இறைவனிடம் செபிக்க வந்திருக்கும் அன்புள்ளங்களே!
கடவுளோடு பேசும் சொற்கள் செபம்.
சோகத்தை சுகமாக்கும் ஒத்தடம் செபம்
கண்ணீரைத் துடைக்கும் கரம் செபம்
கவலையைப் போக்கும் ஆறுதல் செபம்
நோயைத் தீர்க்கும் மருந்து செபம்.
களைப்பை நீக்கும் உற்சாகம் செபம்
ஆன்மாவின் உயிர் நாடி செபம்
ஆம் இந்த செபம்
மனிதனை இறைவனிடம்
கொண்டு செல்லும்
இறைவனை மனிதனிடம் கொண்டு வரும்
தன்னலமற்ற செபம் நலம் தரும்
உன்னதமான செபம் நம்பிக்கை தரும்
அன்போடு செபிக்கும் செபம் உறவு தரும்
மௌன செபம் மனதை
செம்மையாக்கும்
இறைவனுக்கு பிரியமான செபம் பிறருக்காக
செபிக்கும் செபம்
இறைவனிடம் கையேந்துங்கள்.
அவர் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவர் பொக்கிஷத்தை மூடுவதில்லை.
இறைவனின் கரங்கள் வரங்களின் வற்றாத ஊற்றுகள்
உருக்கமாக செபிக்கும் போது உள்ளம் உயர்கின்றது.
இடைவிடாமல் செபிக்கும் போது இதயம் இழகுகின்றது
நாம் செபிக்கும் செபம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை.
செபத்தினால் மாபெரும் செயல்களை சாதித்துவிடலாம்.
செபத்தில் இன்பம் காணும் வரையில் செபித்து பழகுவோம்.
வாழ்நாளெல்லாம் செபித்துக் கொண்டே இருப்போம்.
பிரார்த்தனைக்கு நோய்களை குணப்படுத்தும் சக்தி
இருக்கிறது.
பிரார்த்தனைக்கு நாம் கேட்கும் வரங்களை பெற்றுத் தரும்
சக்தி இருக்கிறது.
என்றும் எங்கும் நம்மோடு இருக்கும் இறைவன் நம்மோடு பேச
இந்த திருப்பலியில் ஆவலோடு இருக்கிறார். இப்போது
திருப்பலியில் அவரோடு பேசுவோம். விரும்பியதை கேட்டு
பெறுவோம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. இறை வார்த்தையை அறிவிக்க திருச்சபையை ஏற்படுத்திய
இறைவா!
திருச்சபை தலைவர்கள் வாய்ப்பு கிடைத்தாலும் வாய்ப்பு
கிடைக்காவிட்டாலும் நற்செய்தியை அறிவிப்பதில்
கருத்தாயிருக்கவும் எப்பொழுதும் இறைவேண்டலில்
நிலைத்திருந்து வளமிகு வரங்களை இறைமக்களுக்குப்
பெற்றுத்தரவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. மனந்தளராமல் மன்றாட எமை அழைக்கும் இறைவா!
நேர்மையற்ற நடுவர் ஏழைக் கைம் பெண்ணுக்கு நீதி
வழங்கியது போல ஏழை எளிய மக்கள் மீது மனமிரங்கி
அவர்களுக்குரிய நல்லதைச் செய்ய நாடுகளின்
தலைவர்களுக்கு நல்மனம் தரவேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. அன்போடு எமை பராமரிக்கும் வானகத் தந்தையே!
இறைவார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது உள்ளத்தின்
சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்க்கிறது என்ற செய்தியை
அறிவிக்கும் எமது பங்குத் தந்தையின் செயல்பாடுகளால்
மக்கள் மனஙகளில் இறைவார்த்தை ஆழமாய் வேர் ஊன்றவும்
செபிக்கும் மன நிலையைத் தூண்டிவிடவும் அருள் தர என
இறைவா உம்மை மனறாடுகிறோம்
4. ஏழைக் கைம் பெண்ணுக்கு மனமிரங்கி அவள் மன்றாட்டை
கேட்ட எம் இறைவா!
இஙகே கூடியுள்ள இறைமக்கள் மனங்களில் மலையெனக்
குவிந்திருக்கும் பிரச்சனைகளை தீர்க்க செபத்தை ஆயுதமாக
நாங்கள் கையில் எடுக்க அருள் தரவேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
5. ஆதரவற்றோரை அரவணைக்கும் எம் இறைவா!
நோய துன்பம், பசி, கொடுமை, வன்முறை போர்,
கற்பழிப்பு, கொள்ளை, கொலை என பாதிக்கப்பட்டு அல்லுறும்
ஆதரவற்ற மக்களை நீரே அரவணைத்து ஆறுதலின் பாதையில்
வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மனறாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
பிரார்த்தனைகள் வீணாய்ப் போவதில்லை!!!!!!!!!!!
விண்ணின் கொடைகளை மண்ணில் பொழிய ஒரே வழி செபம் எல்லா
சூழலிலும் நாம் செபத்தை முழு கவனமுடன் செய்ய இயலா நிலை
இருந்தாலும் - அறம் செய விரும்பு என்பது போல் "செபம்
செய்ய விரும்புவோம். ஆயர் புல்டன் ஷீன்- அவர்கள்
தினமும் ஒரு மணி நேரம் நற்கருணை முன் அமர்வார்கள்
என்பது அனைவரும் அறிந்தது. ஒருநாள் அதிக வேலை பளு
வெளியூர் பயணம். இரவு வெகுநேரம் ஆகிவிட்டது அந்த
நேரத்திலும் ஒருகத்தோலிக்க தேவாலயத்தைக் கண்டு
பிடித்தார். அசதி. ஆனால் நற்கருணை முன் அமர்ந்தார்.
"ஆண்டவரே நான் மிகவும் சோர்வுற்றிருக்கிறேன் நான் ஒரு
வேளை உறங்கிவிட்டால் பொறுத்துக்கொள்ளும் என்றார்.
கடவுளுக்கும் மனிதனுக்கும் அஞ்சாத மனிதன் அந்த விதவை
தன்னிடம் நீதிக் கேட்டு வருவது அவருக்கே சிரிப்பு
வருகிறது- கசாப்பு கடைக்காரனிடம் ஆடு இரக்கம் கேட்ட
கதை. ஆனாலும் அவள் விடாப்பிடியாய் கேட்டதால் அவளின்
தொந்தரவுக்கு பயந்து அவனுக்கே அறிமுகமில்லாத ஆனால்
அந்த விதவைக்கு வேண்டிய நீதி கிடைக்கிறது.
ஒரு ஏழை முதியவர் அவரின் பேரன் இவர்களின் ஒரே சொத்து
அந்த எளிய வீடு எதிர்பாராத் தீயில் எலும்புக் கூடானது.
"எல்லாம் போச்சே தாத்தா அழுதான் பேரன். தாத்தா
கூறினார் "பேராண்டி அழாதே, கடவுள் இன்னும் இறக்கவில்லை
எனவே நாம் வாழ முடியும்.
"திக்கற்றவன் கூவி அழைக்க ஆண்டவர் அவன் குரலைக்
கேட்டார் செபித்து வாழும் குடும்பம் சேர்ந்து வாழும்
குடும்பம். செபமே ஜெயம் செபிப்போமாக!
செபத்தினால் நுண்ணிய ஆற்றல்கள் எளிதாக
விழிப்படைகின்றன.
தன்னுணர்வுடன் செபம் செய்யும் பொழுது எல்லா
விருப்பங்களும் நிறைவு பெறும்.;
வானத்துப் பறவைகளை நோக்குங்கள் அவை விதைப்பதுமில்லை,
அறுப்பதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து
வைப்பதுமில்லை, உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும்
உணவு அளிக்கிறார், அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்
அல்லவா? என்று இறைவனின் அன்பை பராமரிப்பை
தௌளத்தெளிவாய் எடுத்தியம்பிய இயேசு, அதனை பெறும்
வழியை நமக்கு காட்டுகின்றார், செபத்தின் சுருதி ஏறிய
நிலையாக இம்சை செய்வதை முன்னிலைப் படுத்துகிறார்.
செபத்தில் இறைவனின் உதவியை மட்டுல்ல செபத்தில்
இறைவனின் நீதியையும் சந்திக்கலாம். என்று விளக்கம்
கூறுகிறார் இயேசு. லூக் நண்பனை நள்ளிரவில்
தட்டியெழுப்பி வேண்டியதைப் பெற்று வருகின்ற நண்பனின்
உவமையைக் கூறி "கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்
தேடுங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள் உங்களுக்கு
திறக்கப்படும் என்று அறிவுரை கூறுகிறார் இயேசு.
இன்றைய வாசகப்பகுதியில் வஞ்சக எண்ணங்கொண்ட நடுவரையே
விதவை தன் விடா முயற்சியால் இறங்கிவர செய்தாள்.
அநீதியாளனே அவளுக்கு நீதி வழங்கினான். நீதியின்
அரியணையான இறைவன் நீதியை மாரியாக தன் பிள்ளைகள் மீது
பொழியமாட்டாரா?
இ.எம்.பௌன்ட்ஸ் என்பவர் கூறுகிறார். "கடவுள் உலகை
செபத்தினால் வடிவாக உருவாக்குகிறார். மக்கள் அதிகமாக
செபிக்க செபிக்க உலகம் சிறந்ததாகவும் தீமைகளை
வெல்லும் பலம் பெற்றதாகவும் மாறும்.
செபத்தினால் தோல்வியடைந்தவர் யாருமில்லை ஆனால்
செபத்தின் கவர்ச்சிக்கு பலர் ஆளாவதில்லை செபம் அது மௌன
இராகம் எனவேதான் அன்னை தெரசா கூறுவார்கள் எவ்வளவு
தூரம் அமைதியான செபத்தில் இறை வரங்களைப் பெறுகிறோமோ
அவ்வளவு தூரத்திற்குத்தான் மக்களுக்கு அதிகமாக பணி
செய்து கொடுத்துக் கொண்டே இருக்க முடியும் என்கிறார்.
கடவுளை போல வாழ கடவுளுடன் உறவு கொண்டால்தான்
முடியும்.
வாழ்க்கையில் இடியும் புயலும் உண்டு. அதைவிட அதை
அமைதிப் படுத்தும் சக்தி செபத்துக்கு உண்டு என
நம்புவோம். கடவுளின் அருட்துணையால் நம்மால் எதுவும்
செய்ய இயலும்.
உருக்கமாக செபிக்கும் போது உள்ளம்
உயர்கின்றது.இடைவிடாமல் செபிக்கும் போது இதயம்
இழகுகின்றது.
இறைவன் மனம் இரங்குகிறார். துன்பமும் துயரமும்
நெருங்கும் போது இடைவிடாமல் களைப்புறாமல் செபிப்போம்.
வாழ்க்கையில் எந்த சூழலிலும் எப்போதும் இறைவனை
நினைத்துக் கொண்டிருப்பவர் துன்பத்தை கடந்து வெற்றி
பெறுவார்.
செபம் ஆன்மாவின் உயிர் நாடி.
நாம் செபிக்கும் செபம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை.
எளியவரும் வலிமையற்றவரும் செபத்தினால் மாபெரும்
செயல்களை சாதித்துவிடலாம். இறைவன் நம் அன்பு தந்தை
அவர் நமக்கு உதவி செய்ய காத்திருக்கிறார். செபத்தில்
இன்பம் காணும் வரையில் செபித்து
பழகுவோம்.வாழ்நாளெல்லாம் செபித்துக் கொண்டே இருப்போம்.
என்றும் எங்கும் நம்மோடு இருக்கும் இறைவன் நம்மையே
நினைத்துக் கொண்டிருக்கிறார்.. அவர் நம்மை நினைக்காத
நேரமில்லை. நாம் அவரோடு பேச நேரம் வேண்டும் மனம்
வேண்டும்.
நாம் செபிக்கும் செபம் ஒருபோதும் வீணாகப் போவதில்லை.
எளியவரும் வலிமையற்றவரும் செபத்தினால் மாபெரும்
செயல்களை சாதித்துவிடலாம்.. செபத்தில் இன்பம் காணும்
வரையில் செபித்து பழகுவோம்.
பிரார்த்தனைக்கு நோய்களை குணப்படுத்தும் அற்புத
சக்தி இருக்கிறது.
பிரார்த்தனைக்கு கேட்டதை பெற்றுத் தரும் ஆற்றல்
உண்டு.
இந்த நம்பிக்கை ஆண்டில் வலுவான காரியங்களை சாதிக்க
ஆற்றல் கேட்டு செபிப்போம்.
நம் பிரச்சனைகள் தீர இயேசுவை நச்சரித்து கேட்போம்.
உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்.
மறையுரைச்சிந்தனை
மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.
பொதுக்காலம் 29ஆம் வாரம் - ஞாயிறு 19 10 2025
திருப்பலி முன்னுரை
பிரியமானவர்களே, இன்று பொதுக்காலம் 29ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க
வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.
இன்றைய நற்செய்தியில், "நேர்மையற்ற நடுவர்" என உவமையின் தலைப்பே
அவரின் பண்பை நமக்குச் சொல்லி விடுகின்றது. நம்மிடையேயும், இன்று
நேர்மையற்ற ஆட்சித்தலைவர்கள், அதிகாரிகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அவர்களை நாம் தேர்ந்தெடுத்தது போலத்தான் அக்காலத்திலும் நேர்மையற்ற
அந்த நடுவரை தேர்ந்தெடுந்திருப்பார்கள் போலத் தோன்றுகிறது.
திருமுழுக்கு யோவான் அரசன் ஏரோது, தன் சகோதரனின் மனைவியை
வைத்திருப்பதை தவறென நேர்மையுடன், துணிவுடன் சுட்டிக்
காட்டுகின்றார். நாமும் அத்ததைய நேர்மையான உள்ளத்துடன் வாழ முற்படுவோம்.
ஒதுக்கப்ட்டோரை, ஒடுக்கப்பட்டோரையே இறைவன் அதிகம் தேடிச்
செல்கின்றார். அவர்களை வாழ்வில் ஏற்றம் காணச் செய்கின்றார். யூத சமூகத்தினரால்
ஒதுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஏழைக் கைம்பெண்ணுக்கு இறைவன் நீதி
கிடைக்கச் செய்வதை இன்றைய நற்செய்தியில் காண்கின்றோம்.
அநீதியை என்றும் பொறுத்துக் கொள்ளாதவர் இறைவன். அதனால்தான், சமூகத்தால்
புறந்தள்ளப்பட்ட, ஆதரவற்ற அந்தக் கைம்பெண்ணுக்கு நடுவர் நேர்மையற்றவராக
இருந்தபோதிலும் நீதியை வழங்கச் செய்கின்றார். நேர்மையற்ற நடுவரின்
மனதையே அசைய வைத்தது அந்த ஏழைக் கைம்பெண்ணின் விடாமுயற்சி. அப்பெண்ணின்
அந்த அசைக்க முடியாத முயற்சி, நடுவரை அசைத்து விட்டது.
நாமும் நம் வாழ்வில் இறைவனிடத்தில் செபிக்கும்போதும், மற்ற காரியங்களிலும்
முயற்சிகளை எடுக்கின்றோம். ஆனால், அதில் உறுதியாக இல்லாமல்,
விட்டுவிடுகின்றோம். அதனால்தான் நம்மால் எதையும் பெற முடிவதில்லை.
பன்னிரெண்டு ஆண்டுகளாக தன்னிடமுள்ள நோய் நீங்க வேண்டுமென்ற அந்தப்
பெரும்பாடுள்ள பெண் செபித்திருப்பாள். அதேபோல், தான் சுகம் பெற
வேண்டுமென்று, முப்பத்தெட்டு ஆண்டுகளாக குளத்தில் இறக்கிவிட ஆளின்றி
தவித்த உடல்நலமற்ற அந்த மனிதர் செபித்திருப்பார். அவர்கள் மனம்
சோர்ந்து போகாமல், தளர்ந்திடாமல், விசுவாசத்துடன், விடாமுயற்சியுடன்
செபித்ததால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறியது.
நாமும், நமக்கு கிடைக்க வேண்டியது இறைவனின் கரத்திலிருந்து வருவதற்கு
காலதாமதமானால், நம்பிக்கை இழந்திடாமல், விடாமுயற்சியுடன் செபித்திட
வேண்டும். அத்தகைய முயற்சி நிறைந்த மனதினைத் பெற்றிட ஆற்றல்
வேண்டி, இணைவோம் இத்தெய்வீகத் திருப்பலியில்.
மன்றாட்டுகள்
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
1. தாயும், தந்தையுமான இறைவா,
உம் பணிக்காய் நீர் தேர்ந்தெடுத்து, அர்ச்சித்த எம் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள், அருட்சகோதரிகள், துறவறத்தார் அனைவரும், தங்கள்
பணிவாழ்வில் உமதன்பு வாழ்வை, வார்த்தையாக இல்லாமல் வாழ்வாக பிரதிபலித்து,
முன்மாதிரியான சாட்சிய வாழ்வு வாழ்ந்து, மக்களை நல்வழியில் வழிநடத்தி,
இறையாட்சியை எங்கும் வளரச் செய்திட, தூய ஆவியின் ஆற்றலையும், வல்லமையையும்
நிறைவாகப் பொழிந்து, காத்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
2. அரணும், கோட்டையுமான இறைவா,
எங்கள் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், சோதனைகளைக் கண்டு,
மனம் சோர்ந்து, தளர்ந்து, வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைத்தனமான,
முட்டாள்தனமான முடிவுகளை எங்கள் மனதிலிருந்து அகற்றி, நீர் எங்களோடு
என்றும் உடனிருக்கின்றீர், பயணிக்கின்றீர், எங்கள் வாழ்வை வளமாக்குவீர்
என்ற ஆழமான விசுவாசத்தை, நம்பிக்கையை நாங்கள் பெற்று, வாழ்வின்
பயணத்தை உம் கரம் பிடித்து நடந்திடக் கூடிய உறுதியான உள்ளத்தைத் தந்தருள
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
3. உலகின் ஒளியே இறைவா,
வளர்ந்து வரும் இளைய தலைமுறையினரை உம்மிடம் ஒப்புக்
கொடுக்கின்றோம். இந்த உலகம் காட்டும் மாயக் கவர்ச்சியான பணம்,
பதவி, புகழ், மது, மாது என்ற போதையில் தங்கள் வாழ்வை தொலைத்திடாது.
தடம் புரண்டிடாது, உண்மை இறைவன் உம்மை விட்டு விலகி, பாவத்திலே
வீழ்ந்திடாது, இருளின் ஆட்சிக்குரிய தவறான செயல்களிலிருந்து
விடுபட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய செயல்களை உணர்ந்து, அதன் வழியில்
தங்கள் வாழ்வைத் தொடர்ந்திடக் கூடிய தெளிவான மனதினைத் தந்தருள
வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
4. வாழ்வு வழங்கும் வள்ளலே இறைவா,
அன்று வயது முதிர்ந்த சாரா, அன்னா, எலிசபெத் இவர்களின் கண்ணீரின்
வேண்டுதல்களை ஏறெடுத்து, அவர்களுக்கு மக்கட்பேற்றினை அளித்தீரே,
இன்று திருமணமாகி பல ஆண்டுகள் கடந்து, குழந்தைச் செல்வத்திற்காக
ஏங்கித் தவிக்கும் தம்பதியரின் வேண்டுதல்களை கண்ணோக்கிப் பாரும்.
அவர்களின் கண்ணீரை கண்ணுற்று, அவர்களுக்கு நல்ல மக்கட்பேற்றினை
அளித்து, அவர்கள் அக்குழந்தையை உமக்கும், இச்சமூகத்திற்கும்
உகந்தவர்களாக வளர்த்து ஆளாக்கிடக் கூடிய, பொறுப்புள்ள பெற்றோர்களாக
வாழ்ந்திட வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.
5. இரக்கத்தின் ஊற்றே இறைவா.
வறுமை, ஏழ்மையினால் துயருறும் மக்களுக்கு, அவர்களின்
தேவைகளையறிந்து, உதவிடவும், எங்களிடம் இருப்பதை, இல்லாதவர்களோடு
பகிர்ந்து வாழவும், விபத்து, ஆபத்துக்களில் சிக்கித் தவிப்பவர்களை
கண்டும் காணாததுபோல், "நமக்கேன் வம்பு" என விலகிச் செல்லாமல், நல்ல
சமாரியனைப் போல் உடனிருந்து உதவிடவும், அநீதிகளைக் கண்டு, தட்டிக்
கேட்காமல், கோழைத்தனமாக வாழாது, தவற்றினைச் சுட்டிக் காட்டி,
நீதியை நிலைநாட்டவும் கூடிய, துணிவு நிறைந்த உள்ளத்தை தந்தருள
வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
ஆண்டின் பொதுக்காலம் 29- ஆம் வாரம் - ஞாயிறு (19.10.2025)
விடாப்பிடியான செபத்தின் வல்லமை
ஜெபிக்க நேரமில்லை என்ற சாக்குபோக்கு
கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு மனிதன் வேகமாக
ஓடிக்கொண்டிருந்தான். கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப்
பாதையில் கண்களைக் கட்டிக்கொண்டு அவன் வேகமாக
ஓடிக்கொண்டிருந்தான். காலில் முள் தைக்கிறது, கல்
குத்துகிறது. அதைப் பார்த்த ஒருவர் சொன்னாராம், "உன்னுடைய
கண்ணைக் கட்டியிருக்கும் அந்தத் துணியை அவிழ்த்துவிட்டு
ஓடு, பிறகு நீ ஒழுங்காக ஓட முடியும்." அதற்கு அந்த மனிதன்
சொன்னானாம், "அதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை, நான்
வேகமாக ஓடவேண்டும்."
இன்னொரு மனிதன், ஒரு கோடாரியால் மரத்தை
வெட்டிக்கொண்டிருந்தானாம். ரொம்ப நேரம் வேலை செய்தும்,
அவனால் அதிகமாக மரத்தை வெட்ட முடியவில்லை. ஒருவர் அவனிடம்,
"அந்தக் கோடாரியைக் கூர்மை ஆக்கிவிட்டு, பிறகு வெட்டு,
இன்னும் நிறைய வெட்ட முடியும்" என்று சொன்னபோதும், அவன்,
"இல்லை இல்லை. நான் மிகவும் பிசியாக (busy) இருக்கிறேன்.
என்னை வேலை செய்ய விடு" என்றானாம்.
பிரியமானவர்களே, "நீங்கள் செபிக்கிறீர்களா?" என்று நாம்
கேட்கும்போது, பலரும் இப்படித்தான் சொல்லுகிறார்கள்: "நான்
ரொம்ப பிசியாக இருக்கிறேன். எனக்கு வேலையே அதிகமாக
இருக்கிறது. ஜெபிக்க எனக்கு நேரம் இல்லை. ஆண்டவருடைய
வார்த்தையை வாசிக்க நேரம் இல்லை. கோவிலுக்குப் போக நேரம்
இல்லை" என்றெல்லாம் நாம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
கடவுளுக்கே நேரமில்லையா?
கடவுள் நமக்கு உயிரைக் கொடுத்திருக்கிறார். ஒப்பில்லாத
பொக்கிஷம், நாம் மனிதராய் படைக்கப்பட்டிருப்பது. கடவுள்
நம்மைக் கிறிஸ்தவர்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். கடவுள்
நம் மீது காட்டிய அளவில்லாத இரக்கம்! இந்தக் கடவுளை
மறந்துவிட்டு, "அவருக்காகச் செலவிட நமக்கு நேரம் இல்லை"
என்று நாம் சொல்லிக்கொண்டிருந்தோம் என்றால், எந்த அளவுக்கு
நம்மை நாம் நியாயப்படுத்திக்கொள்ள முடியும்?
பிரியமானவர்களே, இன்றைக்கு நம் எல்லாருக்கும் மீண்டும்
திரு அவை இன்றைய வாசகங்கள் வழியாக, நற்செய்தி வழியாக
நமக்குச் சொல்வது இதுதான்: "நீ செபிக்கவில்லை என்றால் நீ
கிறிஸ்தவன் அல்ல. நீ செபிக்கவில்லை என்றால் நீ சீடன்
அல்ல."
ஜெபமும் உழைப்பும்
ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும். விடாப்பிடியோடு ஜெபிக்க
வேண்டும். தாழ்ச்சியோடு ஜெபிக்க வேண்டும். நம்பிக்கையோடு
ஜெபிக்க வேண்டும் என்று நமக்கு ஆண்டவர் மீண்டும்
வலியுறுத்துகிறார்.
உங்களுக்குத் தெரியும், சீடர்கள் இரவு முழுவதும்
மீன்பிடிக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள். அவர்கள்
சொன்னார்கள்: "ஆண்டவரே, இரவு முழுவதும் பாடுபட்டும்
எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை." அதுபோல, ஜெபம்
இல்லையென்றால் உன்னுடைய உழைப்பு எல்லாம் வீணாகிப் போகும்.
உலகப் போக்கிலே, வாய்ப்பு வசதிகளிலே நீ அதிகம் வளர்வதாகத்
தோன்றலாம். ஆனால் ஆண்டவர் கொடுக்கின்ற உண்மையான நிம்மதி
ஜெபத்தில் மட்டும்தான் வரும்.
திருப்பாடலில் நாம் வாசிக்கிறோம்: "நீங்கள்
விடியற்காலையில் எழுந்திருப்பதும், இரவு வெகுநேரம் கழித்து
உறங்கச் செல்வதும் வீணே." "ஆண்டவரே வீட்டைக் கட்டினாலன்றி,
அதைக் கட்டுவோரின் உழைப்பெல்லாம் வீணே. ஆண்டவரே நகரைக்
காத்தாலன்றி, அதைக் காப்போரின் உழைப்பெல்லாம் வீணே."
தம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்கு ஆண்டவர் உறக்கத்திலும்
நன்மை செய்கிறார். தூக்கத்திலும் நன்மை செய்கிறார்.
மனம் தளராமல் ஜெபியுங்கள்
"நான் இளைஞனாய் இருந்தேன்; இப்போது முதியவனாய்
இருக்கிறேன். ஆனால் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்திருப்பவன்
கைவிடப்படுவதை நான் கண்டதே இல்லை" என்கிறார் திருப்பாடல்
ஆசிரியர். பிரியமானவர்களே, ஆண்டவர் உங்கள் எல்லாரையும்
இன்னும் அதிகமாக ஜெபிக்க, அதுவும் விடாப்பிடியோடு ஜெபிக்க
அழைக்கிறார்.
இந்த நற்செய்திப் பகுதியில், ஆண்டவர் ஒரு அழகான கதையைச்
சொல்லி, எப்படி நாம் மனம் தளராமல் ஜெபிக்க வேண்டும் என்று
சொல்லுகிறார்.
ஜெபத்தின் நற்செய்தி: லூக்கா
லூக்கா நற்செய்தி 'ஜெபத்தின் நற்செய்தி' என்றும்
அழைக்கப்படுகிறது. லூக்கா நற்செய்திக்கு இன்னும் எத்தனையோ
பெயர்கள் உண்டு. இது 'தூய ஆவியின் நற்செய்தி' (பரிசுத்த
ஆவியைப் பற்றி அதிகமாகச் சொல்லப்பட்டிருப்பது). இது
'மகிழ்ச்சியின் நற்செய்தி'. இது 'பெண்களின் நற்செய்தி'.
இது 'ஏழைகளின் நற்செய்தி'. முதல் முதலில்
திருவிவிலியத்தைப் படிக்கின்றவர்கள், லூக்கா நற்செய்தியைப்
படிக்கவேண்டும்.
இந்த லூக்கா நற்செய்திக்கு மிக முக்கியமான பெயர்
'ஜெபத்தின் நற்செய்தி'. இதில் ஆண்டவர், மற்ற
நற்செய்திகளில் இல்லாத சில உவமைக் கதைகளைச் சொல்லி
ஜெபத்தினுடைய அற்புதத்தை, அதன் அருமையை நமக்கு
விளக்குகிறார்.
விடாப்பிடியான ஜெபத்தின் வல்லமை
ஒரு சில வாரங்களுக்கு முன்பு நாம் கேட்டோம்: நள்ளிரவில்
தன்னுடைய நண்பனுடைய வீட்டுக் கதவைத் தட்டி, "எனக்கு அப்பம்
வேண்டும்" என்று தொந்தரவு செய்த ஒரு நண்பனைப் பற்றி
ஆண்டவர் சொன்னார். "அவன் நண்பன் என்பதற்காகக்
கொடுக்காவிட்டாலும், அவனது தொந்தரவு தாங்க முடியாமல்,
எழுந்து அவனுக்குத் தேவையானதெல்லாம் கொடுப்பான்." ஆண்டவர்
சொன்னார்: "அந்த மனிதனே அப்படிச் செய்கிறான் என்றால்,
உங்களைக் கேட்கின்ற கடவுள் எப்படித்தான் உங்களுக்குச்
செய்யாமல் இருப்பார்?"
இன்னொரு கதையில், ஒரு நகரத்தில் ஒரு விதவை இருந்தாள்.
அக்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் விதவைகளின்
வாழ்க்கை மிகவும் கடினமானது. அவர்கள் சமுதாயத்தால்
ஒதுக்கப்பட்டார்கள், நசுக்கப்பட்டார்கள்,
ஏமாற்றப்பட்டார்கள். கணவன் இறந்த பிறகு... இந்தக்
காலத்தில் கூட எவ்வளவு விதவைகள் துன்பப்படுகிறார்கள்! அந்த
விதவை, அநீதியுள்ள நடுவரிடம் சென்று தனக்காக நீதி
வழங்கும்படி விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவளது
தொந்தரவுக்காகவே அவளுக்கு நீதி வழங்கப்பட்டது.
ஜெபத்தின் முன்மாதிரி: இயேசு
நம் ஆண்டவராகிய இயேசு, தன் வாழ்வின் முக்கியமான
கட்டங்களில் எல்லாம் ஜெபத்தோடு தொடங்கினார்; ஜெபித்தார்.
சிலுவையிலே தொங்கிக்கொண்டு இருந்தபோதும் ஜெபித்தார்.
"எல்லாம் நிறைவேறிற்று," "தந்தையே, உமது கரங்களில் என்
ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று ஆண்டவர் ஜெபித்தார்.
ஜெபமின்றி ஜெயமில்லை. எல்லா சக்தியும் வல்லமையும்
ஜெபத்தின் மூலம்தான் கிடைக்கிறது என்பதை மறக்காமல்,
மேன்மேலும் ஜெபிப்போம். ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இறை மின்னேற்றிகள்
சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: 'நம்
வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச்
சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.'
'சார்ஜர்கள்' அல்லது 'மின்னேற்றிகள்' அல்லது 'மின்மாற்றிகள்' - இவை
இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்கமாகவே
மாறிவிட்டன. 'உடுக்கை இல்லாதவன் கை போல சார்ஜர் இல்லாதவன் கை' பரிதவித்து
நிற்கும். இன்று நம்முடைய மடிக்கணினி, ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவை
இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக்
கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை
நம் கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில்
பயனற்றவை. ஆனால், அவை தங்களை மின்சாரத்தோடும் கருவிகளோடும் இணைத்துக்கொண்டால்தான்
அவற்றால் கருவிகளுக்குப் பயனுண்டு.
நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப்
பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகம் (காண். விப 17:8-13) நம்மை ஒரு போர்க்களத்திற்கு
அழைத்துச் செல்கிறது. இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்துவிட்டனர். அவர்கள்
வாக்களித்த நாட்டிற்குப் பயணம் செய்கின்றனர். அவர்கள் செல்லும்
வழியில் அமலேக்கியர் என்னும் நாடோடிக் குழுவினர் குடியிருக்கின்றனர்.
அவர்களுடைய எல்கையையும் பாதையையும் பயன்படுத்த அவர்கள் இஸ்ரயேலர்களை
அனுமதிக்கவில்லை. எனவே, போர் அவசியமாகிறது. அமலேக்கியர்கள் ஏற்கெனவே
போர்ப்பயிற்சி பெற்றவர்கள். இஸ்ரயேலர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளாக
செங்கல் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குப் போரைப் பற்றி
ஒன்றும் தெரியாது. கடவுள்தாமே இங்கே குறுக்கிட்டு அவர்களுக்கு அமலேக்கியர்மேல்
வெற்றியைத் தருகின்றார். யோசுவாவின் தலைமையில் ஒரு குழுவினர் -
கொஞ்சம் குச்சி, மட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் - அமலேக்கியருக்கு
எதிராகப் போரிடுகின்றனர். இவற்றால் வெல்ல முடியாது என்று
நினைக்கின்ற மோசே, ஆரோன், மற்றும் கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு
ஏறிச்செல்கின்றனர். மோசே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றார்.
எப்போதெல்லாம் அவருடைய கைகள் உயர்ந்து இருந்தனவோ அப்போதெல்லாம் இறைவல்லமை
கீழே போரிட்டுக்கொண்டிருக்கும் யோசுவா மற்றும் வீரர்களுக்குப்
பாய்கிறது. கைகள் தளர்வுறும்போதெல்லாம் படையும் பின்வாங்குகிறது.
இதைக் காண்கின்ற ஆரோனும் கூரும் உடைந்த சார்ஜருக்குச் ஸெல்லோ டேப்
போடுவதுபோல, தளர்ந்து போன மோசேயை ஒரு பாறையில் அமரச் செய்து இரு கைககளையும்
ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொள்கின்றனர். இஸ்ரயேலர் போரில்
வெற்றிபெறுகின்றனர்.
இங்கே வெற்றி என்பது கடவுளின் செயலாற்றலால் நடந்தேறுகிறது.
கடவுளின் செயலாற்றல் இங்கே எப்படி நடக்கிறது? ஒரு குழுமத்தின்
வழியாக அல்லது கூட்டுமுயற்சியின் வழியாக. யோசுவா, அவருடைய
தலைமையில் வீரர்கள், மோசே, ஆரோன், மற்றும் கூர் ஆகியோரின்
கூட்டுமுயற்சி அவர்களைக் கடவுளையும் மக்களையும் இணைக்கும்
மின்னேற்றியாக (சார்ஜராக) மாற்றுகிறது.
ஆக, நாம் வாழும் குழுமம் அல்லது சமூகம் அல்லது குடும்பம்
இறைமின்னேற்றியாக இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 3:14-4:2) பவுல்
திமொத்தேயுவுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த
அறிவுரைப் பகுதியில்தான் மறைநூலைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை
வெளியிடுகிறார் பவுல்: 'மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல்
பெற்றுள்ளது.' எபேசுத் திருச்சபையில் நிறைய போலிப் போதகர்களும்
போலிப் போதனைகளும் இருந்தன. மக்கள் எளிதாக மற்ற போதனைகளால்
ஈர்க்கப்பட்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் மற்றும்
திமொத்தேயு போதித்தவற்றை அவர்கள் எதிர்க்கவும் செய்தனர். இத்தகைய
போலிப் போதனைகளுக்கு எதிராக திமொத்தேயு என்ற இளவல் துணிவாக நிற்க
வேண்டுமென்றால், அவர் மறைநூலை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த
மறைநூலை திமொத்தேயு அவருடைய இளமைப் பருவம் முதலாகக்
கற்றிருக்கின்றார். இந்த மறைநூல் நான்கு நிலைகளில் பயன்படுவதாக
பவுல் எழுதுகிறார்: (அ) கற்பிப்பதற்கு - புதிய
நம்பிக்கையாளர்களுக்குக் கற்பிக்கவும், பழையவர்களுக்கு கற்பித்தலை
நினைவூட்டவும், (ஆ) கண்டிப்பதற்கு - தவறான போதனையைப்
போதிப்பவர்களை, போதனையில் பிறழ்வுகளை ஏற்படுத்துபவர்களை, (இ)
சீராக்குவதற்கு - நேரிய வழியில் செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நேரிய
வழியில் நடக்கச் செய்வதற்கும், வழி தவறுபவர்களைச் சரியான வழிக்குக்
கொண்டுவந்து சேர்க்கவும், மற்றும் (ஈ) நேர்மையாக வாழப்
பயிற்றுவிப்பதற்கு - அறநெறி வாழ்வுப் பயிற்சிக்கு.
இப்படியாக மறைநூலை சிறுவயதிலிருந்தே கற்றிருக்கின்ற, அதன் பயன்களை
அறிந்திருக்கின்ற திமொத்தேயு, 'இறைவார்த்தையை அறிவிக்க வேண்டும்.
வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில்
கருத்தாய் இருக்க வேண்டும். கண்டித்துப் பேசவும், கடிந்துகொள்ளவும்
அறிவுரை கூறவும், பொறுமையோடு கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.'
ஆக, பவுலைப் பொருத்தவரையில் மறைநூல் அல்லது விவிலியம்
இறைமின்னேற்றியாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 18:1-8) இயேசு தன்னுடைய
இரண்டாம் வருகையை முன்னறிவித்தலின் பின்புலத்தில் இருக்கின்றது.
அதையொட்டியே இன்றைய நற்செய்திப் பகுதியின் இறுதியில், 'மானிட மகன்
வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' எனக் கேட்கின்றார்.
தன்னுடைய சீடர்களும் அவர்களுக்குப் பின் வருகின்ற
நம்பிக்கையாளர்களும் தன்மேல் நம்பிக்கையை இழந்துவிடுவார்களோ என்ற
ஐயம் இயேசுவுக்கு இருக்கவே செய்தது. அப்படி நம்பிக்கை இழப்பதற்கான
வாய்ப்பும் இயேசுவின் சமகாலத்திலேயே நிறைய இருந்தது. இந்த அபாயத்தை
அவர்கள் எதிர்கொள்ள இயேசுவே ஓர் உவமையைச் சொல்கின்றார்.
இந்த உவமையில் வரும் நடுவர் 'கடவுளுக்கும் அஞ்சுவதில்லை.
மனிதர்களையும் மதிப்பதில்லை.' திருச்சட்டத்தின் முதன்மையான மற்றும்
இரண்டாவது கட்டளைகளான இறையன்பும், பிறரன்பும் இவரிடம் அறவே இல்லை.
யாருக்கும் எதிலும் கடன்படாதவராக, யாருக்கும் பயப்படாதவராக,
யாரையும் திருப்திப்படுத்த விரும்பாதவராக இருக்கிறார். 'இதைச்
செய்' என்று இவரிடம் யாரும் வற்புறுத்தவோ, பரிந்துபேசவோ,
விரும்பிக் கேட்கவோ முடியாது. தன்னுடைய வாடிக்கையாளரான ஒரு
கைம்பெண்ணுக்கு நீதி வழங்கும் கடமையையும் அவர் செய்யவில்லை.
யாருக்கும் அஞ்சாத அவர் ஒரு கைம்பெண் என்ற பிள்ளைப்பூச்சிக்கா
அஞ்சுவார்? இல்லை. ஆனாலும், கைம்பெண்ணின் தொல்லையின்பொருட்டு
அவருக்கு நீதி வழங்குகிறார்.
இந்தப் பின்புலத்தில் நீதியற்ற நடுவரோ நீதி வழங்கினார் என்றால்
நீதியும் இரக்கமுமான கடவுள் நீதி வழங்கத் தாமதம் செய்வாரோ? என்ற
கேள்வியை எழுப்புகின்றார் இயேசு.
இயேசு இறந்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள்
ஏறக்குறைய இக்கைம்பெண் போல நிர்க்கதியாக நின்றனர். அவர்களுக்கென்று
எந்தவொரு உடைமையும், உறவும் இல்லை. நீதியும் இல்லை என்றால் அவர்கள்
இன்னும் அதிகம் அவதிப்படுவார்கள். கைம்பெண்ணுடைய விடாத வேண்டுதல்
அவருடைய விண்ணபத்தை நிறைவேற்றியதுபோல, விடாமுயற்சியுடன்கூடிய
இறைவேண்டல் நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும் என்று
அறிவுறுத்துகிறார் இயேசு.
ஆக, விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டல் இறைமின்னேற்றியாக
இருக்கிறது.
இவ்வாறு, இறைமின்னேற்றியாக இன்றைய முதல் வாசகம் குழுமத்தையும்,
இரண்டாம் வாசகம் மறைநூலையும், நற்செய்தி வாசகம் விடாமுயற்சியுடன்
கூடிய இறைவேண்டலையும் முன்வைக்கிறது.
இந்த மூன்று சார்ஜர்களை - குழுமம், மறைநூல், இறைவேண்டல் - நம்முடைய
இறைமின்னேற்றிகளாக வைத்துக்கொள்வது எப்படி?
1. குழுமமும் கூட்டு முயற்சியும்
இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போரிட்டு பெற்ற வெற்றி இறைவனின்
அருள் மற்றும் மனித முயற்சி ஆகியவற்றின் இனிய கலவையாக இருக்கிறது.
மேலும், சிறிய குழுமத்தின் முயற்சி பெரிய குழுமத்திற்கு வெற்றியைத்
தருகின்றது. ஆக, நாம் வாழும் நம்முடைய குடும்பம், சமூகம், குழுமம்,
பங்கு, ஊர், நகரம் ஆகிய அனைத்தும் குழுமங்களே. இவை அனைத்துமே
இறைமின்னேற்றிகளே. இவை அனைத்தின் வழியாகவும் இன்று நாம் நம்மையே
ஆற்றல்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு மாற்றாக இன்றைய
உலகம் தனிநபர் வாழ்வை அதிகமாக முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொருவரும்
தன்னுடைய வீடியோ கேம், காணொளி, சமூக வலைதளம் என்று
மூடிக்கிடக்கவும், அல்லது எல்லா மனிதர்களையும் துறந்துவிடும்
பின்நவீன சந்நியாசிகளை உருவாக்குவதையும் இன்றைய உலகம்
விரும்புகிறது. ஆனால், 'யாரும் எனக்கு வேண்டாம்' என்று எல்லாரையும்
இயல்பு வாழ்க்கையில் துறந்துவிட்டு, செயற்கையான எண்ணியல் வாழ்வில்
நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதிநவீன சந்நியாசிகள்
தங்களுடைய குழுமங்களுக்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், ஒருவர்
மற்றவரை அன்பு செய்யும் குழுமத்தில் அவர்கள் தங்களையே
இணைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலும், குழுமத்திலும்தான்
ஒருவருக்கு முதல் இறைமின்னேற்றி கிடைக்கிறது.
2. மறைநூல் அல்லது இறைவார்த்தை
'மறைநூல் அனைத்தும் கடவுளால் தூண்டப்பட்டது' என்று பவுல்
சொல்லும்போது அவர் முதல் ஏற்பாட்டு மறைநூலையே மனத்தில்
வைத்திருக்கிறார். ஏனெனில் பவுல் இத்திருமுகத்தை எழுதும் காலத்தில்
இரண்டாம் ஏற்பாட்டு நூல்களும் திருமுறையும் முழுமை பெறவில்லை.
இயேசு நிகழ்வில் வார்த்தையே மனிதராக நம்மோடு குடிகொண்டுள்ளது.
விவிலியத்தை நாம் வாசிக்கும்போது நாம் இறையறிவில் வளர்வதோடு,
நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய, மற்றவர்களை பற்றிய அறிவும் நமக்கு
வளர்கிறது. இன்று நாம் மறைநூலை இறைமின்னேற்றியாகப்
பயன்படுத்துகிறோமா? நாம் மறைநூல் அறிவைப் பெற விரும்புகிறோமா?
கற்பிக்கவும், கண்டிக்கவும், சீராக்கவும், நேரிய வழியில் நடக்கப்
பயிற்றுவிக்கவும் மறைநூலைப் பயன்படுத்துகிறோமா? அல்லது ஆலயத்திலும்
செபக்கூட்டங்களிலும் மட்டுமே வாசிக்கப்படும் நூலாக நாம்
அந்நியப்படுத்திடுவிடுகிறோமா?
3. விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல்
நாம் செபிக்கின்றோம். சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி,
முறைப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம்.
ஆனால், வேண்டுவது கிடைக்கும் வரை செபிப்பதில்லை. பல நேரங்களில்
மனம் தளர்ந்து போகின்றோம். நம்முடைய தவறான வாழ்க்கை முறை,
மற்றவர்களைப் பற்றிய எண்ணம், கடவுளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள்
ஆகியவற்றால் இறைவேண்டலைக் கைவிடுகிறோம். கைம்பெண்ணுக்கு வேறு வழியே
இல்லை. ஆகையால் நடுவரை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். இந்த
இறைச்சார்பு நிலை என்னிடத்தில் இருக்கிறதா? சில நேரங்களில் கடவுளை
நான் என் வாழ்வில் இறுதியான தேடுபொருளாகவே வைத்துள்ளேன். என்னுடைய
மனமும் கால்களும் தளர்வதற்கான காரணிகள் எவை? கைகள் செய்யாததை
முழங்கால்கள் செய்யும் என்றால் நான் அவர்முன் எத்தனை முறை
மண்டியிடத் தயாராக இருந்துள்ளேன்? இறைவேண்டலை நான் ஆற்றல்பெறும்
இடமாக பார்க்கிறேனா?
இறுதியாக,
இன்று நம்மைச் சுற்றி நிறைய போலி சார்ஜர்கள் இருக்கின்றன. இவை
நம்மை சார்ஜ் செய்வதுபோல செயல்பட்டு நம் உடலில் எஞ்சியிருக்கும்
ஆற்றலையும் உறிஞ்சிவிடுகின்றன. குழுமமும், இறைவார்த்தையும்,
இறைவேண்டலும் நம்மை உற்சாகப்படுத்தும், நமக்கு வெற்றியைக்
கொடுக்கும் மின்னேற்றிகள்.
இதை அறிந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், 'மலைகளை நோக்கி என்
கண்களை உயர்த்துகின்றேன். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய
ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்' (121:1) என்று
முழங்குகின்றார். இறைமின்னேற்றிகளோடு நாம் தொடர்பு கொண்டிருந்தால்,
'போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் நம்முடைய
வாழ்வு என்னும் அலைபேசியும் மடிக்கணினியும் இயக்கத்தில்
இருக்கும்!'
I விடுதலைப் பயணம் 17: 8-13
II 2 திமொத்தேயு 3: 14- 4:2
III லூக்கா 18: 1-8
மனந்தளராதே! கைகளை உயர்த்து! நிலைத்து நில்!
ஒரு குறிப்பிட்ட நகரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். கடவுள்மீது
மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் அப்பகுதியில் இருந்த ஏழைக் குழந்தைகளுக்கு
மறைக்கல்வி கற்றுக்கொடுக்க விரும்பினார். இதற்காகவே திறமையான ஒரு
பெண்மணியும் அவர் நியமித்தார். அந்தப் பெண்மணி ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் பக்கத்திலுள்ள சேரிக்குச் சென்று, அங்கிருந்த
ஏழைச் சிறுவர் சிறுமிகளைச் செல்வந்தரின் இல்லத்திற்கு அழைத்து வந்து,
அங்கு அவர்களுக்கு ஞாயிறு மறைக்கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும்.
செல்வந்தர் தன்னுடைய இல்லத்திற்கு மறைக்கல்வி கற்றுக்கொள்ள வந்த
சிறுவர் சிறுமிகளுக்குப் புத்தம் புதிய ஆடையைத் தந்தார். இதனால்
ஞாயிறு மறைக்கல்வி கற்க நிறைய சிறுவர் சிறுமிகள் வந்தார்கள்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், ஒரு சிறுவன் மட்டும்
ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கு ஓரிரு வாரங்கள் வராமல் இருந்தான்.
"அவனுக்கு என்ன ஆயிற்றோ?' என்று ஆசிரியை அவனைத் தேடிச் சென்றபோது,
அவனுடைய ஆடை கிழிந்துபோனதால், அவனால் மறைக்கல்வி வகுப்புக்கு வரமுடியவில்லை
என்ற உண்மை தெரிந்தது. இதை அவர் செல்வந்தரிடம் சொன்னபோது, செல்வந்தர்
அந்தச் சிறுவனுக்கு வேறொரு புத்தம் புதிய ஆடையை எடுத்துக்
கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து அவன் ஒழுங்காக மறைக்கல்வி வகுப்பிற்கு வந்தான். இதெல்லாம்
ஓரிரு மாதங்களுக்குத்தான்! மீண்டுமாக அவன் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கு
வராமல் போகவே, ஆசிரியை அவனைத் தேடித் போனார். அப்போதும் அவன் தன்னுடைய
ஆடை கிழிந்து போனதால்தான் தன்னால் மறைக்கல்வி வகுப்புக்கு வரமுடியவில்லை
என்றான். இதை அவர் செல்வந்தரிடம் சொல்லிவிட்டு, "அவனைத் திருத்த
முடியாது. அதனால் அவனை அப்படியே விட்டுவிடுவோம் " என்றபோது, செல்வந்தர்
அவரிடம், "இன்னும் ஒரே ஒரு முயற்சி செய்வோம் " என்று சொல்லி, அவனுக்கு
மீண்டுமாக ஒரு புத்தாடையை வாங்கித் தந்தார்.
இதன்பிறகு அவன் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்குத் தவறாமல் வந்தான்.
அது அவனுக்குள் கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதனால் அவன் வளர்ந்து பெரியவனான பிறகு, சீனாவிற்கு நற்செய்தி அறிவிக்கச்
சென்றான். அங்கு அவன் நற்செய்தியை அறிவித்தது மட்டுமல்லாமல், சீன
மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்தான். இப்படிச் சரியான ஆடையில்லாமல்
ஞாயிறு மறைக்கல்வி வகுப்பிற்கே போகாமல் இருந்த, பின்னாளில் மிகப்பெரிய
நற்செய்திப் பணியாளரான அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன், அவன்தான்
இராபர்ட் மோரிசன் என்ற நற்செய்திப் பணியாளர்.
ஒருவேளை இராபர்ட் மோரிசனுக்கு ஞாயிறு மறைக்கல்வி கற்றுக்கொடுத்த,
ஆசிரியையும் செல்வந்தரும் இன்னொரு வாய்ப்புக் கொடுக்காமல்
போயிருந்தால் மிகப்பெரிய நற்செய்திப் பணியாளர் உலகிற்குக் கிடைக்காமலேயே
போயிருப்பார் அல்லவா! பொதுக் காலத்தின் இருபத்து ஒன்பதாம் ஞாயிறான
இன்று நாம் வாசிக்கின்ற இறைவார்த்தை, "மனந்தளராதே, கைகளை உயர்த்து,
நிலைத்து நில் " என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம்
சிந்திப்போம்.
மனந்தளராதே!
ஆன்மிக வாழ்விலும் சரி, அன்றாட வாழ்விலும் சரி நம்மை மனம் சோர்ந்து
போகச் செய்ய எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அவற்றால் நாம் மனந்தளராமல்
உறுதியாய் இருக்கவேண்டும் என்பதை நற்செய்தியில் இயேசு நேர்மையற்ற
நடுவரும் கைம்பெண்ணும் என்ற உவமை வாயிலாகக் கூறுகின்றார். உவமையில்
வரும் நடுவர் கடவுளுக்கும் மனிதருக்கும் அஞ்சாதவர். அப்படிப்பட்டவரிடம்
கைம்பெண் தொடர்ந்து மன்றாடியதால், அவருடைய வழக்கிற்கு நேர்மையற்ற
நீதி வழங்குகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் வரும் நேர்மையற்ற
நடுவரைக் கடவுளோடு ஒப்பிடக்கூடாது. ஏனெனில், இந்த நடுவர் நேர்மையற்றவர்;
யாருக்கும் அஞ்சாதவர். ஆனால், ஆண்டவர் நடுநிலை தவறாத நீதிபதி (திபா
7:11). மட்டுமல்லாமல், அவர் இரக்கமும் பரிவும் உள்ளவர் (விப 34:6).
அப்படிப்பட்டவர் தம்மை நோக்கி அல்லும் பகலும் மன்றாடுவோருக்கு நிச்சயம்
நீதி வழங்குவார். அதையே இயேசு அந்த உவமை வாயிலாக எடுத்துக்கூறுகின்றார்.
கைகளை உயர்த்து:
கடவுளிடம் மன்றாடுகின்றபோது மனந்தளராமல் மன்றாடவேண்டும் என்பதை
மேலும் வலியுறுத்திக் கூறுகின்றது இன்றைய முதல் வாசகம். குலமுதுவரான
ஈசாக்கிற்கு ஏசா, யாக்கோபு என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். இவர்களில்
முதலாவதாக வரும் ஏசாவின் வழிமரபினர்தான் அமலேக்கியர். இவர்களுக்கும்
இஸ்ரயேலருக்கும் இடையே போர் நடக்கின்றபோது, மோசே மலைக்குச் சென்று,
தன் கைகளை உயர்த்திப் பிடித்தவாறு இருக்கின்றார். அவ்வாறு அவர் தன்
கைகளை உயர்த்திப் பிடித்திருந்தபோதேல்லாம் இஸ்ரயேலுக்கு வெற்றி
கிடைத்தது. அதே நேரத்தில் அவரது கைகள் தளர்வுற்றபோது, இஸ்ரயேலுக்குத்
தோல்வி ஏற்பட்டது. இதனால் அவரது கை தளர்வுறாத வண்ணம் ஆரோன் ஒருபக்கமும்,
கூர் இன்னொரு பக்கமும் அவரது கைகளை உயர்த்திப் பிடித்ததால் இஸ்ரேலுக்கு
வெற்றி கிடைக்கின்றது.
இங்கு மோசே தன் கைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டதை, இறைவனிடம்
மனந்தளராது மன்றாடினால் வெற்றி கிடைக்கும் என்ற விதத்தில்
புரிந்துகொள்ளலாம்.
நிலைத்து நில்:
இறைவேண்டல் செய்கின்றபோது மட்டுமல்ல, கடவுளின் வார்த்தையை அறிவித்து,
அவருக்கு உகந்தவர்களாய் வாழும்போதும் நமக்குப் பலவிதமான சவால்கள்
வரலாம். அப்படியிருந்தாலும், நாம் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதிலும்
நிலைத்து நிற்க வேண்டும் என்ற செய்தியை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குத்
தெளிவுபடுத்துகின்றது.
எபேசு நகரில் ஆயராக நியமிக்கப்பட்ட திமொத்தேயு ஆட்சியாளர்களிடமிருந்து
வந்த எதிர்ப்பினைக் கண்டு மனம் சோர்ந்து போயிருந்தார். இந்நிலையில்,
அவரைத் திருப்பணியில் அமர்த்திய பவுல் அவரிடம், "நீ கற்று, அறிந்தவற்றில்
நிலைத்து நில் " என்கிறார். திமொத்தேயு தன்னுடைய பாட்டி லோயிடமிருந்தும்,
தன்னுடைய அம்மா யூனிக்கியிடமிருந்தும் இறைவார்த்தையைக் கற்றறிந்திருந்தார்.
அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்று சொல்லும் பவுல்,
"இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்
இதைச் செய்வதில் கருத்தாயிரு " என்கின்றார். திமொத்தேயு தன்னுடைய பணிவாழ்வில்
எதிர்கொண்ட ஆபத்துகளைப் போன்று நம்முடைய ஆன்மிக வாழ்விலும் நாம்
பலவிதமான ஆபத்துகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ளலாம். அத்தகைய
வேளையில், நாம் நமது நம்பிக்கையில், நிலைத்திருப்பது மிகவும்
முக்கியம். ஏனெனில், இறுதி வரை மன உறுதியோடு நிலைத்து நிற்பவரே
மீட்புப் பெறுவர் (மத் 24:13).
சிந்தனைக்கு:
பழங்காலத்தில் ஏதென்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், தங்கள்
கையில் ஏந்தியிருக்கும் தீப்பந்தத்தை அணையாமல் கொண்டு வருபவருக்கே
பரிசுகள் கிடைக்கும். நம்பிக்கை வாழ்க்கையிலும் எதிர்வரும் ஆபத்துகளால்
மனம் சோர்ந்து விடாமல் உறுதியாய் நிலைத்து நிற்பவருக்கே கடவுளிடமிருந்து
பரிசுகள் உண்டு. நாம் இறைவேண்டலிலும் நம்பிக்கையிலும் மனந்தளராமல்,
கைகளை உயர்த்தி, நிலைத்து நிற்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
மனந்தளராமல் மன்றாடுவோம்
ஊர் ஊராகச் சென்று மக்கட்குப் போதித்துக்கொண்டிருந்த துறவி
ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் ஒரு கடற்கரைக்
கிராமத்திற்குச் சென்று போதிக்கத் தொடங்கினார். அவருடைய
போதனையைக் கேட்க ஏராளமான மக்கள் கூடி வந்தார்கள். துறவி
தொடர்ந்து போதித்துக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்து
எழுந்த ஒரு மனிதர், "சுவாமி! நான் ஒரு இறைப்பற்றாளன்;
எனக்குக் கடவுள்மீது ஆழமான நம்பிக்கை உண்டு; என்
நண்பர்கட்கும் என்னை நாடி வருபவர்கட்கும் நான் தாராளமாக
உதவிசெய்யக்கூடியவன். அப்படிப்பட்ட நான் பல ஆண்டுகளாக ஒரு
விண்ணப்பத்திற்காக இறைவனிடம் தொடர்ந்து
மன்றாடிவருகின்றேன். இருந்தும் என்னுடைய மன்றாட்டை இறைவன்
கேட்பதாகவே இல்லை. இதனால் நான் இறைவனிடம் வேண்டுவதை
இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று இருக்கின்றேன்.
இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்றார். அந்த
மனிதர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த துறவி,
பேசத் தொடங்கினார்: "தம்பி! கடலில் முத்தெடுப்பவர் எப்படி
எடுப்பார் என்பதைக் குறித்து நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தன்னுடைய உயிரைப் பணயம்
வைத்து கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்கும்போது முத்து
உடனடியாகக் கிடைத்துவிடுவதில்லை. உடனடியாக கிடைக்கவில்லை
என்பதற்காக அவர் தன்னுடைய முயற்சியைக்
கைவிட்டுவிடுவதில்லை; பலமுறை முயற்சி செய்கிறார். அதற்குப்
பின்னரே அவர் தேடிய முத்தானது அவர்க்குக் கிடைக்கின்றது.
அதுபோன்றுதான், இத்தனை ஆண்டுகளும் நீங்கள் இறைவனிடம்
எடுத்து வைத்த விண்ணப்பத்திற்குப் பதில் கிடைக்கவில்லை
என்பதற்காக உங்களுடைய முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள்.
தொடர்ந்து மன்றாடுங்கள். நிச்சயமாக இறைவன் உங்களுடைய
விண்ணப்பத்திற்குப் பதிலளிப்பார். ஏனென்றால், இறைவன்
உங்களுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கத்
தாமதப்படுத்துகிறார் என்பதால், அவர் உங்களுடைய
விண்ணப்பத்திற்குப் தரவே மாட்டார் என்ற அர்த்தம்
கிடையாது." துறவி சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும்
மகிழ்சிபோன அந்த மனிதர் இறைவனிடம் இன்னும் விடாமுயற்சியோடு
மன்றாடத் தொடங்கினார்.
இறைவனிடம் நாம் மன்றாடுகின்றபோது விடாமுயற்சியோடும்
மனந்தளராமலும் மன்றாடவேண்டும் என்ற உண்மையை எடுத்துச்
சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.
பொதுக்காலத்தின் இருபத்து ஒன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில்
இருக்கும் நமக்கு, இன்றைய நாள் இறைவார்த்தை மனந்தரளாது
மன்றாவோம் என்ற சிந்தனையைக் தருகின்றது. நாம் அது
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்
நற்செய்தியில் இயேசு, மனந்தளராது மன்றாடவேண்டும்
என்பதற்காக ஓர் உண்மையைச் சொல்கின்றார். அந்த உவமையைதான்,
நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் என்ற உண்மையாகும்.
இந்த உவமையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு
முன்னம், இஸ்ரயேல் சமூகத்தில் கைம்பெண்களின் நிலை எப்படி
இருந்தது எனத் தெரிந்துகொள்வோம்
லூக்கா நற்செய்தியில் கைம்பெண்களைக் குறித்த குறிப்புகள்
அதிகமான காணக்கிடக்கின்றன (லூக் 2: 37-38; 4: 25-26; 7:
11-17; 18: 1-8; 20: 45-47; 21: 1-4). இன்னும்
சொல்லப்போனால், லூக்கா நற்செய்தியாளர் அளவுக்கு
கைம்பெண்களைக் குறித்து எழுதிய நற்செய்தியாளர் யாரும்
கிடையாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு கைம்பெண்களைக்
குறித்து லூக்கா நற்செய்தியாளர் அதிகமாகவே
பதிவுசெய்திருக்கின்றார். ஆண்டவராகிய கடவுள் கைம்பெண்களைக்
கவனித்துக்கொள்ளவேண்டும்; அவர்களைப் பராமரிக்கவேண்டும்
என்று பலமுறை சொல்லியிருக்கின்றார். இதற்கான குறிப்புகள்
திருவிவிலியத்தின் பட இடங்களில் உள்ளன (விப 22: 22-24, இச
14: 28-29; எரே 7:6). அப்படியிருந்தும் கைம்பெண்களை
இரண்டாம் தர மக்களைப் போன்று நடத்திய போக்கு இஸ்ரயேல்
சமூகத்தில் நிலவித்தான் வந்தது. தொடக்கத் திருஅவையில்
கைம்பெண்களைக் கவனித்துக் கொள்ளும் ஏற்பாடுகள்
நடந்தாலும்கூட (திப 6:1. 1திமொ 5: 3-10, யாக் 1:27)
அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது.
இத்தகைய பின்புலத்தோடு இன்றைய நற்செய்தியில் இயேசு
சொல்கின்ற உவமையில் வருகின்ற கைம்பெண்ணின் நிலையைப்
பார்ப்போம். அவளுக்கு முன்பாக மூன்று சவால்கள் இருந்தன.
ஒன்று, அவள் பெண். இரண்டு, அவள் கணவனை இழந்தவள். மூன்று,
அவள் ஏழை. இப்படிப்பட்ட சாவல்களோடு கடவுளுக்கு அஞ்சாத,
மக்களையும் மதிக்காத ஒரு நடுவரிடமிருந்து நீதிகேட்டு அவள்
போராடுகின்றார். அந்தக் கைம்பெண்ணிடம் பணம் இருந்தாலாவது
கையூட்டுக் கொடுத்து (!) நடுவரிடமிருந்து உடனடியாக
நீதியைப் பெற்றிருக்க முடியும். அக்காலத்தில் அப்படியொரு
நிலை இருந்தது. உவமையில் வரும் கைம்பெண்ணுக்கு அதற்கும்
வழியில்லாமல் போனதால், அவள் மனந்தளராது அந்த
நடுவரிடமிருந்து நீதி கிடைக்கப் போராடுகின்றாள். முடிவில்
அந்த நேர்மையற்ற நடுவர், இவளுக்கு நீதி வழங்கவில்லை
என்றால், என்னுடைய உயிரை வாங்கிவிடுவாள் என்று பயந்து
போய் அவளுக்கு நீதி வழங்குகின்றார். இவ்வாறு அந்தக்
கைம்பெண் மனந்தளராது போராடி தனக்கான நீதியைப் பெறுகின்றாள்
பேரன்பு கொண்ட இறைவனும் அவருடைய மக்கள்
இயேசு இந்த உவமையைச் சொல்லிவிட்டு, நேர்மையற்ற நடுவரே
கைம்பெண்ணுக்கு நீதி வழங்கியபோது, தாம்
தேர்ந்துகொண்டவர்கள் தம்மை நோக்கி மன்றாடும்போது, கடவுள்
அவர்கட்கு நீதி வழங்காமல் இருப்பாரா? என்று தம்
சீடர்களிடம் கேட்கின்றார். இங்கு நாம் நேர்மையற்ற
நடுவர்தான் கடவுள் என்று புரிந்துகொள்ளக்கூடாது. கடவுள்
நேர்மையற்ற நடுவர் அல்ல, அவர் நல்ல நடுவர், நல்ல தந்தை.
அப்படிப்பட்ட தந்தை தம் பிள்ளைகள் அல்லது தாம்
தேர்ந்துகொண்டவர்கள் தம்மிடம் மன்றாடிக் கேட்கின்றபோது,
அவர் எப்படித் தராமல் போவார்...? நிச்சயம் தருவார்
என்பதுதான் இயேசு கூறும் செய்தியாக இருக்கின்றது. இன்னொரு
செய்தியையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில்,
கைம்பெண்ணுக்காக வழக்காட அல்லது அவர் சார்பாக நின்று போராட
யாருமே இல்லை. ஆனால், நம் சார்பாக இறைவனிடம் பரிந்து பேச
இயேசு கிறிஸ்துவும் (எபி 7: 25, 1 யோவா 2:1) தூய ஆவியாரும்
(உரோ 8: 26-27) இருக்கின்றார்கள். அப்படியிருக்கையில்
இறைவனிடம் நாம் மனந்தளராது மன்றாடுகின்றபோது, இறைவன்
மன்றாட்டை நிச்சயம் கேட்பார் என்பதுதான் இயேசு சொல்லும்
செய்தியாக இருக்கின்றது.
இறைவன் காலம் தாழ்த்துகிறார் என்பதால் தரமாட்டார் என்ற
அர்த்தமில்லை
இங்கு ஒரு கேள்வி எழலாம். இறைவனிடம் பரிந்து பேச இயேசு
இருக்கின்றார்; துணையாளராம் தூய ஆவியார் இருக்கின்றார்.
அப்படியிருந்தும் நாம் தொடர்ந்து மன்றாடுகின்றபோதும்,
இறைவன் நம்முடைய மன்றாட்டிற்கு (சில சமயங்களில்)
பதிலளிப்பதில்லையே? அது ஏன்? என்பதுதான் அந்தக் கேள்வி.
இதற்கான பதிலை புனித யோவான் தன்னுடைய முதல் திருமுகத்தில்
கூறுகின்றார். "நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கு
ஏற்ப அமைந்திருப்பின் அவர் நமக்குச் செவி சாய்க்கின்றார்"
(1 யோவா 5: 14). ஆம், எதைக் கேட்டாலும் அதைத் தர வல்லவராக
இறைவன் இருப்பினும், அவர் தன்னுடைய திருவுளத்திற்கு ஏற
அமைந்திருப்பவற்றிற்கே செவிசாய்க்கின்றார்.
ஆகையால், நாம் இறைவனிடம் தொடர்ந்து மன்றாடுவோம். ஒருவேளை
இறைவன் நம்முடைய மன்றாட்டிற்குப் பதில் தரவில்லை என்றால்,
அது இறைவனுடைய திருவுளத்திற்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை
என்று நினைத்துக் கொள்வோம்; தாமதமாக தந்தால் அதை
உள்ளன்போடு ஏற்றுக்கொள்வோம். ஆனால், எத்தகைய
சூழ்நிலையிலும் நாம் மன்றாடுவதை நிறுத்திக்கொள்ளாமல்,
தொடர்ந்து மன்றாடி இறைவனின் ஆசியைப் பெறுவோம்.
சிந்தனை
'காலையில் கடவுளை விட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக்
கண்டுபிடிக்கமாட்டன்' என்பார் பனியன் என்ற அறிஞர்.
ஆகையால், நாம் இறைவேண்டலுக்கு நம்முடைய வாழ்வில்
முதன்மையான இடம்கொடுப்போம்; இடைவிடாமலும் மனந்தளராமலும்
மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
கிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால்
மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது இன்றைய
வார்த்தை வழிபாடு. செபம் என்பது மனித உறவை வளர்க்கும் ஓர்
உன்னதமான கலை. இறைவன் முன்னிலையில் வாழ்வின் அர்த்தத்தைத்
தேடுவதே செபம். இறை - மனித உறவில் நிலைத்திருக்கச் செபமும்,
விடாமுயற்சியும் இரண்டு கண்கள் போன்றது. இறைவனின்
துணையில்லாமல், நமது முயற்சி மட்டும் பயனளிக்காது.
இன்றைய முதல் வாசகம் (விப. 17:8-13) செபத்தின் வல்லமைக்குச்
சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு
யோசுவா தலைமையில் போர் புரிந்தனர். மோசே கடவுளின் கோலை
கையில் பிடித்தவாறு தன் கையை உயர்த்தியிருக்கும்
போதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. கையைத்
தளர விட்டபோதெல்லாம் பகைவர்கள் வெற்றியடைந்தனர். இதனால்
தளர்வுற்ற மோசேயின் கைகளை ஆரோன், கூர் இருவரும் தாங்கிப்
பிடிக்க வெற்றி கிட்டியது. அதேபோல் நமது கைகளை உயர்த்திச்
செபிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது இந்த வாசகம்: தளர்ந்து
போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்
(எபி. 12:12). நாம் மனந்தளராமல் செபிக்க வேண்டும் என்பதை
இன்றைய நற்செய்தியில், நேர்மையற்றவரும், கைம்பெண்ணும் என்ற
உவமை வாயிலாக இயேசு உணர்த்துகிறார்.
நீதி கேட்டு, நடுவரிடம் சென்ற கைம்பெண்ணை நடுவர் இழுத்தடிக்கிறார்.
ஆனால் கைம்பெண் விடாது நச்சரித்ததால், அவளுடைய தொல்லை
தாங்க முடியாமல், அப்பெண்ணுக்கு நீதி வழங்குகிறார். நேர்மையற்ற
நடுவரே தொல்லை தாங்காமல் நீதி வழங்கினாரென்றால், நீதியுள்ள
, இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை
நிச்சயமாகக் கேட்பார் என்பது உறுதி (மூன்றாம் வாசகம்).
இயேசு தனது பணி வாழ்வு முழுவதும், தந்தையோடு உள்ள செப உறவில்
நிலைத்திருந்தார். விடியற்காலையில் கருக்கலோடு எழுந்து
செபித்தார். மாலையானதும் தனிமையாய் மலைக்குச் சென்று
செபித்தார் (லூக். 6:12). ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொடங்கு
முன்பும், முழந்தாளிட்டும், கைகளை விரித்தும், கண்களை வான்
நோக்கியும், முகம் குப்புற விழுந்தும் செபித்தார் என
விவிலியம் தருகிறது. எனவேதான் திருத்தூதர் பவுல்
கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச.
5:17) என்று.
ஒரு துறவியிடம் சீடர்கள், 'மிகப் பெரிய பாவம் எது?' என்று
கேட்டார்கள். துறவி சிரித்துக் கொண்டே, 'திருடுவது, பொய்
சொல்வது, ஏமாற்றுவது அல்ல. மாறாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்து
கொண்டு செபிக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய பாவம்' என்றார்.
ஆனால் மன்றாடுவது மட்டும் போதாது, மனம் தளராமல் தொடர்ந்து
மன்றாட வேண்டும்.
எனவேதான் என் நாட்டிற்கு ஆற்றும் முதல் தொண்டு என் தேசத்திற்காக
செபிப்பதுதான்; அதுவும் இடைவிடா செபத்தின் மூலம்தான் தேசத்தை
வெற்றிகரமாக வழி நடத்த முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை
கொண்டிருந்தார் மன்னரான புனித 9ஆம் லூயி. செபம் மனித
வாழ்வை நிலைப்படுத்தி, பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. முயற்சிக்கு
நல்ல முடிவினைத் தருகிறது. கடவுள் கொடுப்பதை மனிதர் தடுக்க
முடியாது; கடவுள் தடுப்பதை மனிதர் கொடுக்க முடியாது.
முடிவாக, கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இணைந்து
செல்ல, கடவுள் உதவி செய்வார்.
மனமே மயங்காதே!
நற்செய்தியிலே வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நகர நடுவரிடம்
மன்றாடுகின்றார். நெடுங்காலமாகியும், கைம்பெண்ணின் எதிரியைத்
தண்டித்து, நீதி வழங்க நடுவர் மறுத்துவிடுகின்றார். விதவைகள்
புறக்கணிக்கப்பட்ட காலமது. விதவை விடவில்லை. அவரது
தொல்லையைத் தாங்கிக்கொள்ள சக்தியற்றவராய் நேர்மையற்ற
நடுவர் நீதி வழங்குகின்றார். இந்த உவமையின் வழியாக இயேசு
நமக்குக் கற்பிக்கும் பாடம், மனந்தளராமல் எப்பொழுதும்
இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1) என்பதாகும்.
இடைவிடாது தொடர்ந்து மோசே செபித்த போது இஸ்ரயேலர்
போரில் வெற்றி பெற்றதாக முதல் வாசகம் கூறுகின்றது.
நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாம் இடைவிடாது, மனம்
தளராமல் மன்றாட வேண்டும்.
நமது மனத்தைத் தளர விடாமல் வைத்துக்கொள்ள நாம் செய்ய
வேண்டியவை எவை?
மனம் என்பது ஒரு காசு போன்றது. மனத்திற்கு இரண்டு
பக்கங்கள் உள்ளன : ஒன்று அறிவு, மற்றொன்று ஆசை.
புலன்கள் வழியாகக் கிடைக்கக்கூடிய அனைத்துச்
செய்திகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை அறிவு ஆசைக்கு
முன் வைக்கும். ஆசையின் முடிவை அறிவு பின்பற்றும். ஆசை
இதைச் செய் என்றால், அறிவு புலன்களுக்குக் கட்டளை
பிறப்பிக்கும்; புலன்கள் செயல்படும். ஆசை இதைச்
செய்யாதே என்றால் அறிவு அமைதியாக இருந்துவிடும்.
அறிவு மன்றாட்டைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களை
ஆசைக்கு முன்னால் வைக்கும்போது ஆசை பச்சைக்கொடி காட்ட
நமது மனம் தொடர்ந்து மன்றாடத் துவங்கும்.
முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஆன் என்பவர் ஒருவர்
இருந்தார். அவர் ஓர் ஆன்மிகவாதி. அவரை மக்கள்
நேசித்தார்கள். அவர் எந்த வேலையையும் செய்வதில்லை.
மக்கள் அவருக்கு உண்ண உணவு கொடுத்தார்கள் ; உடுக்க உடை
கொடுத்தார்கள்.
ஒரு நாள் ஆனிடம், நீங்கள் நாள் முழுவதும் என்ன வேலை
செய்கின்றீர்கள்? என்று ஒருவர் கேட்டார்.
நான் காளைமாட்டைப் பராமரிக்கின்றேன் என்றார். நீங்கள்
காளைமாட்டை எப்படிப் பராமரிக்கின்றீர்கள்? என்றார்
கேள்வி கேட்டவர். ஆன், காளைமாடு புல்லில் வாய்
வைக்கப்போகும் போதெல்லாம் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து
பின்னால் இழுத்து விடுவேன் என்றார். கேள்வி கேட்ட கியூ
இஷான், நீங்கள் காளைமாட்டைச் சரியாகப்
பராமரிக்கின்றீர்கள் என்றார். ஆன் காளைமாடு என்று
குறிப்பிட்டது அவரது சுயத்தை.
நமக்குள்ளிருக்கும் அறிவு உடலைச் சார்ந்தது. ஆகவே,
உலகச் சூழ்நிலைகளாலும் அனுபவங்களாலும் கல்வி
முறைகளாலும் பாதிக்கப்படும்போது அறிவு பாதிக்கப்படும்.
பல சமயங்களில் பாதிக்கப்பட்ட உடலால் களைப்பு,
வெறுப்பு, அவநம்பிக்கை போன்ற விதைகள் அறிவு என்னும்
நிலத்தில் விதைக்கப்படலாம். அப்படி விதைக்கப்படும்போது
அவற்றை ஒரு வினாடிகூட தாமதிக்காது அப்புறப்படுத்தி
விடவேண்டும். அப்புறப்படுத்தப்பட்ட இடத்திலே இறையன்பு
, இறை நம்பிக்கை, உற்சாகம் போன்ற விதைகளை , எண்ணங்களை
விதைக்க வேண்டும்.
அறிவு நல்லனவற்றை ஆசையின் அடிகளில் வைத்தாலும் பல
சமயங்களில், சரியானதைத் தேர்ந்தெடுக்கக்கூடிய ஆற்றல்
இல்லாமல் ஆசை தத்தளிக்கக் கூடும். அப்படிப்பட்ட
நேரங்களிலே நமக்குள் வாழும் (உரோ 8:9-11) இயேசுவின்
ஆவியாரை நாம் உதவிக்கு அழைக்க வேண்டும். அவர் நமது
பயணத்தில் நம் சோர்வைப் போக்கி நமது பயணத்தை
உற்சாகத்தோடு தொடர உதவுவார். தூய ஆவியாரின் துணை
கேட்பவர்களுக்குக் கிடைக்கும் (லூக் 11:9-13). தூய
ஆவியாருக்கு அடுத்தபடியாக நமக்கு ஞானத்தை அளித்து,
நாம் நேர்மையாக வாழ நம்மைப் பயிற்றுவிக்கும் ஆற்றல்
கடவுளின் தூண்டுதல் பெற்ற மறைநூலுக்கு உண்டு (இரண்டாம்
வாசகம்).
ஆர்க்கமெடிஸ் என்ற அறிவியல்மேதை நெம்புகோல் என்னும் தத்துவத்தைக்
கண்டுபிடித்தார். இந்தத் தத்துவத்தைக் கொண்டு மிகவும் கனமான
பொருள்களை அவற்றின் மையப்புள்ளி மூலம் மிகவும் உயரத்தில்
தூக்க முடியும். ஆர்க்கமெடிஸ் ஒருமுறை கூறினார்: "உலகின்
மையப் புள்ளியை எனக்குக் காட்டுங்கள். நான் என்னுடைய
நெம்புகோல் மூலம் உலகையே உயர்த்திக் காட்டுகிறேன்." ஆனால்
அவர் அவ்வாறு செய்து காட்டவில்லை. உலகையே உயர்த்தும்
நெம்புகோல் செபம் என்பதை இன்றைய அருள் வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (விப 17:8-13) செபத்தின் வல்லமைக்கு
சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியர்
என்ற இனத்தாருடன் யோசுவா தலைமையில் போர் புரிந்தனர். அப்போது
மோசே கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு தம் கையை உயர்த்தியிருக்கும்
போதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால்
அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் பகைவர்கள் வெற்றியடைந்தனர்.
மோசேயின் கைகள் தளர்வுறாது அவரது இரு கைகளையும் ஆரோன் ஒருபக்கமும்,
கூர் மறுபக்கமும் தாங்கிக் கொண்டனர். யோசுவா அமலேக்கியரை
அழித்தொழித்தார்.
மோசே கையிலிருந்த கடவுளின் கோல்தான் செபம் என்னும்
நெம்புகோல், அதை மோசே உயர்த்திய போது கிடைத்தது வெற்றி; அக்கோலைத்
தளர விட்டபோது கிடைத்தது தோல்வி. எனவே நாமும் நம் கைகளை
உயர்த்திச் செபிக்க வேண்டும். எபிரேயர் திருமுகம் நமக்கு
விடுக்கும் அழைப்பு: "தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்,
தள்ளாடும் முழங்கால்களை உறுதிப் படுத்துங்கள்" (எபி.12:12),
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "எங்கிருந்து எனக்கு உதவி
வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே
எனக்கு உதவி வரும் " (திபா 121:1-2). ஆம், உதவி நமக்குக்
கடவுளிடமிருந்து வரும். அவர் நாம் வெளியே போகும் போதும் உள்ளே
வரும் போதும், இப்போதும் எப்போதும் காக்கின்றார் (திபா
121:8).
ஓர் இறையியல் கருத்தரங்கில் பங்கேற்ற ஓர் அருள்சகோதரியிடம்,
"கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட மையக்கருத்து என்ன?" என்று
கேட்டதற்கு அவர் கூறினார்: "செபத்தில் வாழ்க்கையை வீணாக்காமல்
மடத்தைவிட்டு வெளியே வாருங்கள். களப்பணியில் குதியுங்கள்."
செபத்தை விட்டு களப்பணியில் குதிப்பவர்கள் பெரும்பாலும் வன்முறையில்
இறங்குவார்கள், விழித்திருந்து செபிக்கும்படி பேதுருவை இயேசு
கேட்டார். ஆனால் அவர் செபிக்கவில்லை. கத்தியை எடுத்து
மால்கு என்னும் படைவீரரின் வலது காதை வெட்டினார். போலி இறையியலார்
குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும். இறையியலார் யார்?
அவர்கள் எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் ஒருபோதும்
கடவுளிடம் பேசமாட்டார்கள். எல்லா இறையியலாரும் அவ்வாறில்லை
என்பதையும் நாம் அறிவோம்!
நாம் மனந்தளராமல் செபிக்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில்
" நேர்மையற்றவரும் கைம்பெண்ணும் " என்ற உவமை வாயிலாகக்
கிறிஸ்து உணர்த்துகின்றார்.
ஓர் ஊரில் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருடைய வயல்களின்
நடுவில் ஒரு தென்னைமரம் இருந்தது. அதன் மீது உரிமைகோரி
நீதிமன்றத்தில் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதி
வழக்கை நீண்ட காலமாகத் தள்ளிப் போட்டார். இறுதியாகத்
தீர்ப்பு வருமுன் தென்னைமரம் பட்டுப்போய்விட்டது. நீதிமன்றத்தில்
வழக்கு மெகா சீரியல்' போன்று இழுத்துக்கொண்டே போகும்.
இயேசு கிறிஸ்து கூறும் உவமையிலும் நீதி கேட்டு நடுவரிடம்
சென்ற கைம்பெண்ணை நடுவர் இழுத்தடிக்கின்றார். இறுதியாக அந்தக்
கைம்பெண் விடாது அவரை நச்சரித்ததால் அவருடைய தொல்லை தாங்க
முடியாமல் அப்பெண்ணுக்கு நீதி வழங்குகின்றார். இவ்வுவமை
வாயிலாகக் கிறிஸ்து வழங்கும் செய்தி: நேர்மையற்ற நடுவரே
தொல்லை தாங்காமல் நீதி வழங்கினார் என்றால், நீதியுள்ள கடவுள்
தம்மிடம் இடைவிடாமல் மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாகக்
கேட்பார் என்பது உறுதி.
ஆனால், இயேசு கிறிஸ்து மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது மக்களிடம்
நம்பிக்கை இருக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறார்
கிறிஸ்து. அறிவியல் வளர வளர கடவுள் நம்பிக்கை குறைந்து
கொண்டே வருகிறது. ஆனால் அறிவியலுக்கு ஒரு வரையறை உண்டு. ஓர்
அறிஞர் கூறுகிறார்: "மனிதனின் அறிவு அவனுடைய அறியாமையை உணர்த்தும்போது,
மனிதனின் ஆற்றல் அவனின் ஆற்றலின்மையைக் காட்டும்போது, அவன்
இதயத்தைக் கிழித்துப் பார்த்தால் அங்கே இறைவன்
தோன்றுவார்." ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கூற்று இது.
செபத்தினால் எல்லாம் கைகூடும் என்று எண்ணி மனித
முயற்சியைக் கைவிடக்கூடாது. இன்றைய முதல் வாசகத்தில்
மலைமீது மோசே கைகளை உயர்த்திச் செபிக்க, மண்மீது யோசுவா
வாளை உயர்த்தி எதிரிகளுடன் போராடி அவர்களை வெட்டி
வீழ்த்துகிறார். கடவுளே எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று
முயற்சி எடுக்காமல் இருப்பது கடவுள் நம்பிக்கையாகாது. அது
கடவுளை சோதிப்பதாகும்.
கடவுளும் கைவிடுவது போலத் தோன்றினாலும் மனித முயற்சிக்குத்
தக்க பயன் கிடைக்கும் என்று வள்ளுவர் கூறியுள்ளது நினைவில்
நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.
வெற்றிக்கும் சாதனைக்கும் விடாமுயற்சிபோல என்பவர்
உறுதுணையாக இருப்பது வேறு எதுவுமில்லை. கால்வின்
கூலிட்ஜ் 11 கூறுவார்: "மேலே செல்லுங்கள். விடா
முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை ஈடாகாது.
திறமை இருந்தாலும் வெற்றியடையாத மனிதர்கள் உலகில்
நிறையப்பேர். அறிவு ஈடாகாது. வீணாய்ப் போன அறிவாளிகள்
இந்த உலகில் நிறையபேர். விடாமுயற்சியும் மனஊறுதியும்
மட்டுமே அளப்பரிய ஆற்றல் படைத்தவை".
எட்மன்ட் ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தை எட்டும்
முயற்சியில் மூன்று முறை தோற்றவர். தோல்வியடைந்து
திரும்பும்போது வானத்தை முட்டிக் கொண்டு நின்ற எவரெஸ்ட்
சிகரத்தைப் பார்த்துக் கையை மடைக்கிச் சவால்விட்டார்:
"எவரெஸ்ட் சிகரமே, இந்த முறையும் நீ என்னை
தோற்கடித்துவிட்டாய். நான் இப்போது போகிறேன். ஆனால்
மீண்டும் வருவேன். உன்னால் இதற்கு மேல் வளர முடியாது.
ஆனால் என்னால் முடியும். தினமும் ஒவ்வொரு நொடியும்
ஆற்றலால் என்னை வளர்க்க முடியும். வளர்வேன். அந்த
வளர்ச்சியால் உன்னைத் தோற்கடிப்பேன்
எட்மன்ட் குறிப்பிடும் வளர்ச்சி உருவ வளர்ச்சியல்ல.
தோல்விகளைக் கண்டு துவளாத மன உறுதியின் வளர்ச்சி.
சொன்னபடி எட்மன்ட் ஹில்லாரி எவரெஸ்டைத் தோற்கடித்தார்.
எவரெஸ்ட் எட்டு வைத்தார். உலகமே அவர் பெயரை இதயத்தில்
நட்டு.
விடா முயற்சி மனித வாழ்க்கையை உயர்வு நோக்கி நகர்த்தும்
நெம்புகோல். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடிக்க
ஆயிரம் தடவைக்கு மேல் முயன்றாராம். "அத்தனை தடவையும்
தோல்வி அடைந்தீரே " என்று ஒருவர் கேட்க, எடிசன் சொன்ன
பதில் "எப்படியெல்லாம் ஒரு பல்பைச் செய்யக்கூடாது என்பதை
ஆயிரம் தோல்விகளில் கற்றுக் கெண்டேன் " என்பதுதான்.
ஆயிரம் தடவை முயன்றுவிட்டோமே என்று மனந்தளர்ந்து
முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் உலகம் மின்
விளக்கைப் பார்த்திருக்க முடியாது.
எறும்பு ஊறக் கல்லும் தேயும். அடிக்க அடிக்க அம்மியும்
நகரும். செப வாழ்வுக்கும் இது பொருந்தும். உண்மை
ஆன்மீகம் அங்குதான் உணரப்படும்.
"திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை.
கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில்லை" (எசா. 1:23)
இறைவாக்கினர் எசாயா குறிப்பிடும் அத்தகைய கடவுளுக்கு
அஞ்சாத, மனிதரை மதிக்காத, மனித நேய உணர்வற்ற, மனச்சாட்சி
மழுங்கிய, நேர்மையற்ற நடுவரே கைம்பெண்ணின் தொல்லை
தாங்காமல் நீதி வழங்கினார் என்றால் நீதியும்
இரக்கமும் உள்ள அன்புக் கடவுள் தம்மிடம் இடைவிடாமல்
மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயமாகச் செவிகொடுப்பார்
என்பதுதானே இன்றைய நற்செய்தி! இறைவேண்டலில் மனத்
தளர்ச்சிக்கு இடமேது? அதனால்தான் இறைவனால் எல்லாம்
கூடும் என்ற உறுதியோடு "எங்கிருந்து எனக்கு உதவி வரும்?
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே
எனக்கு உதவி வரும்" (தி.பா. 121:1-2) என்று தன்
நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
அமலேக்கியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே போர்.
அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே யோசுவாவை
அனுப்பிவிட்டு, கடவுள் கொடுத்த கோலைக் கையில்
பிடித்தவாறு, குன்றின் உச்சியில் கைகளை உயர்த்தி இறை
வேண்டல் செய்து கொண்டிருந்தார். "மோசே தன் கையை
உயர்த்தி இருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர்
வெற்றியடைந்தனர். அவர் தன் கையைத் தளரவிட்டபோதெல்லாம்
அமலேக்கியர் வெற்றியடைந்தனர் " (வி.ப. 17:11)..
மோசேயின் கைகள் தளர்ந்துபோன நிலையில் அவரை ஒரு
கல்லின்மேல் உட்கார வைத்து அவரது இரு கைகளையும். இருவர்
தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அதன் பயனாக வெற்றி
இஸ்ரயேலருக்கே! தளராத செபத்தின் வல்லமைக்குச் சான்று
இந்த நிகழ்வு!
நம்பிக்கை, வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது.
யாக்கோபின் உறுதியான செபத்தில் உணரலாம். இரவு
முழுவதும் ஆண்டவருடைய தூதனோடு போராடுகிறார். "நீர்
எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்" (தொ.நூ.
32:26).இறைவனைப் பலவந்தம் பண்ணி இறுகப் பற்றிக்
கொள்ளும் முயற்சி அது:
தன்னைத் தாழ்த்தி தனது தகுதியின்மையை உணர்ந்தவராகச்
செபிக்கிறார் (தொ.நூ. 32:10).
இறைவனின் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி உரிமை பாராட்டிச்
செபிக்கிறார் (தொ.நூ. 28:15).
ஆற்றின் அக்கரையில் உறவுகள், உடைமைகள் அனைத்தையும்
விட்டுவிட்டு இங்கே தனித்துப் போராடி செபிக்கிறார்
(தொ.நூ. 32:24).
கடவுள் அருள்புரிந்து விட்டார் என்பதை அறியும் வரை
உறுதிப் பாட்டோடு செபிக்கிறார் (தொ.நூ. 32:24).
ஆற்றல் மிக்க அவரது செபத்தால் பெற்ற ஆசீர்கள்:
பெயர் மாற்றம் - எத்தன், ஏமாற்றி வாழ்பவன் என்ற
பொருளில் யாக்கோபு என்று இதுவரை அழைக்கப்பட்டவர், இனி
முதல் இஸ்ரயேல் அதாவது கடவுளின் பிள்ளை என்று
அழைக்கப்படுவார்.
இஸ்ரயேல் என்ற பெயரில் இனி ஒரு பெரிய இனத்துக்கே தனது
பன்னிரென்டு குலங்களுக்குமே தலைவர்.
ஏசாவின் பழிவாங்கும் இதயம் பாசமும் அன்பும் நிறைந்த
இதயமாக மாறுகிறது. (தொ.நூ. 33:4).
நிறைவாக இனி கடவுளே யாக்கோபின் கடவுள் என்று
அறிமுகமாகும் அளவுக்கு, இனம் காட்டும் அளவுக்கு
யாக்கோபு மாட்சி பெறுகிறார்.
"பிரார்த்தனையின் மூலமாகக் கடவுளின் மன உணர்வை என்னால்
மாற்ற முடியும் என்றால், நான் தொடர்ந்து பிரார்த்தனை
செய்து கடவுளைத் தொல்லைப்படுத்தியாவது என்னுடைய காரியத்தை
நிறைவேற்றிக் கொள்வேன் '' என்பார் மில்ட்டன்.
ஆனால் உண்மை என்னவன்றால் வீடாமுயற்சி கடவுளின் மனத்தை
அல்ல, நம் மன உணர்வுகளை மாற்றுகிறது - அவரின் திட்டத்தை,
திருவுளத்தைப் புரிந்து ஏற்றக் கொள்ள. அங்கு தான்
செபத்தின் தேவை தெரிகிறது. அதனால்தகான் "ஆயினும் மானிட
மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?"
(லூக். 18:8) என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.
கெத்சமணித் தோட்டத்தில் இயேசு செய்த செபம்
நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. வியர்வை பெரும்
இரத்தத் துளிகளாகத் தரையில் விழ ""என் தந்தையே,
முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னைவிட்டு
அகலட்டும்"" (மத். 26:39). முடிந்தாலா? செவி
கொடுக்கப்பட்டதா. அந்த செபம்? இல்லை. ஆனால் கடவுளின்
விருப்பத்தை ஏற்கத் தேவையான ஆற்றலைத் தந்தது. "அப்போது
விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை
வலுப்படுத்தினார்"" (லூக். 22:43).
வாழ்க்கை என்ற சொல் ஒருவருக்குச் சொல்லிக் கொள்ளும்படி
அமைய வேண்டுமா? விடாமுயற்சி என்ற சொல் தாரக மந்திரமாக
வேண்டும்.
விடாமுயற்சி நம்பிக்கைப் பயணத்தில் வீறு நடை போடட்டும்
முயற்சியோடு ஒடுகிறவனுக்குக் கால்களும் சிறகாகும்.
பறக்க மறுக்கும் பறவைக்குச் சிறகுகளும் சுமையாகும்.
பறந்து செல்லும் பறவைகள் ஆறுகளை எப்படிக் கடப்பது என்று
திகைக்கிறதில்லை. செபிக்கத் தெரிந்த மனிதர்கள் வெள்ளம்
போன்ற துன்பங்களைக் கண்டு மலைக்கிறதில்லை.
இடைவிடாது புகைப்பிடிக்கும் கணவனிடம் மனைவி:
"எப்படியாவது விடாமுயற்சி செய்து சிகரெட் பிடிப்பதை
நிறுத்திவிடுங்களேன்."
கணவன்: "விடாமுயற்சி செய்தால் எப்படி நிறுத்த முடியும்.
விடு(ம்) முயற்சியைத்தான் செய்கிறேன். ஆனால்
முடியவில்லை ".
தீமைக்கு விடும் முயற்சி வேண்டும். நன்மைக்கு விடா
முயற்சி வேண்டும்.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
மனம் தளராமல் மன்றாட...
உலகமக்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அற்புத நிகழ்ச்சி 2010ம்
ஆண்டு, அக்டோபர் 12, நள்ளிரவில் நிகழ்ந்தது. தென் அமெரிக்காவின்
சிலே நாட்டில், மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு
தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில்
வெடித்தது.
சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் பாறையான நிலப்பரப்பில்,
துளை ஒன்று செய்யப்பட்டிருந்தது. அந்தத் துளை வழியே,
குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக்
குழாயிலிருந்து Florencio Avalos என்ற இளைஞர்
வெளியேறினார். கண்ணீருடன் ஓடிவந்த அவரது மகன் Bairoவையும்,
அவரது மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார், Florencio.
இந்தக் காட்சியைக் கண்டு பலரது கண்களில் ஆனந்த கண்ணீர்
பெருகியது. பூமிக்கடியில் ஏறத்தாழ எழுபது நாட்கள்
புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டச்
சாதனையை, சிலே நாடும், இவ்வுலகமும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
அன்றிரவு கொண்டாடியது.
சிலே நாட்டுச் சாதனை நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
இருந்தாலும், இது நிகழ்ந்து 12 ஆண்டுகள் சென்றுவிட்டதால்,
அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன்.
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில்
தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் ஒன்றில்
33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது
ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள்
சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில்
2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம்
ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை
முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட்
22ம் தேதி அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். சுரங்கத் தொழிலாளர்களை
மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர் 12 நள்ளிரவு துவங்கி,
அக்டோபர் 14ம் தேதி அதிகாலை வரை 33 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக
வெளியேற்றப்பட்டனர். இந்நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக்
காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.
புதையுண்ட தொழிலாளர்களுக்கு, பல வழிகளில், உதவிகள் அனுப்பப்பட்டன.
உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட, அவர்கள்
உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள்,
செப உதவிகள், ஏராளம்.
அப்போது திருத்தந்தையாக இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள், தன்
கைப்பட ஆசீர்வதித்த செபமாலைகளை அனுப்பிவைத்தார். இத்தொழிலாளர்கள்
தாங்கள் அடைபட்டிருந்த இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து,
செபித்துவந்தனர் என்பதை இவர்கள் தங்கள் பகிர்வுகளில் பின்னர்
வெளியிட்டனர். புதையுண்ட தொழிலாளிகள், பீடம் ஒன்றை அமைத்து,
செபித்துவந்தனர் என்பதை கேள்விப்பட்டபோது, பழங்கால உரோமைய
அரசில் முதல் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த வாழ்வு என் நினைவில்
அலைமோதியது. அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில்,
அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த கிறிஸ்தவர்களை
எண்ணிப் பார்த்தேன். உயிருக்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத
நிலையில் ஒவ்வொரு நாளும் வாழ்ந்த முதல் கிறிஸ்தவர்களுக்கு
உறுதி தந்ததெல்லாம் அவர்கள் கூடிவந்து செபித்த நேரங்கள்.
இன்றும் உலகின் சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் இதே நிலையில்
துன்புறுவதை நாம் நினைவில் கொண்டு, அவர்களுக்காக இறைவனிடம்
நம் செபங்களை எழுப்புவோம்.
சிலே நாட்டின் Atacama பகுதியில் மீட்புப் பணி துவங்கிய நேரம்
முதல், சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய புனித இலாரன்ஸ்
அவர்களின் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள் இச்சுரங்கப்
பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே
நாட்டின் பல கோவில்களில் தொடர் செபவழிபாடுகள், முழு இரவு
விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சாதனை முடிந்ததும், அந்நாட்டின்
ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இவை: "சிலே நாடு, இன்று உயிர்ப்பின்
நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்துள்ளது."
மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து
சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை
இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால்,
மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு,
கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற
நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.
செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில்
வெற்றிகொண்டதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக்
கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல
நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக
இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும்
துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர்
தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக்
குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும்.
ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.
செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம்
என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல்
செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா
நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து
செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி
இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க,
தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள் நிறைந்த பாடங்கள்,
இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.
"அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட
வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார் " என்று இன்றைய
நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா 18: 1) இறைவனுக்கு
அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு
நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம்
கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார்.
நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து,
பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல்
முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.
இவ்வுவமையில் இயேசு சித்திரிக்கும் கைம்பெண் பல நாட்கள்,
ஏன்? பல மாதங்கள், பல ஆண்டுகள் விடாமுயற்சியுடன்
நீதிமன்றத்திற்கும், நடுவரின் வீட்டுக்கும், நடுவர் சென்ற
அனைத்து இடங்களுக்கும் நடையாய் நடந்து சென்று, தான்
தேடியதைப் பெற்றார் என்பதை உணரலாம். எவ்வளவு காலம் இந்தக்
கைம்பெண் தன் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை லூக்கா
நற்செய்தி தெளிவாகச் சொல்லவில்லை. "நடுவரோ நெடுங்காலமாய்
எதுவும் செய்ய விரும்பவில்லை" (லூக்கா 18:4) என்ற ஒரே ஒரு
குறிப்பை மட்டுமே இந்த உவமையில் காண்கிறோம்.
ஏழைகளுக்கு நீதி கிடைக்க, அல்லது அவர்கள் விண்ணப்பித்த
கோரிக்கைகளை நிறைவேற்ற நீதி மன்றங்களும், அரசு
அலுவலகங்களும் எத்தனை காலம் எடுக்கின்றன என்பது நமக்குத்
தெரிந்த கதைதானே! இவர்களில் பலர் எதிர்பார்த்த நீதியான
தீர்ப்புகளோ, விண்ணப்பித்திருந்த கோரிக்கைகளோ அவர்களின்
மரணத்திற்குப் பிறகு அவர்களை வந்தடைந்த செய்திகளையும் நாம்
அவ்வப்போது கேட்டுவருகிறோம். பல ஆண்டுகள், நீதி
மன்றங்களின் வாசல்களிலும், அரசு அலுவலகங்களின்
வாசல்களிலும் தவமிருந்து தங்கள் வேண்டுதல்களின் பலன்களைக்
காண ஏங்கும் பல கோடி ஆதரவற்ற ஏழை மக்களின் பிரதிநிதியாக,
இந்த உவமையின் நாயகியான கைம்பெண்ணை நாம் சந்திக்கிறோம்.
மனம் தளராது, மீண்டும், மீண்டும், மீண்டும் நடுவரைச்
சென்று சந்தித்த அந்தக் கைம்பெண்ணை, மனம் தளராமல்
செபிப்பதற்கு எடுத்துக்காட்டாக இயேசு
சுட்டிக்காட்டுகிறார்.
மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல
நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர்
மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே
வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம்
அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில்
நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை பெறுவதற்கு,
அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில்
பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, அடுத்த நாட்டிற்குள்
நுழைந்ததும், விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால்,
அருகிலிருந்த வேறோர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது.
டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று,
தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்கு செல்ல
ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கேட்டார்.
அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே
செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், வாடகைக்கு ஒரு
காரை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும்,
அதற்கு நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும்
குறிப்பிட்டனர்.
வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார்
ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக்
கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச்சென்றார். வழியில், திடீரென,
முன்னறிவிப்பு ஏதுமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை
பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார்.
அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின்,
களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை
நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால்,
விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்
என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்கு சென்று கதவைத்
தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்கு
தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம்
அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத்
அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது
சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு
வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான்
துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி,
அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு
தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக்
கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர்
செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும்,
செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண்,
"இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில்
வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன்
இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.
அந்த செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று
கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்:
"தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர்
இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என்
பேரனுக்கு வினோதமான ஒரு நோய் உள்ளது. அந்த நோயைக்
குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே
ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது மட்டும்
தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி
இல்லை. அதனால், "இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது
எங்களைக் கொண்டு சேர்த்துவிடு என்பது ஒன்றே, நான் தினமும்
எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர்
வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது
வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான்
வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது
என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய
டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள்
தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று
கூறினார்.
செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக் குறித்து, நமது
எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம்
நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற, இறைவனிடம்
வரம் வேண்டுவோம். செபமாலை அன்னை மரியாவை நினைவுகூரும்
அக்டோபர் மாதத்தில், இடைவிடாத செபத்தின் வலிமையைக்
குறித்து அன்னை மரியா நமக்கு பாடங்களைச் சொல்லித்
தருவாராக!
முழந்தாள் படியிட்டால் முழுமையான
நிம்மதி
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama
பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும்
சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு
இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை
அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில்
2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம்
ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை
முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட்
22ம் தேதி அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும்
முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட
பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர் 12 நள்ளிரவு
துவங்கி, அக்டோபர் 14ம் தேதி அதிகாலை வரை 33
தொழிலாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்த
நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய
ஞாயிறு வாசகங்களே.
மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து
சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு
நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள்
எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன்
எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள்
இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில்
உள்ளன.
செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில்
வெற்றிகொண்டதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக்
கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல
நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக
இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும்
துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர்
தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக்
குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும்.
ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.
செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம்
என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல்
செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா
நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து
செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி
இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க,
தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள் நிறைந்த பாடங்கள்,
இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.
"அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட
வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்" என்று இன்றைய
நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா 18: 1) இறைவனுக்கு
அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு
நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம்
கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார்.
நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து,
பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல்
முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.
மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல
நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர்
மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே
வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம்
அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில்
நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க,
அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில்
பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, ஒரு மணி நேரத்தில்
விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த ஓர்
ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள்,
விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக்
கூறி, எப்படியாவது அங்குச் செல்ல ஏற்பாடுகள் செய்ய
வேண்டும் என்று கேட்டார்.
அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே
செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், ஒரு வாடகைக்
காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு
மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார்
ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக்
கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச் சென்றார். வழியில், திடீரென,
எவ்வித முன்னறிவிப்புமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை
பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார்.
அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின்,
களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை
நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால்,
விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம்
என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்குச் சென்று கதவைத்
தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்குத்
தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம்
அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத்
அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது
சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு
வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான்
துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி,
அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு
தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக்
கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர்
செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும்,
செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண்,
"இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில்
வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன்
இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.
அந்தச் செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று
கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்:
"தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர்
இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என்
பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப்
புற்றுநோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து
நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர்
அகமத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும்
அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், இறைவா, அந்த
டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு
என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்" என்று
கூறி முடித்தார் அந்தப் பெண்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர்
வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது
வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான்
வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது
என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய
டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள்
தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று
கூறினார். செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக்
குறித்து நமது எண்ணங்களைத் தெளிவுபடுத்த, உள்ளங்களை
உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு
பகுதியாக மாற இறைவனிடம் வரம் வேண்டுவோம்.
ஞாயிறு மறையுரைகள்
- அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அன்பார்ந்த நண்பர்களே! கடவுளிடத்தில்
அசையாத நம்பிக்கை கொண்டு நாம் வாழ வேண்டும் என்பது
இயேசுவின் போதனையில் மிக மையமான கருத்து. இங்கே நம்பிக்;கை
எனப்படுவது பழைய மொழிபெயர்ப்பியல் ''விசுவாசம்'' என
அமைந்திருந்தது. இதையே பற்று, பற்றுறுதி எனவும் நாம்
கூறலாம். கடவுளையே பற்றிக் கொள்வோர் வேறு பற்றுக்களால்
பிணைக்கப்பட மாட்டார்கள். பிற பற்றுக்களிலிருந்து நாம்
விடுதலை பெறுகின்ற வேளையில்தான் கடவுளிடத்தில் நாம்
கொள்கின்ற நம்பிக்கை என்னும் பற்று பொருளுள்ளதாக மாறும்.
எனவே, இயேசு மண்ணுலகில் நம்பிக்கை எவ்வளவு நாள் தொடர்ந்து
இருக்குமோ எனக் கேட்கின்ற கேள்வி நம் உள்ளத்தில் ஒரு
சலனத்தை ஏற்படுத்த வேண்டும். இயேசு கூறிய உவமையில்
வருகின்ற ''நேர்மையற்ற நடுவர்'' மற்றும் அவரை அணுகிச்
சென்று நீதிகேட்ட ''கைம்பெண்'' ஆகியோரை (காண்க: லூக்
18:1-8) நாம் உருவகமாகப் பார்க்கலாம். அதாவது, அந்த நடுவர்
அநீதியான ஓர் அமைப்பைக் காட்டிக் காத்தவர் எனலாம். நீதி
வழங்கும் பொறுப்பை முறையாகச் செய்ய அவர் தவறிவிட்டார்.
அதிலும் குறிப்பாக, ஒரு கைம்பெண் தன்னைப் பல முறை அணுகி
வேண்டிய பிறகும் அந்த நடுவர் நீதி வழங்க முன்வரவில்லை.
இங்கே அநீதியான அமைப்பை எதிர்க்கின்ற பெண்ணாக அந்தக்
கைம்பெண்ணை நாம் பார்க்கலாம்.
நீதி தேடி அலைந்து ஓயாமால் செயல்பட்ட அக்கைம்பெண் சமுதாய
அமைப்புகளைக் கேள்விக்கு உள்ளாக்குகிறார். நேர்மையற்ற
அதிகாரியை மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்து அவருக்குத்
''தொல்லை கொடுக்கிறார்''. ஏன், அந்த நடுவரின் ''உயிரை
வாங்கிக் கொண்டேயிருக்கும்'' அளவுக்கு அப்பெண் தொல்லை
கொடுக்கிறார் (லூக் 18:5). கிரேக்க மூலத்தில் ''என்னை
சித்திரவதை செய்கிறார்'' என்னும் பொருள்படும் சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக, அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும் என்றாற்போல, அக்கைம்பெண் விடாமுயற்சியோடு
செயல்படுகிறார். அநீதிகள் நிலவும் சமுதாயத்தை மாற்றியமைக்க
வேண்டும் என்றால் அது ஒருநாள் இருநாள் முயற்சியால்
கைகூடும் இல்லை. பல மனிதரின் ஒத்துழைப்போடு தொடர்ந்து
நடைபெறுகின்ற செயல்பாடு விடாமுயற்சியோடு நிகழும்போதுதான்
வேரோட்டமான மாற்றங்கள் ஏற்படும். மேலும், அக்கைம்பெண்
''நாம் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட
வேண்டும்'' (லூக் 18:1) என்பதற்கு ஒரு சிறந்த
முன்மாதிரியாக உள்ளார். இறைவேண்டல் வழியாக நாம் நம்மை
அன்புசெய்யும் கடவுளோடு நெருங்கி உறவாடலாம். அவருடைய
ஆற்றலால் நம் வாழ்வில் புதிய திருப்பங்கள் நிகழும். நாம்
கடவுளிடம் நிறைவான பற்றுக் கொண்டிருப்பதே இதற்கு உறுதியான
அடிப்படை.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அன்பார்ந்த நண்பர்களே! இறைவேண்டலின் தேவை பற்றி இயேசு
கூறிய உவமைகளில் ஒன்று ''நேர்மையற்ற நடுவரும்
கைம்பெண்ணும்'' பற்றியதாகும் (காண்க: லூக்கா 18:1-8).
லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற இந்த உவமையில்
வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நடுவரிடம் மீண்டும்
மீண்டும் செல்கிறார். நடுவரோ அக்கைம்பெண்ணைப் பற்றி
எள்ளளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அக்காலத்தில்
கைம்பெண்களுக்கு எந்த ஒரு ஆதரவும் இருக்கவில்லை.
கடவுளுக்கும் அஞ்சாமல், மனிதரையும் மதிக்காமல் நடக்கின்ற
நடுவர் அக்கைம்பெண்ணின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல்
புறக்கணிக்கின்றார். ஆனால் அப்பெண் எளிதில் விடுவதாக
இல்லை. நடுவரை அணுகிச் சென்று எப்படியாவது தனக்கு நீதி
வழங்கவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறார். தொல்லை
பொறுக்கமுடியாமல், இறுதியில் நடுவரின் மனமும் இளகுகிறது.
அப்பெண் கேட்டவாறே அவருக்கு நீதி வழங்குகிறார் நடுவர்.
இயேசு இந்த உவமையைக் கூறிய பிறகு, கடவுளை நோக்கி நாம்
வேண்டுவது எத்துணை இன்றியமையாதது என விளக்குகிறார்.
மீண்டும் மீண்டும் கடவுளை நாம் அணுகிச் செல்லும்போது
கடவுள் நமக்குத் ''துணைசெய்யக் காலம் தாழ்த்தமாட்டார்''
(காண்க: லூக்கா 18:7). இவ்வுளவு உறுதியான உள்ளத்தோடு நாம்
கடவுளை அணுகுகிறோமா? சில வேளைகளில் நம் உள்ளத்தில் உறுதி
இருப்பதில்லை. கடவுள் நம் மன்றாட்டைக் கேட்பாரோ மாட்டாரோ
என்னும் ஐயமும் நம் உள்ளத்தில் எங்காவது எழும். அல்லது நம்
மன்றாட்டு முறையானதாக இல்லாததால்தான் கடவுள் நாம் கேட்பதை
நமக்குத் தரவில்லை என நாம் தவறாக முடிவுசெய்திடக் கூடும்.
ஆழ்ந்த நம்பிக்கையோடு நாம் கடவுளை அணுகிச் செல்ல வேண்டும்
என்பதை மட்டும் இயேசு வலியுறுத்துகிறார். நாம் கேட்டது
கிடைக்காவிட்டாலும் கடவுளிடம் நமக்குள்ள நம்பிக்கை
ஆழப்படுவதே நம் வேண்டுதலுக்குக் கிடைக்கின்ற பெரிய
பயனாகும் எனலாம். ஆகவேதான் இயேசு மனிதரிடம் கடவுள்
நம்பிக்கை நிலைத்திருக்குமா என்றொரு கேள்வியோடு இந்த
உவமையை முடிக்கின்றார் (லூக்கா 18:8). நாம் கடவுளிடத்தில்
கொள்கின்ற நம்பிக்கை ஒருநாளும் குறைபடாமல் இருக்க வேண்டும்
என்பதுதான் இறைவேண்டலின் இறுதிப் பொருள்.
மன்றாட்டு
இறைவா, நம்பிக்கையோடு உம்மை அணுகிவந்து, உம்
திருவுளத்திற்கு ஏற்ப வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.
அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
கடவுளுக்கு அஞ்சுகின்ற வாழ்க்கை
கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை என்று
நேர்மையற்ற நடுவர் தனக்குள் சொல்லிக்கொள்வதாக இன்றைய உவமை
நமக்கு வருகிறது. இன்றைய பெரும்பாலான மனிதர்களின் மனநிலையை
இது பிரதிபலிப்பதாக அமைகிறது. ஒரு காலத்தில் தவறு செய்பவர்களை
இந்த உலகம் வெறுத்து ஒதுக்கியது. தவறு செய்வதற்கு மனிதர்கள்
பயப்பட்டார்கள். தவறு செய்கிறவர்கள் அதனை வெளியில் தெரிவதை
மிகப்பெரிய அவமானமாக நினைத்தார்கள். இன்றைய நிலை என்ன?
தவறு செய்கிறவர்கள் தான், இந்த சமுதாயத்தில் நிமிர்ந்த நடையோடு
வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்து கொண்டு
இருக்கிறார்கள். தவறு செய்வது பாவம் என்கிற மனநிலை அறவே இல்லை.
அதையெல்லாம் பெரிதாக நினைப்பதும் இல்லை. நல்லவர்கள் தான்,
அவமானப்பட்டு வாழ்வது போல வாழ வேண்டியுள்ளது. இப்படியொரு
காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால்,
ஒரு காலம் வரும். அதற்கான பலனையும், விளைவையும் தவறு
செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
இந்த உலகத்தில் கடவுளுக்கு பயப்படாமல், மனிதர்களை மதிக்காமல்
இருப்பவர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? என்ற
கேள்விக்குள் செல்லாமல், நம்முடைய ஆன்மாவைக் காத்துக்கொள்ள
நாம் சிரத்தை எடுப்போம். நமது வாழ்க்கையை கடவுளுக்கு பயந்து
நடக்கக்கூடிய வாழ்க்கையாக மாற்றியமைப்போம்.
தளராத இறைநம்பிக்கை
இந்த உலகத்தில் நமக்கு பல தேவைகள் இருக்கிறது. எல்லா தேவைகளையும
நாமே நிறைவேற்றிவிட முடியுமா? நம்மால் முடியாதது இருக்கிறதா?
என்றால், இருக்கிறது. நமக்கென்று பல தேவைகள் இருந்தாலும்,
அவையனைத்தையும் நம்மால் நிறைவேற்ற முடியாது. நம்மை கடந்த
ஒரு ஆற்றல் நமக்கு தேவைப்படுகிறது. அதுதான் கடவுள் சக்தி.
அந்த கடவுளிடம் நம் தேவைகளை எடுத்துரைக்கிறபோது, அவர் நமது
தேவையை நிறைவேற்றித் தருகிறவராக இருக்கிறார்.
இந்த உலகத்தில் நமது தேவையை நிறைவேற்றுகிறவர்கள் நமது தந்தையும்,
தாயும். நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவற்றைப்
பொருட்படுத்தாது, நம்மை மகிழ்ச்சிப்படுத்துவதையே, தங்களது
வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, அதற்காக எத்தகைய தியாகத்தையும்
செய்கிறவர்கள் நமது பெற்றோர். அதைப்போலத்தான் கடவுள் நம்
தந்தையாக, தாயாக இருந்து நமது தேவைகளை உடனிருந்து
நிறைவேற்றித்தருகிறார். நமது பெற்றோர் நமக்கு தேவையானதை,
நாம் கேட்பதற்கு முன்னமே நிறைவேற்றித்தருகிறார்கள். அதுபோல
கடவுளும் நமது தேவைகளை அறிந்து, நமக்கு நிறைவேற்றித்தரக்கூடியவராக
இருக்கிறார்.
எப்படி நம்முடைய பெற்றோர் நமக்கு தேவையான காரியங்களை நிச்சயம்
செய்வார்கள் என்று நம்புகிறோமோ, அதேபோல கடவுளும் நம் தேவைகளை
நிறைவேற்றுவார் என்று, நம்பிக்கை கொள்ள வேண்டும். நமது நம்பிக்கை
தளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். அதற்கான வரத்தை ஆண்டவரிடம்
மன்றாடுவோம்.
அருள்தந்தை குமார்ராஜா
மனந் தளராமல் செபிப்போம் !
இயேசுவில் இனிய அன்பர்களே, இடைவிடாது, மனந்தளராது செபிக்க
வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி ஆண்டவர் இயேசு சொன்ன அருமையான
உவமையை இன்று வாசிக்கிறோம். மானிட உறவுகளில்கூட ஒருவரின்
தளரா முயற்சிக்குப் பலன் கிடைக்குமென்றால், இறைவனோடு நாம்
கொள்கின்ற உறவில் நிச்சயமாகப் பலன் கிடைக்கும் என்பதை இயேசு
வலியுறுத்துகிறார். எனவே, மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம்
வேண்ட முயற்சி எடுப்போம். இடைவிடாமல் செபிக்க என்ன தடைகள்?
இன்றைய உவமையின் அடிப்படையில் பார்த்தால் நம்பிக்கைக்
குறைவும், மனத்தளர்ச்சியும். அனுபவத்தின் அடிப்படையில்
பார்த்தால், ஆர்வமின்மையும், பழக்கக் குறைவும். எனவே, இந்த
நான்கு தடைகளையும் தகர்க்க நாம் முயற்சி செய்வோம். இந்த
நான்கு தடைகளையும் உடைக்க நாம் பயன்படுத்தும் எளிய உத்தி
இறைபுகழ்ச்சி செபம். எப்போதும் இறைவனைப் புகழ்வதும், என்ன
நேர்ந்தாலும் நன்றி கூறுவதும் இந்த நான்கு தடைகளையும் நிச்சயமாகத்
தகர்த்து விடும் என்பது அனுபவம் தருகின்ற பாடம்.
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலி;க்கும் என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர்
(34:1). ஆம், எந்நேரமும் இறைவனுடைய புகழ்ச்சி நம் நாவில்
ஒலித்துக்கொண்டே இருந்தால், அது நமக்கு ஆர்வத்தைத் தரும்.
பழக்கமாக உருவாகும். அத்துடன், இறைபுகழ்ச்சி நமது நம்பிக்கையின்மையைக்
குறைத்து, நாம் கேட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்
இறைவனுக்கு நன்றி கூறும் மனநிலையை நம்மில் உருவாக்குகிறது.
எனவே, காலையிலும், இரவிலும், எந்நேரமும் இறைவனுக்குப் புகழ்
பாடுவோம். இடைவிடாது செபிப்பதைப் பழக்கமாக்குவோம்.
மன்றாடுவோம்: புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, எங்கள்
வாழ்வின் ஒவ்வொரு நாளும், நொடியும் உமது பேரன்பை, இரக்கத்தை
நாங்கள் அனுபவிக்கிறோம். அதற்காக நன்றி கூறுகிறோம். உம்மைப்
புகழப் புகழ, உமது மாட்சிமை உயர்வதில்லை. மாறாக, எங்கள்
மீட்பும், மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றன. எனவே, எந்நேரமும்
உம்மைப் போற்றுகின்ற அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே
நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
அருள்தந்தை குமார்ராஜா
ஜெபத்தில் தளரா விசுவாசம்
கிறிஸ்துவில் அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே, இனிய ஞாயிறு
வணக்கம்!
இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் அனைத்தும், நம் கிறிஸ்தவ
வாழ்வின் அடிப்படை மூச்சாகிய ஜெபத்தின் முக்கியத்துவத்தை
வலியுறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக, ஒரு பண்பைச்
சிறப்பித்துக் காட்டுகின்றன: தளராமல் ஜெபிக்கும்
விடாமுயற்சி!
1. அநீதியான நடுவர் வழங்கிய நீதி (நற்செய்தி: லூக்கா
18:1-8)
இயேசு தன் சீடர்களிடம், "எப்பொழுதும் தளராமல் இறைவனிடம்
மன்றாட வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்த, நேர்மையற்ற
நடுவர் மற்றும் விடாமுயற்சியுள்ள ஒரு கைம்பெண்ணின்
உவமையைக் கூறுகிறார்.
அந்த நடுவர் கடவுளுக்கு அஞ்சாதவர், மனிதரை மதிக்காதவர்.
ஆனால், அந்த ஏழைக் கைம்பெண் தினமும் வந்து, "என்
எதிராளியிடமிருந்து எனக்கு நியாயம் வழங்குங்கள்" என்று
தொடர்ந்து கேட்டதால், நீதிபதி மனமின்றி, "இந்தக் கைம்பெண்
எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு
நீதி வழங்குவேன்" என்று கூறுகிறார்.
இந்த உவமையின் ஆழமான செய்தி என்னவென்றால், அன்புள்ள சகோதர,
சகோதரிகளே, நம் கடவுள் அநீதியான நடுவர் அல்ல! அவர் அன்பும்
நீதியுமானவர். அவரோடு அந்த நடுவரை ஒப்பிட்டால், வானுக்கும்
பூமிக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
"தேர்ந்தெடுக்கப்பட்ட தம் மக்கள் அல்லும் பகலும் தம்மை
நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நியாயம்
வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்காகக் காலந்தாழ்த்துவாரா?
விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என்று
உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்கா 18:7-8அ)
மையக்கருத்து: நேர்மையற்ற ஒருவரே தொல்லை தாங்காமல் நியாயம்
வழங்கினால், நம்மை அன்பு செய்யும், நாம் கூக்குரலிடும்போது
கேட்கும் நம் அன்புத் தந்தை நமக்கு நியாயம் வழங்காமல்
இருப்பாரா? நம் ஜெபங்களுக்குப் பதில் அளிக்க அவர்
எப்போதும் தயாராக இருக்கிறார். உடனடியாக பதில்
கிடைக்கவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு தொடர்ந்து
கதவைத் தட்ட வேண்டும்.
2. ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கிப் பிடித்தல் (முதல்
வாசகம்: விடுதலைப் பயணம் 17:8-13)
இஸ்ரயேல் மக்கள் அமலேக்குடன் போரிட்டபோது, மோசே
மலையுச்சியில் கடவுளின் கோலை உயர்த்திப் பிடித்திருந்தார்.
அவரது கைகள் உயர்த்தப்பட்டிருக்கும்வரை, இஸ்ரயேலர்கள்
வெற்றி பெற்றார்கள். கைகள் சோர்வடைந்து தாழும்போது,
எதிரிகள் வெற்றி பெற்றார்கள்.
மோசேயின் கைகள் சோர்வடைந்தன. அப்போது, ஆரோனும், ஹூரும்
ஒருவருக்கொருவர் துணையாக நின்று, சூரியன் மறையும்வரை
மோசேயின் கைகளைத் தாங்கிப் பிடித்தார்கள். இதனால்,
இஸ்ரயேலுக்கு வெற்றி கிடைத்தது.
அன்றாட வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டு: ஒரு நீண்டகாலப்
பிணியால் அவதிப்படும் உறவினருக்காக நீங்கள்
ஜெபித்திருக்கலாம். சில நாட்கள் ஆர்வத்துடன்
ஜெபித்திருப்பீர்கள். ஆனால், நோய் குணமாகாததால், உங்கள்
ஜெபம் சோர்வடைந்துபோயிருக்கலாம். இந்தச் சமயத்தில்தான்
நமக்கு ஆரோனும், ஹூரும் தேவை.
ஆரோன்: நம் குடும்பத்தினர், பங்குக் குழுக்கள், ஜெபக்
கூட்டங்களில் உள்ளவர்கள்.
ஹூர்: நமது பங்குத் தந்தையர், துறவறத்தார், மற்றும்
திருச்சபை சமூகம்.
தனிப்பட்ட ஜெபம் முக்கியம். அதைப் போலவே, சமூகமாக இணைந்து
ஜெபிக்கும்போது நமது சோர்வு நீங்கி, ஜெபம் சக்தி
பெறுகிறது. ஒருவருக்கொருவர் தாங்கிப் பிடிப்போம், இறுதிவரை
மோசே போல, கிறிஸ்துவைப் போல, கரங்களை உயர்த்திப் பிடித்து
ஜெபிக்க கற்றுக்கொள்வோம்.
3. மறைநூலை இறுகப் பிடித்துக்கொள்ளுதல் (இரண்டாம் வாசகம்:
2 திமொத்தேயு 3:14 4:2)
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய மடலில், "நீ
கற்று அறிந்த உண்மையிலும், உறுதியாய் நம்பியவற்றிலும்
நிலைத்திரு" (2 திமொத்தேயு 3:14) என்று அறிவுறுத்துகிறார்.
மறைநூல் முழுவதும் கடவுளின் தூண்டுதலால் எழுதப்பட்டது
என்றும், அது போதிக்கவும், கண்டிக்கவும், சீராக்கவும்
நமக்கு வழிகாட்டுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.
ஜெபத்தில் விடாமுயற்சி தேவைப்படுவது போலவே, நமது விசுவாச
வாழ்வு முழுவதிலும் விடாமுயற்சி தேவை. கடவுளின் வார்த்தையை
வாசிப்பது நம் ஜெபத்திற்கு வலு சேர்க்கிறது. அவருடைய
வார்த்தையை நம்பி, அதன் வழிகாட்டலின்படி வாழ நாம் தளராத
முயற்சி எடுக்க வேண்டும்.
நம் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் செய்திகள்
தளராமல் ஜெபிக்க உறுதிகொள்வோம்: நம்முடைய ஜெபங்கள் உடனே
கேட்கப்படவில்லை என்றால், சோர்ந்து போகாமல்,
விடாமுயற்சியுள்ள கைம்பெண்ணைப் போல மீண்டும் மீண்டும்
விண்ணப்பிப்போம். நம் தந்தை விரைவாக நமக்கு நீதியும்,
அருளும் வழங்குவார்.
ஜெபத்தில் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்வோம்: சோர்வு
வரும்போது, நமது சமூகத்தின் துணையோடு (ஆரோன், ஹூர் போல)
நம் ஜெபத்தை நிறுத்தாமல் தொடருவோம்.
இயேசுவின் கேள்வியைக் கருத்தில்கொள்வோம்: "மானிட மகன்
வரும்போது உலகில் விசுவாசத்தைக் காண்பாரோ?" (லூக்கா 18:8).
நமது விடாமுயற்சியுள்ள ஜெப வாழ்வால், அவர் எதிர்பார்க்கும்
விசுவாசத்தை நாம் கொண்டிருக்கிறோம் என்று உறுதியளிப்போம்.
ஆமென்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (வி.ப. 17:8-13)
அமலேக்கியர்கள், இஸ்ராயேலரின் விடுதலைப் பயணத்தைத்
தடுத்தவர்கள். அமலேக்கியவர்கள் ஒழுங்கற்றவர்களும்,
மிருகத்தனம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
இந்த அமலேக்கியர் இஸ்ராயேலரின் உறவினர்களாகவும் கருதப்படு-
கின்றனர். இவர்கள் எசாவின் வழிமரபினராகக் கூறப்படுகின்றது.
(ஏசா, யாக்கோபின் சகோதரர்) இஸ்ராயேலர்கள் மட்டுமல்ல
மாறாகத் தங்களின் அகம்பாவம், தற்பெருமை,
வணங்காகழுத்துதனம், இவையே அவர்களின் மிகப்பெரிய எதிரியென
விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. இங்கே மோசேயின்
செபம் வெறும் புற எதிரி- களுக்கு எதிராக மட்டுமன்று.
மாறாகத் தங்களின் அக எதிரிகளுக்கு எதிராகவும், மோசே தன்
கைத்தடியை உயர்த்தி செபித்தார். கைத்தடி இறைவனின் வல்லமையை
உணர்த்தியதால்தான் அவர்களால் வெல்ல முடிந்தது எனச் சில
இறையியல் வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ. 3:14-4:2)
தூய ஆவி மட்டுமே நமக்கு ஆசான். நமக்குச் செபிக்கத்
தெரியாது. ஆவியே நம்மை உந்துகிறது, ஆவியானவர் நம் கைகளில்
ஒரு செப வழிகாட்டியை வைத்துள்ளார். அதுவே விவிலியம். இதையே
தூய பவுல் திமொத்தேயுவுக்கும் எடுத்துரைக்- கின்றார்.
திமொத்தேயு எல்லாத் துன்பச் சூழ்நிலைகளிலும்
விசுவாசத்துடன் விளங்க வேண்டும் என்பதே பவுலடிகளாரின்
விருப்பமாகத் தெரிகிறது. இதற்கு அவர் இறைவார்த்தையைக்
கையிலெடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். இறைவார்த்-
தையை அறிவது தம் சொந்த வளர்ச்சிக்காக மட்டுமன்று மாறாக
மக்களை வழிநடத்துவதற்காக, இறைத்திருவுளத்தை உணர்வதற்- காக,
அதையே மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க, தம் பிழை- களையும்
கண்டு அதனைத் திருத்திக்கொள்ள, இறைவர்த்தையைப் பயன்படுத்த
வேண்டும் என்பதே இவ்வாசகத்தின் கருப்பொருள்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 18:1-8)
தூய லூக்கா தன் நற்செய்தியில் பெரும் பகுதியைச்
செபத்திற்காக ஒதுக்கிருக்கிறார். எனினும், அப்போதையக்
கிறிஸ்த- வர்கள் காத்திருந்துக் களைப்புற்றவர்களாகச்
சித்தரிக்கப்பட்டிருக்- கின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள்
கூறப்படுகின்றது.
🕇 இயேசுவின் இரண்டாம் வருகையின் தாமதம்,
🕇 வேதக் கலாபனைகளின் தீவிரம்.
இவை இரண்டும் சேர்ந்து விசுவாசிகளை அவிசுவாசிகளாக
மாற்றிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அவர்களின் விசுவாசம்
பலவீனமடைந்ததற்கு அவர்களின் செபம் பலவீனமடைந்துவிட்டதே
காரணம், இவர்களுக்குச் செபத்தின் வலிமையையும், செபம்
எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் லூக்கா இந்தப்
பகுதியைச் செபத்திற்காக அர்ப்பணித்திருப்பதாகக் கூறலாம்.
மறையுரை
கேளுங்கள் கொடுக்கப்படும்.
இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? நிராதரவான ஒரு
விதவையின் வெற்றி! ஆம் அவள் வெற்றி அவள் எதிரியின் மீது
மட்டுமல்ல, மாறாக எதற்கும் இணங்காத நடுவரின் மீதும் தான்!
தளராத ஒரு முயற்சியின் வெற்றி. "அடிமேல் அடிவைத்தால்
அம்மியும் நகரும்", என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
நம் நடைமுறை வாழ்க்கையில் விதவை என்பவள் யார்? கணவனை
இழந்தவள், நிராதரவானவள், பெரும்பாலும் பெற்றோரின்
பாதுகாவலில் தன் வாழ்க்கையை முடிக்கும் பரிதாபமான
பிறவிகள். இவ்வளவு வளர்ச்சி அடைந்த இன்றைய சமூகத்தில் கூட
பாதிக்கப்பட்ட நம் சகோதரியை நாம் மதிப்பதில்லை,
இப்படிப்பட்ட பெண்கள் பெரும்பாலும் சுமைகளாகக்
கருதப்படுகின்றார்கள்.
இப்படி இருக்க இயேசுவின் காலத்தை நினைத்துப் பாருங்கள்,
அது ஒரு ஆண் ஆதிக்கச் சமூகம், பெண் பிறவி பாவப்பிறவியெனக்
கருதிய சமூகம், அங்கே விதவைகள் பெரும்- பாலும் எந்தச்
சலுகைகளும் கிடைக்காமல், பிறர் கையை எதிர் நோக்கியே
வாழ்ந்து வந்தனர், இவர்களில் ஏழைகளின் நிலை இன்னும் கீழ்.
இப்படிப்பட்ட ஏழைக் கைம்பெண்ணின் வெற்றியை வைத்துச்
செபத்தின் மேன்மையை விளக்குகிறார் இயேசு.
எந்தச் செபத்திலும் இதேப் போன்ற ஒரு விடாமுயற்சி வேண்டும்,
நீதி கிடைக்கும் வரை ஓயாது கேட்ட அந்தப் பெண்ணை போல,
நாமும் நம் செபம் கேட்கப்படும் வரை தொடர்ந்துச் செபிக்க
வேண்டும், என்பதே நமக்கு இந்த நற்செய்தி விடுக்கும்
செய்தி. இதேப் போன்ற ஒரு விடாமுயற்சியை நாம் லூக்கா
11:5-8-இல் காணலாம். அங்கே ஒருவர் விருப்பமில்லாதத் தன்
நண்பரிடமிருந்து அப்பம் பெறும் பகுதி. அதிலும்
விடாமுயற்சியானது எடுத்துரைக்கப்- பட்டுள்ளது. இதனைத் தூய
லூக்கா, இயேசு இறைவேண்டல் பற்றி கூறும் பகுதிகளில்
பொருத்தியுள்ளார். "விதவையின் வெற்றி", பகுதியை மத்தேயு
விண்ணரசு பற்றிய போதனைகளில் பொருத்தி- யுள்ளார். இரண்டு
வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்தப் போதிலும், அவை
நமக்கு வழங்கும் செய்தி ஒன்றே.
உண்மையான, ஆழமான, நீதியான செபம் எப்பொழுதும் கேட்கப்படும்.
இதற்குச் சிறந்த உதாரணமாக முதல் வாசகம் நமக்கு
வழங்கப்பட்டுள்ளது, மோசேயின் செபம் அன்று அமலேக்கியர்
இடமிருந்து இஸ்ராயேலைக் காத்தது. அதோடு மட்டுமல்லாது
உண்மையான செபத்தின் பலன் என்ன என்பதையும் நமக்கு
உணர்த்தியுள்ளது.
மோசேயின் செபம் இஸ்ராயேலருக்கு வலிமை தந்தது. இன்று நமக்கு
ஒரு அங்கீகாரம் தந்திருக்கின்றது. எந்த ஒரு செபமும்
நமக்குக் கேட்டதை மட்டும் தருவதில்லை, மாறாக அதற்கு
மேலாகவும் நமக்குத் தருகின்றது. அந்தக் கைம்பெண்ணின்
செயலில் அப்படி என்ன மேன்மை? அவள் தன் எதிரியின் மீது
வெற்றி கொண்டாள் அவ்வளவு தானே! என்று நினைத்தால் அது
சராசரியான பார்வை. அங்கே ஒரு சுய ஆய்வே நிகழ்ந்து, நாம்
அனைவரும் கற்றுக் கொள்ள சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
அந்தக் கைம்பெண் முதலில் தன்னை உணர்ந்தாள். எந்தச்
செபத்திற்கு முன்பும் நாம் யார் என்றும், நம் நிலை
என்னவென்றும் உணர வேண்டும். இதற்குச் சிறந்த
எடுத்துகாட்டாக நற்செய்தியில் நல்ல கள்வனைக் கூறலாம். தான்
யார் என்பதை உணர்ந்து தன் தகுதிக்கேற்பக் கேட்டார். ஆனால்
இயேசுவின் இரக்கம் அவர் எதிர் பாராத அளவிற்கு அருள்
தந்துக் காக்கிறது.
இரண்டாவதாக, யாரை அணுக வேண்டும் என்ற அறிவு. அந்தக்
கைம்பெண், தன் நடுவர் எதற்கும் அஞ்சுவதில்லை, யாரையும்
மதிப்பதுமில்லை என்று உணர்ந்திருந்து தன் நிலை
அறிந்தவளாய், அவரையும் விட்டால் வேறுயாரையும் தான் அணுக
முடியாது என்று அவரைத் தொடர்ந்து கேட்டுத் தன் முயற்சியில்
வெற்றியும் கண்டாள். இப்படிப்பட்ட ஒரு சிறந்த முயற்சியை
மற்றுமொரு கைம்பெண்ணும் மேற்கொள்ளுகிறாள். கனானியப்
பெண்ணின் தளராத நம்பிக்கை (மத்தேயு 15:21-28). தான் யாரை
அணுகுகிறோம் என்று தெரிந்து, அவரிடமிருந்து தனக்குச்
சாதகமாக எதும் வரவில்லை என்று உணர்ந்தும் நம்பிக்கையோடு
கேட்டு பெற்று கொண்டாள்.
மூன்றாவதாக, விட்டுக் கொடுக்காத மனநிலை. இங்கு நாம்
கவனிக்க வேண்டியது: தடைகள், சங்கடங்கள், அவமானங்கள் என்று
எதுவரினும் தளராமல் தன் வாழ்வில் வந்த அத்தனை தடைகளையும்,
சவால்களையும், தண்டனைகளையும் பொருட்படுத்- தாது முன்னேறித்
தன் இலக்கைத் தனதாக்கிக் கொண்டார் என்பதுதான்.
இத்தகையப் பண்புகள் நமது செபத்திலும் இருக்குமாயின் நமது
செபமும் உறுதியாகக் கேட்கப்படும். இதற்கு நாம் என்ன செய்ய
வேண்டும், "எல்லாமே இறைவனால் தான் இருகின்றது என்பது போலச்
செபிக்க வேண்டும், மற்றும், எல்லாமே நம்மைச் சார்ந்து
இருப்பது போல உழைக்க வேண்டும். "உழைப்பு இல்லாத எந்த ஒரு
செபமும் உண்மையான செபமாக இருக்க முடியாது, செபமில்லாத எந்த
ஒரு உழைப்பும் முழுமையான வெற்றி பெற முடியாது."
ஏனெனில், "என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரேயெனச்
சொல்வோரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக
விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளப்படிச்
செயல்படுபவரே செல்லுவர்," (மத்தேயு 7:21). இது செப
வாழ்விற்கும் பொருந்தும். எல்லாமே இறைவன் என எண்ணி
சோம்பித் திரிந்து விட்டுச் செபம் கேட்கப்படவில்லை
என்பதில் பயன் என்ன? எப்பொழுது செபமும், நம் வாழ்வும்
ஒத்துப்போகிறதோ, அங்கே கண்டிப்பாய்ச் செபம்
கேட்கப்படுகின்றது. இதற்குத் தூய ஜான் மரிய வியான்னி
சிறந்த எடுத்துக்காட்டு. தன் செபத்தினால் வல்லமை பெற்று
தன் உழைப்பினால் திருச்சபைக்குப் பலன் தந்தவர்.
இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு நம்மிடமிருக்கிறதா?
நம் வாழ்வும், செபமும் ஒத்துப் போகிறதா? இறைவன் எல்லாம்
வல்லவர் அவரால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை
நம்மிடமிருக்கிறதா? நம் குடும்பங்களில் குடும்ப
செபமிருக்கிறதா? நம் வாழ்க்கை நம் வார்த்தைகளோடு
ஒத்துப்போகிறதா? நம் பணித்தளங்களில் நம்மால்
இறைபிரசன்னத்தை உணர முடிகிறதா? நாம் மேற்கொள்ளும் அனைத்து
பணிகளையும் இறைவனிடம் சமர்ப்பிக்க முடிகிறதா? நம் துன்ப
நேரங்களில் இறைத்திருவுளத்தை நாம் காண முடிகிறதா? அல்லது
தப்பிக்க விழைகிறோமா?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் நாம் சரியான பதில்
தரும்பொழுது நம் செபங்களும் கண்டிப்பாகக் கேட்கப்படும்.
நம் செபங்கள் கேட்கப்பட வேண்டுமெனில் நம் வாழ்வு
இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். இறைவன் புதுமை
செய்யட்டும் எனக் காத்திருக்கும் மனிதர்களின் வாழ்வில்
இறைவன் புதுமை செய்தாலும், அவர்களின் வாழ்க்கை
மாறுவதில்லை. இறைவனால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட நமது வாழ்வு
அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும், நமது
செபம் இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 இயேசுவின் வருகையின்போது மண்ணில் விசுவாசம்
வளர்ந்திருக்குமா, வதங்கியிருக்குமா?
🕇 இறைவேண்டல் எதையும் சாதிக்கக் கூடியது.
🕇 நம் செபம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவா?
அல்லது கடவுளின் மகிமைக்காகவா?
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பின்னணி
இன்றைய இறைவார்த்தை, குறிப்பாக முதல் வாசகமும்
நற்செய்தியும், செபத்தின் மாண்பினை, அதிலும் குறிப்பாக
தளர் வின்றி செபிக்க வேண்டுவதன் அவசியத்தை
வலியுறுத்துகின்றன. அமலேக்கியருக்கு எதிரான போரில்
மோசேவின் கரங்கள் உயர்த்திருக்கும் போதெல்லாம் -
செபித்த போதெல்லாம் - இஸ்ரயேலர் வெற்றி கண்டனர். அதை
தளரவிட்ட போது அவர்கள் தோல்வி கண்டனர். எனவே வாழ்வில்
தொடர் வெற்றி காண தொடர் செபம் அவசியம் என்பதை இந்த
விடுதலைப் பயண நூல் நிகழ்வு நமக்கு வலியுறுத்துகன்றது.
நற்செய்தியில் உவமையின் நோக்கம் "அவர்கள் மனந்தளராமல்
எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும்" (வச. 1) என்பதை
லூக்கா உவமையை துவங்குவதற்கு முன்னமே வலியுறுத்தி, தெளிவு
படுத்திவிடுகின்றார். இந்த நற்செய்திப் பகுதியின் பிற
கருத்துக்களை அறிந்து கொள்ளுமுன் அதற்கான பின்னணி
விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
பதினேழாம் அதிகாரத்தின் இறுதியில் இயேசு இறுதிக்
காலத்தைப் பற்றி பேசுகின்றார். அதைத் தொடர்ந்து இந்த
கைம் பெண்ணும் பொல்லாத நடுவனின் உவமையையும், இறை
வேண்டலுக்காய் ஆலயம் சென்ற பரிசேயர், வரிதண்டுபவர்
உவமையையும் கூறுகின்றார். இவற் றுள் முதல் உவமை
அதற்கு முந்தைய இறுதிக் காலத்தைப் பற்றிய போதனையோடு
பொருந்தி வருகின்றது. இன்றைய நற்செய்திக்கு முந்தைய
அதிகாரத்தில் "ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய
நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய்
இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காண மாட்டீர்கள்" (லூக்
17:22) என தம் சீடர்களுக்கு அறி வுறுத்துவார். இந்தக்
காத்திருப்பின் காலத்தை எப்படி மேற் கொள்வது, இந்தக்
காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்குவதற்காக
சீடர்களுக்கு சொல்லப்பட்டதுதான் இந்த உவமை. ஆகவே
மனுமகனுடைய வருகையின் காலம்வரை இடை விடா இறை வேண்டலில்
ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது இயேசுவின்
எதிர்பார்ப்பாகும்.
இந்த உவமையைத் தொடர்ந்து வரும் இறைவேண்டல் செய்த
இருவர் உவமை "தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி
மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலருக்குச் (லூக் 18:9)
சொல்லப்பட்டது என லூக்கா குறிப்பிடுோர். இறுதிக்
காலத்திற்காக காத்திருக்கும் காலத்தில் செய்யப்படும்
இறை வேண்டல் ஒரு வெளிவேடமாகவும், அடுத்தவரை இகழ்ந்து
ஒதுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகவும்
அமைந்துவிடக் கூடாது என இயேசு எச்சரிக்கின்றார். எனவே
இறைவேண்டல் ஒரு நுட்பமான செயல்பாடு அதை நாம் சரியாகக்
கையாள வேண்டும்.
1. கைம்பெண்ணின் நிலை
எந்த ஓர் ஆணாதிக்கச் சமுதாயத்தையும் போலவே யூதச்
சமூகத்திலும் விளிம்புநிலை மக்கள் என்று
குறிப்பிடப்படுபவர்கள் சிலர் இருந்தனர். குறிப்பாக
அனாதைகள், அன்னியர், விதவைகள் ஆகியோர் இதில்
அடங்குவர். இவர்கள் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு
ஆளானவர்கள். இவர்களுக்குப் பலவேளைகளில் நீதி
மறுக்கப்படும் அல்லது தள்ளிப்போடப்படும். எனவே இவர்கள்
நம்பிக்கையும் உற்சாகமும் இழந்து தங்களின்
போராட்டத்தைக் கைவிட்டுவிடும் நிலைக்குத்
தள்ளப்படுவர். ஆனால் இந்நிலைக்கு மாறாக கடவுளுக்கு அஞ்சி
நடக்கும் ஒரு நீதிபதி இத்தகையோருக்கு சிறப்புக் கவனம்
செலுத்தி நீதி வழங்க வேண்டும் என்பது சட்டத்தின்
எதிர்பார்ப்பு (காண். இச 10:18; 14:29; 16:11, 14;
24:19-21; 26:12-13). "அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய
நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே"
(இச 24:17), என்பதும் "அன்னியருக்கும், அனாதைக்கும்,
கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டெபவர்
சபிக்கப்படட்டும்" (இச 27:19) என்பதும் யூதச் சட்டம்.
இறை வாக்கினர்களின் போதனையில் கைம்பெண்களுக்கு நீதி
வழங்குவது உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாயிருப்பதன்
அடையாளமாகும் (காண். மலா 3:5; எசா 1:17, 23; 10:2; எரே
5:28; 7:6; 22:3; எசே 22:7; திபா 93:6). இவர்களுக்கான நீதி
மறுக்கப்படும்போது இறைவனே அவர்களுக்காக நீதி வழங்குவார்
என்றும் எண்ணப்பட்டது (காண். திபா 145:9, மேலும் காண்.
சீராக்கின் ஞானம் 35:14-18). இத்தகைய கைம்பெண்கள்
சார்பான நிலைப்பாடுகள் இறைச்சட்டத்தில் இருந்தாலும்
அந்த நீதிபதி கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும்
மதிப்பதில்லை (வச. 2,4) என்பதால்
அவருக்குநீதிவழங்ககாலம்தாழ்த்திக்கொண்டிருந்தார்.
2. சீடர்களின் நிலையுடன் ஓப்பீடு
இந்த உவமை சீடர்களுக்குக் கூறப்பட்டதால் அவர்களை
அந்தகைம்பெண்ணுடன் ஒப்பிட்டுநோக்க வேண்டும். அவர்களும்
அப்பெண்ணைப்போல அடக்குமுறைக்கு ஆளாகக்கூடும், நீதி
அவர்களுக்கு மறுக்கப்படலாம், அல்லது காலம் தாழ்த்தப்
படலாம், இழுத்தடிக்கப்படலாம், நம்பிக்கை இழந்துபோறெ,
போராட்டத்தில்தளர்ந்துபோகின்றகூழல்கள் எழலாம்.ஆனாலும்
அவர்கள் அந்தக் கைம்பெண்ணைப் போல மனந்தளராமல் தங்கள்
விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். (வச.
3, 5).
3. நீதியதியும் - கடவுளும் ஓப்பீடு
கைம்பெண்ணைச் சீடர்களுக்கு ஒப்பிட்டால், நீதிபதியை
இறைவேண்டல் சூழலில் இறைவனுக்கு ஒப்பிட வேண்டி
மிருக்றெது. ஆனால் இங்கு நீதிபதிக்கும் இறைவனுக்கும்
ஒரு சிறு மாறுபாடு உள்ளது. அதை இயேசுவே தெளிவுபடுத்தி
விடுகின்றார்: "தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும்
பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள்
அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத்
துணை செய்யக்காலம் தாழ்த்துவாரா?" (வச. 7). ஆக, இவ்வுலக
நீதியற்ற நீதிபதிகள்தான் கடவுளுக்கு அஞ்சாமல், மனிதரை
மதிக்காமல் ஏழையருக்கு நீதி வழங்கக் காலம்
தாழ்த்துவர். ஆனால் விண்ணுலக நீதிபதியாகிய இறைவன் தன்
மக்கள் தொடர்ந்து தம்மை நோக்கிக் கூக்குரலிடும் போது
விரைந்து வந்து அவர்களுக்கு நீதிவழங்குவார்.
எனவே இறைவன் விரைந்து வந்து நம் விண்ணப்பத்தைக்
கேட்பார் எனும் நம்பிக்கையுடன் தொடர்ந்து நம்பிக்கையோடு
மன்றாட வேண்டும்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - இருபத்தொன்பதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : விப. 17:8 - 13
கடத்தல் பயணத்தின்போது இறைவன் இஸ்ரயேல் மக்களோடு இருந்து
அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்குகொண்டார். அவர்கள்
துன்புற்று நலிந்தபோது அருஞ்செயல்கள் வழித் தன்
வாக்குறுதிகளை நிறைவேற்றினார். இத்தகைய அருஞ்செயல்களில்
ஒன்று அமலேக்கியர் மீது இஸ்ரயேலர் கொண்ட வெற்றியாகும்.
நம்பிக்கையோடு செபித்தலின் பலனைப் பற்றி இன்றைய வாசகம்
கூறுகிறது.
செயல்பட வேண்டும்
இறைவன் இஸ்ரயேல் மக்களோடு இருந்தாலும், அவருடைய வல்லமையே
அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வழி நடத்தினாலும்,
எதிரிகள் மீது இறைவன் கொண்ட வெற்றியில் அவர்களும்
பங்குகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே
யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அமலேக்கியர்மீது போர்
தொடுக்கின்றனர். அயராது, சளைக்காது காலையிலிருந்து மாலைவரை
போரிடுகின்றனர். வெற்றியும் காண்கின்றனர். ஆன்ம எதிரியாகிய
சாத்தானோடு நாமும் போரிட வேண்டும். தளர்ந்துவிடக் கூடாது.
சோதனைகளை மன உறுதியோடு தாங்குபவன் பேறு பெற்றவன்.... அவனே
வெற்றி வாகை சூடுவான்" (யாக் 1:2) என்பதை மறக்கக் கூடாது.
செபம் செய்ய வேண்டும்
"எல்லாம் தன் செயலாலே, தன் முயற்சியாலே செய்ய முடியும்
என்ற நம்பிக்கையோடு ஒருவன் செயலாற்ற வேண்டும். அதே
வேளையிலே எல்லாம் இறைவனாலே மட்டும் தான் முடியும் என்ற
நம்பிக்கையோடு செபத்திலே ஈடுபட வேண்டும்" என்பது
இஞ்ஞாசியார் கூற்று. எனவே ஒரு பக்கம் நமது முயற்சிகள்,
மறுபக்கம் நமது செபங்கள் என்ற முறையிலே நம் வாழ்வு அமைய
வேண்டும்.
யோசுவா கீழே போர்க்களத்திலே சண்டையிடுகிறார். மோசே, ஆரோன்,
ஊர் ஆகியோர் மேலே மலை உச்சியில் செபித்துக்
கொண்டிருக்கின்றனர். மோசேயின் செபமே இஸ்ரயேலருக்கு வெற்றி
கொணர்ந்தது. "மோசே செபத்தில் தம் கையை
உயர்த்தியிருக்கையில் இஸ்ரயேலர் வெற்றி பெறுவர். அவர்
சிறிதேனும் தம் கையைத் தாழ்த்தி விட்டாலோ, அந்நேரத்தில்
அமலேக்கியர் வெற்றி பெறுவர்" (17: 11) என்ற வார்த்தைகள்
செபத்தின் வல்லமைக்குச் சான்று பகர்கின்றன. தளர்வுற்று
மோசேயின் கைகள் கீழே விழுந்தபோது "ஆரோனும் ஊரும்
இருபக்கமும் அவர் கைகளைத் தாங்கிக் கொண்டனர்" (17:12)
என்பதிலிருந்து தொடர்ந்த, நிலைத்த, இடைவிடாத செபம் எத்துணை
வல்லமையுள்ளது என்பது புலனாகின்றது.
செபிக்க வேண்டும்; தொடர்ந்து செபிக்க வேண்டும் என்பதுதான்
நம் ஆண்டவருடைய கட்டளையும் கூட. "கேளுங்கள், உங்களுக்குக்
கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" (மத் 7:7 - 11)
என்று ஆண்டவர் கூறியுள்ளது நாம் விடாது செபிக்க வேண்டும்
என்பதற்காகவே. நள்ளிரவில் நண்பனிடம் அப்பம் கேட்கச்
சென்றவனுடைய உவமையும் (லூக். 115-13) பொல்லாத நடுவனிடம்
நீதி கேட்டுச் சென்ற கைம்பெண்ணின் உவமையும் (லூக். 18:1-8)
வலியுறுத்தும் பாடமும் இதுவன்றோ? "செபத்திலே இறைவன்
தோல்வியுறுகிறார்; செபிப்பவன் வெற்றி பெறுகிறான்" என்ற
கூற்று எவ்வளவு உண்மையானது? தொடர்ந்து செபிப்போம்; தளராது
அயராது செபிப்போம். வெற்றி நமதே. செபத்தை ஒரு
போராட்டமென்றே பவுல் குறிப்பிடுவதும் (காண் உரோ. 15:30)
காணத்தக்கது. எனவே "உறுதியாய் நிலைத்திருந்து,
விழிப்பாயிருங்கள்" (எபே. 6 18). "எப்பொழுதும்
மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1 தெச. 5: 16
-17). "எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால்
நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின்
வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத்
தெரிவியுங்கள்" (பிலி. 4 : 6). இவையன்ன அறிவுரைகள் நமக்கு,
நம் செப வாழ்வுக்கு வழித்துணையாய் அமைவனவாக.
மோசே தம் கையை உயர்த்தியிருக்கையில் இஸ்ரயேலர் வெற்றி
பெற்றனர். இரண்டாம் வாசகம் 2 திமொ. 3:14-4:2
தம் "அன்பு மகன் திமொத்தேயுவுக்கு" பவுல் இறைவார்த்தை
பற்றி அறிவுரை கூறுகிறார். திருநூலை அறிவது மட்டுமன்று,
அதைப் பிறருக்கு அறிவிக்கவும் வேண்டும் என்பது பவுலின்
கட்டளை. இதுவே இன்றைய வாசகத்தின் சுருக்கம்.
வேதாகமம் (மறை நூல்) இறை ஏவுதல் பெற்றது
விவிலியம் இறை ஏவுதலாலும் உந்துதலாலும் எழுதப்பட்டது. ப.ஏ.
இல் "ஆண்டவர் பேசினார்", "ஆண்டவர் கூறுகிறார்", "ஆண்டவர்
வார்த்தை" என்பது, "நான் உனக்குத் தருகின்ற
இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" (எசே. 3:3),
"ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச
வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" (விய. 4 : 12)
என்பதெல்லாம் ப.ஏ. இறைவன் ஏவுதல் பெற்றது என்பதைக்
காட்டுகின்றன. "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள்
கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித
விருப்பத்தால் உண்டானது அல்ல" (2 பேது 1: 21); "மறைநூல்
அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது" (2 திமொ. 3:
18) என்பவை பு.ஏ வேதாகம நூல்கள் இறைவனுடைய ஏவுதலுக்கு
உட்பட்டவை என்று கூறுவதைச் சுட்டுகின்றன. விவிலியத்தை நாம்
இந்த இறைக் கண்ணோக்கோடு படிக்கின்றோமா? நாம் அன்றாடம்
படிக்கும் செய்தித்தாள்கள், வார மாத ஏடுகளுக்கும்
வேதாகமத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிகிறோமா? விவிலியம்
இறைவனின் வார்த்தையாயின் வேதாகமம் வாசிக்கும்போது இறைவனைச்
சந்திக்கிறோமா?
மறைநூல் சக்தி வாய்ந்தது
இறைவனின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை. ஆண்டவர் ஆணை
யிட்டார், உலகம் உண்டானது (தொநூ. 1-2); ஆண்டவர்
கட்டளையிட்டார், பார்வோன் மன்னன் இஸ்ரயேலரை விடுவித்தான்
(விப), ஆண்டவர் பணித்தார்; புயலும் பூசலும் அடங்கின (மாற்.
4:35-41); நோய் நோக்காடுகள் நீங்கின (மாற். 1:40 45).
பேய்கள் அகன்றன (மாற். 1:21-28). பாவங்கள் பறந்தன
(மாற்.2:1-12). "கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல்
வாய்ந்தது" (எபி.4:12). குழந்தைப் பருவம் முதல் திமொத்தேயு
மறைநூலைக் கற்றறிந்திருந்தார் (2 திமொ. 4:14-15). அதுதான்
அவருக்கு ஞானத்தையும் நன்னடத்தையையும் அளித்தது (4:18).
தாய்ப்பாலோடு மறைநூலறிவையும் நம் பிள்ளைகளுக்குப்
புகட்டுகிறோமா? வெறும் வாசகத்தோடு நின்றுவிடாது, மழைநீர்
நிலத்துள் சென்று செத்துக்கிடக்கும் விதைகளுக்கு
உயிரளித்து ஊட்டமளித்து வளரச் செய்து பலன் தரச் செய்வது
போன்று (காண்: எசா. 55:10-11), விவிலிய வாசகமும் நம்
உள்ளத்தின் அடியாழத்திற்குச் சென்று நம் வாழ்வைச்
சீர்படுத்தி வளமாக்கி, நமது வாழ்வுப் பாதையின்
வழித்துணையாக அமைகிறதா? வாழ்வுதரும் வார்த்தைகள் நம்மை,
நம் நடத்தையை அன்றாடம் கேள்விகேட்டுத் துளைக்கின்றனவா?
நமக்குச் சவால்விட இறை வார்த்தைக்கு நாம் சுதந்திரம்
தருகிறோமா?
இறைவார்த்தைக்கு நாம் அடிமைகள்
இறைவார்த்தை இறைவனுக்கு ஏற்புடைய நல்வாழ்வில் மக்களைப்
பயிற்றுவிக்க வல்லது (4 : 17). வாழ்வும், அவ்வாழ்வை
அடையும் வழியும் இறைவனின் வார்த்தைகள். எனவே நாம் இறை
வார்த்தையின் தூதுவர்களாக வேண்டும். இறைவார்த்தையின்
பணியாளர்கள் ஆக வேண்டும். இறைவார்த்தையைப் பிறருக்கு
எடுத்துரைப்பது நம் ஒவ்வொருவரின் மேல் சுமத்தப்பட்ட
கடமையாகும். "ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி,
அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள்
கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்?
அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு
கேள்வியுறுவார்கள்" (உரோ. 10 : 14) என்பதன் மூலம் நாம்
எல்லோரும் இறைவார்த்தையைப் பிறருக்கு அறிவிக்கக்
கடமைப்பட்டுள்ளோம் என்பது புலன் ஆகிறது. "நான் நற்செய்தியை
அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட
ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!" (1 கொரி.
9 : 16).
ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோரின் சின்னமாகவே கைம்பெண்
எண்ணப்பட்டாள். அந்நியரை ஆண்டவர் காப்பாற்றுகிறார். அநாதை
களையும், விதவைகளையும் ஆதரிக்கிறார் (திபா. 146 : 7).
இன்றைய நற்செய்தியில் ஓர் ஏழைக் கைம்பெண்ணைக் கதாநாயகியாக
வைத்து நமதாண்டவர் செபம் பற்றிய ஓர் உவமையைக் கூறுகிறார்.
அவளது விடாமுயற்சியும் நம்பிக்கையும் அவள் கேட்டதை
அளித்தன. ஏற்கெனவே கூறப்பட்ட உண்மை (லூக்.11 5 - 13) இங்கு
மீண்டும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
விடாது வேண்டுதல் வேண்டும்
இப்பொல்லாத நடுவன் கடவுளுக்கு அஞ்சாதவன், மனிதனையும்
மதிக்காதவன் (1 : 13). இத்தகையோரைப் பற்றி எசாயா
குறிப்பிடுகின்றார்: "உன் தலைவர்கள் வன்முறையில்
ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்,
கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்; நீதி
வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில்
கவனம் செலுத்துவதில்லை" (எசா.1:23).
உவமையில் வரும் நீதிபதி இறைவனுக்குப் பயந்தோ, அல்லது
மற்றவர்களை மதித்தோ அன்று, இக்கைம்பெண் மீண்டும் மீண்டும்
வந்து தொந்தரை செய்ததால் அவளது வேண்டுகோளுக்குச் செவி
சாய்த்து நீதி வழங்கினான். இந்தப் பொல்லாத நீதிபதிக்கு
மாறானவர் நமது பரம தந்தை. "ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்;
அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு
எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்;
தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.
கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம்
முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்" (சீஞா. 35:15 - 18).
கடவுள் நம் குரல் கேட்பார்
இறைவன் நமது நல்ல தந்தை. அன்புடன் நம்மைப் பராமரிப்பவர்
(மத். 6:25 - 31). பொல்லாத நடுவனே ஏழையின் மன்றாட்டைக்
கேட்கும் பொழுது, நமது நல்ல தந்தை நமது மன்றாட்டைத்
தட்டாது கேட்பார் என்பது உறுதி. நாம் அப்பம் கேட்க,
கல்லைக் கொடுக்கும் தந்தை அல்லர் அவர். தீயோராகிய நாமே
நமது பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்து இருந்தால்,
நமது அன்புத் தந்தை நாம் கேட்பதை அளிப்பார் என்பதை நாம்
உறுதியாக நம்பலாம்.
தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்க இறைவனது சந்நிதானத்தை
மீண்டும் மீண்டும் தட்டியும் மழை இல்லையே! குடும்பத்தைக்
காப்பாற்ற வேண்டிய தலைமகனின் பிணி தீர வேண்டியும்,
குடும்பத்தை அநாதையாக விட்டு விட்டுப் போய்விட்டானே!
கடவுள் என் மன்றாட்டைக் கேட்கவில்லையே என்று கடவுளைப்
பழிப்பதோ, செபத்தைக் கைவிடுவதோ தவறு என்பதை இவ்வுவமை
சுட்டிக்காட்டுகிறது. நாம் கேட்பது கிடைக்கக் கால தாமதம்
ஆகும்பொழுது நமது பொறுமை சோதிக்கப்பட்டு, அது யோபுவின்
பொறுமைபோல் சுடர் வீசுகிறது. கனனேயப் பெண்ணின் நீண்ட நேர
மன்றாட்டிற்குப் பிறகே அவளது வேண்டுகோள் அருளப்பட்டது.
எனவே நம்மை விசுவாசத்தில் வலுப்படுத்தவே சில சமயங்களில்
இறைவன் நமது மன்றாட்டுகளுக்குச் செவிசாய்க்கக் கால தாமதம்
செய்கிறார். எக்காலமும் அறியும் இறைவன் நமது நன்மைக்காகவே
நாம் கேட்பதை அளிக்காதும் இருக்கலாம். எனினும் செபம்
என்றுமே வீண்போவதில்லை என்பதை உணர்ந்து தொடர்ந்து செபிக்க
வேண்டும் (காண் : எபே. 6: 8; உரோ. 12: 12). அநீதியும்
அநியாயமும், கையூட்டும் கண்ணீரும் நிறைந்த இவ்வுலகில்
மக்கள் அனைத்துத் தொல்லைகளினின்று விடுதலை பெறத் தனிமனிதன்
மட்டுமல்ல, திருச்சபையும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.
தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை
கூப்பிடும்பொழுது கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரோ?
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ