இறைவனின் அருளைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கும் அன்புள்ளங்களே!
இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு தவக்காலம் நாம் விழித்தெழும்
காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் காலம் நம்பிக்கையின்
காலம்.
மகிழ்ச்சியின் காலம்.
நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க அழைக்கும் காலம்.
புதியதொரு பாதையில் அடியெடுக்க அழைக்கும் காலம்.
இன்றைய முதல் வாசகம் கண்களுக்கு களிப்பூட்டுபவை எல்லாம் நம்
வாழ்வில் எதிரி. நமக்கு விரிக்கும் கண்ணி என எச்சரிக்கிறது.
நமது பாவ இயல்பு அகற்றி புதிய இயல்பு பெற அழைக்கிறது இன்றைய
இரண்டாம் வாசகம். நம் ஆண்டவர் அலகையினால் சோதிக்கப்பட்டதே இன்றைய
நற்செய்தி. சோதனைகளும் வேதனைகளும் மனித வாழ்வின் எதார்த்தங்கள்.
சோதனையே வரக்கூடாது என்று ஜெபிப்பதைவிட, சோதனைகளில் விழவிடாதேயும்
என்று ஜெபியுங்கள் என்றுதான் நம் ஆண்டவர் கற்பித்தார்.
வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஒரு சோதனைதான். நாம் எடுக்கின்ற
முடிவுதான் நமக்கு மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ கொடுக்கின்றது.
எனவே, நம் வாழ்வின் சோதனைகளிலும் இக்கட்டான் நேரங்களிலும் சரியான
முடிவு எடுக்க, அந்த முடிவுகள் நமக்கு மகிழ்ச்சியை நிறைவை அளிக்க
அருள் வேண்டுவோம்.
நம்மை சோதனைக்குள்ளாக்கும் சூழ்நிலைகளை விலக்கு வாழ உறுதி
பூணுவோம். தீய நாட்டம் தீய உணார்வு இவைகள் நம்மை அடிமைப்படுத்தாமல்
தூய்மையான சிந்தனை எண்ணங்கள் இவைகளை நம்முள் உருவாக்குவோம்.
பழக்கமே வழக்கமாகிறது. வழக்கமே வாழ்க்கையாகிறது என்பதை உணர்வோம்.
சோதனை எதிர்வரும்போது பயந்து ஓடுவதை விட்டொழித்து, எதிர்கொள்ளக்
கிட்டிய துணிவைப் பெற ஆவியானவரின் அருள்துணையைத் தேடுவோம். நமக்குள்
இருந்து நம்மை வழிநடத்தும் உள்உணர்விற்கு செவிமடுத்து நல்லவர்களாய்,
தூயவர்களாய், தாழ்ச்சி உடையவர்களாய் உறவோடு வாழ்வோம். இந்த தவக்காலத்தில்
நம்மோடு அயலாரோடு, இறைவனோடு ஒப்புரவாகி வாழ்ந்திட அருள்வேண்டி
இணைவோம் இக்கல்வாரி வேள்வியில்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1 அருள் பொழியும் அன்புத் தந்தையே இறைவா!
அலகையை வென்ற உம்திருமகன் இயேசுவைப் போன்று, நாங்களும்
எங்கள் வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உமது அருளின் வலிமையால்
வென்று, சாதனை படைக்க வரம் தர வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின் இறைவா!
உமது வார்த்தையை மீறியதாலேயே ஆதிமனிதன் ஆதாம் பாவம்
புரிந்து அழிவை வருவித்துக் கொண்டான் என்பதை உணர்ந்து,
நாங்கள் என்றும் உமது வார்த்தை குறித்துக் காட்டும்
வழியில் நடந்து, எமது வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள
அருள் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. மனம்மாறி வாழ அழைக்கும் இறைவா!
நாங்கள் தவக்காலத்தில் உமது ஆவியின் வல்லமையால், எங்களது
சிந்தனை சொல், செயல் அனைத்தையும் புனிதப்படுத்தி,
புனித மக்களாக வாழ முயற்சி எடுக்கவும், நீர் தரும் அருளோடு
இணைந்து பயணிக்க வழிநடத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. வாழும் தெய்வமே இறைவா!
அன்றாட வாழ்வில் உம் இடத்தில் நாங்கள் வைத்து வழிபடும்
படிப்பு, பணம், பொருள் பதவி, மனிதங்கள் என்னும்
குட்டிக்கடவுளர்களை விட்டு வாழக்கூடிய மனவுறுதியைத் தந்தருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. வார்த்தையானவரே இறைவா!
எங்கள் பக்தி முயற்சிகள் உம்மோடு நாங்கள் வைக்கும்
வியாபார ஒப்பந்தங்களாக அமையாமல் எங்களையே உருமாற்றும்
மேன்மையான முன்னெடுப்புகளாக அமைய இறைவா! உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
அன்பார்ந்தவர்களே!
தவக்காலத்தின் முதல் ஞாயிற்றில் இருக்கிறோம் திருமுழுக்கின்போது
இயேசுவின்மேல் இறங்கி வந்த தூய ஆவியானவர் உடனடியாக அவரைப் பாலைநிலத்திற்கு
அழைத்துச் செல்கிறார். (மோசே விப 34 :28. எலியா அர 19:8) அலகையால் இயேசு
சோதிக்கப்பட்ட நிகழ்வு ஒத்தமை நற்செய்திகளில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. யோவான்
நற்செய்தியாளர் இந்த நிகழ்வைக் குறித்து ஒன்றுமே எழுதாமல் அமைதி காக்கிறார். மாற்கு
நற்செய்தியாளர் பாலை நிலத்தில் அவர் 40 நாள்கள் இருந்தார். அப்போது சாத்தானால்
சோதிக்கப்பட்டார். அங்கு காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப்
பணிவிடை செய்தனர். (மாற்கு 1:13.) என்று ஒரே மூச்சாக எழுதி முடிக்கிறார்.
மத்தேயு நற்செய்தியாளரும் லூக்க நற்செய்தியாளரும் இயேசுவின் சோதனைகளை மூன்று
எனக் குறிப்பிட்டாலும் அவர்கள் குறிப்பிடும் வரிசை ஒன்றுக்கொன்று முரண்படுகிறது.
(மத் 4:1-11) அப்பம், கோவில், மலை
(லூக் 1:1-13) அப்பம், நகரம், கோவில்
எருசலேம் கோவிலில் தொடங்கும் தன் நற்செய்தியை எருசலேம் கோவிலிலேயே நிறைவு
செய்கிறார். லூக்கா இரண்டு பேரின் நோக்கங்களும் வேறுபட்டதால் சோதனைகளை
வரிசைப்படுத்துவதிலும் வேறுபடுகின்றனர்.
நமக்கு கடவுள் ஏன் சோதனைகளை அனுமதிக்க வேண்டும்? கடவுளையே
சாத்தான் சோதிக்கிறான் என்றால், கடவுளைவிட அவன் மேலானவனா? எதற்காக இயேசு
எங்களுக்கு சோதனைகள் வேண்டாம் என்று கற்பிப்பதற்குப் பதில் எங்களைச் சோதனையில்
விழவிடாதேயும் என்று இறை வேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும் அன்பும் உருவான
எல்லாம் வல்ல கடவுள், ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம்
உள்ளத்தில் எழக்கூடியவை. நன்மை தீமை என்பது மனிதரின் தொடக்க முதல் இருந்து வரும்
ஒரு தேடல். இந்த கேள்விகளுக்குப் பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு
பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும்,
தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம். இனி சோதனைக்கு வருவோம்.
"நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" இயேசு தன் வாழ்நாள்
முழுதும் தனக்காக என்று எந்த அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை. ஆனால் இறுதிவரை மக்கள்
அவருக்குக் கொடுத்த சோதனையும் இதுதான் "நீ இறைமகன் என்றால், சிலுவையில் இருந்து
இறங்கி வா" (மத் 27:40) தனக்குப் போகத்தான் தானம் என்பது பழமொழி. பழமொழி
பொறுத்தவரையில் தனக்கென்று எதவுமில்லை என்பது தான் வாழ்க்கைத் தத்துவமாக இருந்தது.
"இந்தக் கல்லை அப்பமாக்கி உண்" என்று சொல்கின்ற அலகை இயேசுவின் ஆணவத்தை தூண்டலாம்
என நினைக்கின்றது. நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள். (தொ.நூ 3:5)
என்று முதற் பெற்றோரை
தோட்டத்தில் தூண்டிய அலகை, இங்கே
இயேசுவையும் தூண்டுகிறது. நாம்
எது செய்தாலும், யாரைச் சந்தித்தாலும் நமக்குள் ஒலித்துக்கொள்கின்ற கேள்வி, இதைச்
செய்தால் இவரை அன்பு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? என்பதுதான். சுயத்தை
அறுக்கக் கற்றுக்கொடுப்பதே இம்முதல் சோதனை.
"நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையதாகும்" கடவுளின் செல்வமா? கடவுளா?
பொருளா? கடவுளா? அலகையா?
"நீங்கள் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய
முடியாது" (மத் 6:24) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதே இச்சோதனை.
இங்கே இயேசுவைச் சோதிக்கின்ற சாத்தான்
Deal
or seal
என்று கேட்கிறது.
"வாழ்வையும், சாவையும், ஆதியையும், சாபத்தையும் உனக்கு முன்
வைக்கிறேன். நீயும் எனது வழித்தேன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்து கொள்"
(இச. 30:19) என எதைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இது நமக்குக் கற்பிக்கின்றது.
மனிதர்களைப் பல நேரங்களில் அடிமையாக மாற்றும் என்று அவரகளிடம் இருக்கும்
சுதந்திரம்தான், இது வேண்டும் அது வேண்டாம் என்று நம்மை முடிவெடுக்க வைக்கும்.
சுதந்திரம் பல நேரங்களில் நம் துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது.
தேர்ந்தெடுத்தபின் "ஐயா, தவறு செய்து விட்டேன்" என்ற குற்றவுணர்வையும் அதை
எடுத்திருக்கலாமோ? என்ற கவலையையும் தருவது இந்தச் சுதந்திரம்தான். இன்று நாம்
எதைத் தேர்ந்து கொள்கிறோம்?
"நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்". இங்கு இயேசுவை ஒரு கைப்பொம்மையாக
நினைக்கிறது அலகை.
"கடவுளைக் கடவுளாக இருக்க விடு" என்று பதிலடி கொடுக்கின்றார் இயேசு. நாமும் பல நேரங்களில் கடவுளையும் கடவுளாக இருக்கவிடுவதில்லை.
மற்றவர்களையும் மற்றவர்களாக இருக்க விடுவதில்லை. நான் நவநாள் செய்கிறேன்? என்னை இப்படி
மாற்றுங்கள்? எனக்குச் சொத்து கொடுங்கள் என்று நாம் கடவுளையும் அவர் தன்மையில்
இருந்து குதிக்கத் தூண்டுகிறோம். அவரவருக்குரியதை அவரவருக்குக் கொடுக்க வேண்டும்
என்பதே இச்சோதனையில் இயேசுவின் போதனை.
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்த பின்பு
அவரை விட்டு அகன்றது. (இயேசு)
லூக் 4:13 அப்பொழுது வானதூதர் அவரைவிட்டு (மரியா)
அகன்றார். (லூக் 1:38) இந்த இரண்டு இறைவாக்குகளையும் அருகில் வைத்துப்பார்த்தால்
என்ன புலப்படுகிறது? வானதூதரும் அலகையும் நம்மைவிட்டு அகல்கிறார்கள் என்றால்
திரும்ப வரமாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல, இரண்டு பேருமே நம் வாழ்வில் தொடர்ந்து
வருவார்கள். இயேசுவுக்கும் சோதனைகள் தொடர்கின்றன. (மத் 16:21-23.
லூக் 22:42)
நமக்கும் சோதனைகள் வரும் உங்களுக்கு வருகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும்
சோதனையே அன்றி, வேறு அல்ல கடவுள் நம்பிக்கைக்குரியவர் என்பதை உணர்வோம்.
இயேசு தம் வாழ்வில் எத்தனை புதுமைகள் செய்திருக்கிறார். நற்செய்திகளில் பதிவு
பண்ணப்பட்டவை மட்டுமே 37. அது இல்லாமல் இயேசு செய்த எல்லாவற்றையும் எழுதியால் பூமி
தாங்காது என்று யோவான் கூறுகிறார். எண்ணற்ற அற்புதங்கள் சரி. இதில் ஒன்றையாவது
இயேசு தமக்காகச் செய்து கொண்டாரா? இல்லை, இயேசுவைப் பொறுத்தமட்டில் கொடைகள்
எப்போதும் மற்றவர்களுக்காகவே. இன்றைய தலைவர்களிடம் இருப்பதைப்போல் இயேசுவிடம்
எந்தவிதமான வசீகரத் திட்டமும் இல்லை. சிலுவை மட்டுமே உண்டு என்கிறார்.
"என்னைப்
பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு
என்னைப் பின்பற்றட்டும்" (மத்.16:24) இப்படி உருவானதே கிறிஸ்தவம். இயேசுவின் நோக்கம்
கட்டம் சேர்ப்பது அல்ல. சீடர்கள் உருவாக்குவது.
அவர் வந்தது. கற்களை அப்பமாக்க
அல்ல தம்மையே அப்பமாக்க!.
கற்களை அப்பமாக்கச் சொல்லி இன்றைக்கும் சாத்தான் நம்மைத் தூண்டிக் கொண்டே
இருக்கிறான்.
இயேசுவின் மனசை அறிவது, எந்த கிறிஸ்தவனும் அந்தத் தப்பை செய்யக்கூடாது.
சுயநலம் அல்ல, பிறர் நலம்தான் கிறிஸ்தவத்தின் தாரக மந்திரம் சலுகைகள் அல்ல, கடவுளின் ஜீவனுள்ள வார்த்தைகள் தான் நம் ஒரே பிரதிபலன். மனம் மாற்றம் பெறுவோம்.
செய்கிற தவறையே மீண்டும் மீண்டும் செய்து நம் மனதை அழுக்கப்படுத்த வேண்டாம்,
தூய்மையாக்கும் செயல்களுக்கு நம் இதயங்களைத் திறப்போம்.
அன்பில் அன்னையாய் ,
பாசத்தில் தமக்கையாய்,
வழிநடத்துதலில் தோழியாய்
உடன் வாழ்வதில் மனைவியாய்,
அன்னை அன்பின் மறுதலிப்பாம் மகளாய்
அனுதினமும் மறு பிறவி எடுத்து
மண்ணுலகை மகிழ்விக்கும் அனைத்து
மகளிருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்
தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில் இருக்கக்கூடிய நம்மை இயேசு எழுந்திருங்கள்
அஞ்சாதீர்கள் என்ற வார்த்தைகள் மூலம் வலுப்படுத்துகின்றார். இன்றைய
நாளில் இயேசுவின் உருமாற்றம் பகுதி நமக்கு நற்செய்தி வாசகமாக
கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பேருடைய குரல்களை நமது சிந்தனைக்கு
என்று எடுத்துக்கொள்வோம்.
பேதுருவின் குரல், மேகத்தின் குரல், இயேசுவின்
குரல்
முதலாவதாக பேதுருவின் குரல்
ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும், மோசேக்கு
ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது
உமக்கு விருப்பமா? என்கின்றார். தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே
அவர் பேசுகின்றார். அதாவது இப்போது இருக்கக்கூடிய அந்த இன்பமான
நிலையிலேயே அப்படியே இருக்க விரும்புகிறார். இரண்டாவதாக தன்னை மறந்து
தனக்கு எதிரில் ஒளிமயமாக இருக்கக்கூடிய மோசே எலியா இயேசு ஆகியோரின்
நலன்களை மட்டும் நினைக்கின்றார். அந்த காலத்தில் கூடாரம் அமைப்பது
அல்லது கூடாரம் என்பது இறைவன் வாழும் ஆலயமாக கருதப்பட்டது ஆக இயேசுவை
இறை நிலைக்கு உயர்த்தி மகிழ்கிறார்.
இரண்டாவது மேகத்தின் குரல்
இந்த குரலில் என் அன்பார்ந்த மைந்தர் இவரே இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன் இவருக்குச் செவிசாயுங்கள் என்று ஆண்டவர் எடுத்துரைக்கின்றார்.
இவற்றின் மூலமாக இயேசு யார் என்று தெளிவாக எடுத்துரைக்கின்றார் எனது
அன்பார்ந்த மகன் இந்த மனிதரின் பொருட்டு மிகவும் பூரிப்படைந்திருக்கின்றார்
என்பதை எடுத்துரைக்கின்றார். அடுத்ததாக இவருக்குச் செவிசாயுங்கள்
என்று ஒரு விண்ணப்பம். அன்று யோர்தான் நதிக்கரையில் இயேசு தன் பணியைத்
தொடங்கும் முன் அவர் யார் என மக்களுக்கு எடுத்துரைத்த இறைவன், இன்று
அவரது உயர்பணியாம் எருசலேமை நெருங்கும் முன் மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
இயேசுவின் குரல்
முகம் குப்புற விழுந்த சீடர்கள் மூவரையும் தொடுகின்ற தொடுதலின் மூலம்
தன்னை யாரென்று வெளிப்படுத்துகின்றார் இயேசு. அஞ்சாதீர்கள் எழுந்திருங்கள்
என்ற வார்த்தைகள் அவர்களை பலப்படுத்துகின்றன. மேலும் தான் விண்ணேற்றமடையும்
நாள் வரை இதை யாருக்கும் எடுத்துரைக்கக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்.
எதை யாரிடம் எப்படி எப்போது சொல்ல வேண்டும் என்பதிய நன்கு அறிந்த
இயேசு அதனை தன் சீடர்களுக்கும் பயிற்றுவிக்கின்றார்.
இந்நற்செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்று குரல்களும் மூன்று விதமானவை.
பேதுருவின் குரல் மனித இயல்பின் குரல். மேகத்தின் குரல் தய்வ இயல்பு.
இயேசுவின் குரல் தெய்வ மனித இயல்பு. எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள்
என்று அன்று சீடர்களுக்கு சொன்ன இயேசு இன்று நமக்கும்
சொல்கின்றார். பல்வேறு நேரங்களில் நாமும் இன்பமான இந்நிலையிலேயே தொடர்ந்து
வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடாதா என்று மனித இயல்பில் ஏங்குவது
உண்டு. இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
மேலும் எவ்வாறு சீடர்கள் மேகத்தின் குரலைக் கேட்டு அஞ்சி முகம்
குப்புற விழுந்தார்களோ அதுபோல நாமும் பல நிறங்களில் இறை திருவுளம்
இறை சித்தம் இது என தெரிந்திருந்தும் அதனை செய்ய இயலாமல் அஞ்சி முகம்
குப்புற விழுகின்றோம். இந்நிலையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது விருப்பம் இதுதான் என இயேசுவின் முன் எடுத்து வைத்து அவரது
விருப்பம் எது? அவருக்கு விருப்பமா என்று பேதுரு போல கேட்க முன்வருவோம்.
இவருக்கு செவிசாயுங்கள் என்று மேகத்தின் குரலுக்கு செவிகொடுப்போம்.
இயேசு சொல்வது போல எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள். நமது பலவீனத்தில்
இருந்து எழுந்திருப்போம் நமது அறியாமையிலிருந்து எழுந்திருப்போம்.
நமது பகை மனதிலிருந்து எழுந்திருப்போம். நமது வீண் விவாதத்திலிருந்து
எழுந்திருப்போம்.
அன்று மோசேக்கு சீனாய் மலையில் எரியும் முட்புதரில் காட்சி அளித்த
இறைவன், இறைவாக்கினர் எலியாவிற்கு ஓரேபு மலையில் பலி நெருப்பு வடிவத்தில்
காட்சி அளித்த இறைவன், இன்று இயேசுவுக்கு தாபோர் மலையில் மேகத்தின்
குரல் வழியாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவ்வாறு நமது
வாழ்விலும் பல்வேறு தருணங்களில் எரியும் புதராக பலி நெருப்பாக மேகத்தின்
குரலாக இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்கு தன்னை வெளிப்படுத்திக் கொண்டே
இருக்கின்றார். நாம் அவரது குரலைக் கேட்க, அவரது உருவத்தை அவரது தன்மையை
கண்டுணர முற்படுவோம். இன்று உலகம் முழுவதும் கொரோனா எனும் தொற்று
வியாதி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கக் கூடிய நிலையில், இறைவன்
நம்மை தொட்டு கூறுகிறார் இந்நிலையிலிருந்து எழுந்திருங்கள் அஞ்சாதீர்கள்.
அஞ்சாது இருப்போம் அவர் குரலுக்கு செவி சாய்ப்போம். அப்பொழுது நமது
மனம் என்னும் அகம் நல்லெண்ண ஒளி வீசும். நமது நற்பண்புகள் எனும் குணம்
ஆடை எனும் ஒளியால் நம்மை மூடும். எழுந்திருப்போம் அஞ்சாதிருப்போம்.
இறையாசிர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தில் உள்ள அனைவரோடும் இருப்பதாக
ஆமென்
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
உள்ஒளி
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை
தியானிக்கின்றோம்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தன் நண்பர் பற்றி என் நண்பர்
நேற்று பேசிக்கொண்டிருந்தார். பருமனான உடல் கொண்டிருந்த அவரது நண்பர்
புற்றுநோயால் அவதிப்பட்டுக் கிடக்கிறார் எனவும், அவர் மிகவும்
மெலிந்து விட்டார் எனவும், அவரது முதுகு தண்டுவடம் கூட வெளியே
தெரிகிறது எனவும் சொன்னார். நம் கண்முன்னாலேயே மனிதர்களின் உருவம்
மாறுகின்றது.
ரொம்ப ஆண்டுகளாகப் பார்க்காத ஒருவரை திடீரென பார்க்கும்போது அவரின்
தலைமுடி வெள்ளையாகவும், ஆள் ஒல்லியாகவும் அல்லது குண்டாகவும் இருந்தால்,
அவரை நாம் முன்னால் பார்த்த முகம் உடனே வந்து போகிறது. 'என்ன அப்படியே
மாறிட்டீங்க!' என ஆச்சர்யப்படுகிறோம்.
இன்னும் சிலர் முன்னால் நமக்கு நெருக்கமாக இருந்தவர்கள். இன்று ஏதோ
ஒரு காரணத்தால் நம்மிடமிருந்து விலகி இருப்பார்கள். அவர்களைப் பற்றி
யாராவது நம்மிடம் விசாரித்தால், 'அவர் முன்னால் மாதிரி இல்ல.
மாறிட்டார்' என ஆதங்கப்படுகிறோம்.
ஆக, நாமும் நம் கண்முன் நடக்கும் உடல் மாற்றங்களையும், உணர்வு
மாற்றங்களையும், உறவு மாற்றங்களையும் பார்க்கின்றோம்.
மாற்றத்தை திடீரென்று பார்க்கும்போது நம்மால் அதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.
குழந்தைகளாக இருந்த நாமே வளர்ந்தோம். சிறுவர்கள் ஆனோம். இளமை
வந்தது. வளர்கிறோம். மாறிக்கொண்டே இருக்கிறோம். நம்மில் நிகழும்
இந்த மாற்றம் மெதுவாக நடப்பதால் நாம் அதை அப்படியே
ஏற்றுக்கொள்கிறோம்.
தனக்கு மிகவும் நெருக்கமான சீடர்கள் வட்டத்தில் இருந்த பேதுரு,
யோவான், யாக்கோபு ஆகியோரைக் கூட்டிக்கொண்டு இயேசு ஓர் உயர்ந்த
மலையில் ஏறுகின்றார். இயேசு எல்லாரையும் ஏற்றுக்கொண்டார். ஆனால்
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வட்டத்தில் வைத்து அன்பு செய்தார். அந்த
வகையில் இந்த மூன்று சீடர்களும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக
இருந்தனர்.
மலையில் ஏறிச்சென்றவர் உருமாறினார் என மத்தேயு நற்செய்தியாளர்
பதிவு செய்கின்றார். மாறிய உருவம் எப்படி இருந்தது என வர்ணிக்காமல்
அவரது முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது என்கிறார் மத்தேயு. முகம்
மட்டுமல்ல. ஆடையும் வெண்ணிறமாக ஒளிர்கிறது. ஆக, இயேசு ஒளியாக
மாறுகின்றார். அந்த ஒளி மாற்றத்தில் மோசே மற்றும் எலியாவையும்
கண்டுகொள்கின்றனர் சீடர்கள். அவர்கள் தோன்றியது மட்டுமல்லாமல்,
இயேசுவோடு உரையாடிக்கொண்டும் இருந்தனர். அந்த உரையாடலும் பதிவு
செய்யப்படவில்லை.
இந்த நேரத்தில்தான் இயேசுவைப் பார்த்து பேதுரு உரையாடுகிறார்:
'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு
ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா?
உமக்கு விருப்பமா?'
பேதுரு தன் கண் முன்னால் காண்பதை அப்படியே ஃப்ரீஸ் செய்ய
விரும்புகிறார்.
அதாவது ஃபோட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார். நாம் இன்று நிறைய
ஃபோட்டோக்கள் எடுக்கிறோம். நம்மை நாமே செல்ஃபி எடுக்கிறோம். அல்லது
பிறரை எடுக்கிறோம். அதை நாம் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும்
செய்கிறோம். ஃபோட்டோ எடுக்கும்போது என்ன நடக்கிறது. நாம் இருக்கும்
இடத்திலும், நேரத்திலும் நம்மை அப்படியே உறையச் செய்து விடுகிறோம்.
ஆகையால்தான் ஒரு ஃபோட்டோவைக் காட்டும்போது இது இந்த இடத்தில், இந்த
நேரத்தில் எடுக்கப்பட்டது என்கிறோம். ஃபோட்டோக்கள் மாறுவதில்லை.
ஃபோட்டோவில் இருப்பது அப்படியே உறைந்துவிடுகிறது.
பேதுரு இயேசுவையும், மோசேயையும், எலியாவையும் மூன்று
கூடாரங்களுக்குள் வைத்து அப்படியே உறையச் செய்ய விரும்புகின்றார்.
பேதுருவின் கேள்விக்கு இயேசுவோ, மோசேயோ, எலியாவோ பதில்
சொல்லவில்லை.
ஆனால், அந்த நேரத்தில் வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது.
'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு பூரிப்படைகிறேன்.
இவருக்கு செவிசாயுங்கள்'
பேதுரு ஒன்று கேட்க, பதில் குரல் வேறொன்றாக இருக்கிறது.
அவர்கள் அச்சத்தால் முகங்குப்புற விழுகிறார்கள்.
புதிய ஒளி, புதிய நபர்கள், புதிய குரல் - விளைவு அச்சம்.
முகங்குப்புற விழுவதை சரணாகதியின் அடையாளம் என்றும், அல்லது
பயத்தின் விளைவு என்றும் சொல்லலாம். எவ்வளவு நேரம் இப்படி
விழுந்துகிடந்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்தில்
இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள்.
அஞ்சாதீர்கள்!' என்கிறார்.
அத்தோடு, 'இங்க நடந்ததை மானிட மகன் இறந்து உயிர்க்கும்வரை
யாரிடமும் சொல்லாதீர்கள்!' என அவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
ஆக, இயேசுவின் உருமாற்ற நிகழ்வு அவருடைய பாடுகள், இறப்பு,
உயிர்ப்போடு தொடர்புடையது. எப்படி?
இங்கே தாபோர் மலை. அங்கே கல்வாரி மலை.
இங்கே அவரின் முகம் ஒளிர்கிறது. அங்கே அவரின் முகம் தூசி படிந்து
இருக்கிறது.
இங்கே அவரின் ஆடைகள் வெண்ணிறமாக இருக்கின்றன. அங்கே அவரின் உடலில்
ஆடைகள் இல்லை.
இங்கே மோசேயும் எலியாவும் உடன் நிற்கின்றனர். அங்கே இரண்டு
கள்வர்கள் உடன் நிற்கின்றனர்.
இங்கே பேதுரு இருக்க விரும்புகிறார். அங்கே அவரை விட்டு
ஓடிவிடுகின்றார்.
இங்கே வானகத் தந்தையின் குரல் கேட்கிறது. அங்கே மக்கள் மற்றும்
படைவீரர்களின் ஏளனம் கேட்கிறது.
இங்கே சீடர்கள் முகத்தை மூடிக்கொள்கின்றனர். அங்கே கதிரவன் தன்
முகத்தை மூடிக்கொள்கிறது.
இங்கே வெளிச்சம். அங்கே இருள்.
இங்கே சீடர்களை எழுந்திருக்கச் சொல்கின்றார் இயேசு. அங்கே தானே
உயிர்த்து எழுகின்றார்.
ஆனால்,
இரண்டிற்கும் ஒரே ஒரு முக்கியமான ஒற்றுமை இருக்கிறது.
இங்கேயும், அங்கேயும் மாட்சி பெறுகின்றார் இயேசு.
ஆக, இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு வழியாக இறைமகன் என்னும்
மாட்சி பெறுகின்றார். அந்த இறைமகனுக்குச் செவிகொடுங்கள் என்ற
செய்திதான் இங்கே சீடர்களுக்குத் தரப்படுகிறது.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வை சீடர்கள் எப்படி புரிந்திருப்பார்கள்?
மாற்கு நற்செய்தியாளர் சீடர்களின் புரியாத தன்மையை அடிக்கடி பதிவு
செய்கிறார். இயேசுவும், அவருடைய மெசியா அடையாளமும் சீடர்களுக்கு
இறுதிவரை மறைபொருளாகவே இருக்கின்றது.
இன்றைய நற்செய்தியில் உள்ள முரண் என்னவென்றால் கதிரவன்போல வந்த
வெளிச்சம்கூட சீடர்களின் அறியாமை என்னும் இருளைப் போக்கவில்லை.
நம் நம்பிக்கை வாழ்விலும் இதுபோல நடக்க வாய்ப்பு இருக்கிறது.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் கதிரவன் போல ஒளிர்ந்தாலும் நம்
உள்ளத்தில் இருக்கும் தயக்கம் அல்லது சந்தேகம் என்னும் இருள்
களைவதில்லை. மற்றவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்வதெல்லாம் நமக்குப்
புரிந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ள நம் மனம் தயக்கம் காட்டுகிறது.
சீடர்களின் தயக்கம் இயேசுவின் உயிர்ப்பில்தான் மாறுகிறது. அதுவரை
அவர்கள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கின்றனர். ஆக, நம்பிக்கை
வருவதற்கும், வளர்வதற்கும் வெளி ஒளி தேவை அல்ல. மாறாக, உள் ஒளியே
தேவை.
இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 1:8-10),
'அழியா வாழ்வை நற்செய்தி வழியாக ஒளிரச் செய்தார்' என
திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் தூய பவுல். நற்செய்தி என்பது நாம்
வெளியே இருந்து வாசிக்கக் கேட்பது அல்ல. மாறாக, இயேசுவே நற்செய்தி.
அந்த நற்செய்தியை நாம் நம் உள்ளத்தில் உணர்தலே ஒளி.
இன்றைய முதல் வாசகத்தில் (தொடக்கநூல் 12:1-4) நம் முதுபெரும் தந்தை
ஆபிராம் இறைவனால் அழைக்கப்படுகின்றார். 'உன் நாட்டிலிருந்தும், உன்
இனத்திலிருந்தும், உன் தந்தைவீட்டிலிருந்தும் புறப்பட்டு நான்
காட்டும் நாட்டிற்குச் செல்' என்று கட்டளை இடுகின்றார் கடவுள்.
ஆபிராமும் அவ்வாறே புறப்பட்டுச் செல்கின்றார். இந்த நிகழ்வையே
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'தாம் எங்கே போக
வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்' (எபி
11:8) என எழுதுகின்றார். வெளியே இருளாக இருந்தாலும், தன்
உள்ளத்தில் ஒளி இருந்ததால் புறப்பட்டுச் செல்கின்றார் ஆபிராம்.
இவ்வாறாக, இன்றைய இறைவாக்கு வழிபாடு முன்வைக்கும் கருத்து 'உள்
ஒளி.' இந்த உள் ஒளியைக் கண்டுகொள்வதே உருமாற்றம். உள் ஒளி நம்மில்
எப்போதும் இருக்கிறது. இந்த உள் ஒளியை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
1. இறைவனின் குரலைக் கேட்பது
காரானில் வாழ்ந்து வந்த ஆபிரகாமை ஆண்டவர் அழைக்கின்றார். ஆண்டவரின்
குரலை அவர் எப்படி கண்டுகொண்டார்? என்று நினைத்துப்பார்ப்பது
மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. உள்ளத்தின் குரல் என்பது நாம்
அனுபவிக்கும் ஒன்று. 'இதைச் செய்! இதைச் செய்யாதே! இதைப் பார்!
அதைப் பார்க்காதே!' என்று ஏதோ ஒரு குரல் நம்மை வழிநடத்திக்கொண்டே
இருக்கிறது. இதை நாம் மனம், மனச்சான்று என்றழைக்கின்றோம். சில
நேரங்களில் இந்தக் குரல் - மூளையிலிருந்து எழும் இந்தக் குரல் -
நம்மை ஏமாற்றியும்விடுகிறது. சில நேரங்களில் நாம் இக்குரலை
வெளியிலிருந்து கேட்கின்றோம் - நண்பர்கள் வழியாக, பெற்றோர்கள்
வழியாக, முன்பின் தெரியாதவர்கள் வழியாக. ஆனால், இந்த எல்லாச்
சப்தங்களிலிருந்தும் இறைவனின் சப்தத்தை, குரலை எப்படி
உணர்ந்துகொள்வது? உருமாற்றத்தில் சீடர்கள் கேட்கின்ற குரலில்,
'இவருக்குச் செவிகொடுங்கள்' என்று சொல்லப்படுகிறது. ஆக, அவருக்குச்
செவிகொடுப்பதே, அவரின் குரலைக் கேட்பதே நம் உள் ஒளியைக் கண்டுகொள்ள
முடியும் என்றால், அவரோடு நாம் ஏற்படுத்தும் நெருக்கமே அவரின்
குரலுக்கு அருகில் நம்மைக் கொண்டுசெல்லும்.
2. நற்செய்தியின் பொருட்டு துன்புறுவது
உள்ஒளியைக் காணுதல் என்பது துன்பத்தின் வழி. துன்பம் நம்முடைய
வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. நாம் எடுக்கின்ற முடிவுகள் சில
நேரங்களில் நமக்குத் துன்பத்தைத் தரலாம். நம்மைத் தழுவிக்கொள்கின்ற
நோய்கள், வறுமை, முதுமை துன்பத்தைத் தரலாம். ஆனால், நற்செயல் செய்ய
அல்லது நற்செய்தி கேட்க என்று நாம் ஒரு தெரிவை மேற்கொள்ளும்போதும்
அது நமக்குத் துன்பத்தைத் தருகிறது. அத்துன்பத்தை உவந்து
ஏற்றுக்கொள்ளுமாறு தன் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு
எழுதுகிறார் பவுல்.
3.எழு - அஞ்சாதே - பொறுமையாய் இரு
தன்னுடைய உருமாற்றத்தைக் கண்ட சீடர்களுக்கு இயேசு அடுத்தடுத்து
மூன்று கட்டளைகளை இடுகின்றார்: 'எழு,' 'அச்சம் தவிர்,' 'பொறுiமாய்
இரு'. 'எழுவது' என்பது நாம் இன்னும் முன்னேறிச் செல்ல வேண்டும்
என்பதையும், 'அஞ்சாதே' என்பது நம்பிக்கை கொள்ள வேண்டும்
என்பதையும், 'சொல்லாதே' என்பது பொறுமை காத்துக்கொள்ள வேண்டும்
என்பதையும் உணர்த்துகிறது. வேகமான இந்த உலகத்தில் நாம் இந்த
மூன்றையும் செய்யத் தவறிவிடுகின்றோம். எனது வீடு, எனது குடும்பம்,
எனது வேலை, எனது படிப்பு என அப்படியே அமர்ந்துவிடுகிறோம்.
அவற்றிலேயே அமிழ்ந்துவிடுகிறோம். அல்லது இவற்றைக் குறித்து கலக்கம்
கொள்கிறோம். அல்லது பொறுமையற்று அனைத்தையும் அனைவரிடமும் புலம்பித்
தள்ளிவிடுகிறோம். 'ஒவ்வொன்றிற்கும் ஒரு நேரம் உண்டு' என்பதை
மறக்காமல் இருப்பதே உள் ஒளி. தாபோருக்கு ஒரு நேரம், கல்வாரிக்கு
ஒரு நேரம்.
இறுதியாக, 'உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால் உமது பேரன்பு
எங்கள்மேல் இருப்பதாக' என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா
33:22). அவர்மேல் நம்மேல் காட்டும் பேரன்பே உள்ஒளி. அதை அடைவதே
நம்முடைய நம்பிக்கைப் பயணம்.
துன்பமும் மாட்சியும்
நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!
அமெரிக்கக் கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்று, அணிக்குப் பல வெற்றிகளைப்
பெற்றுத் தந்தவர் ரோஜர் ஸ்டாபக் (Roger Staubach).
ஒரு சமயம் இவர் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது, கடுமையாகக்
காயப்பட்டு, மிகவும் துன்புற வேண்டியதாயிற்று. அப்போது இவரைச் சந்தித்த
செய்தியாளர் ஒருவர் இவரிடம், "நாட்டிற்காக விளையாடி இப்படிக் காயப்பட்டுத்
துன்புறுகின்றீர்களே! இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?"
என்றார்.
"கால்பந்தாட்டம் ஆடும்போது காயம் படத்தான் செய்யும். காயம் படாவிட்டால்,
நான் கால்பந்தாட்ட வீரனே இல்லை!" என்று தீர்க்கமாய்ச் சொல்லி
முடித்தார் ரோஜர் ஸ்டாபக்.
மிகப்பெரிய கால்பந்தாட்ட வீரரான ரோஜர் ஸ்டாபக் நம் ஒவ்வொருவருக்கும்
சொல்லும் செய்தி இதுதான்: ஒரு நாட்டிற்கு அல்லது ஓர் அரசருக்குப்
பணிபுரிகின்றபோது துன்பங்கள் வரத்தான் செய்யும். துன்பங்களைச் சந்திக்க
வில்லை என்றால், நாம் அரசருக்கு உண்மையாய்ப் பணிபுரியவில்லை என்று
பொருள்.
தவக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை,
அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவின் துன்பத்தில் பங்குகொள்ள வேண்டும்
என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
புறப்பட்டுச் செல்!
இன்று பலரும் தங்களுக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை (Comfort Zone)
உருவாக்கிக் கொண்டு, அதற்குள்ளாகவே
'சொகுசாக' வாழப் பழகிக்
கொண்டார்கள். ஒருவேளை பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வர
நேர்ந்தால், துன்புற நேரிட முடியோ? என்று, அவர்கள் கூண்டுக்
கிளியாய் அதனுள் சிக்கிக்கொண்டு தவிக்கின்றார்கள். கடவுளின் மக்கள்
அல்லது அவரது அடியார்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வாழ அழைக்கப்பட்டவர்கள்
அல்ல; மாறாகப் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வரவும், கடவுளுக்குத்
தங்களை அர்ப்பணித்து வாழவும் அழைக்கப் படுகின்றார்கள்.
தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய
கடவுள் ஆபிராமை நோக்கி, "உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும்
உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" என்கிறார். சொந்த நாட்டையும் இனத்தையும்
வீட்டையும் விட்டுச் செல்வது எவ்வளவு கடினம்! இன்றைக்கு எத்தனையோ
பேர் சொந்த நாட்டையும் இனத்தையும் வீட்டையும் விட்டுவிட்டு அன்னிய
மண்ணில் அகதிகளாய் ஏதிலிகளாய் வாழ்கின்ற கொடுமையைக் கண்கூடாகப்
பார்க்கின்றோம். ஆபிராமும் இத்தகைய வாழ்க்கையை வாழ ஆண்டவரால் அழைக்கப்படுகின்றார்.
ஆண்டவர் ஆபிராகாமை அழைத்தபோது காரான் (தொநூ 11:31) என்ற இடத்தில்
அவர் இருந்தார். அங்கிருந்து அவர் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச்
செல்ல அழைக்கப்பட்டார். ஆண்டவர் இவ்வாறு சொன்னதற்கு ஆபிராம் அப்படியே
கீழ்ப்படிந்து, கானான் நாட்டிற்கு நம்பிக்கையோடு புறப்பட்டுச்
செல்கின்றார் (எபி 11:8). இதனால் ஆண்டவர் கூறியது போன்று ஆபிராம்
பெரிய இனமாகி, எல்லாருக்கும் தந்தை ஆகின்றார். ஆசி பெறுகின்றார்.
ஆபிரகாம் என்ற சிறப்புப் பெயரைப் பெறுகின்றார். இத்தகைய ஆசிகளெல்லாம்
ஆபிராம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் காட்டிய நாட்டிற்குப்
புறப்பட்டுச் சென்றதால்தான்.
துன்பத்தில் பங்குகொள்!
உறவினர்களிலும் சரி, நண்பர்களிலும் சரி நமது இன்பத்தில் பங்கு கொள்ளப்
பலரும் முன்வருவதுண்டு. இவர்கள் நமது துன்பத்தில் பங்குகொள்ள முன்வருவார்களா?
என்பது மிகப்பெரிய கேள்விக் குறி
கடவுளின் வார்த்தையைப் பிறவினத்தாருக்கு அறிவித்து, அவர்
பொருட்டுச் சிறையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார் பவுல்.
அப்படிப்பட்டவர் எபேசு சபையில் ஆயராக இருந்த திமொத்தேயுவிடம்,
"கடவுளின் வல்லமைக்கேற்ப, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன்
பங்குகொள்" என்கிறார். பவுல் திமொத்தேயுவிடம் இவ்வாறு கூறுவதற்கு
ஒரு காரணம் இருந்தது. தொடக்கக் காலகட்டத்தில் எபேசு சபையில் ஏற்பட்ட
அத்துமீறல்கள், துன்புறுத்தல்கள் யாவற்றையும் என பார்த்துவிட்டுத்
திமொத்தேயு அச்சத்தோடு இருந்தார். இதனாலேயே பவுல் அவரிடம், "கடவுள்
நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும்
கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்" (2 திமொ 1:7) என்று
சொல்லிவிட்டு, நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னோடு பங்கு
கொள் என்கிறார்.
திமொத்தேயு என்று இல்லை; நாம் ஒவ்வொருவரும் துன்பத்தில் ஏன் பங்கு
கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தைப் பவுல் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டுள்ளார். அதனாலேயே நாம் துன்பத்தில்
அவரோடு பங்குகொள்ள வேண்டும். அப்படி நாம் துன்பத்தில் பங்குகொள்ளவில்லை
என்றால், நாம் கிறிஸ்துவின் பணியாளர்களே அல்ல!
செவிசாயுங்கள்!
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாக மீட்டார் எனில், அவர் நம்மை எப்படி
மீட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவுபடுத்துகின்றது.
இயேசு தம் சாவை முதன்முறை அறிவித்தபோது, அவரது சீடர்களால் அதை ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. மெசியா எதற்குத் துன்புற வேண்டும்? மெசியாவாம் இயேசு
துன்புற்று இறக்கப் போகிறார் என்றால், அவர் மெசியா இல்லையா? என்றெல்லாம்
நினைத்துச் சீடர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். அவர்களுக்குத்
தாம் யார் என்பதை விளக்கும்பொருட்டு, இயேசு அவர்களில் மூவரை அழைத்துக்கொண்டு
மலைக்குச் சென்று, அவர்கள் முன்னே தோற்றமாற்றம் அடைகின்றார்.
இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தின் அடையாளமாக
மோசேயும், இறைவார்த்தையின் அடையாளமான இறைவாக்கினர் எலியாவும்
தோன்றி, எருசலேலில் இயேசு படவிருந்த பாடுகளைப் பற்றிப்
பேசுகின்றார்கள் (லூக் 9: 31) அப்போது, மேகத்திலிருந்து ஒலிக்கும்
குரல், "என் அன்பார்ந்த மைந்தன் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்.
இவருக்குச் செவி சாயுங்கள்" என்கிறது.
இயேசுவை முழுமையாய் அறியாமலும், அவர் எதற்குத் துன்புறவேண்டும் என்று
தெரியாமலும் சீடர்கள் இருந்த வேளையில், கடவுள், தம் அன்பு மகனுக்குச்
செவிசாய்த்து வாழ வேண்டும் என்ற அழைப்பினைச் சீடர்களுக்கு
விடுக்கின்றார்.
இயேசுவுக்குச் செவிசாய்ப்பது என்பது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது;
அவருக்காகத் துன்பங்களைத் தாங்கிக்கொள்வது. இந்த உண்மையை நன்கு உணர்ந்தவர்களாய்
பின்னாளில் பேதுரு, யாக்கோபு, யோவான் மட்டுமல்லாமல், மற்ற திருத்தூதர்களும்
இயேசுவுக்காகத் தாங்கிக் கொண்டார்கள்.
ஆதலால் நாம் ஆபிரகாமைப் போன்று, திருத்தூதர்களைப் போன்று நாமும்
கடவுளின் திருவுளம் நிறைவேறத் துன்புறுத் தயாராகவேண்டும். ஏனெனில்,
துன்பத்தின் வழியாகவே பேரின்ப வீடாம் விண்ணகத்தை அடைய முடியும்.
சிந்தனைக்கு
"கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று, ஒரு முன்மாதிரியை
வைத்துச் சென்றுள்ளார். எனவே, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப்
பின்பற்றுங்கள்" (1 பேது 2:21) என்று திருத்தூதர் பேதுரு கூறுவார்.
எனவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அவர் பொருட்டு
துன்பத்தில் பங்குகொள்ள முன்வருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
இயேசு இறைமகனாய் இருந்தபோது துன்பங்களை
அனுபவித்துத்தான் மீட்பை, விடுதலையை அளிக்க வேண்டும் என்பதைத்
தன் உருமாற்றத்தின் வழியாகக் கற்பிக்கின்றார். விதை மடிந்தால்தான்
பயிர். பயிர் விளைந்தால்தான் பலன். பூ கருகினால்தான் காய்.
காய் கனிந்தால்தான் கனி என்பதை இயேசுவின் உருமாற்றம் நமக்கு
நினைவுபடுத்துகிறது. கரைய விரும்பாத உப்பினால் உணவுக்குச்
சுவை தர முடியாதே! அழிய விரும்பாத மெழுகினால் இருளைப்
போக்க முடியாதே! இழக்க விரும்பாத மனிதரால் இறைவனிடமிருந்து
எதையும் பெற முடியாது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குத்
தெளிவாக்குகிறது. ஆபிரகாம், நாடு, வீடு இவைகளை
விட்டுவிட்டு அறியாத புதிய நாட்டிற்குச் செல்லும்போது பல
துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் கிடைத்த பரிசு விசுவாசத்தின்
தந்தை ஆனார்.
இயேசு தபோர் மலையில் உருமாற்றம் அடைந்தார். இந்த ஒளிமயமான
காட்சியைக் கண்டு இங்கே மூன்று கூடாரம் அமைப்போம் என்றார்
பேதுரு. ஆனால் தபோர் மலை அனுபவம் அடையும் முன் ஒலிவ மலை அனுபவமும்
(இரத்த வியர்வை அனுபவம்), கல்வாரி மலை அனுபவமும் (பாடுகள்
படுதல்) பெற வேண்டும் என்பதை சீடர்கள் அறியவில்லை. ஆனால்
வரப்போகும் துன்பத்தை எதிர்கொள்ளும் துணிவுக்கு முன் அச்சாரமாக
இந்த மகிமையான ஒளிமயமான உருமாற்றத்தைக் காட்டுகிறார் இயேசு.
இலையுதிர்ந்த மரங்களில்தான் வசந்தம் பிறக்கும். இழந்து
பெறும் வாழ்க்கையில்தான் சுகம் இருக்கும். உலக மாற்றம் காண
உளமாற்றம் முதன்மையாகும். எனவே நமது வாழ்க்கையில், நாம்
நடந்துகொள்ளும் முறையில் மாற்றம் தேவை. நமது பேச்சில்
திருத்தம் வேண்டும். எண்ணத்தில் புதிய எழுச்சி வேண்டும்.
வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்த இன்பம். சோகம் நிறைந்த சுகம்.
இந்த உண்மையை இன்றைய நற்செய்தியின் வழியாக நமக்கு இயேசு
எடுத்து இயம்புகின்றார். வாழ்க்கையில் துன்பப்படத் தயாராக
இருப்பவர்களால் மட்டுமே இன்பத்தை அனுபவிக்க முடியும்
என்பதைச் சுட்டிக்காட்ட இதோ மூன்று உவமைகள் :
முதல் உவமை : இரண்டு முட்டைகளைப் பற்றியது இரண்டாவது
உவமை : இரண்டு கற்களைப் பற்றியது மூன்றாவது உவமை : இரண்டு
விதைகளைப் பற்றியது
இதோ முதல் உவமை: இரண்டு கோழி முட்டைகள்! அவற்றிற்குச்
சொந்தக்காரர் அவற்றைப் பார்த்து, உங்கள் இரண்டு
பேரையும் அடைவைக்கப் போகின்றேன் என்றார்.
முதல் முட்டை, ஐயையோ அது எனக்கு சரிபட்டு வராது. 21
நாள்கள் நான் அமைதியாக ஓரிடத்திலே அமர்ந்திருக்கவேண்டும்.
21 நாள்களுக்குப் பிறகு நான் உடைபட வேண்டும். பிறகு
எனக்குள்ளேயிருந்து ஒரு குட்டிக் கோழிக்குஞ்சு வெளியே
வரும். அதை சூப் வைத்து குடித்துவிடுவார்கள் அல்லது
சிக்கன் 65 செய்து விடுவார்கள். இதெல்லாம் எனக்கு சரிபட்டு
வராது. நான் துன்பப்பட தயாராக இல்லை என்று சொல்லிவிட்டது.
இரண்டாவது முட்டையோ, எனக்குள்ளேயிருந்து ஒரு புதிய பிறவி
வெளியே வரட்டும் ; அது வாழ்வாங்கு வாழட்டும் என்றது.
இப்படிச் சொன்ன இரண்டாவது முட்டையை அடைவைத்துவிட்டு முதல்
முட்டையை அந்த வீட்டுக்காரர் ஆம்லெட் போட்டு
சாப்பிட்டுவிட்டார்.
இதோ இரண்டாவது உவமை : ஒரு சிற்பி இரண்டு கற்களைப்
பார்த்து, உங்களுக்குள் தேவதூதர்கள் இரண்டு பேர்
ஒளிந்திருக்கின்றார்கள். உங்களைச் செதுக்கி அவர்களை
வெளியே கொண்டுவர விரும்புகின்றேன் என்றார். அதற்கு
முதல் கல். ஐயையோ என்மீது உளிபட்டால் எனக்கு
வலிக்கும். என்னைச் செதுக்க வேண்டாம் என்று
சொல்லிவிட்டது. இரண்டாவது கல்லோ. என்மீது உளி
விழட்டும். நான் துன்பப்பட, செதுக்கப்பட தயாராக
இருக்கின்றேன் என்றது. இப்படிச் சொன்ன கல்லிலிருந்து
அந்தச் சிற்பி ஓர் அழகான தேவதூதரைச் செதுக்கி
எடுத்தார். முதல் கல்லையோ அவரது வீட்டுக்குள் செல்ல
படிக்கல்லாகப் பயன்படுத்திக்கொண்டார். அது ஒரு நாளில்
பலமுறை மிதிபட்டது.
இதோ மூன்றாவது உவமை : ஒரு விவசாயி இரண்டு விதைகளை
மண்ணில் விதைத்தார். ஒன்று, நான் முளைக்க மாட்டேன்.
முளைத்தால் நான் பல பாடுகளைப் படவேண்டியிருக்கும்.
நான் முளைத்து செடியாகி, மரமாகி, பூவாகி, காயாகி,
கனியாவேன். எல்லாரும். குறிப்பாக குழந்தைகள் என்னைக்
கல்லால் அடிப்பார்கள் என்றது. இன்னொரு விதை முளைத்து
பூவாகி, காயாகி. கனியாகி. உள்ளூர் பழுத்த மரமாகத்
திகழ்ந்தது. எல்லாரும் அந்த மரத்தை வாயார, மனமாரப்
போற்றினார்கள்.
முதல் விதை முளைக்காமல் மண்ணில் கிடந்தது. அப்பக்கமாக
இரைதேடி வந்த கோழி ஒன்று அதை விழுங்கிவிட்டது.
துன்பப்படத் தயாராக இல்லையென்றால் இந்த உலகம் நம்மை
ஆம்லெட் போட்டுச் சாப்பிட்டுவிடும்; அல்லது அதன்
காலடியில் போட்டு நம்மை மிதிக்கும்; அல்லது நம்மை
விழுங்கிவிடும்.
வாழ்க்கை ஒரு காசு. அதற்கு இரு பக்கங்கள் உள்ளன. ஒரு
பக்கத்தின் பெயர் துன்பம். மறு பக்கத்தின் பெயர்
இன்பம். ஒரு பக்கமுள்ள காசை நம்மால் பார்க்கமுடியாது.
அதுபோலவே இன்பம் மட்டும் உள்ள வாழ்க்கையை நம்மால்
பார்க்க முடியாது.
இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. இதனால்தான்
இயேசு, யோவா 12:24 - இல் கோதுமை மணி மண்ணில் விழுந்து
மடிந்தாலொழிய அது பலன் தராது என்கின்றார். அதனால்தான்
ஆண்டவரே, நீ துன்பப்படக்கூடாது, பாடுபடக்கூடாது என்ற
பேதுருவைப் பார்த்து, போ அப்பாலே சாத்தானே. உன்
கருத்துக்கள் கடவுளுடைய கருத்துக்கள் இல்லை என்றார்
இயேசு.
இதனால்தான் திப 5:40, 41-இல் சாட்டையால் அடிக்கப்பட்ட
பிறகு திருத்தூதர்கள் இறைவனைப் புகழ்ந்தார்கள் என்று
படிக்கின்றோம். இதனால்தான் கொலோ 1:24-இல் பவுலடியார்
துன்பத்தைக் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்
என்று கூறுகின்றார்.
துன்பம் எதிர்மறையானது என்ற எண்ணத்தை இன்றோடு
விட்டுவிடுவோம். எந்தத் துன்பமும் எதிர்மறையானது அல்ல.
ஒவ்வொரு துன்பத்திற்குப் பின்னும் ஓர் இன்பம்
மறைந்திருக்கும்.
ஒவ்வொரு வியாதிக்குப் பின்னும் ஏதாவது ஓர் இன்பம், ஒரு
நல்ல செய்தி மறைந்திருக்கும். சிறு பிள்ளைகள் சில
சமயங்களிலே கசப்பான மருந்தைச் சாப்பிட மறுப்பார்கள்.
அப்போது அம்மா, அப்பா அந்தக் குழந்தையின் கால்களையும்,
கைகளையும் பிடித்துக் கொண்டு, சங்கிலே மருந்தை ஊற்றி
வாய்க்குள்ளே ஊற்றுவார்கள். அந்தக் கசப்பான
மருந்துக்குப் பின்னால் இனிப்பான உடல் சுகம்
மறைந்திருக்கின்றது. அந்தக் குழந்தையின் அழுகைக்குப்
பின்னால் சிரிப்பு மறைந்திருக்கின்றது.
ஆம். துன்பத்திற்குப் பின்னால்தான் இன்பம்
மறைந்திருக்கின்றது. இதுவே நமது மன்றாட்டாக
இருக்கட்டும்:
இறைவா, இன்று ஒரு மறைபொருளை நாங்கள் தெரிந்து
கொண்டோம். துன்பத்தைத் துன்பமாக பார்த்தால் அது
துன்பமாகத்தான் தோன்றும். துன்பத்தை இன்பத்தின்
மறுபக்கமாகப் பார்த்தால் துன்பத்தை விட்டு ஓடி
ஒளியமாட்டோம். துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை,
ஆற்றலை. வல்லமையை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.
மேலும் அறிவோம் :
பொருள்:
பொன்னைப் புடம் போடுவதால் அதன் ஒளி மேலும் மிளிரும் ;
அதுபோன்று தவமாகிய நோன்பு மேற்கொள்பவர் துன்பம் வந்து
தாக்கும்போதெல்லாம் அதனைத் தாங்கிக் கொண்டு உள்ளொளி
ஆகிய ஞானம் பெறுவர்.
ஒரு திருமணத் திருப்பலியில் மணமகன்
மணமகளுடைய கழுத்தில் தாலி கட்டும் முன்பு இழுத்துப்
பெருமூச்சு விட்டான். ஏன்? என்று கேட்டதற்கு, "என்
வாழ்வில் கடைசி முறையாக நான் விடும் சுதந்தர மூச்சு" என்றார்.
அருட்சாதனம்
செய்து கொள்வதால் ஆண்கள் தங்கள் சுதந்தரத்தை இழக்கின்றனர்.
பெண்கள் தங்களின் பிறந்த வீட்டை இழக்கின்றனர். ஆனால் இருவரும்
ஒரு புதிய உறவில் சங்கமிக்கின்றனர். வாழ்க்கையில் ஒன்றை
இழந்தால்தான் மற்றொன்றைப் பெறமுடியும் என்னும் உண்மையை
கிறிஸ்துவின் உருமாற்ற நிகழ்வு உணர்த்துகிறது.
இயேசு ஓர் உயர்ந்த மலையில் தோற்றம் மாறினார்; ஒரு மேகம் வத்து
அவர்கள் மேல் நிழலிட்டது. மலையும் மேகமும் கடவுளுடைய உடனிருப்பின்
அடையாளங்கள். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஒரு
திருக்காட்சி, தொலைக்காட்சிக்காண முகக்கண் போதுமானது; ஆனால்
திருக்காட்சியைப் பார்க்க அகக்கண் (விசுவாசக் கண்) தேவைப்படுகிறது.
கண்ணுக்குப் புலப்படும் தொலைக்காட்சி நிழல் உலகம்: கண்ணுக்குப்
புலப்படாத திருக்காட்சி நிஜ உலகம். நிழல் உலகத்தை நம்பி
நிஜ உலகத்தை மறப்பது அறிவுடைமையாகுமா?
கிறிஸ்துவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர். மோசே சட்டத்தின்
பிரதிநிதி; எலியா இறைவாக்கினர்களின் பிரதிநிதி. இவ்வாறு சட்டமும்
இறைவாக்கும் கிறிஸ்து மெசியா என்பதற்குச் சான்று பகர்கின்றன.
அத்துடன், "இவரே என் அன்பார்ந்த மைந்தர்" என்று கூறி வானகத்
தந்தையும் சாட்சியம் பகர்கிறார். மனித சாட்சியத்தைவிடக்
கடவுள் தரும் சாட்சியம் மேலானது (1 யோவா 5:9). கடவுளின்
சாட்சியத்தை ஏற்க மறுப்பவர்கள் நிலைவாழ்வைக் காண முடியாது.
கிறிஸ்துவும் மோசேயும் எலியாவும் "எருசலேமில் நிறைவேறவிருந்த
அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்" (லூக்
9:31)- பாடுகளின் வழியாகவே கிறிஸ்து உலகை மீட்க வேண்டும்,
அவரும் மகிமை அடைய வேண்டும் என்பதே கடவுளின் திட்டம். அத்திட்டத்தைக்
கிறிஸ்து முழுமையாக ஏற்று அதை நிறைவேற்றினார்.
துன்பமின்றி இன்பமில்லை. பேறுகால வேதனையின்றிப்
பிள்ளைப்பேறு இல்லை. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாமல்
விளைச்சலைக் கொடுக்க முடியாது (யோவா 12:24). மெழுகு திரி
எரிந்து கரைந்தால்தான் ஒளி கொடுக்க முடியும். சாம்பிராணி
நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டால்தான் அது நறுமணப் புகையை
எழுப்ப முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது 75-ஆம் வயதில் கடவுளுடைய
அழைப்பை ஏற்றுத் தன் வீட்டையும் நாட்டையும் இனத்தையும் இழக்க
முன்வந்தார். அதன் விளைவாக அவர் கடவுளுடைய ஆசியைப் பெற்றதோடு,
அவரே ஆசியாக மாறினார் (தொநூ 12:1-4). தனது ஒரே மகன் ஈசாக்கையும்
கடவுளுக்குப் பலியிடத் தயங்கவில்லை. எனவே அவர் விசுவாசத்தின்
தந்தையாக உருமாற்றம் அடைந்தார், ஒன்றை இழந்தே மற்றொன்றைப்
பெறமுடியும். துன்பம் நம்மைச் சுட்டுத் தூய்மைப்படுத்துகிறது.
அழிந்து போகும் பொன்கூட நெருப்பில் புடமிடப்படுகிறது. அவ்வாறெனில்
அழியாத நம் விசுவாசம் சோதிக்கப்படுவது முறையே என்கிறார்
பேதுரு (1 பேது 1:7). பொன்னைச் சுடச்சுட அதன் ஒளி அதிகமாகும்.
அவ்வாறே துள்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு உண்டாகும்.
துன்பப்படாமல் வாழ்க்கையில் எளிதாகக் குறுக்கு வழியில்
முன்னேற விரும்புகின்றனர் இன்றைய இளைஞர்கள். திரைப்படப்
பாடல் பாணியில் ஓர் இளைஞர் பின்வருமாறு கூறுகிறார்:
Exanisation இல்லாத Degree கேட்டேன்: Grunner இல்லாத
English கேட்டேன்; Problean இல்லாத Physics கேட்டேன்;
Equation இல்லாத Chem- istry கேட்டேன்; Programme இல்லாத
Computer கேட்டேன்; இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை. எனவே
பரீட்சைக்குப் படிக்கவில்லை.
அதே பாணியில் ஒருசில கிறிஸ்தவர்கள் பின்வருமாறு
கூறுகின்றனர்: சிலுவை இல்லாத கிறிஸ்து கேட்டேன்; நிறுவனம்
இல்லாத திருச்சபை கேட்டேன்; அன்பியம் இல்லாத பங்கு
கேட்டேன். உண்டியல் இல்லாத ஆலயம் கேட்டேன்; பத்துக் கட்டளை
இல்லாத வேதம் கேட்டேன்; இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை;
எனவே நான் ஆலயம் செல்வதில்லை. இவ்வாறு கேட்கின்றவர்களுக்கு
கிறிஸ்து கூறுவது: - "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்
தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப்
பின்பற்றட்டும். ஏனெளில் தம் உயிரைக் காத்துக்கொள்ள
விரும்பும் எவரும் அதை இழந்து விடுவர். மாறாக என்
பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்"
(மத் 16:24-25).
ஒரு கணவர் கண் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரை
கண்ணாடி அணியச் சொன்னார். அவர் வீட்டில் மனைவியைப்
பார்க்கும் போது மட்டும் கண்ணாடி அணிந்தார். அவருடைய மனைவி
அவரிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது கணவர் கூறியது:
"எப்போதெல்லாம். தலைவலி வருகின்றதோ அப்போதெல்லாம் கண்ணாடி
போடச் சொன்னார் டாக்டர்." ஒவ்வொருவருக்கும் தலைவலி
வீட்டிலேயே இருக்கிறது. அது மனைவி வடிவிலோ, கணவன் வடிவிலோ,
பிள்ளைகள் வடிவிலோ வரலாம். அதை நாம் ஏற்றுக்கொண்டு
உருமாற்றம் அடைய வேண்டும். இல்லையென்றால் தடுமாற்றமே
ஏற்படும். வீட்டின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக,
திருச்சபையின் நலனுக்காக ஒரு சிலர் தங்களையே அழித்துக்
கொள்ள வேண்டும். அது ஏன் நாமாக இருக்கக்கூடாது?
உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி நயாகரா. 150க்கும் மேற்பட்ட
அடி உயரம். கீழே கடல் போலத் தண்ணீர்ப் பரப்பு. கலங்க
வைக்கும் நீர்ச்சுழல்கள். பார்க்கும்போது அச்சம் கலந்த பிரமிப்பு
ஏற்படுமே தவிர குற்றாலத்து அருவியில் செய்வது போல குளித்து
மகிழ முடியாது. அங்கு அகன்ற இரு மலைகளுக்கிடையில் ஒரு கயிற்றைக்
கட்டி அந்தக் கயிற்றில் கழைக் கூத்தாடி போல நடக்கப் போவதாகச்
சொன்னான் ஒருவன். பைத்தியக்காரன் பிதற்றிக்
கொண்டிருக்கிறான் என்று கேட்டவர்கள் எள்ளி நகைத்தார்கள்,
ஏளனம் செய்தார்கள்.
ஆனால் அறிவித்தபடி ஒருநாள் சாதித்துக் காட்டினான். கண்டவர்
எல்லாரும் வியந்து வாய்பிளந்து நின்றார்கள். அவன் அவர்களைப்
பார்த்துக் கேட்டான்: "என்னால் நடக்கமுடியும் என்று இப்பொழுதாவது
நம்புகிறீர்களா?". "ஆம்!" என்றனர் அத்தனைபேரும் ஒரு வாய்ப்பட.
கண்ணால் கண்டதாயிற்றே, எப்படி மறுக்கமுடியும்?
"சரி, நாளையும் நடக்கப் போகிறேன்", அவன் தொடர்ந்தான். "ஆனால்
ஒரு வேறுபாடு. நான் தனியாக அல்ல, உங்களில் யாரையாவது ஒருவரை
என் தோளில் ஏற்றிக்கொண்டு, யார். வேண்டுமானாலும் என்
தோளில் ஏறிக் கொள்ளலாம். யார் முன் வரப் போகிறீர்கள்?".
அங்கிருந்த எவருக்கும் துணிவில்லை. தயங்கினார்கள். பின்
வாங்கினார்கள். உயிரைப் பொருத்தவரை அது ரிஸ்க் அல்லவா! ஆபத்தானதல்லவா!
"உம்மாலே முடியும்", "உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை"
என்றெல்லாம் அறிக்கை இடுவோம். அல்லேலூயா கூத்தடிப்போம்.
ஆனால் இயேசுவின் அழைப்பை உணர்ந்து ஏற்று அவர் கையைப்
பற்றிக் கொண்டு அவரது அடிச்சுவட்டில் நடக்க எத்தனை பேர்
முன்வருவர்?
விசுவாசத்தில் எங்கோ கோளாறு. குறைபாடு.
"நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று பேதுருவால்
விசுவாச அறிக்கையிட முடிந்தது. ஆனால் அந்த "மெசியா வாழும்
கடவுளின் துன்புறும் ஊழியன்" என்ற உண்மையைச் செரிமானம்
செய்ய முடியவில்லையே!
சீடர்களின் தவறான எதிர்பார்ப்புகள், வேண்டாத வீணான
கனவுகள், இஸ்ரயேலுக்கு அரசியல் விடுதலை தருவார், புதிய
அரசில் தங்களுக்கு முக்கிய பதவி தருவார் என்ற அவர்களின்
எண்ணத்துக்கு மாறாக முற்றிலும் வேறானவை பற்றியல்லவா இயேசு
பேசுகிறார். "இயேசு தாம் எருசலேமுக்குப்போய் மூப்பர்கள்,
தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு
துன்பப்படவும், கொலை செய்யப் படவும் மூன்றாம் நாள்
உயிருடன் எழுப்பப் படவும் வேண்டும்" (மத்.16:21) என்று
மட்டுமல்ல "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம்
துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப்
பின்பற்றட்டும்" (மத்.17:24) என்றல்லவா இயேசு சொல்கிறார்!
சீடனுக்குரிய வழி சிலுவை வழியே! சீடர்களால் புரிந்து கொள்ள
முடியவில்லை. புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்ளுகின்ற
மனப்பக்குவம் இல்லை. சிலுவை அவர்களுக்குப் பெரிய இடறல்.
சிலுவையின் இடறலை நீக்கி தமது மாட்சிமையை வெளிப்படுத்தவே
இயேசு உருமாறினார். துன்புறும் மெசியாவே மகிமையின் மெசியா
என்பதை உணர்த்தினார். "மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன்
இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா! (லூக்.24:26)
"கல்வாரி மலையில் நீந்தனைகளையும் அவமானங்களையும் தாங்கிய
உருவாக எல்லார் முன்னும் தன்னைக் காண்பித்த இயேசு, தம்
மகிமையை மட்டும் மூவருக்கே காண்பித்தார்" என்பார் பேராயர்
புல்டன் ஷீன். அந்த மூவரில் பேதுரு சிலுவையையே வெறுப்பவர்.
யாக்கோபும் யோவானும் அதிகார இருக்கையில் அமர
விரும்பியவர்கள். மறைந்திருக்கும் தமது மகிமை சிலுவையின்
நிந்தனைகளுக்குப் பின்னரே வெளிப்படும் என்ற உண்மையை
அவர்களுக்கு உணர்த்தவே இந்த உருமாற்றம்.
உருமாற்றத்துக்கு முன்னும் பின்னும் பாடுகள் பற்றிய
சிந்தனையே. இந்த மகிமையில் நம்பிக்கையைப் பார்க்கிறார்
இயேசு. இந்த மகிமையில் நம்பிகையைப் பார்க்க வேண்டும்
நாமும். ஆனால் அந்த மகிமையை எண்ணிக் கொண்டே அந்தப்
பகற்கனவில் நின்று விட முடியாது. "ஆண்டவரே, சிலுவை
வேண்டாம்" என்ற பேதுருவின் மனித இயல்பு சந்தித்த சோதனையே
வேறு வடிவம் எடுத்து "நாம் இங்கேயே இருப்பது எத்துணை
நன்று" என்ற வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. மோர் விற்கப்
போன மோர்க்காரி, கற்பனையில் மிதந்தவளாய் காஞ்சிப்பட்டுக்
கட்டிக் கொண்டு நடக்கிறேன் என்ற எண்ணத்தில் கைவீசிப்
போனாளாம்! தலையில் மோர்ப்பானை இருந்ததை மறந்தாளாம்! பானை
தரையில் விழுந்து உடையவே, மனக்கோட்டை மணற்கோட்டையானது!
அடையப் போகும் மகிமை என்ற நம்பிக்கையில் எழ வேண்டும்.
மலையினின்று கீழே இறங்க வேண்டும். அதாவது எதார்த்த
வாழ்க்கைக்கு வரவேண்டும். அங்கே நமக்கு இருப்பது
போராட்டங்கள், பாடுகள்! அவை வழியாகத்தான் உண்மையான மகிமை.
அந்த மகிமையைக் காணும் வரை ஆபிரகாமைப் போல் நம்பிக்கை
வழியில் நடப்போம். ஆபிரகாமைப் போலக் கடவுள் போகச் சொல்லும்
இடத்துக்குப் போவோம். நமக்கு முன்னே அவர் சென்று அங்கே
நமக்காகக் காத்திருப்பார்.
தூய ஜான் போஸ்கோ தன் நம்பிக்கைக்குரிய இளங்குருவை" ஜெனோவா
நகரில் புதிய இல்லம் அமைக்க அனுப்பினார். கையில் போதிய
பணம் இருக்கிறதா என்று தன் பாணியில் கேட்டிருக்கிறார்.
"கொஞ்சம் வைத்திருக்கிறேன்'' என்று இளம் குரு சொன்னதும்
"அதுகூடத் தேவையில்லை. ஜெனோவாவில் தெய்வப் பராமரிப்பும்
உண்டு" என்றாராம் சிரித்துக் கொண்டே ஜான் போஸ்கோ.
எதிர்காலத்தில் என்ன காத்திருக்கிறது என்று நமக்குத்
தெரியாது. ஆனால் யார் காத்திருக்கிறார் என்பது உறுதியாகத்
தெரியும்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
மாற்றத்தைத் தடுக்கும் சுயநல அணை
எல் சால்வதோர் நாட்டில், இரத்தம் சிந்தி, கிறிஸ்துவுக்குச்
சான்று பகர்ந்த இருவர், நம் ஞாயிறு சிந்தனையை இன்று துவக்கி
வைக்கின்றனர் இவர்களில் ஒருவர், 1917ம் ஆண்டு பிறந்தார் என்பதால்,
இவரது பிறப்பின் முதல் நூற்றாண்டு நினைவு, உலகின் சில நாடுகளில்,
இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. மற்றொருவர், சரியாக 40 ஆண்டுகளுக்கு
முன், இதே நாள், அதாவது, 1977ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி,
எல் சால்வதோர் அரசின் கூலிப்படையால் கொடூரமாகச் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
48 வயதான இயேசுசபை அருள்பணியாளர், ருத்திலியோ கிராந்தே
கார்சியா (Rutilio Grande Garca) அவர்கள், மார்ச் 12,
மாலை 5 மணியளவில், தன் பணித்தள மக்களைச் சந்திக்க ஜீப்பில்
சென்ற வேளையில், கூலிப்படையினரால் சூழப்பட்டு, 12 முறை சுடப்பட்டு,
உயிரிழந்தார்.
1917ம் ஆண்டு பிறந்து, 1977ம் ஆண்டு, தன் 60வது வயதில்,
சான் சால்வதோர் பேராயராகப் பொறுப்பேற்ற, ஆஸ்கர் ரொமேரோ
(Oscar Romero) அவர்கள், அருள்பணி ருத்திலியோ அவர்களின்
நெருங்கிய நண்பர். எல் சால்வதோர் நாட்டில் நிகழும் அநீதிகளைக்
குறித்து, இருவருக்கும் கடுமையான விவாதங்கள் நிகழ்வதுண்டு.
இருப்பினும், இருவரும், இயேசுவின் நற்செய்தியை தங்களுக்கே
உரிய வழிகளில் பின்பற்றி வந்தனர். ரொமேரோ அவர்கள், பேராயராகப்
பொறுப்பேற்ற 18ம் நாள், அவரது நண்பர் அருள்பணி ருத்திலியோ
அவர்கள், படுகொலை செய்யப்பட்டார். அதுவரை, தன் நாட்டில் நிகழ்ந்த
அநீதிகளை, கண்டும் காணாமல், 'கோவில் காரியங்களில்' கவனம்
செலுத்தி வந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இந்தக் கொடூரக்
கொலையால் மாற்றம் பெற்றார். நாட்டில் நிலவிய அநீதிகளை எதிர்த்து,
குரல் கொடுக்கத் துணிந்தார்.
பேராயர் ரொமெரோ அவர்கள் எடுத்துரைத்த உண்மைகள், மிகவும்
கசந்ததால், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, அவர் திருப்பலி
நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, அரசின் கூலிப்படையைச்
சேர்ந்த ஒருவர், குறிவைத்து சுட்ட குண்டு, பேராயரின் இதயத்தில்
பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, உயிரிழந்தார்,
பேராயர் ரொமேரோ.
மார்ச் மாதத்தில், தவக்காலத்தில், கொல்லப்பட்ட இவ்விரு
சாட்சிகளையும், எல் சால்வதோர் மக்கள், புனிதர்களென, கடந்த
30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருதி வருகின்றனர். இவர்களில்,
பேராயர் ரொமேரோ அவர்கள், 2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, அருளாளராக
உயர்த்தப்பட்டார். இறையடியாரான அருள்பணி ருத்திலியோ அவர்களும்,
விரைவில் மக்களின் வணக்கத்தைப் பெற பீடமேற்றப்படுவார் என்ற
எதிர்பார்ப்புடன், எல் சால்வதோர் மக்கள் காத்திருக்கின்றனர்.
வறுமைப்பட்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்த ருத்திலியோ அவர்கள்,
தன் நாட்டு மக்கள், தங்களது வறுமையை, இறைவனின் திருவுளம்
என்று ஏற்று வாழ்ந்ததைக் கண்டு மனம் வருந்தினார். நாட்டில்
நிலவும் வறுமை, இறைவனின் திருவுளம் அல்ல, அது, ஒரு சிலரின்
அநீதியால் உருவானது என்பதை, மக்களுக்கு உணர்த்திவந்தார்.
நாட்டில் நிலவும் அநீதிகளைப்பற்றி தான் உணர்ந்த உண்மையை,
அச்சமின்றி பறைசாற்றினார். ஒருமுறை, எல் சால்வதோர் அரசுத்
தலைவர், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள்
பங்கேற்ற ஒரு திருப்பலியில், "உருமாற்றம் பெறவேண்டும் என்று,
நற்செய்தி விடுக்கும் அழைப்பினை, இந்நாட்டில்,
திருமுழுக்கு பெற்றுள்ள பலர், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
மாற்றம் பெற அழைக்கும் இயேசுவின் நற்செய்தி என்ற வெள்ளம்,
தங்களை நெருங்கிவிடக் கூடாது என்ற குறிக்கோளுடன், இவர்கள்,
தன்னலம் எனும் பெரும் அணைகளை எழுப்பியுள்ளனர். இவர்களது தன்னலத்தை,
திருஅவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்"
என்று, அருள்பணி ருத்திலியோ அவர்கள் வழங்கிய மறையுரை, அவரது
மரணத்திற்கு நாள் குறித்தது. நற்செய்தி கொணரும் மாற்றத்தை
ஏற்க மறுத்தது, எல் சால்வதோரின் ஆதிக்க வர்க்கம். மாற்றத்தைக்
குறித்து நமது நிலை என்ன?
தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம்,
உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட இந்த ஞாயிறு வாசகங்கள்
நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற
ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம்.
பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு,
உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக,
விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை,
சாத்தான் சொல்லித்தந்தது. அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத
இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான்
மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின்
இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து,
மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும்
வகையில் நிகழும் இயேசுவின் உருமாற்றம், மத்தேயு நற்செய்தி,
17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள
வேளையில், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும்
(தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. தனக்குப்
பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச்
செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார்.
மாற்றங்களை சந்திக்க, இளவயது பொருத்தமானது; வயது முதிர்ந்த
காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு,
பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த
ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது,
அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4)
ஆபிரகாமைவிட இன்னும் இரண்டு வயது கூடுதலாக, அதாவது, தன்
77வது வயதில், அர்ஜென்டினா நாட்டின் புவனஸ் அயிரெஸ்ஸில்
(Buenos Aires) பிறந்து, அங்கேயேப் பேராயராகப் பணியாற்றிய,
கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ (Jorge Mario
Bergoglio) அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டார்.
தன் பணிஒய்வைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்,
கர்தினால் பெர்கோலியோ அவர்கள் பெற்ற இந்த அழைப்பு, மாற்றங்களை
வலியுறுத்தும் தவக்காலத்தின்போது நிகழ்ந்தது என்பது,
குறிப்பிடத்தக்கது.
மார்ச் 13, திங்களன்று, திருஅவையின் தலைமைப் பணியில் தன்
4ம் ஆண்டை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
மாற்றங்களைப்பற்றி ஒருசில பாடங்களைச் சொல்லித்தந்துள்ளார்.
அவர், திருஅவையில் மாற்றங்களைக் கொணர்வார் என்ற எதிர்பார்ப்பிற்கு,
அவர் அவ்வப்போது அளித்துவரும் பதில் இதுதான்: "திருஅவையில்
மாற்றங்கள் உருவாக, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில்
மாற்றங்கள் நிகழவேண்டும்" என்ற கருத்தை அவர் வலியுறுத்தி
வருகிறார். தனிப்பட்ட மனிதர் என்ற முறையில், அவர், இதுவரை
கொணர்ந்துள்ள மாற்றங்கள், நம் அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாய்
அமைந்துள்ளன
.
கடந்த நான்காண்டுகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,
சொன்னவை, செய்தவை பலவும், அவர் ஒரு மனிதப்பிறவி என்பதை, நம்
மனதில் ஆணித்தரமாகப் பதித்துள்ளன.
அவர் வாழ்ந்துவரும் சாந்தா மார்த்தா இல்ல குழுமத்தில், தன்
உணவை தானே பரிமாறிக்கொண்டு, மற்றவருடன் உண்பது...
எதிர்பாராத வகையில் தொலைபேசியில் பலரை அழைத்து, ஆனந்த
அதிர்ச்சி அளித்துவருவது...
பங்குத்தளங்களிலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும்,
மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைகளையும், நோயுற்றோரையும்
பரிவோடு அணைத்து முத்தமிடுவது... பாதுகாப்பைப் பற்றி
சிறிதும் கவலைப்படாமல் மக்களைச் சென்று சந்திப்பது...
தானும் ஒரு சாதாரண மனிதன், ஒரு பாவி என்றும், தன்னையும்
தனிமை, வெறுமை, ஐயங்கள் ஆகியவை வாட்டுகின்றன என்றும்
ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணல்களில் கூறுவது... என்று...
நீண்டுசெல்லும் இப்பட்டியலில், நாம், மீண்டும், மீண்டும்,
காண்பது ஒரே ஒரு மாற்றம்தான்... திருத்தந்தை என்பவர்,
வெகு, எளிதாக தொட்டுவிடக்கூடிய ஒரு சாதாரண மனிதர் என்பதை
நிலைநாட்டும் அர்த்தமுள்ள ஒரு மாற்றம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பணியில்
நீடிக்கும் காலத்தில், பெரும் சாதனைகள் எதையும் ஆற்றாமல்
போனாலும் கவலையில்லை. திருஅவையின் தலைவர், ஏனைய
மனிதர்களைப்போல், ஒரு சாதாரண மனிதர்தான் என்ற உண்மையை,
அவர், மக்கள் மனங்களில் ஆழப்பதித்தால், அதுவே, ஒரு பெரும்
சாதனைதான். திருத்தந்தையே ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை,
இவ்வுலக மக்கள், குறிப்பாக, கத்தோலிக்க மக்கள்
புரிந்துகொண்டால், திருஅவையில் ஆரோக்கியமான மாற்றங்கள்
உருவாகும். அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால்,
திருத்தந்தை என்று, பணி நிலைகள் உயர, உயர, அந்நிலைகளை
அடைவோரைச் சுற்றி சுவர்களை எழுப்பி, அவர்களை, எட்டாத
உயரத்தில் பீடமேற்றும் பழக்கங்கள் மாறும்போது, அச்சுவர்கள்
வீழும்போது, திருஅவை, இன்னும் நலமுள்ள ஓர் இயக்கமாக
மாறும். இதைத்தான், போர்க்களத்தில் பணியாற்றும்
மருத்துவமனை போன்ற உருவகங்களால், திருத்தந்தை பேசி
வருகிறார்.
உலகக் கவனத்தை ஈர்க்க, இயேசு தன் தோற்றத்தை மாற்றவேண்டும்
என்று அலகை தூண்டியதை சென்றவாரம் சிந்தித்தோம். அலகையின்
யோசனையைப் பின்பற்றி, இயேசு எருசலேம் கோவிலிலிருந்து
குதித்திருந்தால், யூதர்கள் மத்தியில், உரோமையர்கள்
மத்தியில் பரபரப்பான மாற்றங்களை உருவாக்கியிருப்பார்.
அத்தகைய மாற்றங்களை விரும்பாத இயேசு, தன் மூன்று
சீடர்களுக்கு முன் உருமாற்றம் பெறுகிறார் என்று, இந்த வார
நற்செய்தி சொல்கிறது. இந்த மாற்றம், சீடர்களின்
உள்ளங்களில் நலமிக்க மாற்றங்களைக் கொணரும் என்ற
நம்பிக்கையில், இயேசு, உருமாற்றம் என்ற அருளை,
சீடர்களுக்கு வழங்குகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது நான்கு ஆண்டுகள்
பணிவாழ்வில், ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்த பல மாற்றங்கள்,
வெளிப்படையாக உருவாகியுள்ளன. அதேநேரம், விளம்பரங்கள்
ஏதுமில்லாத மாற்றங்கள் பலவற்றிற்கும் அவர் காரணமாக
இருந்தார். இவற்றை, முக்கியமான மாற்றங்களாக நாம்
எண்ணிப்பார்க்கலாம். பல ஆண்டுகளாகக் கோவில் பக்கமே செல்லாத
கிறிஸ்தவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்
பணியை ஏற்ற ஒரு சில வாரங்களில், கோவிலுக்குத்
திரும்பியுள்ளனர் என்பது, அதிகம் விளம்பரம் ஆகாத ஓர்
உண்மை.
திருத்தந்தை அவர்களின் எளிமையான பணிவாழ்வால், திருஅவைத்
தலைவர்களைப் பற்றி, மக்களின் பார்வை, தெளிவு பெற்றுள்ளது
என்பது, வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். தலைவர்கள் என்று
தங்களையே எண்ணிவந்தவர்கள், இன்று தங்களை, திருஅவையின்
பணியாளர்கள் என்று சிந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.
திருஅவைப் பணியாளர்களின் உறைவிடங்கள், உடைகள்,
பயன்படுத்தும் வாகனங்கள், சாதனங்கள், மாற்றம் பெறவேண்டும்
என்ற எண்ணங்கள், மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றன.
ஒரு சில நாடுகளில், ஆயர்கள், தங்கள் இல்லங்களை அழகுபடுத்த
செய்த செலவைப்பற்றி, மக்கள் கேள்விகள் எழுப்பிள்ளனர். இவை
யாவும், வரவேற்கத்தக்க மாற்றங்கள். மக்கள் மத்தியில்
உருவாகிவரும் இந்த மாற்றங்கள் தொடரும் என்று நம்பிக்கை
கொள்வோம்.
வத்திக்கான் என்ற நீர்நிலையில் திருத்தந்தை பிரான்சிஸ்
வடிவத்தில் விழுந்த ஒரு கல், அலைகளை உருவாக்கி வருகின்றது
என்பது ஆனந்தம் தரும் நற்செய்தி. அலைகள் ஒரு நேர்கோடாகச்
செல்வதில்லை; வளைவுகளாய், மேலும், கீழுமாய் நகர்கின்றன.
மேலிருக்கும் புள்ளி கீழாகவும், கீழிருக்கும் புள்ளி
மேலாகவும் நகர்வது, அலைகளின் அழகு. ஓரிடத்தில்
நின்றுவிடாமலும், பின்னோக்கிச் செல்லாமலும், தொடர்ந்து
முன்னேறுவதும் அலைகளின் மற்றோர் அழகு. "திருத்தந்தை
பிரான்சிஸ் அலை" இன்னும் பல ஆண்டுகள், நலமிக்க மாற்றங்களை,
திருஅவையிலும், இவ்வுலகிலும், உருவாக்கவேண்டும் என்று,
இறைவனை இறைஞ்சுவோம்.
தன் உருமாற்றத்திற்குப் பிறகு, இயேசு தன் சீடர்களுக்கு
விடுத்த அழைப்பு: "எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்." தாங்கள்
கண்ட அதிசயக் காட்சியிலிருந்து அவர்கள் எழுந்து,
மலையைவிட்டு இறங்கினர். அடுத்தநாள் பிரச்சனைகளைச்
சந்திக்கத் துணிந்தனர். இயேசுவும், மகிமையின் உச்சத்தில்,
உருமாற்றம் பெற்ற மலையைவிட்டு இறங்கி, கல்வாரி என்ற
மற்றொரு மலை மீது ஏறத் துணிந்தார். அந்த மலை மீது அவர்
மீண்டும் தன்னையே உருகுலைத்ததால், நாம் உருமாற்றம்
பெறுவதற்கு வழி வகுத்தார்.
நம் தனிப்பட்ட வாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவையிலும்,
கிறிஸ்தவர்கள் மத்தியிலும், மனித சமுதாயத்திலும்
மாற்றங்களை உருவாக்க, முதலில் நம்மிடம் மாற்றங்களை
உருவாக்குவோம். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக, நாம் ஏறி
நிற்கும் மமதை மலையிலிருந்து இறங்குவோம். நம்முன் மலைபோல்
குவிந்திருக்கும் பிரச்சனைகளைக் கண்டு மலைத்துவிடாமல்,
நம்பிக்கையோடு, நலமிக்க மாற்றங்களைத் துவக்குவோம்.
மறையுரைகள்:
அருள்பணி கிங்ஸிலி MMI
"தாபோர் மலையும்... நம் வாழ்வின்
மாற்றமும்"
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! தவக்காலத்தின் முதல்
ஞாயிறு நாம் இயேசுவோடு 'பாலைவனத்தில்' இருந்தோம். அவர் சோதனைகளை
வென்றதைப் பார்த்தோம். இன்று, இரண்டாம் ஞாயிறு நாம் இயேசுவோடு
'தாபோர் மலையில்' நிற்கிறோம். அங்கே இயேசுவின் மாட்சிமை
பொருந்திய உருமாற்றத்தைக் காண்கிறோம். இந்த உருமாற்றம் நமக்குச்
சொல்லும் செய்தி என்ன?
1. சிலுவைக்கு முன்னே ஒரு சிகரம் (A Peak before the
Passion)
இயேசு ஏன் உருமாறிக் காட்டினார்? இன்னும் சில நாட்களில்
அவர் எருசலேமில் பாடுபட்டு, சிலுவையில் அறையப்படப்
போகிறார். தன் போதகர் மரணமடைவதைக் கண்டு சீடர்கள் சோர்ந்து
போய்விடக் கூடாது என்பதற்காக, "சிலுவைக்கு அப்பால் ஒரு உயிர்ப்பு
உண்டு; மரணத்திற்கு அப்பால் ஒரு மகிமை உண்டு" என்பதை
முன்கூட்டியே காட்ட இயேசு உருமாறினார்.
நமக்குச் சொல்லும் பாடம்: நம் வாழ்வில் கவலைகள், நோய்கள்,
சோதனைகள் எனும் 'சிலுவைகள்' வரும்போது, அதுதான் முடிவு என்று
நினைக்க வேண்டாம். இறைவனை நம்புவோருக்கு இறுதியில் ஒரு 'உயிர்ப்பு'
காத்திருக்கிறது.
2. மோசேயும் எலியாவும் - சட்டமும் இறைவாக்கும்
இயேசுவோடு மோசேயும் எலியாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மோசே 'சட்டத்தின்' (Law) அடையாளம்; எலியா 'இறைவாக்குகளின்'
(Prophets) அடையாளம். பழைய ஏற்பாடு முழுவதும் இயேசுவில்தான்
நிறைவடைகிறது என்பதை இது காட்டுகிறது. அவர்கள் இயேசுவின் 'மறைவு'
(Exodus) பற்றிப் பேசினார்கள். அதாவது இயேசுவின் மரணம் ஒரு
தோல்வி அல்ல, அது மனித குலத்தை மீட்கும் ஒரு பயணம்.
3. "இவருக்குச் செவிசாயுங்கள்" (Listen to Him)
மேகத்திலிருந்து ஒரு குரல் கேட்டது: "இவர் என் அன்பார்ந்த
மைந்தர்... இவருக்குச் செவிசாயுங்கள்." இதுதான் இந்தத் தவக்காலத்தின்
மிக முக்கியமான கட்டளை.
நாம் உலகத்தின் குரல்களுக்கு அதிகம் செவிசாய்க்கிறோம் (சமூக
ஊடகங்கள், வீண் பேச்சுகள், மற்றவர்களின் விமர்சனங்கள்).
ஆனால், இந்த வாரம் நாம் கேட்க வேண்டியது இயேசுவின் குரலை.
விவிலியத்தை வாசிப்பதன் மூலமும், அமைதியான செபத்தின் மூலமும்
அவர் நமக்குச் சொல்லும் 'கீழ்ப்படிதலை' நாம் பழக வேண்டும்.
4. மலையிலேயே தங்கிவிட முடியாது (We cannot stay on the
mountain)
பேதுரு சொன்னார்: "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
மூன்று கூடாரங்களை அமைப்போம்." பேதுரு அந்த மகிழ்ச்சியான
தருணத்திலேயே தங்கிவிட விரும்பினார். ஆனால் இயேசு அவரை மலையிலிருந்து
கீழே அழைத்து வருகிறார்.
வாழ்வின் எதார்த்தம்: செபத்திலோ, ஆலயத்திலோ நாம் பெறும்
அமைதி நமக்கு வலிமை தருவதற்காகத்தான். அந்த வலிமையைக்
கொண்டு நாம் மீண்டும் உலகிற்குச் சென்று, துன்புறும் மக்களுக்குப்
பணிவிடை செய்ய வேண்டும். ஆலயத்தில் கிடைக்கும் 'தாபோர் மலை'
அனுபவம், வீதியில் உள்ள 'கல்வாரி மலை' துன்பங்களைச் சுமக்க
நமக்குத் துணையாக இருக்க வேண்டும்.
பங்கு மக்களுக்கான நடைமுறைச் செயல்பாடுகள் (Practical
Points):
1. முகத்தில் ஒரு மாற்றம்: நம் உள்ளத்தில் அன்பு இருந்தால்,
அது நம் முகத்தில் ஒளியாகத் தெரியும். இந்த வாரம் கோபத்தைத்
தவிர்த்து, புன்னகையோடு மற்றவர்களை அணுகுவோம்.
2. வார்த்தையில் ஒரு மாற்றம்: பிறரைப் பற்றிப் புறம் பேசுவதைத்
தவிர்த்து, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவோம்.
3. செபத்தில் ஒரு மாற்றம்: கடமைக்காகச் செபிக்காமல், ஆண்டவரோடு
பேசும் நேரமாகச் செபத்தைக் கருதுவோம்.
முடிவுரை:
அன்பு மக்களே, ஆபிரகாம் இறைவனின் குரலைக் கேட்டுத் தன் தேசத்தை
விட்டுப் புறப்பட்டது போல (முதல் வாசகம்), நாமும் நம்முடைய
பாவப் பழக்கங்களை விட்டுப் புறப்படுவோம். தாபோர் மலையில்
சீடர்கள் கண்ட அந்த ஒளியை நம் இதயங்களில் ஏற்றுவோம்.
சிலுவைகளைச் சுமப்போம், ஆனால் உயிர்ப்பின் மீது நம்பிக்கை
கொள்வோம்.
இந்தத் திருப்பலி நம் வாழ்வை உருமாற்றட்டும். ஆமென்.
மறையுரை மொட்டுக்கள் நன்றி வழிகாட்டும்
தோழன்
என்னைப் பற்றி என்ன சொல்கிறார் கடவுள்
பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் போதும், மற்றொரு பள்ளிக்கோ,
கல்லூரிக்கோ அவர்களை மாற்றும் போதும் நமக்கு மூன்று
சான்றிதழ்கள் தேவை. (1) மாற்றுச் சான்றிதழ் (2) மதிப்பெண்
சான்றிதழ் (3) நன்னடத்தைச் சாள்றிதம் பல நேரங்களில் முதல்
இரண்டு சான்றிதழ்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை நாம்
மூன்றாவது சான்றிதழுக்குத் தருவதில்லை. ஒரு மாணவரது நடத்தைச்
சான்றிதழ் சரியில்லையென்றாலோ, அல்லது மாற்றுச்சான்றிதழில்
நடத்தை என்ற இடத்தில் தலைமையாசிரியர் பச்சை நிற
பேனாவால் எழுதும் நன்று என்ற வார்த்தை மட்டும் இல்லையென்றாலோ
மாணவர்களுக்குப் பள்ளியில் இடம் கிடைப்பதும், இளைஞர்களுக்குப்
பிற்காலத்தில் வேலை கிடைப்பதும் மிகச் சிரமமாக இருக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவுக்குத் தந்தைக் கடவுள்
அளிக்கும் நடத்தைச் சான்றிதழைப் பற்றி பேசுகின்றது. இயேசுவின்
வாழ்வில் நடந்த ஒரு மிகமுக்கியமான நிகழ்வு அவரது தோற்றமாற்றம்.
தனக்கு மிகநெருககமான மூன்று சீடர்களை மட்டும் அழைத்துக்கொண்டு
மலைக்குச் செல்லும் ஆண்டவர் இயேசு அங்கே இரைவேண்டல்
செய்யும்போது சீடர்களின் கண்முன்னே தோற்றமாற்றம் அடைகின்றார்.
அப்போது, வானத்திலிருந்து தந்தையாகிய கடவுள் பேசிய
வார்த்தைகள் முக்கியமானவை: இவரே என் அன்பார்ந்த மைந்தர்.
இவரில் நான் பூரிப்படைகின்றேன். இயேசுவின் பணிவாழ்வைக்
குறித்து தந்தைக் கடவுள் தருகின்ற பாராட்டு மொழிகள் இவை.
நமது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இயேசு என்ற மாணவருக்கு
அவரது ஆசிரியரான தந்த கடவுள் தந்த நடத்தைச் சான்றிதழ்
இது. இயேசுவின் வாழ்க்கையில் இந்த நடத்தைச் சான்றிதழுக்கு
மிக முக்கியமான இடமுண்டு2
இன்று இயேசுவைப் போல நாமும் வாழ்ந்தால், கடவுள் நம்மைப்
பார்த்தும் நீ என் அன்பார்ந்த மகள், மகன். உன்னில்
நான் பூரிப்படைகின்றேன் என்று சான்றிதழ் தருவார். அவ்வாறு
வாழ நாம் தயாரா ?
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தொ.நூ. 12:1-4)
இன்றைய வாசகப் பகுதியானது விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படும்
ஆபிரகாமின் அழைப்பினை விளக்குகிறது. தேராவின் மகனான இவர்
மெசபெட்டோமியாவின் தெற்கு பகுதியில் உள்ள 'ஊர்' என்ற ஊரில்
வசித்து வருகிறார். ஆபிரகாம் என்றால் மக்களின் தந்தை என்று
பொருள்படும். கடவுள் இவரை அழைப்பதன் வாயிலாக மீட்பின் வரலாறு
துவங்குகிறது. தனது அழைப்பினை ஏற்று எல்லாவற்றையும்
விட்டுப் புறப்பட்ட இவருக்குக் கடவுள் மூன்று ஆசீர்வாதங்களை
பொழிகிறார்.
1. கானான் நாட்டை உரிமையாக்கிக் கொள்ளுதல் (600 ஆண்டு களுக்கு
பிறகுதான் இவருடைய வழிமரபினர் இந்த நாட்டை பெறுகிறார்கள்).
2. இவருடைய மக்கள் மிகப் பெரிய இனமாக இருப்பார்கள்.
3. கடவுளின் அருள் இவரின் மூலம் உலக மக்கள் அனைவர் மீதும்
பொழியப்பட்டு அவர்கள் இறைவன்பால் திரும்புவார்கள்.
ஆபிரகாமும் கடவுளின் மீட்பு திட்டத்திற்கு தன்னையே
முழுமையாகக் கையளிக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ. 1:8-10)
இவ்வாசகம் திருச்சபையின் பணிகளை எவ்வாறு கிறிஸ்துவின் கண்ணோட்டத்தில்
அணுக வேண்டும் என்று கூறுவதால் இது மேய்ப்பு பணி திருமடலாகும்.
தூய பவுல் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தபின்,
இறைவார்த்தையின் பொருட்டு உரோமை சிறையில் வேதனைபட்டுக்
கொண்டிருந்தபோது, தன் சீடரான திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தின்
ஒரு பகுதியே இவ்வாசகம். இவர் எபேசுவின் ஆயராக இருந்தபோது
கிறிஸ்துவின் பொருட்டு விசுவாசிகள் மிகுந்தவேதனைக்கு உள்ளாகியிருந்தார்கள்.
இந்த நிலையில்தான் தூய பவுல் தனது கடிதம் வாயிலாகத் தன் சீடருக்கும்
மற்றும் மக்களுக்கும் மன உறுதி அளிக்கின்றார். வாழ்வில் வரும்
துன்ப துயரங்களைக் கண்டு மனம் கலங்காமல், தங்களுடைய விசுவாசத்தில்
உறுதியடையும் படியும், கிறிஸ்துவில் வாழும் படியும்
கேட்டுக் கொள்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 17:1-9)
மத்தேயு மற்ற ஒத்தமை நற்செய்தி நூல்களில் இருப்பது போலவே
உருமாற்ற நிகழ்வைப் படம் பிடித்துக்காட்டுகிறார். இந்த நிகழ்வு
தாபோர் மலையில், மூன்று சீடர்களுக்கு மத்தியில் நிகழ் கிறது.
இந்த மலையானது எஸ்தராயேலோன் சமவெளியில் 588 மீட்டர் கடல்
மட்டத்திற்கு உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் சிலர் இது அவ்வளவு
உயரமானதல்ல என்று கூறி கலிலேயாவின் வட பகுதியில் யோர்தான்
நதி உற்பத்தியாகும் பகுதியில் உள்ள எர்மோன் மலையில் நடந்திருக்கலாம்
என்று கருதுகின்றனர். ஆயினும் இயேசு இங்கு உருமாறினார் என்ற
நிகழ்வைவிட தன் வாழ்வில் குறுக்கிட்ட துன்பங்கள், துயரங்களைக்
கண்டு துவண்டு போகாமல் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும்
இலட்சியத்தில் உறுதியடைந்தார் என்பது அனைவரும் ஏற்றுக்
கொள்ளும் உண்மை.
மறையுரை
இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியில் இயேசுவின் உருமாற்றத்
தையும் தாண்டி ஆழ்ந்த உண்மைகள் இருப்பதை அறிந்து கொள்ள
நாம் இன்று அழைக்கப்படுகின்றோம். இந்த நிகழ்வு நடந்த காலக்
கட்டத்தை ஆராய்ந்து பார்க்கும்போது இயேசு தனது பணி
வாழ்வில் பல வேளைகளில் மேல்தட்டு மக்களாலும், சில நேரங்களில்
கீழ்தட்டு மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட காலம். இன்னும்
சொல்லப் போனால் இயேசு தன் நண்பர்கள் கூடத் தன்னை புரிந்து
கொள்ள வில்லையே, தன் இலட்சியத்தை புரிந்துகொள்ளவில்லையே என்ற
விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டதை உணர்ந்தார். இது இயேசு
வின் வாழ்வில் மற்றுமொரு சோதனை.
தூய பேதுரு இயேசுவின் உருமாற்றத்தின்போது கடவுளின்
மாட்சிமையைக்கண்டு 'ஆண்டவரே நாம் இங்கேயே இருப்பது நல்லது'
என்றார். ஒரு வாரத்திற்கு முன் சிலுவையில் பாடுபட போவதாகக்
கூறினீர். (மத்தேயு 16:21-27 பாடுகள் வேண்டாம் மரணமும்
வேண்டாம், நாம் இங்கேயே தங்கி விடுவோம் என்று பேதுரு கரிசனைப்படுகிறார்.
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்று வதே என் உணவு என்று இருந்த
யேசுவிடம் இலட்சியத்தை கை விடுமாறு சோதிக்கிறார் பேதுரு.
இயேசு உடனே 'போப்பின்னாலே சாத்தானே' என்று கடிந்து
கொண்டார்.
பல நேரங்களில் நாம் இறைமகன் இயேசுவை சக்தி வாய்ந்த இறைமகனாகவே
பார்க்கிறோம். ஆனால் இயேசு எந்த அளவுக்கு இறைதன்மையோடு விளங்கினாரோ
அதே அளவு மனிதத் தன்மை யோடு விளங்கினார் என்பதை நாம் மறந்து
விடுகிறோம். நமக்கு இருக்கும் அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும்
அவருக்கும் இருந்தன. கிறிஸ்துவும் தன் வாழ்வில் ஒரு சராசரி
மனிதனாக இன்ப துன்பங்கள், வேதனை சோதனைகள், மனகுழப்பம்,
விருப்பு வெறுப்புகள் என்று அனைத்தையும் எதிர் கொண்டார்.
இதனால்தான் பேதுருவின் வார்த்தைகள் சோதனையாய் அமைந்தன.
எதைத் தேர்ந்தெடுப்பது? எனது விருப்பத்தையா அல்லது தந்தையின்
திருவுளத்தையா? மனம் தடுமாறுகின்றபோது தந்தை- யிடம் செபத்தில்
உறவாடுகிறார் இயேசு. இதன் பயனாகத் தன் இலட்சிய பயணத்தில்
தெளிவாகிறார். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றவே இந்த உலகிற்கு
வந்தேன் (லூக்கா 4:16-19). கரடுமுரடான பாதைகளைச் செம்மைப்படுத்த,
ஏழைகளின் தோழனாக, ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமை வழங்க, இறையாட்சியை
இம்மண் ணில் மலர வைப்பதே என் பணி என்பதில் உறுதியடைகிறார்.
இதற்காகப் பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் எசாயாவைப் போல,
எரேமியாவைப் போல, திருமுழுக்கு யோவானைப் போல நானும் எனது
உயிரை இழக்க தயாராக உள்ளேன் என்று தனது சோதனைகளை எதிர்
கொண்டு, வெற்றி பெற்றார் இயேசு என்பதை யே நற்செய்தியாளர்
மத்தேயு எடுத்துக் காட்டுகிறார்.
இயேசுவால் இது எவ்வாறு முடிந்தது என்று பார்த்தோ மென்றால்
தந்தையிடம் அவர் கொண்டிருந்த செப வாழ்வின் உறவே அவருக்கு
வெற்றியைக் கொணர்ந்தது. லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின்
செபவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார். இயேசு அற்புதங்கள்
செய்யும் முன்னும், முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும்
(லூக்கா 6:12) செபிக்கிறார் (லூக்கா 9:18; 11:1; 22:39
46). தந்தையிடம் கொண்டிருந்த செப உறவுதான், இயேசுவுக்கு சோதனைகளையும்,
வேதனைகளையும் அவமானங்களையும் சந்திக்கக்கூடிய பலத்தை தந்தது.
இதே கருத்தைதான் இன்றைய முதல் வாசகத்திலும் கண்டோம். இறைவன்
மீது கொண்டிருந்த நம்பிக்கை மற்றும் உறவினால்தான் ஆபிரகாமினால்
அனைத்து விதமான சோதனைகளையும் எதிர் கொள்ள முடிந்தது.
நமது வாழ்வில் நேரிடும் துன்ப துயரங்கள், சோதனைகள் நம்மை
நமது இலட்சியத்திலிருந்து தடுமாற செய்கின்றன... நம்மை விரக்தியடைய
செய்கின்றன... நமது பாவங்களும் நம்மை விழச் செய்கின்றன. மனிதன்
பலவீனமானவன் ... பாவம் செய்யாமல் இருக்க முடியாது. தவறாது
மனித இயல்பு என்று நம்மையே நாம் நியாயப்படுத்திக்
கொள்கிறோம். இந்த நிலையில் நாம் வாழாமல் இருக்கத்தான் நமக்குத்
தியானம் திருச்சபை இந்த 40 நாட்களைத் தருகிறது. இந்தக் காலத்தில்
நம்மையே நாம் சுய ஆய்வு செய்து, செய வாழ்வில், சுய
வாழ்வில் வளர நம்மைத் திருச்சபை துணைக்றது. தூய பவுல்
(2திமொ 1:8-10) கூறுவது போல, நாம் துன்புறும்போது தீயவேலை
எடுக்கதுக்காட்டாகக் கொள்கிறோம். நமது துன்பங்களில், சோதனைகளில்
வீழ்ந்து மடிந்து விடாமல், கிறிஸ்துவின் உறுதி பெறுவோம்.
நம்முடைய இலட்சியப் பயணத்தைத் தொடர்வேம். இந்த 40 நாட்களும்
நமக்குப் புதிய சக்தியைக் கொடுக்க வேண்டும். இந்தப் புதிய
சக்தி நமது இலக்கு நோக்கிய பயணத்தின் எரிபொருளாகப் பயன்படட்டும்.
இயேசு உரு - மாறினார் என்பதை விடத் தன் இலக்கு நோக்கிய
பயணத்தில் உறுதியடைந்தார் என்று சிந்திப்போம். செயல்படுவோம்.
நாமும் உருமாறுவோம், பிறரை உருமாற்றுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
* மனித சாயலில் வந்த இறைமகள் இயேசு, இறைவனின் மாட்சிமையை
தம் சீடர்களுக்கு வெளிப்படுத்தியதன் வழியாக, மனிதனே இறைவன்
வாழும் உயிருள்ள ஆலயம் என்பதை தெளிவுப்படுத்துகின்றார்.
* பிற பணியில் ஈடுபடும்போது வருகிற துன்பங்களை மகிழ்ச்சியுடள்
ஏற்றுக் கொண்டால் நாம் இயேசுவைப் போல் உருமாற்றம்
பெறுவோம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
தவக் காலம் இரண்டாம் ஞாயிறு
ஆபிரகாமின் புண்ணிய பூமி நோக்கிய பயணத்தின் தொடக்கமாக அமைந்த
அவரது அழைத்தலை முதல் வாசகத்தில் வாசித்தோம். இயேசுவின் எருசலேம்
நோக்கிய, தன் பாடுகள் நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வான
இயேசுவின் தோற்ற மாற்றத்தை நற்செய்தியில் வாசித்தோம். இரண்டிலும்
இறை வெளிப்பாடு அருளப்படுகின்றது. இவற்றுள் நற்செய்தி அருளும்
கிறிஸ்தியல் செய்தி என்னவென இவண் காண்போம்.
அமைப்புமுறை
இன்றைய நற்செய்தி கீழ்காணும் அமைப்பு முறையைக்
கொண்டிருக்கின்றது.
அறிமுகம் (எப்போது, யார், எங்கே) - வச. 1
காட்சி விவரிப்பு - வச. 2-3
பேதுருவின் விருப்பம் - வச. 4
விண்ணிலிருந்து வெளிப்பாடு - வச. 5
சீடர்களின் மறுமொழி - வச. 6-7
நிகழ்ச்சி முடிவு - வச. 8
இலக்கிய வகை
மத்தேயு இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்வை மாற்குவின் விவரிப்பை
ஒட்டியே விவரித்தாலும் சில மாற்றங்களையும் செய்து அளிக்கின்றார்.
அதன் அடிப்படையில் இந்த விவரிப்பை எத்தகைய இலக்கிய வகையாகக்
காண்பது என்பதில் அறிஞர் களிடையே இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன.
ஒரு சிலர் வச. 9ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இதை 'காட்சி' எனும்
இலக்கிய வகையினுள் அடக்குகின்றனர். இன்னும் குறிப்பாக இந்நிகழ்வை
பழைய ஏற்பாட்டில் சீனாய் மலையில் அருளப்பட்ட
இறைக்காட்சி'யுடன் ஒத்திருக்கக் காண்கின்றனர் (காண். விப
24). 'உயர்ந்த மலை' (வச.1), 'ஆறு நாள்களுக்குப் பின்பு'
(வச1). இயேசுவின் முகம் கதிரவனைப் போல ஒளிர்ந்தது (வச.2,
காண். விப 34:29), 'ஒளிமயமான மேகம்' (வச. 5) ஆகியவற்றின்
அடிப்படையில் இக்காட்சி சீனாய் மலை திருக்காட்சியை நமக்கு
நினைவூட்டுகின்றது.
இயேசுவின் வெளிப்படப்போகும் மகிமையின் முன் அடையாளம் எனும்
முறையிலும், சிடர்களின் மறுமொழி ஆகியவற்றின் அடிப்படையிலும்
இதை வெளிப்பாட்டு இலக்கிய மாகவும் எடுத்துக்கொள்ள
வாய்ப்பிருக்கின்றது. வெளிப்பாட்டுக் காட்சியில் காட்சியாளர்
(தானியேல், ஏனோக்) ஆகியோருக்கு விண்ணகத்தில் நடக்கும்
காட்சியையோ அல்லது எதிர்காலத்தில் அவருக்கு நிகழ இருப்பதைப்
பற்றியோ காட்சி அருளப்படும். இந்த விதத்தில் இயேசுவும்
அவரது சீடர்களும் எருசலேம் நோக்கி பயணிக்கும்போது (பாடுகளை
நோக்கிப் போகும்போது), உண்மையில் இயேசு யார்? இறையாட்சியில்
அவர் எத்தகைய வராக இருப்பார் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும்
ஒரு வெளிப்பாட்டு இலக்கியமாகவும் இதைக் கொள்ளலாம். இந்த அடிப்படையில்
மத் 17:6-7ல் சீடர்களின் வெளிப்பாட்டைத் தானி 8:17-18;
10-7-9 ஆகிய பகுதிகளோடு ஒப்பிடலாம்.
கிறிஸ்தியல் செய்தி
மத்தேயுவின் இந்த நற்செய்திப் பகுதி இயேசுவின் வாழ்வில்
நடந்த ஒரு நிகழ்ச்சியை, ஓர் இலக்கிய வகையைப் பயன்படுத்தி,
அதன் வழியாகப் பல அடையாளங்களைக் கொண்டு விவரிக்கின்றார்.
எனவே இதை நிகழ்வாகவும், பல அடையாளங் களை உள்ளடக்கிய காட்சி
(வச9) யாகவும் காண வேண்டும். இவை அனைத்தின் வழியாக மத்தேயு
கூற வரும் இறையியல் மற்றும் கிறிஸ்தியல் செய்தி என்னவென்று
கண்டுபிடிக்க வேண்டும். அதன்படி இந்த விவலியப் பகுதி இயேசுபற்றிக்
கூறும் செய்தி இதுதான். அதாவது, இயேசுவின் எருசலேம்
நோக்கிய அவரது இறுதிப் பயணத்தின்போது அளிக்கப்படும் இந்தத்
தோற்ற மாற்ற நிகழ்வு இயேசுவின் பாடுகளையும், மரணத்தையும்,
உயிர்ப்பின் மாட்சியையும் முன்னறிவிக்கின்றது. இயேசு உண்மையில்
40 மாட்சிமிகு இறைவன் என்ற செய்தியோடு, அவரை அவரது துன்பங்கள்
வழிதான் நாம் பின்பற்ற முடியும் எனும் செய்தியை நமக்கு அளிக்கின்றது
.
இத்தவக்காலம் நமக்கு உணர்த்துவதும் இதுதான். இயேசு
மாட்சிமிகு மெசியாவாக இருந்தாலும் பாடுகளின் வழிதான் அதை
அவர் துய்த்துணர்ந்தார். நாம் நம் அன்றாடச் சிலுவைகளை சுமந்து
செல்வதன் வழி இயேசுவைப் பின்தொடர்ந்து அவரது மாட்சியில் பங்கு
கொள்வோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
இரண்டாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் தொநூ 12:1-4
விசுவாசத்தின் தந்தையென ஆபிராம் அழைக்கப்படுகிறார். இன்றைய
வாசகம் வழி அவருடைய அழைப்பும் அவர் காட்டிய விசுவாசமும்
நமக்கு மாதிரிகையாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
ஆபிராமின் அழைப்பு
அழைப்பவர் ஆண்டவர்; கொடுக்கப்பட்ட அழைப்பு, உன்
நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை
வீட்டிலிருந்தும் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும்
நாட்டிற்குச் செல் (12 : 1) என்பது. தம் பணிகென ஆண்டவர்
பலரை அழைக்கிறார். யாரிமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடம்
செல் (எரே 1 : 7) என எரேமியாவையும், இப்போதே போ; இஸ்ரயேல்
இனத்தவர்க்காக நான் உன்கீபிலிதிலிருந்து நடத்திச் செல்வதற்காக
நான் உன்னைப் பார்க்கோனிடம் அனுப்புகிறேன் (விப 3:10) என்று
மோசேயையும் அழைத்த ஆண்டவரே இன்று நம்மையும் அழைக்கிறார்.
ஆபிராம், மோசே, எரேமியா முதலியோர் தம்தம் வீடுகளிலிருந்து,
உற்றார் உறவினரிடமிருந்து, குலத்தொழில்களிலிருந்து,
வெளியேறி வர அழைக்கப்பட்டனர். தம் பணிகென இன்று நம்ம, நம்
மக்களை இறைவன அழைக்கச் செவிமடுத்துக் கேட்கிறோமா?
ஆபிராமின் பதில்
கேள்விகளோ, ஐயங்களோ எழுப்பவில்லை ஆபிராம்; தயக்கமோ, தளர்ச்சியோ
காட்டவில்லை ஆபிராம்; ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே
அவர் புறப்பட்டுச் சென்றார் (12 : 4). எங்கு? ஏன்? எப்படி?
என்ற கேள்விகளுக்கே இடமில்லை. இறைவன் கட்டளை இட்டார்; ஆபிராம்
கீழ்ப்படிந்தார். இதோ, அடியேன் என்னை அனுப்பும் (எசா 6 :
8) என்ற எசாயாவின் கீழ்ப்படிதலும், இதோ ஆண்டவரின் அடிமை;
உமது வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும் (லூக் 1: 38)
என்ற மரியாவின் கீழ்ப்படிதலும் ஆபிராமின் விசுவாசத் தோட்டத்தில்
மலர்ந்திடுமோ? இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பிற்கு எவ்வளவு
தடங்கல்கள், சாக்குப் போக்குகள் கூறி மறுப்பு
விடுத்திருக்கிறோம்? இங்கு. அழைப்பு" என்னும்போது துறவற,
குருத்துவ அழைப்பு என்று மட்டும் கொள்வது கூடாது. ஒவ்வொரு
நொடியும் இறைவன் நம்மை அன்பு வாழ்வுக்கு, உண்மை
வாழ்வுக்கு, சேவை வாழ்வுக்கு, தியாக வாழ்வுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்.
இல்லை," "முடியாது" என்பது தான் நம் அன்றாட பதிலா அல்லது,
ஆம், "முடியும்", "சரி", "செய்கிறேன் என்று கூறுகிறோமா?
"உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன், கற்றாரை
யான் வேண்டேன், கற்பனவும் இனியமையும்.... உன் குரைகழற்கே,
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே (திருவா,
திருப்புலம்பல்) என்பது நமது பதிலாயமைய வேண்டாமா?
ஆபிராம் பெற்ற ஆசி
ஆபிராமுக்குக் கொடுக்கப்பட்ட ஆசி பல இடங்களில் திரும்பத்
திரும்பக் கூறப்படுகிறது (தொநூ 18:18; 22:18; 26:4;
28:14). இதன் முக்கியத்துவமும் இதன் பொருளும், இவ்ஆசியானது
ஆபிராம் வழி மக்கள் எல்லோருக்கும் அளிக்கப்படும் (12:3) என்பதில்
அடங்கும். விசுவசிப்பவர் எல்லோரும் இறையாசி பெறுவர்; ஆபிராம்
போன்றே பெறுவர் எனலாம். "வேற்றினத்தார் அவரில் (ஆபிராமில்)
ஆசி பெறுவர்; அவரிலேயே அவர்கள் பெருமை பாராட்டுவார்கள்" (எரே
4:2) என்பதைக் காண்க. எனவே, ஆபிராம் போன்றே நாமும் விசுவாசத்திலும்
கீழ்ப்படிதலிலும் வளர்வோமாக. அப்போது அவரை ஆசீர்வதித்துப்
பாதுகாத்த இறைவன் நம்மையும் தம் ஆசிகளாலும் அருளாலும் நிரப்புவார்
என்று திண்ணமாகச் சொல்லலாம். பூமியில் உள்ள இனமெல்லாம் ஆபிராமின்
கீழ்ப்படிதலால் ஆசிபெற்றன. நம்மைச் சூழ்ந்து உள்ளோர் நமது
விசுவாச வாழ்வின் முன்மாதிரிகையால் இறைவனிடம் வர நாம் காரணமாயிருக்கிறோமா?
அல்லது நமது வாழ்க்கை நம்மைச் சூழ்ந்துள்ளோருக்கு இடறலாய்
அமைந்துள்ளதா?
திமொத்தேயு என்பது இறைமேன்மையைக் குறிக்கும். தன்னையே மறந்து
இறையரசைப் பரப்பிய திமொத்தேயு பவுலடியாரின் சீடர்களில் சிறப்புடையவர்.
என் உடன் உழைப்பாளி" (உரோமை 16 : 2), என் சகோதரன்" (2
கொரி 1: 1), "விசுவாச வாழ்வில் என் உண்மை மகன்" (1திமொ
1:1) என்று பவுல் அடியார் இவரைப் புகழ்கிறார். பிலிப்பியர்
களுக்கு எழுதிய திருமுகத்தைத் தானும் திமொத்தேயும் இணைந்து
எழுதியதாகக் குறிப்பிடுகின்றார் (1: 1). எபேசு நகரத்
திருச்சபைக்கு ஆயராக, தான் ஏற்படுத்திய திமொத்தேயுவுக்கு
எழுதிய மடலின் பகுதியே இன்றைய வாசகம்.
வெட்கப்படாதீர்
திருச்சபையின் தொடக்க காலத்தில் அதை அழித்துவிட எண்ணற்ற
தீய சக்திகள் எழுந்தன; உரோமைய மன்னன் நீரோ காலத்தில் தொடங்கிய
வேதகலாபனை மூன்றாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது.
கிறிஸ்துவின் சீடர்கள் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவர்;
சாட்டையால் அடிபடுவர்; சிறைச்சாலையில் துன்புறுவர் என்பது
(மத் 10 : 17 -19) இயேசுவின் வாக்கு. அதே ஆண்டவர் "என்னைக்
குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரைப்
பற்றியும் மானிட மகன் தமக்கும் தந்தைக்கும் தூய வானதூதருக்கும்
உரிய மாட்சியோடு வரும்போது வெட்கப்படுவார் (லூக் 9: 26)
என்றும் எச்சரித்துள்ளார். நற்செய்தியைப் பற்றி நான் நாணமடையமாட்டேன்
(உரோ 1 : 16 என்று தன்னை அறிமுகப்படுத்திய பவுல் அடியார்
தன் சீடனை நோக்கி, ஆண்டவரைப் பற்றிச் சாட்சியம் கூற வெட்கப்படாதீர்
என்கிறார். தன் குருவாகிய பவுல் அடியார் சிறைக் கைதியாக இருப்பது
பற்றியும் திமொத்தேயு வெட்கப்படக் கூடாது என்கிறார். ஒவ்வொரு
கிறிஸ்தவனும் நமதாண்டவரின் சீடன். கிறிஸ்தவனாய் இருப்பதால்
ஏனைய மக்கள் பெறும் சலுகைகளை இழந்து வாடும் நிலை ஏற்படலாம்.
நீதிக்காக, தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காகப்
போராட வேண்டியது கிறிஸ்தவனின் கடமை. அந்நிலையிலும் அற்ப ஆதாயத்திற்காக
ஆண்டவரைக் காட்டிக் கொடுப்பதும், அவரை அறியேன் என்று மறுதலிப்பதும்
அல்லது தன்னையே மற்றவர்கள் முன் கிறிஸ்தவன் என்று அறிக்கையிட
வெட்கப்படுவதும் அவனது விசுவாசத் தளர்ச்சியைக் காட்டும்.
கிறிஸ்துவ அழைப்பு
"மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை
உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக
மீட்பர் பிறந்துள்ளார்" (லூக் 2: 11) என்பது வானதூதர் அளித்த
நற்செய்தி. கிறிஸ்து வழியாக நம்மை மீட்டுள்ளார்; நம்மைத்
தூயவராக ஆக்கியுள்ளார் (1 கொரி 1 : 2). இதைத் தக்க
வைத்துக் கொள்வதும், வளர்த்துக்கொள்வதும் நமது கடமை. நமது
பரிசுத்த அழைப்பின் பயனாகக் கடவுளின் வல்லமை பெற்று, நற்செய்திக்காக
நாம் துன்புறத் தயாராயிருக்க வேண்டும். நாம் அனைவரும் நற்செய்தியின்
தூதுவர்கள். அரச ஆணையை அறிவிப்பதும், இரு நாடுகளுக்கிடையே
அமைதியை நிலை நாட்டுவதும், தனது நாட்டின் புகழ்பாடி அதன்
பெருமையைப் பறைசாற்றுவதும், அதில் ஏனைய நாடுகள் கூட்டுச்
சேர உழைப்பதுமே தூதுவனின் கடமை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான்
பெற்றுக்கொண்ட நற்செய்தியை வாழ்ந்துகாட்டுவதன் மூலம் நமதாண்டவரை
அறிவிக்கும் புத்தகமாக, அவருடன் மக்களை இணைக்கும் பாலமாக,
அவரது புகழ்பாடும் வீணை ஆக விளங்க வேண்டும். நற்செய்தியை
நான் நன்கு அறிந்தால் தான், அதை வாழ முடியும்; பரப்ப
முடியும்.
மீட்பு ஒரு கொடை
இறை வாழ்வுக்கு யாரும் உரிமை பாராட்ட முடியாது. நாம்
செய்யும், செய்த நற்செயல்களால் மீட்பிற்கு விலை பேச
முடியாது. நமது நற்செயல்கள் பலன் அளிக்கவே மீட்பின் பயனான
இறையருள் தேவை. எனவே இறைவனே முன் வந்து திட்டமிட்டு நமக்கு
மீட்பு வழங்கியுள்ளார் (எபே 1: 11). அனைவரும் மீட்புப் பெற
வேண்டும் என்பது அவரது விருப்பம். எனினும் அதை என்னுடையதாக்கிக்
கொள்ள என் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவை என்பதை உணர்கின்றேனா?
இதோ மீட்பின் காலம்.
கடவுளின் வல்லமை பெற்று நற்செய்திக்காக என்னோடு துன்புறத்
தயங்காதீர்.
நற்செய்தி: மத் 17:1-9
இவ்வாரம் மூன்று ஆண்டுகளிலும், ஆண்டவர் உருமாறிய நற்செய்தி
வாசகமாயமைகிறது. எனவே இன்றைய விளக்கத்தோடு (மத்), 2-ம் ஆண்டு
ஞாயிறு விளக்கத்தையும் (மாற்), 3-ம் ஆண்டு ஞாயிறு விளக்கத்தையும்
(லூக்) ஒப்பிட்டுக் காணல் நன்று. பாரம்பரியப்படி இயேசு உருமாறிய
மலை தாபோர் என்றழைக்கப்படுகிறது (அதன் உயரம் 1000 அடி). ஆராய்ச்சியாளர்
சிலர் இது பாலஸ்தீன மலைகளிளெல்லாம் உயர்ந்ததான எர்மோன் மலையாய்
இருக்கலாம் (அதன் உயரம் 9400 அடி) என்பர். அது ஒலிவ மலையாயிருக்கலாம்
என்பாரும் உளர்
.
இயேசுவோடு சென்றார்கள்
இயேசு தம்மோடு பேதுரு, யோவான், யாக்கோபு மூவரையும் அழைத்துச்
செல்கிறார். இம்மூவரும் இயேசுவின் தனியன்பைப்
பெற்றிருந்தார்கள் எனலாம். இங்கு மட்டுமன்று: செபக்கூடத்
தலைவனின் வீட்டுக்குச் சென்றபோதும் இம்மூவரையும் மட்டுமே
இயேசு தம்மோடு அழைத்துச் செல்கிறார் (மாற் 5 : 37). எல்லாச்
சீடர்களையும் இயேசுவே அழைத்திருந்தாலும், இம்மூவர் மட்டும்
இயேசுவின் வாழ்விலே தனியிடம் பெற்றிருந்தனர் என்பது புலனாகின்றது.
நாமும் நற்செய்திப் பணிக்காகப் பல நிலைகளிலே (குருக்கள்,
பொதுமக்கள், துறவியர், கன்னியர்) அழைக்கப் பட்டிருக்கிறோம்.
எனினும், நமது வாழ்க்கை மேலெழுந்தவாரியாக, ஏனோதானோ என்ற
முறையிலேதான் அமைந்திருக்கிறதா? அல்லது இயேசுவால் தன்
நெருங்கிய நண்பர்கள், தன்னை மிகவும் நேசிப்பவர்கள் என்ற
நிலையிலே வைத்து எண்ணக்கூடிய வாழ்வு நமதாயிருக்கிறதா? ஒவ்வொரு
குறிப்பிட்ட நிலைக்கு நாம் அழைக்கப்பட்டிருந்தாலும், அந்நிலையிலே
பிறரைவிடச் சிறந்து விளங்க நாம் முயற்சிகள் செய்கிறோமா?
"சாதாரணர்கள்" தான் நாமா? அல்லது ஒரு தலைசிறந்த தாய், ஓர்
ஒப்புவமையற்ற குரு, ஒரு முன்மாதிரி ஆன துறவி, ஒரு விசுவாசமான
கிறிஸ்தவன் என்ற நிலையை அடைய முயல்கின்றோமா?
இயேசுவுக்குக் காட்சியளித்தவர்கள்
மலையிலே மோசேயும் எலியாவும் தோன்றி இயேசுவோடு உரையாடு கின்றனர்.
சீனாய் மலையில் சாட்சியப் பலகைகளைப் பெற்று, ஆண்டவரிடம்
பேசியதால் தம் முகம் ஒளிபெற்றுத் திரும்பியவர் மோசே (விய
34 : 29); ஒரேபு மலையில் தென்றலின் மெல்லிரைச்சலிலே இறைவனோடு
உறவாடியவர் எலியா (1 அர 19: 9-12). எனவே இவர்கள் இருவரும்
நெருங்கிய இறையனுபவம் பெற்றவர்கள். இது மட்டுமன்று. இருவரும்
விண்ணேற்படைந்தனர் என்று வேதாகமும் யூதப் பாரம்பரியமும்
கூறுகின்றன. இவர்கள் இருவரும் வரவிருக்கும் மெசியாவின் போதனைகளுக்கும்
பணிகளுக்கும் மக்களைத் தயார் செய்தவர்கள் என்பதும் உண்மை.
இஸ்ரயேல் வரலாற்றில் ஈடிணையற்ற இவ்விருவரும் வேறு வேறு வகைகளிலே
இயேசுவுக்கு முன்னோடிகளாயிருந்தனர். எனவே இயேசுவை ஒரு வகையிலே
புதிய மோசே (இச 18: 18 - 19), புதிய எலியா (லூக் 9: 51) என்பதில்
தவறில்லை. பழைய மோசேயும் பழைய எலியாவும் இயேசுவோடு
சேர்ந்து தோன்றுவது இதையே வெளிப்படுத்துகிறது எனலாம். நற்செய்திகளில்
பொதுவாக, எலியா திருமுழுக்கு யோவானுக்கு முன்னோடியாகக் கூறப்படினும்
(மத் 11: 14- 15) லூக்காவோ, இயேசுவையும் எலியாவையும் ஒப்பிடுதல்
காணத்தக்கது. இருவரும் விண்ணெழுந்ததைச் சுட்ட ஒரே சொல்லையே
"analempsis" பயன்படுத்தல் காண்க (2 அர 2: 9-11; சீஞா 48 :
9; லூக் 9: 51; தி.ப. 1:2; 11:22). நாமும் மோசேயாக, அதாவது
ஒடுக்கப்பட்டோர், நசுக்கப்பட்டோர், ஏழை எளியோரின் விடுதலையில்
ஈடுபாடு உடையவர்களாக; எலியாவாக, அதாவது, மண், பெண், பொன்
ஆகிய பிற தெய்வங்களை உதறித் தள்ளிய நிலையிலே. முழுமுதற்
கடவுளாகிய இயேசுவுக்குச் சான்று பகர்பவர்களாக வாழ
வேண்டும். மோசேயின் பிறன்புக் சாட்சியமும், எலியாவின் இறையன்புச்
சாட்சியமும் நமது வாழ்வின் இரு தூண்களாய் அமைம்போது நாமும்
இயேசுவோடு அனுபவ வாயிலாக உறவாடும் தன்மையைப் பெறுவோம்.
மோசேயும் எலியாவும் அவரோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே