திருமண திருப்பலி முன்னுரை 8 |
திருமணத்திருப்பலி முன்னுரை கிறீஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே! மங்கலம் நிறைந்த இத்திருமணத் திருப்பலியில் பங்குகொள்ள இறைவனின் ஆலயத்தில் நாம் கூடியுள்ளோம். அருட்சாதனம் இருஇதயங்கள் பாசத்தால் இணைந்து தொடரும் ஓர் உறவுப்பயணம். படைப்பின் தொடக்கத்தில் இறைவன் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இருவரும் ஒரே உடலாக அன்புறவில் வாழவேண்டுமென்று ஆசீர்வதித்தார். ஆண்டவராகிய இயேசு திருமணத்தை ஓர் அருட்சாதனமாக உயர்த்தினார். இப்போது மணமக்கள் (பெயர்கள்)இருவரும் திருமண அருட்சாதனத்தைப் பெற்று இறைவனின் ஆசியுடன் தங்கள் அன்புப் பயணத்தைத் தொடங்கவும், புதிய குடும்பத்தை உருவாக்கவும் வந்துள்ளனர். அவர்களுடைய மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்வோம். அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவோம். அன்புத் தந்தையே இறைவா! இன்று அருட்சாதனம் என்னும் அருட்சாதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இப் புதுமணத்தம்பதிகள் ( பெயர்) தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, திருக்குடும்பத்தைப்போல அன்பிலும் பிரமாணிக்கத்திலும், மகிழ்ச்சிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். அன்பின் ஊற்றாகிய இறைவா! இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இவர்கள் அன்பிலும் புரிந்துணர்விலும் ஒருவரை ஒருவர் ஒன்றித்து வாழவும், இவ்வுலகில் தங்கள் கடமை எது என்பதை உணர்ந்து வாழவும் தூயஆவியின் கொடைகளால் நிரப்பி நீரே வழியும் ஒளியும் ஜீவனுமாய் இருந்து, வழி நடத்திடவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம் கருணைக்கடலே இறைவா! அன்று கானாவூர் திருமணத்தை ஆசீர்வதித்து எவ்வித குறையும் ஏற்படாமல் கன்னிமரியாள் இறைமகன் கிறீதுவிடம் வேண்டிக் கொண்டதுபோல இப்புதுத்தம்பதியினரின் வாழ்க்கையிலும் கன்னிமரியாளின் உதவியாலும் வழிநடத்துதலாலும் இறைமகனின் ஆசீரையும் நிறைவாகப் பெறவும் அவர்கள் அன்பின் அடையாளமாக நன்மக்களைப் பெற்று, என்றும் மகிழ்ந்திருக்க உமது நிறைவான ஆசீரைப் பொழிந்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம். அன்பின் ஊற்றாகிய இறைவா! (மணமக்கள் பெயர்) என்ற இம்மணமக்களின் இல்லறம் நல்லறமாக அமையவும் பெற்றோர் உற்றாருடன் அன்புறவுடன் வாழவும் இவர்களின் ஆன்ம உடல் நோய்களை அகற்றி இவர்கள் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று இன்புற வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் அருளின் ஊற்றே இறைவா! இந்த திருமணக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தும் இந்த அருட்பணி அடிகளார் தொடர்ந்தும் உமது பணியைச் சிறப்பாகப் புரிய ஆன்ம உடல் நலத்தை பெற்று உமது அன்பில் நிலைத்து வாழவும் இன்னும் இத் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தம்பதியர் அனைவரும், தங்கள் திருமண வார்த்தைப்பாட்டை மீண்டும் நினைவு கூர்ந்து அதைப் புதுப்பித்து, இறை அன்பிலும், பிறரன்பிலும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழும் வரத்தினை வழங்கிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |