ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

 பொதுக்காலம் 6 ஆம் - ஞாயிறு  

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
இறையேசுவில் இனிய நண்பர்களே,

 பொதுக்காலம் 6ம் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்று அருள்பெற உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வுலகில் மனித வாழ்வு முடிந்தவுடன் நாம் எப்படி இருப்போம்? எங்கு இருப்போம்? என்று குழம்பிய மனிதனுக்கு, "இறந்த பிறகு நமக்கு ஒரு மறுவாழ்வு உண்டு" என்கிற தெளிவைத் தருகின்றார் கடவுள். அதுமட்டுமன்று, கிறிஸ்து மரித்த மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பப்பட்டதுபோல நாமும் இயேசுவின் இரண்டாம் வருகையின்போது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோம், என்கிற உறுதியையும் அளிக்கின்றார்.

இத்தகைய நம்பிக்கையை நம்மில் நிலைநிறுத்தி இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவரோடு நிறைவாழ்வை நோக்கிச் செல்ல வேண்டுமானால் இந்த உலகில் நாம் எப்படி வாழவேண்டும்? என்று விளக்குகிறது இன்றைய நற்செய்தி வாசகம். ஏழையரின் உள்ளத்தை உடையவர்களாக, துயருறும் வேளைகளில் முணுமுணுக்காதவர்களாக, அனைவரோடும் கனிவுடன் பழகுகிறவர்களாக, நீதியை நிலைநாட்டும் வேட்கைக் கொண்டவர்களாக, இரக்கச் செயல்களைச் செய்பவர்களாக, எப்பொழுதும் தூய்மையான உள்ளத்தினை உடையவர்களாக, எங்கும் எல்லோரிடத்திலும் அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்தும் நண்பர்களாக, நீதியை நிலைநாட்டும்பொழுது உண்டாகும் துன்பங்களைச் சகித்துக்கொள்பவர்களாக மாறவேண்டுமென்று கடவுள் நமக்கு எடுத்துரைக்கிறார். இதைத்தான் புனித யோவான் தனது கடிதத்தில் "கண்ணால் காணாத கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கண்ணால் காண்கிற சகோதரனை அன்பு செய்யாதவன் பொய் சொல்லுகிறான்" (1யோவா. 4: 20) என்றார். எனவே ஆண்டவரில் நம்பிக்கையுடையவராய் இவ்வுலக வாழ்வு முடிந்த பிறகும் விண்ணுலகில் ஆண்டவரோடு வாழ்வோம் என்கிற நம்பிக்கையுடையவராய் அதற்கேற்ற தகுதியுள்ள ஒரு பரிசுத்த வாழ்வு வாழவும், இறைநீதியில் பழகினவர்களாய் எல்லோரையும் அன்பு செய்து வாழவும், இறைமகன் இயேசுவின் உண்மையான சாட்சிகளாய் வாழவும் வரம்வேண்டி இத்திருப்பலியில் இணைந்த மன்றாடும்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. எல்லாம் வல்ல அன்பு இறைவா, இறைமகன் இயேசு எங்களுக்கு வழங்கிச் சென்ற "நம்பிக்கையை" எம்மில் வளர்த்தெடுக்கும் பொறுப்பில் உள்ள திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியரை ஆளுகைச் செய்வீராக. இறைநம்பிக்கைத் தளர்ந்துபோய்க் கொண்டிருக்கும் இச்சூழலில் இவர்கள் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு இறைச்செயலிலும் உமது வழிநடத்துதலையும் துணையையும் தந்து, நிலையான நம்பிக்கையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மையாளும் எல்லாம் வல்லவரே, உமது ஆளுகையில் எமக்கும் பங்களித்து இவ்வுலகை ஆளும் அதிகாரத்தை எமக்களித்தவரே, எமது இந்திய திருநாட்டை ஆளும் தலைவர்களையும், தமிழகத்தை ஆளும் தலைவர்களையும் நீர் வழிநடத்துவீராக. எந்த நோக்கத்திற்காக இவர்களுக்கு இப்பதவிகளை நீர் தந்தீரோ, அந்த நோக்கத்தை அவர்கள் தங்களது பணிவாழ்வில் செயல்படுத்தி, நாட்டையும், மக்களையும் வளமான வாழ்விற்கு இட்டுச்செல்லும் பொறுப்புள்ள தலைவர்களாய் மாற்றிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. நீதியின் நாயகனே இறைவா, இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் இறைநீதியின்படி வாழ வேண்டுமென விரும்புகின்றீர். இத்திருப்பலியில் பங்கெடுக்கும் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் உமது நீதிவாழ்வை வெளிப்படுத்தத் தயை செய்யும். உலக அநீதியில் உழன்று விடாமல் சுயநீதியில் எங்களை இழந்துவிடாமல், இறைநீதியைக் கடைப்பிடித்து வாழ்கிறவர்களாய் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்பிக்கையின் நாயகனே இறைவா, மனிதனை நம்பினீர் உமது நம்பிக்கையை அவன் பொய்யாக்கினான். உமது மனுமகனை நம்பினீர் அவரோ உமது நம்பிக்கையை வாழ்ந்துக் காட்டினார். இறைவா எம்மீது நீர்; வைத்துள்ள நம்பிக்கையை வெற்றியடையச்செய்து நிறைவாழ்வில் உம்மோடு ஒன்றித்திருக்க உதவி செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்


 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
பொதுக்காலம் 6ஆம் ஞாயிறு


I. எரேமியா 17:5-8
II. 1 கொரிந்தியர் 15:12,16-20
III. லூக்கா 6:17,20-26

மெல்லிய கோடா??? மீளா கோடா???


இறையேசுவில் மிகவும் பிரியமான அன்பு உள்ளங்களே பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றில் அடியெடுத்து வைத்திருக்கும் நம்மை, இன்றைய வாசகங்கள் அனைத்தும் சிந்தித்து செயல்பட அழைப்பு விடுக்கின்றன. மனிதராய் பிறந்த நாம் அனைவருமே நல்லவர் கெட்டவர் என்ற இரு நிலைகளில் அடங்குவோம். நற்செயல் புரிந்து நன்மைகளை செய்தால் நல்லவர் என்றும் தீய செயல்களில் ஈடுபட்டு தீச்செயல் புரியும் போது கெட்டவர் என்றும் அழைக்கப்படுகின்றோம். இவை இரண்டிற்கும் இடையில் இருப்பது ஒரு கோடே.. அந்த கோட்டினை மெல்லிய கோடாக -மறைந்து போகக்கூடிய கோடாகவும், மீளாக் கோடாக- மறைந்து போகா கோடாகவும் மாற்றுவது நம்மிடமே உள்ளது. இன்றைய வாசகங்களனைத்தும் நமது இத்தகைய நிலையினை நமக்கு தெளிவாக எடுத்துரைத்து, நாம் எந்நிலையில் இருக்கின்றோம் என்பதனை கண்டுணர்ந்து வாழ அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் இரண்டாம் வாசங்களும் சரி பதிலுரைப்பாடல் முதல் நற்செய்தி வாசகம் வரை அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், மனிதரில் நம்பிக்கை வைப்பவர்
நீரோடை அருகில் நடப்பட்டவர், பாலை நில புதர்ச்செடிக்கு ஒப்பானவர்.
நற்பேறு பெற்றோர், நற்பேறு பெறாதோர்.

தூயஆவியால் உருப்பெற்ற கடைசி ஆதாம் இயேசு, களிமண்ணால் உண்டான முதல் ஆதாம். ஆவியின் இயல்பு, மனிதரின் இயல்பு ஏழைகள்,  பணக்காரர், பட்டினியாய் இருப்போர்,
உண்டு கொழித்திருப்போர். அழுது துன்புறுவோர், சிரித்து இன்புறுபவர்.
வெறுத்து ஒதுக்கப்படுவோர், புகழப்படுபவர்.
ஆக இரண்டு விதமான மனிதர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந்த இரண்டில் நாம் யார் என்பதைக் கண்டறிய மூன்று கேள்விகள் உங்கள் நம் முன் வைக்கப்படுகின்றன.

1. தற்போது வெளியான நவீன ரக தொலைதொடர்பு சாதனம் உன்னிடம் இல்லை ... இருப்பினும் நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா???
2. அளவுக்கு அதிகமான பணம் துன்பத்தைத் தரும் என்பதை உணர்கின்றாயா???
3. நீ இப்போது இருக்கும் நிலைக்காக இறைவனுக்கு நாள்தோறும் நன்றி சொல்கின்றாயா???

இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் ஆம் இல்லை என்று தெளிவாக பதில் சொல்லுமிடத்து நாம் யார் என்பது தெளிவாக விளங்கும். எப்போதாவது ஒரு சில நேரங்களில் பல நேரங்களில் என்று பிரித்து பதில் கூறுவோமானால் நாம் இரண்டிற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோட்டினை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மை. இயேசு கூறிய பேறுபெற்றவர்கள் கூட்டத்தில் நாமும் ஒருவராக இருக்க முயல்வோம்.

ஏழைகளைப் போல எளிய மனம் உடையவர்களாக வாழ்ந்து இறையாட்சியை நமதாக்குவோம். இறைத்தாகம் பசி உடையவர்களாக திகழ்ந்து, இறையாசீரால் நிறைவு பெறுவோம். நன்மை செய்ய துணிந்து வெற்றி பெற்று நிறைவு பெறுவோம். எதுவும் நம்மிடம் இல்லை இருப்பினும் எதிலும் குறைவுமில்லை என்ற மனப்பான்மையுடன் வாழ்வோம். நமது குணங்களுக்கிடையேக் காணப்படும் அந்த மெல்லியக் கோட்டினை இறை நம்பிக்கையால் தகர்த்தெறிவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்தாரோடும் இருப்பதாக ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


யார் நல்லவர் ? யார் கெட்டவர்?

அடியவர் ஒருவர் கண்ணனிடம், இந்த உலகில் நல்லவர்கள் உள்ளார்களா ? கெட்டவர்கள் உள்ளார்களா ? என்று கேட்டார். " நான் சொல்வதை விட நாமே பார்த்துத் தெரிந்து கொள்ளலாமே" என்ற கண்ணன் அந்த அடியவரை அழைத்துக் கொண்டு அத்தினாபுரத்திற்குச் சென்றார். அவர்கள் இருவரும் முதலில் தர்மனிடம் சென்றனர். கண்ணன் தர்மனிடம் "எனக்கு கெட்டவன் ஓருவன் தேவை எங்கேயிருந்தாலும் அழைத்து வா" என்றார். நீண்ட நேரம் கழித்து திரும்பிய தர்மன் ," இந்த நாட்டில் எல்லாரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். கெட்டவர்கள் யாருமே இல்லை. கெட்டவர்கள் ஒருவரையும் என்னால் கண்டுபிடிக்க இயல்வில்லை" என்றார். அதன் பிறகு துரியோதனை அழைத்த கண்ணன் "அத்தினாபுரத்தில் உள்ள எல்லாருமே நல்லவர்கள். கெட்டவன் ஒருவனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் தர்மன். நீ சென்று ஒரு நல்லவனை அழைத்து வா" என்றார். நீண்ட நேரத்திற்கு பிறகு திரும்பிய துரியோதனன், " இந்த நகரத்தில் எல்லோரும் தீயவர்களாகவே இருகிறார்கள் நல்லவன் ஒருவனையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. " என்றான். தன்னுடன் வந்த அடியவரிடம் "நீ கேட்ட கேள்விக்கு இப்போது பதில் தெரிந்து விட்டதா?" என்று கேட்டார் கண்ணன்.

"நாம் நல்லவர்களாக தெரிந்தால் இந்த உலகத்தில் உள்ள எல்லாரும் நல்லவர்களாகத் தெரிவார்கள். நாம் கெட்டவர்களாக இருந்தால் எல்லோரும் கெட்டவர்களாகத் தெரிவார்கள். என்பதைப் புரிந்து கொண்டேன் " என்றார் அடியவர்.

இந்த உலகில் நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் இருவேறு நபர்கள் கிடையாது. எனக்கு நல்லவர்கள் என் நண்பனுக்கு கெட்டவர்களாக இருக்கலாம். என் நண்பனுக்கு நல்லவர்கள் எனக்கு கெட்டவர்களாக இருக்கலாம். நல்லவருக்குள் கொஞ்சம் கெட்டவரும், கெட்டவருக்குள் கொஞ்சம் நல்லவரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒவ்வொருவருமே நல்லதும், கெட்டதும் கலந்தவர்கள் தான். நமது குணங்களின் அளவைப் பொறுத்து, அதாவது நம்முள் எந்தக் குணம் மேலோங்கி நிற்கிறதோ, அதன் பொருட்டே நாம் மற்றவர்களின் பார்வையில் நல்லவர், கெட்டவர் என்று கணிக்கப்படுகிறோம்.

பொதுக்காலத்தின் ஆறாம் வாரத்தில் இருக்கும் நமக்கு, யார் பேறுபெற்றவர்கள்? யார் கேடுற்றவர்கள்? என்று எடுத்துரைக்கின்றார் இயேசு. மத்தேயு நற்செய்தியில் வரும் மலைப்பொழிவில், எட்டு பேறுபெற்றவர்களை மக்கள் கூட்டத்திற்க்கு எடுத்துரைக்கின்றார். அதே இறைமகன் இயேசு லூக்கா நற்செய்தில் வரும் சமவெளிப்பொழிவில் நான்கு பேறுபெற்றவர்களையும், நான்கு கேடுற்றவர்களையும் தம் சீடர்களைப் பார்த்து எடுத்துரைக்கின்றார்.
1.ஏழை / பணக்காரர் ,
2. பட்டினிகிடப்பவர் / உண்டு கொழுத்திருப்பவர்,
3. அழுபவர் / சிரிப்பவர் ,
4. வெறுக்கப்படுவர் / புகழப்படுபவர் யார் பேறுபெற்றவர்கள் ? யார் கேடுற்றவர்கள் ? இவற்றில் நாம் யார் என்று பார்போம்.

ஏழைகள் / பணக்கார்கள் :

ஏழைகள் பேறுபெற்றவர்கள் என்றும், பணக்காரர்கள் கேடுற்றவர்கள் என்றும் கூறுகின்றார் இயேசு. யார் இந்த ஏழைகள் ? தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்கள், மற்றவர்களின் தயவை எதிர்பார்ப்பவர்கள், அதிக வருமானத்தையும் , வசதியையும் பெறாதவர்கள் இவர்களை நாம் ஏழைகள் என்கிறோம். இதற்கு நேர்மாறாக அத்தனை வசதிகளையும் பெற்று, சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களை நாம் பணக்காரர்கள் என்கிறோம். மறுப்பதற்கில்லை. மாறாக பதவி, பட்டம் , செல்வம், அழகு ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காமல், யாரெல்லாம் இறைவனை மட்டுமே மையமாகக் கொண்டு வாழ்கிறார்களோ, உள்ளத்தில் எளிமையாய், தூய்மையாய் இருக்கிறார்களோ அவர்களே பேறுபெற்றவர்கள். அவர்கள் நல்லவர்கள். இறைவனை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் பணக்காரராகவும் இருக்கலாம். ஒருவர் பணக்காரராக இருப்பதால ஏழையரின் உள்ளத்தை கொண்டிருக்க முடியாது என்றில்லை, அதேபோல ஒருவர் ஏழையாக இருப்பாதால், எளிய உள்ளத்தை கொண்டிருக்கிறார் என்றும் இல்லை. நம்முடைய எளிய உள்ளத்தையும், நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களையும் வைத்தே நாம் நல்லவர்கள், கெட்டவர்கள் / பேறுபெற்றவர்கள், கேடுற்றவர்கள் என்று கணிக்கிக்கப்படுகிறோம்.

பட்டினிகிடப்போர் / உண்டு கொழுத்திருப்போர்:


இயேசு வயிற்றுப் பசியை மட்டும் கூறவில்லை, மாறாக ஆன்மீக பசி கொண்டிருப்பவர்களைபேறுபெற்றவர் என்று எடுத்துரைக்கிறார். ஆன்மீக காரியங்களில் முழு ஈடுபாடு கொண்டும், ஆன்மீகச் சிந்தனைளை உள்வாங்கியும், இறைவன் மீது பசித் தாகம் கொண்டிருப்பவர்களையே பேறுபெற்றவர்கள் என்றும் கூறுகின்றார். இதற்கு மாறாக இறைவனை விட்டு தூர விலகி, நான் எல்லாம் அறிந்தவன் என்ற ஆணவச் செருக்கும், இறைத்தாகம் இல்லாமல் இருப்பவர்களை கெட்டவர்கள் என்றும் கேடுற்றவர்கள் என்றும் எடுத்துரைக்கின்றார் இயேசு.

அழுபவர் / சிரிப்பவர்:

மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கலாம், மன அழுத்தம் தரும் விஷயத்திற்காக கண்ணீர் சிந்தி தாக்கத்தைக் குறைக்கலாம்.என்பது ஏதோ புத்தகத்தில் படித்தவரிகள். இங்கே இயேசு கூறுவது தன்னுடைய பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி அழுது, தன் மனதை தூய்மையாய் வைத்திருப்பவர்களை பேறுபெற்றவர் என்றும், அநீதியினால் ஒருவர் துன்புருத்தப்படும் போது , அவர் வடிக்கும் கண்ணீர் பேறுபெற்றது என்றும் கூறுகின்றார். மற்றவர்களை காயப்படுத்தி சிரிப்பவர்களையும் தான் செய்த பாவத்திற்கு கண்ணீர் சிந்தி வருந்தாதவர்களையும் கேடுற்றவர்கள் என்கிறார்.

ஆக நாம் ஒவ்வொருவருமே சில நேரங்களில் நல்லவர்களாகவும், சிலநேரங்களில் கெட்டவர்களாகவும் இருக்கிறோம், இயேசு சொன்ன இவற்றில் நாம் எவற்றைக் கூட்டவேண்டும், எவற்றை கழிக்க வேண்டும், எவற்றை வேறருக்க வேண்டும் எனபதை கண்டறிந்து, இயேசு கூறிய அந்த பேறுபேற்றவர் கூட்டத்தில் நாமும் ஒருவராகிட இறையருள் வேண்டுவோம். ஆண்டவரின் அருளும், ஆசீரும் என்றும் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவதாக ஆமென்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.


நங்கூரப் புள்ளிகள்

என்.எல்.பி என்று சொல்லப்படும் நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராமிங் என்னும் உளவியல் பகுப்பாய்வில் பேசப்படும் சில கருத்துருக்களில் ஒன்று, 'நங்கூரமிடுவது' ('ஆங்க்கரிங்'). அதாவது, எதிர்மறையான நிகழ்வு ஒன்றை நான் எதிர்கொள்ள வேண்டும் என வைத்துக்கொள்வோம். பத்தாயிரம் பேர் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் நான் பேச வேண்டும். எனக்குக் கூட்டத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது. என் பயத்தைப் போக்க நான் என்ன செய்ய வேண்டும்? நான் இதற்கு முன் பயமில்லாமல் பேசிய ஒரு நிகழ்வை என் மனத்தில் ஓடவிட்டு, அந்த எண்ண ஓட்டங்களை ஒரு மோதிரம், பேனா, சட்டை என ஏதாவது ஒன்றோடு இணைத்துவிட வேண்டும். இப்போது இக்கூட்டத்தின் முன் பேசுவதற்குமுன் நான் அந்த மோதிரத்தை அணிந்தாலோ, அந்தப் பேனாவைச் சட்டையில் வைத்திருந்தாலோ, அல்லது அந்தச் சட்டையை அணிந்தாலோ என் மனம் நேர்முகமான உணர்வுகளில் இருந்து ஆற்றல் பெற்று பயம் என்னும் எதிர்மறை உணர்வை அழித்துவிடும். இப்படியாக நேர்முகமான உணர்வின்மேல் உள்ளத்தைப் பதிய வைப்பதுததான் நங்கூரமிடுவது.

'நங்கூரம்' - இது ஒரு கப்பல் அல்லது கடல்தொழில் சொல்லாடல். நகர்கின்ற கப்பலை அல்லது பெரிய படகை நிலைநிறுத்தப் பயன்படுவது நங்கூரம். நங்கூரமிட்ட கப்பலை பெரும் புயலும் நகர்த்த முடியாது. எல்லா இடத்திலும் நங்கூரம் இறக்கிவிட முடியாது. சகதி அல்லது சேறு, பாறை அல்லது கடல் மலைப்பாங்கான பகுதிகளில் நங்கூரம் பதியாது. ஆக, சரியான நங்கூரப் புள்ளிகளைக் கண்டுபிடித்தால்தான் நம் கப்பலை நிலைநிறுத்த முடியும்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்முடைய நங்கூரப் புள்ளிகள் எவை என ஆராய்ந்து பார்க்க அழைக்கின்றன.


நங்கூரப் புள்ளிகள்தாம் நம் வாழ்வின் நிகழ்வுகளை நகர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பழம் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட் செல்கிறோம். அங்கே நாம் வாங்க வேண்டிய பழங்களை கடைக்கு வெளியே வைத்திராமல் கடைக்கு உள்ளே தூரத்தில் வைக்கிறார்கள். ஏன்? பழங்களை வாங்கச் செல்லும் நம்முடைய கண்கள் வழியில் இருக்கும் அனைத்துப் பொருள்களின் மேல் படவும், அப்படிப் படுவதால் நாம் அவற்றால் ஈர்க்கப்பெறவும்தான். ஒருவேளை நான் ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டே சென்றால், அல்லது இவற்றை வாங்க முற்பட்டால், இவையும் தேவை என உணர்ந்தால் இறுதியில் பழங்கள் என்னும் அவசியத்தை விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. ஆக, கடைக்காரர் எனக்கு வைத்திருக்கும் நங்கூரப் புள்ளிகளிலிருந்து தப்பி, என் வாங்குதலின் இலக்கு என்னும் பழங்கள் என்னும் நங்கூரப் புள்ளிகள் நோக்கி நான் நகர்ந்தால்தான் நான் பழங்களை வாங்க முடியும். ஆக, என் நம்பிக்கையை, என் நங்கூரத்தை இன்று நான் எதன்மேல் வைக்கிறேனோ அப்போதுதான் நான் வளர முடியும்.

மைக்கேல் ஜாக்சன் அவர்கள் மிகப்பெரிய பாடகரும் டான்சரும்தான். அதற்காக அவர் தினமும் தன் காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருக்க வேண்டுமா? அண்மையில் 'இளையராஜா 75' கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சிக்காக இளையராஜான டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தாரா? இல்லை! அதை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள். மைக்கேல் ஜாக்சன், இளையராஜா இவர்களின் நங்கூரப் புள்ளிகள் இசையும் அதற்கேற்ற பயிற்சியும். அவர்கள் அதில் மனத்தைப் பதிய வைக்க வேண்டுமே தவிர, மேடை அமைப்பது, பந்தல் போடுவது, நாற்காலி அடுக்குவது போன்றவற்றில் தங்கள் மனத்தைப் பதிய வைக்கக்கூடாது. ஆக, சாதாரண வாழ்க்கை நிகழ்வுகள் தொடங்கி நம் உளப்பாங்கு புதுப்பித்தல் வரை நங்கூரப்புள்ளிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில்
(காண். எரே 17:5-8) எரேமியா, 'மனிதர்மேல் நம்பிக்கை,' 'ஆண்டவர்மேல் நம்பிக்கை' என நம்பிக்கையை இரண்டாகப் பிரித்து, மனிதர்மேல் நம்பிக்கை வைப்போர் அடையும் துன்பத்தையும் அழிவையும், ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைப்போர் பெறுகின்ற மகிழ்ச்சியையும் வாழ்வையும் உருவகமாகப் பதிவு செய்கின்றார். எரேமியாவின் இந்த இறைவாக்கு நிகழ்வு யூதா அரசன் யோயாக்கினின் காலத்தில் (காண். 2 அர 23:36-37) நடக்கிறது. பாபிலோனியர்கள் யூதா நாட்டின்மேல் படையெடுத்து வந்தபோது, யோயாக்கின் பாபிலோனியாவுக்கு உடனடியாக சரணடைந்து தன் நாட்டை அழிவிலிருந்து தற்காலிகமாகக் காப்பாற்றுகிறார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து, தனக்கு அருகில் இருந்த எகிப்து நாட்டோடு கரம் கோர்க்கின்ற யோயாக்கின் பாபிலோனியாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கிறார். ஆனால், பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் மிக வேகமாக எழுந்து இக்கிளர்ச்சியை அடக்கி, கிமு 597ஆம் ஆண்டு யூதாவை முற்றுகைக்கு உட்படுத்துகிறார். உடனடியாக எகிப்தியர்கள் தாங்கள் கொடுத்த இராணுவ பலத்தை விலக்கிக்கொண்டு பின்வாங்குகிறார்கள். யோயாக்கின் கொல்லப்படுகிறார். எருசலேம் கைப்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வைத்தான் எரேமியா இன்றைய இறைவாக்கில் குறிப்பிடுகின்றார்: 'மனிதரில் (எகிப்தியரில்) நம்பிக்கை வைப்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்), வலுவற்ற மனிதரில் (எகிப்தியர்) தம் வலிமையைக் காண்போர் (யோயாக்கினும் அவருடைய அரச அலுவலர்களும்) சபிக்கப்படுவர்.' யோயாக்கின் எருசலேமை அழிவிலிருந்து காப்பாற்ற தன் நங்கூரத்தை மனிதர்கள்மேல் பதித்தார். 'ஆண்டவரின் மேல் பதிக்கத் தவறிவிட்டார்.' மனிதர்கள்மேல் வைக்கின்ற நம்பிக்கை உடனடித் தீர்வைத் தரலாம். ஆனால், நிரந்தர தீர்வு ஆண்டவரிடமே உள்ளது. இப்படியாக, அரசர்களுக்கும், அரச அலுவலர்களுக்கும் இறைவாக்குரைக்கின்ற எரேமியா, தொடர்ந்து, அவர்கள் தங்கள் சக மனிதர்கள்மேலும், தங்கள் சிலைவழிபாட்டின்மேலும் நம்பிக்கை வைக்கின்ற நிலையைச் சாடுகின்றார். ஆண்டவரின்மேல் வைக்கும் நம்பிக்கை உடனடியாக பலன் தராததுபோலத் தோன்றினாலும் அது நீண்ட காலப் பலனை நிச்சயம் தரும். ஏனெனில், மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை 'பாலைவனப் புதர்ச்செடி போன்றது.' பாலைவனத்தில் செடிகள் வேகமாக முளைக்கும். ஆனால், நிலத்தில் நீர் இல்லாததாலும், வெயிலின் கொடுமையாலும் மிக வேகமாகக் காய்ந்துபோய்விடும். புதர்கள் பார்ப்பதற்கு நிறைய இருப்பதுபோலத் தெரிந்தாலும் அவை தன்னிலே வலுவற்றது. அதுபோலவே, மனிதர்களும். எண்ணிக்கையில் நிறைய என்றிருந்தாலும் அவர்கள் தங்களிலேயே வலுவற்றவர்கள். ஆனால், நீர் அருகில் நடப்பட்ட மரம் முளைக்க நாள்கள் ஆகலாம். ஏன் மாதங்கள் ஆகலாம். ஆனால், அந்த மறைவான நாட்களில் அவ்விதையானது நீரோடை நோக்கி கீழாக வளர்கிறது. பின் வேகமாக மேலே வளர ஆரம்பிக்கும். அதன் நங்கூரம் தண்ணீரில் பதிந்திருப்பதால் வெப்பமிகு காலத்திலும் அதற்கு அச்சமில்லை. அது எப்போதும் கனி கொடுக்கும்.

ஆக, எகிப்தியர் என்னும் வலுவற்ற மனிதர்கள்மேல் நங்கூரத்தைப் பதிய வைக்காமல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நங்கூரப் புள்ளியாக்க வேண்டுமென்று இறைவாக்குரைக்கின்றார் எரேமியா.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 15:12,16-20) இறந்தோர் உயிர்ப்பு பற்றிய பவுலின் விளக்கவுரையாகத் தொடர்கிறது. கொரிந்த நகர நம்பிக்கையாளர்கள் இறந்தோர் உயிர்ப்பை மறுத்தனர். ஏனெனில், அவர்கள் நடுவில் நிலவிய கிரேக்க தத்துவச் சிந்தனை அதற்கு இடையூறாக இருந்தது. தத்துவச் சிந்தனையைப் பொறுத்தவரையில் மனித ஆன்மா என்பது மனித உடலில் சிறைப்பட்டிருக்கிறது. உடல் தனக்கென்று ஆசைகளையும், உணர்வுகளையும் வைத்திருப்பதால் அது அழிவுக்குரியதாகவும், தாழ்வானதாகவும், வலுவற்றதாகவும் கருதப்பட்டது. ஆக, ஆன்மா உடலிலிருந்து பெரும் விடுதலைக்காகவே காத்திருக்கிறது. இப்படி இருக்க, இறந்தோர் உயிர்ப்பில் மீண்டும் ஆன்மா உடலுக்குள் வரும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'உடல் இல்லாத வாழ்வையே' அவர்கள் விரும்பினர். இந்தப் பின்புலத்தில் பவுல் மிகவும் பொறுமையோடும், சிந்தனைத் தெளிவோடும் அவர்களுக்குப் புரிய வைக்கிறார். உயிர்க்கும்போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்துகொள்கிறது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்றும் விள்குகின்றார். ஆக, அழிந்துபோகும் இவ்வுலக உடலில் தங்கள் நம்பிக்கையைப் பதிய வைக்காமல், அழியாமல் உயிர்க்கும் அந்த உடலின்மேல் நம்பிக்கையைப் பதிய வைக்க அவர்களை அழைக்கின்றார் புனித பவுல்.

ஆக, அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல் கிறிஸ்துவின் உயிர்ப்பு அவருக்குத் தந்த அழியாத உடலின்மேல் - நாம் பெறப்போகும் அந்த உடலின் மேல் - நம்பிக்கையைப் பதிய வைக்க அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்
(காண். லூக் 6:17,20-26) இயேசுவின் சமவெளிப்பொழிவை வாசிக்கின்றோம். இயேசுவின் மலைப்பொழிவில் (காண். மத் 5:3-10) 'எட்டுப் பேறுகளை' பதிவு செய்கின்றார் மத்தேயு. ஆனால், இயேசுவைச் சமவெளியில் நிற்கச் செய்யும் லூக்கா, அவரின் போதனைகளை, 'நான்கு பேறுகள்,' 'நான்கு சாபங்கள்' என வடிவமைக்கின்றார். இரக்கமே உருவான இயேசு, பகைவரையும் அன்பு செய்யச் சொல்லும் இயேசு மற்றவர்களைச் சபிக்கலாமா? செல்வமும், உணவும், சிரிப்பும், புகழ்ச்சியும் கொண்டிருப்பது தவறா? இவற்றை அல்லது இவற்றைப் பெற்றிருப்பவர்களை இயேசு ஏன் கடிந்து கொள்ள வேண்டும்? என்னும் கேள்விகள் நம்மில் எழலாம். இயேசு. 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' ஆகியவற்றைச் சபித்து, 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' ஆகியவற்றை மட்டுமே நாம் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தவில்லை. மாறாக, 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' போன்ற நான்கு வாழ்வியல் எதார்த்தங்களில் நம் மனம் நம்மேலும், நம் சக மனிதர்கள்மேலும், அவர்களின் அங்கீகாரத்தின் மேலும் தங்கி, நம் நம்பிக்கையைப் பதித்துவிடும் என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்ற வாழ்வியல் எதார்த்தங்களில்தாம் நம் மனம் இயல்பாக ஆண்டவரை நோக்கி எழும்பும் எனவும் சொல்லி, முன்னதை விடுத்துப், பின்னதைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றார்.

ஆக, மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதை விடுத்து ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கான அழைப்பாகவே இருக்கிறது இயேசுவின் சமவெளிப்பொழிவு.

இவ்வாறாக, மனிதர்மேல் வைக்கும் நம்பிக்கை சிறிது காலமே பலன்தர, ஆண்டவர்மேல் வைக்கும் நம்பிக்கை நீண்ட நாள்கள் கனிதர நமக்கு வலுவூட்டும் என்று எரேமியாவும், அழியும் உடல்மேல் வைக்கும் நம்பிக்கையை விட கிறிஸ்துவின் அழியாத உடலின்மேல் வைக்கும் நம்பிக்கையை நமக்கு உயிர்ப்பைத் தரும் என்று பவுலும், 'செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி' என்பவை மனிதர்மேல் நம்பிக்கை வைப்பதன் கனிகளாக இருந்தாலும் அவற்றால் நீடிய பயன் இல்லை என்றும், 'ஏழ்மை, பசி, அழுகை, புறக்கணிப்பு' போன்றவை ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவருக்கு இறைவன் செயலாற்றும் தளங்களாக மாறும் என்று இயேசுவும் நமக்குச் சொல்கின்றனர். இவர்கள் மூவரின் வார்த்தைகளும் ஒன்றுதான்: 'மனிதர் என்னும் நங்கூரப் புள்ளி வலுவற்றது.கடவுள் என்னும் நங்கூரப் புள்ளி வலுவானது. வலுவற்றதை விடுத்து வலுவானதை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.'

மனிதர் என்னும் நங்கூரப் புள்ளியை விட்டு, கடவுள் என்னும் நங்கூரப் புள்ளியை எப்படிப் பற்றிக்கொள்வது? மூன்று நிலைகளில் இது சாத்தியமாகும்.

1. வாழ்க்கையைப் பற்றிய பார்வையை அகலமாக விரிப்பது
தன் கப்பலையும் தன் இருப்பையும் மட்டும் பார்க்கின்ற மாலுமி நங்கூரத்தைத் தனக்குக் கீழ் இருக்கும் சேறு அல்லது பாறையின் மேல் இடுவார். ஆனால், கடல் மொத்தத்தையும் பார்க்கின்ற மாலுமி தன் கப்பலை நகர்த்திச் சென்று சேறு அல்லது பாறை இல்லாத இடத்தில் போடுவார். குறுகிய பார்வை கொண்டிருப்பதால் நம் வேலை எளிதாக முடிவதாக நினைக்கலாம். ஆனால், எளிதாக வருவது எல்லாம் இனிமையாக நீடித்து இருப்பதில்லை. யோயாக்கின் அரசன் தன் நாட்டின் உடனடி பாதுகாப்பைத்தான் பார்த்தாரே தவிர, ஒட்டுமொத்த அரசியல் சூழ்ச்சியை அல்லது ஆண்டவரின் உடனிருப்பை விரித்துப் பார்க்கவில்லை. கொரிந்தியர்கள் தாங்கள் பெற்றிருக்கும் இந்த உடலைப் பார்த்தார்களே தவிர, இதற்கு மேலும் அல்லது இதைவிடவும் அழியாத உடல் இருக்கிறது என்பதைப் பார்க்கவில்லை. செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி கொண்டிருப்போரும் தங்களின் இப்போதைய இருப்பில் மகிழ்ந்தார்களே அன்றி, வாழ்வின் மறுபக்கத்தை அவர்கள் நீட்டிப்பார்க்கத் தவறிவிட்டனர். ஆக, யார் ஒருவர் இருப்பதிலிருந்து இல்லாதது வரை அகலமாகத் தன் கண்களை விரிக்கிறாரோ அவர்தான் தன் நங்கூரப் புள்ளியைச் சரியான இடத்தில் போட முடியும். எடுத்துக்காட்டாக, வால்ட் டிஸ்னி. தன் அறைக்குள் நுழைந்த எலிகளைக் கேலிச்சித்திரமாக வரைவதோடு நின்றிருந்தால் அவர் ஒரு கார்ட்டூன் வரைபவராகவே இருந்திருப்பார். ஆனால், 'மிக்கி மவுஸ்' என்ற ஒன்றை எடுத்து குழந்தைகள் பொழுதுபோக்கு என்று மாற்றியதால்தான் அவரால் டிஸ்னி உலகம் பற்றி யோசிக்க முடிந்தது. இயேசு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் உருவில் பெரிய திருச்சபைத் தலைவர்களைப் பார்த்தார். ஆக, வாழ்வைப் பெரிதாக, முழுமையாக விரித்துப்பார்க்கும்போது நம் நங்கூரப் புள்ளியை நிலையானவற்றில் நாம் பதிக்க முடியும்.

2. உடனடி இன்பங்கள் தவிர்ப்பது
யோயாக்கின், கொரிந்து நகர மக்கள், மற்றும் செல்வர், உணவருந்தி இன்புற்றிருப்போர், சிரிப்போர், புகழ்ச்சியை இரசிப்போர் ஆகிய அனைவரும் உடனடியாகக் கிடைக்கும் முடிவுகள் பற்றியே கருத்தாய் இருந்தனர். இன்றைய உலகம் நமக்கு நிறைய உடனடி நங்கூரப் புள்ளிகளைத் தருகிறது. சமூக தொடர்பு செயலிகளும், விளம்பரங்களும் நம்மை அவை நோக்கி இழுக்கின்றன: களிப்பு, பொழுதுபோக்கு, அழகு, பணம், அறிமுகம், வெற்றி, வேலை என நிறைய நங்கூரப் புள்ளிகள் நம்மை அழைக்கின்றன. இவை எல்லாம் இன்பம் தருபவையே. ஆனால், எவ்வளவு வேகமாக இவை இன்பத்தைத் தருகின்றனவோ, அவ்வளவிற்கு வேகமாக இன்பத்தை இழக்கவும் செய்கின்றன. மேலும், இவை ஒருவரைத் தன்மையம் கொண்டவராக மாற்றிவிடுகின்றன.

3. கவனச் சிதறல்கள் குறைப்பது
'இரு மானைத் துரத்துபவர் ஒரு மானையும் பிடியார்' என்பதுபோல, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நங்கூரம் போட நினைப்பவர் ஓரிடத்திலும் போட மாட்டார். ஆக, எது சரியானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, தெரிவு செய்ததில் முழுமையாக ஆற்றலைச் செலுத்தும் மனப்பக்குவமும், மனவுறுதியும் பெற வேண்டும். 'அது நன்றாக இருக்குமே, இது நன்றாக இருக்குமே' என்று வண்ணத்துப் பூச்சி போல பறந்துகொண்டிருந்தாலும், 'அவரைப் போல நான் இருப்பேன். இவரைப் போல நான் செய்வேன்' என்று ஒப்பீடுகள் செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நிலையானதில் நங்கூரம் பதிக்க முடியாது. யோயாக்கினுக்கு எகிப்து ஒரு கவனச் சிதறலாகவும், கொரிந்தியருக்கு தங்களின் கிரேக்க தத்துவ சிந்தனை ஒரு கவனச் சிதறலாகவும், இயேசுவின் சமகாலத்து எதிராளிகளுக்கு தங்களின் செல்வம், உணவு, சிரிப்பு, புகழ்ச்சி ஆகியவை கவனச் சிதறல்களாகவும் இருந்தன. இன்று என்னுடைய கவனச் சிதறல் எது?

இறுதியாக, கொஞ்சம் நிமிர்ந்து, கண்களையும் இதயத்தையும் திறந்து வைத்து அகலமாகப் பார்த்தால், பார்வை தெளிவாகும். என் நங்கூரப் புள்ளியை - அதாவது, நம்பிக்கை மையத்தை - சரியாகத் தெரிவு செய்து, அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்து, பொறுமையாகக் காத்திருந்தால் நானும் நிலைத்துக் கனிகொடுப்பேன்.
இதுவே, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 1) திருப்பாடல் ஆசிரியரின் இறைவேண்டலாக, ஏக்கமாக, எதிர்நோக்காக இருக்கிறது: 'ஆண்டவரின் திருச்சட்டத்தில் நங்கூரம் பதிப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருப்பார். பருவகாலத்தில் கனிதருவார். தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார்!'
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்!


இறைநம்பிக்கை புதிய ஆற்றலைத் தரும்:

அது ஒரு நகர்ப்புறப் பங்கு. அந்தப் பங்கில் பங்குப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருள்பணியாளர், ஒருநாள் தன்னுடைய பங்கில் இருந்த இல்லங்களைச் சந்திக்கச் சென்றார். ஓர் இல்லத்தில் இளம்பெண் ஒருத்தி சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்ற அருள்பணியாளர் அவளிடம், "உனக்கு என்ன ஆயிற்று, நீ ஏன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கின்றாய்?" என்று கேட்டதற்கு அவள், "இளம்பிள்ளை வாதத்தால் என்னுடைய கால்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கின்றேன்" என்றாள்.

"இளம்பிள்ளை வாதத்தால் உன் கால்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா, அப்படியானால் உன்னுடைய வாழ்க்கையே முடங்கிப் போயிருக்குமே! எப்படி நீ இந்தக் கால்களைக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறாய்?" என்று அருள்பணியாளர் அவளிடம் அனுதாபத்தோடு கேட்டார். "சுவாமி! நீங்கள் கேட்ட இந்தக் கேள்வியைத்தான் என்னுடைய தோழிகளும் எனக்குக் அறிமுகமானவர்களும் என்னிடம் கேட்கின்றார்கள். அவர்களுக்கு நான் அளித்த பதிலையே உங்களுக்கும் அளிக்கின்றேன். "இளம்பிள்ளை வாதத்தால் என்னுடைய கால்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனவே தவிர, என்னுடைய இதயம் அல்ல! மேலும், எனக்கு ஆண்டவரில் மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்ட இந்த இழப்பினைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கான ஆற்றலைத் தந்தது மட்டுமல்லாமல், அதை வெற்றிகொள்வதற்கான ஆற்றலையும் தந்திருக்கின்றது" என்று கண்களில் ஒளிமின்ன மறுமொழி பகர்ந்தாள் அந்த இளம்பெண்.

ஆம், ஒருவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழும்போது, அவரால் எவ்வளவு பெரிய இழப்பையும் துணிவுடன் எதிர்கொண்டு, வெற்றிகொள்ள முடியும். பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

இறைநம்பிக்கை இல்லா வாழ்க்க
ை:

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களிடம் பணம் இருக்கின்றது; செல்வாக்கு இருக்கின்றது; அதிகாரம் இருக்கின்றது. அதனால் கடவுளே எங்களுக்குத் தேவையில்லை என்ற இறுமாப்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகையோரைப் பார்த்துக் கடவுள் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான், "நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கின்றாய்" (திவெ 3:17) என்பதாகும். உண்மையில், கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல், தன்மீதும் தன்னிடம் உள்ள பணத்தின்மீதும் நம்பிக்கை வைத்து வாழும் ஒவ்வொருவருமே இழிந்த நிலையில்தான் இருக்கின்றார்கள்.

நற்செய்தியில் இயேசு, செல்வர்கள், உண்டு கொழுத்திருப்போர், இன்புற்றிருப்போர் யாவருக்கும் ஐயோ கேடு என்று கூறுகின்றார். இயேசு ஏன் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழலாம். இவர்களெல்லாம் தங்களிடம் உள்ள பணம், பொருள் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள். புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவது போன்று, செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவர் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள். பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் (1திமொ 6:9,10). அதனால்தான், இயேசு மேலே இடம்பெறும் யாவருக்கும் ஐயோ கேடு என்கிறார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து இன்றைய முதல் வாசகம் இன்னும் ஒருபடி மேலே சென்று, இறைநம்பிக்கை இல்லாமல் வாழ்வோர் பாலைநிலத்துப் புதர்ச்செடிக்கு ஒப்பாவர்; அவர்கள் பருவ காலத்திலும் பயனடையார் என்கிறது. ஆகையால், இறைநம்பிக்கை இல்லாத வாழ்க்கை எவ்வளவு இழிவானது, இரங்கத்தக்கது என்பதை உணர்ந்து, அத்தகைய வாழ்க்கை வாழாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இறை நம்பிக்கையுள்ள வாழ்க்கை:


"ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றலைப் பெறுவர். கழுகுபோல் இறக்கை விரித்து உயரே செல்வர்" இது இறைவாக்கினர் எசாயா நூலில் இடம் பெறும் வார்த்தைகள் (எசா 40:31) இவ்வார்த்தைகள் ஒருவர் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதால் எத்தகைய ஆசிகளைப் பெறுகின்றார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

நற்செய்தியில் இயேசு ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுகொண்டிருப்போர், தன் பொருட்டு இகழ்ந்து தள்ளப்படுவோர் யாவரும் பேறுபெற்றோர் என்கிறார். இயேசு இவர்களையெல்லாம் பேறுபெற்றோர் எனக் குறிப்பிடக் காரணம், இவர்கள் அனைவரும் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழக்கூடியவர்கள் என்பதால்தான். அதனால் அவர்கள் பேறுபெற்றோர் என அழைக்கப்படுகின்றார் இயேசு. இதை விடவும் இயேசுவுக்கு ஏழைகள்மீது எப்போதும் தனியன்பு உண்டு. அவர்கள் இறைவனிடம் பேரிரக்கத்தை நாடி நிற்பதால், அவர்கள் பேறுபெற்றோர் என்கிறார் இயேசு.

முதல் வாசகம், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர் நீரோடையோரம் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவர் என்கிறது. இவ்வார்த்தைகள் திருப்பாடல் ஒன்றை நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆதலால், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு உகந்தவற்றை நாடி, பேறுபெற்றோர் கூட்டத்தில் இடம்பெறுவது நல்லது.

கிறிஸ்துவின் உயிர்ப்பை நம்புவோர் மீட்படைவர்:

இறை நம்பிக்கையுடையோரின் வாழ்க்கை எவ்வளவு ஆசிபெற்றதாக இருக்கும், இறை நம்பிக்கையில்லாதோரின் வாழ்க்கை எவ்வளவு இரங்கத்தக்கதாக இருக்கும் என்று இன்றைய இறைவார்த்தை கூறுகின்ற அதேநேரத்தில், இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோர், இயேசு இறந்து உயிர்ந்தெழுந்தார் என்பதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது.
மறையுரைச் சிந்தனை: அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்டை
 
 யார் பேறுபெற்றோர்!


நிகழ்வு
1835 ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் இருந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. மூதாட்டி ஒருத்தி ஒரு கடையிலிருந்து ரொட்டியைத் திருடிவிட்டாள் என்பதுதான் அந்த வழக்கு.

வழக்கை விசாரித்த நீதிபதி, மூதாட்டி ரொட்டியைத் திருடியது உண்மைதான் என்பதை உறுதி செய்தார். பின்னர் அவர் அந்த மூதாட்டியிடம், " நீங்கள் எதற்காக கடையிலிருந்து ரொட்டியைத் திருடினீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாமா?" என்று கேட்டார். முதாட்டியோ மிகவும் உடைந்த குரலில், " ஐயா! நான் ஓர் ஏழை, கணவனை இழந்தவள். எனக்கொரு மகள் இருக்கிறாள், அவளும் படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். அவளுக்கு இரண்டு பிள்ளைகள். அவளுடைய கணவன்கூட இப்போது அவளோடு இல்லை. இப்படிப்பட்ட சூழலில், என்னுடைய பிள்ளைக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் உணவு கொடுக்க என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் வேறு வழியில்லாமல் கடையிலிருந்து ரொட்டி திருடலாம் என முடிவுசெய்து, இப்படியோர் செயலில் ஈடுபட்டேன்" என்றார்.

அந்த மூதாட்டி சொன்னதைக் கொண்டிருந்த நீதிபதி உட்பட, நீதிமன்றத்தில் இருந்த எல்லாரும் கணத்த இதயத்தோடு அமைதியாயினர். அப்போது நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்துச் சொன்னார், " அம்மா! சட்டத்திற்கு முன்பு எல்லாரும் சமம்... ஆதலால், நீங்கள் செய்த திருட்டுக் குற்றத்திற்குத் தண்டனையாக பத்து டாலர் அபராதம் கட்டவேண்டும், இல்லையென்றால், பத்து நாள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டார். " ஐயா! பத்து டாலர் என்னிடத்தில் இருந்தால், நான் ஏன் திருடப்போறேன்... மேலும் ரொட்டி திருடிய குற்றத்திற்காக நான் சிறைக்குச் சென்றால், என்னை நம்பி இருக்கக்கூடிய என் மகள் மற்றும் அவளுடைய பிள்ளைகள் சாப்பாட்டிற்கு எங்கு செல்வார்கள்... அதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது" என்று கண்ணீர் மல்கச் சொல்லிமுடித்தார் அந்த மூதாட்டி.

ஒருசில நிமிடங்களுக்கு நீதிமன்றத்தில் பேரமைதி நிலவியது. பின்னர் நீதிபதி அந்த மூதாட்டியைப் பார்த்து, " அம்மா! நீங்கள் கட்டவேண்டிய பத்து டாலர் அபராதத் தொகையை நான் கட்டிவிடுகிறேன்" என்றார். பிறகு அங்கிருந்த மக்களைப் பார்த்து அவர், " இந்த மூதாட்டி ரொட்டி திருடுகின்ற நிலைமைக்கு வந்துவிட்டாரே... இதற்கு நாம்தான் காரணம். ஆகவே, இதற்குத் தண்டனையாக ஆளுக்கொரு டாலர் இவருக்குக் கொடுத்துவிட்டுப் போங்கள்" என்று சொல்லி தீர்ப்பை முடித்தார்.

இந்த உலகத்தில் பிறந்த யாரும் தனித்து வாழமுடியாது, ஒருவர் மற்றவரைச் சார்ந்துதான் வாழவேண்டும். அப்படியிருக்கின்றபோது, பலர் பட்டினியாகக் கிடைக்கின்றபோது, ஒருசிலர் மட்டும் உண்டு கொழுத்து வாழ்வதை சுயல்நலம், அநீதி என்று சொல்லாமல், வேறு என்ன சொல்ல முடியும்?.

பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், சுயநலவாதிகளாக இல்லாமல், பிறர்நலவாதிகளாக இருக்கவும் இவ்வுலகு சார்ந்த காரியங்களில் மட்டும் பற்றுக் கொள்ளாமல், மறுவுலகு சார்ந்த காரியங்களில் பற்றுகொள்ளவும் அதன்மூலம் பேறுபெற்றவர்களாக வாழ அழைப்புத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

மலைப்பொழிவும் சமவெளிப்பொழிவும் வேறு வேறா? அல்லது ஒன்றுதானா?

ஒருசில விவிலிய அறிஞர்கள் லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் சமவெளிப்பொழிவும் (லூக் 6:17) மத்தேயு நற்செய்தியில் இடம்பெறுகின்ற மலைப்பொழிவும் (மத் 5 7) வேறு வேறு என்று சொல்வார்கள். இதற்கு அவர்கள் சொல்கின்ற மிக முக்கியமான காரணம், இரண்டும் இருவேறு இடங்களில் வருகிறது என்பதால். இன்னும் ஒருசில விவிலிய அறிஞர்கள் மலைப்பொழிவின் சுருக்கமே (Shorter Version) சமவெளிப்பொழிவு என்பார்கள். இது ஒருபுறமிருக்க Exegetical Fallacies என்ற புத்தகத்தில் டி.ஏ.கார்சன் என்ற விவிலிய அறிஞரோ, சமவெளி என்பது வேறொன்றுமில்லை, அது மலையில் இருக்கின்ற ஒரு சமதளமான பகுதி என்று குறிப்பிடுவார். இக்கூற்று உண்மையெனில் மலைப்மொழிவும் சமவெளிப்பொழிவும் வேறுவேறு அல்ல, அவை இரண்டும் ஒன்றுதான் என்று நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் இவையெல்லாம் பேறுகளா? சாபங்களா?

யூதர்களைப் பொறுத்தளவில், நீடிய ஆயுளும் நலமான வாழ்வும் குறையாத செல்வமும் களஞ்சியம் நிறையத் தானியமும் பழுகிப்பெருகிய மந்தையும்தான் உண்மையான பேறுகளாகும். (இச 28; யோபு 1:1-12 நீமொ 3:1-10). அப்படி இருக்கும்போது, இயேசு ஏழைகளையும் (ஏழ்மை) பட்டினியாய் கிடப்போரையும் (பட்டினி) அழுவோரையும் (அழுகை) மானிடமகன் பொருட்டு துன்பப்படுவோரையும் (துன்பம்) பேறுபெற்றோர் எனச் சொல்கிறாரே, இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வி எழலாம்.

இயேசு, நாம் ஏழ்மையில் இருக்கவேண்டும், பட்டினி கிடக்கவேண்டும், அழுதுகொண்டிருக்கவேண்டும் அல்லது துன்பப்பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பவரல்ல, அப்படி விரும்புகிறவரும் அல்ல. மாறாக இந்த ஏழ்மை, பட்டினி, அழுகை, துன்பம் போன்றவை எல்லாம் நம்மை இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழவும் சக மனிதன்மீதும் கரிசனை கொண்டு வாழத் தூண்டுகிறதே, அதனால்தான் இத்தகைய நிலையில் இருப்போரைப் பேறுபெற்றோர் என இயேசு அழைக்கின்றார். இதனை உறுதிசெய்யும் வகையில்தான் இயேசுவின் காலத்தில் இருந்த ஏழைகளும் பாவிகளும் வறியவர்களும் அவரைத் தேடிச் சென்றார்கள் (லூக் 15:1) பணக்காரர்களோ இதற்கு மாறாக இருந்தார்கள்.


செல்வந்தர்கள் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?


ஏழைகளையும் பட்டினியில் கிடப்போரையும் அழுதுகொண்டிருப்போரையும் மானிடமகன் பொருட்டு துன்புறுத்தப்படுவோரையும் பேறுபெற்றோர் எனச் சொல்லும் இயேசு, இதற்கு மாறாக இருக்கின்ற செல்வந்தரையும் உண்டு கொழுத்திருப்போரையும் பார்த்து ஐயோ கேடு என்று சொல்கிறாரே அது ஏன்?, அவர்களால் பேறுபெற்றோராக மாறமுடியாதா? எனக் கேள்வி எழலாம்.

செல்வந்தர்கள் இயேசுவின் இத்தகைய கடுஞ்சொல்லுக்கு ஆளாகக் காரணம், அவர்கள் கடவுளை மறந்து, தங்களோடு வாழக்கூடிய சகமனிதர்களை மறந்து வாழ்வதனால்தான். எடுத்துக்காட்டாக, இயேசு சொல்லக்கூடிய உவமைகளில் வரும் அறிவற்ற செல்வந்தனும் (லூக் 12) லாசர் உவமையில் வரும் செல்வந்தனும் (லூக் 16) கடவுளை மறந்ததோடு மட்டுமல்லாமல், தங்களோடு வாழ்ந்த சக மனிதர்களையும் மறந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு அப்படியொரு அழிவு நேர்ந்தது. ஒருவேளை அவர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்து, தங்களோடு வாழ்ந்த சகமனிதர்களை அன்பு செய்திருந்தார்கள் செய்தார்கள் எனில், அவர்களால் பேறுபெற்றவர்களாக மாறமுடிந்திருக்கும்.

எனவே, ஒருவர் செல்வராக அல்லது ஏழையாக இருப்பது முக்கியவில்லை. அவர் இறைவன்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதும் சக மனிதர்களை அன்பு செய்வதுமே முக்கியம். இப்படிப்பட்டோர் மட்டுமே பேறுபெற்றோராக மாற முடியும்.


சிந்தனை

' ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்' என்பார் விவேகானந்தர். ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.

ஆகவே, நாம் அயலாரையும் ஆண்டவரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக பேறுபெற்றவர்களாகி, இறையருள் நிறைவாய் பெறுவோம்.
 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

ஏழ்மை - வாழ்வு!

ஒரு நாள் வீதியிலே பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரனை நோக்கி, அரசன் அரண்மனைக்கு வரச் சொன்னான். அரசன் பொன்னும், பொருளும் நிறையத் தருவான் என்ற எதிர்பார்ப்போடு அவன் உள்ளே சென்றான். வாயிற்காவலனும் உள்ளே போக அனுமதித்தான். அரசன் உள்ளே செபித்துக் கொண்டிருந்ததால் பிச்சைக்காரனைச் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். ஆனால் பிச்சைக்காரன் சிறிது நேரத்தில் வெளியே புறப்பட்டுச் சென்றான். அரசன் என்ன கொடுத்தார் என்று வாயிற்காவலன் ஆவலோடு கேட்டான். அரசனே ஒரு பிச்சைக்காரனாக ஆண்டவரிடம் கையேந்தி நிற்கிறார். அவரிடம் பிச்சை கேட்க முடியாது என்று திரும்பிவிட்டேன் என்றான் பிச்சைக்காரன்.

இந்தக் கதையைக் கேட்கின்ற நீங்கள், இன்றைய இறைவார்த்தையைக் கேட்ட நீங்கள் இயேசுவின் பார்வையில் யார் பேறு பெற்றவர்கள், யார் சபிக்கப்பட்டவர்கள் என்பதைச் சிந்திக்க அழைக்கிறேன்.

இறைவன் சமதளமான இடத்திலே வந்து போதித்தார் என வாசிக்கக் கேட்டோம். ஏனெனில் புனித லூக்கா குறிப்பிடுவது போல இறைவனே இறங்கி வந்து மனிதனோடு மனிதனாகப் பேசினார் என்பதைத்தான் இந்தச் சமதளமான இடம் குறிப்பிடுகிறது.

இன்றைய நற்செய்தியிலே லூக்கா நான்கு வகையான பேறுகளைத் தருகின்றார். ஏழைகளே! பேறு பெற்றவர்கள் என்கிறார். இயேசுவின் பார்வையில் பொருள் இல்லாமல் இருக்கிற ஏழைகள் மட்டுமல்ல, அருளில்லாமல் இருந்து அருளைத் தேடுபவர்களும் பேறு பெற்றவர்கள். எனவேதான் உண்மைச் செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20).

(1) உடல் பட்டினியால் வாடுபவர்களைவிட ஆன்ம பசியால் வாடுபவர்களே பேறு பெற்றவர்கள் என்கிறார்.
(2) பெரும் கண்ணீரோடு புலம்புவதைவிட தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து அழுபவர்களே பேறுபெற்றவர் என்கிறார்.
(3) உலகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால் கடவுளை விட்டு உலகையும், உலகச் செல்வத்தையும் நம்பி வாழும் அத்தனை பேரும் சபிக்கப் பட்டவர்கள். இவர்கள் முத்து இல்லாத சிப்பி குப்பையிலே எறியப்படுவதுபோல ஒன்றுக்கும் உதவாதவர்கள்.

இயேசு வாழ்ந்த காலத்திலே பாலஸ்தீனத்திலே ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருந்தது. எடுபிடி வேலை செய்யவும், கூலி வேலை செய்யவும் ஏழை மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். ஏழை மக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்துவிட்டால் இது போன்ற எடுபிடி வேலைக்கு வரமாட்டார்கள் என்று செல்வந்த வர்க்கம் ஏழைகளை அமுக்கிப் போட்டது. அதிக வட்டிக்கு முன் கூட்டியே பணம் கொடுத்து அதைத் திருப்பித் தரமுடியாத நிலையில் அவர்களைக் கொத்தடிமைகளாக ஆக்கிய காலம் இயேசுவின் காலம். அந்த அவல நிலைதான் இன்றும் நம் நாட்டில் காட்சி தருகிறது. ஏழை மக்கள் பல்வேறு துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தலைநிமிர முடியாத நிலையில் தவிக்கிறார்கள். இயேசுவின் பேச்சைக் கேட்க வந்தவர்களும் இத்தகைய ஏழை மக்கள் தான். எனவேதான் அவர்களுக்கு உயிரூட்டம் கொடுக்க, ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்! இறையாட்சி உங்களுக்கு உரியதே (லூக். 6:20) என்கிறார்.

ஏழை என்பதாலோ, செல்வந்தன் என்பதாலோ கேடுற்றவன் என்பதும் சரியில்லை . மாறாக சமத்துவம், பிறர் அன்பு போன்ற உணர்வுகள் இல்லாமல், சுயநலம், அகங்காரம், ஆணவம் கொண்ட அத்தனை பேருமே ஆண்டவருக்கு முன் கேடுற்றவர்கள் தான். செல்வந்தர்கள் பேறுபெற்றவர்களாக மாற வேண்டுமானால், செல்வமாகிய, நிலையான செல்வமாகிய விண்ணகத்தைத் தேட அழைக்கிறார் (மத். 6:3 லூக் 6:20) திகழ வேண்டும்.

இரண்டாவது, நம்பிக்கையே வாழ்வு. ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர் பேறு பெற்றவர். எரேமியாஸ் கூறுவது போல ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர், நீர் அருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவார். அது எப்போதும் பசுமையாய் இருந்து காலத்தில் கனி கொடுக்கும் (எரே. 17:7-8).

இறுதியாக இரு காரியங்கள் சொல்ல விரும்புகிறேன்.
1. ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு வட்டிக்குக் கொடுக்கிறான். அதை அவர் திருப்பித் தருவார் என்று சொல்லப்பட்டது (நீதிமொழி 19:17). எனவே ஏழையாக உள்ள நாம் ஏழைக்கு இரங்குவோம். கொடுங்கள், உங்களுக்குகொடுக்கப்படும் (லூக். 6:38).

2. இரண்டாவது, மனிதர்களை நம்பாதீர்கள். மனிதர்களை
மதியுங்கள். மிதிக்காதீர்கள். மாறாக, இறைவனை மட்டும் நம்புங்கள். நல்லது நடக்கும்.

ஞாயிறு இறைவாக்கு
அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

கடவுள் யார்?

கடவுள் எப்படிப்பட்டவர்? என்பதற்கு இன்றைய நற்செய்தியில் இயேசு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். கடவுள் யார்? என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் கொடுக்கின்றது.

கடவுள் ஏழைகளை செல்வந்தர்களாக்குபவர்; பட்டினியாய் கிடப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர் : அழுகின்றவர்களைச் சிரிக்கவைப்பவர். ஆம். கடவுள் என்பவர் எளியோரை உயர்த்துகின்றவர்.

ஒரு பெரிய நாட்டை பேரரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்குத் திடீரென ஒரு சந்தேகம்! ஓர் அரசர் நாட்டை ஆள்கின்றார். ஒரு போர் வீரன் போர்புரிகின்றான். ஓர் ஆசிரியர் கற்பிக்கின்றார். இப்படி இந்த உலகில் பிறந்த எல்லாரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்! அது போல கடவுள் என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றார்? என்று அறிந்துகொள்ள அந்தப் பேரரசருக்கு ஆசை !

தலைமை அமைச்சனுக்குக் கூட பதில் தெரியவில்லை! அந்த அமைச்சனின் வழியாக பேரரசரின் சந்தேகத்தைப் பற்றியும், சந்தேகத்தைத் தீர்த்துவைக்க முடியாமல் தவிக்கின்றவர்களைப் பற்றியும் ஆடுமேய்க்கும் ஏழைச் சிறுவன் ஒருவன் அறிந்துகொண்டான்.

அவன் பேரரசர் முன்னால் நின்றான். இவனால் எப்படி இவ்வளவு பெரிய சந்தேகத்தைத் தீர்த்து வைக்க முடியும்? என்ற கேள்வி எல்லாருடைய மனத்திலும் எழுந்தது!

பேரரசர் முன்னால் நின்ற சிறுவன் அவரைப் பார்த்து, பேரரசே! கேள்வி கேட்பவன் மாணவன் ; பதில் சொல்பவர் ஆசிரியர். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான். அவர், ஆம் என்றார்.

சாதரணமாக ஆசிரியர்தான் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருப்பார், மாணவன் அவர் முன்னால் நின்று கொண்டிருப்பான். இதை ஏற்றுக்கொள்கின்றாயா? என்றான் சிறுவன்.

பேரரசர் , ஆம் என்றார்!

சிறுவனோ, அப்படியானால் இங்கே நான் ஆசிரியர், நீ மாணவன், கீழே இறங்கி வா! என்றான்.

சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான். பேரரசர் அவன் முன்னால் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது சிறுவன், இதைத்தான் கடவுள் செய்துகொண்டிருக்கின்றார்; உயர்ந்தோரைத் தாழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்திக்கொண்டிருக்கின்றார் என்றான்.

ஆம். கடவுள் தாழ்ந்தோரை உயர்த்துகின்றவர். இன்றைய முதல் வாசகம் கூறுவதுபோல, கடவுள் முள்ளை மலராக்குவார்! கல்லைக் கனியாக்குவார்!

இன்றைய இரண்டாம் வாசகம் கூறுவது போல அனைவர்க்கும் கடவுள் இம்மையையும் தருவார், மறுமையையும் தருவார்.

கடவுளுடைய அரசாட்சியில், இறையாட்சியில், ஏழைகள், எளியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், இல்லாதவர்கள் ஆகியோருக்குத்தான் முதலிடம். இந்த உண்மையை நமது உள்ளத்தில் முள்ளெனத் தைத்துக்கொண்டு நமது முழு நம்பிக்கையையும் கடவுள் மீது வைப்போம் (முதல் வாசகம்).

மேலும் அறிவோம் :

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் : 4).

பொருள்: இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். அவனுடைய திருவடியைச் சென்று அடைபவருக்குத் துன்பங்கள் எதுவும் தோன்றாது.

மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்
குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்

ஒருமுறை நான் ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவ்வீட்டின் தலைவர் தமது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்திக் கூறியது: "சுவாமி! என் மனைவி தங்கமானவள். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கி அதை அப்படியே அவள் கையில் கொடுக்கும்போது, 'அத்தான்- அத்தான்' என்று தேன் ஒழுகப் பேசுவாள். ஆனால் 15ஆம் தேதி ஆனபிறகு 'போடா வாடா' என்று கத்துவாள்". காசு இருந்தால் அவன் அத்தான்; அது இல்லையென்றால் அவன் செத்தான்.

இன்றைய உலகம், ஒருவர் எத்தகையவர்? அவர் என்ன செய்தார் என்பதற்காக அல்ல. மாறாக அவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதற்காகவே அவரை மதிக்கின்றது. இக்கசப்பான உண்மையை 'நல்வழி' நூல் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.
கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள் மற்றும் ஈன்றெடுத்ததாய் வேண்டாள் செல்லாது அவன் வாயிற்சொல் (நல்வழி 34)

ஒருவர் படிக்காத முட்டாளாக இருந்தாலும், அவர் பணக்காரராய் இருந்தால், எல்லாரும் அவரை வரவேற்பர். மாறாக, அவரிடம் பணம் இல்லையென்றால், பெற்ற அம்மாவோ கட்டிய மனைவியோ அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் சொல்லை எவருமே மதிக்கமாட்டார்.

ஆனால், இன்றைய நற்செய்தியிலே இயேசு கிறிஸ்து, ஏழைகள் பேறு பெற்றவர் களென்றும், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவது இவ்வுலகின் போக்குக்கு ஒத்துவராது. இதைக் கேட்பவர்கள் ஏளனம் செய்வார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து, "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (லூக் 16:13) என்று கூறியதைக் கேட்ட "பண ஆசைமிக்க பரிசேயர் இயேசுவை ஏளனம் செய்தனர்" (லூக் 16:14).

கடவுளின் எண்ணங்களும் வழிகளும் மனிதர்களின் எண்ணங்களையும் வழிகளையும் விட உயர்ந்தவை (எசா 55:8-9). இவ்வுலகின் தாரகமந்திரம்: உலகயமாக்குதல், தாராள மயமாக்குதல். நவீனமயமாக்குதல், ஆனால் கடவுளின் தாரக மந்திரம்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு. இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம். ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).

இவ்வுலகு காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையற்ற செல்வம் கிடைக்கலாம். ஆனால் கடவுள் காட்டும் வழியைப் பின்பற்றினால் நிலையான செல்வம் கிடைக்கும். மனிதருக்குப் பொருளும் வேண்டும்; அருளும் வேண்டும். பொருளில்லாதவர்கள் இவ்வுலக இன்பங்களைத் துய்க்கமுடியாது. அருளில்லாதவர்கள் மறுமைப் பேரின்பத்தைப் பெற முடியாது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)* பொருளைத் தேடி அலையும் மக்கள் அருளுக்கு முதலிடம் கொடுத்தால், மற்றனைத்தையும் சேர்த்துப் பெறுவர் (மத் 6:33).

வறுமையோ, துன்பமோ, அழுகையோ தன்னிலே பேறுபெற்றவை என்றோ, அவற்றைக் கடவுள் விரும்புகிறார் என்றோ அல்லது அவற்றிலிருந்து நாம் விடுதலையைத் தேடக் கூடாது என்றோ இயேசு கிறிஸ்து கூறவில்லை. மாறாக, பண ஆசை கூடாது, பணத்தை நம்பி வாழ்பவர்கள் கடவுளை நம்புவது கடினம் என்பதையே அவர் இன்றைய நற்செய்தியில் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவும், "மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்" எனக் கூறுகிறார். பதிலுரைப் பாடலும், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் என்றும் கனிதரும் மரம்போலப் பசுமையாக இருப்பர். ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ளாத தீயோர் காற்று அடித்துச் செல்லும் பதரைப் போல் ஆவர்' எனக் கூறுகிறது.

ஒரு பணக்காரர் வீட்டில் ஒரு சிறுவன் வேலைக்காரனாக இருந்தான். ஒரு நாள் அவன் பணக்காரருடைய படுக்கை அறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது அந்த அறையிலிருந்த பஞ்சு மெத்தைப் படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டான், பணக்காரர் அதைப் பார்த்துப் பயங்கர கோபத்துடன் தன் "பெல்ட்டால்" வேலைக்காரச் சிறுவனை பலமுறை அடித்தார். ஆனால் அச்சிறுவனோ பயங்கரமாகச் சிரித்தான். ஏன் அவன் அவ்வாறு சிரிக்கிறான் என்று பணக்காரர் அச்சிறுவனைக் கேட்டதற்கு அவன், "இப்படுக்கையில் அரைமணி நேரம் படுத்திருந்த எனக்கு இத்தண்டனை என்றால், இப்படுக்கையில் ஆயுள் முழுவதும் படுத்துறங்கும் உமக்குக் கடவுள் என்ன தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறாரோ?" என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு, ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்து விட்டீர்கள்" (லூக் 6:24) எனக் கூறுகிறார். யாக்கோபு என்பவர் தமது மடலில் செல்வர்களைப் பின்வருமாறு எச்சரிக்கின்றார். "இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்களைக் கொழுக்க வைத்தீர்கள்" (யாக் 5:5).

இவ்வுலகில் துன்புறுகிறவர்கள் மறுமை வாழ்வை எண்ணி மகிழவேண்டும். நமக்கு மறுமை வாழ்வு இல்லையென்றால் மற்ற மக்களை விட நாம் பரிதாபத்துக்குரியவர்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுகிறார் (1 கொரி 15:16), கிறிஸ்து. "தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருள் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக் கொண்டார். இப்போது கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்" (எபி 12:2).

பணக்காரர்களும் ஆயக்காரச் சக்கேயுவைப் போன்று மனம்மாறித் தங்கள் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொண்டால் அவர்களுக்கும் மீட்பு உண்டு, "செல்வத்தின் பயன் ஈதல்".

ஓர் அரசியல்வாதி தான் ஆட்சிக்கு வந்தால் நிலம் கொடுப்பதாகவும், வீடு கட்டித் தருபவதாகவும் மற்றும் எல்லாச் சலுகைகளையும் ஏழைகளுக்குத் தருவதாகவும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவரிடம் ஓர் ஏழை, "பத்து ரூபாய் கொடுங்கள்" என்று கேட்டதற்கு, "இல்லை" என்று கையை விரித்தார். சொல்லிலும் பேச்சிலும் அல்ல. செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம் (1 யோவா 3:18).

இப்போது செல்வம் இல்லாதவர்கள் கூட ஒரு காலத்தில் செல்வந்தவர்களாக வாய்ப்பு உண்டு. ஆனால், அருள் (இரக்கம்) இல்லாதவர்கள் ஒருக்காலும் சிறப்புறமாட்டார்கள்.

பொருள் அற்றார் பூப்பர் ஒரு கால், அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது (குறள் 248)


தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
பேறுபெற்றவரா? கேடுற்றவரா?

இன்று இறைவாக்கினர் எரேமியா நம்மைப் பார்த்து எழுப்பும் கேள்வி இது ஒன்றுதான்: "நீங்கள் பாலை நிலத்தில் முளைத்த பலன்தரா புதர்ச் செடிகளா? அல்லது நீரோடைக்கருகில் செழித்து வளரும் பசு மரங்களா?" அது நாம் யார் மீது, எதன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம், எங்கே புகலிடம் தேடுகிறோம் என்பதைப் பொறுத்தது. "மனிதரில் நம்பிக்கை வைப்போரும், வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக் காண்போரும் சபிக்கப்படுவர். அவர்கள் பாலைநிலத்துப் புதர்ச் செடிக்கு ஒப்பாவர்.... ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறு பெற்றோர்... அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட மரத்துக்கு ஒப்பாவர்" (எரேமி. 17:5-8). அதனால்தான் "மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" என்கிறது திருப்பாடல் 118:8.ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறபோது கவணில் உள்ள சிறுகல் கூட பெரிய ஆயுதம் தான் (1 சாமு. 17:49).

இயேசுவின் மலைப்பொழிவின் மறுபதிப்பே லூக்காவில் காணும் சமவெளிப் பொழிவு. அதன் முதல் கூற்று இன்றைய உலகுக்கும் அதன் மதிப்பீடுகளுக்கும் சவாலாகும். செல்வத்தை மற்றும் செல்வாக்கை - சரியானதோ தவறானதோ - எந்த வழியிலாவது சேர்த்துக் குவித்து புகழும் பெருமையும் அடையத் துடிக்கும் மனிதனுக்கு இயேசு கொடுக்கும் சாட்டையடி: "ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்... செல்வர்களே ஐயோ உங்களுக்குக் கேடு" (லூக். 6:20, 24).* ஏழைகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார் என்பது பற்றிய சரியான புரிதல் தேவை. விவிலியக் கண்ணோட்டத்தில் ஏழை என்னும் சொல் நான்கு வகைகளில் கையாளப்பட்டுள்ளது:

1. செல்வமற்ற வறுமை நிலை. உலக செல்வங்களைப் பெற்றிராத வறியவர்களைக் குறிப்பதற்காக ஏழை என்ற சொல் அன்று பயன்படுத்தப்பட்டது.

2. செல்வாக்கற்ற நிலை. உலகச் செல்வங்கள் இல்லாததால் செல்வாக்கற்று செல்லாக்காசுகளாக வாழ்ந்த ஆதரவற்றவர்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது ஏழை என்ற சொல்.

3. பிறரால் தாழ்த்தப்பட்ட நிலை. இந்த மக்கள் ஆதரவற்று இருந்ததால் ஓயாது ஒடுக்கப்பட்டார்கள். அவர்களின் உழைப்பும் சுரண்டப்பட்டது, சூறையாடப்பட்டது. அத்தகையவர்களைக் குறிப்பதற்கும் ஏழை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

4. இருந்தும் கடவுளை முழுதும் நம்பிய நிலை. இந்த மக்கள் செல்வமும், செல்வாக்கும் அற்றவர்களாய், ஆதரவோ பாதுகாப்போ எதுவும் இல்லாத திக்கற்றவர்களாய் வாழ்ந்ததினால் 'தெய்வமே துணை' என்று இவர்களில் பெரும்பான்மையினர் தங்கள் முழு நம்பிக்கையையும் கடவுள் மேல் வைத்தார்கள். இவர்கள் "யாவேயின் எழைகள்" என்று அழைக்கப்பட்டார்கள். இப்படிக் கடவுளில் முழு நம்பிக்கை கொண்டவர்களைக் குறிப்பதற்காகவே ஏழை என்ற வார்த்தை கையாளப்பட்டது.

இந்த நான்காவது வகையினரைத்தான் "ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றவர்கள்" என்று இயேசு குறிப்பிடுகிறார். பாபிலோன் அடிமைத்தனத்திலிருந்து, விடுபட்டுத் திரும்பிய யூதர்களில் பலர் ஏழைகளாக மாறிப்போனார்கள். அதிகாரமும் செல்வமும் உடையோரின் அடக்குமுறைக்கும் கொடுமைகளுக்கும் ஆளானார்கள்: ஆயினும் அவர்கள் அமைதியாகவும் பொறுமையோடும் இருந்தார்கள். மெசியா விரைவில் வருவார். மீட்பும் விடுதலையும் தருவார் என்று முழுமையாக நம்பியிருந்தார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் இயேசு பேறுபெற்றவர்கள் என்கிறார்.

அவர்கள் வெறுமனே ஏழைகளாக இருந்ததால் அல்ல அவர்கள் புகழப்பட்டது. ஏழ்மை தன்னிலே புனிதமானதும் அல்ல. செல்வம் தீமையானதும் அல்ல. ஆனால் பேறுபெற்றவரா. கேடுற்றவரா.... ஏழையோ பணக்காரனோ கடவுளின் மீது நம்பிக்கை வைத்து சமூக அக்கறை கொண்டவனா என்பதைப் பொறுத்தது. "இறைவா, நான் ஏழையாக இருக்கிறேன். ஆனால் தூயவனாக இல்லையே"- இது ஒரு புனிதரின் ஆதங்கம். சிந்தனைக்குறியது.

லூக்கா நற்செய்தி. ஏழைகளின் நற்செய்தி. இறைவன் ஏழைகள் சார்பானவர் என்றுரைக்கும் நற்செய்தி. செல்வச் செழிப்பு, பண வசதி, உடல் நலம் எல்லாம் இறையாசீரின் அடையாளங்கள் என்று உலகம் கருதுகிறது. ஏழ்மையில் பிறந்து ஏழையாக வாழ்ந்து ஏழைகளே கடவுளின் அன்புக்கும் சிறப்பு ஆசீருக்கும் உரியவர்கள் என்ற இயேசுவின் செய்தி உண்மையானது உயிரோட்டமானது.

ஒருமுறை காந்தி அண்ணல் காஷ்மீரிலிருந்து இரயிலில் வந்து கொண்டிருந்தார். வழியில் மழை பெய்யத் தொடங்கியது. அவரோ வழக்கம்போல மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஒருவர் அவரிடம் "நீங்கள் ஏன் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்கிறீர்கள்?" என்று கேட்க, "இரயிலில் நான்காம் வகுப்பு என்ற ஒன்று இல்லாததுதான் காரணம்" என்றார். மழை பெரிதாக, அவர் பயணம் செய்த பெட்டி முழுவதும் தண்ணீர். ஒரு புகைவண்டி நிலையத்தில் வண்டி நின்றதும் இரயில்வே அதிகாரி அவரிடம் வந்து "தாங்கள் பெட்டி மாறி அமருங்கள்" என்றார்.

காந்தி அவரிடம் "இந்தப் பெட்டியை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். அவரோ "உங்களுக்காக ஒரு பெட்டியில் உள்ளவர்களை வெளியேற்றி இருக்கிறோம். அந்தப் பயணிகள் இந்தப் பெட்டியில் பயணம் செய்வார்கள்" என்று கூறினார். காந்தி அண்ணலோ "இந்தப் பெட்டியில் வேறு ஆள்கள் உட்கார்ந்து பயணம் செய்ய முடியுமானால், நான் ஏன் உட்கார்ந்திருக்கக் கூடாது? என் வசதிக்காகப் பிறருக்குத் துன்பம் கொடுக்க மாட்டேன்" என்றாராம்.

நாம் சுகப்பட்டால் போதும், மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்னும் சிந்தனை, எண்ணம் இன்றைய சமுதாயத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. நான் மட்டும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதால் அடுத்தவரின் பிரச்சனை நம்மில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்ந்தவர்களையே செல்வர்கள் என்று அழைத்துச் சாடுகிறார் இயேசு.

வசதிகளும் வாய்ப்புக்களும், பதுக்கி வைத்து, தான் மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல. மாறாக அவை மற்றவர்களுக்கு வாரி வழங்கப்பட வேண்டும். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்பதே இயேசுவின் எண்ணமும் விருப்பமும். தன்னலச் சிந்தனைகள் மேலோங்கும்போது மனித நேயம் மங்கத் தொடங்குகிறது.

பணத்தின் மீதும் பதவி புகழ் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவன் இறைவனில் கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி அடைகிறான். இறைநம்பிக்கை வெறும் சடங்காகவும் பணமே வாழ்வின் குறிக்கோளாகவும் மாறுகிறது.* இறைவன் மீது ஆழமான பற்றும் நாம் பெற்றுள்ள வசதிவாய்ப்புக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் மனநிலையும் நாம் கொண்டிருந்தால் நாமும் பேறு பெற்றவர்களே!

"நான் ஏழைகளுக்கு உணவு கொடுத்தபோது இவ்வுலகம் என்னைப் புனிதர் என்று அழைத்தது. ஏழைகளுக்கு ஏன் உணவு இல்லை என்று கேட்டபோது என்னைக் கம்யூனிஸ்டு என்று பழித்தது" என்றவர் ஹெல்டர் காமரா.

"ஏழைகளே, நீங்கள் பேறு பெற்றவர்கள் " இயேசுவின் அழுத்தமான வாக்கு. ஏழைகள், பசித்திருப்போர், அழுகிறவர்கள், துன்புறுகிறவர்கள், இகழப்படுகிறவர்கள் .... இவர்களெல்லாம் இயேசுவின் கணிப்புப்படி பேறு பெற்றவர்கள்.

ஏழைகள் ஏன் பேறு பெற்றவர்கள்?
அவர்கள் வறுமை நிலையில் இருப்பதால் அல்ல. ஏழைகளாய் இருந்தும் நல்லவர்களாய், பிறரால் துன்புறுத்தப்பட்டும் பிறருக்குத் தீங்கு நினையாதவர்களாய், முக்கியமாக ஆண்டவரிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருப்பதால்தான் இயேசுவின் புகழ்ச்சிக்கு உரியவர்கள்.

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" (மத். 6:33).

திருவுரைத் தேனடை
அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

கருத்தரங்கு ஒன்று ஆரம்பமானது. அக்கருத்தரங்கை வழிநடத்தியவர், அரங்கத்தில் கூடியிருந்தோரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். "இவ்வுலகில் மிகவும் விலை உயர்ந்த நிலம் எங்கே உள்ளது?" என்று அவர் கேட்டதும், பதில்கள் உடனடியாகப் பறந்து வந்தன. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகள், வைரச் சுரங்கங்கள் நிறைந்த தென்னாப்பிரிக்கா, நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதி என்று பலவகை பதில்கள் சொல்லப்பட்டன. "நீங்கள் சொன்ன அத்தனை பதில்களும் தவறு" என்று கூறியப் பேச்சாளர், சில நொடிகள் மௌனம் காத்தார். பின்னர், "இவ்வுலகிலேயே மிகவும் விலை உயர்ந்த நிலம், நமது கல்லறைத் தோட்டங்கள். ஏனெனில், அங்குதான் பலர், தாங்கள் எழுதாதக் கதைகளுடன், துவங்காத வர்த்தகத் திட்டங்களுடன், ஒப்புரவாகாத உறவுகளுடன் புதைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், 'அடுத்த நாள் செய்துகொள்வோம்' என்று ஒவ்வொரு நாளும் கூறிவந்தனர். அவர்கள் கூறிய அந்த 'அடுத்த நாளை'ச் சந்திக்காமல் விடைபெற்றனர்" என்று பேச்சாளர் கூறினார்.

இந்நிகழ்வைப் பற்றி தன் நூல் ஒன்றில் குறிப்பிடும் டாட் ஹென்றி (Todd Henry) என்ற எழுத்தாளர், அந்த கருத்தரங்கைவிட்டு நேராக தன் அலுவலகம் சென்று, இரு சொற்களை தன் குறிப்பேட்டில் எழுதி வைத்ததாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து அவர் வாழ்வை வழிநடத்திய அவ்விரு சொற்கள்: "Die Empty", அதாவது, "காலியாக இறப்பாய்". ஹென்றி அவர்கள், "Die Empty" என்ற அவ்விரு சொற்களை, 2013ம் ஆண்டு எழுதிய ஒரு நூலின் தலைப்பாகக் கொடுத்தார்.

மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத எதார்த்தங்களாக இருக்கும் மரணம், கல்லறை, ஆகியவை, நமக்கு, வாழ்வின் முழுப்பொருளையும் உணர்த்த வல்லவை. மரணத்திற்கு முன், நம் வாழ்வை, திறமைகளை, சக்தியை மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு, காலியாக கல்லறைக்குச் செல்வது எவ்வளவோ மேல். ஆனால், நம்மில் பலர், கனவுகளை, பிரச்சனைகளை, ஏக்கங்களை, கவலைகளை சுமந்தவண்ணம் நம் கல்லறையை அடைகிறோம். "Die Empty" என்ற இந்நூலின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள ஒரு மேற்கோள் நம் கவனத்தை ஈர்க்கிறது: "ஒருபோதும் பாடாதவர்கள், ஐயோ பாவம்; அவர்கள் அவ்வளவு இசையுடன் இறந்துபோகின்றனர்" 'The Voiceless' என்ற கவிதையில், ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) என்பவர் எழுதிய வரிகள் இவை. "காலியாக இறப்பாய்" என்று ஹென்றி அவர்கள், கூறுவதைக் கேட்கும்போது, " கல்லறைக்குள் போகும்போது, காலியாக ('ஜாலி'யாக) செல்வோர் பேறுபெற்றோர்" என்று சொல்லத் தோன்றுகிறது.

கல்லறையை அடைவதற்குமுன், நம் வாழ்வை பிறருக்கு வழங்கிய நிறைவை நாம் உணர்ந்திருந்தால், கல்லறையைத் தாண்டி நம் வாழ்வு தொடரும் என்ற நம்பிக்கையோடு நாம் கண்களை மூடியிருந்தால், நாம் உண்மையில் பேறுபெற்றோர். கல்லறைக்கு இப்பக்கமும், மறுபக்கமும் நாம் வாழும், வாழப்போகும் வாழ்வு, நிறைவுடன் இருக்க, நற்செய்தியில் நமக்கு பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு முக்கியமான வழிகாட்டி, இயேசு வழங்கியுள்ள 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள். இந்தக் கூற்றுகள் இன்று நம்மை நற்செய்தி வழியே அடைந்துள்ளன.

'பேறுபெற்றோர்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், மத்தேயு நற்செய்தி 5ம் பிரிவில் இயேசு கூறியுள்ள புகழ்பெற்ற வாக்கியங்கள், முதலில் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால், இன்றைய வழிபாட்டில், லூக்கா நற்செய்தி 6ம் பிரிவில் இயேசு கூறும் " பேறுபெற்றோர்" வாக்கியங்கள், நற்செய்தியாக நம்மை வந்தடைந்துள்ளன. மத்தேயு நற்செய்தியில், இயேசு, மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர்ந்து, கற்பித்ததால், அதை, 'மலைப்பொழிவு' என்றும், லூக்கா நற்செய்தியில், இயேசு தன் சீடர்களுடன் இறங்கி வந்து, சமவெளியான ஓரிடத்தில் நின்று கற்பித்ததால், அதை, 'சமவெளிப்பொழிவு' என்றும் அழைக்கிறோம். மத்தேயு நற்செய்தியில், இயேசுவின் கூற்றுகள், 'பேறுபெற்றோர்' என்ற ஆசி மொழிகளாக மட்டும் ஒலிக்கின்றன. லூக்கா நற்செய்தியில், இக்கூற்றுகள், 'பேறுபெற்றோருக்கு' ஆசிகளாகவும், 'கெடுற்றோருக்கு' எச்சரிக்கைகளாகவும் கூறப்பட்டுள்ளன. நற்செய்தியாளர் மத்தேயு, 'ஏழையரின் உள்ளத்தோர்', 'துயருறுவோர்' 'கனிவுடையோர்' என்ற பொதுவானச் சொற்களைப் பயன்படுத்தியதால், இயேசு, வேறு யாரையோ குறிப்பிடுவது போன்ற உணர்வு எழுகிறது. லூக்கா நற்செய்தியிலோ, இயேசு, தன் ஆசி மொழிகளையும், எச்சரிக்கைகளையும், தன்னைச் சூழ்ந்து நின்ற மக்களிடம், 'நீங்கள்' என்ற சொல்லைப் பயன்படுத்தி, நேரடியாகக் கூறுகிறார்.

சமவெளியில், நம்மில் ஒருவராக தன்னையே இணைத்துக்கொண்டு, இயேசு நம்மிடம் நேரடியாகக் கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நமக்குள் எத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றன என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்வது நல்லது.

அதற்குமுன், இயேசு, ஆசி மொழிகளை வழங்கினார் என்ற உண்மையை, கொஞ்சம் தியானித்துப் பயன்பெறுவோம். இயேசு, தன் வாழ்நாள் முழுவதும், ஆசீர் ஒன்றையே, இவ்வுலகிற்கு வழங்கினார். குறிப்பாக, துயரங்களால் துவண்டோரை, தன் ஆறுதலான சொற்களாலும், நலம் வழங்கும் அற்புதங்களாலும் நிறைத்தார். ஆசி வழங்குவது, இயேசுவுக்கு, இயல்பாக அமைந்த ஒரு பண்பு. இத்தகையப் பண்பு, ஆசீர் நிறைந்த ஒரு மனதிலிருந்துமட்டுமே வெளிவரக்கூடும். இதைப் புரிந்துகொள்ள, புத்தமதத்தில் கூறப்படும் ஓர் உவமை உதவியாக இருக்கும்.

ஒருநாள், புத்தர், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, அழகும், உடல் கட்டமைப்பும் கொண்ட ஒரு படைவீரர் அவ்வழியே வந்தார். குண்டாக, அதிக எடையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்த புத்தரைப் பார்த்த அந்த வீரர், "உம்மைப் பார்த்தால், ஒரு பன்றியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். புத்தர் அமைதியாக அந்த வீரரைப் பார்த்து, "உம்மைப் பார்த்தால், ஒரு தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது" என்று கூறினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த வீரர், "என்னைப் பார்த்தால், தெய்வத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது என்று உம்மால் எப்படி சொல்லமுடிந்தது?" என்று கேட்டார். புத்தர் மறுமொழியாக, "நாம் உண்மையிலேயே, வெளி உலகை, வெளியிலிருந்து பார்ப்பது கிடையாது. நமக்குள் இருப்பனவற்றைக் கொண்டு, வெளி உலகைப் பார்க்கிறோம். நான், இந்த மரத்தடியில் அமர்ந்து, இறைவனைத் தியானித்து வருகிறேன். எனவே, நான் காண்பதனைத்திலும், இறைவனைக் காண்கிறேன். நீரோ, வேறு பலவற்றை சிந்தித்துக் கொண்டிருப்பதால், வேறு விதமாகப் பார்க்கிறீர்" என்று அமைதியாகக் கூறினார்.

இவ்வுலகைப்பற்றி, பிறரைப்பற்றி நாம் கொண்டிருக்கும் சிந்தனைகள், கண்ணோட்டம் அனைத்தும் நமக்கு உள்ளிருந்து உருவாகின்றன. நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, ஆசீர் பெற்ற ஒரு மனநிலையா, அல்லது, சபிக்கப்பட்ட ஒரு மனநிலையா என்பதை ஆய்வு செய்வது நல்லது. ஆசீர் பெற்ற மனநிலை, அனைவரையும், அனைத்துலகையும் ஆசீர்வதிக்கப்பட்டதாய் காணும். சபிக்கப்பட்ட மனநிலையோ, அனைத்தின் மீதும் சாபங்களை அள்ளி வீசும். நம்மில் பலர், நமக்கு வந்துசேரும் ஆசிகளை அலட்சியம் செய்துவிட்டு, அவ்வப்போது வரும் துயரங்களை நம் சாபங்களாக பெரிதுபடுத்துவதால், பெரும்பாலான நம் வாழ்வு சபிக்கப்பட்ட மனநிலையிலேயே கழிகிறது.

இயேசுவின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும், ஆசீர் பெற்ற மனநிலையிலிருந்து வெளிவந்தவை. அவர் இவ்வுலகில் மனிதராகப் பிறக்கப்போகிறார் என்ற அற்புதச் செய்தியை, இளம்பெண் மரியாவிடம் பகிரவந்த கபிரியேல் தூதர், மரியாவை, "அருள்மிகப் பெற்றவரே" (லூக். 1:28) என்று வாழ்த்தினார். அவரைச் சந்தித்த உறவினர் எலிசபெத்து, "பெண்களுக்குள் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக். 1:42) என்று, மனநிறைவான ஆசி வழங்கினார்.

இவ்வாறு, கருவில் தோன்றியதுமுதல், ஆசீரால் நிரப்பப்பட்ட இயேசு, தன் பணிவாழ்வைத் துவங்கிய வேளையிலும், ஆசீரால் நிரப்பப்பெற்றார். "நீரே என் அன்பார்ந்த, - ஆசி பெற்ற - மகன்" (காண்க - லூக். 3:22) என்று இறைத்தந்தையின் ஆசீரால் நிரப்பப்பெற்றார், இயேசு. ஆசீரால் நிறைந்து வழிந்த இயேசு, தன் சமவெளிப்பொழிவை, ஆசீர்வாதங்களுடன் ஆரம்பித்தார்:

லூக்கா நற்செய்தி 6: 20-21
"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவுபெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

ஆசீர் வழங்கிய அதே வேளையில், இயேசு, கசப்பான உண்மைகளை, கேடுகளாக, எச்சரிக்கைகளாக வழங்கவும் தயங்கவில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு கூறியிருக்கும் பேறுகளையும், கேடுகளையும் தவறாகப் பொருள்கொள்ள வாய்ப்புண்டு. அதாவது, இயேசு, ஏழ்மையை, பட்டினியை, அழுகையை, ஆசீர்வாதங்களாக உயர்த்திப் பேசுவதாக எண்ணிப்பார்க்க வாய்ப்புண்டு. இயேசு, இக்கொடுமைகளை மேன்மைப்படுத்தவில்லை; இவற்றால் துன்புறுவோரை மேன்மைப்படுத்தினார். ஏழ்மை, பட்டினி, அழுகை ஆகிய கொடுமைகளால் துன்புறுவோர், இறைவனை நோக்கி அடிக்கடி திரும்ப, இறைவனை தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று எண்ணிப்பார்க்க, அவர்களுக்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு. இதற்கு மாறாக, செல்வத்தில், அதிகமான உணவில், மகிழ்வில் ஆழ்ந்திருப்போர், தவறான ஒரு தன்னிறைவு அடைவதால், அவர்களின் பார்வை இறைவனை நோக்கித் திரும்புவதற்கு வாய்ப்புக்கள் குறைவு. இந்த உண்மையை இடித்துரைக்கவே, இயேசு ஒன்றுக்கொன்று முரணான இவ்விரு குழுவினரை இணைத்துப் பேசியுள்ளார்.

ஏழைகள் - செல்வர்கள், பட்டினியாய் இருப்போர் - உண்டு கொழுத்திருப்போர், அழுது கொண்டிருப்போர் - சிரித்து இன்புறுவோர், வெறுத்து, ஒதுக்கி, இகழப்படுவோர் - புகழ்ந்து பேசப்படுவோர் என்று, ஒன்றுக்கொன்று முரணான நான்கு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இயேசு பேசுவது, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் நாம் காணும் முரண்பாடுகளை நினைவுறுத்துகின்றன.

தாழ்வுற்றோரை உயர்த்தும் இறைவன், செருக்குற்றோரை சிதறடிக்கிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பி, செல்வரை வெறுங்கையராய் அனுப்பி விடுகிறார் (லூக்கா 1:47-53) என்ற முரண்பாடுகளை, அன்னை மரியாவின் புகழ்ப்பாடலில் காண்கிறோம். தன் நற்செய்தியின் துவக்கத்தில், அன்னை மரியாவின் புகழ்ப்பாடலை கூறியுள்ள நற்செய்தியாளர் லூக்கா, மீண்டும் ஒருமுறை, அந்த முரண்பாடுகளை நினைவுறுத்தும் வண்ணம், இயேசுவின் சமவெளிப்பொழிவில் நான்கு முரண்பாடுகளை முன்வைக்கிறார்.

மத்தேயு, லூக்கா என்ற இரு நற்செய்திகளிலும், " பேறுபெற்றோர்" என, இயேசு, பட்டியலிட்டுள்ள புண்ணியங்கள், நிறை வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்குகள். மதம், இனம் என்ற வட்டங்களைக் கடந்து, " பேறுபெற்றோர்" வாக்கியங்கள், மகாத்மா காந்தி உட்பட, பல உன்னத மனிதர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. இன்றைய நற்செய்தி வழியே, பேறுகளையும், கேடுகளையும் இணைத்து, இயேசு கூறும் ஆசி மொழிகளும், எச்சரிக்கைகளும், நம்மை விழித்தெழச் செய்யட்டும்.

இறுதியாக, நம் எண்ணங்கள் காஷ்மீர் மாநிலத்தை நோக்கித் திரும்புகின்றன. அன்பைச் சிறப்பிக்கும் நாளான, பிப்ரவரி 14ம் தேதி, வியாழனன்று, காஷ்மீர் மாநிலத்தில், இராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்தின் மீது, இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர், சக்திமிகுந்த வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற காரை மோதி வெடிக்கச்செய்தார். இந்தத் தாக்குதலால், பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன், 28 வயது நிறைந்த சுப்பிரமணியன் அவர்களும், அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் 30 வயது நிறைந்த சிவசந்திரன் அவர்களும், உயிரிழந்துள்ளனர்.

மதியற்ற இந்த வன்முறையை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். அதே வேளையில், இந்த வன்முறைக்கு மறுமொழியாக, வன்முறையைத் தூண்டும் வகையில், நம் தலைவர்களும், வேறு பிரபலங்களும் பேசி வருவது, வேதனையைத் தருகிறது. இந்த வீரர்களின் உயிர்பலியை, தங்கள் அரசியலுக்கு ஆதாயமாக்கிக் கொள்வோரை எண்ணி, இன்னும் அதிகமாக வேதனைப்படுகிறோம்.

கண்ணுக்குக் கண் என்ற பழிவாங்கும் வெறியுடன் அலைந்தால், உலகம் முழுவதும் குருடாகிவிடும் என்ற எண்ணத்தைக் கூறிய மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்தியாவில், தற்போது, பழிக்குப் பழி என்ற உணர்வே மேலோங்கியுள்ளது.

வேதனையும், கோபமும் அலைமோதும் இவ்வேளையில், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை இறைவனின் சந்நிதியில் ஏந்தி வருவோம். இவ்வீரர்களை நம்பி வாழ்ந்த அக்குடும்பங்களுக்கு, மேடைகளில் முழங்கும் பழிவாங்கும் சூளுரைகள் உதவி செய்யாது. ஈடு செய்யமுடியாத இந்த இழப்பை, இந்த வீரர்களின் குடும்பங்கள், துணிவோடும், நம்பிக்கையோடும் சந்திக்கவேண்டும் என்று செபிப்போம்.

இவ்வுலகிற்கு, கனிவை, நீதியை, இரக்கத்தை, அமைதியை, உணர்த்தும் கருவிகளாக நம்மை இறைவன் உருவாக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இந்த மேன்மையான உணர்வுகளைப் பறைசாற்றும் ஆசிமொழிகள் சிலவற்றுடன் இன்றைய சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

மத்தேயு 5: 5-7,9
கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
 
 மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்

பொதுக்காலம்‌ 6-ஆம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகப்‌ பின்னணி (எரே. 17:5-8)

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ இறைவாக்கினர்‌ ஏரேமியாஸ்‌ இஸ்ராயேல்‌ மக்களுக்கு எச்சரிப்பு விடுக்கிறார்‌. ஏனென்றால்‌ அவர்கள்‌ கடவுளை மறந்து, தம்‌ படை பலத்திலும்‌, வேற்று நாட்டு அரசர்களுடன்‌ அவர்கள்‌ செய்து கொண்ட உடன்படிக்கைகளிலும்‌ நம்பிக்கைக்‌ கொள்ளத்‌ தொடங்கினர்‌. எனவே அவர்‌, பாலைவன மரத்தையும்‌, நீரோடை ஓரத்தில்‌ நடப்பட்ட மரத்தையும்‌ உவமையாகக்‌ கூறி இறைவனிடம்‌ முழு நம்பிக்கைக்‌ கொள்ள அழைப்பு விடுத்து, கடவுளை நம்பினோர்‌ கைவிடப்படார்‌, மற்றவற்றை நம்புவன்‌ மறைந்து போவான்‌ என்று எச்சரிக்கிறார்‌

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (1கொரி, 15:12, 16-20)

கொரிந்து நகர கிறிஸ்தவர்கள்‌ புதிதாக மனம்‌ மாறியவர்கள்‌. இங்கு ஒரு சில போலி போதகர்கள்‌, உயிர்த்தெழுதல்‌ என்பது இல்லை, மண்ணக வாழ்வோடு நமது வாழ்வு முடிந்து விடும்‌. அதனால்‌ உண்டு குடித்து மகிழ்ந்து கொண்டாடுங்கள்‌ எற போதனையைப்‌ பரப்பினார்கள்‌. அதனால்‌ புனித பவுல்‌ தனது கடிதத்தின்‌ மூலம்‌, " மறுவாழ்வு உயிர்த்தெழுதலும்‌ உண்டு. அதற்கு மரித்த இயேசு மகிமையோடு உயிர்த்தெழுந்ததே சான்று" என்று கூறி கொரிந்து நகர மக்களின்‌ லிசுவாசத்தை உறுதிப்படுத்த முயல்கிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 6-7, 20-26)

பிற இனத்துக்‌ கிறிஸ்தவரான புனித லூக்கா, இந்த நற்செய்தியைச்‌ சிறப்பாக யூதரல்லாத தன்னுடைய மக்களுக்காக எழுதுகிறார்‌. விண்ணரசு என்றால் என்ன? அதில் நுழைய என்ன தகுதி? நாம்‌ எந்த நிலையில்‌ இருக்கிறோம்‌ என்பதைத்‌ தன்‌ மக்கள்‌ ஆய்ந்து பார்க்க வேண்டும்‌ என்றே இந்தப்‌ பகுதியை எழுதுகிறார்‌. " மதங்கள்‌ மனிதனை மயக்கும்‌ போதைப்பொருள்‌' என்று பொதுவுடமைவாதி காரல்‌ மார்க்ஸ்‌ கூறியதற்கேற்ப இந்நற்செய்தியை மேலெழுந்த வாரியாகப்‌ பார்த்தால்‌, விண்ணரசு என்னும்‌ விண்கக. வாழ்வை மயக்குகின்ற போதைப்பொருளாகக்‌ காட்டி, ஏழ்மையை இயேசு நியாயப்‌ படுத்துவது போலவும்‌ பணக்காரர்கள்‌ எல்லோரும்‌ பாவிகள்‌ என்று அவர்களைச்‌ சபிப்பது போலவும்‌ தோன்றும்‌. ஆனால்‌ இயேசுவின்‌ நோக்கம்‌ அதுவல்ல.
மறையுரை

அந்தோணி குடுத்துவச்சவனப்பா, பாரு பைக்‌, காரு பங்களான்னு வாங்கிட்டே போறான்‌'; " அந்த பொண்ணு கொடுத்துவச்சவடா, எல்வளவு பெரிய சொத்துக்காரன்‌ புருசனா வரப்போறான்னு பாரு, இவை நாம்‌ அன்றாடம்‌ கேட்கும்‌ சில வார்த்தைகள்‌, பணத்தையும்‌ பொருட்களையும்‌ அடிப்படையாகக்‌ கொண்டு கொடுத்து வச்சவண, பாவம்‌ செய்தவனா? என்று கணக்கிடுகிறது இந்த உலகம்‌.

இன்றைய உலகம்‌ ஒருவர்‌ எத்தகையவர்‌? என்ன செய்தார்‌? என்பதைக்‌ கணக்கில்‌ கொள்ளாமல்‌ ஒருவரிடம்‌ எவ்வளவு பணம்‌ இருக்கின்றது? எவ்வளவு சொத்துக்குச்‌ சொந்தக்காரர்‌? என்பதைக்‌ கொண்டே மதிப்பிடுகிறது. ஆனால்‌ இன்றைய நற்செய்தியில்‌ இயேசு ஏழைகள்‌ பேறுபெற்றவர்களென்றும்‌ பணக்காரர்கள்‌ சபிக்கப்பட்டவர்‌களென்றும்‌ கூறுகிறார்‌. இந்த உலகத்தின்‌ கண்னோட்டத்திற்கு முற்றிலும்‌ மாறான கருத்து.

இன்றைய நற்செய்தி நம்‌ ஒல்வொருவரிலும்‌ ஒரு கேள்‌பியை எழுப்பியிருக்கும்‌. ஏழ்மையும்‌, அழுகையும்‌ துன்பமும்‌ பேறுபெற்றவைகளா? செல்வமும்‌ மகிழ்ச்சியும்‌ சபிக்கப்பட்டவைகளா? விசுவாச அடிப்படையில்‌ பார்த்தால்‌ தவிர நம்மால்‌ இன்றைய நற்செய்தியைப்‌ புரிந்துக்‌ கொள்ள முடியாது. எரேமியா இறைவாக்கினர்‌ இன்றைய முதல்‌ வாசகத்தின்‌ மூலம்‌ புரிந்து கொள்ள நமக்குத்‌ துணைபுரிகிறார்‌ அவரும்‌ பேறுபெற்றோரைப்‌ பற்றியும்‌ சபிக்கப்பட்டோரைப்‌ பற்றியும்‌ கூறுகிறார்‌. தனது நம்பிக்கையை முழுவதும்‌ மனிதன்‌ மேல்‌ அதாவது பணத்தின்‌ மீதும்‌ உலகப்‌ பொருட்களின்‌ மீதும்‌ வைத்து, தூன்‌ என்ற அகந்தையுடன்‌ "பணத்தால்‌ முடியாதது ஒன்றும்‌ இல்லை கடவுள்‌ எதற்கு' என்று கூறித்‌ திரிபவர்கள்‌ சபிக்கப்பட்டவர்கள்‌. மாறாகத்‌ தன்னுடையப்‌ பலவீனத்தை அறிந்து கடவுள்‌ மீது முழு நம்பிக்கை வைத்து, மிகுந்த தாழ்ச்சியுடன்‌ என்னிடம்‌ இருப்பது எல்லாமே கடவுளிடம்‌ இருந்து வந்ததுதான்‌ எனக்கு எல்லாமே கடவுள்‌ தான்‌ என்று தன்னையேக்‌ கடவுளிடம்‌ முழுமையாக ஒப்படைத்தவர்களே பேறுபெற்றோர்‌ என்று கூறுகிறார்‌. இன்று இயேசு கிறிஸ்து நமக்குத்‌ தரும்‌ செய்தியும்‌ இந்த நம்பிக்கையை அடிப்படையாகக்‌ கொண்டே அமைந்துள்ளது.

வறுமையோ, அழுகையோ, தன்னிலே பேறுபெற்றவையென்றோ அவற்றைக்‌ கடவுள்‌ விரும்புகிறார்‌ என்றா நாம்‌ அவற்றிலிருந்து மீள வழி தேடக்‌ கூடாது என்றோ இயேசு கூறவில்லை. ஏனென்றால்‌ வறுமையும்‌ துன்பமும்‌ அழுகையும்‌ தன்னிலே பேறு பெற்றவைகள்‌ அல்ல. அதனாலதான்‌ இன்றைய அரசியல்‌ தலைவர்களும்‌ ஆன்மீகத்‌ தலைவர்களும்‌ ஏழ்மையைப்‌ போக்க வேண்டும்‌, வறுமையை ஒழிக்க வேண்டும்‌ என்று பறைசாற்றிக்‌ கொண்டிருக்கின்றனர்‌. இறைமகன்‌ இயேசு பசியால்‌ இருந்த மக்களுக்குப்‌ புதுமை செய்து உணவு கொடுத்தார்‌ (மத்தேயு 15:32: 38) அழுது கொண்டிருந்த ஏழைக்‌ கைம்‌ பெண்ணின்‌ மகனை உயிர்ப்பித்து அவரது துயர்‌ துடைத்ததைப்‌ பார்க்கிறோம்‌ (லூக்கா 7:14-15).

'அப்படியாணல்‌ இயேசுவின்‌ பார்வையில்‌ ஏழைகள்‌ யார்‌? மத்தேயு அழகாகச்‌ சொல்கிறார்‌, " எளிய மனத்தோர்‌ பேறுபெற்றோர்‌" கடவுள்‌ மேல்‌ தங்கள்‌ முழு நம்பிக்கையை வைத்தவர்களையே இயேசு ஏழைகள்‌ என்கிறார்‌. பணத்தின்‌ மீதோ பொருளின்‌ மீதோ 'பதவியின்‌ மீதோ நம்பிக்கை வைக்காமல்‌ கடவுள்‌ மீது நம்பிக்கை வைத்தவர்கள்‌. ஒரு குழந்தை தனது தாயின்‌ கைகளில்‌ புகுவதைப்‌ போல யார்‌ கடவுளின்‌ கைகளில்‌ தன்னையே அர்ப்பணித்து தன்னையேக்‌ கடவுளின்‌ அதிகாரத்தின்‌ கீழ்‌ ஒப்படைக்கிறார்களோ அவர்களே ஏழைகள்‌ தன்‌ வாழ்விற்கென்றிருந்த இரண்டு செப்புக்‌ காசுகளையும்‌, கடவுள்‌ தன்னைக்‌ காப்பார்‌ என்ற நம்பிக்கையில்‌ காணிக்கைப்‌ பெட்டியில்‌ போட்ட ஏழைக்‌ கைம்பெண்ணைய்‌ போல நம்பிக்கைக்‌ கொண்டோரே ஏழைகள்‌ என்கிறார்‌

இயேசுவும்‌ நன்னை முழுமையாகத்‌ தன்‌ தந்தையின்‌ கைகளில்‌ ஒப்படைப்பதை விலிலியத்திலே தெளிவாகக்‌ காணலாம்‌. " என்‌ சித்தப்படி அல்ல. உம்‌ சித்தப்படியே நடக்கட்டும்‌! என்று பல முறை கூறுகிறார்‌. இறுதியாகச்‌ சிலுவையிலே உயிர்விடும்‌ போதுகூட " தந்தையே உம்‌ கைகளில்‌ என்‌ ஆவியை ஒப்படைக்‌- கின்றேன்‌" என்று கூறி உயிர்‌ நீத்தார்‌.

இந்த உலகத்தின்‌ ஏழ்மை தன்னிலே பேறுபெற்றது இல்லை என்றாலும்‌, அந்த ஏழ்மை நிலையும்‌ பெரும்பாலான நேரங்களில்‌ கடவுள்‌ நம்பிக்கைக்கு இட்டுச்‌ செல்கிறது.

ஏழைகள்‌ எளிதில்‌ ஏமாற்றப்படுகின்றனர்‌, ஆட்சியாளர்கள்‌ யாருமே அவர்கள்‌ மீது அக்கறை கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில்‌ அவர்கள்‌ இறைவனை மட்டுமே தங்கள்‌ அடைக்‌கலமாகக்‌ கொண்டு அவரை அண்டி வருகின்றனர்‌. (பணம்‌ படைத்தவர்‌ ஒருவருக்கு நோய்‌ வந்தால்‌ உடனே பெரிய மருத்துவ நிபுணரிடம்‌ செல்வார்கள்‌. ஆனால்‌ ஏழைகள்‌ கடவுளின்‌ மேல்‌ பாரத்தைப்‌ போட்டு " நீதானே காப்பாத்தனும்‌" என்று வேண்டிக்‌ கொண்டு இக்கட்டான சூழ்நிலையில்‌ தான்‌. மருத்தவரிடம்‌ செல்வர்‌.)

விவிலியத்திலே பார்க்கிறோம்‌. சாதாரண மக்களும்‌ ஒடுக்கப்‌ பட்டோரும்‌ கைவிடப்பட்டோரும்‌ தான்‌ இயேசுவின்‌ போதனையை ஏற்றார்கள்‌. கற்றறிந்தப்‌ பரிசேயரோ மறைநூல்‌ அறிஞரோ பணம்‌ படைத்த சதுசேயர்களோ அல்ல. (நமது ஊரின்‌ வரலாற்றைப்‌ புரட்டிப்‌ பார்த்தாலும்‌ முதல்‌ முதலில்‌ கிறிஸ்தவ மறை போதிக்கப்பட்ட காலத்தில்‌, முதலில்‌ கிறிஸ்தவ மறையைத்‌ தழுவியது படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள்‌ தான்‌. பணம்‌ படைத்தவர்களோ, படித்தவர்களோ அல்ல (கொரி. 1.26).
வறுமையினாலும்‌ ஏழ்மையினாலும்‌ துவண்ட மக்கள்‌ தான்‌ பிறருடைய துன்பத்தை எளிதில்‌ புரிந்து கொள்ள முடியும்‌. இதனால்தான்‌ ஆண்டவர்‌ இயேசு கிறிஸ்துவே மனிதர்களாகிய நம்மை மீட்க மனித உருக்கொண்டு இவ்வுலகில்‌ சாதாரண மனிதணகப்‌ பிறந்தார்‌. பிறருடைய துன்பத்தைப்‌ புரிந்து கொள்வதனால்‌ இயற்கையாகவே பிறருக்கு உதவும்‌ உள்ளம்‌ வந்து விடுகிறது. இது ஒரு ஏணிப்படியாக அமைகிறது.

நற்செய்தியின்‌ இரண்டாம்‌ பகுதியில்‌ இயேசுகிறிஸ்து பணக்‌காரர்களைக்‌ கடுமையாகச்‌ சாடுகிறார்‌. ஏன்‌? பணமும்‌, பொருள்களும்‌ தன்னிலே தமையானலையா? சாபத்துக்குரியனவா? இல்லை. அது. எல்லாமே இறைவன்‌ அருளிய கொடை. அதைப்‌ பரிந்து கொண்டு நல்வழியிலே செலவழிக்காமல்‌ தான்‌ மட்டுமே எல்லா சுகங்களையும்‌ அனுபவிக்க வேணடும்‌ என்ற எண்ணம்‌ கொண்டவர்களைத்தான்‌ இயேசு சபிக்கப்பட்டவர்களாகக்‌ கூறுகிறார்‌.

" பணம்‌ என்றால்‌ பிணமும்‌ வாயைத்‌ திறக்கும்‌' என்ற பழமொழிக்கேற்ப செல்வம்‌ மனிதனைக்‌ கடவுளை நோக்கியப்பயணத்திலிருந்து அழிவுக்குச்‌ செல்லும்‌ பாதைக்கு திசை திருப்புகிறது. செய்தித்தாள்களில்‌ அன்றாடம்‌ பார்க்கிறோம்‌. எத்தனை கொலைகள்‌ கொள்ளைகள்‌ இதெல்லாம்‌ எதற்காக? எல்லாம் பணத்திற்காகத்தான்‌. செல்வ நாட்டம்‌ பல தீமைகளுக்கு அடித்தளமாக அமைகிறது. புனித பவுல்‌ கூறுகிறார்‌ " பணமே அனைத்துத்‌ தீமைகளுக்கும்‌ அடித்தளம்‌" (1திமோ, :10). ஏனென்றால்‌ பணம்‌ சேர சேர பேராசை தானாக வந்து விடுகிறது. காசே கடவுளாகி விடுகிறது. கடவுள்‌ ஓரங்கட்டப்‌ படுகிறார்‌. ஆகவேதான்‌ இயேசு கூறுகிறார்‌: " ஊசியின்‌ காதில்‌ ஒட்டகம்‌ நுழைவதை விடப்‌ பணக்காரர்‌ விண்னரசில்‌ நுழைவதுக்‌ கடினம்‌" (மத்தேயு 19:24) ஆகவே பணக்காரர்கள்‌ தங்களுக்கு உள்ள செல்லத்தை இறைவன்‌ அளித்தக்‌ கொடையாக எண்ணி அதை நல்வழியில்‌ பயன்படுத்த அழைப்பு விடுக்கிறார்‌.

இந்த உலகத்தின்‌ கண்னோட்டத்தில்‌ ஏழைகள்‌ என்றால்‌ இல்லாதவர்கள்‌, பணக்காரர்கள்‌ என்றால்‌ இருப்பவர்கள்‌. ஆனால்‌ கடவுளின்‌ எண்ணங்களும்‌ வழிகளும்‌ மனிதர்களின்‌ எண்ணங் களையும்‌ வழிகளையும்‌ விட உயர்ந்தவை (எசா. 55:8-9) இயேசுவின்‌ பார்வையில்‌ ஏழைகள்‌ என்றால்‌ இருப்பவர்கள்‌. பொன்னோ பொருளோ அல்ல. மாறாக

எளிய மனம்‌ இருப்பவர்கள்‌ (மத்தேயு 5:3) தன்‌ கணவனோ, மனைவியோ மகனோ மகளோ யார்‌ தவறு செய்தாலும்‌ மன்னித்து ஏற்றுக்கொள்ளும்‌ எளிய மனம்‌ இருந்தால்‌ நாமும்‌ பேறுபெற்றோர்‌.

தன்‌ பாவத்தை நினைத்து மனம்‌ வருந்தும்‌ குணமும்‌, பிறர்‌ துன்பத்தைப்‌ பார்த்து தன்னால்‌ ஆன உதவியைச்‌ செய்தால்‌ நாமும்‌ பேறுபெற்றோர்‌. ஏழை இலாசர்‌ மற்றும்‌ பணக்காரன்‌ உவமையில்‌ பார்க்கிறோம்‌, தவறு ஏதும்‌ செய்யாமல்‌ இருந்தும்‌ பணக்காரன்‌ தண்டிக்கப்படுகிறான்‌. ஏன்‌? அவனுக்குப்‌ பிறருக்கு உதவும்‌ மனம்‌ இல்லை.

நீதிக்காக நேர்மைக்காகப்‌ பசித்திருந்தால்‌ அநியாயம்‌ நடக்கும்‌ போது அதைத்‌ தட்டிக்‌ கேட்டால்‌ நாமும்‌ பேறுபெற்றோர்‌. ஒவ்வொரு மனிதரிலும்‌, படைப்பிலும்‌, நம்‌ வாழ்வில்‌ நடக்கும்‌ எந்தவொரு செயலிலும்‌ கடவுளின்‌ செயல்‌ என்ன என்று அறிய முயலும்‌ ஆன்மீகப்‌ பசி இருந்தால்‌ நாமும்‌ பேறுபெற்றோர்‌. இதோ இங்கேக்‌ கடவுளைக்‌ கண்டு அவரோடு உறவாட வந்திருந்தால்‌ நீங்கள்‌ அனைவருமே பேறுபெற்றோர்‌.

நமது பெயர்‌ பேறுபெற்றோர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெறுவதும்‌, சபிக்கப்பட்டோர்‌ பட்டியலில்‌ இடம்‌ பெறுவதும்‌ நமது வாழ்க்கை முறையில்தான்‌ உள்ளது. பேறுபெற்றோர்‌ பட்டியலில்‌ இடம்பெற. நம்மிடம்‌ அவசியம்‌ இருக்க வேண்டிய ஒன்று கடவுள்‌ மீது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையே நமக்குத்‌ தேவையான அனைத்து நற்குணங்களையும்‌ கொண்டுவரும்‌.

இதோ அடிமை என்று தன்னையே முழுவதும்‌ இறைவனிடம்‌ அர்ப்பணித்த நமது அன்னைக்கு இருந்தது அசைக்க முடியாத நம்பிக்கை, அதனால்‌ தான்‌ தலைமுறையெல்லாம்‌ அவரைப்‌ பேறுடையாள்‌, பேறுபெற்றவள்‌, என்று போற்றிக்‌ கொணடிருக்கிறது. அந்த நம்பிக்கைதான்‌, அவரைப்‌ பல மைல்‌ தூரம்‌ நடக்க செய்து எலிசபெத்திற்கு உதவி செய்யத்‌ தூண்டியது. அந்த நம்பிக்கை தான்‌ கானாவூர்‌ கல்யாணத்திலே " அவர்‌ சொல்வதையெல்லாம்‌ செய்யுங்கள்‌' என்று சொல்லத்‌ தூண்டியது. அந்த நம்பிக்கைதான்‌ இன்றளவும்‌ பல்வேறு இடங்களில்‌ பல்வேறு மக்களுக்கு, நலமளிக்கச்‌ செய்கிறது.

இதோ இந்தத்‌ திருப்பலியில்‌ கடவுள்‌ எழுந்தருளியிருக்கிறார்‌ என்ற நம்பிக்கையுடன்‌ நமது தேலைகள்‌, நன்றிகள்‌ அனைத்தையும்‌ எடுத்துரைப்போம்‌. மாற்றத்தைக்‌ கண்டுணர்ந்து வீடு செல்வோம்‌.
பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

யார்‌ பேறுபெற்றோர்‌? என்றத்‌ தலைப்பில்‌ கொண்டு சொல்லலாம்‌.
இன்றைய இந்தியாவில்‌ கிறிஸ்தவத்திற்கு எதிரான வன்‌ முறைகளை, எதிர்நோக்கும்‌ அடிப்படையில்‌ அமைக்கலாம்‌.
பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்‌, பகிர்தலும்‌ என்றத்‌ தலைப்பில்‌ அமைக்கலாம்‌.
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்

பொதுக்‌ காலம்‌ ஆறாம்‌ ஞாயிறு

இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ எரேமியா இருவகை மாந்தரை முன்வைக்கின்றார்‌. மனிதரில்‌ நம்பிக்கை வைப்பவரை நீர்‌ அருகில்‌ நடப்பட்ட மரத்திற்கும்‌ ஒப்பிட்டுப்‌ பேசுகின்றார்‌. நற்செய்தியில்‌ நமதாண்டவர்‌ தனது சமவெளிப்‌ பொழிவில்‌ பேறுகளையும்‌, சாபங்களையும்‌ பற்றிப்‌ பேசுகின்றார்‌. இவ்வாறு மக்களை அறநெறி வாழ்வுக்கு அழைக்கின்றது இறைவார்த்தை, இன்றைய நற்செய்தியில்‌ காணப்படும்‌ 'சமவெளிப்‌ பொழிவு' பற்றிய சில பின்னணித்‌ தகவல்களை அறிந்துகொண்டு அதுதரும்‌ செய்திகளையும்‌, வாழ்வியல்‌ போதனைகளைப்‌ பற்றியும்‌ அறிந்து கொள்ளமுயல்வோம்‌.

பின்னணி

இன்றைய நற்செய்தி இயேசு " சமவெனியான ஓரிடத்தில்‌" (வச. 17) போதித்தார்‌, சமவெளிப்‌ பொழிவு' என்றழைக்கப்‌ படுகின்றது. இது 'பெருந்திரனான அவருடைய சீடர்களுக்கும்‌, *பெருந்திரளான மக்களுக்கும்‌' (வச 17) வழங்கப்படுகின்றது. இதில்‌ இயேசு போதித்த இறையரசு குழுமத்தில்‌ யார்‌ யார்‌ இணைக்கப்‌ படுவர்‌ எனக்‌ கூறுகின்றார்‌.

இயேசுவின்‌ இந்த சமவெளிப்‌ பொழிவை மத்தேயுவின்‌ மலைப்‌ பொழிவுடன்‌ ஒப்பிட்டு நோக்கும்போது, மத்‌ 5-7 வை விட இது மிகவும்‌ சிறியதாகவும்‌, கருத்தனவில்‌ கூர்மைப்‌ படுத்தப்பட்டதாகவும்‌ உள்ளது. மத்தேயு நூற்றுப்‌ பதினோரு வசனங்களில்‌ தரும்‌ மலைப்‌ பொழிவை லூக்கா 29 வசனங்களில்‌ சுருக்கித்‌ தருகின்றார்‌. மத்தேயு " சட்டம்‌ மற்றும்‌ இறைவாக்கினர்‌ பற்றிக்‌ குறிப்பிடுபவை லூக்காவில்‌ காணப்படவில்லை, லூக்காவின்‌ சமவெளிப்‌ பொழிவை பின்வருமாறு பிரிக்கலாம்‌.

- பேறுகளும்‌ கேடுகளும்‌ (வச. 20-26).
- இறையரசை சார்ந்தவரின்‌ வாழ்க்கை (வச. 27).
- செயலில்‌ வெளிப்படும்‌ வாழ்வு (வச. 41-49)

இலக்கிய வகை

மத்தேயுவின்‌ மலைப்பொழிவிற்கும்‌ லூக்காவின்‌ சமவெளிப்‌ பொழிவிற்கும்‌ மாதிரியாக அமைவது மோசே மக்களுக்கு சட்டங்‌ களை வழங்கிய நிகழ்வாகும்‌ (காண்‌ விப 79: 20:23; இச 4: 44, 26: 19), மத்தேயுவின்‌ தொடக்க வசனங்களில்‌ (மத்‌ 5: 1-2) இயேசு மலைமீது ஏறி போதித்தது நமக்கு மோசே மலைமீது ஏறிச்சென்றதை நினைவூட்டுகின்றன. ஆனால்‌ மத்தேயு மோசே தந்த சட்டங்களுக்கு மாற்றாக, அவற்றையும்‌ கடந்து இயேசு தன்‌ சட்டங்களைத்‌ தருகின்றதாக அமைத்திருக்கின்றார்‌ " -என்று முற்காலத்தவர்க்குக்‌ கூறப்பட்டிருப்பதைக்‌ கேள்விப்பட்டிருக்கிறீர்கள்‌. ஆனால்‌ நான்‌. உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌..." (மத்‌ 5: 27-22, 27-28, 37-32, 33-34 38-39, 43-44). எனவே மத்தேயுவில்‌ இயேசு மோசேவின்‌ சட்டத்தைவிட உயரிய சட்டத்தை வழங்குபவராகக்‌ காட்டப்படுகின்றார்‌. லூக்காவின்‌ சமவெளிப்‌ பொழிவில்‌ இயேசு, மோசேவைப்போல, ஓர்‌ இறைவாக்கினராக, ஞானியாக காட்டப்படுகின்றார்‌.

மத்தேயுவின்‌ மலைப்பொழிவு ஒன்பது பேறுகளை மட்டும்‌ குறிப்பிடுகின்றது. அதற்கு இணையான அல்லது மாறாக கேடுகள்‌ தரப்படவில்லை.இவை அனைத்தும் மூன்றாம்நபர்‌ மீதுகுறிப்பிட்டு படர்க்கையில்‌ தரப்பட்டுள்ளன. மேலும்‌ அவற்றின்‌ தொனி தனிநபர்‌ ஆன்மிக மனநிலைப்‌ பற்றியதாகவே இருக்கின்றன. இதற்கு மாறாக லூக்கா பேறுகளோடு, கேடுகளையும் குறிப்பிடுகின்றார்‌. இது நமக்கு இணைச்சட்ட நூலில்‌ காணப்படும்‌ " ஆசியையும்‌ சாபத்தையும்‌ (காண்‌ இச 30:1, 19) நினைவூட்டுகின்றது. மேலும்‌ சாபங்கள்‌, பழைய ஏற்பாட்டில்‌ இறைவாக்கினர்களின்‌ பல சாபங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றது. இங்கு பேறுகளும்‌ சாபங்களும்‌, முன்னிலையில்‌, இரண்டாம்‌ ஆளை நோக்கி கூறுபவையாக ஏழைகளே நீங்கள்‌, செல்வர்களே உங்களுக்கு அமைந்துள்ளன. மேலும்‌ இங்கு கூறப்பட்டுள்ளவை தனிநபர்‌ சார்ந்த ஆன்மிகமாக மட்டுமல்லாது, பொருளாதார, சமூகம்‌ சார்ந்த சிந்தனைகளாகவும்‌ அமைகின்றன.

அமைப்புமுறை

லூக்காவின்‌ சமவெளிப்பொழிவில்‌ முதவில்‌ மூன்று பேறுகளும்‌, அடுத்து மூன்று கேடுகளும்‌ தரப்பட்டுள்ளன. கேடுகள்‌ மூன்றும்‌ பேறுகளுக்கு எதிர்‌ இணையாக அமைந்துள்ளன (ஏழை - செல்வர்‌, பட்டினியாய்‌ இருப்போர்‌ - உண்டு கொழுத்திருப்போர்‌, வெறுத்து ஒதுக்கப்படுவோர்‌, புகழ்ந்து பேசப்படுவோர்‌). இந்த ஆறில்‌ முதலும்‌, கடைசியனவைகளும்‌ நிகழ்காலத்தைக்‌ குறித்துக்காட்ட இவைகளுக்கு உள்ளே உள்ள நான்கும்‌ எதிர்காலத்தை குறித்து நிற்கின்றன. இனி இப்பகுதி தரும்‌ வாழ்வியல்‌ செய்திகளைக்‌ காண்போம்‌.

1. ஏற்கப்பட்டோர்‌, தள்ளப்பட்டோர்‌


பேறுகள்‌, சாபங்கள்‌ வழிஇருவகைப்பட்டமாந்தர்‌ காட்டப்‌ படுகின்றனர்‌. செல்வர்களும்‌, உண்டு கொழுத்திருப்போரும்‌, புகழ்ந்து பேசப்படுபவரும்‌ (வச. 24-26) புறந்தன்ளப்படுகின்றனர்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ மகிழ்ந்து இருக்கின்றனர்‌. அனுபவிக்கின்றனர்‌. மாறாக ஏழைகளும்‌, பட்டினியாய்‌ இருப்போறும்‌, வெறுத்து ஒதுக்கப்பட்டோரும்‌ ஏற்கப்படுகின்றனர்‌. இவ்வாறு ஏற்கப்‌ படுவதும்‌, தள்ளப்படும்‌ இறுதிக்‌ காலத்து நிகழ்வாகும்‌. மேலும்‌ மனிதர்களால்‌ தள்ளப்படுவோர்‌ கடவுளால்‌ ஏற்கப்படுவர்‌. மனிதர்களால்‌ புகழப்படுவோர்‌ கடவுளால்‌ தள்ளப்படுவர்‌.

2. இயேசுவின்‌ அனுபவமும்‌ சீடர்களிண்‌ அனுபவமும்‌.

இயேசு இங்கு பெருந்திரளான அவருடைய சீடர்களுக்கு கூறுவது அவருக்கே பொருந்துகின்றது. இயேசு அவர் காலத்து தலைவர்களால்‌ ஒதுக்குத்‌ தள்ளப்பட்டார்‌. ஆனால்‌ அவரின்‌ சீடர்களால்‌ கடவுளின்‌ மகனாக ஏற்கப்பட்டார்‌. எனவே இயேசுவின்‌ சீடர்களின்‌ வாழ்விலும்‌ இயேசுவுக்காக அவர்கள்‌ வெறுத்து ஒதுக்கப்படும்போது அவர்கள்‌ துள்ளி மகிழ்ந்து கொண்டாட வேண்டும்‌. ஏனெனில்‌ அவர்கள்‌ இறைவனால்‌ ஏற்கப்படுவர்‌. இவ்வாறு மனிதர்களால்‌ தள்ளப்படுவது உண்மை யான இறைவாக்கினர்களின்‌ அனுபவமாகவும்‌ இருந்தது. எனவே நாம்‌ உண்மையான இறைவாக்கு பணிசெய்யும்போது எதிர்ப்புகளை கண்டு மனம்‌ துவளாமல்‌ இருப்போம்‌. ஏனெனில்‌ நாம்‌ இறைவனால்‌ ஏற்கப்படுவோம்‌.
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

பொதுக்காலம்‌ - ஆறாம்‌ ஞாயிறு - மூன்றாம்‌ ஆண்டு
முதல் வாசகம்: எரே. 17:5-8

இஸ்ரயேல்‌ மக்கள்‌ தம்‌ உடன்படிக்கைக்‌ கடவுளை மறக்கவும்‌ மறுக்கவும்‌ தொடங்கியபொழுது எரேமியா தோன்றி அவர்களை எச்சரிக்கின்றார்‌. இவர்கள்‌ தம்‌ படைபலத்திலும்‌, வேற்று அரசர்களுடன்‌ தாம்‌ செய்த உடன்படிக்கையிலும்‌ நம்பிக்கை கொண்டனர்‌ ; இதை விடுக்து இறைவனில்‌ நம்பிக்கைகொள்ளும்படி தூண்டுகிறார்‌.
மனிதனை நம்பாதே

இவ்வுலகும்‌ அதில்‌ வாழும்‌ அனைத்தும்‌ நிலையற்றவை. மனிதன்‌ மாறுபவன்‌; மறைபவன்‌. " நில்லாதவற்றை நிலையின என்‌ றுணரும்‌ புல்லறிவாண்மை கடை" (குறள்‌ 331). எனவேதாள்‌, " பற்றுக பற்றற்றான்‌ பற்றினை அப்பற்றைப்‌ பற்றுக பற்று விடற்கு" (குறள்‌ 350) என்கிறார்‌ வள்ளுவர்‌.

நம்பிக்கையில்‌ தான்‌ சமுதாயம்‌ இயங்குகிறது. ஓட்டுநரை நம்பியே நாம வண்டியில்‌ பயணம்‌ செய்கிறோம்‌; சமையல்காரனை நம்பியே நாம்‌ உணவகம்‌ செல்லுகிறோம்‌. எனவே மனிதனை நம்புவது தவறில்லை. ஆனால்‌ இஸ்ரயேல்‌ இனம்‌ தாம்‌ இறைவனுடன்‌ செய்துகொண்ட உடன்படிக்கையை நிராகரித்து, வேற்றுக்‌ கடவுள்களை ஏற்றது; வேற்று அரசர்களுடன்‌ கூட்டுச்‌ சேர்ந்தது. இத்தகையவன்‌ " தன்‌ இதயத்தை ஆண்டவரிடமிருந்து அகற்றுகிறான்‌; அவன்‌ பாலை நிலத்துப்‌ பூண்டுக்குச்‌ சமம்‌" (6). " ஆண்டவர்‌ என்றென்றும்‌ சொல்‌ தவறாதவர்‌ ' (திபா. 145). மளிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம்‌ தஞ்சம்‌ புகுவதே நலம்‌" (திபா. 18 : 8).

இறைவனே இஸ்ரயேல்‌ இனத்தை நடத்தி வந்தார்‌. போரிட ஆணை யிட்டதும்‌, அதில்‌ வெற்றி தந்ததும்‌ அவரே. எனினும்‌ அவர்கள்‌ அவரது விருப்பத்திற்கு மாறாகச்‌ சென்றபொழுது தோல்வியையே தழுவினர்‌ (எசா. 30 : 2) இறைவனைவிட மனிதனில்‌ நான்‌ நம்பிக்கை வைத்துள்ளேனா? இறைவனில்‌ நம்பிக்கை " ஆண்டவர்‌ என்‌ கற்பாறை; என்‌ கோட்டை; என்‌ மீட்பர்‌; என்‌ இறைவன்‌; நான்‌ புகலிடம்‌ தேடும்‌ மலை அவரே; என்‌ கேடயம்‌, எனக்கு மீட்பளிக்கும்‌ வல்லமை, என்‌ அரண்‌ (திபா. 18 : 2). இறைவனில்‌ நம்பிக்கை வைக்காதவன்‌ வரண்டு போன பாலை நிலத்துப்‌ பூண்டு என்றால்‌, இறைவனை நப்பிச்‌ சரண்‌ அடைபவன்‌ நீர்‌ அருகில்‌ நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவான்‌: அது என்றும்‌ ஈரத்தில்‌ வேரூன்றி நிற்கும்‌; கோடைக்‌ காலத்தில்‌ அதற்கு அச்சமில்லை; ... அது ஒருகாலும்‌ கனி கொடாதிருக்காது' (8). அனைத்துப்‌ பொருள்களும்‌ மனித மேம்பாட்டிற்காகவே படைக்கப்‌ பட்டுள்ளன. பொருளைத்‌ தேடி, வருவாயைப்‌ பெருக்கி, குடும்பத்தைப்‌ பேணுவது குடும்பத்‌ தலைவனின்‌ கடமை. ஆனால்‌ இவ்வுலகப்‌ பொருள்களையே தம்‌ குறிக்கோளாய்க்கொண்டு, அவற்றைக்‌ கடவுளாக வழிபடுபவன்‌ பாலைவனப்‌ பூண்டிற்குச்‌ சமம்‌. அனைத்துப்‌ பொருள்களும்‌ ஆண்டவனின்‌ அருட்கொடை; எனவே தம்மிடம்‌ எஞ்சியுள்ளதை இல்லாதவர்களுடன்‌ பகிர்ந்து கொள்பவர்கள்‌ இறையருள்‌ பெறுவர்‌. வறியவரின்‌ கடும்பசி தீர்த்தலே ஒருவன்‌ தன்‌ வானுலக வாழ்வுக்குச்‌ சேர்த்து வைக்கும்‌ சேமநிதியாகும்‌.

அற்றார்‌ அழிபசி தீர்த்தல்‌ அஃதொருவன்‌
பெற்றான்‌ பொருள்‌ வைப்புழி (குறள்‌ 228)

" கடவுளை நம்பினோர்‌ கைவிடப்படார்‌'' என்ற தத்துவமே இங்கு வேதவாக்காக ஒலிக்கிறது. ஆபிரகாம்‌ இறைவனை நம்பி தன்‌ சொந்த நாட்டை விட்டு இறைவனைப்‌ பின்தொடர்ந்தார்‌; வெற்றி கண்டார்‌. மோசே செங்கடலைக்‌ கடந்ததும்‌ நம்பிக்கைக்குச்‌ சான்று பகர்கிறது. என்னையும்‌ இவ்வரிசையில்‌ வைத்து எண்ண முடியுமா?
ஆண்டவரை நம்புகிறவன்‌ நீரருகில்‌ நடப்பட்ட மரத்திற்கு ஒப்பாவான்‌.
இரண்டாம் வாசகம்‌: 1கொரி. 15:12,16-20

இயேசுவின்‌ உயிர்ப்பு நம்‌ விசுவாசத்தின்‌ ஆணிவேரும்‌, அச்சாணியுமாக விளங்குகிறது. உயிர்ப்பு வாழ்வில்‌ நமக்குள்ள நம்பிக்கை, இயேசுவின்‌ உயிர்ப்பிலே ஊன்றி நிற்கிறது. இவ்விசுவாச உண்மையில்‌ மூன்று ஆழ்ந்த அர்த்தங்களைத்‌ தியானிப்போம்‌.

பொய்மையைவிட உண்மையே சக்திமிக்கது:

இயேசு இறைவனைப்‌ பற்றியும்‌ மனிதனைப்‌ பற்றியும்‌ உண்மையை எடுத்துரைத்தார்‌. ஆனால்‌ அவரின்‌ எதிரிகளால்‌ அதை ஏற்க முடியவில்லை. உண்மையாகிய அவரையே சாகடிக்க விரும்பினர்‌; அவரைக்‌ கல்லறையில்‌ புதைத்தனர்‌. இயேசுவே கூறினார்‌: " கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள்‌ கொல்ல முயலுகிறீர்கள்‌'' (யோ. 8 : 40).

ஆனால்‌ இயேசு உண்மைக்குச்‌ சாட்சியம்‌ கூறினார்‌. "உண்மையை எடுத்துரைப்பதே என்‌ பணி. இதற்காகவே நான்‌ பிறந்தேன்‌; இதற்காகவே உலகிற்கு வந்தேன்‌. உண்மையைச்‌ சார்ந்தவர்‌ அனைவரும்‌ என்‌ குரலுக்குச்‌ செவிசாய்க்கின்றனர்‌'' (யோ. 18: 37). உலகை வென்றுவிட்டேன்‌ என்று கூறிய இயேசு, தன்‌ உண்மை சாட்சியத்தை உலகம்‌ இருட்டடிக்க முடியாது என்பதையும்‌ தெளிவுபடுத்தினார்‌.
" ஒளி இருளில்‌ ஒளிர்ந்தது; இருள்‌ அதன்‌மேல்‌ வெற்றி கொள்ளவில்லை" (யோ. 1 : 8).

கிறிஸ்துவில்‌ விசுவாசம்‌ கொள்வோரும்‌ இயேசுவின்‌ உண்மையில்‌ விடுதலை காண்கின்றனர்‌. " உண்மையை அறிந்தவர்களாயும்‌ இருப்பீர்கள்‌. உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்‌ (யோ. 8 : 32).

நன்மை தீமையை வென்றது !

இயேசுவின்‌ உயிர்ப்பிலே அவர்‌ இலட்சியக்‌ கனவு விடிகின்றது. சென்ற இடமெல்லாம்‌ நம்மையே செய்துவந்த இயேசுவின்‌ வாழ்வு முடியவில்லை. மாறாக அவர்‌ ஆற்றிய நன்மைகளுக்குத்‌ தந்தை அளித்த முத்திரையாக உயிர்ப்பு ஒளிர்கிறது.

நன்மையான செயல்களைத்‌ தீய சக்திகள்‌ விழுங்கிவிட முடியாது; அழித்துவிட முடியாது என்பதற்கு உயிர்ப்பு ஒரு சான்று. எனவேதான்‌ பவுல்‌ கூறுகிறார்‌, " தீமை உங்களை வெல்லவிடாதீர்கள்‌, நன்மையால்‌ தீமையை வெல்லுங்கள்‌ (உரோ. 12 : 21). " கடவுளிடமிருந்து பிறக்கும்‌ அனைத்தும்‌ உலகை வெல்லும்‌; உலகை வெல்லுவது நம்‌ நம்பிக்கையே (1 யோ, 5 : 4). நன்மையை நாடுவோர்‌ இன்னல்களுக்கு இரையானாலும்‌ இறுதியில்‌ வெற்றி பெறுவர்‌ என்பதில்‌ ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேனா?

அன்பு பகைமையை ஆட்கொண்டது

இயேசுவின்‌ பகைவர்‌ அவரை சாவுக்கு உட்படுத்தினர்‌. ஆனால்‌ அவர்‌ தன்‌ விரோதிகளை மன்னிக்கும்‌ அன்பால்‌ பகைமையையும்‌ தோற்கடித்தார்‌. " தந்தையே இவர்களை மன்னியும்‌... இவர்கள்‌ செய்வது இன்னதென்று அறியார்கள்‌..." உயிர்ப்பில்‌ இயேசுவின்‌ அன்பு வெற்றி கண்டது. அதே வெற்றியில்‌ நாழும்‌ பங்குகொள்ள இயேசு அழைக்கிறார்‌. " 'உனக்கு அடுத்திருப்பவரிடம்‌ அன்பு கூர்வாயாக', பகைவரிடம்‌ வெறுப்புக்‌ கொள்வாயாக' எனக்‌ கூறியிருப்பதைக்‌ கேட்டிருக்கிறீர்கள்‌. ஆனால்‌ நான்‌ உங்களுக்குச்‌ சொல்கிறேன்‌; உங்கள்‌ பகைவரிடமும்‌ அன்பு கூருங்கள்‌; உங்களைத்‌ துன்புறுத்துவோருக்காக இறைவனிடம்‌ வேண்டுங்கள்‌. இப்படிச்‌ செய்வதால்‌ நீங்கள்‌ உங்கள்‌ விண்ணகத்‌ தந்தையின்‌ மக்கள்‌ ஆவீர்கள்‌ " (மத்‌ 5: 43 - 45).

நற்செய்தி: லுாக் 6:20-26

லூக்கா நற்செய்தியிலிருந்து இயேசுவின்‌ " மலைப்பொழிவு" ' என்னும்‌ தொகுப்பின்‌ ஒரு பகுதி இன்றைய வாசகம்‌. நல்லோருக்கு இயேசு கூறும்‌ பேறுகளும்‌, தீயோருக்கு அவர்கூறிய சாபங்களும்‌ இன்றைய வாசகக்‌ கருத்தாகும்.

துன்புறுவோர்‌ பேறு பெற்றோர்‌

துன்பம்‌ பல வடிவங்களில்‌ நம்மைத்‌ தீண்டலாம்‌. ஏழ்மையால்‌ வரும்‌ துன்பம்‌, பசியால்‌ வரும்‌ துன்பம்‌, வேறு தொல்லைகளால்‌ வரும்‌ துன்பம்‌; இயேசுவின்‌ மதிப்பீடுகளைப்‌ பின்பற்றுவதால்‌ வரும்‌ துன்பம்‌, இவையன்ன பல துன்ப துயரங்கள்‌ நம்மைத்‌ தாக்கும்‌ போது நாம்‌ கவலையற வேண்டியதில்லை; மனம்‌ தளர வேண்டியதில்லை. இயேசுவே துன்ப துயரம்‌, பாடுகள்‌ வழியே தம்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்றினார்‌. " அவர்‌ இகழப்பட்டார்‌; மனிதரால்‌ புறக்கணிக்கப்பட்டார்‌; வேதனையுற்ற மனிதராய்‌ இருந்தார்‌ (எசா. 53 : 3). " நம்‌ குற்றங்களுக்காகக்‌ காயமடைந்தார்‌; நம்‌ தீச்செயல்‌ களுக்காக நொறுக்கப்பட்டார்‌; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர்‌ தண்டிக்கப்பட்டார்‌; அவர்தம்‌ காயங்களால்‌ நாம்‌ குணமடைகின்றோம்‌'' (எசா. 53 : 4 - 5). நமது ஏழ்மை, நமது பசி, நமது தொல்லைகள்‌ அனைத்தும்‌ பிறருடைய மீட்புக்கு உதவுவன. " நமது காயங்களால்‌ அவர்கள்‌ குணமடைந்தார்கள்‌" ' என்று பாவிகளைப்‌ பார்த்து நாம்‌ கூறக்‌ கூடிய நிலையிலே, துன்பங்களை ஏற்று வாழ வேண்டும்‌. இது நமக்கும்‌ மகிழ்வளிப்பது, பிறருக்கும்‌ மீட்பளிக்க வல்லது. நாம்‌ பேறுபெற்றவர்‌ களாவோம்‌; பிறரையும்‌ பேறுபெற்றவர்களாக்குவோம்‌.

இவ்வாறு துன்பதுயரங்களை ஏற்கும்‌ போதெல்லாம்‌ " மனுமகன்‌ பொருட்டு" ஏற்போம்‌. இயேசுவுக்காக ஏற்போம்‌. அப்போது இவ்வுலகில்‌ மட்டுமன்று; " விண்ணகத்திலும்‌ நமக்குக்‌ கைம்மாறு மிகுதியாகும்‌" (6 : 22 - 23).

திருப்தியாயிருப்பவருக்கு ஐயோ கேடு!

பணம்‌, பொருள்கள்‌, மண்‌, பெண்‌, பொன்‌, மற்றும்‌ புகழ்‌ முதலியனவற்றை நாம்‌ கொண்டிருக்கும்போது அவை நமக்கு மகிழ்ச்சி அளிப்பவையாய்‌ தோன்றலாம்‌. ஆயினும்‌ அவை தரும்‌ ஆறுதல்‌, திருப்தி, மகிழ்ச்சி, புகழ்‌ முதலியன கடலில்‌ கரைத்த காயமென மறைந்தொழியும்‌, " காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா" என்பது இவ்வுலக மகிழ்ச்சிகளைப்‌ பொருத்த மட்டிலும்‌ மிகமிக உண்மையானது. " தொட்டது விட்டது'' என்ற முறையிலே இவ்வுலகச்‌ செல்வமெல்லாம்‌ அழிந்துவிடும்‌. என்றும்‌ நிலைத்த செல்வமாய்‌ நம்மோடிருப்பது அன்பு ஒன்றே. எனவே நமது உடைமைகளைப்‌ பகிர்ந்துகொள்வது (திப. 2 : 44 - 45; 4: 32- 35), நமது மகிழ்ச்சியில்‌ பிறரையும்‌ பங்கெடுக்க வைப்பது, நமது புகழ்நிலையிலே ஏனையோரை இகழ்ந்து ஒதுக்காதிருப்பது இவையன்ன அன்புச்‌ செயல்கள்‌ வழி இறைவனின்‌ ஆசியைப்‌ பெறுவோம்‌. இன்று நம்‌ வாழ்வைக்‌ கண்டு " நீங்கள்‌ பேறுபெற்றவர்கள்‌' என்று இறைவன்‌ கூறுவாரா? கூறக்கூடுமா? அல்லது " உங்களுக்கு ஐயோ கேடு' என்ற சொற்கள்‌ தான்‌ அவர்‌ வாயிலிருந்து வருமா? " எல்லாம்‌ இயேசுவே எனக்கெல்லாம்‌ இயேசுவே, தொல்லைமிகு இவ்வுலகில்‌ சுகமில்லையே" என்று நம்மால்‌ பாடக்‌ கூடுமா? ஆண்டவருக்காக, ஆண்டவரிலே வாழக்‌ கற்றுக்‌ கொள்வோம்‌. பிறருக்காகப்‌ பிறரோடு வாழ்வதிலே தான்‌ கிறிஸ்தவ வாழ்வின்‌ அடிப்படைத்‌ தத்துவம்‌ அமைந்துள்ளதென உணர்ந்து, நம்‌ வாழ்வை அமைத்துக்‌ கொள்ளும்போது " நீங்கள்‌ பேறு பெற்றவர்கள்‌; ஏனெனில்‌ கடவுளரசு உங்களதே'' (6 : 20) என்ற சொற்கள்‌ என்றும்‌ நம்‌ காதுகளில்‌ ஒலிக்கும்‌.
( மனிதர்‌ உங்களை வெறுத்து ஒதுக்கும்‌ போது நீங்கள்‌ பேறுபெற்றவர்கள்‌.)
 
சிந்தனைப் பயணம்.திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி

வாழ்வை அளிக்கும் நம்பிக்கை


நற்செய்தியில் இயேசு சீடர்களின் மீது பார்வையைப் பதித்து அவர்களைப் பார்த்துக் கூறியதாவது: "நீங்கள் பேறு பெற்றவர்கள் ஏனெனில் விண்ணரசு உங்களது" என்றார்.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடந்து போகும் நான்கு வாழ்க்கை நிலைகளை ஆண்டவர் இயேசு இந்த நற்செய்தியில் நற்பேறுகளாக நினைவுக் கூர்கிறார் .

1 ஏழ்மை. 2 பசி. 3 அழுகை. 4 புறக்கணிக்கப்படுதல்


இத்தகைய வாழ்க்கை அனுபவங்களைத் தனிமனிதன் சந்திக்கும்பொழுது ஒருபொழுதும் மகிழ்ச்சியாக இன்றுவரை இருந்தது கிடையாது. ஆனால் ஆண்டவர் இயேசு இந்த நான்கு நிலைகளை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் இதன் எதிர்மறையான நன்மைகளும் மிகுந்த பலன்களும் தரக்கூடிய வாழ்க்கையைச் சந்திப்பார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.

இயேசுவைப் பின்பற்றும் இனிய சமூகமே நம் அனைவருக்கும் நன்மைகள் தேவை என்பதும் வாழ்வின் வளங்களும் சந்தோஷமும் தேவை என்பதும் யாரும் மறுக்கமுடியாத உண்மைகள். அப்படி இருக்க அதனைப் பெற்றுக்கொள்ள இத்தகைய துன்பங்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆண்டவர் கூறுவதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? அப்படி இயேசுவின் பார்வையில் அந்த நிலையான வளமான வாழ்வு எது?.

ஆண்டவர் இயேசு நற்செய்தியில் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய என்றும், தன்னை மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு - என்றும் மிகுந்த பலன் தரக்கூடிய விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொள்ள ஒருவரும் தவிர்க்க முடியாத வழிகளை அறிக்கை விடுகின்றார். முன்பகுதியில் நினைவு கூறப்பட்ட நான்கு நிலைகளும் பிற்பகுதியில் நினைவுகூரப்படும் இரண்டு நிலைகளும் அனுபவத்தில் நம்மைக் கடந்து செல்லும் போது நிச்சயம் நமக்கு வருத்தத்தையும் வலிகளையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. அதேவேளையில் இதைக் கடந்து நாம் முன்னேரும் போது 60,100 என்று கோதுமை மணியைப் போலப் பலுகிப் பெருகிப் பலன்களைத் தர முடியும்; நித்திய வாழ்வைப் பெற்றுக் கொள்ளும் முழு மனிதனாக முன்னேறுவதைக் காணமுடியும் இந்த முன் முன்னேற்றத்திற்கு உலக வாழ்க்கையின் நிலைத்தன்மை அதாவது உடல் ஆரோக்கியமும் மிக மிக முக்கியம். உடலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஏழ்மையையும் பசியையும் உழைப்பாலும்- சேமிப்பாலும் போக்க முடியும். அழுகையை உறவுகளின் ஆறுதலாலும், புறக்ககணிப்பை உண்மையான மனிதச் சமூகத்தின் அன்பின் அரவணைப்பாலும் மாற்ற முடியும்.

யாரும் கேட்காமல் ஆண்டவர் இயேசுவாகவே முன்வந்து செய்த ஒரு புதுமை எனில் அது மக்களின் பசியைப் போக்கிய ஐந்து அப்பமும் இரண்டு மீன்களும் பலுகச் செய்து வயிறார மக்களுக்கு உணவளித்த புதுமையே. இரு வாழ்விற்கும் உடல் ஆரோக்கியமும் அவசியமே. தீயில் இடப்படும் பொன் பிரகாசிப்பது போல வேதனைகளைக் கடந்து வரும் ஒவ்வொரு மனிதனும் பிரசவ வலியை மறந்து குழந்தையை அரவணைக்கும் தாய் போல எதிர்கால வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்குகிறான்.

பசியைப்போக்குவது உணவு
ஏழ்மையைப் போக்குவது வளமை-பணம்
அழுகையை அகற்றுவது ஆறுதல் புறக்கணிக்கப்படுவதை அழிப்பது அன்பு, அரவணைப்பு.

இயேசு மனித குலத்திற்கு வளமையை வளமான வாழ்வைத் தர - நானே வாழ்வு என்றார். பசியை அகற்றிடும் அறுசுவை உணவாக- நானே உணவு என்றார். சகோதரனையும்- அயலானையும் மற்றும் இறைவனையும் தேடி கண்ணீர் சிந்தும்போது இயேசு அவர்கள் முன் ஆறுதலுக்கு-மகிழ்ச்சிக்கு விடையாக நிற்கின்றார் . பாருங்கள் லாசரின் சகோதரி தன் சகோதரருடைய (அயலானுடைய) இறப்பிற்காக அழுதபோதும், (யோவான்11:33) மகதலா மரியா கல்லறை வாயிலில் என் ஆண்டவரைக் காணோமே? என்று இயேசுவிற்காக அழுதபோதும் (யோவான்20:11) ஆண்டவர் அவர்கள்முன் வந்து ஆறுதலை - மகிழ்ச்சியை தந்தார். அதேபோல்ஒருவன் புறக்கணிக்கப்படும் போது அவனை அரவணைக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக திருந்திய மைந்தனாக வந்தவனையும், எச்சரிக்கப்பட்ட பிறகும் தவறிய ; அதேவேளை கண்ணீர் விட்டு அழுத பேதுருவையும் - அரவணைத்து அன்பைப்பொழிகின்றார். ஆண்டவர் இயேசு நற்பேறு என குறிப்பிடும் இந்த ஏழ்மை பசி அழுகை புறக்கணிக்கப்படுதல் என்ற வாழ்வின் நான்கு நிலைகளையும் எதிர்கொள்ளும்போது நமது முன்னோக்கு மற்றும் குறிக்கோள் நமக்கும் நம்மோடு பயணிக்கும் அனைவர்க்கும் பயன்படும் விதமாக உண்மையையும் நன்மையையும் சார்ந்து செயல்படுமாயின் 60, 100 என நிறைவாழ்வின் பயன்களை இறைவனிடமிருந்து நமக்கு பெற்றுத் தருகின்றன.

பணம் , ஆறுதல், திருப்தி , சிரிப்பு மற்றும் புகழ்ச்சி ஆகியவை இறைவன் - உலகில் மனிதன் நலமுடன் பயணிக்க தந்த கொடைகள் ஆகும். எவன் ஒருவன் சுயநலமாக இக்கொடைகளை தன்னுடைய விருப்பத்திற்குஇணங்க, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்" என்று தனக்குள் கூறிக்கொண்டவனைப்போல் (லூக்கா 12 :19) வாழ்கின்றானோ அவனுக்கு, அவர்களுக்கு ஐயோ கேடு என்பதையும் நாம் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய சுயநலவாதிகளைத்தான் இயேசு எச்சரித்தார். பணம் , ஆறுதல், திருப்தி , சிரிப்பு மற்றும் புகழ்ச்சி என்ற இந்தக் கொடைகள் தனியொருவரின் சுயநலத்திற்காக மட்டும் பயன்படும் போதும், அயலானை வஞ்சிக்கும் ஆயுதங்களாகும் போதும் "சாபங்கள்" ஆகின்றன.

நற்பேறுகளையும் சாபங்களையும் இப்போது இணைத்துப் பார்ப்போம் வாருங்கள்
1 பணம் இருக்கும் போது ஏழ்மை இருக்காது
2 திருப்தி இருக்கும்போது பசி இருக்காது
3 சிரிப்பு இருக்கும்போது அழுகை இருக்காது
4 ஆறுதல் இருக்கும் போது புறக்கணித்தல் இருக்காது

சரி, இப்படி எதிருக்கு எதிர் என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?.. இறைவன் தரும் கொடைகளை ஆண்டு அனுபவிக்கவே மனிதன் படைக்கப்பட்டான். தனக்கு மட்டும் பயன்படுத்தும்போது அது சாபமாகிறது, அதையே பல்லுயிரோடு பகிர்ந்து பயன் படுத்தி வாழும்போது கொடைகள் ஆகின்றன. உலகில் அது ஆவியின் கொடைகளானாலும், அகிலத்தின் கொடைகளானாலும் ஒருவருக்கே அனைத்து கொடைகளும் கொடுக்கப்படுவதும் இல்லை. ஆகையால் தன்னிடம் உள்ள கொடைகளை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து வாழும் போது மனுக்குலம் நிறைவையும் நிலை வாழ்வையும் அடைகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா ஒரு மனிதனின் நற்செயல்களையும் சாபங்களையும் அனுபவப்பட்டு உணர்ந்து, மனித சமூகம் ஏற்றுக் கொண்ட முடிவுகளை நமக்கு தெளிவுபடுத்துகிறார். மனித அறிவையும் திறமையையும் மட்டும் நம்பிய மனிதன் சாபத்துக்கு உள்ளாகின்றான். இறைவனை நம்பியவனோ, ஜீவ நீர் ஊற்றாக வழிந்தோடும் ஓடையின் கரையின் ஓரத்தில் செழித்தோங்கி வளரும் கனிதரும் மரமாக நிலைத்து நிற்கிறான் என்கிறார்.

எரேமியா மூலமாக நமக்கு உணர்த்தப்பட்ட அனுபவ அறிவு அல்லது பட்டறிவு, நற்செய்தியில் இயேசுவின் வழியாக சீடர்களின் நிலைவாழ்வு பயணத்தின் செயல்திட்டமாக நற்பேறுகள், எச்சரிக்கைவிடும் சாபங்கள் என போதிக்கப்பட்டவை அனைத்தும் இன்று நம்வாழ்க்கையின் பாதையை செவ்வன சீர்படுத்த நமது முன் வைக்கப்பட்டுள்ளது.

என்னதான் மனிதன்முன் பட்டறிவு எச்சரிக்கையாகவும், போதனைகள் செயல்திட்டம் ஆகவும் நிறுத்தப்பட்டாலும் ஆதாமின் வழி வந்த மனிதனுக்கு ஆதாமை போலவே, இறைவன் ஏன் நடு மரக்கனியை விலக்கி வைத்தார் என்ற கேள்வியயைப் போன்றே இன்றைய மனிதனுக்கும் இந்த நற்பேறுகளும் சாபங்களும் எழுப்பும் கேள்விகளுக்கு விடையாக இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. (எபிரேயர் : அதிகாரம் 11:1) என்பதை இயேசுவின் உயிர்ப்பு நிலையானது, நிலை வாழ்விற்கு சாட்சியாக இருக்கின்றது என்பதால் ஐயம்கொள்ளத் தேவை இல்லை எனக் கூறுகின்றார். தங்களை முழுமையாக இழந்து வெறுமையாக்கி இயேசுவோடு இணைந்த அவருடைய சீடர்களுக்கு (நாம்) கண்ணுக்குப் புலப்படாத நிலைவாழ்வு ஐயமற உண்டு, என்பதை உணர்ந்து கொள்ள இயேசுவின் உயிர்த்தலை முன்னிலைப் படுத்துகின்றார். நிலை வாழ்வை உறுதிப்படுத்துகின்றார்.

இயேசுவின் உயிர்ப்பு எவ்வளவு முக்கியமான சான்றோ, அதைவிட இந்த இருபத்தி இரண்டாம் நூற்றாண்டின் உன்னதமான சான்றாக இன்றும் நம் முன் வீற்றிருக்கும் ரத்தமும் சதையும் கொண்ட நற்கருணை நாதரே அந்த உயிர்ப்பு சான்றின் அதிசயம். இந்த கண்ணுக்கு புலப்படாத ஐயமற்ற உண்மையை நமது உயிராக உணவாக, உணர்ந்து உண்டு, மகிழ்ந்து, போற்றிப் புகழும்போது நற்பேறுகள் தரும் நிலைவாழ்வு எவருக்கும் வெகுதூரமில்லை என்பதால் உண்டு மகிழ்ந்து உவப்புடன் நிலைவாழ்வின் பயணிகளாக தொடர்ந்து பயணிப்போம்.
இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.


சிந்தனைப் பயணம்.
திரு சின்னப்பன் டிசில்வா. வெலிங்டன் - ஊட்டி
- திருத்தொண்டர். வளன் அரசு

முரண்பாடல்ல.... முரண்சுவை......


விவிலியம் முழுவதும் செல்வர்களுக்கு எதிரான போர் முரசு முழங்கிக் கொண்டே இருக்கின்றனவே இதன் காரணம் என்ன? ஏழ்மையில் நாம் அனைவரும் இருப்பதையே ஆண்டவர் விரும்புகின்றாரா? அப்படியென்றால் அரசியல்வாதிகளும், செல்வர்களும் கடவுளின் கருவியாகத்தானே இருக்கமுடியும். காரணம் அவர்களால் மட்டுமே இன்று வரை ஏழ்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. நாம் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க நுஆஐ சீக்கிரம் கட்டிமுடிக்க, பையனுக்கு நல்ல பணக்கார, படிச்ச பெண்ணை பார்க்க. இன்னும் அடிக்கிக்கொண்டே ஆண்டவரே நின் வரத்தைத் தா என்றல்லவா இன்று அவரின் பாதம் தேடி வந்திருக்கிறோம். ஏழ்மையாய் இருப்பதும் துன்பப்படுவோரும் பேறுபெற்றோர் என்றால் நாம் ஏன் உழைக்கவேண்டும், நாம் ஏன் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் இதனை நுட்பமாக அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இது ஒரு முரண்சுவை. இச்சுவையினை அறிந்திட முயலுவோம்.

நற்செய்தியை மேலோட்டமாக படிக்கின்றபோது இயேசு நம்மை ஏழையாக பட்டினி கிடந்து சாகக்கூடியவர்களாக, வெறுத்து ஒதுக்கபடுபவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போன்றும், இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் போன்றும் தோன்றும். ஆனால் இரண்டுமே தவறு.

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் இல்லாதவர்கள் ஏழை இல்லை. அடுத்தவர்களுக்கு உதவாதவர்கள் தரன் ஏழை. ஓர் ஏழையால் மட்டுமே இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள முடியும். ஏழையால் மட்டுமே அனைத்தையும் இறைத்திருவுளமாக ஏற்கும் புனித நிலையை அடைய முடியும், ஏழையால் மட்டுமே பிறரின் வயிற்று பசியை தன் வயிற்றுப் பசியாக என்ன முடியும். ஏழையால் மட்டுமே தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, பிறருக்கும்; பகிர வேண்டும் என்கின்ற தாய்மை நிலையினை அடைய முடியும். துறவிகள் ஏழ்மை என்ற வார்த்தைப்பாட்டினை எடுப்பதன் நோக்கமே இது தான். இரண்டு கைகளிலும் பணப் பெட்டியைத் தூக்கி நடந்து செல்பவன் அருகில் ஓர் குழந்தை கீழே விழுந்தாலும் அவனால் அதனைத் தூக்கிவிட முடியாது. இது தான் செல்வர்களின் மனநிலையாக பொதுவாக இருக்கும். ஆண்டவர் இந்த செல்வந்தர்களின் மனநிலையைத்தான் (யுவவவைரவந) சாடுகிறார்.

இந்த செல்வர்களின் மனநிலை பெரும்பாலும் தம்முடைய நம்பிக்கையை கடவுள் மீது வைப்பதைவிட செல்வத்தின் மீதே வைக்கின்றனர். கடவுளை விட செல்வமே எனக்கு பாதுகாப்பானது, மேன்மையானது என எண்ணுகின்றனர். செல்வர்கள் தம் செல்வத்தை அரண் என்றும் உயரமான மதில் என்றும் எண்ணிக் கொள்கின்றனர். (காண்க நீ.மொ 18:11) இச்செல்வமே சிலைவழிபாடாகிய பேராசைக்கு இட்டுச் செல்கின்றது. (எபே 5:5) இதனால் பிறரன்பும், இறையன்பும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.

இன்னும் நுட்பமாக கவனிக்க வேண்டியது இயேசுவின் இறுதி தீர்ப்பு நாளில் அவர் நம்மிடம் திருவிவிலியத்தை முழுவதையும் படித்து முடித்திருந்தாயா? 10 கோடிக்கு எனக்கு திருக்கோவில் கட்டினாயா? லட்சங்களில் எனக்கு திருவிழா எடுத்து கொண்டாடினாயா?.... என்றெல்லாம் கேட்க மாட்டார். மாறாக, இச்சிறியோராகிய ஏழைகளுக்கு நீ என்ன செய்தாய்? என்ற ஒற்றைக் கேள்வியில் நம் வாழ்க்கைப் படத்தின் ஊடiஅயஒ (இறுதிக்கட்டம்) முடிந்து விடும். எனவே இன்னைக்கு என்னால் உதவ முடியல்ல யாருக்கு நான் உதவவேண்டும்? எல்லாரும் நல்லா தானே இருக்கிறார்கள். நானும் தான் கஷ்டப்படுகிறேன். நானே ஓர் ஏழை. எனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் உதவுவேன், எனக்கு போகத்தான் தானமும் தர்மமும் என்று விதண்டாவாதம்; பேசாமல் நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.
- திருத்தொண்டர். வளன் அரசு


 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ