இறைவனின் அருளைப் பெற்றுக்
கொள்ள வந்திருக்கும் அன்புள்ளங்களே!
தவக்காலம் இன்னொருமுறை நமக்காகத் திரும்பி வந்திருக்கின்றது.
பாதைகள் கரடு முரடுதான், பயணத்திற்கு முன் நம் பாதங்களைச் சரி
செய்வோம். உடைகளை அல்ல, உள்ளங்களைக் கிழிக்கும் நாள் இந்த
நாள். சாம்பல் பூசி, தவமிருந்து, பாவங்களுக்காக மன்றாடும் நாள்
இந்தநாள். மனம் நிறைய மன்னிப்பைச் சுமக்கவேண்டிய நாள்
இந்தநாள். பிரச்சனைகளுக்கு, சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தும்
நாள் இந்தநாள்.
நோன்பு, ஜெபம், தருமம், அறநெறி செயல்களை நாள்தோறும் செய்து, மனதை
அமைதியாக்குவோம். மறுவுருப்பெறுவோம்.
இறைவனின் அருளும், இரக்கமும் மிகுதியான இந்தத்தவக்காலத்தை அன்போடு
வரவேற்போம்.
இறைவனின் அருளையும், இரக்கத்தையும் நிறைவாகப் பெற்றுக்கொள்ள,
இந்தத் திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. வழிபாட்டுப் பேரணியை திரட்டுங்கள் என அழைப்பு
விடுக்கும் அருள் நாதரே!
ஆண்டவரின் ஊழியர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள,
குருக்கள,; துறவியர், இறைமக்கள் அருள்பெற்றுக்
கொள்ளும் இந்த தவக்காலத்தில் புனிதமான உண்ணா
நோன்புகளையும், வழிபாட்டுக் கொண்டாட்டங்களையும்
அனுசரித்து, நிந்தைக்கும் பழிச் சொல்லுக்கும்
தப்பித்துக் கொள்ளும் அருளைப் பெற்றுக் கொள்ள
துணைபுரிய வேண்டுமென்று, தெய்வமே உம்மை மன்றாடுகிறோம்.
2. விடுதலை நாளில் எமக்குத் துணையாய் இருக்கும்
அருள்நாதரே! உம்மிடமிருந்து வளங்களைப் பெற்று கொண்ட
நாடுகளின் தலைவர்கள், சமுதாயத்தின் தலைவர்கள் இதுவே
தகுந்த காலம், இதுவே மீட்பின் காலம் என
உணர்ந்தவர்களாய், தேவையில் இருக்கும் ஏழை எளிய
மக்களுக்கு தங்களால் இயன்ற அளவுக்கு நல்லன செய்ய
பக்குவமான மனநிலை தர வேண்டுமென்று, தெய்வமே உம்மை
மன்றாடுகிறோம்.
3. உங்கள் இதயத்தைக் கிழித்துக் கொண்டு என்னிடம்
வாருங்கள் என அழைக்கும் அருள்நாதரே!
எங்கள் இதயத்தை உம் பக்கம் திருப்ப உழைக்கும் எமது
பங்கின் பணியாளர், இரக்கத்தின் காலத்தில் நீர் அருள்
நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், செய்யக் கருதிய
தீமையைக் குறித்து மனம் மாறுகின்றவர் என்ற செய்தியை,
எங்கள் இதயத்தின் ஆழத்தில் பதியச் செய்யும் ஆற்றலோடு
செயல்பட ஏராளமான அருள்பொழிய வேண்டுமென்று, தெய்வமே
உம்மை மன்றாடுகிறோம்.
4. அறச்செயல்களை செய்ய தவக்காலத்தில் ஞாபகபடுத்தும்
அருள்நாதரே! உம்மைப் புகழும் போதும், பிறருக்கு உதவும்
போதும் பெருமையாக நினைக்காமல் விளம்பரமின்றி எம்மால்
இயன்ற நற்செயல் செய்ய அருள் பொழிய வேண்டுமென்று,
தெய்வீக நாதரே உம்மை மன்றாடுகிறோம்.
5. எம்மீது அருள்பொழிய தவக்காலத்தை தேர்ந்தெடுத்த
அருள்நாதரே!
நாங்கள் வாழ்ந்து வரும் சொகுசான வாழ்க்கைக்கு
மத்தியில் சிறுசிறு ஒறுத்தல் முயற்சிகளாலும் உண்ணா
நோன்பினாலும், செப தவ முயற்சிகளாலும் எங்களது பாவ
நாட்டங்களை குறைத்து அருள் வாழ்வின் பாதையில் வளர
அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. இரக்கமே உருவான இறைவா! தவக்காலத்தை தொடங்கியுள்ள
நாங்கள், குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அன்பு செய்து,
அவர்களின் குறை நிறைகளை பொறுத்து சமாதானத்தை எங்கள்
குடும்பத்தில் நிலைக்கச் செய்ய அருள்தர வேண்டுமென்று,
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. கருணையே உருவான இறைவா! ஏழை எளியவர்கள் மீது இரக்கம்
கொண்டு, எங்கள் பகட்டு வாழ்வை விட்டு விட்டு
மற்றவர்களுக்கு உதவி செய்து பகிர்ந்து வாழ கிருபை
தரவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
மன்னன் ஒருவன் வேட்டைக்காக காட்டிற்குச் சென்றான்.
மாலை வேலை என்பதால் தொழுகையை இருந்த இடத்திலேயே
ஆரம்பித்தான். அந்தபக்கமாக காட்டிற்கு விறகு பொறுக்க
வந்த ஒரு பெண்மனி தன் கணளைத் தேடிக் கொண்டு பதட்டமாக
ஓடி அப்போது எதிபாராதவதமாக தொழுது கொண்டிருந்த மன்னன்
மீது மோதிவிட்டாள். சிறிது நேரம் கழித்து அவ்வழியே
அந்தப் பெண்மனியும் அவரது கணவரும் திரும்பினார்கள்.
தொழுகையை முடித்திருந்த மன்னன் அந்தப் பெண்மனியிடம்
தொழுகையில் இருந்த போது என் மீது ஏன் மோதினாய் என
சினத்துடன் கேட்டான். நேரம் இருட்டுவதற்குள் என்
கணவனைக் கண்டுபிடித்து வட வேண்டும் என கணவனையே
நினைத்துக் கொண்டு ஓடியதால் உன்னை நான் கவனிக்கவில்லை.
மன்னித்துக் கொள் என்றாள். தொடர்ந்து மன்னனிடம் நீ
தொழுகையில் இருந்த போது உன்னை நான் மோதியதை நீ எப்படி
கவனித்தாய் எனக் கேட்டாள். அப்போது மன்னன் தன் நிலை
உணர்ந்து அவமானத்தால் தலை குனிந்தான்.
தவக்காலத்தை எப்படி ஆரம்பிக்கப் போகிறோம்? தொழுகை
நடத்திய மன்னனைப் போலவா? கணவனை நினைத்து ஓடிய
பெண்மனியைப்போலவா?
தவக்காலம் ஓடிக் கொண்டே இருக்கும் நம் சிந்தனையை 40
நாளிலாவது கடவுளுக்கு நெருக்கமாக இருக்க இழுத்துப்
பிடித்து வைக்கிறது. கடவுளை மட்டுமே நினைத்து நமது
வாழ்க்கையை அமைத்தால் யார் மோதினாலும் எந்த பாதிப்பும்
நிகழாது. அப்படியே மோதல் நிகழ்ந்துவிட்டால் கூட
வருத்தம் தெரிவிக்கும், மன்னிப்புக் கேட்கும் மனநிலை
தானாகவே உருவாகி விடும். ஓடிக் கொண்டிருக்கும் நாம்
இறைவனை மையமாக நினைத்து ஓட இந்த தவக்காலம் அழைப்பு
விடுக்கிறது.
நமது வாழ்க்கைப் பாதையில் கடவுளை மையமாக வைத்துப்
பயணிக்கும் போது காணுமிடமெல்லாம் மகிழ்ச்சி பூங்காற்று
மட்டுமே நம்மீது வீசும். அப்படியே பலத்த காற்று
வீசினால் கூட தாங்கிக் கொள்ளுவோம்.
இன்று உலகம் போட்டி, பொறாமை சுயநலம், பழிவாங்கும்
உணர்வு, கொலை கொள்ளை, என்ற சிந்தனையை ஏந்திக் கொண்டு
பயணிக்கிறது. இதனால் தான் கவலைப்புயல், துன்பப்புயல்
மோதி விழுந்து விடுகிறோம். தன்னை உணர்ந்து, தன்நிலை
மறந்து பிறரைப்பற்றி கொஞ்சம் சிந்தித்தால் பூங்காற்று
தொடுவதை அனுபவிக்கலாம்.
எது எப்படியானாலும் பரவாயில்லை பூங்காற்றை அனுபவிக்க
வாய்ப்பாக வந்திருக்கும் தவக்காலத்தைப்
பயன்படுத்துவோம். மனமாற்றம் மட்டும் தான் விரும்பும்
பலன் கொடுக்கும் என்பதை முதலில் ஏற்றுக்கொள்வோம்.
எவற்றில் மாறவேண்டும் எப்படி மாறவேண்டும் என
சிந்திப்போம். குடும்பத்தில் இருந்தே ஆரம்பிப்போம்.
குடும்பங்கள் தானே நாம் குடியிருக்கும் கோயில் அதை
பேணிக்காப்போம். குடும்பத்தில் அன்பைக் கொண்டாடும்
போது அதுவே பணித்தளங்களிலும், காணும் இடங்களிலும்,
காணும் மனிதரிலும் எதிரொலிக்கும்.
எப்படி சம்பாதிப்பது? எப்படி சேமிப்பது? எது
முக்கியமான செலவு என குடும்பத் தலைவன், மனைவி,
பிள்ளைகள் உட்பட அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.
காசு பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது. சொந்த வீடு,
ருசியான சாப்பாடு இதெல்லாமே சந்தோஷமான விஷயம் தான்.
பணத்தைவிட குடும்ப உறவுதான் சந்தோஷத்துக்கு காரணமாக
உள்ளது குடும்ப உறவுகளுக்கு மதிப்பு கொடுப்போம்.
பணம் சம்பாதிப்பதில் அதிக நேரமும் அன்பு செய்வதில்
குறைந்த நேரமும் செலவிடுவதால் கோடிக்கணக்கில் செல்வம்
இருந்தும் வாழ்வில் திருப்தியும் நிறைவும் இல்லாமல்
இருக்கிறது. எனவே அன்பு செய்ய நிறைய நேரம்
செலவிடுவோம்.
குழந்தைகளின் தேவையை அறிந்து நிறைவு செய்வோம். அதிக
நேரம் கணினியில் விளையாட இருக்கும் குழந்தைகள் என்ன
செய்கிறார்கள் எனவும் கவனிப்போம். கனிவையும்
கண்டிப்பையும் ஒன்றாக்கி பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்.
பெற்றோர் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக இருப்போம்.
பிள்ளைகள் பெற்றோருக்கு மிகுந்த கீழ்படிதலுடன்
இருப்போம். கட்டாயத்தின் பேரில் ஒருவருக்கு உதவி செய்ய
முடியும். ஆனால் அன்பு செய்ய முடியாது. அன்புடன்
பெற்றோருக்கும் மற்றோருக்கும் உதவி செய்வோம்.
உலகிலேயே மிக மோசமான பாவச்செயல் தான் நல்லவனென்றும்
பிறர் பாவிகள் என்றும் தீர்ப்பிடுவது. இந்த மோசமான
பாவச் செயலை இந்த நாட்களில் செய்யாமல் இருக்க
எல்லோரையும் மனிதாபிமானத்துடன் நேசிப்போம்.
தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும் அதைத் திருத்திக்
கொள்ளும் பலமும் தான் உண்மையான வெற்றிக்கு வழி. தவறு
செய்யாமல் இருப்போம். தவறு செய்யும் போது மனம்
வருந்துவோம். மன்னிப்புக் கேட்போம். அப்படியே பிறர்
நமக்க எதிராக ஏதேனும் தவறு செய்தால் உடனே மன்னிப்போம்.
மன்னிக்காமல் போவதை விட மெதுவாகவேனும் மன்னிப்பது
நல்லது. இது மன்னிப்பின் காலம் நாம் மன்னிப்பது போலவே
மன்னிக்கப்படுவோம்.
வாழ்வின் நூல் மெல்லியது. காலமோ குறுகியது.
அடுத்தவருக்கு முடிந்த வழியில் எல்லாம் நன்மை
செய்வோம். அது நமது கடமையல்ல. அதுவும் ஒரு சந்தோஷம்.
நமது மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அது
மிகுதியாக்கும்.
நன்மை செய்வதற்கு சக்தி இருக்கும் போதே அதை செய்ய
வேண்டியவர்களுக்கு நாம் செய்துவிட வேண்டும்.
பணத்தை விட ஞானம் மேலானது. பணத்தைச் சம்பாதித்தாலும்
நல் ஞானத்தைச் சம்பாதிப்பதும் மேலானது.
கோடைக்காலத்தில் சேமித்து வைப்பவன் புத்தியுள்ளவன்
என்பது போல தவக்காலத்தில் நற்பண்புகளை எல்லாம்
சேமித்துப் கொள்வோம். பொல்லாத மனிதர்களின் நட்பைக்
கைவிடுவது நல்லது. தவறான பழக்க வழக்கங்களை தவிர்ப்பது
நல்லது. அதிகமாக நல்ல செயல்களில் நம்பிக்கையுடன்
ஈடுபடுவதும் நல்லது.
நமக்குள் உள்ள வேண்டாத நினைவுகளை, வேண்டாத பழக்க
வழக்கங்களை நீக்கி நமது நல்லெண்ணத்தால் நல்ல மனிதராக
பிறரின் பார்வைக்குள் அகப்படுவோம்.ரோமில் உள்ள விவசாய
மற்றும் உணவுத் துறையின் அறிக்கையில் உலகில் ஏதேனும்
ஒரு மூலையில் உணவின்மையால் பஞ்சத்தால் ஒவ்வொரு ஐந்து
வினாடிக்கும் ஒரு பச்சிளம் பிஞ்சு இறந்து விடுவதாக
குறிப்பிடப்படுகிறது. தவக்கால தர்மத்தாலும், உபவாச
செபத்தாலும் இதுமாதிரியான அவல நிலைக்கு ஆளாகும்
பிஞ்சுகளின் இறப்பு எண்ணிக்கையை தடுக்க முன்வருவோம்.
நம் வாழ்க்கையில் வளங்கள் நிறைப்பதைவிட பிறரின்
வாழ்க்கையில் வளங்கள் நிறைந்திருக்க வழி காட்டும் போது
நம் மனசும் நிறையும் மகிழ்ச்சியும் பெருகும். என்பதை
கவனத்தில் கொள்வோம்.
நாம் படிப்பது நமக்கு மட்டும் கை நிறைய சம்பாதிக்க
அல்ல. தனக்கு போக மிஞ்சியதை பிறருக்கு தர்மம்
கொடுக்கவே! பிறருக்கு கொடுக்க விரும்பாத மனிதன்
கடவுளிடமிருந்து எதையும் பெற முடியாது.
நமக்கு ஏற்படுகின்ற துன்பத்தை தாங்கிக் கொண்டு
பிறருக்கு ஏற்படுகின்ற துயரத்தை நீக்க முன்வரும் போது
நமது துன்பத்தின் வலி வெகுவாக குறையும்.
அடுத்தவர்களிடம் அன்போடு நடந்து கொள்ளும் போது
சொர்க்கத்தையே நேரில் பார்க்க முடியும்.
கடவுள் கருணைக்கடல். அன்பு நிறைந்த பேராழி. ஆனால்
அதிலே மொள்ள நாம் உபயோகிக்கும் வாளிதான் சிறியது. இந்த
தவக்காலத்தில் அவர் அருகில் சென்று நாம் உபயோகிக்கும்
வாளியை மிகப் பெரிதாக மாற்ற தவமிருப்போம். நாம்
செய்யும் தவம் நம்மை மாற்றும். மிகப்பெரிய வாளியைப்
பயன்படுத்தி கடவுளின் அன்பையும் கருணையையும் மொள்ளும்
போது கடவுள் நம்மை அதிகம் அதிகமாய் நேசிப்பார்.
இத்தவக்காலமானது சமூக அக்கறை கொண்டவர்களாக நம்மை
மாற்றவும், நமது அறநெறி உணர்வுகளை செயல்களாக்கவும்
வந்திருக்கிறது. கொடுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்
என்பது இறைமொழி. ஆனால் இறைவன் மொழியை உச்சரிக்க மறந்து
இருளில் வாழ்கின்றோம். இத்தவக்காலத்தில் எதை எல்லாம்
பெற்றுக் கொள்ள விரும்புகிறோமோ அதை எல்லாம்
பகிர்தலாக்கி இறை மொழியை அதிகமாக உச்சரித்து அதிகமாக
அருளின் வெளிச்சத்தில் பயணிப்போம். அப்போது மெல்லிய
மகிழ்ச்சிப் பூங்காற்று நம் பாதையிலும் தொடரும்.
அயலார் பாதையிலும் தொடரும்.
தவக்காலப் பயணம் இனிதாக அமையட்டும். இறைவனின் அருள் ஒளியால்
நிரம்பி வழியட்டும்.
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
தவக்காலம் அருளின் காலம், அன்பின் காலம்,
புதுப்பித்தலின் காலம், ஆண்டவர் இயேசுவின் பாடுகளை
நினைகூறும் காலம். இக்காலம் கிறிஸ்தவர்களின்
வழிபாட்டு ஆண்டில் ஒரு முக்கிய காலகட்டம் என்றே கூறலாம்.
இக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம்....
ஏராளம், அதனைச் செய்ய நமது தாராள மனதைத் தர
வேண்டுமென்று அழைக்கிறது இத்தவக்காலம். காலங்கள்
பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை. இக்காலம் நமக்கு புதுவகை.
ஏனென்றால் பழய வாழ்க்கை நெறியிலிருந்து விலகி,
புதிய பாதையில் செல்ல நம்மை அழைக்கின்றது. இத்தவக்காலத்தில்
கிறிஸ்தவர்களாகிய நாம், இறைவேண்டல், தவமுயற்சிகளில்
ஈடுபடுதல், தருமம் செய்தல், ஒறுத்தல் போன்ற நற்செயல்கள்
புரிந்து , நமதாண்டவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டும்
என அழைப்புவிடுக்கிறது. காலம் பொன்போன்றது, கடமை
கண்போன்றது" என்ற பழமொழி இக்காலத்தில் நமக்கு மிகவும்
பொருத்தமானது என உணர்ந்து, பொன்னான இத்தவக்காலத்தில்
நற்செயல்கள் செய்வது நமது கடமையாக நினைத்து, அதனை
செயல்படுத்த முன்வருவோம். தவக்காலம் என்பது நம்முடைய
தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து,
நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும், கொடையாக
தரப்பட்டது தான் இக்காலம்.
இத்தவக்காலம் நாற்பது நாற்கள் அனுரிக்கப்படுகிறது.
நாற்பது என்பது, கிறிஸ்தவ வரலாற்றில், ஒரு முக்கியமான
முழுமைபெற்ற எண்ணாக கருதப்படுகிறது. நாற்பது நாள்
என்று சொன்னாலே, பழைய ஏற்பாட்டில் நிறைய சிறப்புகள்
சொல்லப்படுகின்றன. மோசே சீனாய் மலையிலே நாற்பது
பகலும், நாற்பது இரவும் கடவுளோடு பேசினார், பாலைநிலத்திலே
இஸ்ராயேல் மக்கள் அலைந்து திரிந்த காலம் நாற்பது,
நோவாவின் காலத்திலே மழைப்பொழிந்த காலம் நாற்பது,
அன்றைய பழையகாலத்தில் ஒரு மனிதன் என்ன தவறு
செய்திருந்தாலும், அவருக்கு நாற்பது கசையடிக்கு
மேல் அடிக்கக் கூடாது என்ற ஒரு சட்டம் இருந்தது.
இப்படி பல்வேறு நிகழ்வுகள் நாற்பது என்பதன் முக்கியத்துவத்தை
வெளிப்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக இறைமகன்
இயேசு பாலைநிலத்திலே நாற்பது இரவும், நாற்பது பகலும்
உண்ணா நோன்பிருந்து உலகத்திற்காக உயிர்
கொடுத்தார். இப்படி நாற்பது என்பதன் முக்கியத்துவம்
தவக்காலத்திலும் தொடர்கிறது. இறைமகன் இயேசு உண்ணா
நோன்பிருந்து உயிர் சக்தி பெற்ற பாலைவன அனுபவம்
போல, நாம் ஒவ்வொருவரும் பெறவேண்டும் என அழைப்புவிடுக்கிறது
இத்தவக்காலம்.
திருநீற்றுப் புதன் :
தவக்காலத்தின் முதல் நாள் திருநீற்றுப் புதன்.
திருநீற்றுப் புதன் என்பது , சாம்பல் புதன் என்றும்,
விபூதி புதன் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில்
மக்கள் தங்கள் பாவங்களை நினைத்து, மனம் கசிந்து,
சாம்பலை உடலெங்கும் பூசி, மேனி அழகை குறைத்துக்
கொண்டு, கோணியை ஆடையாய் உடுத்தி, ஏழ்மைக் கோலம்
பூண்டு, உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். அதன் அர்த்தமாகவே
விபூதி புதனன்று, நமது நெற்றியில் சாம்பலினால்
சிலுவை அடையாளம் வரையப்படுகிறது. மேலும்" மனிதனே
நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்
மறவாதே என்றும் மறவாதே" என்ற வார்த்தைகள் மனிதர்களாகிய
நாம் நிலையற்றவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இத்தவக்காலதில் நோன்பிருத்தல், செபித்திருத்தல் ,
பிறரன்பு பணியில் ஈடுபடுதல் போன்ற நற்செயல்கள்
செய்ய அழைக்கப்படுகிறோம்.
நோன்பிருத்தல்:
தவக்காலத்தில் முக்கியமான பண்பு நோன்பிருத்தல்,
நோன்பிருத்தல் என்பது எல்லா மாதங்களிலும் கடைபிடிப்பது
நல்லது. ஆனால் தவக்காலதில் கடைபிடிப்பது புனித செயல்பாடு.
நோன்பிருத்தல் நம் உள்ளத்திற்கும்,உடலுக்கும் நல்லது.
நோன்பு என்பது இறைவேண்டலின் பரிமாணம். பாலைநிலத்திலே
இயேசு நாற்பது இரவும் ,நாற்பது பகலும், உண்ணாமல்,
குடிக்காமல் இறையில் மூழ்கியிருந்தார். அவரின்
மாதிரிகையை பின்பற்றும் நாமும், நோன்பு கடைபிடிப்பது
மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தவக்காலத்தில்
நாற்பது நாட்களுமோ, அல்லது வாரத்தின் ஒரு முறையோ
உண்ணாநோன்பிருப்பது, இயேசுவின் மேல் நமக்குள்ள அன்பை
வெளிப்படுத்தும் ஒரு சிறு முயற்சியென்றே சொல்லலாம்.
இக்காலங்களில் அசைவ உணவுகளை ஓரம் கட்டி, ருசிக்காக
அல்லாமல், பசிக்காக உண்டு , பரமன் இயேசுவின் பாடுகளோடு
இணைய, நமது பங்களிப்பை அகலமாக்குவோம். நாம் நோன்பு
இருப்பதன் மூலம் எஞ்சிய உணவுப்பொருட்களை, இல்லாதவர்களோடு
பகிர்ந்து கொண்டு , இறைநட்புறவை பலப்படுத்துவோம்.
நோன்பு இருத்தலின் வழியாக நாம் நம்மை பற்றி ஆய்வு
செய்ய முடிகிறது, நம்முடைய வாழ்வு எப்படியிருக்கிறது
என்பதைப் பற்றிய தெளிவைப் பெறமுடிகிறது. நம்மையே
நாம் முழுமையாக அன்பு செய்து ஏற்றுக்கொள்ள,
நோன்பிருத்தல் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய
நோன்பு நம்மை தூய வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறது.
எந்த மதத்திலும் நோன்பிருத்தலுக்கு மாதிரிகள்
கொடுக்கப்படவில்லை. ஆனால் நமது இயேசு, தானே
நோன்பிருந்து ,நோன்பிருத்தலின் அவசியத்தை நமக்கு
எடுத்துரைக்கிறார். இதனையே வள்ளுவர்,
உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
என்று கூறுகிறார். அதாவது உணவு உண்ணாமல்
நோன்பிருப்பவர், பிறர் சொல்லும் தீய சொற்களை
பொறுத்துக்கொள்பவரினும் மேலானவராக கருதப்படுகிறார்.
ஆக நோன்பு என்பது நமது வாழ்க்கையில் முக்கியமான ஒன்று,
அதனால் அதனை கடைபிடிப்போம்.
செபித்திருத்தல்:
இறைவனின் அருளைப் பெறுவதற்கு இத்தவக்காலம் நமக்கு
மிகவும் உறுதுணையாக இருக்கிறது. செபம் இறைவனோடு உள்ள
உறவை புதுப்பிக்கும் பாலமாக இருக்கிறது. அதிகாலையில்
எழுந்து செபித்த, இயேசுவின் மாதிரிகையை பின்பற்றி,
நாமும் இக்காலங்களில் அதிகாலையில் எழுந்து தனித்திருந்து
செபிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வோம். இச்செபம்
நமக்கு வளமையையும், வலிமையையும் பெற்றுத்தரும்.
வார்த்தைகளை அடுக்கிக் கொண்டு போவதல்ல செபம்.
மாறாக இறைவனின் உடனிருப்பை ஆழமாக உணர்வதே செபம்.
வெளிவேடக்காரரைப் போல பிறர் பார்க்க வேண்டுமென்று
இல்லாமல், நமக்கும் இறைவனுக்கும் உள்ள ஒரு
நெருங்கிய உறவாக நம் செபம் அமையட்டும்.
எல்லாவற்றிற்கும் முதலும், முடிவுமான இறைவனில் பற்றுறுதி
கொண்டு , நாம் பற்றற்ற வாழ்வு வாழ செபிப்போம்.
கோள்களைக் காட்டிலும் மேலான குணங்களைப் படைத்த இறைவனை
நினைத்து வணங்குவதே சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
மேலும்,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனின் அடிசேரா தார்.
கடவுளின் திருவடிகளை பற்றுகின்றவன் பிறவியாகிய
பெருங்கடலை கடக்க முடியும். மற்றவர்களால் கடக்க
முடியாது என்கிறார் வள்ளுவர். ஆக செபம் என்பது நமது
வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை உணர்ந்து
, செபத்தில் ஆழப்படுவோம்.
பிறரன்பு பணிசெய்தல் :
பிறரன்பு பணிசெய்தல் என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஆன்மீகமாக
இருக்கிறது. நாம் இறைவனோடு கொண்டுள்ள நல்லுறவு ,
பிறரன்பில் தான் நிறைவடைகிறது. இயேசு உண்ணா
நோன்பிருந்தார், தந்தைக் கடவுளோடு இடைவிடாது
செபித்தார். அடுத்து அவருடைய செயல் பணித்தளங்களில்
இறங்கி மக்களுக்கு பணிசெய்வதாகவே இருந்தது. நாமும்
உண்ணாநோன்பிருந்து , உன்னத இறைவனில் சரணடைவது அனைத்துமே
, நமது செயலில் மாற்றத்தை ஏற்படுத்தவே. அது பிறரன்பு
பணியில் மிளிர வேண்டும் என்பதையே இறைவன்
விரும்புகிறார். நாம் ஒவ்வொருவருமே மனித சேவையில்
புனிதம் காண அழைக்கப்பட்டுள்ளோம். இந்த உலகத்தில்
எத்தனையோ நபர்கள், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி
இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம்
கண்டு, புது வாழ்வு பெற வேண்டும் என்பதுதான் இயேசுவின்
விருப்பம். அந்த விருப்பம் நம்மில் வெளிப்படவேண்டும்
எனவிரும்புகிறார் இயேசு. நம்மனங்களை திறந்து மனித
மனங்களை ஆற்றுப்படுத்துவோம். இயேசுவின் சகோதர சகோதரிகளாகிய
நாம், பிறர் நலத்தோடு வாழ முயற்சிப்போம். நம்மால
ஆன உதவிகளை செய்வோம். பிறரன்பு என்பது பொருளாதாரத்தை
மட்டும் கொண்டதல்ல, மாறாக நமது உடனிருப்பு, ஆறுதலான
வார்த்தைகள், ஊக்கமூட்டும் மனநிலை, பிறரைப் பற்றிய
நேர்மறை எண்ணம் இவை அனைத்துமே பிறரன்பு செயலுக்கு
சான்று பகர்கின்றது. இதனையே வள்ளுவர்,
அன்பில்லார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருளையும் தமக்கே உரிமையாக்கிக்
கொண்டு வாழ்வர், அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வர். என்கிறார் வள்ளுவர். நாம்
நமது உடைமைகளை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை உண்மையான
அன்பைக் கொடுப்போம்.
ஆக நோன்பிருத்தல், செபித்திருத்தல், பிறரன்பு பணிகள்
போன்ற இம்மூன்று நற்செயல்பாடுகளும் கிறிஸ்து ஆன்மீகத்திற்கு
அழைத்துச் செல்கின்றன. இந்த நாற்பது நாட்களும் நம்மையே
முழுமையாக இறைவனிடத்தில் ஒப்படைத்து, இறையருளை
நிறைவாகப் பெறுவோம். இறைமகன் இயேசு உங்களையும் என்னையும்
ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
திரும்பி வர முடியாத இடம்
அமெரிக்காலிருந்து அட்லாண்டிக் கடலுக்குள் போகிற வழியில்,
சரியாக இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் ஓர் இடம் இருக்கின்றது.
அந்த இடத்திற்குள் சென்று எந்தவொரு மனிதரோ, கப்பலோ, ஏன்
வானூர்திகூட திரும்பிவந்த வரலாறு இல்லை. அது ஏன்? என்ற காரணத்தை
இதுவரைக்கும் யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில்,
டிரான்ஸ்-ஓசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் குறிப்பிட்ட அந்த இடத்தை
ஒரு சிகப்புக் கோட்டினால் வரையறுத்து, அந்த இடத்திற்குப்
'திரும்பி வர முடியாத இடம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், திரும்பி வர முடியாத இடம் என்று
விமானிகள் சிகப்புக் கோட்டினால் வரையறுத்த பின்பும், இன்னும்
ஒருசில கப்பல்கள், வானூர்திகள் அந்த இடத்திற்குள் சென்று,
திரும்பி வரமுடியாதவாறு இருக்கின்றன.
மனிதர்கள்கூட 'திரும்பி வர முடியாதவாறு' இருக்கின்ற
சிற்றின்ப நாட்டங்கள், போதை, குடி, தலையாய பாவங்கள் என்று
திரு அவை கூறுகின்ற ஆணவம், கோபம், பேராசை, பொறாமை, கட்டுப்பாடற்ற
பாலுணர்வு, பெருந்தீனி, சிலைவழிபாடு போன்ற பாவங்களுக்குள்
சிக்கி, வாழ்வையே தொலைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய
சூழ்நிலையில்தான், நாம் திரும்பிவந்து ஆண்டவரோடு ஐக்கியமாக
வேண்டும் என்பதற்காகத் திருஅவை இந்தத் தவக்காலத்தைக்
கொடுத்திருக்கின்றது. இவ்வேளையில், ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கு,
இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை என்ன
சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்
இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
வாசகத்திலிருந்து, ஒவ்வொருவருக்கும் தரப்படுகின்ற அழைப்புதான்
'முழு இதயத்தோடு ஆண்டவரிம் திரும்பி வாருங்கள்' என்பதாகும்.
இந்த அழைப்பு கி.மு. 835 லிருந்து 796 வரையிலான காலகட்டத்தில்,
இறைவாக்குப் பணியைச் செய்துவந்த இறைவாக்கினர் யோவேல், ஆண்டவரின்
வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் தங்களைத் தயார் செய்யவேண்டும்
என்பதற்காக கொடுக்கப்பட்ட அழைப்பாக இருந்தாலும், அது நமக்குக்
கொடுக்கப்பட்ட அழைப்பாக இருகின்றது.
முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவது என்பது,
வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்வதோ, உடைகளைக்
கிழித்துக்கொண்டு, சாக்கு உடை உடுத்தி, சாம்பலில் உட்கார்வதோ
அல்லது அழுது புரள்வதோ (மத் 15: 8-9) அல்ல. மாறாக, குற்றத்தை
உணர்ந்து, நெருங்கிய இதயத்தோடு (திபா 51:17) ஆண்டவரிடம் வருவது.
அதுதான் முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வருவதாகும்.
இன்னும் சொல்லப்போனால் ஆண்டவராகிய கடவுள் ஒவ்வொருவரிடமிருந்தும்
எதிர்பார்ப்பது வெளிப்புற மாற்றத்தை அல்ல, உட்புற மாற்றத்தை.
அத்தகைய மாற்றம்தான் ஆண்டவருக்கு உவப்புடையதாகும்.
நாம் ஏன் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும்?
ஒருசிலர் கேட்கலாம், நான் ஏன் ஆண்டவரிடம் முழு இதயத்தோடு
திரும்பி வரவேண்டும் என்று. அதற்கு மூன்று முக்கியமான காரணங்கள்
இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக இப்போது பார்போம்.
1. நாம் அவருடைய மக்கள்
நாம் ஆண்டவருடைய மக்கள், அவர் நம்முடைய (விண்ணகத்) தந்தை (எரேமியா
7:23) அதனால் நாம் அவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில்கூட தன் மக்கள் மீது கருணைகாட்டினார்
என்ற வாசிக்கின்றோம் (யோவே 2:18) ஆகையால், நாம் ஆண்டவரின்
மக்கள் என்ற காரணத்திற்காக அவரிடம் திரும்பி வரவேண்டும்.
2. கடவுள் அருளாளவராகவும் அன்பானவராகவும் இருக்கிறார்
கடவுள் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர், நீடிய
பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர் இதனாலும் நாம் ஆண்டவரிடம்
முழு இதயத்தோடு திரும்பி வரவேண்டும். இவ்வுலகத்தில் யாரும்
அருள் நிறைந்தவராக, இரக்கமிக்கவராக, பேரன்பு கொண்டவராக இருக்கின்றார்களா?
என்று தெரியவில்லை. ஆனால், கடவுள் இருக்கின்றார். கடவுளின்
இத்தகைய பண்புகள் விவிலியம் முழுமைக்கும் சொல்லப்பட்டிருக்கின்றது
(விப 34: 6-7; எண்14:18; நெகே 9:17; திபா 86:1, 103:8.
145:8; யோனா 4:2). ஆகையால், கடவுளின் மக்களாகிய நாம் ஒவ்வொருவரும்
அவருடைய பண்புகளை உணர்ந்து, அவரிடம் திரும்பி வருவது
தேவையான ஒன்று.
இங்கு இன்னொரு கேள்வி எழலாம். 'கடவுள் அருள்நிறைந்தவராக,
பேரன்பு கொண்டவராக இருக்கின்றாரே, அது எப்படி?' என்பதுதான்
அந்தக் கேள்வி. இப்படித்தான் இளைஞர் ஒருவர் ஒரு துறவியிடம்
சென்று, "கடவுளை அருளாளனாகவும் அன்பாளனாகவும் சொல்கிறார்களே?
அது எப்படி?" என்று கேட்டார். "இவ்வுலகத்தில், தன்னை அன்பு
செய்பவரை மட்டுமல்லாது, வெறுப்பவரையும் அன்பு செய்வதால்
அவர் அருளாளனாக இருக்கின்றார். மறுவுலகில் அப்படியில்லை,
அவர் தன்னை அன்பு செய்பவரை மட்டும் அன்பு அன்புசெய்வதால்
அன்பாளனாக இருக்கிறார்" என்றார் துறவி. எனவே, தன்னை அன்பு
செய்பவரை மட்டுமல்லாது, வெறுப்பவரையும் அன்பு செய்யும் அருளாளனாக
விளங்கும் ஆண்டவரிடம், அவருடைய மக்கள் ஒவ்வொருவரும் முழு
இதயத்தோடு திரும்பி வருவது மிகவும் இன்றியமையாதது.
3. இதுவே தகுந்த காலம்
ஆண்டவரிடம் முழு இதயத்தோடு திரும்பி வர மிக முக்கியமான காரணம்,
இது தகுந்த காலமாகவும் இன்றே மீட்பு நாளாகவும் இருக்கின்றது
என்பதால். இயேசு தன்னுடைய பணிவாழ்வைத் தொடங்கும்போது,
"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது;
மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1: 15) என்று
சொல்லித்தான் தொடங்கினார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளும்
தூய பவுலின் வார்த்தைகளும் ஒருசேர இணைத்துப்
பார்த்தோமெனில், நாம் ஆண்டவரிடம் திரும்பி வருவதற்கும் இறையாட்சியின்
வருகைக்கும் இந்த நாளை விட்டால், வேறு பொன்னான நாளில்லை என்பது
உறுதியாகின்றது. ஆகவே, இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு
நாள் என்று உணர்ந்து, முழு இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி
வருவது நல்லது.
ஆண்டவரிடம் திரும்பி வருவதை செயலில் எப்படி வெளிப்படுத்துவது?
ஆண்டவரிடம் திரும்பி வருதல் என்றால் என்ன? ஏன் நாம்
திரும்பி வரவேண்டும்? என்று இதுவரைக்கும் சிந்தித்துப்
பார்த்தோம். இப்போது நாம் ஆண்டவரிடம் திரும்பி வருவதை எப்படி
செயல்வடிவில் வெளிப்படுத்த போகின்றோம் என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
நற்செய்தியில், இயேசு மூன்று முதன்மையான காரியங்களைக்
குறித்துப் பேசுகின்றார். நோன்பிருத்தல், அறம் செய்தல் அல்லது
தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல் என்பதுதான் அந்த
மூன்று முதன்மையான காரியங்கள். இவற்றின் மூலமாக ஒருவர் தன்னையும்
பிறரையும் கடவுளையும் அன்பு செய்து, அவரிடம் முழு இதயத்தோடு
திரும்பி வரலாம்.
ஒருவர் பிறரை அன்பு செய்யாமல், அந்த அன்பின் வெளிப்பாடாக
அறம் செய்யாமல், ஆண்டவரை அன்பு செய்வதோ அல்லது அவரிடம்
முழு இதயத்தோடு திரும்பி வருவதோ இயலாத காரியம். ஆகையால்,
இந்தத் தவக்காலத்தில் அறச் செயல்கள் செய்வதற்கு அது
பெரிதோ, சிறிதோ தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் ஆண்டவரை
அன்பு செய்ய முடியும். அவரிடம் திரும்பி வரவும் முடியும்.
ஒரு தேனீர் கடையில், "எனக்கு ஒரு காபி, குட்டிச்சுவருக்கு
ஒரு காபி" என்ற குரல் கேட்டு, அங்கு தேனீர் அருந்திக்கொண்டிருந்த
இளைஞன் ஒருவன் திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப்
பார்த்த இடத்தில் இருந்த ஒருவர், ஒரு காபி பருகிவிட்டு, கடைக்காரரிடம்
இரண்டு காப்பிக்குப் பணம் கொடுத்துப் புறப்பட்டார். இப்படிப்
பலரும் செய்ததைக் கண்ட இளைஞன், யாரைக் "குட்டிச்சுவர்" என்கிறார்கள்
என்று கண்களைச் சுழலவிட்டான். அந்த தேனீர்க் கடையருகே இருந்த
குட்டிச்சுவர் பக்கத்தில், உடம்புக்கு முடியாமல் ஒருசிலர்
இருந்தார்கள். அவர்களுக்கும் மேசை. நாற்காலிகள் இருந்தன.
அவர்களுக்கான காபிக்குத்தான் இவர்கள் பணம் தருகிறார்கள் என்பது
அவனுக்குப் புரிந்தது. உடனே அவனும் அவ்வாறு செய்துவிட்டு
அங்கிருந்து கிளம்பினான்.
தேவையில் உள்ள மனிதருக்கு உதவி செய்ய நினைத்தால் அல்லது
ஆறாம் செய்ய நினைத்தால் எப்படியும் செய்யலாம். அதைத்தான்
இந்த நிகழ்வு எடுத்துக் கூறுகின்றது. ஆகையால்,
தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், நோன்பின்
வழியாகவும் இறைவேண்டல் வழியாகவும் நம்மையும் கடவுளையும்
அன்பு செய்யும் அதே அளவுக்கு, அறச் செயல்கள் வழியாக
அடுத்தவரை அன்பு செய்வோம். அதன்வழியாக ஆண்டவரிடம் திரும்பி
வருவதை அர்த்தமுள்ளதாக்குவோம்.
சிந்தனை
இன்றைய நாளில் நம் நெற்றியில் குருவானவரால் பூசப்படும்
சாம்பல், நாம் ஒருநாள் மண்ணுக்குத் திரும்புவோம் என்பதை
உணர்த்துகின்றது. நாம் மண்ணுக்குள் போவதற்குள் நம்முடைய
மண்ணுலக வாழ்வை, நாம் செய்யும் இரக்கச் செயல்களால்
அழகாக்குவோம். அதற்கு ஒரு வாய்ப்பாக இந்த தவக்காலத்தைப்
பயன்படுத்துவோம். இவ்வாறு நாம் இறையருள் நிறைவாய்ப்
பெறுவோம்.
சிந்தனை 2
இனி எல்லாம் சுகமே! - துறவுநிலை
நம் இந்திய மண் துறவுநிலையை போற்றும் மண். துறவு நிலையை
அடைய முடியாதவர்கள் கூட சாமிக்கு மாலை போடும் அந்த 40
நாட்கள் சாமியாகிவிடுகிறார்கள். சபரிமலையோ, பழனியோ,
திருப்பரங்குன்றமோ, ஐயப்பனோ, முருகனோ, எல்லாரும்
மாலையணிந்து பகுதிநேர துறவியாகிவிடுகிறார்கள். ஒட்டி
ஒட்டித் தூங்கும் மனைவியும் இந்த 40 நாட்கள் எட்டி
நிற்கிறாள். காலுக்கு மிதியடி இல்லை. காலையில் உணவு இல்லை.
இறைச்சி இல்லை. மது இல்லை. புகையிலை இல்லை. 'டேய், ராஜா!
அந்த ஃபைலை எடுத்துட்டுவா!' என்று சொல்லும் அவனின்
மேலதிகாரிகூட, இந்த நாற்பது நாட்கள், 'ராஜா சாமி அந்த
ஃபைலை எடுத்துட்டு வாங்க!' என்கிறார்.
துறவுநிலையை நம் வாழ்வின் ஒரு பகுதியாக நாம் அனுபவித்துப்
பார்க்க எல்லா மதங்களும் இடம் கொடுக்கின்றன. சைவ மரபில்
மாலை அணிவது, இசுலாம் மரபில் ரமலான் நோன்பு, கிறிஸ்தவ
மரபில் தவக்காலம்.
தவக்காலம் நமக்கு சொல்வது என்ன?
1. நம் கடவுள் இரண்டாம் வாய்ப்புக்களின் கடவுள். முதல்
ஏற்பாட்டில் யாக்கோபு, இஸ்ரயேல் மக்கள், இரண்டாம்
ஏற்பாட்டில் சக்கேயு, ஊதாரி மகன் என நமக்கு நிறைய
எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. 'ஐயோ, என் வாழ்க்கை
முழுவதும் வீணாயிற்றே!' என்று இறப்பின் தருணத்திலும்
இருந்த கள்வனுக்கும் இரண்டாம் வாய்ப்பு தரப்படுகிறது. ஆக,
இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படி இருந்தாலும், எந்தவித
குற்றவுணர்வும் இல்லாமல் இறைவனை நெருங்கி வரலாம். அவர் நம்
சிலேட்டைத் துடைக்கக் காத்திருக்கிறார்.
2. இது அன்பின் காலம். 'இதைச் செய்ய மாட்டேன். அதைச் செய்ய
மாட்டேன்' என முடிவெடுக்கும் காலம் மட்டுமல்ல இது. 'இதைச்
செய்வேன். அதைச் செய்வேன்.' என உறுதிசெய்யும் காலமும் இது.
'அடுத்தவரிடம் சண்டையிட மாட்டேன், கோபப்பட மாட்டேன்' என்று
நினைப்பதுபோல, 'புதிய நபர்களை சந்தித்து பேசுவேன், புதிய
நண்பர்களை சேர்த்துக்கொள்வேன், பழைய நட்பை புதுப்பிப்பேன்,
அடுத்தவரை தேடிச்செல்வேன்' என நேர்முகமாகவும் யோசிக்க
வேண்டிய காலம் இது.
3. இல்லாமை. பீடத்தில் இந்த நாட்களில் பூ வைப்பதில்லை.
பீடம் வெறுமையாக இருக்கும். இயேசுவின் இறப்பை பற்றியே
சிந்தனைகள் இருக்கும். எதற்காக? நாம் வாழ்வதே இறப்பதற்குப்
பழகத்தான் என்பது என் நம்பிக்கை. நல்ல இறப்பு என்பது நல்ல
சிற்பம் போல. ஒரே நாளில் சிற்பம் உருவாகிவிடுவதில்லை. பல
அனுபவங்களால் நம்மை நாமே பக்குவப்படுத்தி இறக்கத்
தயாராகிறோம். ஆனால். இறப்பு என்னும் சுரங்கப்பாதையின்
முடிவில் உயிர்ப்பு என்னும் வெளிச்சம் இருக்கிறது என்பது
தவக்காலத்தின் முடிவில் நாம் கொண்டாடும் உயிர்ப்பு விழா
தரும் நம்பிக்கை.
4. கடவுளே மகிழ்ச்சி. இந்த நாட்களில் சில பெண்கள்
பொட்டணவதில்லை. பூ அணிவதில்லை. சிலர் செருப்புகள்
அணிவதில்லை. சிலர் முகச்சவரம் செய்வதில்லை. இவை எல்லாம்
வெறும் அடையாளங்களே. ஆனால் அடையாளத்தையும் தாண்டி
உட்பொருளை நாம் உணரவேண்டும். எனக்கு இன்பம் தருபவை இவைகளாக
இருந்தாலும், மகிழ்ச்சி தருபவர் இறைவனே என உணர்கின்ற காலம்
இக்காலம். நம் இறைவன் நாம் இன்பங்களை அனுபவிக்கக் கூடாது
என நினைக்கின்ற இறைவன் அல்லர். கொஞ்ச நேர இன்பத்தை
விற்கும் வியாபாரிகளிடம் நம்மை நாமே விற்றுவிடக்கூடாது
என்கிறார் அவர்.
5. ஒறுத்தல். இது எதற்காக? வாழ்வின் எந்தவொரு வளர்ச்சியும்
ஒருவித தியாகம் மற்றும் வலியில்தான் நடக்கிறது. தியாகமும்,
வலியும், வசதியின்மையும்தான் நாம் வளர்கிறோம் என்பதைக்
காட்டுகிறது. புதிய மொழி கற்பதாலும் சரி, புதிய திறனை
வளர்ப்பதாலும் சரி, நமக்கு வலிக்கத்தான் செய்யும்.
வலியில்லாமல் வருவது நீண்ட காலம் நிலைப்பதில்லை. அதில் நம்
மனம் லயிப்பதில்லை. வலியோடு வருவது நம்மை விட்டு எளிதில்
நீங்குவதில்லை. ஒருவேளை நோன்பு இருக்கிறோம் என்றால், அந்த
நோன்பு நம் மனித வலுவின்மையை நமக்கு நினைவூட்டுகிறது. நம்
நோன்பால் எல்லாரும் பசியாறிப்போவதில்லைதான். ஆனால்,
மனிதரின் நிர்வாணத்தை மனிதருக்கு தோலுரிப்பது ஒரு வேளை
விரதம்தான்.
கடவுளோடு ஒப்புறவாவோம்
இன்று அன்னையாம் திரு அவை சாம்பல் புதனை/விபூதிப் புதனை
நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது. கடவுளோடு ஒப்புறவாகவும்,
அதன்வழியாக நம்மோடு வாழக்கூடிய உடன் சகோதர, சகோதரிகளோடு ஒப்புறவாகவும்
இறைவனால்/ திருச்சபையால் தரப்பட்ட அருளின் காலம்தான் இந்த
தவக்காலம். இத்தவக்காலத்தில் நாம் இறைவனோடும், நம் அயலாரோடும்
எப்படியெல்லாம் ஒப்புறவாகலாம் என்பதை இன்றைய வாசகங்களின்
வழியாகச் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் யோவேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய
முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், "
இப்பொழுதாவது உண்ணா
நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு
என்னிடம் திரும்பி வாருங்கள்.. நீங்கள் உங்கள் உடைகளைக்
கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள்
கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்"
என்று. இங்கே ஆண்டவரிடம்
திரும்பி வாருங்கள் என்ற வார்த்தையானது திரும்பத் திரும்ப
வருவதை நாம் நமது கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதேபோன்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அதாவது கொரிந்தியருக்கு
எழுதிய இரண்டாம் திருமுகம் 5:20 ல் பவுலடியார் கூறுவார்,
"
ஆகவே, கடவுளோடு ஒப்புரவாகுங்கள்"
என்று. எனவே நாம் ஆண்டவராகிய
கடவுளிடம் திரும்பி வந்து, அவரோடு ஒப்புறவாகவேண்டும் என்பதுதான்
இறைவனின் திருவுளமாக இருக்கின்றது.
கடவுளோடு எப்படி ஒப்புறவாகலாம் என்பதற்கு ஆண்டவர் இயேசு
நற்செய்தியில் மூன்று முக்கியமான காரியங்களை கூறுவார்.
அவையாவன 1.தர்மம் 2.நோன்பு 3.இறைவேண்டல். இதில் தர்மம்
என்பதை மட்டும் குறித்துச் சிந்தித்துப் பார்த்து இறைவனோடு
ஒப்புறவாக முயல்வோம்.
எலியாஸ் என்ற ஓர் ஆன்மீக எழுத்தாளர் கூறுவார், "
தபால்
பெட்டியில் போடப்படும் கடிதம் உரிய இடத்தில் போய்
சேர்வதுபோல, ஏழை ஒருவருக்கு நாம் செய்யும் தர்மம்
இறைவனுக்கு நேரடியாகச் சென்று சேர்ந்துவிடுகிறது"
என்று.
ஆம், ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்கே கடன்
கொடுக்கிறவர் என்று நீதிமொழிகள் புத்தகம் 19:17 ல்
வாசிக்கின்றோம். ஆகவே ஏழைகளுக்கு/ எல்லா மக்களுக்கு தர்மம்
செய்வதன் வழியாக எப்படி இறைவனோடு ஒப்புறவாகலாம் என்பது
பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சிகாகோ நகரிலே காவல்துறையினர்
மத்தியில் வித்தியாசமான போட்டி நடைபெற்றது. அது
என்னவென்றால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கூட்டம்
கூடுகிறது என்றால், அவர்களை எப்படி அங்கிருந்து கலைப்பது
என்பதுதான் அக்கேள்வி.
காவல்துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதிலைச்
சொன்னார்கள். கண்ணீர் புகைகுண்டு வீசுவேன்,
துப்பாக்கியைப் பயன்படுத்துவேன், லத்தியை வைத்து அடித்து
விரட்டுவேன் என்று சொல்லிக்கொண்டே போனார்கள். இறுதியாக
ஒரு காவல்துறை அதிகாரி எழுந்து நின்று, "
கலவரக் கூட்டத்தை
விரட்ட, நான் என்னிடம் இருக்கும் தொப்பியைக் கழற்றி,
மக்களிடம் யாசிப்பேன் (பிச்சை கேட்பேன்), உடனே எல்லாரும்
தெறித்து ஓடி விடுவார்கள்"
என்றார்.
அங்கே இருந்தவர்கள் இதைக் கேட்டு குபீர் என்று
சிரித்தார்கள். இறுதியில் அவருக்கே பரிசையும் தந்தார்கள்.
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற
மனநிலையானது படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது என்பதை
இந்த நிகழ்வானது நமக்கு மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
தவக்காலத்தைத் தொடங்கி இருக்கும் நாம், கிறிஸ்தவர்களின்
மூன்று முக்கியக் கடமைகளில் ஒன்றான தர்மம் செய்வதில்/
அறச்செயல் புரிவதில் சிறந்து விளங்கவேண்டும் என்று
திருச்சபையானது நமக்கு அழைப்புத் தருகிறது. ஆண்டவர் இயேசு,
நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்ற
இக்கருத்தை நற்செய்தியின் பல பகுதியில் விளக்கிக்
கூறுவார். குறிப்பாக தன்னைப் பின்பற்ற நினைத்த
செல்வந்தனாகிய இளைஞனிடம், "
உன் உடைமைகளை விற்று
ஏழைகளுக்குக் கொடும், பின்னர் வந்து என்னைப் பின்பற்றும்"
என்கிறார். (மத் 19:21)
ஆகவே, இயேசு தன்னுடைய போதனைகளில் கொடுக்க வேண்டும் என்ற
கருத்தை மிகவும் ஆணித்தரமாக வலியுறுத்திக்கூறுகிறார்
என்பது தெளிவு.
மேலும் நாம் கொடுக்கின்றபோது, தர்மம் செய்கிறபோது
எப்படிப்பட்ட மனநிலையோடு செய்யவேண்டும் என்பதையும் மிகத்
தெளிவாகக் கூறுகிறார்: "
நீங்கள் தர்மம் செய்யும்போது
உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகைக்
கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்.
அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம்
செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத்
தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம்
மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள்
தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்"
என்பார்.
எனவே தர்மம் செய்கிறபோது ஏதோ விளம்பரதிற்காகச் செய்யாமல்,
மறைவாக யாருக்கும் தெரியாமல் செய்யவேண்டும் என்பது
இயேசுவின் போதனையாக இருக்கின்றது.
ஆனால் இன்றைக்கு விளம்பர உலகத்தில் இருக்கும் நம்மால்
விளம்பரமே இல்லாமல் ஒரு நல்ல காரியத்தை, அறச்செயலை செய்ய
முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.
இயேசு "
உங்கள் வலக்கை செய்வது இடக்கைத்
தெரியாதிருக்கட்டும்"
என்கிறார். அப்படியென்றால் நாம்
ஒன்று கொடுக்கிறபோது அதை கொடுக்கிறோம் என்ற மனநிலையே
இல்லாமல் கொடுக்கவேண்டும். வேறு வார்த்தைகளில்
சொல்லவேண்டும் என்றால் பிரதிபலன் எதிர்பாராமல்
கொடுக்கவேண்டும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் "
Natinal Morrow Donor
Programme"
என்ற ஓர் அமைப்பு இருக்கிறது. இதன் முக்கியமான
நோக்கம் இலவசமாக எலும்புக் குறுத்துத் தசை அறுவைச்
சிகிச்சை செய்து தருவதுதான்.
இந்த அமைப்பில் சேர்ந்து எலும்புக் குறுத்துத் தசையை யார்
வேண்டுமானாலும் இலவசமாகப் பெறலாம், கொடுக்கலாம். ஆனால்
இதில் முக்கியமான அம்சம் என்ன வென்றால் எலும்புக்
குறுத்துத் தசை அறுவைச் சிகிச்சை செய்துகொள்வோர், தனக்கு
யார் அதைத் தானமாகத் தந்தார் என்பதை அறிந்துகொள்ள
வாய்ப்பில்லை. அதைப் போன்று எலும்புக் குறுத்துத் தசையை
தானமாகத் தந்தவர், அது யாருக்குப் பொறுத்தப்பட்டிருக்கிறது
என்றுகூட தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
பிரதிபலன் பாராமல் முகம் தெரியாத மனிதருக்கு உதவி
செய்யவேண்டும் என்பதுதான் இவ்வமைப்பின் நோக்கம். ஆண்டவர்
இயேசுவும் நமக்கு அதைத்தான் எடுத்துச் சொல்கிறார்.
ஆதலால் தொடங்கியிருக்கும் இந்த தவக்காலத்தில் இறைவனோடு
நாம் செய்யும் தர்மத்தின் வழியாக (நோன்பின் வழியாக,
இறைவேன்டலின் வழியாக) ஒப்புறவாகுவோம். "
உடல் நலத்திற்கு
இரத்த ஓட்டம் எந்தளவுக்கு முக்கியமோ, அதைபோன்று உலக
நலனிற்கு தர்மம் முக்கியம்"
என்பான் ஓர் அறிஞர்.
ஆகவே நம்மிடம் இருப்பதை பிறருக்குத் தர்மமாகக் கொடுப்போம்.
அதன் வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைப்
பெறுவோம்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
"இயேசு, "நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்
பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ
வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு
செய்வர்" என்றார்" (மத்தேயு 6:2)
மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய "மலைப் பொழிவு" மைய இடம்
பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக்
கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும்
இறையாட்சி பற்றிய நற்செய்தியை "அதிகாரத்தோடு" அறிவித்தார் (மத்
7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள்
யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல்,
ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு
இயேசு "மலைப் பொழிவின்" போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில்
ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற
அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத்
திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில்
இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான்
வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும்,
தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு
உணர்த்தியது.
இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என
எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும்
அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி
அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு
நான் செய்யும் உதவி வெறும் "வெளிவேடம்" என இயேசு கூறுகிறார். தர்மம்
செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச்
செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப்
புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப்
பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது
கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும்
என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும்
பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும்
என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.
மன்றாட்டு:
இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட
அருள்தாரும்.
திருநீற்றுப் புதன்
முதல் வாசகம் : யோவேல் 2 : 12 - 18
தவக்காலம் ஒரு தனிக் காலம், இறைவன் நம் அருகில் உள்ள
காலம்; இறைவனிடம் நாம் திரும்பி வருவதற்கு ஏற்ற காலம்.
மனமாற்றத்தின் காலம். மறுவாழ்வை மனதிற்குக் கொணர வேண்டிய
காலம், தவக்காலத்தின் துவக்க நாளாகிய இன்று இறைவனே நம்மை
மனம்மாறிய ஒரு புதுவாழ்வுக்கு அழைப்பதாக வாசகம்
அமைந்துள்ளது.
இறைவனின் அளப்பரிய கருணை
நம்மைப் புனித வாழ்வுக்கு அழைக்கும் கடவுள் அருளும்
இரக்கமும் உள்ளவர். "பொறுமையும் அளவில்லாத இரக்கமும்
பொருந்திய இறைவா, ஆயிரம் தலைமுறைக்கும் இரக்கம்
காட்டுபவரே. கொடுமையையும், குற்றத்தையும், பாவங்களையும்
போக்குபவரே... எங்கள் கொடுமைகளையும் பாவங்களையும்
போக்கியருளும்" (விப 34:6-9) என்ற மோசேயின் சொற்களில்
எத்தகைய ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது? ஆம், "
நாயிற்
கடையாய்க் கிடந்த அடியோற்குத் தாயிற் சிறந்த தயாவான்
தத்துவன்"
நம் கடவுள்; "
பால் நினைந்தூட்டும் தாயினும்
சாலப்பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி
பெருக்கிடும்"
பரமன் நம் கடவுள் (திருவா). "பாசவேரறுக்கும்
பழம்பொருளாகிய"
அவ்இறைவனின் அருளை நாடுவோம். இத்தவக்காலம்
முழுவதும் இக்கருணைக் கடவுளை, காணாமற்போன நூறாவது ஆட்டைத்
தேடியலையும் ஆயனை, காலியாய் வாழ்ந்து காலத்தைக் கழித்த
மகனுக்காக ஏங்கித் தவிக்கும் தந்தையை நம் கண்முன் நிறுத்தி
வைப்போம். "
கருணைத் தெய்வமே கண் பாராய், எம் பாவங்களை நீ
பொறுத்தருள்வாய்"
என்று கதறியழுவோம். "
அப்பா கடவுளுக்கும்
உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்'' (லூக் 15 : 21)
என்று கூறி அவர் பாதங்களில் விழுவோம்.
பாவிகள் மனமாற்றம்
பல வழிகளிலே நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறது இன்றைய
வாசகம். "திரும்பி வாருங்கள், திரும்பி வாருங்கள்" (2 :
12-13) என்கிறது ஆண்டவரின் குரல். ஆம், நம்முடைய
பாவங்களிலிருந்து தீய வழிகளிலிருந்து திரும்ப வேண்டும்.
மனம் மட்டும் திரும்புவதில் அடங்காது மனமாற்றம். நம்
வாழ்வு, நம் நடைமுறைகள் மாறியமைய வேண்டும்.
"நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால்
காட்டுங்கள் " (மத் 3:8) என்பார் திருமுழுக்கு யோவான்.
தவக்காலம் நமக்கு ஒரு சவால் காலம். நமது பாவ வாழ்வை, அநீத
வாழ்வை, சுயநல வாழ்வை, அகங்கார வாழ்வை, ஆணவ வாழ்வை
விட்டுவிட்டு இறைவனின் அழைப்புக்குச் செவிமடுப்போமா?
தவக்காலம் நம் பாவங்களுக்காக வருந்த வேண்டிய காலம்""உங்கள்
இதயங்களைக் கிழித்துக்கொள்ளுங்கள்"
(13) என்பார் யோவேல்.
உள்ளங்களைக் கிழித்துக்கொள்வது என்பது பாவத்திற்காக அழுது
புலம்புதல் (12), நோன்பிருத்தல் (12,15) ஆகிய வழிகளில்
செயல்படுதல். "
தவக்காலம்"
என்பதே இதைத்தானே சுட்டுகிறது?
பல வழிகளில் நாம் தவமிருக்கலாம் : உடலை வருத்திக்கொள்வது,
உள்ளத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது, தேவைகளைக்
குறைப்பது, பிறருக்கு இல்லையென்னாது ஈவது இவையன்ன தவச்
செயல்களால் நாம் தவக்காலத்தை நிரப்புவோமா?
தவக்காலம், அன்பு நம் வாழ்வில் சிறப்பிடம் பெற வேண்டிய
காலம். சண்டைச் சச்சரவுகள், மனத்தாங்கல்கள் பகைமை விரோதம்
இவற்றை விடுத்து, அனைவரும் இறைவனின் பிள்ளைகள், சகோதரர்கள்
என்ற உணர்வு நம்மில் முதலிடம் பெறவேண்டிய காலம்
(15-16-17). இக்காலத்தில் இறைவனின் அன்பும் இரக்கமும்
நமக்குக் கிட்ட வேண்டுமாயின் (18) நாமும் ஒருவருக்கொருவர்
அன்பு செய்வோம்.
தவக்காலம் செபக் காலம் (15-17). சிறப்பாக இறை மக்களோடு
இணைந்து செபிக்க வேண்டிய காலம் (15-16). ஆண்டின் ஏனைய
காலத்தைவிடச் சிறப்பாக திருப்பலி, சிலுவைப் பாதை பிற பக்தி
முயற்சிகளில் பங்குபெற்று, இறைவனின் இரக்கப்
பெருக்கிற்காகச் செபிக்க வேண்டிய காலம். குடும்பத்தோடு,
பங்கு மக்களோடு சேர்ந்து செபிக்கும் வாய்ப்புகளைப்
பெருக்கிக்கொள்வோமா? "
ஆண்டவரே உம் மக்கள்மேல்
இரங்கியருளும்"
என்று வேண்டுவோம்.
ஆண்டவர் அருளும் இரக்கமும் உள்ளவர்.
இரண்டாம் வாசகம் 2 கொரி 5 20-6:2
உடலை வறுத்தி, உணவு, உறக்கம் துறந்து தவம் செய்வதும்,
மனத்தை ஒருநிலைப்படுத்தி இறைவனைத் தியானித்து, தன்
வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்வதும் அனைத்து
சமயங்களின் போதனை. மோசே நாற்பது ஆண்டுகள் இஸ்ரயேல் இனத்தை
வழிநடத்திச் சென்றார் (விப); நமதாண்டவர் நாற்பது நாட்கள்
ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் நோன்பிருந்தார்
(மத்.4:2); தவக்காலத்தின் நாற்பது நாட்களில் நமது வாழ்வைச்
சீர்படுத்திக் கொள்ள திருச்சபை நம்மை அழைக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டென்பது சபை உரையாளரின் போதனை
(3:1). "மனம் மாற இதுவே ஏற்புடைய காலம்"
என்பது
திருச்சபையின் போதனை.
உரோமைப் பேரரசில் பணிபுரிந்த தூதுவர்கள் மன்னனின் சார்பில்
வேற்று நாடுகளுக்குச் சென்று, அவற்றுடன் தொடர்பு
ஏற்படுத்துவர்; அவற்றைத் தம் வல்லரசுடன் இணைப்பதும் உண்டு.
இப்பின்னணியில் தான் பவுல் அடியார் தன்னையே இயேசுவின்
தூதுவர் என்றழைக்கிறார். அவர் இயேசுவால் அனுப்பப்பட்டவர்.
இறைவனின் அன்பையும் கருணையையும் எடுத்துரைப்பதும்,
அனைவரையும் கடவுளோடு ஒப்புரவாக்குவதுமே தன் பணி என்கிறார்.
"
நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே
எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு
ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள்
மன்றாடுகிறோம்" (20). ஒவ்வொரு கிறிஸ்தவனும் திருமுழுக்கு,
உறுதிபூசுதல் வழியாக இறையரசின் தூதுவன். தன் வாழ்வால் தன்
நாட்டின் பெருமையை நிலைநாட்டி, ஏனைய நாடுகளைத் தன்
நாட்டுடன் இணைக்க முயலும் தூதுவர் போல், ஒவ்வொரு
கிறிஸ்தவனும் தன்னுடன் தொடர்பு கொள்பவர்களை மாற்றும்
சக்தியாய், வேறுபட்ட சமுதாயத்தில் அமைதியை நிலைநிறுத்தும்
பாலமாய்ச் செயல்பட வேண்டும்.
நாம் அனைவரும் பாவிகள்
பரம தந்தை தனது சொந்த மகனையே அனுப்பி, அவரைப்
பாவத்திற்குப் பலியாக்கி, நம்மைத் தம்முடன்
இணைத்துக்கொண்டார் (உரோ. 8:3); நமக்காகக் கிறிஸ்து
சாபத்துக்கு உள்ளானார் (கலா 3 : 13). ஒப்புரவு
செய்வதென்பது மேடு பள்ளங்களைச் சமப்படுத்தி,
ஒழுங்குபடுத்தலாகும். இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்தது
பாவம். மீண்டும் நம்மை இறைவனுடன் இணைத்த பெருமை இயேசுவையே
சாரும். இறைவனே முன் வந்து, இயேசு வழியாக நம்மைத் தம்முடன்
இணைத்துள்ளார். கல்வாரியில் தன் இரத்தத்தால்
முத்திரையிட்டு, இந்த இணைப்பை இயேசு ஏற்படுத்தியுள்ளார்.
இதன் பயன் அனைத்து மக்களுக்கும் ஒப்புரவு
திருவருட்சாதனத்தின் வழியாகக் கிடைக்கிறது. என் பாவங்களை
மையப் பொருளாகக் கொள்வதைவிட, அவற்றை அழித்து என்னை
இறைவனுடன் இணைத்த, இயேசுவையே என் வாழ்வின் மையப் பொருளாக,
நன்றியின் மூலப் பொருளாகக் கொள்ள வேண்டும். ஒப்புரவு
அருட்சாதனம் என்னில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன? தனக்கு
அளிக்கப்பட்ட இறையருள் வீணாகவில்லை என்பதை, "
நான் நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து
விட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்"
என்ற (2 திமொ
4:7) பகுதியில் குறிப்பிடுகின்றார் பவுல் அடியார்.
நமக்குத் தடையாயிருக்கும் எந்தச் சுமையையும், நம்மை
எளிதில் வயப்படுத்தும் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு
நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு
ஓடுவோமாக என்பது பவுல் அடியாரின் அறிவுரை. இயேசுவின் முதல்
வருகையாகிய பிறப்புக்கும், மாட்சிமையுடன் கூடிய இரண்டாம்
வருகைக்கும் இடையே உள்ள காலமே மக்கள் மன மாற்றத்தின்
காலம். அக்காலத்தில் அந்நியராய் அஞ்சி நடக்கவேண்டும் (1
பேதுரு 1: 17); இக்காலத்தை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் (1 தெசலோ 5: 6)."தகுந்த வேளையில் நான் உமக்குப்
பதிலளித்தேன். விடுதலை நாளில் உமக்குத் துணையாய்
இருந்தேன்" என்று கூறிய ஆண்டவர் (எசா 49 : 8)
தவக்காலத்தில் சிறப்பான வரங்களை வாரி வழங்கக்
காத்திருக்கிறார். இவற்றை ஏற்க நாம் தயாரா?
நீங்கள் பெற்ற கடவுனின் அருளை வீணாக்க வேண்டாமென
மன்றாடுகிறோம்.
நற்செய்தி : மத் 6:1-6. 16 - 18
ஒரு யூதனுடைய சமய வாழ்வின் அடிப்படைத் தூண்களாகக்
கருதப்பட்டவை மூன்று. அவை, ஈதல் (பிச்சை இடல்), செபித்தல்,
நோன்பு இருத்தல் ஆகும். தவக்காலத்தைத் துவக்கும் இன்று,
இக்காலத்திலே கிறிஸ்துவின் பாடுகளை நம் கண்முன் வைத்து,
நம் பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுவதற்கு, இம்மூன்று
நற்செயல்களும் நமக்கும் உதவ வேண்டும் என்ற முறையில் இவை
இன்றைய வாசகமாக தரப்படுகின்றன. இங்கு, இயேசு கோடிட்டுக்
காட்ட விரும்புவது இந்நற்செயல்களைப் பிறர் அறிய வேண்டும்,
அறிந்து புகழ வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடாது
என்பதாகும்.
பிறர்க்கு ஈந்து வாழ்வோம்
தவக்காலத்தில் நாம் செய்யக்கூடிய பயனுள்ள செயல்களில்
ஒன்று, பிறருடைய தேவைகளில் அவர்களுக்கு உதவுவதாகும். பிறரை
மகிழ்ச்சிப்படுத்துவதற்கும், நம் பாவங்களுக்கு மன்னிப்புப்
பெறுவதற்கும் ஏற்ற ஒரு சாதனம் இது. ஈயென்று வருபவனுக்கு
இரங்கிப் பிச்சை கொடுப்பதில் மட்டும் அடங்காது இது; நாமே
வலியத் தேடிச் சென்று பிறருக்கு உதவும் போதுதான் இது
முழுமை பெறும். எனவே பலன் கருதாது கொடுப்போம்; கொடுத்துக்
கொடுத்துக் கைகள் காய்த்துப் போகும் அளவிற்குக்
கொடுப்போம். "
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்ற எல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து"
(குறள்-221) என்ற முறையிலே
அளவின்றி, கணக்கு வழக்கின்றிக் கொடுப்போம். "
தருமம்
சாவினின்று காப்பாற்றும்; எல்லாப் பாவத்தினின்றும்
தூய்மையாக்கும். தருமம் செய்வோரின் வாழ்வை அது
நிறைவுள்ளதாக்கும் "
(தோபி 12 : 9) என்ற சொற்கள்
இத்தவக்காலத்தை மிகப் பயனுள்ளதாக நமக்கு மாற்றுவனவாக.
"
ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது ஊதியமில்லை உயிர்க்கு"
(குறள்-231).
நமது செபத்தை வலுப்படுத்துவோம்
"செபம் உயர்ந்தது; மற்றெல்லா நற்செயல்களையும்விட மிக
உயர்ந்தது" என்பது யூத ராபியர் கூற்று. ஒவ்வொரு யூதரும்
"
உற்றுக்கேள்"
(Shema) என்று துவங்கும் விசுவாச
அறிக்கையையும் (காண்: இச. 6 : 4-9; 11: 13-21; எண் 15: 37
41), பதினெட்டுப் புகழுரைச் செபத்தையும் (Shemoneh
Esrch) ஒவ்வொரு நாளும் மும்முறை செபித்தல் மரபு. இயேசுவும்
இம்மரபிலே வளர்ந்தவர். எனவே அவர் அடிக்கடி
செபித்ததுமின்றி, நம்மையும் செபிக்க அழைக்கிறார்.
இத்தவக்காலம் செபக் காலம். கிறிஸ்தவ உலகமே இந்நாற்பது
நாளும் அதிகமாக செபத்திலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு
இருப்பதும் செபத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டுகிறது.
"
கற்பனைக்கும் அரிதான காரியங்களைக்கூட செபத்தின் வழி
அடையலாம்"
என்றார் பெரியவர் ஒருவர். எனவே இக்காலத்தில் நம்
செபம் பன்மடங்காகப் பெருகட்டும். உலகிற்காகச் செபிப்போம்.
"அடுத்தவர்களுக்காகச் செபிப்போம்; நமக்காகச் செபிப்போம்".
தவங்கள் செய்வோம்
நோன்பிருத்தல் வழி இறை அருள் நாடல் எம்மதத்திலும்
காணப்படுவது. தவக்காலம் நோன்புக்கு ஏற்ற காலம்.
உண்ணாதிருந்துதான் நோன்பு செய்யவேண்டுமென்று இல்லை.
நோன்புக்கேற்ற மனநிலையை பல்வழிகளில் காட்டலாம். "
அடக்கறும்
புலன்கள் ஐந்தடக்கி ஆசையாமவை துடக்கறுத்தலும்"
நோன்பே;
"நேசபாசம் எத்திறத்தும் வையாத நிலையும்"
நோன்பே.
"நின்பற்று அலால் ஓர்பற்று மற்றது உற்றிலேன்"
என்ற
நிலையில் வாழ்வதும் நோன்பே, "மெய்வருத்திக் கூடாக்கி
நிற்றலும்"
நோன்பே (திருமழிசை). இத்தகைய பலதரப்பட்ட
நோன்புகள் நம்முடைய தவக்காலத்தை நிறைக்கட்டும். இவற்றைக்
கைம்மாறு கருதாது செய்வோம் நாம் செய்யும் நற்செயல்களைப்
பிறர் காணச் செய்யும்போது, பிறரிடமிருந்தே
இந்நற்செயல்களுக்குப் புகழும் பரிசும் பெற்று விடுகிறோம்.
மறுஉலக வாழ்வுக்கு இவை உதவா. எனவே பிறர் அறியாத முறையில்
நற்செயல்கள் புரிவதே ஒரு தவம்தான் என்பதை உணர்ந்து
இத்தவக்காலத்தை, ஈதல், செபம், தவம் ஆகிய நற்செயல்களில்
செலவளிப்போம்.
மறைவாயுள்ளதைக் காணும் உங்கள் தந்தை கைம்மாறு அளிப்பார்.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ