ஆண்டவரில் அன்பும் நம்பிக்கையும் கொண்ட சகோதர சகோதரிகளே, இன்று
ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவினைச் சிறப்பிக்கின்றோம்.
'நீங்கள் ஆவலுடன் தேடும் தலைவர் திடீரென தம் கோவிலில்
தோன்றுவார். லேவியின் புதல்வர்களைத் தூய்மையாக்குவார். அவர்களும்
ஆண்டவர்க்கு ஏற்புடைய காணிக்கையை தருவார்கள். அது ஆண்டவர்க்கு
யூதாவின் காணிக்கையைப்போல் இனியதாக இருக்கும்", என்கிறது இன்றைய
முதல் வாசகம். அன்னை மரியாவும் சூசையும் குழந்தைக்கு யூத
முறைப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற குழந்தையுடன் எருசலேம்
கோவிலுக்கு வருகின்றனர். தூய ஆவியால் தூண்டப்பட்ட சிமியோனும்
அங்கு வருகின்றார். குழந்தையைக் கையில் ஏந்தி உமது மீட்பை என்
கண்கள் கண்டு கொண்டன, இதுவே பிற இனத்தார்க்கு வெளிப்பாடு அருளும்
ஒளி" என்று கூறி இறை வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறார். இறைவாக்கினர்
அன்னாவும் குழந்தையைக் குறித்து எல்லாரிடமும் எடுத்துச்
சொல்கிறார். ஒருவர் காணிக்கைச் செலுத்தினால் அந்த காணிக்கை,
பெற்றுக் கொண்டவர்க்கே சொந்தமாகிறது. அதுபோல் கடவுளுக்குத் தந்த
பிறகு அது நமக்குச் சொந்தமல்ல, முற்றும் கடவுளுக்கே உரியது.
தூய்மைச் சடங்கை நிறைவேற்றிய பிறகு இயேசுபாலன் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறார்.
அவரும் கடவுளுக்குரியவராகவே இருந்தார்.
நாம் நம் திருமுழுக்கின்போது தூய்மையாக்கப்பட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறோம். கடவுளுக்குரியவராகவே வாழ்கிறோமா? என்றால் அது
கேள்விக்குறியாகவே இருக்கிறது. இந்தக் கேள்விக்குறியை அகற்றுவதே
இந்நாளின் நோக்கமாகும். கடவுளுக்குகந்த தூய உயிருள்ள பலியாக
உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த
வழிபாடு" (உரோ 12:1) என்று தூய பவுல் கூறுகின்றார். நமது மறு
அர்ப்பணத்தை ஒவ்வொருவரும் தனித்தனியே புதுப்பிக்க அருள்வேண்டி
வாழ்வளிக்கும் அப்பத்திலும், கிண்ணத்திலும் நம்மை ஒப்புக்கொடுத்து
இறைவனுக்கு ஏற்புடைய காணிக்கையாக நாம் மாற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
மெழுகுதிரியைப் புனிதப்படுத்துதலும் பவனியும்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே, நாற்பது நாள்களுக்குமுன் ஆண்டவரின்
பிறப்பு விழாவை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். இன்று மரியாவும்
யோசேப்பும் இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த புனித
நாள் வந்துள்ளது. இந்த நாளில் இயேசு திருச்சட்டத்தை வெளிப்படையாக
நிறைவேற்றினாலும் உண்மையில் தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களை
அவர் சந்தித்தார். முதியோரான புனிதர்கள் சிமியோனும் அன்னாவும்
தாய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்தனர். அதே ஆவியாரால் உள்ளொளி
பெற்று அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர்.
அதே போல தூய ஆவியாரால் ஒன்று கூடியுள்ள நாம் கிறிஸ்துவை எதிர்கொள்ளக்
கடவுளின் இல்லம் செல்வோமாக. அவர் மாட்சியுடன் வரும்வரை, அப்பத்தைப்
பிடும்போதெல்லாம் நாம் அவரைக் கண்டு கொள்வோமாக.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அன்பின் இறைவா, திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உம்பாதம்
படைக்கின்றோம். அவர்கள் தம் அர்ப்பணத்தைப்
புதுப்பித்துக்கொண்டு, ஆற்றலோடு உம் பணிகளைச் செய்திட
வரமருள உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதி அருளும் இறைவா, எம் நாட்டின் தலைவர்களையும்,
ஆட்சியாளர்களையும், குடிமக்களையும், அவர்களின் உறவுகள்,
உரிமைகள், உடமைகள், நிலபுலன்கள், தொழில்கள் அனைத்தையும்
உமக்கு காணிக்கையாகத் தருகின்றோம். எம் நாடும் நாட்டு
மக்களும் செழிப்பும் அமைதியும் அரவணைப்பும் பெற்றிட அருள்புரியுமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
3. வாழ்வளிக்கும் இறைவா, எம் பங்கு, சமூகம், குடும்பம்,
எங்கள் உடல் பொருள் ஆவி, எங்கள் நம்பிக்கை, பாவம், பலவீனம்,
இயலாமை, பிணிகள், எங்கள் வாழ்வின் செயல்கள் அனைத்தையும்
உம்மிடம் காணிக்கையாகத் தருகின்றோம். எம் பங்கும், சமூகமும்
நிறைவான வரங்களும், வளமும் பெற்று உம் அன்பில் மகிழ்ச்சியும்
நிலைவாழ்வும் பெற்றிட உம்மை மன்றாடுகிறோம்.
4. எங்கள் அன்புத் தந்தையே இறைவா, திருமுழுக்கு என்னும்
அருளடையாளத்தின் மூலம் உமக்குச் சொந்தமான நாங்கள் உம்மீது
கொண்ட நம்பிக்கையால் உமது அழைப்பிற்கேற்ப உண்மையான அர்ப்பண
உணர்வுடன் வாழவும், உறுதியாக உழைக்க உமது ஆவியின் அருளைப்பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உயர்ந்த இடத்தில் எம்மை நிலையாய் நிற்கச் செய்யும்
இறைவா! எங்கள் குடும்பங்களில் உமது அன்பை நிறைவாய்
பொழிந்து, நாங்கள் உம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்
என்பதை உணர்ந்தவர்களாக வாழவும், உமது அன்பின் சாட்சிகளாக
இவ்வுலகில் வலம் வரவும், இறையரசை அறிவிப்பவர்களாகவும்
வாழவேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மன்றாடுவோமாக: எங்கள் அனைவரின் அரும்பெரும் செல்வமான
இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட இறைவார்த்தையை எங்கள்
இதயத்தின் அருகில் வைத்து, வாசித்து, தியானித்து தவறாமல்
எங்கள் வாழ்வில் கடைபிடிக்க உதவியருளும். எங்கள் ஆண்டவராகிய
கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
மறையுரை சிந்தனைகள்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
ஆண்டவரைக் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்த விழாவாகிய இன்று
துறவறத்தார் அனைவரும் தங்களது அர்ப்பண நாளை நினைவுகூர்ந்து
செபிக்கின்றனர். இன்றைய நற்செய்தியில் இடம்பெறும் மூன்று நபர்களான
சிமியோன், அன்னா, குழந்தை இயேசு பற்றி சிந்திப்போம்.
சிமியோன் : நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு
வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். இயேசுவை உடனடியாகக்
கண்டுகொள்கின்றார். கண்டு கொண்டதோடு மட்டுமல்லாமல் அவரைப் பிறருக்கும்
அடையாளப்படுத்துகின்றார். நமது எதிர்பார்ப்பு எதைக்குறித்து இருக்கின்றது?
நாம் யாரை எதை எதிர்பார்க்கின்றோம்? இயேசுவை நாம் கண்டுகொண்டால்
அவரைப் பிறரும் அறியும் வண்ணம் எடுத்துரைக்கின்றோமா என்று
சிந்திப்போம்.
அன்னா வயது முதிர்ந்தவர். மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின்
கைம்பெண் ஆனவர்; கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி
அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தவர். இவரும் கடவுளின் வருகைக்காகக்
காத்திருந்து அதனைப் பிறருக்கு எடுத்துரைக்கின்றார். அவரது
பேச்சும் செயலும் கடவுளைப் பற்றியதாகவே இருக்கின்றது. நமது
வார்த்தைகள் மற்றும் செயல்கள் வழியாக நாம் இறைப்புகழ்
பாடுகின்றோமா?
குழந்தை இயேசு: கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட இயேசு வளர்ந்து வலிமை
பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தார் என்று
வாசித்தோம். நாமும் நமது திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாகக்
கடவுளின் பிள்ளைகளாக மாறினோம். திருஅவைப்பணிகளுக்கு நம்மை நாமே
அர்ப்பணித்தோம். உடலளவில் மட்டும் தான் நமது வளர்ச்சி இருக்கின்றதா
அல்லது உள்ளத்தளவில் நமது வளர்ச்சி இருக்கின்றதா என்று
சிந்திப்போம். கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ முயல்வோம்
சிமியோன் அன்னா இயேசு என்னும் மூவரின் வாழ்க்கையும்
வார்த்தையும் இறைவனுக்கு மிகவும் விருப்பமுள்ள வாழ்வாக
வார்த்தையாக இருந்தது. நமது வாழ்வும் வார்த்தையும் அத்தகையதாக
இருக்க முயற்சிப்போம்.
மறையுரைச்சிந்தனை -
சகோ. செல்வராணி Osm
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி.
அர்ப்பணத் திருநாள்
அந்த மரம் மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது. அவன் அதிலிருந்து
கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக்
கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச்
செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து
வணங்குகிறான். அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்.
அதன் மேல் அவன் உணவு சமைக்கிறான். இறைச்சியைப் பொரித்து வயிறார
உண்ணுகிறான். பின்னர் குளிர்காய்ந்து, வெதுவெதுப்பாக இருக்கிறது,
என்ன அருமையான தீ! என்று சொல்லிக் கொள்கிறான். எஞ்சிய பகுதியைக்
கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி,
நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும் என்று மன்றாடுகிறான்.
(எசாயா 44:15-17)
எமில் டர்கெய்ம் என்னும் சமூகவியலார் எழுதிய கடவுள்
தோன்றிய கதை என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு சில இடத்தை, ஒரு சில பொருளை, ஒரு சில நபரை நாம் தூயவர்
என்று உயர்த்தி வைக்கிறோம்.
இந்தத் தூய்மை அவைகளுக்கு அல்லது அவர்களுக்கு எங்கிருந்து
வருகின்றன?
அவைகள் அல்லது அவர்கள் அந்தத் தூய்மையை தன்னகத்தே
கொண்டிருக்கிறார்களா? அல்லது மனித மனத்தில் தோன்றும்
உணர்வினால் அவைகள் அல்லது அவர்கள் தூயவர்களாகத்
தெரிகின்றார்களா?
பொருட்களை நாம் நகர்த்துகிறோம். ஆனால் சில நேரங்களில்
பொருட்கள் நம்மை நகர்த்துகின்றன சிலுவை, பைபிள், ஓஸ்தி,
நற்கருணைப் பெட்டி, மாதா சுரூபம், தீர்த்தம் இவைகள் நம்மை
நகர்த்தக் காரணம் என்ன?
வேற்று தெய்வங்களை உருவாக்குபவர்களை நையாண்டி செய்யும் எசாயா
மேற்காணும் உருவகத்தைப் படைக்கின்றார். இந்த உருவகத்தில்
ஒரு பெரிய உண்மை இருக்கிறது. என்ன உண்மை? ஒரே மரம் தான்.
அந்த மரத்தின் ஒரு பகுதியை நெருப்பு மூட்டி குளிர்காயவும்,
அடுத்த பகுதியை இறைச்சி சமைக்கவும், அடுத்த பகுதியை சிலை
செய்யவும் பயன்படுத்துகிறோம். ஆனால் சிலை மட்டும் திடீரென
மதிப்பு பெறுவது எப்படி?
நாளை தூய கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
திருநாளைக் கொண்டாடுகிறோம். யூத மரபில் பெண் குழந்தைகளை
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுப்பது கிடையாது. இருந்தாலும்
விவிலியத்திற்குள் வராத யாக்கோபின் நற்செய்தி என்ற திரைமறைவு
நற்செய்தியில், சுவக்கீன், அன்னம்மாள் தங்கள் முதிர்வயதில்
மரியாளைப் பெற்றெடுத்தார்கள் என்றும், பெற்றெடுத்த மகளை எருசலேம்
ஆலயத்தில் காணிக்கையாக்கினார் என்றும், தான் வயதுக்கு வரும்
வரை மரியாள் அங்கே வளர்ந்தார் என்றும் இந்த நற்செய்தி
குறிப்பிடுகிறது.
முதியவர் குழந்தை பெறுதல் அல்லது குழந்தைப் பேறு இல்லாதவர்
குழந்தை பெறுதல் என்பது விவிலியத்தில் வழங்கப்பெறும் ஒரு
இலக்கிய நடை. நீதித்தலைவர்கள் நூலில் வரும் சிம்சோன், வரலாற்று
நூல்களில் வரும் சாமுவேல் எல்லாம் இப்படிப் பிறந்தவர்கள்தாம்.
ஆக, மரியாளின் பிறப்பையும் இந்த இலக்கிய நடையில் யாக்கோபு
எழுதியிருக்கலாம்.
மரியாளை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தது அவருக்கு முக்கியமோ
என்னவோ, அது நமக்கும், நம் கிறிஸ்தவத்திற்கும் முக்கியம்.
அதாவது, அவர் எல்லாரையும் போல இருந்தாலும், கொஞ்சம் உயர்த்தப்பட்டு
தூய்மையான இடத்தில் அவரை நாம் வைக்க வேண்டும். அப்படி
வைத்தால்தான் தூய்மையான கடவுள் அவரிடம் பிறந்தார் என்ற
லாஜிக் சரியாக வரும்.
ஆக, தூய்மை என்பது மனிதர்களாகிய நாம் ஒரு பொருளுக்கும், ஒரு
நபருக்கும் கொடுப்பது. இதற்கு எதிர்ப்பதமாக தீட்டு என்பதை
பொருட்களுக்கும், நபர்களுக்கும் கொடுப்பது நாம்தான். இதை
நாம் தனிநபராகச் செய்வதில்லை. நாம் சார்ந்திருக்கும்
குழுதான் செய்கிறது. கிறிஸ்தவர்கள் என்ற குழுவில் நாம்
இருப்பதால் பைபிள் நமக்கு புனித நூலாக இருக்கிறது. இதுவே
நாம் இந்துக்கள் அல்லது இசுலாமியர்கள் என்னும்
குழுவில் இருந்தால் நாம் கீதை அல்லது குரானைத்தான்
புனித நூல் என்று சொல்வோம். ஆக, எந்த நூலும் புனிதம் என்றும்
தீட்டு என்றும் இல்லை. நாம் எந்த தளத்தில் நிற்கிறோமோ, அதுதான்
புனிதம்-தீட்டை நிர்ணயம் செய்கிறது.
அப்படியென்றால் இயல்பாகவே தூய்மை, தீட்டு என்பது பொருட்களில்,
நபரில் இல்லையா? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறுமணம்
இருக்கிறதா? என்பது போல ஒரு போட்டியை வைத்தால்தான் சரியாகும்.
நிற்க.
நாளை நாம் கொண்டாடும் மரியாளின் அர்ப்பணத் திருநாள் சொல்வது
என்ன?
நாம் கடவுளுக்கென ஒன்றை அல்லது ஒருவரைத் தள்ளி
வைக்கும்போது, அவர் அதை அல்லது அவரைப் புனிதப்படுத்தி நமக்கே
தருகின்றார்.
நாம் அன்றாடம் ஒப்புக்கொடுக்கும் திருப்பலியிலும் இதைப்
பார்க்கலாம்: நாம் கொடுக்கும் அப்ப, ரசத்தை கடவுள் நமக்கே
தன் திருமகனின் உடல், இரத்தம் என்று கொடுத்துவிடுகிறாரே.
அருள்பணி ஏசு கருணாநிதி
மீட்பைக் கண்டுகொள்தல்
நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக
சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம்.
பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள்.
சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக
இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த
வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர்
இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை
முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும்
ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை
எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால்
அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்.
ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால்
தான் நான் இங்கே நிற்கிறேன்.'
எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள்.
அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி
முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது?
இன்று நாம் நம் ஆண்டவரை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
நாளைக் கொண்டாடுகிறோம். கைகளில் மெழுகுதிரிகள் ஏந்தி பவனியாக
வந்தோம். இந்த நாளை அர்ப்பணத்தின் நாள் என்றும், துறவற
வாழ்வில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தவர்களின்
நான் என்றும் திருஅவை கொண்டாடுகிறது. மேலும், குழந்தைகள்
பற்றிய புரிதல் நாள் என்றும், அல்லது குழந்தைகள் நாள் என்றும்
திருஅவை கொண்டாடி மகிழ்கிறது.
மரியாவும் யோசேப்பும் கொண்டு வந்த குழந்தையைக் கைகளில் ஏந்துகிற
சிமியோன், 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு
செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' என்று ஆர்ப்பரித்து
மகிழ்கின்றார்.
மீட்பு என்றால் என்ன?
'மீட்பு' என்பதை கிரேக்கத்தில் இரண்டு சொல்லாடல்கள் வழியாகக்
குறிக்கலாம்: ஒன்று, 'ஸொத்தேரியா'. இது பெண்பால் பெயரெச்சம்.
இதன் பொருள் 'நலம்' அல்லது 'விடுதலை' அல்லது 'பாவத்திலிருந்து
விடுதலை.' இரண்டு, 'ஸொத்தேரியோன்'. இது பலவின்பால் பெயரெச்சம்.
இது இறைவனின் அரும்பெரும் செயல்களைக் குறிக்கும். நம்முடைய
வாசகத்தில் இரண்டாவது சொல்லாடல்தான், அதாவது, 'இறைவனின் அரும்பெரும்
செயல்' இடம்பெற்றுள்ளது.
கைகளில் தான் ஏந்தி நிற்கும் குழந்தையில் இறைவனின் அரும்பெரும்
செயல்களைக் கண்டுகொள்கிறார் சிமியோன்.
சிறிய விதையில் நிறைய நெல்மணிகளைப் பார்ப்பதுபோல,
ஒற்றைத் துளியில் ஒரு பெரிய கடலைப் பார்ப்பது போல,
ஒற்றை நொடியில் காலாகாலத்தைப் பார்ப்பது போல,
ஒரு மண்துகளில் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தைப் பார்ப்பது போல,
பார்க்கிறார் சிமியோன்.
இறைவனின் அரும்பெரும் செயல்களை நாம் கண்டுகொள்ள முடியுமா?
முதல் ஏற்பாட்டில் இரண்டு எடுத்துக்காட்டுக்களை எடுத்துக்கொள்வோம்.
முதலில் சிம்சோனின் தந்தையும் தாயும். சிம்சோனின் பிறப்பு
அறிவிக்கப்படும் நிகழ்வில் (காண். நீத 13) சிம்சோனின் அப்பா
பெயர் மனோவாகு என்று கொடுக்கப்பட்டுள்ளது. அம்மாவின் பெயர்
கொடுக்கப்படவில்லை. ஆண்டவரின் தூதர் சிம்சோனின் பிறப்பைப்
பற்றி முதலில் பெண்ணுக்கும் இரண்டாவது ஆணுக்கும் அறிவிக்கின்றார்.
இந்நிகழ்வின் இறுதியில் மனோவாகு தம் மனைவியிடம், 'நாம்
செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' (காண்.
நீத 13:22) என்கிறார். ஆக, கடவுளைப் பார்த்த எவரும் உயிரோடு
இருப்பதில்லை என்பது முதல் ஏற்பாட்டின் ஒருவகைப் புரிதலாக
இருக்கிறது. ஏனெனில், கடவுள் ஒளிமயமானவர். கடவுள் நம்மைவிட்டுத்
தூரமாய் இருப்பவர். கடவுள் தூயவர், மாட்சி மிக்கவர். அவரின்
தூய்மையும், மாட்சியும் மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாத
ஒன்று.
இரண்டாவது ஆகார். சாராவின் பணிப்பெண் இவர். எகிப்திய இளவல்.
ஆபிரகாமிற்கு குழந்தை வாக்களிக்கப்படுகிறது. ஆனால், குழந்தைப்பேறு
தள்ளிப்போவதைக் காண்கிற சாரா, அவசரப்பட்டு ஆகாரை ஆபிரகாமிடம்
அனுப்புகிறார். ஆகார் கருத்தரிக்கிறார். அவர் தன்னை ஏளனமாகப்
பார்ப்பதாக நினைக்கின்ற சாரா அவரைக் கொடுமைப்படுத்த அவர்
பாலைவனத்திற்குத் தப்பி ஓடுகின்றார். பாலைவனத்தில் ஆகாரை
எதிர்கொள்கின்றார் கடவுள். கடவுளின் குரலைக் கேட்ட ஆகார்,
'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா!' என்று
சொல்லி, 'காண்கின்ற இறைவன் நீர்' என்று கடவுளுக்குப் பெயரிடுகின்றார்.
இந்தப் புரிதலின்படி இறைவன் நம்மைக் காண்கிறார். நாமும்
அவரைக் காண்கின்றோம். காணுதல் என்பது இறைவனின்
பாதுகாப்புச் செயலை இங்கே குறிக்கிறது. சிறிய குழந்தைகள்
வீட்டருகில் விளையாடும்போது, 'என் கண்பார்வையிலேயே இரு!'
என்று தாய் சொல்வது, 'என் பாதுகாப்பிலேயே இரு!' என்று
பொருள்படுவதுபோல, இங்கே கடவுளின் பார்வை நம்மேல் படுவதால்
நாம் பாதுகாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்.
ஆக, கடவுளைக் காணுதல் மரணத்தைத் தரும் என்ற ஒரு புரிதலும்,
கடவுளைக் காணுதல் நம் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற இன்னொரு
புரிதலும் முதல் ஏற்பாட்டில் இருக்கிறது.
இன்றைய திருநாளின் பின்புலத்தில் பார்க்கும்போது, கடவுளின்
அரும்செயலைக் காணும் சிமியோன் ஒரே நேரத்தில் மரணத்தைத் தழுவுதல்
போலவும், இறைவனின் பாதுகாப்பை அனுபவிப்பது போலவும் இருக்கிறது.
ஏனெனில், சிமியோன், 'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!' என்று தம்முடைய இறப்பைப்
பற்றியும், 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு
செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' என்று தான்
பெற்றுள்ள பாதுகாப்பு உணர்வு பற்றியும் சொல்கின்றார்.
இறைவனின் அரும்பெரும் செயல்கள் எப்படி நடக்கும்? அவற்றை
நாம் எப்படி கண்டுகொள்வது?
ஒன்று, தேடுகின்ற ஒருவர்தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும்
என்று சொல்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். மலா 3:1-4).
யூதாவில் நிலவிய அறநெறி மற்றும் சமயப் பிரச்சினையின்போது
இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. எருசலேம் ஆலயம் கண்டுகொள்ளாமல்
விடப்படுகிறது. பலிகள் ஏனோதானோவென்று நிறைவேற்றப்படுகின்றன.
குருக்களும் மக்களும் தங்களுடைய அறநெறி வாழ்வு பற்றி அக்கறையில்லாமல்
இருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் கடவுள் தன்னுடைய தூதரை
அனுப்புவார் என முன்னுரைக்கிறார் மலாக்கி: 'நீங்கள்
தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார் ...
அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும் சலவைக்காரரின் சவர்க்காரம்
போலவும் - அதாவது, இன்று நாம் பயன்படுத்தும் ஸர்ஃப் எக்ஸெல்
போல - இருப்பார்.' இங்கே இரண்டு விடயங்கள் முக்கியமானதாக
இருக்கின்றன: (அ) தேடுகின்ற ஒருவர்தாம் அல்லது
காத்திருக்கின்ற ஒருவர்தாம் திடீரென்ற வருகின்ற தூதரைக் கண்டுகொள்ள
முடியும். (ஆ) இவர் ஆலயத்தையும், ஆலயத்திலிருக்கின்ற
குருக்களையும், பலியிட வருகின்ற ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களையும்
தூய்மைப்படுத்துவார்.
இதை, இன்றைய திருநாளுக்குப் பொருத்திப் பார்த்தால்,
காத்திருக்கின்ற சிமியோன் உடன்படிக்கையின் தூதராம் இயேசுவைக்
கண்டுகொள்கின்றார். மேலும், குழந்தையை அதன் பெற்றோர்
தூய்மைச்சடங்கிற்காக அழைத்து வருகின்றனர்.
இரண்டு, இறைவன் நம்மைப் போல ஆகிவிட்டதால் அவரைக் கண்டுகொள்வது
எளிது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி
2:14-18). இயேசு வெறும் மனித அவதாரம் அல்ல. மாறாக, அவர் மனிதராகவே
பிறந்தார். இதை இரண்டு நிலைகளில் இரண்டாம் வாசகம் சொல்கிறது:
(அ) 'சாவின்மேல் ஆற்றல்கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே
அழித்துவிட்டார்' - இறப்பு என்பது அலகையின் செயல் என்பது
எபிரேய புரிதல் (காண். சாஞா 2:23-24). இறப்பையும் அதன் தலைவனையும்
அழிக்க இயேசு மனித உடல் ஏற்கின்றார். ஏனெனில் இறப்பு மனித
உடலைத்தான் அழிக்கிறது. (ஆ) இயேசு வலுவற்ற மனித உரு ஏற்றதாலேயே
அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குருவாக
மாறுகின்றார்: 'கடவுள் பணியில் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள
தலைமைக்குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு
எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரியைப் போல ஆகவேண்டியதாயிற்று.'
காணக்கூடாத அல்லது காண முடியாத இறைவன் நம்முடைய உடலை ஏற்றுவிட்டதால்
அவரைக் காண்பது எளிதாயிற்று என்கிறது இரண்டாம் வாசகம்.
இதை, இன்றைய திருநாளுக்குப் பொருத்திப் பார்த்தால், மனித
உரு ஏற்றுள்ள கடவுளை - இயேசுவை - அவருடைய பெற்றோர் ஆலயத்திற்கு
அழைத்து வருகின்றனர். மேலும், அவர் கடவுளாக இருந்தாலும் மனித
வலுவின்மைக்கு உட்பட்டதால் அவரை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணிக்கும்
கட்டாயத்திற்கு அவருடைய பெற்றோர் உட்படுத்தப்படுகின்றனர்.
ஆக, இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் பின்புலத்தில்,
இறைவனையும் அவருடைய மீட்புச் செயல்களையும் கண்டுபிடிக்க
இரண்டு வழிகள் உள்ளன:
ஒன்று, அவருக்காகக் காத்திருத்தல் அல்லது அவரைத் தேடுதல்.
இரண்டு, நம்முடைய வலுவின்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் - அந்த வலுவின்மைகளில்
இறைவனின் வல்லமையைக் காணுதல்.
மீட்பைக் கண்டுகொள்ள நமக்கு இவ்விரு வழிகள் நிற்க இதை நேரடியாக
நமக்கு வாழ்ந்து காட்டிய மூவரை இன்றைய நற்செய்தி வாசகம்
நமக்கு முன்வைக்கிறது:
அ. யோசேப்பு - மரியா
இவர்கள் திருச்சட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருவகையான மாதிரி. அதாவது, சட்டங்கள் நிறைவேற்றுவதன்
வழியாக, நல்ல அறநெறி வாழ்வு வாழ்வதன் வழியாக மீட்பைக் கண்டுகொள்வது.
யோசேப்பு-மரியா பற்றிய மற்றொரு குறிப்பும் இங்கே உள்ளது.
அவர்கள் இரண்டு மாடப்புறாக்களைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றனர்.
இவை அவர்களின் ஏழ்மை நிலையைக் குறிக்கிறது. 'எங்களுடைய மகன்தான்
மீட்பர்' என்று தாங்கள் பெற்ற கொடையில் பெருமை கொள்ளாமல்,
தங்களுடைய வலுவற்ற நிலையை ஏற்றுக்கொள்கின்றனர். ஆக, வலுவற்ற
நிலையில் நாம் இருந்தாலும் நல்ல அறநெறி வாழ்வு வழியாக
மீட்பைக் கண்டுகொள்ள முடியும் என்பது யோசேப்பு-மரியா உணர்த்தும்
பாடம்.
ஆ. சிமியோன்
இவர் நேர்மையாளர். இறைப்பற்றுக் கொண்டவர். வாக்களிக்கப்பட்ட
ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியால் தூண்டப்பட்டு
ஆலயத்திற்கு வருகின்றார். தூய ஆவியின் தூண்டுதலைக் காண ஒருவர்
கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். இணைந்திருத்தல்
நிலையில்தான் தூண்டுதலை அனுபவிக்க முடியும். நம்முடைய
மீட்புச் செயலை நாம் அனுபவிக்க நாமும் இறைவனோடு இணைந்திருக்க
வேண்டும் என்று நம்மை அழைக்கிறார் சிமியோன்.
இ. அன்னா
இவர் கைம்பெண் என்ற நிலையிலும், 'கடவுள் தன்னுடைய கணவரை எடுத்துக்கொண்டார்'
என்ற எந்தக் கோபமும் இல்லாமல், கோவிலை விட்டு நீங்காமல்
நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவருகிறார்.
இவர் தன்னுடைய வாழ்வியல் எதார்த்தங்கள் அனைத்தையும்
முழுமையாக ஏற்று வாழ்கிறார். இவரின் எளிய மனம் நமக்கு உணர்த்தும்
பாடம். எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காமல், தன்னுடைய நேரத்தை
தேவையானவற்றில் மட்டும் செலவழிக்கின்றார் அன்னா.
இத்திருநாள் விடுக்கும் வாழ்வியல் சவால் என்ன?
மீட்பு என்பதை நாம் பரந்த பார்வையில் புரிந்துகொள்ள
வேண்டும். மீட்பு என்பது நம்முடைய இறப்புக்குப் பின் நடக்கும்
நிகழ்வோ, அல்லது நம்முடைய திருமுழுக்கின்போது நடந்த நிகழ்வோ
அல்ல. இது ஒரு அன்றாட நிகழ்வு. நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே
நமக்கு மீட்புதான். ஏனெனில், எல்லா நிகழ்வுகளிலும் இறைவனே
செயலாற்றுகின்றார். மறையுரை எழுத யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
திடீரென ஒரு ஐடியா வருகிறது. அதுதான் மீட்பு. மாணவர்களுக்கு
என்ன சொல்வது என்று யோசிக்கிறேன். அதுதான் மீட்பு. வங்கிக்குச்
செல்கிறேன். பேனா மறந்து செல்கிறேன். 'இந்தாங்க இத வச்சி
எழுதங்க' என்று ஒருவர் நீட்டுகிறார். அதுதான் மீட்பு.
திடீரென காய்ச்சலால் படுக்கையில் சாய்கிறேன். அதுவும் இறைவனின்
மீட்பு. இறைவனின் மீட்புச் செயல் அன்றாடம் நம்மைச் சுற்றி
நடந்துகொண்டே இருக்கின்றது. நாம் செய்ய வேண்டியதெல்லாம்,
சிமியோன் போல ஒவ்வொரு பொழுதையும் ஒரு குழந்தைபோல நம்முடைய
கைகளில் ஏந்தி வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதரையும் குழந்தைபோல
கைகளில் ஏந்தி ஆச்சர்யப்பட வேண்டும். இதற்கு முதலில், ஒவ்வொரு
அனுபவத்தையும் தேடிக் காத்திருக்க வேண்டும். நம்முடைய வலுவின்மைகளைக்
கொண்டாட வேண்டும்.
இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 24) ஆசிரியர், 'வாயில்களே
உயர்ந்து நில்லுங்கள்' என்கிறார். அவர் கடந்து செல்லும்
வாயில் நாம். கொஞ்சம் எழுந்து நின்றால், அவர் நம்மை நோக்கி
வருவார். அவரின் வருகையே நம் மீட்பு.
- Fr. Yesu Karunanidhi
நிகழ்வு: மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமையை ஆண்டுவந்தவன்
கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ். இவன் கி.பி 293 ஆம் ஆண்டு அரசனாகப்
பதிவியேற்ற பொழுது, ஏராளமான கிறிஸ்தவர்கள் அரசவையிலும் அரண்மனையிலும்
உயர்பதவிகளை வகிப்பதைக் கண்டான். அப்பொழுது இவனுக்குள் ஓர்
எண்ணம் தோன்றியது. கிறிஸ்தவர்களாக இருக்கின்ற இவர்கள்
கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்கின்றார்களா...? இதை நாம்
சோதித்துப் பார்ப்போம்...! என்பதே அந்த எண்ணம். உடனே இவன்
"கிறிஸ்துவுக்கு உண்மையாக இருக்க விரும்புகின்றவர்கள் தாங்கள்
வகிக்கக்கூடிய பதவியை விட்டுவிடவேண்டும். பதவி வேண்டும் என்று
நினைக்கின்றவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்கவேண்டும்" என்று ஆணை
பிறப்பித்தான். இவன் விடுத்த ஆணையைத் தொடர்ந்து இவனுடைய
அரசவையிலும் அரண்மனையிலும் உயர்பதவி வகித்த பல கிறிஸ்தவர்கள்,
"எங்களுக்குப் பதவியை விட கிறிஸ்துவே முக்கியம்" என்று
தாங்கள் வகித்து வந்த பதவியைத் துச்சமெனத்
தூக்கியெறிந்தார்கள். ஒருசில கிறிஸ்தவர்களோ பதவிக்கு ஆசைப்பட்டு,
கிறிஸ்தவை மறுதலித்தார்கள். இதையெல்லாம் பார்த்த
கொன்ஸ்டான்டியுஸ் குளோரஸ், கிறிஸ்துவுக்காகத் தாங்கள் வகித்த
பதவிகளையும் துச்சமெனத் தூக்கியெறிந்த கிறிஸ்தவர்களை எல்லாம்
மீண்டுமாக அவர்கள் வகித்துவந்த பதவியிலேயே அமர்த்தினான்.
அதே நேரத்தில் யாரெல்லாம் பதவிக்கு ஆசைப்பட்டுக்
கிறிஸ்துவை மறுதலித்தார்களோ, அவர்களையெல்லாம் அவர்கள் வகித்து
வந்த பதவியிலிருந்து தூக்கி எறிந்தான். இதற்கு இவன் சொன்ன
காரணம், "கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பவர்கள் தாங்கள் வகிக்கின்ற
பதவிக்கும் உண்மையாக இருப்பார்கள்" என்பதாகும்.
ஆம், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவருக்கு உண்மையுள்ளவராக,
உகந்தவராக இருக்கவேண்டும். அதைதான் மேலே உள்ள நிகழ்வும் இன்று
நாம் கொண்டாடகின்ற விழாவும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.
இன்று நாம் ஆண்டவர் இயேசு கோயிலில் ஒப்புக்கொடுக்கப்பட்ட
விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட
இயேசு எப்படி ஆண்டவருக்கு உகந்தவராக வாழ்ந்துவந்தார்...?
நாம் எப்படி ஆண்டவருக்கு உகந்தவர்களாக வாழ்வது...? ஆகியவற்றைக்
குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஆண்டவருக்கு உரியவர்கள்
இன்றைய நற்செய்தியில், தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய
நாள் வந்தபொழுது (நாற்பதாவது நாளில்) குழந்தை இயேசுவை,
தாய் மரியாவும் யோசேப்பும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம்
திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று வாசிக்கின்றோம். குழந்தையை
ஏன் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்ற கேள்வி எழலாம்.
இதற்கான பதிலை நாம் விடுதலைப் பயண நூலில் (விப 13:
2,12,15) வாசித்தறியலாம்.
மோசேயின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டை
விட்டுப் போக முற்பட்டபொழுது, பார்வோன் மனமிறுகி இஸ்ரயேல்
மக்களைப் போகவிடாமல் தடுத்தான். இதைத் தொடர்ந்து எகிப்து
நாட்டிலுள்ள மனிதருள் தலைப்பேறு தொடங்கி கால்நடைகள் தலையீற்று
ஈறாக ஆண்பிறப்பு அனைத்தையும் ஆண்டவர் சாகடித்தார். அதே
வேளையில் வீடுகளில் இரத்தம் தெளிக்கப்பட்ட இஸ்ரயேலரின்
வீடுகளின் இருந்த ஆண் தலைபேற்றை ஒன்றும் செய்யாமல்
விட்டுவிட்டார். இதனலாயே ஆண்தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு
அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. குழந்தை இயேசுவின்
தாய் மரியாவும் யோசேப்பும் திருச்சட்டத்தில் கூறப்பட்டவாறே
குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கின்றார்கள். இவ்வாறு அர்ப்பணிக்கின்றபொழுது,
இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளைப் பலியாக
ஒப்புக்கொடுக்கின்றார்கள்.
மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோவிலில் ஆண்டவருக்கு
அர்ப்பணித்தது, நமக்கு இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றது.
ஒன்று, அவர்கள் ஆண்டவரின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து
நடந்தார்கள் என்பதாகும். இரண்டு, ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட
இயேசு எவ்வாறு ஆண்டவருக்கு உரியவர் ஆனாரோ, அதுபோன்று
திருமுழுக்குப் பெற்ற அல்லது கிறிஸ்தவர்களாக இருக்கின்ற
நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருக்கு உரியவர்களாக இருக்கவேண்டும்.
இதை நாம் மறந்துவிடக்கூடாது
கடவுளுக்கு உகந்தவராய் இருந்த இயேசு
ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இயேசு, வளர்ந்து வலிமை
பெற்று, ஞானத்தால் நிறைந்து, ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார்
என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில் வாசிக்கின்றோம். இயேசு
எப்படி ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பது
குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
இயேசு ஆண்டவருக்கு உகந்தவராய் இருந்தார் என்பதை அவர் ஆண்டவரின்
திருவுளத்தின்படி நடந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம். தன்னுடைய
பன்னிரண்டு வயதிலேயே, "நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்
என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று சொன்ன இயேசு, தன்னுடைய
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தை தன்னிடம் ஒப்படைத்த
அலுவல்களையே செய்துகொண்டிருந்தார் (யோவா 17:4) அல்லது தந்தையின்
திருவுளத்தின்படியே நடந்தார்.. இன்னும் சொல்லப்போனால், இயேசு
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தன்னுடைய உணவாகக்
கொண்டிருந்தார் (யோவா 4:34).
அப்படியானால், இயேசுவைப் போன்று கடவுளுக்கு உரியவர்களாகிய
நாம், கடவுளுக்கு உகந்தவற்றை அல்லது கடவுளின் திருவுளத்தின்படி
நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில்
நாம் நம்முடைய விருப்பு வெறுப்புகளுக்கு முதன்மையான இடம்
கொடுத்து, இறைவனின் விருப்பத்தையும் அவருடைய திருவுளத்தையும்
பின்னுக்குத் தள்ளிவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆண்டவரைக்
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவினைக் கொண்டாடும் நாம்,
ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்வோம் என்னும் உறுதி
ஏற்போம்.
பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இஸ்ரயேலுக்கு பெருமையாகவும்
விளங்கிய இயேசு ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டு, ஆண்டவருக்கு
உகந்தவராய் இருந்த, ஆண்டவரின் திருவுளத்தின்படி நடந்த இயேசுவின்
வாழ்வு எப்படி இருந்தது என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதற்கான பதிலை நாம் எருசலேம் திருக்கோவிலில் இருந்த
சிமியோன் இறைவாக்காக உரைக்கின்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம்.
இயேசு இஸ்ரயேலின் பெருமையாகவும் புறவினத்தாருக்கு
வெளிப்பாடு அருளும் ஒளியாக இருப்பார் என்று அவர்
கூறுகின்றார். இயேசுவின் பணிவாழ்வைப் பார்க்கின்றபொழுது,
யூதர்களுக்கு மட்டுமல்லாது எல்லாருக்குமாக தான் செய்த பணியின்
வழியாக அவர் ஒளியாக இருந்தார். அதனால்தான் எவ்வளவோ அவர்
"நானே உலகின் ஒளி" (யோவா 8:12) என்று கூறுகின்றார்.
ஆண்டவருக்கு உரியவர்களாகிய நாம்... ஆண்டவரின் திருவுளத்தின்படி
வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் நம்முடைய சொல்லாலும் செயலாலும்
எல்லா மக்களுக்கும் உலகிற்கே ஒளியாக இருக்கவேண்டும். இதில்
மாற்றுக்கருத்து இல்லை.
சிந்தனை
இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்
(கலா 2: 20) என்பார் புனித பவுல். இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றி வாழ்ந்து வந்த புனித பவுல் கிறிஸ்துவே என்னுள்
வாழ்கின்றார் என்ற உணர்வோடு வாழ்ந்தார். கடவுளுக்கு உரியவர்களாகிய
வாழ அழைக்கப்பட்டிருக்கும் நாம், கிறிஸ்துவே நம்முள்
வாழ்கின்றார் என்ற உணர்வோடு இறைவனின் திருவுளத்தை
நிறைவேற்றி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
Fr. Maria Antony
இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்
- பிப்ரவரி 02
புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர்
வந்தார். அவரிடம் புத்தர், "நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு
உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத்
தனியாக வரவேண்டும்" என்றார். அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை
4 மணிக்குத் தனியாக புத்தர் இருந்த குடிசைக்கு வந்தார்.
அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், "நான் உன்னைத் தனியாகத்தானே
வரச் சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு
கூட்டிவந்திருக்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அவர், எங்கே
தனக்குப் பின்னால் யாராது இருக்கிறார்களா? என்று
திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், "நான் வெளியே உள்ள
ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச்
சொல்கிறேன்" என்றார்.
தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை
தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான்
சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது
என்று. உடனே அவர் புத்தரிடம், "எனக்கு ஓராண்டு காலம் அவகாசம்
கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக்
கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்"
என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம் வந்தார்.
இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து
தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு,
அவருக்கு ஆசி வழங்கினார்.
துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர்
எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும்
என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.
இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில்
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம்
5:15 ல் கூறுவதுபோல "வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக
இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று இவ்விழாவானது
நமக்கு அழைப்புத் தருகின்றது.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார்,
"இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு
வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின்
தூதர் இதோ வருகிறார்" என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில்
தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய
பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
"தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்" (விப 13:2)
என்ற ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய
தலைப்பேறை ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள்.
அதன்படியே இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில்
காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக்
கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.
இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது
வாழ்க்கையை இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது
விருப்பத்தின்படி வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத்
தன்னையே முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி
வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில்
வாசிக்கின்றோம். குறிப்பாக கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர்
இயேசு சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்பாக, "தந்தையே! உமக்கு
விருப்பமானால் இந்தத் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும்.
ஆனாலும், என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்"
(லூக் 22:42) என்கிறார்.
ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்
அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம்
மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக
கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத்
திருவுளத்தின்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும்
அழைப்பாக இருக்கிறது.
இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், "ஊனும் இரத்தமும்கொண்ட
பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்குகொண்டார்;
இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின்
வழியாக அழித்துவிட்டார்" என்று. ஆம், இயேசு கிறிஸ்து தந்தையின்
விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது வெற்றிகொண்டார் என்றால்,
அவரது சீடர்களாக இருக்கும் நாமும் தந்தையின் திருவுளத்தின்படி
நடந்து சாவின் சக்திகளான வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி
போன்றவற்றைக் களையவேண்டும்.
"சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே
தூய துறவு" என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை
முழுமையாக அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன்
விருப்பத்தை நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை
நிறைவேற்றவேண்டும்.
ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த
விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம்
நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Fr. Maria Anton
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம்
சே.ச. திருச்சி
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான்
பாப்டிஸ்ட் பெங்களூர்
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
காத்திருப்போமா? மீட்புக்காக....
இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே, பொதுக்காலத்தின்
நான்காம் வாரத்தில் நுழைந்து இருக்கக்கூடிய நாம் இன்றைய
நாளில் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட
நாளினை கொண்டாடி மகிழ்கின்றோம். இன்றைய நாளானது துறவிகளின்
நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய நாளில் தங்களது
வாழ்வை இறைப்பணிக்காக அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களுக்காகவும்
சிறப்பாக ஜெபிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.துறவறத்திற்காக,
பொது பணிக்காக தங்களை அர்ப்பணித்த ஒவ்வொரு உள்ளங்களையும்
இன்றைய நாளில் நினைவு கூறுவோம். இன்றைய நாளில் மீட்புக்காக
நாம் காத்திருக்கின்றோமா என்று கருத்தில் வாசகங்கள் அனைத்தும்
நமக்கு கேள்விகளைத்தொடுக்கின்றன? எனவே காத்திருக்கின்றோமா
மீட்புக்காக என்ற தலைப்பில் நாம் என்று சிந்திக்க இருக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் மீட்புக்காக காத்திருப்போர்
யார்? எப்படி? யார் வழியாக வருகின்றது எப்படி வருகின்றது
எவர் வழியாக வருகின்றது என்பது குறித்து தெளிவாக விளக்குகின்றன.
நம்மை ஆயத்தம் செய்கின்றது. அது சுட்டெரிக்கும் நெருப்பாகவும்,
தூய்மைப்படுத்தும் சவர்காரம் போலவும் நம்மை அணுகி வருகின்றது.
அது நம்மைப் புடமிடுகின்றது தூய்மைப்படுத்துகிறது. இதன்மூலமாக
நம்மையே நமது வாழ்வை நாம் காணிக்கை பொருளாக மாற்ற அழைப்பு
விடுக்கின்றது.சாவு அச்சத்தினின்றும், அடிமைத்தனத்தினின்றும்
நம்மை விடுவிக்கின்றது. சோதனைக்கு உட்படுத்தாமலௌம், சோதனைக்கு
உட்பட்டவரை அதிலிருந்து மீட்கவும் செய்கின்றது. சோதிக்கப்படுகின்ற
ஒவ்வொருவருக்கும் உதவி செய்கின்றது. சோதிக்கப்பட்டவர்களுக்கு
உதவி செய்ய வல்லமை தருகின்றது
இவ்வாறாக முதலிரண்டு நற்செய்தி வாசகங்களும் நமக்கு மீட்பை
பற்றிய புரிதலை தெளிவாக எடுத்துரைக்கின்றன. நற்செய்தி வாசகம்
ஐந்து விதமான பண்புகள் உள்ளவர்கள் மீட்பினை கண்டு கொள்வர்
என்று நமக்கு வெளிப்படுத்துகின்றது. அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல்,
எதிர்பார்த்தல் கண்டு கொள்ளுதல், அறிவித்தல்.
முதலாவதாக அர்ப்பணிப்பு:
குழந்தை இயேசு கோவிலில் அர்ப்பணிக்கப்படுகின்றார் ஆண் பேறு
அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம் என்ற பழைய ஏற்பாட்டு வரிகளுக்கு
ஏற்ப குழந்தை இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தனர். அது ஒரு
சாதாரண சடங்காக இருந்தபோதிலும் அதை மரபு மாறாமல் கடைபிடித்து
வருகின்றனர். முதல் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு சொந்தம்
என்பது இன்றும் நாம் கடைபிடித்து வரும் ஒரு செயல். பல இடங்களில்
தங்களது நிலத்தில் விளைந்த முதல் விளைச்சலை கடவுளுக்கு அர்ப்பணிக்க
கூடிய பழக்கம் நம் ஊர்களில் இருந்து வருகின்றது. அது
விளையும் பயிர் ஆனாலும், உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆனாலும்,
வளர்க்கும் கால்நடைகள் ஆனாலும் எதுவானாலும் சரி முதல்
விளைச்சல் கடவுளுக்கு சொந்தம் . இது எல்லாவற்றிற்கும் அது
பொருந்தும். இந்த அர்ப்பணிப்பு மனநிலை நம்மிலும் தொடர்ந்து
வருகின்றது. அது நீடித்து நிலைக்க அருள் வேண்டுவோம்.
இரண்டாவதாக கீழ்படிதல்:
யோசேப்பும் மரியாவும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிகின்றனர்.
இயேசுவின் பிறப்பில் பல்வேறு வித்தியாசமான நிகழ்வுகள் நடந்த
போதிலும் அவரது பிறப்பு வித்தியாசமானதாக இருந்தபோதிலும் அவை
அனைத்தையும் மனதில் கொண்டு யூத சட்டத்திட்டத்திற்கு கீழ்ப்படிகின்றனர்.
முழுமனதுடன் தங்களது முதல் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றனர்.
தங்களால் இயன்ற காணிக்கையை பொருட்களை ஆலயத்தில் செலுத்தி
தங்களது கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் சட்டதிட்டங்களுக்கு
கீழ்ப்படிந்ததால் தான், கடவுளின் திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து
மீட்பரை மகனாக பெரும் பேற்றினைப் பெற்றனர்.நாமும் கடவுளின்
திருவுளம் எது என தெரிந்து நிறைவேற்ற முயல்வோம்.
மூன்றாவதாக எதிர்பார்த்தல்:
சிமியோன் மற்றும் அன்னா இருவரும் தங்களது வாழ்நாளை மீட்பரின்
வருகைக்காக காத்திருப்பதிலேயே செலவு செய்தனர். என்றாவது ஒரு
நாள் மீட்பரைக் காண்போம் என்று நம்பினர். அது போலவே கண்டு
கொண்டனர். நம்மிலும் இந்த எதிர்பார்க்கும் மனநிலையை வளர்த்துக்
கொள்வோம். மீட்பரின் வருமகையை நம் வாழ்வில் எதிர்பார்ப்போம்.
நான்காவதாக கண்டு கொள்ளுதல்:
எருசலேம் தேவாலயத்தில் பல்வேறுவிதமான மக்கள் இருந்தபோதிலும்
சிமியோன் அன்னா என்னும் இருவரும் குழந்தை இயேசுவை மீட்பராக
கண்டு கொள்கின்றனர். ஏராளமான குழந்தைகள் அவ்வாலயத்தில் வந்து
சென்ற போதிலும் இயேசுவை இனம்கண்டு கொள்கின்றனர். மீட்பரின்
வருகையை எதிர்பார்த்து இருந்தவர்கள் அந்த மீட்பை கண்டு
கொள்கின்றனர். நன்மை செய்பவர்களை நாமும் இனம் கண்டு கொள்ள
வேண்டும். அவர்களை இனம் கண்டு அவர்களை போல் நாமும் மாற முயற்சிக்க
வேண்டும்.
ஐந்தாவது அறிவித்தல் :
கண்டுகொண்டதோடு தங்களது பணி முடிந்தது என்று நினைக்கவில்லை
மாறாக தாங்கள் கண்டு கொண்ட மீட்பை மகிழ்வை பிறருக்கு
வெளிப்படுத்துகின்றனர். இதற்காகவே தங்கள் வாழ்நாள் முழுவதும்
காத்திருந்ததாக அறிவிக்கின்றனர். தங்கள் பெற்ற மகிழ்வை பிறரும்
அனுபவிக்க எண்ணி அதனை உரத்த குரலில் வெளிப்படுத்துகின்றனர்.
நாமும் பல நேரங்களில் நம் வாழ்வில் இறைவனால், நன்மையை மகிழ்வைக்
கண்டு கொள்கின்றோம். அதனை பிறருக்கும் அறிவிக்கும் போது அந்த
மகிழ்வு, நன்மை இரட்டிப்பாகும் என்பதை மறந்து விடுகின்றோம்
பெற்ற நன்மையை பிறாருக்கும் எடுத்துரைப்பவர்களாவோம்.
இறுதியாக நாமும் முழு மன அர்ப்பணிப்பு மனநிலையுடன் வாழ முயற்சிப்போம்.
கடவுளின் திருவுளம் இதுதான் என அறிந்து அதற்கு கீழ்ப்படிய
முற்படுவோம். அவரின் வருகைக்காக எதிர்பார்த்து
காத்திருப்போம். அவரை இனம் கண்டு கொள்வோம். இவர்தான் மீட்பர்
என நம் வாழ்வில் நாம் உணர்ந்து அதை பிறருக்கும் அறிவிப்போம்.
இதன் மூலமாக நாம் மீட்பரை கண்டடைய முடியும். நாம் புடமிட
பட்டவர்களாக தூய்மைப்படுத்த பட்டவர்களாக மாறுவோம் இத்தகைய
மீட்பினை நாமும் அடைய காத்திருப்போம் சிமியோன் அன்னா போல.
இறையாசிர் என்றும் நம்மோடு நம் குடும்பத்தில் உள்ள அனைவரும்
இருப்பதாக ஆமென்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
ஆண்டவரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்
இந்த திருவிழாவின் தொடக்கத்தில் இது கன்னிமரியாவின்
தூய்மைச் சடங்கு விழா என்று அழைக்கப்பட்டது. குழந்தை பிறந்த
பிறகு ஒரு பெண் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய
வேண்டியிருந்ததால், இவ்வாறு அழைக்கப்பட்டது. இயேசுவை ஆலயத்தில்
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நற்செய்தி பகுதியை அடிப்படையாகக்
கொண்ட இவ்விழா, கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்த 40
நாட்களில் கொண்டாடப்பட்டது.
தொடக்கத்தில் இந்த திருவிழாவானது கி.பி 400 ம் ஆண்டிலே, எருசலேமில்
கொண்டாடப்பட்டதாக நாம் அறிகிறோம். அதன்பிறகு, ஐந்தாம்
நூற்றாண்டில், இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக, மற்றொரு
வரலாறு கூறுகிறது. பின்பு ஒளி பவனியும் இத்தோடு இணைக்கப்பட்டது.
இது புறவினத்து மக்களின் பாவப் பரிகார சடங்கிற்கு பதிலாகச்
சேர்க்கப்பட்டு, கிறிஸ்தவர்கள் ஒளியேற்றப்பட்ட மெழுகுதிரிகளோடு
பவனியாக ஊரைச்சுற்றி வந்தார்கள். இது இயேசு வரும்போது உலகில்
உள்ள இருள் மறைந்துபோகிறது என்பதை உணர்த்துகிறது. இயேசு
இதற்கு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறார். ஏனென்றால், இயேசு
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறபோது,
சிமியோன் இயேசுவை புறவினத்தார்க்கு வெளிப்பாடு அருளும் ஒளி
என்று கூறுகிறார்.
இந்த ஒளியின் திருவிழாவில் நமது கிறிஸ்தவ வாழ்வு, மற்ற மக்களுக்கு
ஒளியாக இருப்பதற்கு அழைப்புவிடுக்கிறது. வன்முறைகளாலும்,
வெறுப்பாலும் காயப்பட்டு கிடக்கிற மனிதகுலத்திற்கு, கிறிஸ்தவர்கள்
பொறுமையாலும், அன்பாலும், இரக்கத்தாலும் மற்றவர்களின்
வாழ்க்கையில் ஒளியேற்றி, இயேசுவுக்கு சாட்சியாக மாறுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
அருள்முனைவர் மெர்லின் ரெஞ்சித் அம்புரோஸ்
இறைமீட்பின் துவக்கமே இயேசுவை காணிக்கையாக அர்ப்பணித்த விழா
ஆண்டவர் இயேசு கிறிஸ்து குழந்தையாக இருந்தபோது, எருசலேம்
ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வை பிப்ரவரி
2 ஆம் தேதி, நாம் சிறப்பாக கொண்டாடுகின்றோம்.
ஆண்டவர் இயேசுவின் ஆரம்பகால வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான
நிகழ்வு இது. பிப்ரவரி 2 என்றாலே நம் நினைவுக்கு வருவது
மெழுகுதிரிகளோடு நாம் மேற்கொள்கிற பவனிதான். பெரும்பாலான
ஆலயங்களில் கிறிஸ்து பிறப்பிற்கு 40 நாட்களுக்குப் பிறகு,
ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாள், திரு
வழிபாட்டில் குறிப்பிட்டிருப்பது போல, இறையாசீர் மற்றும்
மெழுகுதிரி பவனியோடு தொடங்கி, சிறப்பிக்கப்படுகின்றது.
பொது உரோமை நாள்காட்டி புதுப்பிக்கப்படுவதற்கு முன்பாக இவ்விழா,
கிறிஸ்து பிறப்புகாலத்தின் இறுதி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
சிமியோன் மற்றும் அன்னா இவர்களின் வார்த்தைகளின் வழியாக,
கிறிஸ்து பாலன் மீட்பர் என்ற உண்மையை வெளிப்படுத்துகிற
இந்த நிகழ்வு இன்னொரு திருக்காட்சிப் பெருவிழாவாகக் கருதப்படுகின்றது.
இந்நாளில் நடைபெறும் இந்த மெழுகுதிரி பவனி, கிறிஸ்துவே உலகின்
ஒளி என்பதை உலகிற்கு உரக்கச் சொல்கிறது. ஆலயத்தை நோக்கி நடைபெறும்
இப்பவனியில், கிறிஸ்துவை வெளிப்படுத்திய சிமியோனின்
வார்த்தைகள் அடங்கிய பாடல்கள் பாடப்படுகின்றன.
கத்தோலிக்க மற்றும் மரபு மாறா (Orthodox) திரு அவைகளில்
ஆலயத்தை நோக்கிச் செல்கிற இப்பவனி, கிறிஸ்து பாலன் எருசலேம்
ஆலயத்தை நோக்கி சென்ற நிகழ்வை நமக்கு நினைவு படுத்துகின்றது.
1969 ஆம் ஆண்டு, கீழைத்திரு அவையினர் (Oriental Church) தொடங்கிய
ஆண்டவரை காணிக்கையாக ஒப்புக்கொடுக்கிற இவ்விழாவானது, மேற்கத்திய
நாடுகளில் தாய் மரியின் தூய்மை சடங்கு நாளாக கிறிஸ்து பிறப்பு
காலத்தின் முடிவில் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்து இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நிகழ்வானது,
லூக்கா நற்செய்தியில் 2 ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டவர் அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய லூக்கா நற்செய்தியாளரின்
விவரிப்பு, திருச்சட்டப்படி ஆண் தலைப்பேறை அர்ப்பணிக்கிற
சடங்கையும், தூய்மைபடுத்துகிற சடங்கையும் இணைத்து நமக்குத்
தருகிறது (லூக் 2:23-24). இங்கு, யோசேப்பும், மரியாவும் ஒரு
சோடி மாடப்புறாக்கள் அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளை பலியாக
கொடுப்பதன் வழியாக, ஏழைகளுக்கு உரிய காணிக்கையை (லேவி
12:8) அவர்கள் தெரிவு செய்தார்கள் என்பதை, லூக்கா நற்செய்தியாளர்
வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். லேவியராகமம் 2:1-14 வரை
உள்ள பகுதி, ஒரு ஆண் குழந்தை பிறந்த நாற்பது நாட்களுக்குப்
பிறகு, இந்த அர்ப்பணச் சடங்கை நிறைவேற்ற வேண்டும் என்று
குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த நிகழ்வு
கிறிஸ்து பிறந்த நாற்பது நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான், நமது உரோமைத்
திரு அவை இந்நிகழ்ச்சியை மகிழ்ச்சி நிறை மறையுண்மைகளில்
நான்காவது மறையுண்மையாகக் கொண்டிருக்கிறது.
எருசலேம் ஆலயத்தில் நடந்த இந்த அர்ப்பண நிகழ்வு லூக்கா நற்செய்தியில்
மட்டுமே காணப்படுகிறது. பொதுவாகவே, லூக்கா நற்செய்தியாளர்
ஆலயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருக்கிறார்.
உண்மையில் இவருடைய நற்செய்தி ஆலயத்தில் தொடங்கி, (ஆலயத்தில்
செக்கரியா வானதூதரை சந்தித்தல்) ஆலயத்தில் நிறைவடைகிறது (இயேசுவின்
உயிர்ப்பிற்கு பிறகு அவருடைய சீடர்கள் ஆலயத்திற்கு சென்று
இடையறாது ஆண்டவரை புகழ்ந்து கொண்டிருந்தார்கள்). மேலும்,
இன்னும் பல இடங்களில் ஆலயத்தைப் பற்றிய குறிப்புகள் லூக்கா
நற்செய்தியில் காணப்படுகின்றன.
பண்டைய இஸ்ரயேலர் வாழ்வில் ஏன் ஆலயம் இன்றியமையாத இடத்தைப்
பெறுகின்றது? ஆலயம் என்பது ஆண்டவருடைய உறைவிடம், அது
எல்லாம் வல்லவரை எதிர்கொள்கிற ஒரு தளம், கடவுளும் -
மனிதரும் சந்திக்கிற ஒரு சந்திப்புக் கூடாரம். இறையும் -
மனிதமும் ஒருங்கே சங்கமிப்பது ஆலயத்தில்தான். மனுகுலம்
இறைவழிக்கு திரும்ப இவ்விடம் அவசியப்படுகின்றது.
எப்போதெல்லாம் யாரேனும் ஒருவர் ஆலயத்தில் காணிக்கை
செலுத்துகிறாரோ, அப்போதெல்லாம் அவர் தன் வாழ்வையும்,
மனதையும் மடைமாற்றி இறைவன்பால் திரும்புகிறார். இவ்வாறு,
அவர் கடவுளோடு ஒப்புரவாகின்றார்.
ஆனால், இஸ்ரயேல் நாட்டின் யூத மக்களின் பாவங்கள் ஆலயத்தின்
மேன்மைக்கு மற்றும் புனிதத்திற்கும் ஆபத்தை வருவித்தது.
எனவே, உண்மையில் நிலைமை மோசமானதால் மக்களின் பாவத்தின்
நிமித்தமாக ஆண்டவரின் மாட்சி (செக்கீனா) ஆலயத்தை விட்டு
நீங்கியது என்பதே இறைவாக்கினர் எசேக்கியேலின் கூற்றாகும்.
குறிப்பாக, இறைவாக்கினர் எசேக்கியேல் 8-11 வரை உள்ள
பகுதியில், கடவுளின் மாட்சி முதல் ஆலயத்திலிருந்து
(சாலமோனின் ஆலயம்) வெளியேறியதை, கி.மு 586 ஆம் ஆண்டில்,
எருசலேம் நகரும், ஆலயமும் அழிக்கப்பட்ட நிகழ்வின் ஆரம்பமாக
எடுத்துக் காட்டுகிறார். ஆகவேதான், ஆண்டவரின் மாட்சி
ஆலயத்தைவிட்டு நீங்கியது என்ற இந்த வரிகள் ஒட்டுமொத்த
விவிலியத்திலும் நாம் காண்கிற போது அதிகம்
கலக்கமுண்டாக்கும், பயமுறுத்தும் வரிகளாக கருதப்படுகின்றன.
எனவேதான், இழந்த ஆண்டவரின் மாட்சியை திரும்பக் கொண்டுவர,
அவரைப் புகழ உகந்த இடமாக எருசலேம் ஆலயத்தை மறுசீரமைப்பு
செய்யவேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களின் தீராத வேட்கையாக
எப்போதும் இருந்தது. இந்த ஏக்கத்தை இறைவாக்கினர்களின்
வார்த்தைகளிலும், திருப்பாடல்களிலும் நாம் அதிகம் காணலாம்.
இதைத்தான் இந்த விழாவிற்கென்று நமக்கு தரப்பட்ட மலாக்கி
புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்
நாம் பின்வருமாறு வாசிக்கின்றோம், (மலா 3:1-4) "ஆண்டவர்
சொல்வதாவது,நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம்
கோவிலுக்கு வருவார்". இவ்வாறு, ஆண்டவரின் மாட்சி மீண்டும்
ஆலயத்தில் குடிகொள்ளும் என்று கூறுகின்றார். இந்தப்
புரிதலோடு இந்நிகழ்வை நோக்குகிற போது யோசேப்பும்,
மரியாவும் ஆண்டவர் இயேசுவை ஆலயத்திற்கு கொண்டு வந்தபோது,
மலாக்கி இறைவாக்கினர் உள்ளிட்ட மற்ற பல இறைவாக்கினர்கள்
முன்னுரைத்த இறைவாக்குகள் நிறைவேறியதை நம்மால்
காணமுடிகின்றது. அதாவது, ஆண்டவரின் மாட்சி அவரின்
இல்லிடத்திற்கே திரும்பியது.
இதைத்தான் தூய உள்ளம் கொண்ட சிமியோன் காண்கின்றார்.
மெசியாவின் வருகையை ஆலயத்தில் அவர் காண்கின்றார், கடவுளின்
உடனிருப்பை, அவரின் குடியிருப்பை, மக்கள் ஏக்கத்தோடு
தேடிக்கொண்டிருந்த அந்த மாட்சியை அவர் காண்கின்றார். பழைய
ஏற்பாட்டு இறைவாக்குகளை சிமியோன் நன்கு அறிந்திருந்தார்.
மீட்பரைக் காணும் முன், அவர் இறக்கமாட்டார் என்ற உண்மையை
தூய ஆவியார் அவருக்கு வெளிப்படுத்தி இருந்தார்.
அதனால்தான், குழந்தை இயேசுவை கரங்களில் ஏந்தியதும் அவர்
சொன்னார், "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை
இப்போது அமைதியுடன் போகச்செய்கிறீர். ஏனெனில், மக்கள்
அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை
என் கண்கள் கண்டுகொண்டன." இந்த புகழ் பெற்ற வரிகளைத்தான்
கத்தோலிக்கத் திரு அவையின் குருக்களுக்கான கட்டளை இரவு
செபத்தில் நாம் தினந்தோறும் செபிக்கின்றோம்.
பலி செலுத்துகிறவரைப் போல், கடவுள் மனித வடிவில்
ஆலயத்திற்கு திரும்பிவருகிறார். எதற்காக இந்த பலி?
வீழ்ந்த மனிதத்தை இறைவனோடு ஒப்புரவாக்க, பாவக்கறை
படிந்த மனிதத்தை இறைவனிடம் திரும்பக் கொண்டுவர இந்த பலியை
உண்மையாகவே அவர் நிகழ்த்திக் காட்டினார். இறைவனும்,
மனிதருமான இந்த சின்ன குழந்தை இயேசு, தன் வாழ்வின்
இறுதியில் மீண்டும் இந்த ஆலயத்திற்குள் நுழைந்து, தன் உடலை
புதிய ஆலயமாக அறிவித்தார். பிறகு, மூன்று நாட்கள் கழித்து,
கல்வாரியில் தனது இறுதி பலியை நிறைவேற்றி, சிலுவையில்
தன்னையே ஒப்புக்கொடுத்து, தந்தைக்கு தன்னையே
அர்ப்பணித்தார். எனவே, இன்று நாம் கொண்டாடுவது
கிறிஸ்துவின் முதல் அர்ப்பணத்தை. ஆனால், அவரது இறுதி
அர்ப்பணம் நிகழ்ந்தது சிலுவை மரத்தில். கிறிஸ்து பிறந்த
நாற்பது நாட்களுக்குப் பிறகு, எருசலேம் ஆலயத்தில் நிகழ்ந்த
ஆண்டவரின் அர்ப்பணம் நிறைவடைந்தது கல்வாரி மலையில்.
அக்கல்வாரி பலியின் நினைவைத்தான் நாம் ஒவ்வொரு
திருப்பலியிலும் கொண்டாடுகின்றோம். எனவே, நம் ஆண்டவரை
காணிக்கையாக ஒப்புக்கொடுத்த இந்த நாள் நாம் கொண்டாட
வேண்டிய நம் மீட்பின் தொடக்கம் என்பதில் ஐயமொன்றுமில்லை.
அருள்முனைவர் மெர்லின் ரெஞ்சித்
அம்புரோஸ்
தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்குச் சொந்தம், எனவே அவர்கள்
ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்
(விப13 : 2) என்பது இஸ்ரயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டம்.
அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைக் கோவிலில்
காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
இயேசுவின் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த
சிமியோன், அவரைக் கைகளில் தாங்கி இயேசுக்கிறிஸ்து எப்படிப்பட்டவராக
இருப்பார் என்பதை இறைவாக்காக சொல்கிறார். இயேசு எதிர்க்கப்படும்
அடையாளமாகவும், பலருடைய வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகவும்,
புறவினத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகவும் இஸ்ரேலுக்கு
பெருமையாகவும் இருப்பார் என்பது அவருடைய வாக்கிலிருந்து
வெளிப்படுகிறது.
இவ்விழா நமக்கு கொடுக்கும் அழைப்பு நாம் நமக்கானவர்கள் அல்ல,
கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பதே ஆகும். எனவே நாம் நம்முடைய
விருப்பம் போல அல்ல, நாம் கடவுளின் விரும்பம் அறிந்து கடவுளுக்கு
உகந்தவர்களாக வாழவேண்டும்.
இயேசுகிறிஸ்து கடவுளுடைய திட்டத்தின் படி வாழ்ந்தார். அதற்காக
தன்னுடைய உயிரையே கையளித்தார். இன்றைய இரண்டாம் வாசகத்தில்
இவ்வாறு படிக்கக்கேட்கிறோம்: "சாவின் மீது ஆற்றல்
கொண்டிருந்த அலகையை தன் சாவின்மூலம் வென்றுவிட்டார்." ஆம்
இயேசு நமக்காக உயிர் துறந்து நம்மை மீட்டுக்கொண்டார்.
காட்டில் ஓர் ஆயன் தன்னுடைய ஆடுகளை
மேய்துக்கொண்டிருந்தான். அப்போது திடிரென்று எதிர்பட்ட ஒரு
புலி ஆடுகள் மீது பாய ஆரம்பித்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத
ஆயன், ஆடுகளை அருகே இருந்த ஆற்றுப்பாலத்தின் வழியாக வேகமாக
ஓட்ட ஆரம்பித்தான் ஆனால் அந்த ஆற்றுப்பாலமோ ஒரு மரப்பாலம்,
மரப்பாலத்தில் ஒட்டை வேறு இருந்தது. எனவே அந்த சிறிய ஓட்டையின்
மீது தான் படுத்துக்கொண்டு ஆடுகளை அவன் மீது ஏறி ஓட அனுமதித்தான்.
ஆடுகள் எல்லாம் வேகமாக ஓடி புலியிடமிருந்து தப்பித்தன. ஆயனோ
ஆடுகளின் மிதிபாடுகளால் உருக்குழைந்து கிழே கிடந்தான். ஆடுகளை
விரட்டி வந்த புலி உருக்குழைந்து கிடந்த ஆயனை அடித்து இழுந்துச்
சென்று சாப்பிட்டது. இப்படியாக ஆயன் தன்னுடைய உயிர் தந்து
ஆடுகளைக் காப்பாற்றினான்,
இயேசுகிறிஸ்துவும் நம்மை மீட்க தன் உயிர் தந்தார் (யோவா 10
:10). இந்த நாளில் நாமும் இயேசு கிறிஸ்துவை போன்று பிற வாழ
நம்மையே அர்ப்பணிப்போம். நம்முடைய பணிவாழ்வில் வரும் எதிர்ப்புகளை
எல்லாம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைபோன்று துணிவுடன் எதிர்க்கொள்ள
ஆற்றல் பெறுவோம். அப்போது நாமும் இயேசுவின் உண்மைச் சீடர்களாக
வாழமுடியும்.
மறையுரைச் சிந்தனை
இன்று திருச்சபையானது அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக
ஒப்புக்கொடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றது.
மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதைக்
குறித்த செய்திகள் விவிலியத்தில் இல்லாவிட்டாலும்கூட
திருச்சபை மரபுகளில், குறிப்பாக யாக்கோபு நற்செய்தியில் இதைப்
பற்றி தெளிவான கருத்துகள் இருக்கின்றன.
மரியாளின் பெற்றோர்களான சுவக்கீன், அன்னமாள் இவர்களுக்கு
நீண்ட நாட்களாகக் குழந்தையில்லை. ஆனாலும் அவர்கள் கடவுள்மீது
கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கையினால் தொடர்ந்து இறைவனிடம்
மன்றாடி வந்தார்கள். அவர்களுடைய ஜெபத்திற்கு இறைவன் ஒருநாள்
பதிலளித்தார். ஆம், கடவுள் அவர்களுடைய முதிர்ந்த வயதில் மரியாவைக்
குழந்தையாகத் தந்தார்.
கடவுள் தங்களுக்கு இந்த முதிர்ந்த வயதில் குழந்தைப் பாக்கியம்
தந்ததை நினைத்து அவர்கள் மரியாவை கோவிலிலே காணிக்கையாக ஒப்புக்கொடுகிறார்கள்.
மரியாள் இளம்பெண் ஆகும்வரை அங்கேயே இருந்து பணிசெய்தாள்.
இதுதான் யாக்கோபின் நற்செய்தி என்ற அந்த நூலிலே காணக்கிடக்கிறது.
கி.பி.543 ஆம் ஆண்டு முதலாம் ஐன்ஸ்டீனியன் என்ற மன்னன் எருசலேம்
திருக்கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் சிதைந்து இருப்பதை
கண்டான். அதனை அவன் சீரமைத்து மரியாளுக்கு ஒப்புக்கொடுத்தான்.
கி.பி. 1585 ஆம் ஆண்டு அன்று திருத்தந்தையாக இருந்த ஐந்தாம்
சிக்தூஸ் என்பவர் இவ்விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.
இவ்வாறு மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட
இவ்விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இந்த விழா நமக்கு என்ன
செய்தியைத் தருகிறது என்று இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட
வாசகங்களின் வழியாக சிந்தித்துப் பார்த்து நிறைவு
செய்வோம்.
கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பாடல் என்பது இறைவனுக்கு
முற்றிலும் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்பது; கலாத்தியார்
2:20 ல் பவுலடியார் கூறுவது போல, "வாழ்வது நானல்ல என்னில்
கிறிஸ்துவே வாழ்கிறார் என்ற மனப்பான்மையில் வாழ்வது. வேறு
வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் ஒரு அடிமை போன்று ஆண்டவருக்காகவே
வாழ்வது.
மரியாள் கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர்
தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கணமும் "என்னுடைய விருப்பம் அல்ல,
உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்று இறைத்திட்டத்தின்
படி வாழ்கின்றார். அதற்காக எப்படிப்பட்ட இன்னலையும் சந்திக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, "யார் என்னுடைய
தாய், சகோதரர்கள்?" என்று கேட்டுவிட்டுச் சொல்வார்,
"விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே
என்னுடைய தாயும், சகோதர சகோதரிகளும் ஆவார்" என்கிறார். அந்தவகையில்
மரியாள் இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்லாமல், இறைத்திருவுளத்தின்படி
நடந்ததனாலும் இயேசுவுக்கு தாயாகிறார்.
இறைத்திருவுளத்தின்படி நடத்தல் என்றால் என்ன? இறைவனின்
விரும்பம் என்ன என்பதை அறிந்து, அவருக்கு மட்டுமே பணிசெய்து
வாழ்வதுதான் இறைத்திட்டதின் படி நடப்பதாகும்.
தில்லியிலே ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக சூஃபி ஞானி
ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகச்சிறந்த கவிஞர், பாடகரும்கூட.
மக்கள் அவருடைய கவிதையைக் கேட்டு மெய்மறந்து நிற்பார்கள்.
அந்தளவுக்கு திறமையானவர். ஒருநாள் ஞானியைப் பற்றி கேள்விப்படும்
அரசன், அவரிடம் சென்று, "என்னைப் பற்றி கவிதை பாடினால் உங்களுக்கு
ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்" என்றான். அதற்கு அந்த ஞானி,
"ஆண்டவனைப் பாடல் பாடும் இந்த நாவால் அற்ப மானிடப் பதராகிய
உன்னைப் பற்றியெல்லாம் பாட முடியாது" என்று சொல்லி மறுத்துவிட்டார்.
உடனே அரசன் தன்னுடைய உடைவாளை எடுத்த சூஃபி ஞானியின் தலையை
ஒரு சீவு சீவினான். தலை கீழே தரையில் விழுந்தது. ஆனாலும்
உடலில் இருந்த பலத்தால் அந்த ஞானி கீழே கிடந்த தன்னுடைய தலையை
எடுத்துக்கொண்டு தான் வாழும் கோவிலுக்குச் சென்று அங்கே மரித்தார்
என்பது ஒரு நிகழ்வு. மக்கள் இன்றைக்கும் அவருடைய கல்லறைக்குச்
சென்று வணங்கிவிட்டு வருகிறார்கள்.
ஆண்டவனுக்கு மட்டுமே அடிபணிவேன், வேறு யாருக்கும் அல்ல" என்று
சொல்லி தன்னுடைய இன்னுயிரை ஈந்த அந்த சூஃபி ஞானியின் செயல்
பாராட்டுக்குரியது.
இயேசுவின் சீடர்களாகிய நாம் ஒவ்வொருவரும், மரியாள்
கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட விழாவைக்
கொண்டாடும் இவ்வேளையில் மரியாவைப் போன்று இறைவனுக்கு மட்டுமே
பணிசெய்வேன், அவரது திட்டத்தின் படி மட்டுமே நடப்பேன் என்று
உறுதி ஏற்போம். அதன்விழியாக இறையருள் பெறுவோம்.
மரியாள் பயணமாகும் திருச்சபை என்ற ஓடத்தை விண்ணகம் என்ற
துறைமுகத்திற்குள் கூட்டிச் சேர்பவள் புனித ஜெர்மானுஸ்.
மறையுரைச் சிந்தனை
'சிமியோன் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு
வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை
அவர் பெற்றிருந்தார்'' (லூக்கா 2:25)
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்த நிகழ்ச்சியை விவரிக்கின்ற
லூக்கா சிமியோன் என்னும் நேர்மையாளர் பற்றியும் அன்னா என்னும்
திருப்பணியாளர் (லூக் 2:37) பற்றியும் உயர்வாகக்
குறிப்பிடுகிறார். இவ்விருவரும் கடவுளின் திருவுளத்திற்குப்
பணிந்து வாழ்ந்தவர்கள்; கடவுளை மையமாகக் கொண்டு தங்கள்
வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். இயேசு கோவிலுக்கு வந்ததும்
இவர்கள் கடவுளின் திட்டம் இயேசுவில் நிறைவேறுவதைக் கண்டுகொள்கிறார்கள்.
பழைய ஏற்பாட்டு நேர்மையாளர்கள் வரிசையில் உயர்வாக எண்ணப்படுகின்ற
சிமியோன், அன்னா ஆகிய இருவரும் யூத சமய அருள்நெறிக்குச்
சீரிய எடுத்துக்காட்டுகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். கடவுளின்
வழி யாதெனக் கண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடிப்போர் அவருடைய
அன்பிலும் அருளிலும் நிலைத்திருப்பார்கள். கடவுளிடத்தில்
முழு நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
சிமியோன் நேர்மையாளராக இருந்தார் என்பது அவருடைய வாழ்க்கை
முறையில் துலங்கியது. கடவுள் தம் மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் நிறைவேறும் என சிமியோன் உறுதியாக நம்பினார்.
அந்த நம்பிக்கையின் காரணமாக அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார்.
கடவுள் வாக்களித்த மீட்பு இயேசுவின் வழியாக நிறைவேறப்
போகின்றது என்னும் உண்மை சிமியோனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
நம் வாழ்க்கையில் கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதை நாம்
ஒவ்வொரு நாளும் காணலாம். கடவுளின் அன்புக் கரம் நம்மை வழிநடத்துவதை
நாம் உணரலாம். நேர்மையான மன நிலையோடு கடவுளை அணுகுவோருக்கு
அவருடைய ஆவி வாக்களிக்கப்படுகிறது. அந்த உறுதி நமக்கு
இருப்பதால் நாமும் இறைப்பற்றுக் கொண்டு, இறைவழியில்
தொடர்ந்து வழி நடக்க முன்வர வேண்டும்.
மன்றாட்டு:
இறைவா, எங்கள் உள்ளம் நேர்மையாய் இருக்க அருள்தாரும்.