புதிய ஒளி ஏற்றி, நன்மை பொழிந்து, நிறைவான வாழ்க்கை வாழ புதிய ஆசீர்வாதம்,
புதிய தீர்மானம், புதிய செயல், புதிய முயற்சி, புதிய உற்சாகம்,
புதிய எண்ணம், புதிய நேசம், புதிய உறவு, புதிய சிந்தனை, புதிய சாதனை,
புதிய வெற்றி, புதிய புகழ், புதிய மகிழ்ச்சி என அடுக்கடுக்கான
புதிய நலன்களால் ஆண்டு முழுவதையும் மாற்றி அற்புதங்களாலும், அதிசயங்களாலும்
நிரப்பிட இந்தப் புத்தாண்டு நம்மை இந்த திருப்பலிக்கு அழைக்கின்றது.
மனசுக்குள் உள்ள தேவையற்ற பழைய கசப்பான நினைவுகளுக்கு, தேவையற்ற வருத்தமான,
அச்சமூட்டும் பிரச்சனையான சிந்தனைகளுக்கு எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு
விடைகொடுப்போம்.
புதிய தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களுக்கு இடம் கொடுப்போம். தன்னம்பிக்கை
தான் வெற்றியின் அடிப்படை ரகசியம். எதுவாக நினைக்கிறோமோ அந்த எண்ணத்தால்
நம் மனசு முழுவதையும் நிரப்பிக்கொள்வோம்.
வாழ்க்கை என்பது நேசிப்பதற்கும், வாசிப்பதற்கும், யோசிப்பதற்க்கும்,
பகிர்வதற்க்கும் நமக்கு கிடைத்த வாய்ப்பு, அதை பயன்படுத்துவோம்.
வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம், அதை நழுவவிடாதிருப்போம்.
வாழ்க்கை என்பது ஒரு இலட்சியம், அதை அடைவதில் முழு மூச்சுடன் செயல்படுவோம்.
வாழ்க்கை என்பது ஒரு கடமை, அந்தக் கடமையை மிகச் சரியாகச் செய்வோம்.
வாழ்க்கை என்பது ஒரு மகிழ்ச்சி, அதை அனுபவிப்போம். இந்த புதுவருட
நாட்களில் எல்லா நாளும் அன்னை நம்மை புது வழியில் வழி நடத்துவார்.
இறைவனின் தாய் நமது தாய். நமது வாழ்வை வளப்படுத்தும் காரணி அன்னை
மரியாள்.
எனவே இந்த புத்தாண்டில் நமது ஆசைகள், கனவுகள், தீர்மனங்கள், தேவைகள்
எவை என பட்டியலிட்டு, அவைகளை அடைவதற்குரிய ஆற்றல் தரும் அன்னை மரியாளிடம்
ஒப்புக் கொடுப்போம். நம் தேவையை நிறைவேற்றும் அருளை அன்னை மரியாளும,;
அவர் மகன் இயேசுவும், இந்த திருப்பலி வழியாக நம்மில் பொழிகின்றார்கள்.
புத்துணர்ச்சியுடன் பங்கேற்று பலன் பல பெறுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. புதிய ஆசீர் தரும் தேவனே! திருச்சபையை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுமக்கள்
அனைவரும், புத்தாண்டிலே உமது ஆசீரை இன்னும் அதிகமாய்
பெற்று, தங்கள் பணியை வளமாக செய்ய அருள் பொழிய
வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
2. படைப்புகளை புதுப்பிக்கும் தேவனே!
நாட்டு மக்களுக்கு நலன் தரும் புத்தாண்டு பிறக்கின்ற
இந்த வேளையிலே, நாட்டு தலைவர்கள் அனைவரும் மக்களின்
நலனுக்காக புத்துணர்ச்சியூட்டும் புதிய முயற்சிகளை எடுத்து,
நேர்மையோடு உழைக்க அருள் பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
3. புத்தம் புதிய சிந்தனை தரும் தேவனே!
புத்தம் புதிய வழிகளில் சலிப்பின்றி உம்மோடு உறவாட,
எமக்காய் வழிகாட்டும் எமது பங்கு குருவின் புதிய சிந்தனையால்,
எங்கள் இறைமக்கள் நிறைவாய் வாழ அருள் பொழிய
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. புதிய குடும்பங்களை உருவாக்கும் தேவனே!
எங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற குழப்பங்கள், சந்தேகங்கள்,
பிரச்சனைகள் தீரவும், புதிய உற்சாகம், புதிய நன்மைகள்
பொழிந்து உமதன்பின் பராமரிப்பில் எங்கள் குடும்பங்களை
உருவாக்கவும் இறையருள் பொழிய வேண்டுமென்று, உம்மை மன்றாடுகிறோம்.
5. புதிய கலைகளால் உலகிற்கு மெருகூட்டும் தேவனே!
இயற்கையான கலைகளை உருவாக்கி அவைகள் வழியாக பிளவுகள்,
சண்டைகள், நோய், பசி, கொடுமை, அவமானம் இவைகள் அகன்று,
மக்கள் மத்தியில் மனித மாண்பும், அன்பும் வளர்ந்து
புதிய உலகு உருவாக அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
6. மனம் விரும்புவதைத் தரும் தேவனே!
பழைய காயங்கள் மறந்து புதிய வாழ்க்கை வாழ விரும்பி மனதை
தயாரித்துக் கொண்டிருக்கும், எங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும்.
நல்ல தீர்மானங்கள் எடுத்து, அவைகள் வழியாக உம்மை அனுபவித்து
மகிழும் அருள் பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
7. புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் தேவனே!
இளையோருக்கு வேலை வாய்ப்பும், நோயுற்றோருக்கு நற்சுகமும்,
முகவரி இழந்து அன்பை தேடிக் கொண்டிருப்பவர்க்கு அன்பும்,
புதிய கண்டுபிடிப்பாளர்களின் பயன்தரும் கண்டுபிடிப்புகளால்,
மனிதம் கூடுதலாக நேசிக்கப்படவும் அருள் பொழிய
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
திருப்பலி முன்னுரை GnaOli
அருட்பணி. ராபர்ட் உதவிப் பங்குத்தந்தை
புனித.விண்ணரசி அன்ன மேற்கு மரியநாதபுரம்,திண்டுக்கல்
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி
மரியா பெருவிழா புத்தாண்டுப் பெருவிழா ஜனவரி 1-2023
முதல் வாசகம் - எண்ணிக்கை 6:22-27
+இரண்டாம் வாசகம் கலாத்தியர் 4:4-7
நற்செய்தி வாசகம் - லூக்கா 2:16-21
தாயாவோம்
ஒரு முறை பேருந்திலே நான் கண்ட காட்சி. பேருந்து
நகர்ந்து செல்ல பயணிகளின் கூட்டமும் அதிகமாகிறது. அந்த
பேருந்தில் தாய் ஒருவர் தன்னுடைய கைக்குழந்தையோடு
ஏறுகிறாள். இதைப்பார்த்த சக பயணி அந்த தாயின்
சிரமத்தைப் போக்க தாயின் கையிலிருந்த அந்த குழந்தையை
வாங்கி அவரது மடியில் வைத்துக்கொள்கின்றார். பேருந்து
நகர நகர பயணிகளின் கூட்டத்தால் தாயுக்கும்
குழந்தைக்கும் உள்ள இடைவெளியானது மறைந்து போகின்றது.
தாயானவளை காணவில்லையே என நினைத்த குழந்தை ஓ என அழுதது.
தன் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட தாயானவள் கூட்டத்;தை
ஒதுக்கி தன் முகத்தைக்காட்ட குழந்தை தாயை அடையாளம்
கண்டு அழுகுரல் நின்று போகின்றது. ஒரு சாதாரண தாயானவள்
தன் குழந்தையை அறிந்திருக்கிறாள் எனில் கடவுளின்
தாயானவள் நம்மை எப்படி அறிந்து வைத்திருப்பாள்?
அப்படிப்பட்ட கடவுளின் தாயைத்தான் இன்று திரு அவை
நினைவு கூறுகிறது.
உலக வரலாற்றில் எத்தனையோ தாய்மார்கள் பிறந்து வளர்ந்து
வாழ்ந்திருந்தாலும் ஒரு பெண் மட்டும்தான் இறைவனின்
தாய் என்று அழைக்கப்படுகின்றாள். அவள்தான்
முப்பொழுதும் கன்னியாக எப்பொழுதும் அன்னையாக
விளங்குகின்ற கன்னிமரியாள். இவருக்கு மட்டும் ஏன்
இப்பேர்பட்ட சிறப்பு? இறைவனுக்கு தனது வாழ்வில்
முதலிடம் கொடுத்து அவரிடம் மட்டுமே இன்பத்தைத்
தேடிவாழ்ந்த பெண்ணொருத்தித் தேவைப்பட்டாள். அந்தத்
தேவையை நிறைவு செய்து அருள் நிறைந்தவளாக வாழ்ந்து
இறைவனின் இதயத்தைத் தொட்டவள்தான் கன்னி மரியாள்.
மீட்பின் சரித்திரத்திலே தன்னைப் பற்றிக்கொண்டு
தன்னிடமிருந்து அனைத்து வரங்களையும் பெற்றுக்கொள்ள
இருகரம் விரித்து தனது மக்களை இறைவன் அழைத்த
வண்ணமாயிருந்தார். ஆனால் கன்னிமரியாள் மட்டும் கடவுளை
கண்டடைந்தார். அதுவும் தன்னுடைய வாழ்வால் தனது கற்பால்
தனது ஏழ்மையால் தனது கீழ்படிதலால் இறைவனை அடைந்தார்.
அதற்காக கடவுள் அவருக்கு அளித்த பரிசு இறைத்தாய்மை.
அப்படிப்பட்ட அந்த தாய் தான் பெற்றெடுத்த திருமகனுக்கு
இயேசு எனும் பெயரிட்டார். இயேசு என்றால் கடவுளின்
மீட்பு என்று பொருள்படும். கடவுளின் மீட்பு என்பது
கடவுள் கன்னிமரியிடமிருந்து பிறந்தார் என்பதை பெயர்
சூட்டு விழா சுட்டிக்காட்டி அவ்விழா கன்னிமரி கடவுளின்
தாய் இறைவனின் அன்னை என்பதை ஊரறிய உலகறியச் செய்கிறது.
அந்தக் கடவுளின் தாயைப்போல நாமும் கடவுள்
விரும்புகின்ற தாயாக தந்தையாக வாழ வேண்டுமெனில் வாக்கு
வடிவிலே நம்மோடு உறையக்கூடிய இறைமகனை அடையாளம் கண்டு
கொள்ள வேண்டும். அந்த வாக்கை இறைவார்த்தையை
விவிலியத்தை நாம் நம்முடைய வாழ்வில் அடையாளம் காணும்
போது நாமும் கூட ஒரு வகையிலே கடவுளை இந்த உலகிற்குப்
பெற்றெடுத்துக் கொடுக்கும் தாய்மை நிலையை
அடைந்தவர்களாவோம். - ஆமென்
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா 01 01 2023
சந்தோஷம் தந்திடவே
புத்தாண்டு வந்ததிங்கே!
மனதோடு மகிழ்ந்திடவே
சங்கீதம் தந்ததிங்கே!
புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி இந்த இனிய ஆண்டின் முதல்
திருப்பலிக்கு அன்போடும் மகிழ்வோடும் வரவேற்கின்றோம்.
கடந்த ஆண்டினை கரம்பிடித்து கடக்கச் செய்த இறைவனுக்கு நன்றி
செலுத்தவும், புதிய ஆண்டுக்கான ஆசீரையும், அரவணைப்பையும் இறைவன்
கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளவும் இன்று அழைக்கப்படுகின்றோம்.
முடியும் இந்த இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்.
மலரும் புதிய பொழுது மகிழ்ச்சியின் தொடக்கமாக இருக்கட்டும்.
மங்கல கீதத்தினை மனது ஒலிக்கட்டும்.
மனுமகனின் வரவால் மனது ஒளிரட்டும்.
கடந்த ஆண்டிலே பிறரையும், அதனால் இறைவனையும் கஷ்டப்படுத்திய
காரியங்களுக்காக வருந்துவோம்.
மனக்குறையை நம்முள் அகற்றுவோம்.
மனக்குறையை இறைவன் அகற்றுவார்.
அன்னை மரியாவைப் போல தாழ்ச்சியை நம்முள் தரித்துக்கொள்வோம்.
இறைமகனே இவ்வுலகில் மானிடனாய் பவனி வந்த எளிமையை அணிந்து கொள்வோம்.
புத்தாண்டுக்காக நம் மனைகளை தூய்மைப்படுத்துவதிலும் நம் மனங்களை
தூய்மைப்படுத்துவோம். உயிருள்ள ஆலயங்களாகி உள்ளத்தில் இறைவனை
வரவேற்போம்.
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக என்று இன்றைய
ஆசீர்வாத வார்த்தைகளை தருகின்றது முதல் வாசகம்.
இறைவன் ஆசீர்வதிக்கவே ஆவலாய் இருக்கிறார்.
அதை அள்ளி பருக முனைப்பாய் இருப்போம்.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு என பெயரிடப்பட்டதை நமக்கு
வெளிப்படுத்துகின்றது. பாலகனின் மகிமையை வெளிப்படுத்த வேண்டிய
இயேசுவின் நாமம் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது
புரட்சியின் நாமம், இது மகிமையின் நாமம், இது மீட்பின் நாமம்
என்பதை உணர்ந்து கொண்டு உள்ளத்தால் மாட்சிப்படுத்துவோம்.
புத்தாண்டில் வரம் கேட்போம்.
கடந்த ஆண்டின் காயங்கள்
புத்தாண்டின் அனுபவங்களாய் மாறட்டும்.
எம் நாட்டின் ஏழ்மை காற்றோடு பறக்கட்டும்.
பாரதம் முழுவதும் பசுமை பிறக்கட்டும்.
மதங்கள் பிடித்த மனங்கள் மறையட்டும்.
சாதி வெறியற்ற சகாப்தம் தொடரட்டும்.
யாவரையும் சமமாய் போற்றும் சரித்திர
ஆண்டாய் புத்தாண்டு பிறக்கட்டும்.
மனதில் மகிழ்வோடு நெஞ்சின் நிறைவோடு மீண்டும் புத்தாண்டு
வாழ்த்துக்கள் கூறி திருப்பலியில் பங்கேற்போம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. மீண்டும் ஒரு புத்தாண்டைத் தந்து ஆசீர்வதித்தவரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திரு அவைத்தலைவர்,
பணியாளர்கள் அன்பின் நிறைவால் மக்களை வழிநடத்தவும், சமூக
சீர்கேடுகளை சாடும் துணிச்சலைத் தரவும், இறையாசீரை மக்களுக்கு
பெற்றுத் தரும் வழியாய் அமைந்து புத்தாண்டு சிறப்பாய் அமைய இறை
ஆசீர் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. கடந்ததை நினைத்துக் கலங்காதே என்றவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆளும் தலைவர்கள், அதிகாரிகள் நாட்டை மதத்தால் கூறு
போடாமல், நல்வாழ்வுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவும், மக்களை
வருத்தும் சட்டங்களையும், வரிச் சுமைகளையும் திரும்பப் பெற்று,
புத்தாண்டில் மக்களின் மகிழ்வுக்கான செயல்களை இயற்கையோடு இணைந்து
செயல்படுத்த, நல்லறிவு தர வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
3. உம் திருமுக ஒளியை எம்மீது வீசச் செய்பவரே எம் இறைவா!
எம் வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க துணிவையும்,
உம் துணையையும் எமக்குத் தந்து, எங்கள் குடும்பத்திற்கும்
சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாக வாழ்வை மேற்கொள்ளவும், பிறருக்கு
எங்கள் உதவியையும், நேரங்களையும் பகிர்ந்து கொள்ளவும் தேவையான
மனநிலையை நாங்கள் பெற்றுக் கொள்ள வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
4. விண்ணக கருவூலத்தை திறந்து ஆசீர்வதிப்பவரே எம் இறைவா!
எம் பகுதியில் வேளாண்மை சிறக்க தேவையான பருவகால சூழ்நிலையைத் தந்து
விளைச்சல் அதிகப்படவும், குடும்ப பொருளாதார நிலை உயரவும்,
புத்தாண்டில் குடும்பங்களில் அமைதி, மகிழ்ச்சி பெருகவும்,
படிக்கும் மாணவர்கள் சிறந்த ஞானத்தோடு பயிலவும், வேலைவாய்ப்பு,
திருமணம், குழந்தை வரத்திற்காக ஏங்கிக் காத்திருப்போர் இந்த
ஆண்டில் உறுதியாய் பெற்றுக்கொள்ள வரம் வேண்டும் என்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும்
மாளிகைதான் புதிய ஆண்டு - அது
காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம்.
புதிதாகப் பிறக்கும் புத்தாண்டுகள்
ஒவ்வொன்றும் பழையனவாகி
மற்றொரு புத்தாண்டு பிறந்து கொண்டே இருக்கிறது.
இறைத்தந்தை நமக்களித்துள்ள புத்தாண்டு 2023- ஐ
மகிழ்வுடன் கரம் குவித்து வரவேற்போம்.
இன்று முப்பெரும் விழாவைக் கொண்டாடுகிறோம். இறைவனின்
அன்னையாகிய தூய கன்னிமரியாள் பெருவிழா. மனுவுரு எடுத்த
பாலனுக்கு இயேசு எனப் பெயர் சூட்டிய விழா மற்றும்
புத்தாண்டு விழா.
கடந்த ஆண்டிலே கடவுளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட
நன்மைகளையும், புதிய ஆண்டிலே வரவிருக்கின்ற நலன்களையும்
நன்றியோடு நினைத்துப் பார்த்திட சரியான தருணம் இந்த
புத்தாண்டு பிறக்கின்ற நேரமே!
"இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற
எண்ணத்தைத் திண்ணமற இசைத்துக் கொண்டு
இருந்து இன்புற்று வாழ்வீர்!" என்றார் பாரதி.
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவது நமது பண்பாடு.
பெற்றோரின் ஆசி, வளத்தோடு வாழ்நாள்களைக் கூட்டும் ஆற்றல்
கொண்டது. ஆசானின் ஆசி, அறிவுச் செல்வர்களாக
உருவாக்கக்கூடியது.
பெரியோர்களின் ஆசி அருள்செல்வத்தோடு பொருள் செல்வங்களையும்
அள்ளித்தரும். இன்று சிறப்பாகக் கடவுளின் ஆசி நம்மை
நிறைத்து நிற்கிறது.
ஆண்டவர் உங்களுக்கு ஆசி வழங்கி உங்களைக் காப்பாராக.
ஆண்டவர் தம் திருமுகத்தை உங்கள் மேல் ஒளிரச் செய்வாராக!
உங்கள் மீது அருளைப் பொழிவாராக.
இப்புத்தாண்டு முழுவதும் கடவுள் நம்மைக் காப்பாராக என்ற
வாழ்த்தொலியோடும்,
"உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத்
தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும்
நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான திட்டங்களே அன்றி
கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல" என்று நம்பிக்கை
தருகிறார் எரேமியா இறைவாக்கினர். (எரே 29:11)
ஆண்டின் தொடக்க நாளாகிய இன்று தாய்த்திருச்சபை தூய
மரியாவைக் கடவுளின் தாயாகப் போற்றிச் சிறப்பிக்கிறது.
கன்னிமரியாளின் அன்பும் பாசமும் பராமரிப்பும் பாதுகாப்பும்
நம்மோடு இருந்து நம்மை ஆண்டு முழுவதும் காக்க வேண்டுமென்று
அன்னை மரியாள் வழியாகக் கடவுளிடம் ஒப்படைப்போம்.
இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம். செவிகளுக்கு
இனிமையானது. இயேசுவின் பெயருக்கு விண்ணவர் மண்ணவர்
கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். நாம் மீட்படைய இயேசுவின்
பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை என்ற
சிந்தனையை மனதில் கொண்டு இயேசுவின் வழியில் பயணிக்க
முயற்சியெடுப்போம்.
பார்க்கும் முகமெல்லாம் பழகும் மனிதரெல்லாம்
புதிதாய் பிறந்தவர்கள் என்ற புரிதலில்
பகைமை துறப்போம். வெறுப்பை மறப்போம்.
எல்லோரும் புதிதாய் பிறப்பதால்
அனைவரும் சகோதரர்களே என்ற உணர்வோடு
உறவுப் பயணத்தை உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும்
தொடங்குவோம்.
"புலரும் இந்தப் புத்தாண்டில் நன்மைகள் நிரம்பட்டும்
நம் நம்பிக்கைகள் நிமிரட்டும். புண்ணியம் பொங்கட்டும்.
புது நன்மைகள் பெருகட்டும.; உண்மைகள் ஒளிரட்டும்;
சமூக உறவுகள் உயரட்டும். மன்னிப்பு மலரட்டும்.
மனித மனங்கள் விரியட்டும்.
வளமைகள் சேரட்டும் நம் வாழ்வு செழிக்கட்டும்!
என்ற உணர்வோடு இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையாசீர்
நிறைவாய் பெறுவோம்.
இறைமக்களின்
மன்றாட்டுக்கள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக்
கேட்டருளும்.
1. விடிவெள்ளியாம் எம் இறைவா!
எம் திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருஅவையை வழிநடத்தும்
திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர்
அனைவரையும் சிறப்பாக ஆசீர்வதியும். இந்த புதிய ஆண்டில்
அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உம்மை
மையப்படுத்தியதாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
2. அருளின் ஊற்றே எம் இறைவா!
இந்த நன்னாளில் எமது நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்காக
மன்றாடுகிறோம். ஆயன் தம் மந்தைகளை வழிநடத்துவது போல்
இவர்களும் பிறர் நலத்திற்காக உழைத்திடவும், மக்கள் நலனையே
மையமாகக் கொண்டு ஆளுகின்ற மனப்பக்குவத்தை அவர்களுக்கு
தந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
3. வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா!
எம் பங்கு திருஅவையை ஆசிர்வதியும். இப்புதிய ஆண்டில்
இறையன்பிலும் பிறரன்பிலும் எங்கள் குடும்பங்கள்
சிறந்திடவும், வறுமை நீங்கி செழுமை பிறந்திடவும்,
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிவு பெற்றிடவும் இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
4. வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா!
எம் பங்கில் உள்ள சிறுவர், சிறுமியர்கள் இறைஞானத்தில்
வளரவும், கல்வி கேள்வி செல்வங்களில் சிறந்திடவும், எம்
இளைஞர்கள் நவீன ஊடக உலகிலே தங்களை அழித்து விடாமல்,
உண்மையான வாழ்வின் நெறிகளை கண்டுணரவும், அதன்படி தங்கள்
வாழ்வை அமைத்து கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
நன்றி: அருட்சகோதரி ஷீலா குளுவு, மேலமெஞ்ஞானபுரம்.
திருப்பலி முன்னுரை
ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின், பாவூர்சத்திரம்.
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா
புலர்ந்துள்ள இனிய புத்தாண்டின் முதல் நாளிலே நம்
திருச்சபையானது அன்னை மரியா இறைவனின் தாய் என்ற
திருவிழாவைக் கொண்டாடி மகிழ நம்மை அழைக்கின்றது.
மேகத்தைச் சிறப்பித்துப் புகழ்வது அது கொடுக்கும்
மழைக்காக் மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிகளுக்காக்
பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக் அன்னை மரியாவை
சிறப்பித்துப் புகழ்வது அவர் பெற்றெடுத்த உலக மீட்பர்
இயேசுவுக்காக.
தந்தையாம் கடவுளின் திருவுளத்தில் தூய ஆவியாரின்
உடனிருப்பில் மானிட உடல் ஏற்று வாக்களிக்கப்பட்ட
வார்த்தையான மெசியாவுக்கு தாயாகும் பேற்றினை பெற்றுள்ளதால்
படைப்பு உயிர்களில் சிறந்தவராக போற்றப்படுகிறார்.
இன்றைய முதல் வாசகத்திலே ஆசிகள் வழங்கப் பெறுவதையும்,
வழங்கும் முறையைப் பற்றியும் விடுதலைத் தலைவர் மோசே வழியாக
ஆரோன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எடுத்துரைக்கின்றது
எண்ணிக்கை திருநூல். இப்புத்தாண்டில் ஆண்டவர் தம்
திருமுகத்தை நம்மீது திருப்பி நம்மை பாதுகாப்பார் என்ற
நம்பிக்கைச் செய்தியைப் பெற்று இறை பராமரிப்பில் வாழ்வோம்.
இரண்டாம் வாசகத்திலே நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற
நிலையில் எந்தவிதமான அடிமைத்தனங்களுக்கும் உள்ளாகாதவாறு
வாழ வேண்டியது நமது கடமை என்பதை புனித பவுலடியார்
கலாத்தியருக்கு எழுதிய மடலில் உணர்த்துகின்றார்.
இன்றைய நற்செய்தியிலே மீட்பராக பிறந்த இயேசுவின்
திருமுழுக்கு நிகழ்வை வாசிக்கின்றோம். இப்பெருவிழா நாளில்
நமக்குப் பெயரிடப்பட்ட திருமுழுக்கு நாளை நினைவு கூர்வோம்.
அந்த அருள்பொழிவில் நமக்கு வழங்கப்பட்ட உரிமைகளாகிய
கடவுளின் திருச்சபையின் பிள்ளை என்பதில் பெருமகிழ்வு
கொள்வோம். இப்புத்தாண்டில் இறைவனது ஆசிகளால் நிரப்பப்பட
இப்பலியிலே இறையருளை வேண்டுவோம்.
மன்றாட்டுகள்:
1. ஆசி வழங்குகின்றவரே இறைவா!
எங்களது அன்றாட வாழ்வில் நீரே மையமாக இருந்து எங்களுக்குத்
தேவையான பாதுகாப்பு, அருள், அமைதி இவற்றை அளித்து எங்களது
வாழ்வை வளப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. புதுவாழ்வைத் தருகின்றவரே இறைவா!
புதிதாகப் பிறந்துள்ள இப்புத்தாண்டிலே நாங்கள் எதிர்நோக்கி
காத்திருக்கின்ற தேவைகள் அனைத்தும் நிறைவேறவும், ஒவ்வொரு
நொடிப்பொழுதும் உடனிருந்து எங்களைப் பாதுகாத்து
பராமரித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்னை மரியாளை எமக்குத் தாயாகத் தந்தவரே இறைவா!
அன்னைமரி இறைவனின் தாய் என்று கொண்டாடி மகிழ்கின்ற
இந்நாளிலே அன்னையின் பாதுகாப்பிலும், பரிந்துரையிலும்
இறையருளைப் பெற்றிடவும், உலக தாய்மார்கள் அனைவரும்
மதிக்கப்படவும் தங்களது நிலையினை புனித நிலையாக கருதி
வாழ்வதற்குத் தேவையான உமது அருளைப் பொழிய வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. காலங்களைக் கடந்தவரே இறைவா!
நீர் எங்களுக்கு மூலதனமாக அளித்துள்ள காலங்களை வீணாக்காமல
அவற்றை பயன் தருகின்ற வகையில் செலவிட்டு, இறைவார்த்தையில்
புதைந்துள்ள ஞான செல்வத்தைக் கண்டு உணர்ந்து எங்கள் வாழ்வை
அமைத்திட ஞானத்தைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
5. விடுதலையும் வாழ்வையும் கொடுப்பவரே இறைவா!
விளை நிலங்கள் நல்ல பலனைக் கொடுத்து விவசாயிகள் வாழ்வில்
ஏற்ற பெறவும், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு பாதுகாப்பும் நலமும் வளமுமான நிறைவான வாழ்வு
கிடைத்திடவும், உலக நாடுகள் அனைத்தும் சமாதானத்தில்
மகிழ்ந்திருக்கவும், நீதிக்காகவும், விடுதலைக்காகவும்
உரிமை வாழ்விற்காகவும் எதிர்நோக்கியிருப்போர் அனைவரின்
மனங்களிலும் நிறைவு பெற உமது அருளை அளித்திட இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
நன்றி: ஆசிரியை. திருமதி. லூயிஸ் ரெக்ஸ்லின்,
பாவூர்சத்திரம்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
பயணமும் நோக்கமும்
இன்று புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். மனிதர்களாகிய நமக்கு
இடம் சொந்தம். கடவுளுக்கு காலம் சொந்தம். 2026 என்னும்
புதிய காலத்தை தம் கரத்தில் ஏந்தி அந்தக் காலத்திற்குள் நம்மை
நகர்த்துகிற கடவுளுக்கு நன்றி கூறுவோம். காலங்கள் அவருடையன,
யுகங்கள் அவருடையன. ஆட்சியும் மாட்சியும் என்றென்றும் அவருக்கே!
அன்னை கன்னி மரியாவை இறைவனின் தாய் (தெயோடோகோஸ்) என்று
எபேசு திருச்சங்கம் அறிவித்ததை நினைவுகூர்ந்து சிறப்பிக்கிறோம்.
கிறிஸ்து பிறப்பின் எட்டாவது நாளாகிய இன்று குழந்தைக்கு
அவருடைய பெற்றோர், இயேசு என்று பெயரிடுகிறார்கள்.
முத்து ஒன்றைத் தேடிய இளவரசன் பற்றிய கதையோடு (தழுவல்:
புனித தோமாவின் பணிகள், ஓர் ஆன்மாவின் பாடல்) சிந்தனையைத்
தொடங்குவோம்.
அவன் ஓர் அன்பார்ந்த இளவரசன். கீழைநாட்டின் அரசனாக அவனை
முடிசூட்ட விரும்புகிற அவனுடைய பெற்றோர் அவனுடைய ஆற்றலைச்
சோதிப்பதற்காக எகிப்து நாட்டில் உள்ள முத்து ஒன்றை எடுத்துவர
அவனை அனுப்புகிறார்கள். விலைமதிப்பில்லாத அந்த ஒற்றை
முத்தை ஒரு பெரிய பாம்பு பாதுகாத்து வந்தது. எந்நேரமும்
சீறிக்கொண்டே இருக்கும் அந்த பாம்பின் பாதுகாப்பில் உள்ள
முத்தை எடுத்து வருவதற்காக எகிப்து செல்கிறான் இளவரசன்.
மாறுவேடத்தில் இருக்கிற இளவரசன் தான் எகிப்துக்கு வந்த
நோக்கத்தை யாரிடமும் சொல்லாமல் முத்தைத் தேடுவதில் கருத்தாயிருக்கிறான்.
ஒருநாள் தனக்கு அருகில் வசித்த ஒருவனிடம் தான் வந்த நோக்கத்தைச்
சொல்லிவிடுகிறான். அடுத்த சில நாள்களில் அவனுடைய உணவில் ஏதோ
ஒரு மருந்து கலக்கப்பட அவன் தான் வந்த நோக்கத்தை மறந்துவிட்டு,
எகிப்திய அரசனுடைய அடிமையாக வேலை செய்யத் தொடங்குகிறான்.
இளவரசனைப் பற்றிய எத்தகவலும் இல்லையே என்று
நினைத்துக்கொண்டிருந்த அவனுடைய பெற்றோர் தன் மகனுக்கு
நேர்ந்ததைப் பற்றி வருந்தி கடிதம் ஒன்றை எழுதி கழுகின்
வழியாகக் கொடுத்து அனுப்புகிறார்கள்: தூக்கத்திலிருந்து
நீ விழித்தெழு! நீ ஓர் இளவரசன். உன் அடிமைத்தனத்தை
நினைத்துப் பார்! நீ தேடிச் சென்ற விலைமதிப்பில்லாத
முத்தைப் பற்றி கருத்தாயிரு! நீ அதற்காகவே அங்கு அனுப்பப்பட்டாய்!
விரைந்து வா! மாட்சியின் ஆடை உனக்காகக் காத்திருக்கிறது!
கழுகின் வழியே வந்த செய்தி கேட்டு விழித்தெழுகிற இளவரசன்
தன் வருகையின் நோக்கம் மறந்தது கண்டு வருந்தி முத்தை
தேடிச் செல்கிறான். பாம்பைக் கொன்றழித்து முத்தைக் கைப்பற்றி
நாடு திரும்புகிறான்.
புத்தாண்டின் முதல் நாள் அன்று நாம் அனைவருமே முத்தெடுக்கச்
சென்ற இளவரசன் போல இளமையுடன் எதிர்நோக்குடனும் ஆவலுடனும்
இருக்கிறோம். நாள்கள் நகர நகர நம் பயணத்தின் இலக்கை மறந்துவிட்டு
அடிமையாக வாழ்கிறோம். விழித்தெழும்நாளில் முத்தைக் கண்டுகொள்கிறோம்.
நம் வாழ்க்கையே நாம் தேடிச் செல்லும் முத்து.
நம் தேடலை என்றும் நினைவுகூர்வோம்.
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் தம் அன்பார்ந்த
இஸ்ரயேல் மக்களை ஆரோன் வழியாகத் தேடி வருகிறார். தலைமைக்குருவாகிய
ஆரோன் ஆண்டவராகிய கடவுள் சார்பாக இஸ்ரயேல் மக்களுக்கு வழங்க
வேண்டிய ஆசியை மோசே வழியாகக் கற்பிக்கிறார்:
ஆசி வழங்குவாராக! அருள் பொழிவாராக! அமைதியை அருள்வாராக!
என்று உடலுக்கும், ஆன்மாவுக்கும், உள்ளத்துக்கும் நலம் தருகிறார்
ஆண்டவராகிய கடவுள்.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் தங்கள்
ஆற்றலால் அல்ல, மாறாக, இறைவனின் ஆற்றலால் தாங்கள் இயங்குவதை
நினைவில்கொள்ள வேண்டும்.
நம் வாழ்க்கைப் படகின் துடுப்பை இறைவனின் கரத்தில் ஒப்படைத்துவிட்டு
நாம் கொஞ்சம் சற்றே படகில் இளைப்பாறுவோம்.
நற்செய்தி வாசகத்தில், மூன்று நபர்களின் மூன்று செயல்களை
நாம் வாசிக்கிறோம்.
(அ) இடையர்கள் குழந்தையைக் காண்கிறார்கள்.
இடையர்கள் வானதூதர்களின் செய்தியைக் கேட்டவுடன் புறப்பட்டு
வருகிறார்கள். மெசியாவைக் காண வேண்டுமெனில், ஆட்டு மந்தையை
விட்டுவிட்டு நகர வேண்டும். மேலானதைப் பெற வேண்டுமெனில்
கீழானதை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.
(ஆ) இடையர்கள் அறிவித்த செய்தியைக் கேட்ட ஊரார் வியப்படைகிறார்கள்.
இயேசுவின் சமகாலத்தில் இடையர்கள் தாழ்வானவர்களாகக்
கருதப்பட்டார்கள். பொய்யர்கள், திருடர்கள் என்றும்
அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வழியாகவே ஆண்டவராகிய கடவுள்
தம் மகனின் பிறப்புச் செய்தியை ஊராருக்கு அறிவிக்கிறார்.
ஊருக்கும் உலகுக்கும் அவர்கள் அறிவித்த செய்த வியப்பை
ஏற்படுத்துகிறது.
(இ) நிகழ்வை உள்ளத்தில் இருத்திச் சிந்திக்கிறார் மரியா.
வானதூதர் மங்கள வார்த்தை சொன்னபோது அவருடைய வாழ்த்தை
உள்ளத்தில் இருத்துகிறார் மரியா. பின்னர் கடவுளுடைய
வார்த்தையை தம் வயிற்றில் இருத்துகிறார். இன்றைய நற்செய்தி
வாசகத்தில் தன் வாழ்க்கை நிகழ்வுகளை மனத்தில்
இருத்துகிறார். சும்பல்லோ என்னும் கிரேக்கச் சொல்லுக்கு
அனைத்தையும் கூட்டிச் சேர்த்தல் என்பது பொருள். வாழ்வின்
புள்ளிகளை இணைத்துப் பார்க்கிறார் மரியா.
புதிய ஆண்டில் நாம் அடையும் வெற்றிக்கு மேற்காணும் மூன்று
செயல்களும் அவசியம்: (அ) மேன்மையானதை அடைய தாழ்வானதை
விட்டுவிட வேண்டும். (ஆ) மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன
நினைத்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு அச்சமும்
இன்றி வாழ வேண்டும். (இ) வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும்
நம் கட்டுக்குள் இருந்தாலும் இல்லை என்றாலும் இணைத்துப்
பார்க்க வேண்டும். அப்படி இணைத்துப் பார்ப்பதற்கான ஆழ்ந்த
அமைதி வேண்டும். அவசரமும் பரபரப்பும் குறைக்க வேண்டும்.
இரண்டாம் வாசகத்தில், காலம் நிறைவேறியபோது கடவுள் தம்
மகனை அனுப்பினார் என்கிறார் பவுல். காலத்தைக் கழித்தல்
வேறு, நிறைவேற்றுதல் வேறு. புத்தாண்டின் முதல் நாளில் நாம்
காலத்தின் புனிதத்தை மேன்மையை உணர்ந்துகொள்வோம். நாம்
செய்கிற செயல்கள், ஓடுகிற ஓட்டங்கள் அனைத்தும் காலத்தை
நிறைவேற்றுவதற்காக இருக்க வேண்டுமே அன்றி, காலத்தைக்
கழிப்பதற்காக அல்ல.
காலத்தின் ஓட்டத்தில் இருக்கும் நாம், காலத்தைக் கடந்த
நிலையை அடைவதையே இலக்காகக் கொள்வோம்.
நாம் தேடி வந்த முத்தை எடுத்தவுடன், நமக்காகக்
காத்திருக்கும் மாட்சி என்னும் ஆடை நோக்கி ஓடுவோம். நம்
வாழ்வின் நோக்கத்தை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். நம்
எண்ணம் எல்லாம் விலையுயர்ந்த முத்தைக் குறித்ததாகவே
இருக்கட்டும். சீறும் எந்தப் பாம்பையும் நாம்
வென்றுவிடலாம். ஏனெனில், நாம் இளவரசர்கள், இளவரசிகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!
என்னங்க! எல்லாரும் இங்க வந்து நிக்குறீங்க! இந்தக்
குளிர்ல! கோவிலுக்கு உள்ளே, வெளியே என்று ஒரே மக்கள்
கூட்டம்! போன வருடத்தோடு நம்ம வாழ்க்கையில இன்னொரு வயது
கூடிடுச்சு என்று எந்த வருத்தமும் நம்மிடம் இல்லை! கடந்த
ஆண்டு விட்டுச் சென்ற காயங்கள் நம்மிடம் இல்லை! நாம் இன்று
அணிந்துள்ள புதிய ஆடை போல நம் உள்ளத்தில் ஒருவிதமான
புத்துணர்வு.
விவிலியத்தில் முதன்முதலாகப் புத்தாண்டு கொண்டாடியவர்கள்
நம் முதற்பெற்றோர் ஆதாமும் ஏவாளும்தான். ஏதேன்
தோட்டத்திற்குள் அவர்கள் இருந்தது வரை அவர்களுக்குக் காலம்
பற்றிய உணர்வு இல்லை. தோட்டத்திற்கு வெளியே
அனுப்பப்பட்டவுடன்தான் காலம் பற்றிய உணர்வு அவர்களுக்கு
வருகின்றது. ஆண்-பெண் என்று இருந்த அவர்கள், தந்தை-தாய்
என்று மாறுகிறார்கள். ஏவாள் கருத்தரித்து தன் முதல் மகனைப்
பெறுகிறாள். நம் முதற்பெற்றோரின் புத்தாண்டு சாபத்தில்
தொடங்கியது. 'வயிற்றினால் ஊர்ந்து புழுதியைத் தின்பாய்'
என்று பாம்புக்கும், 'உன் மகப்பேற்றின் வேதனையை
மிகுதியாக்குவேன்' என்று பெண்ணுக்கும், 'நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து உன் உணவை என்பாய்' என்று ஆணுக்கும்
ஆண்டவர் சாபம் அளிக்கின்றார். நெற்றி வியர்வைதான் வாழ்வின்
நியதி என்றால், நாம் இங்கே ஆலயத்தில் கூடி நிற்பது ஏன்?
வேதனைதான் வாழ்வின் எதார்த்தம் என்றால், இந்த இரவில் நாம்
இறைவேண்டல் செய்வது ஏன்?
இந்த இரவில் நாம் நம் காலத்தைக் கொண்டாடுகின்றோம். காலம்
எப்போது தோன்றியது? என்பது பற்றிய கேள்விக்கு இன்றும்
தெளிவான விடை இல்லை. ஆனால், 'காலங்கள் அவருடையன,
யுகங்களும் அவருடையன' என்பது வாழ்வியல் எதார்த்தமாக
இருக்கிறது. நாம் காலத்திற்கும் இடத்திற்கும்
உட்பட்டவர்கள் என்றாலும், இடத்தைத் தெரிவு செய்யும் ஆற்றல்
பெற்றுள்ள நாம், காலத்தின்முன் கையறுநிலையில்
இருக்கின்றோம். காலம் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தை
நமக்கு தருகிறது. அடுத்து வரப் போகும் ஆச்சர்யத்தையும் அது
தன்னகத்தே கொண்டுள்ளது. 'கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன்
காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய
உணர்வை மனிதருக்குத் தந்திருக்கின்றார்' என்கிறார் சபை
உரையாளர் (சஉ 3:11).
இந்த நாள் நமக்கு நான்கு நிலைகளில் முக்கியத்துவம்
பெறுகிறது: கிரகோரியன் காலண்டர்படி புத்தாண்டுத் திருநாள்,
மரியா இறைவனின் தாய் என்னும் திருநாள், இயேசுவுக்கு பெயர்
சூட்டப்பட்ட நாள், மற்றும் கிறிஸ்து பிறப்பின் எட்டாம்
திருநாள். இந்த நாளின் இறைவார்த்தை வழிபாடு நமக்குத் தரும்
செய்தி 'ஆண்டவரின் உனக்கு ஆசி அளிப்பாராக!'
அது என்னங்க ஆசி அல்லது ஆசீர்? எபிரேயத்தில் 'ஆசிர்'
என்னும் சொல் உள்ளது. அச்சொல்லுக்கு 'செல்வம்' அல்லது
'வளம்' என்பது பொருள். தமிழ் ஒருவேளை எபிரேயச் சொல்லைத்
தன் சொல்லாக ஏற்றிருக்கலாம். அல்லது தமிழ்ச்சொல் எபிரேயச்
சொல்லாக மாறியிருக்கலாம் என்பது முதல் புரிதல்.
இரண்டாவதாக, 'ஆசீர்' என்னும் சொல்லை, 'ஆ' மற்றும் 'சீர்'
என இரண்டாகப் பிரித்தால், 'ஆ' என்பது பெயர்ச்சொல்லாகவும்,
'சீர்' என்பது வினைச்சொல்லாகவும் உள்ளது. 'ஆ' என்பதன்
பொருள் 'பசு' என்று அறிவோம். அதைத் தவிர்த்து, 'ஆ' என்றால்
'ஆகுதல்' அல்லது 'ஆகுகை' ('வளர்தல்'), 'ஆறு' ('குணம்'
அல்லது 'பண்பு'), 'ஆன்மா' ('உள்ளம்) என்ற பொருள்களும்
உண்டு. ஆக, உன் 'ஆகதலும்,' 'ஆறும்,' 'ஆன்மாவும்' 'சீர்
ஆகுக!' என்று சொல்வதே 'ஆசீர்!'
விவிலியத்தில் ஆசீர் மிக முக்கியமானதாக இருக்கக் காரணம்
கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுத்த சாபம். அந்த சாபம்
இல்லை என்றால், ஆசீருக்குப் பயன் இல்லை. ஏனெனில்,
சாபத்தின் சாயம் ஆசீரில் களையப்படுகின்றது. ஆசீர் நம்
உழைப்பைத் தாண்டியதாக இருக்கிறது. ஆசீர் இலவசமாகக்
கொடுக்கப்படுகிறது. ஆசீர் நமக்கு ஆச்சர்யத்தைக் கொண்டு
வருகிறது.
படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் மண்ணுலகின்
உயிரினங்களுக்கும் (தொநூ 1:24), ஆணுக்கும் பெண்ணுக்கும்
(1:28) ஆசி வழங்குகின்றார். நோவாவுக்கும்
புதல்வர்களுக்கும் (தொநூ 9:1), ஆபிரகாமுக்கும் (12:1) மற்ற
குலமுதுவர்களுக்கும் எனத் தொடரும் ஆசி இஸ்ரயேல் மக்கள்
அனைவருக்கும் வழங்கப்படுகிறது. கீழ்ப்படிதலுக்கான ஆசிகளை
இணைச்சட்ட நூல் (28:1-14) பட்டியலிடுகிறது. ஈசாக்குக்குப்
பிடித்தமான வேட்டைக் கறியுடன் வருகின்ற ஏசா, 'என் தந்தை
எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக் கறியை
உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குவாராக!' என இறைஞ்கின்றார்.
தான் தன் சகோதரனால் ஏமாற்றப்பட்டதை உணர்கின்ற அவர்,
ஈசாக்கை நோக்கி, 'அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?
எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா!' என்று சொல்லிக்
கூக்குரலிட்டு அழுகின்றார். அவரின் அழுகை நம்மையும் சற்றே
தடுமாற வைக்கிறது.
'ஆண்டவரே, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? கடந்த ஆண்டு என்
வாழ்க்கையில் கஷ்டம் ஏன்? துன்பம் ஏன்? கலக்கம் ஏன்?
ஏமாற்றம் ஏன்? பின்னடைவு ஏன்?' என்று இன்று நாமும்
அவர்முன் அழுகின்றோம். ஏசாவுக்கு வழங்குவதற்கு அப்பா
ஈசாக்கிடம் ஆசி இல்லை. ஆனால், 'அப்பா, தந்தையே!' என்று தூய
ஆவியாரின் உதவியால் நாம் கதறியழும் ஆண்டவர் (இரண்டாம்
வாசகம்) நமக்கு நிறைய ஆசி வழங்கக் காத்திருக்கிறார்.
காலத்திற்கு உட்பட்டு வாழும் நம் நிலையை அறிந்தவர் அவர்.
ஏனெனில், புனித பவுல், 'காலம் நிறைவுற்றபோது, தன் மகனைக்
கன்னியிடம் பிறந்தவராக அதாவது, காலத்திற்கு உட்பட்டவராக
நம் மண்ணுலகுக்கு அனுப்பினார்.' காலத்தின் வரையறுக்குள்
கடவுள் வந்ததால் காலம் புனிதம் பெற்றது. காலம் அடிமை
வாழ்விலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமைப் பேற்றை
அளிக்கின்றது
கடவுளே நுழைந்த கால நீரோட்டத்தின் மிகச் சிறிய பகுதியே
2026 என்னும் புதிய ஆண்டு. இந்த ஆண்டுக்குள் நுழையும்
நமக்குக் கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது முதல்
வாசகம் (காண். எண் 6:22-27). மூன்று ஆசிகள், ஒவ்வொரு
ஆசியிலும் இரு கூறுகள் என்று அமைந்துள்ளன: ;: (அ) 'ஆண்டவர்
உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!' இதில்
ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர் அளிப்பவர்.
'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை) ஒருமை. ஆக, இது
மொத்தமாக கூட்டத்தின்முன் வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு
தனிநபருக்கும் உரியது. (ஆ) 'ஆண்டவர் அவர் திருமுகத்தை
உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி'
என்பது விவிலியத்தில் வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின்
முகம் எப்போதும் ஒளிரக் கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல்
படும்போது அவர்களும் ஒளி பெறுகின்றனர். வாழ்வு
பெறுகின்றனர். மேலும், உருவகத்தின் அடிப்படையில்
'திருமுகம் ஒளிர்தல்' என்பது 'அருள்கூர்தல்' என்றும்
பொருள்படும். 'ஹனான்' ('அருள்') என்ற வார்த்தை 'தன்
குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்' செயலைக்
குறிக்கிறது. (இ) 'ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக!
உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும் ஆண்டவரின் திருமுகமே
இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன முகம்,' அல்லது
'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது கோபத்தைக் குறிக்கும்
(தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம் முகத்தை திருப்பிக்
கொள்ளுதல் கோபத்தையும், ஒருவரிடமிருந்து விலகி
நிற்பதையும், கண்டுகொள்ளாததையும் குறிக்கும் (இச 31:18,
திபா 30:8, 44:25). ஆண்டவர் தன் முகத்தை தாழ்த்திக்
கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக் கொள்ளாமல் உன் பக்கம்
திருப்புகிறார். இறுதியாக அவர் 'ஷலோம்' ('அமைதி, நிறைவு,
நலம்') தருகிறார்.
இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன
தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே
என்று மூன்று நிலைகளில் வரும் ஆசி நம்மை முழமையான
மனிதர்களாக ஆக்குகின்றது அல்லது நம் ஆகுதலைச்
சீர்படுத்துகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 2:16-21), 'இடையர்களின்
வருகை,' 'இடையர்களின் வியப்பு,' 'மரியாவின் பதிலுணர்வு,'
'இடையர்களின் செல்கை,' மற்றும் 'இயேசுவின் விருத்தசேதனம்'
என்று ஐந்து நிகழ்வுகளாக நகர்கிறது. ஆண்டவரின் ஆசி
தங்களுக்கு மீட்பாக வந்ததை இடையர்கள் வந்து கண்டு,
வியப்படைகின்றனர். ஆண்டவரின் ஆசியால் தான் அடைந்த நிலையை
எண்ணி மரியா அனைத்தையும் மனத்தில் இருத்திச்
சிந்திக்கின்றார். ஆண்டவரின் ஆசியைப் பெறும் -
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைப் பெறும் - விருத்தசேதனச்
சடங்கு குழந்தைக்கு நிறைவேற்றப்படுகிறது. காலத்திற்கு
உட்பட்ட கடவுள், அப்படி உட்படுதலின் வலியையும் உணரத்
தொடங்குகின்றார்.
'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' எனக் கேட்ட
எலிசபெத்து, மரியாவை இறைவனின் தாய் என வாழ்த்துகின்றார்
(லூக் 1:43). கீழைத்திருஅவை ஆயர் நெஸ்டோரியஸ் அவர்களுடைய
தப்பறையான கொள்கைக்குப் பதிலிறுக்கின்ற எபேசு பொதுச்
சங்கம் (கிபி 431), 'இம்மானுவேல்தான் கடவுள்.
இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய்' என்று அறிவிக்கின்றது.
நாசரேத்து மரியாவை இம்மானுவேலின் தாய், இறைவனின் தாய்
என்னும் நிலைக்கு உயர்த்தியது ஆண்டவரின் ஆசியே!
'ஆசி' என்னும் சொல்லின் பின்புலத்தில் அன்னை கன்னி
மரியாவின் வாழ்க்கை மூன்று வகை 'ஆசிகளால் நிறைந்துள்ளது:
(அ) 'ஆண்டவரின் சித்தம்,' (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு,'
மற்றும் (இ) 'ஆண்டவரின் சிரிப்பு.' (அ) 'ஆண்டவரின்
சித்தம்' - இவ்விரண்டு வார்த்தைகளில் மரியாவின் சரணாகதி
அடங்கியுள்ளது. முதல் ஏவா தன் சித்தம் நிறைவேற வேண்டும் என
விரும்பியதால் ஆண்டவரின் சாபத்திற்கு உள்ளானார். இரண்டாம்
ஏவா ஆண்டவரின் சித்தமே நிறைவேற வேண்டும் என விரும்பியதால்
(காண். லூக் 1:37) இறைவனின் ஆசியைப் பெற்று அவரின் தாயாக
உயர்கின்றார். (ஆ) 'ஆண்டவரின் சிறப்பு' மரியா தன்
புகழ்ச்சிப் பாடலில், 'இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்' (காண். லூக் 1:48) என்னும்
சொற்கள் வழியாக தான் அடைந்துள்ள சிறப்பான நிலையை
அறிக்கையிடுகின்றார். இது 'ஆண்டவர் தந்த சிறப்பு' என்பதை
அவர் உணர்ந்தார். (இ) 'ஆண்டவரின் சிரிப்பு' மரியா
சிரித்ததாக விவிலியம் பதிவு செய்யவில்லை. ஆனால், அவர் தன்
மகிழ்ச்சியை என்றும் தக்கவைத்துக்கொள்கின்றார். சிமியோனின்
சொற்கள், இளவல் இயேசு காணாமற் போதல், சிலுவையின் நிழல்
என்று எல்லா இடங்களிலும், தன் வலுவின்மை, இயலாமை, மற்றும்
கையறுநிலை குறித்து மனதிற்குள்ளேயே
சிரித்துக்கொள்கின்றார். 'ஆண்டவரின் மகிழ்வே நம் வலிமை'
(நெகே 8:10) என்ற நிலையில் அவர் ஆண்டவரில் எந்நேரமும்
சிரித்தவராக இருந்தார்.
இறைவனின் தாய் அவர் என்றால், இம்மானுவேலின் சகோதர
சகோதரிகளாகிய நம் தாயும் அவரே. நம் முதல் தாய் ஏவா கொண்டு
வந்த சாபத்தை, நம்மிடமிருந்து அகற்றி, நமக்கு ஆசியைப்
பெற்றுத் தர வந்த இந்தத் தாய் நம் புத்தாண்டுக்கு வழங்கும்
செய்தியும் இதுவே:
(அ) 'ஆண்டவரின் சித்தம் நிறைவேற்றுங்கள்!' வாழ்வின்
ஒவ்வொரு நிகழ்விலும் நாம் இறைவனின் குரலைக் கேட்டு
வழிநடக்க இந்த ஆண்டு முயற்சி செய்வோம். 'நீங்கள்
வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும், 'இதுதான் வழி.
இதில் நடந்து செல்லுங்கள்' என்னும் வார்த்தை பின்னிருந்து
உங்கள் செவிகளில் ஒலிக்கும்' (எசா 30:21) என்கிறார்
கடவுள். இறைவனின் குரலைக் கேட்க வேண்டுமென்றால், நம்
உள்ளிருக்கும் ஓசைகள் அடங்க வேண்டும். நம் வெளிப்புறக்
கவனச்சிதறல்கள் குறைய வேண்டும்.
(ஆ) 'ஆண்டவரின் சிறப்புக்கு உரியவர் நீங்கள்!' இந்த உலகின்
பார்வையில் நாம் எப்படி இருந்தாலும், நம் இறைவனின்
பார்வையில் மதிப்புக்கு உரியவர்கள் நாம் (எசா 43:4). ஆக,
நம் தன்மதிப்பையும், மனித மாண்பையும் சீர்குலைக்கும்
எதையும் செய்தல் ஆகாது. மதிப்பற்றவற்றிலிருந்து நம்மைக்
காத்துக்கொள்வது (காண். 2 திமொ 2:20-21) அவசியம்.
(இ) 'ஆண்டவரின் சிரிப்பைக் கொண்டிருங்கள்!' இந்த ஆண்டு
நாம் நிறைய சிரிக்க வேண்டும். 'இடுக்கண் வருங்கால் நகுக'
என்பதால் மட்டுமல்ல, மாறாக, இறைவன் நம்மோடு இருப்பதால்.
அவநம்பிக்கை, அதீத எண்ணம், கவலை உள்ளம் அனைத்தையும் ஓரத்
தள்ளிவிட்டு என்ன நடந்தாலும், எதைப் பார்த்தாலும், நாமே
முட்டாள்தனமாகச் செயல்பட்டாலும் ஒரு புன்முறுவல்
பூத்துவிட்டு அடுத்த நிமிடத்திற்கு நகர வேண்டும்.
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!' என்று நாம் வாயார
ஒருவர் மற்றவரை வாழ்த்துவோம். இதையே திருப்பாடல் ஆசிரியர்
தன் இறைவேண்டலாக (67), 'கடவுளே! எம்மீது இரங்கி எமக்கு ஆசி
வழங்குவீராக!' என முன்மொழிகின்றார்.
அருள்பணி. யேசு கருணாநிதி
தாய்மையோடு புத்தாண்டில்
கிரகோரியன் காலண்டரின் படி இன்று ஆண்டின் முதல் நாள்.
கிரேக்க கடவுள் Janus போல இரண்டு தலை கொண்டவர்களாக -
பின்னோக்கியும், முன்னோக்கியும் - நன்றி மற்றும் நம்பிக்கை
கொண்டவர்களாக இன்றைய நாளில் நிற்கின்றோம். ஆக, (1) இன்று
புத்தாண்டுப் பெருநாள். (2) இந்த ஆண்டின் தலைநாளான இன்று
திருஅவை மரியாளை இறைவனின் தாயாக கொண்டாடுகிறது. மேலும்,
(3) இந்த நாள் தான் 'இயேசுவுக்கு' பெயர் சூட்டப்பட்ட நாள்.
(4) இந்த நாள் தான் கிறிஸ்துபிறப்பின் எட்டாம் திருநாள்.
ஆக, இது கிறிஸ்து பிறப்பின் எட்டாம் திருவிழா. இவ்வாறாக,
நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறும் இந்நாளில்,
'தாய்மையோடு புத்தாண்டில்' என்ற தலைப்பில் உங்களோடு
சிந்திக்க விழைகின்றேன்.
ஐசக் நியூட்டனின் 'அப்சலூட் தியரி' மறைந்து, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்
'ரெலடிவிட்டி தியரி' மேலோங்கி நிற்கும் காலத்தில், எல்லாமே
சார்பு அல்லது ரெலடிவ் என்ற நிலைதான் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக
இன்று 'தாய்மையைக் கொண்டாடுவோம்' என்று நான் சொன்னால், அது
சார்பு நிலையில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. ஏனெனில்,
நான் இப்படிச் சொல்லும்போது, தாய்மையை உடல் அளவில் அடைய
முடியாத ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினர், தாய்மையை தாங்களாகவே
துறந்த பெண் துறவியர், தாய்மையை அடைய முடியாத நிலையில் உள்ள
பெண்கள், வன்புணர்வால் தாய்மை புகுத்தப்பட்டுத் துன்புறும்
பெண்கள், குழந்தைகள், மற்றும் வாடகைத் தாய்மார்கள் என பலரை
நான் சிந்தனையிலிருந்து அகற்றிவிடுவேன். ஆக, 'தாய்மை' என்ற
வார்த்தையை நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன். அதே
போல, 'புத்தாண்டு' என்ற வார்த்தையும் தனிநபர் சார்ந்ததே.
கிரகோரியன் காலண்டர் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே இன்று
புத்தாண்டு நாள். தமிழ், தெலுங்கு, சீன, ஆப்பிரிக்க, யூத
போன்ற பிற காலண்டர்களைப் பின்பற்றுபவர்களுக்கு இதே ஆண்டின்
இன்னொரு நாளே தவிர புத்தாண்டு நாள். ஆக, 'புத்தாண்டு' என்ற
வார்த்தையையும் நான் இங்கே உருவகமாகவே பயன்படுத்துகிறேன்.
'தாய்மையோடு புத்தாண்டில்' நுழைவது எப்படி?
இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக்
கொண்டாடுகிறோம். 'இறைவனின் தாய்' என்றால், அவர் 'இறைவனையே
பெற்றெடுத்தார்' என்ற பொருளில் அல்ல. ஏனெனில், 'படைக்கப்பட்டவர்'
'படைத்தவரை' பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை
(கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின்
மனித தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை
'கிறிஸ்துவின் தாய்' அல்லது 'இயேசுவின் தாய்' என அழைத்தனர்.இதற்கு
எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), 'இம்மானுவேல்தான்
கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்
சபிக்கப்படுக!' என்று அறிவித்தது. ஆக, 'இறைவனின் தாய்' என்னும்
தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின்
இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மரியாள்
எலிசபெத்தைச் சந்திக்கச் சென்றபோது, அவரை வாழ்த்தி வரவேற்கும்
எலிசபெத்து, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?'
(லூக் 1:43) என்று கேட்கின்றார். 'ஆண்டவரின் தாய்' என்ற இந்தச்
சொல்லாடல்தான் 'இறைவனின் தாய்' என்று வந்தது என்றும் நாம்
சொல்ல முடியாது. ஆனால், எலிசபெத்து மரியாளை 'ஆண்டவரின்
தாய்' என்று அழைக்கின்றார். மற்றபடி மரியாளை இறைவனின் தாய்
என அழைக்க வேறு குறிப்புக்கள் விவிலியத்தில் இல்லை.
தாய்மை என்றால் என்ன?
தாய்மைக்கான மிகச் சிறந்த வரையறை விவிலியத்தின் முதல் பக்கங்களில்
உள்ளது. தொடக்கப் பெற்றோர் கடவுளுக்கு எதிராகப் பாவம்
செய்து, அவர்கள் கடவுளால் தண்டிக்கப்பட்டபோதுதான் அந்த இனிய
நிகழ்வு நடக்கிறது. விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு
செய்கிறார்: 'மனிதன் தன் மனைவிக்கு 'ஏவாள்' என்று பெயரிட்டான்.
ஏனெனில், உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' (தொநூ
3:20). கொஞ்சப் பகுதிக்கு முன்னால் - அதாவது, பாவம் செய்வதற்கு
முன், 'ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால் இவள் 'பெண்' (ஈஷா)
என அழைக்கப்படுவாள்' (தொநூ 2:23) என்று வேறு ஒரு பெயர்
கொடுக்கப்படுகிறது. ஆக, தாய் என்ற பெயர் ஒரு ரொமான்டிக் பெயர்
அல்ல. மாறாக, மனுக்குலத்தின் முதல் தாய் ஏவாள் தாய்மை என்ற
பேற்றை அடைவது பிள்ளைப் பேற்றினால் அல்ல. மாறாக, தான்
செய்த தவற்றினால்.
இதைக் கொஞ்சம் புரிந்துகொள்வோம். ஏவாளிடம் எனக்குப் பிடித்தவை
மூன்று: (அ) பாம்பை எதிர்கொள்ளும் துணிச்சல், (ஆ) கணவனுடன்
பகிர்தல், மற்றும் (இ) பொறுப்புணர்வு. முதலில், மனுக்குலத்தின்
எதிரியாகிய பாம்போடு நேருக்கு நேர் நின்று உரையாடிவள் ஆண்
அல்ல. மாறாக, பெண். விவிலியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள
முதல் உரையாடலும் இதுவே. மேலும், அவளின் உரையாடல் வெறும்
பழத்தைப் பற்றியது அல்ல. மாறாக, உண்மை, நன்மை, தீமை போன்ற
பெரிய கருத்தியல்கள் பற்றியது. பாம்பு பெண்ணிடம், 'நீங்கள்
சாகவே மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும்
நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல
நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது
(தொநூ 3:4-5). பாம்பின் இந்த வார்த்தைகளை நம்பி பெண் பழத்தை
உண்ணவில்லை. பின் எதற்காக உண்டாள்? 'அந்த மரம் உண்பதற்குச்
சுவையானதாகவும் கண்களுக்கு களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு
விரும்பத்தக்கதாவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப்
பறித்து உண்டாள்' (தொநூ 3:6). ஆக, பாம்பு சொல்லவில்லையென்றாலும்
ஏவாள் அந்தப் பழத்தை உண்டிருப்பார். ஆக, தானே விரும்பி தன்
முடிவை எடுக்கின்றார் ஏவாள். மேலும், தீமையை நேருக்கு நேர்
எதிர்கொள்கின்றார். இரண்டாவதாக, 'அதைத் தன்னுடனிருந்த தன்
கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்' (தொநூ 3:6) என்கிறது
விவிலியம். தான் செய்த செயலைத் தன் கணவனோடு பகிர்கிறாள்.
மூன்றாவதாக, தான் உண்டதற்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.
'பாம்பு என்னை ஏமாற்றியது. நானும் உண்டேன்' (தொநூ 3:13) என
தன் செயலுக்குப் பொறுப்பேற்கிறார் ஏவாள்.
இந்த மூன்று குணங்களும்தான் அவரைத் தாய்மை நிலை அடைய
வைக்கிறது. ஆக, தாய்மை என்பது, (அ) தீமையை நேருக்கு நேர்
எதிர்கொள்ளுதல், (ஆ) தன்னிடம் உள்ளதைப் பகிர்தல், (இ)
பொறுப்புணர்வோடு இருத்தல். இந்த மூன்றிலும் ஒன்று புலப்படுகிறது.
அது என்ன? தாய்மை என்பது ஒரு தயார்நிலை. தாய்மை ஒரு இலக்கு
அல்ல. மாறாக, இனி வருபவற்றை எதிர்கொள்வதற்கான தயார்நிலை என்னும்
வழிமுறை. மரியாளின் தாய்மையும் ஒரு தயார்நிலையே. அத்தயார்நிலையில்
(அ) அவர் தீமையை நேருக்கு நேர் எதிர்கொண்டு வெற்றி பெறும்
மீட்பரைப் பெற்றெடுத்தார், (ஆ) 'உம் சொற்படியே ஆகட்டும்'
என்று தன்னிடம் உள்ளதைக் கடவுளோடு பகிர்ந்தார், (இ) பெத்லகேம்
முதல் நாசரேத்துக்கு, நாசரேத்து முதல் எருசலேமுக்கு, நாசரேத்து
முதல் கானாவுக்கு, கானா முதல் கல்வாரிக்கு எனத் தன் மகனைப்
பொறுப்புணர்வோடு வழிநடத்தினார். இன்று புத்தாண்டில்
நுழையும் நமக்கு மரியாள் வைக்கின்ற பாடம் இதுவே: 'தாய்மை
என்னும் தயார்நிலை.' மேலும், இத்தாய்மை (அ) பொறுப்புணர்வு
(interactive responsibility), (ஆ) அர்ப்பணம் (commitment),
(இ) தோல்வி தாங்கும் உள்ளம் (resilience) என மூன்று மதிப்பீடுகளாக
வெளிப்பட வேண்டும்.
தாய்மை என்பது எப்படி தயார்நிலையோ, அதுபோல புத்தாண்டு
என்பதும் தயார்நிலையே. புத்தாண்டு என்பது நம் இலக்கு அல்ல.
மாறாக, நம் இலக்கை அடைவதற்கான வழியே புத்தாண்டு.
புத்தாண்டை நாம் கொண்டாடக் காரணம் நாம் காலத்திற்கு
உட்பட்டிருப்பதால்தான். காலத்திற்கு உட்படாத கடவுளுக்கும்,
வானதூதர்களுக்கும், இறந்த நம் முன்னோர்களுக்கும்
புத்தாண்டு இல்லை. ஆக, நம் வரையறையை நினைவுகூறும்,
கொண்டாடும் நாள்தான் இந்நாள்.
காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக
மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா
4:4-7), புனித பவுல், 'காலம் நிறைவேறியபோது,
திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம்
பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம்
பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும்
அனுப்பினார்' என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும்
கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும்
இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள்
வரவேண்டுமென்றால், அவருக்கு நேருமும் இடமும் தேவை. இந்த
நேரத்தையே, பவுல், 'காலம் நிறைவுற்றபோது' என்றும், இந்த
இடத்தையே, 'பெண்ணிடம்' என்றும் குறிப்பிடுகிறார். மேலும்,
திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது
என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு
உட்படுகின்றார். 'கடவுளின் மகன்' என்று இயேசுவைச் சொல்வதன்
வழியாக, மறைமுகமாக மரியாளை 'கடவுளின் தாய்' எனச்
சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள்,
'இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்' என்று
கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக்
கொடுக்கின்றார்.
கடவுளே நுழைந்த காலத்தின் நீரோட்டத்தின் ஒரு பகுதியே கடந்த
ஆண்டு. இந்த ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும்
ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண்
6:22-27). 'யோம் கிப்பூர்' நாளில் பரிகாரப் பலி
செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும்
தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும்
ஆசியுரையே இது. இந்த ஆசீரின் இரண்டு முக்கிய கூறுகள்
அருளும், அமைதியும். இந்த ஆசீரை இறைவனே மோசே வழியாக
ஆரோனுக்கு கற்றுத் தருகின்றார். எபிரேயத்தில் 'ஆசீர்'
என்றால் 'செல்வம்' அல்லது 'வளமை' என்பது பொருள். ஆக,
ஒருவர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் இறைவனின்
ஆசீர் பெற்றவர் என்று நாம் சொல்லலாம். அதற்காக செல்வம்
இல்லாதவர்கள் எல்லாம் ஆசீர் இல்லாதவர்கள் என்று சொல்வதில்
எனக்கு உடன்பாடில்லை.
தமிழ் மொழிபெயர்ப்பில் சின்ன சிக்கல் இருக்கிறது. அதாவது,
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!' என்பது
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!'
என்று இருக்க வேண்டும். ஒருவேளை எபிரேயத்தின் மொழிநடை
எல்லாவற்றையும் பிரித்து எழுதுகிறதோ என்னவோ. மேலும்,
எபிரேய வாக்கிய அமைப்பில் முதல் ஆசியில் மூன்று
வார்த்தைகளும், இரண்டாம் ஆசியில் ஐந்து வார்த்தைகளும்,
மூன்றாம் ஆசியில் ஏழு வார்த்தைகளும் இருக்கின்றன. மூன்று -
ஐந்து - ஏழு என ஆசீர் வளர்கிறது. ஆக, இது சும்மா 'நல்லா
இரு!' என்று சொல்லப்பட்ட ஆசீர் அல்ல. மாறாக, யோசித்து,
நிறுத்தி, நிதானமாக எழுதப்பட்டுள்ளது.
மூன்று ஆசிகள். ஒவ்வொரு ஆசியிலும் இரண்டு கூறுகள்: (1)
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!'
இதில் ஆண்டவர்தான் செயலாற்றுபவர். ஆண்டவர் தான் ஆசீர்
அளிப்பவர். 'உனக்கு' என்பது இரண்டாம் நபர் (முன்னிலை)
ஒருமை. ஆக, இது மொத்தமாக கூட்டத்தின்முன்
வழங்கப்பட்டாலும், ஆசி ஒவ்வொரு தனிநபருக்கும் உரியது. ஆக,
ஆண்டவரின் பிரசன்னத்தில் கூட்டம் போடுவதற்கே இடமில்லை.
ஒவ்வொருவரும் அவரின் பார்வையில் விலைமதிப்பு உடையவர்.
'பராகா' என்பது இறைவன் மனிதர்களுக்கு ஆசீர்வதிப்பதையும்
குறிக்கிறது. 'காத்தல்' என்பதை 'கண்களைப் பதித்தல்.' ஒரு
ஆயன் தன் மந்தையைக் காக்கிறான் என்றால், அவன் தன்
மந்தையின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கிறான். (2)
'ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக!
உனக்கு அருள்கூர்வாராக!' 'ஒளி' என்பது விவிலியத்தில்
வாழ்வைக் குறிக்கும். ஆண்டவரின் முகம் எப்போதும் ஒளிரக்
கூடியது. இந்த முகம் மனிதர்கள்மேல் படும்போது அவர்களும்
ஒளி பெறுகின்றனர். வாழ்வு பெறுகின்றனர். மேலும்,
உருவகத்தின் அடிப்படையில் 'திருமுகம் ஒளிர்தல்' என்பது
'அருள்கூர்தல்' என்றும் பொருள் படும். 'ஹனான்' ('அருள்')
என்ற வார்த்தை 'தன் குழந்தையை கூர்ந்து பார்க்கும் தாயின்'
செயலைக் குறிக்கிறது. (3) 'ஆண்டவர் தன் திருமுகத்தை
உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!' மீண்டும்
ஆண்டவரின் திருமுகமே இங்கு செயலாற்றுகிறது. 'தாழ்ந்து போன
முகம்,' அல்லது 'குனிந்த முகம்' அவமானத்தை அல்லது
கோபத்தைக் குறிக்கும் (தொநூ 4:6,7). மேலும், வேறுபக்கம்
முகத்தை திருப்பிக் கொள்ளுதல் கோபத்தையும்,
ஒருவரிடமிருந்து விலகி நிற்பதையும், கண்டுகொள்ளாததையும்
குறிக்கும் (இச 31:18, திபா 30:8, 44:25). ஆண்டவர் தன்
முகத்தை தாழ்த்திக் கொள்ளாமல், வேறு பக்கம் திருப்பிக்
கொள்ளாமல் உன் பக்கம் திருப்புகிறார். இறுதியாக அவர்
'ஷலோம்' ('அமைதி, நிறைவு, நலம்') தருகிறார்.
இந்த மூன்று ஆசிகளையும் ஒருசேர வாசிக்கும்போது என்ன
தோன்றுகிறது? எனக்கு வெளியில், என்னில், எனக்கு உள்ளே
என்று மூன்று எதார்த்த நிலைகள் உள்ளன. இறைவனின் ஆசிமொழி
எனக்கு வெளியே தொடங்கி, என்மேல் ஒளிர்ந்து, எனக்குள்
பாய்கின்றது. ஆக, இறைவனின் ஆசி முழுமையான ஆசியாக
இருக்கிறது. புத்தாண்டு தரும் தயார்நிலையை இறைவன் நிறைவாக
ஆசீர்வதிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் (லூக் 2:16-21) பின்புலம்
இதுதான்: இயேசு பெத்லகேமில் பிறந்துவிட்டார். இந்த பிறப்பு
செய்தி வானதூதர் ஒருவரால் இடையர்களுக்கு
அறிவிக்கப்படுகிறது. பின் வானதூதர் அணி வானில் பாடல்
பாடுகின்றது. இந்த பாடல் முடிந்தவுடன், இடையர்கள் என்ன
செய்தார்கள் என்பதும், இடையர்களின் வருகை மரியாவில்
ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதுமே இன்றைய நற்செய்தி
வாசகம். இன்றைய நற்செய்தி வாசகத்தை நான்கு உட்பிரிவுகளாகப்
பிரிக்கலாம்: (அ) இடையர்களின் வருகை, (ஆ) இடையர்களின்
வியப்பு, (இ) மரியாளின் பதிலுணர்வு, (ஈ) இடையர்களின்
செல்கை, மற்றும் (உ) இயேசுவின் விருத்தசேதனம். இவற்றில்
மையமாக இருப்பது மரியாளின் பதிலுணர்வு.மரியாளின்
பதிலுணர்வு மௌனமும், தியானமும். எல்லா யூதர்களையும்போல
மரியாளுக்கும் மெசியா பற்றிய காத்திருத்தல்
இருந்திருக்கும். இந்தக் காத்திருத்தல் நிறைவு பெற்றதை தன்
உள்ளத்தில் உணர்ந்தவராய் அப்படியே உறைந்து
போகின்றார்.இங்கே 'சும்பல்லூசா' என்ற கிரேக்க வார்த்தை
பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு 'தியானித்தில்' அல்லது
'உள்ளத்தில் இருத்துதல்' அல்லது 'மனனம் செய்தல்' என்பது
பொருள் அல்ல. மாறாக, 'ஒன்றுகூட்டுதல்' என்பதே பொருள்.
அதாவது, ரெவன்ஸ்பர்கர் ஆட்டத்தில், சிதறிக்கிடக்கும் படத்
துண்டுகளை ஒவ்வொன்றாக அதனதன் அடத்தில் சேர்த்து பெரிய
படத்தை உருவாக்குவதுபோல, மரியாள் இப்போது தன் கையில்
கிடைக்கப்பட்டுள்ள புதிய துண்டை ஆச்சர்யமாக பார்க்கிறாள்.
ஆக, இன்று நாம் கொண்டாடும் மரியாளின் தாய்மை, புத்தாண்டில்
நுழையும் நமக்கு, தாய்மை என்ற தயார்நிலையைத் தருகின்றது.
ஏவாளின் தாய்மையும், மரியாளின் தாய்மையும் 'ஸ்மைல்'
(smile) மற்றும் 'ஸைலன்ஸ்' (silence) என்ற இரண்டு 'எஸ்'
('s') களில் அடங்கியுள்ளன. பாம்பைப் பார்த்துச் சிரித்தார்
ஏவாள். வானதூதரைப் பார்த்துச் சிரித்தார் மரியாள். தான்
சபிக்கப்பட்டவுடன் மௌனம் காக்கிறார் ஏவாள். இடையர்கள்
வாழ்த்தியபோது மௌனம் காக்கிறார் மரியாள்.
தாய்மையும், புத்தாண்டும் இலக்குகள் அல்ல. மாறாக, என்
வாழ்வின் நிறைவை நான் அடைய திறக்கப்படும் வழிகள்.
இவ்வழிகளில் 'ஸ்மைல்' - அது இல்லாதபோது 'ஸைலன்ஸ்' என
இரண்டு கால்களால் நடந்தால் பயணம் இனிதாகும். 2026 என்னும்
இரயில் நம் வாழ்க்கை என்னும் நடைமேடைக்கு வர சில
மணித்துளிகளே உள்ளன.
'உங்கள் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள்
போல மறைந்துபோவனவாக' என்பது இத்தாலியப் பழமொழி. மரங்கள்,
மனிதர்கள், கவலைகள், வாக்குறுதிகள் மறைய இரயில் வேகமாக
ஓடும். ஓட்டத்தின் இறுதியில் இலக்கை அடையும். உங்கள் பயணம்
சிறக்க இனிய வாழ்த்துக்கள்!
அருள்பணி. யேசு கருணாநிதி
இன்னும் மண்ணில் பிறக்காத குழந்தை ஒன்று இறைவனிடத்தில் மிக
உருக்கமாகக் கேட்டது, "நாளைய நாளில் நீர் என்னை
மண்ணுலகிற்கு அனுப்பப்போவதாக அறிந்தேன். அப்படி நீர் என்னை
அனுப்பும் பட்சத்தில் - ஒரு குழந்தையாக நான் பிறக்கும்
பட்சத்தில் - அங்கே எப்படி நான் வாழ்வது?". அதற்கு இறைவன்
அதனிடம், "உன்னுடைய வருகைக்காக தேவதை ஒருத்தி
காத்துக்கொண்டிருக்கின்றாள். அவள் உனக்குத் தேவையான
அத்தனையும் பார்த்துக்கொள்வாள்" என்றார்.
"நான் மண்ணுலகிற்கு போனபின்பு, உம்மிடத்தில் நான்
பேசவேண்டும் என்று நினைக்கின்றேன். அப்போது நான் என்ன
செய்வது?" என்று கேட்டது குழந்தை. "அதைப் பற்றி ஒன்றும்
கவலைப்படாதே, உன்னுடைய தேவதை உன்னுடைய கைகளைக்
கூப்பிவைத்து, உன்னை என்னிடத்தில் ஜெபிக்க வைப்பாள்,
அதன்மூலம் நீ என்னிடத்தில் பேசிக்கொள்ளலாம்" என்றார்
இறைவன். தொடர்ந்து குழந்தை இறைவனிடம், "இங்கே நான்
பாதுகாப்பாக இருந்துவிட்டேன். ஆனால், நான் மண்ணுலகிற்குப்
போனபின்பு, எனக்கு ஆபத்து வருகின்றபோது, என்னை யார்
பாதுகாப்பார்?" என்று கேட்டது. அதற்கு இறைவன் மிகவும்
அமைதியாக, "உன்னுடைய தேவதை உனக்கு எந்தவொரு ஆபத்தும்
வராமல், ஏன் தன்னுடைய உயிரைத் தந்தாவது உன்னைப்
பாதுகாத்துக்கொள்வாள்" என்றார்.
இறுதியாகக் குழந்தை தன்னுடைய முகத்தை மிகவும் சோகமாக
வைத்துக்கொண்டு சொன்னது, "நான் மண்ணுலகிற்குப் போனபின்பு,
உம்முடைய திருமுகத்தைக் காணமுடியாது போய்விடுமே, அப்போது
உமது திருமுகத்தைக் காண்பதற்கு நான் என்ன செய்வது?".
"மண்ணுலகில் உனக்கென்று ஒரு தேவதை இருக்கிறாளே, அவள் உன்னை
என் பக்கம் திருப்புவாள், உன்னை என்னுடைய திருமுகத்தைக்
காணச்செய்வாள்" என்றார் இறைவன். குழந்தை சற்று பொறுமை
இழந்து, "எதற்கெடுத்தாலும் தேவதை இருக்கிறாள், தேவதை
இருகின்றாள் என்று சொல்கின்றீரே, யார் அந்த தேவதை?" என்று
கேட்டது. இறைவன் மிகவும் சாந்தமாக, "அந்தத் தேவதை
(உன்னுடைய) அம்மா தான்" என்றார்.
ஆம், இந்த மண்ணுலகில் நமக்காக இருக்கின்ற தேவதை, தெய்வம்,
இறைவி எல்லாம் "அம்மா"தான். இந்த உன்னதத்தை உணர்ந்துதான்,
"இறைவன் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதால்தான்
தாயினைப் படைத்தார்" என்று யூதப் பழமொழி சொல்கின்றது.
இன்று தாயாம் திருச்சபை "மரியா இறைவனின் தாய்" என்னும்
பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஆண்டின் முதல்
நாளான இன்று, அன்னையின் அடிதொட்டு தொடங்குவது உண்மையில்
மிகப் பெரிய ஆசிர்வாதம்தான். இவ்வேளையில், இன்று நாம்
கொண்டாடுகின்ற விழா நமக்கு எடுத்துரைக்கும் செய்தி என்ன?
என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். கி.பி.431
ஆம் ஆண்டு, எபேசு நகரில் நடைபெற்ற திருச்சங்கம் மரியா
இறைவனின் தாய் என்னும் விசுவாசப் பிரகடனத்தை
அறிக்கையிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை மரியாவை இறைவனின்
தாயாகப் பாவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் முதல்
நாளில், விழா எடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
மரியா இறைவனின் தாயாகின்றபோது, இறைவனின் அன்புப்
பிள்ளைகளாகிய நமக்கும் தாய் என்பதுதான் உண்மை. எனவே, ஒரு
தாய்க்குரிய வாஞ்சையுடன் மரியா எப்படியெல்லாம் நமக்குத்
துணை புரிகின்றார், நம்மை ஆசிர்வதிக்கின்றார் என்று
இப்போது பார்ப்போம்.
மரியா, இந்த உலகமே உயிருக்குப் பயந்து, (நம்மை விட்டு)
ஓடிபோனாலும், ஓடிப்போகாத ஒரு தாய் என்று சொன்னால்
மிகையாகாது. உரோமை அரசாங்கம் இயேசு கிறிஸ்துவின்மீது
சிலுவையைச் சுமத்தி, கல்வாரி மலையில் அறைந்து கொன்றபோது,
அவரோடு யாருமே இல்லை, மரியா மட்டும்தான் அவரோடு இருந்தார்.
அப்படியானால், இயேசுவோடு இறுதிவரைக்கும் இருந்த ஒரே
சொந்தம் தாய் மரியா என்பதுதான் உண்மை. இயேசுவோடு
மட்டுமல்ல, நம்மோடும் இறுதிவரைக்கும் இருக்கின்ற ஒரே
சொந்தம் தாய் (மரியா) என்பதுதான் அசைக்கக் முடியாத உண்மை.
அதனால்தான் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்
ஒருமுறை இவ்வாறு சொன்னார், "தாயைப் பெற்றிருக்கின்ற யாரும்
ஏழை இல்லை" என்று. ஆம், நமக்கென்று ஒரு தாய் இருகின்றாள்,
அவள் நம்மை ஒருபோதும் விட்டு விலகிவிடாத தாய், அவள்
நம்மோடு இருக்கின்றபோது, நாம் ஒன்றும் ஏழைகள் இல்லை, மாறாக
ஆசிர்பெற்ற மக்கள்.
அடுத்ததாக, மரியா தன்னுடைய மகன் இயேசுவுக்காக, இன்று
நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொண்ட, மேற்கொள்ளும் ஒரு
தியாகச் சுடர். ஒரு குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி
அழகுபார்ப்பதற்கு ஒரு சாதாரண தாய் எவ்வளவு தியாகங்களை
மேற்மேற்கொள்கின்றாளோ, அவ்வளவு தியாகங்களையும்
மேற்கொண்டவர் அன்னை மரியா. அது மட்டுமல்லாமல் தான்
பெற்றெடுத்த மகன் தனக்காக வாழாமல், மனுக்குல மீட்புக்காக
தன்னுடைய வாழ்வைத் தியாகம் செய்தவர். அப்படிப்பட்ட தியாகச்
செம்மலை ஈன்றெடுத்து, அவரை மனுக்குல மீட்புக்காக தியாகம்
செய்த மரியாவின் தியாக உள்ளத்தை எப்படி வார்த்தைகளால்
விவரித்துச் சொல்வது?..
வழக்கமாக தாயின் தியாகத்தை பெலிக்கான் பறவையோடு
ஒப்பிடுவார்கள். பெலிக்கான் பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு
இரை கிடைக்காதபோது, தன்னுடைய கூரிய, சிவந்த அலகினால்
தன்னுடைய மார்பினில் குத்தி, அதிலிருந்து வழிகின்ற
இரத்தத்தைக் கொண்டு குஞ்சுகளுக்கு உணவூட்டும். தாயும் கூட
அப்படித்தான் தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும்,
வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காக, தன்னுடைய உடலை
வருத்திகொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்கின்றாள்.
அதனால்தான் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்தீருமா?" என்று தாயின்
தியாகத்திற்கு ஈடாக எதையும் கொடுத்துவிட முடியாது
என்கிறார் கவிஞர் வாலி.
இப்படி நமக்காக பல்வேறு தியாகங்களை மேற்கொள்கின்ற,
இறுதிவரைக்கும் உடனிருக்கின்ற தாய், அன்னை மரியைப்
பெற்றிருப்பது உண்மையில் நாம் பெற்ற பாக்கியம்தான். இந்த
அன்னையின் அன்பு மக்களாக, அவருக்கு உகந்தவராக வாழவேண்டும்
என்றால், அந்த அன்னை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே
ஒன்றுதான். அது வேறொன்றுமில்லை அவர் (இயேசு)
சொல்வதையெல்லாம் செய்வதுதான்" (யோவா 2:5). நாம் இயேசு
சொன்ன வழியில் நடக்கும்போது, நாம் அன்னையின் அன்பு மக்களாக
மாறுவதோடு மட்டுமல்லாமல், இயேசுவின் அன்புச் சகோதர
சகோதரிகளாக மாறுகின்றோம் என்பது உண்மையாகின்றது.
இயேசு அல்லது இறைவன் சொன்ன வழியில் நாம் நடக்கும்போது,
அவர் நமக்கு இன்று மூன்று ஆசிர்வாதங்களைத் தருவதாக
வாக்களிக்கின்றார். பாதுகாப்பு, அருள், அமைதி ஆகிய
இம்மூன்றும்தான் இறைவன் தருகின்ற ஆசிர்வாதங்கள். (இன்றைய
முதல் வாசகம்),
ஆகவே, மரியா இறைவனின் தாய் என்னும் விழாவைக் கொண்டாடுகின்ற
நாம், மரியா நம்மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பினை
உணர்ந்து, அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சி செய்வோம்.
அதே நேரத்தில் இறைவனுடைய வழியில் நடப்போம். அதன்வழியாய்
இறையருள் நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
மரியாள் இறைவனின் தாய்
நிகழ்வு: மைக்கேல் ஆஞ்சலோவின் ஆகச் சிறந்த படைப்பு Pieta
என்பதாகும். (இறந்த இயேசுவை அன்னை மரியாள் தன்னுடைய
மடியில் வைத்திருக்கின்ற சிற்பம்). அந்த சிற்பத்தைப்
பார்த்து ஒருவர் மைக்கேல் அஞ்சலோவிடம் கேட்டார், "எதற்காக
அன்னை மரியாவை மிகவும் இளமையாக இருப்பது போன்று
படைத்திருக்கிறீர்கள்?". அதற்கு அவர் அவரிடத்தில்
சொன்னார், "மாசுமருவற்ற வாழ்க்கை வாழ்வோர் யாவரும்
இப்படித்தான் இளமையாக இருப்பார்கள். மரியாள் மாசற்ற தூய
வாழ்க்கை வாழ்ந்தாள். அதனால்தான் அவள் இவ்வளவு இளமையாக
இருக்கிறாள்".
வரலாற்றுப் பின்னணி
ஆண்டின் முதல் நாளான இன்று திருச்சபை மரியாள் இறைவனின்
தாய் என்ற விழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. இவ்விழா
எப்படி, எப்போது தொடங்கப்பட்டது என அறிந்துகொள்வது மிகவும்
சிறப்பானதாகும்.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த நெஸ்டோரியஸ் என்பவர்
மரியாள் இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் தாய் அல்ல
என்ற புது வாதத்தை முன்வைத்தார். அதற்கு
திருச்சபையிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. 431
ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி எபேசு நகரில் கூடிய
திருச்சங்கம், "இயேசுவில் இறைத்தன்மையும் மனிதத் தன்மையும்
முழுமையாகக் குடிகொண்டிருகின்றன. ஆகவே மரியாள் இறைவனின்
தாய்" என்பதை நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தது.
அன்றிலிருந்து இன்றுவரை திருச்சபை மரியாள் இறைவனின் தாய்
என்று அன்போடு அழைத்துவருகிறது. நம்முடைய முன்னாள்
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல், தான் எழுதிய
மீட்பரின் தாய் என்னும் திருத்தூது மடலில், "மரியாள்
திருச்சபையின் தாய்" என்றும் அழைத்து சிறப்பு செய்கிறார்.
ஆகவே, மரியாள் இறைவனின் தாய் மட்டுமல்ல, திருச்சபையின்
தாயாக நம்முடைய தாயாக - விளங்குகின்றாள்.
விவிலியச் சான்றுகள்
விவிலியத்தில் மரியாள் இறைவனின் தாய் என்பதற்கான
குறிப்புகள் ஒருசில இடங்களில் காணக் கிடக்கின்றன முதலாவதாக
வானதூதர் கபிரியேல் மரியாளுக்குத் தோன்றுகின்றபோது அவர்,
"அருள்மிகப் பெற்றவரே!, இதோ, கருவுற்று ஒரு மகனைப்
பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்கிறார்
(லூக் 1:31). இவ்வார்த்தைகள், மரியாள் இயேசுவைப்
பெற்றெடுப்பதனால் அவர் இறைவனின் தாயாகிறார் என்பதைக்
குறித்துக்காட்டுகின்றது. இரண்டாவதாக மரியாள் தன்னுடைய
உறவினரான எலிசபெத்தைச் சந்திக்கின்றபோது, அவர்,
"பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும்
குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர
நான் யார்?" என்கிறார். இவ்வார்த்தைகளும் மரியாள்
ஆண்டவரின் தாய் இறைவனின் தாய் என்பதற்கு மிகப்பெரிய
சான்றாக இருக்கின்றது.
ஆகவே, திருநூலும் சரி, திருத்தந்தையர்களின் நம்பிக்கைக்
கோட்பாடும் சரி மரியாள் இறைவனின் தாய் என்பதை மிகச்
சிறப்பாக எடுத்துக்கூறுகின்றன.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
மரியாள் இறைவனின் தாய் என்ற விழாவைக் கொண்டாடும் நாம்
அன்னை மரியாளிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்
என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
கீழ்ப்படிதல்
மரியாள் கீழ்ப்படிதலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு
என்று சொன்னால் அது மிகையாகாது. எவ்வாறெனில், வானதூதர்
கபிரியேல் மரியாவுக்குத் தோன்றி, "மரியா, இதோ கருவுற்று
ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்"
என்று (லூக் 1:31) சொல்கிறபோது, மரியாள் தொடக்கத்தில்
தயங்குகிறாள். ஆனால் வானதூதர் அவளிடம் எல்லாவற்றையும்
விளக்கிச் சொன்னபிறகு, "நான் ஆண்டவரின் அடிமை; உம்
சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று இறைவனின் மீட்புத்
திட்டத்திற்கு கீழ்ப்படிந்து தன்னையே முற்றிலுமாகக்
கையளிக்கிறார்.
பழைய ஏவாள் ஆண்டவர் கொடுத்த கட்டளையான விலக்கப்பட்ட
மரத்தின் கனியை உண்ணக்கூடாது என்பதற்குக் கீழ்படியவில்லை,
அவள் பாம்பின் பசப்பு மொழியில் மயங்கி, விலக்கப்பட்ட கனியை
உண்டு ஆண்டவர் கொடுத்த கட்டளைக்குக் கீழ்படியாமல் போனாள்.
அதனால் பாவம் இந்த உலகில் நுழைந்தது. ஆனால் புதிய ஏவாளாகிய
மரியா ஆண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள்,
அதனால் இந்த மண்ணுலகிற்கு மீட்பு உண்டாகக் காரணமாக
இருந்தாள். நாம் கடவுளின் கட்டளைக்கு கீழபடிந்து
நடக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய
பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில்
கூறுவார், "நீங்கள் அனைவரும் அவருக்குக் (கடவுள்)
கீழ்ப்படிந்து அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும்
ஏற்றுக்கொண்ட முறையை அவர் நினைவுகூரும்போது அவரது உள்ளம்
உங்களுக்குக்காக மிகுதியாக உருகுகிறது". ஆகையால் நாம்
அன்னை மரியாவைப் போன்று இறைவனுக்குக் கீழ்படிந்து
நடக்கின்றபோது இறைவனின் தயவு நமக்கு உண்டு என்பது உறுதி.
தேவையில் இருப்போருக்கு உதவும் நல்ல உள்ளம்
மரியாள் பிறருக்கு, தேவையில் இருப்போருக்கு உதவுகின்ற நல்ல
உள்ளத்தைக் கொண்டவராக இருந்தார். கானாவூர் திருமண நிகழ்வாக
இருக்கட்டும், பேறுகால வேதனையில் தவித்த எலிசபெத்துக்கு
உதவச் சென்ற நிகழ்வாக இருக்கட்டும் மரியாள் தேவையில்
இருப்போருக்கு உதவுவதில் தலைசிறந்தவளாக விளங்கினாள். நாம்
ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று பிறருக்கு உதவவேண்டும்
என்பதே நமக்கு முன்னால் இருக்கும் சவால்.
எப்படி உதவுவது?. தமிழில் நாம் சொல்லக்கூடிய "உதவி" என்ற
வார்த்தையே நாம் எப்படி பிறருக்கு உதவவேண்டும் என்பதை
நமக்கு எடுத்துக்கூறுகிறது. (உ உள்ளுணர்ந்து; வி-
விரைந்து ; த- தன்னலமின்றி). நாம் உதவி செய்கின்றபோது
உள்ளுணர்ந்து உதவிசெய்யவேண்டும். பிறர் கேட்டுத்தான் உதவி
செய்யவேண்டும் என்பதில்லை. கேளாமல், நாமாகவே உள்ளுணர்ந்து
உதவி செய்யவேண்டும். அதே நேரத்தில் விரைந்து
உதவிசெய்யவேண்டும். ஒருவருக்கு இப்போது உதவி
தேவைப்படுகிறது என்றால், அந்த நொடியிலே செய்யவேண்டும்.
பிறகு உதவி செய்துகொள்ளலாம் என்பது கூடாத காரியம்.
இறுதியாக நாம் செய்யும் உதவியை தன்னலமின்றிச்
செய்யவேண்டும். ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றைப் பெறலாம்
என்ற எதிர்பார்ப்போடு செய்வது உண்மையான உதவியாகாது.
மரியாள் மேலே சொல்லப்பட்ட இரண்டு நிகழ்வுகளிலும் யாரும்
கேளாமலே உள்ளுணர்ந்து உதவிசெய்தாள்; விரைந்து உதவி
செய்தாள். அதேநேரத்தில் தன்னலமின்றியும் உதவி செய்தாள்.
அவளுடைய அன்புப் பிள்ளைகளாகிய நாமும் உள்ளுணர்ந்து,
விரைந்து, தன்னலமின்றி உதவி செய்வோம்.
இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்தவள்
மரியாள் இறைவார்த்தைக் கேட்டு, அதன்படி நடந்ததற்கு ஒரு
மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. எவ்வாறெனில், ஒருமுறை
மரியாள், தன்னுடைய சொந்தங்களோடு இயேசுவை சந்திக்கச்
செல்கிறபோது, இயேசு, "யார் என்னுடைய தாய்?, யார் என்னுடைய
சகோதரிகள்?" என்று கேட்டுவிட்டு, "விண்ணகத்திலுள்ள என்
தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும்
சகோதரியும் தாயும் ஆவார்" என்பார் (மத் 12:50). இங்கே
மரியாள் இரண்டு விதங்களில் தாயாகின்றார். ஒன்று இயேசுவைப்
பெற்றெடுத்தனால், இன்னொரு தந்தையின் திருவுளத்தின்படி
நடந்ததினால். மரியாள் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு
கட்டத்திலும் இறைவார்த்தையைக் கேட்டு, அதனை தன்னுடைய
உள்ளத்தில் இருத்தி சிந்தித்து செயல்பட்டு வந்தாள். அதனால்
அன்னை இறைவார்த்தையைக் கடைப்பிடித்து வாழ்வதில்
நமக்கெல்லாம் முன்மாதிரி.
நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கின்றோமா என்று
சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம்
இறைவார்த்தையைக் கேட்கின்றோம். ஆனால் வாழ்வக்குவதில்லை;
நம்முடைய வாழ்வில் செயல்படுத்துவதில்லை. தொடக்கநூல் 22:18
ல் ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்துக் கூறுவார், "நீ என்
குரலுக்கு செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன்
வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசிகூறிக்கொள்வர்". ஆம், நாம்
இறைவனின் வார்த்தைக்கு செவிமடுத்து வாழ்கின்றபோது என்றுமே
ஆசிர்வாதம்தான்.
அன்னை மரியாள் இறைவார்த்தையை வாழ்வாக்கினாள், நாமும்
இறைவனின் வார்த்தையை வாழ்வாக்குவோம், இறைவனின் ஆசியை
நிறைவாய் பெறுவோம். ஆகவே, மரியா இறைவனின் தாய் என்ற
விழாவைக் கொண்டாடும் நாம், அன்னையை நமக்குக் கொடுத்த
ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். அதேவேளையில் அன்னையிடம்
விளங்கி கீழ்படிதலை, பிறருக்கு உதவும் நல்ல பண்பினை,
இறைவார்த்தையைக் கேட்டு, நடக்கின்ற பண்பை நமதாக்குவோம்,
ஆண்டவரின் அருளை நிறைவாய் பெறுவோம்.
"தாயின் மடிதான் உலகம், அவள் தாளைப் படிந்திடுவோம்".
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
அன்னையின் வாக்கு
பலிக்கும்
உலகப் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ. அவருடைய
சிறுவயதில் அவரது தாயார் அவரிடம், "என் அன்பு மகனே! நீ
வளர்ந்து பெரியவனாகும்போது, ஒரு படைவீரன் ஆனாயெனில்,
பின்னாளில் இந்த உலகமே கண்டு வியக்கும் மாவீரன் ஆவாய்.
ஒருவேளை நீ துறவியானாய் எனில், பின்னாளில் அகில உலகத்
திருஅவையையே தலைமை தாங்கி வழிநடத்தும் திருத்தந்தை ஆவாய்.
ஒருவேளை நீ வளர்ந்து பெரியவனாகும்போது ஓர் ஓவியனானாய்
எனில், பின்னாளில் நீ படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும்
ஓவியனாவாய்" என்றார்.
பிக்காசோவும் வளர்ந்து ஓர் ஓவியரானார். பின்னாளில்
படிப்படியாக வளர்ந்து உலகம் போற்றும் ஓவியரானார். ஆம்,
அன்னையின் வாக்கு பொய்யாகாது, அவளுடைய வாக்கு நிச்சயம்
பலிக்கும்; அவளுடைய ஆசிர்வாதம் தன் பிள்ளைகளுக்கு
எப்போதும் உண்டு.
மரியா இறைவனின் தாய்
ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னையாம் திரு அவை, மரியா
இறைவனின் தாய் என்றொரு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது.
ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நொஸ்டோரியஸ் என்றொரு
ஆயர், மரியா இயேசுவின் தாய்தானே ஒழிய, இறைவனின் அல்ல என்று
சொல்லிவந்தார். இவருடைய கருத்தை 431 ஆம் ஆண்டு, எபேசு
நகரில் கூடிய பொதுச்சங்கமானது கடுமையாக எதிர்த்து, மரியா
இறைவனின் தாய் என்று பிரகடனம் செய்தது. அன்று முதல்
இன்றுவரை மரியா இறைவனின் தாய் என்று திரு அவை கொண்டாடி
மகிழ்கின்றது.
ஆண்டின் தொடக்கத்தில் அன்னையின் ஆசிர்வாதம்
பொதுவாக நல்ல நாட்களின்போதும், குடும்பத்தில் நடைபெறுகின்ற
முக்கியமான நிகழ்வுகளின்போதும் நாம் நம்முடைய
குடும்பங்களில் இருக்கின்ற பெரியோர்களிடமிருந்தும்
பெற்றோரிடமிருந்தும் ஆசிர்வாதம் பெறுவது வழக்கம். நாம்
ஆசிர்வாதம் பெறுகின்றபோது, அவர்கள் நம்மை நிறைவாக
ஆசிர்வதித்துவிட்டு (சில சமயங்களில்) கையில் பணம்கூடத்
தருவார்கள். ஆண்டின் முதல் நாளான இன்று, அன்னைக்கு
விழாக்கு விழாக் கொண்டாடுகின்ற இந்த மகிழ்ச்சியான
தருணத்தில், நம் அன்னையானவள் நமக்கு என்னென்ன
ஆசிர்வாதங்களைத் தருகின்றார் என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
தீமையிலிருந்து காக்கின்றார்
பிரபல எழுத்தாளரான சாரு நிவேதிதா, நம்முடைய நாட்டில் நாம்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பது பற்றிச்
சொல்லும்போது, "கண்ணிவெடிகள் இருக்கின்ற பகுதியை எப்படி
நாம் கவனமாகக் கடந்துசெல்லவேண்டுமோ, அது போன்று நம்முடைய
இந்திய நாட்டில் ஒவ்வொருநாளையும் மிகக் கவனமாகக்
கடத்தவேண்டி இருக்கின்றது" என்று குறிப்பிட்டார். இது
அப்பட்டமான உண்மை. இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல, உலக
நாடுகளிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றது.
எப்போது என்ன நடக்குமோ, யார் யார்மீது சண்டை செய்வார்களோ
என்ற அச்சத்தில்தான் ஒவ்வொருநாளும் நாம்
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில்,
அன்னையின் விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில், ஆண்டவர்
நமக்கு பாதுக்காப்பைத் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றார்.
எண்ணிக்கை நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்
வாசகத்தில், "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக்
காப்பாராக" என்று கடவுள், ஆரோன் வழியாக இஸ்ரயேல்
மக்களுக்கு பாதுகாப்பை காக்கின்ற பணியைச் செய்வதாக
வாக்குறுதி வழங்குகின்றார். அன்று இஸ்ரயேல் மக்களுக்கு
வழங்கிய ஆசிர்வாதத்தை, இறைவன் இன்று தன் திருத்தாய் வழியாக
நமக்கு வழங்குகின்றார். ஆகவே, இறைவன் நம்மைக் காத்திடுவார்
என்ற நம்மையோடு வாழ்வோம்.
அருளை பொழிகின்றார்
அன்னையானவள், தம் பிள்ளைகளாகிய நமக்கு தருகின்ற இரண்டாவது
ஆசிர்வாதம், அவர் தன்னுடைய அருளைப் பொழிவதுதான். முதல்
வாசகத்தில் ஆண்டவர் தொடர்ந்து கூறும்போது, "ஆண்டவர் தம்
திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து, அருள் பொழிவாராக"
என்பார். இதையே நாம் அன்னையானவள் இன்று நமக்குத் தருகின்ற
ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்ளலாம். மரியா, வானதூதரால்
அருள்மிகப் பெற்றவளே என்று வாழ்த்தப்பட்டவள்.
அப்படிப்பட்ட அன்னை நமக்கு தன்னுடைய அருளை நிறைவாகப்
பொழிவது உறுதி.
சில நாட்களுக்கு முன்பாக, ஒரு காவல்த்துறை அதிகாரி,
காட்டில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தன்னுடைய
தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற மாதிரியான
ஒரு படம் இணையத்தில் ட்ரென்டிங்கானதை பார்த்திருப்போம்.
இந்தப் படத்தில் வருகின்ற காவல்துறை அதிகாரி கர்நாடகா
மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் தன்னுடைய பணியில்
பதவி உயர்வு பெற்றார் என்றும் செய்திகள் சொல்கின்றன.
அன்னையின் ஆசீர்வாதம் ஒருவருக்கு இருக்கும்போது அவர்
தன்னுடைய வாழ்வில் மேலும் மேலும் உயர்வார் என்பதுதானே
உண்மை.
அன்னை மரியா இன்று நம்மீது பொழிகின்ற அருள், நம்மை மேலும்
மேலும் உயர்வடையச் செய்யும் என்பதில் எந்தவொரு
மாற்றுக்கருத்தும் கிடையாது.
அமைதியை அருள்கின்றார்
பாதுகாப்பையும் அருளையும் தருகின்ற மரியன்னை, நிறைவாக
நமக்கு அமைதியையும் அருளுகின்றார். முதல் வாசகத்தில்,
"ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு
அமைதி அருள்வாராக" என்று ஆண்டவர் சொல்வதாக வாசிக்கின்றோம்.
ஆம், ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதியை - வெளி அமைதி
மட்டுமட்ல்ல, மன அமைதியையும் நிறைவாகத் தருகின்றார். இதே
அமைதியை மரியன்னை நமக்குத் தருகின்றார். இத்தகைய அமைதி
நமக்குக் கிடைக்கின்றபோது நம்முடைய வாழ்வில் என்பதும்
மகிழ்ச்சிதான்.
நிறைவாக
அன்னை என்றால் ஒரே அன்னைதான், உன் அன்னை, என் அன்னை என்ற
வேறுபாடு இல்லை" என்பார் லா.சா.ரா என்ற தமிழ் சிறுகதை
எழுத்தாளர். ஆமாம், நமக்கு மரியா என்ற அன்னை
இருக்கின்றார். அவர் நமக்கு பாதுகாப்பையும் அருளையும்
அமைதியையும் இன்னும் பல்வேறு நலன்களையும் வழங்குகின்றார்.
ஆகவே, அப்படிப்பட்ட அன்னையின் பெருவிழாவைக் கொண்டாடும்
நாம், அவர் நமக்குச் சொல்வதுபோல், இயேசு சொல்வதுபோல
செய்வோம், வாழ்ந்து காட்டுவோம். அதன்வழியாக இறையருள்
நிறைவாய் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
பிரிந்த சபையைச் சார்ந்த ஒரு சகோதரி ஒரு கத்தோலிக்கப்
பெண்ணிடம் இயேசுவைத் தான் நாம் போற்ற வேண்டும். மரியாவைப்
போற்றக் கூடாது. பிள்ளைகளுக்குத்தான் மதிப்பு. தாய்க்கு அல்ல.
குஞ்சுக்குத்தான் மதிப்பு. கூட்டுக்கு அல்ல என்று அடிக்கடி
கூறிக் கொண்டே வந்தாள். ஒருநாள் கத்தோலிக்கப் பெண் அந்தப்
பிரிந்த சபைச் சகோதரி வீட்டிற்குச் சென்று அந்த வீட்டுப்
பையனிடம் மட்டும் வணக்கம் செலுத்திவிட்டு அந்த அம்மாவைக்
கண்டுகொள்ளாமல் புறப்பட்டாள். இதைக் கண்டு அந்த சகோதரி ஆத்திரமடைந்து
என்னங்க! இன்று வித்தியாசமா நடக்கிறீங்க! என் பிள்ளைக்கு
மட்டும் வணக்கம் செலுத்திப் பேசிவிட்டு என்னை ஓரங்கட்டிப்
போறீங்களே! இது முறையா? என் பிள்ளைதான் என்னை மதிக்குமா?
என்றாள். அதற்குக் கத்தோலிக்கப் பெண், நீங்கதான்
பிள்ளைக்குத் தான் மதிப்பு. தாய்க்கு அல்ல. குஞ்சுக்குத்
தான் மதிப்பு, கூட்டுக்கு அல்ல என்று சொன்னீங்களே என்றாள்.
பிரிவினை சபைச் சகோதரி என்ன பேசுவது என்று தெரியாது மவுனம்
ஆனாள்.
தாயுமானவர் சொல்லுகிறார்: நீயில்லாமல் நானில்லை. தாயில்லாமல்
சூல் (கரு) இல்லை, தாய் இல்லாமல் சேய் இல்லை என்று. மேகத்தைப்
புகழ்வது அது தரும் மழைக்காகத்தானே! பூந்தோட்டத்தைப் புகழ்வது
அது தரும் பூக்களுக்காகத்தானே. பசுவைப் புகழ்வது அது தரும்
பாலுக்காகத்தானே. அதேபோல் தாயைப் புகழ்வது அது ஈன்றெடுத்த
குழந்தைக்காக. அதேபோல் மரியாளின் பெருமை அவள் இயேசுவை ஈன்றெடுத்த
தனிப்பேறு. ஆண் இல்லாமல் கடவுள் இவ்வுலகில் மனிதராக முடிந்தது.
ஆனால் ஒரு பெண் இல்லாமல் இயேசு இவ்வுலகில் பிறக்க முடியவில்லை.
மரியாவின் சம்மதம் இயேசுவுக்குத் தேவைப்பட்டது. எனவே மீட்பரின்
தாயாக, இயேசுவின் தாயாக, இறைவனின் தாயாக விளங்குகின்றாள்
மரியா.
விவிலியத்தைப் புரட்டினால் தெளிவான சான்றுகள் காண
முடியும்.
எலிசபெத் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் என்
ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? (லூக். 1:43) என்று
கேட்கவில்லையா?
காலம் நிறைவேறியபோது. கடவுள் தன் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக
அனுப்பினார் (கலா. 4:4-5) என்று வாசிக்கின்றோம்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அது கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு
கடவுளாகவும் இருந்தது. வாக்கு மனிதர் ஆனார் (யோவா.1:1,14).
அந்த இயேசுவே மரியாவின் மகன் என்றும் சொல்லப்பட்டுள்ளது
(மாற்.6:3).
இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும்
பெயரிடுவீர் (லூக். 1:31) என்றும் தெளிவாக வானதூதர் கபிரியேல்
கூறுகிறார்.
மரியா உண்மையிலே இறைவனின் தாய் என்று கி.பி. 431- ஆம் ஆண்டிலே
எபேசில் கூடிய திருச்சங்கம் தெளிவு படுத்தியுள்ளது. அதில்
கிறிஸ்துவின் இறைத்தன்மைக்குத் தாய் அல்ல. மாறாக உண்மையான
கடவுளாக இருந்தவரை மனிதராக ஈன்றெடுத்தவள் என்று பொருள்படும்
என்றும் தெளிவு படுத்துகிறது எபேசு சங்கம்.
மரியாள் உண்மையிலே இறைவனும் மீட்பருமான இயேசுவின் தாய் என
ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறாள் என்று இரண்டாம் வத்திக்கான்
சங்கம் திருச்சபைக் கொள்கைத் திரட்டு நமக்கு உறுதி செய்கிறது.
பள்ளி மாணவன் ஒருவன் பள்ளிக்குச் செல்ல மறுத்தான். ஏன் என்று
கேட்டால் கணித ஆசிரியர் முட்டாள் தனமாகக் கணக்கு சொல்லித்
தருகிறார். நேற்று, மூன்றும் மூன்றும் ஆறு என்றார். இன்று
நான்கும் இரண்டும் ஆறு என்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது.
இது தப்புக் கணக்கு என்றான் பையன். இதேபோலத்தான் நம்
பிரிந்த சகோதரர்கள் போடும் தப்புத் தாளம்.
கடவுளுடைய ஞானமும், அறிவும் எத்துணை ஆழமானது. அவருடைய
தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை. அவருடைய செயல் முறைகள் ஆராய்ச்சிக்கு
அப்பாற்பட்டவை (உரோ. 11:33) என்பதை நாம் சிந்திக்க
வேண்டும்.
மரியாவை இரண்டு விதங்களில் புரிந்துகொள்ளலாம். ஒன்று ஊன்
இயல்பில், மற்றொன்று ஆவியில். மரியாவை ஊன் இயல்பில்
புரிந்து கொண்ட பெண் ஒருத்தி இயேசுவைப் பார்த்து "உம்மைக்
கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவள்" என்றாள்.
ஆனால் இயேசுவோ, "தந்தையின் வார்த்தையைக் கடைபிடிப்பவர் இன்னும்
அதிகமாகப் பேறுபெற்றவர்" (லூக். 11:27-28) என்றார்.
மரியா பேறுபெற்றவள். காரணம் இயேசுவைக் கருத்தாங்கினாள், ஈன்றெடுத்தாள்.
பாலூட்டினாள் என்று மட்டுமல்ல. மாறாக மரியா இயேசுவின்
வார்த்தைக்குச் செவிமடுத்தார். அதை உள்ளத்தில் இறுத்தித்
(லூக். 2:19) திறந்த உள்ளத்தோடு ஏற்றாள். தன் வாழ்வில் கடைபிடித்து
வாழ்ந்தார். எனவே மரியாவின் உண்மையான தாய்மைப் பேறு என்பது
அவள் ஊன் இயல்பைக் கடந்து ஆவியில் செயல்பட்டார் என்பதுதான்.
எனவே இயேசுவின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம், ஊனியல்பின்
குடும்பம் அல்ல. ஆவியின் குடும்பம், விசுவசிக்கும் குடும்பம்.
எனவேதான் என் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
எனக்குச் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் (மத்.12:50)
என்று தாயை இரத்த உறவைவிட விசுவாச உறவில் உயர்த்துகிறார்.
நமது வாழ்வில் இறைவனின் விருப்பத்தை நாம் நிறைவேற்றும்போது
நாமும் இறைவனின் தாயாகலாம் - தாயாகிறோம். இயேசுவின் சிறப்புக்
குடும்பத்தில் நுழைகிறோம். இறைவனின் வார்த்தையை விசுவாசத்துடன்
ஏற்றுக் கொள்வதின் மூலம் திருச்சபையும் ஓர் அன்னையாகச் செயல்படுகிறது.
திருமுழுக்கு வழியாகப் புதிய பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்
திருச்சபை ஓர் அன்னையாகிறது என்றால் பிறரில் நாம்
கிறிஸ்துவை உருவாக்குதலின் வழியாக நாமும் அன்னையாக, தாயாக
ஆகலாம் அன்றோ!
நிகழ்ச்சி
நிறைமாத கர்ப்பிணி ஒருவரை, இரு பெண்கள் என்னிடம் கொண்டு வந்து
சாமி! இவளுக்கு இடுப்பு வலி வர வேண்டும் எனச் செபியுங்கள்
என்றனர். குழந்தை பிறக்க வேண்டுமானால் பேறுகால வேதனை அனுபவிக்க
வேண்டும். இடுப்பு வலி வரவேண்டும். இதேபோலத்தான் இயேசுவை
ஈன்றெடுக்க நாமும் பேறுகால வேதனை அடைய வேண்டும். எனவேதான்
தூய பவுல் அடிகளார், "பிள்ளைகளே! உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை
உங்களுக்காக நான் மீண்டும் பேறுகால வேதனை அடைகிறேன்" (கலா.
4:19) என்றார்.
திருமணமான பெண் ஒருவர் மூன்று வழிகளில் தாய்மைப் பேறு அடையாது
போகலாம். ஒன்று, பிள்ளை பெற இயலாதவளாக இருக்கலாம். இரண்டாவது,
அவள் பிள்ளை பெறாதபடி கருத்தடை கருவிகளை முன்னமே பயன்படுத்தலாம்.
மூன்றாவது, தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் கருச்சிதைவு
செய்யலாம்.
நம் கிறிஸ்தவ வாழ்விலும் மூன்று விபத்துக்கள் நிகழ இடமுண்டு,
ஒரு சிலர் கிறிஸ்துவைக் கருத்தரிக்க இயலாத நிலையில் உள்ளனர்.
இவர்கள் விசுவாச மலடுகள், பாதை ஓரத்தில் விதைக்கப்பட்டவர்கள்
(மத். 13:19).
வேறுசிலர் திருமுழுக்கால் தாங்கள் பெற்ற விசுவாசம்
முளைக்காமல் விசுவாசக் கருத்தடை செய்பவர்கள். இவர்கள் பாறை
மீது விதைக்கப்பட்ட விதையைப் போல் ஆவார்கள் (மத். 13:21).
மற்றும் சிலர் கிறிஸ்துவைச் சிறிது காலம் வளர விட்டு
பின்பு கருச்சிதைவு செய்பவர்கள். இறைவார்த்தையை உலகப் பற்றுக்களால்
நெருக்கிவிடும் முட்புதர்கள் இவர்கள் (மத். 13:22).
விசுவாச வாழ்வில் நாம் எந்த ரகத்தைச் சார்ந்தவர்கள்?
விசுவாச மலடுகளா? அல்லது விசுவாசக் கருத்தடைச் செய்பவர்களா?
உலகிற்கு கிறிஸ்துவை ஈன்றெடுத்துக் கொடுப்பதே நமது அழைப்பின்
தலையாயக் கடமை. நாமும் அவரோடு இணைந்திருந்தால் மிகுந்த கனி
தருவோம் (யோவா. 15:5) என்கிறார் இயேசு. எனவே அழைப்பை உணர்ந்து
மரியாவைப் போல நாமும் தாய்மை நிலையில் செயல்படப் புறப்படுவோம்.
அது நம் தாய் மரியாவுக்குப் பெருமை சேர்க்கும்.
தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை
எழுப்ப முடியுமா?
துறவி ஒருவருக்குக் கடவுளோடு பேசும் வரம் இருக்கின்றது
என்று சொல்லி பலர் அவரிடம் சென்று ஆசி பெற்று வந்தனர்.
ஓர் இளைஞனுக்குத் துறவி கடவுளோடு பேசுவது உண்மையா என்பதை
அறிந்து கொள்ள ஆசை! அந்த இளைஞன் துறவியைத் தேடி
காட்டுக்குச் சென்றான்.
துறவியிடம், உங்களுக்குக் கடவுளோடு பேசும் வரம் இருப்பதாக
எல்லாரும் சொல்கின்றார்கள். அது உண்மையா? என்றான்.
ஆம். கடவுளோடு பேசுகின்றேன். கடவுள் என்னோடு
பேசுகின்றார் என்றார் துறவி.
அப்படியானால், நீங்கள் அடுத்த முறை அவரைப்
பார்க்கும்போது. நான் செய்த பாவங்கள் என்னென்ன என்று
கேட்டுச் சொல்லுங்கள் என்றான் இளைஞன்.
துறவி, சரி என்றார்.
மறுநாள் இளைஞன் துறவியிடம் சென்று, என்ன! கடவுளைச் சந்தித்தீர்களா?
அவர் என்ன சொன்னார்? என்றான்.
அதற்கு அந்த முனிவர், சந்தித்தேன் மகனே! உன் பாவங்களைப்
பற்றியும் கேட்டேன். அதற்குக் கடவுள். அந்த இளைஞனுடைய
பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்துவிட்டேன்.
இப்போது அவனுடைய பாவங்கள் எதுவும் என் ஞாபகத்திலில்லை
என்று சொல்லிவிட்டார் என்றார்.
அதைக் கேட்டு அந்த இளைஞன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
ஆம். நமது கடவுள் நமது பாவங்களை மன்னித்து, அவற்றை
மறந்துவிடும் கடவுள்.
இப்படிப்பட்ட கடவுள் தமது நிபந்தனையற்ற ஆழமான அன்பை
உலக மக்களுக்கு வெளிப்படுத்தத் திருவுளமானார்.
தமது திருவுளத்தை நிறைவேற்றிக் கொள்ள. மனிதனாகப்
பிறந்து, மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள்
பாவங்களை மன்னித்து, மறந்து அவர்களை வளமுடன் வாழவைக்க,
மக்களினத்தைக் காப்பாற்ற, அனைவர் மீதும் அருள்பொழிய,
தம் திருமுகத்தை உலகின் பக்கம் திருப்ப (முதல் வாசகம்)
தாயொருவர் தேவைப்பட்டார். அவரைக் கடவுள் தேடினார்.
தேடிய பெண் (இரண்டாம் வாசகம்] கிடைத்தார். அவர்தான்
மரியா!
மேலும் அறிவோம் :
புத்தாண்டு புலர்ந்துவிட்டது; மற்றும் ஓர் ஆண்டு மலர்ந்துவிட்டது.
இப்புத்தாண்டை இயேசுவின் இனிய நாமத்தில் தொடங்குவோம்; இறைவனின்
தாய் புனிதமிகு கன்னிமரியின் பாசமிகு பாத கமலத்தில்
வைப்போம்.
இன்று இயேசு பிறந்த எட்டாம் நாள். அவருக்கு இயேசு என்ற பெயரைச்
சூட்டிய நாள். இயேசுவின் நாமம் சிந்தைக்கு இனிய நாமம்;
செவிகளுக்கு இனிய நாமம்: பைந்தமிழ் பாவுக்கும் நாவுக்கும்
இனிய நாமம். இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர்
அனைவரும் மண்டியிடுவர் (பிலி 2:10). நாம் மீட்படைய இயேசுவின்
பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை (திப
4:12), புனித பேதுரு கால் ஊளமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால்
எழுந்து நடக்கச் செய்தார் (திப 3:6). பழைய ஏற்பாட்டில்
சிறுவன் தாவீது கோலியாத் என்ற அரக்களைக் கடவுளின் பெயரால்
கொன்றான். (1 சாமு 17:43-45).
நமது வாழ்வில் கோலியாத் போன்ற பல தீய சக்திகள் நம்மை முடக்கி
விடுகின்றன.. நாம் செய்வது என்னவென்று கலங்கித்
திகைக்கிறோம். ஆனால் இயேசுவின் பெயரைச் சொல்லி அவற்றை எதிர்த்து
வெற்றி அடைவோம். இயேசுவின் பெயரால் நாம் தந்தையிடம் கேட்பதையெல்லாம்
அவர் நமக்குக் கொடுப்பார் (யோவா 15:16), கடவுள் நம்
சார்பில் இருக்கும்போது நாம் யாருக்கும் பயப்படத்
தேவையில்லை. "ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு: யாருக்கு
நான் அஞ்ச வேண்டும். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்"
(திபா 27:1).
இன்று புளிதமிகு நன்னி மரியா இறைவனின் தாய் என்ற
பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். மரியன்னையின் தனிச்சிறப்பு
அவர் இறைவனின்தாய் என்பதாகும். நாம் மேகத்தைப் புகழ்வது அது
கொடுக்கும் மழைக்காக; மரத்தைப் புகழ்வது அது கொடுக்கும் கனிக்காக:
பசுவைப் புகழ்வது அது கொடுக்கும் பாலுக்காக; தாயைப் புகழ்வது
அவர் ஈன்றெடுத்த சேயுக்காக. அவ்வாறே நாம் மரியன்னையைப் புகழ்வது
அவர் ஈன்றெடுத்த உலக மீட்பருக்காக. கிறிஸ்து கடவுள் என்றால்,
மரியா கடவுளின் தாய் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பலியின்
வருகைப்பாடல் மரியாவை இறைவனின் தாய் என்று புகழாரம்
சூட்டுகிறது. "வாழ்க புனித அன்னையே! விண்ணையும் மண்ணையும்
எக்காலத்தும் ஆளும் அரசரை ஈன்றவர் நிரே." இன்றைய இரண்டாம்
வாசகத்தில் திருத்து பவுல், "காலம் நிறைவேறியபோது கடவுள்
தம் மகனைப் பெண்ணிடமிருந்து பிறக்கச் செய்தார் " (கலா 4:4)
என்கிறார்.
மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டு
உரத்த குரலில் மரியாவைப் பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம்
வர தான் யார்?" (லூக் 1:43) என்று கேட்கிறார். மரியா ஆண்டவரின்
தாய். ஆண்டவர் என்ற சிறப்புப் பெயர் இறைவனுக்கு மட்டுமே உரியது.
மரியா ஆண்டவரின் தாய் என்றால், அவர்
இறைவனின் தாய் என்பது வெள்ளிடை மலை.
ஒரு பேரன் தன் தாத்தாவைச் சுட்டிக்காட்டி. "நான் என்
தாத்தாமேல் உயிரை வைச்சிருக்கிறேன். ஏனெனில் என் தாத்தா என்மேல்
உயிலையே எழுதி வைச்சிருக்கிறாரு" என்றான். இயேசு கிறிஸ்து
அவர் சாகுமுன் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் என்ன? "இவரே
உம் தாய்" (யோவா 19:27). புனித யோவான் வாயிலாக மரியாவை நமது
தாயாக அளித்தார். கிறிஸ்துவின் இந்த இறுதி விருப்பத்தை ஏற்றுக்
கொள்ளாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதில்லை. மரியன்னையை
நமது தாயாக ஏற்றுக்கொண்டு, அவருடைய பாதத்தில் இப்புத்தாண்டை
வைப்போம். "உருவிலான் உருவாகி, உலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக்
சுருததாங்கிய கன்னிமரி நம்மைக் கைபிடித்து வழிநடத்துவார்."
மரியா உண்மையிலேயே "இறைவனின் தாய்" என்று கி.பி. 431- ஆம்
ஆண்டு எபேசில் கூடிய பொதுச் சங்கம் அறிக்கையிட்டது. "இம்மானுவேல்
உண்மையிலேயே கடவுள். எனவே பேறுபெற்ற கன்னி உண்மையிலேயே இறைவனின்தாய்."
மரியா மீட்பரின் தாய். யாரெல்லாம் கடவுளுடைய விருப்பத்தை
நிறைவேற்றுகின்றார்களோ அவர்களும் மீட்பரின் தாயாக முடியும்
(மத் 12:48.50). மரியா மீட்பரை இவ்வுலகிற்கு அளித்தார்.
நாமும் நமது சாட்சிய வாழ்வினால் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு
அளிக்க முடியும்.
புத்தாண்டின் முதல் நாள் உலக அமைதி நாளாகக்
கொண்டாடப்படுகிறது. அமைதி எங்கே இருக்கிறது என்பதை ஓர்
ஓவியர் பின்வருமாறு படம் வரைந்து காட்டிப் பரிசு பெற்றார்.
மரங்கள் நிறைந்த அடர்த்தியான காடு; அமாவாசை இருட்டு; கோடை
இடி; கண்ணைப் பறிக்கும் மின்னல்; சிங்கம், சிறுத்தைப்புலி
மற்றும் கொடிய விலங்குகளின் சீற்றம்; பேய் மழை.
இப்பயங்கரமான காட்டில் ஒரு பெரிய மரம்: அம்மரத்தின்
நடுவில் ஒரு பொந்து: அப்பொந்தில் ஒரு தாய்ப்பறவை; அதன்
இறக்கைக்கு அடியில் ஒரு சேய்ப்பறவை பயமின்றி நிம்மதியாகத்
தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்பொந்துக்குக் கீழ்:
"இங்கேதான் அமைதி தவழ்கின்றது" என்று ஓவியர்
எழுதியுள்ளார்.
காரிருள் சூழ்ந்த பயங்கரமான காட்டில் ஒரு சேய்ப்பறவை
அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக்
காரணம்: அது தன் தாயின் இறக்கைக்கு அடியில் உள்ளது.
அச்சமும் திகிலும் நிறைந்த நம் வாழ்வில் நாம் அமைதியுடன்
வாழவேண்டுமென்றால், நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு, அவரது
அன்பான அரவணைப்பில் இருப்பதை உணர வேண்டும். திருப்பா 91
கூறுவதை இப்புத்தாண்டின் தாரக மந்திரமாகக் கொள்வோம்: "அவர்
தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்
கீழ் நீர் புகலிடம் காண்பீர் - தீங்கு உமக்கு நேரிடாது.
வாதைஉம் கூடாரத்தை நெருங்காது" (திபா 91:1, 10),
புத்தாண்டாகிய இன்று குழந்தை இயேசு பிறந்த எட்டாம் நாள்,
இன்று குழந்தை இயேசுவுக்கு அதன் பெற்றோர்கள் விருத்தசேதனம்
செய்து, இயேசு என்ற பெயரைச் சூட்டியதாக இன்றைய
நற்செய்தியில் வாசிக்கின்றோம். அக்குழந்தை இந்த ஆண்டில்
ஒவ்வொரு நாளும் கூறுவது: "நான்தான்: அஞ்சாதீர்கள்" (யோவா
6:20). இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, அழுகையோ
சிரிப்போ, உடல் நலமோ நோயோ - எத்தகைய சூழலிலும் குவலயம்
போற்றும் குழந்தை இயேசு நம்முடன் இருந்து, நம்மை
வழிநடத்திக் காத்து வருகிறார்,
இன்று திருச்சபை, "மரியா இறைவனின் தாய்" என்ற பெருவிழாவைக்
கொண்டாடுகிறது. மரியா மீட்பரின் தாய் மட்டுமல்ல, நம்முடைய
தாயும்கூட, எனவே, இறைவனின் தாயும் நமது தாயுமான
மரியன்னையின் பாத கமலத்தில் இப்புத்தாண்டை வைப்போம். அந்த
அன்பு அன்னை நம்மை கரம்பிடித்து, கவலைகளைப் போக்கி,
கண்ணீரைத் துடைத்து, நம்மைக் கரைசேர்ப்பார் என்பது உறுதி.
மரியாவின் படத்திற்கு முன் ஒருவர் மண்டியிட்டு, "அம்மா!
உம்மை எனக்குத் தாயாகக் காட்டமாட்டாயா?" என்று கேட்க,
மரியா அவரிடம், "மகனே! உன்னை எனக்குப் பிள்ளையாக
காட்டமாட்டயா?" என்று கேட்டார். மரியா என்றும் நமக்குத்
தாயாக இருக்கிறார். ஆனால் நாம் என்றும் அவருடைய பிள்ளைகளாக
இருக்கின்றோமா? என்பதுதான் பிரச்சினை!
மரியன்னையின் பிள்ளைகளாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
"என் ஆண்டவரின் தாய்" (லூக் 1:42) என்று மரியாவை அழைத்த
எலிசபெத் அவரிடம், "ஆண்டவர் உமக்குச் சென்னவை நிறைவேறும்
என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" (லூக் 1:45) என்று
கூறினார், மரியா பேறு பெற்றவர்; ஏனெனில் அவர் கடவுளின்
வார்த்தையை நம்பினார். "கன்னி நம்பினார்; நம்பி
கருவுற்றார். உடலால் கருவுறுமுன் உள்ளத்தால் கருவுற்றார்"
(புனித அகுஸ்தின்).
எனவே, மரியாவின் உண்மையான பிள்ளைகளாக நாம் நடக்க
வேண்டுமென்றால், நாமும் அவரைப்போல் கடவுளை முற்றிலும்
நம்பி, கடவுளிடம் சரண் அடைய வேண்டும். மரியா கடவுளை
நம்பியதால் கடவுள் அவருக்குத் துன்பம் வராமல்
பாதுகாக்கவில்லை . மரியாவைக் கடவுள் சென்மப்பாவம்
தீண்டாமல் பாதுகாத்தார்; ஆனால் துன்பம் தீண்டாமல்
பாதுகாக்கவில்லை. கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது மரியா
சிலுவை அருகில் நின்றுகொண்டிருந்தார் (யோவா 19:25).
அப்போது சிமியோன் கூறிய இறைவாக்கு, "உமது உள்ளத்தை ஒரு
வாள் ஊடுருவிப் பாயும்" (லூக் 2:35) நிறைவேறியது. ஆனால்
மரியா சிலுவை அடியில் விசுவாசத்தால் நிமிர்ந்து நின்றார்.
இத்தகைய வீரத் தாயின் புதல்வர்களாகிய நாம் துன்பத்தைக்
கண்டு துவண்டு போகலாமா?
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்:
"நாம் அடிமைகள் அல்ல; பிள்ளைகள்" (கலா 4:7). அதே
திருத்தூதர் கூறுகிறார்: "கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய
மனப்பான்மையைப் பெற்றுக்கொண்டீர்கள். அதனால் நாம், அப்பா,
தந்தையே என அழைக்கிறோம்" (உரோ 8:15), எனவே, நாம் கோழைகள்
அல்ல; கடவுளின் பிள்ளைகள் அவ்விதமே அச்சமின்றி வாழ்வோம்.
மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவருடைய வயிற்றில் இருந்த
திருமுழுக்கு யோவான் பேருவகையால் துள்ளினார் (லூக் 1:44).
மரியா நமது மகிழ்ச்சியின் காரணம், மரியாவைப் பின்பற்றி
நாமும் இப்புத்தாண்டில் பிறரை மகிழ்விப்பதில் கருத்தாய்
இருப்போம். பிறரை நமது சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதபடி
கவனமாய் இருப்போம். அகம் மலர்ந்து தருமம் செய்வதைவிட,
முகம் மலர்ந்து இனிய சொல் கூறுவது சிறந்தது.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் (குறள் 92)
இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துப்
பாதுகாப்பாராக! அவரின் உடனிருப்பு என்றும் உங்களை
வழிநடத்தவதாக! உலகம் தரமுடியாத அமைதியால் கிறிஸ்து உங்கள்
உள்ளத்தையும் இல்லத்தையும் நிரப்புவாராக!
- Rev.Fr. Y. Iruthyaraaj.
புலர்ந்துள்ளது புத்தாண்டு!
அது காலப்போக்கின் ஒரு புதிய திருப்பம்
-மனித வாழ்க்கை ஏட்டின் ஒரு புதிய பக்கம்
-உலக வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயம்.
புத்தாண்டு என்பது என்ன?
மனிதனைத் தவிர காலத்தைக் கடந்த கடவுளுக்கோ, கடவுளின் மற்ற
படைப்புகளுக்கோ - உயிரற்ற சடப்பொருளாகட்டும், உயிருள்ள ஆனால்
உணர்வற்ற பயிரினமாகட்டும், உணர்வுள்ள ஆனால் அறிவற்ற மிருக
இனமாகட்டும், அல்லது அறிவே நிறைவான இறைவனாகட்டும் அனைத்துக்கும்
- புத்தாண்டு என்பது பொருளற்றது!
புத்தாண்டு என்பது ஓர் எல்லைக்குட்பட்ட காலத்தின் தொடக்கம்
தானே! அது உண்மை என்றால், காலமற்ற, காலத்தைக் கடந்த கடவுளுக்கு
ஒரு காலத்தின் தொடக்கமா? நினைத்துப் பார்க்க முடியவில்லை.
நாள், வாரம், மாதம், வருடம் என்று வரையறுக்கப்பட்ட கால எல்லைகளுக்கு
மதிப்பேது?
பூமி தன்னையே சுற்றுவதைக் கண்டு, தன்னைச் சுற்றிக் கொண்டே
சூரியனைச் சுற்றுவதைக் கண்டு நாள் என்றும் வாரம் என்றும்,
மாதம் என்றும், ஆண்டு என்றும் வகுத்தும் கணித்தும் அதற்கு
ஒரு தொடக்கத்தைக் கற்பித்தவனே மனிதன் தானே!
இம்மை, அதன் தொடர்ச்சியான மறுமை இவற்றையெல்லாம் உள்ளடக்கிய
நித்தியம் ஒன்றே உண்மை! அந்த நித்தியத்தை நம் வசதிக்காக அநித்தியமாக்கிக்
கொள்கிறோம் நாம்.
எப்போது பூமி சுற்றத் தொடங்கியது? யாருக்குத் தெரியும்?
தமிழனுக்கு என ஒன்று, தெலுங்கனுக்கு என ஒன்று,
ஆங்கிலேயனுக்கு என ஒன்று... இப்படி எத்தனை எத்தனை
புத்தாண்டுகள்! அத்தனையும் மனிதக் கற்பனைகள்!
நமக்கென வகுத்துக் கொண்ட புத்தாண்டுக்கு நாம்தாம் பொருள்
தரவேண்டும்.
குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தின் தொடக்கமாகப் புத்தாண்டு
இருப்பதுபோல, நமது வாழ்க்கையிலும் ஒரு புதிய தொடக்கத்தைக்
காண விழையும் போதுதான், ஒரு புதிய திருப்பத்தைப் பார்க்க
நினைக்கும் போதுதான் புத்தாண்டு பொருள் பெறும்; பொலிவு
பெறும்!
தவறுகள் கூட வாழ்வுக்கு வலுவூட்டும். கூட்டித் தள்ளும்
குப்பைகள் வயலுக்கு உரமாவது போல கடந்த ஆண்டு நாம் செய்த
தவறுகளை உரமாக்கிப் புதிய ஆண்டில் நம் வாழ்க்கையைப்
பசுமையாக்கிக் கொள்வோம்.
கடவுள் மனித இனத்துக்கெனத் திறந்து வைத்திருக்கும்
மாளிகைதான் புதிய ஆண்டு.
தந்தை ஒருவர் தன் இருமக்களையும் அழைத்துத் தன் சொத்தை
ஒப்படைக்கப் பொறுப்பான தகுதியுள்ள வாரிசு யார் என்பதை அறிய
ஒரு சோதனைக்கு உட்படுத்தினார். குறிப்பிட்ட பணத்தை
இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுத்து இரு அறைகளை
ஒதுக்கி தனித்தனியாக அந்த அறைகளைப் பொருட்களால்
நிரப்புங்கள் என்றார். மூத்தவன் வண்டி வண்டியாக வைக்கோலை
வாங்கிச் சிறிதுகூட இடம் இல்லாமல் அறை முழுவதையும்
நிரப்பினான். இளையவனோ ஒரு மெழுகுதிரி ஒரு தீப்பெட்டி, ஒரு
ஊதுபத்தி வாங்கித் திரியை ஏற்றி வைத்தான். ஊதுவத்தியைப்
புகைய விட்டான். மீதிப்பணத்தை ஏழை எளியவருக்கு அள்ளிக்
கொடுத்தான். தந்தை மூத்த மகனுக்குரிய அறைக்குள் நுழைய
முயன்றார். நுழைய முடியாதபடி அறைமுழுவதும் இறுகஇறுக
வைக்கோல் மலை. இளையவன் அறைக்குள் நுழைந்தார். பார்க்கும்
இடம் எல்லாம் ஒளி வெள்ளம், மூக்கைத் துளைக்கும் நறுமணம்.
இரண்டு பேர்களுமே அறைகளை நிறைத்திருந்தார்கள். ஆனால் என்ன
வேறுபாடு? ஒருவன் குப்பை கூளம் போல வைக்கோலால்
நிறைத்திருந்தான். மற்றவனோ ஒளியாலும் நறுமணப் புகையாலும்
நிறைத்திருந்தான். வைக்கோல் நிறைந்த அறைக்குள் அவனாலும்
நுழைய முடியவில்லை. அவன் தந்தையாலும் நுழைய முடிய வில்லை.
மற்ற அறைக்குள்ளோ நுழைந்த அனைவராலும் ஒளியையும் மணத்தையும்
அனுபவிக்க முடிந்தது.
நாமும் இப்படி வீணானவற்றால் நம் மனத்தையும் வாழ்வையும்
நிறைக்காது இளையவனைப் போல இறைவார்த்தை என்ற ஒளியை ஏற்றி
நற்செயல்களால் வாழ்வை நறுமணம் கமழச் செய்தால் வாழ்க்கை
எப்படிப் பொலிவுறும்! புத்தாண்டு எப்படிப் பொருள் பெறும்!
ஞானியாக மக்கள் கருதிப் போற்றிய அந்தப் பெரியவரிடம் இளைஞன்
ஒருவன் வந்தான். அவரைச் சோதிக்க எண்ணி உள்ளங்கைக்குள் ஒரு
சிட்டுக் குருவியை மறைத்துக் கொண்டு கேட்டான்:
"சிட்டுக்குருவி உயிரோடு இருக்கிறதா? இல்லை இறந்து
விட்டதா?" இறந்து விட்டது என்று சொன்னால் குருவியைப் பறக்க
விட்டு உயிரோடு இருக்கிறது எனச் சொல்லலாம். உயிருள்ளது
என்று சொன்னால் மெதுவாக நசுக்கிக் கொன்றுவிட்டு இறந்து
விட்டது என்கலாம் என்பதுதான் இளைஞனின் திட்டம். ஞானி சொன்ன
பதில்: "அது உன் கையில் இருக்கிறது" புத்தாண்டு எப்படி
இருக்கும்? அது உன்னைப் பொருத்தது.
"இறைவன்தாமே உனக்கு முன்பாகப் போகிறார். அவர் உன்னோடு
இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உனைக்
கைவிடுவதும் இல்லை. நீ பயப்படவும் கலங்கவும்
வேண்டியதில்லை" (இ.ச.38:8) என்ற நம்பிக்கை உணர்வில், "அதோ
அங்கே ஒரு தேவை! உன்னால் அதனைத் தீர்த்து வைக்க முடியும்.
இதோ இங்கே ஒரு புண்! உன்னால் இதனை ஆற்றிவிட முடியும்" என்ற
இலட்சிய ஈடுபாட்டில் புதிய வாழ்க்கைப் பாதை பிறக்கட்டும்.
புதிய ஆண்டின் ஒவ்வொருநாளும் கடந்து செல்லட்டும்.
புலர்ந்துள்ள புதிய ஆண்டில் மளங்களில் மகிழ்ச்சி
மலரட்டும், இல்லங்களில் நல்உறவு வளரட்டும். வாழ்க்கையில்
வளமை பெருகட்டும்!
வேண்டும் மூன்றுவித நம்பிக்கைகள்
இயேசு ஒருநாள் பேதுருவோடு பூமிக்கு வந்து உலகைச் சுற்றிப்
பார்க்க விரும்பினார். இருவரும் புறப்பட்டனர். இறைமக்கள்
எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்க ஆசை. போகிற வழியில்
எதிரே ஒரு குதிரைவண்டி மணலில் சிக்கிக் கொண்டதைப்
பார்த்தனர். வண்டியை அப்படியே விட்டுவிட்டுப்
பாதையோரத்தில் வண்டிக்காரன் முழந்தாளிட்டுச் செபித்துக்
கொண்டிருந்தான்: "இறைவா, என் வண்டியை ஓடவிடு. நீ
நினைத்தால் இந்த அற்புதத்தைச் செய்யலாம். உன்னால்
முடியாதது உண்டா என்ன?" உருக்கமான அவன் செபத்தைக்
கேட்டதுமே செப வேளையில் தூங்கியே பழக்கப்பட்ட பேதுருகூடச்
சிலிர்த்துப் போனார். இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே,
அவனுடைய செபம் உம் மனத்தைத் தொட வில்லையா? உதவி செய்யும்"
என்று கெஞ்சினார். இயேசுவோ பேதுருவை முறைத்து அமைதியாக
இரு' என்ற சொல்லிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.
சிறிது தொலைவு சென்றதும் இன்னொரு குதிரை வண்டி தலைகீழாக
உருண்டு கிடந்ததைக் கண்டனர். வண்டிக்காரனோ சொல்லக்கூடாத
பொல்லாத வார்த்தைகளைச் சொல்லித் திட்டிக் கொண்டும் தெய்வ
நிந்தனை செய்து கொண்டும் விழுந்து கிடந்த வண்டியை
நிமிர்த்தப் பாடுபட்டுக் கொண்டிருந்தான். வேர்த்து
விறுவிறுக்க அவன் உழைக்கும் உழைப்பெல்லாம் பயனற்றுப்
போகிறதே என்று பேதுரு பரிதாபப்பட்டு "ஆண்டவரே, இவன்
இப்படிப் பாடுபடுகிறானே, பயனளியும்" என்று மன்றாடினார்.
இரவு முழுவதும் உழைத்தும் எதுவும் கிடைக்காத நிலையில்
விடியல் வேளையில் கரைமேல் நின்று கொண்டே வலைகிழிய மின்படச்
செய்தவர் அல்லவா இயேசு என்ற நினைவு பேதுருவுக்கு வந்தது.
"பேதுரு, பேசாமல் இருக்க மாட்டே" என்று இயேசு கடிந்ததும்
வாயடங்கி நின்றார் பேதுரு.
கொஞ்சத்தூரம் போனதும் இன்னொரு குதிரை வண்டி சேற்றில்
மாட்டிக் கொண்டதைப் பார்த்தனர். வண்டிக்காரனோ கடவுள் உதவி
செய்வார் என்ற உறுதிப்பாட்டோடு 'இயேசுவே' என்று இறைவன்
நாமத்தைத் துதித்துக் கொண்டு நுகத்தடியைப் பிடித்து
அசைத்து இழுக்க முயன்று கொண்டிருந்தான். அதைக்கண்ட
பேதுருவுக்கு இயேசுவிடம் உதவி கேட்க வேண்டும் போல்
இருந்தது. ஆனால் கேட்கும் துணிவில்லை. முந்தைய
அனுபவங்களின் காரணமாக பேசவே பயந்தார். ஆனால் இயேசுவோ
பேதுருவைப் பார்த்து "நீ அந்தச் சக்கரத்தைப் பிடி, நான்
இந்தச் சக்கரத்தைப் பிடித்துக் கொள்கிறேன், இரண்டு பேரும்
அவனோடு சேர்ந்து தள்ளுவோம்" என்றார். வண்டி நகர்ந்தது.
பேதுருவுக்கு ஒன்றுமே புரியவில்லை. மூன்று
நிகழ்ச்சிகளிலும் இயேசு நடந்து கொண்ட முறை புதிராக
இருந்தது. வியப்பாகவும் இருந்தது. விளக்கம் கேட்க
விரும்பினார். தயங்கினார். அவரது கலக்கத்தைப் பார்த்த
இயேசு விளக்கத் தொடங்கினார்.
"முயற்சி எதுவுமின்றி முதல் வண்டிக்காரன் செபித்துக்
கொண்டிருந்தான். திண்ணையில் இருந்து கொண்டே தெய்வத்தை
நினைப்பவனுக்கு நான் எப்போதும் படியளக்க விரும்புவதில்லை.
இரண்டாவது வண்டிக்காரனோ தெய்வ சிந்தனை இன்றியே உழைத்ததனால்
அவன் உழைப்பு வெறுமையைக் கண்டது. அவனன்றி அணுவை அசைக்க
முயன்றவன் அவன். ஆனால் மூன்றாவது மனிதனோ
தன்னம்பிக்கையோடும், தெய்வ நம்பிக்கையோடும் செயல்பட்டவன்.
தெய்வ நம்பிக்கையோடும் தன்னம்பிக்கையோடும் எவன்
உழைக்கிறானோ அவனுக்கு வலிய தேடிச் சென்று உதவக்
காத்திருக்கிறேன்"
கடவுளால் மட்டுமே முடியும் என்பது போல செபித்திடு மனிதனால்
மட்டுமே முடியும் என்பது போல உழைத்திடு
வெற்றி உனதே! அத்துடன் நல்லது நடக்கும் என்ற பொது
நம்பிக்கையை வளர்த்துக் கொள். இறைவா, நீயும் நானும்
இணைந்து கையாள முடியாத எதுவும் எனக்கு இந்த ஆண்டில்
நடக்கப் போவதில்லை என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே
இரும்!
ஆக, வாழ்க்கைக்கு வேண்டும் மூன்று நம்பிக்கைகள்:
தெய்வ நம்பிக்கை: கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற உணர்வு
- மத்.19:26.
தன்னம்பிக்கை: எனக்கு உறுதியூட்டும் இறைவனருளால் என்னால்
சாதிக்க இயலாதது எதுவுமில்லை என்ற உறுதி - பிலி.4:13.
பொது நம்பிக்கை: என்ன ஆனாலும் நல்லது நடக்கும் என்ற எண்ணம்
-1 தெச.5:18
நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும். நம்பிக்கை
என்பதே மனிதனுக்கு உயிரூட்டும் உயிர்ச்சத்து.
"ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள்
எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும்
நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின்
திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல
என்கிறார் ஆண்டவர் (எரேமி.29:11).
புத்தாண்டில் மூன்று விதமான இறையாசீர் நம்மோடு இருக்க
வேண்டுமென்று எண்ணிக்கை நூலாசிரியர் வாழ்த்துகிறார்
(எண்.6:2426):
1. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
2. ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்
மீது அருள் பொழிவாராக!
3. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு
அமைதி அருள்வாராக! இன்பமாயிருக்கப் போதுமான இனிமைகளும்
உறுதியாயிருக்கப் போதுமான முயற்சிகளும் இதயத்துடன்
இருக்கப் போதுமான துக்கங்களும் துள்ளிப்பாடப் போதுமான
தன்னம்பிக்கையும் ஆண்டவனை நேசிக்கவும் அயலானை நேசிக்கவும்
போதுமான இறையருளும் புத்தாண்டு அருளட்டும்!
- Rev. Fr. E. Lourduraaj.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
அருள்முனைவர் உவரி அந்தோணி
கன்னி மரியா - கடவுளின் தாய் புத்தாண்டின் விடிவெள்ளி!
புத்தாண்டு புலரும் நேரத்தை மக்களில் பலர் வெளிப்படையாக
பல்வேறு விதத்தில், பல்வேறு இடங்களிலும், நாடுகளிலும்
தங்களுடைய பண்பாட்டிற்கேற்ப கொண்டாடி மகிழ்கின்றனர். நம்
நாட்டிலும் இன்று கிராமங்களிலும், நகரங்களிலும் எளிமையான
முறையில் வீடுகளிலும், விமரிசையாக பலர் இணைந்து
தெருக்களிலும், விடுதிகளிலும், பங்களாக்களிலும் கொண்டாடி
புத்தாண்டை வரவேற்கின்றார்கள். அதே வேளையில் நம் நாட்டில்
கிறிஸ்தவர்கள், சிறப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்
ஆலயங்களில் ஒன்றுகூடி, புத்தாண்டு புலரும் நேரத்தில்
கடவுளின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்க செபத்திலும்,
திருப்பலியிலும் பங்குப்பெற்று மகிழ்கின்றார்கள். ஆண்டின்
இறுதி நேரத்தில் இறைவன் தம் வாழ்வில் செய்த நன்மைகளுக்கு
நன்றிக்கூறி, கடவுளின் அன்பை, பராமரிப்பை உணரவேண்டி
திருப்பலியில் பங்குப்பெற இணைகின்றார்கள். இறையருளை
நாடிவரும் நமக்கு இந்த நல்ல நாளில் கன்னி மரியா, கடவுளின்
தாய் என்ற பெருவிழாவைக் கொண்டாடி, புத்தாண்டில் மரியாவின்
தாய்மைப் பிரசன்னத்தில் வாழ்ந்து, அவரின் வழித் துணையோடு
நம்முடைய நம்பிக்கைப் பயணத்தை ஆண்டு முழுவதும் நமக்கு
துணையாக இருக்க வேண்டுமென கொண்டாடுகின்றோம். தாயின்
மடியில் குழந்தை நிம்மதியுடன் இருப்பதுபோல திருஅவையின்
உறுப்பினர்கள் அனைவரும் அன்னை மரியாவின் மடியில்
பாதுகாப்போடு இருந்திட இவ்விழா நமக்கு வாய்ப்பைத்
தருகின்றது. எனவே, நம் அன்னை மரியாவின் சிறப்பினை
சிந்தித்துப் பகிர்ந்து கொள்வோம்.
புத்தாண்டில் இறை ஆசீர்வாதம்
புத்தாண்டின் முதல் நாளில், முதல் மணித்துளியில் ஆலயத்தில்
கூடியிருக்கும் நமக்கு கடவுளின் வார்த்தை, நமக்கு
நம்பிக்கையைத் தருகின்றது. "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி
உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் மேல்
ஒளிரச் செய்து, உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம்
திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி
அருள்வாராக!" (எண் 6:24-26) என்று அறிக்கையிட்டு இறையருளை
கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவோடு வாழும் தம் பிள்ளைகளுக்கு
கடவுள் தம் ஆசீர்வாதத்தையும், அருள் வரங்களையும்
பொழிகின்றார். மேலும் "உனக்கு ஆசி கூறுவோன் ஆசி பெறுவான்"
(எண் 24:9) என்றும், அந்நாளில் அவர் வீட்டார்க்கும்,
அவருக்குரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார். (1
குறி 13:4). ஆண்டவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் ஆசிபெறுவர்
(திபா 40:4) என்று புத்தாண்டில் இறைவன் தம் அருளால்
நம்மையும், குடும்பங்களையும், திரு அவை முழுவதையும்
ஆசீரால் நிரப்புகின்றார். இந்த புத்தாண்டு திருப்பலிக்
கொண்டாட்டமும் நமக்கு வழி வகுக்கின்றது.
புத்தாண்டில், பாலன் இயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு
"இயேசு" என்று பெயர் சூட்டிய நாளையும் நினைவுக்
கூறுகின்றது. இப்பெயர் இறைவன் கொடுத்தப் பெயர். "அவர் ஒரு
மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு என பெயரிடுவீர்"
(மத் 1:21) என்று புனித யோசேப்பை கடவுள் கனவில் தோன்றி
அழைக்கின்றார். இதன் வழியில் அவருக்கும் கடவுளின் திட்டம்
வெளிப்படுத்தப்படுகின்றது. இயேசு என்ற பெயருக்கு பல
ஆற்றல்கள் உண்டு. அது நலம் தரும் செபம், மீட்பளிக்கும்
பெயர். அப்பெயர் அவரின் ஆளுமையையும், கடவுளின் மகன் என்ற
அடையாளத்தையும் வெளிப்படுத்துகின்றது. இயேசுவின் பெயர்
சூட்டப்பட்ட நாளைக் கொண்டாடும் நமக்கு நம்முடைய
திருமுழுக்கு நாளை நினைவுக் கூர்ந்து, நம் பெயரின்
அர்த்தத்தையும், ஆளுமையையும், நம்முடைய அடையாளத்தையும்
கண்டுணர அழைக்கின்றது. மேலும் கிறிஸ்தவர்கள் என்ற
பெயருக்கேற்ப வாழ பல வழிமுறைகளை இந்நாளில் நமக்கு கற்றுத்
தருகின்றது.
புத்தாண்டின் விடிவெள்ளி மரியா
புத்தாண்டில் இறை ஆசீரைப் பெற்று, இயேசுவின் நாமத்தைத்
தொடர்ந்து உச்சரித்திட நமக்கு துணையாக இருப்பவர் நம் அன்னை
மரியா. இவரின் மன்றாட்டு மாலையில் மரியாவை "விடியற்கால
நட்சத்திரம்" என்று போற்றிப் புகழ்கின்றோம். சூரியன்
உதிக்கப் போகின்றது என்பதனை முன்னறிவிப்பது விடியற்கால
நட்சத்திரம். அதுபோல உலகிற்கு ஒளிதரும் மாபெரும் சூரியானான
இயேசுவை மரியா இவ்வுலகிற்குக் கொண்டுவருகின்றார். இந்த
மகத்தான உண்மையை வெளிப்படுத்திட புத்தாண்டின் முதல் நாளில்
மரியா கடவுளின் தாய் என்ற விழாவை திரு அவைக் கொண்டாடி,
அவரின் தாயன்பு, பராமரிப்பு மற்றும் நமக்காகப் பரிந்துப்
பேசும் தாயாக இவ்வாண்டு முழுவதும் இருக்க வேண்டுமென
வேண்டுகின்றோம். இயேசுவைப் பெற்றெடுத்து, வளர்த்து
ஆளாக்கிய அன்னை மரியா நம்மையும், தம் குழந்தைகளாக
பாவித்துப் பாதுகாக்க வேண்டி இந்நாளில் அவரை
நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம்.
அன்னை மரியா, இறைவனின் தாய்
அன்னை மரியாவை நம் திருவழிபாட்டில் கொண்டாடி மகிழ்வதன்
தனிச் சிறப்பு அவரின் தாய்மை தான். விவிலியத்தில் மரியா
கடவுளின் தாய் என்று வெளிப்படையாக கூறவில்லையென்றாலும், பல
இடங்களில் மரியா கடவுளின் மகனான இயேசுவின் தாய், ஆண்டவரின்
தாய் என்று எடுத்து இயம்புகின்றது. "கடவுளின் மகனாகிய
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்" (மாற்
1:1) என்று முதலாவதாக எழுதப்பட்ட நற்செய்தி சொல்கின்றது.
மேலும் மரியா எலிசபெத்தைச் சந்தித்தபோது அவரும் தூய
ஆவியாரால் நிரப்பப்பட்டு, உரத்தக்குரலில் மரியாவைப்
பார்த்து, "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?"
(லூக் 1:43) என்று வாயார மரியாவை ஆண்டவரின் தாய் என்று
அறிக்கையிட்டுப் புகழ்கின்றார். அதேபோல் மரியா ஆண்டவரின்
தாய் என்பதை வானதூதரின் வாழ்த்துரையில் கேட்ட மரியா "நான;
ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக்
1:38) என்று பதில் கூறி ஆண்டவரின் அழைப்பையேற்று,
அர்ப்பணித்து தம்மை முழுவதுமாகக் கையளித்தார். மரியாவும்
இயேசுவைப்போல கடவுளின் திருவுளத்திற்காக முன்குறித்து
வைக்கப்பட்டதால் கடவுள் காலம் நிறைவேறியபோது,
திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம்
பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனை பெண்ணிடம் (மரியா)
பிறந்தவராகவும், திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும்
அனுப்பினார் (கலா 4:4-5). மரியா தேர்ந்தெடுக்கப்பட்டு,
இறைவனின் திட்டத்தில் பணி செய்ய, இறையருளுடன் வாழ்ந்து,
இறைவனின் தாயானார் என்றும் நமக்கு உறுதிப்படுத்துகின்றது.
இயேசுவின் வாழ்வில் மரியாவின் தாய் அன்பும், தியாகமும்
நிறைந்துள்ளது. தான் பெற்ற மகனை பிறருக்காக கையளித்து,
மகனிடம் கானாவூர் திருமணத்தில் பரிந்துப் பேசுவது, மகனை
இறைப்பணிப் புரிந்திட வழிகாட்டியது, சிலுவையில் கையளித்து
அவர் அருகில் நின்றது போன்ற செயல்கள் அனைத்தும் மரியாவின்
தாய் அன்பிற்கு இலக்கணமாக அமைந்துள்ளது. மேலும் மனிதகுல
மீட்பிற்காக தன் மகனையும், அவரோடு இணைந்து தம்மையும்
முழுமையாக அர்ப்பணித்தல், தாய் என்ற முறையில் தம் மகன்
இயேசுவிற்காக தன் தேவைகள், ஆசைகள் அனைத்தையும் தியாகம்
செய்து, தம் மகன் வாழவேண்டும், வளர வேண்டுமென்று
காத்திருந்தார். அத்தோடு தம்முடைய சொந்த விருப்பு
வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் உலகத்தின் மீட்பே தமது
குறிக்கோள் என்று தம் மகனோடு இணைந்திட்ட தாய் மரியாவை இந்த
புத்தாண்டு நாள் நமக்கு முன்னிருத்தி, நமக்காக, நம்முடைய
தேவைக்காக, நம்மோடு நின்று இறைவனிடம் வேண்டி, நமக்கு
இறையருளைப் பெற்றுத் தருகின்றார்.
மரியா- கடவுளின் தாய் - பெருவிழா
திரு அவையின் தொடக்க முதல் இயேசுவின் பிறப்பு விழாவாக
கொண்டாடப்பட்டு வந்துள்ளது. அவ்விழாவோடு அவரின் தாயான
மரியாவையும் நினைவுக் கூறிக் கொண்டாடப்பட்டுள்ளது.
இயேசுவின் பிறப்பு விழாவும் மரியாவின் தாய்மையுடன் உள்ள
நெருங்கிய உறவும் இவ்விழாவில் சுட்டிக்காட்டி போதித்து
வந்துள்ளார்கள். கி.பி. 431 ஆம் ஆண்டு எபேசு நகரில் நடந்த
பொதுசங்கத்தில் மரியா கடவுளின் தாய் என்று பிரகடனம்
செய்தபின் மரியாவின் மாண்பும் மகத்துவமும்
முன்னிறுத்தப்பட்டு, அன்றிலிருந்து மரியாவுக்கு
கிறிஸ்தவர்கள் மத்தியில் தனி மரியாதையும், பக்தி
வணக்கங்களும், திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்நாட்களில் மரியாவுக்கு உரோமை நகரில் அழகுமிகு பேராலயம்
ஒன்று கட்டி பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை அன்னை மரியாவுக்கு பல
கோவில்கள் எழுப்பி, அவரின் தாய்மையை திரு அவை தொடர்ந்து
வாழ்த்தியும், வணக்கம் செலுத்தியும் அவரின் தாய்மை
பிரசன்னத்தையும், ஒவ்வொரு நாளும் உணர்ந்து தம் இறையாட்சிப்
பணியைத் தொடர்கின்றது. எனவே, இந்த புத்தாண்டிலும், நாம்
அந்த அன்னையின் அருள்காவலில் இருந்து, இறை ஆசீரோடு
மகிழ்ச்சியாக வாழ்வோம், வளர்வோம். நாமும் ஒருவருக்கு
ஒருவர் துணையாக நின்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
அருள்முனைவர் உவரி அந்தோணி
அருள்பணி. குமார்ராஜா
கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக!
புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு
இறைவனின் ஆசியை வேண்டுகிறது: "கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி
வழங்குவீராக".
என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின்
ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு
வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை
நினைவூட்டுகிறது:
1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள்
பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள்
ஆற்றப்பட வேண்டும்.
2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு
என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன்,
ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார்.
திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. "நரம்பிசைக் கருவிகளுடன்
பாடவேண்டிய புகழ்ப்பாடல்" என மூல மொழியிலேயே குறிப்பு
தரப்பட்டிருக்கிறது. இந்தப் புகழ்ப் பாடலை ஆண்டின் முதல் நாளில்
பாடுவது பொருத்தமானது. இத்திருப்பாடலின் இரண்டாம் வசனம் நம்
கவனத்தை ஈர்;க்கிறது: "உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக.
அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும். பிற இனத்தார்
அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர்".
ஆம், இறைவனின் ஆசியை நாம் பெறுவதுகூட, நற்செய்தி அறிவிப்புப்
பணிக்காகத்தான். இறைவனின் இரக்கத்தையும், ஆசிகளையும் பெறுகின்ற
நாம் பிற இனத்தாருக்கு, நம் அயலாருக்கு இறைவனின் மீட்பை அறிவிக்க
வேண்டும் என்னும் அழைப்பையும் இந்தத் திருப்பாடல் தருகிறது.
இறைவனின் ஆசிகளைப் பெற்று, அவரது மீட்பின் செய்தியைப் பிறருக்கு
அறிவிப்போமா!
அருள்பணி. குமார்ராஜா
பணி. குமார் ராஜா
புதிய ஆண்டில் புதிய
நம்பிக்கைகள்!
இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின்
பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு
தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின்
தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!
கடந்த ஆண்டின் ஏமாற்றங்கள், தோல்விகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு,
புதிய எதிர்நோக்கோடு இந்த ஆண்டைச் சந்திக்க ஆண்டவர் நமக்கு அழைப்பு
விடுக்கின்றார். நம் வாழ்வின் தனிப்பட்ட போராட்டங்கள், பொதுநீதிப்
போராட்டங்கள் அனைத்தும் தோற்றுப்போகுமோ என்னும் கவலையும்,
கலக்கமும் நம்மைத் தாக்கலாம். ஆனால், இன்றைய இறைவாக்கு நமக்கு
ஊக்கமூட்டுகிறது. மரியா, யோசேப்புடன் தீவனத் தொட்டியில்
கிடத்தியிருந்த குழந்தை இயேசுவைக் கண்ட இடையர்கள் வியப்படைந்தனர்,
மகிழ்ச்சியும் அடைந்தனர். "அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறே எல்லாம்
நிகழ்ந்திருந்தது". எனவே, கடவுளைப் போற்றிப் பாடிக்கொண்டே
திரும்பிச் சென்றனர். "ஆண்டவர் உனக்கு ஆசிவழங்கி உன்னைக்
காப்பாராக" என்னும் ஆண்டவரின் ஆசிமொழி ஆண்டின் முதல் நாளில் நமக்கு
வழங்கப்படுகிறது. இந்த வாக்குறுதியில் நம்பிக்கை கொண்டு நமக்குச்
சொல்லப்பட்டவாறே எல்லாம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் நமது
பயணத்தைத் தொடர்வோம். அன்னை மரியாவின் ஆசியும், துணையும் நம்மோடு
இருக்கும்.
மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர்
தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி
கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம்.
எங்களது கடமைகள், பணிகள், போராட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற உமது
தூய ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- பணி. குமார் ராஜா
மறையுரை அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
மரியா இறைவனின் தாய்
மரியா, இறைவனின் தாய் என்கிற இந்த திருவிழா ஆண்டின் முதல் நாளில்
சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மரியா, இறைவனின் தாய் என்கிற இந்த
திருவிழாவின் முக்கியத்துவம் என்ன? எதற்காக அவள் இறைவனின் தாய்
என்று அழைக்கப்பட வேண்டும்? இதற்கு விடை தெரிய வேண்டுமென்றால்,
அதனுடைய வரலாற்றுப்பிண்ணனி நமக்கு நன்றாகத் தெரிந்திருக்க
வேண்டும்.
கி.பி ஐந்தாம் நூற்றாண்டில், நெஸ்டோரியஸ் என்னும் கான்ஸ்டாண்டி
நோபிளின் ஆயர், 429 ம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மறையுரையில்,
அன்னை மரியாளைப் பற்றி ஒரு தப்பறைக்கொள்கையைப் போதித்தார்.
இயேசுவில் இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். மனித இயேசு ஒன்று,
தெய்வீக இயேசு ஒன்று. அவரைப்பொறுத்தவரையில், மரியாள் பெற்றெடுத்தது
மனித இயேசுவைத்தான். எனவே, அவள் இயேசுவின் அன்னை என்றுதான்
அழைக்கப்பட வேண்டுமே தவிர, கடவுளின் தாய் என்று அழைக்கப்பட
முடியாது. ஆனால், அதுவரை திருச்சபையின் போதனை, இயேசு ஒரே ஆள்தான்.
ஆனால், அவரிடத்தில் இரண்டு தன்மைகள் இருந்தன். (One Person and
that is Divine Person but he had two natures namely humand and
divine) ஒன்று மனிதத்தன்மை, மற்றொன்று தெய்வீகத்தன்மை.
நெஸ்தோரியசின் இந்த போதனை, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. எபேசில் நடைபெற்ற திருச்சங்கத்தில் நெஸ்டோரியஸ்
மற்றும் அவருடைய போதனை கண்டனம் செய்யப்பட்டது. எபேசு திருச்சங்கம்,
மரியா, இறைவனின் தாய் என்பதை உறுதிப்படுத்தியது. அந்த அறிவிப்பைக்
கேட்ட எபேசில் கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்து இறைவனையும், அன்னை
மரியாளையும் போற்றினர்.
அன்னை மரியாள் இறைவனுடைய மிகப்பெரிய கொடை. அவளது அன்பும், பண்பும்,
பரிவும் நமக்கு எந்நாளும் சிறந்த பலமாக இருக்கிறது. அந்த அன்னைக்கு
எதிராக இன்றைக்கும் பல தவறான போதனைகள் பரப்பப்படுகிறது. அந்த
போதனைகள் போலிகளால் போதிக்கப்படுபவை. அவற்றை அடையாளம் கண்டுகொண்டு,
எந்நாளும் அன்னைமரியாளின் பரிந்துரைக்காக மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
மறையுரை
காலத்தின் கரங்களில் கடவுளின் ஆசீர்வாதம்
முன்னுரை: கிறிஸ்துவில் பிரியமானவர்களே, காலத்தின்
தலைவராம் இறைவனின் பராமரிப்பில் நாம் 2026-ஆம் புதிய
ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இன்று நாம்
கொண்டாடும் புத்தாண்டு வெறும் நாட்காட்டி மாற்றம்
மட்டுமல்ல, இது ஒரு புதிய விடியல், புதிய வாய்ப்பு மற்றும்
புதிய ஆசீர்வாதம். இன்றைய நற்செய்தியில் இடையர்கள் பாலன்
இயேசுவைக் கண்டு மகிழ்ந்ததையும், அன்னை மரியா அனைத்தையும்
தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்ததையும் காண்கிறோம்.
இப்புதிய ஆண்டில் நாம் எத்தகைய மனநிலையுடன் பயணிக்க
வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தைகளின் அடிப்படையில்
சிந்திப்போம்.
1. ஆசீர்வாதம் என்பது இறைவனின் திருமுகம் (எண்ணிக்கை
6:22-27)
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மோசே வழியாகக்
குருக்களுக்கு ஒரு ஆசி மொழியைக் கற்றுக் கொடுக்கிறார்.
"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர்
தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள்
பொழிவாராக!"
நம்மில் பலர் ஆசீர்வாதம் என்றால் செல்வம், பதவி அல்லது
வெற்றி என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையான ஆசீர்வாதம்
என்பது "இறைவன் நம்மோடு இருப்பது". இறைவன் தன் முகத்தை நம்
பக்கம் திருப்புவது என்பது அவர் நம்மை அங்கீகரிக்கிறார்,
நம்மைக் கைவிடவில்லை என்பதன் அடையாளம்.
குட்டி கதை (Anecdote): ஒரு சிறுவன் தன் தந்தையிடம்
கேட்டான், "அப்பா, கடவுள் எவ்வளவு பெரியவர்?". தந்தை
வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தைக் காட்டி,
"அது எவ்வளவு பெரிது?" என்றார். சிறுவன் "மிகச்சிறியது"
என்றான். பிறகு தந்தை அவனை ஒரு விமான நிலையத்திற்கு
அழைத்துச் சென்று, அருகில் நின்ற ஒரு விமானத்தைக் காட்டி
"இப்போது சொல், இது எவ்வளவு பெரியது?" என்றார். சிறுவன்
"ஆச்சரியமாக இருக்கிறது அப்பா, இது மிகப் பிரம்மாண்டமானது"
என்றான். தந்தை சொன்னார்: "கடவுளும் இப்படித்தான். நீ
அவரிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறாயோ, அவ்வளவு
சிறியவராக அவர் தெரிவார். நீ அவருக்கு எவ்வளவு நெருக்கமாக
இருக்கிறாயோ, அவ்வளவு பெரியவராக உன் வாழ்வில் அவர்
தெரிவார்."
இப்புதிய ஆண்டில் நாம் இறைவனுக்கு நெருக்கமாக வாழ்ந்தால்,
அவர் ஆசீர்வாதமாக நம் வாழ்வில் பிரம்மாண்டமாகத் தெரிவார்.
2. அன்னை மரியாவைப் போல உள்ளத்தில் இருத்திச் சிந்தித்தல்
(லூக்கா 2:16-21)
நற்செய்தியில், அன்னை மரியா நடந்த நிகழ்வுகள் அனைத்தையும்
"தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்"
என்று வாசிக்கிறோம். இன்று உலகம் மிகவும் இரைச்சல்
மிக்கதாக இருக்கிறது. சமூக வலைதளங்கள், அலைபேசிகள் என நாம்
எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால்,
அன்னை மரியா அமைதியாக இருந்தார்.
புதிய ஆண்டில் நாம் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானம்:
"அமைதி".
புனித அன்னை தெரசா கூறுவார்: "அமைதியின் கனி செபம்,
செபத்தின் கனி விசுவாசம், விசுவாசத்தின் கனி அன்பு,
அன்பின் கனி சேவை." வாழ்க்கையில் சவால்கள் வரும்போது
பதற்றமடையாமல், அன்னை மரியாவைப் போல இறைவனின் திட்டத்தை
அமைதியில் தேடுவோம்.
3. நாம் அடிமைகள் அல்ல, பிள்ளைகள் (கலாத்தியர் 4:4-7)
புனித பவுல் அடியார் கூறுகிறார், "நாம் இனி அடிமைகள் அல்ல,
மாறாக இறைவனின் பிள்ளைகள்." கடந்த ஆண்டின் கவலைகள்,
பாவங்கள், தோல்விகள் ஆகியவற்றுக்கு நாம் அடிமையாக இருக்கத்
தேவையில்லை. ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படிக்
கைவிடமாட்டாரோ, அப்படியே கடவுள் நம்மை வழிநடத்துவார்.
மேற்கோள் (Quote): திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல:
"கடவுள் மன்னிப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை, நாம்தான்
அவரிடம் மன்னிப்புக் கேட்பதில் சோர்வடைகிறோம்." 2026-இல்
நாம் ஒரு புதிய மனிதராக, இறைவனின் வாரிசுகளாக வாழத்
தொடங்குவோம்.
4. அமைதியின் தூதுவர்களாக மாறுவோம்
இன்று "உலக அமைதி நாள்" (World Day of Peace). புதிய
ஆண்டில் நாம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற வேண்டும்.
மற்றவர்களைக் காயப்படுத்தாமல், மன்னிப்பைப் பகிர்ந்து
கொள்வதே உண்மையான புத்தாண்டு கொண்டாட்டம்.
முடிவுரை: அன்பு மக்களே, நம் முன்னால் 365 வெற்றுப்
பக்கங்கள் (Blank Pages) கொண்ட ஒரு புதிய புத்தகம்
இருக்கிறது. அதில் எத்தகைய கதையை எழுதப் போகிறோம் என்பது
நம் கையில் தான் உள்ளது.
இறைவனின் ஆசீர்வாதத்தை (அவரது பிரசன்னத்தை) நாடுவோம்.
அன்னை மரியாவைப் போல அமைதியில் இறைத் திருவுளத்தைத்
தேடுவோம்.
இறைவனின் பிள்ளைகளாகப் பாவங்களை விட்டு விலகி நடப்போம்.
இப்புதிய ஆண்டு உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், சமாதானத்தையும் கொண்டு
வர இறைவனின் தாயாம் அன்னை மரியா பரிந்துரைப்பாராக.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ஆமென்.
Rev. Fr. M. Arul
இன்று இறைவனின் தாயை நினைவுகூர்கின்றோம். தாய் என்ற
சொல்லைக் கேட்டவுடன் நமது நினைவிற்கு வருவது அன்பு!
இதோ ஒரு தாயின் அன்பு எப்படிப்பட்டது என்பதைச்
சுட்டிக்காட்ட ஓர் உண்மை நிகழ்ச்சி .
1980 - ஆம் ஆண்டு தென்கொரியாவிலுள்ள சியோல் என்னும் நகரிலே
வீரத் தாயொருத்தி! அவள் பெயர் கிம் மிஸ். ஒரு மாடி
வீட்டில் 13-வது மாடியில் அவள் குடியிருந்தாள். அவளுக்கு
இரண்டு வயது குழந்தை ஒன்று.
ஒருநாள் அந்த வீட்டிலிருந்த காசோலை ஒன்று ஜன்னல் வழியாகக்
கீழே விழுந்துவிட்டது. அதன் மதிப்பு ரூ.126. அதைக் கவனித்த
கிம் மிஸ், தனது குழந்தையை வீட்டில் விட்டு விட்டுக் கீழே
விழுந்த காசோலையை எடுப்பதற்காக மாடியிலிருந்து கீழே
இறங்கினாள்.
கீழே கிடந்த காசோலையை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். அங்கே
அவள் காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டாள்.
வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எப்படியோ
வீட்டைவிட்டு வெளியேறி, மதிலேறியது! தவறியது. 13- வது
மாடியிலிருந்து கீழே விழுந்தது. விழுந்து கொண்டிருந்த
குழந்தையைத் தாய் பார்த்தாள்.
அபயக்குரல் எழுப்பி ஆட்களை அழைக்க அங்கே நேரமில்லை!
விழுந்த குழந்தைக்கு முன்னால் நின்று தனது இரண்டு
கைகளையும் விரித்தாள். குழந்தை கைகளில் விழுந்தது.
குழந்தைக்கு எந்த ஆபத்துமில்லை!
குழந்தை தன் மீது விழுந்தால் தனது நிலை என்னவாகும் என
அந்தத் தாய் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை!
அவளுடைய இதயத்திலிருந்ததெல்லாம் அவள் குழந்தையை
எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான்! அவள்
அன்பைக் கடவுள் தமது வல்லமையால் ஆசீர்வதித்தார். அவளது
கைகள் தெய்வீகச் சக்தியைப் பெற்றன! குழந்தை காப்பாற்றப்
பட்டது!
தாய் என்பதற்கு மறுபெயர் அன்பு; தாய் என்பதற்கு மறுபெயர்
பரிவு; தாய் என்பதற்கு மறுபெயர் பாசம்; தாய் என்பதற்கு
மறுபெயர் நேசம்; தாய் என்பதற்கு மறுபெயர் கருணை .
ஒரு மனிதன் வாழ்க்கையில் தேடி அலைவதெல்லாம் அன்பே! அந்த
அன்பை அர்த்தமுள்ள முறையில் மனித குலத்திற்குத் தருபவள்
தாய்! இதனால் தான் இயேசு தனது தாயையே நமக்குத் தாயாகக்
கொடுக்க கல்வாரியில் முன் வந்தார்!
நமது உலகத் தாய்களுக்கு உள்ள அத்தனை நல்ல பண்புகளும் நமது
தேவதாய்க்கு உண்டு. மேலும் மற்ற தாய்களிடம் நின்று நிலவும்
பண்பைவிட மேலான பண்பு ஒன்று மரியிடம் உண்டு! அதுதான்
அவளிடம் நின்று நிலவும் வல்லமை!
உலகப் பெண்களில் கடவுளுக்குத் தாயாகும் பெருமை மரியாவுக்கு
மட்டுமே கிடைத்தது.
கடவுள் எப்படிப்பட்டவர் என்பதை இன்றைய மூன்று வாசகங்களும்
நமக்குத் தெளிவாக்குகின்றன. அனைவருக்கும் ஆசி வழங்குபவர்
கடவுள்; கருணை பொழிபவர் கடவுள் ; அமைதி தருபவர் கடவுள்
(முதல் வாசகம்) நம்மை எல்லாத் துன்பங்களில் இருந்தும்
மீட்கும் கடவுள் ; நம்மீது ஒளியைப் பொழியும் கடவுள் ;
பிள்ளைகளாக்கும் உரிமையை அளிக்கும் கடவுள் (இரண்டாம்
வாசகம்) மீட்பர் என்ற பெயர் கொண்ட கடவுள் (நற்செய்தி) -
இவை யாவும் கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நமக்கு
உணர்த்துகின்றன. கடவுளிடம், இறைமகன் இயேசுவிடம், மரியா
கேட்டால், அவர் ஒருபோதும் அவள் கேட்பதை மறுக்கப் போவதில்லை
(யோவா. 2:1-11). ஆகவே ஒரு வகையில் மரியாவால் ஆகாதது
ஒன்றுமில்லை!
இதை நினைத்து இன்று நாம் பெருமகிழ்ச்சி அடைவோம். நமது
விண்ணகத் தாயிடம் அன்பும் உண்டு, வல்லமையும் உண்டு. இதை
மனதில் கொண்டு நமக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கன்னித்தாய்
வழியாக இறைவனிடம் வேண்டிப் பெறுவோம்.
Rev. Fr. M. Arul
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
தூய மரியாள் இறைவனின் தாய் புத்தாண்டுப்
பிறப்பு
முதல் வாசகப் பின்னணி (எண். 6:22-27)
-
விடுதலைப்பயணம் முடிந்தது, இறைவன் இஸ்ராயேல் மக்களைச்
சீனாய் மலையில் தேர்ந்தெடுக்கிறார். இஸ்ராயேல் மக்கள் இடையே
உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார். கடவுள் மோசே யின் மூலமாக
லேவியர் குலத்தைத் தனியாகத் தனிதன்மையோடு
தேர்ந்தெடுக்கிறார். அவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்தவும்,
கடவுளுக்கு வழிபாடு நடத்தவும் வேண்டியிருந்தது. இந்தக் குலத்தின்
தலைவரான ஆரோனின் குடும்பத்தார் குருக்களாகவும், பிறர்
குருக்களுக்கு உதவுபவர்களாகவும் செயல்பட்டனர். சிறப்பான நிகழ்ச்சிகளின்
போதும், பலிகளுக்குப் பிறகும் "ஆசீர்" கொடுப்பது குருக்களின்
வழிபாட்டுக் கடமையாக இருந்தது. இந்த ஆசீர்வாதமானது மக்களுக்கு
உடன்படிக்கையை கடைபிடிப்பதால் கிடைத்த பரிசாகும். மேலும்
இது ஆபிரகாமின் மூலம் எல்லா நாடுகளுக்கும் வாக்களிக்கப்பட்ட
ஆசீருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. இங்குக் கடவுள்
மோயீசன் வழியாக ஆரோனுக்கும் அவர் புதல்வர் களுக்கும்
கொடுத்த ஆசீரின் வார்த்தைகள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வாசகப் பின்னணி (கலா. 4: 4-7)
கலாத்தியாவில் வசிக்கும் மக்கள் தூய பவுலால் 2-ஆம் பயணத்தின்போது
மனமாற்றம் பெற்றவர்கள். அவர்கள் கிறிஸ்தவ கோட்பாடுகளை ஏற்றுக்
கொண்டு வாழ்ந்தார்கள். ஒரு சில யூதர்கள் அவர்களிடம் வந்து
பவுல் சொல்லும் கோட்பாடுகள் தவறாக இருப்பதாகவும், பழைய சட்டங்கள்கூட
கடைபிடிக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்கள். இதை முறியடிப்பதற்காகவே
பவுல் எபேசிலிருந்து இந்த மடலை எழுதுகிறார். குறிப்பாக இயேசுவின்
வருகை பழைய சட்டங்களை நிறைவுக்கு கொண்டுவந்துவிட்டது எனவும்,
நிழல் உண்மையால் விலக்கிவிடப்பட்டது எனவும், கிறிஸ்தவர்கள்
பழைய சட்டங்களின் அடிமைப்பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு
கடவுளின் பிள்ளைகளாக மாற்றம் பெற்றார்கள் எனவும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 2: 16-21)
கிறிஸ்து பிறந்த செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
அவர்கள் வானதூதர்களின் வார்த்தையை அப்படியே கேட்டுக் கடைப்பிடிக்கின்றனர்.
நற்செய்தியாளர் இங்கு மரியாளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார். கிறிஸ்து பிறந்த காலத்தில் ஒரு குழந்தை
மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதென்பது சாதாரணமாக நடந்த ஒன்று.
ஏனெனில் அது பஞ்சகாலத்தில் அதாவது பொருளாதாரரீதியாக நிறைய
ஏழைகள் இருந்தார்கள். எனவே குழந்தை பிறக்க நல்ல இடம் இல்லாமல்
இவ்வாறு நடந்தது. ஆனால் இடையர்க ளுக்கு ஆச்சரியம் என்னவென்றால்
வானதூதர் கொடுத்த செய்தியை போல மனித பிறவி எடுத்த தெய்வத்தைத்
தீவனத் தொட்டியில் பார்த்ததுதான்.
மறையுரை
பிறப்பு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலையை
கொடுக்கிறது. சிலருக்கு பிறந்த நாள் என்றால் சந்தோஷம், மகிழ்ச்சி.
இவர்கள் பிறந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்வார்கள். பலருக்கு
பிறந்த நாள் என்றாலே ஏதோ இழந்தது போல் "ஏன்தான் பிறந்தோமோ?'
என்ற மனநிலை அதிகமாக இருக்கும். இந்த இரண்டு மனப்பான்மைகளும்
நமது வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்து அமைந்து விடுகிறது.
பிறப்பும், இறப்பும் நமது கையில் இல்லை. நாம் எவ்வாறு பிறக்கப்போகிறோம்,
ஆணாகவா பெண்ணாகவா சிவப்பாகவா என்று தெரியாது. எந்த
நாட்டில் எந்த ஊரில், எந்தத் தெருவில் யாருக்கு பிள்ளையாகப்
பிறக்கப் போகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும்
உண்மை. ஒரு அன்பான, பாசமான, தியாகம் நிறைந்த அன்னைக்கு மகனாக,
மகளாகப் பிறக்கப் போகிறோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அன்னையால் இந்த உலகம் நமக்கு அறிமுகமாகிறது. அன்னையால்
நாமும் இந்த உலகத்திற்கு அறிமுகமாகிறோம். பிறப்பெடுக்கும்
ஒவ்வொரு குழந்தையாலும் அன்னை என்ற முகவரி ஒரு பெண்ணிற்கு
இயல்பாகக் கிடைக்கிறது. எதுவுமே நமது கையில் இல்லாத
நிலையில் நமது பிறப்பிற்கு ஆதாரம் இறைவன். இறைவனின் இந்தத்
தெய்வீகத் திட்டத்தில் கருவிகளாகச் செயல்படுபவர்கள் நமது
பெற்றோர். குறிப்பாக நமது தாய்தான் நம்மைப் பத்து மாதம் சுமந்து
பாலூட்டி, சீராட்டி எடுத்து நமக்கு உருக்கொடுத்து உண்டாக்குபவர்,
புதுவாழ்வு கொடுப்பவர். "கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் பிறக்க
முடியாது, இருக்க முடியாது என்பதற்காக அன்னையை படைத்தார்"
என்ற சான்று நமது அன்னை கடவுளின் பார்வையில் விலைமதிப்பேறப்
பெற்றவள் என்பது நிறைவாகிறது.
எவ்வாறு அன்னை இந்தப் புத்துலகை நமக்கு அறிமுகம்
செய்கிறாரோ, இந்த உலகம் நம்மை அறிந்து கொள்கிறதோ அவ்வாறுதான்
ஒவ்வொரு புத்தாண்டின் போதும், கிறிஸ்தவ பாரம்பரியத்தில்
புத்தாண்டும் இறைவனின் தாய் என்ற பெறுவிழாவும் சேர்ந்து வருவது
உண்மைப் பொருளை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அன்னையின்
வழியில் நேரமும் காலமும் தம்மில் நம்மைச் சேர்த்துக்
கொள்கிறது என்பதால் இங்குத் தாயும் முக்கியம் புத்தாண்டும்
முக்கியம். எனவேதான் இந்த இருபெரும் விழாக்கள். மரியாள் இறைவனின்
தாய் என்பதை பின்வரும் உண்மைகளால் ஏற்றுக்கொள்கிறோம். மரியாள்
உண்மையாக ஒரு மனித பிறவியாக இருந்தாலும், கடவுளால் உலக
மீட்பராம் இயேசுவிற்கு மனித உரு கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள்.
இதன் மூலம் தான் உலக மாந்தர் மீட்படைய முடியும் என்பது
திண்ணமாகிறது. இந்த மாபெரும் பாக்கியம் கடவுளால் கொடுக்கப்பட்டது.
இதை மரியாள் உணர்ந்து கொண்டாள். எனவேதான் "இதோ ஆண்டவரின்
அடிமை" (லூக்கா 1:48) என்று கூறுகிறாள். எனவே நாம் மரியாவை
புகழ்ந்து பாடும் போதெல்லாம் அவர் மூலம் செயல்பட்ட நமது
கடவுளையே புகழ்கிறோம். ஏனெனில் நம்மில், நம்மோடு பிறந்த ஒருவருக்கு
இந்த மாபெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
கடவுளால் எல்லாம் செய்ய முடியும். "பாவத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும்
இயேசு மனிதனாக இருக்க வேண்டும்" என்று திட்டமிருந்ததால்
"பெண்ணிடமிருந்து பிறந்தார்" என்ற உண்மை நிகழ வேண்டியிருந்தது.
இங்குக் கடவுள் தெய்வீக அன்பின் மூலம் மனித குலத்தைப்
பெருமைபடுத்தி உள்ளார். 2-ஆம் வத்திக்கான் சங்கத்தின்
"திருச்சபை" என்ற கோட்பாட்டில் 8-ஆம் அதிகாரத்தில் அன்னை
மரியாள் கடவுளின் தாய் என்பதை பல இடங்களில் நாம்
காண்கிறோம். 8:53எனவே அவர் உண்மையாகவே கடவுளும் மீட்பருமானவரின்
தாய் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுப் போற்றப்படுகின்றார். தம்
மகனின் பேறுபலன்களை முன்னிட்டு அவர் சீரிய முறையில் மீட்கப்
பெற்று நெருங்கிய, பிரிக்க முடியாத முறையில் அவரோடு இணைக்கப்
பெற்று இருக்கிறார். இறைவனின் தாய் என்ற இந்த உன்னத
நிலையாலும் பெருமையாலும் அணி செய்யப்படுகின்றார்.
8:54 இவர் கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கை
கொண்டோரின் தாய்.
8:56 ஏவாளோடு ஒப்பிட்டு மரியாவை "வாழ்வோரின் தாய்" எனவும்
அழைக்கின்றனர்.
8:58 'அம்மா இவரே உம் மகன்' (யோவா 19:26-27) என்னும் சொற்களால்
சிலுவையில் உயிர்விட்ட அந்தக் கிறிஸ்து இயேசுவே மரியாவைத்
தம் சீடருக்குத் தாயாக அளித்தார்.
8:59நம் இணைப்பாளர் ஒருவரே, மக்கள்பால் மரியா கொண்டுள்ள
தாய்க்குரிய பணியால் கிறிஸ்துவின் இந்த இணையற்ற இணைப்பாளர்
பணி சற்றேனும் மறைவதில்லை.
8:60 இதனால் தான் அருள்நிலையைப் பொறுத்தமட்டில் மரியா நமக்குத்
தாயாக அமைந்துள்ளார்கள்.
8:61 இசைவளித்த நேரத்திலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்
முடிவில்லா நிறைவுபெறும் வரை அருள் திட்டத்தின்படி மரியாவின்
தாய்மையும் தடையின்றி நீடிக்கும். தாய்க்குரிய அன்போடு
காத்து வருகின்றார். எனவேதான் கன்னி மரியா திருச்சபையிலே
பரிந்துரைப்பவர் எனச் சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகின்றார்.
8:63 அன்னையும் கன்னியும் என்று சரியாக அழைக்கப்பெறுகின்ற
திருச்சபையின் மறைபொருளின் தூய கன்னி மரியா கன்னி-
மைக்கும் தாய்மைக்கும் தனிப்பட்ட சிறந்த ஓர் எடுத்துக்
காட்டாக உள்ளார். கடவுளால் அனுப்பப்பட்ட மகனையே அவர்
பெற்றெடுத்தார். இவரை நம்பிக்கை கொண்டவராய்ப் பெற்றெடுத்து
வளர்ப்பதில் மரியா தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்.
8:65 தூய கன்னி தம் வாழ்வில் தாய்க்குரிய அன்பிற்கு
மாதிரியாய் உள்ளார்.
8:69 கடவுளுக்கும் மக்களுக்கும் தாயான கன்னி மரியா தம்
இறைவேண்டலால் தொடக்க காலத் திருச்சபைக்கு உதவினார்.
மரியா இறைவனின் அன்னையாகவும், இறைமக்களின் அன்னையாகவும்
இருக்கின்றார் என்பதை மேற்கூறியவைகள் நமக்குத்
தெளிவுப்படுத்துகின்றன. தனிமனித வாழ்வில் இறைமக்கள்
தாய்க்குரிய வாஞ்சையோடு அந்த அன்னையிடம் வருவதையும், அவர்
வழியாக மக்கள் பெறுகின்ற கொடைகளையும் அவர்களின்
அனுபவத்தையும் பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
நாமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் அனுபவித்துள்ளோம்.
இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ பேர் தாயின் அன்புக்காக
ஏங்குகின்றனர். தாய்மையைச் சிறப்பித்துக் கூறுகின்ற நமது
சமுதாயத்தில் கருவில் சிதைக்கின்றவர்களும் பெற்றெடுத்து
சிசுவைக் கொலை செய்கின்றவர்களும், குப்பைத் தொட்டியிலும்,
புதர்களிலும் போடுகின்றவர்களும் நம்மிடையே
இருக்கின்றார்கள். இப்படிக் கைவிடப்பட்டோர் ஒரு சில நல்ல
உள்ளங்களால் பராம- ரிக்கப்பட்டு நல்ல மனிதர்களாக
வளர்க்கப்படுகின்றனர். இருப்பினும் உண்மையான தாயின் அன்பு
அவர்களுக்குக் கிடைப்பதில்லை. இது போன்ற சூழல்களில் நாம்
அனைவரும் அன்புகாட்டி வாழ அழைக்கப்படுகின்றோம்.
நம் எல்லோருக்கும் ஒருவிதமான இரக்க குணம் இருப்பதை
உணரமுடிகின்றது. வாழ்வின் ஒருசில நிலைகளில் நாம் நம்முடைய
உள்ளத்தில் உணருகின்ற இரக்கக் குணத்தை மற்றவர்களுக்குக்
காட்ட முடிகின்றது.
எப்பொழுதெல்லாம் இந்த இரக்க குணத்தை நாம் மற்றவர்களுக்கு
நமது உறவு முறைகளில், பணி செய்யும் இடங்களில், சாலையோர
நிகழ்வுகளில், பிச்சையெடுப்பவர்களில் காட்டுகின்றோமோ
அப்பொழுதெல்லாம் நாம் தாயின் அன்பையும் இரக்கத்தையும்
அவர்களுக்குக் காட்டுகின்றோம்.
அந்தத் தாய்மை இவ்வுலகில் வாழுகின்ற மனிதர்களில் சிறந்திட
அன்னையின் வழியைப் பின்பற்ற வேண்டும். அன்னை மரியா தனது
கீழ்ப்படிதலினால் இறைவனுக்குத் தாயாக அதன்வழி அவரின்
மீட்புத் திட்டத்தில் இணைந்து திருச்சபையில் வாழும்
மக்களுக்கும், கிறிஸ்துவை விசுவசிக்கும் ஒவ்வொருவருக்கும்
எப்படித் தாயாக இருக்கின்றாரோ அதைப் போன்று அந்த அன்னையின்
வழிநடந்தால் நாம் அவரின் பிள்ளைகளாக இவ்வுலகில் வாழ்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 இந்த புதுவருட நாட்களில், எல்லா நாளும் அன்னை நம்மை
புதுவழியில் வழிநடத்துவாள்.
🕇அன்னை மரியா இயேசுவால் நமக்கு கொடையாக கொடுக்கப்பட்டவள்,
"இதோ உன் தாய்". பரிசை பாதுகாப்பதில், நமது மதிப்பையும்,
மாண்பையும் பரிசளித்தவருக்கு தெரியப்படுத்து கிறோம்.
🕇இயேசுவுக்கு பிறப்பு கொடுத்ததன் மூலம் மனிதகுலத்திற்கு
மரியாள் வரம் பெற்று தந்திருக்கின்றார்கள்.
🕇 மரியா இயேசுவின் தாய், இறைவனின் தாய், நமது தாய். நமது
வாழ்வை வளப்படுத்தும் காரணி அவரே!
🕇 தாய்மையின் நிறைவில் மரியாள். நமது பெண்களும் நமது
தாய்மையை தெய்வீகத்திற்கு இணையாகக் கருதி போற்றி வாழ
வேண்டும். கருகலைப்பு, கருத்தடை சாதனங்கள் இத்தெய்வீகத்
தாய்மைக்கு எதிரானவை. அவற்றிற்கு உடந்தையாகவோ,
தூண்டுதலாகவோ, கருவியாகவோ ஒரு போதும் இருத்தலாகாது.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா
இன்று புதிய ஆண்டொன்றை துவங்குகின்றோம். இந்த நாளும், இந்த
ஆண்டு முழுவதும் நமக்கு இனிதானதாக இருக்க வேண்டும் என்னும்
நமது ஆசைக்கு ஏற்ப, இன்றைய இறைவார்த்தை முதல் வாசகத்தில்
ஆசியின் வார்த்தைகள் கூறப்படுகின்றன. நாம் பொருள் செல்வம்,
உடல் நலச்செல்வம் மற்ற பிற உலகச் செல்வங்களை விரும்பலாம்
ஆனால் இறைவன் அவற்றையும் தாண்டி. நம் வாழ்வுக்குத்
தேவையான, உயர்வான மூன்றை நமக்குத் தர விரும்புசின்றார்.
அதாவது, ஆசி, அருள், அமைதி ஆகிய மூன்றையும் இறைவன் இன்றும்,
என்றும், என்றென்றும் வழங்க விரும்புகின்றார். அதையே
நாம் ஒருவருக்கொருவர் வழங்கி புத்தாண்டு நல்வாழ்த்துக்களை
பகிர்ந்து கொள்வோம்.
இன்றைய நற்செய்தி இயேசுவின் பிறப்புடன் தொடர்புடைய நிகழ்வுகளான
இடையர் குழந்தை இயேசுவைச் சந்தித்ததையும், இயேசுவுக்குப்
பெயரிடப்பட்ட நிகழ்வையும் விவரிக்கின்றது. இந்த நற்செய்திப்
பகுதி அளிக்கும் முக்கியமான இறையியல் செய்திகளை மட்டும்
இவண் காண்போம்.
1. முன்னறிவிப்பு - நிறைவேற்றம்
இயேசுவின் பிறப்பின்போது வானதூதர்கள் இடையர் களுக்குத்
தோன்றி இயேசுவின் பிறப்பின் செய்தியை, "எல்லா மக்களுக்கும்
பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை" (வச. 10) அறிவித்தபோது
குழந்தையை, இவனத் தொட்டியில் கடத்தி யிருப்பதை (வச. 12)
அடையாளமாகத் தந்தனர். இடையர்கள் குழந்தையைக் காண வரும்போது
இந்தத் தவனத் தொட்டி அடையாளத்தை லூக்கா மறக்காமல்
குறிப்பிடுகின்றார் (வச. 16). இவ்வாறு "முன்னறிவிப்பு -
நிறைவேற்றம்' எனும், அமைப்பு இங்கு எடுத்தாளப்படுகின்றது.
மேலும் இயேசு எனும் பெயரும் ஏற்கெனவே வானதூதரால் முன்னறிவிக்கப்பட்டு
இப்போது இயேசுவுக்கு கூட்டப்படுறெது (வச. 21).
2. சட்டத்திற்கு உட்பட்டவராய். . .
இன்றைய இரண்டாம் வாசகத்தில், " காலம் நிறைவேறிய போது...
கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு
உட்பட்ட வராகவும்" அனுப்பியதாக பவுலடியார்
குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை விவரிக்கின்ற
லூக்கா இயேசுவின் பெற்றோர் எவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு
செயல்பட்டனர் என்று விவரிக்கின்றார். முதலாவதாக, அகுஸ்து
சர் தம்பேரரசு முழுவதும் மக்கள்தொகை கணக்கிட்டபோது பல வன்முறைகள்
வெடித்தன (காண். திப 5:37). ஆனால் இயேசுவின் பெற்றோர்
கிளர்ச்சியாளருடன் சேராமல், சட்டத்தை மதித்து தங்கள் பெயரை
பதிவு செய்ய பெத்லகேமுக்குச் சென்றனர். இன்றைய நற்செய்தியில்,
எட்டாம் நாளில் செய்யவேண்டிய விருத்தசேதன நிகழ்வையும்,
இயேசுவுக்குப் பெயரிடும் நிகழ்வை யும் நிகழ்த்துகன்றனர்
(வச. 21). இந்த நற்செய்திப் பகுதியைத் தொடர்ந்துவருகிறபகுதியில்மோசேயின்
சட்டப்படி இயேசுவுக்கு 'தூய்மைச் சடங்கு நிறைவேற்றப்படுவதையும்
(வச. 22), அத்திருச் சட்டத்தில் எழுதியுள்ளபடி தலைபேறு
ஆண்டவருக்கு அர்ப் பணிக்கப்பட்டு அதற்கு ஈடாக பறவைகள் அளிக்கப்பட்டு
இயேசு "மீட்கப் படுவதையும்" காண்கிறோம் (காண். வச
23-24). எனவே இயேசுவின் பெற்றோர் சட்டத்திற்கு உட்பட்ட
குடிமக்களாகவும், சமயப் பற்றாளர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
3. ஏழையராம். . .
1 இயேசுவின் பிறப்பின் நிகழ்வு விவரிப்புகள் எல்லாம்
ஒரு சாதாரண சாமான்ய குடும்ப நிகழ்வாக, இயேசுவின் பெற்றோரை
ஏழையராகவே படம்பிடித்துக் காட்டுகின்றன. இயேசு பிறந்த
போது, "பிள்ளையைத் துணிகளில் பொதிந்து, தவனத்தொட்டியில்
கிடத்தினர்" (வச.7); இடையர்கள்தான் இயேசுவைமுதலில்பார்க்க
வந்த முதல் பார்வையாளர்கள் (வச. 15-17); இயேசு ஆலயத்தில்
அர்ப்பணித்து மீட்கப்படும்போது ஏழையர்களுக்கு என விதிக்கப்
பட்டிருந்த இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை
இயேசுவின் பெற்றோர் பலியாகத் தரூகின்றனர் (வச. 24). இவ்வாறு
இயேசுவைச் சுற்றி நிகழ்பவை எல்லாம் ஒரு "புலம் பெயர்ந்த"
"அகதிக்கு" இருக்கும் எளிமையான பின்னணியிலே விவரிக்கப்படுகின்றன.
இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பிறப்பைச் சுற்றிய நிகழ்வுகளைக்
குறித்து மூன்று வகையான உணர்வுகள் வெளிப் படுத்தப்படுகின்றன;
குறிப்பிடப்படுகின்றன; முதலாவது, இடையர் கள் குழந்தையைப்
பற்றித்தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத்
தெரிவித்தார்கள்" (வச.17),மேலும், "தாங்கள் கேட்டவை, கண்டவை
அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றி புகழ்ந்து
பாடிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்" (வச. 20). எனவே
அவர்களது வெளிப்பாடு மகிழ்ச்சி, ஆனந்தம். இரண்டாவது, இடையர்கள்
சொல்வதைக் கேட்டவர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட வற்றைக்
குறித்து வியப்படைந்தனர் (வச. 18). இவர்களின் உணர்வு வியப்பாக
இருந்தது. இறுதியாக தொடக்க முதல் இயேசுவின் பிறப்பு நிகழ்வுகள்
அனைத்தோடும் தொடர்புடைய மரியாவின் உணர்வை நற்செய்தியாளர்
"மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச்
சிந்தித்துக் கொண்டிருந்தார்" (வச. 19, மேலும் காண்.
வச. 51) என வெளிப்படுத்துகின்றார். ஆச அன்னை மரியாவின்
உணர்வு ஆழ்நிலை தியானமாக, செபமாக இருந்தது. நமது உணர்வுகள்
இக்காலங்களில் எப்படி உள்ளன?
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
இறைவனின் அன்னை புனித மரியா ஜனவரி 1
முதல் வாசகம் : எண் 6: 22-27
இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் அளித்த ஆசீர், புத்தாண்டு துவக்கத்தில்
இவ்வாசகத்தின் மூலம் நம் எல்லோருக்கும் அளிக்கப்படுகிறது.
ஆண்டவரின் பெயரைக் கூவி அழைத்தோமாயின் நமக்கும் அவரது ஆசீர்
(6:24), இரக்கம் (6:25), சமாதானம் (6:26) கிட்டும்.
இயேசுவின் பெயர் வாழ்வு தரும் பெயர்
பெயர், ஒருவருடைய ஆளுமையைக் குறிக்கும். பெயர் மாற்றம் அல்லது
புதுப்பெயர் புது அழைப்பை, புதுப்பணியைச் சுட்டும். ஆபிராம்
ஆபிரகாம் ஆகி "அநேக மக்களுக்குத் தந்தையாகிறார்" (தொநூ
17:5); யாக்கோபு இஸ்ரயேல் ஆகி "மனிதர்களை மேற்கொள்பவராகிறார்"
(தொநூ 32:28). சவுல் பவுல் ஆகி நற்செய்தியின் போதகராகிறார்
(திப 13 : 9). கடவுள் "ஆண்டவர்"("yahweh") ஆகி இஸ்ரயேலருக்கு
விடுதலைஅளிக்கிறார் (விப 3:14-15). ஆண்டவர், இயேசுவாகப் பிறந்து,
("yah-ho shua") "மக்களை அவர்கள் பாவங்களிலிருந்து மீட்பவர்
ஆகிறார்" (மத் 1: 21). இயேசு என்னும் புதுப் பெயர் நமக்கு
வாழ்வளிக்கும் பெயர் (திப 4:12, 1 யோவா 2: 12; மாற் 16:
17- 18). இப்புத்தாண்டிலே அப்புதுப் பெயரைக் கூவியழைப்போம்.
பாவம் ஒழிய, புது வாழ்வு மலர இப்பெயர் நமக்குப் பலமும் சக்தியும்
தரும். "இயேசு" என்று சொன்னாலே போதும்; நம் பாவங்கள் எல்லாமே
தீரும்.
நமக்கு ஆசி வழங்கும் பெயர்
புத்தாண்டிலே ஆண்டவரின் ஆசீர் நமக்குத் தேவை. அவரது ஆசீர்
ஒன்றே நம்மை அனைத்துத் தீமைகளிலிருந்தும் பாதுகாக்கும் சக்தி
கொண்டது."உமது பெயரால் அவர்களைக் காத்தருளும். நான் அவர்களோடு
இருந்தபோது அவர்களை உமது பெயரால் காத்துவந்தேன்" (யோவா 17:
11-12) என்று இயேசு கூறுவது நமக்கு நம்பிக்கையளிக்க
வேண்டும். ஆண்டவரின் ஆசீரும் அவரது பாதுகாப்பும் நமக்கு என்றும்
இருக்கிறது. "ஆண்டவர் நீ போகும் போதும் காப்பார்; வரும்போதும்
காப்பார்; இப்போதும் எப்போதும் உன்னைக் காப்பார்" (திபா
121:8).
கனிவு காட்டும் பெயர்
புத்தாண்டிலே ஆண்டவரின் இரக்கம் நம்மோடு தொடர்ந்து இருக்க
வேண்டும். "ஆண்டவரே, உமது முகத்தைத் திருப்பும்; ஆண்டவரே,
உம் முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்" (திபா 4: 6),
எங்களைத் தயவுடன் கண்ணோக்கியருளும் என்று வேண்டுவோம். கனிந்த
உம் திருமுகத்தை எனக்குக் காட்டியருளும்; உம் அருளன்பைக்
காட்டி என்னை ஈடேற்றும்" (திபா 31;16) என்று இறைஞ்சுவோம்.
புத்தாண்டிலே ஆண்டவரின் சமாதானம் நமக்குக் கிட்ட வேண்டும்.
அவர் ஒருவரே உண்மைச் சமாதானத்தை நமக்கு அருள முடியும். பிறப்பிலே
அவர் சமாதானம் கொண்டு வந்தார். "உலகிலே அவர் தயவு பெற்றவருக்கு
அமைதி ஆகுக" (லூக் 2: 14); இறப்பிலே அவர் சமாதானம் அளித்தார்.
"சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்
தையே உங்களுக்கு அளிக்கிறேன்" (யோவா 14:27). உயிர்த்த
பின்னும் அவர் சமாதானத்தை விட்டுச் சென்றார். "உங்களுக்குச்
சமாதானம்" (யோவா 20:20-21). எனவே புத்தாண்டிலே குடும்பத்திலும்,
உலகிலும் சமாதானம் நிலவ வேண்டுவோம். "உன் மதில்களுக்குள்
அமைதி இருப்பதாக; உன் மாளிகைகள் பாதுகாப்புடன் விளங்குவனவாக.
அமைதி உன்னகத்து விளங்குவதாக" (திபா 122:7-8) என்று இறைவன்
நம்மை ஆசீர்வதிப்பாராக.
ஆண்டவர் உனக்கு ஆசீர் அளித்துக் காப்பாற்றுவாராக.
இரண்டாம் வாசகம் : கலா 4:4-7
ஆண்டின் முதல் நாள். நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும்
ஊட்டும் நாள். மரியா கடவுளின் தாயானதினாலே நம்முடைய தாயாகவும்
மாறுகிறார். இன்று அவருடைய தாய்மையின் திருநாள்; நம் அனைவரின்
மகப்பேற்றின் திருநாள். எனவே மகிழ்ச்சிமிக்க நன்றிப் பாடலோடு
புத்தாண்டில் கால்வைப்போம்.
கிறிஸ்து பெண்ணிடமிருந்து பிறந்தார் (4:5)
பெண் வழியாக எவ்வாறு மனித குலத்துக்கு அழிவு வந்ததோ (தொநூ
3:1) அதே போன்று, பெண் வழியாகவே மனித குலத்திற்கு மீட்பும்
கிடைத்தது. "அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு
என்று பெயரிடுவீர். ஏனெனில் இவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களில்
இருந்து மீட்பார்" (மத் 1: 21, லூக் 1: 31-33). மரியாவின்
வழி பெண்மையை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பெண்மை
தாய்மையோடு தொடர்புடையது. பெண்மையை வெறும் போகப் பொருளாகக்
கருதுவது மிருகத்தனமானது. இன்று, ஆண்டின் முதல் நாளில், மரியாவின்
தாய்மையை வணங்கும் நாளில் நமது தாய்மார்களுக்காக, நமது சகோதரிகளுக்காக,
இளம் பெண்கள் மற்றும் விதவைகளுக்காக இறை அன்னையிடம்
வேண்டுவோம். பெண் குலத்தின் பெருமையாகிய மரியா பெண்ணினம்பால்
நமது மதிப்பையும் மரியாதையையும் வளரச் செய்வாராக!
எந்த ஒரு சமுதாயம் பெண்ணினத்தை மதிக்கக் கற்றுக்கொள்கிறதோ,
"ஆண் என்றும் பெண் என்றும் வேற்றுமை இல்லை" (கலா 3: 28) என
உணர்ந்து, பெண்ணுக்கு வாழ்வும் வழியும் காட்ட முன் வருகிறதோ
அதுதான் பண்பாடுள்ள சமுதாயம் என்பதை உணர்ந்து நடப்போம். மரியாவை
வாழ்த்துவோம்; அவள்வழி பெண்குலத்திற்குப் பெருமை தருவோம்.
பெண்டிரும் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும்.
மரியா ஒரு பெண். பு.ஏ.-இல் நம் ஆண்டவர் அருகில் இருந்தோரில்
பலர் பெண்கள். எனவே துணிவுடன் முன்வந்து, திருச்சபைக்கும்
உலகுக்கும் பணி செய்தல் பெண்களின் கடன். பெண்டிர் முன்வருவார்களா?
திருச்சபை பெண்களுக்குத் தன் பணித் தளத்தில் முக்கியத்துவம்
தருமா?
நாம் அனைவரும் இறைமக்கள் (4:6)
இறைவன் நமது தந்தை. நாம் இறைவனின் பிள்ளைகள் என்பது ஏதோ ஒரு
கட்டுக்கதையன்று; வெறும் நம்பிக்கையன்று. முழுக்க முழுக்க
உண்மை இது. ஏனெனில் நம்மை இறைவனின் "பிள்ளைகளாக்கும் தேவ
ஆவியை" (உரோ 8; 15) இறைவன் நமக்கு அளித்துள்ளார். இத்தேவ
ஆவியாரின் உதவியாலே தான், "அப்பா, தந்தாய்" என நாம் இறைவனை
அழைக்க முடிகிறது (உரோ 8:15; கலா 4:6). "இத்தேவ ஆவியாரே
நாம் கடவுளின் பிள்ளைகளெனச் சான்று பகர்கிறார்" (உரோ
8:16). என்னே நாம் பெற்ற பேறு!
பாவத்திற்கும் சாவுக்கும் சட்டத்துக்கும் அடிமைகளாய் இருந்த
நாம் இறைவனின் உரிமை மக்களாக மாறுகிறோம். "கிறிஸ்துவோடு
கடவுளின் செல்வம் அனைத்திற்கும் உரிமையாளர்களாக" (உரோ
8:17) மாறுகிறோம். கிறிஸ்துவோடு உடன்பிறவாத சகோதரர்களாகிறோம்.
இவ்வளவு உயர்ந்த ஒரு நிலையை இறைவனே நமக்களித்துள்ளார் (கலா
4:7). எங்கே உரிமைகள் உண்டோ, அங்கே கடமைகளும் உண்டு. இறைவனின்
மக்களுக்குரிய கடமைகளில் கண்ணும் கருத்துமாயிருக்கிறோமா?
இறைவனின் கட்டளைகள், சிறப்பாக அவரது அன்புக் கட்டளை நமது
வாழ்வின் அடிப்படையாக அமைந்திருக்கிறதா?
ஆண்டின் முதல் நாள் இன்று. நமது மகப்பேற்றுக்கும் அதைச்சார்ந்த
உரிமைகளுக்கும் நன்றி செலுத்தும்போது இறைமக்களுக்கு ஏற்றப்
புனித வாழ்வை, அன்பு வாழ்வை வாழ்வதற்கு அன்னை மரியாவிடமும்,
அவர் மகன் நம் சகோதரர் இயேசுவிடமும் வேண்டுவோம்.
கடவுள் தம் மகனின் ஆவியை நம் உள்ளங்களுக்குள் அனுப்பினார்.
நற்செய்தி: லூக் 2: 16-21 ஆண்டின் தொடக்கத்தில் கன்னி மரியா
கடவுளின் தாயான விழாவைக் கொண்டாடுகிறோம். கபிரியேல் தூதனின்
மங்களச் செய்தி முதல் (லூக் 1:26), மனுமகனின் மரணம்வரை, இயேசுவும்
மரியாவும் ஒன்றாகவே நற்செய்தியில் இடம் பெறுகின்றனர்.
வீட்டிற்குள் போய்ப் பிள்ளையை அதன் தாய் மரியாவுடன் கண்டு
தெண்டனிட்டு வணங்கினர் (மத் 2: 11). ஆண்டவரின் தூதர்
யோசேபுக்குக் கனவில் தோன்றி எழுந்து பிள்ளை யையும்
தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம் என்றார் (மத்
211-14). இடையர்சென்று மரியாவையும் குழந்தையையும் கண்டனர்
(2:16). மரியாவின்றி மைந்தன் இயேசு இல்லை. மரியா வழியே இயேசுவிடம்
செல்கிறோம். எனவே நம் ஒவ்வொருவர் வாழ்விலும், திருச்சபையின்
வாழ்விலும் மரியா சிறப்பிடம் பெறுகின்றார். குழந்தை இயேசுவைப்
பெற்று வளர்த்து ஆளாக்கிவிட்ட அன்னை நம்மையும் தம் குழந்தைகளாகப்
பாவித்துப் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான் ஆண்டின் தொடக்கத்
திலேயே மரியாவை நினைவுகூர்கின்றோம்.
மரியா கடவுளின் தாய்
கபிரியேல் தூதர் கன்னி மரியாவை நோக்கி "மரியே அஞ்சாதீர்.
கடவுளின் அருளை அடைந்துள்ளீர். இதோ உமது வயிற்றில் கருத்தரித்து
ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்"
(லூக் 1:31) என்று கூற, இதோ, ஆண்டவரின் அடிமை; உமது
வார்த்தையின்படியே ஆகட்டும் என்றார் (1: 38). அதே வேளையில்
உருவிலானைக் கருவிலே தாங்கிக் கன்னித் தாயானார். கடவுளையே
தாங்கிய கற்புக்கரசி தன் வீடு தேடி வந்ததைக் கண்ட எலிசபெத்தம்மாள்
"என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" என்று வியப்படைந்தார்.
இயேசு தெய்வத் திருமகன் என்றால், அவரைப் பெற்றவரைத் தேவதாய்
என்றழைப்பதில் என்ன தயக்கம்? எனினும் ஒருசிலர் கன்னி மரியாவைக்
கடவுளின் தாயென அழைக்கலாகாது என்றனர். இறை இயேசுவில் உள்ள
மனித ஆளுக்குத் தான் அவர் தாயே தவிர, தெய்வ ஆளுக்கு அன்று
என்று தெய்வத் திருமகனைக் கூறு போட்டனர். இவ்வேளையில் தான்
எபேசு நகரில் 4-ம் நூற்றாண்டில் கூடிய திருச்சங்கம் கன்னி
மரியா கடவுளின் தாய் என்ற உண்மையை வேதசத்தியமாக வரையறை
செய்தது. அன்று முதல் இன்று வரை எல்லாத் தலைமுறைகளும் அவளைப்
பேறு பெற்றவர் எனப் போற்றுகின்றன.
மரியா என்னுடைய தாய்
கடவுளின் தாயாகச் சம்மதித்தபொழுதே அவர் நமக்கும்
தாயாகிவிட்டார். ஏனெனில் மக்களை மீட்டு அருள் வாழ்வு வழங்கும்
அற்புதக் கனியைத் தந்த கற்பகத்தரு மரியா; இயேசுவாகிய
திராட்சைக் கொடி பயிரான நிலம் அவர். வாழ்வு அளிப்பவர்
தாய்; அருள் வாழ்வு அவள் வழியாகவே நமக்கு வருகிறது. எனவே
அவர் நமது தாய். இந்த உறவு கல்வாரியில் இரத்தத்தால்
முத்திரையிடப்படுகிறது. "இவரே உன் தாய்" என்று கூறப்பட்ட
சொற்கள் யோவானுக்கு மட்டுமல்ல; நமக்கும் பொருந்தும். எனவே
"கடவுளின் தாய், என் தாய்!" என்று புனித தனிஸ்லாசுடன் நாம்
பெருமையுடனும், உரிமையுடனும் கூற முடியும். அன்னையின் அடிச்சுவட்டில்
நடக்கிறேனா? அவரிடம் என்னை முழுதும் அர்ப்பணிக்கின்றேனா?
இயேசு எனது மீட்பர்
யூத முறைப்படி பாலன் பிறந்த எட்டாம் நாள் பெயர் சூட்டுவிழா
நடந்தது. இயேசு என்று பெயரிட்டனர். "கடவுள் மீட்பர்" என்பது
அதன் பொருள். வல்லமையுள்ள பெயர்; மண்ணும் விண்ணும் மண்டியிடும்
இப்பெயருக்கு! "நசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து
நடந்திடும்" (திய 3:6). "ஏனெனில், நாம் மீட்படைவதற்கு அவர்
பெயரைத் தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை"
(திப 4 : 12). "நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும் அதை
என் பெயரால் உங்களுக்குத் தருவார்" (யோவா 16: 23). ஆதலால்தான்
கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும்
மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு
விண்ணவர் மண்ணவர் கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர் (பிலிப்
2:9). வல்லமையுள்ள இப்பெயரை வாயுள்ள வரை சொல்வோம்.
மரியாவோ இந்நிகழ்ச்சிகளை உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தார்.
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே