விண்ணகத் தந்தையின் விருப்பத்தை தெரிவு செய்ய வந்திருக்கும் அன்பு
நெஞ்சங்களே
அணுசக்தியை விட ஆற்றல் வாய்ந்தது முடிவெடுக்கும் திறமை. சரியான
நேரத்தில் மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள் தான்
வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம். அப்படி ஒரு
அற்புதமான முடிவைத் தேர்ந்தெடுத்து ஆனந்தமாய் வாழ நற்சிந்தனையை
நமக்கு ஏற்படுத்த இந்த ஆறாவது ஞாயிறு வழிபாடு வரவேற்கின்றது.
செய்யலாமா? செய்யக் கூடாதா? கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா?
போகலாமா? போக வேண்டாமா? எதைத் தேர்ந்தெடுப்பது? எப்படித்
தேர்ந்தெடுப்பது? இப்பழ அடுக்கடுக்கான கேள்விக்குறிகளால்
தொகுக்கப்பட்டதே நமது அன்றாட வாழ்க்கைப்பாடம். மின்னுவதெல்லாம்
பொன் அல்ல என்பதை மறந்து, அவசரமாய் எடுக்கப்படும் தவறான
முடிவுகளால் தான் உள்ளம் குடும்பம் நாடு வீடு உலகம் என எல்லாம்
உடைந்து போய்க் கிடக்கிறது.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில
முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர்.
அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கைப் பாதையையே
மாற்றிவிடுகின்றன. மிகச் சரியாக முடிவெடுக்கும் திறன்
படைத்தவர்கள், வாழ்வின் எல்லாத் தடைகளையும் எளிதாகக் கடந்து
செல்வது நிதர்சன உண்மை. நல்லது எது? கெட்டது எது? என
பகுத்தறியும் ஆற்றலை மனிதனுக்கு மட்டுமே கொடையாக கொடுத்த
ஆண்டவனின் சட்டப்படி வாழ்ந்தால், வாழ்வோர் நாட்டில் நாம்
குடியிருப்போம். நாம் தீர்மானிக்கின்ற எல்லாமே ஆண்டவனுக்கு
உகந்ததாகவும், நம் அயலாருக்கும் உகந்ததாகவும் அமையும்.
நம்மிடம் இருக்கின்ற குறைகளை வேண்டாதவைகளை விட்டு விடும்போது
ஆண்டவனின் கட்டளையை அமுலாக்கி விடுகிறோம். இதோ அற்புதமான
முடிவை தேர்ந்தெடுத்து விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கேற்ப
வாழ வழி காட்டும் திருப்பலியில் அன்றாடம் நாமும் நம் அயலாரும்
ஆண்டவன் அருட்துணையொடு சரியான முடிவை தேர்ந்தெடுத்து அவனியில்
மகிழ்ச்சியாக பவனி வர வேண்டி கொள்வோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
அனைத்தையும் துருவி ஆராய்கின்ற இறைவா!
திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள்
துறவியர் அனைவரும் கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களை மக்கள்
கண்டு கொண்டு வாழ்வின் பாதையை தேர்ந்தெடுத்து வாழ
வழிகாட்டும் ஆன்மீக நலன்களால் நிரம்பி வழிய
வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
மறைபொருளாய் இருக்கும் "ஞானத்தை வெளிப்படுத்துகின்ற
இறைவா!
மேன்மை பெற வேண்டும் என்றும் நோக்கத்துடன் உலகம்
தோன்று முன்பு கடவுளின் திட்டத்தில் இடம் பெற்ற மறைபொருளாய்
இருக்கின்ற ஞானத்தை கண்டு கொண்டு இவ்வுலகத் தலைவர்கள்
மாட்சிக்கு உரிய இறைவன் பணியென மக்கள் பணியை மென்மையான
செயல்களால் செய்து மகிழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை
வேண்டுகிறோம்.
விண்ணரசு நோக்கி நடக்க பாதை காட்டுகின்ற இறைவா!
இன்றைய நற்செய்திப் போதனை வழியாக உமதரசை சுட்டிக்
காட்டிய எங்கள் ஞானமேய்ப்பர் நீர் இருக்கும் திசையில்
எங்களைப் பயணிக்கச் செய்ய உடலுக்கும் உள்ளத்திற்கும்
சுகம் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.
நாவினைப் படைத்த இறைவா!
பேச்சைக் குறைத்து நற்செயல்களை அதிகரிக்க நாக்கு ஒன்றையும்
கைகள் இரண்டையும் தந்திருக்கின்றீர். எங்கள் நாவையும்
கரங்களையும் ஆசீர்வதியும். எங்கள் பேச்சு எளிதாக இயல்பானதாக
எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையவும் தீயோரிடமிருந்து வருகின்ற
குழப்பமான பேச்சுக்களால் எங்கள் குடும்பகள் சிதைந்து
விடாமல் இருக்கவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை
வேண்டுகிறோம்.
அன்போடு வாழப்பணித்த இறைவா!
கொலை கொள்ளை விபச்சாரம் வன்முறை பொய்யானை சமீப காலங்களில்
மிகுந்துள்ளது. மனிதம் பாதிக்கும் செயல் செய்வோர் மனம்
மாறவும் பாதிப்படைந்த நண்பர்களுக்கு அன்போடு கலந்த இரக்கமும்
கருணையும் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை
வேண்டுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
சரியான அளவில்
இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின்
5ஆம் ஞாயிற்றில் இருக்கக்கூடிய நம்மை இறைமகன் இயேசுசரியான அளவில்
உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நம்மை
ஆசீர்வதிப்பனவாக, நமக்கு ஆறுதல் தருவனவாக இருக்கின்றன.
முதல் வாசகத்தில் ஏராளமான ஆசீர்வாதங்களை கடவுள் நமக்கு
கொடுக்கின்றார். இரண்டாவது வாசகத்தில் புனித பவுலடியார் தனது பழைய
நிலைமையை சொல்லி சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அறிந்ததால் அவர்
பெற்றுக்கொண்ட மகிமையை எடுத்துரைக்கின்றார். இறுதியாக நற்செய்தி வாசகத்தில்
இயேசு தனது சீடர்களை உப்பாக ஒளியாக வாழ அழைக்கின்றார். இன்றைய காலகட்ட
சீடர்களாகிய நாமும் உப்பாக ஒளியாக வாழ அவரால் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை இதற்கு பல்வேறு விதமான அர்த்தங்கள் உண்டு.
உப்பிட்டவரை, உப்பு இவ்விடத்தில் உணவாக கருதப்படுகிறது. உணவு நம்
அனைவருக்கும் இன்பம் தரக்கூடியது. நிறைவினைத் தரக்கூடியது. அந்த இன்பத்தினை
நிறைவினை நமக்கு தந்தவர்களை, நமது பசியை ஆற்றிய அவர்களை உள்ளத்தில்
எப்போதும் மறக்காமல் நினைக்க வேண்டும். இந்த அர்த்தத்திலேயே உப்பிட்டவரை
உள்ளளவும் நினை என்பது சிலரது கருத்து. (வாழ்வில் இனிமை சேர்த்த
அவர்களை இதயம் உள்ளவரை நினை என்பது) இரண்டாவதாக நாம் திருமணங்களில்
பலமுறை கண்டிருப்போம் உணவு பரிமாறுவதற்கு முன் உப்பையும் இலையில்
வைப்பார்கள். உப்பு இலையில் வைத்து பரிமாறப்படுவதற்கான காரணம் என்னவென்றால்
அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இருக்கும் போது யாராவது ஒரு சிலர்
உப்பில்லை என்று கூறி விருந்தின் தன்மையை மாற்றிவிடக் கூடாது,அல்லது
கேட்க வருத்தப்பட்டுக்கொண்டு உப்பில்லா உணவை உண்டு வருந்தக்கூடாது
என்பதற்காகவே.
மனிதனுடைய வாழ்வில் மிக முக்கியமானது உணவு. அத்தியாவசிய தேவைகளில்
ஒன்று உணவு. அந்த உணவிற்கு சுவையை ஊட்டுவது உப்பு. உப்பு சரியான
நிலையில் இருக்க வேண்டும் அதிகமானாலும் கார்ப்பு என்பதை கரிப்பு,
உப்பு கரிக்கிறது என்றும், குறைவானால் இதென்ன சப்புன்னு இருக்கு என்று
சொல்லிவிடுகிறோம் இவ்வாறாக, அந்த உப்பு இல்லாத உப்பு மிகுதியான உணவினை
நாம் நமது வார்த்தைகளால் வெளிப்படுத்துவோம். உப்பு கரிக்கிறது, உப்பில்லாமல்
சப்பென்று இருக்கிறது என்று கூறிவிடுகிறோம்.
நமது நாம் உணவிற்கு பயன்படுத்தக்கூடிய பலவிதமான பொருட்களில் அறுசுவைகளில்
இரண்டு மூன்று ஒன்றாக இணைந்து செய்யப்படுகின்றன.பொதுவாக நமக்கு பரிமாறப்படும்
உணவில் புளிப்பு இல்லை என்றாலோ காரம் இல்லை என்றாலும் அதனை ஈடுகட்ட
எந்த பொருளும் அந்நேரத்தில் நமது இலையில் வைக்கப்படுவதில்லை மாறாக
உப்பு இல்லை என்றால் உடனடியாக உப்பு இலையில் வைக்கப்பட்டு உணவோடு
சேர்க்கப்பட்டு அந்த குறையை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. உப்பு
தனது குறையை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை பெற்றது. இத்தகைய
உப்பு போல நாம் வாழ, இயேசுவின் சீடர்களாகிய நாம் வாழ, இயேசு அழைக்கின்றார்.
தனது குறையை சுட்டிக் காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்யக்கூடியவர்களாக
நாம் வாழ சரியானவர்களாக, சரியான சுவை தருபவர்களாக நாம் வாழ அழைக்கின்றார்
அடுத்து ஒளி அதிகமான ஒளி தீபம் என்றும் ஜோதி என்றும் அழைக்கப்படுவதில்லை
மாறாக தீப்பந்தம் என்று அழைக்கப்படும். அதுவே மிகவும் குறைவாக எரிந்தால்
மங்கிய வெளிச்சம் என்று அழைக்கப்படும். எனவே ஒளியாகிய நமது நற்செயல்
நமது வாழ்வில் சுடர்விட்டு எரியச்செய்வோம். வெளிச்சம் தரக்கூடிய ஒளியாக
மாற வேண்டும். மங்கியதாகவும் இல்லாமல் அதிக தீப்பந்தம் போலவும் இல்லாமல்
சரியான ஒளியாக, சரியான தீபமாக சரியான ஜோதியாக நாம் வாழ வேண்டும் என்று
அழைப்பு விடுக்கின்றார். நம்மில் பலர் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
செய்கிறென் பேர்வழி என்று நினைத்து வம்பில் மாட்டிக் கொள்வதும் உண்டு
( என்னையும் சேர்த்து தான் ).
இப்படி நமது வாழ்வு சரியான உப்பாக சரியான ஒளியாக மாறும் பொழுது
நமது ஒளி விடியல் போய்விடும் நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்.
நேர்மை நமக்கு முன் செல்லும். ஆண்டவரின் மாட்சி நம்மைப் பின்
தொடரும். இதுவரை மிகுந்த அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருந்த
நாம், சொல்வன்மை உடையவர்களாக ஞானம் உடையவர்களாக மாறுவோம். இந்த
சரியான உப்பாக, சரியான ஒளியாக மாற மனித ஞானம் அவசியமில்லை. மாறாக
கடவுளின் வல்லமை மிகவும் தேவை என்பதை இன்றைய நாள் நமக்கு
வலியுறுத்துகிறார். நமது வாழ்வின் உப்பை சாரமற்றதாக மாற்றும்
வாய்ப்பு கொண்டது இந்த மனிதன் ஞானம். மரக்காலுக்குள் ஒளித்து
வைக்கப்பட்ட ஒளியாக நமது வாழ்வை மாற்றக்கூடும். கடவுளின் வல்லமை
ஒன்று மட்டுமே சுவையான உப்பாக சுவையூட்டக்கூடிய உப்பாக, ஒளி
தரக்கூடிய ஒரு தீபமாக ஜோதியாக நமது வாழ்வை மாற்றும்.
இதுவரை இருந்த நிலை மாறி நம்மிடமுள்ள அனைத்தையும் பிறருடன்
பகிர்ந்து கொள்பவர்களாக நாம் மாறமுடியும். முதல் வாசகத்தில்
சொல்லப்பட்டிருப்பது போல,நமது உணவை பகிர, வீடு இல்லாதவர்களுக்கு
நமது இல்லத்தில் இடம் கொடுக்க, உடையற்றவர்களுக்கு உடையளிக்க நாம்
அழைக்கப்படுகின்றோம். சுவையோடு கூடிய உப்பாக ஒளியாக இருக்கும் போது
நம் இறைவன் நாம் மன்றாடும் போது நமக்கு பதில் அளிப்பார் நாம்
கூக்குரல் இடும் போது இதோ என பதிலிறுப்பார். நாம் செய்ய
வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நம்மைப் பற்றியும் நம்மைச்
சுற்றியுள்ளவர்கள் பற்றியும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கக்
கூடிய அந்த நுகம் எனும் சுமையை கீழே இறக்கி வைத்தல் அல்லது அதை
நம்மிடமிருந்து அகற்றுதல், குற்றம் சாட்டுதல் பொல்லாத பேசுதல்
போன்ற தீய பண்புகளை நம்மிடம் இருந்து நீக்கி வாழும் போது இருள்
நடுவே நாம் ஒளி என திகழ்வோம். இருண்டு கிடந்த நமது வாழ்க்கை
நண்பகல் போல வெளிச்சம் தரும் ஆக மனித ஞானத்தை விட கடவுளின்
வல்லமையை நம்புவோம். வாழ்விற்கு இனிமை சேர்க்கக்கூடியவர்களாக, நமது
வாழ்விற்கும் பிறரது வாழ்விற்கும் சுவை ஊட்ட கூடியவர்களாக வாழ
இறைவனிடம் அருள் வேண்டுவோம். சரியான உப்பாக, தரமான ஒளியாக வாழ
இறைவனிடம் அருள் வேண்டுவோம். இறைவனின் அருளும் ஆசீரும் என்றும்
நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் இருப்பதாக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
உப்பு பொம்மை
ஒரு ஜென் ஆசிரமத்தில் துறவியாகச் சேர்வதற்கு இளைஞன் ஒருவன் வருகிறான்.
அந்த இளைஞனிடம் மூன்று பொம்மைகளைக் காட்டுகின்றார் மூத்த துறவி
கியான். ஒரு பொம்மை கண்ணாடியால் ஆனது. இரண்டாவது பொம்மை பஞ்சால்
ஆனது. மூன்றாவது பொம்மை உப்பால் ஆனது. 'இந்தப் பொம்மையில் எது உனக்குப்
பிடிக்கும்?' எனக் கேட்கின்றார் துறவி. பளபளப்பாய் இருந்த கண்ணாடி
பொம்மையைச் சுட்டிக்காட்டிய இளைஞன், 'இதுதான்!' என்கிறான். துறவி
அவனை அழைத்துக்கொண்டு பொம்மைகளையும் எடுத்துக்கொண்டு கடலுக்குச்
செல்கிறார். மூன்று பொம்மைகளையும் கடலுக்குள் எறிகின்றார். கண்ணாடி
பொம்மை தொட்டும், தொடாமல் தண்ணீரின் மேலேயே கிடக்கின்றது. பஞ்சு
பொம்மை தண்ணீரை தனக்குள் இழுத்துக் கொண்டு தன் உருவையே மிஞ்சி விகாரமாக
ஆகிவிடுகிறது. உப்பு பொம்மை கரைந்து விடுகிறது. 'தொட்டும், தொடாமல்
இருப்பதும், உறிஞ்சி தனக்கென வைத்துக்கொள்வதும் ஜென் அல்ல. இறையோடு
கலப்பதே ஜென்' என்கிறார் கியான். ஞானம் பெற்றான் இளைஞன்.
இயேசுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியாக, ஏன் அதன் ஒரு பகுதியாகவே இன்றைய
நற்செய்தி அமைந்துள்ளது. மூன்று உருவகங்களை முன்வைக்கின்றார் இயேசு:
உப்பு, ஒளி, மலைமேல் இருக்கும் நகர்.
1. உப்பு: பழைய ஏற்பாட்டில் உப்பு பல அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றது.
பலிப்பொருளில் முக்கியமானதாக உப்பு கருதப்பட்டது (லேவி 2:13, எசேக்
43:24). உடன்படிக்கையின் அடையாளமாக (எஸ்ரா 4:14, எண் 18:19),
தூய்மைச்சடங்கிற்காக (2அர 2:19-26), பொருட்களை பதப்படுத்துவதற்காக
(யோபு 6:6) என பல நிலைகளில் பயன்படுத்தப்பட்டது உப்பு. மேலும் ஒன்றாக
சேர்ந்து உணவு உண்பதற்கு 'உப்பைப் பகிர்வது' என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
உப்பு பயன்தர வேண்டுமென்றால் 'உவர்ப்புத்தன்மை' அவசியம். உவர்ப்புத்தன்மை
எப்போது கரைந்து போகும்? தகாத பொருட்களோடு சேர்ந்தால் அது தன் இயல்பை
இழந்துவிடலாம். உவர்ப்புத்தன்மை இல்லையென்றால் அது பலன்தராமல்
போய்விடுகிறது. உப்பின் இயல்பு தனக்காக இருப்பதற்கு அல்ல, மற்ற
பொருட்களோடு இணைந்து அதன் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதே. அதுபோல சீடர்களும்
இருப்பது தங்களுக்காக அல்ல, மாறாக, மற்றவர்களுக்காகவும், மற்றவர்களோடும்
கலந்து மற்றவர்களின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கே. அவர்கள் தகாத
பொருட்களோடு இணைந்தால் அவர்களின் 'உவர்ப்புத்தன்மையும்'
நீர்த்துப்போக வாய்ப்பு இருக்கின்றது. 'உலகிற்கு உப்பு நீங்கள்' என்றால்
இந்த உலகத்தோடு நாம் கலக்க வேண்டும் என்பது பொருள். சோற்றிற்குள்
இடப்படுகின்ற உப்பு சோற்றோடு கரைந்து விடுகிறது. இனி அதைத் தனியாகப்
பிரித்து எடுக்க முடியாது. ஆனால் அதன் தன்மையை சோறு தன்னகத்தில் எடுத்துக்கொள்கிறது.
அதனால் சுவை பெறுகிறது. வெறும் உப்பினால் பயன் இல்லை. அந்த உப்பு
மற்ற உணவுப்பொருளோடு இணையும்போதுதான் அது அர்த்தம் பெறுகிறது.
2. ஒளி. ஒளி எப்படி இருக்கும்? இருளின் மறைந்த நிலையே ஒளி. ஒளி மற்ற
பொருட்களையெல்லாம் அடையாளம் காட்டும். ஆனால் ஒளி இப்படித்தான் இருக்கும்
என நாம் சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் மெழுகுதிரி, ஒளி
விளக்கு, நெருப்பு அனைத்துமே ஒளியின் வடிவங்கள்தாம். அவற்றில் இதுதான்
ஒளி என நாம் எதையும் வரையறுத்துவிட முடியாது. ஒளியை யாரும் பொத்தி
மூடிவிடவும் முடியாது. கார்மேகம் மறைத்தாலும் சூரியனின் ஒளி அதைச்சுற்றி
வெள்ளை வெளேரென தன் முகத்தைக் காட்டிவிடுகிறது. ஒளி ஒளியாக மட்டுமே
இருக்க முடியும். நான் இன்று ஒளியாக இல்லை, நான் கொஞ்சம் மட்டும்
ஒளியாக இருக்கிறேன் என்று அது சொல்ல முடியாது. முழுமையாக ஒளிர
வேண்டும். அல்லது அணைந்து போக வேண்டும். இடைப்பட்ட நிலையே
கிடையாது. 'வெப்பமாக இருக்க வேண்டும். அல்லது குளிராக இருக்க
வேண்டும். இடைப்பட்ட நிலையில் வெதுவெதுப்பாக இருக்க முடியாது'. சீடர்களின்
இயல்பும் அதுதான். இன்று சீடராக இருக்கிறேன். நாளை நான் வேறு
மாதிரி இருக்கிறேன் எனவும், இன்று நான் யாருக்கும் பயன்பட
மாட்டேன். நாளை பயன்பட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவு செய்ய
முடியாது. சீடனாக இருக்க வேண்டும். அல்லது இருக்க முடியாது. 50-50
மனநிலைக்கு வாய்ப்பே இல்லை. தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லையென்றாலும்
மற்றவர்களுக்கு ஒளி காட்ட வேண்டியது ஒளியின் வேலை. நல்லவர் கெட்டவர்
எனப் பாகுபாடு காட்டாமல் அனைவர்மேலும் ஒளிர வேண்டும். நல்லது, கெட்டது
என இல்லாமல் எல்லாவற்றையும் அடையாளம் காட்ட வேண்டும். தன்னைச்
சுற்றியிருப்பவைகளை, தன்னைச் சுற்றியிருப்பவர்களை ஒளிரச் செய்ய
வேண்டும்.
3. மலைமேல் உள்ள ஊர். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது. அது
மறைவாக இருக்க வேண்டுமென்றால் பள்ளத்தாக்கில்தான் இருக்க வேண்டும்.
சீடத்துவம் என்பது உயர்ந்த நிலை. அந்த உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்
தாங்கள் விரும்புகிறார்களோ இல்லையோ மற்றவர்களின் கண்களுக்குத்
தெரிந்துகொண்டேதான் இருப்பார்கள். இது ஒரு பெரிய பொறுப்புணர்வை நமக்குத்
தருகின்றது. பிறர் நம்மைப் பார்க்கிறார்கள் எனில் நம் செயல்கள்
மேன்மையானவையாக இருக்க வேண்டும். 'இரவு முடியப்போகிறது. பகல்
நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து
விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! பகலில்
நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக!' (உரோ 13:12).
சீடரின் குணம்
'மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது!'
கொடைக்கானல் மலையில் தங்கியிருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால்
நிறைய விளக்குகள் எரிவது தெரியும். நின்று எரியும் விளக்குகள். நகர்ந்து
கொண்டே இருக்கும் வாகனங்களின் விளக்குகள். ஆலய எல்.இ.டிக்கள், ஹோட்டல்
விளம்பரங்கள் என நிறைய தெரிவது வானத்து நட்சத்திரங்கள் கொஞ்சம் இறங்கி
வந்தது போல இருக்கும்.
தமிழில் 'உள்ளங்கை நெல்லிக்கனி,' 'வெள்ளிடை மலை,' 'கைப்புண்ணுக்கு
கண்ணாடி எதற்கு' என்ற சொல்லாடல்கள் உள்ளன.
அதாவது, நேருக்கு நேர் தெரிகின்ற ஒன்றை மறைக்க முடியாது.
இப்படித்தான் இருக்க வேண்டும் சீடரின் குணம் என்கிறார் இயேசு.
மற்றவரால் மறைத்துவிட முடியாத அளவிற்கு நம் குணம் உயர்ந்துவிட்டால்
நாமும் ஒளிவீசலாம். இல்லையா?
'துன்பத்தால் மனஉறுதியும்,
மனஉறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்' (உரோ 5:3) என்ற பவுலின்
வார்த்தைகள் இன்றைய காலை செபத்தில் வந்தன.
'தகைமை' என்றால் 'கேரக்டர்' அல்லது 'நடத்தை' என்று இன்று நான்
கண்டுபிடித்தேன்.
ஆக, மனஉறுதிதான் என் நடத்தையை உருவாக்குகிறது.
ஒளியாக, உப்பாக இருப்பதும் ஓர்நாள் நிகழ்வு அல்ல. அது என்
தொடர்நடத்தையால் வரும் பயன்.
கட்டின்மை
போற்றுதல்
நல்வாழ்வு தரும் கட்டின்மை நோக்கி நம்மை அழைக்கிறது தவக்காலத்தின்
முதல் ஞாயிறு.
இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 2:7-9, 3:1-7) விவிலியத்தின்
முதல் பக்கங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உருவான
வரலாற்றின் பதிவே இப்பக்கங்கள். இரண்டு கதையாடல்கள் வழியாக
மனித வாழ்வின் தொடக்கத்தை விளக்குகிறது விவிலியம். இவ்விரண்டு
கதையாடல்களையும் ஒன்றுக்கொன்று அருகில் வைத்துப்
பார்க்கும்போது மனிதர்கள் என்றால் யார்? அவர்களுக்கும் கடவுளுக்கும்
உள்ள உறவு என்ன? அவர்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவுநிலை
என்ன? அவர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு என்ன?
போன்ற கேள்விகளுக்கு விடைகளை நாம் கண்டறிய முடியும்.
முதல் வாசகத்தின் முதல் பகுதி படைப்பின் இரண்டாம் கதையாடல்
பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடவுளின் படைப்புச்
செயலின் முதற்கனியாக முதல் மக்களை முன்வைக்கிறது இது. மனிதர்கள்
கடவுளின் மூச்சையே தங்களுக்குள் கொண்டிருக்கின்றனர். இதுவே
மனிதர்கள் கடவுள்மேல் கொண்டிருக்கும் சார்புநிலையின் அடையாளம்.
கடவுளின் மூச்சை இழப்பது என்பது ஒருவரை இறக்கச் செய்யும்.
இச்சார்புநிலையின் மற்றொரு பக்கம் கடவுள் அவர்களுக்கு இட்ட
நிபந்தனை அல்லது விதிமுறை. கடவுள் படைப்பில் சில வரையறைகளை
நிர்ணயித்து, மனிதர்களின் நலனை முன்னிட்டும், ஒட்டுமொத்தப்
படைப்பின் ஒழுங்கிற்காகவும் சிலவற்றைத் தடைசெய்கின்றார்.
நன்மை-தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று முதல்மனிதர்களுக்குக்
கட்டளையிடுகிறார் கடவுள். ஏனெனில், இத்தகைய அறிவை மனிதர்களால்
கையாள முடியாது. மேலும், இது அவர்களை அழிப்பதோடு, கடவுளின்
படைப்பில் தொய்வையும் ஏற்படுத்திவிடும்.
ஆனால், முதல் மனிதர்கள் கடவுளின் கட்டளையை மீறுகின்றனர்.
அவர்கள் கடவுள் தங்களுக்குத் தந்த கொடைகளை மறந்துவிட்டனர்.
கடவுள் கனியை விலக்கிவைத்ததை உரிமை மீறலாகப் பார்த்தனர்.
தாங்கள் உண்ணுமாறு கடவுள் கொடுத்த அனைத்து மரங்களையும் அவற்றின்
கனிகளையும் மறந்துவிட்ட இவர்கள் விலக்கப்பட்ட கனியை நாட
ஆரம்பிக்கின்றனர். தாங்கள் ஏற்கனவே கடவுளின் சாயலில் இருக்கிறோம்
என்பதை மறந்து, பாம்பின் சூழ்ச்சிக்கு இரையாகின்றனர். அவர்கள்
தங்கள் கைகளை நீட்டி உண்ட அக்கனியால் முதலில் அவர்களின் கண்கள்
திறக்கப்பட தாங்கள் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதை உணர்கின்றனர்.
அவர்களின் ஆடையற்ற நிலை அவர்களுடைய வலுவின்மையையும்,
நொறுங்குநிலையையும் அடையாளப்படுத்துகிறது. அன்றிலிருந்து
அதுவே அவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் மாறிவிடுகிறது. விலக்கப்பட்ட
கனியை உண்டதால் அவர்கள் கடவுளிடமிருந்தும் ஒருவர் மற்றவரிடமிருந்தும்
அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
ஆக, அவர்களின் கீழ்ப்படியாமை அவர்களை இந்நிலைக்கு ஆளாக்குகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 5:12-19), ஆதாம்-இயேசு,
பாவம்-விடுதலை, குற்றம்-அருள்கொடை என்னும் முரண்களைப் பட்டியலிடுகின்ற
பவுல், ஆதாமின் கீழ்ப்படியாமை பாவத்தைக் கொணர்ந்தது என்றும்,
இயேசுவின் கீழ்ப்படிதல் கடவுளுக்கு நம்மை ஏற்புடையவர் ஆக்கியதும்
என்றும் நிறைவு செய்கின்றார்.
ஆக, கீழ்ப்படியாமையால் பிறழ்வுபட்ட உறவுநிலைகள் இயேசுவின்
கீழ்ப்படிதலால் சரிசெய்யப்படுகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 4:1-11) இயேசு பாலைவனத்தில்
சோதிக்கப்பட்ட நிகழ்வை நமக்குக் காட்டுகிறது. திருமுழுக்கு
பெற்றவுடன் இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்காக பாலை நிலத்திற்கு
அழைத்துச் செல்லப்படுகிறார். திருமுழுக்கின்போது அவர்
அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்பட்டார். பாலைவனத்தில்
சோதிக்கிறவன் மூன்றுமுறை சோதித்தபோது நம்பிக்கைக்கும் பிரமாணிக்கத்திற்கும்
உரியவராக இருந்து மகன் என்ற நிலையைக்
காத்துக்கொள்கின்றார். இயேசுவின் பாலைநில அனுபவம் 40 நாள்கள்
நீடிக்கின்றன.
நாற்பது என்ற எண் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு
வந்த பயணத்தைக் குறிக்கிறது. செங்கடலைக் கடந்த இஸ்ரயேல் மக்கள்
மூன்று சோதனைகளுக்கு உள்ளாகின்றனர்: (அ) உணவு வேண்டி அவர்கள்
கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தது (காண். விப 16) இயேசுவின்
முதல் சோதனையில் எதிரொலிக்கிறது. (ஆ) கடவுள் நம்மோடு இருக்கிறாரா?
என்று அவர்கள் கேட்ட கேள்வி (காண். விப 17) இரண்டாம் சோதனையில்
தெரிகிறது. (இ) பொன்னாலான கன்றுக்குட்டியை அவர்கள் வணங்கியது
(காண். விப 32) மூன்றாம் சோதனையில் எதிரொலிக்கிறது. இஸ்ரயேல்
மக்கள் ஆண்டவராகிய கடவுளின் அளப்பரிய செயல்களை எகிப்தில்
கண்டாலும் அவரை நம்பவில்லை. ஆனால், இயேசுவோ இறுதிவரை நம்பிக்கைக்குரியவராகவும்,
கீழ்ப்படிபவராகவும் விளங்கினார்.
இயேசு யார் என்பதைத் தன் குழுமத்தாருக்கு அறிமுகம் செய்ய
விழைகின்ற நற்செய்தியாளர்கள், இயேசு அலகையையும் அதன் சோதனைகளையும்
வென்றவர் என்று சோதனைகள் நிகழ்வு வழியாக அறிமுகம்
செய்கின்றனர். சோதனைகள் நிகழ்வு இயேசுவை முதல் இஸ்ரயேலோடு
இணைக்கிறது (காண். நாற்பது நாள்கள், மன்னா, அப்பம், விப
16:15, ஆண்டவரை சோதித்தல், விப 17:1-7, சிலைவழிபாடு,
விப 32). இது இறைவனின் ஆட்சிக்கும், அலகையின் ஆட்சிக்கும்
உள்ள முரண்பாட்டை விளக்குகிறது. சோதனைகள் நிகழ்வு இயேசுவை
முதல் ஏற்பாட்டு இறைவாக்கு நூல்களின் நிறைவாக முன்வைக்கின்றன.
இயேசு சோதனைகளை வெல்லும் நிகழ்வு பிற்காலச் சீடர்களுக்கு
வாழ்க்கைப் பாடமாக இருக்கிறது.
அ. கற்களை மாற்று!
சோதிக்கிறவன் அவரை அணுகி, நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள்
அப்பமாகும்படிக் கட்டளையிடும் என்றான். அவர் மறுமொழியாக,
"மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின்
வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (காண். இச 8:3) என மறைநூலில்
எழுதியுள்ளதே என்றார். (காண். மத் 4:3-4) லூக்கா நற்செய்தியாளர்,
மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை என்று மட்டும்
பதிவிடுகின்றார். (காண். லூக் 4:4)
நாற்பது நாள்கள் இரவும் பகலும் நோன்பிருக்கின்றார் இயேசு.
நோன்பு என்பது பசியை விரும்பி ஏற்கும் நிலை. உணவு மனித
வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம்
என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து
நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன.
இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும்.
நம் ஒவ்வொருவரின் தனிநபர் வாழ்வுநிலையை உடல்சார், அறிவுசார்,
உறவுசார், ஆன்மிகம்சார் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
இவற்றில் ஒவ்வொரு நிலையிலும் நாம் பாலைநில அனுபவம்
பெறுகின்றோம். பசி என்பது உடல்சார் பாலை, அறியாமை என்பது
அறிவுசார் பாலை, தனிமை என்பது உறவுசார் பாலை, வெறுமை, உறுதியற்ற
தன்மை, தவறான தெரிவுகள் போன்றவை ஆன்மிகம்சார் பாலை.
உடல்சார் பாலை என்னும் பசியை பாலைநிலத்தில் எதிர்கொள்கின்றார்
இயேசு. கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும் என்னும் அலகையின்
சொற்கள் மூன்று நிலைகளில் இயேசுவுக்கு ஈர்ப்பாக இருந்திருக்கும்:
ஒன்று, அவர் பசியாக இருக்கிறார். இரண்டு, வல்ல செயல்
செய்யும் ஆற்றலைச் சோதிப்பதற்கான ஒரு தளமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மூன்று, மெசியா என்பவர் மாற்றத்தைக் கொணர்பவர். இருப்பதை
இல்லாமலும், இல்லாததை இருக்கவும், ஒன்றை மற்றொன்றாகவும்
செய்கின்றவர்.
உறுதியற்ற ஒன்றை உறுதியாக்கிக்கொள்ளத் தூண்டுகிறது அலகை.
பாலைவனத்தில் உள்ள கற்கள் எல்லாம் அப்பமாக மாறிவிட்டால்,
பசியைப் பற்றிய கவலையே தேவையிருக்காது. எங்கு
திரும்பினாலும் அப்பமாக இருக்கும். விரும்பும் வரை உண்ணலாம்.
ஆனால், பசி தீர்ந்தவுடன் எஞ்சிய அப்பங்களால் பயன் ஒன்றுமில்லை.
பசியில்லாத நபருக்கு ருசியான உணவும் சுமையே. மனிதர்களின்
தேடல் என்பது வெறும் உணவுதான் என்றும், அந்த உணவுக்கான தேடலில்
மனிதர்களை அமிழ்த்தி விட்டால் அவர்கள் வேறெதைப் பற்றியும்
கவலைப்பட மாட்டார்கள் என்பதும் அலகையின் எண்ணமாக இருந்தது.
ஆனால், மனிதர்களின் தேவை வெறும் உடல் சார்ந்தது அல்ல,
மாறாக, ஆன்மிகம் சார்ந்தது என்றும், அவர்கள் வெறும் சதை அல்ல,
மாறாக, ஆவிக்குரிய ஆன்மாவைக் கொண்டிருப்பவர்கள் என்றும்
அலகைக்கு நினைவூட்டுகிறார் இயேசு.
மேலும், கற்களை அப்பமாக மாற்றுதல் என்பது தேவையானதை
விடுத்து, தேவையற்றதன்மேல் கவனத்தைத் திருப்பும் சோதனையாகும்.
ஒருவேளை இயேசு கற்களை அப்பமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தால்,
காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது.
மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் (காண். மாற் 1:15) என்று
அறிவித்திருக்க இயலாது. பார்க்கின்ற அனைத்துக் கற்களையும்
அப்பமாக்கும் பணியே அவருடைய முதன்மையான பணியாக இருந்திருக்கும்.
கற்கள் கற்களாகவும், அப்பம் அப்பமாகவும் இருக்கட்டுமே என்பது
இயேசுவின் பதில்மொழியாக இருக்கிறது.
ஆ. கடவுளைச் சோதி!
பின்னர் அலகை இயேசுவை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச்
சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, நீர்
இறைமகன் என்றால் கீழே குதியும்; கடவுள் தம் தூதருக்கு உம்மைக்
குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி
அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் என்று
மறைநூலில் எழுதியுள்ளது (காண். திபா 91:12) என்று அலகை அவரிடம்
சொன்னது. இயேசு அதனிடம், உன் கடவுளாகிய ஆண்டவரைச்
சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளதே என்று சொன்னார். (மத்
4:5-6)
மத்தேயு நற்செய்தியாளர், இரண்டாவது என முன்மொழியும் சோதனையை,
லூக்கா நற்செய்தியாளர், மூன்றாவது என எழுதுகின்றார்.
கோவில் என்பது மத்தேயு நற்செய்தியில் 17 முறை வருகின்றது.
கோவிலின் உயர்ந்த பகுதி என்பதை கோபுரம் அல்லது இறக்கை
வடிவிலான நீட்சி அமைப்பு அல்லது சிறிய கைப்பிடிச் சுவர்
என்று புரிந்துகொள்ளலாம். மெசியா வெளிப்படுத்தப்படும்
நாளில் அவர் திருக்கோவிலின் கூரைமேல் நிற்பார் என்பது ரபிக்களின்
போதனையாக இருந்தது (காண். பெசிக்தா ரப்பாதி, 62இ-ஈ). எருசலேம்
ஆலயத்தின் திருத்தூயகத்திற்கு மேல் உள்ள பகுதி, அல்லது
ஆலயத்தின் முன்முகப்புக் கூரை, அல்லது கெதரோன் பள்ளத்தாக்கைப்
பார்த்தவாறு அமைந்துள்ள வெளிப்புறச் சுவரின் கோபுரம் எனப்
பலர் இந்த இடத்தை அடையாளம் காண்கின்றனர்.
மாயவித்தை செய்து மக்களின் கவனத்தை ஈர்க்குமாறும், வல்ல செயல்கள்
வழியாக கடவுளைச் சோதிக்குமாறும் தூண்டுகிறது அலகை. உன்
கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் (காண். இச 4:16) என்னும்
மோசேயின் வார்த்தைகளைச் சொல்லி, அலகையின் சோதனையை விலக்குகிறார்
இயேசு.
முதல் ஏற்பாட்டில் பாலைவனத்தில் இரபதிம் பகுதியில் பாளையம்
இறங்கிய போது மக்கள் குடிக்க அங்குத் தண்ணீர் இல்லை. மக்கள்
மோசேயிடம் வாதாடி, குடிக்க எங்களுக்குத் தண்ணீர் கொடும்!
என்று கேட்கின்றனர். ஆண்டவரின் அறிவுறுத்தலின்படி மோசே
பாறையைக் கோலால் அடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படுகின்றது.
ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று இஸ்ரயேல்
மக்கள் சோதித்துப் பார்க்கின்றனர் (காண். விப 17:1-7).
ஆனால், இறைமகன் இயேசு அப்படிச் சோதித்துப் பார்க்கத்
தேவையில்லை. ஏனெனில், இயேசுவின் திருமுழுக்கின்போது, தூய
ஆவி புறாவைப் போல அவர்மேல் இறங்கி வர, என் அன்பார்ந்த மகன்
நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின்
குரல் ஒலித்தது (காண். மாற் 1:10-11). தான் இறைமகன் என்பதும்,
இறைத்தந்தை என்றும் தன்னோடு உடனிருக்கிறார் என்பதும் இந்த
நிகழ்வு வழியாக இயேசு பெற்ற அடித்தள அனுபவமாக இருந்ததால்
அவர் கடவுளைச் சோதனைக்கு உட்படுத்தவில்லை.
இ. காலில் விழு!
மறுபடியும் அலகை இயேசுவை மிக உயர்ந்த மலைக்குக் கூட்டிச்
சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும்
அவருக்குக் காட்டி, அவரிடம், நீர் நெடுஞ்சாண்கிடையாக
விழுந்து வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்
என்றது. அப்போது இயேசு அதனைப் பார்த்து, அகன்று போ,
சாத்தானே. உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே
பணி செய் என்றும் மறைநூலில் எழுதியுள்ளது (காண். இச 6:13)
என்றார். (மத் 4:8-10)
நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய
முடியாது (மத் 6:24) என்னும் வாக்கியத்தின் விளக்கவுரையாகக்
கூட இந்தச் சோதனையை எடுத்துக்கொள்ளலாம்.
நெடுஞ்சாண்கிடையாக விழுதல் என்பது கடவுளுக்கு மட்டுமே உரித்தான
ஒரு வழிபாட்டு முறை. இருந்தாலும், அரசர்கள் முன்னும் அதிகாரம்
பெற்றவர்கள் முன்னும் நெடுஞ்சாண்கிடையாக விழும் வழக்கம்
விவிலியக் காலத்தில் இருந்தது. இந்தச் செய்கையின் வழியாக
ஒருவர் தனக்கு முன்னால் இருப்பவரைத் தன் தலைவராக ஏற்றுக்கொள்கின்றார்.
தனது விருப்புரிமை, தன்னுரிமை, விடுதலை போன்றவற்றை அவருக்கு
விற்றுவிடுகின்றார்.
இயேசு தீமையின் ஆதிக்கத்துக்கு உட்பட மறுத்ததோடு, கடவுள்
ஒருவரே வணங்குதலுக்கும் பணி செய்தலுக்கும் உரியவர் என்ற தன்
நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார்.
இவ்வாறாக, கற்களை மாற்று!, கடவுளைச் சோதி!, காலில்
விழு! என்னும் மூன்று பாலைவனச் சோதனைகளையும் வெற்றி
கொள்கின்றார் இயேசு.
தவக்காலத்தின் முதல் ஞாயிறு கீழ்ப்படிதல் என்ற மதிப்பீட்டைக்
கற்றுக்கொள்ள நம்மை அழைக்கிறது. முதல் மக்கள் கடவுளை நம்ப
மறுத்தனர். ஆகையால் கீழ்ப்படிய மறுத்தனர். அதற்கு மாற்றாக
இயேசு தந்தையின் திருவுளத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார்.
நம்பிக்கையின்மை-நம்பிக்கை, கீழ்ப்படியாமை-கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கான
போராட்டம் எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையாளர்கள்
தாங்கள் இப்படி அலைக்கழிக்கப்படும்போதெல்லாம் இன்றைய பதிலுரைப்பாடல்
வரிகளை நினைவில்கொள்ள வேண்டும்: கடவுளே, தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும்
ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும் (திபா 51:10).
இயேசு இறுதிவரை தன் கட்டின்மையை சுதந்திரத்தை
விட்டுவிடவில்லை. நம் முதற்பெற்றோர் பாம்பின் சோதனையில்
விழுந்தபோது தங்கள் கட்டின்மையை இழக்கின்றனர். கட்டின்மையை
என்றும் விரும்புவதும், அதைப் பற்றிக்கொள்வதும் நலம்.
வாசித்து வாழ்வாக்கு:
நீண்ட நாள் காதலர்களான ஜோவுக்கும் இவாஞ்ஜலினுக்குமிடையே அருட்சாதனம்
நடந்தபோது, ஜோவின் மாமா அவனுக்கு ஒரு பரிசனை வழங்கினார். அதை அவன்
மறுநாள் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே ஓர் அருமையான திருவிவிலியம்
இருந்தது. உடனே அவன் மாமாவிற்கு, "நீங்கள் பரிசாக வழங்கிய
திருவிவிலியம் அருமை" என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி
வைத்துவிட்டு, திருவிவிலியத்தை வீட்டில் இருந்த அலமாரியில்
வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
சில நாள்கள் கழித்து ஜோவின் மாமா அவனைத் அலைபேசியில் அழைத்து,
"திருவிவிலியம் எப்படி இருக்கின்றது?" என்று கேட்டார். ஒருவினாடி
என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்த அவன், "திருவிவிலியம் அருமையாக
இருக்கின்றது என்று அன்றைக்கே சொன்னேனே! மாமா" என்று சொல்லி
நிலைமையைச் சமாளித்தான். இது போன்று இரண்டு, மூன்று முறை நடந்தது.
ஒரு கட்டத்தில் அவன் தன் மாமாவின் 'தொந்தரவு' தாங்க முடியாமல்,
'திருவிவிலியத்தில் அப்படி என்ன இருக்கின்றது?' என்று அதைப் புரட்டப்
பார்க்கத் தொடங்கினான். அப்போதுதான் அவன் திருவிவிலியத்தின் ஒவ்வொரு
புத்தகத்திற்கு முன்னும் நூறு ரூபாய் இருப்பதைக் கண்டு வியந்து
போனான். 'இதற்காகத் தான் திருவிவிலியம் எப்படி இருக்கின்றது என்று
மாமா கேட்டுக்கொண்டே இருக்கின்றாரோ?' என நினைத்துக்கொண்டு அவன்,
அவரை அலைபேசியில் அழைத்து நடந்ததைச் சொன்னான். அப்போது அவர் அவனிடம்,
"நீ திருவிவிலியத்தை ஆழமான வாசித்தால், இதைவிடவும் பெரிய செல்வம்
இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வாய்" என்றார்.
ஆம், பலரும் இருந்த நிகழ்வில் வரும் ஜோவைப் போன்று திருவிவிலியத்தை
வாசிக்காமல், பொத்தி வைத்திருக்கின்றார்கள். எப்போது அதை அவர்கள்
வாசித்து வாழ்வாக்கின்றார்களோ, அப்போது அவர்கள் அதில் மிகப்பெரிய
செல்வம் இருப்பதைக் கண்டு கொள்வார்கள். விண்ணரசில் பெரியவர்களாயும்
இருப்பார்கள்.
பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
நாம் ஒவ்வொருவரும் விண்ணரசில் பெரியவர்களாக இருக்க அழைப்புத் தருகின்றது.
விண்ணரசில் பெரியவராக இருக்க நாம் என்ன செய்வது என்பது குறித்து
நாம் சிந்திப்போம்.
நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகள்!
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் நமக்கு
முன்பாகக் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது
என்றுதான் நமக்குக் குழப்பமாக இருக்கின்றது. ஒன்று மட்டும் உறுதி
நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ, அதுவே நம்முடைய வாழ்வைத்
தீர்மானிக்கின்றது.
சீராக்கின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம்,
"மனிதர் முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள்
விரும்புகின்றார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்" என்கிறது.
இவ்வார்த்தைகள் இணைச்சட்ட நூல் 30: 15-20 இல் இடம்பெறுகின்ற இறைவார்த்தையை
நிறையவே ஒத்திருக்கின்றன. அதே நேரத்தில் இவ்வார்த்தைகள், கடவுள்
நமக்கு வாய்ப்புகளைக் கொடுத்தாலும், இதைத் தான் செய்யவேண்டும் என்று
அவர் நமது சுதந்திரத்தில் தலையிடாமல், நமது விருப்பத்திற்கு
விட்டுவிடுகின்றார் என்று செய்தியையும் நமக்கு உரக்கச் சொல்கின்றன.
தம் உருவிலும் சாயலிலும் மனிதர்களைப் படைத்த கடவுள், "தோட்டத்தில்
இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்;
ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே"
(தொநூ 2: 16, 17) என்று சொன்னாரே அன்றி, அவர்களுடைய சுதந்திரத்தில்
தலையிடவில்லை. மனிதர்கள் தங்கள் அழிவினைத் தாங்களே தேடிக்கொண்டார்கள்.
எனில், நமக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகளிலிருந்து நாம் எடுக்கும்
முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அடங்கியிருக்கின்றது என்பதை
நாம் மறந்துவிடவேண்டும்.
ஆண்டவரின் திருச்சட்டப்படி நட!
நாம் எடுக்கும் முடிவைப் பொறுத்துத்தான் நமது வாழ்வு அமையும் என்பது
ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் நான் என்ன முடிவு எடுக்க
வேண்டும் என்பதையும், எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் தூய
ஆவியார் நமக்கு வெளிப்படுத்துகின்றார். இதைப் பற்றி இன்றைய இரண்டாம்
வாசகத்தில் பவுல் கூறும்போது, "இதைக் (ஞானத்தை) கடவுள் தூய ஆவியார்
வழியாக நமக்கு வெளிப்படுத்துகின்றார்" என்கிறார். பவுலின் இவ்வார்த்தைகள்,
"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது, அவர் முழு உண்மையை
நோக்கி உங்களை வழிநடத்துவார்" (யோவா 16: 13) என்ற இயேசுவின்
வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
மனிதர்கள் நாம் நமது முதற் பெற்றோரைப் போன்று என்ன முடிவினை எடுக்க
வேண்டும் என்று தடுமாறக் கூடியவர்கள். இந்நிலையில் நாம் உண்மையை
வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் தூண்டுதலின்படி நடந்தால் (கலா
5:16), நம்மால் கடவுளின் திருவுளத்தின்படி நடந்து, நல்ல முடிவுகளை
நம்மால் எடுக்க முடியும். கடவுளின் திருவுளம் என்ன கேள்விக்கு இன்று
நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 119 நமக்குப் பதில்
தருகின்றது.
திருவிவிலியத்தில் பெரிய அதிகாரம், நூற்று ஐம்பது திருப்பாடல்களில்
எவரெஸ்ட் சிகரம் போன்று உயர்ந்து நிற்கும் திருப்பாடல் எனப் பல சிறப்புகளைக்
கொண்ட திருப்பாடல் 119, "ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர்
பேறுபெற்றோர்" என்கிறது. நாம் ஆண்டவரின் திருச்சட்டப்படி நடக்க
வேண்டும். அதுவே ஆண்டவர் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது.
இயேசுவே நமக்கு முன்மாதிரி
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் ஒருமுறை பேசும்போது, "இன்றைக்கு
மக்கள் போதிப்பவர்களை விடவும் போதனையின்படி வாழ்கின்றவர்களையே
பெரிதும் விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டார். இது முற்றிலும்
உண்மை. இயேசுவின் காலத்திலும் சரி, இன்றும் சரி போதிப்பதற்குப்
பலர் இருக்கின்றார்கள். அதன்படி வாழ்வதற்குத்தான் ஆள்கள் குறைவு
(மத் 23:3).
நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தையோ, இறைவாக்குகளையோ
அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன் என்று கூறுகின்றார்.
இயேசுவின்மீது பரிசேயர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வைத்த
குற்றச்சாற்று, இயேசு ஓய்வுநாள் சட்டத்தை மீறுகின்றார் என்பது.
இயேசு யூத இரபிகள் கற்பித்து வந்த மூதாதையர் மரபைத் தான் மீறினாரே
அன்றி, திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் மீறவில்லை. அவற்றை
அழிக்கவும் இல்லை. மாறாக, அவற்றை நிறைவேற்றினார். மேலும் இயேசு
தொடர்ந்து பேசும்போது, இவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிப்பவர்
விண்ணரசில் பெரியவர் என்கிறார். இன்றைக்கு ஒருசிலர் போதிப்பது
ஒன்றும், வாழ்வது வேறோன்றுமாய் இருப்பார்கள். ஆனால், இயேசு
சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார் (லூக்
24:19). அதனால் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின்
வார்த்தையின் படி நடந்து, விண்ணரசில் பெரியவர்களை இருப்போம்.
சிந்தனைக்கு:
'திருவிவிலியத்தில் நாம் இயேசுவைச் சந்திக்கின்றோம். அவரோ
வாழ்வளிக்கும் வார்த்தையானவர்' என்பார் ஆலிஸ்டர் பெக் என்ற அறிஞர்.
எனவே, நாம் வாழ்வளிக்கும் வார்த்தையைக் கொண்டிருக்கும்
திருவிவிலியத்தை வார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக
விண்ணரசில் பெரியவர்களாகும் பேற்றினைப் பெறுவோம்.
ஓர் அரசன் தன் மூன்று மகன்களையும் அழைத்து
நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்று கேட்டார். 'உங்களை
மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன்' என்றான் முதல் மகன்,
இரண்டாவது மகன், 'உங்களைப் பொன்னைப்போல நேசிக்கிறேன்' என்றான்.
மூன்றாம் மகனோ, 'உங்களை உப்பைப்போல நேசிக்கிறேன்' என்றான்.
மூன்றாம் மகனின் பதிலைக் கேட்டவுடன் அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது.
இதையறிந்த சமையற்காரன் அரசனுக்கு உப்பு போடாமல் சமையல்
செய்து வைத்தான். உப்பில்லா உணவைச் சுவைத்த அரசன் கோபத்தோடு
சமையற்காரனைக் கூப்பிட்டான். அப்போது மூன்றாம் மகன், அப்பா!
உப்பில்லா உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள்.
என் வாழ்வுக்குச் சுவையூட்டி, வழிகாட்டும் ஒளியாக மேன்மைப்படுத்துகிறீர்கள்
என்று சொன்னவுடன் அரசன் உப்பின் தன்மையை உணர்ந்து
கொண்டான்.
இன்றைய வார்த்தை வழிபாடு நாம் அனைவரும் பிறருக்குப் பயன்
தரக்கூடிய சாரமுள்ள உப்பாக, ஒளி கொடுக்கும் விளக்காக வாழ
வலியுறுத்துகிறது. விழிகளுக்கு ஒளியாக, உணவுக்கு உப்பாக,
உலகிற்கு நாம் மாற வேண்டும். உண்மையை அறிந்து, தீமைகளைக்
களைந்து நன்மைகளில் மிளிர வேண்டும். உப்பு தன்னையே முழுவதும்
கரைத்துக் கொள்ளும்போதுதான் அதன் பயன் முழு நிறைவடைகிறது.
மெழுகுதிரி தன்னையே கரைக்கும்போதுதான் ஒளி தர முடிகிறது.
ஒருவரை கிறிஸ்துவின் சீடராக்குவது அவருடைய சாரமுள்ள சான்று
வாழ்வுதான். இதனால்தான் இயேசு மனித வாழ்வை உப்புக்கும் ஒளிக்கும்
ஒப்பிடுகின்றார். இருளின் நடுவே உன் ஒளி உதிப்பதாக (எசா.
58:10).
உப்புக் கரைந்தால்தான் சுவை. மெழுகு உருகினால்தான் ஒளி. சந்தனம்
வெட்டப்பட்டால்தான் மணம். ஆம்! மலராக மணம் வீசவும், சந்தனமாக
மணக்கவும், நாம் நம்மையே இழக்காமல் கொடுக்க முடியாது.
கொடுக்காமல் மன நிறைவோடு வாழவும் முடியாது. சாரமுள்ள உப்பாக,
மற்றவர்களின் வாழ்வுக்கு ஒளியாக மாறும்போதுதான் நாம்
மேன்மையடைகிறோம். உப்பானது பாதுகாக்கும் தன்மை கொண்டது.
திருடுவதற்கும் கொல்லுவதற்கும், அழிப்பதற்குமின்றி திருடர்
வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வுபெறும்
பொருட்டு வந்தேன் (1யோவா 10:10) என்ற இயேசுவின் அமுதமொழி
நமக்கும் உரியதாகும்.
உப்பானது மருந்தாகும் தன்மை கொண்டது. நோய்க்குப் பயன்படுத்தப்படும்
மருந்துகளில் அது கலக்கப்படுகிறது. நமது வாழ்வும்,
சொல்லும், செயலும் மற்றவரைக் குணமாக்க வேண்டும் (1பேதுரு
2:24).
உப்பானது ருசி தரக்கூடியது. "உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே" என்பது பழமொழி. "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று
சுவைத்துப் பாருங்கள்" (திபா. 34:8) என்று திருப்பாடல் ஆசிரியர்
கூறியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் சுவைமிக்க வாழ்வை வாழ
வேண்டும்.
உப்பானது வெள்ளையானது. கருப்பான கடல் நீரானது உப்பாக மாறிய
பின் வெண்ணிறமாகிறதுபோல திருமுழுக்கால் நாம் புனிதம்
(1பேதுரு 1: 15) பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும். சாரமுள்ள
மனித வாழ்வு கிறிஸ்துவைப்போல சுடர்விட்டு எரிய வேண்டும்.
எசாயாவைப் போல நாம் வழிகாட்டும் ஒளியாக நனவாக்கப் வாழ முன்
வருவோம். இறையரசுக் கனவை புறப்படுவோம்.
ஒருவன் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து. வாழ்நாள்
முழுவதும் கடவுளுக்கு விருப்பமுள்ளவனாய் வாழ்ந்தால்,
அவன் கடைப்பிடிக்கும் கட்டளைகள் அவனைக் காப்பாற்றும்
என இன்றைய முதல் வாசகம் கூறுகின்றது.
கடவுளின் ஒவ்வொரு கட்டளையும் அவரது அன்பை மனித குலத்திற்குப்
பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. ஆகவே ஒருவன் கடவுளை அன்பு
செய்தால் அவர் தரும் கட்டளைகளைக் கடைப்பிடிப்பான். இதனால்தான்
இயேசு, நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால், என் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பீர்கள் (யோவா 14:15] எனக் கூறியுள்ளார்.
புதிய ஏற்பாட்டில் இயேசு இறைமக்களுக்கு அளிக்கும்
கட்டளைகளில் சில இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
அவர் அருளும் ஏழு கட்டளைகள் :
1. சினம் கொள்ளக்கூடாது. 2.உன் சகோதரனோடு சமாதானமாக
வாழ். 3. பெண்களை இச்சையோடு நோக்காதே. 4. உன் ஐம்புலன்களும்
உனக்கு இடறலாயிராதபடி பார்த்துக்கொள். 5. மணமுறிவைத்
தேடாதே. 6. ஆணையிடவே வேண்டாம். 7. எப்பொழுதும் உண்மையே
பேசு.
நமது சிந்தனைச் சக்கரத்தை முதல் கட்டளையைச் சுற்றி
சற்று ஓடவிடுவோம். சினம் கொள்ளக்கூடாது என்கின்றார்
இயேசு. சினம் ஒரு வகையில் கொலையைவிடப் பெரிய பாவம்!
கொலை உடலுக்கு ஊறு விளைவிக்கின்றது. ஆனால் ஒருவனின்
சினம் உடலைவிட உயர்ந்த ஆன்மாவிற்குத் துயரத்தைக்
கொடுக்கக்கூடும். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறளொன்று. தீயினால் சுட்டபுண் உள்
ஆறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று கூறியிருப்பதை
நாமறிவோம். இதனால்தான் இயேசு, ஒருவன் மற்றவனைப்
பார்த்து முட்டாள் என்றோ, மதிகெட்டவனே என்றோ சொல்லுதல்
கூடாது என்று கூறுகின்றார்.
சினம் கொள்ளவே கூடாதா? என்ற கேள்வி சிலர் உள்ளத்தில்
எழலாம். இந்த கேள்விக்குப் பதிலை, புனித பவுலடிகளார்
எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கொடுக்கின்றார்.
எபே 4:26 அ-இல் சினமுற்றாலும் பாவம் செய்யாதீர்கள்
என்று கூறுகின்றார். இந்த அறிவுரை. நம்மைப்
பாவத்திற்கு உட்படுத்தாத சினமொன்று இருக்கின்றது
என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
சினத்தில் இரண்டு வகைகள் உள்ளன: ஒன்று கட்டுக்கடங்காத
சுயநலத்துடன் மற்றவர்களை அடியோடு அழிக்கின்ற கோபம்;
மற்றொன்று அடக்கமான, சுயநலமற்ற. மற்றவர்களை
உருவாக்குகின்ற கோபம். இரண்டாம் வகை சினத்தைத்தான்
இயேசு பரிசேயர்களிடமும் (மாற் 3:5),கோயிலிலும் (யோவா
2:13-17) வெளிப்படுத்தினார். அர்த்தமுள்ள சினத்திற்கு
விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு. ஆடு மாடுகளை
மேய்க்கச் சென்ற சிறுவர், சிறுமிகள் சிலர் காட்டில்
வாழ்ந்த நாகமொன்றிற்குப் பெருந்தொல்லை கொடுத்தனர்.
சினம் கொண்ட நாகம் அவர்களில் சிலரைக் கடித்துக்
காயப்படுத்தியது. காட்டின் வழியே பயணம செய்த துறவி
ஒருவர் அந்தப் பாம்பைப் பார்த்து. இனி யாரையும்
கடிக்காதே என்றார். அதற்கு பாம்பு, அவர்களும் எனக்கு
எந்தத் துன்பத்தையும் கொடுக்கக் கூடாது என்று சொல்லிச்
செல்லுங்கள் என்றது. பாம்பு துறவி கேட்டபடி கடிக்கவே
மாட்டேன் என்று சத்தியமும் செய்து கொடுத்தது.
இதையறிந்த சிறுவர்களும், சிறுமிகளும் பாம்பின்
சத்தியத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பாம்பை
அடித்துத் துன்புறுத்தி அதன் மண்டையை உடைத்தார்கள்.
காயப்பட்ட பாம்பு எலும்பும், தோலுமானது. ஆறு
மாதத்திற்குப் பிறகு அதைப் பார்க்கச் சென்ற துறவி அதன்
நிலைகண்டு மனம் வருந்தி, உனக்கு ஏன் இந்நிலை? என்றார்.
அதற்கு அந்தப் பாம்பு நடந்ததைச் சொன்னது. அப்பொழுது
துறவி, நீ மற்றவர்களைக் கொத்தக்கூடாது என்றுதான்
கூறினேனேயொழிய, சீற வேண்டாம் என்று கூறவில்லையே!
என்றார். பின் பாம்பு எப்படி வாழ்ந்திருக்கும் என்பதை
நாம் யூகித்துக்கொள்ளலாம்.
கடின மனம், அநீதி, அக்கிரமம், வஞ்சகம், சூழ்ச்சி
இவற்றை மாற்ற சினம் கொள்ளலாம். ஆனால் எது நீதி, எது
அநீதி, எது சரி, எது தவறு என்பதை எப்படி அறிவது ?
அதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. இறைவனால்
அன்பு செய்யப்பட்ட நம் அனைவருக்கும் திருமுழுக்கின்
வழியாக கடவுளின் ஞானமாகிய இயேசு
அருளப்பட்டிருக்கின்றார். அவரின் அருள் துணையோடு நாம்
சரியானவற்றைக் கண்டுணர்ந்து, இறைவனின் கட்டளைகளைக்
கடைப்பிடித்து அவரின் பாதுகாப்பிற்கு உரியவர்களாக
வாழ்வோம். மேலும் அறிவோம் :
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் (குறள் : 306).
பொருள்:
கோபம் ஆகிய தீ தன்னைக் கொண்டவரை ஒழிப்பதோடு,
அவருக்குத் துன்ப வேளையில் பாதுகாப்பாக உதவும் தோணி
போன்ற சுற்றத்தார் அனைவரையும் அழித்து விடும்.
ஓர் இந்து ஆசிரமத்தில் பூசை நடந்தபோதெல்லாம் பூசை அறையில் நுழைந்து தொந்தரவு
கொடுத்த ஒரு பூனையை பூசை நடக்கும்போது பூசை அறைக்கு எதிரிலிருந்த
ஒரு மரத்தில் கட்டவேண்டுமென்று கட்டளையிட்டார் ஆசிரமத்தின்
குரு. அந்த குருவும் அந்த பூனையும் இறந்த பின்னும், பூசை
நடந்தபோது மற்றொரு பூனை பூசை அறைக்கு எதிரிலிருந்த அதே மரத்தில
கட்டப்பட்டது. பூசை நடக்கும்போது பூனையைக் கட்டி வைப்பது
ஓர் இன்றியமையாத சடங்காகிவிட்டது.
கிறிஸ்துவின் காலத்தில் பரிசேயர்கள் ஒரு சில சடங்குகளை அவற்றின்
பொருள் புரியாமல் இயந்திரமயமாகக் கடைப்பிடித்து வந்தனர்.
திருச்சட்டங்களைக்கூட அவற்றின் உள் நோக்கம் புரியாமல்
குருட்டுத்தனமாகக் கடைப்பிடித்து வந்தனர். அவர்களின் ஒழுக்கம்
வெறும் புற ஒழுக்கமாகிவிட்டது; அக ஒழுக்கத்தைப்பற்றி அவர்கள்
கவலைப்படவில்லை. பரிசேயர்களின் இந்தப் போக்கைக் கிறிஸ்து
கண்டித்து, தம் சீடர்களிடம் இன்றைய நற்செய்தியில்
கூறுகிறார்: *மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின்
நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில்
நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது" (மத் 5:20).
கிறிஸ்தவர்களுடைய ஒழுக்கம் சட்டம் சார்ந்த புற ஒழுக்கமாக
மட்டும் அமையாமல், ஆவியாரால் நெறிப்படுத்தப் படும் அகஒழுக்கமாக
அமைய வேண்டுமென வலியுறுத்துகிறார் கிறிஸ்து. இன்றைய நற்செய்தி
மலைப்பொழிவின் தொடர்ச்சி யாகும். இதில் கிறிஸ்து சட்டங்களை
நாம் எவ்வாறு சுடைப்பிடிக்க வேண்டுமென விளக்குகிறார்.
ஒரு நோயை முற்றிலுமாகக் குணமாக்கவேண்டுமெனில், அந்நோயின்
தன்மை, அதன் காரணம், அதற்கான மருந்து ஆகியவற்றை அறிந்து,
மருந்தை நோயாளிக்குப் பொருந்தும்படி கொடுக்கவேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும்
வாய்நாடிவாயப்பச்செயல்" (குறள் 948)
அவ்வாறே. ஒரு பாவச் செயலை அல்லது தீச்செயலை தடுக்க
வேண்டுமென்றால், அதன் காரணத்தை அறிந்து அதைக் களைய
வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் கிறிஸ்து. கொலையைத் தடுக்க
வேண்டுமென்றால், அதற்குக் காரணமான கோபத்தைக் குழிதோண்டிப்
புதைக்க வேண்டும் (மத் 5:21). விபசாரத்தை விலக்க
வேண்டுமென்றால், அதற்குக் காரணமான காம இச்சை நிறைந்த
பார்வைக்கு வேகத்தடை போட வேண்டும் (மத் 5:27-28), கொலை
செய்பவர்கள் மட்டும் கொலைக்காரர்கள் அல்ல. பிறர்மீது கோபம்
கொள்பவர்களும் பிறரைப் பகைக்கிறவர்களும் கொலைக்காரர்கள்.
தம் ஈகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்"
(1 யோவா 3:15), சினத்தை நாம் அடக்காவிட்டால், அச்சினமே நம்மைக்
கொன்று அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர்.
ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் எப்போதும்
சிரித்துக்கொண்டே இருந்தனர். இது எப்படி சாத்தியமாகும்? மனைவிக்குக்
கோபம் வரும்போது கணவர்மீது கரண்டியைத் தூக்கி எறிவாள். அது
கணவர்மீது விழுந்தால் அவள் சிரிப்பாள். அவர்மேல் படாமல்
கீழே விழுந்துவிட்டால் கணவர் சிரிப்பார். இது எப்படி இருக்குது?
எத்தனையோ திருமணங்கள் தம்பதியரின் கோபத்தால், சகிப்புத்தன்மை
சகிப்புத்தன்மை இல்லாததால் மணமுறிவில் முடிவடைகின்றன. கோபப்பட்டாலும்
கதிரவன் மறையும்முன் கோபம் மறைந்து விடவேண்டும் (எபே
4:26).
விபசாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது; பெண்களைக்
காம இச்சையுடன் நோக்கக்கூடாது. தாவீது மன்னர் உரியாவின் மனைவியுடன்
விபசாரம் செய்யக் காரணம், அவள் குளித்துக் கொண்டிருந்தபோது
அவளைக் காம இச்சையுடன் நோக்கியதே ஆகும் (2 சாமு 11:2-4).
கண்போள போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? அடுத்தவரின் மனைவியை
நோக்காமல் இருப்பதுதான் ஆண்மைக்கு அழகு; அரண்; ஆன்ற ஒழுக்கம்.
ஒவ்வொரு நாளும் திருமணமான ஒருவர் பூக்காரியிடம் ஒரு கொத்து
மல்லிகைப் பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவார். மனைவியின்மீது
கொண்ட அன்பினாலா?' என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறினார்:
"இல்லை; பூக்காரிமீது கொண்டுள்ள அன்பினால்," காலப்போக்கில்
திருமண அன்பு திசைமாறித் திருட்டுத்தனமான அன்பாகிவிடுகிறது.
மனிதருக்குக் கடவுள் மனச் சுதந்திரம் கொடுத்துள்ளார். அதை
அவர்கள் பயன்படுத்தும் விதம் அவர்கள் கையில் உள்ளது
என்கிறது இன்றைய முதல் வாசகம். "மனிதர்முன் வாழ்வும்
சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ
அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்" (சீஞா 15:17).
"ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர் என்று
பதிலுரைப் பாடல் கூறுகிறது (திபா 119:1). திருச்சட்டங்
களைக் கிறிஸ்து மலைப் பொழிவில் விளக்கியுள்ளபடி கடைப்
பிடித்தால் நாம் பேறுபெற்றவர்கள். சட்டங்களை எழுத்து
வடிவில் அல்ல, அவற்றின் உள்ளுயிரில் கடைப்பிடித்தல்
வேண்டும். ஏனெனில், திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
"எழுதப்பட்ட சட்டத்தால் வினைவது சாவு: தூய ஆவியால் வினைவது
வாழ்வு" (2 கொரி 3:6).
"உங்கள் இதயத்தின் கதவுகளைத் தேடுங்கள். அங்கே இறையாட்சியைக்
கண்டுணர்வீர்கள்" "Find the doors of your heart. There
you wil discover the kingdom of God" என்று சொன்னவர் அலெக்சாண்ட்ரியோ
நகர் புனித கிளமென்ட். இதயத்தின் கதவுகளைக் கண்டுபிடிப்பது
அவ்வளவு எளிதன்று. அதற்கான வழியில்தான் செருக்கு, சினம்,
தீய இச்சை என்று எத்தனை தடைகள்! இதயம் தான் கடவுளைக்
காணும் கண். அது எப்போதும் நலமாக இருக்கச் செய்வது நமது
கடமை.
2003ஆம் அண்டில் நெல்சன் மண்டேலா பி.பி.சி. வானொலிக்கு அளித்த
பேட்டியில் ஒரு கேள்வி: "உங்களைச் சிறையிலிட்ட போது உங்கள்
வலுவான கட்சித் தொண்டர்கள் மூலம் சிறைக்கதவுகளையே உடைத்து
வெளிவந்திருக்கலாமே! இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்க
வேண்டாமே!" அவர் சொன்ன பதில்: "செய்திருக்கலாம். அது பெரிய
புரட்சியாகக் கூடத் தோன்றியிருக்கும். ஆனால் அது எங்கள்
இலட்சியமான நாட்டு விடுதலைக்குப் புனிதம்
சேர்த்திருக்காது. நாட்டுச் சட்டங்களை மீறிப் பெற்ற சுதந்திரத்திற்கு
மகத்துவம் இருந்திருக்காது".
மனிதனுக்கு முகவரி தந்து அவனை அடையாளப்படுத்துவது அவன்
கைக்கொள்ளும் நெறிமுறைகளே. இன்றைய மனிதனோ நெறிமுறைகளைத் தன்
சுதந்திரச் சிறகை ஒடிக்கும் சுமைக்கற்களாக வெறுக்கிறான்.
மனம் போன போக்கில் வாழ முற்படுகிறான். திருச்சட்டத்தை
நிறைவேற்ற வந்த இயேசு, சட்டங்கள் மனிதனை விடுவிக்க
வேண்டும். அடிமைப்படுத்தக் கூடாது (மார்க் 2:27,28) என்று
எடுத்துரைக்கிறார். தன்னையே அந்தச் சட்டங்களுக்கு உட்படுத்திக்
கொண்டு புதுப்பொருள், புதுப் புரிதல் தருகிறார். அதனால் இயேசுவே
நமக்கு நெறிமுறை!
இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட தங்கள் நாட்டில் நுழைவதற்காக
அதாவது புதிய சமுதாயம் படைக்க மோசே சட்டங்களை அறிவுரையாகத்
தருகிறார். அவற்றின் நோக்கமே வாழ்வை நெறிப்படுத்துவது, சமூக
வாழ்வை ஒழுங்குபடுத்துவது, சமயச் சடங்குகளைப் பொருள் உள்ளதாக்குவது,
அரசியலை அறநெறியோடு கொண்டு செல்வது. எனவே புதிய மோசேயாக இயேசு
இறையாட்சி சமூகத்தைப் படைக்க சட்டங்களைப் புதிய பார்வையோடு
புதியபொருளுணர்ந்து புதிய புரிதலோடு அணுக அழைக்கிறார். அதுதான்
திருச்சட்டத்தின் நிறைவு!
பரிசேயர்களின் நெறியைவிட சீடர்களின் நெறி சிறந்திருக்கட்டும்
என்று இயேசு சொல்வதன் பொருள் என்ன? பரிசேயர்களுடையது சட்டம்
சார்ந்த புற ஒழுக்கம். கிறிஸ்தவர்களுடையது ஆவியார் நெறிப்படுத்தும்
அக ஒழுக்கம். இது அன்பு சார்ந்தது. மனித நேயம் சார்ந்தது.
பரிசேயர்கள் மோசே தந்த கட்டளைகளை எழுத்துக்கு எழுத்துக் கடைப்பிடித்தால்
போதும் என்று செயல்பட்டார்கள். புதிய மோசேயான இயேசுவோ அந்த
எழுத்துக்களுக்கிடையே இழையோடும் உணர்வுகளுக்கும் உள்நோக்கத்திற்கும்
ஏற்பச் செயலாற்ற அழைக்கிறார்.
பாவம் புண்ணியம் எல்லாம் வெறும் செயல்பாட்டில் அல்ல, ஒருவனுடைய
உள்ளத்துச் சிந்தனைகளில் ஊற்றெடுக்கிறது என்பது தான் இயேசு
வலியுறுத்துவது. இயேசுவின் அணுகுமுறை திருச்சட்டத்தை அழிப்பதோ
மாற்றுவதோ அல்ல (மத். 5:17). அதன் வாழ்வுதரும் வேர்களுக்கு
மக்களின் இதயங்களை அழைத்துச் செல்வதேயாகும். இயேசு
காட்டும் புதிய பாதையில் புதிதாக நடக்க விரும்பும் சீடர்களின்
ஒழுக்கநெறி வழித்தடங்கள் அவர்களுக்கு வெளியே அல்ல அவர்களது
இதயத்துக்குள்ளே இருந்து இயக்குவது.
திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கே வந்தேன் என்ற இயேசு கொலை
செய்வது மட்டுமல்ல பாவம், கொலைக்குக் காரணமான சினம்
கொள்வதே பாவம் என்கிறார். சினம் கொள்ளாமல் இருத்தல் என்பது
நீதிக்கு அடங்கிப்போதல் அன்று. அநீதியோடும்
அக்கிரமத்தோடும் சமரசம் ஆகிவிடுதலும் அன்று. இல்லையென்றால்
இயேசுவின் கன்னத்தில் காவலாளி அநியாயமாக அறைந்தபோது "நான்
தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும்; சரியாகப்
பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?" (யோ. 18:23) என்று
சீறியிருக்கமாட்டார் இயேசு. "சினமுற்றாலும் பாவம்
செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம்
தணியட்டும்" (எபேசி. 4:26).
விபச்சாரச் செயல் மட்டுமன்று. விபச்சாரச் செயலுக்கு வேராக
இருக்கும் இச்சையோடு நோக்குவதே பாவம் என்கிறார் இயேசு.
கற்பைக் காத்துக் கொள்வது என்பது வெறும் கருப்பையைக்
காத்துக் கொள்வதா?
ஆற்றில் ஒரு பெண் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். அவசரமாக
அக்கரை போக வேண்டும். அதே வழியில் சென்ற இரு துறவிகளில்
ஒருவர் அவளைக் காப்பாற்றித் தோளில் தூக்கி வந்து
அக்கரையில் இறக்கிவிட்டுக் கிளம்பினார். கூட வந்த மற்றொரு
துறவி மனத்துக்குள் பொருமிக் கொண்டிருந்தார். "நீ ஒரு
துறவியா? துறவி பெண்ணைத் தொடலாமா? அதுவும் தோளில்
தூக்கலாமா? ..." முனகிக் கொண்டே வந்த துறவியைப் பார்த்து
பெண்ணைத் தூக்கி வந்து கரையேற்றிய துறவி சொன்னார்: "அந்தப்
பெண்ணை எப்போதோ அந்தக் கரையிலேயே தோளிலிருந்து கீழே
இறக்கிவிட்டுவிட்டேன். ஆனால் நீரோ இன்னும் அவளை உம்
இதயத்தில் சுமந்து கொண்டு வருகிறீரே..."
பரிசேயர்களின் நெறி சட்டத்துக்கு அப்பால் பார்க்க
மறுப்பது. ஆனால் சட்டம் என்றைக்கோ தோல்வி கண்டுவிட்டது.
நீதிமன்றங்களில், காவல் நிலையங்களில் இன்று சட்டமா ஆட்சி
செய்கிறது? பணம் அல்லவா! ஊழலும் கையூட்டுமல்லவா! இன்று
மட்டுமல்ல இயேசுவின் காலத்திலும் வாழ்விலும் தோல்வி
கண்டது. நீதியின் காவலன் பிலாத்து சொல்கிறான் "இவனிடம்
குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று. உடனே
யூதர்கள் கத்துகிறார்கள்: "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு.
அச்சட்டத்தின்படி இவன் சாக வேண்டும்" (யோ. 19:7) எங்கள்
சட்டப்படி என்றால் இவர்களுக்கு ஒரு சட்டம். பிலாத்துக்கு
ஒரு சட்டமா? எனவேதான், "பிலாத்து செய்தது சரியோ தவறோ
உன்னைவிட என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம்
செய்தவன்" என்கிறார் இயேசு.
அதனால்தான் திருத்தூதர் பவுல் சொல்வார்: "உள்ளத்தின்
ஆழத்திலிருநது உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்".
இதுதான் பரிசேயர்களின் நெறியை விடச் சிறந்த கிறிஸ்தவ நெறி.
கிறிஸ்தவர்கள் என்ற நிலையில் இறைவனின் சட்டங்களை இதயத்தால்
கடைப்பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக வீட்டுக்கும்
நிலத்துக்கும் வரி செலுத்தும் அரசுச் சட்டம்.
விரும்பினாலும் வரி செலுத்துவது கட்டாயம். தண்டனைக்குப்
பயந்து விரும்பாவிட்டாலும் வரி செலுத்தும் ஒருவர் அரசுச்
சட்டத்தை நிறைவேற்றி விடுகிறார். ஆனால் ஞாயிறு
திருப்பலிக்குப் போக மனமில்லாத ஒருவனை பெற்றோர்
வற்புறுத்தி இழுத்து வருகின்றனர். அவன் கோவிலுக்குள்
இருந்தாலும் கட்டளையைக் கடைப்பிடிப்பவனல்லன்.
காரணம்,அவனுடைய இதயம் அதில் இல்லை.
சட்டங்கள், கட்டளைகள் சமுதாயத்திற்கு இன்றியமையாதவை. ஆனால்
அவை கடவுளது திருவுளத்தின் வெளிப்பாடாக, அவரது ஞானத்தின்
பிரதிபலிப்பாக, அவரது பேரன்பை உணர்த்தும் காலக்
கண்ணாடியாகத் திகழ்கின்றன என்ற மேலான நோக்கோடு, உடலால்
மட்டுமன்றி உள்ளத்தாலும் இறைச் சட்டங்களைக் கடைப்பிடிக்க
வேண்டும் என்ற கருத்தைத்தான் நம்மை
இறையாட்சிக்குரியவர்களாக்கும் சிறந்த நெறியாகச்
சித்திரிக்கிறார் இயேசு. உடல் ஊனமுற்றிருந்தாலும்
பரவாயில்லை உள்ளம் ஊனமுற்றிருக்கக் கூடாது. அதனால்தான்
உடல்உறுப்பை இழந்தாவது உள்ளத் தூய்மையைக் காக்க வேண்டும்
என்கிறார் இயேசு.
மனித மனம் பூனைக்கு ஒத்தது. கட்டளைச் சுவரில் மனம்
மதில்மேல் அமர்ந்துள்ள நாம் நன்மையாஎ தீமையா வாழ்வின்
வளமையா சாவின் சகதியா எந்தப்பக்கம் சாயப் போகிறோம்? (முதல்
வாசகம்) "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு" (உரோமை 14:10).
அன்பால் கட்டளைகளை நிறைவுக்குக் கொணர்வோம். உள்ளம் ஒன்றாத
போலித்தனத்தைப் புதைப்போம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பொதுக்காலம் 6ம் ஞாயிறு
செரோக்கி' (Cherokee) என்ற அமெரிக்கப் பழங்குடி இனத்தைச்
சேர்ந்த முதியவர் ஒருவர், தன் பேரனுக்கு, வாழ்க்கைப் பாடங்களைச்
சொல்லித்தந்தார். "நமக்குள் இரு ஓநாய்கள் உள்ளன. ஒரு ஓநாய்,
மிகவும் நல்லது. சாந்தம், பொறுமை, கருணை, என்ற நல்ல குணங்கள்
கொண்டது. மற்றொரு ஓநாய், பொல்லாதது. கோபம், ஆணவம், பொய்மை
என்ற பல எதிர்மறை குணங்கள் கொண்டது. இவ்விரு ஓநாய்களும்,
எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே உள்ளன" என்று முதியவர்
சொன்னார்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின், பேரன், தாத்தாவிடம், "இந்தச்
சண்டையில் எந்த ஓநாய் வெல்லும்?" என்று கேட்டான். அதற்கு
தாத்தா, பேரனிடம், "நீ எந்த ஓநாய்க்கு அதிக உணவளிக்கிறாயோ,
அதுதான் வெல்லும்" என்றார். நாம் எந்த ஓநாயை ஊட்டி வளர்க்கிறோம்
என்பது நாம் எடுக்கும் முடிவு.
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் தெரிவுகள் செய்கிறோம்.
முடிவுகள் எடுக்கிறோம். நமது முடிவுகள், நல்லது, கெட்டது,
என்ற இரண்டுக்கும் இடையில் மட்டும் நிகழ்வதில்லை. பல வேளைகளில்,
நல்லது, அதைவிட நல்லது, அல்லது, சிறந்தது என்ற இரண்டுக்கும்
இடையிலும் நாம் தெரிவுகளை மேற்கொள்கிறோம். இன்றைய
வழிபாட்டு வாசகங்கள், நாம் மேற்கொள்ளும் தெரிவுகளைப் பற்றி
சிந்திக்க நம்மை அழைக்கின்றன. இன்றைய முதல் வாசகம் -
சீராக்கின் ஞானம் 15:15-20 - கடவுளுடைய கட்டளைகளை கடைபிடிப்பது,
அல்லது அவற்றை கடைபிடிக்க மறுப்பது என்ற இரு தெரிவுகளை நம்முன்
வைக்கின்றது. நல்லது, கெட்டது என்ற இரு நிலைகளுக்கு இடையில்
நாம் மேற்கொள்ளும் தெரிவு இது. கட்டளைகளில் சொல்லியிருப்பனவற்றை
சற்றும் மாற்றாமல் பின்பற்றுகிறோமா, அல்லது, கட்டளைகளில்
காணப்படும் உள்ளார்ந்த பொருளை உணர்ந்து அவற்றை பின்பற்றுகிறோமா
என்ற கேள்வியை இன்றைய நற்செய்தியில் - மத்தேயு 5:17-37 -
இயேசு நம்முன் வைக்கிறார். அதாவது, நல்லது, மற்றும் அதைவிட
நல்லது என்ற இரு நிலைகளுக்கிடையே நம்மை தெரிவு செய்யச்
சொல்லி, முடிவெடுக்கச் சொல்லி இயேசு நமக்கு சவால்
விடுக்கிறார்.
தொடர்ந்து, மூன்றாவது வாரமாக, மலைப்பொழிவின் வழியே, இயேசு
சொல்லித்தரும் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறோம்.
சென்ற வாரம், இயேசு கூறிய உப்பும், விளக்கும் என்ற இரு உருவகங்களைச்
சிந்தித்தோம். இந்த வாரம், நமது சிந்தனைகளை, நீரும்,
நெருப்பும் என்ற, வேறு இரு உருவகங்களுடன் ஆரம்பிப்போம்.
சீராக்கின் ஞானம் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய
முதல் வாசகம், இவ்வுருவகங்களை தருவதோடு, எளிய வார்த்தைகளில்,
அழகான, ஆழமான வாழ்க்கைப் பாடங்களையும் நமக்கு உணர்த்துகின்றது.
இவ்வாசகத்தின் அறிமுகப் பகுதி இதோ: நீ விரும்பினால் கட்டளைகளைக்
கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப்
பொருத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர்
வைத்துள்ளார்; உன் கையை நீட்டி, உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள்.
மனிதர்முன், வாழ்வும், சாவும், வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள்
விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
(சீராக்கின் ஞானம் 15: 15-17)
நீரா, நெருப்பா... எதை கைநீட்டி எடுப்பது? வாழ்வா, சாவா...
எதை விரும்புவது? என்ற கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாக, எளிதில்,
பதில் சொல்லிவிடலாம். நெருப்பை எடுப்பதை விட, நீரை எடுப்பதே
மேல் என்றும், சாவை விரும்புவதை விட, வாழ்வை விரும்புவதே
மேல் என்றும், நம் அறிவு எளிதில் சொல்லிவிடும். ஆனால்,
வாழ்வில், அறிவு மட்டுமே நம்மை வழிநடத்துகிறதா? இல்லையே!
உறவுகள், உணர்வுகள், பல்வேறு பழக்கங்கள் என்று, வேறு பல சக்திகளும்
நம்மை வழிநடத்துகின்றனவே. இந்த சக்திகளால் வழிநடத்தப்பட்டு,
நாம் நெருப்பைத் தேடிச்சென்ற நேரங்களை, நெருப்பை கைநீட்டி
எடுத்த நேரங்களை, நினைத்துப் பார்க்கலாம்.
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு, பார்க்க அழகாக இருக்கும்.
அந்த அழகினால் ஈர்க்கப்பட்டு, குழந்தை ஒன்று, நெருப்பை
நோக்கி, தவழ்ந்து செல்லும்போது, அதைத் தடுக்கிறோம். குழந்தை
எவ்வளவுதான் அடம் பிடித்து அழுதாலும், நெருப்பின் அருகே குழந்தை
செல்வதை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால், நெருப்பையொத்த எத்தனை
விபரீத ஆசைகள் நம்மை ஈர்த்துள்ளன? எத்தனை முறை, நாம், அந்த
ஈர்ப்பினால், நெருப்புடன் விளையாடி, புண்பட்டிருக்கிறோம்?
நம் வாழ்வின் எத்தனைப் பகுதிகளை, அந்த நெருப்பு
விளையாட்டில், சாம்பலாக்கியிருக்கிறோம்?
இயற்கையில், நீர், நெருப்பு இரண்டும் நல்லவையே. ஆனால்,
அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்து,
நன்மையோ, தீமையோ விளையலாம். நெருப்பும், நீரும் நமக்கு
முன் இருக்கும்போது, கைநீட்டி எடுத்துக்கொள்ள, நீரே
நல்லது, நெருப்போடு விளையாடுவது ஆபத்து என்ற எச்சரிக்கையை,
அனைவரும் உணர்கிறோம். இருப்பினும், நெருப்போடு விளையாடும்
பலரை நாம் பார்த்திருக்கிறோம். இளமை வேகத்தில் நெருப்புடன்
விளையாடத் துடிக்கும் இளையோரை, இவ்வேளையில் நினைத்துப்
பார்ப்போம். அவர்கள், தங்கள் விபரீத விளையாட்டுகளை விட்டு
விலகி, நல்வழி வந்து சேரவேண்டும் என மன்றாடுவோம்.
சீராக்கின் ஞானம் எழுப்பும் மற்றொரு கேள்வி - வாழ்வா,
சாவா... எதை விரும்புவது? அறிவுப்பூர்வமாய்ச்
சிந்தித்தால், இதுவும் மிக எளிதான கேள்விதான். சாவை எப்படி
விரும்பமுடியும்? வாழ்வைத்தான் விரும்பவேண்டும் என்று,
எளிதில் பதில் சொல்லிவிடலாம். சீராக் கூறும் வாழ்வு, சாவு
இவை குறித்து, இயேசுசபை அருள்பணியாளர் Walter Burghardt
என்பவர் கூறும் விளக்கம், இந்தக் கேள்வியை, இன்னும் சிறிது
ஆழமாய் ஆய்வுசெய்ய அழைக்கின்றது.
சீராக் கூறும் வாழ்வு, மூச்சு விடுதல், இதயம் துடித்தல்
போன்ற, வெறும் உடல் சார்ந்த செயல்களை மட்டும் கருத்தில்
கொண்டு சொல்லப்பட்டது அல்ல. சீராக்கைப் பொருத்தவரை,
இறைவன் மீது பற்றுகொண்டு, அவர் வழி நடப்பதே வாழ்வு.
அதேபோல், அவர் கூறும் சாவு, நமது மூச்சு நின்று போகும்போது
நிகழும் சாவு அல்ல. மூச்சு இருக்கும்போதே, மனிதர்களால்
சாகமுடியும். இறைவாக்கினர்களைப் பொருத்தவரை, இறைவனின்
வழியில் நடக்காத மனிதர்கள் மூச்சுவிடும் நடைப்பிணங்களே.
எனவே, இறைவாக்கினர் சீராக், வாழ்வையும், சாவையும் நம்முன்
வைக்கும்போது, இறைவனின் வழி நாம் வாழ்கிறோமா என்ற கேள்வியை
நம்முன் வைக்கிறார். இதுவே, அருள்பணி Walter Burghardt
அவர்கள் தரும் விளக்கம்.
இறைவனின் வழி வாழ்வது என்பதை, இறை சட்டங்களின்படி, அதாவது,
மோசே தந்த சட்டங்களின்படி வாழ்வது என்ற அளவில் நினைத்துப்
பார்த்தனர், இஸ்ரயேல் மதத்தலைவர்கள். அத்துடன், மோசே தந்த
சட்டங்களையும், தங்கள் வசதிக்கேற்ப அவரகள் வளைத்துக்கொள்ள
முயன்றனர். எனவே, சுயநலக் கணக்குகளோடு சட்டங்களைப்
பின்பற்றி, அவர்கள் வாழ்ந்த வாழ்வு, வெறும் மூச்சுவிடும்
நடைப்பிணங்களின் வாழ்வு என்பதை, இயேசு, தன் மலைப்பொழிவில்
மட்டுமல்ல, தன் வாழ்நாள் முழுவதும் தெளிவுப்படுத்தினார்.
"முன்னோர் கூறிய சட்டங்களைக் கேட்டிருக்கிறீர்கள்....
ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று, இன்றைய
நற்செய்தியில் பலமுறை கூறி, சட்டத்தையும் தாண்டிய ஒரு
மேலான வாழ்வுக்கு அழைப்பு விடுக்கிறார், இயேசு. "நான்
உங்களுக்குச் சொல்கிறேன்..." என்று இயேசு, மீண்டும்,
மீண்டும், கூறிய இந்த வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களுக்கு
அதிர்ச்சியைத் தந்திருக்கும். ஏதோ ஒரு சிற்றூரிலிருந்து,
வந்த ஒரு தச்சனின் மகன், மோசே தந்த சட்டங்களை மாற்ற
முயல்கிறாரே என்று, கேள்விகள் எழுந்திருக்கலாம். கோபம்
கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம்.
அதனால், இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில், இயேசு, தன்
நிலையைத் தெளிவுபடுத்துகிறார். சட்டங்களை அழிக்க தான்
வரவில்லை; அவற்றை நிறைவேற்றவே வந்துள்ளேன் என்று
கூறுகிறார். சட்டங்களை வெறும் சடங்காக, சம்பிரதாயமாக,
ஏனோதானோவென்று பின்பற்றாமல், அச்சட்டங்களின் பின்னணியில்
உள்ள ஆத்மாவை, அர்த்தத்தைக் கண்டுபிடித்து, அதைப் பின்பற்ற
வேண்டும் என்பதை, இயேசு தெளிவுபடுத்துகிறார். மோசே கூறிய
சட்டங்களை, இன்னும் ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறார்
இயேசு.
இயேசு கொணர்ந்த இந்த மாற்றத்தை, ஓர் எடுத்துக்காட்டின்
உதவிகொண்டு, நாம் உணர முயல்வோம். கோவிலில் காணிக்கை
செலுத்துவதுபற்றி மோசே தந்த சட்டங்களை, இயேசு எவ்விதம்
மாற்றி சிந்தித்துள்ளார் என்பதை, இன்றைய நற்செய்தி
நமக்குச் சொல்கிறது.
மோசே தந்த காணிக்கைச்சட்டங்கள், கோவிலுக்குக்
கொண்டுவரப்படும் காணிக்கை போருள்களைப் பற்றியே அதிகம்
பேசின. காணிக்கையாகக் கொண்டுவரப்படும் ஆட்டுக்குட்டிகள்,
புறாக்கள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவை, எவ்விதம்
இருக்கவேண்டும் என்பதை, மோசேயின் சட்டங்கள் வலியுறுத்தின.
இயேசு ஒருபடி மேலே செல்கிறார். வெளிப்புறமாக நம் கரங்களில்
ஏந்திவரும் காணிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும். காணிக்கை
செலுத்தவந்த நம் உள்புறம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியை
இயேசு எழுப்புகிறார். நீங்கள் உங்கள் காணிக்கையைப்
பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர்
சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென
அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள்
காணிக்கையை வைத்துவிட்டு, போய், முதலில், அவரிடம் நல்லுறவு
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள்
காணிக்கையைச் செலுத்துங்கள். (மத். 5: 23-24)
காணிக்கை செலுத்தும் நேரத்தில், ஒருவருக்கு, தன் உறவுகள்
சரியில்லை என்ற நெருடல் எழுகிறது.. உறவுகள் சரியில்லாமல்
போனதற்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? என்ற
கேள்வியும் எழுகிறது. "காணிக்கை செலுத்த வரும்போது,
நீங்கள் உன் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல்
கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர்
தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு
முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள்
எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே
நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர்
தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... சகோதர, சகோதரிகள்
நடுவே உருவாகும் மனத்தாங்கலுக்கு நாம் காரணமாக இல்லாமல்,
அடுத்தவர் காரணமாக இருந்தாலும், அதை உணர்ந்த உடனேயே, நமது
காணிக்கைச் சடங்குகளை நிறுத்திவிட்டு, முதலில் அவர்களுடன்
நல்லுறவை உருவாக்க நாம் செல்லவேண்டும். காணிக்கைகள்
காத்திருக்கலாம் என்று சொல்கிறார் இயேசு.
சரி... பிறர் நம்மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதற்கு பதில்,
நாம் அவர்கள் மீது மனத்தாங்கல் கொண்டிருப்பதாக உணர்ந்தால்,
என்ன செய்வது? இக்கேள்விக்கு, இயேசுவின் பதில் எப்படி
இருந்திருக்கும் என்று எளிதில் கற்பனை செய்துகொள்ளலாம்.
உன் சகோதரர், சகோதரிகள் மீது நீ மனத்தாங்கல்
கொண்டிருந்தால், காணிக்கை செலுத்துவதைப் பற்றியே சிந்திக்க
வேண்டாம். முதலில் நல்லுறவை உருவாக்க முயற்சி செய்.
பின்னர், உனது காணிக்கையைப் பற்றி சிந்திக்கலாம் என்று
திட்டவட்டமாகச் சொல்லியிருப்பார் இயேசு.
காணிக்கை செலுத்துவதற்கு முன் பிறருடன் நல்லுறவு கொள்ள
வேண்டும் என்ற இயேசுவின் இந்த ஒரு கூற்றை மட்டும்
முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் விழைந்தால்,
நமது ஞாயிறுத் திருப்பலியை இப்போதே நிறுத்த
வேண்டியிருக்கும். நீங்களும், நானும், ஏதோ ஒரு வகையில்
மனத்தாங்கல்களைச் சுமந்து இப்போது வந்திருக்கிறோம். நமது
காணிக்கையைச் செலுத்தும் முன், பிறருடன் ஒப்புரவு பெற
வேண்டும். சரி, அது இப்போது முடியாத பட்சத்தில்,
அதற்கடுத்த நிலையையாவது நாம் தேடவேண்டும்... அதாவது, நமது
மனத்தாங்கலைத் தீர்க்கும் ஓர் ஆவலை நாம் பெறுவதற்கு, ஒரு
நல்லுறவு முயற்சியை நாம் எடுப்பதற்கு, இறைவன் இன்று நமக்கு
அருள் தரவேண்டும் என்று செபிப்போம்.
காணிக்கைச் சட்டங்களைப் போலவே, அடுத்தவர் மீது
தொடுக்கப்படும் வழக்குகள், பெண்களை மாண்புடன் நடத்தும்
முறை, மணவிலக்கு, பொய்யாணை என்று பல விடயங்களில், மோசே
தந்த சட்டங்களைத் தாண்டி, உன்னத வழியைப் பின்பற்றவேண்டும்
என்று, இயேசு சவால்களை விடுத்துள்ளார். இன்றைய நற்செய்தி
முழுவதும், இயேசு எடுத்துக்காட்டும் பல சட்டங்கள்,
வெளிப்புறத்தைச் சார்ந்தவை. "ஆனால், நான் உங்களுக்குச்
சொல்கிறேன்," என்று இயேசு கூறும் சவால்கள், நமது
மனசாட்சியைச் சார்ந்தவை.
தொடர்ந்து மூன்று வாரங்களாய், இயேசு, தன் மலைப்பொழிவின்
வழியே, சவால்களை நம்முன் வைத்துள்ளார். இப்படியும்
வாழமுடியுமா என்ற பிரமிப்பை எழுப்பும் சவால்கள் இவை.
இப்படி வாழ்ந்தால் எவ்வளவோ சிறப்பாக இருக்குமே என்ற
ஏக்கத்தை எழுப்பும் சவால்கள் இவை. நல்லவற்றை
நடைமுறைப்படுத்த நம் மனதில் எழும் கேள்விகள்,
பிரமிப்புகள், ஏக்கங்கள், கனவுகள் அனைத்தும், நம்மைப்
புனிதத்தின் சிகரம் நோக்கி அழைத்துச் செல்லும் படிகற்கள்.
இந்தப் படிகளில் பணிவோடு ஏறிச்சென்று, நம்மையே தகுந்த
காணிக்கையாக்கும் பக்குவத்தை இறைவன் நமக்கு
வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சீராக். 15: 15-20)
சீராக் நூலானது பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுத்தும்
நூல்களில் ஒரு சிறந்த நூலாக இருக்கிறது. இது அன்றாட
வாழ்க்கை சூழல்களில், ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும்
நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. இது எபிரேய மொழியில்
கி.மு. 180-களில் ஏசு என்பவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று
அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த நூல் எகிப்தில் வாழ்ந்த யூதர்களுக்காக, எபிரேய மொழியை
மறந்து போனவர்களுக்காக, அவரது பேரனால் கிரேக்க மொழியில்
மொழிபெயர்க்கப்ட்டுள்ளது. இந்த மொழிபெயர்ப்பு மோசே கொடுத்த
கட்டளைகளை மக்கள் மறந்து விடக் கூடாது என்பதற்காக எழுதப்பட்டது.
இந்த நூல் இன்றும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஞானத்தின் பெட்டகமாக
இருக்கிறது. இன்றைய வாசகம் இதற்கு ஒரு சான்றாக இருக்கிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி 2:6-10)
இவ்வாசகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாசகத்தின் தொடர்ச்சியாக
வருகிறது. இது மதமாறிய கொரிந்தியர்களை பார்த்து அவர்கள்
பெற்றுக்கொண்ட கிறிஸ்தவ விசுவாசம் கடவுளின் கொடையென தூய பவுல்
கூறுகிறார். இந்த விசுவாசம் இந்த உலகத் தத்துவங்களாலும்,
உலக ஞானத்தாலும் தூய பவுலால் கொடுக்கப்பட்டதல்ல, மாறாகக்
கடவுளின் அளவற்ற இரக்கத்தினால் கொடுக்கப்பட்டது எனப் பவுல்
கூறுகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 5: 17-37) மத்தேயுவின்
மலைப்பொழிவின் தொடர்ச்சி இன்றும் நமக்கு நற்செய்தியாகக்
கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பகுதியில் கடவுள் மோசே மூலம்
கொடுத்த பத்துக்கட்டளைகளை எடுத்துத் தேவையான புதுமைகளைப்
புகுத்தி இயேசு கையாள்கிறார். "நான் உங்களுக்குச்
சொல்கிறேன்" என மிகவும் அதிகாரத்தோடு, புறத் தூய்மைக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல் அகத் தூய்மைக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டுமென்று கடவுளின் தரத்திலிருந்து போதிக்கத்
தொடங்குகிறார்.
மறையுரை
சட்டங்கள், ஒழுங்குகள், நெறிமுறைகள் என்பன எப்பொழு துமே ஒரு
குடும்பம் நல்லா இருக்க வேண்டும், ஒரு ஊர் நல்லா இருக்க
வேண்டும், இதன் மூலம் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற
உயர்வான நோக்கத்தோடு உருவாக்கப்பட்டன. இது எல்லா சூழ்நிலைகளிலும்
வளர்ச்சியை, மகிழ்ச்சியை, நிறைவான வாழ்வை தந்தாலும், எல்லா
நேரங்களிலும் எல்லோராலும் இன்முகத்தோடு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
எப்பொழுதுமே பயணம் கடினமாயிருக்கும் ஆனால் நாம் செல்ல
வேண்டிய, அடைய வேண்டிய நோக்கமோ, எதிர்கால திட்டமோ வந்தவுடன்
எல்லா கடினங்களும் நமக்கு மறந்துபோகும். எப்பொழுது நாம்
கரடுமுரடான முட்கள் நிறைந்த பாதைகளில் நடக்கிறோமோ, அந்த நிகழ்காலம்
நமக்குத் தொல்லைகளாக தெரியும். அதேபோலத்தான் சட்டங்களையும்,
ஒழுங்குகளையும் நாம் கடைபிடிக்கின்றபொழுது நமக்குக் கசப்பான
அனுபவம் ஏற்படுகிறது. ஆனால் முடிவு நமது வாழ்க்கையில்
நிறைவை ஏற்படுத்துகிறது.
ஒரு சிலர் பத்துக் கட்டளைகள் என்பது இந்தக் காலத்திற்கு
பயன் இல்லாதது என்றும் அது இறந்தகால ஒன்று என்றும் கருதி
அதை விரும்பாமலிருக்கின்றனர். சிலர் வெறுக்கின்றனர். கடவுள்
கொடுத்த கட்டளைகள் மக்களின் நலனுக்காகவும் ஒரு நிறைவான சமுதாயம்
படைக்கவுமேயன்றி மக்களை அடிமைகளாகப் பாவிக்க அல்ல. நமது
கடவுளை நாம் நமது நன்மைகளை விரும்புபவர் அதாவது நமது சிந்தனைகளுக்கெல்லாம்
அப்பாற்பட்ட நல்லவர் என்று வணங்குகிறோம்.
இப்படிப்பட்ட நல்லவர் எப்படி நமக்குப் பாதகமான நம்மை
பாதிக்கக்கூடிய சட்டங்களை இயற்ற முடியும்? நமது கடவுளின்
அன்பு இந்த கட்டளைகளின் மூலம் நம்மில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
யாரெல்லாம் இந்தச் சட்டங்களுக்கு எதிராகப் போகிறார்களோ,
அவர்கள் கடவுளுக்கு ஒரு நாள் கணக்குக் கொடுக்க வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் கடவுளின் கட்டளைகளை மீற முடியாது அல்லது
உடைக்க முடியாது மாறாக நம்மையே நாம் கடவுளின் கட்டளைகளுக்காக
உடைத்துக் கொள்ள வேண்டும். "மனிதர் முன் வாழ்வும் சாவும்
வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே
அவர்களுக்குக் கொடுக்கப்படும்" (சீராக் 15:17). இந்த
வார்த்தை யாரெல்லாம் சட்டங்களைக் கடைபிடிக்கிறார்களோ அவர்கள்
வாழ்வார்கள் என்றும் யாரெல்லாம் கடைபிடிக்கவில்லையோ அவர்கள்
சாவார்கள் அதாவது இறந்தவர்களுக்குச் சமம் என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் கடவுளின் கட்டளைகள் நம்மீது கொண்ட அன்பால் அவர்
கொடுத்தது. இதைத்தான் நாம் மத்தேயு 5:17-இல் பார்க்கிறோம்.
இயேசு கூட "திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க
வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம். அவற்றை அழிப்பதற்கல்ல,
நிறைவேற்றவதற்கே வந்தேன்" என்கிறார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததன் மூலம், தன்னையே கையளித்ததன்
மூலம், கடவுளின் திருச்சட்டங்களையெல்லாம், நமது மேல் கொண்ட
அன்பிற்காகவும், இறைவன் மேல் கொண்ட அன்பு நிறைவாக இருக்கவும்
கடைப்பிடிக்கிறார். தமது செயல்களை செய்ததன் மூலம் இறைவன்
நம்மையும் வெளிப்படையாக சட்டங்களை வாழந்து காட்ட அழைப்பு
விடுக்கிறார். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் வெளிப்படையான
பழக்கவழக்கங்களால் மட்டுமல்ல உள்ளார்ந்த தூய்மையாலும் நிறைவடையலாம்.
இந்த திருச்சட்டங்கள் நம்மைக் கொலை செய்தல் என்ற பெரிய
குற்றத்திலிருந்து மட்டுமல்ல கொலை செய்யத்தூண்டும் அடிப்படை
உணர்வான கோபத்திலிருந்தும் விலக அழைப்பு விடுக்கின்றன. மோக
பாவமாகிய கற்பழித்தல் என்ற குற்றத்திலிருந்து மட்டுமல்ல,
இதற்காக நம்மைத் தூண்டும் காமப்பார்வையிலிருந்தும் விலகச்
சொல்கின்றன.
பொய்சாட்சி செய்வதிலிருந்தும், பொய்சத்தியம் செய்வதி-
லிருந்தும் மட்டுமல்ல நமது தவறான எண்ணங்களுக்கு
தூண்டுகோலாக இருக்கும் நேர்மையற்ற தவறான நோக்கங்களுக்கும்
ஒரு நேர்மையான வழி கிடைக்கும், விடுதலை கிடைக்கும் என்று
மத்தேயு 5:21-37-லிருந்து வாசிக்கக் கேட்கிறோம். இந்தப்
புதுமையான போதனைமூலம் நாமும் தந்தையாகிய இறைவனைபோல நிறைவானவர்களாக
முழுமையான கடவுளாக இருப்பதால்தான் மெழுகுதிரி, சாம்பிராணி
மற்றும் தீர்த்தம் மூலம் கடவுளுக்கு நாமும் தூய்மையாக இருக்கிறோம்
என்பதை கூறுகிறோம். வாரம் முழுவதும் இந்த உள்ளார்ந்த தூய
தன்மை, நிறைவு நம்மிடம் இருக்கிறதா?
நாம் கடவுளைப்போலத் தூய்மையாகவும், முழுமையாகவும் நிறைவாகவும்
இருக்க முடியுமா? இது நமது சாத்தியமாகப்படாவிட்டாலும் முயற்சி
செய்யாமல் இருப்பதைவிட முயற்சி செய்து பார்ப்பதை நமது கடவுள்
விரும்புகிறார். நாம் தனியாக இதைத்தேடி அலைய வேண்டிய கட்டாயமில்லை,
மாறாகக் கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். (1கொரி 2:7)
"வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறைஞானத்தைப்
பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும்
என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில்
இருந்தது". கடவுள் கொடுத்த ஞானத்தால் நாம் எல்லாம் செய்ய
முடியும். ஆன்மீக கண்கொண்டு கடவுளின் அன்பால் நமக்குக்
கிடைத்த மதிப்பீடு- களையும், கடவுளின் ஆற்றல் நம்மிலிருந்து
நம்மை வழிநடத்துவதையும், உணர்ந்து இதெல்லாம் நமக்காக மரித்த
கிறிஸ்துவால் நமக்குக் கிடைக்கப்பெற்றது என்பதையும் அறியலாம்.
எப்பொழுதெல்லாம் நாம் வாழுகின்ற சூழலில் நமக்கு பிடிக்காதவர்கள்
நமகெதிராகத் திரும்பும்பொழுது, நம்மைத் துன்புறுத்துகின்றபொழுது,
நம்மைத் தூற்றுகின்றபொழுது நாம் பொறுமையாக இருக்கிறோமோ....
எப்பொழுதெல்லாம், நமது கடமைகளிலிருந்து பிறர் நம்மை தவறச்
செய்யும்பொழுது, பல காரணகளுக்கு நம்மைக் கீழ்த்தரமாக நடத்துகின்றபொழுது
கொஞ்சம் நிலையாக இருக்கிறோமோ... எப்பொழுதுதெல்லாம், நமது
தகுதிக்கு ஒவ்வாத நிலையில், நமது திறமைக்கு மதிப்பு
கொடுக்காமல் நம்முள் திணிக்கப்பட்ட வேலையைத் தாழ்ச்சியோடு
செய்கிறோமோ...
எப்பொழுதெல்லாம், நமது அமைதி, நிம்மதி பறிக்கப்படுகின்ற
சூழ்நிலையிலும் மனதைரியத்தோடு இருக்கின்றோமோ... எப்பொழுதெல்லாம்,
காயப்பட்டிருக்கின்ற சூழ்நிலையிலும் புன்னகையோடு இருக்கின்றோமோ...
எப்பொழுதெல்லாம் நாம் சுயநலம் இல்லாமல் பிறரது சிந்தனைகளையும்
உணர்வுகளையும் புரிந்து கொள்கிறோமோ.... எப்பொழுதெல்லாம் செபம்
செய்து கடவுளை நமது உள்ளத்திற்கு கொண்டு வருகிறோமோ அப்பொழுதெல்லாம்
நாம் முழுமைபெற, நிறைவு பெற முயற்சிக்கிறோம். இதெல்லாம்
நமக்கு 164கடினமானதாக இருக்கலாம். ஆனால் முயன்றால் முழுமை
பெறலாம். எனவே ஒவ்வொரு திருச்சட்டமும் இயேசுவால்
முழுமையாக்கப் பட்டதுபோல் நம்மையும் முழமையாக்க கட்டளைகளை
கடைபிடிப்பதில் இயேசுவை பின்பற்றுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
➤ மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் வெளியடையாளங்களாகிய
நெறிமுறைகளைக் கடைபிடித்து சட்டத்தின் உட்பொருளாம் இரக்கம்,
அன்பு, மன்னிப்பு இவற்றைப் புறந்தள்ளினார்கள்.
➤ கோபத்தின் வெளிப்பாடுகளான எரிச்சல், சினம், வெறுப்பு, பகை,பழிவாங்கும்
உள்ளம் இவற்றை மனித உள்ளங்களிலிருந்து இயேசு களைய
விரும்புகிறார்.
➤ நம்பிக்கையே வாழ்வின் ஊற்று.
➤அன்பின் சமுதாயம் மலர்ந்திட.
இன்றைய முதல் வாசகம், கட்டளைகளைக் குறித்து ஆரம்பிக்
கின்றது. இரண்டாம் வாசகம் ஞானத்தைப் பற்றி பேசுகின்றது.
நற்செய்தியில் நமதாண்டவர் திருச்சட்ட த்தைப் பற்றியும்
இறை வாக்குகளைப் பற்றியும் போதிக்கின்றார். இவையனைத்தும்
ஒன்றோடு ஒன்று கருத்தியல் தளத்தில் இணைந்திருந்தாலும்,
இன்றைய நற்செய்தி வழி இறைவன் தரும் செய்தியைக்
காண்போம்.
பின்னணி
மத்தேயு 5 : 17 - 37 எனும் இன்றைய நற்செய்திப் பகுதி இயேசுவின்
மலைப்பொழிவின் முன்னுரையின் இறுதிப் பகுதியை யும் (மத்
7 : 17-20), ஆறு "எதிர் கருத்துக்கள்" எனும் அடுத்த பகுதியின்
முதல் பகுதியையும் (மத் 5: 21 - 37) உள்ளடக்கியது. மஜ்
5: 17 - 20 இல் இயேசுவின் போதனைக்கும் "தோரா? எனப்படும்
திருச்சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறிப்பிடப்படுகின்றது.
"நிறைவேறற்றும் எனும் புள்ளியில் இவை இரண்டும் இணைகின்றன.
எனவே இயேசுவின் போதனை திருச்சட்டத்தை அழிப்பதற்குப் பதிலாக
அதை வலியுறுத்தி நிறைவேற்றுகின்றது அதோடு இயேசுவின் சீடர்களின்
வாழ்க்கை நெறியை ஒரு சிறந்த உயர்நிலைக்கு அழைக்கின்றது. அது
மறைநூல் அறிஞர் பரிசேயர் ஆகியோரது நெறியைவிடச் சிறந்ததாக
இருக்கவேண்டும் என இயேசு அழைக்கிறார் (வச - 20). எனவே
திருச்சட்டத்திற்கு மத்தேயுவின் காலத்திலும் பொருள் இருந்தது.
ஆனால் அது சிறந்ததாக மாற்றப்படவேண்டும் என்பதே இயேசுவின்,
மத்தேயு நற்செய்தியாளரின் எண்ணமாக இருந்தது.
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதி (வச 21 - 37) மத்
5: 2] - 48 என்ற நீண்ட. பகுதியின் தொடக்கமாகும். இப்பகுதியில்
ஆறு "எதிர் கருத்துக்கள்" வைக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும்
"முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்...'
"ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்" எனும் அமைப்பு
முறையில் அமைந்துள்ளது. இவை "எதிர் கருத்துக்கள்" என்று
கூறப்பட்டாலும் இவை உண்மையில் எதிரான கருத்துக்கள் அல்ல
மாறாக, முதல் பகுதியில் திருச்சட்டத்தில் கூறப்பட்டதை
ஆழப்படுத்துகின்றதாக இரண்டாம் பகுதி அமைகின்றது.
எனவே கொலையின் மூலம் கோபம், விபச்சாரத்தின் மூலம் இச்சை
என ஆழமான சிந்தனைக்கு இட்டுச் செல்கின்றது. எனவே மத் 5:
17-20ன் பின்னணியில் இயேசு கூறுகின்ற, "நான் உங்களுக்குச்
சொல்கிறேன்" என்பதை எதிர் சிந்தனையாகப் பார்க்காமல் தொடர்ந்த,
ஆழமான சிந்தனையாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. எனவே இயேசுவின்
போதனை தோராவின் தொடர்ச்சியாகவும், அதன் அழத்திற்கும்,
நிறைவுக்கும், இலக்குக்கும் இட்டுச் செல்வதாகவும் அமைகின்றது.
இவ்வாறு யூத திருச்சட்டம் இயேசுவிலே நிறைவு காண்றெது. ஆக
மத்தேயுவைப் பொறுத்த மட்டில் யூதத்தின் தொடர்ச்சி, நீட்சதொன்
கிறிஸ்தவம். இனி இந்த "எதிர்கருத்துக்கள்' கொண்டு
செல்லும் ஆழத்தைக் காண்போம்.
1. கொலை (வச 21-22)
"கொலைசெய்யாதே" எனசட்டம் கூற இயேசு அதன் ஆணி வேறான கோபத்தைஅகற்று
என்கறார். இதற்கு மாற்றாக,நேர்மறை யாக எதிரியோடு நல்லுறவு
ஏற்படுத்துதல் (வச 23 - 24), உடன்பாடு செய்துகொள்ளுதல் (வச
25-26) ஆகியவற்றை முன்மொழிகின்றார்.
இச 24 இன்படி மணவிலக்கு யூதச் சட்டத்தில் அனுமதிக்கப்
பட் டிருந்தது. அனால் இயேசு மணவிலக்கே கூடாதென்கிறார்.
4. பொய் ஆணை (வச 32-37)
பொய் ஆணை இடுவதை தவிர்க்க, ஆணையிடுதலையே தவிர்த்துவிடச்
சொல்கின்றார் (வச 34-34. பேசும் பேச்சில்
சுத்தமிருந்தால் ("ஆம்" என்றால் "ஆம் எனவும், "இல்லை"
என்றால் "இல்லை" என்றும்) (வச.37) ஆணையிடுதலின் தேவையே
எழாது. இயேசுவின் இந்த ஆழமான அறநெறிப் புரிதல்களைப்
புரிந்துகொண்டு அவற்றை நமது அறநெறி வாழ்வாக்குவோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - ஆறாம் ஞாயிறு முதல் ஆண்டு
சீராக்கின் ஞானம் ஒரு நீதிநூல்
முதல் வாசகம் : சீஞா. 15: 16 -20
கி.மு. 180-ல் எழுதப்பட்டது. மோசேயின் சட்டங்களின்
தொகுப்பினையும், அவற்றைச் செயல்படுத்தும் முறையினையும் இங்குக்
காணலாம். மனிதனது மனசுதந்திரம் பற்றிய நித்திய உண்மைகளே இன்றைய
வாசகம்.
தனியுரிமை
மனிதன் பகுத்தறிவுடையவன்; சுய சிந்தனையுடையவன். இவ்வுரிமையைப்
பயன்படுத்தி மனிதன் தீமையை விலக்கி நன்மையைத்
தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்பது இறைவனின் திட்டம். இன்பவனத்தில்
வாழ்ந்த ஆதிப் பெற்றோருக்கு "விலக்கப்பட்ட கனியை உண்ணலாகாதெனக்"
கட்டளை கொடுத்துத் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்
பொறுப்பினை அவர்களுக்கே விட்டுவிட்டார். "தொடக்கத்தில் கடவுள்
மனிதரை உண்டாக்கினார்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட
அவர்களை விட்டுவிட்டார். நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி;
பற்றுறுதியுடன் நடப்பது உன் விருப்பத்தைப் பொருத்தது..."
(16). நன்மையைவிடத் தீமை கவர்ச்சியாகத் தோன்றலாம். இதைத்
தேர்ந்து தெளியும் உரிமை -மனித சுதந்திரம் -நமக்கு உண்டு.
தன் விருப்பம்போல் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் மனிதனைக்
கட்டாயமாகத் தடுத்து நிறுத்தமாட்டார். இது சுதந்திரத்தை அளித்துவிட்டு
அதைப் பறித்துக் கொள்வதற்குச் சமம். பாவம் செய்துவிட்டு,
"அவரே நான் கெட்டுப் போவதற்குக் காரணம் என்று சொல்லாதே"
(16) என்று எச்சரிக்கிறது சீராக்கின் ஞானம். "இதோ பார்,
வாழ்வையும் நன்மையையும், சாவையும் தீமையையும் இன்று நான்
உனக்கு முன்பாக வைத்துள்ளேன். உன் கடவுளாகிய ஆண்டவர்மீது
அன்பு பாராட்டு. அவரைப் பின்பற்றி அவரது வழியில் நட. அப்போது
நீ வாழ்வாய், நீ பலுகுவாய். ஆனால், உனது உள்ளம் விலகிச்
சென்று, நீ செவிகொடாமல் கெட்டலைந்து, வேறு தெய்வங்களை வணங்கி,
அவற்றுக்குப் பணிவிடை புரிந்தால், நீ நிச்சயம் அழிந்துபோவாய்"
(இச. 30 : 15 -20). இந்த இறை எச்சரிக்கை என் செவிக்கு எட்டுகிறதா?
என் செயலுக்கு நானே பொறுப்பு
என்னை உருவாக்கியவரும் என் உடலுறுப்புகளை இயங்கச் செய்பவரும்
இறைவன் என்பது உண்மை. ஆனால் நான் பாவம் செய்வதற்கும் காரணம்
அவரே என்பது அபத்தம். நான் கத்தியால் குத்திக் கொலை
செய்யும்பொழுது கத்தியைச் செய்தவனே கொலைக்குக் காரணம் என்று
வாதாடுவதில்லை. நற்செயலோ, தீச்செயலோ ஒவ்வொன்றுக்கும் நானே
பொறுப்பு என்பதை உணர்கின்றேனா? ஒவ்வொரு மனிதனும் மதிப்பற்ற
தன்னுரிமை -செயலுரிமை- பெற்றுள்ளான். நன்மையையோ தீமையையோ
தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரின் தனியுரிமை; எனினும் தீமையைத்
தேர்ந்து எடுக்கும்பொழுது ஒருவன் தன் உரிமையைத் தவறான
முறையில் பயன்படுத்துகிறான் என்பதை உணர வேண்டும். என்
விருப்பம்போல் எதையும் செய்வது சுதந்திரம் ஆகாது.
தவறு செய்பவன் தப்ப முடியாது
ஒரு பொருளைச் செய்பவன் அதன் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு
அறிந்துள்ளான். அப்படியே தம்மைப் படைத்த இறைவன் நம்மை
முற்றிலும் அறிவார். "கடவுளுடைய ஞானம் மகத்தானது; மனிதனது
எல்லாச் செயல்களையும் அவர் அறிகிறார்." அறியாமை, காலத்தின்
போக்கு, மனிதனின் பலவீனம், மற்றவர்களின் துர்ப்புத்தி, சோதனையின்
கொடுமை என்ற போலிக் காரணங்களைக் காட்டி இறைவனின்
தீர்ப்புக்கு நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. "ஆண்டவர்
எவன்மேல் பாவத்தைச் சுமத்தவில்லையோ அவன் பேறு பெற்றவன்"
(திபா) சிறுபிள்ளைத்தனம் மறைந்து, கட்டுப்பாடும் கடமையுணர்வும்
என்னிடம் வளர்ந்துள்ளதா?
உனக்கு முன் வாழ்வும் சாவும்... நீ தேர்ந்துகொள்வதை
அடைவாய்.
இரண்டாம் வாசகம்: 1கொரி 2:6 10
மறைபொருளான ஞானம்
உலகில் அனுபவம் வழியாக ஞானம் பெறுகிறோம். இயேசுவே
ஞானத்தில் வளர்ந்ததாக நற்செய்தி கூறுகிறது. இந்த ஞானம்
புலன்களுக்கும், புத்திக்குமே அப்பாற்பட்டதாக உணர்கிறோம்.
இது ஓர் அருட்கொடையாகப் பெறுவதாகவும் இயேசுவே
அறிவிக்கிறார். "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும்
அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர். இதுவே உமது திருவுளம்" (மத் 11:25).
பவுலும் இந்த அருள் ஞானத்திற்காக மன்றாடினார். "நீங்கள்
முழு ஞானத்தையும் ஆவிக்குரிய அறிவுத்திறனையும் பெற்றுக்
கடவுளின் திருவுளத்தைப் பற்றிய அறிவை நிறைவாக அடைய
வேண்டும் " (1 கொலோ. 1: 9). தூய யாக்கோபும் இறைஞானம்
பற்றித் தெளிவாகக் கூறுகிறார். "விண்ணிலிருந்து வரும்
ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும் அது
அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப்போகும்
தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை
தவறாதது; வெளிவேடம் அற்றது" (யாக். 3:17; காண் தீபா. 111 :
10).
உலக ஞானத்துடன் ஒப்பிட முடியாத இந்த ஞானம் மறையுண்மைகளை
அறிந்துகொள்ள, அனுபவிக்கத் துணை புரியும். இந்த ஞானத்துடன்
ஒப்பிடும்பொழுது ஏனைய ஞானங்களை குப்பை என்கிறார் பவுல்.
உலக ஞானத்தில் கொண்டுள்ள ஆர்வத்தைவிட இந்த இறை ஞானத்தைப்
பெற, அதன் வழியாக இறைவனுக்கு மேலும் மேலும் அன்பு செய்ய
நான் ஆர்வம் காட்டுகிறேனா?
தூய ஆவி நம் துணைவர்
"நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்;
அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய்
இருக்கும்...படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய
ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம்
பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும்
நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்...தூய ஆவியார்
நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்'' (உரோ.8:
11. 21; 26). ஆவியானவர் நம்மோடு இணைந்து செபிக்கின்றார்.
உண்மையின் நிறைவை நோக்கி நம்மை வழி நடத்துகிறார்.
இறைவனின் திருவுளத்தை உள்ளார்ந்த விதமாக அறியவும், நம்மையே
இறைவனுக்கு அர்ப்பணிக்கத் தூண்டுவதும் தூய ஆவியே. எனவேதான்
புத்திக்கு வெளிச்சத்தையும், உள்ளத்திற்கு உறுதியையும்
அளிக்கும்படி நம் செயல்பாடுகளில் தூய ஆவியை வேண்டுகிறோம்.
ஆவியானவரின் வரங்களும், கனிகளும் நம் அருள்வாழ்வின்
நிறைவாக சாட்சிய வாழ்வுக்கு இட்டுச்செல்கின்றன. "கடவுளிடம்
அன்புகூர்ப வர்களோடு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப
அழைக்கப்பட்ட வர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார்
அனைத்திலும் ஒத்துழைக்கிறார்" (உரோ 8: 28). இன்று நமக்கு
அதிகத் தேவையான ஞானம், நம் சமுதாயத்தில் நம் உள்ளங்களில்
இயங்கும் ஆவிகளைத் தேர்ந்து தெளியக்கூடிய ஆவியின் வரம்.
அரசர் சாலமோனைப் போல் நாமும் செபிப்போம்.
"உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும்
தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத்
தந்தருளும்" (1 அர 3:9).
காலத்தின் அறிகுறிகளை அறியவும், அதற்கேற்ப செயல் புரியவும்
இறை ஞானம் நம்மைத் தூண்டுகிறதா?
நாங்கள் அறிவிப்பதோ கண்ணுக்குப் புலப்படாதது: காதுக்கு
எட்டாதது...
நற்செய்தி: மத். 5:17-37
இன்றைய வாசகம் "மலைப்பொழிவு" என்ற பகுதியிலிருந்து (மத். 5
-7) எடுக்கப்பட்டுள்ளது. சகோதர அன்பு, "பிறன் மனை
நோக்காமை", உண்மை உரைத்தல் என்பன இன்றைய வாசகத்தின்
படிப்பினைகள்.
பிறரன்பு
"கொலை செய்யாதிருப்பாயாக" (விப 20:13) என்பது பத்துக்
கற்பனைகளில் ஒன்று. ஆனால் இயேசுவோ அயலானிடம் சினம் முதலாய்
கொள்ளக் கூடாது; பிறரை "முட்டாள், மதிகெட்டவன்"
என்றழைப்பதும் கூடாது என்கிறார். அன்புக்கு அளவுகோல்
கிடையாது. பலியையும் காணிக்கையையும் விட அன்பு மேலானது.
தம் எதிரிகளுக்கும் அன்பு செய்தார் இயேசு. அன்பையே தமது
ஒரே கட்டளையாகவும் நமக்குக் கொடுத்துள்ளார். "ஒருவர்
மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை
நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு
செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும்
அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும்
அறிந்துகொள்வர்" (யோ. 13:34 - 35; 13:13-15). இதற்கு
மேலும் நமக்கு அறிவுரை வேண்டியதில்லை. கடவுளே அன்பு:
இயேசுவே அவ்வன்பின் வெளிப்பாடு; கிறிஸ்தவர்களோ அவ்அன்பின்
சாட்சியங்களாய் வாழ வேண்டும் என்பதை உணர்கிறோமா? "அன்பின்
வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்திய
உடம்பு" (குறள் 80).
பிறன் மனை நோக்காமை
"விபச்சாரம் செய்யாதிருப்பாயாக" (விப. 20: 14) என்பது
பத்துக் கற்பனைகளுள் ஒன்று. ஆனால், பிற பெண்களை இச்சையுடன்
நோக்குவதே பாவம் என்கிறார் இயேசு (5:28). "கன்னிப் பெண்ணை
உற்று நோக்காதே; நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய்"
(சீஞா. 9:5) என்பதும் ஆன்றோர் படிப்பினையாகும். விபச்சாரம்
என்பது செயலிலே நடக்கும் ஒன்றுமட்டுமன்று; உள்ளத்திலே ஒரு
கணத்திலே நம்மைத் தடம் பிறழவைக்கக் கூடியது. எனவேதான்
வள்ளுவரும் "பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு" (குறள் 148) "எனைத் துணையராயினும்
என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்" (குறள் 144)
என்பார். திருமணமானவரும் சரி, திருமணமாகாதவரும் சரி
உள்ளத்திலோ உண்மையிலோ "சின்னவீடு" கட்டுதல் தவறு; பகை
பாவம் அச்சம் பழி இவை அனைத்திற்கும் இது காரணமாயமையும்.
எனவே நாம் எந்த வாழ்நிலையிலிருந்தாலும் பிரமாணிக்கமாய்
இருக்கக் கற்றுக் கொள்வோம்.
உண்மை பேசல்
என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு
இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள்" என்பது ப.ஏ.
படிப்பினைகளுள் ஒன்று (லேவி. 19:12). ஆனால் இயேசுவோ, உண்மை
பேசுங்கள்; "ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை" என்று
இருக்கட்டும். இது போதும் என்பார். இயேசுவே கடவுள் முன்
எப்போதும் "ஆம்" ஆக இருக்கிறார். பொய் கலந்த வாழ்வு
அவரதன்று. "இறைமகன் இயேசு கிறிஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்'
என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல. மாறாக அவர் 'ஆம்'
என உண்மையையே பேசுபவர்" (2 கொரி 1: 19). எனவே இயேசுவின்
மறுபதிப்புகளான நம்மிடமும் பொய் என்பது நெருங்கி வரக்
கூடாது. வார்த்தையில் உண்மை, வாழ்க்கையில் உண்மை என்ற
முறையில் நம் நடத்தை அமைய வேண்டும். ''பொய்யாமை
பொய்யாமையாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று" (குறள்
297) என்ற குறள் வழி வள்ளுவர் அறங்களுக்கெல்லாம் தலையாயதாக
உண்மை வாழ்வைச் சுட்டுவதைக் காண்க. "பொய்யாமையன்ன
புகழில்லை, எய்யாமை எல்லா அறமும் தரும்" (குறள் 296)
என்பதிலும் இதே கருத்தே வெளிப்படுகிறது.
இவ்வாறு, இம்மூன்று வழிகளிலும் இயேசுவின் படிப்பினைகளைப்
பின்பற்றுவது "மறைநூல் அறிஞர், பரிசேயர் இவர்களின்
ஒழுக்கத்தைவிடச் சிறந்தது" (5:20) என்பார் இயேசு.
இயேசுவைப் பின்பற்றுவது என்பது நிபந்தனைகளைக் கடந்த ஒன்று
என்பதை உணர்வோம்.
உங்கள் ஒழுக்கம் சிறந்திராவிட்டால், விண்ணரசு
சேரமாட்டீர்கள்.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே