ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 திருவருகைக்காலம் 4ம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Sermon Fr.Albert
Sr. Gnanaselvi (india)

திருவருகைக்காலம் 4ம் வாரம் - ஞாயிறு
 திருப்பலி முன்னுரை -
1ம் ஆண்டு

திபா 24: 1-2. 3-4ab. 5-6 (பல்லவி: 7c,10b)
பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்; மாட்சிமிகு மன்னர் இவரே.

கடவுளின் அழைப்புக்கு நம்பிக்கையுடன் 'ஆம்' என்று சொல்ல வந்திருக்கும் அன்புறவுகளே!

அன்று கடவுளின் அழைப்புக்கு முழுவதுமாக அடிபணிந்து உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்ற பதில் மொழி பகர்ந்தாள் மரியா. இன்று அவளின் நம்பிக்கை மொழியை நமதாக்க
  • திருமணம்
  • இறப்பு
  • ஞானஸ்நானம்
  • -வது ஞாயிறு வழிபாடு நம்மை வரவேற்க்கிறது.

    கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பிக்கை நாற்று விதைக்கப்படும் காலமாய் வாய்த்திருக்கின்றது இன்றைய நாள். இன்று நம் இதயத்தில் விதைக்கப்படும் இறை வார்த்தையெனும் நம்பிக்கை நாற்றுகளுக்கு உயிருட்டம் தந்து வளர்த்தெடுப்பது நம் கடமையே!

    முதலில் நம்மை நம்புவோம். கடவுளிடத்திலும் நம்பிக்கை வைப்போம். கடவுளும் நாமும் நண்பர்கள். ஒரு வேளை நாம் கடவுளை விட்டு விலகி செல்லலாம். ஆனால் கடவுள் நம்மை விட்டு விலகிச் செல்லவே மாட்டார். கடவுள் நம் நிழல் போல நம்மைத் தொடர்கிறார்.

    மனித வாழ்வில் மகத்தான சக்தியாக விளங்குவது நமது எண்ணங்களே! எண்ணங்கள் மனிதனின் அணுகு முறைக்கு வடிவமாக அமைகின்றது. மனிதனின் இந்த அணுகு முறையை நிர்ணயிப்பது நம்பிக்கையே! நம்பிக்கை தான் வெற்றி தோல்வியை வெளியிடுகின்றது.

    உலகில் உள்ள எல்லாவற்றையும் ஈர்க்கும் சக்தி மகத்தான நம்பிக்கைக்கு மட்டுமே உரியது என்பதை அன்னை மரியா அனுபவித்து மகிழ்ந்தாள். கடவுளின் அழைப்புக்கு முழுவதும் நம்பிக்கை உணர்வுடன் அடிப்பணிந்து வளமையும் நிறைவாழ்வும் பெற்று அன்னை மரியா உயர்ந்ததைப் போல, நாமும் இன்று நமது காதுகளில் கேட்கப்படுகின்ற இறைவார்த்தைக்கு நம்பிக்கை வடிவம் கொடுத்து உயர்வோம்.

    கடவுள் காட்டும் பாதையில் இருந்து எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், கடவுளின் அருகில் நமது நம்பிக்கை உணர்வினால் செல்ல முடியும் என்பதை உணர்த்துவதே இன்றைய நற்;செய்தி நிகழ்வுகள்!
    நாம் கடவுளிடம் கேட்க வேண்டியது: கடவுளே உம் வார்த்தைக்கு செவி மடுத்து பலம் வாய்ந்த நம்பிக்கை மொழியால் பதில் மொழி பகிர இந்த திருப்பலியி;ல் எங்களுக்கு அருள்புரியும் என்பதே!
     
    நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


    1. நம்பிக்கையோடு காத்திருக்க கற்றுத் தந்த தேவனே!
    திருச்சபையின் தலைவர்கள் இறைமக்கள் உள்ளங்களில் நம்பிக்கை நாற்றுகளை நட்டு விசுவாசத்தோடு உமது வருகையில் பங்கேற்க பலன் தரும் செயல்பாடுகளை வளர்த்தெடுக்க அருள் பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    2. நீ செல்லுமிடமெல்லாம் நான் உன்னோடு இருப்பேன் என்று சொல்லிய தேவனே!
    எங்கள் நாட்டுத் தலைவர்கள் மத்தியில் நீர் இருந்து அவர்கள் செய்யும் பணிகளால் வேற்றுமைகள் ஒழிந்து ஒற்றுமை வளர்ந்து மக்கள் எல்லோரின் தேவைகள் நிறைவேற அருள் பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    3. பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழப் பணிக்கும் தேவனே!
    உமது கட்டளைப்படி வாழ்ந்து நற்செய்தியைப் பறைசாற்ற உமது ஞானத்தை எங்களது பங்குத் தந்தைக்கு பொழிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    4. கடவுளால் இயலாதது எதுவுமில்லை என்ற செய்தியை எமக்கு தந்த தெய்வமே!
    எங்கள் தேவைகள் நிறைவேறாத போதும், எங்கள் பிரச்சனைகள் எங்களைத் தாக்கும் போதும் நாங்கள் விசுவாசத்தில் தளர்ந்து நம்பிக்கை இழந்து விடுகிறோம். உம்மால் இயலாதது எதுவுமில்லை என்ற வார்த்தையால் எங்கள் நம்பிக்கைக்கு வலுவூட்ட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    5. இன்று எங்கள் வீட்டைக் கட்டப் போவதாக அறிவிக்கின்ற தேவனே!
    வீடிழந்து தவிப்போருக்கும், வீடு கட்ட வேண்டும் என திட்டமிடுவோருக்கும் இந்த உலகில் வீடு கட்டத் தேவையான பொருட்கள் கிடைக்கவும். அதன் வழியாக வானக வீட்டிற்கு செல்லும் நம்பிக்கை உணர்வு மிகுதியாக பெற்றுக் கொள்ளவும் துணைபுரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    6. அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன் என்று அறிவிக்கின்ற தேவனே!
    தங்கள் முதுமையால் வருந்துவோர், பணி செய்து ஓய்வு பெற்றிருப்போர், தனிமையில் வாடுவோர் அனைவருக்கும் மறுவுலக ஓய்வை மகிழ்ச்சியோடு வரவேற்க அவர்களை தொடரும் தொல்லைகள் அனைத்தையும் நீக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

    7. உன் வழித் தோன்றலை உனக்குப் பின் உயர்த்துவேன் என இன்று எங்களோடு உறவாடும் தேவனே!
    தங்கள் பிள்ளைகளின் நலனைக் காணப் பெற்றோருக்கு வாய்ப்பு தாரும். பிள்ளைச் செல்வங்களால் பெற்றோர் மகிழவும், குழந்தைப் பேறு இல்லாதோருக்கு குழந்தைப்பேறு கிடைக்கவும் அருள் புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

     
    திருப்பலி முன்னுரை - Gnaoli
    "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்."மத்தேயு 1:(18-24)

    அமைதி என்னும் மெழுகுதிரி ஏற்றி, திருவருகை காலத்தின் நான்காம் ஞாயிறு திருவழிபாட்டில் பங்கெடுக்க, புனிதமிக்க இறை சந்நதிமுன் நாம் கூடியுள்ளோம். நாம் மனம் திருந்தி வாழ, திருவருகை காலம் நான்காம் ஞாயிறு என்னும் அருள் அடையாளத்தை திருஅவை நமக்கு வழங்கியுள்ளது.

    நீங்கள் கடவுளால் தேர்ந்து கொள்ளப் பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள் என்ற பெருமையை, மகிமையை, உயர்வினை இன்றைய வார்த்தை வழிபாடு முன்மொழிகிறது.  இம்மானுவேல் இறைவன் நம்முடன் வாழ்கிறார். இதுவே கிறிஸ்து பிறப்பு விழாவின் மையப்பொருள். இன்றைய வழிபாட்டின் கருப்பொருள் இதுவே.

    நாம் நற்செய்திக்கேற்ற வாழ்வு நடத்துகிறோமா? கிறிஸ்து பிறப்பு நமக்கும், நம்மை அடுத்திருப்போருக்கும் நற்செய்தியாய் அமைய தேவையானவற்றை செய்கிறோமா? யோசேப்பைபோல் இறை திட்டத்திற்கு செவிசாய்த்து வாழ்கிறோமா? என்ற கேள்விகளை | முன்னெழுப்பி நம்மை சிந்திக்க அழைக்கிறது இன்றைய திருப்பலி.

    நீதிமானும், திருகுடும்பத் தலைவருமான யோசேப்பு, இறை திட்டத்திற்கு செவிசாய்த்ததால், அதனை கடமை உணர்வோடு ஏற்றுக் கொண்டதால், மண்ணில் மனிதராக அவதரித்த ஆண்டவருக்கு இம்மானுவேல் என்ற பெயரினை சூட்டி மகிழும் வாய்ப்பினைப் பெற்றார். பாலன் இயேசுவை தூக்கி வளர்க்கும் பேற்றினை பெற்றார். மரியாளுக்கும், மாமரி மைந்தனுக்கும் நிழல் தரும் | ஆலமரமாகத் திகழ்ந்தார்.

    மரியாள் வானதூதரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார். சூசையப்பர்  வானதூதரின் வார்த்தையை புரிந்து கொண்டார். மரியாளைப்போல், யோசேப்பை போல் இறைவார்த்தை களை நெஞ்சில் ஏற்று, அதை வாழ்வாக்கி வாழ இத்திருப்பலி வழியாக இறையருளை வேண்டுவோம்.

    முதல் வாசக முன்னுரை
    யூதேயா நாட்டை ஆண்டுவந்த, ஆகாசு மன்னனுக்கு கடவுளின் வாக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்த செய்தி இன்றைய முதல் வாசகமாக அருளப்பட்டுள்ளது. மனிதரின் உதவியை நாடுவதைவிட, ஆண்டவரின் உதவியை நாடுவதே மேல் என்பதற்கு அடையாளமாகத் தரப்படும் இம்மானுவேல் இறைவாக்கை கவனமுடன் கேட்போம்.

    இரண்டாம் வாசக முன்னுரை

    நற்செய்தி பணியாளர்களுக்கான இறைவனது அழைப்பு, அவர்களது பணி போன்றவற்றையும், நற்செய்தி என்றால் என்ன என்பது பற்றியும் தூய பவுலடியார் தரும் விளக்கம் இன்றைய இரண்டாம் வாசகமாக அமைந் துள்ளது. திருவருகை காலத்தில் நமது அழைப்பு, கடமைகள், நற்செய்தி பணி பற்றி தியானிக்க உதவும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

     
     
    கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவில் திருப்பலி 25 12 2025

    திருப்பலி முன்னுரை

    இனியவர்களே! மீட்பராம் இயேசுவின் பிறப்பு பெருவிழா கொண்டாட்டத்திற்கு வந்துள்ள உங்கள் யாவரையும், குழந்தை இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடனே வாழ்த்துகின்றேன்.

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை குழந்தை இயேசுவுக்கு பகிரும் இந்த இரவு உங்களுக்கும், உங்களது உறவுகளுக்கும் மகிழ்வு தரும் நல்ல இரவாக அமைய வாழ்த்துகின்றோம்.

    அவருக்கு உகந்தவர்க்கு அமைதியைத் தரும் இந்த நல்ல காலத்திலே நல்ல ஆன்ம ஆயத்தத்தோடு, மகிழ்வுடனே வந்துள்ள உங்களுக்கும், உங்களது உறவுகளுக்கும், அமைதி பிறக்கட்டும் என வாழ்த்துகின்றோம்.

    நமக்காக ஒரு குழந்தை தரப்பட்டது. அந்த குழந்தையின் வரவு பல மாற்றங்களைக் கொணர்ந்தது. வரலாற்றைக் கூட முன், பின் என பிரித்தது. வாழும் நம் வாழ்விலும் பல மாற்றங்களை இன்றும் தந்து வளப்படுத்துகின்றார். பிறப்பு தரும் அற்புதத்தை கண்டு, மகிழ்ந்து, அந்தப் பிறப்பினை கொண்டாடுவதோடு, எதற்காகப் பிறப்பு தரப்பட்டதோ அதனை உணர்ந்து, பிறரை வாழச் செய்ய நல்லதைச் செய்து வாழ்ந்து, பிறப்புக்கு அர்த்தம் கொடுக்க முன்வருவோம். வாருங்கள். பலியிலே இணைந்து கொண்டாடுவோம்.

    முதல் வாசக முன்னுரை: (எசாயா 9: 2-4,6-7)

    காரிருளில் நடந்த மக்கள் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. எனவே மக்கள் மகிழ்ச்சியில் அக்களிக்கிறார்கள். ஏனெனில் இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார். அவர் ஆட்சி வலிமை மிகுந்தது. அமைதி நிறைந்தது. நீதி செழித்தது, என்றும் நிலைபெயராதது என வரவிருக்கும் அரசரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் கூறும் வாசகத்திற்கு ஆர்வமுடன் செவிமெடுப்போம்.

    இரண்டாம் வாசக முன்னுரை: (தீத்து 2: 11-14)


    கடவுளின் அருள் நம்மீது பொழியப்பட்டுள்ளது. இவ்வருளை வளப்படுத்த நாம் தீமையைக் களைய வேண்டும். ஏனெனில் இயேசுவின் மாட்சி வெளிப்படப் போகிறது. எனவே நாம் நம்மையே தூய்மையாக்க வேண்டும் என அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

    இறைமக்களின் மன்றாட்டுகள்:

    பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

    1. மனுவுருவானவரே இறைவா! திருஅவை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் எல்லா சீர்திருத்த நடவடிக்கைகளிலும், அவர்களுக்கு பக்கபலமாக இருந்து திருஅவையை காலத்திற்கு ஏற்ப கொண்டு செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    2. மனுவுருவானவரே இறைவா! மதவாத சக்திகளால், பாரதம் பின்தள்ளப்படாமல், ஆள்வோர் உண்மையோடும், நேர்மையோடும், மக்களை முன்னேற்றமான பாதையில் அழைத்துச் செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    3. மனுவுருவானவரே இறைவா! பலியிலே பங்கேற்கும் நாங்கள், மகிழ்வோடும், மனஅமைதியுடனும் பயணிக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    4. மனுவுருவானவரே இறைவா! பல்வேறு காரணங்களினால், மகிழ்வையும் அமைதியையும் இழந்து அவநம்பிக்கை கொண்டோருக்கு, உம்முடைய ஆசீர் கிடைக்கப் பெறவும், தங்களது நம்பிக்கையில் உறுதிப் பெறவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    5. மனுவுருவானவரே இறைவா! கொண்டாட்டங்களில் மகிழும் நாங்கள், ஒன்றுபட்ட மனநிலையோடு, உறவோடும், உண்மை அன்போடு பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    "கடவுள் அன்பாய் இருக்கிறார்!" 1 யோவா 04: 16
     
    கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருவிழிப்புத் திருப்பலி 24 12 2025 மாலை

    திருப்பலி முன்னுரை

    அன்பார்ந்தவர்களே! "இம்மானுவேல்" என்னும் பெயரைத் தாங்கி என்றும் நம்மோடு இருக்கும் ஆண்டவரின் சந்நிதானத்தில் ஒன்று கூடி, இறைவனின் திருமகனாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழா வழிபாட்டில் பங்கேற்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை அன்புடன் மகிழ்வுடன் கூறிக் கொள்கிறோம்.

    மார்கழி குளிரினில் மாபெரும் மகிழ்வின் மறையுண்மையாக மாபரன் மாமரியின் மழலையாக மண்ணகத்தில் மனுவுருவாக மலர்ந்து, மனித மாண்பினை மீட்டெடுக்க, மானுடத்திற்கு விடுதலையளிக்க, இறைத்திருவுளம் மண்ணில் நிறைவேற்ற, நமக்காக நம் மீது கொண்ட பேரன்பின் பொருட்டு மானிடராக, பேரொளியாக நம்மிடையே வந்துள்ளார்.

    ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் வெகுமதியாகும். ஆனால் இங்கே இறைவன் தன் மகனை நமக்கு வெகுமதியாக, பரிசாக கொடுத்துள்ளார். அதில்தான் இறையன்பு அடங்கியுள்ளது என நாம் உணர வேண்டும். எளியவர் வாழ்வு ஏற்றம் பெற, ஏங்கும் விழிகளின் ஏக்கங்கள் நீங்கிட, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஓங்கி உயர்ந்திட, அடிமைத்தனத்திலிருந்து விடுதலையளித்திட, இருளின்று ஒளியின் பாதையில் பயணித்திட, பாமரனாக பாலன் பிறந்திருக்கின்றார்.

    அவரின் பிறப்பு நம் கிறிஸ்தவ வாழ்வு பற்றி சிந்திக்க அழைக்கின்றது, இறைமகன் மனிதனாக பிறந்து. தம் அன்பு, இறைவாழ்வு, நம்பிக்கை அனைத்தையும் ஏன் தன்னையே நமக்காகப் பகிர்ந்து கொண்டார். தமது ஊடுருவும் அன்பினால் நம் வாழ்வு முழுவதும் நமக்குள் நிலைத்திருக்கின்றார். கிறிஸ்தவ வாழ்வென்பது நமக்குள் அடைபட்டு போகும் வாழ்வல்ல. கிறிஸ்மஸ் இதயம் கொடுக்கும் இதயம். தன்னைவிட மற்றவரை முதலில் நினைக்கும் பரந்த இதயம் கொண்டது. அது நான் என்ற சுயநலம் தாண்டி நம்மையே பகிர்ந்து வாழவேண்டுமென்பதே இன்று நாம் பெறும் நற்செய்தி.

    வறுமையில் வாடுவோர்க்கு நம் பொருளை, பணத்தை பகிர்ந்து கொடுக்கலாம். உறவுகளின்றி நட்புகளின்றி தனிமையில் வாடுவோர்க்கு நம் நேரத்தை பகிர்ந்து கொடுக்கலாம். கோபத்தில் சிதறிய உறவுகளிடம் மன்னிப்பை பகிர்ந்திடலாம். மேலும் நாம் பெறும் "அஞ்சாதீர்கள்" என்ற நற்செய்தியை நாம் உலகினருடனும், உடன் வாழ்பவர்களோடும் பகிர்ந்து கொள்வோம். இப்படி பல பகிர்வின் பல முகங்கள் பல உள்ளன. இந்த கிறிஸ்மஸ் விழாவில் நாம் இயேசுவோடு இணைந்து பகிர்வின் மனிதர்களாய் மாறவும், நம்மைத் தேடி வந்த அவரை, நம் வாழ்வின் மையமாக இதயத்தில் ஏற்றிடவும் அருள் வேண்டி இப்புனிதத் திருப்பலியில் நம்மையே முழுமையாக அர்ப்பணிப்போம்.

    இறைமக்களின் மன்றாட்டுகள்:

    பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

    1. அன்புத் தந்தையே இறைவா!
    எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலைப்பணியாளர்கள் அனைவரும் இக்காலத்தில் மக்களுக்கு இறைநம்பிக்கையூட்டுபர்களாகவும், உலகிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுப்பவர்களாகவும், மக்களை இருளின் பாதையிலிருந்து ஒளியின் வழியில் பயணித்திடச் செய்திடவும், நீர் விரும்பிய உமதரசை இம்மண்ணிலே மலரச் செய்திடுபவர்களாகவும் தங்கள் அர்ப்பணத்தில் உமக்கு என்றும் உண்மையுள்ளவர்களாகவும், அதிலே உறுதியுள்ளவர்களாகவும் இறைபணிகளாற்றிட, நீரே அவர்களுக்கு உம் தூய ஆவியின் வல்லமையை நிறைவாக அளித்து, உடல், உள்ள நலன் தந்து, காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    2. மகிழ்ச்சியின் நிறைவே இறைவா!
    உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் உம்மீது முழுமையாக நம்பிக்கை கொண்டு வாழவும், தங்கள் நம்பிக்கையால் உமக்குச் சான்று பகர்ந்து பிறரும் நிலைவாழ்வைக் கண்டடைய உதவவும், ஒவ்வொரு இல்லங்களும் உமது அமைதியை, மகிழ்ச்சியை, நிறைவை பெற்றிடவும், பெற்றுக் கொண்டவற்றை பிறரோடு பகிர்ந்து வாழ்ந்திடவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    3. வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா
    எம் நாட்டை ஆளும் தலைவர்கள், மற்றும் பொறுப்பான பதவிகளில் இருப்போர் அனைவரும் தங்கள் பொறுப்புக்களை ஆழமாக உணர்ந்து கொண்டு, மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு, நீதி, மனிதநேயம், அன்பு இவற்றுக்காக உழைக்கின்ற மனப்பக்குவத்தை அளித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    4. ஆறுதலின் தெய்வமே இறைவா!
    உம் பிறப்பின் மகிழ்வினை கொண்டாடும் இவ்வேளையில், உடல், உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, துயருறும் மாந்தர்களையும். உறவுகளை இழந்து, பிரிந்து தனிமையில் வேதனையுறும் மாந்தர்களையும் ஒப்புக் கொடுக்கின்றோம். நீர்தாமே அவர்களின் கண்ணீரை துடைத்து, மனத்துயரை மாற்றி, உம் மேலான இரக்கத்தினால் அவர்களிலே உம் இறைப்பிரசன்னம் கடந்து சென்று, அவர்களை குணப்படுத்தி, அவர்களுக்கு எல்லாமுமாக இருந்து, உமதன்பை உய்த்துணரச் செய்து, உம் அற்புதத்தையும். அதிசயத்தையும் உணர்ந்து, உம்மிலே என்றும் நம்பிக்கையுள்ளவர்களாக வாழ்ந்திடும் நல்உள்ளத்தை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    5. ஒளியானவரே இறைவா!
    "காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்" என்ற உம் வார்த்தைக்கேற்ப, நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தீய வழிகளிலிருந்து மனந்திரும்பி, என்றும் உம்மைவிட்டு அகலாமல், உமது திருப்பெயரைத் தொழுது, உமது திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து. இருளின் பாவ செயல்களிலிருந்து விடுபட்டு, உம் பேரொளியின் பாதையில் வழிநடந்திட, உம்மோடு என்றும் ஒன்றித்திட, எம் ஆன்ம வாழ்வை புதுப்பித்து, புதுப்படைப்பாகி, உமக்கே எம் வாழ்வை சமர்ப்பணம் செய்து, ஒளியின் மாந்தர்களாக வாழ்ந்திடும் வல்லமையான மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    "கடவுள் அன்பாய் இருக்கிறார்!" 1 யோவா 04: 16
    மறையுரை வழங்குபவர் முனைவர். இ.ஸ்டேன்லி ராபின்சன் (Phil.lic)M.A.(Chris).,Dip Pas Coun, M.Sc (Psy)., MBA., MPhil., Phd.

    இயேசு கிறிஸ்துவில் அன்புக்குரியவர்களே, திருவருகைக் காலத்தின் 4ம் ஞாயிறின் திருவழிபாட்டின் மையக் கருத்தாக, கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்ற உண்மையை நம் முன் வைக்கப்பட்டுள்ளது. கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக கொடுத்த வாக்குறுதி அன்னை மரியாள் வழியாக நிறைவேறுகிறது. கடவுள் எப்பொழுதும் நம்முடன் இருக்கின்றார் என்ற பேருண்மை நம் ஒவ்வொருவரின் விசுவாசம். கடவுள் நம்முடன் பல விதத்தில், பல மனிதர்கள் உருவில், பல நல்ல மதிப்பீடுகளின் வழியாக இருக்கின்றவரான இருக்கின்றார்.
    இன்றைய நற்செய்தி வாசகம் கடவுள் நேர்மையாளர் யோசேப்பு வழியாக எவ்வாறு நம்முடன் இருக்கின்றார். என்பதை எடுத்துக் காட்டுகின்றது. யோசேப்பிடம் இருந்த இரண்டு போற்றுதற்குரிய மதிப்பீடுகளின் வழியாக கடவுள் நம்முடன் இருக்கின்றார். முதலாவதாக நேர்மை என்ற மதிப்பீடு. மத்தேயு நற்செய்தியாளர் யோசேப்பை நேர்மையாளர் என்ற ஏற்றமிது பண்போடு குறிப்படுகின்றார். இக்காலத்தைப் போல காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்குனதுபோல் அல்ல. இது வாழ்க்கையில் வாழ்ந்து பெற்றப் பண்பு இது. நேர்மையாளர்கள் யாரையும் இகழ்ச்சிக்கு உள்ளாக்க மாட்டார்கள் என்பது யோசேப்பின் வழியாக கடவுள் நமக்குக் கற்பிக்கின்றார். உண்மைதான். நேர்மையாளர்கள் யாரும் சக மனிதர்களை இகழ்ச்சிக்கு உள்ளாவதை விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்கள் கடவுளின் சாயலாகப் படைக்கப் பட்டிருக்கின்றார்கள். சக மனிதர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவது கடவுளை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவது என்பதை நன்கு அறிந்தவர்கள். சக மனிதர்களை எந்தவிதத்திலும், நம்முடைய சிந்தனையாலும், செயலாலும், சொல்லாலும் எந்தவித இடையூறுகளுக்கும் உள்ளாக்காமல் இருப்பது நேர்மையாளர்களின் பண்பு. அதுவே கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை நினைவுப்படுத்துகின்றது.

    நேர்மையாளர் யோசேப்பிடம் இருந்த இரண்டாவது போற்றுதற்குரிய பண்பு, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவது. ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறு மரியாவை ஏற்றுக்கொள்கின்றார். கடவுளுடைய திட்டம் என்னவென்று அறிந்து, அந்தத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு மீட்பின் திட்டம் நிறைவேற தானும் ஒரு கருவியாக நேர்மையாளர் யோசேப்பு திகழ்கின்றார். ஆக நேர்மையாளர்களின் மாண்புமிக்க பண்புகளில் ஒன்று கடவுளுடைய திட்டத்தை ஏற்று நடப்பது. கடவுளுடைய திட்டம் எப்பொழுதுமே மற்றவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்காது. இவ்விதமாக இம்மானுலோகிய கடவுள் என்று நம்மோடு இருக்கின்றார் என்பதை புனித யோசேப்பின் வழியாக அவருடைய இரண்டு மாண்புமிகு பண்புகளாகிய நேர்மை மற்றும் கடவுளுடைய திட்டத்தின்படி வாழ்வது என்பதன் வழியாக நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    நாமும் கடவுளுடைய திட்டத்தை அறிந்து ஏற்றுகொண்டு அதை செயல்படுத்துபவர்களாகவும், அடுத்தவர்களை எந்தவிதத்திலும் இகழ்ச்கிக்கு உள்ளாக்காமல் நேர்மையாளர்களாக வாழ்ந்து கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாம் வாழும் சமூகத்திற்கு வாழ்ந்து காட்டுவோம். -ஆமென்.
     
    திருவருகைக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 18 12 2022



    பிரியமானவர்களே

    திருவருகைக்கால நான்காம் ஞாயிறு திருப்பலி வழிபாட்டினை சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    இன்;றைய நற்செய்தி நமக்குத் தரும் சிந்தனை, நாம், பிறரின் மனநிலையை உணர்ந்தவர்களாக, பிறரின் உணர்வுகளை புரிந்து கொண்டவர்களாக, பிறரின் தனிப்பட்ட மாண்பை மதிப்பவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்பதே. ஆம். இன்றைய நற்செய்தி அதை நமக்கு அழகாக, ஆழமாக, தெளிவாக உணர்த்துகின்றது. நற்செய்தியில், யோசேப்பு மரியாவை இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கி விடத் திட்டமிட்டார் என்ற இறைவார்த்தையை வாசிக்கக் கேட்டோம். ஆம். திருமணமாகமல் கருவுற்றிருக்கும் அன்றைய யூத சமூகம் எப்படிப் பார்க்கும், அதனால் அப்பெண்ணின் வாழ்க்கைநிலை எத்தகைய இழிநிலைக்காளாகும், அவளின் எதிர்கால வாழ்வு எப்படி அமையும் என்பதையெல்லாம் உணர்ந்தவராக, மரியாவுக்கும் அத்தகைய அவலநிலை வரவிரும்பாதவராக, மனித மாண்புக்கு மதிப்பளிப்பவராக மரியாவை இகழ்ச்சிக்குள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத் திட்டமிட்டார். மரியாவும் அவர் பங்கை தன் வாழ்வில் சிறப்பாகவே செய்கிறார். வயதான நிலையில் கருவுற்றிருக்கும் எலிசபெத்துக்கு அவரின் உடல்நிலையை உணர்ந்தவராக, மரியா உதவிட ஓடோடிச் செல்கின்றாள். கானாவூர் திருமணத்திலும் இரசம் காலியானாதால் அத்திருமண வீட்டார் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை உளமார உணர்ந்தவராக, தன்; மகனிடம் அப்பிரச்சனைக்கு தீர்வை அளித்திடும் பொறுப்பை ஒப்படைக்கின்றார்.

    அன்னைக்கும், தந்தைக்கும் தாம் சற்றும் சளைத்தவரல்ல என்பதை அவர்கள் தவப்புதல்வன் இயேசுவும் உணர்த்துகின்றார். நயீன் ஊர் கைம்பெண்ணின் இறந்த மகனை, அந்தத் தாயின் உணர்வை புரிந்தவராக, அவரின் வாழ்வு என்னவாகும் என்பதை உணர்ந்தவராக தாமாக முன்வந்து, அவரின் மகனை உயிர்ப்பித்துக் கொடுக்கின்றார். தன்னைக் காண மரத்தில் ஏறி அமர்ந்த சக்கேயுவின் மனநிலையை, அவரின் விருப்பத்தை உணர்ந்தவராக, அவரை தானே அழைத்து, அவரின் வீட்டில் விருந்துண்டு, அவருக்கு மீட்பினைத் தருகின்றார். ஆம், இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு இருக்கின்றார். நம் குறைகளை, பாவங்களை உணர்ந்தவராக,வலுவின்மையை புரிந்தவராக, நம்மை தம் பேரிரக்கத்தால் எந்நாளும் காத்து, பராமரித்து, வழிநடத்துகின்றார். நாமும், பிறரின் மனநிலையை உணர்ந்து, அவர்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உதவிக்கரம் நீட்டிடும் நல்மனதைப் பெற்றிட, அருள்வேண்டி, இத்தெய்வீகத் திருப்பலியில் நம்மை அர்ப்பணிப்போம்.

    மன்றாட்டுக்கள்:

    பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

    அருளும், இரக்கமும் நிறைந்த இறைவா,

    எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், துறவற சபையினர் அனைவரும் அன்னை மரியாளைப் போன்று உமது திருவுளத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் உடையோராய் இருக்கவும். சுவால்கள் நிறைந்த இக்காலத்தில் மனவுறுதியுடனும். ஆர்வத்துடனும் பணியாற்றிட தூயஆவியின் அருளையும், வல்லமையையும், நல்ல உடல்நலனையும் அளித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    பொறுமையும். தயாளமும் நிறைந்த இறைவா,

    உமது தூய இதயத்திற்கு எதிராக நாங்கள் செய்யும் அனைத்துப்; பாவங்களுக்காகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றோம். எமது பாவ வாழ்வினால் சோர்வடைந்து போகும் எங்கள் ஆன்மாவிற்கு புத்துயிர் அளித்து, உமது பொறுமையையும், இரக்கத்தையும் உணர்ந்தவர்களாக, நல்ல மனமாற்றத்தைப் பெற்று, புதுப்படைப்பாக மாறிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    மாட்சியும் மகத்துவமும் நிறைந்த இறைவா,

    எம் நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மக்களை நேரிய வழியில் நடத்தவும், மக்களிடையே சாதி, மத, இனவெறியைத் தூண்டி, பிரிவினைகளை உருவாக்கிடாமல், மக்களை ஒற்றுமையுடன் வழியில் நடத்திடவும், மக்களின் வாழ்வு நல்ல ஒரு பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டிட, பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வு ஒளிமயமாக்கிடக் கூடிய ஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

    கனிவும், பணிவும் நிறைந்த இறைவா,

    நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள மக்கட்செல்வங்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழ்வதில் தங்கள் கவனத்தைச் செலுத்தவும், எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

    நீதியும், நேர்மையும் நிறைந்த இறைவா,

    இன்று உலகநாடுகள் முழுமையும் அகதிகளாகி இடம் பெயர்ந்து அல்லலுறும் அனைத்து மக்கள்மீதும் மனமிரங்கி அவர்களின் கண்ணீரைத் துடைத்தருளும். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களிலே நிம்மதியாக வாழவும், உலகிலே அடக்குமுறைகள், வன்முறைகள், தீவிரவாதம் ஒழிந்து, அன்பும், மனிதநேயமும், நீதியும், அமைதியும் நிலைபெறச்; செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

    "கடவுள் அன்பாய் இருக்கிறார்!" 1 யோவா 04: 16





    2 திருவருகைக்காலம் 4ஆம் வாரம் ஞாயிறு 18 12 2022

    திருப்பலி முன்னுரை


    திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு இன்று.

    விழாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களை செய்ய தொடங்கியுள்ள இந்த வேளையில் இந்த வாரத்தை, 'அன்பின்' வாரம் என்றழைக்கின்றோம்.

    யோவான் கூறியுள்ளவாறு 03: 16 தன் மகனையே அனுப்பி வைத்து, கடவுள் இந்த உலகை அன்பு செய்தார். அந்த மகனும் தன்னையே முழுமையாக தந்து உலகை நேசித்தார். இத்தகைய அன்பையே நமக்கும் தந்து, உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருந்து நம்மை அன்பு செய்து வருகின்றார்.

    அன்பாக வந்த இறைமகனை இன்றும் வாழ்விலே கண்டு, சான்று பகர முன்வருவோம்.

    மன்றாட்டுக்கள்:

    பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

    1. திருஅவை அன்பர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் உம் ஆவியை தந்து, அருள் பொழிந்தருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    2. நாட்டிலே நல்ல மழையைத் தந்து, பூமி செழிக்கவும், மண் வளம் பெறவும், ஊர்வன, பறப்பன, நடப்பன யாவும் நிறைந்த பயன் பெற, அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    3. பலியிலே பங்கேற்கும் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடும், மகிழ்வோடும், அமைதியோடும், உண்மை அன்போடும் பெருவிழாவை கொண்டாடிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    4. குடும்பத்தாரோடு பெருவிழாவைக் கொண்டாட பயணிக்க உள்ள அன்பர்களின் தூதர்களை கட்டளையிட்டு, மிகுந்த பாதுகாப்போடு பயணிக்கவும், கொண்டாட்டங்கள் மகிழ்வு தரவும், அருள் பொழிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

    "கடவுள் அன்பாய் இருக்கிறார்!" 1 யோவா 04: 16


     
    மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.

     திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

    உறவுகளைத் தேடி .....

    பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
    அன்பெனப்படுவது தன் கிளை செறாஅமை..... என்பது கலித்தொகை பாடல்.
    பண்பு என்பது யாதெனில் நல்லவர்களோடு சேர்ந்து பழகி வாழ்தல், அன்பு என்பது யாதெனில் தன் சுற்றத்தார்களோடு சேர்ந்து அமைந்த வாழ்க்கை வாழ்வது என்பது இப்பாடல் உணர்த்தும் பொருள். இந்த தன் கிளை செறாஅமைக்காக தான் அன்னை மரியாள் நெடிய பயணம் மேற்கொள்கிறார். இயேசுவின் பிறப்பு பெருவிழாவை மகிழ்வோடு நெருங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் அன்னை மரியாள் மற்றும் எலிசபெத் இவர்களின் சந்திப்பு நமக்கு உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. உறவுகள், வாழ்வின் உயிர் நாடிகள். அதை சரியான விதத்தில் நாம் கையாளாவிட்டால் அதற்கான பாதிப்புக்களையும் விளைவுகளையும் நாம் தான் சந்திக்க வேண்டியதிருக்கும். இன்றைய இறைவாக்குப் பகுதிகள் அனைத்தும் உறவுகளின் உன்னதத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் வாசகம் ஆயன்போல நம்மை தம் மந்தையாக நினைத்து பாதுகாக்கும் அமைதியின் ஆண்டவருடனான நமது உறவைப் பற்றி எடுத்துரைக்கின்றது. இரண்டாம் வாசகமோ தன் உடலையே நமக்காக பலியாகச்செலுத்தி நம்மை தூயவர்களாக்கிய இயேசுவுடனான நமது உறவைப் பற்றி எடுத்துரைக்கிறது. நற்செய்தி வாசகமோ, அன்னை மரியாள் எலிசபெத் அம்மாள் சந்திப்பை எடுத்துரைப்பதன் மூலம், உறவோடு வாழ நல்ல மாதிரிகையை நமக்கு காட்டுகிறது.

    ஆக அனைத்து வாசகங்களும் உறவோடு வாழும் உன்னதத்தையே விளக்குகின்றன. இன்றைய கால சூழலில் உறவோடு இருப்பது என்பது உள்ளங்கை அலைபேசியில் தொடர்பு எண் இருப்பதோடு முடிந்துவிடுகிறது. எண் தொலைந்து போனால் உறவே தொலைந்து போனது போல் வருந்தும் மனிதர்களும் நம் மத்தியில் உண்டு. விடுமுறை நாட்களில் உறவுகளைத் தேடிச்சென்று பார்த்து மகிழ்ந்த காலம் எல்லாம் கடல் கடந்து போய்விட்டது. கோடைவிடுமுறையில் இப்போது எல்லாம் எஃஸ்சேஞ்ச் மேளா என்று இருக்கிறது .. அப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எஃஸ்சேஞ்ச் செய்யப்படுவார்கள். இங்குள்ள குழந்தைகள் உறவினர்கள் வீட்டிலும், உறவினர்கள் குழந்தை இங்கும் மாறி இருந்து தங்கள் விடுமுறையைக் கழிப்பார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணர்ந்து பார்த்தால் தான் புரியும். இப்படியாக உறவை மேம்படுத்திய காலம் போய், இப்போது உறவுகளே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். என்வீடு, என்ஊர், என் விளையாட்டு பொருள்கள் என்று தன்னை சுற்றிய வாழ்க்கைக்கு நாமும் மாறி நமது சந்ததியினரையும் மாற்றிவிட்டோம். இந்நிலையில் மரியாள் மற்றும் எலிசபெத் இவர்களின் செயல்பாடுகள் நம்மை பழையனவற்றுக்கு திரும்ப அழைப்பு விடுக்கின்றது.

    இன்றைய நற்செய்தி பகுதிகளில் வரும் சொற்களில் ஐந்து வினையுரிச்சொற்களை அட்வெர்பு நமது வாழ்வின் செயல்பாடுகளில் பயன்படுத்த, அதற்காக முயற்சி செய்ய இறைவனின் அருள் நாடுவோம்.

    1.விரைந்து சென்றார்,
    2. மகிழ்ச்சியால் துள்ளிற்று,
    3. முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்,
    4. உரத்த குரலில்,
    5. ஆண்டவரின் தாய்.

    முதலில்... வினையுரிச்சொற்கள் எனப்படுபவை ஒரு வினையை மேலும் மிகைப்படுத்தி கூற உதவுபவை... மரியாள் எலிசபெத் முதிர் வயதில் கருவுற்ற செய்தி கேள்விப்பட்டு விரைந்து செல்கிறார். எண்ணித்துணிக கருமம் என்னும் குறளுக்கு முன்னோடியாக செயல்பட்டவர் மரியாள். எலிசபெத்தை சந்திக்க நினைத்தார். எவ்வளவு விரைவாக அவரை சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றார். நாமும் நற்செயல்கள் செய்கிறோம் ஆனால் நமது நற்செயல்கள் மரியாளின் செயல்களைப் போல விரைவாக செய்யப்படுகின்றனவா ??? நாம் பயன்படுத்தும் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை அனைத்தும் விரைவானதாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம் ஆனால் நமது நற்செயல்கள் விரைவாக செய்யப்படுகின்றனவா?? நாம் செல்கிறோம் ஆனால் விரைந்து செல்கிறோமா?? அன்னை மரியாளிடம் இருந்த அந்த நற்செயலுக்கான விரைவு நம்மிடம் வர வளர செபிப்போம்.

    மகிழ்ச்சியால் துள்ளிற்று;
    துள்ளல், இன்பம் துன்பம் இரண்டிலும் நிகழும். இன்பம் எப்போதும் இரட்டிப்பாகும். இங்கே வயிற்றில் இருந்த யோவானின் மகிழ்ச்சி துள்ளல், அவரது தாயாம் எலிசபெத் அம்மாளையும் அன்னை மரியாளையும் மகிழ்வித்தது. அதனால் உடன் இருந்த சுற்றத்தாரும் மகிழ்கின்றனர். நமது மகிழ்வு துள்ளல் பெரும்பாலும் ஃபார்வேர்டு துள்ளலாகத் தான் இருக்கிறது. நாம் பார்த்து துள்ளி மகிழ்ந்த காணொளிகளை நம் நண்பர்களோடு பகிர்வதோடு முடிந்து விடுகிறது. நமது மகிழ்ச்சி உணர்வுகள் துள்ளல்கள் வெறும் ஊடகத்தோடு முடிந்துவிடாது உணர்வுகளை சென்றடையும் துள்ளல் மகிழ்வாக இருக்க வேண்டும். நமது பார்வை, பேச்சு செயல் நடை உடை பாவனை அனைத்தும் பிறருக்கு துள்ளல் மகிழ்வைத் தரக்கூடியதாக இருக்க அருள் வேண்டுவோம்.

    முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்....
    தூய ஆவியின் ஆற்றல் தன்னில் இறங்குவதை கண்டுணர்ந்த எலிசபெத்தம்மாள் முற்றிலுமாக ஆட்கொள்ளப்படுகிறார். அமைதியில் இறைஆற்றலின் வல்லமையை உணர்ந்த அவர், தன்னை ஆவியின் பதம் அர்ப்பணிக்கின்றார். அதன் பலனாக மங்கள வாழ்த்து சொல்லி அன்னை மரியாளை வாழ்த்துகிறார். அவர் எவ்வளவுக்கு எவ்வளவு இறைஆற்றலால் நிரம்பப்பெற்றார் என்றால், அன்று அவர் சொன்ன வாழ்த்துக்கள் தான் , அந்த வார்த்தைகளைத்தான் இன்று நாம் அருள் நிறை மரியே செபத்தின் இரண்டாம் பாகமாக செபித்துக்கொண்டு வருகிறோம். அந்த அளவுக்கு வலிமை பெற்றவராயிருக்கிறார். நாமும் தூய ஆவி நம்மை ஆட்கொள்ள அனுமதித்தோமானால் நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வாழ்த்துகள் கூட வல்லமை மிக்க செபமாக மாறும்... முற்றிலும் ஆட்கொள்ளப்பட அருள் வேண்டுவோம்..

    உரத்த குரலில் ;
    தன் மனதில் இறை ஆவி உணர்த்தியதை உரத்த குரலில் கூடியிருந்தவர்கள் கேட்குமாறு எடுத்துரைக்கிறார் எலிசபெத் அம்மாள். உண்மையை உரக்கச்சொல்கிறார், உள்ளத்தில் படுவதை வெளிப்படையாகப் பேசுகிறார். இவர் கன்னியாயிற்றே இவர் கர்ப்பமாயிருப்பது வேறு யாருக்கும் தெரியாதே பிறர் மரியாளைப் பற்றி என்ன நினைக்கக் கூடும் என்று எண்ணவில்லை. தூய ஆவி உணர்த்தியதை உள்ளது உள்ளபடி உரத்தக்குரலில் கூறுகிறார். உரத்த குரல் உண்மையை சொல்வதற்கு மட்டுமே.. சிலர் உரக்கக் கூறினால் பொய்யும் உண்மையாகிவிடும் என்ற நினைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். உண்மை மட்டுமே உரக்கச்சொன்னால் நிலைத்து நிற்கும்... நாம் நமது குரலை எப்போது உயர்த்துகிறோம் உண்மைக்காகவா?? இல்லை உண்மை என பிறர் எண்ண வேண்டும் என்பதற்காகவா சிந்தித்து செயல்படுவோம்..

    ஆண்டவரின் தாய்;
    தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதற்கேற்ப தாய்க்கெல்லாம் தாயாம் அன்னை மரியாளை ஆண்டவனின் தாய் என் முதன் முதலாக அழைத்த பெருமை எலிசபெத் அம்மாளையேச் சேரும். சொல்லின் செல்வர் என்றே அவரை அழைக்கலாம் அந்த வகையில் தான் கூற விரும்புவதை வாழ்த்த நினைப்பதை தெளிவாகக் கூறி வாழ்த்தி மகிழ்கிறார். ஆண்டவருக்கு வழியை ஆயத்தம் செய்ய இருக்கும் மகனைப் பெற்றெடுக்க விருக்கும் தாயும் முன்னோடியாக செயல்படுகிறார். யோவான் வழியை ஆயத்தம் செய்யும் முன்னோடி , எலிசபெத் அன்னை மரியாளின் சிறப்புப் பெயர்களுக்கு முன்னோடி. ஏனெனில் பெண்களுக்குள் பேறுபெற்றவர். அருள் நிறைந்தவர், ஆண்டவரின் தாய் என முதன் முதலில் அழைத்தவர் இவரே. நாம் எப்படி பேசுகிறோம்?? நமது வாழ்த்துக்கள் நிலைத்து நிற்கின்றனவா?? சிந்தித்து செயல்படுவோம்...

    ஆக விரைந்து, மகிழ்ந்து , முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு , உரத்த குரலில் ஆண்டவனின் தாய் என அழைத்த எலிசபெத் போல நாமும் செயல்பட முயல்வோம். நமது வினைச்செயல்களுக்கு மேலும் ஒரு சிறப்பு கொடுக்கமுயற்சிப்போம். உறவுகளைத் தேடி வந்த மரியாளுக்கு உறவின் மேன்மையை தன் செயல்களாலும் சொல்லாலும் காட்டிய எலிசபெத் போல வாழ நினைப்போம். இன்றைய தினம் ஏற்றப்பட்ட நான்காம் மெழுகுதிரி நமது உறவின் மேன்மைக்காக ஏற்றப்பட்ட திரி என்பதை மனதில் கொண்டு செயல்படுவோம். உறவுகளின் உன்னதமும் உதுப்பிடமுமாய் இருக்கின்ற இறைஇயேசுவின் வருகையில் மகிழ்ந்து வாழ்வோம்... தங்கிளைச்செறா அமைக்காக நம் உறவுகளை நாடிச்செல்வோம் உயர் மகிழ்வுடன் வாழ்வோம். இறை ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.

     


     
    மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
     
    தூக்கத்திலிருந்து விழித்தெழுதல்

    திருவருகைக்காலத்தின் நான்கு ஞாயிறு நற்செய்தி வாசகங்களும் ஒன்றோடொன்று இணைந்து நகர்கின்றன: (1) விழித்திருங்கள்! (2) தயாரியுங்கள்! (3) மகிழுங்கள்! மற்றும் (4) ஏற்றுக்கொள்ளுங்கள்!

    இன்று நாம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அமைதியைக் குறித்துக் காட்டுகின்றது. போர் மற்றும் எதிரியின் அச்சுறுத்தல்களால் குழப்பம் அடைந்த ஆகாசு அரசனின் மனம் இறைவன் தருகின்ற 'இம்மானுவேல்' அடையாளத்தால் அமைதி பெறுகிறது. மரியாவை ஏற்றுக்கொள்வதா அல்லது யாருக்கும் தெரியாமல் விலக்கி விடுவதா எனக் குழப்பம் அடைந்த யோசேப்பின் மனம் இறைவனின் வெளிப்பாட்டில் அமைதி பெறுகிறது. ஆகாசு மற்றும் யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுகின்றனர். தூக்கத்திலிருந்து விழித்தெழுகின்ற எவரும் அமைதியைத் தழுவிக் கொள்கிறார். ஆக, தூக்கம் நம் வாழ்வுக்கு உடல் அளவில் அமைதி தந்தாலும், மன அமைதியைப் பெற்றுக்கொள்ள நாம் தூக்கம் கலைப்பது அவசியம்.

    இன்றைய வாசகங்கள் மூன்று மனிதர்களையும், அவர்களுடைய தூக்கங்களையும், அவற்றிலிருந்து அவர்கள் விழித்தெழுவதையும் நம் கண் முன் கொண்டுவருகின்றன.

    கிமு 735ஆம் ஆண்டு ஆகாசு யூதாவை ஆட்சி செய்தார். சாலமோன் அரசருக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இஸ்ரயேல் அரசு, வடக்கே இஸ்ரயேல், தெற்கே யூதா என்று பிரிந்தது. வடக்கே உள்ள இஸ்ரயேல் அரசு அசீரியாவின் அடிமையாக மாறி வரி செலுத்தி வந்தது (காண். 2 அர 15:19-20). இஸ்ரயேலின் அரசனான பெக்கா, சிரியாவின் அரசன் ரெஸினுடன் இணைந்து அசீரியாவை எதிர்க்கவும், அசீரியாவுக்கு எதிராக ஆகாசின் படைகளைத் திருப்பவும் திட்டமிட்டான். ஆகாசு அத்திட்டத்திற்கு உடன்பட மறுத்ததால் அவனை நீக்கிவிட்டு, தபியேலின் மகனை தாவீதின் அரியணையில் அமர வைக்க விரும்பி, ஆகாசின் மேல் படையெடுத்தான். ஏறக்குறைய எருசலேமை நெருங்கியும் விட்டான் (காண். எசா 7:1). வலுவற்ற உள்ளம் கொண்ட ஆகாசு, அச்சத்தால் நடுங்கி அசீரியப் பேரரசன் திக்லத்-பிலேசரின் உதவியை நாட முடிவெடுத்தான் (காண். 2 அர 16:7). அப்படிச் செய்வதற்கு அவன் நிறைய வரிசெலுத்த வேண்டியிருந்ததுடன், நாட்டின் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இறைவாக்குரைக்குமாறு எசாயா அனுப்பப்படுகின்றார் (முதல் வாசகம்). ஆகாசு ஆண்டவராகிய கடவுளின் துணையையோடு, தன் மக்களின் துணிவையோ நாடாமல் எதிரியின் உதவியை நாடுகிறான். ஆகாசு அரசனின் அச்சத்தைக் களையவும், அசீரியாவுடன் கூட்டுச் சேர்வதைத் தடுக்கவும் இறைவாக்கினர் எசாயா அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். அடையாளம் வழங்குதல் என்பது இறைவாக்குரைத்தலின் ஒரு கூறு ஆகும். ஆண்டவரைச் சார்ந்திருப்பதற்கு அஞ்சுகின்ற ஆகாசு, 'நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' (எசா 7:12) என்று போலியாகச் சொல்கின்றார். அவனது நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் எசாயா: 'மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களா?' (எசா 7:13).

    தொடர்ந்து எசாயா, 'ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர், 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்' (எசா 7:14) என்று அடையாளம் ஒன்றை வழங்குகின்றார். இந்த அடையாளத்துக்கான விளக்கம் தெளிவாக இல்லை. கிரேக்க மொழிபெயர்ப்பிலும், மத்தேயு நற்செய்தியிலும் (1:23), 'இளம்பெண்' என்னும் சொல்லுக்குப் பதிலாக, 'கன்னி' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எசாயா இறைவாக்கு நூலில் 'இளம்பெண்' என்ற சொல் யாரைக் குறிக்கிறது? என்னும் கேள்விக்குத் தெளிவான விடை காண நம்மால் இயலவில்லை. சில விவிலிய அறிஞர்கள், இறைவாக்கினர் எசாயாவின் மனைவியைக் குறிக்கலாம் என்கின்றனர். ஓசேயா இறைவாக்கினரின் மகன்கள் அடையாளமான பெயர்களைப் பெற்றது போல, எசாயாவின் இரு மகன்களும் அடையாளமான பெயர்களைப் பெறுகின்றனர் 'செயார்யாசிப்' ('எஞ்சியோர் திரும்பி வருவர்') (எசா 7:3), 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது') (எசா 8:3). 'இம்மானுவேல்' என்பது இரண்டாவது பெயரைக் குறிக்கலாம் என்பது இவர்களின் கருத்து. இன்னும் சிலர், 'இம்மானுவேல்' என்னும் சொல் ஆகாசின் மகன் எசேக்கியாவைக் குறிக்கிறது என்பர். ஆனால், இந்த இறைவாக்கு உரைக்கப்படும்போது எசேக்கியாவுக்கு ஏற்கெனவே ஒன்பது வயது ஆகிறது (காண். 2 அர 16:2). எசாயாவைப் பொருத்தவரையில், 'இம்மானுவேல்' என்னும் சொல், 'செயார்யாசிப்' என்னும் சொல்லைப் போல பெரிய கருத்துருவையும் புரட்சியையும் தன்னிலே கொண்டுள்ளது. ஆகையால்தான், 'இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்' (எசா 8:8) என்று மீண்டும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.

    ஆகாசுக்கு ஆண்டவராகிய கடவுள் அளித்த 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் நம்பிக்கை தருகின்ற வாக்குறுதியா? அல்லது அழிவை முன்னுரைக்கும் அச்சுறுத்தலா? என்னும் கேள்வியும் எழுகிறது. முதலில் இதை மீட்பு மற்றும் ஆசீரின் அடையாளமாகத்தான் எசாயா முன்னுரைக்கின்றார் (எசா 7:4, 7). அப்படி என்றால், ஆகாசின் நம்பிக்கையின்மை அடையாளத்தின் தன்மையை மாற்றிவிட்டதா? 'எப்ராயிமின் தலைநகர் சமாரியா. சமாரியா நகரின் தலைவன் இரமலியாவின் மகன். உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்துநிற்கமாட்டீர்கள்' (எசா 7:9). 'அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன் உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலைநிலமாக்கப்படும்' (எசா 7:16) என்னும் வாக்கியத்தில் வரும் 'இரு நாடுகள்' என்பது 'சிரியா மற்றும் எப்ராயிமை' குறிக்கிறதா? அல்லது 'யூதா மற்றும் அசீரியாவை' குறிக்கிறதா? என்பதும் தெளிவாக இல்லை. 'யூதா மற்றும் அசீரியாவைக் குறிக்கிறது' என்றால், 'இம்மானுவேல்' அடையாளம் அச்சுறுத்தல் மற்றும் எச்சரிக்கையாக இருக்கிறது. மேலும், 'அவன் வெண்ணையையும் தேனையும் உண்பான்' (எசா 7:15) என்றும் இறைவாக்குரைக்கின்றார் எசாயா. 'பாலும் தேனும்' பாலைவனத்து உணவே அன்றி, செழிப்பான விவசாய நிலத்தின் உணவு அல்ல. அப்படி எனில், இம்மானுவேல் பிறக்கும்போது அனைத்தும் அழிக்கப்பட்டு நிலம் பாழாக்கப்படுமா? எசாயாவின் இந்தப் பாடம் புரிந்துகொள்வதற்குக் கடினமாகவே இருக்கிறது. பெரும்பாலான அறிஞர்கள், 'இது வாக்குறுதியின் அடையாளம்' என்றே 'இம்மானுவேல்' அடையாளத்தைக் கருதுகின்றனர். 'இம்மானுவேல்' என்னும் பெயரில் இளம்பெண்ணின் நம்பிக்கை அடங்கியுள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்னர் தன் நாடு விடுவிக்கப்படும் என்று அவள் நம்புகிறாள். ஆனால், அந்த நம்பிக்கை ஆகாசுக்கு இல்லை. ஆக, சிரியாவும் எப்ராயிமும், தொடர்ந்து வருகின்ற அசீரியப் படையெடுப்பும் அழிந்துவிடும். எஞ்சியோர் வழியாக யூதாவுக்கு மீட்பு வரும் (காண். எசா 11:11). 'இம்மானுவேல்' என்னும் பெயரைத் தொடர்ந்து வரும், 'மகேர் சாலால் கஸ்-பாசு' ('கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது. இரை விரைகின்றது) என்னும் பெயரும் நம்பிக்கை தருகின்ற பெயராக இருக்கிறது. எசா 7:15, 17 என்னும் வாக்கியங்கள் எதிர்மறையான பொருளைத் தந்தாலும், ஒட்டுமொத்த பாடப் பகுதி நேர்முகமான பொருளையே தருகின்றது.

    மத்தேயு நற்செய்தியாளர் தன் நற்செய்தியில் பல முதல் ஏற்பாட்டு மேற்கோள்களைப் பயன்படுத்துகின்றார். அவர் தன் மேற்கோள்களை எழுபதின்மர் பதிப்பிலிருந்து (கிரேக்கம்) கையாளுகின்றார். குறிப்பாக, இயேசு பிறப்பு நிகழ்வில் பல முதல் ஏற்பாட்டு இறைவாக்குகள் நிறைவேறுவதாக முன்மொழிகின்றார். எடுத்துக்காட்டாக, 'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மெசியா பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை. ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலே ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' (மத் 2:5-6ளூ மீக் 5:2). முதல் இறைவாக்காக மத்தேயு முன்மொழிவது, ''இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்'' (மத் 1:22-23). இங்கே மத்தேயு, 'இம்மானுவேல்' என்ற சொல்லின் பொருளையும் முன்மொழிகின்றார். மத்தேயு நற்செய்தியார், 'இம்மானுவேல்' என்னும் அடையாளம் 'இயேசு' என்னும் 'ஆபிரகாமின் மகனை, தாவீதின் மகனை' குறிப்பதாகப் பதிவு செய்கின்றார்.

    ஆக, அச்சம் என்னும் தூக்கத்திலிருந்த ஆகாசு ஆண்டவராகிய கடவுள் எசாயா வழியாக அருளிய அடையாளத்தால் துணிவுக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

    இன்றைய இரண்டாம் வாசகம் (காண். உரோ 1:1-7), பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. இரு உள்பிரிவுகளைக் கொண்டுள்ளது இந்தப் பாடம்: முதலில், பவுல் மூன்று சொற்களால் தன் அடையாளத்தைப் பதிவு செய்கின்றார் 'இயேசு கிறிஸ்துவின் தொண்டன் அல்லது அடிமை,' 'திருத்தூதன்,' மற்றும் 'நற்செய்திப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டவன்.' ஆண்டவராகிய திருஅவையை, ஆண்டவரின் திருஅவையை அச்சுறுத்துவதற்காகத் தமஸ்கு புறப்பட்ட சவுல் தூக்கத்திலிருந்து விடுதலை பெறுகின்றார். புதிய அடையாளங்களைப் பெற்றுக்கொள்கின்றார். இரண்டாவதாக, 'தாவீதின் மரபினரான இயேசுவே கடவுளின் மகன்' என முன்மொழிந்து பிறஇனத்தார் அனைவரையும் நம்பிக்கைக்கு விழித்தெழச் செய்கின்றார்.

    ஆக, நம்பிக்கையின்மை என்னும் தூக்கத்திலிருந்த பவுல் (மற்றும் பிறஇனத்தார்) இயேசு கிறிஸ்து தமஸ்கு வழியில் தோன்றிய நிகழ்வு வழியாக நம்பிக்கைக்குள் விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

    இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 1:18-24), இயேசுவின் பிறப்பு யோசேப்புக்கு முன்னறிவிக்கப்படும் நிகழ்வாகவும், பிறக்கப்போகும் குழந்தைக்கு வழங்கப்படும் பெயரின் வரையறையாகவும் இருக்கின்றது. நேர்மையாளராகிய யோசேப்பு, தூய ஆவியால் மரியாள் கருத்தாங்கியிருக்கும் குழந்தையைத் தன்னுடையதாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த ஏற்றுக்கொள்தல் 'பெயரிடும் நிகழ்வால்' உறுதிசெய்யப்படுகிறது.

    நிகழ்வில் அதிகமாகச் சிந்தித்துக்கொண்டிருந்த யோசேப்பு திடீரென தூங்கிவிடுகின்றார். கனவில் ஆண்டவரின் தூதர் அவரிடம் பேசுகின்றார். இரு செய்திகள் தரப்படுகின்றன. ஒன்று, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியாரால்தான். இரண்டு, குழந்தைக்கு வழங்கப்பட வேண்டிய பெயர்.

    வாழ்வின் எதார்த்தங்கள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, அதீத எண்ணங்களால் நம் மனத்தின் சுமை அதிகமாகும்போது, உடனடியாகத் தூங்கிவிடுதல் நலம் என்பது யோசேப்பு தருகின்ற முதல் பாடமாக இருக்கின்றது.

    நிராகரித்தல் என்னும் தூக்கத்திலிருந்த யோசேப்பு கனவில் நிகழ்ந்த வெளிப்பாட்டின் வழியாக ஏற்றுக்கொள்தல் என்னும் நிலைக்கு விழித்தெழுந்து அமைதி பெறுகின்றார்.

    இன்று நம் வாழ்வில் நாம் தூங்கிக்கொண்டிருக்கும் நிலைகளில் இருக்கக் காரணம் நாம் கொள்ளும் அச்சம், நம்பிக்கையின்மை, மற்றும் நிரகாரித்தல் ஆகியவைதாம். இவற்றால்தாம் நம் அமைதியும் நிலைகுலைகிறது. தனிப்பட்ட வாழ்வு பற்றிய அச்சம், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, மற்றவர்களின் இருத்தலையும் இயக்கத்தையும் நிரகாரித்தல் ஆகியவற்றிலிருந்து நாம் விழித்தெழ வேண்டும் எனில் என்ன செய்வது?

    இறைவனின் குறுக்கீட்டைக் கண்டடைந்து அதை உறுதியாகப் பற்றிக்கொள்வது.

    திருவருகைக்காலத்தின் நான்காம் (இறுதி) வாரத்திற்குள் நுழையும் நாம் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அமைதியின் அரசரைக் கண்டுகொள்வோம்.

    நிற்க.
    'கடவுள் நம்மோடு' என்னும் செய்தியை மையமாக வைத்துச் சிந்தித்தால், பின்வரும் பிறழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. 'கடவுள் நம்மோடு' என்பது மூன்று நிலைகளில் பிறழ்வுக்குள்ளாக்கப்படுகிறது. அப்பிறழ்வுகள் எவை எனவும், அவற்றை எப்படிக் களைவது எனவும் அறிதல் முதன்மையான வாழ்வியல் சவால்.

    (அ) கடவுள் நம்மோடு இல்லை முதல் ஏற்பாட்டில் சில கதைமாந்தர்களை விட்டு கடவுள் நீங்குகின்றார். தனிநபர்களும் (காண். சிம்சோன் நீத 16:20, சவுல் 1 சாமு 16:14) ஒட்டுமொத்த குழுவும் (இஸ்ரயேல் மக்கள் எசே 11:23), 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற உணர்வைப் பெறுகின்றனர். 'கடவுள் நம்மோடு இல்லை' என்பது இங்கே ஒரு வாழ்வியல் அனுபவமாக அவர்களுக்கு இருக்கிறது. சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் நம்பிக்கை இழக்கிறோம். நம் அன்புக்குரியவரின் இறப்பு, எதிர்பாராமல் நிகழும் இழப்பு, குணப்படுத்த இயலாத நோய், மீள முடியாத தீய பழக்கம் ஆகியவை, 'கடவுள் என்னோடு இல்லை' என்ற ஒருவித விரக்தி உணர்வை நம்மில் ஏற்படுத்துகிறது. கோவித்-19 பெருந்தொற்று மற்றும் இயற்கைச் சீற்றங்களின்போது, கடவுள் நம்மை விட்டு நீங்கிவிட்டதாக நாம் உணர்கிறோம். சிலர் தங்கள் வாழ்வில் தாங்கள் செய்த தவறான செயல்களுக்காகக் கடவுள் தங்களைத் தண்டிக்கிறார் என்று நினைப்பதுண்டு. எடுத்துக்காட்டாக, அறியாமல் செய்த கருச்சிதைவினால், தங்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் கடவுள் செய்துவிட்டார் என்றும், நாம் ஆன்மிகத்தில் நன்றாக இல்லாததால், கடவுள் நமக்குத் தீமைகளை அனுப்புகிறார் என்றும் சில நேரங்களில் நாம் எண்ணுகிறோம். கடவுள் நம் தீச்செயலின் பொருட்டு தன் உடனிருப்பை நம்மிடமிருந்து விலக்கிக்கொள்வதில்லை. ஆக, 'கடவுள் நம்மோடு இல்லை' என்ற அவநம்பிக்கையை நம் உள்ளத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

    (ஆ) கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை
    அறிவொளி இயக்கம் தொடங்கிய காலம் தொட்டே, அறிவு அரியணையில் ஏற்றப்பட்டு, நம்பிக்கை வெளியே விரட்டப்பட்டு வருகிறது. புலன்களால் உணர முடியாத எதுவும் இருத்தல் கொண்டிருப்பதில்லை எனக் கற்பிக்கின்ற அறிவுமைய வாதம் கடவுளையும் புலன்களுக்குள் அடக்கிவிட நினைக்கிறது. ஆக, அறிவொளி இயக்கம் கடவுள் நம்பிக்கையை சுமையாகப் பார்க்கிறது. மேலும், சமயச் சடங்குகள் அனைத்தும் மூட நம்பிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. இரண்டாவதாக, சமயத்தின் பெயரால் நடந்தேறும் வன்முறை, போர், அறநெறிப் பிறழ்வுகள் ஆகியவற்றைக் காண்கின்ற சிலர், கடவுள் இல்லாமல் இருந்தால் இத்தகைய சண்டைகள் தவிர்க்கப்படலாம் என்றும், கடவுள் இருப்பது நமக்கு ஒரு பெரிய நேர விரயம் என்றும் கருதுகின்றனர். சிலர் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஆலயம், அருள்பணி நிலை போன்ற அமைப்புகள் தேவையற்றவை எனக் கருதுகின்றனர். மூன்றாவதாக, கடவுள் நம்மோடு இல்லை என்றால் நாம் விரும்பியதை நம்மால் செய்ய இயலும் என்று சொல்கின்ற சிலர், கடவுள் இருப்பதால்தான் அறநெறிக் கோட்பாடுகள் இருக்கின்றன என்று சொல்லி, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என முன்மொழிகின்றனர். யோபுவும் கூட தன் துன்பத்தின் ஒரு கட்டத்தில், 'என்னுடைய நாள்கள் சிலமட்டுமே. என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால், மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்' (யோபு 10:20) என்கிறார். தன் மகிழ்ச்சியைத் தடைசெய்கின்ற நபராக கடவுளைக் காண்கின்றார் யோபு. அறிவுவாதத்தின் கூற்று உண்மை போல இருந்தாலும், வெறும் புலனறிவு மட்டுமே மனித அறிவு அல்ல. புலன்களால் உணர முடியாத பல எண்ணங்கள் நம் மூளையில் இருக்கின்றன. இறையனுபவம் என்பது புலனறிவுக்கு அப்பாற்பட்டது. கடவுள் பெயரால் நாம் பல நேரங்களில் பிளவுபட்டிருந்தாலும், சமயம் மானுடருக்கு அளிக்கப்பட்ட மயக்கமருந்து என்றாலும், சமயத்தின் வழியாக நிறைய மேம்பாடு மனித இனத்தில் நடந்துள்ளது என்பதையும் நாம் மறுக்க இயலாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை, நீதி போன்ற கோட்பாடுகள் இருக்கவே செய்கின்றன. ஆக, கடவுள் நம்மோடு இருக்கத் தேவையில்லை என்ற கூற்று ஆபத்தானது.

    (இ) கடவுள் எங்களோடு மட்டும்
    'கடவுள் நம்மோடு' என்ற சொல்லாட்சி, 'கடவுள் எங்களோடு' அல்லது 'கடவுள் எங்களோடு மட்டும்' என்று மாறும்போது சமய அடிப்படைவாதம் தோன்றுகிறது. மனிதர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதோடு, தங்களைச் சாராத மற்றவர்களை அழிக்கவும் இது தூண்டுகிறது. கடவுள் யாருடைய தனிப்பட்ட உரிமைப் பொருளும் அல்ல. பல நேரங்களில் கடவுளைக் காப்பாற்றுவதிலும், கடவுள்சார் கோட்பாடுகளைத் தூக்கிப் பிடிப்பதிலும் நாம் நேரத்தையும் ஆற்றலையும் பணத்தையும் செலவழிக்கின்றோம். 'எங்கள் கடவுளே உண்மைக் கடவுள்' என்ற மனநிலையே காலனியாதிக்கத்திற்கும் கட்டாய சமயமாற்றத்திற்கும் வழிவகுத்தது. உண்மைக் கடவுள் யார் என உறுதி செய்ய நடந்தேறிய போர்களை வரலாறு அறியும். கடவுள் எங்களோடு மட்டும் என்ற மனநிலையில்தான் தூய்மை-தீட்டு, மேல்-கீழ், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்னும் பாகுபாடுகள் வருகின்றன. ஆக, 'கடவுள் நம்மோடு' என்பது ஒட்டுமொத்த மானுட அனுபவமாக இருக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட குழுவின் அடிப்படைவாத நிகழ்வாக மாறக் கூடாது.

    இப்பிறழ்வு எண்ணங்களும் நம் அமைதியைக் குலைக்கின்றன. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு, 'கடவுள் நமக்காக' என்று விண்ணேறிச் சென்றார். கடவுள் நம்மோடு இருக்கிறார் எனில், நாம் அவரோடும், அவர் வழியாக ஒருவர் மற்றவரோடும் இணைந்து நின்றால் எத்துணை நலம்!
     
    மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

    "கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்போம்"

    குருவிடமிருந்து கிடைத்த பாராட்டு:

    தனக்கு வயலின் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருக்கின்றது என்பதை அறிந்த அந்த இளைஞன் அதை முறைப்படி கற்றுக்கொண்டான். அத்தோடு நின்றுவிடாமல், அதில் வல்லுநராக வேண்டும் என்பதற்காக அவன் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு பெரிய அரங்கில், தன்னுடைய இசை நிகழ்ச்சியை அரங்கேற்றவும் முடிவு செய்தான் அவன். அதற்காக அவன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, தன்னையே தயாரித்துக் கொண்டான்

    குறிப்பிட்ட நாளும் வந்தது. அன்றைய நாளில், அவனுடைய இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க அரங்கமே நிரம்பி வழிந்தது. அவன் தன் கையில் வயலினை எடுத்து வாசிக்கத் தொடங்கியபோது, பார்வையாளர்களின் கைதட்டலால் அரங்கே அதிர்ந்தது. அவன் அந்தக் கைதட்டல்களில் மயங்கி விடாமல், தொடர்ந்து வாசித்தான். இடையிடையே, அவன் அரங்கியின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரைப் பார்த்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பெரியவர் தம் கைகளை உயர்த்தி அவனுக்குப் பாராட்டுத் தெரிவித்தபோதுதான் அவன் மிகவும் மகிழ்ந்தான்.

    அரங்கிலிருந்த அனைவரும் கைகளைத் தட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தபோதும் மகிழாத அந்த இளைஞன், மூலையில் இருந்த ஒரு பெரியவர் தம் கைகளை உயர்த்தித் தம் வாழ்த்துகளைத் தெரிவித்தபோது மகிழ்ந்தான் எனில், அதற்கு முக்கியக் காரணம், அந்தப் பெரியவர் அவனுக்கு வயலின் வாசிக்கக் கற்றுக்கொடுத்த குரு. அதனால்தான் அவர் தம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தபோது, அவன் மகிழ்ந்தான்.

    ஆம், இந்த நிகழ்வில் வரும் இளைஞன் எப்படித் தன் குருவிடமிருந்து வாழ்த்தினைப் பெறுவதற்காகச் சிறந்த முறையில் வயலின் வாசித்தனோ, அப்படி நாம் ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து வாழ்த்தினைப் பெறுவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கவேண்டும். திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, "நாம் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கவேண்டும்" என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் எப்படி இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்பது? என்பது குறித்துச் சிந்திப்போம்.

    கீழ்ப்படிதலை விடச் சிறந்த பலியில்லை:

    கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தன் விருப்பம் போல் நடந்த, இஸ்ரயேலின் முதல் அரசனான சவுலிடம் சாமுவேல் சொல்லும் வார்த்தைகள்தான், "கீழ்ப்படிதல் பலியைச் சிறந்தது" (1சாமு 15:22). இவ்வார்த்தைகள் சவுலுக்கு மட்டுமல்லாமல், இன்று நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும். ஒருவர் எந்த இனத்தவராக இருந்தாலும், அவர் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர் ஆண்டவரின் சொந்த இனத்தவராக மாறுகின்றார், அல்லது இயேசு கிறிஸ்துவுக்கு உரியவராகிறார். அதே நேரத்தில் ஒருவர் கடவுளின் சொந்த இனத்தில் அல்லது, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும், அவர் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்காவிட்டால், அவர் யாரோ ஒருவராகத்தான் இருப்பார் இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தியும் இதுதான்.

    ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்களைப் பிடித்துத் துன்புறுத்தி, அதன்மூலம் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர் தமஸ்கு நகர் நோக்கிச் செல்லும்போது ஆண்டவர் இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்பட்டுப் பிறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் பணிக்கப்பட்டார் (திப 9:15; உரோ 11:13). இதன்பிறகு அவர் பிறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினார்.

    இன்றைய இரண்டாம் வாசகத்தில், பிறவினத்தாராகிய உரோமையர்களுக்குக் கடிதம் எழுதும்போது, பவுல் தன்னை இயேசு கிறிஸ்துவின் பணியாளன், திருத்தூதனாக அழைக்கப்பட்டவன் எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்டுவிட்டு, கிறிஸ்து இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கின்றார். அந்த நற்செய்தி கடவுளால் தம் இறைவாக்கினர் வாயிலாகத் திருநூலில் வாக்களித்ததுதான் என்று சொல்லிவிட்டு, இறுதியில், "பிற இனத்தாராகிய நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்பு பெற்றிருக்கின்றீர்கள்" என்கிறார் அவர் யூதரல்லாத அனைவரும் பிற இனத்தவர்தான். அந்த அடிப்படையில், உரோமையரைப் போன்று பிறவினத்தாராகிய நாமும் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்கவேண்டும். அதுதான் பவுல் விடுக்கும் அழைப்பாகும்.

    அரசனின் கீழ்ப்படியாமை:

    ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்ற ஒருவரால் மட்டுமே அவருக்கு உரியவராக இருக்க முடியும் என்று பார்த்தோம். இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவரே ஒரு அடையாளத்தைத் தருவதாகச் சொல்லியும், அவருக்குக் கீழ்ப்படியாமல், ஆகாசு தம் விருப்பப்படி நடப்பதைக் குறித்து வாசிக்கின்றோம்.

    திருவிவிலியத்தில் அடையாளம் கேட்பது, ஆண்டவரைச் சோதிப்பதற்கு இணையானது. இயேசு கூட, பரிசேயர்கள் தன்னிடம் அடையாளம் கேட்டபோது, அவர்களைக் கடுமையாகச் சாடியதைப் பற்றி நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம் (மத் 12: 38-42). இந்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, ஆகாசு மன்னனிடம் அடையாளம் ஒன்றைக் கேட்குமாறு சொன்னபோது, அவன், "நான் கேட்க மாட்டேன்; ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்" என்கிறான். இதை நல்ல விதமாய் எடுத்துக்கொள்ளலாமா? என்றால் முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.

    ஏனெனில், இந்த ஆகாசு மன்னன் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ள அழைக்கப்பட்டான். அவனோ ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், சிரியாவோடும் இஸ்ரயேலோடும் கூட்டுச்சேர்ந்து கண்டு, ஆண்டவரைப் புறக்கணித்தான். எனவேதான் இறைவாக்கினர் எசாயா அவனிடம், "ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார்..." என்கிறார். ஆம், ஆகாசு அரசனாக இருந்தாலும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல் நடந்து, யாரோ ஒருவர் போன்று ஆனான்.
    யோசேப்பின் கீழ்ப்படிதல்

    அரசன் என்பவன் ஒரு நாட்டிற்கே தலைவன். அவன் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, எல்லாருக்கும் முன்மாதிரியாய் இருந்திருக்கவேண்டும். ஆனால், ஆகாசு மன்னன் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமல், துன்மாதிரியாய் இருக்கின்றான். இதற்கு முற்றிலுமாக மாறாக, தாவீதின் வழிவந்த யோசேப்பு ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு உகந்தவராகின்றார்.

    "மணமாகியும் கன்னிமை கழியாத ஒருத்தியை நகரில் ஒருவர் சந்தித்து, அவளோடு உறவு கொண்டால், இவர்கள் இருவரையும் நகர் வாயிலுக்குக் கொண்டு போய்க் கல்லால் எறிய வேண்டும்" (இச 22: 23-24) என்பது யூதச் சட்டம். யோசேப்பு தனக்கு மண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருக்கின்றார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும், அவர் யூதச் சட்டத்தின் படி நடக்காமல், அவரை மறைவாக விலக்கிவிடத் திட்டமிடுகின்றார். அல்லது எண்ணிக்கை நூலில் சொல்லப்பட்டது (எண் 5:1-11) போன்று நடந்து கொள்ள முடிவு செய்கின்றார். இந்நிலையில்தான் ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில், தோன்றி, மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்கிறார். இதையடுத்து, தூக்கத்திலிருந்து விழித்தெழும் யோசேப்பு, கனவில் ஆண்டவரின் தூதர் தனக்குச் சொன்னது போன்றே தன் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்கின்றார்.

    ஆம், அரசராய் இருந்த ஆகாசு ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதபோது, தாவீதின் வழிவந்த யோசேப்பு, ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேறக் காரணமாக இருக்கின்றார். இன்று பலர் ஆகாசைப் போன்று தங்கள் விருப்பம் போன்று நடக்கின்றார்கள். அவர்களால் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. நாம் யோசேப்பைப் போன்று கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும். அதற்காக ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். நாம் ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தயாரா? சிந்திப்போம்.

    சிந்தனைக்கு:

    'கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டுள்ளனர்' (சஉ 12:13) என்கிறது சபை உரையாளர் நூல். எனவே, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
     
    திருவருகைக்காலம் நான்காம் வாரம் 21 டிசம்பர் 2025

    I எசாயா 7: 10-14
    II உரோமையர் 1: 1-7
    III மத்தேயு 1: 18-24

    சிந்தனை 1
    கனவின் வழியாகப் பேசும் கடவுள்
    கி.மு. 44 ஆம் ஆண்டு, மார்ச் 14 ஆம் நாள் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர் தன்னுடைய மனைவி கல்புனியாவோடு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். நள்ளிரவு நேரத்தில் கல்புனியா தூக்கத்தில் ஏதோ பேசுவதைக் கேட்டு, திடுக்கிட்டு எழுந்த ஜூலியஸ் சீசர், அவளைத் தட்டி எழுப்பி, "உனக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டான் ஜூலியஸ் சீசர். "அன்பரே! நாளைய நாளில் நீங்கள் செனட்டிற்குப் போகும்போது, அங்கு நீங்கள் கொல்லப்படுவதும் என்னுடைய மடியில் இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடப்பதுமாய்க் கனவு கண்டேன். அதனால் தயைகூர்ந்து நாளைய நாளில் நடக்கும் செனட்டிற்கு நீங்கள் போகவேண்டாம்" என்றாள். "சரி, நீ சொல்வதுபோல் நாளை நான் சென்ட்டிற்குப் போகமாட்டேன்" என்று உறுதிகூறினான் ஜூலியஸ் சீசர்.

    மறுநாள் காலையில் ஜூலியஸ் சீசர், தன்னைப் பார்க்க வந்த தன்னுடைய நெருங்கிய நண்பனாகிய புரூட்டசிடம், "இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளைக்குத் தள்ளிவைக்கிறேன்... அதனால் கூட்டிற்கு வரும் எல்லாரிடமும் செய்தியைச் சொல்லிவிடுங்கள்" என்றான். அதற்கு அவன், "பேரரசரே! இன்றைக்கு நடப்பதாக இருக்கும் செனட் கூட்டத்தை இன்னொரு நாளுக்குத் தள்ளிவைத்தால், எல்லாரும் உங்களைக் குறித்து, 'இவன் கையாலாகாதாவன்' என்று தவறாகப் பேசுவார்களே" என்று நயவஞ்சகமாகப் பேசினான். இதைக்கேட்டு சற்று தடுமாற்றம் அடைந்த ஜூலியஸ் சீசர், "ஆமாம், நீ சொல்வதுதான் சரி" என்று தன்னுடைய மனைவியின் வார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, புரூட்டசோடு செனட் நடைபெறும் இடத்திற்குச் சென்றான். போகிற வழியில் ஜூலியஸ் சீசருக்கு நெருக்கமான ஒருவர், நடக்கப்போகும் சதியைக் குறித்து முன்கூட்டியே தெரிந்தவராய் அவரிடம் வந்து, "இதை நீங்கள் மட்டும் படியுங்கள்" என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பைக் கொடுத்துவிட்டுப் போனார். ஜூலியஸ் சீசர், அது ஒரு மனு என்று நினைத்துக்கொண்டு மற்ற காகிதங்களோடு வைத்துக்கொண்டான். செனட் நடைபெறவிருந்த இடத்தை ஜூலியஸ் சீசரும் புருட்டஸும் அடைந்த பிறகு, அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தவர்கள் போல் செனட்டில் இருந்தவர்களும் ஜூலியஸ் சீசரின் நெருங்கிய நண்பனுமாகிய புரூட்டஸும் ஜூலியஸ் சீசர்மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டார்கள். அவனோ இரத்த வெள்ளத்தில் இறந்துபோனான். தன்னுடைய மனைவிக்குத் தோன்றிய கனவின் வழியாக ஜூலியஸ் சீசர் எச்சரிக்கைப்பட்ட போதும், அதற்குப் பணிந்து நடக்காததால் அவன் கயவர்களால் கொல்லப்பட்டது மிகவும் வேதனைக்குரியது. இதற்கு முற்றிலும் மாறாக, கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு கடவுளின் தூதுவருடைய குரலுக்குச் - செவிகொடுத்த யோசேப்பைக் குறித்து இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகின்றது. யோசேப்பிற்குக் கனவின் வழியாகச் சொல்லப்பட்ட செய்தி என்ன? அதற்கு அவர் எவ்வாறு கீழ்ப்படிந்து நடந்தார்? நாம் எப்படி ஆண்டவரின் குரலுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது? என்பவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

    யோசேப்பு என்னும் நேர்மையாளர்
    நற்செய்தி வாசகத்தில், நேர்மையாளர் யோசேப்பைக் குறித்து வாசிக்கின்றோம். இவர் தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்பே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரை மறைவாய் விலக்கிவிடத் தீர்மானிக்கின்றார். இங்கு யோசேப்பு மரியாவிடம் (பெருந்தன்மையோடு) நடந்துகொண்டவிதம் கவனிக்கத்தக்கது.

    மண ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்ணிடம் கன்னிமை காணவில்லை என்றால், அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும் வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (இச 22: 20-21). மேலும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், அந்தப் பெண்ணின் அருவருக்கத்தக்க செயலைப் பார்த்துவிட்டு, அவளிடம் முறிவுச் சீட்டு எழுதிக்கொடுத்துவிட்டு, அவளை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி விடலாம். இதையும் மோசேயின் சட்டம் கூறுகின்றது (இச 24:1). ஆனால், யோசேப்போ தனக்கு மணஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா தன்னோடு கூடி வாழ்வதற்கு முன்னமே கருவுற்றிருந்த செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைக் கல்லால் எறியவுமில்லை; மணமுறிவுச் சீட்டு எழுதிக் கொடுக்கவுமில்லை. மாறாக, மறைவாக விலக்கிவிட முடிவுசெய்கின்றார். இவ்வாறு அவர் நேர்மையாளராய் நடந்துகொள்கின்றார். திருவிவிலியம் 'நேர்மையாளர்' என்பவரைச் சக மனிதரிடம் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொள்பவராகச் சுட்டிக்காட்டுக்கின்றது. இயேசு சொல்கின்ற இறுதித் தீர்ப்பு உவமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த உவமையில் வருகின்ற நேர்மையாளர்கள் (மத் 25: 37-39) சகமனிதர்களிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடப்பார்கள்; நற்செயல் புரிவார்கள். அந்த வகையில் யோசேப்பும் மரியாவின் மட்டில் இரத்தத்தோடு நடத்துகொண்டு, நேர்மையாளராய் மிளிர்கின்றார்.

    கனவின் வழியாகப் பேசும் கடவுள்
    யோசேப்பு, மரியாவைத் தனியாக விலக்கிவிடத் திட்டமிட்ட சமயத்தில்தான், கடவுள் தன்னுடைய தூதர்மூலம், யோசேப்பின் கனவில் தோன்றிப் பேசுகின்றார். கடவுள் கனவின் வழியாகப் பேசுவார் என்பதற்குத் திருவிவிலியத்தில் பல சான்றுகள் இருக்கின்றன. ".....கனவில் அவனோடு பேசுவேன்' (எண் 12:6) என்ற இறைவார்த்தையும், உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளையோர் காட்சிகளையும் காண்பார்கள் (யோவே 2: 28) என்ற இறைவார்த்தையும் இன்னும் ஒருசில இறைவார்த்தைகளும் (மத் 2:12,13,19,22) இதற்குச் சான்று பகர்கின்றன. யோசேப்பின் கனவில் தோன்றிய கடவுளின் தூதர் அவரிடம், மரியா தூய ஆவியார்தான் கருவுற்றிருக்கின்றார் என்பதையும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம் என்பதையும் அவர் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பதையும் எடுத்துக்கூறுகின்றார். இவ்வாறு கனவின் வழியாகப் பேசிய கடவுளுக்கு கடவுளின் தூதருக்கு யோசேப்பு செவிமடுத்தாரா? அதன்பிறகு என்ன நடந்தது என்பன குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

    இறைத் திருவுளத்தின்படி நடந்த யோசேப்பு
    கடவுளின் தூதர் கனவின் மூலம் கடவுளின் திருவுளத்தை யோசேப்பிடம் எடுத்துச் சொன்னதும், அவர் தன்னுடைய மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தொடங்குகின்றார். இதன்மூலம் யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகும் பேறுபெறுகின்றார், மட்டுமல்லாமல், 'நம்மோடு இருக்கும் கடவுளின்' உடனிருப்பை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உணரத் தொடங்குகின்றார். யோசேப்பு கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடந்தது, நமக்கு முன் ஒரு கேள்வியை எழுப்புகின்றது. அது என்ன என்றால், நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? என்பதாகும். நிறைய நேரம் நாம் இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற ஆகாசு மன்னனைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்காமல், நம்முடைய விருப்பத்தின்படியே நடந்தே அழிந்து போகின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் யோசேப்பைப் போன்று கடவுளின் திருவுளத்திற்கு நம்மையே கையளித்து, அதற்குப் பணிந்து நடந்தால், இயேசு கண்ட இறையாட்சிக் கனவு நனவாகும் என்பது உறுதி.

    சிந்தனை
    'உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ நான் வருகின்றேன்' (எபி 10: 9) என்று இயேசு கிறிஸ்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவார். ஆதலால், நாமும் நம் ஆண்டவரைப் போன்று, யோசேப்பு, மரியாவைப் போன்று ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
    - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
     
     
    இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
    இறைவனின் சந்திப்பிற்கு இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆண்டவர் தாமே ஓர் அடையாளம் தருகிறார். "இதோ, கருவுற்று இருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் இம்மானுவேல் என்று பெயரிடுவார்" (எசா. 7:14).

    ஆண்டவர் விண்ணகத்தினின்று மானிடரை உற்று நோக்குகின்றார்! மதி நுட்பமுள்ளோர், கடவுளை நாடுவோர் எவராவது உண்டோ எனப் பார்க்கின்றார். எல்லாரும் நெறி பிறழ்ந்த ஒருமித்துக் கெட்டுப்போயினர். நல்லது செய்வார் யாரும் இல்லை (திபா. 14:2-3) என்கிறார் திருப்பாடல்கள் ஆசிரியர். இப்படி மனிதன் கடவுளைத் தேட நினைக்காதபோது, கடவுள் மனிதனைத்தேடி வருகிறார்!

    இறைவன் மனிதரைச் சந்திக்க நினைத்ததற்குக் காரணம் உண்டு! தான் படைத்த உலகத்தைக் கடவுள் பார்த்தார்! அழுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது! மனிதன் மனிதனை வெறுக்கத் துவங்கினான். தனி மரம் தோப்பாகலாம்! தோப்பு தனிமரமாவதைக் கடவுள் கண்டார். காடு வீடாகலாம்! வீடு காடாகலாமா? வீடு காடாவதைக் கடவுள் கண்டார். மிருகம் மனிதனாகலாம்! மனிதன் மிருகமாகலாமா? மனிதன் மிருகமாவதைக் கடவுள் கண்டார்! நானென்ன, என் சகோதரனுக்குக் காவலாளியா என்ற காயினின் கேள்வி மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது! எங்கு பார்த்தாலும் கல்லறைத் தோட்டங்கள் பலுகிப் பெருகத் துவங்கின. நீதிக்கொரு கல்லறை. நேர்மைக்கொரு கல்லறை, அன்புக்கொரு கல்லறை, அமைதிக்கொரு கல்லறை, சமத்துவத்திற்கொரு கல்லறை, சகோதரத்துவத்திற்கொரு கல்லறை. சுதந்திரத்திற்கொரு கல்லறை. இந்தக் கல்லறைகளுக்கெல்லாம் பொய்யும், புரட்டும், வஞ்சகமும், சூழ்ச்சியும், அநீதியும், அக்கிரமும் காவல் நின்றன. யாரையும் யாரும் சந்திக்க விரும்பவில்லை! எங்கு பார்த்தாலும் சுயநலம்! இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன்னால் படைக்கப்பட்ட மனிதர்கள் துடிதுடித்து, அனாதைகள் போல சாவதைக் கடவுள் விரும்பவில்லை! நமது தாயைவிட நம்மை அதிகம் அன்பு செய்பவராயிற்றே நமது கடவுள்! (எசா. 49:15)

    இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல்நலம் பொங்கியது. உள்ள அமைதி பொங்கியது. உயிர்ப்பு பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இயேசு பேதுருவின் மாமியாரைச் சந்தித்தார். அவளுக்கு உடல்நலம் கிடைத்தது (மத். 8:14-15). இயேசு பேய்பிடித்த இருவரைச் சந்தித்தார். அவர்களுக்கு விடுதலை கிடைத்தது (மத். 8:26-34). இயேசு பாவத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியைச் சந்தித்தார் (யோவா. 8:1-11). பாவிக்கு பாவ மன்னிப்பு கிடைத்தது. இயேசு கல்லறையில் வைக்கப்பட்டிருந்த இலாசரைச் சந்தித்தார். இலாசருக்கு உயிர்ப்பு கிடைத்தது (யோவா. 11:44).

    இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு அன்னை கன்னிமரியாள் உருவிலே பாதுகாப்பு கிடைத்தது (யோவா.19:25-27). உயிர்த்த இயேசு தனது சீடர்களைச் சந்தித்தார். அவர்களுக்குச் சமாதானம் கிடைத்தது ( யோவா.20:29). உலக மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள் (உரோ.1:7). இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வெல்லாம் ரோஜாப் பூக்களாக, மல்லிகைப் பூக்களாக, தாமரைப் பூக்களாக, செவ்வந்திப் பூக்களாக, செண்பகப் பூக்களாக, மலரும் பூக்களாக, மிளிரும் பூக்களாக, வளரும் பூக்களாக பூத்துச் சிரித்தன.

    இப்படி நம்மை வாழ வைக்கும் இயேசுவைச் சந்தித்து புது வாழ்வும், புத்துயிரும் பெற விசுவாசத்தாலும், நம்பிக்கையாலும் நம்மையே நாம் அலங்கரித்துக் கொள்ளும் முயற்சியில் இந்நாட்களிலே ஈடுபடுவோம்.
     
     
     
    மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
     உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும்.

    நம்மோடு வாழ இயேசு பிறக்கப்போகின்றார். நற்செய்தியிலே ஆண்டவரின் தூதர். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகளைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப்பெயரிடுவீர் (மத் 1:22) எனக் கூறுகின்றார். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கின்றார் என்பது பொருள் (மத் 1:23).

    நமக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் நம் வீட்டில் தங்க வந்தால் நமது வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க நாம் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். நம்மைச் சந்திக்க வருபவர் இயேசு (மத் 1:21அ). அவர் பாவங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் மீட்பர் (மத் 1:21ஆ): கடவுள் (மத் 1:23): தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட இறை மகன் (உரோ 1:4அ) ஆண்டவர் இயேசு கிறிஸ்து (உரோ1:4); அருளின் ஊற்று (உரோ 1:5அ).

    நம்மோடு வாழ, நம் இல்லத்திற்குள்ளும், உள்ளத்திற்குள்ளும் வாசம் செய்ய வரும் கடவுளுக்கு நாம் தகுந்த மரியாதை செலுத்த விரும்பினால், நமது மனத்தை. உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள மனமுவந்து முன் வரவேண்டும். நம்மையே நாம் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம்?

    நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வதே நமது ஆன்மிக வாழ்வின் அடித்தளம். என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது குற்றம் சுமத்த முடியுமா ? (யோவா 8:46) என்று கேட்கும் அளவுக்கு இந்த உலகத்திலே யாரும் இயேசுநாதர் கிடையாது. அருள்மிகப்பெற்றவரே வாழ்க! (லூக் 1:28) என்று வாழ்த்தப்படும் அளவுக்கு இந்த பூமியில் யாரும் தேவ அன்னையும் கிடையாது.

    புனித பவுலடியார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் உரோ 3:9-18) கூறியுள்ளதுபோல நாம் எல்லாரும் பாவிகளே. புனித யோவான் தாம் எழுதியுள்ள முதல் திருமுகத்திலே (1 யோவா 1:8) பாவம் நம்மிடம் இல்லையென்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கின்றோம் என்கின்றார்.

    பாவிகளில் இரண்டு வகையினர் உள்ளனர் : சிலர் திட்டமிட்டுப் பாவம் செய்வார்கள் : சிலர் அறிவுத் தெளிவின்மையால் தவறி பாவத்தில் விழுந்துவிடுவார்கள். இரண்டுக்கும் இரண்டு உதாரணங்கள் :

    அன்று பெரிய வெள்ளிக்கிழமை! ஒரு மாடப்புறாவை வல்லூறுகள் பிடித்து, அதனை பலவந்தமாக இழுத்து வந்து பிலாத்துவின் முன்னால் நிறுத்தினர் இயேசுதான் அந்த மாடப்புறா.

    இயேசு என்ன குற்றம் செய்தார்? அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நம்மைப்போன்று ஒரு சாதாரண, சராசரி மனிதனாக வாழ இவன் மறுக்கின்றானே! இவனை இப்படியே விட்டுவிட்டால். எல்லாரையும் இவன் தன் பக்கம் இழுத்துவிடுவான். இவனைக் கொலை செய்துவிட வேண்டும் என்று எண்ணியவர்கள் இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்தி அவரைக் கொல்ல (யோவா18:31) விரும்பினார்கள்.

    பிலாத்து மூன்று முறை, இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணாயில்லையே (யோவா 18:38ஆ: 19:4ஆ, 6ஆ) என்றான். பிறகு ஏன் இயேசுவை விடுதலை செய்யவில்லை? ஆசை, பேராசை, பதவி மீது பேராசை! தன்னுடைய பதவி ஆசைக்கு இயேசுவை அவன் பலியாக்கினான். அவன் அறியாமலா பாவம் செய்தான்? அறிந்து. புரிந்து உணர்ந்து, தெரிந்து பாவம் செய்தான்.

    அறிவுத் தெளிவு இல்லாமலும் சிலர் பாவம் செய்வதுண்டு! ஒருவன் மருந்துக் கடைக்கு மருந்து வாங்கச் சென்றான். கடைக்காரரிடம் விக்கலுக்கு மருந்து கேட்டான். கடைக்காரர், மருந்து கேட்டவனை ஓங்கி அறைந்தார். மருந்து வாங்கப்போனவன் : எதுக்காக என்னை அறைஞ்சே? என்று கேட்டான். அதற்கு கடைக்காரர் சொன்னார் : விக்கலுக்கு அதிர்ச்சி வைத்தியம்தான் பெஸ்ட். இப்பப் பாரு. நான் உன்னை அறைஞ்சதினாலே விக்கல் நின்னிட்டு என்றார். அதற்கு மருந்து கேட்டவன்: அடப்பாவி, விக்கல் எனக்கு இல்லேய்யா, என் மனைவிக்கு என்றான்.

    அந்த கடைக்காரர் செய்தது குற்றம், பாவம்! ஆனால் அதை அவர் அறியாமல் செய்தார். பாவம் என்பது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போன்றது! அது நம்மைப் பாதிக்கும்! நம் உள்ளத்திலும், இல்லத்திலும் தங்க வரும் இயேசுவை மகிழ்ச்சியோடு வரவேற்கவிடாமல் அது நம்மைத் தடுத்துவிடும்.

    நமது உள்ளத்தையும், இல்லத்தையும் இயேசு தங்கக்கூடிய இனிய இடமாக மாற்ற நம்மையே நாம் இந்த நாள்களிலே தூய்மையாக்கிக் கொள்வோம்.

    இன்று இதுவே நமது செபமாக இருக்கட்டும் :
    இயேசுவே! என் வாய் உம்மைப்போற்ற மறந்தது போதும்!
    என் நா உம்மைப் புகழ மறந்தது போதும்! என் கண்கள் உம்மைத் தேட மறந்தது போதும்!
    என் செவிகள் உம் வார்த்தையைக் கேட்க மறந்தது போதும்!
    என் சுவாசம் உம்மைச் சுவாசிக்க மறந்தது போதும்!
    போதும் ! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!
    ஓடி ஓடி களைத்துப்போனேன்!
    என்னிடம் மிஞ்சியிருப்பதெல்லாம்
    சோதனை, வேதனை, தயக்கம், மயக்கம், குழப்பம், பயம், பஞ்சம், பசி!
    போதும்! நான் உம்மைவிட்டு ஓடியது போதும்!

    இன்று உமது உடனிருப்பால் என்னைத் தொட்டுக் குணமாக்கி உமக்கு ஏற்ற இல்லிடமாக என்னை மாற்றியருளும். மேலும் அறிவோம்:

    இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல் (குறள் : 961).

    பொருள்: கட்டாயமாகச் செய்து தீர வேண்டும் என்னும் சிறப்புடையவை என்றாலும் தன் மதிப்பைக் குறைக்கும் செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.
     
     
    மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

    ஒரு மாணவன் ஒழுங்காகப் படிப்பதில்லை. அவனுடைய வகுப்பு ஆசிரியர் கேட்டதற்கு, "அப்பாவும் அம்மாவும் எப்போதும் சண்டை போடுவதால் என்னால் படிக்க முயவில்லை" என்றான். யாருடா உன் அப்பா? என்று ஆசிரியக் கேட்டதற்கு, "அதைப் பற்றிதான் ஒவ்வொரு நாளும் சண்டை நடக்குது" என்றான்!

    எத்தனையோ குடும்பங்களில் கணவன் - மனைவி இடையே விரிசல் ஏற்படுவதற்குக் காரணம், ஒருவர் மற்றவருடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகப்படுவதாகும். யோசேப்பு- மரியாவுடைய வாழ்வில் திருமணத்திற்கு முந்தியே சந்தேகப் புயல் வீச ஆரம்பித்துவிட்டது. மரியாவுக்கும் யோசேப்புக்கும் இடையே திருமண ஒப்பந்தம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இன்னும் கூடி வாழவில்லை. அதற்கு முன்பே மரியா கருவுற்றிருந்ததை அவர் கணவர் யோசேப்பு ஏற்கவும் இயலவில்லை; மரியாவைக் காட்டிக் கொடுக்கவும் மனமில்லை. இந்நிலையில் மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால் என்ற செய்தியை வானதாதர் யோசேப்புக்குக் கனவில் தெரிவித்த போது, நேர்மையாளரான (நீதிமானாகிய) யோசேப்பு மரியாவைச் சற்றும் தயக்கமின்றித் தம் மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

    மரியா தம் கணவர் யோசேப்பின் துணையின்றிக் கன்னிமையில் தூய ஆவியால் கிறிஸ்துவைக் கருத்தாங்குவார் என்பது இறைவாக்கினார் எசாயாவால் முன்னறிவிக்கப்பட்டது என்பதை நற்செய்தியாளரான மத்தேயு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார். "இதோ கன்னிப் பெண் கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்" (எசா 7:14: மத் 1:22-23) இன்றைய முதல் வாசகம் கிறிஸ்துவின் கன்னிமைப் பிறப்பை எடுத்துக் கூறுகிறது.

    ஏசாயா 7:14ம் சொற்றொடரின் மூலப் பாடத்தில் வருகின்ற "இளம் பெண்" என்ற சொல்லை மத்தேயு தமது நற்செய்தியில் 'கன்னி' என்று மொழிபெயர்த்துள்ளார். மரியா கன்னிமையில் கிறிஸ்துவை ஈன்றெடுத்தார் என்பது மத்தேயுவின் நம்பிக்கை; அதுவே திருச்சபையின் நம்பிக்கை, அதை நாமும் ஏற்று அறிக்கையிடுவதில் பெருமையடைகிறோம். கிறிஸ்துவுக்கு ஒரே தந்தை, வாகைத் தந்தை எனவே யோசேப்பு கிறிஸ்துவை ஈன்ற தந்தையாக இருக்க முடியாது. மேலும் மீட்பு கடவுளுடைய முன் செயல்; அது யோசேப்பின் முன் செயலாக இருக்கவும் முடியாது.

    எனினும் சட்ட ரீதியாகப் பார்க்கும்போது, இயேசு கிறிஸ்து தாவீதின் மகன், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார்: "இயேசு கிறிஸ்து மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்" (உரோ 1:3). கிறிஸ்து தாவீதின் மகன் என்று கருதப்படுவதற்குக் காரணம் மரியா அல்ல, மாறாக யோசேப்பு ஆவார். ஏனெனில் யோசேப்புதான் தாவீது குலத்தில் பிறந்தவர். அவரைத் 'தாவீது மகன்' (மத் 1:20) என்றும், 'தாவீது வழி மரபினர்' (லூக் 2:4) என்றும் நற்செய்தி கூறுகிறது.

    யோசேப்பு மரியாவின் கணவராசு இல்லையென்றால், மரியாவுக்கு 'நடத்தை கெட்டவள் என்ற பட்டம் சூட்டி அவரைக் கல்லால் எறிந்து கொன்றிருக்கும் அன்றைய யூதச் சமுதாயம், கிறிஸ்து யோசேப்பின் மகனாகக் கருதப்பட்டார் (லூக் 3:23). யோசேப்பு உண்மையிலேயே ஒரு நேர்மையாளர்; கடவுளின் திட்டத்தை ஏற்றுக்கொண்டவர். நாமும் அவரைப் பின்பற்றி நமது புத்திக்கு அப்பாற்பட்ட மீட்பின் மறையுண்மைகளை ஏற்றுக் கொள்வோம்.

    மரியா ஒரு கன்னி. கன்னிமைப் பண்பு என்பது இதயத்தின் முழுமை,பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளம். மரியா பிளவுபடாத ஒரு மனப்பட்ட உள்ளத்துடன் தம்மை முழுமையாகக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். மசியாவின் அடியொற்றித் திருச்சபையும் ஒரு கன்னி ஏனெனில் இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூறுவதுபோல், முழு விசுவாசம், தளராத நம்பிக்கை, உண்மையான அன்பு இவற்றைக் கன்னிமைப் பண்போடு திருச்சபை காத்து வருகிறது. (திருச்சபை, எண் 64)

    நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வில் விசுவாசம் கன்னிமையைப் பழுதறப் பாதுகாக்க வேண்டும். கிறிஸ்து நமது மணமகன் என்றும், அவர்முன் நாம் கற்புள்ள கன்னியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் திருத்தூதர் பவுல் (2கொரி 11:2). ஒருசில கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் போலிப்போதகர்கள் வலையில் சிக்கித் தங்களது விசுவாசக் கன்னிமையை இழந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.

    ஓர் இளைஞன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்து, பிறகு அவளை விட்டுவிட்டு, அவளின் தங்கையைக் காதலிக்க ஆரம்பித்தான். ஏன் அவன் அவ்வாறு மாறினான்? என்று அக்கா கேட்டபோது அவன், "நான் என்ன செய்வது? உன்னைப் பார்த்த போது என்னை மறந்தேன்; உன் தங்கையைப் பார்த்தபோது உன்னை மறந்தேன்" என்றான். அவன் ஒரு சந்தர்ப்பவாதக் காதலன்!

    அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் நீண்ட நெடுங் காலமாக இருந்தவர்கள். போலிச் சபைகளின் மாயக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, கத்தோலிக்கத் திருச்சபையை விட்டுவிட்டு அப்போலிச் சபைகளில் சேர்கின்றனர். இவர்கள் யார்? புனித பவுல் கூறுகிறார்; ஏவா பாம்பின் சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டதைப்போல். தங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டு, கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழத்துவிட்டவர்கள் (2 கொரி 11:3). பச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால், தங்களுடைய விசுவாசக் கற்பை இழத்தவர்கள்!

    மரியா ஒரு கன்னி: திருச்சபையும் ஒரு சுன்னி. இருவருமே இறைவனுக்கு என்றும் பிரமாணிக்கமாய் உள்ளவர்கள். கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது, இந்த இறுதிக் கட்டத்தில் நாம் கன்னி மரியாலைப் பின்பற்றிக் கிறிஸ்துவுக்கும், உண்மைக்கு அரணும் அடித்தளமுமாகத் திகழும் திருச்சபைக்கும் (1 திமொ 3:15) உண்மை உள்ளவர்களாய் இருப்போம். கடவுளை முழுமையான, பிளவு படாத, ஒருமனப் பட்ட உள்ளத்துடன் அன்பு செய்வோம்.

    மரியன்னை வழியாகவே 'வார்த்தை மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14); கடவுள் இம்மானுவேல் ஆனார்; அதாவது கடவுள் என்றென்றும் நம்முடன் இருக்கின்றார் (மத் 1:23). இம்மானுவேல் என்றும் உங்களோடு இருந்து உங்கள் வாழ்வைச் செம்மையுறச் செய்து, உங்களை அமைதியின் பாதையில் (லூக் 1:79) வழிதடத்துவாராக!
     
     
    திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
    தூய்மையிலும் நீதியிலும்

    இந்தப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு விழாக் கொண்டாட்டம். ஆடல் பாடல் நாடகம் நடனம் என்று மாணவர்கள் கலக்கினர். அதில் நாடகக் காட்சி ஒன்று (கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவர்களே)

    காவலாளி: "சத்திரத்தில் இடமில்லை" என்று போர்டு போட்டிருக்கிறோமே உம் கண்ணில் அது படவில்லையா?

    யோசேப்பு: தெரிகிறதையா... ஆனால் என்னுடைய மனைவி நிறைமாதக் கர்ப்பிணி...

    காவலாளி: அதற்கு நானா காரணம்?

    யோசேப்பு: (பரிதாபத்துக்குரிய மெல்லிய குரலில்) அதற்கு நானும். காரணமில்லை....!

    நாடகம் என்ற நிலையில் புன்முறுவல் பூக்கலாம். ஆனால் நடைமுறை எதார்த்தத்தில்...?

    மரியா கருவுற்றிருக்கிறாள் என்ற உண்மை யோசேப்புக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியை, மனக்குழப்பத்தைத் தந்திருக்க வேண்டும்! இந்த உண்மையை அறிந்ததும் அவர் நடந்து கொண்ட விதம் தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

    மனைவியின் வயிற்றில் கருவாக வளர்வது தன் குழந்தை இல்லை என்று கணவன் அறியும் போது அவரைச் சட்டப்படி கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். (எண்.5:11-31). தவறு எண்பிக்கப் பட்டால் ஒன்று அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் அல்லது மணமுறிவு செய்ய வேண்டும். (இணை.22:20,21)

    யோசேப்பு இரண்டாவது முறையில் மிகவும் மென்மையாக நடந்து மறைவாக விலக்கிவிட விரும்பினார். இந்த மனித நேய உணர்வு தான் ஆழமான அவரது நம்பிக்கைக்குப் புதுப்பொலிவு தருகிறது.

    மரியாளுக்கு நேர்ந்தது கூட அவ்வளவாக அல்ல, மரியாளின் மௌனம்தான் யோசேப்பை நிம்மதி இழக்கச் செய்திருக்கும். மரியாளின் அன்பையும் நேர்மையையும் கூட சந்தேகத்துக்கு உள்ளாக்கி இருக்கும். உண்மையான அன்பு இருந்திருந்தால், கபிரியேல் தூதன் மூலம் கடவுள். சொன்னதை, செய்ததை முன்கூட்டியே யோசேப்பிடம் சொல்லியிருக்க வேண்டாமா?

    ஆண்டவனின் திட்டமிது. அதனால் வரும் சிக்கலை ஆண்டவன்தான் தீர்த்து வைக்க வேண்டும், தீர்த்து வைப்பார் என்ற உறுதியே மரியாவின் மௌனத்துக்குக் காரணமாக இருந்திருக்கும்.

    கடவுள் எப்படிச் சிக்கலைத் தீர்த்து வைத்தார் என்பதே இன்றைய நற்செய்தி.

    கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் சிக்கல்கள் எழலாம். அவற்றில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்தே நாம் நேர்மையானவர்களா, பண்பாடுடையவர்களா என்று முடிவு கட்ட முடியும். ஒரு கணவன் மனைவி, ஏதோ காரணத்தால் இரண்டு பேருக்குள்ளும் உறவு விரிசல். மணமுறிவு வாங்க நீதிமன்றத்துக்குப் போன கணவனைப் பார்த்து "உன் மனைவி என்ன தப்புப் பண்ணினா?" என்று ஒருவன் கேட்டான். கணவன் "இன்னும் டைவர்ஸ் வாங்கல. அதனால் என் மனைவியைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பல" என்றான். டைவர்ஸ் வாங்கிட்டுக் கோர்ட்டிலிருந்து வரும்போது அதே ஆள் "டைவர்ஸ் தான் வாங்கிட்டியே? இப்பச் சொல்லு உன் சம்சாரம் என்ன தப்புப் பண்ணினாள்? " என்றான். அதற்குக் கணவன் "டைவர்ஸ் வாங்கிட்டதாலே இப்ப அவள் என் மனைவி இல்லை. அதனால் மனைவி இல்லாத ஒருத்தியைப் பத்தி நான் பேசுறது தப்புன்னு போய் விட்டான். கேள்வி பண்பாடற்றது. பதிலோ பண்பாடானது.

    யோசேப்பு வெளிப்படுத்திய பண்பாட்டிற்கு முன் இது எம்மாத்திரம்! இத்தகைய பண்பட்ட மனநிலையே நேர்மையாளர், நீதிமான் என்ற பேரை யோசேப்பு வாங்க வைத்தது!

    "உலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமாபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லை. நம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால் தான் அவ்வாக்குறுதி கிடைத்தது (ரோமை.4:13) ஆபிரகாமைப் பின்பற்றி யோசேப்பு மனித நேயம் கலந்த நம்பிக்கையின் அடிப்படையில் இறைத்திட்டத்தை நிறைவேற்றத் தயங்காத நேர்மையாளர்.

    இயேசு கற்றுத் தந்த செபத்தில் வரும் வார்த்தைகள்: "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக (மத்.6:10). இதன் பொருள்: நாம் விரும்புவதை இறைவன் நமக்குச் செய்ய வேண்டும் என்பதன்று. மாறாக இறைவன் விரும்புவது. நம்மால், நம்மில் நிறைவேற வேண்டும் என்பதே!

    மரியா இயேசுவின் மீது கொண்ட அன்பு இரத்த உறவால் எழும் அன்பு. தான் ஆடாவிட்டாலும் தன் சதையை ஆடவைக்கும் அன்பு. யோசேப்பின் அன்பு விசுவாச உறவால் வந்தது. எது பெரிது? "என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?... விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதாரும் சகோதரியும் தாயும் ஆவார்" (மத்.12:49-50)

    "இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் (மத்.1:22, எசா.7:14) என்று ஆண்டவர் அருளிய அடையாளம் யோசேப்பின் நம்பிக்கைக்குப் புதிய ஒளி, சோர்வுற்ற மனதுக்கு ஓர் உறுதி, ஐயுற்ற அறிவுக்குப் புதுத்தெளிவு.

    இறைவன் மானிடப் பிறப்பெடுத்த நிகழ்வில் நாம் பார்க்கும் இரு உண்மைகள்: 1. யோசேப்பு நீதித்தன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. 2. மரியா தூய்மைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இரண்டும் இல்லாத சமுதாயம் அவலமான வீழ்ச்சிக்கு ஆளாகும்.

    கிறிஸ்துமஸ் என்பது இறைவனைப் பிரசன்னப்படுத்தும் நமது பணி. மரியாவின் தூய்மையிலும் யோசேப்பின் நீதி உணர்விலுமே இறைவன் தன் பிரசன்னத்தை நிலைநாட்டினார்.
     
     
     
    ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
     வாழவைக்கும் கனவுகள்

    அடுத்த ஞாயிறு, கிறிஸ்து பிறப்புப் பெருவிழா. ஒரு குழந்தையை மையப்படுத்திக் கொண்டாடப்படும் இவ்விழா, பல கோடி குழந்தைகள் மனதில் கனவுகளை வளர்க்கும் விழா. இவ்விழாக் காலத்தில் தனக்குக் கிடைக்கப்போகும் பரிசைப் பற்றியக் கனவுகள், பலகோடி குழந்தைகளின் உள்ளங்களில் அலைமோதும். அந்தப் பரிசை வழங்கப்போவது 'கிறிஸ்மஸ் தாத்தா' என்ற கனவையும், குழந்தைகள் சுமந்து வாழ்கின்றனர். குழந்தைகளின் இத்தகையக் கனவுகள் அர்த்தமற்றவை, ஆபத்தானவை என்று அறிவுரைகள் வழங்கும் பெரியவர்களையும் நாம் காணலாம். பொதுவாகவே, கனவுகள் காண்பதும், கனவுலகில் வாழ்வதும் குழந்தைத்தனம் என்பது, வயதில் வளர்ந்துவிட்ட பலரின் தீர்ப்பு. கனவுகள் இன்றி மனுக்குலம் இதுவரை வாழ்ந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

    சென்ற ஞாயிறு, பாலை நிலம் பூத்துக் குலுங்கும் என்று, இறைவாக்கினர் எசாயா, கற்பனை கலந்து கண்ட கனவைப் பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, மீண்டும் கனவைப் பற்றி சிந்திக்க வந்திருக்கிறோம். குறிப்பாக, கனவுக்கு செயல் வடிவம் கொடுப்பதுபற்றியும், அவ்விதம் செயல்வடிவம் கொடுப்பதற்கு நம்மிடம் உள்ள தடைகள் பற்றியும் சிந்திக்க வந்திருக்கிறோம். நமது சிந்தனைக்குத் துணையாக, கடந்த வாரம் நிகழ்ந்த இரு செய்திகளை நினைவுக்குக் கொணர்வோம்.

    முதல் செய்தி, ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்தது - ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்த முர்தாசா அஹ்மாதி (Murtaza Ahmadi) என்ற ஆறு வயது சிறுவன், உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், இலயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவர்களைச் சந்தித்தான்.

    இரண்டாவது செய்தி, இந்தியாவில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்தது - தன் மகளின் திருமண பரிசாக, ஒரு செல்வந்தர், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தந்தார்.

    முதல் செய்தியில் கூறப்பட்டுள்ள சிறுவன் முர்தாசா, ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். உலகப் புகழ்பெற்ற கால் பந்தாட்ட வீரர், மெஸ்ஸி அவர்களின் தீவிர இரசிகன். பிளாஸ்டிக் பை ஒன்றை, கால்பந்தாட்ட பனியன் போலச் செய்து, அதில் 'மெஸ்ஸி' என்ற பெயரையும், 10 என்ற எண்ணையும் எழுதி, அச்சிறுவன் உடுத்தியிருந்த புகைப்படம், மெஸ்ஸியின் இரசிகர் வட்ட வலைத்தளத்தில் பதிவாகி, உலகெங்கும் வெகு வேகமாகப் பரவியது. அதன் விளைவாக, அச்சிறுவன், தன் கனவில் கண்டுவந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களை, டிசம்பர் 13, கடந்த செவ்வாய், கட்டார் நாட்டில் நிகழ்ந்த ஒரு கால்பந்தாட்ட விளையாட்டில் சந்தித்தான்.

    இரண்டாவது செய்தி, இந்தியாவில் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் நகரைச் சேர்ந்த மனோஜ் முனோத் (Manoj Munot) என்ற செல்வந்தர், தன் மகளின் திருமணச் செலவைக் குறைத்துக்கொண்டு, அத்தொகையில், 90 ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளார். அவரது மகள், ஷிரேயாவும், அவரது கணவரும் இணைந்து, அந்த ஏழைகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்கினர். "என் தந்தை எனக்களித்த மிகப் பெரிய திருமணப் பரிசு இதுதான். வறியோர் எங்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களை, எவ்வளவு பணம் தந்தாலும் எங்களால் வாங்கியிருக்க முடியாது" என்று மணப்பெண் ஷிரேயா கூறினார்.

    இந்த இரு செய்திகளும், அவை நமக்குள் உருவாக்கும் பல்வேறு எண்ணங்களும் சில பாடங்களைப் புகட்டுகின்றன. முதல் செய்தியில் நாம் சந்திக்கும் முர்தாசா, வறுமையும், ஆபத்தும் நிறைந்த ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த சிறுவன். அச்சிறுவனின் குடும்பம், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, வேறொரு நாட்டிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி அவர்களைப் பற்றி, தன் மனதுக்குள் வளர்த்துக்கொண்ட கனவுகளே, அச்சிறுவன் சந்தித்த வேதனைகளிலிருந்து அவனை ஓரளவு காத்தது என்று சொல்லலாம். சிறுவன் முர்தாசா, தன் கனவு நாயகனைக் கண்டான் என்பதை மகிழ்வுடன் எண்ணிப் பார்ப்பவர்கள் உண்டு. ஒரு சிலரோ, அச்சிறுவன் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியது தவறு என்ற பாணியில் விமர்சனம் கூறியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    செல்வந்தர் மனோஜ் அவர்கள், ஏழைகளுக்கு வீடுகட்டித் தந்த நற்செயலை, பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க முடியும். இந்தியாவில், பணத்தட்டுப்பாடு உருவானபின்பு, ஓர் அரசியல்வாதி, கோடி கோடியாகச் செலவு செய்து, தன் மகளின் திருமணத்தை நடத்தினார் என்ற செய்தி வெளியான சில வாரங்களில், மனோஜ் அவர்களைப்பற்றிய இந்தச் செய்தியும் வெளியானது.

    பிரித்தானிய நாளிதழ் ஒன்று (The Independent) இச்செய்தியை வெளியிட்டதும், ஆரம்பத்தில், மனோஜ் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தி, வாசகர் கருத்துக்கள் வெளிவந்தன. ஆனால், சிறிதுநேரம் சென்று, எதிர்மறையான கருத்துக்களும் வெளிவந்தன. "இதுபோன்ற செல்வந்தர்களின் அருட்சாதனம் , பெரும்பாலும் விவாகரத்தில்தான் முடிகின்றன" என்று ஒருவரும், "இப்படி, சிறு, சிறு வீடுகளை கட்டி, நிலத்தை வீணாக்குவதைவிட, அடுக்குமாடி அமைப்பில் கட்டியிருந்தால் நல்லது" என்று மற்றொருவரும் "அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கு, இந்துக்களுக்கு மட்டுமே வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவருக்கும் வீடுகள் ஒதுக்கப்படவில்லை" என்று வேறொருவரும், எதிர்மறை கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

    நல்ல செய்திகளைக் கேட்கும்போது, முதலில் நம் உள்ளங்களில் நல்ல எண்ணங்களும், அதிர்வுகளும் உருவாகின்றன. ஆனால், நாம் அறிவிலும் வயதிலும் முதிர்ந்தவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்ததும், சந்தேகங்கள், விமர்சனங்கள், எதிர்மறை எண்ணங்கள் ஆகியவை எழுகின்றன. வயது வந்தவர்கள் என்ற காரணத்தால், நம்மில் பலர், கனவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் வாழப் பழகிக்கொள்கிறோம்.

    கனவுகளைப்பற்றி, இன்று நாம் சிந்திப்பதற்குக் காரணம்... இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் புனித யோசேப்பு. மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம். மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. (மத். 1: 18-24) கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) எகிப்தில் அகதிகளாய் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

    இம்மூன்று சம்பவங்களையும் ஆழமாகச் சிந்தித்தால், ஒருசில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள நிகழ்வை முதலில் சிந்திப்போம். மரியாவோடு திருமண ஒப்பந்தம் நடந்து ஒரு சில நாட்களில், மரியா கருவுற்றிருந்தார் என்ற கசப்பான, பேரிடியான உண்மை யோசேப்புவுக்குத் தெரியவருகிறது. இச்சூழலில், யோசேப்பு, தன் பெயரை, தன் பெருமையை மட்டும் காப்பாற்ற நினைத்திருந்தால், ஊர் பெரியவர்களிடம் இதைத் தெரிவித்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்திருந்தால், தன்னைக் காப்பாற்றியிருப்பார். மரியாவோ ஊருக்கு நடுவே, கல்லால் எறியப்பட்டு, கொடூரமாய் கொலையுண்டிருப்பார்.

    இந்தச் சிக்கலான சூழலில், யோசேப்புவின் கனவில் ஆண்டவரின் தூதர் தோன்றினார் என்கிறது இன்றைய நற்செய்தி. தன்னை நீதிமான் என்று ஊரில் நிலைநாட்டினால் போதும், மரியா எக்கேடுகெட்டாகிலும் போகட்டும் என்ற சுயநலக் கோட்டைக்குள் யோசேப்பு வாழ்ந்திருந்தால், இறைவனின் தூதர் அவரை நெருங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். சுயநல மனங்களில் கடவுள் நுழைய நினைத்தாலும், அவரால் முடியாது. மென்மையான மனங்களில் மேலான எண்ணங்களும், கனவுகளும் தோன்றும். அப்படித் தோன்றிய ஒரு கனவையே இன்று நற்செய்தி நமக்குச் சொல்கிறது. இந்தக் கனவில் யோசேப்புவுக்கு இறைவன் தந்த செய்தியை நாம் இப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்: "யோசேப்பே, தாவீதின் மகனே, சட்டங்களை, சமுதாயக் கட்டுப்பாடுகளை மட்டும் மனதில் எண்ணிக் குழம்பாதே. அவற்றையும் தாண்டி, மனிதாபிமானத்தோடு நடந்துகொள். இவ்வாறு நீ நடந்தால், உன்னையும் மரியாவையும் மட்டுமல்ல. இவ்வுலகையும் காப்பாற்றும் வழியொன்றை நீ திறப்பாய்" என்பது, யோசேப்பு கனவில் பெற்ற செய்தி என்று நாம் சிந்திக்கலாம்.

    சுயநலனைக் கடந்து, அடுத்தவர் நலனை முன்னிறுத்துவோர் உள்ளங்களில் கனவுகள் தோன்றும்; அக்கனவுகள், செயல்வடிவமும் பெறும் என்பதை, புனித யோசேப்புவின் வாழ்வு நமக்கு உணர்த்துகிறது. இன்றைய நற்செய்தியை பின்புலமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டிசம்பர் 15 இவ்வியாழனன்று சில கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். உரோம் நகரில், குழந்தைகள் நலனுக்கென இயங்கிவரும் புகழ்பெற்ற 'குழந்தை இயேசு மருத்துவமனை'யைச் சேர்ந்த மருத்துவர்கள், பணியாளர்கள், நோயுற்ற குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு உதவிகள் செய்வோர் என்று, ஏறத்தாழ 7000 பேரை, இவ்வியாழன் காலை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை சந்தித்தபோது, கனவுகளைப் பற்றி இவ்வாறு பேசினார்: "கனவுகளை, உயிர் துடிப்புடன் வாழவைக்க வேண்டும். கனவுகளுக்கு மயக்கமருந்து கொடுக்கக்கூடாது" என்று கூறியத் திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வழியே கனவுகள் பற்றிய பாடங்களை, இறைவன் நமக்குச் சொல்லித் தருகிறார் என்று தொடர்ந்தார்:

    "கனவுகள் கடினமாக இருந்தாலும், அவற்றை நனவாக்க, நடைமுறை வாழ்வாக்க, இறைவன் அழைக்கிறார். இறைவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து கனவு காண்கிறார். கனவுகள் இல்லாத வாழ்க்கை, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை அல்ல. உற்சாகமற்ற, சோர்ந்துபோன வாழ்வு, கிறிஸ்தவ வாழ்வு அல்ல" என்று வலியுறுத்திக் கூறியத் திருத்தந்தை, கனவுகளுடன் தொடர்புள்ள மற்றோர் அம்சத்தைக் குறித்தும் பேசினார்: "கனவுகளைத் தொடர்ந்து வருவது, பரிசு. வாழ்வில் இருவகை இலக்குகளை நாம் துரத்திச் செல்லமுடியும். ஒன்று, மேலும், மேலும் நமக்கென சேகரித்து வைத்துக் கொள்வது; மற்றொன்று, தருவது. ஒவ்வொருநாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியேறும்போது, நமது உள்ளம் நம்மைச் சுற்றியே வட்டமிடுகிறதா, அல்லது, மற்றவர்களைச் சந்திப்பது, பிறருக்குத் தருவது என்ற திறந்த மனநிலையில் உள்ளதா?" என்ற கேள்வியை எழுப்பினார், திருத்தந்தை.

    எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.

    முதல் காரணம் : அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நற்செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்பைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.

    இரண்டாவது காரணம் : யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு 'க்ரீமை'ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

    ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்பை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

    1963, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி, கறுப்பு, வெள்ளை இனத்தவரிடையே நல்லுறவு வளரும் என்பதை, "எனக்கொரு கனவு உண்டு" (I have a dream) என்ற உலகப்புகழ்பெற்ற உரையாக வழங்கிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்களையும், அதே கனவு, தென்னாப்ரிக்காவில் நனவாகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து, அந்தக் கனவைப் பெருமளவு நனவாக்கி, 2013ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி, புகழுடல் எய்திய நெல்சன் மண்டேலா அவர்களையும், ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மட்டுமல்ல, சாதியப் பிரிவுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய தளைகளிலிருந்தும் இந்தியா விடுதலை பெறவேண்டுமென்று கனவுகள் கண்டு, அவற்றை கவிதைகளாக விட்டுச்சென்ற மகாகவி பாரதியார் அவர்களையும் வரலாறு மறந்திருக்க வாய்ப்பில்லை. கனவு காணவும், அக்கனவை நனவாக்கவும் துணிபவர்கள் வாழ்வதால்தான், இவ்வுலகம் இன்றும் வாழ்ந்து வருகிறது.

    கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம். கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!

     
    அனைத்தும் நலமாகவே அமையும்...
    இன்று திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு. அடுத்த ஞாயிறு நாம் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கிறோம். இன்று, நமது பாரம்பரிய திருவருகைக்கால வளையத்தில் வைக்கப்பட்டுள்ள நான்காவது மெழுகுதிரியை ஏற்றிவைக்கிறோம். மெழுகுதிரியை ஏற்றுதல் என்பதை நாம் பொதுவாக வழிபாடு தொடர்பான நிகழ்வாகவே கருதுகிறோம். ஆனால், மெழுகுதிரிகளை ஏற்றிவைத்ததன் வழியே, தென் ஆப்ரிக்க மக்கள், தங்கள் நாட்டை ஆண்ட அநீதியான அரசையே மாற்றி அமைத்தனர் என்பதை, வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது.

    தென் ஆப்ரிக்கா, இனவெறி கொண்ட வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட அரசால் வதைக்கப்பட்டபோது, அங்கு வாழ்ந்த மக்கள், 'மெழுகுதிரியை ஏற்றிவைத்தல்' என்ற ஒரு மௌனமான புரட்சியை மேற்கொண்டனர். இந்தப் புரட்சியை, திருவருகைக் காலத்தில் மெழுகுதிரியை ஏற்றிவைக்கும் நம் பாரம்பரிய பழக்கத்துடன் இணைத்து, அருள்பணி Ron Rolheiser என்பவர், 'திருஅவருகைக்கால எதிர்நோக்கு' என்ற தலைப்பில் பகிர்ந்துகொண்ட ஒரு சில கருத்துக்கள் இதோ:

    இனவெறி அடக்குமுறையின்போது, தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த நம்பிக்கையாளர்கள், செபிக்கத் துவங்கினார்கள். தங்கள் நாட்டில் நிலவும் இனவெறி என்ற தீமையை ஒரு நாள் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, தங்கள் அயலவர், அரசு அதிகாரிகள், ஏன்... இந்த உலகமே காணவேண்டும் என்ற எண்ணத்துடன், அவர்கள், மெழுகுதிரிகளை ஏற்றி, தங்கள் இல்லங்களின் சன்னல்களில் வைத்தனர். அவர்களது எண்ணங்களை அரசு அதிகாரிகள் புரிந்துகொண்டனர். உடனே, ஓர் அரசாணையையும் வெளியிட்டனர். மெழுகுதிரிகளை ஏற்றுவது, துப்பாக்கியை வைத்திருப்பதற்கு இணையான குற்றம் என்று கூறி, அந்தச் செயலைத் தடுக்க முயன்றனர். இந்த அடக்குமுறையைக் கண்டு, தென் ஆப்ரிக்காவின் குழந்தைகள், "எங்கள் நாட்டில், எரியும் மெழுகுதிரிகளைக் கண்டு, அரசு பயப்படுகிறது" என்று கேலி செய்தனர்.

    அரசு அவ்வாறு பயப்படுவதற்கு காரணம் இருந்தது. எரியும் திரிகளும், அவற்றிற்குப் பின்புலத்தில் சொல்லப்பட்ட செபங்களும், எரியும் திரிகள் வெளிப்படுத்திய நம்பிக்கையும், அந்த நாட்டின் அரசியல் சூழலையை மாற்றின. இனவெறி தீமையானது என்பதை உணர்ந்த அரசு, தன் நிலையை மாற்றியது. ஆயுதங்கள் ஏதுமற்ற ஒரு அமைதிப்போர், தென் ஆப்ரிக்காவின் இனவெறி அரசை கவிழ்த்து, மக்களாட்சியைக் கொணர்ந்தது.

    திருவருகைக் காலத்தில், நம்பிக்கையை வெளிப்படுத்த, மெழுகுதிரிகளை ஏற்றிவைக்குமாறு தாய் திருஅவை நம்மை அழைக்கிறார். ஆனால், பொருள் நிறைந்த இச்செயல், ஆலயங்களில் வெறும் வழிபாட்டுச் சடங்காக மட்டுமே நிகழ்ந்துவருகிறது. வழிபாட்டுச் சடங்குகளும், பக்தி முயற்சிகளும், நம் உள்ளங்களில், குறிப்பாக, குழந்தைகளின் உள்ளங்களில் நம்பிக்கையை வளர்க்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருப்பினும், நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் மெழுகுதிரிகளை ஏற்றிவைப்பது, அரசியல் மாற்றத்தைக் கொணரும் ஒரு செயல்பாடாக, இறைவனின் சக்தியைப் பறைசாற்றும் ஒரு செயல்பாடாக இருக்கவேண்டும்.

    இவ்வுலகை இருள் எவ்வளவுதான் சூழ்ந்தாலும், அதை மீறி, கடவுள், உயிரோட்டம் உள்ளவராக, நம் நடுவே வாழ்ந்து வருகிறார் என்பதை, நாம் ஏற்றிவைக்கும் மெழுகுதிரிகள் உணர்த்தவேண்டும். நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம், ஊடகங்கள் வழியே, ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடையும் செய்திகளைத் தாண்டி, "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற உண்மையை, நாம் ஏற்றிவைக்கும் மெழுகுதிரிகள் பறைசாற்ற வேண்டும். "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற ஆழமான உண்மையை, 14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் Norwich நகரில் வாழ்ந்த Julian என்ற ஞானப் பெண்மணி கூறினார்.

    ஜூலியன் அவர்கள் வாழ்ந்த காலம் பல்வேறு பிரச்சனைகளால் நிறைந்த காலம். குறிப்பாக, கொள்ளை நோயினால் மக்கள் அதிகம் துன்புற்ற காலம் அது. இன்று மனிதர்களாகிய நாம் நமக்கே உருவாக்கிவரும் பல்வேறு உடல், உள்ள, சமுதாய நோய்களுக்கு நடுவே, ஜூலியன் அவர்கள் "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்று கூறிய சொற்களை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.

    அனைத்தும் நலமாகவே அமையும்' என்ற ஆறுதலான சொற்கள், இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்திலும் (எசாயா 7:10-14)[J1] [J2] , நற்செய்தியிலும் (மத்தேயு 1:18-24) வெவ்வேறு வடிவங்களில் ஒலிக்கின்றன. இவ்விரு வாசகங்களிலும், நாம் சந்திக்கும் அரசன் ஆகாசு மற்றும் யோசேப்பு ஆகிய இருவரும் தங்கள் வாழ்வில் 'அனைத்தும் நலமாகவே அமையும்' என்பதை நம்புவதற்கு போராடியவர்கள்.

    யூதாவின் அரசனான ஆகாசுக்கு எதிராக இஸ்ரயேல் அரசனும், சிரியாவின் அரசனும் இணைந்து, படை திரண்டு வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ஆகாசு மனமுடைந்து போனார். அவருடன் சேர்ந்து, யூதாவின் மக்கள் அனைவரும் மனம் கலங்கியிருந்தனர். தான் தீய வழிகளில் சென்றவர் என்பதை, அரசன் ஆகாசு உணர்ந்திருந்ததால், இறைவன் தனக்கு உதவி செய்யமாட்டார் என்று அவர் தீர்மானம் செய்திருந்தார். ஆனால், இறைவன், ஆகாசுவை கைவிடாமல் அவருக்கும், யூதா குலத்து மக்களுக்கும் இறைவாக்கினர் எசாயாவின் வழியே நம்பிக்கை தரும் வாக்கினை வழங்குகிறார்: "தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; ... ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்." (எசாயா 7:13-14)

    'அனைத்தும் நலமாகவே அமையும்' என்ற உண்மையை நம்புவதற்குப் போராடிவந்த யோசேப்பை நற்செய்தியில் சந்திக்கிறோம். சென்ற ஞாயிறன்று, பாலை நிலம் மலர்களால் பூத்துக் குலுங்கும் என்று இறைவாக்கினர் எசாயா, சொன்ன சொற்களை, நடைமுறைக்கு ஒத்துவராத, மிகைப்படுத்தப்பட்ட கற்பனை என்று எண்ணிப்பார்த்தோம். நடைமுறை வாழ்வுக்கு முரணாக, திருமணத்திற்கு முன்னதாகவே கருவுற்றிருந்த இளம்பெண் மரியாவை ஏற்றுக்கொள்வதா, விலக்கிவிடுவதா என்ற கடினமானக் கேள்வியுடன் போராடிவந்த யோசேப்புக்கு, இறைவனின் தூதர், ஒரு கனவின் வழியே விடை தருவதை, இன்றைய நற்செய்தியில் காண்கிறோம்.

    மரியாவின் கணவரான யோசேப்பு, அமைதியான ஒரு புனிதர். அவரை, வாழ்வின் பல நிலைகளுக்குப் பாதுகாவலர் என்று போற்றுகிறோம். திருஅவையின் காவலர், கன்னியர்களின் காவலர், குடும்பங்களுக்குக் காவலர், தொழிலாளர்களுக்குக் காவலர்... என்று பலவழிகளில் பெருமைப்படுத்துகிறோம். மனித வாழ்வின் மற்றொரு முக்கிய அனுபவத்திற்கும் இவரைக் காவலர் என்று அழைக்கலாம். புனித யோசேப்புவை, கனவுகளின் காவலர் என்று நாம் பெருமைப்படுத்தலாம்.

    மத்தேயு நற்செய்தியில் யோசேப்பு கண்ட கனவுகள் பற்றி மூன்றுமுறை கூறப்பட்டுள்ளது. கருவுற்றிருந்த மரியாவை ஏற்பதா, விலக்கிவைப்பதா என்று யோசேப்பு போராடிக்கொண்டிருந்த வேளையில், மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி, அவருக்கு, கனவில் ஒரு செய்தி வருகிறது. இந்நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் வந்து, குழந்தை இயேசுவைக் கண்டு திரும்பிய பின்னர், யோசேப்புவின் கனவில் தோன்றிய வானதூதர், அவரை எகிப்திற்கு ஓடிப்போகச் சொல்கிறார். இரவோடு இரவாக மரியாவையும், பச்சிளம் குழந்தை இயேசுவையும் அழைத்துக்கொண்டு யோசேப்பு எகிப்துக்குச் செல்கிறார். (மத். 2: 13-14) புலம்பெயர்ந்தோராக எகிப்தில் இவர்கள் வாழ்ந்தபோது, சொந்த நாட்டில் ஏரோது இறந்து விடுகிறான். மீண்டும் யோசேப்புக்குக் கனவில் செய்திவர, அவர் இஸ்ரயேல் நாட்டுக்குத் திரும்புகிறார். (மத். 2: 19-21)

    எல்லாருமே கனவு காண்கிறோம். யோசேப்புவும் கனவு கண்டார். அவரை ஏன் கனவுகளின் காவலர் என்று கூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். இக்கேள்விக்கு விடையாக, இரு காரணங்களை எண்ணிப்பார்க்கலாம்.

    முதல் காரணம்: அதிர்ச்சிகளும், அச்சங்களும் நம்மைச் சூழும்போது, நமது தூக்கம் பெரிதும் பாதிக்கப்படும். அப்படியே நாம் தூங்கினாலும், நமது கனவுகளும் நம்மைப் பயமுறுத்தும். மரியா கருவுற்றிருந்தார் என்பதை அறிந்த யோசேப்பு, கட்டாயம் இந்த ஒரு நிலையில் இருந்திருக்க வேண்டும். நம்பமுடியாத அந்த அதிர்ச்சியின் நடுவிலும், கனவில் தனக்குக் கிடைத்தச் செய்தியை, நல்ல செய்தி என்று நம்பினாரே, அந்தக் காரணத்திற்காக, யோசேப்புவைக் கனவுகளின் காவலராகப் போற்றலாம்.

    இரண்டாவது காரணம்: யோசேப்பு தன் கனவில் கண்டதைச் செயல்படுத்தினார். கனவு காண்பது எளிது. கனவு முடிந்து எழுந்ததும், கனவின்படி நடப்பது அவ்வளவு எளிதல்ல. கண்ட கனவு சுகமான கனவு என்றால் ஒருவேளை செயல்படுத்துவது எளிதாகலாம். உதாரணமாக, குறிப்பிட்ட ஒரு 'க்ரீமை'ப் பயன்படுத்தினால், ஒரு சில வாரங்களில் நமது தோல் நிறம் மாறும் என்றும், குறிப்பிட்ட ஒரு பற்பசையைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பர் என்றும் நமது விளம்பர உலகம் சொல்லும் எத்தனைக் கனவுகளை நாம் நம்புகிறோம்? செயல்படுத்துகிறோம்?

    ஆனால், யோசேப்பு கண்டதாகக் கூறப்படும் மூன்று கனவுகளும் கடினமானச் சூழலில், கடினமானதைச் செய்வதற்கு யோசேப்புவை உந்தித் தள்ளிய சவால்கள்... திருமணத்திற்கு முன்னரே கருவுற்ற பெண்ணை, தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது; ஏரோதின் பிடியிலிருந்து தப்பிக்க, பச்சிளம் குழந்தையோடும், தாயோடும், எகிப்துக்கு ஓடிச்செல்வது; மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவது... என்று யோசேப்புவுக்கு வந்த எல்லாக் கனவுகளும் சிக்கலைத் தீர்ப்பதற்குப் பதில், மீண்டும் சிக்கலில் தள்ளும் கனவுகளாக இருந்தன. இருந்தாலும், இம்மூன்று கனவுகளிலும் சொல்லப்பட்டவற்றை யோசேப்பு உடனே செயல்படுத்தினார் என்று நற்செய்தி சொல்கிறது. சிக்கலானச் சூழல்களின் நடுவிலும் தன்னை வந்தடைந்த கனவுகளை இறைவன் விடுத்த அழைப்பு என்று ஏற்றுக்கொண்டதால், அக்கனவுகளில் சொல்லப்பட்டவற்றைச் செயல்படுத்தியதால், யோசேப்பைக் கனவுகளின் காவலர் என்று நாம் கொண்டாடலாம்.

    இன்றைய நற்செய்தி, யோசேப்பைக் குறித்து வேறொரு பாடத்தையும் நமக்குச் சொல்லித் தருகிறது. இந்த எண்ணங்களை அருள்பணி Ron Rolheiser அவர்களின் கருத்துக்களுடன் இணைத்து, பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

    யோசேப்பு இஸ்ரயேல் பாரம்பரியத்தில் ஊன்றி வளர்ந்த, நேர்மையான பக்திமான். பாரம்பரியத்தை மீறுவதென்பதை அவர் கனவிலும் கருதியிருக்கமாட்டார். இறைவனின் தூதர், அவரது கனவில் சொன்ன செய்தி, பாரம்பரியத்திற்கு முரணானதாகத் தெரிந்தது யோசேப்புக்கு. திருமணத்திற்கு முன் ஒரு பெண் கருவுற்றால், அவர் இறைவனின் கட்டளைகளை மீறியவர்; இஸ்ரயேல் இனத்திற்குக் களங்கம் விளைவித்தவர் என்று மோசே தந்த சட்டமும், பாரம்பரியமும் சொல்கின்றன. இதற்கு நேர்மாறாக, கனவில் யோசேப்புக்குக் கிடைத்த செய்தி இருந்தது. கன்னியான ஒரு பெண் கருத்தரித்திருப்பது கடவுளின் செயல்; அதுவும் அவர் கருவில் தாங்கியிருப்பது கடவுளையே என்பது, பாரம்பரிய எண்ணங்களில் வளர்ந்திருந்த யோசேப்புக்கு, பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

    பாரம்பரியம், சட்டம் ஆகியவற்றில் யோசேப்புக்கு ஆழ்ந்த, வெறித்தனமான பற்றும், பக்தியும் இருந்திருந்தால், மரியாவின் நிலையை அறிந்ததும், ஊரைக்கூட்டி, பாரம்பரியத்தை நிலைநாட்டியிருப்பார். மரியாவின் மீது அவரே முதல் கல்லையும் எறிந்திருக்கக்கூடும். ஆனால், யோசேப்பு, பாரம்பரியத்தை, சரியான முறையில் புரிந்தவராய் இருந்ததால், பாரம்பரியத்தைக் கடக்கக் கூடியவர் கடவுள் என்பதை உணர்ந்திருந்தார். கடவுளிடம் அடையாளம் கேட்கத் தயங்கும் ஆகாசுக்கு, இறைவாக்கினர் எசாயா வழியாக, இறைவன் தந்த அடையாளமும் இதுதானே என்பதை, யோசேப்பின் மனம் எண்ணிப் பார்த்திருக்கும். தன்னிடம் அடையாளம் கேட்கும்படி இறைவன் அழைத்தபோது, அந்த அழைப்பை ஏற்கத் தயங்கிய ஆகாசுவுக்கு நேர்மாறாக, தன் கனவில் கூறப்பட்டவைகளை மனதார நம்பி, செயல்பட்டார் யோசேப்பு. கடவுளை, நம்மோடு, 'எம்மானுவேலா'கத் தங்கவைத்தார்.

    சாத்திரம், சம்பிரதாயம் சட்டம், பாரம்பரியம் இவை அனைத்துமே மனிதகுலத்தைக் காப்பாற்ற தேவையானவைதான். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து நிற்பவர் கடவுள். பாரம்பரியங்களைக் கடந்த, அல்லது அவற்றிலிருந்து முரண்பட்ட ஒரு வழியில் கடவுள் வந்து நம்மோடு தங்குவதாக இருந்தால், அவரை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா? பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது பாரம்பரியங்களை உடைத்து வரும் கடவுளைச் சந்திக்க நாமும் பாரம்பரியங்களைக் கடந்து, அல்லது உடைத்துச் செல்ல வேண்டியிருக்கும், புனித யோசேப்பைப் போல.

    கனவுகளின் காவலரான புனித யோசேப்பு, தன் கனவுகளை நம்பி, செயல்பட்டதால் தன்னையும், மரியாவையும், குழந்தையையும் மட்டும் காப்பாற்றவில்லை. இவ்வுலகைக் காக்கவந்த இறைவனை 'இம்மானுவேல்' ஆக நம்முடன் தங்கவைத்தார். கனவுகள் காண்போம். இன்னல்கள் நடுவிலும் நம் கனவுகளை நல்ல முறையில் புரிந்து கொள்வோம். கனவுகளைச் செயல்படுத்தி, கடவுளை நம்மோடு தங்க வைப்போம்.

    கிறிஸ்மஸ் பெருவிழாவிற்கு முந்தைய இறுதி வாரத்தில், நம் குடும்பங்களிலும், நாம் வாழும் சூழல்களிலும் "அனைத்தும் நலமாகவே அமையும், அனைத்து வழிகளும் நலமாகவே விளங்கும்" என்ற உண்மையைப் பறைசாற்றும் நம்பிக்கை திரிகளை ஏற்றிவைப்போம்! கனவுகளின் காவலரான புனித யோசேப்பு நமக்குத் துணை புரிவாராக!

    அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
     
     
    அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
    ஏற்றுக்கொள்ளுதல்

    யோசேப்பு கனவில் தனக்கு சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டு, மரியாவை ஏற்றுக்கொண்டார் என்று நற்செய்தி சொல்கிறது. "ஏற்றுக்கொள்ளுதல்" என்பது நமது வாழ்வின் முக்கியமான பண்பு என்றால் அது மிகையாகாது. யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்? எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய கேள்வி இது. உதாரணமாக, யோசேப்பின் வாழ்வில் நாம் நடந்ததைப் பார்ப்போம்.

    யோசேப்புவிற்கு மரியா திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அவர்கள் கூடிவாழும் முன் மரியா கருவுற்றிருக்கிறார். இதனை நமது வாழ்வோடு நாம் தொடர்புபடுத்திப் பார்ப்போம். நமக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கிற ஒரு பெண், திருமணத்திற்கு முன்பாகவே கருவுற்றிருக்கிறாள் என்கிற செய்தி கேள்விப்பட்டால், நாம் செய்வது என்னவாக இருக்கும்? உடனடியாக திருமணத்தை நிறுத்துவோம். பெண் வீட்டாரை ஏளனம் செய்வோம். மற்ற ஒன்றுமே நமது எண்ணத்திற்குள் வராது. ஆனால், யோசேப்பு அப்படிப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள முன்வந்தால், அது அவரது பெருந்தன்மை அல்ல, மாறாக, நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கக்கூடிய திறன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாம் ஒன்றை பொறுமையாக ஆராய்ந்து பார்ப்பதால் எடுக்கக்கூடிய முடிவு. அதனடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம். இதுதான் யோசேப்பை தனித்துவமிக்க மனிதராக அடையாளம் காட்டியது.

    நமது வாழ்விலும் யோசேப்பிடம் காணப்படக்கூடிய இந்த "ஏற்றுக்கொள்ளக்கூடிய" மனது நமக்கு வேண்டும். மற்றவர்களுடைய குறைகளை தவிர்த்துவிட்டு, அவர்களது நிறைகளை அலசி ஆராய்ந்து, நல்ல முறையில் உறவை பலப்படுத்துவதற்கான ஆசீர் வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

    அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்


     
     
    அருட்திரு பவுல் லியோன் வறுவேல்


    இயேசு என்னும் மீட்பர் !

    அன்பார்ந்த நண்பர்களே! மனிதரைப் பாவத்திலிருந்தும் எல்லாவிதத் தீமைகளிலிருந்தும் மீட்க வந்த கடவுளின் மகனாகிய இயேசு ''பெண்ணிடம் பிறந்தவராக வந்தார்'' (கலா 4:4). அவரது அன்னை மரியா பற்றி நற்செய்தி நூல்கள் பல இடங்களில் குறிப்பிடுகின்றன. ஆனால் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு பற்றி ஒரு சில செய்திகளையே நாம் அறிகிறோம். யோசேப்பு உரைத்ததாக ஒரு வார்த்தை கூட விவிலியத்தில் இல்லை. ஆனால் அவரைப் பற்றிப் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒருசில நிகழ்ச்சிகளிலிருந்து அவருடைய உயர்ந்த உள்ளத்தையும் பணிவான பண்பையும் அறிந்துகொள்கிறோம். யோசேப்பு தாவீதின் குலத்தில் பிறந்தவர். யோசேப்பின் கனவில் தோன்றிய ஆண்டவரின் தூதர் அவரைத் ''தாவீதின் மகனே'' என அழைப்பது கருதத்தக்கது (காண்க: மத் 1:20). யோசேப்பு மரியாவை மணந்திருந்தார். ஆனால் அவர்கள் கூடி வாழும் முன்னரே மரியா கருவுற்றார். இந்த நிகழ்ச்சி யோசேப்பின் உள்ளத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க அவருக்கு மனம் வரவில்லை. எனவே மரியாவை மறைவாக விலக்கிவிடலாமா என யோசேப்பு எண்ணுகிறார். அந்நிலையில் யோசேப்புக்குக் கடவுளிடமிருந்து செய்தி வருகிறது. கடவுளின் திட்டப்படியே மரியா தூய ஆவியால் கருத்தரித்தார் (காண்க: மத் 1:20) என்னும் உண்மையை அறிந்ததும் யோசேப்பு கடவுள் முன்னிலையில் பணிகின்றார்.

    தன் மனைவியாகிய மரியாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ''கடவுளின் மகன்'' என்னும் உண்மை யோசேப்புக்குப் படிப்படியாகத் தெரியவருகிறது. அக்குழந்தைக்கு இயேசு எனப் பெயரிடுமாறு ஆண்டவரின் தூதர் யோசேப்பிடம் கேட்கின்றார் (மத் 1:21). யூத மரபில் ஒருவருக்கு இடப்படுகின்ற பெயருக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. பெயர் குறித்துநிற்கின்ற பண்புகள் அப்பெயரைக் கொண்டுள்ள மனிதரிடம் விளங்கும் என்பது கருத்து. எனவே இயேசு எத்தகையவராய் இருப்பார் என்பதை அவருடைய பெயரே சுட்டிக்காட்டுகிறது. இயேசு என்னும் பெயருக்கு ''மீட்பர்'' என்பது பொருள். அதாவது அவர் ''தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' (மத் 1:21). இயேசு நம்மை ஏற்கெனவே மீட்டுவிட்டார். ஆயினும் அந்த மீட்பின் பயன்கள் நம் வாழ்வில் துலங்கவேண்டும். அவர் நமக்கு வழங்குகின்ற அருளோடு நாமும் ஒத்துழைத்து, அவருக்கு உகந்த விதத்தில் வாழ்ந்தால் மீட்பின் நிறைவு நமக்கு வழங்கப்படும். அதுவே மூவொரு இறைவனோடு நம்மை ஒன்றிக்கின்ற நிலையான பேரின்ப வாழ்வு. அந்த மகிழ்ச்சிநிறை வாழ்வை நமக்கு வழங்குகின்ற கடவுளுக்கு நாம் எந்நாளும் நன்றியுடையோராய் வாழ்ந்திட வேண்டும்.

    மன்றாட்டு
    இறைவா, எங்களைப் பாவத்திலிருந்து மீட்டு, பேரின்ப வாழ்வுக்கு அழைக்கின்ற உம்மை உறுதியாகப் பற்றிக்கொள்ள அருள்தாரும்.
    அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
     
    அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

     
     
    புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
    திருவருகைக்காலம் 4-ஆம் ஞாயிறு
    முதல் வாசகப் பின்னணி (எசா. 7:10-14)

    இயேசு பிறப்பதற்கு 735 ஆண்டுகளுக்கு முன்னால் ஆகாசு என்ற அரசன் யூதாவை ஆட்சி செய்து வந்தான். சிலை வழிபாட்டில் ஆர்வம் கொண்டவனாய் தன் மகனையே அந்தச் சிலைக்கு பலிகொடுக்கத் தயாராக இருந்தான். அண்டை நாடான இஸ்ராயேலின் அரசன், தமாஸ்சு நாட்டின் அரசனோடு கூட்டணி வைத்துக்கொண்டு யூதாவின் தலைநகரான எருசலேமைத் தாக்கத் தயாராக இருக்கின்ற சமயத்தில் யாவே கடவுள் எசாயா இறைவாக்கினரை அனுப்புகிறார். "அஞ்சாதே! யாவே மீது உன் நம்பிக்கையை வை. நீயும் உனது மக்களும் காப்பாற்றப்படுவீர்கள். எருசலேமிற்கு எதிராக வருகின்ற இஸ்ராயேலும் தமாஸ்குவும் அழிந்துபோகும்" என்ற செய்தி தரப்படு- கின்றது. ஆகாசு அதனைப் பொருட்படுத்தாமல், தனது திறமையில் நம்பிக்கை வைத்து அசீரிய அரசனிடம் உதவி நாடுகின்றார். தனது முடிவில்லாப் பொறுமையினால் யாவே கடவுள் மீண்டும் எசாயா இறைவாக்கினரை அனுப்புகிறார். ஆகாசு நம்பும் வண்ணம் எந்த ஒரு அருங்குறியும் தனது இறைவாக்கினர் வழியாகக் கொடுக்கப்படும் என்கிறார். எல்லா மனிதரையும் காப்பாற்றும் அருங்குறியாக இருக்கும் என்று உணர்த்தப்படுகிறது. அதைத்தான் இப்பகுதியில் காணுகின்- றோம். ஆகாசுவின் நம்பிக்கையற்றுப்போன மக்கள் கடவுளின் பிரசன்னத்தைக் காணவில்லை. எனவே அவனது மகனிலாவது அவரைக் காண வேண்டும் என்ற நோக்கோடு இந்தத் தீர்க்கத்தரிசனம் கொடுக்கப்படுகின்றது.

    இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 1:1-7)

    பவுல் கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்கிறார். யாருக்- கெல்லாம் விசுவாசம் இருந்ததோ அவர்களெல்லாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவர்களுக்குத் தனது விசுவாசத்தை பவுல் அறிக்கையிடுகின்றார். அது இன்றைய வாசகங்களில் பின்னணியை எதிரொலிப்பதாக இருக்கிறது. ஆதியிலே கொடுக்கப்பட்ட வாக்கு, தாவீதின் வழிமரபு, மனிதனில் தூய ஆவியில் வல்ல செயல், மீட்கும் சக்தி, போன்றவைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். கிறிஸ்து வையகம் முழுவதும் தனது பிரசன்னத்தைக் கொடுக்கக்கூடியவராய் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறார்.

    நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 1:18-25) பழைய ஏற்பாட்டின் சில முக்கிய நிகழ்வுகளில் கடவுள் தனது தூதர்களை அனுப்புகிறார். இன்றைய நற்செய்தியிலும்கூட கடவுள் யோசேப்பிடம் தனது மீட்புத்திட்டத்தினை மரியாவின் மூலமாகத் தொடங்க இருப்பதாக அறிவிக்கிறார். இதன்மூலம் மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்ற பெருமை யோசேப்புக்கு கொடுக்கப்படுகின்றது. "கடவுள் நம்மோடு இம்மானுவேல்" என்று குறிப்பிடுவதன் மூலம் மத்தேயு இயேசுவின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் கூறுகிறார். கடவுளிடமிருந்து வந்தவர், மனித அவதாரத்தில் மனித வரலாற்றில் நுழைகிறார் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.

    மறையுரை

    கடந்த 3 வாரங்களாக மனம் மாறுங்கள், ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்யுங்கள் என்று ஓயாது குரலெழுப்பிய திருமுழுக்கு யோவானின் அத்தியாயம் முடிகிறது. இன்றைய நற்செய்தியில் வானதூதரின் காட்சி அரங்கேறுகிறது. முதல் வாசகத்திலே எசாயா இறைவாக்கினர் மூலமாக ஆகாசுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்க தரிசனம், "இதோ! கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண் மகவை ஈன்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவாள்."

    இன்றைய நற்செய்தியில் மேற்சொன்ன செய்தி வானதூதர் மூலமாக நிறைவடைகிறது. கன்னிப் பெண் மகனைப் பெற்றெடுப்பதா? கணவனை அறியாத பெண்ணுக்குக் குழந்தையா? யூத சமுதாயத்திலே, அப்படிப்பட்ட பெண்ணுக்குக் கல் எறிந்து கொல்லும் தண்டனைதான் என்பதை இணைச்சட்டம் நூலில் 23:20- 21-இல் "பெண்ணிடம் கன்னிமை காணப்படவில்லை என்பது உண்- மையானால் அந்தப் பெண்ணை அவள் தந்தையின் வீட்டு வாயிலுக்கு வெளியே கொண்டுவந்து அவளது நகரின் மனிதர் அவளைக் கல்லால் எறிவர். அவளும் சாவாள். ஏனெனில் அவள் தன் தந்தையின் வீட்டிலிருக்கும்போதே வேசித்தனம் பண்ணி இஸ்ரா- யேலுக்கு இழுக்கானதைச் செய்தாள்," என்று வாசிக்கின்றோம். இதனை மனதில் வைத்து, மறைவாக விலக்கிவிட எண்ணிய யோசேப்புக்கு கனவில் வானதூதர் உண்மையை வெளிப்படுத்துகி- றார், ஏற்றுக்கொள்ளத் திடப்படுத்தப்படுகிறார்.

    மத்தேயு 1:24-இல் ஏற்றுக் கொள்கிறார். முதல் வாசகத்திலே, ஆகாசுவில் கடவுளின் பிரசன்னத்தை காணாத மக்களுக்கு அவனது மகனின் மூலமாவது இப்பிரசன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இம்மானுவேல் கடவுள் நம்மோடு என்ற பெயரை இடக் கட்டளையிடப்படுகிறார். இந்தத் தீர்க்கத்தரிசனம் நேர்மறை- யாக ஆகாசுவின் மகனைக் குறித்தாலும், மறைமுகமாக இயேசுவின் பிறப்பினைக் குறிக்கின்றது. இரண்டாவது வாசகத்திலும்கூட, கடவுள் வாக்களித்த நற்செய்தி தனது மகனைப் பற்றியதாகும் என்றும், எந்தவித வேறுபாடின்றி எல்லாரும் அவருக்கு உரியவர்களாய் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறுவதைப் பார்க்கின்றோம். இந்தத் தீர்க்கத்தரிசனமானது, இம்மானுவேல் கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது இன்னலிலும் இன்பத்திலும், நம்பிக்கையிலும், நம்பிக்கையற்ற சூழலிலும் நம் வாழ்வின் எல்லா நொடிப்பொழுதும் அவர் நம்மோடு நம்மிலே குடிகொண்டிருக்கிறார் என்பதைச் சுட்டிக்- காட்டுகின்றது.

    விடுதலைப் பயணம் முழுவதும் கடவுள் மக்களோடு இருந்து அவர்களை வழிநடத்திச் சென்றார் என்பதை வி.ப. 13:21-இல், "ஆண்டவர் பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும் இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணிலும் இருந்தார். பகலில் மேகத்தூணும் இரவில் நெருப்புத் தூணும் மக்களை விட்டு அகலவேயில்லை" என்று வாசிக்கின்றோம். இதையே கிறிஸ்து "இதோ! உலகம் முடியும்வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று உறுதிப்படுத்துகின்றார். அவரது பெயர் இம்மானுவேல் அதாவது 'நம்மோடு கடவுள்' எனத் துவங்கும் மத்தேயு நற்செய்தி அதே செய்தியோடும், வாக்குறுதியோடும் முடிவுறுகிறது. இது கடவுள் நம்மோடு உள்ளாரெனத் தெளிவுபடுத்துகிறது. இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டத்தின் வழியாகத் தம்மை வெளிப்படுத்திய இறைவன், இயேசுவின் தந்தையாகத் தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை உணருகிறோமா? பிரசவ வலியில் இருக்கிற பெண், தனது கணவன் தன்னோடு இருந்தா நல்லாயிருக்கும் என்று நினைக்கிறார். விடுதியில் படிக்கும் மாணவன் என்னோட அம்மா, அப்பா, இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறான். இந்தப் பிரசன்னத்தைத்தான் கடவுள் நமக்கு அறிவிக்கின்றார், திருமணத்தன்று ஒருவர் மற்றவரோடு இருப்போம் என்று வாக்களித்ததை எத்தனை முறை செயல்படுத்தியிருக்கிறோம்.

    காலம்போன கடைசியில் நமது பெற்றோரோடு நாம் இருக்கின்றோமா? கடவுள் நம்மோடு இருக்கிறார் என்றால் நாமும் பிறரோடு இருக்க வேண்டும். அன்பில் இருக்க வேண்டும். "My neighbour is hell" என்பார் ஒரு தத்துவ பேராசிரியர். நமது உடனிருப்பு எப்படிப்பட்டது. அன்னை மரியாவை போன்றதா, யூதாசைப் போன்றதா? வியாதியாய் இருக்கிறவரைப் பார்த்துக் கவலைப்படாதீங்க, "உங்களுக்குச் செபிக்கின்றேன்" என்று சொல்லும்போது அவர்க- ளோடு இருக்கின்றோம். ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் எடுத்து நம்மிடம் வந்து சொல்லும்போது, "வாழ்த்துக்கள் எதிர்காலத்துல நல்லா இருப்ப" என்று சொல்கின்றபோது அவனது மகிழ்ச்சியில் நாம் இருக்கின்றோம். உற்சாகப்படுத்தும்போது, நேர் மறையாக பேசும்போதும் இறைபிரசன்னத்தை வெளிப்படுத்துகிறோம். சமீபத்தில் ஒரிசாவில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக நாம் தவமிருந்து, அமைதிப்பேரணி நடத்தி, அவர்களுக்காய் செபித்தோமே, அப்போது அவர்களோடு இருக்கி- றோம். இத்தோடு இது நிற்காமல் அவர்களது பாடுகளில் ஏதாவது ஒரு விதத்தில் பங்கெடுக்க நாம் முயல வேண்டும். இதே போன்றுதான் நமது ஆண்டவர் இயேசுவும் திவ்விய நற்கருணையில் என்றும் நம்மோடு இருக்கின்றார். அத்தகைய இறைவன் இன்னும் சிலதினங்களில் மனித அவதாரத்திலே குழந்தை- யாய்ப் பிறக்க இருக்கின்றார். அவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு வரவேற்கத் தயாராவோம்.

    பிற மறையுரைக் கருத்துக்கள்

    🕇 தூய யோசேப்புக்கு கபிரியேல் தூதர் கூறும் செய்தி "உன் மனைவி மரியாளை ஏற்றுக் கொள்ள அஞ்ச வேண்டாம்". செய்தியாவது:
    ➤ உன் மனைவி மரியாள் இருப்பது போல் ஏற்றுக் கொள்.
    ➤மரியாளே, மீட்பரின் தாய்.
    ➤மரியாளை ஏற்பதின் வழியாக உனக்கும் உன் தலைமுறைக்கும், உன் உலகம் முழுவதுக்கும் மீட்பு கிடைக்கும்.

    🕇 நிறைகுறையுள்ள திருச்சபையை இயேசு நிலைபெறாத அன்பினால் அன்பு செய்வது போல, நிறையுள்ள மனிதர்களை அன்பு செய்து பணிவிடை செய்யும்போது, "கடவுள் நம்மோடு இருக்கிறார்" என்பதை நாம் உணர முடியும்.
     
    அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
    திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு

    இயேசுவின் பிறப்புப் பெருவிழாவிற்கு அண்மையில் இருக்கின்றோம்; இன்றைய நற்செய்தி (வச 23) இன்றைய முதல் வாசகத்தின் (வச 14) நிறைவாக அமைகின்றதாக மத்தேயு கூறுகின்றார்.எனவே இருவாசகங்களும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. எனினும் நமது சிந்தனைக்கு மத்தேயு நற்செய்தி கூறும் இயேசுவின் பிறப்புப் பற்றிய சில முக்கியமான செய்திகளை இவண் காண்போம். அதற்கு முன் இன்றைய நற்செய்தியைப் புரிந்து கொள்ள அவசியமான சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
    பின்னணி

    இன்றைய நற்செய்திப்பகுதி அதற்கு முந்தைய பகுதியான மத் 1:17ன் தொடர்ச்சியாகும். வச 1-17ல் மத்தேயு யோசேப்புவை இயேசு தனது சட்டத்தின் வழிதந்தையாகக்கொண்ட, தாவீதின்மகன்(வச1) எனத் தலைமுறை அட்டவணை வழி நிறுவுகின்றார். இன்றைய பகுதியின் வழியாக அந்த இயேசு இறைமகன், தூய ஆவியால் பிறக்க இருக்கிறார் எனும் கருத்தை நற்செய்தியாளர் மத்தேயு நிறுவுகிறார். இதைப் புரிந்துகொள்ளப் பண்டைய யூத சமூக முறை மற்றும் சில இலக்கிய முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.
    1. திருமண முறை

    அக்காலச் சமுதாயத்தில், நம் சமுதாயத்தில் இருப்பதுபோல திருமண நிச்சயம் முக்கிய பங்காற்றியது. மணமக்கள் நிச்சயம் செய்யப்பட்ட பிறகு தத்தமது இல்லங்களிலேயே வாழ்வர். முறை யாகத் திருமணம் நிகழ்ந்த பிறகே மணமகள் மணமகன் இல்லத்தில் நிகழ்வுகளுக்கும் (நிச்சயம், திருமணம்) இடையே நிகழ்ந்ததாகத் தெரிகின்றது. இந்தநிகழ்ச்சிப்பகுதி தொடர்புடைய சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள இச 20:7, 22:23-27 ஆகிய பகுதிகளைக் காணவும். ஆனால் புனித யோசேப்பு நீதிமானாயிருந்ததால் இத்தகைய இகழ்ச்சிக்கு மரியாவை உள்ளாக்க விரும்பாமல் மறைவாய் விலக்கிவிடத் திட்டமிட்டிருந்தார்.

    இன்றைய நற்செய்தியில் இறைவனின் திருவுளமும் திட்டமும் ஆண்டவரின் தூதர்' மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. பழைய ஏற்பாட்டில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன (காண். தொநூ 16:7-13; 22:11; விப 3:2; எண் 22:22; நீதி 6:11-24; 13:3; செக் 1:11; 3:1). பழைய ஏற்பாட்டு நூலில் பல இடங்களில் இறைவனும், 'ஆண்டவரின் தூதரும்' ஒன்றாகவே பார்க்கப்பட்டனர்.

    அடுத்ததாக இன்றைய அறிவியல் கண்ணோட்டத்தில் கனவு என்பது கடந்தகால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளின் விளைவு என்று எண்ணப்படுகின்றது. ஆனால் விவிலியப் புரிதலின்படி கனவுகள் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்கள் என்று எண்ணப் பட்டன (காண். தொநூ 28:10-17 - யாக்கோபு; தொநூ 37:5-11 - யோசேப்பு, தானியேல் நூல்). இந்தப் பின்னணிகளோடு இன்றைய நற்செய்தி தரும் இறையியல் கருத்துக்களைக் காண்போம்.
    இயேசுவின் பிறப்பு, பெயர், அடையாளம்

    இந்தச் சமுதாய சூழல், இலக்கியப் பின்னணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இயேசுவின் பிறப்பின் சிறப்பு, அவரின் பெயரின் பொருள், இயேசுவின் உண்மையான அடையாளம் ஆகியவற்றை விளக்கி விடுகின்றார் நற்செய்தியாளர். இவ்வாறு பிறக்க இருக்கும் குழந்தையின் சிறப்புகளை முன்னமே அறிவிக்கும் இலக்கிய வகையும் விவிலியத்தில் காணக்கிடக்கின்றன (காண். இஸ்மாயேல் - தொநூ 16:11-12; ஈசாக்கு தொநூ 17:19; சாலமோன் -1 குறி 22:9-10; யோசியா 1 அர 13:2).

    மேலும், இயேசுவின் பிறப்பிலும், வாழ்விலும் பழைய ஏற்பாட்டின் பல முன்னறிவிப்புகள் நிறைவேறுகின்றன. அதன் முதல் தொடக்கமான, 'நிறைவேறுதல்' இன்றைய நற்செய்தியில் நிறைவேறுகின்றது. அதாவது, "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவ4:14; 8:17; 12:17; 13:14, 35; 21:4; 26:56; 27:9). இவ்வாறு பழைய ஏற்பாட்டுக்கும் இயேசுவுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன என்பது எண்பிக்கப்படுகின்றது. எனவே இந்த நிகழ்வின் வழியாக இயேசு தாவீதின் மகன், இறைமகன், தூய ஆவியால் கருத்தரித்தவர், யோசேப்பு சட்டப் பூர்வ அல்லது வளர்ப்பு தந்தை மட்டுமே, அவரின் பிறப்பால் கடவுள் நம்மோடு இருக்கிறார் எனும் இறையியல் உண்மைகள் வலியுறுத்தப்படுகின்றன.
     
    அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

    திருவருகைக் காலம் - நான்காம் ஞாயிறு முதல் ஆண்டு
    முதல் வாசகம் : எசா 7:10-14

    "எம்மானுவேல் இறைவாக்கு" எனப்படும் இப்பகுதி (7; 14) பழைய ஏற்பாட்டில் முக்கியமான ஒன்று, கடினமானதும்கூட. கிறிஸ்தவப் பாரம்பரியம் கிறிஸ்துவையும் மரியாவையும் முன்வைத்து இப்பகுதிக்குப் பொருள் தருகிறது. அதே வேளையிலே இப்பகுதி, "சிரியா எப்ராயிமோடு சேர்ந்துகொண்டு" (7: 2) யூதாவின் அரசரான ஆகாசுக்கு எதிராகப் படையெடுத்தபோது கூறப்பட்டது (கி.மு. 733) என்பதையும் மனத்திலிறுத்த வேண்டும். ஆகாசு தன் எதிரிகளுக்குப் பயந்து அசீரிய மன்னரின் உதவியை நாடுகிறார். அப்போது இறைவாக்கினர், "உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்களும் நிலைத்து நிற்கமாட்டீர்கள்" (7:9) என்று ஆகாசுக்கு உரைத்து, அவர் அசிரிய உதவியை நாடுவதைவிட, ஆண்டவரின் உதவியை நாடுவதே மேல் என்கிறார். அதற்குச் சான்றாக ஓர் அடையாளமும் தருகிறார். அதுதான் இந்த "எம்மானுவேல் இறைவாக்கு."
    கன்னிப்பெண் கருத்தாங்குவார்

    எபிரேய மூலத்தில் "இளம்பெண்" (ha'almah) என்றுள்ளது. எனினும் கிரேக்க மொழிபெயர்ப்பாளர் இதைச் சிறிது தெளிவுபடுத்தி, "கன்னிப் பெண்" (betulah) என்றழைக்கிறார். மத்தேயு இம்மரபையே பின்பற்றி, "இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார்" (மத் 1:22- 23) என்பதை மரியா மேலும் இயேசுவின் மேலும் கூறப்பட்ட இறைவாக்காகக் காட்டுகிறார். இளம் பெண்ணின் மகன், இவ்விறைவாக்கு உரைக்கப்பட்ட சூழலிலே ஒருவேளை எசாயா இறை வாக்கினரின் மகனாக இருக்கலாம் (8: 1-4); அல்லது ஆகாசு அரசனின் மகனாகவும் இருக்கலாம். எனினும் எசாயா இறை வாக்குகளின் பொது நோக்கோடு காணும்போது, இது தாவீது குலத்தில் தோன்றவிருக்கும் "மெசியா" அரசரையும் சுட்டும் எனலாம் (2 சாமு 7: 12-16). இவ்வரசர் தாவீது மரபினரின் தாழ்வு நிலைக்குப் பின் தோன்றுவார்; அவர்தான் பிறக்க இருக்கும் இயேசு எனலாம். "மரியா வழி இயேசுவிடம்" செல்ல வேண்டும். திருவருகைக் காலத்தில் மரியாவும் நம்மோடிருந்து இயேசுவின் வருகைக்கு நம்மைத் தயார் செய்ய வேண்டும் என்பது தெளிவு.
    ஆண்டவர் சொற்களிலே நம்பிக்கை வைப்போம்

    ஆகாசு இறைவனிடம் அடையாளம் கேட்க மறுக்கிறார். அசீரியரின் ஆட்சிக்குத் தன்னையும் தன் மக்களையும் ஆட்படுத்த விரும்புகிறார். ஆனால் தம்முடைய மக்களைச் சுதந்திரவாளிகளாகக் காப்பாற்ற விரும்பும் இறைவனோ, ஆகாசின் திட்டங்களைத் தவிடு பொடியாக்குகிறார். மனிதர் மேல் அவன் நம்பிக்கை வைக்கக் கூடாது. விடுதலை மக்களை விலைக்கு விற்கக் கூடாது என்று அவருக்கு அறிவூட்டுகிறார். "தாவீதின் வீட்டாரே, கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதா? என் கடவுளின் பொறுமையைக்கூடச் சோதிக்கப் பார்க்கிறீர்களா? (7:13) என்று இறைவாக்கினர் வழி அவருக்குச் புத்தி புகட்டுகிறார். ஆகாசு கேட்காவிடினும், தாமே மக்களுக்கு ஓர் அடையாளம் தருகிறார் (7:14). இறைவனின் திட்டத்திற்கு முன் மனிதர் எதிர் நிற்க முடியுமா? நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கலாமல்லவா? தம்மை எதிர்த்து நின்ற பவுல் அடியாரையே கலங்கடித்தவரல்லவா நம் இறைவன்? (திப 9 : 1-19). நாமும் எவ்வளவு நாள் கடின இதயம் உடையவர்களாய் இருப்போம்? நம்முடைய கல்லான இதயங்களை உடைத்துவிட்டு (எசே 36: 26) இறைவனுக்கு உகந்த இதயங்களைப் பெற இந்நாட்களிலே அயராது வேண்டுவோம்.

    கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பார்.
    இரண்டாம் வாசகம் : உரோ 1:1-7

    உரோமையருக்கு எழுதிய திருமுகத்தின் முன்னுரையில் இறை மக்கள், நற்செய்திப் பணியாளர் இவர்களது அழைப்பு, பணி முதலியன பற்றியும் நற்செய்தி என்றால் என்ன என்பது பற்றியும் பவுல் அடியார் கூறுகிறார். திருவருகைக் காலத்தில் நமது அழைப்பு, கடமைகள், நற்செய்திப் பணிபற்றித் தியானிக்க இவ்வாசகம் பெரிதும் உதவும்.

    நாம் "இறைமக்கள்" ஆகும்படி அழைக்கப்பட்டுள்ளோம்

    கிரேக்க மூலத்திலே "புனிதர்கள்" (hagioi) என்றிருக்கிறது. விண்ணக வாழ்வுக்கு உரியோரே புனிதர் எனப்படுவர். பவுல் அடியார் கிறிஸ்தவர் அனைவரையும் இப்பெயராலேயே அழைக்கிறார் (1கொரி 1:2, எபே 1:1, கொலோ 1: 1), "தூய சொல்மலர்ப்பொதி நலன் நுகர்தரு புனிதர் பேரவை" (பெரிய புராணம்). நாம் அனைவரும் இறைவன் பணிக்காக ஒதுக்கிவைக்கப் பட்டவர்கள், ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள். பிற இனங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, இறைவனுடைய வழிபாட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலர் "புனிதர்", "புனித சபையினர்" (விப 19 : 6) எனவும், "அர்ச்சிக்கப்பட்டவர்" (எரே 2 : 3) எனவும் அழைக்கப்பட்டனர். இவ்வழைப்புக்கு ஏற்ற வாழ்வை நாமும் வாழ வேண்டும்.
    நாம் கடவுளின் அன்பைப் பெற்றவர்கள்

    கடவுள் நம்மை அன்பு செய்ததினாலேதான் நம்மை அழைத்தார். "இதோ என் ஊழியர். அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது" (எசா 42:1). "இவரே என் அன்பார்ந்த மகன். இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" (மத் 17 : 5) என்ற சொற்கள் கடவுளின் ஊழியனுக்கும் கிறிஸ்துவுக்கும் கூறப்பட்டனவெனினும் நமக்கும் இவை பொருந்தி அமையக் கூடியன. நாம் "கடவுளால் அன்பு செய்யப்படும் சகோதரர்கள்" (1 தெச 1 : 4), "நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது அன்பிற்குரிய இறைமக்கள்" (கொலோ 3: 12) என்கிறார் பவுல் அடியார். என்னே நமது மகிமை? என்னே நமது உயர்வு? இம்மகிமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோமா? இம்மகிமைக்கு ஏற்ற அன்பு வாழ்வு வாழ்கின்றோமா? இறைவன் நம்மைத் தேர்ந்து கொண்டு அன்பு செய்தாராயின், நாமும் இறைவனுக்கும் பிறருக்கும் அன்பு காட்டக் கடமைப்பட்டவர்களில்லையா?
    நாம் பவுல் அடியார் போன்று கிறிஸ்து இயேசுவின் பணியாளர்கள்

    கிரேக்க மூலம் "அடிமை" (doulos) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. "என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர்கெடுத்து" 11-ஆம் திருமுறை. அடிமை விலைகொடுத்து வாங்கப்பட்டவன். அவனுக்குச் சுயஉரிமை கிடையாது. அவனுடைய உடைமைகளெல்லாம் அவன் தலைவருடையன. நாமும் கிறிஸ்துவின் இரத்தமாகிய விலை கொடுத்து வாங்கப்பட்டவர்கள் (1 கொரி 6: 20, 7: 22-23). நாமும் இறைவனுக்கு அடிமைகள். மோசே, ஆபிரகாம் முதலியோர் தம்மை இறையடிமைகளாவே கண்டனர். பவுல் அடியார் நம்மையும் தம்மையும் கிறிஸ்துவின் அடிமைகள் எனக் குறிப்பிடுவதன் மூலம் கிறிஸ்து கடவுளேயென்று காட்டுகிறார். மேலும் அடிமைக்குரிய தொண்டு புரியவும் நம்மை அழைக்கிறார். நற்செய்திப் பணிவழி, கிறிஸ்துவுக்கும் கிறிஸ்துவ சமூகத்திற்கும் நாம் தொண்டு புரிய அழைக்கப்பட்டுள்ளோம். தொண்டரடிப் பொடி அடியார் போன்று இறைவனுக்கும் அவர் தொண்டர்களுக்கும் நாம் அடி பணிந்து சேவை செய்கிறோமா? கிறிஸ்துவே "அடிமையின் வடிவை ஏற்று" (பிலி 2: 7) கீழ்ப்படிதல் வாழ்வு வாழ்ந்தார் என்றால் (லூக் 2:51) அது நமக்குப் படிப்பினை காட்டுவதற்காகவன்றோ?

    நாம் பவுல் அடியார் போன்று திருத்தூதர்கள்

    "அனுப்பப்பட்டவர்" (apostolos) என்று பொருள்படும் இச்சொல் விரிந்த பொருளில் நம் அனைவரையும் குறிக்கும். கிறிஸ்து இயேசு மனிதரிடையே பிறந்து இறந்து உயிர்த்தார். அவரே மனுக்குலத்திற்கு மீட்பும் வாழ்வும் அளிக்கும் கடவுள் என்ற நற்செய்தியை அறிவிக்கவும் அந்நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கேற்ப வாழ்வு நடத்தவும் நாம் இறைவனால் அழைக்கப் பட்டுள்ளோம். நற்செய்திக்கு ஏற்ற வாழ்வு நடத்துகிறோமா? கிறிஸ்து பிறப்பு நமக்கும், நம்மைச் சூழ்ந்தோர்க்கும் நற்செய்தியாய் அமைய வேண்டியவற்றைச் செய்கிறோமா?

    கடவுளின் நற்செய்தியை அறிவிக்கக் குறிக்கப்பட்டிருக்கிறேன்.
    நற்செய்தி: மத் 1: 18-24
    இயேசுவின் பிறப்புப்பற்றித் தாம் மரியாவிடமிருந்து கேட்டறிந்தவற்றையே மத்தேயுவும் லூக்காவும் குறிப்பிடுகின்றனர் என்பர் ஆய்வாளர். மத்தேயு தன் நற்செய்தியை, சிறப்பாக யூத மக்களுக்காகவே எழுதினார். எனவே பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை எடுத்துக் கூறி, அவை இயேசுவின் வாழ்வில் நிறைவேறியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றார். மனு உருவான வார்த்தை தெய்வத் திருமகனே என்பதை வலியுறுத்துகின்றார்.
    யோசேப்பு நீதிமான்

    யோசேப்புக்கும் மரியாவுக்கும் மண ஒப்பந்தம் முடிந்துவிட்டது. யூத மரப்புப்படி இக்காலத்தில் இவர்கள் கணவன் மனைவியாகக் கூடி வாழலாம். ஆனால் அப்படி வாழுமுன் மரியா கருவுற்றிருப்பதை யோசேப்பு அறிந்தார். அதிர்ச்சி அடைந்தார். எனினும், அவரை ஐயுற அவரது மனம் இடந்தரவில்லை. அவர் நீதிமானானதால் தானே அவரை விட்டு விலகிவிடத் தீர்மானித்தார் (மத் 1: 19). அப்பொழுதுதான் ஆண்டவரின் தூதன் அவருக்குத் தோன்றி, கடவுளுடைய ஆவியின் தனி அருளால் மரியா தன் கருவிலே உருவிலானைத் தாங்கியுள்ளாள் என்று விளக்கம் அளிக்கிறார் (1:20). மரியா மீது யோசேப்பின் மதிப்பு அதிகரிக்கிறது. அனைத்தையும் ஐயத்துடன் பார்க்கும் சமுதாயத்தில் யோசேப்பு ஒரு தனி ரகம் எனலாம். குடும்பத் தலைவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

    "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது" (குறள் 45)

    ஆவியார் வாழ்வு அளிப்பவர்

    இஸ்ரயேலின் மரபுப்படி கடவுளின் ஆவி படைப்புடன் தொடர்பு கொண்டதாகக் கருதப்படுகிறது. "நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" (தொநூ 1:2). "உமது ஆவியை நீர் அனுப்ப அவை படைக்கப் பெறுகின்றன. மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக் கின்றீர்" (திபா 104:30). "இறைவனின் ஆவி என்னைப் படைத்தது. எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது" (யோபு 33:4). இறைவார்த்தை மனு உருவெடுக்கத் துணைபுரிந்தவர் இதே இறைவனின் ஆவி என்பது வானதூதரின் கூற்று. பாவ வாழ்வால் செத்து மடிந்துகொண்டிருந்த சமுதாயத்திற்குப் புத்துயிர் அளிக்கும் புது மனிதர் - இறை மனிதர்- இவ்வுலகில் தோன்றி விட்டார். அவரே இயேசு; "இம்மானுவேல்' இறைவன் நம்முடன் வாழ்கிறார் (மத் 1: 22-23). இதுவே கிறிஸ்து பிறப்பு விழாவின் மையப்பொருள். இறைவனின் வாழ்வை கிறிஸ்து வழியாகப் பெற்று வாழ, நமக்கும் தூய ஆவியின் துணை தேவையென்பது இவ்வாசகத்தின் முடிவு.
    இயேசு மீட்பளிக்கும் 'இம்மானுவேல்'

    அருள்பொழிவு செய்யப்பட்ட கிறிஸ்து பிறப்பிலே சிறப்புடையவர். இவரது பிறப்பிடமும் பின்னணியும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. "கன்னிப் பெண் கருத்தரிப்பார்" என்ற எசாயாவின் இறைவாக்கு (எசா 7: 14) இன்று நிறைவேறியுள்ளதாக மத்தேயு சுட்டிக் காட்டுகிறார். "இவருக்கு இயேசு என்று பெயரிடுவீர்" என்றார் வானதூதர். இயேசு என்றால் மீட்பர் என்பது பொருள் (மத் 1: 21). கடவுள் மனிதனானது மக்களைப் பாவத்தினின்று மீட்பதற்கேயாகும். பாவத்தின் பயங்கர விளைவே இவ்வுலகில் தோன்றியுள்ள அத்துணை துன்பங்களும்! துன்ப துயரங்களால் கட்டப் பட்டுள்ளனர் மனிதர். ஒருவர் மற்றவருக்கு அடிமையாக வாழ்வது, உழைப்பாளியின் உழைப்பை உறிஞ்சிக்கொண்டு தக்க ஊதியம் அளிக்காமை, சாதி அடிப்படையில் ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் கொடுமையான தளைகள். நாம் இயேசுவின் மீட்பால் அடிமைத்தன்மை நீங்கி இறைவனைத் தந்தாய், அப்பா என்று அழைக்கும் உரிமை பெற்றுள்ளோம் (உரோ 8:15, கலா 4:6). இயேசுவின் வருகையால் நாம் முழு விடுதலை அடைந்துள்ளோமா? இயேசுவின் சீடர்களாகிய நாம் மக்களின் முழு விடுதலைக்காக உழைக்கின்றோமா?

    பாவத் தளையிலிருந்து விடுதலை அடைய ஏற்றக் காலம் இதுவே. "இம்மானுவேல்" இறைவன் நம்மோடு இருக்க வேண்டுமானால் நாம் மனம் மாற வேண்டும். தூய ஆவியாருக்கு நம்மில் முதலிடம் கொடுக்க வேண்டும்.

    இம்மானுவேல் என்றால் "கடவுள் நம்மோடு."
     
     
     

      
    மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
    இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே