ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

          தவக்காலம் 3ம் ஞாயிறு ழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த ஞாயிறு வாசகம்    
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
நெஞ்சத்தை தூய்மையாக்க விரும்பும் நெஞ்சங்களே!
B தவக்காலம்1   நெஞ்சக்கோவிலை பரிசுத்தமாக்க நம்தேவன் இன்று நம்மை வரவேற்கின்றார். "தந்தையின் இல்லம் சந்தை அல்ல" என்று வியாபாரிகளை இயேசு விரட்டி அடிப்பது நமது மனசை நாம் அலசிப் பார்க்கவே.

ஆலயம் என்பது இறைவன் வாழும் இல்லம். அது அன்பையும் அமைதியையும் உற்பத்தி செய்யும் அற்புதவனம். நாம் கடவுளை பார்க்குமிடம், நம்மை கடவுள் பார்க்கும் இடம். சாதி, இன, மொழி, ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று கூடும் இடம். வருந்தி வருவோரை அரவணைக்கும் இடம். பாவிக்கு மன்னிப்பு தரும் இடம் அப்படியான வரம் பல பொழியும் ஸ்தலத்தை வியாபார ஸ்தலமாக்கிய விற்பனையாளர்களை இயேசு விரட்டி அடிக்கின்றார்.

கடவுளை வாழ்விக்க, அவரை சந்திக்க மனிதன் விரும்பிக் கட்டிய கட்டிடம் ஆலயம். மனிதனை வாழ்விக்க, அவனை சந்திக்க கடவுள் தான் விரும்பித் தேர்ந்தெடுத்த ஆலயம் நாமல்லவா? மனிதன் கட்டிய ஆலயத்தில் அன்பும் அமைதியும் உற்பத்தியாக வேண்டும். அறம் செழிக்கவேண்டும். அருள் பொழியப்பட வேண்டும் என விரும்பும் போது கடவுள் விரும்பி வாழும் நம் நெஞ்சக் கோவில் எத்தனை பெரிய அன்புடன் அமைதியுடன் மாண்புடன் விளங்கவேண்டும்.

நம் மனதை வியாபார ஸ்தலமாக்கும் நுகர்வுகலச்சாரம், பணஆசை, ஆசாபாசங்கள் அனைத்தையும் அகற்றி அமைதியை நட்டு வைக்கும் திருப்பலியின் உணர்வலைகளை உள் வாங்குவோம். நெஞ்சக் கோயிலில் அன்பை அகலாக்கி நினைவை திரியாக்கி இறைவனை எண்ணும் போது இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு ஒளி வீசி சுடர்விடும். அந்த சுடர்விடும் அமைதியின் ஒளியில் ஆண்டவரும் அகம் குளிர வந்து தங்குவார். திருப்பலியில் அமைதியின் ஓளியை கண்டுகொள்ள பக்தியுடன் பங்கேற்போம்.
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. உம் விதி முறைகளை கடைபிடிப்போரிடம் ஆயிரம் தலைமுறைக்கு பேரன்பு காட்டும் பரமனே!
ஆலயத்தில் திருப்பணி புரியும் திரு ஆட்சியாளர்கள், திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் அனைவரும், ஆலயத்தை பொருள் சேமிக்கும் இடமாக்காமல் அருள் பொழியும் இடமாக்க, எல்லா காலங்களிலும் சிறப்பாக திருவிழா காலங்களில் பயன்படுத்த துணை புரிய வேண்டும் என்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் வாழ்நாட்களை நாங்கள் வாழும் நாட்டில் நீடிக்கச் செய்யும் பரமனே!
பூமியில் வாழும் நாட்களில் ஏழை எளிய மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமையை உருவாக்கித் தந்திட நாட்டுத்தலைவர்கள் மீது உமது ஆசி பொழிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.இறைவல்லமையை இறைஞானத்தை அழைக்கப்பட்டோருக்கு வாரி வழங்கும் வல்லவரே!
உமது பேரன்புக்கு ஏற்ற விதிமுறைகளை கடைபிடித்து வாழும் எமது நற்செய்தியாளர்களுக்கு இறைவல்லமையையும், இறைஞானத்தையும் நிறைவாக பொழிந்து, இறைமக்கள் உள்ளங்களை நீர் விரும்பித் தங்கும் ஆலயமாக்க வேண்டுமென்று பரமனே உம்மை மன்றாடுகின்றோம்.

4. "கடவுளின் ஆலயம் தூயது நீங்களே அவ்வாலயம்" என உணர்த்திய உன்னதரே!
ஆசாபாசங்கள், பணம், பதவி, பட்டம் போன்ற பேராசைகளால் நீர் உறையும் எங்கள் மனம் சிதைந்து கிடக்கிறது. உமக்கும் பிறருக்கும் உகந்த நல்லன செய்து, எங்களது இதயத்தை நீர் வாழும் அமைதிப் பூங்காவாக மாற்றிட வேண்டுமென்று, பரமனே உம்மை மன்றாடுகிறோம்.

5. வாழும் நாட்களில் வளமாக வாழ மனம் தரும் இறைவா!
எங்கள் வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தராமல் இருக்கவும், துன்பப்படுவோருக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்யவும் அருள் தர, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

 
மறையுரை சிந்தனைகள்
மனம் மிக நல்ல வேலைக்காரன். ஆனால் மிக மோசமான எஜமான். மனதை ஆளும் சக்தி வந்துவிட்டாலே மனிதன் தெய்வ நிலை நோக்கிப் பயணம் செய்கிறான் என்று பொருள். நம்முடைய சுவாசக் காற்றுதான் மனமாகச் செயல்படுகிறது. இது கருதியே மனோவேகம் வாயுவேகம் என்ற பழமொழி வந்தது.

மனம் ஒரு குரங்கு என்றும் ஒரு பழமொழி உண்டு. குரங்கு அடிக்கடி தாவித்தாவி ஓடும். ஓர் இடத்தில் நிற்காது. மனமும் அப்படித்தான். நம் மனம் குரங்கை விட மோசமானது. காரணம் குரங்குகூட இன்னொரு கிளையைப் பிடிப்பதானால் முதல் கிளையை விட்டு விடும். ஆனால் மனிதன் அப்படியல்ல. இதையும் விடமாட்டான்... அதையும் விடமாட்டான். இரண்டையும் பிடிக்கக் கஷ்டப்படுவான். காரணம் மனசு குரங்கை விட மோசம்!

ஒரு குரங்காட்டி வீட்டில் குரங்குதான் உணவு பரிமாறும். உணவை ஒவ்வொன்றாக அது பரிமாறும் போதும் கையில் வைத்திருக்கும் குச்சியால் ஓர் அடி அதன் மீது பலமாக விழும்;. இத்தனைக்கும் அந்தக் குரங்கு எந்தத் தப்பும் செய்யாத போதே அதற்கு இந்தத் தண்டனை.. சமர்த்தாகச் சாதம் வைத்ததும் ஓர் அடி...சாம்பார் பரிமாறியதும் ஓர் அடி... காய் வைத்ததும் ஓர் அடி... குரங்கு சரியாக அடி வாங்கிச் சரியாக வேலை செய்தது.

அந்தத் குரங்காட்டி வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். சமர்த்தாக ஒரு தப்பும் செய்யாத போதே குரங்கை அடிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. தப்பு செய்தால்தான் அடிக்கவேண்டும். தவறு செய்யாத குரங்கை அடித்தால் நான் சாப்பிடமாட்டேன்" என்று மறுத்துவிட்டார். குரங்காட்டியோ..சரி... குரங்கை அடிப்பதில்லை.. ஆனால் இனி என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு" என்று மவுனமாகிவிட்டார்.

இலை போட்டது குரங்கு. அடி இல்லை அதற்கு அதிர்ச்சி. சாதம் வைத்தது.. அப்போது அடி இல்லை...மகிழ்ச்சி. காய் வைத்தது... அடி இல்லை. ஈய் என்று பல்லைக் காட்டி சிரித்தது குரங்கு.! அடி இல்லை. குழம்பு கொண்டு வரும்போது அலட்சியமாக இளித்தது... அடி இல்லை என்றதும் குழம்பிற்குள் கையை விட்டு கலக்கியது.. விருந்தாளி முகம் சுளித்தது.. "ச்சூ..ச்சூ" என்று எரிச்சலுடன் விரட்ட அவர் மீதே பாய்ந்தது. அவர் கண்ணாடியை எரிந்து தலையைப் பிரான்டியது. "ஜயோ... காப்பாற்றுங்கள்" என்று அலறினார் விருந்தாளி... குரங்காட்டி கோலை எடுத்தார்.. குரங்கு...ஒடுங்கி விட்டது. நம்ம மனசும் குரங்குதான். அதை எந்தக் கோலால் அடிப்பது?

தவறு செய்தபின் தண்டிப்பதால் பயன் இல்லை! செய்யாதபடி கண்டிப்பதும் ஒடுக்குவதும் முக்கியம். மனம் ஒரு பேய்க் குரங்கு. அதனால்தான் மகான்கள் அடிக்கடி அதனைக் கண்டித்து ஒடுக்கி உயர்ந்தார்கள். தவறு செய்யாதபடியே மனசைப் பாதுகாத்துக் கண்டித்து வைத்தனர். மனசை வசப்படுத்தினால் மனிதன் தெய்வமாக முடியும் என்பது பெரியோர்களின் அனுபவம். மனசை நம் வசமாக்க நாமும் முயற்சி செய்யலாமே! மனசை நம் வசமாக்க ஆலயத்தை நாடிச் செல்வோம்.

ஆதரவற்ற சிறுவன் ஒருவன் தொழிற்சாலை ஒன்றில் சிறு சிறு எடுபிடி வேலைகளை செய்து வந்தான். தொழிற்சாலையின் மதியஉணவு இடைவேளையின் போது தான் வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவான். சாப்பிட்ட பிறகு அந்த ஓய்வு நேரத்தில் அருகில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு நேராக செல்வான். மதிய நேரம் என்பதால் அந்த ஆலயம் மூடி இருக்கும். இருப்பினும் ஆலயத்தின் கதவில் உள்ள சாவி நுழையும் துவாரத்தின் வழியாக தினமும் எட்டிப்பார்த்து விட்டு செல்வான்.

ஒரு நாள் அவனுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி. அவனை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அறுவை சிகிச்சை செய்யும் கட்டாயத்தில் அவன் உடல் இருப்பதை கண்டுபிடித்தனர். அவனை அறுவை சிகிச்சை செய்யும் அறையில் படுக்க வைத்திருந்தார்கள். திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான் அவனது முகம் புன்னகையால் ஒளி வீசியது. சற்று நேரம் கழித்து மருத்துவர்கள் அவனை அறுவை சிகிச்சை செய்யவந்த போது அவன் உடல் நலம் தேறியிருந்தான். சிறுவனிடம் உன்னை யார் வந்து பார்த்தார்கள்? என்று வினவிய போது தவறாமல் தினமும் உணவு இடைவேளையின் போது ஆலயத்தில் சென்று நான் ஒருவரைப் பார்த்துவிட்டு வருவேன். ஆனால் இன்று நான் அவரை பார்க்கப் போகவில்லை என்றதும் என்னைத் தேடி அவரே இங்கு வந்துவிட்டார். நான் இங்கு இருப்பதை அவருக்கு சொன்னது யார் என்று எனக்குத் தெரியவில்லை என்று ஆச்சரியத்துடன் சொன்னான்.

ஒரு பெண்மணி தனியாக தன் கைக்குழந்தையுடன் வேலைக்கு சென்று வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அப்போது அங்கே வந்த ஒரு மனிதர் ஏன் நீ மட்டும் தனியாக வேலை செய்கிறாய்? என்று கேட்டார்." வழக்கமாக என்னோடு நிறைய பேர் வேலைக்கு வருவார்கள். இன்று எங்கள் ஊரில் திருவிழா என்பதால் சாமியைப் பார்க்க எல்லோரும் போய்விட்டார்கள்" என்று சொன்னாள.; நீ ஏன் போகவில்லை என்று கேட்டார். அதற்கு அவள் நான் சாமியைப் பார்க்க போய்விட்டால் என் பிள்ளைகளை யார் பார்ப்பார்கள்? தேவையான உணவை யார் கொடுப்பார்கள்? என்று சொன்னாள். அப்போது அந்த மனிதர் மற்றர்களிடம் சாமி உங்களைத் தேடி இங்கே வந்தார் என்று சொல் எனச் சொல்லி சென்றராம்.

ஆம் ஆலயத்திற்கு நாம் செல்லாவிட்டால் நம்மைத் தேடி இறைவன் வந்துவிடுவார். எப்போது என்றால் செய்யும் தொழிலே தெய்வம் எனப் பணியை பிறரின் நலனுக்காக செய்யும் போது. ஆம் உயர்ந்த நோக்கத்தோடு உழைக்கும்போது கடவுளின் ஆசிர்வாதம் நம்மேல் தங்கும்.

நம் மனதில் குடியிருக்க கடவுள் கதவைத் தட்டிக்கொண்டு வெகு நேரமாகக் காத்திருக்கிறார். ஆலயமும் நம் மனதை இறைவன் வாழும் இல்லமாக்க தவக்கால வழிபாடுகள் வழியாக அழைக்கிறது. மனக் கதவைத் திறக்க ஆலயத்தில் போய் சும்மாவாவது உட்காருவோம். சும்மா உட்காருவதே பெரிய காரியம்தான். சும்மா உட்கார்ந்தால் மனதை ஆளும் சக்தி வந்து விடும். மனதை ஆள நினைக்கும் நப்பாசைகள் தலைதெறிக்க ஓடிவிடும். மனம் சுத்தமாகும் போது கடவுள் நாமிருக்கும் இடம் தேடி வருவார்.

நெஞ்சத்தைத் தூய்மையாக்கும் தவக்கால நினைவுகள்

ஆலயத்தில் நாம் நுழைகையிலே புது நினைவுகள் நுழைகின்றன. அந்த நினைவுகளின் புது வருகையிலே நம் நெஞ்சங்கள் நிறைகின்றன.

இறைவனை தொடர்ந்து நினைப்பதால் சிறந்த செல்மாகிய ஞானம் கிடைக்கும்.
இறைவனின் உடலென்னும் ஆலயத்தை உணவாக அருந்துகிறோம்.

திருவுணவின் பலம் ஆன்மாவைப் பலப்படுத்தும். அடிக்கடி திருப்பலியில் பங்கேற்று திருவுணவை அருந்தி ஆன்மாவை பலப்படுத்துவோம்.

நமது உடலையும் உள்ளத்தையும் பாவ நாட்டத்தில் இருந்து பாதுகாப்போம்.
பிறரின் உடலையும், உள்ளத்தையும் கடவுள் வாழுமிடமாய் மரியாதையோடு நடத்துவோம்.
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.
உயர்வைத்தரும் உடனடிச் செயல்பாடு

விவசாயி ஒருவர் தனது இறுதி காலத்தில் பொறுப்பில்லாத தன் பிள்ளைகளுக்கு நல்ல புத்தியைக் கடவுள் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கடினமாக வயலில் உழைத்து, செல்வம் சேர்த்த விவசாயி தன் பிள்ளைகளும் தன்னைப்போல நிலத்தில் பயிரிட்டு உயர்வடைய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரது பிள்ளைகளோ, உழைப்பு என்றால் என்னவென்று அறியாதிருந்தனர். தன் மூன்று பிள்ளைகளுக்கும் தகுந்த பாடத்தை உணர்த்தவேண்டும் என்று விரும்பியவர், தனது சொத்துக்களை மூன்று பங்காகப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்தார். தனது உயிர் பிரியும் முன், தன் பிள்ளைகளிடம், பிள்ளைகளே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களுல் ஒன்றில், ஓர் அடி ஆழத்தில் புதையல் ஒன்று இருக்கின்றது என்று கூறி உயிர் நீத்தார்.

தந்தைக்கு செய்ய வேண்டிய எல்லா இறுதி காரியங்களையும் செய்து முடித்த பிள்ளைகள் மூவரும், புதையலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். மூத்த மகன், ஓர் அடி ஆழத்திற்கு தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை தோண்ட ஆரம்பித்தான். நிலம் முழுவதும் தோண்டியும் எந்த புதையலும் கிடைக்கவில்லை. ஒருவேளை தனது தந்தை இரண்டடி என்று சொல்வதற்கு பதில் மூன்று அடி என்று தவறுதலாகக் கூறி விட்டாரோ என்று எண்ணினான். எனவே தன்னுடைய சகோதரர்களுடன் இணைந்து நிலம் முழுவதையும் மீண்டும் இரண்டடி தோண்டினான். இப்படியே இரண்டாவது மகன் மற்றும் மூன்றாவது மகனின் நிலங்களும் தோண்டப்பட்டன. எந்த புதையலும் கிடைக்கவில்லை. நிலங்கள் அனைத்தும் தோண்டப்பட்டுவிட்டன. அதை அப்படியே விட்டுவிட்டால் நல்லதல்ல என்று எண்ணி அதில் பயிரிட ஆரம்பித்தனர். மூவரும் சேர்ந்து உழைத்ததன் பயனாக, அந்த வருடம் வழக்கத்தை விட அதிகமான இலாபத்தைப் பார்த்தனர். இறுதியாக தங்களது தந்தை சொன்ன புதையல் உழைப்பே, உடனடியாக செயல்படுதலே என்று உணர்ந்து கொண்டனர்.

உழைப்பு, உடனடி செயலாக இருந்தால் வாழ்வில் ஏராளமான புதையல்கள் நம்மைத் தேடி வரும். பொதுக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் அடியெடுத்து வைக்கும் நமக்கு இன்றைய வாசகங்கள் அனைத்தும், உயர்வைத் தரும் உடனடிச் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கின்றன. அன்னிச்சை செயல்கள் என்பவை நம்மை அறியாமல் நம்முள் ஏற்படுகின்றன. நாம் யோசித்து செய்யாமல் நமக்குள் உடனடியாக செய்யத் தோன்றும் உணர்வானது செயல்களாக வெளிப்படுகின்றன. இத்தகைய உடனடி செயல்பாடுகளினால் மனமாற்றம், மாறும் காலம், மனநிறைவு ஏற்படுகின்றது என்பதே இன்றைய நாளின் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.

மனமாற்றம் தரும் உடனடிச்செயல்பாடுகள்
உடனடிச்செயல்பாடுகள் நல்ல மனமாற்றத்தைத் தருகின்றன என்பதில் யோனாவின் மனநிலை மற்றும் நினிவே மக்களின் மனநிலை குறித்து நாம் காண்போம்.

முதல் வாசகத்தில் யோனா கடவுளின் வார்த்தையைக் கேட்டு உடனடியாக செயல்படுகின்றார். முதலில் நினிவே நகர் பக்கமே போக மாட்டேன் என்றவர் இப்போது நாள் முழுதும் பயணித்து ஊரின் பகுதியை அடைகின்றார். வந்த களைப்பில் உண்டு உறங்கவில்லை. மாறாக, உடனடியாகக் கடவுளின் வார்த்தையை அவர்களுக்கு அறிவிக்கின்றார். அவருக்குள் நிகழ்ந்த மாற்றமானது பலருடைய வாழ்விற்கு வழியாக அமைந்தது. கடவுளை அவர் நம்பி அதற்கேற்றவாறு செயல்படுகின்றார்.

நினிவே மக்கள் யோனாவின் வார்த்தைகளைக் கேட்டு மனம்மாறி உடனே சாக்கு உடை உடுத்தி தங்கள் தீய பழக்கவழக்கங்களினின்று தங்களை மாற்றிக் கொள்கின்றனர். இதனால் கடவுளும் தனது மனதை மாற்றி அவர்களுக்கு கொடுக்க எண்ணி இருந்த தண்டனையினின்று அவர்களை மீட்டு விடுதலை அளிக்கின்றார்.

கடவுளின் குரலே நமது உள்ளத்தில் மனசாட்சியின் குரலாக எதிரொலித்து நம்மை நற்செயல்களைச் செய்யத் தூண்டுகின்றது. மனமாற்றத்திற்கு நாம் ஓர் அடி எடுத்து வைத்தால் போதும் கடவுள் பல அடிகள் நமக்காக எடுத்துவைத்து நம்மை மன்னிக்கக் காத்திருக்கின்றார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான். அவரது குரலுக்கு செவிமடுப்பது. முற்காலத்தில் அது இறைவாக்கினர்கள் வழியாக வந்தது. கண்ணால் அவர்களின் செயலைப் பார்க்க முடிந்தது. காதால் அவர்களின் குரலைக் கேட்க முடிந்தது. இப்போது அத்தகைய இறைவாக்கினர்களை நாம் காண முடிவதில்லை. நாம் வாழும் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் இறைவாக்கினர்கள் போன்றும் அவர்களது அறிவுரைகள் நமக்கு இறைவாக்காகவும் சில நேரங்களில் திகழ்கின்றன. மேற்கூறிய கதையில் தந்தையின் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு இறைவாக்காக தோன்றியதைப் போல நம் வாழ்வில் இறைகுரல், இறைவார்த்தை எப்படி அறிவிக்கப்படுகின்றது என்பதை உணர்ந்து அவற்றை இனம் கண்டறிந்து கடைபிடிக்க முயலவேண்டும். மனமாற்றத்திற்கு நம்மை நாம் கையளிக்கவேண்டும்.

உடனடிச் செயல்களினால் மாறும் காலம்
மனமாற்றமடைந்த நினிவே மக்கள் கடவுளின் அருளினைப் பெற்றுக்கொள்கின்றனர். தண்டனைத் தீர்ப்பு பெற வேண்டியவர்கள் மனமாற்றத்தினால் அதிலிருந்து மீட்கப்படுகின்றனர். இதனையே திருத்தூதர் பவுலும் தனது மடலில் எதுவும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லாம் மாறக்கூடியது என்பதனை எடுத்துரைக்கின்றார். இனியுள்ள காலம் குறுகியதே. இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது என்னும் இறைவார்த்தைகள் வழியாக அதனைத் தெளிவுபடுத்துகின்றார். இதுவும் கடந்து போகும் என்ற மந்திர வார்த்தைகளையே இந்த இறைவார்த்தைகள் எடுத்துரைக்கின்றன.

நம்மில் பலர் மாற்றம் என்ற ஒன்றைத்தவிர அனைத்தும் மாறும் என்று இயல்பாகக் கூறிவிடுகின்றோம். ஆனால் மாற்றங்களை சந்திக்கின்ற, அதனை எதிர்கொள்கின்ற மனப்பக்குவம் நமக்கு இருப்பதில்லை. எதையும் துணிவுடன் சந்திக்கின்ற மனப்பக்குவம் உள்ளவர்களாலேயே வாழ்வின் உயர்வான நிலைகளை அடையமுடியும். காலம் சில நோய்களுக்கும், காயங்களுக்கும் மருந்து என்பர். அது மிகவும் ஆழமான உண்மை. ஒரே நாளில் ஒரே வாரத்தில் விதைத்ததும், முளைக்கும் சிறு செடிகளின் வளர்ச்சியை விட, விதைத்து பல மாதங்களுக்குப் பின் முளைக்கும் மூங்கிலின் வளர்ச்சி அபாரமானது என்பது நாம் அறிந்ததே. கதையில் வரும் மூன்று மகன்கள் நிலத்தை இரண்டடிக்குத் தோண்டி அதில் பயிரிட்டு நல்ல இலாபத்தைப் பார்த்தது போல, நாமும் நம் நிலமென்னும் மனம், மாற்றத்தினால் ஏற்றமடைய முயல்வோம். மாற்றத்தின் காலம் அழகானது என்பதை உணர்ந்து அதனை ரசித்து வாழ முயல்வோம்.

மனநிறைவு தரும் உடனடிச்செயல்பாடுகள்

இன்றைய நற்செய்தி வாசகம் மிக அருமையான ஒரு நிகழ்வினை நமக்கு எடுத்துரைக்கின்றது. முதல் சீடர்கள் அழைப்பு. இதில் இயேசு தனது பணிக்காக தன்னுடன் இணைந்து பணியாற்ற ஆள்களைத் தேடுகின்றார். உடனடியாக அதற்கான செயல்களில் இறங்குகின்றார். பெரிய படிப்பு படித்தவர்கள், அறிஞர்கள், மேதாவிகள், மறைநூல் வல்லுனர்கள் என அவர் நாடவில்லை. மாறாக எளிய மக்களில் ஒருவராக, புத்தக அறிவைவிட அனுபவ அறிவைக் கொண்டவராக, தந்தை, தாய், சகோதரர் என அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு செல்லும் மனம் உடையவர்களையே அவர் தனது சீடராகத் தேர்ந்தெடுத்தார்.

கடற்கரையில் அலைகளோடு போராடி தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய மீனவர்களிடத்தில் சவால்களைச் சந்திக்கின்ற மனப்பக்குவத்தைக் காண்கின்றார் இயேசு. வலைகளைப் பத்திரமாக கவனமாக மீன்கள் இருக்கும் பக்கத்தில் போட்டு அதனைப் பிடிக்க எண்ணும் அவர்களின் யுக்தி முறையில் கூர்மையான திறமையைப் பார்க்கின்றார். ஒன்றிணைந்து கண்ணும் கருத்துமாக மீன்பிடித்தொழிலைச் செய்து வந்த அவர்களின் கவனத்தில், தொழிலில் அவர்கள் காட்டும் முனைப்பை, சிக்கல்களைத் தீர்க்கும் திறமையைப் பார்க்கின்றார். இத்தகைய பண்பு நலன் கொண்ட மீனவர்கள் என் பின்னே வாருங்கள் என்ற இயேசுவின் குரல் கேட்டதும், தங்கள் வலைகளை விட்டு விட்டு உடனே அவர் பின் செல்கின்றனர். அவர்களது விரைவான உடனடியான இச்செயல் கட்டாயம் இயேசுவை ஈர்த்திருக்கும்.

இயேசுவின் குரல் கேட்ட அவர்கள் இனிமேல் எல்லாமே அவர்களுக்கு இயேசு தான் என்று நினைத்தனர். எனவே தான் தங்களது வாழ்வின் அடிப்படை ஆதாரமாக இருந்த வலையை அவர்கள் அப்படியே போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். அதுமட்டுமன்றி அண்ணன் தம்பி இருவரும் இயேசுவைப் பின்தொடர்கின்றனர். செபதேயுவின் மக்களான யாக்கோபு, யோவான் ஆகிய இருவரும், தங்களது தந்தையின் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்வின் ஆதாரமான வலையைப் பழுதுபார்க்கும் அவர்களிடத்தில் பொறுமையையும், விடாமுயற்சியையும் காண்கின்றார் இயேசு. என்னைப் பின்பற்றுங்கள் என்ற இயேசுவின் குரல் கேட்ட அவர்கள், தங்களது தந்தையை கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர். கூலியாள்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால் வேலைக்கு ஆள்வைத்து செய்யும் அளவிற்கு அவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக இருந்திருக்கலாம் இருப்பினும், கூலியாள்களோடு ஒருவராக இணைந்து வலைகளைப் பழுது பார்த்த அவர்களின் எளிய மனத்தினை, இயேசு காண்கின்றார்.

ஆக இயேசுவால் அழைக்கப்பட்ட சீடர்கள் முழு மனநிறைவுடன் அவரைப் பின் தொடர்கின்றனர். முழு மனதுடன் இயேசுவும் அவர்களை அழைக்கின்றார் அவர்களும் மனநிறைவுடன் அவரைப் பின்தொடர்கின்றனர். நாமும் இயேசுவின் குரல் கேட்டவுடன் விரைவாக செயல்பாட்டில் இறங்கும் போது நமது வாழ்வும் மனநிறைவுடையதாக மாறும்.

எனவே அன்பு உள்ளங்களே, கடவுளின் குரலால் தூண்டப்படும் நமது செயல்பாடுகளானது, மனமாற்றம் கொண்டதாக, மாறும் காலத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக, மனநிறைவு கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கான அருளினை இன்று நாம் வேண்டுவோம் உயர்வைத்தரும் உடனடி செயல்பாடுகளாக நமது வாழ்வின் செயல்பாடுகள் அமைய இறையருள் வேண்டுவோம். இறைவன் நம்மையும் நம் குடும்பத்தார் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


 

 
மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm


புரட்சியாளர் இயேசு

வாழ்க்கை மகத்துவமானது அது மக்களுக்காக அர்ப்பணிக்கும் போது. எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் சிந்தனைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி, அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே புரட்சி மனிதன். இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரராய் இருப்பவர் நம் பெருமான் இயேசு.

தவக்காலத்தின் முதல் ஞாயிறு, பசியோடும், களைப்போடும் இருந்த இயேசுவை பாலைநிலத்தில் சந்தித்தோம் .

தவக்காலத்தின் 2ஆம் ஞாயிறு உருமாற்றம் பெற்று , ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசுவை மலையில் சந்தித்தோம்.

தவக்காலத்தின் 3ம் வாரம் எருசலேம் தேவாலயத்தில் சந்திக்கிறோம். ஒவ்வொரு சந்திப்பிலும் இயேசு பல உண்மைகளையும், புரட்சிகரமான சிந்தனைகளையும் நமக்கு கொடுக்கிறார்.

யூதர்களின் புனித்தலமாக கருதப்பட்ட எருசலேம் தேவாலயத்திற்கு, யூதமக்கள் ஆண்டுதோறும் பாஸ்கா விழாகொண்டாடச் செல்வது வழக்கமான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் எருசலேம் ஆலயத்திற்குச் சென்ற இயேசு, இந்த முறை மட்டும், இப்படியொரு கோபக்கனல் கொண்டு, கயிறுகளால் சட்டைபின்னி, அங்கிருந்த ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், நாணயம் மாற்றுவோரையும் விரட்டியடித்தது ஏன்? எதற்காக? என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்க அழைக்கிறது இன்றைய தவக்காலம் 3 ஆம் ஞாயிறு. பாலைவனம், மலைப்பகுதி, தேவாலயம் போன்ற இடங்களுக்கு, இறைவனைக் காணச் செல்லும் மக்கள், இறையாசீரும், இறையனுபவமும் பெற்ற நம்பிக்கையில் வீடு திரும்புகின்றனர். பாலைவனம், மலை, ஆலயம் மூன்றுமே தூய்மையாக, அமைதியாகத் தான் இருக்கும். ஆனால் எருசலேம் தேவாலயம் அமைதியிழந்து, பலவிதமான சப்தங்களோடு, வணிகத்தலமாக மாறிருப்பதைக் கண்டு இயேசுவின் உள்ளம் பற்றி எறிகிறது.

ஏழை யூதர்களும், புற இனத்தவர்களும் ஆலயத்திற்குச் சென்று இறைவனைக் காண்பது என்பது எட்டாக் கனியாக இருந்தது. அதனால் தான் இயேசு கோபம் கொண்டு ஆலயத்திற்குள் இருந்து அநீதி புரிபவர்களை அடித்து விரட்டுகின்றார். இம்மண்ணுலகிற்கு அமைதியை அல்ல.... தீயை மூட்டவே வந்தேன் என்றவர்...தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறார். எப்படியெனில் நான் நன்மை செய்யவே இம்மண்ணில் மனிதனானேன் நன்மை என்னும் தீ உள்ளத்தில் எறிந்துகொண்டிருந்ததால் அதை நிலைநாட்டவே தான் மனுவுரு எடுத்ததாக கூறுகின்றார் இயேசு. இன்றைய நற்செய்தியின் வாயிலாக இயேசு இரண்டு விதமான் சிந்தனைகளை நமக்குத் தருகின்றார்
1. நம் வாழ்வை சீர்படுத்த வேண்டும்
2. நம் உள்ளம் என்னும் ஆலயத்தை தூய்மை செய்ய வேண்டும்

நமது வாழ்வை எப்படி சீர் படுத்துவது..... ? ஒரு மரமானது நன்றாக ஓங்கி உயர வளர வேண்டுமென்றால், அதன் கரடு முரடான கிளைகளை வெட்டி எறிந்து விடுவார்கள். அதே போலத்தான் நமது வாழ்க்கையிலும்...... மற்றவர்களுக்கு இடரலாக இருக்கிற நமது தீய குணங்களை விட்டு விட்டு, நலம் தரும் குணங்களை பின்பற்றுவோம் . இயேசுவைப் போல, எந்நிலையிலும் துணிவுடன் செயல் பட வேண்டும். எல்லாவற்றிற்கு ஆம்... ஆம் ....என்று சொல்லும் ஏட்டுச் சுரக்காய் ஆக இல்லாமல், நன்மையான செயல்களை துணிவுடன் செய்யவும், தவறு செய்பவர்களின் செயல்களை அஞ்சாமல் சுட்டிக்காட்டும்மனத்தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும் என இறைமகன் இயேசு நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

உடல், உடை இவற்றின் சுத்தத்தை விட, நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் தூய்மை நீரால் அமையும், உள்ளத்தூய்மை வாய்மையால் காணப்படும், என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். உள்ளத்தில் பொய், புரட்டு, இல்லாத தூய்மையான உள்ளம் கொண்டவர்களே இறைவனைக் காணமுடியும்.

 நம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறிபவன் இறைவன் ஒருவரே. எனது இல்லத்தை கள்வர் குகையாக்காதீர்கள் என்று எடுத்துரைத்த இயேசுவின் வார்த்தைகளை நம் எண்ணத்தில் இருத்தி , தவக்காலத்தில் இருக்கின்ற நாம், நம்முடைய உள்ளங்களை தூய்மை செய்வோம். இறைமகன் இயேசு நம்மோடும், நம் உறவுகளோடும் இருந்து ,நம்மை ஆசீர்வதிப்பாராக . ஆமென்


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.
சிலுவையின் புதிய பொருள்

இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கும் தங்களுக்கும் உள்ள நெருக்கத்தின் அடையாளமாகக் கருதிய இரு பெரும் அமைப்புகளை மாற்றி, சிலுவையை முன்மொழிகிறார் இயேசு.

முதல் அமைப்பு, பத்துக் கட்டளைகள். ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த இனமாகத் தேர்ந்தெடுத்து அவர்களோடு சீனாய் மலையில் ஏற்படுத்திய உடன்படிக்கையின்போது வழங்கப்பட்டவை பத்துக் கட்டளைகள். இவற்றை இரு கட்டளைகளாகச் சுருக்குகிற இயேசு, இறையன்பு, பிறரன்பு என மொழிகிறார் (காண். லூக் 10). தொடர்ந்து, தம் சீடர்களுடைய பாதங்களைக் கழுவுகிற நிகழ்வில், புதிய கட்டளையாக அன்புக் கட்டளையை முன்மொழிகிறார் இயேசு (காண். யோவா 13:34). ஒருவர் மற்றவரை அன்பு செய்வதே மொத்தக் கட்டளைகளின் நோக்கம் என சட்டங்கள் பற்றிய புரிதலுக்குப் புதிய விளக்கம் தருகிறார் இயேசு.

இரண்டாவது அமைப்பு, எருசலேம் கோவில். எதிரிகள் அனைவரையும் வெற்றிகொண்டு ஆண்டவர் தருகிற ஓய்வை அனுபவித்த தாவீது அரசர் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு கோவில் கட்ட விழைகிறார். தாவீதுடன் உடன்படிக்கை செய்துகொள்கிற ஆண்டவராகிய கடவுள் அவரோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். சாலமோன் தமக்குக் கோவில் கட்டுவார் என அறிவிக்கிறார். சாலமோன் மிகப் பெரிய கோவிலைக் கட்டி எழுப்புகிறார். ஆண்டவருடைய பெயர் குடியிருக்கும் கோவில் மக்கள் நடுவில் கடவுளுடைய பிரசன்னத்தை உணர்த்தியது. பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது எருசலேம் ஆலயம் தரைமட்டமாக்கப்படுகிறது. பாரசீகப் பேரரசர் இஸ்ரயேல் மக்களை விடுவிக்கிறார். செருபாபேலின் தலைமையில் இரண்டாம் கோவில் கட்டி எழுப்பப்படுகிறது. இந்த இரண்டாவது கோவிலை பெரிய ஏரோது புதுப்பிக்கிறார். இக்கோவிலையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தூய்மைப்படுத்துகிறார்.

இயேசு கோவிலைத் தூய்மையாக்கும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இயேசுவின் பாடுகளுக்கு முன்னர் பதிவு செய்கிறார்கள் ஒத்தமைவு நற்செய்தியாளர்கள். இயேசு கோவிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு அவருடைய பாடுகள் உடனடியாகத் தொடங்குவதற்கான காரணமாக இருக்கிறது. யோவான் நற்செய்தியாளரோ, தன் நற்செய்தியின் தொடக்கத்திலேயே இந்நிகழ்வைப் பதிவு செய்கிறார். இவரைப் பொருத்தவரையில் பழைய கோவிலை மாற்றிவிட்டு, தம்மையே புதிய கோவிலாக முன்வைக்கிறார் இயேசு.

கடவுளையும் மனிதர்களையும் இணைக்கிற கோவில், காலப் போக்கில் பண்டப் பரிமாற்று இடமாக மாறுகிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே தூரம் உண்டாகிறது. இயேசு இத்தகைய கோவிலை மாற்றி, அந்த இடத்தில் தம்மை வைக்கிறார். இயேசுவின் உடலே கோவிலாக மாறுகிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இக்கருத்துருவை எடுத்துக் கையாளுகிறார். இயேசு தம் உயிர்ப்பின் வழியாக அனைவரையும் அவருடன் இணைததுக்கொள்கிறார். இயேசுவின் உடல் வழியாக நாம் அனைவரும் கடவுளுக்கு அருகில் செல்கிறோம்.

இவ்வாறாக, இஸ்ரயேல் மக்களின் இரு பெரும் அடையாளங்களை பத்துக் கட்டளைகள், எருசலேம் கோவில் மாற்றுபவராக வருகிறார் இயேசு.

(அ) பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?

(1) பத்துக் கட்டளைகள் காலப் போக்கில் மனிதப் பாராம்பரிய விதிமுறைகளாக மாறி ஏறக்குறைய 613 மக்களை அடிமைப்படுத்தத் தொடங்கின.
(2) சட்டங்கள் வழியாக மனித மாண்பு பேணப்படுவதற்குப் பதிலாக சட்டங்கள் வழியாக மனித மாண்பு மீறப்பட்டது.
(3) சட்டங்கள் சுட்டிக்காட்டுகிற கடவுளைப் பற்றிக்கொள்வதை விடுத்து, சட்டங்களை மட்டுமே பற்றிக்கொண்டார்கள் மக்கள்.

(ஆ) கோவில் என்னும் அடையாளம் மாறுவதற்கான காரணங்கள் எவை?

(1) கோவில் என்பது வழிபடுகிற இடம் என்ற நிலை மாறி, வியாபாரம் செய்யும், பண்டங்களை மாற்றிக்கொள்ளும் இடம் என்ற நிலை உருவானது.
(2) கோவில் சார்ந்த சடங்குகள் அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டதே அன்றி, கோவிலில் உள்ள கடவுளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
(3) கோவில் அரசியல் தளமாக மாறிவிட்டது.

மெசியாவின் வருகையின்போது பத்துக்கட்டளைகளும் கோவிலும் மாற்றம் பெறும் என்பது ரபிக்களின் பாடம். மெசியாவாக வருகிற இயேசு, பத்துக்கட்டளைகளையும் கோவிலையும் தம் சிலுவையில் மாற்றிப் போடுகிறார்.

இரண்டாம் வாசகத்தில், சிலுவை என்ற அடையாளத்தை முன்மொழிகிற பவுல், அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் இருக்கிறது. ஆனால், அழைக்கப்பட்டவர்கள் யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் என எழுதுகிறார்.

நாம் பயன்படுத்தும் சிலுவை என்னும் அடையாளத்தில் இரு திசைகள் உள்ளன. ஒன்று, மேல் நோக்கியது. இரண்டு, சமன் நோக்கியது. சிலுவையின் மேல் நோக்கிய பகுதி கடவுளோடும், சமன் நோக்கிய பகுதி ஒருவர் மற்றவரோடும் இணைக்கிறது. மேல்நோக்கிய பகுதியை கோவில் என்ற அடையாளத்தோடும், சமன் நோக்கிய பகுதியை பத்துக் கட்டளைகள் என்னும் அடையாளத்தோடும் நாம் இணைத்துக்கொண்டால், இயேசுவையே புதிய ஆலயமாகவும், அவர் வழங்கிய புதிய கட்டளையை நம் வாழ்வின் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் செய்தி என்ன?

(அ) வெறும் அடையாளங்களைக் கொண்டிருப்பதால் பத்துக் கட்டளைகள், கோவில் நாம் கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாகிவிட முடியாது. இவை குறித்துக் காட்டுபவற்றையும் முன்மொழிபவற்றையும் பின்பற்ற வேண்டும்.

(ஆ) சிலுவை என்னும் அடையாளத்தை நாம் இந்நாள்களில் தியானித்துக் கொண்டாடுகிறோம். சிலுவை என்னும் அடையாளத்தின் வழியாக இயேசு பழைய அடையாளங்களை மாற்றுகிறார். சிலுவை குறித்துக்காட்டுகிற அன்பு, தற்கையளிப்பு, தியாகம் போன்றவை நம் வாழ்வாக வேண்டும்.

(இ) கடவுளோடும் ஒருவர் மற்றவரோடும் நெருக்கமாக மாறுவதற்கு இத்தவக்காலத்தில் நாம் எடுக்கும் முயற்சிகளை ஆய்ந்து பார்த்தல் நலம்.

ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன எனக் கடவுளைப் பற்றிக்கொள்ள முன்வருவோம்.

 
அடிமை வீடா? தந்தையின் இல்லமா?

 விடுதலைப் பயணம் 20:1-17
 1 கொரிந்தியர் 1:22-25
 யோவான் 2:13-25

முதல் ஏற்பாட்டில் எங்கெல்லாம் எகிப்து பற்றிய வர்ணனை வருகிறதோ அங்கெல்லாம் பெரும்பாலும் விவிலிய ஆசிரியர் "அடிமை வீடாகிய எகிப்து நாடு" என்று வர்ணனை செய்கின்றார். இவ்வாறாக, எகிப்து என்பது இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கிறது. அடிமை வீடாகிய எகிப்தில் அவர்கள் பாரவோனுக்கு அடிமைகளாக இருந்தனர். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்கள் யாவே இறைவனின் உரிமை மக்களாக மாறுகின்றனர். ஆக, அடிமை வீட்டிலிருந்து அவர்கள் தந்தையின் இல்லத்திற்குக் கடந்து செல்கின்றனர்.

ஆனால், ஒருவர் தந்தையின் இல்லத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பத்துக்கட்டளைகளைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம். இந்த பத்துக் கட்டளைகள் சொல்வது ஒற்றைச் சொல்தான்: "புனிதம்."

"புனிதம்" என்ற வார்த்தையை மையமாக வைத்து பத்துக்கட்டளைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

கட்டளை 1: கடவுள் என்னும் புனிதம்

கட்டளை 2: வார்த்தை என்னும் புனிதம்

கட்டளை 3: நேரம் என்னும் புனிதம்

கட்டளை 4: அதிகாரம் என்னும் புனிதம்

கட்டளை 5: உயிர் என்னும் புனிதம்

கட்டளை 6: அன்பு என்னும் புனிதம்

கட்டளை 7: உரிமை என்னும் புனிதம்

கட்டளை 8: உண்மை என்னும் புனிதம்

கட்டளை 9: திருப்தி என்னும் புனிதம்

கட்டளை 10: நிறைவு என்னும் புனிதம்

இந்த 10 புனித வாயில்களில் நாம் நுழையும்போது தந்தையின் இல்லத்திற்குச் சென்றுவிடலாம்.

அடிமை வீடா? தந்தையின் இல்லமா? - எதைத் தேர்ந்து கொள்வது என்ற கேள்வி இன்றைய நற்செய்தி வாசகத்தில் தொடர்கிறது. இயேசு எருசலேம் ஆலயத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நான்கு நற்செய்தி நூல்களிலும் நாம் காணும் ஒன்று. யோவான் இந்த நிகழ்வை நற்செய்தி நூலின் தொடக்கத்திலும், மற்றவர்கள் ஏறக்குறைய இறுதியிலும் பதிவு செய்கின்றனர்.

எருசலேம் ஆலயம் அடிமை வீடாக இருக்கிறது. எப்படி?

இயேசுவின் சமகாலத்தில் எருசலேம் ஆலயம் ஒரு வியாபார ஸ்தலமாக மாறிவிட்டது. கடவுளையும், கடவுள் சார்ந்தவற்றையும் காசாக்கும் வித்தைகள் கற்றிருந்தவர்களின் கருவூலமாக ஆலயம் இருந்தது. இவ்வாறாக, மக்களையும், கடவுளையும் இணைக்கவேண்டிய ஆலயம் இவ்விருவருக்கும் இடையே பெரிய பொருளாதார, சமூக, சமய, அரசியல் பிளவை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், இவ்வாறாக இவ்வாலயம் இருந்தததால் இவ்வாலயம் சுயநலம், குறுக்குவழி வணிகம், தாறுமாறான லாபம், ஏமாற்றுவேலை, இலஞ்சம், ஊழல் என்னும் காரணிகளுக்கு அடிமைகளாக இருந்தவர்களின் வீடாக மாறிவிட்டது. இயேசு இதைத் தூய்மைப்படுத்துகிறார்?

"நீர் யார் இதைச் செய்ய?" என்று யூதர்கள் கேட்டபோது, தன்னையே "தந்தையின் இல்லம்" என்னும் கோவில் என்று அடையாளம் காட்டுகின்றார்.

ஆக, அடிமைத்தன வீட்டை அழிக்க தந்தையின் இல்லமாக வாழும் ஒருவரால் தான் முடியும்.

இன்று நான் என்னையே கேட்டுப்பார்க்கிறேன்:

எப்போதெல்லாம் என் உடல் என்னும் ஆலயம் அடிமைத்தன வீடாக இருந்தது? நான் எவற்றிற்கெல்லாம் அடிமையாக இருந்தேன்?

அல்லது என் உடல் தந்தையின் இல்லமாகவே இருந்திருக்கிறதா?

இல்லம் வலுவில்லாமல் இருந்தாலும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் அது வலுவுள்ளது என்பதை, "மனித வலிமையைவிட அவரின் வலுவின்மை வலிமை மிக்கது" என்கிறார் தூய பவுல்.

இறுதியாக,

என் உடல் தந்தையின் இல்லம் என்பதை அறிவுறுத்துகின்ற இயேசு இந்த உடலில் உறையும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தூய்மைப்படுத்துகின்றார். இவற்றின்மேல் நாம் உரிமை கொண்டிருக்க அழைக்கப்படுகிறோமே தவிர, இவற்றின் அடிமைகளாக, இவற்றிற்கு நம்மை விற்றுவிட அல்ல.

ஒவ்வொரு கட்டளை சொல்லும் புனிதம் இந்த இல்லத்தின் வாழ்வாக நான் என்ன செய்கிறேன்?

வலுவான ஒரு வீடாக என் உடல் இருந்து அது அடிமைத்தனத்தின் வீடாக இருப்பதைவிட, வலுவற்றதாயினும் அது தந்தையின் இல்லமாக இருந்தால் சால்பு.


 
 இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
என்‌ தந்தையின்‌ இல்லம்

அன்பார்ந்தவர்களே!

இன்றைய நற்செய்தியில்‌ நாம்‌ கண்ட நிகழ்ச்சியின்‌ வாயிலாக இயேசு அனுப்பப்பட்டவர்‌ என்பதை நாம்‌ கண்டு கொள்ளுகிறோம்‌. அலங்கோலமாக வியாபாரக்‌ கூடம்‌ போன்று காட்சி அளித்த தன்‌ தந்தையின்‌ இல்லத்தைக்‌ கண்டதும்‌ இயேசு அங்கிருக்கும்‌ வியாபாரிகளைக்‌ கடிந்துகொண்டு, அதிகாரத்தோடு அவர்களை விரட்டுகின்றார்‌. தந்தையின்‌ இல்லமாகிய அந்த ஆலயத்தின்‌ புனிதத்தைக்‌ கெடுக்கக்‌ கூடியது எதுவாக இருந்தாலும்‌ அதைக்‌ கண்டித்தார்‌. அவரது அதிகாரத்தைப்‌ பார்த்து, நீதான்‌ அனுப்பப்பட்டவர்‌ என்றால்‌ எங்களுக்கு ஒரு அடையாளம்‌ காட்டு என்று யூதர்கள்‌ கேட்டபோது, அவர்களின்‌ வெளிவேடத்தைக்‌ கண்ட இயேசு இந்த ஆலயத்தை இடித்து விடுங்கள்‌. மூன்றே நாளில்‌ கட்டி விடுகிறேன்‌ என்று மறைமுகமாகத்‌ தான்‌ மரித்து உயிர்க்கப்‌ போவதை வெளிப்படுத்துகிறார்‌.

வியாபாரம்‌ செய்வோர்‌ மக்களை ஏமாற்றி உண்மை தெய்வத்தையும்‌, சகோதர அன்பையும்‌ மறந்ததால்தான்‌ இயேசு அவர்களை கடிந்துகொள்ளுகிறார்‌. இதே கருத்தைத்தான்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்குத்‌ தருகிறது. அடிமைத்தனத்தில்‌ இருந்த இஸ்ரயேல்‌ மக்கள்‌ தங்களை மீட்டு வந்த உயிருள்ள இறைவனை விட்டு விட்டு, 10 கட்டளைகளையும்‌ கடைப்பிடிக்க மறந்து, நன்றி கெட்டவர்களாக மாறினார்கள்‌ என்பதை எடுத்துரைக்கிறது. இன்றும்‌ நம்மில்‌ பல பேர்‌ அவ்வாறே இறைவன்‌ நமக்குத்‌ தந்த கட்டளையை மறந்து நம்‌ கடமையில்‌ தவறி விடுகிறோம்‌. இறைவன்‌ தந்த 10 கட்டளைகள்‌ ஒரே நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல இரண்டு கட்டளைகளில்‌ அடங்குகிறது. இந்த இரண்டு கட்டளைகளும்‌ நாணயத்தின்‌ இரு பக்கங்கள்‌ போல உள்ளன. அதாவது இறைவனை அன்பு செய்கிறேன்‌ எனக்‌ கூறிக்‌ கொண்டு தன்‌ சகோதரனை வெறுப்பவன்‌ பொய்யன்‌ (1 யோவா. 4:20). எவ்வாறு நம்மைத்‌ துன்புறுத்தியவர்களை நேசிக்க முடியும்‌? நடைமுறையில்‌ இது மிகவும்‌ கடினம்தான்‌. ஆனால்‌ இந்த சகோதர அன்பில்தான்‌ இறையன்பு மிளிர்கிறது.

நமது உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ இறைவன்‌ குடி கொள்ளத்‌ தயாராக உள்ளார்‌. இந்த தவக்காலம்‌ நம்மைத்‌ தகுந்த முறையில்‌ தயாரிக்க ஏற்ற காலம்‌. நம்‌ வானகத்‌ தந்தையை அன்பு செய்ய வேண்டுமெனில்‌ நம்‌ சகோதரர்களுக்குச்‌ சேவை செய்து அன்பு செய்ய வேண்டும்‌. எனவே நம்மைப்போல பிறரையும்‌ நேசிக்க நம்‌ வானகத்‌ தந்‌தை நம்‌ உள்ளம்‌ என்னும்‌ ஆலயத்தில்‌ நிறைவாகத்‌ தங்கிட நம்மைத்‌ தகுந்த முறையில்‌ இந்த தவக்காலத்தில்‌ தயார்‌ செய்வோமாக.

ஆண்டவர்‌ வாழும்‌ இல்லம்‌ நம்‌ உள்ளமாக இருக்கின்றபடியால்‌ நம்‌ ஒவ்வொருவருடைய உள்ளமும்‌ இறைவன்‌ வாழும்‌ ஆலயமாகும்‌. ஆண்டவர்‌ நம்‌ உள்ளத்திலே உறைகின்றபடியால்‌ நாம்‌ ஒவ்வொருவருமே ஆண்டவராகின்றோம்‌. எனவே ஆலயத்திற்கு வருகின்றவரெல்லாம்‌ ஆண்டவராகவே மாறிட முயற்சி எடுப்போம்‌.
 
 மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
பாவங்களின் இருப்பிடம் சுயநலம்

இயேசு - அவர் மிகவும் அன்பானவர்.
அவர் - அழுதால் அரும்புதிரும்
அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரித்தால் முத்துதிரும்
வாய் திறந்தால் தேன் சிதறும்
அவர் இருக்கும் இடத்திலே
காலையிலே பூபாளம் ஒலிக்கும்
மதியத்திலே கல்யாணி ஒலிக்கும்
இரவினிலே நீலாம்பரி ஒலிக்கும்
அவர் கண்ணுக்குள் கங்கை உண்டு!
கைக்குள் காவிரி உண்டு!
இதயத்துக்குள் இமயம் உண்டு!

இப்படிப்பட்ட இயேசு இன்றைய நற்செய்தியிலே சாட்டை பின்னி. கோயிலில் வியாபாரம் செய்பவர்களை துரத்துவதைப் பார்க்கின்றோம்.
தன் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் (மத் 5:22) என்றவர் இங்கே சினங்கொள்வதை, கோபப்படுவதைப் பார்க்கின்றோம். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத் 11:28) என்ற இயேசுவை, மக்களைத் துரத்தும் இயேசுவாக இன்று சந்திக்கின்றோம்.
சினத்திலே இரண்டு வகை : பாவமான சினம், பாவமில்லாத சினம். சுயநலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமான சினம்; பிறர்நலத்திற்காகக் கோபப்பட்டால் அது பாவமில்லாத சினம். அனைத்துப் பாவங்களின் இருப்பிடமாகத் திகழ்வது சுயநலம்; அனைத்துப் புண்ணியங்களுக்குத் தாயாக விளங்குவது பிறர் நலம்.

இதோ பாவமான கோபத்திற்கு விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்:
நல்ல சமாரியர் உவமையையும் (லூக் 10:25-37) காணாமற்போன மகன் உவமையையும் (லூக் 15:11-32) நமக்குத் தந்த கருணை முகில் இயேசு இடியாக மாறி வியாபாரிகள் மடிமீது விழுவதை இங்கே காண்கின்றோம்.
கோயிலில் வியாபாரம் செய்பவர் மீது கோபப்பட்டது போல நீதிக்கும், அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் (உரோ 14:17) எதிராகச் செயல்பட்ட சில பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், ஏரோதியர் மீது இயேசு சினங்கொண்ட நேரங்கள் உண்டு (மாற் 3:1-6).
இந்த இடத்திலே, இயேசுவைப் போல நாமும் சினம் கொள்ளலாமா? கோபப்படலாமா? என்ற கேள்வி நம்மில் பலரது மனத்திலே எழுந்து மறையலாம்.
இந்தக் கேள்விக்கு புனித பவுலடிகளார் பதில் கூறுகின்றார். சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தெளியட்டும். அலகைக்கு இடம் கொடாதீர்கள் (எபே 4:26-27) என்கின்றார்.
காயினையும், அவன் காணிக்கையையும் கடவுள் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே காயின் கடும் சினமுற்றான். கடவுள் அவனைப் பார்த்து, நீ ஏன் சினமுற்றாய்? என்று கேட்டார் (தொநூ 4:5-7). காயினின் கோபம், அவனுடைய தம்பி ஆபேல்மீது கொண்டிருந்த பொறாமையிலிருந்து பிறந்த பாவமாகும்.
காணாமற்போன மகன் உவமையில், மூத்த மகன் சினமுற்று விருந்து நடந்துகொண்டிருந்த வீட்டிற்குள் புக விருப்பமின்றி நின்றான் (லூக் 15:28). அவனது சினம், கோபம் அவனது சகோதரன்மீது அவன் கொண்டிருந்த வெறுப்பிலிருந்து பிறந்தது.
இப்படி பொறாமையிலிருந்து, வெறுப்பிலிருந்து, பாவத்திலிருந்து, சுயநலத்திலிருந்து பிறக்கும் சினத்திற்கு, கோபத்திற்கு கிறிஸ்தவ மறையில் இடமே கிடையாது.
இயேசுவிடம் நின்று நிலவிய கோபம் சுயநலத்திலிருந்து பிறந்தது அல்ல; அது பிறர் நலத்திலிருந்து பிறந்தது; அவர் அவரது தந்தையின் மீது கொண்டிருந்த மாறாத அன்பிலிருந்து பிறந்தது (யோவா 2:16).

ஆகவே பிறர் நலத்திற்காக, பிறரன்புக்காக, நீதிக்காக, அமைதிக்காக, மகிழ்ச்சிக்காக, இறையரசின் மதிப்பீடுகளுக்காக நாம் கோபப்பட வேண்டும். சினம் கொள்ள வேண்டிய நேரத்திலே நாம் சினம் கொள்ளவில்லை என்றால், நாம் கடமையில் தவறிய பாவத்தைப் புரிந்தவர்களாகிவிடுகின்றோம்.
பத்துக் கட்டளைகள் (முதல் வாசகம்) கேள்விக் குறிகளாகும் போது நாம் கோபப்படலாம்; குழந்தைக்கு வைத்திருக்கும் பாலை பூனை குடிக்க நினைத்தால் பூனையின் மீது கோபப்படலாம்; பாமரர்கள் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றுகிறவர்கள் மீது கோபப்படலாம்.
எப்போது சினம் கொள்ளலாம், எப்போது சினம் கொள்ளக்கூடாது என்பதை அறிந்துகொள்ள போதிய ஞானத்தை (இரண்டாம் வாசகம்) இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம். மேலும் அறிவோம்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை (குறள் : 310).

பொருள் : வரம்பு கடந்த கோபம் கொள்பவர் உயிரோடு இருந்தாலும் இறந்தவராகவே கருதப்படுவார்! கோபத்தை முழுமையாக நீக்கியவர் பற்றற்ற துறவிக்கு ஒப்பாவார்!
 
 மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒரு வீட்டிற்கு நான் சென்றபோது, அவ்வீட்டில் டோனி என்ற ஒரு சிறுவன் தட்டிலிருந்த உளுந்தவடைகளைத் தின்றுகொண்டிருந்தான். நான் அவனிடம், 'இதுவரை எத்தனை வடைகள் தின்றாய்?' என்று கேட்டதற்கு அவன் ஏழு என்று பதில் சொன்னான். நான் அவனிடம், 'அருள் அடையாளங்களே ஏழுதான்; நிறுத்திக்கொள்' என்று சொன்னேன், அவன், 'என்ன பாதர் பத்துக்கட்டளைகளை மறந்துவிட்டீர்களே!' என்று கேட்டபோது வீட்டிலிருந்த அனைவரும் சிரித்தனர், அச் சிறுவன் வேடிக்கையாகச் சொன்னதில் ஓர் ஆழமான உண்மை பொதிந்துள்ளது. வழிபாட்டில் ஏழு அருள் அடையாளங்களைக் கொண்டாடிவிட்டு வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை மறந்துவிடுகிறோம்.

இன்றைய உலகம் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்க மறந்துவிட்டதால்தான், காமம். குடிவெறி, களியாட்டம், கொலை, கொள்ளை, இலஞ்சம், ஊழல், பாலியல் பலாத்காரம், சிசுக்கொலை முதலிய பாதகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள் ளன. இன்றைய உலகை அழிவிலிருந்து பாதுகாக்கப் பத்துக்கட்டளைகள் தேவை. தனி மனிதருடைய நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் தான் கடவுள் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார் (முதல் வாசகம்). பத்துக்கட்டளைகள் உறவை மையமாகக் கொண்டுள்ளன. முதல் மூன்று கட்டளைகள் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப்படுத்துகின்றன. எஞ்சியுள்ள ஏழு கட்டளைகளும் மனிதருக்கும் மனிதருக்குமிடையே நிலவும் உறவைப் புனிதப் படுத்துகின்றன, பத்துக்கட்டளைகள் வாழ்வு தரும் வார்த்தைகள், "ஆண்டவரே முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன" (பதிலுரைப்பாடல், யோவா 6:68), முடிவில்லா வாழ்வடைய பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்படி இயேசு பணக்கார இளைஞனிடம் கூறினார் (மத் 19:16-19),

பத்துக்கட்டளைகள் உடன்படிக்கை என்னும் மோதிரத்தில் பதிக்கப்பட்ட வைரக்கற்கள், சீனாய் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக்கட்டளைகளாகும். எனவே, பத்துக்கட்டளைகளை மீறுவது வெறும் பாவம் மட்டுமன்று; உடன்படிக்கையை மீறுவதாகும், கிறிஸ்து பத்துக் கட்டளைகளை அழிக்காமல் அதை நிறைவு செய்தார் (மத் 5:17) கொலை செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, கொலையின் காரணமான கோபத்தையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:21-22). விபச்சாரம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, விபச்சாரத்திற்குக் காரணமான காம இச்சையுடன் கூடிய பார்வையையும் தவிர்க்க வேண்டும் (மத் 5:27-28). ஒரு நோயைக் குணப்படுத்த வேண்டுமென்றால். அந்நோயின் மூலகாரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

"நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி, வாய்ப்பச் செயல்" (குறள் 948)

கட்டளைகளை வெறும் எழுத்து வடிவத்தில் கடைப்பிடிப்பது பரிசேயரின் ஒழுக்கம். ஆனால், கட்டளைகளை அவற்றின் உள் நோக்கம் அறிந்து கடைப்பிடிப்பது கிறிஸ்துவ ஒழுக்கமாகும். முந்தைய ஒழுக்கம் சாவையும், பிந்தைய ஒழுக்கம் வாழ்வையும் விளைவிக்கும். எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு: தூய ஆவியால் விளைவது வாழ்வு (2 கொரி 3:6). எனவே, பத்துக் கட்டளைகளை கிறிஸ்து தமது மலைப்பொழிவில் விளக்கியதற்கு ஏற்ப அவற்றைக் கடைப்பிடிப்பது நமது முதன்மையான கடமையாகும், பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. ஆனால் புதிய உடன்படிக்கையோ மனித இதயத்தில் எழுதப்பட்டது (எரே 31:33). புதிய உடன்படிக்கையின் இணைப்பாளரான கிறிஸ்து கொண்டு வந்தது புதிய வாழ்வு, புதிய ஆலயம், புதிய வழிபாடு, புதிய கட்டளை. இன்றைய நற்செய்தியில் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தாமே புதிய ஆலயம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒரு சிலருக்கு ஆலயம் என்றாலே ஒருவகையான ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. ஒருவர் ஆலயத்திற்குச் செல்வதில்லை. காரணம் கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் : "என் மனைவியை முதன் முதல் ஆலயத்தில்தான் பார்த்தேன். இவ்வளவு மோசமான ஒரு பெண்ணை ஆலயத்தில் எனக்குக் காட்டிய அந்த ஆண்டவன் முகத்தில் ஆயுள் முழுவதும் முழிக்கமாட்டேன்! "பாவம் கசப்பான அனுபவம். இத்தகைய கசப்பான அனுபவங்களால் ஒருசிலர் ஆலயம் செல்வதில்லை. இது தவறான முடிவாகும். ஏனெனில், நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி! கிறிஸ்து ஆலயத்தையோ ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை. அவருடைய பெற்றோர்கள் ஆண்டு தோறும் பாஸ்கா விழாவிற்கு எருசலேம் ஆலயத்திற்குச் சென்றனர். இயேசுவும் பன்னிரண்டு வயதில் எருசலேம் ஆலயத்திற்குச் சென்றார், ஆலயத்தை அவருடைய தந்தையின் இல்லமென்றார் (லூக் 2:41-42, 49). ஆனால் ஆலயத்தைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதை அவர் எதிர்த்தார். செபவீடாகிய கடவுளின் இல்லத்தைச் சந்தையாகவும் (யோவா 2:16), கள்வர் குகையாகவும் (மாற் 11:17) மாற்றப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.

நாத்திகர்கள் ஆத்திகர்களிடம், "கடவுளை மற, மனிதனை நினை' என்று சொல்லுமளவிற்கு இன்று ஆலயமும் ஆலய வழிபாடும் தரம் தாழ்ந்து, தறிகெட்டுச் சென்றுக்கொண்டிருக்கிறது. ஆலயங்கள் வாணிபக் கூடமாகக் காட்சியளிக்கின்றன. திருத்தலங்களில் பணம் மையப்படுத்தப்படுகிறது.

குழந்தை இயேசுவின் கையில் என்ன இருக்கின்றது? என்று சிறுவர்களை நான் கேட்டபோது அவர்கள் உண்டியல் பெட்டி என்றார்கள்.

குழந்தை இயேசுவின் திருத்தலப் பங்குத் தந்தையிடம் நான் சிரித்துக் கொண்டே குழந்தை இயேசுவை வயசுக்கு வர விடமாட்டார்களா? என்று கேட்டதற்கு அவரும் சிரித்துக்கொண்டே குந்த இயேசு வயசுக்கு வந்துவிட்டால் வருமானம் போய்விடும். என்றார். ஆலய வழிபாட்டில் பண ஆதிக்கம் செலுத்தாமல், பக்தி நெறி ஆதிக்கம் செலுத்த வேண்டும். நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

 
 திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
தீமையா?... சீறி

தாவோசு என்பது தனி மாநிலம். மலைப் பகுதி, அங்கே உலகப் பொருளாதார மாநாடு (World economic forum) ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நடைபெறும். World economic forum என்பது ஒரு மிகப் பெரிய கழகம். உலகின் தலைசிறந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் இவர்களை ஒன்று கூட்டி உலக அளவில் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும், வழிகாட்டும் மாபெரும் மன்றம் அது. 819 உலகக் கம்பெனிகள் இதில் உறுப்பினர்கள். Everybody who is somebody இந்த ஆண்டுக் கூட்டத்துக்கு வருவார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்தியாவின் மீது வெளிச்சமிட்டு நம்நாட்டின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்களைக் கவனித்து அன்றைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவை இறுதிக் கூட்டத்தில் பேச அழைத்திருந்தார்கள்.

அப்பொழுது நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் வீசல்லின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் சொன்னார்: ''உண்மைக்கு எதிரி பொய் அல்ல, நன்மைக்கு எதிரி தீமை அல்ல. முன்னேற்றத்துக்கு எதிரி பிற்போக்கு அல்ல. எல்லாவற்றுக்குமே ஒரு பொது எதிரி உண்டு. அதுதான் அலட்சியப் போக்கு (Indifference). அதுவே நமது மிகப் பெரிய எதிரி. பணக்காரர்கள் ஏழைகளை அலட்சியப்படுத்துவது, முன்னேற்ற நாடுகள் பின்தங்கிய நாடுகளை அலட்சியப்படுத்துவது... எந்தப் பாவத்திலும் பொது அம்சம் இந்த அலட்சியம் அருமையான உன்னதமான பேச்சு! ஒருவன் அலட்சியமாக இருக்கவில்லை என்பதை அவனுடைய சினம் - சீற்றம் - சீறி எழும் ஆவேசம் வெளிப்படுத்தும்.

ஒரு சிற்றூரை ஒட்டிய முட்புதரில் ஒரு பாம்பு நடமாடியது. அந்த வழியாகப் போவோர் வருவோரையெல்லாம் கடித்துத் துன்புறுத்து - வதாகப் பரவலாக ஒரு பேச்சு. ஒருநாள் முனிவர் ஒருவர் அந்தப் பாம்மைப் பார்த்தார். ''ஏன் இப்படிக் கடித்து மக்களைத் துன்புறுத்துகிறாய்? உன் இயல்பைக் கொஞ்சம் மாற்றி எவருக்கும் தீங்கு செய்வதை விட்டுவிடு" என்று முனிவர் கேட்டுக் கொள்ள அந்தப் பாம்பும் பணிந்தது.

சில நாட்களுக்குப் பின் மீண்டும் முனிவர் அந்த வழியே வந்தார். அந்தப் பாம்மைப் பார்த்தார். பரிதாபமாக இருந்தது. அதன் உடம்பு முழுவதும் இரத்தக் காயங்கள். குற்றுயிராய் நகரக் கூட முடியாத படி கிடந்தது. "என்ன ஆச்சு?" என்று கேட்டதற்கு, அந்தப் பாம்பு முணங்கியது: ''நீங்கள் சொன்னபடி நடந்ததற்கு எனக்குக் கிடைத்த பரிசு இது. நான் கடிப்பதில்லை என்று கண்டதும் கண்டவன் எல்லாம் கல்லெறிந்து காயப்படுத்திவிட்டுச் செல்கிறான். அதைக் கேட்ட முனிவர் கோபத்தோடு சொன்னார்: "கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் குமுறக் கூடாது என்றேனா? தீங்கு இழைக்காதே என்றுதான் சொன்னேன் . தீங்கு இழைப்பதைக் கண்டு நீ சீறி எழுந்திருக்க வேண்டாமா?

பொய்மை காணும் போது கோபம் வேண்டும். தீமை எதிர்ப்படும் போது கோபம் வேண்டும். அநீதி ஆட்சி செய்யும் போது கோபம் வேண்டும்.

எருசலேம் ஆலயம் கள்வர் குகையானபோது, வணிகக் கூடமான போது இயேசுவுக்குக் கோபம் வந்தது. கைக்குச் சாட்டை வந்தது. சிறுமை கண்டு பொங்கினார். சீறி எழுந்தார். ஆலயம் என்பது ஆண்டவனின் உறைவிடம். மனிதனும் இறைவனும் சந்தித்து உறவாடும் ஆன்மீக அனுபவத்தளம். உலகக் கடமைகள், பொறுப்புகள், தடைகள், சவால்கள் இவற்றிற்கிடையே சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தாயின் மடியில் தலை சாய்ப்பது போல ஒரு சுக அனுபவம் தரும் புனித தலம். சமத்துவம், சகோதரத்துவம் என்ற இறையாட்சி விழுமியங்கள் மணம் பரப்பும் மலர்த்தோட்டம்.

ஆலயம் இருப்பது இறைவழிபாட்டுக்காக, இறை நம்பிக்கையை வளர்ப்பதற்காக, வழிபாடுகள் நம்மை வாழ்வு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக. அந்த நோக்கம் நிறைவேறாத போது வாழ்வு வேறு வழிபாடு வேறு என்று ஒன்றுக்கு ஒன்று பொருந்தாத நிலையில் உங்கள் திருவிழாக்களை நான் வெறுத்து அருவருக்கின்றேன். உங்கள் வழிபாட்டுக் கூட்டங்களில் எனக்கு விருப்பமே இல்லை" (ஆமோசு 5:21) என்று வெறுப்பை உமிழ்கின்றார் இறைவன்.

இயேசு வெகுண்டெழுந்தது தந்தையின் இல்லத்தைச் சந்தை யாக்குகிறார்களே என்பதற்காக மட்டுமா? கடவுளின் பெயரால் ஏழைகளின் வயிற்றில் அடித்து அநியாயமாக அவர்களைத் துன்புறுத்தியதற்காக "நீதி வெள்ளமெனப் பொங்கி வருக! நேர்மை வற்றாத ஆறாகப் பாய்ந்து வருக! (ஆமோசு 5:24) என்ற வேட்கையில் இயேசுவின் கோபம் தகுதியான முறையில் வெளிப்படுத்திய நியாயமான உணர்வு.

கோபப்படுவது யாருக்கும் எளிது. ஆனால் சரியான நபர் மீது சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான நோக்கத்துடன் சரியான வழியில் கோபப்படுவது அவ்வளவு எளிதல்ல. மூன்று வகையான கோபம் பற்றி தந்தை மைக்கிள் ஜெயராஜ், சே.ச. குறிப்பிடுகிறார். ) அகச்சினம் (தன்னையே கடிந்து கொள்வது) 2. புறச்சினம் (பிறர்மீது கோபம் கொள்வது) 3. அறச்சினம் (ஒடுக்கப் பட்டோருக்கு ஆதரவாக அநீதி கண்டு சீறி எழுவது). அறச்சினம் பிறர் நலத்தில் பிறக்கும் அன்பின் வெளிப்பாடு. சமுதாய அக்கறையின் சின்னம். விடுதலை வாழ்வின் ஆணிவேர்.

கோபம் ஓர் உந்து சக்தி. கோபம் கொடிது என்று கூறினும் கோபம் கனலைப் போன்று பலனளிக்க வல்ல எரிசக்தி. எனினும் ''சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள். பொழுது சாய்வதற்குள் உங்கள் சினம் தணியட்டும் (எபே.4:26)

கோபம் உள்ள இடத்தில் குணமிருக்கும் என்பார்கள் - ஏதோ கோபமும் குணமும் மாறுபட்டதுபோல. கோபமே குணமாகலாம் என்பது இயேசுவின் வெளிப்பாடு - நிலைப்பாடு.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
கழுவப்பட வேண்டிய மனங்கள்!

தன்னையே சுத்தம் செய்துகொள்வது மனிதர்களின் அடிப்படைத்

தேவைகளில் ஒன்று. மனிதர்கள் மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையும், தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வதை நாம் அறிவோம். தன்னையே சுத்தம் செய்துகொள்ளும் இயற்கையை மீண்டும் குப்பையாக்குவதில் மனிதர்களாகிய நம் பங்கு மிக அதிகம் என்பதையும் வெட்கத்துடன், வேதனையுடன் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

'சுத்தப்படுத்துதல்' என்பது தவக்காலத்தின் மைய இலக்குகளில் ஒன்று. புறத் தூய்மையைவிட, அகத் தூய்மையை வலியுறுத்தும் காலம், தவக்காலம். இத்தருணத்தில், இயேசு எருசலேம் கோவிலைச் சுத்தம்செய்யும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியாகத் (யோவா. 2:13-25) தரப்பட்டுள்ளது. 'இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற இந்நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது (மத். 21:12-17; மாற். 11:15-19; லூக். 19:45-48; யோவா. 2:13-22). 'கோவிலைத் தூய்மையாக்குதல்' என்ற சொற்றொடரைக் கேட்டதும், ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது:

தென் ஆப்ரிக்கா, இனவெறியில் மூழ்கியிருந்த காலம் அது. கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு கோவிலில் நுழைய முயன்றார். அருகிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தி, "நில்! வெள்ளையினத்தவர் மட்டுமே இக்கோவிலுக்குள் நுழையமுடியும். நீ உள்ளே போகக்கூடாது!" என்று கூறினார். கறுப்பின மனிதர் அவரிடம், "ஐயா, நான் இந்தக் கோவிலைச் சுத்தம் செய்யவே போகிறேன்" என்று கூறினார். உடனே, அந்தக் காவல்துறை அதிகாரி, "அப்படியென்றால் நீ உள்ளே போகலாம். ஆனால், அங்கு நீ செபித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தால், பின்னர், உனக்குத் தொல்லைதான்!" என்று எச்சரித்து உள்ளே அனுப்பினார்.

நமது ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள் மற்றும் யூத தொழுகைக்கூடங்கள் ஆகியவை, முன்னெப்போதும் தேவைப்படாத அளவு சுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. நரேந்திர மோடியைப் போல பல்வேறு அரசியல்வாதிகள், கோவில்களை நாடக மேடைகளாக்கி, அதன் வழியே, தங்களையே தெய்வங்களாக விளம்பரப்படுத்தும் அவல முயற்சிகளை நாம் அறிவோம். வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்தி, பிரிவினை, வன்முறை, மோதல்கள் போன்ற உணர்வுகளை வளர்த்துவருவது நமக்கு வேதனையைத் தருகிறது. இவ்வாறு, நமது வழிபாட்டுத் தலங்களில் அளவுக்கு அதிகமாக குப்பைகளை குவித்துள்ளோம். இத்தகையைச் சூழலில், இயேசு எருசலேம் கோவிலை சுத்தப்படுத்திய நிகழ்வு நமக்கு சில பாடங்களைக் கற்றுத்தர முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியே சித்திரிக்கப்பட்டுள்ள இயேசுவின் உருவம் நமக்குள் உருவாக்கும் உணர்வுகளிலிருந்து நம் பாடங்களைத் துவங்குவோம். இயேசு, கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள் என்று கூறினார். (யோவான் 2:14-16) இந்த வரிகளில் சித்திரிக்கப்பட்டுள்ள இயேசு நமக்குள் நெருடல்களை உருவாக்குகிறார்.

இந்த ஞாயிறையும் சேர்த்து, தவக்காலத்தின் முதல் மூன்று ஞாயிறு வழிபாட்டிலும் இயேசுவை வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில் சந்தித்துவருகிறோம். தவக்காலத்தின் முதல் ஞாயிறு, பசியோடு, களைப்போடு இருந்த இயேசுவை, நாம் பாலைநிலத்தில் சந்தித்தோம். இரண்டாவது வாரம், தோற்றமாற்றம் அடைந்து, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசுவை, நாம் மலைமீது சந்தித்தோம். மூன்றாவது ஞாயிறான இன்று, இயேசுவை, எருசலேம் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்க, சாட்டையைச் சுழற்றும் இந்த இயேசு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

தவக்காலத்தின் மூன்று ஞாயிறுகளிலும் நாம் சிந்தித்த இக்காட்சிகளை ஓவியங்களாகப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று ஓவியங்களில், பாலை நிலத்திலும், மலைமீதும் நாம் சந்தித்த இயேசுவை, கோவில்களில் பீடமேற்ற தயங்கமாட்டோம். ஆனால், எருசலேம் கோவிலில் சாட்டையைச் சுழற்றி வியாபாரிகளை விரட்டும் இயேசுவின் ஓவியத்தை, நம் ஆலயங்களில் வைத்து வழிபடமுயுமா என்பது பெரும் கேள்விக்குறிதான். பொதுவாக, கோவில்களில் நாம் பீடமேற்றும் இயேசுவின் திரு உருவங்கள், சாந்தம் நிறைந்த உருவங்கள், வெற்றிவாகை சூடிய உருவங்கள், அல்லது சிலுவையில் துன்புறும் உருவங்கள். கிறிஸ்தவ மறையின் துவக்ககாலத்தில், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும் சவாலாக இருந்தார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடியார் இவ்வாறு கூறுகிறார்: நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. (1 கொரி. 1:23-24)

இந்த மூன்று நிகழ்வுகளில், மற்றோர் அம்சத்தையும் நாம் சிந்திப்பது பயனுள்ள முயற்சி. பாலைநிலம், மலை, கோவில் ஆகிய மூன்று இடங்களும் இறைவனைச் சந்திக்கக்கூடிய இடங்கள் என்பது நமக்குத் தெரிந்த உண்மை. இவற்றில், பாலைநிலத்திலோ, மலையிலோ, இறைவனை, நாம் தேடிச்செல்ல வேண்டும். அவ்வளவு எளிதில் நம் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. இறைவனை எளிதில் காண்பதற்கென மனிதர்கள் உருவாக்கிய இடம்தான், கோவில். அந்தக் கோவிலுக்குச் சென்ற இறைமகனாகிய இயேசு, அங்கு, இறைவனைக் காணமுடியாததால், கோபமுற்று, சாட்டையைக் கையில் எடுக்கிறார்.

கோவிலுக்குச் சென்றால் நாம் தூய்மை பெறலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால், இங்கோ, இயேசு, கோவிலைத் தூய்மைப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களின் உயிர்நாடியாக விளங்கிய எருசலேம் கோவிலில், இயேசு, ஏன் கோபத்துடன் நடந்துகொண்டார் என்பதன் காரணத்தைப் புரிந்துகொள்வது பயனளிக்கும். எருசலேம் கோவிலில், அன்று நடந்த நிகழ்வுகளுக்கும், இன்று நம் திருத்தலங்களில் காணும் பல நிகழ்வுகளுக்கும் நெருங்கிய ஒப்புமைகள் இருந்தால், நாம் கேள்விகளை எழுப்பவும், பதில்களைத் தேடவும் கடமைப்பட்டுள்ளோம். எருசலேம் கோவிலைச் சந்தையாக மாற்றியவர்களை, சாட்டை கொண்டு விரட்டியடித்த இயேசு, இன்று, நம் கோவில்களுக்கு வந்தால், என்ன நினைப்பார், எப்படி நடந்துகொள்வார் என்பதைச் சிந்தித்துப்பார்க்க, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது.

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார் (யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்லவேண்டும், அந்த ஆண்டுக்குரியக் காணிக்கையை, கோவிலில் செலுத்தவேண்டும். இது இஸ்ரயேல் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை. இயேசுவும் ஒரு யூதருக்குரிய கடமைகளை நிறைவேற்ற கோவிலுக்குச் சென்றார். அங்கு சென்றவர், அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.

ஏற்கனவே, 12 வயது சிறுவனாக, முதல்முறை, எருசலேம் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு அவர் கண்ட ஒரு சில காட்சிகள், அவரைப் பாதித்திருக்க வேண்டும். அதன்பின், ஒவ்வோர் ஆண்டும், அவர் அங்கு சென்றபோதெல்லாம், அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இயேசுவுக்குள் இத்தனைக் கேள்விகளும் வேதனைகளும் உருவாகக் காரணம் என்ன? ஏழைகளும், பிற இனத்தாரும் அடைந்த துன்பங்கள். இயேசு, ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஏழை யூதர்கள் அடைந்த வேதனைகளை, அவரும் அடைந்திருப்பார். இறைவனைக் காணும் ஆர்வத்தோடு, வறியோர், ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, எருசலேம் கோவிலுக்கு சென்றபோது, அவர்கள் அங்கு சந்தித்தப் பிரச்சனைகள் பல. ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தவேண்டும் என, ஆண்டு முழுவதும், தங்கள் வீடுகளில், கண்ணும் கருத்துமாய், அவர்கள் வளர்த்து வந்த ஆடு, மாடு, புறா போன்ற காணிக்கைகளைக் குருக்களிடம் கொண்டு சென்றபோது, அந்தக் காணிக்கைகளில் ஏதாவது ஒரு குறை கண்டனர் குருக்கள். குறையுள்ள காணிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். சரியான காணிக்கையைச் செலுத்தவில்லையெனில், கடவுள் அவர்களைப் புறக்கணித்துவிடுவார் என்ற அச்சத்தை, வறியோர் மீது, குருக்கள் திணித்தனர். எனவே, அந்த ஏழைகள், கோவிலில், அநியாய விலைக்கு விற்கப்பட்ட ஆடு, மாடு, புறா இவற்றை வாங்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். ஆண்டு முழுவதும் அவர்கள் சேமித்து வைத்த பணமெல்லாம் ஒரு காணிக்கை வாங்குவதற்கே பற்றாமல் போயிற்று.

அடுத்ததாக, கோவிலுக்குச் செலுத்தவேண்டிய காணிக்கைப் பணமும் பிரச்சனைகளை எழுப்பியது. இஸ்ரயேல் மக்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்திய நாணயம், உரோமைய நாணயம். அந்த நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால், அதைக் கோவில் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. எனவே, காணிக்கை செலுத்தும் அனைவரும், கோவில் சந்தையில் இருந்த நாணயம் மாற்றுமிடங்களில், தாங்கள் சேமித்து வைத்திருந்த உரோமைய நாணயங்களைக் கொடுத்து, கோவிலுக்கு ஏற்ற நாணயங்களை வாங்கவேண்டும். இந்த வர்த்தகத்திலும் ஏழைகள் அதிகம் ஏமாற்றப்பட்டனர். எருசலேம் கோவிலில் நடந்த காணிக்கைப் பொருட்களின் வியாபாரம், நாணயம் மாற்றும் வியாபாரம் அனைத்திலும், கோவில் குருக்களுக்குப் பங்கு இருந்தது.

நாணயமற்ற முறையில், நாணய மாற்றங்கள் நிகழும் வேளைகளில், ஏழைகள் துன்புறுவது, அன்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் கொடுமை. சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் நரேந்திர மோடியால் நடத்தப்பட்ட பணமுடக்கம் என்ற கொடுமை, வறியோரை எவ்வளவு தூரம் வாட்டியது என்பதை அறிவோம். அதே நேரம், கோடீஸ்வரக் கொள்ளையர்கள் அதே மோடியின் ஆசியுடன் அனுபவித்துவரும் சலுகைகளும் ஏராளம். நிச்சயம், இயேசுவை, மீண்டும் சாட்டையை எடுக்கத் தூண்டும் எதார்த்தங்கள் இவை. வருகிற தேர்தல் கண்ணியமான, நேர்மையான முறையில் நடைபெற்றால், இந்திய பாராளுமன்றம் என்ற கோவிலிலிருந்து, இயேசுவின் சாட்டையடி, கொள்ளையர்களை விரட்டும் என்ற நம்பிக்கையுடன் வேண்டுவோம்.

வறியோர், ஆண்டு முழுவதும் காத்திருந்து, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, இறைவனைக் காண எருசலேம் கோவிலுக்குச் சென்றால், அங்கு இறைவனைக் காண இத்தனைத் தடைகள் இருந்தன. தாங்கள் காணவிழைந்த இறைவன், தங்களது ஒருவருட சேமிப்பையெல்லாம் தாண்டி, ஒவ்வோர் ஆண்டும் உயர, உயர விலகிச் செல்கிறாரே என்ற தவிப்பு, வறியோர் மனதை ஆக்கிரமித்தது. இறைவனின் இல்லத்தில், அவரது கண் முன்பாகவே இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றனவே என்று, ஆயிரமாயிரம் ஏழைகளும், நேரிய மனத்தவரும் வெந்து, புழுங்கிக் கொண்டிருந்தனர்.

அதே வேதனை, அதே புழுக்கம், யூதர் அல்லாத பிற இனத்தவருக்கும் இருந்தது. எருசலேம் கோவிலில் வியாபாரங்கள் நடந்ததெல்லாம் கோவிலின் வெளிச் சுற்றில். இந்த வெளிச்சுற்று, பிற இனத்தவர் முற்றம் (The Court of the Gentiles) என்று அழைக்கப்பட்டது. பிற இனத்தவர், இந்த வெளிச்சுற்றில் மட்டும் நின்று இறைவனைத் தரிசிக்க அனுமதி உண்டு. இந்த வெளிச் சுற்றில், கடைகள் கூடிவிட்டதால், கடவுள் காணாமல் போய்விட்டார். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்காதக் கதையாய், இறைவனைக் காண ஆவலாய் வந்திருந்த பிற இனத்தவர், இறைவனைக் காணமுடியாமல், ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கெனக் குறிக்கப்பட்டிருந்த வெளிச்சுற்றை ஆக்கிரமித்திருந்த சந்தையைக் கண்டு, இறைவன் மீதே ஓரளவு வெறுப்பை வளர்த்துக்கொண்டு வீடு திரும்பவேண்டிய நிலைக்கு, பிற இனத்தவர் தள்ளப்பட்டனர்.

ஏழைகளையும் பிற இனத்தவரையும் வாட்டியெடுத்த வேதனைகள், இயேசுவையும் வாட்டியெடுத்தன. இந்த வேதனை, கோபமாக வடிவெடுத்தது. ஏழை யூதர்களும், பிற இனத்தவரும் கடவுளைச் சந்திக்க முடியாதபடி, ஒரு சந்தையாக, கள்வரின் குகையாக மாற்றப்பட்டிருந்த கோவிலைச் சுத்தம் செய்ய முடிவெடுத்தார் இயேசு.

பாஸ்கா விழா காலத்தில், எருசலேம் கோவிலுக்கு ஒரு இலட்சம் பக்தர்களாகிலும் வந்தனர் என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கணிப்பு. அந்த ஒரு இலட்சம் பேருக்குத் தேவையான ஆடு, மாடு, புறா என்ற காணிக்கைகள், கோவிலில் குவிந்திருக்க வேண்டும். தனியொரு மனிதராய், இந்த வியாபாரக் கோட்டையைத் தகர்க்கத் துணிந்த இளையவர் இயேசுவின் மனம், சாதாரண மனம் அல்ல..
இயேசு, எருசலேம் கோவிலில் செய்த அந்தப் புரட்சியை நாம் ஒரு புதுமையாகவே பார்க்கவேண்டும். அவ்வளவு பெரிய ஒரு நிறுவனத்தை எப்படி தனியொரு மனிதர் தலைகீழாக மாற்றத் துணிந்தார்? எப்படி அந்த நேரத்திலேயே, அவர் கொல்லப்படாமல் தப்பித்தார்? என்பதெல்லாம் புதுமையே. இந்தப் புதுமையை எண்ணிப்பார்க்க, திருஅவை, இன்று ஒரு வாய்ப்பை நமக்கு அளித்துள்ளது.

கோபக்கனல் தெறிக்க, இயேசு, அந்த வர்த்தகக் கோட்டையைத் தாக்கியபோது, அவர் எந்த அதிகாரத்தில் இவற்றைச் செய்கிறார் என்ற கேள்வி எழுந்தது. இயேசு அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன் (யோவான் 2: 19) என்ற சவாலை அவர்கள் முன் வைத்தார் என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம். 46 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட ஆலயத்தை, மூன்றே நாட்களில் கட்டியெழுப்புவதாக இயேசு சொன்னதை, குழந்தைத்தனமான சவாலாக நாம் பார்க்கலாம்; அல்லது, கடவுளால் மட்டுமே செய்துமுடிக்கக்கூடிய ஓர் அற்புதச் செயலாகவும் கருதலாம். இயேசு கூறிய அந்தக் கோவில் அவரது உடல் என்றும் யோவான் தன் நற்செய்தியில் கூறுகிறார் - அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார் (யோவான் 2: 21).

இறைவனுக்கே விலைகுறித்து, வர்த்தகக் கோட்டையாக மாறிய எருசலேம் கோவில், வரலாற்றில் இரு முறை தரைமட்டமாக்கப்பட்டது. இன்றும், அந்தக் கோவில், மோதல்கள் பல உருவாக ஒரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு மாறாக, முற்றிலும் தகர்க்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உடல் என்ற கோவிலை, கடவுள், மூன்று நாட்களில் மீண்டும் கட்டியெழுப்பினார். இந்தக் கோவில், இருபது நூற்றாண்டுகளைக் கடந்து, உறுதியுடன் நிமிர்ந்து நிற்கிறது. இந்தக் கோவிலில் வியாபாரங்கள் கிடையாது, கடவுளை விலை பேசமுடியாது, வெளிச் சுற்று, உள்சுற்று என்ற பாகுபாடுகள் கிடையாது, வறியோர், செல்வந்தர், பாவி, புண்ணியவான், யூதர், பிற இனத்தவர், ஆண், பெண் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் உள்ளே வரலாம். இறைவனை, எந்தத் தடையும் இல்லாமல், கண்ணாரக் கண்டு நிறைவடையலாம்.

பாகுபாடுகள் ஏதுமற்ற இறைமக்களின் சமுதாயம் என்ற அழகிய கோவில்கள் உலகெங்கும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். மதத்தையும், கடவுளையும் மூலதனமாக்கி நடைபெறும் ஓட்டு திரட்டும் நாடகங்கள், அரசியல் வர்த்தகங்கள் அனைத்திலிருந்தும், உலகை, இறைவன் தூய்மையாக்க வேண்டும் என்று செபிப்போம்.
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை
இறைவனுக்கு முதலிடம் தருவோமா!

தவக்காலத்தின் மூன்றாம் வாரத்தில் நாம் இருக்கிறோம். இன்றைய நாளின் வாசகங்கள் நமது வாழ்வில் ஆண்டவருக்கு கொடுக்கும் இடமென்ன, அவருக்கு நாம் அளிக்கும் மதிப்பென்ன என்ப தை உணர்ந்தறிய நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

ஒரு முறை நான் ஒரு நற்செய்தி பெருவிழா கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அக்கூட்டத்திலே நற்செய்தி பகிர வந்தவர் சிறந்த பாடகர். அவர் புதிதாக ஒரு ஒலிநாடாவை வெளியிட்டு அதை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். அந்த குறிப்பிட்ட நாளில் வாங்குவோர்க்கு அதை பாதி விலையில் கொடுப்பதாக அறிவித்தார். செபம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்த வேளையில் பலர் பாதியில் எழுந்து எங்கோ சென்று வருவதை நான் கவனித்தேன். எங்கே செல்கிறார்கள் எனப் பார்க்கும் போது அவர்கள் அந்த ஒலிநாடாவை வாங்கச் செல்வதைக் கவனித்தேன். வழிபாட்டை விட குறைந்த விலையில் ஒலிநாடா வாங்குவது அவர்களுக்கு பெரியதாகத் தெரிந்தது.எனக்கு வருத்தம் கலந்த வியப்பு உண்டானது. கடவுளுக்கு எந்த இடம் என் வாழ்வில் என நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆம். நண்பர்களே ....இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் மோசே வழியாக வழங்கிய திருச்சட்டம் பற்றிய விவிலியப் பகுதியை நாம் தியானிக்கிறோம். கடவுள் மோசே வழியாக தன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இதன்மூலம் கடவுளுக்கு நம் வாழ்வில் முதன்மையான இடத்தை நாம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் உணர்கிறோம். கடவுளுக்கு முதன்மையான இடமும் பிறர் மேல் நீதியான அன்பும் நம் வாழ்வை நல்வழிப்படுத்தும் என்பதை வலியுறுத்தவே பத்து கட்டளைகளை கடவுளே நமக்குத் தந்தார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலில் வியாபாரம் செய்பவர்களை விரட்டிய நிகழ்வு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கடவுளுக்குரிய இடத்தையும் நேரத்தையும் அவருக்காக முழுமையாய் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் நாம் நம் வாழ்விலிருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்பதையும் இயேசு கற்பிக்கிறார்.

நம்மையே நாம் இறைசந்நிதியில் சோதித்தறிய முற்படுவோம். இறைவனுக்குரிய இடத்தை அவருக்கு கொடுத்தால் நம் வாழ்வு செழிப்புறும். மாறாக நம் பலவீனங்களுக்கும் உலக நாட்டங்களுக்கும் தந்தால் நமது வாழ்வு சந்தையாகிவிடும். இதை உணர்ந்து தேவையற்ற அனைத்தையும் விரட்டியடித்து ஆண்டவரை நம் அகத்தில் முதன்மையாய் அமர வைப்போம்.
இறைவேண்டல்

இறைவா! வேறு எதுவும் எங்களை ஆட்டிப்படைக்காமல் இருக்க எம் வாழ்வில் உள்ள தேவையற்ற அனைத்தையும் அகற்றியருளும். ஆமென்.

 
 
அருட்பணி மேரி ஜான் R . புனித அலோசியஸ் குரு மடம் கோட்டாறு
கடந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசு தன்னுடைய முதற்சீடர்களை அழைத்ததை யோவான் நற்செய்தியிலிருந்து வாசிக்கக் கேட்டோம். இந்த ஞாயிறு நற்செய்தியில் மாற்கு பதிவுசெய்துள்ளபடி அந்த நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அழைக்கப்பட்ட முறையும் அதன் பின்னணியும் இரண்டு நற்செய்தி ஏடுகளிலும் வேறுபட்டிருந்தாலும் அழைக்கப்பெற்ற சீடர்கள் யாரென்பதில் முரண்பாடு இல்லை. ஆம், கடந்த ஞாயிறு நற்செய்தியில் அந்திரேயாவும் பேதுருவும் அழைப்பு பெற்ற நிகழ்வு தரப்பட்டது. இந்த ஞாயிறு நற்செய்தியில் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து யாக்கோபும் யோவானும் அழைக்கப்பெற்ற நிகழ்வு இடம்பெறுகிறது. பின்னணி, அழைப்பு பெறும் முறை முதலியவை ஒவ்வொரு நற்செய்தியாளரின் இறையியல் பின்னணியைப் பொறுத்ததாகும்.

அதைவிட இந்த ஞாயிறு நற்செய்தி தரும் சில குறிப்புகள் நம் மனதை ஈர்ப்பவையாகும். அவற்றின் பொருளும் அது விடுக்கும் சவாலும் இன்றைய காலத்துக்கு மிகவும் பொருந்துபவை. குறிப்பாக, இயேசுவின் முழுநேரச் சீடராக அழைப்பு பெற்றுள்ள அருள்பணி நிலையினருக்கு இவை மிகவும் பொருளுள்ளவையும் சவால் விடுப்பவையுமாகும்.

இந்த நாளின் நற்செய்தியில் வரும் மூன்று வாக்கியங்கள் நம் சிந்தனைக்கு உகந்தவை. (1) " என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்" என்ற இயேசுவின் அழைப்புமொழி. (2) உடனே அவர்கள் (பேதுருவும் அந்திரேயாவும்) வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். (3) அவர்களும் (யாக்கோபும் யோவானும்) தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.

' மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? அவர்கள் அதுவரையில் செய்துவந்த தொழில் மீன் பிடிப்பது. அதன் நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரியும். தங்களுடைய உணவுத் தேவை, பிற தேவைகள் முதலியவற்றை நிறைவுசெய்வதற்காக அவர்கள் ஆற்றிவந்த தொழில் அது. ஆனால் மனிதரைப் பிடிப்பதன் நோக்கம்? மீன் பிடிப்பதன் நோக்கமும் மனிதரைப் பிடிப்பதன் நோக்கமும் ஒன்றாக இருக்க இயலாது. மனிதரைப் பிடித்து அடிமைகளாக விற்றுவந்த காலக்கட்டத்தில் இயேசுவின் சொற்கள் தவறாகக்கூட புரிந்துகொள்ள வாய்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் இயேசுவின் நோக்கம் முற்றிலும் மாறானது. அனைத்து வகைகளிலும் அடிமைநிலையில் இருந்த மனிதர்களுக்கு முழு விடுதலை அளிப்பதே இயேசுவைப் பொறுத்தவரையில் மனிதரைப் பிடிப்பதன் நோக்கமாகும். மனிதரைப் பிடிப்பது என்பது அன்பாலும் நல்வாக்காலும் நற்செயல்களாலும் மனிதரை ஈர்த்து அவர்களை இறையாட்சியின் பாதைக்கு இட்டுச் செல்வதாகும். அது முற்றிலும் அவர்களுடைய நலனுக்காகவேயன்றி அழைப்பவரின் நலனுக்காக அல்ல. இன்றைய நிலையோடு ஒப்பிடும்போது தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பணத்தாலும் பதவியாலும் சலுகைகளாலும் மக்களை ஈர்த்து அவர்களைத் திசைதிருப்பும் அருள்பணி நிலையினர் நம் மத்தியில் இருக்கலாம். இது இயேசுவின் நோக்கத்துக்கு முற்றிலும் முரணானது. இவ்வாறு ' பிடிக்கப்பட்ட' மனிதர்கள் ' பிடிக்கிறவர்களுக்கு' அடிமையாகும் அவலம்தான் ஏற்படும்.

இரண்டாவது, ' உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்' என்ற வாக்கியம். வலைகள் அவர்களின் தொழிற்கருவிகள். வாழ்வாதாரத்துக்குத் துணையாக இருந்தவை. அவற்றை விட்டுவிட்டுத் தலைசாய்க்கவும் இடமில்லாத ஒருவரைப் பின்பற்றினார்கள். இயேசுவின் சீடராக வாழவும் பணிசெய்யவும் அழைப்பு பெறுபவர்களுக்கு வாழ்வாதாரம் என்பது அவர்கள் பணியாற்றும் மக்களின் பராமரிப்பே. இதனை இயேசு பின்பு தம் சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது கற்றுக்கொடுத்து வலியுறுத்தினார். பணப்பை முதலான வாழ்வாதாரப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுத்திய நிகழ்வுகள் நற்செய்தி ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காலத்துக்கேற்ற மாற்றம் என்று சொல்லிக்கொண்டு தன் பெயரிலோ பினாமி பெயரிலோ பணம் சேர்த்து வைப்பது, நிலபுலங்கள் வாங்கிக் குவிப்பது, நிறுவனங்கள் ஏற்படுத்துவது, கல்வியை வணிகமாக்குவது முதலியவை இயேசுவின் நோக்கத்துக்கு முற்றிலும் முரண்பட்டவையாகும். திருஅவையின் பொருளாதாரத் தன்னிறைவு என்பது எல்லா மக்களுக்கும் நல்வாழ்வு கிடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியைத் தவிர வேறு நோக்கங்களுக்காக இருந்தால் அது சிலைவழிபாட்டுக்கு ஒத்ததாகவே இருக்கும். பணத்தாலும் செல்வத்தாலும் கடவுள் அப்புறப்படுத்தப்படுவார். வாழ்வாதாரமான தொழிலையும் தொழிற்கருவிகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்ற முதற்சீடர்கள் நமக்கு ஒரு சவாலாகவே திகழ்கிறார்கள்.

மூன்றாவது, யாக்போபும் யோவானும் தங்கள் தந்தையைக் கூலியாள்களோடு விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்ற நிகழ்வு. கூலியாள்கள் வைத்துத் தொழில் செய்யும் அளவுக்கு அவர்களிடம் வசதி வாய்ப்புகள் இருந்ததுபோல் தெரிகிறது. இயேசுவின் சீடருக்கும் அவர்களுடைய பெற்றோர், குடும்பத்தார் ஆகியோருக்கும் இடையில் உள்ள உறவு இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இதுவும் ஒரு சவாலான நிலையே. இன்றைய நிலையில் அருள்பணி நிலையினருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையிலுள்ள உறவு மிக நெருக்கமானதாகவே உள்ளது. பெரும்பாலான பெற்றோர் அதிகமாக அன்பு செய்யும் பிள்ளைகள் அவர்களின் அருள்பணி நிலையில் உள்ள மக்களாகவே இருப்பர். இது இயல்பானதே. திருமணமான மக்களுக்கு அன்பு காட்டவும் பராமரிக்கவும் அவர்களுடைய வாழ்க்கைத் துணைவரும் பிள்ளைகளும் இருப்பர். அருள்பணி நிலையில் உள்ளவர்களுக்கு அத்தகைய துணை இல்லாததால் பெற்றோர்களுடன் அவர்களுக்குள்ள உறவு சற்று உறுதியானதாகவே இருக்கும். பெற்றோரை விட்டுவிடுதல் என்பதன் பொருள் உறவு நிலையில் அல்ல, மாறாக, பணிநிலையில் என்றுதான் நான் கருதுகிறேன். ஆம், அருள்பணி நிலையில் உள்ளவர்களுடைய பணியின் இலக்கு மக்கள் பெற்றோரோ குடும்பத்தாரோ அல்ல, மாறாக, அவர்களிடம் ஒப்படைப்பட்ட பணித்தளங்களில் உள்ள மக்களே. தங்களுடைய உழைப்பின் பலனை அனுபவிக்க வேண்டியவர்கள் தன் பணித்தளத்தில் உள்ள மக்களே, குறிப்பாக, தேவைகளில் இருக்கும் மக்களே. இத்ததைய அர்ப்பண உணர்வுடன் பணியாற்றியுள்ள எத்தனையோ அருள்பணியாளர்களை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். இதுதான் சீடத்துவ நிலையின் உட்பொருள் என்று கருதுகிறேன்.

இயேசுவின் முழுநேரச் சீடர்களாகிய இறையாட்சியின் பணியாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டுதலாக இந்த ஞாயிறு நற்செய்தி அமைகிறது. இதனைக் கடைபிடிக்கும் சீடர்களையும் இதிலிருந்து முரண்பட்டு நிற்பவர்களையும் அடையாளம் காண்பதும் திறனாய்வு செய்வதும் இறைமக்களின் கடமை. அருள்பணியாளர்கள் என்பதால் மட்டும் அவர்கள் திறனாய்வுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். அவர்களின் பணிவிடையைப் பெறவேண்டிய இறைமக்களே அவர்களைத் திறனாய்வு செய்யும் உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளனர்.

இயேசு விரும்புகிறபடி, அவருக்கு ஏற்ற சீடர்களை உருவாக்குவது இறைமக்கள்தாம். தவறாக வழிநடத்தும் சீடர்களுக்கு அடிமையாகாமல், அவர்களின் தவறான விருப்பங்களுக்குத் துணைபோகாமல், நீதியின்பால் சார்புகொண்டு, விழிப்புணர்வோடு நிலைப்பாடு எடுக்கும் கடமை திருமுழுக்கின் வழியாக இயேசுவின் சீடராகிய அனைத்து இறைமக்களுக்கும் உள்ளது.

அர்ப்பணமுள்ள அருள்பணியாளரும் நீதியுணர்வும் விழிப்புணர்வும் கொண்ட இறைமக்களும் உள்ள சமூகம் இறையாட்சியின் பாதையில் அடியெடுத்து வைக்கும் என்பதை நினைவில் கொண்டிருப்போம்.

அனைவருக்கும் அன்பான ஞாயிறுதின வாழ்த்துகள்.


அருட்பணி மேரி ஜான் R . புனித அலோசியஸ் குரு மடம் கோட்டாறு