நம்பிக்கையை மிகுதியாக்க நலன் வேண்டி வந்திருக்கும் நண்பர்களே!
மனதுக்குள் இருக்கும் ஒரே பொக்கிஷம் நம்பிக்கை. மனம் சுமக்கும் நம்பிக்கையெனும்
பொக்கிஷத்தை இனம் காட்டவும், அதை மிகுதியாக்கவும் வரவேற்கிறது இந்த
ஞாயிறு!
உலகில் வாழும் எல்லோருக்கும் இறை நம்பிக்கை அவசியம். நம்பிக்கை இருந்தால்
மட்டுமே வாழ்வில் பிடிப்பும், அமைதியும், இன்பமும் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன்
முயன்றால் தடைக் கற்கள் படிக்கற்களாகும். நம்பிக்கை உள்ளவர்களால்
மட்டுமே எந்தச் சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேற முடியும்.
சோர்ந்து விடாதீர்கள் வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன.
நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள் என இந்தத் திருப்பலியும் நம்
மனதைப் பிடித்து இழுக்கிறது.
விரும்பும் வளம் யாவும் நல்கும் என நம்பிக்கை உணர்வு தரும் திருப்பலியில்
நம்பிக்கையோடு செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. நேர்மையுடையவர் தங்கள் நம்பிக்கையில் வாழ்வர் என்றுரைத்த
ஆண்டவரே!
வழக்கும் வாதையும் நிறைந்த உலகில் பாதிக்கப்படும், அழுது
புலம்பும் அப்பாவி மக்களின் கண்ணீரைத் துடைத்தருளும்.
நேர்மையுடன் வாழ்வோர் தங்கள் நம்பிக்கைக்கு விளையும்
இயூறுகளை பொறுமையுடன் அனுபவித்து நற்பேறுகளை கைமாறாகப்
பெற்றுக் கொள்ள அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நல்ல போதனைகளை போதிக்கத் தூண்டும் ஆண்டவரே!
திருப்பீடப் பணியாளர்கள் இந்த நம்பிக்கை ஆண்டிலே நற்
போதனைகளால் இறை மக்களின் நம்பிக்கையை மிகுதியாக்கிட
அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கடுகளவு விசுவாசம் கொண்டிருந்தால் காட்டு மரங்கள்
கூட சொல்லுக்குப் பணியும் என கற்பிக்கும் ஆண்டவரே!
விசுவாசத்தில் நிலைத்திருக்க வழிகாட்டும் எம்
பங்குத்தந்தை வழியாக, கடவுளின் வல்லமையை இறைமக்கள்
கண்டு கொள்ள அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கையுடையோரால் நலன்களை விளையச் செய்யும்
இறைவா!
நாட்டு மக்களுக்குச் செய்யும் நலன்களால் நாடும் வீடும்
செழிக்கும் என்ற உணர்வுடன் செயல்பட, நாடுகளின்
தலைவர்களுக்கு அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
5. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா!
நம்பிக்கை உணர்வோடு நாங்கள் வாழவும், பிறரது நம்பிக்கை
உணர்வை நாங்கள் வளர்த்தெடுக்கவும் அருள் தர
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரைச்சிந்தனை
அது ஒரு ஆழமான கடல் அந்தக் கடலுக்கு அடியில்
சில கடல் தூதர்கள் குடியிருந்தார்கள். அவர்கள் அவ்வப்போது
பூமிக்கு வந்து மகிழ்ச்சியுடன் மனிதர்களை சந்தித்து
செல்வார்கள்.
ஒரு முறை அந்த கடல் தூதர் கூட்டம் விவசாயி ஒருவரின் நிலம்
ஒன்றில் மகிழ்ச்சியாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
விவசாயி அந்த வித்தியாசமான கடல் தூதர்களை உற்று
நோக்கினார். அவர்கள் யாரென அறிந்து கொள்ளவும் அவர்கள்
எங்கிருந்து வருகிறார்கள் எனவும் அறிய ஆசைப்பட்டார்.
காரணம் அவ்வளவு மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேச்சு அவ்வளவு இனிமையாக இருந்தது. அவர்கள் தங்கள்
இருப்பிடம் செல்ல ஆயத்தமான போது அவர்கள் அறியாவண்ணம்
அவர்கள் கையில் இருந்த குடைக்குள் விவசாயி ஒளிந்து
கொண்டார். தூங்கியும் போய்விட்டார். கடல் தூதர்கள் கடலுக்குள்
செல்வதற்கு அந்தக் குடையைப் பயன்படுத்தி கடலுக்குள்
சென்றார்கள். அங்கு போனபின் விவசாயி விழித்து
விட்டார். புதிய சூழலை கண்டு மகிழ்ந்தார். தலைமைக் கடல்
தூதர் விவசாயியை இனம் கண்டு அவனை இங்கே எப்படி வந்தாய்?
என விசாரிக்க அவரும் நடந்தவைகளை சொன்னார். தங்கள் இருப்பிடம்
வந்தவரை அன்புடன் உபசரித்தார்கள். மகிழ்ச்சியுடன் ஒருவாரம்
வரை தங்கச் செய்தனர் வீடு திரும்பும் போது நிறைய தங்கம்
கொடுத்து வழி அனுப்பினார்கள். அப்போது தான் அவனுக்கு
ஞாபகம் வந்தது மேலே தண்ணீரில் நடக்க வேண்டுமே என, கடல்
தூதர்களிடம் இதை சொன்னவுடன் தலைமைக் கடல்தூதர் விவசாயியை
அழைத்து அவன் கையில் ஒன்றை கொடுத்து இதைக் கொண்டு
போனால் மேலே போய் விடலாம். கையை மூடிக் கொள் தரைக்கு
சென்ற பின் கையை விரித்துப் பார் என்று சொன்னார். விவசாயி
மேலே வந்ததும் கடல் மேல் நடந்தார். கடல் அவனைக் கண்டதும்
வழி விட்டது அவனால் மகிழ்ச்சி தாங்க இயலவில்லை. கையை
மூடியவாறு வந்தவன் சிறிது தூரம் சென்ற பின் கையில் என்ன
தான் இருக்கிறது என விரித்து பார்த்த போது நம்பிக்கை
என எமுதிய பேப்பர் இருந்தது. அதைக் கண்டவுடன் ப்பூ இவ்வளவு
தானா என சொல்ல அவ்வளவு தான் கடல் அவனை அப்படியே மூடிக்
கொண்டது.
நம்பிக்கையால் கட்டப்பட்டது தான் மனித வாழ்க்கை.
வாழ்க்கை எனும் நெடும் பயணத்தில் நாம் சேர வேண்டிய
இடத்தை பற்றிய தெளிவும் வழிகாட்டும் உணர்வாக நம்பிக்கையும்
மிக முக்கியம் என்பதை இன்றைய நற்செய்தி நமக்கு
தெளிவாக்குகிறது.
நம்பிக்கை வேண்டும் நம்பிக்கையால் நாம் பெறுவது
வாழ்வு. மனிதர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை வீண் போகலாம்.
ஆனால் இறைவன் மீது நாம் வைக்கும் நம்பிக்கை வீண்
போகாது.
இந்த நம்பிக்கை ஆண்டிலே கணவன் மனைவி நம்பிக்கையை வளர்த்துக்
கொள்வோம்.
பிள்ளைகள் பெற்றோர் நம்பிக்கையையும், பெற்றோர்
பிள்ளைகள் நம்பிக்கையையும் வளர்தெடுப்போம்.
உண்மை நட்புகளை இனம் கண்டு நட்புகளின் மீது நம்பிக்கை
வைத்து நலமிகு உறவுகளை வளர்த்தெடுப்போம்.
எவ்வளவு பெரிய விளக்காக இருந்தாலும் விளக்கு எரியும்
போது தூண்டுகோல் ஒன்று தேவை பிறரின் நம்பிக்கையை
தூண்டி எழுப்பும் சுடராக இருப்போம்.
ஆழமான இறை நம்பிக்கை உதவியால் துன்பங்களைக் கடந்து வாழ
வரம் வேண்டி வருகை தந்துள்ள அன்பு இறைமக்களே, உங்கள்
அனைவரையும் பொதுக்காலத்தின் 27-ஆம் ஞாயிறு
வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
வாழ்க்கை என்ற படகு கரைசேர நம்பிக்கை என்ற துடுப்பு
அவசிய மாகிறது. நம்பிக்கை மனிதனை வாழ வைக்கிறது. அத்தகைய
நம்பிக்கையை மையப் பொருளாகக் கொண்டுள்ளது இன்றைய
வழிபாடு. நாம் நமது இறை நம்பிக்கையை புதுப்பித்து, அதனை
மேலும் வலுவாக்க இன்றைய திருவழிபாடு நம்மை அழைக்கிறது.
இது என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளவனால் ஒரு
மலையைக் கூட பெயர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை
நங்கூரமாய் நம் நெஞ்சங் களில் இறக்குகிறது இன்றைய இறைவாக்கு.
துன்பத்திலும் துவண்டு விடாமல் இருந்த யோபுவுக்கு அனைத்திலும்
இரு மடங்காகப் பெற்றுத் தந்தது நம்பிக்கை. ஆகட்டும் என்ற
ஒற்றைச் சொல்லால் அவமானத்தைக்கூட ஆபரணமாய் மாற்றியது
மரியாளின் நம்பிக்கை. அவர் சொல்வதை செய்யுங்கள் என்று
சீடருக்கு ஆணையிட்டது மாதாவின் நம்பிக்கை. ஆண்டவனின்
ஆடைகூட குணமாக்கும் என்பதை மெய்ப்பித்தது
பெரும்பாடுள்ள பெண்ணின் நம்பிக்கை. மேசையில் இருந்து
சிதறி விழும் துண்டுகளை நாய்கள் சாப்பிடுமே என்று ஆண்டவனையே
அசைத்து பார்த்தது கானானியப் பெண்ணின் நம்பிக்கை. ஒரு
வார்த்தை சொன்னால்போதும் என் ஊழியன் குணமடைவான் என்று
சாதித்தது நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை. குருடர்
பார்த்ததும், செவிடர் கேட்டதும், முடவர் நடந்ததும் நம்பிக்கையால்தான்.
நம்பிக்கை ஒன்று மட்டுமே இறைவனின் வல்லமையை வெளிப்படுத்த
வைக்கிறது. நம்பிக்கை ஒன்றுமட்டுமே நம் வீட்டு வாசலுக்கு
கடவுளை வரவழைக்கிறது. நம்பிக்கையுடன் பயணிக்கத் தொடங்கும்
போதுதான் வானம் வசப்படுகிறது. நம்பிக்கை உள்ளவனுக்கு
அந்த வானமே எல்லையாகிறது. அத்தகைய நம்பிக்கையைப்
பெற்று வாழ நம்பிக்கை யுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று வாழ்வோம்.
முதல் வாசக
முன்னுரை
விசுவாசம்தான் ஒருவருடைய வாழ்வை அதன் நடைமுறைகளை சீர்
செய்கிறது. ஆண்டவர்மேல் விசுவாசம் கொள்பவர் தான் என்றென்றும்
வாழ்வர் என்ற நம்பிக்கை நாற்றுகளை நம் நெஞ்சத்தில்
விதைக்கிறது இன்றைய முதல் வாசகம். நேர்மையுடையவர் நம்பிக்கையால்
வாழ்வடைவர் என்ற ஆண்டவரின் அமுத மொழிகளை கவனமுடன்
கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
தன்னால் திருநிலைப் படுத்தப்பட்ட தீமோத்தேயுவுக்கு பவுலடியார்
கூறும் அறிவுரைகள் இன்றைய இரண்டாம் வாசகமாக அருளப்பட்டுள்ளது.
நற்செய்தி யின் மதிப்பீடுகள் நமது வாழ்வின் சட்டமாக
வேண்டும். அதன் படிப்பினைகள் நம்மை பாதுகாக்க வேண்டும்
என்பதை எடுத்து ரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன்
கேட்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1) ஆயன் தன் மந்தைகளைக் காப்பது போல் எம்மைக் காத்துவரும்
இறைவா, உம்மாலும், உம் தூய ஆவியின் அருளாலும் உம்
திருப்பணிக்கென தேர்ந்துகொள்ளப்பட்ட எம் திருத்தந்தை,
ஆயர்கள், அருட்பணியாளர்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்
வதியும். நீர் வழங்கிய அருள் வரங்களால் மக்களை நல்வழிப்படுத்தி,
பயனை எதிர்பாராது பணிவிடை புரியும் பக்குவப்பட்ட அருட்பணியாளராய்
அவர்கள் உவப்புடன் ஊழியம் புரியவும், உடல் உள்ள நலனை
பெற்று வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2) எம் கால்கள் இடராதபடி எம்மைப் பார்த்துக்கொள்ளும்
அன்பு இறைவா, நாங்கள் எங்களது வாழ்வில் தூய ஆவியாரின்
வழி நடத்தலோடு, அன்னை மரியாளின் கரம் பிடித்து பயணிக்கவும்,
மற்றவர்களிடமிருந்து பலனை எதிர்பார்க்காமல் நம்பிக்கை
யோடு நாங்கள் எங்கள் கடமையைச் செய்யவும் உம்மில் என்றும்
நம்பிக்கை யோடு வாழவும் அருள் தர வேண்டு மென்று இறைவா
உம்மை மன்றாடு கிறோம்.
3) உறங்காமல், கண் அயராமல் எம்மை காக்கும் இறைவா, உம்
மீது நாங்கள் கொண்ட நம்பிக்கையை மிகுதியாக்கும். காலம்
கடந்தாலும் நீர் எம்மை கைவிடமாட்டீர். உம்மால் மட்டுமே
எம்மை வாழவைக்க முடியும். உம்மையன்றி ஓர் அணுவும் அசையாது
என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நாங்கள் பெறவும், அந்த
நம்பிக் கையின் வழியே நாங்கள் நல்வாழ்வு பெறவும் அருள்தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4) அமைதியை அருளும் அருட் கொடையே, கவலைகளால் கண்ணீர்
சிந்தி, துன்பங்களால் துயர் அடைந்து, வாட்டும் நோய்களால்
விரக்தி அடைந்து, நிம்மதி இழந்து தவிக்கும் எம்மை கருணையுடன்
பாரும். துன்ப துயரங்களில் இருந்தும், வாட்டுகின்ற
நோய்களில் இருந்தும் எம்மை பூரணமாக விடுவித்து அமைதியையும்
ஆறுதலையும் தந்து ஆதரிக்க வேண்டுமாய் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரைச்சிந்தனை
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மனோதத்துவம் பேராசிரியர்
வில்லியம் ஜேம்ஸ். இவர் அதீத அறிவாற்றல் பெற்றவராக திதழ்ந்தார்.
யாரும் எதிர்பாராத வன்னமாய் 29-ஆம் வயதில் மனநிலை
பாதிக்கப்பட்டவராகிறார். ஆனால் இவர் எப்பொழுதெல்லாம்
தனக்கு நல்ல மனநிலை இருந்ததோ, அந்த நேரத்தில் எல்லாம்
தான் பூரண குணம் அடைந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நாட்கள், ஆண்டுகள் ஆயின. நான் குணம் அடைந்து விட்டேன்
என்ற நம்பிக்கை. அவர் பூரண குணமடைந்து நல்ல மனநிலையைப்
பெற்றார். ஒரு விஷயத்தை நாம் எந்தளவுக்கு ஆழமாக நம்புகிறோமோ,
அந்த அளவுக்கு நாம் நம்பிக்கையில் வலுப்பெற முடியும்.
சீடர்கள் இயேசுவிடம் எங்கள் நம்பிக்கையை
மிகுதியாக்கும் என வேண்டுகின்றனர். அனுதினமும் இயேசுவோடு
வாழ்ந்து அவரது அதிசயங்களையும், மாட்சியையும் கண்ட
பின்பும் கூட சீடர்கள் நம்பிக்கைக் கொள்ள கற்றுக் கொள்ளவில்லை.
அவரது வார்த்தையைக் கேட்டு அவரையே நம்பி பின்பற்றிய
பின்னும் கூட, அவர்கள் நம்பிக்கையில் வளரவில்லை. பலமுறை
இயேசு அவர்களது நம்பிக்கையை கடிந்துள்ளார். கடலில் புயலால்
தாக்கப்பட்டபோது, ஆண்டவரே மடிந்து போகிறோம் என கூச்சலிட்டனர்.
சாத்தானே பின்னால் போ எனக் கூறி இராயப்பரை ஒருமுறை எச்சரிக்கிறார்.
உயிர்ப்பை ஏற்றுக் கொள்ளாத நம்பிக்கையற்ற சீடர்களை கடிந்து
கொள்கிறார். புனித தோமாவைச் சந்தித்த உயிர்த்த இயேசு,
நம்பிக்கைக்கொள், என்னை காணாமல் நம்புபவனே பேறுபெற்றவன்
என அறிவுரை வழங்கினார்.
இத்தகைய நம்பிக்கையினாலே புனிதர்கள் பெரும் புதுமைகள்
புரிந்துள்ளனர். புதுமை புரிய தனிவரம் பெற்ற புனித கிரகோரியார்,
குன்றைப் பார்த்து கடலிலே போய் விழு என்றதும் உடனே மலை
பெயர்ந்து கடலில் போய் சரிந்ததாக வரலாறு கூறுகிறது. நம்மிடம்
உள்ள நம்பிக்கை போதிய அளவு இருக்கிறதா, வளருகிறதா என்பதைக்
குறித்து இன்று நாம் சிந்திக்க, இறைவார்த்தை
வழிபாட்டால் அழைக்கப்படுகின்றோம்.
கடலிலே கப்பல் ஒன்று நிம்மதியாக சென்று கொண்டிருந்தது.
திடீரென அடித்த புயலிலே கப்பல் பெருமளவு ஆடி அசைந்தது.
பயணிகள் பெரும் பீதிகொண்டு அங்குமிங்குமாக ஓடினர். ஒரு
சிறுவன் மட்டும் கப்பலின் மேற்தளத்தில் நிம்மதியாக
விளையாடிக் கொண்டிருந்தான். கப்பல் முழுவதும் பேராபத்தில்
இருக்கிறது. நாங்கள் எல்லாம் பயந்து நடுங்கும்போது நீ
மட்டும் நிம்மதியாக விளையாடுகிறாயே என கப்பல் பயணி ஒருவர்
அச்சிறுவனிடம் கேட்டபோது சிறுவன், என் அப்பா தான் இக்கப்பலின்
ஓட்டுநர், அவர் இருக்கும் வரை எனக்கு ஒரு ஆபத்தும்
நேரிடாது. அதனால்தான் எனக்கு பயமில்லை என பதில்
கொடுத்தான். இச்சிறுவனிடமிருந்த இந்த களங்கமற்ற நம்பிக்கையைப்
போல தான் நாம் இறைவனிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
நம்பிக்கை என்பது நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் பற்று.
வாழ்விலும், தாழ்விலும், அவரே தமக்கு ஏக உறுதுணை என்ற
நினைப்போடு அவரிலே முழுநம்பிக்கை கொண்டு வாழ்வதே நம்பிக்கை
வாழ்க்கை. இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நமக்குத் தேவை.
காணாதிருந்தும், தெரியாதிருந்தும் நம்புவதுதான் சிறந்த
நம்பிக்கை. நம்பிக்கை இருள் போன்றது. இறைவன் ஒருவரையே
நம்பி இவ்விருளில் புகுந்து வாழ்கின்றோம். விண்ணக ஒளியில்
சேரும் வரை இவ்விருளிலே தான் நடக்க வேண்டும்.
திருமுழுக்கின்போது திருச்சபையிடம் நாம் பொன்னையும்
பொருளையும் கேட்கவில்லை. படிப்பையும், பதவியையும் கேட்கவில்லை.
ஆனால் நம்பிக்கையைக் கேட்போம். அப்படிப்பட்ட நம்பிக்கை
நம்மில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்வதாக.-
ஆமென்
மறையுரைச்சிந்தனை
அருள்சகோதரி: பிரின்சி
பொதுக்காலம் 27 ஆம் வாரம் - ஞாயிற
திருப்பலி முன்னுரை
அன்பிற்குரியவர்களே:
இன்று பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு.
",கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது", என்பது இவ்வுலகின் பழமொழி .
கடுகளவு நம்பிக்கை அத்திமரத்தையும் வேரோடு பெயர்க்கும் - என்பது இயேசுவின்
நம்பிக்கைமொழி .
இயேசுவின் பேதனைகளில் பல இயற்கையை மையமாக கொண்டுள்ளது. இன்றைய நற்செய்தியில்
கூட கடுகு, அத்திமரம்,வயல்வெளி என்று நம்மை சுற்றியுள்ள இயற்கையை
சுட்டிகாட்டி தன் சீடர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார். இன்றைய
திருவழிபாட்டு வாசகங்களின் மையமாக இருப்பது - இறைநம்பிக்கை. இந்த
இறைநம்பிக்கை கடுகளவு இருந்தால் போதும் கடலளவு அற்புதங்கள் நடக்கும்
என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு தரும் பாடம். கேட்டவை கிடைக்காத
அபக்கூக்கு இறைவாக்கினருக்கு ஆண்டவர் அளித்த பதில் மொழி ,
",காத்திரு அது நிறைவேறியே தீரும்",, காலம் தாழ்த்தாது! என்ற நம்பிக்கை
மொழி .
சிறையில் இருந்த பவுலடியார் துன்பத்தை துணிவுடன் ஏற்றுகொண்டதும் இறைநம்பிக்கையால்
தான்.
",எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்", என்று அப்போஸ்தலர்கள் ஆண்டவரை
வேண்டிக்கொண்டதும்- இறைநம்பிக்கையால் தான்.
அன்பு சகோதரமே!
நம்மில் பலரும் பல ஆண்டுகளாக கேட்டவை கிடைக்காத நிலையில் விரக்தி
அடைந்து சோர்ந்து போய் உள்ளோம். வாருங்கள் நாமும் இன்று ஆண்டவரிடம்
கேட்போம், ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்- என்று . நம்புவோம்!
ஆண்டவர் நமக்கு தர நினைப்பது எதுவும் தடைபடாது .ஆண்டவரின் செயல்கள்
நிறைவேற பொறுமையுடன் காத்திருப்போம். ஆணடவரின் தாமதம் ஒருபோதும் தடைபடாது.மாறாக
ஆண்டவர் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்வார். அவரின்
வாக்குறிகள் உண்மையானவை. கடுகளவு விசுவாசத்தை எங்களுக்கு தாரும் ஆண்டவரே
என்ற வரம் கேட்டு இன்றைய திருப்பலில் இணைவோம்.
முதன் வாசக முன்னுரை:
அப1:2-3, 2:2-4
நீண்டநாள் ஆண்டவரிடம் முறையிட்டு கேட்ட விண்ணப்பத்திற்கு பதில்
கிடைக்காத நிலையில் இறைவாக்கினர் அபக்கூக்கு ஆண்டவரிடம் நம்பிக்கையிழந்து
புலம்பியபொழுது ஆண்டவர் அவருக்கு அருளிய நம்பிக்கை மொழிகளை தெளிவாக
எடுத்துரைக்கும் முதல் வாசகத்தை கவனமுடன் கேட்டு நம் நம்பிக்கையை
திடப்படுத்திக் கொள்வோம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 2 திமொ 1:6-2, 13-14
கிறிஸ்துவின் பொருட்டு கைதியாக இருக்கும் பவுலடியார், அதைக்குறித்து
வெட்கமடையவில்லை, பெருமையடைகிறார். சோர்ந்து போய் நற்செய்திபணியில்
பின் வாங்கவில்லை. தூய ஆவியின் வல்லமையை உணர்ந்து, புதுத்தெம்பு
பெற்று சோர்ந்து போன திமொத்தேயுவையும் நம்பிக்கையில் திடப்படுத்தும்
வகையில் புனித பவுல் எழுதிய கடிதத்தை இரண்டாம் வாசகத்தில்
கேட்போம்.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுக்கள்
பதில்: ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்
1. பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, இறைப்பணிக்கென அர்ப்பணிக்கப்பட்ட
எம் திருத்தந்தை, ஆயர்கள் குருக்கள், துறவிகள் அனைவரும், உம்மில்
ஆழமான நம்பிக்கை கொண்டு, எவ்வித தற்பெருமைக்கு இடம் தராமல் நற்செய்திப்பணியை
இன்னும் ஆர்வத்துடன் சிறப்பாக செய்யும் வரமருள ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
2. கிறிஸ்தவர்கள் அனைவரும், இயேசு கிறிஸ்துவின் வழியாக
பெற்றுக்கொண்ட நம்பிக்கையை காத்துக்கொள்ளவும், உண்மை கிறிஸ்துவை
உலகெங்கும் அறிவித்து கடுகளவு விசுவாசத்துடன் கடலளவு நற்பணிகள்
செய்யும் ஆற்றல் தந்தருள் ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.
3. நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்று தவறாமல் ஆன்மீக முயற்சிகளில்
ஈடுபடும் நாங்கள் அனைவரும், மாய மந்திரங்கள் சம்பிரதாயங்கள் மனையடி
சாத்திரங்கள் ராகுகாலம் நல்லநேரம் எமகண்டம் போன்ற மூடநம்பிக்கைகளில்
முழ்கிவிடாமல் இறைநம்பிக்கையில் எங்கள் வாழ்வினை தொடர வரமருள இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
4. இன்றைய திருப்பலியில் பங்கெடுத்து நற்கருணை உட்கொள்ளும் நாங்கள்
இறைநம்பிக்கையில் வளர தேவையான ஆற்றலை திவ்ய நற்கருணையிலிருந்து
பெற்றுக்கொண்டு எங்கள் வாழ்வின் சோதனை சேரத்தில் துவண்டுவிடாமல்
நீண்டநாள் எதிர்பார்த்துக் காத்திருப்பவை நிச்சயம் கைக்கூடி வரும்,
வாக்களித்த ஆண்டவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள்
அதிகரிக்க இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிரியமானவர்களே, இன்று பொதுக்காலம் 27ம் ஞாயிறு
வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின்
இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்செய்தி, நமக்கு வெளிப்படுத்தும் முதல் சிந்தனை,
இறை நம்பிக்கை நம்மிலே என்றும் உறுதியாக இருக்க
வேண்டும் என்பதையே. இயேசு, ",கடுகளவு விசுவாசம் இருந்தால்
அத்திமரம் கடலில் வேரூன்றி நிற்கும்", என்று தம் சீடர்களுக்குக்
கூறுகின்றார். ஆம். ",இயேசுவின் ஆடையைத் தொட்டாலே
போதும், நலம் பெறுவேன்", என்ற அந்த பெரும்பாடுள்ள
பெண்ணின் நம்பிக்கை நம்மில் வேண்டும். ",நீர் ஒரு
வார்த்தை சொல்லும், என் ஊழியன் குணமடைவான்", என்ற
நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை நம்மிலே வேண்டும்.
",என்னில் நம்பிக்கை கொள்பவர் நான் செய்பவற்றை
செய்வார், ஏன் அவற்றைவிடப் பெரியனவும் செய்வார்", என்று
இயேசு நம்மிலே இறைநம்பிக்கை ஆழமாக வேண்டும் என்பதை நமக்கு
மிகத் தெளிவாக எடுத்துரைப்பதைக் காணலாம்.
இறைநம்பிக்கையை சோதிக்கும் பல நிகழ்வுகள், சோதனைகள் நம்
வாழ்வில் ஏற்படலாம். யோபுவின் வாழ்வில் அவர் சந்தித்த
அனைத்து இழப்புக்களிலும் தாம் இறைவன் வைத்துள்ள நம்பிக்கையில்
எள்ளளவும் தடம் புரளவில்லை. அதனால்தான் அனைத்தையும் இறைவனிடமிருந்து
இருமடங்காகப் பெற்றுக் கொண்டார் என்பதை நாம் நன்கு அறிவோம்.
இறைவனிடம் நாம் கேட்கும்போது நம்பிக்கையோடு ஐயப்பாடின்றி
கேட்க வேண்டும் என யாக்கோபு தாம் எழுதிய திருமுகத்திலே
அழுத்தமாக எடுத்துரைப்பதைக் காணலாம். நாம் நம் இறைநம்பிக்கையில்
பாறைமீது கட்டப்பட்ட வீட்டைப்போல உறுதியாக இருக்க
வேண்டும்.
இரண்டாவதாக நாம் பெறும் சிந்தனை, நாம் ஒருவர் ஒருவருக்குப்
பணியாளராக மாற வேண்டும் என்னும் பாடத்தைப் புகட்டவில்லை.
நாம் பணிவிடை பெறுவதில் கவனம் செலுத்தாமல் பணிவிடை
புரிவதில் கருத்தாயிருக்க வேண்டும் என்னும் போதனையை இயேசு
தருகின்றார். நாம் புரிகின்ற பணிக்காக நம்மைப் பிறர்
பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என கற்பிக்கிறார்.
நாம் சுதந்திரமாக அவரது பணியைச் செய்ய வேண்டும். மனிதர்
தரும் பெருமையை நாம் என்றும் விரும்புதல் கூடாது. நம்மிடம்
ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நாம் எவ்வித எதிர்பார்ப்பின்றி,
மனநிறைவோடு, கடமை உணர்வோடு செய்ய வேண்டும். அப்போதுதான்
நம் வாழ்க்கை அமைதியாக இருக்கும். நாம் இறைவனுடைய புகழுக்காக
செயல்படும்போது நம் வாழ்வு வளம் பெறும்.
இறைபுகழ் பெருகப் பெருக மனிதர்களின் உண்மையான நலனும்
பெருகும். பாராட்டுக்காக, புகழுக்காக, நாம் எதையும் எதிர்பார்க்காமல்
நமது பணிகளை, பொறுப்புடன், கடமை உணர்வோடு செய்திட, இறையாசீர்
வேண்டி, இத்திருப்பலியில் நம்மை அர்ப்பணிப்போம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. கடமை தவறாத ஆண்டவரே,
எங்கள் கடமைகளை, பணிகளை நாங்கள் நேர்மையுடன் ஆற்றிடவும்,
அந்தப் பணிகளுக்காக எந்த பாராட்டையும் எதிர்பார்க்காத
மனநிலையையும் தந்தருளும். நாங்கள் என்ன செய்தாலும் உம்
நாமத்தை மகிமைப்படுத்திடவும், உம் மாட்சிமைக்காகவும்
மட்டுமே என்று கடமை செய்ய அருள்தர வேண்டுமென்று, இறைவா
உம்மை மன்றாடுகின்றோம்.
2. வழிநடத்தும் ஆண்டவரே,
எங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாத்திட நீர் எங்களுக்குத்
தந்திட்ட காவல்தூதர்களுக்காக நன்றி கூறுகின்றோம். உம்
சார்பாக எங்களுக்கு அவர்கள் துணையாக எங்கள் வாழ்வில்
எல்லா நிலைகளிலும் எங்களை காத்து வருகின்றனர். தொடர்ந்து
அவர்களின் பாதுகாப்பினின்று நாங்கள் விலகிடாது, அவர்களுடைய
அரவணைப்பில், வழித்துணையில் எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத்
தொடர்ந்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வலுவூட்டும் ஆண்டவரே,
எங்கள் வாழ்வில் வரும் வேதனைகள், சோதனைகள். நெருக்கடிகள்
போன்ற அனைத்து நிலைகளிலும் எங்கள் நம்பிக்கையை இழந்திடாமல்,
விசுவாசத்தில் தளர்ந்திடாமல் வாழ்ந்திடவும், உம்மால்
ஆகாதது எதுவுமில்லை என்பதிலே அசையாத, மாறாத இறைநம்பிக்கையுள்ளவர்களாக
வாழ்ந்திடவும், அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பிரிந்ததை இணைக்கும் ஆண்டவரே,
கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக பிரிந்து வாழும்
கிறிஸ்தவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஒன்றிணைக்கப்பட்டு,
உலகெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கவும், தம்
தாய் திருச்சபையோடு இணைந்து, உண்மைக் கடவுளாகிய உம்மைத்
தங்கள் வாழ்வில் கண்டுணரவும், ஒரே ஆயனும், ஒரே மந்தையுமாக
அனைவரும் ஒன்றாய் உம் இறையரசைக் கட்டியெழுப்பிடும் பணியில்
இணைந்து செய்து, உம் நாமத்தை மகிமைப்படுத்திட ஆற்றல்
தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. வாழ்வில் இனிமை தரும் ஆண்டவரே,
எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பிலும். பிறரன்பிலும்
நாளும் வளர்ந்திடவும், உறவுகளில் உள்ள கசப்புணர்வுகள்,
பழிவாங்கும் மனநிலைகளை அகற்றி, ஒருவரையொருவர் மனதார மன்னித்து,
ஒவ்வொரு குடும்பங்களிலும், மனங்களிலும் நீர் அளித்திடும்
அமைதி, மகிழ்ச்சி, சமாதானம் நிறைவாகத் தங்கிடவும்,
பொருளாதாரப் பிரச்சனைகள் சீராகிடவும், தங்கள் குழந்தைகளை
ஆன்மீகப் பாதையில் வழிநடத்திடவும் அருள்தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நீங்கள் என்றைக்காவது உழைத்து ஓய்ந்துபோன, மற்றவர்கள் பயன்படுத்தித்
தள்ளிவிட்ட கழுதைபோல உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது 'நான் நல்லது
செய்கிறேன் ஆனால் நல்லதே எனக்கு நடப்பதில்லை' என்று நீங்கள் புலம்பியதுண்டா?
அல்லது 'நான் எழுப்பும் கூக்குரலுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை'
என்று நீங்கள் சோர்ந்து போவதுண்டா? அல்லது எங்கே செல்கிறதோ
வாழ்க்கை என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கிறதா?
அல்லது 'இது என்னால் முடியுமா? இதை நான் செய்ய முடியுமா?' என்று தன்ஐயத்தால்
நீங்கள் வருந்தியதுண்டா? அல்லது 'எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்களே
தவிர, என்னுடைய மகிழ்ச்சியை, துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் என்னோடு
இல்லை' என்று நீங்கள் புலம்பியது உண்டா?
இந்தக் கேள்விகளுள் எதற்காவது உங்களுடைய பதில் 'ஆம்' என்றால் இன்றைய
இறைவார்த்தை வழிபாடு உங்களுக்குத்தான். நீங்கள் எழுப்பும் அந்தக்
கேள்விக்கான விடையை இன்றைய வாசகங்கள் உங்களுக்குத் தருகின்றன.
எப்படி?
நம்பிக்கைக்கு பல வரையறைகளும் வடிவங்களும் உள்ளன. இன்றைய இறைவார்த்தை
வழிபாடு நம்பிக்கையின் ஒரு வரையறையும் வடிவத்தையும் நமக்கு விளக்குகிறது:
நம்பிக்கை அன்றாடம் வாழ்வாக்கப்பட வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். அப 1:2-3,2:2-4) நாம் காணும் இறைவாக்கினர்
அபக்கூக்கு யூதா நாடு அனுபவித்த மிகப்பெரிய மாற்றத்தின் காலத்தில்
வாழ்ந்தார். யோசியா அரசன் நிறைய சமூக, அரசியல் மாற்றங்களைச்
செய்தார். சிலைவழிபாட்டுத் தளங்களை ஒழித்தார். அரசவையில் விளங்கிய
சிலைவழிபாட்டையும் தடை செய்தார். இப்படியாகக் கடவுளையும் அவருடைய
திருச்சட்டத்தையுமே மையமாக வைத்து ஆட்சி செய்த அவர் திடீரென கிமு
609இல் எகிப்தியருக்கு எதிரான போரில் இறந்து போகின்றார். அதன்பின்,
எகிப்தியர்கள், பாபிலோனியர்கள் என்ற அந்நியர்கள் யூதாவை ஆட்சி
செய்கின்றனர். அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சி நம்பிக்கை கொண்ட பல
இஸ்ரயேலர்களின் உள்ளத்தில் நிறைய கேள்விகளை எழுப்பியது: 'கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருந்தால் ஏன் இப்படி எல்லாம் தீமை நடக்கிறது? தீமையின்
மேல் நன்மை வெற்றி கொள்வது ஏன்? நன்மையும் அன்பும் உருவான கடவுள்
தீமையை எப்படி அனுமதிக்கலாம்?' - இப்படியாக நிறையக் கேள்விகளை மக்கள்
கேட்பதோடல்லாமல் இறைவாக்கினர் அபகூக்கும் கேட்கின்றார்.
'இன்னும் எத்தனை காலத்திற்கு?' என்று இறைவாக்கினர் கேட்கும்
கேள்வியில் அவருடைய சோர்வும் தளர்ச்சியும் வெளிப்படுகிறது. 'நீர்
என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச்
செய்கின்றீர்?' என்ற கேள்வியில், 'இன்னும் நான் உயிரோடு இருக்க
வேண்டுமா?' என்ற இறைவாக்கினரின் புலம்பல் தெரிகிறது.
வாசகத்தின் இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவருக்கு மறுமொழி பகர்கின்றார்.
இந்த இக்கட்டான வேளையில் இறைவாக்கினரின் பணி என்ன என்பதை முதலில்
உணர்த்துகின்றார் ஆண்டவர்: 'எழுதி வை! ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம்
தெளிவாக எழுதி வை!' கடவுள் சரியான நேரத்தில் குறுக்கிட்டு அனைத்தையும்
சரி செய்வார். மக்கள் மடியும்போது கடவுள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை.
மாறாக, கடவுள் ஒரு 'நோக்கமும் இலக்கும் பார்வையும்' வைத்துள்ளார்.
கடவுளின் திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப வரலாறு விரிகிறது.
கடவுளே அனைத்து நிகழ்வுகளையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதும்,
தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கைச் செய்தி இங்கே
புலப்படுகிறது. இதை நம்பாதவர்கள் 'உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர்'
எனவும், 'நேர்மையுடையவர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்றும் இறுதியில்
வரையறுக்கின்ற ஆண்டவர், 'ஆணவமிக்கோர்' - 'நம்பிக்கையுடையோர்' என்ற
இரு குழுவினரில் நம்பிக்கை உடையவர்களே வாழ்வு பெறுவர் என்கின்றார்.
நேர்மையுடையவரின் நம்பிக்கை என்ன? கடவுள் பார்ப்பதுபோல அனைத்தையும்
பார்ப்பது, அல்லது கடவுளின் நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையை தன்னுடைய
நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையாக ஆக்கியவரே நேர்மையடைவயர். இந்த
நம்பிக்கைப் பார்வையை ஒருவர் கொண்டிருத்தலே நம்பிக்கையை வாழ்வாக்குதல்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 1:6-8,13-14) தன்னுடைய உடனுழைப்பாளரான
திமொத்தேயுவுக்கு பவுல் வழங்கும் அறிவுரையாக இருக்கின்றது.
திமொத்தேயு என்ற இளவலின் கண்காணிப்பின்கீழ் எபேசு ஒப்படைக்கப்படுகிறது
(காண். 1 திமொ 1:3). அங்கே அவர் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றார்.
பலர் அவருடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகையால்,
திமொத்தேயு சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாகின்றார். இதை அறிகின்ற
பவுல் அவருக்கு உந்துதல் தரும் பொருட்டு இன்றைய இறைவார்த்தைப் பகுதியை
எழுதுகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் திமொத்தேயு பெற்றிருந்த
நம்பிக்கையைப் பாராட்டுகின்றார்: 'வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை
நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி
லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது.' இந்த இரண்டு
பெண்மணிகளின் நம்பிக்கையை மேல்வரிச்சட்டமாகக் காட்டி,
திமொத்தேயுவின் திருத்தூது ஆர்வத்தைத் தூண்டு எழுப்புகிறார்.
திமொத்தேயு மேல் கைகளை வைத்து செபித்து அவரிடம் பணிப்பொறுப்பை வழங்குகின்றார்.
இப்போது அதே நிகழ்வைச் சுட்டிக்காட்டி, 'கடவுள் நமக்கு கோழையுள்ளத்தை
அல்ல. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்'
என்று பெருமிதம் கொள்கின்றார். மேலும், ஆண்டவருக்குச் சான்று பகர்வதைக்
குறித்து வெட்கப்பட வேண்டாம் என்று ஊக்கம் தருகின்றார். தன்னுடைய
குழுமத்தில் தன்னை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும்,
தன்னைப் பயமுறுத்துகிறார்கள் என்றும் உணர்கின்ற திமொத்தேயு பயம்,
தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம், மற்றும் வெட்கம் கொள்கின்றார். ஆனால்,
அவர் தன்னுடைய அம்மா, பாட்டி, மற்றும் வழிகாட்டி பவுல் போல
வாழ்ந்தால் நம்பிக்கையை வாழ முடியும் என உணர்கின்றார்.
பவுல் தான் அடைந்த துன்பம், அனுபவிக்கின்ற சிறைவாசம், அடைந்த எதிர்ப்புகள்
அனைத்தையும் நம்பிக்கை கண் கொண்டு பார்க்கின்றார். இவை எல்லாவற்றிலும்
தன் நம்பிக்கையை வாழ்கின்றார் பவுல். இதே போல வாழ திமொத்தேயுவை அழைக்கின்றார்
பவுல்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:5-10) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.
முதல் பகுதியில் திருத்தூதர்கள், 'எங்கள் நம்பிக்கையை
மிகுதியாக்கும்' என்று ஆண்டவரிடம் வேண்டுகிறார்கள். இப்படிக் கேட்பதால்
அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று பொருள் இல்லை. மாறாக, இயேசுவோடு
ஒப்பிட்ட நிலையில் தங்களுடைய நம்பிக்கை குறைவுபடுவதாக ஐயம்
கொண்டார்கள். 'கடுகளவு நம்பிக்கை கொண்டு மலையைப் பெயர்த்துவிடலாம்'
என்று சொல்கிறார் இயேசு. கடுகு அளவில் மிகவும் சிறியது. மலையோ பெரியது.
சிறியதைக் கொண்டு பெரியதைச் செய்துவிடலாம் என்று இயேசு அவர்களிடம்
ஏற்கெனவே இருக்கும் நம்பிக்கையின் சிறப்பை அடிக்கோடிடுகின்றார். இவ்வாறாக,
நம்பிக்கை என்பது ஒருவர் பெற்றிருக்கின்ற பொருள் அல்ல. மாறாக, கொஞ்சம்
கொஞ்சமாக ஒருவர் தனக்குள்ள உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் அல்லது திறன்
என்கிறார் இயேசு. தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் அவர்கள் தங்கள்
நம்பிக்கையை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று கற்பிக்கின்றார்
- நம்பிக்கைக்குரிய மற்றும் பலனை எதிர்பாராத பணிவிடையின் வழியாக.
தன்னுடைய சமகால மேட்டிமை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இல்லத்தில் நடக்கும்
நிகழ்வின் பின்னணியில், பணியாளர்கள் அல்லது அடிமைகள் எந்தவொரு நன்றியையும்,
வெகுமதியையும் எதிர்பாராமல் உழைக்க வேண்டிய சூழலைச்
சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. பணியாளர் பகல் முழுவதும் வயல்வெளியிலும்,
மாலையில் தலைவரின் உணவறையிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
மேலும், இச்செயலைப் பொறுப்புடனும் கண்ணியமுடனும் அவர் நிறைவேற்றுவதற்காக
அவருக்கு எந்தவொரு பாரட்டும் நன்றியும் வழங்கப்படவில்லை. 'பயனற்ற
பணியாளர்கள்' என்றால் 'பயனை மையப்படுத்தியோ, மற்றவர்களின் பாராட்டை
மையப்படுத்தியோ, நன்றியை எதிர்பார்த்தோ பணியாற்றாத பணியாளர்கள்' என்று
பொருள்.
எந்தப் பணியாளருக்கு நம்பிக்கைப் பார்வை இருக்கிறதோ அவர் ஒருவரால்தான்
இப்படி பயனையோ, பாராட்டையோ, நன்றியையோ எதிர்பாராமல் பணிசெய்ய
முடியும். அதாவது, தன்னுடைய வேலை தன்னுடைய கடமை என்று மட்டும் எண்ணுவது.
இப்படி எண்ணும்போது ஒருவர் எளிதில் சோர்வடைந்துவிடுவதில்லை. நான்
காலையில் திருப்பலியில் மறையுரை நிகழ்த்தும்போது, 'எல்லாரும் என்னைப்
பாராட்ட வேண்டும்' என்பது என் இலக்காக இருந்தால், யாரும் பாராட்டாதபோது
நான் சோர்ந்துவிட வாய்ப்புண்டு. மாறாக, மறையுரை நிகழ்த்தும்
பொறுப்பை, கடமையை நான் நேர்த்தியாகச் செய்வேன் என்று அங்கே என்னுடைய
திருப்தி மற்றும் நிறைவை மட்டும் நான் முன்வைத்தால் நான் அப்படிச்
சோர்வடைய மாட்டேன்.
ஆக, நம்பிக்கை என்பது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் வாழ்வாக்கப்பட
வேண்டும். அபக்கூக்கைப் பொருத்தவரையில் நம்பிக்கை என்பது சந்தேகம்
மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் சூழ்ந்த நேரங்களில் கடவுள்
செயலாற்றுவார் என்று கடவுளின் அகன்ற பார்வையைப் பெற்றிருப்பது.
திமொத்தேயுவைப் பொருத்தவரையில் நம்பிக்கை என்பது தான்
நிராகரிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் தன்னுடைய திருத்தூது
தாகத்தைக் குறைத்துக்கொள்ளாமல் இருப்பது. இயேசுவின்
திருத்தூதர்களைப் பொருத்தவரையில் நம்பிக்கை என்பது மிகச் சிறியதாக
இருந்தாலும் மிகப் பெரிய செயலை ஆற்றும் வல்லமை கொண்டது. மேலும்,
அன்றாட வாழ்வில் பணிவிடைச் செயல்களில் வாழப்பட வேண்டியது.
நம்பிக்கைப் பார்வை கொண்டிருப்பது என்பது வீட்டின் ஜன்னலுக்கு முன்
நின்று வெளியில் பார்க்கும் குறுகிய பார்வை அன்று, மாறாக, வீட்டு
மாடியில் நின்று பார்க்கும் அகன்ற பார்வை போன்றது. அந்தப் பார்வை
நம் இலக்கை, நோக்கை, செயல்பாட்டை அதிகரிக்கும். அத்தகைய
நம்பிக்கைப் பார்வை நம் வாழ்வின் செயல்களை மேம்படுத்தும்.
நம்பிக்கையை நாம் எப்படி வாழ்வாக்குவது?
1. கேள்வி கேட்கும் உள்ளமா? சரணாகதி ஆகும் உள்ளமா?
நம் வாழ்வின் துன்பமான நேரங்களில் நம்முடைய மூளை அதிகமாக வேலை
பார்க்கும். 'இப்படியா?' 'அப்படியா?' 'இப்படி ஆகிவிடுமா?' 'அப்படி
ஆகிவிடுமா?' 'இது ஏன்?' 'அது எப்படி?' என நிறைய அங்கலாய்க்கும்.
இம்மாதிரியான நேரங்களில் நாம் மூளையின் வேலையை அப்படியே நிறுத்த
வேண்டும். இக்கேள்விகளுக்கு நாம் விடை தேடினால் குழப்பம் இன்னும்
அதிகமாகும். இந்த மாதிரியான நேரங்களில் மூளையின் செயல்பாட்டைக்
குறைத்து மனத்தின் செயல்பாட்டைக் கூட்ட வேண்டும். மூளையின்
செயல்பாடு கேள்வி கேட்பது என்றால், மனத்தின் செயல்பாடு சரணாகதி
அடைவது. பல நேரங்களில் வெறும் ஜன்னலின் சிறிய ஓட்டைக்குள்
பார்த்துவிட்டு, 'இதுதான் நாம்! இதுதான் உலகம்! இவ்வளவுதான்
மனிதர்கள்! கடவுளும் இல்லை ஒன்றும் இல்லை!' என்று நாம்
சோர்ந்துவிடுகிறோம். இல்லை! 'நேர்மையுடையவர்' - 'அதாவது கடவுளைப்
போல பார்ப்பவர்,' 'நம்பிக்கை ஆற்றல்,' 'நம்பிக்கை பார்வை'
கொண்டிருப்பவர் அவருடைய நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். ஆக,
கேள்விகள் குறைப்பது நம்பிக்கையை வாழ்வதற்கான முதல்படி.
2. கோழையுள்ளமா? வல்லமையா?
'கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் எல்லாம் நன்றாக நடக்கும்' என்ற
புரிதலை திமொத்தேயு கொண்டிருந்ததால், சின்னச் சின்ன பிறழ்வும்
அவரைத் தாக்கிவிடுகிறது. ஆகையால் எளிதில் மனம்தளர்ந்துவிடுகிறார்.
கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருப்பதால் எல்லாம் நன்றாக இருக்கும்
எந்த ஆட்டோமேடிக் தத்துவமும் உலகில் இல்லை. ஒன்றும் நன்றாக
நடக்கவில்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை இருந்தால் நாம் வல்லமை
பெறுவோம் என்பதே சரியான பார்வை. ஆக, கடவுளின் உடனிருப்பு துன்பத்தை
இல்லாமல் செய்துவிடும் என்று நினைக்கக் கூடாது. மாறாக, கடவுளின்
உடனிருப்பால் நான் துன்பத்தை ஏற்க முடியும் என்று நினைக்க
வேண்டும். பவுல் திமொத்தேயுவின் வாழ்வில் நடந்த அருள்பொழிவு
நிகழ்வை இங்கே சுட்டிக்காட்டுகிறார்: 'உன் மீது என் கைகளை வைத்து
திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின்
அருள்கொடையைத் தூண்டி எழுப்புமாறு ...' நம் ஒவ்வொருவருக்கும்
இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இருக்கும் - அருள்பொழிவு, திருமண நாள்,
உறுதிப்பூசுதல் நாள், வேலை கிடைத்த நாள் - இப்படி ஏதாவது ஒரு
நேர்முகமான நிகழ்வுகளில் நம் மனத்தை நங்கூரமிட்டுக்கொள்ளுதல்
நம்பிக்கையை வாழ்வதற்கான இரண்டாம் படி.
3. செயல்களின் பயனை எதிர்பாராமல் வாழ்வது
இன்று சின்னச் சின்னச் செயல்கள் செய்தாலும் அதில் நம் பெயர் வர
வேண்டும் என நினைக்கிறோம். பிறரின் பாராட்டுக்கள்,
ஏற்றுக்கொள்ளுதல், விமர்சனங்கள் நம் செயல்களை நிறையவே
பாதிக்கின்றன. ஆனால், நம்பிக்கைப் பார்வை கொண்டவர்கள் தங்களுடைய
செயல்களோடும் அவற்றின் கனிகளோடும் ஒருபோதும் தங்களை ஒன்றிணைத்துக்
கொள்ளவே மாட்டார்கள். நான் என்பது என் செயல்களையும் தாண்டிய ஒன்று.
எடுத்துக்காட்டாக, இன்று எனக்கு ஒரு விபத்து நடந்து என் கைகால்கள்
முடமாகிப் போய், என்னால் ஒரு செயலும் செய்ய முடியவில்லை என்றால்,
'நான் பயனற்றவன்' என்று ஆகிவிடுவேனா? ஆக, பயன்பாட்டையும் தாண்டிய
ஒரு பண்பு மனிதனுக்கு உண்டு. நான் ஆற்றும் செயல்களோடு என்னைக்
கட்டிக்கொள்ளாமல் என்னைச் செயல்படுவதற்கு அழைத்த என் தலைவனின்
பார்வை கொண்டு நான் அனைத்தையும் பார்த்தால் என் மகிழ்ச்சியை நான்
இழந்துவிட மாட்டேன். இதையே, 'விடாமுயற்சியோடும் முணுமுணுக்காமலும்
பணி செய்யுங்கள்' என்று கற்பிக்கின்றார் பவுல்.
இறுதியாக,
நம்பிக்கையை வாழ்வாக்குவது என்பது பறவை கூடு கட்டுவது போன்றது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குச்சி என்று சேர்த்துக்கொண்டே இருப்பது
போன்றது. அன்றைய வேலை அன்றைக்கு நிதானமாக நேர்த்தியாகச் செய்வது.
சிறு குச்சிகள் அழகான கூடாக மாறும் என்ற பார்வையை மங்காமல்
பார்த்துக்கொள்வது.
இப்படிப்பட்ட நம்பிக்கையாளரே, இன்றைய திருப்பாடல் ஆசிரியர் போல,
'அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்' (காண். திபா
95:7) என்று சொல்ல முடியும்.
I அபகூக்கு 1: 2-3, 2: 2-4
II 2 திமொத்தேயு 1: 6-8, 13-14
III லூக்கா 17: 5-10
'என் கடன் பணிசெய்து கிடப்பதே'
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயம். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு
எதிராகக் கலகம் செய்ததாக 46 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு, குற்றவாளிக்
கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அவர்கள் சார்பாக வழக்குரைஞர் ஒருவர்
பேச்சில் அனல் பறக்க வாதித்துக் கொண்டிருந்தார். நடுவில் அந்த வழக்குரைஞரின்
உதவியாளர் அவரிடம் வந்து, ஒரு துண்டுக் காகிதத்தைக்
கொடுத்துவிட்டுப் போனார். அதை வாசித்துப் பார்த்த வழக்குரைஞர் ஒரு
கணம் அதிர்ந்துபோனார். பின்னர் அவர் அந்தத் துண்டுக் காகிதத்தை
தான் அணிந்திருந்த சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, அந்த 46 இந்தியர்கட்காக
வாதிட்டார். வழக்கின் முடிவில் அந்த 46 இந்தியர்களும் நிரபராதிகள்
என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வழக்காடிய வழக்குரைஞரிடம் வந்த அந்த (ஆகிலேய)
நீதிபதி அவரிடம், ",குற்றம் சுமத்தப்பட்ட இந்த 46 இந்தியர்கட்காக
நீங்கள் வாதாடும்போது, நடுவில் உங்களுடைய உதவியாளர் கொண்டுவந்து
கொடுத்த துண்டுக் காகிதத்தைப் படித்ததும் ஒரு கணம் நீங்கள் அதிர்ந்துபோனீர்களே!
அதில் என்ன எழுதியிருந்தது?", என்றார். ",அதுவா! என்னுடைய மனைவி இறந்துவிட்டார்
என்ற செய்தி", என்றார் அந்த வழக்குரைஞர். ",என்ன உங்களுடைய மனைவி இறந்துவிட்டார்களா...?
உங்களுடைய மனைவி இறந்த செய்தியை அறிந்தும், நீங்கள் ஏன் வழக்கை அப்படியே
விட்டுவிட்டு பாதியிலேயே சென்றிருக்கக்கூடாது...? என்றார் நீதிபதி.
",நீங்கள் சொல்வதுபோன்று இந்த வழக்கைப் பாதியிலேயே விட்டுவிட்டுப்
போயிருந்தால் இறந்துபோன என் மனைவி திரும்பக் கிடைத்துவிடுவாளா...?
இல்லைதானே! ஆனால், நான் அங்கு செல்லாமல் இருந்தால், அநியாயமாகக்
குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த 46 இந்தியர்களையும் தூக்குத்
தண்டனையிலிருந்து மீட்க முடியும். அதனால்தான் என்னுடைய மனைவியின்
இறப்புச் செய்தியை அறிந்தபின்னும் வீட்டுக்குப் போகாமல், இங்கேயே
இருந்து, இவர்கட்காக வாதிட்டேன்", என்றார். இதைக் கேட்ட அந்த ஆங்கிலேயே
நீதிபதி, 'இப்படியெல்லாம் கடமை உணர்வோடு மனிதர்கள் இருப்பார்களா!
என்று வியந்து நின்றார். தன்னுடைய மனைவி இறப்புச் செய்தியை அறிந்தபின்னும்
46 இந்தியர்கட்காக வாதித்த அந்த வழக்குரைஞர் வேறு யாருமல்ல, இந்தியாவின்
இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான்!
நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாருடைய பாராட்டுக்காகவும்
இல்லாமல், பிறர் நலனுக்காக (இறைவனின் மகிமைக்காகக்) கடமை உணர்வோடு
செய்யவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், கடமையுணர்வோடு இறையாட்சிப் பணியையும்
நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியினையும் செய்யவேண்டும் என்றோர்
அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப்
பார்ப்போம்.
பிரதிபலன் பாராது பணிசெய்யவேண்டும்
இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு பயனற்ற பணியாளர்
உவமையைச் சொல்கிறார். இவ்வுவமையில் வருகின்ற பணியாளர் வயலில் உழுதுவிட்டோ,
மந்தையை மேய்த்துவிட்டோ வருகின்றபோது, அவருடைய தலைவர் அவரிடம்,
'உணவருந்த அமரும்' என்று சொல்லவில்லை. மாறாக, அவர் அவரிடம்,
'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்... எனக்குப் பணிசெய்யும்' என்றுதான்
சொல்கின்றார்; அந்தப் பணியாளர் செய்த பணிக்காகத் தலைவர் அவர்க்கு
நன்றி கூறவில்லை. நீங்களும் அந்தப் பணியாளரைப் போன்று இருங்கள் என்கின்றார்
இயேசு.
உவமையில் வருகின்ற பணியாளர் செய்கின்ற பணிகளாக இயேசு, உழுவதையும்
மந்தையை மேய்ப்பதையும் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு பணிகளும்
நற்செய்திப் பணியோடு தொடர்புடையவை. எப்படி என்றால், உழவர் உழுது
விதைகளை விதைத்து, பின்னர் அறுவடை செய்கின்றார். அதுபோன்று நற்செய்திப்
பணியாளர் ஆண்டவருடைய வார்த்தையை மனிதர்களுடைய உள்ளம் என்று நிலத்தில்
விதைக்கின்றார்.
மேலும் மந்தையை மேய்ப்பவர், தன்னுடைய மந்தைக்குத் தேவையானதைச்
செய்துதந்து, அதனை முன்னின்று வழிநடத்தி, நல்லாயனைப் போன்று விளங்குகின்றார்.
அவரைப்போன்று இயேசுவின் சீடரும் ஆயனைப் போன்று இருந்து, மக்களைப்
பேணிவளர்க்க வளர்க்கின்றார் (யோவா 21: 15-17). அப்படியென்றால், உவமையில்
வருகின்ற பணியாளர் எப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவரின்
பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடு
செய்கின்றாரோ, அதுபோன்று நற்செய்தியை அறிவிகின்றவரும் மந்தையை
மேய்க்கிறவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவராகிய ஆண்டவரின்
பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் தன்னுடைய கடமை என்ற உணர்வோடு
செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எந்தவொரு
பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குப் பணிசெய்யவேண்டும் என்கின்றார்
இயேசு
அன்போடு பணிசெய்யவேண்டும்
இயேசு தன்னுடைய சீடர்கள் யாவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை
கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொன்னதை 'கடமைக்காகச் செய்வது'
என்றோ, 'அடிமை மனோபாவத்தோடு செய்வது' என்றால் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
இன்றைக்குப் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடமைக்காக ஏனோதானோ
என்று செய்கின்ற போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது. இது இயேசுவின்
சீடர்களிடமிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டியதொன்றாக இருக்கின்றது.
மேலும் ஒருசிலர் தங்களை அடிமை என கருதிக்கொண்டு பணிசெய்கின்ற
போக்கையும் காணமுடிகின்றது. இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இயேசுவின் சீடர்கள் கடமைக்காகவோ அல்லது அடிமை மனபாவத்தோடோ அல்ல, அன்போடு
அல்லது உளமாரப் பணிசெய்ய வேண்டும்.
புனித பவுல் இதைத்தான், ",கிறிஸ்துவின் பணியாளர்களாய்க் கடவுளின்
திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்", (எபே 6:6) என்று
குறிப்பிடுகின்றார். கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்ற
வேண்டும் என்றால், அதற்கு கடவுளின்மீது/ இயேசுவின்மீது நமக்கு உண்மையான
அன்பு இருக்கவேண்டும். ஏனென்றால் இயேசுவின்மீது உண்மையான அன்பு
கொண்டிருப்பவரால் மட்டுமே, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க (யோவா
14: 15) முடியும்; அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடைய
முடியும் (திபா 40: 8). இயேசுவின் பணியை அல்லது கடவுளின் திருவுளத்தை
கடமைக்காகவும் அடிமை மனோபாவத்தோடும் செய்தால், அங்கு மகிழ்ச்சி இருப்பதற்கு
வாய்ப்பே இல்லை
இயேசுவைப் போன்று பணிசெய்ய வேண்டும்
கடவுளின் பணியை உளமாரச் செய்யவேண்டும் என்பதை இதுவரையில்
பார்த்தோம். அதை வேறுசொற்களில் சொல்லவேண்டும் என்றால், நாம்
செய்யும் பணியை இயேசுவைப் போன்று செய்யவேண்டும் என்று சொல்லலாம்.
இயேசு கடவுள் தன்மையில் விளங்கியபோதும், அதை வலிந்து பற்றிக்
கொண்டிருக்காமல், தம்மையே வெறுமையாக்கி மனிதரானார் (பிலி 2: 6-7)
மட்டுமல்லாமல், தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன்
(மாற் 10: 45) என்று சொல்லி, சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்களையும்
அவ்வாறு இருக்கச் சொல்கின்றார் (யோவா 13: 14). இதுதான் நாம் இயேசுவிடமிருந்து
கற்கவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், இயேசு இறைப்பணியை கடமைக்காகவோ
அல்லது அடிமை மனோபாவத்தோடா செய்யவில்லை. மாறாக அவர் அதை உளமாரச்
செய்தார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும்
நமக்குப் பணிக்கப்பட்ட பணிகளை உளமாரவும் அன்போடும் செய்யவேண்டும்.
அதன்மூலம் இயேசு விரும்பும் நல்ல சீடர்களாக, பணியாளர்களாக மாறவேண்டும்.
சிந்தனை
'மனிதராகப் பிறந்தவர்க்கு எவ்வளவோ நற்பேறுகள் பாக்கியங்கள் உண்டு.
அந்த நற்பேறுகளில் எல்லாம் தலைசிறந்த பேறு பிறருக்குப் பணி
சேவைசெய்வதே' என்பார்கள் பெரியோர். ஆகையால், நாம் இறைவனுக்கும் அவருடைய
மக்களுக்கும் பணிசெய்வதையே மிகப்பெரிய பேறாக நினைத்து வாழ்வோம்.
மேலும் அதை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடோ செய்யாமல் உளமாரவும்
உள்ளார்ந்த அன்போடும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மனிதன் வாழ்வதே நம்பிக்கையால்தான். நிலத்தை உழுது விதைப்பவன் உரிய
காலத்தில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். கடின உழைப்போடு
படிக்கும் மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கையால்
தான். சேர வேண்டிய இலக்கை, இடத்தை நோக்கிச் சேருவோம் என்ற நம்பிக்கையால்தான்
பேருந்துகளிலும், புகை வண்டியிலும் பயணம் தொடர்கிறோம். ஒரு கவிஞர்
கூறியதுபோல, நீ இன்று சுமக்கும் நம்பிக்கை, நாளை நீ கீழே
விழும்போது உன்னை சுமக்கும். நம்பிக்கை வாழ்வின் ஆணி வேராக அமைகிறது.
நம்பிக்கை இழந்தவன் செத்தவனாவான். எனவேதான் இயேசு கூறுகிறார், என்
தந்தையின் மீது நம்பிக்கை வையுங்கள். என் மீதும் நம்பிக்கை வையுங்கள்
(யோவா. 14:1). உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னை நம்புவோர்
என்றும் வாழ்வர்(யோவா. 6:47) என்று.
ஆண்டவரே, எத்துணை காலத்திற்கு நான் துணை வேண்டி கூக்குரலிடுவேன்.
நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? கொள்ளையும், வன்முறையும் என் கண்
முன் நிற்கின்றன என்று புலம்புகின்ற வருக்கு (அபகூக். 2:4) எதிர்பார்த்து
காத்திரு. அது நிறைவேறியே தீரும். நேர்மை உடையவர் நம்பிக்கையால்
வாழ்வடைவர் (முதல் வாசகம்) என்று பதில் தருகிறார் ஆண்டவர்.
இன்றைய நற்செய்தி இன்னும் ஆழமான உணர்வுக்கு நம்மை அழைக்கிறது.
காட்டு அத்திமரத்தை நோக்கி, நீ வேரோடு பெயர்ந்துபோய் கடலில்
வேறூன்றி நின்றால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் (லூக். 17:6)
என்று. இது என்ன நடக்கக் கூடியதா? என்ற கேள்வி நம்மிலும் எழலாம்.
ஆம் நடக்கக் கூடியதுதான். நடக்காததை நமக்கு ஆண்டவர் போதிக்க
மாட்டார். விவிலியத்தில் கூறப்படும் பிறவினத்தாளாகிய கனானேயப்
பெண், பிள்ளைகளுக்கு முதலில் உணவைக் கொடும். ஆனால் அதிலிருந்து
கீழே விழும் சிறு துண்டுகளையாவது நாய்களாகிய நாங்கள் பொறுக்கித்
தின்ன உரிமை தாரும் என்று நம்பிக்கையோடு கூறி இயேசுவையே அசைத்துவிட்டார்
(மத். 15:28).
மராட்டிய நாட்டிலே சிவாஜி என்ற மன்னன் ஆட்சி செய்த காலம், வறுமையால்,
நோயில் உயிருக்காகப் போராடிய தன் தாயைக் காப்பாற்ற விரும்பி எதிரியின்
வாக்குறுதியை நம்பி, அரசனைத் தொலைத்துக் கட்ட 18 வயது இளைஞன் ஒருவன்
அரசனின் படுக்கை அறைக்கு வாளோடு நுழைந்தான். ஆனால் வீரர்களால் பிடிபட்டான்.
இந்தச் செயலுக்காக அரசன் அவனைத் தூக்கிலிடப் பணித்தான். ஆனால் அந்த
இளைஞன், அரசே! நான் செய்யத் துணிந்த குற்றம் பெரியது. உங்கள் தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னை நம்புங்கள். விலங்கு மாட்டாது என்னை
அனுப்பி வையுங்கள். நான் வீடு சென்று அம்மாவிடம் ஆசீர் பெற்றுத்
திரும்புகிறேன். அதன்பின் எனக்குத் தண்டனை கொடுங்கள் என்று
வேண்டினான். ஏனெனில் நான் மானமுள்ள மராட்டியன் என்றான். அரசனும் இறுதியாக
நம்பி. போகவும் அனுமதி கொடுத்தார். குறிப்பிட்டபடி, அம்மாவின் ஆசீர்
பெற்று, அரசன்முன் நின்றான். இதைக் கண்ட அரசன், உன்னைப்போல நம்பிக்கைக்கு
உரிய ஒருவனை, நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. நீயே என் நம்பிக்கைக்குரியவன்
எனப் பரிசு வழங்கி, தன் படையிலும் சேர்த்துக் கொண்டார். ஆம், நாம்
மூவொரு இறைவனில் நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
ஏனெனில் உன் கால்கள் இடறாதபடி பார்த்துக் கொள்வார். உம்மைக்
காக்கும் அவர் உறங்குவதும் இல்லை. கண் அயர்வதும் இல்லை (திபா.
121:3).
ஆபேலை நேர்மையாளராக, நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட, ஆப்ரகாம்
துணிந்து தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிந்ததும் (எபி.
11:4-11) நம்பிக்கையால்தான்.
சிந்தனை
குரங்கு குட்டியானது, தாயை நன்றாகப் பற்றிக் கொள்ளும். பூனையோ தன்
குட்டியை வாயில் கவ்விச் செல்லும். நாம் குரங்கு குட்டிபோல நம்பிக்கையோடு
இறைவனைப் பற்றிக் கொண்டோமானால், இறைவன் பூனையைப்போல நம்மைத்
தூக்கிச் செல்வார்.
இன்றைய நற்செய்தியில். திருத்தூதர்கள் ஆண்டவரிடம், எங்கள்
நம்பிக்கையை மிகுதியாக்கும் (லூக் 17:5) என்று
கேட்கின்றார்கள். நம்பிக்கை என்றால் என்ன? இதோ புனித
பவுலடியார் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி (திப
27:13-26) : புனித பவுலடிகளாரும். அவருடைய நண்பர்களும்
பயணம் செய்த கப்பல் கிரேத்துத் தீவுக்குப் பக்கத்தில்
பேய்க்காற்றில் சிக்கிக்கொண்டது. ஒரு நாள் முழுவதும்
அவர்கள் புயலோடு போராடினார்கள். மறு நாள் கப்பலிலிருந்த
சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள்.
மூன்றாம் நாளும் புயல் ஓயவில்லை. கப்பலின் தளவாடங்களை
அவர்கள் கடலுக்குள் எறிந்தனர். கதிரவனோ, விண்மீன்களோ
அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுளின் தூதர் புனித பவுலடிகளாருக்குத்
தோன்றினார். தூதர் புனித பவுலடிகளாரிடம், அஞ்சாதீர்!
நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்படவேண்டும். உம்மோடுகூடக்
கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் காப்பாற்றப் போகின்றார்
(திப 27:24) என்று கூறினார். விண்ணகத்தூதரின் வார்த்தைகளை
அப்படியே ஏற்றுக்கொண்டு, புனித பவுலடிகாளர் தன் உடன்
பயணிகளைப் பார்த்து, மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம்
நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னவாறே
நடக்கும் (திப 27:25] என்றார். புனித பவுலடிகளார் நம்பியபடியே
கப்பலிலிருந்த இருநூற்று எழுபத்தாறு பேரும் பதினான்கு
நாள்களுக்குப் பிறகு மால்தா தீவில் கரையிறங்கினார்கள்.
இறைவனின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, வாக்களிக்கப்பட்டது
கிடைக்கும் என்ற மன உறுதியோடு காத்திருப்பதற்குப் பெயர்தான்
நம்பிக்கை.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். நம்பிக்கை என்பது
நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி ;
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி
11:1) என்று கூறுகின்றது. நாம் கடவுளிடம் கேட்பது
கிடைக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான்
நம்பிக்கை. நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது, எவற்றையெல்லாம்
கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்.
நீங்கள் கேட்டபடியே நடக்கும் (மாற் 11:24) என்கின்றார்
இயேசு.
ஐந்து வயது சிறுவனும், சிறுமியும்
விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறுவன் சிறுமியைப்
பார்த்து, உன்னிடம் எவ்வளவு காசு இருக்கின்றது? என்றான்.
சிறுமி, ஒரு ரூபாய் என்றாள். சிறுமி சிறுவனைப்
பார்த்து, நீ எவ்வளவு வைத்திருக்கின்றாய்? என்றாள்.
சிறுவன். இரண்டு ரூபாய் என்றான். சிறுமி, அந்த இரண்டு
ரூபாயையும் காட்டு என்றாள். சிறுவன் ஒரு ரூபாய் நாணயத்தை
மட்டும் காட்டினான். சிறுமி, என்ன இரண்டு ரூபாய் என்று
சொல்லிவிட்டு ஒரு ரூபாயைக் காட்டுகின்றாய்? என்றாள்.
அதற்கு அந்தச் சிறுவன், சாயந்திரம் எங்க அப்பா ஆபீஸ்லேயிருந்து
வந்ததும் ஒரு ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்காங்க. அதையும்
சேர்த்தா இரண்டு ரூபாய்தானே! என்றான்.
ஒரு ரூபாய் அந்தச் சிறுவனின் கைக்கு இன்னும் வரவில்லை!
இருந்தாலும் வந்துவிட்டதாக, கிடைத்துவிட்டதாக அவன் நம்பினான்.
என்ன அருமையான நம்பிக்கை வாழ்வு!
நம்பிக்கையால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் எவை?
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (அப
2:4ஆ) என்கின்றது முதல் வாசகம்.
இன்றைய நற்செய்தியில், கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு
இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்திமரத்தை நோக்கி,
நீ வேரோடே பெயர்ந்துபோய் கடலில் வேரூன்றி நில் எனக்
கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் என்கின்றார்
இயேசு. நம்பிக்கை நிறைந்த நல்வாழ்வுக்குள் இன்று நாம்
நுழைவோம். புனித பவுலடிகளார் இரண்டாவது வாசகத்தில்
கூறுவதுபோல கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கைக்கொண்டு
வாழ்வோம்.
என்னை மட்டும் நம்பும்போது இடறி விழுகின்றேன். எழுந்து
நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கின்றேன். என்னுள்
வாழும் உன்னை நம்பி எழுந்து நடப்பேன். இனி இமயம் போன்ற
தடைவரினும் எளிதாய்க் கடப்பேன் எனப் பாடி நம் பயணத்தைத்
தொடர்வோம்.
மேலும் அறிவோம்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி
சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர்
மனக்கவலை மாறாது.
ஓர் ஊரிலே ஒரு கிறிஸ்தவர் கடவுளை மறுத்து அவருக்கு எதிராக
எப்போதும் பேசி நாத்திகக் கொள்கையைப் பரப்பி வந்தார். அவர்
ஒருநாள் காட்டுக்குச் சென்றபோது ஒரு சிங்கம் அவரைத் துரத்திக்கொண்டு
வந்தது. அப்போது அவர் பயந்துகொண்டு. ",இயேசுவே என்னைக்
காப்பாற்றும்", என்று கத்தினார். இயேசு அவரிடம், ",வாழ்நாள்
முழுவதும் கடவுளை மறுத்த உங்களைச் சாகும்போது எப்படிக்
கிறிஸ்தவராக மாற்றுவது?", என்று கேட்டார். அதற்கு அந்த
நாத்திகர், ",என்னைக் கிறிஸ்தவராக மாற்ற முடியாது என்றால்,
இச்சிங்கத்தையாவது கிறிஸ்தவராக மாற்றும். அப்போது என்னைக்
கொல்லாமல் விட்டுவிடும் என்றார். இயேசு அச்சிங்கத்தைக்
கிறிஸ்தவராக மாற்றினார். உடனே அது தனது இரண்டு கைகளையும்
குவித்து, ",இயேசுவே, நான் உண்ணப்போகும் இவ்வுணவை ஆசீர்வதியும்!",
என்று செபித்து, அந்த ஆளைக் கொன்று சாப்பிட்டுவிட்டுத் தனக்குக்
கிடைத்த உணவுக்காக நன்றி செலுத்தியதாம்!
வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த நாத்திகர் சாகும்போது
கடவுள் பக்தராக மாறுவது அரிது. ",இரண்டு கண்ணும் கெட்டபின்
சூரிய நமஸ்காரம் எதற்கு?", இருப்பினும், ஒரு சிலர் கடவுளை
மறுப்பதற்குக் காரணம்: மக்கள், குறிப்பாக ஏழை எளியவர்கள்
படும். துன்பம்: அத்துன்பத்தைக் கண்டும் கடவுள் அதைத்
தீர்க்காமல் இருப்பது.
இன்றைய முதல் வாசகத்தில் அபக்கூக் என்ற இறைவாக்கினர்.
தாமும் தம்முடைய இனத்தவரும் படும் துன்பங்கள் நடுவில் இறைவன்
காத்துவரும் மௌனத்தை அவருக்குச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு
புலம்புகிறார்: ",ஆண்டவரே எத்துணை காலத்திற்கு நான்
துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும்
செவிசாய்க்காதிருப்பீர்?... கொள்ளையும் வன்முறையும் என் கண்முன்
நிற்கின்றன வழக்கும் வாதும் எழும்புகின்றன", (அப் 1:2-3).
கடவுள் அபக்கூக்குக் கூறும் பதில்: *(கடவுளுடைய தீர்ப்பு)
காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக்
காத்திரு. அது நிறைவேறியே தீரும்... நேர்மையுடையவர் தம் நம்பிக்கையினால்
வாழ்வடைவர்", (அப் 2:2-4). அதாவது, நீதிமான் விசுவாசத்தால்
வாழ்கிறான்.
",எதிர்பார்த்து காத்திரு.", எனவே நமக்குத் தேவையானது நம்பிக்கையும்
பொறுமையும் ஆகும். முதலாவது, நமக்கு நம்பிக்கை தேவை. இன்றைய
நற்செய்தியிலே கிறிஸ்து கூறுவது கடுகளவு நம்பிக்கை நம்மிடம்
இருந்தால் நம்மால் எல்லாம் செய்ய முடியும் (லூக் 17:6). நம்பிக்கை,
மரங்களை வேரோடு பிடுங்கவும் மலைகளைப் பெயர்க்கவும் வல்லது;
அதாவது, நம்பிக்கை உடையோர் எத்தகைய இடையூறுகளையும்
மேற்கொள்ள முடியும்.
'கடுகளவு நம்பிக்கை' என்று கிறிஸ்து குறிப்பிடுவது நம்பிக்கையின்
தரத்தைப் பற்றியது. ",கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாது.",நாம் எவ்வளவு நம்புகிறோம் என்பதைவிட எவ்வாறு நம்புகிறோம்
என்பதே முக்கியமாகும். நமது நம்பிக்கை ஆழமானதாக, அசைக்க
முடியாததாக இருத்தல் வேண்டும்.
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: ",அவரே நம் கடவுள்: நாமே
அவரது மேய்ச்சலின் மக்கள்: நாம் அவர் பேணிக்காக்கும்
ஆடுகள்", (திப 95:7). ஆயன் தன் மந்தையைக் காப்பதுபோல்
ஆண்டவர் நம்மைக் காக்கின்றார். எனவே நாம் ஒருபோதும் கடவுள்
நம்பிக்கையில் தளர்ச்சியடையக் கூடாது. நமக்குக் கடவுள்
நம்பிக்கையுடன் பொறுமையும் வேண்டும். நாம் நினைப்பதெல்லாம்
உடனடியாகக் கைகூட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. ",நடவுக்கு ஒருகாலம்;
அறுவடைக்கு ஒருகாலம்", (சஉ 3:2). புனித யாக்கோபு
கூறுகிறார்: ",பயிரிடுபவர் விளைச்சலை எதிர்பார்த்துப்
பொறுமையோடு இருப்பதுபோல, நாமும் ஆண்டவரின் வருகைவரை
பொறுமையோடு இருக்க வேண்டும்", (யாக் 5:7-8). இறுதிவரை மன
உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:13) என்று
ஆண்டவரும் நமக்கு அறிவுறுத்துகிறார்.
கொக்கு ஏன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு நிற்கிறது? இரண்டு
காலையும் தூக்கினால் அது கீழே விழுந்துவிடும்! (கடி ஜோக்).
கொக்கு ஏன் ஒத்தக்காலில் நிற்கிறது? கொத்துவதற்கான பெரிய
மீன் வரும்வரை அது பொறுமையோடு காத்திருக்கிறது.
",ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம்
கொக்கு.", இதே கருத்தை வள்ளுவர் பின்வரும் குறளில்
எடுத்துரைக்கின்றார்.
இறுதியாக. நாம் என்ன செய்தாலும் பிரதிபலன். அதாவது கைமாறு
கருதி செய்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து
கூறுகிறார்; ",உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும்
செய்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள்: எங்கள்
கடமையைத்தான் செய்தோம் எனச் சொல்லுங்கள்", (லூக் 17:10).
பகவத்கீதை கூறும் முக்கிய செய்தி நிஷ்காம கர்மா, அதாவது,
",கடமையைச் செய், கைமாறு எதிர்பார்க்காதே.",
பெற்றோர்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பிள்ளைகளை
வளர்க்கின்றனர். பிள்ளைகள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு
எதிராகச் செயல்படுகின்றனர். ஓர் அம்மா தன் மகனிடம், ",ராஜா!
உனக்கு நான் மூக்கும் முழியுமாக ஒரு பெண்ணைப்
பார்த்திருக்கின்றேன்", என்று சொன்னதற்கு அவன் அம்மாவிடம்,
",நான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்து அவள் வாயும்
வயிறுமாறு இருக்கின்றாள்", என்றான். இந்நிலையில்
பெற்றோர்கள் சொல்ல வேண்டியது: ",நாங்கள் எங்கள்
பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தோம். அவர்கள்
நன்றியுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; நல்லா
இருக்கட்டும்.",
மழை எத்தகைய கைமாறும் எதிர்பாராது மண்மீது பொழிந்து
உலகத்தாரை வாழ வைக்கின்றது. மழைபோன்றவர்கள் தாங்கள்
செய்யும் உதவிகளுக்குக் கைமாறு எதிர்பார்க்க மாட்டார்கள்.
யூதர்களைத் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறது ஹிட்லரின்
போர்ப்படை. தங்கள் அடையாளத்தை அழித்துக் கொண்டு அவர்கள்
நடு நாடாக ஓடுகிறார்கள். இடிந்துபோன வீட்டுச் சுவர்
ஒன்றில் இளைஞன் ஒருவன் கரித்துண்டால் கிறுக்கிக்
கொண்டிருக்கிறான் -
",எனக்குத் தெரியும்:
இங்கே இருள் என்றாலும் எங்கோ சூரியன் இருக்கிறான் எனக்குப்
பிடிக்கும்:
இதயத்தில் இருந்தாலும் நீ உதடு திறந்து உச்சரிக்காத உன்
காதல்
நான் நம்புகிறேன்:
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் உண்டு",
இந்த இறைநம்பிக்கைக்குத்தான் எவ்வளவு ஆற்றல்!
இறைநம்பிக்கை என்பது இறைவனின் வார்த்தையிலும்
வாக்குறுதியிலும் இறைவல்லமையை உணர்ந்து ஏற்று அவரிடம்
ஈரணடைவதே. தயக்கம் எதுவுமின்றி நம்மை முழுமையாக அவரது
கரத்தில் ஒப்படைப்பதே. நாம் செயல்படுவதற்குப் பதிலாக,
நம்மில் இறைவனைச் செயல்பட வைப்பது. இந்த அனுபவத்தில்
இறைவனின் உயிர்த்துடிப்பை உணர்பவர்கள் மட்டுமே
இறைநம்பிக்கையில் வளர்கிறார்கள்.
அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் தீ. எதிரே என்ன இருக்கிறது
என்று கூடத் தெரியாத அளவுக்கு ஏராளமான புகை. மேலே மாட்டிக்
கொண்ட சிறுவன் 'அப்பா அப்பா' என்று கதறுகிறான். 'மகனே
பயப்படாதே' என்கிறது தந்தையின் குரல். கீழே குனிந்து
பார்க்கிறான். புகை மண்டலத்தில் எதுவும் தெரியவில்லை.
",மகனே கீழே குதி. நான் பிடித்துக் கொள்கிறேன்", என்று தந்தை
குரல் கொடுக்க ",அப்பா நீங்கள் நிற்கும் இடமே தெரியவில்லை.
எப்படிக் குதிப்பது?", என்கிறான் சிறுவன். ",உன்னால் பார்க்க
முடியாவிட்டால் பரவாயில்லை. என்னால் உன்னை நன்றாகப்
பார்க்க முடிகிறது. நீ நிற்கிற இடத்திலிருந்து கீழே குதி.
நான் பிடித்துக் கொள்கிறேன்", என்கிறார் தந்தை. பையன்
கண்களை மூடிக்கொண்டு குதித்தான். தந்தை அவனைப் பிடித்துக்
காப்பாற்றி அணைத்துக் கொண்டார்.
இவ்வுலகம் புகை போல இறைவனை நாம் பார்க்க முடியாமல்
மறைத்துக் கொண்டாலும், அவர் நம்மைப்
பார்க்கிறார்.விழவிடமாட்டார் என்று நினைத்து இருளில்
குதிப்பதுதான் நம்பிக்கை வாழ்க்கை. எப்போதெல்லாம் இருள்
சூழ்ந்து நம் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்கிறதோ
அப்போதெல்லாம் கடவுள் என்னோடு இருக்கிறார். அவரது அன்பும்
வல்லமையும் என்னைக் காக்கும் என்று உணர முடிந்தால் அதுதான்
உண்மையான இறைநம்பிக்கை.
தூய அவிலா தெரசா மன்றாடும் போதெல்லாம் தான்
துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆளாவதாக முறையிடுவாராம்.
தன் நண்பர்களை நடத்துவதே இப்படித்தான் என்று இயேசு பதில்
அளிக்க ",இவ்வுலகில் உமக்கு ஏன் வெகுசில நண்பர்களே
இருக்கிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது",
என்றிருக்கிறார் புனிதை.
விவிலியத்தில் நம்மை வியக்க வைப்பது இறையடியார்கள்
எப்படியெல்லாம் இறைவனிடம் பொறுமை இழந்திருக்கிறார்கள்,
கோபம் கொண்டிருக்கிறார்கள், புகார் செய்திருக்கிறார்கள்
என்பதுதான். எடுத்துக்காட்டாக யோபு 3:3இல் ",ஒழிக நான்
பிறந்த நாளே", என்று தன்னையே சபித்துக் கொள்ளும் அளவுக்கு
கடவுளைப் பார்த்துப் பொறுமையிழந்திருக்கிறார். யோனா 4:1இல்
கடவுள் தம் மனதை மாற்றிக் கொண்டது சிறிதும் படிக்காமல்
கடும் சினம் கொண்டு கடவுளிடம் முறையிடுகிறார். அநீதி
குறித்து இறைவாக்கினர் அபக்கூக்கின் முறையீடுதானே இன்றைய
முதல் வாசகம். அத்தனைக்கும் கடவுள் தரும் அழுத்தமான பதில்:
",நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்", (அபக்.
2:4). எனவேதான் ஒரு நம்பிக்கையாளனால் சொல்லமுடியும்.
",எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய
எனக்கு ஆற்றல் உண்டு", (பிலிப். 4:13). ",உலகை வெல்லுவது நம்
நம்பிக்கையே' (1 யோ. 5:4).
",(அந்த) எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்", (லூக். 17:5)
ன வேண்டுகின்றனர் இயேசுவின் சீடர்கள். நம்பிக்கை என்ன
செடியா கொடியா, ஆடா மாடா வளர்வதற்கு. பாதுகாத்தாலே போதும்
என்கிறீர்களா? அது வளர வேண்டும், வலுப்பெற வேண்டும் வளப்பட
வேண்டும்!
அந்த நம்பிக்கையின் ஆற்றல் பற்றி இயேசு சொல்வது: ",கடுகளவு
நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு
அத்திமரத்தை நோக்கி 'நீ வேரோடே பெயர்ந்து போய் கடலில்
வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக்
கீழ்படியும்", (லூக். 17:6, மத். 17:20).
நாம் கேட்பது கிடைக்கும் நினைப்பது நடக்கும் என்பதுகூட
நம்பிக்கையின் முதிராத நிலையே, குழந்தைப்பருவமே. 'என் கடன்
பணி செய்து கிடப்பதே' என்ற உணர்வோடு கைமாறு நோக்காது
கடமையைச் செய்வதே நம்பிக்கையின் முதிர்ச்சி.
ஆழமான, ஆரோக்கியமான நம்பிக்கையில் உருவான உறவில்
எதிர்பார்ப்பு இருக்காது. அதனால்தான் ",நீங்களும்
உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின் நாங்கள்
பயனற்ற பணியாளர்கள். எங்கள் கடமையைத்தான் செய்தோம் எனச்
சொல்லுங்கள்", (லூக். 17:10). என்கிறார் இயேசு.
அலுவலகம் ஒன்றில் ஆண்டுதோறும் 'சிறந்த பணியாளர்கள்' எனச்
சிலரைத் தெரிவு செய்து பரிசும் விருதும் கொடுப்பது
வழக்கம். ஒரு குறிப்பிட்ட அலுவலர் சிறந்த உழைப்பாளி. அவரது
கடின உழைப்பால் அந்த நிறுவனத்திற்கும் நல்ல பெயர்.
அனைவருடைய நட்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
எனினும் எந்த ஆண்டிலும் அவர் பெயர்
பரிந்துரைக்கப்பட்டதில்லை. அவரோடிருந்த பலருக்கும் இது
வேதனையை அளித்தது. உடன் பணியாளர்கள் சிலர் இந்த உணர்வை
அவரிடம் வெளிப்படுத்த, அவர் சொன்னார்: ",நான் ஏன் வருந்த
வேண்டும்? ஏமாற்றமடைய வேண்டும்? நான் செய்யும் இந்த வேலையே
கடவுள் எனக்கு அளித்த கொடையாய் நினைக்கிறேன். அதற்கு ஏற்ப
உரிய சம்பளத்தையும் பெற்று வருகிறேன். நான் ஏன்
பரிசுக்காகவும் பாராட்டுக்காகவும் ஏங்க வேண்டும்?", என்றார்
அமைதியாக.
பயனற்ற ஊழியர் என்றால் தேவையற்றவர்கள், ஒன்றுக்கும்
உதவாதவர்கள், செயல்திறன் குன்றியவர்கள் என்று பொருள்படாது.
மாறாகக் கடவுள் நமக்குச் செய்யப் பணித்த யாவற்றையும்
செய்தபின் அதற்குகப் பதிலாகக் கைமாறு பெற நமக்குத் தகுதியோ
உரிமையோ இல்லை என்று உணர்வதே இதன் பொருளாகும்.
*கடமையைச் செய் - பலனை எதிர்பார்க்காதே' என்பதே நம் பாரத
மண்ணின் ஆன்மீகம். இந்த ஆன்மீக சாரத்தையும் இறை இயேசுவின்
வார்த்தையையும் கைக்கொண்டு, நாம் இறைவனின் பணியாளர்கள்,
பணிபுரிவதே நம் கடமை, நாம் செய்வதெல்லாம் என்ற புகழுக்காக
அல்ல, பாராட்டுக்காக அல்ல, நன்றியை எதிர்பார்த்தல்ல
உணர்வுடன் அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும்
நாடி வாழ்வோம். மற்ற அனைத்தும் சேர்த்துக் கொடுக்கப்படும்
(மத். 6:33).
திருத்தூதர் பவுல் கூடத் தனக்கு வகுத்துத் தரப்பட்ட பந்தய
ஓட்டத்தில் பயனைக் கருதாமல் ஓடினார். முடிவில் இறைவன்
தரும் ",நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே' பெரிதென
நினைத்தாரே தவிர வேறு எதை எதிர்பார்த்தார்?(II திமோ.
4:7-8).
இறையாட்சிப் பணியாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
பண்ணையாளர்களாக அல்ல. பணி வாழ்வுக்கு அடிப்படையாக
இருப்பதும் அணி செய்வதும் முழு அர்ப்பணமும் கடின
உழைப்புமே. இறுதி மூச்சு இருக்கும் வரை அந்த அழைப்பையே
வரமாக, பெரும் பேறாக உணர்ந்து கைமாறு கருதாமல்
கடமையாற்றுவோம். பணி வாழ்வில் இன்பம் காண்போம்.).
",ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன் - விண்ணக
தள்ளிவிடுவீர் வாழ்வு கிடைக்கும் என்ற எதிர்நோக்கினால்
அன்று. எரிநரகில் என்ற அச்சத்தினாலும் அன்று. நீர்
அன்புக்குரியவர் என்ற ஒரே காரணத்திற்காக நான் உம்மை அன்பு
செய்கிறேன்", இப்படித்தான் புனித சவேரியார் செபிப்பாராம்.
அவரது இந்த மனநிலையே உண்மையான கிறிஸ்தவனின் சரியான மன
நிலை!).
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
வன்முறையற்ற வாழ்வு
10 ஆண்டுக்கு முன்பு முன் CNS என்ற கத்தோலிக்கச் செய்தி
நிறுவனம் சிரியாவைப்பற்றி வெளியிட்ட ஒரு செய்தி என்னை
மிகவும் பாதித்தது. குறிப்பாக, அச்செய்தியின் ஆரம்ப
வரிகள்...
இளவயது தந்தை ஒருவரும் அவரது சிறு வயது மகனும் இரவில்
நடந்து சென்றபோது, திடீரென அச்சிறுவன் தந்தையைப் பார்த்து,
",அப்பா, அவர்கள் மீண்டும் குண்டுபோட வருகிறார்களா?", என்று
கேட்டான். தந்தைக்கு ஒன்றும் விளங்காமல், வானத்தைப்
பார்த்தார். அங்கு வானத்தில் மின்னிய விண்மீன்களை
அக்குழந்தை பார்த்து, அந்தக் கேள்வியைக் கேட்டான் என்பதைப்
புரிந்துகொண்டார். அக்கேள்வி தன் மனதில் ஆழமான காயங்களை
உருவாக்கின என்றும், விண்மீன்களைக் கண்டு தன் மகன்
பயப்படத் தேவையில்லை என்பதை எப்படி தன் மகனுக்குப்
புரியவைப்பது என அறியாமல் தான் கலங்கி நின்றதாகவும் தந்தை
இச்செய்தியின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவிலிருந்து துருக்கிக்குத் தப்பித்து வந்துள்ள Ali
Ahmad என்ற அந்த இளவயது தந்தை ஒரு மருத்துவப் பணியாளர்.
அவரது மகன், விவரம் தெரிந்த நாள்முதல், வானில் ஒளியைக்
கண்டபோதெல்லாம் பயந்து நடுங்கி வாழ்பவன் என்பதை, CNS என்ற
நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும் Ahmad, சிரியா
மக்களுக்கு தற்போது மிக அதிகத் தேவையானது, மன நல
மருத்துவர்களே என்று கூறுகிறார்.
பெரியவர்களை விட குழந்தைகளுக்கு இந்தத் தேவை மிக அதிகம்
உள்ளது என்று சிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றும் Ole
Nasser என்பவர் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Ali Ahmadன் மகன் மட்டுமல்ல, உலகெங்கும் பல கோடிக்
குழந்தைகள் பிறந்த நாள் முதல் வன்முறைகளையே கண்டு
வளர்வதால், இவ்வுலகம் எவ்வகையில் மாறப்போகிறதோ என்று நாம்
கவலைப்படவேண்டிய நேரம் இது.
வன்முறையைப் பற்றி இன்று நாம் சிந்திப்பதற்கு இரு முக்கிய
காரணங்கள் உண்டு. முதல் காரணம்... அக்டோபர் 2. காந்தி
ஜெயந்தி என்று கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில், மகாத்மா
காந்தி பிறந்தார். இதே நல்ல நாளில், மற்றொரு கண்ணியமான
அரசியல் தலைவர் லால் பகதூர் சாஸ்திரியும் பிறந்துள்ளார்.
இதே அக்டோபர் 2ம் தேதி, கர்மவீரர் காமராஜ்
இவ்வுலகிலிருந்து விடைபெற்றார். இம்மூன்று தலைவர்களை
நினைத்துப் பார்க்கும்போது, இவர்கள் பிறந்த இந்திய மண்ணில்
நானும் பிறந்தேனே என்று பெருமைப்படுகிறேன். அரசியல் என்ற
சொல்லுக்கே ஒரு புனிதமான அர்த்தம் தந்தவர்கள் இவர்கள்.
ஆனால், இன்று அரசியல் என்றதும், அராஜகம், அடாவடித்தனம்,
வன்முறை இவையே இச்சொல்லுக்கு இலக்கணமாகி வருவது, வேதனையைத்
தருகிறது.
1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தபோது,
அகிம்சையும் அவருடன் இணைந்து இரட்டைப் பிறவியாகப் பிறந்ததோ
என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. காந்தி என்றதும்
உலகம் முழுவதும் அகிம்சையும் அதே மூச்சில் பேசப்படுகிறது.
எனவே, 2007ம் ஆண்டு ஐ.நா.பொது அவை அக்டோபர் 2ம் தேதியை
அகில உலக வன்முறையற்ற நாள் என்று அறிவித்துள்ளது. இந்த
வன்முறையற்ற உலக நாளை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக
உருவாக்க இந்தியத் தலைவர்கள் அரும்பாடு பட்டனர் என்று
அறிகிறோம். வன்முறையற்ற உலக நாளை உருவாக்கிவிட்டு, அதனை
இந்திய மண்ணில் நிஜமாக்க முடியாமல் நாம் தவிக்கிறோம்.
வன்முறையைப் பற்றி இன்று நாம் எண்ணிப்பார்க்க வன்முறையற்ற
உலக நாளான அக்டோபர் 2 முதல் காரணம். வன்முறையைப் பற்றி
இன்று எண்ணிப்பார்க்க மற்றொரு காரணம் நமக்கு இன்று
தரப்பட்டுள்ள ஞாயிறு வாசகங்கள். குறிப்பாக, இறைவாக்கினர்
அபக்கூக்கு கூறும் வார்த்தைகள்...
உலக வரலாற்றின் பெரும்பாலான பக்கங்கள் வன்முறையால்
காயமுற்ற பக்கங்களாகவே உள்ளன. மனித வரலாற்றில்,
வன்முறைகளுக்குப் பல வழிகளில் பதில் சொல்லப்பட்டுள்ளன.
இன்றும் பதில்கள் சொல்லி வருகிறோம். வன்முறைகளுக்குப்
பதில் சொல்லும் மூன்று வழிகளைச் சிறிது ஆழமாகச்
சிந்திப்போம். வன்முறைகளுக்கு வன்முறைகளையே பதிலாகச்
சொல்வது முதல் வழி. கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற
இந்த வழியை நியாயப்படுத்த, 'முள்ளை முள்ளால்தான் எடுக்க
வேண்டும்' என்று சமாதானமும் சொல்லிக் கொள்ளலாம்.
வன்முறைகளுக்கு வன்முறைகளால் பதில் சொல்வது முதல் வழி.
கண்ணுக்குக் கண் என்று இவ்வுலகம் வாழ்ந்தால் அனைவருமே
விழியிழந்து அலையவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையை
விடுத்தவர், நமது அண்ணல் காந்தியடிகள்.
தாங்கமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட வன்முறைகளுக்கு மனித
நீதி மன்றங்களில் நீதி கிடைக்காது என்று கடவுளிடம்
முறையிடுவது, வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் இரண்டாவது
வழி.... அபக்கூக்கு என்ற இறைவாக்கினர் எழுப்பும்
முறையீட்டை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் முதல் வாசகம்
நமக்குச் சொல்கிறது: இறைவாக்கினர் அபக்கூக்கு 1 : 2-3
ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக்
கூக்குரலிடுவேன்: நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும்
எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம்
அழுது புலம்பவேன்: நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர்
என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக்
காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன்
நிற்கின்றன: வழக்கும் வாதும் எழும்புகின்றன.
ஒவ்வொரு நாளும் நமது பத்திரிக்கைகளைப் பிரிக்கும்போது,
அல்லது தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்க்கும்போது
இறைவாக்கினரின் வேதனை வார்த்தைகள் தாமே நமது மனதிலும்
ஒலிக்கின்றன.
காந்தி பிறந்த இந்தியாவில், சில ஆண்டுகளுக்கு முன், அவரது
பிறந்த நாளுக்கு அடுத்தநாள், அக்டோபர் 3ம் தேதி, வன்முறை
ஏதும் அறியாத 7 கிறிஸ்தவர்களுக்கு ஒடிஸ்ஸா மாநிலத்தின்
நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை விதித்தது. 2008ம் ஆண்டு
ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், Laxmanananda
Saraswati என்ற இந்துமதக் குரு ஒருவர் கொலை
செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழ்ந்த
கிறிஸ்தவர்கள், இந்து அடிப்படைவாதத்தினரின் கட்டுக்கடங்காத
வன்முறைகளுக்குப் பலியாயினர். இந்துமதக் குருவைக் கொன்றது
தாங்களே என்று மாவோயிஸ்ட் குழு பொறுப்பேற்றுள்ள போதிலும்,
7 அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது இந்தக் கொலைப்பழியைச்
சுமத்தி, நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியில்
நிகழ்ந்த வன்முறைகள், குஜராத்தில் நடந்த வன்முறைகள்,
மும்பையில் நடந்த வன்முறைகள் என்று நமது நீதி மன்றங்களில்
நிரந்தரமாய் குடியேறிவிட்ட வன்முறை வழக்குகள்,
வன்முறைக்கும் நீதிக்கும் புது இலக்கணங்கள் சொல்லி
வருகின்றன. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னரும்
தொடரும் வன்முறைகள், அண்மையில் தமிழ்நாடு, கர்நாடகா
மாநிலங்களில் எழுந்த வன்முறைகள்... இப்படி வன்முறையிலேயே
ஊறிப் போயுள்ளது உலகம். மனித வரலாற்றைப் பல்வேறு யுகங்களாக
நாம் பிரித்துள்ளோம். நாம் வாழும் இக்காலத்தை வன்முறையின்
யுகம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நம்பிக்கையைக்
குழிதோண்டி புதைக்கும் வன்முறைகளுக்கு விடை தேடிய
இறைவாக்கினருக்கு இறைவன் தந்த பதில் இது:
இறைவாக்கினர் அபக்கூக்கு 2 : 2-4
ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: குறித்த காலத்தில்
நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது:
முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும்
பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால்,
எதிர்பார்த்துக் காத்திரு: அது நிறைவேறியே தீரும்: காலம்
தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய்
இருப்பர்: நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இறைவனிடம் முறையிட்டு, அவரது நீதிக்காகக் காத்திருப்பது;
காலம் தாழ்த்தினாலும் இந்த நீதி கட்டாயம் வரும் என்று
நம்பிக்கை கொள்வது வன்முறைக்கு நாம் பதில் தரும் இரண்டாவது
வழி. இப்படிப்பட்ட நம்பிக்கையின் விளைவுகளை இயேசு இன்றைய
நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்:
லூக்கா நற்செய்தி 17 : 5-10
அக்காலத்தில், திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ",எங்கள்
நம்பிக்கையை மிகுதியாக்கும்", என்று கேட்டார்கள். அதற்கு
ஆண்டவர் கூறியது: ",கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்
நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே
பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது
உங்களுக்குக் கீழ்ப்படியும்.",
வன்முறைகளுக்குப் பதில் சொல்லும் மூன்றாவது வழி,
திருவள்ளுவர் உட்பட, பல உயர்ந்த உள்ளங்கள் சொன்ன வழி. தன்
வார்த்தைகளாலும், வாழ்வாலும் இயேசு காட்டிய வழி: ",இன்னா
செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்",. எல்
சால்வதோர் நாட்டில், நீதிக்காக குரல் கொடுத்து, அதன்
விளைவாக, 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி திருப்பலி
நேரத்தில் கொல்லப்பட்ட பேராயர் ஆஸ்கர் ரொமேரோவின்
கூற்றுக்கள் அடங்கிய ஒரு புத்தகம் 2004ம் ஆண்டு
வெளியிடப்பட்டது. புத்தகத்தின் தலைப்பு: 'அன்பின்
வன்முறை.' (THE VIOLENCE OF LOVE Oscar Romero. Compiled
and translated by James R.Brockman,S.J.) இந்நூலில்
காணப்படும் பேராயர் ரொமேரோவின் கூற்றுக்களில் ஒன்று இது:
நான் பறைசாற்றும் வன்முறை கத்தியைச் சார்ந்ததல்ல. வெறுப்பை
வளர்ப்பதல்ல. அன்பைச் சார்ந்தது. இந்த வன்முறையால்
அழிவுக்குப் பயன்படும் ஆயுதங்கள், ஆக்கப்பூர்வமான
பணிகளுக்குப் பயன்படும் கருவிகளாக மாற்றப்படும். (THE
VIOLENCE we preach is not the violence of the sword, the
violence of hatred. It is the violence of love, of
brotherhood, the violence that wills to beat weapons
into sickles for work. Reference to Isaiah 2:4 - -
Oscar Romero, November 27, 1977)
அகிம்சை என்ற அற்புத வழியை இவ்வுலகிற்குச் சொல்லித்தந்த
காந்தி அடிகளின் கூற்றுக்களில் பல வன்முறைக்கு அன்பை,
பொறுமையை பதிலாகத் தரக்கூடிய மூன்றாம் வழியை
வலியுறுத்துகின்றன.
",வன்முறையற்ற அகிம்சை என்பது நாம் உடுத்தும் சட்டையைப் போல
வேண்டும்போது பயன் படுத்தும் கொள்கை அன்று. நம் வாழ்வின்
அடித்தளமாய் இருப்பது அது.", (Nonviolence is not a garment
to be put on and off at will. Its seat is in the heart,
and it must be an inseparable part of our being.)
",தற்காலிகமாய் நன்மை விளைவிப்பதைப் போல் தெரிந்தாலும்,
வன்முறை நிரந்தரமாய் தீமையை மட்டுமே விளைவிக்கும். எனவே,
அதை நான் வன்மையாய் எதிர்க்கிறேன்.", (I object to violence
because when it appears to do good, the good is only
temporary; the evil it does is permanent.)
வன்முறைகளைப் பற்றி நினைக்கும்போது, அரசியல் மற்றும் பொது
வாழ்வின் வன்முறைகள் மட்டுமே நம் கண்களில் அதிகம்
தெரிகின்றன. நமது செய்திகளிலும் இவை அதிகம்
பேசப்படுகின்றன. ஆனால், நமது இல்லங்களில் ஒவ்வொரு நாளும்
நடக்கும் வன்முறைகள் மிகவும் கொடுமையானவை. நமது
இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள் மீது காட்டப்படும்
வன்முறைகள், குழந்தைகள் மீது காட்டப்படும் வன்முறைகள்,
பெண்கள் மீது காட்டப்படும் வன்முறைகள், வயது முதிர்ந்தோர்
மீது காட்டப்படும் வன்முறைகள்... இந்த வன்முறைகள் வெகு
ஆழமானவை. இவை பெரும்பாலும் நான்கு சுவர்களுக்கு மத்தியில்
மெளனமாக சகித்துக் கொள்ளப்படும் வன்முறைகள். இவை
செய்திகளாக வெளிவராததால், ஒவ்வொரு நாளும் அதிகமாகி
வருகின்றன.
வன்முறையற்ற அகிம்சை வழிகள் இறுதியில் வெல்லும் என்ற
நம்பிக்கையை உருவாக்கிய காந்தியடிகளின் பிறந்த நாளைத்
தொடர்ந்து, ",அமைதியின் தூதனாய் என்னை மாற்றும்", என்ற
உயர்ந்ததொரு செபத்தை இவ்வுலகிற்குத் தந்த அசிசி நகர் புனித
பிரான்சிஸ் அவர்களின் திருநாள் அக்டோபர் 4ம் தேதி
சிறப்பிக்கப்படுகிறது. அர்த்தமுள்ள இவ்விரு நாட்களையும்
சிறப்பிக்கும் நாம், வன்முறையின் பல வடிவங்களுக்கு
மத்தியில் நம்பிக்கையைக் கைவிடாமல், நன்மையை, உண்மையைப்
பின்பற்ற இறையருளை வேண்டுவோம். இந்த நம்பிக்கை நம்மிடம்
கடுகளவே இருந்தாலும் போதும்... மலைகளையும் பெயர்ந்துபோகச்
செய்யமுடியும். வெறுப்பு எனும் கோட்டையை தகர்த்துவிட
முடியும். அன்பு அனைத்தையும் வெல்லும். தொடர்ந்து
நம்புவோம். வன்முறைக்கு அன்பை பதிலாக வழங்கி, வாழ்ந்து
காட்டுவோம்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (அப. 1:2-3, 2:2-4)
இன்றையப் பகுதியானது இறைவாக்கினர் அபகூக்கின்
குற்றச்சாட்டுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை அபகூக் கடவுளை நோக்கி எழுப்புகிறார்.
காரணம், இவரது காலத்தில்தான் எருசலேம் நகரம் மிகவும்
மோசமான சூழ்நிலையைச் சந்திக்க நேர்ந்தது. வலிமை மிகுந்தப்
பாபிலோனிய அரசு யூதாவின் நகரத்தை ஒன்றன்பின் ஒன்றாக
அழித்ததோடு அல்லாமல் எருசலேம் நகரத்தையும் தகர்த்தெறிய
ஆணவம் கொண்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அபகூக் ",ஆண்டவரே
நாங்கள் பாவம் செய்தோம் என்பதை ஏற்கிறோம், ஆனால் நீர்
முன்னோருக்குச் சொன்ன கட்டளையை மறந்து போய்விடுவீரோ,
எங்கள் செபத்தை கேளாமல் இருப்பீரோ", என்ற குற்றத்தை
முறையிடுகிறார். இதற்கு ஆண்டவர் ",குற்றம் வெகுவிரைவில்
நிறைவு செய்யப்பட்டு நீங்கள் வாழ்வடைவீர்கள் அதற்குறியக்
காலம் வரும்வரை நீங்கள் துன்பத்தை ஏற்றுக் கொண்டு வாழ
வேண்டும்", என்று பதில் கொடுக்கின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ. 1:6-9, 12-14)
தூய பவுல் திமேத்தேயுவை எபேசு நகர திருச்சபைக்குத் தலைவராக
ஏற்படுத்துகிறார். அப்போது எபேசு நகர கிறிஸ்தவர்- களிடையே
பலர் பலவிதமான தப்பறைக் கொள்கை-களைப் பரப்பி வந்தனர். எனவே
நகருக்கு ஆயராக நியமிக்கப்பட்டு இருந்தத் திமேத்தேயுவைத்
திடப்படுத்தும் விதமாகப் தூய பவுல் உரோமைச் சிறையிலிருந்து
இரண்டாவது முறையாகக் கடிதம் எழுதுகிறார். அந்தக்கடிதத்தில்
திருமுழுக்கின் வழியாகவும், குருவாக, ஆயராகத் திருநிலைப்
படுத்தப்பட்டதின் வழியாகவும் நீர் பெற்று கொண்ட நம்பிக்கை,
ஆவிக்குரிய வாழ்வு உம்மைத் திடப்படுத்துவதாக. கடவுள் மேல்
கொள்ளும் நம்பிக்கை நம்முடைய சொந்த முயற்சிகளால் மட்டும்
கிடைப்பது அல்ல. மாறாகக் கடவுளின் திருவுளமே என்று
திமோத்தியுவை தூய பவுல் அவரது பணிகளை எபேசு நகரத்தில்
தொடர்ந்து செய்திட அவரை நம்பிக்கையில் உற்சாகப்படுத்தும்
விதமாக இந்தப் பகுதியை எழுதுகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 17:5-10)
இயேசுவின் தொடர் போதனையில் இன்றைய நற்செய்தி- யானது ஒரு
பகுதியாகும். இந்தப் போதனையானது இயேசுவின் பாடுகளுக்கு
முன், எருசலேம் செல்லும் வழியில் நடந்ததாகும். இதற்கு முன்
இரண்டு முறை இயேசு தன் சாவைப் பற்றி அறிவித்து விட்டார்
(லூக்கா 9:22, 44). அடுத்து மூன்றாவது முறையாக அறிவிக்கப்
போகிறார் (லூக்கா 18:31-34). எனவே திருத்தூதர்கள்
அதிர்ச்சி அடைகிறார்கள். தங்களது நம்பிக்கையை
அதிகப்படுத்தும் எனத் திருத்தூதர்கள் ஆண்டவர் இயேசுவை
கேட்கிறார்கள்.
மறையுரை
",கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக்
காட்டு அத்திமரத்தை நோக்கி, ",நீ வேரோடே பெயர்ந்துபோய்க்
கடலில் வேரூன்றி நில்", எனக் கூறினால், அது உங்களுக்குக்
கீழ்ப்படியும்", (லூக்கா 17:6).
மனிதனுடைய வாழ்வில் நம்பிக்கை இதயத்துடிப்பு போன்றது.
வாழ்க்கை என்ற படகுக் கரைசேர நம்பிக்கை என்ற துடுப்பு
அவசியம். நம்பிக்கை மனிதனை வாழ வைக்கிறது, வாழ்வு
கொடுக்கிறது. நாம் இறைவன் இயேசுவின் மீது கொண்டுள்ள அளவற்ற
நம்பிக்கையால்தான் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துக்
கொண்டிருக்கிறோம். இன்று நாம் நமது நம்பிக்கையை
மிகுதிப்படுத்த இன்றையத் திருவழிபாடு அழைப்பு விடுக்கிறது.
பழைய ஏற்பாட்டில் ஆபிரகாமை நம்பிக்கையின் நாயகன் என்று
குறிப்பிடலாம். கடவுள் தமக்குக் குழந்தையை அருள்வார் என்ற
நம்பிக்கை அவரிடம் மேலோங்கி இருந்தது (தொ.நூ.
12:2;13:16;15:5;18:10) ஆபிரகாமின் நம்பிக்கைக்குப் பலன்
கிடைத்தது. கடவுள் ஆபிரகாமுக்கு ஆண் குழந்தை ஒன்றை
அருளினார் (தொ.நூ. 21:2-3). எகிப்தில் அடிமைகளாய் இருந்த
இஸ்ரேயல் மக்கள் தாங்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை
பெறுவோம் என்று நம்பியிருந்தனர். அவர்கள் நம்பிக்கைக்கு
மோசே வழியாகப் பலன் கிடைத்தது (வி.ப) யோபு எத்தகைய துன்பம்
வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு ஆண்டவர் மீது
வைத்திருந்த நம்பிக்கையில் நிலைத்- திருந்தார், அவரது
நம்பிக்கை வாழ்வு கொடுத்தது. இவ்வாறு பழைய ஏற்பாட்டில்
கடவுள்மீது அளவற்ற நம்பிக்கைக் கொண்டிருந்த அனைவரும்
வாழ்வு பெற்றனர். அவர்களின் நம்பிக்கைக் கடவுளுடைய அருளைப்
பெற்றுத்தந்தது.
ஆண்டவர் இயேசு செய்த அனைத்து புதுமைகளையும்,
அற்புதங்களையும் அருள் அடையாளங்களையும் நம்பிக்கைக்
கொண்டோர் அனைவருக்கும் செய்தார். அவர் எங்குச் சென்றாலும்
ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். காரணம் அவர்மீது
நம்பிக்கைக் கொண்டு நோயுற்றோர்களையும், பிணியாளர்களையும்,
அசுத்த ஆவி பிடித்தவர்களையும் இயேசுவிடம் கூட்டி வந்தனர்.
தொழு நோயாளர் ஒருவர் வந்து ஆண்டவர் இயேசுவிடம் ",ஐயா நீர்
விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்", என்று
கூறுகிறார் (மத்தேயு 8:2-3, மாற்கு 1:40-41, லூக்கா
5:12-16). நம்பிக்கையோடு கேட்டார், நலமடைந்து சென்றார்.
மத் 8:8-இல் நூற்றுவர்த் தலைவன் இயேசுவிடம் ",ஐயா நீர் என்
வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஒரு
வார்த்தை மட்டும் சொல்லும், எனது பையன் நலமடைவான்",
என்கிறார். இவரது நம்பிக்கை இவர் மகனுக்கு வாழ்வு
கொடுத்தது. நான் ஆண்டவரின் ஆடையைத் தொட்டால் நலமடைவேன்
என்று தொட்ட இரத்தப் போக்குடையப் பெண் நலன் பெற்றார்.
இயேசு கனானியப் பெண்ணைப் பார்த்துக் கூறுவார், ",மகளே உமது
நம்பிக்கைப் பெரிது. நீர் விரும்பியது உமக்கு நிகழட்டும்",
என்று அவளின் நம்பிக்கையை எண்ணி வியந்து போகிறார் இயேசு
(மத்தேயு 15:25-28).
இத்தகைய அருஞ்செயல்களைச் சீடர்கள் கண்டிருந்தும் ஆண்டவர்
மீது அதிக நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவில்லை. இன்றைய
நமது சமுதாய, குடும்பச் சூழலிலே ஒருவரையொருவர் சார்ந்து
வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தில் வாழ்ந்துக்
கொண்டிருக்கும் கணவன்மார்கள், மனைவிமார்கள் கணவன் அல்லது
மனைவிமார்களுக்கு நம்பிக்கைகுரியவர்களாக வாழ்வோம் என்று
திருமணத்திலே வாக்குறுதி அளித்துள்ளனர்.
அத்தகைய நம்பிக்கையைக் கடைபிடிப்பவர்கள் மிக மகிழ்ச்சியாக,
சமாதானமாகயிருப்பர். எப்பொழுது ஒருவர் மற்றவர் மீதுள்ள
நம்பிக்கையை இழக்கிறோமோ அப்போது சந்தேகம், தேவையற்றத் தீய
எண்ணம் போன்றவைத் தோன்ற வாய்ப்புள்ளது. பிறகு
நம்பிக்கையற்றதன்மை, சண்டை சச்சரவு, சமாதானமின்மைக்
குடும்பத்திலே நிலவும். இதனால் குடும்பத்தில் அமைதியற்ற
நிலைக் காணப்படும். உண்மையாய் வாழும்போது நம்பிக்கை என்ற
நங்கூரம் உடைபடாது, வளைவுபடாது. பிள்ளைகள் தங்கள்
பெற்றோருக்கு நம்பிக்கைக்குரியப் பிள்ளைகளாய் வாழ
வேண்டும். பொய் சொல்வதை அறவே மறக்க வேண்டும்.
நண்பர்களிடையே உள்ள நட்பை அவர்களின் நம்பிக்கை எனும்
அளவுகோலால் அளந்து விடலாம். நம்பிக்கை இல்லை- யென்றால்
நட்பு என்ற புனிதமான வார்த்தைக்கு இடமேயில்லை. மாவீரன்
அலெக்ஸாண்டர் ஒருமுறை நோய்வாய்ப் பட்டிருந்தபோது அவருடைய
நண்பர் அவருக்கு ஒரு கிண்ணத்திலே மருந்துக் கலக்கிக்
கொடுத்தார். அலெக்ஸாண்டர், கிண்ணத்தைக் கையில்
எடுத்துக்கொண்டு, சற்று முன்பு, வந்திருந்தக் கடிதத்தை
அவர் நண்பரிடம் கொடுத்துவிட்டு கிண்ணத்திலிருந்த மருந்தை
நோய் நீங்குவதற்காகக் குடித்தார். அந்தக் கடிதத்தில்
இவ்வாறு எழுதியிருந்தது. ",மாவீரன் அலெக்ஸாண்டர் அவர்களே,
தாங்கள் அருந்தப் போகும் மருந்தில் உம்முடைய நண்பர்
உம்மைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், நஞ்சைக்
கலந்துள்ளார்",. அலெக்ஸாண்டர் தனது நண்பனின் மீது நூறு
சதவிகிதம் நம்பிக்கைக் கொண்டிருந்தார். மருந்தை
அருந்தியபின் நலமடைந்தார்.
சாதனையாளர்கள், அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள்
வாழ்வில் வெற்றியைப் பெற்றதும் கூறும் முதல் வார்த்தை
'நம்பிக்கை'. நம்பிக்கையோடு இறுதிவரை போராடினேன்.
வெற்றியடைந்தேன், என்றே கூறுவார்கள். இன்றைய மூன்று
வாசகங்களும் நம்பிக்கையில் வளர வேண்டியதன் அவசியத்தை
உணர்த்துகின்றன. விவிலியத்தில் பல இடங்களில் இயேசு
மக்களின் நம்பிக்கையற்றத் தன்மையைக் கடிந்துக்கொள்கிறார்.
நம்பிக்கையில் வளரும்போது மற்றவர்களின் பயனை
எதிர்பார்காமல் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்களின்
மீது கொண்டிருந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும்போது
அது நம்மை எதிர்மாறான பாதைக்கு வழிகோலும், ஏமாற்றங்கள்
அதிகமாகும். எப்போதெல்லாம் நமது எதிர்பார்ப்புகள்
நிறைவேறாமல் போகிறதோ அப்போதெல்லாம் ஏமாற்றங்களும் அதிகச்
சந்தேகங்களும் வலுக்கும். சந்தேகம் என்ற கிருமி நம்
உள்ளத்திலே வந்துவிட்டால் எல்லா நல்ல பண்புகளையும்
செயலிழக்கச் செய்துவிடும். பிறகு நம்பிக்கை நம்மை விட்டுக்
கண்ணுக்கு எட்டாதத் தொலைவில் சென்றுவிடும். இதனால் தான்
இயேசு தம்முடைய சீடர்களுக்கு நம்பிக்கையில் வளர
தங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின் தாங்கள்
பயனற்ற பணியாளர்கள், தங்கள் கடமையைத்தான் செய்ததாகச் சொல்ல
அழைப்பு விடுக்கிறார். (மத் 17:10).
நாமும் நமது வாழ்வில் தூய ஆவியின் வழிநடத்துதலோடு அன்னை
மரியின் கரம்பிடித்து மற்றவர்களிடமிருந்து பயனை
எதிர்ப்பார்க்காமல் நம்பிக்கையோடு கடமையைச் செய்வோம்.
நம்பிக்கை என்னும் கொடையைக் கொடுத்த ஆண்டவர் அவரில்
நம்பிக்கையோடு வாழ வரம் தர வேண்டுமென்று நம்பிக்கையோடு
இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
இயேசுவின் மீது விசுவாசம் என்பது அவருடையப் பணியிலே
விசுவாசமாயிருப்பது. இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது
கடவுளின் கொடை.
இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்டிருத்தல், உலக இருட்டிலே
இயேசு என்றும் ஒளியைக் கொண்டு நடந்து செல்வதாகும். அந்த
ஒளியை அணையாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். செபம்,
அன்பு என்னும் எண்ணையை அந்த விளக்கிற்கு ஊற்ற வேண்டும்.
அபாகூக், திமோத்தி, திருத்தூதர்கள் மற்றும் எண்ணிலடங்கா
கிறிஸ்தவர்கள் விசுவாசத்தோடு இறந்தார்கள். அவர்களைப் போல
நாமும் வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம். நம்பிக்கைக்குச்
சிறந்த உதாரணம் அன்னை மரியாள்.
இயேசுவைத் தாழ்ச்சியோடு கருத்தரித்தார், தன்னையே
ஆவியானவரின் வழிகாட்டுதலில் நடக்க அர்ப்பணித்தார்.
நம்பிக்கையானவளாக இயேவுக்கு உதவினாள். தன்னுடைய
நம்பிக்கையை ஆண்டவரிடத்தில் வைத்தாள். அதனால்தான் அவள்
இறைவனின் அன்னையாகத் திகழ்கின்றாள்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பொதுக் காலம் இருபத்தேழாம் ஞாயிறு
'நம்பிக்கை' எனும் கருத்தாக்கம் இன்றைய வாசகங்களை
ஒன்றிணைக்கின்றது. அபக்கூக்கு கிறிஸ்தவ இறையியலின் மிக
முக்கியமான மறையுண்மையை வெளிப்படுத்துகிறார். ",நேர்மை
யுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்", (அப 2:4) எனும்
இந்த வார்த்தையின் மீது பவுலடியார் கிறிஸ்தவ வாழ்வின்
இறையியலையும், மீட்பின் இயலையும் கட்டி எழுப்புகிறார்
(காண். உரோ1:17).இரண்டாம் வாசகத்தில்
பவுலடியார்திமொத்தேயுவுக்கு நம்பிக்கைகுறித்து
அறிவுறுத்துகின்றார்: ",கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும்
அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை
மேல்வரிச் சட்டமாகக் கொள்", (2 திமொ 1:13). நற்செய்தியில்
தங்களது நம்பிக்கையை மிகுதியாக்குமாறு கேட்ட
சீடர்களிடத்தில் இயேசு கடுகளவு நம்பிக்கையைப் பற்றி
பேசுகின்றார். இவற்றுள் நற்செய்தி தரும் இன்னும் சில
முக்கியச் செய்திகளை இவண் ஆராய்வோம்.
நற்செய்தியின் பின்னணி
லூக்கா நற்செய்தியின் பதினாராம் அதிகாரத்தில் இயேசு பண
ஆசைமிக்க பரிசேயர்களின் ஏளனத்துக்குப் பதிலாக சில
அறிவுரையும், செல்வர்-ஏழை இலாசர் உவமை மூலமாக அவர்களின்
பொய்யான பக்தியை தோலுரித்தும் காட்டினார். பதினேழாம்
அதிகாரத்தில் நமதாண்டவரின் கவனம் தம் சீடர் பக்கம்
திரும்புகிறது. இதில் முக்கியமாகச் சீடத்துவ வாழ்வின்
எதிர்பார்ப்புகளையும் சவால்களையும் விளக்குகின்றார்.
முதலில் சிறியோரை பாவத்தில் விழத்தாட்டும் துர்மாதிரியைப்
பற்றிப் பேசுகின்றார் (வச. 1-2). அடுத்து சகோதரர்
சகோதரிகளை மன்னிப்பதுபற்றி அமைகின்றது (வச. 3-4).
மூன்றாவதாக, சீடர்களிடம் இருக்க வேண்டிய நம்பிக்கை
பற்றியும் (வச. 5-6), இறுதியாகச் சீடர்கள் பணியாளர்களின்
மனநிலையில் நன்றியை எதிர்பார்க்காமல் பணியாற்ற வேண்டும்
(வச. 7-10) எனும் செய்தியையும் அளிக்கின்றது. இவற்றுள்
இன்றைய நற்செய்தி இறுதி இரு பகுதிகளை உள்ளடக்கியதாக
உள்ளது.
1. நம்பிக்கையின் அளவு
இந்த நற்செய்தியில் காணப்படும் 'நம்பிக்கையின் அளவு'
பற்றிய விவாதம், மத்தேயு நற்செய்தியில் சீடர்களால்
குணமளிக்க முடியாத சூழலில், பேயை ஓட்ட முடியாத சூழலில்
தரப் பட்டுள்ளது (காண். மத் 17:14-18). திருத்தூதர்கள்
தங்களின் நம்பிக்கையின் அளவை மிகுதியாக்கும்படி
கேட்கின்றனர். ஆனால் இயேசுவோ நம்பிக்கையின் அளவு
முக்கியமல்ல அது கடுகளவு இருந்தாலே போதுமானது, அதைக்
கொண்டே நிறையச் சாதிக்கலாமென விளக்குகிறார். இங்கு இயேசு
கடுகளவு நம்பிக்கையைப் பற்றிக் கூறுவதால் சீடர்களிடம் அந்த
அளவு கூட நம்பிக்கை இல்லாமலிருந்தது எனக் கொள்ள
வேண்டியிருக்கிறது.
2. பயனற்ற பணியாளர்கள்
இன்றைய நற்செய்தியில் பேசப்படும் 'பயனற்ற பணியாளர்கள்'
பற்றிய விவாதத்தை இவ்வதிகாரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட
மூன்று விடயங்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அதாவது,
ஒரு சீடர் பிறருக்கு இடறலாய், துர்மாதிரி யாய் இல்லாமல்
இருப்பது (வச. 1-2). ஒரு நாளைக்கு ஏழுமுறை மன்னிப்பது (வச.
4), மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பது (வச. 5-6)
ஆகியவற்றைக் கடைபிடிக்கும்போது தாங்கள் பெரிய, செயற்கரிய
செயலைச் செய்துவிட்டதாக எண்ணிவிடக் கூடாது. பரிசேயர்களைப்
போலத் தங்களைத் தாங்களே நீதிமான்கள் என மெச்சிக் கொள்ளக்
கூடாது. மாறாக இவையெல்லாம் சாதாரண மாக, கடைமட்ட சீடர்
செய்ய வேண்டியவை, அவற்றைத்தான் செய்தோம் எனும் மனநிலையில்
",நாங்கள் பயனற்ற பணி யாளர்கள்; எங்கள் கடமையைத் தான்
செய்தோம்", (வச. 10) எனும் மனநிலையில் வாழ வேண்டும். எனவே
சீடத்துவ வாழ்வு சவால்கள் நிறைந்தது, கடினமானது. ஆனால் அதை
நிறைவேற்றுவதற்குக் கடுகளவு நம்பிக்கையும் பணிவான
மனநிலையும் அவசியம். இன்று தங்களின் பணியையும் பக்தியையும்
குறித்துத் தம்பட்டம் அடித்து, 'விளம்பரம்' செய்து
கொள்ளும் சூழலில், இயேசுவின் இந்தப் போதனை நம்மில்
பலருக்கு மிகப்பெரிய சவால்தான்.
அபக்கூக்கு இறைவாக்கினர் ஏறத்தாழக் கி.மு 6-ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டும் (கி.மு.605 579).
யூதாவின் இனத்தாரைப் பிறவினத்தாராகிய கல்தேயர் வழி இறைவன்
அடக்கியதைக் கண்டு அபக்கூக்கு பொருமுகிறார். இறைவன் தரும்
பதிலோ, ",ஆண்டவர் மேல் விசுவாசம் வைப்பவன் வாழ்வான்", (2: 4)
என்பதாகும். இன்றைய வாசகம் அபக்கூக்குவின் வினாவையும் ஆண்டவரின்
விடையையும் வெளிப்படுத்துகிறது.
அபக்கூக்குகின் முறையீடு
மக்களின் துயரைக்கண்டு இறைவாக்கினர் இறைவனிடம் முறையிடுவதாகப்
பலமுறை ப.ஏ. சுட்டுகிறது (எசா. 59: 9 - 14; எரே. 10:23-25;
14: 2-9; திபா. 54 : 9 - 11 முதலிய). உள்நாட்டுக் குழப்பங்களால்
மட்டுமன்று, கல்தேயர்களாலும் இஸ்ரயேலர் கொடுமைப்படுத்தப்பட்டனர்
(1:5-6). இறைவாக்கினர் கலங்குகிறார். மக்களின் துயரைத் தனதாகப்
பாவித்து இறைவனிடம் அழுது புலம்புகிறார். பிறர் துன்பம் கண்டு
நாமும் கலங்குகிறோமா? பிறர் கண்ணில் நீர் வடியும்போது நம்
உள்ளம் கரைகிறதா? பிறர் வாழ்வில் புயல் வீசும்போது நமது
வாழ்வில் ஆட்டமிருக்கிறதா? ",எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி
இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே",
(தாயுமானவர்) என்ற வார்த்தைகள் நம்மைத் தொடுகின்றனவா?
பிராணிகள், மிருகங்கள் துயருறும்போது கண்ணீர் வடிக்கும்
நாம் ",கடவுளின் சாயல்கள்", (தொநூ.1:27) கதறும்போது கருணைக்
கண் திறக்கின்றோமா?
ஆண்டவர் வாக்கு பொய்க்காது
",பழங்காலத்திலிருந்தே கடவுளுடைய வார்த்தையால் விண்ணுலகும்
மண்ணுலகும் தோன்றின", (2 பேது. 3: 5), ஆண்டவருடைய
வார்த்தைகள் ஒரு போதும் தவறாதன. படைப்புப் பொருள்கள்
",உண்டாகுக", (காண் : தொநூ.1) என்றார். அனைத்தும் உண்டாயின.
",நான் விரும்புகிறேன், உன் நோய் நீங்குக!", (லூக். 5 : 13)
என்றார் இயேசு. தொழுநோயாளன் குணமானான். ",மகனே, உன்
பாவங்கள் மன்னிக்கப்பட்டன", (மாற். 2:5) என்றார் இயேசு.
திமிர்வாதக்காரன் தன் பாவங்களிலிருந்து விடுதலை அடைந்தான்.
",கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது", (எபி.
4 : 12), ",நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல; மாறாக,
உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியா வித்தாகிய
கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்", (1
பேது. 1: 23). இறைவார்த்தை நிறைவேறுவதில் காலதாமதம்
ஏற்படலாம். எனினும் ",முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது.
ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத்
தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே
தீரும்", (அப. 2:3). மேற்கூறிய சொற்கள் இறைவார்த்தையின்
மேல், விவிலியத்தின் மேல் நமக்கு ஆழ்ந்த பற்றையும்
பிடிப்பையும் ஏற்படுத்த வேண்டும். நமது விவிலிய வாசகம்
அன்றாட நாளேடு, வார, மாத ஏடுகள் வாசிப்புப் போன்றே
அமைகிறதா? அல்லது ஆழ்ந்த விசுவாசத்தோடு வேதாகமத்தை
வாசித்து, வாழக் கற்றுக்கொள்கிறோமா? விவிலியத்தை
வாசிப்போம்; விடாது வாசிப்போம்; விசுவாசத்தோடு வாசிப்போம்;
வெற்றி கிட்டுவது திண்ணம்; வாழ்வு மாறுவது திண்ணம்.
விசுவாச வாழ்வு
வாழ்க்கையில் வெற்றிக்கு வழி கோல்வது எந்த ஒரு
காரியத்திலும் விசுவாசத்தோடு, நம்பிக்கைத் திடனோடு
ஈடுபடுவதாகும். ஆண்டவரிடம் விசுவாசம் வைப்பது என்பது
அவரிடம் நம்மையே சரணடையச் செய்வதாகும். நமது சொல் ஒன்று,
செயல் வேறு என்று வாழும்போது, ",கண்டதே காட்சி, கொண்டதே
கோலம்", என்று எண்ணும்போது அங்கே விசுவாசத்திற்கு இடமில்லை.
",நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்", (அப 2:
4) என்னும்போது விசுவாசமே அவனுடைய வாழ்வை, அவனுடைய
வாழ்வின் நடை முறைகளை ஒழுங்குபடுத்திச் சீர்செய்கிறது
என்பது பொருளாகும். இத்தகைய ஆழ்ந்த விசுவாசம், வாழ்வைத்
தொட்டுப் ",பாதிப்புகள்", ",கீறல்கள்", ஏற்படுத்தும்.
விசுவாசமே மறுவாழ்வுக்கு உறுதுணை யாயிருக்கும் (காண்: உரோ.
1:17; கலா. 3:11; எபி. 10: 38). இத்தகைய விசுவாச வாழ்வு
நம்மில் வேரடித்து வளர இறைவனிடம் வேண்டுவோம்.
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.
இரண்டாம் வாசகம் : 2 திமொ. 1 : 6 - 8. 13 - 14
எபேசுத் திருச்சபையின் ",மேற்பார்வையாளராக", தான்
திருநிலைப்படுத்திய தன் ",அன்பு மகன் திமொத்தேயுவுக்கு",
புனித பவுல் கூறும் அறிவுரைகள் இன்றைய வாசகமாயமைகின்றன.
ஈண்டுச் சிறப்பாகத் திமொத்தேயு பெற்ற அருட்கொடைகள் பற்றிக்
கூறி அவற்றிற்கு அவர் பிரமாணிக்கமாய் இருக்கும்படி பவுல்
வேண்டுதல் விடுக்கிறார்.
திமொத்தேயு பெற்ற கொடை
திருநிலைப்படுத்திய வேளையிலே மூப்பர் ஒன்று கூடித்
திமொத்தேயு மேல் கை விரித்தபோது ",இறைவாக்கினால் அவருக்கு
ஞான வரம் அளிக்கப் பட்டது", (1 திமொ. 4 : 14). அவ்வரத்தை
அவர் ",தீயெனப் பற்றியெரியச் செய்ய வேண்டியது கடன்", (2 திமொ
1: 6). திமொத்தேயுவுக்கு மட்டுமன்று, நமக்கும் நமது
திருமுழுக்கு, மற்றும் திருவருட்சாதனங்கள் வழி இறைவன்
பற்பல வரங்களை வாரி வழங்கியுள்ளார் என்பது உண்மை.
ஆவியாரின் வழியாக ஒருவனுக்கு, ஒருத்திக்கு ஞானம்,
மற்றவருக்கு விசுவாசம், குணமாக்கும் வரம், இறைவாக்கு வரம்
என்று பகிர்ந்தளிக்கப்படுகின்றன (காண் 1 கொரி. 12: 4-11).
இவற்றை எந்த முறையிலே பிறர் பணியிலே பயன்படுத்துகிறோம்?
நம் ஞான வாழ்க்கை இவ்வரங்களால் முன்னோக்கி நடைபோடுகிறதா?
சிறப்பாக நம் எல்லோருக்கும் அளிக்கப்பட்ட வரம் அன்பு
(காண்: 1 கொரி. 13). இவ்அன்பு வரம்பற்றிக் கூறும் பவுல்,
",ஒருவருக்கொருவர் அன்பின் அடிமைகளாயிருங்கள்", (கலா 1: 13)
என்பார். ",அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே", என்று
பாடுகிறோம். இவ்அன்பு நம் கிறிஸ்துவ வாழ்வின்
அடித்தளமாகவும், அவ்வடித்தளத்தின் மேல் கட்டிய
கட்டடமாகவும், நம் நினைவு, சொல், செயல்களில்
வெளிப்படுகிறதா?
தேவ ஆவியாரின் அருள்
தேவ ஆவியாரின் அருளால் திமொத்தேயு
திருநிலைப்படுத்தப்பட்டது போல, நாமும் திருமுழுக்கிலே அதே
தேவ ஆவியாரின் அருளால் இறைவனின் பிள்ளைகள் ஆனோம்.
",மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள்
பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய
மனப்பான்மையையே பெற்றுக்கொண்டீர்கள். எனவேதான், இறைவனை
",அப்பா, தந்தாய்' என நாம் அழைக்க முடியும் (கலா. 4: 6;
உரோ. 8: 15 - 17). தந்தை தாம் திருநிலைப்படுத்தியவருக்கு
",வலிமையும் அன்பும் விவேகமும்", (1 : 7) அளித்துள்ளாரெனின்,
திருமுழுக்குப் பெற்ற நம் அனைவருக்கும் ஆவியாரின்
கனிகளாகிய ",அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு,
நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்", (கலா.5: 22)
முதலியவற்றை வாரி வழங்கியுள்ளார். எனவே கோழை உள்ளத்திற்கோ
(1 : 7) அச்சத்திற்கோ (1 யோ. 4 18) அடிமைகளாகிவிடாது,
துணிவுடன் கிறிஸ்துவுக்குச் சாட்சியம் பகர்வோம்,
",அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே.",
நற்செய்திக்காக உழைத்தல்
திருநிலைப்படுத்தப்பட்ட திமொத்தேயு மட்டுமென்று,
திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் நற்செய்தியைக்
கற்றறிந்து வாழ்வதோடு பிறருக்கும் எடுத்துச் சொல்லத்
தயங்கக் கூடாது. ",நாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்", என்ற
முறையிலே நற்செய்தியாகிய இயேசுவை நம்மோடு முடங்கிவிடச்
செய்யாது பிறரோடு, சிறப்பாக, நமது குடும்பங்களிலே வாழவிடச்
செய்ய வேண்டும். நற்செய்தி நம்மவரிடமும் பிறரிடமும்
பரவிடத் துன்புறவும் தயங்கக் கூடாது (1:8). பவுலின்
படிப்பினைப்படி நற்செய்தியின் மதிப்பீடுகள் நமது
வாழ்க்கைச் சட்டமாக வேண்டும் (1: 13); அதன் படிப்பினைகள்
நம்மைத் தீய சக்திகள், பழக்க வழக்கங்களிலிருந்து பாதுகாக்க
வேண்டும் (1:14). ",ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்?
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன",
(யோவா. 6:68).
கடவுளின் வரத்தை நீ தீயெனப் பற்றியெரியச் செய்ய வேண்டும்.
நற்செய்தி: லூக். 17:5-10
விசுவாசம் பற்றியும், வேலையாளின் கடமை பற்றியும்
நமதாண்டவர் கூறிய போதனையின் தொகுப்பே இன்றைய நற்செய்தி.
இயேசுவின் சீடர்களுக்கு விசுவாசம் அடிப்படை நிபந்தனை.
குருவின் கட்டளைகளைச் செயல்படுத்துவதன் வழியாகச் சீடனும்
தனது விசுவாசத்தை வெளிப்படுத்துகிறான். இயேசுவின் சீடனும்
இதற்கு விதிவிலக்கன்று. மோசேயின் சட்டத்தைத் தாங்கள் சரிவர
அனுசரிப்பதால் கடவுள் தங்களுக்கு மிகவும்
கடமைப்பட்டுள்ளார் என்ற யூதர்களின் தவறான எண்ணத்தைத்
தகர்த்தெறியவே தலைவன் ஊழியன் உவமையை ஆண்டவர் கூறினார்.
ஆழ்ந்த விசுவாசம் தேவை
தாபோர் மலையிலிருந்து இறங்கி வந்த இயேசு தமது சீடர்களால்
குணமாக்க முடியாத சிறுவனைக் குணமாக்கி, அவர்களது விசுவாசக்
குறைவினால்தான், அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை
என்றார். அப்பொழுது ",உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை
இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து 'இங்கிருந்து
பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால் அது பெயர்ந்து
போகும்",என்றார் (மத். 17 : 19 - 20). இன்றைய நற்செய்தியில்
மலைக்குப் பதிலாக மரம். உண்மை ஒன்றுதான். முசுக்கட்டை மரம்
சுமார் 600 ஆண்டுகள் வாழும் என்பர். இது தானாகவே பெயர்ந்து
கடலில் ஊன்றிக்கொள்வதில்லை. எனினும் இது இறைவனால் இயலும்.
இறைவனால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1: 37) என்ற உண்மை
வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவனில் முழு நம்பிக்கைகொள்பவன்
எதையும் சாதிக்கும் ஆற்றல் பெறுகிறான். ",நீங்கள் ஐயம்
எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு
நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்", (மத். 21: 21; மாற்.
11: 21-22). ஆண்டவரின் ஆற்றலில் பக்தன் சிறிதளவும் ஐயம்
கொள்ளக் கூடாது. மலைகளே பெயர்ந்து அவன்மீது விழுந்தாலும்
அவர் அவனைக் காப்பார் என்ற ஆழ்ந்த விசுவாசம் அவனிடம்
விளங்க வேண்டும்.
",நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை
கொள்ளுங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை
கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும்
செய்வார்", (யோ 14: 1,12).
கடுகளவு, என்பது விசுவாசத்தின் ஆற்றலைக் குறிக்கிறது.
திருமுழுக்கில் விதைக்கப்பட்ட விசுவாசம் வளர்ந்து முழுமை
பெற வேண்டும்; முதிர்ச்சியடைய வேண்டும் (மத். 13: 32).
பயன் கருதாச் சேவை தேவை
",பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத்துரையென்ற காலமும் போச்சே", (பாரதியார்)
எல்லோரும் சமம் என்ற எண்ணம் இன்று வளர்ந்து வருகிறது.
ஆனால் அன்றைய சமுதாய அமைப்பின்படி அடிமைகள் அல்லது
பணியாட்கள் கடுமையாகவே நடத்தப்பட்டனர். காட்டு வேலைக்குப்
பின் அவர்கள் வீட்டு வேலையும் செய்தாக வேண்டும். எனவே வெளி
வேலையை முடித்து வந்த வேலைக்காரனைத் தன்னுடன் சமமாக
அமர்ந்து சாப்பிடு என்று முதலாளி கூறமாட்டான். எனக்குப்
பணிவிடை செய்தபிறகு நீ உண்ணலாம் என்றுதான் கூறுவான்.
இப்படி அக்கால முறைபற்றி நமதாண்டவர் பேசியபொழுது மக்கள்
ஆமோதித்தனர். இந்த ஆமோதிப்பை அடிப்படையாகக் கொண்டு,
கடவுளுக்குப் பணிபுரிவது நமது கடமை; இறைவனால் அவருக்காவே
படைக்கப்பட்ட நாம் அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்காகப்
பாராட்டை எதிர்பார்க்க வேண்டியதில்லை. நாம் செய்யும்
எந்தச் சேவையும் இறைவனுக்குத் தேவையில்லை. அதனால் நமது
பேறுபலன்கள்தான் பெருகுகின்றன. எவ்வளவுதான் நாம்
நற்செயல்கள் புரிந்தாலும் ",நாம் பயனற்ற ஊழியர்கள்", என்ற
அடக்கமும் பணிவும் நமக்குத் தேவை (காண்: யோபு. 22: 3:35:
7). பயன் கருதாத- கடமையைச் செய்யும் கர்மவீரர்களாக நம்மை
மாற்றவே, தெய்வமே இயேசுவில் ஊழியனானார் (லூக். 22: 27).
பரிசை எதிர்பாராது பணிவிடை புரியும் பக்குவம் எனக்குண்டா?
நாங்கள் பயனற்ற ஊழியர்கள்: செய்ய வேண்டியதைத்தான்
செய்தோம்.
நாம் எல்லோரும் நம்பிக்கையாளர்கள் என்று
அழைக்கப்படுகிறோம். திரு அவைச் சட்டம் கூட நம்மைக்
கிறிஸ்தவர்கள் என்று வெறுமனே குறிப்பிடாமல், கிறிஸ்தவ
நம்பிக்கையாளர்கள் என்றுதான் நம் ஒவ்வொருவரையும்
அழைக்கிறது. ஆனால், நம்முடைய நம்பிக்கை வாழ்வில் தான்
எத்தனை எத்தனைப் பிரச்சனைகள்! தொடக்கத்திலே கடவுள் மீது
மிகுந்த நம்பிக்கை கொள்ளும் எத்தனையோ பேர், வாழ்க்கையில்
நெருக்கடிகள் மற்றும் துன்பங்கள் வரும்போது அந்த
நம்பிக்கையிலிருந்து தவறி, வேறுவிதமான ஒரு வாழ்க்கையை
அமைத்துக் கொள்கிறார்கள்.
இறைவாக்கினர் அபக்கூக்கின் போராட்டம்
விவிலியத்திலே அபக்கூக்கு என்றோர் இறைவாக்கினரைக்
காண்கிறோம். அவர் இறைவனை முழுமையாக நம்பி இருந்தவர்.
ஆனாலும், அவருக்கு ஒரு பெரிய மனப்போராட்டம் இருந்தது.
அவருடைய மக்கள் செய்கின்ற அநியாயங்களையும்
அக்கிரமங்களையும் பார்த்துக் கொண்டு இறைவன் அமைதியாக
இருப்பது ஏன் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவர் இறைவனைப் பார்த்துக் கூக்குரலிட்டார்: ஆண்டவரே, நான்
உம்மையே நம்பி இருக்கிறேன். நீர் நல்லவர், வல்லவர்.
இப்படிப்பட்ட நீர் இருக்கும்போது, என்னுடைய மக்கள் ஏன்
இப்படித் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்? நீர்
ஏன் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்? என்று
முறையிட்டார்.
அப்போது இறைவன் அவருக்குப் பதில் கொடுத்தார்: நீ
கவலைப்படாதே. இந்த மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும்,
இவர்களைத் தண்டிப்பதற்காகவும் பாபிலோனியர்களைப் படையெடுக்க
அனுப்புவேன். அப்போது இவர்கள் திருந்துவார்கள். இதைக்
கேட்ட இறைவாக்கினர் அபக்கூக்கு முன்பை விட அதிகமாகக் கோபம்
கொண்டார். என் மக்களை விட அந்தப் பாபிலோனியர்கள் மிகவும்
மோசமானவர்கள். அவர்களை அனுப்பி என் மக்களுக்குப் பாடம்
புகட்டுவேன் என்று சொல்வது நியாயமா? என்று மீண்டும்
இறைவனிடம் முறையிட்டார்.
இந்தச் சூழ்நிலையில்தான் அவருக்கு இரண்டாவது செய்தி
கொடுக்கப்பட்டது. பயப்படாதே, காத்திரு என்று சொன்ன
இறைவன், இறுதியாக ஒரு முக்கிய வார்த்தையைக் கூறினார்:
நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்
(அபக்கூக்கு 2:4).
நம்பிக்கையால் வாழ்வு
திருத்தூதர் பவுல், உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலும், நேர்மையாளர் தம்
நம்பிக்கையால் வாழ்வடைவர் என்ற வார்த்தையை மீண்டும்
மீண்டும் வலியுறுத்துகிறார். இன்று நம் ஒவ்வொருவருக்கும்
அதே செய்திதான் சொல்லப்படுகிறது. நீ நேர்மையாளனாக
இருந்தால், கடவுள் உன்னைக் கைவிட மாட்டார். ஆண்டவரில்
நம்பிக்கை வை; நீ உன் நம்பிக்கையினால் வாழ்வாய். சில
நேரங்களில், உன் வாழ்க்கையில் நீ சந்திக்கின்ற சில
காரியங்கள் உனக்குப் புரியாததாக இருக்கலாம், ஏற்றுக்கொள்ள
முடியாததாக இருக்கலாம். ஆனாலும், நீ நம்பிக்கையினால்
வாழ்வடைவாய். தம்மில் நம்பிக்கை வைக்கிறவர்களுக்கு
ஆண்டவர் தூக்கத்திலும் நன்மை செய்வார் என்று திருப்பாடல்
ஆசிரியர் கூறுகிறார். நம்முடைய நம்பிக்கை எத்தகையது என்று
நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடுகளவு நம்பிக்கை
நம் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் அவரிடம் சில காரியங்களைக்
கேட்டார்கள். தந்தையை எங்களுக்குக் காட்டும் என்று ஒரு
சீடர் கேட்டார். நீர் செபிப்பது போல, எங்களுக்கும்
செபிக்கக் கற்றுக் கொடும் என்று சிலர் கேட்டார்கள். அதைப்
போலவே, ஆண்டவரே, எங்கள் நம்பிக்கையை அதிகமாக்கும் என்ற
ஒரு விண்ணப்பத்தையும் அவரிடம் வைத்தார்கள். நேர்மையாளர்
நம்பிக்கையால் வாழ்வடைவர் என்று அருளப்பட்டிருக்கிறது.
ஆனால், எங்கள் நம்பிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறதே,
நாங்கள் தொடர்ந்து இந்த நம்பிக்கை வாழ்வில் பயணிக்க
முடியுமா என்ற அச்சத்தில் சீடர்கள் அப்படிக் கேட்டார்கள்.
நீங்கள் ஆசையோடு கேட்டதால், உங்கள் நம்பிக்கையை
அதிகமாக்குகிறேன் என்று ஆண்டவர் இயேசு கூறவில்லை. மாறாக,
கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்தக்
காட்டு அத்தி மரத்தை நோக்கி, நீ வேரோடு பெயர்ந்து கடலில்
நடப்படு எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்
என்றார். விசுவாசத்தின் அளவைப் பற்றி நீங்கள்
கவலைப்படாதீர்கள். ஆனால், எத்தகைய விசுவாசத்தோடு
இருக்கிறீர்கள் என்று உங்களைச் சோதித்துப் பாருங்கள்
என்கிறார். இறைவனை முற்றிலுமாகப் பற்றிக்கொண்டு, அவருக்காக
வாழ்கின்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? இன்னும் அதிக
விசுவாசத்தைத் தேடாமல், இருக்கின்ற விசுவாசம் செயலுள்ள
விசுவாசமாக இருக்கிறதா என்று கற்பிக்கும் விதமாக இயேசு ஒரு
உவமையையும் கூறினார்.
பயனற்ற ஊழியர்கள் உவமை
இயேசுவின் காலத்தில் அடிமைகள் மிக மோசமாக
நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு ஓய்வெடுக்கக் கூட
தலைவர்கள் நேரம் கொடுப்பதில்லை. அந்த அளவுக்கு அவர்கள்
கொடூரமாக நடத்தப்பட்டார்கள். அவர்கள் உயிருள்ள மனிதர்களாக
அல்லாமல், ஒரு பொருளாகவே பார்க்கப்பட்டார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஆண்டவர் இயேசு அந்த அடிமையின்
உதாரணத்தைத் தன் சீடர்களுக்குச் சொல்கிறார்.
வயலில் வேலை செய்வதற்கோ அல்லது ஆடு மாடுகளைக் கவனித்துக்
கொள்வதற்கோ உங்களுக்கு ஒரு பணியாளர் இருந்தால், அவர்
அதிகாலையில் எழுந்து வயலுக்குச் சென்று, பகல் முழுவதும்
கடினமாக உழைத்துவிட்டு, இரவில் வீடு திரும்புகிறார். அவர்
வந்தவுடன், நீ வந்து சாப்பிடு என்றோ, சற்று ஓய்வெடு
என்றோ எந்தத் தலைவனாவது சொல்வாரா? மாறாக, இரக்கமின்றி, நீ
சீக்கிரம் கை கால்களைக் கழுவிவிட்டு, முதலில் எனக்கு உணவு
பரிமாறு என்றுதானே சொல்வார்? நாள் முழுவதும் உழைத்து
வந்தவரிடம், நான் சாப்பிட்டு முடிக்கும்வரை நீ பணிவிடை
செய், அதன்பின் வீட்டைச் சுத்தம் செய் என்றுதானே
கூறுவார்கள்? இவை எல்லாவற்றையும் பொறுமையோடும்
பொறுப்போடும் செய்த அந்தப் பணியாளருக்கு யாராவது நன்றி
சொல்வதுண்டா?
ஆண்டவர் இயேசுவின் இந்தக் கேள்விகள் அனைத்திற்கும்
சீடர்களின் பதில் இல்லை என்பதாகத்தான் இருந்திருக்கும்.
செயல்படும் நம்பிக்கை
இவை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு ஆண்டவர் இறுதியாகக்
கூறுகிறார்: கடவுள் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும்
செய்து முடித்தபின், அந்தப் பணியாளரைப் போல, நாங்கள்
பயனற்ற ஊழியர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் என்று
சொல்லுங்கள்.
உங்களுடைய நம்பிக்கை வாழ்வு இப்படித்தான் அமைய வேண்டும்.
நாம் எப்போதும், "We are unprofitable servants; we have
only done what was our duty" என்ற மனநிலையுடன் வாழ
வேண்டும். ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையில்
இறுதிவரை நிலைத்து வாழ்வோம். திருத்தூதர் யாக்கோபின்
வார்த்தைகளான, செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை
(யாக்கோபு 2:26) என்பதை மனதில் கொண்டு, நம் நம்பிக்கையைச்
செயலில் காட்டுவோம்; நேர்மையோடு வாழ்வோம்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமைஏற்றாயோ