ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 24ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டின் பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
திருப்பாடல்: 51
நான் புற்ப்பட்டு என் தந்தையிடம் போவேன்

இறைவனின் இரக்கத்தை பெற்றுக் கொள்ள வந்திருக்கும் அன்புள்ளங்களே!

இறைவனின் இரக்கமும், அன்பும், மன்னிப்பும் அணி வகுத்து நின்று நம்மை இந்த திருப்பலிக்கு வரவேற்கின்றன!

காணாமல் போன ஆட்டை.........
காணாமல் போன காசை...........
ஊதாரி மைந்தனை............
தான் தோன்றித்தனமாக திரிவதால் ஏற்படுகின்ற இழப்பை.....
சுழ்நிலையால் தவறு செய்வதை............
தவறை நினைத்து மனம் வருந்துவதை.......
திருந்தி மகிழ்ச்சியை அனுபவிப்பதை.......
மன்னிப்பு கேட்பதால் மனதின் சுமை குறைவதை..........
மனம் விட்டு பேசும்போது அன்பு பெருகுவதை.........
தந்தையை தேடிச் செல்லும் மகனை.........
மகனைத் தேடும் தந்தையை...........
இன்றைய இறைவார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.

தவறுவது மனிதத்தன்மை.
தவறுக்காக மனம் வருந்துவது புனிதத் தன்மை.
மன்னித்து ஏற்றுக்கொள்வதோ தெய்வீகத்தன்மை.
ஆம், செய்த தவறுக்கு மனம் வருந்த வேண்டும், திருந்த வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இது வளமிகு வாழ்வுக்கு வழிமுறை.

மனம் விட்டு பேசுவோம், அன்பு பெருகும்.
அன்போடு பேசுவோம், இரக்கம் பெருகும்.
இரக்கத்தோடு பேசுவோம், மன்னிக்கும் மனப்பான்மை பெருகும்.
மன்னித்து மறப்போம், உறவு பெருகும்.
கடவுள் அன்பும் இரக்கமும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினை கொடுத்துள்ளார். அன்பு, இரக்கம், கட்டுப்பாடு இவைகளை வாழ்க்கையில் அன்றாடம் செயல்படுத்தினால் நிச்சயம் மகிழ்ச்சி, நிம்மதி, வெற்றி, என அனைத்தையும் பெருமளவில் பெற்றுக் கொள்வோம்.

நாம் ஆனந்தமாக, நிம்மதியாக வாழப் படைக்கப்பட்ட உலகில், ஊதாரித்தனமாக பிறர் வெறுக்கும் வண்ணமாக நிம்மதியின்றி ஏன் வாழவேண்டும்?

பெரும் சொத்தும், ஊதாரித்தனமான வாழ்க்கையும், பிறர் பழிக்கும், இரக்கமில்லாத அரக்கக் குணமும் வாழ்விற்கு துயர் தரும்.

நாம் வாழும் நாட்களில் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் தகுதியானதை தகுந்த நேரத்தில் கடவுள் நமக்குத் தருவார்.
அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை வழங்கும் திருப்பலியில், அவைகளை பெற்றுக் கொண்டு இறைவன் விரும்பும் வாழ்க்கை வாழ வரம் வேண்டி செபிப்போம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பு, இரக்கம், மன்னிப்பு இவைகளை வாரி வழங்கும் தெய்வமே!
எமது திருச்சபையை வழி நடத்தும் திருத்தந்தை. ஆயர்களையும், குருக்களையும், அருட்சகோதரிகளையும் நீர் நிறைவாக ஆசிர்வதித்து உமது அருள் இரக்கத்தினால் அவர்களை நிரப்ப வேண்டிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பாவிகளைத் தேடி மீட்க வந்த தெய்வமே!
மன்னிப்பு வழங்குவதில் நீர் வள்ளல். ஆகவே, நாட்டை ஆளும் தலைவர்கள் தங்கள் கடமைகளில் தவறாமல் கண்டிப்பதில், மன்னிப்பதில், மக்களுக்கு இரக்கத்தை அன்பை கொடுப்பதில் மனம் பதிப்பவர்களாய் உருவாகிட, இறைவா உம்மை மன்றாடுகிறோம்

3. இரக்கத்தையும் அன்பையும் நற்செய்தியாய் அறிவிக்க அழைக்கும் இறையே! இந்த அழைப்பினை எமது பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருக்கள் அனைவரும் ஏற்று நற்செய்தியினை அறிவிக்கும் சாட்சிகளாக வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஊதாரி மைந்தனை நேசிக்கும் இரக்கமுள்ள தந்தையே!
எங்களை அனுதினமும் வழிநடத்தும் பங்குத் தந்தை, ஊதாரி மைந்தனை நேசிக்கும் இரக்கமுள்ள தந்தையாய் இருந்து, இறை வாழ்வில் எங்களை வழிநடத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. எங்களை உமது இரக்கத்தினால் வழிநடத்தும் தந்தையே!
எங்கள் குடும்பங்கள் இரக்கம், அன்பு, மன்னிப்பு, இவைகளால் கட்டி எழுப்பப்படவும் ஊதாரித்தனமாகத் திரிகின்ற எங்கள் குடும்ப சகோதர சகோதரிகள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


 
மறையுரை சிந்தனைகள்

ஊதாரித்தனத்தை உதறிவிடுவோம்.

அது ஒரு சிறிய கிராமம். அந்த கிராமத்தில் இருந்து முதல் வகுப்பு மாணவி ப்ரியா, தனது பாட்டி வீட்டில் இருந்து தனியாக பள்ளிக்கு பஸ்ஸில் பயணம் செய்து வருவாள். அவளது வகுப்பு ஆசிரியை அவளிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்வார். அவளது தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் அவளது தாயை அடிப்பதும், வீட்டில் உள்ள பொருட்களை விற்று குடிப்பதும், எந்த வேலைக்கும் போகாமல் ஊதாரித்தனமாக ஊரை சுற்றி வருவதும் அவனது வழக்கம். அவனது மனைவியோ குடிகாரக் கணவனிடம் அடி உதை வாங்க முடியாமல், வாங்கிய கடனைக் கட்ட, பிள்ளைகளைப் படிக்க வைக்க சம்பாதிக்கும் மனப்பான்மையில் கன்னியர் இல்லம் ஒன்றில் தங்கி வேலை செய்யச் சென்று விட்டார். வகுப்பில் உடல் நலக் குறைவோடு உள்ள ப்ரியாவிற்கு மருத்துவ உதவி செய்து அவளது வகுப்பாசிரியை கவனித்துக் கொண்டார்."ப்ரியா ஜாலியாக இருக்கிறாயா?" என ஆசிரியர் கேட்ட கேள்விக்கு இல்லை"எனக்கு அம்மா வேணும், அப்பா வேணும்" என அந்த முதல் வகுப்பு ஆறு வயது சிறுமி சொல்வதை கேட்டு வகுப்பாசிரியை கண் கலங்குகிறார். ஊதாரித் தந்தையால் அந்த குடும்பத்தில் மனைவி, மகள், மகன் பிரிந்து நிம்மதி இன்று வாழ்கின்றார்கள். பிள்ளைகளை வீட்டில் வளர்க்க வேண்டிய தந்தை மதுப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டு தெருவில் திரிகின்றான். பிள்ளைகள் ஜாலியாக நிம்மதியாக வளர வேண்டிய தருணத்தில் புத்தகப் பையோடு வேதனையை சுமந்து திரிகிறார்கள்.

வாழும் காலங்களில் கடவுள் கொடுத்த அற்புதமான கொடை தான் குடும்பம். மனைவி, மகன், மகள், நண்பர்கள், உறவுகள் அதையும் விட அற்புதமான கொடை. இவர்களை நேசிக்கும்போது கிடைக்கும் பிரியங்களைவிட போதைப் பொருட்களால் அதிகமாக கிடைத்துவிடுமா? சிந்திப்போம். ஊதாரித்தனமாகத் திரிகின்ற பெற்றோரால், பிள்ளைகளால் இன்று நாடும், வீடும் சீர் குலைந்து கிடக்கின்றது.

நம் குடும்பங்களில் நிலவும் ஊதாரித்தனப் போக்கு எவை என சிந்திப்போம்.
குடும்பங்களில் அன்பை இரக்கத்தை மன்னிப்பை விதைக்கும் போது ஊதாரித்தனம் குறையும்.

பிள்ளைகள் தங்கள் மனம் போன போக்கில் போகிறார்கள் என்றால் அவர்கள் மீது அன்பு கலந்த அக்கறையை திணிப்போம். நண்பர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என குடும்ப உறுப்பினர்கள் வீண்களியாட்டங்களில் ஈடுபடும் போது குடும்பச் சூழ்நிலையை எண்ணிப் பார்ப்போம்.
குடும்பங்களில் அன்பை இரக்கத்தை மன்னிப்பை விதைக்கும் போது ஊதாரித்தனம் குறையும்.

நம் குடும்பங்களில் இப்படியான சூழ்நிலை இல்லை என்றால் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம். தான் தோன்றித்தனமாகத் திரியும் குடும்பங்கள், உறவுகள், நட்புகள் காணும்போது அவர்கள் மனம் திருந்த வழிகாட்டுவோம். அந்தக் குடும்ப நலன்களுக்காக இறைவனிடம். மன்றாடுவோம்.
குடும்பங்களில் அன்பை இரக்கத்தை மன்னிப்பை விதைக்கும் போது ஊதாரித்தனம் குறையும்.

ஊதாரித்தனமான போக்குகளை இறைவனின் அருட் துணையோடு உதறி விடுவோம்.

1981 ஆம் ஆண்டு பாப்பரசர் ஜான்பாலும், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ரீகனும் தாக்கப்பட்டனர். அவர்கள் செய்த நற்செயல்களால் பிழைத்துக் கொண்டார்கள். அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு போகும் நிலையில் வழியில் ரீகன் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொண்டார். பாப்பரசரோ தாக்கியவனை உடனே மன்னித்தார். இவர்கள் இருவரைப்பற்றியும் எழுதுகின்ற இராஜ்மோகன்"அதிபர் மிகுந்த மனிதத் தன்மையுடன் செயல்பட்டார். ஆனால் திருத்தந்தையோ தெய்வீகத் தன்மையுடன் நடந்து கொண்டார்" என்கிறார். ஆம் இறைத்தன்மை உள்ளவர்களால் மட்டுமே மன்னிக்க முடியும்.

எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் என அன்றாடம் திருப்பலியில் செபிக்கிறோம். நமக்கு தீமை செய்தவர்களை, நாம் மனதார மன்னிப்போம் நாமும் மன்னிக்கப் படுவோம். இயேசுவைப் போல மன்னிக்க முயன்றால் திருந்தாத இரும்பு மனம் கூட வருந்தி மனம் மாறும். மன்னிப்பதால் மனதின் சுமை கரைகிறது, குறைகிறது.

அன்னை திரேசா குழந்தைகளுக்காக கரம் நீட்டியபோது காரி உமிழ்ந்தவனை மனம் மாறச் செய்தது இந்த மன்னிப்பே! பெருந்தன்மையான அவரின் அன்பும் மன்னிப்பும் கரும்பாறையை தொட்டு, காரி உமிழ்ந்தவனை மனம் மாறச் செய்தது. அன்னையின் முகத்தில் அரும்பிய புன்னகையோ திருந்திய மனிதனை அரவணைத்துக் கொண்டது.

ஒருவர் ஒரு நாயை ஆசையாக வளத்து வந்தாராம். அவருக்கு உல்லாசமான வாழ்க்கை வாழ ரொம்ப இஷ்டம் வர, அந்த நாய அடமானம் வெச்சி காசு வாங்கினார்.
நாயை வைச்சிகிட்டு காசு கொடுத்த வியாபாரி கேட்டாராம் "என்னப்பா நாய என்கிட்ட விட்டுட்டு போற. அது என்ன விட்டு உன்கிட்ட ஒடிவந்திராத" அப்படின்னார்.
உடனே இவர் அப்படி வராதுன்னு, நாய் கண்ணப் பாத்து அப்படி வந்திராதன்னு பார்வையில கெஞ்சினார் . அன்னையில இருந்து நாய் வியாபாரிக்கு ரொம்ப விசுவாசமா இருந்துச்சி. காசு வாங்கியவர் இஷ்டம் போல வாழ்ந்தார்.

ஒருநாள் வியாபாரி இல்லாத நேரம் ஒரு திருடன் வர, நாய் திருடன கடிச்சி விரட்டிச்சாம். உடனே வியாபாரி நாய் மேல அன்பு அதிகமாகி இரக்கப்பட்டு "சரி நீ இனிமே உன் எஜமானன் கிட்டேயே போயிரு. எனக்கு சேவை செய்தது போதும். நான் கடன் பத்திரத்த கிழிச்சிப் போட்டிரேன்னு அனுப்பி வெச்சார்..
நாய் ஆசை ஆசையா எஜமானன தேடி வருது. இங்க நம்ம ஆள் மனம் வருந்தி நாயை மீட்டுக்கிறதுக்கு காசு சேத்துட்டு வேகமா வர்றார்.. எதுத்தாப்புல நாய் வால ஆட்டிக்கிட்டு வருது.  அதப் பாத்து தப்பா நினைச்சிர்ரார்"ஏய் நாயே. நாந்தான் உன்ன நா வர்ற வரைக்கும் வியாபாரிக்கி விசுவாசமா இருன்னு சொன்னேனே, நீ துரோகம் பண்ணிட்டு தப்பிச்சி ஒடிவர்றியா" என்று சொல்லிட்டு தன் கையில இருக்கிற கம்ப வெச்சி நாய் மேல ஒரே அடி. நாய் பாவமா அடிபட்டு தரையில விழுந்து இறந்து போனது. .

என்னைக்குமே நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல நம்பிக்கை வைக்கனும்.
நமக்கு பிடிக்காத ஒண்ண அவுங்க செய்தாக கூட அந்த எஜமானன் மாதிரி டக்குன்னு உணர்ச்சிவசப்பட்டிரக் கூடாது.
பொறுமையா அவுங்கள நம்பி மெல்லமா அன்பா விசாரிக்கனும்.
இரக்கத்தோட நடந்துக்கணும் தவறே செய்தாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அன்பு, இரக்கம், மன்னிப்பு இல்லாவிட்டால் பெரிய இழப்புல கொண்டு விட்ரும்.
கடினமான உழைப்பும் கட்டுப் பாடும் வறுமையை விரட்டி அடிக்கும்.
ஏணியின் உச்சிப் படியை அடைய கீழ்படியிலிருந்து தான் ஏற வேண்டும்.
சில காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை.
செய்யும் செயலை நிறைவாகச் செய்ய வேண்டும்.
பணம் சேர்க்கும் பொழுது கவலைப் பட மாட்டோம்.
கவலைப்படும் பொழுதும் பணம் சேர்க்க மாட்டோம்.
கவலை பயம் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகும் நிம்மதியும் இருக்கின்றது.

நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, மறு பாதி நம்பத் தகாதவை..
பார்க்க கண்களை கொடுத்த இறைவன் பார்க்காதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறார். இரண்டையும் சரியான நேரத்தில் பயன்படுத்துவோம்....
சோம்பேறித்தனம், உல்லாசப் பொழுது போக்கு இவைகளால் புண்ணியம் எதுவுமில்லை. வீண்பொழுது போக்குவது, சோம்பேறித்தனமாக இருப்பது வறுமையைத் தான் வளர்க்கும். ..

கடமையை செய்பவனுக்கு கடமை இருந்து கொண்டே இருக்கும். கவலைப் படுபவனுக்ககோ கவலை இருந்து கொண்டே இருக்கும்.
இன்றைய உலகில் ஊதாரித்தனமும். உல்லாசக் களியாட்டமும், வீண்பொழுது போக்கும், பொய்யும் புரட்டும். அலட்சியமும். தான் அதிகமாகி விட்டது. மனம் விட்டு பேசுவது குறைந்து போய் விட்டது. பொய் சொல்பவர்கள் கொஞ்ச காலம் மட்டுமே தழைக்க முடியும். சாயம் வெளுத்தால் உண்மை நிறம் தெரியும் அல்லவா!
அன்பு ததும்ப பேசுவோம். இரக்கமும் சொல்லுறுதியும் நம் இதயத்தில் இருந்து எப்போதும் வெளிவரட்டும்.

அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி சகிப்புத்தன்மை நிலவினால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும்.
அன்போடு இரக்கத்தோடு செயல்பட்டால் நிம்மதி நிமிர்ந்து நிற்கும். உண்மை உயர்ந்து நிற்கும்.

நாம் வாயைத் திறக்கும் போதெல்லாம் நம் உள்ளத்தையும் சேர்த்து திறக்கின்றோம் ஆகவே கவனமாக பேசுவோம். ஆயிரமாயிரம் ஏழை எளிய மக்களுக்கு ஆலமர விழுதாக இருந்து பாதுகாத்து வாழ்வளித்தவர் புனித அன்னை தெரேசா. அவர்கள் அனுபவித்த இருளான நேரங்கள், ஆண்டவரின் இரக்கத்தின் மாபெரும் வல்லமையில், தொடர்ந்து மிகுந்த நம்பிக்கை கொண்டு, அதனைச் சார்ந்திருக்கச் செய்தன. இன்று மாபெரும் புனிதராக உயர்த்தி நிற்கின்றன.

பிறருக்கு இரக்கத்தையும், மன்னிப்பையும் காட்டுவதற்கு, அன்னையவர்கள் எப்போதும் தயாராக இருந்தார். மன்னிப்பதற்கு, மிகுந்த அன்பும், மறப்பதற்கு மிகுந்த தாழ்மையும் மனம் நிறைய வைத்திருந்தார். இவைகளை மனம் நிறைய சுமந்து திரிந்தவரை இன்று எல்லோரின் மனமும் புனித தெரேசா என சுமந்து திரிகிறது.

*அன்னை திரேசா சொல்வது போல இறக்கத்தான் பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

*எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்பதைவிட, எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறோம் என்பது முக்கியமானது.

*மனதை பூந்தொட்டியாக வைத்திருப்போம், குப்பைகளே வந்து விழுந்தாலும் அவை உரமாக மாறிவிடும்.

*முதியோர் இல்லத்தில் தந்தை ஒருவர் இப்படி மன்றாடுகிறார்."இறைவா என் மகனுக்கு இப்படியான நிலைமை வந்து விடக்கூடாது" எல்லாத் தந்தைகளும் இவரைப்போலத்தான் இருப்பார்கள்.! கட்டாயம் இப்படித்தான் மன்றாடுவார்கள்.
பெற்றோரை மேன்மைபடுத்துவோர் பேறுபெற்றோர். ஏனெனில் இறைவனின் ஆசீரைபெறுவர். ..

ஒவ்வொரு இரக்கச் செயலும் இறைவனுக்கு விருப்பமானது, ஏனெனில், காணமுடியாத இறைவனின் முகத்தை, நம் சகோதர, சகோதரிகளிடம் காண்கிறோம். நம் சகோதர, சகோதரிகள் துன்புறும் போது அவர்களின் துயரங்களைக் களைய, தேவைகளை நிறைவேற்ற நாம் இரக்கம் காட்டும் போது, இயேசு உண்பதற்கும், குடிப்பதற்கும், உடுத்துவதற்கும் நாம் உதவுகிறோம், நமது விசுவாச அறிக்கைக்கும் செயல்வடிவம் கொடுக்க முன் வருகின்றோம். அடுத்தவருக்கு பணிபுரிவோர், அவர்கள் அறியாமலேயே, இறைவனை அன்பு செய்பவர்கள். தேவையில் இருப்போருக்கு அன்போடு உதவி செய்யவும், இரக்கம் காட்டவும், மகிழ்வோடு பணி ஆற்றுவதற்கும், துணிவும், மன உறுதியும் தேவை..

அன்னை தெரேசா அவர்கள், தன் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இறைவனின் இரக்கத்தை வெளிப்படுத்தும் கருவியாக வாழ்ந்தார். கருவில் உள்ள உயிரை மிகவும் மதித்து, அதற்காகப் போராடினார். தெருவோரம் கிடந்தவர்கள் முன் தன்னையே தாழ்த்தி அன்பையும் இரக்கத்தையும் அள்ளிக் கொட்டி பணியாற்றினார்.
அவரிடம் விளங்கிய இரக்கம், இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக இருந்தது.
கடைநிலை வறியோருக்கு அருகே இறைவன் இருக்கிறார் என்பதற்கு, அன்னை தெரேசாவின் வாழ்வும், பணியும் சான்றாக ஓர் அடையாளமாக இருக்கின்றது. இதை அன்னை தெரசாவிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும். . மொழி, கலாச்சாரம், இனம், மதம் என்ற அனைத்தையும் கடந்து, இந்த அன்பை தெரேசா வெளிப்படுத்தினார். நாமும் அதை வெளிப்படுத்த வேண்டும்.
நம்மை தேடிவந்த இயேசுவைப் போல, நாமும் நம்மோடு இருக்கும் அனைவரையும் தேடிச் சென்று, அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்துவோம்.

 
                                                  முன்னுரை  ஞானஒலி
நான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, மனம் வருந்தி, கடவுள் பக்கம் திரும்பி, வந்து அவரது அன்பின் மக்களாக வாழும் உரிமைப் பேற்றைத் திரும்ப பெற வருகை புரிந்துள்ள அன்பு இறை மக்களே உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

ஆண்டவர் அன்பும் அருளும் இரக்கமும் மிகுந்தவர். சினம் கொள்ள தாமதிப்பவர். சாந்தமுடையவர் என்ற உண்மைக்குச் சான்று பகர்வதோடு நாம் நம் பாவச்சுமையால் அழுத்தப் பட்டு அவநம்பிக்கைக்கு ஆளாகத் தேவையில்லை என்ற பாடத்தையும் கற்றுத் தருகிறது இன்றைய வழிபாடு.

எவ்வளவு பெரிய பாவியாய் இருந்தாலும் அதற்காக வருந்தித் திருந்தி வானகத் தந்தையிடம் திரும்பி வருபவரை அவர் முழுமையாகத் தூய்மைப்படுத்தி தன் மகனுக்குரிய அந்தஸ்தை மீண்டும் தருவார் என்ற கருத்தை முன்னிருத்தி கடவுளின் அன்பையும், இரக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது இன்றைய இறை வார்த்தை வழிபாடு.

நீ காணாமல் போன ஆடாக இருந்தாலும், நீ காணாமல் போன காசாக இருந்தாலும், நீ காணாமல்போன ஊதாரி மகனாக இருந்தாலும் நான் உன்னைக் கைவிட மாட்டேன். என்னிடம் என் பரம தந்தை ஒப்படைத்த எதையும் நான் இழக்க மாட்டேன். ஆகவே உணர்ந்து திருந்தி திரும்பி வா, நான் உனக்காக காத்திருக்கிறேன் என்று இன்றைய வழிபாட்டின் வழியாக இறைமகன் இயேசு நம்மை அழைக்கிறார்.

பலவீனத்தால் பாவத்தில் தவறி விழுந்தாலும், இரக்கத்தின் ஊற்றாகிய இறைவனிடம் மன்றாடுவோம். அவர் மன்னிப்பதில் வல்லவர் என்பதை உணர்ந்து அவரை நம்பிக்கையுடன் நாடி வருவோம்.

நாம் நமது பாவங்களை அறிக்கை யிட்டு மனம் திருந்தி வரும்போது நம்மை வரவேற்க இயேசு காத்திருக் கிறார். நாம் அவரை அணுகி வர, அவரது அரவணைப்பில் ஆறுதல் பெற இத்திருப்பலியில் நம்பிக்கையுடன் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை
கடவுளை சினம் கொண்டவராக சித்தரித் தாலும் அவரின் இரக்கத்தையும், பரிவையும் நிலைநிறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். மனிதரை அழிப்பதல்ல மாறாக அவர்களை வாழ வைப்பதே கடவுளின் திட்டம் என்பதையும், விசுவாசத்துடன் கூடிய உருக்கமான தொடர் வேண்டுதல் மூலம் கடவுளின் சினத்தை தணிக்க முடியும் என்பதையும் விளக்கும் இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை
தவறு செய்தவர்களை குறிப்பாக திருஅவையையே கூண்டோடு அழிக்க நினைத்த பாவிகளுள் முதன்மைப் பாவியான தன்னை கடவுள் மன்னித்து தடுத்தாட்கொண்டதை இன்றைய இரண் டாம் வாசகத்தின் வழியே விளக்குகிறார் பவுலடியார். இயேசுவிற்கு எதிராய் அவர் நடந்தாலும் கடவுள் தனக்காக மன மிரங்கியதை நினைவுகூர்ந்து பெருமிதத் துடன் விவரிக்கும் இவ்வாசகத்தை கனமுடன் கேட்போம்.
 
   நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1) இரக்கத்தின் திருவுருவான அன்பு இறைவா, உமது நம்பிக்கைக்கு உரியவர்கள் எனக்கருதி உம் திருத்தொண்டிற்கு உம்மால் அமர்த்தப்பட்ட எம் திருத்தந்தை, ஆயர்கள், எம் பங்குத் தந்தையர் மற்றும் அருட்பணியாளர் கள் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும், உமது மனப்பக்குவத்தையும், அன்பையும் பெற்றுச் சாட்சிய வாழ்வு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) தம்மை விட்டு விலகிப் போன ஒவ்வொரு ஆன்மாவையும் ஓய்வின்றி தேடும் ஒப்பற்ற இறைவா, தவறு செய்பவர்களுக்காக மோசேவைப் போல் மன்றாடவும், தூய பவுலைப் போல் நான் பாவிகளுள் முதன்மையான பாவி என்று எங்களையே தாழ்த்தி செபிக்கவும், செய்த தவறை உணர்ந்து திருந்தி வந்த இளைய மகனைப் போல் நாங்களும் எங்கள் தவறை உணர்ந்து உன்னிடம் திரும்பி வரவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) சினம் கொள்ளத் தாமதிப்பவராய், பேரன்பு மிக்கவராய் விளங்கும் அன்பு இறைவா, பாவத்தைக் குறித்து வருந்தி கலங்கி தன்னைத் தானே தாழ்த்தும் எந்த இதயத்தையும் நீர் ஒருநாளும் புறக்கணித்துத் தள்ளுவதில்லை என்ற விசுவாசத்தோடு நாங்கள் எங்கள் தவறுகளை உணர்ந்து, திருந்தி எம்மையே தாழ்த்தி வாழவும், அடுத்த வரை முழுமையாக மன்னித்து ஏற்றுக் கொள்வதில் உம்மைப் போல் இரக்கம் உள்ளவர்களாய் வாழவும், அதன் மூலம் விண்ணக மகிழ்ச்சியை இம்மண்ணகத்தில் மலரச் செய்யவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) உம்மை கூவி அழைக்கின்ற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டு கின்ற அன்பு இறைவா, எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங் களையும் உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம் சகோதர சகோதரிகளுக்கு உதவிடவும், குடும்பங்களில் ஆரோக்கியமும், நட்புறவும், சமாதானமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திடவும், ஆலயப் பணிகளிலும், ஆன்மீகப் பணிகளிலும் எம் பங்குத் தந்தையுடன் இணைந்து பணியாற்றவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 
 
மறையுரைச்சிந்தனை
முதல் வாசகம் - விடுதலை பயணம் 32:7-11, 13-14
இரண்டாம் வாசகம் 1 தீமொத்தேயு 1:12-17
நற்செய்தி வாசகம் லூக்கா 15:1-32

மனம் வருந்து,  மன்னிக்கப்படுவாய் மனம் திரும்பு மகிழ்ச்சி கொள்வாள்

இறை இயேசுவிலே எனக்கு மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே, திரைப்படப் பாடல் ஒன்று
தப்பு செஞ்சவன் வருந்தியாகனும்
தவறு செஞ்சவன் திருந்தியாகனும்... என்கிறது.

ஆம் அன்பான இறைச் சமூகமே. மனித உடல் கொண்ட யாவருமே. புனிதர்களில்லை. மாறாக குறை இயல்பு கொண்டவர்களே. ஆம் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. தவறு செய்த மனிதனுக்குத் திரும்பிவர, திருந்தி வாழப் பல வாய்ப்புகளைக் கடவுள் தருகிறார். திருந்தி வரும் மனிதன் தன் வாழ்வில் மனிதத்தைப் புனிதமாக்கி மகிழ்ச்சியை இரட்டிப்பாய்ப் பெறுகிறான் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாய் நமக்குத் தருகிறது.

தவறு செய்த அசோக மன்னன் மனம் திருந்தவில்லையா? வேதத்திலே மறுதலித்துத் தவறு செய்த பேதுரு மனம் திருந்தவில்லையா? புனித அகஸ்டின், கடந்த மாதப் புனிதர், மனம் திருந்தி மறைவல்லுநராக, புனிதராக மாறவில்லையா? மாறுவதற்கு மனம் வேண்டும். திருந்துவதற்கு, திடம் கொண்ட தியாக உள்ளம் வேண்டும். திருந்திவர, வாழ்வைத் திருப்பிப் பார்த்து, அதை திருப்பிப் போடத் திடமான மனம் வேண்டும்.

இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியில் நம் ஆண்டவர் இயேசு, மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்த்தொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்திலே மகுதியான மகிழ்ச்சி உண்டாகுமென்கிறார். (லூக்கா 15:4)

இரண்டாவது பகுதியிலே ஊதாரி மைந்தனின் உவமை வாயிலாக தவறு செய்தவர் வருந்தி, திருத்தி, திருந்தி மன்னிப்புக் கோறுதல் மற்றும் திருந்தி வருபவரை, திருப்பி அடிக்காது வாய்ப்புக் கொடுத்து வரவேற்பதும், மன்னித்து ஏற்பதும், மனித மாண்பு என்பதை விளக்கி எடுத்துரைக்கிறார் இயேசு. இங்கே இயேசு, நம்மை மனம் திருப்புவதா? மன்னித்து ஏற்பதா? இதில் எது பெரியது? எது உயர்ந்த பண்பு. மனிதத்திற்க எது தேவை என உணர்த்தும் பாடத்தை இந்த உவமையில் விளக்குகிறார்.

கண்ணதாசன் கூற்றுப்படி தப்பு செய்தவன் வருந்தியாகனும் என்பது படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இளைய மகன் தன் தந்தையின் அன்பைப் புறக்கணித்தான், தன் சொத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு கண்காணா இடம் சென்று, கயவர் கூட்டத்தில் கலந்து கொண்டு, கணக்கற்ற பாவத்திற்கு உட்பட்டு கரைத்துவிட்டான். தந்தையிடம் பெற்ற சொத்தை, உணவை இழந்து, உறவுகளை இழந்து உருக்குலைந்தான். தவறை உணர்ந்தான். மனம் வருந்தினான். தந்தையின் அன்பை நினைக்கிறான். மனம் திடம் கொண்டு எழுந்து, தந்தையிடம் திரும்பிச் செல்ல முயற்சி எடுத்து சென்று, தந்தையே நான் வருந்துகிறேன். உம் மகனென அழைக்கப்பட தகுதியற்று விட்டேன். உம் வேலைக்காரருள் ஒருவராக என்னை ஏற்று ஆதரியுங்கள். நான் வாழ வழி செய்யுங்களென வரம் கேட்பேன் என்று மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, தன் தந்தையிடம் ஊதாரி மைந்தன் ஓடிச் சென்று, காலைப் பற்றிக்கொண்டு மனம்விட்டுப் பேசிக் கதறி அழுது மன்னிப்பு கேட்கிறான். இங்கே ஏழு அருட்சாதனங்களில் ஒன்றான ஒப்புரவு நடக்கிறது. எப்படி? ஊதாரி தவறை நினைத்தான், மனம் வருந்தி தந்தையின் அன்பை எண்ணினான். மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டான். வருத்தப்பட்டு வந்த, வாழ்வை இழந்த இளைய மகனுக்கு (ஊதாரி மகனுக்கு) மறுக்க முடியாத, மறக்க முடியாத மன்னிப்பை வழங்கி, அவனை மகிழ்ச்சியால் நிரப்பி அவரும் மகிழுகிறார். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் அவனுடைய தந்தை.

மனம் திரும்பும் பாவியைக் குறித்து விண்ணுலகில் உண்டாகும் மகிழ்ச்சியை, இம் மண்ணுலகில் இந்த உவமையின் வழியாய் இயேசு லூக்கா 15:4ல் நிகழ்த்திக் காட்டிப் பாடம் கற்பிக்கிறார்.

இங்கு நம் வாழ்வை இந்த நற்செய்தியோடு உரசிப் பார்ப்போம் இன்று? நம்மிலே பலர் நம்மை புனிதர்களென்று சொல்லிக் கொண்டு, உத்தமரென்று உலகுக்கு படம் காட்டிக் கொண்டு, தவறுக்குமேல் தவறு செய்து தரம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து நரகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டு வருகிறோம். நரகம் கடவுளைக் காணமுடியாத, அழியாத நெருப்புள்ள இடம். நம்மைக் கடவுள் படைத்ததே அவரை அறிந்து, அன்பு செய்து, அவரை அனுபவித்து, அறிக்கையிட்டு, இவ்வுலகைவிட்டுப் பிரிந்து, அவரோடு விண்ணுலகிலே வாழ்வதற்காகத்தான். ஆம் விண்ணகமே நம் தாய்நாடு எனப்பவுலடிகள் பிலிப்பியர் 3:20ல் சொல்லுகிறார்.

விண்ணுலகம் நமதாக நம் மண்ணக வாழ்வில் விண்ணகத்தைக் கட்ட முயுலுவோம். பிறரன்பை பேணி வளர்த்து மனிதத்தை, மனித நேயத்தைக் கட்டிக் காப்போம். நம் தவற்றை உணருவோம். தவறுக்காய் மனம் வருந்தி. திருந்தி திரும்பி வருவோம். புனிதத்தை நோக்கி பயணித்து, பிறர் குற்றம் மன்னிப்போம். அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி நாமும் மகிழுவோம். அப்படிப்பட்ட சகோதரத்திலே இங்கே வாழும்பொழுது நாம் விண்ணகத்தை மண்ணகத்திலே நிலைநாட்டுகிறோம். நீதி, உண்மை, அன்பு, மகிழ்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம் மிளிர்ந்த சமதர்ம சமுதாயம் படைக்கிறோம். இறை ஆட்சி மிளிரும். இறைவன் நம்மோடு இருப்பார். அல்லேலூயா பாடுவோம். ஆமென்.

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

என்னுடையதெல்லாம் உன்னுடையதே....

பொறுமை இல்லாதவன் கூட ஒருகுழந்தைக்கு தகப்பனாக முடியும் ஆனால் ஒரு பொருப்பானவனால் மட்டுமே நல்ல தந்தையாக முடியும். தாய் அன்பு ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு தந்தையின் அன்பும் அரவணைப்பும் ஒரு குழந்தை மனிதனாக உருவாகக் கட்டாயம் தேவை. சாதாரண தந்தையின் அன்பிற்கே இவ்வளவு என்றால் இறைத்தந்தையின் அன்பிலும் அரவணைப்பிலும் வளரும் ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக வளரும் என்பதற்கு சிறிதளவும் சந்தேகம் வேண்டாம். நாமெல்லாம் வானகத் தந்தையின் அன்பு பிள்ளைகள். அவர் நம் அனைவரின் அன்புத் தந்தை . அவர் அருளும் அளவற்ற இரக்கமும் உடையவர். இத்தகைய இரக்கம் உடைய இறைத்தந்தையின் பிள்ளைகளாகிய நாம் அவரைப் போல இரக்கமுடையவர்களாக மாற இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய நற்செய்தியில் இயேசு ஊதாரி மைந்தனின் கதையை பரிசேயர்களுக்கும் மறை நூல் அறிஞர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் கூறுகிறார். பாவிகளோடு உணவு அருந்துவது தவறு என்று எண்ணிய அவர்களுக்கு பாவிகள் மனம்மாறி மன்னிப்பு பெற வழியுண்டு. அதன்மூலம் அவர்கள் புது வாழ்வு வாழ இடமுண்டு என்பதை எண்பிக்கின்றார். இந்த நற்செய்தியில் இடம்பெறும் இரண்டு மகன்களும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களில் இருவரைக் குறிக்கும். மூத்த மகன் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைக் குறிக்கும். இளையமகன் பாவிகள் எனக் கருதப்பட்ட ஏழை எளிய மக்களைக் குறிக்கும். இங்கு தந்தையாக பாவிக்கப்படுபவர் இறைத்தந்தை, அவர் வழி வரும் இயேசு. இங்கு தந்தை கூறும் என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்னும் வாக்கியம் நமது வாழ்வாக செயல்பட இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகின்றோம். என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று எல்லோரிடமும் நாம் சொல்லி விட முடியாது. நமக்கு மிகவும் பிடித்த ,நெருக்கமான உரிமை உடையவர்களிடம் மட்டுமே நாம் அதை சொல்வோம். அதைப்போல் மற்ற எல்லோரும் நம்மிடமும் அப்படிச்சொல்வதில்லை. ஆக என்னுடையதெல்லாம் உன்னுடையதே என்று நம்மிடம் பிறர் சொல்லவும், நாம் பிறரிடம் சொல்லுமளவுக்கு நாம் தாராளமனம் உடையவர்களாக வாழ முயற்சிப்போம். மூன்று கதைமாந்தர்களின் செயல்பாடுகளை வைத்து நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறோம் இனி எப்படி வாழவேண்டும் என்று சிந்திக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.

1. மகிழ்வை தொலைவில் தேடியவர்.
இளையவர் ... நம் வீடுகளில் எப்போதும் கடைசி குழந்தை மேல் அதிக பாசம் வைப்பர். அது பெற்றோர்களானாலும் சரி , உடன் பிறப்புக்களானாலும் சரி. அப்படி இருக்க இந்த இளைய மகனும் தன் தந்தையால் அளவுக்கு அதிகமாக அன்பு செய்யப்பட்டிருப்பார். அதனால் தான் உரிமையுடனும் தைரியத்துடனும் தந்தையிடம் நேராக சென்று தனக்குரிய பங்கைக் கேட்கிறார். அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்தும் தந்தை, தேவைக்கு அதிகமான செல்வம், வேலையாட்கள் என அனைத்தும் இருந்தும் மகிழ்வு அவரிடத்தில் இல்லை. ஏனெனில் அவர் தந்தையின் அன்பை உணரவில்லை. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும்... தந்தையின் அன்பை அவர் இல்லாதபோது உணர்கிறார். சொத்தும் பணமும் மட்டுமே மகிழ்வைத் தரும் என்று எண்ணியவர், அது தனக்கு பிரித்து கொடுக்கப்பட்டதும் அனைத்தையும் திரட்டிக் கொண்டு தொலை தூரம் செல்கிறார் . நாமும் பல நேரங்களின் இருக்கும் இடத்தில் இருக்கும் மகிழ்வை உணராது இல்லாத ஒன்றிற்காக வருந்துகிறோம். மகிழ்வு நம்மிடத்தில் தான் உள்ளது அது நமக்குள் உள்ளது என்று உணர்வோம். செய்த பாவத்திற்காக மனம்வருந்தி தந்தையிடம் திரும்பி வந்த இளைய மகன் போல நாமும் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். அவர் தன் தந்தையின் அன்பை உணர்ந்ததும் உடனடியாக புறப்பட்டு தந்தையின் இல்லம் வருகின்றார் எந்த வித தாமதமும் இன்றி. நாமும் மனம் வருந்துகிறோம் ஆனால் இறைத்தந்தையிடம் திரும்பி வர கால தாமதம் செய்கின்றோம். மகிழ்வைத் தேடி வெளியே நெடும்பயணம் செல்வதை விடுத்து நம் உள்ளத்துக்குள் நீண்ட ஆழமான பயணம் செல்வோம். இறை அன்பை உணர்ந்து கொள்வோம்.
என்னுடைய மகிழ்வு உன்னுடையதே, உன்னுடைய மகிழ்வும் என்னுடையதே என்று வாழ முயற்சிப்போம்.

2. அனுதினமும் அடிமை வாழ்வு வாழ்ந்தவர்.:
மூத்த மகன். இவர் தான் தந்தையின் சொத்துக்களுக்கு முதன்மையான வாரிசு. ஆனால் அதை உணராது வீட்டில் பணிபுரியும் வேலையாட்கள் போல தன்னை நினைத்துக் கொள்கிறார். தனது தந்தையின் சொத்துக்களை அவருக்கு பின் தான் தான் பராமரித்து வாழ வேண்டும் என்று எண்ணியவருக்கு தம்பியின் வடிவில் வருகிறது பிரச்சனை. இருப்பினும் அவன் பங்கைஅவன் எடுத்துக் கொண்டான் மிச்சம் இருக்கும் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று நினைத்தவன் மகிழ்வை கெடுத்தார் போல வீடு திரும்புகிறான் இளையவன். அதுவரை மனதில் அடக்கி வைத்திருந்த அனைத்தும் வெளியே கொட்டப்படுகிறது. சொந்த வீட்டிற்குள்ளே செல்லத் தயங்குகிறார். தன் தந்தையிடம் கேட்பதற்கு பதிலாக வேலையாட்களிடம் என்ன நடக்கிறது என்று கேட்கிறார். அவர்களும் இவரின் கோபத்தீயில் எண்ணெய் விட்டு நன்றாக எரியச்செய்வது போல உம் தம்பி வந்திருக்கிறார். உம் தந்தை கொழுத்த ஆட்டினை அடித்து விருந்து சமைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். முதலாளிஎன்றோ , சின்ன முதலாளி என்றோ சொல்லாது இந்த விருந்தில் எங்களுக்கு பங்கில்லை என்பது போல செயல்படுகின்றனர். தனது முதலாளியையும் அவர் மகனையும் பிரித்து அதில் இன்பம் காணும் எண்ணத்தில் கூறுகிறார். நாமும் பல நேரங்களில் இப்படித்தான் . யாரிடம் கேட்டு தெளிவு பெறவேண்டுமோ அவர்களை விட்டு விட்டு பிரச்சனை பெரிதாக காரணமாக இருப்பவர்களிடமே அறிவுரைக் கேட்கிறோம். பிறருக்கு துன்பம் ஏற்படுத்தி அதில் மகிழ்வு காணும் குணம் களைந்து அமைதியை ஏற்படுத்துபவர்களாவோம். இறைத்தந்தையின் அன்புக்கும் அருளுக்கும் சொந்தக்காரர்கள் நாம் என்ற நோக்கத்தில் செயல்படுவோம்.

3... இரக்கமே உருவான இனிய இறைவன்.
இங்கு தந்தை போல சித்தரிக்கப்படுபவர் வானகத்தந்தை . இவரது செயல்பாடுகள் அவர்தம் பிள்ளைகளாகிய நம்மிடமும் துலங்க முயற்சிப்போம்.

சொத்தைக் கேட்டதும் பங்கிட்டுக் கொடுக்கிறார். ஏன் எதற்கு என்று கேட்கவில்லை ஒவ்வொருவரின் உரிமையையும் மதிக்கிறார்.

தன்னிடம் பணிபுரியும் பணியாட்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுப்பவராக இருக்கின்றார்.

தன்மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் எதிர்பார்க்கின்றார்.

தொலைவிலேயே மகனைக் கண்டு கொள்கிறார். கட்டித் தழுவுகிறார். அவன் செய்த அனைத்து செயல்களையும் மன்னித்து மறக்கிறார்.

முதல்தரமான ஆடை மோதிரம் காலணி என அணிவித்து மகிழ்கிறார். புதிய மகனாக மாற்றுகிறார்.

எல்லோர்க்கும் எல்லாமாக இருக்கின்றார் தன் மூத்த மகனையும் இளைய மகனையும் பணிபுரியும் பணியாட்களையும் அன்பு செய்து அவரவர்க்கு கொடுக்க வேண்டிய தகுதியையும் உரிமையையும் கொடுக்கின்றார்.

என்னுடையதெல்லாம் உன்னுடையது ... சொத்தும் செல்வமும் மட்டுமல்ல என்னுடைய குணமும் பண்பும் பரிவும் எனக்குப் பின் உன்னுடையதாக வேண்டும் என்கிறார். நான் மனம்மாறி வந்த உன் தம்பியை ஏற்று மகிழ்வது போல நீயும் பிறரை மன்னித்து ஏற்று வாழ் என்கிறார். நாமும் இத்தகைய பேற்றுக்கு உரிமை உடையவர்களே .. நம் வானகத்தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாக வாழ முயற்சிப்போம்.

உன்னுடையதெல்லாம் என்னுடையது என்று சொல்லும் மனப்பாங்கு உடையவர்களாவோம்.வெறும் பணம் பதவி சொத்து சுகம் விடுத்து நல்ல எண்ணம் சிந்தனை சொல் செயல்களுக்கு சொந்தக்காரர்களாவோம். நம் வானகத்தந்தை இரக்கமுடையவராய் இருப்பது போல நாமும் இரக்கமுடையவர்களாவோம். இளையவனானாலும் சரி மூத்தவனானாலும் சரி தந்தைக்கு நல்ல மகன்களாவோம். தந்தையின் நம்பிக்கை இருக்கும் வரை தனயன் (மகன்) வழிதவறான். என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம் இறைத்தந்தையின் பராமரிப்பு என்றும் நம்மையும் நம் குடும்பத்தையும் வழிநடத்தி வாழவைப்பதாக ஆமென்
 


 
மறையுரைச்சிந்தனை  - அருட்சகோதரி: செல்வராணி O.S.M.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 I விடுதலைப் பயணம் 32: 7-11
II 1 திமொத்தேயு 1: 12-17
III லூக்கா 15: 1-32


அவர் பெயர் இரக்கம்!
புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் பிரிவு 13ல் அன்பிற்கு ஒரு பாடல் இசைக்கின்றார். அதை வாசிக்கும்போதெல்லாம், இந்தப் பாடலில் 'இரக்கம்' என்ற வார்த்தையை அவர் ஏன் பயன்படுத்தவில்லை என்ற ஐயம் என்னில் எழுவதுண்டு. இன்று அதிகமாகப் பேசப்பட்டு பொருளை இழந்த வார்த்தைகளில் ஒன்று அன்பு. எல்லாவற்றையும் நாம் அன்பு செய்வதாக இன்று சொல்கின்றோம். ஆனால், அன்பிற்கு அடிப்படையான ஒரு படி அல்லது வாயில் இருக்கின்றது. அதன் வழியாகத்தான் ஒருவர் அன்பிற்குள் நுழைய முடியும். அது என்ன? இரக்கம். அந்தப் படியை நாம் ஏறிக் கடக்கத் தேவையில்லை - இறங்கித்தான் கடக்க வேண்டும்!

நாம் பலகாரக் கடை ஒன்றிற்குச் செல்கின்றோம் என வைத்துக்கொள்வோம். நிறைய பலகாரங்களை வாங்கிவிட்டு வெளியே வந்து, நம்முடைய வண்டியை நகர்த்தும்போது அங்கு வருகின்ற ஒருவர், 'ஐயா! எனக்கு ஏதாவது கொடுங்க!' என்று கையை நீட்டுகிறார். நாம் பையைத் துலாவி ஐந்து அல்லது பத்து ரூபாய் கொடுக்கிறோம். இதை நாம் பிறரன்புச் செயல் என்று சொல்கிறோம். இந்த அன்பு நம்மில் எப்படி வந்தது? இரக்கம் என்ற உணர்வால்தான். இரக்கம் என்ற உணர்வு வர வேண்டுமென்றால் ஒருவர் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி வந்து அடுத்தவரின் தளத்தில் நிற்க வேண்டும். இரக்கம் வர இறங்கித்தான் ஆக வேண்டும்!

இரக்கம் கொண்டு இறங்கி வந்த ஐந்து நபர்களை இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த ஐந்து நிகழ்வுகள் அல்லது எடுத்துக்காட்டுக்கள் சுட்டிக்காட்டும் செய்தி ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம்!' இவை எழுப்பும் கேள்வியும் ஒன்றுதான்: 'அவர் பெயர் இரக்கம் என்றால் உன் பெயர் என்ன?'

1. ஆண்டவராகிய கடவுளின் இரக்கம்
இன்றைய முதல் வாசகத்தில் (காண். விப 32:7-11,13-14) இஸ்ரயேல் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியை வழிபட்டு யாவே இறைவனை, ஆண்டவராகிய கடவுளைப் புறக்கணிக்கின்றனர். இது பெரிய பிரமாணிக்கமின்மையாகக் கருதப்பட்டது. ஆகையால் ஆண்டவரின் கோபம் அவர்கள்மேல் எழுந்து அவர்களைக் கொல்ல நினைக்கிறது. அந்த நேரத்தில் மோசே ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கையை அவருக்கு நினைவூட்ட, ஆண்டவரின் கோபம் தணிகின்றது. ஆண்டவர் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு மக்களுக்குச் செய்யப் போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாமல் விடுகின்றார். இஸ்ரயேல் மக்கள் செய்த செயலுக்கு ஆண்டவராகிய கடவுள் கோபம் கொள்வது தகுந்தது என்றாலும், அவர் அந்தக் கோபத்திலிருந்து இறங்குகின்றார். அந்த இறங்குதல் அவருடைய இரக்கமாக மாறுகின்றது. இங்கே மோசேயின் பங்கும் முக்கியமானது. ஆண்டவராகிய கடவுளுக்கே அவருடைய நற்குணத்தைச் சுட்டிக்காட்டுபவராக மாறுகின்றார் மோசே.

2. இயேசு கிறிஸ்துவின் இரக்கம்
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 திமொ 1:12-17), தன்னுடைய அழைத்தல் வாழ்வு அல்லது பழைய வாழ்வு பற்றி திமொத்தேயுவுக்கு எழுதுகின்ற மடலில் நினைவுகூறுகின்ற பவுல், 'நான் அவரைப் பழித்துரைத்தேன். துன்புறுத்தினேன். இழிவுபடுத்தினேன் ... ஆயினும் அவர் எனக்கு இரங்கினார்' என்று இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை - தான் அனுபவித்ததை - அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். தொடர்ந்து, 'கடவுள் எனக்கு இரங்கினார் ... பொறுமையைக் காட்டினார்' என்றும் எழுதுகின்றார். பவுலைப் பொறுத்தவரையில் இயேசு அவருடைய செயல்களுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்கவோ கண்டிக்கவோ இல்லை. மாறாக, இரக்கத்தைக் காட்டி அவரைப் புறவினத்தாரின் திருத்தூதராகத் தெரிந்துகொள்கிறார்.

3. ஆடு மேய்ப்பவரின் இரக்கம்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 15:1-32) இயேசு, 'பரிசேயரின் முணுமுணுப்புக்கு' எதிராக மூன்று எடுத்துக்காட்டுக்களைச் சொல்கின்றார். முதலாவது எடுத்துக்காட்டு, ஆடு மேய்க்கும் ஒருவர் காணாமல் போன ஆட்டைத் தேடும் நிகழ்வு. நூறு ஆடுகள் வைத்திருந்த ஒருவர் அவற்றில் ஒன்று காணாமல்போனபோது, தொன்னூற்று ஒன்பது ஆடுகளை விட அந்த ஒரு ஆடுதான் பெரியது என்று எண்ணியதால் அதைத் தேடிக் கண்டுபிடித்து மகிழ்ச்சியோடு தோளில் போட்டுக்கொண்டு, தன் நண்பர்களையும் தன்னுடைய மகிழ்ச்சியில் பங்கேற்க அழைக்கின்றார். அவர் காணாமல் போன அந்த ஒரு ஆட்டிற்காக அனுபவித்த எல்லாத் துன்பங்களும் மறைந்து சட்டென்று மகிழ்ச்சியாக மாறிவிடுகிறது. ஆடு மேய்ப்பவர் காணாமல்போன அந்த ஆட்டிற்காக மலைகள், பள்ளத்தாக்குகள் என அனைத்திலும் ஏறி இறங்குகின்றார். அதுவே அவருடைய இரக்கம்.

4. நாணயம் தொலைத்த பெண்ணின் இரக்கம்
ஒரு ஆணை உருவகப்படுத்திய லூக்கா தொடர்ந்து ஒரு பெண்ணையும் உருவகப்படுத்துகிறார். பத்து நாணயங்களுள் ஒன்றைத் தொலைத்த பெண், உடனடியாக எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும் வரை தேடி, அதைக் கண்டுபிடித்து, தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடுகின்றாள். தான் தோழியரோடு மகிழ்ந்து கொண்டாடிய பணம் தொலைந்து போன பணத்தைவிட மிகுதியாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படவில்லை அவள். தான் தொலைத்த திராக்மா கிடைத்ததே அவளுடைய பெருமகிழ்ச்சியாக இருக்கிறது.

5. மகன்களைத் தொலைத்த தந்தையின் இரக்கம்
'ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்' எடுத்துக்காட்டில், தந்தை இரண்டு மகன்களையும் தொலைத்துவிடுகின்றார். இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்து வாங்கிக் கொண்டு சென்று, தந்தையிடமிருந்து தொலைந்துவிடுகின்றான். மூத்த மகன் தன்னுடைய வேலைகளிலேயே தொலைந்துவிடுகின்றான். இருவரையும் விருந்திற்கு அழைக்கின்றார் தந்தை. மூத்தவன் விருந்திற்குள் நுழைய மறுக்கிறான், தயங்குகிறான். தான் செய்த வேலைகள் அனைத்தும், தான் தந்தைக்குக் காட்டிய பிரமாணிக்கம் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாக உணர்கின்றான்.

இவர்களுடைய பெயர்கள் இரக்கம் என்றால் என்னுடைய பெயர் இரக்கம் என்றாக நான் என்ன செய்ய வேண்டும்?

இவர்களே இதற்கான வாழ்க்கைப் பாடங்களையும் வரையறுக்கிறார்கள்:

அ. அவரவருடைய முடிவுக்கு அவரவரே பொறுப்பு
தன்னுடைய இளைய மகன் தன்னுடைய சொத்துக்களைப் பிரித்துக் கேட்டபோது அவனைத் தடுத்து நிறுத்தவோ, அவனுக்கு அறிவுரை பகரவோ முயற்சி செய்யவில்லை அந்த ஊதாரித் தந்தை. மகனுடைய முடிவுக்கு மகனே பொறுப்பு என்று கருதினார். தன்னுடைய ஆற்றல், நேரத்தைச் செலவழித்து அவனுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அல்லது தன்னுடைய வேலைக்காரர்களை அனுப்பி அவனைப் பின்தொடரச் சொல்லவில்லை. 'நான் போகிறேன்' என்று என்று சொன்ன மகனிடம், 'போ' என்கிறார். முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுளும் தன்னுடைய மக்கள் தனக்கு எதிராகத் திரும்பிய போது, அவர்களுடைய முடிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பொறுமை காக்கின்றார். இரண்டாம் வாசகத்திலும் பவுல் திருச்சபையைத் துன்புறுத்தியபோது இயேசு பொறுமை காக்கின்றார். பவுலின் செயலுக்கு அவரே பொறுப்பு என்பது போல அமைதி காக்கின்றார்.

இரக்கத்தின் முதன்மையான பண்பு பொறுமை. அந்தப் பொறுமையில் நான் அடுத்தவரை அவருடைய பொறுப்பில் விட வேண்டும். இரக்கம் என்றவுடன் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு என்னுடைய மடியில் வைத்து, 'நான்தான் எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் பொறுப்பு' என்று பதறுவது அல்ல. மாறாக, ஒவ்வொருவரும் முதிர்ச்சி அடைந்தவர். ஒவ்வொருவரும் நன்மை-தீமை அறியக்கூடியவர், பொறுமையாக இருந்தால் அல்லவரும் நல்லவர் ஆவார் என்று அடுத்தவரின் செயல்களுக்கு அடுத்தவரே பொறுப்பு என்று பொறுமையுடன் அமர்தல் இரக்கத்திற்காக முதற் பாடம்.

ஆ. உன்னுடைய தீமை என்னுடைய நன்மையை ஒருபோதும் பாதிக்காது
'நீ தீயவனாய் இருக்கிறாய் என்பதற்காக நானும் தீயவனாய் இருப்பேன்' என்று யாவே இறைவனோ, இயேசுவோ, தந்தையோ சொல்லவில்லை. மாறாக, மற்றவர்களின் தீமை தங்களுடைய நன்மையைப் பாதிக்காவண்ணம் அவர்கள் கவனமாக இருந்தார்கள். தன்னுடைய மகன் வெறுங்கையனாய் வந்தான் என்பதற்காக அவனுடைய தந்தை தன் கைகளையும் வெறுங்கையாக்கவில்லை. வெற்றுக்கையனாய் இருந்த மகனை இருந்த இடத்திலேயே நிரப்புகின்றார். தான் தெரிந்துகொண்ட இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமின்மையில் இருந்தாலும் அவர்களுடைய தீமை கடவுளையோ மோசேயையோ பாதிக்கவில்லை. பவுல் சவுலாய் இருந்தபோது செய்த தீமையும் இயேசுவின் நன்மைத்தனத்தைப் பாதிக்கவில்லை.

இன்று நான் என்னுடைய நன்மையை எப்படி நிர்ணயிக்கிறேன்? எனக்கு ஒருவர் தீமை செய்தால் நான் அவருக்கும் தீமை செய்ய நினைத்தேன் என்றால், என்னுடைய நன்மையைவிட அவருடைய தீமை வலுவானதாக இருக்க நான் அனுமதித்துவிடுகிறேன். காணாமல் போன ஆடும் நாணயமும் தங்களுக்கு ஏதோ வகையில் தீங்கிழைத்தாலும் அவற்றைத் தொலைத்தவர்கள் வாளாவிருக்கவில்லை. தங்களுடைய நன்மைத்தனத்தால் அவற்றைத் தேடினர். இதுவே இரக்கத்தின் இரண்டாம் பாடம்.

இ. என்னுடையதும் உன்னுடையதே

ஊதாரித் தந்தையின் இவ்வார்த்தைகள் அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றன. 'என்னுடையதும் உன்னுடையதே' என்று அவர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் சொல்கின்றார். தன்னுடைய செயலுக்கு அவர் எந்த பதில் உபகாரமும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய இளைய மகனைக் கண்டபோது அவனுடைய கழுத்தில் விழுந்து அவனை வரவேற்ற தந்தை மூத்த மகனுடைய கழுத்தில் அவ்வாறு விழவில்லை. ஏனெனில், மூத்த மகனை அவர் தன்னுடைய சமம் என்று கருதினார். 'எனக்குரிய ஒன்று என் தம்பிக்குப் போகிறது' என்று மனதுக்குள் முணுமுணுத்த மூத்த மகனிடம், 'நான், என்னுடையது, என்னுடைய இளைய மகன், வேலைக்காரர்கள், சொத்து என எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி ஒரு நொடியில் அவனைத் தந்தையாக்கி இவர் மகனாகின்றார். இதுதான் இரக்கத்தின் மூன்றாம் குணம்.

நான் ஒருவருக்கு இரங்குகிறேன் என்றால் அவரை நான் அதே நிலையில் வைத்திருத்தல் கூடாது. அப்படி வைத்திருந்தால் நான் அவரைப் பயன்படுத்துபவராக மாறிவிடுவேன். மாறாக, 'என்னுடையது எல்லாம் உன்னுடையது' என்று சொல்லி அவருக்கு இரங்கும்போது, அவர் நிறைந்தவராகிவிடுவார். அங்கே நான் குறைந்தவன் என ஆனாலும் எனக்கு அது நிறைவே.

இறுதியாக,
நம்முடைய உறவு நிலைகள் இனிய உறவு நிலைகளாக இருக்க அன்பை விட இரக்கமே தேவை என்பேன். இன்றைய உலகிற்கு அறிவார்ந்தவர்கள் தேவையில்லை, இரக்கமானவர்களே தேவை.

நிலவிற்கு இராக்கெட் அனுப்பி சோதனையிடும் அளவிற்கு அறிவில் வளர்ந்துவிட்டு, எனக்கு அடுத்திருப்பவனை நான் பகைத்துக்கொண்டு, பசியால் இருக்கும் அவனுடைய தட்டில் சோறிடும் அளவிற்குக் குனியவில்லை என்றால், என் இருப்பால் பயன் ஏது?

இரக்கம் என்பது இறைவனின் பெயர்!
இது நம் பெயரானால் இந்த உலகமும், உறவும் இனிக்கும்!


 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

பாவிகளை வரவேற்கும் இயேசு

இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தான் பணிசெய்து வந்த இடத்தில் தன்னோடு பணிசெய்து வந்த ஓர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராகக் காதலித்தான்; அவளையே அருட்சாதனம் செய்துகொள்வதென முடிவுசெய்தான். இது குறித்து அவன் தன்னுடைய தந்தையிடம் பேசியபோது அவர், ",சொந்த பந்தத்தில் இருக்கின்ற ஒரு பெண்ணைப் பார், கட்டிவைக்கிறேன்... அதை விடுத்து யாரோ ஒரு பெண்ணை அருட்சாதனம் செய்துகொள்ளப் போகிறாய் என்றால், என்னால் அவளை வீட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது", என்று மறுத்துவிட்டார். அவன் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அப்படியும் அவர் இறங்கிவராததால், அவன் தான் உயிருக்கு உயிராக அன்புசெய்த அந்தப்பெண்ணை மணந்துகொண்டு பெருநகரில் ஒன்றில் குடியேறினான்.

அவன் தந்தையை விட்டுப் பிரிந்துவந்தாலும், ஒவ்வொரு வாரமும் அவர்க்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தான். அந்தக் கடிதத்தில் அவன் அவருடைய நலத்தை விசாரித்தும் அவருடைய சொல்பேச்சுக் கேட்டு நடக்காததற்கு மன்னிப்புக் கேட்டும் எழுதினான். ஆனால், அவனுடைய தந்தையிடமிருந்து மட்டும் எந்தவொரு பதில் கடிதமும் வரவில்லை. அப்படியிருந்தும் அவன் தன் தந்தைக்குக் கடிதம் எழுதுவதை மட்டும் நிறுத்தவே இல்லை. பத்து ஆண்டுகட்கும் மேல் எழுதிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் அவனுடைய முகவரிக்கு கனமான ஒரு பொட்டலம் (Parcel) வந்தது. அனுப்புநர் முகவரியை அவன் பார்த்தபோது, அதில் அவனுடைய தந்தையிடம் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. அவனால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பதற்றம். இந்தப் பொட்டலத்திற்குள் என்ன இருக்குமோ? என்ற கலவையான எண்ணங்களோடு அவன் அதைப் பிரித்துப் பார்த்தன். அதில் அவன் பத்தாண்டுகட்கும் மேல் தன் தந்தைக்கு எழுதி அனுப்பிய கடிதங்களெல்லாம் இருந்தன, அதுவும் எந்தக் கடிதமும் பிரிக்கப்படாமலேயே இருந்தன. அப்பொழுது அவன், ",இத்தனை ஆண்டுகளும் நான் எழுதி அனுப்பிய ஒரு கடிதத்தையாவது என் தந்தை பிரித்தப் பார்த்திருந்தால்கூட அவர் என்னை தன் மகனாக ஏற்றுக்கொண்டிருப்பாரே! இப்படி எதையுமே பிரித்துப் பார்க்காமல், நான் செய்த தவறையும் மன்னிக்காமல் வைராக்கியத்தோடு இருக்கிறாரே என்று மிகவும் வேதனைப்பட்டான்.

இந்த நிகழ்வில் வருகின்ற தந்தையைப் போன்றுதான் பலர், தவறுசெய்தவர்களை (சில சமயங்களில் அது தவறில்லாமல் கூட இருக்கலாம்) மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனதில்லாமல் இருக்கின்றார்கள். ஆனால், இவர்கட்கெல்லாம் முற்றிலும் மாறாக, தவறு செய்தபின் மனம் திருந்தியவர்களை, பாவிகளை உள்ளன்போடு ஏற்றுக்கொள்ளக்கூடியவராக விண்ணகத் தந்தை இருக்கின்றார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பாவிகளை வரவேற்ற/ தேடிச்சென்ற இயேசு
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைத் தேடி மீட்டதையும் (லூக் 19: 10) பாவிகளோடு இருந்ததையும் (மத் 9: 10) பார்த்த பரிசேயக்கூட்டம், ",இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே", என்று அவருக்கு எதிராக முணுமுணுக்கத் தொடங்குகிறார்கள். அப்பொழுது இயேசு, தான் ஏன் பாவிகளைத் தேடி மீட்கிறேன், எதற்காக அவர்களோடு தன்னை ஒன்றித்துக் கொள்கிறேன் என்பதை விளக்க, காணாமல் போன ஆடு உவமை, காணாமல் போன திராக்மா உவமை, காணாமல் போன மகன் உவமை என்ற மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இம்மூன்று உவமைகளிலும் அடிநாதமாக இருப்பவை, காணாமல் போதல், கண்டுகொள்ளுதல், மகிழ்ச்சி உண்டாகுதல் என்ற மூன்று கருத்துகள்தான். இம்மூன்று கருத்துகளையும் தனித்தனியாக சிந்தித்துப் பார்த்துவிட்டு, அவற்றின் மூலம் இயேசு ஏன் பாவிகளை வரவேற்றார் என்று தெரிந்துகொள்வோம்.

காணாமல் போதல்
லூக்கா நற்செய்தியில் இடம்பெறுகின்ற மூன்று உவமைகளிலும் வெளிப்படக்கூடிய முதலாவது உண்மை, காணாமல் போதல் ஆகும். காணாமல் போன ஆடு உவமையில் வரும் அந்த ஆடானது, தன்னுடைய மதியினத்தால் அல்லது அறிவுகெட்டத்தனத்தால் காணாமல் போகிறது. ஆடு என்றால், ஆயனின் குரல் கேட்டு நடக்கவேண்டும். ஆனால், காணாமல் போன ஆடோ ஆயனின் குரல் கேட்கமால், தன்னுடைய மதியினத்தால் தொலைந்து போகின்றது. காணாமல் போன திராக்மா உவமையில் வரும் அந்த திராக்மா, அதை வைத்திருந்த பெண்ணின் கவனக்குறைவால் காணாமல் போகின்றது. இதை ஒருசில வீடுகளில் பெற்றோர்களின் நெறிகெட்ட வாழ்க்கையால் பிள்ளைகளும் கேட்டுப் போகிறார்களே, அதற்கு ஒப்பிடலாம். எப்படியிருந்தாலும் காணாமல் போனது அல்லது பாவத்தில் விழுந்தது பாவத்தில் விழுந்ததுதான். காணாமல் போன மகன் உவமையில் வரும் இளைய மகன் தெரிந்த காணாமல் போகிறான் அல்லது தெரிந்தே பாவத்தில் விழுகின்றான். காணாமல் போவதும் பாவத்தில் விழுவதும் இறப்பதற்குச் சமம் (15: 24) என்று இதே அதே அதிகாரம் நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படிக் காணாமல் போன அல்லது இறந்துபோன(வை)(வர்)கள் எப்படிக் கண்டுகொல்லப்பட்டார்கள் என்று தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

கண்டுகொள்ளுதல்
மூன்று உவமைகளிலும் வெளிப்படும் இரண்டாவது முக்கியமான உண்மை, கண்டுகொள்ளுதல். காணாமல் ஆடு உவமையிலும் காணாமல் போன திராக்மா உவமைவிலும் உரிமையாளர்களே அவற்றைத் தேடிக் கண்டுகொள்கின்றார்கள். இதனை ஆண்டவர் இயேசு பாவிகளைத் தேடிவந்து மீட்டதற்கு ஒப்பிடலாம் (லூக் 19: 10). ஆனால், காணாமல் போன மகன் உவமையில் அப்படியில்லை. அதில் காணாமல் போன மகனே, தந்தையின் பேரன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து, தன்னுடைய பாவத்தைக் கண்டுகொண்டு தந்தையிடம் திரும்பி வருகின்றான். இவ்வுவமை தந்தைக் கடவுள் பேரன்புடையவராக இருந்தாலும், மனிதர்களாகிய நாம், நம்முடைய இயலாமையை, பாவத்தை உணர்ந்து, அவரிடம் சேரவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்வதாக இருகின்றது.

மகிழ்ச்சி உண்டாகுதல்
மூன்று உவமைகளும் எடுத்துரைக்கும் மூன்றாவது, மிக முக்கியமான உண்மை. மகிழ்ச்சி உண்டாகுதல் என்பதாகும். காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் ஆயர் நண்பர்களோடும் அண்டை வீட்டாரோடும் சேர்ந்து மகிழ்கின்றார்; காணாமல் போன திராமாவைக் கண்டுபிடித்தவரோ தன் தோழியரோடும் அண்டைவீட்டாரோடும் மகிழ்சிகின்றார்; காணாமல் போன மகனைக் கண்டுகொண்ட தந்தை தன் பணியாளர்கள் எல்லாரோடும் விருந்து கொண்டாடுகின்றார். இன்னும் சொல்லவேண்டும் என்றால், ஒரு பாவி மனம் மாறுகின்றபோது அது அவரைச் சார்ந்தவர்கட்கும் மட்டுமல்லாது, விண்ணுலகிலும் கடவுளின் தூதர்கட்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு செயலாக இருக்கின்றது.

இப்படி ஒரு பாவியின் மனமாற்றத்தினால் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்பதால்தான் இயேசு அவர்களைத் தேடிச் செல்கின்றார்; தவறை உணர்ந்து திருந்தியவர்களை அன்போடு வரவேர்கின்றார். இந்த உண்மையை உணராமலும் தாங்களும் பாவிகள்தான் என்பதை அறியாமலும் இருந்ததால்தான் காணாமல் போன மகன் உவமையில் வருகின்ற மூத்த சகோதரனைப் போன்று பரிசேயக் கூட்டம், இயேசு பாவிகளை வரவேற்றதற்கு முணுமுணுக்கிறார்கள். பலநேரங்களில் நாமும்கூட, தவறுகளை உணர்ந்து, திருந்தி வருகின்றவர்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நம்மிடமிருந்து அப்புறப்படுத்திவிட்டு இயேசுவைப் போன்று பாவிகளை அன்போடு ஏற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

சிந்தனை
",யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்மென இறைவன் விரும்புகிறார் (1 பேது 3:9) என்பார் புனித பேதுரு. ஆகையால், நாம் மனம்மாறி அவரிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்பும் அன்பு இறைவனிடம் திரும்பி வருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

 
 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

இறைவனின் இணையற்ற இரக்கம்

அநேக மக்கள் கடவுளை பழிவாங்கும் கடவுளாகவும், நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை வழங்கும் போலீஸ் காரராகவும் நினைக்கிறார்கள். ஆனால் இன்றைய வார்த்தை வழிபாட்டில் இறைவன், அன்பு காட்டும் தெய்வம், மன்னிக்கும் தெய்வம், இரக்கம் காட்டும் தெய்வம், காத்திருக்கும் தெய்வம், என்னைத் தேடும் தெய்வமாகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறார்.

வானத்து விலங்குகளோ, வானதூதர்களோ தவறுகள் செய்வதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் தான் தவறு செய்கிறோம். அறியாமை, இயலாமை, பலவீனம் என்ற போர்வையில் நாம் தவறுகிறோம். எல்லாரும் தவறு, குற்றம் புரிபவர்களாக இருந்தாலும், பெரும்பாலோர் தம் குற்றங்களை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக நியாயப்படுத்தவே முயல்வார்கள். அதே நேரத்தில் தாங்கள் எத்தகைய குற்றங்கள் செய்தாலும், பிறர் தமது நிலைமையைப் புரிந்து மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. ஆனால் இவர்கள், பிறர் இத்தகைய தவறுகளைப் புரியும் போது அத்தகைய தாராள உள்ளத்துடன் நடந்துகொள்வதில்லை. குறிப்பாக ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வேலைக்காரர்கள் குற்றம் செய்தால் அதைப் பெரிதுபடுத்தி ஒடுக்கும் முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டார்கள். இதனால் இன்று தண்டனை வழங்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் பெருகிக் கொண்டே போகிறது. சிலர் தங்களையே மன்னிக்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் தவறு செய்பவர்களையும், குற்றம் புரிவோரையும் நாம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இயேசு இன்று மூன்று உவமைகளால் அழகாகச் சித்திரிக்கிறார். தவறிச் சென்ற ஆட்டைத் தேடி அலைந்து அதைக் கொண்டு வரும் ஆயன். காணாமல் போன நாணயத்தைத் தேடிக் கண்டுபிடித்து மகிழும் ஒரு பெண். வீட்டை விட்டு ஓடிப் போன ஊதாரி மகனை வரவேற்று விருந்து கொண்டாடும் தந்தை.

இந்த மூன்று உவமைகளிலும் (கடவுளின் பண்புகளான) தேடுதல் நடைபெறுகிறது. கண்டடைந்த பின் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகிறது. அதைத் தொடர்ந்து விருந்து கொண்டாட்டமும் நடைபெறுகின்றது. எனவேதான் மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக். 15:7, 10) என் இயேசு கூறுகின்றார். நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடி வந்தேன் என்கிறார் ஆண்ட வர் (மத். 9:13).

உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன் (எரே. 31:3) என்கிறார் ஆண்டவர். நீ செய்த தீமையெல்லாம் நாம் மறந்திடும் தெய்வம் அல்லவா (எசே. 16:63)

நம் இறைவன், எசாயா தீர்க்கதரிசி கூறுவது போல நமது பாவங்கள் செந்தூரம் போல சிவப்பாக இருந்தாலும் அவற்றை அழித்து நம் இதயத்தை வெண் பனியிலும் வெண்மையாக்குவார்.

இத்தாலி நாட்டில் பிளாரென்ஸ் நகரில் ஏஞ்சலினா என்ற பெண் வாழ்ந்து கொண்டிருந்தாள். பெயர் ஏஞ்சல்தான். ஆனால் பாவம் செய்து பாவியாக வாழ்ந்து பலரின் வாழ்வைக் கொடுத்தவள். ஒருநாள் தன் வீட்டு அலமாரியைத் திறந்து உடுத்த, அலங்கரிக்க ஆடை எடுத்தபோது அங்கிருந்த பாடுபட்ட சுரூபம் அவள் கண்களில் பட அச்சிலுவையிலிருந்து ஒரு குரல் கேட்டது. நான் உன் பாவங்களுக்காக இறந்தேன்! என்பதை மறந்துவிடாதே! இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்பத் தன் காதில் ஒலித்ததால் தன் தவறான வழியை விட்டு விட்டு புனித வாழ்க்கை வாழத் தொடங்கினாள். இன்று புனித ஏஞ்சலினாவாகத் திகழ்கின்றாள்.

கல்வாரி நோக்கி வாருங்கள். கல்வாரியைப் பாருங்கள். அங்கே மூன்று சிலுவைகள் உண்டு. நடுவே நிற்கும் சிலுவை இயேசு தொங்கிய சிலுவை. இது மீட்பின் சிலுவை. இது இயேசுவுக்குச் சொந்தம். இதை அணைத்து முத்தமிடலாம். வலது புறத்தில் இருக்கும் சிலுவை நல்ல கள்வனின் சிலுவை. இது பாவபரிகாரத்தின் சிலுவை. இதை இன்று நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் இடது புறத்தில் இருக்கும் சிலுவையோ சாபத்தின் சிலுவை. நம் வாழ்வை நாசமாக்கும் சிலுவை. இந்த மூன்று சிலுவைகளில் எதை உங்களுக்குச் சொந்தமாக்க விரும்புகிறீர்கள்?
 
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி

நம்மைத் தேடும் இறைவன்

இஸ்ரயேல் இனம் பெருகினால் நமக்கு ஆபத்து என்று சொல்லி இஸ்ரயேலருக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளையெல்லாம் ஆற்றிலெறிந்து கொன்றுவிடும்படி எகிப்து நாட்டு அரசன் பார்வோன் கட்டளையிட்டான்.

தன் மகன் ஆற்றிலெறியப்படுவதை விரும்பாத தாயொருத்தி நாணல் கூடையில் அக்குழந்தையை வைத்து தன் மகள் வழியாக அதை ஆற்றிலிட்டாள். அது ஆற்றில் மிதந்து வந்தது. அந்தக் குழந்தையின் பெயர் மோசே. பார்வோன் மன்னனின் புதல்வியால் அது அரண்மனைக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது.

மோசே வாழ்க்கையிலே ஒரு நாள் . தன் இனத்தைச் சேர்ந்த அடிமை ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்துவிடுகின்றார். மோசேயின் இரத்தம் கொதிக்கின்றது. கோபம் கொப்பளிக்கின்றது. தன் இனத்தவனை அடித்தவனை அடித்துக் கொன்று மண்ணைத் தோண்டிப் புதைத்துவிட்டு, தான் செய்தது யாருக்கும் தெரியாது என்று எண்ணி அரண்மனையை அடைகின்றார். ஆனால் மோசே செய்தது எப்படியோ வெளியே தெரிந்துவிடுகின்றது. அரசன் மோசேயைக் கொல்லத் தேடுகின்றான். ஆனால் மோசே தப்பித்து மிதியான் நாட்டுக்கு ஓடிவிடுகின்றார். அங்கே அவருடைய மாமனின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோதுதான் கடவுள் அவரை எரியும் புதரில் எரியாது நின்று அழைத்தார்.

மோசே ஒரு கொலைகாரர். கொலைகாரரைக் கடவுள் விடுதலை வீரராக விளங்க அழைத்தார். ஆம். கொலைகாரரைத்தான் அழைத்தார். எதற்கு ஒரு கொலைகாரரைக் கடவுள் தம் பணியைச் செய்ய அழைக்க வேண்டும்? இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு தலையாய காரணம், தாம் நல்லவர்களைவிட, பாவிகளைத் தேடி அலையும் கடவுள் என்பதை உலக மக்களுக்குக் கடவுள் எடுத்துச் சொல்ல விரும்பினார்.

புதிய ஏற்பாட்டிலே யூதாஸ் ஒரு முறைதான் காட்டிக்கொடுத்தான். ஆனால் பேதுருவோ மூன்று முறை மறுதலித்தார். ஆனால் இயேசு உயிர்த்த பிறகு திபேரியாக் கடல் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த பேதுருவைத் தேடிச்சென்று, மூன்று முறை மறுதலித்தவரை, மூன்று முறை என்னை அன்பு செய்கின்றாயா? எனக் கேட்டு திருஅவைக்குத் தலைவராக ஏற்படுத்தினார் (யோவா 21:1-17).

நமது கடவுள் பாவிகளைத் தேடிச் செல்லும் கடவுள். தனது மனத்தை மாற்றிக்கொள்ளும் கடவுள் (முதல் வாசகம்). முன்னர் நான் அவரைப் பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயினும் அவர் எனக்கு இரங்கினார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுகின்றார். இந்த உண்மையைத்தான் இன்றைய நற்செய்தியும் எடுத்துச் சொல்கின்றது. இன்று இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து,

நீ காணாமல் போன ஆடாக இருந்தாலும் (லூக் 15:1-7),
நீ காணாமல் போன காசாக இருந்தாலும் (லூக் 15:8-10),
நீ காணாமல் போன மகளாகவோ, மகனாகவோ இருந்தாலும் (லூக் 15:11-32) நான் உன்னைக் கைவிட மாட்டேன்.

என் அரசிலே அழிவு என்ற சொல்லுக்கே இடமில்லை. என்னிடம் என் பரம தந்தை ஒப்படைத்த எதையும் நான் இழக்கமாட்டேன். ஒரு பாவி சாகவேண்டுமென்று நான் விரும்புவதில்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும், வாழ்ந்ததும், இறந்ததும், உயிர்த்ததும், இன்று வாழ்வதும் பாவிகளை மீட்பதற்காகவே. ஆகவே அஞ்சாதே, திகையாதே, வா என்னிடம், உனக்காகப் பொறுமையோடு நான் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று கூறுகின்றார்.
 
 
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
 
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி

காணாமற்போய், கண்டுபிடிக்கப்படும் உவமை

இன்று, செப்டம்பர் 11. செப்டம்பர் 11 அல்லது 9/11 என்று சொன்னதும், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி, நியூ யார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்த காட்சி நினைவுக்கு வரலாம். வர்த்தக உலகின் பெருமைக்குரிய சின்னங்களாக உயர்ந்து நின்ற அவ்விரு கோபுரங்களின் மீது இரு விமானங்கள் மோதிய காட்சியும், ஏறத்தாழ 100 நிமிடங்கள் இரு தீப்பந்தங்களைப்போல் எரிந்த அவ்விரு கோபுரங்களும், பின்னர், அவை ஒன்றன்பின் ஒன்றாக இடிந்து விழுந்த காட்சியும், உலகெங்கும் ஒளிபரப்பப்பட்டு, அதிர்ச்சியை உருவாக்கின.

தொடர்ந்து வந்த பல நாட்களில், உலக ஊடகங்கள், இந்நிகழ்வை மீண்டும், மீண்டும், பல கோணங்களில் காட்டி, அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி, பதில்கள் தேட முயன்றன. நியூ யார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு என்ற வட்டங்களைக் கடந்து, நம் அனைவரையும் ஒரு தேடலில் ஈடுபடுத்தியது, இந்நிகழ்வு. மரணம், துன்பம், வன்முறை, நம்பிக்கை என்ற பல கோணங்களில் எழுந்த இத்தேடல்களின் விளைவாக, பல நூறு கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்தன. இந்த வெளியீடுகளில், 'One' - அதாவது, 'ஒன்று' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதை, நம் ஞாயிறு சிந்தனைகளை இன்று துவக்கி வைக்கிறது. இக்கவிதையின் ஒரு சில வரிகள் இதோ:

"கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,
நாம் ஒரே நிறத்தவரானோம்.
எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,
நாம் ஒரே வகுப்பினரானோம்.
சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,
நாம் ஒரே மதத்தவரானோம்.
இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,
நாம் ஒரே உடலானோம்.
இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,
நாம் ஒரே குடும்பமானோம்."

இக்கவிதை வரிகள் கூறும், ஒரே நிறம், ஒரே இனம், ஒரே மதம், ஒரே குடும்பம் என்பதுதானே, நாம் அனைவரும் கனவு காணும் விண்ணகம். இந்த விண்ணகத்தைத் தொலைத்துவிட்டு, அடிக்கடி தேடி வருகிறோமே! ஒரே இறைவனின் மக்கள் என்ற உன்னத உண்மை, நாம் எழுப்பும் பிரிவுச் சுவர்களுக்குப்பின் காணாமல் போய்விடுகிறது. நாம் எழுப்பிய பிரிவுச் சுவர்கள், 2001ம் ஆண்டு, செப்டம்பர் 11ம் தேதி என்ற அந்த ஒரு நாளிலாவது இடிந்து விழுந்ததே என்று எண்ணி, ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் 11ம் தேதியன்று, நாம் நன்றி சொல்லவேண்டும். ஒரு கொடூரமான நிகழ்வு, நம்மை ஒருங்கிணைத்தது என்பதுதான், புதிரான, வேதனையான ஓர் உண்மை. அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச் சுவர்களை மீண்டும் தேடிக் கண்டுபிடித்து, கட்டியெழுப்பி, நம்மையே சிறைப்படுத்திக் கொண்டோம். மத வெறி, நிற வெறி, சாதிய வெறி, என்ற சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.

காணாமல் போவதையும், கண்டுபிடிப்பதையும் எண்ணிப்பார்க்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இயேசு கூறிய உவமைகளில், உலகப் புகழ்பெற்ற உவமையான 'காணாமற்போன மகன் உவமை', இந்த அழைப்பை விடுக்கிறது. இந்த உவமைக்கு முன்னதாக, 'காணாமற்போன ஆடு' மற்றும் 'காணாமற்போன காசு' என்ற இரு உவமைகளையும் ஒரு முன்னுரைபோல் தருகிறார், இயேசு (லூக்கா 15:1-32 ). மூன்று உவமைகளிலும், காணாமற்போவதும், கண்டுபிடிப்பதும் நிகழ்கின்றன. ஆடு, காசு இரண்டும் காணாமல் போகின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதோ, அவற்றின் உரிமையாளர்கள். ஆனால், காணாமற்போகும் மகனோ, பன்றிகள் நடுவே, பசியால் துடித்தபோது, தன்னை முதலில் கண்டுபிடிக்கிறார். பின்னர், தன் தந்தையின் இல்லம் திரும்பிவந்து, புது வாழ்வையும் கண்டுபிடிக்கிறார். வீட்டைவிட்டு வெளியேறியதால், காணாமல்போய், மீண்டும் தன்னையே கண்டுபிடித்த இளைய மகனையும், வீட்டைவிட்டு வெளியேறாமல், வீட்டுக்குள்ளேயே காணாமல்போன மூத்த மகனையும் நம் சிந்தனைகளின் மையமாக்குவோம்.

முதலில், காணாமல் போவது என்றால் என்ன என்பதை அறிய முயல்வோம். ஆன்மீக எண்ணங்களை எழுதுவதில் புகழ்பெற்ற Ron Rolheiser, OMI என்ற (அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த) ஓர் அருள்பணியாளர், இந்த உவமையைப் பற்றி எழுதும்போது, காணாமல் போவதுபற்றி கொஞ்சம் விரிவாகச் சிந்தித்துள்ளார். தன் வாழ்வில், 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறியுள்ளார்:

",எனக்கு 14 வயதானபோது, கோடை விடுமுறையில் நடந்த சில நிகழ்வுகளால் என் உலகம் நொறுங்கிப்போனது. நல்ல உடல் நலமும், அழகும் நிறைந்த, 20 வயதுள்ள ஓர் இளைஞர், என் வீட்டுக்கருகே வாழ்ந்தார். அவரைப் பார்க்கும்போதெல்லாம், பிற்காலத்தில் நானும் அவரைப்போல் இருக்கவேண்டும் என்று நினைப்பேன். அந்த விடுமுறையில் ஒருநாள், அவர் தூக்கில் தொங்கி இறந்தார். அதே விடுமுறையில், என் நண்பர்களில் ஒருவர், வேலை செய்யும் இடத்தில், ஒரு விபத்தில் இறந்தார். வேறொரு நண்பர், குதிரை சவாரி பழகும்போது, தூக்கி எறியப்பட்டு, கழுத்து முறிந்து இறந்தார். இந்த மரணங்கள் எல்லாம், ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு மாதத்திற்குள் நடந்தன. இவர்களது அடக்கச் சடங்கில் நான் பீடச்சிறுவனாய் உதவி செய்தேன்.
வெளிப்படையாக, என் உலகம் மாறாததுபோல் நான் காட்டிக்கொண்டாலும், என் உள் உலகம் சுக்குநூறாய் சிதறிப்போனது. இருள் என்னைக் கடித்துக் குதறியது. உலகிலேயே என்னைவிட சோகமான, பரிதாபமான, 14 வயது இளைஞன் ஒருவன் இருக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.",

அருள்பணி Rolheiser அவர்கள், தன் சோகமான முடிவிலேயே தங்கியிருந்திருந்தால், அவரது வாழ்வு திசைமாறி போயிருக்கலாம். அவர் முற்றிலும் காணாமற் போயிருக்கலாம். ஆனால், அவ்வேளையில் அவருக்கு வந்த ஓர் உள்ளொளியைப் பற்றி அவர் இவ்விதம் விவரித்துள்ளார்:

",இந்த சோகம் என் உள்ளத்தை ஆக்கிரமித்த அதே வேளையில், மற்றொன்றும் என் உள்ளத்தில் மெதுவாக, சப்தமில்லாமல் நுழைந்தது. அதுதான் விசுவாசம். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்கவும், எனக்குள் மண்டிக்கிடந்த குறைகளோடு என்னையே நான் ஏற்றுக்கொள்ளவும், அந்த விசுவாசம் எனக்கு உதவியது. நான் இன்று ஓர் அருள்பணியாளராக இருப்பதற்கு, அந்தக் கோடை விடுமுறை பெரிதும் உதவியது. சூழ்ந்த இருளில், என்னைக் காணாமல் போகச்செய்த அந்தக் கோடை விடுமுறைதான் என்னை அதிகம் வளரச் செய்தது.",

தனது 14வது வயதில் நடந்தவற்றை இவ்வாறு கூறும் Ron Rolheiser அவர்கள், தொடர்ந்து, Christina Crawford என்பவர் எழுதியுள்ள 'Mummy Dearest', 'Survivor' என்ற இரு நூல்களைப் பற்றிக் கூறுகிறார். Christina அவர்கள், ஒரு வீட்டில் வளர்ப்புப் பிள்ளையாக வாழ்ந்தவர். அந்த வீட்டில் அவர் அடைந்த துன்பங்களையெல்லாம் இந்நூல்களில் விளக்குகிறார். அவர் வாழ்வில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்த காலங்களைப்பற்றி அவர் எழுதும்போது, "அந்த நாட்களில் நான் முற்றிலும் காணாமல் போயிருந்தேன்" என்று எழுதிவிட்டு, உடனே, "காணாமல் போவதும் ஒரு வகை கண்டுபிடிப்புதான்" என்றும் குறிப்பிடுகிறார்.

ஆம், காணாமல் போவதில் பல உண்மைகளைக் கண்டுபிடிக்கலாம். முற்றிலும் காணாமல்போகும், நிலைகள் முடிவுகள் அல்ல. அந்த இருள், புதிய வழிகளை, புதிய ஒளியை உருவாக்கும். ஆன்மீக ஒளி பெற, முற்றிலும் காணாமல் போவதும் உதவி செய்யும். இதற்கு புனித அன்னை தெரேசா ஓர் எடுத்துக்காட்டு.

செப்டம்பர் 4, சென்ற ஞாயிறன்று, அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நாள் என்பதை சிந்தித்தோம். இந்த அன்னையைப் புகழாத நாடு இல்லை, மதம் இல்லை, மொழி இல்லை... அவ்வளவு உயர்ந்ததோர் இடத்தை, இந்தப் புனிதர், மனித மனங்களில் பெற்றுள்ளார். காணாமல் போவதைச் சிந்திக்க, அன்னை தெரேசாவின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கும். காணாமல் போவதையும், இப்புனிதரின் வாழ்வையும் இணைத்து நான் பேசுவது ஆச்சரியமாக இருக்கலாம். எனினும் அந்தப் புதிரைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

அன்னை தெரேசா அவர்கள் புனிதர் பட்டம் பெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை ஒருங்கிணைத்துவந்த அருள்பணி Brian Kolodiejchuk என்பவர், 2007ம் ஆண்டு, "Mother Teresa - Come Be My Light" என்ற நூலை வெளியிட்டார். அன்னை தெரேசா அவர்கள், தனிப்பட்ட வகையில் எழுதிவைத்திருந்த எண்ணங்கள், இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகள், அந்த அன்னையின் மனதில் எழுந்த சந்தேகங்கள், கலக்கங்கள், போராட்டங்கள் ஆகியவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆறு ஆண்டுகளுக்கு முன், அவர் புனிதராக உயர்த்தப்படுவதற்கு முன்னர், 2016ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி வெளியான மற்றொரு நூலிலும், அன்னையின் உள்மனப் போராட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ",A Call to Mercy: Hearts to Love, Hands to Serve", என்ற தலைப்பில் வெளியான இந்நூலில், அன்னை அவர்கள், தன் ஆன்மீக வழிகாட்டிக்கு எழுதிய ஒரு மடலில் நாம் காணும் வரிகள் இதோ: "அனைவராலும் கைவிடப்பட்டு, தன் துன்பங்களோடு மட்டுமே வாழும் ஓர் ஏழையின் நிலை, ஆன்மீக வாழ்வில் நான் உணரும் கைவிடப்பட்ட நிலையின் உண்மையான பிரதிபலிப்பு."

பலரும் செய்யத்தயங்கும் ஒரு பணியை, ஆழ்ந்த அன்புடன், நாள் தவறாமல் செய்துவந்த அந்த அன்னைக்கு இப்படி ஒரு நிலையா? அதுவும், அவர் அப்பணிகளைச் செய்துவந்த காலத்தில், இப்படி ஒரு நிலையா? அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் இது போன்ற போராட்டங்களில் கழிந்தனவா? அன்னை தெரேசா அவர்களின் உள்மனப் பதிவுகளை வாசிக்கும்போது, இத்தகையக் கேள்விகள் நம்மைத் துளைக்கின்றன.

ஆனால், நிதானமாய், ஆழமாய்ச் சிந்தித்தால், அன்னை தெரேசா போன்ற உன்னத உள்ளங்களால் மட்டுமே இத்தனை நீண்டகாலம், இவ்வளவு ஆழமான துன்பங்கள், கலக்கங்கள், இருள் நிறை நாட்கள் இவற்றைச் சமாளித்திருக்கமுடியும் என்பது புரியும். அதிலும் சிறப்பாக, அன்னை தெரேசா அவர்கள் செய்துவந்த பணியில், நம்பிக்கையைக் குலைக்கும் வண்ணம் நிகழ்ந்த துன்பங்களையே, ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும் அவர் சந்தித்ததால், அவர் மனதிலும் இருள், பயம், கேள்விகள், குழப்பங்கள் இவைச் சூழ்ந்தது இயற்கைதானே.

கேள்விகளும் குழப்பங்களும் இல்லாமல், எவ்வித சலனமுமில்லாமல் அவர் வாழ்க்கை ஓடியிருந்தால், அவர், உணர்வுகளற்ற ஓர் இயந்திரமாய் இயங்கியிருக்க வேண்டும். தன்னைச்சுற்றி நிகழ்வனவற்றால் சிறிதும் பாதிக்கப்படாமல், தன் உலகத்திற்குள்ளேயே வாழும் பலருக்கு, காணாமற்போகும் வாய்ப்புக்கள் இருக்காது. அவ்வாறு காணாமல் போகாமல், பாதுகாப்பாக வாழ்பவர்கள், பல உண்மைகளை தொலைத்துவிட வாய்ப்புண்டு. இந்நிலையில் வாழ்ந்தவர், இன்றைய உவமையில் நாம் சந்திக்கும் மூத்த மகன்.

Timothy Keller என்பவர் எழுதிய 'The Prodigal God' என்ற நூலில், இரு மகன்களும் மேற்கொண்ட வாழ்வுப் பயணத்தை ஒப்பிடுகிறார். இளைய மகன் தன்னையே கண்டுகொள்ள வேண்டும் என்ற தேடலில், தந்தையின் கட்டுப்பாட்டைவிட்டு விலகிச்செல்கிறார். பலரது மனங்களைப் புண்படுத்துகிறார். தான் தேர்ந்துகொண்ட தேடல் பாதை தவறானது என்பதை உணர்ந்ததும், தாழ்ச்சியுடன் தந்தையைத் தேடி வருகிறார். தந்தையின் உறவில்தான் தன் மீட்பு உண்டு என்பதைக் கண்டுபிடிக்கிறார்.

மூத்தவரோ, தன் சொந்த முயற்சியால் மீட்படைய முடியும் என்ற உறுதியில், தந்தைக்கும், அனைவருக்கும் ஏற்றவராக வாழ்கிறார். ஆனால், தன் வாழ்வுக்கு உரிய வெகுமதிகளை தந்தை வழங்கியிருக்கவேண்டும் என்ற கணக்குடன் வாழ்ந்துவருகிறார். அவர் போட்டுவைத்த கணக்கு தவறாகிப் போனது என்று அறிந்ததும், அவரது குணம் தலைகீழாக மாறுகிறது. அதுவரை அவர் அணிந்து வாழ்ந்த முகமூடிகள் வீழ்ந்தால், அவர் வெறுப்பில் காணாமல் போகிறார். வீட்டுக்குள் அவர் பாதுகாப்பாக வாழ்ந்தாலும், அவர் தனக்குள் வளர்த்துக்கொண்ட சுயநலக் காட்டில் அவரே தொலைந்துபோகிறார்.

நாம் எல்லாருமே வாழ்வில் காணாமல் போயிருக்கிறோம். அறியாத, புரியாதச் சூழல்களில் திகைத்து நின்றிருக்கிறோம். கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப்போல் உணர்ந்திருக்கிறோம். அந்நேரங்களில், அந்த இருளுக்குள் தங்களையேப் புதைத்துக் கொள்வோர் பலர் உண்டு. ஒரு சிலர், தங்கள் உள் உலகம் இருள் சூழ்ந்ததாய் இருந்தாலும், வெளி உலகை ஒளி மயமாக்கினர், புனித அன்னை தெரேசாவைப் போல்.

பன்றிகள் நடுவே, பசியில் மயங்கியிருந்த இளைய மகன், பன்றிகளுடன் தன்னையே புதைத்துக் கொள்ளாமல், அவையே இனி தன் வாழ்வு என்ற விரக்தியான எண்ணங்களால் ஒரு பாலைநிலத்தை உருவாக்கி, அங்கு காணாமற் போய்விடாமல், "நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்" என்று எழுந்தாரே, அதுதான் அழகு.

காணாமல் போவதும் ஒரு வகையில் பார்க்கப்போனால் அழகுதான். அப்படி காணாமல் போகும்போது, அதுவரை, வாழ்வில் காணாமல் போயிருந்த பல உண்மைகளையும், நம்பிக்கை உணர்வுகளையும் நம்மால் மீண்டும் கண்டுபிடிக்கமுடியும்.

இறைவனை நோக்கி, எழுந்து நடப்போம். மீண்டும் நம்மையும், நம் இறைவனையும் கண்டுபிடிப்போம்.

 
 
 
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
 
 
 
 
 
அருள்பணி: மாணிக்கம் - திருச்சி

 
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
 
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.

 
  
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ