Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 செபமாலை அன்னையின் விழா - அக்டோபர் 7
   

செபமாலை அன்னையின் விழா - அக்டோபர் 7

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் என் பிரியமான சகோதர சகோதரிகளே! இன்றைக்கு நாம் செபமாலை அன்னையின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருத்தலங்களுக்கு நாம் செல்லும்போதெல்லாம் பல்வேறு புனிதப் பொருட்களை, படங்களை வாங்குகிறோம். எல்லாவற்றையும்விட அதிகமாக அங்குள்ள கடைகளில் விற்பனையாவது என்னவென்றால், செபமாலை! இது உங்கள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

அடையாளச் சின்னமாம் செபமாலை

நான் என்னுடைய வாகனத்தில் வரும்போதெல்லாம், காரில் யாராவது பயணம் செய்யும்போது பார்ப்பதுண்டு. அந்தக் காரில் ஓட்டுநருக்கு முன்னால் செபமாலை தொங்கிக்கொண்டிருந்தால், "இதோ ஒரு கத்தோலிக்கக் குடும்பம் பயணம் செய்கிறது" என்று மனத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். அது நம்முடைய அடையாளமாக இருக்கிறது. பல சமயங்களில் எத்தனையோ பேர் செபமாலை ஜெபிக்கிறவர்களைக் குறை சொல்கிறார்கள். உண்மையில், செபமாலை நம்முடைய வெற்றியின் சின்னம்.

நம்பிக்கையின் அறிக்கை செபமாலை

திருத்தந்தை சொல்லியிருப்பதைப்போல, விவிலியத்தின் சுருக்கம் செபமாலை. It is the summary of the whole Bible என்று நாம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு செபமாலையையும் தொடங்கும்போது, நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிட்டுத் தொடங்குகிறோம். " விண்ணகத்தையும் மன்னகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனை நம்புகிறேன்" என்று தொடங்கி, கடைசி வரை நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். மீண்டும் மீண்டும் நாம் எல்லாரும் நம்புபவர்கள் என்பதை நினைவுபடுத்திக்கொள்கிறோம்.

* கடவுளை நம்புகிறோம்.
* அவருடைய மகனை நம்புகிறோம்.
* தூய ஆவியானவரை நம்புகிறோம்.
* கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறோம்.
* உயிர்த்தெழுதலை நம்புகிறோம்.
* புனிதர்களின் உறவை நம்புகிறோம்.

இதை எல்லாம் அறிக்கையிடுவது தவறா? நிச்சயமாக இல்லை.

பிறகு செபமாலையில் என்ன இருக்கிறது? ஆண்டவர் இயேசுவே நமக்குக் கற்றுக்கொடுத்த ஜெபம் இருக்கிறது. எத்தனை முறை அதைச் சொன்னாலும் தகும். ஆண்டவர், தந்தையை நோக்கிப் பிள்ளைகளுக்குரிய ஒரு பற்றோடும், தந்தை நம்மைக் கைவிட்டுவிட மாட்டார் என்ற உணர்வோடும் வாழ்வதற்கு நமக்குக் கற்றுக்கொடுத்தார். ஆண்டவர் இயேசுவே கற்றுக்கொடுத்த அந்த ஜெபத்தை நாம் சொல்கிறோம். தந்தையைப் புகழ்கிறோம். அவருடைய விருப்பத்தை நாள்தோறும் செய்ய சக்தியைக் கேட்கிறோம். நமக்கு அன்றாட உணவு, உறைவிடம், உடுத்த உடை தேவைப்படுகிறது. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நமக்கு நிம்மதி தேவைப்படுகிறது. சாத்தானின் சோதனைகளிலிருந்து நமக்கு வெற்றி தேவைப்படுகிறது. இவையெல்லாவற்றுக்கும் கர்த்தர் கற்பித்த ஜெபத்தைப் பலமுறை ஜெபிப்பதன் வழியாக நாம் அறிக்கையிடுகிறோம்.

விவிலியத்தின் வார்த்தைகள் 'அருள் நிறைந்த மரியே'

இன்னும் நிறைய பேர், பிற சபைகளைச் சார்ந்தவர்கள் எல்லாம் நம்மீது குற்றம் சொல்வது என்ன தெரியுமா? "இந்த அருள் நிறைந்த மரியே ஜெபத்தை ஏன் இத்தனை தடவை, ஐம்பத்து மூன்று முறை சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார்கள். பல பேருக்கு அருள் நிறைந்த மரியே ஜெபத்தினுடைய அர்த்தமே புரிவதில்லை. புரியாததால்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

நாம் முதல் பகுதியில் என்ன சொல்கிறோம்? இன்றைக்கு நாம் வாசகத்தில் கேட்டது போல, முதல் பகுதியில் வானதூதர் கபிரியேல் எப்படி நம்முடைய அன்புத்தாய் கன்னி மரியாளை வாழ்த்தினாரோ, அந்த வார்த்தைகளைச் சொல்கிறோம். விவிலியத்தில் லூக்கா நற்செய்தியில் எழுதியிருப்பது போல, வானதூதர் சொன்ன வார்த்தைகளைச் சொல்லி நம்முடைய தாயை வாழ்த்துவது தவறா? நிச்சயமாகக் கிடையவே கிடையாது.

நம்முடைய தாய்க்கு என்ன சொல்லப்பட்டது?

1. "மரியே, மகிழ்ச்சியாயிரு!" - அதுதான் முதல் செய்தி. செபமாலை சொல்லும் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாய் இருக்க ஆண்டவர் அழைக்கிறார்.

2. "ஆண்டவர் உம்முடனே இருக்கிறார்!" - செபமாலை சொல்லும்போதெல்லாம், எப்படி நம்முடைய அம்மாவுக்குச் சொல்லப்பட்டதோ, அப்படியே ஆண்டவர் நம்மோடும் இருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

3. "நீர் பெண்களுள் ஆசிர்வதிக்கப்பட்டவர்!" - எலிசபெத்தம்மாள் நம் அன்னையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் இவை. இதுவும் விவிலியத்தில் இருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தையை நம்பியதால் அன்னை மரியாள் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆனார். "கடவுளால் முடியாதது எதுவுமே கிடையாது" என்று சொன்னவுடனே, நம் அம்மா, "இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய வாக்கு நிறைவேறட்டும்" என்று நம்பினாரே, எனவே அவர் பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர். நாமும் நம்பினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே!

4. "உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே!" - இந்த ஜெபத்தைச் சொல்வது தவறா?

கடைசியாகத்தான் நாம், "இறைவனுடைய தாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், குறிப்பாக எங்கள் மரண நேரத்தில் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று சொல்கிறோம். இதுதான் இந்த அற்புதமான ஜெபம்.

விவிலியத்தின் சுருக்கம்தான் மறையுண்மைகள்

செபமாலையின் வல்லமையைப் பாருங்கள். நம்முடைய கிறிஸ்தவ மறையின் சாரம், சுருக்கம் என்னவென்றால்:

* மகிழ்ச்சியின் மறையுண்மைகள்: இயேசு எனக்காகப் பிறந்தார்.
* துக்க மறையுண்மைகள்: இயேசு எனக்காகப் பாடுபட்டார்.
* மகிமையின் மறையுண்மைகள்: இயேசு எனக்காக உயிர்த்தார்.
* ஒளியின் மறையுண்மைகள்: அண்மைக் காலத்தில் திருத்தந்தை சேர்த்தது. இயேசு எனக்காக வாழ்ந்தார், எனக்காகத் திருமுழுக்குப் பெற்றார், எனக்காக இறையாட்சியை அறிவித்தார்.

செபத்தின் முன்மாதிரியாம் அன்னை மரியாள்

செபமாலை அன்னை விழாவைக் கொண்டாடுகின்ற இன்று, நாம் எல்லாரும் செபமாலை ஜெபிப்பவர்களாக மாற வேண்டும். கிறிஸ்தவன் என்றால் என்ன அர்த்தம்? எல்லாவற்றுக்கும் மேலாக ஜெபிப்பதுதான் முக்கியம். திருத்தூதர் பணிகள் நூலில், நம்முடைய அன்புத்தாய் அன்னை மரியாள், திருத்தூதர்களுடன் ஒருமனப்பட்டு ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். தூய ஆவியின் வருகைக்காக ஜெபித்தார்கள். சிதறுண்டு போயிருந்த திருச்சபையைக் கட்டி காத்தார்கள்.

ஜெபம் தான் நம்மைச் சேர்த்து வாழச் செய்யும்.
* உங்கள் குடும்பம் பிளவுபட்டிருக்கிறதா? ஜெபியுங்கள்.
* ஆறுதல் தேவையா? ஜெபியுங்கள்.
* உங்கள் சுமைகளைத் தாங்க வேண்டுமா? ஜெபியுங்கள்.
* இன்னும் அதிகமாகக் கஷ்டப்பட்டுத் தியாகம் செய்ய வேண்டுமா? ஜெபியுங்கள்.

ஆண்டவர் இயேசுவின் மாதிரிகை, அன்புத்தாய் அன்னை கன்னிமரியாளின் மாதிரிகை நம் எல்லாருக்கும் இன்றைக்கும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது. இத்தகைய உன்னதமான அன்னையை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். அந்தத் தாயைப் பார்த்து, "எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று சொன்னால், நிச்சயமாக நாம் ஏமாந்து போகவே மாட்டோம். சிலுவையின் அடியில் நம்முடைய தாயாகப் பெற்றுக்கொண்ட அன்புத்தாய் அன்னை கன்னி மரியாள், நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

அன்னையைப் போல் வாழ்வதற்கான அழைப்பு

அம்மா எவ்வளவு நல்லவராக இருந்தாலும், கடவுள் கிடையாது. ஒரே இறைவனைத்தான் நாம் நம்புகிறோம். அவர்கள் நல்ல மனுஷி, ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷி, கடவுளின் வார்த்தையைக் கேட்டு நம்பியவர், நன்மை செய்தவர், துன்புற்றவர், தியாகம் செய்தவர். *அவரைப் போல நாம் வாழ வேண்டும்.*

புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், ஆசியத் திருஅவைக்கு எழுதிய மடலில் ஒரு அழகான ஜெபத்துடன் முடித்திருக்கிறார். அதிலிருந்து சில சிந்தனைகள்:

1. வார்த்தையைக் கேட்பது: "அம்மா, கடவுளுடைய வார்த்தையை நீர் ஏற்புடைய மனத்தோடு கேட்டாயே, அதே போல நாங்களும் கேட்க எங்களுக்குக் கற்றுத்தாரும்."

2. உதவிக்கு விரைவது: "அம்மா, தேவையில் இருந்த உறவினருக்கு உதவி செய்ய விரைந்து சென்றாயே, அதே போல நாங்களும் தேவையில் இருக்கின்ற எங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய விரைந்து செல்ல எங்களுக்குக் கற்றுத் தாரும்."

3. பரிந்து பேசுவது: "அம்மா, கானாவூர் திருமணத்தில் நீர் உம்முடைய மகனிடம் உலகத்தைப் பற்றியும், உலகத்திடம் உம்முடைய மகனைப் பற்றியும் பேசினீர். அதேபோல, நாங்களும் எங்கள் குடும்பத்தின் தேவைகளை ஆண்டவரிடமும், ஆண்டவரைப் பற்றி எங்கள் குடும்பத்திடமும் பேச எங்களுக்குக் கற்றுத்தாரும்."

4. உடன் இருப்பது: "அம்மா, சிலுவையின் அடியில் உம்முடைய மகனோடு துன்புற்றாயே, அதேபோல் துன்புறுகின்ற எங்கள் சகோதர சகோதரிகளோடு உடனிருக்க எங்களுக்குக் கற்றுத்தாரும்."

5. ஒன்றித்து ஜெபிப்பது: "அம்மா, சீடர்களோடு ஒன்று சேர்ந்து ஜெபித்தாயே, அதேபோல் நாங்களும் ஜெபிக்க எங்களுக்குக் கற்றுத்தாரும்."


நம்முடைய அன்புத்தாய் அன்னை கன்னிமரியாளை நாம் எல்லாரும் பின்பற்ற வேண்டும். இதுதான் நம்முடைய அழைப்பு என்பதை உணர்ந்துகொள்வோம். "எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் செபமாலை அன்னையே, உம்மைப் போல நாங்களும் இந்த உலகத்திலே வாழ எங்களுக்குத் துணை செய்யும்" என்று வேண்டுவோம். ஆமென்.

அவருக்குச் செவிசாய்க்க..
மேதகு. அருள்செல்வம் இராயப்பன் - மறையுரை



 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா