ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

ஆண்டின் பொதுக்காலம் 2ம் ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)

 ஆண்டின் பொதுக்காலம் 2ம் ஞாயிறு  
திருப்பலி முன்னுரை

திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a)
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.


"இதோ இறைவனின் ஆட்டுக்குட்டி" என்று இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றார். திருமுழுக்கு யோவான் பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்கி நாடு, திருச்சட்டம் ஆலயம் என அனைத்தையும் இழந்து, இருளில் உழன்ற இஸ்ராயேல் மக்களுக்கு மெசியா என்னும் ஒளியை வாக்களிக்கிறார், யாவே இறைவன். நம் வாழ்வில் இருக்கும் இருளின் காரணிகளைக் களைந்து, இறைவனின் ஒளியைப் பெற அழைக்கிறது இன்றைய முதல் வாசகம். கிறிஸ்துவின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் தூய பவுல் அடிகள்.

அன்றாடம் வளர்ந்து வரும் அறிவியல் உலகில் கடவுளுக்கான இடம் குறைந்து கொண்டே வருகிறது. கடவுள் எதற்கு? என்று கேட்கும் நிலை வந்து கொண்டேயிருக்கிறது. மற்றொரு பக்கம் கடவுள் பக்தி வெறும் சடங்காக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், இயேசு நமக்கு யார்? என்ற வினாவை எழுப்புகிறது. இன்றைய வழிபாடு,

நமது பதில் என்ன? நமக்குள்ளே பயணம் செய்.. நமது பதில் வெறும் வார்த்தைகளாக இராமல் அனுபவமாக அமையட்டும். அனுபவமே சிறந்த ஆசான். இதுவே வாழ்க்கையைப் புரட்டிப்போடும். ஒவ்வொரு திருப்பலியிலும் "இதோ இறைவனின் செம்மறி" என்று சொல்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு நம் வாழ்வாலும், நம் அன்பாலும், தியாகத்தாலும் சான்று பகர்வது நம்மவர் கடமை, இயேசு நமக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஆண்டவர். இந்த உண்மையை உலகம் உணர வைப்பது திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவனின் கடமை. நாம் கிறிஸ்துவை அனுபவிக்க வேண்டும். அனுபவித்து கிறிஸ்துவை நம் வாழ்வால் வார்த்தையால் அறிக்கையிட உலகு வளர்ந்திட உழைக்க முன்வருவோம். இருளாக நம்மை போர்த்தியுள்ள வெறுப்பு, பகைமை, கோபம், பேராசை போன்றவைகளை நீக்குவோம். அன்புப் போர்வையால் நம்மை மூடி பாசம் பண்பு, கருணை, இரக்கம் இவைகளால் நம்மை நிரப்புவோம். இதற்கான அருளை வேண்டியவர்களாக பலியில் இணைவோம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1) அன்பின் ஆண்டவராகிய இயேசுவே!
நீர் எங்களுக்கு மட்டுமல்ல உலகின் அனைத்து மக்களுக்குமே ஆண்டவர் என்பதை உணர்ந்து, எங்களது வார்த்தையால், வாழ்வால் அறிக்கையிடவும், மக்களும்: நீரே உண்மையான கடவுள் என்பதை தங்களது வாழ்வின் நிகழ்வுகளில் கண்டு கொள்ளக்கூடிய ஞானத்தைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

2) அன்புத் தந்தையே இறைவா!
இன்றைய முதல் வாசகத்தில் நாங்கள் அனைவரும் உமது பார்வையில் மதிப்புப் பெற்றவர்கள் என்பதை இறைவாக்கினர் எசாயா வாயிலாக உணர்த்தினீர், எங்கள் எண்ணங்கள், சிந்தனைகள், சொற்கள், செயல்கள் மதிப்புக்குரியதாக உமது மேன்மையை வெளிப்படுத்தக் கூடியதாக. இருந்திட வரம் தந்து காக்கும்படியாக, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) எங்கள் உள்ளத்தில் குடிகொள்ளும் இறைவா!
எங்கள் உடல் தூய ஆவியானவர் குடிகொள்ளும் கோவில் என்பதை நாங்கள் உணர்ந்து, எங்கள் உடலை தூய்மை குலையாது பேணிக்காக்கவும், ஒருவர் மற்றவரை கடவுளின் கோவிலாக எண்ணி, வேற்றுமைகளைக் களைந்து மாண்புடன், மதிப்புடன் நடத்திட அருள்தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4) வந்து பாருங்கள் என்று அழைத்த இயேசுவே!
அன்புப்பணி புரிய அர்ப்பணித்துள்ள அனைவரும் தங்கள் வாக்குறதியில் நிலைத்து இடர்வரினும் புயல்வரிலும், உம்மைச் சிக்கெனப் பற்றிக்கொண்டு இறைவார்த்தை அருளடையாளங்கள், மாந்தர் உறவுகள் இவற்றில் எல்லாம் உமது பிரசன்னத்தை உணர்ந்து அர்ப்பண வாழ்வு வாழ அருள்புரிய வேண்டுமென்று இறiவா உம்மை மன்றாடுகிறோம்.

5) சான்று வாழ்வுக்கு அழைத்த இறைவா!
இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று உம் திருமகனைச் சுட்டிக்காட்டி தன் வாழ்வினால் சான்று பகர்ந்த தூய திருமுழுக்கு யோவானைப் போல, அன்றாட வாழ்க்கைச் சூழலில் உம் அன்புக்கும், அருளுக்கும் சான்று பகரும் இறை மக்களாக வாழ்ந்திட அருள் பொழிய வேண்டுமென்று இறைவா!  உம்மை மன்றாடுகிறோம்.




 
திருப்பலி முன்னுரை - தந்தை தஞ்சை டோமி
பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 
திருப்பலி வழிபாடு வழிகாட்டி-அறந்தாங்கி!

ஞாயிறு திருப்பலி வாசகங்கள்
எசாயா 49:3,5-6
1
கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34


இன்று பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள அறந்தாங்கி இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை புனித ஆரோக்கிய அன்னை அன்பியக் குடும்பத்தார் அன்புடன் வரவேற்கிறோம். "இதோ, கடவுளின் ஆட்டுடிக்குட்டி" என்று கூறும் திருமுழுக்கு யோவான், இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம், மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். "தூய ஆவியானவர் புறா வடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியானவரால் திருமுழுக்குக் கொடுப்பார்" என்று அடையாளம் காட்டப்பட்டவரை, "நானும் கண்டேன்" என்று பதிவுச் செய்கிறார்.
இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது.

பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார். பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை
யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என இறைவாக்கினர் எசாயா. நாம் நம் வாழ்வில் இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கம் மினிமின்ப் பூச்சிகளாகத் திகழ்கின்றோமா?  இவ்வாசகத்தின் மனதில் பதித்துச் சிந்திப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை
கொரிந்து நகர் திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராகச் சண்டையிட்டுக்கொண்ட மனிதர்களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுலடியார் அவர்களைத் "தூயவர்கள் என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமெடுப்போம் 


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.) தூய பவுலடியாரின் மடலின்படி, இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள திருச்சபைக்காகவும், திருத்தந்தை லியோ, நம் ஆயர் சகாயராஜ், மற்றஅஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினருக்காகவும் மன்றாடுகிறோம். "உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்" என்கிற இறை அழைப்பை உணர்ந்து வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.) இருளகற்றும் ஒளியே இயேசு இறைவா!
உலகின் பாவத்தைப் போக்க வந்த கடவுளின் செம்மறியாகிய உம் வழியாக அருளும் அமைதியும், இந்த உலகிற்கும், அனைத்துலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும், உலகாளும் தலைவர்களும், எம் இந்திய தேசத்தை ஆட்சி புரிவோரும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய விழுமியங்களின்படி ஆட்சி புரியவும், மக்கள் யாவரும் 'ஒரு தாய் பிள்ளைகள்' என்கிற உணர்வோடு வாழ்ந்திடவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.) ஆறுதலின் பிறப்பிடமே இயேசு இறைவா!
குழந்தைப்பருவத்திலேயே கைவிடப்பட்டோரும், குடிப் பழக்கம், ஒழுக்கக்கேட்டால் இளமையிலே, தம் வாழ்வையும், எதிர்காலத்தையும் தொலைத்தவர்களும், குடும்பத்தின் பாசமிழந்து தவிப்போரும், முதுமையில் தனிமைப்படுத்தப்பட்டோரும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோரும், அனைத்துவகையான விளிம்பு நிலை மக்களும், மனம் சோர்ந்து போகாமல், "ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்" என்கிற உத்வேகத்துடன் தொடர்ந்து போராடி, வெற்றிவாகை சூட, நீர்தாமே துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.) தாழ்ச்சியின் முழுமையே இயேசு இறைவா!
"எனக்குப் பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்" என்கிற மனத்தாழ்மையோடு நடந்துகொண்ட திருமுழுக்கு யோவானைப் போல, குடும்பம், நிறுவனம், சமுதாயம், பங்கு, திருச்சபையெனப் பல்வேறு நிலைகளில் பொறுப்பில் இருப்போர், எந்த ஒரு சூழலிலும், தங்களை முன்னிறுத்த முயலாமல், இறைவனையும் பிறரையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிற, நற்பண்புடன் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    

5.) தந்தையின் திட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என்ற இயேசு இறைவா!
இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், "உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்" என்கிற திருப்பாடல் பதிலுரையை உதட்டால் உச்சரிப்பதோடு நில்லாமல், எம்வாழ்விலும் பிரதிபலித்து, எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள கிறிஸ்தவக் கடமைகளையும், பணிகளையும், சீரிய செம்மனதுடனும், உள்ளத்து உவகையுடனும் நிறைவேற்றி, எம் இறைப்பற்றையும், பற்றுறுதியையும், வாழ்க்கையில் நிரூபிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

தந்தை தஞ்சை டோமி
 
திருப்பலி முன்னுரை - மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
பொதுக்காலம் 2ஆம் வாரம் ஞாயிறு 18 01 2026


கடவுளின் செம்மறியைக் காண ஆவலோடு ஓடி வந்திருக்கும் அன்புள்ளங்களை பொதுக்காலம் 02ஆம் ஞாயிறு திருப்பலிக்கு அன்புடனே வரவேற்கின்றோம்.

தான் படைத்த மக்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனை பலியாகக் கொடுத்த இறை தந்தையின் அன்பின் ஆழம் உணர்ந்து, அதே அன்பை நம் வாழ்விலும் பிரதிபலிக்க இப்பலியில் மன்றாடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் சிதறுண்ட மக்களை ஒன்று திரட்ட கடவுளின் ஊழியனாக இயேசு அனுப்பப்பட இருப்பதை எசாயா இறைவாக்கினர் முன்னறிவிக்கின்றார். நாமும் நம் உறவுகளிலும் சுற்றத்திலும் சமுதாயத்திலும் பல்வேறு காரணங்களால் சிதறுண்டு கிடக்கும் உள்ளங்களை ஒன்று சேர்ப்போம்.

ஆண்டவரே, உமது திருவுளம் நிறைவேற்ற இதோ நான் வருகிறேன் என்று தன்னையே முழுவதுமாக மனுக்குலத்தின் மீட்புக்காகக் கையளித்த இறை மகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உலகில் ஒளி வீசும் சுடர்களாகத் திகழ, உறவுகளை ஒன்று சேர்த்து இறையன்பின் ஆட்சியை உருவாக்க இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. இறைத்திருவுளம் நிறைவேற்ற விரைந்த எம் இறைவா!
உம் அன்பின் ஆட்சியை இவ்வுலகில் அமைக்க நீர் எமக்குத் தந்த திரு அவைப் பணியாளர்களை நிறைவாக ஆசீர்வதித்து, உம் பணியில் அவர்கள் மேற்கொள்ளும் சவால்களில் உடனிருந்து வெற்றி அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்றுதிரட்ட அனுப்பட்டவரே எம் இறைவா!
பல்வேறு மொழி பேசும் மக்களைக் கொண்டுள்ள எம் தாய் திரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களை ஆசீர்வதியும். பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளினாலும் கொள்கையினாலும் சிதறுண்டு கிடக்கும் நாட்டை முன்னேற்ற எம் தலைவர்களோடு உடனிருந்து வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்தப்பட்டவரே எம் இறைவா!
ஆற்றலோடு மாற்றம் நோக்கி என்ற இலக்கோடு பயணிக்கும் எம் இளைய தலைமுறையை உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இளைஞர் ஆண்டில் இவர்கள் எடுத்துச் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நீரே வழிகாட்டியாக இருந்து தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் பணியினைத் தொடர்ந்து ஒளிவீசித் துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உம் பிள்ளைகளாகும் உரிமையை அளித்தவரே எம் இறைவா!
குட்டித் திரு அவையாம் குடும்பங்களை ஆசீர்வதியும். குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை நிலைத்து நிற்கவும், பிள்ளைகள் பெற்றோருக்கும் பெரியோருக்கும் கீழ்படிந்து தங்கள் வாழ்க்கைப் பாதையில் உம் நெறிகளைப் பின்பற்றி வாழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

"கடவுள் அன்பாய் இருக்கிறார்!" 1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
 
மறையுரைச்சிந்தனை - Sr. Gnanaselvi (india)


ஜென் துறவி ஒருவரிடம், ஜென் ஞானம் பற்றிக் கேட்பதற்காகக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வந்தார். துறவி அவரைத் தன் உணவறைக்கு அழைத்துச் சென்று, தேநீர் பரிமாறினார். தேநீர் கோப்பையை பேராசிரியரின் முன் வைத்து, அது நிறையும்வரை, ஊற்றினார். கோப்பை நிறைந்த பின்னும் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். தேநீர் நிறைந்து மேசையின் மேல் கொட்டியது. உடனே பேராசிரியர், ஐயா! நிறுத்துங்கள்! கோப்பை நிறைந்து விட்டது. அதற்குமேல் ஒன்றும் ஊற்ற முடியாது. நீயும் நிறைந்துதான் வந்துள்ளாய். அதற்குமேல் உன்மேல் ஊற்ற முடியாது என்றார் துறவி. ஞானம் பெற்றார் பேராசிரியர்.

"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்றார், திருமுழுக்கு யோவான். எனக்குப் பின் வந்தவர் எனக்கு முன்னேயே இருந்தவர் என்று, இயேசுவைக் குறித்து சான்று பகர்கின்றார். தான் ஒரு வெற்றுக்கோப்பை எனவும், அதில் இறைவன் நிரப்ப வேண்டும் எனவும் ஆசைப்படுகின்றார். இன்றைய நற்செய்தியின் மையமாகக் இருப்பது, சான்று பகர்வதும் நாம் மற்றவர்களிடம் பேசும்போது எதையாவது பற்றி, நம்மையறியாமலே சான்று பகர்ந்து கொண்டேதான் இருக்கிறோம். மற்றவர்கள் விரும்புகின்றனரா, கேட்கின்றனரா என்பதை எல்லாம் நாம் கண்டு கொள்வதே இல்லை. நம்மேல் நமக்கு அவ்வளவு அக்கறை.

நாம் இயேசுவைப்பற்றி எந்த அளவுக்குப் பேசுகிறோம். நாம் வெறும் இறையனுபவம் நம்மைப்பாதிக்கிறதா? இயேசுவைப் பற்றி விவிலியத்தில், மறைக்கல்வி வகுப்புகளில், வழிபாடுகளில் கேட்கிறோம், படிக்கிறோம். இவையெல்லாம் மற்றவர்கள் இயேசுவைப் பற்றிச் சொல்வது. இயேசுவைப் பற்றி நான் என்ன சொல்வேன்? என் இறையனுபவம் என்ன? என்று கேள்வி கேட்க முனைந்தால், அங்கே மௌனம் மிஞ்சுகிறது. இன்று என் வாழ்வில் கடவுளின் நிலை என்ன? யோவானின் இறையனுபவம் அவரது தனிப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இன்று: ஞாயிறு திருப்பலி, கடமை அன்று என்று சொல்லிவிட்டால், நம்மில் எத்தனைபேர் ஆர்வமுடன் ஆலயம் நோக்கி விரை வர். இறையனுபவம் நம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இறையனுபவமே நம் மற்ற அனுபவங்களுக்கு ஊற்றாக அமைகிறது. இறையனுபவம் நம் வேர், நம் வேர் உறுதியாக இல்லாவிட்டால் நாம் காற்றில் ஆடும் நாணலாகத்தான் இங்கும் அங்கும் சாய்ந்து கொண்டிருப்போம். இன்று இறைவன் எனக்கு யார்? என்பது நாம் கேட்கவேண்டிய முதற்கேள்வி.

தான்சேன் என்கின்ற இசைக் கலைஞர் அக்பருடைய அவையில் இருந்தார். அவருடைய கம்பீரமான இசை அரண்மனத் தாழ்வாரங்களை எல்லாம் நிரப்பும். தான்சேனின் இசையின் பல்வேறு பரிமாணங்களில் சொக்கிய அக்பர், இவ்வளவு அழகாக நீங்களே பாடுகிறீர்களே, உங்கள் குரு எப்படிப் பாடுவார் என்பதை நான் கேட்க வேண்டும்" என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அவர் குரு ஹரிதாஸ் பாடுவதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகின்றன். அந்தப் பாட்டைக் கேட்பதற்காக அக்பரும், தான்சேனும் இசைக் கலைஞர்களைப்போல அவருடைய தோட்டத்திற்குச் சென்றார்கள். அங்கே தான்சேன் தவறான இராகம் ஒன்றைப் பாடினார். ஹரிதாஸ் இப்படியா பாடுவது என்று கடிந்து கொண்டே அதைச் சரியாகப்பாடும் விதத்தைப் பாடிக்காட்டினார். அந்த இசையின் இனிமையில் அக்பர் தன்னை மறந்தார். அவர் தான்சேனிடம் கேட்டார்: "உன்குருவைப்போல் உன்னால் ஏன் பாடமுடியவில்லை" அதற்கு தான்சேன் "நான் உங்களுக்காகப் பாடுகிறேன். அதனால் அது சாதாரணமாக உள்ளது. அவர் கடவுளுக்காகப் பாடுகிறார். அதனால் அது அபரிமிதமாக உள்ளது" என்றார்.

நாம் செய்கின்ற செயலில் நம்மை விட்டு விலக்கிவிட்டு, ஆன்மாவைச் செலுத்தி அர்ப்பணிப்புடன் செயல்பட்டோமெனில், இறைமையை எளிதில் அடையமுடியும். இறையனுபவம் உதயமாகும். இந்த இறையனுபவம் திருமுழுக்கு யோவானிடம் இருந்தமையால்தான் இயேசுவைக் கண்டு கொள்ள முடிந்தது. கடவுளின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று சுட்டிக்காட்ட முடிந்தது. ஆம் திசை மாறிய ஆடுகளை நேரிய பாதையில், சரியான பாதையில் அழைத்துச் செல்லவே, பாவங்களைப் போக்கும் செம்மறியாகவும், சுமைகளைச் சுமக்கும் மனிதராகவும், தன்னையே உட்படுத்திக் கொண்டார் இயேசு. மனித குலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. (உரோ:3:23) இப்படிப்பட்ட சூழ்நிலையில், இயேசு செம்மறியாக நமக்காகத் தம்மையே கையளித்தார். பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல, பாவத்திலிருந்து புனித வாழ்வு வாழ நம்மை அழைக்கின்றார். (எசா:53:56)

இன்று இறைவன் நம்மேல் இறங்கி வர எது தடையாக இருக்கிறது? "எனக்கு எல்லாம் இருக்கிறது" என்ற மனநிலையா? இல்லை "இறைவன் எனக்குத் தேவையில்லை" என்ற மனநிலையா? எது தடுக்கின்றது. நம் இதயத்தை சலவை செய்வோம்.

வெறும் திருப்பலியும், நவநாட்களும் நம் வாடிக்கையான ஒன்றாகிவிடாது. அர்த்தமுள்ள வகையில் ஈடுபாட்டுடன் முழமையான பங்கேற்பாக மாறட்டும். பலியில் இணையும் நாம், அன்றாட வாழ்வில் நிகழ்வனவற்றில் எல்லாம், நம்மை மறந்து இறைவனில் நம்மைப் பலியாக்குவோம். நமக்கு எதெல்லாம் நம்பிக்கை தருகிறதோ, அதுவே நம் கடவுள். நமக்கு எதெல்லாம் பயம் தருகிறதோ அதுவே சாத்தான். இறைமை என்பது அன்பு, நட்பு, பாசம் போன்றதொரு உணர்வு. அதை உணரத்தான் முடியும். இப்படி இருக்கும், அப்படியிருக்கும் என்று மற்றவர்கள் கூறினால் எல்லாம் அது நமக்குப் புரியாது. யோவான் உணர்ந்தார். நாமும் உணர்வோம், அனுபவிப்போம்.
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

கண்டேன் சான்று பகர்கிறேன்.

இறையேசுவில் மிகவும் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே!

பொதுக்காலத்தின் இரண்டாம் வாரத்தை தொடங்கி இருக்கும் நாம் திருமுழுக்கு யோவானைப் போல இயேசுவை அடையாளம் காண அவரைப் பற்றி சான்று பகர அழைக்கப்படுகின்றோம். இன்றைய முதல், இரண்டாம் மற்றும் நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஆழமான தொடர்புடையதாக காணப்படுகின்றது. முதல் வாசகத்தில் இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். நீயே என் ஊழியன். தாயின் கருப்பையிலிருந்தே உன்னை நான் என் ஊழியனாக தேர்ந்தெடுத்தேன் என்று அழைக்கின்றார். அவர் பார்வையில் மதிப்பு பெற்றவர்களாக, அவரை நம் ஆற்றலாக எண்ணி நாமும் நம்பிக்கை பெறுகின்றோம்.

அழைத்தலுக்கு பதில் சொல்லும் விதமாக பதிலுரைப்பாடலில் உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன் என்று நாம் பதிலளிக்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், அழைக்கப்பட்ட நமது பணி என்ன என்பதை திருத்தூதர் பவுல் அழகாக சொல்கின்றார். திருத்தூதனாக வாழ அழைக்கப்பட்ட நாம். நமது பணி ஆண்டவர் இயேசு, அனைவருக்கும் ஆண்டவர் என எடுத்துரைப்பது. அவர் தரும் அமைதியையும் அருளையும், பிறருக்கும் அளிப்பது. இவ்வார்த்தைகள் குருக்களுக்கும் துறவியர்களுக்கும் மட்டுமல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்பி ஞானஸ்ஞானம் பெற்ற நம் அனைவருக்கும் உரியது. நாம் அவர் பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள்.

நற்செய்தி வாசகத்தில், அழைக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் செயலும் இயேசுவின் செயலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. யோவான் தான் யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். இயேசு யார் என்பதையும் கண்டு கொள்கின்றார். கண்டதோடு மட்டும் நின்று விடாமல் அதைக்குறித்து சான்றுபகர்கின்றார். கிறிஸ்தவர்களாகிய நாமும் பிறப்பின் வழி அழைக்கப்பட்டோம். ஞானஸ்ஞானத்தின் வழி வாழ பதில் கொடுத்தோம். அத்தோடு நாம் நின்று விட்டோம். தொடர்ந்து கிறிஸ்தவ பணி செய்யவோ, நாம் யார் என கண்டு கொள்ளவோ இயேசுவை கண்டு கொள்ளவோ நாம் முயற்சிப்பதில்லை.

இந்நிலை மாற இறைவனிடம் அருள் வேண்டுவோம். பல நேரங்களில் நம் பார்வை அகலமாவதே இல்லை கடிவாளம் கட்டிய குதிரை போல நேரில் இருப்பதை மட்டும் பார்க்கிறோம் இல்லையென்றால் கீழே பார்க்கிறோம்.இல்லாவிடில் நமக்கு விருப்பமானவற்றை மட்டும் பார்க்கிறோம். யோவான், இயேசு யாரென்று அறியாதிருந்தார். பின் அறிந்து கொண்டார். அவர் பார்வையை அகலப்படுத்தினார். தூய ஆவி புறா வடிவில் இயேசு மேல் வந்து தங்குவதைக் கண்டார். அதை பிறருக்கும் வெளிப்படுத்தினார். நாம் பல நேரங்களில் காண்பதில்லை . கண்டாலும் பிறருக்கு சான்று பகர்வதில்லை. வேண்டுதல்கள் செய்கின்றோம் இறைவன் ஏதாவது நமது வாழ்வில் புதுமை நிகழ்த்த மாட்டாரா என்று? நன்மைகள் நடந்தால் அந்த மகிழ்வில் இறைவனை மறந்து விடுவது . மீண்டும் துயரம் வரும்போது அவரிடம் வேண்டுவது. நம் வாழ்வில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை நாம் பிறரிடம் எடுத்துரைக்கும் போது நமது மகிழ்வும் இரட்டிப்பாகும். நம்மால் பிறரும் இறை நம்பிக்கையில் வளரும் வாய்ப்பு பெறுவர்.

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. அதற்கு நாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே அவற்றின் தன்மை நிலைத்து நிற்கும். ஒரு சிறிய கதை ஒரு தேநீர் விடுதியில் மக்கள் பலர் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தனர். மாலை நேரம், அவர்களுக்குள் மகிழ்வாக கலகலப்பாக அப்பொழுதினை கழித்துக் கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு எட்டுக்கால் பூச்சி எங்கிருந்தோ வந்தது. அமைதியாக இருந்த அவர்கள் மனது சஞ்சலத்திற்கு உள்ளானது. ஒரு இளம்பெண் கத்திய சத்தத்தில் தேநீர் விடுதியே அல்லோலப்பட்டது. ஒருவர் பின் ஒருவராக அனைவரின் கூச்சல் கூப்பாடு சப்தம் என இருந்த இடமே அதிர்ந்தது. பணியாளர் ஒருவர் வந்தார். சூழ்நிலையைப் பார்த்தார். எந்த சஞ்சலமும் இல்லாமல் அதை தன் கையால் எடுத்து வெளியே போட்டுவிட்டு தன் பணியை தொடர்ந்தார். மீண்டும் சிறிய சலசலப்புக்கு பின் இயல்பு நிலை திரும்பியது.

எட்டுக்கால் பூச்சி ஒன்று தான் ஆனால் அதை பார்த்தவர்களின் மனநிலை தான் வேறுபட்டிருந்தது. ஒருவருக்கு இடையூறாக இருப்பது மற்றவருக்கு சுலபமாக தெரிகிறது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட மனிதர்கள் நாம், நம்மை அந்த சுண்டு விரல் அளவு பூச்சி என்ன செய்துவிடும் என்று எண்ணினாலே போதும் . அதை எதிர்க்கும் பலம் நமக்கு கிடைத்துவிடும்.

நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் இது போல தான் . நமது நம்பிக்கை மலையளவு இருந்தாலும் கடுகளவு துன்பம் வந்ததும் நமது பலத்தை நாம் மறந்து விடுகின்றோம். பிறரது அவநம்பிக்கை கண்டு அவநம்பிக்கை கொள்ளும் நாம், ஏன் நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கை முறை பார்த்து நமது நம்பிக்கையை வளர்க்கக்கூடாது? நன்மையை விட தீமைக்கு பலம் அதிகம் என்று சொல்லி சொல்லி நன்மையின் தரத்தை நாமே அழித்துவிட்டோம். தீமையை விட நன்மைக்கே பலம் அதிகம் என்று சொல்லி பழகுவோம். நம் கண்ணெதிரே காணும் நல்லவைகளை மட்டும் சொல்லி மகிழ்வடைவோம். நன்மையைக் காண்போம் நன்மையில் இயேசுவைக் காண்போம் அதைக்குறித்து சான்று பகர்வோம். நனமையின் நாயகன் என்றும் எப்போதும் நம் முன் நடமாடுவார் . நல்லதை நினைப்போம் நலமுடன் வாழ்வோம் நல்ல எண்ணங்கள் நன்மையைத் தரும். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்.

 


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
இரு கேள்விகள்

பாரக் ஒபாமா அவர்களின் துணைவியார் திருமதி. மிஷல் ஒபாமா அவர்கள் எழுதி புகழ்பெற்ற நூல், 'பிகமிங்' என்பது. குழந்தைகளிடம் நாம், 'நீ வயது வந்தபின் என்னவாகப் போகிறாய்?' எனக் கேட்கிறோம். ஆனால், வயது வந்தவர்களிடம், 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?' என்று மட்டுமே கேட்கிறோம். குழந்தைப் பருவம் மட்டும்தான் மாற்றத்தின் பருவம் என்றும், வயது வந்த பருவம் இருத்தலின் பருவம் எனவும் நினைக்கிறோம். இது தவறு! நாம் ஒவ்வொரு பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறோம் - 'வி ஆர் பிகமிங் எவ்ரி மொமண்ட்' - இப்படியாக எழுதுகிறார் மிஷல்.

நாம் எப்படி மாறுகிறோமோ அதுவேதான் நம்முடைய இருத்தலாக இருக்கின்றது என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. வரலாற்றில் பெரிய முத்திரை பதித்த யாரை எடுத்தாலும் - மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பெருந்தலைவர் காமராஜர் போன்றோர் - இவர்கள் தங்களுடைய வாழ்வில் இரண்டு கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருந்தனர்: ஒன்று, 'நான் யார்?' இரண்டு, 'நான் யாருக்காக?' இக்கேள்விகளில், 'நான் யார்?' என்பது ஒருவருடைய வேர் என்றால், 'நான் யாருக்காக?' என்பது அவருடைய கிளை என்று சொல்லலாம். இந்த இரண்டு கேள்விகள் கேட்பதும் ஒருவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

உளவியல் மற்றும் மெய்யியலில் அதிகமாக வலியுறத்தப்படும் கேள்வி, 'நான் யார்?' என்பதுதான். இதற்கு விடையாக நாம் நம்முடைய பெயர், ஊர், பெற்றோர், குடும்ப பின்புலம், படிப்பு, வேலை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம். மெய்யிலாளர் சாக்ரடிசு, 'உன்னையே நீ அறிந்துகொள்!' என்றார். ஆனால், இதிலிருந்து புறப்பட்டு, 'நீ யாருக்காக என்பதை அறிந்துகொள்!' என்பதில்தான் மெய்ஞ்ஞானம் இருக்கிறது. இந்த மெய்ஞ்ஞானத்தை நோக்கியே கீழைத்தேய ஞானம் இருந்தது.

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற ஊக்கவுரையில், இளைஞர்களின் பாதைகளைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'இளைஞர்கள் தங்களுடைய வாழ்வைச் சீராக அமைத்துக்கொள்ள இவ்விரு கேள்விகள் கேட்பது அவசியம்: 'நான் யார்?' அதைவிட, 'நான் யாருக்காக?'' என்கிறார். இக்கேள்விகளுக்கு விடைகள் காணும் இளைஞர்களே வெற்றியாளர்கள்.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் நாம் சந்திக்கும் மூன்று நபர்கள் - எசாயா, பவுல், இயேசு - இக்கேள்விகளுக்கு விடை தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 49:3,5-6), முதல் பகுதி இஸ்ரயேல் மக்களைப் பார்த்துக் கடவுள் பேசுவதாகவும், இரண்டாம் பகுதி இறைவாக்கினர் அல்லது இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய அழைப்பு பற்றி தாங்களே பேசுவதாகவும் அமைந்துள்ளது. இஸ்ரயேல் அல்லது இறைவாக்கினர் யார்? 'அவர் ஊழியன். கருப்பையிலிருந்து ஊழியனாக உருவாக்கம் பெற்றவர். ஆண்டவர் பார்வையில் மதிப்பு பெற்றவர். ஆண்டவரைத் தன் ஆற்றலாக் கொண்டவர். இவர் யாருக்காக? யாக்கோபின் குலங்களுக்காக, இஸ்ரயேலில் சிதறடிக்கப்பட்டவர் களுக்காக. இறைவாக்கினர் தன்னுடைய முதல் கேள்விக்கு விடை கண்டதால், இரண்டாம் கேள்விக்கும் எளிதாக விடை காண்கின்றார். 'நான் யார்?' என்று அறிந்துகொண்ட அடுத்த நொடி, 'நான் யாருக்காக?' என்பதை அறிந்து தொடர்ந்து தன் பணியைச் செய்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:1-3) புனித பவுல் கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதும் முதல் திருமடலின் தொடக்கமாக இருக்கிறது. வருகின்ற ஏழு வாரங்கள் தொடந்து நாம் இத்திருமுகத்திலிருந்தே வாசிப்போம். பவுலைப் பொருத்தவரையில் கொரிந்து நகரத் திருச்சபை அவருக்கு 'அடங்காத குழந்தை.' கொரிந்து நகரத் திருச்சபையில் விளங்கிய பிளவுகள், பரத்தைமை, சிலை வழிபாடு, வழிபாட்டுப் பிறழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கேள்விப்படுகின்ற பவுல் அவர்களைக் கடிந்தும், அறிவுறுத்தியும் இம்மடலை எழுதுகின்றார். கடிந்துரைக்கும், அறிவுறுத்தும் இம்மடலை மிகவும் இனிமையான வார்த்தைகளால் தொடங்குகிறார்: 'கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு ... திருத்தூதனாக அழைக்கப்பட்ட ... இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்று, தூயோராக்கப்பட்டு, இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கு ...' பவுலின் வார்த்தைகளில் கோபமோ, மனவருத்தமோ, உளக்கசப்போ இல்லை. இத்தொடக்க வார்த்தைகளில் தான் யார் என்பதையும் தன்னுடைய பணி யாருக்கு என்பதையும் தெளிவாக உரைப்பதோடு, கொரிந்து நகர மக்கள் யார் என்பதையும் அவர்களுடைய பணி யாருக்கு என்பதையும் எடுத்துரைக்கின்றார். பவுல் யார்? திருத்தூதர். பவுல் யாருக்காக? கடவுளின் திருச்சபைக்காக, கடவுளுக்காக. கொரிந்து மக்கள் யார்? இறைமக்கள், தூயவர்கள். இவர்கள் யாருக்காக? கிறிஸ்துவுக்காக.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 1:29-34), இயேசு தன்னிடம் வருவதைக் கண்ட திருமுழுக்கு யோவான், 'அவர் யார்?' என்பதையும் - 'கடவுளின் செம்மறி', 'அவர் யாருக்காக?' - 'உலகின் பாவத்தைப் போக்க' என்பதையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகின்றார். இங்கே 'செம்மறி' என்ற உருவகம், பாவக்கழுவாய்க்குப் பயன்படுத்தப்படும் பலி ஆட்டையோ, அல்லது போக்கு ஆட்டையோ, அல்லது பாஸ்கா திருநாளன்று கொல்லப்படும் ஆட்டுக்குட்டியையோ குறிக்கும். மேலும், இப்பகுதியில் தான் யார் என்பதையும், தான் யாருக்கு என்பதையும் திருமுழுக்கு யோவானும் தெளிவாக உணர்ந்திருப்பதை நாம் காண்கின்றோம்.

இந்தக் கேள்விகளை நம் வாழ்வோடு எப்படி பொருத்திப் பார்ப்பது? இன்றைய நாளில் நாம் அறுவடைத் திருநாளாகிய பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இது தமிழர்களின் புத்தாண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. நாம் பானையில் இடும் அரிசியும், தண்ணீரும், சர்க்கரையும் பொங்கலாக மாறுகின்றன. தங்கள் இருத்தலால் அல்ல, தங்களுடைய மாற்றத்தால்தான் அவை புதிய வடிவமும், இனிமையும் பெறுகின்றன.

'நான் யார்?' என்னும் கேள்வியிலிருந்து, 'நான் யாருக்காக?' என்னும் கேள்விக்கு நகர்ந்து செல்வது ஒரு பயணம். அந்தப் பயணத்தின் அடிப்படையாக இருப்பது மாற்றம். நம் வாழ்வில் பல நேரங்களில், 'நான் யார்?' என்ற கேள்வியைக் கேட்டிருப்போம். ஆனால், 'நான் யாருக்காக?' என்று நான் என்னையே கேட்கும் அத்தருணத்தில்தான் என்னுடைய வாழ்வு மாற்றம் பெறுகிறது.

இக்கேள்விகளுக்கான விடை மூன்று நிலைகளில் வரலாம்:

(அ) இறைவனிடமிருந்து
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அல்லது இறைவாக்கினர் எசாயாவுக்கு இக்கேள்விகளின் விடைகள் இறைவனின் வெளிப்பாட்டிலிருந்து வருகின்றன. ஆண்டவராகிய கடவுள்தாமே அவருக்கு இவற்றை வெளிப்படுத்துகின்றார். மேலும், ஆண்டவரின் வாக்குறுதிகள் எதிர்கால வாக்குறுதிபற்றியதாகவும் இருக்கின்றன.

(ஆ) தன் குழுமத்திலிருந்து
இரண்டாம் வாசகத்தில் பவுல் இக்கேள்விகளுக்கான விடைகளைதத் தன்னுடைய இலக்கு மக்களாகிய கொரிந்து நகரத் திருச்சபையிடமிருந்து பெற்றுக்கொள்கின்றார். தன்னுடைய குழுமத்தின்மேல் கோபமோ அல்லது மனத்ததாங்கலோ கொள்ளாமல் மிகவும் மனமுதிர்ச்சியோடு தேடுகின்றார் பவுல்.

(இ) தன் சகோதரர் அல்லது நண்பர்களிடமிருந்து
நற்செய்தி வாசகத்தில் இயேசு யார் என்ற அடையாளமும், அவர் யாருக்காக என்பதற்கான விடைகளும் திருமுழுக்கு யோவனிடமிருந்து வருகின்றன.

இன்றைய நாளில், நாம் இவ்விரண்டு கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்: 'நான் யார்?' 'நான் யாருக்காக?'

கேள்விகளுக்கு விடை கண்டவுடன் மாற்றம் நோக்கி நாம் புறப்படுதல் வேண்டும். அது எப்படி சாத்தியம்?

(அ) நம் அடித்தள அனுபவம்
அடித்தள அனுபவம் என்பது நம்மைப் புரட்டிப் போடுகின்ற, முழுமையாக மாற்றுகின்ற அனுபவம். 'ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன்' என்னும் இவ்வார்த்தைகளை இறைவாக்கினர் அடிமைத்தனத்தின் தளத்தில் நின்று மொழிகின்றார். அதாவது, தான் அடிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும், வெறுத்து ஒதுக்கப்பட்டாலும் தன் மதிப்பு ஆண்டவரின் பார்வையில் உள்ளது என அறிதலே இறைவாக்கினரின், இஸ்ரயேல் மக்களின் அடித்தள அனுபவம். இன்று பல நேரங்களில் நாம் அடித்தள அனுபவங்களை நபர்கள் அல்லது இடங்கள்மேல் வைக்கின்றோம். இவை சில நேரங்களில் மாறலாம், மறைந்து போகலாம். ஆனால், ஆண்டவரை அடித்தளமாகக் கொண்ட அனுபவம் நிலைத்து நிற்கிறது.

(ஆ) எதிர்வினை ஆற்றுதல் குறைத்தல்
நாம் பல நேரங்களில் நமக்கு வெளியே இருக்கும் சூழல் அல்லது நபர்களுக்கு ஏற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்ள நினைக்கின்றோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்துமாறு அனுமதிக்கிறோம். அப்படி அனுமதித்தால் நாம் வெளிப்புற நிகழ்வுகள்மேல்தான் கவனம் செலுத்துவோம். நமக்கு வெளியே இருக்கும் பல நிகழ்வுகளை நபர்களை நம்மால் கட்டுப்படுத்த இயலாது. அப்படிக் கட்டுப்படுத்த நினைப்பது நம் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கும். தான் நற்செய்தி அறிவித்த கொரிந்து நகரத் திருஅவையின் பிரச்சினைகள் பவுலுக்கு நெருடலாக இருந்தாலும், அவை தன் மேல் தாக்கத்தை ஏற்படுத்த அவர் அனுமதிக்கவில்லை. தன் திருத்தூதுப் பணியை அவர் தொடர்ந்து செயலாற்றினார்.

(இ) நம்பிக்கைப் பார்வை
தன் முன்னே நின்ற ஒரு நபரை 'இயேசு-செம்மறி-இறைமகன்' என்னும் மூன்று சொற்களால் மொழிகின்றார் திருமுழுக்கு யோவான். மற்றவர்கள் எல்லாம் நாசரேத்து இயேசு எனக் கண்டறிந்த ஒருவரை, இறைமகனாகக் காண்கின்றார் யோவான். இதுவே அவருடைய நம்பிக்கைப் பார்வை. 'நான் இப்படி இருப்பேன்' என்னும் நம்பிக்கைப் பார்வையே நம் இலக்குகளை நோக்கி நம்மை வேகமாக நகர்த்துகின்றது. இயேசுவும் தன் இலக்கை அறிந்தவராகவும் அதை நோக்கி நகர்பவராகவும் இருக்கிறார்.

இக்கேள்விகளுக்கான விடைகள் தெரிந்தால், 'உமது திருவுளம் நிறைவேற்ற நானும் வருகிறேன் ஆண்டவரே' (காண். திபா 40) என்று திருப்பாடல் ஆசிரியர் போல (இன்றைய பதிலுரைப்பாடல்) நாமும் அவரிடம் சரணாகதி அடைய முடியும். இக்கேள்விகளுக்கான விடைகளில் அவருடைய உடனிருப்பும் உற்சாகமும் நிறைய இருக்கும்.
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
"கண்டேன்; சான்றும் கூறிவருகின்றேன்"

இராணுவ வீரனின் சான்று:
கிறிஸ்தவ இளைஞன் ஒருவன் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் தன்னுடைய வீட்டில் இருக்கும்போது, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாகத் திருவிவிலியத்திலிருந்து ஓர் அதிகாரத்தை வாசித்துவிட்டுத்தான் தூங்குவான்.

'இங்கே இந்த இராணுவ முகாமில், வீட்டில் இருந்தபோது திருவிவிலியத்தை வாசித்தது போன்று வாசிக்கலாமா? அப்படி வாசித்தால் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கக்கூடுமோ?' என்று அவனுக்குச் சிறிது பதற்றமாக இருந்தது. இருந்தாலும், அவன் மனத்தில் துணிவை வரவழைத்துக் கொண்டு திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கினான். சுற்றி இருந்தவர்கள் அவனை ஒரு மாதிரிப் பார்த்தார்கள்; அவனைப் பற்றி முணுமுணுத்தார்கள். ஆனாலும், யாரும் அவனிடம் வந்து, எதுவும் கேட்கவில்லை. இப்படி முதல் நாள் முடிந்தது.

இரண்டாம் நாள் இரவு அவன் திருவிவிலியத்தை வாசிப்பதற்கு முழந்தாள் படியிட்டபோது, அவனுடைய கண்களை அவனால் நம்ப முடியவில்லை. ஏனெனில், அவனைப் போன்று, அதே இராணுவ முகாமில் இருந்த எட்டு இராணுவ வீரர்கள் முழந்தாள் பட்டியிட்டுத் திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கினார்கள். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றுதான் இவர்கள் திருவிவிலியத்தை வாசிக்கக்காமல் வைத்திருந்தார்கள் போலும்; இப்போது என்னைப் பார்த்துவிட்டு இவர்கள் திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஆண்டவருக்கு நன்றி' என்று அவன் தனக்குள் சொல்லிக்கொண்டு, திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கினான். அன்றைய நாளில் முந்தைய நாளில் இருந்த எந்தவொரு முணுமுணுப்பும் இல்லை.

மூன்றாம் நாள் இரவு அவன் முழந்தாள் படியிட்டுத் திருவிவிலியத்தை வாசிக்கத் தொடங்கியபோது, அவனைச் சூழ்ந்து ஒருசிலர் அமர்ந்து கொண்டு, "இது என்ன நூல், இந்த நூலில் உள்ளதைப் பற்றி எங்களுக்கு எடுத்துரைக்க முடியுமா?" என்று ஆர்வமாய்க் கேட்டார்கள். அவனும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துரைத்தான். இதனால் அந்த இராணுவ முகாமில் இருந்த பெரும்பாலான இராணுவ வீரர்கள் கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொண்டார்கள்.

'மற்றவர்கள் முன்பாகத் திருவிவிலியத்தை வாசித்தால், அவர்கள் என்ன நினைக்கக்கூடும்!' என்று நினைத்து, இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்தவ இளைஞன் அஞ்சவில்லை. மாறாக, அவன் துணிவோடு எல்லார் முன்பாகவும் திருவிவிலியத்தை வாசித்துப் பலரும் இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளக் காரணமாக இருந்தான். பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் அறிந்த இயேசு கிறிஸ்துவை அடுத்தவருக்கும் அறிவிக்கவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

திருமுழுக்கு யோவான் என்னும் சுட்டுவிரல்
மெசியாவாம் ஆண்டவர் இயேசுவுக்காக மக்களைத் தயாரித்து, திருவருகைக் காலத்தில் ஒரு கதாநாயகனைப் போன்று விளங்கியவர் திருமுழுக்கு யோவான். அவர் திருவருகைக் காலத்தோடு நின்றுவிடாமல், பொதுக் காலத்தின் தொடக்கத்தில் ஒருசில வாரங்கள் வருகின்றார். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இறுதி இறைவாக்கினர், பாலைநிலத்தில் ஒலித்த குரல், பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் ஒன்றிணைப்பவர் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படும் திருமுழுக்கு யோவான், மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்ததோடு தன்னுடைய பணி முடிந்துவிட்டது என்று மனநிறைவடைந்து விடவில்லை. மாறாக, அவர் மெசியா வந்தபோது, அவரை மக்களுக்குச் சுட்டிக்காட்டும் சுட்டுவிரலாகச் செயல்படுகின்றார்.

இயேசுவின் வருகைக்கு முன்பாக ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் இஸ்ரயேலில் எந்தவோர் இறைவாக்கினரும் தோன்றாதபோது, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குக் கொடுத்துக்கொண்டிருந்த திருமுழுக்கு யோவானைப் பார்த்துவிட்டு, மக்கள் அவர் மெசியாதான் என்று நினைத்தார்கள். அதை அவர் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை மெசியா என்று பிரகடனப்படுத்தவில்லை. மாறாக அவர், "நான் மெசியா அல்ல" (யோவா 1:l19) என்கிறார். இன்றைய நற்செய்தியில் அவர், "இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தவே நான் வந்துள்ளேன்" என்கிறார். தொடர்ந்து, "என்னை அனுப்பியவர், 'தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ, அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்" என்கிறார்.

தாய் தன் பிள்ளையிடம், "இவர்தான் உன் தந்தை" என்று சுட்டிக்காட்டாவிட்டால், தன் தந்தை யாரெனப் பிள்ளைக்குத் தெரிய வாய்ப்பில்லை. அந்த வகையில், தான் அறிந்த இயேசுவை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, அவரைப் பற்றிச் சான்று பகர்ந்த வகையில், திருமுழுக்கு யோவான் நமக்கு ஒரு முன்மாதிரி.

இயேசு அனைவருக்கும் ஆண்டவர்
நாம் அறிந்த இயேசுவைத் திருமுழுக்கு யோவானைப் போன்று மக்களுக்கு எடுத்துரைத்து, அவரைப் பற்றி நாம் ஏன் சான்று பகரவேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம். இதற்கான பதில் இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் இருக்கின்றது.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், "இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்" என்கிறார். இயேசு அனைவருக்கும் ஆண்டவர் என்பதை எண்பிக்கும் வகையில்தான் நாம் கடந்த ஞாயிறு அன்று, ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இயேசு அனைவருக்கும் ஆண்டவராக இருக்கும்போது, அவரைப் பற்றி அனைவருக்கும் அறிவிப்பதுதானே முறை. ஏனெனில், பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்வதுபோல், "அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும்" (உரோ 10:17). ஆதலால், அனைவருக்கும் ஆண்டவரான இயேசுவை அனைவருக்கும் எடுத்துரைத்து, அவருக்குச் சான்று பகர்வோம்.

நம் வழியாய் மாட்சியுறும் ஆண்டவர்
இயேசு அனைவருக்கும் ஆண்டவராய் இருப்பதால், அவரைப் பற்றி அனைவருக்கும் எடுத்துரைப்பது நமக்கு கடமை என்று பார்த்தோம். இவ்வாறு இயேசுவைப் பற்றி அனைவருக்கும் நாம் எடுத்துரைக்கின்றபோது, என்ன நடக்கின்றது என்பதை இன்றைய முதல் வாசகம் விளக்கிக் கூறுகின்றது.

"நீயே என் ஊழியன்; இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்" என்று ஆண்டவர் கூறுகின்ற வார்த்தைகள், நாம் அவரைப் பற்றிச் சான்று பகர்கின்றபோது, அவர் மாட்சியுறுகின்றார் என்பதை எடுத்துக்கூறுகின்றன. இங்கே இடம்பெறும், 'ஊழியன்' என்ற வார்த்தை மெசியாவைப் பற்றிக் கூறுவதாக இருந்தாலும் (எசா 42: 1; 49: 5,6,7 52:13, 53:11) இருந்தாலும், ஆண்டவரைப் பற்றி அறிவித்து, மக்களை அவரிடம் கொண்டு வரும் ஒவ்வொருவரையும் குறிக்கின்றது. எனவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் ஊழியன் என்பதை உணர்ந்தவர்களாய், அவரைப் பற்றி மக்களுக்கு அறிவித்து, அதன்மூலம் மக்களை அவரிடம் கொண்டு வந்து, அவரை மாட்சியுறச் செய்வோம்.

சிந்தனைக்கு
'மற்றவர் இயேசுவின்மீது மிக எளிதாய் நம்பிக்கை கொள்வதற்குக் காரணமாக இருப்பவருக்குப் பெயர்தான் கிறிஸ்தவர்' என்பார் இராபர்ட் முரே மெக்செயின் என்ற அறிஞர். நாம் நமது வாழ்வாலும் வார்த்தையாலும் திருமுழுக்கு யோவானைப் போன்று, பவுலைப் போன்று இயேசுவுக்குச் சான்று பகர்ந்து, அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
தன்னையே செம்மறியாக்கினார்‌ இயேசு.

இந்த உலகில்‌ மனிதர்கள்‌, தங்கள்‌ படிப்பால்‌, பதவிகளால்‌ தீர்மானிக்கப்படுகிறார்கள்‌. இவர்‌ எழுத்தாளர்‌, இவர்‌ மருத்துவர்‌, இவர்‌ விஞ்ஞானி, இவர்‌ பேராசிரியர்‌, இவர்‌ அதிகாரி, இவர்‌ தலைவர்‌ என்றெல்லாம்‌ மனிதர்கள்‌ பிரிக்கப்படுகிறார்கள்‌. ஆனால்‌ இயேசுவோ இறைவனின்‌ ஆட்டுக்குட்டி, உலகின்‌ பாவங்களைப்‌ போக்க வந்தவர்‌ (யோவா. 1:29) என்று வருணிக்கப்படுகிறார்‌. இயேசு தன்னையே பலியாக்க தலைநிமிர்ந்து சென்றார்‌. தனது பெருமைக்காக அல்லாமல்‌, தன்னால்‌ மனித குலம்‌ வாழ்வு பெறவே இதைச்‌ செய்யத்‌ துணிகிறார்‌. இவரைத்தான்‌ உயிர்‌ கொடுக்கும்‌ ஆட்டுக்‌ குட்டியாக உலகிற்கு காட்டுகிறார்‌ திருமுழுக்கு யோவான்‌. . ஆம்‌! திசை மாறிய ஆடுகளை நேரிய பாதையில்‌, சரியான பாதையில்‌ அழைத்துச்‌ செல்லவே, பாவங்களைப்‌ போக்கும்‌ செம்மறியாகவும்‌, சுமைகளை சுமக்கும்‌ மனிதராகவும்‌ தன்னையே உட்படுத்திக்‌ கொண்டார்‌ இயேசு. இதனால்‌ சாதாரண விபச்சார பெண்‌ அசாதாரண சூழ்நிலையில்‌ புனிதையாகின்றாள்‌. மனித குலம்‌ பாவம்‌ செய்து கடவுள்‌ கொடுத்த மேன்மையை இழந்தது (உரோ. 3:23). இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ இயேசு செம்மறியாக, நமக்காகத்‌ தம்மையே கையளித்தார்‌. பாவத்தைச்‌ சுமந்தவர்‌ மட்டுமல்ல. பாவத்திலிருந்து புனித வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார்‌ (எசாயா 53:5-6)

இந்தியாவை சிபி சக்கரவர்த்தி என்ற அரசன்‌ ஆண்டு வந்தான்‌. ஒரு பருந்து ஒரு புறாவை துரத்தி வந்தது. ஆனால்‌ அந்த புறாவானது அடைக்கலம்‌ தேடி சிபி சக்கரவர்த்தியின்‌ மடியில்‌ தஞ்சம்‌ புகுந்தது. எனவே புறாவுக்கு முழு பாதுகாப்பு கொடுக்க விரும்பினார்‌ அரசன்‌. ஆனால்‌ துரத்தி வந்த பருந்தோ, அந்தப்‌ புறா எனது உணவு. அதை நீண்ட நேரமாகத்‌ துரத்தி வந்திருக்கிறேன்‌. நீங்கள்‌ எப்படி அடைக்கலம்‌ கொடுக்கலாம்‌ என்று தர்க்கம்‌ செய்தது. அதற்கு அரசன்‌, புறாவுக்கு நான்‌ அடைக்கலம்‌ கொடுத்து - விட்டேன்‌. அது எவ்வளவு எடையோ அந்த அளவுக்கு என்‌ உடலில்‌ உள்ள தசையை வெட்டி உனக்குத்‌ தருகிறேன்‌ என்று : சொல்லி புறாவை தராசின்‌ ஒரு தட்டிலும்‌, அடுத்த தட்டில்‌ தன்‌ தொடையில்‌ இருந்து சதையை வெட்டி வைத்தார்‌. ஆனால்‌ புறாவின்‌ எடைக்கு சதை ஒத்து வரவில்லை. கடைசியாக சிபி சக்கரவர்த்தி தராசில்‌ ஏறி அமர்ந்தார்‌. அப்போது தராசு சமநிலைக்கு வந்தது. புறாவுக்கு அடைக்கலம்‌ கொடுக்கத்‌ தன்னையே கொடுத்தார்‌ அரசன்‌. ஓர்‌ உயிரைக்‌ காப்பாற்ற தன்னையே கையளித்தார்‌ சிபி சக்கரவர்த்தி.

ஆனால்‌ உலகத்தின்‌ பாவம்‌ போக்கி, நமக்கு நிலைவாழ்வு கொடுக்க இயேசு பாவம்‌ போக்கும்‌ செம்மறியானார்‌. நமது பாவங்களைப்‌ போக்கி நமக்கு அடைக்கலம்‌ கொடுக்கத்‌ தனது. காயங்களாலும்‌, கல்வாரி இரத்தத்தாலும்‌ தன்னையே செம்மறியாக்கினார்‌ இயேசு. நாம்‌ அவருக்காக நம்மையே கொடுக்கத்‌ தயாராக இருக்கிறோமா?
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
உலகின்‌ பாவங்களைப்‌ போக்கும்‌ செம்மறி இயேசு

இன்றைய நற்செய்தியில்‌ இயேசுவை உலகின்‌ பாவங்களைப்‌. போக்குகின்றவராக திருமுழுக்கு யோவான்‌ அறிமுகப்படூத்துகின்றார்‌.

பாவம்‌ என்றால்‌ என்ன? இதோ கவிஞர்‌ கண்ணதாசனின்‌ கதையொன்று. ஒரு குளத்துக்குள்ளே பல மீன்கள்‌. ஒரு நாள்‌ அந்தக்‌ குளத்திலே வாழ்ந்த பரிய மீன்‌ ஒன்று அதிலே வாழ்ந்த சின்ன மீன்களைப்‌ பார்த்து: எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்‌ என்றது. அதற்குச்‌ சின்ன மின்கள்‌:மிகுப்பரிய மீனாகிய உனக்கு எங்களால்‌ எப்படி உதவி செய்ய முடியும்‌? நாங்கல்லாம்‌ மிக மிகச்‌ சிறியவர்கள்‌ என்றன. அதற்குப்‌ பெரிய மீன்‌: உங்களால்‌ எனக்கு உதவி செய்ய முடியவில்லையென்றால்‌ நான்‌ உங்களுக்கு உதவி செய்கின்றேன்‌ என்று சொல்லி ஒவ்வாரு சிறிய மீனாகப்‌ பிடித்து விழுங்கியது. விழுங்கியபோது, இனி உங்களுக்கு எந்தத்‌ துன்பமும்‌ இருக்காது: இனி என்றென்றும்‌ உங்களுக்கு நிலையான ஒய்வே என்றது.

கதையிலே வந்த பெரிய மீன்‌ புரிந்த செயலுக்குப்‌ பெயர்தான்‌. பாவம்‌. பாவத்திற்கு மறுபெயர்‌ சுயநலம்‌! பாவம்‌, சுயநலம்‌ எங்கெல்லாம்‌. இருக்கின்றனவோ அங்சகல்லாம்‌ நமக்கும்‌ கடவுளுக்குமிடையே உள்ள உறவ முறியும்‌: கடவுளை நேருக்கு நேர்‌ சந்திக்கப்‌ பயந்து நாம்‌ அவரைவிட்டு விலகிச்‌ செல்வோம்‌. சூரியனை விட்டு அகன்று செல்லச்‌ செல்ல நம்‌ நிழல்‌ நீளமாவது போல, கடவுளை விட்டு நமது பாவத்தால்‌. நாம்‌ விலகிச்‌ சசல்லச்‌ ஈசல்ல நமது பாவ நிழல்‌, பாவ இருள்‌ அதிகமாகும்‌.

ஒரு காலத்தில்‌ கடவுளின்‌ நண்பர்களாக விளங்கிய ஆதாமும்‌, ஏவாளும்‌. பாவம்‌ செய்த பிறகு ஆண்டவரின்‌ திருச்சந்நிதியை விட்டு விலகி மரங்களுக்கிடையே ஒளிந்து கொண்டதை நாம்‌ தொடக்க நூலிலே படிக்கின்றோம்‌ [தொநூ 3:8]. புதிய ஏற்பாட்டில்‌ எரிகோ நகரிலே வாழ்ந்த சக்கேயு என்னும்‌ செல்வர்‌ தூயவராக விளங்கிய இயேசுவைச்‌ சந்திக்க ஒரு காட்டு அத்தி மரத்தில்‌ ஏறி அமர்ந்திருந்தார்‌ என்று லூக்கா நற்செய்தியில்‌ படிக்கின்றோம்‌ (லூக்‌ 19:1-10). பாவம்‌ எங்கு (கருக்கின்றதோ அங்கே பயம்‌ இருக்கும்‌. பயமிருக்குமிடத்திலே பாசமிருக்காது : பாசமிருக்குமிடத்திலே பயமிருக்காது! பாசம்‌ எங்கு இல்லையோ அங்கே உறவு இருக்காது!

நாமல்லாம்‌ இறைவனோடும்‌, நம்‌ அயலாரோடும்‌, நம்மோடும்‌. (இயற்கையோடும்‌ நல்லுறவோடு வாழ ஆசைப்படுகின்றவர்கள்‌. நமது ஆசை நிறைவேற வேண்டுமென்றால்‌ நமது வாழ்வின்‌ ஒளியாக (முதல்‌ வாசகம்‌) விளங்குகின்ற ஆண்டவராம்‌ இயேசுவின்‌ பக்கம்‌ நம்‌. கண்களை திருப்ப வேண்டும்‌ ருளுக்கும்‌, அமைதிக்கும்‌ ஊற்றாக விளங்குகின்ற (இரண்டாம்‌ வாசகம்‌) இயேசு கிறிஸ்துவின்‌ பாதத்தில்‌ நாம்‌ சரணடைய வேண்டும்‌.

இயேசு என்னும்‌ கலங்கரைத்‌ தீபத்தை நோக்கி நமது வாழ்க்கைப்‌ படகைச்‌ செலுத்தினால்‌, நாம்‌ கரை சேர்வோம்‌ - புதுவாழ்வு என்னும்‌. கரையைச்‌ சேர்வோம்‌. அந்தக்‌ கரையினிலே, என்‌ வாழ்வில்‌ புதுப்பாதை கண்டேன்‌ என நாம்‌ ஒவ்வொருவரும்‌ பாடி மகிழ்வோம்‌: ஆனந்தம்‌. ஆனந்தம்‌. ஆனந்தம்‌ என ஆடி மகிழ்வோம்‌.

பாவ இருள்‌ நம்மைவிட்டு அகன்ற நிலையிலே, நாம்‌ ஒவ்வாருவரும்‌ மனிதமும்‌, புனிதமும்‌ கமழ பூத்தப்‌ புதுமலராய்‌, புண்ணியத்‌ திருமலராய்‌, புவியினுக்கு ஒரு மலராய்‌ வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்‌.
மேலும்‌ அறிவோம்:

நோய்நாடி நோய்முதல்‌ நாடி அதுதணிக்கும்‌
வாய்நாடி வாய்ப்பச் செயல்‌ (குறள்‌ : 948)

பொருள்‌ : வந்தநோய்‌ எதுவென்று தெளிவாகத்‌ தெரிந்துகொண்டு அது வந்த காரணத்தையும்‌ அதைப்போக்கும்‌ வழிமுறையினையும்‌ ஆராய்ந்து. அதற்கு ஏற்றவாறு முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்‌!
 
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஓர்‌ இளம்‌ பெண்‌ மாலைக்‌ கல்லூரியில்‌ படித்துக்‌ கொண்டிருந்தார்‌. ஒருநாள்‌ கல்லூரிக்குப்‌ போன அவர்‌ இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார்‌. "ஏண்டி ரொம்ப லேட்டாக வந்தே?" என்று அவரை அவருடைய அம்மா கேட்டார்‌. அதே கேள்வியை அவருடைய அப்பா ஆங்கிலத்திலும்‌, அண்ணன்‌ மலையாளத்திலும்‌, தம்பி தெலுங்கிலும்‌ கேட்டனர்‌. ஏன்‌? ஏனென்றால்‌ ஒரு வயசுப்‌ பெண்‌ லேட்டாக வந்தால்‌ நாலுபேர்‌ நாலுவிதமாகப்‌ பேசுவார்களாம்‌!

கிறிஸ்துவைப்‌ பற்றியும்‌ நாலுபேர்‌ நாலுவிதமாகத்தான்‌ பேசினர்‌. சிலர்‌ அவரைப்‌ பேய்பிடித்தவன்‌, சமாரியன்‌, குடிகாரன்‌ என்றும்‌ வரி தண்டுவோரின்‌ நண்பர்‌ என்றும்‌ கூறினர்‌. வேறுசிலர்‌ அவர்‌ தச்சரான யோசேப்பின்‌ மகன்‌ என்றனர்‌; மற்றும்‌ சிலர்‌ அவர்‌ ஓர்‌ இறைவாக்கினர்‌ என்றனர்‌. ஆனால்‌ கிறிஸ்து யார்‌? அவரின்‌ உண்மையான இயல்பு என்ன?

கிறிஸ்துவின்‌ முன்னோடியும்‌, ஒளியைக்‌ குறித்துச்‌ சாட்சி சொல்ல வந்தவருமான திருமுழுக்கு யோவான்‌ இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்துவைச்‌ சுட்டிக்காட்டி, "இதோ கடவுளின்‌ ஆட்டுக்குட்டி (செம்மறி). ஆட்டுக்குட்டியாம்‌ இவரே உலகின்‌ பாவத்தைப்‌ போக்குபவர்‌" (யோவா 1:29) என்று சிம்மக்‌ குரலில்‌ சான்று பகர்கின்றார்‌. இன்றைய முதல்‌ வாசகம்‌ மெசியாவை (கடந்த ஞாயிறு போலவே) "இறை ஊழியனாகச்‌ சித்தரிக்கின்றது. "கருப்பையிலிருந்து ஆண்டவர்‌ என்னைத்‌ தம்‌ ஊழியனாக உருவாக்கினார்‌" (எசா 49:59) இறை ஊழியனின்‌ சிறப்புப்‌ பண்புகள்‌: "அடிப்பதற்கு இழுத்துச்‌ செல்லப்படும்‌ ஆட்டுக்குட்டி ... கத்தாத செம்மறி" (எசா 53:7). "அவர்‌ தம்‌ உயிரை குற்ற நீக்கப்‌ பலியாகத்‌ தந்தார்‌" (எசா 53:10).

இயேசு கிறிஸ்து பாஸ்கா செம்மறி. யூதர்கள்‌ ஆண்டுதோறும்‌ நீசான்‌ மாதம்‌ 14-ஆம்‌ தேதி ஆலயத்தில்‌ பாஸ்கா செம்மறியைப்‌ பலி செலுத்தினர்‌. நீசான்‌ மாதம்‌ 14-ஆம்‌ தேதி யூத குருக்கள்‌ ஆலயத்தில்‌ பாஸ்கா செம்மறியைப்‌ பலி செலுத்திய அதே நேரத்தில்‌ கிறிஸ்து கல்வாரியில்‌ சிலுவை மரத்தில்‌ தமது இன்னுயிரைப்‌ பலியாக ஒப்புக்கொடுக்கின்றார்‌. பாஸ்கா செம்மறியின்‌ எலும்பை முறிக்கக்‌ கூடாது (விப 12:4-6), அவ்வாறே கிறிஸ்துவின்‌ கால்களை முறிக்கவில்லை (யோவா 19:33). எனவே கிறிஸ்துவே உண்மையான பாஸ்கா செம்மறி; உலகின்‌ பாவங்களைப்‌ போக்கியவர்‌. "நம்‌ பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்‌" (1 கொரி 5:7) என்கிறார்‌ திருத்தூதர்‌ பவுல்‌.

"கிறிஸ்து தமது ஒரே பலியினால்‌ முற்காலப்‌ பலிகளை நிறைவு செய்தார்‌. அவரே குருவும்‌ செம்மறியாகவும்‌ திகழ்ந்தார்‌. நாம்‌ திருப்பலியில்‌ பங்கு பெறுவதால்‌ நாமும்‌ கிறிஸ்துவின்‌ பலித்‌ தன்மையில்‌ பங்குபெற வேண்டும்‌. நம்மையே பிறர்க்குப்‌ பிட்டுக்‌ கொடுக்க வேண்டும்‌; பிறர்க்காக நமது இரத்தத்தைப்‌ பிழிந்து கொடுக்க வேண்டும்‌. அன்பு இல்லாதவர்‌ எல்லாப்‌ பொருள்களையும்‌ தமக்கே உரிமையாக்கிக்‌ கொள்வர்‌. ஆனால்‌ அன்பு உடையவர்களோ தம்‌ உடலையும்‌ பிறர்க்குக்‌ கையளிப்பர்‌.

அன்பிலார்‌ எல்லாம்தமக்குரியர்‌;அன்புடையார்‌
என்பும்‌ உரியர்‌ பிறர்க்கு (குறள்‌ 72).

ஒரு காதலன்‌ தன்‌ காதலியிடம்‌, "அன்பே! உனக்காக நான்‌. தாஜ்மஹாலையும்‌ கட்டத்‌ தயார்‌" என்றான்‌. அதற்கு அவள்‌, "அறிவு கெட்ட முண்டம்‌! நான்‌ மூணுமாசமாய்‌ இருக்கிறேன்‌. முதலில்‌ என்‌ கழுத்தில்‌ தாலியைக்‌ கட்டித்‌ தொலை" என்றாள்‌. காதலியின்‌ கழுத்தில்‌ தாலிகட்டத்‌ துணியாதவன்‌ தாஜ்மஹாலை எப்படிக்‌ கட்டுவான்‌? சிறிய காரியங்களில்‌ தியாக உணர்வு இல்லாதவர்கள்‌ பெரிய காரியங்களில்‌ எப்படித்‌ தியாக உணர்வைக்‌ காட்டுவார்கள்‌? "நாம்‌ சொல்லிலும்‌ பேச்சிலும்‌ அல்ல, செயலில்‌ உண்மையான அன்பை விளங்கச்‌ செய்வோம்‌" (1 யோவா 3:18).

திருமுழுக்கு யோவான்‌ கிறிஸ்துவுக்குச்‌ சான்று பகர்ந்தது போல நாமும்‌ கிறிஸ்துவுக்குச்‌ சான்று பகர வேண்டும்‌. திருமுழுக்கு யோவான்‌ யூதர்களிடம்‌, "நீங்கள்‌ அறியாத ஒருவர்‌ உங்களிடையே நிற்கிறார்‌" (யோவா 1:26) என்று கூறினார்‌. மெசியா அவர்களிடையே நடமாடியும்‌ யூதர்கள்‌ அவரை அடையாளம்‌ கண்டுகொள்ளவில்லை. கடவுள்‌ பலவகையில்‌ நம்மைச்‌ சந்திக்கிறார்‌. ஆனால்‌ நாம்‌ அவரைக்‌ காணத்‌ தவறிவிடுகிறோம்‌. அன்றாட வாழ்வு ஓர்‌ அடையாளம்‌. கடவுளை நமது சாதாரண வாழ்வில்‌, சாதாரண நிகழ்வுகளில்‌ காணப்‌ பழகிக்‌ கொள்வதுதான்‌ ஆழ்ந்த ஆன்மிகமாகும்‌.

நமது கடவுள்‌ உண்மையிலேயே மறைவான கடவுள்‌ (எசா 45:16). அவர்‌ அனைத்திலும்‌ இருக்கிறார்‌; அனைத்துமாய்‌ இருக்கிறார்‌ (கொலோ 3:1). அவரைக்‌ காணாதபடி நமது பார்வை தடைபட்டுள்ளது (லூக்‌ 24:16). நமது சுயநலம்‌, ஆணவம்‌, பொருளாசை, காம இச்சைகள்‌ கடவுளைக்‌ காணாதபடி நம்‌ கண்களைக்‌ குருடாக்கி விடுகின்றன. முகக்‌ கண்களால்‌ அல்ல, அகக்‌ கண்கொண்டு கடவுளைக்‌ காண வேண்டும்‌. நம்பிக்கை கொண்டோர்க்கு ஒவ்வொரு முட்செடியும்‌ மோசே கண்ட முட்‌ செடி; கடவுளின்‌ உடனிருப்பு; இறைவனின்‌ திருக்காட்சி; புனிதமான இடம்‌; காலணியைக்‌ கழற்ற வேண்டிய இடம்‌ (விப 3:2-5).

நமது வாழ்வில்‌ நிகழும்‌ சில கசப்பான நிகழ்வுகளால்‌, நாம்‌. இறைவனைக்‌ காணத்‌ தவறிவிடுகிறோம்‌. கடவுள்மேல்‌ நமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஒருவர்‌ ஆலயம்‌ செல்வதில்லை. ஏன்‌? அவர்‌ தனது மனைவியை ஆலயத்தில் தான்‌ முதல்‌ முதலாகப்‌ பார்த்தாராம்‌. அவ்வளவு மோசமான பெண்ணை ஆலயத்தில்‌ காட்டிய அந்த ஆண்டவன்‌ முகத்தில்‌ ஆயுள்‌ முழுவதும்‌ முழிக்கமாட்டாராம்‌! பாவம்‌!! ஒரு சிலர்‌ ஆலயத்துக்கு "அம்பாளைத்‌' தரிசிக்கச்‌ செல்கின்றனர்‌; வேறு, சிலரோ "நம்பாளைத்‌" தரிசிக்கச்‌ செல்கின்றனர்‌. அவ்வாறு செல்வது அவர்கள்‌ குற்றமே, ஆண்டவரின்‌ குற்றமல்ல!

கடவுள்‌ எல்லா இடங்களிலும்‌ இருக்கிறார்‌. என்பதை அறியாதவர்கள்‌, கங்கையிலும்‌ காவிரியிலும்‌, கன்னியாகுமரியிலும்‌ 'இந்துமகாக்கடலிலும்‌ புனித நீராடி என்ன பயன்‌? என்று கேட்கிறார்‌ அப்பர்‌ அடிகளார்‌.

கங்கையாடிலென்‌ காவிரியாடிலென்‌?
கொங்குதென்குமரித் துறையாடிலென்?
ஓங்குமாகடல்‌ ஒதநீராடிலென்‌?
எங்கும்ஈசன்‌ எனாதவர்க்கு இல்லையே!

ஆலயத்தில்‌ அருள்வாக்கிலும்‌ அகுள்‌ அடையாளங்களிலும்‌ ஆண்டவரைச்‌ சந்திக்கத்‌ தெரியும்‌ நமக்கு, அன்றாட வாழ்வின்‌ நிகழ்வுகளில்‌ அவரைச்‌ சந்திக்கத்‌ தெரியாதது ஏன்‌?
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
பாவச்‌ சுமைதாங்கி

ஜெர்மனி நாடு. எவர்டன்‌ என்ற இடம்‌. அங்குள்ள ஓர்‌ ஆலயத்தின்‌ மேற்புற உச்சியில்‌ ஆட்டுக்குட்டி ஒன்றை ஒற்றைக்‌ கல்லில்‌ செதுக்கி வைத்துள்ளனர்‌. : இதன்‌ வரலாற்றுப்‌ பின்னணி வியப்புக்குரியது! ஆலயக்‌ கோபுர உச்சியில்‌ சிற்ப வேலை செய்து கொண்டிருந்தபோது சிற்பியைத்‌ தாங்கியிருந்த கயிறு திடீரென்று அறுந்துபட சிற்பி கீழே விழுந்தார்‌. அந்த இடத்தில்‌ மேய்ந்து , கொண்டிருந்த ஒர்‌ ஆட்டுக்குட்டியின்‌ மேல்‌ விழுந்ததால்‌, தெய்வ அருளால்‌ சிற்பி உயிர்‌ தப்பினார்‌. ஆனால்‌ அவரது உடற்பளுவைத்‌ தாங்க இயலாமல்‌ ஆட்டுக்குட்டி உயிர்‌ இழந்தது. தனக்காக, தன்‌ பொருட்டு அன்றோ அந்த ஆட்டுக்குட்டி இறந்தது, அதன்‌ நினைவாக ஏதாவது செய்ய வேண்டாமா என்று சிந்தித்த சிற்பியின்‌ எண்ணத்தின்‌ விளைவே மேற்குறிப்பிட்ட சிற்பம்‌. தியாகத்துக்கு எழுப்பிய நினைவுச்‌ சின்னம்‌!

பிறருக்கு வர வேண்டிய பதவி, பணம்‌ எல்லாம்‌ நமக்கு வராதா என்று நினைப்பவர்‌ பலர்‌. பிறருக்கு வரும்‌ தண்டனை நமக்கு வராதா என்று யாராவது சொல்வார்களா?

மனித குலம்‌ முழுவதற்கும்‌ வர இருந்த தண்டனையைத்‌ தன்மீது விரும்பிச்‌ சுமந்தவர்‌ ஒருவர்‌ உண்டு. அவர்தான்‌ இயேசு. நமது தண்டனை அவர்மேல்‌ விழுந்தது என்பார்‌ இறைவாக்கினர்‌ எசாயா. அதனால்தான்‌ "இதோ கடவுளின்‌ ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம்‌ இவரே உலகத்தின்‌ பாவத்தைப்‌ போக்குபவர்‌" (யோ 1:29) என்று இயேசுவை அறிமுகப்படுத்துகிறார்‌ திருமுழுக்கு யோவான்‌. இயேசு பற்றிய முதல்‌ அறிமுகம்‌ இது! அவரது வாழ்வின்‌ சுருக்கமும்‌ கூட!

"கடவுளின்‌ செம்மறி" - இதன்‌ பொருள்‌ என்ன? ஒரு யூதனின்‌ வாழ்வில்‌ அவன்‌ எதிர்பார்த்தது ஆற்றல்மிக்க அரசியல்‌ தலைவரை. ஆனால்‌ இயேசுவோ தன்னையே பலியாக்கும்‌ சாந்தமான செம்மறியாக வந்தார்‌.

திருவிவிலியத்தில்‌ செம்மறி "பாவச்‌ சுமைதாங்கி, மீட்பின்‌ சின்னம்‌" என்று இரு கோணங்களில்‌ சித்திரிக்கப்படுகின்றது.

1.செம்மறி பாவச்‌ ௬மைதாங்கி: யாம்கிப்பூர்‌ என்ற யூதர்களின்‌ சமய விழா கருத்தாழமிக்க பாவக்‌ கழுவாய்‌ விழாவாகும்‌. இரு வெள்ளாட்டுக்கிடாய்கள்‌ ஆலயத்துக்கு முன்‌ கொண்டுவரப்படும்‌. திருவுளச்‌ சீட்டுப்போட்டு அவற்றில்‌ ஒன்று பாவத்துக்காகப்‌ பலியிடப்படும்‌. அதன்‌ இரத்தம்‌ இரக்கத்தின்‌ இருக்கை மீது தெளிக்கப்படும்‌. "மற்ற ஆட்டின்‌ மீது தலைமைக்குரு தன்‌ இரு கைகளையும்‌ வைத்து இஸ்ரயேல்‌ மக்களின்‌ எல்லாக்‌ குற்றங்களையும்‌, தவறுகளையும்‌ பாவங்களையும்‌ அறிக்கையிட்டு அதன்‌ தலைமேல்‌ சுமத்தி, பாலை நிலத்தில்‌ போக்கு ஆடாக விடப்படும்‌" (லேவி. 16:21)

ஆண்டவரின்‌ ஊழியர்‌ பற்றிய நான்காவது கவிதையில்‌ இறைவாக்கினர்‌ எசாயா இயம்புவது போல, "கொலைக்‌ களத்துக்கு "இழுத்துச்‌ செல்லப்படும்‌ செம்மறியாக ... அவரோ நம்‌ குற்றங்களுக்காகக்‌ காயமடைந்தார்‌. நம்‌ தீச்‌ செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்‌. நமக்கு நிறைவாழ்வளிக்க அவர்‌ தண்டிக்கப்பட்டார்‌" (எசா. 53:5-8). இது இயேசுவுக்கு மட்டுமே பொருந்தும்‌ என்பதைத்‌ திருத்தூதர்‌ பிலிப்பு எத்தியோப்பிய அரச அலுவலருக்குக்‌ கொடுத்த விவிலிய விளக்கம்‌ உறுதிப்படுத்தும்‌. (தி.ப. 8:26-29). "இது எனது உடன்படிக்கையின்‌ இரத்தம்‌ பலருக்காகச்‌ சிந்தப்படும்‌'" (மார்க்‌. 14:24) என்ற இயேசுவின்‌ வார்த்தைகளில்‌ முழுமையாக நிறைவு காணும்‌.

2. செம்மறி மீட்பின்‌ அடையாளம்‌ : எகிப்திலிருந்து விடுதலையின்‌ முந்தைய நாள்‌ இரவு இஸ்ரயேல்‌ மக்களின்‌ வீடுகளில்‌ உண்ணப்பட்டதுதான்‌ பாஸ்கா செம்மறி. அதன்‌ இரத்தம்‌ யார்‌ யாருடைய கதவு நிலைகளில்‌ பூசப்பட்டதோ அவர்கள்‌ அனைவரும்‌ சாவுக்குத்‌ தப்பினார்கள்‌ (வி.ப. 12:13).

ஆபிரகாமின்‌ நம்பிக்கையைச்‌ சோதிக்கும்‌ அந்தச்‌ சோக நிகழ்ச்சியிலும்‌, ஈசாக்குக்குப்‌ பதிலாகப்‌ பலியிட கடவுளே ஓர்‌ ஆட்டுக்கிடாயை ஏற்பாடு செய்யவில்லையா? (தொ.நூ. 22:13).

ஆலயத்தில்‌ யூத குருக்கள்‌ பாஸ்கா செம்மறியைப்‌ பலிசெலுத்திய அதே வேளையில்‌, இயேசு கல்வாரிச்‌ சிலுவையில்‌ தமது இன்னுயிரைப்‌ பலியாக ஒப்புக்‌ கொடுத்தார்‌ (யோ. 19:14). எனவே திருத்தூதர்‌ பவுல்‌ "கிறிஸ்துதான்‌ புதிய பாஸ்கா செம்மறி" என்பார்‌ (1. கொரி. 5:7).

தூயவாழ்வுக்கு நம்மை அழைக்கும்‌ திருத்தூதர்‌ பேதுரு சொல்வார்‌: "உங்களை விடுவிக்கக்‌ கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத்‌ தெரியும்‌. அது பொன்னும்‌ வெள்ளியும்‌ போன்று அழிவுக்கு உட்பட்டதல்ல. மாறாக மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப்‌ போன்ற கிறிஸ்துவின்‌ உயர்‌ மதிப்புள்ள இரத்தமாகும்‌" (1 பேதுரு 1:18-19).

இயேசுவின்‌ சிலுவைப்பலி ஒரு தியாகப்பலி. தமக்கென " ஒருதுளி இரத்தம்‌ முதலாய்‌ வைக்காது நமக்காகத்‌ தம்மையே முழுவதும்‌ கையளித்த பலி. துன்புறும்‌ மனிதனைத்‌ தேற்றும்‌, திடப்படுத்தும்‌ பலி! எனக்காக இயேசு எவ்வளவு பாடுபட்டார்‌; அவருக்காக நான்‌ என்ன வலியை ஏற்றுக்‌ கொள்கிறேன்‌ என்ற உணர்வூட்டும்‌ பலி!

தூய பிரான்சிஸ்கு அசிசியாரின்‌ வரலாற்றில்‌ ஒரு வினோத நிகழ்வு. அவருடைய சீடர்களுள்‌ இருவர்‌ போதிக்கச்‌ சென்றார்கள்‌. அவர்கள்‌ சொல்லெறிந்தார்கள்‌. அதைக்‌ கேட்ட மக்களோ கல்லெறிந்தார்கள்‌. கல்லெறிந்த திசையில்‌ தான்தான்‌ முன்னே நிற்க வேண்டும்‌ என்று இருவருமே தள்ளுமுள்ளுச்‌ செய்தார்களாம்‌. "உனக்குப்‌ பதிலாய்‌ நான்‌ கல்லெறிபடுவேன்‌ " என்றார்‌ ஒருவர்‌. "இல்லை, நீ இரு, நான்தான்‌ எறிபடுவேன்‌"' என்று அடுத்தவர்‌ கல்‌ வந்த திசை பார்த்து முன்னே சென்றாராம்‌. இதற்காகச்‌ சண்டைபோட்டுக்‌ கொண்டார்களாம்‌.

பிறர்‌ மீது விழும்‌ கல்லெறியை, தான்‌ வாங்கிக்‌ கொள்ள வேண்டும்‌ என்ற எண்ணம்‌ கொண்ட இருவருமே கடவுளின்‌ செம்மறிகள்தாம்‌!

"இறைவா நண்பனுக்கு வந்த மாரடைப்பு எனக்கு வரட்டும்‌. அவர்‌ அதனின்று விடுதலை பெறட்டும்‌" என்று செபிப்பவரும்‌ ' இறைவனின்‌ செம்மறியே!

நான்‌ துன்பப்பட்டாலும்‌ பிறர்‌ துன்புறக்கூடாது என்று எண்ணும்‌ எல்லாரும்‌ இறைவனின்‌ செம்மறிகளே!

பிறர்‌ குற்றத்தைத்‌ தன்மீது சுமந்து கொண்டு பிறரைக்‌ காப்பாற்றுபவரும்‌ கடவுளின்‌ செம்மறியே!

இதையெல்லாம்‌ விடுத்து பிறர்‌ எக்கேடு கெட்டாலும்‌ பரவாயில்லை. தான்‌ பிழைத்துக்‌ கொண்டால்‌ சரி என்று எண்ணுபவர்களைப்‌ பற்றி என்ன சொல்ல?

தவ வலிமை மிக்க முனிவர்‌ ஒருவர்‌ தான்‌ இறக்கும்‌ நேரம்‌ நெருங்குவதை உணர்ந்தார்‌. தனக்குப்‌ பின்‌ தன்‌ பணியைத்‌ தொடரப்‌ பொருத்தமான சீடரைத்‌ தேர்ந்து தெளிய விரும்பினார்‌.ஒர்‌ இளைஞனைச்‌ சந்தித்தார்‌. "என்னிடம்‌ பொன்னோ பொருளோ இல்லை. என்‌ குரு என்னிடம்‌ சொன்ன இரகசியம்‌ ஒன்று உண்டு. அதை நீ யாரிடமும்‌ சொல்லாமல்‌ இருந்தால்‌ நூறாண்டு வாழலாம்‌. அதை நீ எவரிடமாவது சொன்னால்‌ இறந்துவிடுவாய்‌"' என்று சொல்லி நீண்ட வாழ்வுக்கான அந்த இரகசியத்தைக்‌ கற்றுக்‌ கொடுத்தார்‌.

அதைப்‌ பற்றிச்‌ சிந்தித்த சீடன்‌, அடுத்த நாள்‌ மக்கள்‌ கூடும்‌ பொது இடத்தில்‌ நின்று எல்லோருக்கும்‌ கேட்குமாறு உரக்கச்‌ சொன்னதும்‌ அந்த இளைஞன்‌ க்ழே விழுந்து இறந்தான்‌. நிகழந்ததைக கேள்விப்பட்ட முனிவர்‌ தன்‌ தவ வலிமையால்‌ இளைஞனை உயிர்பெறச்‌ செய்து அவனிடம்‌ "இரகசியத்தைச்‌ சொன்னால்‌ இறந்து விடுவாய்‌ என்று நான்‌ எச்சரித்தும்‌ ஏன்‌ சொன்னாய்‌?"' எனக்‌ கேட்டார்‌. "ஒருவன்‌ வாழ்வதை விட ஊரார்‌ அனைவரும்‌ வாழ்வது நல்லதல்லவா! அதனால்தான்‌ சொன்னேன்‌" என்று பதில்‌ அளித்தான்‌. "நானும்‌ துறவிதான்‌. ஆனால்‌ இந்த மக்கள்‌ உன்னை மட்டும்‌ எப்பொழுதும்‌ தங்கள்‌ நெஞ்சில்‌ வைத்திருப்பார்கள்‌ " என்று வாழ்த்தினார்‌ முனிவர்‌.

தன்னைத்‌ தந்து பிறரை வாழவைப்பதே கிறிஸ்தவ வாழ்வின்‌ அழைப்பு. தான்‌ இறைமகனாய்‌ இருந்தும்‌ மக்கள்‌ வாழ்வு பெறும்பொருட்டு தன்னையே கையளித்தவர்‌ இயேசு. இயேசுவின்‌ பணி தொடர நாம்‌ ஒவ்வொருவரும்‌ இறைவனின்‌ செம்மறியாக மாறுவோம்‌!
 
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
  ஆட்டுக்குட்டியாக அறிமுகமான இயேசு

தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்களாகிய நாம், பொங்கல் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். இறைவனின் கருணையால், இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து, நமக்குக் கொடுத்த கொடைகளுக்கு நன்றிசொல்லும் அழகான அறுவடைத் திருநாள் இது.

இந்த அறுவடைத் திருநாளைக் கொண்டாட அடிப்படைக் காரணங்களாக அமைந்துள்ள நிலம், நீர், காற்று, வயல்வெளி, மாடு, மற்றும், இத்திருநாளின் உயிர்நாடியாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் ஆகியோரைக் காண, கிராமங்களையும், வயல்வெளிகளையும் நாடிச் செல்லவேண்டிய நாள்கள் இவை. இயற்கையோடு நம்மை மீண்டும் இணைக்க வேண்டிய இத்திருநாளை, ஒரு வியாபாரத் திருநாளாக மாற்றிவிட்டன, பன்னாட்டு நிறுவனங்கள். அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்கள், இந்த நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, நம்மை, தொலைக்காட்சி பெட்டியின் முன்பு கட்டிப்போட்டு வைத்துள்ளன. உண்மையான வயல்வெளிகளில் நடந்து, இயற்கையான காற்றை உள்வாங்கி, உள்ளத்திலும், உடலிலும், புத்துணர்ச்சி பெறுவதற்குப் பதில், ஊடகங்கள் காட்டும் வயல்வெளி காட்சிகளைக் கண்டு அறுவடைத் திருநாளை நம் வீட்டுக்குள்ளேயே கொண்டாடும் வழக்கத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

வியாபார உலகமும், ஊடக உலகமும் இணைந்து, நம்மைச் சுற்றி விரித்திருக்கும் இந்த மாய வலையிலிருந்து விடுபட்டு, நம் அறுவடைத் திருநாளின் ஆணிவேர்களாய் விளங்கும் விவசாயப் பெருமக்களுக்காகவும், அவர்களுக்கு துணை நிற்கும், நிலம், நீர், விலங்குகள் ஆகியவற்றிற்காகவும் நன்றி கூறி, பொங்கல் திருநாளை கொண்டாட முயல்வோம். நம் மனங்களில், நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு, இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்யவேண்டும்.

பொங்கல் விழாவின் முக்கியக் காரணம் அறுவடை. பொருள்செறிந்த அறுவடைத் திருநாளையொட்டி வரும் இஞ்ஞாயிறு வழிபாடு, அறுவடையைக் குறித்த சிந்தனைகளை நம்முன் வைக்கிறது. நல்ல நிலங்களில் வளரும் பயிர்களைப் போல, பாதுகாப்பானச் சூழல்களில் வளர்ந்து, நமக்கும், பிறருக்கும், பயன்தரும் கருவிகளாக நாம் மாறமுடியும் என்ற அழகான எண்ணங்களை, இன்றைய ஞாயிறு வாசகங்கள், நம் உள்ளத்தில் விதைக்கின்றன.

நமக்கே உரித்தான அடையாளங்களைப் புரிந்துகொள்வதைப்பற்றிச் சிந்திக்கும்போது, வலைத்தளத்தில் வலம்வரும் ஓர் அழகியக் கதை நினைவுக்கு வருகிறது. 'Value What You Have' - அதாவது, 'உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக' என்ற தலைப்புடன் வெளியான அச்சிறுகதை இதோ:

Olavo Bilac என்பவர், பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள், அவரது நண்பர் அவரைத் தேடிவந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilac அவர்களிடம் கேட்டுக்கொண்டார். Bilac அவர்கள் பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:

"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழலும், அமைதியும் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.

ஒரு சில வாரங்கள் சென்று தன் நண்பரைச் சந்தித்த Bilac அவர்கள், "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்பதை உணர்ந்துகொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப்பற்றி, நம்மிடம் உள்ளவற்றைப்பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்துவைத்திருக்கிறோம் என்பதைப் பொருத்து, நமது நல் வாழ்வு, நல வாழ்வு அமையும். நம்மிடம் உள்ள உண்மையான கருவூலங்களைப் புரிந்துகொள்ளாமல், தூரத்துக் கானல்நீரை துரத்துவதால், வாழ்வின் பெரும் பகுதியை, நாம் வீணாக்குகிறோம். நம் உண்மை அடையாளங்களுடன் வாழ்வதற்குப்பதில், அவரைப்போல், இவரைப்போல் என்று போலி முகமூடிகளை அணிந்து வாழ முயல்கிறோம். பல நேரங்களில், இந்தப் பொய்யான, மாயைகளைப் பெறுவதற்கு, நம்மிடம் உண்மையாய் இருப்பனவற்றை விலைபேசுகிறோம். நம் குடும்ப உறவுகள், தொழில், நண்பர்கள் என்று, நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவற்றை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம்.

நாம் நாமாகவே வாழ்வதற்கு, நம்மைப்பற்றிய தெளிவு முதலில் நமக்கு வேண்டும். இந்தத் தெளிவு, நம்மைப்பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்குமுன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெறவேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில், நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை, இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா 49: 3, 5-6) நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எசாயாவைப் போல், நாமும், நெஞ்சுயர்த்திச் சொல்லவேண்டும்.

இறைவாக்கினர் எசாயா 49: 1,5
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்... ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்.

ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்கமுடியும். இன்றைய நற்செய்தியில் (யோவான் 1: 29-34) நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான், இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு, யோவான், தான் என்ற அகந்தை கொண்டு, நிலை தடுமாறவில்லை. தன் உண்மையான நிலை, தன் மதிப்பு அனைத்தும் இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்மட்டுமே அடங்கியுள்ளது என்று, தன்னைப்பற்றியத் தெளிவு யோவானுக்கு இருந்தது. தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்கு உரிமையாளர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், மக்களின் கவனத்தை அந்த உரிமையாளர் பக்கம் திருப்பினார் திருமுழுக்கு யோவான். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

யோவான் நற்செய்தி 1: 29,34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்... இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்."

யோவான் நற்செய்தியின் முதல் பிரிவில் பல அறிமுகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நற்செய்தியின் ஆரம்பமே ஓர் இறையியல் அறிக்கையாக அமைந்துள்ளது. அந்த அறிக்கையில், இயேசு, இறைவனுடன் வாழ்ந்த வாக்கு என்றும், அந்த வாக்கு மனிதரானார் என்றும், நற்செய்தியாளர் யோவான் அறிமுகம் செய்து வைக்கிறார் (காண்க. யோவான் 1: 1-18). இதைத் தொடர்ந்து, திருமுழுக்கு யோவானின் அறிமுகம் இடம்பெறுகிறது. அவர், தான் மெசியாவோ, எலியாவோ, இறைவாக்கினாரோ அல்ல, தான் பாலைநிலத்தில் ஒலிக்கும் குரல் என்று தன்னையே அறிமுகம் செய்கிறார் (காண்க. யோவான் 1: 19-28).

மறுநாள், அதாவது, தான் யார் என்று மக்களுக்கு அறிமுகம் செய்துகொண்ட மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!..." என்றார் (யோவான் 1:29). இன்றைய நற்செய்தி இவ்வாறு ஆரம்பமாகிறது. "நான் மெசியா அல்ல" (யோவான் 1:19) என்று முந்தின நாள் திட்டவட்டமாகக் கூறிய திருமுழுக்கு யோவான், மறுநாள், இயேசுவைக் கண்டதும், 'இதோ மெசியா' என்று அவரை, மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!" (யோவான் 1:29) என்று அவரை அறிமுகம் செய்துவைக்கிறார். 'மெசியா' என்ற சொல்லின் முதல் பொருள், 'அர்ச்சிக்கப்பட்டவர்' என்றாலும், அந்த அர்ச்சிப்பின் விளைவாக, அவர் ஓர் அரசராக, தலைமைகுருவாக மாறும் நிலையும் அச்சொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சி, அதிகாரம் என்ற எண்ணங்களுடன் தொடர்புள்ள 'மெசியா' என்ற சொல்லைப் பயன்படுத்தாமல், 'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லின் வழியே, இயேசுவின் பணிவாழ்வை அறிமுகப்படுத்துகின்றனர், திருமுழுக்கு யோவானும், நற்செய்தியாளர் யோவானும்.

ஒருவரை முதல் முறையாகச் சந்திக்கும்வேளையில், அல்லது, அவர் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்படும் வேளையில், அவரைப்பற்றி நம் மனதில் பதியும் உருவம், எண்ணம் ஆகியவை ஆழமானதாக, நீண்டகாலம் நீடிப்பதாக அமையும் என்பதைக் கூற, ஆங்கிலத்தில், "First impression is the best impression" என்ற கூற்று பயன்படுத்தப்படுகிறது. இதை மனதில் கொண்டே, ஒருவர் அறிமுகமாகும் வேளையில், அவரைப்பற்றி சொல்லப்படும் கருத்துக்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.

'ஆட்டுக்குட்டி' என்ற சொல்லில், பலியாகுதல், பாவங்களைச் சுமத்தல், விருந்தில் உணவாகுதல் போன்ற எண்ணங்கள் வெளிப்படுகின்றன. கூடுதலாக, பாஸ்கா இரவன்று, ஆட்டுக்குட்டியின் இரத்தம், கதவு நிலைகளில் பூசப்பட்டதால், இஸ்ரயேல் மக்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர். எனவே, 'ஆட்டுக்குட்டி', மக்களின் கவசமாகவும் அமைந்தது. பலியாதல், பழிதீர்த்தல், உணவாதல், உயிர்களைக் காத்தல் என்ற அனைத்து அர்த்தங்களும் இயேசுவுக்கு அற்புதமாகப் பொருந்தியிருந்ததால், அவரை, திருமுழுக்கு யோவான், "கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அறிமுகப்படுத்தினார்.

தன்னைவிட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்ல, ஒருவருக்கு, தன்னம்பிக்கையும், தன்னைப்பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல், பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவைச் சுட்டிக்காட்டி, புகழுரைகள் சொன்னார். இயேசுவும், திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகச்சிறந்த புகழுரை வழங்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம். மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு நற்செய்தி 11: 11) என்று இயேசு கூறினார். இயேசுவும், யோவானும், ஒருவரையொருவர் புகழ்ந்துகொண்டது, வெறும் முகத்துதி அல்ல. இருவரும் தங்களை உள்ளூர உயர்வாக மதித்தவர்கள், எனவே அவர்களால் அடுத்தவரின் உயர்வையும் மனதார உணரமுடிந்தது. வாயாரப் புகழமுடிந்தது.

திருமுழுக்கு யோவான், இயேசுவை, 'கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு, மனித வாழ்வில் நிகழும் அறிமுகங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் பொருள் ஆகியவற்றைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது.

விளம்பரத்தை விரும்பும் இன்றைய உலகில், 'மக்கள் திலகம்', 'சூப்பர் ஸ்டார்', 'சாதனைப் புலி', 'லிட்டில் மாஸ்டர்'... போன்ற மிகைப்படுத்தப்பட்ட பட்டங்கள் வழியே தலைவர்கள், நடிகர்கள், மற்றும், விளையாட்டு வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்படுவதை நாம் அறிவோம். இவர்களுக்கு வழங்கப்படும் பட்டங்களில் பூசப்பட்டிருக்கும் செயற்கைத்தனம், நம்மை வெட்கத்திலும், வேதனையிலும் நிரப்புகின்றது.

இத்தகைய ஒரு சூழலில், தங்கள் வாழ்வை மக்களின் நலனுக்காகக் கையளித்த பல உன்னத மனிதர்கள், தாங்கள் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பதைக் குறித்து தெளிவான எண்ணங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்க ஐக்கிய நாட்டில் கறுப்பினத்தவரின் சம உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர்.

1968ம் ஆண்டு, தன் 39வது வயதில் கொல்லப்பட்ட மார்ட்டின் லூத்தர் அவர்கள், இறப்பதற்கு இரு மாதங்களுக்கு முன், அட்லான்டா நகரில், அவர் மேய்ப்புப்பணி ஆற்றிவந்த எபனேசர் பாப்டிஸ்ட் ஆலயத்தில், தன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் அன்று தன் உரையில் கூறிய ஒரு சில எண்ணங்கள் இதோ:

"அவ்வப்போது நான் என் மரணத்தையும், இறுதி ஊர்வலத்தையும் பற்றி நினைப்பதுண்டு. என் அடக்கச் சடங்கில் என்ன சொல்லப்படும் என்பதையும் எண்ணிப் பார்த்திருக்கிறேன். உங்களில் யாராவது அவ்வேளையில் உயிரோடு இருந்தால், என் அடக்கச் சடங்கில் மறையுரை வழங்குபவரிடம், என்னைப்பற்றி அதிகம் பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள். நான் உலக அமைதி நொபெல் விருது பெற்றதைச் சொல்லவேண்டாம். அதேவண்ணம், நான் பெற்றுள்ள ஏனைய விருதுகளைக் குறித்து சொல்லவேண்டாம். அவை முக்கியமல்ல.

மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், தன் வாழ்வை, மற்றவர்களுக்குப் பணியாற்றுவதற்காக வழங்கினார் என்று, அந்த மறையுரையாளர் சொல்லட்டும். பசித்தோருக்கு உணவளிக்கவும், ஆடையற்றோரை உடுத்தவும் நான் முயன்றேன். சிறைப்பட்டோரைச் சந்திக்க முயன்றேன். மனித குலத்திற்குப் பணியாற்ற முயன்றேன். மறையுரையாளர் இவற்றையெல்லாம் சொல்லட்டும்.

நான் எனக்குப்பின், சொத்துக்களை விட்டுச்செல்லப் போவதில்லை. ஆனால், ஒரு குறிக்கோளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை விட்டுச் செல்வேன். அதைமட்டும், என் அடக்கச் சடங்கில் சொல்லுங்கள்" என்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் கூறினார். இந்த உரை வழங்கிய இரு மாதங்களில், 1968 ஏப்ரல் 4ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்.

தன் மரணத்தைக் குறித்தும், தான் எவ்வாறு நினைவுகூரப்படவேண்டும் என்பது குறித்தும் அவர் வழங்கிய உரை, அன்று பதிவு செய்யப்பட்டதால், இரு மாதங்களுக்குப் பின், அவரது அடக்கச் சடங்கில், அவ்வுரை மீண்டும் ஒலிபரப்பானது.

மக்களால் தான் எவ்விதம் நினைவுகூரப்படவேண்டும் என்பதில் மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் மிகத் தெளிவான எண்ணங்கள் கொண்டிருந்தார். 1929ம் ஆண்டு, சனவரி 15ம் தேதி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் அவர்கள் பிறந்தார். இன்று, அவரது பிறந்தநாளின் 94வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கிறோம். அவரது பிறந்தநாள், அமெரிக்க ஐக்கிய நாட்டில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் என்று, ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதம் மூன்றாம் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 16, இத்திங்களன்று மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் நாள் சிறப்பிக்கப்படுகிறது.

இனவெறியினால் உண்டாகும் பாகுபாடுகள், அநீதிகள் போன்ற உலகின் பாவங்களைப் போக்க, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள், தனக்கே உரிய வழியில் முயன்ற செம்மறியாக வாழ்ந்தார். உலகின் பாவங்களைப் போக்கிய செம்மறியான இயேசுவும், அவரது வழியைப் பின்பற்றிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் போன்ற அவரது சீடர்களும், நமக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டுவோம். அவர்களின் எடுத்துக்காட்டுகளால் தூண்டப்பட்ட நம் வாழ்வும், பணிகளும், நம்மைச் சுற்றியுள்ள உலகின் பாவங்களைப் போக்கவும், அவ்வுலகை அருள் நலன்களால் நிறைக்கவும் மன்றாடுவோம்.

நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மதிப்பை முதலில் நமக்குள் நாமே வளர்த்துக்கொண்டு, பிறருக்கும் அவரவருக்குரிய மதிப்பை வழங்க ஆரம்பித்தால், உலகம் மதிப்பு பெறும், மீட்பு பெறும். இந்த அறுவடைத் திருநாளன்று, மதிப்பை விதைப்போம். மாண்பை அறுவடை செய்வோம்.
 
 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
திருவருகைக்காலம் 2-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 11:1-10)

இஸ்ராயேலரின் அரசு அழிக்கப்பட்டு பலர் நாடுகடத்தப் பட்டனர். எஞ்சியவர்கள் அருகாமையில் உள்ள நாடுகளுக்குத் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சிதறி சென்றனர். இச்சூழலில், இறை- வாக்கினர் எசாயா, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில், "ஜெசெவின் கோத்திரத்திலிருந்து மெசியா தோன்றுவார். அவர்மீது ஆண்டவரின் ஆவி தங்கும். நீதியோடு தீர்ப்பு வழங்குவார். அன்பும் அமைதியும் மக்கள் மனங்களில் குடிகொள்ளச் செய்வார்." எடுத்துரைக்கிறார்.

இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 15:4-9)

தூய பவுல், முதல் கிறிஸ்தவர்களைக் கொன்றார். கிறிஸ் தவத்தை அழிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரைத் தேர்ந்து கொண்ட இயேசுவின் ஆவி அவரையும் தூய ப்படுத்தினார். கிறிஸ்த வர்களை துன்புறுத்திய சவுல், கிறிஸ்துவுக்காகத் துன்புறும் ஊழியனாகப் பவுலாக மாறினார். அப்படியே பாவத்தில் இருக்கும் பிறஇனமக்களை இயேசு தமது இரக்கத்தினால் அவர்களின் பாவங் களை மன்னித்து அவர்களையும் தூய வாழ்வுக்கு உரிமை உடைய வராக்கினார் என்று பவுல் இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 3:1-12)

திருமுழுக்கு யோவான் "மனம் திரும்புங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கிவிட்டது" என்றுகூறி "விண்ணரசில் நுழைய மனமாற வேண்டும்" என்பதில் அத்தியாவத்தை வலிவுறுத்து விதமாக இந்த வாசகம் அமைந்துள்ளது. "யூதக்குலப் பெருமையோ, சட்டத்திட்டங்களோ உங்களுக்கு மீட்பு அளிக்க முடியாது. மாறாக மனம் மாறியதற்குரிய நம்பிக்கை கொண்டு தூய ஆவியில் திரு முழுக்கு பெறுவதின் வழியாகவே நீங்கள் மீட்பு பெறுவீர்கள், என்பதை தெளிவுப்படுத்துகின்றார் யோவான்.

மறையுரை

எலிசபெத்தம்மாள் பத்து மாதம் சுமந்து ஒரு பச்சிளங்- குழந்தையை அல்ல, ஒரு பாலைவனக்குரலை, தன் முதிர்ந்த வயதில் எலிசபெத்து கருத்தரித்தாள். இயேசுவின் முகம் சாந்தம் வழியும் முகம், கருணை கொண்ட கண்கள், நீண்ட தொங்களாடை, பாத்தாலே பரவசமான தோற்றம்! ஆனால் திருமுழுக்கு யோவான் அப்படியல்ல கரடுமுரடான முகம்! படியாத தலைமுடி, கண்கள் இரண்டும் நெருப்பு, நாக்கு தீப்பிழம்பு போலச் சுடும் தன்மை, உடுத்தியது ஒட்டக மயிராடை, உணவு காட்டுதேனும், வெட்டு கிளியும்.

ஆனால் அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் எல்லாம் நற்செய்தியை கேட்டபோது தொடும் வார்த்தைகளாகவும், சுடும் வார்த்தைகளாகவும் உள்ளன! ஒரு கவிஞன் அழகாகச் சொல்லுவான். கடவுள் ஒரு கனம் இடியென இடிக்கிறார், அடுத்த கணம் மழையை பொழிகின்றார். இது கடவுளுக்குப் பொருந்தும். அவருக்கு இரண்டு முகம், நீதி முகம், இரக்க முகம். நீதி முகத்தில் இடிக்கிறார். இரக்க முகத்தில் பொழிகின்றார். பொழியும்போது இனிக்கிறது. அவர் இடிக்கும்போது கசக்கிறது.

➤ "இதோ நான் இறங்கி வருவேன் என் மக்களை மீட்டு பாலும் தேனும் பொழியும் கானான் தேசத்திற்கு கொண்டு செல்வேன். கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. என் கட்டளைகளை கடைபிடித்து அதன்படி நடங்கள் இல்லையென்றால் என் கோபம் உங்களுக்கு எதிராக எழும்" என்று கடவுள் சொல்லும்போது கசக்கிறது.

➤ செல்வேன், நீர் நிலையில் இளைப்பாற்றுவேன் என்று கடவுள் சொல்லும்போது இனிக்கிறது. ஏழையை வஞ்சிக்காதே, ஆதர வின்றி இருப்பவர்களை நீதி மன்றத்தில் சிறுமை படுத்தாதே. அவர்களுக்காக நான் வாதாடுவேன்" என்று கடவுள் சொன்னால் கசக்கிறது.

➤ "ஆறுதல் கூறுங்கள், என் மக்களுக்குக் கனிமொழி கூறுவேன் என்று ஆண்டவர் கூறும்போது இனிக்கிறது. மரக்காலை சிறி தாக்கி, எடைக்கல்லை கனமாக்கி, கள்ளதராசில் மோசடி செய்கி றீர்கள், வெள்ளிகாசுக்கு ஏழைகளையும், இரு காலணிக்கு வறி யோரையும் வாட்டுகிறீர்கள்" எனக் குற்றம் சாட்டும்போது கசக்கிறது.

திருமுழுக்கு யோவானின் குரல் கடவுளின் இடிக்கும் இடி. அவர் கடவுளுடைய நீதிமுகத்தின் பிரதிபலிப்பு. அவர் பேச்சும் செயலும் சற்று கசக்கும்தான், மருந்து கூடக் கசக்கதான் செய்கிறது. அதற்காக அதைத் தூக்கியா எறிந்து விடுகிறோம். சாப்பிட்டு நம் நோயைப் போக்கி கொள்கிறோம் அல்லவா. திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் கூட, ஒரு கசப்பு மருந்து அதைச் சாப்பிட்டு நம் நோயைக் குணமாக்கி கொள்வோம்.

ஏரோது அவருடைய தலையை வெட்டியதால், திருமுழுக்கு யோவான் இறந்து விடவில்லை தலைமுறை தலைமுறையாய் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தப்பான ஒன்ன உலகமே சரி என்று ஒத்துக்கொண்டாலும், நீதிக்காக ஆங்காங்கே எழும்பும் சின்ன சின்னப் பாலைவனக் குரல்களில் திருமுழுக்கு யோவான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறர்.

இன்றைய நற்செய்தியின் வழியாகத் திருமுழுக்கு யோவானின் செய்தி இடிக்கும் இடியாக, மனமாற்றம் பெற அழைப்பு விடுக்கிறது. மாற்றம் என்பது மானிடத் தத்துவம். மாற்றம் ஒன்றுதான் உயிரின் அடையாளம். தன்னை மாற்றிக் கொள்ளாத, அல்லது மாற்ற மறுக் கின்ற எந்த ஒரு நபரையும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. ஓர் இலையுதிர்காலத்திற்கு பின் தன்னை புதுப்பிக்காத மரத்தை வனம் தன் எண்ணிக்கையில் வரவு வைப்பது கிடையாது. ஊற்று நீராலும், ஆற்று நீராலும், மழை நீராலும் தன்னைப் புதுப்பிக்காத நதியை மனிதன் நதி என்பதில்லை. மாற்றம் என்பது காலத்தின் கட்டுப்பாடு. இது மரத்திற்கு மட்டுமல்ல மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். மாற்றம் என்பது மிகவும் அவசியம். குறிப்பாகத் தன் பாவ வாழ்க்கையிலிருந்து புண்ணிய வாழ்வுக்கு மாற இன்றைய வாசகங்களும், வழிபாடும் அழைப்பு விடுக்கின்றன.

➤ தீயவர் தாம் செய்த பாவங்களை விட்டு மனம்மாறி நேர்மையை கடைபிடித்தால் வாழ்வது உறுதி என்கிறது (எசே 18:21).
➤ பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து விடுங்கள் (எபே 4:22).
➤ உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே. (சீராக் 4:26)

நாம் பாவத்தை அறிக்கையிட்டு புதிய மனிதனாக வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு இரண்டு செய்திகளைத் தருகின்றன. ஒன்று. மனம்மாறுங்கள், மற்றொன்று நற்செய்தியை நம்புங்கள்.

1. மனம் மாறுங்கள்:

"பாவத்தைப் பற்றிய அறிவே மீட்பின் தொடக்கம்" என்கிறது இலத்தின் பழமொழி. எனவே நாம் நம் பாவத்தை நியாயப்படுத்தாமல் அதைத் தாழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம். நினிவே மக்கள் இறைவனின் அழைப்பை ஏற்று பாவத்திற்கு மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டதால் புதுவாழ்வு பெற்றார்கள் (யோனா 3:5). புதிய ஏற்பாட்டில் தன் பாவத்தை உணர்ந்து, மனம்வருந்தி அதன் அடையாளமாகத் தன் சொத்துக்களை ஏழைகளுக்குப் பகிர்ந்த சக்கேயு புதுவாழ்வு பெற்றார் (லூக்கா 19:1-10). அதுபோல நாமும், நம் பாவங்களை ஏற்று மனம் வருந்தி வாழ்வோம்.

2. நற்செய்தியை நம்புங்கள்:

நற்செய்தியை நம்புவது என்பது இயேசு தரும் புதிய வாழ்வை ஏற்பதாகும். புதிய வாழ்வு வாழ்வதற்கு நற்செய்தி மிகவும் அவசியம்.
➤ ஒருவன் உலகம் எல்லாம் தனதாக்கி கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் அதனால் வரும் பயனென்ன! என்ற நற்செய்தி தூய சவேரியாரை உருவாக்கியது. நற்செய்தியை கேட்டார். உளமார ஏற்றார். வாழ்வாக வாழ்ந்தார்.
➤ சின்னஞ்சிரிய சகோதர்களுக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற வார்த்தை அன்னை தெரசாவை உருவாக்கியது. ஆக! மேற்சொன்ன உதாரணங்கள் எல்லாம் நற்செய்தியால் புதுவாழ்வு பெற்றவர்கள் தான். எனவே நாமும் நற்செய்தியை வாசித்துப் பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கு அடி எடுத்து வைப்போம். நம்முடைய சுயநலத்திலிருந்து - பொதுநலத்திற்கு, தற்பெருமையிலிருந்து தாழ்ச்சிக்கு, அநீதியிலிருந்து - நீதிக்கு, பாவத்திலிருந்து - புண்ணியத்திற்கு, பேராசையிலிருந்து - அருள் ஆசைக்கு மாற முயற்சி எடுப்போம்..

பறவையைக் கண்டு விமானம் படைத்த நாம்
பாயும் மீனைக் கண்டு படகைப் படைத்த நாம்
எதிரொலியை கேட்டு வானொலியைப் படைத்த நாம்
நற்செய்தியை படித்துப் புதிய மனம் படைப்போம்.
புதிய மனிதர்களாக வாழ்வோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

🕇 நவீன உலகில் உடலை ஒறுப்பது, உண்ணா நோன்பு இருப்பது எல்லாம் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால், தூய திருமுழுக்கு யோவான் எளிய உடையும், ஏழையின் உணவும், நோன்பு நிறைந்த பாலைவன வாழ்வும் வாழ்ந்தார். தன் ஊனுடலை பார்த்துத் தூய அகுஸ்தினார், "கழுதை, வெளியில் காத்திரு. நான் அருமையான ஆண்டவரை என் ஆவியிலும் உண்மையிலும் வழிபடப் போகின்றேன்" என்பாராம். உடல் ஒறுத்தல் இச்சை அடக்கத்திற்கு வழி.

🕇 நமது பிரிந்த சகோதரர்கள் முழுக்கு திருமுழுக்கே உண்மை யானது, நீரால் பெறும் திருமுழுக்கு திருமுழுக்கேயல்ல என்கின் றனர். திருமுழுக்கு யோவான் தந்த திருமுழுக்கு பாவ மன்னிப்பின் அடையாளமே ஒழிய வேறில்லை. பரிசுத்த ஆவியின் வல்லமை தரும் திருமுழுக்கு ஜென்ம பாவத்தைப் போக்குவதோடு தூய ஆவியின் தூய ஆலயமாக நமது உடலை மாற்றுகின்றார். பிள்ளைக்களுக்குரிய அருள்வாழ்வு வாழ வழிவகை செய்கின்றார்.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
பொதுக் காலம் இரண்டாம் ஞாயிறு

கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து ஆண்டின் பொதுக் காலத்தில் நுழைந்துள்ளோம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயாவுக்கு இறைவன் தந்த அழைப்பும், பணியும் விவரிக்கப் படுகின்றது.நற்செய்தியில் நமதாண்டவரைப் பற்றியத் திருமுழுக்கு யோவானின் சான்று விவரிக்கப்படுகின்றது. நற்செய்தி தரும் ஆழமான கருத்துகளை அதன் பின்னணியோடு தெரிந்து கொள்ள முயல்வோம்.

பின்னணி

யோவான் நற்செய்தி, ஓர் அருமையான கிறிஸ்தியல் பாடலுடன் தொடங்குகின்றது (காண். யோவா 1:1-18). அதைத் தொடர்ந்து வருகின்ற பகுதி (யோவா 1:19-51), நாள்களின் கணக்கில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது,

➤ வச. 19-28 - முதல் நாள் - யோவான் தான் மெசியா அல்ல என ஒப்புக்கொள்கிறார்.
➤ வச. 29-34 - இரண்டாம் நாள், "மறுநாள்" (வச. 29), யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்றும், இறைமகன் என்றும் சான்று பகர்கிறார்.
➤ வச. 35-42 - மூன்றாம் நாள் - "மறுநாள்" (வச 35), யோவானின் சீடர்கள் இயேசுவைப் பின் தொடர்கின்றனர்.
➤ வச. 43-51 - நான்காம் நாள் - "மறு நாள்" (வச. 43), இயேசு பிலிப்புவிற்கும், நத்தனியேலுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார்.
.

இந்த நான்கு நாள்களும் யோவா 2:1-12ல் நிகழவிருக்கின்ற கானா திருமண நிகழ்விற்கும், அங்கு இயேசு தன் மாட்சியை வெளிப்படுத்தியதற்கும் முன் தயாரிப்பாக அமைகின்றது. இது இறைவன் சீனாய் மலையில் தனது மாட்சியை வெளிப்படுத்தும் முன்பாக இஸ்ரயேலைத் தயாரித்ததை ஒத்திருக்கின்றது (காண். விப 19:7-9).

இனி இரண்டாம் நாள் நிகழ்வின்படி, (இன்றைய நற்செய்தி யின்படி) இறைவார்த்தை தரும் செய்தியை அறிந்துகொள்ள முயல்வோம்.

1. இயேசுவும் யோவானும்

இன்றைய நற்செய்தியில் இரு கதாபாத்திரங்கள் மட்டுமே காட்டப்படுகின்றனர். அதிலும் இயேசு மறைமுகமாக, அமைந்த கதாபாத்திரமாக, யோவானை நோக்கி வருவதாக மட்டுமே காட்டப்படுகின்றார். ஆனால் நிகழ்ச்சிப் பகுதி முழுவதும் யோவான் பேசுவதாக அமைந்திருக்கின்றது. அவர் இயேசுவைப் பற்றியும், யோவானாகிய தனக்குக்கிடைத்த வெளிப்பாடு பற்றியும் பேசுகின்றார். அவரின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவைப் பற்றி நற்செய்தியாளர் தரும் செய்திகளைக் காண்போம்.

2. இயேசுவின் அடையாளம்

திருமுழுக்கு யோவானின் வார்த்தைகளின் பின்னணியில் இயேசுவின் பல்வேறு அடையாளங்களைப் பின்வருமாறு பட்டிய லிடலாம்

🕀 கடவுளின் ஆட்டுக்குட்டி (வச. 29).
🕀 உலகின் பாவத்தைப் போக்குபவர் (வச. 29).
🕀 திருமுழுக்கு யோவானைவிட முன்னிடம் பெற்றவர் (வச. 30).
🕀 முன்பே இருந்தவர் (வச.30).
🕀 தூய ஆவி புறாவைப் போல இறங்கி வரப் பெற்றவர் (வச. 32).
🕀 இறைவனால் முன்னுரைக்கப் பெற்றவர் (வச. 33அ).
🕀 தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் (வச. 33ஆ).
🕀 அனைத்திற்கும் மேலாக, 'இறைமகன்' (வச. 34).
ஆக இயேசுவுக்கான பலவகை அடையாளங்களை யோவான் வெளிப்படுத்துகின்றார்.

3. திருமுழுக்கு யோவானின் நிலை

இயேசுவைப் பற்றி இவ்வளவு அடையாளங்களை இவ்வளவு உயர்வாகக் கூறிய திருமுழுக்கு யோவான் தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது தாழ்மையாக, அமைந்த மனதுடனே குறிப் பிடுகின்றார்.

🕀 'இவர் (இயேசு) என்னைவிட முன்னிடம் பெற்றவர் (வச. 30).
🕀 எனக்கு முன்பே இருந்தார் (வச. 30 ஆ).
🕀 இவரைப் பற்றியே சொன்னேன் (வச. 30 இ).
🕀 எனக்குத் தெரியாதிருந்தது (வச. 31 அ).
🕀 இவரை (இயேசுவை) வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன் (வச. 31 ஆ).
🕀 நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்து வருகிறேன் (வச. 31)
🕀 மாறாக இயேசு தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் வச 33).
🕀 நான் கண்டேன் - சான்றும் கூறி வருகிறேன் (வச. 34).

எனவே இன்றைய நற்செய்தியில் புனித திருமுழுக்கு யோவான் இயேசுவின் அடையாளத்தை வெளிப்படுத்தி, அவருக்குச் சான்று பகர்ந்து உயர்த்துகின்றார். தன்னை அவர்முன் தாழ்த்திக் கொள்கின்றார். நாமும் இத்தகைய மனநிலை கொண்டு வாழ்வோம்.
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகம் : எசா. 49:3, 5-6

பாபிலோனிய நாட்டில் அடிமைகளாக வாழ்ந்த இஸ்ரயேல் இனத்தை மீண்டும் எருசலேமில் குடியேற வழி வகுத்தவன் பாரசீகப் பேரரசன் சைரசு. அந்நிய அரசனையே இறைவன் தன் கருவியாகத் தெரிந்துகொண்டார். எனினும் இவன் என்றும் இறைவனுக்கு ஏற்புடையவனாக இருக்கவில்லை. எனவே, எதிர்காலத்தில் வரவிருக்கும் இறைவனுக்கு ஏற்புடைய ஊழியனை எசாயா அறிமுகப்படுத்துகின்றார். இவர் கருவிலே திருவுடையார்; துன்பத்தின் உறைவிடம்; என்றும் இறைவனின் திருச்சித்தத்தை நிறைவேற்றும் திருத்தொண்டர். இவ்வாறு வரவிருக்கும் மீட்பர் இக்கவிதையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளார்.

இறைவனின் அழைப்பு

இறைவன் தன் அரசுக்கு அனைவரையும் அழைக்கிறார். "உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்" (எபே. 1: 4). எனினும் ஒரு சிலரைச் சிறப்பான பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனது அழைப்பைக் கேட்டவுடனே "ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறேன்" என்றார் சாமுவேல் (1 சாமு. 3:10). இறைவனின் அழைப்பைக் கேட்ட எரேமியாஸ் வியப்பும் திகைப்பும் கொண்டு அழைப்பை ஏற்க மறுத்த வேளையில், தனது வார்த்தைகளை அவரது வாயில் ஊட்டி இறைவாக்குரைக்க இறைவன் அவரைப் பணிக்கிறார் (எரே 1:1-10). ஒவ்வொரு ஊழியரும் இறைவனால் முன் குறியிடப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்.
"கருப்பையிலே ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார்; என் தாய் வயிற்றிலேயே எனக்குப் பெயரிட்டிருக்கிறார் (2)

அழைக்கப்பட்ட தன் ஊழியனைப் பராமரித்தும் வருகிறார். "தன் கையின் நிழலில் என்னைக் காத்தருளினார்; தீட்டிய அம்பாக என்னைச் செய்து தமது அம்பறாத்தூணியில் ஒளித்து வைத்தார் (2). அழைக்கப்பட்ட ஊழியர்களின் வரிசையில் வந்த ஒப்பற்ற ஊழியனே இறை இயேசு. "என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மத். 3:17) என்று தந்தை, கிறிஸ்துவைப் பற்றிக் கூறியதன் எதிரொலியை "இஸ்ரயேல் நம் ஊழியன்; உன்னில் நாம் மகிமையடைவோம்" (3) என்றவாக்கில் கேட்கின்றோம். தெய்வத் திருமகன் ஊழியனாகவே வந்தார். கிறிஸ்துவின் தொண்டர்களாகிய நாம் அனைவரும் அவரைப் போல் பணி புரியவே அழைக்கப்பட்டுள்ளோம். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற வாக்கு எனக்குப் பொருந்துமா?

புறவினத்தாரின் ஒளி

இஸ்ரயேல் இனம் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்தது. தன் இனத்தை மட்டுமே மெசியா மீட்க வருவார் என்று எண்ணியது. ஆனால் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இவ்வூழியன் அனைத்து மக்களின் மீட்பாவார்; ஒளியாவார் என்கிறார் எசாயா.

"யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும்
இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக்கொணர்வதற்கும்
நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ?
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு
நான் உன்னைப் பிற இனத்தார்க்கு
ஒளியாக ஏற்படுத்துவேன்." எசா. 49: 6

இந்த ஒளியை மனதில் கொண்டே ஆனந்தக் கவிதை பாடுகிறார் எசாயா; "எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!... அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னரிடம் வருகின்றனர்." (60 : 1-4).

பாலன் இயேசுவைக் கையிலேந்திய சிமியோன் பாடினார்: "இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" (லூக். 2: 32).

தன்னையே சுட்டிக் காண்பித்து "நானே உலகின் ஒளி" என்றார் இயேசு; அதே ஆண்டவர் நம்மையும் விளித்து, "நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார். நாம் நமது வாழ்வில் இறை இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கும் மின்மினிப் பூச்சிகள் ஆகவாவது திகழ்கின்றோமா?

புறவினத்தார்க்கு ஒளியாக என்னை ஏற்படுத்தினார்.

இரண்டாம் வாசகம் : 1 கொரி. 1:1-3

கொரிந்து கிரேக்க நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று. செல்வச் செழிப்பும். கலைவளமும் மலிந்த நகரம். பவுல் இங்கு ஒன்றரை ஆண்டுகள் தங்கி திருச்சபையை நிறுவினார். அவர் அங்கிருந்து சென்ற சில ஆண்டுகளில் பிரச்சனைகள் எழுந்தன. கொரிந்தியத் திருச்சபைக்கு அறிவுரை கூறியும், வேத உண்மைகளை விளக்கியும் எழுதிய முதல் நற்செய்தியின் தொடக்கமே இன்றைய வாசகம்.

பவுலின் அழைப்பு

கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்த பவுலை தமாஸ்கஸ் செல்லும் வழியில் இயேசு தடுத்தாட்கொண்டார் (திப. 9). "தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள்" என்று இறையருளை நன்றிப் பெருக்குடன் நினைவு கூர்கின்றார் பவுல் (கலா. 1:15). கிறிஸ்தவனாக அழைக்கப்பட்டதே இறைவன் நமக்குக் காட்டியுள்ள தனிச் சலுகை. தன் வயிற்றிலேயே ஏன், நித்தியத்திற்கும் இறைவன் என்னைத் தேர்ந்தெடுத்து அன்பு செய்தார் என்று ஒவ்வொரு கிறிஸ்தவனும் கூற முடியும். இயேசு தன் சீடர்களை நோக்கி "நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்" என்றார் (யோ. 15:16). கிறிஸ்துவால் அழைக்கப்பட்டு, அவரது சீடனாயிருப்பதில் பூரிப்படைகின்றேனா?

தூயவராக அழைப்பு

சீனாய் மலையில் காட்சி கொடுத்த கடவுள் இஸ்ரயேல் இனத்தைத் தம் உடைமையாகப் பிரித்தெடுத்து, "அவர்களைக் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் மாற்றினார்" (விய. 19: 6-15). தூய என்ற சொல் ஏனைய பொருள்களிலிருந்து அல்லது ஆட்களிலிருந்து பிரிக்கப்பட்டு இறைவனுக்கே உரியதாக்கப்பட்ட பொருளை அல்லது ஆளைக் குறிக்கும். கோயில் தூய்மையானது என்றால் ஏனைய கட்டடங்களிலிருந்து பிரிக்கப்பட்டு இறைவனுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே பொருள். தனித்து நிற்கும் தனக்குவமை இல்லாத பரம்பொருளை தூயவர் என அழைக்கிறோம். "தூயவர் என்பதே அவரது பெயர்" (லூக். 1: 49), ஒவ்வொரு கிறிஸ்தவனும், இயேசுவின் அர்ப்பணத்தால் பாவத்தினின்று பிரிக்கப்பட்டு, இறைவனுக்கு ஏற்றக் காணிக்கையாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளான். "நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்" (எபே. 1:4). "தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப் படுத்தினேன்" (எரே. 1:5) என்பது வேதவாக்கு. "கடவுளின் கோயில் தூயது; நீங்களே அக்கோயில்" என்பது பவுல் போதனை (1 கொரி 3:17). "இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும் பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக" (1தெச. 3:13).

நாம் திருமுழுக்கால் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; இதைப் பாதுகாப்பதுடன், இதில் மேலும் வளர்ச்சியடைந்து தூயவராகும்படி அழைக்கப்பட்டுள்ளோம். பவுல் அனைத்துக் கிறிஸ்தவர்களையும் தூயவர்கள் என்றே அழைக்கிறார். நாயினும் கடையனேயினும் இறையருளால் அவரது அடி சேர முடியும் - தூயவராக முடியும்.

"ஆய நான் மறையவனும் ஆதல்
அறிந்து நான் யாவரினும் கடையன் ஆய
நாயினேன் ஆதலையும் நோக்கிக்கண்டு
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன்
ஆயினேன் ஆதலால் ஆண்டுகொண்டாய்." - திருவாசகம்

தூயவராவதில் என் அக்கறை என்ன?

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தூயவர் ஆக்கப்பட்டவர்கள்.
நற்செய்தி: யோ. 1:29 - 34

இயேசு கடவுளின் ஆட்டுக்குட்டி

இயேசுவைச் சுட்டிக்காட்டி "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று அழைக்கிறார் திருமுழுக்கு யோவான். 'ஆட்டுக்குட்டி' என்ற அடைமொழி விவிலியத்தில் மீட்பின் சின்னமாக விளங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்ட நாளில் அவர்களைக் காப்பாற்றியது அவர்கள் கதவு நிலைகளில் பூசப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம். எசாயா இறைவாக்கினரும் இறை ஊழியரை (மெசியாவை) ஒரு ஆட்டுக்குட்டியாகவே சித்தரித்துள்ளார். "அவரோ அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோல் அமைதியே உருவாக இருந்தார்" (53:7).

நாமும் பலியாவோம்

எருசலேம் ஆலயத்திலும் ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு ஆட்டுக்குட்டி பலியிடப்பட்டு வந்தது (விப. 29: 38 - 42). இஸ்ரயேல் மக்களை மீட்ட ஆட்டுக்குட்டிபோல் உலக மக்களை மீட்ட ஆட்டுக்குட்டி இயேசு. இயேசுவே இறை ஊழியனான ஆட்டுக்குட்டியாகத் தம்மையே கையளித்தார் (மாற். 14:24) "இது பலருக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்." எனவே பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டிபோல் தம் இரத்தத்தை சிந்துகிறார் இயேசு. இயேசுவை ஒரு ஆட்டுக்குட்டியாகக் காணும்போது அவரை ஒரு பலியாகப் பார்க்கிறோம். அதுவும் இரத்தப் பலி - மீட்புப் பலி.

பலி என்பது ஒரு பொருள் முழுமையாக அழிக்கப்பட்டு அர்ப்பணிக்கப் படுவதாகும். பலிப்பொருள் சுய அர்ப்பணத்தின் ஓர் அடையாளமே. இயேசுவில் பலிப்பொருளும், பலி நிறைவேற்றுபவரும் ஒன்றே.

மாசற்ற ஆட்டுக்குட்டி மக்களின் பாவங்களுக்காக இரத்தம் (உயிர்) அளிப்பது போலவே, பாவ மாசற்ற இயேசுவும் மக்கள் ஈடேற்றத்துக்காகத் தம் உயிரைத் தானம் செய்கிறார். இயேசுவைப் போல் நாமும் பலியாகும் ஆட்டுக்குட்டிகளாக, அதாவது பிறர் மீட்புக்காகத் தம்மையே அர்ப்பணிக்கும் ஊழியர்களாக வாழ நற்செய்தி அழைக்கிறது.

தூய ஆவி புறா வடிவில் இறங்கி வந்த நிகழ்ச்சி இயேசு திருமுழுக்குப் பெற்ற நேரத்தில் நடந்தது. திருமுழுக்கு யோவான் 'ஆவியானவர்' என்று குறிப்பிடும்போது அது இறைவனுடைய ஆற்றலையும், வல்லமையையும் குறிக்கிறது. இப்பொருளில்தான் எசாயா கூறுகிறார்: "உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும், உன் வாயினின்றும் உன் வழிமரபினர் வாயினின்றும், வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது" (59 : 21). "ஆண்டவரின் ஆவி என் மேலே; ஏனெனில் ஆண்டவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்" என்பது எசாயாவின் கூற்றே.

சான்று பகர்வோம்

திருமுழுக்கால் அருள்பொழிவு செய்யப்பட்ட நாமும் ஆவியின் வல்லமையைக் கொண்டுள்ளோம். இந்த உண்மையை உணர்கின்றோமா? இறை ஆவியின் வல்லமை நம்மை ஒளியின் மக்களாக்கி ஒளியின் கனிகளாகிய நீதிக்கும், உண்மைக்கும் சாட்சியம் கூறத் தூண்டுகிறது.

நாம் பெற்ற திருமுழுக்குப் பாவத்தைக் கழுவுவதற்காக மட்டும் கொடுக்கப்பட்டது அன்று. இறைவனின் வல்லமையில் பங்களிக்கும் திருமுழுக்கு ஆகும். இத்தெய்வீக வல்லமை நம் உள்ளத்தில் உண்டு என்று உணரும்போது, வெளி பலத்தையும் பாதுகாப்பையும் அதிகம் தேடி அலையோம்.

நான் கண்டேன்! அவரே கடவுளின் மகன் எனச் சாட்சியம் கூறுகின்றார் திருமுழுக்கு யோவான். தம் பணியைச் சாட்சியப் பணியாகக் கண்டார். சாட்சியப் பணி தன்னை மையமாகக் கொண்ட வாழ்வு அன்று; எனவேதான் "அவர் வளர வேண்டும் நான் குறைய வேண்டும்' என விரும்பினார்.

கிறிஸ்தவர்களாகிய நாமும் சாட்சிய வாழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளோம். இந்தக் குறிக்கோளின் தெளிவும் உறுதியும் நம்மிடம் விளங்குகிறதா? அப்படி இல்லையென்றால் நம்மில் ஆழ்ந்த 'கிறிஸ்து அனுபவம்' இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவரே கடவுளின் செம்மறி... உலகின் பாவங்களைப் போக்குபவர்.
 
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே