• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு மன்றாட்டு மாலை

   
புனித தஸ்நேவிஸ் மாதாவுக்கு மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்(2
கிறிஸ்துவே இரக்கமாயிரும்(2)
ஆண்டவரே இரக்கமாயிரும்(2)
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் நன்றாகக் கேட்டருளும்
பரலோகத்தில் இருக்கிற பிதாவாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்
தூய திருத்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா,
எங்கள் மேல் இரக்கமாயிரும்

- சர்வலோக சராசரங்களையும் படைக்கு முன்னமே சருவேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

- தீயை உமிழ்ந்து தீக்குணங்களையே ஓயாது செய்கின்ற ஆதிசர்ப்பத்தின் தலையை நொறுக்கி நசுக்கிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- குளிர்ந்த நிலவைப் பொழியும் சந்திரனைப் பாத தாமரையால் மிதித்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- அடர்ந்த இருளை நீக்கும் செஞ்சுடராகிய ஆயிரங்கதிரோனை ஆடையாகத் தரித்திலங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பன்னிரெண்டு விண்மீன்களைத் திருமுடியின் மகுடமாய் சூடி விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- மகா தீர்க்கத்தரிசிகளால் முன்னமே அறிவிக்கப்பட்ட மோட்ச அலங்காரியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பிசாசு அணங்குகள் நடுங்கிப் பதுங்கும் பரிசுத்த நாமலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- ஆறுமூன்று மகுடாதிபதிகளின் குலவிளக்காய் விளங்கும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- வலம்புரி உயிர்த்த வெண் முகத்தைப் பார்க்கிலும் மகா அலங்காரம் பொருந்திய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- அகிலம் முழுவதும் போற்றும் அருணாகிய சுவாமிக்கு முன் தோன்றும் உதய தாரகையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சகல வரப்பிரசாதங்களும் மலிந்த சம்பூரண அலங்காரியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- தாவீதரசரின் திருமுடியிற் துலங்கிய ஜீவ இரத்தினமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பிரியத்தனத்தினாற் பூரணமானவளே வாழ்கவென்று பிரபல தேவதூதனால் வாழ்த்தி துதிக்கப்பட்ட திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பரலோக பூலோக பாதாளலோகமென்னும் திரிலோகங்களிலும் அடங்காத தேவாதி தேவனைத் திருவுதிரத்தலடங்கிக் தாங்கிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- கொடுங்கோலனாகிய ஏரோதரசனின் கொலை பாதகத்திற்கு அஞ்சி குழந்தையாயிருந்த உலக இரட்சகரை எகிப்திற்கு கொண்டுபோய் இரட்சித்தவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- மகோன்னத பரிசுத்த கோதுமை அப்பத்தின் மாதாவாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- அக்கினிக்குள் வேகாத அழகிய முட்செடியில் தோன்றிய அசரீரி வாக்கியத்தின் திருமகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- அப்போஸ்தலர்கள் மேலிறங்கிய சிவந்த அக்கினி நாக்கு உருவத்தின் அமல பத்தினியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பூலோக ஆசைகளை வெறுத்து மேலோக ஆசைகொண்ட வேதசாட்சிகளில் திடதைரியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பாவ துர்க்கத்தம் ஒழிக்கும் பரிமள தந்தமயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பேய்க்குணம் கொண்ட படைகளைச் சிதறடிக்கும் வாளாயுதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- வேத விரோதமாய்ப் படரும் அடர்ந்த கார் மேகங்கiளைத் துரத்தி அழிக்கும் பிரசண்டமாருதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சத்திய திருச்சபையின் ஆறுதலின் வச்சிரத்தூணாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- மோட்ச சாம்ராஜ்ஜியத்தின் தூணாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
- சன்னியாசிகளுக்கும், கன்னியாஸ்திரிகளுக்கும் முன்மாதிரிகையாகும். கற்பலங்காரம் நிறைந்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சர்வலோகங்களையும் பரிபாலிக்க நாம் அதிகாரமுடையோமெனக் காண்பிக்க சர்வலோக நாயகனை திருக்கரத்தில் ஏந்தியிலங்கும்திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- உலக மீட்பராகிய உமது குமாரன் ஞானஸ்நானம் பெற்ற நன்னீர் நிறைந்த யோர்தான் நதியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- ஆதித்தாய் தந்தை செய்த தோஸத்தை நீக்கி அடைபட்டிருந்த மோட்ச கபாடத்தை திறந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சத்திய வேதத்தை தூஸித்து அலையும் பதிதரின் பொல்லாத நாவிற்கு ஆணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பாவங்களுக்காக பரிந்து பேசி பரகதி கொடுக்கும் வரம் நிறைந்த பாவிகளின் அடைக்கலமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- கடலிலும் வனத்திலும் வருந்தும் பக்தர்களுக்கு வலியத் தரிசனையாகி, அவர்கள் ஆபத்தில் அகமகிழ்வோடு உதவி புரியும் அபயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- தீராத நோயாளிகளுக்கு உத்தம ஒளடதமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- வாடாத திவ்விய மணம்வீசும் புஸ்பமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- அழுகண்ணீர்களின் அழியாத பாக்கியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- மகாத்துமாக்களின் மகத்துவம் தங்கிய நல்ல ஆலோசனையாகும் திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- தருமவான்களின் விசேச தயாளமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
- பொறுமையின் குன்றாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- தாழ்ச்சியின் பொக்கிசமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,
- நவவிலாச சம்மனசுகளின் மகிமை மிகுந்த அரசியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சத்தியவேத இராஜாக்களுக்குள் மேதானத்தை வளர்க்கும் சக்கரவர்த்தியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பரலோக சக்கரவர்த்தியின் அமலபத்திராசனமாகிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- கொள்ளை நோயை விலக்கும் வல்லபம் வாய்ந்த மகா பண்டிதையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சர்வலோக நாயகன் சொன்ன சத்திய வாக்கியத்தின் சாட்சியாகிய வானமண்டலத்தில் பிரகாசிக்கும் பச்சை வில்லாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- வெண்பொன்னை நிகர்த்த பனிமயமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- நீலோற்பவத்தைப் பழிக்கும் இரு நேத்திரங்களால் எங்களை எந்நாளும் கடாட்சித்துக் காத்தருளும் காருண்ணிய தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சாதுக்களாகிய சகல அர்ச்சியசிஸ்டவர்களின் சதானந்தமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- சிலுவை பத்திராசனத்தில் உயிர் விடும் தருணம் உலக இரட்சகராகிய உமது திருக்குமாரனால் எங்களுக்கு கையளிக்கப்பட்ட ஏக அடைக்கலத் தாயாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- உரோமை மாநகரில் பத்திரிஸ் அருளப்பருக்கும், அவர் மனைவிக்கும் பிரசன்னமாகி எக்ஸ்கலின் மலையில் ஒரு தேவாலயம் கட்டும்படி திருவாய் மலர்ந்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பனி பெய்யக்கூடாத உஸ்ண காலத்தில் உறைபனியைப் பெய்வித்து ஆலயம் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்தருளிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

- பரிசுத்த திபேரியும் பாப்பரசருக்குந் தரிசனை தந்து அதிசயங்களை செய்தருளிய எஸ்கலின் மலை நாயகியான திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே,

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்களைப் பொறுத்தருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் யேசுவே

உலகின் பாவங்களைப் போக்கும் சர்வேசுரனுடைய செம்மறியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் யேசுவே


மு:- எங்களுடை எளிய விண்ணப்பங்கள் சருவேசுரனால் அங்கிகரிக்கப்படும் பொருட்டு.
து: திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


செபிப்போமாக
சர்வலோக காத்தாவும், உலக மீட்பருமாகிய உத்தம யேசுவே! தேவரீரை மனுச சுபாவத்தின் படியே பெறுமுன்னும், பெற்றபோதும், பெற்றதின் பின்னும் கன்னிமை குன்றாதிருக்க வரம் பெற்ற தேவரீPருடைய திருமாதமாவின் பாதார விந்தங்களை அடைக்கலமாய் தேடிக்கொள்கிற அடியோர், அத்திரு மாதாவின் வல்லமையுள்ள மன்றாட்டினால் உலகம், சரீரம், பசாசென்னும் சத்துருக்களுடைய மாயையாகிய அந்தகாரத்துக்குள் அகப்படாமல், தேவரீருடைய பரிசுத்த வரப்பிரசாதமாகிய திருச்சுடர் பரவிய இதயங்களோடு இவ்வுலகில் தேவரீருக்கு பணிசெய்து சதாகாலமும் பேரின்ப வீட்டிலே அத்திருத் தாயாரோடும், சகல வானோர்களோடும் தேவரிரைத் தோத்தரித்து வாழக் கிருபை புரிந்தருளும் சுவாமி. பிதாவோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சதாகாலமும் சீவியருமாய் இராட்சியம் பண்ணுகிறவருமாயிருக்கிற ஆண்டவரே ஆமென்.




பனிமய மாதா நவநாள் ஜெபம்

�சர்வ ஜீவகோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்!

(3 முறை)

எங்கள் இருதய கமலாயங்களில், மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து, உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும், எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு காடு கடல்களைக் கடந்து ஓடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே! ஆமென்!


பனிமயத்தாயிடம் விசுவாச அறிக்கை

🌹ஓ! இடைவிடா பனிமயத்தாயே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசு கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ பனிமயத்தாயே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும்! ஆமென்!

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்