ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

     ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா ழா

    திருப்பலி முன்னுரை

திருக்குடும்ப விழ   வருடாந்த
ஞாயிறு வாசகம்
  pdf/Calendrier-litrugique2021.pdf
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
திருக்காட்சிப் பெருவிழா ஆசி பெற வந்திருக்கும் அன்பிற்குரியவர்களே!
B தவக்காலம்1 ஞானிகள் யேசுவைத் தேடியது போல, நாமும் யேசுவைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற செய்தியை கொண்டு வரும் திருக்காட்சி நிகழ்ச்சி, இந்த திருப்பலிக்கு நம்மை வரவேற்கின்றது.

தேடல், வாழும் மனிதனின் அவசியத் தேவை. தேவைப்படும் ஒன்றை அடைய வேண்டுமென்றால் கட்டாயம் தேடியே ஆகவேண்டும்;, ஆனால் தேவை எது என்று தேடலில் ஒரு தெளிவு வேண்டும். கூடவே துணிவும் நம்பிக்கையும் வேண்டும். தேடலில் ஒரு தெளிவு இருந்தால், நம்பிக்கை இருந்தால்; வாழ்வுப் பாதையில் புதையல் நம் காலடியில் கிடப்பதைக் காணலாம்.

ஞானியரின் தேடல் தேவலோகத்து தெய்வக் குழந்தையை தரிசிக்க செய்தது. தெளிவான தேடல் தேவலோகத்தை அடையச் செய்யும் என்ற சிந்தனையை தருகிறது.
கடலைத் தேடும் நதி
கரையைத் தேடும் அலை
நீரைத் தேடும் வேர்
உறவைத் தேடும் இதயம்
இவை அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் தேடுங்கள்; என்பதே.

வாழ்வுக்கான தேடல் வலிமையாய் இருக்கும்போது மலைகள் குனிந்து கை குலுக்கும். செழிப்பான தேடல்
இருளை ஒளியாக்கும்.
வறுமையை வளமையாக்கும்.
தீமையை நன்மையாக்கும்.
துக்கத்தை சந்தோஷமாக்கும்.
தடைகளை படைகளாக்கும்.
மனித வளர்ச்சிக்கு தேவையானதை தேடியதால் வசதிகளும் வாய்ப்புகளும் மலையென குவிந்து, மனிதனை கைகுலுக்குகின்றன. வரலாற்றை புரட்டியிருக்கின்றன. திசைகளை தீர்மானித்து இருக்கின்றன.

என் தேடல் நீ, என் தெய்வமே - இனி நீயின்றி நானில்லை
என தெய்வத்தைத் தேடுவோம். இயேசுவைத் தேடிச் சென்று அன்பளிப்புகளுடன் தங்களையே அர்பணித்த ஞானியரைப் போல, நாமும் தெய்வத்தை தேடிச் சென்று நம்மையே சமர்ப்;பணம் செய்வோம். அப்போது நாம் தேடும் தெய்வம் நம்மைத் தேடி நம் அருகில் இருப்பதை உணர்வோம்.

இத்திருப்பலியில் தெய்வமே தெளிவான தேடல் தாரும். தேடலின் முடிவில் தெய்வீக சுகம் தாரும் என செபிப்போம்.

 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
 
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. வழிகாட்டும் விண்மீனாய் திருச்சபையை எமக்கு தந்த தெய்வமே!
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும், குடிலில் உள்ள தெய்வக் குழந்தையை தேடிச் சென்று சந்தித்து, தங்களையே முழுமையாக அர்பணித்து வாழ அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது பேழையைத் திறந்து பொன்னையும் பொருளையும் எமக்கு அளிக்க எமை அழைக்கும் தேவனே!
நாட்டு மக்கள் நலமாய் வாழ தங்கள் பேழைகளைத் திறந்து பொன் பொருளை அள்ளிக் கொடுக்கும் மனநிலையையும், மக்கள் பணிக்காக தங்களை அர்பணித்துவாழும் மனநிலையையும் நாட்டு தலைவர்களுக்கு தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் இதயம் வியந்து விம்மும் செயலைச் செய்யும் தேவனே!
இருளில் இடறிவிழும் எங்கள் கையைப்பிடித்து தூக்கி, ஒளியை நோக்கி பயணம் செய்ய எங்களை தூண்டிவிடும், எங்கள் ஆன்மீகத் தந்தையர்கள் விண்மீனாய் பணிபுரிய, இதயம் வியந்து விம்மும் செயலைச் செய்யும் உம்திரு ஒளியை, அவர்மீது பதிய செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இன்று பெருந்திரளான செல்வத்தால் எங்களை நிரப்பும் தேவனே!
எங்களை சுற்றிலும் நிலவும் தடைகளை அகற்றி குடும்பங்கள் செழிக்கவும், பிள்ளைச் செல்வங்கள் மகிழவும், தொழில் முன்னேறவும், வசதிகளும் வாய்ப்புகளும் பெருகவும் நாங்கள் தேடும் மகிழ்ச்சி எங்களை வந்தடையவும், நாங்கள் இழந்து போன சொத்து சுகங்களை திரும்ப பெறவும், காணாமல் போன பந்த பாசங்களை மீண்டும் கண்டு கொள்ளவும், பிரிந்த உறவுகளை கூடச் செய்யவும் திருக்காட்சி பெருவிழா வழியாக திரளான செல்வத்தால் இன்று எங்கள் உள்ளங்களை நிரப்ப, தேவனே உம்மை மன்றாடுகிறோம்.

5. உமது மாட்சியை நாங்களும் எங்கள் அருகில் உள்ளோரும் அறியச் செய்யும் தேவனே!
இன்று இந்த திருப்பலிக்கு வர இயலாதோரையும், இந்த திருப்பலிக்கு வந்தும் மன வருத்தத்தோடு இருப்போரையும் உமது பரிவான பார்வைக்குள் வைத்து ஆசீர்வதித்து, உமது திருக்காட்சி மகிழ்ச்சியை அனுபவித்து வாழ அருள் தர வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. விண்ணில் உதித்த அற்புத ஒளியான இறைவா!
கீழ்திசையிலிருந்து உம்மைக் காண வந்த மூன்று ஞானிகள் மகிழ்ச்சியையும், நிறைவையும் அடைந்ததைப் போல, நாங்களும் உம்மைத் தேடி வந்து முழு நிறைவை அடைந்திட அருள் புரியும்படி, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
 
மறையுரை சிந்தனைகள்

நாமும் ஞானிகளாவோமா...?

பேராசிரியர் ஒருவர் உலகிலுள்ள மக்களை அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். அறிவுள்ளவர்களைப் பண்டிதர்கள், ஞானிகள் என்று மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். பண்டிதர்கள் எனப்படுபவர்கள் சட்டப்படிப்பு புத்தகப்படிப்பு படித்தவர்கள் ஆவார்கள். ஆனால் ஞானிகள் எனப்படுபவர்கள் கண்டு கேட்டு தொட்டு நுகர்ந்து அனுபவ ரீதியாக உண்மையை அறிந்தவர்கள். என இப்படிக் குறிப்பிடுவார்.
ஆம் நாம் எல்லோரும் பண்டிதர்கள் ஆகாவிட்டாலும் எல்லோருமே ஞானிகள் ஆகலாம்.
பென்ஹர் என்ற ஒரு திரைப்படத்தின் கதாநாயகனான பென்ஹர் குதிரைச் சவாரியில் இவருக்கு ஒத்தவரோ இவரை மிஞ்சியவரோ எவரும் இருக்கவில்லை. இவருடைய தாயார் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டதாக இவருக்குத் தெரிய வந்தது. பாவிகளுக்கும் ஏழை எளியவர்க்கும் பிணியாளருக்கும் காட்சி அளிக்கின்ற தொழுநோயாளரைக் குணப்படுத்துகின்ற முடவரை நடக்கச் செய்கின்ற இயேசுவைப்பற்றி இவர் கேள்விப்பட்டிருந்தார். தன் தாயாரைச் சுகப்படுத்துவதற்காக உடனடியாக அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார். பிலாத்தின் அரண்மனையை அடைந்ததும் மக்களின் ஆரவாரத்தைக்கேட்டார். இயேசுவைக் கொல்வதற்காகவே இவர்கள் இப்படி ஆரவாரம் செய்கின்றனர் என்று இவர் அறிந்து கொண்டார். இயேசு மரிப்பதற்கு முன்பே கல்வாரிமலையை அடைய அவர் முயற்சி செய்தார். கல்வாரிமலை ஏறுவதற்கு முன் அவருடைய தாய் மூர்ச்சை அடைந்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டாள். நினைவிழந்து தண்ணீர் கேட்ட தாயிக்கு அருகிலிருந்த அருவிக்கு ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தார். தண்ணீரைக் குடித்த தாயார் அற்புதமாக உடனடியாக பூரண சுகமடைந்தாள். அருவித்தண்ணீரில் இயேசுவின் இரத்தம் கலந்து இருந்ததே இப்பூரண சுகத்திற்குக் காரணமாகும்.

கஷ்ட துன்பங்களும், வேதனை சோதனைகளும் நேரிடும்போதுதான் நாம் நம் இயேசுவைக் கண்டு பிடிக்கின்றோம். கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காண வந்த ஞானிகள் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய பயணத்தை கஸ்தி வியாகுலங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டதால் தான் இயேசுவைக் காண முடிந்தது.
வாழும் நாட்களில் நாமும் குடும்பத்தில் வேதனை, சோதனை என துன்பங்களுக்குள் சிக்கித் தவித்தாலும் பெற்றோரை பேணிப் பாதுகாக்கும் போது, முதிர் வயதில் அவர்களை உதாசீனப்படுத்தாது, அவர்களது இயலாமையில் நம் குழந்தைகளைப் போல அவர்களது தேவைகளை நிறைவேற்றும் போதும் கிறிஸ்மஸ் திருப்பலிக்கு வர இயலாவிட்டாலும் நடமாட முடியாத அவர்களுக்கு புத்தாடை அணிவித்து பரிசையும் பாசத்தையும் பரிமாறி அவர்களின் ஆசீரைப் பெறும் போதும் நாமும் ஞானிகளாவோம்.

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். குழந்தையை வணங்கினார்கள்.
ஞானி என்பவர் யார்? ஹென்றி வால்டிக் என்பவர் மற்றொரு ஞானி என்ற தனது நூலில் உண்மையான ஞானி யார் என்பதை விளக்குகின்றார். ஹார்த்தபான் என்பது இயேசுவைக் காண வந்த நான்காவது ஞானியின் பெயர். இவர் குழந்தை இயேசுவிற்கு அன்பளிப்பு கொடுப்பதற்காகத் தன் உடைமையை எல்லாம் விற்று மூன்று விலையேறப் பெற்ற இரத்தினக் கற்களை வாங்கிக் கொண்டார். இயேசுவைக் காணப் போகும் பாதி வழியில் பிணியாளியான ஒரு கிழவிக்கு உதவி செய்ய ஹார்த்தபான் நிற்க வேண்டி வந்தது. மற்ற மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடிச் சென்று விட்டனர். எனவே ஹார்த்தபான் இயேசுவைக் காண மூன்று பேருடன் செல்ல இயலாமற் போயிற்று. அது மட்டுமல்ல வயது முதிர்ந்த பிணியாளியுடைய மருத்துவ செலவிற்காக தன்னுடைய இரத்தினங்களில் ஒன்றை விற்கவும் வேண்டியதாயிற்று. பின்னர் முப்பத்தி மூன்று ஆண்டுகள் ஹார்த்தபான் பலநாடுகளிலும் இயேசுவைக் காண தேடி அலைந்தும் அவரால் இயேசுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் இரண்டாவது இரத்தினக்கல்லும் செலவாகிகிட்டது. இயேசுவைச் சிலுவையில் அறைந்த பெரிய வெள்ளிக்கிழமை அன்று ஹார்த்தபான் எருசலேம் அடைந்தார். அதிவிரைவாக நடந்து கல்வாரி மலையை அடைந்தார். அப்பொழுது மாசிடோனியா பட்டாளக்காரன் ஒருவன் ஓர் இளம் மங்கையை வலுவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தார். அவளை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக மூன்றாவது இரத்தினக்கல்லையும் விற்றார். அதற்குள்ளாக இயேசு சிலுவையில் உயிர் நீத்தார். அப்பொழுது உண்டான நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் ஹார்த்தபான் சிக்கிக்கொண்டார். தான் யாரைத்தேடி கண்டடைய வேண்டுமென்று வாழ்ந்தாரோ அவரை ஒரு வினாடி கூடப்பார்க்க இயலாமல் அவருக்குக்கொண்டு வந்த காணிக்கையைக் கொடுக்க இயலாமல் மரண வேதனையில் கிடந்த ஹார்த்தபான் பின்வரும் அசரீரி வாக்கைக்கேட்டார். ஹார்த்தபான்! நீ என்னைப் பார்த்து விட்டாய். நீ எனக்கென்று காணிக்கையாக கொண்டு வந்த மூன்று இரத்தினக்கற்களையும் நீ எனக்கே கொடுத்திருக்கிறாய். சின்னஞ்சிறு சகோதரர்கள் ஒருவருக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள். இந்த ஹார்த்தபான் தான் உண்மையான ஞானி. இது வரலாற்றில் நாம் வாசிக்கும் உண்மை ஞானி

ஆம் சின்னஞ் சிறு சகோதரர்களுக்கு துன்பத்தோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்கும் போதெல்லாம் நாமும் ஞானிகளாகிறோம். சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் ஓய்வுக்காய் வழியில் மாதா கோவில் முற்றத்தில் தங்கினார்கள். அப்போது அருகில் இருந்த சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளைக் காண நேர்ந்தது. அந்த சிறுவர் காப்பகத்தைத்தை பராமரிக்கும் அருட்சகோதரியை தங்கள் இரவு உணவை ஆசீர்வதித்து செபிக்க அழைத்தார்கள். செபம் முடிந்தவுடன் திருப்பயணிகளில் ஓருவர் அன்னையின் ஆலயத்திற்கு காணிக்கையாக சேர்த்து வைத்திருந்ந சில்லறை நாணயப் பொட்டலத்தை எடுத்து அருட்சகோதரியிடம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தாய் தந்தை இல்லாத இந்த சிறுவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த அருட்சகோதரி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்க எழுந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த போதும் தங்களிடம் இருந்த சொற்ப தொகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக கொடுத்து முகம் மலர்ந்தனர். சிறுவர்கள் சிலர் அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர். வழியில் தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கிய பேனா, பென்சில் போன்ற பொருட்களை சிறுவர்களுக்கு கொடுக்கச் சொல்லி கொண்டுவந்து கொடுத்தனர். ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் தாங்கள் தங்கிய திசையில் சந்தித்த ஆதரவற்ற சிறுவர்களுக்கு கொடுத்த பரிசுகள் பொன், மீறை, தூபம் போல விலையேறப்பட்ட ஒன்றல்லவா! இவர்கள் திருப்பயணிகள் மட்டுமல்ல கீழ்திசை ஞானிகளாக எங்கள் குழந்தைகளின் கண்களுக்குத் தென்படுகிறார்கள் என்று தமது நன்றி உரையில் அந்த அருட்சகோதரி குறிப்பிட்டார்.

ஆம் ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் நாம் வாழும் நாளில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை ஞானிகள்;. இப்படியான சின்னசெயலை செய்து கீழ்திசை ஞானிகள் போல யேசுவுக்கு அன்பளிப்பு அளிக்கும் ஞானிகளாக பேசப்படும் வாய்ப்பை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வோம்.


The man from la mancha
ஆங்கிலத் திரைப்படம்.
அதன் கதைத்தலைவன் டான்குயிக்சோட்.
முடிவே இல்லாத ஆனால் தன்னை
முற்றிலும் ஈர்க்கின்ற பயணம் ஒன்றிலே முனைந்திருக்கிறான்.
முழுமையான அவனது பாடல். காணவே முடியாத கனவு.
விண்மீனைப் பின்சென்று தொடவேண்டும்!
என் தேடுதல் பயணம் என்பது இதுதான்!
எத்துணை தொலைவு என்பது என் கவலையில்லை. இது நடக்குமா? என்ற கேள்வி என்னில் இல்லை.
நான் புறப்பட்டுவிட்டேன் -
நடக்கவே முடியாத கனவினை நடத்திவைக்க!
நொறுக்கவே முடியாத பகைவனை நொறுக்கிவிட.
நேராக்கவே முடியாத தவறுகளை நேராக்கிவிட
நேர்மையானதை நிலைநாட்ட நரகத்திற்கும் சென்றிட!
தொலைக்கவே முடியாத துன்பத்தைத் தொலைத்துவிட.
தொடவே முடியாத விண்மீனைத் தொட்டுவிட.
துணிந்தவரும் துணியாத தூரத்தைக் கடந்துவிட.
காணவே முடிந்திராத காதலியை அன்புசெய்ய.
கடுகளவும் நிறுத்தாமல் நீதிக்காகப் போராட.

பெருமைமிகு இந்தப் பயணத்தைப் பொருத்தவரை
பொறுமையும் உண்மையும் உள்ளவனாக நான் இருப்பின்
இறக்கும்போது எனக்கு மனநிறைவு கிடைக்கும்.
ஏராளமான தழும்புகளுடன் ஏளனங்களைத் தாங்கிக்கொண்டு
போர்க்குணம் மிக்க ஒருவன் எட்டாத விண்மீனைத் தொட்டிடப்
போராடினான். துணிச்சலின் கடைசித் துளிவரை! என்பதால்
ஓரடியாவது உலகம் முன்னேறிவிடாதா என்ன?


 
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
 
காட்சி காண்போமா???

இன்று தாயாம் திருச்சபை திருக்காட்சிப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. காட்சிகள் பல விதம் . கண்ணைக் கவர்வதல்ல காட்சி ,கண்ணோடு கருத்தையும் கவர்வதே காட்சி என்பர். அவ்வகையில் இன்று பாலன் இயேசுவைக் காண வந்த ஞானியர்களுக்கு கண்ணொடு சேர்த்து கருத்தையும் கவர்ந்ததாலேயே இவ்விழா இத்தகைய சிறப்பு பெற்றிருக்கிறது. அக்காட்சி அவர்களின் கண்களுக்கு மட்டும் மகிழ்வைத் தந்திருந்தால், அது வெறும் காட்சி விழாவாக இருந்திருக்கும். மாறாக அவர்களின் கருத்தையும் வாழ்வையும் கவர்ந்ததால் தான் இன்று திருக்காட்சி விழாவாக நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. நாமும் பல காட்சிகளைக் காண்கிறோம். தொலைதூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தொலைக்காட்சி, திரையரங்குகளில் காட்டப்படும் திரைக்காட்சி என பல காட்சிகளைக் காண்கிறோம் . ஆனால் அவை அனைத்தும் நம் கண்களை மட்டுமே கவர்கின்றன. நம் கருத்துக்களை கவர்ந்து திருக்காட்சிகளாக நம் மனதில் இடம் பிடிப்பவை ஒன்றுமில்லை. நமது பார்வைகள் எப்படி இருக்கின்றன? நமது காட்சிகள் எதை தேடிச்செல்ல உதவுபவைகளாக இருக்கின்றன என்பதை பற்றி சிந்திக்கவே இன்றைய நாள் விழா நமக்கு அழைப்புவிடுக்கின்றது.
திருக்காட்சி பெருவிழாவைப் பற்றியும் அதில் இடம் பெறும் விண்மீன் பற்றியும் மேலை நாடுகளில் ஒரு வட்டார வழக்கு கதை ஒன்று உண்டு. உலகை படைத்த இறைவன் ஒரு நாள் மிக்கேல் கபிரியேல் ரபேல் என்னும் அதிதூதர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்தார். நீங்கள் மூவரும் விண்ணுலகம் எங்கும் சென்று மிக அழகும் ஒளியும் கொண்ட ஒரு விண்மீனை தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும் என்றாராம். அதற்கு அதிதூதர்கள், இறைவா நீர் படைத்த அனைத்தும் மிகுந்த அழகும் ஒளியும் பொருந்தியவையாயிற்றே. அப்படியிருக்க அதில் எப்படி ஒன்றை தேர்வு செய்து கொண்டுவருவது என்றார்களாம். யாம் படைத்த அனைத்தும் நல்லவை என்று அறிவோம். இருப்பினும் தன் செயல்களாலும் பண்புகளாலும் தங்கள் அழகையும் ஒளியையும் அதிகமாக்குபவர்கள் நம்மில் இருப்பார்கள் அல்லவா? அதில் சிறந்த ஒரு விண்மீனை அழைத்து வாருங்கள் என்று கூறி அதிதூதர்களை அனுப்பிவிட்டார் இறைவன். மூவரும் மிகு அழகும் ஒளியும் பொருந்திய விண்மீனை தேடி அலைந்தனர். ஒரு பொழுதில் அத்தகைய சிறப்பு மிகுந்த விண்மீனைக் கண்டும் கொண்டனர். அதனை மறுநாள் இறைவன் முன்னிலையில் நிறுத்தினர். அதனிடம் இறைவன் உனது நற்செயல்களாலும் பண்புகளாலும் உனது அழகையும் ஒளியையும் மிகுதியாக்கிய நீயே நான் எதிர்பார்த்த ஒரு விண்மீன் . உன்னிடம் ஒரு மிகச்சிறப்பான பொறுப்பொன்றை தர இருக்கின்றேன் என்றார். விண்மீன் படைத்தவனின் கட்டளைக்காக ஆவலுடன் காத்திருந்தது. எனது மகனை குழந்தையாக மண்ணுலகிற்கு அனுப்ப இருக்கிறேன். அவனைக் காண நினைப்பவர்களுக்கு நீ தான் பாதை காட்ட வேண்டும் என்றார்.
விண்மீனும் ஆசையுடன் விடை பெற்று இடையர்கள் வானதூதர்கள் ராஜாக்கள் என அனைவருக்கும் வழிகாட்டி, தன் வேலையை முடித்து மண்ணுலகம் திரும்பியது. மற்ற விண்மீன் கூட்டங்கள் இதனிடம் நலம் விசரித்தன. எங்கு சென்றாய்? என்ன செய்தாய்? என்று. நமது சிறப்பு விண்மீனும் தனது பயண அனுபவங்களையும் வேலையையும் மற்ற விண்மீன்களுடன் பகிர்ந்து கொண்டது. அன்று முதல் மற்ற விண்மீன்கள் நம் சிறப்பு ண்மீனுடன் பேசுவதை நிறுத்தி கொண்டன. பொறாமையுணர்வுடன் அதை பார்க்க தொடங்கின. இதனால் மனமுடைந்த சிறப்பு விண்மீன் இறைவனின் முன் சென்று தன் குறையை எடுத்துரைத்தது. தன்னை வேறு எங்காவது மாத்திவிடுமாறு கெஞ்சி கேட்டது. இறைவனும் அதை உயரமான மலைஉச்சியில் பூக்கும் அரிய வகை அல்பீனா மலராக மாற்றி அனுப்பி, நீ காண்போர் கண்களுக்கு சிறப்பு மிகுந்த மலராகத் திகழ்வாய். உன்னைத் தேடிக் கண்டடைபவர் மிகச்சிறப்பு பெற்றவராவர், உன்னைக் காண ஏங்கித் தவிப்பவர்கள் மட்டுமே உன்னைக் காண்பர். சிறப்பான பணியைச்செய்து உயர்வு பெற்றதால் நீ உயரிய மதிப்பு பெறுவாய் என்று வாழ்த்தி அனுப்பி விட்டார். அன்றிலிருந்து இன்று வரை அச்சிறப்பு விண்மீன், மனிதர்கள் உயர்ந்த மலைகளில் அரிதாய் அலைந்து தேடும் , காட்சிக்கு காண கிடைக்காத அல்பீனா மலராக திகழ்கின்றது. இறைவனின் மகனை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டி மீட்படையச்செய்த விண்மீன் நமது வாழ்வையும் மீட்பிற்கு இட்டுச்செல்லாதா என்ற ஒரு ஏக்கத்தோடும் தேடலோடும் மனிதர்கள் அல்பீனா மலராக மாறிய நம் சிறப்பு விண்மீனைத் தேடி அலைகின்றனர். இது வட்டார வழக்கு கதை தான் என்றாலும் இதில் சொல்லப்படும் உண்மைகள் ஏராளம்.
இறைமகன் இயேசு ஒவ்வொரு ஆண்டும் ஏன் ஒவ்வொரு நாளும் நம் மத்தியில் மனிதராகப் பிறக்கின்றார். அவர் பிறந்திருக்கும் செய்தியை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க விண்மீன்களாய் நம்மை அனுப்ப நினைக்கிறார். நாம் சிறப்பு வாய்ந்தவர்களா என்று முதலில் கண்காணிக்கப்படுகின்றோம்.அதன்பின் பணிக்கு அமர்த்தப்படுகின்றோம். பணியை நிறைவாகச்செய்த பின்னும் நம்மைச்சுற்றி இருப்பவர்களால் புறக்கணிக்கப்படுகின்றோம். பின் கடவுளின் அருளால் பிறர் கண்களுக்கு காணக்கிடைக்காத ஒரு பொருளாய் அரிய உறவாய் மாறி விடுகின்றோம்.
ஞானியரின் வருகையை விழாவாகக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுக்கு ஒளியின் பாதையை தெளிவாகக் காட்டிய விண்மீன் போல தெளிவுடன் நாமும் செயல்பட முயல்வோம். எத்தனையோ அரசர்கள் ஞானியர்கள் இருந்தாலும் இறைவன் பிறப்பைக் கொண்டாட சிறப்பாக அழைக்கப்பட்ட இந்த ஞானியர்கள் போல நாமும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருக்க முயல்வோம்.
எவ்வளவு தான் கொடியவனாய் இருந்தாலும் யூதர்களின் அரசன் பிறக்கும் இடம் பெத்லகேம் என்று கண்டறிந்து ஞானியர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்த ஏரோது போல, நமது எதிர் சிந்தனையாளர்களுக்கும் நம்மை வெறுப்போர்களுக்கும் நாம் வெறுப்பொர்களுக்கும் நல்லதே செய்ய நினைப்போம்.
அரசன் கலக்கமுற்றதும் உடன் கலங்கிய நாடு போலத் தேவையற்ற கலக்கம் பயம் தவிர்த்து வாழ முற்படுவோம்.
விண்மீனைக் கண்ட ஞானியர்களுக்கு அவர்கள் கண்ட காட்சி திருக்காட்சி. ஆனால் ஞானியரைக் கண்ட ஏரோதிற்கோ வெறும்காட்சி. ஏனெனில் ஞானியர்களிடம் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஏரோதிடமோ, அவரைக் கொல்ல வேண்டும் என்ற குரோதம் இருந்தது. ஞானியர்கள் தங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற பொருளைக் காணிக்கையாக கொடுக்க எண்ணினர். ஏரோதோ மாசற்ற குழந்தைகளின் உயிரை எடுக்க எண்ணினான். ஞானியர் தெண்டனிட்டு வணங்க ஆயத்தமாயிருந்தனர். ஏரோதோ தெண்டனிட்டு வணங்கப்பட ஆயத்தமாயிருந்தான். காணும் காட்சியில் தெளிவு இருந்ததால் ஞானியர்களுக்கு இரண்டு முறை விண்மீனைக் கண்டுணர முடிந்தது. கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்ததனால் ஏரோதிற்கு விண்மீனின் வடிவம் கூட தெரியவில்லை. நாம் யார் போல் காட்சி காண்கின்றோம் ஏரோது போலா?? இல்லை ஞானியர்கள் போலா??? நமது காட்சி நமது கண்ணோடு கருத்தையும் கவர்கின்றதா?? ஞானியர்கள் போலா???சிந்தித்து செயல்படுவோம். நாம் காண்கின்ற காட்சிகள் நமது வாழ்வை மாற்றுகின்ற திருக்காட்சிகளாக அமைய, நாம் பிறரால் தேடப்படுகின்ற ஒரு நபராக இருக்க , காணக் கிடைக்காத அரிய உறவாக நமது உறவு சிறப்படைய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


 

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும்

 எசாயா 60:1-6
 எபேசியர் 3:2-3, 5-6
 மத்தேயு 2:1-12
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர்

'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை, பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக் காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில் இருக்கின்றது.

இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8). புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட, அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர், அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.
ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. இருவகைக் காணுதல்:
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக் காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர். ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில் அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில் வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15). இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக் காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?

2. மூவகை பதிலிறுப்புகள்:
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப் பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர் கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும் நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின் அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள் ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில் நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!' என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின் தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கும்.

3. இரண்டாம் முறை விண்மீன்:
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின் அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன் இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம் கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண். பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள் அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?
இறுதியாக,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர் (காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப் பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும் பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும்.
திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

(அருட்தந்தை: இயேசு கருணாநிதி)