ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பாஸ்காக் காலம் 3 ஆம் ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
    Calendrier-litrugique2022
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
பொறுப்புடன் நடந்து கொள்ள அருள் வேண்டி வந்திருக்கும் பிரியங்களே!
B தவக்காலம்1
பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவப் பண்பின் அடையாளம் என வலியுறுத்துகிறது பாஸ்கா காலம் 3 ஆம் ஞாயிறு. நாம் வாழும் நாட்களில் நமது பொறுப்பு என்ன? நமது பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை வழங்குகிறது இன்றைய திருப்பலி.

பேதுருவின் பொறுப்புணர்ச்சி பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு மக்களை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்படுகிறது. திருச்சபையை வழிநடத்தி அதைப் பாதுகாக்கும் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட, பேதுரு இயேசுவின் அருட் துணையோடு அச்சமின்றி தனது பணியை மாட்சியுடன் செய்ததை இன்றைய நற்செய்தி உருவகமாய் நமக்கு விளக்குகிறது.

ஆட்சி தலைவரும் பொறுப்பாளாரே. அவர் தம் குடி மக்கள் மீது பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும். கணவன் தன் குடும்பத்தின் பொறுப்பாளர். தன் மனைவி பிள்ளைகள் மீது பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியமாகும். மனைவியும் குடும்பத்தின் பொறுப்பாளர். தன் கணவன் பிள்ளைகள் மீது பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும். பணியாளரும் பொறுப்பாளரே தன் எஜமான் வீட்டு செல்வங்களின் மீது பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும். இப்படி ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கின்ற துறையின் பொறுப்பாளர்களே அவரவர் தம் பொறுப்பை உணர்ந்து செயல்படும் போது பிரச்சனையின்றி எப்போதும், எங்கும், எதிலும் சந்தோஷம் நிலவும்.

பொறுப்புணர்ச்சி நல்ல சமுதாயத்தை படைக்கும் வல்லமை பெற்றிருக்கிறது! தலைமைத்துவமும், பொறுப்புணர்வும் பிரிக்க முடியாதவை. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாளிகளே! நமது பொறுப்புகள் பற்றி மறுமையில் நம் தேவன் நம்மை விசாரிப்பார்.

நம்முடைய இதயம் நமது பொறுப்புணர்ச்சியால் நிரம்பி வழியவும், நமது பொறுப்புணர்ச்சியால் குடும்ப சமாதானம் ஓங்கவும், நாம் பணிபுரியும் இடங்களில் அன்பு பெருகவும், நாம் வாழும் நாட்டில் அமைதி நிலைக்கவும் அருள் தரும் திருப்பலி இது. இந்த திருப்பலியில் நமது பொறுப்பை பொறுப்பாக செய்ய அருள் கேட்டு மன்றாடுவோம்.

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
 
1. மாண்பும், பெருமையும், புகழ்ச்சியும் நிறைந்த ஆண்டரே!
திருச்சபையின் பணியாளர்கள் உமது மாண்பையும், பெருமையையும் இறைமக்களுக்கு அறிவிக்கும் பணியை பொறுப்புடன் நடை முறைப்படுத்த அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கோடிக் கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஆண்டவரே!
ஆட்சி பொறுப்பில் இருப்போர், அதிகாரம் படைத்தோர் அனைவரும் மக்கள் நலன் காக்கவும், மனிதநேயத்தைப் பாதுகாக்கவும், நாட்டில் அமைதி நிலவச் செய்யவும் தங்கள் பொறுப்பை மிகுந்த அக்கறையுடன் செயல்படுத்த அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. 'வலப்பக்கத்தில் வலை வீசுங்கள் மீன்கள் கிடைக்கும்' என்று சொன்ன இயேசுவே!
உமது வலப்புறத்தில் நின்று திருப்பலி நிறைவேற்றும் அருட்பணியாளர்கள் செய்யும் பொறுப்பு மிகு பணியால் பங்கு மக்களின் விசுவாச வாழ்வு வளம் பெற வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. யோவானின் மகானான சீமோனே நீ என்னை அன்பு செய்கிறாயா? எனக் கேட்ட இயேசுவே!
எங்கள் குடும்பங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் அன்புடன் வளர்த்தெடுப்பதில் பொறுப்புணர்வுடன் செயல்படவும், பிறர் நலனுக்காக எங்கள் பொறுப்புகளை பயன்படுத்தவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மிகுந்த பொறுப்புணர்வுடன் எங்களைப் படைத்து அன்பு செய்யும் இறைவா!
துன்ப துயரங்களால், வேதனை சோதனைகளால், பசி பிணியால், முதுமையால் வாடும் நலிவுற்ற மக்களை பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சி எங்கள் இதயத்தில் ஏராளமாக செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. நன்றியின் நாயகனே ஆண்டவரே
29ந் திகதியன்று தனது குருத்துவத்தின் 36வது வருடத்தைக் கொண்டாடிய அருட்பணி: லீனஸ் சொய்சா அவர்களுக்கு கடந்த 36 வருடங்களாக அவருடைய குருத்துவ வாழ்வில் நீர் பொழிந்துள்ள அருட் கொடைகளுக்கு நன்றி கூறுகிறோம். இனிவரும் காலங்களிலும் உமது அருளாலும் ஆசியாலும் அவரை வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்

அபுபக்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மதீனாவில் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். ஊரே மகிழ்ச்சியில் திளைத்தது. இரண்டு சிறுமிகள் மட்டும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. காரணம் அபுபக்கர் தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்த சிறுமிகளின் ஆடுகளில் இருந்து பால் கறந்து கொடுப்பாராம். அபுபக்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தங்கள் ஆடுகளிலில் இருந்து பால் கறந்து கொடுப்பாரா? என்பது தான் சிறுமிகளின் சந்தேகம். இந்தச் செய்தி அபுபக்கர் செவிகளுக்கு எட்டியது. உடனே அவர் சிறுமிகள் இருக்கும் இடம் தேடிச் சென்றார். 'இறைவன் அருளால் எனது பதவி எனது வேலைகளை எந்த விதத்திலும் மாற்றிவிடாது. நிச்சயமாக நான் உங்கள் ஆடுகளில் இருந்து பால் கறந்து தருவேன்' என்று சொன்னாராம். அவ்வழியே செல்லும் போதெல்லாம் 'உங்கள் ஆடுகளில் இருந்து பால் கறக்க வேண்டுமா?' என்று கேட்பாராம்.

இதைத்தான் பொறுப்புணர்ச்சி என்கிறோம். இந்தப் பொறுப்புணர்ச்சி தான் தலைமைத்துவப் பண்பின் அடையாளமாகும்.

பாதையில் கற்களும், முட்களும் கிடக்கின்றன. பொறுப்பில்லாதவர்கள் தான் அதை கவனிக்காதது போல செல்வார்கள். அல்லது பிறரைக் குறைகூறிக் கொண்டிருப்பார்கள். பொறுப்பு மிகுந்தவர்கள் யாரையும் குறை சொல்லாமல் தாங்களே அதை பாதையில் இருந்து அகற்றுவார்கள். இதைத்தான் நாமும் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

போரில் தன் ஒரே மகனை இழந்த வயது முதிர்ந்த மூதாட்டி மதீனாவில் ஒரு குடிலில் தங்கி இருந்தார். இச்செய்தி அபுபக்கர் அவர்கள் செவிக்கு வருகிறது. இறைவனுக்கு அடுத்தபடியாக தாமே அந்த மூதாட்டிக்கு ஆதரவாக இருக்க விரும்பி காலையில் தினமும் விரைவாக விடியு முன் எழுந்து, வீடு பெருக்கி, பாத்திரம் கழுவி, தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு வந்துவிடுவாராம். அந்த ஊரில் உள்ள உமர் ஒருவர் செவிக்கும் இந்த மூதாட்டி பற்றிய தகவல் தெரிய வருகிறது. அவர் காலையில் விரைவாக அந்த மூதாட்டியின் தேவைகளை நிறைவேற்ற ஓடி வருகிறார். ஆனால் அவர் வருவதற்கு முன் வீடு சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் அதிகாலையில் உமர் மறைந்து இருந்து பார்த்தபோது அபுபக்கர் வேலைகளைச் செய்வதை பார்க்கிறார். பெரிய பதவியில் இருப்பவர்கள் ஒருவர் ஒருவருக்கு தெரியாமல் மூதாட்டி ஒருவருக்கு உதவ இப்படி ஓடுகிறார்கள்.

நாமாக இருந்தால் பதவி வந்ததும் பக்கத்தில் இருப்பவரைக்கூட பார்க்க நேரமில்லாதது போலக் காட்டிக் கொள்வோம்.

பதவி தானாக வரும் என்பது இன்று நம் நற்செய்தியின் மையச் செய்தி.

பதவிக்கு நான் வந்தால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று சொல்பவர்கள் எல்லாம், பதவிக்கு வந்த பிறகு சொன்ன அத்தனையையும் காற்றில் பறக்க விட்டுவிடும் செய்தியை இன்று நாம் பார்க்கிறோம். மூதாட்டி ஒருவருக்கு உதவி செய்யத் தலைவர்கள் இருவர் போட்டி போட்டு ஓடுகின்றார்கள்.

இன்று இப்படி பொறுப்புள்ள தலைவர்கள் நமக்கு கிடைப்பார்களா?

பெற்றோர் பிள்ளைகளை எப்படி பொறுப்புணர்ச்சியுடன் பேணுகிறார்கள்? முதிர்; வயது பெற்றோர் மீது பிள்ளைகளின் பொறுப்புணர்ச்சி என்ன?

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவும் மருத்துவர்களின் பொறுப்புணர்ச்சி சில நேரங்களில் நம்மை வேதனைப்பட வைக்கிறது.

நீதியை அறிவிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நீதியை மறந்து விடும் நிலை....

பொறுப்பில் உள்ள பலரின் பொறுப்பற்ற தனத்தால் பல அழிவுகள் இன்று நாம் காண்கின்றோம்.

கட்டிடப் பொறியாளரின் பொறுப்பற்ற தனத்தால் கட்டிடம் இடிந்து உயிர்ச்சேதம், பொருள் சேதம்.

ஆசிரியர்களின் பொறுப்பற்ற தனத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி?

நாடுகளின் தலைவர்களின் பொறுப்பற்றதனத்தால் நாட்டு மக்களின் நலவாழ்வு கேள்விக்குறி.

சுற்றுப்புற சூழல் மீது அக்கறையின்றி இருப்பது..

சமுதாயத்தின் எல்லா இடங்களிலும் பொறுப்பற்றதனம் மட்டுமீறி நிலவுவதால்தான் வன்முறையும் மட்டுமீறி நிலவுகின்றது.

பொறுப்பற்றதனம் மட்டுமீறி நிலவும் போது நல்ல தலைவர்கள் எப்படி நமக்குக் கிடைப்பார்கள்?

எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையை தாமே மாற்றாத வரை சமுதாய மாற்றம் நிகழாது.

எல்லாரும மாறினால் தான் நானும் மாறுவேன் என்பது பொறுப்பற்றதனம்.
1997ல் அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை ஈராக்கின் மீது கொண்டு வந்த காலம் அது. அப்போது அமைதியாக எதிர்ப்பை தெரிவிக்க விரும்பிய அமெரிக்கர் ஒருவர், கையில் எரியும் மெழுகுதிரியை ஏந்திக்கொண்டு வெள்ளை மாளிகை எதிரில் நின்றாராம். மழை பெய்தபோது மெழுகுதிரிக்கு ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு நின்றாராம். இதைப் பார்த்து வியந்த வெள்ளை மாளிகை சேவகர் ஒருவர் அவரிடம் நீங்கள் இப்படி நின்று எதிர்ப்பை தெரிவித்தால் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா? எனக் கேட்டாராம்.
அதற்கு அவர் அளித்த பதில் 'அவர்கள் மாறவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் என்னை மாற்றிவிட முடியாது என்பதை தெரிவிக்கவே நான் இங்கு நிற்கிறேன்.'

அரச பரம்பரையில் இல்லாத ஒரு ஏழைத் தொழிலாளியின் மகன் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டில் மன்னராக பதவி வகிக்கக் காரணம் அவரிடம் இருந்த பொறுப்புணர்வு.

நமது பொறுப்புணர்வை சிந்திப்போம். நல்ல விதமாக பொறுப்புடன் எல்லா நிலையினரும் செயல்பட நமது செபங்களை அர்ப்பணிப்போம். அமைதியான உலகம் உருவாக பொறுப்பாய் நம் செபங்களை ஏறெடுப்போம்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.
பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணி 3,13-15.17-19
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 4
இரண்டாம் வாசகம்: 1யோவான் 2,1-5
நற்செய்தி: லூக்கா 24,35-48

நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்?

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உண்மையான அன்பு உள்ளங்களே, பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்நாளில் எம்மாவூஸ் சீடர்களோடு உடன் பயணிப்பவர்களாய், உயிர்த்த இயேசுவின் தரிசனம் பெறுபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவோடு எம்மாவூஸுக்கு பயணம் செய்த சீடர்கள் வழியில் இயேசுவைக் கண்டு, குறிப்பாக அப்பம் பிடும் செயல் மூலம் அவரைக்கண்டு கொண்டு எருசலேம் திரும்புகின்றனர். மற்ற சீடர்களோடு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இயேசு அவர்கள் அனைவருக்கும் காட்சியளிக்கிறார். எம்மாவூஸ் நோக்கிப் புறப்பட்ட அவர்கள் பயணம் நினைத்தது போல் முடியவில்லை. வெற்றி பெறவில்லை. ஆனால் அதுவே ஓர் மிகப்பெரிய அனுபவமாக மாறி அவர்கள் வாழ்வை வெற்றி பெற வைத்தது. உயிர்த்த ஆண்டவரின் ஆற்றலும் அது தரும் அனுபவமும் நமது வாழ்க்கையை, வாழ்க்கைப்பாதையை மாற்றிப் போடக்கூடிய அளவுக்கு வல்லமை வாய்ந்தது என்பதே ஆணித்தரமான உண்மை. காணொளி ஒன்றில் கண்ட செய்தி ஒன்றினைக் கூறி எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர விரும்புகிறேன். தொலைதூர நெடுஞ்சாலைப் பயணம். இளம் தம்பதியர் இருவர் தங்களது மகிழுந்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இருமருங்கும் காட்டு மரஞ்செடிகொடிகள், அடைய வேண்டிய இலக்கை நோக்கிய பயணம், இனிய இசை என விரைந்து செல்கிறது மகிழுந்து. திடீரென்று சாலையின் நடுவில் ஒரு பெண், கை கால் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளமாய் காட்சியளிக்கிறாள். கண்களில் கண்ணீர் மல்க, கை கூப்பி உதவி கேட்டு மன்றாடுகிறாள். இளகிய மனம் கொண்ட அவர்கள் வண்டியை விட்டு இறங்கி உதவ விரைகின்றனர். தாயானவள் தூரத்தில் தெரிந்த ஒரு வண்டியைக்காட்டி கண்ணீர் சிந்துகிறாள். விரைந்து சென்று விபரம் என்னவென்று அறிகின்றனர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்து தடம் மாறி காட்டு மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வண்டியை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விடுகிறார். மோதிய வேகத்தில் வண்டியின் ஜன்னல்களும் கதவுகளும் இறுக மூடிக்கொள்ள, வண்டியினுள்ளே ஒரு குழந்தையானது மூச்சுவிட சிரமப்பட்டு உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறது. சூழ்நிலை புரிந்த தம்பதியினர், கண்ணாடிகளை உடைத்து குழந்தையைக் காப்பாற்றுகின்றனர். ஓட்டுநர் இடத்தில் அமர்ந்தவாறு இறந்திருந்த பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் திடுக்கென்று இருந்தது அவர்களுக்கு . ஏனெனில் எந்தப் பெண் தங்களது வண்டியை நிறுத்தி உதவி கேட்டு கண்ணீர் சிந்தினாரோ, அந்த பெண்ணே ஓட்டுநர் இடத்தில் இறந்து கிடந்தார். அக்குழந்தையின் தாயே அவர். தான் இறந்த பின்பும் தன் குழந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என துடிப்பது தாயின் உள்ளம் மட்டுமே. ஆவியாக மாறினாலும் தாய் எந்நிலையிலும் தாய் தான் என்பதை இந்நிகழ்வு நமக்கு நினைவூட்டுகிறது. தாயின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் எதையும் கூற முடியாது. அதே தாயன்பைத் தான் இன்றைய விவிலிய நிகழ்வில் இயேசுவினிடத்தில் நாம் காண்கிறோம். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு இணையான பாசத்தை மூன்றாண்டுகாலம் தன் சீடர்கள் மேல் காட்டியவர் இயேசு. சிறு குழந்தை போல் அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சியும் வாய்ப்பும் கொடுத்து வளர்த்தவர். தான் இறந்த பின்பும் தனது சீடர்கள் நலமாக வாழ வேண்டும் என்று எண்ணியவர், விரும்பியவர். எனவே தான் யூதர்களின் மிரட்டல், உரோமை அரசின் அதிகார அடக்குமுறை, தலைமை குருக்களின் கண்காணிப்பு, போன்ற கெடுபிடிகளுக்கு மத்தியில் தங்களுக்கு யார் உதவுவார்? என்று எண்ணி வருந்திய அவர்களுக்கு மகிழ்வளிக்க உயிர்த்த இயேசு காட்சியளிக்கிறார். இன்றைய திருப்பாடல் வரிகளில் வருவது போல நலமானதை எங்களுக்கு அருள்பவர் யார்? என எண்ணி வருந்திய அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அருள் ஆசீர் தருகிறார்.

வாழ்வில் சவால்களை சந்திக்கின்ற மனிதர்கள் ஏராளம். அவர்கள் அனைவரின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. எங்களுக்கு நன்மை செய்பவர் யார்? என்பதே. இன்று தமிழக மக்களாகிய நம் அனைவர் மனங்களிலும் எழுந்திருக்கக்கூடிய கேள்வியும் இதுதான். ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட், காவிரி நதிநீர் மேலாண்மை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் என நாம் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம். இது அனைத்திலுமிருந்து நம்மை மீட்பவர் யார்? இத்தனை தீமைகளுக்கும் மத்தியில் எம் தமிழக மக்களுக்கு நன்மை தருவது யார் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறோம், எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு உயிர்த்த இயேசுவாக தோன்றி திடமளிப்பவர் யார்? அவர் அனுபவமாக மாறப்போவது எது? சிந்திப்போம். இயேசு சீடர்களோடு அமர்ந்து உண்கிறார். அன்றைய காலத்து எளிய மக்களும் உண்ணும் உணவு மீன். இயேசு பிறக்கும் போது மட்டுமல்ல, இறந்து உயிர்த்த பின்பும் எளியவராகவே வாழ்கிறார் என்பதை உணர்த்துகிறது இச்செயல். கொஞ்சம் பணமும் பதவியும் புகழும் வந்தாலே, பேச்சும் மிடுக்கும் தோரணையும் மாறிவிடும் இக்காலத்தில் இயேசு இறந்து உயிர்த்து இறைமகனாக மாட்சி பெற்றும், எளியவராகவே காட்சி தருகிறார். உறவினர்கள் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது கை நனைத்தல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக நமது ஊர்களில் கருதப்படும். விருந்தில் கை நனைக்காமல் அதாவது உணவு உண்ணாமல் ஒருவர் சென்றுவிட்டாரென்றால் விழா கொண்டாடும் நபரோடு அவருக்கு இனி உறவு இல்லை என்று அர்த்தம். அதுவே விருந்து உண்டு மகிழ்ந்தார் என்றால் உறவு புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது ,தொடர்கிறது என்று அர்த்தம்.

சீடர்கள் தங்களது உயிர்த்த இயேசுவின் அனுபவத்தை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் தருணம், இயேசு அவர்கள் மகிழ்வில் பங்கு கொள்கிறார். தான் இறந்து உயிர்த்த பின்பும் அவர்களுடனான உறவு நீடிக்கும், தொடரும் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார். அதே போல் அனுதினமும் திவ்ய நற்கருணை மூலமாக நம்முள் வந்து தங்கி, நம்முடனான உறவையும் புதுப்பித்துக் கொள்கிறார். நாம் அதை உணர்கிறோமா? அவருடனான உறவைப் புதுப்பிக்கின்றோமா?

அன்று சீடர்களுக்கு தோன்றி கலங்காதீர்கள் பயம்கொள்ளாதீர்கள் என்று கூறி திடப்படுத்தியவர், எலும்பும் சதையுமான தனது உடலைத் தொட்டு நம்பிக்கை பெறச்செய்தவர், இன்று நமக்கும் திட மூட்டுகிறார். நம்பிக்கை தருகிறார். அன்று உண்மைக்கு சாட்சியம் பகிரவே நான் வந்தேன் என்று கூறியவர், இன்று இக்காலத்து சீடர்களாகிய நம்மைப்பார்த்து சொல்கிறார் நீங்களே இதற்கு சாட்சிகள் என்று. இன்றைய நமது ஒவ்வொரு செயல்பாடுகளும் நமது வருங்கால சந்ததியினருக்கு சாட்சியமே. சாட்சியம் சொல்லுதல் என்பது கொடை ஒரு புது வாழ்வு. சாட்சியம் கூறுபவனுக்கும் அதனால் பயன் பெறுபவனுக்கும் ஒரு கொடையாக புது வாழ்வளிப்பதாக மாறுகிறது. நமது வாழ்வு புது வாழ்வாக மாற, கொடையாக பொலிவடைய நாம் உண்மையின் சாட்சிகளாக மாற வேண்டும்.

எவ்வாறு உயிர்த்த இயேசு திகிலும் மனக்கலக்கமும் கொண்டிருந்த சீடர்களுக்கு தைரியமும் மனத்திடமும் கொடுத்தாரோ, அதே போல் நமக்கும் தருவார் என நம்புவோம். எங்களுக்குத் தலைவராக இருந்து வழிநடத்திய இயேசு இறந்து விட்டார். இனியார் எங்களுக்கு தலைமை தாங்குவார்? என்று எண்ணி கலங்கிய சீடர்களையே தலைவர்களாக மாற்றுகிறார். பாவ மன்னிப்பு பெற மனம் மாறுங்கள் என்று கூறி உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்ற சீடர்களாக அல்ல, தலைவர்களாக அல்ல, மக்கள் பணி செய்யும் பணியாளர்களாக அனுப்புகிறார். அவர்கள் தலைவர்களாக, முன் மாதிரிகைகளாக உருமாறுகிறார்கள். நாமும் உருமாறுவோம். நலமானதைப்பெற, நன்மையை பிறருக்கு தர உண்மையின் சாட்சிகளாவோம். நலமானதை நமக்கு அருள்பவர் இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அருளை நாம் பெற உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளி நம்மீது படுபவர்களாக நாம் மாற வேண்டும். பள்ளிப் பருவத்தில் குழி ஆடி, குவி ஆடி எனும் இரண்டு லென்ஸுகளைப் பற்றி நாம் படித்திருப்போம். ஒன்று ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும். மற்றொன்று ஒளியைக் குவித்து நெருப்பாக மாற்றும். நாம் உயிர்த்த இயேசுவின் திருமுக ஒளியைப் பெறுபவர்களாக மாறும்போது அதை பிறருக்கு பிரதிபலிக்கும் லென்சாகவும், அவ்வொளியால் தீமையை சுட்டெரித்து சுடர்விட்டு எரியும் நெருப்பாகவும் மாறவேண்டும் . தான் மட்டும் நலமாய் இருந்தால் போதும் என்று நினைப்பவரைக் காட்டிலும் தானும் நலமாய் வாழ்ந்து , தன்னைச்சுற்றிலும் இருப்பவர்களையும் நலமாய் வாழ வைக்க எண்ணும் நல் இயேசுக்களாய் வாழ முற்படுவோம். நலமனைத்தையும் தரும் உயிர்ப்பின் ஆற்றல் நம்மேலும் நம் குடும்பத்தினர் அனைவர் மேலும் இருந்து வழிநடத்துவதாக ஆமென்....
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
என் சாக்குத் துணியைக் களைகிறார்!

திருச்சிராப்பள்ளி மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2019ஆம் ஆண்டு கத்தார் நாட்டிலுள்ள தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர் ஓடி முடித்து விளையாட்டரங்கில் ஓய்ந்து நின்ற நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர் ஏறக்குறைய கிழிந்து நைந்துபோன ஷூ ஒன்றை அணிந்திருப்பது பலருடைய கண்களில் பட்டது. தன் பழைய கிழிந்த ஷூதான் தனக்கு லக்கி என்று இந்த இளவல் பெரிய மனத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டாலும், புதிய காலணிகள் வாங்குவதற்குக் கூட இயலாத இவருடைய பின்புலமும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படவில்லை என்ற விளையாட்டு அரசியலும் இங்கே தெளிவாகிறது. தன் தங்கத்தின் வெற்றிக்குப் பின்னாலும் தன்னுடைய கிழிந்த ஷூவைக் கழற்றத் துணியவில்லை கோமதி.

இவரின் வெற்றிக் களிப்பும், மகிழ்ச்சியும் இவரின் கிழிந்த காலணியைக் கழற்ற முடியவில்லை.

முதன் முதலாக வாங்கி உடைந்த பேனா, நம் லக்கியான சேலை, ஷர்ட், திருமண பட்டுச் சேலை, குருத்துவ அருள்பொழிவு திருவுடை, பழைய டைரி என நிறைய பழையற்றையும், கிழிந்தவற்றையும் நாம் இன்று நம்முடன் வைத்திருந்து பழமை பற்றிப் பெருமை கொள்கிறோம். பழமையான இவைகளை நாம் பாதுகாக்கக் காரணம் இவை நம் இறந்த காலத்தை, நம் வேர்களை நமக்கு நினைபடுத்துகின்றன.

ஆனால், சில நேரங்களில் - இல்லை, பல நேரங்களில் - நாம் தூக்கி எறியப்பட வேண்டிய பழையவற்றை இன்னும் தூக்கிக்கொண்டே திரிகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நம் பழையவற்றை அகற்றிவிட்டு புதியவற்றை அருள இறைவன் வருகிறார் என்று நமக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றை பதிலுரைப்பாடலோடு (காண். திபா 30) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

'புகழ்ப்பா, திருக்கோவில் அர்ப்பணப்பா, தாவீதுக்கு உரியது' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல் மிக அழகான உருவகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. 'நீர் என் புலம்பலை களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்!' (திபா 30:11). 'புலம்பல்' மற்றும் 'சாக்குத்துணி', 'களிநடனம்' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற ஒரே பொருள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படுவதால், இங்கே 'ஒருபோகு நிலை' அல்லது 'இணைவுநிலை' என்னும் இலக்கியக்கூறு காணக்கிடக்கிறது.

தான் அணிந்திருக்கின்ற சாக்குத்துணியை கடவுள் அகற்றுவதாக தாவீது பாடுகிறார். இன்று சாக்கு என்பது 'ஜனல்' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இது ஆடுகளின் மயிரிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த சாக்கு ஒரு விநோதமான பயன்பாட்டுப் பொருள். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, சீனி போன்றவை சேமிக்கப்படுவதும் சாக்கில்தான். அடுப்பறையில், கழிவறைக்கு வெளியில் ஈரம் அகற்றும் கால்மிதியாகப் பயன்படுத்துவதும் சாக்குதான். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் நிழலுக்கு, கவிழ்த்து வைக்கப்பட்ட பஞ்சாரத்துக் கூடையிலிருக்கும் கோழிக்குஞ்சுகளை பருந்துகளின் பார்வையிலிருந்து காப்பாற்ற கூடையின் மேல், பெரிய பாத்திரத்தை சூடு பொறுத்து இறக்க கைகளில், அப்பாத்திரத்தின் கரி தரையில் படியாமல் இருக்க தரையில், பழைய பாத்திரங்களை மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி வீடு மாற்ற என்று இதன் பயன்பாடு மிகவே அதிகம். நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தடைசெய்யப்பட்டபின் இப்போது சாக்குப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது நம் ஊரில். விவிலியத்தில் சாக்கு மூன்று பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஒன்று, துக்கம் அல்லது சோகம். தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டான் என்று தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் யாக்கோபு சாக்கு உடை அணிந்து துக்கம் கொண்டாடுகிறார் (காண். தொநூ 37:34). தன் இனத்தார் அழிக்கப்படப் போகின்றனர் என்று கேள்விப்பட்ட எஸ்தர் அரசி சாக்கு உடை அணிகின்றார் (காண். எஸ் 4:1-2). தன் மகனின் இறப்பு செய்தி கேட்டவுடன் சாக்கு உடை அணிகின்றார் தாவீது (காண். 2 சாமு 42:25). இரண்டு, மனமாற்றம். ஏறக்குறைய முதல் பொருளை ஒட்டியதுதான். இறைவாக்கினர் யோனாவின் செய்தியைக் கேட்ட நினிவே நகரம் சாக்கு உடை அணிந்துகொள்கிறது (காண். யோனா 3:8, மத் 11:21). மூன்று, சேமிப்பு பை. எகிப்துக்கு உணவு சேகரிக்க வந்த தன் சகோதரர்களின் கோணிப்பையில் தன் வெள்ளித்தட்டை வைத்து தைக்கிறார் யோசேப்பு (காண். தொநூ 42:25). 'என் சாக்குத் துணியை நீர் களைகிறீர்' என்று தாவீது பாடும்போது, தன்னுடைய 'துக்கத்தையும்,' 'பாவத்தையும்' இறைவன் களைவதாக முன்மொழிகின்றார் தாவீது. கடவுள் சாக்குத்துணியை அகற்றினால் மட்டும் போதுமா? நிர்வாணத்தை அவரே மறைக்கின்றார். எப்படி? மகிழ்ச்சியால்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-32,40-41) திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்படுகின்றனர். தலைமைச் சங்கம்தான் இயேசுவுக்குச் சிலுவைத்தீர்ப்பிடுமாறு பிலாத்துவை வலியுறுத்தியது. தங்களுடைய ஆண்டவரும் போதகருமான இயேசுவைக் கொலைக்கு உட்படுத்திய அதே சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும் நிறுத்தப்படும்போது இயல்பாக அவர்களின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வு 'பயம்.' 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா?' என்று தலைமைக்குரு கேட்டபோது, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர் திருத்தூதர்கள். இந்தப் பதிலில் இவர்களின் பயமற்ற நிலையையும் அதே வேளையில், 'நீ ஒரு மனிதன்தான்!' என்ற தலைமைக் குருவையே எதிர்த்து நிற்கும் இறைவாக்கினர் துணிச்சலையும் பார்க்கின்றோம். இவர்களின் இந்தப் பதிலால் இவர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர். ஆனாலும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட திருத்தூதர்கள், 'இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்திலிருந்து வெளியே சென்றனர்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா.

அரசவையிலிருந்து பொன்னும் பரிசிலும் பெற்று வெளியே வந்தால் ஊரார் வியப்புடன் பார்த்து வாயாரப் புகழ்வர். நெற்றி முகர்வர். நன்றாய் அடிபட்டு, கிழிந்த ஆடை, உடைந்த பற்கள். வழியும் இரத்தம், கலைந்த தலை என்று வெளியே வந்தால் எல்லாரும் ஏளனம் செய்வர். ஒதுங்கிச் செல்வர். ஆனால், திருத்தூதர்கள் அச்சம் அற்றவர்களாக, அவமதிப்பை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதோடு, இவற்றுக்காக மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

ஆக, 'அச்சம்' என்னும் சாக்குத்துணியை திருத்தூதர்களிடமிருந்து அகற்றி 'மகிழ்ச்சி' என்ற ஆடையை கடவுள் இவர்களுக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 5:11-14) யோவான் 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைக்' காட்சியில் காண்கின்றார். 'பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லாமல், இகழப்பட்டு, மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, அடிப்பதற்காக இழுத்துச்செல்லபட்ட ஆட்டுக்குட்டி போல' (காண். எசா 52:13-53:12) இருந்த இயேசு, 'வல்லமை, செல்வம், ஞானம், ஆற்றல், மாண்பு, பெருமை, புகழ்' என்னும் ஏழு குணங்களைப் பெருகிறார். யூத நம்பிக்கைப்படி கடவுள் கொண்டிருக்கும் அல்லது கடவுளிடம் நிறைவாக இருக்கும் ஏழு குணங்கள் இவை. கடவுளுக்கு உரித்தான ஏழு நிறைகுணங்களும் இப்போது இயேசுவுக்கு வழங்கப்படுகின்றன.

ஆக, 'அவமானம்' என்னும் சாக்குத்துணியை இயேசுவிடமிருந்து அகற்றி, 'மாட்சி' என்ற ஆடையை கடவுள் அவருக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 21:1-19) யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை இரண்டு நிலைகளில் பதிவு செய்கிறார் யோவான். முதலில், லூக்கா நற்செய்தில் செய்வதுபோல, தன் சீடர்களோடு இணைந்து உணவு உண்கிறார் இயேசு. இரண்டவதாக, மூன்று முறை தன்னை மறுதலித்த பேதுருவை, 'என்னை அன்பு செய்கிறாயா?' என்று மூன்று முறை கேட்டு, தலைமைத்துவத்தால் அவரை அணிசெய்கிறார்.

எருசலேமிலிருந்து கலிலேயா திரும்புகின்ற சீடர்கள் தாங்கள் முதலில் செய்துவந்த மீன்பிடித்தொழில் செய்யப் புறப்படுகின்றனர். இது இவர்களுடைய ஏமாற்றத்தின், விரக்தியின், சோர்வின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அவர்களை அழைத்த நிகழ்வில் போலவே (காண். லூக் 5:1-11) காலியான வலைகள் மற்றும் காலியான வயிறுகளோடு காய்ந்திருக்கின்ற சீடர்களுக்கு மிகுதியான மீன்பாட்டை அருளுகின்றார் இயேசு. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தாயன்போடு, 'பிள்ளைகளே' என் அவர்களை அழைத்து, 'கரியினால் தீ மூட்டி உணவு தயாரித்து' அவர்களின் பசியைப் போக்குகின்றார். தொடர்ந்து, சீமோன் பேதுருவோடு தனித்து உரையாடும் இயேசு, 'நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்பு செய்கிறாயா?' என்று கேட்டு, 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,' 'என் ஆடுகளை மேய்,' 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று தலைமைத்துவப் பொறுப்பை அவருக்கு அளிக்கின்றார். மேலும், பேதுருவின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் என்பதையும் முன்னுரைக்கும் இயேசு, 'என்னைப் பின்தொடர்!' என்று தற்கையளிப்பிற்கு அவரை அழைக்கின்றார்.

ஆக, 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணியை சீடர்களிடமிருந்து அகற்றும் இயேசு, 'பொறுப்புணர்வு' என்ற ஆடையால் அவர்களை அணிசெய்கின்றார்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில், 'அச்சம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மகிழ்ச்சி' என்னும் ஆடையும், இரண்டாம் வாசகத்தில், 'அவமானம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மாட்சி' என்னும் ஆடையும், நற்செய்தி வாசகத்தில், 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'பொறுப்புணர்வு' என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.

இன்று நம்மிடம் இருக்கும் 'அச்சம்,' 'அவமானம்,' மற்றும் 'குற்றவுணர்வு' என்ற சாக்குத் துணிகளை அகற்றி, 'மகிழ்ச்சி,' 'மாட்சி,' 'பொறுப்புணர்வு' என்னும் ஆடைகளை நமக்கு அணிவிக்கின்றார் கடவுள்.

எப்படி?
1. 'அச்சம்' அகற்றி 'மகிழ்ச்சி'
நம் இருப்பை நாம் மறுக்கும்போது, அல்லது பிறருடைய இருப்பை அதிக மதிப்பிடும்போது நமக்கு அச்சம் வருகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைக் குருவைப் பார்த்து மறைமுகமாக, 'நீரும் ஒரு மனிதன்தான். உமக்கு அச்சப்படத் தேவையில்லை' என்று சொல்கின்றனர் திருத்தூதர்கள். பல நேரங்களில் இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அல்லது இருப்பதை மிகைப்படுத்திப் பார்த்து நாம் அச்சம் கொள்கிறோம். சிறிய தலைவலி வந்தால் புற்றுநோய் வந்துவிட்டதாகவும், சிறிய பிரச்சினையை பெரிய ஆபத்தாகவும் நினைக்கின்றோம். தாங்கள் யார் என்றும், தங்களுடன் கடவுள் இருக்கின்றார் என்றும் அறிந்துகொள்கின்ற சீடர்கள், தலைமைக்குரு யார் என்றும் தெரிந்துகொள்கின்றனர். இவ்வளவு நாளாக, தாங்கள் கொண்டிருந்த மிகைப்படுத்துதலை அகற்றி, 'நீயும் ஒரு மனிதன்தான். உன்னைவிட கடவுள் இருக்கிறார்' என்று துணிவு கொள்கின்றார். ஆக, மிகைப்படுத்துதல் மறைந்தாலே அச்சம் மறைந்துவிடும். அரசுத் தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்விலேயே தோற்றுவிட்டதுபோல நாம் அச்சப்படக் காரணம் நம்முடைய மிகைப்படுத்துதலே. ஆக, மிகைப்படுத்துதல் மறைந்து, மனிதர்களை மனிதர்களாக, தேர்வை தேர்வாக, பிரச்சனையை பிரச்சினையாகப் பார்க்கும்போதும், இவற்றை எல்லாம் விட பெரிய கடவுளை நம் அருகில் வைத்துக்கொள்ளும்போதும் நம் அச்சம் மறைந்து நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது.

2. 'அவமானம்' அகற்றி 'மாட்சி'
இன்று நாம் ஒருவரின் பின்புலம், இருப்பு, கையிருப்பு, பையிருப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பார்க்கும்போது, அவரை நாம் நம்மைவிடத் தாழ்வானவர் என எண்ணி, இகழ்ச்சியாகப் பார்ப்பது சில நேரங்களில் நடக்கும். அல்லது இதே காரணங்களுக்காக நாமும் மற்றவர்களால் அவமானத்திற்கு உள்ளாகியிருப்போம். அவமானம் அல்லது வெட்கம் என்பது நம்முடைய ஆளுமையைச் சீர்குலைக்கும் பெரிய காரணி. 'தனக்குத் தானே பொய்யாய் இருக்கும் ஒருவர் அவமானத்தால் கூனிக்குறுகுவார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. எடுத்துக்காட்டாக, என் அறையின் இருட்டின் தனிமையில் நான் ஒரு மாதிரியாகவும், வெளியில் வேறு மாதிரியாகவும் இருக்கும்போது, என்னை அறியாமல் என் மனம் வெட்கப்படும். ஏனெனில், என் மனத்திற்கு என் அறையின் இருட்டில் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியும். நமக்குள்ளே நாம் கொள்ளும் அவமானம் குறைய வேண்டுமெனில் எனக்கு நானே பொய் சொல்வதை நான் குறைக்க வேண்டும். பிறரால் வரும் அவமானம் குறைய வேண்டுமெனில் நான் பொறுமை காக்க வேண்டும். ஆக, பொய்யைக் குறைக்கும்போது, பொறுமையாய் இருக்கும்போது அவமானம் மறைந்து மாட்சி பிறக்கும்.

3. 'குற்றவுணர்வு' அகற்றி 'பொறுப்புணர்வு'
நம்மை வெற்றிப்பாதையிலிருந்து பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரிய காரணி குற்றவுணர்வு. நாம் கடந்த காலத்தில் செய்த தவறும், அந்தத் தவறு நம்மில் உருவாக்கிய காயமும் நம்மை முன்நோக்கிச் செல்லவிடாது. 'ஐயோ! நான் இப்படி,' 'நான் இப்படித்தான்,' 'என்னால் திருந்த முடியாது,' 'என் பழைய சுமை கடினமாக இருக்கிறது' என்று சோர்வும், விரக்தியும் கொண்டிருந்தால் நம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. முதல் ஏற்பாட்டில் மிக அழகான வாக்கியம் இருக்கிறது: தானும் தன் மனைவியும் தன் நிலமும் கடவுளால் சபிக்கப்பட்டவுடன், ஆதாம் தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிடுகின்றான். இதுவரை 'பெண்' (காண். தொநூ 2:23) என அறியப்பட்டவள் இப்போது 'உயிர் வாழ்வோர் அனைவரின் தாயாக' (காண். தொநூ 3:20) மாறுகிறாள். 'ஐயோ! பாவம் செய்தாயிற்று! கீழ்ப்படியவில்லை! கடவுளின் கட்டளை மீறிவிட்டேன்!' என ஆதாமும், ஏவாளும் குற்றவுணர்வுடன் புலம்பிக் கொண்டே இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கின்றனர். நாமும் நம் பழைய பாவக் காயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், கொஞ்சம் நன்றாகச் சிரித்தாலே, அல்லது தங்களுக்கென ஒரு நல்ல பொருளை வாங்கினாலே குற்றவுணர்வு கொள்வர். இதுவும் ஆபத்தானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல பொருள்களைப் பயன்படுத்தவும், மதிப்பாக இருக்கவும், மதிப்பானவற்றோடு, மதிப்பானவர்களோடு உறவு கொள்ளவும் குற்றவுணர்வுகொள்தல் கூடாது. மதிப்பான இந்தப் பொருளை வைத்து நான் எப்படி என் மதிப்பைக் கூட்ட முடியும்? என்று நினைக்க வேண்டுமே தவிர, 'ஐயோ! எனக்கு தகுதியில்லை இதற்கு!' என்று அழுது புலம்பக்கூடாது. 'நான் தவறிவிட்டேன். நான் மறுதலித்தேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்' என சரணாகதி ஆகிறார் பேதுரு. ஆக, குற்றவுணர்வு மறையும்போது பொறுப்புணர்வு தானாக வந்துவிடுகிறது.

இறுதியாக,
பழைய சாக்குத் துணிகளை இறைவன் அகற்றி புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது, நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம். அப்போதுதான், 'மகிழ்ச்சி என்னும் ஆடை அணிந்து களிநடனம் செய்ய முடியும்' - இன்றும் என்றும்!
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
இயேசு விண்ணகம் சென்ற பின் பேதுரு இத்தாலி நாட்டில் உள்ள உரோமை நகரிலே உயிர்த்த ஆண்டவரைப் பற்றிப் போதித்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த நகரில் வேதகலாபனை எழுந்தது. கிறிஸ்தவர்கள் உரோமைப் பேரரசால் கொலை செய்யப்பட்டார்கள். இதைக் கண்டு பேதுரு என்ன செய்திருக்க வேண்டும்? கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி இருந்திருக்க வேண்டும். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர் உரோமையை விட்டு ஓடினார். உரோமை நகரின் எல்லையை அடைந்துவிட்டார். அப்போது சற்றும் எதிர்பாராத காட்சி ஒன்றைக் கண்டார். இயேசு தன் சிலுவையைச் சுமந்துகொண்டு உரோமை நகருக்குள் நுழைந்து கொண்டிருந்தார். தப்பித்து ஓடிக் கொண்டிருந்த பேதுரு இயேசுவைப் பார்த்து ஆண்டவரே எங்கே செல்கிறீர் என்று கேட்டார். அதற்கு இயேசு மறுபடியும் சிலுவையில் அறையப்பட நான் உரோம் நகர் செல்கிறேன் என்றார். அப்போது இயேசு சொன்ன வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உன் முதிர்ந்த வயதில் வேறு ஒருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார் என்பது நினைவுக்கு வந்தது.

உடனே முழந்தாளிட்டு ஆண்டவரே என்னை மன்னித்து விடும் என்று அழுது உரோமை நகருக்குள் நுழைந்தார். தலைகீழாக அங்கு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். இது வரலாறு தரும் உண்மை.

பேதுரு மட்டுமல்ல திருத்தூதர்கள் மட்டுமல்ல, அவர்கள் வழிவந்த எத்தனையோ ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் இயேசுவுக்காக உயிர் துறந்துள்ளார்கள். தந்தை புரோ சுடப்பட்டது. (பக்கம் எண் 124 காண்க.)

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு குடும்பத்தின் தந்தை, தாய், மகன், மகள் ஆகிய நான்கு பேரையும் வேளாங்கன்னி ஆலயத்தில் சந்தித்துப் பேசினேன். 2 ஆண்டுகள் கடந்து மறுமுறையும் சந்தித்தேன். ஆனால் மூவர் மட்டுமே வந்திருந்தனர். பையன் இல்லை. எங்கே உங்கள் மகன் என்று கேட்டேன் தாயிடம். மனந்துடித்தாள். 10 ஆண்டுகள் கடந்து மகனை பெற்று ஆரோக்கியராஜ் என்று பெயர் வைத்தோம். ஆனால் இறைவன் அவர் அருகில் மகன் இருக்க வேண்டும் என விரும்பி எடுத்துக் கொண்டார். இன்று என் மகளையும் இந்தத் தாய் அழைத்தால் நான் தடுக்க முடியாது என்று என்னிடம் கூறினார்.

இதுதான் உண்மையான விசுவாசம். இந்த ஆழமான விசுவாசத்திற்கு அற்புதமான புதுமைகளைச் செய்யும் ஆற்றல் உண்டு. 5 அப்பங்களையும் 2 மீன்களையும் 5000 பேர் உண்ட பின் மீதியை 12 கூடைகளில் நிறைத்தனர்.

கல்லறை வெடித்து கலிலேயன் இயேசு உயிர்த்தார். சேறு செந்தாமரையை இழப்பதில்லையா? ஆனால் சேற்றுக்கு மதிப்பு. சிப்பி முத்தை இழப்பதில்லையா? இதனால் சிப்பிக்கு மதிப்பு. மண் மாணிக்கத்தை இழப்பதில்லையா? இதனால் மண்ணுக்கு மதிப்பு. அதேபோலத்தான் கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு எதுவுமே இழப்பு இல்லை.

ஆண்டவர் சொன்னார் கோதுமை மணியானது தரையிலே விழுந்து மடிந்தால் ஒழிய அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் மிகுந்த பலன் தரும் (யோவா. 12:24). ஆம்! மகனே! மகளே! உன் உயிர் இழப்பு உனக்கு இழப்பு அல்ல. ஏனெனில் நான் வெற்றிக் கொடி நாட்டிவிட்டேன். எனக்கு முதலிடம் கொடு. நான் டனக்கு அரசில் முதலிடம் கொடுப்பேன் என்பார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 என்னை அன்பு செய்கின்றாயா?

என்னை அன்பு செய்கின்றாயா? என்று இயேசு புனித பேதுருவைப் பார்த்துக் கேட்டார். அதே கேள்வியை இயேசு இன்று நம்மைப் பார்த்து கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்.

இயேசுவை அன்பு செய்ய விரும்பும் நாம் அனைவரும் முதலில் இயேசு எங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இயேசுவே, அவர் எங்கே வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதைத் தெளிவாகக் கற்பித்துள்ளார்.

மத் 25:31-40 : 1. பசியாய் இருப்போர், 2. தாகமாயிருப்போர், 3. அன்னியர், 4. ஆடையற்றோர், 5. நோயுற்றோர், 6. சிறைப்பட்டோர். நாம் இந்த ஆறுபேரையும் அன்பு செய்யும்போதெல்லாம் இயேசுவையே அன்பு செய்கின்றோம். அன்பு என்றால் என்ன? என்பதை விளக்க இதோ நான் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சி ஒன்று. புலி ஒன்று அதன் நான்கு குட்டிகளோடு நடந்து சென்றுகொண்டிருக்கின்றது. கல்லும், முள்ளும் நிறைந்த காட்டுப் பாதை! மூன்று புலிக்குட்டிகள் தாயோடு நடக்கின்றன.

ஒரு புலிக்குட்டியைக் காணோம்! அந்தத் தாய்ப் புலி பதறிப்போய் திரும்பிப் பார்க்கின்றது. சற்று தூரத்தில் நான்காவது புலிக்குட்டி நடக்கமுடியாமல் தடுமாறி, தடுமாறி கீழே விழுகின்றது.

உடனே அந்தத் தாய்ப்புலி நடக்க முடிந்த மற்ற மூன்று புலிக்குட்டிகளையும் விட்டுவிட்டு, நான்காவது புலிக்குட்டியை நோக்கிச் செல்கின்றது. சென்று நடக்க முடியாமல் தள்ளாடும் அந்த நான்காவது புலிக்குட்டியின் கழுத்தை தன்னுடைய வாயால் கவ்வி தூக்கிக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றது.

அந்த தாய்ப் புலி கொண்டிருந்த உணர்வு நிலைக்குப் பெயர்தான் அன்பு. தடுமாறும் உள்ளங்களுக்கு தயவு காட்டுவதற்குப் பெயர்தான் அன்பு.

இயேசுவை, நமது அயலாரை அன்பு செய்யவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட இதோ ஒரு கதை.

காகம் ஒன்று. அதற்குச் சரியான பசி. உணவு தேடி அலைகின்றது. அதற்கு ஒரு நத்தை கிடைத்தது. அதை ஒரு மரக்கிளையின் மீது வைத்து அதன் ஓட்டை உடைத்தது; அதற்குள்ளேயிருக்கும் சதையை உற்றுப்பார்த்தது; அந்த நத்தையின் ஓட்டை அதனால் உடைக்க முடியவில்லை.

அந்த மரத்தடியில் ஒரு நரி உட்கார்ந்திருந்தது. அது காகத்தைப் பார்த்து, என்ன செய்தி? எனக் கேட்டது. அதற்குக் காகம், இந்த நத்தையின் ஓட்டை உடைத்து உள்ளேயிருக்கும் சதையை உண்ணப்பார்க்கின்றேன், முடியவில்லை என்றது. அதற்கு நரி, நான் ஒரு வழி சொல்கின்றேன். அதன்படி செய் என்றது. காகம், என்ன? என்றது. கீழே ஒரு கருங்கல் பாறை கிடக்கின்றது; அதன் மீது நத்தையைப் போட்டால் அது உடைந்துவிடும் என்றது.

அப்படியே காகம் செய்தது. கீழே விழுந்த நத்தை பாறையின் மீது பட்டது. ஓடு உடைந்தது. அதற்குள்ளேயிருந்த சதை வெளியே வந்து விழுந்தது. அதை எடுத்து நரி விழுங்கிவிட்டது; காகம் ஏமாந்தது.

இந்தக் கதையில் வருகின்ற நரி கொண்டிருந்த உணர்வு நிலைக்குப் பெயர்தான் சுயநலம்.

அன்பிற்கு எதிரானது சுயநலம். இந்தச் சுயநலம் வரலாற்றிலே பெரிய பெரிய புனிதர்களையெல்லாம் ஆட்டிப்படைத்திருக்கின்றது.

உரோ 7:14-25 முடிய உள்ள பகுதி. அங்கே தூய பவுலடிகளார் கதறி அழுகின்றார். நான் என்ன சொல்வேன்? நான் என்ன செய்வேன்? இரங்கத்தக்க மனிதன் நான். எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றேனோ அதை செய்துகொண்டிருக்கின்றேன் என்கின்றார். புனித பவுலடிகளார் எப்படிப்பட்டவர்? அவர் ஒப்பற்ற என் செல்வமே, ஓ எந்தன் இயேசுநாதா! உன்னை நான் அறிந்து உறவாட உள்ளதெல்லாம் இழந்தேன் என்று வாழ்ந்தவர்.

அவரையும் சுயநலம் விட்டுவைக்கவில்லை. கீதாஞ்சலியை எழுதி நோபல் பரிசு பெற்ற, கவிஞர் இரபீந்திரநாத் தாகூர். அவர், இறைவா நீதான் என் உற்ற நண்பன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். என் சொத்தும் சுகமும் நீதான் என்பதும் எனக்கு நன்றாகப் புரியும். ஆனாலும் நீ என் வீட்டுக்கு வந்தால் என் வீட்டில் கிடக்கும் ஒரு தூசியைக் கூட விட்டுக்கொடுக்கமாட்டேன் என்கின்றார்.

ஆக, எல்லாரையும் சுயநலம் சோதிக்கும். என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன, நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் எல்லாருடைய மனத்திலும் எழும்.

இயேசுவை நமது அயலாருக்குள் கண்டு அவரை அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.

எளியவர்களில், இல்லாதவர்களில், புறக்கணிக்கப்பட்டவர்களில் இயேசுவைக் காணவிடாது நமது பண ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது பதவி ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது உடல் ஆசை நம்மைத் தடுத்து விடும்;
நமது உயிர் ஆசை நம்மைத் தடுத்து விடும்.

இயேசுவை அன்பு செய்யவிடாமல் யூதாசைத் தடுத்தது பண ஆசை!

இயேசுவை அன்பு செய்யவிடாமல் பிலாத்துவைத் தடுத்தது பதவி ஆசை!

இயேசுவை அன்பு செய்யவிடாமல் ஏரோதைத் தடுத்தது உடல் ஆசை!

இயேசுவை அன்பு செய்யவிடாமல் பேதுருவைத் தடுத்தது உயிர் ஆசை!

இந்த ஆசைகளையெல்லாம் மீறி, நமது ஆண்டவர் இயேசுவை நமது அயலாருக்குள் கண்டு அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.

ஆம். இயேசுவை அன்பு செய்வது அவ்வளவு எளிதல்ல.

என்ன செய்யலாம்?

புனித பவுலடிகளார் உரோ 7:25-இல் இயேசு நம்மை விடுவிப்பார் என்கின்றார்.

இரபீந்திரநாத் தாகூர், ஒரு நிமிடம் உன் அருகில் அமர அருள்வாயோ இறைவா என்கின்றார்.

இன்று இதுவே நமது மன்றாட்டாக இருக்கட்டும் : இறைவா, கல்லான இதயத்தை எடுத்துவிடு; எம்மைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழவிடு; எம்மையே நாங்கள் மறக்கவிடு; கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு.

மேலும் அறிவோம் :

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (குறள் : 8).

பொருள் :
அறக்கடலாகத் திகழும் சான்றோனாகிய இறைவன் அடியொற்றி நடப்பவர், ஏனைய பொருளும் இன்பமும் ஆகிய கடல்களை எளிதாகக் கடந்து செல்வர்; ஏனையோர் பிற துன்பங்களிலிருந்து மீள முடியாது தவிப்பர்.
மறையுரைச்சிந்தனை  - தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 மருமகன் ஒருவர் ஒருநாள் காலையில் தன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். அன்று மாமியார் உப்புமா கிண்டியிருந்தார்; கொஞ்சம் உப்புமா தான் மீதி இருந்தது. அதை ஒரு தட்டில் போட்டு மருமகனிடம் கொடுத்தார். மருமகன் அதைச் சாப்பிட்டார். அது அவருக்குப் போதவில்லை. மாமியாரைக் கூப்பிட்டு, காலியான தட்டை அவரிடம் காட்டி, "அத்தை! இந்தத் தட்டை எப்போது வாங்கினீர்கள்?" என்று கேட்டார். மாமியார் சமையல் அறையில் காலியாகக் கிடந்த உப்புமா சட்டியைக் கொண்டு வந்து மருமகனிடம் காட்டி, "மாப்பிள்ளை! இந்த உப்புமா சட்டியை வாங்கிய போதுதான் அந்தத் தட்டையும் வாங்கினேன்" என்றார்! சட்டியும் காலி, தட்டும் காலி: உள்ளேயும் ஒன்றுமில்லை, வெளியேயும் ஒன்றுமில்லை.

இத்தகைய ஓர் அனுபவம் இயேசு உயிர்த்தபின் அவருடைய சிடர்களுக்கும் கிடைத்தது. இயேசு உயிர்த்துவிட்டார். ஆனால் அவர் எங்கே போனார் ? தெரியவில்லை. சரி, இனிக் கிறிஸ்துவை நம்பிப் பயனில்லை; மீன்பிடிக்க மறுபடியும் கடலுக்குச் சென்றால், அங்கும் ஒரு மீன் கூட அகப்படவில்லை. கடவுளும் அவர்களைக் கைவிட்டுவிட்டார். கடலும் அவர்களைக் கைவிட்டு விட்டது. "ஏமாற்றமே! உன் பெயர்தான் வாழ்க்கையா?" என்று சீடர்கள் வினா எழுப்பி நொந்து நூலாகி நின்றனர்.

ஏமாற்றத்தின் நடுவில்தான் கடவுள் காட்சி அளிக்கிறார். முதன் முறையாக இயேசு சீடர்களை அழைத்தபோது நிகழ்ந்ததுதான் மறுபடியும் நிகழ்கிறது. இரவு முழுவதும் மீன்பிடித்தும் ஒரு மீன் கூட அகப்படாமல் ஏமாற்றத்துடன் நின்ற முதல் சீடர்களிடம், படகை ஆழத்திற்குக் கொண்டு போய் வலையை வீசும்படி இயேசு கேட்டார். ஏராளமான மீன்கள் அகப்பட்டன (லூக் 5:4-10). இயேசு உயிர்த்தபின் அதே சூழ்நிலை உருவாகிறது. கிறிஸ்து அவர்களிடம், "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் அகப்படும்" என்கிறார் (யோவா 21:6), சீடர்களும் அவ்வாறு செய்கின்றனர். 153 பெரிய மீன்கள் அகப்படுகின்றன.

இரவும் பகலும் ஒன்று சேர்ந்துதான் ஒருநாள் "ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே. இரவென்றால் பகலொன்று வந்திடுமே," பகல் இல்லாத இரவு மட்டும் இல்லை. அவ்வாறே தோல்வி என்ற இரவுக்குப் பின்பு வெற்றி என்ற பகல் உதயமாகும். எனவே, நாம் ஒருபோதும் விரக்தி அடையக்கூடாது. கடவுளே இல்லை என்று தோன்றும் போதுதான் கடவுள் நமக்கு மிகவும் அருகாமையில் உள்ளார். பல்வேறு துன்பங்களைச் சந்தித்த பேதுரு நமக்குக் கூறும் அறிவுரை: "உங்கள் கவலைகளை யெல்லாம் அவரிடம் (கடவுளிடம்) விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (1 பேதுரு 5:7)

ஒரு சிறுவனை அவனுடைய அம்மா மண்ணெண்ணையால் குளிப்பாட்டினார். ஏனெனில் அவன் 'துருதுரு' என்று அலைந்தானாம். அவ்வாறே பேதுருவும் 'துருதுரு' என்று இருந்தார். இயேசு சீடர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர்தான் முந்திரிக்கொட்டை போல் பதில் சொன்னார். "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத் 26:33) என்று இயேசு விடமே சவால் விட்டபேதுரு சவால் விட்டபேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்தார் (மத் 26:69-75).

'துருதுரு' என்றிருந்த பேதுருவைக் கிறிஸ்து மண்ணெண்ணை கொண்டு அல்ல, தமது இரத்தத்தால் கழுவினார். இதைப் பேதுருவே சுட்டிக்காட்டியுள்ளார். நாம் மீட்படைய கிறிஸ்து கொடுத்த விலை பொன்னோ வெள்ளியோ அன்று. மாறாக அவருடைய உயர் மதிப்புள்ள இரத்தமாகும் (1 பேதுரு 1:18).

செம்மறியின் இரத்தத்தால் கழுவப்பட்டுப் புதுப் பிறப்பெடுத்த பேதுரு, தான் இயேசுவை மும்முறை மறுதலித்ததிற்குப் பரிகாரமாக மூன்றுமுறை, "ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என்று உமக்குத் தெரியுமே" (யோவா 21:15) என்று பணிவுடன் பதில் அளித்தார்.

இயேசு பேதுருவை முழுமையாக மன்னித்து, முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவரிடம் திருச்சபையின் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். கடவுளைப் பொறுத்தமட்டில் அவரது அன்பு மாறாதது. நிலையானது. "கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை" (உரோ 11:39).

திருமண நாள் அன்று பெரும்பாலும் மணமகன் மஞ்சள் கயிறு கொண்டு மணமகள் கழுத்தில் தாலி கட்டுவார். ஒரு சில நாள்கள் கழித்து அதைப் பிரித்துவிட்டு தங்கச் சங்கிலியால் தாலி கட்டுவார். அவ்வாறே மணமகனாம் கிறிஸ்து முதலில் மீன் படகுக் கயிற்றால் பேதுருவுடன் துவக்கிய உறவை. உயிர்த்தபின் சிலுவைச் சங்கிலி கொண்டு உறுதி செய்கிறார். இரண்டாம் முறையாகப் பேதுருவை, "என்னைப் பின் தொடர்" (யோவா 21:19) என்று சொல்லி அழைத்து, சிலுவைச் சாவால் அவர் தம்மை மகிமைப்படுத்துவார் என்று இறைவாக்கு உரைக்கின்றார் (யோவா 21:18-19).

கிறிஸ்துவின் மேல் பேதுரு கொண்டிருந்த முதல் அன்பைவிட அவரது இரண்டாவது அன்பு சக்தி வாய்ந்ததாக உள்ளது. கிறிஸ்து விண்ணகம் சென்றபின் திருத்தூதர்கள் கிறிஸ்துவின் பெயரால் கற்பிக்கக் கூடாது என்று தலைமைக் குரு தடை செய்தபோது, பேதுரு, "மனிதருக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?" என்று பதில் அளிக்கிறார் (இரண்டாம் வாசகம், திப 5:29).

கிறிஸ்து திருச்சபையின் தலைமைப் பொறுப்பைப் பேதுருவிடம் ஒப்படைத்தார். "என் ஆடுகளை மேய்" (யோவா 21:16), பேதுருவின் வழித்தோன்றல்களான திருத்தந்தையர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைக் கிறிஸ்துவின் பெயரால் வழிநடத்தி வருகின்றனர். திருத்தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடன் இணைந்து செயல்பட அனைத்துத் தரப்பு விசுவாசிகளும் அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், "எங்கு பேதுரு இருக்கிறாரோ அங்கு கிறிஸ்து இருக்கிறார்" (புனித அகுஸ்தீனார்).

ஒரு காட்டில் ஒருதாய்க் கோழி தனது 10 குஞ்சுகளுடன் இருந்தபோது, திடீரென்று காடு தீப்பிடிக்க, 9 குஞ்சுகள் தாயைவிட்டு ஓடித் தீயில் கருகிச் செத்துவிட்டன. ஆனால் தாயின் இறக்கைக்கடியில் ஒளிந்து கொண்ட ஒரு குஞ்சு மட்டும் பிழைத்துக்கொள்கிறது. இன்று சிலர் திருச்சபைத் தாயை விட்டுவிட்டு வெளியே சென்று அழிந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்யாமல் திருச்சபையின் ஐக்கியத்தில் நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், பேதுருவின் விசுவாசம் என்னும் கற்பாறையில் திருச்சபை கட்டப்பட்டுள்ளது. பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா (மத் 16:18).

உயிர்த்த இயேசு திபேரியக் கடல் அருகே பொரித்த மீனையும் அப்பத்தையும் வைத்துக் கொண்டு சீடர்களிடம், "உணவருந்த வாருங்கள்" (யோவா 21:12) என்றார். அவர் கொடுத்த உணவு நற்கருணைக்கு அடையாளம். இன்றும் அவர் திருப்பலியில் 'சாப்பிட வாருங்கள்' என்றழைக்கிறார். அவர் தரும் விண்ணக உணவை உண்டு வாழ்வில் வளமடைவோம். செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பட்ட நாம் பேறு பெற்றோர் (திவெ 19:9).



 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை

அமலா பங்குத் தந்தையைச் சந்திக்கிறாள். அன்பரசை மணமுடிக்கப் போவதாகச் சொன்ன போது பங்குத்தந்தைக்கு ஒரே வியப்பு.

" அமலா, நீ பெரும் செல்வந்தரின் மகள். அன்பரசோ அவ்வளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல".
"எனக்கு அது தெரியும் சாமி",
*அன்பரசு உன்னளவு கற்றவனும் அல்ல''
"அதுவும் எனக்குத் தெரியும்"
"அன்பரசுக்கு நிலையான தொழிலும் இல்லை. வருமானமும் இல்லை". முடிவாக அமலா சொன்னாள்: "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் அவரைப் பற்றி ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நான் சந்தித்த இளைஞர்களில் என்னை மிகவும் அன்பு செய்பவர் அன்பரசு. எனக்காக அவர் எந்த தியாகத்தையும் செய்வார், எந்தத் துன்பத்தையும் ஏற்பார். அதுதானே எனக்கு வேண்டும்".

அமலாவைப் போல, நம்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பு உறுதியானது என்பதை அறியும் போது நமது நம்பிக்கை எவ்வளவு வலுவடைகிறது! அன்பில் வெளிப்படும் நம்பகத் தன்மையின் விளைவு அது.

இன்றைய நற்செய்தி உள்ளத்தைத் தொடும் ஒரு காட்சி. இயேசுவுக்குத் தெரியும் பேதுரு தன்னை நேசிக்கிறார் என்பது. ஆனால் அந்த நேசம் வெளிப்படையான அறிக்கையாக வேண்டும் என்று ஆசிக்கிறார். அன்பின் நம்பகத்தன்மை உறுதிப்படுகிறபோது திருச்சபையை வழிநடத்தும் மிகப்பெரிய பொறுப்பைப் பெறுகிறார் பேதுரு அந்தப் பணியைப் பொறுப்புடன் நிறைவுறச் செய்வார் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு உண்டு.
இயேசு - பேதுரு சந்திப்பு, பேதுருவின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் மூன்று:
1. பேதுருவின் மனமாற்றம் உறுதிப்படுகிறது.
நம்பிக்கை தளர்கிறபோது வாழ்க்கை அர்த்தமாற்றுப் போகிறது. இயேசுவின் மீது பேதுரு வைத்திருந்த நம்பிக்கை தளர்ச்சியடைகிறது. தன் பழைய தொழிலான மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பி விடுகிறார் தன் தோழர்களோடு.

உடல், உள்ளம், ஆன்மா - இந்த மூன்றின் கலவை தானே மனிதன்! இவற்றில் எந்த ஒன்று பாதிப்புக்கு ஆளானாலும் முழுமனிதனும் பாதிப்புக்கு உள்ளாகிறான். பயம், பகை, தாழ்வு மனம், குற்றப் பழியுணர்வு, கவலை - இவை மனிதனை இயல்பில் பாதிக்கிறது. நலம் இழக்கச் செய்கிறது. ஆளுமைச் சீர்குலைவுக்குக் காரணமாகிறது.

இயேசுவின் வார்த்தையில் மிகுந்த மீன்பாடு கிடைக்க, இயேசுவைக் கண்டு கொள்கிறார் பேதுரு. இது பேதுருவுக்கு இரண்டாவது அழைப்பு. இயேசு பேதுருவை முதலில் அழைத்தபோதும் மீன்பிடிப்பு என்ற அருங்குறியின் மூலமாகத்தன்னை யார் என்று தெளிவுபடுத்தித்தான் அழைத்தார் (லூக்.5:4-10). இப்போது மீண்டும் அதே பாணியில் இரண்டாவது அழைப்பு. இப்போது நம்பிக்கை வலுப்பெறுகிறது. அதனால் மனமாற்றம் அடைகிறார். புதுவாழ்வு பெறுகிறார். இயேசுவுக்காக உயிர்த்தியாகம் செய்யவும் துணிகிறார்.
2. பேதுருவின் அன்பு உறுதிப்படுகிறது.
கடற்கரை மணலில் பதிந்த காலடிச் சுவடுகளை அலைகள் அழித்துச் சீராக்குவது போல, மும்முறை மறுதலிப்பின் வடுக்களை அன்பு அறிக்கையால் மனத்தினின்று நீக்க வழிவகுக்கிறார் இயேசு. இயேசு விரும்பிக் கேட்கும் பாவப் பரிகாரம் அன்பைத் தவிர வேறொன்றும் இல்லை.

எந்த நிகழ்வால் பேதுருவின் உள்ளம் பாதிக்கப்பட்டதோ, அந்த நிகழ்ச்சியின் சூழலுக்கே அவரை அழைத்துச் செல்ல ஒரு பின்னணியைத் தோற்றுவிக்கிறார். "படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதைக்... கண்டார்கள்" (யோவான் 21:9) *சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்' (யோவான் 18:25) அன்றோ! "அறியேன்" என்று மூன்றுமுறை மறுதலிப்பு. "என்னை அன்பு செய்கிறாயா?" என்று மூன்றுமுறை உறுதிப்பாடு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய் விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்.26:23) இது பேதுருவின் தம்பட்டம், "நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்து கிறாயா?" (யோவான்.21:15) இது இயேசுவின் கேள்வி. தன் தலைவனை மறுதலித்த மன உளைச்சலில் துடித்துக் கொண்டிருந்த பேதுருவை உயிர்த்த இயேசு படிப்படியாகக் குணப்படுத்துகிறார். பேதுருவின் அன்பு புடமிட்ட பொன்னாகப் புதுப்பிக்கப்படுகிறது.
3. பேதுருவின் பணி (பொறுப்பு) உறுதிப்படுகிறது.
தான் இயேசுவை மறுதலித்த போதிலும், அதை அவர் ஒரு பொருட்டாகக் கருதவில்லை, அவர் கொண்டிருக்கும் அன்பு சிறிதும் குறையவில்லை, அவர் இவருக்கென்று தந்த பொறுப்பில் ("என் ஆடுகளைப் பேணி வளர்") மாற்றம் இல்லை என்று உணர்ந்து மனவலிமை பெறுகிறார் பேதுரு. அத்தகைய மனவலிமையின் காரணமாகவே "மனிதர்களுக்குக் கீழ்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்" (தி.ப.5:29) என்ற மனஉறுதி பெறுகிறார். "இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்" (தி.ப.5:41) மன மகிழ்ச்சி அடைகிறார். இனி இயேசுவின் பெயரைச் சொல்லாமல் உயிர்ப்புக்குச் சான்று பகராமல் அவரால் இருக்க முடியாது. அவரது மரணமே கடவுளை மகிமைப்- படுத்தும் (யோவான் 21:18, 19)

திருத்தந்தை 2ஆம் அருள் சின்னப்பர் 1984இல் பாரதம் வந்தபோது சங்கப் பரிவாரங்கள் "அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் கட்டாய மனமாற்றம் செய்ய அவருடைய ஆட்சிப் பொறுப்புத்தான் ஆணையிடுகிறது" என்று கூக்குரல் இட்டன. ஆனால் நம் திருத்தந்தை மிகத்தெளிவாகக் கூறினார்: "கிறிஸ்தவ நற்செய்தி யாளர்கள் யாரையும் எப்பொழுதும் கட்டாயமாக மதமாற்றம் செய்வதில்லை. ஆனால் இயேசுவின் கட்டளைப்படி உலகெங்கும் சென்று அவருடைய போதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை. எங்கள் போதனைகளை ஏற்றுக் கொள்வதும் ஏற்க மறுப்பதும் அவரவர்களுடைய விருப்பம். இதில் கட்டாய மனமாற்றம் என்பதற்கு இடமில்லை".
இதே வார்த்தைகளைத்தான் பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தின் முன் துணிவோடு எடுத்துக் கூறினார்கள். "நாங்கள் கண்டதையும் கேட்டதையும் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது".

அறிவிப்பவராகட்டும் கேட்பவராகட்டும்... எல்லாம் மனச்சான்று தொடர்புடையது
மறையுரைச்சிந்தனை  -திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
 
மறையுரைச்சிந்தனை  -அருள்பணி. குழந்தைஇயேசு பாபு சிவகங்கை


 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ