திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச்
சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின்
நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு
இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு
செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது
விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை
எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது. திருத்தூதர்
பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின்
ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து
கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் வரிதண்டுபவர் உவமைமூலம் இறைவன்
முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது
என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம்
அடித்துப் பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன்
தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு
ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவிச் செல்லும். இக்கருத்துகளை
மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே
இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன்
பங்கு கொள்வோம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. நீதியுள்ள நடுவராம் ஆண்டவர், அவர் தோன்றுவாரென
விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே, வெற்றியின்
மணிமுடியைத் தருவார் என்கிற பவுலடியாரின் நம்பிக்கை,
தாயாம் திரு அவையையும், அதன் தலைவராகத் திகழும்
திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார்,
துறவறத்தார் ஆகியோரையும், பொதுநிலையினராகிய எங்களையும்
உறுதிப்படுத்த, அந்த உறுதியுடனேயே, நாங்கள் அனைவரும்,
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக முன்னேறிச் சென்றிட,
அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. "ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச்
சார்பு என்பதே கிடையாது" என்கிறது இன்றைய முதல்
வாசகம். இறைவனிடம் உள்ள நீதியும்,
ஒருதலைச்சார்பின்மையும், ஏழைகள்பால் பரிவும்,
புலம்பெயர்ந்தார் மீது கரிசனையும், அனைவருக்குமான
நீதியும், இவ்வுலகினையும் எம்நாட்டினையும் ஆள்கிற
தலைவர்களிடமும், மக்கள் அனைவரிடமும் துலங்கிட
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. "தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை
ஊடுருவிச் செல்லும்" என்கிற சீராக் நூலின் ஞானமும்,
"இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார்" என்கிற திருப்பாடல் வரிகளும், உடைந்த
உள்ளத்தார், நைந்த நெஞ்சத்தார், வறுமையில் வாடுவோர்,
துயரில் தவிப்போர், கண்ணீரில் மிதப்போர் ஆகியோரைத்
தேற்றவும், அனைத்து துன்பங்களிலுமிருந்தும் அனைவரும்
விடுபட்டு வாழவும் வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" என்கிற
நற்செய்தி உவமையைப் புரிந்தவர்களாய், எங்களையே
"நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து
ஒதுக்கும்" பரிசேயத்தனத்தைத் துறந்து, கடவுளே,
பாவியாகிய என்மீது இரங்கியருளும் என மன்றாடுகிற
தாழ்ச்சிநிறை உள்ளத்தை, நீர் தாமே எங்களுக்குத் தந்திட
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், "நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன் விசுவாசத்தைக்
காத்துக்கொண்டேன்" எனப் பவுலடியாரைப் போலச் சொல்லத்
தகுந்த, நேரிய, நம்பிக்கை குன்றாத, பிரமாணிக்கம்
நிறைந்த வாழ்வையும், வாழ்கின்றபோது எங்களையே பலியாகப்
படைக்கிற தியாகத்தையும், வாழ்வின் இறுதிவரை நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபடுகிற நெஞ்சுரத்தையும் பெற்றிட
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
நாம் நாமாக...
ஒளியாம் ஆண்டவரின் ஒளிரும் சுடர்களாக மாற ஆவல் கொண்டு
ஆலயம் வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன்
வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தியின் கதைமாந்தர்கள்
மூலமாக ஆண்டவர் இயேசு மிக அருமையான ஒரு வாழ்வியல்
தத்துவத்தை நமக்கு எடுத்துரைக்கின்றார். ஒரு சிறு கதை
மூலமாக நாம் இந்த நற்செய்தியை நம் வாழ்வாக்க
முயல்வோம்.
ஒரு அழகான வயல். அறுவடைக்குத் தயாராக தன்னை
தயாரித்துக் கொண்டிருக்கும் வேளை. நெற்கதிர்கள் சில
கம்பீரமாக நிமிர்ந்து நின்று தங்களது அழகை ரசித்துக்
கொண்டிருந்தன. பல தங்களின் பாரம் தாளாமல் தலை
கவிழ்ந்து நின்றன. நிமிர்ந்து நின்றவைகள் தலை
கவிழ்ந்து இருந்த கதிர்களைப் பார்த்து ஏளனமாக
சிரிக்கத் தொடங்கின. தங்களின் அழகையும் வனப்பையும்
பார்த்து பார்த்து பூரிப்படைந்தன. இவைகளின்
ஏளனச்சிரிப்பைக் கண்டு வருத்தமுற்ற பிற கதிர்கள் தலை
கவிழ்ந்த வண்ணம் ஒன்றும் சொல்வதறியாது நின்றன. இதனைக்
கண்டு பெரிதும் எரிச்சலுற்ற காற்று தன்னுடைய வலிமையை
ஒன்றாக சேர்த்து வீசியது. அவ்வளவு தான் தலை கவிழ்ந்து
நின்ற கதிர்கள் தங்களது பணிவால் தாழ்ச்சியால் தங்களை
காத்துக் கொண்டன. ஆனால் தலை நிமிர்ந்து நின்ற கதிர்களோ
தங்களுக்குள் நெற்கதிர் இல்லாமையால் காற்றோடு காற்றாக
அடித்து செல்லப்பட்டன. தலை தாழ்த்திய கதிர்
வாழ்க்கையானது. தலை நிமிர்ந்து தற்பெருமை பேசிய கதிர்
வாழ்வை இழந்தது.
ஆம் அன்பு உள்ளங்களே இன்றைய நற்செய்தியில் நாம் காணும்
பரிசேயர் வரிதண்டுபவர் இவர்களின் செயல்களும் நாம்
கடவுள் முன் எப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்களாக
வாழவேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும்
என்பதையும் எடுத்துரைக்கின்றது.. இருவரும் ஆலயம்
நோக்கி செல்கின்றனர். செபிக்கின்றனர். ஆனால் திரும்பி
வரும்பொழுது யாருடைய செபம் கடவுளால்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது என்பதைப் பொறுத்தே செபத்தின்
தன்மை அமைகின்றது. இருவரும் பார்வை ஒப்பீடு செயல்பாடு
என்னும் மூன்று குணங்களின் அடிப்படையில் அவர்கள்
வேறுபடுகின்றனர்.
பார்வை: நாமும் பல நேரங்களில் கோவிலுக்கு செல்கின்றோம்
ஆனால் அவை நமக்காகவா? இல்லை நம்மை பிறர்
பார்க்கவேண்டும் என்பதற்காகவா? இன்று பெரும்பாலும்
கோவிலுக்கு வருவது என்பது ஆண்டவரை சந்திக்க என்ற
நிலைமை போய் உறவினர்களை சந்திக்க, ஆடை அணிகலங்களை அழகு
பார்க்க என்ற காலம் வந்துவிட்டது. பார்வையாலேயே பலரது
மனங்களை பாடாய்ப்படுத்தி விடுகின்றோம். என்ன புடவை
இது? இதைப் போய் கோவிலுக்கு கட்டிட்டு
வந்துருக்கீங்களே? வேற நல்ல உடை எதுவுமே இல்லையா?
என்பதில் சிந்திக்க ஆரம்பித்து நீ எல்லாம் கோவிலுக்கு
வரலைன்னு யார் கேட்டா பேசாம வீட்ல இருக்க
வேண்டியதுதான. என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிடும்.
இத்தகைய நமது எண்ணம் பார்வை மாற வேண்டும்.
ஒப்பீடு மனிதனின் மிக மோசமான வியாதி. தன்னை உலகில்
உள்ள எல்லாவற்றுடனும் ஒப்பிட்டு மகிழ்ச்சியடையும்
குணம். பிறரை தாழ்த்தி தன்னை உயர்த்தி உயர்வானவனாக
காட்டும் குணம். முள் தராசில் உயரத்துக்கு போகும்
பொருளுக்கு மதிப்பில்லை . மாறாக கணம் உள்ள தராசு
எப்போதும் தாழ்ந்தே இருக்கும் . தாழ்ச்சியில் அதன்
மதிப்பு உயரும். அதுவும் கடவுள் முன் நம்மை தாழ்த்தும்
போது அவர் நம்மை எதிர்பாராத விதத்தில் மிக உயரத்திற்கு
அழைத்துச்செல்வார். எனவே ஒப்பிடு செய்து பார்ப்பதை
நிறுத்திக் கொள்வோம்.
செயல்பாடுகள்: பரிசேயர் தனக்கு கீழ் நிலையில்
இருப்பவர்கள் போல் தன்னை வைக்காமல் இருப்பதற்காக
இறைவனுக்கு நன்றி சொல்கின்றார். வரி தண்டுபவர் தனது
பாவ நிலையை எண்ணி மனம் வருந்தி மன்னிப்பு
கேட்கின்றார். அதனால் கடவுளின் இரக்கத்தில் பங்கு
பெறுகின்றார். நாம் நமது செயல்களில் கவனத்தை
செலுத்துவோம். பிறரைப் போல் துன்பம் இல்லாமல் என்னை
மகிழ்வோடு வைத்திருப்பதற்கு நன்றி என்று சொல்லிப்
பழகுவோம். மாறாக பிறரது இயலாமை, நிலைமை ஆகியவற்றை
ஒப்பிட்டோ பழி சுமத்தியோ நம் செயல்பாட்டை நாம்
குறைத்துக் கொள்ள வேண்டாம்.
ஆக நாம் நாமாக இருப்போம். நமது பார்வை ஒப்பீடு
செயல்பாடுகள் முலமாக நாம் நாமாக இருக்க முயல்வோம்.
நமக்கு இறைவன் செய்த செயல்களை எண்ணி நன்றி கூறுவோம்.
கடவுள் முன் நம்மை தாழ்த்தி உயர்வு பெறுவோம் இறையாசீர்
என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும்
இருப்பதாக ஆமென்.
Sr. Merina OSM
அன்பிற்குரியவர்களே, பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு
உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
மனத்தாழ்ச்சியுடன் கூடிய ஜெபத்தை இறைவன் ஒருபோதும்
புறக்கணிப்பதில்லை. வளமையும் வாழ்வும் வலியோருக்கு, வறுமையும்
வருத்தமும் ஏழைக்கு. சுயநலமுடைய ஒரு சில மனிதர்களின் வஞ்சகமான
எண்ணங்கள் இது. ஆனால் அன்புருவான நம் வானகத் தந்தை இரக்கம்
நிறைந்தவர்; நீதி வழுவா நடுவர்; ஒருதலைச் சார்பு என்பது அவரிடம்
இல்லை. நல்லவனுக்கும் தீயோனுக்கும் சமமாக மழை பொழிபவர். நம்மை
பற்றிய அறிமுக உரையோ அடையாளச் சீட்டோ அவருக்கு தேவையில்லை. நம்
உள்ளங்களை ஆய்ந்து அறிபவர். அவர் சாயலில் நம்மைப் படைத்து அவரது
உயிர்மூச்சையும் தந்தவர்.
ஆனால் நாமோ இன்றையை நற்செய்தியில் வரும் பரிசேயனைப் போல் பல
நேரங்களிலும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம். கடவுளுக்கே தன்னை
அறிமுகப்படுத்தி அடுத்திருப்பவனை மட்டம் தட்டி, தாழ்ச்சி என்னும்
புண்ணியத்தை இழக்கின்றோம். கடவுளையே உதாசீனப்படுத்துகின்றோம்.
மடிந்திடாத நெல்மணியும் ஆணவம் கொண்ட நெஞ்சமும் நம் வாழ்வை
உயர்த்துவதில்லை. நல்ல பயிரை விட தலைதூக்கி நிற்கும் களைகள்
அக்கினியில் தான் அடங்கிவிடும். நமது தாழ்ச்சியான ஜெபங்களாலும்
வாழ்க்கை முறைகளாலும் அவரை மகிமைப்படுத்துவோம். ஏனெனில் தங்களை
தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும் என்று
அறிவித்தவர் நம் இறைவன்; என்றும் வாக்கு மாறாதவர்.
மனத்தாழ்ச்சியுடன் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம். நிச்சயம் நம்
வாழ்வை உயர்த்துவார். இறை வார்த்தைகளுக்குச் சான்று பகர்ந்து
வாழ்ந்து காட்டுவோம்.
முதல் வாசக முன்னுரை:
சீராக்கின் ஞானம் 35: 12-14, 16-18
சீராக்கின் ஞான நூலின் கருவூலங்களில் அறிவார்ந்த பொன் மொழிகள்
கொட்டிக் கிடக்கின்றன. நாம் கடவுளுக்கு எவ்வாறு ஊழியம் செய்ய
வேண்டும், நம் வேண்டுதல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று
சீராக்கின் ஞானம் நமக்கு கற்பிக்கின்றது. தாழ்ச்சியுடன்
மன்றாடுபவரின் வேண்டுதல்களை கடவுள் கேட்கின்றார். ஆள் பார்த்து
செயல்படாதவர் நம் இறைவன். தீங்கிழைக்கப்பட்டோரையும்,
கைம்பெண்களையும், ஆதரவற்றவர்களையும் நீதிமான்களையும் காக்கும்
இறைவனின் அன்பு மொழிகளுக்கு கவனமுடன் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை: 2 திமொத்தேயு 4: 6-8, 16-18
நல்லதொரு போராட்டத்தையும் தன் ஓட்டத்தையும் முடித்து விட்டு, இயேசு
கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையாலும் அன்பாலும்
விசுவாசத்தில் தளராமல் வாழ்ந்து காட்டி வெற்றி வாகை சூடிய புனித
பவுலடியாரின் வார்த்தைகள் இரண்டாம் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. நீதி
தவறா அந்த நடுவருக்காக காத்திருக்கும் நாம் பவுலடியாரின்
அறிவுரைகளை ஏற்று பயன் பெறுவோம்.
மன்றாட்டுக்கள்:
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. நீதியின் அரசரே எம் இறைவா!
எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள்,
துறவியர்கள் சிறப்பாக எம் பங்குத்தந்தை என அனைவரையும் உம் பாதம்
சமர்ப்பிக்கின்றோம். இவர்கள் தங்களது பணி வாழ்வில் சந்திக்கின்ற
சவால்களை வெற்றி கொண்டு, நல்ல உடல், உள்ள நலன்களோடு வாழ வரம் தர
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நீதியின் அரசே எம் இறைவா!
எங்களை ஆளும் ஆட்சியாளர்கள் ஏழை எளியோரின் குரலையும்
கேட்பவர்களாகவும், ஒருதலைப்பட்சமாக செயல்படாதவர்களாகவும், நாட்டு
மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்களாகவும் வாழ வரமருள வேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. மனத்தாழ்ச்சியின் உருவமே எம் இறைவா!
எங்களது ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள்
நாங்கள் மட்டுமே என எண்ணிக் கொண்டு பிறரை மதிக்காமல்
உதாசீனப்படுத்திய தருணங்களுக்காக உம்மிடம் மன்னிப்பு
வேண்டுகின்றோம். அன்பு, பணிவு முதலிய பண்புகளை இழக்காமல்,
அடுத்தவர்களிலும் உமது சாயலைக் கண்டு வாழும் மனப்பக்குவத்தை எமக்கு
தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நன்மைகளால் எம்மை நிரப்புகின்றவரே எம் இறைவா!
எங்கள் வேண்டுதல்கள் யாவற்றையும் புறக்கணியாமல் கேட்பவரே, எங்கள்
பங்கில் வரும் ஏழை எளிய மக்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் அனைவரும்
உமது அருள் ஆற்றலால் உதவிகள் பெற்றிடவும், எமது பணியாளர் மற்றும்
பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களும் எல்லா வளங்களும் பெற்று
நலமோடு வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
பிரியமானவர்களே, இன்று பொதுக்காலம் 30ம் ஞாயிறு வழிபாட்டை
சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில்
அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்செய்தியில், பரிசேயன், "நான் இந்த வரிதண்டுபவரைப்போல்
இல்லாதது குறித்து உமக்கு நன்றி கூறுகிறேன்"என்று கூறுவதன்
வழியாக, ஆயக்காரனை தவறான, கீழ்நிலையிலுள்ள ஒரு நபராக அவரை
தீர்ப்பிடுகின்றார். இறைவன் கவனம் ஆயக்காரன் மீது செல்லாமல் தம்
பக்கம் திசை திருப்பி இறைவனுக்கே கடிவாளமிட நினைத்து, தன்னை இறைவன்
முன்னிலையில் நேர்மையாளராக காட்டுகின்றார்.
ஆனால், "நாம் ஒவ்வொருவரும் நம்மைக் குறித்தே கணக்குக் கொடுக்க
வேண்டும்"என்ற இறைவார்த்தைக்கேற்ப, நாம் நம் செயல்களை, தவறுகளை,
பாவங்களை மட்டுமே உள்ளத்தில் ஆய்ந்தறிய வேண்டுமே ஒழிய, பிறரைத்
தவறாக தீர்ப்பிடுதலாகாது. மனிதன் பாதி, மிருகம் பாதியாக வாழும்
நாம், நம் தவற்றைக் களைந்தெறியாமல், அடுத்தவர்களை தீர்ப்பிட்டுக்
கொண்டிருக்கின்றோம். "பிறருக்கு எதிராக தீர்ப்பளிக்கும்போது
நீங்கள், உங்களுக்கே தண்டனைத் தீர்ப்பை அளிக்கிறீர்கள்"என்பதை
உள்ளத்தில் உள்வாங்கியவர்களாக நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து,
அதில் கவனமுடன் வாழ்ந்திட முன்வர வேண்டும்.
தொடக்கநூலில் ஆதாம், ஏவாள் இருவருமே தங்கள் தவற்றினை, ஏற்றுக்
கொள்ளாமல், அடுத்தவர்மீது பழியைச் சுமத்துகின்றனர். தங்கள்
தவற்றினை தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள முன்வர அவர்கள் மனம் மறுத்து
விட்டது. ஆனால், இன்றைய நற்செய்தியில், ஆயக்காரன் தன்னை இறைவன்
முன்பாக தாழ்த்திக் கொண்டதால், இறைவனுக்கு ஏற்புடையவனாக வீடு
திரும்பினான். ஆம், தன்னை தாழ்த்துவோரின் வேண்டுதல்கள் முகில்களை
ஊடுருவிச் செல்லும்"என இறைவார்த்தை மிகத் தெளிவாக சீராக்கின் ஞான
நூலில் கூறப்பட்டுள்ளது.
தாழ்ச்சி நிறைந்த செபமே இறைவனால் ஏற்றுகொள்ளப்படும். "தமக்குத்
தாமே நற்சான்று கொடுப்பவர் அல்ல, மாறாக, இறைவனிடம் நற்சான்று
பெற்றவரே ஏற்புடையவர்"என்று புனித பவுல் கூறுவது போல, நாமும்
நம்மைக் குறித்து, உயர்வு மனப்பான்மை கொள்ளாமல், பெருமை
பாராட்டாமல், நமக்கு நாமே நற்சான்று கொடுக்காமல், நம்மைக் குறித்து
கணக்கு கொடுக்கக் கூடிய மாந்தர்களாக, உள்ளத்தில் தாழ்ச்சி
நிறைந்தவர்களாக இறைவனிடம் நம்மை முழுமையாக இத்திருப்பலியில்
அர்ப்பணிப்போம்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்"என்ற ஆண்டவரே,
எங்கள் வாயிலிருந்து வரும் சொற்கள், பிறரை ஏளனம் செய்வதாக,
அவமானப்படுத்துவதாக, இல்லாதது, பொல்லாதது எல்லாம் கூறுவதாகவே
இருக்கின்றன. அதற்காக இவ்வேளையில் மன்னிப்பு கேட்கின்றோம் தெய்வமே,
இனியும் நாங்கள் இத்தவற்றினைச் செய்யாமல், எங்கள் வார்த்தைகள்
பிறருக்கு வாழ்வளிக்கக் கூடிய விதத்தில், நிம்மதியளிக்கும்
விதத்தில், ஊக்கம் தரும் வகையில் அமைந்திட அருள் புரிந்திட
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. "எல்லாரும் ஒன்றாயிருப்பார்களாக"என்ற ஆண்டவரே,
தாயாம் திருச்சபையை விலகி பிற சபைகளுக்குச் செல்லும் மாந்தர்கள்
உண்மைத் தெய்வம் நீரே, நற்கருணையில் என்றும் பிரசன்னமாகி
எங்களுக்கும் அருமருந்தாக இருக்கின்றீர் என்பதை அவர்கள் உணர்ந்து,
மீண்டுமாக நம் திருச்சபையில் இணைந்திடவும், சாதி, மத, இனவெறியால்
சிதறுண்டு கிடக்கும் மாந்தர்களும் நல்ல மாற்றம் பெறவும், இறைவா,
உம்மை மன்றாடுகின்றோம்.
3. "நாளைக்காக கவலைப்படாதீர்கள்"என்ற ஆண்டவரே,
எங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ, எங்கள் பிள்ளைகள் எப்படி
வாழ்வார்களோ என்ற கவலை இன்று ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைத்துக்
கொண்டிருக்கின்றது. அதனால், இன்று ஒவ்வொருவரும் நிம்மதியிழந்து,
தங்கள் தூக்கத்தையிழந்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். தங்கள்
உடல்நலனை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தவறான, குறுக்கு
வழிகளை பின்பற்றுகின்றனர். இதையெல்லாம் மாற்றி, நீர் சொன்னதுபோல,
"அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்"என்ற மனநிலையைப்
பெற்று, எங்கள் வாழ்வில் நிம்மதியுடன் வாழ, வரமருள வேண்டுமென்று,
இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
4. "நீங்கள் உலகின் ஒளி"என்ற ஆண்டவரே,
எங்கள் வாழ்வில் பொறாமை, பேராசை, கொலை, களவு, செருக்கு, வஞ்சகம்,
விபச்சாரம் போன்ற இருளுக்குரிய செயல்களில் உழன்று
கொண்டிருக்கின்றோம். இத்தகைய தீச்செயல்களைக் களைந்து, ஒளியின்
ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து, கிறிஸ்தவர்கள் என்ற பெயர்
தாங்கிய நாங்கள், அதை வாழ்ந்து காட்டி, அர்த்தமுள்ளதாக்கிட,
உலகிற்க ஒளியாக வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை
மன்றாடுகின்றோம்.
5. "என்னை விட்டுப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய இயலாது"என்ற
ஆண்டவரே.
எங்கள் வாழ்வில் வரும் சோதனைகள், துன்பங்கள் வரும்போது எங்கள்
விசுவாசத்தை இழந்து, உம்மை விட்டு விலகிச் செல்கின்றோம். குறி
கேட்பது, வேற்றுத் தெய்வங்களை தேடிச் செல்வது என உண்மைத்
தெய்வமாகிய விட்டுத் தவறிச் சென்றிருக்கின்றோம். ஆனால் அவையெல்லாம்
ஒன்றும் செய்ய இயலாதவை என்பதை உணர்ந்து, எங்கள் ஆணவம்,
அகந்தையிலிருந்து விடுபட்டு, உம்மால் மட்டுமே எல்லாம் இயலும்
என்பதை உணர்ந்து, உம்மிடமே எங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும்
ஒப்படைத்து வாழ்ந்திடக் கூடிய, உறுதியான உள்ளத்தைத் தந்தருள
வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலம் ஒன்றில், ஓர் இளம்
அருள்பணியாளர், திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
பீடத்திற்கருகே, பளிங்கினால் செய்யப்பட்ட அன்னை மரியாவின்
உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. வயதான ஒரு பெண், அந்த
உருவச் சிலைக்கு முன், அன்னையின் அழகிய முகத்தை உற்று
நோக்கியவாறு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நாளும், அன்னையின்
உருவத்திற்கு முன், அந்தப் பெண், இவ்வாறு
அமர்ந்திருந்ததைக் கண்ட இளம் அருள்பணியாளர்,
அத்திருத்தலத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த வயதான
அருள்பணியாளரிடம் சென்று, அந்தப் பெண்ணின் பக்தியைப் பற்றி
பாராட்டிப் பேசினார்.
அவர் கூறியதைக் கேட்ட அந்த வயதான அருள்பணியாளர், ஒரு
புன்சிரிப்புடன், "சாமி, நீங்கள் இப்போது காண்பதை வைத்து
ஏமாறவேண்டாம். பல ஆண்டுகளுக்கு முன், இந்த ஊரைச் சேர்ந்த
சிற்பி ஒருவர், அன்னை மரியாவின் சிலையைச் செதுக்க, ஓர்
அழகிய இளம்பெண்ணை 'மாடலாக'ப் பயன்படுத்தினார். அந்த
இளம்பெண்தான் நீங்கள் இப்போது காணும் அந்த வயதானப்
பெண்மணி. அவர் ஒவ்வொருநாளும், அன்னையின் திரு உருவத்திற்கு
முன் அமர்ந்திருப்பது, பக்தியால் அல்ல. மாறாக, அவர், தன்
இளமையையும், அழகையும் ஆராதிக்கவே அங்கு அமர்ந்துள்ளார்"
என்று கூறினார்.
புனிதம் நிறைந்த ஆலயத்தில், இறைவனுக்கு முன், அன்னை
மரியாவுக்கு முன், புனிதர்களுக்கு முன், ஒருவர் தன்னையே
ஆராதிக்க முடியுமா? முடியும் என்று இயேசு, ஓர் உவமை வழியே
கூறியுள்ளார். தன் நேரிய, புண்ணியம் மிகுந்த வாழ்வை
இறைவனுக்கு முன் பறைசாற்ற கோவிலுக்குச் சென்ற ஒரு
பரிசேயரை, இயேசு, இன்றைய நற்செய்தியில், நமக்கு அறிமுகம்
செய்து வைக்கிறார்.
லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இரு
உவமைகள், சென்ற ஞாயிறும், இந்த ஞாயிறும் நமக்கு நற்செய்தி
வாசகங்களாக அமைந்துள்ளன. "இருவர் இறைவனிடம் வேண்டக்
கோவிலுக்குச் சென்றனர்" என்று, இன்றைய உவமையை, இயேசு
ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில், வேண்டுதல் என்ற
வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை, செபிப்பது பற்றிய ஒரு
பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால், தாழ்ச்சி என்ற
உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே, இயேசு, இந்த உவமைச்
சொன்னார் என்பதை, இவ்வுவமையின் அறிமுக வரிகள் நமக்குச்
சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை
இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச்
சொன்னார் (லூக்கா 18: 9) என்று நற்செய்தியாளர் லூக்கா
இவ்வுவமையை அறிமுகம் செய்துள்ளார்.
சென்ற ஞாயிறன்று நாம் சிந்தித்த 'நேர்மையற்ற நடுவரும்
கைம்பெண்ணும்' என்ற உவமையை இயேசு சொன்னதற்கான காரணத்தை,
நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு கூறியிருந்தார்: "அவர்கள்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும்
என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" (லூக்கா 18: 1).
அடுத்தடுத்து சொல்லப்பட்டுள்ள இவ்விரு உவமைகளில், இயேசு
பயன்படுத்தியிருக்கும் கதைக்களம், நம் கவனத்தை ஈர்க்கிறது.
மனிதக் கண்ணோட்டத்தின்படி, மனந்தளராமல் செபிக்கவேண்டும்
என்ற கருத்தைச் சொல்ல, கோவில் பொருத்தமானதொரு கதைக்களமாகத்
தெரிகிறது. ஆனால், இயேசு கோவிலைப் பயன்படுத்தவில்லை.
தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், கைம்பெண்
ஒருவர், நேர்மையற்ற நடுவரை, எல்லா இடங்களிலும் தொடர்ந்தார்
என்பதை, இயேசு இவ்வுவமையில் மறைமுகமாகக் கூறியுள்ளார்.
இந்தத் தொடர்முயற்சியின்போது, இக்கைம்பெண், கட்டாயம்
இறைவனிடமும் தன் விண்ணப்பத்தை எழுப்பியபடியே
சென்றிருப்பார். இந்தக் கோணத்தில் சிந்திக்கும்போது,
இடைவிடாமல் செபிக்கவேண்டும் என்ற பாடத்தை மட்டும் அல்ல,
கூடுதலாக ஒரு பாடத்தையும் இயேசு சொல்லித்தந்தார் என்பதை
உணரலாம். அதாவது, வீதியோரம், நீதிமன்றம், இறை
நம்பிக்கையற்ற ஒருவரின் வீட்டு வாசல் என்று,
எவ்விடமானாலும், அங்கெல்லாம் இறைவனிடம் செபிக்கமுடியும்
என்பதை, சென்ற வார உவமையின் வழியாகச் இயேசு சொல்லித்
தந்துள்ளதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த வார உவமையில், தற்பெருமையுடன் வாழ்வது தவறு என்ற
கருத்தை வலியுறுத்த, இயேசு, கோவிலை, தன் கதைக்களமாகத்
தேர்ந்துள்ளார். தற்பெருமை தாராளமாக வலம்வரும் அறிஞர்கள்
அவை, அரண்மனை, அரசியல் மேடை, விளையாட்டுத் திடல் போன்ற
கதைக்களங்களைப் பயன்படுத்தாமல், ஒரு கோவிலை தன்
கதைக்களமாகத் தேர்ந்துள்ளார் இயேசு.
உள்ளம் என்ற கோவிலில் இறைவன் குடியிருந்தால், நாம்
செல்லும் இடமெல்லாம் புனித இடங்களாகும்; அங்கெல்லாம்
நம்மால் செபிக்கமுடியும். அதேநேரம், புனித இடம் என்று
கருதப்படும் கோவிலே என்றாலும், அங்கு செல்லும் நம்
உள்ளத்தில், 'நான்' என்ற அகந்தை நிறைந்திருந்தால்,
கோவிலும் சுயவிளம்பர அரங்கமாக மாறும். அங்கு நம்மை நாமே
ஆராதனை செய்துவிட்டுத் திரும்புவோம் என்ற எச்சரிக்கை, இந்த
உவமையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர்
பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற
வார்த்தைகளுடன், இயேசு, இந்த உவமையைத் துவக்கியதும், சூழ
இருந்த மக்கள், கதையின் முடிவை, ஏற்கனவே எழுதி
முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்;
வரிதண்டுபவர், இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார்
என்று, மக்கள் முடிவு கட்டியிருப்பர். பரிசேயருடன்
ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில் பல படிகள்
தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்காக தன் சொந்த மக்களிடமே வரி
வசூல்செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று,
இறைப்பற்று என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே,
இறைவன் முன்னிலையில், பரிசேயருக்கு ஆசீரும்,
வரிதண்டுபவருக்கு சாபமும் கிடைத்திருக்கும் என்ற
மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களின்
எண்ணங்களை, தலைகீழாகப் புரட்டிப்போட்டார், இயேசு.
இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம், இவ்விருவரும்
தங்களைப்பற்றி கொண்டிருந்த தன்னறிவு; அதன் விளைவாக,
அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு. இவ்விருவருமே தங்களைப்பற்றி
இறைவனிடம் பேசுகின்றனர். பரிசேயரும், வரிதண்டுபவரும் கூறிய
வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் வெளிச்சத்திற்கு
வருகின்றன: பரிசேயர் சொன்னது, 27 வார்த்தைகள்.
வரிதண்டுபவர் சொன்னதோ 4 வார்த்தைகள். இருவரும் 'கடவுளே'
என்ற வார்த்தையுடன் ஆரம்பித்தனர். இந்த முதல் வார்த்தையைக்
கேட்டதும், இதைத் தொடரும் வார்த்தைகள், செபமாக
இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால்,
பரிசேயர் பயன்படுத்திய ஏனைய வார்த்தைகளில், அவர் சொன்னது
சுய விளம்பரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'கடவுளே' என்ற
அந்த முதல் வார்த்தைக்குப் பிறகு, பரிசேயர் சொன்ன மீதி 26
வார்த்தைகளில், தன்னை, பிறரோடு ஒப்பிட்டுப் பேசிய
வார்த்தைகளே (16) அதிகம். வரிதண்டுபவரோ தன்னை யாரோடும்
ஒப்பிடாமல், 'தான் ஒரு பாவி' என்பதை மட்டும் நான்கு
வார்த்தைகளில் கூறியுள்ளார்.
பரிசேயரின் கூற்று, இறைவனின் கவனத்தை வலுக்கட்டாயமாகத்
தன்மீது திருப்ப அவர் மேற்கொண்ட முயற்சி. தன்னுடன்
சேர்ந்து, அந்தக் கோவிலுக்கு வந்துவிட்ட வரிதண்டுபவரின்
மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற பயத்தில்,
அவரைவிட, தான், கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத் தகுதி
உடையவர் என்பதை, அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பரிசேயர்.
சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே
இருக்கவேண்டும் என்ற ஆவலில், பரிசேயர், கடவுளுக்கே
கடிவாளம் மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம்
பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான்,
இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப்
புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய அம்சங்கள்,
உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில்,
அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது, இன்னும்
உயர்ந்ததொரு மனநிலை. எனவே இயேசு, வரிதண்டுபவரை உயர்த்தி,
பரிசேயரை தாழ்த்தி, தன் உவமையை நிறைவு செய்தார்:
"பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு
திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர்
தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்
பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 18: 14)
தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது
தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு
எளிதல்ல. "தான் தாழ்ச்சி உள்ளவர் என்று ஒருவர் நினைக்கும்
அந்த நொடியில், இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான்
தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற
தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு
நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று
இருக்கமுடியாது." என்று, ஓர் அறிஞர், தன் பெயரைக்
குறிப்பிடாமல் (Anonymous) கூறியுள்ளார்.
பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை
ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப்
பணியாற்றியவர் C.S.Lewis. இவர், Mere Christianity
குறைந்த அளவு கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு
வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் -
என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக்
கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை
ஈர்க்கின்றன:
"எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில் வாழும்
அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது. மற்றவர்களிடம்
இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே குறை நம்மிடம்
உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதுதான் அகந்தை"
என்று அவர் தன் கட்டுரையை ஆரம்பித்துள்ளார். பின்னர்,
அகந்தையின் ஒரு முக்கியப் பண்பான ஒப்புமைப்படுத்துதல்
என்பதைக் குறித்து அழகாக விவரிக்கிறார்.
"ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால் வாழமுடியாது.
என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட, என்னிடம்
உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற கோணத்தில்
நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என் திறமை, அழகு,
அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று ஒருவர்
சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு...
மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக,
அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது,
அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை
உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது.
ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு
இடமில்லை."
இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு
ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார்.
இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில்
சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது.
அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.
இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு,
தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த
புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர்.
"தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம்,
ஆதாரம்" என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம்
அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று
ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து
குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக்
காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த
திருத்தூதர் பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் பணிவைப்
பற்றிய சிந்தனைகளுக்கு முத்தாய்ப்பாக அமையட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10
கிறிஸ்து என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்:
வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து
பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள்
தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும்
இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை
முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான்
வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
இஞ்ஞாயிறை மறைபரப்பு ஞாயிறென்று கொண்டாட திருச்சபை நம்மை
அழைக்கிறது. Mission Sunday என்ற ஆங்கிலச் சொற்றொடரை
அப்படியே மொழி பெயர்த்தால், 'அனுப்பப்படும் ஞாயிறு' என்று
சொல்லலாம். அனுப்பப்படுதல் என்பது அழகான ஓர் எண்ணம்.
"உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து
வரும் பரிசு. இந்தப் பரிசுப் பொருள் ஒவ்வொன்றும் ஒரு
செய்தியுடன் இவ்வுலகை அடைகிறது. 'இறைவன் இந்த உலகைக்
குறித்து இன்னும் களைப்படையவில்லை' என்பதே அச்செய்தி."
இதைச் சொன்னவர் இந்திய மகாக் கவி இரவீந்திரநாத் தாகூர்.
நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம். ஒரு
பரிசாக அனுப்பப்பட்டுள்ளோம். உலக வரலாற்றில், மனித
வரலாற்றில் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஓர் இடம்
உண்டு. நாம் பிறந்ததற்குத் தனிப்பட்ட ஒரு காரணம் உண்டு.
நமக்கேனக் குறிக்கப்பட்டுள்ள, நிர்ணயிக்கப்பட்டுள்ள அந்தக்
குறிக்கோளை வேறு ஒருவராலும் நிறைவேற்ற முடியாது.
பணிவைப் பற்றி சிந்திக்கும் இந்த ஞாயிறன்று, கத்தோலிக்கத்
திருஅவை மறைபரப்பு ஞாயிறு அல்லது, அனுப்பப்படும் ஞாயிறைக்
கொண்டாடுவது, பொருத்தமாக உள்ளது. உண்மை இறைவனை அறிவிக்க பல
கோடி உன்னத உள்ளங்கள் உலகெங்கும் சென்றனர் என்பதை, பல
நூற்றாண்டுகளாக, மறைபரப்பு ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி
வந்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின்
நற்செய்தியை பணிவான உள்ளத்துடன் சுமந்து சென்று,
அனைவரோடும் பகிர்ந்துகொள்ள உலகெங்கும் செல்வதற்கு,
குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்கத்
தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இறைவன் வரம்
தரவேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
அகஒளி
இன்றைய நாளில் நாம் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகிறோம்.
'தீபம்' ('விளக்கு') மற்றும் 'ஆவளி' ('வரிசை') -
'விளக்குகளின் வரிசையே' தீபாவளி. பளபளக்கும் ஆடை, கண்களை
வியக்கவைக்கும் இனிப்புக்களின் நிறங்கும், கண்கள் கூசும்
அளவிற்கு பட்டாசு வெளிச்சம் என இன்று நம்மைச் சுற்றி
எல்லாமே பளபளப்பாய், வெளிச்சமாய் இருக்கின்றன. இந்தப்
புறஒளியில் அகஒளியைத் தேட அல்லது புறத்திலிருந்து
அகத்திற்கு நம்மைத் திருப்ப அழைக்கின்றது இன்றைய இறைவாக்கு
வழிபாடு.
நம்முடைய பிறந்தநாள் அல்லது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு
நமக்கு நிறைய பரிசுப்பொருள்கள் வருகின்றன என
வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பரிசுப்பொருளும் மிகவும்
நேர்த்தியான தாளால் பொதியப்பட்டுள்ளது.நேர்த்தியான தாளில்
அல்லது தாளால் பொதியப்பட்ட பரிசுப்பொருள் நம் கண்களுக்கு
நேரிடையாகத் தெரிகிறது. ஆனால், அதைத் திறந்து பார்த்தால்
அதற்கு உள்ளே வேறு ஒரு பொருள் இருக்கிறது. அப்போதுதான்
நமக்கு உரைக்கிறது. முதலில் நம் கண்களுக்குத் தெரிந்த
பொருளும் இப்போது தெரிகின்ற பொருளும் ஒன்றல்ல என்று.
மேலும், இவை இரண்டையும் விட சில நேரங்களில் இந்தப்
பரிசுப்பொருளைக் கொடுத்தவரால் பரிசு இன்னும் அதிக மதிப்பு
பெறுகிறது. ஆக, பளபளப்புத் தாளில் பொதியப்பட்ட பொருள்,
உள்ளே இருக்கும் பொருள், கொடுத்தவர் என்று பரிசுப்பொருளில்
மூன்று விடயங்கள் அடங்கியிருக்கின்றன. இப்படித்தான்
எல்லாப் பரிசுப்பொருள்களும்.
இப்போது நம்மையே பரிசுப்பொருளுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
நாம் எல்லாரும் பரிசுப்பொருள்கள். நம் எல்லாரையும் ஒரு
காகிதம் மூடியிருக்கிறது. நம்முடைய நிறம், உயரம், அகலம்,
தடிமன், பேசும் மொழி, குடும்ப பின்புலம், படிப்பு, வேலை
போன்ற அனைத்தும் நம்மை மூடியிருக்கும் காகிதங்கள். இவை
எல்லாவற்றையும் கடந்து ஒரு நபர் நமக்குள் இருக்கிறார்.
அதுதான் பரிசுப்பொருள். மேலும், இந்தப் பரிசுப்பொருளை
உலகிற்கு வழங்கிய ஒருவர் இருக்கிறார். அவர்தான் கடவுள்.
இப்போது பிரச்சினை என்னவென்றால், பரிசுப்பொருள்கள்
அமைதியாக இருக்க, பல நேரங்களில் அட்டைப்பெட்டிகள்
மோதிக்கொள்கின்றன. 'நான் இப்படி!' 'நீ அப்படி!' 'நான்தான்
உன்னைவிட சிறந்தவன்!' 'நீ எனக்கு அடிமை!' 'நான் அதிகம்
வைத்திருக்கிறேன்!' 'நீ ஒன்றுமில்லாதவன்' என சத்தம்போட்டு
சண்டை போடுகின்றன அட்டைப் பெட்டிகள். ஆனால், உள்ளே
இருக்கும் பரிசுப்பொருள்கள் யாருடனும் மோதிக்கொள்வதில்லை.
அட்டைப் பெட்டிகளிலிருந்து நாம் பரிசுப்பொருளுக்குக்
கடந்து செல்ல நமக்குத் தேவை அகஒளி.
இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 35:12-14,16-18)
சீராக்கின் ஞானநூல் என்னும் இணைத்திருமுறை நூலிலிருந்து
எடுக்கப்பட்டுள்ளது. 'ஆண்டவருடைய திருச்சட்டத்திற்குக்
கீழ்ப்படிபவர் வளமும் ஆசீரும் பெறுவார்' என்பது சீராக்கின்
ஞானநூல் ஆசிரியரின் பொதுவான போதனையாக இருக்கிறது. இதைத்
தலைகீழாகப் புரிந்துகொண்ட சிலர், 'ஒருவர் ஏழ்மையிலும்
நோயிலும் வாடுகிறார் என்றால் அவர் ஆண்டவருடைய
திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர், பாவி,
சபிக்கப்பட்டவர்' என்று எண்ணத் தொடங்கினர். மேலும்,
'செல்வரும் நலமுடன் வாழ்வோரும் ஆண்டவரின்
திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற நீதிமான்கள்' என்ற
எண்ணமும் வளர்ந்தது. இப்படிப்பட்ட தவறான எண்ணங்களையும்,
எளிமையாக்கப்பட்ட புரிதல்களையும் களைய முயல்கின்றார்
ஆசிரியர்.
ஏழைகளையும் எளியவரையும் ஒடுக்கும் ஒருவர் கொடுக்கும் 'அநீத
பலியின்' பின்புலத்தில் அமைகிறது இன்றைய முதல் வாசகம்.
ஒருவர் எளியவரை ஒடுக்கி அந்தப் பணத்தைக் கொண்டு கொடுக்கும்
பணம் அநீதியானது என்றும், பணத்திற்கும் நேர்மையாளராய்
இருப்பதற்கும் தொடர்பில்லை என்றும், எளியவர்கள்,
கைவிடப்பட்டோர், மற்றும் கைம்பெண்களின் குரலையும் ஆண்டவர்
கேட்பார் என்றும் சொல்லி ஒரு மாற்றுப் புரிதலை
விதைக்கின்றார் பென் சீரா. ஆண்டவரின் விருப்பத்திற்கு
ஏற்றவாறு பணி செய்வோர் - அவர் ஏழை என்றாலும் செல்வர்
என்றாலும் - ஏற்றுக்கொள்ளப்படுவர் என்றும் சொல்கின்றார்.
ஆக, ஒருவர் தன்னுடைய செல்வத்தினாலும், வளத்தினாலும் அல்ல,
மாறாக, ஆண்டவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு
பணிசெய்யும்போதே ஆண்டவருக்கு ஏற்புடையவராகிறார் என்று
அறிதலே அகஒளி. அல்லது புறஒளி பெற்றிருப்பவர் ஒருவரின்
பொருளாதார நிலையை வைத்து மதிப்பை நிர்ணயிப்பார். ஆனால்,
அகஒளி பெற்றவரோ, ஒருவர் தன்னுடைய இறைவேண்டலாலும், இறைவனின்
இரக்கத்தினாலும் மதிப்பு பெறவும் நேர்மையாளர் எனக்
கருதப்படவும் இயலும் என்று உணர்வார்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 4:6-8,16-18) இரண்டு
பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் (4:6-8),
தன்னுடைய இறப்புக்கு முன் தன்னுடைய வாழ்வைத் திருப்பிப்
பார்க்கின்ற பவுல் (அல்லது ஆசிரியர்) தன்னுடைய வாழ்வுப்
பயணத்தையும், திருத்தூதுப் பணியையும் மற்போருக்கும்
ஓட்டப்பந்தயத்திற்கும் ஒப்பிடுகின்றார்: 'நான் நல்லதொரு
போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை
முடித்துவிட்டேன்.' இந்த இரண்டிலும் - வாழ்விலும்
பணியிலும் - 'விசுவாசத்தைக் காத்துக்கொள்கின்றார். நேரிய
வாழ்வுக்கான வெற்றிவாகைக்காகக் காத்திருக்கின்றார்.' அதை
இறுதிநாளில் ஆண்டவர் தனக்குத் தருவார் என்று நம்புகிறார்
பவுல். இரண்டாம் பகுதியில், தன்னுடைய இக்கட்டான வாழ்வியல்
நிகழ்வுகளில் தன்னோடு உடனிருந்து தன்னைக் காத்து
வழிநடத்தியவர் ஆண்டவர் என்று அறிக்கையிடுகின்றார்:
'எல்லாரும் என்னைவிட்டு அகன்றனர் ... ஆண்டவர் என் பக்கம்
நின்று எனக்கு வலுவூட்டினார். சிங்கத்தின் வாயிலிருந்தும்
என்னை விடுவித்தார். தீங்கு அனைத்திலிருந்தும் என்னை
விடுவித்தார்.'
பவுல் பெற்ற அகஒளி இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது:
ஒன்று, தன்னை முழுமையாக அறிந்தவராகவும், தன் பணியின்
நிறைவை உணர்ந்தவராகவும், தன் ஆண்டவர்மேல் உறுதியான
நம்பிக்கை கொண்டவராகவும் இருக்கிறார். இரண்டு, தன்னுடைய
'விருத்தசேதனம், இஸ்ரயேல் இனம், பென்யமின் குலம்,
தூய்மையான வழிமரபு, திருச்சட்டத்தின்மேல் உள்ள பேரார்வம்'
(காண். பிலி 3:5-6) என்று தனக்கிருந்த எல்லாத் தூண்களையும்
தகர்த்துவிட்டு, ஆண்டவரின் இரக்கம் என்னும் தூணின்மேல்
சாய்ந்துகொள்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி (காண். லூக் 18:9-14) கடந்த
வார நற்செய்தி வாசகத்தைப் போல லூக்கா நற்செய்தியில்
மட்டுமே காணக்கிடக்கிறது. 'தாங்கள் நேர்மையானவர்கள் என்று
நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து'
இயேசு ஓர் உவமை சொல்கின்றார். நேர்மையானவர் என்பவர்
இறைவனோடும் ஒருவர் மற்றவரோடும் நல்ல உறவுநிலையில்
இருப்பவர். இந்த உறவுநிலை உருவாக அகஒளி அவசியம்.
இந்த நிகழ்வு கோவிலில் நடக்கிறது.கோவிலுக்கு இறைவேண்டல்
செய்ய பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் என்னும் இரு
கதைமாந்தர்கள் வருகின்றனர். இருவருமே கடவுளிடம் தங்கள்
வாழ்வைப் பற்றி மனம் திறக்கின்றனர். பரிசேயரின் இறைவேண்டல்
மூன்று கூறுகளைக் கொண்டிருக்கிறார்:
(அ) தான் யார் என்பதைத் தான் யார் இல்லை (கொள்ளையர்,
நேர்மையற்றோர், விபச்சாரர், வரிதண்டுபவர்) என்று
அறிக்கையிடுகின்றார்,
(ஆ) தான் என்ன செய்கிறேன் - வாரம் இருமுறை நோன்பு,
பத்திலொரு பங்கு காணிக்கை - என்பதைப் பட்டியலிடுகின்றார்,
மற்றும்
(இ) கோவிலுக்குள் நின்றுகொண்டு கோவிலுக்கு வெளியே
நிற்பவரோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்கின்றார் - அவருடைய
நெருக்கம் அவரைக் கடவுளுக்கு அருகில் கொண்டுவரவில்லை.
வரிதண்டுபவரின் இறைவேண்டலும் மூன்று கூறுகளைக்
கொண்டிருக்கிறது:
(அ) தான் யார் என்பதை நேரடியாகவே - 'பாவி' -
அறிக்கையிடுகின்றார், (ஆ) தான் செய்யும் செயல்கள் எதையும்
பட்டியலிடவில்லை - தன் செயல்களைவிடக் கடவுளின் இரக்கம்
மேன்மையானது என நினைக்கின்றார், மற்றும்
(இ) கோவிலுக்கு வெளியே நிற்கின்றார்.
'பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு
திரும்பினார்' என இயேசு தீர்ப்பு எழுதுகின்றார். மேலும்,
'தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்
தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்' என்னும்
மகாவாக்கியத்தையும் உதிர்க்கின்றார். 'நான் அப்படி அல்ல,
இப்படி அல்ல' என்று 'இல்லை' என்று பேசிய பரிசேயரை, 'நீர்
ஏற்புடையவர் இல்லை' என்று அவருடைய வாய்ச்சொல்லை அவருக்கே
திருப்புகின்றார் இயேசு. 'இரங்கியருளும்!' என்னும்
வார்த்தை 'என்னைச் சரிசெய்யும் அல்லது எனக்கும் எனக்குமான
உறவை சரியானதாக்கும்!' என்ற பொருளில் அமைகிறது.
கோவிலுக்கு வெளியே நின்றவர் கடவுளுக்கு அருகில்
வருகின்றார். கோவிலுக்கு உள்ளே நின்றவர் கடவுளைவிட்டு
தூரமாகிப் போகின்றார். ஏனெனில், வெளியே இருந்தவர் தன்னுடைய
இருப்பை தனக்கு மேலே இருக்கும் இறைவனில் பார்த்தார். உள்ளே
இருந்தவர் தன்னுடைய இருப்பை தன் செயல்களில் பார்த்தார்.
கடவுளின் லாஜிக் முரணாகவே இருக்கிறது. தான் செய்த செயல்கள்
அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றிற்குக் கைம்மாறு
செய்யுமாறு கடவுளிடம் வியாபாரம் செய்கிறார் பரிசேயர்.
தன்னுடைய வெறுங்கையைக் காட்டிப் பரிசுகளை அள்ளிச்
செல்கின்றார் வரிதண்டுபவர். 'தாழ்ச்சி' என்பதன் ஆங்கிலப்
பதம், 'ஹ்யூமுஸ்' என்ற இலத்தீன் பதத்திலிருந்து வருகிறது.
இதற்கு 'களிமண்' என்பது பொருள். ஆக, கடவுள் நம்மை
முதன்முதலாக உருவாக்கிய களிமண் நிலையை - ஒன்றுமில்லாத
நிலையை - ஏற்று, அவரிடம் சரணாகதி ஆவதே தாழ்ச்சி.
ஆக, கோவிலுக்கு உள்ளே நின்றவரைவிட, கோவிலுக்கு வெளியே
நின்றவரே அகஒளி பெற்றவராக இருக்கிறார். அந்த அகஒளியே
அவரைக் கடவுளுக்கு ஏற்புடையவராக்குகிறது.
பொருளாதார மதிப்பு என்னும் புறஒளியைவிட ஆண்டவருக்கு
விருப்பமானதைச் செய்யும் அகஒளியே சிறந்தது என்று இன்றைய
முதல் வாசகமும், மற்ற மனிதர்களின் உடனிருப்பு என்னும்
புறஒளியைவிட ஆண்டவரின் உடனிருப்பு என்னும் அகஒளியே
சிறந்தது என்று இரண்டாம் வாசகமும், மேட்டிமை எண்ணம்
மற்றும் நற்செயல்கள் என்னும் புறஒளியைவிட ஆண்டவரின்
இரக்கத்தை நம்புவதும், அவருக்குச் சரணாகதி ஆவதும் என்னும்
அகஒளியே சிறந்தது என்று நற்செய்தி வாசகமும் அகஒளியின்
மேன்மையைச் சுட்டிக்காட்டி அதை நம் உள்ளங்களில்
ஏற்றிக்கொள்ள அழைக்கின்றன.
இன்று நாம் கொண்டாடும் தீபஒளித் திருநாளில், புறஒளியை
விடுத்து அகஒளிக்கு நாம் எப்படிக் கடந்து செல்வது?
1. நம்முடைய வலுவின்மையை ஏற்றுக்கொள்வது
ஏழைகள், தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர்,
கைம்பெண்கள் என்று கையறு நிலையில் இருக்கும் நபர்களைப்
பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம். இவர்களுக்குத்
தங்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. ஆனால், இவர்களின்
வலுவின்மையே இவர்களை இறைவனின்மேல் சார்புநிலைகொள்ளச்
செய்கிறது. இவர்களுடைய வலுவின்மையே இறைவனின் வல்லமை
செயல்படும் தளமாக மாறுகிறது. இன்று நாம் பல நேரங்களில்
நம்முடைய வலுவின்மைகளோடு சண்டையிடுகிறோம், அல்லது நம்முடைய
வலுவின்மையிலிருந்து தப்பி ஓடுகிறோம். சண்டையிடும்போது நம்
வலுவின்மையை மூடி மறைக்க முயல்கின்றோம். தப்பி ஓடும்போது
நம்முடைய வலுவின்மைக்கு நாமே பயப்படுகிறோம். இவை இரண்டுமே
ஆபத்தானது. மூன்றாவது வழி ஒன்று இருக்கிறது. அதுதான்,
வலுவின்மையை நேருக்கு நேராக எதிர்கொள்வது. என்னை நான்
இருப்பதுபோல, என்னுடைய வலுவின்மையோடு என்னை ஏற்றுக்கொள்வதே
அகஒளி. இந்த அகஒளி இருந்ததால்தான் பவுல் தன்னுடைய
வாழ்க்கையை போராட்டம் என்று ஏற்றுக்கொள்கின்றார்.
வரிதண்டுபவர் தன்னைப் பாவி என்று ஏற்றுக்கொள்கின்றார்.
2. நம்பிக்கையைக் காத்துக்கொள்வது
தன்னுடைய போராட்டத்திலும் ஓட்டப்பந்தத்திலும்
நம்பிக்கையைக் காத்துக்கொண்டதாகச் சொல்கிறார் பவுல்.
'ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்' என்பதே
பவுல் கொண்டிருந்த நம்பிக்கை. நாம் சார்ந்திருக்கும்
நம்முடைய பெயர், ஊர், உறவு, பின்புலம், பணபலம், ஆள்பலம்
எதுவும் துணையிருக்காது நமக்கு. பவுலுக்கும் இதே நிலைதான்
நேர்ந்தது. ஆனால், அவருடைய கைவிடப்பட்ட நிலையில் ஆண்டவர்
அவரை நோக்கிக் கைகளை நீட்டுகின்றார். அப்படி அவர்
நீட்டுவார் என்று நம்புவதும், அவருடைய அருள்கரமே நம்மைக்
காக்கிறது என்று நம்புவது அகஒளிப் பயணத்தின் இரண்டாம் படி.
3. இறைவனை மட்டுமே பார்ப்பது
கோவிலுக்கு உள்ளே நின்ற பரிசேயர் முன்நோக்கியும்
பின்நோக்கியும் பார்க்கிறார். முன்நோக்கி இறைவனையும்
பின்நோக்கி வரிதண்டுபவரையும் பார்க்கிறார். ஆனால், வெளியே
நின்ற வரிதண்டுபவர் முன்நோக்கிப் பார்க்கிறார். இறைவனை
மட்டுமே பார்க்கிறார். பரிசுப்பொருளாகிய அவர் தன்னைக்
கொடுத்த இறைவனைப் பார்க்கிறாரே தவிர தனக்கு அருகே நிற்கும்
இன்னொரு பரிசுப்பெட்டியை அவர் பார்க்கவில்லை. பரிசேயரோ
வரிதண்டுபவரின் வெளிப்புறக் காகிதத்தைப் பார்த்தாரே தவிர,
அவரின் உள்ளிருப்பதையும், அவரை அளித்த கடவுளையும்
பார்க்கத் தவறிவிட்டார். இறைவனை மட்டுமே பார்ப்பது ரொம்ப
எளிது. எப்படி? நம்மையே களிமண்ணாக்கிவிட்டால், அவர் அங்கே
உடனே ஓடி வருவார். நம்மை அப்படியே கைகளில் ஏந்தி நம்
நாசிகளில் அவரின் மூச்சை ஊதுவார். ஏனெனில், வெறும்
களிமண்ணாக அவர் நம்மை வைத்திருந்து காயவிடமாட்டார் அவர்.
இன்று நாம் மனிதர்களைச் சேர்த்துப் பார்க்கும்போது அவர்கள்
கொண்டிருக்கும் காகிதங்களும், அவர்கள் நம்மேல் ஒட்டும்
காகிதங்களும் நம் கண்களைக் கூச வைக்கின்றன. அவரை மட்டும்
பார்க்கும்போது அகம் ஒளி பெறும்.
இறுதியாக,
புறஒளியை தீபஒளித் திருநாளாகக் கொண்டாடும் நாம் இன்று நம்
உள்ளத்தில் அகஒளி ஏற்ற முன்வருவோம். எண்ணெய் இல்லாத
விளக்குகளாக நின்றாலும், நம் திரிகள் எரிந்து
கருகியிருந்தாலும் அவர் நம்மைத் தொட்டு ஏற்றுவார்.
ஏனெனில், 'இந்த ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்குச்
செவிசாய்த்தார்' (பதிலுரைப் பாடல், திபா 34).
Fr. Yesu Karunanidhi
இரண்டு வகை செபங்கள்!
இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் ஆண்டவரின் இல்லத்திற்குள்
நின்று கொண்டு செபிக்கின்றார். அவரின் செபம் முழுவதும் அவரையே
மையமாக வைத்து இருக்கின்றது. அவர் தன்னைப் பற்றி தன்னிடமே
பேசிக்கொள்கின்றார். நான் என்ற வார்த்தை ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
பரிசேயரின் இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, அவர் கடவுளைப்
பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை, தன்னைப் பற்றியும்
புரிந்துகொள்ளவில்லை எனவே தோன்றுகிறது.
வரிதண்டுபவர் தொலைவில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து
பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக் கொண்டு,
;கடவுளே பாவியாகிய என்மீது இரங்கியருளும் என்றார். தன்னைப்
பாவியாகவும், கடவுளை இரக்கம் மிக்கவராகவும் ஏற்றுக்கொள்கின்றார்.
நாம் வாழும் இந்தக் காலத்தின் கலாச்சாரம் கடவுள் யார் என்பதை
மறந்து கொண்டே வருகின்றது. கடவுள் யார் என்பதை நாம் மறக்கின்றோம்
என்றால், நாம் யர் என்பதையும் மறந்து விடுகிறோம். ஏனெனில்
கடவுளின் சாயலில்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம். கடவுள்
யார் என்பதை மறந்து விட்ட வெற்றிடத்தை நிரப்ப மனிதன் அங்கே
தன் சாயலை முன்னிறுத்துகின்றான். மனிதன் தன்னையே கொண்டு நிரப்பினால்
எது தவறு? எது சரி? என்பதை எப்படி முடிவெடுப்பது? வலிமையானவர்களின்
சொல்லும் செயலும் சரி எனவும், மற்றது தவறு எனவும் மாறி
விடும். வலிமையானவன் சொல்வதே வாய்மை என ஆகிவிடுகிறது. அன்பிற்குப்
பதில் வலிமைக்குக் கட்டுப்படுபவர்களாக நாம் மாறி
விடுகிறோம்.
நாம் யார்? என்பதையும் மறந்து விடுகிறோம். எது சரி? என்ற
அறநெறியிலும் பிறழ்வு ஏற்பட்டு விடுகின்றது. பரிசேயருக்குத்
தன் பாவநிலை எப்போது மறந்து போயிருக்கும்? ஒரே இரவிலா? இல்லை.
படிப்படியாக! கொஞ்சம் கொஞ்சமாக!
கொதிக்கின்ற தண்ணீரில் விழுகின்ற தவளை சூடு தாளாமல் உடனே
வெளியே குதித்து விடும். அதே நேரத்தில் சாதாரண தண்ணீரில்
தவளையைப் போட்டு மெதுவாகப் பாத்திரத்தை சூடேற்றினால், அதன்
வெதுவெதுப்பிலேயே இன்பம் காண்கின்ற தவளை ஒரு கட்டத்தில்
இறந்தே போய்விடும். பரிசேயரின் மனச்சான்றும் இப்படித்தான்
கொஞ்சம் கொஞ்சமாக, படிப்படியாக மாறியிருக்க வேண்டும்.
பரிசேயர்கள் தங்கள் கொள்கைகளில் மிகவும் பிடிப்புள்ளவர்கள்.
பரிசேயர் என்ற வார்த்தைக்கு பிரித்து வைக்கப்பட்டவர் என்பது
பொருள். தன் பிறப்பிலேயே, தன் வளர்ப்பிலேயே மற்றவர்களிடமிருந்து
பிரித்து வைக்கப்பட்டவர், மேன்மையானவர் என்ற சிந்தனையில்
இருப்பவர்கள். தங்கள் செபத்தாலும், நோன்பினாலும், திருச்சட்ட
நூற்களைக் கற்பதனாலும் விண்ணகத்தை உரிமையாக்கிக் கொள்ளலாம்
என்ற நம்பிக்கை உடையவர்கள். ஆனால் இயேசு அவர்களின் இந்த நம்பிக்கையைக்
கேள்விக்குட்படுத்துகின்றார்.
ஆன்மீகம் இறைவனை நோக்கி இருப்பதற்குப் பதிலாக நம்மை
நோக்கித் திரும்பினால் அது ஆபத்தாகவே முடிகிறது. பல நேரங்களில்
நமது வழிபாடுகளும், நம் மறையுரைகளும் இறைவனைப் பற்றியதாக
இருப்பதை விடுத்து, நாம் மக்களின் நல்லெண்ணத்தைப் பெற
வேண்டும் என்ற அடிப்படையிலேயே நீர்த்துப் போவதாக இருக்கின்றது.
அப்படிப்பட்ட நேரங்களில் நாம் இறைவனை வழிபடுவதற்குப் பதிலாக
நம்மை நாமே வழிபடுகிறோம். இறைவன் நம் மையமாவதற்குப் பதிலாக
நாமே நம் மையமாகின்றோம்.
இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் தான் மற்றவர்களைப்
போல இல்லாதது பற்றி நன்றி செலுத்துகின்றார். இதில் பரிசேயரின்
தவறு ஒப்பீடு. ஆலயத்திற்கு நன்கொடை கொடுப்பவரும், பூசைக்கருத்து
கொடுப்பவர்களும் கூட ஒரு கட்டத்தில் நான் மற்றவர்களைப்
போல இல்லை. நான் நல்லவன் என்ற சிந்தனைக்குக் தள்ளப்படுகின்றனர்.
நம்மை ஒருவர் மற்றவரோடு இணைக்க வேண்;டிய இறைச்சாயலே நம்மை
மற்றவரிடமிருந்து பிரித்து விடுகிறது. இறைவனின் பிரசன்னம்
நம்மை ஒருவர் மற்றவரோடு ஒன்றிணைக்க வேண்டும். நம் செயல்கள்
அளவிலும், நம் பொருள்கள் அளவிலும் நாம் மற்றவரிடமிருந்து
உயர்ந்தோ, தாழ்ந்தோ இருந்தாலும் நம் இருத்தல் அளிவில் நாம்
அனைவரும் சமமே. நம்மிடமிருக்கும் இறைச்சாயிலில் நாம் அனைவரும்
சமமே.
தன் நோன்பையும், தன் காணிக்கையையும் முன்னிறுத்துகின்றார்
பரிசேயர். நோன்பும், காணிக்கையும் நம்மை மற்றவரோடு ஒன்றிணைக்கும்
காரணிகள். நோன்பு இருக்கும்போது வறியோரின் பசியோடு நம்மை
ஒன்றிணைக்கின்றோம். நாம் காணிக்கை செலுத்தும்போது இல்லாதவரோடு
நமக்குள்ளதை நாம் பகிர்ந்து கொள்கின்றோம். மற்றொரு பக்கம்,
நோன்பினாலும், பிறரன்புச் செயல்களாலும் இறைவனின் இரக்கத்தை
வென்று விடலாம் என நினைக்கின்றார் பரிசேயர். நோக்கம் தவறாக
இருக்கும் எந்தச் செயலினாலும் பலன் இல்லை. செயல்கள் நல்லவையாக
இருந்து அவற்றின் பின் இருக்கும் நோக்கம் தவறு என்றால் அச்செயல்களால்
பலன் ஒன்றும் இல்லை.
வரிதண்டுபவர் இறைவனின் முன்னிலையில் தன் ஒன்றுமில்லாமையை
உணர்கின்றார். பிறர் உங்களைவிட உயர்ந்தவர்கள் என எண்ணுங்கள்
என இறைவன் முன்னிலையிலும், பிறர் முன்னிலையிலும் தன்னைத்
தாழ்த்துகின்றார். நம் இருத்தல் அளவில் நாம் அனைவருமே
தாழ்ந்தவர்கள்தாம், ஒன்றுமில்லாதவர்கள்தாம். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?
இன்று நாம் இறைவனை வழிபடுகிறோமா? அல்லது நம்மையே வழிபட்டுக்கொள்கின்றோமா?
இது நம் ஆலயமா? அல்லது இறைவனின் ஆலயமா?
ஆண்டவர் ஒருதலைச் சார்பு அற்றவர். அவர் ஒடுக்கப்பட்டோரின்,
கைவிடப்பட்டோரின் மன்றாட்டுக்களைக் கேட்கின்றார். இறைவன்
முன்னிலையில் தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்கள் மேகங்களையும்
ஊடுருவிச் செல்லும் இயல்புடையது. இறைவன் முன்னிலையில் நம்மையே
வெறுமையாக்கி அர்ப்பணமாக்க அழைப்பு விடுக்கின்றது இன்றைய
முதல் வாசகம்.
தன் வாழ்வின் முடிவு நெருங்குவதை உணர்கின்ற தூய பவுல்,
தான் இறுதிவரை இறைவனுக்கு பிரமாணிக்கமாய் இருந்ததையும்,
தான் அசைவுறாத விசுவாசத்தைக் காத்துக் கொண்டதாகவும், இந்தப்
போராட்டத்தில் இறைவன் தனக்கு வலுவூட்டியதாகவும், தன்
வாழ்வால் தான் இறைவனுக்கு மாட்சி தருவதாக பெருமைப்படுகின்றார்.
I சீராக் 35: 12-14, 16-16
II 2 திமொத்தேயு 4: 6-8, 16-18
III லூக்கா 18: 9-14
முகில்களை ஊடுருவிச் செல்லும் இறைவேண்டல்
சொற்பொழிவாளர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொற்பொழிவில்
தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்ற எண்ணமானது நிறைவே
இருந்தது.
ஒருமுறை அவர் ஒரு கோயில் திருவிழாவில் பேசுவதற்கு
அழைப்புப் பெற்றிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளர்
நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லாரையும் வரவேற்றுவிட்டுச்
சொற்பொழிவாளரை உரை நிகழ்த்துவதற்காக மேடைக்கு அழைத்தார்.
சொற்பொழிவாளரும் தனக்கு அருமையான குரல் வளம் இருக்கின்றது;
சொற்பொழிவை நன்றாகத் தயாரித்திருக்கின்றோம். அதனால்
சிறப்பாகச் சொற்பொழிவாற்றலாம் என எண்ணத்தோடு மேடைக்கு
ஏறிச் சென்றார்.
ஒலிவாங்கி முன்பு நின்றுகொண்டு சில வினாடிகள் திரண்டிருந்த
மக்களைத் தனக்கே உரிய கர்வத்தோடு பார்த்தார். அவர்
அத்துணைக் கர்வத்தோடு பார்ப்பதை மக்கள் பார்த்துவிட்டு
சற்று அதிர்ந்து போனார்கள். பிறகு அவர் தன்னுடைய
சொற்பொழிவை நிகழத் தொடங்கினார்.
அவர் சொற்பொழிவை நிகழ்த்தத் தொடங்கிய சில மணித்துணிகளில்
ஒலிவாங்கி ஊளையிடத் தொடங்கியது; முன் வரிசையில் இருந்த ஒரு
சிறுவன் அழகைத் தொடங்கினான். இவற்றால் அவருடைய கவனம்
சிதறி, வார்த்தைகள் அவருடைய வாயிலிருந்து வரத் தயங்கின.
எப்படியோ நிலைமைச் சமாளித்துகொண்டு அவர் சொற்பொழிவை
நிகழ்த்தியிருந்தாலும், அவருடைய சொற்பொழிவு அவருக்கே
திருப்திகரமாக இல்லை. இதனால் தலையைத் தாழ்த்திக்கொண்டு
கீழே இறங்கி வந்தார். இதைப் பார்த்துவிட்டு, முன்வரிசையில்
இருந்த பெரியவர் ஒருவர், "நீங்கள் மேடையிலிருந்து கீழே
இறங்கி வந்ததுபோல், மேடைக்கு ஏறிச் சென்றிருந்தால்,
மேடைக்கு ஏறிச் சென்றதுபோல், மேடையிலிருந்து கீழே இறங்கி
வந்திருப்பீர்கள்" என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சொற்பொழிவாளரைப் போன்றுதான்
பல நேரங்களில் நாம், என்னை மிஞ்ச ஆளே இல்லை! என்னைப்
போல் ஓர் ஆள் உண்டா? என்ற ஆணவத்தில் ஆடுகின்றோம்.
இதனாலேயே அவமானத்தையும் அழிவையும் சந்திக்கின்றோம். பொதுக்
காலத்தின் முப்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, தங்களைத் தாழ்த்திக்கொள்வோரின் இறைவேண்டலே
முகில்களை ஊடுருவிச் செல்கின்றது என்ற சிந்தனையைத்
தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
தாழ்ச்சியும் தலைக்கனமும்:
கந்தைகூட எதற்காவது பயன்படும்; அகந்தை எதற்குமே
பயன்படாது என்று சொல்வர். இது யாராலும் மறுக்க முடியாத
உண்மை. இன்று பலர் எதற்குமே பயன்படாத அகந்தையோடு
இருக்கின்றார்கள் என்பதுதான் வேதனை கலந்த உண்மை.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் தங்களை
நேர்மையாளர்கள் என்று கருதினார்கள். இதுகூட பிரச்சனை இல்லை
என்று விட்டுவிடலாம். ஆனால், அவர்கள் மற்றவர்களை இழிவாகக்
கருதினார்கள். இவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில்
இயேசு பரிசேயர், வரித்தண்டுபவர் உவமையைக் கூறுகின்றார்.
இந்தப் பரிசேயர் இறைவேண்டல் என்கிற பெயரில் வாரத்தில்
இருமுறை நோன்பிருக்கின்றேன்; என் வருவாயில் எல்லாம்
பத்திலொரு பங்கைக் கொடுக்கின்றேன்" என்று தன்னைப் பற்றித்
தம்பட்டம் அடித்துக் கொள்கின்றார். இதைவிடவும் அவர்
கொள்ளையர், விபசாரர், வரிதண்டுபவர் போன்று இல்லாததற்காகக்
கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றார்.
நல்லது எது என்று ஆண்டவர் கூறுவதாக, இறைவாக்கினர் மீக்கா
நூலில் இவ்வாறு நாம் வாசிக்கின்றோம்: "நேர்மையைக்
கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன்
கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?" இந்த
இறைவார்த்தையின்படி பார்த்தால், உவமையில் வரும் பரிசேயர்
தன்னை நேர்மையாளராகக் காட்டிக் கொண்டாரே ஒழியே, உண்மையில்
நேர்மையாளராக இல்லை. ஏனெனில், அவர் நேர்மையாளராக
இருந்திருந்தால், வறியரிடம் இரக்கம் காட்டியிருப்பார்.
அடுத்ததாக, அவர் கடவுளுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திக்
கொள்ளவே இல்லை. அதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராகாமல்
போகிறார்.
இதற்கு முற்றிலும் மாறாக, உவமையில் வருகின்ற வரிதண்டுபவர்,
வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாதவராய்க்
கடவுளுக்கு முன்பு தன்னைத் தாழ்த்திக் கொண்டு, "கடவுளே,
பாவியாகிய என்மேல் இரங்கியருளும்" என்கிறார். இதனால் அவர்
கடவுளுக்கு ஏற்புடையவராய்த் தம் வீடு திரும்புகின்றார்.
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்திற்கும் நூலளவு
வித்தியாசம்தான். உவமையில் வரும் பரிசேயரிடம் தலைக்கனம்
மிகுதியாக இருந்ததால், அவரால் கடவுளுக்கு ஏற்புடையவராக
முடியவில்லை. தாழ்ச்சியோடு இருந்த வரிதண்டுபவராலேயே
கடவுளுக்கு ஏற்புடையவராக முடிந்தது.
முகில்களை ஊடுருவிச் செல்லும் இறைவேண்டல்:
கடவுள் விண்ணகத்தில் இருக்கின்றார் என்ற நம்பிக்கை
யூதர்களிடம் மிகுதியாக இருந்தார். இயேசுகூடத் தன்
சீடர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத் தரும்போது,
"விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே!" (மத் 6:9)
என்றுதான் கற்றுத்தருகின்றார்.
விண்ணை நோக்கி நம்முடைய வேண்டுதலை நாம் எழுப்புகின்றபோது
முகில்கள் போன்ற தடைகள் நடுவில் வரலாம். இந்தத் தடைகளை
அப்புறப்படுத்திவிட்டு, நம்முடைய வேண்டுதல் இறைவனிடம்
செல்லவேண்டும் என்றால், அதற்குத் தாழ்ச்சி என்ற ஒன்று
தேவைப்படுகின்றது. அதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில்
சீராக்கின் ஞான நூல் ஆசிரியர், "தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை
அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை" என்கிறார்.
நற்செய்தியில் இயேசு சொல்லும் உவமையில் வரும் வரிதண்டுபவர்
கடவுளுக்கு முன்பாகத் தன்னையே தாழ்த்தியதால்தான் அவருடைய
வேண்டுதல் முகில்களையும் ஊடுருவிச் சென்றது; அதன்மூலம்
அவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார். அதனால் ஒருவர்
கடவுளுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும்போது
அவரது வேண்டுதல் நிச்சயம் கேட்கப்படும் என்பது உறுதி.
நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகை:
ஒரு காலகட்டத்தில் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதன் மூலம்
கிறிஸ்துவைத் துன்புறுத்தியவர் பவுல். அப்படிப்பட்டவர்
தமஸ்கு நகர் நோக்கிய பயணத்தில் கிறிஸ்துவால்
தடுத்தாட்கொள்ளப்பட்டுக் கிறிஸ்துவுக்காகவே தன்னை
அர்ப்பணித்தார்; ஏன் மறுகிறிஸ்துவாகவே வாழ்ந்தார் (கலா
2:20). அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திமொத்தேயுவிடம்,
"நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்; என் ஓட்டத்தை
முடித்துவிட்டேன். நம்பிக்கையைக் காத்துக்கொண்டேன். இனி
எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி
வாகையே" என்கிறார்.
பவுல் கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்படுவதற்கு முன்பு வரை
தன்னுடைய பெருமையைப் பேசிக்கொண்டு ஆணவத்தோடு இருந்தார்!
எப்போது அவர் கிறிஸ்துவால் தடுத்தாட்கொள்ளப்பட்டாரோ,
அப்போதே அவர் தன்னிடம் இருந்த ஆணவத்தை அழித்து
தாழ்ச்சியோடு வாழத் தொடங்கினார். அவர் தாழ்ச்சியோடு
வாழ்ந்தார் என்பதன் அடையாளம் தான், "மனத்தாழ்மை, கனிவு,
பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்" (கொலோ
3:12) என்ற வார்த்தைகள் ஆகும். இறைமக்கள் மனத்தாழ்மையோடு
இருக்கச் சொல்லும் பவுல், அவரும் அவ்வாறே
வாழ்ந்திருப்பார். அதனால்தான் அவரால் நீங்கள் என்னைப் போல்
ஒழுகுங்கள் என்று சொல்ல முடிந்தது. (2 தெச 3:7).
பவுல் தன்னுடைய தாழ்ச்சி நிறைந்த வாழ்விற்கு வெற்றி
வாகையைப் பரிசாகப் பெற்றிருப்பார். நாமும் வெற்றி வாகையைப்
பரிசாகப் பெற, மனத்தாழ்மையோடு வாழ்வோம்.
சிந்தனைக்கு:
எங்கே தாழ்ச்சி இருக்கின்றதோ அங்கே வெற்றி இருக்கும்.
அந்த வெற்றி சாதாரண வெற்றியாக இல்லாமல் நிலையான வெற்றியாக
இருக்கும் என்பார் பேட்ரிக் லென்சியோனி என்ற அறிஞர்.
எனவே, நாம் மனத்தாழ்மையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்
அது ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவக் குடும்பம். அந்தக்
குடும்பத்தில் அண்ணன், தம்பி என இருவர் இருந்தார்கள்.
இதில் அண்ணன் தவறாது கோயிலுக்குச் செல்வான்; காலையிலும்
மாலையிலும் இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் மிக
உருக்கமாக மன்றாடுவான். தம்பி அப்படிக் கிடையாது; அவன்
கோயிலுக்குச் செல்வதும் கிடையாது; இறைவார்த்தையை வாசித்து,
இறைவேண்டலும் செய்வது கிடையாது. இதனால் அண்ணனுடைய
உள்ளத்தில் தான்தான் நல்லவன்... தம்பி மிகவும் கெட்டவன்
என்ற எண்ணமானது இருந்துகொண்டே இருந்தது. ஒருநாள்
அவர்களுடைய வீட்டிற்கு புதிதாக வந்திருந்த பங்குத்தந்தை
இல்லம் சந்திக்க வந்தார். அவர் வீட்டிலிருந்த எல்லாரிடமும்
பேசிவிட்டு, அண்ணன் தம்பி இருவரிடமும், "உங்கட்கு
இறைவனிடம் வேண்டுகின்ற பழக்கமெல்லாம் இருக்கின்றாதா?"
என்று கேட்டார். அதற்கு மூத்தவன் அதாவது, அண்ணன் அவரிடம்,
"சுவாமி! நான்தான் ஒவ்வொருநாளும் கோயிலுக்குச் சென்று
திருப்பலியில் கலந்துகொள்வேன்; காலையிலும் மாலையிலும்
இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம் வேண்டுவேன். ஆனால், என்
தம்பி இவனோ கோயிலுக்கும் செல்வது கிடையாது, இறைவார்த்தை
வாசித்து, இறைவனிடம் வேண்டுவதும் கிடையாது; மிகவும் மோசம்"
என்றான். மூத்தவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்ட
பங்குத்தந்தை அவனிடம், "நீ இப்படி உன்னுடைய தம்பி
கோயிலுக்குச் செல்வதில்லை; இறைவார்த்தையை வாசித்து
இறைவனிடம் வேண்டுவதில்லை என்று அவனைப் பற்றி
குறைகூறிக்கொண்டிருப்பதற்குப் பதில், நீயும் அவனைப் போல்
கோயிலுக்குப் போகாமல், இறைவார்த்தையை வாசித்து, இறைவனிடம்
வேண்டாமல் இருப்பது எவ்வளவோ மேல்" என்றார். தொடர்ந்து அவர்
அவனிடம், "கோயிலுக்குச் சென்று இறைவார்த்தையை வாசித்து,
இறைவனிடம் வேண்டும் யாரும் அடுத்தவரைப் பற்றி எப்பொழுதும்
குறைகூறிக் கொண்டிருப்பதில்லை" என்றார். பங்குத்தந்தை
சொன்ன இச்சொற்கள் அவனுடைய உள்ளத்தில் ஆழமாக இறங்கின.
அதன்பிறகு அவன் தன் தம்பியைக் குறித்து குறைகூறிக்
கொண்டிருக்கவில்லை.
தான் நேர்மையாளர், மற்றவர்கள் எல்லாம் மோசம்- பாவி என்று
குறைகூறிக் கொண்டிருக்கின்ற யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர்
ஆகமுடியாது, அவர்களுடைய மன்றாட்டைக் கடவுள் ஒருபோதும்
கேட்பதில்லை என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த
நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் முப்பதாம்
ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக்கேட்ட
இறைவார்த்தை, தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ
அழைப்புத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம்
சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
தன்னைக் குறித்துத் தப்பட்டம் அடித்த பரிசேயர்
நற்செய்தியில் இயேசு தம்மை நேர்மையாளர் என்று நம்பி,
மற்றவரை இழிவாக ஒதுக்கிய பரிசேயர்களைப் பார்த்து ஓர்
உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையில், இருவர்
இறைவனிடம் வேண்டுவதற்குக் கோயிலுக்குச் செல்கின்றார்கள்.
இதில் முதலாவதாக வருகின்ற பரிசேயர் எப்படி இறைவனிடம்
வேண்டினார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டல் என்றால் இறைவனுக்கு முக்கியத்துவம்
கொடுப்பதாகவும் அவர்க்குப் பெருமை சேர்ப்பதாவும்
இருக்கவேண்டும் (மத் 6: 9-10) ஆனால், பரிசேயரோ இறைவனுக்கு
முக்கியத்துவம் கொடுக்காமல், இறைவனை முன்னிலைப்படுத்தாமல்,
தன்னை முன்னிலைப் படுத்துகின்றார். குறிப்பாக அவர்
வாரத்திற்கு இரண்டுமுறை நோன்பிருந்ததையும் (ஆண்டிற்கு
ஒருமுறை பாவப்பரிகார நாளில் நோன்பிருந்தாலே போதும் (லேவி
16: 29). ஆனாலும் இவர் மக்கட்கு முன்னம் தன்னை நேர்மையாளர்
எனக் காட்ட விரும்பி, வாரத்திற்கு இருமுறை
நோன்பிருக்கின்றார்), பத்திலொரு பங்கைக் காணிக்கையாகத்
தருவதையும் பட்டியலிடுகின்றார் (மத் 23: 23). இதைவிடக்
கொடுமை என்னவென்றால், தன்னோடு கோயிலுக்கு வந்து, இறைவனிடம்
வேண்டிக்கொண்டிருந்த வரிதண்டுபவரை மிகவும் தரக்குறைவாகப்
பேசுகின்றார்.
இவ்வாறு பரிசேயர் தன்னுடைய இறைவேண்டலில் இறைவனுக்கு
முதன்மையான இடம் கொடுக்காமலும் தன்னைக் குறித்துத்
தம்பட்டம் அடித்து, மற்றவர்களை இழிவாகப் பேசியதாலும்,
கடவுளுக்கு ஏற்புடையவராகாமல் போகின்றார்.
தன்னைத் தாழ்த்திக் கொண்ட வரிதண்டுபவர்
பரிசேயருடைய மன்றாட்டு எதனால் கேட்கப்படாமல் போனது என்பதை
அறிந்த நாம், வரிதண்டுபவருடைய மன்றாட்டு எதனால்
கேட்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வோம். வரிதண்டுபவர்
இறைவனிடம் வேண்டுகின்றபோது வானத்தை அண்ணார்ந்து
பார்க்கக்கூடித் துணியாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு,
"கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்று
மன்றாடுவதாக நாம் வாசிக்கின்றோம்.
இதில் மூன்றுவிதமான செயல்கள் உள்ளடங்கி இருக்கின்றன.
ஒன்று, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமை;
இரண்டு, தன் மார்பில் அடித்துக்கொள்தல்; மூன்று, பாவியாகிய
என்மீது இரங்கியருளும் என்று மன்றாடுதல். இந்த மூன்று
செயல்களும் இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று
வரிதண்டுபவர் சொல்வதாய் இருக்கின்றன. ஆம், தாழ்ச்சி என்பது
வேறொன்றுமில்லை, இறைவனுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்ல
என்று உணர்வதுதான். வரிதண்டுபவர் கடவுளுக்கு முன்பாகத்
தான் ஒன்றுமில்லை என்று உணர்ந்தார். அதனால் அவர்
கடவுளுக்கு ஏற்புடையவராகை இல்லம் சென்றார். பரிசேயரோ
கடவுளுக்கு முன்பாக தான் பெரிய ஆள் என்று நினைத்தார்.
அதனால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக ஆகாமல் போனார்,
அப்படியானால் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம்
இருக்கும் தாழ்த்தியே அடிப்படைக் காரணம் என்றால் அது
மிகையாகாது.
தம்மைத் தாழ்த்துவோரின் வேண்டுதலே முகில்களை ஊடுருவிச்
செல்லும்
இதுவரையில் ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரிடம்
உள்ள தாழ்ச்சியே காரணம் என்று பார்த்தோம். இன்றைய முதல்
வாசகமோ ஒருபடி மேலே போய், தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும் என்று
கூறுகின்றது. இவ்வார்த்தைகள் இன்றைய நற்செய்தி வாசகத்தோடு
அப்படியே பொருந்திப் போவதாக இருக்கின்றன. வரிதண்டுபவர்
கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை... பாவி என்று
உணர்ந்ததால், அவருடைய மன்றாட்டு, முகில்களை ஊடுருவிச்
சென்று, விண்ணத்தை விண்ணகத்தை அடைந்தன. அத்தகைய தாழ்ச்சி
நிறைந்த உள்ளம் பரிசேயர்க்கு இல்லாமல் போனால், அவருடைய்
மன்றாட்டு முகில்களை ஊடுருவிச் செல்ல முடியவில்லை.
இப்பொழுது நாம் இயேசு சொல்லும் உவமையில் வரும் பரிசேயரைப்
போன்று நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டும்
மற்றவர்களை இழிவாகப் பேசிக்கொண்டும் இருக்கின்றோமா? அல்லது
வரிதண்டுபவரைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராக
இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். "ஆண்டவர்
உள்ளத்தில் செருப்புடன் சிந்திப்போரைச் சிதறடித்து
வருகின்றார் என்றும் தாழ்நிலையில் இருப்போரை
உயர்த்துகின்றார் என்றும் லூக்கா நற்செய்தியில் (லூக் 1:
51,52) நாம் வாசிக்கின்றோம். ஆகையால், நாம் அழிவிற்கு
அல்ல, ஆண்டவருடைய அருளை அபரிமிதமாய்ப் பெற்றுத் தரும்
தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு வாழக் கற்றுக் கொள்ள முயற்சி
செய்வோம்.
சிந்தனை
மேன்மையடையத் தாழ்ச்சியே வழி (நீமொ 15: 33) என்கிறது
நீதிமொழிகள் நூல். ஆகையால் நாம் உள்ளத்தில் தாழ்ச்சியோடு
வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.
இறைவன் முன் தன்னைத் தாழ்த்துகின்றவர்களே ஏற்புடையவர்
என்று, பரிசேயர்களுக்கு எடுத்து இயம்ப விரும்பினார் இயேசு.
அதற்காகச் செபிக்க கோவிலுக்குச் சென்ற பரிசேயரைப் பற்றியும்,
வரிதண்டுவோர் பற்றியும் அழகான உவமைக் கூறுகிறார். ஏறத்தாழ
50 உவமைகள் நற்செய்தி ஏடுகளில் காணப்படுகின்றன. அதில்
லூக்கா மட்டும் 15 உவமைகளைத் தருகிறார். இன்றைய உவமையின்
மூலமாக, தாங்கள் நேர்மையானவர் என்று கருதி, மற்றவரை இகழ்ந்து
ஒதுக்கும் சிலரைப் பார்த்து இந்த உவமையைச் சொன்னார் இயேசு
(லூக். 18:9).
இயேசுவின் உவமையில், இருவர். இறைவனிடம் வேண்ட
கோவிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன். மற்றவர் வரி
தண்டுபவர். பிறர் தன்னைப் பார்த்துப் புகழ வேண்டும்
என்பதற்காக, எல்லோருடைய பார்வையிலும் படும்படியான இடத்தில்
நின்றுகொண்டு செபிக்கிறான் பரிசேயன். கடவுளுடைய நன்மைத்
தனத்திற்காக அவரைப் புகழ்வதற்கு மாறாக, தன்னைப் புகழ்ந்து
நன்றி கூறுகிறான். கொள்ளையர், வரிதண்டுவோர், நேர்மையற்றோர்,
விபச்சாரர் ஆகியவரோடு தன்னை ஒப்பிட்டு, தான் அவர்கள்போல்
இல்லாதது பற்றி இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். யூதச்
சட்டத்தின்படி இரு முறை நோன்பு இருப்பதாகவும், தன் வருவாயில்
பத்தில் ஒரு பங்கைக் கடவுளுக்குக் கொடுத்ததாகவும் அறிக்கையிடுகிறான்.
இவன் தன் பாவங்களுக்குப் பரிகாரம் தேடவில்லை. இவைகளையெல்லாம்
தற்பெருமைக்காகவே கடைப்பிடிக்கிறான்.
ஆனால் ஆயக்காரனோ ஆலயத்தின் வெளியே நின்று, தன் பாவத்தை
உணர்ந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத்
துணியாமல், மனத்துயரோடு தான் பாவி என்று கூறி, இறைவனின்
இரக்கத்தைக் கேட்டு மன்றாடினான். பரிசேயனைப்போல ஆயக்காரன்
தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.
இவ்விருவருடைய செபங்களில், தனது பாவங்களை உணர்ந்து, கடவுளுடைய
சிறப்பான மன்னிக்கும் அருள் தனக்குத் தேவை என்று உணர்ந்து
மன்றாடிய வரி தண்டுவோரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு
திரும்பினார் என்று இமேசு அறிவிக்கிறார் (மூன்றாம் வாசகம்).
"ஏனெனில் தன்னைத்தானே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்;
தன்னைத் தானே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" (லூக்.
18:14) என்று இயேசு தீர்ப்பளிக்கிறார்.
சிந்தனைக்காக
ஒரு பக்தன், தான் எந்தப் பணியைத் தொடங்கினாலும், எந்த
இடத்திற்கும் செல்லும் முன்னும், " ஒரு நிமிடம் செய்வது
சரிதானா? போவது சரிதானா? என சுய ஆய்வு செய்து, தன் பணியைத்
தொடங்குவேன்" என்றான். இன்னொரு பக்தன், "ஒவ்வொரு
நாளும், நான் மற்றவருக்கு உப்பாக, ஒளியாக, மடியும்
கோதுமை மணியாக இருந்தேனா? என்று ஆய்வு செய்துதான் தன்
நாளைக் கழிப்பேன்' என்றான். ஆம், இன்று நாம் நம்மையே
சுய ஆய்வு செய்ய அழைக்கப்படுகிறோம். அப்போது நம்மில்
கொடி கட்டிப் பறக்கும் பரிசேயத்தனத்தை, தவறுகளை உணளர்ந்தவர்களாய்,
வரிதண்டுவோன் மனநிலை அடைவோம்.
புதிய ஏற்பாட்டில் கல்வாரியில், சிலுவையில் தொங்கிய இரு
குற்றவாளிகளில் ஒருவன், நாம் தண்டிக்கப்படுவது முறையே.
நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகின்றோம். இவர்
ஒரு குற்றமும் செய்யவில்லையே (லூக் 23:41) என்று
சொன்னபோது அவனுக்கு பேரின்ப வீடு பரிசாகக் கிடைத்தது
[லூக் 23:43].
காணாமற்போன மகன் தந்தையிடம், அப்பா, கடவுளுக்கும்
உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான்
உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் (லூக் 15:21)
என்று சொல்லும்வரை அவனுக்கு முதல் தரமான ஆடை
கிடைக்கவில்லை; கைக்கு மோதிரம் கிடைக்கவில்லை; காலுக்கு
மிதியடி கிடைக்கவில்லை (லூக் 15:22); விருந்து
கிடைக்கவில்லை (லூக் 15:23].
பாவிகளுள் முதன்மையான பாவி நான் (1 திமொ 1:15ஆ) என்ற
புனித பவுலடிகளாரை இறைவன் எல்லாத் தீங்குகளிலிருந்தும்
விடுவித்து, அவருக்கு மீட்பின் காரணரானார் [2 திமொ
4:18]. எங்கே ஏற்றுக்கொள்ளுதல் இருக்கின்றதோ அங்கே
பாவமன்னிப்பு இருக்கும். ஏற்றுக்கொள்ளுதல் என்பது
கடையில் வாங்கக்கூடிய ஒரு பொருள் அல்ல; மாறாக, அது
தாழ்ச்சி என்னும் புண்ணியம் பெற்றெடுக்கும் குழந்தை.
நாம் இருப்பதுபோல நம்மையே நாம் இறைவன் முன்னால்
பிரசன்னப்படுத்திக் கொள்வதற்கு பெயர்தான் தாழ்ச்சி.
இறைவனின் ஏற்புடைய மக்களாக வாழ, பாவிகளான நாம் செய்ய
வேண்டியவை எவை?
உவமையில் வந்த வரிதண்டுபவரைப்போல் இறுமாப்புக்கு இடம்
கொடாமல் இறைவன் முன்னால் நம்மையே நாம் தாழ்த்திக்
கொள்வது (சீஞா 35:17).
நாம் பாவி என்பதை ஏற்றுக்கொள்ளுதல்.
மேற்சொல்லப்பட்ட இரண்டு எண்ணங்களையும் நமது மனத்தில்
முள்ளெனத் தைத்துக் கொள்ளுதல்.
வயதான பயணி ஒருவர் கடுங்குளிரிலும், மழையிலும் இமய
மலைக்குப் புறப்பட்டார். இந்த குளிரிலும், மழையிலும்
எப்படிச் செல்லப்போகின்றீர்கள்? என்றார்
சத்திரத்திற்குச் சொந்தக்காரர்.
என் மனம் ஏற்கெனவே அங்கே போய் சேர்ந்துவிட்டது. அதைப்
பின் தொடர்வது மிகவும் எளிது என்றார் அந்த முதியவர்
மகிழ்ச்சியோடு.
மேலும் அறிவோம் :
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீறங்கி
மாசறு காட்சி யலர்க்கு (குறள் : 352.)
பொருள் : அறியாமை ஆகிய மயக்கம் களைந்து மெய்யறிவு
பெற்றவர்க்கு மாசற்ற உண்மை தோன்றும்; அறியாமை இருள்
விலகுவதால் இன்பப் பேறு வாய்க்கும்!
ஒரு ஞானியிடம் ஒருவர் சென்று தமக்கு ஞானத்தைக் கற்றுக்
கொடுக்கும்படி கேட்டார். ஞானி அவரிடம், "உங்களுக்கு என்ன
தெரியும்?" என்று கேட்டதற்கு அவர், " எனக்குக் கராத்தே
தெரியும்; கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து,
கிரிக்கெட் விளையாட்டுக்கள் தெரியும்" என்று அடுக்கிக்
கொண்டே போனார். ஞானி அவரிடம், "உங்களுக்கு என்னால்
எதையும் கற்றுக்கொடுக்க முடியாது, ஏனெனில் உங்களுடைய
பாத்திரம் ஏற்கெனவே நிரம்பி விட்டது. உங்களுடைய
பாத்திரத்தைக் காலி செய்தால் மட்டுமே அதை என்னால்
நிரப்ப முடியும்" என்றார்.
கடவுள் நம் உள்ளத்தை நிரப்ப வேண்டுமென்றால், முதலில்
நமது உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்
அனைத்தையும் குறிப்பாக "நான்' என்னும் ஆணவச் செருக்கை,
வெளியேற்ற வேண்டும், கடவுள் நம்மிடம் கேட்பது: "உனது
உள்ளத்தைக் காலி செய்து கொடு; நான் அதில் குடிபுக
வேண்டும்."
இன்றைய நற்செய்தியில் வருகின்ற பரிசேயரின் உள்ளம்
"நான்" என்னும் செருக்கினால் நிறைந்திருந்தது. அவர்
தனது நற்செயல்கள் என்னும் "புராணத்தைப்' பாடினார்.
அவர் தன்னைத் தானே நீதிமானாக ஆக்கிக் கொண்டார். எனவே
அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக வீடு திரும்பவில்லை.
குளிக்கப் போனவர் சேற்றைப் பூசிக்கொண்டு வந்த கதைதான்
அவருடைய கதை. "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைக்
கடவுள் சிதறடிக்கிறார்" (லூக் 1:52) என்பதை அவர்
மறந்துவிட்டார்.
மாறாக, வரி தண்டுவோர், பாவி என்று சமுதாயத்தில்
கருதப்பட்டவர். தமது பாவத்தை உணர்ந்தவராக, "கடவுளே,
பாவியாகிய என்மீது இரக்கமாயிரும்" என்று சொல்லித் தமது
மார்பில் அறைந்து கொண்டார் (லூக் 18:13). பாவ அறிக்கை
செய்தார்; பாவ. மன்னிப்புப் பெற்றார்: கடவுளுக்கு
எற்புடையவராக வீடு திரும்பினார். நாம் பாவம்
செய்யவில்லை என்று கூறுவோமானால், நம்மையே நாம்
ஏமாற்றிக் கொள்கின்றோம். மாறாக நம் பாவங்களை ஏற்றுக்
கொண்டால், கடவுள் நம்மை மன்னித்து நம்மைத்
தூய்மைப்படுத்துவார் என்று திருத்தூதர் யோவான்
கூறுகின்றார் ( 1 யோவா 1:8-9).
கடவுள் நம்முடைய வேண்டுதலைக் கேட்க வேண்டுமென்றால்,
நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும். ஏனெனில் இன்றைய முதல்
வாசகம் கூறுவது போல, "தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்" (சீஞா 35:17).
இன்றைய பதிலுரைப் பாடலும் கூறுகிறது: "இந்த ஏழை கூவி
அழைக்க, ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" (திபா
34:6). "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர்
இருக்கிறார்; நைந்த நெஞ்சத்தாரை அவர்
காப்பாற்றுகின்றார்" (திபா 34:18). திருப்பா 51
கூறுகிறது: "நொறுங்கிய குற்றமுணர்ந்த உள்ளத்தைக் கடவுள்
அவமதிப்பதில்லை" (தியா 51:17). கடவுள் நம்மிடம்
எதிர்பார்ப்பது தாழ்ச்சி. தாழ்ச்சியுடையோர்
எழுச்சியடைவர்: தாழ்ச்சியில்லாதவர் வீழ்ச்சி அடைவர்.
சைவ சிந்தாந்தக் கோட்பாட்டின்படி மனிதனை வாட்டி
வதைக்கின்ற மலங்கள் மூன்று. அவை முறையே ஆணவம், கன்மம்,
மாயை. ஆணவம் என்பது "தான்" என்ற செருக்கு. கன்மம்
என்பது தான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் கைமாறு
எதிர்பார்ப்பது. மாயை என்பது நிலையில்லாதவந்றை நிலையானவை
எனக் கருதுவது. இம்மும்மலங்களில் கன்மம், மாயை
அழிந்தாலும், ஆணவம் அவ்வளவு எளிதில் அழியாது.
பெருங்காயர் சட்டியிலிருந்து பெருங்காயத்தை வெளியே
கொட்டிவிட்டாலும் சட்டிமினுள் பெருங்காயத்தின் வாசனை
வீசிக்கொண்டே இருக்கும். அவ்வாறே எல்லாப் பற்றுகளையும்
துறந்த நிலையிலும் ஆணவ மலத்தின் வாசனை அகலாது. நாயை
விரட்டிவிடலாம், ஆனால் ஆணவத்தை விரட்டி வெற்றிகொள்ள
முடியாது என்கிறார் தாயுமானவர்.
"யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம்புகும்' (குறள்.346)
இரண்டாவதாக, ஆணவத்தின் வெளிப்பாடு மற்றவர்களை இழிவாகக்
கருதும் மனநிலை. இயேசு கூறும் உவமையிலே பரிசேயர் தன்னை
உயர்த்திப் பேசிவிட்டு, வரிதண்டுவோரை இழிவாக விமர்சனம்
செய்கின்றார். ஒரு சிலர்க்கு அடுத்தவர்களைப் பற்றிக்
குறைவாகப் பேசுவது இனிமையான பொழுதுபோக்கு, கைவந்த கலை.
எப்போதும் பிறரைப்பற்றிப் புறணி பேசிவந்த ஒரு
பாட்டியிடம், "நரகத்துக்குப் போனா எப்படி புறணி
பேசுவீர்கள்?" என்று கேட்டதற்குப் பாட்டி கூறினார்:
"அங்கே ஒருத்தி கிடைக்காமலா போறா!"
நாம் பிறனரைத் நீர்ப்பிடக் கூடாது, ஏனெனில்
தீர்ப்பிடும் அதிகாரம் கடவுள் ஒருவருக்கு மட்டுமே
உரியது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு (யோக் 4:11-12)
என் அம்மா தன் சின்ன மகனிடம் 30ரூபாய் கொடுத்துச் சல்லடை
வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டார். கடைக்குப்போன சிறுவன்
சல்லடை வாங்காமல் வீடு திரும்பினான். ஏன் அவன் சல்லடை
வாங்கவில்லை என்று அம்மா கேட்டதற்கு அவன் கூறியது:
"போம்மா! சல்லடை பூரா வெறும் பொத்தலாக இருக்கின்றது."
சர்வமும் பொத்தல் மயமாகவுள்ள சல்லடை ஊசியைப் பார்த்து
"உனது காதில் ஒரு பொத்தல் இருக்கின்றது" என்றதாம்.
நாம் நம்மிடத்தில் பல குற்றங்களை வைத்துக்கொண்டு
மற்றவர்களுடைய சில குற்றங்களைக் கண்டுபிடிப்பதுதான்
பரிசேயத்தனம் எனப்படும்.
திருப்பலியில், "எனது பாவமே, எனது பெரும் பாவமே" என்று
சொல்லி நமது நெஞ்சில் அடித்துக் கொள்கின்றோம். ஆனால்
திருப்பலி முடிந்து வெளியே சென்றதும், "உன் பாவமே, உன்
பெரும் பாவமே" என்று அடுத்தவர் நெஞ்சில் அடிக்கிறோம்,
இது முறையா?
நாம் ஒவ்வொரு நாளும் தலை கூனிந்து, நெஞ்சில் அடித்துக்
கொண்டு சொல்ல வேண்டியது: "ஆண்டவரே! பாவியாகிய என்மேல்
இரக்கமாயிரும்."
வாய்விட்டுச் சொல்லவதனால் குறைந்துபோகும் சங்கதிகள்
இரண்டு. அவை புண்ணியமும் பாவமும். நீ எய்த புண்ணியங்களை
நீயே எடுத்துச் சொல்வதனால் புண்ணியம் குறையும். நீ
செய்த பாவங்களை நீயே பிறர்முன் அறிக்கையிடுவதால் பாவம்
குறையும். குறைய வேண்டியது பாவம். நீறைய வேண்டியது
புண்ணியம். ஆதலால் நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே!
பாவத்தைக் கூறு!
விவிலியம் வலியுறுத்தும் செபிக்கத் தேவையான 4
பண்புகள்:
அரசர் ஒருவர் சிறைக் கைதிகளைப் பார்வையிடச்
சென்றார். நீங்கள் ஏன் சிறைக்கு வந்தீர்கள்? என்று
ஒவ்வொரு கைதியாகக் கேட்டு வந்தார். சில கைதிகள்
தாங்கள் நல்லவர்கள், சந்தர்ப்பச்சூழல் கங்களை இங்கே
தள்ளிவிட்டது என்று சொன்னார்கள். வேறுசிலர்
காவல்துறையினர் பொய் வழக்குப் போட்டுத் தங்களை இழுத்து
வந்ததாகக் கூறினார்கள். இன்னும் சிலர் எதிரிகளின்
சூழ்ச்சி வலையில் மாட்டிக் கொண்டதன் விளைவு
என்றார்கள். ஆனால் ஒரேயொரு கைதி மட்டும் தான் செய்தது
பெரிய குற்றம். அதற்கான தண்டனையே இந்தச் சிறைவாழ்வு
என்று சொல்லிக் கண் கலங்கினான். உடனே அரசர் சிறை
அலுவலரை அழைத்து "இத்தனை நல்லவர்கள் இருக்கும் இடத்தில்
இந்தக் குற்றவாளி இருக்கக்கூடாது. இவனைச் சிறையினின்று
வெளியேற்றுங்கள்" எனச் சொல்லிக் குற்றத்தை ஒப்புக்
கொண்டவனை விடுதலை செய்யுமாறு ஆணையிட்டான்.
2. பரிசேயரின் செபம் தன்னையே நோக்கியது. இறைவனை
நோக்கியது அல்ல. திருவிவிலியத்தின் புதிய பொது மொழி
பெயர்ப்பு பதிவு செய்யத் தவறிய முக்கிய குறிப்பு
"தனக்குள்ளே செபித்தான் (18:12) என்பது. மெளனமாகச்
செபித்தான் என்பதல்ல அது. வார்த்தைக்கு வார்த்தை
வாய்விட்டு உரக்கத்தான் செபித்தான்..
பரிசேயர் செபம் செய்த முறை தவறா? அல்ல. நின்று செபித்த
உடல்நிலை தவறா? அல்ல. அதுதான் யூத மரபு. சொன்ன
வார்த்தைகள் தவறா? அல்ல. இன்னும் சொல்லப்போனால் பழைய
ஏற்பாட்டுச் செபங்களை எதிரொலிக்கும் வார்த்தைகள். அவரது
செபம் திருப்பாடல் 17:3-5 போன்றது. சொன்னது செய்தது
எல்லாம் உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் தன்னை
மையப்படுத்திய அவரது மனநிலை தவறு. தான் எவ்வளவு நல்லவன்
என்ற தகவலைக் கடவுளுக்குத் தெரிவித்த சொல்திறம் கொண்ட
செபம். தெய்வத்துக்கு முன்னே மனிதன் தன்னைப் பற்றிப்
பீற்றிக் கொள்வதா அவருக்குத் தெரியாதது போல?
"ஆண்டவர் கூறுவது இதுவே: ஞானி தன் ஞானத்தைக் குறித்து
பெருமை பாராட்ட வேண்டாம். வலியவர் தன் வலிமையைக்
குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம். செல்வர் தம்
செல்வத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்"
(எரேமி 9:23). துறவிக்குக் கூடத் தான் பற்றொழித்தவன்"
என்ற ஆணவம் வரலாம். உடைமையைத் தியாகம் செய்தால்
மட்டும் போதாது. செய்தவன் நான்" என்ற எண்ணத்தையும்
தியாகம் செய்ய வேண்டும்.
3. பரிசேயரின் செபம் பிறரை இழிவுபடுத்தியது. பிறரை
இழிவுபடுத்தி இறைவனைப் புகழ முடியுமா? கொள்ளையரைப்
போல், வரி தண்டுபவரைப் போல் தான் இல்லை என்கிறார்
பரிசேயர். பக்கத்து வீட்டுக்காரனைப்போல் இரு,
மேல்மாடியில் இருப்பவனைப் போல வாழு என்றா இயேசு
சொல்கிறார்? அடுத்த வீட்டுக்காரனா நமது நன்மைத்தனத்துக்கு
எடுத்துக்காட்டு? கடவுளே நன்மைத்தனம், புனிதம்
அனைத்துக்கும் ஊற்று, மற்றும் எடுத்துக்காட்டு. "உங்கள்
விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும்
நிறைவுள்ளவர்களாய் இருங்கள்" (மத். 5:48) என்பதுதானே
இயேசுவின் அழைப்பு! கடவுளின் நன்மைத் தனத்துக்கு முன்னே
மனிதனின் நன்மைத்தனம், புனிதம் எல்லாம்
ஒன்றுமில்லாமையே! அந்த நிலையில் நன்மைத்தனமே தானாக
இருக்கும் கடவுளுக்கு முன்னே வரிதண்டுபவரைப் போல நான்
பாவி' என்ற உணர்வு மட்டுமே எழும். "இரக்கமாயிரும் என்ற:
செபம் மட்டுமே வரும். இதை உணர நான் தவறுபவன் என்ற
பணிவு, தவறை ஏற்றுக் கொள்ளும் துணிவு... இவையே கடவுளைக்
காண்பதற்கான படிக்கட்டுகள்.
ஒரு நாள் முகமது நபியிடம் ஒரு சீடன் வந்தான். "நபிகளே,
என்னுடைய ஆறு சகோதரர்களும் உறங்குகிறார்கள். நான்
ஒருவன் மட்டுமே விழித்திருந்து அல்லாவைத் தொழுகிறேன்"
என்றான். அதற்கு நபிகள் "உன் சகோதரர்களுக்கு எதிராகக்
குற்றம் சொல்லி அல்லாவைத் தொழுவதைவிட நீயும் அவர்களைப்
போல் உறங்குவது நல்லது" என்று பதிலளித்தார்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பணிவு என்ற புதிர்
Prussia நாட்டு அரசர், Frederick, ஒருநாள் சிறைக் கைதிகளைச்
சந்திக்கச் சென்றார். அரசரைக் கண்டதும், அங்கிருந்த கைதிகள்
தங்கள் உள்ளக் குமுறல்களை அவரிடம் கொட்ட ஆரம்பித்தனர்.
தான் செய்யாத குற்றத்திற்காகச் சிறைதண்டனை அனுபவிப்பதாகவும்,
நீதிபதி தன் வழக்கைச் சரியாக விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கியதாகவும்,
தான் குற்றமற்றவர் என்றும் ஒவ்வொருவராகக் கூறியதை அரசர்
பொறுமையுடன் கேட்டார். சிறையில் இருந்த ஒருவர் மட்டும் எதுவும்
சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அரசர் அவரை அணுகி,
"நீயும் எக்குற்றமும் செய்யாமல் இவர்களைப் போல் மாட்டிக்
கொண்டவன்தானே?" என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இல்லை,
மன்னா. நான் தவறு செய்தேன்; அதற்குரிய தண்டனையைத்தான் அனுபவித்துக்
கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். இதைக் கேட்டதும்,
அரசர், சிறை அதிகாரிகளிடம், "இந்தக் குற்றவாளியை உடனே
வெளியில் அனுப்புங்கள். இவன் இங்கிருந்தால், சிறையில் உள்ள
மற்ற குற்றமற்ற அப்பாவிகளை இவன் கெடுத்துவிடுவான்" என்று
கட்டளையிட்டார்.
அரசனைக் கண்டதும், தங்கள் அருமை பெருமைகளைக் கூறிய கைதிகள்,
அதன் பலனை அனுபவிக்கப் போவதாகக் கனவு கண்டனர். இதற்கு
மாறாக இருந்தது அந்த ஒரு கைதியின் நடத்தை. அரசனாக இருந்தாலும்
சரி, ஆண்டவனாகவே இருந்தாலும் சரி, அந்தக் கைதி தன் உண்மை
நிலையைச் சொன்னது, நமக்குச் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றது.
இன்றைய நற்செய்தி சொல்லும் கருத்தும் இதுதான்... அரசன் ஆனாலும்,
ஆண்டவனே ஆனாலும் சரி... இதுதான் நான் என்று பணிவுடன்,
துணிவுடன் சொல்பவர் மீட்படைவார் என்பதே இன்றைய நற்செய்தியின்
முக்கியப் பாடம்.
லூக்கா நற்செய்தி, 18ம் பிரிவில் கூறப்பட்டுள்ள உவமையின்
ஆரம்ப வரிகளில், "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச்
சென்றனர்" என்று இயேசு ஆரம்பிக்கிறார். இறைவன், கோவில்,
வேண்டுதல் என்ற வார்த்தைகளைக் கேட்டதும், இவ்வுவமை,
செபிப்பது பற்றிய ஒரு பாடம் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால், தாழ்ச்சி என்ற உயர்ந்த பாடத்தைச் சொல்லித் தரவே
இயேசு இந்த உவமைச் சொன்னார் என்பதை இவ்வுவமையின் அறிமுக
வரிகள் இவ்வாறு சொல்கின்றன: தாங்கள் நேர்மையானவர் என்று
நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து
இயேசு இந்த உவமையைச் சொன்னார்: (லூக்கா 18: 9)
"இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர்
பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்" (லூக்கா 18: 10) என்ற
வார்த்தைகளுடன் இயேசு இந்த உவமையைத் துவக்கியதும், சூழ
இருந்தவர்கள் கதையின் முடிவை ஏற்கனவே எழுதி
முடித்திருப்பர். பரிசேயர் இறைவனின் ஆசீர் பெற்றிருப்பார்;
வரிதண்டுபவர் இறைவனின் கோபமான தீர்ப்பைப் பெற்றிருப்பார்
என்று மக்கள் முடிவு கட்டியிருப்பர். அவர்கள் அவ்விதம்
சிந்தித்ததற்கு காரணமும் இருந்தது. பரிசேயர்கள் யூத
சமுதாயத்தில் அவ்வளவு உயர்ந்த இடம் பெற்றிருந்தனர்,
வரிதண்டுபவரோ சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர்.
பரிசேயர் என்றதும் நாம் எண்ணிப் பார்ப்பதெல்லாம்,
இயேசுவுடன் மோதலில், போட்டியில் ஈடுபட்ட பரிசேயர்களையே!
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த அத்தனை பரிசேயர்களும்
மோசமானவர்கள் அல்ல! பார்க்கப்போனால், அவர்கள் மிகக்
கடினமான வழிகளில் இறைச் சட்டங்களை, இம்மியளவும் தவறாமல்
பின்பற்றியவர்கள். "வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன்;
என் வருவாயில் எல்லாம் பத்தில் ஒரு பங்கைக் கொடுக்கிறேன்"
(லூக்கா 18: 12) என்று அந்தப் பரிசேயர் தன்னைப் பற்றிச்
சொன்னது வெறும் வீம்புக்காகச் சொன்ன வார்த்தைகள் அல்ல,
உண்மை.
மோசே சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளவற்றிற்கும் பல
மடங்கு அதிகமான செபம், தவம், உண்ணாநோன்பு, தர்மம் என்று
அனைத்திலும் பரிசேயர்கள் எடுத்துக்காட்டான வாழ்க்கை
நடத்தியவர்கள். அதுவும், இந்த முயற்சிகள் எல்லாமே மக்களின்
கண்கள் முன்பாகவே இவர்கள் மேற்கொண்டனர். எனவே, "கடவுளே,
நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற
மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி
உமக்கு நன்றி செலுத்துகிறேன்" (லூக்கா 18: 11) என்று
முழக்கமிட்டு அவர் அறிவித்தது, பொய் அல்ல, உண்மை.
பரிசேயருடன் ஒப்பிட்டால், வரிதண்டுபவர், மக்கள் மதிப்பில்
பல படிகள் தாழ்ந்தவர்தான். உரோமையர்களுக்கு வரி வசூல்
செய்த இவரிடம், நேர்மை, நாணயம், நாட்டுப்பற்று, இறைப்பற்று
என்று பல அம்சங்கள் தொலைந்து போயிருந்தன. எனவே,
இவ்விருவரும் இறைவன் முன்னிலையில் இருந்தபோது,
பரிசேயருக்கு ஆசீரும், வரிதண்டுபவருக்கு தண்டனையும் இறைவன்
வழங்குவார் என்று மக்கள் எண்ணியதில் தவறில்லை! இத்தகைய
மனநிலையோடு கதையைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் சற்றும்
எதிர்பாராத வகையில் அவர்கள் எண்ணங்களை முற்றிலும்
தலைகீழாகப் புரட்டிப் போட்டார் இயேசு:: "பரிசேயரல்ல,
வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்" (லூக்கா 18: 14)
இந்தத் தலைகீழ் மாற்றம் உருவாகக் காரணம்... இவ்விருவரும்
பெற்றிருந்த தன்னறிவு; அவர்கள் இறைவனிடம் கொண்ட உறவு.
இவ்விருவருமே தங்களைப்பற்றி இறைவனிடம் பேசுகின்றனர்.
பரிசேயர் தனது நேர்மையான, அப்பழுக்கற்ற வாழ்வை இறைவனிடம்
பட்டியலிட்டுக் கூறுகிறார். பரிசேயரின் கூற்று இறைவனின்
கவனத்தை வலுக்கட்டாயமாகத் தன்மீது திருப்ப மேற்கொண்ட
முயற்சி. அந்தக் கோவிலுக்கு தன்னுடன் சேர்ந்து வந்துவிட்ட
வரிதண்டுபவரின் மீது இறைவனின் கவனம் திரும்பிவிடுமோ என்ற
பயத்தில், அவரைவிட தான் கடவுளின் கவனத்தைப் பெறுவதற்குத்
தகுதி உடையவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்
பரிசேயர். சொல்லப்போனால், கடவுளின் பார்வை தன்மேல் மட்டுமே
இருக்கவேண்டும் என்ற ஆவலில், இவர் கடவுளுக்கே கடிவாளம்
மாட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதற்கு மாறாக, வரிதண்டுபவர் தன்னைப்பற்றி அதிகம்
பேசவில்லை. அவர் சொன்னதெல்லாம் இதுதான்: "இறைவா, இதோ நான்,
இதுதான் நான், இவ்வளவுதான் நான்." தன் உண்மை நிலையைப்
புரிந்துகொள்ளுதல், அதனை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய அம்சங்கள்
உண்மையான தாழ்ச்சியின் கூறுகள். இந்தத் தன்னறிவில்,
அடுத்தவரை இணைக்காமல், ஒப்பிடாமல் சிந்திப்பது இன்னும்
உயர்ந்ததொரு மனநிலை.
தலை சிறந்த ஏழு புண்ணியங்களில் ஒன்றாகக் கருதப்படுவது
தாழ்ச்சி. இந்தப் புண்ணியத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு
எளிதல்ல. "தனக்கு தாழ்ச்சி உள்ளது என்று ஒருவர் நினைக்கும்
அந்த நொடியில் இந்தப் புண்ணியம் தொலைந்து போகிறது. 'நான்
தாழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக அடைந்தேன்' என்ற
தலைப்பில் இதுவரை ஒரு நூல் வெளிவந்ததில்லை. அப்படி ஒரு
நூல் வெளிவந்தால், அதைவிட முரண்பாடு ஒன்று இருக்க
முடியாது." என்று ஓர் அறிஞர் தன் பெயரைக் குறிப்பிடாமல்
(Anonymous) கூறியுள்ளார்.
நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய தாழ்ச்சியைக் குறித்து
மக்களுக்கு மறையுரையாற்றிய ஒருவர், இறுதியில் ஒரு சிறு
செபத்தைச் சொன்னார்: "இறைவா, இயேசுவைப்போல் பணிவில்
நாங்கள் வளரச் செய்தருளும். எங்களுக்கு முன் நிற்பவர்கள்
எங்களைவிட தாழ்ந்தவர்கள் என்பதை நாங்கள்
அறிந்திருந்தாலும், அவர்களுக்கு முன் பணிவுடன் இருக்க வரம்
தாரும்" என்று அவர் வேண்டினார். இது மிகவும் ஆபத்தான,
அபத்தமான, தவறான செபம். போலித்தாழ்ச்சிக்கு அழகானதோர்
எடுத்துக்காட்டு. நமக்கு முன் நிற்பவர் நம்மைவிட
தாழ்ந்தவர் என்ற எண்ணமே நம்மைத் தற்பெருமையில்
சிக்கவைத்துவிடும். அந்தப் பெருமிதமான எண்ணங்களுடன்
அவர்களுக்கு முன் பணிவது, நடிப்பே தவிர, உண்மையான பணிவு
அல்ல. இயேசுவைப்போல் எம்மை மாற்றும் என்று சொன்ன அதே
மூச்சில், போலியானத் தாழ்ச்சியையும் இணைப்பது மிகவும்
ஆபத்தானது.
இந்திய மதகுரு ஒருவர் சொன்ன கதை, போலி தாழ்ச்சிபற்றி
இவ்விதம் கூறுகிறது:
தற்பெருமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஓர் அரசனை ஞானி ஒருவர்
பார்க்க வந்தார். அரசன் அவரை உடனே சந்திக்கவில்லை. பல
அலுவல்களில் மூழ்கி இருப்பது போல் நடித்துக்கொண்டு, அந்த
ஞானியைக் காத்திருக்கச் செய்துவிட்டு, பிறகு அரசன் அவரைச்
சந்தித்தான். அரசனுக்கு முன் ஞானி வந்ததும், அவர் தன்
தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி அரசனை வணங்கினார்.
உடனே, அரசனும் தான் அணிந்திருந்த மகுடத்தைக் கழற்றி ஞானியை
வணங்கினான். இதைக்கண்ட அமைச்சர்களுக்குப் பெரும்
ஆச்சரியம். அவர்களில் ஒருவர், "அரசே, என்ன இது? அந்த
மனிதன் சாதாரண குடிமகன். அவன் தன் தொப்பியைக் கழற்றி
வணங்கியது முறையே. அதற்காக நீங்கள் ஏன் உங்கள் மகுடத்தை
கழற்றினீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அரசன் சொன்ன
விளக்கம் இது: "முட்டாள் அமைச்சரே, அந்த மனிதனைவிட நான்
குறைந்து போக வேண்டுமா? அவன் தன் பணிவைக் காட்ட தொப்பியைக்
கழற்றி எனக்கு வணக்கம் சொன்னான். அவனுக்கு முன் நான் என்
மகுடத்தைக் கழற்றவில்லையெனில், அவன் பணிவில் என்னை
வென்றுவிடுவான். நான் அவன் முன் தோற்றுவிடுவேன். யாரும்,
எதிலும் என்னை வெல்லக்கூடாது. புரிகிறதா?" தாழ்ச்சியிலும்
தன்னை யாரும் வென்றுவிடக் கூடாது என்பதில் கருத்தாய்
இருந்த அரசன் கூறிய விளக்கத்தைக் கேட்டு, அமைச்சர்
வாயடைத்து நின்றார். போலியான பணிவுக்கு நல்லதொரு
எடுத்துக்காட்டு இது.
பெருமை, பணிவு என்ற இரு மனித உணர்வுகளை, மனநிலைகளை
ஆய்வுசெய்ய இன்றைய நற்செய்தி நம்மை அழைக்கின்றது.
மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, பெருமையும், பணிவும்
எதிரும் புதிருமான முரண்பட்ட இரு மனநிலைகளாகத்
தோன்றுகின்றன. ஒன்று இருக்கும் இடத்தில், மற்றொன்று
இருக்கமுடியாது என்பதே நம்மிடையே உள்ள பரவலான கருத்து.
ஆயினும், ஆழமாகச் சிந்தித்தால், உண்மையான பெருமையும்,
உண்மையான பணிவும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்பதைப்
புரிந்துகொள்ளலாம். ஒளி என்றால் என்ன என்பதைப்
புரிந்துகொள்ள இருளைப்பற்றி நாம் சிந்திப்பதுபோல்,
உண்மையான பணிவு அல்லது பெருமை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள
போலியானப் பணிவு, போலியான பெருமை ஆகியவற்றை உருவாக்கும்
அகந்தையைப் புரிந்துகொள்வது நல்லது.
கதாசிரியராக, கவிஞராக, இறையியல் மேதையாக, பேராசிரியாகப்
பணியாற்றியவர் C.S.Lewis. இவர், Mere Christianity -
குறைந்தபட்ச கிறிஸ்தவம் - என்ற நூலை 1952ம் ஆண்டு
வெளியிட்டார். இந்நூலில் 'The Great Sin' - பெரும் பாவம் -
என்ற தலைப்பில் அகந்தையைப்பற்றி ஆழமான கருத்துக்களைக்
கூறியுள்ளார். அக்கட்டுரையின் ஆரம்ப வரிகளே நம்மை
ஈர்க்கின்றன: "எவ்வித விதிவிலக்கும் இல்லாமல், இவ்வுலகில்
வாழும் அனைத்து மனிதரிடமும் ஒரு குறை உள்ளது.
மற்றவர்களிடம் இக்குறையைக் கண்டு வெறுக்கும் நாம், அதே
குறை நம்மிடம் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
இதுதான் அகந்தை" என்று அவர் தன் கட்டுரையை
ஆரம்பித்துள்ளார். பின்னர், அகந்தையின் ஒரு முக்கியப்
பண்பான ஒப்புமைப்படுத்துதல் என்பதைக் குறித்து அழகாக
விவரிக்கிறார். "ஒப்புமையும், போட்டியும் இன்றி அகந்தையால்
வாழமுடியாது. என்னிடம் ஒன்று உள்ளது என்று சொல்வதைவிட,
என்னிடம் உள்ளது, அடுத்தவரிடம் உள்ளதை விட அதிகம் என்ற
கோணத்தில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவதே அகந்தை. என்
திறமை, அழகு, அறிவு இவற்றில் நான் பெருமை கொள்கிறேன் என்று
ஒருவர் சொல்கிறார். உண்மையில் அவர் சொல்ல முனைவது வேறு...
மற்றவர்களைக் காட்டிலும், அதிகத் திறமையுள்ளவராக,
அழகானவராக, அறிவுள்ளவராக இருப்பதில்தான் பெருமை - அதாவது,
அகந்தை - கொள்ளமுடியும். சமநிலையில் அழகு, அறிவு, திறமை
உள்ளவர்கள் மத்தியில், ஒருவர் அகந்தை கொள்ளமுடியாது.
ஒப்புமையோ, போட்டியோ இல்லாதச் சூழலில் அகந்தைக்கு
இடமில்லை."
இன்றைய உவமையில் நாம் காணும் பரிசேயர் தன்னை மற்றவர்களோடு
ஒப்புமைப்படுத்தி, அதில் தன் பெருமையை நிலைநாட்டுகிறார்.
இவ்வகைப் போட்டியாலும், ஒப்புமையாலும், அகந்தையில்
சிக்கியவர்கள், கடவுளோடும் தொடர்பு கொள்ளமுடியாது.
அவர்களைப் பொருத்தவரை, கடவுளும் அவர்களுக்குப் போட்டியே.
இதற்கு மாற்றாக, சொல்லப்படும் புண்ணியம், அடக்கம், பணிவு,
தாழ்ச்சி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த
புண்ணியத்தைப் புகழ்ந்து பல பெரியோர் பேசியுள்ளனர்.
"தாழ்ச்சியே மற்ற அனைத்து புண்ணியங்களுக்கும் அடித்தளம்,
ஆதாரம்" என்று புனித அகுஸ்தின் கூறியுள்ளார். அடக்கம்
அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்று
ஆரம்பமாகும் அடக்கமுடைமை என்ற பிரிவில், அழகிய பத்து
குறள்களை நமது சிந்தையில் பதிக்கிறார் திருவள்ளுவர்.
தன் அகந்தையினால் பார்வை இழந்து, இறைவனின் நியமங்களைக்
காப்பதாக எண்ணி, கிறிஸ்தவர்களை அழித்துக் கொண்டிருந்த
திருத்தூதர் பவுல் அடியார் சொல்லும் வார்த்தைகள் நமது
ஞாயிறு சிந்தனையை நிறைவு செய்யட்டும்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12 : 9-10
கிறிஸ்து என்னிடம், "என் அருள் உனக்குப் போதும்:
வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து
பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள்
தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும்
இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை
முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான்
வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
அருள்பணி:
Fr. M. Arul
மனிதர் இருவரில், ஏற்புடையவர்
ஒருவர்!
இறைவன் முன் தன்னைத் தாழ்த்துகின்றவர்களே ஏற்புடையவர்
என்று, பரிசேயர்களுக்கு எடுத்து இயம்ப விரும்பினார்
இயேசு. அதற்காகச் செபிக்க கோவிலுக்குச் சென்ற
பரிசேயரைப் பற்றியும், வரிதண்டுவோர் பற்றியும் அழகான
உவமைக் கூறுகிறார். ஏறத்தாழ 50 உவமைகள் நற்செய்தி
ஏடுகளில் காணப்படுகின்றன. அதில் லூக்கா மட்டும் 15
உவமைகளைத் தருகிறார். இன்றைய உவமையின் மூலமாக, தாங்கள்
நேர்மையானவர் என்று கருதி, மற்றவரை இகழ்ந்து ஒதுக்கும்
சிலரைப் பார்த்து இந்த உவமையைச் சொன்னார் இயேசு (லூக்.
18:9).
இயேசுவின் உவமையில், இருவர். இறைவனிடம் வேண்ட
கோவிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன். மற்றவர் வரி
தண்டுபவர். பிறர் தன்னைப் பார்த்துப் புகழ வேண்டும்
என்பதற்காக, எல்லோருடைய பார்வையிலும் படும்படியான
இடத்தில் நின்றுகொண்டு செபிக்கிறான் பரிசேயன்.
கடவுளுடைய நன்மைத் தனத்திற்காக அவரைப் புகழ்வதற்கு
மாறாக, தன்னைப் புகழ்ந்து நன்றி கூறுகிறான். கொள்ளையர்,
வரிதண்டுவோர், நேர்மையற்றோர், விபச்சாரர் ஆகியவரோடு
தன்னை ஒப்பிட்டு, தான் அவர்கள்போல் இல்லாதது பற்றி
இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். யூதச் சட்டத்தின்படி
இரு முறை நோன்பு இருப்பதாகவும், தன் வருவாயில் பத்தில்
ஒரு பங்கைக் கடவுளுக்குக் கொடுத்ததாகவும்
அறிக்கையிடுகிறான். இவன் தன் பாவங்களுக்குப் பரிகாரம்
தேடவில்லை. இவைகளையெல்லாம் தற்பெருமைக்காகவே
கடைப்பிடிக்கிறான்.
ஆனால் ஆயக்காரனோ ஆலயத்தின் வெளியே நின்று, தன் பாவத்தை
உணர்ந்தவனாய், வானத்தை அண்ணாந்து பார்க்கக் கூடத்
துணியாமல், மனத்துயரோடு தான் பாவி என்று கூறி, இறைவனின்
இரக்கத்தைக் கேட்டு மன்றாடினான். பரிசேயனைப்போல
ஆயக்காரன் தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்க்கவில்லை.
இவ்விருவருடைய செபங்களில், தனது பாவங்களை உணர்ந்து,
கடவுளுடைய சிறப்பான மன்னிக்கும் அருள் தனக்குத் தேவை
என்று உணர்ந்து மன்றாடிய வரி தண்டுவோரே கடவுளுக்கு
ஏற்புடையவராகி வீடு திரும்பினார் என்று இமேசு
அறிவிக்கிறார் (மூன்றாம் வாசகம்). "ஏனெனில்
தன்னைத்தானே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தன்னைத்
தானே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்" (லூக். 18:14)
என்று இயேசு தீர்ப்பளிக்கிறார்.
சிந்தனைக்காக
ஒரு பக்தன், தான் எந்தப் பணியைத் தொடங்கினாலும், எந்த
இடத்திற்கும் செல்லும் முன்னும், " ஒரு நிமிடம்
செய்வது சரிதானா? போவது சரிதானா? என சுய ஆய்வு செய்து,
தன் பணியைத் தொடங்குவேன்" என்றான். இன்னொரு பக்தன்,
"ஒவ்வொரு நாளும், நான் மற்றவருக்கு உப்பாக, ஒளியாக,
மடியும் கோதுமை மணியாக இருந்தேனா? என்று ஆய்வு
செய்துதான் தன் நாளைக் கழிப்பேன்' என்றான். ஆம்,
இன்று நாம் நம்மையே சுய ஆய்வு செய்ய அழைக்கப்படுகிறோம்.
அப்போது நம்மில் கொடி கட்டிப் பறக்கும் பரிசேயத்தனத்தை,
தவறுகளை உணளர்ந்தவர்களாய், வரிதண்டுவோன் மனநிலை
அடைவோம்.
Fr. M. Arul
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
பொதுக்காலம் 30-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (சீரா. 35:2-4, 6-9)
ஞானம் நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்று
சீராக் கூறுகின்றார். நாம் எவ்வாறு கடவுளுக்கு ஊழியம்
செய்ய வேண்டும், கடவுளை எவ்வாறு வழிபட வேண்டும் என்று ஞானம்.
நமக்குக் கற்பிக்கின்றது. தாழ்ச்சியுடன் வேண்டுபவரின்
மன்றாட்டைக் கடவுள் கேட்கின்றார். கடவுள் ஆள்
பார்த்துச் செயல்படுவர் அல்லர், மாறாக இதயத்தைப்
பார்த்துச் செயல்படுபவர். தங்களைக் கடவுள். முன்
தாழ்த்துபவர்களைக் கடவுள் உயர்த்துகின்றார்,
இரண்டாம் வாசகப் பின்னணி (திமோ. 4:6-8, 6-8)
தூய பவுல் தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் சிறையில்
அடைக்கப்பட்டபோது இந்த வசனங்களை எழுதுகின்றார். சிறையில்
தான் அடைக்கப்பட்டதை விடத் தன்னுடைய நெருங்கிய நண்பர்களைத்
தனியாகத் தவிக்கவிட்டதை நினைத்து வருந்துகின்றார். பவுல்
தன்னுடைய வாழ்வை ஒரு தொடர் ஓட்டமாகவும், இறுதியில் விண்ணக
வெற்றி என்ற கிரீடத்தைப் பெற போகின்ற நம்பிக்கையோடும்,
விசுவாசத்தோடும் தன்னுடைய வாழ்வை வாழும் கடவுளின்
திருச்சபைக்காகக் கையளிக்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 8:9-4)
தங்களை நீதியானவர்கள் என்று தாங்களே கருதி பெருமை கொண்டவர்களுக்குப்
பாடமாக இந்த உவமை அமைந்துள்ளது. கடவுள் நீதியின் நீதிபதி,
தாழ்ச்சியுடன் மன்றாடுவோரின் வேண்டுதல் களை ஏற்கும்
கடவுள். வரிதண்டுபவர் என்று ஒரு காரணத்திற்காக ஒருவரை மக்கள்
தவறாகக்கண்கொண்டு பார்க்கின்ற போது, வரிதண்டுபவரோ தன்னைக்
கடவுள் முன்பாகத் தாழ்த்தி கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும்
பெற்று இறைவனுக்கு ஏற்புடையவர்.
மறையுரை
எதிர்கட்சி இல்லாத நாடு மூக்கணாம் கயிறு இல்லாத மாடு
என்பது பழமொழி. இதன் பொருள் நாட்டில் சில நல்ல
திட்டங்கள் நிறைவேற வேண்டுமானால் எதிர்கட்சி ஒன்று
இருக்க வேண்டும். எதிர்க்கட்சியானது தன்னை
மிகைப்படுத்தியும், ஆளும் கட்சியைக் குறையாகவும்
பேசும்போதுதான் ஆட்சியில் இருப்பவர்கள் சில நன்மையாவது
மக்களுக்குச் செய்வார்கள். எதிர்க்கட்சி விமர்சனம்
செய்யவில்லையெனில் இன்றைய நற்செய்தியில் பரிசேயன்
தம்பட்டம் அடிப்பதுபோல் அவர்களும் தங்களைப்பற்றி
பெருமையாகப் பேசி மக்களுக்கு மொட்டைபோட்டுவிடுவார்கள்.
இதைவிட ஆபத்தான கலாச்சாரத்திற்கு இப்பொழுது அடிமைகளாகிக்
கொண்டிருக்கின்றோம். எடுத்ததந்கெல்லாம் மிகைப்படுத்தும்
தன்மை. அதுதான் விளம்பர உலகம். எழுத்தறி- வித்தவன்
இறைவன் என்று முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் இன்று
சில குழந்தைகள் படிப்பைப் பெற கல்வி நிறுவனங்கள் தங்களை
மிகைப்படுத்துகின்றனர். ஆனால் கல்வியின் தரமோ
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருப்பதில்லை. வீட்டு உபயோகப்
பொருட்களின் விளம்பரங்களைப் பார்க்கின்ற நடுத்தர
மக்களும் அவற்றிற்கு அடிமையாகி பொருட்களை வாங்கி
பயன்படுத்தியப் பிறகு அறிந்துக் கொள்கிறோம்,
விளம்பரத்தில் அவர்கள் கூறியது அனைத்துமே பொய் என்று.
இப்படிப்பட்ட விளம்பரங்களும், விமர்சனங்களும் ஏன்
உருவானது என்றால் அங்கேப் பொருட்களைத்
தயாரிக்கின்றவர்- களுக்கும், பொருட்களை வாங்கி
பயன்படுத்துகின்ற மக்களுக்கும் நேரடி தொடர்பு எதுவும்
கிடையாது.
ஒரு எசமான் இருக்கிறார் என்றால் அவருக்குக் கீழ் பணி
செய்பவர்கள் அனைவரும் அவரைப் பார்க்கும் போதெல்லாம்.
அடக்கமாக நடந்துக் கொள்வார்கள். ஏனென்றால் அங்கே தலை.
வனுக்கும் பணியாளனுக்கும் முன் அறிமுகமும் நேரடி
தொடர்பும் உள்ளன. அதே எசமான் வெளியூர் சென்றால்
அவரைப் பார்ப்- பவர்கள் அவரிடம் பணிவுடன்,
தாழ்ச்சியுடன் நடந்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில்
அங்கு முன் அறிமுகம் என்பது கிடையாது.
கடவுள் மானிடரைத் தம் உருவிலும், சாயலிலும் (தொ.நூ.
:26) படைக்கின்றார். மனிதனின் முதலும், முடிவுமாக
இருப்பவர் கடவுள். இத்தகைய வல்லமை மிக்க கடவுள் நம்மை
முழுமையாக அறிந்தவராக இருக்கின்றார். ஆனால் இன்றைய
நற்செய்தியில் வரும் பரிசேயனோ தன்னைக் கடவுளுக்கு
அறிமுகப் படுத்துகின்றான். இது அவன் செய்த முதல் தவறு.
இரண்டாவது தவறு: தன்னைக் கடவுளிடமிருந்து
பிரித்துவிடுகின்றான். கடவுளை முன் பின் அறிமுகமில்லா
நபராகக் கருதுகின்றான். மூன்றாவது தவறு: தன்னை
நேர்மையாளன் என்பதைக் காட்டிக்கொள்ள அடுத்தவர்களை
மட்டம் தட்டுகின்றான். இந்த மூன்று தவறுகளையும்
செய்ததன் மூலம் கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான
தாழ்ச்சி என்ற புண்ணியத்திலிருந்து தவறி தன்னைக்
கடவுள் முன்பாக 'உயர்த்துகின்றான். தாழ்ச்சியே உருவான
கடவுளை உதாசீனப்படுத்துகின்றான்..
இறைவாக்கினர்களில் திருமுழுக்கு யோவான் மட்டுமே
இயேசுவைக் காணும் பாக்கியம் பெற்றார். இயேசுவுக்குத்
திருமுழுக்கும் கொடுத்தார். ஆனால் அவர் பெருமைப்
பட்டுக்கொள்ள -வில்லை, கடவுள் முன்பாகவும், மக்கள்
முன்பாகவும் தன்னை உயர்த்தவில்லை. மாறாக அவருடைய
மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை (மாற்கு
:7) என்று தன்னை தாழ்த்துகின்றார். இயேசுவைப்
பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றவள் கன்னி மரியாள்.
அதுமட்டுமல்ல, இயேசுவின் ஆட்சி எப்படி மேன்மை மிக்கது
என்று வானதூதர் விளக்குகின்றார். இத்தகையப் பாக்கியம்
பெற்ற கன்னிமரியாள் தன்னைப் பெருமைபடுத்தி
மனிதர்களிடமிருந்து பிரித்தோ, உயர்த்தியோ பார்க்கவில்லை.
மாறாக நான் ஆண்டவரின் அடிமை (லூக்கா :38) என்று
கடவுள் முன்னிலையில் தாழ்ச்சியுடன் நடந்துக்
கொள்கின்றாள்.
அற்புதங்கள், அருஞ்செயல்கள், புதுமைகள், ஞானிகளும்
கண்டு வியக்கும் அளவிற்கு நற்செய்தியாற்றும் திறமை
உடையவராக இருந்தப் போதும் இயேசு ஒருபோதும் தன்னை தந்தை
முன்பாகப் பெருமைப்படுத்தியோ, உயர்த்தியோ கூறியதுக்
கிடையாது. மாறாக, முகங்குப்புற விழுந்து தந்தையின்
விருப்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தன்னைத்
தாழ்த்துகின்றார். இவைகள் அனைத்தும் கடவுள் நமக்குக்
கொடுக்கும் பாடங்கள், படிப்பினைகள். இவற்றோடு கடவுள்
நமக்கு முன்மாதிரியை நிறுத்திவிடவில்லை. இயற்கையின்
மூலம் தாழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
நன்று விளைந்த நெற்கதிர்கள் தலை குனிந்து நிற்கும்.
ஒன்றுக்கும் உதவாதப் பதர் கதிர்களோ தன்னை உயர்த்தி
அசைந்- தாடிக்கொண்டிருக்கும். நாம் பயிரிட்டால், நாம்
பயிரிடுகின்ற பொருட்களை விடக் களையானது சற்று உயர்ந்தே
நிற்கும். ஆனால் அதனுடைய உயர்வு நிரந்தரமானது கிடையாது.
காரணம், தோட்டக்காரன் வந்து உயர்ந்து நிற்கும்
களைகளைப் பிடுங்கி தீயிட்டு எரிப்பான்.
யோவானும், கன்னிமரியாளும், கிறிஸ்து இயேசுவும்
தங்களைக் கடவுளின் கனிகளாகக் கருதினார்கள். மேலும்
அவர்களுடைய உயர்வும் கடவுளிடம் இருந்தே வருகின்றது
என்பதை நன்கு உணர்ந்த அவர்கள் தாழ்ச்சி என்ற புண்ணியத்தை
வாழ்ந்துக் காட்டினார்கள். ஆனால் மனிதர்களாகிய நாம்
கடவுளை மறந்து விடுகின்றோம், நம்முடையத் திறமையால்
அனைத்தையும் சாதித்துவிட்டதாக நினைத்து நாம் பெருமைப்
படுகின்றோம். நமக்கு இந்த அருமையான, அந்தஸ்து மிக்க,
வளமையான வாழ்வைக் கொடையாகக் கொடுத்தவர் கடவுள் என்பதை
நாம் மறந்து விடுகின்றோம். போராட்டம் நிறைந்த உலகில்
தம் பிள்ளை நன்றாக வாழவேண்டுமென்று நல்ல திறமையைக்
கொடுத்தார் கடவுள். ஆனால் நாமோ நம்முடையத் திரமையைப்
பற்றி அவரிடமே பெருமையாகக் கூறுகின்றோம்.
இவ்வாறு நாம் செயல்படுகின்றபோது பரிசேயனைப்போன்று நாம்
நம்மையேக் கடவுளிடமிருந்து பிரிந்துகொள்கின்றோம்.
கடவுள் தாழ்ச்சியை விரும்புகின்றார். கிறிஸ்துவிற்குள்
ஞானஸ்தானம் பெற்ற நாம் அனைவரும் மனத்தில் நிறுத்த
வேண்டியது. தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும்
தாழ்த்தப்பெறுவர்: தம்மைத்தாமே தாழ்த்துவோர்
உயர்த்தப்பெறுவர் (லூக்கா 4:) நாம் எந்த அளவிற்கு
உயர்கின்றோமோ அந்த அளவிற்கு நாம் நம்மை கடவுள்
முன்பாகத் தாழ்த்த வேண்டும். வாழ்வில் வளங்களையும்,
வசதிகளையும், குழந்தைப் பாக்கியத்தையும் அளித்த கடவுளை
நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டும். நாம்
கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்பது நமது தாழ்ச்சியான
செபத்தாலும், வாழ்க்கை முறையாலும் நாம் வெளிப்படுத்த
வேண்டும். அது மட்டுமல்ல முதல் வாசகம் தங்களைத்
தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச்
செல்லும் என்று கூறுகின்றது. எதையும் வாழ்ந்து
பார்த்தால்தான் அனுபவிக்க முடியும். எனவே இன்று முதல்
வாழத் தொடங்குவோம், கடவுள், வார்த்தை மாறாதவர்,
நிச்சயம் நம்மையும் உயர்த்துவார் என்ற நம்பிக்கையில்
வாழ்ந்துக் காட்டுவோம். வரித்தண்டுபவரைப்போல கடவுளுக்கு
ஏற்புடையவர்களாகி வாழ்வோம், வாழ்ந்துக் காட்டுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 இறைமகன் இயேசு தான் கடவுளின் மகன் என்பதை மனதில்
நிறுத்தி வாழ்ந்தார். நாமும் கடவுள் முன் நம்மை நாம்
முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது கடவுள் நம் பொருட்டு
மகிழ்ச்சியடைவார்.
🕇 நாம் எந்த மனநிலையோடு கடவுளை வழிபட வருகின்றோம்!
இறைமகன் இயேசு தன் பணியைச் செய்ய உலகில் அவதரித்து,
தான் செய்தச் செயல்களைப் பற்றி தந்தையிடம் பெருமைப்
பாராட்டவில்லை, மாறாகக் கடவுளைச் சார்ந்து வாழ்ந்தார்.
அதே போன்று நாமும் நம் செயல்கள் மட்டில் பெருமைப்
பாராட்டாமல் கடவுளைச் சார்ந்து வாழ வேண்டும்.
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பொதுக் காலம் முப்பதாம் ஞாயிறு
இன்றைய முதல் வாசகமும் நற்செய்தியும் இறைவேண்டல் பற்றி
சிந்திக்க அழைக்கன்றன. முதல் வாசகத்தில் இறைவன் தம்மை
நோக்கி மன்றாடுபவர் மட்டில் எப்படிச் செயல்படுகின்றார்
என்று கூறுவதைக் காண்கிறோம். குறிப்பாக,
தீங்கழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின்
வேண்டுதலைப் புறக்கணியார்.தம்மிடம் முறையிடும்
கைம்பெண்களைக் கைவிடார் தங்களைத் தாழ்த்துவோரின்
வேண்டுதல் முகல்களை ஊடுருவிச் செல்லும் என்கிறார்
சீராக் நூலின் ஆசிரியர். ஆக ஏழையரின் வேண்டுதல் இறைச்
சமூகத்தில் கேட்கப்படும். நற்செய்தியில் இறைவேண்டல்
செய்பவரின் மனநிலை எப்படி இருக்கக்கூடாது மற்றும் எப்படி.
இருக்கவேண்டும் என்பதை இயேசு ஓர் உவமை மூலம் விளக்குகின்றார்.
இந்த வார நற்செய்திப் பகுதி கடந்த ஞாயிற்றுக்கழமையின்
நற்செய்திப்பகுதியின் தொடர்ச்சியாகும். எனவே கடந்த வார
நற்செய்திப் பகுதிக்குக் கூறப்பட்ட பின்னணிகள் இன்றைய
நற்செய்திப் பகுதிக்கும் பொருந்தும் எனபது சொல்லாமல்
விளங்கும். அதோடு, இன்றைய நற்செய்திப் பகுதியை, உவமையை
எப்படி அணுக வேண்டும், அதைத் திறக்கும் திறவுகோல் எது
என்பதை அல்லது இந்த உவமையின் நோக்கம் எது என்பதை இயேசு
துவக்கத்திலேயே கூறிவிடுகின்றார். அதாவது தாங்கள்
நேர்மையானவர்கள் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை
(வச. 9) நோக்கி அவர்களின் மனமாற்றத் திற்காக, அல்லது
செபிக்கவேண்டிய முறையாது என்பதை விளக்குவதற்காக இவ்வுவமை
கூறப்பட்டது. இவர்கள், நற்செய்தி களின் பின்னணியில், பரிசேயரையும்
மறைநூல் வல்லுநர் களையும் குறித்துக் காட்டப்படுவர்
என்பது தெளிவு. இருப்பினும், இது இன்றும் நம்மிடையே
வாழும் இரு நிலை மக்களுக்கும் பொருந்தும் எனவும் கொள்ளலாம்.
மேலும் இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்யும் இறைவாக்கினர்
எனும் முறையில், இறைவன் தலைகீழாக மாற்றிப் போடுபவர்
எனும் இறைவாக்குச் செய்தியையும் இந்த உவமை முடிகன்றபோது,
பரிசேயரல்ல, வரிதண்டபெவரே கடவுளுக்கு. ஏற்புடையவராகி வீடு
திரும்பினார் என்றும் (வச. 14), தம்மைத் தாமே உயர்த்துவோர்
தாழ்த்தப் பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்
பெறுவர் (வச. 14) எனும் இயேசுவின் வார்த்தைகளில் காண
முடிகின்றது. இந்த உவமையில் வரும் இரு கதைமாந்தர்களையும்
அலசுவதன் வழியாக இயேசு கூறவரும் இறைவேண்டல் குறித்த
செய்தியை இனிப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுப்போம்.
1. ஒருவர் பரிசேயர்
இவ்வுவமையில் வரும் பரிசேயர் எவ்வாறு இறைவேண்டல்
செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாகிறார், எதிர்-மாதிரி
யாகின்றார். அவரது செபத்தில் செ பல குறைபாடுகள்
இருந்தன. அவர் செபத்தைத் தனது தற்புகழ்ச்சியின் இடமாக,
வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். தன்னுடைய
நற்செயல்களைக் கூறுவதன் மூலம் ஒருவிதத்தில்
இறைவனுக்குதான் அவசியம், தேவை என்று கூற முயல்கின்றார்.
தன்னை கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர்... இந்த
வரித்தண்டுபவர் (வச. 11) ஆகியோருடன் ஒப்பிட்டுப்
பார்த்து தன்னை உயர்ந்தவராக எண்ணிக் கொண்டார். அவர்
தன் செயல்பாடுகளான நோன் பிருத்தல், பத்திலொரு பங்கைச்
செலுத்துதல் ஆகியவற்றை மேலோட்டமாகக் கண்டு தன்னைக்
குறித்து பெருமை பாராட்டிக் கொண்டார். தன்னால்
என்னவெல்லாம் செய்யமுடிகிறது, செய்யப்பட்டது எனக்
கூறுவதன் மூலம்தான் இறைவனுக்கு என்னவெல்லாம்
தரமுடியும் என்று நினைத்தாரேயொழிய, தான் எதை
இறைவனிடமிருத் து பெற்றுக் கொள்ள முடியும் என எண்ணாமல்
போனதால், இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதை (வச.14)
பெற்றுக்கொள்ள முடியாமல் வெறுங்கையராய் அவர் வீடு
திரும்பினார். இவற்றைவிட, கடவுளுக்கே உரித்தான
தீர்ப்பிடும் பண்பை தனதாக்கிக் கொண்டு தன்னுடைய
நற்பண்புகளை இறைவன் முன்பட்டியலிடுகின்றார். கொள்ளையர்,
நேர்மையற்றவர், விபசாரர், வரிதண்டேபவர் ஆகியோரின்
குறைகளை இறைவனுக்குக் குறிப்பிட்டுக் காட்டுகின்றார்.
அவர்களை தீர்ப்பிடுகின்றார்.
2. மற்றவர் வரிதண்டுயவர்
வரி தண்டுபவர் பரிசேயருக்கு நேர்மாறாக வேண்டுதல்
செய்கின்றார். அவரது மன்றாட்டில் எளிமை, உண்மை, நேர்மை
இருந்தது. அவர்தான் இறை சமூகத்தின் முன்வரும்போது தான்
பாவி என்பதை உணருகின்றார். தன் உண்மை நிலையை ஏற்றுக்
கொண்டு தொலைவிலேயே நின்று விடுகின்றார் (வச. 13), இறைவனை
நேராக பார்க்கும் தகுதியும், திராணியும் தன்னிட
மில்லையாதலால் வானத்தை அண்ணாந்து பார்க்காமல் (வச.
13), மன வருத்தத்தின் அடையாளமாக தம் மார்பில்
அடித்துக் கொண்டு, கடவுளே, பாவியாகிய என்மீது
இரங்கியருளும் (வச. 13) என்று இறை இரக்கத்திற்காகவும்,
மன்னிப்பிற்காகவும் மன்றாடுகின்றார். தன் குறையையும்,
இல்லாமையையும் அவர் உணர்ந்து ஏற்றுக்கொண்டதால்,
இறைவனால் அவரைத் தமது ஏற்புடைமையால் நிரப்ப முடிந்தது
(வச. 14). அவர் தம்மையே தாழ்த்திக் கொண்டதால் இறைவனால்
அவரை உயர்த்த முடிந்தது (வச. 14). அவர் தன்னை இறைவனோடு
ஒப்பிட்டுப் பார்த்ததால் பரிசேயர்போல் பிறருடன் தன்னை
ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் அவருக்கு எழவில்லை.
எனவே லூக்கின் பார்வையில் செபம் என்பது ஒருவரது
நம்பிக்கையை வெளிப்படுத்தும் செயல்பாடு, இறைவன் முன்
தன் நிலை உணர்தல், இறைவனோடு உள்ள உறவேயன்றி தற்புகழ்ச்சி
அல்ல.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - முப்பதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : சீஞா. 35: 15-17.20-22
மோசேயின் சட்டத்தில் உள்ள கட்டளைகளை நடை முறைக்குக் கொண்டு
வருவது பற்றிக் கூறுகிறது சீராக்கின் ஞானம். மனித வாழ்வின்
அன்றாட நிகழ்ச்சிகள், நடைமுறைகள்பற்றிய விளக்கம்
இப்புத்தகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. இன்றைய வாசகம்
கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுபற்றி, சிறப்பாக
நீதியுள்ள வாழ்வு, தாழ்ச்சியுள்ள வாழ்வு பற்றிக்
கூறுகிறது.
நீதியுள்ளவர் கடவுள்
ஆண்டவர் நீதியுள்ளவர். "அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை;
கையூட்டு வாங்குவதும் இல்லை" (இச. 10 :7). 'உமது செங்கோல்
வளையாத செங்கோல்" (தி.பா. 45: 4-7). அவர் வதியும் நகரம்
"நீதியின் நகர் எனப் பெயர் பெறும்; உண்மையின் உறைவிடம்
எனவும் அழைக்கப்படும்" (எசா.1 :26). அது ஆண்டவரே நமது
நீதி" என்று பெயர் கொள்ளும் (எரே. 33:16). அவர்
ஏற்படுத்திய அரசர்களும் நீதியுள்ளோராயிருத்தல் வேண்டும்.
"கடவுளே, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும் ஆற்றலை
அளியும்... எளியோரின் மக்களுக்கு நீதி வழங்குவாராக! ...
கதிரவனும் நிலாவும் உள்ள வரையில் உம் மக்கள் உமக்கு அஞ்சி
நடப்பார்களாக" (திபா. 72: 1- 7). அவர் திருமகன் கிறிஸ்து
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர்
விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என
முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்"
வந்த நீதிமான் (லூக் 4:18-19). நீதிக் கடவுளின் பிள்ளைகள்
நாம்; நீதியே உருவான இயேசுவின் சகோதரர்கள் நாம். நம்
வாழ்விலே நீதி இருக்கிறதா? ஏழை எளியோருக்கு, பணியாளருக்கு,
சிறியோருக்குச் சொல்லிலும் செயலிலும் நீதி வழங்குகிறோமா?
"நீதிக்குக் குரல் கொடுப்போம்" என்பது ஒரு "கோஷமாக"
மட்டும் தானே இருக்கிறது? நம்முடைய வாழ்க்கையைத் தொட்டதாக
இல்லையே? நாம் பொய்யர்கள் இல்லையா?
இரக்கம் மிக்கவர் கடவுள்
"எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி மேகத்தால் உம்மை
மூடிக்கொண்டீர் (புல. 3: 44) என்று வருத்த மிகுதியிலே
புலம்பல் ஆகம ஆசிரியர் புலம்பினாலும், "நம்முடைய
வேண்டுதல்கள் மேகங்களை ஊடுருவிப் போகும் தன்மையன" (சீஞா.
35:21) என்பதை நாமறிவோம். "தாம் தேர்ந்துகொண்டவர்கள்
அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள்
அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத்
துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?" (லூக் 18:7) என்ற
இயேசுவின் சொற்களும் நமக்குப் படிப்பிப்பது இதுதானே. இரக்க
மிகுந்தவரன்றோ கடவுள்? நமது ஈனநிலையை, இழிநிலையை உணர்ந்து
நாம் கதறிடும் குரலுக்குச் செவிமடுக்காதிருப்பாரா?
"ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும், உமது
பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்" (திபா. 6: 4) என்று
கதறியழும் திருப்பாடல் ஆசிரியர், "ஆண்டவர் என்
விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை
ஏற்றுக்கொண்டார்" (திபா. 6: 9) என்று அதே திருப்பாடலை
முடிப்பதன் பொருள் இதுதானே.
எனவே தாழ்ச்சியோடு வேண்டுவோம்; நம்பிக்கையோடு மன்றாடுவோம்;
விடாது செபிப்போம்: கேட்டுக்கொண்டே இருப்போம், தட்டிக்
கொண்டேயிருப்போம், தேடிக்கொண்டே இருப்போம். ஆண்டவர்
தூரமாய்ப் போகமாட்டார்" (சீஞா. 35 : 22). நீதியின் கடவுள்,
இரக்கத்தின் இறைவன் "நீதிமான்களை ஆதரித்துத்
தீர்ப்பிடுவார்(35:22). தன்மை பிறராலறியாத தலைவா, பொல்லா
நாயான புன்மையேனை, ஆண்டையா, புறமே போகவிடுவாயோ? என்னை
நோக்குவார் யாரே, என் நான் செய்கேன், எம்பெருமானே...
எங்குப் புகுவேனே (திருவா. திருச்சதகம்)
திமொத்தேயுக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்தின் இறுதிப்
பகுதி இன்றைய வாசகமாயமைகிறது. தன்னுடைய வாழ்வின் இறுதிக்
காலத்தைப் பற்றிக் கூறும் பவுல் தனது நம்பிக்கை பற்றியும்
(4: 6-18) இறைவன் தனக்களித்த பரிசு பற்றியும் (4: 16-18)
இப்பகுதியில் எடுத்துரைக்கிறார்.
பவுல் வாழ்க்கை
இறைவனுக்காக, நற்செய்திக்காகத் தன்னையே அர்ப்பணித்த பவுல்
இவ் அர்ப்பண வாழ்வை இரண்டு எடுத்துக்காட்டுகள் வழி
விளக்குகிறார். இரத்தம் சிந்துவது உயிரைக் கொடுத்தலுக்குச்
சமம். நற்செய்திப் பணியிலே பவுல் தன் உயிரையும் ஒரு
பொருட்டாக எண்ணவில்லை. "நம்பிக்கையால் நீங்கள் படைக்கும்
பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக
வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.
அம்மகிழ்ச்சியை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
(பிலிப் 2 : 17). இதோ என் வாழ்க்கை, பலியின் இரத்தமென
வார்க்கப்படுகிறது" (2 திமொ 4:6) என்பார்.
அடுத்து, பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே
தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக்
கட்டுப்படுத்துகிறேன்" (1 கொரி 9 : 27). பந்தயத்தில்
போட்டி இடுகிறவர்கள் போன்று கட்டுப்பாடான வாழ்க்கையை
வாழ்ந்தார். துன்ப துயரம் எதிர்ப்பட்ட வேளையிலும்
குறிக்கோளிலே வைத்த கண் வாங்காது ஓடினார் பவுல்.
நற்செய்திக்குச் சான்று பகர அழைக்கப்பட்டுள்ள நம்
அனைவருக்கும் எவ்வளவு அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறார்
பவுல்? நற்செய்தியை, அதன் மதிப்பீடுகளைப் பறைசாற்றுவதற்காக
நம்முடைய நேரம், பணம் உழைப்பு இவற்றிலே ஒரு சிறிதாவது நாம்
விரும்பி அளிக்கிறோமா?
ஆண்டவர் துணை
வேலை செய்பவன் கூலிக்கு உரிமையுடையவன். இறைவனுக்காக,
அவருடைய நற்செய்திக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு உழைத்து
ஓய்ந்த பவுலுக்கு இறைவனே பரிசு அளிக்கிறார். "வாழ்வின்
பரிசான வெற்றி வாகை எனக்காகக் காத்திருக்கிறது" (4 : 8).
இறுதி நாளில் மட்டும் இறைவன் பவுலுக்குக் கைம்மாறு
அளிப்பதில்லை; வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலுமே அவருக்குத்
துணை நின்றார் (4: 17); அவரைத் தமது வழிகளிலே
உறுதிப்படுத்தினார் (4: 17); தீயோரின்
தாக்குதல்களிலிருந்து அவரைப் பாதுகாத்தார் (4:17).
நற்செய்திக்காக நாம் உழைக்கும்போது நமக்கும் கட்டாயம்
இடைஞ்சல்கள் இன்னல்கள் வராமல் இருக்காது, அவ்வேளைகளில்
நாம் மனம் கலங்கித் தளர்வது கூடாது, அந்த இன்னல்களிடையே
இறைவனின் அன்புக்கரம் நம்மை வழிநடத்துகிறது என்பதை உணர
வேண்டும், இப்படி அவர்கள் நீதிமன்றங்களில் உங்களை
ஒப்புவிக்கும்பொழுது, 'என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என
நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும்
என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும் (மத் 10: 17-
20) என்ற இயேசுவின் சொற்கள் நமக்குத் துணை புரிவனவாக.
அவருடைய அயரா உதவியில் நம்பிக்கை வைத்து இன்னலென்றும்
இடைஞ்சலென்றும் பாராது, பசியென்றும் தாகமென்றும் கணிக்காது
உழைப்போம். நற்செய்தி மதிப்பீடுகளுக்கு ஏற்ற வாழ்வு
வாழ்வோம்.
ஆண்டவர் எனக்குத் துணை நிற்கிறார்.
நற்செய்தி : லூக் 18:9-14
என்றும் தம் புகழ் பாடிய பரிசேயர்கள், தங்களைவிடப்
பக்தியிலும், சட்டங்களை அனுசரிப்பதிலும் சிறந்தவர் வேறு
எவருமில்லையென்று இறுமாப்புக் கொண்டனர். பரிசேயரல்லாதவர்
இறைவனுக்கு ஏற்புடையவர் அல்லர் என்பது அவர்கள் கணிப்பு.
இவர்களை இறைவன் எடைபோடும் முறையே இன்றைய நற்செய்தி.
பரிசேயச் செபம் சுயநலம்
பரிசேயர்களைத் திருத்தும் நோக்கத்துடன் ஆண்டவர்
பரிசேயர்களைக் கடிந்து கொள்ளுகிறார். தங்கள் போதனையைச்
செயல்படுத்தாதவர்கள்; பலர் பார்ப்பதற்காகத் தெருவில்
நின்று செபிப்பவர்கள்; குருட்டு வழிகாட்டிகள் (மத் 23).
இத்தகைய பரிசேயன் செபிக்க வருகிறான். இறைவன் பாராட்டு
முன்னரே, இவன் தன்னையே பாராட்டிக் கொள்ளுகிறான். நோன்பு,
வருவாயில் பத்திலொரு பங்கு என்று அடுக்குகிறான் (இச.14 :
22 -27). இவன் நல்லவன் என்பது நமது கணிப்பு. இயேசுவின்
மதிப்பீடு முற்றிலும் மாறானது. இவன் நீதிமானாக வீடு
திரும்பவில்லை. அவன் தன்னையே செபத்தின்மையமாக்கிக்
கொண்டான். சட்டங்களைத் தான் சரிவர அனுசரித்ததற்காகக்
கடவுள் தனக்குக் கடமைப்பட்டுள்ளார் என்று எண்ணுமளவுக்கு,
நான் என்ற ஆணவம், தற்புகழ்ச்சி, சுயநலம் அவனை ஆட்கொண்டது.
"யான் எனது என்னும் செறுக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)
என்பதை மறந்தான்.
"செல்வரை வெறுங்கையராக அனுப்பினார்என்ற (லூக் 1:52)
அன்னையின் வாக்கு இவனில் நிறைவேறிற்று எனலாம். இன்றுகூட
பலர் கோவிலுக்கு ஒழுங்காகச் செல்வர்; வெள்ளி, சனி தவறாது
நோன்பு இருப்பர்; கொள்ளையடித்த பொருளில் ஒரு பகுதியைக்
கோவில் உண்டியலில் கூடப் போடுவர். ஆனால் அவர்கள்
உள்ளத்தால் இறைவனுடன் ஒன்றித்து இரார். காரணம் அவர்களது
சுயநலமே.
ஆயக்காரச் செபம் தாழ்ச்சிச் செபம்
ஆயக்காரன் கோவிலின் ஒரு மூலையில் நிற்பதும் கடவுளை
ஏறெடுத்துப் பார்க்கத் துணியாததும், 'கடவுளே, பாவி என்மேல்
இரக்கமாயிரும்' என்று சொல்லி மார்பில் அறைந்து கொள்வதும்
(18:13), இறைவன் முன் தன்னையே அவன் வெறுமையாக்கிக்
கொண்டதையும், அவரால்தான் தனக்கு மீட்பு உண்டு என்று
உலகறியப் பறை சாற்றியதையும் குறிக்கிறது. இறைவன் முன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் அளவிற்குத் தான் செய்தது
ஒன்றுமில்லையென்பதை உணர்கிறான். தன் பாவங்களையே
மூலதனமாக்கி இறைவனின் பாராட்டைப் பெற்றுவிடுகின்றான்.
"ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம்
ஏமாற்றிக்கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம்
பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை
மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத்
தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர்;
நேர்மையுள்ளவர் (1யோ. 1:8-9; காண் தீபா. 31 &50).
ஆயக்காரனின் பரவசச் செபம் "தாழ்ந்தோரை உயர்த்தினார் என்ற
மரியாவின் சொற்களை நினைவுபடுத்துகிறது. இவன் பாவியாகக்
கோவிலில் நுழைந்தான். தன் பாவங்களை அறிக்கையிட்டான்;
மன்னிப்பு வேண்டினான். இவனே நீதிமானாய்த் திரும்பிச்
சென்றான். ஆண்டவர் கூறிய இவ்வுவமையைக் கேட்ட மக்கள்
பரிசேயனை நீதிமானாகவும், ஆயக்காரனைப் பாவியாகவுந்தான் எடை
போட்டிருப்பர். ஆனால் ஆண்டவர் தீர்ப்பு முற்றிலும் மாறாக
இருந்தது. "என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள்
வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்பது வேதவாக்கு (எசா.
55 :8). மக்களுடைய மதிப்பீட்டைவிட இறைவனுடைய மதிப்பீடே
நமக்குத் தேவை. இறைவனின் இறுதித் தீர்ப்பு நாளிலே மக்கள்
தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஒவ்வொரு பக்தனும் இறைவன்
முன்னிலையில் ஆயக்காரனாக மாற வேண்டும். பரிசேயத்தன்மை
என்னிடம் உண்டா? அதை வேரறுக்க என்ன செய்கிறேன்?
தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத்
தாழ்த்துகிறவன் உயர்த்தப் பெறுவான்
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ