திருப்பலி
முன்னுரை |
இந்தியாவின் திருத்தூதரான திருத்தூதர் தோமாவின் பெருவிழாவை
இன்று இந்திய கத்தோலிக்கத் திரு அவை அக்களிப்புடன் கொண்டாடி
மகிழ்கிறது. 1950 ஆண்டுகளுக்கு முன்பு, கிமு 52-ல்,
இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் கால்பதித்து, இன்றைய
தமிழகம் மற்றும் கேரளாவின் இயேசுவைப் பறைசாற்றி, அவர்தம்
விசுவாச அறிக்கையான என் ஆண்டவரே! என் தேவனே!' என்ற
அடிச்சுவட்டில் உயிர்ப்புக்குச் சான்று, திக்கெட்டும்
நற்செய்தி அறிவித்து, இறுதியில் சென்னையிலுள்ள புனித தோமையார்
மலையில் மறைச்சாட்சியாக 1972-ல் தமது இன்னுயிரையும் ஈந்து
சான்று பகர்ந்தவர் திருத்தூதர் புனித தோமையார். இதோ. என் கைகள்
என்று சொன்ன ஆண்டவரின் காயங்களில் தன் விரல்களைப் பதிந்து,
அவர்தம் உயிர்ப்பிற்குச் சான்று பகர்ந்த அவர், நீரே என்
ஆண்டவர், நீரே என் கடவுள் என்று ஒற்றை வரியில் தன் விசுவாசத்தை
அறிக்கையாக வெளியிடுகின்றார்.
தொடக்கத் திரு அவையில் புனித தோமாவின் உயிர்ப்பு அனுபவமே
மிகப்பெரிய மூலதனமாகவும் மூல ஆதாரமாகவும் அமைந்தது. நாமும்
செல்வோம், அவரோடு இறப்போம் (யோவா 11: 16 என்று புனித தோமா
துணிச்சல் மிக்க திருத்தூதராக மிகுந்த பேரன்போடு
விளங்குகிறார். இயேசுவின் மீதான இவர்தம் அன்பும் அக்கறையும்
கீழை நாடுகளின் மாபெரும் திருத்தூதராக விளங்க களம் அமைத்தது.
இயேசுவின் காயங்களில் பதிந்த விரல்கள் இந்தியாவில் நற்செய்தியை
விதைத்தது. அன்னை மரியாவின் மீதான இவர்தம் அன்பு, தொடக்கத்
திரு அவையில் மரியன்னைமீதான பக்தி வளர பேருதவி செய்தது.
திருத்தூதர் தோமா கொண்டு வந்ததாக நம்பப்படுகின்ற, புனித லூக்கா
வரைந்த அன்னை மரியின் அழியாத ஓவியம் இன்றும் அதற்குச் சான்று.
நாமும் இத்திருப்பலியில் சிறப்பாகப் பங்கேற்று புனித
தோமையாரின் வழியாக உலகத் திரு அவையும் நம் விசுவசத்தையும்
புதுப்பித்து கூட்டியக்கத் திரு அவையாக பயணிப்போம்.
திருப்பலி முன்னுரை 2
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில்
ஒருவர் புனித தோமா ஆவார். துணிவுமிக்கவர், இயேசுவுக்காகத்
தன்னையே இழக்கவும் துணிந்தவர். ஒருமுறை யூதேயாவில் உள்ள
யூதர்கள் இயேசுவின்மீது கல்லெறிய முயன்றனர். ஆனால் இயேசுவின்
உறவினராக இலாசர் மரித்த நிலையில் இயேசு அங்கு மறுபடியும் செல்ல
நினைக்கையில் மற்ற சீடர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று
இயேசுவைத் தடுத்தனர். ஆனால் புனித தோமாவோ அவரோடு செல்வோம்,
அவரோடு இறப்போம்": (யோவா 11: 16) என்று கூறி தனது துணிவை
வெளிப்படுத்தினார்.
அந்தத் துணிவுதான் அவரை இந்தியாவில் நற்செய்தி அறிவிக்க
அழைத்து வந்தது. இயேசு உயிர்த்த நிகழ்வை மற்ற சீடர்கள்
தோமாவிடம் கூறியபொழுது அவர் நம்பவில்லை. என் கண்களால் காணதவரை
நம்பமாட்டேன்": என்றார். இதனால் இயேசு தோமாவும்
இருக்கின்றபொழுது மீண்டும் காட்சியளித்து கண்ணால் காண்பதைவிட
காணாமலே நம்புகிறவர்கள் பேறுபெற்றோர்": என்றார் (யோவா 20: 22).
தோமாவோ தனது தவறை உணர்ந்தவராய் நீரே என் ஆண்டவர், நீரே என்
கடவுள்": என்றார் (யோவா 20: 28) புகழ்பெற்ற இந்த வார்த்தைகள்
அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன.
கி.பி. 52ல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்த
புனித தோமா அவர்கள் முதன் முதலில் கேரளத்தில் பணியாற்றினார்.
அவர்மூலம் திருமுழுக்குப் பெற்றவர்கள் தோமா கிறிஸ்தவர்கள்":
என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர். பின்பு கி.பி. 59ல் சென்னை
மயிலைப் பகுதியில் நற்செய்தி அறிவித்த தோமாவை கி.பி. 72ம்
ஆண்டு புனித தோமையார் மலை என்று சொல்லப்படுகின்ற மலையில்
செபித்துக்கொண்டு இருந்தபோது ஈட்டியால் குத்தி கொலைச்
செய்தனர்.
சைதாப்பேட்டை சின்னமலையில் அவர் தங்கியிருந்து பணிசெய்ததற்கான
அடையாளங்கள் உண்டு. அவரது கல்லறை சென்னை மயிலையில் உள்ள புனித
தோமையார் தேசிய திருத்தலத்தின்கீழ் உள்ளது. புனிதரின்
திருவிழாவை ஜூலை3ம் நாள் சிறப்பிக்கின்றோம். புனித தோமா
அவர்கள் இந்தியாவின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகின்றார்.
இத்தகைய சிறப்புப் பெற்ற புனித தோமாவின் திருவிழாவைச்
சிறப்பிக்கும் நாம் அவரது துணிவு, நம்பிக்கை, பாடுகளை ஏற்கும்
மனப்பக்குவம் பெற்று நற்சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ வரம்
வேண்டி இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
|
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள் |
1. எல்லாம் வல்ல அன்பு இறைவா, நீர்
இந்த உலகில் ஏற்படுத்தியிருக்கும் உமது திருஅவையை
வழிநடத்தும் எமது திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள்,
குருக்கள், துறவிகள் யாவரும் இயேசுவோடு செல்வோம்,
இயேசுவோடு மரிப்போம்": என்று முழங்கிய தோமாவைப்போல
இயேசுவோடு உடனிருப்பவர்களாகவும் பணி வாழ்வில்
உண்மையுள்ளவர்களாகவும் வாழ வரமருள உம்மை
மன்றாடுகிறோம்.
2. அன்பு இறைவா, எமது இந்திய திருநாட்டை ஆளுகை
செய்துவரும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்களின்
பிரதிநிதிகள் யாவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டப்
பணியைச் சுயநலமில்லாத பொதுநல மனப்பான்மையோடு
ஆற்றிடவும் நாட்டை முன்னேற்றப் பாதையில்
வழிநடத்திடவும் வரமருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
3. நம்பிக்கையின் துவக்கமும் முடிவுமானவரே, புனித
தோமாவைப் போல இயேசுவின்மீது உண்மையான
அன்புள்ளவர்களாகவும், வாருங்கள் அவரோடு இறப்போம் என்று
முழங்கிய அவரைப்போல துணிவுமிக்கவர்களாகவும்
நற்செய்திக்காகச் சான்று பகர்ந்து வாழ்ந்திட வரமருள
உம்மை மன்றாடுகிறோம்.
4. கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர்
பேறுபேற்றோர் என்றவரே, துவக்கத்தில் ஏற்பட்ட
சந்தேகத்தின் விளைவால் உம்மை அறிந்து பின்பு உம்மிடம்
கொண்ட நம்பிக்கைக்காக இந்தியாவிற்கு வந்து
நற்செய்திக்காக தமது உயிரையும் தந்து இரத்த சாட்சியாக
மரித்த புனித தோமாவைப்போல நாங்களும் உம்மீது கொண்டுள்ள
நம்பிக்கையில் உறுதி பெற்றவர்களாய் நற்செய்திக்கென்று
சாட்சிய வாழ்வு வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
5. என்றென்றும் இரக்கம் காட்டும் இறைவா!
இத்திருஅவையிலுள்ள அனைவரும் புனித தோமாவைப் போல் ஐயம்
நீங்கித் தெளிவுப் பெற்று நம்பிக்கைப் பெற்றவும்,
துணிவுடன் இறையரசை அறிவிக்கவும் தேவையான வலிமைத் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
|
மறையுரைச்சிந்தனை
ஞானஒலி |
துன்பம் துயரம், சோதனை வேதனை, கண்ணீர் கவலை நிறைந்ததுதான்
கிறிஸ்தவர்களின் வாழ்வு. ஆனால் இவை தற்காலிகமானவை. எதுவும் நிரந்தரமல்ல
என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். |
பரிசுத்த திருச்சபையானது இம்மாதம் புனிதர்களான
தோமையார், தூய மரியகொரற்றி ஆகியோரை நினைவு
கூர்கின்றது. மரியகொரற்றி இயேசுவிற்காக அதிகமான துன்பங்களையும்
வேதனைகளையும் மிகவும் பொறுமையோடு தாங்கிக்கொண்டு பாவத்தைவிட
மரணத்தை பாக்கியம் எனக்கருதி மறைசாட்சியானவர். துன்பத்தில்,
வறுமையில், கண்ணீரில் வாழும் எம் அனைவருக்கும் மேலான
எடுத்துக்காட்டாக விளங்குகின்றாள். வாழ்வில் எத்தனை தடைகள்
வந்தாலும் கஷ்டங்கள் சூழ்ந்தாலும் அவைகள் ஒருபோதும் இயேசுவோடு
நாம் வைத்திருக்கும் அன்பிலிருந்து எம்மை பிரிக்கமுடியாது
என்பதை இவரது வாழ்க்கை
எடுத்துக்காட்டுகிறது.
புனித தோமையார் இயேசுவோடு இருந்து அவரோடு வாழ்ந்தவர்.
உயிர்த்த ஆண்டவரைக் காண்பதற்கு தோமா போட்ட நிபந்தனையால்
அவரை "சந்தேகப் பேர்வழி" என்றே இன்றுவரை உலகம் அழைக்கிறது.
ஆனால் அவர் "நீரே என் ஆண்டவர் நீரே என் கடவுள்": என்று
விசுவாச அறிக்கை வெளியிட்டதுபோல் வேறுயாரும் அவ்வளவு
மனம்விட்டு அறிக்கையிடவில்லையே!
இருவரது வாழ்விலும் துன்பமும் துயரமும்
நிறைந்திருந்தாலும் அவர்கள் இறைவனை முழுமையாக நம்பியவர்கள்
என்பது உண்மை.
துன்பம் துயரம், சோதனை வேதனை, கண்ணீர் கவலை
நிறைந்ததுதான் கிறிஸ்தவர்களின் வாழ்வு. ஆனால் இவை தற்காலிகமானவை.
எதுவும் நிரந்தரமல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ள
வேண்டும். நம்பிக்கை வாழ்வு என்பது சீரான பாதையில்
செல்லும் சொகுசு வண்டி அல்ல. மாறாக அது கடல் அலைகளில்
தத்தளிக்கும் கட்டுமரம். "அழியக்கூடிய பொன்
நெருப்பினால் புடமிடப்படுகின்றது. அதைவிட விலையுயர்ந்த
உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்"
(1பேதுரு 1:7). சோதனைகளும் துன்பங்களும் சந்தேகங்களும்
ஊடுருவாத நம்பிக்கை வாழ்வு ஒன்று இல்லை என்று தான் கூறவேண்டும்.
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே": (மத்.3:17) என்று இறைத்தந்தையைப்
பூரிக்க வைத்த இயேசுவும் "என் இறைவா ஏன் என்னைக்
கைவிட்டீர்?": (மத்.27:46) என்று கதறிய நேரமும் இயேசுவின்
வாழ்வில் இருந்ததை நாம் அறிவோம்.
எமது நாட்டில் ஏற்பட்ட தாக்குதலின் விளைவும் எமக்கு
துன்பம் வேதனை, துயரம் போன்ற பலவற்றை ஏற்படுத்தியிருந்தாலும்
நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையை அது அழிக்கவில்லை.
மாறாக அதிகப்படுத்தியது எனலாம். எமது வாழ்வில் ஏற்படும்
கவலைகள், கஷ்டங்கள், சோதனைகள், வேதனைகளில் துவண்டு
போகாமல் இறைவனை உறுதியாக பற்றிப்பிடிப்போம். தோமாவின்
சந்தோகம் அவரை இயேசுவின் மீது அளவுக்கதிகமாக நம்பிக்கை
கொள்ளச்செய்தது மட்டுமல்ல அந்நம்பிக்கையை எடுத்துரைக்கவும்
செய்தது. அதேபோன்று நாமும் எம் வாழ்வை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போம்.
அவரது பணியை எடுத்துரைப்போம்.
|
உலகெங்கும்
சென்று நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் |
இயேசு தமது நற்செய்தி பணிக்காக
தேர்ந்தெடுத்த பன்னிரு திருத்தூதர்களில் தோமா ஒருவர்.
தோமாவுக்கு இயேசுவின் மேல் தனிப்பற்று. இயேசு இலாசரை
உயிர்ப்பிக்கச் செல்லும்போது மற்ற சீடர்கள் அவரது உயிருக்கு
ஆபத்து என்று தடுத்த போது தோமா நாமும் செல்வோம். இயேசுவோடு
இறப்போம்": என்றுக் கூறினார். இயேசு இறுதி இரவுணவு
வேளையில், தாம் விண்ணகத்திற்கு செல்வது குறித்து மறைபொருளாக
பேசிக்கொண்டிருந்தபோது, தோமா அவரிடம்
'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத்
தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை
நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? என்று
கேட்டார்.
தோமாவின் கேள்விக்கு விடையாகவே, வழியும் உண்மையும்
வாழ்வும் நானே என்று இயேசு தம்மை வெளிப்படுத்தினார்.
இயேசு உயிர்த்துவிட்டார் என மற்ற சீடர்கள் சொன்னதை நம்ப
மறுத்த தோமா, உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதும் நீரே
என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று இவர் கூறிய
வார்த்தைகள் போன்ற விசுவாச அறிக்கை நற்செய்தியில்
வேறெங்கும் காணப்படவில்லை.
உயிர்த்த இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே
தோன்றியபோது, பேதுரு, யோவானுடன் தோமாவும் இருந்தார்.
தோமா, ஆண்டவரின் விண்ணேற்பிற்குப் பிறகு உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்
ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இந்தியாவிற்கு
வந்தார். கொடுங்கலூர் என்ற துறைமுகத்தை வந்தடைந்தார்
தோமா. அரசனின் மகளுக்கு அற்புத சுகம் தந்தார். பல அற்புதங்கள்
செய்து வேதத்தைப் போதித்தார். மலபாரில் வாழ்ந்து வந்த
யூதர்கள் பலர் மனந்திரும்பினர். கொச்சின் பகுதியில்
பெரிய யூத சமூகமே இருந்தது. மலபார் திருச்சபையின் மையமாகக்
கொடுங்கலூர்சபை செயல்பட்டது. தோமா இந்தியாவில் தம்
பயணத்தைத் தொடர்ந்தார்.
நாடெங்கும் சென்று நற்செய்தியை போதித்து அற்புத சுகமளித்து
தீய ஆவிகளை விரட்டி வந்தார். இரண்டாம் முறையாக கேரளா
வந்தார். ஒன்றரை ஆண்டுகளில் நம்பூதிரி குடும்பங்கள்,
பிராமண குடும்பங்கள் உள்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட
மக்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். தோமா ஏழு சபைகளை
நிறுவினார். மலையத்தூர், பாலயூர், கூவக்கயல், கொத்தமங்களம்,
கொல்லம், நிரணம், நிலகெல், என்ற ஒவ்வொரு சபையிலும் ஆயர்கள்
குருக்கள் நியமிக்கப்பட்டனர். இந்தியக் கிழக்குப் பகுதியில்
சோழமண்டலக் கடற்கரையிலும் மைலாப்பூரிலும் மறைபணியாற்றினார்.
பின் சைனா வரை சென்று நற்செய்தியைப் போதித்தார்.
மைலாப்பூருக்குத் திரும்பி வந்து மறைப்பணியாற்றினார்.
அரசன் மகாதேவனும் அவன் மக்களும் திருமுழுக்குப் பெற்று
நற்செய்தியை ஏற்றுக்கொண்டனர். மைலாப்பூரில் முதல்
கோவிலை தோமா கட்டினார். பொறாமை கொண்டவர்கள் தோமாவைக்
கொல்ல தருணம் தேடினர்.
சின்னமலையில் கோவிலுடன் சேர்ந்த குகையில் ஒழிந்திருந்தார்.
கோவிலுக்குப் பின்புறம் தோமாவால் கற்பாறையில் செதுக்கப்பட்ட
ஒரு சிலுவையடியில் திருப்பலி நிறைவேற்றி செபம், தியானம்
செய்தார்.
சின்னமலையின் மேலிருந்து போதித்தார். மக்கள் தாகத்தால்
தவித்தபோது பாறையை தம் தடியால் தட்டி நீர் சுரக்கச்
செய்தார். இந்த நீர்ச்சுனை இன்றும் இருக்கிறது. பின்னர்
பெரிய மலை எனப்படும் தோமையார் மலைக்கு தோமா சென்று அங்கு
அடிக்கடி மறைந்து செபம், தியானம் செய்வார். தாமே
செதுக்கிய சிலுவையின் முன் செபத்தில் ஆழ்ந்திருந்தபோது
ஒரு வேத விரோதி அவரை பின்புறமாக ஈட்டியால்
குத்திக்கொன்றான். தோமா மறைசாட்சி இரத்தத்தோடு
சிலுவையை அரவணைத்தவாறு உயிர் துறந்தார்.
நற்செய்தியாளர் லூக்காவால் வரையப்பட்ட அன்னை மரியாவின்
திருப்படம் தோமாவால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
அது தோமையார் மலை ஆலயத்தில் இன்றும் உள்ளது. தோமாவின்
திருவுடல் மைலாப்பூரில் அவர் கட்டிய கோவிலில் அடக்கம்
செய்யப்பட்டது. பிறகு புனிதர் திருவுடலின் பெரும்பகுதி
மெசபத்தோமியாவில் உள்ள இறுதியில் எதேசா நகருக்கு எடுத்து
செல்லப்பட்டது. இத்தாலிக்கு எடுத்து செல்லப்பட்டு
ஒர்டோனா நகரில்
வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
புனித தோமா மறை சாட்சியாக மரித்தார். அவரது கல்லறை கி.
பி. 1522இல் போர்த்துக்கேயர்கள் சென்னை வந்தபோது கண்டு
பிடித்திருக்கிறார்கள்.
|
மறையுரைச்சிந்தனை
- அருள்பணி ஏசு கருணாநிதி. |
இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித
தோமாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள்
இயேசுவின் விலாவுக்குள் தங்கள் கைகளையும், இயேசுவின்
கைகளில் தங்கள் விரல்களையும் இட்டார்கள் என நினைக்கும்போது
நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசு கிறிஸ்துவுக்கும்
இந்தியாவுக்குமான இணைப்புக் கோடு புனித தோமா.
இயேசுவின் இறப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் மூன்று
நிலைகளில் செயல்படுகின்றனர்: (அ) யூதர்களுக்குப் பயந்து,
அதாவது, தங்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டுவிடுமோ என்று
பயந்து பூட்டிய அறைக்குள் இருக்கின்றனர். இது பெரும்பாலும்
எருசலேமில் உள்ள திருத்தூதர்களின் செயல்பாடாக
இருந்திருக்கும். (ஆ) எருசலேமை விட்டு வெளியே சென்றவர்கள்,
தங்கள் சொந்த ஊரான கலிலேயப் பகுதிக்குச் சென்றவர்கள்
மீண்டும் தங்கள் மீன்பிடிக்கும் பணிக்குச் சென்றனர். (இ)
புனித தோமாவோ மக்களோடு மக்களாக
நடமாடிக்கொண்டிருக்கின்றார்.
புனித தோமா பற்றி யோவான் நற்செய்தியாளரே அதிகமான
குறிப்புகளைத் தருகின்றார். இலாசரின் இறப்பு செய்தி கேட்டு
இயேசு புறப்படத் தயாரானவுடன், அவருடைய திருத்தூதர்கள்
தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் தோமா, 'நாமும் செல்வோம்.
அவரோடு இறப்போம்' (காண். யோவா 11:16) என்று துணிகின்றார்.
இயேசுவின் இறப்பை இது முன்னுரைப்பதுடன், இறப்பிலும்
இயேசுவோடு உடனிருக்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை
நமக்கு எடுத்துரைக்கிறது.
தொடர்ந்து, இறுதி இராவுணவுக்குப் பின் இயேசு வழங்கிய
பிரியாவிடை உரையில், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே
எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர்
போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள
இயலும்?' என்று கேட்கின்றார் தோமா. அவருக்கு
விடையளிக்கின்ற இயேசு, 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே'
என அறிக்கையிடுகின்றார். 'நானே' என்ற வார்த்தை இங்கே
முதன்மையானது. ஏனெனில், முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண
நூலில், 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்று
ஆண்டவராகிய கடவுள் மோசேக்குத் தன்னை
வெளிப்படுத்துகின்றார்.
இறுதியாக, இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவர்' என்ற
வார்த்தையை மையமாக வைத்து நிகழ்வு நகர்கிறது. 'ஆண்டவரைக்
கண்டோம்' என திருத்தூதர்கள் தோமாவிடம் சொல்கின்றனர்.
'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து'
என்று, எந்தவொரு தலைப்பும் இல்லாமல், 'அவர்' என்று இயேசுவை
அழைக்கின்றார். ஆனால், இயேசு தோன்றி, 'இதோ! என் கைகள்!'
என்று சொன்ன அடுத்த நொடி, சரணாகதி அடைகின்றார் தோமா. 'நான்
சீடர்களிடம் சொன்னது இயேசுவுக்கு எப்படி தெரிந்தது?' என
அவர் தன் மனதிற்குள் கேட்டிருப்பார். அல்லது இயேசுவின்
இருத்தல் அவரை மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்திருக்கும்.
தோமா இந்த இடத்தில் செய்யும் நம்பிக்கை அறிக்கை மிகவும்
மேலானது: 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்று
தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை செய்கின்றார் தோமா.
இதுதான் தோமா இன்று நமக்கு முன்வைக்கும் பாடம். ஆண்டவராகிய
கடவுளை நான் தனியாக அனுபவித்தாலன்றி அவரை நம்ப முடியாது.
இறையனுபவம் என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். நம் தந்தை
மற்றும் தாயின் அனுபவத்தைப் போன்றே இது தனித்துவமானது.
இறையனுபவம் பல நேரங்களில் நமக்குப் புலப்படும் விதமாக
இருப்பதில்லை. புலன்களுக்குப் புறம்பானதால் அது இல்லை
என்று ஆகிவிடுவதில்லை. 'என் ஆண்டவரே! என் கடவுளே!' என்ற
சரணாகதி நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இருந்தால்
எத்துணை நலம்!
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எசாயா,
'நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும்,
நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும்,
சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்' என்று கூறவும்
வருவோரின் பாதங்கள் மலைமேல் எத்துணை அழகாய் இருக்கின்றன!'
என உரைக்கின்றார். மெசியா வருகையை முன்னுரைக்கும் பாடமாக
இருக்கும் இந்த இறைவாக்கு, நம்பிக்கையையும்
எதிர்நோக்கையும் தருகின்றது. பழங்காலத்தில் செய்திகள்
அறிவிப்பவர் மலைமேல் ஏறி நின்றி எல்லா மக்களுக்கும்
கேட்குமாறு அறிவிப்பார். போர் மற்றும் வன்முறையின்
செய்திகளைக் கேட்டுப் பயந்து நின்ற மக்களுக்கு, ஆறுதல்
மற்றும் அமைதியின் செய்தியை அறிவிக்கின்றார் இத்தூதர்.
இவரின் செய்தி நல்வாழ்வைவும் விடுதலையையும் தருகின்றது.
புனித தோமா நம் மண்ணில் அறிவித்த செய்தியும் நமக்கு
நல்வாழ்வையும் விடுதலையையும் கொண்டு வந்தது. இன்று நாம்
ஒருவர் மற்றவருக்கு நற்செய்தி அறிவிக்கக்
கடமைப்பட்டுள்ளோம். நம் வாழ்வையே நற்செய்தியாக
அமைத்துக்கொள்ளுமாறு நம்மை அழைக்கிறார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இரண்டாம் வாசகத்தில், கட்டடம் என்னும் உருவகத்தைப்
பயன்படுத்தி, திருஅவையின் ஒழுங்கு மற்றும் ஒருங்குநிலையை
எபேசு நகர மக்களுக்கு எடுத்துரைக்கின்றார் பவுல்.
திருத்தூதர்கள் இக்கட்டடத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள்.
ஏனெனில், அவர்கள் எடுத்துரைத்த நற்செய்தியின் வழியாகவே
நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவோடு இணைகிறார்கள்.
தோமா என்னும் கதைமாந்தரை ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி
என்று சொல்லப்படுகின்ற, 'தோமையாரின் நற்செய்தியிலும்'
பார்க்கின்றோம். இவர் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
1. பெயர்
யோவான் நற்செய்தி இவரை திதிம் என்னும் தோமா என்றும்,
ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி இவரை திதிம் யூதாசு தோமா
என்றும் அழைக்கின்றது. 'திதிம்' (இரட்டை) என்ற சொல்லைப்
பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இவர் இரட்டையர்களில்
ஒருவர் என்று அதிகமாகச் சொல்லப்படுவதுண்டு. நான், 'திதிம்'
என்பதை இரு நிலைகளில் புரிந்துகொள்கிறேன்: (அ) 'திதிம்'
என்பது தோமாவிடமிருந்த இரட்டிப்புத்தன்மையைக் குறிக்கிறது.
இவர் தன்னிலேயே பிளவுண்ட மனிதர். இயேசு யூதேயாவுக்குச்
செல்ல விரும்பும்போது, அவரோடு சென்று இறக்க விரும்புகிறார்
(காண். யோவா 11:16). ஆனால், உயிர்த்த ஆண்டவர் மற்ற
சீடர்களுக்குத் தோன்றியபோது, 'நான் நம்பமாட்டேன்' (காண்.
யோவா 20:25) என அவநம்பிக்கை கொள்கின்றார். ஒரே நேரத்தில்
துணிவும் அவநம்பிக்கையும் கொண்டவர் இவர். (ஆ) இவருடைய
நற்செய்தியில், 'இயேசுவும் நாமும் - எல்லா மனிதர்களும் -
இரட்டையர்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. இது இயேசுவைப்
பற்றிய புதிய புரிதலையும், நம்மைப் பற்றிய புதிய
புரிதலையும் தருகின்றது. இயேசு நம்மைப் போன்றவர். நாம்
அனைவரும் இயேசு போன்றவர்கள். இன்னும் அதை நாம் உணராமல்
இருக்கிறோம். அதுதான் பிரச்சினை.
2. கேள்வி கேட்பது நல்லது
யோவான் மற்றும் தோமா நற்செய்தி நூல்களில், தோமா கேள்வி
கேட்கும் நபராக இருக்கின்றார். 'ஆண்டவரே, நீர் எங்கே
போகிறீர்?' (காண். யோவா 14:5) என்று யோவானிலும், மற்றும்
இறையாட்சி பற்றிய நிறைய கேள்விகளைத் தோமாவிலும்
கேட்கின்றார். நம் வாழ்வில் எழும் கேள்விகளை இயேசுவிடம் -
கடவுளிடம் - எழுப்புவது நலம் எனக் கருதுகிறேன்.
3. குழுமம் இன்றியமையாதது
உயிர்த்த இயேசு வந்தபோது தோமா அவர்களோடு இல்லை (காண். யோவா
20:24). குழுமம் இயேசுவின் சீடர்களுக்கு மிக முக்கியமானது.
இந்தக் குழுமம் ஒருவர் மற்றவர்முன் இயேசுவைப் பற்றிச்
சான்றுபகரும் இயங்குதளமாக அமைகின்றது.
4. இயேசுவே கடவுள்
'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' (காண். யோவா 20:28)
என்று யோவானில் அறிக்கையிடுகிறார் தோமா. தோமா
நற்செய்தியில் இயேசுவே தன்னைக் கடவுளாக அவருக்கு
வெளிப்படுத்துகின்றார்.
5. காணாமல் நம்புதல்
நம்பிக்கை கொள்தலுக்கான பாடமாக, அதுவும் காணாமலே
நம்புவதற்கான பாடமாக நம்முன் என்றும் நிற்பவர் தோமா.
6. வழிப்போக்கனாய் இரு
தோமா நற்செய்தி (வசனம். 42) இயேசு சொல்லும் இந்தக் குறுகிய
வசனத்தைக் கொண்டுள்ளது: 'வழிப்போக்கனாய் இரு!' அதாவது,
எதையும் பற்றிக்கொள்ளாமல், எதையும் சுமக்காமல், எதன்மேலும்
இலயிக்காமல், நீ தொடங்கிய புள்ளியையும், அடைய வேண்டிய
புள்ளியையும் மனத்தில் வைத்து நடந்துகொண்டே இரு. அதிக சுமை
தூக்கும் வழிபோக்கனும், அதிகமாய்க் கவனம் சிதறும்
வழிப்போக்கனும் இலக்கை அடைவதில்லை.
சற்றே வித்தியாசமான ஒரு விடயமும் தோமா நற்செய்தியில் (வ.
16, 6) இருக்கிறது:
'நீங்கள் நோன்பிருந்தால் பாவம் செய்வீர்கள். செபித்தால்
தீர்ப்புக்கு உள்ளாவீர்கள். தர்மம் செய்தால் உங்கள்
ஆன்மாவுக்குத் தீங்கிழைப்பீர்கள்.... ...ஆனால், பொய்
சொல்லாதீர்கள். நீங்கள் வெறுக்கும் ஒன்றை நீங்களே
செய்யாதீர்கள். ஏனெனில், எல்லாம் உண்மையை நோக்கியே
இருக்கிறது.'
தோமாவும் அவருடைய நற்செய்தியும் மறைபொருளே.
புரிவது போலவும், புரியாததுபோலவும் இருக்கும் அவரும்,
அவருடைய நற்செய்தியும், இன்றும் அவரை 'திதிம்' ('இரட்டை')
என்றே அடையாளப்படுத்துகின்றன.
|
|
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை |
தோமாவைக் குறித்து சொல்லப்படும் தொன்மம்
இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு தோமாவிற்கு இந்தியாவிற்குப்
போகுமாறு சீட்டு விழுந்தது. எனவே அவர் இந்தியாவிற்கு வந்தார்.
அப்போது குண்டபோரஸ் என்னும் மன்னன் அழகு மிளிர்ந்த ஒரு
மாளிகை கட்ட நினைத்தான். இந்தப் பொறுப்பை அவன் தன்னுடைய ஆலோசகராகிய
ஹப்பான்ஸ் என்பவரிடம் ஒப்படைத்தான். ஹப்பான்ஸ் யாரிடம் இந்த
வேலையைக் கொடுப்பது என நினைத்துக்கொண்டிருக்கும்போது, அவருக்குக்
கனவில், தோமா என்னும் ஒருவர் இருக்கிறார், அவர் கட்டடக் கலையில்
வல்லுநர் என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது. எனவே அவர்
தோமாவை அணுகிச் சென்று, மாளிகை கட்டும் பொறுப்பை அவரிடம்
ஒப்படைத்தார். மன்னர் தோமாவிடம் மாளிகை கட்டுவதற்கான போதிய
பணத்தைக் கொடுத்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டுப்
பயணம் சென்றார்.
தோமாவோ, மன்னன் மாளிகை கட்டக் கொடுத்த பணத்தை அதற்காகப்
பயன்படுத்தாமல், ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்து
கொடுத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து, மன்னர் தோமாவை அழைத்து,
":மாளிகை எங்கே?": என்று கேட்டார். அதற்கு அவர், ":மாளிகை இங்கே
இல்லை. விண்ணகத்திலே கட்டப்பட்டிருக்கிறது": என்றார். இதைக்
கேட்டு சினமடைந்த மன்னன், தோமாவை சிறையில் அடைத்தான். இதற்கிடையில்
மன்னனின் சகோதரன் காத் என்பவன் இறந்துபோனான். ஒருநாள் அவன்
மன்னருக்குக் கனவில் தோன்றி, ":சகோதரனே! விண்ணகத்தில் உனக்காக
ஓர் அழகு மிளிர்ந்த மாளிகை கட்டப்பட்டிருக்கிறது, மேலும்
நீ சிறையில் அடைத்து வைத்திருக்கும் மனிதர் சாதாரண மனிதர்
அல்ல, அவர் கடவுளின் தூதர்": என்று உரைத்தான். இதை அறிந்த
மன்னன் சிறையில் இருந்த தோமாவை விடுதலைசெய்து அனுப்பினான்.
அதோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்து திருமுழுக்குப் பெற்று
உண்மைக் கிறிஸ்தவனாக வாழத் தொடங்கினான்.
வாழ்க்கை வரலாறு
திதிம் என அழைக்கப்படும் தோமா கலிலேயாவைச் சார்ந்தவர். இவரும்
தூய பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோபு போன்று மீன்பிடித்
தொழிலைச் செய்து வந்தார். ஆண்டவர் இயேசு அழைத்த உடன், இவர்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார்.
விவிலியத்தில் யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற நற்செய்தி
நூல்களில் இவரைக் குறித்த செய்திகள் காணக் கிடைக்கவில்லை.
யோவான் இவரைக் குறித்து சொல்கிற செய்திகளை வைத்துக்கொண்டு
இவர் எப்படிப்பட்ட ஆளுமை என நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் நெருங்கிய நண்பரான இலாசர் இறந்தபோது, இயேசு
பெத்தானியாவிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடித்தார். அப்போது
சீடர்கள் எல்லாம் இயேசுவிடம், ":ரபி, இப்போதுதானே யூதர்கள்
உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப்
போகிறீரா?": என்று சொல்லி அவரைத் தடுத்தார்கள் (யோவா 11:8).
ஆனால் தோமாவோ, ":நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்": என்று
சொல்லி தான் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை
வெளிப்படுத்துகிறார்.
இன்னொரு சமயம் இயேசு சீடர்களிடம், ":நான் போய் உங்களுக்கு
இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து, உங்களை என்னிடம்
அழைத்துக்கொள்வேன்": என்று சொல்லும்போது தோமா, ":ஆண்டவரே,
நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க
நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித்
தெரிந்துகொள்ள இயலும்?": என்பார். அதற்கு இயேசு, ":வழியும்
உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம்
வருவதில்லை": என்பார். (யோவா 14: 1-6). இப்பகுதியில் இயேசு
சொன்னது மற்ற சீடர்களுக்கும் புரியாதிருக்கும். ஆனால் அவர்கள்
இயேசுவிடம் கேள்வி கேட்கத் துணியவில்லை. தோமாதான் மிகவும்
துணிச்சலாக கேள்வியைக் கேட்டு, விளக்கத்தைத்
தெரிந்துகொள்கிறார். இதன்மூலம் அவர் உண்மையை அறிந்துகொள்ள
முற்படுபவர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பிறகு, சீடர்களுக்குத்
தோன்றினார். அவர் தோன்றிய நேரம் தோமா அங்கு இல்லை. எனவே சீடர்கள்
அனைவரும், இயேசு தோன்றிய செய்தியை தோமாவிடம் எடுத்துச்
சொன்னபோது, ":அவர் நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட
காயங்களில் என் விரலையும், அவருடைய விலாவில் ஏற்பட்ட காயத்தில்
என்னுடைய கையை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன் ":என்கிறார். எட்டு
நாட்களுக்குப் பிறகு சீடர்கள் அனைவரும் (தோமாவும் அதில் இருந்தார்)
ஒன்றாகக் கூடி வந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி அவர்களை
வாழ்த்தினார். பின்னர் தோமாவிடம், ":தோமா உம்முடைய விரலை என்னுடைய
கையிலும், கையை என்னுடைய விலாவிலும் விட்டுப் பார்": என்று
சொல்லிவிட்டு, ":ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்": என்பார்.
அப்போது தோமா, ":நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!": என்பார்
(யோவா 20: 28).
இப்பகுதியைக் வைத்து, நிறையப் பேர் தோமா ஒரு சந்தேகப்
பேர்வழி என்பர். ஆனால் உண்மையில் அவர் முழு உண்மையை அறிந்துகொள்வதற்காக
இப்படிச் செயல்பட்டார் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
":நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்": என்று தோமா அறிக்கையிட்ட
நம்பிக்கை அறிக்கையைப் போன்று வேறு யாரும் இப்படி வெளிப்படுத்தவில்லை
என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தோமா தற்போதைய ஈரான்,
பெர்சியா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகவும்,
இறுதியில் இந்தியாவின் தென்பகுதியில் வந்து நற்செய்தி அறிவித்ததாகவும்
சொல்லப்படுகின்றது. ஆனால் கிபி. 52 ஆம் ஆண்டு தோமா கேரளாவில்
உள்ள கிராங்கநூர் பகுதியில் தரை இறங்கினார் என்றும் அங்கே
ஏழு ஆலயங்களைக் கட்டி எழுப்பினார் என்றும் உறுதியாக நம்பப்படுகின்றது.
அதற்கு கேரளாவில் உள்ள தோமையார் கிறிஸ்தவர்களே சான்றாக இருக்கின்றார்கள்.
தோமா கிராங்கநூரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில
ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அதன்பிறகு, சென்னையிலுள்ள மயிலாப்பூர்
பகுதியில் நற்செய்தி அறிவித்தார். அவருடைய போதனையைக்
கேட்டு நிறைய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார்கள்.
இதனால் அவருக்கு இந்து பூசாரிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு
வந்தது. ஆனால் தோமா தனக்கு வந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்துவிட்டு,
தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். ஒருசமயம் அவர்
சின்ன மலையில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது பகைவர்கள் வந்து,
அவர்மீது ஈட்டியைப் பாய்ச்சி அவரைக் கொலை செய்தார்கள். இவ்வாறு
தோமா, முன்பு சொன்ன, ":வாருங்கள் நாமும் போவோம், அவரோடு இறப்போம்":
என்ற வார்த்தையை உண்மையாக்கிக் காட்டினார். 232 ஆம் ஆண்டு
தோமாவின் புனித பொருட்கள் எடேசாவிற்கு கொண்டு செல்லப்பட்டன.
15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள்
தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஆலயம் கட்டினார்கள். 1972
ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த, திருத்தந்தை ஆறாம்
பவுல் தோமாவை இந்திய நாட்டின் திருத்தூதராக அறிவித்தார்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இந்திய நாட்டின் திருத்தூதர் என அழைக்கப்படும் தூய
தோமாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து
என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து
நிறைவு செய்வோம்.
நம்பிக்கையோடு வாழ்வோம்
நற்செய்தியில் இயேசு தோமாவைப் பார்த்து, ":நீ என்னைக் கண்டதால்
நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்": என்பார் (யோவா
20: 29). இதையே நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். தோமா
இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள
நினைத்தார். அதனால் அவர், இயேசுவின் கைகளில் என்னுடைய விரலையும்,
அவருடைய விலாவில் என்னுடைய கையை விட்டால் ஒழிய நம்ப
மாட்டேன்": என்கிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இறைவனிடத்தில்
நம்மோடு வாழும் சக மனித்ரகளிடத்தில் நம்பிக்கை கொண்டு
வாழ்கிறோமா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நம்பிக்கை என்பது எத்தகையது என்பதை எபிரேயருக்கு எழுதிய
திருமுகத்தின் ஆசிரியர் அழகாகச் சொல்வார், ":நம்பிக்கை என்பது
நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப்
புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை": (எபி 11:1) நாம் நம்மைப்
படைத்தவரில் ஏன், நம்மோடு இருப்பரில் ஐயமில்லாது இருக்கவேண்டும்.
அதுவே உண்மையான நம்பிக்கையாகும். ஆனால் பல நேரங்களில் கடவுளிடத்திலும்
நம்பிக்கை கொள்வதில்லை, நம்மோடு வாழக்கூடிய சக மனிதரிடத்திலும்
நம்பிக்கை கொள்வதில்லை. எப்போதும் அவ நம்பிக்கையிலே
வாழ்ந்து மடிந்துபோய்விடுதில்லை.
எப்போதும் அவநம்பிக்கையோடும் சந்தேகப் புத்தியோடும்
வாழ்ந்த ஒரு பெண்மணியைக் குறித்து சொல்லப்படும்
வேடிக்கையான கதை.
கணவன் மனைவி, இரண்டு குழந்தைகள் என்று இருந்த வீட்டில் மனைவி
எப்போதும் தன்னுடைய கணவன் மீது சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தாள்.
காரணம் மனைவி அலுவலகத்தில் வேலை பார்த்தாள். கணவரோ
வேலையேதும் இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். வீட்டில் இருக்கும்
கணவர் என்ன செய்கிறார் என்பதுதான் அந்த மனைவிக்குச் சந்தேகம்.
அதனால் மனைவி அலுவலத்திற்குச் சென்று, தன்னுடைய கணவருக்கு
போன் செய்து, ":எங்கே இருக்கிறீர்கள்?": என்று கேட்பார். அவர்
":வீட்டில் இருக்கிறேன்": என்பார். ":வீட்டில் இருக்கிறீர்கள்
என்றால், எங்கே மிக்ஸ்சியை ஆன் (On) செய்யுங்கள்": என்பார்.
அவரும் மிக்ஸ்சியை ஆன் செய்வார். உடனே மனைவி தன்னுடைய கணவர்
வீட்டில்தான் இருக்கிறார் என நினைத்து நிம்மதிப்
பெருமூச்சு விட்டுக்கொள்வார். இது வாடிக்கையாக ஒவ்வொருநாளும்
நடந்தது.
ஒருநாள் மனைவி, தன்னுடைய கணவர் தான் அலுவலகம் சென்றபிறகு
உண்மையிலேயே வீட்டில்தான் இருக்கிறாரா? அல்லது வேறு எங்கும்
போய்விடுகிறாரா? என சோதித்துப் பார்க்க விரும்பினார். அதனால்
அவர் அலுவலகம் செல்வதுபோல் வெளியே சென்றுவிட்டு, சிறிது நேரத்திற்குள்
வீட்டிக்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் கணவரைக்
காணவில்லை. பிள்ளைகள் மட்டுமே இருந்தார்கள். இதைப்
பார்த்து திடுக்கிட்டுப் போன மனைவி, தன்னுடைய பிள்ளைகளிடம்,
":அப்பாவைவை எங்கே?": என்று கேட்டார். அதற்கு அவர்கள்,
":அப்பா இப்போதுதான் மிக்ஸ்சியைத் தூக்கிக்கொண்டு வெளியே
போனார்": என்றார்கள். இதைக் கேட்டதுதான் தாமதம் தன்னுடைய
கணவர் தன்னை இத்தனை நாளும் இப்படிதான் ஏமாற்றிக்கொண்டிருக்கிறாரோ?
என நினைத்து மயக்கம் போட்டு விழுந்தார். எப்போதும் சந்தேகப்
புத்தியோடு வாழ்ந்தால், இதுதான் கதி.
ஆகவே, தூய தோமாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் ஆண்டவர்
இயேசுவைப் போன்று எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். இறைவன்
மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
|
இறைவாக்கு
ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள்
பாளையங்கோட்டை |
சாம்பலில் பூத்த சரித்திரம்
இமாலயாவிற்கு தெற்கே, ஆசியாவின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய
ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப், சிந்து ஆகிய பகுதிகளின்
அரசராக, கி.பி.46ம் ஆண்டில், Gondophernes அல்லது
Guduphara என்ற பெயரில் ஓர் அரசர் ஆட்சி செய்தார் எனக் கூறப்படுகின்றது.
இந்த அரசரின் கட்டளைப்படி, திருத்தூதர் தோமா ஈட்டியால்
குத்திக் கொலை செய்யப்பட்டார் என, கடந்த வார நிகழ்ச்சியில்
கேட்டோம். மேலும், எப்ரேம், சைரஸ், அம்புரோஸ், புலினுஸ்,
ஜெரோம், தூர்ஸ் நகர் கிரகரி ஆகியோரும், இன்னும் பல எழுத்தாளர்களும்,
திருத்தூதர் தோமா இந்தியாவில் நற்செய்தி அறிவித்தார் என எழுதியுள்ளனர்.
யுசேபியுஸ் என்ற புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இவ்வாறு
கூறுகிறார். "தோமா, திருத்தூதர் யூதா ததேயுவை, Edessaவிலிருந்த
அப்கர் என்ற அரசருக்கு திருமுழுக்கு கொடுக்க அனுப்பிய
பின், தமக்கென பார்த்தியா மீட்ஸ், பெர்ஷியா இன்னும் பல அண்டை
நாடுகளைத் தெரிந்துகொண்டு மறைபரப்புப் பணியாற்றினார். அப்போதுதான்
தோமா இந்தியா சென்றார். "தோமாவின் பணிகள்" என்ற ஒரு நூல்,
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மக்களிடம்
இருந்ததாக ஆதாரம் இருக்கிறது. இந்தியாவில் இயேசுவின் நற்செய்தியை
முதன்முதலில் அறிவித்தவர் இவரே என்று பழங்கால கிறிஸ்தவ மரபும்,
ஏடுகளும் சான்று பகர்கின்றன. கேரளாவில் வாழும் தோமா கிறிஸ்தவர்களும்
இதற்குச் சான்றாக உள்ளனர்.
கொண்டோபெர்னஸ் (Gondophernes) அல்லது குடுப்பாரா (Cudupara)
என்ற மன்னரது ஆட்சி, கி.பி.46ம் ஆண்டில் பெஷாவர் வரை பரவிக்கிடந்தது.
பஞ்சாபிலிருந்து கொச்சின், திருவிதாங்கூர் சிற்றரசு வரைக்கும்
பரவியிருந்தது. இப்பகுதியினர், "புனித தோமாவின் கிறிஸ்தவர்கள்"
என்றே அழைக்கப்பட்டு வந்தனர். தங்களுடைய திருவழிபாட்டுக்கு
"சிரியக்" என்ற மொழியையே அன்று முதல் இன்றுவரை அவர்கள் பயன்படுத்தியதோடு,
"சிரியன் கிறிஸ்தவர்கள்" என்றும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சிரியக் மொழி பெர்ஷியா, மெசப்பொத்தேமியா பகுதிகளிலிருந்து
இறக்குமதியானது என, உறுதியாகச் சொல்லலாம். தோமா, முதன்முதலில்
பண்டைய சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் (தற்போது இது
கேரளாவிலுள்ளது) கி.பி. 52-ல் பாதம் பதித்தார். தென் இந்தியாவின்
கடற்கரையோரமாக நற்செய்தி பணியாற்றிய இவர், ஏழு ஆலயங்களை
நிறுவினார். அவை கொடுங்கல்லூர், பழவூர், கொட்டகாவு, கொக்கமங்கலம்,
நிரனம், நிலக்கல், கொல்லம், வேம்பார், திருவிதாங்கோடு (கன்னியாகுமரி
மாவட்டம்) ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இவர் குமரி கடற்கரை
வழியாக சென்னை வந்தடைந்தார் எனவும், அங்கே பலரையும் மனந்திருப்பிய
பின் சென்னை, "சிறிய மலை" என்ற பெயர் கொண்ட இடத்தில் கி.பி
72-ல் குத்திக் கொல்லப்பட்டார் எனவும் வரலாறு கூறுகின்றது.
அவர் மைலாப்பூரில் அடக்கம் பண்ணப்பட்டதற்கு கல்லறை ஆதாரங்களும்
உள்ளன. பதின்மூன்றாம் நூற்றாண்டில், இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்ட மார்கோ-போலோவின் குறிப்புப்படி, சென்னை அருகே அம்புகளால்
குத்தப்பட்டு இவர் இறந்தார் எனத் தெரிகிறது.
1522ம் ஆண்டு போர்த்துக்கீசியர் சென்னை வந்தபோது, திருத்தூதர்
தோமா அவர்களின் கல்லறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள்
கண்டுபிடித்த பொருட்கள் மைலாப்பூரில் சாந்தோம் பேராலயத்திலேயே
வைக்கப்பட்டுள்ளன. இவரின் திருப்பண்டங்கள் பலவும் நான்காம்
நூற்றாண்டில் எடெஸ்ஸாவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக
"தோமாவின் பணிகள்" என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து மெசபத்தோமியாவுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும்
அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் எடெஸ்ஸாவிலிருந்து அப்ரூஸ்ஸியில்
உள்ள ஓர்டோனாவிற்கு(Ordon) எடுத்துச் செல்லப்பட்டு இன்றுவரை
புனிதமாக காப்பாற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாக
கூறப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித
தோமா, பல்வேறு போராட்டங்களை ஏற்று இந்தியாவுக்கு போதிக்க
வந்தார். அவர் மறைப்பணியாற்றிய இடங்களில் மிக முக்கியமானது
சென்னை சைதாப்பேட்டையிலுள்ள சின்னமலை ஆரோக்கிய அன்னை
திருத்தலம் ஆகும். சின்னமலை, பாரத மண்ணுக்கே இயேசுவின்
விழுமியங்களை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. புனித
தோமாவின் புண்ணான கால்கள் அழுந்திப் பதிந்து உரமேறிய ஞான
பூமி, இந்தப் புண்ணிய பூமி. இங்கு அமைந்துள்ள சிற்றாலயத்தின்
அடியில் ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய குறுகலான வாசலில்
குனிந்துகொண்டே சென்றால் புனிதரின் முழு உருவ சிலை ஆசி
கூறி நிற்பதைக் காணலாம். சற்று வலப்பக்கம் திரும்பினால்
சிறு துவாரத்தை நாம் காணலாம். பகைவர் தன்னைக் கொல்ல வருவதை
அறிந்ததால் அங்கிருந்து, பரங்கிமலை எனவும், தோமையார் மலை
எனவும் அழைக்கப்படும் மலைக்குத் தப்பிச் சென்றார்.
குகையின் பின்பக்கம் சற்று உயரத்தில் தோமா மறைப்பணியாற்றுகையில்
தாகத்தோடு வந்த மக்களுக்காக தன் கோலால் தட்டி உருவாக்கிய
வற்றாத நீரூற்றை நாம் காணலாம். இவர், தன் கையாலேயே
செதுக்கிய கற்சிலுவை இன்றும் சாட்சியாய் நிற்கிறது. அதைச்
சுற்றிலும் அவர் கால் தடங்களும், உள்ளங்கைத் தடங்களும் இன்றும்
அவரின் வருகையை உறுதி செய்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் இறப்பின் நிகழ்வுகளைச் சித்தரிக்கும்
சிலுவைப்பாடுகள் அனைத்தும் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதை
நாம் காணலாம். இயேசுவின் மலைப்பொழிவை ஒத்த சிறு சிறு
குன்றுகள் தோமாவின் உயர்ந்த இலட்சியங்களையும் கொள்கைப்
பிடிப்பையும் பறைசாற்றுகின்றன. இங்கு அமைந்துள்ள ஆறு பிரமாண்ட
தூண்களைக் கொண்ட வட்ட வடிவ ஆரோக்ய அன்னை ஆலயம் காண்பதற்கு
அருமையாய் அமைந்துள்ளது. இன்றுவரை புனித தோமாவின் திருத்தலங்களான
தோமா மலை, சாந்தோம் பேராலயம், தோமா கல்லறை ஆகியவற்றுக்கு
வருகைதரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் சின்னமலை,
புண்ணிய பூமியையும் தரிசித்து அற்புத வரங்கள் பெற்றுச்
செல்கின்றனர்.
எல்லாம் வல்ல தந்தையே! புனித தோமா, நீரே என் ஆண்டவர் என்று
ஏற்றுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மில் எம் வாழ்வை பயணமாக்க
வரம் தாரும்.
ஆதாரம் : இணையதளங்கள்/ வத்திக்கான் வானொலி
|
திருமதி அருள்சீலி அந்தோணி |
ஜூலை 3ஆம் தேதி புனித தோமையாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான புனித தோமா சிறப்பு
வாய்ந்தவர் காரணம் இயேசுவின் பிறப்பு - இறப்பு -உயிர்ப்பு
குறிப்பாக உயர்த்தலில் பெரும் பங்கு வகித்தவர் புனித
தோமையார் ஆவர். இவரது திருவிழா உலக திருச்சபைக்கு மட்டுமன்று,
இந்திய திருஅவைக்கு மெய்காப்பாளரும் ஆவார்
புனித தோமா இயேசுவின் அன்பு கட்டளையை ஏற்று இந்தியாவிற்கு
வந்தவர். குறிப்பாக தென் தமிழகத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு
மிக சிறந்த சான்று இவர் தொடுத்த வினா என்பதனை உணர்ந்திடுவோம்.
இதுவே இந்தியா பண்பாட்டு பல சமயங்களை சேர்ந்தவர்களுக்கு உய்த்துணரும்
நற்சான்றாகும். கேரளா வழியாக கிறிஸ்துவின் போதனைகளை எடுத்துரைத்து
சென்னை சாந்தோம், சின்னமலை, பரங்கிமலை என்று பரந்து
விரிந்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தமிழக மக்கள் கண்டுணரச்
செய்தவரே நம் தோமா! இவர் நம் திருநாட்டின் பாதுகாவலருமாவார்!
மேலும் இவர் பாதங்கள் தடம் பதித்த இடங்கள் இன்றும் வரலாற்றுச்
சின்னங்களாக காட்சியளிப்பதை நாம் காணலாம். குறிப்பாக
தென்னிந்தியாவின் புனிதர். இவர் வாழ்ந்து கிறிஸ்துவத்தை
போதிக்கையில் மகாதேவன் என்பவரால் கொலையுண்டு இன்று புனிதரான
நிகழ்வு கிறிஸ்துவத்தின் தொன்மை வாய்ந்த வரலாற்றை பறைச்சாற்றிக்
கொண்டிருப்பதை இவ்வுலகு அறியும்.
சந்தேகம் எழும்போது, தோமா என்று சுட்டிக்காட்டி பேசும் அளவு
இவர் புகழ் பெற்றவர். அதே வேளையில் எல்லா தூதர்களை விட இயேசு
நம்மைப் போல, ஒரு மனிததன்மையில் வாழ்ந்தார் என்பதை, தொட்டு
நன்குணர்ந்தவர் தோமா! மற்ற சீடர்கள் இயேசுவின் பின்னால்
சென்றால் கல்லெறிய படுவோம் என்று தயங்கிய வேளையில் "நாமும்
செல்வோம். அவரோடு இறப்வோம்." (யோவா 11:16) என்று அஞ்சா
நெஞ்சத்தோடு அறிக்கையிட்டவர். கிறிஸ்துவின் மேல் பற்றுறுதியும்,
அர்ப்பண உணர்வும் கொண்டவர்.
இயேசுவுக்காக சிலுவையை சுமக்கவும் தயங்கியவர் அல்லர். அவரது
மரணமே இதற்கு சாட்சி!
அவரது குருதி தமிழகமண்ணில் சிந்தி உலகம் ழுமுவதும் தேடி வந்து
வணங்கிச் செல்லும் அளவுக்கு இன்று புனித தோமையார் வரலாற்றில்
மட்டுமன்று மாறாக தோமையார் மலையே இதற்கு சான்றாகும். இந்த
மாபெரும் புனிதரை யாம் பெற்றது யாம் செய்த பெரும் பாக்கியமே
என்று உவகையோடு வலம் வருவோம்.
அன்று இறைமகன் சிலுவையில் அறையுண்டு இறந்தபின் ஒளிந்துக்
கொண்ட சீடர்களைப் போல இல்லாமல் பயமின்றி துணிவோடு சுற்றி
திருந்த துணிச்சல் மிக்க சீடர் புனித தோமையார்.
இயேசு உயிர்த்து விட்டார் என்று கூறியபோது கோழைகளான சீடர்களுக்கு
பல கற்பனைத் தோற்றங்கள் எழக்கூடும் என்ற யூதித்து மறை உண்மையை
முக்காலமும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையில் தான்
தோமா இயேசுவிடம் உறுதியான அடையாளம் தேடுகின்றார்.
அவை தான் இயேசுவின் திருக்காயங்கள்! தோமாவின் மனதை
புரிந்துக் கொண்டவர் இயேசு மட்டுமே. காரணம் நமது
நாட்டிலுள்ள பல சமயங்களின் போட்டி மும்முனை போட்டியாகத் திகழும்
என்ற நிலையை இறைமகன் முன் கூட்டியே உணர்ந்தவராய் தோமாவை கடிந்து
கொள்ளாமல் தன் காயங்களை தேடும் சீடருக்கு இறைமகன் "தோமா இதோ
என் கைகள் - என் விலாவில் உன் கையை இடும்" எனும் தொடும் அனுபவத்திற்கு
அழைப்பு விடுக்கின்றன. மனிதத் தன்மையில் இருந்த இயேசுவை
தொட்டுணர்ந்து அவரில் இறைத்தன்மையை கண்டுணர்ந்து "என் கடவுளே!
என் ஆண்டவரே!" என்ற தோமாவின் நம்பிக்கை அறிக்கைகள் இன்றும்
ஒலிக்கும் உயிரலைகளாகும் இறை - மனித - உறவை நம்மோடு
இணைக்கும் மறையுண்மையாகும்.
இயேசு தோமா நீ கண்டதினால் நம்பிக்கைக் கொண்டாய், காணாமல்
நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர் என்ற மறைவாக்கு நமக்கும்
நமக்கு பின் வரும் சந்ததியருக்கும் உயிரோட்டம் தரும் ஒலி
அலைகளாகும்.
புனித தோமாவின் குருதி சிந்திய மண்ணில் வாழும் நாம்
மண்ணின் புனிதத்தை உணர்ந்து அவர் வாழ்ந்து திரிந்து
சுவாசித்த தென்றலை நாமும் சுவாசிக்கும் வரம் வேண்டி
மன்றாடுவோம்!
நாளும் தோமாவின் பரிந்துரையை வேண்டுவோம். அவரில்
தஞ்சமடைவோம்! சாதி - சமயங்களை கடந்து அன்பின் உறவை
வளர்ப்போம். நமது தேசிய திருத்தலம் புனித தோமாவின்
பன்னாட்டு திருத்தலமாக மாறிட வரம் வேண்டி அவரில்
சரணடைவோம்.
திருமதி அருள்சீலி அந்தோணி
|
மறையுறை
மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ் |
|
திருவுரைத்
தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை |
|
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி |
சந்தேகக் கல்லறையைத் தகர்த்து...
2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில், தோன்றிய கிருமியொன்று,
கடந்த 30 மாதங்களாக, உலகின் பல நாடுகளில், மக்களை, அவ்வப்போது,
அவரவர் வீடுகளில் சிறைப்படுத்தியுள்ளது. இந்தக் கிருமியைப்பற்றிய,
உறுதியான, முழுமையான, அறிவியல் விவரங்கள் இல்லாத நிலையில்,
இக்கிருமியைக் குறித்த பல்வேறு வதந்திகள் வலம் வருகின்றன.
இந்தக் கிருமியின் தாக்குதல்களைக் குறித்து, செய்திகள் என்ற
பெயரில், ஊடகங்கள், ஒவ்வொருநாளும் வெளியிட்டு வரும் தகவல்கள்,
நமக்குள் அச்சத்தையும், சந்தேகத்தையும் வளர்த்து வருகின்றன.
அச்சம், கலக்கம், சந்தேகம் ஆகிய உணர்வுகளுடன் நாம் போராடிவரும்
இச்சூழலில், இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா, சந்தேகத்தின்
பிடியில் சிக்கித்தவித்த நிகழ்வை, தாய் திருஅவை, நமக்கு நற்செய்தியாக
(யோவான் 20:24-29) வழங்கி, நம்மை சிந்திக்க அழைக்கிறார்.
புனித தோமாவின் திருநாளாகிய இன்று, நாம் நற்செய்தியில்
காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான
நிகழ்ச்சி.
நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது
எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஒரு தனி உணர்வு அல்ல,
மாறாக, அதை ஒரு கூட்டு உணர்வு என்று நாம் எண்ணிப்பார்க்கலாம்.
சந்தேகம், பல உணர்வுகளின் பிறப்பிடம். சந்தேகம்
குடிகொள்ளும் மனதில், கூடவே, பயம், கோபம், வருத்தம், விரக்தி
என்ற பல உணர்வுகள், கூட்டுக்குடித்தனம் செய்யும்.
உண்மை பேசும் எவரையும், "அரிச்சந்திரன்" என்றும், தாராள
மனதுடையவரைப் "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேபோல்,
சந்தேகப்படும் யாரையும், ":சந்தேகத் தோமையார்": என்று அழைக்கிறோம்.
அவ்வளவு தூரம், தோமா, சந்தேகத்தின் மறுபிறவியாக, அடையாளமாக
மாறிவிட்டார்.
தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும்,
நம்மில் பலர், (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்) உடனே,
ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துகொள்கிறோம். "என்ன மனிதர்
இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு,
எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை
கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற
தீர்ப்பையும் எழுதிவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வதும்,
அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை
நீட்டி, தோமாவை, குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற
மூன்று விரல்கள் நம்மை நோக்கித் திரும்பியுள்ளதை எண்ணி,
கொஞ்சம் நிதானிப்போம்.
இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய், ஆயிரமாயிரம்
விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து
வளர்ந்துள்ள நமக்கே, அந்த உயிர்ப்பு குறித்த விசுவாசத்தில்
அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பைப்பற்றி
தெளிவற்ற எண்ணங்கள் கொண்டிருந்த யூத சமுதாயத்தில், 2000 ஆண்டுகளுக்கு
முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச்
சந்தேகித்தார் என்பதற்காக, அவரைக் கண்டனம் செய்வது தவறு.
தீர்ப்பிடுவது தவறு.
கல்வாரியில், இயேசு இறந்ததை, நீங்களோ, நானோ நேரடியாகப்
பார்த்திருந்தால், ஒருவேளை, தோமாவை விட இன்னும் அதிகமாய்
மனமுடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப்
பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எனவே,
தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து
முதலில் எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள
தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச்
சிந்திப்போம்.
உயிர்த்த இயேசுவைக் கண்டதும், ஏனையச் சீடர்களுக்கும் கலக்கம்,
குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன
(காண்க. மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா
24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள்
புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான் தோமா வாய்விட்டுச்
சொன்னார். எனவே தோமாவை மட்டும் சந்தேகப் பேர்வழி என்று கண்டனம்
செய்யாமல், எல்லாச் சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில்
வாழ்ந்துவந்தனர் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
சீடர்களின் பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது.
அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.
தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும்
விட்டுவிட்டு, இயேசுவை நம்பி, மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள்,
இச்சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் தங்களது
உலகம் என்று, நம்பிவந்தனர். அவர்கள், கண்ணும், கருத்துமாய்
வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணி வேரோடு பிடுங்கப்பட்டு,
சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து,
அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம், தரை மட்டமாக்கப்பட்டன.
எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை
முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசுவின் கொடுமையான
மரணம், அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும்
பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர்.
உரோமைய அரசும், மதத் தலைவர்களும் தங்களைத் தாக்கக்கூடும்
என்ற அச்சத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
இன்று, நமது நிலை என்ன? இவ்வுலகையே முற்றிலும் ஆள்வதாக எண்ணிக்கொண்டிருந்த
நாம், இன்று, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியினால், எப்போது,
எவ்வகையில் தாக்கப்படுவோம் என்பதை அறியாமல், அவ்வப்போது,
அச்சத்திலும், சந்தேகத்திலும் சிறைப்பட்டு கிடக்கிறோமே!
தங்களில் ஒருவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், தங்களில்
ஒருவர் இயேசுவை மறுதலித்ததால், இயேசுவின் சீடர்கள் நடுவே,
அதுவரை, ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை
தொலைந்து போனது. சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக்
கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, அவரால்
இனி நடக்கப்போவது ஒன்றுமில்லை என்று, மனதால் அவரைப்
புதைத்துவிட்டனர் சீடர்கள்.
நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது
என்ன? உள்ளத்தையும், சிந்தனையையும், இறுகப் பூட்டிவிட்டு,
இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத்
தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான்
இயேசு செய்துகாட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை
வேரறுக்க, வாய் வார்த்தைகள் மட்டும் போதாது. ஆங்கிலத்தில்
சொல்வதுபோல், சில வேளைகளில், 'physical proof', அதாவது,
உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். உயிர்த்தபின் இவை அனைத்தையும்
இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது.
வாய் வார்த்தைகளாலும், தன் உடலையே நிரூபணமாக அளித்ததாலும்,
தோமாவையும், ஏனையச் சீடர்களையும், அவர்கள் எழுப்பியிருந்த
விரக்தி என்ற கல்லறையிலிருந்து வெளியே வருமாறு அழைத்தார்,
இயேசு. சீடர்களின் சந்தேகங்களுக்கு, தோமாவின் சந்தேகங்களுக்கு,
இயேசு விடுத்த அழைப்பு: "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை
இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்...
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" (யோவான் 20:27,29).
இயேசு மலைமீது வழங்கிய பல பேறுகளை நாம் அறிவோம். ஒருவேளை,
தன் பணிவாழ்வின்போது, இன்னும் பல பேறுகளை ஆசிமொழிகளாக அவர்
வழங்கியிருக்கக் கூடும். உயிர்த்தெழுந்தபின், இறுதியாக,
அவர் வழங்கிய மற்றுமொரு பேறு, "காணாமலே நம்புவோர்
பேறுபெற்றோர்" (யோவான் 20:29) என்ற அந்த இறுதி பேறு.
காயங்களும், தழும்புகளும் இயேசுவின் வாழ்வில் வகித்த
முக்கியமான இடத்தை, இயேசுவுக்கும், தோமாவுக்கும் இடையே நிகழ்ந்த
சந்திப்பு நமக்கு உணர்த்துகிறது. சிலுவையில் அவர் பெற்ற
ஆழமான காயங்களின் தழும்புகளை, அவர், தன் உயிர்த்த உடலிலும்
பதித்திருந்தார். இயேசுவின் உயிர்ப்பு, அவரது வாழ்வு, பாடுகள்,
மற்றும் மரணம் ஆகியவற்றுடன் பிரிக்க இயலாதவண்ணம் பிணைக்கப்பட்டுள்ளது
என்பதை, அவர், தன் உயிர்த்த உடலில், தொடர்ந்து தாங்கி
நின்ற தழும்புகள் உணர்த்துகின்றன. கிறிஸ்துவின் உடலான திருஅவை,
வரலாற்றில் தொடர்ந்து காயங்கள் அடையும் என்பதையும், இயேசுவின்
உடலில் இருந்த தழும்புகள் நமக்கு உணர்த்துகின்றன.
தன் காயங்களைத் தொடுவதற்கு இயேசு விடுத்த அழைப்பை ஏற்று,
தோமா இயேசுவைத் தொட்டாரா என்பதில் தெளிவில்லை. உடலால்,
தோமா, இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம்.
ஆனால், இந்த அழைப்பின் வழியே, தோமாவின் மனதை, இயேசு, மிக
ஆழமாகத் தொட்டார். எனவே மிக ஆழமானதொரு மறையுண்மையை தோமா
கூறினார் - "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான்
20: 28). இயேசுவை, கடவுள் என்று கூறிய முதல் மனிதப்பிறவி
தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர்
உணர்ந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும்
பறைசாற்றினார், புனித தோமா.
இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது.
அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, இறைவனின் இரக்கத்தை
நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள்
தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால் நாம் உருவாக்கிக்கொள்ளும்
கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். மரணமும், கல்லறையும் நிரந்தர
முடிவுகள் அல்ல என்பதைப் பறைசாற்ற உயிர்த்தெழுந்த
கிறிஸ்துவின் வெற்றியை, நாம் மீண்டும் ஒருமுறை, இத்திருநாளில்,
கொண்டாடி மகிழ்கிறோம். கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள
மரணங்களையும், கல்லறைகளையும் முடிவுக்குக் கொணரும்
புதுமையை, உயிர்த்த ஆண்டவரிடமிருந்து எதிர்பார்த்து
காத்திருக்கிறோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை
வழியாக இறைவனை மன்றாடுவோம்.
|
|
|
|
|

|
|
|