திருமுழுக்கு பெருவிழா ஆசி பெற வந்திருக்கின்ற
அன்புள்ளங்களே!
யோக நதி ஒன்றை யோர்தான் நதி ஒன்று திரு நீராட்டுகின்றது! இந்த
திருநீராட்டு வைபவ விழாவுக்கு பரிசுத்த ஆவி புறா வடிவமெடுத்து வருகை
தருகின்றது! வானத்து கதவைத் திறந்து தந்தையின் குரல் ஒலியோ இவரே என்
அன்பார்ந்த மகன் இவரிடம் பூரிப்படைகிறேன் என வாழ்த்தி மொழிகின்றது!
இங்கே படைப்பின் கடவுள் தன் படைப்பிடம் தலை தாழ்த்தி நிற்கின்றார்!
தண்ணீராலும், தூய ஆவியாலும் புதிய வலுப்பெறுகிறார். பணிக்குப்
புதிய தடம் அமைக்கிறார். விசுவாசத்தின் வெளிப்பாடாகின்றார்.
இன்றைய திருப்பலிக்கு யோர்தான் நதி நம்மை அன்போடு வரவேற்கின்றது!
நம்மையும் யோர்தான் நதி திருநீராட்ட விரும்பி திசை திரும்பி
வந்தால் நமது திருநீராட்டை பெற்றுக் கொள்ள நம் தலையை தாழ்த்துவோமா?
முக்கிய பணியில் இருக்கிறேன், பதவியில் இருக்கிறேன் எனக்கேன் இந்த
திருநீராட்டு என தவிர்த்து நிற்போமா? தலைதாழ்த்தி சிந்திப்போம்!
எது எப்படியானாலும் அறியாத பருவத்தில் நமது திருமுழுக்கின் போது
நம் மீது இறங்கிய பரிசுத்த ஆவியின் செயல்பாடு எப்போதும் நம்மோடு
உண்டு! இவரே என் அன்பார்ந்த மகன், மகள் என்ற பேரொலி நம் செவியிலும்
ஒலித்திருக்கும்! அதை அப்படியே மறு பதிவு செய்து இப்போது நம்
மனதுக்குள் ஒடவிட்டு விசுவாசத்தை உறுதிப்படுத்தும் திருப்பலிஇது.
இதில் பங்கேற்போம். புதிய படைப்பாய் தடம்பதித்து நடப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. ஆற்றலோடு ஆட்சி புரியும் இறைவா!
திருச்சபையின் தலைவர்கள் ஆற்றலோடு ஆட்சிபுரிய அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
2. ஆறுதல் கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்
என மொழிந்த ஆண்டவரே!
நாடுகளின் தலைவர்கள் ஆறுதலும் கனிமொழியும் நிறைந்த
பாதையில் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்!
3. ஆடுகளைத் தோளில் சுமக்கும் ஆயனைப் போல எமை
சுமக்கும் இறைவா!
மக்கள் எதிர் நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்
பேறாக பெற்றுக் கொள்ள வழிகாட்டும் எமது பங்குத்
தந்தையை உமது தோளில் சுமந்து பராமரிக்க வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
4. திருமுழுக்கினால் திடம் பெற்ற இயேசுவே!
நாங்களும் எங்களது திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட
ஆவியானவரின் அருட்துணையால் யேசுவைப் போல வாழ அருள் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்!
5. திருமுழுக்கு பெருவிழா வழியாக எங்களோடு உரையாடிக்
கொண்டிருக்கின்ற இறைவா!
வேதனையோடு இருப்பவர், கண்ணீரோடு தவிப்போர், நோயுற்றோர்,
புதிதாய் திருமுழுக்குப் பெற விரும்புவோர்,
திருமுழுக்குப்பெற்று அதன் மகத்துவத்தை அறியாதோர்
அனைவருடனும் நீர் இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
திருப்பலி முன்னுரை
- Gnaoli
-
பா. சேவியர் திண்டுக்கல்
ஆண்டவருடைய திருமுழுக்கு விழா
எசா 42:1-4, 6-7,
தி.ப. 10:34-38,
மத். 3:13-17
திருப்பலி முன்னுரை
அன்பு இறைமக்களே, இன்று ஆண்டவருடைய திருமுழுக்குப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ, திருமுழுக்கின் மேன்மையை
உணர்ந்து, உலகு சார்ந்த தீய நாட்டங்களை விட்டொழித்து,
நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழத் தாய் திருச்சபை
நம்மை அழைத்துள்ளது.
ஆண்டவரின் திருமுழுக்குபெருவிழா, கிறிஸ்து பிறப்புக்
காலத்தின் முடிவாகவும், ஆண்டின் பொதுக்காலத்தின் தொடக்கமாகவும்
அமைகிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு அவர் இவ்வுலகில்
தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்க இருக்கிறார் என்பதன்
அடை யாளமாக இருக்கிறது. தந்தை, மகன், தூய ஆவி மூவரும்
ஒரே நேரத்தில், ஒன்றாய் காட்சி தந்த முதல் நிகழ்ச்சி
இறைமகன் இயேசு திருமுழுக்குப் பெற்ற இந்த நிகழ்ச்சிதான்.
திருமுழுக்கின் வழியாக பாவங்கள் கழுவப்பட்டு, ஆண்டவரின்
அன்பு மக்களாக புதுப்பிறப்பு எடுத்துள்ள நாம் ஒவ்வொருவரும்
இயேசுவின் இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ
வேண்டும் என்பது தான் இந்நாள் நமக்குத் தருகின்ற மேலான
அழைப்பாக இருக்கின்றது.
இவர்கள் என் அன்பார்ந்த மக்கள், இவர்களிடம் நான்
பூரிப்படைகிறேன் என்று நம் வானகத் தந்தை, நம்மைப்
பார்த்து பெருமைப்படும்படி நாம் வாழவும், நமது ஆண்டவராகிய
இயேசுவின் வாழ்வைப் போல் நமது வாழ்வும் ஆவியானவரின் உந்துதலுக்கு
உகந்த வாழ்வாய் அமையவும், நாம் என்றும் ஆவியானவரின்
ஆலயமாக திகழவும் இத்திருப்பலி வழியாக இறையருளை
வேண்டுவோம்.
வாருங்கள் இறைமக்களே, யோர் என்னும் ஊற்றும், தான் என்னும்
ஊற்றும் சங்கமமாகும் யோர்தான் என்னும் இத்திருப்பலியில்
பக்தியுடன் மூழ்கி, நம்மேல் படிந்துள்ள பாவக் கறைகளைக்
கழுவி, நம் வாழ்வை புதுப்பித்துக் கொள்வோம்.
முதல் வாசக
முன்னுரை
இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்ற இன்றைய
நாளில் ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்கினர் எசாயா
உரைக்கும் செய்திகள் இயேசுவுக்குப் பொருந்தி அமைவதாய்
உள்ள வாசகத்தை திருஅவை நமக்கு வழங்கியுள்ளது. சடங்குகள்,
சம்பிரதாயங்கள், விவாதங்கள் எல்லாம் தாண்டி
திருமுழுக்கின் தரமான அர்த்தத்தை எடுத்துரைக்கும் கவனமுடன்
கேட்போம்.
இரண்டாம்
வாசக முன்னுரை
கொர்னேலியுவின் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு பேதுரு
வழங்கிய அருளுரை இன்றைய இரண்டாம் வாசகமான
அமைந்துள்ளது. யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு,
எம்முறையில் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றுகிறார்
என்பதே இவ்வாசகத்தின் மையக்கருத்து. திருமுழுக்கு
விழாவிற்கு ஏற்ற கருத்தாழமிக்க இவ்வாசகத்தை கவனமுடன்
கேட்போம்.
மன்றாட்டுகள்
1. நிலை வாழ்வை உரிமைப் பேறாக வழங்குகின்ற அன்பு
இறைவா, பாவத்தால் பார்வை இழந்தோரின் அகக் கண்களைத்
திறக்கவும், அலகையின் தளைகளை அறுக்கவும், பாவ
இருளில் இருப்போரை மீட்டு, உம் திருஒளிக்கு அழைத்து
வரவும் ப உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட உம்
திருஅவையின் தலைவர்களை ஆசீர்வதி 6 யும். இவ்வுலக
மாந்தருக்கு அவர்கள் உடன்படிக்கையாகவும், ஒளியாகவும்
திகழ்ந்து, மக்களை கரம் பிடித்து நடத்திட அவர்களுக்கு
வேண்டிய ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் நிறைவாகத்
தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, திருமுழுக்கு
என்பது வாழ்க்கை யின் மையம். அதுவே வாழ்வின் துவக்கம்.
அதுவே உம்மையும் எம்மையும் இணைக்கும் பாலம் என்பதை
நாங்கள் உளமாற உணர்ந்து, தூய ஆவிக்கு சாட்சியமாகவும்,
அவரின் ஆலயமாகவும் வாழ்ந்து, நீ என் அன்பார்ந்த மகன்,
மகள் என்று உம்மால் அழைக்கப்படும் பேற்றினை பெற்றிட
வரம் அருளுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. மன்னிப்பதில் மகிழ்ச்சி காணும் இறைவா, அறிந்தும்
அறியாமலும் நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்.
திருப்பலி என்னும் யோர்தானில் மூழ்கி எழுகிறோம். எம்
உடலையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்தும். சொல்லாலும்
செயலாலும் சிந்தையாலும் உமக்கேற்ற பிள்ளைகளாக
வாழ்ந்து, நிறை வாழ்வையும், அதனைத் தொடர்ந்து
நிலைவாழ்வையும் பெற்று மகிழ அருள் தர வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எல்லா நெறிகேடுகளில் இருந்தும் எம்மைமீட்கின்ற
அன்பு இறைவா, எம் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்
தலைவர் களும் அதிகாரிகளும் உம்மைப்போல் மக்களை
நேசித்து, அன்புப் பாதையில் வழிநடத்தவும், வளர்ச்சித்
திட்டங்களை செயல்படுத்தி வளமான வாழ்வை ஏற்படுத்தவும்.
தாழ்ச்சி, உண்மை, நீதி, நேர்மை, தன்னலமின்மைபோன்ற
பண்பு களைக் கொண்டு செயலாற்றவும், மக்களின்
நலனுக்காகவும் நட்டின் முன்னேற்றத்திற்காகவும்
அர்ப்பணிப்பு டனும், ஆர்வத்துடனும் பணியாற்றவும்
அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
திருமுழுக்கின் வழியாக தூய ஆவியை துணையாய்ப் பெற்றுக்கொண்ட
இயேசுகிறிஸ்துவின் திருமுழுக்கு திருவிழா திருப்பலிக்கு அன்புடனே
அழைக்கின்றோம்.
இறை மைந்தன் இம்மண்ணுலகில் மனிதனோடு மனிதனாக நின்று தூய
யோவானிடம் திருமுழுக்கு பெறுகின்றார். ஒவ்வொரு செயல்களிலும்
தம்மையே தாழ்த்தி, பரம தந்தையின் திருவுளத்திற்குப் பணிகின்றார்.
இத்தகைய தாழ்ச்சி, அன்பு, பொறுமை போன்ற தூய ஆவியின் கனிகள்
திருமுழுக்கினால் நம்முள் நிலைப்படுத்தப்படட்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், தன் அன்பிற்குரிய பணியாளனின்
மேன்மையையும் மாட்சியையும் எடுத்துரைக்கின்றார் ஆண்டவர்.
பிற இனத்தாருக்கு ஒளியாகவும், அடிமைத்தனத்தை அகற்றி மக்களை
மீட்டெடுக்கவும் பயன்படுத்துவேன் என்கிறார் ஆண்டவர்.
நாமும் இறைவன் தேர்ந்தெடுத்த கருவிதான். நமது பாதையை
செம்மையாக்கி, நமது வாழ்வை பிறருக்கு முன்மாதிரியாக்கி,
கைகோர்த்து நடப்போம்.
இன்றைய நற்செய்தியில், "என் அன்பார்ந்த மகன் இவரே" என இறைவன்
மகிழ்ந்து இயேசுவினால் பூரிப்படைவதைக் காண்கின்றோம். பாவமே
அற்றவர் ஆயினும் திருமுழுக்கு என்னும் அருட்சாதனம்
பெறுகிறார் இயேசு. நாமும் திருமுழுக்கு என்பதை பெயர்
சூட்டும் விழாவாக மட்டும் எண்ணாமல், தூய ஆவியை நம் உள்ளத்தில்
வரவேற்க தயாராக வேண்டும். திருமுழுக்கு தூய ஆவியின் கனிகளை
நம்முள் பிறப்பிக்கட்டும். இயேசுவின் திருமுழுக்கினால் இறை
விருப்பம் நிறைவேறுகிறது. அதே இறை விருப்பத்தை நம்மிலும்
நிறைவேற்றுவோம். கிறிஸ்துவின் பங்காளிகள் என்பதை உணர்ந்துகொண்டு,
மகிழ்வாயினும், மனவருத்தம் ஆயினும் இறைவனோடு மகிழ்ந்திருப்போம்.
தூய ஆவியின் துணை வேண்டி இப்பலியில் இணைவோம்.
இறைமக்களின் மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. உமது ஊழியர்களாக வாழ அழைப்பவரே!
திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்கள் பணியாளர்களை,
தூய ஆவியால் நிரப்பி, உம் கரத்தால் வழிநடத்தவும், மக்களை
இறை பாதையில் வழிநடத்த தேவையான வல்லமையை தந்து காத்து வழிநடத்தும்
வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
2. ஆற்றலோடு ஆட்சி புரிய வருபவரே எம் இறைவா!
எம் நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள், நீர் மக்களை
நேசித்து, அன்புப் பாதையில் வழிநடத்தியது போல, ஆட்சியாளர்களும்
பிரிவினை, பிரித்தாளும் போக்கை கைவிட்டு வளர்ச்சித் திட்டங்களை
செயல்படுத்தி வளமான வாழ்வை ஏற்படுத்தும் வரம் வேண்டும் என
ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
3. தூய ஆவியால் எம்மை நிரப்புபவரே!
திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட தூய ஆவியை
உணர்ந்து, தூய ஆவியின் வல்லமை எங்களில் தொடர்ந்து நிறைவேறவும்,
தூய ஆவியின் கனிகளை பெற்று நற்செய்தியை வாழ்வாக்கிட வரம்
வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
4. என் அன்பார்ந்த மகன் இவரே என்று இறைத் தந்தையால் அரவணைக்கப்பட்டவரே!
எமது பிள்ளைகளும் கல்வி, இறை ஞானம், ஒழுக்கத்தில் சிறந்து
விளங்கவும், இறைவன் விரும்பும் பாதையில் தூய வாழ்க்கை
வாழ்ந்து, பெற்றோர், பெரியோரை மதிக்கவும், கீழ்ப்படிந்தும்
சிறந்தவர்களாக வளர வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
5. பள்ளங்கள் எல்லாம் நிரப்பப்படும் என்றவரே எம் இறைவா!
எம் பகுதியில் தகுந்த இயற்கை கால சூழ்நிலை நிலவி, விவசாயம்
சிறந்து, பொருளாதாரம் மேம்படவும், குடும்பங்களில் அமைதி,
சந்தோசம் பெருகவும், எண்ணங்கள், ஏக்கங்கள் நிறைவேறவும்,
வேலைவாய்ப்பு, திருமணம் குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால்
பெற்று மகிழும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
அன்புமிக்க பங்கு மக்களே "அகம் தூய்மையாகும்போது ஆண்டவரின் அன்பும்,
மகிழ்வும் அங்கு பெருகும்" என்ற சிந்தனையோடும், திருச்சபையோடும் இணைந்து
ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைச் சிறப்பிக்க வந்திருக்கும் உங்கள்
அனைவதையும், புனித குழந்தை இயேசு அன்பியக் குடும்பங்கள் அன்போடு
வரவேற்கின்றோம். இயேசுவின் திருமுழுக்கு விழா, நம்மை மறு
கிறிஸ்துவாக வாழ அழைக்கும் விழா. வானம் திறந்து ஆவியானவர் இறங்க,
இறைத்தந்தை தம் மகனின் மீட்புப் பணிக்கு அதிகாரப்பூர்வமாக நடத்திய
தொடக்க விழா. இயேசு உலகம் எனும் ஆற்றில் மூழ்கி, அமிழ்ந்து, மக்கள்
எனும் நீரில் கலந்து, கரைந்து, மீட்புப் பணியைத் தொடங்கிய நாள்.
அவர் ஒரு இறைப் பணியாளர் என்பதை ஆவியினால் திருப்பொழிவு செய்யப்பட்டு,
மனிதகுல கலாச்சாரப் பாரம்பரியத்தில் தன்னை இணைத்து தானும் ஒரு அங்கம்
என்பதை உலகிற்கு காட்டுகிறார். இயேசு திருமுழுக்குப் பெற்றபோது
வானிலிருந்து வந்தக் குரல் ஒரு உண்மையை உலகறியச் செய்தது. நாம்
பெறுகின்ற திருமுழுக்கும் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றுகிறது.
எனவே நாமும் இறைப்பணியாளர்களாக கடவுளை மகிமைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
நமது வார்த்தையும் செயல்பாடுகளும் கடவுளுக்குச் சான்று பகர்ந்திட
வேண்டும். இறைவன் நம்மைக் குறித்து மகழ்ச்சியடைகிறேன் என்னும்
சொல்லுக்குப் பாத்திரமாக விளங்க அருள் வேண்டியவர்களாக இப்பலியில்
பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை(எசா 42: 1-4,6-7)
ஆண்டவரின் வருகையினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், பாவங்கள் மன்னிக்கப்பட்டது,
ஆயனைப்போல மந்தையைப் பேணி காப்பார், பள்ளத்தாக்குகள் நிரப்பப்பட்டு,
நீதி, நேர்மை, சமத்துவம் மலரும் என்று கூறும் எசாயா இறைவாக்கினரின்
நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
(திப 10: 34-38)
இயேசுவே மனிதர் அனைவருக்கும் மீட்பர், நம் பாவங்கனிலிருந்து நம்மை
மீட்டு புதுவாழ்வு வழங்கும் இறைவன் என்றும் நம் செயல்களால் அல்ல,
இறைவனின் இரக்கத்தினால் நாம் விடுதலை பெற்றுள்ளோம் என்றும்,
நீரினாலும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்பார் என்று திருத்தூதர்
பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள
இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1.) ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவை சிறப்பிக்கும் இந்த
ஞாயிற்றுக் கிழமை வழிபாட்டில், திருத்தந்தை லியோ, எங்கள் ஆயர் சகாயராஜ்,
மற்ற திருச்சபைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும்,
திருமுழுக்கு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு ஏற்ற
வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றும், எங்கும் நன்மை செய்துகொண்டே
சென்ற இயேசுவிடம் இருந்த மனநிலையோடு, நாங்கள் ஒவ்வொருவரும் பயணிக்க
வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.) உலகாளும் தலைவர்களும், எம்தாய்த்திருநாட்டை ஆட்சி புரிவோரும்,
"நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது"
என்று கடவுளும், தேர்ந்தெடுத்த மக்களும் பூரிக்கும் வண்ணம் நல்லாட்சி
நடத்தவும், நேர்மையாகச் செயல்படுபவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும்,
அமைதியை நாடுவதிலும், அனைவருக்குமான நலத்தில் முனைப்பாய் இருப்பதிலும்,
தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.) இதோ! என் ஊழியர்! என ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட
குருக்களும், துறவியரும், மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு
ஒளியாகவும் இருந்து, பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின்
தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரை மீட்கவும், நீர் தாமே ஆசி அருள
வேண்டுமென்றும், இளைஞர்கள் இளம்பெண்கள் பலரும் தேவ அழைத்தல் பெற
வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.) ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளின் பிள்ளைகளாய் நாங்கள் இருந்து,
இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை நம்பும்
மக்களாகத் திகழ்ந்து, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும்,
பங்கிலும், உழைக்கும் இடங்களிலும், வாழும் சமுதாயத்திலும், அமைதியின்
தூதுவர்களாகவும், இறைவனுக்கும், மனிதருக்கும் ஏற்புடையவர்களாகவும்
வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.) எம்மில் ஒருவரைப் போல் திருமுழுக்கு பெற்ற இயேசுவே! இங்கே
கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் தமிழ்ச் சொந்தங்களோடு
சேர்ந்து, நன்றி பாராட்டுதல், உழவரையும் உழைப்பவரையும் மதித்தல்,
பிற உயிரனங்களையும் மாண்புடன் நடத்துதல், காண்போரை எல்லாம் மனம்
நிறைய வாழ்த்துதல் ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய தமிழர் திருநாளாம்
பொங்கல் திருநாளை கொண்டாடி, பிறக்கின்ற தை முதல், பொங்கும் மகிழ்வுடன்,
வாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
தந்தை தஞ்சை டோமி
மறையுரைச்சிந்தனை -
- ஜோசப் லீயோன்
இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
திருமுழுக்கு ஞாயிறு இயேசுவின் திருமுழுக்கைப்பற்றி பேசியபோதும்
நம் திருமுழுக்கை நினைவுபடுத்துகிறது. இயேசுவின்
திருமுழுக்கோடு நமக்குள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்துகிறது.
திருமுழுக்கு ஒரு நெறியின் அல்லது நம் கத்தோலிக்க மதத்தின்
நுழைவிடம் மட்டுமல்ல. அதிலும் மேலாக அது ஒரு செயல்பாட்டுக்கு
கொடுக்கப்படும் அழைப்பு. திருமுழுக்கின்போது நாம்
"கிறிஸ்மா" என்னும் திருத்தைலத்தால் திருநிலைப்படுத்தப்படுகிறோம்.
ஆயர்களும் அரசர்களும் குருக்களும் அரிய பெரிய செயல்களைச்
செய்வதற்காக அவ்வாறு அபிஷேகம் செய்யப்படுகிறார்கள். ஆகவே
திருமுழுக்கு ஒரு செயல்பாட்டை மையப்படுத்தியது.
திருமுழுக்கு ஒரு மாபெரும் சக்தியில் பங்கேற்கும் ஒரு நிகழ்வு.
அளவிடமுடியாத ஆற்றல் அதிலே அடங்கியிருக்கிறது. இயேசு
திருமுழுக்கு பெற்றபோது அவர் பெற்ற தெய்வீக ஆற்றல் அனைத்தும்
திருமுழுக்கு பெறும் அனைவரும் பெருகிறோம்.
இவ்வுலகும் அதன் படைப்புக்களும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவை.
அவையால் இவ்வுலகம் இயங்குகிறது என்பது ஒரு கணிப்பு. ஐம்பெரும்
பூதங்கள் என்பன நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும்
ஐந்து பெரிய சக்திகள். இச் சக்திகளின் தொகுப்பால் உலகம் உருவாக்கப்பட்டது.
புதிது புதிதாக இன்று உருவாக்கப்படுகிறது, இயக்கப்படுகிறது.
புதிய படைப்பும் படைப்பின் இயக்கமும் இச் சக்திகளைச்
சார்ந்தே இருக்கின்றது.
இயேசுவின் திருமுழுக்கில் இந்த ஐந்து மாபெரும் இறைவனின் படைப்பாற்றலும்
வெளிப்பட்டு சாட்சியம் பகர்வதைக் காண்கிறோம்.
1. நீர் - இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றார்
(மத்3:16)
திருமுழுக்கில் வழங்கப்படும் தண்ணீரின் ஆற்றல்,நம்முடைய பாவங்களையும்
சமுதாயத் தீமைகiளை கழுவவும் புதிய சமூகத்தின் ஊட்டச் சத்தாகவும்
அமைகிறது.
2. நிலம் - இயேசு காலூன்றி நின்ற யூதேயா மண் ஒரு வரலாற்றுச்
சான்று.
திருமுழுக்கில் தொடர்புடைய நிலம் என்னும் ஆற்றல், இப்பணிக்குத்
தேவையான சொத்தாகவும்,இப் பணியில் அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல
நிதானத்தோடும் பொருமையோடும் பணியாற்ற வலிமைளை வழங்குகிறது.
3. நெருப்பு தூய ஆவி இறங்கி வந்தார் (மத்3:16) எனக்குப்
பின் வருகிறவர் தூய ஆவி என்னும் நெருப்பால் திருமுழுக்கு
கொடுப்பார் (மத்3:11) நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர்
மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.அவர்கள் அனைவரும்
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் (தி.ப 2:3-4)
திருமுழுக்கின் நெருப்பு, அநீதியை, அதர்மத்தை அழிப்பதில்
நாம் காட்டும் வேகத்திற்கு வலிமை சேர்க்கும் ஆற்றலாக நம்மில்
உள்ளது.
4. காற்று ஒலி பரவுவது காற்று மற்றும் அதன் நுண்ணலைகள்
வழியாக என்கிறது அறிவியல். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே.
இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து
கேட்ட குரல் (மத் 3:17) இறை ஆற்றலின் வெளிப்பாடு அல்லவா.
திருமுழுக்கின் காற்றுபோன்ற ஆற்றல், தொடர்புச் சாதனமாகச்
செயல்பட்டு, அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்னும் உறவை
வளர்க்க ஆற்றல் வழங்குகிறது.
5. ஆகாயம் - வளி மண்டலத்தை இவ்வாறு குறிப்பிடுவர். வானம்
திறந்தது (மத் 3:16) என்னும் சாட்சியம் வளி மண்டல வல்லமை
இயேசுவில் ஆளுமைகொண்டது என்பதன் சான்று.
திருமுழுக்கின் வளி மண்டலம் இப்பணியில் நமக்குத் தேவையான
ஆன்மீக வலிமையை விண்ணிலிருந்து அருட்கொடையாக வாரி
வழங்குகிறது.
நம் திருமுழுக்கின்போது இயேசுவில் இறங்கிய இச் சக்திகள்
அனைத்தும் தொகுத்துச் செரிவூட்டப்பட்ட நிலையில்
திருமுழுக்கு பெருவோருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு
வழங்கப்படுவது புதிய மனிதனாக, புதிய சமுதாயம் படைக்க,
இறுதியில் புதிய வானகமும் புதிய வையகமும் உருவாக்க
வேண்டும் என்பதற்காகவே.
ஆக, நம் திருமுழுக்கில் நாம் பெறும் இந்த ஐமுனை ஆற்றல்,
புதிய சமுதாயம் படைக்க, இறுதியில் புதிய வானகமும் புதிய
வையகமும் காண எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பது
நம் முன் இருக்கும் கேள்வி.
- ஜோசப் லீயோன்
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்குங்கள்.
எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் தரும், எதிர்பார்ப்புக்களைக்
குறைத்துக் கொண்டால் எதிர்வருவது தானாக நிறையும் என்று
பலவற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிகமாக
எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் வரும் என்றெண்ணி அதில்
கவனமாக இருந்த நாட்கள் கூட இருக்கலாம் இப்படியிருக்க நமது
எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்க அழைப்புவிடுக்கின்றன இன்றைய
வாசகங்கள். கிறிஸ்து பிறப்பு, ஞானியர் வருகை, திருமுழுக்கு
என்று மூன்று முப்பெரும் விழாக்களுடன் கிறிஸ்து
பிறப்புக்காலத்தை நிறைவு செய்து பொதுக்காலத்தில்
அடியெடுத்து வைக்க இருக்கும் நாம் நல்லவற்றை எதிர்பார்க்க
அழைக்கப்படுகின்றோம்.
கிறிஸ்து பிறப்பு, மெசியா எங்கு பிறப்பார்? எப்படி
பிறப்பார்? என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி ஏழ்மையின்
மன்னனாக பிறந்து மண்ணகத்தில் மகிழ்ச்சி தந்ததோடு
நிறைவடைந்தது.
ஞானியர் வருகை, யூதரின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே
என்ற எதிர்பார்ப்போடு தொடங்கி, மாடடைக் குடிலில் மரியின்
மடியில் அரியணை கொண்ட மகவின் நிறைவோடு முடிவடைந்தது.
திருமுழுக்கு விழா, யோவான் தான் மெசியாவாக இருப்பாரோ என்ற
ஏக்கத்தோடு தொடங்கி இவரே என் அன்பார்ந்த மகன் இவர்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்ற வாழ்த்தோடு
வழிநடக்கிறது.
ஆக நாம் கொண்டாடிய அனைத்து விழாக்களும் ஏதோ ஒரு
எதிர்பார்ப்போடு தொடங்கி நல்ல நிறைவுடன் முடிவடைகிறது.
அவ்வகையில் இன்று நாம் கொண்டாடும் நமதாண்டவரின்
திருமுழுக்கு பெருவிழாவும் நல்லதொரு எதிர்பார்ப்பினை நம்
மனதில் உருவாக்குகிறது. இன்றைய நற்செய்தி பகுதி மூன்று
நிலை மனிதர்களின் எதிர்பார்ப்பும் அவர்களது நிறைவும் பற்றி
நமக்கு எடுத்துரைக்கின்றன. முதல் நிலை, இடை நிலை, கடை
நிலை.
கடை நிலை
கலிலேயா கடற்கரைப் பகுதியைச்சார்ந்த மக்கள் இந்நிலை
வகையைச்சார்ந்தவர்கள். இவர்களின் எதிர்பார்ப்பு, மெசியா
யாராக இருக்கும் என்பதில் இருந்தது. யோவானாக இருக்குமோ ?
இவர் தான் மக்களை மனம்மாற்றுகின்றார். ஆனால் ஆடை உணவு
உறைவிடம் அனைத்தும் மிக மிக எளிமையாக இருக்கின்றதே என்ற
எண்ணம் இருந்திருக்கலாம். இவர்களது எதிர்பார்ப்பு
வெளிப்புறத்தோற்றத்தையும் செயல்பாட்டையும் பொறுத்ததாக
இருந்தது. ஆனாலும் நன்மையை நோக்கிய ஒரு எதிர்பார்ப்பாக
இருந்ததால் அதுவும் நிறைவேற்றப்படுகிறது. மெசியா யார்
என்று கண்டு கொள்ளும் ஒரு வாய்ப்பினைப் பெறுகின்றனர்.
யோவான் தான் இல்லையேன்று சொல்லி இயேசுவைப் பார்த்து இவரே
கடவுளின் ஆட்டுக்குட்டி என்று சுட்டிக்காட்டுகின்றார்.
இவர்களது எதிர்பார்ப்பின் நிலைக்கேற்ப நிறைவு
செய்யப்படுகின்றார்கள்.
இடை நிலை
இவ்வகை நிலையில் திருமுழுக்கு யோவான் இருக்கிறார்.
ஆண்டவராகிய மெசியாவிடம் நான் திருமுழுக்கு வாங்க வேண்டும்
என்று எண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருக்க, இயேசுவே இவரிடம்
திருமுழுக்கு வாங்க வருகின்றார். தன்னைத் தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான் என்னும் மறைநூல் வரிகள் இவர் தம்
வாழ்வாலும் வாக்காலும் நிறைவேற்றப்படுகின்றது. இவரது
எதிர்பார்ப்பு உள்ளம் சார்ந்ததாய் இருக்கின்றது. நான்
தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன் இவர் தூய ஆவியினால்
கொடுப்பார் என்று எதிர்பார்த்து அவருக்கு முன்னோடியாக
இருந்து முன்னுரை அளிக்கின்றார். விளைவு அந்த தூய ஆவியின்
வல்லமையையும் குரலையும் நேரில் கண்டு அனுபவிக்கும் நிலை
பெற்றார். அதில் நிறைவும் பெற்றார்.
முதல் நிலை
இவ்வகை முதல் நிலையில் இயேசு இருக்கின்றார். கடவுளின்
மகனான அவர் தன்னை தாழ்த்தி ஒரு சாதாரண மனிதர் போல்
திருமுழுக்கு பெற எண்ணினார். பாவிகளோடு பாவிகளாக தன்னையும்
இணைத்து தாழ்த்த எதிர்பார்த்தார். கடவுளோ இவரின்
எண்ணத்தையும், செயலையும் உயர்த்தியதோடு மட்டுமல்லாமல் அதை
உடன் இருப்போரும் உணரும்படிச் செய்தார். பாவியைப் போல
இருக்க நினைத்தவர் மேல் பரிசுத்த ஆவி பொழிந்து இவரே என்
அன்பார்ந்த மகன் என்று அறிக்கையிடுகின்றார். இவர் தனி ஆள்
அல்ல நாங்கள் மூவர் என்பதை எண்பிக்கும் வகையில் தூய ஆவியை
புறா வடிவில் அவர் மேல் தங்கச்செய்தார். அனைவர்
முன்னிலையிலும் கடவுளின் மகன் என்று அழைக்கப்படும்
பேற்றினைப் பெறச்செய்கின்றார்.
ஆக இந்த திருமுழுக்கு பெருவிழா நமக்கு விடுக்கும் அழைப்பு
இதுதான். எதிர்பாருங்கள் கடை நிலை மனிதர் போல் அல்லாமல்
முதல் நிலை மனிதர் போல. ஏனெனில் நமது எண்ணங்களும் சரி
எதிர்பார்ப்புக்களும் சரி எப்போதும் உயர்ந்தவகையாக இருக்க
வேண்டும். நமது எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம்.
இதனால் வரும் பலன்கள் நமக்கு இரட்டிப்பான மகிழ்வைத்தரும்.
யோவான் போல எதிர்பார்ப்போம் இயேசுவை சுட்டிக்காட்டும்
மனிதர்களாக மாறலாம் . இயேசு போல எதிர்பார்ப்போம் இவரே என்
அன்பார்ந்த மகன் என்று அழைக்கப்படும் பேறுபெறலாம். எனவே
நமது நல்ல எதிர்பார்ப்புக்களை இரட்டிப்பாக்குவோம். நிறைவான
பலன்களை அடைவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்திலுள்ள
ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ஆமென்.
சகோதரி மெரினா
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
கரை சேர்க்கும், கரை சேரும் கடவுள்
ரொம்ப பரிச்சியமான ஒரு கதைதான். ஆனால், இன்றைய நாளுக்கு
இது பொருந்துவதாக இருப்பதால், அக்கதையுடன் நம் சிந்தனையைத்
தொடங்குவோம். ஒரு ஊரில் இருந்த 3 பேர் ஒரு நாள் மாலையில்
குடிப்பதற்காக ஆற்றின் அக்கரையிலுள்ள ஓர் ஊருக்குச்
செல்கின்றார்கள். பரிசல் ஒன்றை எடுத்து இவர்களே
ஓட்டிக்கொண்டு போய் அக்கரையை அடைந்து வெகு நேரம்
குடிக்கிறார்கள். நன்றாக இருட்டிவிட, அவர்கள் வீடு
திரும்புவதற்காகத் தாங்கள் வந்த பரிசலில் மீண்டும் ஏறி ஊர்
திரும்பும் முகத்தான் துடுப்புப் போடுகின்றனர். துடுப்புப்
போட்டுக்கொண்டே இருக்க விடிந்து விடிகின்றது. ஆனால்,
அவர்கள் அக்கரையிலேயே இருக்கின்றனர். போதை தெளிந்த அவர்கள்
சற்றே திரும்பிப் பார்க்கிறார்கள். மது மயக்கத்தில்
தாங்கள் ஏறி அமர்ந்த பரிசலைக் கட்டியிருந்த கயிற்றை
அவிழ்க்காமலேயே விடிய விடிய தங்கள் ஆற்றலை
வீணாக்கியிருப்பதை நினைத்து வருந்துகிறார்கள்.
அவர்களின் மது மயக்கம் அவர்களைக் கரை சேர்க்கவும், கரை
சேரவும் விடாமல் தடுத்துவிட்டது. இல்லையா?
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக்
காலம் நிறைவு பெறுகிறது. திருவருகைக்காலத்தில் 4 மெழுகு
திரிகள் ஏற்றி, குடில் ஜோடித்து, நட்சத்திரங்கள் கட்டி,
கேரல்ஸ் பாடி, கேக் உண்டு, கிறிஸ்து பிறப்பு, புத்தாண்டு,
திருக்காட்சி என விழாக்களைக் கொண்டாடிய நாம் இன்றோடு நாம்
அவற்றை நிறைவு செய்கின்றோம். இவ்வளவு நாளாக நாம் கரையின்
இந்தப் பக்கம் இருந்துவிட்டோம். கரையின் இந்தப் பக்கம்
மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. இப்போது
கரையின் அடுத்த பக்கமான சாதாரண, பொதுக்காலத்திற்குக்
கடந்து செல்கின்றோம். ஆனாலும், இப்போது நாம் செல்லும்
கரையின் மகிழ்ச்சி கொஞ்சமும் சாதராணது அல்ல.
இன்றைய நாளின் இறைவாக்கும் வழிபாடு கரை சேர்க்கும் கடவுளாக
ஆண்டவராகிய இறைவனையும், கரை சேரும் கடவுளின் மகனாக இயேசு
கிறிஸ்துவையும் முன்வைக்கின்றன. திருமுழுக்கின் வழியாக
பாவக் கரை-கறையிலிருந்து தூய்மைக்குக் கரைசேர்த்த கடவுளோடு
இணைந்து நாம் தொடர்ந்து கரை சேர இன்றைய நாள் நமக்கு
அழைப்பு விடுக்கிறது.
கி.மு. 586ஆம் ஆண்டு யூதாவில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள்
பாபிலோனியாவுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்படுகின்றனர்.
இறப்பும், இருளும், அழிவும் மேலோங்கி நின்ற அந்த
நேரத்திலும் அவர்கள் அந்தப் புதிய நாட்டில் இயல்பான
வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொண்டனர். வாழ்க்கை என்னதான்
இயல்பாக இருந்தாலும் அந்நிய மண்ணில் அவர்கள் இருப்பது
அவர்களுக்கே ஏற்புடையதாக இல்லை. அவர்கள் அன்பு செய்த யூதா
நாடு மிகவும் அழிந்த நிலையில் இருந்தது. 'சொந்த நாட்டிற்கு
இனி திரும்ப மாட்டோம்' என்ற நம்பிக்கையின்மையும்
விரக்தியும் மேலோங்கி நின்ற நிலையில், இறைவாக்கினர் எசாயா
ஆண்டவரின் வாக்கை அவர்களுக்கு அறிவிக்கின்றார்: 'ஆறுதல்
கூறுங்கள். என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள்.' இதயத்தில்
நம்பிக்கை இழந்த, சிதறுண்டு போன மக்களுக்கு
மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டு செல்லுமாறு எசாயாவை
அனுப்புகிறார் இறைவன். இந்த மிகப்பெரும்
நாடுகடத்தப்படுதலுக்குக் காரணமான அவர்களின் பாவங்கள்
மறக்கப்பட்டன என்பதையும், அவர்கள் நாடு திரும்பும் நேரம்
வந்துவிட்டதையும் அறிவிக்குமாறு பணிக்கின்றார். ஆண்டவர்
தாமே சிதறுண்ட மக்களைக் கூட்டிச் சேர்த்துத் திரும்பக்
கூட்டிவரும் நிகழ்வில் இயற்கையும் கரம் கோர்க்கிறது:
'பாழ்நிலம் சீராகிறது. பள்ளத்தாக்கு நிரப்பப்படுகிறது.
மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுகிறது, கோணலானது
நேராக்கப்பட்டு, கரடுமுரடானது சமதளமாக்கப்படுகிறது.
மேலும், மானிடர் தங்கள் வார்த்தைகளில் தவறிப் போவர்,
ஆனால், 'நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும்
நிலைத்திருக்கும்' என்று தன் வாக்குறுதியின்
உறுதித்தன்மையை அறிக்கையிடும் இறைவன், 'ஆயனைப் போல அவர்களை
மேய்ப்பதாக' உருவகம் செய்கிறார்.
இறைவன் இஸ்ரயேல் மக்களை பாபிலோனியாவிலிருந்து மீட்டு
மீண்டு எருசலேமில் கரை சேர்க்கும் நிகழ்வு மூன்று
நிலைகளில் நடந்தேறுகிறது: (அ) 'ஆட்டுக்குட்டிகளைத் தம்
கையால் ஒன்று சேர்ப்பார்' - ஆக, ஒவ்வொருவரின் மேலும்
இறைவனின் கரம் படும். ஆயன் குச்சியைக் கொண்டு சேர்ப்பதுபோல
அவர் சேர்க்க மாட்டார். ஏனெனில், குச்சி தண்டனையின்
அடையாளமாகும். தன் கைகளால் சிதறுண்டு போய்க்கிடக்கின்ற
அனைத்து ஆடுகளையும் ஒன்று சேர்ப்பார். (ஆ) 'அவற்றைத் தம்
தோளில் சுமப்பார்' - அடிமைத்தனத்தால் தங்களின் உடல்
மற்றும் உள்ளத்தில் வலுவிழந்தவர்களை, அடிமைகளாக இழுத்துச்
செல்லப்பட்டவர்களைத் தம் தோளில் சுமப்பார். (இ)
'சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்' - அதாவது,
முதுகில் தட்டி அழைத்துக் கொண்டு போவார். சினையாடுகள்
எளிதில் சோர்ந்துவிடக் கூடியவை. அவைகளுக்கு தொடர்
அரவணைப்பு அவசியம். அந்த அரவணைப்பை இறைவன் தருவார்.
இவ்வாறாக, சிதறுண்டவர்களை ஒன்று சேர்த்து,
வலுவிழந்தவர்களைத் தோள் மேல் சுமந்து,
வலுக்குறைந்தவர்களைத் தன் வலது கரத்தால் தாங்கி கரை
சேர்க்கின்றார் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆயர் தீத்து தன் குழுமத்தில்
உள்ளவர்கள் எப்படி கண்காணிக்கப்பட வேண்டும் என
எழுதுகிறார். 'நாமும் ஒரு காலத்தில் அறியாமையில்
இருந்தோம். கீழ்ப்படியாமல் இருந்தோம். நெறிதவறிச்
சென்றோம். தீய நாட்டங்களுக்கும் பல்வகைச்
சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம். தீமையிலும்
பொறாமையிலும் உழன்றோம். காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர்
மற்றவரை வெறுத்தோம்' (தீத் 3:3) தன் குழுமத்தின்
வலுக்குறைந்த பின்புலத்தைச் சுட்டிக்காட்டும் தீத்து,
இவ்வலுவின்மையிலிருந்து நாம் விடுபட்டது, 'நம்
அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாக ஆண்டவரின் இரக்கத்தை
முன்னிட்டே, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும்
புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுளால் மீட்கப்பட்டோம்' என
எழுதுகின்றார்.
ஆக, 'புதுப்பிறப்பு அளிக்கும் நீரும், புதுப்பிக்கும் தூய
ஆவியும், இவை இரண்டின் ஊற்றாக இருக்கின்ற கடவுளின்
இரக்கமும்' பாவ இயல்பிலிருந்து மனுக்குலத்தை மீட்பு
என்னும் கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பவைகளாக இருக்கின்றன.
இங்கே 'நீர்' மற்றும் 'தூய ஆவி' ஒருவர் பெறுகின்ற
திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுபடுத்துகின்றன.
இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வை, ஒத்தமைவு
நற்செய்தியாளர்கள் என்று சொல்லப்படும் மத்தேயு, மாற்கு
மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே பதிவு
செய்கின்றனர். லூக்கா நற்செய்தியாளர் மற்ற
நற்செய்தியாளர்களைவிட மூன்று விதங்களில் முரண்படுகின்றார்:
(அ) இயேசுவின் திருமுழுக்கின்போது திருமுழுக்கு யோவான்
சிறையில் இருப்பது போல பதிவு செய்கிறார் லூக்கா (காண்.
3:20). 'மக்கள் எல்லாரும் திருமுழுக்கு பெறும் வேளையில்
இயேசுவும் திருமுழுக்குப் பெற்று இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்தார்' என்று பதிவு செய்யும் லூக்கா,
யார் இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார்கள்? என்பதைப்
பதியாமல் விடுகின்றார். (ஆ) மத்தேயு மற்றும் மாற்கு
நற்செய்திகளில், இயேசு ஆற்றை விட்டு வெளியே வந்தவுடன்
தந்தையின் குரல் கேட்கிறது. ஆனால், லூக்கா நற்செய்தியில்,
இயேசு திருமுழுக்குப் பெற்று இறைவனிடம் வேண்டிக்
கொண்டிருந்தபோது, 'தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது
இறங்க' வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கிறது. (இ) மத்தேயு
மற்றும் மாற்கு நற்செய்திகளில் இயேசு 'தண்ணீரால்' மட்டுமே
திருமுழக்கு பெறுகின்றார். ஆனால், லூக்காவில், 'தண்ணீர்,'
'தூய ஆவி' என இரண்டு நிலைகளில் திருமுழுக்கு பெறுகிறார்
இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில் திருமுழுக்கு
யோவானிடம் மக்கள் வருகிறார்கள். 'அவர்கள் மீட்பரை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யோவான்
மெசியாவாக இருப்பாரோ என அவர்கள் தங்களுக்குள்
எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.' 'மெசியா எதிர்பார்ப்பு'
இயேசுவின் காலத்தில் மிகவும் உச்சநிலையில் இருந்தது.
ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மக்கள் தாங்கள்
உரோமையர்களால் அனுபவித்த அரசியல், சமூக, சமய, கலாச்சார
துன்பங்களிலிருந்து தங்களை விடுவிக்க மெசியா வர வேண்டும்
என மிகவும் எதிர்நோக்கியிருந்தனர். வரவிருக்கும் மெசியா
முதலில் ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதும்
அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால்தான்,
'மனமாற்றத்தை' அறிவித்து, மனமாற்றத்திற்கான திருமுழுக்கு
கொடுத்து வந்த திருமுழுக்கு யோவான் தங்கள் எதிர்பார்ப்பை
நிறைவேற்றுவதாக நினைக்கின்றனர். ஆனால், அதை மறுக்கிறார்
யோவான்.
இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் இரண்டு நிலைகளில்
இருக்கிறது: ஒன்று, அவர் திருமுழுக்கு யோவானின்
திருமுழுக்கை ஏற்றுக்கொள்கின்றார். ஏன்? தன்னிடம் பாவம்
இருப்பதால் அல்ல. மாறாக, 'மனமாற்றம்' என்பது 'கரைக்குத்
திரும்புவது' என அறிந்திருந்தார் இயேசு. இதுவரை
நாசரேத்தில் மறைந்து வாழ்வு வாழ்ந்த இயேசு, தண்ணீரில்
மறைந்திருப்பது போல மறைந்து நின்ற இயேசு, இப்போது கரை
சேர்கின்றார். முற்காலத்தில் இதே யோர்தானைக் கடந்துதான்
யோசுவா தலைமையில் இஸ்ரயேல் மக்கள் பாலும் தேனும் பொழியும்
கானான் நாட்டிற்குக் கரை ஏறினார்கள். இந்த 'கரை சேரும்
நிகழ்வு' வழியாகத் தன் பொதுவாழ்வையும் பணிவாழ்வையும்
தொடங்ககிறார் இயேசு. இரண்டு, இயேசு தூய ஆவியால்
திருமுழுக்கு பெறுகிறார். இத்தூய ஆவியால்தான் இயேசுவின்
பணி உந்தித் தள்ளப்படுகிறது. தன் உயிர்ப்புக்குப் பின் இதே
தூய ஆவியைத் தம் திருத்தூதர்கள்மேல் பொழிகிறார் இயேசு.
தங்களைக் கரை சேர்க்க யாராவது வர மாட்டார்களா? என்று
மெசியா எதிர்நோக்கில் மேலோங்கியிருந்தவர்கள் நடுவே, தூய
ஆவியால் நிரப்பப்பட்டவராய்க் கரை சேருகிறார் இயேசு.
இவ்வாறாக, பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களை எசாயா
இறைவாக்கினர் வழியாக எருசலேம் என்னும் கரை சேர்க்கிறார்
ஆண்டவராகிய கடவுள். பாவத்திலும் தீமையிலும் உழன்றவர்களை
மீட்பு என்ற கரையில் சேர்க்கின்றார் கடவுள். 'மெசியா வந்து
எங்களை மீட்பார்' எனக் காத்திருந்தவர்களில், 'நீ இறைவனின்
அன்பார்ந்த மகன்-மகள்' என்று கடவுள் சாயலைத் தூண்டி
எழுப்பி, பணிவாழ்வு என்னும் கரை சேர்ந்து மற்றவர்களைக் கரை
சேர்க்க கரம் குவிக்கின்றார் இயேசு.
இப்படிப்பட்ட இறைச் செயலையே இன்றைய பதிலுரைப்பாடலில்
திருப்பாடல் ஆசிரியர், 'ஆண்டவரே! நீர் எத்துனை
மேன்மைமிக்கவர்! ... உமது ஆவியை நீர் அனுப்பி மண்ணகத்தின்
முகத்தைப் புதுப்பிக்கின்றீர்' (திபா 104:1,30) எனப்
பாடுகின்றார்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல்
சவால்கள் எவை?
1. அக்கரைக்கும் இக்கரைக்குமான வாழ்க்கை
கிறிஸ்து பிறப்புக் காலம் என்னும் அக்கரையில் இருந்த நாம்,
பொதுக்காலம் என்னும் இக்கரைக்குள் வருகின்றோம். மகிழ்ச்சி,
கொண்டாட்டம் விடுத்து வாழ்வைத் தொடங்குவது கொஞ்சம்
கடினமாகவே இருக்கும். பழையவற்றின் நினைவுகள் நம்மை
இழுக்கும். பழைய நினைவுகள் மகிழ்ச்சி தந்தால் பரவாயில்லை.
சில நேரங்களி;ல் நாம் காயப்பட்ட நினைவுகள் நம்மைப் பின்
நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். நாம் அனைவருமே
காயப்பட்டிருக்கிறோம். காயப்படுத்தியிருக்கிறோம். வருத்தம்
தரும் தவறுகள் செய்திருக்கின்றோம். ஆனால், நாம் எந்த
நிலையில் இருந்தாலும் அவைகளிலிருந்து விடுபட்டு
'மகிழ்ச்சி' என்ற கரையை அடைவது சாத்தியம் எனச் சொல்கிறார்
கடவுள். நாம் தயங்கி நிற்கும்போது அவரே முன்வந்து நம்மைக்
கரைசேர்க்கத் தன் கரத்தை நீட்டுகின்றார்.
2. புதுப்பிறப்பு அளிக்கும் நீர், புதுப்பிக்கும் தூய ஆவி
திருமுழுக்கு பெற்ற நாம் ஒவ்வொருவரும்
புதுப்பிறப்பளிக்கும் நீரினால் கழுவப்பட்டுள்ளோம், தூய
ஆவியால் புதுப்பிக்கப்பட்டும் உள்ளோம். மேலும், கடவுளின்
இரக்கத்தை முன்னிட்டு நாம் மீட்கப்பட்டுள்ளோம். அந்த
இரக்கத்தின் துணையால் நாம் பழைய கட்டுக்களை
அவிழ்த்துவிடவும், பழைய இயல்புகளைக் களைந்துவிடவும்
முடியும். அக்கரைக்குப் பரிசலில் சென்றவர்கள் பரிசலின்
கயிற்றை அறுக்காமல் விடிய விடிய துடுப்புப் போட்டதுபோல,
நானும் சில நேரங்களில் என் கயிறுகளை அவிழ்த்துவிடாமல்,
அக்கரையிலேயே கட்டிவிட்டு நிற்கலாம். ஆனால், என் பழைய
இயல்பு என்னும் கயிற்றை நான் அறுக்கும்போது, அவரின்
அருள்துணையால் நான் அக்கரை அடைவேன்.
3. நீரே என் அன்பார்ந்த மகன்-மகள்
இயேசுவின் வாழ்வில் திருமுழுக்கு ஓர் அடித்தள அனுபவம்.
இந்த அனுபவம் அவருடைய ஒட்டுமொத்த வாழ்வை அப்படியே
முழுவதுமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. 'நீரே என்
அன்பார்ந்த மகன்' எனத் தன் தந்தையாகிய கடவுளால்
அழைக்கப்பட்டதால், ஒருவர் மற்றவரை, 'நீர் என் சகோதரர்,
சகோதரி' என அழைக்கிறார் இயேசு. இப்படி அவர் மற்றவர்களை
அழைப்பதற்காக வெட்கப்படவில்லை. ஆகையால் தான் அவரின்
பார்வையில் அனைவரும் - யூதர்கள், சமாரியர்கள்,
புறவினத்தார்கள், பெண்கள், குழந்தைகள், தொழுநோயாளர்கள்,
கண்பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், இறந்தோர் சமமாகத்
தெரிகின்றனர். அனைவரோடும் அவரால் பழக முடிகின்றது.
இறைவனின் அரசு அனைவருக்கும் சொந்தம் எனவும் அது
சமத்துவத்திலும், சகோதரத்திலும், சுதந்திரத்திலும்
அடங்கியுள்ளது எனவும் கற்பிக்கின்றார். 'நான் இறைவனின்
மகன்' என்ற அனுபவம் அவரின் முழு ஆளுமையையும்
ஆட்கொள்கின்றது. இறப்பு வரை அவருக்கு இருந்த ஒரே
அடையாளமும் இதுதான். ஆகையால் தான், 'இவன் தன்னையே
இறைமகனாக்கிக் கொண்டான்' என குற்றம் சுமத்தப்படுகின்றார்.
நாம் பெற்ற திருமுழுக்கின்போதும் நமக்கு இதே அனுபவம்
கிடைக்கிறது. ஆனால், அதை நாம் உள்வாங்கியிருக்கிறோமா?
திருமுழுக்கில் நாம் பாவம் என்னும் கரையைக் கடந்து தூய
வாழ்வு என்னும் கரை சேர்கிறோம். அப்பயணத்தில் நாம்
தாங்கியிருக்கும் இறையியல்பு நம்மில்
புதுப்பிக்கப்படுகிறது. திருமுழுக்கில் நாமும் நம்
இறைத்தன்மையை மீட்டெடுப்பு செய்வதால், நாமே கடவுளாக கரை
சேர்கிறோம்.
இறுதியாக, நம்மைக் கரை சேர்க்கும் கடவுள் நமக்கு ஆறுதலும்,
கனிமொழியும் கூற, அவரின் இரக்கம் அன்றாடம் நம்மைப்
புதுப்பிக்கிறது. இயேசுவோடு இணைந்து நாமும் கரை சேர்ந்தால்
நாமும் இறைவனின் அன்பார்ந்த பிள்ளைகளே. இந்த அனுபவத்திற்கு
நாம் மற்றவர்களை அழைத்துச் செல்லும்போது நாமும் கரை
சேர்க்கும், கரை சேர்க்கும் கடவுள்களே!
அருள்பணி ஏசு கருணாநிதி
கடவுளோடு ஒன்றித்திருத்த வாழ்வு: கிறிஸ்துவின்மீது கொண்ட
ஆழமான நம்பிக்கைக்காக நாஜிக்களால் வதைமுகாமில்
அடைக்கப்பட்டவர் அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப் (Alfred
Delp 1907-1945). இவர் வதைமுகாமில் அடைக்கப்பட்ட
பிறகும்கூட யாருக்கும் தெரியாமல் திருப்பலி
நிறைவேற்றியும், கிறிஸ்துவைப் பற்றி எழுதியும் வந்தார்.
இந்நிலையில் இவர் 1945 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் நாள்
நாஜிக்களால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்குச் சில
நாள்களுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இவை: "கடவுளோடு
ஒன்றித்திருக்கும்போதே ஒரு மனிதன் மனிதனாக இருக்கின்றான்."
தான் நாஜிக்களால் கொல்லப்படப் போகிறோம் என்று
தெரிந்தபின்பும்கூட, கடவுளோடு ஒன்றித்து வாழ்வதுதான்
உண்மையான வாழ்க்கை என்று வாழ்ந்த அருள்பணியாளர் ஆல்பிரட்
டெல்ப், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் எப்படி
வாழவேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம் முன்மாதிரி. இன்று
நாம் ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழாவைக்
கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நம்மைக் கடவுளோடு ஒன்றித்து
வாழ அழைக்கின்றது. கடவுளோடு ஒன்றித்து வாழும் ஒருவரது
வாழ்க்கை எப்படி இருக்கும், அதனால் அவர் பெறுகின்ற
கைம்மாறு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
எதையெல்லாம் விட்டுவிட வேண்டும்?
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது அருள்பணியாளர்
கேட்கின்ற முதற்கேள்வி, "பாவத்திற்குக் காரணனும்
தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?" என்பதுதான்.
இதற்கு அந்தத் திருச்சடங்கில் பங்கேற்கிற அனைவரும்
"விட்டுவிடுகிறேன்" என்று பதிலளிக்கின்றார்கள். முதல்
பெற்றோரான ஆதாமும் ஏவாவும் ஆண்டவரையும் அவரது கட்டளையையும்
விட்டுவிட்டு (தொநூ 2:16,17), பாவத்திற்குத் தலைவனான
சாத்தானைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் பாவம் செய்தார்கள்.
இவ்வாறு வரும் பிறப்பு நிலை பாவத்திலிருந்து விடுவிக்கப்பட
வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சாத்தானை விட்டுவிட வேண்டும்.
அதனாலேயே அருள்பணியாளர் திருமுழுக்குத்
திருச்சடங்கின்போது, "சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?"
என்று கேட்கின்றார்.
பவுல், தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், நாம்
இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்து
வாழவேண்டும் என்கிறார். நாம் ஏன் இறைப்பற்றின்மையை மறுத்து
வாழவேண்டும்? என்ற எழலாம். "இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள்
செயலாலும் சொல்லாமலும் இறப்பை வரவழத்தார்கள்" (சாஞா 1:16)
என்கிறது சாலமோனின் ஞான நூல். இறைப்பற்றின்மை இறப்பை
வருவிக்கும் என்பதால்தான் பவுல், இறைப்பற்றிமையை மறுத்து
வாழச் சொல்கின்றார்.
இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள்
வருவித்துக்கொண்டவர்களுக்கு மிகப்பெரிய
எடுத்துக்காட்டுதான் முதல் பெற்றோர். கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்திருந்தபோது (சாஞா 2:23), கடவுளின்
கட்டளையை மீறி அல்லது இறைப்பற்றின்மையால் இறப்பைத்
தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள் அவர்கள் (தொநூ 2:17).
ஆகையால், இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால் அந்த
இறைப்பற்றின்மை நமக்குள் தூண்டி எழுப்பும் சாத்தானையும்
அவனுடைய மாயக் கவர்ச்சிகளையும் விட்டு விடுவது நல்லது
யார்மீது நம்பிக்கை கொள்வது?
திருமுழுக்குத் திருச் சடங்கில் அருள்பணியாளர், "சாத்தானை
விட்டுவிடுகிறீர்களா?" என்று கேட்பதோடு நிறுத்திக்
கொள்வதில்லை. அதற்கு அடுத்ததாக, "விண்ணையும் மண்ணையும்
படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறீர்களா?"
என்று கேட்கின்றார். இதற்கு அனைவரும், "நம்புகிறேன்" என்று
மறுமொழி கூறுகின்றார்கள். எனில், பாவத்திற்குத் தலைவனாகிய
சாத்தானை விட்டுவிடுவதோடு அல்லாமல், கடவுளை நம்ம வேண்டும்.
அப்பொழுதுதான் ஒருவருடைய வாழக்கை பெறும்.
இரண்டாம் வாசகத்தில் பவுல், "இறைப்பற்றின்மையையும் உலகு
சார்ந்த நாட்டங்களையும் மறுத்துவிடுங்கள்" என்று
சொல்லிவிட்டுத் தொடர்ந்து, "கட்டுப்பாடுடனும்
நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இறையருளால்
பயற்சி பெறுகின்றோம்" என்கிறார். நாம் ஏன் இறைபற்றுடன்
வாழவேண்டும் என்பதற்குச் சாலமோனின் ஞான நூல், "இறைப்பற்று
எல்லாவற்றையும்விட வலிமை மிக்கது" (சாஞா 10:12) என்று
விளக்கம் தருகின்றது. இந்த வார்த்தைகளை நாம் இன்றைய முதல்
வாசகத்தோடு இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும்
பொருள் நிறைந்ததாக இருக்கும்.
கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்யாமல், அவர் கொடுத்த
கட்டளையையும் கடைப்பிடிக்காததால் யூதா நாட்டினர்
பாபிலோனியரிடமிருந்து இரு மடங்கு தண்டனை பெற்றனர்.
இந்நிலையில் கடவுள் அவர்களது குற்றங்களை மன்னித்து,
அவர்களது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். தவிர,
"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்"
என்று இறைவாக்கினர் எசாயா வழியாக அழைப்பு விடுக்கின்றார்.
கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக இத்தகையதோர் அழைப்பு
விடுகின்றார் எனில், யூதா நாட்டினர் தன்னை மறந்து
இறைப்பற்றில்லாமல் வாழ்ந்தால் தண்டனை பெற்றார்கள். அதனால்
அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டு இறைப்பற்றுடன்
வாழ்ந்தால் ஆறுதலையும் அரவணைப்பையும் பெறுவார்கள் என்று
கடவுள் சொல்லாமல் சொல்கின்றார். ஆதலால், யூதா நாட்டினர்
என்றில்லை, ஒவ்வொருவரும், "மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை
விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது நலம்" (திபா 118:8)
ஆண்டவரின் அன்பார்ந்த மக்களாவோம்:
சாத்தானை விட்டுவிட்டுக் கடவுளை நம்புகிற ஒருவர் அவரது
பிள்ளையாகின்றார். அதன்பிறகு அவர், கடவுளின் அன்பார்த்த
மகனான இயேசுவைப் போன்று வாழ அழைக்கப்படுகின்றார்.
நற்செய்தியில் இயேசு மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும்விதமாய்த் திருமுழுக்குப் பெறுகின்றார். அவ்வாறு
அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோது, "என் அன்பார்ந்த மகன்
நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்றொரு குரல்
வானத்திலிருந்து ஒலிக்கின்றது. இயேசு தந்தையின்
திருவுளத்தை நிறைவேற்றி (லூக் 22:42), அவரது அன்பார்ந்த
மகனானார். திருமுழுக்குப் பெற்றதன் மூலம் சாத்தானை
விட்டுவிட்டு, ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும் நாம்,
இயேசுவைப் போன்று கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி
வாழ்ந்தால், அவரது மக்களாவோம்.
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, சென்ற இடங்களில்
எல்லாம் நன்மை செய்தார் (திப 10:38). திருமுழுக்குப்
பெற்றிருக்கும் நாமும் இயேசுவைப் போன்று, செல்லும்
இடங்களில் எல்லாம் நன்மை செய்ய அழைக்கப்படுகின்றோம்.
இன்றைக்குப் பலர் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை
மறந்துவிட்டுச் சாத்தனைப் பற்றிக்கொண்டு வாழ்வது வேதனையாக
இருக்கின்றது. ஆண்டவருடைய திருமுழுக்குப் பெருவிழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் நமது வாக்குறுதிகளைப்
புதுப்பித்துக் கொண்டு, ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வது
நல்லது. ஏனெனில், ஆண்டவரோடு ஒன்றித்து வாழும்போதுதான் நமது
வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கின்றது.
சிந்தனைக்கு:
கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற
நீங்கள அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள் (கலா
3:27) என்பார் புனித பவுல். ஆகையால், திருமுழுக்கின் மூலம்
கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அவரைப் போன்று சென்ற
இடங்களில்லாம் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
ஒரு புதுக் கவிதை . குழந்தை ஒன்று காணவில்லை
காணாமல் போன நாள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15. நேரம் இரவு 12
மணி. அது எங்கேயாவது அழுது கொண்டிருந்தால் அழைத்து வாருங்கள்.
அதன் பெயர் சுதந்திரம். ஆம், நம் நாடு சுதந்திரம் அடைந்து
எத்தனையோ ஆண்டுகள் கடந்து பொன்விழாவும் கொண்டாடி விட்டோம்.
வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றது உண்மை!
எனவேதான் இப்புதுக் கவிதை இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்நாடு, நோய், பாவம், அநீதி, அக்கிரமம், பகை, பஞ்சம்,
ஏழ்மை, ஏற்றத்தாழ்வு இவைகளிலிருந்து விடுதலை பெற்றுள்ளதா?
இயேசுவின் திருமுழுக்குப் பெற, தூய ஆவி அவர்மீது புறா வடிவிலே
இறங்க, அவர் இந்த உலகத்தைப் புதுப்படைப்பாக மாற்ற வந்த
புதிய தலைவர் என்பதை அறிவிக்கிறது. புறா புதியவை அனைத்திற்கும்
அடையாளம். புதிய உலகிற்கு அடையாளம்.
ஆண்டவரின் ஆவி என் மேலே, ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு
விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, குருடருக்குப்
பார்வை, நோயுற்றோருக்கு நலம் என்பதை இயேசு தன் வருகையில்
உண்டாகும் என அறிவிக்கின்றார் (லூக். 4:18-20).
குளிரிலே நடுங்கிக் கொண்டிருந்த ஒரு தாத்தா, பாட்டி இருவரும்
வீடு இல்லாது தவித்தார்கள். ஒருவன் தன் வீட்டைப் பூட்டிச்
சாவியை அந்த முதியவரிடம் கொடுத்து, நீங்கள் என்
வீட்டிற்குச் செல்லுங்கள் என விட்டுவிட்டுப் புறப்பட்டான்.
மனம் போன போக்கிலே நடந்தான். பசியால், பட்டினியால் நடக்க
முடியாது ஊரின் வெளியே ஒரு கிராமத்தின் வெளியே அமர்ந்து இருந்தான்.
ஆனால் ஊரார் அவனைப் பிடித்து இழுத்து வந்து திருடன்,
கொள்ளைக்காரன் என்றெல்லாம் பட்டம் சூட்டி பஞ்சாயத்தில்
குற்றவாளியாக்குகிறார்கள். நான் குற்றமற்றவன் என்றெல்லாம்
சொல்லியும் அங்கே அது எடுபடவில்லை. எனவே குற்றமற்றவனின் முகத்தை
கருப்புத் துணியால் மூடி, கைகளைக் கட்டி பஞ்சாயத்தார் அனைவரும்
ஓர் உயரமான மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்டு கடலிலே விழ
வைத்தார்கள். மலை உச்சி சென்றவனின் முகத்தில் இருந்த திரை
அகற்றப்படுகிறது. கட்டப்பட்ட கைகள் விடுதலை அடைகின்றன. மலையிலிருந்து
உருட்டி விடப்பட்டு கடலில் விழுந்து தன் உயிரை இழந்தான்.
அவனது இழப்பில் இருந்து குற்றமற்றவனுக்குப் புது வாழ்வு
கிடைத்தது.
ஆம். இயேசுவின் வாழ்க்கைப் படலம் தான் இது. அதுவே இழப்பின்
படலம். ஆனால் புது வாழ்வுக்குக் கிடைத்த பரிசு இது. தன் ஆடுகளுக்காக,
அவை மிகுதியாகப் பெரும் பொருட்டே வந்தேன் (யோவா. 10:10) என்றாரே.
இதை நன்கு உணர்ந்த புனித பவுல் அடிகளார் (பிலி. 3:8-9)
கிறிஸ்துவுக்காக இந்த உலகம் முழுவதையும் குப்பையெனக் கருதுகிறேன்
என்றார்.
கிறிஸ்து இயேசுவின் திருமுழுக்கு ஏதோ நடந்து முடிந்த ஒரு
நிகழ்ச்சி அல்ல. அது நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும்
பாதிக்கும் ஒரு தொடர் நிகழ்ச்சி. இரண்டாவது, இதைப்
பெற்றுக் கொண்ட நாம் வாழ்ந்து காட்ட முன் வர வேண்டும். இயேசுவைப்
போல் வாழாத எந்த மனிதரும் புதிய உலகத்தையும் படைக்க
முடியாது. புதிய உலகத்தைப் படைக்க முன் வராத எந்த மனிதரும்
திருமுழுக்குப் பெற்ற உண்மையான கிறிஸ்தவர் அல்லர்.
ஆண்டவருடைய ஆவி இயேசுவோடு இருந்தது. அவர் சென்ற இடமெல்லாம்
விடுதலை கிடைத்தது. எந்த தூய ஆவி இயேசுவின் மீது தங்கி மக்களைக்
கட்டியிருக்கும் கட்டுகளை அறுத்தெறிய அவரை மக்கள் நடுவே அழைத்துச்
சென்றதோ, அதே தூய ஆவி திருமுழுக்கின்போது நம்மீதும் பொழியப்பட்டது.
(யோவா 12:24) கோதுமை மணியானது தரையில் விழுந்து மடிந்தால்
ஒழிய அது அப்படியே இருக்கும். மண்ணில் விழுந்து மடிந்தால்
தான் அது பலன் தரும். எனவே எந்த நோக்கத்திற்காக இந்த உலகத்திற்கு
வந்தாரோ (லூக். 4:16-22) அந்த நோக்கத்தை நூற்றுக்கு நூறு
நிறைவேற்றினார் என்பது ஊரறியும், உலகமறியும் உண்மை . அவரது
பணியை நாம் தொடர வேண்டும் என்பதற்காக நமக்கும் இயேசு
திருமுழுக்குத் தந்துள்ளார். எனவே இது வெறும் சடங்கு அல்ல.
மாறாக நம்மை தூய ஆவியால் புதுப் படைப்பாக மாற்றி, நம்மைப்
புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு. புனித எரோணி
முஸ் கூறுகிறார், நாம் பிறப்பில் கிறிஸ்தவர்களாக உண்டாக்கப்பட்டவர்கள்
அல்ல. மாறாக தூய ஆவியால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை
உணருவோம்.
இயேசு திருமுழுக்குப் பெற்றபோது வானகத் தந்தை, என் அன்பார்ந்த
மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் என்றார்.
வானகத் தந்தையின் அன்புக்குரியவராகவும், அவரை பூரிப்படையச்
செய்பவராகவும் இயேசு திகழ்ந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.
இயேசு எளியோரை ஏக்கமுடன் பார்த்தார்; பிணியாளர்களைப் பிரியமுடன்
தொட்டார்; ஆதரவற்றோரை அன்புடன் அரவணைத்தார்; தவறுகளைத் தட்டிக்கேட்டார்;
ஆன்ம பசிக்கு அறுசுவை உணவை அளித்தார்; வயிற்றுப்பசிக்கு வயிறார
உணவு கொடுத்தார்; தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்தார்;
ஆவியாரின் அற்புத ஆலயமாகத் திகழ்ந்தார்; நீதி தவறா
நேர்மையாளராயிருந்தார்; அமைதிக்கு அடித்தளமாய்த் திகழ்ந்தார்;
இருளகற்றும் இணையற்ற ஒளியாய் வாழ்ந்தார்; பார்வையற்றோர்க்கு
பார்வையைத் தந்தார்; கைதிகளின் தளைகளை அறுத்தார்; சிறைப்பட்டோருக்கு
மீட்பை அளித்தார்; சென்ற இடமெல்லாம் நன்மையைச் செய்தார்.
இவை அனைத்திற்கும் இன்றைய முதலிரண்டு வாசகங்களும் சாட்சி
சொல்லும்.
இன்று விண்ணகத் தந்தையின் அன்பான மக்களாக, அவரை மகிழ்ச்சிபடுத்தும்
பிள்ளைகளாக நாம் வாழவிரும்பினால் இயேசுவின் குணங்கள் அனைத்தையும்
நம்முடைய குணங்களாக மாற்றிக் கொள்ளவேண்டும். நாம் இயேசுவைப்
போல ஆகமுடியுமா? இந்தக் கேள்விக்கு கதை ஒன்று பதில்
சொல்லும்.
ஓர் உப்புச்சிலை! பல நாள்கள், பல மாதங்கள் கடற்கரையில்
காத்திருந்தது. கடல் பேசியது : சிலையே, சிலையே உனக்கு என்ன
வேண்டும்? சிலை சொன்னது : உன்னை எனக்கு ரொம்பப்
பிடிக்கும்! எத்தனை பேரை நீ வாழவைக்கின்றாய்? எத்தனை மீன்களுக்கு
நீ அடைக்கலம் தருகின்றாய்? உன் அன்பே அன்பு! உன் கருணையே
கருணை! உன் முக அழகே அழகு! உன் நிற அழகே அழகு! உன் அலை அழகே
அழகு! நீ என்னை மயக்கினாயா? - இல்லை நான் உன்னிடம் மயங்கிப்போனேனா?
எனக்குத் தெரியவில்லை! எனக்குப் பிடித்தமான உன் பெயரை அறிந்துகொள்ள
ஆசை! உன் பெயர் என்ன?
கடல் சிரித்துக்கொண்டே சொன்னது:என் பெயரைக் கேட்டுவிட்டு
கரையிலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படி? கீழே இறங்கி வா.
உப்புச்சிலை மெல்ல மெல்ல கடலுக்குள் இறங்கியது! கடலுக்குள்
முழுவதும் கரைந்தது! கடலோடு சங்கமமாகியது.
கரைந்து போன சிலையை கடல் பார்த்து : நான் யார்? என்றது.
சிலையோ : உப்பே உருவான கடல் நீ என்றது. சரி நான் கடல் - நீ
யார்? என்றது கடல் சிலையோ : நானும் கடல்தான் என்றது. என்ன
நீ கடலா? என்றது கடல்.
ஆம். நானும் உப்பு, நீயும் உப்பு - அப்படியானால் நாம் கடல்தானே
என்றது கரைந்த சிலை.
நமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இயேசுவிடம், நற்கருணை
ஆண்டவரிடம் நாம் அர்ப்பணிக்கும்போது, நாம் மறுகிறிஸ்துவாக
மாறி அவரைப் போலவே வாழ்வோம் ; வானகத் தந்தையின் அன்பான மக்களாக,
அவரை மகிழ்ச்சிப்படுத்தும் மகள்களாக, மகன்களாகத் திகழ்வோம்.
மேலும் அறிவோம் :
மகன்தந்தைக்(கு) ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் ( குறள் : 70).
பொருள் : தன்னைப் பேணி வளர்த்து ஆளாக்கிய தந்தைக்கு
மைந்தன் செய்யும் கைம்மாறு "இவனை மகனாகப் பெறுவதற்கு இவன்
தந்தை என்ன தவம் செய்தானோ?" என்று பாராட்டத்தக்க புகழை
ஈட்டித் தருவது ஆகும்.
ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் பலவற்றைக் கேட்டு நச்சரித்தான்.
அம்மா குச்சியை எடுத்து அவனை அடித்து, - இனிமேல் காக
கேப்பியா?" என்று கேட்டதற்கு அவன், "கேட்க மாட்டேன் என்றான்.
"ஐஸ் கிரீம் கேப்பியா?" என்று கேட்டதற்கு, "கேட்க
மாட்டேன்" என்றான். -சொன்ன பேச்சைக் கேப்பியா?" என்று கேட்டதற்கு
அதற்கும், கேட்க மாட்டேன்" என்றான்.
பிள்ளைகள் பெற்றோரிடம் பல காரியங்களைக் கேட்டுத் தொந்தரவு
செய்கின்றனர்; ஆனால் அவர்கள், சொல்லுவதை மட்டும் கேட்பதில்லை.
அதாவது, கீழ்ப்படிவதில்லை. இந்நிலையில் இன்று தமது ஆண்டவரின்
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். ஆதாமின்
கீழ்ப்படியாமையால் விளைந்த சாபக்கேட்டைக் கிறிஸ்து தமது
கீழ்ப்படிதலால் நீக்கினார். எனவேதான் கிறிஸ்து
திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மைத்தர் இவரே.
இவர் பொருட்டு நான் பூரிப்படை சிறேன்" (மத் 3:17) என்று
கூறி வாளாகத் தந்தை அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
கிறிஸ்து தந்தைக்குக் கீழ்ப்படித்தார்; "சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படித்தார்"
(பிலி 2:8), கிறிஸ்து கடவுளின் அன்பு மகன், ஏனெனில் அவர்
கடவுளின் அன்பான வாழியர், அதாவது இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்த
"துன்புறும் இறை மாழியன், இன்றைய முதல் வாசகத்தில் கடவுள்
கிறிஸ்துவைப் பற்றி "இதோ என் ஊழியர். இவரால் என் நெஞ்சம்
பூரிப்படை கிறது (எசா 42:1) பாண்கிறார். துன்புறும் இறை ஊழியரைப்
பற்றிய மற்றொரு கவிதையில் கிறிஸ்து, "அடிப்பதற்கு இழுத்துச்
செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி (செம்மறி)" என்று வர்ணிக்கப்படுகிறார்
(எசா 53:7), இயேசு கிறிஸ்துவை "உலகின் பாவம் போக்கும் கடவுளின்
செம்மறி" (யோவா 1:29) என்று திருமுழுக்கு யோவான் கட்டிக்
காட்டினார்.
கிறிஸ்து யோர்தான் ஆற்றிலே பெற்ற திருமுழுக்கு அவருக்குத்
தேவையில்லை. ஏனெனில் அவரிடம் பாவம் ஏதுமில்லை. அவருடைய உண்மையான
திருமுழுக்கு அவர் கல்வாரி மலையில் பெற்ற பாடுகளின்
திருமுழுக்கு. இதைப் பற்றித்தான் கிறிஸ்து பின்வருமாறு
குறிப்பிட்டார். நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு.
அது நிறைவேறும் அளவும் தான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி
இருக்கிறேன்" (லூக் 12:50), தம்மோடு ஆட்சிபுரிய விரும்பிய
யாக்கோபு மற்றும் யோவானிடம் (செபதேயுவின் மக்கள்)
கிறிஸ்து, "நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?"
(மாற் 10:38) என்று கேட்டார்.
திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள் போவதும் தண்ணீரிலிருந்து
வெளியே வருவதும் இல்லை. மாறாகக் கிறிஸ்துவோடு பாவத்துக்கு
இறந்து, கல்லறையில் பழைய மனிதனை (இயல்பை) அடக்கம்
செய்துவிட்டு, கிறிஸ்துவோடு புது வாழ்வுக்கு உயிர்த்தெழுதல்
ஆகும் (உரோ 8:3-5), திருத்தூதர் பணிகள் எட்டாம் அதிகாரத்தில்
காணப்படும் மந்திரவாதி சீமோனைப் பற்றி (திப 8:1924) எருசலேம்
ஆயர் சிரில் பின்வருமாறு கூறுகிறார்: "மந்திரவாதி சீமோன்
தண்ணீருக்குள் போனான்; ஆனால் அவன் கிறிஸ்துவோடு சாகவில்லை.
தண்ணீரிலிருந்து அவன் வெளியே வந்தான்; ஆனால் அவன்
கிறிஸ்துவோடு உயிர்க்கவில்லை. திருமுழுக்குப் பெறுவது
முக்கியமல்ல; ஆனால் கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறந்து புது
வாழ்வுக்கு உயிர்ப்பதே முக்கியமாகும். சுருக்கமாக,
கிறிஸ்துவின் பாஸ்கா மறைபொருளில் பங்கு பெறுவதே
திருமுழுக்காகும்.
திருமுழுக்குப் பெற்றதின் விளைவாக நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்கள்.
"கிறிஸ்துவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும்
இச்சைகளோடும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டார்கள்" (கலா
5:24) என்று கூறும் திருத்தூதர் பவுல், ஊனியல்பின் செயல்கள்
யாவை என்று பட்டியலிட்டுள்ளார். அவை முறையே "பாத்தைமை,
கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லிசூனியம், பகைமை,
சண்டைசச்சரவு, பொறாமை, சீற்றம். கட்சிமனப்பான்மை,
பிரிவினை, பிளவு, அழுக்காறு. குடிவெறி, களியாட்டம் முதலியவையாகும்"
(கலா 5: 19-20), நமது வாழ்வில் ஊனியல்பின் செயல்கள் வெளிப்பட்டால்,
நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாக இருக்க முடியுமா? தமிழ்
ஆசிரியர் மாணவர்களிடம், * ஒரு கோழி 10 முட்டைகளை அடைக்காத்தது;
அவற்றில் ஒரு முட்டையிலிருந்து வாத்துக் குஞ்சு வெளிவந்தது.
அது எப்படி?" என்று கேட்டார். மாணவர்கள், "சார், அக்கோழி
நடத்தை கெட்ட கோழி" என்று கூறினார்கள். கோழி
முட்டையிலிருந்து வாத்துக் குஞ்சு வந்ததை அந்த மாணவர்களால்
ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியானால் கிறிஸ்தவர்களின்
வாழ்வில் எப்படி ஊனியல்பின் செயல்கள் ஆட்சி செய்ய
முடியும்?
திருமுழுக்குப் பெறும்போது நமக்குத் தூய ஆவி அருளப்படுகின்றார்.
அந்த ஆவியாரால் கடவுளை நாம் "அப்பா தந்தையே" என அழைக்கின்றோம்
(உரோ 8:15), கடவுளின் ஆவியைப் பெற்றுக்கொண்ட நம் வாழ்வில்
ஆவியின் செயல்களான "அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு,
நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" (கலா 5:22-23) ஆகியவை
ஆட்சிபுரிய வேண்டும். ஒரு மரத்தை அதன் கனிகளைக் கொண்டு அறிகிறோம்.
அவ்வாறே ஒருவரின் செயலைக் கொண்டே அவர் ஊனியல்பில்
வாழ்கிறாரா அல்லது ஆவியில் வாழ்கிறாரா என்று அறியலாம்.
இன்ற நாம் நமத திருமுழுக்கு வாக்குறுதிகளைப்
புதுப்பித்துக் கொள்வோம். குறிப்பாக சாதி வெறியை
விட்டுவிடுவோம். "சாதிகள் இல்லையடி பாப்பா" என்பதைஅகிலத்துக்க
உணர்த்தவோம். தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகிய பொங்கலை
கொண்டாட இருக்கிறோம். பொங்கலில் எல்லாம் பொடலாம். ஆனால்
"ஜாதிக்காயை" மட்டும் போடமால் தவிர்ப்போம். அப்போது தான்
"மீட்புப் பொங்கல்" தேனாக தித்திக்கும்.
ஆடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்ட ஆதிவாசி இனத்தவர். மேய்ச்சல்
நிலமே சொந்த இடம்போல ஊர் ஊராக ஆடுகளை ஓட்டிச் சென்று ஆங்காங்கே
கூடாரமடித்துத் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வார்கள்.
குறிப்பிட்ட ஓர் ஊருககுள் நுழைந்ததும் பங்குத்தந்தையைப்
பார்க்கப் போனார்கள். "நாங்கள் கிறிஸ்தவர்களாக
விரும்புகிறோம். ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று விண்ணப்பம்
செய்தார்கள். கேட்டதும் பூரித்துப்போனார் பங்குத்தந்தை -
தேடிப்போன செல்வத்தைக் காலடியில் கண்டதுபோல. ஐம்பது பேரல்லவா
ஒரே சமயத்தில் திருமுழுக்குக் கேட்கிறார்கள்!
ஓரிரு வாரங்கள் மறைக்கல்வி புகட்டி ஒருநாள் வெளிச்சிறப்போடு
ஆடம்பரமாகத் திருமுழுக்குக் கொடுத்தார். திருச்சடங்குகள்
முடிந்ததும், 'பாவம் ஏழைகள்' என்ற பரிவுணர்வோடு 'ஆளுக்கு
மூன்றுபடி கோதுமை கொடுங்கள்' என்று சமூகப் பணியாளரிடம்
சொன்னார். 'உழைப்புக்கு உணவு'த் திட்டம் கொடி கட்டிப் பறந்த
காலம் அது! உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்களிடையே
சிறு சலசலப்பு. ஒரு முணுமுணுப்பு. "மூணு படி கோதுமைதானா?
முந்தைய ஊரில் அந்தச் சாமியார் ஐந்து படி தந்தாரே..."
அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இறைவன்கூட
எவரையும் நேரடியாக அழைப்பதில்லை. சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின்
கட்டாயங்களுக்கு உட்படுத்தித்தான் அழைக்கிறார். ஏன், அறிந்து
உணர்ந்து தெளிந்து வருகின்றனர் என்பதற்காகவா குழந்தைகளுக்குத்
திருமுழுக்குக் கொடுக்கிறோம்? பெற்றோர், பெரியோர் விசுவாசத்தில்
அவர்களது கூட்டுப் பொறுப்பில் திருச்சபை வைத்திருக்கிற நம்பிக்கைதானே
குழந்தைத் திருமுழுக்கை அருத்தப்படுத்துகிறது, நியாயப்படுத்துகிறது!
குழந்தையின் நலன் கருதிப் பெற்றோர் முடிவெடுப்பது அதன் வளர்ச்சிக்குப்
பெரிதும் உதவும். ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து,
எந்தப் பள்ளியில் சேர்ப்பது, என்ன படிக்க வைப்பது என்று எல்லாவற்றையும்
பெற்றோரே முடிவெடுத்துச் செய்கின்றனர். அப்போது குழந்தையின்
சுதந்திரம் பறிக்கப்படவில்லையா? பெற்றோரின் கவனமிக்க வளர்ப்பில்தான்
ஒரு குழந்தை வாழ்க்கையின் மதிப்பீடுகளைப் பெறத் தொடங்குகிறது.
முற்றாத அறிவு, முதிராத பருவம் என்று சொல்லிக் கடவுளின் அருள்மழைக்கு
முட்டுக்கட்டை போடுவது முறையன்று.
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். இறையாட்சி இத்தகையோருக்கே
உரியது" (லூக். 18:16, மார்க் 10:14, மத். 19:14) என்று இயேசுவே
கூறிக் குழந்தைகளை இறையரசில் ஏற்றுக்கொள்ளும்போது அவர்களைத்
தடுப்பதற்கு நாம் யார்?
கடவுள் மனிதனுடன் உடன்படிக்கை மூலமே உறவாடுகிறார். இந்த
உடன்படிக்கையின் சின்னம் பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம்.
புதிய ஏற்பாட்டில் திருமுழுக்கு. பழைய ஏற்பாட்டில் கடவுள்
இந்த உடன்படிக்கையை எட்டுநாள் குழந்தையுடன் செய்து
கொள்கிறார் (லூக். 2:21). பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம்
என்பது இறைவனே ஆணையிட்டுச் சொன்னது என்றால், பிறந்த எட்டாம்
நாள் திருமுழுக்கு என்பது எப்படிப் பொருளற்றுப் போகும்?
"ஆதாமின் பாவ விளைவுகளைக் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே
பெற முடிந்தால், கிறிஸ்துவில் விளைந்த அருளையும் குழந்தைகள்
விவரம் அறியாதபொழுதே பெற முடியாதா?" - தூய அக்குவினா
தோமாவின் அறைகூவல் இது!
நாளுக்கு நாள் திருமுழுக்கின் அழைப்பை, அருத்தத்தை,
பொறுப்பை, சிறப்பை உணர்ந்து வாழத் தவறினால் நாமும் அந்த ஆடு
மேய்த்த ஆதிவாசிகளைப் போல நகைப்புக்குரியவர்களே!
இயேசுவின் திருமுழுக்கு நமது திருமுழுக்கை நினைவுபடுத்த
வேண்டும். திருமுழுக்கு வெறும் பெயர் வைக்கும் அல்லது ஒரு
சபையில் சேர்க்கும் சடங்கு அன்று; அது ஓர் இலட்சியப் பயணத்திற்காக
ஆவியின் ஆற்றலைப் பெறும் தருணம் அன்றோ!
நம்மையும் நம்மைச் சுற்றிலும் உற்று நோக்கினால்
திருமுழுக்குப் பெற்ற பிற இனத்தாராகக் கிறிஸ்தவர்கள்
நாமும், திருமுழுக்குப் பெறாத கிறிஸ்தவர்களாகப் பிற இனத்தாரும்
வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
திருமுழுக்கு என்றால் என்ன? பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப்
பாவத்தையும் போக்கி நம்மைக் கடவுளின் பிள்ளைகளாகவும் திருஅவையின்
உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற திருவருள் சாதனம். இவ்வளவுதானா
திருமுழுக்கு? எழுத்துச் சொல் உருவில் காணும் நமது நம்பிக்கைக்
கோட்பாடு எவ்வளவு குறைபாடுள்ளது என்பதற்கு இந்தத் திருமறைச்
சுவடியின் விளக்கமே ஓர் எடுத்துக்காட்டு.
இயேசுவின் திருமுழுக்கை எண்ணிப்பாருங்கள். அவருக்கு எந்தப்
பிறப்புநிலைப் பாவம் அகன்றது? எந்தச் செயல்வழிப் பாவம்
தீர்ந்தது? இதுவரை இல்லாதது போல இப்போது புதிதாக எந்தக்
உடன்படிக்கையை எட்டுநாள் குழந்தையுடன் செய்து கொள்கிறார்
(லூக். 2:21). பிறந்த எட்டாம் நாள் விருத்த சேதனம் என்பது
இறைவனே ஆணையிட்டுச் சொன்னது என்றால், பிறந்த எட்டாம் நாள்
திருமுழுக்கு என்பது எப்படிப் பொருளற்றுப் போகும்?
"ஆதாமின் பாவ விளைவுகளைக் குழந்தைகள் விவரம் அறியாதபொழுதே
பெற முடிந்தால், கிறிஸ்துவில் விளைந்த அருளையும் குழந்தைகள்
விவரம் அறியாதபொழுதே பெற முடியாதா?" - தூய அக்குவினா
தோமாவின் அறைகூவல் இது!
நாளுக்கு நாள் திருமுழுக்கின் அழைப்பை, அருத்தத்தை,
பொறுப்பை, சிறப்பை உணர்ந்து வாழத் தவறினால் நாமும் அந்த ஆடு
மேய்த்த ஆதிவாசிகளைப் போல நகைப்புக்குரியவர்களே!
இயேசுவின் திருமுழுக்கு நமது திருமுழுக்கை நினைவுபடுத்த
வேண்டும். திருமுழுக்கு வெறும் பெயர் வைக்கும் அல்லது ஒரு
சபையில் சேர்க்கும் சடங்கு அன்று; அது ஓர் இலட்சியப் பயணத்திற்காக
ஆவியின் ஆற்றலைப் பெறும் தருணம் அன்றோ!
நம்மையும் நம்மைச் சுற்றிலும் உற்று நோக்கினால்
திருமுழுக்குப் பெற்ற பிற இனத்தாராகக் கிறிஸ்தவர்கள்
நாமும், திருமுழுக்குப் பெறாத கிறிஸ்தவர்களாகப் பிற இனத்தாரும்
வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
திருமுழுக்கு என்றால் என்ன? பிறப்புநிலைப் பாவத்தையும் செயல்வழிப்
பாவத்தையும் போக்கி நம்மைக் கடவுளின் பிள்ளைகளாகவும் திருஅவையின்
உறுப்பினர்களாகவும் ஆக்குகின்ற திருவருள் சாதனம். இவ்வளவுதானா
திருமுழுக்கு? எழுத்துச் சொல் உருவில் காணும் நமது நம்பிக்கைக்
கோட்பாடு எவ்வளவு குறைபாடுள்ளது என்பதற்கு இந்தத் திருமறைச்
சுவடியின் விளக்கமே ஓர் எடுத்துக்காட்டு.
இயேசுவின் திருமுழுக்கை எண்ணிப்பாருங்கள். அவருக்கு எந்தப்
பிறப்புநிலைப் பாவம் அகன்றது? எந்தச் செயல்வழிப் பாவம்
தீர்ந்தது? இதுவரை இல்லாதது போல இப்போது புதிதாக எந்தக்
கடவுளுக்கும் திருஅவைக்கும் பிள்ளையானார்? வானம் திறந்தது,
குரலோலி கேட்டது, புறா இறங்கியது எல்லாம் அந்த உண்மையின்
சில அடையாளங்கள் என்றாலும் திருமுழுக்கு என்பது இயேசுவைப்
பொறுத்தவரை திருமறைச் சுவடியின் விளக்கத்துக்கு அப்பால்.
இயேசு தன் திருமுழுக்கில் தன்னுணர்வு பெற்றதுபோலத் தன் பணி
வாழ்வுக்கான இலட்சிய முழக்கத்தைக் கேட்டார். கொள்கை விளக்கத்தைக்
கண்டார். குறிக்கோளுக்கு ஏற்ற அருப்பணத்தைச் செய்தார். அதற்குத்
தேவையான அருளையும் மன உறுதியையும் பெற்றார். எனவே,
திருமுழுக்கு என்பது பணி வாழ்வுக்கான அழைப்பு! பலி
வாழ்வுக்கான அருப்பணம்; அரங்கேற்றம்! இலட்சிய வாழ்வுக்கான
நிலைப்பாடு! யோர்தான் நீரில் தொடங்கிய இந்தப் பந்தயத்தைக்
கொல்கொத்தா சிலுவையில் ஓடி முடிப்பார். "நான் பெற வேண்டிய
திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும்
மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக். 12:50).
நீரினால் பெறும் திருமுழுக்கு இரத்தத்தால் பெறும்
திருமுழுக்குக்கு இட்டுச் செல்லும். இயேசுவுக்கு மட்டுமல்ல,
அவருடைய சீடர்களுக்கும்தான்! "நான் பெறும் திருமுழுக்கை உங்களால்
பெற இயலுமா?" (மார்க். 10:38). இது சீடருக்கான சவால்!
எனவே திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள் மூழ்குவதும் தண்ணீரிலிருந்து
எழுந்து வெளியே வருவதும் அல்ல. அது பாஸ்கா மறைபொருளில் பங்கேற்பு.
கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறப்பது. பழைய இயல்பைப் புதைப்பது.
அருள் வாழ்வுக்கு, புது வாழ்வுக்கு உயிர்ப்பது.
திருமுழுக்கு கிறிஸ்தவனுக்கு கருவறை. அதே வேளையில் கல்லறையும்
கூட.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
ஓடும் நீரில் ஒடுக்கப்பட்டோர் நடுவில்...
தந்தை மகன் உறவைக் கூறும் பல கதைகளை நாம்
கேட்டிருக்கிறோம். அவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு
கதை இது. டீன்ஏஜ் இளைஞன் ஒருவன் தன் தந்தையுடன் வாழ்ந்து
வந்தான். இருவருக்கும் மிக ஆழமான, அழகான உறவு இருந்தது. இளைஞன்
கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல்
அந்த விளையாட்டிற்கு ஏற்றது போல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும்
அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு பயிற்சியாளர் கல்லூரி கால்பந்தாட்டக்
குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் அவன்
விளையாடாமல், ஓரத்திலிருந்து தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்
கொண்டே இருப்பான். அவன் களமிறங்கி விளையாடாவிட்டாலும்,
அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார்.
உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.
ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி
நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி
பெற்று வந்தனர், இந்த இளைஞனையும் சேர்த்து. அந்நேரத்தில்
இளைஞனின் தந்தை இறந்து விட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர்
இளைஞனை ஆதரவாய் அணைத்து ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பி
வைத்தார். போட்டியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று
சொல்லி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டி நடைபெற்றது. இளைஞனின்
குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர்.
விளையாட்டின் பாதி நேர இடைவேளையின் போது அந்த இளைஞன்
திரும்பி வருவதைக் குழுவினர் பார்த்தனர். அதுவும்,
குழுவின் சீருடை அணிந்து விளையாட வந்திருந்தான் அவன். அவனுக்கு
கால்பந்தாட்டத்தின் மீது இருந்த ஆர்வம் அனைவருக்கும்
தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம்
முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத் திடலுக்கு வந்தது
அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. இவ்வளவுக்கும், அவனுக்கும்
அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும்
பார்த்திருந்தனர். எனவே, இந்த அவனது செயலை அவர்களால்
புரிந்து கொள்ள முடியவில்லை.
திடலுக்கு வந்தவன் பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது
பாதியில் தயவு செய்து என்னை விளையாட அனுமதியுங்கள்." என்று
கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக் கொண்டிருந்த
சூழ்நிலையில், இவனை இறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகுமே
என்று பயிற்சியாளர் பயந்தார். எனினும், அந்த இளைஞனின் மனதை
உடைக்க விரும்பவில்லை. மேலும் அந்த இளைஞனின் கண்களில் கண்ணீரோடு
சேர்ந்து தெரிந்த அந்த ஆர்வத்தால், அனுமதி அளித்தார்.
இரண்டாவது பாதியில் அந்த இளைஞனின் அற்புதமான விளையாட்டால்,
தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது.
அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி.
ஆட்டத்தின் முடிவில் அந்த இளைஞனைத் தோள்களில் சுமந்து ஆரவாரம்
செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின், பயிற்சியாளர் அவனிடம்,
"தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று?
எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே
கேட்டார்.
இளைஞன் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார்
என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப்
பார்வையே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று
கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப்
பார்த்தனர். இளைஞன் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்கு
பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும்
தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று இந்த ஆட்டத்தைத்தான்
முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார்.
அவர் பார்க்கிறார் என்பதற்காக, அவரை மகிழ்விக்க நான் என்
முழு திறமையை இன்று வெளிப்படுத்தினேன்." என்று அவன் சொல்லி
முடிக்கும் போது, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர்
வழிந்தது. ஆனந்தக் கண்ணீர்.
புறக் கண்களால் பார்க்கும் திறனற்ற ஒரு தந்தை தன் மகனை
அவனது கனவில் அவனது திறமைகளில் வளர்த்த கதை இது. புறக் கண்களால்
மனிதர்கள் பார்க்க முடியாத விண்ணகத் தந்தை தன் மகன் இயேசுவின்
கனவுகளை ஆரம்பித்து வைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி
நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தை
அவரை உலகிற்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்... "என்
அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்"
(மத்தேயு 3: 17)
உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் மனிதக் குழந்தை
வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே அதிகமான காலம். மற்ற
உயிரினங்களின் வளர்ச்சிக்கு இவ்வளவு அதிகமான நேரம் தேவைப்படுவதில்லை.
மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்பது நம்
பேச்சு வழக்கு. மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்ததும்
நீந்த ஆரம்பிக்கும். யாரும் அவைகளுக்குப் பாடங்கள்
சொல்லித் தருவதில்லை. அதேபோல், பிற மிருகக் குட்டிகள், பறவைக்
குஞ்சுகள் எல்லாம் குறைவான காலத்திலேயே வளர்ந்துவிட்ட மிருகங்கள்,
பறவைகள் போல் செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. மனித குழந்தையின்
வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் ஆகின்றன.
உடலளவில் ஒரு குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு பருவங்களில்
நாம் கொண்டாடுகிறோம். குழந்தை குப்புறப்படுக்கும் போது, குழந்தை
தன் முதல் அடியெடுத்து நடக்கும் போது என்று... பல நிலைகளை
நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் குழந்தைகள் வளர்வதைக்
கொண்டாடுவது போல், உள்ளத்தளவில், அறிவுத் திறனில் அவர்கள்
வளர்வதையும் நாம் பல வழிகளில் கொண்டாடுகிறோம், அங்கீகரிக்கிறோம்.
ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன்னையே ஆளும் திறமை பெறுவதை
பல கலாச்சாரங்கள், பல மதங்கள் சடங்குகள் வழியாகக்
கொண்டாடுகின்றன. இனி இந்த இளைஞன் அல்லது இளம் பெண் இந்த
உலகைத் தனியே சந்திக்க திறமை பெற்றுள்ளனர் என்று இந்த
கொண்டாட்டங்கள் சொல்கின்றன.
நமது மனித வளர்ச்சியின் படிகளை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு
நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதிலும், நாம்
ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வை நாமே நிர்ணயிக்கும் முக்கிய
நிலையை எண்ணிப் பார்க்க இந்த ஞாயிறு ஒரு நல்ல தருணம்.
இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதை இன்று நாம்
கொண்டாடுகிறோம். தன் வாழ்வை, தன் பணியை நிர்ணயிக்க,
தீர்மானிக்க இயேசு தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார்.
அவர் எடுத்து வைத்த முதல் அடியையே தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற
ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது நம் சிந்தனைகளைத்
தூண்டும் அழகான ஓர் அடையாளம். உறுதியான தரையில் நிற்பதற்கும்,
ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. தான்
மேற்கொள்ளவிருக்கும் பணியும் ஓடும் நீரைப் போல் இருக்கப்போகிறதென்று
இயேசு சொல்லாமல் சொன்னாரோ? இனி தொடரும் தன் பணிவாழ்வில் தந்தையாம்
இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது
என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும்
நீரில் எடுத்து வைத்தாரோ?
ஓடும் நீரில் மற்றொரு அழகும் உண்டு... அந்நீரில் உயிர்கள்
வளரும். தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள்
வாழும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப்
போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று
நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடியாகத் தேர்ந்தெடுத்தார்
. அந்த ஆற்றின் நீரில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை.
மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை
விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய்
மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது
திருமுழுக்கு யோவானுக்குச் சங்கடத்தை விளைவித்தது. எனினும்,
இயேசு தன் முடிவிலிருந்து மாறவில்லை. ஓடும் நீரில் இறங்கியது,
மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக
தன் பணியின் நோக்கத்தை இயேசு உலகறியச் செய்தார். விண்ணகத்
தந்தையும் தன் பங்கிற்கு தன் அன்பு மகனை உலகிற்கு அறிமுகம்
செய்து வைத்தார்.
பொறுப்பான பணியில் இறங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய இருப்பதை
திட்டங்களாகச் சொல்வார்கள். முக்கியமாக, மக்களின் தலைவர்களாய்
மாறத் துடிப்பவர்கள், தாங்கள் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன
செய்வோம் என்பதைத் தேவைக்கும் அதிகமாக பறை சாற்றுவார்கள்.
அந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், இயேசு தன் பணிவாழ்வை
யோர்தான் நதியில் ஆரம்பித்தார். "இவரே என் அன்பார்ந்த மைந்தர்"
என்று தந்தை வானத்திலிருந்து முழங்கிய போது, தன் மைந்தனுக்குரிய,
தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை உலகறியச்
செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு
இறைவாக்கினர் எசாயா மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான்
தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது:
அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு
நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்:
தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை
முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே
நீதியை நிலை நாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை
அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத்
தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து
விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச்
செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு
ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய
நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப்
பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும்
பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன்.
பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை
அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும்
உம்மை அழைத்தேன்.
இறுதியாக, அன்புள்ளங்களே, இரு சிறப்பான வேண்டுதல்களோடு நம்
சிந்தனைகளை நிறைவு செய்வோம். கடந்த நவம்பர், மற்றும் டிசம்பர்
மாதங்களில் எனக்குத் தெரிந்த பல குரு மாணவர்கள் குருக்களாகத்
திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த புது குருக்கள் ஒவ்வொருவரும்
எசாயா கூறும் இறை ஊழியர்களாய் தங்கள் வாழ்வை அமைத்துக்
கொள்ள சிறப்பாக செபிப்போம். குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும்
உண்மையான இறை ஊழியர்களாய் விளங்கவும் செபிப்போம்.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான அகிலஉலக இளையோர் ஆண்டு
இன்னும் தொடர்கிறது. ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் இந்த
உலகில் தங்கள் வாழ்வை, பணியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர்.
ஓடும் நீரைப் போன்ற உறுதியற்றச் சூழ்நிலைகளில் அவர்கள் நல்ல
முடிவுகளை எடுக்கவும், அம்முடிவுகளின் இறுதியில் அவர்கள்
கரையேறும் போது, அவர்களை இறைவன் தன் அன்புப் பிள்ளைகள் என்று
உலகறிய அறிமுகப்படுத்தவும் வேண்டுமென்று அவர்களுக்காகவும்
செபிப்போம்.
மறையுரை மொட்டுக்கள் - நன்றி வழிகாட்டும் தோழன்
அருள்பணி. K.J. பிரவின் ராஜ்
நம் பணிகளால் கடவுள் பூரிக்கட்டும்
கிறிஸ்துவ வாழ்வில் திருமுழுக்கு என்பது ஏழு அருள் அடையாளங்களுள்
ஒன்று. அதிலும் 3 கிறிஸ்துவப் புகுமுக அருள் அடையாளங்களுள்
(திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், நற்கருணை) முதன்மையானது.
கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது, ஏறத்தாழ எல்லாக் கிறிஸ்துவர்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கி
வைக்கும் அருள் அடையாளம். மற்ற எல்லா அருள் அடையாளங்களையும்
பெற்றுக் கொள்ள உதவும் கிறிஸ்துவ வாழ்வின் வாசல். கிறிஸ்துவர்களின்
வாழ்வில் மட்டுமன்று, கிறிஸ்துவின் வாழ்விலும்
திருமுழுக்கு என்பது ஒரு திருப்புமுனையான நேரம். இயேசுவின்
திருமுழுக்கின் முக்கியத்துவத்தை நான்கு நிலைகளில் பார்க்கலாம்.
1. இது மூவொரு கடவுள் தம்மை வெளிப்படுத்திய நேரம்: இயேசுவின்
திருமுழுக்கில் தந்தை, மகன், தூய ஆவியாராகிய கடவுள் இணைந்து
வெளிப்பட்டார்.
2. இது இயேசுவுக்குக் கடவுள் தந்த ஏற்பிசைவின் நேரம்: தன்
அன்பார்ந்த மகன் எனக் கடவுளே அறிக்கையிடுகின்றார். தூய ஆவியாரால்
நிரப்பப்படுகின்றார்.
3. இது இயேசு மக்களோடு தன்னை ஒன்றிணைத்த நேரம்: யோவான் அறிவித்த
திருமுழுக்கு, பாவத்திலிருந்து மனம்மாறுவதன் அடையாளம். எப்பாவமும்
இல்லாத இயேசு, பாவமுற்ற மனிதரோடு தன்னை ஒன்றிணைத்து, மனுக்குலத்தின்
பாவங்களைத் தன்மீது சுமந்து திருமுழுக்குப் பெறுகின்றார்.
4. இது இயேசுவின் பணிவாழ்வுத் தொடக்க நேரம்:
திருமுழுக்கில் இயேசு பெற்றுக் கொண்ட "அப்பா" அனுபவம்தான்
அவரது பணிவாழ்வைத் தொடங்க அவர் பெற்றுக்கொண்ட உந்து சக்தி.
"வரலாற்றில் வாழ்ந்த நாசரேத்து இயேசுவின் ஒட்டுமொத்த அடையாளம்
அவர் ஓர் இறையாட்சிப் பணியாளர் என்பதே" என்கிறார் இறையிலாளர்
ஜோஸ் ஆன்டனி பகோலா. இறையாட்சிப் பணி செய்வதைத் தன்
முழுமூச்சாகக் கொண்டிருந்தவர் அவர். எனவேதான், யோவான் கைது
செய்யப்பட்டதும், பணி செய்யப் புறப்படுகின்றார் (மாற்
1:14). தன் மனித வாழ்வின் நிறைவை உணர்ந்து, தனக்குப் பின்
பணி செய்யச் சீடர்களைத் தேர்வுசெய்கின்றார்.
இயேசுவுக்கு மட்டுமன்று, நமக்கும் திருமுழுக்கு பணிவாழ்வின்
தொடக்கமே. திருமுழுக்கின் வழியாக "அப்பா" அனுபவம்
பெற்றுள்ள நாமும் பணியாற்றப் புறப்பட வேண்டும்.
திருமுழுக்கின் வழியாக நாம் மேற்கோள்ளும் பணிகளில் 3
முக்கிய அம்சங்கள் இடம்பெறல் வேண்டும். அவை
1. குணமாக்குதல்,
2. உயர்த்துதல்,
3. விடுவித்தல்.
இப்பணிப் பண்புகளை ஒவ்வொரு கிறிஸ்துவரும் மனம் சுமந்து களம்
இறங்கக் கடமைப்பட்டுள்ளனர். மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ்
குறிப்பிடுவதுபோல "போர்க்களத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு மருத்துவமனைபோலத்
திரு அவை இயங்க வேண்டும். திரு அவையின் குணப்படுத்தும் பணிக்காகக்
காத்திருப்போரின் எண்ணிக்கை மிகப் பெரிது." திருப்பலி
முடிவில் 'சென்று வாருங்கள்' என்று அருள்பணியாளர்
சொல்கின்ற வார்த்தைகள், நாம் இறையாட்சிப் பணிசெய்ய நமக்குத்
தரப்படுகின்ற அழைப்பு" என்கின்றது இரண்டாம் வத்திக்கான் சங்கம்.
இதனை உணர்ந்து செயல்படும்போதுதான் நாம் பெற்றுக்கொண்ட
திருமுழுக்கு பொருள் பெறும்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
இயேசுவின் திருமுழுக்கு
முதல் வாசகப் பின்னணி (எசா. 42:1-4,6-7)
இறைவாக்கினர் எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றிய செய்தியை இஸ்ராயேல்
மக்களுக்கு முன்னறிவிக்கிறார். இது இஸ்ராயேல் மக்களுக்கு
ஆறுதல் மொழியாக அமைகின்றது. யார் இந்தப் பணியாளன், அல்லது
ஊழியன்? அரசனா? இல்லை யுதமதக் குருவா? இல்லை ஆண்டவரின்
வார்த்தையை முன்னறிவிக்கும் இறைவாக்கினரா? எதுவும் இல்லை
இவர் அனைவருக்கும் அப்பாற்ப் பட்டவர், இறைசித்தத்தின்படி
வாழ்ந்து, தன் மக்களுக்காய் துன்பப் பட்டுத் தியாகத் தீபமாய்
மாறக்கூடியவர்; இதைத் தான் 2-ஆம் எசாயா முன்னறிவிக்கிறார்.
இந்த இறைவாக்கானது புதிய ஏற்பாட்டில் இயேசுவே மெசியா என்பதில்
நிறைவு கொள்கிறது. பாபிலோனிய அடிமைத்தன பின்னணியில் எசாயாவின்
ஊழியன் மீட்பின், விடுதலையின் வெளிப்பாடாக அமைகின்றார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (தி.ப. 10:34-38)
இன்றைய இரண்டாம் வாசகம் தி.ப. 10:34-38 ஆண்டரின்
திருமுழுக்கிற்கு ஏற்றக் கருத்தாழம் மிக்க மையப் பொருளாய்
அமைகின்றது. கொர்னேலியு இவர் ஒரு யூதனும் இல்லை, கிறிஸ்த
வனும் இல்லை. உரோமை அரசு அதிகாரி, பாலஸ்தீனத்தில் வசிக்கும்
ஒரு புறவின சகோதரன். "நான் ஒரு தலை சார்பாய் இருப்பவர் அல்ல"
என்ற ஆண்டவரின் வார்த்தை தூய பேதுருவுக்கு அருளப்படுகிறது.
பேதுரு கொர்னேலியுவின் இல்லத்திற்கு சென்று அவரையும் அவரது
குடும்பத்தார் அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார். அனைவரையும்
ஆண்டவருக்குள் அழைத்து வருகி- றார். இந்தக்
கொர்னேலியுதான், புறவினத்தாராக இருந்து கிறிஸ்துவை ஏற்றுக்
கொண்ட முதல் கிறிஸ்துவர். ஆண்டவர் தம்மைத் தேடும் யாவருக்கும்
அருகிலேயே உள்ளார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 3:13-17)
திருமுழுக்கு யோவான், யாருக்காக வழியை ஆயத்தம் செய்து
கொண்டிருந்தாரோ அவரிடமே ஆண்டவர் இயேசு வந்தார். எதற்காக
வழியை ஆயத்தம் செய்தாரோ அதை உறுதிப்படுத்த யோவானிடம் வருகின்றார்.
யோர்தானில் திருமுழுக்குப் பெற்று தந்தையால் இந்த உலகிற்கு
தன்னை யார் என்று வெளிப்படுத்தவே அங்கு வந்தார். இந்த
யோர்தான் நதியைக் கடந்து தான் இஸ்ராயேல் மக்கள் பாலஸ்தீனத்தில்
குடியேறினார்கள். இதில் மூழ்கி எழுந்த தினால் நாமான் என்ற
தொழுநோயாளி இறைஇரக்கத்தால் குணம் பெற்றார். இங்கிருந்துதான்
எலியாஸ் நெருப்பு தேரில் விண்ணகம் சென்றார். புண்ணியம் படைத்த
இந்த நீர் ஓட்டத்தில் தெய்வம் தன்னை வெளிப்படுத்துகிறது.
மறையுரை
இன்று அன்னையாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் திரு
முழுக்குப் பெருவிழாவினைக் கொண்டாடுகிறது. இன்றைய திருவழி
பாடும், இறைவார்த்தை வழிபாடும், நாம் நம் திருமுழுக்கின்
வழியாய் புது வாழ்வு தொடங்க, புண்ணிய வாழ்வு வாழ, அதன்
வழியாய் ஆண்டவரை மகிமை செய்ய அழைப்பு விடுக்கிறது. புது
வாழ்வு தொடங்க... தூய வாழ்வு வாழ... நம்மால் ஆண்டவர் மகிழ்ச்சி
அடைய... "ஒவ்வொரு கிறிஸ்தவனும் திரு முழுக்கினால் மட்டுமே
கிறிஸ்துவோடு இணைக்கப்படுகிறான். காரணம் கிறிஸ்து கடவுள்
தன்மையில் விளங்கினாலும் நெறிகெட் டவர்களோடு ஒன்றாகக் கருதப்பட்டார்
என்பதற்கிணங்க, மனிதர் களோடு ஒன்றாகத் தம்மை நிரூபித்துக்
காட்டினார்". -திருதந்தை இரண்டாம் ஜான்பால், 1986 ஆண்டு
பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி இந்தியா வந்தபோது கூறினார்.
ஒவ்வொரு நாளும் மனிதனானவன் புதிய நாளை எதிர்ப்பார்க்
கின்றான். புதிய கண்டுபிடிப்புகளைக் காண முனைகின்றான்.
புதிய வாழ்வு முறைக் கலாச்சாரம், புதிய மொழி நடை, புதிய நண்பர்கள்!
இவ்வாறு உலகம் வெளித்தோற்றத்தில் புதிய புதிய... என்று
சென்று கொண்டே இருக்கிறது. இது உலகத்தின் பால் பெருமை யடைய,
மகிழ்ச்சியடைய, நிலையற்ற மகிழ்ச்சியை பெற்றுக் கொள்ள உதவும்.
இந்த மகிழ்ச்சியால் தனிமனிதனுக்கு மகிழ்வு கிடைக்குமே தவிர
பிறர் மகிழ மாட்டார்கள். இந்த வாழ்க்கை முறையினால் இறைவன்
மகிழ மாட்டார். இவையனைத்தும் இருந்- தால் திருமுழுக்கின்
வழியாய் புதிய வாழ்வு வாழும்போது, நமது வாழ்க்கை தூய மாகிறது.
இந்தப் புதிய தூய வாழ்க்கை முறையினால் ஆண்டவர் மகிழ்ச்சி
அடைகின்றார்.
புது வாழ்வு
கடவுள் நமக்கு ஆதரவு தருகிறார். மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு
அத்தியாயத்திலும் இறை ஆதரவை நாடுகின்றான். ஆனால்
திருமுழுக்கின் வழியாய் கடவுள் நமக்குத் துணையாய் இருக்கிறார்,
ஆதரவு தருகிறார். "இதோ என் ஊழியன் அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்"
என்ற எசாயாவின் வாக்கு நம்மை பலப்படுத்துவதாக அமைகின்றது.
இந்த உறுதியான ஆதரவு திருமுழுக்கு அன்று மட்டுமல்ல நமது இறுதி
நாட்கள்வரை நம்மோடு இருக்கிறது. மாபெரும் விவிலியப்
பேராசிரியர் அருள்தந்தை லெக்ரான் சொல்லுவார், "நான் பிறந்தநாளைவிட,
எனது திருமுழுக்கு நாளைப் பெரிதும் நினைத்து மகிழ்கின்றேன்.
ஏனெனில் அது எனக்கு புது வாழ்வு தந்தது. அதன் வழியாய் ஆண்டவரின்
அருட்கரம், ஆதரவு என்றும் என்னோடு இருக்கிறது".
தூய வாழ்வு
திருமுழுக்கின் வழியாய் நாம் ஆண்டவரின் ஆதரவை மட்டும் பெறுவது
அல்ல மாறாகக் கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமை- யையும்
பெறுகிறோம். "என் அன்பார்ந்த மைந்தர் இவரே" என்று ஆண்டவர்
இயேசுவை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த கடவுள் இன்று
திருமுழுக்கின் வழியாய் நமது பெயரைச் சொல்லி இந்த உலகிற்கு
கடவுளின் மகனாக, மகளாக அறிமுகம் செய்து வைக்கிறார். எபேசியர்
1:5-இல் கூறுவது போல, "நம்மைத் தமது பிள்ளைகளாக்கிக் கொள்ள
அன்பினால் முன் குறித்து வைத்தார்", நாம் அனைவரும் தூய
வாழ்வு வாழ அவரது அன்பினால் முன் குறித்து வைக்கப்பட்டுள்ளோம்.
ஆண்டவர் மகிழ்ச்சி கொள்கிறார். புது வாழ்வினைப் பெற்று,
தூய வாழ்வு வாழும்போது நம்மால் ஆண்டவரின் நெஞ்சம் பூரிப்
படைகிறது. பல்வேறு தருணங்களில் திருமுழுக்கு வழியாக நாம்
பெற்ற அருளை உணர்ந்து கொள்ளாமல் சோதனைவேளையில், இயற்கை
சீற்றத்தின் வேளையில், கடவுளை நாம் இகழத் தொடங்கு கிறோம்.
மற்றும் நமது தேவைகளை அறிக்கையிடும்போது கடவுள் நம்மைத் தனியாகத்
தவிக்க விட்டுச் சென்றுவிட்டார் என்று சொல்லி நிறைய வேண்டுதல்
செய்கின்றோம். ஆனால், திருமுழுக்கின் வழியாய் நம்மில் இணைந்த
கடவுள் நம்மை விட்டுச் செல்வது இல்லை என்று சொல்லி நம்மில்
அவரது ஆவியை நிலை கொள்ள செய்கிறார். இந்த உயிருள்ள ஆவியானவர்
எல்லா நிலைகளிலும் நம்மைத் தூய வாழ்வுக்கு அழைத்துச்
செல்கிறார்.
ஆனால் நாம் எந்த அளவிற்கு திருமுழுக்கினை புது வாழ்வு தருவதாகத்
தூய வாழ்வு தருவதாக உணர்ந்திருக்கிறோம். நமது திருமுழுக்கு
நிகழ்வுகளில் நமது பெற்றோரும் ஞானப்பெற்றோரும் பங்கு கொள்ள
எந்த அளவிற்கு அவர்கள் திருமுழுக்கின் மகத்து வத்தை
புரிந்துள்ளனர்.
ஆண்டவரின் திருமுழுக்கு நம் அனைவருக்கும் நாம் பெற்ற புது
வாழ்வை, தூய வாழ்வை வாழ உணர்த்தட்டும். அதன் வழியாய் ஆண்டவர்
மகிமையடைவார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. திருமுழுக்கு பெறுபவர்கள் ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை
அடைவதோடு, தீமைகளின் தலைவனாம் அலகையை வெற்றிக் கொள்ளவும்,
உலகத்தின் மதிப்பீடுகளைக் களைந்து, கிறிஸ்துவின் மதிப்பீடுகளை
அணிந்து கொள்ளவும், தூய வாழ்வு வாழவும் வல்லமை பெறுகின்றனர்.
2. திருமுழுக்கு ஒரு மனிதனை கடவுள் வாழும் தூய ஆலயமாக
மாற்றுகிறது. அவர்கள் உள்ளங்களில் உண்மையிலும் ஆவியிலும்
இடைவிடாமல் இறைவனுக்கு வழிபாடு நடத்தும் வல்லமை தருகிறது.
"இயேசுவே என் ஆண்டவர், கடவுள்" என்று விசுவசிக் கவும், அதை
அறிக்கைச் செய்யவும் தகுதி பெறுகின்றார்கள்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
ஆண்டவரின் திருமுழுக்கு
ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழாவோடு கிறிஸ்து பிறப்புக்காலம்
முடிந்து, ஆண்டின் பொதுக்காலம் தொடங்கு கின்றது.
திருமுழுக்கிலிருந்து நமதாண்டவரின் பணிவாழ்வு, பொது வாழ்வு
தொடங்குகின்றது. இன்றைய இறைவார்த்தைகள் இந்த மையப்
புள்ளியில் ஒன்றிணைகின்றன. முதல் வாசகத்தில் ஏசாயா இறை ஊழியரைப்
பற்றியும், அவரது அழைப்பு மற்றும் பணியைப் பற்றியும்
பேசுகின்றார். இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பணிகள்
நூலில், பேதுரு இயேசுவின் மீது 'தூய ஆவியாரின் வல்லமை பொழியப்பட்டதைப்
பற்றியும், இயேசு நன்மை செய்துகொண்டே சென்றதையும் அறிவிக்கின்றார்.
நற்செய்தியில் மத்தேயு இயேசுவின் திருமுழுக்கைப் பற்றியும்
இறைமகன் இயேசுவுக்குத் தந்த சாட்சியம் பற்றியும் விவரிக்கின்றார்.
இந்த நற்செய்தி பற்றிப் பல நிலைகளில் விளக்கலாம் என்றாலும்,
நமது சிந்தனைக்கு இயேசுவின் ஆளுமைபற்றி, அடையாளம் பற்றி மத்தேயு
கூற வருவது என்ன என்பது பற்றியும், கிறிஸ்தவ வாழ்வுக்கு அதுதரும்
செய்திகளைப் பற்றியும் மட்டும் இவண் கவனிப்போம்.
உள்கூறுகள்
மேலே குறிப்பிட்டதுபோல இந்த நற்செய்தியில் பல உட்கூறுகள்
உள்ளன. இயேசு தன் மறைந்த வாழ்வுக்குப் பிறகு தனது
பொதுவாழ்வைத் தொடங்கும்போது இது நிகழ்கின்றது. ஒரு வளர்ந்த
மனிதனாக இயேசுவின் ஆளுமையை இது படம் பிடித்துக் காட்டுகின்றது.
மேலும் இந்த நிகழ்விலே சில அசாதாரணமானவைகளும்
விண்ணிலிருந்து சில வெளிப்பாடு களும், செய்தியும் வழங்கப்படுகின்றன.
அவை திருமுழுக்குப் பெரும் இயேசுவின் ஆளுமையைப் பற்றிப்
புரிந்து கொள்வதற்கு உதவுகின்றன
.
1. கிறிஸ்தியல் செய்தி மேலே கூறப்பட்டவை அனைத்தும் இயேசுயார்
என்பதைத் தெளிவுப்படுத்துவதில் குறியாய் உள்ளன. முதலாவது
இந்த நிகழ்வின் வழியாக இயேசு உலகுக்கு வெளிப்படுத்தப்படுகிறார்.
அறிமுகப்படுத்தப்படுகின்றார். இதுமுதல் இயேசு தனது பணி
வாழ்வினைத் தொடங்குகின்றார். எனவே வானிலிருந்து ஒரு குரல்
இயேசுவின் உண்மையான அடையாளம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறது.
இயேசு இறைத்தந்தையின் "அன்பார்ந்த மைந்தர்" என்பதும் இயேசுவிலே
இறைத்தந்தை "பூரிப்படை கின்றார்" (வச 17) என்பதும் இங்குக்
கிறிஸ்துவைப் பற்றித் தரப்படும் கிறிஸ்தியல் செய்தியாகும்.
2. திருமுழுக்கு யோவானும் இயேசுவும் இயேசுவின்
திருமுழுக்குப் பற்றிய மத்தேயுவின் விவரிப்பு பிற ஒத்தமை
நற்செய்திகளிலிருந்து இயேசுவுக்கும் திருமுழுக்கு
யோவானுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் (வச 14-15) தனித்து
நிற்கின்து. இது நற்செய்தியின் காலத்தில் எழுந்த சிக்கல்களுக்கு
விடையளிப்பதாக அமைகின்றது. தொடக்கத் திருஅவையில் இயேசு
திருமுழுக்கு யோவானைவிட உயர்ந்தவர் எனக் கிறிஸ்தவர்கள்
போதித்துக் கொண்டிருக்க இயேசு ஏன் தன்னைவிட தகுதி குறைந்தவராகிய
திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற வேண்டும் எனும்
கேள்வி எழுந்திருக்கலாம். அதற்கு விடையாக இந்த உரையாடல் அமைகின்றது.
மேலும் திருமுழுக்கு யோவானின் திருமுழுக்கு மனமாற்றம் பாவமன்னிப்பு
ஆகிய வற்றோடு தொடர்புடையது. இயேசு "பாவம் செய்யாதவர்"
(காண் எபி 4:15) எனில் அவர் திருமுழுக்கு யோவானின்
திருமுழுக்கை ஏன் பெற வேண்டும் எனும் வினாவுக்கு விடையளிக்
கவும் இந்த உரையாடல் உதவுகின்றது. அதாவது 'கடவுளுக்கு ஏற்புடையவை
அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக" (வச 15) இயேசு இந்தத்
திருமுழுக்கைப் பெற்றுக் கொண்டார்.
3. திருமுழுக்கு இயேசுவின் திருமுழுக்கு நமது
திருமுழுக்குக்கு முன் மாதிரியாக இருக்கின்றது. இயேசுவின்
பணிவாழ்வுக்கு அவரது திருமுழுக்குத் தொடக்கமாக இருந்ததுபோல,
நமது கிறிஸ்துவ வாழ்வுக்குத் தொடக்கமாக அமைவது நமது
திருமுழுக்கு. இயேசுவின் திருமுழுக்கில் தூய ஆவி இறங்கிவர
தந்தை அவரை தன் மகன் என ஏற்று அறிக்கையிட்டதுபோல, நம்
திருமுழுக்கின் போதும் நம் மீது தூய ஆவி பொழியப்பட்டு நாம்
இறைவனின் சொந்த மக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றோம். இந்தப்
புனித வாழ்வுக்கு ஏற்றக் கிறிஸ்தவ வாழ்வு வாழ அழைக்கப்படுகின்றோம்.
4. மூவொரு கடவுளின் வெளிப்பாடு கிறிஸ்தவக் கோட்பாடுபற்றிப்
பேசும்போது இந்த நற்செய்தி பகுதி முக்கியத்தும் வாய்ந்ததாக
இருக்கின்றது. இங்கு மூவொரு இறைவன் ஒருசேர வெளிப்படுத்தப்படுகின்றார்.
இரண்டாம் ஆளாகிய மகன் தன் பணி வாழ்வின் தொடக்கமாகத்
திருமுழுக்குப் பெறுகின்றார்.கடவுளின் ஆவி புறா இறங்குவதுபோல
இயேசுவின் மீது இறங்கி வருகின்றார் (வச 16), தந்தையாம் இறைவன்
'வானம் திறக்கப்படுதல், (வச 16), வானத்திலிருந்து ஒரு குரல்
(வச 17) எனத் தன்னை வெளிப்படுத்துகின்றார். மத்தேயு நற்செய்தியில்
'வானம்' என்பது இறைவனை குறிக்கும் இடவாகு பெயர் என்பது
நாம் அறிந்ததே. எனவே நமது இறை நம்பிக்கையின் அடிநாதமான
மூவொரு இறைவன் இந்நிகழ்வில் நமக்கு வெளிப்படுத்துகிறார்.
நமது திருமுழுக்கில் நமது கிறிஸ்தவ வாழ்வைத் தொடங்கிய
நாம், நமது நம்பிக்கையில் ஆழம்பெற்று, இறைவன்
பூரிப்படையும்' (வச 17) விதத்தில் நமது கிறிஸ்தவ வாழ்வை
வாழ முயல்வோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
ஆண்டவரின் திருமுழுக்கு
முதல் வாசகம் : எசா 42 : 1-4 6-7
இரண்டாம் எசாயா எழுதிய ஆறுதல் மொழிகளில் (எசா 40-55)
நான்கு முறை "ஆண்டவரின் ஊழியனைப்" பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன
(42:1-9, 49: 1-6, 50: 4-11, 52: 13-53 : 12). உரிப்பொருளிலே
இவை இஸ்ரயேலையோ வேறொரு நபரையோ (எரேமியா, மோசே முதலியோர்)
சுட்டலாம். நிறைவுப் பொருளில் இவை இயேசுவுக்குப் பொருந்தி
அமையும். இயேசுவின் திருமுழுக்கு நாளைக் கொண்டாடும் இன்று,
முதல் வாசகம் ஏற்றதாய் அமைகிறது.
இயேசுவின்மேல் ஆவியார் தங்குகிறார்
இறைவாக்கினருக்கு அளிக்கப்பட்ட ஆவியார் (112)
திருமுழுக்கின்போது இயேசுவின் மேல் இறங்கி வருகிறார் (மத்
3 : 16) "மெசியா"வின் காலம் தொடங்கிவிட்டது என்பதற்கு அறிகுறி
இது (யோவே 3: 1-5; திப 2: 16-21). நம்முடைய திருமுழுக்கின்
வழி நாமும் ஆவியாரைப் பெற்றுள்ளோம். நாமும் இறைவனுக்குச்
சாட்சியம் பகரத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஆவியாரைப்
பெற்ற இயேசு ஆவியாரின் உந்துதலுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்தது
போல நமது வாழ்வும் ஆவியாருக்கு, அவரின் உந்துதல்களுக்கு,
மதிப்பீடுகளுக்கு இசைந்த வாழ்வாயமைய வேண்டும்.
இயேசு கடவுளின் ஊழியன்
கடவுளுடைய செயல்களிலே அவர் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்.
கடவுள் அவருக்கு அளித்த பணியைச் செய்து முடிப்பதே அவரது
உணவாய் இருக்கிறது (யோவா 4: 34). "நீர் எனக்குச் செய்யக்
கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்"
(யோவா 17:4). பிறரிடமிருந்து பணி பெறுவது எளிது, ஆனால் பிறருக்குப்
பணிபுரிவது மிக அரிது. எனினும் ஊழியனின் கடமை பணிபுரிவதே
என்பதை, "மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும்,
பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்"
(மாற் 10: 45, யோவா 13:1-16) என்கிறார் இயேசு. நாம் அனைவரும்
இயேசுவுக்கும், இயேசுவிலே பிறருக்கும் ஊழியம் புரிய அழைக்கப்பட்டிருக்கிறோம்.
"நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன். நான் செய்ததுபோல
நீங்களும் செய்யுங்கள்" (யோவா 13:15, எபே 5:2, பிலிப்
2:5-8) என்னும் இயேசுவின் சொற்கள் நம் அனைவருக்கும்
பொருந்தும். நம்மில் பெரியவர்களும் சிறியவர்களும், தலைவர்களும்,
அவர்களுக்குக் கீழிருப்பவர்களும், எல்லோரும் பின்பற்ற
வேண்டிய கடமை ஊழியச் செயல். எனவே பிறருக்கு, சிறப்பாக ஏழை
எளியவருக்கும் ஒடுக்கப்பட்டோர் நசுக்கப்பட்டோருக்கும் நாம்
செய்யும் சிறிய பணியையும் இறைவனுக்கே செய்யும் பணியாய்க்
கருதி (மத் 25 : 31-46) செயல்படுவோமாக.
இயேசு மக்களினத்தாருக்கு ஒளியாயிருக்கிறார்
"இருளிலும் இறப்பின் நிழலிலும் இருப்போருக்கும்" ஒளியாய்
(லூக் 1:79) இருக்கிறார். அவருடைய ஒளியிலே பார்வையற்றோர்
காண்கின்றனர், கட்டுண்டவர் விடுதலையடைகின்றனர்; அனைவருக்கும்
நற்செய்தி அறிவிக்கப்படுகிறது (லூக் 4:18-19, எசா 42:6-7,
1:1-2). அவருடைய முக்கிய பணி "மக்களினங்களுக்கு நீதி வழங்குவது"
(42: 1-2). நீதியின் இறைவாக்கினர் இயேசு நம்மையும் "நீதியை
நிலைநாட்டும் வேட்கை கொண்டோராக" மாற்ற வேண்டிக்கொள்வோம் (மத்
5: 6). மக்களிடையே நீதி செழிக்க, அநீதி ஒழிய வேண்டுவோம்.
அதற்காக நம்மாலான முயற்சிகளையும் செய்வோம்.
அவர்மேல் நம் ஆவியைத் தங்கச் செய்தோம்.
இரண்டாம் வாசகம் : திப 10:34-38
கொர்னேலியுவின் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு, பேதுரு
கொடுத்த அருளுரை, ஆண்டவரின் திருமுழுக்குத் திருநாளான இன்று
வாசகமாயமைகிறது. யோவானிடம் திருமுழுக்குப் பெற்ற இயேசு (மத்
3: 13-17) எம்முறையில் இறைவனின் திட்டத்தை
நிறைவேற்றுகிறார் என்பது வாசகத்தின் கருத்து.
தூய ஆவியாரால் இயேசு நிரப்பப்படுகிறார்
"ஆண்டவரின் ஆவி என்மேலே. ஏனெனில் ஆண்டவர் என்னை
அருள்பொழிவு செய்துள்ளார்" (எசா 61: 1, மத் 13 : 16). அந்த
ஆவியாரே இயேசுவின் நற்செய்திப் பணிக்கு வேண்டிய சக்தியும்
வல்லமையும் அளிக்கிறார். அந்த ஆவியாரின் சக்தியாலேதான்
இயேசு "ஒடுக்கப் பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்க,
ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க" முடிகிறது (லூக்
4: 18-19). "உன்னதத்திலிருந்து வரும் இவ்வல்லமையை" (லூக்
24: 49, திப 1: 8) நாமும் திருமுழுக்கு வழிப்
பெற்றுள்ளோம். இயேசுவை, பவுல் அடியாரை மற்றும்
திருத்தூதர்களைத் தம் வல்லமையால் நடத்திய ஆவியார் நம்மில்
செயல்பட வேண்டும்.
நாமும் அதே ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ளோம்
ஏழை எளியவருக்கு, நோய் நோக்காடுகளால் துன்புறுவோருக்கு,
நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நைந்து கொண்டிருப்போருக்கு,
அநாதைகளுக்கு, விதவைகளுக்கு, இன்னும் இவர்கள் போன்று
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும்
பலருக்கும் வாழ்வளிக்கும் போதுதான் நாம் உண்மையாகவே நமது
திருமுழுக்கின் முழுப்பொருளையும் அறிந்தவர்களாவோம்;
ஆவியாரின் உந்துதலுக்குச் செவி மடுத்தவர்களாவோம்.
அந்த ஆவியாரால் செயல்படுவோம்
அதே வேளையில், "யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்" என்ற
முறையிலே நம் திருமுழுக்கு நம்மிலே செயல்பட வேண்டும்.
சாதி, மதம், குலம் கோத்திரம், பிறப்பு, பணம், தோல் நிறம்
ஆகியவற்றின் அடிப்படையிலே இறைவன் செயல்படுவது கிடையாது.
"அவர் ஒருதலைச் சார்பாய் இருப்பவரல்லர், கையூட்டு
வாங்குபவருமல்லர். அவர் அனாதைப் பிள்ளைக்கும் விதவைக்கும்
நீதி நியாயம் வழங்குபவரும், அந்நியரை நேசித்து அவர்களுக்கு
உணவும் உடையும் தந்தருள்பவருமாயிருக்கிறார்" (இச 10:
17-18). ஆளைப் பார்த்து அவர் செயலாற்றுவதில்லை (கலா 2:
11). இத்தகைய ஒரு பொதுமைத்தன்மை திருமுழுக்குப் பெற்ற
நம்மிடம் முன்னணியில் இருக்க வேண்டும். "ஏழையென்றும்
அடிமையென்றும் எவனுமில்லை சாதியில்" என்பதை உணர்ந்து
நற்செய்தி மதிப்பீடு களுக்கேற்ப நம்முடைய நடத்தையைச்
சீர்திருத்தி அமைக்க வேண்டும்.
கடவுளுக்குப் பணிந்த வாழ்வு (திப 10 : 2) பிறரைப்
பொறுத்தமட்டிலே நீதி வழுவாத வாழ்வு, அன்பு தழுவிய வாழ்வு,
உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் ஆழ்ந்த விசுவாச வாழ்வு (திப
15: 9). இவையே நம் திருமுழுக்குக்குப் பொருள் தருவன.
இத்தகைய வாழ்வே நம்மைக் கடவுளுக்கு உகந்தவர்களாகவும்
மக்களின் மதிப்புக்கு உரியவர்களாகவும் (உரோ 1418) மாற்றக்
கூடியது. இயேசுவின் திருமுழுக்கை நினைவுபடுத்தும் நாம்,
நம்முடைய திருமுழுக்கின் உரிமைகளையும் கடமைகளையும்
உணர்ந்து, ஆவியாரின் அருள்பொழிவுக்கு ஏற்ப அன்பு தழுவிய
வாழ்வை மேற்கொள்வோம்.
மனிதர்களிடையே கடவுள் வேற்றுமை பாராட்டுவதில்லை.
நற்செய்தி: மத் 3:13-17
நமதாண்டவர் யோவானிடம் திருமுழுக்குப் பெற,
கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். உலகிலே உள்ள
புனித நதிகளில் மிகச் சிறந்தது யோர்தான் ஆகும். இஸ்ரயேல்
இனம் இதைக் கடந்துதான் பாலஸ்தீனாவில் குடியேறியது; இதில்
மூழ்கி எழுந்ததால்தான் அனல் கக்கும் தேரில் எலியா
அற்புதமாக விண்ணகம் சென்றார். அனைத்திற்கும் மேலாக இந்த
ஆற்றில்தான் தெய்வத் திருமகன் திருமுழுக்குப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியே இன்றைய நற்செய்தி.
இயேசு இறைத்திட்டத்திற்குப் பணிந்தார்
ஆற்றிலே மூழ்கித் திருமுழுக்குப் பெற்றுத் தம் பாவங்களைக்
கழுவக் காத்துநின்ற பல பாவிகளுடன் இயேசுவும் நின்றார்.
"என்னில் பாவம் உண்டென உங்களுள் யார் எண்பிக்கக்கூடும்?"
(யோவா 8: 46) என்று யூதர்களைப் பார்த்துச் சவால்விட்ட
இயேசு, யோவானை அணுகித் திருமுழுக்கு கேட்டார். யோவானோ
"நானே உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியிருக்க நீரா
என்னிடம் வருவது?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்
பார்த்தார்" (3: 14). யோவானின் திருமுழுக்கை ஆயக்காரர்கள்
பெற்றனர். பரிசேயரும் சட்டவல்லுநரும் இது தங்களுக்குத்
தேவை இல்லையென எண்ணினர். கடவுளின் திட்டத்தைத் தங்களைப்
பொருத்தமட்டில் வீணாக்கியவர்கள் இவர்கள் (லூக் 7: 29-30).
இயேசுவோ கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து திருமுழுக்கு
பெற்றார். திருமுழுக்கு யோவானின் பணிவு
போற்றுதற்குரியதுதான். ஆனால் இயேசுவின் பணிவும்
தாழ்ச்சியும் அளவற்றது. இயேசு தன்னையே பாவிகளின்
பட்டியலில் சேர்த்துக் கொண்டார். அனைத்துலக பாவத்தையும்
சுமந்து கொண்டு, அவற்றைக் கழுவி நம்மைத்
தூய்மையாக்குகிறார். "கிறிஸ்துவுக்குள் நாமும் கடவுளுக்கு
ஏற்புடையவர்களாகுமாறு, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ
உருவாக்கினார்" (2 கொரி 5:21).
"ஆண்டவருடைய ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்: ஞானம்,
மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்
பற்றிய அச்ச உணர்வு இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்"-
(எசா 11:2)
என்ற எசாயாவின் இறைவாக்கை யோவான் அறிந்திருந்தார்.
எனவேதான் இத்திருமுழுக்கு யோவான், "தூய ஆவியார் புறாவைப்
போல் வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன்.
இவர் யார் என்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால்
தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்
'தூய ஆவியார் இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே
தூய ஆவியாரால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம்
சொல்லியிருந்தார். நானும் கண்டேன். இவரே இறைமகன் எனச்
சான்று கூறிவருகிறேன்" (யோவா 1:32-34).
ஆவியாரில் நானும் புதுவாழ்வுக்கு அழைக்கப்படுகிறேன்
உலகப் படைப்பில் நீரின் மீது அசைந்தாடிய ஆவி (தொநூ 1:2)
ஆண்டவரின் திருமுழுக்கு வேளையில் தோன்றுகிறார். அன்று,
முதல் படைப்பு; இன்று புதுப் படைப்பு. புதுயுகத்தின்
ஆரம்பம். இன்று இயேசு, மெசியா பணிக்கு கடவுளின் ஊழியராக
அருள்பொழிவு செய்யப்படுகிறார். கடவுள் அவருக்கு பரிசுத்த
ஆவியாரின் வல்லமையை அளித்து அருள்பொழிவு செய்தார் (திப
10:38). இந்த ஆவியே அவரை அவரது பணியில் வழிநடத்திச்
செல்வார் (மத் 4:1; லூக் 4:14-18; 10:21). திருமுழுக்கு
வேளையில் இறங்கி வந்த ஆவியார், தண்ணீரைப் புனிதப் படுத்தி,
திருவருட்சாதனத்தின் தொடக்கமாக இருந்தாரெனத்
திருத்தந்தையர் கூறுகின்றார். திருமுழுக்கிலே நானும்
அருள்பொழிவு செய்யப்படுகிறேன்: புதுவாழ்வு தொடங்க
வேண்டும். அது புனித வாழ்வாக வேண்டும்.
கடவுளின் ஆவியானவர் புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதைக்
கண்டார்.