ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

       பொதுக்காலம் 2ஆம் ஞாயிறு ழா

    திருப்பலி முன்னுரை

    வருடாந்த
ஞாயிறு வாசகம்
  pdf/Calendrier-litrugique2021.pdf
 
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
இயேசு அழைக்கும் குரலொலி கேட்க வந்திருக்கும் அன்பர்களே!
B தவக்காலம்1  
"வந்து பாருங்கள்" என்று இயேசு அழைக்கும் குரலொலி கேட்டு, அவர் விரும்பும் பணியைச் செய்ய, இந்த ஞாயிறு நம்மை வரவேற்கிறது.

நான் கட்டிய வீட்டை வந்து பாருங்கள். என் பிள்ளைகளை வந்து பாருங்கள். நான் நீண்டதூரத்தில் இருக்கிறேன் என்னை ஒரு முறை வந்து பாருங்கள். இதுபோல அன்றாட பணிகளுக்கு இடையில் அன்போடு "வந்து பாருங்கள" என அழைப்பு விடுக்கும் சுற்றமும், நட்பும் உறவை உறுதிபடுத்த, மகிழ்ச்சியை மிகுதியாக்க, இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் உணர்வின் வெளிப்பாடு.

தன்னைப் பின் தொடர்ந்த சீடர்களை திரும்பி பார்த்து, என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டபோது, வந்து பாருங்கள் என சீடர்களுக்கு யேசு அழைப்பு விடுத்ததே, தன் பணியைச் செய்யும் கருவிகளாக பயன்படுத்தவே.

இந்த அழைப்பு அவர்களின் வாழ்க்கைப் பாதையையே புரட்டிப் போடுகிறது.

என்ன தேடுகிறீர்கள் என்ற கேள்வியை யேசு நம்மை பார்த்து கேட்கிறார். நமது வாழ்க்கையில் பொன், பொருள், பதவி, பட்டம், அதிகாரம் எனத் தேடிக் கொண்டிருக்கும் நம்மைப் பார்த்து "வந்து பாருங்கள்" என அழைக்கிறார்.

ஆண்டவரைத் தேடி சென்று, அவர் விடுக்கும் அழைப்பை ஏற்று, அன்பை விதைக்க இறையுறவில் நம் குடும்பத்தைக் கட்டி எழுப்ப, இறைவனின் திருவுளம் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளோம்.

நமது கடமையை மிகச் சரியாகச் செய்ய அருள் தரும் திருப்பலி இது. இறைவனின் அழைப்பை ஏற்று அவரின் அன்பைத் தேடி, அதையே நம் வாழ்க்கை பாதையில் விதைக்கும் வல்லமை கேட்டு மன்றாடுவோம்.
 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
 
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. பெயரைச் சொல்லி உம் பணிக்கு உரியோரைத் தேர்ந்தெடுத்த தந்தையே!
ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என, நீர் அழைத்த குரலுக்கு செவிமடுத்த திரு ஆட்சியாளர்கள் ஆற்றும் திருப்பணியை ஆசீர்வதியும். அருள் பொழிவு பெற்ற ஒவ்வொருவரும் அழியாத செல்வத்தை சுட்டிக்காட்டும் விரல்களாய் திரு அவையில் செயல்பட அருள் தர, தந்தையே உம்மை மன்றாடுகிறோம்.
நம்பதில்:- வந்து பாருங்கள் என அழைத்த தந்தையே, எங்களை நிறைவாய் ஆசீர்வதியும்!

2. எங்களை விலை கொடுத்து மீட்ட எங்கள் அன்புத் தந்தையே!
தெய்வீக ஆலயமாக நீர் படைத்த எங்கள் உடலையும், உள்ளத்தையும் நீர் வாழும் ஆலயமாக பேணி பாதுகாக்கவும், எங்களின் தரக்குறைவான பேச்சுகளால், செயல்களால் எங்களது உடலையும், எங்கள் அயலாரின் உடலையும் பாதிக்காது, எங்கள் உடலால் உமக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் வாழ அருள் பொழிய, தந்தையே உம்மை வேண்டுகிறோம.
நம்பதில்:- வந்து பாருங்கள் என அழைத்த தந்தையே, எங்களை நிறைவாய் ஆசீர்வதியும்!

3. தூய ஆவி தங்கும் ஆலயமாய் எங்கள் உடலைப் படைத்த தந்தையே!
மாந்தர் அனைவரும் இறைவன் உறையும் ஆலயம் என்பதை உணர்ந்து, நாட்டு நலப் பணியால் உமக்கு பெருமை சேர்க்கும் வண்ணம், மக்களுக்காக நற்பணியாற்ற நாட்டுத் தலைவர்களுக்கு அருள் பொழிய வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
நம்பதில்:- வந்து பாருங்கள் என அழைத்த தந்தையே, எங்களை நிறைவாய் ஆசீர்வதியும்!

4. "வந்து பாருங்கள்" என எமை அழைக்கின்ற தேவனே!
உம்மைப் பின் தொடர்ந்து அழியாத செல்வமாகிய உம்மை தங்களது பணியால், எங்களுக்கு சுட்டிகாட்டிக் கொண்டிருக்கும் எங்கள் ஆன்மீகத்தந்தையரின் உழைப்பை, இன்னும் உயர்த்திட வேண்டுமென்று, ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
நம்பதில்:- வந்து பாருங்கள் என அழைத்த தந்தையே, எங்களை நிறைவாய் ஆசீர்வதியும்!


5. என்ன தேடுகிறீர்கள் என எங்களைப் பார்த்து கேட்கும் தந்தையே!
எங்கள் வாழ்க்கையில் பொன் பொருள், பதவி, பணம் என அழியக்கூடிய செல்வத்தைத் தேடி சம்பாதித்து வைத்திருக்கிறோம். இவற்றின் வழியாக அழியாத செல்வமாகிய உம்மைத் தேடிக் கண்டு கொண்டு, பிறருக்கும் உம்மை பற்றிய செய்தியை அறிவிக்க எங்களையும் பயன்படுத்த வேண்டுமென்று, தந்தையே உம்மை மன்றாடுகிறோம்.
நம்பதில்:- வந்து பாருங்கள் என அழைத்த தந்தையே, எங்களை நிறைவாய் ஆசீர்வதியும்!

 
மறையுரை சிந்தனைகள்
 
மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா.

தேடல் என்னும் பொக்கிசம்

இளைஞன் ஒருவன் தனது வீட்டின் பரண் பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் எதிர்பாராத விதமாக அவனது கண்களுக்கு பழைய புத்தகம் ஒன்று தென்பட்டது. அதனை எடுத்து என்ன புத்தகம் என்று ஆவலுடன் பார்த்தவன் அதிர்ந்து போனான் ஏனெனில் அது உலகின் மிகப்பெரிய பொக்கிசங்கள்,மற்றும் புதையல்கள் எங்கு உள்ளன என்பதை எடுத்துரைக்கும் மந்திரப் புத்தகம் ஆகும். இதனைக் கண்டவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து தனது வாழ்வும் முன்னேற ஏதாவது வழி கிடைக்குமா என்று எண்ணினான். பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்ததால் புத்தகத்தின் பக்கங்கள் அனைத்தும் மிகவும் பலவீனமாக இருந்தன. தொட்டாலே கிழிந்து போகும் அளவிற்கு இருந்த அப்புத்தகத்தை அவன் பத்திரமாக பிரித்துப் பார்த்தான்.

இறுதியாக ஒரு கருங்கடல் கடற்கரையில் கிடைக்கும் கருப்புநிற விலைமதிப்பற்ற கற்களால் எந்த பொருளைத் தொட்டாலும் அது தங்கமாக மாறிவிடும் என்பதை அறிந்து கொண்டான். எனவே கருங்கடல் பகுதிக்கான வரைபடத்தை குறிப்பெடுத்துக் கொண்டு அவ்விடத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாள்கள் பயணத்திற்குப் பின் கருங்கடலின் கடற்கரை அருகே வந்து சேர்ந்தான். கருப்புநிறக் கற்களைத் தேட ஆரம்பித்தான். கடலுக்குள் சென்று ஒவ்வொரு கற்களையும் எடுத்துத் தொட்டுப் பார்த்தான். வெதுவெதுப்பான கற்களே மந்திர சக்தி வாய்ந்த கற்கள் என்பதை தனது மந்திரப்புத்தகத்தின் குறிப்பால் அறிந்து கொண்ட அவன், அந்த வெதுவெதுப்பைக் கைகளினால் உணர முயற்சித்தான். நாள்கள் வாரங்களாக மாதங்களாக உருண்டோடின. கடற்கரை அருகிலேயே தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டான். அந்த வாழ்க்கையிலே மிகுந்த மகிழ்வு அடைந்தவன், தான் வந்த நோக்கத்தை மறந்து போனான். கடற்கரையின் அழகிலும் அங்கு வாழும் வாழ்க்கையிலும் தன் மனதை மகிழ்வாக வைத்துக்கொண்டவன், கற்களின் வெதுவெதுப்பை உணரும் தன்மையை மறந்து போனான். ஒரு காலகட்டத்தில் கற்களின் வெதுவெதுப்பை அவன் கைகளால் உணர முடியாத அளவிற்கு அவன் மனம் மாறிப் போனது. இருப்பினும் கடலுக்குள் சென்று கற்களை அள்ளி வருவது அதனைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறிவது என்று அதனை ஒரு தொழிலாகவே செய்து கொண்டிருந்தான். அதுவே அவனது பழக்கமாகிப் போனது. குறிப்பிட்ட நாளில் அவன் கைகளுக்கு அந்த கருப்புநிற மந்திரக்கல் தென்பட்டது ஆனால் அவன் வழக்கம் போலவே அதனை தொட்டுப்பார்த்துவிட்டு கடலுக்குள் வீசினான்.

கதை இத்துடன் முடிகின்றது. இளைஞனின் தேடல் மந்திரக் கல்லை தேடுவதாகத் தொடக்கத்தில் இருந்தது. ஆனால் தான் வந்த நோக்கம், தனது தேடுதலின் நோக்கம் என்ன என்பது அனைத்தையும் மறந்து, இருக்கும் இடத்தில் மகிழ்வைத் தேட ஆரம்பித்தான். எனவே அவனால் அவன் அடைய நினைத்த செல்வத்தை அடைய முடியவில்லை. இன்றைய நற்செய்தியின் வழியாக இறைவன் நமக்கு வலியுறுத்துவதும் இதுவே. தேடல் மிக முக்கியமானது பொக்கிசமானது.

தேடல் தேடலுக்கு இல்லை முற்றுப்புள்ளி. தேவைக்கதிகமாய் தேடியதெல்லாம் தேவையில்லையென தூக்கி எறியப்பட்ட பின்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது இந்தத் தேடல். போதும். யாருக்காக இந்தத் தேடல் எதற்காக இந்தத் தேடல் என்று அறியாமலே நமது இந்தத் தேடல் தொடர்கின்றது. நமது தேடல் பொக்கிசமாக புதையலாக இருக்க இறைவன் இன்றைய நாளில் அழைக்கின்றார். நமது தேடலில் தெளிவும், ஏன்? எதற்காக? என்ற கேள்விக்கான பதிலும் இருக்கும் போது நமது தேடல் அர்த்தமாகும் ஆழமானதாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் சிறுவன் சாமுவேல் இறைவன் குரலுக்கு பதிலளிக்கும் நிகழ்வு குறித்து நாம் கண்டோம். சிறுவன் சாமுவேலைப் பொறுத்த அளவில் ஏலி தான் அவருக்கு எல்லாம். அவர் சொல்வது தான் வேதவாக்கு. அவர் சொல்படியே ஆண்டவரின் இல்லத்தில் பேழைக்கு அருகில் தங்குகின்றார். ஆண்டவரது குரல் அவருக்குக் கேட்டதும் ஏலி தான் தன்னை அழைத்தார் என்று நம்புகின்றார். உடனே ஓடிச்சென்று என்னை அழைத்தீரா என்று கேட்கின்றார். கூர்மையான செவிமடுக்கும் திறன், அழைப்பின் குரல் கேட்டதும் செயல்படுதல், ஏலியின் சொற்களைக் கேட்டு அதற்கு செவிசாய்த்தல் என்னும் பண்புகள் கொண்டிருந்ததாலேயே சாமுவேலால் பிற்காலத்தில் மிகச்சிறந்த இறைவாக்கினராகத் திகழ முடிந்தது. நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்று சிந்திப்போம். நாம் இறைகுரலைக் கேட்க நம்மை அர்ப்பணிக்கின்றோமா? ஆண்டவரின் குரலை அடையாளம் காண முயற்சிக்கின்றோமா? பிற சத்தங்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள காதுகளை அடைத்துக் கொண்டு இசையில் மூழ்கிவிடுகின்றோம்.

புனித அன்னை தெரசாவிற்கு தாகமாய் இருக்கின்றேன் என்ற குரல் தான் அவரது வாழ்க்கையை மாற்றிப்போடும் தருணமாக இருந்தது. லொயோலா இஞ்ஞாசியாருக்கு எடுத்து வாசி என்ற உள்குரலே புதிய வாழ்க்கைப் பாதைக்கான காரணமாக அமைந்தது. புனித பவுலுக்கு நீ துன்புறுத்தும் இயேசு நான் தான் என்ற வார்த்தைகளே மாற்றத்திற்கான காரணமாக அமைந்தது. நாம் கடவுளின் குரலுக்கு செவிசாய்க்கின்றோமா என்று சிந்திப்போம். சாமுவேல் போல இறைகுரலை அடையாளம் காண முயல்வோம். நம்மால் கண்டறிய முடியாவிட்டாலும் இது இறைகுரல் என்று எடுத்துரைத்த ஏலி போல் நமக்கு வழிகாட்டும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர்களின் குரலுக்கு செவிசாய்ப்போம்.

இரண்டாவது வாசகத்தில் நமது உடல் ஆண்டவரின் இல்லம் என்பதாக எடுத்துரைக்கின்றார் புனித பவுல். இறைவனைத் தேடி நாம் செல்லும் பாதையில் நமது உடலை இறைவனின் ஆலயமாக எண்ணி நாம் பாதுகாக்க வேண்டும். அதனைக் கொண்டு தீய செயல்கள் செய்வது மிக பாவம் என்று வலியுறுத்துகின்றார். மேற்சொன்ன கதையில் புதையலைத் தேடிச்சென்ற இளைஞன் தன்னைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கென்று ஒரு கூடாரத்தை ஏற்படுத்திக் கொண்டான். தனது உடல்நலனைக் காப்பது ஒன்றை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டான் அதனால் தனது தேடுதலுக்கான காரணம் என்ன என்பதை மறந்தான். நாமும் பல நேரங்களில் நமது இன்ப துன்பங்களில் மூழ்கி நமது தேடல் பயணத்தை மறந்து விடுகின்றோம் அல்லது அதற்கான பாதையைத் தவறவிட்டு வழிமாறிச் செல்கின்றோம். சிலர் உடல் இன்பம் மற்றும் இச்சைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்வதால் தங்களது நோக்கத்தை மறந்து விடுகின்றார்கள்.

இன்றைய இரண்டாம் வாசகமானது உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூயஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல. கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் என்று எடுத்துரைக்கின்றது. நம் உடலால் நாம் கடவுளைப் பெருமைப்படுத்தும்போது நமது தேடலும் அதற்கான பாதையும் தெளிவாக புலப்படும்.

நற்செய்தி வாசகமானது தேடல் என்பது பொக்கிசம் என்பதனைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றது. யோவானின் சீடர்களுக்கு இந்தத் தேடல் இருந்தது. அவர்கள் தங்களது குருவான யோவானின் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கள். இயேசுவை யோவான், கடவுளின் செம்மறி என்று அடையாளப்படுத்தியதை முழுமையாக நம்புகின்றார்கள். அவர் கூறியதற்கு ஏற்ப இயேசுவைப் பின்தொடர்கின்றனர். நாம் யாரைப் பின்பற்றுகின்றோம்?. யாருடைய குரலுக்கு செவிசாய்க்கின்றோம்? என்று சிந்திப்போம். இயேசு தன்னை இருவர் பின் தொடர்வதை கண்டு என்ன தேடுகின்றீர்கள்? என்று கேட்கின்றார். அவர்கள் ரபீ நீர் எங்கே தங்கி இருக்கின்றீர்? என்று கேட்கின்றனர். எங்கே செல்கின்றீர்? என்றோ யாரை நோக்கிச் செல்கின்றீர்? என்றோ கேட்கவில்லை. மாறாக எங்கே தங்கி இருக்கின்றீர்? என்று கேட்கின்றனர். அவரும் வந்து பாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார்.

தங்குதல், தங்குமிடம் என்பது மிகவும் முக்கியமானது. முற்காலத்தில் எல்லாம், உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் அதிகமாக நமது வீடுகளுக்கு வந்து தங்கிச்செல்லும் வழக்கம் இருந்தது. இதனால் உறவுகள் வலுப்பட்டது. ஒருவர் மற்றவருடைய வாழ்க்கையானது பிறருக்கு மிகவும் உதாரணமாக இருந்தது. உறவினர்களின் அன்பான அறிவுரைகளும் உடன்இருப்பும் வாழ்க்கைக்கு வழிகாட்டுபவையாக இருந்தன. ஒன்றாக இணைந்து, சமைத்து, உண்டு மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்ந்த குடும்பங்களை இன்று சமூக வலைதளத்தின் புகைப்படங்களில் மட்டுமே காண முடிகின்றது. இயேசுவோடு தங்க விரும்பிய யோவானின் சீடர்கள் இதுவரை தாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயல்கின்றனர். அவர்கள் அவரோடு தங்கி, தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்களை தங்களது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கின்றனர். நற்செய்தி அறிவிப்புக்கான மிக முக்கியமான படிப்பினை இதில் வெளிப்படுகின்றது. இயேசுவோடு தங்கி அனுபவம் பெறுதல், பெற்ற அனுபவத்தை குடும்பத்தாருக்கு அறிவித்தல். நற்செய்தி அறிவிப்பானது முதலில் குடும்பத்தில் இருந்தே தொடங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்துவதும் இதுவே. குடும்பம் நற்செய்தி அறிவிப்பின் தொடக்கம் அங்கிருந்து பகிரப்படும் செய்திகளே உலகின் எல்லையெங்கும் பரப்பப்படுகின்றன. ஆக யோவானின் சீடர்கள் தங்களது தேடலுக்கான பதிலினைக் கண்டடைகின்றனர். அதன் பலனாகக் கிடைத்த மகிழ்வைத் தங்களுடைய குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

நாமும் தேடல் உள்ளவர்களாக இருப்போம். நமது தேடல் எதை நோக்கியது என்ற தெளிவுடன் இருப்போம். நாம் என்ன தேடுகின்றோம் எதைத் தேடுகின்றோம் எதற்காகத் தேடுகின்றோம் என்ற தெளிவுடன் நமது தேடலைத் துவக்குவோம். யோவான் நற்செய்தியில் இயேசு பேசிய முதல் வார்த்தையான என்ன தேடுகின்றீர்கள் என்பது இன்று நம்மிடம் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கவேண்டும். என்ன தேடுகின்றோம்? எதற்காக தேடுகின்றோம்? என்ற தெளிவுடன் வாழ்வோம். தேடல் என்பது விலைமதிப்பற்ற செல்வம் அதன் முடிவில் நாம் கண்டடைவதும் விலைமதிப்பற்ற செல்வமாகத் தான் இருக்கும். அது முக்கியமான பொருளாக இருப்பதால் தான் நாம் அதனைத் தேடவே முயல்கின்றோம். எளிதில் கிடைக்கும் பொருள் என்றால் அதனைத் தேடவேண்டிய அவசியமில்லை. எனவே நமது வாழ்க்கையிலும் தேடல் என்னும் அழகான செயலை செய்ய முற்படுவோம். அப்போது அந்தத் தேடலின் முடிவில் நமது வாழ்க்கையிலும் நாம் விலைமதிப்பற்ற செல்வத்தைக் கண்டுகொள்வோம். நாமும் நம் குடும்பத்தார் அனைவரும் இறையருளால் நிரப்பப்பட தேடல் என்னும் கொடைக்காக இறைவனின் அருளினை நாடுவோம்.
 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி.

 
 
அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட
 

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

தூய ஆவியின் கொடைகள் பொது நன்மைக்காகவே!

அமெரிக்காவில் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர் வில்லியம் ஆலன் ஒயிட். மிகுந்த தாராள உள்ளமும், இரக்க குணமும் உடையவர். ஒருமுறை அவர் தனக்கென்று இருந்த 50 ஏக்கர் நிலத்தையும் தன்னுடைய ஊர் மக்களுக்காக எழுதி வைத்தார். இதை அறிந்த அவருடைய உறவுக்காரர் ஒருவர் அவரிடம், " எதற்காக இவ்வளவு நிலத்தையும் ஊர் மக்களுக்கு எழுதி வைக்கிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு அவர், " நான் என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கிறபோது மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறேன்" என்றார். " அது என்ன மூன்றாவது விதமான மகிழ்ச்சி. அதைக் கொஞ்சம் எனக்குத் தெளிவாக விளக்குங்கள்" என்று கேட்க, வில்லியம் ஆலன் ஒயிட் மறுமொழியாக, " பணம் மூன்றுவிதமான மகிழ்ச்சிகளைத் தருகிறது. முதலாவது பணத்தைச் சேர்ப்பதில் மகிழ்ச்சி; இரண்டாவது கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதில் மகிழ்ச்சி; மூன்றாவது மற்ற எல்லாவற்றையும்விட சிறந்தது, அது நம்மிடம் இருப்பவற்றை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி.

பலர் தாங்கள் பெற்ற செல்வத்தை; திறமைகளை; கடவுள் கொடுத்த ஆசிர்வதங்களை தங்களுக்குள்ளே வைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் மூன்றாவது விதமான மகிழ்ச்சியை அடைவதில்லை. ஆனால் நான், என்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதால் அதை அனுபவிக்கிறேன்" என்றார்.

நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்பதை இந்நிகழ்வு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் தரும் அழைப்பு " நமக்குக் கொடுக்கப்பட்ட கொடைகள் பிறரது நம்மைக்காகவே" என்பதே. கடவுள் கொடுத்த திறமைகள், கொடைகள், வாய்ப்பு வசதிகள் யாவற்றையும் நமது சொந்த தேவைக்காகவே பயன்படுத்தி வாழும் நமக்கு, இன்றைய வாசகங்கள் அவற்றைப் பொதுநலத்திற்காக பயன்படுத்த அழைப்புத் தருகிறது.

கொரிந்தியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார், " கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமையைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ஒரு சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வன்மை, அறிவுநிறைந்த சொல்வன்மை, நம்பிக்கை, வல்ல செயல்கள் புரியும் ஆற்றல், பரவசப் பேச்சுப் பேசும் ஆற்றல், இன்னும் ஒருசிலருக்கு அவற்றை விளக்கும் ஆற்றல் இவையெல்லாம் கொடுத்திருக்கலாம். ஆனால் நாம் அதனை பிறருக்காக, பொது நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்றதொரு அழைப்பினை விடுக்கிறார் (1 கொரி 12:7).

ஆனால் நடைமுறையில் கடவுள்/ தூய ஆவியார் கொடுத்த திறமைகளை, கொடைகளை பொது நன்மைகாகப் பயன்படுத்தாமல் தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய பெயர் விளங்கச் செய்வதற்குத்தான் மக்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பது வேதனை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வெறுமனே பணம், பொருள் என்று மட்டுமல்லாமல் இறைவனின் பணி செய்ய கடவுள் கொடுத்திருக்கும் ஆற்றலையும், திறமையையும்கூட இன்றைக்கு மக்கள் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஒருமுறை மராட்டிய மன்னர் சிவாஜி பகைவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பெரிய கோட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார். அந்த கோட்டையைக் கட்டும் பணியில் ஏராளமான மக்கள் ஈடுபட்டிருந்தார்கள். அரசர் அவர்கள் எல்லாருக்கும் உணவு கொடுத்து, அவர்களை பராமாரித்துக் கொண்டும் வந்தார். இது அவருடைய உள்ளத்தில் ஒருவிதமான கர்வத்தை உண்டுபண்ணியது. " நான்தான் எல்லாருக்கும் உணவு கொடுக்கிறேன். நான் எவ்வளவு பெரிய மன்னர்" என்ற கர்வம் அவருடைய பேச்சிலே அடிக்கடி தெறித்தது.

இதைக் கண்ணுற்ற அவருடைய குரு மன்னருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவர் மன்னரிடம், " மன்னர் மன்னா! எனக்காக அருகே இருக்கக்கூடிய பாறையை உடைத்து, அதை இங்கே கொண்டுவர முடியுமா?" கேட்டார். அதற்கு மன்னரும் தன்னுடைய வேலையாட்களிடம் பாறையை உடைத்துக்கொண்டு வரச்சொல்ல, அவர்களும் அதைக் கொண்டுவந்தார்கள்.

அப்போது அந்த பாறைக்குள் இருந்து ஒரு தேரை (தவளை) வெளியே ஓடியது. உடனே குரு மன்னரை பார்த்து, " மன்னா! எல்லாருக்கும் உணவிடுகிறீர்கள், இந்த பாறைக்குள் இருந்த தேரைக்கும் நீங்கள்தானே உணவிடுகிறீர்கள்" என்று சொன்னதும், மன்னருக்கு, குரு தன்னுடைய ஆணவத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை உரைத்தது. அதன்பிறகு ஆணவம் இல்லாது செயல்படத் தொடங்கினார்.

கடவுள் கொடுத்திருக்கும் கொடைகள்/பொறுப்புகள் எல்லாம் கடவுளின் பேர் விளங்கப் பயன்படுத்த வேண்டுமே ஒழியே அதனை தன்னுடைய பெயர் விளங்கப் பயன்படுத்துவது தவறு என்பதை இந்த நிகழ்வானது அழகாக எடுத்துரைக்கிறது.

ஆக, நம்மிடம் இருக்கும் எல்லாமும் நாம் பிறருக்காக பயன்படுத்த, இறைவன் கொடுத்த கொடைகள் என்பதை நாம் உணரவேண்டும். இதற்கு நம்மிடம் இருக்கக்கூடிய அடிப்படையான மனநிலை, நாம் அனைவரும் ஒரே உடலின் உறுப்புகள், இந்த உடலின் உறுப்புகளுக்குத் தலையாக இருப்பவர் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். உடலில் காலோ அல்லது தலையோ அடிபட்டிரும்போது கை சும்மா இருக்காது. உடனே அது உதவி செய்ய விரைந்து வரும். அதுபோன்றுதான் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கும் நாம் அனைவரும், நம்மோடு வாழக்கூடிய மக்களின் நிலை அறிந்து, உதவி செய்ய விரைந்து வரவேண்டும்.

அந்த வகையில் கடவுள் கொடுத்த எல்லா ஆசிர்வாதங்களையும் பொது நன்மைகாகப் பயன்படுத்திய ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது இயேசுவைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. இன்று படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது.

கானாவூர் திருமணத்திற்கு தன்னுடைய தாய் மற்றும் சீடர்களுடன் செல்லும் இயேசுக் கிறிஸ்து, அங்கே திருமண விருந்தின்போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது என்பதை தன்னுடைய தாயின் வழியாகக் கேள்விப்படுகிறார். தாயின் வேண்டுதலின் பேரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றி, மணவீட்டாருக்கு நேரிட இருந்த அவப்பெயரைப் போக்குகிறார்.

இங்கே இயேசுக் கிறிஸ்து கடவுள் கொடுத்த அருளை தனது பெயர் விளங்கப் பயன்படுத்தவில்லை. மாறாக மணவீட்டாரின் அவல நிலை நீங்கவும், கடவுளின் பெயர் விளங்கவுமே அப்படிச் செய்கிறார். நற்செய்தியின் இந்த பகுதியில் மட்டுமல்லாது, எல்லா இடங்களிலும் இயேசு தன் அருளை பிறரது நலனுக்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது " எல்லா மக்களும் இறைவனின் பிள்ளைகள்" என்ற எண்ணமே. நாமும் இப்படி கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் கொடையை பிறருக்காகப் பயன்படுத்தும்போது அதைவிடச் சிறந்த பேறு வேறு எதுவும் இருக்க முடியாது.

" சமுதாயச் சேவையை சட்டையாக மாற்றாதீர்கள்; உங்கள் உடம்பின் சதையாக மாற்றுங்கள்" என்பார் கவிஞர் வைரமுத்து. நாம் சமுதாயத்திற்கு ஏதோ ஒருசில நன்மைகளை மட்டும் செய்து திருப்திப்பட்டுக் கொள்ளாமல், எப்போதுமே இயேசுவைப் போன்று இறைபணி/சமூகப்பணி செய்ய வேண்டும் என்பதுதான் அவர் சொல்ல விரும்பும் கருத்து.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில், பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் ஒரு காலைப் பொழுதில், காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் பனிப்பொழிவில் மாட்டிக்கொண்டார். எவ்வளவுதான் அவர் சத்தம் போட்டாலும் யாருமே அவருக்கு உதவ முன்வரவில்லை.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர், தன்னுடைய கையில் இருந்த இரும்புக் கம்பியால் பனிக்கட்டிகளை எல்லாம் உடைத்து, அகற்றிவிட்டு, அவரை அதிலிருந்து காப்பாற்றினார். தனக்கு தக்க நேரத்தில் வந்து உதவியதற்காக, அன்பளிப்பாக ஏதாவது தரலாம் என்று நினைத்த அந்தக் கணவான், தன்னுடைய பையிலிருந்து கொஞ்சம் டாலரை எடுத்து அதை அவரிடம் நீட்டினார்.

ஆனால் அந்த இளைஞர் பணத்தை வாங்க மறுத்துவிட்டுச் சொன்னார், " நான் DO UNTO OTHERS" என்று மன்றத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இந்த மன்றத்தின் முக்கியமான நோக்கம் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் என்று சொன்னதும், காரில் வந்திரந்த அந்த கணவான் நன்றிப் பெருக்கோடு அவரைக் கைகூப்பி வணங்கிவிட்டு, அங்கிருந்து சென்றார்.

நாம் ஒவ்வொருவருமே தேவையில் இருப்பவருக்கு, அதுவும் யாராக இருந்தாலும் உதவவேண்டும்; கடவுள் கொடுத்த கொடைகளை பிறர் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

இப்படியெல்லாம் ஒரு மனிதர் வாழ்கிறபோது கடவுள் எத்தகைய ஆசிர்வாதத்தைத் என்று இன்றைய முதல் வாசகத்தில் (எசாயா புத்தகம் 62) படிக்கின்றோம்.

" அவர்களது வெற்றியையும், மேன்மையையும் புறவினத்தார் காண்பார்கள்; புதிய பெயரால் அழைக்கப்படுவார்கள்; இறைவனின் கையில் அழகிய மணிமுடி போன்றும், அரச மகுடம் போன்றும் இருப்பார்கள்" என்று இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். ஆம், இறைப்பணி நல்ல உள்ளத்தோடு செய்யும்போது இறைவனும் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை.

எனவே நாம், நமது ஆண்டவர் இயேசுவைப் போன்று கடவுள் நமக்குக் கொடுத்திர்க்கும் திறமைகளை/ கொடைகளை இறைவனின் பெயர் விளங்கவும், பொது நன்மைகாகவும் பயன்படுத்துவோம். அதன் வழியாக இறைவனின் அன்புப் பிள்ளைகள் ஆவோம். அவரது ஆசியை நிறைவாய் பெறுவோம்.


 
வாசகங்கள்: I 1 சாமுவேல் 3: 3b-10, 19
II 1 கொரிந்தியர் 6: 13c-15a, 17-20 III யோவான் 1: 35-42

சிந்தனை 1
" கடவுளின் ஆட்டுக்குட்டி"
யூதர்கள் நடுவில் சொல்லப்படுகின்ற கதை இது. ஆண்டவராகிய கடவுள் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, அவற்றை உற்று நோக்கியபொழுது, யாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க, செம்மறியாடு மட்டும் மிகவும் வருத்தத்தோடு இருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் கடவுள், " நான் படைத்த யாவும் மகிழ்ச்சியாக இருக்க, நீ ஏன் கவலையோடு இருக்கின்றாய்?" என்று கேட்க, செம்மறியாடு கடவுளிடம், " நீர் படைத்த விலங்குகளிலியே நான் மிகவும் வலுக்குறைந்தவனாக இருக்கின்றேன். மற்ற விலங்குகளுக்கு பெரிய கொம்புகளும், கூரிய நகங்களும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களும் இருக்கின்றன. எனக்குத்தான் அப்படி எதுவுமே இல்லை. அதுதான் என்னுடைய வருத்தத்திற்குக் காரணம்" என்று சொன்னது.

அதற்குக் கடவுள், " அப்படியானால், நான் உனக்கு மற்ற விலங்குகளைப் போல் பெரிய கொம்புகளையும், கூரிய நகங்களையும், நச்சுத்தன்மை நிறைந்த பற்களையும் தரட்டுமா? அப்படித் தந்தால், யாரும் உன் அருகில் வந்து, உனக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள்" என்றார். " கடவுளே! எனக்கு அப்படி எதுவும் வேண்டாம். நான் அமைதியைப் பெரிதும் விரும்புகின்றனவன்; வன்முறையை விரும்பாதவன். அதனால் நீர் எனக்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்வதற்கான ஆற்றலையும் தாரும். அது போதும்" என்றது செம்மறி ஆடு. கடவுளும் அது கேட்டுக்கொண்டதற்கேற்ப, அதற்குத் தீமை செய்கின்றவர்களை மன்னிப்பதற்கான ஆற்றலையும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக்கொள்ளும் ஆற்றலையும் தந்தார்.

இங்கு இடம்பெறும் செம்மறி ஆட்டினைப் போன்று, உயிருள்ள கடவுளின் செம்மறியான இயேசு தீமை செய்தவர்களை மன்னிக்கின்றவராகவும், துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்ளக்கூடியவராகவும்; ஏன், மானிட மீட்புக்காகத் தம்மையே பலியாகத் தருபவராக இருக்கிறார். பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் இயேசுவைப் பார்த்து, " இதோ! கடவுளின் செம்மறி" என்கின்றார். திருமுழுக்கு யோவான் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன, இன்றைய இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எருசலேம் திருக்கோயிலில், ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பாவம் போக்கும் பலியாக (லேவி 14: 12, 21, 24; எண் 6: 12) ஓர் ஆடானது ஒப்புக் கொடுக்கப்படும் (விப 39: 38-40). இறைவாக்கினர் எசாயாவோ, துன்புறும் ஊழியரைக் குறித்துக் கூறும்பொழுது, அவர் அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டி போலும், உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் தா வாயைத் திறவாதிருந்தார் என்று கூறுகின்றார் (எசா 53: 7)

ஆனால், இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தன் சீடர்கள் யோவான், அந்திரேயா ஆகியோரோடு இருக்கின்றபொழுது, அப்பக்கமாய் வருகின்ற இயேசுவைப் பார்த்து, " இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்று கூறுகின்றார். திருமுழுக்கு யோவான் தன் சீடர்களிடம் சொன்ன இந்த வார்த்தைகள், அவர்களுக்குப் பாஸ்கா ஆட்டினை (விப 12) நினைவுபடுத்தியிருக்கும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை. ஆம், இயேசு கிறிஸ்து உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி. அதையே திருமுழுக்கு யோவானின் வார்த்தைகள் உறுதி செய்கின்றன.

நாம் நமக்குரியவர்கள் அல்லர்; கடவுளுக்குரியவர்கள்
கடவுளின் ஆட்டுக்குட்டியாக இவ்வுலகிற்கு வந்த இயேசு, ஆடுகளாகிய நாம் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டுத் தன்னையே பலியாகத் தந்தார் (யோவா 10: 10). இதன்மூலம் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுவது போல், கடவுள் நம்மை தன் திருமகனின் இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டுக்கொண்டார். கடவுள் நம்மை விலை கொடுத்து மீட்டுக்கொண்டார் எனில், நாம் நமக்கானவர்கள் அல்லர்; கடவுளுக்கானவர்கள்.

நாம் கடவுளுக்கானவர்கள் எனில், கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து வாழ்வதுதான் சாலச்சிறந்த ஒரு செயலாகும். சாமுவேல் முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், சாமுவேலின் அழைப்பைக் குறித்து வாசிக்கின்றோம். கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த சிறுவன் சாமுவேலை ஆண்டவர் மூன்று முறை அவனுடைய பெயரைச் சொல்லி அழைக்கின்றார். மூன்றுமுறையும் அவன் தன்னை அழைப்பது குரு ஏலிதான் என நினைத்துக்கொண்டு அவரிடம் செல்கின்றான். அப்பொழுதுதான் குரு ஏலி, சிறுவன் சாமுவேலை அழைப்பது கடவுள்தான் என உணர்ந்துகொண்டு, உன்னை அவர் மீண்டுமாக அழைத்தால், " ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கிறேன்" என்று சொல்லும் என்கின்றார். பின்னர் ஆண்டவர் சிறுவன் சாமுவேலை அழைத்தபொழுது, அவனும் குரு ஏலி தன்னிடம் சொன்னது போன்றே சொல்லி, ஆண்டவருடைய பணிக்குத் தன்னை முற்றிலும் அர்ப்பணிக்கின்றார்.

ஆம், நாம் ஒவ்வொருவரும் கடவுளால் விலைகொடுத்து மீட்கப்பட்டவர்கள் என்பதால், சாமுவேலைப் போன்று கடவுளுடைய பணியைச் செய்ய நம்மை முழுமையாய் அர்ப்பணிக்கவேண்டும்.

பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகர்வோம்
கடவுளுடைய பணியைச் செய்ய கடவுளுக்கு நம்மை முற்றிலும் அர்ப்பணித்து விட்டு கடவுளுக்குரியவர்களாய் இருக்கும் ஒவ்வொருவரும், தான் பெற்ற இறை அனுபவத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், அதைப் பிறரோடும் பகிரவேண்டும். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்குபவர் அந்திரேயா. இந்த அந்திரேயா இயேசுவோடு தங்கி இறையனுபவம் பெற்ற பின், தன் சகோதரர் சீமோன் பேதுருவிடம் சென்று, " மெசியாவைக் கண்டோம்" என்று சான்றுபகர்கின்றார். இதனால் பேதுரு இயேசுவிடம் வருகின்றார்.

அந்திரேயா மேலும் ஒருசிலரை ஆண்டவரிடம் கொண்டுவருவதைப் பற்றி யோவான் நற்செய்தி எடுத்துக்கூறுகின்றது. குறிப்பாக இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் அவர் சிறுவனை ஆண்டவரிடம் கொண்டு வருகின்றார் (யோவா 6: 9), இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களை அவர் இயேசுவிடம் கொண்டு வருகின்றார் (யோவா 12: 20-22) இவ்வாறு அந்திரேயா தான் பெற்ற இறை அனுபவத்தைத் தனக்குள் வைத்துக் கொள்ளாமல், அதைப் பிறரோடு பகிர்ந்து, அவர்களை இயேசுவிடம் அழைத்து வருகின்றார். இந்த அந்திரேயாவைப் போன்று நாம் இறை அனுபவம் பெறவேண்டும். அவ்வாறு பெற்ற இறை அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்து, அவர்களை இயேசுவிடம் கொண்டு வரவேண்டும்.

இன்றைக்குப் பலர் தாங்கள் கடவுளுக்குரியவர்கள் என்பதை உணராமல், தங்கள் விருப்பம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இதனால் அவர்கள் இறை அனுபவம் பெறுவதும் இல்லை, பெற்ற அனுபவத்தைப் பிறரோடு பகிர்வதுமில்லை. உலகிற்கு ஒளியாக இருக்கும் நாம் (மத் 5: 14) ஒவ்வொரு கடவுளுக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து, பெற்ற இறை அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்து வாழ வேண்டும்.

சிந்தனை
" ஒருவர் இறைவனால் வழிநடத்தப்படுவதற்கு அவர் தன்னை அனுமதித்து, கிறிஸ்து மற்றும் நற்செயதிக்கான அன்பால் நிறைந்து, ஒன்றிப்பின் ஊழியர்களாக வாழ்வதன் வழியாக ஆண்டவரை அறிவிக்க முடியும்" என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் கிறிஸ்துவின் அன்பால் நிறைந்து, அவரைப் பற்றிய நற்செய்தி மக்களுக்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை

இறைவனைத் தேடு

மனித வாழ்வு என்பது ஒரு தேடல், மனிதன் மகிழ்ச்சியை அடைய ஒடித் திரிகின்றான். நண்பர்களைச் சம்பாதிக்க ஒடித் திரிகின்றான். பணத்தைத் திரட்ட ஒடித் திரிகின்றான். பட்டம் பதவிக்காக ஒடித் திரிகின்றான். பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஒடித் திரிகின்றான். உடலால் உள்ளத்தால் ஏற்படும் நோயிலிருந்து விடுதலைப் பெற ஒடித் திரிகின்றான். ஆனால் இவை அனைத்தும் இறைவனைத் தேடுவதில் முடிவு பெற வேண்டும்.

வாழ்வு என்பது மனிதனுக்கு இறைவன் தந்த அழைப்பு. எதற்காக? மகிழ்ச்சியைப் பெறுவதற்காக, சாதனைகளைச் செய்து முடிக்க, கடமையை நிறைவேற்ற சேவை செய்ய. ஏன், தன்னையே பலியாக்க - இந்த அழைப்பு நண்பர்களினாலோ, உறவினர்களினாலோ, அதிகாரிகளினாலோ பலவித சூழ்நிலைகளில் வாழும் மக்களாலோ வரலாம். ஆனால் இவையனைத்தும் இறுதியில் கடவுளின் இறுதி அழைப்பில் நிறைவு பெற வேண்டும். வாருங்கள் தந்தையில் ஆசி பெற்றவர்களே. உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக (மத். 25:34).

இன்றைய வார்த்தை வழிபாட்டிலே தரப்பட்டிருக்கின்ற வாசகங்களுக்கு வருவோம். இன்று தெளிவாக உண்மையான சீடனாக இருக்கின்றவர்களுக்கு உரிய தேடுதலும், அழைப்பும் தெளிவாக்கப்பட்டிருப்பதை நாம் காண வேண்டும்.

திருமுழுக்கு யோவானின் சீடர்களில் இருவர் இயேசுவைத் தேடி வருகின்றார்கள். ஆனால் தேடியவர்கள் நீர் யார் என்று கேட்கத் துணிவில்லை. ஆனால் இயேசுவோ திரும்பிப் பார்த்து எதைத் தேடுகிறீர்கள் என்று கேட்கின்றார்? இதிலிருந்து எல்லா அழைப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன என்பதை அறிய வேண்டும். சீடர்கள் கேட்ட கேள்வி? போதகரே நீ எங்கே இருக்கிறீர்? இங்கே இருக்கிறேன் என்று விளக்கம் தந்தாரா? இல்லை. "வந்து பாருங்கள்" (யோவா. 1:39) என்றார் இயேசு. இவர்கள் சென்றார்கள். இயேசுவோடு தங்கினார்கள். அவரை அறிந்தார்கள். அனுபவித்தார்கள் (திபா. 34:8). அவரது சீடராக மாறினார்கள்.

சென்னையில் நடந்த அகில இந்திய அருங்கொடை மாநாட்டிலிருந்து திரும்பிய பின் என்னைச் சந்தித்த பலர் என்னைப் பார்த்துக் கேட்டார்கள், மாநாடு எப்படி இருந்தது என்று? நான் அவர்களுக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? நீங்கள் அங்கு வந்து பார்த்திருக்க வேண்டும். ஏனெனில் நான் பெற்ற இறை அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே முடியும் என்றேன். இதைத்தான் இயேசு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்: வந்து பாருங்கள் என்னிடம் வருபவனுக்கு பசியே இராது. என்னிடம் விசுவாசம் கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது (யோவா. 6:35) என்றார்.

நம்முடைய வாழ்க்கையைச் சிறிது சிந்திப்பது நல்லது. அந்த இரண்டு சீடர்கள் வழியே கண்டு, கேட்டு, அறிந்து, விலகிச் செல்லவில்லை. அவரோடு சென்று தங்கி, அனுபவித்து உறவு கொண்டு வாழ்வு பெற்றார்கள்.

நான் இருக்கும் இடத்தில் நீங்களும் இருப்பீர்கள் (யோவா. 14:3) என்கிறார் ஆண்டவர்.

புனித திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடியாக வந்தவர். இயேசுவை முன்னறிவிக்கின்றார். உலகின் பாவங்களைப் போக்க வந்த செம்மறி (யோவா. 1:29) என்று அறிமுகப்படுத்துகின்றார்.

இப்படி இயேசு கடவுளின் செம்மறி என்று அறிவிக்கிறார். நாம் இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமானால் நாம் அவரோடு இருக்க வேண்டும். அவரின் வாழ்வையும், பணியையும் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதோடு மட்டுமல்ல நாமும் இறைவனின் செம்மறிகளாக, பிறரைப் பாவங்களிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும். தவறான எண்ணங்கள், தவறான மதிப்புகள், நிலையற்ற பற்றுகள் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் செம்மறிகளாக மாற வேண்டும்.

1. கிறிஸ்து இயேசுவில் அன்புக்குரியவர்களே நாம் இயேசுவைத் தேடி வந்திருக்கின்றோம். ஆனால் அவரைப் பார்த்துச் செல்லும் மக்களாகத்தான் நாம் காலம் கடத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு வாரமும் நாம் ஏதோ வழிப்போக்கர்களைச் சந்தித்தது போல் நாமும் சந்தித்தவர்களாக இன்னும் அவரை அனுபவிக்காதவர்களாகத்தான் இருக்கின்றோம். கடவுளின் அழைப்பை உணராது, உலக அழைப்புகளுக்கு உலகத்தின் ஆசைகளுக்கு இடம் கொடுக்கும்போது நாம் அவரோடு வாழ முடியாது.

2. அதே நேரத்தில் ஓர் எச்சரிக்கை. இயேசுவைக் காட்டிக் கொடுத்தவன் யார்? இயேசுவின் சீடரில் ஒருவன்தான். சீடன் என்று உலகத்திற்கு முன்பாகப் பெயர் பெற்றான். ஆனால் அவரை அனுபவிக்க முடியவில்லை. பணத்தையும், புகழையும் பெற்றான். ஆனால் வாழ்வை இழந்தான். அவனுக்குச் சீரழிவுதான். இந்த நிலை நமக்கு நேரக் கூடாது.

 
அருட்திரு. D. பீட்டர் ஜெயக்காந்தன் S.S.S


 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

 மெளனமே உன்னை நேசிக்கின்றேன்

போதி தர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகள் தம் சீடர்களுக்குப் போதித்தார். ஒருநாள் இவர் மரணப்படுக்கையிலிருந்த போது, அவரது கொள்கையைப் பரப்ப சரியான சீடரைத் தேர்ந்தெடுக்க எண்ணி, ஒரே கேள்வியை எல்லாச் சீடர்களிடமும் கேட்டார். இதுதான் கேள்வி : "நீங்கள் எவ்வாறு என் கொள்கைகளைப் பரப்புவீர்கள்?"

முதல் சீடர் : "ஐயா, உமது உரைகள் பிறர் காதுகளைத் துளைக்கும்படி போதிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "எனது சதைக்கு நீ உரியவன்" என்றார்.

இரண்டாவது சீடர் : "குருவே, நான் பாகுபாடின்றி, அனைவரையும் சமமாக நேசிப்பேன்" என்றார். அதற்குக் குரு, "என்னுடைய தோள் உனக்குரியது" என்றார்.

மூன்றாவது சீடர் : "போதகரே. நான் மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை உருவாக்குவேன்" என்றார். அதற்குக் குரு, "என் எலும்புகளுக்கு நீ சொந்தக்காரன்" என்றார்.

நான்காவதாக ஹிகோ என்ற சீடர் வந்து குருவை மிகுந்த வணக்கத்துடன் வணங்கி மெளனமாக ஒதுங்கி நின்றார். அவரைப் பார்த்து குரு, "மௌனமே அனைத்திலும் ஆற்றல் மிக்கது. என் ஆன்மா உனக்குரியது. நீதான் எனது வாரிசு. பொறுப்பு அனைத்தையும் உன்னிடம் ஒப்படைக்கின்றேன்" என்றார்.

பேச்சு வெள்ளி, மெளனமோ தங்கம்,

மெளனத்திற்கு மிகுந்த ஆற்றல் உண்டு குறிப்பாகக் கடவுள் நம்மோடு பேசும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும் சக்தி மெளனத்திற்கு உண்டு.

இறைவாக்கினர் எலியாவோடு இறைவன் சுழற்காற்றில் பேசவில்லை, நிலநடுக்கத்தில் பேசவில்லை, தீயில் பேசவில்லை, மாறாக அடக்கமான மெல்லிய ஒலியில் பேசினார் (1 அர 19:1-13). இயேசு அவரது பரமதந்தையோடு பேச அடிக்கடி தனிமையான இடத்திற்குச் சென்றார் (மாற் 1:35).

இன்றைய முதல் வாசகத்திலே சாமுவேல் இறைவனைப் பார்த்து, ஆண்டவரே பேசும் உம் அடியான் கேட்கின்றேன் என்கின்றார் (1 சாமு 3-10)இவ்வாறு சொல்லிவிட்டு மெளனமாகின்றார். அவர் பேசாமலிருக்கத் தொடங்கியதும், கடவுள் அவரோடு தங்கத் தொடங்கினார் (சாமு 3-19). அவரோடு பேசத்தொடங்கினார். சாமுவேலின் மௌனம் அவரை பெரிய இறைவாக்கினராக உயர்த்தியது.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களும் வந்து பாருங்கள் என்று கூறிய இயேசுவோடு சென்று அவரோடு தங்கியதாகப் படிக்கின்றோம்.

இயேசுவோடு தங்கியிருந்தார்கள் ஆனால் அவரோடு எதுவும் பேசவில்லை! சீடர்கள் எதுவும் பேசியதாக நாம் நற்செய்தியில் படிப்பதில்லை! அந்தச் சீடர்கள் மெளனமாக இருந்தபோது இயேசு மெசியா என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்பட்டது : மெளனத்திலே அவர்கள் இயேசுவை அனுபவித்தார்கள்: கண்டு கொண்டார்கள். பேதுருவின் சகோதரர் அந்திரேயா, சீமோனிடம் சென்று, மெசியாவைக் கண்டோம் என்றார்.

நாம் பேசாமலிருக்கும்போது கடவுள் பேசுவார். நாம் பேசாமலிருக்கும், நமது வெளிப் புலன்களும், உள் புலன்களும் அமைதியாக இருக்கும்போது, நமக்குள் வாழும் கடவுள் (இரண்டாம் வாசகம்) அவரது தூய ஆவியாரின் வரங்களாலும் (கொரி 12:8-10), அவரது கனிகளாலும் (கலா 5:22-23) நம்மை நிரப்புவார்; நாம் புதுப்படைப்பாக மாறி (எபே 4:24) கிறிஸ்துவை அணிந்துகொள்வோம்(உரோ 1314) நமது புதுவாழ்வால் கடவுளுக்குப் பெருமை சேர்ப்போம் (1 கொரி 6:19)

மேலும் அறிவோம்

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொர் (குறள் : 415).

பொருள்: வழுக்கும் பாறையில் நடப்பவர்க்கு வலிய ஊன்றுகோல் உதவுவது போன்று, கற்றுத் தெளிந்த நல்லறிஞர் பெருமக்களின் மனம் தளரும்போது பெரிதும் துணைபுரியும்.
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 ஒரு பெரியவர் ஓர் இளைஞனிடம் மணி (நேரம்) கேட்டார் அவன், 'பத்து - பத்து என்றான். பெரியவர் கோபத்துடன், "எப்பா, நான் என்ன செவிடனா? பத்து என்று ஒருமுறை சொன்னால் போதாதா? ஏன் பத்து - பத்து என்று இருமுறை கூறினாய்?" என்று கேட்டார்.

சிறுவன் சாமுவேலை, சாமுவேல் - சாமுவேல்' என்று இருமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார் (1 சாமு 310) அவ்வாறே ஆபிரகாமை 'ஆபிரகாம், ஆபிரகாம்' என்றும் (தொநூ 22:11) யாக்கோபை, யாக்கோபு யாக்கோபு என்றும் (தொநூ 46:2). மோசேயை மோசே, மோசே என்றும் (விப 34) இரண்டுமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

இறைவன் இவர்களை இருமுறைப் பெயர் சொல்லி அழைத்தது அவர்கள் செவிடர்கள் என்பதற்காக அல்ல, மாறாக, இறைவன் ஒருவரை ஒரு குறிப்பிட்ட பணிக்குப் பெயர் சொல்லி அழைக்கிறார் நிச்சயமாக அழைக்கிறார் அழைத்தல் என்பது இறைவனுடைய முன் செயல் என்பதைக் காட்டுவதற்கேயாகும்.

இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சிறுவன் சாமுவேல், பேசும் உன் அடியான் கேட்கிறேன்" (1 சாமு 310) என்று பதில் கூறுகிறான். சாமுவேல் இறைவனுடைய அழைத்தலுக்குத் தாராள மனதுடனும் திறந்த உள்ளத்துடனும் கீழ்ப்படிய தயார் நிலையில் இருந்ததை இது காட்டுகிறது

இன்றைய நற்செய்தியிலும் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர்கள் திறந்த மனதுடனும் தாராள உள்ளத்துடனும் இயேசுவைப் பின் தொடர்கின்றனர். இது வியப்பாக இருக்கிறதா?

ஓர் இளைஞன் ஒரு இளம்பெண்ணின் அழகில் மயங்கி, அவளிடம் இருபது வருஷம் என் பெற்றோர் வசமிருந்தேன், இருபது நிமிஷத்தில் உன் வசமாகி விட்டேன்" என்றான். மனித காதலுக்கு இவ்வளவு கவர்ச்சி இருந்தால் தெய்வீகக் காதலுக்கு எவ்வளவு கவர்ச்சி இருக்க வேண்டும்?" இறைவா என்னை நீர் மயக்கி விட்டீர் நானும் மயங்கிப்போனேன்" (எரே 20:7) என்று இறைவாக்கினர் எரேமியா கூறவில்லையா?

இறைவன் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இறைவனுடைய அண்டித்தல் என்பது துறவற அழைத்தலாகவோ இல்லற அழைத்தலாகவோ இருக்கலாம் துறவறம் எவ்வாறு இறைவனது கொடையோ அவ்வாறே இல்லறமும் இறைவனது கொடையாகும். "ஒவ்வொருவருக்கும் கடவுள் தரும் தனிப்பட்ட அருள்கொடை உண்டு. இது ஒருவருக்கு ஒருவகையாகவும் வேறொருவருக்கு வேறுவகையாகவும் இருக்கிறது" (1கொரி 7:7).

இறைவன் நம்மை எத்தகைய வாழ்க்கை நிலைக்கு அழைத்தாலும் அவருடைய அழைத்தலைத் தாராள உள்ளத்துடனும் திறந்த மனதுடனும் ஏற்பது நமது கடமையாகும் "ஆண்டவரே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (பதிலுரைப்பாடல்). இதுவே நமது மனநிலையாக இருக்க வேண்டும் ஒரு பேருந்தில் கண்டெக்டர் பயணிகளிடம் கை நீட்டிக் காக வாங்கி'டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அதே பேருந்தில் ஒரு பிச்சைக்காரனும் பயணிகளிடம் கை நீட்டிக் காசு வாங்கிக் கொண்டிருந்தான் கண்டெக்டர் கோபத்துடன் பிச்சைக்காரனிடம், வண்டியை விட்டுக் கீழே இறங்குடா. இரண்டுபேரும் பயணிகளிடம் கைநீட்டிக்காக வாங்குறோம் யார் கண்டெக்டர்? யார் பிச்சைக்காரன்? என்ற விவஸ்தை இல்லாமல் போயிடுச்சு" என்றார்

அவ்வாறே இன்று திருச்சபையிலும் யார் திருப்பணியாளர்கள்? யார் பொதுநிலையினர்? என்ற வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. பொதுநிலையினர் திருப்பணியாளர் களாகவும் திருப்பணியாளர்கள் பொதுநிலையினராகவும் மாறிக்கொண்டு வருகின்றனர். எனவேதான், சாமியர்களின் சம்சாரித்தனமும் சம்சாரிகளின் சாமியார்த்தனமும் கண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் குருப்பட்டம் என்ற அருளடையாளத்தால் குருக்கள் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தவர்களாகின்றனர். எனவே அவர்கள் கிறிஸ்துவின் இடத்தில், கிறிஸ்துவின் பெயரால், கிறிஸ்துவின் ஆளுமையில் (in the person of Christ) இறைமக்களுக்குப் போதிக்கின்றனர்; அவர்களைப் புனிதப்படுத்துகின்றனர். அவர்களுக்கு நல்ல ஆயனாக இருந்து வழிநடத்துகின்றனர். அவர்கள் உலகில் இருந்தாலும் அவர்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவா 17:16)

ஆனால், பொதுநிலையினரோ உலகத்தில் இருக்கின்றனர். உலகைச் சார்ந்தும் இருக்கின்றனர்; உலகக் காரியங்களில் ஈடுபடுகின்றனர் உலகைச் சார்ந்திருக்கும் பண்பு பொது நிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும் என்று இரண்டாவது வத்திக்கான் சங்கம் உறுதிபடக் கூறியுள்ளது. உலகின் நடுவே வாழ்ந்து குடும்பம், அரசியல், பொருளாதாரம், கலை, கல்வி ஆகிய உலகியல் காரியங்களில் ஈடுபட்டு, உலகியல் காரியங்களை நற்செய்தி மதிப்பீடுகளால் ஊடுருவி, புளிப்பு மாவு போல் (மத் 13:33) பொதுநிலையினர் உலகில் இறையரசைக் கட்டி எழுப்புகின்றனர். இதுவே பொதுநிலையினரின் தனிப்பட்ட அழைத்தலாகும்.

பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது. கருட செளக்கியமா? இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாரும் செளக்கியமே கருடன் சொன்னது ஆம் இல்லறத்தாரும் துறவறத்தரும் தத்தம் அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாய் இருந்துகொண்டு. தங்களின் கிறிஸ்துவ, சமுதாயக்கடமைகளை நிறைவேற்றினால் எல்லாம் நலமுடன் இருக்கும். "ஒவ்வொருவரும் எந்நிலையில் அழைக்கப்பட்டிருக் கிறார்களோ அந்நிலையிலே நிலைத்திருக்கட்டும்". (1கொரி 7:20)

இல்லறத்தாரும் துறவறத்தாரும் தத்தம் கடமைகளைச் செம்மையாகச் செய்து முடிக்க இறைஅனுபவம் தேவை. "வந்துபாருங்கள்" (யோவா 1:39) என்ற இயேசுவின் அழைப்பை ஏற்ற முதல் சீடர்கள் இயேசுவுடன் ஒருநாள் தங்கி, இறைஅனுபவம் பெற்று, மற்றவர்களையும் அவரிடம் அழைத்து வந்தனர். அவ்வாறே நாமும் இயேசுவைக் குறிப்பாக அருள்வாக்கு அருளடையாளங்கள் வழியாகச் சந்தித்து, இறை அனுபவம் பெற்று, எல்லாரையும் இயேசுவிடம் கொண்டுவருவது நமது அழைத்தலாகும்.
 
 
திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ்
வந்து பாருங்கள்‌ வாழ்ந்து காட்டுங்கள்‌

" நான்‌ ஆத்திகனா, நாத்திகனா?'' எனக்குள்‌ அடிக்கடி எழுகின்ற கேள்வி, ஒருவித உறுத்தலால்‌ அமைதி இழக்கச்‌ செய்கின்ற கேள்வி ... இந்தக்‌ குழப்பத்துக்குக்‌ காரணம்‌? இளந்துறவி விவேகானந்தரின்‌ கூற்றுத்தான்‌.

" கடவுளின்‌ உடனிருப்பை நேரடி அனுபவமாக அடையாதவறை, " கடவுள்‌ உண்டு என்று நம்புகிற ஆத்திகனுக்கும்‌ " இல்லை" என்று மறுக்கிற நாத்திகனுக்கும்‌ இடையே பெரிய வித்தியாசம்‌ எதுவும்‌ இல்லை" என்றார்‌ விவேகானந்தர்‌.

கடவுளை நீங்கள்‌ பார்த்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு இன்றுவரை என்னால்‌ தெளிவாகப்‌ பதில்‌ கூற இயலவில்லை.

பார்த்தால்தான்‌ ஒன்று உண்டு என்ற சிந்தனை தவறானது. அமெரிக்காவை நான்‌ பார்த்ததில்லை என்பதற்காக அமெரிக்கா இல்லாமல்‌ போய்விடுமா என்ன! அதற்காக முந்தாநாள்‌ இரவு மூன்று மணிக்குக்‌ கடவுள்‌ என்னைச்‌ சந்தித்தார்‌. பேசினார்‌, இதனை உங்களுக்குச்‌ சொல்லச்‌ சொன்னார்‌ என்று பிதற்றுபவர்களையும்‌ நான்‌ நம்புவதில்லை.

இயேசுவின்‌ சீடனாக, இயேசு அனுபவம்‌ வேண்டும்‌. இறை அனுபவம்‌ வேண்டும்‌. அதனால்தான்‌ " வந்து பாருங்கள்‌" (யோ. 1:39) என்று இயேசு இன்று நம்மை அழைக்கிறார்‌.

இயேசுதன்‌ சீடர்களுக்குத்‌ தந்த கட்டளைகள்‌ மூன்றுதான்‌.
1. வந்து பாருங்கள்‌ (யோவான் 1:39)
2. அன்பு செய்யுங்கள்‌ (யோவான் 13:34)
3. சென்று போதியுங்கள்‌ (மார்க்‌. 16:15, மத்‌தேயு 28:20)

" அறிவோம்‌ - அறிவிப்போம்‌" என்பது நம்பிக்கை ஆண்டின்‌ (2012-2013) விருது முழக்கம்‌. அது கூடச்‌ சரியல்ல. " அனுபவிப்போம்‌ - அறிக்கையிடுவோம்‌'" என்பதே சாத்தியமானதாக இருக்கும்‌.

பிரான்ஸ்‌ நாட்டிலிருந்து சில மாணவர்கள்‌ இந்தியாவுக்குச்‌ சுற்றுலா மேற்கொண்டனர்‌. அவர்களில்‌ ஒரு மாணவனின்‌ ஒரே நோக்கம்‌ தாஜ்மகாலைப்‌ பார்க்க வேண்டும்‌ என்பது. பல இடங்களைப்‌ பார்த்துவிட்டு ஒரு வாடகைப்‌ பேருந்தில்‌ ஆக்ரா புறப்பட்டனர்‌. எதிர்பாராத விபத்துக்கு ஆளாகி உடல்‌ காயங்களுடன்‌ உயிர்‌ தப்பினர்‌. தாஜ்மகாலைப்‌ பார்க்கும்‌ திட்டம்‌ கைவிடப்பட்டது. இதனைப்‌ பேரிழப்பாகக்‌ கருதினான்‌ அந்த மாணவன்‌. எனவே கூட வந்த நண்பர்கள்‌ தாஜ்மகால்‌ பற்றி ஒரு புத்தகத்தை வாங்கி அவனுக்கு அன்பளிப்புச்‌ செய்தனர்‌. மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை ஒரு வரி விடாமல்‌ பலமுறை படித்தான்‌. வீடு திரும்பியதும்‌ அவனுடைய தாய்‌ " தாஜ்மகால்‌ எப்படி இருந்தது?" என்று கேட்டாள்‌. உடனே அம்மாணவன்‌ தாஜ்மகாலைக்‌ கட்டி எழுப்ப எத்தனை கலைஞர்கள்‌, கூலியாள்கள்‌ உழைத்தனர்‌. எவ்வளவு கற்கள்‌ மணல்‌ தேவைப்பட்டது என்றெல்லாம்‌ மிகத்‌ துல்லியமாக விளக்கினான்‌. ஆனால்‌ இவ்வளவு தெரிந்திருந்தும்‌ தாஜ்மகாலை நேரில்‌ பார்த்துச்‌ சுவைத்த அனுபவம்‌ அவனுக்கு இல்லையே! புத்தக அறிவு அனுபவமாகிவிடுமா? பைபிளைப்‌ படிப்பதால்‌ மட்டும்‌ இயேசுவை அறிந்தவர்களாகி விட முடியுமா?

நான்‌ இயேசுவைச்‌ சந்தித்தேன்‌. பேசினேன்‌. அவர்‌ தந்த பணியை ஏற்றேன்‌ என்று திருத்தூதர்‌ பவுலால்‌ சொல்லமுடிந்தது. அந்த இயேசு அனுபவம்‌ எத்தகைய தாக்கத்தை, மாற்றத்தை, திருப்பத்தை பவுலாக மாறிய சவுலுக்குத்‌ தந்தது!

சில கண நேர மனித சந்திப்புக்கள்‌ கூட எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நொடி கண்ணோடு கண்‌ நோக்க, காதலன்‌ என்னவெல்லாம்‌ செய்யத்‌ தயாராகிவிடுகிறான்‌! உறக்கமின்றித்‌ தவிக்கிறான்‌. மிகப்‌ பெரிய பாதிப்புக்கு ஆளாகிறான்‌. இயேசுவை நான்‌ சந்தித்தேன்‌ என்றால்‌ அதன்‌ வெளிப்பாடு என்‌ வாழ்வில்‌ மாற்றம்தான்‌. எதிர்பார்க்கும்‌ மாற்றம்‌ ஏன்‌ என்னில்‌ இல்லை?

'என்ன தேடுகிறீர்கள்‌?" (யோ. 1:38) என்பதே யோவான்‌ நற்செய்தியில்‌ இயேசு பேசிய முதல்‌ சொற்கள்‌. " ஏன்‌ என்னைத்‌ தேடினீர்கள்‌?" (லூக்‌. 2:49) என்பது லூக்கா பதிவு செய்துள்ள இயேசுவின்‌ முதல்‌ வார்த்தைகள்‌. நமது அன்றாட வாழ்வில்‌ நாம்‌ என்ன தேடுகிறோம்‌ என்பதையும்‌ அத்தகைய தேடலில்‌ நாம்‌ தேடுவது இயேசு என்றால்‌ எதற்காக அவரைத்‌ தேடுகிறோம்‌ என்பதற்கான தெளிவையும்‌ தருவதற்காகவே நற்செய்தியின்‌ தொடக்கத்திலேயே இவ்வினாக்கள்‌ தொடுக்கப்பட்டி ருக்கின்றன.

சிறு வயதிலேயே சாமுவேல்‌ இறைவன்‌ இல்லத்தில்‌ இறைவாக்கினர்‌ ஏலியிடம்‌ வளர்ந்து வந்த சமயம்‌. ஆண்டவரை இன்னும்‌ அறியாமல்‌ இருந்த சாழுவேலுக்கு இறைவனுடைய வாக்கு அருளப்படுகிறது (1 சாழு. 3:7)

அழைப்பது யார்‌ என்று தெரியாதபோதும்‌ அழைத்தது தன்னைத்தான்‌ என்று அறிந்தபோது அழைப்பை ஏற்கப்‌ புறப்பட்டுவிட்டார்‌. யார்‌ தன்னை அழைப்பதாக நினைத்து ஓடினாரோ, அவர்‌ தன்னை அழைக்கவில்லை என்றபோதும்‌ மனம்‌ தளரவில்லை. அகச்செவியும்‌ புறச்செவியும்‌ எப்போதும்‌ இறைவன்‌ குரலைக்‌ கேட்கப்‌ பக்குவப்பட்டநிலையில்‌, பணிக்காக எப்போதும்‌ தயார்‌ நிலையில்‌ உள்ள சாமுவேலைப்‌ பார்க்கிறோம்‌.

அழைப்பவர்‌ இறைவன்தான்‌ என்று சாழுவேலுக்கு உணர்த்துகிறார்‌ ஏலி. இறைவனின்‌ குரலை இனம்‌ கண்டு " ஆண்டவரே பேசும்‌, உம்‌ அடியான்‌ கேட்கிறேன்‌" (1 சாமு. 3:10) என்பதைத்‌ தாரகமாக்கி இறைவனுக்குத்‌ தன்னையே அர்ப்பணிக்கிறார்‌.

இறைநம்பிக்கை அறிவு என்ற மட்டத்தில்‌ மட்டும்‌ நின்றுவிடாமல்‌ அனுபவம்‌ என்ற கட்டத்துக்குச்‌ செல்லும்போது அதை அறிவப்பது இயல்பாக நிகழ்கின்றது. " என்ன ஆனாலும்‌ நாங்கள்‌ கண்டதையும்‌ கேட்டதையும்‌ எடுத்துரைக்காமல்‌ இருக்க எங்களால்‌ முடியாது" (தி.ப. 4:20)

இயேசு " கடவுளின்‌ செம்மறி" என்று திருமுழுக்கு யோவான்‌ அடையாளம்‌ காட்டியதும்‌ அவருடைய " இரு சீடர்களும்‌ தேடிப்போகிறார்கள்‌. கண்டதும்‌ கேட்ட முதல்‌ கேள்வி, " ரபி, நீர்‌ எங்கே தங்கியிருக்கிறீர்‌?'" இயேசுவைக்‌ கண்டு சுவைக்க வழி " வந்து பாருங்கள்‌. அன்றிரவு அவர்கள்‌ அவரோடு தங்கினார்கள்‌. விளைவு? அந்திரேயா தன்‌ சகோதரன்‌ சீமோனைப்‌ பார்த்து " மெசியாவைக்‌ கண்டோம்‌" என்றார்‌. (யோ. 1:41). பிலிப்பு நத்தனியேலைப்‌ பார்த்து இறைவாக்கினர்களும்‌ திருச்சட்ட நூலில்‌ மோசேயும்‌ குறிப்பிட்டுள்ளவரை நாங்கள்‌ கண்டு கொண்டோம்‌ என்றார்‌. (யோ. 1:45)

எத்தனையோ போதகர்களில்‌ இயேசுவும்‌ ஒருவர்‌ என்ற எண்ணத்தில்‌ சந்தித்தவர்கள்‌, வெறும்‌ போதகரை அல்ல, மெசியாவை, கடவுள்‌ வாக்களித்த மீட்பரையன்றோ பார்க்கிறார்கள்‌!

நற்செய்தி என்பது 'வந்து பாருங்கள்‌, சென்று போதியுங்கள்‌ என்ற இரு சொற்றொடர்களுக்கிடையே இருக்கிறது. அனுபவித்ததைத்‌ தானே அறிவிக்கமுடியும்‌! இறை நம்பிக்கை என்பது ஒர்‌ அனுபவம்‌, பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய அனுபவம்‌ - யாம்‌ பெற்ற இன்பம்‌ பெறுக இவ்வையகம்‌ என்பது போல.

பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும்‌ பொறுப்பு திருத்தூதர்‌ பவுல்‌ உருவாக்கியதல்ல. மீட்பர்‌ இயேசுவே தந்தது. " அவர்‌ பிற இனத்தாருக்கும்‌ அரசர்களுக்கும்‌ இஸ்ரயேல்‌ மக்களுக்கும்‌ முன்பாக எனது பெயரை எடுத்துச்‌ செல்ல நான்‌ தேர்ந்தெடுத்துக்‌ கொண்ட கருவியாய்‌ இருக்கிறார்‌" (தி.ப. 9:15). அதனாலேயே " நற்செய்தியை அறிவிக்காவிடில்‌ ஐயோ எனக்குக்‌ கேடு" (1 கொரி 9:16) என்பார்‌ பவுல்‌.

திருஅவை இயல்பிலேயே நற்செய்தி‌ அறிவிக்கும்‌‌ தன்மையுடையது என்கிறது 2ஆம்‌ வத்திக்கான்‌ சங்கம்‌. திருஅவையைப்‌ பரப்ப ஆர்வம்ல்லாமல்‌ தான்‌ கீழித்த வட்டத்திற்குள்ளேயே காலத்தைக்‌ கழித்துக்‌ கொண்டிருக்கும்‌ திருஅவை ஒரு நோய்‌ பிடித்த திருஅவை என்று கடுமையாக சாடுகிறார்‌ திருத்தந்தை புனித 2ஆம்‌ ஜான்பால்‌.

ஆண்டவர்‌ தங்கியுள்ள இடம்‌ நம்‌ ஆழ்மனக்‌ கோவிலாகும்‌. அதற்குள்‌ அவரைத்‌ தேடாமல்‌ வேறு எங்கு தேடினாலும்‌ அவர்‌ நமக்கு அகப்பட மாட்டார்‌. அங்கும்‌ முதல்‌ அடியை எடுத்து வைப்பவர்‌ கடவுளே. " கடவுள்‌ நம்மைக்‌ கண்டு பிடிக்காதவரை நாம்‌ அவரைத்‌ தேடுவதைத்‌ தொடங்கக்கூட முடியாது" என்கிறார்‌ புனித அகுஸ்தினார்‌.
மறையுரை  அருள்பணி. குழந்தை இயேசு பாபு சிவகங்கை
 
அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
ஆண்டவர் அவனோடு இருந்தார்
இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் இறைவன் தனது இறைப் பணிக்கென்று மனித உள்ளங்களை அழைக்கும் சம்பவத்தையும், அழைக்கப்பட்டவர்களின் வாழ்வில் அவருடைய உடனிருப்பைபற்றியும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இறைவன் தனது மீட்புப் பணிக்காக விவிலியத்தில் அழைத்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இன்றும் அழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார். இறைவன் நம் அனைவரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்து, ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக அழைத்துள்ளார். இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் சாமுவேலின் அழைப்பைப் பற்றி கூறுகின்றது. சாமுவேல் கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் இருந்த பொழுதுதான் இறைவன் மூன்று முறை அழைத்தும் அவரால் அவருடைய குரலைக் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. மூன்று முறையும் ஆண்டவரின் குரு ஏலிதான் அழைக்கின்றார் என்று அவரிடம் கேட்கின்றார். ஆண்டவரின் குரு ஏலி இறைவன்தான் அழைக்கின்றார் என்று உணர்ந்து அவரிடம் இவ்வாறு கூறுகின்றார் " உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ " ஆண்டவரே பேசும், உம் அடியான் கேட்கின்றேன் " என்ற பதில் சொல் என்று கூறுகின்றார். மீண்டும் ஆண்டவர் இரண்டுமுறை அழைத்த போது அவர் இறைவன்தான் என்று அறிந்து " பேசும் உம் அடியான் கேட்கிறேன் " என்று மறுமொழி கூறுகின்றார். அவசர உலகத்தில் பயணிக்கின்ற நமக்கு இறைவின் குரலைக் கேட்பது இன்று மிகவும் கடினமாக இருக்கலாம். இன்று நமக்கு ஆண்டவரின் குருவாக விளங்கிய ஏலியாவைப் போல் ஆன்மீக குருக்கள் தேவைப்படுகின்றது. இறைவன் இன்று எத்தனையோ வழிகளில் நம்மை சந்திக்க விரும்புகின்றார். ஆனால் இன்று அவரை முழுமையாக அனுபவிக்க மனிதனாகிய நமக்கு நேரம் இல்லை. வேலைப் பழுவால் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டுள்ளோம். இக்காலக் கட்டத்தில் நாம் அனைவரும் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருக்க வேண்டும். இறைவார்த்தையின்படி வாழ முயற்சி எடுக்க வேண்டும். அப்பொழுதான் இறைவனின் குரலைக் கேட்க முடியும். மூன்று முறை அழைத்தும் சிறுவன் சாமுவேல் இறைவனுடைய குரல்தான் என்று உணரமுடியவில்லை. அவருக்கு குருவான ஏலியின் உதவி தேவையாய் இருந்தது. இன்று பெற்றோர்கள் விழிப்பாய் இருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு இறைவனுடைய வழிகளை அவருடைய வார்த்தையின் வழியாக கற்பிக்க வேண்டும். பெற்றோர்கள் இறைஅனுபவம் பெறுவதற்கு குடும்ப செபமும், குடும்பமாக இறைவார்த்தை படித்தல், குடும்பமாக இறைவழிபாட்டில் பங்கு பெறுவது, மேலும் அடுத்திருப்பவர்களுக்கு இறைஅனுபவத்தைபற்றி எடுத்துரைப்பது போன்ற பணிகள் செய்யும் போது இறைவனின் குரலை நம்மால் கேட்கமுடியும் என்பது உண்மை.

அழைக்கும் இறைவன் என்றும் வாக்கு மாறாதவர். விசுவசத்தின் தந்தை என்று அழைக்கும் ஆபிரகாம் முதல் இன்று வரை அழைத்த அனைவரின் வாழ்க்கையில் இறைவன் துணையிருந்து வழிநடத்தின்றார் என்பது உண்மை. இறைவனுடைய அழைப்பு நேரடியாகவோ அல்லது மற்றவர்களின் வழியாகவோ ஏற்படலாம் என்று இன்றைய வாசகம் விளக்குகின்றது. இறைவாக்கினர் எரேமியா நூலில் இறைவன் கூறுகின்றார் " தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன், மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன் என்று வாக்கு மொழிந்து அந்த சிறுபிள்ளையை அழைக்கின்றார். அவருக்கு பேசத் தெரியாது என்று அவர் பதில் கூறிய போது இறைவன் கொடுக்கும் பதிலைக் கவணிப்போம். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன் " என்கிறார் ஆண்டவர். மேலும் ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன். பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் என்று வாக்கு தருகின்றார். இன்று இப்படிபட்ட இறைவாக்கினர்கள் நம்மிடையே எழும்ப வேண்டும். எவ்வளவு ஓர் அருமையான வாக்கை இன்று இறைவன் நமக்கு தருகின்றார். ஏனென்றால் இறைவன் பார்வையில் நாம் அனைவரும் மதிப்பு மிக்கவர்கள். விலையேறப் பெற்றவர்கள். நீ நம்பினால் என் மாட்சியைக் காண்பாய் என்று சொல்லிய இறைவன் நேற்றும் இன்றும் என்றும் வாழ்கின்றவர். அவர் கூறுவதைச் செய்பவர். ஆகையால் அமைதி கொண்டு அவரே நம்முடைய இறைவன் என்று உணர்ந்து கொள்வோம். அவருடைய நற்செய்தியை அறிவிக்க துணிவுடன் எழும்புவோம். இறைவனால் ஆகாதது ஒன்றும் இல்லை. இறைவார்த்தை என்னும் ஆயுதத்தை நமது கையில் எடுப்போம். அவைதான் நம்மை இருளின் படியிலிருந்தது விடுவிப்பது.

நாம் அனைவரும் இறைவனுக்குரியவர், ஆவியானவர் வாழும் கோவில் என்று அழைக்கின்றார். நாம் நமக்குரியவர்கள் அல்ல என்றும், நம் அனைவரையும் விலை கொடுத்து மீட்டுள்ளார் என்றும், ஒவ்வொரு நொடிப் பொழுதும் இறைவனுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று இறைவார்த்தை எடுத்துரைக்கின்றது. இனிவரும் நாட்களில் இறைவனுக்கு பெருமை சேர்ப்போம். உலகம் நமக்கு தங்கும் வீடு அல்ல மாறாக நாம் அனைவரும் உலகில் வழிபோக்கர்கள். உலகில் இருப்பது ஒன்றும் நிரந்தரம் இல்லை ஆனால் இறைவன் உறவுமட்டும் நிரந்தரம் என்பதை உணர்ந்து இறைவனுக்கு ஏற்ற தூய வாழ்க்கை வாழ முயற்சிப்போம். வார்த்தையின் வழியாக இறைவனின் குரலுக்கு செவிமடுத்து அதன்படி வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். சிறப்பாக இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள அனைவருக்காகவும், குடும்பத் தலைவர் தலைவிகளுக்காகவும் மன்றாடுவோம். இவர்கள் அனைவரும் இறைவனில் தங்களுடைய வாழ்வைக் கட்டி எழுப்பி அதன் வழியாக சாட்சிய வாழ்வு வாழ வேண்டும் என்று உரிமையாளரிடம் நமது வேண்டுதலின் குரலைக் கொடுப்போம்.

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயலே, உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்,அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன். என் பெயரைச் சொல்லி என்னை அழைத்தேன், நீ எனக்குரியவன். எசாயா 43:1
 
 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச

வழியோரம், கடவுளின் அறிமுகம்

இன்றைய ஞாயிறு வாசகங்களின் மீது ஒரு பார்வை....
நம் ஒவ்வொருவருக்கும், வாழ்வின் பல நிலைகளில், பலச் சூழல்களில்,
இறைவன் அறிமுகம் ஆகிறார் என்பதை, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சிறுவன் சாமுவேலுக்கு இறைவன் அறிமுகமான நிகழ்வை, முதல் வாசகமும் (1 சாமுவேல் 3: 3ஆ-10, 19), வளர்ந்துவிட்ட நிலையில் அந்திரேயா, மற்றும் பேதுரு இருவருக்கும், இயேசு அறிமுகமாகும் நிகழ்வை, இன்றைய நற்செய்தியும் (யோவான் 1: 35-42) படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த இரு நிகழ்வுகளுமே, சில பாடங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன.

சிறுவன் சாமுவேலுக்கு, ஆண்டவரின் இல்லத்தில், இறைவன் அறிமுகமாகிறார். ஆண்டவரின் இல்லமே அவன் வாழ்வாக மாறிவிட்ட நிலையிலும், அந்தப் புனிதமான இடத்தில், அச்சிறுவனால், இறைவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

நம் வாழ்வை ஆய்வு செய்யும்போது, நமக்கு அதிக பழக்கமான இடங்களிலும், சூழல்களிலும் இறைவன் தன்னை அறிமுகப்படுத்திய நேரங்களில், அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் அவதியுற்றிருக்கிறோம். குறிப்பாக, நம் துன்ப நேரங்களில், இறைவன் காணாமற் போய்விட்டதாக எண்ணியிருக்கிறோம். கடற்கரையில் இறைவனும், பக்தனும் இணைந்து நடந்து சென்ற கதை நமக்கு நினைவிருக்கும். கடந்து வந்த பாதையைத் திருப்பிப் பார்த்த பக்தன், தானும், இறைவனும் வாழ்வில் இணைந்து நடந்ததன் அடையாளமாக இரு சோடி காலடித்தடங்கள் பதிந்திருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். ஒரு சில வேளைகளில் அந்தப் பாதையில், ஒரு சோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டான், பக்தன். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடித்தான். உடனே பக்தன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிட்டான். இறைவன், பதில் மொழியாக, "மகனே, பெரும் அலைகளாய் துன்பங்கள் வந்தபோது, ஒரு சோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு, அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரங்களில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார்.

சிறுவயதில் நமக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட இறைவனைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவருடன் அதிகமான நேரத்தைச் செலவு செய்யாமல் போனதால் இத்தவறுகள் நடந்தன. இத்தவறுகளைத் தீர்க்கும் வழிகளை, இன்றைய நற்செய்தி சொல்லித்தருகிறது.

இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான், இயேசுவை, தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம், இயேசுவின் அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே, மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை, இன்றைய நற்செய்தி நினைவுறுத்துகிறது.

வழியோரம் அறிமுகமான இயேசுவை, வழியோரமாகவே விட்டுவிட்டு, தங்கள் வழியில் செல்லவில்லை, அச்சீடர்கள். அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தனர். இந்நிகழ்வைக் கூறும் யோவான் நற்செய்தியின் வரிகளைக் கேட்போம்:
யோவான் நற்செய்தி 1: 38-39
இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, " என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், " ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், " வந்து பாருங்கள்" என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.

இயேசு பேசிய முதல் சொற்களாக, யோவான் நற்செய்தியில் நாம் காண்பது, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற பொருள் செறிந்த கேள்வி. இதைத் தொடர்ந்து, "வந்து பாருங்கள்" என்ற அழைப்பை இயேசு விடுக்கிறார்.

ஒவ்வொரு புதிய ஆண்டிலும் நாம் தேடல்களை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக, இத்தேடல்கள், நமது வாழ்வை, கூடுதலான நலமும், வசதியும் நிறைந்ததாக மாற்றும் தேடல்களாக அமைகின்றன. நம்மிடம், இன்று, இயேசு, "என்ன தேடுகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்பினால், நமது பதில் என்னவாக இருக்கும் என்பதை, ஓர் ஆன்மீக ஆய்வாக மேற்கொள்வது பயனளிக்கும். 2024ம் ஆண்டு, நாம் தேடுவது என்ன?

"என்ன தேடுகிறீர்கள்?" "நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்ற இரு கேள்விகளும், "வந்து பாருங்கள்" என்ற அழைப்பும், அந்த அழைப்பை ஏற்று, சீடர்கள் இயேசுவுடன் தங்கியதும், இன்றைய நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது. இறைவனை, இயேசுவை, உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க விரும்பும் சீடர்களுக்குத் தேவையான இரு அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. இறைவனைத் தேடுவதும், இறைவனுடன் தங்குவதும் சீடர்களுக்கு மிகவும் தேவையான அம்சங்கள். அடுத்ததாக, தாங்கள் பெற்ற அனுபவத்தை, பிறரும் பெறவேண்டுமென்ற ஆவலில், அவர்களை இறைவனிடம் அழைத்துச் செல்வதும், உண்மையான சீடரின் பண்பு. இதையே, அந்திரேயா செய்தார்.

அந்திரேயா முதலில் இயேசுவைச் சந்திக்கிறார். பின்னர், தான் பெற்ற இன்பம் தன் சகோதரனும் பெற வேண்டும் என்று, பேதுருவை இயேசுவிடம் அழைத்து வருகிறார். நம் குடும்பங்களில், உடன்பிறந்தோரும், உறவுகளும், வாழ்வில் முன்னேறுவதற்கு உதவியாக, பலரை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்து வைக்கிறோம். இந்த அறிமுகங்களில் எல்லாம் மிக முக்கியமான அறிமுகம், இறைவனை, அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பது. இந்த அறிமுகம் நம் குடும்பங்களில் நடைபெறுகிறதா? நாம் வாழும் அவசர உலகில், இறைவனை அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்புக்கள் உள்ளனவா? என்ற கேள்விகளை நாம் ஆழமாக ஆராய வேண்டும். இறைவனை நம் குடும்பங்களில் அறிமுகப்படுத்த, அவருடன் உறவை வளர்க்க, குடும்ப செபங்கள் பெரும் உதவியாக இருக்கும்.

அந்திரேயா தன் உடன் பிறந்த பேதுருவை இயேசுவிடம் அழைத்து வந்தார். பேதுருவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனதால், காலத்தால் அழியாத ஒரு வரலாறு உருவானது. பேதுருவைக் கண்டதும் இயேசுவின் முழு கவனமும் அவர்மீது திரும்பியது. அவரை 'கேபா' 'பாறை' உறுதியானவர் என்றெல்லாம் புகழ்கிறார் இயேசு. தான் அழைத்து வந்த சகோதரன் மீது இயேசு தனி கவனம் காட்டியது, அந்திரேயாவுக்கு வருத்தத்தையோ, பொறாமையையோ உருவாக்கவில்லை. காரணம், அவர் திருமுழுக்கு யோவானின் சீடர். " அவர் வளரவேண்டும், தான் மறைய வேண்டும்" என்று அடிக்கடி சொல்லி வந்த திருமுழுக்கு யோவான் இயேசுவை தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்தார்; மறைந்துபோனார். அவரது சீடராக இருந்த அந்திரேயாவும், அதே மன நிலையில் இருந்தார். தான் மறைந்தாலும் சரி, தன் சகோதரன் பேதுரு வரலாறு படைக்கவேண்டும் என்று எண்ணினார் அந்திரேயா. அவர் எண்ணியபடியே, இயேசுவும், பேதுருவும் படைத்த அந்த வரலாறு, 20 நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறது.

உடன் பிறந்தோரிடையில் இப்படி உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் பொங்கல் திருநாளில் நாம் ஒருவர் ஒருவருக்கு இறைவனை அறிமுகம் செய்வதற்கும், அனைவரும் இணைந்து, " யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பரந்த மனப்பான்மையுடன், மனித குடும்பத்தை உருவாக்குவதற்கும் இறைவன் நமக்கு நல்வழிகாட்ட மன்றாடுவோம்.