ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

ஆண்டின் பொதுக்காலம் 3 ம் ஞாயிறு  


Sermon Fr.Albert
Sr. Gnanaselvi (india)

 ஆண்டின் பொதுக்காலம் 3ம் ஞாயிறு  
திருப்பலி முன்னுரை

திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 1a)

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?
இன்று ஆண்டின் பொதுக்காலம் 3ம் ஞாயிறு, தம் முதற் சீடர்களை இயேசு அழைக்கும் நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் இன்று நம்முன் வைக்கிறார். 'வருகிறோம்' என்று வெறும் வார்த்தையில் சொல்ல வில்லை. உடனே இயேசுவை நாம் பின் தொடர்கின்றனர். சீடர்கள் எந்த நம்பிக்கையோடு எந்த எதிர்பார்ப்போடு அவர்கள் சென்றிருப்பார்கள்? என்ற கேள்வி நம்முள் எழுகின்றது. அவர்கள் இயேசுவை நாம் வழிபடுவதும் இயேசுவை நாம் பின்பற்றுவதும் எதை அடிப்படையாக வைத்து நிகழ்கிறது? என்று நம் பின் தொடர்தலைக் கேள்வி கேட்கிறது இந்த நாள் இறை ஞானத்தின் அடிப்படையில் மனிதருக்குக் முழு நலத்தையும் வழங்குவதே இயேசுவின் நற்செய்தி இந்தப் பணியைத் தொடர்ந்திட சீடர்களை அழைத்தார். இயேசுவைப் பின்பற்றுதல் என்பது தம்மை முற்றிலுமாக சரணாகதியாக்குதல் இறைப்பிரசன்னத்தில் எப்போதும் வாழ்தல் இறையேசுவுடன் இருத்தல். இந்த இருத்தலில் இருந்து அருள் பெற்றவர்களாக வாழ்வது. பிறரையும் அருள்வாழ்வக்கு வழ்காட்டுவது ஒப்பற்ற செல்வமாம் இயேசுவை அடைய, அனைத்தையும் இழப்பது, விட்டுவது நமது வாழ்வின் மையமாக இசேவைப் பற்றிக் கொள்வது இன்றைய நாளில் அருள்நிiலை இறையழைத்தலுக்காக ஜெபிப்போம். இறை பணிக்கென்று தங்களை தேர்ந்துகொண்ட அனைவரையும் நினைவு கூர்வோம், இயேசுவைப் பின்பற்றுதல் முன்வைக்கும் சவால்களை சந்திக்கக்கூடிய ஆற்றலை, சக்தியை, துண்வை, தந்தருள வேண்டுவோம். அசையாத நம்பிக்கையை ஆண்டவர்மீது வைத்தவர்களாக அவரது வழி நடத்தலுக்கு தம்மை முன்னும் பணித்தவர்களாக வாழ்ந்திட ஆழ்நிலை ஜெபத்தில் இருந்து பணிசெய்திட வேண்டுவோம். இறையழைத்தலின் விளை நிலமான குடும்பங்கள் அன்பில் ஊன்றப்பட்டதாக, தம்முடைய குழந்தைகள் தெய்வபயத்தில் வளரும் சூழ்நிலையை குடும்பங்கள் உருவாக்கி வாழவைத்திடும் அன்புநிறை இல்லமாக விளங்கிட முயல்வோம். இறைவனின் பிரசன்னம், நம் வாழ்வின் இருளையும், இறப்பின் காரணிகளையும் அகற்றும் என்ற நம்பிக்கையோடு வாழ அருள்வேண்டி இணைவோம் இக்கல்வாரி வேள்வியில்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 

1. எம்மவர் வாழ்வே இறைவா!
உம் அழைத்தலுக்கு "இதோ வருகிறேன்"என்று பதில் மொழி கூறி, உம்மைப் பின்தொடர்ந்து அர்ப்பணித்து பணிபுரியும் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்கிறோம். இவர்களுக்கு உம் அருளை நிறைவாய் பொழிந்து அழைத்தல் வாழ்வில் தாராள மனதையும் ஆர்வமுடன் பணி செய்யும் பண்பையும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைக்கக்கூடிய ஆற்றலையும் கொடுத்து பாதுகாத்து வழிநடந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. குடும்பத்தில் கோமகனே இறைவா!
அருள் நிலை அழைத்தலுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்கும் பாசளைகளாக எம்மவர் குடும்பங்கள் அமையவும், அருள்நிலையும் பொதுநிலையும் ஒன்றோடொன்று இணைந்து உலகிற்கு உயிரிகொடுப்பவை என்பதை உணர்ந்து குடும்பத்தில் இறைச்சூழ்நிலை, பக்திச்சூழ்நிலை இருப்பதில் அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3.எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளே!
உம் திருமகனின் பிரசன்னம் முதற்சீடர்களுக்கு மிகுதியான மீட்பாட்டைக் கொடுத்தது. ஊம் பிரசன்னம் எல்லா இடங்களில் நிறைந்திருப்பதையும் உம் பிரசன்னம் தருகின்ற நிறைவை ஒவ்வொரு நாளும் உணர்ந்து புதியவர்களாய் புனிதர்களாய் வாழ வரம்பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. வார்த்தையாம் இறைவா!
இறைவார்த்தையை வாசிப்பதால் உமது வல்லமையால் ஆட்கொள்ளப்படுகிறோம். என்பதை உணர்ந்து ஆர்வமுடன் வாசித்து. அவை குறித்துக்காட்டும் வழியில் எம் வாழ்வுப் பாதையை அமைத்து நேரிய வழியில் பயணிக்க வேண்டுமென்று இறை உம்மை மன்றாடுகிறோம்.

5. எளியோரின் ஏந்தலே இறைவா!
கப்பல், கடல் மீன்பிடி கடற்படை என்று கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் பாதுகாப்பு பராமரிப்பும் அருளவும், கடல் எல்லை பிர்ச்சினைகளால் கொல்லப்படும் அப்பாவி உயிர்களைக் காப்பற்ற அரசுகள் செயல்படவும், தலைவர்கள் முன் சார்பு எண்ணங்கள் நீக்கி உண்மையுடன் செயல்பட நீரோ வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.



 
மறையுரைச்சிந்தனை - Sr. Gnanaselvi (india)

கன்னியாகுமரியில் உள்ள ஆசிரமத்திற்கு இரண்டு சீடர்கள் அனுப்பி வைக்குமாறு காஷ்மீரில் உள்ள ஆசிரமத்தின் தலைமைத் துறவி சியானுக்கு ஓலை அனுப்புகிறார். சியான் தன்னிடமிருந்த சீடர்களில் பத்துப்பேரை எடுத்துக் கன்னியா குமரிக்கு அனுப்புகிறார் சியான். எல்லாருக்கும் ஆச்சரியம். "இரண்டு பேரைத்தானே கேட்டார். புத்துப்பேரை அனுப்புகிறீர்களே?"கேட்கின்றனர் அவரை மெனளமட சாதிக்கின்றார் சியான். பத்துப்பேரும் புறப்பட்டு கன்னியாகுமாரி நோக்கிச் செல்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பின் தங்களால் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது என மூன்று பேர் தாங்கள் புறப்பட்ட இடத்திற்கே திரும்புகின்றனர். இரண்டு பேர் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றனர். இரண்டு பேர் வழியில் ஓர் இடம் பிடித்துப்போக அங்கேயே தங்கி விடுகின்றர். ஒருவர் காதல் வயப்பட்டு வழிமாறிவிடுகின்றனர். இறுதியாக இரண்டு பேர் மட்டுமே கன்னியாகுமரி செல்கின்றனர். இப்போது எதற்காகப் பத்துப்பேரை சியான் அனுப்பினார். என்பது மற்றவர்களுக்குப் புரிந்தது.

இயேசு தன் பணிக்காக 12 முதற்சீடர்களை அழைக்கிறார். இயேசுவைச் சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் வெளும் 12 பேர் மட்டுமே திருத்தூதர்களாக அழைக்கப்படுகின்றனர். "மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது" எனத் தன் பணிவாழ்வைத் தொடங்குகிறார் இயேசு. "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர். உதித்துள்ளது என்ற எனையா இறைவாக்கினரின் இறைவாக்கின் நிறைவாக இயேசுவின் பணி ஒளியாகத் தொடங்குகிறது அந்த ஒளியை மற்றவர்களிடம் கொண்டு சேர்க்க தன் சீடர்களை அழைக்கிறார்.
இயேசு "என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்று அவர்களை அழைக்கின்றார். ஏற்கனவே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது நிறைவு தருவதல்ல மனிதர்களைப் பிடிப்பதே நிறைவு என அவர்களுக்குக் கற்பிக்கின்றார். வாழ்வில் இலக்குகள் இரண்டு வகைகள். ஓன்று பொருள்கள் நிலை. இரண்டு மனிதர்கள் நிலை. நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகள் முதல் நிலை. இயேசுவின் முதற்சீடர்கள் இந்த நிலையில் தான் இருந்தனர். இரண்டாம் நிலை அன்பு, நட்பு, மதிப்பு, சுயநிர்ணயம் இவை போன்றவை மனிதர்கள் சார்ந்தவை. இந்த இரண்டாம் நிலை இலக்கிற்குத் தான் இயேசு தன் முதற்சீடர்களை அழைக்கிறார். அனுப்புகின்றார். திருமுழுக்கின் வழியாக நாமும் இயேசுவின் சீடர்களாக அழைக்கப்பட்டுள்ளோம். இன்று நம் இலக்குகள் எந்த நிலை சார்ந்தவையாக இருக்கின்றன.

இரண்டாவதாக இயேசுவை மையமாக வைத்து அவரைச் சுற்றி வட்டங்கள் வரைந்தால் இன்று வரை அந்த வட்டம் வளர்ந்து கொண்டே இருக்கும். இயேசு நடுவிலும், இயேசுவைச் சுற்றியிருந்த அவரது தாய், சகோதரர்கள், சீடர்கள் இரண்டாம் வட்டத்திலும் அவரில் நலமட பெற்றோர் மூன்றாம் வட்டத்திலுமு; அவரின் போதனையைக் கேட்போர் நான்காம் வட்டத்திலும் என வட்டத் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. இன்று நாம் எந்த வட்டத்தில் இருக்கிறோம்? நமக்கும் இயேசுவுக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கிறது?

மூன்றாவதாக மத மனம் மாறுவது இயேசு மத மாற்றாத்திற்கு நம்மை அழைக்கவில்லை. மனமாற்றத்திற்கே அழைக்கின்றார். மதம் மாறுதல் எளிது, மனம் மாறுவது அரிது. மதமாற்றம் வழிபாட்டைக் கற்பிக்கின்றது. மனமாற்றம் சீடத்துவத்தைக் கற்பிக்கிறது. இயேசுவுக்கு இன்று பக்கிமான்கள் அல்ல சீடர்கள் பக்திமானாய் இரப்பது எளிது. ஆலயத்திற்கு வரலாம். மெழுகுதிரிகள் ஏற்றலாம். அது போதும் ஆனால் சீடனாய் இருப்பது மிகவும் கடினம். சீடத்துவத்தின் அவசியம் விட்டுவிடுதல் முதற்சீடர்கள் தங்கள் படகுகளையும் தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுப் புறப்படுகின்றர். தங்கள் பற்றுகளை விடுத்து, இறைவனைப் பற்றிக் கொள்கின்றனர்.

ஒருவருக்குப் புதிதாகக காய்கள் வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும். என்று ஆசை அவரே தினமும் மார்க்கெட்டுக்குச் சென்று புதிதாகக் காய்கறிகள் வாங்கி வருவாள் அன்றும் வழக்கம் போல் காய்கறிகள் வாங்கியபின், காசு கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டடார். பை கிழிசலாக இருந்ததால், அவர் எடுத்து வந்த நூறு ரூபாய் நோட்டு எங்கோ விழுந்து விட்டது. மிகுந்த வருத்தத்துடன் கடைக்காரரிடம் காய்களைக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினார். மனைவி முகவாட்டத்துடன் வந்த அவரிடம் காரணம் கேட்டுவிட்டு போனால் போகிறது வந்து சாப்பிடுங்கள் என்றார். பசிக்கவில்லை என்று சொல்லி விட்டார். அன்று அவருக்குத் தூக்கம் வரவில்லை மறுநாள் கடைக்குச் சென்றபோது மரத்தடியில் ஒரு தாயும் பிள்ளையும் பசியுடன் இருப்பதையும், சிறுவன் பசி தாங்காமல் அழுவதையும் கண்டார். மனம் கேட்கவில்லை சாப்பாட்டுக்குக் கடைக்குக் கூட்டிச் சென்று வயிறு நிரம்பச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். காசில்லமல் வீடு வந்தார். "மறுபடியும் காசு காணாமல் போய்விட்டதா?" என்று மனைவி கேட்ட மனைவியிடம் உள்ளதைச் சொன்னார். முனைவி கூறினார், "அன்று பணம் உங்களை விட்டுப் போனது வருத்தப்பட்டீர்கள் இன்று பணத்தை விட்டுவிட்டு நீங்கள் வந்து விட்டீர்கள். உங்களிடம் வருத்தம் இல்லை" என்றார்.

பொருட்களின் மேல், ஆட்களின் மேல் பற்று இருக்கும் வரை நமக்கு நிம்மதி கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு ஆசை வாயை அகலப் பிளந்து கொண்டு நம்மை விழுங்கக் காத்திருக்கிறது. அதற்கு உட்படாமல் அதைக் கடந்து வந்து விட்டால் பற்றற்ற நிலைக்குள் காலடி பதித்து விடுவோம். அப்போதுதான் இயேசுவின் சீடனாய் இருக்க முடியும். இயேசுவின் குரலுக்குப் பலர் இன்றும் பதில் கொடுக்கின்றனர். இதில் நிலைத்து நிற்பதுதான் சீடத்துவம் இன்று சீடத்துவத்திற்கான தடைகள் எவை? உள்ளார்ந்த தடைகள், கோபம்,வெறுப்பு பகைமை, மன்னிப்பின்மை, பழிவாங்குதல், பொறாமை, அவற்றில் இருந்து விடுபடுதல் வெளியுலகம் சார்ந்த தடைகள் பொருள்கள், இடங்கள், நுகர்வு கலாச்சாரமும், உலகு சார்ந்த மனப்பான்மை இப்படிப்பட்ட தடைகளையும் மீறுதலே விண்ணரசின் படிக்கல், அதுவே மெய்யான சீடத்துடம் இன்று அருள்நிலை பணியாளர்களை நினைவு கூர்வோம். கொடுத்த வாக்குறுதியில் நிலைத்து நின்றிடவும். இறையாட்சிப் பரவ உழைக்க உடல் உள்ள உறுதியையும் தடைகளைப் படிக்கற்களாகக் கொண்டு இறையருளில் நிறைந்தவர்களாய் வாழவும் அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.


 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

நான் யாரைப் பின்பற்றுகிறேன்? சாதனங்களா? சாதனைகளா?

இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இன்றைய நாளில் இயேசுவின் பணி வாழ்வினை குறித்து நாம் சிந்திக்க இருக்கின்றோம். இயேசு தனது பொது வாழ்வினை துவங்கிய வாசகமானது இன்றைய நற்செய்தியில் நமக்கு கூறப்பட்டுள்ளது. முதல் வாசகம் மறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள் அடையும் பயன்கள் பற்றியும், இரண்டாவது வாசகம் மறைப்பணியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகம் ஒரு பணியாளர் எப்படி அழைக்கப்படுகிறார் எந்த சூழ்நிலையில் அழைக்கப்படுகிறார் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. நாம் ஒவ்வொருவரும் இறைப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள். நாம் எவ்வாறு அழைக்கப்படுகிறோம்? எப்படி இருக்க பணிக்கப் படுகிறோம்? நாம் அடைய இருக்கக்கூடிய பயன்கள் என்னென்ன என்பதைப்பற்றி இன்றைய வாசகங்கள் அனைத்தும் எடுத்துரைக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு முதல் சீடர்களை அழைத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம். இருவகையான சகோதரர்களை சீடர்களாக இயேசு அழைக்கிறார் முதலில் சீமோன் பேதுருவும் அவரது சகோதரர் அந்திரேயாவும். இவர்கள் இருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இரண்டாவதாக செபதேயுவின் மக்கள் இவர்கள் கரையோரமாக அமர்ந்து தங்களது தந்தையுடன் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இயேசு இரண்டு சகோதரர்களையும் அழைக்கின்றார். வேலை செய்துகொண்டு இருப்பவர்களையும், ஓய்வாக இருப்பவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் அழைப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவரது பணி செய்ய நம்மை அவர் வேலையிலும் ஓய்விலும் அழைக்கலாம். சீடர்கள் செய்த வேலைகள் 2. ஒன்று அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டனர். வேலை செய்து கொண்டிருந்தாலும் இயேசு அவர்கள் அருகில் வரும்பொழுது இவர்தான் மெசியா நம்மை மீட்க கூடிய வல்லமை உள்ளவர் என்பதை அறிந்து அவரை இனம் கண்டு கொள்கின்றனர். இரண்டாவதாக அவரது குரலினால் கவரப்படுகின்றனர். அவரது குரலுக்கு செவி மடுக்கின்றனர். இயேசு நம்மை சுற்றிலும் நாம் வேலை செய்யும் பொழுதும் சோர்வாக அமர்ந்து இருக்கும் பொழுதும் நம்மை சூழ்ந்து அவர் இருக்கின்றார். அவரது பணி செய்ய எல்லாச் சூழலிலும் மெல்லிய குரல் மூலம் நம்மை அழைக்கின்றார். நாம் செய்ய வேண்டியது இதுதான் இயேசுவை அவர் குரலை இனம் கண்டு கொள்வது அவரது குரலுக்கு செவிமடுப்பது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் அழைக்கப்பட்டவர்கள் (கிறிஸ்தவ வாழ்வு வாழ) எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஒத்த கருத்துடையவர்களாக இருக்க வேண்டும். அவர்களிடையே பிளவு மனப்பான்மை இருக்கக்கூடாது. ஒரே நோக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சண்டை சச்சரவுகள் அவர்களிடத்தில் இருக்கக் கூடாது. பணியாளர்களாக அழைக்கப்பட்ட நாம் ஒத்த கருத்துடையவர்களாக, ஒரே மனம், நோக்கம் உடையவர்களாக இருக்கிறோமா? அல்லது பிளவுபட்ட மனம் சண்டை சச்சரவுகளும் குழப்பங்களும் உடையவர்களாக இருக்கிறோமா? என்று சிந்திப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் பணியாளர்கள் அடைந்த பயன்கள் பலன்கள் பற்றி கூறப்படுகிறது. காரிருளில் நடந்துவந்த மக்கள், சாவின் நிழல் சூழ்ந்துள்ள இடத்தில் வசித்த மக்கள், பேரொளியை, சுடர் ஒளியை காண்கிறார்கள். அவர்களது இனம் அவர்களோடு முடிவடையாமல் பலுகிப் பெருகுகின்றது. அவர்களது மகிழ்வு இரு வகையாக பிரிக்கப்படுகிறது ஒன்று அறுவடை நாளில் நிறைவடையும் ஒரு உழவனைப் போல, கொள்ளை பொருளை பங்கிடும் ஒருவனின் மனநிலையைப் போல என் இரு வகை மகிழ்வாக பிரிக்கின்றார். அறுவடைநாள் மகிழ்வு என்பது ஒரு விவசாயி கடினமாக உழைத்து வேலை செய்து தனது வியர்வை சிந்தி தனது உழைப்பு எல்லாம் கொடுத்து ஒரு விதையை உருவாக்கி அதிலிருந்து அதற்குரிய பலனை எடுக்கக்கூடிய அந்த நாள் அறுவடை நாள். தனது துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வை காணக்கூடிய அந்த நாள் அவனது அறுவடை நாள். அந்நாளில் அவன் அடையும் மகிழ்வுக்கு வறையரை கிடையாது அவனது உழைப்புக்கேற்ற ஊதியம் அவர் பெறுகிறார். அவனது நேரத்தை உழைப்பை துன்பத்தை அனைத்தையும் கொடுத்து அந்த நிலத்தை பயிரிட்டு அதன் மூலமாக கிடைக்கக்கூடிய விளைச்சலின் மூலம் அவன் பெருமகிழ்வடைகின்றேன் இரண்டாவது வகை மகிழ்வு கொள்ளை பொருளை பங்கிடுவது எந்தவிதமான ஆதாரமும் இன்றி பிறரிடம் இருந்து பெறும் மகிழ்வு. மேலும் அவர்களது சுமை உடைத்தெறியப்படுகிறது. அவர்கள் உடம்பைப் புண்ணாக்கிய தடி தகர்த்தெறியப்படுகின்றது. அவர்களது கொடுங்கோல் ஒடிக்கப்படுகிறது. ஆக இதுவரை துன்பத்தை அனுபவித்து வந்த அவர்கள் மகிழ்வினை அடைகிறார்கள். சாதாரண ஒரு பணியாள் துன்பங்கள் பல அனுபவித்தாலும் இறுதியில் அவனுக்கு பெருமகிழ்வு கிட்டும் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது நற்செய்தி அறிவிப்பவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக நேரிடும் இருப்பினும் இறுதியில் அவர்கள் பெரும் மகிழ்வை அடைவார்கள்.

இன்றைய வாசகங்கள் மூலம் நாம் நமது வாழ்க்கைக்கு என்று எடுத்துக் கொள்வது என்ன?
நான் யாரை பின்பற்றுகிறேன்? என்ற கேள்விக்கான ப்திலைத் தேடுவதே இன்றைய வாசகங்கள் நமக்கு விடுக்கும் அழைப்பு. வளர்ந்து வரும் தொலைதொடர்பு சாதனை உலகில் நாம் பல சாதனங்களை பின்பற்றுகிறோம் முகப்புத்தகத்தில் புலனத்தில் வலைதளத்தில் என முகம் தெரியாத அறிமுகமில்லாத பலரை பின்பற்றுகிறோம். அவர்கள் பதிவிடும் கருத்துக்களைப் பின்பற்றுகிறோம். ஆனால் நமக்கு நன்கு அறிமுகமானவர் இயேசு. அவரது போதனைகள் மூலமாக நமது வாழ்க்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்களை எடுத்துரைத்தவர். அவரை பின்பற்றுகிறோமா? அவரது வார்த்தைகளை வாழ்வாக்குகின்றோமா? இன்றைய காலகட்டத்தில் நாம் சிலுவையை விட சாதனங்களையே அதிகமாக பின்பற்றுகிறோம்? இந்நிலை மாறி சிலுவையை பின்பற்றுவோம் சிலுவை நமது வாழ்வின் வெற்றியின் சின்னம். மகிமையின் சின்னம். அந்த சிலுவையின் நாயகன் இயேசு. அவர் நமக்காக, நமது நல்வாழ்வுக்காக தன் உயிரை ஈந்தார் அவரது பணி செய்ய அவரைப்போல பல்வேறு உள்ளங்களை இறைவன்பால் திருப்ப,ஆவல் கொள்வோம்.மறைப்பணி செய்ய ஆர்வம் கொள்வோம். சாதனங்களை விடுத்து சிலுவையை, சிலுவை நாதர் இயேசுவைப் பின்பற்றுவோம்.

ஒரு சிறிய கதை மூலம் இதை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
நண்பர்கள் இருவர், தூரமான ஒரு இடத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் மாணிக்கக் கற்களும் தங்க ஆபரணங்களும் பொக்கிஷமாக இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். எப்படியாவது அந்த பொக்கிஷத்தை தங்களோடு எடுத்து வந்து அதை விற்று காசாக்கி தங்களது வாழ்க்கையை வளமாக்க விரும்புகின்றனர். நீண்ட பயணத்திற்குப் பிறகு அடையவேண்டிய அந்த மலைப் பாதையை அடைகின்றனர். அதுவரை நேராக வந்து கொண்டிருந்த பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தவிதமான பலகையோ அறிவிப்பு பலகையோ
வழிகாட்டி பலகையோ எதுவுமில்லை. எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று தங்களுக்குள் ஆலோசித்தனர் திடீரென்று அவ்வழியாக வழிப்போக்கர் ஒருவர் பயணம் செய்கின்றார். பார்ப்பதற்கு மிகவும் முதியவராக வறுமையில் வாடியவர் போல எலும்பும் தோலுமாக இருக்கின்றார் அந்த முதியவர். இவர்களை பார்த்து தம்பிகளே இதே இடத்தில் நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது மிகவும் ஆபத்தான பகுதி விரைவில் உங்கள் இல்லம் திரும்புங்கள். பலவிதமான கொடிய காட்டு மிருகங்கள் நடமாடும் இடம் இது. மாலை நேரம் அவைகள் அனைத்தும் வெளியே உலாவ தொடங்கும். அது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார். இருவரும் அந்த வழிப்போக்கரிடம் அதோ தூரமாக தெரியக்கூடிய அந்த மலையின் அடிவாரத்திற்கு இவ்விரண்டு பாதையில் எந்த பாதை வழியாகச் சென்றால் செல்ல முடியும் என்று கேட்கின்றனர். அந்த வழிப்போக்கர் அவர்கள் இருவரையும் மேலும் கீழுமாக பார்த்துவிட்டு சொல்கின்றார். 2 பாதையும் அந்த மலை அடிவாரத்தை சென்றடைய கூடியதுதான் ஒன்று நீண்ட அகலமான பாதை மலை அடிவாரத்தை அடைய சில ஆண்டுகள் ஆகும். இன்னொன்று குறுகலான பாதை கடினமான பாதையும் கூட விரைவில் மலை அடிவாரத்தை அடையலாம் என்றார். இருவரும் குறுகலான பாதை வழியாக செல்ல முடிவெடுக்கின்றனர் மீண்டும் வழிப்போக்கன் அவர்களை தடுத்து நிறுத்தி குறுகலான பாதையில் நிறைய பிரச்சினைகள் சிக்கல்கள் இருக்கும் பலவிதமான ஆபத்தான விலங்குகளும் இருக்கும் பாதை கரடுமுரடானது அது செல்வது மிகவும் கடினம் உயிருக்கும் கூட ஆபத்து என்று கூறுகின்றார். நீண்ட அகலமான பாதை பாதை மிகவும் சுலபமானது ஆனால் கடந்து போக வேண்டிய தூரம் அதிகம் என்று கூறுகின்றார். இருவருக்குள் மறுபடியும் வாக்குவாதம் இந்த பாதை வழியாக சென்று அடைவது என்று ஒருவன் நீண்ட பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். மற்றவன் குறுகலான பாதை வழியே செல்ல முடிவெடுக்கிறான். நீண்ட பாதை வழியாக செல்பவன் மலையின் அடிவாரத்தை சென்று அடைவதற்குள், குறுகலான பாதை வழியே சென்றவன் பல்வேறுவிதமான ஆபத்துக்கள் விளைவுகள் அனைத்தையும் கடந்து அதனை முறியடித்து விட்டு அத்தனை துன்பங்களுக்கு பிறகும் அந்த மலையின் அடிவாரத்தை சென்றடைகிறான் பொக்கிஷத்தை தனதாக்கிக் கொள்கிறான். எந்தவிதமான துன்பமும் சோதனையும் அனுபவிக்காமல் சுலபமாக நீண்ட தூரம் பயணம் செய்து அந்த பொக்கிஷத்தை அடையலாம் என்று முயற்சித்து இன்னொருவன் நடந்து நடந்து உடல் சோர்வுற்று மயங்கி விழுகிறான். நமது வாழ்க்கையும் இப்படித்தான் நம் முன்னே இரண்டு பாதைகள் இருக்கின்றன ஒன்று நீண்ட சுலபமான பாதை அது நாம் பயன்படுத்தக்கூடிய தொலை தொடர்பு சாதனங்கள். குறுகலான பாதை சிலுவைப்பாதை, இயேசுவின் பாதை, மறைப்பணி செய்யக்கூடிய பாதை அப்பாதையில் பல்வேறுவிதமான இடைஞ்சல்கள் சிக்கல்கள் இருக்கும் ஆனால் சென்றடைய வேண்டிய இலக்கை விரைவில் சென்றடையலாம் நீண்ட அகலமான பாதை கானல்நீர் போல பொக்கிஷத்தை நம் அருகில் காட்டும் நாம் விரைவாக செல்ல செல்ல அது இன்னும் நம்மை விட்டு அகன்று கொண்டே போகும். ஆக கிறிஸ்தவர்களாகிய நாம் நமது வாழ்வினை அர்த்தமுள்ள வாழ்வாக மாற்றுவோம். நமக்காக பாடுபட்டு இறந்து உயிர்த்த நம் ஆண்டவர் இயேசுவின் பணியைச் செய்ய முன்வருவோம். சிலுவையை மீட்பின் சின்னமாக ஏற்று அதனை பின்பற்றுவோம். சாதனங்களை அல்ல சாதனை புரியும் இயேசுவைப் பின்பற்றுவோம். ஆண்டவர் இயேசுவின் அருளும் அமைதியும் சமாதானமும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் என்றென்றும் இருப்பதாக ஆமென்

 
 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 என் கப்பர்நாகும் எங்கே?

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்கென்று ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைக் கண்டுபிடித்தலே நம் வாழ்வின் இலக்கு. எந்த இடத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமோ, எந்த இடத்தில் நாம் எல்லாரையும் அணைத்துக்கொள்கிறோமோ. எந்த இடத்தில் நாம் கனிதந்து வளர்கிறோமோ அந்த இடமே நம் இடம். அந்த இடமே நம்முடை கப்பர்நாகும்!

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 9:1-4), 'செபுலோன் நாடு, நப்தலி நாடு" என்று உருவகமாகவும், நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 4:12-23), 'செபுலோன் நாடு, நப்தலிநாடு, பெருங்கடல்வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பால் உள்ள நிலப்பரப்பு. பிற இனத்தவரின் கலிலேயப் பகுதி என்று உருவகமாகவும், 'கப்பர்நாகும்' என்று நேரிடையாகவும் அழைக்கப்படுகிறது கப்பர்நாகும்.

கலிலேயக் கடலின் (ஏரியின் கரையோரமாய்) ஹஸ்மோனியர்களின் ஆட்சிக்காலத்தில் (கிமு 2 ஆம் நூற்றாண்டு) ஏற்படுத்தப்பட்டு ஏறக்குறைய கிபி 11ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட போரினால் ஆட்கள் வெளியேறி இன்று வெறும் தூண்களும் உடைந்த வீடுகளும் கற்களும் எஞ்சி நிற்கும் நகரம் தான் கப்பர்நாகும். இயேசுவின் சமகாலத்தில் இது ஒரு மீனவ நகரம். இந்நகரின் மக்கள்தொகை 'ஏறக்குறைய 1500. திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் மற்றும் மத்தேயு ஆகியோரின் சொந்த ஊர் இது. இங்கேதான் இயேசு நூற்றுவர்தலைவனின் மகனைக் குணமாக்குகிறார். முடக்குவாதமுற்ற ஒருவரை நான்கு பேர் கூரையைப் பிரித்து இறக்கியதும் இங்கேதான். கப்பர்நாகும் எதிர்மறையான பதிவையும் விவிலியத்தில் பெற்றுள்ளது: பெத்சாய்தா, கொராசின் நகரங்களோடு, இயேசு கப்பர்நாகுமையும் சபிக்கின்றார் (காண். மத் 11:23).

இயேசு நாசரேத்தை விட்டு அகன்று கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகின்றது.

ஏன் கப்பர்நாகுமுக்குச் செல்ல வேண்டும்?
இரண்டு நிலைகளில் இந்தக் கேள்விக்கு விடை தரலாம். ஒன்று. நாசரேத்து இயேசுவின் தனிவாழ்வின் அல்லது மறைந்த வாழ்வின் மையம். இந்த மையத்திலிருந்து விலகும் இயேசு தன் பொதுவாழ்வின் அல்லது பணிவாழ்வின் மையமாக கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்கிறார். இரண்டு, மேன்மக்களும், அரசக்குடிகளும் வாழ்ந்த எருசலேமை. அல்லது சமாரியர்களின் புனித தலம் என்றழைக்கப்பட்ட கெரிசிம் நகரைத் தேர்ந்துகொள்ளாமல், அந்நியப் படையெடுப்புகளால் சூறையாடப்பட்ட பிறப்பில் யூதர்களாக இருந்தாலும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியதால் புறவினத்தார் என்று நிலையில் கருதப்பட்டு வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த இடமாகிய கப்பர்நாகுமைத் தேர்ந்துகொள்வதன் வழியாக. தன்னுடைய இறையாட்சிப் பணி மேன்மக்களுக்கும். அரசகுடிகளுக்கும் அல்ல, அது புனித இடம் சார்ந்ததும் அல்ல, மாறாக, வலுவற்றவர்களுக்கும். வெகுசன மக்களுக்கும் உரியது என்பதை இயேசு தெளிவுபடக் கூறுகிறார்.

ஆக, இயேசுவைப் பொருத்தவரையில், "இப்பிரபஞ்சத்தில் இது என்னுடைய இடம்' என்று இயேசு தெரிந்து கொண்ட இடம் 'கப்பர்நாகும்'.

விவிலியத்தில் 'இடம்' மிகவும் முக்கியமானது. முதல் ஏற்பாட்டில் இதை மிக அழகாகக் காணலாம். 'பாபேல்' என்ற இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தவர்களை வெளியேற்றி அவர்களை பல நாடுகளுக்கு இடம்பெறச் செய்கின்றார் கடவுள். ஊர் என்ற இடத்தில் வாழ்ந்த ஆபிரகாமை கானானுக்கு இடம் மாற்றுகிறார். பெயர்செபாவில் குடியேறிய யாக்கோபு காரானுக்கு இடம் பெயர்கின்றார். யாக்கோபு மீண்டும் பெத்தேலுக்கு வருகின்றார். யோசேப்பு அங்கிருந்து விற்கப்பட்டு எகிப்துக்குச் செல்கின்றார். எகிப்தில் ஆளுநராகித் தன் தந்தையையும் வீட்டாரையும் அங்கே அழைத்துக்கொள்கின்றார். அங்கிருந்து விடுதலைப் பயணம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டிற்கு வருகின்றார்கள். இந்த இடமாற்றம் அல்லது இடம்பெயர்தல் ஒரு நிகழ்வு அல்ல, மாறாக, அது இறைவனின் நோக்கம் நிறைவேறுகின்ற ஒரு நிகழ்வு. ஏனெனில், ஒவ்வொருவரும் இடம் மாறும்போது விவிலியத்தில் அவருடைய வாழ்க்கை தலைகீழ் மாற்றம் அடைகிறது. அந்த மாற்றத்தில் கடவுள் செயலாற்றுகிறார் என்பதை அந்தக் கதைமாந்தர் அறிந்துகொள்கிறார்.

நம்முடைய மரபிலும் திருமணத்திற்குப் பின் மனைவி கணவருடைய இடத்திற்குச் செல்கிறாள். படிப்பு அல்லது வேலையின் பொருட்டு ஆண் இடம் மாறுகின்றான். இடமாற்றம் என்பது வாழ்வு மாற்றம் என்பதை நாம் நம்முடைய வாழ்வியல் அனுபவமாகவும் உணர்ந்திருப்போம்.

இயேசு கப்பர்நாகுமிற்கு வருகின்றார்
இதுதான் தன்னுடைய இடம்' என்று அவர் அதை அறிந்துகொள்கிறார். இந்த இடத்தில் இயேசு மூன்று செயல்கள் செய்வதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அல்லது இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. நற்செய்தி அறிவிப்பு (மத் 4:12-17)
ஆ. முதல் சீடர்கள் அழைப்பு (4:18-22)
இ. திரளான மக்களுக்குப் பணி (4:23)

முதலில், 'மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். இரண்டாவதாக, தன்னுடைய விண்ணரசுப் பணிக்கான நுகத்தடித் தோழர்களாக. உடனுழைப்பாளர்களாக, திருத்தூதர்களாகத் திகழ நால்வரைத் தெரிவு செய்கிறார். இறுதியாக, அப்பகுதிகளில் சுற்றி வந்து மக்களிடையே இருந்த நோய்நொடிகளைக் குணமாக்குகின்றார்.

இதுதான் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடம் என்பதை இயேசு எப்படிக் கண்டுகொள்கின்றார்? இதற்கு மூன்று காரணங்களை நாம் நற்செய்தி வாசகத்தில் பார்க்கலாம்.

அ. இறைவாக்கு நிறைவேறுகிறது
தன்னுடைய பணிவாழ்வை இயேசு எசாயா இறைவாக்கினரின் நிறைவாகப் பார்க்கிறார். இந்த இறைவாக்கையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். வடக்கே இஸ்ரயேல் மக்கள் போர்களால் அலைக்கழிக்கப்பட்ட நேரம், அசீரியாவின் படையெடுப்பால் அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நேரத்தில் இறைவாக்குரைக்கும் எசாயா, வரவிருக்கும் அரசர் பற்றிய முன்னறிவிப்பில், இருளிலும் அடிமைத்தனத்தில் குளிரிலும் இருந்தவர்களுக்கு ஒளி உதித்தது என்று அறிவிக்கின்றார். மேலும், மகிழ்ச்சி, அக்களிப்பு. களிகூர்தல் என்று மூன்று நிலைகளில் அவர்கள் தாங்கள் இழந்த மகிழ்ச்சியைக் கண்டுகொள்கிறார்கள். மேலும், நுகம், தடி, மற்றும் கொடுங்கோல் ஒடித்துப்போடப்படுவதால் அடிமைத்தனம் முற்றிலும் அழிகிறது. ஆக, இதிலிருந்து இயேசுவின் பணி மற்றவர்கள் இழந்த மகிழ்ச்சியை அவர்களுக்குத் திரும்ப வழங்கவும், மற்றவர்களின் அடிமைத்தனத்தை அழிப்பதும் என்பது தெரிகிறது.

நம்முடைய வாழ்விலும் பிரபஞ்சத்தில் நம் இடத்தைக் கண்டறிவதற்கான முதல் படி இதுதான்: எனக்கென இறைவன் முன்குறித்து வைத்த நோக்கத்தை நான் அறிவது.' இது சிலருக்கு எளிதாகவும் உடனடியாகவும், இருக்கலாம். சிலருக்கு மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.

ஆ. பாதை மாற்றம்
தன்னுடைய முதல் சீடர்களை அழைக்கின்ற இயேசு அவர்களின் பாதையை மாற்றுகின்றார். கடலில் ஈரமாகி நின்றவர்களின் கால்கள் புழுதியில் நடக்குமாறு அவர்களின் பாதையைத் திருப்பிவிடுகின்றார். என்னால் மற்றவர்களின் வாழ்க்கை திரும்ப வேண்டும். இது அடுத்த அறிகுறி. இன்று என்னால் எத்தனை பேருடைய வாழ்க்கைப் பாதை மாற்றம் பெற்றிருக்கிறது?

இ. நோய் குணமாதல்
நோய் என்பது குறைவு. அக்குறைவை நிறைவாக்குகிறார் இயேசு. இயேசுவைச் சந்தித்த அனைவரும் குறைகள் நீங்கி நிறைவாகச் செல்கின்றனர்.

என்னுடைய இடத்தை 'நான் கண்டுபிடித்தவுடன் என்னுள் இருக்கும் எல்லாக் குறைகளும், தீய எண்ணங்களும் மறைய ஆரம்பிக்கும். நான் உள்ளத்தில் நலம் பெறுவேன். என்னுடைய வறுமை, அறியாமை, குறுகிய எண்ணம், கோபம், குற்றவுணர்வு என எல்லாம் மறைய ஆரம்பிக்கும். ஏனெனில், நான் என்னுடைய உள்ளத்தை நேர்முக எண்ணங்களால் நிரப்பத் தொடங்குவேன்.

ஆக, இறைவனின் நோக்கம் நிறைவேறும்போது, என் வாழ்வுப் பாதை மாற்றம் அடைந்து நான் மற்றவரின் பாதையைத் திருப்பும்போது, நான் என் குறைகளையும் மற்றவர்களின் குறைகளையும் களைய முற்படும்போது நான் பிரபஞ்சத்தின் என்னுடைய இடத்தைக் கண்டறிந்தவன் ஆவேன். வெறும் படத்திற்கும் யூரோ நோட்டுக்களுக்குமான வித்தியாசத்தை உணர ஆரம்பிப்பேன். இதுதான் நான், இதற்காக என்னுடைய பணியைக் கூர்மைப்படுத்த ஆரம்பிப்பேன்.

நம் எல்லாருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கிறது. இருப்பது ஒரு வாழ்க்கைதான் என்று எண்ணும் அந்த நாளில் என்னுடைய இரண்டாம் வாழ்க்கை தொடங்குகிறது. அந்த இரண்டாம் வாழ்க்கைதான் என்னுடைய கப்பர்நாகும். அகுஸ்தினாரும் தன்னுடைய 36 வது வயதில் தன்னுடைய கப்பர்நாகுமாம் கடவுளைக் கண்டுகொள்கிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 1:10-13,17) பவுல், கொரிந்து நகரத் திரு அவையில் விளங்கிய பிளவுகளைக் கடிந்துகொள்கின்றார். 'நான் பவுலைச் சார்ந்தவன். நான் கேபாவைச் சார்ந்தவன், நான் கேபாவை சார்ந்தவன், நான் அப்பொல்லோவைச் சார்ந்தவன், நான் கிறிஸ்துவைச் சார்ந்தவன் என்று சொல்லி பிளவுபட்டுக் கிடக்கின்றனர் கொரிந்து மக்கள். வெளிப்புற அடையாளத்தைப் பற்றிக்கொண்டிருப்பது நாம் நம்முடைய கப்பர்நாகுமிற்கு இன்னும் வரவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கப்பர்நாகுமிற்கு வந்த நபர் பிரிவினை பாராட்ட மாட்டார். அடுத்தவரோடு தன்னை எது இணைக்கிறது என்று தவிர, மற்றவரிடமிருந்து எது தன்னைப் பிரிக்கிறது என்பதை அவர் பார்க்க மாட்டார்.

இறுதியாக,
இன்று நான்‌ எங்கே இருக்கிறேன்‌? என்னுடைய கப்பர்நாகுமை நான் கண்டுபிடித்துவிட்டேனா? என்னுடைய கப்பர்நாகுமில்‌ மூன்று விடயங்கள்‌ இருக்க வேண்டும்‌: ஒன்று, என்னுடைய வாழ்வின்‌ நோக்கம்‌. இரண்டு, என்னுடைய நுகத்தடித்‌ தோழர்கள்‌, நண்பர்கள்‌, அல்லது வாழ்க்கைத்துணை. மூன்று, என்னுடைய வாழ்வால்‌ என்‌ குடும்பமும்‌' மற்றவர்களும்‌ அடையும்‌ பலன்‌. இதையே உருவமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌, என்‌ வாழ்வின்‌ நோக்கம்‌ என்பது வேர்‌, நுகத்தடித்‌ தோழர்கள்‌ என்பவர்கள்‌ தண்டு, நான்‌ கொடுக்கும்‌ பலன்‌ நான்‌ விரிக்கும்‌ கிளைகள்‌, அவை கொடுக்கும்‌ கனிகள்‌. இந்த மூன்றும்‌ ஒன்றோடொன்று இணைந்தீருப்பவை.

"நான்‌ ஆண்டவரிடம்‌ ஒரு விண்ணப்பம்‌ செய்தேன்‌: அதையே நான்‌ நாடித்‌ தேடுவேன்‌; ஆண்டவரின்‌ இல்லத்தில்‌ என்‌ வாழ்நாள்‌ எல்லாம்‌ நான்‌ குடியிருக்க வேண்டும்‌. ஆண்டவரின்‌ அழகை நான்‌ காண வேண்டும்‌' என்று தன்னுடைய கப்பர்நாகுமை .ஆண்டவரில்‌ தேடுகின்றார்‌ திரூப்பாடல்‌ ஆசிரியர்‌ (காண்‌. 27:4)

இயேசு பணியைத்‌ தொடங்கிய உடைந்த ஊராக நான்‌ இருந்தாலும்‌. என்னையும்‌ கப்பர்நாகுமாக நினைத்து அவர்‌ என்னிடம்‌ வருகிறார்‌. எதற்காக? "என்‌ கப்பர்நாகும்‌ எங்கே" என்று காட்டுவதற்காக!

 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 22.01.2023

I எசாயா 9: 1-4
II 1 கொரிந்தியர் 1: 10-13,17
III மத்தேயு 4: 12-23


"மனிதர்களைப் பிடிப்பவர்களாக"


ஒருசமயம் இறைநம்பிக்கையில்லாத நாத்திகன் ஒருவன் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வந்த பிஜி தீவுக்குச் சென்றான். அந்தத் தீவில் இருந்த மக்கள் யாவரும் கிறிஸ்தவர்களாக இருந்ததைக் கண்டு, அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். பின்னர் அவன் அந்த மக்களின் தலைவரைச் சந்தித்து, அவரோடு பேசத் தொடங்கினான்: "அது எப்படி இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்?". "இங்கொரு மிஷினரி மறைப்பணியாளர் இருக்கின்றார். அவரால்தான் நான் உட்பட இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்கள ஆனோம்" என்றார் மக்கள் தலைவர்.

தலைவர் இவ்வாறு சொன்னது நாத்திகனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. "இன்னுமா இந்த மறைப்பணியாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்... இவர்கள் போதிக்கப் பயன்படுத்தும் திருவிவிலியம் காலாதியான ஒரு நூல்... இவர்கள் போதிக்கக்கூடிய இயேசுவோ எப்போதோ வாழ்ந்தவர். இப்படியிருக்கையில் இந்த மறைப்பணியாளரின் பேச்சைக் கேட்டு, நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கின்றீர்களே...! உங்களைப் போன்ற முட்டாள்களை இவ்வுலகத்தில் நான் பார்த்ததே இல்லை" என்றான்.

நாத்திகன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டுவிட்டு, மக்கள் தலைவர் அவனிடம் மிகவும் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: "நீ சொல்வதுபோன்றே என்றோ வாழ்ந்த இயேசுவை காலாவாதியான நூலின் வழியாக எங்களுக்குப் போதித்த மறைப்பணியாளர் ஏமாற்றுக்காரராக இருக்கட்டும்; ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மறைப்பணியாளர் மட்டும் இயேசுவின் வார்த்தையை எங்களுக்கு அறிவிக்காமல் இருந்திருந்தால், அதோ தெரிகின்றதே ஒரு பெரிய கல். அந்த கல்லில் உன் மண்டையை உடைத்து, இதோ தெரிகின்றதே ஒரு பெரிய அடுப்பு. இதில் போட்டு உன்னை வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். இவ்வளவு நேரம் நீ உயிரோடு இருந்து, என்னோடு பேசிக்கொண்டிருக்க முடியாது. இப்பொழுது நீ உயிரோடு இருப்பதற்குக் காரணமே, இந்த மறைப்பணியாளர்தான். அதனால் இந்த மறைப்பணியாளருக்கு, இவரை இங்கு அனுப்பி வைத்த இயேசுவுக்கு நன்றி சொல்."

மக்கள் தலைவர் பேசியதை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்த நாத்திகன், அதன்பிறகு எதுவும் பேசாமல், அங்கிருந்து நகர்ந்துசென்றான்.

மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஒரு பெருங்கூட்டத்தையே முழு மனிதர்களாக மாற்றிய பெருமை மறைப்பணியாளரையே சாரும். ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளர் இயேசு சொல்வதுபோன்று 'மனிதர்களைப் பிடிப்பவராக' மாறினார். அதனால்தான் அவரால் பிஜி தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களை முழு மனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆண்டவர் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாகுங்கள் என்கின்றார். இயேசு விடுக்கும் இந்த அழைப்பிற்கு நாம் எப்படிப் பணிந்து வாழ்வது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தொடர்ந்து நடைபெறவேண்டிய இறையாட்சிப் பணி
திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டபின்பு இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குகின்றார் (மத் 4:12) திருமுழுக்கு யோவான் மெசியாவாம் இயேசுவுக்காக மக்களை ஆயத்தம் செய்தார். அவர், இயேசு வந்ததும் பொறுப்பினை அவரிடம் கொடுத்துவிட்டு விலகிக்கொள்கின்றார். இவ்வாறு நற்செய்திப் பணி அல்லது இறையாட்சிப் பணி ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நடைபெறுகின்றது.

இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குபொழுது, தன் சொந்த ஊராகிய நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் இருந்த கப்பர்நாகுமுக்கு வருகின்றார். இது புறவினத்தார் அதிகமாக வாழும் பகுதி. இயேசு தன் சொந்த ஊரைவிட்டு புறவினத்தார் வாழும் பகுதிக்கு வந்து நற்செய்திப் பணிசெய்தார் எனில், அவர் எல்லா மக்களுக்கும் பணிசெய்து, எல்லா மக்களுக்கும் மீட்பரானார் என்ற செய்தியை மத்தேயு நற்செய்தியாளர் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.

இயேசு, கப்பர்நாகுமுக்கு வந்து இறையாட்சிப் பணி செய்யத் தொடங்குவதைக் குறிப்பிடுகின்றபொழுது, மத்தேயு நற்செய்தியாளர் இறைவாக்கினர் எசாயா நூல் 9:2 ல் இடம்பெறுகின்ற, "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்..." என்ற இறைவார்த்தையைக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் எல்லா மக்களுக்கும் பணிசெய்யத் தொடங்கும் இயேசு, அவர்கள் அனைவர்க்கும் ஒளியாக இருக்கப்போகிறார் என்பதையும் குறிப்பிடுகின்றார். ஆம், உலகின் ஒளியான இயேசு (யோவா 8:12), திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியிலிருந்து விலகியபின்பு அல்லது ஓய்ந்த பின்பு, அங்கிருந்து தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார்.

சீடர்களை அழைக்கும் இயேசு
நற்செய்திப் பணியை ஒரு தொடர் ஓட்டத்திற்கு ஒப்பிடுவார்கள். தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்ற போட்டியாளர் தன்னிடம் ஒப்படைக்கப்படும் கோலினை எடுத்துச் சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். அவர் அதனை எடுத்துச்சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். இவ்வாறு அணியில் இருக்கின்ற எல்லாருடைய கூட்டு முயற்சியின் காரணமாக இலக்கினை அடைவர். ஆண்டவர் இயேசு இறையாட்சிப் பணியைச் செய்தபொழுது, அவர் மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை. தனக்குப் பின் அப்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக முதலில் அந்திரேயாவையும் அவர் சகோதரர் பேதுருவையும் அவர்களுக்குப் பின் யாக்கோபையும் யோவானையும் தொடர்ந்து மற்றவர்களையும் அழைத்தார். இதன்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்கான விதையினை இயேசு விதித்தார்.

இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான செய்தி, 'இறையாட்சிப் பணி ஒருகூட்டு முயற்சி'என்பதைத்தான். ஆம். ஆண்டவர் தொடங்கி, விட்டுச் சென்ற இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெற ஒவ்வொருவரும் தன்னுடைய பங்களிப்பைச் செய்யவேண்டும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

'மனிதர்களைப் பிடிக்க'அழைக்கும் இயேசு
இயேசு முதல் சீடர்களை அழைத்த பின்பு, அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள், "என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்" என்பதாகும். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகள் நமது ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இயேசு சீடர்களிடம் சொன்னதுபோன்றே அவர்களுக்கு அவர் உரிய பயிற்சி தந்து மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்கினார். சீடர்களும் இயேசு தங்களை எதற்காக அழைத்தாரோ, அந்த அழைப்பினை உணர்ந்து மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆனார்கள்.

இயேசுவின் சீடர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆனதுபோல் நாம் ஒவ்வொருவரும் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறவேண்டும். இது ஒவ்வொருவருடைய கடமை. நற்செய்திப் பணி தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வு இவ்வாறு சொல்கின்றது: "உலக மக்களில் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த ஆறு பேரிலும் மூன்று பேர் இயேசுவைப் பற்றி இதுவரைக்கும் கேள்விப்படாதவர்களாக இருக்கின்றார்கள்."

இந்த ஆய்வுமுடிவின் படி பார்த்தால், பத்துக்கு மூன்று பேர் இயேசுவைக் குறித்து கேள்விப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களிடம் இயேசுவைக் கொண்டு செல்லும் 'மனிதர்களைப் பிடிப்பவர்களாக'மாறவேண்டியது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் கடமை (1 கொரி 9:16). இக்கடமையை நாம் உணர்ந்து செய்கின்றபொழுது, இயேசுவின் அன்பிற்கு உரியவர்களாவோம் என்பது உறுதி. எனவே, நாம் இயேசு விட்டுச் சென்ற பணி இப்புவியில் தொடர்ந்து நடைபெற மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறுவோம்.

சிந்தனை
'அன்பில்லாமல் செய்யப்படும் மறைப்பணி. அன்பே இல்லாத தாய்மைக்கு ஒப்பாக இருக்கும்'என்பார் சுக் ஸ்விண்டோல் என்ற அறிஞர். தாய்மைக்கு அழகே அன்புதான். அதுபோன்றுதான் மறைப்பணிக்கும் அன்பே அழகு. ஆகையால், நாம் அன்போடு மறைப்பணி செய்வோம் அல்லது மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
ஓர் ஆசிரமத்தின் தலைவர் ஓர் ஊருக்குச் சென்றார். அங்குள்ள இளைஞர்களிடம் பேசி தன் ஆசிரமத்திற்கு ஆள் சேர்க்கச் சென்றார். ஆசிரமத்தைப் பற்றியதை விளக்கிய பின் ஓர் இளைஞன் வந்தான். 'குருவே ஆசிரமத்தில் நான் சேர வேண்டும் என்றான். 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார். 'ஓட்டை வண்டி ஆரோக்கியம்' என்றான். 'அது என்ன' என்றார். 'ஆரோக்கியம் என்பது என் பெயர். ஓட்டை வண்டி என்றால் அது என் குடும்பப் பெயர்.' 'குடும்பத்தை அடியோடு மறந்தால்தான் ஆசிரமத்தில் வாழ முடியும். உன்னிடம் குடும்பப் பாசம் உள்ளது. எனவே நீ ஆசிரமத்திற்கு வரமுடியாது' என்றார்.

இரண்டாவது ஒருவன் வந்தான். 'உன் பெயரென்ன?' என்று கேட்டார். 'அந்தோணி முதலி' என்றான். 'அந்தோணி என்பது உன் பெயர். முதலி என்பது என்ன?' என்று கேட்க, 'அது என் சாதிப்பெயர்' என்றான். 'சாதிப் பற்றுடையவர் ஆசிரமத்திற்கு வர இயலாது' என்றார்.

மூன்றாவது ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன என்று கேட்க, அருளப்பன் என்றான். 'மகிழ்ச்சி. வரலாம்' என்றார் ஆசிரமத் தலைவர். ஆனால் நான் வருமுன் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் என்றான். சொல் என்று அனுமதிக்க, ஆசிரமத்தில் காலையில் என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, 'இட்லி' என்றார். 'குருவே எனக்கு எத்தனை இட்லி தருவீர்கள்?' எனக் கேட்டான். குரு கோபமுடன், 'சாப்பாட்டு இராமனுக்கு ஆசிரமத்தில் இடமில்லை' என்றார். இறுதியாக ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன? என்று கேட்க, தாசன் என்றான். உன் பெயரின் பொருள் தெரியுமா என்று கேட்டார். அனைவருக்கும் பணிபுரியும் அடியான். குரு மகிழ்ந்து தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசு தான் விரும்பிய சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். என்னைப் பின் செல் என்று அழைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார்கள் என்று நற்செய்தி அறிவிக்கிறது. இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

நாம் விண்ணரசைப் பற்றிக் கொள்ள மனம் மாற வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றார் (மத்.4:17). ஒரு மனித வாழ்வில் மூன்று காரணங்களால் இருள் படரலாம். (1) நோயினால் (2) பாவத்தால் (3) மரணத்தால்

1. நோய்: பார்வையற்ற குருடன் பர்த்திமேயு (மாற்கு 10:46-52) எரிக்கோ சாலையோரத்தில் இருந்த குருடர் பர்த்திமேயு, இயேசு அந்த பக்கமாகச் செல்வதை உணர்ந்து, தாவீதின் மகனே என் மேல் இறங்கும் என்று இருமுறை அழைக்க, இயேசு அவன் கண்களைத் தொட்டு அவர் விருப்பப்படி அவருக்குப் பார்வைக் கொடுத்து மூடியிருந்த கண்களைத் திறந்துவிட்டார். இயேசுவின் அருள் அவரை ஒளியின் மகனாக மாற்றியது.

2. கல்வாரியின் கள்வன் (லூக். 23:42-43) அன்று சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் இருபக்கத்திலும் கள்வர்கள் இருவர் தொங்கினார்கள். ஒருவர் இயேசுவைப் பழித்தார். மற்றவனோ இயேசுவே நீ ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார். நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் எனக் கூறினார். அந்தக் கள்வரின் உள்ளம் இயேசுவின் கருணை வெள்ளத்தால் நிரம்பி ததும்பியது. அவன் இறையொளியைக் காணும் பேறு பெற்றார்.

3. மரண நிழல் (லூக். 7:11-17) நயின் என்ற ஊருக்குள்ளே வாழ்ந்த கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டான். ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. ஆனால் இயேசு அந்த விதவையின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன் வந்து பாடையை நிறுத்தி இளைஞனே எழுந்திரு என்று கூறி எழுப்பிவிட்டார்.

இந்த இயேசுதான் உலகின் ஒளியாக வந்தார் (யோவா. 8:12). நானே உலகின் ஒளி என்னைப் பின் செல்பவர் இருளில் நடவார். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் என்றார். ஆம்! நாம் மனம் மாறி இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
மனம் மாற வேண்டும்

ஓர் ஆசிரமத்தின் தலைவர் ஓர் ஊருக்குச் சென்றார். அங்குள்ள இளைஞர்களிடம் பேசி தன் ஆசிரமத்திற்கு ஆள் சேர்க்கச் சென்றார். ஆசிரமத்தைப் பற்றியதை விளக்கிய பின் ஓர் இளைஞன் வந்தான். 'குருவே ஆசிரமத்தில் நான் சேர வேண்டும் என்றான். 'உன் பெயர் என்ன?' என்று கேட்டார். 'ஓட்டை வண்டி ஆரோக்கியம்' என்றான். 'அது என்ன' என்றார். 'ஆரோக்கியம் என்பது என் பெயர். ஓட்டை வண்டி என்றால் அது என் குடும்பப் பெயர்.' 'குடும்பத்தை அடியோடு மறந்தால்தான் ஆசிரமத்தில் வாழ முடியும். உன்னிடம் குடும்பப் பாசம் உள்ளது. எனவே நீ ஆசிரமத்திற்கு வரமுடியாது' என்றார்.

இரண்டாவது ஒருவன் வந்தான். 'உன் பெயரென்ன?' என்று கேட்டார். அந்தோணி முதலி' என்றான். 'அந்தோணி என்பது உன் பெயர். முதலி என்பது என்ன?' என்று கேட்க, 'அது என் சாதிப்பெயர்' என்றான். 'சாதிப் பற்றுடையவர் ஆசிரமத்திற்கு வர இயலாது' என்றார்.

மூன்றாவது ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன என்று கேட்க, அருளப்பன் என்றான். 'மகிழ்ச்சி. வரலாம்' என்றார் ஆசிரமத் தலைவர். ஆனால் நான் வருமுன் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன் என்றான். சொல் என்று அனுமதிக்க, ஆசிரமத்தில் காலையில் என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க, 'இட்லி' என்றார். 'குருவே எனக்கு எத்தனை இட்லி தருவீர்கள்?' எனக் கேட்டான். குரு கோபமுடன், 'சாப்பாட்டு இராமனுக்கு ஆசிரமத்தில் இடமில்லை' என்றார். இறுதியாக ஒருவன் வந்தான். 'உன் பெயர் என்ன? என்று கேட்க, தாசன் என்றான். உன் பெயரின் பொருள் தெரியுமா என்று கேட்டார். அனைவருக்கும் பணிபுரியும் அடியான். குரு மகிழ்ந்து தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசு தான் விரும்பிய சீடர்களைத் தேர்ந்தெடுத்தார். என்னைப் பின் செல் என்று அழைத்தவுடன் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் சென்றார்கள் என்று நற்செய்தி அறிவிக்கிறது. இன்று இயேசு நம்மையும் அழைக்கிறார்.

நாம் விண்ணரசைப் பற்றிக் கொள்ள மனம் மாற வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கின்றார் (மத்.4:17). ஒரு மனித வாழ்வில் மூன்று காரணங்களால் இருள் படரலாம். (1) நோயினால் (2) பாவத்தால் (3) மரணத்தால்.

1. நோய்: பார்வையற்ற குருடன் பர்த்திமேயு (மாற்கு 10:46-52) எரிக்கோ சாலையோரத்தில் இருந்த குருடர் பர்த்திமேயு, இயேசு அந்த பக்கமாகச் செல்வதை உணர்ந்து, தாவீதின் மகனே என் மேல் இறங்கும் என்று இருமுறை அழைக்க, இயேசு அவன் கண்களைத் தொட்டு அவர் விருப்பப்படி அவருக்குப் பார்வைக் கொடுத்து மூடியிருந்த கண்களைத் திறந்துவிட்டார். இயேசுவின் அருள் அவரை ஒளியின் மகனாக மாற்றியது.

2. கல்வாரியின் கள்வன் (லூக். 23:42-43) அன்று சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் இருபக்கத்திலும் கள்வர்கள் இருவர் தொங்கினார்கள். ஒருவர் இயேசுவைப் பழித்தார். மற்றவனோ இயேசுவே நீ ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும் என்றார். நீ இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய் எனக் கூறினார். அந்தக் கள்வரின் உள்ளம் இயேசுவின் கருணை வெள்ளத்தால் நிரம்பி ததும்பியது. அவன் இறையொளியைக் காணும் பேறு பெற்றார்.

3. மரண நிழல் (லூக். 7:11-17) நயின் என்ற ஊருக்குள்ளே வாழ்ந்த கைம்பெண்ணின் ஒரே மகன் இறந்துவிட்டான். ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. ஆனால் இயேசு அந்த விதவையின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன் வந்து பாடையை நிறுத்தி இளைஞனே எழுந்திரு என்று கூறி எழுப்பிவிட்டார்.

இந்த இயேசுதான் உலகின் ஒளியாக வந்தார் (யோவா. 8:12). நானே உலகின் ஒளி என்னைப் பின் செல்பவர் இருளில் நடவார். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பார் என்றார். ஆம்! நாம் மனம் மாறி இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
இறைவா, எங்களுக்கு விண்ணரசு வேண்டும்

இன்றைய நற்செய்தியில் இயேசு, மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது (மத் 4:17) என்கின்றார். விண்ணரசு என்பதற்கு ஓர் அழகான விளக்கத்தைப் புனித பவுலடிகளார் உரோமையருக்கு எழுதியுள்ள திருமுகத்தில் தந்துள்ளார்: இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17), நாம் விண்ணரசுக்குள், இறையாட்சிக்குள் நுழைய விரும்பினால், அதாவது நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்க விரும்பினால், முதலில் மன மாற்றத்திற்கு நம்மையே நாம் உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

நீதி என்பது அவரவர்க்கு உரியது அவரவர்க்குக் கிடைப்பதில் அடங்கியுள்ளது. இந்த உலகத்திலே மனிதர்களாகப் பிறந்த அனைவர்க்கும் ஆண்டவரின் மீட்பைப் பெற உரிமை உண்டு. ஆனால் மனிதர்கள் அவர்களுக்கு உரிய ஆசியைப் பெற முதலில் விண்ணகத் தந்தை தூயவராக இருப்பது போல அவர்களும் தூயவர்களாக வாழ முன்வரவேண்டும் (மத் 5:48). இந்தக் கருத்தைத் தெளிவாக லூக் 19:1-10 என்ற பகுதி நமக்கு எடுத்து இயம்புகின்றது!

சக்கேயு மனம்திரும்பத் தயாராக இருந்தபோதுதான் இயேசு அவருக்கு நீதி வழங்குகின்றார். அவரைப்பார்த்து : இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று (லூக் 19:9அ) என்று கூறுகின்றார். விண்ணரசின் ஒரு பகுதியான அமைதியும் மனம் மாறுகின்றவர்களுக்கே கிடைக்கும். அவள் உள்ளத்தில் அமைதி இல்லை! வெளியே சிரித்து உள்ளே அழுதுகொண்டிருந்தாள். எங்கோ, எப்படியோ. யாரிடமோ அவள் தன்னுடைய அமைதியைத் தொலைத்துவிட்டாள்:

இருள் அகற்றும் ஒளிவிளக்கைத் தேடி அலைந்தாள் (முதல் வாசகம்). தேடுவது கிடைப்பதில்லை : கிடைப்பதை நாம் தேடுவதில்லை என்பார்கள். ஆனால் அன்று அவள் தேடியது கிடைத்தது கிடைக்கக்கூடியதை அவள் தேடியதால்!

லூக் 7:36-50: அவள் படிகச் சிமிழை உடைத்தபோது அவள் உள்ளமும் உடைந்தது. அவள் தைலத்தை சிமிழிலிருந்து ஊற்றியபோது அவள் இதயத்திலிருந்த பாவத்தையும் இயேசுவின் பாதத்திலே அவள் ஊற்றினாள். உடலை இருளாக்கிய கண்கள் ஒளிபெறட்டும் என்பதற்காக அவள் அழுதாள். இந்தக் கூந்தலால்தானே மற்றவரை என் காலடியில் கட்டிப்போட்டேன்; இந்தக் கூந்தல் புனிதமடையட்டும் எனச்சொல்லி அவள் இயேசுவின் பாதத்தைக் கூந்தலால் துடைத்தாள். மனிதர்களை முத்தமிட்டு பாவம் செய்த இந்த உதடுகள் பரிசுத்தம் அடையட்டும் எனச்சொல்லி தனது உதடுகளால் இயேசுவின் பாதத்தை முத்தமிட்டாள்.

அவள் அவரைத் தொட்டவுடன், சேற்றிலே மலர்ந்த செந்தாமரையானாள்: சிப்பியிலே பிறந்த முத்தானாள் : மண்ணிலே பிறந்த மாணிக்கமானாள் - உலகத்திலிருந்து பெற முடியாத அமைதியை அவள் அன்று துய்த்தாள்.

மகிழ்ச்சி மனம் மாறுகின்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும் (லூக் 15:32அ) என்று எப்போது காணாமற்போன மகனின் தந்தை கூறினார்? அந்த ஊதாரி மகன் மனம் திரும்பி வந்தபோது !

மனம் மாறுதலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன : ஒன்று நாம் பாவி என்பதை, சக்கேயுவைப் போல, பாவியான பெண்ணைப் போல, ஊதாரி மகன் போல ஏற்றுக்கொள்வது : மற்றொன்று இயேசுவின் பாதத்தில் விழுந்து - அவருடைய பிரதிநிதியாம் அருள் பணியாளரின் முன் பிரசன்னமாகி - சுவாமி என் பாவங்களை மன்னியும் என்று சொல்வது. மனம் மாற. மனமார முன்வந்து, எல்லாப் பாவங்களையும் (இரண்டாம் வாசகம்) விட்டுவிட்டு நீதியையும், அமைதியையும். மகிழ்ச்சியையும் துய்த்து இந்த மண்ணகத்திலேயே விண்ணகத்தைக் காண்போம்! மேலும் அறிவோம்:

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள்:6).

பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள் வாயிலாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவன் இறைவன். அத்தூயவனது மெய்யான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவோர் நீடிய புகழுடன் வாழ்வர்.
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் வகுப்பு ஆசிரியர் அவர்களுடைய முக்கியமான பிரச்சினை என்னவென்று கேட்டதற்கு அவர்கள்: "எங்கள் பெற்றோர்கள்" என்றனர். பிள்ளைகள் தங்களுடைய பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற விரும்புகின்றனர். கல்லூரி மாணவர்களின் தாரக மந்திரம்: "கல்லூரிக்குக் அடிப்போம்; தேர்விலே 'பிட்' அடிப்போம்; பெண்களைச் 'சைட்' அடிப்போம்". இது கல்லூரி மாணவர்களின் கனாக்காணும் காலங்கள்! ஒரு கணவர் தம் மனைவியிடம், "நீ என்ளை உன் நாயைப் போல நடத்து; நாயோடு கொஞ்சி விளையாடுவதுபோல என்னுடனும் கொஞ்சி விளையாடு; நாயுக்கு வயிறு நிறைய சாப்பாடு போடுவது போல எனக்கும் வயிறு நிறைய சாப்பாடு போடு, எல்லாவற்றிற்கும் மேலாக, நாயை இரவிலே அவிழ்த்து விடுவதுபோல, என்னையும் அவிழ்த்துவிடு; தேடாதே" என்றார். இது ஒரு கணவர் காணும் விடுதலை வாழ்வு!

இன்றைய உலகிலே எல்லாருமே எவ்விதக் கட்டுப்பாடு மின்றிச் சுதந்திரப் பறவையாகப் பறக்க விரும்புகின்றனர். ஆனால், விடுதலைப் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாக ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். விடியலைத் தேடுபவர்கள் அமாவாசை இருட்டில் அகப்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கே விடுதலை? என்று வினவுகின்றனர். இவ்வினாவுக்கு விடையளிக்கிறது இன்றைய அருள்வாக்கு வழிபாடு. கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுடன் உடன்படிக்கை செய்தார். ஆனால் அந்த மக்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், அவருடைய கட்டளைகளை மீறி, பிற இனத்தெய்வங்களை வழிபட்டனர். அதன் விளைவாகப் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். கி.மு. 5ஆம் நூற்றாண்டில் பாபிலோனியாவுக்கு யூதர்கள் அடிமைகளாகச் சென்றனர்.

50 ஆண்டுகள் அடிமை வாழ்வுக்குப் பின்னர், சீருஸ் அவர்களுக்கு விடுதலை அளித்தார். அவர்கள் எருசலேம் திரும்பி. ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்பி ஆண்டவரை வழிபட முயற்சி எடுத்தனர். எஸ்ரா என்ற சட்ட வல்லுநர் மக்களுக்குச் சட்ட நூலை வாசித்தபோது அவர்கள் அழுதனர் (முதல் வாசகம்). கடவுளும் அவருடைய அருள்வாக்கு அடங்கிய மறைநூலும் அவர்களுக்கு விடுதலை கொடுத்தது. கடவுளை விட்டு அகலும் எவரும் அடிமைகளாகின்றனர்; கடவுளை நெருங்கும் எவரும் விடுதலை பெறுகின்றனர். கடவுளுக்கு வெளியே தேடும் விடுதலை வெறும் பகற்கனவே! இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாசரேத்து தொழுகைக் கூடத்தில் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து தம்மைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை (எசா 61:1-2) வாசித்து, மக்களிடம் கூறியது: "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" (லூக் 4:21). மறைநூலின் மையம் கிறிஸ்து. மறைநூலில் எழுதப்பட்ட எல்லா இறைவாக்குகளும் கிறிஸ்துவில் நிறைவடைகின்றன. மறைநூல் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் அளிக்கிறது (யோவா 5:39). முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக முன்னோரிடம் பேசிய கடவுள் இறுதிக் காலத்தில் கிறிஸ்து வழியாகப் பேசியுள்ளார் (எபி 1:1).

கிறிஸ்து மக்களுக்கு வழங்கிய செய்தி விடுதலைச் செய்தி. எளியவர்களுக்கு நற்செய்தி சொல்லவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வாழ்வு வழங்கவும் அவர் இவ்வுலகிற்கு வந்தார். கிறிஸ்து கொண்டு வந்த விடுதலை வெறும் புறவிடுதலை மட்டுமல்ல, மாறாக அக விடுதலை, ஆன்மீக விடுதலை, அவர் யூதர்களிடம் கூறியது: செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால்தான் நீங்கள் உண்மையில் விடுதலை பெற்றவராய் இருப்பீர்கள்" (யோவா 8:34-36). கிறிஸ்து தான் உலகின் பாவங்களைப் போக்கும் உண்மை யான செம்மறி (யோவா 1:29). அவர் பலருடைய பாவ மன்னிப்புக்காக இரத்தம் சிந்தினார் (மத் 26:28). நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். 38 ஆண்டுகளாகத் தீராத நோயால் அவதிப்பட்ட ஒருவரைக் குணப்படுத்திய கிறிஸ்து. மீண்டும் அவரைப் பார்த்த போது அவரிடம் கூறியது: "பாரும்! நீர் நலமடைந்துள்ளீர், இதை விடக் கேடான எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனிப்பாவம் செய்யாதீர்" (யோவா 5:14). ஒரு தீய செயல் மற்றொரு தீய செயலுக்கு வித்திடுவதால், தீக்குப் பயப்படுவதை விடத் தீய செயலுக்குப் பயப்பட வேண்டும்.

தீயலை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும். (குறள் 202)

அழிவுக்குச் செல்லும் அகலமான பாதையில் செல்லாது, வாழ்வுக்கு இட்டுச் செல்லும் இடுக்கமான வாயிலின் வழியாகச் செல்ல அழைப்பு விடுக்கிறார் ஆண்டவர் (மத் 7:13-14). பாவங்களில் எல்லாம் கொடிய பாவம் வடிகட்டிய தன்னலம். பிறரைப் பற்றி அலட்டிக் கொள்ளாத நிலை. இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் திருச்சபையை, இறைமக்கள் சமூகத்தை ஓர் உடலுக்கு ஒப்பிடுகிறார். உடலில் ஒர் உறுப்பு துன்புற்றால், உடல் முழுவதும் துன்புறுகிறது. உடலில் ஓர் உறுப்பு இன்புற்றால், முழு உடலும் இன்புறுகிறது (1 கொரி 12:26). அவ்வாறே நாமும் பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகவும், பிறருடைய இன்பத்தை நம்முடைய இன்பமாகவும் கருதி, அழுவாரோடு அழுது மகிழ்வாரோடு மகிழ வேண்டும் (உரோ 12:15) நமக்குச் சமுதாய அக்கறை வேண்டும். பிறருடைய துன்பத்தை நம்முடைய துன்பமாகக் கருதாவிட்டால், நம்மிடம் பகுத்தறிவு இருந்தும் அது பயனற்றது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக் கடை (குறள் 315)

ஒரு பெரியவர் ஒரு குடும்பத் தலைவரிடம், "மனிதராகப் பிறந்ததற்கு நாலு பேருக்கு நன்மை செய்ய வேண்டும்" என்றார். அதற்குக் குடும்பத் தலைவர். "நானும் நாலு பேருக்கு நன்மை செய்கிறேன். அவர்கள் எனது மனைவியும் எனது மூன்று பிள்ளைகளும்" என்றார். நமது அன்பு நமது குடும்பம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் மற்றவர்களையும் அரவணைக்கும் உலகளாவிய அன்பாக இருக்கவேண்டும். புறநானூற்று ஆசிரியர் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்குக் கூறும் காரணம்: இவ்வுலகில் இன்னும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் மனிதர் ஒரு சிலர் இருப்பதால்.

உண்டால் அம்ம இவ்வுலகம்... தமக்கென முயலா நோன்தான்,
பிறர்க்கென முயலுநர் உண்மையானே" (புறம் 182)

பாவத்திலிருந்து குறிப்பாகத் தன்னலத்திலிருந்து விடுதலை அடைந்து, உலகம் தரமுடியாத அமைதியைப் பெற்று மகிழ்வோம்.
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

இருளைப்‌ பழிப்பதை விட ...

யோர்தான்‌ ஆற்றில்‌ திருமுழுக்கு, பாலைவனத்தில்‌ சோதனைகள்‌ என்று உடனடியாகத்‌ தன்‌ பொது வாழ்க்கையைத்‌ தொடர்கிறார்‌ இயேசு.

இத்தாலிய மொழியில்‌ ஒரு பொன்மொழி உண்டு. "எங்கே போகிறோம்‌ என்பதைத்‌ தெளிவாகத்‌ தெரிந்த ஒருவனுக்கு உலகமே ஒதுங்கி நின்று வழிவிடுகிறது. என்பதுதான்‌ அது. திடமான நம்பிக்கை, தெளிவான குறிக்கோள்‌, திண்ணமாய்‌ வெற்றியடையும்‌ உறுதி உடைய ஒருவனால்‌ எதையும்‌ சாதிக்க முடியும்‌.

அத்தகைய ஒருவரைப்‌ பாரதநாடு அண்ணல்‌ காந்தி, ஜெயப்பிரகாஷ்‌ நாராயணன்‌ போன்றவர்களில்‌ கண்டது. அவர்களுக்கெல்லாம்‌ எங்கே போகிறோம்‌, எது நோக்கி நாட்டை நடத்துகிறோம்‌ என்பதெல்லாம்‌ தெளிவாக இருந்தது. அதனால்‌ பெரும்‌ புரட்சியைக்‌ கொண்டு வர முடிந்தது. நாட்டைச்‌ சூழ்ந்திருந்த இருளான "நிலைக்கு ஒளியூட்ட முடிந்தது. ஒளி பெற்ற தலைமையால்‌ தான்‌ ஒளி கொடுக்க முடியும்‌.

எல்லாக்‌ காலங்களுக்கம்‌ எல்லா மக்களுக்கும்‌. ஒளியும்‌ "ஆற்றலும்‌ தரக்கூடிய ஒரு தலைவனை, ஒரு வழிகாட்டியை இயேசுவில்‌ காண்கிறோம்‌. "பிற இனத்தார்‌ உன்‌ ஒளி நோக்கி வருவர்‌. மன்னர்‌ உன்‌ உதயக்கதிர்‌ நோக்கி நடைபோடுவர்‌"" (எசா. 60:3) என்பது இயேசுவில்‌ நிறைவேறியது. "காரிருளில்‌ நடந்து வந்த மக்கள்‌ பேரொளியைக்‌ கண்டார்கள்‌. சாவின்‌ நிழல்‌ சூழ்ந்துள்ள நாட்டில்‌ குடியிருப்போர்‌ மேல்‌ சுடரொளி உதித்துள்ளது" (எசா. 9:2) என்று.இறைவாக்கினர்‌ எசாயா சொன்னதும்‌ இயேசுவைப்‌ பற்றியே!

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு செயல்பட்ட இடங்களாக, செபுலோன், நப்தலி, கடலோரமாய் உள்ள கப்பர்நகூம், பிற இனத்தார் வாழும் கலிலேயா ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இறைவாக்கினர் எசாயா பார்வையில் அவை இருள் சூழ்ந்தவை; சாவின் நிழல் படர்ந்தவை. திருமுழுக்கு யோவானின் பிறப்பில் அவருடைய தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: "இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது" (லூக். 1:78,79). இருளிலும் இறப்பின் நிழலிலும் நமக்கு ஒளியூட்டும் இளஞாயிறு இயேசு என்பது தானே இந்த இறைவாக்கு!

ஒளியை எதுவும் கறைப்படுத்த முடியாது. கறைகளையே சுட்டெரிக்கும். ஒளி மட்டுமே புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து இயங்க முடியும். ஒளிக்கே உரிய தனித் தன்மையோடும் ஆற்றலாரும், எதிரிகளின் தாக்குதலிலும் துன்பத்தின் இருளிலும் வாழ்ந்த செபுலோன், நப்தலி நாடுகளின் மக்கள் விடுதலைக்காகச் செயல்பட்டார். இயேசுவின் நற்செய்தியும், அருங்குறிகளும் இயேசுவை அப்பகுதி மக்களுக்குப் பேரொளியாகக் காட்டின.

இறைப்பற்றுக் கொண்டவராய், இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவராய் ஆலயத்திலேயே வாழ்ந்த முதியவர் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி கடவுளைப் போற்றிச் சொன்னதும் சிந்திக்கத்தக்கது. "மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள மீட்பை என் கண்கள் கண்டு கொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" (லூக். 2:30-32).

அடிமைத்தனம், இருள், அழிவின் அவலம் மண்டிக்கிடக்கும் இடத்திலே இயேசு மீட்பராக, ஒளியாக, வாழ்வாக, விடுதலை வீரராக விளங்குவார். இருளின் தளங்களாக நமது வாழ்க்கையில் பல உண்டு. அச்சம், நோய், வேதனை, பாவம், விரக்தி, தனிமை, பிளவுகள், பிரிவினைகள், தவறுகள், மன அழுத்தங்கள் எல்லாமே இருளின் தாக்கங்கள்தாம். எனவே இயேசுவின் ஒளி நமக்குத் தேவை. இயேசு என்ற ஒளியில் நடப்பவர்களுக்குத் தீங்கு ஏதும் இல்லை. "உலகின் ஒளி நானே. என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்க மாட்டார். வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" (யோ.8:12) என்றார் இயேசு. இயேசுவின் உடனிருப்பில் சாவின் நிழலோ பயமோ இல்லை. கடலில் புயலில், "போதகரே, சாகப் போகிறோமே, உமக்குக் கவலையில்லையா?" என்று கதறியபோது, இயேசு கேட்டார்: "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?" (மார்க். 4:35-40).நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஒளியின் மகிமை இருளில் தெரியும். இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவது மேலன்றோ!

இறைவன் ஒளியென்றால் இறைவனின் சாயலான மனிதனும் ஒளிதான். ஆகவேதான் இயேசு சொன்னார்: "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் ... உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்" (மத். 5:14-16). நாம் ஒளியின் மக்களா? இருளின் மக்களா?

இயலாமைகள், பலவீனங்கள் எல்லாம் இறைவன் செயல்படும் இடங்கள் ஆகிட வேண்டும். உடல் ஊனம் வாழ்வின் பெரிய சோகம் என நினைத்த காலங்கள் மலையேறிவிட்டன. ஊனம் இருந்தும் அதையே வெற்றிமலையின் படியாக மாற்றியவர்கள் உண்டு. 1961ஆம் ஆண்டு கோமா என்னும் இடத்தில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பார்பரா என்ற பெண் இரண்டாவது பரிசு பெற்றாள். பேரும் புகழும் பணமும் கிட்டியது. 1964ஆம் ஆண்டு அவள் காலில் புற்றுநோய். காலை வெட்டி எடுத்துவிட்டார்கள். ஆனால் அந்த அழகியோ ஊனமுற்ற பிள்ளைகள் வாழும் இல்லத்தைத் தன் உறைவிடமாக்கிக் கொண்டாள். ஊனமுற்ற குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் நல்லாசிரியை ஆனாள்.

அவள் அப்போது தனக்குள் மிகவும் உற்சாகம் தரக்கூடிய வார்த்தைகளைச் சொல்லிக் கொள்வாள். "நான் இவர்களுக்கு இருளில் ஓர் ஒளி. நான் என் காலைத்தான் இழந்தேன். என் வாழ்வை அல்ல. என் வாழ்வு என்னோடு இருக்கும் வரை மற்றவர்களை வாழவைப்பேன். மற்றவர்களுக்கு இருளில் ஒளியாய் இருப்பேன்."

இந்த உலக அழகி எப்படி ஊனமுற்ற சிறுவர்களுக்கு ஆசிரியையாய் இருந்து அவர்களது வாழ்வின் இருளிலும் ஒளியாய் இருந்தாளோ, அதுபோல இயேசுவும் நமக்கு இருளில் ஒளியாய் இருக்கிறார். புற்றுநோயினால் பாதிப்புக்கு ஆளாகி கால் இழந்த காரிருள் சூழலிலும். "நான் வாழ்வை இழக்கவில்லை" என்ற ஒளியைக் கண்டாள். இதே செய்தியைத் தான் இன்றைய வழிபாட்டு இறைவாக்குகளும் உணர்த்துகின்றன.

அந்நிய நாட்டின் படையெடுப்புக்கு இரையாகி அடிமைத்தனத்துக்கும் அழிவுதரும் அவலத்துக்கும் உட்பட்டிருந்த நாட்டுக்குக் கடவுள் மீட்பைக் கொண்டு வருவார் என்று முன்னறிவிக்கிறார் இறைவாக்கினர் எசாயா (முதல் வாசகம்) "அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர். அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை உடைத்தெறிந்தீர்."(எசா. 9:1,2,4) என்று வர இருக்கும் விடுதலையை, மீட்பை, மாட்சியை அறிவிக்கிறார் இறைவாக்கினர்.

இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறது; எங்கே அடிமைத்தனம் கோலோச்சுகிறதோ, அங்கே மீட்பாக விடுதலையாக, எங்கு இருள் மண்டிக்கிடக்கிறதோ, அங்கு போரொளியாக மாட்சியாக இயேசு வருகிறார் என்பதே நற்செய்தி.

நாமும் ஒளியாகத் திகழ அழைக்கப்படுகிறோம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீ சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் இயேசுவாக இரு. நீ சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இயேசுவைப் பாரு. Be Jesus to everyone you meet and see Jesus in everyone you meet.
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 பொதுக்காலம் 3ம் ஞாயிறு இந்திய குடியரசு நாள்

சனவரி 26, வருகிற வியாழனன்று, இந்தியாவில் 74வது குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகள் மன்னர்களால் ஆளப்பட்ட இந்தியா, சில நூறு ஆண்டுகள், அன்னியர்களால் ஆளப்பட்டது. இவ்வாறு, முடியாட்சியை சுமந்து வருந்திய இந்திய மக்கள், இனி வேறு யாரும் எங்களை ஆட்சி செய்யவேண்டாம்; எங்களை நாங்களே ஆட்சி செய்வோம் என்று உலகறியப் பறைசாற்றிய நாள் குடியரசு நாள். இந்த வரலாற்றுப் பின்னணி, நம் மனங்களை உண்மையிலேயே பெருமையுறச் செய்கிறது. 21ம் நூற்றாண்டில், உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியாதான் என்ற உலகச்சாதனை, நம்மை மேலும் தலைநிமிரச் செய்கிறது.

இந்த வரலாற்றுப் பெருமைகளை விழுங்கிவிடும் வேதனை எண்ணங்களும் மனதை நெருடுகின்றன. கடந்த 73 ஆண்டுகளாக, குறிப்பாக, அண்மைய ஆண்டுகளில், இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆட்சியைச் சிந்திக்கும்போது, இது மக்களால் நடத்தப்படும் குடியாட்சியா அல்லது, குடியாட்சி என்ற போர்வையில் ஒரு சில முடிசூடா மன்னர்கள் நடத்தும் சர்வாதிகார ஆட்சியா என்ற கேள்வி மனதை வதைக்கிறது.

குடியாட்சி'அல்லது 'மக்களாட்சி'என்ற சொல்லுக்கு, மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அளித்துள்ள இலக்கணம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், லிங்கன் அவர்கள் சொன்ன வேறொரு கூற்றையும், மக்களாட்சியோடு இணைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்: எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.

உலகின் மாபெரும் குடியரசு அல்லது, குடியாட்சி என்று பெயரளவில் இயங்கிவரும் இந்திய அரசில் நிகழும் அனைத்து ஏமாற்று வேலைகளையும் மக்கள் புரிந்துகொண்டு, அடுத்துவரும் தேர்தல்களில் தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை மக்கள் பெறவேண்டும் என்று மன்றாடுவோம். இந்திய மக்களுக்கு, குறிப்பாக, வறுமையில் வாடும் பல கோடி இந்திய மக்களுக்கு, இந்த குடியரசு நாள், மக்களாட்சியை நிலைநாட்டும் ஒரு நாளாக அமையவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். உண்மையான மக்களாட்சியை நிலைநாட்டிய பின், நாம் குடியரசு நாளை சிறப்பாகக் கொண்டாட முடியும். அதுவரை, குடியரசு நாள் கொண்டாட்டங்கள் வெறும் சடங்காகவே இருக்கும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் என்று சொல்லும்போது, இந்தியாவில் எதைக் கொண்டாடுகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசு நாளன்று, மக்களாட்சியைப் பறைசாற்றும் அம்சங்களைக் கொண்டாடுவது பொருத்தமானது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பு ஒன்றே குடியரசு நாளின் முக்கிய கொண்டாட்டம் என்று உலகிற்குக் காட்டப்படுகிறது. இந்த அணிவகுப்பில், மக்களின் கலாச்சாரங்கள் அணிவகுத்துச் செல்கின்றன என்றாலும், இந்திய அரசின் இராணுவ வலிமையே பெருமளவு விளம்பரப்படுத்தப்படுகின்றது. இதுதான் குடியரசு நாள் கொண்டாட்டமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கொண்டாட்டங்கள் ஆடம்பரமாய், ஆர்ப்பாட்டமாய், பிரமாதமாய், பிரமிப்பூட்டுவதாய் இருக்கவேண்டும் என்பது, உலகில் பல நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பின்பற்றும் சிந்தனை. இந்நிறுவனங்களின், கட்சிகளின் ஆரம்பவிழாக்கள் பல கோடி ரூபாய் செலவில் அமர்க்களமாய் இருக்கும்; எதிர்பார்ப்பை உருவாக்கும். இவ்விதம் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள், வரலாற்றில் எவ்விதச் சுவடும் பதிக்காமல் சென்றுள்ளன. இவற்றிற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லத் தேவையில்லை.

இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் எடுத்துக்காட்டாக, புனித அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உடலெல்லாம் புண்ணாகி, நாற்றம் எடுத்து, சாக்கடைக்கருகில் சாகக்கிடந்த ஒரு நோயாளிக்குச் செய்த பணியில் ஆரம்பமானது இச்சபை. பிறந்த நாட்டைவிட்டு, வேறொரு நாட்டில் தனியொரு பெண்ணாக அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த அற்புதப் பணிக்கு எந்த ஆரம்பவிழாவும், ஆர்ப்பாட்டமும் இல்லை. அப்பெண்ணின் மன உறுதியைக் கண்டு இன்னும் 12 பெண்கள் அவருடன் சேர்ந்தனர். இவ்விதம் ஆரம்பமான பிறரன்புச் சகோதரிகள் சபை, இன்று உலகெங்கும் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பணிகளைத் தொடர்கின்றது.

இந்திய மக்கள், முதல் குடியரசு நாளைக் கொண்டாடிய அதே 1950ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்கள், பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபையையும் நிறுவினார். மிக அமைதியாக ஆரம்பமான இந்த துறவு சபை, கடந்த 73 ஆண்டுகளாய் தனக்கென தனித்துவமிக்க ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளது.

பிறரன்புப் பணியில் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த ஒரு பெண், அவரைச் சுற்றி 12 பெண்கள் என்ற இந்த வரலாற்றுக் குறிப்பு, நம் நினைவை 20 நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. அந்த நினைவு, இன்றைய நற்செய்தியில் பதிவாகியுள்ளது. இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த நிகழ்வையும், தன் பன்னிரு சீடர்களில் ஒரு சிலரை அழைத்ததையும், இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். ஆர்ப்பாட்டம் ஏதுமற்ற, அடக்கமான, ஆழமான ஆரம்பம் இது.

இயேசு ஆரம்பித்த பணிவாழ்வினை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தி, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் குறிப்பிடுகின்றனர். "காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது." (எசாயா 9: 2; மத்தேயு 4: 16)

ஒளி ஓர் அழகிய உருவகம். அட்டகாசமான, அர்த்தமற்ற ஆரம்பங்களையும், அமைதியான, அர்த்தமுள்ள ஆரம்பங்களையும் இயற்கையில் நாம் காணும் மின்னல், சூரியஒளி என்ற இருவகை ஒளியுடன் ஒப்புமைப்படுத்தலாம். அட்டகாசமான ஆரம்பங்கள் மின்னலைப் போன்றவை. பளீரெனத் தோன்றி மறையும் ஒவ்வொரு மின்னலும் பலகோடி 'வாட்ஸ்' (Watts) மின்சக்தி கொண்டது. ஒரே ஒரு மின்னல் உருவாக்கும் சக்தியைப் பயன்படுத்தமுடிந்தால், மும்பை அல்லது சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் பல மாதங்களுக்குத் தேவையான மின்சக்தி தரமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், மின்னலின் சக்தியைச் சேமித்துவைக்கும் கருவிகள் இல்லாததால், மின்னல்கள் பயனில்லாமல் தோன்றி மறைகின்றன. பல சமயங்களில், மின்னல்களால் தீமைகள் விளைவதும் உண்டு. அட்டகாசமான, ஆடம்பரமான ஆரம்பங்கள், மின்னலைப் போன்றவை.இதற்கு மாறானது சூரியஒளி. இரவு முடிந்து பகலவன் எழும்போது, பளீரென உதயமாவதில்லை. அமைதியாய், ஆர்ப்பாட்டமில்லாமல், சிறு, சிறு ஒளிக் கீற்றுக்களாய் சூரியன் உதயமாகிறது. இப்படி அமைதியாய் ஆரம்பித்து, அகிலத்தை ஒவ்வொரு நாளும் நிறைக்கும் சூரியஒளியால், பல்லாயிரம் உயிர்கள் பயனடைகின்றன. இயேசுவின் பணி வாழ்வு, ஆதவனைப்போல் ஆரம்பமானது.

இயேசு என்ற தலைவன், தன் பணிவாழ்வின் ஆரம்பத்தில், மக்கள் முன் சொன்னதாக, மத்தேயு, மாற்கு ஆகிய இரு நற்செய்தியாளர்களும் பதிவுசெய்துள்ள வார்த்தைகள் இவையே: "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது." (மத்தேயு 4: 17) இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து, இயேசு செய்த முதல் வேலை... தன் பின்னே வரும்படி ஒரு சில மீனவர்களை அழைத்தது...

ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் என்ற உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்த விதம் ஏமாற்றம் தருவதாக உள்ளது. ஒரு பிரம்மாண்டமான புதுமையைச் செய்து அவர் தன் பணியை ஆரம்பித்திருக்கலாம். இதைத்தான் அலகையும் அவருக்குச் சொல்லித்தந்தது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் இருந்து குதிக்கச்சொன்னது. ஆனால், இயேசு தன் பணிவாழ்வை ஆரம்பித்தவிதம் அமைதியாக இருந்தது. அவர் முதன்முதலாகச் சொன்ன வார்த்தைகள் புதிராகவும் இருந்தன. "மனம் மாறுங்கள்" என்று மக்களுக்குச் சொன்னார். "என் பின்னே வாருங்கள்" என்று மீனவர்கள் ஒரு சிலரிடம் சொன்னார். கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்கள் இவை: மனமாற்றம், இயேசுவைப் பின்தொடர்தல்.

மனமாற்றம் அனைவருக்கும் தேவையான ஓர் அழைப்பு. இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இயேசுவைப் பின்தொடர்தல் என்பது துறவறத்தார், அருள் பணியாளர்கள் ஆகியோருக்குத்தான்; அனைவருக்கும் அல்ல என்பது பொதுவாக நாம் எடுக்கும் முடிவு. ஆழச் சிந்தித்தால், மனம் மாறுவதும், இயேசுவைப் பின்தொடர்வதும் ஒன்றோடொன்று தொடர்புடையது, இவை ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் விடப்படும் அழைப்பு என்ற உண்மைகள் விளங்கும்.

மாற்றம் என்பது பழைய நிலையை விட்டு விலகி, புதிய நிலைக்குச் செல்வது. வேலை மாற்றம், வீடு மாற்றம், படிப்பு மாற்றம் என்ற இந்த மாற்றங்கள், வெளிப்புற மாற்றங்கள். ஓரளவு எளிதான மாற்றங்கள். உள்ளமாற்றம், மனமாற்றம் என்பது மிகவும் கடினமானது. நமது மனதில் ஆணிவேர்விட்டு வளர்ந்துவிட்ட எண்ணங்கள், ஆசைகள், பழக்கங்கள் இவற்றை மாற்றி, புதிய எண்ணங்களைக் கொண்டுவருவது எளிதல்ல. இவ்வகை மாற்றங்கள் உருவாக ஒரு முக்கிய உந்துதலாக இருக்கக்கூடியது, அன்பு, பாசம், காதல்... நாம் மற்றொருவர்மீது ஆழமான ஈடுபாடு கொள்ளும்போது, அந்த மற்றொருவருக்காக நம்மிடம் எத்தனையோ அடிப்படை மாற்றங்களைச் செய்துகொள்ள தயாராகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வின் இரு முக்கிய அம்சங்களான மனம் மாறுங்கள், என் பின்னே வாருங்கள் என்ற இந்த இரு அழைப்பினையும் நாம் இந்தக் கோணத்தில் இணைத்துப் பார்க்கமுடியும். இயேசுவின் மீது ஆழமான ஈடுபாடு கொண்டு, அவரைப் பின்செல்ல நாம் ஆரம்பித்தால், மாற்றங்கள், மனமாற்றங்கள், வாழ்வின் அடிப்படை மாற்றங்கள் எளிதில் உருவாகும். இயேசுவினால் ஈர்க்கப்பெற்று, அவரது அழைப்பை ஏற்று, சீடர்கள் அவரைப் பின்சென்றனர். தங்கள் வாழ்வின் ஆதாரங்களான மீன்பிடிக்கும் தொழில், தங்கள் படகுகள், தங்கள் தந்தை என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு இயேசுவைப் பின்சென்ற சீடர்களின் வாழ்வு முற்றிலும் மாறியது.

மாற்றத்தைப் பற்றிப் பேசும்போது, 'மாற்றம் நாமாக இருப்போம்' என்ற தலைப்புடன், குடியரசு நாளையொட்டி, சில ஆண்டுகளுக்குமுன் நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு செய்தி மனதில் தோன்றுகிறது ('Lets be the change' The Hindu, January 24, 2014). இச்செய்தி வெளியான அவ்வாண்டு, பாராளுமன்றத் தேர்தல் அணுகிவந்ததால், அந்தத் தேர்தலும், குடியரசு நாளும் இளையோர் மனதில் உருவாக்கும் ஒரு முக்கிய எண்ணம் என்ன என்று அந்த நாளிதழ், இளையோரிடம் கருத்து கேட்டிருந்தது. அதற்கு, இளையோரில் பலர் கூறியது இதுதான்: "இந்தியாவில் எத்தனையோ நல்ல மாற்றங்கள் தேவை. அந்த மாற்றங்கள் என்னிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்று விரும்புகிறேன்" என்ற கருத்து, பல இளையோரிடமிருந்து வந்தது.

மிகவும் அற்புதமான ஒரு கருத்து இது. இந்த உறுதி, இன்றைய இளையோர் அனைவரிடமும் பரவினால், நிச்சயம் இந்தியா ஒரு தலைசிறந்த குடியரசாக உலகில் தலைநிமிர்ந்து நிற்கும். நாளையத் தலைமுறையினர் இந்தியாவை நல்வழியில் அழைத்துச் செல்வர் என்று நம்பிக்கை கொள்வோம். நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்ட இளையோர் ஒவ்வொருவரும், உண்மையான மாற்றம் பெற்று, (மனமாற்றம் பெற்று) கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாக பின்பற்றும் உறுதி பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.
 
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
மறையுரைச்சிந்தனை  -அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை
 
கடவுளே நம் வாழ்வின் ஒளி!

இன்று என்னுடைய கைபேசியில் வந்த இந்த குறுந்தகவல் என் மனதைத் தொட்டது. "ஒரு ரூபாய் எழுதுகோல் பலருக்கு அறிவொளி ஊட்டுகிறது. ஒரு லட்சம் கைபேசி பலருடைய கண்பார்வையை கெடுக்கிறது " என்பதே அப்பதிவு. கைப்பேசியால் பலர் கண்ணொளியை மட்டுமல்ல அறிவொளியையும் இழக்கின்றனர் என்ற சிந்தனையைத் தருவதாக இச்செய்தி அமைந்துள்ளது. கண்ணொளியும் அறிவொளியும் ஒரு மனிதனுக்கு மிக அவசியம். இந்த செய்திக்கும் நற்செய்தி பகுதிக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நான் உணர்கிறேன். கண் பார்வை என்பது நம் வாழ்வுக்கு முக்கியம். விவிலியத்தில் கண்தான் உடலுக்கு விளக்கு எனக் கூறப்பட்டுள்ளது. உடலுக்கு ஒளி தேவை. உலகிற்கு ஒளி தேவை. அவ்வாறே நம் ஆன்ம வாழ்வுக்கு ஒளி என்பது மிக மிக அவசியம். அந்த ஒளி கடவுளைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.

இன்றைய முதல் வாசகத்தில் காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டனர் என மொழியப்பட்டுள்ளது. இதே வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளரும் நற்செய்தியில் உறுதிப்படுத்துகிறார். காரிருள் என்ற வார்த்தை மனிதனின் பாவ வாழ்வைக் குறிக்கிறது. போரொளி என்ற வார்த்தை கடவுளின் இரக்கத்தைக் குறிக்கிறது. ஆம் காரிருளில் வாழ்ந்த மக்கள் கடவுளின் இரக்கம் என்ற பேரொளியைக் கண்டு மீட்படைகின்றனர் என்ற ஆழமான சிந்தனையை இவ்வாசகங்கள் நமக்குத் தருகின்றன.

என்னதான் நம்மைச் சூழ்ந்து ஒளி இருந்தாலும் நம் கண்கள் மூடி இருந்தால் நாம் இருளில் தான் இருப்போம். அதேபோல கடவுள் நமக்கு ஒளியாய் இருந்தாலும் நாம் மனம் திறந்தால்தான் அவருடைய ஒளி நம் உள்ளங்களை நிரப்பும். அதற்கான ஒரு அரைகூவலாகவும் இந்நற்செய்தி அமைகிறது. ''மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" என்று இயேசு பறைசாற்றினார் என நாம் வாசிக்கிறோம். இவ்வார்த்தைகள் கடவுள் என்னும் ஆன்ம ஒளி நம் உள்ளங்களை நிரப்ப மனம்மாற்றம் என்னும் திறவுகோல் தேவைப் படுவதை உணர்த்துகிறதல்லவா.

அன்புக்குரியவர்களே! இன்றைய பதிலுரைப்பாடலிலே ஆண்டவரே என் ஒளி ,அவரே என் மீட்பு என நாம் தியானிக்கிறோம். அவரை நம் ஒளியாக மீட்பாக நாம் அனுபவிக்க வேண்டுமெனில் நம் மனதை அவரிடம் திருப்பி அவருடைய ஒளி நம்முள்ளங்களில் பாய்ந்தோட அனுமதிக்க வேண்டும். அப்போது பாவம், பலவீனம், அடிமைத்தனம், உலக இயல்பு எனும் காரிருளில் வாழ்கின்ற நம் இதயங்களும் நிச்சயம் பேரொளியைக் காணும் என்பதில் ஐயமில்லை. சிந்திப்போம். மனம்மாறுவோம்.

இறைவேண்டல்
பேரொளியாம் இறைவா எம் உள்ளத்தின் காரிருளை உம் ஒளியால் அகற்றுவீராக. ஆமென்.
 
‌நன்றி வழித் தோழன்

மையச்‌ சிந்தனை : மனம்‌ மாற மனம்‌ துணிவோம்‌

மாற்றம்‌ ஒன்றே மாறாத ஒன்று என்பார்கள்‌. மாறாதிருக்க நான்‌ மண்ணா, கல்லா, மரப்பாச்சி பொம்மையா ? என்று சினந்து பாடுகின்றான்‌ கவிஞன்‌ ஒருவன்‌. மனித வாழ்வு மாற்றத்தை ஏற்கும்‌ வாழ்வு. பூ அழகானது, ஆனால்‌ அது. பூவாகவே இருந்து விட முடியாது. காயாக, கனியாக, விதையாக, இன்னொரு புதிய மரமாக அது மாற்றம்‌ பெற வேண்டும்‌. குழந்தை மகிழ்ச்சியானது. ஆனால்‌ அது சிறுவனாக, இளைஞனாக, பெரியவராக மாற்றம்‌ பெற வேண்டும்‌. , அதுதான்‌ இயல்பானது; இயற்கையானது. கடவுள்‌ தருகின்ற மாற்றத்திற்கான அழைப்பை உணர அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

காரிருளில்‌ வாழ்ந்த மக்களின்‌ வாழ்வில்‌ இறைவன்‌ ஏற்படுத்தும்‌ மிகப்பெரிய மாற்றத்தை முன்னுரைப்பதாக இன்றைய முதல்‌ வாசகம்‌ அமைந்துள்ளது. பாபிலோனியப்‌ படையெடுப்பின்‌ அண்மையை உணர்ந்து அஞ்சி நடுங்கும்‌ மக்களுக்கு, இந்த நிலை மாறும்‌ என்ற நம்பிக்கையை அவர்‌ ஊட்டுகின்றார்‌. கிறிஸ்துவை ஏற்றுத்‌ திருமுழுக்குப்‌ பெற்ற பின்னரும்‌, பிரிவுகளோடும்‌ பிளவுகளோடும்‌ வாழும்‌ கொரிந்து மக்கள்‌ மாற்றம்‌ பெற வேண்டும்‌ என இரண்டாம்‌ வாசகத்தில்‌ அழைக்கின்றார்‌ திருத்தூதர்‌ பவுல்‌: இயேசுவை நம்புவதற்கு முன்னர்‌ வாழ்ந்த அதே வாழ்வை, இயேசுவை ஏற்றுக்‌ கொண்ட பின்னரும்‌ வாழ்ந்தால்‌ அது சரியானதல்ல. மாற்றம்‌ கட்டாயம்‌ இருக்க வேண்டும்‌. நற்செய்தியில்‌ மனம்‌ மாறுங்கள்‌ என இயேசு அழைக்கின்றார்‌. இங்கே இயேசு பயன்படுத்தும்‌ மெத்தனோயா என்ற கிரேக்க வார்த்தை அப்படியே திரும்புதல்‌ எனப்‌ பொருள்படுவதாக விவிலிய அறிஞர்கள்‌ கூறுவர்‌. நாம்‌ வாழ்ந்து கொண்டிருக்கும்‌ உலக வாழ்விலிருந்து அப்படியே திரும்பிக்‌ கடவுளிடம்‌ வர வேண்டும்‌. அதற்கு எடுத்துக்‌ காட்டுதான்‌ முதல்‌ சீடர்கள்‌. மீனவர்களாக, தங்கள்‌ வாழ்வுக்காக உழைத்துக்‌ கொண்டிருந்த அவர்கள்‌, திருத்தூதர்களாக, பிறரது மீட்புக்காக உழைப்பவர்களாக மாற்றம்‌ பெறுவதையே நற்செய்தி விளக்குகின்றது.

🕀 நற்செய்தி நூல்களில்‌ நாம்‌ பார்க்கும்‌ மிகப்பெரிய உண்மை: இயேசுவைப்‌ பார்த்தால்‌ மாற்றம்‌ வரும்‌ என்பது.
🕀 குழந்தை இயேசுவைப்‌ பார்த்த இடையர்கள்‌, அவரைப்‌ பிறருக்கு அறிவிக்கும்‌ திருத்தூதர்களாக மாறினார்கள்‌.
🕀 மீன்பிடிப்பவர்கள்‌ மனிதரைப்‌ பிடிப்பவர்களாக மாறினார்கள்
🕀 பாவி சக்கேயு மீட்படைந்த மனிதராக மாறினார்
🕀 சவுல்‌ பவுலாக மாறினார்‌.
🕀 ஞானிகள்‌ கூட வேறு வழியில்‌ மாறிச்‌ சென்றார்கள்‌.

இன்று இயேசுவைப்‌ பார்க்கத்தான்‌ நானும்‌ வந்துள்ளேன்‌. நற்கருணை வடிவில்‌ இயேசுவைப்‌ பார்த்து விட்டேன்‌. என்‌ வாழ்வில்‌ என்ன மாற்றத்தை நான்‌ உருவாக்கப்‌ போகிறேன்‌ ? திருப்பலிக்கு எப்படி வந்தேனோ அப்படியே திரும்பிச்‌ சென்றால்‌ நான்‌ உண்மையான சீடன்‌ அல்லன்‌.

மானிடத்துள்‌ நிகழும்‌ மாற்றங்கள்‌ புதிய புதிய கண்டுபிடிப்புகளில்‌ அல்ல; மாறாக மேலான உறவுகளில்‌ அடங்கியிருக்கிறது.

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 8: 23-9:3)

செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் கி.மு. 732-இல் பாழ்ப்படுத்தப்பட்டன. நாசபடுத்தப்பட்டன. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அடிமைகளாக, முகவரி இழந்த முகங்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குத் துன்பங்களும், துயரங்களும், கண்ணீர், கம்பலையுமே உணவாகவும், மூச்சாகவும் இருந்து வந்தது. இச்சூழ்நிலையில்தான் ஆண்டவரின் ஆவியால் இறைவாக்கினர் எசாயா தூண்டப்பட்டு சோகத்தில் இருக்கின்ற மக்களின் வாழ்க்கை நிலை சோலைவனமாக மாற்றப்படும், இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் முழுநிலவு உதயமாகும், என்கிறார் இறைவாக்கினர்.

இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 1:10-13)

தூய பவுல் தனது நற்செய்திப்பணியை கொரிந்து நகரில் இருந்த அனைத்து மக்களுக்கும் அறிவித்துக் கொண்டு இருந்த வேளையில் அங்கிருந்த மக்களிடையே ஏகப்பட்ட பிரிவினைகளும், ஏற்றத்தாழ்வுகளும், கசப்பு மனப்பான்மையும், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பிரிவாதக் குணமும் இருந்து வந்தது. தன்னலமே உருவெடுத்து இருந்தது. அவரவர் எவரால் திருமுழுக்குப் பெற்றனரோ அவரையேப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அதுவே அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட காரணமாக இருந்தது. பிரிவினை உருவாக்கிச் சுயலாபம் தேட விழைந்தனர். இத்தகைய சூழலில் பவுல் அம்மக்களைக் கண்டித்து இயேசுவின் பெயரால்தான் அனைவரும் திருமுழுக்கு பெற்றுள்ளார்கள் என்றும் அதனால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் இயேசுவின் பெயரால் கேட்டுக் கொள்கின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 4:12-23)

பெத்லேகமில் இயேசு பிறந்தார். அவர் வளர்ந்தது எல்லாம் நாசரேத்து என்னும் ஊரிலே! கப்பர்நகூம் இயேசுவின் கலிலேயா பணிக்கு மையமாக இருந்தது. இயேசுவின் பணி என்பது தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான். அவரின் பணியின் மையமாக இருப்பது இரண்டு முக்கியமானக் கருத்துக்கள்.

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது, உங்களின் பாதைகளை சீர்ப்படுத்துங்கள். வாழ்வின் பாதையை மாற்றவேண்டுமானால் முதலில் மனமாற்றம் தேவை. தந்தையின் விண்ணகப் பணியைச் செய்ய, மனிதர்களை அழைக்கின்றார்.

இதன் மூலம் மனிதன் தூயவன் ஆகலாம் என்றும், மனிதன் தனது மனம்மாற்றத்தின் மூலம் அந்தக் கடவுளோடு உறவு கொள்ள முடியும் என்றும் மறைமுகமாகக் கூறுகின்றார். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற வார்த்தைக்கேற்ப தான் மட்டும் இறையரசில் பங்குக் கொண்டால் போதாது, மற்ற மனிதரும் பங்குப் பெற்று பயன் பெற வேண்டும் என்று கூறி சீடர்களை அழைக்கின்றார் இறைமகன் இயேசு கிறிஸ்து.

மறையுரை- அழைத்தல்

இருளிலிருந்து ஒளி நிறைந்த வாழ்வுக்கு
பாவ வாழ்விலிருந்து புண்ணிய வாழ்வுக்கு
நிழல் உலகிலிருந்து நிலை வாழ்விற்கு

இன்றைய வழிபாடு நம் அனைவரையும் அழைக்கின்றது. புறவின பகுதிகளான செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அசீரியர்கள் அடிமைப்படுத்தினார்கள். அனைத்து மக்களையும் அடிமைகளாக நடத்தி அவர்களை இழிவுபடுத்தினர். ஆனால் ஆண்டவர் இஸ்ராயேல் மக்கள்மேல் இரக்கங் கொண்டு, அசீரியர்களால் இஸ்ராயேல் மக்கள்மேல் சுமத்தப்பட்ட அனைத்து நுகத்தடிகளாம் துன்பங்கள், துயரங்கள், துக்கங்கள், கவலைகள், கொடுமைகளையும், அவமானங்களையும் ஆண்டவர் முறியடித்து அவர்களின் சமாதானத்தை காக்கின்றார். அடிமைத்தனம் எனும் இருளில் இருந்த மக்களை மகிழ்ச்சி, மன்னிப்பு எனும் பேரொளி நோக்கி அழைத்து வருகின்றார்.

அடிமைகளாகப் பணியாளர்களாக, சாபத்தை சுமந்து இருந்த இஸ்ராயேல் மக்கள்மேல் தனது இரக்கம், மன்னிப்பு என்ற ஒளியை மிளிரச் செய்கின்றார். சாவின் நிழலில் வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்களை மறுவாழ்வு, உயிர்ப்பு நிறைந்த வாழ்வான அவரது ஒளியை அவர்கள்மீது ஒளிரச் செய்து புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். அவர்களை அடிமைப்படுத்திய அசீரியர்களை ஆண்டவரே ஒடுக்குகின்றார்.

இரண்டாம் வாசகத்தில் இறைவனால் புதுவாழ்வுக்கு அழைக்கப்பட்ட மக்களை நல்வாழ்வு வாழ அழைக்கின்றார். அதாவது கொரிந்து நகர மக்களிடையே பல்வேறு பிளவுகள் இருந்து வந்தன. அவர்களிடையே ஒற்றுமை இல்லை. பெயரளவில்தான் ஒருவரை- யொருவர் சகோதரர்கள், சகோதரிகள் என்று சொல்லிக் கொண்டனர்.

எனவேதான் "உங்களிடையே பிளவுகள் இருக்கவே கூடாது" என்று கூறுகின்றார். "ஆண்டவரால் அழைக்கப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் ஒரே கருத்துடையவராக வாழ்ந்து இயேசுவுக்கு சான்றுபகர வேண்டும்" என்று கூறுகின்றார். இங்கு நாம் 'அந்த சபைக்குப் போகிறோம்', அல்லது 'இந்தச் சபைக்குப் போகிறோம்' என்று சொல்லலாம்.

ஆனால் இயேசுவில் அழைக்கப்பட்டவர் இயேசுவை மட்டுமே சார்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இயேசுவின் பெயரால் திரு- முழுக்கு பெற்றுள்ள நாம் அவருக்காகவே, அவருக்காக மட்டுமே வாழந்து ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்கிறார் தூய பவுல்.

படைத்தான் படைப்பெல்லாம் மனிதனுக்காக - மனிதனை படைத்தான் தன்னை வணங்க என்ற முதுமொழிக்கேற்ப அவரால் அழைக்கப்பட்ட நாமனைவரும் அவருக்காகவே வாழ்ந்து சாட்சி சொல்ல வேண்டும். இன்றைய நற்செய்தியிலே இறைமகன் இயேசு தன் விண்ணக அரசை நிறுவுவதற்காக மனிதர்களை அழைக்கின்- றார். கடலும், காற்றும் தழுவும்போது அலை உருவாகின்றது. கல்லும், உளியும் தழுவும்போது சிலை உருவாகின்றது.

ஆண் உள்ளமும், பெண் உள்ளமும் தழுவும்போது நிறைவான இல்லம் உருவாகின்றது. அதே போல் இறைவனும், மனிதனும் தழுவும்போது இறைவனின் அரசு, இறைவனின் மீட்பு திட்டம் செயலாகிறது. இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்கு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. இன்றைய நற்செய்தி நமக்குக் கீழ்கண்ட கருத்தைக் கற்றுத் தருகின்றது.
ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியும்.

அவரைப் பின் தொடர்ந்தால் நமது வாழ்விலே அற்புதமும் அதியங்களும் நடக்கும். இதோ சீமோனையும், அவர் சகோதரரையும் இயேசு அழைத்தவுடன் அவர்கள் வலைகளை விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

மீனவர்கள் எவ்வளவுதான் பணக்காரர்களாக, சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தாலும் அவர்களின் மிகப்பெரிய சொத்து மீன் பிடிக்க உதவும் வலையும் படகும்தான். அந்த மிகப்- பெரிய சொத்தாகிய வலையையும், படகையும் உதறித்தள்ளிவிட்டு, உன்னத உத்தம, உண்மையான தெய்வமான இயேசுவையே அடைக்கலமாக ஏற்று கொள்கின்றனர். தங்களின் ஆன்மீகம் மட்டும் இல்லாமல் அனைத்திற்கும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு பின்செல்கின்றார்கள்.

காரணம் அவர்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைத்தான். யாக்கோபும் அவரின் சகோதரான யோவானும் இயேசு அழைத்தவுடன் தங்களின் தந்தையையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தங்களிடம் இருந்த அனைத் தையும் இழந்தாலும், அவரின் மாட்சியில் பங்குப்பெறும் உரிமையைப் பெற்றார்கள், காரணம் அவரின் அழைப்பை அலட்சியப்படுத்தாமல் ஏற்றுக் கொண்டதுதான்.

அவர்களின் வாழ்க்கை மாற்றம் பெறுகிறது. உணவு மோசமானால் ஒருநாள் இழப்பு. அறுவடை மோசமானால் ஆண்டு முழுவதும் இழப்பு. ஆனால் ஆன்மீகம் மோசமானால் ஆயுள் முழுவதும் இழப்பு" என்பதை அவர்கள் அறிந்து இருந்தார்கள். எனவேதான் இயேசுவின் அழைத்தலுக்கு செவிமடுத்து பின் சென்- றார்கள். சாதாரணமான மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுரு திருச்சபைக்கு முதல் தலைவராகும் அருளை பெற்றார்.

ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொண்டு அவரின் அழைத்தலுக்கு ஏற்றப்படி வாழ்ந்தான் அரசன் எசேக்கியாசு (2அர. 18:1-5). அதன் காரணமாக அவனுக்கு முன்னும் அவனுக்கு பின- னும் அவரைப் போல் எந்தவொரு அரசனும் இருந்ததில்லை. ஆண்ட- வரின் அழைப்பை இதயத்தில் இன்முகத்துடன் ஏற்று அவர் சென்ற இடத்திற்கெல்லாம் சென்றார் யாக்கோபு.

🕀 இதோ! ஆண்டவரின் அடிமை (லூக்கா 1:38) என்று ஆண்டவரின் அழைப்பிற்கு முழுவதுமாகத் தன்னையே அர்பணித்த மரியாள் இன்று இறைமகன் இயேசுவுக்கு, ஏன் நம் அனைவருக்கும் தாயாக இருக்கின்றாள்.

🕀தன்னிடமிருந்த ஏழு பேய்களை ஓட்டித் தனக்கு பாவமன்னிப்புத் தந்த இயேசுவின் அழைப்பை ஏற்று அவருக்குச் சாட்சியாக வாழ்ந்தார் மகதலேன் மரியா. விளைவு உயிர்த்தப்பின் இயேசுவை முதலில் காணும் பாக்கியம் பெற்றாள் (மாற்கு 16:9).

🕀நீ எழுந்து நகருக்குள் செல்" (தி.ப. 9:6) என்று அழைத்த இயேசுவின் அழைப்பை இதயத்தில் ஏற்று சென்றதால் இன்று திருத்தூதர்களிலேயே புரட்சியாளராகத் திகழ்கிறார் தூய பவுல். கணவனையும், பிள்ளைகளையும் புரிந்து கொண்டு அவர்களின் தேவைகளை உரிய முறையில் நிறைவு செய்யும் உண்மையான மனைவியாகவும் அன்பான அன்னையாகவும் வாழ இறைவன் நம்மை அழைக்கிறார்

மனைவியை முழுவதும் அன்பு செய்யவும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக வாழவும், கணவனாக, தந்தையாக வாழப் பலரையும் இன்று அழைக்கின்றார். இயேசு எவ்வாறு சிறுவயது முதல் தனது பெற்றோர்களுக்கும், கடவுளுக்கும் கீழ்படிந்து அனைவரையும் மதித்து வாழ்ந்தாரோ, அவரைப் போல் வாழ அனைத்து சிறுவர்- களையும், சிறுமிகளையும் அழைக்கின்றார்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

➤ இறைவனின் அழைப்பை ஏற்கும்போது மனிதன் தூயன் ஆகின்றான். மனிதன் மறுமலர்ச்சி அடைகின்றான், தூயன் எங்கும் எதிலும் புதுமையைக் காண்கின்றான்.

➤ இறைவனுக்கு நாம் சொல்லும் பதில் இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

➤ வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை என்று அவரின் அழைப்பிற்கு நம்மை அர்ப்பணிப்போம். இறைவன் வலிமை- யுள்ளவர்களுக்காக இல்லை, மாறாக வலிமையற்றவர்களுக்கே தனது அழைப்பைக் கொடுக்கின்றார்.
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌

பொதுக்‌ காலம்‌ மூன்றாம்‌ ஞாயிறு

இன்றைய முதல்‌ வாசகத்தையும்‌ நற்செய்திப்‌ பகுதியையும்‌ செபுலோன்‌ நாடே! நப்தலி நாடே! பெருங்கடல்‌ வழிப்‌ பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர்‌ வாழும்‌ கலிலேயப்‌ பகுதியே! காரிருளில்‌ இருந்த மக்கள்‌ பேரொளியைக்‌ கண்டார்கள்‌. சாவின்‌ நிழல்‌ சூழ்ந்துள்ள நாட்டில்‌ குடியிருப்போர்மேல்‌ சுடரொளி உதித்துள்ளது எனும்‌ இறைவாக்குகள்‌ ஒன்றிணைக்கின்றன. முதல்‌ வாசகத்தில்‌ எசாயா இறைவாக்காக கூறியவை இயேசுவில்‌ நிறை வேறுகின்றதாக மத்தேயு காட்டுகின்றார்‌. இந்த இறை வார்த்தை களின்‌, குறிப்பாக நற்செய்தியின்‌, ஆழமான பொருள்களைக்‌ காணமுயல்வோம்‌.
அமைப்பு

மத் 4:12-25 எனும்‌ நீண்ட பகுதியை பின்வரும் உட்பிரிவுகளாகப்‌ பிரிக்கலாம்‌.
1 யோவானின்‌ கைதுக்குப்‌ பின்‌ இயேசு. கலிலேயாவிற்கு வந்து தனது நற்செய்திப்‌ பணியை ஆரம்பிக்கின்றார்‌ (வச. 12-17).
2. கலிலேயக்‌ கடலோரம்‌ இயேசு தன்‌ முதல்‌ சீடர்களை அழைக்கிறார்‌ (வச. 18-22).
3. கலிலேயப்‌ பகுதி மக்கள்‌ இயேசுவின்‌ நற்செய்தியைக்‌ கேட்டு, நலம்‌ பெறுகின்றனர்‌ (வச. 23-25).
இன்றைய நற்செய்தி முழுவதும்‌ கலிலேயப்‌ பகுதியைச்‌ சுற்றிச்‌ சுழன்று வருவதால்‌ அதைப்பற்றி விளக்கிவிட்டு இன்றைய நற்செய்தி தரும்‌ முக்கியச்‌ செய்தியைக்‌ காண்போம்‌.
இயேசு கால கலிலேயா

இயேசு தனது போதனைப்‌ பணியை கலிலேயப்‌ பகுதியில்‌ தொடங்குகின்றார்‌. அவருடைய பணியின்‌ பெரும்பகுதி அங்கு தன்‌ நடந்தது. அவரது பணியின்‌ இறுதி கட்டத்தில்தான்‌ அவர்‌ எருசலேம்‌ நோக்கிச்‌ சென்றார்‌. இது ஒத்தமை நற்செய்திகள்‌ காட்டும்‌ விதம்‌. யோவான்‌ நற்செய்தியில்‌ இயேசுவின்‌ பணி எருசலேயிலும்‌, கலிலிலேயாவிலும்‌ மாறி மாறி நடக்கின்றதாக காட்டய்படுகின்றது.

இயேசுகாலத்து பாலஸ்தனம்‌, யூதேயா, கலிலேயா, சமாரியா என மூன்‌றுபகுதிகளாகபிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் கலிலேயா சிரியாவுக்கும்‌ எகிப்துக்கும்‌ இடையே இருந்த கடல்‌ நெடுஞ்‌சாலையினால்‌ இணைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த மக்கள்‌ விவசாயமும்‌, மீன்பிடித்‌ தொழிலும்‌ செய்துவந்த சாதாரணர்கள்‌. அத்தகைய நிலப்பரப்பில்‌ கப்பர்நாகும்‌ எனும்‌ கலிலேயக்‌ கடலின்‌ கடற்கரை நகரைத்‌ தேர்ந்தெடுத்து அங்கிருந்து நற்செய்திப்‌ பணியைத்‌ தொடங்குகின்றார்‌. இயேசு அந்நகர்‌ கடற்கரை நகரமாக இருந்ததால்‌ தொழில்‌ நிமித்தமாக அங்கு வந்த மக்கள்‌ வழியாக நற்செய்தி தொலை தூரங்களுக்கு எளிதில்‌ பரவ வாய்ப்பு இருந்தது.

சமதளத்தில்‌ கலிலேயாவும்‌, யூதேயாவும்‌ யூதர்களால்‌ நிறைந்திருக்க, சமாரியா . சமாரியர்களால்‌ நிறைந்திருந்தது. சமாரியர்கள்‌ கேரிசம்‌ எனும்‌ மலையை தங்கள்‌ தொழுகையின்‌ இடமாகக்‌ கொண்டனர்‌. யூதர்கள்‌ எருசலேமில்‌ இறைவனை வழிபட்டனர்‌. இந்தக்‌ காரணத்திற்காக யூதேயாவைச்‌ சேர்ந்த வர்கள்‌ கலிலேயரை இழிவாகப்‌ பார்த்தனர்‌. அவர்களைப்‌ படிப்‌பறிவற்ற, பாமரர்களாக, சட்டம்‌ அறியாதவர்களாகப்‌ பார்த்தனர்‌. இதனால்‌ இப்பகுதி பிற இனத்தவர்‌ வாழும்‌ கலிலேயப்‌ பகுதி என்றே அறியப்பட்டு, ஏளனப்படுத்தப்பட்டது. இந்தக்‌ காரணத்திற்காகவே, இத்தகையவர்களும்‌ இறை ஒளியைக்‌ காண வேண்டும்‌ என்பதற்காகவே இயேசு இங்கு 'தனது நற்செய்திப்‌ பணியை ஆழற்றுகின்றார்‌.

இப்பகுதி தரும்‌ பிற செய்திகளை இனிக்‌ காண்போம்‌.
௮. இயேசுவின்‌ கலிலேயய்‌ பணி

இயேசு தனது போதனைப்‌ பணியை இறைவனின்‌ திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே செய்கின்றார்‌. இறைவன்‌ எசாயா இறைவாக்கின்‌ வழியாக முன்‌ மொழிந்ததையே இயேசு தன்‌ வாழ்வில்‌ நிறைவேற்றுகின்றார்‌.

இங்கு யோவான்‌ குறிப்பிடப்படுகின்றார்‌. இயேசுவுக்கும்‌ யோவானுக்கும்‌ உள்ள ஒப்புமை இங்கு மறைமுகமாக குறித்துக்‌ காட்டப்படுகன்றது. யோவானைப்‌ போலவே (காண்‌. யோவா 3:2) மனம்‌ மாறுங்கள்‌, ஏனெனில்‌ விண்ணரசு நெருங்கிவந்து விட்டது (வச. 17) என இயேசு அறிவிக்கின்றார்‌. யோவான்‌ கை து செய்யப்பட்டு மரணத்தைச்‌ சந்தித்ததுபோலவே (வச. 12) இயேசுவுக்கும்‌ நிகழ்ந்தது.
ஆ. முதல்‌ சீடர்களின்‌ அழைப்பு

இந்த அழைப்பு நிகழ்வுக்கு எத்தகைய முன்‌ தயாரிப்பும்‌ இல்லாமல்‌, ஆண்டவர்‌ கட்டனையிட, அழைக்க அவர்கள்‌ அவரைப்‌ பின்தொடர்கின்றார்‌. இது இயேசுவின்‌ முக்கியத்‌துவத்தை, அவர்பால்‌ இருந்த ஈர்ப்பைக்‌ காண்பிக்கின்றது. மேலும்‌ யூதப்‌ பாரம்பரியத்தில்‌ சீடர்கள்தான்‌ குருவைத்‌ தேடிப்போவார்கள்‌ (காண்‌. யோவா 1:35-42) ஆனால்‌ இங்கு குரு தன்‌ சீடர்களைத்‌ தேடிச்சென்று அழைக்கின்றார்‌.
இ.கலிலேய மக்கள்

இயேசுவின்‌ பணியினால்‌ மக்கள்‌ நற்செய்தியும்‌, உடல்‌ உள்ள நலமும்‌ பெற்றுக்‌ கொண்டனர்‌. இந்தப்‌ பகுதி, அடுத்துவரும்‌ மலைப்பொழிவுக்குத்‌ தக்க தயாரிப்பாகவும்‌ விளங்குகின்றது.
முடிவாக...

இன்றைய நற்செய்தியின்‌ வழி யோவானுக்கும்‌, இயேசுவுக்கும்‌ இடையேயுள்ள ஒற்றுமை, இயேசு இறைத்‌ திட்டத்தின்படி செயல்‌ படுதல்‌, சீடர்களை அழைத்தலில்‌ காணப்படும்‌ இயேசுவின்‌ ஈர்ப்புத்‌ தன்மை, இயேசுவுக்கு நேர்மறையாய்‌ பதிலிறுத்த மக்கள்‌ கூட்டம்‌ என பல முக்கி கருத்துகளை அறிந்து கொள்கின்றோம்‌.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.


பொதுக்காலம் - முன்றாம் ஞாயிறு
முதல் வாசகம் எசா. 9:1-4

அசீரியர் படையெடுப்பால் (கி.மு 733 - 732) பாலஸ்தீனா நாட்டின் வட பகுதியில் உள்ள கலிலேயாவும், அதை அடுத்துள்ள சபுலோன், நெப்தலீம் நாடுகளும் அழிவுக்கு உள்ளாயின. மக்கள் பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் விடுதலை வேண்டித் தவித்தனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எசாயாவின் இறைவாக்கு அமைந்துள்ளது. "எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே "யூதாவைச் சூழ்ந்திருந்த வேளையில் (எசா. 8:22; 9:11) இருளில் ஒளிபோல் அமைகிறது "ஆண்டவரின் நாள்" பற்றிய இவ்விறைவாக்கு. இது ஆகாசின் மகன் எசேக்கியா மேல் ஏற்றிக் கூறப்பட்டது, எனினும், எசாயா எதிர்பார்த்த இப்புதுயுகம் இறை இயேசுவில் நிறைவேறியுள்ளதாக மத்தேயு கூறுகிறார் (4:13).

உலகின் ஒளி

பாவ இருளில் அமிழ்ந்திருக்கும் மக்களுக்கு ஒளியாக வருபவர் இயேசு. "அவர் இருள் அகற்றும் ஒளி" (லூக் 2: 32). இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போருக்கு ஒளிகாட்ட வானினின்று எழுந்த இளஞாயிறு இயேசு (லூக். 1: 79; சக். 3: 8; 6 : 12). அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது." ஆதலால், 'தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்' (எபே. 5: 14). இயேசுவாம் ஒளியைக் கண்ட மகிழ்ச்சியிலே உலகைவிட்டுச் செல்லவும் தயாராகிறார் சிமியோன் (லூக். 2: 32). கிறிஸ்துவின் வருகையால், பட்ட மரமாகிய ஆன்மா ஒளிபட்டுத் துளிர்க்கிறது. "என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" (யோ. 8: 12). நீங்கள் உலகின் ஒளி; மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது... வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒளி தரும் பொருட்டு விளக்குத் தண்டின் மீது வைப்பார்கள். அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்தில் உள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்துப்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக (மத். 5:14 16) என்பது ஆண்டவரின் அன்புக் கட்டளை. கிறிஸ்துவின் ஒளியை நான் பிரதிபலித்து மற்றவர்களின் வழியை ஒளிர்விக்கும் ஒளியாக விளங்கு கின்றேனா? என் வழியாக ஏனையோர், இயேசுவாம் பேரொளியைக் காண்கின்றனரா?
''ஏதும் தெரியாது எனை மறைத்த வல்இருளை
நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையா?"
(தாயுமானவர்)
மகிழ்ச்சியூட்டும் ஒளி

வைகறையில் பறவைகள் மகிழ்ச்சியால் சிறகடித்துப் பறக்கின்றன; மொட்டுகள் சூரியனை கண்ட மகிழ்ச்சியால் மலர்கின்றன. வைகறை நாதங்கள் மகிழ்ச்சியால் எழுகின்றன. ஒளிதான் வாழ்வின் உயிரோட்டம். இறை இயேசுவாகிய ஒளி உள்ள இடத்தில்தான் மகிழ்ச்சியின் நிறைவைக் காண முடியும். "விதையை எடுத்துச் செல்லும்போது அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது அக்களிப்போடு வருவார்கள்" (9:3; திபா. 126 : 6); இது எதிர்பாராது அளவற்ற செல்வம் கிடைத்தவன் அடையும் மகிழ்ச்சி, தோள்மேல் சுமத்தப்பட்ட பெரிய பாரச் சுமையை இறக்கி வைத்தவன் கொள்ளும் மகிழ்ச்சி போன்றது. இது இயேசு கொண்டுவரும் இன்பப் பெருக்கு. ஆவியானவரால் தூண்டப்பட்டு எழும் மகிழ்ச்சியாய் (கலா. 5 : 22), ஆண்டவரில் நாம் அடையும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் (பிலி 4: 4 5). இறை இயேசுவில் நான் நிறைவு காண்கிறேனா? மற்றவர் வாழ்வில் மகிழ்ச்சியூட்டும் ஒளி விளக்காக விளங்குகின்றேனா?

இருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்.
இரண்டாம் வாசகம்: 1கொரி. 1:10-13-17

அன்றைய உலகின் புகழ் பெற்ற கொரிந்து நகரில் பவுல் சுமார் ஒன்றரை ஆண்டுகள் தங்கி மக்களை மனந்திருப்பினார். ஒழுக்கம் குன்றிய இந்நகரில் பவுல் திருச்சபையை நிறுவியது வியப்புக்குரியதேயாகும். பவுலைத் தொடர்ந்து அப்பொல்லோ அங்குச் சென்று போதித்தார்; வேறு பணியாளர்களும் சென்றனர். கொரிந்திய கிறிஸ்தவர்கள் போதனையை மறந்து போதகர்களைப் பற்றிக்கொண்டனர். இதன் பயனாக பணியாளர்களின் பெயரால் பல கட்சிகள் தோன்றின. வேறுசில பிரச்சனைகளும் உருவாயின (7 -1). இவற்றிற்கு விடிவு காணும் வகையில் கொரிந்தியர்களுக்குத் தன் முதல் திருமுகத்தை வரைந்தார். இன்றைய வாசகத்தில் கட்சிகளைக் கடிந்து, அனைவரையும் கர்த்தரில் இணையும்படி தூண்டுகிறார்.
கிறிஸ்துவில் - கிறிஸ்துவால் ஒன்றிப்பு

நாம் அனைவரும் ஒரே மனித இயல்பைக் கொண்டவர்கள்; ஒரே ஆதிப்பெற்றோரிடமிருந்து வந்தவர்கள்; இவற்றிற்கு மேலாகக் கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்று, ஒரே தெய்வீக வாழ்வை வாழ்பவர்கள். எனவே நாம் அனைவரும் உண்மையிலேயே சகோதரர்கள். கிறிஸ்து என்ற பெயர் ஆற்றல் மிக்கது. தீராத நோய்களையும் தீர்த்து வைத்த அவர் (திப. 3 : 6) ஒற்றுமை இன்மையாகிய ஆன்மீக நோயையும் தீர்த்து வைக்க முடியும். எனவேதான் பவுல் கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறார்
.

"ஒரே மனமும் ஒரே கருத்தும்" கொண்டிருப்பதே (10) உண்மையான ஒன்றிப்பாகும். மனம் சிந்திக்கிறது. சிந்தனை கருத்தாக உருவெடுக்கிறது பிறகு சொல்லாக, செயலாகப் பரிணமிக்கிறது. உள் வாழ்விலிருந்து தோன்றும் ஒன்றிப்பே நீடிக்கும். ஒரே மனமும், ஒரே கருத்தும்கொண்டு வாழ்கின்றோமா? மொழி, சாதி, இனம் என்ற அடிப்படையில் சமுதாயத்தில் பிளவுகளுக்கு நாம் காரணமா?
பல்வேறு கட்சிகள்

பிற மறையினருக்கு நற்செய்தியை அறிவித்து அவர்களை மனந்திருப்பிய பெருமை பவுலுக்கு உண்டு. எனவே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் நாங்கள் பவுல் கட்சி என்றனர் (12). அப்பொல்லோ யூதர் - அறிஞர் - மறைநூல் வல்லுநர் நாவலர் (திப. 18:24 - 25). எனவே கற்றோரும் தத்துவ ஞானிகளும். "நாங்கள் அப்பொல்லோ கட்சி என்றனர். பேதுரு பெயரிலும் "கேபா கட்சி இருந்தது. இக்கட்சி மனப்பான்மை சண்டை சச்சரவுகளில் வெளிப்பட்டது. "ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்கிறார் பவுல் (கலா. 5 : 20 - 21). கொரிந்திய திருச்சபையில் அன்று தோன்றிய பிளவு மனப்பான்மை இன்னும் விரிந்து பல்வேறு பிரிவினை சபைகளாகப் பரிணமித்துள்ளது. கிறிஸ்துவோடு நட்புறவு கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் (1: 9); கிறிஸ்து ஒருவரே (8 : 6); அவரது உடலாகிய திருச்சபையும் ஒன்றுதான். எனவே பவுல் கூட்டம் வழிபடும் கிறிஸ்து என்றோ, அப்பொல்லோ குழுவினர் வழிபடும் கிறிஸ்து என்றோ பிளவுபட்ட கிறிஸ்துவைத் தேடுவது கிறிஸ்துவைக் கூறுபோடுவதற்குச் சமம். திருச்சபையை உடைப்பதற்கு சமம். கிறிஸ்துவின் செபத்தை நமதாக்குவோம்.

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும், நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்" (யோ.17:21).

நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழுங்கள்.
நற்செய்தி: மத். 4:12-23

இருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்: இறைவாக்கினர் எசாயா, மெசியா வருகையினால் மக்கள் காணும் மீட்பை அறிவித்தார் (9:1-2). இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட மீட்பை எதிர்பார்த்திருந்த பக்தர் சிமியோன் இவ்வொளியை இயேசுவில் கண்டுகொண்டார்.

இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" (லூக். 2:32).

இருளுக்கும் ஒளிக்கும் நடக்கும் தொடர் போராட்டத்தில் அதாவது நீதிக்கும் - அநீதிக்கும் ... உண்மைக்கும் பொய்மைக்கும் ஏற்படும் போராட்டத்தில் - ஒளியே வெல்லும் என்பதை திட்டவட்டமாக இயேசு கூறுகிறார்:

நானே உலகின் ஒளி... என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான்;
உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்" 8 -12

இன்றைய வரலாற்றிலும், நம் சமுதாயத்திலும் இருள் சூழ்ந்திருப்பதைக் கண்டு மருள்கின்றோம்.

திருப்பாடல் ஆசிரியர் பாடல் நமக்குத் தெம்புவூட்டுகிறது. "நான் இருள்சூழும் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமே இல்லை... ஆம் இறுதி இருளான சாவும் உயிர்ப்பின் ஒளியில் விடுதலை கண்டுவிட்டது. இந்திய மக்களின் விடுதலை மன்றாட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பாடப்பட்ட பிரகாதரண்ய உபநிடத செபம் நம்மை அழைக்கிறது.

"பொய்மையினின்று மெய்மைக்கும் இருளினின்று ஒளியினுக்கும் சாவினின்று வாழ்விற்கும் ...அழைத்துச் செல்வாய்!"

மனந்திரும்புங்கள்... விண்ணரசு நெருங்கிவிட்டது

இயேசு தம் பொதுப்பணியின் ஆரம்பக் கட்டத்திலே ... தம் போதனையைத் தொடங்கிய வேளையிலே ... தம் பணியின் குறிக்கோளை மக்களுக்கு இரத்தினச் சுருக்கமாக அறிக்கை இடுகின்றார். இயேசுவின் அறிவிப்பே ஒரு அழைப்பாக வருகிறது ... ஒரு கட்டளையும் பிறக்கின்றது. இயேசுவில் வெளிப்பட்டுள்ள இறை அன்பையும், அருள் இரக்கத்தையும் கண்டுகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் விடுக்கும் அழைப்பு இது.

மனந்திரும்புதல் என்பது குழந்தைகள்போல் இறையரசில் தாழ்ந்து நுழைவதாகும். "இக்குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன் (18: 3). மனந்திறந்து இயேசுவின் நற்செய்தியை ஏற்பதுவே மனமாற்றமாகிறது. இயேசு நற்செய்தியாக அறிவிப்பது விண்ணரசு நெருங்கிவிட்டது... அதாவது இயேசுவில், இறைத் தந்தையின் அருள் அன்பு மக்களை நாடி வந்துள்ளது என்பதுதான். இந்த இறை அன்பை திரும்பி ஏற்பதுவே உண்மையான மனமாற்றமாகிறது.
மனிதரைப் பிடிப்போராக்குவேன்

இயேசு சீடர்களை அழைத்ததன் நோக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார். சீடர்கள் குருவுக்குப் பணிபுரிவதே பரம்பரை மரபு. ஆனால் இயேசு சீடர்களைத் தன் உடன் உழைப்பாளிகளாகத் தம் பணியின் உரிமையாளர்களாக்க விரும்பி அவர்களை அழைக்கிறார்.

மீன்பிடிப்போர் மனிதனைப் பிடிப்போராக மாறுகின்றனர். மனிதர்களைக் கவர்ந்து அவர்களைக் கூட்டிச்சேர்க்க, புதிய சமுதாயம் அமைக்கச் சீடர்களை அழைக்கிறார்.

இன்றும் இயேசு எத்தனையோ பேரை அழைக்கின்றார். இரவெல்லாம் கண்விழித்துக் கடலில் மீன் பிடிப்பவர்போல்... கண் விழித்து மக்கள் கடலில் குதித்து அவர்களைக் கரை சேர்க்கும் மீட்புப் பணியாளர்களாக நமக்குப் அழைப்பு.

எனவே இயேசுவின் அழைப்பு (துறவற வாழ்வு) இவ்வுலகைவிட்டுத் தப்பித்து ஓடுவதற்கல்ல... மாறாக மக்களைப் பிடிப்போராக... மக்கள் மத்தியில் ஈடுபட்டு உழைக்கவே அழைத்துள்ளார்.

என் பின்னே வாருங்கள்: உங்களை மனிதரைப் பிடிப்போராக்குவேன்.
 
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே