எம்மாவுஸ் செல்லும் வழியில் சீடர்களின் மன இருளை அகற்றிய இயேசு
இன்று நம் மன கலக்கங்களை அகற்ற பாஸ்கா காலம் 3 வது ஞாயிறு
திருப்பலி வழியாக அழைக்கின்றார்.
எம்மாவுஸ் பாதையில் நடந்து சென்ற சீடர்கள் தங்களோடு
பேசிக்கொண்டு நடப்பவர் இயேசு தான் என்பதை உணராது பேசிக் கொண்டு
வருகிறார்கள்;. இயேசுவோ இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியவர்
போலக் காட்டிக் கொள்கிறார். சீடர்கள் மாலை நேரமாகிறது எங்களோடு
தங்கும் என அக்கறையோடு கேட்கிறார்கள். இயேசுவும் தங்குகிறார்.
உணவு உண்ணும் வேளை வந்தபோது அப்பத்தை பிட்கும் போது சீடர்களின்
கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அடையாளம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி
அடைகிறார்கள்;. தங்கள் நடுவில் தங்கிய இயேசுவை கண்டபின் ஆவியின்
அருட்துணை பெற்றவர்களாக அவரைக் காணாத மற்ற சீடர்களிடம் சொல்ல
ஓடுகிறார்கள். அது முதல் இயேசுவைப் பற்றிய செய்தியை எல்லா இடங்களிலும்
துணிவுடன் பேச ஆரம்பிக்கிறார்கள்.
அயலார் மீது அக்கறை காட்டும் போது, நாம் கூட மாலை நேரமாகிறது
எங்களோடு தங்கும் என்ற சீடர்களைப் போல செயல்படுகின்றோம். இயேசுவை
நம்மோடு தங்கச் சொல்லி நாம் கேட்கும் போது, அவர் நம் வீட்டில்
நிச்சயமாக தங்;குவார்;. அப்படி அவர் தங்கும்போது, நிச்சயமாக நம்
வீட்டு பிரச்சனைகள் யாவும் தீரும். நம் மகிழ்ச்சியோ
மிகுதியாகும்.
நம் மன இருள் அகற்றி, நம் அயலார் வழியாக நம்மை சந்திக்க வரும்
இயேசுவை அடையாளம் காட்டிடும் அருளை தரும் திருப்பலி இது. இந்த
திருப்பலியில் ஆண்டவரே எங்களோடு தங்கும், எங்கள் மன இருள் அகற்றும்
என செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. எங்கள் வலப்பக்கத்தில் எங்களுக்குத் துணையாக இருக்கின்ற
இறைவா!
திருச்சபையை ஆட்சி செய்யும் திருத்தந்தை, ஆயர்கள்,
குருக்கள், துறவியர், இறைமக்கள் அனைவரின் பயணத்திலும்
நீரே வலப்பக்க்ததில் துணையாக நின்று வழிநடத்த
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆள்பார்த்து தீர்ப்பிடாத எங்கள் இறைவா! நாட்டுத்தலைவர்கள்,
rq;கத்தலைவர்கள், கிராமத்துத்
தலைவர்கள், குடும்பத்து தலைவர்கள் அனைவருமே ஆள்பார்த்து
தீர்ப்பிடாது மக்கள் செயல்பாட்டிற்கு ஏற்ற நல்ல
தீர்ப்புக்களை சொல்லி அநீதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு,
வறுமை இவைகளை அகற்றி சமத்துவ சமுதாயம் படைக்கும் தலைவர்களாக
வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. எங்கள் கால்கள் நடந்து செல்ல வேண்டிய பாதையை
காட்டும் இறைவா!
எங்கள் கால்கள் மான் கால்களைப் போல மேடு பள்ளங்களில்
பயணிக்க வழிகாட்டிடும் ஆன்மீக தந்தைக்கு, உம் அருள்
வரங்கள் ஏராளமாய் கிடைக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எம்மாவுஸ் சீடர்கள் மன இருள் அகற்றிய இறைவா!
இங்கே கூடி இருக்கின்ற மக்கள் மனங்களில் உள்ள கலக்கங்கள்,
கண்ணீரை அகற்றி, எங்களோடு தங்கி உமது உயிர்ப்பின் மகிழ்ச்சியை
அனுபவிக்கச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. பாதுகாக்கும் பரம் பொருளே இறைவா!
பாரமான வாழ்க்கை, நோயினால் தொல்லை, தனிமை, முதுமை, இழப்பு
பிரிவு என வாடுவோரின் வாழ்க்கையை பாதுகாத்து பராமரிக்க,
நீர் அவர்களோடு தங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் இயேசு நம்மோடு பயணிக்கிறார். இறைவார்த்தை
வழியாக நமக்கு தெம்பும் தெளிவும் தருகின்றார். அன்றாடம் நாம் இறைவார்த்தையை
வாசிக்கும் போது இறைவன் நம்மோடு பேசுகின்றார். ஆனால் அவர் பேசுவதை
கேட்க இயலாதவாறு நமது பிரச்சனைகள் கவலைகள் நம் கண்களை மறைத்துவிடுகிறது.
"உனது மன்றாட்டு இறைவனிடம் நீ பேசும் வார்த்தை. ஆனால் விவிலியம்
வாசிப்பது இறைவன் உன்னோடு பேசும் வார்த்தை என்கிறார்" புனித அகுஸ்தினார்.
நமது கவலைகளும் கண்ணீரும் பிரச்சனைகளும் அவர் பேசுவதை கவனிக்கவிடாது
தடுத்து விடுகிறது.
அப்படியிருந்தும் தொடர்ந்து இறைவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துகிறார்.
"நான் இயேசு வாழ்ந்த காலத்தில் வாழவில்லை என வருத்தப்படவில்லை.
நான் வாழ்கின்ற காலத்தில் நற்கருணை வடிவத்தில் இயேசு வாழ்ந்து
கொண்டிருக்கின்றாரே என்று மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார் அவிலா
தெரெசாள்.
எந்தெந்த இடத்தில் தெய்வத்தன்மை தோன்றுகிறதோ அந்தந்த இடத்தில் நாம்
அன்பு கொண்டு பாராட்டி தெய்வத்தை உள்ளத்தில் பற்றி உறவு
கொண்டோமேயானால் அவர் உ்ள்ளத்தில ஒளிர்ந்து காட்சியளிப்பார்..அருளவும்
செய்வார்..ஊதுபத்தியில் நெருப்பு பற்றிக் கொண்டால் நாம் அதை ஊதவேண்டியது
இல்லை.. தானாகப் பற்றி அந்த நெருப்பு கனிந்து கொண்டேயிருப்பதைப்
போல உள்ளத்தில் மற்றதெல்லாம் விட்டுவிட்டு தெய்வத்தைப் பற்றிக்
கொண்டால் அவா் அதைக்கனியச் செய்து கொண்டு உள்ளும் புறமும் எப்போதும்
நம்மிடையே இருந்து கொண்டு நம்மை வழிநடத்திக் கொண்டிருப்பதை அனுபவ
ரீதியாக உணர முடியும்..
அவர் ஒரு அருட்சகோதரி. தனது கடமைகளை மிகச்சிறப்பாக செய்பவர். அன்றாடம்
தனது செபங்களை செபிக்கத் தவறமாட்டார். மிக நேர்மையுடன் நடந்து
கொள்ளும் அவரை எல்லோரும் நேசிப்பார்கள். இறைவனை நம்பி வாழும் தனக்கு
இறையருளும் எந்நாளும் வழி நடத்தும் என்ற நம்பிக்கையை மனம் நிறைய
வைத்திருப்பவர்.
ஒரு முறை நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிட்டது. கன்னியாகுமரியில் இருந்து
சென்னை செல்லும் பேருந்தில் பயணம் செய்தார். திண்டிவனம் அருகில்
இறங்க நேரிட்டது. தொடர்ந்து பயணிக்க வேண்டும் காலையில் தான் செல்ல
வேண்டிய இடத்திற்கு கட்டாயம் செல்லவேண்டும். பேருந்து ஒன்றும் இல்லை.தனி
ஆளாக அங்கே அந்த அருட்சகோதரி மட்டும் செய்வதறியாது எப்படிப் போவது
என்று திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முதியவர்
வந்து "எங்கே போக வேண்டும்?" என கேட்டார்.
'சென்னைக்குப் போக வேண்டும்' என்று சொன்னவுடன் ஒரு லாரியைக் காண்பித்து அதில் ஏறும்படி
சொன்னார். அந்த அருட்சகோதரியும் ஏறி அமர்ந்தார். அருகில் அந்த முதியவரும்
ஏறி அமர்ந்து கொண்டார். விடிந்தது. அந்த அருட்சகோதரி இறங்கவேண்டிய
இடம் வந்தது. முதியவர் சகோதரி இறங்குவதற்கு உதவி செய்தார். இறங்கியபின்
அருட்சகோதரி முதியவருக்கு நன்றி சொல்ல நிமிர்ந்து பார்த்தார். அங்கே
அந்த முதியவர் இல்லை தன்னோடு பயணம் செய்து தன்னை பாதுகாப்புடன் அழைத்து
வந்தவர் ஆண்டவர் என உணர்ந்து உளம் நெகிழ்ந்து. போனார்.
ஒவ்வொரு நாளும் ஆண்டவர் நம்மையும் இப்படி அற்புதமாக நாம் செய்யும்
பணிகளுக்கு மத்தியில் பராமரிக்கின்றார்.
வழிநெடுகிலும் வாழ்க்கை நெடுகிலும் நம்மோடு பயணிக்கிறார். ஒவ்வொரு
நாளும் நமது செயலுக்கு ஏற்ப நமக்கு கைமாறும் தருகின்றார்.
நாம் அஞ்சத் தேவையில்லை. அன்றாடம் திருப்பலியில் பங்கேற்கும்
போதெல்லாம் அவர் நற்கருணை வழியாக நம் இதயத்துக்குள் வருகின்றார்.
நாம் கேட்பதை எல்லாம் தந்து வழி நடத்துகின்றார். நமது கவலைகளை கண்ணீரைத்
துடைக்கின்றார். இதை பல நேரங்களில் உணராமல் வாழ்ந்திருக்கிறோம்.
நமது அன்புக்குரிய உறவுகள் வழியாக, ஆறுதல் நிறைந்த உறவுகள் வழியாக,
அன்றாடம் நாம் பங்கேற்கும் திருப்பலி வழியாக தினமும் நம்மை சந்தித்து
நமக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றார்.
ஆண்டவர் எப்போதும் நம் கண்முன் உள்ளார். அவர் நம்மை கரம் நீட்டி
அரவனைக்கின்றார். கரங்களை விரித்து அழைக்கிறார்.....
அவர் தமது சிறகுகளாலே உன்னை அரவணப்பார். அவர் தம் இறக்கைகளின் கீழ்
நீர் புகலிடம் காண்பீர். அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.
ஒரு ஊரில் ஏழை பெண் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு இரண்டு வயதில்
ஜெனி என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. ஏழைத் தாயான அவள், கல்குவாரி
ஒன்றில் கல் உடைக்கும் சித்தாளாகப் பணிபுரிந்து வந்தாள். அப்படி ஒவ்வொரு
நாளும் வேலைக்கு செல்லும் போது ஜெனியையும் தூக்கிச் செல்வது வழக்கம்.
அன்றும் அப்படித்தான் காலை சுமார் மணி 10 இருக்கும். தாய் ஓரிடத்தில்
கற்களை உடைத்துக் கொண்டிருக்க, ஜெனி சற்று தொலைவில் விளையாடிக்
கொண்டிருந்தாள். சற்று நேரத்தில், அருகில் வேலை செய்துக்
கொண்டிருந்தவர்கள் அனைவரும் கூக்குரலிட்டனர்- "ஜெனி! அங்கே போகாதே!
ஓடாதே! நில்! அங்கு வெடி இருக்கிறது... வெடித்து விடும்".
திடுக்கிட்ட அந்த தாய் அலறியபடி ஜெனியிடம் ஓடினாள். ஆனால் ஜெனியோ,
தாய் தன்னிடம் விளையாடுகிறாள் என்று எண்ணி, இன்னும் வேகமாய் ஓடினாள்.
பெரும் கற்பாறைகளை உடைப்பதற்காக, அப்பாறைகளில் வெடிகளை பொருத்தி,
அதனை வெடிக்கச் செய்து உடைப்பது வழக்கம். அன்றும் அப்படியே
பொருத்தியிருந்தனர். அதை அறியாத ஜெனி அந்த பாறையை நோக்கி ஓடிக்
கொண்டிருந்தாள். அம்மா தன்னோடு ஓடி விளையாடுகிறார் என்பது அவளுடைய
நினைப்பு, பாவம் அந்த ஏழைத்தாய் தவித்து போனாள். செய்வதறியாது ஒரு
நொடி திகைத்து நின்றாள். சற்றே யோசித்த பின்னர் ஓடிக் கொண்டிருந்த
ஜெனியைப் பார்த்து தன் இருகைகளையும் அகல விரித்து, '"ஜெனி, ஜெனி"
என்று கூப்பிட்டாள். திரும்பிபார்த்த ஜெனி, தன் தாயின் நீட்டப்பட்ட
கரத்தைப் பார்த்து ஓட்டமாய் ஓடி வந்து அடைக்கலம் புகுந்தாள். தாய்
தன் பிள்ளையை அன்போடு அனைத்துக் கொண்டுஅதன் உயிரைக் காத்தாள்.
ஆம்! நம் இயேசுவின் அன்பு ஓர் உலகத் தாயின் அன்பைக் காட்டிலும்
பெரியது. இயேசுவே என்னை எவ்வளவு நேசித்தீர் என்று கேட்டதற்கு அவர்
இரு கைகளையும் சிலுவையில் அகல விரித்து இவ்வளவாய் என்றார்.. அவ்வளவு
நேசம் நம்மீது வைத்திருக்கிறார்..
அநேக நேரங்களில் பாவத்தையும் பிரச்சனைகளையும் நோக்கி ஓடும்
வேளையில் தன் அன்பு கரத்தினுள் வந்து விடு மகளே! மகனே! என்று அவர்
அழைக்கும் குரலுக்கு நாம் செவி கொடுப்போம் " அவரே நமக்கு உயர்ந்த
அடைக்கலாமனவர்." இறைவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில்
அநுகூலமான துணையுமானவர்".
அவரின் அடைக்கலத்திற்குள் நம்மை ஒப்புக்கொடுப்போம். கைவிடாமல் நம்மை
பார்த்துகொள்வார். ஒவ்வொரு நாளும் நாம் அருந்தும் நற்கருணை நமக்கு
பலம் வாய்ந்த சக்தி தரும் உணவாகும். பக்தியோடு அதை அருந்தும் போது
நமக்கும் எம்மாவுஸ் சீடர்களுக்கு கிடைத்த துணிச்சல் கிடைக்கும் நமது
கண்கள் திறக்கப்பட்டு நாமும் மனத்திடன் பெற்று நற்செய்தியை அறிவிப்போம்.
80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது. நல்லபடியாக
நடந்து முடிந்த பின்... அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை
மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர். அந்த பில்லை
பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பெரியவரின்
பரிதாபகரமான அழுகையைப் பார்த்த..... மருத்துவர்
கூறுகிறார். அழாதீர்கள்
தாங்களுக்கு என்னால் முடிந்த அளவு பில்லை குறைத்துவிடுகிறேன் என்றனர்.
அதற்கு பெரியவரின் பதிலை என்னவென்று பாருங்கள்.....
"எனக்கு அது பிரச்சினையில்லை, பில் 10 லட்சமாக இருந்தாலும் நான் தர
தயாராக உள்ளேன்..... ஆனால் 80 வருடமாக எவ்வித பிரச்சினையுமின்றி என்
இதயத்தை பாதுகாத்த _இறைவன் ஒரு ரூபாய்கூட பில் கேட்கவில்லையே.....
இவ்வளவு நாள், இதனை உணர்ந்ததேயில்லை, இப்போது நினைத்து உணர்ந்தபோது,
கண்ணீர் வழிகிறது, மூன்று மணி நேரம் மட்டும் நீங்கள்
பாதுகாத்ததற்கு எட்டு லட்சத்திற்கு பில்....எல்லாம் வல்ல கடவுள் கருணையையும்
அன்பையும் நினைத்து அழுதுவிட்டேன்" என்றார்......
இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே.....
- நாம் தான் இறைவனை அடையாளம் காணாமல் அவரின் அற்புதத்தை உணராமல் இந்த
மண்ணில் வாழ்கிறோம்.....
எந்த எதிர் பார்ப்புமே இல்லாமல் எப்போழுதும் நம்மை கண்ணும் கருத்துமாக
பத்திரமாக பாதுகாப்பவர் அன்பே உருவான இறைவன் மட்டுமே....நாம் வாழ
உண்வின் வடிவில் தன்னை வழங்கி நம்மைப் பேணும் கடவுளின் பாதையைக் கண்டு
கொள்வோம்.
நமது இயேசு இராஜாவுக்கு நிகரான இராஜா யாருமில்லை.
நமது நற்கருணை உணவுக்குஇணையான உண்வும் எதுவுமில்லை.
நமது முழங்காலுக்கு எதிரான ஆயுதமும் எதுவுமில்லை.
அன்றாடம் திருப்பலியில் பங்கேற்போம். நற்கருணை எனும் தேவ அமுதத்தை
தகுந்த தயாரிப்புடன் அருந்துவோம்.
திருப்பலியில் நாம் உண்ணும் நற்கருணை நமக்கு வாழ்வின் வழியை அறியச்
செய்யும். நிறை வாழ்வைக் காணச்செய்யும் நாவுக்கு மகிழ்ச்சி தரும்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
எங்களோடு தங்கும் இயேசுவே....
I. திருத்தூதர் பணி 2:14,22-33
II. 1 பேதுரு 1:17-21
III. லூக்கா 24:13-35
இன்று நாம் அனைவரும் தடை உத்தரவின் பேரில் வீடுகளில் தங்கி
இருக்கின்றோம். யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்வதில்லை.
யாருடைய விருந்துகளுக்கும் அழைக்கப்படுவதில்லை. வீட்டில்
தங்கி இருக்கின்றோம். ஒரே இடத்தில் இருப்பது பலருக்கு
வெறுப்பு. சிலருக்கு விருப்பு. இன்றைய காலகட்டங்களில் இயேசுவோடு
நாம் தங்கியிருக்க, இயேசுவை நம்மோடு தங்க அழைக்க, நம்மை இன்றைய
வாசகங்கள் வலியுறுத்துகின்றன. துறவிகளும் அருட்பணியினரும்
ஏன் ஏனைய மக்களும் தியானம் செய்யும் போது பெரும்பாலானவர்கள்
செய்ய வலியுறுத்தப்படுவது, தனித்திரு, விழித்திரு,
செபித்திரு. இது இன்றைய காலகட்டத்தில் நமக்கும்
பொருந்தும். நாம் தனித்திருக்கிறோம், ஆனால் விழித்திருந்து
செபிக்கிறோமா என்பது அவரவர் மனசாட்சியைப் பொருத்தது.
இயேசுவின் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் எம்மாவுஸ்
ஊருக்கு நடந்து சென்றவர் ஒருவர் பெயர் நற்செய்தியில் இடம்
பெற்றுள்ளது. மற்றோருவரின் பெயர் யார் என்று தெரியவில்லை.
அது நாம் தாம் என்பது மறைவல்லுனர்கள் கூறும் செய்தி.. இவர்கள்
இயேசுவின் 12 சீடர்களில் இல்லை என்பது, இவர்கள் எருசலேம்
சென்று பதினொருவரையும் அவர்களோடு குழுமி இருந்தவர்களையும்
கண்டார்கள் என்ற செய்தி சாட்சி. இவர்கள் இயேசுவின் பரந்து
பட்ட பல்லாயிரக்கணக்கான சீடர்களில் இருவர். இவர்களின் பண்பு
நலன்கள் தான் இயேசுவை இவர்களோடு தங்க வைக்க செய்தது. அதே
குண நலன்களை நாமும் பெற்று இயேசுவை நம்மோடு தங்க அழைப்போம்.
1. இயேசு இறந்தவுடன் அமைதியாக அழுது கொண்டு
வீட்டிற்குள்ளேயே இருந்து விடவில்லை. அவரது உயிர்ப்பின் நிகழ்வை,
மகதலா மரியாள் போன்றோர் சொன்ன செய்தியை பிறருக்கும் அறிவிக்க
செல்கின்றார்கள். நாமும் இக்காலத்தில் உயிர்த்த நம் இறைவனின்
மகிமையை பிறருக்கு நேரடியாக சென்று எடுத்துச் சொல்ல
முடியாவிட்டாலும் சிறு செய்தி மூலமாக பிறருக்கு நம்பிக்கையை
தருபவர்களாக மாறலாம். காலாவதியான செய்திகளை பிறருக்கு அனுப்புவதற்கு
பதிலாக என்றும் வாழ்வு தரும் வாழ்வின் வார்த்தைகளாம்
விவிலிய வார்த்தைகளை பகிரலாம்.
2. சீடர்களின் உரையாடல் இயேசுவைப் பற்றியதாக மட்டுமே இருந்தது.
அவர்களுக்கு அவர் தான் மூச்சாகவும் பேச்சாகவும் இருந்தார்.
எதைப் பேசுகிறோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். இது இயற்கை
நியதி. நல்லதைப் பேசினால் நல்லதாக மாறுவோம். இப்போது நாம்
தேவையற்ற பேச்சுக்களாலே அதீத பயத்தினால்
ஆட்கொள்ளப்படுகிறோம். உயிர்த்த ஆண்டவரின் வல்லமையைப் பற்றி
மட்டுமே பேசி வலிமை பெறுவோம்.
3. தங்களோடு உடன் வந்தவர், அந்நியரான போதிலும் அவரை
மதித்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதிலை
கொடுக்கின்றனர். நாம் இந்நாட்களில் நம்மோடு உடன் இருக்கும்
நம் குடும்பத்தார்களை உறவுகளை மதிக்கின்றோமா? அதிகமான
குடும்ப உறவுகள் விரிசலில் வீழ்ந்து கொண்டிருப்பதாக
செய்திகள் வருகின்றன. ஒவ்வொருவரின் உணர்வுகளை மதித்து வாழ
முயற்சிப்போம்.
4. இயேசுவின் போதனையில் மயங்கி அவரை தங்களோடு இருக்க
அழைக்கின்றனர். அவரது மறைநூல் விளக்கத்திற்கு தங்கள்
இதயங்களைத் திறக்கின்றனர். நாமும் இன்றைய காலகட்டத்தில்
தொலைக்காட்சிகளில் திருப்பலியினைக் கண்டு கொண்டிருக்கும்
வேளையில் நம்முடைய இதயங்களை இறைவார்த்தைக்கு திறப்போம்.
5. இயேசு செய்த அடையாளத்தைக் கண்டு இவர் தான் இயேசு என்று
அடையாளம் கண்டு கொள்கின்றனர். அவரது அப்பம் பிட்கும் ஒரு
செயல் இவர்களுக்கு இயேசுவை அடையாளம் காட்டுகின்றது.
நம்முடைய வாழ்விலும் இயேசு பல்வேறு செயல்களை செய்கின்றார்.
நாம் தாம் அவரை அடையாளம் காணாமல் இருக்கின்றோம். நம்
கண்களை மாயை என்னும் உலக நிகழ்வுகள் மறைத்து விடுகின்றன.
6. அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டதும் தங்களது
எம்மாவூஸ் பயணத்தை மாற்றி மீண்டும் எருசலேம்
திரும்புகின்றார்கள். இயேசு உயிர்த்து விட்டார் என்ற
செய்தியை மற்ற சீடர்களுக்கும் அறிவிக்கின்றார்கள். நமது
வாழ்வின் திசையை மாற்றி அமைப்போம். பலமிலந்தவர்களுக்கு
பலம் கொடுப்பவர்களாக நாம் மாறுவோம்.
இப்படி எம்மாவூஸ் சீடர்கள் போல நாமும் செயல்பட்டால்
உயிர்த்த இயேசு நம்மோடும் தங்குவார். நம்மிலும் பல
மாற்றங்களை அவர் ஏற்படுத்துவார். உயிர்த்த இறைவனின் ஆற்றல்
பெற்றவர்களாக நாமும் மாற நம்மோடு இருப்பவர்களையும் மாற்ற
அருள் வேண்டுவோம் எம்மோடு தங்கும் இயேசுவே என்று
அனுதினமும் செபிப்போம் தனித்திருப்போம் அவரோடு
செபித்திருப்போம் அவரோடு. இறைவனின் ஆசீர் என்றும்
நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரோடும் இருப்பதாக
ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
திசைதிரும்பிய எதிர்பார்ப்புக்கள்
'எதிர்பார்ப்பு' இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்ற ஒரு கேள்வியை
நாம் எழுப்பும் அதே நேரத்தில், 'எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம்
இல்லை' என்று நம் மனம் சொல்லி முடிக்கிறது.
பெக்கி மற்றும் கான் தம்பதியினர் அருட்சாதனம்
முடிந்து இருபது ஆண்டுகள்
கழித்து, பெக்கி ஒரு நாள் தன் கணவன் கானிடம், 'நான் உங்களைப் பற்றிய
எதிர்பார்ப்புக்களைக் குறைத்துக்கொள்ளலாம் ன நினைக்கிறேன்!' என்கிறாள்.
அதற்கு கான் அவளிடம், திருமணத்தில் வரும் பெரும்பாலான பிரச்சினைகளையும்,
மகிழ்ச்சியின்மையும் மூன்று வகையான எதிர்பார்ப்புக்களிலிருந்து வருகிறது
என்கிறார்:
(அ) நியாயமற்ற எதிர்பார்ப்பு. அருட்சாதனம்
முடிக்கும்போது குடும்பத்தில்
நிலவிய பணக்குறையை அறிந்த பெக்கி, கானிடம், தினமும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
வேலை செய்யுமாறு சொல்கிறாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களில் அவனிடம்,
'நீங்கள் என்னுடன் நேரம் செலவழிப்பதே இல்லை. வேலை, வேலை என்று இருக்கிறீர்கள்'
என்று குறைபட்டுக்கொள்கிறாள். இது பெக்கியின் நியாயமற்ற எதிர்பார்ப்பு.
ஏனெனில், கான் ஒரே நேரத்தில் வேலைக்குச் செல்லவும், வீட்டில் இருக்கவும்
முடியாது.
(ஆ) தெளிவற்ற எதிர்பார்ப்பு. பத்தாவது திருமண நாளில் பெக்கிக்கு ஒரு
பரிசு கொடுக்க விரும்புகிறான் கான். என்ன வேண்டும் எனக்
கேட்கின்றான். அவள் சேலை, மோதிரம், நெக்லஸ் என நாளுக்கு ஒன்று
சொல்கிறாள். குழம்பிப் போகிற கான் அவளுக்கு அழகான சேலை எடுத்துக்கொடுக்கிறான்.
அது அவளுக்குப் பிடிக்கும் என நினைத்து, ஆவலுடன் அதை அவளிடம்
நீட்ட, 'ஐயோ! இதே மாடல், கலர் என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே!' என
அழத் தொடங்குகிறாள் பெக்கி. இங்கே, பெக்கியின் எதிர்பார்ப்பு தெளிவற்றதாய்
இருந்ததால் கான் அதை நிறைவேற்ற முடியவில்லை.
(இ) நிறைவேறாத எதிர்பார்ப்பு. சில நேரங்களில் எதிர்ப்பார்ப்புகள்
நியாயமானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். ஆனால், நிறைவேறாமலேயே
போய்விடும். எடுத்துக்காட்டாக, இவர்கள் காதல் செய்யும்போது இரண்டு
குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால்,
திருமணத்திற்குப் பின் நடந்த ஒரு விபத்தினால் கருத்தரித்தல் பாதிக்கப்படுகிறது.
ஆக, அங்கே இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறாமலேயே
போய்விடுகின்றன.
இவற்றை சொல்லி முடித்த கான், இனி 'எதிர்பார்ப்புக்களைக்
குறைத்துக்கொள்ளலாம்' என நினைக்கிற பெக்கியைப் பாராட்டுகிறான்.
கானின் இந்தப் பட்டியலோடு நாம் இன்னும் மூன்று எதிர்பார்ப்புக்களை
இணைத்துக்கொள்ளலாம்:
(ஈ) அதீத எதிர்பார்ப்பு. அதாவது, ஒருவருடைய ஆற்றலை அல்லது திறனை
நாம் அறிந்தாலும் அதைவிட அதிகம் எதிர்பார்த்தல். இது நபர்களுக்கும்
பொருந்தும், பொருள்களுக்கும் பொருந்தும். நினைவுத்திறன் குறைவாக
உள்ள என்னுடைய மாணவர் தேர்வில் அனைத்தையும் நினைவுகூர்ந்து
எழுதுவார் என நினைப்பதும், நம்முடைய குட்டிக் கார் மணிக்கு 200
கிமீ வேகத்தில் செல்ல வேண்டும் என நினைப்பதும் அதீத
எதிர்பார்ப்புக்களே.
(உ) தாழ்வான எதிர்பார்ப்பு. இது, அதீத எதிர்பார்ப்புக்கு முரணானது.
ஒருவரின் ஆற்றலை அறியாத நாம் மிகவும் தாழ்வாக எதிர்பார்த்தல். சில
நேரங்களில் இது ஆச்சர்யத்தையும் பல நேரங்களில் அதிர்ச்சியையும்
கொடுக்கும். எடுத்துக்காட்டாக, பெலிஸ்தியன் கோலியாத்தைக்
கொல்வதற்காக ஒரு கவனுடனும் சில கூழாங்கற்களோடும் அவரை
எதிர்கொள்கின்ற தாவீது தன்னிடம் வருவதைப் பார்க்கின்ற கோலியாத்,
தாவீதிடம் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பு மிகவும் தாழ்வானது.
விளைவாக, கோலியாத்து தன்னுடைய தாழ்வான எதிர்பார்ப்பாலேயே
இறந்துவிடுகிறார்.
(உ) தவறான எதிர்பார்ப்பு. இது ஏறக்குறைய நியாயமயற்ற எதிர்பார்ப்பை
ஒத்திருக்கிறது. பொருந்தாத ஒன்றை எதிர்பார்ப்பது. கோழி முட்டையை
அடைகாக்க வைத்துவிட்டு, மயில் குஞ்சுகளை எதிர்பார்ப்பது தவறான
எதிர்பார்ப்பு.
இவ்வளவு பெரிய முன்னுரை எதற்கு?
'நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும்
மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல
இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலே மீட்கப் போகிறார் என
நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்.'
'... நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம்' - இப்படித்தான் தங்களுடைய
எம்மாவு வழிப்பாதையில் தங்களோடு கரம் கோர்த்த முன்பின் தெரியாத
வழிப்போக்கனின் கேள்விக்கு விடையளிக்கின்றார் கிளயோப்பா.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 24:13-35) எம்மாவு நிகழ்வை
நம் கண்முன் கொண்டு வருகிறது.
'நாசரேத்து இயேசு இஸ்ரயேலை மீட்கப் போகிறார்' என சீடர்கள்
எதிர்பார்த்ததை மேற்காணும் பட்டியலில் எந்த வகையில் சேர்க்கலாம்?
நியாயமற்ற எதிர்பார்ப்பு - ஏனெனில், இறைவாக்கினராக, வல்ல செயல்கள்
செய்தவர் உரோமை அரசை எதிர்த்துச் சண்டையிடுவார் என நினைத்தது.
தெளிவற்ற எதிர்பார்ப்பு - இயேசுதரும் விடுதலை அல்லது மீட்பு என்பது
அரசியல்சார் நிகழ்வா அல்லது ஆன்மீகம்சார் நிகழ்வா என்ற
தெளிவில்லாமல் இருக்கின்றனர் சீடர்கள்.
நிறைவேறாத எதிர்பார்ப்பு - இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
ஆகவே, எருசலேமை விட்டு எம்மாவு நோக்கிச் செல்கின்றனர்.
மேலும், இவர்களுடைய எதிர்பார்ப்பை அதீத மற்றும் தவறான
எதிர்பார்ப்பு வகையிலும் சேர்க்க முடியும்.
இப்படியாக, இங்குமங்கும் அலைக்கழிக்கப்பட்ட அவர்களின்
எதிர்பார்ப்புக்களின் திசையைத் திருப்புகின்றார் இயேசு. விளைவாக,
அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே திசையை நோக்கித்
திரும்பிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்புகள் நியாயமற்றவை, தெளிவற்றவை, அதீதமானவை என
நினைக்கின்ற இயேசு மறைநூலின் உதவியுடன் அவர்களுக்கு
விளக்குகின்றார். இறுதியில், உணவு அருந்தும்போது அவர்கள் கண்கள்
திறக்கப்பட்ட அந்த நேரத்தில், தங்களுடைய எதிர்பார்ப்புக்கள்
தவறானவை என உணர்கின்றனர்: 'வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை
விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'
சீடர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனதால் நடந்த சிலவற்றை
இன்றைய நற்செய்தி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது:
அ. எதிர்திசை நோக்கிச் செல்கின்றனர்
சீடர்கள் எம்மாவு நோக்கிச் செல்கின்றனர். அவர்களுடைய இல்லம் அங்கே
இருந்ததா அல்லது உறவினர்கள் அல்லது நண்பர்களின் இல்லம் அங்கே
இருந்ததா என்று தெரியவில்லை. எருசலேமில் இருந்தால் தங்களுக்கும்
ஆபத்து என்று தப்பி ஓடுகிறார்களா அல்லது இனி இங்கே இருந்து பயன்
ஒன்றுமில்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்று தப்பி ஓடுகிறார்களா
என்று தெரியவில்லை. ஆனால், எருசலேமை தங்கள் முதுகின்பின் தள்ளி
எதிர்திசையில் நடக்கின்றனர். இனி இங்கே வரவே கூடாது என்பதுதான்
அவர்களுடைய எண்ண ஓட்டமாக இருந்திருக்கும்.
ஆ. நடந்து செல்கின்றனர்
ஏறத்தாழ 11 கிமீ நடந்துசெல்ல முயல்கின்றனர். ஒன்று, அவர்களால்
கழுதை அல்லது குதிரை வாகனம் ஏற்பாடு செய்ய முடியாமல்
போயிருக்கலாம். அல்லது, அதை எல்லாம் தேடாமல், ஓட்டமும் நடையுமாக
யார் துணையுமின்றி ஓடிவிட முயல்கின்றார்கள். மனித விரக்திக்கும்
ஆற்றல் உண்டு என்பது இதற்குச் சான்று.
இ. உரையாடிக்கொண்டு செல்கின்றனர்
அமைதியற்ற உள்ளம் நிறையப் பேசும். தாங்கள் இயேசுவால்
ஏமாற்றப்பட்டதைப் பேசியே தீர்த்துக்கொள்ள நினைக்கின்றனர். ஊர்
போய்ச் சேரும் வரை நன்றாகப் பேசிவிட்டு, உள்ளத்தில் உள்ளதை எல்லாம்
கொட்டிவிட்டு, போய் ஒரு நல்ல குளியல் போட்டு, இயேசுவைத் தலைமுழுகி
விட வேண்டும் என்பது இவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம்.
ஈ. முகவாட்டம்
முன்பின் தெரியாத மற்றொரு வழிப்போக்கன் கேள்வி கேட்டாலும்,
தங்களுடைய உள்ளுணர்வுகளை மறைக்கத் தெரியாமல், அல்லது மறைக்க
முடியாமல் நிற்கின்றனர் அப்பாவி சீடர்கள். அவர்களின் முகவாட்டம்
அவர்கள் அடைந்த ஏமாற்றத்தின் அறிகுறி.
உ. கோபம்
'எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்கு மட்டும்தான் நிகழ்ந்தவை
தெரியாதோ!' எனக் கோபம் கொள்கின்றனர். வழக்கமாக, ஏமாந்து
போயிருப்பவர் எல்லார் மேலும் கோபப்படுவார். அதுதான் இங்கே
நிகழ்கிறது.
ஊ. வரவேற்பு
இறுதியாக, ஏமாந்த உள்ளம் தன்னுடைய கதையைக் கேட்ட ஒருவரை உடனே
அரவணைத்துக்கொள்ளும். அப்படித்தான் இங்கேயும் நடக்கிறது. முன்பின்
தெரியாத ஒருவரை தங்களோடு இரவில் தங்குவதற்கு அழைக்கும் அளவிற்கு
அவர்களுடைய மனம் சோர்ந்து போயிருக்கிறது. முன்பின் தெரியாத இந்த
நபர் இரவில் கத்தியை எடுத்துக் குத்தினால் என்ன நடக்கும்? என்று
அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அடைந்த ஏமாற்றம் இந்தக்
கேள்வியை அப்புறப்படுத்திவிடுகிறது.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அவர்கள் பெற்ற இந்த ஆறு
உணர்வுகளையும் செயல்களையும் இயேசுவின் ஒற்றைச் செயல்
புரட்டிப்போட்டுவிடுகிறது. அப்பத்தைப் பிட்கும்போது இயேசுவைக்
கண்டுகொள்கின்றார்கள்.
'அவர்கள் அந்நேரமே திரும்பிப் போனார்கள்' எனப் பதிவு செய்கிறார்
லூக்கா.
அதாவது, உணவருந்தி முடித்த அந்த இரவிலேயே, இரவோடு இரவாக எருசலேம்
நோக்கித் திரும்புகிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பின் திசையைத்
திருப்பிவிடுகிறார் இயேசு.
அவர்களின் இந்த விரைவான பயணத்தில் அவர்கள் தங்களின் மனச்சோர்வு,
விரக்தி, ஏமாற்றம் அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். 'இயேசு
இருக்கிறார்' என்ற அனுபவம் அவர்களின் எதிர்பார்ப்பின் திசையைத்
திருப்பிவிடுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 2:14,22-33), பெந்தகோஸ்தே
நிகழ்வுக்குப் பின் பேதுரு எருசலேமில் ஆற்றிய பேருரையின் ஒரு
பகுதியை வாசிக்கிறோம். தாவீது அரசரின் திருப்பாடல் வரிகளை (காண்.
திபா 32:11, 2 சாமு 7:12,13) மேற்கோள் காட்டுகின்ற பேதுரு, அவர்
தன்னைப் பற்றி அல்ல, மாறாக, தனக்குப் பின் வரும் மெசியா பற்றி
முன்னுரைத்திருப்பதாக எழுதுகின்றார். பேதுருவின் உரையின் சாரம்
என்னவென்றால், தன்னுடைய சமகாலத்து யூதர்களின் தாழ்வான
எதிர்பார்ப்பை இயேசுவின் உயிர்ப்பு தவிடு பொடியாக்கியிருக்கிறது
என்பதுதான். இயேசுவைக் கொன்றுவிடலாம் என்பது யூதர்களின்
எதிர்பார்ப்பாக இருந்து, அவர்கள் இயேசுவைக் கொல்லவும்
செய்கின்றனர். ஆனால், அவருடைய உடல் படுகுழியைக் காணவிடாமல் கடவுள்
அவரை உயிர்த்தெழச் செய்கிறார். பாதாளத்தைப் பார்த்துக்கொண்டு
தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டதாக எண்ணிக்கொண்டிருந்த
யூதர்களின் திசையைத் திருப்பி வான் நோக்கிப் பார்க்க அவர்களை
அழைக்கின்றார் பேதுரு.
இரண்டாம் வாசகம் (காண். 1 பேது 1:17-21), பேதுருவின் கடந்த வார
அறிவுரைப் பகுதியின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இயேசுவின்மேல்
நம்பிக்கை கொண்டதால் தாங்கள் அனுபவித்த பல்வேறு துன்பங்களால் மனம்
துவண்டு போன மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பேதுரு, அவர்கள் பெற்ற
மீட்பின் மேன்மையை - 'விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும்
வெள்ளியும் அன்று, கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்' -
எடுத்துக்காட்டி, கீழானவற்றிலிருந்து தங்கள் முகத்தை மேலானது
நோக்கித் திருப்ப அழைக்கின்றார்.
இறுதியாக,
'நீ விழுந்து கிடக்கும் இடத்தை அல்ல, நீ வழுக்கிய இடத்தையே கவனிக்க
வேண்டும்' என்பது பழமொழி. தங்களுடைய எதிர்பார்ப்புகளில்,
எதிர்பார்ப்புகளால் வழுக்கிய சீடர்களின் திசையைத் திருப்புகின்றனர்
இயேசுவும், பேதுருவும்.
திசைதிரும்பிய எதிர்பார்ப்புகள் புதிய பயணத்தின் மைல்கற்கள்!
வில்லியம் கெளபர் (William Cowper 1731 1800) என்றொருவர் இருந்தார்.
தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த துன்பங்களையும் பிரச்சனைகளையும்
தாங்கி முடியாமல் தேம்ஸ் நதியில் குதித்து, தற்கொலை செய்துகொள்ளலாம்
என முடிவெடுத்தார் இவர். இதன் நிமித்தம் இவர் ஒரு குதிரை வண்டிக்காரனைத்
தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்தார். அவனும் இவருடைய வீட்டிற்கு
முன்பாக வந்து நின்றபோது, வண்டியைத் தேம்ஸ் நதிக்கு ஓட்டச்
சொன்னார்.
அன்றைக்குப் பனிப்பொழிவு மிகுதியாக இருந்தது. அதனால் வண்டியை ஓட்டிச்
செல்வது வண்டிக்காரனுக்குச் சிரமமாகவே இருந்தது. குறிப்பிட்ட
தூர்ம் வந்ததும், வில்லியம் கெளபர் தேம்ஸ் நதி வந்துவிட்டதாக
நினைத்துக்கொண்டு, வண்டியிலிருந்து இறங்கி, கீழே குதித்தார்.
இவர் கீழே குதித்தபோதும் இவருக்கு எதுவுமே ஆகவில்லை; ஏனெனில், இவர்
குதித்தது தேம்ஸ் நதியில் இல்லை; இவரது வீட்டிற்கு முன்பாக! உண்மையில்,
பனிப்பொழிவின் காரணமாக வண்டி இவரது வீட்டை ஒட்டியே
சுற்றிக்கொண்டிருந்தது. இதனை அறிந்த இவர், கடவுள், தான் சாகவேண்டும்
என்றல்ல, வாழவேண்டும் என்றே விரும்புகின்றார் போலும் என்று
நினைத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் வந்து இப்படியொரு கவிதையை
எழுதினார்:
"கடவுள் மிகவும் ஆச்சரியமாகச் செயல்படுகின்றார், அவரது செயல்கள் அற்புதமானவை.
கடலில் அவர் தம் காலடிகளைப் பதிக்கின்றார், புயலில் அவர் பயணம்
செய்கின்றார்."
இதற்குப் பிறகு இவர் அறிவுக் கண் திறக்க, வாழ்வின் வழியை அறிந்துகொண்டவராய்
மிகப்பெரிய கவிஞராகவும், பாடலாசிரியராகவும் ஆனார். இவரது பாடல்கள்
பல திருவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்ளலாம் என்றிருந்த வில்லியம்
கெளபரின் அறிவுக் கண்ணைத் திறந்து, கடவுள் அவரை வாழ்வின் வழியை அறியச்
செய்தார். இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, நாம் நமது கண்களைத்
திறக்கவும், வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி நடக்கவும் அழைப்புத்
தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
கண்களைத் திறந்த சீடர்கள்
சிலர் காதால் தொடர்ந்து கேட்டும், அதைக் கருத்தில் கொள்வதில்லை; கண்களால்
பார்த்துக்கொண்டே இருந்தும் உணர்வதில்லை (மத் 13: 14). இவ்வார்த்தைகள்
யாருக்கு பொருத்திப் போனதோ இல்லையோ, இயேசவின் சீடர்களுக்கு நன்றாகவே
பொருந்திப் போயின.
தாம் பாடுபட்டு இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று இயேசு
தம் சீடர்களுக்குப் பலமுறை சொல்லியிருந்தார். அதைவிடவும் அவர் உயிர்த்தெழுந்த
பின் மகதலா மரியாவிற்கும், அதன் பிறகு பேதுருவுக்கும் யோவானுக்கும்
காட்சியளித்திருந்தார். இச்செய்தியை எம்மாவு நோக்கிச்
சென்றுகொண்டிருந்த இயேசுவின் இரண்டு சீடர்கள் கேள்விப் பட்டிருந்தார்கள்.
எனினும், அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பாமல்,
குருடர்களாகவே இருந்தார்கள்.
எப்போது இயேசு அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி, அவர்களுக்குக்
கொடுத்தாரோ அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அதன்பிறகு அவர்கள் இயேசு
உயிர்த்தெழுந்துவிட்டார் என்று நம்பத் தொடங்ககின்றார்கள். இயேசுவின்
சீடர்கள் அவர் உயிர்த்தெழுந்ததைக் காணாமலே நம்பி இருக்க வேண்டும்!
(யோவா 20: 29); அவர்களோ இயேசு முன்னறிவித்திருந்த வார்த்தைகளையும்
நம்பாது; உயிர்த்த ஆண்டவரை நேரில் கண்டவர்கள் சொன்ன வார்த்தைகளையும்
நம்பாமல் இருந்தது வேதனையானது. இந்நிலையில்தான் அப்பம் பிடுகையில்
அவர்களது கைகளைத் திறக்கச் செய்கின்றார் இயேசு.
பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலாது (லூக்
6: 39). பார்வையற்றவர்களாய் இருந்த இயேசுவின் சீடர்களுக்கு இயேசு
பார்வை கொடுத்து; அல்லது அவர்களது கண்களைத் திறந்து, அவர்களுக்குப்
புதுப் பார்வை அளிக்கின்றார் இயேசு.
மற்றவரின் கண்களைக் திறந்த சீடர்கள்
அறியாமையை விடவும் ஆபத்தானது வேறு எதுவும் இல்லை. இதைத் தான் கடவுள்
இறைவாக்கினர் ஒசேயா வழியாக, "அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்"
(ஒசே 4:6) என்கிறார். ஒரு காலத்தில் அறிவின்மையால் பார்வையின்றி இருந்த
இயேசுவின் சீடர்கள் பார்வை பெற்றதும், அறிவின்மையால் இருந்த மற்றவர்களும்
பார்வை பெறுமாறு செய்கின்றார்கள். அதை இன்றைய முதல் வாசகத்தில்
நாம் வாசிக்கின்றோம்.
யூதர்களின் முப்பெரும் விழாக்களுள் ஒன்றான பெந்தக்கோஸ்து விழாவில்
பதினொருவருடன் பேசுகின்ற பேதுரு, "நீங்கள் திருச்சட்டம் அறியாதவ்ர்மூலம்
இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண
வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார்... இதற்கு நாங்கள்
அனைவரும் சாட்சிகள்" என்கின்றார். இதற்குப் பிறகு திரண்டிருந்த மக்கள்
தங்கள் அறியாமையால் பாவம் செய்ததை உணர்ந்து, மனம் மாறித்
திருமுழுக்குப் பெறுகின்றார்கள். இவ்வாறு இயேசுவால் கண்கள் திறக்கப்பட்ட
சீடர்கள், அறியாமையில் இருந்த மக்களின் கண்களைத் திறந்து அவர்களும்
பார்வை பெறச் செய்கின்றார்கள்.
அவரவர் செயல்களின்படி தீர்ப்பு
அறியாமையால் பார்வையின்றி இருக்கும் மனிதர்கள் பார்வை பெற்று, ஆண்டவரைப்
பற்றிய அறிவில் வளர்வதற்கும் அவரது அருள் தேவைப்படுகின்றது. இது
யாரும் மறுக்க முடியாத உண்மை.
இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 16 இல்
தாவீது, "ஆண்டவரே, வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்" என்று
மன்றாடுகின்றார். தாவீது ஆண்டவரிடம் மன்றாடியது போலவே, அவரை
வாழ்வின் வழியை அறியச் செய்தார். இது நமக்குக் உணர்த்தும் செய்தி,
ஆண்டவரின் அருளால்தான் அவரின் வழியை நாம் அறிய முடியும்
என்பதாகும். இயேசு தன்னுடைய அருளால் சீடர்களின் கண்களைத் திறந்து
அவர்கள் வாழ்வின் வழியை அறியச் செய்தார். அவர்களும் அறியாமையில்
இருந்த மக்களின் அறிவுக் கண்களைத் திறந்து அவர்களை வாழ்வின் வழியை
அறியச் செய்தார்கள்.
நாம் ஏன் அறிவுக் கண்ணைத் திறந்து, வாழ்வின் வழியை அறியவும்,
அதன்படி நடக்கவும் வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதில்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் இருக்கின்றது. "நீங்கள் தந்தையே என
அழைத்து மன்றாடுபவர், ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே
தீர்ப்பு வழங்குகிறார்" என்று பேதுரு கூறுகின்றார். எனில், கடவுள்
நம்முடைய செயல்களின்படியே தீர்ப்பு வழங்குவார் எனில், நம்முடைய
செயல்கள் அவருக்கேற்ற செயல்களாக இருக்க வேண்டும். கடவுளுக்கு ஏற்ற
செயல் அவர் அனுப்பிய இயேசுவை நம்புவதுதான் (யோவா 6:29).
இயேசுவை நம்புகின்ற ஒருவர் வாழ்வின் வழியை அறிந்து, அதன்படி
நடக்கின்றார். அப்போது அவர் ஆள்பார்த்துச் செயல்படாத
கடவுளிடமிருந்து மிகுந்த கைம்மாறு பெறுவார். நாம் கடவுளிடமிருந்து
மிகுந்த கைம்மாறு பெற, இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து,
அதற்கேற்றாற்போல் வாழ்வோம்.
சிந்தனைக்கு
"ஆண்டவரே, எங்களை கண்களைத் திறந்தருளும்" (மத் 20: 33) என்று
பார்வையற்ற இருவர் இயேசுவிடம் வேண்டுவார்கள். நாமும் கடவுளிடம்
நம்முடைய அகக் கண்களைத் திறக்கச் சொல்லி, வாழ்வின் வழியில்
நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
பரிசு சீட்டு வாங்குபவர், தனக்குப் பரிசு கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் வாங்குகிறார். தேர்வு எழுதும் மாணவர், நிச்சயம்
வெற்றி பெறுவேன் என்று நம்புகிறார். நாம் எழுதும் கடிதம்,
கண்டிப்பாகப் போய் சேரும் என்ற நம்பிக்கைதான், அதைத் தபால்
பெட்டியில் போட வைக்கிறது. இந்த நம்பிக்கை நம் வாழ்வையே
இயக்குகிறது.
போர் வீரன் அலெக்சாண்டர் போருக்குச் சென்றபோது, எதிரியோடு
போர் புரிந்து நோய்வாய்ப்பட்டார். அது எதிரி நாட்டு பாரசீக
மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி. பாரசீக மன்னனின் அரண்மனை
மருத்துவர், இவரை இந்த நோயிலிருந்து குணமாக்கிவிடுவார் என்று
பலரும் சொன்னார்கள். அதற்கு அலெக்சாண்டரின் போர்வீரர்கள்,
அந்த மருத்துவரை எப்படி நம்புவது? என்று யோசித்தார்கள். ஆனால்
அலெக்சாண்டர் மட்டும் தயங்கவில்லை. உடனே அந்த மருத்துவரை
அழைத்து வாருங்கள் என்றார். அலெக்சாண்டரின் உடலை மருத்துவர்
சோதித்து விட்டு இரண்டு நாட்களுக்குள் மூலிகை மருந்தைக்
கொண்டு வந்து, நான் குணமாக்கி விடுகிறேன் என்று
கூறிவிட்டுச் சென்றார். அலெக்சாண்டரின் தளபதிகளில் ஒருவர்,
உங்களிடம் வந்திருந்த எதிரி நாட்டு மருத்துவரை நம்பாதீர்கள்.
அவர் உங்களுக்குக் கொடுக்க இருப்பது, விஷம் கலந்த மூலிகை,
என்று அவசர கடிதத்தை அனுப்பினான். அதைப் படித்த அவர் கொஞ்சம்
கூட அலட்டிக் கொள்ளவில்லை. மருத்துவர் கொண்டு வந்து
கொடுத்த மூலிகை மருந்தைச் சாப்பிட்டுக் குணமடைந்தார். குணமடைந்த
பிறகு தளபதியின் கடிதத்தை மருத்துவரிடம் காட்டினார்.
தன் மீது அலெக்சாண்டர் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து
அப்படியே திகைத்துப் போனார் மருத்துவர். நம்பிக்கை என்ற அச்சாணியை
ஆதாரமாக வைத்துதான், இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
பாரசீக மன்னன் எனக்குப் பகைவராக இருந்தாலும், மிகவும் பெரியவர்,
அவரின் அரண்மனை மருத்துவர் தொழிலில் நேர்மை இல்லாதவராக இருக்கமாட்டார்.
அப்படி இருந்திருந்தால், அவரை அங்கே வைத்திருக்க மாட்டார்கள்
என்று நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை என்றார்.
நம்பிக்கை இல்லாவிட்டால். இந்த உலகில் வாழவே முடியாது.
அவநம்பிக்கை எப்போதும், அவஸ்தையைத்தான் தரும். எதையும் நம்பிதான்,
வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது.
இயேசுவின் உயிர்ப்பிலும் அவரது சீடர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
அவரது சொல், செயல், சிந்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளவில்லை.
ஆனால், இயேசு அப்பத்தை பிட்கின்றபோது, அவரை அடையாளம் கண்டுகொண்டு,
நம்பிக்கை கொள்கிறார்கள். இயேசுவின் புதுமைகள், போதனைகள்,
செயல்பாடுகள், இவைகளனைத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான், அவர்
தன் சீடர்களோடு அப்பத்தையும், இரசத்தையும், தனது உடலாகவும்,
இரத்தமாகவும் அடையாள வடிவில் பகிர்ந்து கொடுத்தது. இதன்
வழியாகவே, இயேசு தன்னை இறை மகனாகவும், மனித மீட்புக்காக தன்னை
முழுவதுமாக இழப்பதையும் வெளிப்படுத்தினார். சீடர்கள் உள்ளத்தாலும்,
உணர்வாலும், புதுவாழ்வையும், நம்பிக்கையையும் பெற்று
போதிக்கத் தொடங்கினார்கள்.
மனிதர் முதலில் தன்னை நம்ப வேண்டும். ஆனால், இறைவனின் அருள்துணை
இல்லாமல் நம்பிக்கை மட்டும் பயன் தராது, மருத்துவர் மருந்து
கொடுக்கிறார். இறைவன்தான் குணப்படுத்துகிறார். இதுதான் உண்மை.
ஆனால் ஒருவர் குணம் பெற, மருந்தைவிட, நான் கண்டிப்பாகக் குணம்
பெறுவேன் என்ற நம்பிக்கையே குணமடைய வைக்கிறது. மனிதர்
சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழ்வதில்லை. அவன் நம்பிக்கையைச்
சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறார். உயிர்த்த இயேசுவை நம்பாத
சீடர்கள், அவரைப் பார்த்ததால் மட்டும் நம்பவில்லை, அப்பத்தைப்
பிட்கிறபோதுதான், அடையாளம் கண்டு நம்பிக்கையில் தங்களையே,
உறுதிப்படுத்திக் கொண்டனர்.
வாழ்வு தரும் உணவு நானே, என்னிடம் வருபவருக்கு பசியே இராது.
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது
(யோவா. 6:35) என்ற இயேசுவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை
கொள்வோம்.
ஒரு காட்டுக்குள்ளே ஒரு துறவற இல்லம். அங்கே மூன்று துறவிகள்
வாழ்ந்து வந்தார்கள்.
அவர்கள் மூன்றுபேரின் முகங்களும் எங்கேயும், எப்போதும்
மாலையில் மலரும் மல்லிகைப் பூ போல் சிரித்திருக்கும்.
அவர்கள் காட்டைவிட்டு நாட்டுக்குள் புகுந்தால், அவர்கள்
இருக்கும் இடம் சிரிப்புக் கடலாக மாறிவிடும்.
இப்படிப்பட்ட மூவரில் ஒருவர் திடீரென ஒரு நாள் இறந்துவிட்டார்.
மீதி இருந்த இருவரும் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அழவில்லை!
ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாடையைக் கட்டினார்கள்.
ஊர் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை! இவர்களோடு
சேர்ந்து சிரிப்பதா, இல்லை அழுவதா என்று அவர்களுக்குப்
புரியவில்லை.
அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. பாடையோடு
சேர்த்து அவர்கள் கட்டிவைத்திருந்த வெடிகள் வெடிக்கத்
துவங்கின.
வெடிகள், வெடிக்க, வெடிக்க உயிரோடிருந்த இரண்டு துறவிகளும்
ஆனந்தக் கூத்தாடினார்கள்.
மக்களோ, உங்கள் நண்பர் இறந்திருக்கின்றார். நீங்கள்
வெடிவெடித்து விழா நடத்துகின்றீர்களா? என்றார்கள்.
அதற்கு அந்தத் துறவிகள் இருவரும் மக்களைப் பார்த்து,
இறப்பு என்பது அழிவில்லா மறுவாழ்வுக்கு நம்மை அழைத்துச்
செல்லும் வாயில்! முடிவில்லா வாழ்வை. மகிழ்ச்சி
நிறைந்த மறுவாழ்வை இவர் அனுபவிக்கச் செல்கின்றார். அப்படிச்
செல்கின்றவரை வருத்தத்தோடு அழுதுகொண்டு அனுப்பச்
சொல்கின்றீர்களா? என்று கேட்டார்கள். இப்படி
கேட்டுவிட்டு அவர்கள் மக்களைப் பார்த்து, இறப்பை, சாவை
கொண்டாடுங்கள் என்றனர்.
மேலும் அறிவோம் :
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ(டு) உயிரிடை நட்பு (குறள் : 338).
பொருள்:
உடலுக்கும் உயிருக்கும் இடையே உள்ள உறவு நிலையற்றது!
தான் தங்கியிருந்த கூடு அல்லது ஓடு தனித்துக் கிடக்க
பறவைக் குஞ்சு நீங்கிச் செல்லும்நிலை சிந்திக்கத்தக்கது!
ஒரு திருமணத் திருப்பலியில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலிகட்டிய
போது, தாலிக்கயிற்றில் இரண்டு முடிச்சுகளுடன் நிறுத்திக்
கொண்டார். மூன்றாவது முடிச்சு ஏன் போடவில்லை? என்று கேட்டதற்கு
அவர் கூறியது: "பெண் வீட்டார் வரதட்சணையாக மூன்று இலட்சம்
ரூபாய் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இதுவரை இரண்டு இலட்சம்தான்
கொடுத்தார்கள். எப்போது மூன்றாவது இலட்சம் கொடுக்கிறார்களோ
அப்போதுதான் மூன்றாவது முடிச்சு போடுவேன்." தாலிக்கயிற்றில்
மணமகன் மூன்று முடிச்சுப் போடுவதின் ஆழமான பொருள்: மனம் (எண்ணம்),
வாக்கு (சொல்), காயம் (செயல்) ஆகிய மூன்றிலும் அவன் தன் மனைவியைத்
தவிர வேறு யாரையும் தீண்டமாட்டான் என்று அவன் தனக்கு ஒரு
வேலி அமைத்துக் கொள்கிறான்!
தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சுகள் இருப்பதுபோல, கிறிஸ்தவர்கள்
வாழ்விலும் மூன்று முடிச்சுகன் உள்ளன, அவை முறையே
திருவிவிலியம், திருவிருந்து, திருச்சபை. இவை மூன்றும் உறுதியாக
இருந்தால்தான், கிறிஸ்தவ நம்பிக்கை இறுதிவரை உறுதியாக இருக்கும்.
இம்மூன்று முடிச்சுகளைப் பற்றி இன்றைய நற்செய்தி கூறுகிறது.
திருவிவிலியம்: கிறிஸ்து இறந்த பிறகு சீடர்கள் கதிகலங்கிப்
போனார்கள்; நம்பிக்கை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்.
அவ்வாறு நம்பிக்கை இழந்த இரு சீடர்கள் கிறிஸ்து உயிர்த்த
ஞாயிறு அன்று எருசலேமிலிருந்து எம்மாவு என்ற ஊருக்குப் பயணித்தனர்,
உயிர்த்தக் கிறிஸ்து அவர்களுடன் நடந்து சென்றும் அவரைக் கண்டு
கொள்ளாதவாறு அவர்கள் பார்வை தடை செய்யப்பட்டிருந்தது. அவர்கள்
வாடிய முகத்துடன் காணப்பட்டனர்.
நல்ல பாம்பு ஒன்று வாட்டத்துடன் வழியில் படுத்திருந்தது.
ஏன்? என்று கேட்டதற்கு, "நான் எடுத்த படம் ஓடவில்லை" என்றது.
திரைப்படம் ஓடவில்லை என்றால் அதை எடுத்தவர்கள் வாடிப் போய்
விடுகின்றனர். அவ்வாறே கிறிஸ்து எடுத்த "இறையாசு" என்ற படம்
பாதியிலேயே நின்றுவிட்டதே என்று அந்த இரண்டு சீடர்கள் முகவாட்டத்துடன்
காணப்பட்டனர். உயிர்த்த கிறிஸ்து அவர்களுடைய முகவாட்டத்தைப்
போக்கப் பயன்படுத்திய முதல் ஆயுதம் திருவிவிலியம் மெசியா
பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் என்பதை திருவிவிலியத்தைக்
கொண்டு கிறிஸ்து விளக்கினார். "மறைநூலைப் புரிந்து
கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்" (லூக்
24:45)
நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க அனைவரும்,
குறிப்பாக இளைஞர்கள், திருவிவிலியத்தைப் பயன்படுத்த
வேண்டும். திருப்பா கூறுகிறது: "இளைஞர்கள் தம் நடத்தையை மாசற்றதாய்க்
காத்துக் கொள்வது எவ்வாறு? உம் வாக்கைக் கடைப்பிடிப்பதால்
அன்றோ" (திபா119:9). இன்றைய நவீன உலகின் தீய சக்திகளிலிருந்து
இளையோரைப் பாதுகாக்க, அவர்களைத் திரைப்பட உலகிலிருந்து
திருவிவிலிய உலகத்துக்குக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும்.
திருவிவிலியத்தில் கிறிஸ்துவைச் சந்திக்கின்றோம். அவர் நமது
மனக்கண்களைத் திறந்து நம்முடன் வழிநடப்பதை உணர்த்துகிறார்.
சேறும் சகதியும் நிறைந்த பாதையில் வழுக்கி விடாமல் நடக்க
ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அவ்வாறே வாழ்க்கையில் வழுக்கி
விழாதிருக்க ஆன்றோரின் அருள்வாக்கு தேவை என்கிறார் வள்ளுவர்.
திருவிருந்து: இரண்டு சீடர்கள் கிறிஸ்துவின் விவிலிய விளக்கத்தைக்
கேட்டபோது, அவர்களுடைய உள்ளம் பற்றி எரிந்தாலும் அவர்கள்
அவரை இன்னும் அடையாளம். கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிறிஸ்து
அவர்களோடு அமர்ந்து, அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி,
அதைப் பிட்டுக் கொடுத்தபோதுதான் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன;
அவரை அடையாளம் கண்டுகொண்டனர் (லூக் 24:30-31). எனவே,
கிறிஸ்து தம்மை வெளிப்படுத்தப் பயன்படுத்திய இரண்டாவது ஆயுதம்,
திருவிருந்து (நற்கருணை).
தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடிய போதெல்லாம் அப்பம்
பிட்டனர் (திப 2:42), நற்ருணையின்றித் திருச்சபை இல்லை:
திருச்சபை இன்றி நற்கருணை இல்லை. இரண்டாம் வத்திக்கான் சங்கம்
கூறுவதுபோல, நற்கருணைதான் திருச்சபை வாழ்வின் ஊற்றும் உச்சியும்
ஆகும் (திருச்சபை. எண் 11), உயிர்த்த கிறிஸ்து அப்பத்தைப்
பிட்டு அந்த இரண்டு சீடர்களுக்குக் கொடுத்தபின் அவர்கள்
பார்வையிலிருந்து மறைந்து விட்டார். ஏனெனில் அவரது இரண்டாம்
வருகைவரை. அப்பம் பிடுவதில், அதாவது நற்கருணைக் கொண்டாட்டத்தில்
நாம் அவரை அடையாளம் காண வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
திருச்சபை: கிறிஸ்தவர்களின் மூன்றாவது முடிச்சு திருச்சபை
என்னும் சமூகமாகும். கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அந்த
இரண்டு சீடர்கள் உடனடியாக எருசலேம் திருச்சபைக்குத்
திரும்பி அங்கிருந்த சீடர்களுடன் அவர்கள் அப்பம்
பிடுகையில் கிறிஸ்துவை அடையாளம் கண்டுகொண்ட அனுபவத்தைப் பகிர்ந்து
கொண்டனர் (லூக் 24:33-35). அனைவரும் கிறிஸ்து உயிருடன் இருப்பதை
உணர்ந்தனர்.
திருச்சபையின் உறவு ஒன்றிப்பில் நிலைத்து இருந்துதான்
திருவிவிலியம் படிக்க வேண்டும்: திருவிருந்தில் பங்கேற்க
வேண்டும். திருச்சபையில் இருந்து பிரிந்து போலி சபைகளுக்குச்
செல்லுபவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. ஒரு விவசாயி ஒரு
குளத்தில் இருந்த ஆமையிடம் தனது வீட்டில் குளத்துத் தண்ணீரை
விட இதமான தண்ணீர் இருப்பதாகக் கூறி அதைத் தன்
வீட்டுக்குக் கொண்டுபோனார் வீட்டில் ஓர் அடுப்பில்
பானையில் தண்ணீரை நிரப்பி அதில் ஆமையை விட்டு அடுப்பைச்
சூடுபடுத்தினார். இளஞ்சூட்டில் ஆமை ஆனந்தமாகத் துள்ளியது,
ஆனால், சிறிது சிறிதாக இளஞ்சூடு கொதிக்கும் தண்ணீராக, ஆமை
அதில் வெந்து செத்தது. விவசாயி அதைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்.
அவ்வாறே கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து இதர
சபைகளுக்குச் செல்லும்போது ஆரம்பத்தில் ஆனந்தம்
அடைகின்றனர். ஆனால் இறுதியில் தங்கள் விசுவாசத்தை இழந்து,
உடைமைகளையும் இழத்து, முகவரி இல்லாமல் பரிதாபமாகத் தங்கள்
வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். இத்தகைய
பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எப்பொழுதும்
விழிப்பாயிருக்க வேண்டும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் கிறிஸ்து எம்மாவுசுக்குச் சென்ற
சீடர்களின் கண்களைத் திறக்கப் பின்பற்றிய அதே வழிமுறையைத்
திருச்சபை பின்பற்றுகிறது. முதற்பகுதி அருள்வாக்கு
வழிபாடு. இரண்டாம் பகுதி நற்கருணை வழிபாடு. திருவிவிலியம்,
நற்ருணை விருந்து, திருச்சபையின் உறவு ஒன்றிப்பு ஆகிய
முப்பெரும் கூறுகளில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு,
மற்றவற்றை ஒதுக்கிவிடாமல் இருக்க விழிப்பாயிருப்போம்;
மூன்றையும் முழுமையாகப் பயன்படுத்தி, இம்மையில் வளமுடன்
வாழ்ந்து, முடிவில்லாப் பேரின்ப வாழ்வைப் பெற்று
மகிழ்வோம்!
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு ஏற்றதொரு தலைப்பிட வேண்டுமா?
'தெருவிலே ஒரு திருப்பலி' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.
- வீதியிலே வார்த்தை வழிபாடு
- வீட்டிலே பலி வழிபாடு.
"மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட
வேண்டுமல்லவா!" (லூக்.24:26) இதுவன்றோ இறைவனின் திருவுளம்!
வழிப்போக்கனாக வந்திணைந்த இயேசுவின் இந்தச் சொற்கள், இறைவனின்
திட்டத்தை, விருப்பத்தை அறிந்து ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பே
திருப்பலி என்பதை உணர்த்துகின்றன. 'மொழியில் சிறந்தது மௌனம்,
மருந்தில் சிறந்தது மன்றாட்டு' என்பார்கள். இறை மகிமையை அல்ல,
இறை உள்ளத்தை அறிந்து கொள்ள முற்படுவது - இதுவே திருப்பலி!
"இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால்
அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள்
மறைக்கப்பட்டிருந்தன" (லூக்.24;15,16). அதற்குக் காரணம்?
அச்ச உணர்வு சீடரின் கண்களை மூடியது, காணும் திறனை இழக்கச்
செய்தது.
நம்பிக்கைக் குறைவு அவர்களின் அறிவை மழுங்கடித்தது, மந்தமடையச்
செய்தது.
இதைப் போலத்தான் நமது வாழ்விலும், அச்சமும் நம்பிக்கை இன்மையும்
ஒன்று சேர்ந்து நமது விசுவாசக் கண்களை மறைத்துவிடும். அப்பொழுதெல்லாம்
இறைவன் நம்மோடு இருப்பதை உணராமல் கண்டுபிடிக்காமல் போய்
விடுகிறோம்.
இயேசுவை மறுதலிக்கும்படி தூய ஜான் கிறிசோஸ்டம் கட்டாயப் படுத்தப்பட்டார்.
அதற்குக் கிறிசோஸ்டம் மறுப்புத் தெரிவிக்க, அதனால் கோபமடைந்த
அந்த நாட்டு ஆளுனர் "உன்னை நான் நாடு கடத்துவேன்' என்று
அவரைப் பயமுறுத்தினான். அதற்குக் கிறிசோஸ்டம் "கடவுள் எங்கு
இல்லையோ அங்கு என்னை நாடு கடத்தினால் மட்டுமே பயப்படுவேனேயொழிய
வேறு எங்கு அனுப்பினாலும் நான் பயப்பட மாட்டேன்" என்றார்.
கொந்தளிக்கும் கடல். அதைக் கண்டு அஞ்சி நம்பிக்கை இழந்துவிட்ட
சீடர்கள், நீரின் மீது நடந்து வந்த இயேசுவைக் கண்டு "ஐயோ
பேய் என அச்சத்தினால் அலறினர்" (மத்.14:26, மார்க் 6:49)
அச்சம் அவர்களைக் குருடர்களாக்கியது.
இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாது மரியா அழுகிறாள். இயேசு
அங்கே வருகிறார். "ஆனால் அங்கு நிற்பவர் இயேசு என்று அவள்
அறிந்து கொள்ளவில்லை" (யோவான் 20:14) இனி அவரை எங்கே காணப்போகிறோம்
என்ற நம்பிக்கை இழப்பு அவளை நிமிர்ந்து ஏறெடுத்துப்
பார்க்காதவாறு செய்து விடுகின்றது.
இதைப்போலவே எம்மாவு சென்ற சீடர்களும் உடன்நடந்த இயேசுவை
இனம் காணாதபடி அவர்களின் "முகவாட்டம்" (லூக்.24:17) மனமுடைவு
விரக்திக்குத் தள்ளியிருந்தது. "அவர் இஸ்ரயேலை மீட்கப்
போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்"
(லூக்.24:20) என்றார்கள். இப்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்.
நம்பிக்கை என்னும் உயிரை இழந்துவிட்டவனுக்கு அறிவு எங்கே
இருக்கும். எப்படி இயங்கும்? எனவே "அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே"
(லூக்.24:25) என்ற இயேசுவின் கடிந்துரைக்கு ஆளாகிறார்கள்.
வாழ்வு என்னும் ஓடம் எப்பொழுதும் அமைதி ஆற்றில் செல்வதில்லை.
துன்பம் என்னும் கடலுக்குள் நுழையும் போது நம்பிக்கை தான்
நமக்குக் கண்கள். அது இருந்தால் இறைவன் புயலிலும் இருப்பதை
நாம் உணரலாம்.
எத்தனை பெரிய வெள்ளிக்கிழமைகளைச் சந்தித்தால் என்ன? உயிர்த்த
ஞாயிறாய் - உதய சூரியனாய் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை
இறைவார்த்தையும் இயேசு நிறுவிய திருவருள் சாதனமும் (நற்கருணை)
நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.
உயிர்த்து உயிர்வாழும் இயேசுவை இனம் கண்டு சந்திக்க இரு
வழிகளுக்கு எம்மாவு நிகழ்வு அழுத்தம் கொடுக்கிறது.
1. இறைவார்த்தையைக் கேட்கும் போது (in the spoken word)
"வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம்
பற்றி எரியவில்லையா? (லூக்.24:32). சீடர்கள் இயேசுவை அடையாளம்
காணாவிட்டாலும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன. இறைவார்த்தைக்குத்
தனி ஆற்றல் உண்டு.
ஞாயிறு வழிபாடு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்
கொண்டிருந்தாள் வயதான மூதாட்டி. அவளைக் கண்ட இளைஞர்கள்
கிண்டலாக, "பாட்டி, இன்று மறையுரையில் சாமியார் என்ன
சொன்னார்?" என்று கேட்டார்கள். வயதான பெண்மணி நினைத்துப்
பார்த்தாள். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. "சாமியார் சொல்வது
ஒன்றும் நினைவில் பதிவதில்லை என்றால் எதற்காகக்
கோவிலுக்குப் போகிறாய்?'' என்று கேட்டுச் சிரித்தனர். ஒரு
மூங்கில் கூடையை அவர்களிடம் கொடுத்து அருகில் உள்ள
நீரோடையில் அமிழ்த்தித் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். அவர்கள்
கொண்டு சென்று நீரில் அமிழ்த்தி வெறுங் கூடையைக் கொண்டு வந்தனர்.
"இந்தக் கூடையில் எத்தனை ஓட்டைகள். இதில் எப்படித் தண்ணீர்
தங்கும்?" என்றனர். அவள் சொன்னாள்! "உண்மைதான். கூடையில்
தண்ணீர் தங்காது. ஆனால் கூடையை இப்போது பாருங்கள். நீரில்
நனைந்ததும் அதன்மேல் படிந்திருந்த தூசி அகலவில்லையா? கூடை
இப்போது சுத்தமாக இல்லையா?" அதுபோல் இறைவார்த்தை எனக்குள்ளே
பதியவில்லை என்றாலும் அதைக் கேட்கும் போது நான் தூய்மையாவதை
உணருகிறேன்'.
2. அப்பத்தைப் பிட்கும் போது (in the broken bread)
"அவர் அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது...
அவர்களும் அவரை அடையாளம் கண்டு கொண்டார்கள்'
(லூக்.24:30,31) இயேசுவை இனம் காண உணர்ந்து ஏற்க இறைவார்த்தை
மட்டும் போதாது. நற்கருணை என்னும் அருள்சாதனம் வேண்டும்.
இறைவார்த்தை
- மனித சொல்லுரு எடுத்தது. அது விவிலியம்
- மனித உடலுரு எடுத்தது. அது நற்கருணை
கத்தோலிக்குத் திருச்சபை வைத்திருக்கும் கருவூலம் திருவருள்
சாதனம். எவ்வளவு பெருமைக்குரியது!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
"வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு"
பிரேசில் நாட்டைச் சேர்ந்த Alvaro Weyne என்ற வர்த்தகர் ஒருவருக்கு
திடீரென பத்து இலட்சம் ரூபாய் வந்து சேர்ந்தது. தன் அலுவலக
அறையில் அதைப் பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்ல
விரும்பினார். மிகவும் பாதுகாப்பான இடம், தன் மேசைக்குக்
கீழ் இருக்கும் குப்பைத் தொட்டிதான், அதை யாரும் தொடமாட்டார்கள்
என்று அவர் தீர்மானித்து, பணத்தை ஒரு பிளாஸ்டிக் பையில்
போட்டு, குப்பைத் தொட்டியின் அடிப்புறத்தில் அதை ஒளித்து
வைத்தார்.
அவர் தன் அறையை விட்டு வெளியேச் சென்றிருந்த நேரம், அவர்
அறையைச் சுத்தம் செய்யவந்த துப்புரவுத் தொழிலாளி, அந்தக்
குப்பைத் தொட்டியில் இருந்தவற்றை மற்றொரு பெரிய குப்பைத்
தொட்டியில் கொட்டி, வெளியே எடுத்துச் சென்றார்.
இது கற்பனைக் கதை அல்ல, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்
பிரேசில் நாட்டில் வெளியான ஒரு செய்தி. இச்செய்தியை
வாசித்த John Davies என்ற கிறிஸ்தவப் போதகர், இதன் தொடர்ச்சியாக
மற்றொரு கற்பனைக் கதையை இணைத்துள்ளார்.
பிரேசில் நாட்டில் ஒரு சேரியில் மிகுந்த வறுமையில் வாழ்பவர்,
Enrico. ஒவ்வொரு நாளும், நகரில் இருந்த குப்பைத் தொட்டிகளில்
கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, அவர் தன் குடும்பத்தைக்
காப்பாற்றி வருபவர். அன்று, அவர் அந்த அலுவலகத்தின் அருகில்
இருந்த குப்பைத் தொட்டியில் தேடியபோது, ஒரு 'பிளாஸ்டிக்'
பையைப் பார்த்தார். திறந்தபோது, அதில் இருந்த பத்து இலட்சம்
ரூபாய் அவரைப் பார்த்துச் சிரித்தது.
இந்த உண்மைச் செய்தியும், அதைத் தொடரும் கற்பனைக் கதையும்
நம் வாழ்வின் அனுபவங்களைப் பிரதிபலிக்கின்றன. நம்மை வந்தடையும்
கொடைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், சரியாகப்
பாதுகாக்காமல், அவற்றை இழந்துவிடுகிறோம். நாம் முற்றிலும்
எதிர்பாராத நேரங்களில், பெரும் மகிழ்வைத் தரும் கொடைகளை
நாம் பெறுகிறோம். தவறவிட்டதால் தவிப்பு, வியப்படையவைக்கும்
மகிழ்வு என்ற இவ்விரு உணர்வுகள், இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்றன.
எம்மாவு என்ற ஊரை நோக்கிச் சென்ற இரு சீடர்கள் அடைந்த அனுபவம்
இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது. (லூக்கா 24: 13-35)
இவ்வுலகிற்கு வழங்கப்பட்ட உன்னதக் கொடையான இயேசுவையும்,
அவரது உண்மையான வல்லமையையும் சீடர்கள் சரியாகப் புரிந்து
கொள்ளவில்லை. இறைவனின் அரசை இயேசு நிறுவுவார் என்று சீடர்கள்
எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த உச்சகட்ட எதிர்பார்ப்பில்,
இயேசு பரிதாபமாய் கொலை செய்யப்பட்டு இறந்ததும், அவர்கள் நடுவே,
ஏமாற்றம் அதிகம் உருவானது. அந்த ஏமாற்றத்தில் சீடர்கள் பலரும்
மனம் உடைந்து, பயந்து, பதுங்கி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்களோடு
பார்த்தபடி, காலத்தைக் கடத்தினர். அவர்கள் மத்தியில்
வாழ்ந்த பெண்களோ, இன்னும் நம்பிக்கையை இழக்காமல், துணிவோடு
கல்லறைக்குச் சென்றனர். உயிர்ப்பின் நற்செய்தி அவர்களுக்கு
முதலில் வழங்கப்பட்டது. 'கலிலேயாவுக்குச் செல்லுங்கள், அங்கு
மீண்டும் இயேசுவைக் காண்பீர்கள்' என்ற செய்தி, பெண்கள்
வழியே சொல்லப்பட்டது. இந்த நற்செய்தியைக் கேட்டும், கேட்காதது
போல் தங்கள் துன்பத்தில் மூழ்கிய இருவர், இன்றைய நற்செய்தியின்
நாயகர்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டதுபோல், கலிலேயாவுக்குச்
செல்லாமல், எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற இரு சீடர்கள், விரக்தியின்
உச்சியை அடைந்தவர்கள். நமது நாயகர்களில் ஒருவரது பெயர் கிளயோப்பா
என்று குறிக்கப்பட்டுள்ளது. (லூக்கா 24:18) மற்றவரது பெயர்
குறிக்கப்படவில்லை. அந்த இரண்டாவது சீடராக நம்மை இணைத்து,
இப்பயணத்தைத் தொடர்வோம்.
எருசலேமுக்கும் எம்மாவு என்ற ஊருக்கும் இடைப்பட்டத் தூரம்
11 கி.மீ. என்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது (லூக்கா
24:13). இந்த தூரத்தை, நடைப் பயணமாகக் கடக்க இரண்டு மணி நேரங்கள்
எடுத்திருக்கலாம். ஆனால், இந்த நடைப்பயணத்தை, நடைப் பிணங்களைப்
போல மேற்கொண்ட அந்த இரு சீடர்களுக்கும் இந்தப் பயணம்
முடிவின்றி செல்வதுபோல் தெரிந்திருக்கும்.
இவ்விரு சீடர்களும் போகும் வழியில் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்
கொண்டே சென்றனர் என்று நற்செய்தி கூறுகிறது. (லூக்கா
24:14) என்ன பேசியிருப்பார்கள்? அவர்களது உள்ளக் குமுறல்கள்,
புலம்பல்களாக, கோபமான வார்த்தைகளாக வெடித்திருக்கும்.
"நாங்கள் இவரை எவ்வளவோ நம்பினோம், இவரிடமிருந்து எவ்வளவோ
எதிர்பார்த்தோம். ஆனால், இவ்விதம் ஆகிவிட்டதே..." என்ற
குமுறல்கள் எழுந்திருக்கும். இவ்விரு சீடர்களின் குமுறல்கள்
பல தலைமுறைகளாய் நம் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டு
தானே இருக்கின்றன? நாம் எதிர்பார்த்தவை கிடைக்காதபோது,
நாம் எதிர்பாராதவை வந்து சேர்ந்தபோது நொறுங்கிப்போன நேரங்களை
நினைத்துப் பார்க்கலாம்.
2017ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து
நாட்டின் கெய்ரோ நகரில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட
வேளையில், எம்மாவு சீடர்களைப் பற்றிய இந்த நற்செய்தியை மையப்படுத்தி
வழங்கிய மறையுரையிலிருந்து சில எண்ணங்களை இப்போது
நினைவுகூர்வது நமக்குப் பயனளிக்கும். "அச்சீடர்கள் எருசலேமிலிருந்து
துவங்கிய பயணத்தை, மரணம், உயிர்ப்பு மற்றும் வாழ்வு என்ற
மூன்று சொற்களில் விவரிக்கலாம்" என்று திருத்தந்தை தன் மறையுரையைத்
துவக்கினார். பின்னர், 'மரணம்' என்ற சொல்லை அவர் விவரித்துக்
கூறியது இதுதான்: "மரணம். அவ்விரு சீடர்களும், ஏமாற்றம்
நிறைந்தவர்களாய் தங்கள் வழக்கமான வாழ்க்கைக்குத்
திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களது போதகர் இறந்துவிட்டார்.
இனி நம்பிக்கை கொள்வதில் பொருளில்லை. மற்றவர்களை மரணத்திலிருந்து
உயிர்ப்பித்த, மற்றவர்கள் நோய்களைக் குணமாக்கிய தங்கள் போதகர்,
சிலுவையில் அவமான மரணம் அடைந்தார் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை.
அனைத்து வல்லமையும் கொண்ட கடவுள், அவரை அந்த மரணத்திலிருந்து
ஏன் காப்பாற்றவில்லை என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை."
கடவுளை, குறிப்பாக, கடவுளின் வல்லமையைப் புரிந்துகொள்ள
முடியாத, புரிந்துகொள்ள விரும்பாத அச்சீடர்களைப்போல்
நாமும் நடந்துகொள்கிறோம் என்பதை, திருத்தந்தை, தன் மறையுரையில்
சுட்டிக்காட்டினார்:
"எத்தனை முறை நாம், அச்சீடர்களைப்போல், மனித சாயலில் நாமே
உருவாக்கிக்கொண்ட கடவுளைத் தாண்டி, உண்மைக் கடவுளை நம்ப மறுத்திருக்கிறோம்.
கடவுளின் வல்லமை, அதிகாரத்தையும், சக்தியையும் சார்ந்ததல்ல,
மாறாக, அன்பை, மன்னிப்பை, வாழ்வைச் சார்ந்தது என்பதை நாம்
எத்தனை முறை நம்ப மறுத்திருக்கிறோம்" என்ற கேள்விகளை
திருத்தந்தை தன் மறையுரையில் எழுப்பினார்.
நொறுங்கிய உள்ளத்துடன் நடந்துசென்ற சீடர்களுடன் இயேசு இணைந்து
நடக்க ஆரம்பித்தார். தாயன்போடு அவர்களைத் தேடிச்சென்ற இயேசு,
கனிவோடு பேசினார், கடிந்து கொண்டார், பொறுமையாய் விளக்கினார்.
அந்தத் தாய், இறுதியில் உணவைப் பரிமாறிய அழகில், இவ்விரு
சீடர்களின் கண்கள் திறந்தன.
தங்களை வியப்படையச் செய்த மகிழ்வை, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள
அவ்விரு சீடர்களும் எருசலேமுக்கு விரைந்தனர். "மாலை நேரம்
ஆயிற்று; பொழுதும் போயிற்று" (லூக்கா 24:29) தங்களை இருள்
சூழ்ந்துகொண்டது என்று பலவாறு புலம்பிக் கொண்டிருந்த அவ்விரு
சீடர்களின் உள்ளங்கள், எதிர்பாராத இந்த மகிழ்வால், ஒளிவெள்ளத்தில்
மூழ்கின. வெளியில் சூழ்ந்திருந்த இருளைப் பற்றிய கவலை ஏதும்
இல்லாமல், இரவோடு இரவாக, அவர்கள் இருவரும் எருசலேம்
திரும்பிச் சென்றனர். கனமான, உடைந்த உள்ளத்தைச் சுமந்து
அவர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டபோது, அவர்கள் கடந்து
சென்ற 11 கி.மீ. தூரம், பல நூறு கி.மீ. போலத்
தெரிந்திருக்கும். இப்போதோ, அந்த இரவில், அதே 11 கி.மீ.தூரம்,
11 மீட்டர் தூரமாகத் தெரிந்திருக்கவேண்டும். வியப்பில் ஆழ்த்தும்
மகிழ்வுக்கு இந்த மந்திரச் சக்தி உண்டு.
"Surprised by Joy" அதாவது, "வியப்பில் ஆழ்த்தும் மகிழ்வு",
அல்லது, "வியப்படைய வைக்கும் மகிழ்வு" என்ற சொற்றொடர்,
கிறிஸ்தவ சிந்தனையாளர், C.S.Lewis (Clive Staples Lewis)
அவர்கள், 1955ம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு. இந்நூலில்,
அவர், தன் மனமாற்றத்தை விவரித்துள்ளார். கடவுள் நம்பிக்கையற்றவராக
அவர் வாழ்ந்த நாட்களில், இறைவன் அவரைத் தொடர்ந்துவந்தார்
என்பதை அழகாகக் கூறியுள்ளார்: "ஒவ்வொரு நாளும், என் அறைக்குள்
நான் தனிமையில், என் வேலைகளில் என்னையே புதைத்துக்
கொண்டேன். அவ்வப்போது, நான் புதைந்திருந்த வேலைகளிலிருந்து
என் சிந்தனை சிறிது வெளியே எட்டிப் பார்த்தபோது, அங்கு என்னைச்
சந்திக்கக் காத்திருந்தார் கடவுள். யாரை நான் சந்திக்கக்கூடாது
என்று தீர்மானித்து, விலகிச் சென்றேனோ, அவர் என்னைத்
தேடித் தேடி வந்தார்."
சிறிது, சிறிதாக, Lewis அவர்கள் மனம் மாறத் துவங்கினார்.
கோவில் வழிபாடுகளில் அரை மனதோடு கலந்துகொண்டார். இங்கிலாந்திலேயே,
தயங்கிய, சந்தேகப்பட்ட உள்ளத்துடன் வாழ்ந்த கிறிஸ்தவன்
தான் ஒருவனாக மட்டுமே இருந்திருக்கவேண்டும் என்று அவர் தன்னையே
விவரித்துள்ளார். இறுதியில், அவரை இறைவன் முழுமையாக ஆட்கொண்ட
அனுபவத்தை அவர் இவ்விதம் விவரிக்கின்றார்:
"நான் எப்போது என் இறுதித் தீர்மானத்தை எடுத்தேன் என்பது
நன்றாக நினைவிருக்கிறது. அன்று காலை நான் 'Whipsnade' உயிரியல்
பூங்காவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். பயணத்தைத் துவக்கியபோது,
இயேசு கிறிஸ்து இறைவனின் மகன் என்பதை நம்பாமல் இருந்தேன்.
அனால், நான் உயிரியல் பூங்காவை அடைந்தபோது, அந்த நம்பிக்கை
உறுதி அடைந்தது" என்று Lewis அவர்கள், தன் மனமாற்றப் பயணத்தை,
இறை நம்பிக்கைப் பயணத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் விவரித்துள்ள
இந்த மனமாற்றக் காட்சியை வாசிக்கும்போது, ஓர் அடிப்படைக்
கேள்வி நமக்குள் எழ வாய்ப்புண்டு.
ஒருவர், கோவிலுக்கோ, திருத்தலத்திற்கோ செல்லும்போது, மனமாற்றமோ,
மத நம்பிக்கை வளர்ச்சியோ உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆனால், ஓர் உயிரியல் பூங்காவிற்குச் செல்லும்போதும், ஒருவருக்கு
மனமாற்றம் ஏற்படக்கூடுமா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு
நாம் தரக்கூடிய ஒரே பதில் - "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை"
(லூக்கா 1:37) என்று, வானதூதர் கபிரியேல், மரியாவிடம்
கூறிய சொற்கள்.
மனமாற்றங்கள், இறைவனின் சந்திப்புக்கள் எங்கும், எவ்வேளையிலும்
நிகழும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? இஸ்ரயேல்
மக்களின் உயிர் நாடியான கோவில் இருந்த எருசலேமில் இவ்விரு
சீடர்களைச் சந்திக்காத இயேசு, அவர்கள் எம்மாவு சென்ற
வழியில் சந்தித்தார், மனமாற்றத்தைக் கொடுத்தார். திருத்தூதர்
பவுல், கொலைவெறியுடன் தமஸ்கு நகர் சென்றபோது, வழியில் அவரைச்
சந்தித்தார், மனமாற்றம் தந்தார் (திருத்தூதர் பணிகள் 9:
3-9). C.S.Lewis அவர்களுக்கு, உயிரியல் பூங்காவிற்குச்
செல்லும் வழியில் மனமாற்றம் தந்தார் இறைவன்.
இன்று நாம் வாழும் இந்த புதிரானச் சூழலை எண்ணிப்பார்ப்போம்.
இந்தியாவில் ஏறத்தாழ கடந்த 30 நாள்களாக, ஐரோப்பாவில் 40
நாள்களுக்கும் மேலாக, நமது கோவில்கள் அனைத்தும் வழிபாடுகளுக்கு
மூடப்பட்ட நிலையில், நம்மில் எத்தனை பேர், நம் இல்லங்களில்,
இறை அனுபவத்தை, வெவ்வேறு வழிகளில் பெற்றுவருகிறோம் என்பதை
எண்ணிப்பார்ப்போம். ஒரு சிலருக்கு, இத்தனை ஆண்டுகளாக,
கோவிலில் நடைபெற்ற வழிபாடுகளில் அரைமனதோடு கலந்துகொண்ட
வேளையில் கிடைக்காத இறை அனுபவம், இல்லங்களில், நம் குடும்பங்கள்
நடுவில், இன்னும் கூடுதலாக, ஆழமாகக் கிடைத்திருக்கலாம்.
அதற்காக, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
எம்மாவு சென்ற சீடர்களைத் தேடிச்சென்ற இயேசு, அவர்கள் தங்கியிருந்த
இடத்திற்குச் சென்று, அங்கு அப்பத்தைப் பகிர்ந்த வேளையில்
தன்னையே வெளிப்படுத்தினார். இஞ்ஞாயிறன்று, நம் குடும்பத்தினருடன்
இணைந்து, தொலைக்காட்சி, அல்லது, வேறு ஊடகங்கள் வழியே, நாம்
மேற்கொள்ளும் வழிபாட்டு முயற்சிகளில், இயேசுவைக் கண்டுகொள்ளும்
அனுபவம் நமக்குக் கிடைக்கவேண்டும் என்று மன்றாடுவோம். இயேசுவோடு
பெற்ற அனுபவத்தால், "நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?"
(லூக்கா 24:32) என்று வியப்புற்ற எம்மாவு சீடர்களைப் போல்,
நம் உள்ளங்களையும், இறைவன், தன் சொற்களால், பற்றியெரியச்
செய்து, நம்மையும் வியப்பில் ஆழ்த்துவாராக!
மரணத்தையும், நோயையும், இத்தனை நாள்களாக, செய்திகளில்
பார்த்து, மனம் தளர்ந்திருக்கும் நம்மை, தாயன்புடன் தேடிவரும்
உயிர்த்த கிறிஸ்துவை நாம் அடையாளம் கண்டுகொள்ளும் வரத்தை,
இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் பெறுவோமாக!
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம், பெங்களூர்
பாஸ்கா காலம் மூன்றாவது ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:14,21-23)
புனித பேதுரு தனது முதல் மறைபரப்புப் பணியை யூதர்களுக்கு
மத்தியில் துவங்குகிறார். தனது மறைபரப்புப் பணியின்
கருப்பொருளாகக் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும்
உயிர்ப்பையே எடுத்துக்கொண்டார். ஆனால் யூதர்கள் இயேசுவே
மெசியா என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். தங்களை மீட்க
வந்தவர் இயேசுவே என்பதை நம்பவில்லை. மேலும் அவரைக்
குற்றவாளியெனத் தீர்ப்பிட்டு கழுமரம் ஏற்றினர்.
இவையனைத்தும் தவறு என்று யூதர்களுக்கு சுட்டிக்காட்டவும்,
இயேசுவே மெசியா என்பதை நம்பவும் லூக்காஸ், புனித பேதுரு
வழியாக வலியுறுத்துகிறார். மனம்மாறி இயேசுவிடம் வர அழைப்பு
விடுக்கிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (1பேது. 1:17-21)
கி.பி. 65-இல் நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக் காலத்
தில் கிறிஸ்தவர்கள் பலர் வேதசாட்சிகளாய் இரத்தம்
சிந்தினர். இந்த வேதகலாபனையின்போது பலர் சிதறுண்டு
தற்காலிகமாக சிறிய ஆசியாவின் சில பகுதிகளுக்குக்
குடியேறினர். குடியேறிய அவர்கள் வேற்றுத் தெய்வங்களை
வழிபடுகிற மக்களுக்கு மத்தியில் அந்நியர்களாய் வாழ்ந்து
வந்தனர். அந்த மக்களுக் குத்தான் பேதுரு எழுதுகிறார்:
"நீங்கள் கடவுளுக்கு அஞ்சி ஒழுக்கமான வாழ்வு வாழுங்கள்.
ஏனெனில் உங்கள் மூதாதையர் தொடங்கிய பாவங்களிலிருந்து
உங்களை விடுவிக்க இயேசு தனது இரத்தத்தை சிந்தினார். தனது
இரத்தத்தால் உங்களைக் கழுவிச் சுத்தப்படுத்தினார். அவரில்
நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 24:13-35)
"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே" என்ற ஏக்கத்தோடு
நம்பியது நடக்காததால் நடைப்பிணங்களாக, "வாழ்வு கொடுக்க
வந்த மீட்பர் மாண்டு விட்டாரே" என்ற துக்கச் செய்தியைப்
பரிமாறியவர்களாக எம்மாவுஸ் நோக்கிப் பயணிக்கின்றனர்
இருவர். இத்தகைய நம்பிக்கையற்ற சூழலில்தான், இறை இயேசு
அவர்க ளோடு பேசி வருகின்றார்.
தனது வார்த்தையால் சாந்தப்படுத்துகின்றார். ஆறுதல்
படுத்துகின்றார். உலகம் மீட்படைய, மீட்பர் இயேசு செத்து
உயிர்த்தெழ வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு
விளக்குகிறார்.
இறைவார்த்தை தங்களின் உள்ளத்தில் ஒரு மாற்றத்தை,
புத்துணர்ச்சியை கொண்டு வருவதை சீடர்கள் உணர்கின்றனர்.
இதைத்தான் சீடர்கள், "வழியிலே அவர் நம்மோடு பேசி மறைநூலை
விளக்கும்போது நம் உள்ளம்பற்றி எரியவில்லையா?" என்று
உளமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். இறைவார்த்தையில்
கடவுளை உணர்ந்தவர்கள், அப்பம் பிட்குதலில் கடவுளை
முழுமையாகக் கண்டு உணர்ந்தனர். இந்த அனுபவத்தைத்தான் நாம்
தினம் கொண்டாடுகிற திருப்பலியில் பெறுகிறோம், பெற
வேண்டும். (குறிப்பு: இயேசு சீடர்களோடு நடந்து
செல்கின்றபோது அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
காரணம், எம்மாவுஸ் எருசலேம் நகருக்கு மேற்கு பகுதியில்
இடம் பெறுகிறது. எனவே மாலை நேரத்தில் பயணிக்கிற சீடர்களால்
இயேசுவைக் காணமுடியவில்லை. ஏனென்று சொன்னால், மேற்கில்
மறைகிற சூரியன் நன்கு பிரகாசிப் பதால் சீடர்களின் கண்கள்
கூசி, அவர்களால் பார்க்க முடியாமல் போனது என்ற ஒரு கருத்து
நிலவுகிறது).
மறையுரை
"எம்மாவுஸ் அனுபவம் ஒரு திருப்பலி, நற்கருணைப் பலி"
எம்மாவுஸ் அனுபவம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று
இயேசு இறைவார்த்தையைப் பற்றி விளக்குகிறார், இரண்டு இயேசு
அப்பம் பிட்கிறார். அவற்றின் விளைவு, ஒன்று
இறைவார்த்தையைக் கேட்டபோது அவர்களின் உள்ளம்பற்றி
எரிந்தது. இரண்டு அப்பம் பிட்கும்போது அவர்கள் இயேசுவைக்
கண்டு கொண்டனர். திருப்பலியும் இரண்டு பகுதிகளைக்
கொண்டுள்ளது. ஒன்று இறைவார்த்தை வழிபாடு, இரண்டு நற்கருணை
வழிபாடு. அவற்றின் விளைவு, எம்மாவுஸ் சீடர்கள் போன்று,
நமது உள்ளம் பற்றியெரிய வேண்டும். நமது உள்ளக் கண்கள்
இயேசுவைக் கண்டுணர வேண்டும்.
1. இறைவார்த்தை வழிபாடு
திருப்பலியின் முக்கியப் பகுதிகளில் ஒன்று இறைவார்த்தை
வழிபாடு. இதில் இறைவார்த்தை வாசிக்கப்படுகின்றது. இவ்வாறு,
இறைவார்த்தையைக் கேட்கிற நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும்
மாற்றம் கண்டிப்பாக நிகழ வேண்டும்.
முதலில் நாம் இறைவார்த்தையை உள்ளத்தில் வாங்க வேண்டும்,
அது என்ன சொல்லுகிறது என்பதைக் கேட்க வேண்டும்.
இறைவார்த்தை நம்மில் வாழ்வானால் மனமாற்றத்திற்காக நாம்
ஏங்க வேண்டியதில்லை. இறைவார்த்தை, எந்த வழியில் மனிதரை
வந்தடைகிறது? மனிதரில் எவ்வாறு செயல்படுகிறதென்பதே கேள்வி.
பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம், இறைவார்த்தை பல வழிகளில்
குறிப்பாக இறைவாக்கினர்களின் வார்த்தை வழியாக மனிதரை
வந்தடைகிறது. கடவுள் இறைவாக்கினர் எரேமியாவிடம்
கூறுகிறார். "இதோ பார்! என் சொற்களை உன் வாயில்
வைத்துள்ளேன்" (எரே. 1:9). இறைவாக்கினர்களின் வழியாக
வருகின்ற இறைவார்த்தையை உதாசீனப்படுத்தினோமென்றால்,
கடவுளின் அருளைப் பெறாமல் விலகிச் செல்வது நாம்தான்.
வாழ்வுக்கான வழியிலிருந்து சாவுக்கான வழியைத்
தேர்ந்தெடுப்பது நாம்தான். இதைத்தான் 2அர. 16:13 -இல்
பார்க்கிறோம், யூதாவின் அரசன் ஆகாசு தனது மூதாதையரான
தாவீது அரசன் போன்று நேர்மையாக நடக்கவில்லை. அவன்
ஆண்டவரால் விரட்டியடிக்கப்பட்ட வேற்றினத்தாரின் கடவுளை
வழிபட்டு வந்தான். மேலும் அந்த வேற்றினத்தார் முறைப்படி
தனது முதல் கனியான மகனைத் தீயிலிட்டு பலியாக்கினான்
(23:10). இந்நேரத்தில் சிரியா மற்றும் இஸ்ரயேல் அரசர்கள்
ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டிருந்தனர். அப்போது
இறைவாக்கினர் எசாயா, கடவுள் கூறிய வார்த்தையை அவனிடம்
தெரிவிக்கின்றார். "ஆண்டவரிடம் ஓர் அடையாளம் கேளும்.
மீட்கின்ற கடவுள் உயிரோடிருந்து உன்னை உயர்த்துவார்.
எதிரிகளை விரட்டுவார்" என்று கூறுகிறார் (எசா. 7:10).
ஆனால் ஆகாசு எசாயாவின் இறைவாக்கை மறுத்துவிடுகிறான்.
கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை.
10 மாதம் தான் சுமந்து பெற்றெடுத்த முதல் கனியை இழந்து
தவித்த ஆகாசின் மனைவிக்கு (2அர. 18:2) இறைவாக்கினர் எசாயா
ஆறுதல் கூறுகிறார். "இதோ, கருவுற்றிருக்கும் ஒரு இளம்பெண்
ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவர்
இம்மானுவேல் என்று பெயரிடுவார்" என்று மீட்பரின் வருகையை
முன்னறிவிக்கிறார். அவரின் மனதில் ஒரு எண்ணம் எழுகிறது.
அதாவது, ஆகாசுடைய மகன் எசேக்கியாதான் அக்குழந்தை. கடவுளின்
அரசைக் கொண்டு வர இருக்கின்றவர் அந்தக் குழந்தை தானென
நினைத்திருந்தார்.
ஆனால், அது நிறைவேற வேண்டுமெனில், ஆகாசு கடவுளின்
திட்டப்படி நடந்திருக்க வேண்டும். ஆண்டவர் சொன்னபடி
அவரிடம் அடையாளம் ஒன்று கேட்டிருக்க வேண்டும்.
இறைவார்த்தைக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
விவிலியத்திலும், திருச்சபைப் பாரம் பரியத்திலும் ஒரு
செய்தி ஆழக்கிடப்பதைக் காணலாம். அதாவது, எவனொருவன்
கடவுளிடம் முழுமையாகச் சரணடைகிறானோ, அவனிடத்தில் தான்
மெசியா வருவது சாத்தியம் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது.
அதாவது, மரியாவின் "ஆகட்டும்" (லூக்கா 1:38) என்ற
வார்த்தையால்தான் உலக மீட்பர் உலகிற்கு வந்தார். ஒருவேளை,
ஆகாசு கடவுளின் திட்டப்படி நடந்திருந்தால் அவரது மகன்
எசேக்கியாவில் இறைவாக்கினர் எசாயாவின் 'மீட்பர் பற்றிய
முன்னறிவிப்பு' நிறைவு பெற்றிருக்கக்கூடும். புனித ஜஸ்டின்
காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர்கூட, எசேக்கியாதான்
அந்தக் குழந்தை (இம்மானுவேல்) என நம்பினர். ஆனால் ஆகாசு
இறந்து விட்டான். இறைவார்த்தைக்கு கீழ்ப்படியாமையால் பாவம்
அவனைக் கவ்விக் கொண்டது.
ஒவ்வொரு நேரமும் இறைவார்த்தை வாசிக்கப்படுகின்றபோது, ஒரு
குறிக்கோளோடுதான் நம்மிடம் வருகிறது. நாம் அதை உள் ளத்தில்
வாங்க வேண்டும். உள்ளத்தில் வாங்கிய இறைவார்த்தை பலன்
தராமல் திரும்பிப் போகாது. இதைத்தான் எசா. 55:10-11 இல்
கூறுகிறார். "பூமிக்கு வருகின்ற மழை புல், தானியங்களை
விளைவிக்காமல் செல்வதில்லை. அதுபோலதான் இறைவார்த்தை." பாறை
மழைத் தண்ணீரை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகாசு ஒரு பாறை,
இறைவார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை. மனிதர் அனைவரும் ஆகாசு
அல்லர். மரியாக்கள் பலரும் உள்ளனர்.
மரியாவின் மடியில் விழுந்த இறைவார்த்தை உங்கள் மடியிலும்
விழுகின்றது. சீடர்களின் உள்ளம்பற்றி எரியக் காரணமான
இறைவார்த்தை உங்களுக்காக, உங்கள் இதயத்தின் கதவருகே
நிற்கின்றது. அதை ஏற்றுக்கொண்டு பலன் பெறுவது மனிதரான
உங்கள் கையில் உள்ளது. தவறினால் தண்டனை நிச்சயம். தண்டனை
என்று சொன்னால் பட்டினி அல்ல. நோயல்ல. வெள்ளப்பெருக்கல்ல.
மாறாக இறைவார்த்தைப் பஞ்சம் ஏற்படும் (ஆமோஸ் 8:11-12).
இறைவார்த்தைப் பஞ்சம் ஏற்பட்டிருந்தால் புனித சவேரியார்
கிடைத்திருப்பாரா? புனித அகுஸ்தினார்தான்
கிடைத்திருப்பாரா?
"ஒருவன் உலகெல்லாம் தனதாக்கினாலும், தன் வாழ்வையே
இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத்தேயு
98 16:26) என்ற இறைவார்த்தைதான் பணக்கார சவேரியாரை புனித
சவேரியாராக மாற்றியது. "இரவு முடியப் போகிறது. பகல்
நெருங்கி யுள்ளது. ஆகவே, இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக்
களைந்து விட்டு ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலன்களை
அணிந்துகொள் ளுங்கள்" (உரோ. 13:12) என்ற இறைவார்த்தைதான்,
சிற்றின்பத்தில் சிக்கியிருந்த அகுஸ்தினாரை புனித
அகுஸ்தினாராக்கியது. புனிதவர் களான மனிதர்கள் அனைவரும்,
என்னையும் உங்களையும்போல் பாவம் செய்தவர்கள்தான். அவர்களை
மாற்றிய இறைவார்த்தை நம்மை மாற்றவில்லை எனில் தவறு
யாரிடம்? நம் உள்ளத்தில் பற்றியெரியவில்லையெனில் தவறு
யாரிடம்? "என் வார்த்தையை நீங்கள் நம்பவில்லை. நான்
அனுப்பிய இறைவாக்கினர்களையும் புனிதவர்களையும் நம்பவில்லை.
எனவே நானே மனுவுருவாகி உங்க ளிடையே வருகின்றேன் (யோவா.
1:14) என்று நமக்காகத் தன்னைத் தந்தவர் இயேசு. அதன்
நினைவாகத்தான் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் நற்கருணை
வழிபாட்டில் அப்பம் பிடுதலை கொண்டாடு கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அப்பத்தைப் பிட்டு
சீடர்களுக்குக் கொடுக்கின்றபோது அவர்கள் கடவுளைக் கண்டு
கொள்கின்றனர். இந்த அனுபவத்தைத்தான் ஒவ்வொரு திருப்பலியி-
லும் பெறுகிறோம். அந்தத் திருப்பலி எவ்வாறு உள்ளது? அதன்
பொருள் என்ன? நாம் கொண்டாடுகிற திருப்பலியானது இயேசுவின்
பாடுகளையும் உயிர்ப்பையும் நினைவு படுத்துகின்றது. தனது
கடைசி இராவுணவின்போது இயேசு பயன்படுத்திய வார்த்தையைத்தான்
(1கொரி. 11:24-25) திருப்பலியில் வசீகர வார்த்தையாகக் குரு
பயன்படுத்துகிறார். வசீகர வார்த்தையால் அப்பமும் இரசமும்
இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது. குருவானவரும்
அதை உயர்த்திப் பிடிக்கிறார். ஏனென்று சொன்னால், அன்று
பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம்
செய்தனர். விளைவு, பாம்புகள் பல, பாவிகளைக் கடித்தன, பலர்
இறந்தனர். இந்நேரத்தில்தான் மோசே வெண்கலத்தால் பாம்பு
செய்து உயர்த்திப் பிடித்தார். பார்த்த அனைவரும் உயிர்
பெற்றனர். யோவே. 3:14-இல் பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு
உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்
என்ற இயேசு கூறிய வார்த்தை ஒவ்வொரு திருப்பலியிலும் நிறைவு
பெறுகிறது. பாவியான நாமும் பாவமெனும் பாம்புகளால்
கடிபட்டவர்கள்தான். எனவே உயிர்பிழைக்க நற்கருணை ஆண்டவரை
உற்று நோக்குவோம். எம்மாவுஸ் நிகழ்ச்சியில் இதைத்தான்
பார்க்கிறோம். அப்பம் இரண்டாக உடைந்தது. கண்கள் திறந்தன.
அவர்கள் கடவுளைக் கண்டு கொண்டனர். ஏனெனில் நம்பிக்கை கொண்ட
கண்களை பெற்றிருந்தனர்.
நமது வாழ்க்கைக்கு வருவோம்
கிறிஸ்தவ மறையின் அச்சாணி, திருப்பலிதான். கிறிஸ்தவன்
ஒவ்வொருவனின் வாழ்விலும் மையமாக இருப்பதும் திருப்பலிதான்.
நம் வாழ்வு சுழலுகின்ற மையப்புள்ளி திருப்பலிதான். ஒவ்வொரு
திருப்பலியிலும், அப்பம் பிட்கும்போது எம்மாவுஸ் சீடர்கள்
போன்று கடவுளைக் கண்டுகொள்கிறோமா? அவ்வாறு கடவுளைக் கண்டு-
கொண்டால் நூற்றுவர் தலைவன்போல விசுவாசத்தை அறிக்கையிட
நம்மாலும் முடியும். (மத். 8:8-) 'ஆண்டவரே! தேவனே, நீர்
என் உள்ளத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்: ஆனால் ஒரு
வார்த்தை சொல்லும் என் ஆன்மா குணமடையும்" திருப்பலி
முடிந்து செல்லுகிறபோது நம்மால் சொல்ல முடியுமா?
இறைவார்த்தை கேட்டபோது நமது உள்ளம்பற்றி எரிந்தது என்று?
அப்பம் பிட்கும்போது நாம் கடவுளைக் கண்டு கொண்டோமென்று?
கோவிலை விட்டு வெளியே போகும்போது நமது நண்பனிடம் நம்மால்
சொல்ல முடியுமா? "இன்றைக்கு இறைவார்த்தை வாசிக்கப்பட்டபோது
நமது உள்ளம் பற்றியெரியவில்லையா? அப்பம் பிட்கப்பட்டபோது
கடவுளைக் கண்டோமல்லவா? இத்தகைய ஈடு இணையற்ற அனுபவமாக
உள்ளது. இதுவரை திருப்பலி வெறும் சடங்கே என்ற மனநிலையை
மாற்றுவோம். திருப்பலியில் இயேசு நமக்காகத் தினம் தினம்
தன்னையே கொடுக்கிறார். பலியாகிற இறைவனை உயிருள்ளவராய்
ஏற்றுக்கொள்வோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
இறைவன் இறைவார்த்தையின் வழியாகப் பேசும் போது, மன-
மாற்றம் பெறுவோம். மகிழ்ச்சி அடைவோம். புதிய பாதை, புதிய
பார்வை கிடைக்கும். இயேசுவுக்காய் எதையும் இழக்க
தயாராவோம்.
வாழ்கின்ற திருச்சபையாகிய நாம், திருப்பலியில் பங்கு
பெறும் போது துன்புறும் திருச்சபையோடும், மகிமையின்
திருக்- கூட்டத்தோடும் உறவு கொள்கிறோம்.
திருப்பலியில் நான்குவித இறைபிரசன்னத்தை உணர முடிகிறது.
திருக்கூட்டத்தின் இறைப்பிரசன்னம், இறைவார்த்தையின் இறைப்-
பிரசன்னம், குருவின் உருவில் இறைப்பிரசன்னம் மற்றும் உணவு
வடிவில் இறைப்பிரசன்னம்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
கடந்த இரு வாரங்களாக யோவான் நற்செய்தியின்படி நமதாண்டவரின்
உயிர்ப்புப் பற்றிய விவரிப்புக்களை நாம் தியானித்தோம்.
இன்று லூக்கா நற்செய்தியின்படி இயேசுவின் உயிர்ப்பின்
நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. யோவான் நற்செய்தி போலவே
லூக்காவும், வெறுமையான கல்லறையிலிருந்து தம்
நிகழ்ச்சிகளைத் தொடங்குகின்றார் ஆனால் வெண்ணாடை யணிந்த
இருவர் இயேசுவின் உயிர்ப்பைப் பெண்களுக்கு
அறிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து லூக்கா, இயேசு எம்மாவு
நோக்கிச் சென்ற சீடர்களோடு பயணித்ததை விவரிக்கின்றார்.
இந்தச் சீடர்களோடு இயேசு உடன் நடந்து, உண்மையை விளக்கி,
இறுதியில் உயிர்த்த இயேசுவை அவர்கள் கண்டுகொண்டதில் கொண்டு
வந்து முடிக்கிறார். இந்த எம்மாவு சீடர்களின் அனுபவம்
வாரம்தோறும் (நாள்தோறும்) திருப்பலிக்கு வரும் நமது
அனுபவமாகவும் அமைகிறது. எம்மாவு நிகழ்வையும் நமது
திருப்பலி இறை அனுபவ நிகழ்வையும் நான்கு நிலைகளில் இங்கு
காண்போம்.
1. வீழ்ச்சிகளைக் கணக்கெடுத்தல்
அ) இயேசுவின் நற்செய்தியில்:
எம்மாவு நிகழ்வைத் தொடங்கும்போது அனைத்தும் எதிர் மறையாகவே
இருப்பதாக லூக்கா படம் பிடித்துக் காட்டுகின்றார். இதற்கு
முந்தைய நிகழ்வில் பெண்கள் வெறும் கல்லறையை காண்கிறார்கள்
(லூக் 24:2), திருத்தூதர்களுக்குப் பெண்கள் கூறியது வெறும்
பிதற்றலாகத் தோன்றுகின்றது (லூக் 24:11) பேதுருவும்
கல்லறைக்குள் சென்று உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டும்
கண்டு வியப்புறுகிறார் (லூக் 24:12) இத்தகைய ஒரு
சூழலில்தான் எம்மாவு நிகழ்ச்சி நிகழ்கின்றது. சீடர்கள்
இருவர் எருசலேமிலிருந்து எம்மாவு திரும்பிக்
கொண்டிருக்கின்றனர். ஒருவேளை இவர்கள் இயேசு கலிலேயாவி
லிருந்து தம் சீடர்களோடும், பெரும் திரளோடும்
எருசலேமுக்குப் போனபோது அவரை இஸ்ரயேலை மீட்கப்போகிறவர் (வச
20) என்று, பெரும் எதிர்பார்ப்புடன் அரசியல், சமய மாற்றம்
ஒன்று நிகழ்ந்துவிடும் என்று, ஏக்கத்தோடு இயேசுவைப்
பின்பற்றி எருசலேம் சென்றவர்களாக இருக்க வேண்டும்.
தலைமைக் குருக்களும், ஆட்சியாளர்களும் அவரைக் கொன்று
போட்டபிறகு (வச. 20), இப்போது இவர்கள் எல்லாம்
முடிந்துபோய்விட்டது என்னும் விரக்தியில் வீடு திரும்பிக்
கொண்டிருக்கின்றனர். அவர்கள் இதயத்தை இருளும், சோகமும்,
தோல்வியும் கவ்விக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதோடு எல்லாம்
முடிந்து விடவும் இல்லை. அண்மையில் கிடைத்த ஒருசில தரவுகள்
இந்த நிகழ்ச்சியை அவ்வளவு எளிதில் மறந்துவிடவும் முடியாமல்
செய்துவிடுகின்றன. பெண்களும் பேதுருவும், பெற்ற அனுபவங்கள்
ஒருவேளை அவர் உயிர்த்திருப்பாரோ என்றும் எண்ணத்
தோன்றுகிறது.
எனவே, எதை நம்புவது, எதை நம்பாமல் விடுவது. அவர் மெசியாவா?
சாதாரண மனிதரா? அவர் இறந்து போனவரா? இன்னும் வாழ்கிறவரா?
எனும் ஒருவித கையறு நிலையில் அவர்கள் இருந்தனர்.
ஆ) நம் வாழ்வில்:
இச்சீடர்களின் நிலையில்தான் பல நேரங்களில் நாம் இருக்
கிறோம். அதே மனநிலையுடன்தான் திருப்பலிக்கும் செல்கின்
றோம். நமது வீழ்ச்சிகளையும், தோல்விகளையும் மட்டுமே நம்
கண்முன் கொண்டு விரக்தியோடும், இறைவன் நம் வாழ்வில்
இருக்கிறாரா? இன்னும் இன்றும் செயல்படுகிறாரா? எனும்
குழப்பத்தில்தான் நாம் ஆலயம் வருகின்றோம்.
2. நற்செய்தி பற்றி அறியச் செய்யும் இறைவார்த்தை
அ) இயேசுவின் நற்செய்தியில்,
இயேசு இத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் சீடருடன்
பயணிக்கிறார். அவர்கள் அவரைக் காணாதவாறு அவர்களது கண்கள்
மறைக்கப்பட்டிருந்தாலும் அவர் அவர்களுடன் இருக்கிறார்.
அவர்கள் தங்களின் விரக்தியை வெளிப்படுத்திய பிறகு அவர்
அவர்களுக்கு "மெசியா மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்கள்
பட வேண்டும்" (வச. 26) என்பதை மோசே தொடங்கி இறைவாக்கினர்
வரையிலான இறைவார்த்தைகளைப் பயன்படுத்தி தம்மைப் பற்றி
விவிலியம் கூறியுள்ள இறைவாக்கு களை அவர்களுக்கு
விளக்குகின்றார். இந்த அனுபவத்தை அவர்கள் பிறகு நினைத்துப்
பேசும்போது தங்கள் உள்ளம்பற்றி எறிந்ததாகக் கூறுகின்றனர்
(வச. 32).
ஆ) நம் வாழ்வில்:
குழப்பமான சூழலில் ஆண்டவரின் ஆலயம் வந்து, அவரது பலியில்
பங்கெடுக்கும்போது அங்கு மறை நூல் வழியாக இறைவன் நம்மோடு
பேசுகின்றார். இந்த இறைவாக்கு, திருப்பாடலின் ஆசிரியர்
"என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு. என் பாதைக்கு ஒளியும்
அதுவே" (திபா 119:105) எனக் கூறுவதுபோல, நமக்குத்
தெளிவும், நோக்கும், வழியும் காட்டுகின்றது. நமது வாழ்வைச்
சந்திக்கத் திடனும், தெளிவும் தருகிறது. சுருங்கக்கூறின்
நம் இதயங்களைப் பற்றியெரியச் செய்கிறது.
3. அப்பம் பிட்குதலில் ஆண்டவரைக் கண்டுகொள்ளுதல்
அ) இயேசுவின் நற்செய்தியில்:
இயேசு இறைவார்த்தையைக் கொண்டு அவரது பாடுகளின் உள்
அர்த்தத்தை, அதன் அவசியத்தை விளக்கியது அவர்களுக்குக்
கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். தாங்கள் நேசித்த
மனிதரின் இறப்பின் துயரோடு போராடிக்கொண்டிருந்த அவர் களின்
இதயத்தை மயிலிறகு கொண்டு கொஞ்சம் வருடிவிட்டது போல்
இருந்திருக்க வேண்டும். இந்த இதமான அனுபவத்தை அவ்வளவு
எளிதாகப் பிரிந்துவிட அவர்கள் விரும்பவில்லை. முக்கியமாக
இருள் சூழ்ந்துவரும் கலக்கமான அந்த மாலை நேரத்தில் அவர்
தங்களோடு தங்கினால் நலமாயிருக்கும் என்று எண்ணி அவரைக்
கட்டாயப்படுத்தி இணங்க வைக்கின்றனர் (வச. 29).
பற்றிப் படர்வதற்கும், சாய்ந்து கொள்வதற்கும் ஒன்று ம்
இல்லாமல் இருந்த இளம் செடி போன்ற அவர்களுக்கு அவரின்
உடனிருப்பு ஒரு கொம்பு கிடைத்தது போலாயிற்று. அந்த மாலை
வேளையின் உணவு நேரத்தில் அவர்களுக்கு ஓர் ஆனந்த அனுபவம்
வாய்க்கப் பெற்றது.
இயேசு இன்னும் அவர்களுக்கு ஏதோ ஒரு வழிப்போக்க னாகத்தான்
தென்பட்டார். ஆனால் மாலையில் அவர்களோடு பந்தியில்
அமர்ந்திருந்தபோது அவர் செய்தது அவர்களுக்கு
வித்தியாசமாகப்பட்டது. அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளைப்
போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் (வச. லூக்
24:30). இது இவர்களுக்கு ஏதோ ஒன்றை நினைவுபடுத்தியது.
இறுதி இராவுணவின்போது இயேசு இதையேதான் இதே வரிசையில் தான்
செய்தார். "பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு
நன்றி செலுத்தி அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்"
(லூக் 22:19). அதற்கு முன் ஐந்து அப்பங்களை
பலுகச்செய்தபோதும் அவர் அப்பங்களையும், மீன்களையும்
எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து அவற்றின்மீது ஆசிகூறி
பிட்டு கொடுத்தார் (லூக் 9:16). ஆக, இது இயேசுவின்
வழக்கமான பாணியில் இறுதி இராவுணவில் செய்ததை அவர் இங்கே
இப்போது இதோ நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். எனவே, இவர்
வெறும் வழிப்போக்கனல்ல. இறைமகன், இயேசு என இனம் கண்டு
கொள்கின்றனர் (வச. 31).
ஆ) நமது வாழ்வில்:
திருப்பலிக்கு வரும்போது இதுதான் நிகழ்கின்றது; அல்லது
நிகழ வேண்டும். எதிர்மறை அனுபவங்களோடும், நினைவு களோடும்
ஆலயம் வரும் நமக்கு இறைவார்த்தைத் தெளிவும், வழியும் தந்து
நம் இதயங்களைப் பற்றி எரியச்செய்ய வேண்டும். அதன் நிறைவாக
அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறிவிட்டு நமக்குப்
பகிர்ந்தளிக்கப்படும்போது நாம் ஆண்டவரை கண்டு கொள்ள
வேண்டும். நாமும் இறைவனோடு தங்க வேண்டும். அவரின் அனுபவம்
பெற வேண்டும். இறைவனோடு செபத்தின் வழி பேச வேண்டும். நமது
வாழ்வைப் பற்றிய எதிர்மறை சிந்தனை களை, இறைவன் நம்மோடு
இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது என்ற எண்ணத்தை நேர்மறை
சிந்தனைகளாக மாற்ற வேண்டும். இறைவன் வாழ்கிறார்,
உடனிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
4. வாழ்வைச் சந்திக்க ஓடுதல்
அ) இயேசுவின் நற்செய்தியில்:
இந்த ஆனந்த அனுபவத்தை ஆண்டவர் தங்களோடு உடன் நடந்து,
தங்கினார். "அவரை நாங்கள் கண்டு கொண்டோம்" எனும் உன்னதமான
அனுபவத்தை அறிவிக்க அந்நேரமே (மாலை அல்லது இரவு நேரமே)
அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்
(பதினோரு கிலோ மீட்டர் தொலை) (வச 13, 33). அங்குப்
பதினொருவரும் இதே விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
அந்தக் குழுமத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டனர். தங்கள்
அனுபவத்தை அவர்கள் சீடர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
சீமோனுக்கு ஆண்டவர் தோன்றிய அனுபவம் அவர்களின்
அனுபவத்தையும் உறுதிப் படுத்துகின்றது. இவ்வாறு அவர்கள்
அந்தக் குழுமத்தில் ஒன்றாகிப் போனார்கள். வாழ்வைச்
சந்திக்கும் திடம் பெறுகின்றனர்.
ஆ) நம் வாழ்வில்:
திருப்பலியில், நற்கருணையில் ஆண்டவரை சந்தித்த அனுபவம்
பெற்றவர்கள் திருஅவையோடு தோழமைக்கொண்டு நமது அனுபவத்தைப்
பகிரவும் அவர்களின் அனுபவத்தால் உறுதிப்படுத்தப்படவும்
வேண்டும். இந்தத் திருஅவையின் தோழமையோடு வாழ்வைச் சந்திக்க
நாம் துணிவுடன் புறப்பட்டுச் செல்வோம்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பாஸ்கா காலம் - முன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம் : திப 2:14. 22-33
பெந்தகோஸ்து திருநாளில் திருத்தூதர்களும் அவர்களோடு
கூடியிருந்த வர்களும் தூய ஆவியைப் பெற்றதும் அவர்களிடையே
ஒரு புதிய உற்சாகமும் உத்வேகமும் ஏற்பட்டது. புதுமொழிகள்
பேசும் வரமும் அவர்களுக்கு அருளப்பட்டது. இவ்வியத்தகு
நிகழ்ச்சியைக் கண்டு குழம்பிய மக்கள் கூட்டத்திற்குப்
புனித பேதுரு ஆற்றிய அருளுரை புகழ்பெற்றது. இதே
அருளுரையின் முதல் பகுதியே இன்றைய முதல் வாசகம்.
ஒரு சாதாரண பணிப்பெண்ணின் வார்த்தைக்குக் கூடப் பயந்து
இயேசுவை மும்முறை மறுதலித்த பேதுரு ஒரு மாபெரும் மக்கள்
கூட்டத்தைச் சந்தித்து, இயேசுவைப் பற்றி அஞ்சா நெஞ்சத்தோடு
போதித்தாரென்றால் இது ஒரு வியத்தகு செயல்தானே! அன்று
திருத்தூதர்கள் பெற்றது தூய ஆவி தான் என்பதற்கு வேறு
சாட்சியமே தேவையில்லை. பழைய ஏற்பாட்டிலே யோவேல்
இறைவாக்கினர், "அதற்குப் பின்பு நான் மாந்தர் யாவர் மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன். உங்கள் புதல்வரும்
புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்..." (யோவேல் 2:28) என்று
கூறியது முழுமையாக நிறைவேறிவிட்டது. எலும்புக்
கூடுகளுக்கும் உயிர் தந்து மக்கள் கூட்டமாக மாற்றிய
இறைவனின் ஆவி (எசேக் 37) பேதுருவை மாற்றி ஊக்கம் நிறைந்த
திருத்தூதன் ஆக்கிவிட்டது.
தந்தை கடவுளின் மகனே இயேசு
தனது போதனையில் பேதுரு இயேசுவின் வாழ்க்கையை சுருக்கமாக
மக்கள் முன் வைக்கின்றார். இயேசு கிறிஸ்து தான் ஆற்றிய
புதுமைகள், அருங்குறிகள் அனைத்திலும் தந்தையாகிய கடவுளின்
சான்று பெற்றவராக எண்பிக்கப்பட்டார் என்பதைச்
சுட்டிக்காட்டுகின்றார் (திப 2: 22) பெந்தகோஸ்து திருநாள்
கொண்டாட வந்திருந்த பற்பல யூதர்களின் கூட்டமே அன்று
எருசலேமில் கூடியிருந்தது. இவர்கள் அனைவரும் தங்கள் பாஸ்கா
கடமைகளை நிறைவேற்ற வந்திருந்த மக்களாவர். இவர்கள் கடவுளை
ஏற்ற மக்கள்; ஆனால் இவர்களுள் பலர் இயேசுவைப் பற்றி அதிகம்
அறியாதவர்கள். ஆகவேதான் கடவுளுக்கும் இயேசுவுக்கும் உள்ள
உறவை முன் வைத்துப் பேசுகிறார் பேதுரு. கடவுளின் அருளைப்
பெற்றவர் இயேசு. கடவுளின் செயல்களைப் புரிந்தவர் இயேசு.
கடவுளால் எண்பிக்கப்பட்டவர் இயேசு என்று படிப்படியாக
இயேசுவை மக்கள் முன் வைக்கிறார். இந்த இயேசுவே "நாசமின்றி
நமை நிதம் காப்பார், நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்"
(பாரதி) என்பதை உணர்கிறோமா?
தந்தை கடவுளே இயேசுவை உயிர்ப்பித்தார்
இவ்வாறு தாங்கள் போற்றிப் புகழ்ந்த கடவுளின் அன்பர்
இயேசுவைத்தான் யூதர்கள் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்
என்ற உண்மையை உடைக்கின்றார் பேதுரு. ஆனால் கடவுள் அவரைக்
கைவிட்டுவிடவில்லை. அவரை உயிர்த்தெழச் செய்து, தனக்கும்
அவருக்கும் இடையே உள்ள உறவை முழுமையாக எண்பித்துவிட்டார்.
அவர்கள் நம்பியிருந்த கடவுளை மையமாக வைத்தே இயேசுவைப்
பற்றிய பல உண்மைகளைச் சாதூரியமாக யூத மக்கள் கூட்டத்திற்கு
உணர்த்திவிட்டார் பேதுரு. இனி தொடர்ந்து யூத மக்கள்
வியந்து போற்றிய தாவீது அரசன் எழுதிய திருப்பாக்களை
மேற்கோள் காட்டி இயேசுவின் உயிர்ப்புப் பற்றியும் அவர்
இப்போது வெற்றி வாகையுடன் வீற்றிருப்பது பற்றியும் மேலும்
விவரிக்கிறார். "ஆண்டவரை எப்போதும் என் கண்முன்
வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே நான்
அசைவுறேன்" (திபா 16:8).
பெயரும் புகழும் பெற்று விளங்கிய தாவீது கூட
இறந்துவிட்டார்; பாதாளம் சென்றுவிட்டார். ஆனால் அவர்
குறிப்பிடும் ஆண்டவர் அதாவது இயேசு கிறிஸ்து "பாதாளத்தில்
விடப்படவில்லை' "அவர் உடல் அழிவு காணவில்லை" என்று
முன்கூட்டியே சொல்லிவிட்டார் (திபா 132:11). சாவினின்று
உயிர்த்த இயேசு பாவச் சாவிலிருந்து நம்மை
உயிர்ப்பிப்பாராக!
ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்.
இரண்டாம் வாசகம் : 1 பேது 1 :11-21
திருத்தூதர் பேதுரு கிறிஸ்தவ மக்களுக்கு, குறிப்பாகப்
புதிதாகத் திருமுழுக்கு பெறவிருந்தவர்களுக்கு வழங்கிய
அறிவுரையின் ஒரு பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம்.
திருமுழுக்கு இயேசு கிறிஸ்துவில் நம்மை ஒரு புதிய படைப்பாக
மாற்றுகிறது. ஆகவே இனி பழைய பாவ வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளியிட்டு, புதிய வாழ்க்கையை மேற்கொள்ள
வேண்டும் என்பது பேதுருவின் அறிவுரை. இப்படிப்பட்ட புதிய
வாழ்க்கையை நாம் வாழ வேண்டுமென்று, இயேசுகிறிஸ்து
நமக்காய்ப் பாடுபட்டு மரித்தார் என்ற உண்மையையும் பேதுரு
அறிவிக்கிறார்.
உங்கள் விலை கிறிஸ்துவின் இரத்தம்
"நீங்கள் இவ்வுலகில் அந்நியராய் வாழும் காலமெல்லாம்
அவருக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்" என்ற வாக்கியத்தில்
நாம் வாழும் உலகச் சூழ்நிலைகள் நம்மை எவ்வாறெல்லாம்
பாதிக்கின்றன என்ற கருத்து அடங்கியுள்ளது. அநீதிகள்,
ஏற்றத்தாழ்வுகள், வன்முறைகள் போன்ற பாவ அமைப்புகள்
மலிந்துள்ள இன்றைய சமுதாயத்தில் இயேசு கிறிஸ்துவின்
மதிப்பீடுகளின்படி வாழ விரும்புகின்றவன் ஓர்அந்நியனாகவே
காணப்படுவான். இருப்பினும் அந்த மதிப்பீடுகள்
நிலைநாட்டப்பட வேண்டும். உலகின் தவறான மதிப்பீடுகளின்று
நம்மை விடுவிக்கவே, இயேசு கிறிஸ்து தன் உயிரையே தியாகம்
செய்தார். அவர் வாழ்ந்த பிறரன்பு வாழ்க்கையும் அவரது தியாக
மரணமும் நமக்கு இன்று ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
புனித பேதுரு கூறும் மற்றொரு வாக்கியம் இதே கருத்தை
நமக்குத் தருகிறது ! "உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட
விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும்" (1 பேது 1:18).
அன்று அவர் சிந்திய விலைமதிக்கப்படாத இரத்தத்திற்காக
அவருக்குக் கிடைத்த பரிசு, மீட்புப் பெற்ற நாம்தான். நாம்
செலுத்தும் வழிபாடு, அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்
கடன்; நமது பணி, நமது சிறிய காணிக்கை.
தூய வாழ்வு வாழுங்கள்
நம்மைச் அழைத்த ஆண்டவர் தூயவர் (லேவி 11: 44-45; 19: 2).
படைப்புக்களிலிருந்து, தீமைகளிலிருந்து, பாவத்திலிருந்து
பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, அதேவேளையிலே படைப்புகளைப்
பேணிப்பாதுகாக்கவும், தீமைகள், பாவங்களை அழிக்கவும்
தம்மையே அர்ப்பணித்தவர் கடவுள். "Kadosh" - "கதோஷ்" என்ற
எபிரேயச் சொல்லுக்கு, பிரித்து வைக்கப்பட்டு (separation),
அர்ப்பணிக்கப்பட்டது (consecration) என்பது பொருள். எனவே
நாமும் திருமுழுக்கால், தீமை, பாவங்களிலிருந்து விலகி,
நன்மை, புண்ணியம் அன்பு வழிகளிலே நம்மைக்
கரைக்கும்போதுதான் தூயவராகிறோம்.
இத்தூய்மை நமது நினைவு, சொல், செயல்களிலே வெளிப்பட
வேண்டும். "உங்கள் விண்ணகத் தந்தை
நிறைவுள்ளவராயிருப்பதுபோல், நீங்களும் நிறைவுள்ளவராய்
இருங்கள்" (மத்5:48); "உங்கள் தந்தை இரக்கமுள்ளவ
ராயிருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்"
(லூக் 6:36). தந்தையின் நிறைவிலும் இரக்கத்திலும்
வெளிப்படுவது அவரது தூய்மை என்பதை உணர்ந்து அன்பு
செயல்கள்வழி நாம் தூயவர்களாவோம்.
நீங்கள் தூயவராயிருங்கள்.
நற்செய்தி: லூக். 24: 13 35
எம்மாவுஸ் சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தது பற்றி லூக்கா
மட்டுமே குறிப்பிடுகிறார். ஒருவேளை மாற்கு குறிப்பிட்ட
சம்பவத்தையே (மாற் 16:12- 13) லூக்கா
விரிவுபடுத்தியிருக்கலாம் என்பர் ஆய்வாளர். இயேசுவை இன்று
நம் வாழ்விலே எதிர்ப்பட உதவும் இரண்டு சாதனங்கள்
திருவாக்கும் (விவிலியம்), திவ்ய நற்கருணையும் ஆகும்
என்பதை இப்பகுதி சுட்டுகிறதெனலாம்.
இறைவாக்கு வழி இயேசுவை அறிதல்
சீடர்களின் நம்பிக்கை குறைபட்ட நம்பிக்கை. இயேசு
வல்லமையுள்ள இறைவாக்கினர், மக்களுக்கு நற்செய்தி
அறிவித்து, நோய் நோக்காடு களிலிருந்து அவர்களைக்
குணப்படுத்தியவர். தலைமைக் குருக்களால் சிலுவையில் அறைந்து
கொல்லப்பட்டவர், இஸ்ரயேலருக்கு விடுதலையளிப்பவர்
என்றெல்லாம் தாம் அறிந்ததை, தாம் கேள்விப்பட்டதை
இயேசுவிடமே கூறுகின்றனர். ஆனால் தான் உயிர்ப்பேன் என்று
அவரே மும்முறை சொல்லக் கேட்டதை நம்ப மறுக்கின்றனர்.
குறைவுபட்ட நம்பிக்கையால்தான் உயிர்த்த இயேசுவை அவர்கள்
கண்டுகொள்ள முடியவில்லை. "அவர்கள் கண்கள்
மறைக்கப்பட்டிருந்தன" (24:16). மறைநூல் வழி, "மெசியா
பாடுகள்பட்டு மகிமையடைய வேண்டும்" (24:25) என்பதை இயேசு
விளக்குகிறார். அவர்கள் கண்கள் திறக்கின்றன. "வழியில் அவர்
நம்மோடு உரையாடி மறைநூலைத் தெளிவாக்குகையில், நம்
உள்ளம்பற்றி எரியவில்லையா?" (24:32) என்பர். ஆம், நம்
உள்ளங்களை உருக்குவது மறைநூல்; நம் வாழ்வுக்கு வழியும்
ஒளியுமாயிருப்பது மறைநூல். வாழ்வு தரும் வார்த்தைகளைக்
கொண்டது மறைநூல். விவிலிய வாசகம், படிப்பு, உரையாடல்,
செபம் முதலியவற்றின்பால் நமக்கிருக்கும் ஈடுபாடு என்ன? நம்
குடும்பங்களில் விவிலியம் பெறும் இடம் யாது?
திருவுணவு வழி இயேசுவை அறிதல்
இவ்வாசகத்தில், "கண்கள் மறைக்கப்பட்டிருந்தன" (24:16),
"கண்கள் திறக்கப்பட்டன" (24:31) என்ற தொடர்கள்
முக்கியமானவை. நம்பிக்கைக் குறை பார்வையைத்
தடைப்படுத்துகிறது. திருவுணவுப் பார்வையை அளிக்கிறது.
"அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு
அவர்களுக்கு அளித்தார்" (24:30). அவர்கள் கண்கள்
திறக்கின்றன. "நானே உயிர்தரும் உணவு. என்னிடம்
வருகிறவருக்குப் பசியே இராது; என்னில் நம்பிக்கை
கொள்பவருக்கு என்றுமே தாகம் இராது" (யோவா 6:35) என்ற
இயேசுவின் சொற்கள் உண்மையடைகின்றன. நம்பிக்கைக் குறையால்
வீடு திரும்பிய சீடர், இப்போது நம்பிக்கை நிறைவு பெற்று,
எருசலேம் திரும்புகின்றனர்; திருத்தூதர்களுக்கே தூதர்கள்
ஆகின்றனர் (24:35).
திருப்பலியிலே நாம் எம்மாவுஸ் சீடர்கள் போன்றே
இருக்கிறோம். "வார்த்தைப் பந்தி", "நற்கருணைப் பந்தி" வழி
இறையோடு கலந்துரையாடு கிறோமா? திருப்பலியில் நம் கண்கள்
திறக்கப்படுகின்றனவா? நமது உள்ளம் உருகி, "அம்மையே அப்பா,
ஒப்பிலா மணியே...இம்மையே உன்னைச் சிக்கெனப்பிடித்தேன்,
எங்கெழுந்தருளுவதினியே" (திருவாசகம்) எனறு நம்மால்
கூறமுடியுமா?
எங்களோடு தங்கும் : எனெனில் மாலை நேரமாயிற்று.
மறையுரை
மெடடுக்கள் நன்றி வழிகாட்டும் தோழன்
பற்றியெரியட்டும் - நம் இதயங்களும்
நற்செய்தி நூல்களைப் புரட்டிப் பார்த்தால் இயேசுவின்
வாழ்வில் பயணங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை
என்பதை நம்மால் உணர முடியும். தாயின் வயிற்றில் அவர்
கருவாக இருந்தபோதே நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு
மேற்கொண்ட முதல் பயணத்தில்தான் அவரது மண்ணக வாழ்வின்
தொடக்கமே ஆரம்பித்தது. சீடர்கள் அனைவரும் கூடியிருக்க,
அவர்களது கண்கள் முன்பாக மண்ணகத்திலிருந்து விண்ணகத்தை
நோக்கிப் பயணித்த அவரது விண்ணேற்றம்தான் மண்ணக வாழ்வில்
அவரது இறுதிப் பயணம். கலிலேயா, யூதேயா, சமாரியா, எருசலேம்,
கப்பர்நாகும் என தன் வாழ்வு முழுவதும் எத்தனையோ
இடங்களுக்குப் பயணித்துக் கொண்டேயிருந்தார் இயேசு. ஒவ்வொரு
பயணத்திலும் ஒவ்வொருவிதமான பாடத்தை மக்களுக்கும்
சீடர்களுக்கும் கற்றுத்தந்துகொண்டே சென்றார்.
இன்றைய நற்செய்தியும் இயேசுவின் ஒரு பயணத்தைப் பற்றித்தான்
பேசுகின்றது. இஸ்ரயேல் மக்களின் அரசியல், சமூக, ஆன்மீகத்
தலைநகரான எருசலேமிலிருந்து பதினொரு கிலோமீட்டர் தொலைவில்
உள்ள எம்மாவு என்ற இடத்திற்கு இரண்டு சீடர்களோடு இயேசு
மேற்கொண்ட பயணம்தான் இன்றைய நற்செய்தி வாசகம். தங்களோடு
நடந்து கொண்டிருந்த இயேசுவை அவர்கள் உணரவில்லை. இயேசுவின்
வாழ்க்கை முழுவதுமே இப்படி இயேசுவைக் கண்டுகொள்ளாத, உணர
முடியாத பலர் இருந்திருக்கிறார்கள்.
* இயேசுதான் கடல்மீது நடக்கிறார் என்பதை உணராமல் அவரைக்
கண்டு அஞ்சிய சீடர்கள், இயேசு வழங்குவது முழுமனித விடுதலை
என்பதை உணராமல் அவரை வெறும் அரசியல் விடுதலை தருபவராக
எண்ணி அவரது ஆட்சியில் சிறப்பு அரியணைகளைக் கேட்ட
செபதேயுவின் மக்கள்
* இரவுமுழுவதும் அவரோடு உரையாடினாலும் அவரை முழுமையாக
உணராத நிக்கதேம் வரவிருப்பவர் இயேசுதான் என்பதை
முன்னறிவித்துச் சுட்டிக்காட்டியவராக இருந்தும் அவரை
உணராமல் அவரிடமே ஆளனுப்பிக் கேட்ட திருமுழுக்கு யோவான்
* இயேசுதான் உயிர்த்த ஆண்டவராகத் தன்முன் நிற்கிறார்
என்பதை உணராமல் அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணிய மகதலா
மரியா
இப்படிப் பலர் தங்களோடு இருக்கும் இயேசுவைக்
கண்டுகொள்ளாமல், உணராமல் இருந்ததை விலிலியம்
பதிவுசெய்கின்றது. "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்;
அவருக்கு உரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா
1:14).
நமது வாழ்விலும்கூட பலநேரங்களில் இப்படி நடக்கலாம்.
நம்மோடு இருக்கும் நம் ஆண்டவரை அறிந்து கொள்ளாதவர்களாக,
கண்கள் மூடப்பட்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
கோவிலில் ஆண்டவரை ஒவ்வொரு நாளும் தரிசிக்கின்ற நாமும் நமது
அன்றாட வாழ்வில் நம்மோடு நெருங்கி நடந்து வரும் இயேசுவை
உணராமலேயே அவரைத் தேடிக்கொண்டிருக்கலாம். நமது பெற்றோரின்
வழியாக நம்மை அன்புசெய்பவராக, நமது நண்பர்கள் வழியாக
நம்மைத் தட்டிக்கொடுப்பவராக, நம் ஆசிரியர்கள் வழியாக
நமக்குக் கற்றுத்தருபவராக, அருள்பணியாளர்கள், துறவியர்
வழியாக நமக்கு நல்வழிகாட்டுபவராக, கடவுள் நம்மோடுதான்
இருக்கிறார். நாம் அவரைக் கண்டுகொள்கிறோமா என்று நம்மை
நாமே கேட்டுப்பார்ப்போம்.
தித்திக்குதே (ஞாயிறு மறையுரை) அருட்பணி
அ. ஸ்தனிஸ்லாஸ்
பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
"நீ என்னப்பல நாட்கள் பக்தியுடன் வேண்டியதால் உனக்கு ஒரு
வரம் தருகிறேன். இன்றிரவு சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஒரு
கருநாகம் வந்து உன் வீட்டில் ஐந்து நிமிடம் படமெடுக்கும்.
அதை நீ கட்டிப்பிடித்தால் பெரும் வரம் கிடைக்கும்,"
என்றார் கடவுள் பக்தனிடம். பக்தன் தன்
குடும்பத்திலிருப்பவர்களிடம் இதைச் சொன்னான். கடவுள்
சொன்னபடியே கருநாகம் இரவு வந்து படமெடுத்தது. அதைக்
கட்டிப்பிடிக்க நகர்ந்தான். "நீ அதைக் கட்டிப்பிடித்தால்
செத்துவிடுவாய். நாங்கள் அநாதையாகிவிடுவோம்," என மனைவியும்
பிள்ளைகளும் அழுதனர். ஆனால் கடவுளின் வார்த்தையில்
நம்பிக்கையுடன் கருநாகத்தை கட்டிப்பிடிக்கப்போனான்.
சொந்தங்கள் விடவில்லை. ஐந்து நிமிடம் முடிந்துவிட்டது.
பாம்பு மீண்டும் திரும்பிப் பொந்துக்குள் புகுந்தது.
கடவுள் வரத்திலே நம்பிக்கையுடன் மனைவி, பிள்ளைகளை
உதறிவிட்டுவிட்டு ஓடிப்போய்ப் பாம்பின் வாலைப் பிடித்தான்.
வால் மட்டும் அறுந்து அவன் கையிலிருந்தது. அந்த வால்
தங்கமாக ஜொலித்தது. பக்தன் குறைவாக நம்பினான். குறைவாகப்
பெற்றான்.
மனிதன் தான் நினைத்தது நடக்கவேண்டுமென ஆசித்து
எதிர்பார்த்து, அதை அடைய பல வழிகளைப் பின்பற்றுகிறான்.
முழுநம்பிக்கையுடன் செயல்படாது, அரை நம்பிக்கையுடன் ஏனோ
தானோவெனச் செயல்படுவதால், நினைத்த காரியத்தில் வெற்றி
கிடைக்காதபோது தோல்விகளை மறக்கப்
பலவழிகளைப்பின்பற்றுகிறான். சிலர் கவலையை மறக்கப்
புகைப்பிடிப்பார்; வேறு சிலர் சினிமா பார்ப்பர். மற்றும்
சிலர் ஆடுவர், பாடுவர். இன்றும் சிலர் வேதனையில் சிரிப்பர்
அல்லது அழுவர். பலவழிகளில் முயன்று கவலையை மறக்க
முயற்சிப்பர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்கள் கவலைகளில்
இறைவனைத்தேடி ஆறுதல் அடைவர்; சுகம் பெறுவர்; இன்பம்
அடைவர்; இறைவனும் தம்மை முழுநம்பிக்கையுடன் தேடி
வருபவர்களுக்கு ஆறுதல், சுகம், தேறுதல், இன்பம் கொடுத்து,
"நான் உங்களுடனேயே பயணிக்கும் கடவுள்," என்பதை
உறுதிப்படுத்தி, நிரூபிக்கிறார். இறைவனும் பலவழிகளில்
நம்முடன்தான் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரை
விசுவாசத்துடன் கண்டடைந்தால், அவரின் அன்பு பிரசன்னத்தை
உணர்ந்தால், நம் வாழ்வு மகிழ்ச்சி வாழ்வாக அமையும்.
நம்மைத்தேடி நம்மோடு பயணிக்கும் இறைவன்:
சீடர்கள் எருசலேமிலிருந்து எம்மாவுக்கு பயணிக்கின்றனர்.
அவர்கள் மனதிலே விரக்தி; சோகம்; ஏமாற்றம்; தவிப்பு.
அந்நாட்களில் இயேசுவுக்கு நடந்ததைப் பற்றி மிகவும்
சோகத்துடன் பேசிக் கொள்கின்றனர். இயேசு மெசியாவாக,
மீட்பராக உயிருடன் இருந்து தங்களை வழிநடத்துவாரென
எதிர்பார்த்தவர்களுக்கு, அவர் சிலுவையில் இறந்து சமாதியில்
அடக்கம் செய்யப்பட்டார்; எல்லாம் முடிந்து விட்டது; நாம்
எதிர்பார்த்தது நடக்காமல் ஏமாந்துவிட்டோமே, நம்பியது
நடக்காததால் நடைபிணமானோமேயெனப் புலம்பிக்கொண்டு சோகத்துடன்
நடக்கின்றனர். இனி வாழ்வில் யார் நமக்கு வழிகாட்டுவார்
என்ற நம்பிக்கையின்மையில் நடந்து செல்கின்றனர்.
இப்படிப்பட்ட அந்தச் சீடர்களின் சோகப்பயணத்தில் உயிர்த்த
இயேசுவும் இணைந்து அவர்களோடு பயணிக்கிறார். துன்பங்கள்,
கலக்கங்கள், வேதனைகள், சோதனைகள், கண்ணீர் நிறைந்த நம்
வாழ்விலும் இறைவன் நம்மோடு பயணிக்கிறார். எகிப்திய
பாலைவனத்தில் பயணம் 'செய்த இஸ்ராயேல் மக்களோடு
நெருப்புத்தூண் மேகத்தூண் வடிவில் பயணம் செய்த அதே இறைவன்
என்றும் நம்மோடு பயணம் செய்கிறார். அவரின் அன்பு பிரசன்னம்
நம்மைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் தம்மோடு பயணிக்கும் உயிர்த்த இயேசுவை எம்மாவு
சீடர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர் இயேசு ஆண்டவர்தானென
உணரவில்லை. அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டதுபோல, நம்முடைய
கண்களும் கவலை, சுயநலம், அவநம்பிக்கை, அச்சம், ஏமாற்றம்,
விரக்தி, சோகம் போன்றவைகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன.
அதனால்தான் அவரின் உயிருள்ள பிரசன்னத்தை நாம் கண்டு உணர
முடியவில்லை. மனிதன் கடவுளைத் தேட மறக்கும்போது,
மறுக்கும்போது, கடவுளே மனிதனைத்தேடி வருகிறார். 'உண்ண
வேண்டாம்' என்ற விலக்கப்பட்ட கனியை உண்டு, கீழ்படியாமை
பாவம் செய்த ஆதாம், ஏவாள் கடவுளைத்தேடி செல்லவில்லை.
மாறாகக் கடவுளேதான் ஆதாமைத்தேடிச்சென்று "ஆதாம் நீ எங்கே
இருக்கிறாய்?" தொநூல் 3:9 என்றார். உயிர்த்த இயேசுவைத்தேடி
சீடர்கள் செல்லவில்லை. இயேசுவே சீடர்களுக்குத் தோன்றி,
"உங்களுக்குச் சமாதானம்" என்றார். இயேசுவோடு மூன்று
ஆண்டுகள் தங்கியிருந்தாலும், உயிர்த்த ஆண்டவரை கண்டுணர்ந்த
பின்புதான் எம்மாவுஸ் சீடர்கள் வாழ்வில் உண்மையான மாற்றம்
நடந்தது. அவர்களின் மனமாற்றம் விசுவாசமின்மையிலிருந்து
விசுவாசத்தை நோக்கிய மனமாற்றம்; பார்வை மறைக்கப்பட்ட
நிலையிலிருந்து பார்வையடைந்த நிலையை நோக்கிய மன மாற்றம்;
தோல்வி மனப்பான்மையிலிருந்து வெற்றி மனப்பான்மையை நோக்கிய
மனமாற்றம். ஆற்றிலே கிடக்கும் கூழாங்கல் வருடம் முழுவதும்
ஆற்றுநீரிலே கிடந்தாலும், அதை வெளியே எடுத்து
உடைத்துப்பார்த்தால் அதன் உட்புறம் வறண்டு நீரால் எந்தவித
பாதிப்பும் அடையாமல் இருக்கும். ஆனால் உண்மையான மன மாற்றம்
நற்செயல்களுக்கு நம்மை இட்டுச்செல்ல வேண்டும்.
எம்மாவுஸ் சீடர்களைப் போல நம்மோடு பயணிக்கும் இயேசுவை நாம்
கண்டுணர்வதில்லை. உயிர்த்த இயேசு சீடர்களுக்கு
வேற்றுருவில் தோன்றினார் மாற் 16:12. ஆனால் சீடர்கள்
கண்டுகொள்ளவில்லை. உயிர்த்த இயேசு மக்தலா மரியாவுக்குத்
தோன்றியபோது அவரை மரியா 'தோட்டக்காரர்' என நினைத்தார்.
யோவா 20:15. அவர் இயேசுதான் எனக்கண்டு கொள்ளவில்லை.
திபேரியா கடலருகே உயிர்த்த இயேசு தோன்றியபோது சீடர்கள்
அவரைக் கண்டு கொள்ளவில்லை. யோவா 21:4. இறைவன் தன்னை
மக்களுக்கு பலவகையில் வெளிப்படுத்தி 'நான் உங்களோடு
பயணிக்கும் கடவுள்' என உறுதிபடுத்துகிறார். கடவுள் நம்மோடு
இயற்கையில் பயணிக்கிறார் திபா 19:1-6. திருமுழுக்கு பெற்ற
கிறிஸ்தவர்களில் 1கொரி 3:16-17, ஏழை எளியவர்களில் மத்
25:40, செபிக்கக் கூடியிருக்கும் மக்களில் மத் 18:20
இறைவனின் சக்திமிக்க பிரசன்னம் வெளிப்பட்டுக் கொண்டுதான்
இருக்கிறது.
வாழ்வளிக்கும் அருள்வாக்கு வழியே பயணிக்கும் கடவுள்:
கடவுளின் வார்த்தை உயிள்ளது; ஆற்றல்மிக்கது. எபி 4:12
அவ்வார்த்தை கற்பிப்பதற்கும், கண்டிப்பதற்கும்,
சீராக்குவதற்கும், நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும்
பயனுள்ளது. 2திமோதி 3:16 அவ்வார்த்தை ஒருபோதும் மனித
விருப்பத்தினால் உருவானது அன்று. 2பேதுரு 1:21. கடவுளின்
வார்த்தை என்றென்றும் நிலைத்திருக்கும் எசா 40:8 கடவுளின்
வாயிலிருந்து புறப்பட்டுச் சென்று அவர் தம் விருப்பத்தைச்
செயல்படுத்தி, எதற்காக அதை அனுப்பினாரோ அதை வெற்றிகரமாக
நிறைவேற்றி அவரிடமே திரும்பிச் செல்லும். எசா 55:11.
அவ்வார்த்தையே நமக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.
முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாகப் பேசிய கடவுள், இந்த
இறுதி நாட்களில் தம் மகன் வழியாக நம்முடன் பேசினார். எபி
1:1-2. இந்த வாக்கே கடவுளோடு இருந்தார். கடவுளாயும்
இருந்தார். நம்மிடையே குடிகொண்டார் யோவா 1:14.
இப்படிப்பட்ட வார்த்தையானவர் உயிர்த்த ஆண்டவர்தான்
எம்மாவுஸ் சீடர்களுக்கு இறைவார்த்தைக்கு விளக்கம்
கொடுக்கிறார். வார்த்தையில் இறைபிரசன்னம் இருந்ததால்தான்
சோகபயத்தில் அறியாமையில் மூழ்கியிருந்த அவர்கள்
உள்ளம்பற்றி எரிந்தது. கல்லான இதயம் சுக்குநூறாக உடைந்து
கனிவுள்ள இதயமாகியது. எம்மாவுஸ் சீடர்களும் இறைவார்த்தையை
நம்பாத மந்தபுத்தியுடையவர்களாக, மந்த உள்ளத்தோடு,
அறவிலிகளாக ஆரம்பத்தில் இருந்தனர். ஆனால் வார்த்தையான
உயிர்த்த இயேசு மோசே முதல் இறைவாக்கினர் வரை தம்மைப்
பற்றிச் சொல்லப்பட்டவைகளை விளக்கியபோது, அவர்களின்
உள்ளம்பற்றி எரிந்தது. அவர்கள் கண்கள் திறந்தன. வார்த்தை
உருவில் நம்முடன் வந்து வாழும் வார்த்தையானவரை நாம்
கண்டுகொண்டு அவரின் வாழ்வில் பயணிக்க உயிர்த்த ஆண்டவர்
நம்மை அழைக்கிறார் "உம் வாக்கே என் பாதத்திற்கு விளக்கு.
மக்கள் தம் நடத்தையை மாசற்றதாய் காத்துக்கொள்வது எவ்வாறு?
உம் வாக்கைக் கடைபிடிப்பதால் அன்றோ!" திபா 119:9.
இறைவார்த்தையில் நம்முடன் பயணிக்கும் இறைவன் நாம்
மாசற்றவர்களாக வாழத் தம் வார்த்தையின் வழி உதவுகிறார்.
நற்கருணை வழியாக நம்முடன் வாழும் இயேசு:
இயேசுவின் உயிர்ப்பில் அவரது சீடர்கள் நம்பிக்கை
கொள்ளவில்லை. அவரது சிந்தனை, சொல், செயல்களிலும் நம்பிக்கை
கொள்ளவில்லை. எம்மாவுஸ் சீடர்களோடு இயேசு நடந்தபோதும்,
யெருசலேமில் நடந்ததைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தபோதும்
மோசே முதல் இறைவாக்கினர்கள் வரை அனைவரின் நூல்களிலும்
தம்மை குறித்து எழுதப்பட்டயாவற்றையும் அவர் அவர்களுக்கு
விளக்கியபோதும், எம்மாவுஸ் சீடர்கள் இயேசுவை உயிர்த்த
ஆண்டவர்தானெனக் கண்டுணரவில்லை. ஆனால் அவர்களோடு இயேசு
பந்தியில் அமர்ந்து அப்பத்தை எடுத்து, பிட்டு
அவர்களுக்குக் கொடுத்தபோதுதான் எம்மாவுஸ் சீடர்கள் கண்கள்
திறந்தன; அவர்களும் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டனர்.
அப்பம் பிட்குதல், நற்கருணைதான் திருச்சபையின் ஆதாரம்;
விசுவாசத்தின் அடையாளம். "வாழ்வுதரும் உணவு நானே! என்னிடம்
வருபவருக்குப் பசியே இராது. என்னிடம் நம்பிக்கைக்
கொண்டிருப்பவர்க்கு என்றுமே தாகம் இராது" யோவா 6:35, என்ற
இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அவரை நாம் நற்கருணை வடிவில்
திருவுடல், திருரத்தம் வடிவில் ஏற்றுக்கொள்ளும்போது தான்
நம் விசுவாச வாழ்வு பயனளிக்கும் வாழ்வாகிறது. எம்மானுவேலாக
நம்மோடு வாழ்பவராக வந்த இயேசு. "இதோ! உலக முடிவுவரை
எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்," என வாக்களித்த இயேசு,
நற்கருணை மூலம் நம்மோடு என்று பயணித்துக்கொண்டிருக்கிறார்.
கிறிஸ்து தம்மை நமக்கு நற்கருணைமூலம் வெளிப்படுத்தி வாழ
வைத்துக் கொண்டிருக்கிறார்.
மாற்றத்தைத் தந்து, புதுவாழ்வு தரும் பயணம்:
பயத்தால், தயக்கத்தால், தடுமாற்றத்தால் பலவீனமடைந்து
இருந்த சீடர்கள் வாழ்வில் உயிர்த்த இயேசு பயணித்ததன் மூலம்
அவர்களுக்கு தெம்பும், பலமும், தைரியத்தையும் கொடுத்து
இறைவாக்குகளை விளக்கிக்கூறி மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.
இயேசு அப்பத்தை எடுத்து இறைபுகழ் கூறி பிட்டுக்கொடுத்தபோது
அவர்கள் இயேசுவைக் கண்டுகொண்டனர்; மாற்றம் பெற்றனர்;
புதுவாழ்வடைந்தனர். மனதிலிருந்த அச்சம், பயம், கலக்கம்,
பலவீனம் என்ற தேவையில்லாத அழுக்கு மூட்டைகள் சீடர்களின்
மனத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்டு, அவர்களின் மனம் இறை
தரிசனத்தில் புதுவாழ்வும், மாற்றமும் பெற்றது.
எம்மாவுஸ் சீடர்களின் வெளிப்பயணம் முடிந்தாலும்,
இப்பயணத்தில் கிறிஸ்து தந்த அனுபவத்தால் அவர்கள்
உள்ளுக்குள் ஒரு புதிய பயணம் தொடங்கினார்கள்.
அந்தபயணம்தான் அவர்களைச் சாட்சிகளாக வாழ உதவியது;
அவர்களின் வாழ்வை சாட்சி வாழ்வாக மாற்றியது. உயிர்த்த
ஆண்டவரின் சந்திப்பே அவர்களின் இதய ஆழத்தில் பயன்தரும்
பாதிப்பை உருவாக்கியது. கண்கள் திறக்கப்பட இறைதரிசனம்
கண்டு வியந்தார்கள். இங்கிருந்துதான் அவர்களின் அகப்பயணம்,
ஆன்மீகப்பயணம் ஆரம்பமானது.
உயிர்த்த இயேசுவை அவரின் வார்த்தையிலும், நற்கருணையிலும்
உள்ளார்ந்து சந்தித்த எல்லாருடைய வாழ்விலும் மாற்றமும்,
மாற்றுப்பயணமும் உண்டாகிறது. எப்போது சீடர்களின் விழி
திறந்ததோ, அப்போதே புது வாழ்வின் வழி பிறந்ததுபோல, நாமும்
இறைப்பிரசன்னத்தில் விழி திறக்கும்போது அவரைக்
கண்டுணரும்போது, நமக்குள் புதுவாழ்வு ஆரம்பிக்கிறது.
கடவுளின் சக்தி, ஆற்றல் நம்முள் குடிகொள்ளும்போது நாமும்
இறைஅனுபவ சாட்சிகளாக வாழ்வோம். எனவே எம்மாவு பயணம் நம்
தடைகளைத் தகர்த்தெறிய, இறைஅனுபவம் பெற்று சாட்சிகளாக வாழ,
இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் ஆழமான நம்பிக்கை கொள்ள,
விழிகளில் ஒளிபெற்று ஒளியின் மக்களாக வாழ அழைக்கிறது;
நாமும் உயிர்த்த ஆண்டவருடன் துணிவுடன் பயணித்து,
இறையனுபவத்தை பெற்று சாட்சியுள்ள இறைமக்களாக வாழ்வோம்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே!
என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!