ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா
 திருப்பலி முன்னுரை

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

திருக்காட்சிப் பெருவிழாவின் அருளைப் பெற வந்திருக்கும் இறைமக்களே!

திருக்காட்சி என்ற சொல், மீண்டும் நம் நினைவை மாட்டுக் குடிலுக்கே கொண்டு செல்கிறது. எளிமையை எளியோரை நேசிக்க மானிட மகன் தேர்ந்தெடுத்த அடையாளச் சின்னமே மாட்டுக் குடில். எளிமையை நேசிக்கவும், எளியோரை நேசிக்கவும், மாட்டுக் கொட்டகை விரிவுரை ஒன்று ஆற்றிவிட்டது.

ஏதோ ஒரு மூலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கு, வால் நச்சத்திரம் வழிகாட்டியது. சமூக அமைப்புகளால் சக்தி இழந்து கிடப்போருக்கு, சக்தி உண்டு என்ற செய்தியை, வால் நட்சத்திரம் வலுக்கட்டாயமாக நம் உணர்வுகளுக்குள் உறைய வைக்கிறது.

ஏரோதாய், அதிகாரம் பெற்றோராய் அவனியில் பிறரை மதிக்க மறந்து வாழும் போது, இறைவன் அங்கே உறைய மறுத்து மறைந்து விடுவதை, கனவில் எச்சரிக்கப்பட்டு, வேறுபாதையில் ஞானியர் சென்ற நிகழ்ச்சி விளக்குகிறது. ஞானியர் வருகையும் அவர்களது அன்பளிப்புப் பொருட்களும், இறைபராமரிப்பையும், பகிர்வையும் மாதிரிச் சுவடியாய் மனதில் பதித்து விட்டது.

மாட்டுக் கொட்டகையும், வால் நட்சத்திரமும், இடையர்களும், ஞானிகளும், அவர்கள் ஏந்தி வந்த அன்பளிப்புப் பொருட்களும், திருக்காட்சி நிகழ்ச்சியாகிய இந்தத் திருப்பலிக்கு வாருங்கள்! எளியோராய் மாறுங்கள்!! என நம்மை அழைக்கின்றது. புதிய தடத்தில் பயணிக்க, விண்மீனாய் வழிகாட்டி, ஒளிதருகின்ற திருப்பலியின் ஒளி பெற்று, அதையே காணும் நபரில் எல்லாம் ஒளிர்விக்க, இறைவனை வேண்டுவோம்.




 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
வழிகாட்டும் விண்மீனே எம் இறைவா!
திருச்சபையின் அனைத்து செயல்பாடுகளிலும், வழிகாட்டும் விண்மீனாய் திகழ்கின்ற திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் ஆன்மீக சரீர நலம் பெற்று, என்றென்றும் எளியோருக்கு வழிகாட்டும் விண்மீனாய் சுடர்வீச, உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எளியோரை நேசிக்க மாட்டுக் குடிலில் பிறந்த எம் இறைவா!
அதிகாரமும் ஆட்சிப் பொறுப்பும் நிறைந்த தலைவர்கள், ஆணவம் களைந்து தாழ்ச்சி நிறைந்து, தங்கள் பதவிப் பொறுப்புகள், உதவிகள்; எளியோருக்கே தேவைப்படும் என்ற நினைவுடன் செயல்பட, உமதருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இடையர்களும் உம்மை வணங்க வாய்ப்புத் தந்த இறைவா!
சமூகம் நினைக்க மறந்தவர்கள், ஒதுக்கப்பட்டவார்கள், தீண்டத்தகாதவர்கள், ஏழைகள், துன்புறுவோர், அந்நியர், அகதிகள், விதவைகள், ஆதரவற்றோர் என்ற அடைமொழியால் அழைக்கப்படுகின்ற சகோதரர்களுக்கு, நிச்சயம் ஒரு நல்ல விடியல் உண்டு என்ற நல்ல செய்தியை, இந்தத் திருக்காட்சிகளால் நிகழ்த்தித் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஞானியர்களுக்கு பராமரிப்பையும் பகிர்தல் மனப்பான்மையையும் தந்த எம் இறைவா!
எங்களை ஞானத்தோடு உம்பாதையில் அழைத்துச் செல்லும் எம் ஆன்மீகத் தந்தைக்கு, உம் பாதுகாப்பையும், பராமரிப்பையும், மிகுதியாக்கும். அதன்வழியாய் இறைமக்களை பாதுகாப்புடனும் மந்தைக்குக் கூட்டிச் செல்ல அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

புதியபாதையில் பயணிக்க அருள்தரும் எம் இறைவா!
இங்கே ஒரே குடும்பமாய்க் கூடி நிற்கின்ற எங்கள் மனங்களில் குவிந்துள்ள கலக்கங்கள், நிம்மதி இழப்புகள், துயர நினைவுகள், வருத்தக்கோடுகள், கவலை மிகு நிகழ்வுகள் அனைத்தையும் அகற்றி புத்தொளி பெற்று, இன்று முதல் எங்கள் பழைய பாவ நிலைகளை விட்டுவிட்டு, புதிய பாதையில் மகிழ்ச்சியோடு பயணிக்கும் நிகழ்வை, அன்றாடம் சந்திக்க அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



 
மறையுரைச்சிந்தனை Sr. Gnanaselvi (india)
நாமும் ஞானிகளாவோமா...?

பேராசிரியர் ஒருவர் உலகிலுள்ள மக்களை அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். அறிவுள்ளவர்களைப் பண்டிதர்கள், ஞானிகள் என்று மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். பண்டிதர்கள் எனப்படுபவர்கள் சட்டப்படிப்பு புத்தகப்படிப்பு படித்தவர்கள் ஆவார்கள். ஆனால் ஞானிகள் எனப்படுபவர்கள் கண்டு கேட்டு தொட்டு நுகர்ந்து அனுபவ ரீதியாக உண்மையை அறிந்தவர்கள். என இப்படிக் குறிப்பிடுவார்.
ஆம் நாம் எல்லோரும் பண்டிதர்கள் ஆகாவிட்டாலும் எல்லோருமே ஞானிகள் ஆகலாம்.
பென்ஹர் என்ற ஒரு திரைப்படத்தின் கதாநாயகனான பென்ஹர் குதிரைச் சவாரியில் இவருக்கு ஒத்தவரோ இவரை மிஞ்சியவரோ எவரும் இருக்கவில்லை. இவருடைய தாயார் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டதாக இவருக்குத் தெரிய வந்தது. பாவிகளுக்கும் ஏழை எளியவர்க்கும் பிணியாளருக்கும் காட்சி அளிக்கின்ற தொழுநோயாளரைக் குணப்படுத்துகின்ற முடவரை நடக்கச் செய்கின்ற இயேசுவைப்பற்றி இவர் கேள்விப்பட்டிருந்தார். தன் தாயாரைச் சுகப்படுத்துவதற்காக உடனடியாக அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார். பிலாத்தின் அரண்மனையை அடைந்ததும் மக்களின் ஆரவாரத்தைக்கேட்டார். இயேசுவைக் கொல்வதற்காகவே இவர்கள் இப்படி ஆரவாரம் செய்கின்றனர் என்று இவர் அறிந்து கொண்டார். இயேசு மரிப்பதற்கு முன்பே கல்வாரிமலையை அடைய அவர் முயற்சி செய்தார். கல்வாரிமலை ஏறுவதற்கு முன் அவருடைய தாய் மூர்ச்சை அடைந்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டாள். நினைவிழந்து தண்ணீர் கேட்ட தாயிக்கு அருகிலிருந்த அருவிக்கு ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தார். தண்ணீரைக் குடித்த தாயார் அற்புதமாக உடனடியாக பூரண சுகமடைந்தாள். அருவித்தண்ணீரில் இயேசுவின் இரத்தம் கலந்து இருந்ததே இப்பூரண சுகத்திற்குக் காரணமாகும்.

கஷ்ட துன்பங்களும், வேதனை சோதனைகளும் நேரிடும்போதுதான் நாம் நம் இயேசுவைக் கண்டு பிடிக்கின்றோம். கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காண வந்த ஞானிகள் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய பயணத்தை கஸ்தி வியாகுலங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டதால் தான் இயேசுவைக் காண முடிந்தது.
வாழும் நாட்களில் நாமும் குடும்பத்தில் வேதனை, சோதனை என துன்பங்களுக்குள் சிக்கித் தவித்தாலும் பெற்றோரை பேணிப் பாதுகாக்கும் போது, முதிர் வயதில் அவர்களை உதாசீனப்படுத்தாது, அவர்களது இயலாமையில் நம் குழந்தைகளைப் போல அவர்களது தேவைகளை நிறைவேற்றும் போதும் கிறிஸ்மஸ் திருப்பலிக்கு வர இயலாவிட்டாலும் நடமாட முடியாத அவர்களுக்கு புத்தாடை அணிவித்து பரிசையும் பாசத்தையும் பரிமாறி அவர்களின் ஆசீரைப் பெறும் போதும் நாமும் ஞானிகளாவோம்.

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். குழந்தையை வணங்கினார்கள்.
ஞானி என்பவர் யார்? ஹென்றி வால்டிக் என்பவர் மற்றொரு ஞானி என்ற தனது நூலில் உண்மையான ஞானி யார் என்பதை விளக்குகின்றார். ஹார்த்தபான் என்பது இயேசுவைக் காண வந்த நான்காவது ஞானியின் பெயர். இவர் குழந்தை இயேசுவிற்கு அன்பளிப்பு கொடுப்பதற்காகத் தன் உடைமையை எல்லாம் விற்று மூன்று விலையேறப் பெற்ற இரத்தினக் கற்களை வாங்கிக் கொண்டார். இயேசுவைக் காணப் போகும் பாதி வழியில் பிணியாளியான ஒரு கிழவிக்கு உதவி செய்ய ஹார்த்தபான் நிற்க வேண்டி வந்தது. மற்ற மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடிச் சென்று விட்டனர். எனவே ஹார்த்தபான் இயேசுவைக் காண மூன்று பேருடன் செல்ல இயலாமற் போயிற்று. அது மட்டுமல்ல வயது முதிர்ந்த பிணியாளியுடைய மருத்துவ செலவிற்காக தன்னுடைய இரத்தினங்களில் ஒன்றை விற்கவும் வேண்டியதாயிற்று. பின்னர் முப்பத்தி மூன்று ஆண்டுகள் ஹார்த்தபான் பலநாடுகளிலும் இயேசுவைக் காண தேடி அலைந்தும் அவரால் இயேசுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் இரண்டாவது இரத்தினக்கல்லும் செலவாகிகிட்டது. இயேசுவைச் சிலுவையில் அறைந்த பெரிய வெள்ளிக்கிழமை அன்று ஹார்த்தபான் எருசலேம் அடைந்தார். அதிவிரைவாக நடந்து கல்வாரி மலையை அடைந்தார். அப்பொழுது மாசிடோனியா பட்டாளக்காரன் ஒருவன் ஓர் இளம் மங்கையை வலுவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தார். அவளை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக மூன்றாவது இரத்தினக்கல்லையும் விற்றார். அதற்குள்ளாக இயேசு சிலுவையில் உயிர் நீத்தார். அப்பொழுது உண்டான நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் ஹார்த்தபான் சிக்கிக்கொண்டார். தான் யாரைத்தேடி கண்டடைய வேண்டுமென்று வாழ்ந்தாரோ அவரை ஒரு வினாடி கூடப்பார்க்க இயலாமல் அவருக்குக்கொண்டு வந்த காணிக்கையைக் கொடுக்க இயலாமல் மரண வேதனையில் கிடந்த ஹார்த்தபான் பின்வரும் அசரீரி வாக்கைக்கேட்டார். ஹார்த்தபான்! நீ என்னைப் பார்த்து விட்டாய். நீ எனக்கென்று காணிக்கையாக கொண்டு வந்த மூன்று இரத்தினக்கற்களையும் நீ எனக்கே கொடுத்திருக்கிறாய். சின்னஞ்சிறு சகோதரர்கள் ஒருவருக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள். இந்த ஹார்த்தபான் தான் உண்மையான ஞானி. இது வரலாற்றில் நாம் வாசிக்கும் உண்மை ஞானி

ஆம் சின்னஞ் சிறு சகோதரர்களுக்கு துன்பத்தோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்கும் போதெல்லாம் நாமும் ஞானிகளாகிறோம். சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் ஓய்வுக்காய் வழியில் மாதா கோவில் முற்றத்தில் தங்கினார்கள். அப்போது அருகில் இருந்த சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளைக் காண நேர்ந்தது. அந்த சிறுவர் காப்பகத்தைத்தை பராமரிக்கும் அருட்சகோதரியை தங்கள் இரவு உணவை ஆசீர்வதித்து செபிக்க அழைத்தார்கள். செபம் முடிந்தவுடன் திருப்பயணிகளில் ஓருவர் அன்னையின் ஆலயத்திற்கு காணிக்கையாக சேர்த்து வைத்திருந்ந சில்லறை நாணயப் பொட்டலத்தை எடுத்து அருட்சகோதரியிடம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தாய் தந்தை இல்லாத இந்த சிறுவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த அருட்சகோதரி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்க எழுந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த போதும் தங்களிடம் இருந்த சொற்ப தொகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக கொடுத்து முகம் மலர்ந்தனர். சிறுவர்கள் சிலர் அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர். வழியில் தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கிய பேனா, பென்சில் போன்ற பொருட்களை சிறுவர்களுக்கு கொடுக்கச் சொல்லி கொண்டுவந்து கொடுத்தனர். ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் தாங்கள் தங்கிய திசையில் சந்தித்த ஆதரவற்ற சிறுவர்களுக்கு கொடுத்த பரிசுகள் பொன், மீறை, தூபம் போல விலையேறப்பட்ட ஒன்றல்லவா! இவர்கள் திருப்பயணிகள் மட்டுமல்ல கீழ்திசை ஞானிகளாக எங்கள் குழந்தைகளின் கண்களுக்குத் தென்படுகிறார்கள் என்று தமது நன்றி உரையில் அந்த அருட்சகோதரி குறிப்பிட்டார்.

ஆம் ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் நாம் வாழும் நாளில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை ஞானிகள்;. இப்படியான சின்னசெயலை செய்து கீழ்திசை ஞானிகள் போல யேசுவுக்கு அன்பளிப்பு அளிக்கும் ஞானிகளாக பேசப்படும் வாய்ப்பை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வோம்.


The man from la mancha
ஆங்கிலத் திரைப்படம்.
அதன் கதைத்தலைவன் டான்குயிக்சோட்.
முடிவே இல்லாத ஆனால் தன்னை
முற்றிலும் ஈர்க்கின்ற பயணம் ஒன்றிலே முனைந்திருக்கிறான்.
முழுமையான அவனது பாடல். காணவே முடியாத கனவு.
விண்மீனைப் பின்சென்று தொடவேண்டும்!
என் தேடுதல் பயணம் என்பது இதுதான்!
எத்துணை தொலைவு என்பது என் கவலையில்லை. இது நடக்குமா? என்ற கேள்வி என்னில் இல்லை.
நான் புறப்பட்டுவிட்டேன் -
நடக்கவே முடியாத கனவினை நடத்திவைக்க!
நொறுக்கவே முடியாத பகைவனை நொறுக்கிவிட.
நேராக்கவே முடியாத தவறுகளை நேராக்கிவிட
நேர்மையானதை நிலைநாட்ட நரகத்திற்கும் சென்றிட!
தொலைக்கவே முடியாத துன்பத்தைத் தொலைத்துவிட.
தொடவே முடியாத விண்மீனைத் தொட்டுவிட.
துணிந்தவரும் துணியாத தூரத்தைக் கடந்துவிட.
காணவே முடிந்திராத காதலியை அன்புசெய்ய.
கடுகளவும் நிறுத்தாமல் நீதிக்காகப் போராட.

பெருமைமிகு இந்தப் பயணத்தைப் பொருத்தவரை
பொறுமையும் உண்மையும் உள்ளவனாக நான் இருப்பின்
இறக்கும்போது எனக்கு மனநிறைவு கிடைக்கும்.
ஏராளமான தழும்புகளுடன் ஏளனங்களைத் தாங்கிக்கொண்டு
போர்க்குணம் மிக்க ஒருவன் எட்டாத விண்மீனைத் தொட்டிடப்
போராடினான். துணிச்சலின் கடைசித் துளிவரை! என்பதால்
ஓரடியாவது உலகம் முன்னேறிவிடாதா என்ன?

 
திருப்பலி முன்னுரை - மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 04 01 2026


விண்மீன் வழிகாட்ட இறைவனை ஆராதிக்க வந்த மூன்று ஞானியர்களைக் காட்சிப்படுத்தும் இத்திருக்காட்சிப் பெருவிழாவிற்கு அழைக்கப்பட்ட மக்களே வருக.

மழை வந்தால் மகிழ்ச்சி வரும்;
சூரியன் வந்தால் மலர்கள் மலரும்;
தென்றல் வீசினால் மனங்கள் குளிரும்; இவை இயற்கையின் வர்ண காட்சிகள்.

இவற்றிற்கெல்லாம் மேன்மையாக மனுமகன் வந்தால் மீட்பு வரும் என்பதே இத்திருக்காட்சி. முதல் வாசகமும் இதையே தெளிவாக்குகிறது. இருள் பூவுலகை மூடும் போது, காரிருள் மக்களினங்களைக் கவ்வும் போது ஆண்டவர் நம்மீது எழுந்தருள்வார் என்று நமக்கு உணர்த்துகிறது.

"பாரினையே படைத்தான் இறைவன் அவன்
பிறக்க விரும்பியதோ பசு தொழுவத்தில்"

இந்த எளிமையை தரிசிக்கவே கடல் கடந்து வந்தனர் ஞானியர். எளிமையும் தாழ்மையும் மேன்மைப்படுத்தப்படும் என்பதை நமக்கு உணர்த்தவே இப்பெருவிழா.

அன்பான இதயத்துடனும், உண்மையான உள்ளத்துடனும் பயணிக்கும் போது இயற்கையே நமக்கு துணையாய் வரும் என்பதை வழிகாட்டிய விண்மீன் நமக்கு உணர்த்துகிறது.

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக்கதிர் நோக்கி நடைப்போடுவர் என்ற வாக்குகள் இறைவனிடத்திற்கு நம்மை இழுக்கிறது. மெசியா பெத்லகேமில் பிறப்பார் என்று தெரிந்திருந்தும், அவர் பிறப்பை அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு மமதையில் கண்கள் ஒளியிழந்து விட்டன யூதர்களுக்கு. ஆனால் ஆவலோடும் அன்போடும் புறப்பட்ட ஞானியர்களுக்கு ஒளியே வழிகாட்டியது.

இயேசுவைக் கொல்ல வேண்டும் என்று எண்ணிய ஏரோதுக்கு, ஞானிகளிடமிருந்து தகவல் வரும் என்ற வஞ்சக எண்ணம் கொண்ட ஏரோதுக்கு கிடைத்ததோ ஏமாற்றமும், பாவமும்.

நெடுந்தொலைவு நடந்து வந்தே இறைவனைக் கண்டனர் ஞானியர். பொன்னும் தூபமும் வெள்ளைப் போளமும் பரிசளித்தனர். அதற்கு இறைவன் தந்த பரிசு என்ன தெரியுமா? உன்னத நூலாம் திருவிவிலியத்தில் அவர்களை இன்றளவும் நினைவுகூருகிறோம்.

நடக்கும் தூரத்தில் ஆலயம் இருந்தும், சொகுசு வாகனம் வைத்திருந்தும், இறைவனைத் தேடாமல், இறைவனைக் காண முடியாமல் போனதற்கான காரணங்களைத் தேடுகிறோம். இவ்வுலகப் பணிகள் எல்லாவற்றிலும் மேன்மையான பணி இறைவனைச் சந்திப்பது என்ற தீர்க்கமான ஒளி நம் மனதில் ஏற்றப்படும் போது உள்ளத்தில் திருக்காட்சி ஒளிர்கிறது.

மன்றாட்டுகள்:

1. மீட்பு பாதையில் எம்மை வழி நடத்த வந்த விண்மீனே எம் இறைவா!
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரின் பணிவாழ்வை ஆசீர்வதித்து, மக்களுக்கு சரியான வழியினை காட்டி அழைத்து செல்லும் வரம் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நெடும் பயணம் மேற்கொண்ட ஞானியருக்கு தம்மை வெளிப்படுத்தியவரே!
நாங்கள் உம்மை கண்டடைய தடையாய் இருக்கும் இவ்வுலக சிக்கல்களை அகற்றி, பிணிகளின் வேதனை நீக்கி, மன அமைதியுடன் நாங்கள் வாழ்வை மேற்கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வாழ்வின் விடிவெள்ளியே எம் இறைவா!
பொன், தூபம், வெள்ளைப்போளம் போன்றவற்றை உமக்கு பரிசளித்து மகிழ்ந்த ஞானியருக்கு விழா எடுக்கும் நாங்கள், தேவையில் இருப்பவர்களுக்கு தாராளமாய் கொடுத்து உதவும் மனங்கள் கொண்டவர்களாக வாழும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இம்மண்ணுலகிற்கு மன்னனாய் தோன்றியவரே எம் இறைவா!
பிற இனத்தார் உம் ஒளி நோக்கி வருவர் என வாக்களித்தவரே, உம்மை அறியாது, தேடாமல் வாழும் மக்கள் மனம் மாறி, உம் அன்புப் பாதையில் அரவணைக்கப்பட்டு, உம்மை முழுமையாக ஏற்று, உம் பிள்ளைகளாக வாழும் மனமாற்றத்தைத் தர வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

"கடவுள் அன்பாய் இருக்கிறார்!"1 யோவா 04: 16
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
 
திருப்பலி முன்னுரை - அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்ஞானபுரம்.
ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 04 01 2026

"விண்மீனைக் கண்டதால் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, அவர்கள் ஏற்கெனவே இறைவனை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்ததால், அவர்கள் விண்மீனைக் கண்டார்கள். ஆண்டவரின் திருமுகத்தைப் பார்த்து தரிசிக்கும் பேற்றைப் பெற்றார்கள்." என்று கூறும் புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் சிந்தனையோடு இன்றைய பெருவிழாத் திருப்பலிக்கு அன்போடு வரவேற்கின்றோம்.

மனிதர்களின் உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் தேடல் பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்து மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். இன்றைய திருக்காட்சிப் பெருவிழா இதற்குச் சிறந்த சான்று. மூன்று அரசர்கள் குழந்தை இயேசுவைத் தேடி வருகிறார்கள். இறைத் தேடல் உள்ள உள்ளம் நற்சிந்தனைகளால் மட்டுமே நிறைந்திருக்கும் என்பதற்கேற்ப கடவுளும் அவர்களுக்கு உதவிபுரிந்தார்; வழிகாட்டினார். ஆனால் நற்சிந்தனையற்ற தேடல் உள்ளம் இல்லாத உள்ளம் கொண்ட ஏரோது கலக்கமுற்றார், துயரமடைந்தார். தேடல் கொண்ட உள்ளம் இறைவனின் துணைகொண்டு அவரையே கண்டு மகிழும். மனிதன் கடவுளாகவும், கடவுள் மனிதனாகவும் நம் முன்னே காட்சி தரும் இந்நாளில் இறை மனித சந்திப்பும், இறை மனித உறவும் தினம் வளர வேண்டி பக்தியோடு இத்திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது. ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார். பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்"என்று எடுத்துரைத்து, மெசியாவின் வருகையானது எல்லா இனத்தாரையும் ஒன்று கூட்டிச் சேர்ப்பதாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தும் இறைவாக்கினர் எசாயா நூலின் வார்த்தைளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகள் இயேசு என்னும் மறைபொருள், தூய ஆவியார் வழியாக அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிற இனத்தார் அனைவருக்கும் இம்மறைபொருள் அளிக்கப்பட்டுள்ளது என்றும் நாமும் நம்பிக்கையோடு இயேசு என்னும் மறைபொருள் தூய ஆவியார் வழியாக நம் வாழ்வில் கலந்திட அருள் வேண்டி திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அருளின் ஊற்றே இறைவா! இயேசுவின் பிறப்பு படைப்பனைத்திற்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது போல, எம் திருஅவை உறுப்பினர்களும் எப்போதும் மகிழ்ச்சியை, நிறைந்த அமைதியைத் தரும் கருவிகளாகச் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருட்பெருஞ்சுட்ரே எம் இறைவா! உம்மை ஆவலாய் தேடி, கண்டுக் கொண்ட ஞானிகளின் மன உறுதியைப் போல, நாங்களும் உம்மை ஆவலாய் தேடவும், எங்கள் அயலவரில் உம் முகம் கன்டு மகிழவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! உலகில் உள்ள எல்லா குழந்தைகளையும் ஆசிர்வதியும். உம்மைப் போன்று ஞானத்தில் வளரவும், கல்வி, கேள்விகளில் சிறக்கவும், பெந்நோருக்கு உகந்த பிள்ளைகளாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அமைதியின் ஊற்றே இறைவா! எம் பங்கில் உள்ள எல்லா குடும்பங்களையும் ஆசிர்வதியும். குடும்பத்தில் அமைதியும், தொழிலில் முன்னேற்றமும், நோயுற்றோர் நலம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்ஞானபுரம்.

 
திருப்பலி முன்னுரை✝️ அருள்சகோதரி. சத்திய ஜீவ யேசு CIC


ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

இறைமகன் இயேசுவில் அன்புள்ள சகோதரர்களே சகோதரிகளே, அனைவருக்கும் திருக்காட்சிப் பெருவிழாவின் வாழ்த்துக்களைக்கூறி மகிழ்கிறேன். உலக மக்களை மீட்க இறைமகன் இயேசு மனிதனாகப் பிறந்து வந்ததை உலக மக்களுக்கு அறிவிக்க இறைவன் ஓர் அருமையான ஏற்பாட்டை ஏற்படுத்தியிருந்தார். அதைத்தான் திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடுகிறோம். ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா திருப்பலியை கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். உலக செல்வங்களை விட மேலான செல்வமாகிய இறைவனில் மகிழ்ச்சி காண இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது.

யூதர்கள் அறிந்துகொள்ளாத அரசர் இயேசுவின் பிறப்பை, விண்மீனின் அடையாளத்தைக் கொண்டு கிழக்கத்திய ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள். குழந்தை இயேசுவின் மேன்மையை உணர்ந்தவர்களாய் அவரைக் கண்டு வணங்கச் செல்கிறார்கள். அனைத்துலகின் அரசராம் இறைவனே, மனிதராக பிறந்திருப்பதை அறிந்து அவருக்கு பொன்னும், சாம்பி ராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாக அளிக்கிறார்கள். அந்த ஞானிகளைப் போன்றே, நாமும் அனைத்துக்கும் மேலாக ஆண்டவருக்கு பணிவிடை செய்யும் மன நிலையைப் பெற்று வாழும் வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை: எசாயா 60:1-6



இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின் போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள் செல்வங்கள் தேடிவரும். மக்கள் பொன், நறுமணப் பொருள் ஏந்தி வருவதைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்ததைக் கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: எபேசியர் 3:2-3, 5-6



திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார் நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும். ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் ஆகியிருக்கிறார்கள் செவிமெடுப்போம். என்று இயம்பும் இக்கருத்தினைக் பங்காளிகளும் கவனமுடன் செவிமடுப்போம்.



விசுவாசிகள் மன்றாட்டுகள்:

பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்



1. மறைபொருளை எம்மில் மலரச் செய்திடும் எம் தந்தையே இறைவா! மறைபொருளாம் நாசரேத்து இயேசுவை மலர்ந்த இதயத்துடன் தம் வாழ்வாக்கிடும் அருளை எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், இருபால் துறவறத்தாருக்குத் தந்திட உம்மை வேண்டுகிறோம்.



2. மாட்சியின் மகத்துவமே எம் இறைவா! உம் அன்புத் திருமகனின் திருமுகத்தில் வீசும் உமது மாட்சியாகிய அறிவொளியை எம் நாட்டுத் தலைவர்கள் மீது ஒளிரச் செய்திட உம்மை வேண்டுகிறோம்.



3. திருமகனாம் கிறிஸ்துவை எமக்கு வெளிப்படுத்தத் திருவுளம் கொண்ட தந்தையே! நாங்கள் அனைவரும் எமக்காக வெளிப்படுத்தப்பட்ட அவரைக் கண்டுணர அருள்புரிய உம்மை இறைஞ்சுகிறோம்.



4. அன்பே உருவான தந்தையே! இறைமகனைச் சுட்டிய விண்மீனைப் போன்று, நாங்கள் அவரையே உவப்புடன் உலகினுக்குச் சுட்டிடும் வரமருள உம்மை வேண்டுகிறோம்.



5. இறைமகனை ஈந்திட்ட எம் தந்தையே!பொன்னோ, சாம்பிராணியோ, வெள்ளைப்போளமோ எம்மிடம் இல்லை. எம் மனங்களையே எம்மவருக்குத் தருகிறோம். அவரே எம்மில் அனைத்துமாகிட, இறைவா உம்மை வேண்டுகிறோம்.

 
 
திருப்பலி முன்னுரை  - அருள்சகோதரி. சத்திய ஜீவ யேசு CIC

இறைஇயேசுவில் இனிமையானவர்களே! நமக்காக குடிலில் பிறந்த இறைமகனின் திருக்காட்சியை காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இன்றைய திருப்பலிக்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

திரு அவையின் பழம்பெரும் பெருவிழாக்களில் ஒன்றான ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா மூலம் இறைமகன் இயேசுவின் பிறப்பு உலக மாந்தர் அனைவருக்கும் உரித்தான ஒன்று என்பதை ஆழமாக பதிவு செய்கிறது நம் திருஅவை. தன்னை தேடி வருபவர்களை அற்புதமாக வழிநடத்தி தன்னை வெளிப்படுத்துகின்றார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நல்மனம் படைத்த அனைவருக்கும் அவர் சொந்தமானவர். பிறந்த போது மகிழ்ச்சியை தந்தார். இறக்கும்போது மன்னிப்பை வழங்கியவர். தேடி வருபவர்களுக்கு தூய ஆவியாரின் அருட்கொடைகளை அள்ளித் தருகிறார். அன்று ஒளியாகப் பிறந்து, தம் ஞானஒளியை வீசி, அனைத்து மக்களையும் ஈர்த்தவரை தொழ வந்துள்ள நம் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்து நாமும் அவரை போல் மற்றவர்களை அன்பால் ஈர்க்க வாழ்வளிக்கும் தியாகச்சுடராய் திகழ்ந்திட அன்புடன் அழைக்கும் இறைவனின் அழைப்பிற்கு செவிசாய்த்து இத்திருவிழா பலியில் இணைவோம்! இறையாசீர் பெறுவோம்!! பாலனை வணங்கி ஆராதிப்போம்!!!

முதல் வாசக முன்னுரை:

மெசியாவின் வருகையின்போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை அழகாக இன்றைய முதல் வாசகத்தில் பதிவு செய்கிறார் இறைவாக்கினர் எசாயா. கடவுளின் மாட்சிமிக்க ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் தேடி வருவார்கள் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நற்செய்தியின் வழியாக பிற இனத்தாரும் இயேசு கிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு கவனமுடன் செவிசாய்ப்போம்.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:

1. எழுந்து ஒளி வீசு என்று எம்மை பணித்த இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்று கடைசி வரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சான்று பகர எம் திருஅவை தலைவர்களை வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.



2. உலக நாடுகளை வழிநடத்தும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் நேர்மையுடன் மக்களை ஆட்சி செய்யவும், இப்புதிய ஆண்டிலே மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தவும், உலகெங்கும் நிறைந்த அமைதி நிலவவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.



3. அருட்பெருஞ்ஜோதியே இறைவா! நாங்கள் ஒரு சிறு வட்டத்துக்குள் அடங்கி விடாமல், நீர்படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும், உம்மைப்போல் அன்பு செய்யவும், ஏழை எளியோர்களையும், குடும்பத்தில் உள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்களையும் நேசிக்கவும், அவர்களை அரவணைத்து அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த நாங்கள் உழைத்திட நல்மனதினை தர வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.



4. எம்மை படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைத்து குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சார சூழலில் தங்களின் தேவைகளை விடுத்து, இறைவிருப்பத்தை அறிந்து, இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து, ஒன்றிணைந்து செயலாற்ற வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.



5. குடும்பங்களை உம் அன்பில் இணைத்திடும் இறைவா! எங்கள் பங்கிலுள்ள அனைத்து குடும்பங்களையும் உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, விட்டுக் கொடுத்து, குடும்பங்களில் நீர் விரும்பும் அன்பு, அமைதி, இறை அச்சம் நிறைந்து நல்ல கிறிஸ்தவ குடும்பங்களாக வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
 
 
 
மறையுரை சிந்தனை -  Sr. Gnanaselvi (india)

நாமும் ஞானிகளாவோமா?

பேராசிரியர் ஒருவர் உலகிலுள்ள மக்களை அறிவுள்ளவர் அறிவில்லாதவர் என்று இரு வகையாகப் பிரிக்கலாம். அறிவுள்ளவர்களைப் பண்டிதர்கள், ஞானிகள் என்று மேலும் இருவகையாகப் பிரிக்கலாம். பண்டிதர்கள் எனப்படுபவர்கள் சட்டப்படிப்பு புத்தகப்படிப்பு படித்தவர்கள் ஆவார்கள். ஆனால் ஞானிகள் எனப்படுபவர்கள் கண்டு கேட்டு தொட்டு நுகர்ந்து அனுபவ ரீதியாக உண்மையை அறிந்தவர்கள். என இப்படிக் குறிப்பிடுவார்.

ஆம் நாம் எல்லோரும் பண்டிதர்கள் ஆகாவிட்டாலும் எல்லோருமே ஞானிகள் ஆகலாம்.
'பென்ஹர்' என்ற ஒரு திரைப்படத்தின் கதாநாயகனான பென்ஹர் குதிரைச் சவாரியில் இவருக்கு ஒத்தவரோ இவரை மிஞ்சியவரோ எவரும் இருக்கவில்லை. இவருடைய தாயார் குஷ்டரோகத்தால் பீடிக்கப்பட்டதாக இவருக்குத் தெரிய வந்தது. பாவிகளுக்கும் ஏழை எளியவர்க்கும் பிணியாளருக்கும் காட்சி அளிக்கின்ற தொழுநோயாளரைக் குணப்படுத்துகின்ற முடவரை நடக்கச் செய்கின்ற இயேசுவைப்பற்றி இவர் கேள்விப்பட்டிருந்தார். தன் தாயாரைச் சுகப்படுத்துவதற்காக உடனடியாக அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்றார். பிலாத்தின் அரண்மனையை அடைந்ததும் மக்களின் ஆரவாரத்தைக்கேட்டார். இயேசுவைக் கொல்வதற்காகவே இவர்கள் இப்படி ஆரவாரம் செய்கின்றனர் என்று இவர் அறிந்து கொண்டார். இயேசு மரிப்பதற்கு முன்பே கல்வாரிமலையை அடைய அவர் முயற்சி செய்தார். கல்வாரிமலை ஏறுவதற்கு முன் அவருடைய தாய் மூர்ச்சை அடைந்து தாகத்திற்கு தண்ணீர் கேட்டாள். நினைவிழந்து தண்ணீர் கேட்ட தாயிக்கு அருகிலிருந்த அருவிக்கு ஓடிச் சென்று கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தார். தண்ணீரைக் குடித்த தாயார் அற்புதமாக உடனடியாக பூரண சுகமடைந்தாள். அருவித்தண்ணீரில் இயேசுவின் இரத்தம் கலந்து இருந்ததே இப்பூரண சுகத்திற்குக் காரணமாகும்.

கஷ்ட துன்பங்களும், வேதனை சோதனைகளும் நேரிடும்போதுதான் நாம் நம் இயேசுவைக் கண்டு பிடிக்கின்றோம். கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காண வந்த ஞானிகள் உயிருக்கே ஆபத்து வரக்கூடிய பயணத்தை கஸ்தி வியாகுலங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டதால் தான் இயேசுவைக் காண முடிந்தது.
வாழும் நாட்களில் நாமும் குடும்பத்தில் வேதனை, சோதனை என துன்பங்களுக்குள் சிக்கித் தவித்தாலும் பெற்றோரை பேணிப் பாதுகாக்கும் போது, முதிர் வயதில் அவர்களை உதாசீனப்படுத்தாது, அவர்களது இயலாமையில் நம் குழந்தைகளைப் போல அவர்களது தேவைகளை நிறைவேற்றும் போதும் கிறிஸ்மஸ் திருப்பலிக்கு வர இயலாவிட்டாலும் நடமாட முடியாத அவர்களுக்கு புத்தாடை அணிவித்து பரிசையும் பாசத்தையும் பரிமாறி அவர்களின் ஆசீரைப் பெறும் போதும் நாமும் ஞானிகளாவோம்.

வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். குழந்தையை வணங்கினார்கள்.
ஞானி என்பவர் யார்? ஹென்றி வால்டிக் என்பவர் மற்றொரு ஞானி என்ற தனது நூலில் உண்மையான ஞானி யார் என்பதை விளக்குகின்றார். ஹார்த்தபான் என்பது இயேசுவைக் காண வந்த நான்காவது ஞானியின் பெயர். இவர் குழந்தை இயேசுவிற்கு அன்பளிப்பு கொடுப்பதற்காகத் தன் உடைமையை எல்லாம் விற்று மூன்று விலையேறப் பெற்ற இரத்தினக் கற்களை வாங்கிக் கொண்டார். இயேசுவைக் காணப் போகும் பாதி வழியில் பிணியாளியான ஒரு கிழவிக்கு உதவி செய்ய ஹார்த்தபான் நிற்க வேண்டி வந்தது. மற்ற மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடிச் சென்று விட்டனர். எனவே ஹார்த்தபான் இயேசுவைக் காண மூன்று பேருடன் செல்ல இயலாமற் போயிற்று. அது மட்டுமல்ல வயது முதிர்ந்த பிணியாளியுடைய மருத்துவ செலவிற்காக தன்னுடைய இரத்தினங்களில் ஒன்றை விற்கவும் வேண்டியதாயிற்று. பின்னர் முப்பத்தி மூன்று ஆண்டுகள் ஹார்த்தபான் பலநாடுகளிலும் இயேசுவைக் காண தேடி அலைந்தும் அவரால் இயேசுவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் இரண்டாவது இரத்தினக்கல்லும் செலவாகிகிட்டது. இயேசுவைச் சிலுவையில் அறைந்த பெரிய வெள்ளிக்கிழமை அன்று ஹார்த்தபான் எருசலேம் அடைந்தார். அதிவிரைவாக நடந்து கல்வாரி மலையை அடைந்தார். அப்பொழுது மாசிடோனியா பட்டாளக்காரன் ஒருவன் ஓர் இளம் மங்கையை வலுவந்தமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தார். அவளை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக மூன்றாவது இரத்தினக்கல்லையும் விற்றார். அதற்குள்ளாக இயேசு சிலுவையில் உயிர் நீத்தார். அப்பொழுது உண்டான நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அடியில் ஹார்த்தபான் சிக்கிக்கொண்டார். தான் யாரைத்தேடி கண்டடைய வேண்டுமென்று வாழ்ந்தாரோ அவரை ஒரு வினாடி கூடப்பார்க்க இயலாமல் அவருக்குக்கொண்டு வந்த காணிக்கையைக் கொடுக்க இயலாமல் மரண வேதனையில் கிடந்த ஹார்த்தபான் பின்வரும் அசரீரி வாக்கைக்கேட்டார். ஹார்த்தபான்! நீ என்னைப் பார்த்து விட்டாய். நீ எனக்கென்று காணிக்கையாக கொண்டு வந்த மூன்று இரத்தினக்கற்களையும் நீ எனக்கே கொடுத்திருக்கிறாய். சின்னஞ்சிறு சகோதரர்கள் ஒருவருக்குச் செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள். இந்த ஹார்த்தபான் தான் உண்மையான ஞானி. இது வரலாற்றில் நாம் வாசிக்கும் உண்மை ஞானி.

ஆம் சின்னஞ் சிறு சகோதரர்களுக்கு துன்பத்தோடு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நம்மிடம் இருப்பதை கொடுக்கும் போதெல்லாம் நாமும் ஞானிகளாகிறோம். சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் ஓய்வுக்காய் வழியில் மாதா கோவில் முற்றத்தில் தங்கினார்கள். அப்போது அருகில் இருந்த சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளைக் காண நேர்ந்தது. அந்த சிறுவர் காப்பகத்தைத்தை பராமரிக்கும் அருட்சகோதரியை தங்கள் இரவு உணவை ஆசீர்வதித்து செபிக்க அழைத்தார்கள். செபம் முடிந்தவுடன் திருப்பயணிகளில் ஓருவர் அன்னையின் ஆலயத்திற்கு காணிக்கையாக சேர்த்து வைத்திருந்ந சில்லறை நாணயப் பொட்டலத்தை எடுத்து அருட்சகோதரியிடம் ஆதரவற்ற சிறுவர்களுக்கு தாய் தந்தை இல்லாத இந்த சிறுவர்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த அருட்சகோதரி மிகுந்த நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவிக்க எழுந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த போதும் தங்களிடம் இருந்த சொற்ப தொகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக கொடுத்து முகம் மலர்ந்தனர். சிறுவர்கள் சிலர் அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர். வழியில் தங்கள் பயன்பாட்டிற்காக வாங்கிய பேனா, பென்சில் போன்ற பொருட்களை சிறுவர்களுக்கு கொடுக்கச் சொல்லி கொண்டுவந்து கொடுத்தனர். ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் தாங்கள் தங்கிய திசையில் சந்தித்த ஆதரவற்ற சிறுவர்களுக்கு கொடுத்த பரிசுகள் பொன், மீறை, தூபம் போல விலையேறப்பட்ட ஒன்றல்லவா! இவர்கள் திருப்பயணிகள் மட்டுமல்ல கீழ்திசை ஞானிகளாக எங்கள் குழந்தைகளின் கண்களுக்குத் தென்படுகிறார்கள் என்று தமது நன்றி உரையில் அந்த அருட்சகோதரி குறிப்பிட்டார்.

ஆம் ஏதோ ஒரு திசையில் வாழும் இவர்கள் நாம் வாழும் நாளில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மை ஞானிகள்;. இப்படியான சின்னசெயலை செய்து கீழ்திசை ஞானிகள் போல யேசுவுக்கு அன்பளிப்பு அளிக்கும் ஞானிகளாக பேசப்படும் வாய்ப்பை நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வோம்.


The man from la mancha
ஆங்கிலத் திரைப்படம்.
அதன் கதைத்தலைவன் டான்குயிக்சோட்.
முடிவே இல்லாத ஆனால் தன்னை
முற்றிலும் ஈர்க்கின்ற பயணம் ஒன்றிலே முனைந்திருக்கிறான்.
முழுமையான அவனது பாடல். காணவே முடியாத கனவு.
விண்மீனைப் பின்சென்று தொடவேண்டும்!
என் தேடுதல் பயணம் என்பது இதுதான்!
எத்துணை தொலைவு என்பது என் கவலையில்லை. இது நடக்குமா? என்ற கேள்வி என்னில் இல்லை.
நான் புறப்பட்டுவிட்டேன் -
நடக்கவே முடியாத கனவினை நடத்திவைக்க!
நொறுக்கவே முடியாத பகைவனை நொறுக்கிவிட.
நேராக்கவே முடியாத தவறுகளை நேராக்கிவிட
நேர்மையானதை நிலைநாட்ட நரகத்திற்கும் சென்றிட!
தொலைக்கவே முடியாத துன்பத்தைத் தொலைத்துவிட.
தொடவே முடியாத விண்மீனைத் தொட்டுவிட.
துணிந்தவரும் துணியாத தூரத்தைக் கடந்துவிட.
காணவே முடிந்திராத காதலியை அன்புசெய்ய.
கடுகளவும் நிறுத்தாமல் நீதிக்காகப் போராட.

பெருமைமிகு இந்தப் பயணத்தைப் பொருத்தவரை
பொறுமையும் உண்மையும் உள்ளவனாக நான் இருப்பின்
இறக்கும்போது எனக்கு மனநிறைவு கிடைக்கும்.
ஏராளமான தழும்புகளுடன் ஏளனங்களைத் தாங்கிக்கொண்டு
போர்க்குணம் மிக்க ஒருவன் எட்டாத விண்மீனைத் தொட்டிடப்
போராடினான். துணிச்சலின் கடைசித் துளிவரை! என்பதால்
ஓரடியாவது உலகம் முன்னேறிவிடாதா என்ன?
 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

 திருக்காட்சி பெருவிழா

காட்சி காண்போமா???
இன்று தாயாம் திருச்சபை திருக்காட்சிப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றது. காட்சிகள் பல விதம் . கண்ணைக் கவர்வதல்ல காட்சி ,கண்ணோடு கருத்தையும் கவர்வதே காட்சி என்பர். அவ்வகையில் இன்று பாலன் இயேசுவைக் காண வந்த ஞானியர்களுக்கு கண்ணொடு சேர்த்து கருத்தையும் கவர்ந்ததாலேயே இவ்விழா இத்தகைய சிறப்பு பெற்றிருக்கிறது. அக்காட்சி அவர்களின் கண்களுக்கு மட்டும் மகிழ்வைத் தந்திருந்தால், அது வெறும் காட்சி விழாவாக இருந்திருக்கும். மாறாக அவர்களின் கருத்தையும் வாழ்வையும் கவர்ந்ததால் தான் இன்று திருக்காட்சி விழாவாக நம் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. நாமும் பல காட்சிகளைக் காண்கிறோம். தொலைதூரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காண தொலைக்காட்சி, திரையரங்குகளில் காட்டப்படும் திரைக்காட்சி என பல காட்சிகளைக் காண்கிறோம் . ஆனால் அவை அனைத்தும் நம் கண்களை மட்டுமே கவர்கின்றன. நம் கருத்துக்களை கவர்ந்து திருக்காட்சிகளாக நம் மனதில் இடம் பிடிப்பவை ஒன்றுமில்லை. நமது பார்வைகள் எப்படி இருக்கின்றன? நமது காட்சிகள் எதை தேடிச்செல்ல உதவுபவைகளாக இருக்கின்றன என்பதை பற்றி சிந்திக்கவே இன்றைய நாள் விழா நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

திருக்காட்சி பெருவிழாவைப் பற்றியும் அதில் இடம் பெறும் விண்மீன் பற்றியும் மேலை நாடுகளில் ஒரு வட்டார வழக்கு கதை ஒன்று உண்டு. உலகை படைத்த இறைவன் ஒரு நாள் மிக்கேல் கபிரியேல் ரபேல் என்னும் அதிதூதர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு வேலை கொடுத்தார். நீங்கள் மூவரும் விண்ணுலகம் எங்கும் சென்று மிக அழகும் ஒளியும் கொண்ட ஒரு விண்மீனை தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும் என்றாராம். அதற்கு அதிதூதர்கள், இறைவா நீர் படைத்த அனைத்தும் மிகுந்த அழகும் ஒளியும் பொருந்தியவையாயிற்றே. அப்படியிருக்க அதில் எப்படி ஒன்றை தேர்வு செய்து கொண்டுவருவது என்றார்களாம். யாம் படைத்த அனைத்தும் நல்லவை என்று அறிவோம். இருப்பினும் தன் செயல்களாலும் பண்புகளாலும் தங்கள் அழகையும் ஒளியையும் அதிகமாக்குபவர்கள் நம்மில் இருப்பார்கள் அல்லவா? அதில் சிறந்த ஒரு விண்மீனை அழைத்து வாருங்கள் என்று கூறி அதிதூதர்களை அனுப்பிவிட்டார் இறைவன். மூவரும் மிகு அழகும் ஒளியும் பொருந்திய விண்மீனை தேடி அலைந்தனர். ஒரு பொழுதில் அத்தகைய சிறப்பு மிகுந்த விண்மீனைக் கண்டும் கொண்டனர். அதனை மறுநாள் இறைவன் முன்னிலையில் நிறுத்தினர். அதனிடம் இறைவன் உனது நற்செயல்களாலும் பண்புகளாலும் உனது அழகையும் ஒளியையும் மிகுதியாக்கிய நீயே நான் எதிர்பார்த்த ஒரு விண்மீன் . உன்னிடம் ஒரு மிகச்சிறப்பான பொறுப்பொன்றை தர இருக்கின்றேன் என்றார். விண்மீன் படைத்தவனின் கட்டளைக்காக ஆவலுடன் காத்திருந்தது. எனது மகனை குழந்தையாக மண்ணுலகிற்கு அனுப்ப இருக்கிறேன். அவனைக் காண நினைப்பவர்களுக்கு நீ தான் பாதை காட்ட வேண்டும் என்றார்.

விண்மீனும் ஆசையுடன் விடை பெற்று இடையர்கள் வானதூதர்கள் ராஜாக்கள் என அனைவருக்கும் வழிகாட்டி, தன் வேலையை முடித்து மண்ணுலகம் திரும்பியது. மற்ற விண்மீன் கூட்டங்கள் இதனிடம் நலம் விசரித்தன. எங்கு சென்றாய்? என்ன செய்தாய்? என்று. நமது சிறப்பு விண்மீனும் தனது பயண அனுபவங்களையும் வேலையையும் மற்ற விண்மீன்களுடன் பகிர்ந்து கொண்டது. அன்று முதல் மற்ற விண்மீன்கள் நம் சிறப்பு ண்மீனுடன் பேசுவதை நிறுத்தி கொண்டன. பொறாமையுணர்வுடன் அதை பார்க்க தொடங்கின. இதனால் மனமுடைந்த சிறப்பு விண்மீன் இறைவனின் முன் சென்று தன் குறையை எடுத்துரைத்தது. தன்னை வேறு எங்காவது மாத்திவிடுமாறு கெஞ்சி கேட்டது. இறைவனும் அதை உயரமான மலைஉச்சியில் பூக்கும் அரிய வகை அல்பீனா மலராக மாற்றி அனுப்பி, நீ காண்போர் கண்களுக்கு சிறப்பு மிகுந்த மலராகத் திகழ்வாய். உன்னைத் தேடிக் கண்டடைபவர் மிகச்சிறப்பு பெற்றவராவர், உன்னைக் காண ஏங்கித் தவிப்பவர்கள் மட்டுமே உன்னைக் காண்பர். சிறப்பான பணியைச்செய்து உயர்வு பெற்றதால் நீ உயரிய மதிப்பு பெறுவாய் என்று வாழ்த்தி அனுப்பி விட்டார். அன்றிலிருந்து இன்று வரை அச்சிறப்பு விண்மீன், மனிதர்கள் உயர்ந்த மலைகளில் அரிதாய் அலைந்து தேடும் , காட்சிக்கு காண கிடைக்காத அல்பீனா மலராக திகழ்கின்றது. இறைவனின் மகனை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டி மீட்படையச்செய்த விண்மீன் நமது வாழ்வையும் மீட்பிற்கு இட்டுச்செல்லாதா என்ற ஒரு ஏக்கத்தோடும் தேடலோடும் மனிதர்கள் அல்பீனா மலராக மாறிய நம் சிறப்பு விண்மீனைத் தேடி அலைகின்றனர். இது வட்டார வழக்கு கதை தான் என்றாலும் இதில் சொல்லப்படும் உண்மைகள் ஏராளம்.

இறைமகன் இயேசு ஒவ்வொரு ஆண்டும் ஏன் ஒவ்வொரு நாளும் நம் மத்தியில் மனிதராகப் பிறக்கின்றார். அவர் பிறந்திருக்கும் செய்தியை பிற இனத்து மக்களுக்கு அறிவிக்க விண்மீன்களாய் நம்மை அனுப்ப நினைக்கிறார். நாம் சிறப்பு வாய்ந்தவர்களா என்று முதலில் கண்காணிக்கப்படுகின்றோம்.அதன்பின் பணிக்கு அமர்த்தப்படுகின்றோம். பணியை நிறைவாகச்செய்த பின்னும் நம்மைச்சுற்றி இருப்பவர்களால் புறக்கணிக்கப்படுகின்றோம். பின் கடவுளின் அருளால் பிறர் கண்களுக்கு காணக்கிடைக்காத ஒரு பொருளாய் அரிய உறவாய் மாறி விடுகின்றோம்.

ஞானியரின் வருகையை விழாவாகக் கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுக்கு ஒளியின் பாதையை தெளிவாகக் காட்டிய விண்மீன் போல தெளிவுடன் நாமும் செயல்பட முயல்வோம். எத்தனையோ அரசர்கள் ஞானியர்கள் இருந்தாலும் இறைவன் பிறப்பைக் கொண்டாட சிறப்பாக அழைக்கப்பட்ட இந்த ஞானியர்கள் போல நாமும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாய் இருக்க முயல்வோம்.

எவ்வளவு தான் கொடியவனாய் இருந்தாலும் யூதர்களின் அரசன் பிறக்கும் இடம் பெத்லகேம் என்று கண்டறிந்து ஞானியர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்த ஏரோது போல, நமது எதிர் சிந்தனையாளர்களுக்கும் நம்மை வெறுப்போர்களுக்கும் நாம் வெறுப்பொர்களுக்கும் நல்லதே செய்ய நினைப்போம்.

அரசன் கலக்கமுற்றதும் உடன் கலங்கிய நாடு போலத் தேவையற்ற கலக்கம் பயம் தவிர்த்து வாழ முற்படுவோம்.

விண்மீனைக் கண்ட ஞானியர்களுக்கு அவர்கள் கண்ட காட்சி திருக்காட்சி. ஆனால் ஞானியரைக் கண்ட ஏரோதிற்கோ வெறும்காட்சி. ஏனெனில் ஞானியர்களிடம் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஏரோதிடமோ, அவரைக் கொல்ல வேண்டும் என்ற குரோதம் இருந்தது. ஞானியர்கள் தங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற பொருளைக் காணிக்கையாக கொடுக்க எண்ணினர். ஏரோதோ மாசற்ற குழந்தைகளின் உயிரை எடுக்க எண்ணினான். ஞானியர் தெண்டனிட்டு வணங்க ஆயத்தமாயிருந்தனர். ஏரோதோ தெண்டனிட்டு வணங்கப்பட ஆயத்தமாயிருந்தான். காணும் காட்சியில் தெளிவு இருந்ததால் ஞானியர்களுக்கு இரண்டு முறை விண்மீனைக் கண்டுணர முடிந்தது. கலக்கமும் குழப்பமும் நிறைந்திருந்ததனால் ஏரோதிற்கு விண்மீனின் வடிவம் கூட தெரியவில்லை. நாம் யார் போல் காட்சி காண்கின்றோம் ஏரோது போலா?? இல்லை ஞானியர்கள் போலா??? நமது காட்சி நமது கண்ணோடு கருத்தையும் கவர்கின்றதா?? ஞானியர்கள் போலா???சிந்தித்து செயல்படுவோம். நாம் காண்கின்ற காட்சிகள் நமது வாழ்வை மாற்றுகின்ற திருக்காட்சிகளாக அமைய, நாம் பிறரால் தேடப்படுகின்ற ஒரு நபராக இருக்க , காணக் கிடைக்காத அரிய உறவாக நமது உறவு சிறப்படைய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
சிறியதில் பெரியதைக் காண்பது

ஜென் மடாலயத்திற்கு இளவல் ஒருவர் வந்தார். அவருக்கு ஞானம் பெற வேண்டும் என்ற ஆசை. மடலாயத்தின் தலைவரைச் சந்திக்கின்றார் அவர். 'ஐயா! நான் ஞானம் பெற வேண்டும்!' 'வருக! இதோ, இந்த கைப்பிடி அரிசியில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை அறுத்து வருக!' என்று சொல்லி, ஒரு கைப்பிடி அரிசையைக் கொடுக்கின்றார் தலைவர். 'கைப்பிடி அரிசியில் நெற்கதிர்களா?' - வியக்கின்றார் இளைஞர். 'இது எப்படி ஐயா இயலும்?' - கேட்கின்றார் இளைஞர். 'நீ வீட்டிற்குப் போகலாம். ஞானம் பெறும் ஆசை உன்னிடம் பேரார்வமாக மாறும் வரை அங்கேயே இரு!' - அனுப்புகின்றார் தலைவர். 'பேரார்வம் வந்ததை நான் எப்போது உணர்வேன்?' - கேட்கின்றார் இளைஞர். 'நீ தயாராக இருக்கும்போது நட்சத்திரம் தோன்றும். அப்போது வா!'

நிற்க.
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக இன்று கொண்டாடுகிறோம்.'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது.

இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

திருக்காட்சிப் பெருவிழாவின் பொருள் என்ன? இவ்விழா நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடம் ரொம்ப எளிதான ஒன்று: 'சிறியதில் பெரியதைக் காண்பது'. 'நட்சத்திரத்தில் மெசியாவின் பிறப்பு அடையாளத்தைக் காண்பது'. 'முன்பின் தெரியாத ஒருவரில் உடன்பயணியைக் காண்பது'. 'குழந்தையில் யூதர்களின் அரசரைக் காண்பது'. 'கனவில் இறைவனைக் காண்பது'- இப்படியாக சிறியதிலும் பெரியதைக் காண்பது.

மனித குலத்தில் எவ்வளவோ பேர் ஞானிகளாக வாழ்ந்து மறைந்தாலும் உலகம் முழுவதும் ஞானியர் என்று கொண்டாடப்படுபவர்கள் கீழ்த்திசை ஜோதிட நிபுணர்கள் அல்லது வானியல் அறிஞர்கள் மட்டுமே.
'சிறியதில் பெரியதைக் காண்பதே ஞானம்' என்று உணர்ந்தனர் இவர்கள். அல்லது 'சிறியதில் பெரியதைக் காண்பதே' ஞானம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 2:1-2) மூன்று வகையான மனிதர்களைப் பார்க்கின்றோம்:

அ. ஏரோது - இவர் பெரியதில் சிறியதைக் பார்க்கின்றார் - 'யூதர்களின் அரசர்' அல்லது 'மெசியா' என்று சொல்லப்பட்டவரை, 'குழந்தை' என்று பார்க்கின்றார்.
ஆ. மறைநூல் அறிஞர்கள் - இவர்கள் 'சிறியதில் சிறியதையும் பெரியதில் பெரியதையும் பார்க்கின்றனர்' - விண்மீனை வெறும் விண்மீனாகவும், மெசியா பற்றி மறைநூலில் எழுதப்பட்டதை மெசியா பற்றிய குறிப்பு என்றும் பார்க்கின்றனர்.
இ. ஞானியர் - இவர்கள் சிறியதில் பெரியதைப் பார்க்கின்றனர் - குழந்தையில் யூதர்களின் அரசரையும், விண்மீனில் மெசியாவின் வருகையயும், மனித வலுவின்மையில் இறைவனையும், கனவில் கடவுளையும் பார்க்கின்றனர்.

நாம் பல நேரங்களில் பெரியதில் சிறியதையும், நன்மையானவற்றில் தீமையானதையும், நல்லவற்றில் கெட்டதையும், அல்லது மனிதர்களிடம் குறைகளையும் காண்பது ஏன்?
இதற்குக் காரணம் மூன்று பண்புகள். இந்த மூன்று பண்புகளையும் ஏரோது கொண்டிருக்கின்றார்:

1. அச்சம் அல்லது கலக்கம்
ஞானியரின் வார்த்தைகளைக் கேட்டதும் 'ஏரோது அஞ்சினான் அல்லது கலங்கினான்' எனப் பதிவு செய்கிறார் மத்தேயு. இந்த அச்சம் என்பது கரப்பான் பூச்சியைப் பார்த்தோ, அல்லது இருட்டைப் பார்த்தோ கொள்ளும் அச்சம் அல்ல. மாறாக, வாழ்வா? சாவா? என்ற சூழலில் - எடுத்துக்காட்டாக, புயலால் பாதிக்கப்பட்டு - கொள்ளும் அச்சம். ஒருவரின் அச்சம் அடுத்தவரையும் பற்றிக்கொள்ளும் என்பதுபோல ஏரோதுவின் அச்சம் எருசலேம் நகரத்தாரையும் பற்றிக்கொள்கிறது - 'அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று!' அச்சம் வரும்போது மூளை தன்னைக் காத்துக்கொள்ளும் தற்காப்பு கவசம் ஒன்றை அணிந்துகொண்டு, 'வெளியில் இருக்கும் பெரியதை சிறியது போல' நமக்குக் காட்டும். அதனால்தான், அச்சம் கொண்ட ஏரோதுவுக்கு 'யூதர்களின் அரசர்' ஒரு 'குழந்தையாகத்' தெரிகின்றார்.

2. விசாரணை
தன்னுடைய கலக்கத்திலும் அச்சத்திலும் தான் கேட்டது உண்மையா? என்று பார்க்க உடனடியாக மறைநூல் அறிஞர்களை விசாரிக்கின்றார் ஏரோது. 'தான் கேட்கின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும்' என்று நினைத்துக்கொண்டேதான் விசாரித்திருப்பார் ஏரோது. ஏனெனில், நாம் அச்சப்படுகின்ற செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றே நம் மனம் விரும்புகிறது. சில நேரங்களில் சிலர் தாம் கேட்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தே விசாரிப்பது உண்டு. இந்த விசாரணை அச்சத்தினால் அல்ல, மாறாக, ஒருவரின் தீய எண்ணத்தால் வருவது. ஏரோது முதல் வகை மனிதராக இருக்கிறார். ஆனால், பொய்யாய் இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது உண்மையாகிவிடுகின்றது.

3. பொய்
இது அச்சத்தின் அடுத்த குழந்தை. அச்சம் வந்தவுடன் பொய் வந்துவிடுகிறது. தன் அம்மா அடிப்பாள் என்று அச்சப்படுகின்ற குழந்தை தான் செய்த ஒன்றை, 'செய்யவில்லை' என்று பொய் சொல்லிவிடுகின்றது. 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துக் கேட்டு எனக்கு அறிவியுங்கள் ... நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்கிறார் ஏரோது. ஆனால், நிகழ்வின் பிற்பகுதியில் ஏரோது குழந்தையை வணங்குபவராக அல்ல, மாறாக, குழந்தையைக் கொல்பவராக மாறுகின்றார். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் வேறொன்றும் வைத்திருக்கிறார்.

இதற்கு மாறாக, சிறியதில் பெரியதைக் காணவும் நமக்கு மூன்று பண்புகள் தேவை. அவற்றை கீழ்த்திசை ஞானியர் கொண்டிருக்கின்றனர்:

1. இறைக்கண்களால் காணுதல்
இறைவனே ஒன்றை வெளிப்படுத்தினால் அன்றி நாம் சிறியதைப் பெரிதாகக் காண முடியாது. இறைவெளிப்பாடு என்பது திடீரென்று தோன்றும் வெளிச்சம் அல்ல. மாறாக, இறைவனின் கண்கள் கொண்டு நாம் மற்றவர்களையும் மற்றதையும் பார்ப்பதே இறைவெளிப்பாடு. ஞானியர் தங்களுடைய கண்களால் அல்ல, மாறாக, இறைவனின் கண்களால் பார்த்ததால்தான், 'விண்மீனில் மெசியாவின் பிறப்பையும்,' 'மனிதக் குழந்தையில் கடவுளையும்' காண்கின்றனர். இறைவெளிப்பாடு பெற்றவர்கள் தீமையைக் கண்டு வணங்கமாட்டார்கள். ஆகையால்தான், யூதர்களின் அரசரை பெத்லகேம் குடிலில் வணங்கிய அவர்கள் ஏரோதிடம் திரும்பிச்செல்லவில்லை.

இன்று நான் மற்றவரிலும், மற்றவற்றிலும் சிறியவற்றில் பெரிதானதைக் காண வேண்டும் என்றால் எனக்குத் தேவை இறைவனின் கண்கள். இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 60:1-6), பாபிலோனியாவில் அடிமைகளாக, இருளிலும் குளிரிலும் நொறுங்குண்ட நிலையிலும் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களிடம், 'ஒளிரும் மக்களை, தோளில் தூக்கிவரப்படுதலை, பிற இனத்தாரின் தேடி வருதலை' காண்கின்றார் கடவுள். சிறியவற்றில் பெரியவற்றைக் காணவும், சிறியவற்றில் பெரியவற்றைக் கொண்டாடவும் கடவுளின் கண்கள் தேவை.

2. ஏற்றுக்கொள்ளுதல்
விசாரிக்கும் மனம் ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளும் மனம் விசாரிக்காது. ரொம்ப எளிதான லாஜிக். சிறிய குழந்தையில் கடவுளையும், வலுவற்ற குழந்தையில் யூதர்களின் அரசரையும், யூதர்களின் அரசரில் தங்கள் அரசரையும் ஏற்றுக்கொள்கின்றனர் ஞானியர். 'எங்கே?' என்று ஏரோதிடம் கேட்ட கேள்விகூட, விசாரணை அல்ல, தேடலின் நீட்சி அல்லது ஏற்றுக்கொள்தலின் நீட்சி.

இன்று நான் மற்றவர்களை அவர்கள் இருப்பதைவிட பெரியதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இருப்பவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேனா? என்பது நான் கேட்க வேண்டிய கேள்வி.

3. வணங்குதல்
'வணங்குதல்' என்பதில் 'ஒருவரின் மதிப்பைக் கண்டுணர்தல்' அடங்கியிருக்கிறது. நாம் வணங்குகின்ற ஒன்றை மிகுந்த மதிப்போடு வைத்திருக்கின்றோம். ஒன்று சிறியதாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இருக்கின்றது என்று அறியும் ஒருவரே சிறியதை இரசிக்கவும், வணங்கவும் முடியும். 'நாங்கள் வணங்க வந்திருக்கிறோம்' என்று ஏரோதிடம் அவர்கள் சொன்னது, குழந்தையை வணங்குவதில் நிறைவேறுகிறது. வணங்குதலில் உண்மையும் அடங்கியிருக்கிறது. தாங்கள் எதற்காக வந்தார்களோ அதைச் செய்கிறார்கள் ஞானியர்.

இன்றைய உலகத்தில் நாம் சிறியதில் பெரியதைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, அல்லது வன்முறை, வயது வந்த முதியவர்களுக்கு எதிரான ஒதுக்குதல்கள் போன்றவற்றுக்குக் காரணம் நாம் இவர்களில் பெரியதைப் பார்ப்பது இல்லை. இன்றைய நம் நாட்டின் அரசியல் சூழல் பெரிய நாடு, பெரிய மொழி, பெரிய மதம் என்று ஒற்றைமயமாக்கும் முயற்சியில் இருப்பதால், அரசியல் தலைவர்கள் ஏரோது போல அனைத்திற்கும் அஞ்சுகின்றனர். அல்லது அச்சுறுத்துகின்றனர். சிறிய மதம், சிறிய பொருளாதாரம், ஏழைகள், எளியவர்கள் போன்றோர் வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலையில் அனைவரையும் அழித்துவிடுவதில் மும்முரமாயிருக்கிறது நாடு.

இன்றைய திருவிழா நமக்குக் கற்றுத்தரும் இந்த மேலான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றால் - சிறியதிலும் பெரியதைப் பார்த்தால் - நான் என்னைப் பற்றிய, பிறரைப் பற்றிய, இறைவனைப் பற்றிய நேர்முகமான புரிதலைப் பெற்றுக்கொள்ள முடியும். அந்நேர்முகப் புரிதலின் பின்புலத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நானும் ஞானியாக விளங்க முடியும்.

ஞானியரின் வாழ்வில் 'நிலா உள்ளவரை மிகுந்த சமாதானம் நிலவும்' என்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 72:7). சிறியதிலும் பெரியதைக் காணும் ஞானியருக்கு ஒவ்வொரு காட்சியும் திருக்காட்சியே!
 
கடலின் திரள் செல்வம்

சிற்றூர் ஒன்றுக்கு இளைஞன் ஒருவன் வந்தான். ஊருக்கு வெளியிலிருந்த ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருந்த அவனைப் பற்றி ஊரார் ஒவ்வொரு விதமாக ஊகித்தார்கள். அந்த இளைஞன் தன்னைப் பற்றி யாருக்கும் எதுவும் சொல்லவில்லை. 'அவன் ஒரு ஞானி, பித்துப் பிடித்தவன்' என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாகச் சொன்னார்கள். ஒரு நாள் மாலையில் அந்த இளைஞனிடம் சிறுமி ஒருத்தி வருகிறாள். 'உன் பையில் என்ன வைத்திருக்கிறாய்?' என்று சிறுமி இளைஞனிடம் கேட்டாள். பழைய அந்தப் பையைத் திறந்த இளைஞன் அதிலிருந்த வைரக்கல்லை எடுத்து சிறுமியிடம் நீட்டினான். மாலை வெயில் பட்டு வைரம் மின்னியது. 'இதை எனக்குத் தருவாயா?' எனக் கேட்டாள் சிறுமி. 'எடுத்துக்கொள்!' என்று சொல்லி சிறுமியிடம் வைரக் கல்லைக் கொடுத்தான் இளைஞன். வைரக்கல்லின் பிரமாண்டம் கண்டு வியந்தாள் சிறுமி. மறுநாள் காலையில் துயில் எழுந்த இளைஞன் தன் அருகே அதே சிறுமி நிற்கக் கண்டான். 'என்ன ஆயிற்று?' என விசாரித்தான். தன் கையை விரித்து இளைஞனை நோக்கி நீட்டிய சிறுமி, 'இந்தா உன் வைரம்!' என்றாள். ஆச்சர்யத்துடன் இளைஞன், 'உனக்கு இது வேண்டாமா?' என்று கேட்டான். 'இந்த வைரக் கல்லை அப்படியே எனக்குத் தரத் தூண்டிய உன் உள்ளத்தைத் தா!' என்றாள் சிறுமி.

கீழ்த்திசையிலிருந்து வந்து தாங்கள் பெற்றிருந்த அறிவை, தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைத் தந்துவிட்டு வெறுங்கையராய் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பிய மூன்று ஞானியரை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

இறையியல் அடிப்படையில், திருக்காட்சிப் பெருவிழா ஆண்டவராகிய இயேசுவை புறவினத்தாருக்கு வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.

இலக்கிய அடிப்படையில், ஞானியரின் வருகை குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வுக்கான தொடக்கமாக இருக்கிறது.

விண்மீன், ஒளி, பயணம், மகிழ்ச்சி, அன்பளிப்புகள் ஆகியவை இன்றைய வாசகங்கள் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

(அ) ஒரு திடீர் நிகழ்வு

ஏரோதுவுக்கும் எருசலேம் வாழ் மக்களுக்கும் ஞானியரின் வருகை ஒரு திடீர் நிகழ்வாக இருக்கிறது. திடீரென ஊருக்குள் நுழைகிற ஞானியர், 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்று கூறுகிறார்கள். ஏரோதுவும் அவருடன் சேர்ந்த எருசலேமும் கலக்கம் அடைகிறது.

(ஆ) ஒரு நீடித்த நிகழ்வு

ஞானியர் நீண்ட பயணம் செய்து எருசலேம் வருகிறார்கள். அவர்கள் புறப்பட்ட இடமும் அவர்களுடைய அடையாளமும் நமக்கு மறைவாக இருக்கின்றன. ஆனால், 'வானங்கள் கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன' என்பதை அறிந்தவர்களாகவும் நம்புகிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். கடவளின் வெளிப்பாட்டை தங்கள் உள்ளுணர்வாலும் வெளிப்புற அடையாளத்தாலும் அறிகிற அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.

(இ) ஒரு தொடர் நிகழ்வு

எருசலேமுக்குள் நுழைந்த இவர்கள் தங்கள் பயணத்தைத் பெத்லகேம் நோக்கியும், பின்னர் தங்கள் வாழ்விடம் நோக்கியும் தொடர்கிறார்கள். எருசலேமும் பெத்லகேமும் அவர்களுடைய இலக்கு அல்ல. தங்கள் வாழ்வே இவர்களுடைய இலக்கு. ஒவ்வொருவரும் தாம் தொடங்கிய புள்ளி நோக்கியே நகர வேண்டும் என்னும் பெரிய வாழ்வியல் தத்துவத்தை இவர்கள் நமக்கு எடுத்துரைக்கிறார்கள். 'பாதை மாறுவதே பயணம்' என்று கற்றுத் தருகிறார்கள்.

இந்த நாளின் பொருள் என்ன?

(அ) பயணம்

நாம் அனைவருமே பயணிகள், திருப்பயணிகள். நகர்ந்துகொண்டே இருக்கும்போதுதான் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். கீழ்த்திசை ஞானியர் தொடக்கமுதல் இறுதி வரை பயணிகளாகவே காட்டப்படுகிறார்கள். இவர்களுடைய பயணத்தின் இலக்கு மாறிக்கொண்டே இருக்கிறது எருசலேம், ஏரோதுவின் அரண்மனை, பெத்லகேம், சொந்த ஊர். ஆனாலும் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்தவொரு பாதுகாப்பு வளையத்தையும் வைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் ஒவ்வொரு வழிகாட்டியைக் கைக்கொள்கிறார்கள்: விண்மீன், மறைநூல் அறிஞர்களின் செய்தி, கனவில் எச்சரிக்கை. வாழ்வின் அழைப்புகள் எப்போதும் எங்கிருந்தும் வரலாம் என்று நினைக்கிற அவர்கள், தங்களுக்கு வெளியே தங்களுக்கு உள்ளே என அனைத்தையும் பற்றிக் கருத்தாக இருக்கிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் மீண்டும் நாடு திரும்பக் கூடிய பயணத்தை முன்னுரைக்கிறார் எசாயா. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மீண்டும் எருசலேம் திரும்புகிறார்கள். இழுத்துச் செல்லப்பட்டவர்கள் தூக்கி வரப்படுகிறார்கள். இருளும் அழுக்கும் அழுகையும் நிறைந்த இடம் ஒளியும் தூய்மையும் மகிழ்ச்சியும் நிறைந்த இடமாக மாறுகிறது.

இன்று நாம் மேற்கொள்கிற அனைத்துப் பயணங்களையும் எண்ணிப்பார்ப்போம். பயன் தராத பயணங்கள் எல்லாம் நேர விரயமே. இலக்குகள் இல்லாத பயணங்கள் எல்லாம் ஆற்றல் விரயமே.

(ஆ) ஒளி

நற்செய்தி வாசகத்தில் விண்மீனின் ஒளி கீழ்த்திசை ஞானியருக்கு வழி காட்டுகிறது. ஏரோதுவின் அரண்மனை விட்டு வெளியே வருகிற ஞானியர் மீண்டும் ஒளியைக் கண்டுகொள்கிறார்கள். இன்றைய முதல் வாசகத்தில் எருசலேம் நகரமே ஒளிர்கிறது. இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவின் நற்செய்தி வழியாக புறவினத்தார் பெற்ற வெளிப்பாட்டை எடுத்துரைக்கிறார் பவுல். ஏரோதுவும் எருசலேம் மக்களும் விண்மீனைக் கண்டுகொள்ளவில்லை. தம்மைத் தேடுகிறவர்களுக்கே கடவுள் தம்மை வெளிப்படுத்துகிறார். நம் ஒவ்வொருவரும் ஒளியை நோக்கி வர வேண்டும் என்பதே கடவுளின் அழைப்பாக இருக்கிறது.

(இ) கொடை

கீழ்த்திசை ஞானியர் வெறும் பரிசுப் பொருள்களை மட்டும் குழந்தைக்குக் கொடுக்கவில்லை. மாறாக, யூதர்களுடைய அரசர் பிறந்திருக்கிறார் என்னும் செய்தியை ஏரோதுவுக்கும் எருசலேம் மக்களுக்கும் அறிவிக்கிறார்கள். தாங்கள் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள். ஞானியர் தாங்கள் பெற்ற ஞானத்தைத் தங்களுக்குள் வைத்துக்கொள்வதில்லை.

இறுதியாக,

ஞானியரை நோக்கிய ஓர் இறைவேண்டலோடு நம் சிந்தனையை நிறைவு செய்வோம்:

'தாமதமாக வருபவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள்!
உண்மையை நோக்கி நீண்ட பயணம் செய்கிறவர்களுக்கு!
அறிதலையும் கற்பனைiயும் குழப்பிக்கொள்பவர்களுக்கு!
தங்களை அறியாமலேயே தங்கள் நல்லுள்ளத்தால் மற்றவர்களுக்குத் துயரம் ஏற்படுத்தக் காரணமாக இருப்பவர்களுக்கு!
அறிவும் திறன்களும் இருப்பதால் எப்போதும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு!
நீங்கள் பாதுகாவலர்கள்!'

பெயரில்லாக் கீழ்த்திசை ஞானியர்களின் தேடல் தொடர்கிறது. தங்களுடைய தேடலில் தங்களை முழுவதுமாகக் கரைத்துக்கொள்கிறார்கள் இவர்கள்.

இவர்கள் கொண்டு வந்த பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அல்ல, மாறாக, இவர்களுடைய தற்கையளிப்பு இதயமே நம்மை அவர்கள் நோக்கி இழுக்கிறது.
 
 
இரண்டாம் முறை விண்மீன்
'நம் அனைவருக்கும் இரண்டு வாழ்க்கை உண்டு. இரண்டாம் வாழ்க்கை எப்போது தொடங்குகிறது என்றால், 'இருப்பது ஒரு வாழ்க்கைதான்' என்ற புரிதல் வரும்போது' என்பது டுவிட்டர் வாக்கு. 'வாழ்வில் இரண்டாம் வாய்ப்பு வருவதில்லை' என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், வாழ்வில் இரண்டாம் வாய்ப்புக்கள் வரவே செய்கின்றன. எப்படி?

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய, 'எ கிறிஸ்மஸ் கேரல்' (ஒரு கிறிஸ்துபிறப்பு பாடல்) பிரபலமான நாவல். அந்த நாவலின் கதாநாயகன் எபநேசர் ஸ்க்ரூகே கிறிஸ்துமசுக்கு முந்திய மாலை தன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பார். இங்கிலாந்தின் குளிரின் நடுக்கத்தில் அவருடைய அலுவலக கிளார்க் கூனிக்குறுகி அமர்ந்திருப்பார். ஏனெனில், எபரேசர் தன் அலுவலகத்தை வெதுவெதுப்பாக்க பணத்தைச் செலவிட மாட்டார். எபநேசரின் உறவினர் ஒருவர் அவரை கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு வருமாறு அழைப்பார். அந்த நேரத்தில் இன்னும் இருவர் கிறிஸ்துமஸ் நன்கொடை கேட்டு வருவார்கள். 'கிறிஸ்துமஸ் ... ஒரு ஹம்பக்!' என்று விரட்டி விடுவார். இரவில் தன் வீடு திரும்பிய அவருக்கு இறந்து போன தன் பிஸினஸ் பார்ட்னர் ஜேக்கப் மார்லியின் ஆவி காட்சிதரும். மார்லி தன்னுடைய பழைய தன்னலமான வாழ்விற்குத் தண்டனையாக பெரிய சங்கிலியைக் கட்டி அவர் இழுத்துக்கொண்டு செல்வதுபோல காட்சியில் இருக்கும். 'இந்த தண்டனையிலிருந்து நீ தப்பித்துக்கொள்' என மார்லியின் ஆவி எபநேசரை எச்சரிக்கும். 'இன்னும் சில இரவுகளில் மூன்று ஆவிகள் உனக்குத் தோன்றும்' என்றும் சொல்வார் மார்லி. அப்படியே தூங்கிப்போவார் எபநேசர். 'நேற்றைய கிறிஸ்துமஸ்' என்ற முதல் ஆவி வந்து எபநேசரை அவருடைய குழந்தைப் பருவத்திற்கு அழைத்துப்போய்க் காட்டும். தன் குழந்தைப் பருவ, இளமைப்பருவ நிகழ்வுகளை நினைத்து மகிழ்வார் எபநேசர். 'இன்றைய கிறிஸ்துமஸ்' என்ற இரண்டாம் ஆவி எபநேசரை லண்டன் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்லும். அந்த நேரத்தில் தன் மேலாடைக்குள் 'அறியாமை,' 'தேவை' என்று இரண்டு குழந்தைகள் ஒளிந்திருப்பதைக் காண்பார் எபநேசர். 'நாளைய கிறிஸ்துமஸ்' என்ற மூன்றாம் ஆவி இறந்துபோன ஒருவர் படும் துன்பத்தைக் காட்டும். அந்த இறந்துபோன நபரின் கல்லறையில் 'எபநேசர்' என எழுதியிருக்க, நம் கதாநாயகர் உடனே, தன் தவற்றை உணர்ந்து, 'என் 'அறியாமை,' மற்றும் என் 'தேவை' இவற்றுக்காக நான் வருந்துகிறேன்' என்று சொல்லி, வருவோர் போவோர், தேவையில் இருப்போர் அனைவருக்கும் தன் பணத்தைக் கொடுத்துவிட்டு, தன் உறவினரின் கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு மகிழ்வுடன் செல்வார். இதுபோல அவர் தொடர்ந்து கருணை, தாராள உள்ளம், அன்பு, பரிவு கொண்டவராக விளங்குவதாக நாவல் முடிவுறும்.

எபநேசர் ஸ்க்ரூகேயைப் பொறுத்தவரையில் தான் கண்ட காட்சி அவருடைய இரண்டாம் வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கிறது. இவரைப் போலவே, புனித பவுல், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா என்று எல்லாருமே தங்கள் வாழ்வில் இறையனுபவம் பெற்றவுடன் தங்களின் இரண்டாம் வாழ்க்கையை புதிய பொலிவுடன் மாற்றி எல்லாருக்கும் எல்லாம் என ஆகின்றனர்.

இன்றைய நாளில் 'இரண்டாம் கிறிஸ்துமஸ்' என்று கிராமங்களில் சொல்லப்படுகின்ற 'ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக்' கொண்டாடுகிறோம். கீழைத்திருச்சபைகள் இன்றைய நாளைத்தான் கிறிஸ்து பிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.

'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று ஏரோதிடம் வருகின்ற கீழ்த்திசை ஞானியர், 'முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றுவதை - இரண்டாம் முறை தோன்றுவதை - கண்டுகொள்கின்றனர்.' ஆக, இவர்கள் முதல் முறை பார்த்த விண்மீன் இவர்களை ஏரோதின் அரண்மனைக்குத்தான் அழைத்துச் சென்றது. இரண்டாம் முறை பார்த்த விண்மீன்தான் இவர்களை பெத்லகேமிற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, வாழ்வின் ஆச்சர்யங்கள் இரண்டாம் முறைகளிலும் சாத்தியம் என்பதை உணர்த்துகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் இரண்டாம் முறை வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இரண்டாம் முறை இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் இரண்டாம் முறை வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

ஆக, எருசலேம் புத்துயிர் பெற்றதை அகில உலக புத்துயிர்ப்புக்குமான இரண்டாம் வாய்ப்பாகப் பார்க்கிறார் எசாயா. நாடுகடத்தப்பட்ட எருசலேம் மக்கள் தங்கள் நாடு திரும்புகின்றனர். அவர்களின் வருகை அனைத்துலக நாடுகளையும் சேர்த்துக் கொண்டு வருவதாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் பெற்ற இரண்டாம் ஒளி அவர்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் வெளிச்சமாகவும், மாட்சியாகவும் இருக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3, 5-6), 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்னும் மறைபொருள்' தூய ஆவி வழியாகத் தனக்கும், திருத்தூதருக்கும், இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக முன்வைக்கின்றார். யூதராக இருந்தால்தான் ஒருவர் கிறிஸ்தவராகவும், கிறிஸ்தவ சபையின் உறுப்பினராகவும் இருக்க முடியும் என்ற புரிதலில் இருந்த எபேசு நகரத் திருச்சபைக்கு, யூதரல்லாத புறவினத்தாரும் நம்பிக்கையின் வழியாக மறைபொருளில் பங்கெற்க முடியும் என அறிவுறுத்துகின்றார். பவுலின் இந்த வார்த்தைகள் இன்று நமக்கு மிகச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில், பவுலின் இதே உறுதிப்பாட்டால்தான் இன்று நீங்களும், நானும் கிறிஸ்தவராக இருக்கிறோம்.

ஆக, பிற இனத்தாருக்கு நம்பிக்கையின் வழியாக வழங்கப்படும் இரண்டாம் வாய்ப்பாக இருக்கிறது கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை பிரிவினை சபை விவிலியம் 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். மேலும், இவர்கள் 'ஞானியர்' என அழைக்கப்படுகின்றனர். ஆனால், 'யூதர்களின் அரசனாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?' என்று யூதர்களின் அரசன் ஏரோதிடம் போய்க் கேட்பது ஞானம் அன்று. ஏரோது தன் அரியணையைத் தக்க வைக்க தன் குடும்பம் முழுவதின் இரத்தத்தையும் குடித்தவன். இத்தகைய அரசனிடம் போய் மற்றொரு அரசனைப் பற்றி விசாரிப்பது 'கொள்ளிக் கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமமாக' இருந்திருக்கும். ஆனாலும், நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.

ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.

அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இந்நிகழ்வில் இவர்கள் ஏரோதின் அரண்மனைக்கு வந்தது ஒருமுறைதான். வந்த வழி ஒருமுறைதான். இயேசுவைக் கண்டதும் ஒருமுறைதான். திரும்பும் வழியும் ஒருமுறைதான். ஆனால், விண்மீனைக் கண்டது மட்டும்தான் இரண்டுமுறை. அதுவும் இரண்டாம் முறை அவர்கள் கண்ட விண்மீன் அவர்களின் பாதையை முழுவதுமாக மாற்றிப் போடுகின்றது.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எருசலேம் இரண்டாம் முறை ஒளி பெற்று, கடவுளின் மாட்சியால் துலங்குகிறது. இரண்டாம் வாசகத்தில் புற இனத்தார் நம்பிக்கையின் வழி இரண்டாம் வாழ்வைப் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் முறை கண்ட விண்மீன் சாஸ்திரிகளுக்கு யூதர்களின் அரசனை அடையாளம் காட்டுகிறது.

வாழ்வின் இனிமைகள் இரண்டாம் முறையிலும் சாத்தியம் என்கிறது இன்றைய வழிபாடு. ஞானம் என்பது முதல் முறை எழுந்து நிற்பது அல்ல. மாறாக, முதல் முறை விழுந்து இரண்டாம் முறை எழுந்து நிற்பது.

இன்றைய நம் உலகம் முதல் முறைகளையே பெரிதும் கொண்டாடுகிறது. முதல் முறையில் வெல்லாதவர்களைத் தேவையற்றவர்கள் என முத்திரை குத்திவிடுகிறது. புனித அகுஸ்தினரின் வாழ்வை எடுத்துக்கொள்வோம். தன் மனமாற்றத்திற்கு முன் அவருடைய முதல் வாழ்வு அமைதியில்லாமல் இருக்கிறது. ஆனால், அதை அவர் விரக்தியாக எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாம் வாழ்விற்குள் அடியெடுத்து வைக்கின்றார். மிகப்பெரிய இறையியலாராக மாறுகின்றார். மானிக்கேய சிந்தனையால் முதல் வாழ்வைக் கழித்த அவர், இறைவனில் தன் இரண்டாம் வாழ்வைக் கழிக்கிறார்.

2019ஆம் ஆண்டு தொடங்கி சில நாள்கள் கடந்திருக்கின்றன. 'இனி குடிக்க மாட்டேன்,' 'இனி கோபப் பட மாட்டேன்,' 'இனி உடல்நலம் கவனிப்பேன்,' 'இனி வாக்கிங் போவேன்,' 'இனி என் நேரம் வீணாக்க மாட்டேன்' என்று கடந்த ஆண்டு வாக்குறுதிகள் எடுத்து, நிறைவேற்ற முடியாமல் போயிருப்போம். அல்லது எடுத்த ஆறு நாள்களுக்குள் மீறியிருப்போம். ஆனால், அதற்காக நம்மை நாமே சபித்து குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாழப் பழகுவோம். வாழ்வில் எல்லாமே ஒருமுறைதான் இந்த உலகம் பல இனியவர்களையும், இனியவைகளையும் இழந்திருக்கும்.

'தொடங்கியது எல்லாம் இனியதாக முடியும். அப்படி இனியதாக இல்லை என்றால் அது இன்னும் முடியவில்லை' என்பார் ஆஸ்கார் வைல்ட். எருசலேம் மக்களின் பயணம் பாபிலோனியாவின் அடிமை இருளில் முடியவில்லை. புறவினத்தாரின் பயணம் தங்கள் பாவ வாழ்க்கையோடு முடியவில்லை. சாஸ்திரிகளின் பயணம் ஏரோதின் அரண்மனையோடு முடியவில்லை. இரண்டாம் முறை ஒளி வந்தது. இரண்டாம் முறை வாழ்க்கை வந்தது. இரண்டாம் முறை விண்மீன் வந்தது.

இரண்டாம் முறை வரும் விண்மீனைக் காண மூன்று படிகள் அவசியம்: (அ) இதுதான் விண்மீன் எனத் தெரிய வேண்டும், (ஆ) பழைய விண்மீனோடு அதைப் பொருத்திப் பார்க்க வேண்டும், (இ) 'இதுவே அது' என்று முடிவு எடுத்து பயணம் தொடர வேண்டும்.

நாம் சந்தித்த பாபிலோனியாவும், ஏரோதுகளும் போதும். கொஞ்சம் அண்ணாந்து பார்ப்போம். வாழ்க்கை மீண்டும் விண்மீனாக ஒளிரும். ஏனெனில், முதல் முறை பார்த்ததும், பார்த்ததை மறந்ததும் நம் தவறாக, சந்தர்ப்ப சூழலாக இருக்கலாம். ஆனால், இரண்டாம் முறை பார்ப்பதும், விண்மீனைத் தொடர்வதும் நம் தெரிவாக இருக்க வேண்டும். தெரிவு பிறக்க தெளிவு பிறக்கும். அந்தத் தெளிவில் பெத்லகேம் குழந்தை நம்மில் ஒளிரும். ஏனெனில், முதல் மட்டுமல்ல. இரண்டாவதும் வெற்றியே!
திருக்காட்சிப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
அருள்பணி ஏசு கருணாநிதி
 
ஒளி - பார்த்தலும் பதிலிறுத்தலும்
கீழைத்தேய திருஅவைகளின் கிறிஸ்து பிறப்பு விழா என்று சொல்லப்படும் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். 'பிற இனத்தாருக்கு ஒளியாகிய கிறிஸ்துவில் எமது மீட்பின் மறைபொருளை இன்று வெளிப்படுத்தினீர். சாவுக்கு உரிய எங்களது மனிதத்தன்மையில் அவர் தோன்றியபோது அவருக்கு உரிய சாகாத்தன்மையின் மாட்சியால் எங்களைப் புதுப்பித்தீர்' என்று இன்றைய நாளை இறையியலாக்கம் செய்கிறது திருப்பலியின் தொடக்கவுரை.

லூக்கா நற்செய்தியாளரின் பதிவின்படி இடையர்கள் என்னும் யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்திய கிறிஸ்து, இன்று, மத்தேயு நற்செய்தியாளரின் பதிவின்படி ஞானியர் என்னும் புறவினத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் சமகாலத்தவருக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'யூதர்களுக்கு மட்டுமே மீட்பு உண்டு. யூதர்கள் மட்டுமே கடவுளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். யூதர்கள் மட்டுமே தூய்மையானவர்கள். யூதர்களுக்கு மட்டுமே மெசியா' என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், புறவினத்தாருக்கும் மீட்பு, புறவினத்தாரும் தெரிவுசெய்யப்பட்டவர்கள், புறவினத்தாரும் தூய்மையானவர்கள், அவர்களுக்கும் மெசியா தோன்றுவார் என்று முன்வைக்கப்படும் கருதுகோள் அவ்வளவு ஏற்புடையதாக இருந்திருக்காது. இந்தக் கருதுகோளையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 3:2-3,5-6) நாம் வாசிக்கின்றோம். யூதர்களுக்கு மட்டுமே மீட்பு என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலத்தில், பவுல் எபேசுநகர் திருஅவைக்கு எழுதுகின்ற திருமடலில், 'நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்' என எழுதுகின்றார். இந்த ஒற்றை வரியால்தான் நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம். ஏனெனில், நாம் பிறப்பிலேயே யூதர்கள் அல்லர். ஆக, இன்றைய நாள் நம்முடைய கிறிஸ்து பிறப்பு பெருவிழா.
இன்றைய முதல் வாசகம் (காண். எசா 60:1-6) எசாயா இறைவாக்கினர் நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் திரும்பி வர அனுமதி பெற்ற காலகட்டத்தில் எழுதப்பட்டது இப்பகுதி. இன்றைய வாசகப் பகுதியில், 'எழு! உலகிற்கு ஒளி வீசு!' என்று எருசலேமைத் தூண்டி எழுப்புகிறார் எசாயா. ஏனெனில், 'உன் ஒளி தோன்றியுள்ளது,' 'ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.' ஒளியும் மாட்சியும் ஆண்டவரின் காணக்கூடிய வெளிப்பாடுகள் (காண். எசே 1:4, விப 24:15-17). இவ்வாறாக, இருளடைந்து பாழடைந்து கேட்பாரற்றுக் கிடந்த நகரம் கடவுள் வந்ததால் ஒளிர்கிறது. இவர்கள் அடிமைகளாக்கப்படும் முன் இருந்த ஒளி அடிமைத்தனத்தால் இருண்டு போனது. இப்போது நகரம் ஒளிருமாறு மக்களைக் கவ்வியிருந்த இருளை அகற்றுகிறார் கடவுள். கடவுள் வந்ததை ஒரு பெரிய ஒருங்கிணைவாக முன்வைக்கிறார் எசாயா: (அ) பிற இனத்தார் எருசலேம் நோக்கி வருவர், (ஆ) நாடுகடத்தப்பட்ட, இழுத்துச் செல்லப்பட்ட புதல்வர், புதல்வியர் தோளில் தூக்கிவரப்படுவர், (இ) கடலின் திரள் செல்வம், சொத்துக்கள், ஒட்டகத்தின் பெருந்திரள் எருசலேம் வரும், (உ) 'பொன்' (அரசனுக்கு), 'நறுமணப்பொருள்' (கடவுளுக்கு) ஏந்தி வருவர் மக்கள். இவ்வாறாக, கடவுளே அரசனாகவும் இருப்பார் என்பது குறிக்கப்படுகிறது. இக்கடவுள் எருசலேமிற்கு மட்டும் கடவுள் அல்ல. மாறாக, அனைத்து நாடுகளுக்கும் கடவுளாகவும் அரசனாகவும் இருப்பார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 2:1-2) 'ஞானிகள் வருகை' பற்றிப் பேசுகின்றது. நமக்கு மிகவும் தெரிந்த வாசகப் பகுதிதான். இவர்கள் ஏன் வர வேண்டும்? இவர்கள் இறையியல் தேவையையும், இலக்கியத் தேவையையும் நிறைவு செய்ய வருகின்றனர். 'இயேசுவை புதிய மோசே' என்ற இறையியலாக்கம் செய்ய விரும்புகிறார் மத்தேயு. ஆக, பாலன் இயேசுவை எகிப்திற்கு அனுப்பினால்தான் அவரை அங்கிருந்து அழைத்து வர முடியும். இப்போது திருக்குடும்பம் இருப்பது பெத்லகேமில். பெத்லகேமில் நடக்கும் இலக்கிய நிகழ்வு எகிப்துக்கு நகர்ந்தால்தான் இறையியல் சாத்தியமாகும். எனவே, குழந்தையை எகிப்திற்கு அனுப்ப வேண்டியதன் இறையியல் மற்றும் இலக்கியத் தேவையை நிறைவு செய்ய வருகின்றனர் 'ஞானிகள்.'

இவர்கள் யார்? இவர்கள் 'ஞானியரோ,' 'அரசர்களோ' அல்லர். இவர்களை, பிரிவினை சபை சகோதரர்களின் விவிலியம், 'சாஸ்திரிகள்' என சரியாக மொழிபெயர்க்கிறது. இவர்கள் வானியல் பண்டிதர்கள். நட்சத்திரங்களையும், அவற்றின் நகர்வுகளையும், பறவைகள் மற்றும் விலங்குக் கூட்டங்களின் இடம் பெயர்தலையும் வைத்த வருங்காலத்தைக் கணிக்கத் தெரிந்தவர்கள். அவ்வளவுதான்! ஏனெனில், இவர்கள் அரசர்களாக இருந்திருந்தால், 'நீங்கள் போய்ப் பாருங்கள்' என்று ஏரோது அரசன் இவர்களை அனுப்பியிருக்க மாட்டான். 'நீங்கள் இங்கே தங்கி இளைப்பாறுங்கள். நான் காவலாளிகளை அனுப்பி விசாரிக்கிறேன்' என்று இவர்களை அரண்மனையில் அமர்;த்தியிருப்பான். மேலும், இவர்கள் மூன்று பேர் அல்லர். இவர்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருள்களை வைத்து நாம் 'மூன்று நபர்கள்' வந்ததாகச் சொல்கிறோம். நம் நிகழ்வின்படி அவர்கள் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். ஏனெனில், இத்தகையோரின் சேவை அரசர்கள் எதிர்காலத்தைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆகவேதான், இவர்கள் அரசனிடம் செல்கிறார்கள். மேலும், இவர்கள் எதையும் மூடி மறைக்காத, அதே நேரத்தில், துணிச்சல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
'அவரது விண்மீன் எழக் கண்டோம்' - இதுதான் அவர்கள் பெற்றிருந்த அடையாளம்.
ஏரோது தன் குள்ளநரித்தனத்தால், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்து திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று குழந்தையை வணங்குவேன்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவைக்கின்றான்.
அந்த நேரத்தில்தான் இரண்டாம் முறை அந்த விண்மீன் தோன்றுகின்றது. அரண்மனையின் உயரமான சுவர்கள் அதை மறைத்ததா? அல்லது ஏரோதின்முன் இவர்கள் மண்டியிட்டதால் விண்மீன் இவர்களுக்கு மறைவாயிருந்ததா? - தெரியவில்லை நமக்கு. ஆனால், 'அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.' மத்தேயு முதல் முறையாக அவர்களின் மகிழ்ச்சி என்ற உணர்வைப் பதிவு செய்கின்றார். வீட்டிற்குள் செல்லும் அவர்கள் குழந்தைக்கு தங்கம் (அரச நிலையின் அடையாளம்), தூபம் (இறை நிலையின் அடையாளம்), வெள்ளைப் போளம் (மனித நிலையின் அடையாளம்) பரிசளிக்கின்றனர். கனவில் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் நகரம் ஒளி வீசுகிறது. அதைக் காணுகின்ற இஸ்ரயேல் மக்களும், புறவினத்து மக்களும் பதிலிறுப்பு செய்கின்றனர். அவர்களது பதிலிறுப்பு திரும்பி வருதலில் இருக்கின்றது.

இரண்டாம் வாசகத்தில், 'ஒரு காலத்தில் இருளாய் இருந்த எபேசு நகர மக்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறார்கள். அவர்கள் ஒளிபெற்ற மக்களாக வாழ வேண்டும்' (காண். எபே 5:8). புறவினத்தாருக்கு கிறிஸ்துவின் மீட்பு என்னும் ஒளி வழங்கப்பட, அவர்களும் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், ஒளியைக் காணுகின்ற கீழ்த்திசை ஞானியர், அந்த ஒளியைப் பின்தொடர்ந்து வந்து, ஒளியாம் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்.

ஒளியைப் பார்த்தலும் பதிலிறுத்தலும் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. இருவகைக் காணுதல்:
கீழ்த்திசை ஞானியரின் ஞானம் நமக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. ஏன்? அவர்கள் தங்களுக்கு வெளியே இருக்கின்ற விண்மீனின் ஒளியைக் காண்கின்றனர். அதே வேளையில், தங்கள் கனவில் வெளிப்படுத்தப்பட்ட ஒளியைக் கண்டு, வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்புகின்றனர். ஆக, தங்களுக்கு வெளியே நடப்பது பற்றிய அறிவும், தங்களுக்கு உள்ளே இருக்கின்ற உள்ளுணர்வு பற்றிய அறிவும் அவர்களுக்கு ஒருங்கே அமைந்திருந்தது. இதுதான் ஞானம். பல நேரங்களில் அறிவார்ந்த பலர் தங்களுக்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றித் தெளிவாக இருப்பர். ஆனால், அவர்கள் தங்கள் உள்ளங்களில் வீசும் ஒளியைக் கண்டுகொள்ள மறந்துவிடுவர். சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் உள்ளத்தின் ஒளி பற்றி இப்படி எழுதுகிறார்: 'உன் உள்ளத்தின் அறிவுரையில் உறுதியாய் நில். அதைவிட நம்பத்தக்கது உனக்கு வேறெதுவுமில்லை. காவல் மாடத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஏழு காவலர்களைவிட மனித உள்ளம் சில வேளைகளில் நன்கு அறிவுறுத்துகின்றது ... உன்னத இறைவனிடம் மன்றாடு. அப்பொழுது அவர் உன்னை உண்மையின் வழியில் நடத்துவார்' (சீஞா 37:13-15). இன்றைய திருநாளின் ஞானியர் தங்கள் உள்ளத்தின் அறிவுரையை ஏற்றனர். அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தனர். இன்று நாம் புறக் காணுதல் மற்றும் அகக் காணுதல் நிலைகளில் எப்படி இருக்கிறோம்?

2. மூவகை பதிலிறுப்புகள்:
ஏரோது ஒளியைக் கண்டு அஞ்சுகிறார், எருசலேம் நகரத்தவர் ஒளியைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர், ஞானியர் ஒளியைப் பின்தொடர்கின்றனர். ஒளி அல்லது உண்மை பல நேரங்களில் நமக்கு அச்சத்தை விளைவிக்கலாம். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் மருத்தவரிடம் செல்வதைத் தவிர்ப்போம். ஏனெனில், நம்மிடம் உள்ள நோயை மருத்துவர் கண்டுபிடித்துவிட்டால், அல்லது நம் நோய் பற்றிய உண்மைநிலை நமக்குத் தெரிந்துவிட்டால், அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒளியைக் கண்டு அஞ்சுவதை இயேசுவும் நிக்கதேமிடம் சொல்கின்றார்: 'ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர் ... தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்' (காண். யோவா 3:19-21). ஏரோதுவின் அரியணை ஒளியை அவரிடமிருந்து மறைத்தது. எருசலேம் நகர மக்கள் ஒளியைக் கண்டனர். ஆனால், அன்றாட கவலைகளுக்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்ததால் அவர்கள் ஒளியைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் வாழ்வின் இன்ப துன்பங்களிலிருந்து எழுந்து பார்க்கவோ, அந்த ஒளியைப் பின்பற்றவோ அவர்களுக்குத் தோன்றவில்லை. சில வேளைகளில் நமக்கும் இதே மனநிலை வரலாம். 'பின்னர் பார்த்துக்கொள்ளலாம்!' என்று தள்ளிப் போடலாம். ஆனால், ஞானியர் உடனடியாகப் பதிலிறுப்பு செய்கின்றனர். ஒளியைப் பின்தொடர்தல் கடினமாக இருந்தாலும் பின் தொடர்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய பயணம் பெரும்பாலும் இரவில்தான் நடந்திருக்கும்.

3. இரண்டாம் முறை விண்மீன்:
நம் பாதையும் பதிலிறுப்பும் தெளிவாக இருந்தால், நாம் தீயவனின் அரண்மனையில் இருந்தாலும் விண்மீன் மீண்டும் தோன்றும். விண்மீன் இரண்டாம் முறை தோன்றுவதைக் கண்ட ஞானியர் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். தங்களின் பயணமும் பாதையும் சரியானது என்பது உறுதி செய்யப்பட்டதன் அடையாளமாக அதைக் காண்கின்றனர். நாம் நம் கனவுகள் நோக்கிச் செல்லும்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நம்முடன் சேர்ந்து ஒத்துழைக்கிறது என்ற இரசவாதமும் (காண். பவுலோ கோயலோ, தி ஆல்கெமிஸ்ட்) இதுவே. இன்று நம் இலக்குகள் அல்லது நட்சத்திரங்கள் நோக்கி நாம் வழிநடக்கும்போது இதே அனுபவத்தை நாமும் பெற்றிருக்கலாம். அப்படி இருக்க நம் இலக்குகளை நோக்கி நகர்வதிலிருந்து நாம் பின்வாங்குவது ஏன்?

இறுதியாக,
'அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக. நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக!' எனப் பாடுகின்றார் திபா ஆசிரியர் (காண். 72). நிலவின், கதிரவனின், விண்மீனின் ஒளி உள்ளவரை அதைப் பார்த்தலும், அதற்குப் பதிலிறுத்தலும் தொடரும். பாதையிலும் பாதையின் இறுதியிலும் நம் கண்கள் அவரைக் காணும். திருக்காட்சிப் பெருவிழா நல்வாழ்த்துகள்!
அருட்தந்தை: இயேசு கருணாநிதி

 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

எல்லாருக்குமான இறைவன்

டோனி டி மெல்லோவின் கதை இது. ஓர் ஊரில் இறையடியார் ஒருவர் இருந்தார். அவர் இறைவனைத் தொழாத நாளில்லை. அப்படிப்பட்டவர் ஒருநாள் இறைவனிடம் மிக உருக்கமாக வேண்டிக்கொண்டிருக்கும்போது, இறைவன் அவருக்கு முன்பாகத் தோன்றினார். இறைவனின் தரிசனத்தை சிறிதும் எதிர்பார்த்திராத இறையடியார், அவருக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

பின்னர் அவர் இறைவனைப் பார்த்து, "இறைவா! உன் கருணையோ கருணை. எளியவன் என்னைப் பார்க்க வந்திருக்கின்றாயே... சொல்லும் உமக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன்" என்றார். உடனே இறைவன் அவரைப் பார்த்து, "எனக்கு ஃபுட்பால் ஆட்டம் பார்க்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. பக்கத்தில் எங்காவது ஃபுட்பால் ஆட்டம் நடந்துகொண்டிருந்தால் என்னை அங்கு கூட்டிக்கொண்டு போவாயா?" என்று கேட்டார். "இதோ உடனே கூட்டிக்கொண்டு போகிறேன் சாமி" என்று இறையடியார் இறைவனை ஃபுட்பால் ஆட்டம் நடைபெற இருந்த ஒரு மைதானத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.

அவர்கள் மைதானத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் போட்டி ஆரம்பமானது. அன்றைய நாளில் போட்டியானது கிறிஸ்தவர்கள் அணிக்கும் சீக்கியர்கள் அணிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி தொடங்கிய சிறுதுநேரத்திலே கிறிஸ்தவர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் முதல் கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் மிகவும் உற்சாகமாகக் கத்தினார். தன்னுடைய தலையில் அணிந்திருந்த தொப்பியை மேலும் கீழும் தூக்கிப் போட்டுப் பிடித்தார். இதைப் பார்த்த இறையடியாருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. "இறைவன் ஃபுட்பால் ஆட்டத்தை நன்றாக இரசிக்கிறார் போலும், இரசிக்கட்டும்' என்று நினைத்துவிட்டு, எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார்.

நேரம் ஆக ஆக, போட்டி இன்னும் சூடுபிடித்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் சீக்கியர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோலைப் போட்டார்கள். இதைப் பார்த்துவிட்டு இறைவன் முன்புபோல் உற்சாகத்தில் கத்தினார், தன்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் கீழும் தூக்கப் போட்டுப் பிடித்தார். இது இறையடியாருக்கு இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. உடனே அவர் இறைவனை அழைத்து, "இறைவா! நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்? கிறிஸ்தவ மதமா? சீக்கிய மதமா?" என்று கேட்டார். அதற்கு இறைவன், "நான் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்பதைவிட எல்லாருக்கும் சொந்தமானவன், எல்லாரும் என்னுடைய மக்கள். அதனால்தான் நான் இரு தரப்பினரும் கோல்போட்ட போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன்" என்றார்.
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர். அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குலத்திற்கோ மட்டும் சொந்தமாக்குவது அர்த்தமற்ற செயல்.

குழந்தை இயேசுவைத் தேடிவந்த ஞானிகள்
இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையினை உணர்த்தும் திருக்காட்சி பெருவிழாவை அல்லது மூன்று ஞானிகளுடைய பெருவிழாவை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வானவியல் அறிஞர்களான இந்த மூன்று பேருமே வானத்தில் தோன்றிய விண்மீனைப் பார்த்துவிட்டு, யூதர்களின் அரசர் தோன்றியிருக்கின்றார் என்று உறுதிசெய்துகொண்டு, அவரைப் பார்க்க காணிக்கைப் பொருட்களோடு எருசலேமை நோக்கி வருகிறார்கள். வந்து குழந்தை இயேசுவைச் தரிசிகிறார்கள். பின்னர் தங்களுடைய இல்லத்திற்கு மாற்றுப் பாதையில் திரும்பிச் செல்கிறார்கள்.
இன்று இம்மூன்று ஞானிகளின் விழாவைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில், இவ்விழா நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

1. இறைவன் வாக்கு மாறாதவர்
விண்மீன் வழிகாட்டுதலின் பேரில் எருசலேமிற்கு வந்த மூன்று ஞானிகளும், அங்கிருந்த ஏரோது மன்னனிடம் சென்று, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை வணங்க வந்திருக்கிறோம்?" என்கிறார்கள். இதைக் கேட்டு ஏரோது கலங்கினாலும் தலைமைக் குருக்களையும் மறைநூல்கள் அறிஞர்களையும் கூப்பிட்டு, "மெசியா எங்கே பிறப்பார்?" என்று கேட்க, அவர்கள் பெத்லகேம் என்று சொல்கிறார்கள். இங்கேதான் நாம் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெசியா பெத்லகேமில்தான் பிறப்பார் என்ற செய்தி மறைநூல் அறிஞர்களுக்கும் தலைமைக்குருக்களும் தெரிந்தபோதும், அவர்கள் மூன்று ஞானிகள் சொன்னதைக் கேட்டு இயேசுவை/மெசியாவைப் பார்க்கச் செல்லவில்லை. மாறாக மூன்று ஞானிகள்தான் இறைவார்த்தையை நம்பி, இயேசுவைக் காணச் செல்கின்றார்கள். கடைசியில் கண்டுகொள்ளவும் செய்கிறார்கள்.

இறைவன் சொன்ன சொல் மாறாதவர் (13:8), அப்படிப்பட்டவருடைய வார்த்தைகளை நம்பிச் செயல்பட்ட மூன்று ஞானிகளைப் போன்று நாமும் செயல்பட்டால், இறைவனின் ஆசிரைப் பெறுவது உறுதி.

2. இயேசு இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர்
இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளுமே யூதர்கள் அல்ல, அவர்கள் புறவினத்தார். அப்படியிருந்தபோதும் "யூதர்களின் அரசர்' (?) என்று அறியப்பட்ட இயேசு, அவர்களுக்கும் தன்னை வெளிப்படுத்துகின்றார். இது ஆண்டவராகிய இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவர் என்ற உண்மையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இறைவன் எல்லாருக்கும் பொதுவானவர் என்றால், இறைவன் என் குலத்திற்கு, என் இனத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்? அது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஒன்று.
இறைவன் எல்லாருக்கும் பொது என்றால், யாவரும் ஓர் குலம், ஒரு தாயின் மக்கள் என்பதுதான் நிஜம்

3. நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடுவோர், அவரைக் கண்டுகொள்வர்
திருக்காட்சிப் பெருவிழா நமக்குக் கொடுக்கும் மிக முக்கியமான செய்தி, நாம் நேர்மையான உள்ளத்தோடு ஆண்டவரைத் தேடினோம் என்றால், அவரை நிச்சயமாக கண்டுகொள்வோம் என்பதாகும். மூன்று ஞானிகளும் இயேசுவை முழு மனதாக, அதே நேரத்தில் நேர்மையான உள்ளத்தோடு தேடினார்கள். இடையில் அவர்கள் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக்கூடும். அவற்றைக் கண்டெல்லாம் அவர்கள் மனந்தளராமல் ஆண்டவரைத் தேடினார்கள். இறுதியில் கண்டுகொள்ளவும் செய்தார்கள். நாமும் அவர்களைப் போன்று ஆண்டவரைத் தேடினால், நிச்சயம் கண்டுகொள்வோம் என்பது உறுதி.

சிந்தனை
இன்றைக்கு கடவுளின் பெயராலே பிளவுபட்டுக் கிடக்கின்றோம். இந்தக் கோவில் எங்களுக்குத்தான் சொந்தம், அவர்கள் இதில் வழிபட உரிமை என்று வேற்றுமை பாராட்டுகின்றோம். ஆனால், இறைவன் ஒருவர்தான், அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அப்படிப்பட்டவரை நாம் நம்மிடம் இருக்கின்ற வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமை உணர்வோடு வழிபடுவோம். அவரை முழு உள்ளத்தோடு தேடி, அவருக்கு உகந்த மக்களாவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.


 
எழு! ஒளிவீசு

இருள் நடுவேதான் விளக்கு ஏற்றி வைக்கப்படும்:

ஞாயிறு திருப்பலி முடிந்ததும், பங்குப் பணியாளரைப் பார்க்க வந்த இளம்பெண் ஒருத்தி, "சுவாமி! எனக்கு வேறு எங்காவது வேலை இருந்தால் சொல்லுங்கள்; இப்போது நான் பார்க்கும் வேலை எனக்குப் பிடிக்கவில்லை" என்றார். இந்த இளம்பெண்ணை பங்குப் பணியாளர் நன்கு அறிவார். இவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றி வந்தாள். இந்நிலையில் இவள் தனக்கு வேறோர் இடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னதுதான் பங்குப் பணியாளருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"இப்போது நீ நல்லதொரு நிறுவனத்தில்தானே பணியாற்றுகின்றாய், பிறகு எதற்கு இன்னொரு இடத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் என்கிறாய். உனக்கு என்ன ஆயிற்று?" என்று பங்குப் பணியாளர் அவளிடம் கேட்டபோது, "நான் பணியாற்றும் இடத்தில் எல்லாரும் பிற சமயத்தவர்; நான் மட்டும் கிறிஸ்தவள். இதனால் நான் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின்றேன்" என்று வருத்தத்தோடு சொன்னாள் அவள்.

"சரி, உன்னிடத்தில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்" என்று சொல்லிவிட்டுப் பங்குப் பணியாளர் அவளிடம், "விளக்கை எங்கு ஏற்றி வைப்பார்கள்?" என்றார். "நான் சொன்னதற்கும் நீங்கள் கேட்கும் கேள்விக்கும் என்ன சம்பந்தம்?" என்று அவள் கேட்டபோது, பங்குப் பணியாளர் அவளிடம், "சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பேனா, நான் கேட்டதற்குப் பதில் சொல்" என்றார். அதற்கு அவள், "இருள் நிறைந்த இடத்தில்தான் விளக்கேற்றி வைப்பர்" என்றாள்.

"மிகச் சரியாகச் சொன்னாய். இருள் நிறைந்த இடத்தில்தான் விளக்கேற்றி வைப்பார்கள். அதுபோன்று கிறிஸ்தவர்களே இடத்தில் ஒரு நல்ல கிறிஸ்தவராக வாழ்வதுதான் சிறந்தது. பிறர் உன்னைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள் என்பதற்காக நீ வேறோர் இடத்திற்கு வேலைக்குச் செல்வது நல்லதல்ல. நீ இருக்கின்ற இடத்திலேயே நல்லதொரு கிறிஸ்தவளாக வாழ். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பார்" என்று பங்குப் பணியாளர் அவளிடம் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைத்தார். இதன்பிறகு அந்த இளம்பெண் தான் பணியாற்றி வந்த இடத்தில் நல்லதொரு கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தாள். இதனால் அவளோடு பணி செய்த ஒன்பது பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆம், பிற சமயத்தவர் மிகுதியாகப் பணியாற்றிய ஒரு நிறுவனத்தில், தன்னுடைய எடுத்துக்கட்டான வாழ்வால் எழுந்து ஒளிவீசி, பலரும் கிறிஸ்துவின்மீது நம்பிக்கைக் கொள்ளக் காரணமாக இருந்தாள் அந்த இளம்பெண். இன்று நாம் ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மகிழ்ச்சி பொங்கும் இப்பொன்னாளில் இப்பெருவிழா நமக்கு "எழுந்து ஒளிவீசு" என்ற செய்தியைத் தருகின்றது. நாம் எப்படி எழுந்து ஒளிவீசுவது என்று சிந்திப்போம்.

எழுந்தார்; ஒளிவீசினார்:
ஆண்டவர் இயேசு பிற இனத்தாராகிய மூன்று ஞானிகளுக்கும் தன்னை வெளிப்படுத்தியதை இன்று நாம் 'ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா' என்று கொண்டாடுகின்றோம். இயேசு தன்னை மூன்று ஞானிகளுக்கும் வெளிப்படுத்தியதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர் விண்மீனாய் எழுந்தார்; ஒளி வீசினார் என்று சொல்லலாம். அதனாலேயே அவரைக் காண மூன்று ஞானிகளும் பெத்லேகிமிற்கு வந்தார்கள். இதை உறுதி செய்வதாய் இருக்கின்றது மூன்று ஞானிகளும் ஏரோதிடம் சொல்லும், "அவரது விண்மீன் எழக் கொண்டோம்" என்ற வார்த்தைகள். மேலும், இவ்வார்த்தைகள், "யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்" (எண் 24:17) என்ற பாலாமின் இறைவாக்கை நிறைவு செய்கின்றன.

முன்னதாக, இயேசு இடையர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தினார். இப்பொழுது அவர் பிற இனத்தாராகிய மூன்று ஞானிகளுக்கும் வெளிப்படுத்துகிறார். தனது திருமுழுக்கின்போது தன்னை அவர் உலகிற்கு வெளிப்படுத்துவார். தனது பணிவாழ்வு முழுவதும் தன்மீது நம்பிக்கைகொண்ட ஏழைகள், பாவிகள், வரிதண்டுவோர், நூற்றுவத் தலைவர், கானானியப் பெண்மணி, சமாரியப் பெண்மணி, கிரேக்கர் போன்ற பிற இனத்தவர் பலருக்கும் தன்னை வெளிப்படுத்தினார். இவ்வாறு இயேசு விண்மீனாய், உலகின் ஒளியாய் (யோவா 8:12) எழுந்து ஒளிவீசினார். இவை எல்லாவற்றிற்கும் அவர் இறந்து உயிர்த்து எழுந்து ஒளிவீசினார். இதன்மூலம் இயேசு நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் எழுந்து ஒளிவீசுவதற்கு முன்மாதிரி காட்டியிருக்கின்றார்.

எழுந்து ஒளிவீச அழைப்பு
ஆண்டவரின் திருநகராம் எருசலேமை முன்னிட்டு இறைவாக்கினர் எசாயா கூறும், "எழு! ஒளிவீசு!" என்ற வார்த்தைகள், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டு, எல்லாமே முடிந்துவிட்டு என்றிருந்த யூதா நாட்டிற்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தரக்கூடிய வார்த்தைகள். என்றாலும், எழுந்து ஒளிவீசு என்ற அழைப்பானது, ஆண்டவரால் முதுபெரும் தந்தை ஆபிரகாம் மூலம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது (தொநூ 12:3). இஸ்ரயேல் மக்கள் அனைவரும் எழுந்து ஒளிவீசுப் பிற இனத்தாருக்கு ஒளியாக, ஆசியாக இருந்திருக்க வேண்டும் (எசா 49:6). அவர்ரகள் அவ்வாறு இல்லாமல் அல்லது உண்மைக் கடவுளை வழிபடாமல், வேற்று தெய்வத்தை வழிபட்டு பிற இனத்தருக்குத் துன்மாதிரியாய் இருந்ததால், கடவுள் மீண்டுமாக அவர்களிடம், "எழுந்து, ஒளிவீசு" என்ற அழைப்பினைத் தருகின்றார்.

மண்ணாக எருசலேமில் இருந்தவர்களுக்கு எழுந்து ஒளிவீச அழைப்புத் தரப்பட்டிருக்கின்றது என்பதால், விண்ணக எருசலேமில் இடம்பெறப் போகும் நாம் எழுந்து ஒளி வீசுவது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

எப்படி நாம் எழுந்து ஒளிவீசுது?
இயேசு தமது வாழ்வாலும் வார்த்தையாலும் எழுந்து ஒளிவீசி இருக்கையில், அவரது முன்மாதிரியைப் பின்பற்றி, அவர் வழிநடக்கும் ஒவ்வொருவரும் எழுந்து ஒளிவீசுவது இன்றியமையாதது. எப்படி எழுந்து ஒளிவீசவது என்பதற்கான தெளிவினை இன்றைய இரண்டாம் தருகின்றது.

இரண்டாம் வாசகத்தில், "நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் ஆகியிருக்கின்றார்" என்கிறார் பவுல். அப்படியெனில், ஒருவர் பணக்காரராக, உயர்குடியினராக, குறிப்பிட்ட இனத்தில் பிறந்தவர் என்பதற்காக அவர் இயேசுவின் உடன் உரிமையாளர் ஆகிவிட முடியாது. மாறாக, அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் கேட்டு, அதன்மீது, ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வதன் மூலமாகவே ஒருவர் கிறிஸ்துவின் உடன் உரிமையாளர் ஆக முடியும்.

இயேசுவைக் காணவந்த மூன்று ஞானிகளும் பிற இனத்தாராக இருந்தாலும், இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு அவரைத் தேடி வந்ததால், அவர்கள் கடவுளுக்கு உரியவர்கள் ஆனார்கள். இயேசு எந்த இடத்தில் பிறப்பார் என்று தெரிந்திருந்தும், அவர் பிறந்தபோது, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல், அவரைக் காணச் செல்லாத மறைநூல் அறிஞர்கள் பிறப்பால் யூதர்களாக இருந்தாலும் அவர்கள் பிற இனத்தவர் ஆகின்றார்கள். ஆதலால், நமது பிறப்பு அல்ல, நாம் வைத்திருக்கும் பணமும் அதிகாரமும் அல்ல, ஆண்டவர்மீது நாம் கொள்ளும் நம்பிக்கையும் அதற்கான தேடலுமே நம்மை ஆண்டவருக்கு உரியவர்கள் ஆக்கும்; அப்பொழுது நம்மால் ஒளிந்து ஒளிவீச முடியும். நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, எழுந்து ஒளிவீசத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனைக்கு:
'பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போல என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்' (தானி 12:3) என்கிறது இறைவார்த்தை. எனவே, நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி எழுந்து, ஒளிவீசுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,

 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
ஆண்டவரின்‌ திருக்காட்சிப்‌ பெருவிழா

இயேசு ஒரு குறிப்பிட்ட இனத்தார்க்கு மட்டும்‌ சொந்தமல்ல. அவர்‌ எல்லார்க்கும்‌ சொந்தமானவர்‌ என்பதைச்‌ சுட்டிக்‌ காட்டுகிறது இன்றையப்‌ பெருவிழா.

எட்டுத்‌ திக்கு மக்களும்‌ இறைவனின்‌ மக்களே என்பதைச்‌ சுட்டிக்காட்டவே கிழக்கிலிருந்து (மத்‌. 2:1) மூன்று ஞானிகள்‌ புறப்பட்டு இயேசுவைக்‌ காணச்‌ "சென்றார்கள்‌ என்று திருவிவிலியம்‌ கூறுகிறது.

இயேசு எல்லார்க்கும்‌ மகிழ்ச்சியூட்டும்‌ நற்செய்தியைக்‌ கொண்டு வந்தவர்‌. இதனால்தான்‌ அவர்‌ பிறந்தபோது விண்ணகத்‌ தூதர்‌ பேரணி, உன்னதத்தில்‌ கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!

உலகில்‌ அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! (லூக்‌. 2:13-14) எனக்‌ கடவுளைப்‌ புகழ்ந்தது! ஆம்‌. இயேசு நன்மனம்‌ படைத்த அனைவருக்கும்‌ சொந்தமானவர்‌.

அவர்‌ வாழ்ந்தபோது எந்த இனத்தாரையும்‌ அவர்‌ புறக்கணிக்க வில்லை! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌, நான்‌ உங்களுக்கு இளைப்பாறுதல்‌ தருவேன்‌ (மத்‌. 11:28) என்றார்‌.

அவர்‌ சாகும்போது, தந்தையே இவர்களை மன்னியும்‌ (லூக்‌. 23:84அ) எனச்‌ சொல்லி பாவிகள்‌ எல்லாருக்காகவும்‌ செபித்தார்‌.

இன்றும்‌ கேட்பவர்கள்‌ அனைவருக்கும்‌ தூய ஆவியைத்‌ தந்து (லூக்‌. 11:9-13) அருங்கொடைகள்‌ அனைத்திற்கும்‌ ஆதி காரணமாக விளங்கி வருகிறார்‌.

நமது ஆண்டவர்‌ அனைவரையும்‌ அன்பு செய்யும்‌ ஆண்டவராக விளங்குவதால்‌, நாம்‌ எந்த வேற்றுமையும்‌ பாராட்டாது அனைவருக்கும்‌ அன்பு நண்பர்களாக விளங்க வேண்டும்‌. பிற இனத்தாரும்‌ நமது பங்காளிகளே என்கிறார்‌ புனித பவுல்‌ (எபே. 3:6).

ஒளிவீசும்‌ ஞாயிறைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

குளிர்‌ சிந்தும்‌ திங்களைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை!

ஆடி வரும்‌ தென்றலைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

ஓடி வரும்‌ அருவியைப்‌ பார்க்கிறோம்‌. அது வேற்றுமை பாராட்டுவதில்லை.

மலர்‌, மணம்‌, தேன்‌, சுவை, கடல்‌, கரை இவை யாவும்‌ வேற்றுமை பாராட்டுவதில்லை! நாம்‌ மட்டும்‌ ஏன்‌ வேற்றுமை பாராட்ட வேண்டும்‌? நாம்‌ இயற்கையின்‌ மணி மகுடமல்லவா?

அன்று ஒளியாய்ப்‌ பிறந்து (எசா. 6:1) ஞானஒளி வீசி பிற இனத்தாரை தம்மை நோக்கி "ஈர்த்தார்‌ இயேசு! வந்தவர்‌ அனைவரும்‌ அவரைக்‌ கண்டு அவரிடமிருந்து அமைதியும்‌, மகிழ்ச்சியும்‌, நம்பிக்கையும்‌ பெற்று வீடு திரும்பினர்‌! அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாம்‌ மற்றவர்களை நம்பால்‌ ஈர்க்கும்‌, வாழ்வளிக்கும்‌ ஒளி விளக்காகத்‌ திகழ வேண்டும்‌.
 

எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்தும் கடவுள்


நிகழ்வு: இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண்டார்கள். அப்பொழுது ஒருவர் மற்றவரிடம், "கடவுள் இருக்கிறாரா?" என்றார். "ஆம். இதில் என்ன சந்தேகம்?" என்றார் மற்றவர். உடனே முதலாமவர், "கடவுள் இருக்கிறார் என்று சொல்கிறீர்... அப்படியானால் ஏன் அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை" என்றார். இரண்டாமவரோ, "எல்லாருக்கும் தென்படவேண்டும் என்பதற்காகவே அவர் ஒருவருக்குத் தென்படாமல் இருக்கிறார்" என்றார்.

"நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை; சற்று விளக்கமாக சொல்லும்" என்று முதலாமவர் கேட்டபொழுது, இரண்டாமவர் அவரைத் தன் அறைக்கு அழைத்துச்சென்று மின்விசிறியைக் காட்டி, "இந்த மின்விசிறியில் எத்தனை இறக்கைகள் உள்ளன?" என்றார். அதற்கு முதலாமவர் "மூன்று" என்று பதிலளித்தார். பின்னர் இரண்டாமவர் மின்விசிறியை சுழலவிட்டார். அது வேகமாகச் சுழன்றது. அதைப் பார்த்துவிட்டு இரண்டாமவர் முதலாமவரைப் பார்த்து, "இப்போது மின்விசிறியில் இருக்கும் இறக்கைகள் உன்னுடைய கண்களுக்குத் தெரிகின்றனவா?"என்றார். "தெரியவில்லை. ஆனால் உணரமுடிகிறது" என்றார் முதலாமவர்.

"மிகச் சரியாய் சொன்னீர்" என்ற இரண்டாமவர், தொடர்ந்து அவரிடம் பேச தொடங்கினார்: "மின்விசிறி சுழலாமல் இருந்தபோது, அதில் உள்ள இறக்கைகள் தெளிவாகத் தெரிந்தன என்றீர். அது சுழன்றபோது இறக்கைகள் இருப்பது உனக்குத் தெரியவில்லை என்கிறீர். இதற்குக் காரணம், மின்விசிறி சுழன்றுகொண்டே இருப்பதால்தான். இதுபோன்றுதான் கடவுள். கடவுள் எங்கும் சுழன்றுகொண்டே இருக்கிறார் அல்லது அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். இப்படி அவர் எங்கும் வியாபித்திருப்பதால், உனக்கும் எனக்கும் மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது."

ஆம். கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார்; எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கின்றார். அதனாலேயே அவர் ஒருவருடைய கண்களுக்குத் தென்படுவதில்லை; அவரை உணர மட்டுமே முடிகிறது. இன்று நாம் எல்லாருக்கும் பொதுவான கடவுளாகிய இயேசு தன்னை உலகிற்கு வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன? இவ்விழாவிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்திய இயேசு
மத்தேயு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதை குறித்துக் வாசிக்கின்றோம். இந்தக் கீழ்த்திசை ஞானிகள் அரசர்களாக இருக்கலாம் என்பதை இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், வருகின்ற, "மன்னர் உன் உதய கதிர்நோக்கி நடைபோடுவர்"(எசா 60:3) என்ற இறைவார்த்தை எடுத்தியம்புதாக இருக்கிறது. ஆம் மன்னாதி மன்னரான இயேசுவைப் பார்க்க மன்னர்கள் வந்தார்கள். அவர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்தினார்.

லூக்கா நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி நடைபெறக்கூடிய நிகழ்வுகளில், இடையர்களுக்கு ஆண்டவர் இயேசு தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கிறோம். மத்தேயு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, அரசர்களுக்கு அல்லது ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துவதாக வாசிக்கின்றோம். இவையெல்லாம் நமக்கு ஓர் உண்மையை உரக்கச் சொல்வதாக இருக்கிறது. அது என்னவெனில் கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர் என்பதாகும். ஆம். கடவுள் யூதருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் பொதுவானவராக இருக்கிறார். அதனாலேயே அவர் கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகளுக்கும் சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் தன்னை வெளிப்படுத்திகின்றார்.

இதில் வேடிக்கை என்னவெனில், எங்கோ இருந்து வந்த புறவினத்து மக்களான கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவனுடைய திருக்காட்சியைக் கண்டார்கள்; ஆனால் எருசலேமில் இருந்த தலைமைக் குருக்களும் ஏரோது அரசனும் இயேசுவைக் கண்டு கொள்ள முடியவில்லை. அதற்கு முக்கியமான காரணம், கீழ்த்திசை ஞானிகள் இயேசுவை நல்ல உள்ளத்தோடு தேடினார்கள். அதனால்தான் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சியைக் கண்டார்கள். கொடுங்கோலன் ஏரோதைச் சார்ந்தவர்களும் இயேசுவைக் கொல்லவேண்டும் என்று தேடினார்கள். அதனால் அவர்களால் இயேசுவை கண்டுகொள்ள முடியவில்லை. நாம் எத்தகைய மனநிலையோடு இயேசுவைத் தேடுகிறோம் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பலநேரங்களில் நாம் இயேசு நல்ல மனதோடு தேடுவதில்லை; தன்னால நாட்டங்களுக்கத் தேடுகின்றோம். அதனாலேயே இயேசுவைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றோம். எப்பொழுது நாம் இயேசுவை நல்ல மனத்தோடு அல்லது நேர்மையான உள்ளத்தோடு தேடுகின்றோமோ (எபி 10:22) அப்பொழுது அவரைக் காண்போம் என்பது உறுதி.

பிற இனத்தவரும் இயேசுவின் உடன் பங்காளிகளாக முடியும்
ஆண்டவர் இயேசுவின் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்தக்கூடிய இரண்டாவது முக்கியமான செய்தி, பிற இனத்தவரும் இயேசுவின் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளுமாக மாறமுடியும் என்பதாகும்.

பிறப்பினால் இயேசு யூதர்களுக்குச் சகோதரராக இருக்கமுடியும். இத்தகைய பேறு மற்ற இனத்தவருக்குக் கிடைக்காமல் போகலாம்; ஆனால் நர்செஇதியிநால் இயேசுவினுடைய உடன் உரிமையாளரும் உடன் பங்காளிகளாகவும் முடியும். அதைப் புனித பவுல் மிக அழகாகச் சுட்டிக்காட்டுகிறார். மத்தேயு நற்செய்தி பன்னிரண்டாவது அதிகாரத்தில் கூட, இயேசு இதே செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறார். அங்கு அவர், "விண்ணுலகில் இருக்கின்ற என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என்னுடைய தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார்" (மத் 12:50) என்பார். அப்படியானால் நாம் நற்செய்தியின் மூலம், அதாவது இயேசு கிறிஸ்துவின் மூலம், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவருடைய சகோதரர் சகோதரிகளாக மாற முடியும் என்பது உறுதி.

ஆண்டவரைத் தேடுவோருக்குக் கிடைக்கும் ஆசி
ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற மூன்றாவது மிக முக்கியமான செய்தி, ஆண்டவரைத் தேடுவோர்க்கு அவர் தரும் மகிழ்ச்சியாகும். கீழ்த்திசை ஞானிகள் ஆண்டவரைத் தேடி வந்தபோது அவரைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். ஆம் யாரெல்லாம் ஆண்டவரைத் தேடுகிறார்களோ அதுவும் நல்ல, நேர்மையான உள்ளத்தோடு தேடுகிறார்களோ அவர்களுக்கு ஆண்டவர் மகிழ்ச்சியும் இன்னபிற ஆசியையும் தந்து, அவர்களைத் தன்னுடைய அருளால் திரும்புகிறார். இது உறுதி. திருப்பாடல் ஆசிரியர்கூட, "சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரைத் நாடுவோருக்கு நன்மையும் எதுவும் குறைவுபடாது"(திபா 34: 10) என்று கூறுவார்.

ஆகவே, நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று ஆண்டவரை தேடிச்செல்வோம். அதன் மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிரம்பப் பெறுவோம்.

சிந்தனை
"ஆண்டவரைத் தேடுங்கள்; வாழ்வீர்கள்"(ஆமோ 5:4) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகவே நாம் கீழ்த்திசை ஞானிகளைப் போன்று நல்ல மனத்தோடு ஆண்டவரை தேடிச் செல்வோம் அதன்மூலம் அவர் தருகின்ற மகிழ்வையும் எல்லாவிதமான ஆசியையும் நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்

 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
இறைவா, எங்களுக்குப் போதுமான ஞானத்தைத் தாரும்!

சாதாரணமாக நம் வாழ்க்கையை இருள்மயமாக்குவது மூன்று வித நோய்கள் : உடல் நோய், உள்ள நோய், மரண நோய்.

எல்லா நோய்களிலிருந்தும் நமக்கு விடுதலையை அளித்து நமக்கு ஒளிமயமான வாழ்வை வழங்க நம் நடுவே இயேசு உலகின் ஒளியாகப் பிறந்திருக்கின்றார் (நற்செய்தி).

மத் 9:27-31: அங்கே பிறவியிலிருந்தே கண் தெரியாத இருவரைச் சந்திக்கின்றோம். பார்வையுள்ளோருக்கு 12 மணி நேரம்தான் இரவு; பார்வையற்றவர்களுக்கோ 24 மணிநேரமும் இரவு! பாவம்! அவர்கள் பகலைப் பார்த்ததே இல்லை! ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனையோ இராகங்கள் ; அவர்கள் இதயச் சுரங்கத்திற்குள்ளே எத்தனையோ ஆசைகள். அந்த ஆசைகளுக்குள்ளே ஒன்று இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை! அவர்களை இயேசு தொடுகின்றார் ; அவர்களது கண்கள் திறக்கப்படுகின்றன : அவர்களது வாழ்க்கையிலே ஒளி பிறக்கின்றது.

லூக் 7:36-50 : அங்கே அவள் வாழ்க்கையிலே இருள் - உள்ளத்திலே இருள்! மின்னியதையெல்லாம் பொன்னென்று நினைத்தவள் அவள் ; வெளுத்ததையெல்லாம் பாலென்று நினைத்தவள் அவள் ; நிழலையெல்லாம் நிஜமென்று நினைத்தவள் அவள் ; ஏமாந்து போனவளாய், ஏமாற்றப்பட்டவளாய், எங்கே ஒளி கிடைக்கும் என்று ஒளியைத் தேடி அலைந்தாள்.

இறுதியாக காயப்பட்ட பறவையாக, ஒளிவிளக்காம் இயேசுவின் பாதத்திற்குக் கொண்டுவரப்பட்டாள் : மன்னிக்கப்பட்டாள் ; ஒளியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

யோவா 11:1-44 : அங்கே அந்தக் கல்லறையில் இலாசரை வைத்து நான்கு நாள்களாகியிருந்தன! இலாசர் இருளுக்குள் உறங்கிக் கொண்டிருந்தார். இயேசு. இலாசரே வெளியே வா என்றதும் அவர் எழுந்து வெளிச்சத்திற்கு வந்தார்.

இதோ. நோயின் இருளையும், பாவ இருளையும், மரண இருளையும் அகற்றி மக்களையெல்லாம் வாழ்வாங்கு வாழவைக்க இயேசு நம் நடுவே பிறந்திருக்கின்றார். உங்கள் அனைவரையும் நான் வளமுடன் வாழவைக்கின்றேன். நீங்கள் என்னைத் தேடிவந்து என்னிடமிருந்து உங்களுக்கு வேண்டிய வரங்களைப் பெற்றுச் செல்லுங்கள் என்கின்றார்.

இன்று நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே! நம் நடுவே பிறந்திருக்கும் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (இரண்டாம் வாசகம்]. அவர் அனைத்து ஆசிகளையும் நம்மீது பொழிய வல்லவர் என்று நாம் நம்ப வேண்டும்.

நம்பிக்கை பிறப்பது அறிதலிலிருந்து. இயேசுவைப் பற்றி எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் அறிகின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர்மீது நம்பிக்கை வைப்போம். நாம் இயேசுவைப் பற்றி அறிய பல வழிகள் உள்ளன. அவற்றில் ஓர் அருமையான வழி,தூய ஆவியாரை நோக்கி, தூய ஆவியாரே உமது முதல் வரமாகிய ஞானத்தை [முதல் வாசகம்] எனக்குத் தாரும் என்று மன்றாடுவதாகும்.

இதுவரை எத்தனையோ வரங்களை நாம் கடவுளிடம் கேட்டிருக்கின்றோம். ஒரு பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பு மாணவ, மாணவிகளைப் பார்த்து, கடவுள் உங்களுக்கு முன் தோன்றி உங்களுக்கு என்ன வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்? என்றேன். இரண்டு தேன் மிட்டாய்கள் என்றான் ஒரு சிறுவன். யாருக்கு? என்றேன். ஒன்று எனக்கு, இன்னொன்று என் தங்கச்சிக்கு என்றான். கடவுள்தான் உன் முன்னால் நிற்கின்றாரே, ஒரு மூட்டை மிட்டாய் வாங்கி எல்லாருக்கும் கொடுக்கலாமே என்றேன். அவனும், கொடுக்கலாமே என்றான்.

ஒரு நாள் ஒரு முதியோர் இல்லத்திலுள்ள தாத்தா, பாட்டிகளைப் பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும்? என்றேன். ஆளுக்கொரு பல்செட் வாங்கித் தாங்களேன் என்றார்கள்! இப்படி எத்தனையோ ஆசைகள் நமது மனத்திற்குள் எழுந்து மறைகின்றன.

இன்று. இயேசுவே, உம்மை வெறும் தலைவராக மட்டுமல்ல, பெரிய சூப்பர் ஸ்டாராக மட்டுமல்ல. உம்மை ஆற்றல்மிக்க, எங்களை வாழவைக்கும் கடவுளாக, எங்கள் வாழ்வின் மையமாக. எப்படிப்பட்ட இருளையும் போக்கும் பரமனாக ஏற்றுக்கொள்ள எங்களுக்குப் போதிய ஞானத்தையும், இறையறிவையும் தாரும் என்று மன்றாடுவோம். மேலும் அறிவோம் :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).

பொருள் :
இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.
 
இயேசு நமக்குக் காட்சி தருவாரா?
கடவுள் யாருக்குக் காட்சி கொடுப்பார் என்பதை இன்றைய விழா நமக்குக் கற்பிக்கின்றது!

இயேசு பிறந்தபோது அவரை இடையர்கள் தேடிச் சென்றனர்; ஞானிகள் தேடிச் சென்றார்கள்; ஏரோது மன்னன் தேடினான்; அவனுடைய ஆள்கள் தேடினார்கள்.

ஆனால் முதல் இரண்டு பிரிவினருக்கு மட்டும்தான் இயேசு காட்சித் தந்தார். ஏரோதிற்கும், அவனுடைய ஆள்களுக்கும் இயேசு காட்சி தரவில்லை ! காரணம், இடையர்களும் ஞானிகளும் தங்களிடமுள்ளதை இயேசுவுக்கு கொடுக்கச் சென்றார்கள். ஆனால் நரரோதும் அவனுடைய ஆள்களும் இயேசுவின் உயிரை எடுக்க அவரைத் தேடினார்கள் (மத் 2:16-18).

இடையர்கள் தங்களது பாராட்டையும், மகிழ்ச்சியையும், பாடலையும் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அவரைத் தேடினார்கள் (லூக் 2:20). ஞானிகள் தங்கள் வணக்கத்தையும் (மத் 2:2) பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாகக் கொடுக்க இயேசுவைத் தேடினார்கள் (மத் 2:11). எடுக்க நினைத்தவர்களுக்குக் குழந்தை இயேசு காட்சிக் கொடுக்கவில்லை; கொடுக்க நினைத்தவர்களுக்கே அவர் காட்சி கொடுத்தார்!

கடவுள் நமக்குக் காட்சி தர வேண்டுமானால், அவரது ஆசியை நாம் பெற விரும்பினால், நாம் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவேண்டும்! கொடுப்பவர்களுக்கு இறைவனின் ஆசி கிட்டும் என்பதற்கு விவிலியத்திலிருந்து இதோ இரண்டு உதாரணங்கள்.

ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பது (தொநூ 17:1). ஆனால் அவருக்குக் குழந்தை இல்லை! அவரது மனைவி ஒரு கிழவி (தொநூ 18:12). ஆபிரகாம் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்ந்தவர்! ஆனால் அவர் கேட்ட பிள்ளை வரம் அவருக்குக் கிடைக்கவில்லை. உயர்ந்த, உன்னதமான இறை நம்பிக்கையாளருக்குக் கடவுளுடைய ஆசி கிடைக்கவில்லை!

எப்போது அவருக்கு ஆசி கிடைத்தது தெரியுமா? அவர் முன்பின் தெரியாத மூன்று மனிதர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உபசரித்தபோதுதான் அவருக்குக் குழந்தை வரம் கிடைத்தது (தொநூ 18:1-15).

புதிய ஏற்பாட்டில் பெரும்பாவியான சக்கேயு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகின்றேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகின்றேன் (லூக் 19:8) என்று கூறியபோதுதான் சக்கேயுவுக்கு இயேசு மீட்பராகக் காட்சியளிக்கின்றார்.

இயேசுவுக்கு ஒருவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது முக்கியமில்லை. ஞானிகள் கிழக்கிலிருந்து எருசலேமுக்கு வந்தார்கள். இயேசுவுக்கு ஒருவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமல்ல (முதல், இரண்டாம் வாசகங்கள்). ஞானிகள் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

இயேசுவுக்கு வேண்டியதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கும் மனம் உள்ளதா என்பதுதான். நாம் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஆனால் அதே நேரத்தில் புனித யாக்கோபு சொல்வதையும் நம் நினைவில் கொள்ளவேண்டும். கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள்; நல்லதுதான். பேய்களும்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன (யாக் 2:19). நம்மிடம் நம்பிக்கை உண்டு என்றால் அதைச் செயலில் காட்ட வேண்டும் (யாக் 2:14) என்கின்றார் புனித யாக்கோபு. செயல்களிலெல்லாம் சிறந்த செயல் நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்குக் கொடுத்தலாகும் (1 கொரி 13:13).

ஞானிகளிடமிருந்தது போல, நம்மிடம் பொருளிருந்தால் பெட்டியைத் திறந்து மற்றவர்க்குப் பொருளைக் கொடுப்போம்; அது இல்லையென்றால் இடையர்களைப் போன்று நமது அர்த்தமுள்ள வார்த்தைகளை சிறப்பாக வறியோருக்கு வாரி வழங்குவோம்! அப்போது எந்தக் குழந்தை இயேசு ஞானிகளுக்கு காட்சியளித்தாரோ அதே குழந்தை இயேசு நமக்கும் காட்சியளித்து நமக்கு ஆசியளிப்பார்.

மேலும் அறிவோம்: இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள்: 229).

பொருள்: பெரிதும் தேடித் திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்று தாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.
ஆயர் F. அந்தோனிசாமி
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஆண்டவரின் திருக்காட்சி

இந்துக்களுக்கு ஒரு கடவுள், இஸ்லாமியருக்கு ஒரு கடவுள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கடவுள் என்று மூன்று கடவுள் இல்லை. கடவுள் ஒருவரே. அவர் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2: 4-5), மேலும் பேதுரு கூறுவதுபோல, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை; எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடப்பவர் அவருக்கு ஏற்புடையவர்" (திப 10: 34-35)

மீட்பு என்பது யூத இனத்தாருக்கு மட்டும் உரிய தனியுடைமை அல்ல; மாறாக, அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடைமை என்பதை இன்றையப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது. யூதர்கள் அவர்கள் மட்டுமே மீட்படைவர், மற்றவர் மீட்படையமாட்டார்கள் என்று தவறாக எண்ணினர். ஆனால் உண்மையில் பிற இனத்தவர் மீட்பரை ஏற்றுக் கொண்டனர்: யூத இனத்தார் மீட்பரை ஏற்றுக் கொள்ளவில்லை. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11),

இன்றைய அருள்வாக்கு வழிபாடு பிற இனத்தாரும் மீட்படைவர் என்ற உண்மையை எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "பிற இனத்தார் உள் ஒளியை நோக்கி வருவார்கள்" (எசா 60:3). பதிலுரைப்பாடல் கூறுகிறது, "மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர்" (திபா 72:11). இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "பிற இனத்தாரும் யூத இனத்தாருடன் ஒரே உரிமைப்பேற்றிற்கு வாரிசுகள்" (எபே 3:6). இன்றைய நற்செய்தியில், பிற இனத்தைச் சார்ந்த ஞானிகள் குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு. அவரை ஆராதித்து, அவருக்குக் காணிக்கை செலுத்துகின்றனர் (மத் 2:11).

நாம் அனைவரும் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். கடவுள் தமது அளப்பரிய அன்பிலே நம்மையும் மீட்புக்குத் தகுதியுள்ளவர்களாகத் தேர்ந்து கொண்டார். எனவே அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்போம். "பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும்ஆண்டவரைப் போற்றுங்கள்" (திபா 117:1),

ஓர் இளைஞள் ஓர் இளம் பெண்ணைக் காதலித்தான். பெண் வீட்டார் அவர்களின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் காதலன் தன் காதலியிடம், "நீ கட்டிய புடவையுடன் வா: காலமெல்லாம் உன்னைக் கண் கலங்காமல் காப்பாற்றுவேன்" என்று உறுதி அளித்தான். ஆனால் அந்தப் பெண் 10 புடவைகளுடன் வந்தாள். ஏன் என்று கேட்டதற்கு, "இந்தப் பத்துப் புடவைகளும் நான் கட்டிய புடவைகள்" என்றாள்!

ஒரு பெண் தன் காதலனை நம்பித் தன்னுடைய பெற்றோர், உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் விட்டு விட்டுக் கட்டிய புடவையுடன் வர முடியும் என்றால், நாம் கடவுளை நம்பி அவரிடம் ஏன் சரண் அடையக் கூடாது? கீழ்த்திசை ஞானிகள் தங்களுடைய சொந்தம் பந்தம், சொத்துப் பத்து எல்லாவற்றையும் விட்டு விட்டு விண்மீனை நம்பி தங்கள் நம்பிக்கைப் பயணத்தை மேற்கொண்டனர். கிறிஸ்தவ வாழ்வு ஒரு துணிச்சலான பயணம். அதனை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோமா?

கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளத் திருத்தூதர் பவுல் அனைத்தையும் குப்பையெனக் கருதினார் (பிலி 3:8). கடந்ததை மறந்துவிட்டு முன் இருப்பதைக் கண்முன் கொண்டு இலக்கை நோக்கி ஓடினார் (பிலி 3:13-14), இறுதியாக ஓட்டத்தை முடித்துக் கொண்டு வெற்றிவாகை சூடினார் ( 2திமொ 4:7-8), வேதனையோ நெருக்கடியோ, சாவோ வாழ்வோ எதுவுமே அவரைக் கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முடியவில்லை (உரோ 8:35-39).

வாழ்க்கையில் எழும் தடைகளைக் கண்டு மலைத்துப்போய் மனமுடைந்து போகிறவர் மனிதர் அல்லர். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக்கொள்ள வேண்டும். தண்ணீர் ஓடும் திசையில் செத்த பிணம்கூடச் சிரமமின்றிப் போகும். ஆனால் தண்ணீர் ஓடும் திசைக்கு எதிராக நீந்த வேண்டுமென்றால் அதற்குத் துணிச்சல் வேண்டும். இதுவரை பலர் தடந்த பழைய பாதையில் நடப்பது எளிது, ஆனால் இதுவரை எவருமே நடக்காத புதிய பாதையில் சென்றவர்கள்தான் சாதனையாளர்களாக மாறினார்கள். மற்றவர்கள் முகவரியில்லாமல் மறைந்தனர்.

கீழ்த்திசை ஞானிகள் பல தடைகளைச் சந்தித்தனர். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்து தங்களது குறிக்கோளை அடைந்தனர். இலக்குத் தெளிவு உடையவர்கள். துணிச்சலுடன் செயல்படுபவர்கள், இலக்கை அடைவர் என்பது உறுதி.

எண்ணியார் எண்ணியாங்கு எய்துப எண்ணியாச்
திண்ணியர் ஆகப்பெரின் (குறள் 666)

கீழ்த்திசை ஞானிகள் கிறிஸ்துவைச் சந்திக்க விண்மீன் உதவியதுபோல, நம்மைச் சுற்றி வாழ்கின்ற பிற சமயத்தினர் கிறிஸ்துவிடம் வர நம் வாழ்வு ஒரு விண்மீனாக அமைவதாக, "உங்கள் ஒளி மனிதர்முள் ஒளிர்க" (மத் 5:16).
 
கத்தோலிக்கர் ஒருவர் விண்ணகம் சென்றார். விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச் சுவரைக் கண்டு பேதுருவிடம், "இந்தக் குறுக்குச் சுவருக்கு மறுபுறம் யாராவது இருக்கின்றார்களா?" என்று அவர் கேட்டதற்கு, பேதுரு அவரிடம், "நீங்கள் விண்ணகத்துக்கு வரமாட்டார்கள் என்று நினைத்த மற்ற மதத்தைச் சார்ந்தவர்களெல்லாம் மறுபுறத்தில் இருக்கின்றனர்" என்றார்! கிறிஸ்தவர்கள் மட்டும்தான் மீட்படைவார்கள், மற்ற மதத்தினர் எல்லாம் நரகத்துக்குச் செல்வார்கள் என்று ஒரு சிலர் நினைக்கின்றனர். அவ்வாறே யூதர்களும் நினைத்தனர், யூதர்கள் தான் மீட்படைவர்; பிற இனத்தவர் நரகத்தை எரியூட்டும் மரக்கட்டைகளாகக் கடவுளால் பயன்படுத்தப்படுவர் என்று அவர்கள் தப்பாக நினைத்தனர். ஆனால், கடவுள் எல்லா மனிதரும் மீட்படைய விரும்புகிறார் (1 திமொ 2:4). எந்த இனத்தவரும் கடவுளுக்கு அஞ்சி, அவருக்கு ஏற்புடையதைச் செய்தால் அவர்களும் மீட்படைவர் (திப் 10:35). மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரிய தனியுடைமையன்று, மாறாக அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொதுவுடைமை என்பதை இன்றைய பெருவிழாவும், இன்றைய அருள்வாக்கு வழிபாடும் தெளிவாக உணர்த்துகின்றன. மக்களினத்தார் அனைவரும் உன் ஒளியை நோக்கி வருவர் (முதல் வாசகம்). மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர். அவருக்கு ஊழியம் புரிவர் (பதிலுரைப் பாடல்), நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தவரும் சுவாக்குறுதியின் உடன்பங்காளிகள் (இரண்டாம் வாசகம்). பிற இலாத்தைச் சார்ந்த ஞானிகள் கீழ்த்திசையிலிருந்து பெத்லகேம் வந்து குழந்தை இயேசுவை ஆராதித்துக் காணிக்கை செலுத்தினர் (நற்செய்தி).

இன்றைய விழா பிற இனத்தைச் சார்ந்த நம்முடைய விழா. பிற இனத்தவராகிய நம்மையும் கடவுள் இருளிலிருந்து தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளார். நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம்; அரச | குருக்களின் திருக்கூட்டம்: தூய மரபினர்; கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள் (1 பேது 2:9), எனவே, நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். பொன்னையும், தூபத்தையும், வெள்ளைப் போளத்தையுமல்ல, நம்மையே கடவுளுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுப்போம். மற்றவர்களை நமது ஒளிமயமான அன்பு வாழ்வால் கிறிஸ்துவிடம் கொண்டு வரும் விண்மீனாகச் செயல்படுவோம், கீழ்த்திசை ஞானிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் என்ன ? எத்தகைய தடைகள் வந்தாலும் நமது குறிக்கோளை அடைய வேண்டும். நாம் எண்ணுவது திண்ணமாக இருந்தால் நாம் எண்ணுவதைக் கட்டாயம் அடைவோம் என்பதில் ஐயமில்லை .

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)

எந்த விண்மீனை நம்பி ஞானிகள் தங்கள் பயணத்தைத் தொடங்கினரோ அந்த விண்மீன் மறைந்துவிட்டது. ஆனால் அவர்கள் அதனால் மனமுடைந்து போகவில்லை, முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. மன்னன் ஏரோது ஒரு கொடுங்கோலன் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்கள் அவனிடம் சென்று தேவையான தடயங்களைப் பெற்று, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். மறைந்த விண்மீன் மீண்டும் தோன்றியது. அதன் துணையுடன் பெத்லகேம் சென்று குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவுடன் கண்டு ஆராதித்து, காணிக்கை செலுத்தினர். "கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல" (லூக் 9:62) என்று ஆண்டவர் கூறிய அருள்வாக்கிற்கு அவர்கள் சிறந்ததோர் இலக்கணமாகத் திகழ்கின்றனர்.

நமது வாழ்க்கையில் நமக்கென்று ஓர் இலட்சியம் வேண்டும். ஒரு மாணவன் ஒரு பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். ஒரு பெரியவர் அவனிடம், "படித்து முடித்தவுடன் என்ன செய்வாய்?" என்று கேட்டதற்கு, "புத்தகத்தை மூடிவிடுவேன்" என்றான். இன்று எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வாழ்வில் எத்தகைய கொள்கைப் பிடிப்போ இலட்சியமோயின்றித் தங்கள் பொன்னான வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் பார்த்துக் குடியரசுத் தலைவர் "கனவு காணுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். ஆனால், அவர்களோ "தாவணிக் கனவுகள்" காண்கின்றனர். "ஆடிக்குப் பின் ஆவணி, தாடிக்குப் பின் தாவணி" என்ற புதிய பழமொழி உருவாகியுள்ளது; வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. ஒரு சிலர் வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளைத் தாங்கிக் கொள்ள இயலாது. தற்கொலை முயற்சியில் இறங்குகின்றனர். தற்கொலை செய்ய முடிவு கட்டிய ஓர் இளைஞன் ஒருவருடைய, ஒரு மணி நேரச் சொற்பொழிவைக் கேட்ட பின்பு அவரிடம், "உங்களின் சொற்பொழிவு எனது தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தி விட்டது" என்றான். சொற்பொழிவாளர் அவனிடம், "எவ்வாறு?" என்று கேட்டார். அவன் அவரிடம், "இவ்வளவு மோசமான சொற்பொழிவு ஆற்றுகிறவர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது, நான் ஏன் தற்கொலை செய்யவேண்டும்?" என்று பதில் சொன்னான்.
.
நமது வாழ்வில் நமக்குப் பெரிய எதிரி தாழ்வு மனப்பான்மை, நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மைக் குறைவாக எடைபோடக் கூடாது. தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்கள் இங்கிலாந்து பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சர் கூறியுள்ளதை நினைவில் நிறுத்த வேண்டும், "காலையில் கூவுவது சேவலாக இருக்கலாம், ஆனால் முட்டையிடுவது, பெட்டைக் கோழி மட்டும்தான்". வாழ்க்கை என்பது ஒரு தொடர் தேடல். 'தேடல் உள்ளவர்களுக்கே வாழ்க்கையில் பசி இருக்கும், தேடல் உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்", ஞானிகள் தேடினர்; தாங்கள் தேடியதைக் கண்டடைந்தனர், நாமும் தேட வேண்டும்; நல்லவற்றைத் தேடவேண்டும். "தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்" (லூக் 11:9) என்று கிறிஸ்து நமக்கு உறுதி மொழி அளித்துள்ளார். வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். காயமில்லாத போர்க்களம் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி. தீ இல்லாத வேள்வி உண்டா? வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு மலையைக் கேட்டதற்கு, "ஏறிப் பார் என்றது". வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு ஆற்றைக் கேட்டதற்கு, "குதித்துப் பார்" என்றது. ஒருவர் ஓர் எறும்பைப் பார்த்து, "நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அந்த எறும்பு, "உன்னைப்போல் வீண்பேச்சுப் பேச எனக்கு நேரமில்லை. வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், என்னோடு தரையில் ஊர்ந்து வா" என்றது. புலர்ந்துள்ள புத்தாண்டில், ஞானிகளைக் கண்முன் கொண்டு, புத்தொளி பெறுவோம், தடைக்கற்களைப் படிக்கற்களாகக் கொண்டு புதிய சாதனை படைப்போம்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம். - திரைப்படப்பாடல்

அமெரிக்காவில் மூலதனம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் மூளைதனம் இருக்கிறது. சிந்திப்போம்! செயல்படுவோம்!
அருள்பணி Y. இருதயராஜ்
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
ஓர் அழைப்பு-ஓர் அறைகூவல்

வேறுபட்ட சமயங்களைச் சார்ந்த மூன்று பேர் எந்தச் சமயம் சரியானது, உயர்வானது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், பக்கத்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவரை அணுகினர்.

அந்தப் பெரியவர் சொன்னார்: "அதோ, அந்தக் குன்றைப் பாருங்கள். அதன் உச்சியில் ஒரு மாவு ஆலை! அதனைச் சென்றடைய மூன்று வழிகள் இருக்கின்றன. நேரே தெரிகின்ற பாதை சுருக்கமானது. ஆனால் செங்குத்தானது. ஏறிச் செல்லச் சிறிது சிரமமானது. பக்கவாட்டில் ஒரு பாதை. அகலமானது. ஆனால் குண்டும் குழியுமாகக் கரடுமுரடானது. இடதுபக்கமாகச் சென்றால் இன்னொரு பாதை. மலையைச் சுற்றி வளைந்து செல்லும். தூரமானது. அதே வேளையில் எளிதானது. மூன்று வழிகளுமே மாவு ஆலையில்தான் சென்று முடிகின்றன" சிறிதுநேரம் மௌனம் காத்த பெரியவர் தொடர்கிறார்: "மாவு ஆலையை அடைந்ததும் அந்த ஆலை முதலாளி "நீ எந்த வழியில் வந்தாய்?" என்று கேட்கமாட்டார். கேட்கவும் அவருக்குத் தோன்றாது. "நீ கொண்டு வந்திருக்கும் கோதுமை நன்றாக விளைந்ததா? நன்கு காய்ந்து உலர்ந்ததா? அரைப்பதற்கு ஏற்ற பக்குவத்தில் உள்ளதா?" என்று மட்டுமே கேட்பார்.

மேலே காணும் கதையாகட்டும், கீழ்த்திசை ஞானிகளின் வருகையாகட்டும் உணர்த்துகின்ற உண்மை ஒன்றே! எந்த ஒரு சமயமும் கடவுளைத் தனி உடைமையாக உரிமை கொண்டாட முடியாது. இஸ்ரயேலரோ, பிற இனத்தவரோ எல்லா மக்களுக்கும் உரியவர் கடவுள். அவர் தரும் மீட்புக்கும் விடுதலைக்கும் எல்லாச் சமயத்தினரும் உரியவரே. உண்மையோடும் நேர்மையோடும் திறந்த மனத்தோடும் கடவுளைத் தேடுபவர்கள் அவரைக் கண்டடைகிறார்கள் என்பதே கீழ்த்திசை ஞானிகள் நமக்குச் சொல்லும் செய்தி,

இந்த உணர்வைத்தான் விடுதலை தந்த மகிழ்ச்சிக் கீதமாக இறைவாக்கினர் எசாயா இசைக்கிறார்: "ஆண்டவரின் மாட்சி உன் மீது தோன்றும். பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர். மன்னர் உன் உதயக் கதிர் நோக்கி நடைபோடுவர்" (எசாயா 60:2-3). இதே உணர்வுக்குத் தனி அழுத்தம் கொடுத்துத் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நற்செய்தியின் வழியாக, பிறஇனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள்" (எபேசி.3:6)

இயேசுவைச் சந்திக்க வந்த கீழ்த்திசை ஞானிகள் யூதர்களே அல்லர்; மாறாகப் பிற இனத்தவர்தாம்! இன்னும் சொன்னால் ஆன்மீகவாதிகளோ, சமயத்தின் பிரதிநிதிகளோ கூட அல்லர். ஆனால் முழுதும் கற்ற, மெய்யுணர்ந்த சான்றோர்கள். உலகத்தின் தலைசிறந்த வரலாற்று நிகழ்வைத் தேடி கண்டுபிடித்தவர்கள். வெறுமனே தங்கள் கடமைகளையும் வாடிக்கையான நிகழ்வுகளையும் நடத்திக் கொண்டிருந்தவர்கள் அல்ல. ஆனால் நிறை உண்மையின், நிலை வாழ்வின் முழுப் பொருளையும் தேடிக் கண்டடைந்தவர்கள்!
அந்தத் தேடலின் பயனாக அவர்களுக்குத் தென்பட்டது வெறும்

வால் நட்சத்திரம் அன்று; அதற்குப் பின்னால் ஒரு மாபெரும் நற்செய்தி. விண்மீன் வெளிப்படுத்திய இறைமாட்சிமை! (It was more a theologi- cal star than an astronomical star)

கீழ்த்திசை ஞானிகள் சென்ற பாதையே கிறித்தவ வாழ்க்கை. அது அவர்கள் கால்போன பாதை அல்ல அது கரடு முரடானது, பாலை பள்ளத்தாக்கானது. மலை நதியானது! அது அவர்கள் மனம் போன பாதை, அது மூன்று படிகள் கொண்டது. தேடுதல், கண்டடைதல், அனுபவித்தல்.

1. தேடுதல் : தேடலே ஞானத்தின் தொடக்கம். வீட்டில் தொலைத்த சாவியை நினைத்து வெளிச்சம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக வீதியில் தேடிய முல்லா அல்ல கீழ்த்திசை ஞானிகள் வானியல் நூற்கள் ஆய்வு, இரண்டாண்டுப் பயண முயற்சி, ஏரோது மாளிகையில் தகவல். அவர்கள் விண்மீனை அன்று, அதில் ஒரு செய்தியை, ஓர் அடையாளத்தைக் கண்டனர். தேடுதல் எல்லாமே உண்மையை நோக்கி இருப்பதில்லை. ஏரோதும் தேடினான் உண்மையை அறிவதற்கல்ல; உண்மையைக் கொல்வதற்கு! ஞானிகளை வழிநடத்தி வந்த விண்மீன் எருசலேம் வரவும் மறைந்து விட்டது. காரணம்? அவர்கள் தேடியது ஏரோது மாளிகையை. அங்கே உண்மை அன்று. ஏரோதின் சூழ்ச்சியும் பரிசேயரின் அகந்தையுமே இருந்தன.

2. கண்டுபிடித்தல் : வெளித்தோற்றத்தில் ஓர் ஏழைக் குழந்தைதான். அக்குழந்தையில் எப்படி இறைவனைக் கண்டு தூபத்தையும் (எண்.16:40) அரசனைக் கண்டு பொன்னையும் (1 அர.7:51) மனிதனைக் கண்டு வெள்ளைப் போளத்தையும் (யோ.19:39) காணிக்கையாக்க முடிந்தது, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்க முடிந்தது! (மத்.2:11) உண்மையின் கண்டுபிடிப்பும் மனித முயற்சி அன்று; ஆவியின் செயலே!

3. அனுபவித்தல்: நம்பிக்கை வாழ்வு வார்த்தைக்குள் அடங்காது. வாழ்ந்து பார்க்க வேண்டியது. புதிய திருப்பத்தை, புதிய மனமாற்றத்தை, புது வாழ்வை, புது வழியை உணர்த்தும். "ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டதால் வேறுவழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்" (மத்.2:12). "உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு... அவரே உன் சார்பில் செயலாற்றுவார்" (தி.பா.37:5)

திருக்காட்சித் திருவிழா ஒர் அழைப்பு - அதே சமயம் ஓர் அறை கூவலும் கூட.

1. நம்மை அவரை நோக்கி ஈர்க்கிறது. ஆகையால் அது ஓர் அழைப்பு.

2. நம்மை மாற்றுப் பாதையில் செல்லப் பணிக்கிறது. ஆகையால் அது ஒரு சவாலான அறைகூவல்.


 
நான்காவது ஞானி - திருக்காட்சிப் பெருவிழா
ஒருநாள் வான்வெளியில் சூரியன், சந்திரன், விண்மீன்களுக்கு இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. "நானே பெரியவன். நான் இல்லாமல் ஒளியேது? உயிரேது? நிலவு கூட என்னிடமிருந்துதான் ஒளியைப் பெறுகிறாய்" என்றது சூரியன். "அழகு என்றாலே நான் தானே. கவிஞனின் கண்ணில் படுகிறேன். கனவாக என்னை நினைத்த மனிதனே தேடிவந்து என்னில் கால் பதித்து விட்டான்" என்றது சந்திரன். மௌனமாக இருந்த விண்மீன் வாய்திறந்து சொன்னது: "இறைவன் குழந்தையாகப் பிறந்த போது என் ஒளிதானே அவரது பிறப்பை அறிவித்தது. கீழ்த்திசை ஞானிகளை வழிநடத்தி அவரைக் கண்டடையச் செய்தது. இன்று கூட அவருடைய பிறப்பு விழாவுக்குக் கிறிஸ்மஸ் நட்சத்திரமாக எவ்வளவு சிறப்புச் சேர்க்கிறேன்..." அதற்கு மேல் சூரியனால், சந்திரனால் எதுவும் பேச முடியவில்லையாம்!

அந்த விண்மீன் "யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலிலிருந்து செங்கோல் என்று எழும்பும்" எனத் தூய ஆவியால் ஏவப்பட்டு பிலயாம் உரைத்த யாக்கோபின் குலக்கொழுந்தாக இருக்கலாம் (எண்.2417). இறைவாக்கினர் எசாயா குறிப்பிட்டது போல் "எழு! ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது. பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்" (எசா. 60:1-3). இஸ்ரயேல் மக்கள் மேல் பெருமளவில் தோன்றிய இறைமாட்சிமையாக இருக்கலாம். கீழ்த்திசை ஞானிகள் கண்டது அந்த மாட்சிமையின் வெளிப்பாடு.

கிறிஸ்துதான் உலகை மீட்கும் உன்னத ஒளி என்ற இறைவெளிப்பாட்டினைத் தொடக்ககாலத் திருச்சபையில் பவுல் எபேசியரோடு எப்படியெல்லாம் பகிர்ந்து கொள்கிறார்! "நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்" (எபே.3:6)

ஒளியானது பாவ இருளைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளைப் புறங்காணச் செய்யும். இருண்ட இதயத்தில் நம்பிக்கைத் தீபத்தை ஏற்றும். பகைமையை நீக்கும். பாசத்தைப் பெருக்கும். அப்படிப் பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர். பிற இனத்து ஞானிகள். ஆனால் இயேசுவின் பிறப்பைக் கேட்டதும் "ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று'' (மத்.2:3) பிறருடைய அரசை வீழ்த்தவா இயேசு வந்தார்? எல்லா மக்களும் வாழ்வு பெற வேண்டும் என்றுதானே அவர் பிறப்பெடுத்தார்! திறந்த மனம், தேடும் ஏக்கம் இருந்தால் எந்த நிலையிலும் அந்தத் தெய்வத்தைக் காணலாம்.

"நான்காவது ஞானி" (The fourth magi) என்பது ஒரு கற்பனைக் கதை. அருத்தாபன் என்ற நான்காவது ஞானி மற்ற மூவருடன் தொடர்பு கொண்டு மெசியாவைத் தரிசிக்கச் செல்ல ஏற்பாடாகி இருந்தது. குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அறிவிக்கப் பட்டிருந்தார். ஆனால் இவர் தாமதமாகிவிடவே, மற்ற மூவரும் மூன்று திசைகளிலிருந்து புறப்பட்டு விண்மீன் வழியே நடக்க ஆரம்பித்து விட்டனர். அருத்தாபன் வந்த போது ஞானிகளைக் காணவில்லை. அவர் கையில் விலையுயர்ந்த மூன்று முத்துக்கள். அவர்கள் சென்ற பாதையைக் கேட்டறிந்தார். அதுவோ மிகப் பெரிய பாலைவனம். தன் குதிரையால் கடக்க முடியாது. ஆனால் மெசியாவைத் தரிசிக்க வேண்டும். என்ன செய்வது? மெசியாவுக்கென வைத்திருந்த மூன்று முத்துக்களில் ஒன்றை விற்று ஒட்டகம் வாங்கினார். பாலைவனம் கடந்தார். பல ஆண்டுகளாயின. மெசியாவை மட்டும் பார்க்க முடியவில்லை. அங்கு விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. தான் இருப்பது பாலஸ்தீன் நாடு என்பது மட்டும் தெரிந்தது. இரண்டு முத்துக்களைப் பொக்கிஷம் போல் பாதுகாத்து மெசியாவுக்கென வைத்திருந்தார்.
அதோ, தொலைவில் ஒரு பெண் தலைவிரி கோலமாக ஒடி வருகிறாள். பின்னால் ஒரு பெரிய யூதக் கூட்டமே அவளைத் துரத்தி வருகிறது. அந்தப் பெண் ஓடிவந்து இவர் காலில் விழுந்து கதறுகிறாள். விபச்சாரத்தில் பிடிபட்டவளாம், கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்களாம். புரிந்தது அருத்தாபனுக்கு. அவளைப் பின்னுக்குத் தள்ளி, தலைமைக் குருவைத் தனியே அழைத்துப் பேசி அவர் கையில் இரண்டாவது முத்தை அழுத்தினார். கற்கள் எல்லாம் கீழே விழுந்தன. கண்ணீரோடு நன்றி சொன்னாள் அந்தப் பெண்.
சில ஆண்டுகள் கழிந்தன. அருத்தாபனுக்கு வயதாகிவிட்டது. சாவதற்கு முன்பாவது மெசியாவை நான் பார்க்க முடியுமா? என்ற கேள்வியை நெஞ்சத்திலும் எஞ்சிய ஒரு முத்தைக் கையிலும் வைத்துக் கொண்டு கூனிக்கூனிச் சென்ற அர்த்தாபனுக்கு அந்தக்கூட்டம் புரிபடவில்லை. கேட்டார். யாரோ மெசியாவாம். தெய்வ நிபந்தனைக்காக அந்த மனிதனைக் கொல்லப் போகிறார்களாம். ஒடினார். எங்கும் கூட்டம் காவலர்கள் தடுத்தனர். வீட்டின் தாழ்வாரத்தில் நின்று மெசியாவைப் பார்க்க கடைசி முத்தையும் கொடுத்து விட்டு ஏறி நின்றார். மெசியாவின் பின்புறம் மட்டும் அவர் கண்ணில் பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் கூரை சரிய ஒடுகள் அருத்தாபனின் தலையைத் தாக்க, ரத்தம் வழியக் கீழே விழுகிறார். அருத்தாபன் சாகும் தறுவாயில் நினைவற்று அவர் முனகுவதை அருகிலிருந்த காவலர்கள் கேட்கின்றனர்: "எப்போது ஆண்டவரே நான் உம்மைப் பார்த்தேன்? எப்போது ஆண்டவரே நான் உமக்கு உதவி செய்தேன்?..

இறைவன் ஏதோ ஒரு விதத்தில் தன்னை வெளிப்படுத்தத்தான் செய்கிறார். மிகச்சிறியவற்றிலும் மிக எளியவற்றிலும் தன் முகத்தைக் காட்டக் கூடும். அதைக் கண்டுபிடிக்கும், உணர்ந்து அறியும் ஞானம் நமக்கு வேண்டும். கனவுகள், நிகழ்வுகள், உள்மன எச்சரிப்புகள், அனுபவ உணர்வுகள் இவை எல்லாவற்றையும் புரிந்து வாழ்க்கையில் உண்மையையும் நன்மையையும் தேடிக் கண்டுபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அப்போது நாமும் ஞானிகளே!
அருள்பணி இ. லூர்துராஜ்
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
 திருக்காட்சிப் பெருவிழா

சிறுவயதில் நான் பார்த்த கிறிஸ்மஸ் நாடகங்களில் எனக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் யார் தெரியுமா? மூன்று இராஜாக்கள். அந்த மூன்று பேரும் பளபளப்பாய் உடை அணிந்து, தலையில், தங்கக் காகிதத்தால் செய்த மகுடம் சூடிக்கொண்டு வருவார்கள். மரியா, யோசேப்பு, குழந்தை இயேசு, இடையர்கள் என்று அந்த நாடகத்தில் பங்குபெறும் எல்லாரையும் விட, இவர்களது தோற்றம் பிரம்மாதமாக இருக்கும். தங்கள் ஆடம்பர உடையால், சின்ன வயதில் என்னைக் கவர்ந்த இந்த அரசர்கள், இன்று, வேறு சில காரணங்களுக்காக என்னைக் கவர்ந்துள்ளனர். எனக்கு ஆழமான பாடங்களைச் சொல்லித்தருகின்றனர்.

மூன்று அரசர்கள், மூவேந்தர்கள் அல்லது மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த மூவரும் யார்? வரலாற்றுப்பூர்வமான, துல்லியமான பதில்கள் இந்தக் கேள்விக்கு எளிதில் கிடைக்காது. மத்தேயு நற்செய்தி 2ம்பிரிவில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த மூவரும், கடந்த 20 நூற்றாண்டுகளாக பல கோடி மக்களின் மனங்களில், பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்... முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும், இவர்களுக்கு விழா எடுப்பதற்கு.

இன்று நாம் கொண்டாடும் மூன்று அரசர் அல்லது மூன்று ஞானிகள் திருநாள், இறைவன், தன்னை, அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சித் திருநாள் எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று எண்ணிவந்த யூத குலத்தவருக்கு, இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும், அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக, தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தோன்றினார் என்பது அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா, இந்தத் திருக்காட்சி திருநாள்.

கடவுளின் பெயரால், பிரிவுகளையும், பிளவுகளையும் உருவாக்கி, அவர் பெயரால், வன்முறைகளை வளர்க்கும் பல அடிப்படைவாதக் குழுக்களை, இந்நேரத்தில் எண்ணிப் பார்ப்போம். 2023ம் ஆண்டு பிறந்ததும், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், கிறிஸ்தவ கோவில் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. அந்தக் கோவிலில் மதமாற்றம் நிகழ்ந்தது என்ற காரணத்தைக் கூறி, வன்முறை கும்பல், அந்தக் கோவிலை தாக்கியுள்ளது. இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், 2021ம் ஆண்டைவிட, 2022ம் ஆண்டில் அதிகமாக இருந்தன என்று ஊடகங்கள் கூறுகின்றன. உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகம் இருந்ததாகவும், எண்ணிக்கையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ம் ஆண்டு இந்த தாக்குதல்கள், 511 என்ற அளவில் இருந்ததாகவும், ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, வழிபாட்டுத் தலங்களில், மக்கள் கூடிவரும் வேளைகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கள், அப்பாவி மக்களின் உயிர்களை பலிவாங்கிவருவதை நாம் அறிவோம். நம்மை ஒரே குடும்பமாய் இணைக்க விரும்பும் இறைவனின் இல்லமே, நம்மைச் சிதைக்கும் போர்க்களமாக மாறிவருவது மிகவும் வேதனை தரும் ஒரு போக்கு. கடவுளின் பெயரால், பிரிவுகளையும் பிளவுகளையும் உருவாக்கும் எண்ணங்கள், இந்த புத்தாண்டில், வேரோடு களையப்பட வேண்டுமென முதலில் வேண்டிக்கொள்வோம்.

மனிதக் குடும்பம் அனைத்திற்கும் பொதுவானவர் இறைவன். திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித் தரும் முதல் பாடம் இது. உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். இது நாம் கற்றுகொள்ளக்கூடிய இரண்டாவது பாடம். இன்னும் இதில் அழகு என்னவெனில், இறைவனைத் தேடி, ஏழு கடல்களையும், மலைகளையும் தாண்டிச்செல்லத் தேவையில்லை. அவர் எப்போதும், எங்கும், நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக்கண்களை மூடிக்கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப்போல் உணர்கிறோம்.

இந்த மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்திக்க வந்த இந்நிகழ்வை, பல கோணங்களில் நாம் சிந்திக்கலாம். விண்மீன்களின் ஒளியில், இந்த ஞானிகள் வழிநடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும், நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்று சிந்திக்கலாம். இறைவனைச் சந்திக்கும்போதும், சந்தித்தபின்னரும் நம் வாழ்வுப் பாதையில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி சிந்திக்கலாம்.

விண்மீன்கள் என்றதும், மனதில் நட்சத்திரங்கள், "ஸ்டார்கள்' என்ற சொற்கள் பல எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. மழலையர் பள்ளியில் நான் பயின்ற Twinkle, twinkle little star என்ற பாடல் வரிகளில் ஆரம்பித்து, வாழ்க்கையில் ஸ்டார்களைப் பற்றி எனக்கு ஊட்டிவிடப்பட்ட கருத்துக்கள் பலவும் நினைவுக்கு வருகின்றன. இந்தியாவில், அதிலும் முக்கியமாக, தமிழ் நாட்டில், பல ஸ்டார்களை நாம் உருவாக்கிவிட்டதால், ஸ்டார்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், இந்த ஸ்டார்களைச் சுற்றி வட்டமிட்டு, தங்கள் வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை குறிப்பாக, இளைய தலைமுறையினரை - நினைத்து கவலையாய் இருக்கிறது.

இன்று நாம் கொண்டாடும் ஞானிகளை, "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்" என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. இந்த ஞானிகள், இந்தியாவிலிருந்து, ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பது, ஒரு சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இந்த ஞானிகள், கோள்களையும், நட்சத்திரங்களையும் ஆய்ந்து அறிந்தவர்கள். 

இந்தியாவில், கோள்களை, நட்சத்திரங்களை வைத்து வாழ்வின் பல முடிவுகள் எடுக்கப்படுவதை நினைத்துப் பார்க்கலாம். ஒருவர் பிறந்த தேதியால், பிறந்த நேரத்தால் அவருக்குக் குறிக்கப்படும் நட்சத்திரம், அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக, நம்மில் பலர் நம்பி வருகிறோம். இவ்வாறு, கோள்களும் விண்மீன்களும் நம் வாழ்வை நடத்துவதாக நம்பி, நம்மையும், நம் குடும்பத்தையும் வழிநடத்தும் பொறுப்பிலிருந்து நாம் விலகிப் போகிறோமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கலாம்.

திரைப்படங்கள், விளையாட்டு, அரசியல் ஆகிய உலகங்களில் உருவாகும் 'ஸ்டார்களையும்' நம் ஜாதகத்தில், கைரேகைகளில் பதிந்துவிட்ட 'நட்சத்திரங்களையும்' நம்பி வாழாமல், நல்வழிகாட்டும் இலட்சியங்கள் என்ற விண்மீன்களை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த விழா நமக்குச் சொல்லித் தருகிறது.

வானில் தோன்றிய ஒரு விண்மீனை தங்கள் எண்ணங்களிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த ஞானிகள் தங்கள் வழக்கமான வாழ்வைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள், அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்டதும், அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்வி கேட்டு வதைத்திருக்கலாம், கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. அவர்கள் விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே, இந்த ஞானிகள், இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் அதிகம் இல்லாத அந்த யுகத்தில், இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்லவே. அதுவும், தூரத்தில் தெரியும் ஒரு சிறு விண்மீனை, பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே, மீண்டும், மீண்டும், அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது, அவ்வளவு எளிதல்லவே. பல இரவுகளில், மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில், மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து, அவர்கள் நடந்திருக்க வேண்டும்! அத்தனை இடர்பாடுகள் மத்தியிலும், ஒரே குறிக்கோளுடன், இரவு நேரங்களில், பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் பொறுமையும், மன உறுதியும், நமக்கெல்லாம் நல்ல பாடங்கள்.

நாம் வாழும் அவசர உலகில், விண்மீன்களைப் பார்ப்பது மிகவும் அரிது. நாம் வாழும் நகரங்களில், இரவும், பகலும், எரியும் செயற்கை விளக்குகளின் ஒளியில், நாம் வானத்தையே மறந்துவாழ்கிறோம். வானத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நமக்கு இப்போது நேரமில்லை. எப்போது வானத்தைப் பார்ப்போம்? கருமேகம் சூழும்போது, "ஒருவேளை மழை வருமோ?" என்ற சந்தேகப் பார்வையோடு வானத்தைப் பார்ப்போம். அதேபோல், உள்ளத்தில் கருமேகங்கள் சூழும்போதும், மீண்டும் வானத்தைச் சந்தேகத்தோடு பார்க்கிறோம்... கடவுள் என்ற ஒருவர் அங்கிருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள. சந்தேகம் என்பது கறுப்புக் கண்ணாடி போன்றது. கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டால், பார்ப்பது எல்லாமே கருமையாகத்தானே தெரியும்.

சந்தேகம் வரும்போது மட்டும் வானத்தைப் பார்த்தால், அங்கே கருமேகங்கள் மட்டுமே தெரியும். அந்தக் கருமேகங்களுக்குப் பின் கண்சிமிட்டும் விண்மீன்கள் தெரியாது. அந்த விண்மீன்கள் விடுக்கும் அழைப்பும் தெரியாது. கருமேகங்களைத் தாண்டி விண்மீன்களைப் பார்ப்பதற்கு, நமது உடல் கண்கள் பயனற்றவை. மனக் கண்கள் தேவை.

அன்பு மருத்துவர் அல்லது காதல் மருத்துவர் (Dr Love) என்று புகழ்பெற்ற அமெரிக்க பேராசிரியரும், எழுத்தாளருமான லியோ புஸ்காலியா (Leo Buscaglia) அவர்கள் பகிர்ந்துகொண்ட ஓர் நிகழ்வு இது: அவர் தென் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணிசெய்தபோது, அவரிடம், Joel என்ற மாணவர் படித்துவந்தார். மிகச்சிறந்த அறிவும், பல்வேறு திறமைகளும் கொண்டவர் Joel. பாரம்பரியம்மிக்க யூத குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், கடவுளையும், யூத மத நியதிகளையும் விட்டு வெகுதூரம் விலகிச் சென்றார் Joel. ஏன் வாழ்கிறோம் என்பது தெரியாமல் குழம்பிப்போன அவர், ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்ள தீர்மானித்தார்.

யார் தடுத்தும் கேட்காத அவர், தான் சாவதற்கு முன், தன் அபிமான ஆசிரியர் லியோ புஸ்காலியா அவர்களைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தான் எடுத்திருந்த முடிவைச் சொன்னார். "உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், நமது பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வயது முதிர்ந்தோர் இல்லத்திற்குச் சென்று வா" என்றார் லியோ. தன் அபிமான ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை Joel புரிந்துகொள்ளவில்லை. எனவே, லியோ அவருக்கு விளக்கிக் கூறினார். "நீ உன் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு முன், வாழ்வு என்றால் என்ன என்பதை உன் இதயக் கண்கள் கொண்டு நீ பார்க்க வேண்டும்." "இதயக் கண்களா?" என்று Joel அழுத்திக் கேட்டதும், லியோ மேலும் விளக்கம் தந்தார். "அந்த முதியோர் இல்லத்தில் வாழ்க்கையின் அர்த்தமுள்ள தொடர்புகளையெல்லாம் இழந்திருக்கும் அந்த முதியோருக்கு உன்னால் என்ன தரமுடியும் என்பதைச் சிந்தித்துப் பார். அந்த நிலையில் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடி... அங்குள்ளவர்களில், யார், எந்த ஓர் உறவினரும் வராமல், பல மாதங்கள் அல்லது வருடங்கள் காத்திருக்கிறார்களோ, அவர்களைச் சென்று பார்." என்று லியோ சொன்னதும், Joel, "அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். "என்ன சொல்ல வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள்.. ஆனால், அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பை, நம்பிக்கையை உண்டாக்கும் எதையாவது சொல்" என்று சொல்லி அனுப்பினார். பிறருக்குக் கொடுப்பதன் வழியாக நாம் வாழ்வில் அர்த்தத்தைப் பெறமுடியும் என்பதே லியோ கொடுத்த இந்த ஆலோசனையில் பொதிந்திருந்த இரகசியம்.

இந்த சந்திப்பிற்குப் பின், Joelக்கு என்ன ஆயிற்று என்பதை லியோ புஸ்காலியா மறந்துவிட்டார். ஒரு நாள், அவர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு விளையாட்டுப் போட்டிக்குப் போய்க்கொண்டிருந்தபோது, Joel ஒரு பேருந்தில் வந்து இறங்கினார். அவருடன் முதியோர் இல்லத்திலிருந்து பத்து அல்லது பதினைந்து பேர் இறங்கினர். அவர்களில் மூன்று பேர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தனர். Joel தன் ஆசிரியர் லியோவிடம் வந்தார். "சார், இவர்கள் கால்பந்தாட்டப் போட்டியை நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். எனவேதான் அவர்களை அழைத்து வந்துள்ளேன்." என்று சொன்னார். சிறிது தூரம் சென்றபின், லியோவின் கைகளைப் பிடித்தபடி Joel பேசினார்: "என் இதயத்தின் கண்களைத் திறந்து மற்றவர் தேவைகளை எனக்குச் சொல்லித் தந்தீர்கள். மிக்க நன்றி." என்று சொன்னார்.

விரக்தியால் வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட Joel, அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற விண்மீன் கொடுத்த அழைப்பை ஏற்றதால், அவரது வாழ்வு முற்றிலும் மாறியது. இதயத்தின் கண்களைத் திறந்து பார்த்தால், இவ்வுலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம். இதைத்தான் கீழ்த்திசை ஞானிகள் மூவர் இன்று நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனஉறுதியைத் தந்து, இறைவன் வழிநடத்த வேண்டுவோம்.

இசைக் கலைஞரும், பாடலாசிரியருமான Joe Darion அவர்கள் எழுதிய "The Impossible Dream' அதாவது, "முடியாது எனத் தோன்றும் கனவு' என்ற புகழ்பெற்ற பாடலின் சில வரிகள் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்...

முடியாது என தோன்றும் கனவை நான் காணவும்,
வெல்லமுடியாத எதிரிகளுடன் போரிடவும்
தாங்கமுடியாத துயரங்களைத் தாங்கவும்
வீரர்களும் துணியாத இடங்களுக்குச் செல்லவும்
சரிசெய்ய இயலாத தவறுகளை சரியாக்கவும்
தொடமுடியா தூரத்தில் இருக்கும் விண்மீனைத் தொடவும்...

இதுவே என் தேடல்
வெகு தூரத்தில் இருக்கும் அந்த விண்மீனைத்
தொடர்வதே என் தேடல்...

கேள்வியோ, தயக்கமோ இன்றி
நேரிய ஒன்றிற்காக போராடவும் 
உன்னதமான ஒரு காரணத்திற்காக
நரகத்திற்குள்ளும் நடக்கும் துணிவைப் பெறவும்
இறுதியில் என்னை அடக்கம் செய்யும்போது
நிறைவான அமைதியுடன் விடைபெறவும்...

இதுவே என் தேடல்
வெகு தூரத்தில் இருக்கும் அந்த விண்மீனைத்
தொடர்வதே என் தேடல்..

உடலெங்கும் காயங்கள் நிறைந்தாலும்
பிறரது ஏளனங்கள் சூழ்ந்தாலும்
தன்னிடம் எஞ்சியிருக்கும் சக்தியைக் கொண்டு
தொடமுடியாத தூரத்தில் இருக்கும் விண்மீனைத்
தொடர்ந்த அந்த ஒரு மனிதரால்
இவ்வுலகில் நலம் நிறைந்திருக்கும்
 
திட்டங்கள்... திட்டவட்டமான செயல்கள்

மகன் தந்தையிடம் புதிர் கேள்வியொன்றைத் தொடுத்தான். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டான். "இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் தந்தை. "அப்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்து கொண்டு பதில் சொல்லுங்கள். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னான்.

அப்பா எதையோ புரிந்து கொண்டவர் போல், "ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்றவைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல் புன்னகை பூத்தார்.

"அப்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறீர்கள்" என்று மகன் தலையில் அடித்துக்கொண்டு, விளக்கத் தொடங்கினான்: "மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவைகளில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தான். தந்தையின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது. இலேசாகக் கொஞ்சம் அசடும் வழிந்தது.

சில நாட்களுக்கு முன் நாம் ஆங்கிலப் புத்தாண்டு நாளைக் கொண்டாடினோம். ஒவ்வோர் ஆண்டின் துவக்கத்திலும் நாம் புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுக்கிறோம், திட்டங்கள் தீட்டுகிறோம். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிட்டால் பயனில்லை. அவை செயல்வடிவம் பெறவேண்டும். தீர்மானங்கள் செயல்வடிவம் பெறவேண்டும் என்ற பாடத்தை இன்றையத் திருக்காட்சிப் பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது. மூன்று இராசாக்கள், மூன்று அரசர்கள், மூன்று ஞானிகள் என்று பலவாறாக அழைக்கப்படும் இன்றைய விழா நாயகர்கள் நமக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். எந்தத் தடை வந்தாலும், எடுத்தத் தீர்மானத்தில் உறுதியாய் இருந்த இவர்களை, தீர்மானங்களின் பாதுகாவலர்கள் எனக் கொண்டாடலாம். மூன்று ஞானிகளும் ஒரு விண்மீனைக் கண்டதால், கடினமானதொரு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் கண்ட அதே விண்மீனை இன்னும் பல்லாயிரம் பேர் பார்த்திருப்பர். ஆனால், ஏனையோருக்கு அது வெறும் விண்மீனாய் பளிச்சிட்டது, நமது புத்தாண்டுத் தீர்மானங்களைப் போல... அவ்வளவுதான்... மூன்று ஞானிகளுக்கோ அந்த விண்மீன் ஓர் அழைப்பாகத் தெரிந்தது. அவர்கள் அந்த விண்மீனைத் தொடரத் தீர்மானித்தனர். அவர்களது தீர்மானத்தைக் கேட்ட அவரது குடும்பத்தினர், உறவினர், ஊர்மக்கள் அவர்களைக் கேள்விக்குறியுடன் பார்த்திருக்கலாம். கேலி செய்திருக்கலாம். அவர்களது கேள்விகளும், கேலிகளும் இம்மூன்று ஞானிகளின் உறுதியைக் குறைக்கவில்லை. விண்மீனைத் தொடர்ந்தனர்.

விண்மீன்களின் ஒளியில் இந்த ஞானிகள் வழி நடந்தனர் என்றும்,. இறைவனைச் சந்தித்தபின் இவர்கள் வேறு வழியாகச் சென்றனர் என்றும் இன்றைய நற்செய்தி சொல்கிறது. வாழ்க்கையில் எந்த விண்மீன்களின் ஒளியில் நாம் நடக்கிறோம் என்றும், இறைவனைச் சந்தித்தப்பின் நம் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது பற்றியும் சிந்திக்கலாம். விண்மீன்கள் என்றதும் நட்சத்திரங்கள், ஸ்டார்கள் என்ற சொற்களும், இச்சொற்களுடன் தொடர்புகொண்ட பல எண்ணங்களும் உள்ளத்தில் எழுகின்றன. திரைப்படம், விளையாட்டு போன்ற துறைகள் உருவாக்கும் செயற்கையான 'ஸ்டார்களும்' 'சூப்பர் ஸ்டார்களும்' எவ்வளவு தூரம் இளையோர் வாழ்வை ஆக்கிரமித்துள்ளன என்பதை எண்ணிப்பார்க்க இது நல்லதொரு தருணம். இந்த 'ஸ்டார்களை'ச் சுற்றி வட்டமிட்டு, வாழ்வை வீணாக்கும் விட்டில் பூச்சிகளை நினைத்தால், வேதனையாய் இருக்கிறது.

வானில் தோன்றும் விண்மீன்களைத் தொடர்வது எளிதான செயல் அல்ல. விண்மீன் இரவில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். பகலில் தெரியாது. எனவே இந்த ஞானிகள் இரவில் தங்கள் பயணத்தை அதிகம் செய்திருக்கவேண்டும். பயண வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் இரவில் மேற்கொள்ளும் பயணங்கள் எளிதல்ல. அதுவும் பல்லாயிரம் விண்மீன்களுக்கு நடுவே ஒரு சிறு விண்மீனை மீண்டும் மீண்டும் அடையாளம் கண்டு, அந்த விண்மீனைத் தொடர்வது அவ்வளவு எளிதல்ல. பல இரவுகள் மேகங்களும், பனிமூட்டமும் அந்த விண்மீனை மறைத்திருக்கும். அந்த நேரங்களில் மேகமும், பனியும் விலகும்வரைக் காத்திருந்து, மீண்டும் விண்மீனைப் பார்த்து... எத்தனை எத்தனை இரவுகள் அவர்கள் நடந்திருக்க வேண்டும்? இத்தனை இடர்கள் மத்தியிலும் ஒரே குறிக்கோளுடன் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்த அந்த ஞானிகளின் மன உறுதி நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.

இந்த மூன்று ஞானிகளை, பாரம்பரியமாக, மூன்று அரசர்கள் என்றே அழைத்து வந்துள்ளோம். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைய நற்செய்தி (மத்தேயு 2:1-12) நான்கு அரசர்களைப் பற்றி கூறுகிறது. ஆம், இந்த மூன்று அரசர்களுடன் நாம் ஏரோது அரசனையும் இணைத்துப் பார்க்கிறோம். இவர்கள் நால்வரும் இயேசுவைத் தேடினார்கள். விண்மீன் வழிநடத்த, பல நூறு மைல்கள் பயணம் செய்த மூன்று அரசர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் இயேசுவை உண்மையிலேயேத் தேடினர். இயேசுவைக் கண்டதும் தங்களையே அர்ப்பணம் செய்ததன் அடையாளமாக, காணிக்கைகளை அக்குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தனர்... அதன்பின், வேறுவழியில் தங்கள் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிகழ்வுக்குப் பின், அவர்களைப் பற்றி விவிலியத்தில் எந்தத் தகவலும் இல்லை. திரும்பிச்சென்ற வழியில், ஏதோ காற்றோடு காற்றாக அவர்கள் கரைந்துவிட்டதைப் போல் தெரிகிறது.

இறைவனைத் தேடி, கண்டுபிடித்து, அவரை உண்மையாகவேச் சந்தித்த பலரது நிலை இதுதான். எடுத்துக்காட்டாக, எருசலேம் கோவிலில் குழந்தை இயேசுவைக் கையிலேந்திய சீமோன் இயேசுவைக் கண்டதால் உண்டான மகிழ்வுடன் இவ்வுலகிலிருந்து விடைபெற விரும்பினார். (லூக்கா 2:25-32) இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் நிலையும் (யோவான் 3:30) "இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (கலாத்தியர் 2:20) என்று முழங்கிய புனித பவுலின் நிலையும் இதைப் போன்றதே. இறைவனை உண்மையிலேயேக் கண்டு, நிறைவடைந்த அனைவருமே தங்கள் வாழ்வை அவரிடம் அர்ப்பணித்துவிட்டு மறைவதையே விரும்புவர். இந்த அழகியப் பாடத்தை மூன்று அரசர்கள் நமக்குச் சொல்லித் தருகின்றனர்.

இதற்கு நேர்மாறாக, நான்காவது அரசன் ஏரோதுவின் செயல்பாடுகள் அமைந்தன. அவனும் இயேசுவைத் தேடினான். எதற்காக? அவரைக் கொல்வதற்காக. அவரைக் கண்டு வணங்கப் போவதாக மூன்று ஞானிகளிடம் பொய் சொன்னான். அவனது தேடுதல் வெறியாக மாறி, பல நூறு பச்சிளம் குழந்தைகளை அவன் கொன்று குவித்தான். இயேசுவைக் கண்ட மகிழ்வில் மறைந்துபோன மூன்று அரசர்களுக்கு நேர்மாறாக, ஏரோது இயேசுவை மறைக்க, அழிக்க வழி தேடினான். காரணம் என்ன? அவன் இயேசுவைவிட முக்கியமான ஒரு கடவுளைக் கண்டுவிட்டதாக நினைத்தான். அவனைப் பொருத்தவரை, அவனது அரியணையே அவன் வணங்கிய கடவுள். அரியணை என்ற இந்தக் கடவுளுக்கு, அவன் தன் மனைவியரையும், பிள்ளைகளையும் பலி கொடுத்தான் என்று சொல்லப்படுகிறது. இயேசுவையும் பலி கொடுக்க முயன்றான். ஏரோதின் வாழ்க்கை சொல்லித்தரும் எச்சரிக்கைப் பாடங்களையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்

. மூன்று ஞானிகளின் கதை வேறு பல அழகான கற்பனைக் கதைகளுக்கு வித்திட்டுள்ளது. அவைகளில் ஒன்று Henry Van Dyke எழுதிய "The Other Wise Man" மற்றுமொரு ஞானி என்ற கதை. இந்தக் கதையில் வரும் ஞானியின் பெயர் Artaban. தான் சந்திக்கச் செல்லும் மன்னனுக்குப் பரிசுகள் ஏந்திச்செல்ல நினைத்த Artaban, தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, விலையுயர்ந்த மாணிக்கம், வைரம், முத்து ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்.

அவர் செல்லும் வழியில், நோயுற்று சாகும் நிலையிலிருந்த ஒரு யூதரைப் பார்த்தார். நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல நினைத்தார். ஆனால் மனம் இடம் தரவில்லை. தன்னிடம் இருந்த மாணிக்கத்தை விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு நோயாளிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். இதனால், அவரது பயணம் கொஞ்சம் தாமதமானது.

அவர் பெத்லகேமை அடைந்தபோது, மற்ற மூன்று ஞானிகளும் மீண்டும் தங்கள் நாட்டுக்குப் போய்விட்டதை அறிந்தார். அதைவிட, பெரும் ஏமாற்றம்... குழந்தை இயேசுவை அவரது பெற்றோர் எகிப்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்ற செய்திதான். Artaban எகிப்து நோக்கி தன் பயணத்தைத் துவக்கியபோது, மன்னன் ஏரோதின் படைவீரர்கள் அங்குள்ள குழந்தைகளைக் கொல்வதற்கு வருவதைப் பார்த்தார். தன்னிடம் இருந்த வைரத்தைப் படைத் தளபதியிடம் கொடுத்து, ஒரு குழந்தையை அவர் காப்பாற்றினார்.

பின்னர், Artaban 33 ஆண்டுகள் தனது மன்னனைத் தேடி வந்தார். சென்ற இடமெல்லாம், தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிகள் செய்து வந்தார். இறுதியில் அவர் எருசலேம் வந்து சேர்ந்தார். அங்கு, இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஏற்கனவே கல்வாரிக்குக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கேள்விப்பட்டார். தன் கையிலிருக்கும் விலையுயர்ந்த முத்தை அந்த வீரர்களிடம் கொடுத்து இயேசுவை மீட்டுவிடலாம் என்று கல்வாரி நோக்கி விரைந்தார். போகும் வழியில், அடிமையாக விற்பதற்கென்று ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டார். அப்பெண்ணை விடுவிக்க, தன்னிடம் இருந்த கடைசி பரிசான அந்த முத்தையும் கொடுத்தார். அந்நேரத்தில், திடீரென இருள் சூழ்ந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டது. Artaban தலையில் அடிபட்டு கீழே விழுந்தார். அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக: "இந்தச் சிறியவர்களுள் ஒருவருக்கு நீர் இதைச் செய்யும்போது, எனக்கேச் செய்தீர்." என்ற குரல் கேட்டது. இக்குரலைக் கேட்டதும், Artaban தான் தேடி வந்த அரசனைக் கண்டுகொண்ட மகிழ்வோடு, நிறைவோடு கண்களை மூடினார்.

மனதுக்கு நிறைவைத்தரும் ஒரு கதை. விண்மீனைக் கண்டு பயணம் புறப்பட்டவர்களெல்லாம் கடவுளை நேரில் கண்டனரா? இல்லையே. எத்தனையோ பேர், கடவுளை நேரில் காணாதபோதும், அந்தக் கடவுளின் நியதிகளை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினர். இதனால், அவர்களே பலரை, கடவுளிடம் அழைத்துச்சென்ற வின்மீண்களாயினர் என்பதை Artaban புரிய வைக்கிறார்.

உண்மையான விண்மீன்களைப் பார்த்ததால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்றதால் தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப்போல், Artabanஐப் போல், எத்தனையோ நல்ல உள்ளங்கள் தங்களையும், உலகத்தையும் மாற்றியிருக்கிறார்கள். தீர்மானமாய் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் கண்ட ஞானிகளைப் போல், இப்புத்தாண்டின் துவக்கத்தில் நாமும் இறைவனைக் காணவும், அவரிடம் மற்றவர்களை அழைத்துவரும் விண்மீன்களாய்த் மாறவும் தேவையான இறையருளை வேண்டுவோம்.
 
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

 
 
- அருட்பணி. குமார்ராஜா

ஆண்டவரின் திருக்காட்சி!
இயேசு தன்னைப் புற இனத்தவருக்கு வெளிப்படுத்திய விழா இன்று. "எருசலேமே எழு! ஒளி வீசு. உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன் மேல் உதித்துள்ளது" என்று எசாயா இறைவாக்கினர் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்குறுதி குழந்தை இயேசுவில் நிறைவேறியது. அதே இறைவாக்கு இன்று நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிப்பதுதான் இன்றைய விழா.

நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விழா. இருளில் இருப்போருக்கு ஒளி பிறந்துள்ளது எனப் பறைசாற்றும் விழா. இந்த உலகில் நன்மையும், உண்மையும் வெல்லும் என முழங்கும் விழா. இறைவன் நம் அனைவருக்கும் ஆண்டவர், இந்தப் புவி முழுவதும் அவரது மாட்சி ஒளிரும் என அறிவிக்கும் விழா. எனவே, நாம் நம் இதயங்களில் புதைந்துள்ள அவநம்பிக்கை என்னும் இருளை அகற்றி, நம்பிக்கைத் தீபம் ஏற்றுவோம். இறைவன் இந்த உலகைக் கைவிட்டுவிடவில்லை. இறைவனின் கரங்களில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்னும் நம்பிக்கையுடன் வாழுவோம். அந்த நம்பிக்கையைப் பிறருக்கும் ஊட்டுவோம்.

மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உலகில் வாழும் அனைத்து நாட்டு மக்களுக்கும் நீரே மீட்பராக, ஒளியாக, வழியாக, நம்பிக்கை நாதமாக உம்மை வெளிப்படுத்தியிருப்பதற்காக நன்றி கூறுகிறோம். இந்த நம்பிக்கை எங்கள் வாழ்விலும் வழிபாட்டிலும் வெளிப்படுவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
- அருட்பணி. குமார்ராஜா
 
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு:
இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
திருக்காட்சி திருவிழா
வரலாற்றுப் பின்னணி

இது ஒரு பழமையான விழா. சாதாரணமாக கிரேக்க- உரோமானிய கலாச்சாரத்தில் பேரரசரின் பிறப்பையோ, அல்லது பதவியேற்பு விழாவையோ, அல்லது ஒரு நகரத்திற்கு அவர் தரும் வருகையையோ சுட்டிக்காட்டவே 'திருக்காட்சி' (epiphany) என்ற பெயர் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், தெய்வீகத்தின் வெளிப்பாட்டைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது இவ்விழா.

இது பழமைக்காலத்திலிருந்தே ஜனவரி 6-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. எகிப்திய முறைப்படி சூரிய கடவுளின் திருவிழா இந்நாளிலேயே கொண்டாடப்பட்டது. மேலும், குளிர் காலம் முடிந்து இளவேனிற் காலம் துவங்குவதனாலும் இந்நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், ஏயோன் (Aeon) என்ற கடவுளின் பிறந்த நாள் இந்நாளிலேயே கொண்டாடப்பட்டது. இக்கடவுள் ஒரு கன்னிகையிடமிருந்து பிறந்ததாக ஒரு நம்பிக்கை. இவை அனைத்தையும் உள்ளடக்கியே, உரோமானிய சமயத்தில் ஜனவரி 6ஆம் நாளைச் சூரிய கடவுளின் விழாவாக மிகவும் ஆடம்பர- மாகக் கொண்டாடி வந்தனர். கிறிஸ்தவ மதம் உரோமானியரை கைபற்றிய பின்பு, இவ்விழா நாளிலே கிறிஸ்துவின் திருக்காட்சித் திருவிழாவைக் கொண்டாடி வந்தனர்.

இத்திருவிழாவிலே நான்கு சிறப்புகள் உண்டு. இயேசுவின் பிறப்பைக் குறிப்பதாக இருந்தது. அத்தோடு, இயேசுவின் திருமுழுக்கு, ஞானிகளின் வருகை மற்றும் கானாவூர் திருமண விழாவில் இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்வு ஆகிய நான்கையும் குறிப்பதாக இவ்விழா முற்காலத்தில் கொண்டாடப்பட்டது. காலம் செல்லச்செல்ல, இந்நாள் ஞானிகளின் வருகையைக் குறிப்பதாக மட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் வாசகப் பின்னணி (எசா. 60:1-6)

பொதுவாக எசாயா எழுதிய புத்தகத்தை மூன்றாகப் பிரிப்பர். இவற்றுள் இவ்வாசகம் 3-ஆவது எசாயா என்ற பிரிவின் கீழ் வருகிறது. இஸ்ராயேல் பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை வாங்கிய பின் எழுதப்பட்டவையாக இருக்கிறது. இப்பிரிவின் கீழ் வரும் அதிகாரங்கள் (56-66). எனவே இவற்றில் புதிய சுதந்திரம், புதிய வாழ்வு, புதிய எருசலேம், புதிய விண்ணகம் என்னும் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன.

குறிப்பாக, இன்றைய முதல் வாசகமாக நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பகுதியில், சீயோன் ஒளியாக இருந்து மக்களினங்களை தன்னிடத்தில் ஈத்துக்கொள்வேண்டும் என்பதே மையக்கருத்தாக இருக்கிறது. குறிப்பாக 55 முதல் 59 வரை உள்ள அதிகாரங்களில் இருள் என்ற கருத்தே அதிகமாக இருக்கிறது. அதற்கு மாற்றாக இவ்வதிகாரத்தில் ஒளி என்ற கருத்து முதலிடம் பெறுகிறது. சீயோன் ஒளியாக இருந்து மக்களினங்களின் இருளை போக்க வேண்டும் என்பது உள்ளார்ந்த கருத்து. இவை அனைத்தும் மீட்பரின் வருகையை முன்னறிவிப்பதாகவே இருக்கிறது. மெசியா வந்து உலகின் இருளை போக்கி, தம் ஒளியால் உலகை நிரப்புவார் என்பதே இவ்வாசகம் நமக்குக் கொடுக்கும் செய்தி.

இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 3:2-3,5-6)

எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகம் பொதுவாகப் பவுலால் எழுதப்பட்டது என்று கருதப்பட்டாலும், சுமார் 80% அறிஞர்கள் பவுலின் சீடர்களுள் ஒருவர் எழுதியிருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். இவ்வாசகம் எடுக்கப்பட்டிருக்கும் பகுதி, இறைபுகழோடு இறைவன் இயேசு கிறிஸ்து வழியாகச் செய்துள்ள பெருங்காரியங்களை நினைவுபடுத்துவதாக அமைகின்றது. இயேசு வழங்கிய மீட்பு யூதருக்கு மட்டுமல்ல, மாறாக யூதரல்லாதோருக்கும் பொருந்தும் இயேசுவின் மீட்புச்செயல் அனைவருக்கும் உரியது என்று சுட்டிக்காட்டுவதாக அமைகிறது இவ்வாசகம். இத்திருவிழாவின் சிறப்பு அம்சம் மீட்பரை புறஇனத்தார் கண்டுகொள்வர் என்ற கருத்துக்கு ஒத்ததாக அமைகிறது.

நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 2:1-12)

மத்தேயு நற்செய்தி மட்டுமே ஞானிகளின் வருகையைக் குறிப்பிடுகிறது. இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவர்கள் அரசர்களா? ஞானிகளா? குருக்களா? என்ற கேள்விகள் உண்டு. பொதுவாக மூன்றரசர்கள் திருவிழா என இவ்விழா அழைக்கப் பட்டாலும், இவர்கள் ஞானிகளாகவே கருதப்படுகிறார்கள். எத்தனை பேர் வந்தனர் என்ற வினாவிற்கும் பல விடைகள் உண்டு. கிழக்கத்திய திருச்சபையில் 12 பேர் என்ற பாரம்பரியம் உண்டு. மத்தேயு நற்செய்தியில் இது வெளிப்படையாக கொடுக்கப்படாவிட்டாலும், இவர்கள் கொண்டுவந்த காணிக்கைகள் மூன்றாகையால், ஞானிகளும் மூவர் என்கிறது பாரம்பரியம். இவர்களின் பெயர்களும் ஒவ்வொரு பாரம்பரியத்தைக் கொண்டு மாறுகிறது. சீரியா, அர்மேனியா போன்ற திருச்சபைகள் பல்வேறு பெயர்களைக் கொடுத்துவந்தாலும் மேற்கத்திய திருச்சபைப் பாரம்பரியம் கொடுக்கும் பெயர்கள்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். இவர்கள் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் என்ற கேள்விக்கும் பல பதில்கள் தரப்பட்டிருக்கின்றன. சிலர் மெசபடோமியா, பெர்சியா, தென் அரேபியா, பாபிலோன் என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனாலும், தெளிவாக இவ்விடம்தான் என்ற கூறுவதற்கில்லை. மத்தேயு நற்செய்தியாளரின் முக்கிய கவனம் இவர்களைப் பற்றிய வரலாற்று செய்திகளைக் கூறுவதல்ல. மாறாக, சிறந்த இறையியலைக் கற்பிக்கிறார். இயேசு புதிய மோசே, புதிய இஸ்ராயேல், புதிய ஞானம் என்றெல்லாம் விளக்க முனையும் நற்செய்தியாளர். இந்நிகழ்வின் மூலமாக இயேசுவின் வாழ்வு, குறிக்கோள் மற்றும் பணி ஆகியவற்றை விளக்குகிறார். மேலும் பழைய ஏற்பாட்டின் கூறுகள் நிறைவேறியது என்பதை காட்டுவதாயும் அமைகிறது இப்பகுதி.

மறையுரை

திருக்காட்சி திருவிழா ஒரு மாபெரும் திருவிழா. இது கிறிஸ்து பிறப்பு பெருவிழா போன்று சிறப்பானது. குறிப்பாகக் கிழக்கத்திய கிறிஸ்தவர்களுக்கு இது மிகவும் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. ஏனெனில், இயேசுவின் பிறப்பு யூத நிலத்தில் நிகழ்ந்தது. முதல் செய்தியும் யூதர்களுக்கே அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரின் பிறப்பு பிறஇனத்தவர்க்கு தெரியவந்தது அந்த மூன்று ஞானிகளின் வருகையால்தான். இவர்களே புறஇனத்தாரின் பிரதிநிதிகளாக மீட்பரிடம் வந்து காணிக்கைகள் செலுத்தி, வணங்கிச் சென்றனர். புறஇனத்தவருக்கு மீட்பரின் செய்தி அறிவிக்கப்பட்டது இந்நாளில்தான். எனவேதான் யூதரல்லாதோர் இந்நாளை மிகச் சிறப்பாக கொண்டாடிவந்தனர், கொண்டாடிக்கொண்டும் வருகின்றனர். இத்தகைய பெருமை வாய்ந்த நாள் நமக்குக் கொடுக்கும் அழைப்பு என்ன? செய்தி என்ன? கிறிஸ்தவர்களாகிய நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? அந்த மூன்று ஞானிகள் வந்தனர், கண்டனர், பாதை மாறிச் சென்றனர்.

தேடல் என்பது மனித இனத்தினூடே கலந்த ஒப்பில்லாத ஒரு இயக்கம். தேடல் இல்லாத மனிதர் இருக்க முடியாது. தேடல் இல்லாத மனித இனமும் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. தேடலின் விளைவே கலாச்சாரம். தேடலின் விளைவே முன்னேற்றம். தேடல் மனிதரை உந்தித்தள்ளும் ஒரு ஊக்கசக்தி. கவலையும், பிரச்சனையும் நிறைந்த இவ்வுலகிலே தேடல் ஒன்றே வாழ்வதற்கு நம்பிக்கை அளிக்கிறது. மீட்பு கிடைக்கும் என்ற விசுவாசம் பிறக்கிறது. சகல பிரச்சனைகளும் ஓய்ந்து, ஒளி பிறக்கும் என்ற நிறைவு உதிக்கிறது.

இதே நம்பிக்கையும், விசுவாசமும் தான் இந்த மூன்று ஞானிகளை உந்தித்தள்ளியது. மீட்பின் ஒளியை கண்டுகொள்ள ஏவியது. அவர்கள் வெகுகாலமாக மீட்பை எதிர்பார்த்திருந்தனர். மீட்பரை எதிர்பார்த்திருந்தனர். யூதர் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே மீட்பரை எதிர்பார்த்திருந்தது. அந்த எதிர்பார்ப்பே இவ்வரசர்களை மீட்பரிடம் கொண்டுவந்தது. நட்சத்திரம் மீட்பரின் பிறப்பை அறைகூவ, அதே நட்சத்திரம் அவர்களைப் பெத்லகேமிற்கு வழிகாட்ட, கொடுமைக்காரனாக இருந்தாலும் ஏரோதின் உதவியும் கைகூட, அவர்கள் மூவரும் மீட்பரை கண்டடைகின்றனர். மூவரும் வேறு வேறு இனத்தவராயும், சமயத்தவராயும், நாட்டினராயும் இருந்தாலும், மீட்பின் தேடலிலே ஒன்றிணைகின்றனர். கண்டடைந்தும் விடுகின்றனர். தேடல் இருந்தால் கண்டிப்பாகக் கண்டடைதலும் உண்டு.

தேடுவதை கண்டடைவது தேடலோடே சேர்ந்து வருவது. கண்டடைதல் இல்லையென்றால் தேடல் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நாம் தேடுவதை கண்டடைவோம் என்ற எதிர்நோக்கே நம்மை தேடப் பணிக்கிறது. கண்டடைந்ததும் அலாதியான ஆனந்தமடைகிறோம். தேடல் பூர்த்தியாகிவிட்டது என்ற நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். சாதாரண மனித தேடலே இவ்வாறு இருந்ததென்றால், மீட்பின் தேடல் எவ்வாறிருக்கும்? மீட்பரை தேடுவோருக்கு எத்தகைய மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும்? அதே ஆனந்தமும் மகிழ்ச்சியுமே இவர்களிடம் இருந்தது. தேடலின் பலன் நிச்சயம் உண்டு. மீட்பரை கண்டடைவோம் என்ற எதிர்நோக்கு தேடுதலுக்கு முன்னரே இருந்திருக்குமோ என்னவோ! அவர்கள் தேடத் துவங்கும் போதே மீட்பருக்கு கொடுக்க வேண்டிய காணிக்கைகளை எடுத்து வந்துவிட்டனர்.

அக்காணிக்கைகள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு அர்த்தத்தை உள்ளடக்கியவை. பொன், தூபம், வெள்ளைப்போளம். பொன் சாதாரணமாக அரசருக்குக் காணிக்கையாக்கப்படும் பொருள்.

இயேசு அரசருக்கெல்லாம் அரசர் என்பதை எண்பிக்கவே இக்காணிக்கை. அடுத்து தூபம். இது தெய்வத்திற்கு படைக்கப்படும் காணிக்கை. இறைவனை வழிபடும்போது தூபம் இட்டு வழிபடுவது அனைத்து கலாச்சாரங்களின், மதங்களின் பழக்கம். இயேசு இறைமகன் தெய்வம் ஈடுஇணையற்ற இறைவன் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. இறுதியாக வெள்ளைப்போளம். இது சாதார ணமாக இறந்தோருக்கு பூசப்படும் பொருள். இறப்பை நினைவுபடுத்து. வதாக அமைகின்றது. இயேசுவின் இறப்பு மீட்பளிக்கும் இறப்பு, மாட்சி பொருந்திய இறப்பு. இத்தகைய அவரின் இறப்பு பிறப்பிலேயே முன்குறிக்கப்படுவதாக அமைகின்றது. இயேசுவைக் தேடினர் அந்த ஞானிகள், மீட்பரைக் கண்டுகொண்டனர். இறுதியாகப் பாதை மாறினர். இயேசுவை சந்திக்கும் எவரும் பாதை மாறியாக வேண்டும். பாதை மாற்றம் இல்லா சந்திப்பு ஏமாற்று வேலையாகத்தான் அமையும். வெளிவேடத்தனமாக இருக்கும். உண்மை ஆன்மீகமாய் இராது. இந்த ஞானிகள் மீட்பரின் சந்திப்பினாலே ஊக்கம் பெற்றனர். பாதை மாறினர். உயிர் பிழைத்தனர்.

இயேசுவின் திருக்காட்சித் திருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவாகத்தான் இருக்க முடியும். இயேசுவை சந்தித்து பாதை மாற அழைக்கப்படுகிறோம். நம் தேடல் இயேசுவாக இருக்க வேண்டும். தேடல் கண்டிப்பாகக் கண்டடைதலிலே முடிய வேண்டும். இயேசுவைக் கண்ட நாம், அவரின் மீட்பை சுவைத்த நாம் அத்தேடலின் விளைவாக, அக்கண்டடைதலின் பலனாகப் பாதை மாற வேண்- டும். இயேசுவை சந்திப்பதற்கு முன்னரும் சந்தித்ததற்கு பின்னரும் சந்தித்தவர் ஒன்றாகவே இருப்பாரானால் அது பொய்மை. அது இயேசுவை இழிவு செய்வதற்கு சமமாகும். இயேசு சந்திப்பவரின் வாழ்வை மாற்ற வேண்டும். சந்திப்பவரின் எண்ணத்தை தொடவேண்டும். சந்திப்பவரின் வாழ்வு முழுமையையும் தலைகீழாக புரட்டிப்போட வேண்டும். இது நிகழாதவரை, சந்திப்புப் பொய் சந்திப்பாகிவிடும். தேடல் வெற்றுத் தேடலாகிவிடும். கண்டடைந்தது வீணாகிவிடும்.

ஞானிகள் வந்தனர் கண்டனர் பாதை மாறினர். நாமும் ஞானிகளாவோம். இயேசுவைத் தேடிவருவோம். அவர் தரும் மீட்பை கண்டடைவோம். நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றுவோம். இவை நிகழ்ந்தால் நாமும் ஞானிகள். இல்லையேல் அஞ்ஞானிகள்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

இரண்டு அரசர்களும், தவிக்கும் ஞானிகளும்
இரண்டு அரசர்கள் - ஏரோதும், அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவும். ஏரோதின் ஆணவம் இயேசுவின் தாழ்ச்சி. ஏரோதின் கொடுங்கோலாட்சி இயேசுவின் அமைதியாட்சி. ஏரோதின் சூதுள்ள மனம் இயேசுவின் கபடற்ற தன்மை. இவர்களுக்கிடையே தவிக்கும் ஞானிகள். யாருக்கு உதவுவது இயேசுவை கொல்லத் துடிக்கும் ஏரோதிற்கா? உலகத்தை மீட்கத் துடிக்கும் இயேசுவிற்கா? இறையாட்சியின் பக்கம் முடிவெடுக்கிறார்கள்.

நாமும் ஏரோது போன்ற தீமையின் சக்திக்கும், இயேசுவாகிய நன்மையின் சக்திக்கும் இடையே தவிக்கிறோம் இவ்வுலகிலே. யார் பக்கம் சாய்வது? யார் பக்கம் முடிவெடுப்பது? ஞானிகள் போல இறையாட்சி மலர முடிவெடுப்போம். தீமையை அழிக்க உதவுவோம்.

இயேசுவைத் தேடுதல் தம்மவராலே இயேசு மறுக்கப்படல்
யூதரல்லாதோரான இம்மூன்று ஞானிகள் வானத்தில் எழுந்த நட்சத்திரத்தைக் கண்டு இயேசுவைத் தேடி வருகின்றனர். அவர்களின் கேள்வி: "எங்கே அவர்?" தேடுதலின் விளைவாக எழும் கேள்வி. மாறாக, இதே கேள்வியை யூதகுலத்தவரும் கேட்கின்றனர். "யூதர்களின் அரசர் எங்கே பிறப்பார்?' இயேசுவின் சொந்த மக்களும் இதே கேள்வியைத்தான் கேட்கிறார்கள். ஏன்? மதவாதிகளுக்கே தெரியவில்லை மீட்பர் பிறந்த செய்தி. ஞானிகள் சொன்ன பிறகே மறைநூலை புரட்டிப்பார்க்கிறார்கள். பெத்லகேமில் என்ற விடையைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பிரச்சனையே இயேசுவின் வாழ்வு முழுவதும் வரும். தம் இனத்தவரே இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுப்பர். இறுதியில் கொல்லவும் துணிவர். தேடல் இல்லாதோர் இயேசு வழங்கும் மீட்பை அனுபவிப்பதில்லை. அவரைத் தேடுவோருக்கு மீட்பு மறுக்கப்படுவதில்லை.
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 ஆண்டவரின் திருக்காட்சி‌

இன்று, குழந்தையாகப்‌ பிறந்த இயேசு உலகிற்கு, றெப்பாக பிற இனத்தாருக்குத்‌ தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப்‌ பெரு விழாவைக்கொண்டாடுகின்றோம்‌.இன்றையஇறைவார்த்தைகள்‌, வாசகங்கள்‌ அனைத்திலும்‌ பிற இனத்தாரைக்‌ குறிக்கும்‌ சொல்‌ லாடல்கள்‌ பயன்படுத்தப்பட்டுன்ளதைக்‌ காணலாம்‌. முதல்‌ வாசகத்தில்‌, "பிற இனத்தார்‌ உன்‌ ஓளி நோக்கி வருவர்‌; மன்னர்‌ உன்‌ உதயக்‌ கதிர்நோக்கி நடைபோபுவர்‌" (வச. 3) என்றும்‌, "அவர்கள்‌ அனைவரும்‌ஒருங்கேதிரண்டுஉன்னிடம்வருகின்றனர்‌" (வச.4) என்னும்‌ பிற இனத்தார்‌ நேரடி யாகக்‌ குறிப்பிடப்படுகின்றனர்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ பவுலடியார்‌, "நற்செய்தியின்‌ வழியாக, பிறஇனத்தாரும்கிறிஸ்‌துஇயேசுவின்மூலம்‌உடன்‌ உரிமையாளரும்‌ ஒரே உடலின்‌ உறுப்பினரும்‌ வாக்குறுதியின்‌ உடன்பங்காளிகளும்‌ ஆகியிருக்கறொர்கள்‌" (எபே 3:6) என இயேசுவின்‌ வழியாய்‌ பிற இனத்தாருக்கு கிடைத்த நலன்களை எடுத்துரைக்கின்றார்‌. நற்செய்தியில்‌ பிற இனத்தார்‌ என நேரடியாகக்‌ குறிப்பிடப்‌ படாவிட்டாலும்‌ "கிழக்கிலிருந்து வந்த ஞானிகள்‌" (வச. 1) பிற இனத்தாரைக்‌ குறிப்‌ பதாகக்‌ கொள்ளலாம்‌. யூதர்களுக்கு கிழக்கு என்பது யோர்தானுக்கு அப்பால்‌ உள்ள பகுதியைக்‌ குறிக்கும்‌. அது எப்போதும்‌ பிற இனத்தார்‌ பகுதியையே குறித்து வந்தது. இருப்பினும்‌ இது எந்தப்‌ பிறஇனக்‌ குழுமத்தை குறித்தது என்பதைக்‌ குறித்து அறிஞர்கள்‌ இடையே வேறுபட்ட கருத்துக்கன்‌ நிலவுகின்றன. இந்த ஞானியரைக்‌ குறிக்கும்‌ மூலச்‌ சொல்லான "மாஜாய்‌""( MAGI) என்பது பாரசீகர்களைக்‌ குறிக்கலாம்‌ என்றும்‌, அவர்கள்‌ வானவியல்‌ அறிவு கொண்டு விண்மீனால்‌ வழிநடத்தப்பட்ட்தால்‌ அவர்கள்‌ பாபிலோனியர்களாக இருக்கும்‌ என்றும்‌, அவர்கள்‌ பாலன்‌ இயேசுவுக்குத்‌ தந்த பரிசுப்‌ பொருள்களின்‌ அடிப்படையில்‌ அவர்கள்‌ அராபிய அல்லது சிரியாவின்‌ பாலைநிலங்களைச்‌ சார்ந்தவர்களாக இருக்கலாம்‌ என்றும்‌ கருதப்படுகின்றது. எது எப்படியிருப்பினும்‌ அவர்கள்‌ திருநூலையும்‌, மெசியா பெத்லகேமில்‌ பிறப்பார்‌ எனும்‌ மீக்காவின்‌ (மீக்‌ 5:1-2) இறைவாக்கையும்‌ அறியாத பிற இனத்தார்‌. அவர்களுக்கு இயேசுவின்‌ திருக்காட்சி அருளப்படுகின்றது.

இனி இன்றைய நற்செய்தி தருகின்ற முக்கியமான கிறிஸ்நியல்‌, இறையியல்‌ செய்தி என்ன என அறிய முயல்வோம்‌. அதற்கு முன்‌ நற்செய்திப்‌ பகுதியின்‌ பின்னணித்‌ தகவல்கள்‌ சிவைற்றைத்‌ தெரிந்து கொள்வோம்‌.

பின்னணி

மத்தேயு இயேசுவின்‌ குழந்தைப்‌ பருவ நிகழ்வுகளை தன்‌ நற்செய்தியின்‌ முதல்‌ இரு அதிகாரங்களில்‌ விவரிக்கின்றார்‌ அவற்றுள்‌ முதல்‌ அதிகாரம்‌, பிறக்க இருக்கும்‌ இயேசு "யார்‌?" எனும்‌ வினாவிற்கு விடை காணுகின்றது. இயேசுவின்‌ தலைமுறை அட்டவணையின்‌ வழி இயேசு "தாவீதின்‌ மகன்‌" என்றும்‌ "ஆபிரகாமின்‌ மகன்‌" என்றும்‌ (மத்‌ 1:1) மத்தேயு விவரிக்கின்றார்‌. யோசேப்புவுக்குக்‌ கனவில்‌ தோன்றிய வானதூதர்‌ விவரிக்கின்றார்‌. இந்த இயேசு கருவுற்றது தூய ஆவியால்தான்‌ என்றும்‌ (மத்‌ 1:20), அவரது பெயர்‌ "இயேசு" என்றும்‌, "அவர்‌ தம்‌ மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்‌" (மத்‌ 1:21) என்றும்‌ இயேசுவின்‌ அடையாளத்தை விவரிக்கின்றார்‌. மத்தேயு நற்செய்தி யின்‌ இரண்டாம்‌ அதிகாரம்‌ "எங்கே?" எனும்‌ கேள்விக்கு விடை காணுகின்றது.இந்த அதிகாரம்ஞானியர்‌ வருகை (2:1-12), எகிப்துக்கு ஓடிப்போதல்‌ (2:13-15), மாசற்ற குழந்தைகளின்‌ படுகொலை (2:16-18), எகிப்திலிருந்து திரும்புதல்‌ (2:19-23) ஆகிய பகுதிகளைக்‌ கொண்டுள்ளது. இங்கு எருசலேம்‌, பெத்லகேம்‌, எகிப்து, ராமா, நாசரேத்து என பல இடங்கள்‌ குறிப்பிடப்பட்டாலும்‌, இன்றைய நற்செய்திப்‌ பகுதி எருசலேம்‌, பெத்லகேம்‌ ஆகிய இடங்களிலேயே மையம்‌ கொண்டுள்ளது.

பெத்லகேமின்‌ மாண்பு

இன்றைய நிகழ்ச்சிப்‌ பகுதி தூவீதின்‌ நகராக விளங்கிய பெத்லகேமின்‌ மாண்பை விவரிக்கின்றது. அதை மத்தேயு ஏன்‌ விவாதிக்கின்றார்‌, எவ்வாறு நிறுவுகின்றார்‌ எனக்‌ காண்போம்‌

இயேசுவின்‌ பணிவாழ்வின்‌ பின்னணியில்‌ இயேசு கலிலேயாவின்‌ நாசரேத்திலிருந்து வந்ததாகவே பலரும்‌ நம்பினர்‌. இந்த கலிலேயா அதிக வரலாற்று முக்கியத்துவம்‌ இல்லாத பகுதி. நந்தனியேல்‌, "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும்‌ வரமுடியுமோ?" (யோவா 1:46) என்றும்‌, பரிசேயர்கள்‌ "கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர்‌ யாரும்‌ தோன்றுவதில்லை" (யோவா 7:52) என்றும்‌ கூறியதிலிருந்து கலிலேயா, நாசரேத்து ஆகியவை றுச்காலத்தில்‌ இருந்த நிலைமை, அவை குறித்து யூதர்களும்‌, முவார்களது தலைவர்களும்‌ கொண்டிருந்த கருத்து ஆகியவை தெளிவாகின்றன. அதற்கு மாறாக மெசியா தாவீதின்‌ வழி மரபில்‌ பதோன்றவிருப்பதால்‌ யூதேயாவின்‌ பெத்லகேமில்தான்‌ பிறப்பார்‌ வன்றே நம்பினர்‌. ஏனெனில்‌ இறைவாக்னெர்கள்‌ இதைத்தான்‌ முன்னறிவித்தனர்‌: "யூதா நாட்டுப்‌ பெத்லகேமே, யூதாவின்‌ ஆட்‌சி மையங்களில்‌ நீ சிறியதே இல்லை; ஏனெனில்‌, என்‌ மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர்‌ ஒருவர்‌ உன்னிலிருந்தே தொன்றுவார்‌" (மத்‌ 2:6; மேலும்‌ காண்‌ மீக்‌ 5:1-2; 2 சாமு 5:2). எனவே இந்த நற்செய்திப்‌ பகுதி இயேசு உண்மையில்‌ யூதேயாவைச்‌ சார்ந்தவர்‌, இவர்‌ பெத்லகேமில்‌ பிறந்தவர்‌, அங்குதான்‌ ஞானியர்‌ முழந்தை இயேசுவைக்‌ கண்டு வணங்கினர்‌ என்று இயேசுவின்‌ உண்மை அடையாளத்தையும்‌, பெத்லகேமின்‌ மாண்பையும்‌ விளக்குகின்றது.

மேலும்‌ இங்கு "யூதாவின்‌ ஆட்சி மையம்‌" எனும்‌ சொல்லாடல்‌ சற்று உற்று நோக்கப்பட வேண்டியது. உண்மையில்‌ ஞானியர்‌ யூதர்களின்‌ அரசரைக்‌ காண அக்கால ஆட்சி மையமான எருசலேமுக்கு, அக்கால அரசரான ஏரோதிடம்‌ (வச. 1) வந்தனர்‌. ஆனால்‌ இறைவாக்குகள்‌ எருசலேமை ஆட்சி மையமாகக்‌ காட்டாமல்‌, ஏரோதை அச்சமும்‌ (வச. 3) கலக்கமும்‌ (கொண்டவனாகக்‌ காட்டுகின்றது. அதற்கு மாறாக பெத்லகே மையும்‌, குழந்தை இருந்த வீட்டையும்‌ ஆட்சி மையமாகவும்‌ குழந்தையை மெசியாவாகவும்‌ காட்டுகின்றது. இதுதான்‌ கிறிஸ்மஸ்‌ செய்தி. இறைவனைக்‌ குடிவிலும்‌, குழந்தை வடிவிலும்‌ "ஞானியர்‌" கண்டுகொண்டதுதான்‌ திருக்காட்‌சிப் பெருவிழாவின்‌ செய்தியும்‌ கூட...
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
ஆண்டவரின் திருக்காட்சி
முதல் வாசகம்: எசா 60:1-6

பாபிலோனிய அடிமைத் தளையாலே அழிந்துபட்ட எருசலேமுக்கும், அல்லல்பட்ட இஸ்ரயேலருக்கும் ஆறுதல் மொழிகளாக எழுதப்பட்டவை (எசா 40; 55;60-62 ஆகிய அதிகாரங்கள்). எருசலேம் புத்துயிர் கொள்ளும் என்று நம்பிக்கையூட்டும் இன்றைய வாசகம் இயேசுவின் இறைக் காட்சியால் அனைத்து மக்களும் வாழ்வு பெறுவர் என்பதைக் காட்டுகிறது.

எருசலேம் நாமே

பாபிலோனியத் தளை விரைவில் முடிந்துவிடும். ஆண்டவருடைய மாட்சி முன்பு சீனாய் மலையில் தங்கியது போல (விப 24: 16), இப்போது அவரது மகிமை எருசலேம் மீது உதயமாகும் (எசா 60:2). ஆண்டவர் அதன்மேல் தங்குவார். "சீயோனைச் சுற்றிச் செல்லுங்கள்... அதன் கொத்தளங்களை எண்ணிப் பாருங்கள்... அப்போது இனிவரும் தலைமுறைகளை நோக்கிச் சொல்வீர்கள்: கடவுள் எவ்வளவு மேலானவர் என்று"(திபா 48:13-14). அந்தச் சீனாய் மலையே நாம்; அந்தச் சீயோன் மலையே நாம்; அந்த எருசலேமே நாம். இரக்கத்தின் கடவுள் நம்மேல் எழுந்துள்ளார். நம்மைச் சூழ இருக்கும் பாதுகாப்பு மலைகளாக "இப்போதும் எப்போதுமே ஆண்டவர் நம்மைச் சூழ்ந்துள்ளார்" (திபா 25:1-12). ஆம், கடவுள் நம்மோடு, நம்மேல், நம்மைச்சூழ இருக்கிறார். என்னே மகிமை நமக்கு! இதை உணர்ந்து, கிறிஸ்து நம்மிடையே பிறந்ததற்காக நன்றி கூறுகிறோமா?

கிறிஸ்து நம்மோடிருப்பது பிறருக்காக

எருசலேமின் மகிமையைக் கண்டு புறவினத்தார் அதை நோக்கி ஓடிவந்தது போல (60: 3), பெத்லகேமில் இயேசுவின் ஒளியைக் காணக் கீழ்த்திசை ஞானிகள் வந்ததுபோல (இன்றைய நற்செய்தி), நம்மிலே, நம்முடைய நடை உடை பாவனைகளிலே, சொல் செயல்களிலே கிறிஸ்துவைக் காண, கண்டு அனுபவிக்கப் பிற மக்கள் வர வேண்டும். நம்மிடமிருக்கும் கிறிஸ்து காந்த சக்தியாக அமைந்து, கிறிஸ்துவை அறியாதவரை நம்மைச் சுற்றி வரச்செய்ய வேண்டும். கிறிஸ்துவாகிய காந்த சக்தி நம்மில் செயல்பட வைக்கிறோமா? புதிய எருசலேமில் "ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு; அதன் ஒளியிலே எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்... அங்கு இரவே இராது" (திவெ 21 24) என்பார் திருவெளிப்பாடு ஆசிரியர். நம்மைப் பார்த்துப் பிறரும் ஆண்டவரது ஒளி அவனிடம், அவளிடம் உள்ளது; "அங்கு இரவே இராது" என்று கூறமுடியுமா
?
கிறிஸ்து நம்மோடிருப்பது இந்தியாவுக்காக

"எகிப்து தன் வேலைப் பயனாகிய செல்வங்களோடும், எத்தியோப்பியா தன் வணிகத்தால் கிடைத்த வருமானத்தோடும், செபா தன் உயர்ந்து வளர்ந்த குடிகளோடும், இஸ்ரயேலே, உன்னிடம் வந்து சேரும்" (எசா 45:14) என்பார் எசாயா. இன்றைய வாசகத்திலும் "மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்... மீதியான், ஏப்பாகு நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும். சேபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தி வருவர்" (60:5-6) என்கிறார். "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி"களைக்கொண்ட நம் பாரத அன்னை, ஆன்மீக வாழ்விலும், பண்பாடு, கலாச்சாரத்திலும் முன் நின்ற இந்திய நாடு, ஈராயிரம் ஆண்டளவாக நற்செய்தியைக் கேட்க வாய்ப்புப் பெற்றிருந்த பழம்பெரும் கீழ்த்திசை நாடு, ஏன் இன்னும் இயேசுவைக் கண்டுகொள்ளவில்லை? நம்முடைய ஒளி மரக்காலின் கீழ்வைத்த விளக்காகிவிடவில்லையா? (மத் 5: 15-16). இருளைப் பழிப்பதில் பொருளில்லை. இருளிலே நம்முடைய சிறு தீபங்களை ஏற்றுவோம். கீழ்த்திசை ஞானிகளை இயேசுவிடம் இட்டுச் சென்ற விண்மீன்களாக ஒளிர்வோம். நமது நடத்தை அதற்குச் சான்று பகரட்டும். பற்பல சிறு ஒளிகள் கூடித்தானே பேரொளியை உண்டு பண்ணுகின்றன!!

எருசலேமே, எழுந்து ஒளி வீசு.

இரண்டாம் வாசகம் : எபே 3 : 2-3, 5-6

கீழ்த்திசை ஞானிகள் பாலன் இயேசுவைக் கண்டு ஆராதித்தது ஒரு அடையாளம், ஒரு மறைபொருள். யூதருக்கு மட்டும் இயேசு அரசரன்று, மக்களினத்தார் அனைவருக்கும் அவர் மன்னர் என்பதைச் சுட்டுகிறது இந்நிகழ்ச்சி (மத் 2:1-12). பவுல் அடியாரும் இம்மறைபொருளின் கருத்தை அறிந்து, புறவினத்தாருக்காகப் பாடுபட்டு உழைப்பதை விளக்குகிறது இன்றைய வாசகம்.

அருள் அளிப்பவர் கடவுள்

கிறிஸ்துவ வாழ்வின் தொடக்கம், அடிப்படை, அனைத்தும் கடவுளது கொடையே என்பது பவுல் அடியாரின் துணிவு. "பாவிகளை மீட்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார் என்னும் மொழி உண்மையானது... அந்தப் பாவிகளிலெல்லாம் பெரும் பாவி நானே. இருப்பினும் இறைவனின் இரக்கத்தைப் பெற்றேன்" (1திமொ 1:15-16) என்கிறார். "நான் கடவுளின் தனிப்பட்ட அருளைப் பெற்றவன்" (உரோ 15:15; 1 கொரி 3: 10; கலா 1:15-16;2-9) என்று அடிக்கடி அவர் கூறுவதன் மூலம் தனது இயலாமையையும், இறைவனின் அளவுகடந்த பரிவையும், அவர் தன்னை ஆட்கொண்ட அருளையும் நினைவுறுத்துகிறார்.
நாம் அருள்பெற்றது பிறர் நலனுக்காக

அவருக்குக் கொடுக்கப்பட்ட அருளானது "நமது நன்மைக்காகவே" (3:2). "அந்த அருள்தான் என்னைப் புறவினத்தாருக்காகக் கிறிஸ்து இயேசுவின் தொண்டனாக்கிற்று" (உரோ 15: 15). நற்செய்தியைப் புறவினத் தாருக்கு அறிவிப்பதற்காகவே (கலா 1: 15-16) இவ்வருள் வழங்கப்பட்டது. பவுல் அடியாருக்குப் போன்றே நமக்கும் இறையருள் அபரிமிதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வருளுக்கு நாம் காட்டும் நன்றி, நற்செய்திக்காகப் பணிபுரிவதேயாகும். நம்முடைய வாழ்வில் நற்செய்தி மதிப்பீடுகள் முக்கிய இடம் பெறும்போதுதான், நாமும் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு, பவுல் அடியார் போன்று சாட்சியம் பகர முடியும். இன்று இறைக்காட்சித் திருநாள். இறைவன் நம் வழியாகப் பிறருக்குக் காட்சியளிக்க வேண்டும். பிற சமய மக்களிடையே வாழும் நாமே பிறருக்கு இறைவனின் வெளிப்பாடுகளாக அமைய இறைவன் நமக்கு அருள் பாலிப்பாராக.

ஆவியாரின் அருளால் செயல்படுவோம்

மறைபொருளின் விளக்கம் தருபவர் தேவ ஆவி (3:5). "ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதரின் விருப்பத்தால் உண்டானதில்லை. மனிதர் பரிசுத்த ஆவியாரால் தூண்டப்பட்டு, கடவுளின் ஏவுதலால் பேசினர்" (2 பேதுரு 1: 21). மறைநூலை அறியவும், மறை பொருளைக் கண்டுணரவும் தூய ஆவியாரின் அருள் நமக்கு எப்போதும் தேவை. "ஆண்டவரே பேசும்; உம் அடியான் கேட்கிறான்" (1சாமு 3:10) என்ற திறந்த உள்ளத்தோடு ஆவியாரின் அருளை நாடுவோம். ஆவியாரின் அருளே நமக்கு "ஞானமும் மெய்யுணர்வும் ஆலோசனையும் வல்லமையும் அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும்" (எசா 11: 2) தரவல்லது. அதே ஆவியாரின் அருளே நம்மைப் புறவினத்தாருக்கு நற்செய்தியின் தூதுவர்களாக மாற்றக்கூடியது. இறைக்காட்சித் திருநாளாகிய இன்று ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, "எளியோருக்கு நற்செய்தி அறிவிக்க... கட்டுண்டவர்களுக்கு மீட்புச் செய்தியை வெளிப்படுத்த" (எசா 61:1-3) முயற்சி செய்வோம். இவ்வாறுதான் நாம் கொண்டாடும் இறைக்காட்சி விழா அமைந்து பொருள் தர வேண்டும்.

பிற இனத்தவரும் நம்மோடு சேர்ந்து ஒரே உரிமைப் பேற்றுக்கு வாரிசுகள்.

நற்செய்தி: மத் 2:1-12

ஞானிகளின் வருகை மீட்பு வரலாற்றில் ஒரு புதுத்திருப்பம். இதுவரை இடையர்கள், சிமியோன், அன்னா ஆகிய யூத இனத்தவர்க்கே காட்சி கொடுத்த கடவுள் குமாரன், இன்று பிற மறையினர், பிற இனத்தவரான கீழ்த்திசை ஞானிகளுக்குத் தன்னை வெளிப்படுத்துகிறார். நமதாண்டவர் அனைத்து மக்களுக்கும் உரியவர் என்பதை இக்காட்சி நமக்குக் கற்பிக்கிறது.

பெத்லகேமில் இயேசு

விண்ணிலே நடக்கும் விபரீதங்களைக் கொண்டு, மண்ணிலே நடக்கும் நிகழ்ச்சிகளைக் கணிக்கும் கீழ்த்திசை ஞானிகள், எருசலேமை அடைந்து "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று கேட்டார்கள் (2:2). தனக்கு மாற்று அரசன் பிறந்துவிட்டானோ என்று ஏரோதன் கலங்கினான் (2: 3). மெசியாவின் பிறப்பிடத்தைத் தேடும்படி கட்டளை விடுத்தான். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் வேதநூல் வழிநின்று பெத்லகேமின் வரலாற்றை ஆராய்ந்தனர். யாக்கோபு தன் மனைவி இராக்கேலை அடக்கம் செய்தது பெத்லகேமில்தான் (தொநூ 48:7) ; ரூத் வாழ்ந்த இடமும் இதுவே (ரூத்.2: 1); தாவீது பிறந்த ஊர் இதுவே (1சாமு 16:1; 17:12). தாவீதின் வாரிசாக, பெத்லகேமில் யூதர்களின் அரசர்-இஸ்ரயேலின் மீட்பர் - தோன்றுவார் என்பது இறை வாக்கெனத் தெளிவுபடுத்தினார். ஞானிகள் அவரைக் காண விரைந்தனர். இந்நிகழ்ச்சியில் மூன்றுவித மக்களைச் சந்திக்கின்றோம். ஏரோதன்: பதவிவெறி பிடித்தவன்; தனக்கு எதிராக எழும் எவரையும் கொன்று குவிப்பவன்; தன் மகனையும் அவன் விட்டு வைக்கவில்லை. புதிய அரசனின் பிறப்பில் தன் அரியணைக்கே ஆபத்து வந்ததென, தெய்வத் திருமகனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். "குழந்தையைக் கண்டபின் என்னிடம் வந்து தெரிவியுங்கள். நானும் சென்று ஆராதிக்க வேண்டும்" என்று நெஞ்சாரப் பொய் சொன்னான். தலைமைக் குருக்கள், மறை நூல் அறிஞர்கள் மற்றொரு ரகம்: வேத நூல்களை நன்கு அறிந்தவர்கள்; விளக்கம் அளிப்பவர்கள். ஆனால் உண்மையின் ஊற்றிடம் செல்வதுபற்றிக் கவலைப்படாதவர்கள். ஞானிகளோ, ஞானத்தின் இருப்பிடத்தைத் தேடி அலைந்தனர். எத்துணை இடர்ப்பாடுகள் ஏற்படினும் அவற்றை முறியடித்துத் தம் பயணத்தின் குறிக்கோளைக் கண்டடைந்தவர்கள். எனவே, இயேசுவுக்கு எதிராக எழுபவர் ஏரோது. அவரைப் பற்றி, பற்றோ, பாசமோ, பகையோ அற்றவர்கள், தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர். இறுதியாக, அவரைக் காணத் துடிக்கும் ஞானிகள்; இவ்வாறு மூன்று பிரிவினர். நான் எவர் பக்கம்?

ஞானிகளின் விசுவாசத்திற்கு ஒரு சோதனை

அவர்கள் எதிர்பார்த்தது அரண்மனையில் பிறந்துள்ள குழந்தை. யூதர்களின் அரசனோ அரண்மனையில் பிறக்காது, மாட்டுத் தொழுவத்தில் மரியின் மடியில் மலரெனத் துயில்கொண்டிருந்தார். அவரைத் தெண்டனிட்டு வணங்கினர். "தம் பேழைகளைத் திறந்து பொன்னும், தூபமும், வெள்ளைப் போளமும் அவருக்குக் காணிக்கையாகச் செலுத்தினர்" (2:11). இந்நிகழ்ச்சியை ஏற்கனவே எசாயா சுட்டிக் காட்டியுள்ளார். "எருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு: ஏனெனில் உனது ஒளி வந்துவிட்டது... மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள்... ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும்" (எசா 60:1-6; திபா 72: 10-15).
இயேசு அரசர், குரு, மீட்பர்

உலோகங்களில் அரசு செலுத்துவது பொன். அதுவே அரசரின் அடையாளப் பொருள். "அவரது தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோப்பின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார்" (லூக் 1: 33). இயேசுவைத் தம் அரசராய் ஏற்றுப் பொன்னை வழங்கினர். வழிபாட்டில் தூபம் இடம் பெறுகிறது. இயேசு நம்மையும் இறைவனையும் இணைக்கும் பாலம்; நித்திய பலி செலுத்தும் நிலையான குரு இவர். இதைக் குறிப்பதே தூபம். இயேசு இறப்பதற்காகவே பிறந்துள்ளார். இதைக் குறிப்பதே போளம். பெத்லகேம் குடிலில் இயேசு அரசராக, நித்திய குருவாக, உலக மீட்பராக ஆராதிக்கப்படுகிறார். யூதரல்லாத அனைத்து மக்களின் சார்பில் இந்த ஞானிகள் அவரை ஆராதித்தனர். நாமும் அவர்களுடன் இணைந்து நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து ஆராதிப்போம்.

வீட்டிற்குள் போய்ப் பிள்ளையை, அதன் தாய் மரியாவுடன் கண்டு தெண்டனிட்டு வணங்கிளர்.
 
 

  
மீட்பரின் பாதையில் சென்றவளே, மேலவன் திருவுளம் வாழ்ந்தவளே
இகமதில் இருப்பவர் எம் துணையே, எங்களின் இனியநல் இறையன்னையே