ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

         புனிதர்கள் பேதுரு பவுல் திருத்தூதர்கள் பெருவிழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
 திருப்பலி முன்னுரை
 
வருகைப் பல்லவி
ஊனுடலில் வாழ்ந்தபோது தமது இரத்தம் சிந்தித் திரு அவையை நிறுவியவர்கள் இவர்களே. ஆண்டவரின் கிண்ணத்தில் பருகி, இறைவனின் நண்பர்களானவர்களும் இவர்களே.

திருப்பலி முன்னுரை
புனிதர்களான பேதுருவும் பவுலும் திரு அவையின் தூண்களாகத் திருவிவிலியத்தால் எடுத்துக்காட்டப்படுகின்றனர். திரு அவையின் முதல் திருத்தந்தையான புனித பேதுரு ஆளுமைத் திறனோடு எளிய மனமும் ஏழைகளின் மீது மிகுந்த கனிவும் கொண்ட மிகச் சாதாரண மனிதர். திருத்தூதரான புனித பவுல் இளமை துடிப்பும் படைப்புத்திறனும் உயர்ந்த அறிவாற்றலும் கொண்ட அசாதாரண மனிதர். இருவரின் பண்புகளும் குண நலன்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதும் இயேசுவின் பொருட்டு இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொண்டவர்கள். முதியோருக்கு உதாரணமாகப் புனித பேதுருவையும் இளையோருக்கு எடுத்துக்காட்டாகப் புனித பவுலையும் கூற முடியும். அந்த அளவிற்கு இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும் தங்களுடைய வல்லமைமிக்க வாழ்க்கை சாட்சியத்தால் திரு அவையை வளர்த்து எடுத்தனர்.

இன்று நம் தாய் திருநாட்டில் நிலவுகின்ற எதிரும் புதிருமான சூழல்கள் நம்மைப் புனித பேதுருவின் கனிவையும் புனித பவுலின் துணிவையும் கொண்டு வாழ அழைப்பு விடுக்கின்றது. எந்நிலையில் இருந்தாலும் அந்நிலையில் பணிவும் துணிவும் நம்மிடம் இருக்குமானால் நமது வாழ்வும் சான்று வாழ்வாக அமையும் என்ற உணர்வோடு இன்றைய திருப்பலி கொண்டாட்டத்தில் குடும்பமாய் இணைவோம்.

திருப்பலி முன்னுரை 2
புனித பேதுரு, மற்றும் பவுல் நமது திருச்சபையின் இரு தூண்கள் என்று மதிக்கப்படும், திருத்தூதர்கள் விழாவை, நமது திருஅவை கொண்டாடுகிறது. பேதுரு இயேசுவின் முதல் சீடரும் திருஅவையின் முதல் திருத்தந்தை விண்ணகத்தின் திறவுகோலைத் தன்னகத்தே கொண்டுள்ளவர். இந்த பாறையின்மீது என் திருச்சபையைக் கட்டுவேன் என்று இயேசு வாக்களித்தது இவர் வழியாய் நிறைவேறிற்று. எனினும் இவர் தன்னுயிரை சிலுவைக்கு அர்ப்பணித்து இறையாட்சி மனிதரானார். புனித பவுல், சவுலாக இருந்தபோது அநேக யூதர்களை கொடுமைப்படுத்தி வதைத்த, தமஸ்கு நகர் காட்சிக்கு பின் இயேசுவின் அன்பினை உணர்ந்து தமது வாழ்நாள் முழுவதும் இறையரசை பறைசாற்றுவதையே உயிர் மூச்சாய் கொண்டு நல்ல போராட்டதை போராடி ஓட்டத்தை முடித்து விசுவாசத்தைக் காத்துக் கொண்டவர். இவரது இறப்புப் பற்றிய துல்லியமான குறிப்புகள் இல்லை. எனினும் தலை கொய்தோ புனித பேதுருவைப்போல் இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இன்றைய வாசக நற்செய்தியும், இவர்கள் சந்தித்தத் துன்பங்கள் இறைத்தூதர் காப்பாற்றியது சாட்சிப் பகர்ந்தது ஆகியவற்றை எண்பிக்கிறது. தலைமை பண்பிற்கும் நிர்வாகத்திற்கும் புனித பேதுருவும் நற்செய்தி பணியின் அறிவிப்பதின் அடையாளமாய் புனித பவுல் விளங்குவதுபோல் இவ்விருவரையும் நம் வாழ்வில் உதாரணமாகக் கொண்டு இறையன்பிலும், இறைப்பணியிலும் இறையுறவிலும் நிலைத்து இறைவனுக்கு சாட்சி பகர இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. "இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா" என்றிரைத்து திருஅவையை நிறுவிய இறைவா, பேதுருவின் மொழிமரபில் எம்மை வழிநடத்த, நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மேய்ப்புப்பணியை, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அளவு கடந்த அன்புடனும் மேற்கொள்ள, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அடைபட்டுக் கிடந்த சிறையின் அறை ஒளிமயமாகி, விலங்குகள் உடைபட, இரும்பு வாயில் தானாகத் திறந்து வழிவிட, விடுதலையின் அனுபவத்தைப் புனித பேதுருவுக்கு அளித்த இறைவா, போர் மேகங்களால் இருளடைந்து, அதிகரித்துவரும் யுத்தச்சூழல்களால் நிலைகுலைந்து, அழிவின் விளிம்பில் அல்லலுறும் அவனிக்கு, அமைதியை அருளவேண்டுமென்றும், உலகாளும் தலைவர்கள், சமாதானத்தின் பாதைக்குத் திரும்பவேண்டுமென்றும், உண்மையான விடுதலையை, எங்கள் தேசம் சமத்துவத்தில் சுவைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ":விண்ணரசி திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்": என்றிரைத்து, மன்னிக்கும் அதிகாரத்தினை, திருஅவைக்கும் திருப்பணியாளர்களுக்கும் அருளிய இறைவா, உம்மோடு ஒப்புரவாக நீர் தந்திருக்கும் ஒப்பற்ற கருவியாகிய, பாவசங்கீர்த்தனம் எனப்படும் ஒப்புரவு அருட்சாதனத்தை, நாங்கள் போற்றிப்பயன்படுத்தவும், மன்னிப்பு என்னும் திறவுகோலால், மனித உறவுகளைப் பேணி, நல்லுறவுடன் வாழவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருஅவையின் தூணான இறைவா, ஏதும் அறியா பாமரனாகிய புனித பேதுருவையும் எல்லாம் கற்றுத்தேர்ந்த வித்தகனான புனித பவுலையும் ஒன்றிணைத்து திருஅவையின் தூண்களாக நிறுத்தி நற்செய்தியை உரக்கச் சொல்ல பணித்தது போல் எங்களையும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ அருள் தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

5. புனிதர்கள் பேதுரு, பவுல், ஆகியோரது பெருவிழாவின், ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சீமோன் பேதுருவைப் போல "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என நம்பிக்கை அறிக்கையிடவும் பவுலடியாரைப் போல "நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்": எனச்சொல்லும்படியான, பிரமாணிக்கம் நிறைந்த சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்றும், அதற்கான இறையருளை, நீரே தந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. அன்பு தந்தையே இறைவா, பங்கு மக்கள் யாவரும் இறைவார்த்தையில் விசுவாசம் கொண்டு மற்றவர்களிடத்தில் பகிர்ந்து, இறைவனோடு ஒன்றித்து வாழ தாழ்ச்சி, விட்டுக்கொடுத்தல், சமாதானம் இவைகளை அனுதினம் கடைப்பிடித்து வாழும் மனப்பக்குவத்தை இறைவன் அருளி, நோய்கள், கடன்சுமை, பணம் பற்றாக்குறை இவைகளை நீக்கி உமது இறையருளை எம் பங்கிலுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கிடைக்கப்பெற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

7. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!
உலகில் ஏற்படும் மாற்றங்கள் எங்கள் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, எங்கள் உள்ளங்களைக் கலக்கமடையச் செய்கின்றபோது நாம் நிலை குலைந்து போகாமல், உமது வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை எமக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
மறையுரைச்சிந்தனை ஞானஒலி.
திருப்பலி முன்னுரை
 

 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

நம்பிக்கையின் திருத்தூதர்கள்

உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.

இவர்கள் இருவருக்கும் அடிப்படையான பண்புகள் எவை?

அ. உயிர்ப்பு அனுபவம்

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.

ஆ. பொருந்தக் கூடிய தன்மை

பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.

இ. எழுத்துக்கள்

'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:

(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்

நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.

(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்

பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.

(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்

தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.

இன்றைய வாசகங்கள்

(அ) சிறையில் கட்டுண்டு கிடந்த பேதுரு வியத்தகு முறையில் விடுதலை பெறுகிறார். 'ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் கையிலிருந்து என்னை விடுவித்துக் காத்தார்' என்று அறிவிக்கிறார் பேதுரு (முதல் வாசகம்). தாம் அழைத்தவரையும் அனுப்பியவரையும் கடவுள் கைவிடுவில்லை. இக்கட்டான சூழலிலிருந்து அவர் அவர்களை விடுவிக்கிறார்.

(ஆ) திருத்தூதுப் பணியால் நிறைவு பெறுகிற பவுல், 'நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்' என்று சரணாகதி அடைகிறார். தான் தொடங்கிய பயணத்தை இனிதே நிறைவு செய்கிறார் பவுல்.

(இ) இயேசுவை இறைமகன், மெசியா என்று அறிவித்த பேதுரு சீடர்களின் நம்பிக்கைக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். நம்பிக்கை வாழ்வில் நாம் ஒருவர் மற்றவருக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின. நாம் எப்படி இருக்கிறோம் என்பதல்ல, மாறாக, எப்படி மாறுகிறோம் என்பதே முக்கியம்.

நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
இன்று நாம் திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்று திருச்சபை உலக முழுவதும் ஆலமரம் போன்று விரிந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர்கள் இந்த இரண்டு திருத்தூதர்களுமே என்று சொன்னால் அது மிகையாது. இவர்களது பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவர்களது வாழ்வு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

தூய பேதுருவும், பவுலும் அடிப்படையில் இருவேறுபட்ட ஆளுமைகள். பேதுருவோ படிக்காத பாமரர், (தொடக்கத்தில்) யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு என்று நம்பியவர். ஆனால் பவுலோ, இவருக்கு முற்றிலும் மாறாக மெத்தப் படித்தவர், யூத மரபுகளையும், திருச்சட்டத்தையும் கரைத்துக் குடித்தவர். எல்லா மக்களுக்கும் (யூதர் அல்லாத புறவினத்தாருக்கும்) கடவுள் தரும் மீட்பு உண்டு என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ளவர். ஆளுமையில் மட்டுமல்லாமல், ஆற்றிய பணியிலும் இருவரும் வேறுபட்டு இருந்தார்கள். தூய பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, யூதர்கள் நடுவில் நற்செய்திப் பணியாற்றினார். தூய பவுலோ யூதர்களைக் கடந்து, புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவித்தார். தூய பவுல் ஆற்றிய பணிகள், மேற்கொண்ட பயணங்கள், எழுதிய எழுத்துகள் எல்லாம் இன்றைக்கும் நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் தருகிறது. எப்படி இந்த மனிதனால் மட்டும் இவ்வளவு பணியை ஆற்ற முடிந்தது என்று. இவர்கள் இருவரும் ஆளுமையில், ஆற்றிய பணியிலும் வேறுபட்டு இருந்தாலும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றுபட்டு இருந்தார்கள். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இருவருமே கி.பி. 67 ஆண்டில்தான் நீரோ மன்னனால் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவர்கள் இருவரது சாட்சிய வாழ்வும் நமக்குக் கற்றுத்தரும் உண்மைகள் என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலாவதாக. தூய பேதுருவும், பவுலும் பலவீனமானவர்களாக/ வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் அவர்களை வலுவுள்ளவர்களாக, பலமுள்ளவர்களாக மாற்றுகின்றார். ஆம், பேதுரு படிப்பறிவில்லாதவர், ஆண்டவர் இயேசுவையே தெரியாது என்று மறுதலித்தவர். அப்படியிருந்தாலும் இயேசு அவரைத் திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகின்றார். தூய பவுலோ தொடக்கத்தில் திருச்சபையைத் துன்புறுத்தியவர். அவரையும் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணிக்காக தேர்ந்தெடுக்கின்றார். இவ்வாறு வலுவற்றவர்களில் இயேசு தன்னுடைய வல்லமையை சிறந்தோங்கச் செய்கிறார்.

2 கொரிந்தியர் 12:7,9 ஆகிய வசனங்களில், ":எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளில் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக்கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது. நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மும்முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால், அவர் என்னிடம், ":என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும் என்கிறார் தூய பவுலடியார். ஆம் தூய பவுலடியார் வலுவற்றவர். ஆனாலும் அவருடைய அந்த வலுவற்ற நிலையில் இறைவன் தன்னுடைய வல்லமையைப் பொழிந்து, தான் எல்லாம் வல்லவரென நிரூபித்துக் காட்டுகிறார்.

அடுத்ததாக தூய பேதுருவும், பவுலும் தங்களுடைய கொள்கையில் அதாவது ஆண்டவர் இயேசுவை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். பேதுருவையும், அவரோடு இருந்தவர்களையும் தலைமைச் சங்கத்தார் நைய்யப்புடைத்து, ஆண்டவர் இயேசுவை இனிமேல் அறிவிக்கக்கூடாது என்று சொன்னபோதும் அவர் கிறிஸ்தவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கத் தவறவில்லை. அதேபோன்று பவுலும் மக்களிடமிருந்து, ஆட்சியாளர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புக்களைச் சம்பாதித்தபோதும் கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் தர முன்வருகின்றார். இவ்வாறு அவர்கள் தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் நாம் நமது கொள்கையில் மிக உறுதியாக இருகின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பிலடெல்பியா என்ற நகரத்தில் ஜெரார்டு என்ற கோடிஸ்வரர் வாழ்ந்துவந்தார். அவருக்குக் கீழ் ஏராளமான பணியாளர்கள் வேலை பார்த்து வந்தார்கள். ஒரு சனிக்கிழமை அன்று அவர் தன்னுடைய பணியாளர்களிடம், ":நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை, நம்முடைய நிறுவனத்திற்கு வெளியூரிலிருந்து சரக்கு வருகின்றது. ஆதலால் பணியாளர்கள் யாரும் விடுப்பு எடுக்காமல் தவறாது வரவேண்டும்": என்று உத்தரவிட்டார்.
அப்போது பணியாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து, ":நாளை ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள். கோவிலுக்குச் செல்லவேண்டும். அதனால் என்னால் வேலைக்கு வரமுடியாது": என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜெரார்டுக்கு கோபம் தாங்கமுடியவில்லை. உடனே அவர் அந்தப் பணியாளரிடம், ":உன்னை நான் இப்போதே வேலையிலிருந்து தூக்குகின்றேன். அதனால் காசாளரிடம் சென்று, உனக்கான தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே போய்விடு": என்று சத்தம் போட்டார். அந்தப் பணியாளர் எதைக்குறித்தும் கவலைப்படாமல் தனக்குரிய பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே கிளம்பினார்.
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு ஒரு வங்கி மேலாளர் ஜெரார்டை அணுகி, ":என்னுடைய வங்கியில் பணிபுரிய ஒரு நேர்மையான மனிதர் வேண்டும். உமக்குத் தெரிந்து அப்படி யாராவது நேர்மையான மனிதர் இருக்கிறாரா?": என்று கேட்டார். அதற்கு ஜெரார்டு, தன்னுடைய நிறுவனத்திலிருந்து நீக்கியவரைப் பரிந்துரைத்தார். ஏனென்றால் அவர் நிர்வாகம் சொன்னதைக் கேட்காவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமையில் வேலைக்குப் போகக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவருக்கு அந்த வேலையைப் பரிந்துரைத்தார். நாம் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் தொடக்கத்தில் பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் இறுதியில் நாம் நல்ல ஒரு வாழ்வைப் பெறுவோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

பேதுருவும், பவுலும் தங்களது பணியில் கொள்கைப்பிடிப்போடு இருந்தார்கள். அதனால் இறுதியில் கடவுளின் ஆசியைப் பெற்றார்கள். நிறைவாக பேதுரும், பவுலும் நற்செய்தி அறிவிப்புப் பணியில் சிறந்த முன்மாதிரியாய் விளங்கினார்கள் என்று சொன்னால் அது மிகையாது. பேதுரு உரோமையில் நற்செய்தியை அறிவித்தார். பவுலோ கொரிந்து, கலாத்தியா, பிலிப்பி போன்ற பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து, வாழும் நற்செய்தியாகவே விளங்கினார். அதனால்தான் அவரால் வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்": என்று சொல்ல முடிந்தது. (கலா 2:20). திருமுழுக்குப் பெற்று, நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிரும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஜப்பானில் ஒரு பள்ளியில் கல்வி புகட்டுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பாடவேளையில் கிறிஸ்துவைப் பற்றி எதுவும் போதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பாடவேளையில் பாடத்தைத் தவிர வேறு எதையும் கற்றுத்தரவில்லை. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவருடைய வாழ்க்கைப் பார்த்துவிட்டு, நிறைய மாணவர்கள் உத்வேகமும், ஞானமும் பெற்றார்கள். ஒருநாள் இரவில் அவருடைய வாழ்வால் தொடப்பட்ட அவரிடம் படித்த நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று, நாங்கள் கிறிஸ்தவர்களாக மாறப்போகிறோம்": என்று சொல்லி, திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அந்த ஆசிரியர் அவர்களில் 20 மாணவர்களை கோயோடோ கிறிஸ்தவ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பி வைத்து, அவர்கள் குருவாக மாற துணைபுரிந்தார்.

இந்த நிகழ்வில் ஆசிரியரின் வாழ்வே மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்பாக இருந்தது. நாம் நற்செய்தி அறிவிக்க கடல்கடந்து செல்லத் தேவையில்லை. நாம் இருக்கும் இடத்தில் நம்முடைய வாழ்வால் நற்செய்தி அறிவிக்கலாம். நற்செய்தியின் தூதுவர்களாக மாறலாம்.

ஆகவே, தூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம், கொண்ட கொள்கையில் உறுதியாய் இருப்போம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் வெற்றி வாகையை பரிசாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்

மறையுரைச் சிந்தனை 2
மூன்று ஆண்டுகள் நெருங்கிப் பழகிய ஒரு நண்பரை, தனக்குத் தெரியாது என்று சொல்லி, தன் உயிரைக் காத்துக்கொண்ட ஒரு மீனவர், அதே நண்பருக்காக தன் உயிரைக் கொடுத்தார். சீமோன் என்ற இயற்பெயர்கொண்ட அந்த மீனவர், தன் நண்பரும், தலைவருமான இயேசுவைப் போல தனக்கும் சிலுவை மரணம் விதிக்கப்பட்டது என்பதை அறிந்ததும், தன்னைச் சிலுவையில் தலைகீழாக அறையுமாறு கேட்டுக்கொண்டார். அதே நிலையில் உயிர் துறந்தார் புனித பேதுரு.
பிறந்த குழந்தை ஒன்றைக் கொல்லும் வெறியுடன் அலைந்த ஒரு சட்ட அறிஞர், அதே குழந்தைக்காகத் தன் உயிரைக் கொடுத்தார். புதிதாகப் பிறந்திருந்த கிறிஸ்துவ மறையை வேரோடு அழிக்கும் வெறியுடன் அலைந்த சவுல் என்ற அந்த இளைஞன், பவுலாக மாறி, அதே கிறிஸ்தவ மறைக்காக தலை வெட்டுண்டு உயிர் துறந்தார். இவ்விருவரையும் இணைத்து, ஜூன் 29, இஞ்ஞாயிறு, கத்தோலிக்கத் திருஅவை, பேதுரு, பவுல் ஆகிய இரு புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகிறது.

வத்திக்கானின் மையமாக அமைந்துள்ள புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் நுழையும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை, புனித பேதுரு, பவுல் ஆகிய இருவரின் பிரம்மாண்டமான உருவச்சிலைகள். இவ்வளாகத்தின் முகப்புப் பக்கத்திலிருந்து பார்க்கும்போது, இவ்விரு புனிதர்களும், பின்னணியில் இருக்கும் பசிலிக்காவைத் தாங்கி நிற்கும் தூண்கள் போலக் காட்சியளிக்கின்றனர். இது வெறும் தோற்றம் அல்ல, இது வரலாற்று உண்மை. புனித பேதுருவும், பவுலும் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
ஆனால், துவக்கத்திலிருந்தே இவ்விருவரையும், குறிப்பாக, இயேசுவுடன் வாழாத பவுல் அடியாரை, பேதுருவுக்கு இணையான ஒரு தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. துவக்கக் காலத் திருஅவையில் யார் பெரியவர், யார் தலைவர் என்ற கேள்விகள் எழத்தான் செய்தன. கிறிஸ்துவை அறிவிப்பது ஒன்றே தங்கள் பணி என்பதை, திருத்தூதர்கள் உறுதியாக உணர்ந்தபோதும், அவர்களைப் பின்பற்றிய தொண்டர்களிடம் வேற்றுமை உணர்வுகள் வளரவே செய்தன. இத்தகைய வேற்றுமை உணர்வுகளால் எழுந்த பிரச்சனைகளை, திருத்தூதர் பணிகள் நூலும், பவுல் அடியாரின் திருமுகங்களும் பதிவு செய்துள்ளன.

குழந்தைப் பருவத்தில் தவழ்ந்து, தட்டுத் தடுமாறி வளர்ந்த கிறிஸ்தவ மறைக்கு வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக்கள், வன்முறைகள் ஒருபுறம். கிறிஸ்தவக் குடும்பத்திற்குள்ளேயே எழுந்த வேற்றுமை உணர்வுகள் மறுபுறம். இத்தகையச் சூழலில் யூதர்களையும், வேற்று இனத்தாரையும் ஒருங்கிணைத்து, திருஅவை என்ற குழந்தையை வளர்த்த பெருமை, புனிதர்களான பேதுரு, பவுல் ஆகிய இருவரையும் சேரும்.

கல்வியறிவு அதிகமின்றி, மீனவராக வளர்ந்த பேதுருவுக்கும், யூதமறையின் சட்டங்கள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த பவுலுக்கும் இடையே இருந்த வேறுபாடுகள் அதிகம். இருப்பினும், இந்த வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல், இவ்விருவரும் இயேசுவைப் பறைசாற்றியதால், கடந்த 20 நூற்றாண்டுகளையும் தாண்டி, இவ்விரு புனிதர்களும், அவர்கள் பறைசாற்றிய இயேசுவும் உலகிற்கு பொருளுள்ளவர்களாக விளங்குகின்றனர்.

இன்றைய உலகிலும் கிறிஸ்தவ மறைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. வெளியிலிருந்து வரும் எதிர்ப்புக்களையும், வன்முறைகளையும் சமாளிப்பதற்கு, திருஅவைக்குள்ளும் கிறிஸ்தவ மறைக்குள்ளும் ஒற்றுமை உறுதி பெற வேண்டும். புனிதர்களான பேதுரு, பவுல் பெருவிழாவன்று, இந்த ஒற்றுமைக்காக நம் மன்றாட்டுக்களை இறைவனிடம் இப்புனிதர்கள் வழியே சமர்ப்பிப்போம்.

புகழ்பெற்ற இவ்விருவரின் பெருவிழாவுக்கென வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, இயேசுவையும், அவரது சீடர்களையும் பற்றி இன்னும் சில தெளிவுகளையும், பாடங்களையும் தருகின்றது. மனிதர்கள் அனைவருக்கும் இருக்கும், அல்லது, இருக்கவேண்டிய உள்ளார்ந்த தேடலை மையப்படுத்தி இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.
ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள் நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில் பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்திருக்கும். அவற்றில் மிக முக்கியமாக நம் மனதில் எழுந்த ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி. இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. இன்றைய நற்செய்தியின் இரு வாக்கியங்கள், இயேசுவின் இரு கேள்விகள் நமக்குப் பாடங்கள் சொல்லித் தரும் என்ற நம்பிக்கையுடன் நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?"
"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன இயேசுவின் இரு கேள்விகள்.

நான் ஆசிரியராகப் பணியாற்றியபோது, அரசு அதிகாரிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அவ்வப்போது சொன்ன ஒரு சில தகவல்கள் இப்போது என் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று காலை செய்தித் தாள்களில் வந்த தகவல்களையும், முந்திய நாள் இரவு தொலைக்காட்சி வழியே வந்த தகவல்களையும், சேகரித்து, வகைப்படுத்தி, பட்டியலிட்டு, பிரதம மந்திரி அல்லது முதல் அமைச்சர் இவர்களிடம் கொடுப்பதற்கென ஓர் அரசு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இத்தகவல்களைப் பட்டியலிடுவதன் முக்கிய நோக்கம்... நாட்டு நடப்பு பற்றி தெரிந்து கொள்வது ஒரு முக்கிய நோக்கம் என்றாலும், நாட்டில் தங்களைப்பற்றி, தங்கள் ஆட்சிபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதே, இந்த முயற்சியின் முக்கிய நோக்கம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் இத்தலைவர்களின் நினைவை, மனதை ஆக்ரமிக்கும் அந்தக் கேள்வி: "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" தங்களைப் பற்றியும், மக்களைப் பற்றியும் சரியானப் புரிதல் இல்லாத இத்தலைவர்கள் மனதில் தோன்றும் சந்தேகமும், பயமும் இக்கேள்வியை அவர்களிடம் எழுப்புகின்றன. மக்களை முன் நிறுத்தி, மக்களை மையப்படுத்தி, அவர்கள் நலனையே நாள் முழுவதும் சிந்தித்து, அதன்படி செயல்படும் தலைவனுக்கோ, தலைவிக்கோ இந்தக் கேள்வி பயத்தை உண்டாக்கத் தேவையில்லை...

"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" இயேசு இக்கேள்வியை அவர் காலத்து மக்களுக்கு மட்டுமல்ல. இன்றும் கேட்கிறார். மக்கள் இயேசுவைப்பற்றி என்ன சொல்கிறார்கள்? என்னென்னவோ சொல்லிவிட்டார்கள். இன்னும் சொல்லி வருகிறார்கள்... நல்லதும், பொல்லாததும்... உண்மையும், பொய்யும்... விசுவாசச் சத்தியங்களும், கற்பனைக் கதைகளும்... அளவுக்கதிகமாகவே சொல்லிவிட்டார்கள். ஆனால், இவ்வளவு சொல்லியும் இயேசுவைப்பற்றி முழுமையாக நம் மனித குலம் சொல்லிவிட்டதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு இவர்தான், இப்படிப்பட்டவர்தான் என்று சொல்வது மிகக் கடினம். இலக்கணங்களை, வரையறைகளை, வேலிகளை உடைப்பது இயேசுவின் இலக்கணம். இயேசுவின் அழகு.

"நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" உங்களையும் என்னையும் பார்த்து இயேசு கேட்கிறார், இந்தக் கேள்வியை. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், ஆசிரியர்களிடம் நான் பயின்றவைகளை, மனப்பாடம் செய்தவைகளை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம்.

ஆனால், இந்த இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது.

நான் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இக்கேள்விக்குப் பதிலாக வேண்டும். நான் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இக்கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இக்கேள்வி நம்மில் பலருக்கு சங்கடங்களை உருவாக்கலாம். "என்ன இது... திடீர்னு இயேசு முகத்துல அறைஞ்சா மாதிரி இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டார்... எனக்கு அப்படியே, வெலவெலத்துப் போச்சு... என்ன சொல்றதுன்னே தெரியல..." இப்படி நீங்களும் நானும் உணர்ந்தால், அது ஒரு நல்ல ஆரம்பம். இயேசுவின் இந்தக் கேள்வி வெறும் கேள்வி அல்ல. ஓர் அழைப்பு. ":என்னைப்பற்றிப் புரிந்து கொள் என்னைப் பற்றிக்கொள். என்னைப் பின்பற்றி வா": என்று பலவழிகளில் இயேசு விடுக்கும் அழைப்பு.

கடவுளைப் பற்றி வெறும் புத்தக அறிவு போதாது. அப்படி நாம் தெரிந்துகொள்ளும் கடவுளைக் கோவிலில் வைத்துப் பூட்டிவிடுவோம். விவிலியத்தில் வைத்து மூடிவிடுவோம். அனால், இறைவனை, இயேசுவை அனுபவத்தில் சந்தித்தால், வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பல சவால்களைச் சந்திக்க வேண்டும். நம் மனதைக் கவர்ந்த ஒருவரை, கருத்தளவில் புரிந்துகொள்வதோ, அவரைப் புகழ்வதோ எளிது. அவரைப் போல வாழ்வதோ, நம்பிக்கையோடு அவரைத் தொடர்வதோ எளிதல்ல.

எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். இவர்களில் ஒரு சிலர் கயிற்றின் மேல் படுத்தல், சாப்பிடுதல், சைக்கிள் சவாரி செய்தல்... என்று பல வியக்கத்தக்க சாகசங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம்.

உலகப் புகழ் பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர் இரு அடுக்கு மாடிகளுக்கிடையே கயிறு கட்டி சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அவரது சாகசங்களில் ஒன்றாக, மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக் கொண்டு அந்தக் கயிற்றில் நடந்தார். அதை அவர் அற்புதமாக செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்." என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு ஈடுபாடு, நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார். "என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப்பற்றி நான் கேள்வி பட்ட போது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது நானே அவற்றை நேரில் கண்டுவிட்டேன். இனி உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை." என்று பரவசப்பட்டுச் சொன்னார்.

"மற்றவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி செய்யமுடியுமா?" என்று கேட்டார் அந்தக் கழைக்கூத்துக் கலைஞர்.
"உம்.. சொல்லுங்கள்." என்று அவர் ஆர்வமாய் சொன்னார் இரசிகர்.
"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப் போகிறேன். இந்த முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.

அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர் அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்ய விழைந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் திறமையில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு மறைந்து விட்டார்.

இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள, அவரைக் கண்டு பிரமித்துப் போக, அவரை இரசிக்க கேள்வி அறிவு, புத்தக அறிவு போதும். அந்த பிரமிப்பில் நாம் இருக்கும்போது, இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நம் பதில்கள் ஆர்வமாய் ஒலிக்கும். ஆனால், அந்த பிரமிப்பு, இரசிப்பு இவற்றோடு மட்டும் நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13:1)

எனவே, இயேசு நம்மை அடுத்த நிலைக்கு வருவதற்கு கொடுக்கும் அழைப்பு தான் "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப்போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கொடுக்கப்படும் இந்த அழைப்பிற்கு, மனதின் ஆழத்திலிருந்து வரட்டும் நம் பதில்கள்.

இயேசுவின் இந்த அழைப்பைப் புரிந்தும் புரியாமலும், சீமோன்: ":நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்": என்று பதிலளித்தார். சீமோனின் பதில் எந்த ஒரு மனித முயற்சியாலும் சொல்லப்பட்ட பதில் அல்ல என்பதை உணர்ந்த இயேசு, அவருக்கு, பேதுரு என்ற பெயரை அளித்து, ஒரு பொறுப்பையும் ஒப்படைக்கிறார். ஒரு பாறையாக நின்று திருஅவையைத் தாங்கவேண்டிய பேதுரு, தன் மனித இயல்பால் தொடர்ந்து தவறுகள் இழைத்தார். இருப்பினும், தன் உயிரைத் தரும் அளவுக்கு இயேசுவின் சாட்சியாக வாழ்ந்தார்.

இயேசுவுடன் தட்டுத் தடுமாறி நடைபயின்ற பேதுரு, மற்றும் இயேசுவின் வழியை அறவே அழித்துவிட புறப்பட்ட பவுல் இருவரும், இயேசுவைத் தங்கள் சொந்த அனுபவத்தில் சந்தித்தபின், இறுதி மூச்சு வரை உறுதியாய் இருந்ததுபோல், நாமும், சொந்த அனுபவத்தில் இயேசுவை உணர்ந்து, அவருக்காக எதையும் இழக்கும் துணிவு பெறவேண்டும் என்று, புனித பேதுரு, பவுல் ஆகியோரின் பரிந்துரையோடு மன்றாடுவோம்.


 

மறையுரைச் சிந்தனை 3
பேதுருவைக் குறித்து சொல்லப்படுகின்ற ஒரு தொன்மம். உரோமையை ஆண்ட நீரோ மன்னன் திருச்சபையின் தலைவரான பேதுருவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினான். இதையறிந்த கிறிஸ்தவர்கள் பேதுருவை எப்படியாவது உரோமை நகரைவிட்டு தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பேதுருவும் அரை மனதாக உரோமை நகரைவிட்டு தப்பித்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அவர் போகும்வழியில் இயேசு எதிரே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பேதுரு, ":ஆண்டவரே! நீர் எங்கே செல்கிறீர்?": என்று கேட்டார். அதற்கு இயேசு, ":நான் உரோமை நகரில் மீண்டுமாக கொல்லப்படப் போகிறேன்": என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், பேதுரு வெளியே தப்பித்துப் போகும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உரோமை நகருக்குச் சென்று, அங்கேயே மறைசாட்சியாக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. முதலில் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன என சிந்தித்து நிறைவுசெய்வோம்.

வாழ்க்கை வரலாறு

பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டவர் இயேசு இவரிடம் ":என் பின்னே வா நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்": (மத் 4: 18-21) என்று சொல்லி அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசுவின் சீடர்கள் குலாமில் சேர்ந்த பேதுரு, அவருடைய மூன்று முதன்மைச் சீடர்களில் ஒருவராக மாறுகின்றார். குறிப்பாக இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளை உயிர்ப்பித்தல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியத்தல் போன்ற நிகழ்வுகளில் இவர் இயேசுவோடு உடனிருக்கிறார்.

ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் ":நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?": என்று கேட்கும்போது பேதுரு மறுமொழியாக, ":ஆண்டவரே நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்": (மத் 16:16) என்று சொன்னதினால் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, எல்லா அதிகாரங்களையும் அவருக்குக் கொடுக்கின்றார். இயேசு தன்னுடைய உயிர்ப்புக்கு பிறகு, அவருக்குத் தோன்றியபோது, ":என் ஆடுகளை மேய்": என்று சொல்லி அதனை உறுதிசெய்கிறார் (யோவா 21: 15-18).

பேதுருவைப் பொறுத்தளவில் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளமாக இருக்கின்றார். அவசரப்பட்டு ஏதாவது பேசுவார். பின்னர் அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த பேதுருதான் பின்னாளில், ":ஆண்டவரே உம்மைப் பின்பற்றிவந்த எங்களுக்கு என்ன கியிக்கும்?": என்று கேட்பார். ":எல்லாரும் உம்மைவிட்டுப் போனாலும் நான் உம்மைவிட்டுப் போகமாட்டேன்": என்று சொன்னவர், பிறகு இயேசுவை மூன்றுமுறை காட்டிக்கொடுப்பார். எனக்கு எதிராகத் தீங்கு செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறையா?": என்று கேட்டவர் படைவீரனாகிய மால்கு இயேசுவைக் கைதுசெய்ய வரும்போது, அவருடைய காதைத் துண்டிப்பார். இப்படியாக அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார். இருந்தாலும் அவர் இயேசுவின்மீது அளவு கடந்த அன்புகொண்டிருந்தார், அவருக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து புரிந்த பணிகள் ஏராளம். மத்தியாசை திருத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு பேதுருதான் முன்னின்று செயலாற்றினார். பெந்தகோஸ்தே நாளில் பேதுருதான் சீடர்களின் சார்பாக இருந்து பேசுகின்றார். அதேபோன்று புறவினத்தாரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை அறிந்து, அவர்களையும் இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கு பேதுருதான் காரண கர்த்தாவாக இருக்கின்றார் (திப 10: 34- 43). பேதுருதான் திருத்தூதர்களில் முதன்முறையாக இயேசுவின் பெயரால் புதுமையை ஆற்றியவர் (திப 3: 1-9). இவ்வாறாக பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, சீடர்களை ஒருங்கிணைத்தும் இறைமக்கள் கூட்டத்தை வழிநடத்தியும் சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.

பேதுரு தொடக்கத்தில் அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணி செய்தார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, அங்கே நற்செய்திப் பணியை ஆற்றி வந்தார். அப்போதுதான் நீரோ மன்னன் பேதுருவைப் பிடித்து சிறையில் அடைத்து, அவரைச் சித்ரவதை செய்தான். இறுதியாக அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறாக பேதுரு, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால் அவருக்காகத் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.64.

தூய பவுல்
சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின் குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று, யூத சமயத்தில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார். அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார். அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையை வாங்கிக்கொண்டு தமஸ்கு நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவரை நிலைகுலையச் செய்தது. அதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். ":சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்": என்று வானத்திலிருந்து குரல் ஒலித்தது. அதற்கு அவர், ":ஆண்டவரே! நீர் யார்?": எனக் கேட்க, ":நீ துன்புறுத்தும் இயேசு நானே": என அந்தக் குரல் பதிலளித்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சவுல் பவுலாகின்றார். அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆனார்.

எந்த மதத்தைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த மதத்திற்காக பவுல் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். நற்செய்தி அறிவிப்பிற்காக பவுல் மேற்கொண்ட மூன்று திருத்தூது பயணங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிடவும் அவர் நமக்கு வழங்கிவிட்டுச் சென்ற பதிமூன்று திருமுகங்கள் மிகவும் முக்கியமானவை. இத்திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது பவுல் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பும் பற்றும் கொண்டிருந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். ":வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்": என்று சொல்லி அவர் மறு கிறிஸ்துவாக மாறிவிடுகின்றார் (கலா 2:20).

":பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன். பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்": (2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர் கிறிஸ்துவுக்காக பட்ட பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படியாக ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து, அதற்காக துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்த புறவினத்தாரின் திருத்தூதராக பவுல் 67 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
 
தூய பேதுரு மற்றும் பவுலின் வாழக்கை வரலாற்றைக் குறித்து வாசித்த நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் தருதல்

பேதுருவும் பவுலும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவில் ஒன்றிணைந்து வந்தார்கள்; அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் தர, ஏன் தங்களுடைய உயிரையும் தர முன்வந்தார்கள். இந்த இருவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவர்களைப் போன்று இயேசுவுக்காக நம்மையே முழுவதுமாய் தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.

ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், அவ்வாறு கடலில் மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்தார்கள். அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக் கீழே ": I have nothing more to give you": ( என்னுடைய இதயத்தைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது. பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வரவேண்டும்.

நற்செய்தியில் இயேசுகூறுவார், ":என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார் (மத் 16:25). பேதுருவும் பவுல் இயேசுவுக்காக தம்மை இழந்தார்கள், வாழ்வடைந்தார்கள். நாமும் அவ்வாறு செய்வோம். வாழ்வடைவோம்.

வலுவின்மையில் சிறந்தோங்கும் வலிமை

பேதுருவும் பவுல் குறைபாடு உள்ளவர்கள்தான். பேதுரு படிக்காதவர், ஆண்டவரை இயேசுவை மும்முறை மறுதலித்தவர். இருந்தாலும் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். பவுல் திருச்சபையை துன்புறுத்தியவர், உடல் குறைபாடோடு இருந்தவர் (":உடலில் தைத்த முள்": (2 கொரி 12: 7-9) என பவுல் சொல்வதை விவிலிய அறிஞர்கள், அவர் பார்வைக் குறைபாடோடு, திக்கு வாயராக இருந்ததை குறித்துக்காட்ட சொல்வதாக விளக்கம் தருவார்கள்) அப்படியிருந்தாலும் கடவுள் அவரை புறவினத்தாருக்கு திருத்தூதராக ஏற்படுத்துகிறார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையும் அன்பும்தான்.

நாம் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இருந்தாலும் இறைவன் தன்னுடைய வலிமையை நம்முடைய வலுவின்மையில் சிறந்தோங்கச் செய்வார். அதனை இவர்கள் இருவருடைய வாழ்விலிருந்தும் நாம் கண்டுகொள்கிறோம்.
ஆகவே, தூய பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களை இறைவன் நமக்குத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம், அவர்களைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.
 
நம்மையே பலியாகப் படைப்போம்!
அ) ஆண்டவரில் ஒன்றிணைவோம்
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்திருக்கலாம்; ஆனாலும் கிறிஸ்துவில் நாம் ஒன்றிணைந்து வாழவேண்டும். அது மிகவும் முக்கியம்.
இன்று நாம் விழா கொண்டாடும் பேதுருவும் பவுலும் இரு வேறு துருவங்களாக இருந்தார்கள். பேதுரு படிப்பறிவற்றவர்; பவுல் மெத்தப் படித்தவர். பேதுரு (முதலில்) யூதர்களுக்கு மட்டும்தான் மீட்பு உண்டு என்று நினைத்தவர்; பவுல் பிறவினத்தார் நடுவில் நற்செய்திப் பணியாற்றியவர். இப்படி இருவருக்குள்ளும் பல வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவில் ஒன்றிணைந்து திரு அவையைக் கட்டி எழுப்பினார்கள். நமக்குள்ளும் பல்வேறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் கிறிஸ்துவில் நாம் ஒன்றிணைந்து வாழவேண்டும். கடவுள் அதையே நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றார்.

ஆ) ஆண்டவருக்காக் உயிரையும் தருவோம்
பேதுரு இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று அவரை மும்முறை மறுதலித்தவர். பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதன் வாயிலாகக் கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர். இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டுமாக ஒரு வாய்ப்புத் தரப்பட்டபோது, அவர்கள் கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையே தருகின்றார்கள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல், ":இப்போதே என்னைப் பலியாகப் படைக்கின்றேன்": என்கிறார். பவுல் தான் சொன்னது போன்று தன்னைப் பலியாகப் படைக்கின்றார்; பேதுருவும் அவ்வாறே தன்னை இயேசுவுக்காகப் பலியாகப் படைக்கின்றார். இவர்களைப் போன்று நாமும் இயேசுவுக்காக நம்மையே பலியாகப் படைக்க வேண்டும். ஏனெனில், கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்

இ) ஆண்டவரின் பராமரிப்பு
கடவுளுக்கு நம்மையே பலியாகப் படைக்கும்போது அவரது பாதுகாப்பும் பராமரிப்பும் நமக்கு எப்போதும் உண்டு என்பதை இன்றைய இறைவார்த்தை நமக்குச் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
முதல் வாசகத்தில் பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதையும், இரண்டாம் வாசகத்தில் பவுல் சிங்கத்தின் வாயிலிருந்து விடுவிக்கப் பட்டதையும் பற்றி வாசிக்கின்றோம். நாம் கடவுளின் பணியைச் செய்யும்போது, அவரது பராமரிப்பு எப்போதும் இருக்கும் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.
ஆகையால், நாம் எத்தகைய இடர்வரினும் பேதுருவைப் போன்று, பவுலைப் போன்று இயேசுவே ஆண்டவர் என அறிக்கையிட்டு, அவரது ஆசியைப் பெறுவோம்.

இயேசுவுக்காக உயிரையே தந்த சிறுமி
ஒரு மறைப்பணித் தளத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கிறிஸ்தவர்கள் அங்கிருந்த கோயிலுக்கு ஆர்வமாய்ச் செல்வதைச் சிறுமி ஒருத்தி ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்று ஆர்வமாய் இருந்தது; ஆனால், அவள் மற்றவர்களைப் போன்று தானும் கோயிலுக்குச் சென்றால் மதவெறியர்கள் தன்னைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினாள்.

ஒருநாள் அவளைச் சந்தித்த அங்கிருந்த அருள்பணியாளர், ":நீ ஏன் கோயிலுக்கு வரக்கூடாது?": என்று கேட்க, அவள் தனக்கிருந்த அச்சத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது அருள்பணியாளர் அவளிடம், ":அதையெல்லாம் நினைத்து நீ அஞ்சவேண்டாம். கோயிலுக்கு வா": என்று கேட்டுக் கொண்டார். இதன்பிறகு அவள் கோயிலுக்குச் சென்றாள். அங்கு நடந்த வழிபாடும், அறிவிக்கப்பட்ட கடவுளின் வார்த்தையும் அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே, அவள் திருமுழுக்குப் பெற்றுக் கிறிஸ்தவள் ஆனாள்.

இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருக்கையில், ஒருநாள் அவள் கோயிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருகையில், மதவெறியர்கள் அவளைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செய்தியறிந்து அருள்பணியாளரும் இறைமக்களும் விரைந்து சென்றனர். மருத்துவமனையில் அவள் குற்றுயிராய்க் கிடந்தாள். அவளைப் பார்த்தவர்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

அப்போது அவள் அருள்பணியாளரிடம், ":நான் திருமுழுக்குப் பெற்றபோது அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை அணியவேண்டும் என்று ஆசையாக இருக்கின்றது": என்றாள். அதற்கு அருள்பணியாளர், ":நீ இருக்கும் நிலையில் அந்த ஆடையை அணிய முடியாதே!": என்று சொன்னபோது, ":பரவாயில்லை தந்தையே! இயேசுவுக்காக நான் என் உயிரைத் தரப் போவது அவருக்குத் தெரியுமே!": என்று சொல்லித் தம் உயிரைத் துறந்தாள்.
கடவுள் நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் இவ்வாழ்வை இச்சிறுமியை போன்று, இன்று நாம் விழா கொண்டாடும் பேதுவைப் போன்று, பவுலைப் போன்று தர முன்வருவோம்.

ஆண்டவரின் வார்த்தை
":கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள்": (உரோ 12:1)

தீர்மானங்கள்
1) கடவுளை நாம் வாய்மொழியால் மட்டுமல்ல, வாழ்வாலும் மாட்சிப் படுத்துவோம்.
2) கடவுளின் துணை நமக்கு எப்போதும் உண்டு என அவரது பணியைத் துணிவுடன் செய்வோம்.
3) திருஅவையை கட்டி எழுப்பும் பணிகளில் நம்மையே நாம் கையளிப்போம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்

 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
பேதுரு-பவுல் பெருவிழா - இரட்டையர் விழா

உரோமையில் உள்ள புனித பேதுரு பேராலய முற்றத்தில் வளைந்து இறங்கிவரும் படிக்கட்டுக்களின் முடிவில் நிற்கின்றன கம்பீரமாக இருபெரும் திருச்சிலைகள்! ஒன்று பேதுருவின் திருவுருவம். மற்றது பவுலின் திருவுருவம். இரண்டுமே பதினாறு அடி உயர அடிமேடை மேல் பதினெட்டு அடி உயரத்தில் உலகத் திருஅவையையே காவல் காக்கும் போர் வீரர்களைப் போல நிற்கின்றன.

மத். 16:19 குறிப்பிடும் இயேசு தந்த 'விண்ணரசின் திறவுகோலை' ஏந்தியவராகப் பேதுரு - அந்த மைதானத்தில் கூடித்திரளும் மக்களை அன்போடு அக்கறையோடும் உற்றுப் பார்ப்பது போல் தோன்றுகிறார்.

எபேசி 6:17 உணர்த்துவதுபோல 'கடவுளின் வார்த்தை' அடங்கிய ஏட்டுச்சுருளை ஒரு கையிலும் "தூய ஆவி அருளும் போர்வாளாக" அதனை இன்னொரு கையிலும் தாங்கியபடி பவுல் உயிர்த்த ஆண்டவரின் மகிமையையும் தூய ஆவியாரின் வல்லமையையும் பறைசாற்றும் திருத்தூதராகத் திகழ்கிறார்.

பேதுரு பாறை (மத். 16:18) பவுல் தேர்ந்து கொள்ளப்பட்ட கருவி (தி.ப. 9:11). திருஅவையின் இந்த இரட்டைத் தூண்களுக்கு இன்று பெருவிழா. பேதுருவும் பவுலும் இரு துருவங்கள் போலத் தென்பட்டாலும் அவர்கள் அறிக்கையிட்ட நம்பிக்கையில் சங்கமிக்கின்றனர். மறுநாள் காலையில் வர இருக்கும் தண்டனைத் தீர்ப்பை எதிர்பார்த்துச் சிறையில் தவித்த வேளையில், ":அப்போது ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார்... ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் சுகையிலிருந்து என்னை விடுவித்து யூத மக்கள் எதிர்பார்த்த எதுவும் நிகழாதவாறு என்னைக் காத்தார்": (தி.ப. 12:7, 11) என்கிறார் பேதுரு. "நான் முதன்முறை வழக்காடியபோது எவருமே என் பக்கம் இருக்கவில்லை. எல்லாரும் என்னை விட்டு அகன்றனர்... நான் அறிவித்த செய்தி நிறைவுற்று அனைத்து நாட்டினரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார். சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார்": (உதிமோ. 4:16,17) என்கிறார் பவுல்.

பழமைப்பற்றோ, புதுமை மோகமோ நம்மை மீட்க முடியாது. இறைமகன் இயேசு மீது கொண்ட நம்பிக்கை ஒன்றே நம்மை மீட்க வல்லது. இந்தப் பேருண்மைக்குப் பேதுருவும் பவுலும் உயிருள்ள சான்றுகள்! நமது நம்பிக்கை வாழ்வின் முன்னோடிகள்!

பழமையில் வேரூன்றி, புதுமையில் பூத்துக் காய்த்துக் கனி தருவது திருஅவை. திருமரபைக் கட்டிக் காக்க பேதுரு தேவை. அதை ஆவியின் இயக்கமாக மாற்ற பவுல் தேவை.

திருத்தூதர் பேதுரு மரபு (திருஆட்சி அமைப்பு, நிறுவன)த் திருஅவையின் அடையாளம்.

திருத்தூதர் பவுல் மறுமலர்ச்சி ஆவியின் அருங்கொடை இயக்கத் திருஅவையின் அடையாளம்.

முற்போக்காளர், பிற்போக்காளர் என்ற போர்வையில் இரண்டு மனைக்காரன்போல் இன்று திருஅவை மொட்டையடிக்கப்படுகிறது. பழமையை அதாவது மரபைக் கைவிடுவதும், புதுமையை அதாவது முற்போக்குச் சிந்தனைகளை, வழிமுறைகளை எதிர்ப்பதும் தற்கொலை முயற்சிக்கு ஒப்பாகும். ":விண்ணரசு பற்றிக் கற்றுக் கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்": (மத். 13:52). இது ஆண்டவரின் வழிகாட்டும் நெறிமுறை. மரபுத் திருஅவையும் மறுமலர்ச்சித் திருஅவையும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; நிறைவு செய்பவை.

திருஅவை என்ற செடிக்குத் தங்கள் குருதியை நீராக ஊற்றி வளர்த்தவர்கள் பேதுருவும் பவுலும். இந்த இரண்டு பேரின் வாழ்வையும் சிறிது அலசிப் பார்த்தால் ஒருசில உண்மைகள் வெளியாகும்:

இறைவன் தன் பணிக்கென யாரையும் அழைக்கலாம்.
மீட்புக்குத் தொடக்கமும் முடிவும் இறைவனே. மனிதர்கள் கடவுளின் கைகளில் கருவிகளே!

பாவியான மனிதனும் திருந்தும் போது, மனம் மாறும்போது அவன் இருப்பதுபோல பயன்படுத்துகிறார். அவனை ஏற்றுக் கொள்கிறார்.

நல்ல தலைவர்கள் எல்லாருக்கும் இரு முக்கியப்பொதுமைப் பண்புகள் - நாணயத்துக்கு இரு பக்கங்கள் போல இருக்கின்றன.

1. ஆட்கொள்ளப்பட்ட அனுபவம். ஒரு மீனவனைத் தன் மீட்புப் பணிக்குத் தேர்ந்து கொள்கிறார் இயேசு. "என் பின்னே வாருங்கள். மனிதரைப் பிடிப்பவராக்குவேன்": (மார்க் 1:77) என்கிறார். மக்கள் தன்னை உணர்ந்துள்ளார்களா என்று அறிய இயேசு கேள்வி எழுப்ப ":நீர் மெசியா. வாழும் கடவுளின் மகன்": (மத். 16:16) என்று உரைத்தது ஆட்கொள்ளப்பட்டபேதுருவின் அறிக்கை. மறுதலித்தபோது கூட இயேசு அவருக்காகச் செபிப்பார் (லூக். 22:33). அதற்குப் பரிகாரமாக மூன்று முறை இயேசுவின் மீது தனக்கு இருக்கும் அன்பை அறிக்கையிட்டு (யோ. 21:15-17) ஆட்கொள்ளப்படுதலைப் புதுப்பித்துக் கொள்வார்.

"தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கி வைத்துத் தமது அருளால் என்னை அழைத்தார் கடவுள்": (கலா. 1:15) என்பது பவுலின் ஆட்கொள்ளப்பட்ட அனுபவம். யூதக் கடவுளின் மீது கொண்டிருந்த வெறி கலந்த ஆர்வத்தால் கிறிஸ்தவர்களை கொலைவெறி கொண்டு துன்புறுத்தியவர் (தி.ப. 22:1-3) தமஸ்கு செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவால் ஆட்கொள்ளப்பட்டு சவுல் பவுலானார் (தி.ப. 9). அவரை ஆட்கொண்டது ஒரு கொள்கையோ இலட்சியமோ மட்டுமன்று. இன்றும் உயிருடன் வாழும் ஓர் ஆள் இறைமகன் இயேசு.

2. அனுப்பப்பட்ட அனுபவம். பேதுரு எருசலேம் திருச்சங்கத்தில் ஒரு தலைவனுக்குரிய பண்போடு நன்கு ஆலோசித்து இறுதியில் "புற இனத்தாரும் சரி, நாமும் சரி மீட்புப் பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளால்தான்": (தி.ப. 15:11) என்று சொன்னது அனுப்பப்பட்ட நிலையில். இறுதியாகத் தலைகீழாகச் சிலுவையில் அறையப்பட்டு கிறிஸ்துவுக்காகத் தன் உயிரையும் கையளித்தார்.

":கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்": (பிலிப் 3:12). ":நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன்.": (உதிமோ 4:7) என்ற பவுலின் வார்த்தைகளில் அனுப்பப்பட்ட அனுபவத்தை உணர்கிறோம். புற இனத்தாரின் நற்செய்தித் தூதுவராக மூன்று மறைபரப்புப் பயணங்களை மேற்கொண்டார். அப்பணியில் எத்தனையோ வேதனைகளை அனுபவித்த (2. கொரி. 11:23-27) அவர் இறுதியில் தலை துண்டிக்கப்ட்டு இரத்தம் சிந்தி இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார்.
மற்றொரு கோணத்தில் பேதுருவும் பவுலும்:-
1. பேதுரு நம்பிக்கை வாழ்வின் எடுத்துக்காட்டு.

":நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்": (மத். 16:16) "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்? நிலை வாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன": (யோ. 6:68).
"எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?": (யோ. 21:17).
2. பவுல் நற்செய்தி அறிவிப்புப் பணியின் எடுத்துக்காட்டு.

":நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு ஐயோ கேடு!":.
"எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு": (பிலிப் 4:13).
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? (உரோ. 8:35).
சுருங்கச் சொல்லின் பேதுருவும் பவுலும் இணையாத இரு துருவங்கள்: சிந்தனைப் போக்கில் குணநலன்களில் செயல்பாடுகளில்.
இணைந்த இரு வைரத்தூண்கள்: திருஅவை சரியாதபடி தூக்கிப்பிடிப்பதில், அதற்காக எதையும் செய்வதில் அறிக்கை இட்ட நம்பிக்கையில்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் (ஜூன் 29)

அன்னையாம் திருச்சபை இன்று அகமகிழ்கின்றது, அக்களிக்கின்றது. ஏனென்றால் திருச்சபையின் அடித்தளமாய், இரண்டு தூண்களாய் விளங்கும் தூய பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரின் விழாக்களைத் திருச்சபை இன்று கொண்டாடி மகிழ்கின்றது.

தூய பேதுரு கலிலேயாக் கடற்கரையில் அமைந்திருக்கும் பெத்சாயிதா என்ற ஊரைச் சார்ந்தவர். திருமணம் முடிந்து மீன்பிடிப்புத் தொழிலைச் செய்து கப்பர்நகூம் என்ற ஊரிலே அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இயேசு அவரை "என்னைப் பின்செல்... இன்று முதல் உன்னை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்" (லூக்கா 5:9) என்று கூறி அழைத்தார். அவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார். இயேசு தன்சீடர்களை நோக்கி "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்தேயு 16:15) என்று கேட்டபோது, சிறிதும் தயக்கம் இல்லாமல், "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" (மத்தேயு 16:17) என்ற உண்மையைத் தைரியமாய் அறிக்கையிட்டார். அப்போது இயேசு "யோனாவின் மகனானச் சீமோனே... உன் பெயர் பாறை. இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன்": (மத்தேயு 16:17) என்று கூறி திருச்சபையின் தலைவராக்கினார். மேலும் இயேசு உயிர்த்தபின் பேதுருவிடம் "என் ஆடுகளை மேய்" என்று 3 முறை கூறினார். பின்னர் பேதுரு அன்னை மரியாளுடன் இணைந்து சிதறிப்போனச் சீடர்களை மீண்டும் கூட்டிச் சேர்த்து யூதாசுக்குப் பதிலாக மத்தியாஸ் என்பவரைத் தேர்ந்தெடுத்தார் (தி.ப. 1:13- 26). பெந்தகோஸ்தே அன்று தூய ஆவி இறங்கி வர முதலில் பொது இடத்தில் நின்று வெளிப்படையாகத் துணிச்சலுடன் இயேசுவைக் குறித்து அறிக்கையிட்டார் (தி.ப. 2:14-47). அன்று முதல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், இயேசுவைப் பற்றி தொடர்ந்து,யூதர்கள் வாழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் சென்று போதித்தார். இறுதியாக உரோமை நகரிலே அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுத் தன்னுயிரைத் தான் பின்சென்ற தலைவர்களுக்காகக் தியாகம் செய்தார்.

பவுல் பென்யமீன் குலத்தைச் சார்ந்த யூதக்குடும்பத்திலே பிறந்து இன்றையத் துருக்கி நாட்டில் உள்ள சிலிசியா மாநிலத்தின் தர்சு என்ற நகரிலே வாழ்ந்து வந்தார். சவுல் என்று அழைக்கப்பட்ட இவர் உரோமைக் குடியுரிமையும் பெற்று இருந்தார். இவர் இளமையிலிருந்தே யூதச் சட்டங்களை நுணுக்கமாய்க் கற்றறிந்தார். யூதச் சட்டங்களை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கும் பரிசேயர் என்ற பிரிவின் உறுப்பினராய் இருந்த இவர், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக் கொன்று குவித்தார். சவுல் முதல் வேதசாட்சியான ஸ்தேவான் என்பவர் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என உறுதியாய் நின்றவர் (தி.ப 8:1). இவ்வாறு ஒருநாள், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தத் தமஸ்குவிற்குச் செல்லும் வழியில் இறைவன் இயேசு அவரை தடுத்து ஆட்கொண்டார். பின்னர் அனனியா என்பவரின் வாயிலாகப் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிப்பவராக, இயேசு தம்மை அழைக்கிறார் என்பதை அறிந்து கொண்டார். சவுல் பவுலாக மாறினார். அன்று முதல் இயேசுவின் நம்பிக்கைக்குரிய, ஆர்வமுள்ளச் சீடரானார். பல மைல் தூரம் பயணங்கள் செய்து நற்செய்தியை அறிவித்து எண்ணிலடங்கா மக்கள் கிறிஸ்துவைப் பின்பற்றச் செய்தார். அதன் பின்னர் பல மடல்களை எழுதிக் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்தார். கிறிஸ்தவம் யூதர்களுக்கு மட்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சூழலில், தூய பவுல் இது அனைவருக்கும் அளிக்கப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, யூதர் அல்லாதவர்க்கு அறிவித்து இன்று நாமெல்லாம் கிறிஸ்தவர்களாக வாழ வழிவகுத்தார்.

நாம் இந்த இரண்டு புனிதர்களையும் சற்று உற்று நோக்கினால், இவர்கள் இருவரும் இரு துருவங்கள், ஏணிவைத்தாலும் எட்டாது என்பதுபோன்று இருவருமே வித்தியாசமானவர்கள். பற்பலவிதமான வேறுபாடுகளைக் கொண்டவர்கள். புனித பேதுரு கல்வியறிவு இல்லாத மீன்பிடிப்புத் தொழில் செய்யும் எளிமையான மனிதர். ஆனால் பவுல் நன்கு கற்றறிந்தப் புலமை வாய்ந்த மனிதர். புனித பேதுரு சாதாரண யூதர்கள் பின்பற்ற வேண்டிய யூத மத நெறிகளைக் கடைப்பிடித்து தான் உண்டு தனது தொழில் உண்டு என்று வாழ்ந்து வந்தவர். ஆனால் புனித பவுல் தன் இளமைக் காலம் முதல் யூதச் சட்டங்களை நன்கு கற்றறிந்து அவற்றை நுணுக்கமாகக் கடைப்பிடித்து வாழ்வதில் ஆர்வமும், உறுதியும் கொண்டவர். புனித பேதுருவை இயேசு "என்னைப் பின்செல்" இன்று முதல் உன்னை மனிதரைப் பிடிப்பவராக்குவேன்" என்று கூறி அழைக்கிறார். புனித பவுல் கிறிஸ்தவர்களைக் கைது செய்ய சென்றுகொண்டிருந்தபோது ஒளியால் அவரைச் சூழ்ந்துகொண்டு "சவுலே! சவுலே! ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்" என்று அழைக்கிறார்.

புனித பேதுரு இயேசுவின் பொது வாழ்வின் 3 ஆண்டுகளும் அவரோடு இருந்தார். அப்போது அவர் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கலந்து கொண்டார். ஆனால் புனித பவுல் இயேசுவைப் பின்பற்றும் எவரையும் துன்புறுத்தி வந்தார்.

புனித பேதுரு இயேசுவை "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்": என்று அறிக்கையிடுகிறார். புனித பவுல் ":ஆண்டவரே நீர் யார்" என்று கேட்கிறார். புனித பேதுருவிடம் இயேசு ":உன் பெயர் பாறை. இந்தப் பாறையின்மீது என் திருச்சபையைக் கட்டுவேன்": என்றும், "என் ஆடுகளை மேய்" என்றும் கூறி பேதுருவின் பணி என்னவென்று நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பவுலை எதற்காக அழைத்தார் என்பதை அனனியா என்பவரின் மூலமாகத்தான் "அவர் பிற இனத்தவருக்கும், அரசருக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் இருக்கிறார்" (தி.ப. 9:15) என்று கூறுகிறார்.

புனித பேதுரு யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறார். பவுலோ யூதர் அல்லாதோருக்கும் நற்செய்தியை அறிவிக்கிறார். இவ்வாறு இந்த இரண்டு புனிதர்களும் பல்வேறு விதங்களில் வேறுபட்டு இருந்தார்கள். கல்வி, கலாச்சாரப் பின்னணி, வாழ்க்கை முறை, இயேசுவோடு கொண்ட தொடர்பு இவை அனைத்திலும் பல வேறுபாடுகள் இருந்தன. அப்படி இருக்க இவர்கள் இருவரையும் நாம் திருச்சபையின் தூண்கள் என்று அழைப்பது எப்படிச் சரியாகும்?

ஆம். இருவருக்கும் இடையே பல வேறுபாடுகள் இருந்தன உண்மைதான். ஆனால் அவர்களிடம் வேற்றுமைகள் கிடையாது. பல விதங்களில் அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருந்தாலும், அவர்கள் இருவரின் விசுவாசமும் ஒன்றுதான். அவர்கள் இருவரின் பணியும் கிறிஸ்துவின் சாட்சிகளாய் வாழ்வதுதான். அதாவது, இயேசு கிறிஸ்து நம்மை மீட்பதற்காகப் பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதனாகப் பிறந்த இறைவன், நாம் நிலைவாழ்வைப் பெறும் பொருட்டுத் தன்னையேத் தியாகம் செய்து சிலுவை மரணத்தைத் தழுவினார். 3-ஆம் நாள் அவர் முன்னுரைத்தபடியே உயிர்த்தெழுந்தார். இறுதிநாளில் அவர் மீண்டும் வருவார் என்ற உண்மையை எடுத்துரைப்பதுவே அவர்களின் பணி. அவர்கள் கொண்ட விசுவாசத்தைப் பல இடங்களுக்கும் பயணம் செய்து மக்கள் அனைவருக்கும் அறிவித்து அதைத் தங்கள் வாழ்வாக்குவதில் உறுதியாய் இருந்தார்கள். நிலையாக இருந்தார்கள்.

இவ்வாறு, கிறிஸ்துவிற்காகப் பணிபுரிந்து கிறிஸ்துவையே ஆதாயமாக்கிக் கொள்ள மற்ற எல்லாவற்றையும் குப்பையாகக் கருதி (பிலி. 3:8) பேதுரு தன் பாரம்பரியத் தொழிலையும், குடும்பத்தையும், பவுல் தன் இளமையிலிருந்துக் கற்றுத் தேர்ந்த யூதச் சட்டங்களையும், சம்பிரதாயங்களையும் தூக்கி எறிந்துவிட்டு "நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே'' (பிலி. 1:21) என்று கிறிஸ்துவைப் பல இடங்களுக்கும் சென்று அறிவிக்கிறார்கள்.

"அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள். தொழுகைக் கூடங்களுக்கும் கொண்டு செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள், என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்": (லூக்கா 21:12) என்று இயேசு முன்னறிவித்தது போன்று, அவர்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகின்றார்கள். இருந்தாலும், "கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக்கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?' (உரோ. 8:35). கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு அவர்மீது கொண்ட விசுவாசத்தினால் நிலையாய் இருந்து எதைப் பற்றியும் கவலைப் படாமல், இயேசுவுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்து, தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நின்றார்கள். இறுதியில் நீரோ என்ற மன்னர் உரோமைப் பேரரசை ஆட்சி செய்த காலத்தில் பேதுருவைச் சிலுவையில் அறைந்தார்கள். பேதுரு இயேசுவைப் போன்று சிலுவையில் அறையப்பட நான் தகுதியற்றவன் என்பதை உணர்ந்து தலைகீழாகத் தன்னைச் சிலுவையில் அறையும்படிக் கேட்டுக்கொள்கிறார். அவ்வாறே அறையப்பட்டு தனது உயிரைக் கிறிஸ்துவுக்காகத் தியாகம் செய்கிறார். புனித பவுல் உரோமைக் குடிமகன் என்பதால் அடிமைகள் மட்டுமே தண்டிக்கப்படும் சிலுவை மரணத்தைக் கொடுக்காமல் நகருக்கு வெளியில் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வாறு இந்த இரண்டு புனிதர்களும் பல்வேறு வேறுபாடுகளுக்கு மத்தியில் வேற்றுமைப் பாராட்டாது கிறிஸ்துவை மட்டுமே தங்கள் இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்கள். எனவேதான் இன்றும் அவர்கள் திருச்சபையின் தூண்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், நினைவு கூறப்படுகிறார்கள்.

இவ்விழாவினைக் கொண்டாடும் நம்மிடம் இந்தப் புனிதர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? பாகுபாடற்ற மனம், ஆழமான விசுவாசம், அதை வாழ்வாக்க உறுதியான உள்ளம். Variety is the Spice of Life என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். ஒரு பூந்தோட்டம் என்றால் அதில் பலவகையான பூக்கள் இருப்பதைத்தான் விரும்புகிறோம். விருந்து என்றால் பலவகையான உணவு வகைகளைத் தயார் செய்கிறோம். உடைகள் பல விதங்களில், பல்வேறு வண்ணங்களில் உடுத்தி மகிழ்கிறோம். சுற்றுலா என்றால் பல ஊர்களைப் பார்க்க விரும்புகிறோம். சுதந்திரத்தை அனைத்திலும் எதிர்பார்க்கிறோம்.

இப்படி அனைத்திலும் வேறுபாடுகளை, அதாவது variety என்பதை விரும்புகிறோம், இரசிக்கிறோம். நம் மனிதரிலும் பல வேறுபாடுகள் உள்ளன. நிறம், மொழி, கலாச்சாரம், சமுதாயச் சம்பிரதாயங்கள், கல்வியறிவு, பொருளாதார நிலை, பதவிகள், என்று பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் பொதுவாக இந்த வேறுபாடுகளை வேற்றுமையாக உருவாக்குகிறோம். பாகுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறோம். எனது மொழியைச் சார்ந்தவன், எனது சாதியைச் சார்ந்தவன், எனது குடும்பத்தைச் சார்ந்தவன், எனதுக் கட்சியைச் சார்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பது போன்ற பல்வேறு வேறுபாடுகளை, பாகுபாடுகளை உருவாக்கிவிடுகிறோம். இன்றைய காலச் சூழ்நிலையில் இப்படி உள்ள ஏதாவது ஒரு பிரிவைச் சார்ந்து வாழவில்லை என்றால் எங்கு தான் தனி மனிதனாகத் தனித்து விடப்படுவோமா அல்லது பதவிகள் பறிபோய்விடுமோ, மற்றவர்கள் ஆதரவு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து வேற்றுமைகளை வளர்த்துவிட்டு, மற்றவர்களை ஒடுக்கி நம் வாழ்க்கையை மேன்மைப்படுத்த விரும்புகிறோம்.

கிறிஸ்து வேற்றுமைகளை விரும்பாதவர். அவரின் இறப்பு உயிர்ப்பின் மூலம் நாம் கடவுளின் பிள்ளைகளாக்கப்பட்டோம். நாம் அவரின் பிள்ளைகள் என்றால் நமக்கு வேறுபாடுகள், பாகுபாடுகள் இருக்கமுடியாது. திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாக இருக்கும் நாம் அந்தக் கிறிஸ்துவை இலக்காகக் கொண்டிருப்பது அல்லது நாம் அவர்மீது கொண்டுள்ள விசுவாசம் உண்மையானது என்றால் அதை நாம் நம் வாழ்க்கையில் வாழ்ந்துக் காட்டவேண்டும். அப்பொழுதுதான் நாமும் இன்றைய 2-ஆம் வாசகத்தில் பவுல் அடிகளார் கூறுவதுபோன்று, "நான் நல்லதொருப் போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" (2திமோ. 4:7) என்று கூற முடியும்.

கணவன் மனைவியை எடுத்துக்கொண்டால் அவர்கள் இருவருமே வெவ்வேறு இடங்களில் பிறந்து வளர்கிறார்கள். பெற்றோர்கள், சூழ்நிலை, கல்வி, வயது, விருப்பு, வெறுப்புகள், குறிக்கோள், திறமைகள் என்று பலவிதங்களில் அவர்கள் இருவரும் வேறுபட்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்குப்பின் அந்த வேறுபாடுகளை வேற்றுமைகளை உருவாக்குவதில்லை. மாறாக, ஒருவர் ஒருவரை விட்டுக்கொடுத்து, ஏற்றுக்கொண்டு பலம் என்ன? பலவீனம் என்ன? என்று பார்த்துக்கொண்டு அன்பு செய்து, "இனி நாம் இருவர் அல்லர். ஒரே உடல்" என்று புதுவாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இனி அவர்கள் இருவருக்கும் விருப்பம் வெவ்வேறாக இருந்தாலும் ஒரே விருப்பத்தைத்தான் தேர்வு செய்வார்கள்.

அதே போலத்தான் திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் பல வேறுபாடுகளைக் கொண்டு இருக்கலாம். ஆனால் திருமுழுக்கிற்குப் பிறகு நாம் அனைவரும் கிறிஸ்தவர்கள். பேதுரு கூறுவதுபோன்று, "நாம் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர், அவரது உரிமைச் சொத்தான மக்கள்" (1பேதுரு 2:9). நாம் அனைவரும் சகோதர, சகோதரிகள். எனவே வேறுபாடுகள் (Variety) இருக்கலாம். ஆனால் வேற்றுமைகளையும், பிரிவினைகளையும் (Divisions) உருவாக்கி விடக்கூடாது. வேறுபாடுகள் என்பது ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை மற்றவருக்கு அளித்து, இல்லாததைப் பிறரிடமிருந்துப் பெற்றுக்கொண்டு அன்புறவிலே நாமும் வளர இறைவன் கொடுத்த கொடை. ஆனால் இந்த வேறுபாடுகளை வேற்றுமையாக்கி பாகுபாடுகளை உருவாக்கி உறவுகளை அறுத்துத் துண்டாக்குவது மனிதன் செய்யும் கொலை.

ஆகவே, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் விழாவினைக் கொண்டாடும் இந்நாளிலே கிறிஸ்துவை நம் முன் நிறுத்துவோம். வேற்றுமைகளைக் களைய உறுதி கொள்வோம். அதற்குப் பாகுபாடற்ற மனம் தேவை. எனவே ஆண்டவரைப் பார்த்து, ":இறைவா பாகுபாடற்ற மனத்தையும், ஆழமான விசுவாசத்தையும், அதையே வாழ்வாக்க உறுதியான உள்ளத்தையும் தாரும்" என்று மன்றாடுவோம். இன்று நாம் கொண்டாடும் இந்தப் புனிதர்கள் நமக்காகப் பரிந்துப் பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் திருப்பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
புனித பேதுரு, பவுல் திருவிழா
முதல் வாசகம் : தீப. 12 : 1 - 11

பேதுரு சிறையிலிடப்பட்டது பற்றியும் அவர் விடுதலை பற்றியும் இன்றைய வாசகம் கூறுகிறது. ஏரோது அகிரிப்பா பேதுருவைச் சிறையில் அடைக்கிறான். திருச்சபை அவருடைய விடுதலைக்காக மன்றாடுகிறது. தமது தூதர் வழியாக இறைவன் சிறையிலிருந்து பேதுருவை விடுவிக்கிறார்.

ஏரோதின் கொடுமை

ஏரோது அந்திப்பா இயேசுவின் பாடுகள் சமயத்திலே வாழ்ந்தவன். திருமுழுக்கு யோவானைக் கொன்றவன். பெரிய ஏரோதுவின் மகன். ஏரோது அகிரிப்பா பெரிய ஏரோதுவின் பேரன். ஆதித் திருச்சபைக் காலத்திலே வாழ்ந்தவன். இவனும் கொடியவன். யாக்கோபை வாளால் கொன்றான் (12 : 2); திருச்சபையைத் துன்புறுத்தினான்; பேதுருவை சிறையிலடைத்தான். இத்தகைய ஏரோதுகள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றனர். பிறர் நன்மை செய்வதைத் தடுக்கும்போது, பங்கு வளர்ச்சி, பங்கு ஒற்றுமை முதலியவற்றிற்குத் தடைக்கல் நாட்டும்போது நாமும் ஏரோதுகளாக மாறுவதில்லையா? இந்த ":ஏரோதுக் குணம்" நம்மைத் தொத்திக் கொள்ளாதவாறு நடந்து கொள்வோம்; அதற்காக வேண்டுவோம். இத்தகைய ":ஏரோதுகள்": நம்மிடையே இருந்தால் அவர்களை இனம் கண்டு ஒதுங்கவும் முயல்வோமா?

சிறையிலே பேதுரு

குற்றம் செய்தவனுக்குச் சிறைத் தண்டனை நியாயம். பேதுரு என்ன குற்றம் செய்தார்? இயேசுவுக்குச் சாட்சியம் பகர்ந்தது தான் அவரது குற்றம். ":இயேசுவின் பெயரைத் தவிர நாம் மீட்புப் பெற இவ்வுலகில் மனிதருக்கு வேறுபெயர் அருளப்படவில்லை": (4 : 12) என்று அவர் போதித்ததுதான் குற்றம். "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது நியாயமில்லை" (4 : 19 - 20) என்று கூறியதுதான் குற்றம். மாசற்ற இயேசு குற்றம் சாட்டப்பட்டு மரித்தார். அவ் இயேசுவின் பாதையிலேயே பேதுருவும் செல்கிறார்.' அநீதி, நீதிக்குத் தீர்ப்பு வழங்குகிறது. பாவம் புண்ணியத்தை ஒடுக்குகிறது. எனினும் அநீதியும் பாவமும் எப்போதுமே வெற்றி கொள்ளமுடியாது. இயேசுவுக்காக, அவர் மதிப்பீடுகளுக்காகத் துன்பங்கள் அனுபவிக்க முன்வருகிறோமா? அல்லது, இத்துன்பங்களைக் கண்டு ஒதுங்கி விடுகிறோமா? இயேசுவின் பாடுகளிலே நாமும் பங்கு பெறுவோமா?

பேதுரு விடுதலை

செபமே செயம். ஆம், சிறையிலிடப்பட்ட பேதுருவுக்காக ஆதித்திருச்சபை வேண்டுகிறது. "பேதுரு இவ்வாறு சிறையிலிருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது" (12: 5). "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று கூறிய இயேசு, திருச்சபையின் செபத்தைக் கேட்கிறார். தம் தூதரை அனுப்பி, பேதுருவைச் சிறையினின்று விடுவிக்கிறார். "ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் பிடியிலிருந்து என்னை விடுவித்தார்"[12: 11) என்பார் பேதுரு.

நமது செபத்திற்கு நிறைய வல்லமையுள்ளது என்பதை நாம் உணர்கிறோமா? ":எதிர்பார்த்தவாறு நிகழாமல் என்னைக் காத்தார்": (12:11) என்று பேதுரு கூறுவதன் மூலம் செபத்தின் சக்தி புலப்படுகிறது. செபத்திலே நாம் வெற்றி பெறுகிறோம்; ஆண்டவர் தோல்வியுறுகிறார் என்று கூறுவது உண்மையன்றோ?

திருச்சபை இடையறாது மன்றாடிக் கொண்டிருந்தது என்பதன் மூலம் தொடர்ந்த செபத்தின் வல்லமை சுட்டப்படுகிறது. நமது செபங்கள் ஏனோதானோ என்ற முறையிலே அமைகின்றனவா? அல்லது, குட்டிக்குரங்கு தாயைப் பற்றிக் கொள்வது போன்று விடாப்பிடியான முறையில் அமைகின்றனவா? "இடைவிடாது செபியுங்கள்" (1 தெச 5:16- 18). எப்போதும் செபியுங்கள், சோம்பிவிடாது, தளர்ந்து விடாது செபியுங்கள் என்ற முறையிலே பவுல் அழைப்பு விடுப்பது இதை வலியுறுத்தவன்றோ? நமக்கு வரும் இன்னல்கள் இடைஞ்சல்கள், துன்பங்கள் துயரங்கள் அனைத்தும் நம்மைச் செபிக்க அழைக்கும் அழைப்பிதழ்கள் என்பதை அறிவோம். திருச்சபைக்காக, திருமறைத் தலைவர்களுக்காக வேண்டிக்கொள்ளவும் இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது. வேண்டுவோம்; வெற்றி பெறுவோம்.

திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக் கொண்டிருந்தது.

இரண்டாம் வாசகம் : 2 திமொ. 4 : 6 - 8, 17 - 18

இன்றைய முதல் வாசகம் பேதுரு இயேசுவுக்காகச் சிறைப்பட்டது பற்றிக் கூறியது. இவ்வாசகம் இயேசுவுக்காக உழைத்து வாழ்வின் முடிவுக் கட்டத்தில் இருக்கும் பவுல் பற்றிக் கூறுகிறது. பவுலே இங்குத் தன் பணி பற்றியும், தனக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் இறுதிப் பரிசு பற்றியும் எடுத்துரைக்கிறார். நம் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இவ் வார்த்தைகளை நமதாகக் கூறமுடியுமா?
பவுலின் வாழ்க்கை பலி வாழ்க்கை

இயேசுவுக்காக அவர் வாழ்ந்தார்; இயேசுவுக்காக அவர் எண்ணிலடங்காத் துன்பங்களை ஏற்றார் (2 கொரி. 6: 3 10; 1 கொரி. 4:9-13). இரத்தம் சிந்திய பலியாகவும் இரத்தம் சிந்தாப் பலியாகவும் தம்மையே ஒப்புக்கொடுத்தார். ":நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே" (பிலி. 2: 17 - 18) என்பார். ":இதோ என் வாழ்க்கை பலியின் இரத்தமென வார்க்கப்படுகிறது" (2 திமொ. 6) என்பார். பந்தயத்தில் ஓடுபவன் தன் உணவை, ஓய்வை, உடலை, குடியைக் கட்டுப்படுத்தி, வெற்றிக்காகத் தன்னைத் தயார் செய்துகொள்கிறான். வெற்றியடைவதற்காக அவன் எத்துணைத் தியாகமும் செய்யத் தவறுவதில்லை. அதே போன்றுதான் பவுலும் கிறிஸ்துவுக்காகத் தான் வாழ்ந்த வாழ்வை ஒரு பந்தய வாழ்வாகக் கருதி எத்தகைய தியாகமும் செய்யப் பின்வாங்காது வாழ்வு நடத்தினார். சீரியதொரு பந்தயத்தில் ஓடினேன். ஓட்டத்தை முடித்துவிட்டேன்... நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது (4:7- 8) என்கிறார். இதே பவுல் நாமும் நமது கிறிஸ்துவ வாழ்வைப் பந்தய ஓட்டமாகக் கருதி அவருடைய தியாக மரபைப் பின்பற்ற வேண்டுமென்று நமக்கு அழைப்பு விடுகிறார். "பரிசு பெறுவதற்காகவே நீங்களும் ஓடுங்கள். பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர்" (1 கொரி.9:24-25). அது போன்றே நாமும் இருக்க வேண்டும் என்று கூறி, நம்மைத் தியாக வாழ்கைக்கு கடின உழைப்புக்கு அழைக்கிறார். நமது வாழ்வு சோம்பித் திரியும் வாழ்வாயிருக்கிறதா? அல்லது கிறிஸ்துவுக்காக, அவர் நற்செய்திக்காகத் துன்புறும் வாழ்வாய் இருக்கிறதா? கிறிஸ்துவுக்காக நாம் அனுபவிக்கும் துன்பங்கள் என்ன? கிறிஸ்துவுக்காகத் துன்புறுவது, அவரது சகோதரராகிய பிறமக்களுக்காக, அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் துன்புறுவதன்றோ? (மத் 25).

பவுலுக்கு ஆண்டவரின் உதவி

பந்தயத்தில் ஓடிய பவுல், இறைவனே தனக்குப் பரிசளிப்பதாகக் கூறுகிறார். "எனக்கு இருப்பது ஒன்றே. நல்வாழ்வின் பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது. இதை... ஆண்டவர் இறுதி நாளிலே எனக்குக் கைம்மாறாக அளிப்பார்" (4:8) என்று திண்ணமாகக் கூறுகிறார். இறுதி வெற்றியும் பரிசும் மட்டுமன்று. இவ் வாழ்விலேயே ஆண்டவர் தனக்கு உறுதுணையாயிருந்ததையும் கூறுகிறார். ":ஆனால் ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்... என்னை உறுதிப்படுத்தினார்... எல்லாத் தீங்கு களிலுமிருந்து என்னை விடுவித்தார்": (4 : 17 - 18) என்பார்.

நம் துன்ப துயரங்களில் ஆண்டவர் நம் வழித்துணையும் உறுதி அளிப்பவரும் மட்டுமன்று, அவரே நம் இறுதிப் பரிசாகவும் அமைவார். ":அந்நாளில் அவர் வரும்பொழுது இறைமக்கள் அவரைப் போற்றிப் புகழ்வர்; நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர். நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதனால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்": (2 தெச 1:10).

எனவே, துன்ப துயரங்கள் இடையே துவண்டுவிடாது, துணிந்து நடப்போம். ":நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்": (திபா. 121) என்ற சொற்கள் நமக்கு உரமும் உறுதியும் அளிப்பனவாக. அவரை நம்பினோர் என்றும் கைவிடப்படார். எனவே, ஆண்டவரில் நம்பிக்கை வைத்து, நம் நற்செய்திப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துவோம், முன் வைத்த கண் பின் வாங்காது (. 9 : 59 60) பிறர் பணியிலே ஈடுபடுவோம். ":துன்பம் இல்லை, துயரில்லை.... இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே": (அப்பர்). "துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட தொண்டர் தம்மை இன்பக்கரை முகந்து ஏற்றும்":(அப்பர்) இறைவன் நம் இயேசு என்பதை உணர்வோம்.

ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
நற்செய்தி : மத். 16 : 13 - 19

இன்றைய நற்செய்தி பேதுரு வெளியிட்ட விசுவாச அறிக்கைப் பற்றியும் இவ்விசுவாச அறிக்கைக்காக, இயேசு அவருக்கு அளித்த பரிசு பற்றியும் கூறுகிறது. பேதுரு சீடரின் பெயரால் இயேசுவுக்குப் பதிலிறுக்கிறார். எனவே, இயேசு அவருக்குக் கொடுத்த பரிசு சீடர்களுக்கும் உரித்தானது. பாவ மன்னிப்புத் திருவருட்சாதனம் இயேசு பேதுருவுக்குக் கொடுத்த இப்பரிசு வழி வெளிப்படுகிறது எனலாம்.
இயேசு யார்?

இயேசுவைப் பற்றிப் பலபேர் பலவகையான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். அவர் இறைவாக்கினர் என்றனர் சிலர்; அவர் புதுமைகள் செய்பவர் என்றோர் சிலர்; அவர் உரோமரிடமிருந்து இஸ்ரயேலருக்கு விடுதலை வாங்கித் தர வந்த அரசியல் தலைவன் என்றனர் சிலர்; அவர் அரசர் என்றோர் சிலர்; அவர் கடவுளின் மகன் என்றனர் சிலர்; அவர் புத்தி தடுமாறியவர் என்றனர் சிலர் (மாற். 3:20 - 21). இத்தகைய பல்வேறு மதிப்பீடுகளுக்கிடையே, உண்மையிலே ":இயேசு யார்?": என்பது பற்றிக் கேள்வி எழுவது முறையே. இக்கேள்வியை இயேசுவே எழுப்புகிறார் (16 : 13). அவர் யோவான், எலியா, எரேமியா, அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்ற பதிலே கிட்டுகிறது (16 : 14).

"நீங்களோ என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" (16 : 15) என்பது சீடருக்கு விடப்பட்ட வினா. பேதுருவிடமிருந்து பதில் வருகிறது. "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்": (16 : 16). ஆம், இயேசு கடவுளால் எண்ணெய் பூசப்பட்டு, திருநிலைப்படுத்தப்பட்டு இவ்உலகிற்கு அனுப்பப்பட்டவர். கடவுளிடமிருந்து வந்தவர் என்பது பொருள். அவரே கடவுளின் மகன்; ":கடவுளுக்கு அர்ப்பணமானவர்": (யோ. 6 : 69). அவரே கடவுள்.

இயேசு நமக்கு யார்? ஒரு புரட்சி வீரன் மட்டுமா? ஒரு உயர்ந்த மனிதன் மட்டுமா? ஒரு பெரிய போதனையாளர் மட்டுமா? ஒரு புதுமை செய்யும் வித்தைக்காரன் மட்டுமா அல்லது.... உண்மையில், ":நீங்கள், இயேசுவை யாரென்று சொல்கிறீர்கள்?": பதில் கூற முயல்வோம்.
பேதுரு யார்

மீன் பிடிக்கும் ஒரு செம்படவன் (மத். 4 : 18 - 22). மும்முறை ":நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை": என்று மறுதலித்தவர் (மத். 26: 69 75); இயேசுவின் பாடுகளிலே அவருக்குத் துணையாக இருக்க மறுத்து ஓடி ஒளிந்தவர். இது பேதுருவின் ஒரு பக்கம். பேதுரு யார்? ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்; ஆண்டவர் நேசித்த சீடர்களுள் ஒருவர்; ஆண்டவர் தாம் விண்ணுலகு சென்றபின் தம் ஆடுகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டவர் (யோ. 21: 16); நம் ஆண்டவரை மிகவும் நேசித்தவர் (யோ. 21 : 15). பேதுரு யார்? ":நீ பேறு பெற்றவன்": (மத். 16 : 17) என்று ஆண்ட்வரால் புகழப்பட்டவர். திருச்சபை கட்டப்பட்ட உறுதியான பாறை. "வானத்தின் திறவுகோல்களை": பெற்றவர். அவர் செய்வதை எல்லாம் கடவுள் உறுதிப்படுத்துவார். அவர் திருச்சபையின் தலைவர். ":என் ஆடுகளை மேய்" (யோ.21:17) என்ற சொற்களைக் காண்க.

ஆம், தம்மிலே பலமற்ற பேதுரு; இயேசுவின் அருளிலே பாறையாகிறார், மேய்ப்பராகிறார், தலைவராகிறார். ":பேறுபெற்றவர்": ஆகிறார். பேதுரு பெற்ற இப்பேறு அவருக்குப் பின்வந்த பாப்புமார்க்கும் பொருந்தும். பாப்புமார் தலைமையாயிருந்து, மேய்ப்புப்பணி நடத்துபவர் என்பது உணரற்பாலது. மந்தைகளாகிய நாம் மேய்ப்பனின் குரலொலிக்குச் செவிமடுப்பது கடன் (யோ. 10). நம் மேய்ப்பர் பாப்புவுக்காக, மற்றும் நமது ஞான மேய்ப்பவர் களுக்காக வேண்டிக்கொள்கிறோமா?

குறிப்பு : "கட்டுதல்":, ":அவிழ்த்தல்" (16 : 19) என்பன நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள். ஒருவனைக் குற்றவாளியென நிரூபித்தல். அல்லது குற்றமற்றவனென்று விடுவித்தலை இவை குறிக்கும். இச்சொற்களுக்குப் பாவமன்னிப்பு என்ற பொருளில், இவ் உலகில் திருச்சபையில் பாவமன்னிப்பு அளிக்கப்படுவதை இறைவன் உறுதி செய்கிறார் என்று கொள்ளலாம். அல்லது இறைவனின் மன்னிப்பு, பாவமன்னிப்பு அருட்சாதனத்தில் உறுதிப்படுகிறது என்றும் கொள்ளலாம். எவ்வகையில் காணிணும், மன்னிப்பு அளிப்பவர் இறைவன் ஒருவரே என்பது உணர்த்தப்படுகிறது.

நீர் மெசியா: உயிருள்ள கடவுனின் மகன்.