tamoul3
  • english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3
english
                      

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠
(Visitation of the Blessed Virgin Mary)
 
நினைவுத் திருநாள் : (மே/ May 31)
✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠
(Visitation of the Blessed Virgin Mary)


 மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39�56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியாள் அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மரியாள் கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாளின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மரியாள் தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.

2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாளின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே" என கன்னி மரியாளைப் பாராட்டியது.

4. "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மரியாள் சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மரியாள். ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மரியா எலிசபெத்தை சந்தித்தல்

நிகழ்வு

தாவீது இஸ்ரயேலின் அரசனாக உயர்ந்த பிறகு, பெலிஸ்தியர்கள் கைப்பற்றிச் சென்ற ஆண்டவரின் பேழையை தன்னுடைய படைவீரர்களோடு சென்று மீட்டுக்கொண்டு வந்தான். அவன் ஆண்டவரின் பேழையை மீட்டுகொண்டு தன்னுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வரும்போது அதற்கு முன்பாக அவன் இசைக் கருவிகளை மீட்டிக்கொண்டும், நடனமாடிக்கொண்டும் வந்தான். ஆண்டவரின் பேழை நாக்கோனின் இடைத்திற்கு வந்தபோது உசா என்பவன் ஆண்டவரின் பேழையைத் தாங்கிப் பிடித்தான். அப்போது ஆண்டவரின் சினம் அவனுக்கு எதிராக எழுந்தது. ஏனென்றால் அவன் ஆண்டவரின் பேழையை தகுதியில்லாமல் தாங்கிப் பிடித்தான். இதனால் அவன் ஆண்டவரின் பேழையருகே மடிந்து இறந்தான்.

ஆண்டவரின் பேழையைத் தொட்ட உசா இப்படி இறந்துபோனதை அறிந்த தாவீது பெரிதும் வருந்தினார். எனவே அவர் ஆண்டவரின் பேழையை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் விட்டுவிட்டு வந்தார். அவர் ஒரு லேவியர். இறைப்பற்றுக்கொண்ட மனிதர். ஆண்டவரின் பேழை ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதம் தங்கி இருந்ததால் ஆண்டவர் அவரை நிறைவாக ஆசிர்வதித்தார். அதன்பொருட்டு ஓபேது ஏதோம் பெரிதும் மகிழ்ந்தார்.

ஆண்டவரின் பேழை கித்தியனாகிய ஓபேது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் இருந்ததனால் ஆண்டவரால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டார். அதைப் போன்றுதான் ஆண்டவரைத் தன்னுடைய மடி தாங்கிய அன்னை மரியாள் எலிசபெத்தின் இல்லத்தில் தங்கியிருந்ததால் எலிசபெத்து ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி 

மரியாள் எலிசபெத்தை சந்தித்த இந்த விழா பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பொனவெந்தூர் என்பவரால் தொடங்கப்பட்டது. ஆனால் இவ்விழா இவ்வளவு சிறப்பாக வளர்வதற்கு முக்கியக்காரணமாக இருந்தவர் பராக் (Prague) என்ற நகரில் ஆயராக இருந்த ஜான் ஜென்ஸ்டீன் என்பவர்தான். இவர்தான் மரியா எலிசபெத்தை சந்தித்ததன் முக்கியத்துவத்தை விவிலியப் பின்னணியோடு மறையுரை ஆற்றி மக்களுக்கு விளங்கச் செய்தார். மேலும் இவருடைய காலத்தில் திருச்சபையில் இரண்டு திருத்தந்தையர்கள் இருந்தார்கள். ஒருவர் (ஐந்தாம் அர்பன்) உரோமை நகரைத் தலைமைபீடமாகக்கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். இன்னொருவர் (ஏழாம் கிளமென்ட்) அவிஞ்ஞோனை தலைமைபீடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார். ஜான் ஜென்ஸ்டீன் இவ்விழாக் கொண்டாடுவதன் வழியாக இரண்டு திருத்தந்தையர்களுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த நினைத்தார். இதற்கு இரண்டு திருத்தந்தையர்களும் ஒத்து வந்தார்கள். இறுதியில் திருச்சபையில் ஏற்பட்ட இப்படிப்பட்ட குழப்பம் தீர்ந்தபோது அதன்பிறகு திருத்தந்தையாக வந்த திருத்தந்தை ஒன்பதாம் போனிபஸ் என்பவர் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1969 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஆறாம் பவுல் இவ்விழாவை மே மாதம் 31 ஆம் தேதி கொண்டாடப் பணித்தார். அப்படி வந்ததுதான் இவ்விழா.

ஆண்டவரின் தூதர் மரியாவுக்கு மக்கள வார்த்தை சொன்ன அதே நாளில், மரியாளிடம் அவர் எலிசபெத்து தன்னுடைய முதிர்ந்த வயதில் கருவுற்றிருக்கிறார் என்ற செய்தியையும் எடுத்துச்சொல்கிறார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட மரியா எலிசபெத்தின் வீட்டிற்கு விரைந்து செல்கிறார் (லூக் 1: 39). அங்கே அவரோடு தங்கியிருந்து அவருக்கு பல விதங்களில் உதவிசெய்கிறார். மரியா இருந்த ஊரான நாசரேத்திற்கும் எலிசபெத்தின் ஊரான ஹெப்ரோனுக்கும் இடையே 76 கிலோமீட்டர். இருந்தாலும், தான் ஒரு கர்ப்பிணியாக இருந்தாலும் அவர் பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார்.

இந்த நிகழ்வில் பழைய ஏற்பாட்டின் நிறைவாக திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் காரணகர்த்தாவாகிய ஆண்டவர் இயேசுவும் கருவிலேயே சந்தித்துக்கொள்கிறார்கள். ஆகையில், மரியா எலிசபெத்து சந்திக்கின்ற அதே வேளையில் திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிகழ்வு ஒரு சாதாரண நிகழ்வாக முடிந்துவிடாமல் மகிழ்ச்சியையும், வாழ்த்தையும், அருளையும் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாக மாறுவது இதன் தனிச்சிறப்பாக இருக்கின்றது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

உதவும் நல்ல மனம்

பேறுகால வேதனையில் இருக்கும் எலிசபெத்துக்கு மரியா உதவவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. மேலும் அவள் உதவும் நிலையிலும் இல்லை. ஏனென்றால் அவள் கர்ப்பிணியாக இருக்கிருக்கிறாள். அப்படி இருந்தாலும்கூட மரியா எங்கோ இருக்கும் எலிசபெத்துக்கு உதவச் செல்கிறார். இது அவளிடம் இருக்கும் உதவும் நல்ல பண்பைக் காட்டுகின்றது. கானாவூர் திருமணத்திலும் மரியாள் கேளாமலே உதவிசெய்தாள் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும். மரியாவை நம்முடைய அன்னையாகக் கொண்டிருக்கும் நாம், அவரைப் போன்று தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவும் நல்ல பண்பை நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஒருநாள் அவனுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. "புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தால் வளமாகவும், பெருமையாகவும் வாழலாம்!� என்று நினைத்தான் அவன். நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்காக நல்ல உடைகளை அணிந்து கொண்டான். நேரத்தோடு செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்தான் ரஞ்சித். அப்போது வழியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. பெண்மணி ஒருத்தி அதன் சக்கரத்தைக் கழற்ற முயற்சி செய்துகொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற யாரும் அவளுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இதைப் பார்த்த அவன், "யாராவது உதவி செய்தால்தான் அவளால் சக்கரத்தைக் கழற்றி மாட்ட முடியும். நான் உதவி செய்தால் நேரத்தோடு நேர்முகத் தேர்விற்குச் செல்ல முடியாது, அத்துடன் நான் அணிந்திருக்கும் உடைகள் வேறு அழுக்காகி விடும். என்ன செய்வது?� என்று குழம்பினான். பின்னர், கண் எதிரே ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தும் உதவி செய்யாமல் செல்வதா?, என்ன நடந்தாலும் நடக்கட்டும். அவளுக்கு உதவி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான் அவன். காரின் அருகே சென்ற அவன், "அம்மா! நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்!" என்றான். பிறகு இருவரும் பழுதான சக்கரத்தைக் கழட்டி வேறு சக்கரத்தை மாட்டினர். "மிகவும் நன்றி!" என்று உணர்ச்சி பொங்கச் சொன்னாள் அவள். பின்னர் அவள் அங்கிருந்து காரில் புறப்பட்டாள்.

காலதாமதமாகி விட்டது. வேலை கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று நினைத்தபடி அந்த நிறுவனத்திற்குள் நுழைந்தான் அவன். இயக்குநர் அறையில் இருந்த பெண்மணி அவனைப் பார்த்ததும் வெளியே வந்தாள். தான் உதவி செய்த பெண்மணிதான் அவள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவனை வரவேற்ற அவள், "நான் இந்த நிறுவனத்தின் இயக்குநர். பிறருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இங்கே வேலை தருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். நாளையே நீங்கள் வேலையில் சேர்ந்து கொள்ளலாம்!" என்றாள். ஒருநிமிடம் அசந்து போனான் ரஞ்சித். ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கு உதவி செய்ததால், அந்த ஆண்டவன் இவ்வளவு பெரிய நண்மையை தனக்கு தந்ததை எண்ணி மகிழ்ந்தான்.

தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவி செய்யும்போது நாம் இறைவனின் மக்களாகின்றோம், அதே நேரத்தில் இறைவனிடமிருந்து ஆசிரையும் பெற்றுகொள்கிறோம் என்பதுதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகவே, நாம் மரியாவைப் போன்று தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல மனத்தைக் கொண்டு வாழ்வோம்.

வாழ்த்துக் கூறுவோம்

இந்த விழா நமக்கு உணர்த்தும் இரண்டாவது பாடம். ஒருவர் மற்றவரை வாழ்த்தவேண்டும் என்பதாகும். மரியாள் எலிசபெத்தை சந்தித்ததும் வாழ்த்துகிறார். அதேபோன்று எலிசபெத்தும் மரியாவை, "ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிகழும் என நம்பிய நீர் பேறுபெற்றவர்" வாழ்த்துகிறார். இப்படி ஒருவர் மற்றவரை வாழ்த்தியதனால் அந்த இடத்தில் மகிழ்ச்சியும், கடவுளின் அருளும் பிறப்பெடுத்து ஓடுகிறது, எலிசபெத்தின் வயற்றின் உள்ளே இருந்த குழந்தை பேருவகையால் துள்ளுகிறது.

நாம் ஒருவர் மற்றவரை அவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளை இனங்கண்டுகொண்டு வாழ்த்தும்போது அந்த இடமே மகிழ்ச்சியால் நிரம்பும் என்பதை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டும். நாம் பிறரிடம் இருக்கும் நல்ல பண்புகளைக் கண்டு பாராட்டுகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கடவுளைப் போற்றிப் புகழவேண்டும்

மரியாவும் எலிசபெத்தும் ஒருவர் மற்றவரை வாழ்த்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் குறிப்பாக மரியா ஆண்டவர் தனக்குச் செய்த நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்துகிறார் "என் ஆன்மா ஆண்டவரைப் போற்றிப் புகழ்கிறது, என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது" என்று. நாம் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்கு அவருக்கு  நன்றி செலுத்துகிறோமா? அவரை நாளும் பொழுதும் போற்றிப் புகழுகிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்! அவர் தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்" என்று.

ஆகவே, மரியா எலிசபெத்தை சந்தித்த விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் மரியாவைப் ஒன்று பிறருக்கு உதவும் நல்ல மனத்தைக் கொண்டு வாழ்வோம், பிறரிடம் இருக்கும் நல்ல பண்புகளை இனம்கண்டுகொண்டு பாராட்டுவோம், எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா