இறைவனின் ஆசிபெற்றவர்களே! வாஞ்சைக்குரியவர்களே !
இயேசுவின் சீடத்துவ அழைப்பு ஒரு பக்கம் இலவசமாகவும், மற்றொரு பக்கம்
பொறுப்புகள் மிகுந்ததாகவும் உள்ளது. இயேசுவும், அவருடைய அரசும் அனைத்திற்கும்
மேலாக முதன்மைப்படுத்த வேண்டும். நம் உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும்
மேலான இடத்தை இயேசு இன்று நம்மிடம் கேட்கின்றார். 'ஆம்' எனச்
சொல்லுமுன் யோசிக்கவேண்டியது அவசியம். இறைவன், அவர் இரவைப் பகலாக்கும்
வெண்ணிலா: மலையைச் சிலையாக்கும் சிற்பி: பாவியைப் பனிதனாக்கும்
புனிதையாக்கும் பரமன்:
ஆம், அவரது வலிமையோடு நம் வலுவின்மை இணையும்போதுதான் அனைத்தும்
சாத்தியமாகும். அத்தகைய வல்லமையை இன்று நமக்கு திருவிருந்தாம் நற்கருணை
விருந்தில் அவர் தருகின்றார். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் இயேசுவின்
அழைப்பிற்கு 'ஆம்' எனச் சொல்ல துணிவை வேண்டுவோம். எனக்கென இருப்பது
ஒரு உயிர். அஃது உன்னுயிருடன் கலந்தால், அதிலே தனிச்சுகம் எனச்
சொல்லி இறைவனோடு சங்கமிப்போம், இரண்டறச் கலப்போம்., ஒன்றித்துப்
போவோம். அனைத்தும் சுகமாகும். இதற்கான அருளை வேண்டுவோம், இக்கல்வாரிப்
பலியில் இணைவோம்
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
வழிநடத்தும் வள்ளலே இறைவா!
திருச்சபையின் பொறுப்பு நிலையில் இருக்கும் அனைவரும்
தாங்கள், தங்கள்மேல் ஏற்றுக்கொண்ட சீடத்துவ அழைப்பை
மனதில் கொண்டு, துணிவுடன் உமக்குச் சான்று பகர, வரம்
தந்து வழிநடத்த வேண்டுமென்று, இறiவா உம்மை மன்றாடுகிறோம்.
ஞானத்தின் ஊற்றாகிய இறைவா!
நாங்கள் மீட்படைவதற்கு உமது கொடையாகிய தூய ஆவியின் ஞானத்தையும்,
வல்லமையையும் தந்து வழிநடத்த வேண்டுமென்று, இறiவா உம்மை
மன்றாடுகிறோம்.
எங்கள் வாழ்வின் மூலைக்கல்லே இறைவா!
எல்லா முடிவுகளுக்கும் எங்கள் உயிருக்கும் நீரே மையம்
என்பதை உணர்ந்து, உம்மையே நாங்கள் அனைத்திற்கும் மேலாக
அன்பு செய்து வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
வாழ்வின் நாயகனே
இறைவா!
இங்கே கூடியிருக்கும் நாங்கள் அனைவரும், எங்களின்
வாழ்க்கை நிலைகளுக்கேற்ப உண்மை சீடத்துவத்தில் பங்கேற்கவும்,
எங்கள் பணியிடத்திலும் வாழ்விடத்திலும் துணிவோடு
சான்று பகரவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
அன்பான தந்தையே இறைவா!
உம் திருமகனின் சிந்தனையும், சொல்லும் செயலும் எங்களின்
சிந்தனையாக, சொல்லாக செயலாக மாறவும், அவற்றால் நாங்கள்
மாறி, எங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு மாற்றத்தின்
அடையாளமாகத் திகழ அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
சீடத்துவத்தின் விலை
இயேசு எங்கே சென்றாலும் ஒரு கூட்டம், அவரைப் பின்பற்றியே
வருகிறது. இயேசுவைத் தொடவும், இயேசுவைக் காணவும், இயேசுவுக்கு
அருகில் வரவும், இயேசுவை நெருக்கவும் ஒரு கூட்டம். இயேசுவின்
பின், காந்தத்தை நாடும் இரும்புத் துகள்களாய் ஒட்டிக்
கொண்டே வருகின்றது. இந்தக் கூட்டத்திலிருந்து தப்பிக்க,
படகை நாடும் அளவிற்கு கூட்டம் வருகின்றது. இன்றைய நற்செய்தி
நடைபெறும் இடம் ஒரு கூட்டம். இந்தக் கூட்டத்தோடு இணைந்து
அவர் நடந்து கொண்டிருக்கிறார். பெண்கள், குழந்தைகள்,
நோயுற்றவர் இப்படிப் பலதரப்பட்ட மக்கள் வருகின்றனர்.
எனவே அவர் கண்டிப்பாய் மெதுவாகத்தான் நடந்து
சென்றிருப்பார். அந்தக் கூட்டம் அவரைப்பற்றியும், அவரது
சீடர்களாய் இருப்பவர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே
சென்றிருக்க வேண்டும். ஆகையால்தான் இயேசுவின் போதனையும்
சீடத்துவத்தைப்பற்றியதாக இருக்கிறது.
சீடத்துவத்தின் மூன்று பண்புகளை
முன்வைக்கின்றார் இயேசு.
முதலில் யார் சீடராய் இருக்க
முடியாது?
என்னிடம் வருபவர் தம் தாய் தந்தை, மனைவி, சகோதரர், சகோதரிகளையும்,
ஏன் தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால் அவர்கள்
சீடராய் இருக்க முடியாது. இயேசு ஏன் இவ்வளவு கடினமான
சவாலை முன்வைக்கிறார்? மனித உறவுகள் தேவையற்றவையா? மனித
உயிரும் தேவையற்றதா? இதற்கு நம்முடைய பதில் என்ன? இயேசுவின்
இந்த வார்த்தைகள் ஒரு இலக்கிய கையாள்கை. நம்வாழ்வின்
அனைத்தையும்விட இயேசுவுக்கு முதன்மையான இடத்தை அளிக்கவேண்டும்
என்பதே, இயேசுவின் முன்மொழியாக இருக்கிறது. நாம் இயேசுவை
முதன்மைப்படுத்துவதை விட முழுமைப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
'பத்தோடு ஒன்று பதினொன்றாக இயேசுவை நாம் கருதமுடியாது'.
இரண்டாவதாக 'தன் சிலுவையைச் சுமக்காமல்
என்பின்னே வருபவர் எனக்குச் சீடனாய் இருக்க முடியாது'
என்பது.
எல்லா உறவுகளையும் விட இயேசுவை முதன்மையாக்கியாயிற்று.
அடுத்ததாக மறுபடியும் சிலுவை சுமக்க வேண்டுமா? 'இது மிகவும்
கடினமான ஒன்று' நம் உள்ளங்கள் கூறுகின்றன. ஆனால் இந்த
இரண்டாம் கட்டளை முதற்கட்டளையின் மறுபக்கம்தான். இயேசுவை
நம்வாழ்வின் முதன்மையாகவும், முழுமையாகவும் மாற்றி
விட்டாலே, சிலுவைகள் தாமாய் வந்துவிடும். நாம் சிலுவைகளைத்
தேடிச் செல்ல வேண்டியதில்லை. வாழ்வின் ஒவ்வொரு
முடிவும், முயற்சியும் நாம் சுமக்கும் சிலுவைகளாகவே
மாறிவிடும். நாம் சுமப்பதால் வரும் இந்தத் துன்பம் இறையரசின்
மகிமைக்காகவே.
அடுத்ததாக, இயேசு இரண்டு கதைகளின்
வழியாக, மூன்றாவது பாடத்திற்கு மக்களைத் தயாராக்குகின்றார்.
முதலில் உங்களில் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட
விரும்பினால், முதலில் உட்கார்ந்து அதைக் கட்டி
முடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதன் பொருள் வசதி தம்மிடம்
இருக்கிறதா என்று பார்க்கமாட்டாரா? (லூக்: 14:28) கட்டி
முடிக்க இயலாமல் போனால், பார்ப்பவர்களின் ஏளனப்
பேச்சுத்தான் மிஞ்சும். இரண்டாவதாக, வேறு ஒரு அரசனோடு
போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன்
தமக்கு எதிராக வருபவரைப், பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்கமுடியுமா
என்று முதலில் உட்கார்ந்து சிந்திக்க
மாட்டாரா?(லூக்:14:31)
இந்த இரண்டு கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால், தங்களிடம்
போதுமான சக்தி உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதுதான்.
கோபுரம் கட்ட பணம் - போர் செய்ய வீரர்கள். இந்தக் கதைகளின்
நிறைவில் தன் மூன்றாவது பாடத்தைக் கற்பிக்கின்றார். உங்களுள்
தம் உடமையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது. நம்மிடம் போதுமானது இருக்கிறதா என ஆராய்ந்து
பார்க்கச் சொல்லிவிட்டு 'நம்மிடம் ஒன்றுமிருக்கக்
கூடாது என்று இயேசு சொல்வது சற்று வியப்பாக இருக்கிறது.
சீடத்துவத்திற்கு குறுக்கே வேறெதுவும் வரக் கூடாது என்பதே
இயேசுவின் பாடம். சீடத்துவம் என்பது கோபுரம் கட்டுவதற்கும்,
போரில் வெல்வதற்கும் சமம். சீடத்துவம் தான் வாழ்வின்
முக்கிய நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர பணமோ, ஆள்பலமோ
அல்ல.
இலட்சியத் தெளிவு:
சீடராக மாறவிரும்பும் எவரும் தன் வாழ்வை உணர்ச்சிப்பூர்வமாக
அழித்துவிட முடியாது. உணர்ச்சிவயப்பட்டு மறுதலித்து விடவும்
முடியாது. ஆனால் அந்த நபரின் கொள்கையினைப் பற்றிய அறிவுப்பூர்வமான,
உணர்ச்சிப்பூர்வமான ஒரு தெளிவான நிலையைப் பெறவேண்டும்.
பின் தொடர்வது என்பது தெளிவாக்கப்படவேண்டிய ஒன்று. சீடத்துவும்
என்பது எளிதான ஒன்று அல்ல. ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப்
பெறமுடியும் என்ற தெளிவு தேவை.
இலட்சியத் தயாரிப்பு:
இலட்சியத் தெளிவு கொண்டவர் அதற்கான தயாரிப்பில் இறங்கவேண்டும்.
(லூக்:14:28-32) சீடத்துவம் என்பது சிந்திக்காமல்
மூழ்கிவிடுவதில்லை. சீடத்துவம் என்பது ஒரு ஆபத்தான
பாதை. சிலுவை நிறைந்த பாதை. அதற்குத் தயாரிப்புத்
தேவை. மலையேறுபவன் பயிற்சி மேற்கொள்கிறான். விளையாட்டு
வீரன் ஒவ்வொருநாளும் தன்னைப் பயிற்சியில்
தயாரிக்கின்றானே..
இலட்சிய உறவு:
பின்தொடர விரும்புபவரின் கொள்கையினையும், கொள்கை
விடுக்கும் ஆபத்துக்களையும் அறிந்தவராய், அந்த நபரோடு
ஆள், தன்மை, உறவு கொண்டிருப்பர். இந்த உறவு இருந்த உறவு
அல்ல, மாறாக ஞான உறவு. இதைத்தான் தூய மாற்கு
கூறுகிறார்: இயேசு தம் சீடர்களைத் தம்மோடு இருப்பதற்காக
அழைத்தார் என்று. (மாற்:3:14) இயேசுவின் சீடத்துவமே
இலட்சிய உறவின் அடிப்படை.
இலட்சியப்பயணம்:
தெளிவு பெற்றவர்கள், உறவை வைத்தவர்கள் அந்த இலட்சியம்
நிறைவேறும் வரை பயணம் செய்வார்கள். இவர்களுக்குத் தடைகள்
பல வர வாய்ப்பு உண்டு. ஆனால் உண்மையான சீடர்கள் இந்தத்
தடைகளை எல்லாம் கடந்து செல்வார்கள். இவர்களுக்கு வரும்
தடைகளே, இவர்களுக்குச் சிலுவைகள். லூக்:14:27) இதைத்தான்
இயேசு சுமந்து வர அழைக்கிறார். இவைகள் வாழ்வின் படிக்கற்கள்.
ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மல்லிகா என்று
சிறுமி அழுது கொண்டே வீடு திரும்பிளாள். 'என்ன ஆயிற்று'
என்று கேட்டாள் அவளின் தாய். 'இன்றைக்கு எங்க ஸ்கூல்ல
ரீச்சர் எல்லோருக்கும் விளையாட ரூபாய் கொடுத்து விளையாடச்
சொன்னார். எல்லோருக்கும் 1000ரூபாய் கொடுத்தாங்க. அன்பு
500ரூபாய், காலதாமதமின்மை 250ரூபாய, நட்பு 300ரூபாய்,
கடின உழைப்பு என விலைப்பட்டியல் போட்டாங்க. நான்
'மோட்சம் 500ரூபாய்க்கு கிடைக்குமான்னு' கேட்டேன். உடனே
ரீச்சர்; மோட்சம் 500ரூபாய்ன்னு ஏலம் போட்டாங்க. எப்பவுமே
என்கூட சண்டை போடுற மாலதி, உடனே மோட்சம்
1000ரூபாய்ன்னு கேட்டு மோட்சத்தை வாங்கிட்டா' என்றாள்
சிறுமி தாய் திரும்பவும் கேட்டாள் 'இப்ப நீ என்ன சொல்ல
வர்ற. மல்லிகா சொன்னாள்: "நான் பேரம் பேசுறதுக்குப் பதிலா
எல்லாத்தையும் கொடுத்திருக்கணும்"
சீடத்துவம் என்பது இதுவே: இவ்வளவு அர்ப்பணம் கடவுளுக்கு!
இவ்வளவு அர்ப்பணம் மற்றவர்களுக்கும் என பேரம் பேசுவதல்ல,
மாறாக எல்லாவற்றையும் கொடுத்துவிடுவதே.
முன்னுரை ஞானஒலி
இயேசுவைப் பெற, அவரில் நிலை வாழ்வு
பெற, துன்பச் சிலுவைகளை ஏற்று அவரைப் பின் தொடர அதன்
மூலம் அவரது சீடராக வாழ வரம் வேண்டி வருகை தந்துள்ள அன்பு
இறை மக்களே, உங்கள் அனைவரை யும் பொதுக்காலத்தின் 23-ஆம்
ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
ஊழலும் பொய்யும் புரட்டும் நிறைந்த சமுதாயத்தில்
கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதில் வரும் தொல்லையை ஏற்று
நேரிய வழியில் நடப்பவர்களாய், ஞானத்தைத் தேடுபவர்களாய்,
இயேசு வின் உண்மையான சீடர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும்,
தூய ஆவியாரையும் பெற வேண்டும். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை
அன்பு டன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை
பின்பற்றி வாழ வேண்டும் மற்றும் தன் சிலுவையைச் சுமப்பவர்கள்
மட்டுமே இயேசுவின் சீடராக இருக்க முடியும் என்ற கருத்துக்களைத்
தெளிவாக முன் வைக்கிறது இன்றைய வாசகங்கள்.
ஞானத்தின் மூலமாகவும், அன்பின் வழியாகவும், ஆசாபாசங்களைத்
தவிர்ப்பதன் வழியாகவும், உண்மை யான பரம்பொருளாகிய இறைவனை,
அவரது அன்பை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும், ஞானத்தின்
பேறுபலன்களை சுவைத்து உணர அன்பு என்ற கனிரசம் இன்றியமை
யாதது என்பதையும் இன்றைய வழிபாடு உணர்த்துகிறது.
பிறரிடத்தில் அன்பு செலுத்துவதன் வழியாக இறைவனைக் கண்டுணர,
பற்றற்ற வாழ்வின் வழியாக இறை வனைப் பற்றிக்கொள்ள, தூய
ஆவியாரால் இயக்கப்படுகிற வாழ்வாக நமது வாழ்க்கை அமைந்திட
இத்திருப்பலி வழியாக இறையருளை வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
ஞானத்தின் கருப்பொருள் என்ன என்பதை எடுத்து விளக்கி இறை
உறவை புதுக் கண்ணோட்டத்துடன் காண வழி செய்கின்றது இன்றைய
முதல் வாசகம். ஞானம் இறைவனால் அருளப்படும் அறிவாக, ஒழுக்க
நெறியாக, வாழ்வு முறையாக, வழி நடத்தும் கருவியாக இருக்கிறது
என்பதை விளக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
பிலமோனிடமிருந்து தவறு செய்து ஓடி வந்த ஒனேசிமுவின்
விசுவாசக் கண்ணைத் திறந்து புது வாழ்வு அளிக்கிறார் பவுல்.
தவறு செய்த அடிமையை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் பிலமோனுக்கு
பவுல் எழுதிய சிபாரிசுக் கடிதம் இன்றைய இரண்டாம் வாசகம்.
தவறு செய்பவர்களை மன்னித்து, அன்பு செய்து நல்வழிப்படுத்துகிறோமா
என்பது குறித்து சிந்திக்க அழைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன்
கேட்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1) மாட்சிமைக் கொண்ட தந்தையே இறைவா, இயேசுவுக்கு உண்மையான
சீடராக இருந்து உமக்கு சான்று பகர்பவர்களாக வாழ உம்மால்
தேர்ந்து கொள்ளப்பட்ட உம் திருஅவையின் தலைவர்கள் தங்கள்
பணி வாழ்வில் வரும் துன்பங்களையும், சவால்களை யும்,
அவமானங்களையும் தாங்கி மனம் தளராமல் பணியாற்ற உமது அன்பையும்,
ஆசியையும் தூய ஆவியாரின் துணையையும் தந்தருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2) அன்பு இறைவா நாங்கள் எங்கள் வாழ்க்கையில் தூய ஆவியானவரின்
மகத்துவத்தையும், உடனிருப்பையும், அவரது கொடைகளையும்
உணராமல், வாழ்வதால் இன்னலில் உழன்று வலுவற்றவர்களாய்
இருக்கிறோம். நாங்கள் அவரால்தான் இயக்கப்படு கிறோம்.
அவரது வழி காட்டலே நல்வாழ்வை எங்களுக்குத் தரும் என்பதை
முழுமையாக உணர்ந்து, நாங்கள் என்றும் அவரின் துணை யுடன்
வாழவும், அவர் வழியாக இயேசு வின் உண்மைச் சீடராக திகழவும்
அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3) குழந்தைகளை அன்பு செய்த அன்பு இறைவா, எங்கள் குடும்பங்களில்
உள்ள குழந்தைகளை நிறைவாக ஆசீர்வதியும். அவர்களுக்கு சிறந்த
ஞானத்தையும், உயர்ந்த அறிவையும், நல்ல ஒழுக்கத்தையும்,
திடமான உடல் ஆரோக்கியத்தையும் நிறைவாகத் தாரும். அவர்கள்
நல்ல முறையில் வாழ்ந்து, ஊர் போற்றும் சான்றோர் களாகவும்,
உத்தம கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகவும் வாழ வரமருள
வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4) எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம்
இறைவா, எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம்.
எங்கள் அனை வரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும்,
இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு
வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர்விட்டுப்
பிரகாசிக்கும் பணியாளராய் திகழ்ந்திடத் தேவை யான ஞானத்தையும்
பொழிய வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
மறையுரைச்சிந்தனை
பல நூறு மில்லியன்களுக்கு அப்பாலுள்ள சூரியன் தொடர்ந்து
பூமிக்கு ஒளியைத் தருகிறது. அந்த சூரியன் தன்னை இழக்கவில்லையெனில்
பூமி ஒன்றுமில்லாமல் போய்விடும். சூரியஒளி இல்லையெனில்
பூமியில் வாழ்வு இல்லை. வாழ்வு தரக்கூடிய ஒளியை சூரியன்
எப்படி உற்பத்தி செய்கிறது? சூரியன் தன்னிடம் இருக்கக்கூடிய
ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தையும் தொடர்ச்சியாக எரித்துக்கொண்டே
இருப்பதனாலே ஒளியைத்தருகிறது. கண்டிப்பாக சூரியன் தன்னிடம்
இருக்கக்கூடிய ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தையும் எரித்தபின்
அதன் வாழ்நாள் கண்டிப்பாக ஒருநாள் முடிந்துவிடும் என்று
அறிவியல் கூறுகிறது. ஒற்றைவரியில் கூறவேண்டுமெனில் ஒளி
தருவதற்காக சூரியன் தன்னை வெறுமையாக்கி கொண்டிருக்கிறது.
ஆக சூரியன் தன்னை வெறுமையாக்கி பூமியை வாழச்செய்கிறது.
வெறுமையாக்கும் அனுபவம் ஒரு விடுதலை அனுபவம்.
முழுமையான சுதந்திரத்திற்கு இட்டு செல்லும் அனுபவம்.
இருந்தாலும் வெறுமையாக்குதல் மிகவும் கடினமானது; கசப்பானது.
நடைமுறைக்கு ஒவ்வாதது போல் தோன்றுவது. ஆனால், புறத்தோற்றங்களைக்
கடந்து வாழ்வின் மையத்திலிருந்து அணுகினால் நிலையான அமைதிக்கும்,
நீடித்த மகிழ்வுக்கும் நிறைவான வளர்ச்சிக்கும்
வெறுமையாக்குதல் அவசியமானது என்பதை உணரலாம்.
இயேசு என்ற மனிதன் தன் பிறப்பு முதல் இறப்பு வரை
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வெறுமையாக்கலை
விரும்பித் தேர்ந்து கொள்கிறார். தன்னைக் கட்டிவைக்கும்
பற்றுக்களையெல்லாம் ஒவ்வொன்றாய் வெட்டி எறிந்தமையால்தான்
சிலுவையில் இவர் உயிர்நீத்ததைக்கண்டு எதிரே நின்று
கொண்டிருந்த நூற்றுவத்தலைவன் இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்
என்றார். (மாற் 15:39).
நாமும் இறைவனின் மகன்களாக, மகள்களாக மாற வேண்டுமெனில்
நம்மை வெறுமையாக்க வேண்டும். இப்பேர்ப்பட்ட நிலைக்காக
தான் இறைமகன் இயேசுகிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகத்தின்
வழியாக அழைப்பு விடுக்கின்றார். இவ்வுலகப்பொருட்களும்,
இவ்வுலக உறவுகளும், ஏன் நம்முடைய சொந்த குடும்பங்களும்
நம்மை பின்னிபிணைந்து விடுவதால் கடவுளோடு நாம்
கொள்கின்ற உறவு ஆழமானதாக இல்லாமல் மேலோட்டமான உறவாக,
சிலநேரம் அக்கடவுளையே கண்டுகொள்ளாத வாழ்வாக நம் வாழ்வு
அமைந்துவிடுகிறது. இங்கு இயேசு நாம் நம் உறவுகளை
வெறுக்கவேண்டும் என சொல்ல வரவில்லை. மாறாக கடவுளுக்கு
நாம் நம்முடைய வாழ்வில் முதலிடம் தரும் போது அந்த முதலிடத்தில்
இருக்கின்ற இறைவன் அவருக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய
அனைவரையும் பார்த்துக்கொள்வார்; இதுவே கடவுளின் திட்டமாக
இருக்கிறது. இதுவே கடவுளின் திருவுளமாக இருக்கிறது. மனிதனின்
திட்டங்கள், எண்ணங்கள் அனைத்தும் தவறக்கூடியது. ஆனால்
இறைவனை முதலிடமாக கொண்டு நாம் செயல்படும் போது இறைஅருளும்,
தூயஆவியின் வழிகாட்டுதலும் சாத்தியமாகும் என முதல் வாசகம்
கூறுகிறது.
இரண்டாம் வாசத்திலும் கூட கிறிஸ்துவே ஒப்பற்ற செல்வம்
என பவுலடியார் கூறுகிறார். கிறிஸ்துவைப்பெற நாம் நம்மை
வெறுமையாக்க வேண்டும் என்கிறார். பவுலடியார் இவ்வுலகை,
இவ்வுலக ஞஸனத்தை, இவ்வுலகம் சார்ந்த அனைத்தையும் அறிந்திருந்தார்.
ஆனால் அவரே அவ்வனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டு
குப்பை என கருதினார். ஆனால் நம்முடைய இயல்பானது நம்மை
வெறுமையாக்கலுக்கு எதிர்மறையான திசையில் இழுத்துச்செல்ல
முற்படுகிறது. பேராசை மேல் பேராசை கொள்ள செய்கிறது. உந்துதலினால்
நம்முடைய தேவைக்கேற்ப சொத்துகளை, பொருட்களை உறவுகளை
நாடுகிறோம். அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து
தேவையற்றவைகளை அடிப்படைத்தேவைகளாகக் கருதி விஸ்தரித்துக்
கொண்டு செல்லும் வசதிகளுக்கு ஈடுகொடுக்கச் சேர்ப்பது
சேர்த்துக்கொண்டே போவது என போய்க் கொண்டேயிருக்கிறோம்.
நாம் நம்மை வெறுமையாக்கி இறைவனை நோக்கி பயணித்து அதே
இறைவனை நாம் வாழ்வின் மையமாக, முதலிடமாக கொண்டோமெனில்
அதன் விளைவுகள் நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிகளிலும்
வெளிப்படுவது சாத்தியமே. வெறுமையாக்குவோம் வளமடைய... -
ஆமென்
அருள்சகோதரி.
பிரின்சி - திருப்பலி முன்னுரை
பொதுக்காலம் 23 ஆம் வாரம் - ஞாயிறு
அன்பிற்கினியவர்களே!
இன்றைய பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு இரத்த உறவுகளை விட
ஆண்டவரின் உறவினை மேலாக கருதி சீடத்துவ வாழ்வினை சிறப்பாக
வாழ அழைக்கின்றது.
நாம் வாழும் உலகம் விளம்பரங்கள் நிறைந்தது. சிறு சிறு
வியாபரங்கள் செய்பவர்கள் முதல் பெரிய பெரிய
அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் வரை எல்லோரும்
அட்டகாசமான விளம்பரங்களை ஆடம்பரமாக அறிவித்து தன்
நண்பர்களையும், தன் கட்சிக்குத் தேவையான ஆள்களையும்,
தன் கம்பெனிக்கு தேவையான பணியாளர்களையும்
சம்பாதித்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் இயேசுவோ
தனக்கான சீடர்களை சிறந்த விளம்பர வார்த்தைகளால் அல்ல
சிலுவை என்ற வார்த்தைகளால் அறிமுகப்படுத்தி
அழைக்கின்றார். இயேசுவின் வழி, புதிய வழி, தியாக வழி,
அமைதி வழி, இத்தகைய வழிகளில் பயணம் செய்ய தன் உறவுகளை,
உடைமைகளை விட்டு விட்டு சிலுவைகளை சுமந்து கொண்டு
இயேசுவை பின் செல்ல வேண்டும் என்பதே இன்றைய
திருவழிபாட்டின் அழைப்பு. இயேசுவின் சீடத்துவ அழைப்பு
யாரையும் அடிமைப்படுத்தும் அழைப்பு அல்ல. இன்றைய முதல்
வாசகப்படி எந்தவொரு நன்மையையும் கட்டாயத்தினால்
செய்யாமல் மனமாரச் செய்ய அழைக்கும் அழைப்பு . இந்த
சீடத்துவ அழைப்பினை இறைத்திட்டத்தின் படி ஞானத்தாலும்
தூய ஆவியின் அருளாலும் வாழ சாலமோனின் ஞான வரம் கேட்டு
தொடர்ந்து ஜெபிப்போம் இத்திருப்பலியில் இணைந்து.
முதல் வாசக முன்னுரை : சா.ஞா 9 : 13 18
சாலமோன் அரசர் தன் எண்ணங்களும் திட்டங்களும்
ஆண்டவருக்கு உகந்தவையாக இருக்க இறைஞானமும் தூய ஆவியும்
வேண்டி ஜெபக்கின்றார். நாமும் நிலையற்ற இவ்வுலக
வாழ்வில் பற்றுக் கொள்ளாமல் விண்ணுலகில் இருப்பவற்றை
தேடி இறைத்திட்டத்தை அறிந்து கொள்ள இறை ஞானமும் தூய
ஆவியும் வேண்டி பக்தியுடன் இவ்வாசகத்தைக் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை பிலமோன் 1 : 9டி 10, 12 -17
இன்றைய இரண்டாம் வாசகம் நற்செய்தியை அறிவிப்பதன்
பொருட்டு சிறந்த நண்பர்களாக இருக்கின்ற புனித பவுல்,
ஒனேசிமுவின் மேல் கொண்ட அன்பினையும் அக்கறையையும்
எடுத்துக்காட்டுகின்றது. பவுலடியார் சிறையில் இருந்த
போதும்கூட, ஒனேசிமு ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும்
முறையில் அன்புக்குரியவனாக நடத்தப்பட வேண்டும் என்று
பிலமோனுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசிக்கப்படும் இறைவார்த்தைகளுக்கு கவனமுடன்
செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுக்கள்:
1. எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்
அனைவரும் இவ்வுலக உறவுகளை விட, தன் உயிரையும் விட
ஆண்டவரை மேலாக கருதி இறையரசிற்காக சிலுவைகளை சுமந்து
இயேசுவின் சிறந்த சீடர்களாக வாழும் வரம்தர இறiவா உம்மை
மன்றாடுகின்றோம்.
2. எம் நாட்டை ஆளும் தலைவர்களும் பல்வேறு பொறுப்பிலும்
அதிகாரத்திலும் உள்ளவர்களும் பொது நலனில் அக்கறை
கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஒருவர் மற்றவருடன்
கலந்தாலோசித்து இறைவனுக்குகந்த முறையில் திட்டமிட்டு
செயல்படுத்தும் அருள் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம் பங்குப் பேரவை உறுப்பினர்கள் அன்பியப்
பொறுப்பாளர்கள் பக்த சபை உறுப்பினர்கள் அனைவரும்
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மிக்ப்பெரிய பொறுப்பினை
கண்ணுங்கருத்துடன் செய்து எந்தவித போட்டிப்
பொறாமைக்கும் இடங்கொடாமல் அமைதியின் வழியில்
இறைமகிமைக்காக ஆர்வத்துடன் உழைத்து, சந்திக்கும்
சிலுவைகளையும் துணிச்சலுடன் சுமக்க தூய ஆவியின் அருள்
தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இங்கு இன்றைய திருப்பலியில் பங்கெடுத்துக்
கொண்டிருக்கும் நாங்கள் அனைவரும் மனிதர்களுக்கு உகந்த
வழிகளைத்தேடாமல் ஆண்டவரின் திட்டங்களை தேர்ந்து
தெளிந்து நிலையற்ற மனித வாழ்வை நிலையான கடவுளின்
அருளாலும் ஞானத்தாலும் தூய ஆவியின் கொடைகளாலும்
அர்த்தமுள்ளதாக்க உமது அருள் தர இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.
மறையுரைச்சிந்தனை
அருட்சகோதரி: மெரினா
O.S.M.
உறவாக உணர்வாக உடைமையாக
இயேசு
பொதுக்காலத்தின் 23 ஆம் ஞாயிற்றில் இருக்கும் அன்பு இறைமக்களாகிய
நாம் அனைவரும் இயேசுவைப் பின்பற்றும் உண்மையுள்ள சீடர்களாக வாழ இன்றைய
நாளின் வாசகங்கள் வழியாக இறைவன் அழைக்கின்றார். உண்மையான இயேசுவின்
சீடர்கள் என்பவர்கள் உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கொண்டு வாழ
வேண்டுமென்று வலியுறுத்தி ஞானத்தின் மூலம் மீட்படைய வழி
சொல்கின்றார்.
தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஏராளமான மக்களை திரும்பிப் பார்த்த இயேசு
தனக்குரிய சீடர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று
குறிப்பிடுகின்றார். தாய் தந்தையர்களை தன்னை விட மேலாக கருதுபவர்கள்,
தம் சிலுவையை தூக்க மறுப்பவர்கள், உடைமையை விட விரும்பாதவர்கள்
போன்றோர் தனக்கு சீடராக இருக்க தகுதியற்றவர்கள் என்கின்றார். மாறாக
உறவு உணர்வு உடைமை என எல்லாமாக தன்னை நினைப்பவன் மட்டுமே சீடனாக
வாழ முழுத் தகுதியுடையவன் என்று வலியுறுத்துகின்றார்.
உறவாக இயேசு.
நாம் வாழும் இவ்வுலகில் ரத்த உறவுகளும் எந்த சூழ்நிலையிலும் நம்மை
விட்டுக் கொடுக்காத நட்புறவுகளும் கட்டாயம் தேவை. உயிரும் உணர்வும்
கலந்த இவ்வுறவு பல நேரங்களில் கடவுளன்பை விட மேலானதாக கருதப்படுகின்றது.
கடவுளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பல நேரங்கள் இந்த உறவு முறைகளுடனான
பொழுதுபோக்கில் காணாமல் போகின்றன. கடவுளா உறவா என்று வரும்போது இக்காலகட்டத்தில்
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
கடவுளன்பினால் தான் இத்தகைய உறவுகள் வந்தன என்றும் இனி வரப்போகும்
உறவுகளும் அவராலே வந்து நிலைபெறப் போகின்றன என்றும் எண்ணாதவர்கள்
தான் இத்தகைய உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
நம்முடைய உறவுகள் கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவை வளர்ப்பதாக இருக்கவேண்டுமே
தவிர பாதிப்பதாக ஒரு போதும் இருக்கக் கூடாது. தாய் தந்தையர் சகோதர
சகோதரிகள் நண்பர்கள் அனைவரும் கடவுளன்பின் சுவையை நாம் உணர நமக்குக்
கடவுளால் கொடுக்கப்பட்டவர்கள் என்று உணர்ந்தோமானால் நம் வாழ்வு
செழிப்படையும். அடிமையாகிய ஒபேசினுவிற்கு பவுலடியார் காட்டிய அன்பு
போல நமது அன்பும் பலுகிப்பெருகும். கடவுளன்பை அதிகமதிகமாக சுவைத்து
அதனைப் போதனைகள் வழியாகப் பிறருக்கும் கொடுத்த புனித பவுலடியார் அடிமை
ஒபேசினுவைப் பற்றி அவரது தலைவன் பிலமோனிற்கு எழுதும் கடிதத்தில்
இதயத்திற்கு ஈடாக சகோதரனுக்கும் மேலாக கருதி தன்னை ஏற்பது போல் அவரையும்
ஏற்க சொல்லி எழுதுகின்றார். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில்
நாம் அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும்
முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை
மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்! 17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி,
என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும். என்று பிலமோனுக்கு
எழுதியக் கடிதத்தின் வழியாக வாசிக்கக்கேட்டோம். கடவுளின் உறவை உலகிலுள்ள
உறவுகளில் எல்லாம் மேலான உறவாக புனித பவுலைப் போல நினைப்பவர்களே உண்மையான
சீடர்கள் என்று வலியுறுத்துகின்றார் இயேசு.
2. உணர்வாக இயேசு.
மனிதர்களாகிய நாம் பல உணர்வுகளால் நிறைக்கப்பட்டுள்ளோம். மகிழ்ச்சி
பெருமிதம் வெட்கம் கோபம் கவலை போன்ற உணர்வுகளின் நிலை அதிகமாகும்
போது நம்முடைய இயல்பு நிலையில் இருந்து மாறி செயல்படுகின்றோம். உணர்வுள்ள
மனிதனே உண்மை மனிதன். எவரொருவர் நம்முடைய உணர்வுகளோடு நம்மை மதித்து
அன்பு செய்து ஏற்றுக் கொள்கின்றாரோ அவருடனான உறவு காலத்திற்கும் அழியாது
நிலைத்திருக்கும் என்பர். இப்படிப்பட்ட உணர்வுகளின் அடிப்படையாக ஆணிவேராக
இயேசு இருந்து செயல்படும்போது நம் வாழ்வு முற்றிலும் மாற்றம் பெற்ற
வாழ்வாக இருக்கும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர்
எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. என்று கூறுவதன் வழியாக
சிலுவையைத் தூக்கிக் கொண்டு பின்தொடர்பவனே உண்மையான சீடன் என்று வலியுறுத்துகின்றார்.
சிலுவையைத் தூக்க முதலில் உடலில் பலம் மனத்திடம் நல்ல மன நிலை
வேண்டும் இவை இல்லாமல் சிலுவையைத் தூக்க முயற்சிப்பவரால் இறுதிவரை
அவரைப் பின் செல்ல முடியாது. என்னால் தான் சுமக்க முடியும் என்ற
ஆணவமோ என்னால் தூக்கவே முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை உணர்வினால்
ஆட்கொள்ளப்பட்டால் அவரது சீடராக இருக்க முடியாது. இன்றைய முதல் வாசகத்தில்
குறிப்பிடப்படுவது போல நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய
திட்டங்கள் தவறக்கூடியவை. அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி
அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய்
அமைகிறது. நம்முடைய உணர்வுகள் எல்லாம் இயேசுவாக இருக்கும் போது எண்ணங்களும்
திட்டங்களும் சிறப்பாக அமையும். நமது உடலைக் கடந்து ஆன்மா இறைவனில்
இன்புற்று மகிழும்.
3. உடைமையாக இயேசு.
ஒரு மனிதன் இவ்வுலகில் இன்பமாக வாழ அடிப்படை உரிமைகளும் உடைமைகளும்
தேவை. ஆனால் அடிப்படையான இவ்வுலகப் பொருட்களை சில நேரங்களில் கட்டாயத்
தேவையாகக் கருதிக் கொண்டு செயல்படுகின்றோம். உதாரணத்திற்கு
தொலைபேசி தொலை தூரத்தில் இருக்கும் நம் உறவுகளை வலுப்படுத்த தொடக்க
காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. காலப் போக்கில் நம்முடைய அன்றாட
வாழ்வின் அத்தியாவசிய தேவையாக மாறி இன்று சிலருக்கு சுவாசமாகவே
மாறி விட்டது. கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிந்து பழக்கப்பட்டவர்களுக்கு
அது அணியாமல் வெளிய செல்வது ஏதோ உடையணிவதில் ஏதோ மறதி ஏற்பட்ட உணர்வு
அது போல தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அது இல்லாமல்
வெளியே பயணிப்பது என்பது உடல் உறுப்பில் ஒன்று இல்லாமல் பயணிப்பது
போல் உணர்வைத் தரும் அந்த அளவிற்கு உடலோடு ஒட்டிக் கொண்டு நம்முடன்
பயணிக்கின்றது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் மேல் ஆசை பற்று உண்டு. சிலருக்கு உடையில்
சிலருக்கு உடைமையில். இப்படி உலகப் பொருட்களின் மேல் பற்றும் ஆசையும்
கொண்டு செயல்படுபவர்களால் இயெசுவைப் பின்பற்றும் உண்மையான சீடர்களாய்
இருக்க முடியாது. நமது பற்று ஆசை எல்லாம் பற்றற்ற இயேசுவின் மேல்
இருக்கும் போது நாம் கடவுளிடமிருந்து வரும் உண்மையான ஞானத்தை
பெற்று அவரது சீடர்களாக மாறுகின்றோம். ஞானம் என்னும் மெய்யறிவு என்பது
கடவுளிடம் இருந்து கிடைக்கப்பெறுவது அது கிடைக்க நாம் அதிகமாக
செபிக்கவேண்டும் . இது தெரியாமல் சிலர் உலக அனுபவத்தினால் கிடைக்கக்
கூடிய அறிவு தன்னுடைய சொந்த கடின உழைப்பினால் கிடைத்தது என்று எண்ணி
பெருமிதம் கொள்கின்றனர். இத்தகைய பெருமிதம் கொள்வதும் ஒருவகையில்
உலக அறிவை உடைமையாகக் கொள்வவதற்கு சமம் ஆக உடைமையாக இயேசுவைக் கருதுபவர்களால்
மட்டுமே அவரது உண்மை சீடர்களாக இருக்க முடியும்.
எனவே அன்பு உள்ளங்களே உறவாக உணர்வாக உடைமையாக இயேசுவைக் கோண்டிருப்பவர்களாக
மாறுவோம். அவரே நம் வாழ்வின் எல்லாம் என உணர்ந்து செயல்படுவோம் இறைவன்
நம்மையும் நம் குடும்பத்திலுள்ள அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து
வழி நடத்துவாராக ஆமென்.
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
இயேசுவுக்காக உயிரைத் தரத் தயாரா?
கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த தொடக்கக் காலக்கட்டம் அது. அந்தக் காலக்கட்டத்தில்
இயேசுவின்மீது ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த இயேசுவின்
சீடர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்துவந்தார்.
இறைவனின் அருள் அவர்க்கு அபரிமிதமாக இருந்ததால் அவர் தொட்டதெல்லாம்
பொன்னானது. ஆம், அவர் நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதில் தனக்கென்று
கொஞ்சம் எடுத்துக்கொண்டு மிச்சத்தை வரியவர்கட்குப் பகிர்ந்து
கொடுத்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய இல்லத்திற்கு வந்த எல்லாரையும்
அன்போடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்து வந்தார். மொத்தத்தில்
அவர் இயேசுவின் உண்மையான சீடராக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட உரோமை அரசாங்கம் அவரைப்
பிடித்துக் கொல்வதற்குப் படைவீரர்கள் சிலரை அனுப்பிவைத்தது. அவர்களும்
அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இயேசுவின் சீடர் இருந்த கிராமத்தை
நோக்கி வந்தார்கள். அவர்கள் அந்த கிராமத்திற்குள் வந்தபோது நன்றாக
இருட்டிவிட்டது. அதனால் படைவீரர்களில் ஒருவர், 'இனிமேலும் இயேசுவின்
சீடரைத் தேடித் போய்க்கொண்டிருக்க முடியாது. அதனால் இந்த இரவில் ஏதாவதோர்
இடத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் வந்த வேலையை முடிப்போம்'
என்றார். அவர் சொன்னதற்கு எல்லாரும் சம்மதம் தெரிவிக்கவே, இரவில்
தங்குவதற்கான இடத்தைத் தேடி அலைந்தார்கள்.
அப்பொழுது எதிரில் ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள், இரவில்
தங்குவதற்கான இடத்தைக் கேட்டபோது, அவர் அவர்களிடம், "இங்கு ஒரு மனிதர்
இருக்கின்றார். அவர் தன்னுடைய வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை
அன்போடு வரவேற்று உபசரிப்பார். அவரிடம் போய்க் கேளுங்கள். நிச்சயம்
அவர் இரவில் தங்குவதற்கான இடத்தைத் தருவார்"என்று சொல்லிவிட்டு
அவருடைய வீடு இருந்த திசையைச் சுட்டிக் காட்டினார். படைவீரர்கள்
பெரியவர்க்கு நன்றிசொல்லிவிட்டு, அவர் சுட்டிக்காட்டிய வீட்டை
நோக்கி நடந்துசென்றார்கள்.
அந்த வீட்டை அடைந்ததும் அங்கிருந்தவர் அவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றார்.
பின்னர் அவர்கள், "இரவில் இங்கு தங்கிகொள்ளட்டுமா?"என்று கேட்டபோது,
"தாராளமாகத் தங்கிக்கொள்ளுங்கள்"என்றார். பின்னர் அவர் அவர்களிடம்,
"தாங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்னவோ?"என்று கேட்டபோது, அவர்கள்
தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள். அவர் சொன்னதைக் கேட்டு
திடுக்கிட்ட இயேசுவின் சீடர் தன்னை யார் என்று அப்பொழுது
வெளிக்காட்டிக் கொள்ளாமல், "உங்களைப் பார்க்க மிகவும் களைப்பாக இருப்பது
போல் தெரிகின்றது. முதலில் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். காலையில் எல்லாவற்றையும்
பேசிக்கொள்ளலாம்"என்றார். பின்னர் அவர் அவர்கட்கு சுவையான உணவு தயாரித்துக்
கொடுக்க அவர்கள் சாப்பிட்டு ஓய்வெடுக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் ஓய்வெடுக்கத் தொடங்கியதும். அவர் தன்னுடைய தோட்டத்தின் பக்கம்
சென்று, ஒரு கல்லறைக்குழி வெட்டிவிட்டு, வீட்டிற்கு வந்து தூங்கத்
தொடங்கினார். அவர்க்குத் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் பொழுது புலர்ந்ததும்
படைவீரர்களிடம் அவர், "நீங்கள் தேடிவந்த ஆள் நான்தான்"என்றார்.
அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர்கள் அதிர்ந்துபோனார்கள்.
"உங்களைப் போன்ற நல்ல மனிதரையா நாங்கள் கொல்வது. மாட்டோம்"என்று
பின்வாங்கினார்கள். அப்பொழுது அவர் அவர்களிடம், "இத்தனை நாட்கட்கும்
நான் இந்த மறைசாட்சிப் பட்டத்திற்காகத்தான் காத்திருந்தேன். அதனால்
என்னைத் தயவுசெய்து வெட்டிக்கொல்லுங்கள்"என்றார். அவர்கட்குக் கண்ணீர்
தாரைதாராய் வந்தது. இருந்தாலும் வந்த நோக்கத்தை நிறைவேற்றவேண்டும்
என்று, படைவீரர்களில் ஒருவர் அவரை வெட்டிக் கொலைசெய்தார். அதன்பிறகு
இயேசுவின் சீடர்க்குத் தெரிந்தவர்கள் வந்து, அவர் அவர்க்காக
வெட்டிய கல்லறைக்குழியில் அடக்கம் செய்தார்கள்.
இயேசுவின் சீடர். அவர்க்காக எதையும் இழக்கத் தயாராகவேண்டும் என்ற
செய்தியை எடுத்துச்சொல்லும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது.
பொதுக்காலத்தின் இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் சீடராக இருப்பதற்கு ஒருவர்
என்ன செய்யவேண்டும் என்ற செய்தியைத் தாங்கிவருகின்றது. அது
குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் சீடர் எல்லாரையும் விட இயேசுவுக்கு முதன்மையான இடம் தரவேண்டும்
இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் பெருந்திரளான மக்கள்
அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றார்கள். இயேசுவுக்கு நன்றாக
தெரியும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள்
தன்னுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதற்காக அல்ல. மாறாக,
தான் அளிக்கும் உணவிற்காகத்தான் தன்னைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்
என்று (யோவா 6: 26). அதனால்தான் அவர் அவர்களைப் பார்த்து, என்னைப்
பின்பற்றி வருகின்றவர் தன் உறவுகளையும் ஏன், தன் உயிரையும் மேலாகக்
கருதினால் அவர் என் சீடராக இருக்க முடியாது என்கின்றார். அப்படியானால்,
இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர் எல்லாவற்றையும் விட, இயேசுவுக்குத்
தன்னுடைய முதன்மையான இடம் தந்து வாழவேண்டும்.
இயேசுவின் சீடர் சிலுவையைத் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும்
இயேசுவின் சீடர், மற்ற எல்லாரையும் விட, ஏன், தன் உயிரையும்விட இயேசுவுக்கு
முன்னுரிமை தந்து வாழ்வது சீடத்துவ வாழ்வில் முதல்நிலை என்றால்,
சிலுவையைச் சுமப்பது சீடத்துவ வாழ்வின் இரண்டாவது நிலை. இங்கு இயேசு
குறிப்பிடுகின்ற 'சிலுவை' என்பதை அவர்க்காவும் அவருடைய விழுமியங்கட்காகவும்
நாம் படக்கூடிய அவமானங்கள், வேதனைகள், துன்பங்கள், என்று எடுத்துக்கொள்ளலாம்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் பலரும், 'இயேசுவைப் பின்பற்றினால்
துன்பமே இல்லாத இன்பமான வாழ்க்கை வாழலாம்' என்று
நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் (லூக் 9:57-58). இது ஒரு தவறான எண்ணம்.
இயேசுவைப் பின்பற்றினால் நிச்சயம் துன்பம் வரும், அவமானம் வரும்,
உயிரையே இழக்கக்கூடிய நிலை வரும். இதற்கெல்லம் எவர் ஒருவர் தயாராக
இருக்கின்றாரோ அவர் மட்டுமே இயேசுவின் சீடராக இருக்கமுடியும்.
இயேசுவின் சீடர் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத் தயாராகவேண்டும்
இன்றைய நற்செய்தியில் இறுதியில் இயேசு கூறுகின்றார், "உங்களுள் தம்
உடைமைகளையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது."
ஆம், இயேசுவின் சீடர் தன்னிடம் இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இயேசுவுக்காக
இழக்கத் தயாராகவேண்டும். அதற்குக் காரணம் எவரும் இரு தலைவர்கட்குப்
பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24) என்பதால்தான். ஒருவர் தன்னிடம்
இருக்கின்ற பணம், பொருள், வசதி வாய்ப்புகள் இவற்றின்மீதும் பற்று
வைத்துகொண்டு, இயேசுவின் மீதும் பற்று வைத்துக்கொண்டிருந்தால் அவர்
யார்க்கும் உண்மையாக இருக்க முடியாது என்பதால்தான் இயேசு, தம் உடைமைகளை
விட்டுவிடாத எவரும் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்கின்றார்.
ஒவ்வொன்றும் ஒரு விலையிருக்கின்றது. அதுபோன்றுதான் இயேசுவின் சீடராக
இருப்பதற்கும் ஒரு விலை இருக்கின்றது. அந்த விலையை அல்லது அதற்கான
வெகுமதியை நாம் கொடுக்காவிட்டால் நிச்சயமாக இயேசுவின் சீடராக இருக்கமுடியாது.
எத்தனையோ புனிதர்களும் மறைசாட்சிகளும் இறையடியார்களும் இயேசுவின்
சீடராக இருப்பதற்கான விலையை, தங்களுடைய உயிரை, உடலை, உடைமையைக்க்
கொடுத்தார்கள். நாமும் அதுபோன்று நம்முடைய உயிரை, உடைமையை, உடலைக்
கொடுத்தோம் எனில், இயேசுவின் உண்மையான சீடராக இருப்போம் என்பது உறுதி.
சிந்தனை
'இயேசுவின் சீடரராக இருப்பது என்பது, அவரிடம் கற்பதும் அவரைப்
பின்தொடர்வதும் ஆகும். ஆனால், அதற்காக நாம் கொடுக்கும் விலையோ மிகவும்
உயர்ந்ததாக இருக்கும்' என்பார் பில்லி கிரஹாம் என்ற மறைப்போதகர்.
ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் சீடத்துவத்தின் மகத்துவத்தை
உணர்ந்து இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
I சாலமோனின் ஞானம் 9:
13-18
II பிலமோன் 9b-10, 12-17
III லூக்கா 14: 25-33
மீட்பு அளிக்கும் ஞானம்!
காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட நாம் எப்போதும் நாம்
நம்முடைய காலத்தையும் இடத்தையும் நீடித்துக்கொள்ளவே
விரும்புகிறோம். நிறைய ஆண்டுகள் வாழ விரும்புகிறோம், நிறைய
இட வசதியோடு வீடு கட்டிக்கொள்ள விரும்புகிறோம், நிறைய இட
வசதி கொண்ட வாகனம் வாங்க விரும்புகிறோம், நீடித்த பேட்டரி,
நீடித்த கறுப்பு நிற முடி, நீடித்த சிவப்பழகு, நீடித்த
டிவி, நீடித்த முதலீடுகள், நீடித்த வட்டி விகிதம் என எல்லாவற்றிலும்
நீட்சியை விரும்புகிறோம். இவை எல்லாமே நம்முடைய நீடித்த மகிழ்விற்கான
தேடலின் வெளிப்பாடுகள். நமக்குக் கிடைக்கும் சின்னஞ்சிறு
மகிழ்ச்சி தருணங்கள், அனுபவங்கள் நீடிக்காதா என ஏங்குகிறோம்.
நீடித்த மகிழ்ச்சியே மீட்பு என்றும், அந்த மீட்பை ஞானத்தால்
அடையலாம் என்றும் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.
மீட்பு என்றவுடன் நாம் பல நேரங்களில் பாவத்திலிருந்து
மீட்பு என்று நினைத்து மீட்பை பாவத்தோடு இணைத்துவிடுகிறோம்.
'மீட்பு' என்பது மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு சார்ந்த
வார்த்தை மட்டும் அன்று. மாறாக, முதலில் அதன் பொருள் 'நலம்'
என்பது. ஒரு மருத்துவர் மற்றவருக்கு நலம் தரும் செயல்
கிரேக்க மொழியில் 'மீட்பு' என்றே சொல்லப்பட்டது. நலம் தரும்
மருத்துவர் என்ன செய்கிறார்? நோயை நம்மிடமிருந்து நீக்கி
நம்முடைய நலத்தை அல்லது மகிழ்ச்சியை நீட்டிக்கிறார். இயேசு
செய்வதும் இதுதான். பாவத்தால் வந்த இறப்பிலிருந்து நம்மை
'மீட்டு' நம்முடைய வாழ்வை, மகிழ்ச்சியை நீட்டிக்கிறார்.
நீடித்த மகிழ்ச்சியை ஞானம் எப்படி அருள்கிறது?
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 9:13-18), சாலமோனின்
ஞானநூல் ஆசிரியர் மனிதர்களின் இயலாமை அல்லது வரையறை அனுபவம்
பற்றி அழகாக எழுதுகின்றார். அதை நான்கு வாக்கியங்களில் பதிவு
செய்கின்றார்: (அ) 'நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவவை,'
(ஆ) நம்முடைய திட்டங்கள் தவறக் கூடியவை, (இ) 'அழிவுக்குரிய
உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது,' மற்றும் (ஈ) 'இந்த
மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது.'
இங்கே மூன்று விடயங்கள் அடிக்கோடிடப்படுகின்றன: (அ) நாம்
நிலையற்றவர்கள், நம்முடைய உடல் அழியக்கூடியது. இருந்தாலும்
அங்கே அழியாத ஆன்மா ஒன்று உள்ளது. (ஆ) அழிவுக்குரிய உடலோ,
அதிலிருக்கும் மூளையோ தங்களிலேயே வரையறைக்குட்பட்டவை. ஆகவே
அழிவுக்குரிய திட்டங்களைத்தான் அவைகளால் எடுக்க முடியும்.
(இ) நம்முடை மனத்தில் இயல்பாகவே கவலை இருக்கின்றது. அந்தக்
கவலை நம்முடைய உடலால் இன்னும் அழுத்தப்படுகிறது. இதை
வாசித்தவுடன், 'ஐயோ! என்ன ஒரு இரங்கத்தக்க நிலை! இதிலிருந்து
விடுபட வழியே இல்லையா? என் எண்ணங்கள் பயனற்றவையா? என் திட்டங்கள்
நிறைவேறாதா? என் கவலை மாறாதா? என் மண் கூடாரம் எனக்குச் சுகமாக
இருக்காதா?' என்ற கேள்விகள் நம்முள் எழுகின்றன.
இந்தக் கேள்விகளிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆறுதலான
செய்தியையும் ஆசிரியர் தருகின்றார்: (அ) கடவுளின் ஞானத்தாலும்
தூய ஆவியாலும் நாம் இறைவனின் திட்டத்தையும், நம் வாழ்வின்
திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியும். (ஆ) அந்த ஞானம் நமக்கு
மீட்பு, நலம், மகிழ்ச்சி தரும்.
ஆக, நம்முடைய உடல், எண்ணம், மனத்தின் கவலை ஆகியவற்றால்
நாம் நலமற்று இருந்தாலும், நமக்கு நிலையான நீடித்த மகிழ்ச்சியை,
மீட்பாக வழங்குகிறது கடவுளுடைய ஞானம். நாம் கடவுளுடைய ஞானத்தையும்,
அவருடைய ஆவியையும் பெற்றுக்கொள்ளும்போது நம்முடைய வாழ்வு
செம்மைப்படுத்தப்பட்டு, நாம் அவருக்கு உகந்தவற்றையே
செய்வோம். செம்மையான வாழ்வும், அவருக்கு உகந்தவற்றைச் செய்வதும்தானே
நீடித்த மகிழ்ச்சி!
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். பில 9-10,12-17) பவுலுடைய
திருமுகங்களில் மிகச்சிறிய திருமுகம் அல்லது பரிந்துரைக்
கடிதம் என அழைக்கப்படும் பிலமோன் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
மகிச்சிறிய நூலாக இருந்தாலும் மிகப்பெரிய புரட்டிப் போடுதலை
இது செய்கின்றது. அது என்ன புரட்டிப் போடுதல்? கொலோசை நகரின்
முக்கியமான செல்வந்தர் பிலமோன். இவருடைய அடிமையின் பெயர்
ஒனேசிமு. அடிமை என்றவுடன் இன்று அது வெறும் வார்த்தையாகத்
தெரிகிறது. இன்று நாம் காலையிலிருந்து எழுந்தவுடன்
ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது. குழாய் திறந்தவுடன் தண்ணீர்
வருகிறது. ஒரு பக்கம் சுடுதண்ணீர் மறுபக்கம் குளிர்ந்த
நீர். அங்கே அருகில் தொங்கும் புதிய டவல். அருகிலேயே கழிப்பறை.
அருகில் சென்றாலே தானாகவே தண்ணீர் இட்டுக்கொள்ளும்.
குளித்து முடித்து வெளியே வந்தவுடன் முடி உலர்த்தி,
மின்விசிறி, அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள், மேலே
ஒரு கையில் துணிகளை உயர்த்தி மறு கையால் துணியை உருவி பட்டன்
மாட்டிக்கொண்டே ஊபர் ஈட்ஸ் துலாவி காலை உணவு ஆர்டர் செய்து
சாப்பிட்டுவிட்டு அப்படியே அடுத்த வேலை பார்க்க கிளம்பிவிடலாம்.
ஆனால், அன்று இவை எல்லாவற்றையும் செய்ய பிலமோனுக்கு ஒனேசிமு
தேவைப்பட்டார். எழுப்பி விட, தீப்பந்தம் ஏற்ற, தண்ணீர்
கொண்டுவர, கழிவிற்கு மண்பானை கொண்டுவர, தண்ணீர் சுட வைக்க,
விறகு பொறுக்க, அடுப்பு ஏற்ற, வெதுவெதுப்பாய் வாளியில் நிரப்ப,
குளிக்க வைக்க, துண்டால் துவட்டி விட, ஆடையை மற்றும் உணவு
தயாரிக்க என அடிமை இல்லாமல் வாழ்வை நினைத்துப் பார்க்க
முடியாத நிலை. ஒருநாள் காலை பிலமோன் துயில் எழும் நேரம் ஒனேசிமு
இல்லை. அவர் தப்பிவிட்டார். அடிமை தப்பினால் அவருக்கு மரண
தண்டனை கொடுக்கலாம் என்று கிரேக்க மற்றும் உரோமைச் சட்டங்கள்
நிர்ணயித்தன. அப்படித் தப்பி வந்த ஒனேசிமு பவுலிடம் அடைக்கலம்
அடைகிறார். பிலமோன் வீட்டிற்குப் பவுல் அடிக்கடி வந்து
சென்றதால் பவுலை ஒனேசிமுவுக்குத் தெரிந்திருக்கலாம். இப்படித்
தன்னிடம் வந்த ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகின்றார்.
பிலமோன் கோபத்தால் ஒனேசிமுவைத் தண்டித்துவிடலாம் என்று
நினைத்த பவுல் ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதுகின்றார். அக்கடிதத்தின்
ஒரு பகுதியே இரண்டாம் வாசகம்.
'என் இதயத்தையே அனுப்புகிறேன்' என்று பவுல் சொல்கின்றார்.
மேலும், 'நீர் அவனை ஓர் அடிமையாக அல்லாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில்
ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்' என்று பிலமோனுக்கு எழுதுகின்றார்.
அக்காலத்தில் அடிமை என்பவர்கள் விலங்குகள் அல்லது பொருள்களாகக்
கருதப்பட்டனர். அஃறினையாகக் கருதப்பட்ட ஒருவரை உயர்திணையாகக்
கருத பிலமோன் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். அவருடைய
உளப்பாங்கு மாற்றம் பெற வேண்டும். இறுதியாக, 'என்னை ஏற்றுக்கொள்வது
போல அவனை ஏற்றுக்கொள்ளும்' என்று அடிமையோடு தன்னையே இணைத்துக்கொள்கின்றார்
பவுல்.
இதில் என்ன ஞானம் இருக்கிறது? நான் எனக்கு அடுத்திருப்பவரை
என்னைப் போல நினைக்கவும் நடத்தவும் தொடங்கினால் நான் நலம்
பெறுவேன், என் உள்ளம் மகிழ்ச்சி பெறும். உயர்ந்தவர்-தாழ்ந்தவர்,
பெரியவர்-சிறியவர், வேண்டியவர்-வேண்டாதவர் என்ற பேதமே நம்முடைய
மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், பேதங்களற்ற
நிலையில் நாம் அனைவரும் சகோதர, சகோதரிகளாக, ஒருவர் மற்றவரை
இருப்பது போல ஏற்றுக்கொண்டு, மன்னித்து, அன்பு செய்து
வாழ்ந்தால் இந்த உலகமே நாம் மீட்பு அடையும் இடமாகிவிடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 14:25-33) தன்னைப்
பின்தொடர்ந்து வந்த மக்களைப் பார்த்து இயேசு சீடத்துவத்தின்
போதனைகளை வழங்குகின்றார். மூன்று பேர் தன்னுடைய சீடர்களாக
இருக்க முடியாது என முதலில் வரையறுக்கிறார் இயேசு: (அ) 'தம்
தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரை,
ஏன், உயிரை இயேசுவை விட மேலாகக் கருதுபவர்கள்' - இங்கே இயேசு
இவர்களை வெறுக்க வேண்டும் அல்லது துறக்க வேண்டும் என்று
சொல்லவில்லை. மாறாக, முதன்மைப்படுத்துதலில் தெளிவு
வேண்டும் என வலியுறுத்துகின்றார். (ஆ) 'தம் சிலுவையைச் சுமக்காமல்
அவர் பின் செல்பவர்கள்' - சிலுவை என்பது இயேசுவின் இலக்காக
இருந்தது. நாம் அனுபவிக்கும் எல்லாவித நெருடல், இடறல், கீறல்தாம்
சிலுவைகள். (இ) 'தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிடாதவர்கள்'
- லூக்காவைப் பொறுத்தவரையில் செல்வம் மற்றும் பற்று எப்போதும்
இயேசுவைப் பின்தொடர்தலுக்கு இடையூறானது. ஏனெனில், அது கவனச்
சிதறல்களை உருவாக்கிவிடும். இயேசுவை முதன்மையாகக் கொண்டு,
அன்றாட இடறல்களையும், இடையூறுகளையும், பிறழ்வுகளையும்
தூக்கிக்கொண்டு, கவனச் சிதறல்களைத் தவிர்த்து இயேசுவோடு
வழிநடப்பவரே அவருடைய சீடராக இருக்க முடியும்.
மூன்று எதிர்மறையாக வாக்கியங்களில் சீடத்துவத்தை வரையறுத்த
இயேசு இரு உருவகங்கள் வழியாக தன்னுடைய போதனையை இரத்தினச்
சுருக்கமாக்க அணியம் செய்கிறார்: (அ) கோபுரம் கட்ட
விரும்பும் ஒருவர், (ஆ) வேறு ஓர் அரசரோடு போரிடும் அரசர்.
கோபுரம் கட்டுதல் மிகவும் சிரமமான வேலை. சமதளத்தில் எளிதாக
நாம் கட்டிவிட முடியும். ஆனால், மேல் நோக்கிச் செல்லும் கட்டிடம்
மற்றும் கோபுரம் நிறைய வேலைகளை எடுக்கும். ஒரு அறை கட்டுகிறோம்
என வைத்துக்கொள்வோம். அதற்குப் பக்கத்தில் இன்னும் இரண்டு
அறைகள் கட்ட வேண்டுமெனில் நாம் எளிதில் வானம் தோண்டிக் கட்டிவிடலாம்.
ஆனால், அவ்வறைகளை மாடியில் கட்ட வேண்டும் என்றால் சிரமம்.
ஏனெனில் ஏற்கனவே உள்ள அடித்தளம் எவ்வளவு தாங்குமோ அந்த அளவிற்குத்தான்
கட்ட முடியும். அடித்தளத்தை மீண்டும் தோண்டி இடவும்
முடியாது. ஆக, உயரமாக செல்வதற்கு நிறையத் திட்டமிடல் அவசியம்.
போரிலும் அதே நிலைதான். பாதிப் போர் முடிந்து, 'நான்
நிறுத்திக் கொள்கிறேன்' என்று எந்த அரசனும் சொல்ல
முடியாது. போர் தொடங்கிவிட்டால் வாழ்வு அல்லது சாவு தான்.
பாதி வாழ்வு, பாதி சாவு என்பது போரில் கிடையாது. சீடத்துவம்
என்பதும் இயேசுவைப் பொறுத்தவரையில் திரும்ப திருத்த இயலாத
ஒன்று. ஒரு முறை முடிவு எடுத்து, 'ஆம்' என்று
சொல்லிவிட்டால், தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருக்க
வேண்டும். பாதி அர்ப்பணம் மிகவும் ஆபத்தானது. போரில் பாதி
வீரம் போல. கோபுரத்தில் பாதிக் கோபுரம் போல.
ஆக, இயேசுவைப் பின்பற்றுதல் நம்முடைய நீடித்த மகிழ்ச்சியாக
மீட்பாக இருக்கிறது. அதை அடைவதற்கு திட்டமிடலும், விட்டுவிடலும்
அவசியமாகின்றன.
நீடித்த மகிழ்ச்சி என்னும் மீட்பை ஞானத்தின் வழியாக நாம்
எப்படி பெறுவது?
நாம் பல நேரங்களில், 'எனக்கு மகிழ்ச்சி வேண்டும்' என்று
வெளியே தேடுகிறோம். அது தவறு. மகிழ்ச்சி இயல்பாகவே நம்முள்
இருக்கிறது. அது சில நேரங்களில் கவலை, ஏக்கம், எதிர்பார்ப்பு
என்னும் மேகங்களால் மங்கலாகத் தெரிகிறது. அவ்வளவுதான்! மேகங்கள்
களைய மகிழ்ச்சி கண்களுக்குப் புலப்படும்.
1. மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை என்று தெளியும் ஞானம்
நாம கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்தால் நிறைய எண்ணங்கள்
தோன்றி மறைகின்றன நம் மூளையில். எண்ணங்களைக் கட்டுப்படுத்த
முடியாது. எண்ணங்கள் இயல்பாகவே எழுகின்றன. ஆனால், சிந்தனை
என்பது நான் சிந்திப்பது. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைக்
கண்டுணர வேண்டும். 'என் நண்பர் என்னைவிட்டுப்
போய்விடுவார்,' 'என்னுடைய கணிணியைச் சரி செய்ய முடியாது,'
'தங்கம் விலை கூடுகிறது,' 'பெட்ரோல் விலை கூடுவதால் இன்று
கார் எடுக்க வேண்டாம்,' 'இந்தச் சட்டை எனக்கு டைட்டாக இருக்கிறது'
- இவை எல்லாம் என் மனதில் எழும் சில எண்ணங்கள் என
வைத்துக்கொள்வோம். இவை கொய கொய என்று குப்பை மாதிரி
நிறைந்துகொண்டும், காற்றில் பறந்துகொண்டும் இருக்கும். ஆனால்,
'நான் இதை முதலில் எழுதுவேன்,' 'இந்தக் கருத்து நல்லது' என்று
நான் சிந்திப்பது மற்றொரு பக்கம் வரிசையாக நடக்கும். எண்ணங்களை
நான் நெறிப்படுத்த வேண்டும் என்றால் என் ஆசைகளை நெறிப்படுத்த
வேண்டும். ஆசைகள் குறைய எண்ணங்கள் குறையும். என் வாழ்வில்
எழும் எண்ணங்கள் என் மகிழ்ச்சியை, என் நலத்தை, என் நம்பிக்கையை
குலைத்துவிடக் கூடியவை. ஆகையால்தான், அவற்றை பயனற்றவை என்கிறார்
ஞானநூல் ஆசிரியர். நீடித்த மகிழ்ச்சியைப் பெறும் ஞானத்தின்
முதற்படி இதுதான். என்னுடைய ஆசைகளை நெறிப்படுத்தி என்னுடைய
எண்ணங்களை நெறிப்படுத்துவது. பயனற்ற எண்ணங்களை விடுத்து இறைவனின்
ஆவியின் துணையால் செம்மையானவற்றைச் சிந்திப்பது.
2. எனக்கு அடுத்திருப்பவரை என்னைப் போல ஏற்றுக்கொள்ளும் ஞானம்
முதல் வாசகத்தில் 'மண்கூடாரம்' என்ற வார்த்தையை உருவகமாகக்
கையாளுகிறார் ஆசிரியர். நாம் இன்று எவ்வளவு பொருள்கள், பதவிகள்,
படிப்பு, உறவுகள் வைத்திருந்தாலும் என் வாழ்வு ஒரு மண்கூடாரம்.
அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழலாம். செங்கல்கள்
சரிந்தால் நேராகச் சரியும். மண் அப்படியில்ல. எங்கே எந்தப்
பக்கம் இழுத்துக்கொண்டு போகும் எனத் தெரியாது. இப்படிபட்ட
மண்கூடாரமாக இருக்கும் நான், வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கும்
நான், எனக்கு அடுத்திருப்பவரின் நொறுங்குநிலையை உணர
வேண்டும். பிலமோன் இன்று தலைவராக, ஒனேசிமு இன்று அடிமையாக
இருந்தாலும் இருவரும் மண்கூடாரங்களே. பிலமோனின் பணமும்,
பொருளும், சமூக நிலையும் அவரை ஒரு போதும் காங்க்ரீட் கட்டிடமாக
மாற்ற முடியாது. ஆக, என்னையும் அடுத்தவரையும் இணைக்கும் ஒன்றைப்
பார்த்து நான் பழக வேண்டுமே தவிர, அவரையும் என்னையும்
பிரித்துப் பார்க்கும் எதையும் நான் பெரிதாக்கிப் பார்த்து
மற்றவரை இகழக் கூடாது. என்னை மண்கூடராமாக ஏற்றுக்கொள்ளுதல்
எனக்கு அடுத்திருப்பவரோடு என்னை இணைக்கும்.
3. விட்டுவிடுதல், திட்டமிடுதல் என்னும் ஞானம்
இன்று மகிழ்ச்சிக்குத் தடையாக இருப்பவற்றை நான் முதலில்
விட்டுவிட வேண்டும். குதிரையை லாயத்தில் கட்டிக்கொண்டு அதில்
நான் பயணம் செய்ய முயற்சிக்கக் கூடாது. குதிரை பயணம் செய்ய
வேண்டுமெனில் லாயத்தின் கயிறு அகற்றப்பட வேண்டும்.
குதிரைக்கு லாயத்தில் இருப்பது பாதுகாப்புதான். ஆனால்,
குதிரை அதற்காக வாங்கப்படவில்லை. அது தன்னுடைய சிலுவையை,
துன்பத்தை அன்றாடம் சுமக்க வேண்டும். ஆக, இன்று நான் இயேசுவை
முதன்மைப்படுத்தி மற்றவற்றை விட்டுவிடவும், என்னுடைய இயலாமையை
நான் சிலுவையாகச் சுமக்கவும், என்னுடைய கவனச்சிதறல்களைக்
களையவும் வேண்டும். தொடர்ந்து, கோபுரம் கட்டுபவர்,
போருக்குச் செல்பவர் போல நேரம் எடுத்து, அனைத்தையும் ஆராய்ந்து
பார்த்து, யோசித்து, திட்டமிடல் வேண்டும். ஒருபோதும் என்னுடைய
செயலில் பின்வாங்கவே கூடாது.
இவ்வாறாக, இறைவனின் ஆவியால், ஒருவரை மற்றவரை ஏற்றுக்கொள்ளுதலால்,
இயேசுவின் சீடராதலால் நாம் நம்முடைய மீட்பைப்
பெற்றுக்கொள்ள முடியும். இறைவனின் ஆவியைப் பெறுவதும், ஒருவர்
மற்றவரை ஏற்றுக்கொள்வதும், இயேசுவின் சீடராவதுமே ஞானம்.
இறுதியாக, இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 90) ஆசிரியர் இவ்வாறு
செபிக்கிறார்: 'எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக்
கற்பியும். அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்!'
இதுவே நம் செபமாகட்டும்.
இன்றைய நாள் முடிந்தால் நம் வாழ்நாளில் ஒரு நாள் மறைகிறது.
நாள்கள் கூடக்கூட வாழ்நாள் குறைகிறது. இந்தக் கூட்டல்-குறைத்தல்
தெளிவானால் ஞானம் பிறக்கும். ஞானம் பிறந்தால் இந்த நொடியே
நமக்கு மீட்பு நிகழும்!
கிறிஸ்தவம் வேகமாகப் பரவிவந்த தொடக்கக் காலக்கட்டம் அது.
அந்தக் காலக்கட்டத்தில் இயேசுவின்மீது ஆழமான அன்பும் நம்பிக்கையும்
கொண்டிருந்த இயேசுவின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு
கிராமத்தில் விவசாயம் செய்துவந்தார். இறைவனின் அருள் அவர்க்கு
அபரிமிதமாக இருந்ததால் அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. ஆம்,
அவர் நிலம் அமோக விளைச்சலைத் தந்தது. அதில் தனக்கென்று
கொஞ்சம் எடுத்துக்கொண்டு மிச்சத்தை வரியவர்கட்குப் பகிர்ந்து
கொடுத்தார். மட்டுமல்லாமல் தன்னுடைய இல்லத்திற்கு வந்த எல்லாரையும்
அன்போடு வரவேற்று, நல்லமுறையில் உபசரித்து வந்தார். மொத்தத்தில்
அவர் இயேசுவின் உண்மையான சீடராக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட உரோமை அரசாங்கம்
அவரைப் பிடித்துக் கொல்வதற்குப் படைவீரர்கள் சிலரை அனுப்பிவைத்தது.
அவர்களும் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இயேசுவின் சீடர்
இருந்த கிராமத்தை நோக்கி வந்தார்கள். அவர்கள் அந்த கிராமத்திற்குள்
வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. அதனால் படைவீரர்களில் ஒருவர்,
இனிமேலும் இயேசுவின் சீடரைத் தேடித் போய்க்கொண்டிருக்க
முடியாது. அதனால் இந்த இரவில் ஏதாவதோர் இடத்தில் தங்கிவிட்டு,
மறுநாள் காலையில் வந்த வேலையை முடிப்போம் என்றார். அவர்
சொன்னதற்கு எல்லாரும் சம்மதம் தெரிவிக்கவே, இரவில் தங்குவதற்கான
இடத்தைத் தேடி அலைந்தார்கள்.
அப்பொழுது எதிரில் ஒரு பெரியவர் வந்தார். அவரிடம் அவர்கள்,
இரவில் தங்குவதற்கான இடத்தைக் கேட்டபோது, அவர் அவர்களிடம்,
",இங்கு ஒரு மனிதர் இருக்கின்றார். அவர் தன்னுடைய
வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று
உபசரிப்பார். அவரிடம் போய்க் கேளுங்கள். நிச்சயம் அவர்
இரவில் தங்குவதற்கான இடத்தைத் தருவார்", என்று சொல்லிவிட்டு
அவருடைய வீடு இருந்த திசையைச் சுட்டிக் காட்டினார்.
படைவீரர்கள் பெரியவர்க்கு நன்றிசொல்லிவிட்டு, அவர்
சுட்டிக்காட்டிய வீட்டை நோக்கி நடந்துசென்றார்கள்.
அந்த வீட்டை அடைந்ததும் அங்கிருந்தவர் அவர்களை
முகமலர்ச்சியோடு வரவேற்றார். பின்னர் அவர்கள், ",இரவில்
இங்கு தங்கிகொள்ளட்டுமா?", என்று கேட்டபோது, ",தாராளமாகத்
தங்கிக்கொள்ளுங்கள்", என்றார். பின்னர் அவர் அவர்களிடம்,
",தாங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்னவோ?", என்று கேட்டபோது,
அவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னார்கள். அவர்
சொன்னதைக் கேட்டு திடுக்கிட்ட இயேசுவின் சீடர் தன்னை யார்
என்று அப்பொழுது வெளிக்காட்டிக் கொள்ளாமல், ",உங்களைப்
பார்க்க மிகவும் களைப்பாக இருப்பது போல் தெரிகின்றது.
முதலில் சாப்பிட்டு ஓய்வெடுங்கள். காலையில் எல்லாவற்றையும்
பேசிக்கொள்ளலாம்", என்றார். பின்னர் அவர் அவர்கட்கு சுவையான
உணவு தயாரித்துக் கொடுக்க அவர்கள் சாப்பிட்டு ஓய்வெடுக்கத்
தொடங்கினார்கள்.
அவர்கள் ஓய்வெடுக்கத் தொடங்கியதும். அவர் தன்னுடைய
தோட்டத்தின் பக்கம் சென்று, ஒரு கல்லறைக்குழி
வெட்டிவிட்டு, வீட்டிற்கு வந்து தூங்கத் தொடங்கினார்.
அவர்க்குத் தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் பொழுது
புலர்ந்ததும் படைவீரர்களிடம் அவர், ",நீங்கள் தேடிவந்த ஆள்
நான்தான்", என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அவர்கள்
அதிர்ந்துபோனார்கள். ",உங்களைப் போன்ற நல்ல மனிதரையா
நாங்கள் கொல்வது. மாட்டோம்", என்று பின்வாங்கினார்கள்.
அப்பொழுது அவர் அவர்களிடம், ",இத்தனை நாட்கட்கும் நான் இந்த
மறைசாட்சிப் பட்டத்திற்காகத்தான் காத்திருந்தேன். அதனால்
என்னைத் தயவுசெய்து வெட்டிக்கொல்லுங்கள்", என்றார்.
அவர்கட்குக் கண்ணீர் தாரைதாராய் வந்தது. இருந்தாலும் வந்த
நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்று, படைவீரர்களில் ஒருவர்
அவரை வெட்டிக் கொலைசெய்தார். அதன்பிறகு இயேசுவின்
சீடர்க்குத் தெரிந்தவர்கள் வந்து, அவர் அவர்க்காக வெட்டிய
கல்லறைக்குழியில் அடக்கம் செய்தார்கள்.
இயேசுவின் சீடர். அவர்க்காக எதையும் இழக்கத்
தயாராகவேண்டும் என்ற செய்தியை எடுத்துச்சொல்லும் இந்த
நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது. பொதுக்காலத்தின்
இருபத்து மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம்
படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் சீடராக
இருப்பதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்ற செய்தியைத்
தாங்கிவருகின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசுவின் சீடர் எல்லாரையும் விட இயேசுவுக்கு முதன்மையான
இடம் தரவேண்டும்
இயேசு எருசலேமை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில்
பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து
செல்கின்றார்கள். இயேசுவுக்கு நன்றாக தெரியும், தன்னைப்
பின்தொடர்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் தன்னுடைய
வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பதற்காக அல்ல. மாறாக,
தான் அளிக்கும் உணவிற்காகத்தான் தன்னைப் பின்தொடர்ந்து
வருகிறார்கள் என்று (யோவா 6: 26). அதனால்தான் அவர்
அவர்களைப் பார்த்து, என்னைப் பின்பற்றி வருகின்றவர் தன்
உறவுகளையும் ஏன், தன் உயிரையும் மேலாகக் கருதினால் அவர்
என் சீடராக இருக்க முடியாது என்கின்றார். அப்படியானால்,
இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர் எல்லாவற்றையும்
விட, இயேசுவுக்குத் தன்னுடைய முதன்மையான இடம் தந்து
வாழவேண்டும்.
இயேசுவின் சீடர் சிலுவையைத் சுமக்கத் தயாராக
இருக்கவேண்டும்
இயேசுவின் சீடர், மற்ற எல்லாரையும் விட, ஏன், தன்
உயிரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தந்து வாழ்வது
சீடத்துவ வாழ்வில் முதல்நிலை என்றால், சிலுவையைச் சுமப்பது
சீடத்துவ வாழ்வின் இரண்டாவது நிலை. இங்கு இயேசு
குறிப்பிடுகின்ற சிலுவை என்பதை அவர்க்காவும் அவருடைய
விழுமியங்கட்காகவும் நாம் படக்கூடிய அவமானங்கள், வேதனைகள்,
துன்பங்கள், என்று எடுத்துக்கொள்ளலாம்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பும் பலரும், இயேசுவைப்
பின்பற்றினால் துன்பமே இல்லாத இன்பமான வாழ்க்கை வாழலாம்
என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள் (லூக் 9:57-58).
இது ஒரு தவறான எண்ணம். இயேசுவைப் பின்பற்றினால் நிச்சயம்
துன்பம் வரும், அவமானம் வரும், உயிரையே இழக்கக்கூடிய நிலை
வரும். இதற்கெல்லம் எவர் ஒருவர் தயாராக இருக்கின்றாரோ அவர்
மட்டுமே இயேசுவின் சீடராக இருக்கமுடியும்.
இயேசுவின் சீடர் எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத்
தயாராகவேண்டும்
இன்றைய நற்செய்தியில் இறுதியில் இயேசு கூறுகின்றார்,
",உங்களுள் தம் உடைமைகளையெல்லாம் விட்டுவிடாத எவரும் என்
சீடராய் இருக்கமுடியாது.", ஆம், இயேசுவின் சீடர் தன்னிடம்
இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இயேசுவுக்காக இழக்கத்
தயாராகவேண்டும். அதற்குக் காரணம் எவரும் இரு தலைவர்கட்குப்
பணிவிடை செய்ய முடியாது (மத் 6: 24) என்பதால்தான். ஒருவர்
தன்னிடம் இருக்கின்ற பணம், பொருள், வசதி வாய்ப்புகள்
இவற்றின்மீதும் பற்று வைத்துகொண்டு, இயேசுவின் மீதும்
பற்று வைத்துக்கொண்டிருந்தால் அவர் யார்க்கும் உண்மையாக
இருக்க முடியாது என்பதால்தான் இயேசு, தம் உடைமைகளை
விட்டுவிடாத எவரும் என்னுடைய சீடராக இருக்க முடியாது
என்கின்றார்.
ஒவ்வொன்றும் ஒரு விலையிருக்கின்றது. அதுபோன்றுதான்
இயேசுவின் சீடராக இருப்பதற்கும் ஒரு விலை இருக்கின்றது.
அந்த விலையை அல்லது அதற்கான வெகுமதியை நாம்
கொடுக்காவிட்டால் நிச்சயமாக இயேசுவின் சீடராக
இருக்கமுடியாது. எத்தனையோ புனிதர்களும் மறைசாட்சிகளும்
இறையடியார்களும் இயேசுவின் சீடராக இருப்பதற்கான விலையை,
தங்களுடைய உயிரை, உடலை, உடைமையைக்க் கொடுத்தார்கள். நாமும்
அதுபோன்று நம்முடைய உயிரை, உடைமையை, உடலைக் கொடுத்தோம்
எனில், இயேசுவின் உண்மையான சீடராக இருப்போம் என்பது உறுதி.
சிந்தனை
"இயேசுவின் சீடரராக இருப்பது என்பது, அவரிடம் கற்பதும்
அவரைப் பின்தொடர்வதும் ஆகும். ஆனால், அதற்காக நாம்
கொடுக்கும் விலையோ மிகவும் உயர்ந்ததாக இருக்கும்' என்பார்
பில்லி கிரஹாம் என்ற மறைப்போதகர். ஆகையால், இயேசுவின்
வழியில் நடக்கின்ற நாம் சீடத்துவத்தின் மகத்துவத்தை
உணர்ந்து இயேசுவுக்காக எதையும் இழக்கத் தயாராவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்,
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9b-10, 12-17
லூக்கா 14:25-33
சீடத்துவம்
மனிதன் ஒருவரைப் பின் தொடருவது என்பது உலகில் தவிர்க்க முடியாத ஒன்று.
சிலர் வார்த்தைகளால் கவரப்படு கிறார்கள். ஒரு சிலர் கொள்கைகளால்
கவரப்படுகிறார்கள். ஒரு சிலர் இலட்சியம் நிறைந்த வாழ்வால் உந்தித்
தள்ளப்பட்டும் பின் தொடர்வர்.
இயேசு என்ற மாமனிதரைப் பின் தொடர விரும்பியவர்கள் பலர். அவரைப்
பின் தொடர அடிப்படைத் தன்மைகள் இன்றைய நற்செய்தியில் (லூக்.
14:26-27) தெளிவாக்கப்படுகிறது. இது மறுதலிப்பு அல்ல. மாறாகப்
புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளுதல் எனப் பொருள் கொள்தல் ஆகும்.
இலட்சியத் தெளிவு
சீடராக மாறவிரும்பும் எவரும் தம் வாழ்வை உணர்ச்சிப் பூர்வமாக அழித்துவிட
முடியாது. உணர்ச்சி வயப்பட்டு மறுதலித்து விடவும் முடியாது. ஆனால்
அந்த நபரின் கொள்கையினைப் பற்றிய அறிவுப்பூர்வமான. உணர்வுப்பூர்வமான
ஒரு தெளிவான நிலையைப் பெறவேண்டும். பின்தொடர்வது என்பது தெளிவாக்கப்பட
வேண்டிய ஒன்று. சீடத்துவம் என்பது எளிதான ஒன்று அல்ல. ஒன்றை இழந்தால்தான்
மற்றொன்று பெற முடியும் என்ற தெளிவு தேவை.
இலட்சிய தயாரிப்பு
இலட்சியத் தெளிவு கொண்டவர் அதற்கான தயாரிப்பில் இறங்க வேண்டும்
(லூக். 14:28-32). சீடத்துவம் என்பது சிந்திக்காமல் மூழ்கிவிடுவதல்ல.
சீடத்துவம் ஓர் ஆபத்தான பாதை. அதற்குத் தயாரிப்புத் தேவை. எவரெஸ்ட்
மலை ஏறுபவன் தயாரிக்கிறான். விளையாடுபவன் தன்னைப் பயிற்சியில் தயாரிக்கிறானே!
இலட்சிய உறவு
பின் தொடர விரும்புவரின் கொள்கையினையும், கொள்கை விடுக்கும் ஆபத்துகளையும்
அறிந்தவராய் அந்த நபரோடு ஓர் ஆள் தன்மை உறவு கொண்டிருப்பர். இந்த
உறவு இரத்த உறவு அல்ல. மாறாக ஞான உறவு. இதைத்தான் மாற்கு
சொல்கிறார் (மாற்கு 3:14) இயேசு சீடர்களைத் தம்மோடு இருப்பதற்காக
அழைத்தார் என்று. இயேசுவின் சீடத்துவமே இலட்சிய உறவின் அடிப்படை.
இலட்சியப் பயணம்
தெளிவு பெற்றவர்கள், உறவை வைத்தவர்கள் அந்த லட்சியம் நிறைவேறும் வரை
பயணம் செய்வார்கள். இவர்களுக்குத் தடைகள் பல வர வாய்ப்பு உண்டு. ஆனால்
உண்மையான சீடர்கள் இந்தத் தடைகளை எல்லாம் கடந்து செல்வார்கள். இவர்களுக்கு
வரும் தடைகளே, இவர்களுக்குச் சிலுவைகள் (லூக். 14:27). இதைத்தான்
இயேசு சுமந்து வர அழைக்கிறார். இவைகள் வாழ்வின் படிக்கற்கள்.
என் வார்த்தைகள் உங்களுள் நிலைத்திருந்தால் விரும்பியதெல்லாம்
கேளுங்கள். கேட்பதெல்லாம் நடக்கும் (யோவா. 15:7).
நான் கட்டளையிடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாய் இருப்பீர்கள்
(யோவா. 15:14).
நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை
(யோவா. 15:17).
நான் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் அன்பு. இந்த அன்பினால்
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துகொள்வார்கள் (யோவா.
13:34-35).
ஒருவனுக்குத் துறவியாக ஆசை. அந்த ஆசையை
நிறைவேற்றிக்கொள்ள ஒரு பெரிய துறவியைத் தேடி
காட்டுக்குச் சென்றான். காட்டிலிருந்த துறவி
நாட்டிலிருந்து வந்தவனைப் பார்த்து, கையில் என்ன? என்றார்.
அதற்கு அந்த மனிதன், பையிலே பணம். அவசரத்துக்கு உதவும்
எனக் கொண்டுவந்திருக்கின்றேன் என்றான். அதற்குத் துறவி,
துறவி என்பவன் கடவுளே கதி என வாழவேண்டும். நீ துறவியாக
விரும்புகின்றாய்; உனக்கு இந்தப் பணம் தேவையில்லை. நீ
அந்தப் பையைப் கொண்டுபோய் அதோ அந்த ஆற்றுக்குள் எறிந்துவிட்டு
வா என்றார். அந்த மனிதனோ சோகம் நிறைந்த உள்ளத்தோடு ஆற்றங்கரைக்குச்
சென்று, கரையிலே அமர்ந்து, ஒவ்வொரு காசாக எடுத்து அதை
ஆற்றுக்குள் எறிந்துகொண்டிருந்தான். இரண்டு, மூன்று
காசுகளை எறிந்திருப்பான். பின்னால் நின்ற துறவி, மீதி
காசை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ! காசை விட்டுவிட
உனக்கு ஆசை. ஆனால் காசின் மீது நீ வைத்திருக்கும் ஆசையை
இன்னும் நீ விடவில்லை. உனக்கு காசு மீது ஆசை இல்லையென்றால்
பை முழுவதையும் தண்ணீருக்குள் தூக்கி எறிந்திருப்பாய்
என்றார்.
துறவு என்றால் அனைத்தையும் விட்டுப்பிரியத் தயாராக இருத்தல்
என்பது பொருள். துறவிலே இரண்டு வகையான துறவு உண்டு:
வெளித் துறவு, உள் துறவு.
வெளித் துறவு என்பது இன்றைய இரண்டாவது வாசகத்தில்
புனித பவுலடிகளார் அவரது உயிரின் உயிராக விளங்கிய பிலமோனை
விட்டுப்பிரிய முன்வந்தது போல, நமக்குப் பிரியமான மனிதர்களை,
பொருள்களை இடங்களை, சூழ்நிலைகளை விட்டுப் பிரிய முன்வருவது.
அப்படி வெளித் துறவைப் பின்பற்ற முன்வருகின்றவர்கள்
கீழ்க்கண்ட பயன்களை அனுபவிப்பார்கள்:
எல்லாவற்றையும் அயலாருக்காக இழக்க முன்வரும் மன வலிமையைப்
பெறுவார்கள். தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும்
சுதந்தரத்தைப் பெறுவார்கள். உள் துறவு என்பது கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்ற நமது எண்ணங்களையும், திட்டங்களையும்
(முதல் வாசகம்) விட்டுவிடுதலில் அடங்கியுள்ளது. இத்தகைய
உள் துறவைப் பின்பற்றுகின்றவர்கள் கீழ்க்கண்ட ஞானக்கனிகளைச்
சுவைத்து மகிழ்வர்:
சேர்த்து வைத்ததை எப்படிக் காப்பாற்றுவது என்ற எண்ணத்திலிருந்து
விடுதலை கிடைக்கும். பெறுவதில் அல்ல, கொடுப்பதில்தான்
இன்பம் இருக்கின்றது என்பதால், இதயத்திற்கு இதமான இன்பம்
கிடைக்கும். இழப்பை இழப்பாகக் கருதும்போது, இழப்பு நமக்கு
இழப்பாகத் தெரியும். இழப்பை இழப்பாக அல்ல, இழப்பை இலாபமாகக்
கருதும்போது இழப்பு நமக்கு இலாபமாகத் தெரியும். இலட்சங்கள்
இல்லாமல் வாழ்ந்து விடலாம்; ஆனால் இலட்சியங்கள் இல்லாமல்
வாழக்கூடாது. எடுப்பது அல்ல கொடுப்பதே, துறப்பதே நமது
இலட்சியமாக இருக்கட்டும். நமது வாழ்வில் துறப்பதைக்
கூட்டி, கொடுப்பதைப் பெருக்கி, கிடைப்பதை வகுத்து, எடுப்பதைக்
கழித்து, பயன் - பிறப்பின் பயன் - என்ற விடையைப்
பெற்று அகமும் முகமும் மலர வெற்றி நடைபோடுவோம்.
தனது மனைவிக்குக் குடை பிடித்துச் சென்ற ஒரு கணவரைப்
பார்த்துச் சிரித்தனர் மக்கள். கணவர் அவர்களிடம் கூறியது:
"நான் காரியத்துடன்தான் என் மனைவிக்குக் குடை
பிடிக்கிறேன். ஏனெனில் தெருவின் வலப்பக்கத்தில் நகைக் கடையும்
இடப்பக்கத்தில் துணிக் அடையும் இருக்கின்றன, அவைகளைப்
பார்த்தால் என் மனைவிக்கு நகையும் புடவையும் வாங்க
வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். வலது பக்கத்தில் நகைக்கடை
வரும்போது குடையை வலது பக்கத்தில் சாய்த்துப் பிடிப்பேன்.
இடது பக்கத்தில் துணிக்கடை வரும்போது குடையை இடது பக்கத்தில்
சாய்த்துப் பிடிப்பேன். இவ்வாறு நகைக் கடையோ, துணிக்கடையோ
அவளது கண்களில் படாமல் அவளை வீட்டுக்கு அழைத்துச்
சென்றுவிடுவேன்."
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்கூட, இல்லறத்தார். மட்டுமல்ல,
துறவறத்தாரும்கூடப் பொருள்களை வாங்கிக் குவிப்பதில் கருத்தாய்
உள்ளனர். ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்:
"உங்களுள் தன் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய்
இருக்க முடியாது" (லூக் 14:33). மேலும், கிறிஸ்துவைப் பின்பற்ற
விரும்புகிறவர்கள் உற்றார் உறவினரையும், ஏன் தங்கள் உயிரையும்
கூட வெறுத்து, தங்கள் சிலுவையைச் சுமக்க வேண்டும் என்று
கோரிக்கை விடுக்கின்றார் (லூக் 15: 25-27).
மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து இந்த நிபந்தனைகளை தம் சீடர்களுக்கு
மட்டும் விதிக்கின்றார் (மத் 10:37-38). ஆனால் லூக்கா நற்செய்தியிலோ
கிறிஸ்து இந்த நிபந்தனைகளை எல்லா மக்களுக்கும்
விதிக்கின்றார் (லூக் 14:25) மத்தேயு நற்செய்தியில், சீடர்கள்
தங்கள் உற்றார் உறவினரைக் கிறிஸ்துவைவிட அதிகமாக அன்பு
செய்யக் கூடாது என்று கூறுகின்றார் (மத் 10:37). ஆனால்
லூக்கா நற்செய்தியிலோ சீடர்கள் தங்கள் உற்றார் உறவினரை (மனைவி,
மக்கள் உட்பட) " வெறுக்க வேண்டும்" என்கிறார் (லூக்
14:28). லூக்கா நற்செய்தி முழுத்துறவையும், வேரோட்டமான சீடத்துவத்தையும்
வலியுறுத்துகிறது. சீடத்துவம் மிகவும் விலையுயர்ந்தது.
போர் புரியச் செல்லும் அரசர், வீடு கட்டுபவர் ஆகிய உவமைகள்
மூலமாக, சீடராகுமுன் அதன் விலை என்ன என்பதைச் சிந்தித்துச்
செயல்பட வேண்டும் என்கிறார் கிறிஸ்து. ஒரு காரியத்தைச்
செய்வதற்கு முன்பாக அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்; காரியத்தைச்
செய்தபின் அதைப்பற்றிச் சிந்திப்பது இழுக்கானது என்கிறார்
வள்ளுவர்,
எஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள் 467)
நீரழிவு நேயாளியிடம் மருத்துவர், "நீங்கள் நாள்தோறும் ஒரு
மணி நேரம் நடக்க வேண்டும்" என்று கூறியபோது நோயாளி, "டாக்டர்!
நடக்கிற காரியமாகச் சொல்லுங்க"என்றாராம், அவ்வாறே
கிறிஸ்து கோரும் முழுமைத் துறவு நடக்கிற காரியம் போல் தெரியவில்லை
என்று பலர் நினைக்கலாம். அவர்களுக்குக் கிறிஸ்து கூறுவது:
"மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" (லூக்
18:27).
கிறிஸ்து கூறிய உண்மைத் துறவு தொடக்ககாலத் திருச்சபையில்
நிகழ்ந்தது. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமை அனைத்தையும்
விற்றுத் திருத்தூதர்களிடம் கொடுத்து பொதுவுடைமை வாழ்வு
நடத்தினார்கள் (திப 2:42-45). ஆனால் காலப்போக்கில் அது வழக்கொழிந்து
போய்விட்டது.
தனது வீட்டுக்கு வந்த நண்பர்க்கு ஒருவர் கெட்டியான,
சுவையான சூப்பைக் கொடுத்தார். அச்சூப்பில் மீதியிருந்ததைத்
தண்ணீர் கலந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் நாளும்
கொடுத்தார். நண்பர் அவரிடம், "இது சூப்பா?" என்று கேட்டதற்கு
அவர் கூறியது: "இது சூப்பினுடைய, சூப்பினுடைய, சூப்பினுடைய
சூப்பு," அவ்வாறே நாம் கடைப்பிடிப்பது நற்செய்தியா? என்று
கேட்டால், அதற்குரிய பதில்: "நாம் கடைப்பிடிப்பது. நற்செய்தியினுடைய,
நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி." நற்செய்தியை
கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்துவிட்டோம்.
அன்று கிரேக்க நாட்டு தத்துவ மேதை ஒருவர், பட்டப்பகலில்
கையில் விளக்கேந்தி மனிதனைத் தேடினார். இன்று கிறிஸ்து பட்டப்பகலில்
விளக்கைக் கையிலேந்தி அவருடைய சீடர்களைத் தேடுகிறார், இன்று
ஏராளமான கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர், ஆனால் சல்லடை போட்டு
சலித்து எடுத்தாலும் ஒரு சீடரையும் கண்டுபிடிக்க இயலாது.
கிறிஸ்துவை ஒப்பற்றச் செல்வமாகக் கருதி அவரைப் பின்பற்ற,
இன்றைய முதல் வாசகம் குறிப்பிடும் ஞானம் தேவைப்படுகிறது,
மெய்யுணர்வு பெற்றவர்கள் மட்டுமே எல்லாவற்றையும் துறந்து
கிறிஸ்துவைப் பின்பிற்ற இயலும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்;
உனார்ந்து கொள்ளக்கூடியவர் உணரட்டும், "நீங்கள் கடவுளுக்கும்
செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24).
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9b-10, 12-17
லூக்கா 14:25-33
பின்பற்றுவதா, பிரதிபலிப்பதா?
இத்தாலி நாட்டைக் குடியரசாக மாற்ற தளபதி கரிபால்டி தனது வீரர்களுடன்
போரிட்டுத் தோல்வியைத் தழுவினார். என்றாலும் மனம் தளர்ந்துவிடவில்லை.
மீண்டும் வீரர்களை அழைத்தார். "திரும்பவும் போரிட
விரும்புகிறேன். உங்களுக்குக் கொடுக்க பணமோ பொருளோ என்னிடம்
இல்லை. என்னால் பசி பட்டினியை மட்டுமே தரமுடியும். காயமும்
இரத்தமுமே நீங்கள் அணிந்து கொள்ளும் பதக்கமாக இருக்கும்.
என்னோடு இணைந்து போரிட விரும்புகிறவர்கள் - நான் ஒரு நிமிடம்
கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது ஓர் அடி முன்னே எடுத்து
வைத்து வரவும்" என்று அறைகூவலிட்டார். கண்களைத் திறக்கிறார்.
வீரர்கள் அப்படியே நின்றிருந்தனர். கரிபால்டி மிகவும் சோர்வடைந்துவிட்டார்.
அதைக் கண்ட ஒரு வீரன் வேகமாக விரைந்து "தவறாக நினைக்க
வேண்டாம். பட்டாளம் முழுவதுமே ஓர் அடி முன்னுக்கு வந்துவிட்டதால்
உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. வெற்றி நமதே" என்று
முழங்கினான். ஆம்,, வெற்றி அவர்களதே என்பதை வரலாறு சொல்கிறது.
அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த இலட்சிய உணர்வு,
கொள்கைப் பிடிப்பு, தியாகச் சிந்தை!
இவ்வுலகில் இறையரசைக் கட்டி எழுப்ப முன்வந்த இறைமகன் இயேசுகூட
இத்தகைய மனநிலையை தன் சீடர்களிடம் எதிர்பார்க்கிறார். இயேசுவைப்
பின்பற்றத் தடையாக இருக்கும் எதையும் - அது உடைமையோ, உறவோ,
உயிரோ எதுவாயினும் - இழக்கத் துணிபவனே இயேசுவின் உண்மையான
சீடனாக முடியும்.
ஒரு செல்வந்தன் தானே தனக்கு உலகமாக இருந்தான். தனக்கு அப்பால்
எதையும் பார்க்க முடிந்ததில்லை. தான் தான் என்று
வாழ்ந்திருந்தவன். எல்லாம் தனக்கு மட்டுமே தெரியும் என்ற
மனநிலையை வளர்த்துக் கொண்டவன். அறிவு புகட்ட நினைத்த அவனுடைய
நண்பன் அவனை அழைத்துச் சன்னல் கண்ணாடியில் பார்க்கச்
சொன்னான். திறந்த வெளியில் மலைகள், மரங்கள், மனிதர்கள் எல்லாம்
தெரிந்தன. பின்னர் வெள்ளி பூசிய கண்ணாடியில் பார்க்கச்
சொன்னான். தன்னை மட்டுமே பார்க்க முடிந்தது. வெள்ளியும் தங்கமும்
மனிதனுடைய கண்களை மறைக்கும். அதனால்தான் இயேசு சொல்கிறார்:
உறவு உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
உடைமை உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
உயிரே கூட உன் கண்ணைக் குருடாக்குகிறதா? விட்டுவிடு.
வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை நீந்திக் கடக்க நினைப்பவன்
கைகளிலும் கால்களிலும் 'பற்று' என்ற பாறாங்கல்லைக் கட்டிக்
கொண்டு நீச்சலடிக்க முடியுமா?
பணத்தால், பொருளால் ஓரளவு திருப்தி இருந்தும் வாழ்க்கையில்
ஏதோ ஒரு வெற்றிடத்தை உணர்ந்தானே அந்தப் பணக்கார இளைஞன்
(மார்க். 10:22). தேவையான ஆன்மீக விடுதலை பெறாதது தானே இயேசுவைப்
பின்பற்றத் தடையாக இருந்தது.
உடைமைகள் தடைகள் மட்டுமல்ல பல சமயங்களிலும் சுமைகள். இறைச்சிக்
கடையிலிருந்து கரித்துண்டைத் தூக்கிக் கொண்டு அந்த நாய் ஓடியது.
கடைக்காரன் கல்லால் எறிந்து கொண்டே அதை விரட்டிச்
சென்றான். கல்லெறியால் காயமுற இரத்தம் ஒழுக நாய் ஓடியது.
அதற்குள் ஏழெட்டு நாய்கள் அந்த நாயைப் பின் தொடர, நிற்கவோ
இளைப்பாறவோ முடியாத நாயின் கால்கள் பின்னிக் கொண்டன. கண்கள்
செருகின. இனியும் அதனால் ஓட முடியாது. கறித் துண்டைக் கீழே
போட்டுவிட்டு பக்கத்து மரத்தடியில் ஒண்டிக் கொண்டது. விரட்டி
வந்த நாய்களும் இந்த நாயைப் பொருள்படுத்தாமல் இறைச்சியைச்
தேடி விரைந்தன. மூச்சுவாங்க இளைத்து நின்ற நாய் தனக்குள்
சொல்லிக் கொண்டது: "இப்போது எவ்வளவு நிம்மதி! என் விருப்பப்டி
நான் எங்கேயும் போகலாம், எதுவும் செய்யலாம். போட்டியோ
பொறாமையோ இல்லாத இந்த உலகம் இப்போது எனக்குச் சொந்தம்".
இத்தாலியின் 12ஆம் நூற்றாண்டுப் புனிதர் பிரான்சிஸ் அசிசியார்
தன் இலட்சியத்திற்குத் தன் தந்தையே தடையாக இருந்தபோது, தன்னைப்
புரிந்து கொள்ளத் தவறியபோது, "இனி விண்ணகத் தந்தையே எனக்கு
அப்பா" என்று தோளில் இருந்த துண்டை உதறிச் சென்ற நிகழ்ச்சி
நினைவில் இல்லையா?
பொதுநிலையினரின் பாதுகாவலர் என்று நாம் புகழ்ந்து போற்றும்
புனித தாமஸ்மூர் தன் மனைவியைவிட, மக்களை விட, ஏன் தன் உயிரையும்
விட இயேசுவையும் அவர் நிறுவிய திருஅவையையும் நேசிக்கவில்லையா?
பெற்றோரைப் போற்றுவதும் பேணிக்காப்பதும் மகனின் கடமைதான்.
ஆனால் தந்தையின் அலுவல் என்றபோது பெற்ற தாயையோ வளர்த்த தந்தையையோ
பெரிதாக நினைக்கவில்லை இயேசு. காணாமற்போன 12 வயதுச் சிறுவன்
"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில்
ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?"
(லூக். 2:49) என்று கேட்கவில்லையா? "என் தாய் யார்? என் சகோதர்கள்
யார்?" (மத். 12:48) என்ற இயேசுவின் கேள்வி உணர்த்துவது என்ன?
இயேசு யார் என்பதற்கான பொருள்மிக்க விளக்கத்தைத் திருத்தூதர்
பவுல் குறிப்பிடுகிறார்: "கடவுள் வடிவில் விளங்கிய அவர்,
கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்
கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே
வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்''
(பிலிப். 2:6,7). இப்படிப்பட்ட இயேசு தன் சீடர்களும் தன்னைப்
போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். "பணியாளர் தலைவரை
விடப் பெரியவரல்ல: தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை
விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்'' என்கிறார் ஆண்டவர் (லூக். 13:16, 12:26). அந்த
சீடத்துவம் விடுக்கும் சவால்களுக்குத் தன்னால் ஈடு கொடுக்க
முடியுமா என்று முன்னமே அமர்ந்து தீர்க்கமாகச் சிந்திப்பது
மிக மிகத் கோபுரம் கட்டுபவரும் போரிடச் செல்பவரும் தன்
நிலையைக் கணித்துச் செயல்படுவது போல் இயேசுவின் சீடனும் செயல்படவேண்டும்
என்கிறார் இயேசு (லூக். 14:28-33).
இந்தத் திட்டமிடலுக்கு மனித அறிவும் ஆற்றலும் மட்டும்
போதுமானதல்ல. இறை ஞானம் வேண்டும். அதைத் தூய ஆவி அருள்வார்
(முதல் வாசகம்).
அழைப்புப் பற்றிய வங்கக்கவி தாகூரின் கருத்து இது! ஒரு
கூடை நிறைய மாம்பழம் ஒருவர் வந்து ஒவ்வொன்றாகப் புரட்டிப்
பார்த்து ஒன்றைப் பொறுக்கி எடுக்கிறார். என்ன நேர்கிறது?
பொறுக்கி எடுத்த அந்த ஒரு பழம் பிற அனைத்துப் பழங்களினின்றும்
பிரிகிறது. அந்தப் அந்தப் பிரிவு ஓர் இழப்பே! ஆனால்... அதனைப்
பொறுக்கி எடுத்தவர் பழத்துக்குச் சொந்தமன்றோ!
"ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம். எனக்குரிய
பங்கைக் காப்பவரும் அவரே" (தி.பா. 16:5) என்ற திருப்பாடல்
ஆசிரியரின் உணர்வு இருந்தால் அங்கே இழப்பு உணர்வுக்கு இடமேது?
கணவனுக்காகத் தன் பெற்றோரை, தன் குடும்பத்தை தான் வளர்ந்து
வாழ்ந்த சூழலை, ஏன் தன் ஆசைகளைக் கூட விட்டுவரும்
பெண்ணுக்கு அவை இழப்பா? மண வாழ்க்கையின் இயல்பான எதிர்பார்ப்பு
இல்லையா!
"ஒருவிதை தன்னை அழித்துக் கொண்டுதான் மரமாகிறது. ஒரு துளி
தன்னை இழந்த பின்பே கடலாகிறது. ஆனால் மனிதன்...? மனிதன் தன்னை
இழக்கத் தயாரில்லை. பின் எப்படி இறைத்தன்மை இவனில் விளைய
முடியும்?" - ஒஷோ (ரஜனிஷ்).
இயேசுவுக்கு வேண்டும் சீடர்கள், இரசிகர்கள் அல்ல.
வெறம் பக்தர்கள் அல்ல! இயேசுவைப் பின்பற்றுவதை விட அவரைப்
பிரதிபலிப்பதில்தான் சீடனுக்குப் பெருமை!
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பொதுக் காலத்தின் 23-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9b-10, 12-17
லூக்கா 14:25-33
துணிவுடன் சீடராக...
அந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகிவந்த பங்கு அருள்பணியாளர்,
இளையோரை அதிகம் கவர்ந்தார். அவர் அங்கு வருவதற்குமுன், வறுமைப்பட்ட
ஒரு நாட்டில் பல ஆண்டுகள் பணியாற்றிவர். எனவே, அவர், அந்நாட்டில்
தான் பெற்ற ஆழமான அனுபவங்களை இளையோரிடம் பகிர்ந்துவந்தார்.
ஒருமுறை, ஞாயிறு திருப்பலி முடிந்தபின், ஓர் இளம்பெண்ணின்
பெற்றோர் அவரைக் காண காத்திருந்தனர். அருள்பணியாளர் அறைக்குள்
நுழைந்ததும், "சாமி, எங்கள் மகள் எடுத்துள்ள அர்த்தமற்ற,
ஆபத்தான முடிவுக்கு நீங்கள்தான் காரணம்" என்று குற்றம்
சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் மகள் எடுத்த முடிவு என்ன? நிலநடுக்கத்தால்
பாதிக்கப்பட்டிருந்த ஓர் ஏழை நாட்டில் ஆறு மாதங்கள் உழைக்கச்
செல்வதாக அந்த இளம்பெண் பெற்றோரிடம் கூறியிருந்தார். அந்த
முடிவு, பெற்றோரை நிலைகுலைய வைத்தது. அப்பெண் கல்லூரிப் படிப்பை
முடிக்க இன்னும் ஓராண்டு இருந்தது. அவ்வேளையில் இதுபோன்ற
ஒரு முடிவா? என்று திகைத்த பெற்றோரிடம், தன் கல்லூரிப் படிப்பு
ஓராண்டு காத்திருக்கலாம், ஆனால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட
மக்கள் காத்திருப்பது, அநீதி என்று மகள் வாதாடினார். தங்கள்
மகளை இவ்விதம் மாற்றியது, பங்குத்தந்தை என்று எண்ணி, அவரிடம்
முறையிட வந்திருந்தனர், பெற்றோர்.
"எங்கள் மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு நீங்கள்தான்
பொறுப்பேற்கவேண்டும்" என்று இளம்பெண்ணின் பெற்றோர்
சொன்னதும், பங்குத்தந்தை ஒரு புன்முறுவலுடன், "இல்லை...
நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று அவர்களிடமே
திரும்பக் கூறினார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த
பெற்றோரிடம், "ஆம், உங்கள் மகளுக்கு முதலில் கிறிஸ்துவை
அறிமுகப்படுத்தியது யார்? நான் இல்லையே" என்று
அருள்பணியாளர் சொன்னார். உடனே, அந்த பெற்றோர், "எங்கள்
மகள் ஒரு சராசரி கிறிஸ்தவப் பெண்ணாக வளரவேண்டும்
என்றுமட்டும்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காகத்தான்
கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினோம்" என்று சொன்னார்கள்.
கிறிஸ்துவுக்கு அறிமுகமாவது ஒரு சடங்கு மட்டுமே; அவரை
அவ்வப்போது கோவிலில், திருப்பலியில் சந்தித்தால் போதும்;
அவர் பெயரைச் சொல்லி, ஒரு சில தான தர்மங்கள் செய்தால்
போதும் என்று வாழ்வதுதான் பாதுகாப்பான, சராசரி கிறிஸ்தவ
வாழ்வு என்று எண்ணியிருப்பவர்களுக்கு, இன்றைய நற்செய்தி,
ஓர் அதிர்ச்சியைத் தர காத்திருக்கிறது. தனக்கு
அறிமுகமானவர்கள், தன்னைப் பின்தொடர விழைபவர்கள், வெறும்
பெயரளவில், சராசரி கிறிஸ்தவர்களாக வாழ்வது கடினம் என்பதை
இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறியுள்ளார். லூக்கா
நற்செய்தி 14 : 25-27
அக்காலத்தில், பெருந்திரளான மக்கள் இயேசுவோடு
சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து
அவர்களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய்,
மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன்,
தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என்
சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என்
பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது".
இயேசு விடுத்த இச்சவாலை தன் 18வது வயதில் ஏற்று, துறவற
வாழ்வைத் தொடர்ந்த ஓர் இளம்பெண்ணை செப்டம்பர் 04,
இஞ்ஞாயிறன்று பெருமைப்படுத்துகிறோம். தான் விரும்பித்
தேர்ந்த துறவற சபையை விட்டு வெளியேறி, இயேசுவின் சவாலை
இன்னும் முழுமையாக நிறைவேற்ற, 1950ம் ஆண்டு, தன் 40வது
வயதில், மற்றொரு துறவு சபையை நிறுவி, துன்புறும்
மக்களுக்கு தன் முழுமையான அர்ப்பணிப்பை 47 ஆண்டுகளாக
வழங்கிய அன்னை தெரேசா, இஞ்ஞாயிறன்று ஒரு புனிதராக
உயர்த்தப்படுகிறார். இரக்கத்தின் இறைதூதர், சேரிகளின்
காவல்தூதர், சாக்கடையின் புனிதர் என்று, பல வழிகளில்
புகழப்படும் அருளாளர் அன்னை தெரேசா, இரக்கத்தின் சிறப்பு
யூபிலி ஆண்டின் ஒரு சிகர நிகழ்வாக, செப்டம்பர் 4,
ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில்,
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் சிறப்புத்
திருப்பலியில், புனிதராக அறிவிக்கப்படுகிறார். 1950ம்
ஆண்டு, பிறரன்பு மறைப்பணி சகோதரிகள் சபையை உருவாக்கி,
வறுமைப்பிடியில் சிக்கித்தவிக்கும் பல்லாயிரம்
மனிதர்களுக்கு, தன்னால் இயன்ற அளவு விடுதலை வழங்கிய புனித
அன்னை தெரேசாவிற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு விடுத்துள்ள சவாலை,
புனித அன்னை தெரேசாவைப்போல், முழுமையாகப் பின்பற்றிய
பல்லாயிரம் உன்னத உள்ளங்கள், தங்கள் உயிரையும்
வழங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர், Dietrich Bonhoeffer
(1906-1945). ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் வாழ்ந்த
இவர், லூத்தரன் சபை பணியாளர், இறையியலாளர். ஹிட்லரின்
அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், துன்பங்களைச்
சந்தித்தவர். ஹிட்லரின் அநீதமான அடக்குமுறைக்கு உதவியாகச்
செயல்பட்ட இராணுவத்தில் கட்டாயமாகச் சேரவேண்டியச் சூழலைத்
தவிர்க்க, Bonhoeffer அவர்கள், அமேரிக்காவிற்குச்
சென்றார். ஆனாலும், தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது,
அவர் மனதை உறுத்தியது. மீண்டும் ஜெர்மனிக்குத்
திரும்பினார். அவர் ஜெர்மனிக்கு வந்தபின், அவரும் அவரது
குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டனர். Flossenberg என்ற
முகாமில், 1945ம் ஆண்டு, ஏப்ரல் 9ம் தேதி, Bonhoeffer
அவர்கள், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு,
தூக்கிலிடப்பட்டார்.
இயேசுவின் சீடராக வாழ்வது குறித்து சிந்திக்கும்
இஞ்ஞாயிறன்று, Dietrich Bonhoeffer அவர்களைப் பற்றி
குறிப்பாக எண்ணிப்பார்ப்பதற்குக் காரணம் உள்ளது. அவர்
எழுதிய ஓர் அற்புதமான, புகழ் பெற்ற நூலின் பெயர் 'The Cost
of Discipleship', அதாவது, 'சீடராவதற்குத் தரவேண்டிய
விலை'. Bonhoeffer அவர்கள், இந்நூலை அறிவுப்பூர்வமான
விளக்கமாக எழுதவில்லை. இந்நூலில் விவரித்த சீடராக அவரே
வாழ்ந்துகாட்டினார்.
இயேசுவின் சீடராக வாழ்வதென்பது, உலகத்தோடு ஒத்துப்போகும்,
கும்பலோடு கும்பலாகக் கலந்து, கரைந்து போகும் வாழ்வு அல்ல.
Bonhoeffer அவர்கள் விரும்பியிருந்தால், ஹிட்லரின்
கொள்கைகளைக் கேள்வி கேட்காமல், ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
அல்லது, ஏற்றுக்கொண்டதுபோல் நடித்திருக்கலாம். 39 ஆண்டுகளே
இவ்வுலகில் வாழ்ந்த Bonhoeffer அவர்கள், அமேரிக்கா
சென்றபோது, அங்கேயேத் தங்கியிருந்துவிட்டு, போர்
முடிந்தபின், ஜெர்மனி திரும்பியிருக்கலாம். இன்னும் பல
ஆண்டுகள் வாழ்ந்து, பல நூல்கள் எழுதி, புகழ்
பெற்றிருக்கலாம்.
இதைச் செய்திருக்கலாம் அதைச் செய்திருக்கலாம் என்று இங்கு
நாம் சிந்திப்பவை அனைத்தும், தன்னை மட்டும் காத்துக்
கொள்வதற்கு, உலகம் சொல்லித்தரும் வழிகள். ஆனால்,
Bonhoeffer அவர்கள், உலகம் சொன்ன வழியைவிட, இயேசு சொன்ன
வழியை, இன்றைய நற்செய்தி சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார்.
இயேசுவின் சீடராய் வாழ்வதற்கான விலையைக் கொடுத்தார்.
தூக்கிலிடப்பட்டார்.
Bonhoeffer அவர்களை, சாவதற்கும் துணிந்த சீடராக
வாழத்தூண்டிய இயேசுவும், அவர் வாழ்ந்த காலத்தில்,
உலகத்தோடு ஒத்துப்போயிருந்தால், இளமையிலேயே இறந்திருக்கத்
தேவையில்லை. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வாய்
வாழ்ந்திருந்து, இன்னும் பல்லாயிரம் புதுமைகள் ஆற்றி
புகழடைந்திருக்கலாம்.
ஒவ்வொரு முறையும் புதுமை செய்தபோது, இயேசுவின் புகழ்
பெரிதும் பரவியது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள்
சொல்வது போல், பெருந்திரளான மக்கள் இயேசுவை எப்போதும்
பின்பற்றிய வண்ணம் இருந்தனர். கூட்டம் கூட்டமாக, மக்களைத்
தன் பக்கம் ஈர்த்து, தன் புகழை வளர்ப்பது மட்டுமே
இயேசுவின் நோக்கமாய் இருந்திருந்தால், அந்த மக்கள்
கூட்டத்தை எப்போதும் மகிழ்விக்கும் செய்திகளையேச் சொல்லி,
புதுமைகள் செய்து, சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஒருவேளை,
அவர்களது அரசராகக் கூட மாறியிருக்கலாம்.
இவ்வழிகளை இயேசு பின்பற்றியிருந்தால், இன்றைய அரசியல்
தலைவர்களுக்கு அவர் ஓரு சிறந்த எடுத்துக்காட்டாக
இருந்திருப்பார். தலைமைத்துவம் என்றால் என்ன என்று, இன்றைய
மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் பாடங்களுக்கு ஓர்
இலக்கணமாக இயேசு இருந்திருப்பார். இயேசு, தான் வாழ்ந்த
காலத்தில், மேலாண்மை பாடங்களைச் சொல்லித் தந்திருக்கிறார்.
"திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்."
(He who fails to plan, plans to fail) என்பது, மேலாண்மை
நிறுவனங்கள் சொல்லித்தரும் ஓர் அரிச்சுவடி.
வாழ்வில் திட்டமிடுவது மிகவும் அவசியம் என்பது
எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடம். நம் பேச்சு வழக்கிலும்
இதையொத்த எண்ணங்களை வெளிப்படுத்துகிறோம்: "சும்மா
எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் செஞ்சிடக்கூடாது; ஆர, அமர,
யோசிச்சுத்தான் செய்யணும்" என்று. ஆர, அமர சிந்திப்பதைப்
பற்றி இயேசு இன்றைய நற்செய்தியில் ஒரு முறை அல்ல, இரு முறை
கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளவற்றை
நற்செய்தியிலிருந்து கேட்போம்:
லூக்கா நற்செய்தி 14: 28-32
உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால்,
முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக்
கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப்
பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு
அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும்
ஏளனமாக, இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க
இயலவில்லை என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர்
தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு
எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க
முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க
மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில்
இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட
மாட்டாரா?
ஆர அமர சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும் என்பதை,
கோபுரம் கட்டுதல், போருக்குப் புறப்படுதல் என்ற
எடுத்துக்காட்டுகளுடன் கூறும் இயேசு, திடீரென, சற்றும்
எதிர்பாராத ஒரு கருத்தையும் கூறுகிறார். அதுதான், இன்றைய
நற்செய்தியின் இறுதியில் அவர் கூறும் ஒரு திருப்பம்.
"அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டு விடாத
எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14: 33) இதை
நாம் வாசிக்கும்போது, யாரோ நம் முகத்தில் தண்ணீர்
தெளித்து, மயக்கத்திலிருந்து நம்மை எழுப்புவதைப்போல்
உணர்கிறோம்.
இயேசு பயன்படுத்திய 'அப்படியே' என்ற வார்த்தைதான்
முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர் போல் இருக்கிறது.
'அப்படியே' என்று இயேசு குறிப்பிடுவது எதை? அதற்கு முன்
அவர் கூறிய அந்த இரு எடுத்துக்காட்டுகளை... இயேசு கூறுவது
இதுதான்... எப்படி திட்டமிட்டு கோபுரம் எழுப்புவீர்களோ,
எப்படி திட்டமிட்டு போருக்குச் செல்வீர்களோ, அப்படியே தம்
உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும், என் சீடராய் இருக்க
முடியாது என்பதுதான் இயேசு விடுக்கும் சவால். இந்த
வாக்கியத்தை ஆழமாகச் சிந்தித்தால், இயேசு, இந்த வரிகளில்
ஓர் உண்மைச் சீடனுக்குரிய சவாலை முன்வைக்கிறார் என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
ஒரு கோபுரம் கட்டுபவர், இரவும் பகலும் அதைப்பற்றியே
எண்ணிக் கொண்டிருப்பார். ஒரு போருக்குச் செல்பவர்,
அதேபோல், அல்லது, அதைவிட இன்னும் தீவிரமாக எண்ணமும்,
துணிவும் கொண்டிருப்பார். இயேசுவைப் பின் தொடர்வதிலும்
இரவும் பகலும் தீவிர எண்ணம் வேண்டும், துணிவு வேண்டும்
என்பதைத்தான் அந்த 'அப்படியே' என்ற வார்த்தை சொல்கிறது.
அந்த வார்த்தைதான் முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீரைப்போல்
நம்மை விழித்தெழச் செய்கிறது.
ஒரு சீடராக இயேசுவைப் பின்பற்றுவதென்பது, ஏதோ ஓரிரவில்
தோன்றி மறையும் அழகான, இரம்மியமான கனவு அல்ல. மாறாக,
வாழ்நாள் முழவதும், இரவும், பகலும், நம் சிந்தனை, சொல்,
செயல் இவற்றை நிறைக்கவேண்டிய ஒரு தாகம் என்பதைத்தான்,
இயேசு, இவ்வரிகளில் சொல்லியிருக்கிறார்.
பணத்திற்காக, புகழ், பெருமைகளுக்காக, ஏதோ ஒன்றைச்
சாதிக்கவேண்டும் என்பதற்காக, தூக்கம் மறந்து, உணவை மறந்து,
குடும்பத்தை மறந்து, உழைக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம்.
தாங்கள் ஆரம்பித்ததை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்பதில்
அவர்கள் கொண்டுள்ள தீவிரத்தை, தன் சீடர்கள்
கொண்டிருக்கவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கிறார்.
இறுதியாக ஓர் எண்ணம்... இந்த எண்ணம் உங்களை
அதிர்ச்சியடையச் செய்யலாம்; உங்களுக்குச் சவாலாக அமையலாம்.
இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள்
எல்லாம், குருக்கள், துறவறத்தாருக்கு என்று எண்ணி,
தப்பித்துக் கொள்ளமுடியாது. இயேசு, இந்த வார்த்தைகளை, தன்
சீடர்களுடன் தனித்து இருக்கும்போது சொல்லவில்லை... மாறாக,
தன்னைப் பின்தொடர்ந்த பெருந்திரளான மக்களை நோக்கி,
அதாவது, நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.
தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்கள், அதிலும்
குறிப்பாக, இரவும் பகலும் தீர ஆய்வு செய்து, தியாகம்
செய்யத் துணியாத உள்ளங்கள், தன்னைப் பின்தொடர்வது இயலாது
என்று கூறும் இயேசுவுக்கு நமது பதில் என்ன?
ஞாயிறு அருவி மறையுரைகள் இனிய தோழன்
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி
மாணிக்கம் , திருச்சி
பொதுக் காலத்தின் 23-ஆம் ஞாயிறு
இன்றைய வாசகங்கள்
சாலமோனின் ஞான நூல் 9: 13-18
பிலமோன் 9b-10, 12-17
லூக்கா 14:25-33
நாக்கில் பட்ட சுவையும் நலமில்லா வாழ்வும்
நிகழ்வு: நான் 2008ஆம் ஆண்டு எங்கள் மறைமாவட்ட இளங்குருமடத்தில்
சேர்ந்த போது எங்களுக்கு நடந்த முதல் மாதாந்திர தியானத்தில்
எங்கள் ஆன்மிகத் தந்தை சொன்ன அருமையான கதை ஒன்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அழகிய எழில் கொஞ்சம்
இயற்கை சூழந்த மலை பகுதிக்கு அருகில் மடம் ஒன்று இருந்தது.
அதில் துறவறம் மேற்கொள்ள விரும்பி பல இளைஞர்கள் பயிற்சி
பெற்றுக்கொண்டிருந்தனர். செபம், தவம், ஒறுத்தல்,
சீடத்துவம் என்றெல்லாம் தங்கள் வாழ்வை பல்வேறு ஆன்மிகப்
பயிற்சிகளால் மெருகுவு+ட்டி கொண்டிருந்தனர். எல்லாரும்
நன்றாக படித்து கொண்டிருந்தனர். அப்போது அம்மடத்தின்
தலைவர் இறுதியாண்டை நெருங்கிக் கொண்டிருந்த ஏழு
மாணவர்களைக் உலக அனுபவத்திற்காக ஒரு நாள் வெளியே
அனுப்பினார். போங்கள், நேரத்தை நகரில் உள்ளவரோடு
செலவிடுங்கள். அனுபவம் பெற்று வாருங்கள் என்றார். தலைவரின்
கட்டளைப்படி சென்றனர். மாலையானதும் மடத்திற்கு
திரும்பினர். மடத்தின் தலைவர் இரவு உணவு உண்பதற்கு முன்
கேட்கிறார்: எப்படி இருந்தது? நல்ல அனுபவம் கிடைத்ததா?
என்ன கற்றுக்கொண்டீர்கள்? அனைவரும் அவரவர் அனுபவத்தின்
அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். நன்று. நன்றாக நீங்கள்
அனுபவம் பெற்றதை எண்ணி மகிழ்கிறேன். வாருங்கள் உணவருந்த
செல்லலாம் என்று அழைத்து வந்தார். அனைவரும் உண்டனர்.
ஒருவர் மட்டும் சென்று, உணவு சமைத்த பாட்டியிடம் இன்னைக்கு
உப்பு கம்மியாயிருக்கு கொஞ்சம் கொடு என்றான். பாட்டி
எதுவும் அவனிடம் சொல்லாமல் நேராக தலைவரிடம் வந்து, இவன்
இந்தப்பணிக்கு தகுதியற்றவன். இவனை உடனே வெளியே
அனுப்புங்கள் என்றார். திக்குமுக்காடிபோன தலைவர் ஏன்
என்றார். இவன் நாக்கில் சுவை வந்துவிட்டது. இவன் வாழ்வு
நலமானதாய் அமையாது. சீடத்துவ வாழ்வின் சுவை இவனைவிட்டு
அகன்றுவிடும் என்றார். இதுவரை உணவில் நான் உப்பிட்டதே
இல்லை. அதையெல்லாம் சாப்பிட்டவன், இன்று உப்பில்லை என்று
சொல்கிறான் என்றார், எங்கோ இவனின் நாக்கில் சுவை
ஒட்டியிருக்கிறது. அது நீங்காது எனவே இவனை நீக்கிவிடுங்கள்
என்றார். ஒட்டிய சுவை நம்மைக் கடவுளிடமிருந்து
ஓரங்கட்டிவிடும். ஒதுக்கிவிடும். ஒன்றுமில்லாமல்
ஆக்கிவிடும். ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் மாற்றிவிடும்.
சிதறிய மனதோடு வாழும் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில்
இருக்கிறோம். எனக்கான சீடத்துவம் என்னவென்று?
இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
இன்றைய நாள் வாசகங்கள் எவ்வாறு ஒருவர் உண்மையான சீடத்துவ
வாழ்வில் பங்கேற்க முடியும் என்ற வாழ்வியல் பாடங்களைக்
கற்றுக்கொடுக்கின்றன. ஆண்டவரின் அழைப்பை ஏற்றுக்கொள்கிற
நாம் ஒவ்வொருவருமே அவரின் சீடத்துவத்தில் பங்கேற்க
வேண்டுமென்பதே இறைவனின் விருப்பமாய் இருக்கின்றது. அத்தகைய
விருப்பத்தை நிறைவேற்ற எத்தகைய மனிதனாய் நாம் வாழ
வேண்டுமென்பதை தெளிவாய் படம் பிடித்து காட்டுகிறது இன்றைய
இறைவாக்கு வழிபாடு. நாக்கில் பட்ட சுவை நலமான வாழ்வை இவனை
பேண விடாது என்றுரைத்த அந்த மூதாட்டியின் வார்த்தைகள்
நமக்கும் பொருந்தும். என் நாக்கின் சுவை எதன் மீது
இருக்கிறதோ அதை பொருத்துதான் என் மனம் செயலாற்றும். அதுவே
சீடத்துவ வாழ்வைத் தடுக்கவும், தடுக்க வரும் தடைகளைத்
தகர்க்கவும் செய்யும். இதைத்தான் இயேசு இவ்வாறு
சொல்கிறார்: "உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள்
உள்ளமும் இருக்கும்" (மத் 6:21). ஆக நம்முடைய நாக்கின்
சுவை சரியாக மாற முயற்சிப்பதுதான் சீடத்துவத்தின்
அடையாளம். இதை வலியுறுத்தி வாழ்விற்கான வழியைத்தான் இன்று
நாம் வாசிக்க கேட்கும் முதல் வாசகமும்,இரண்டாம் வாசகமும்
பறைசாற்றுகிறது.
முதல் வாசகத்தில்,
சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இப்பகுதி
எவ்வாறு ஒருவர் ஞானமிக்கவராக ஆண்டவரின் சீடத்துவத்தில்
பங்கேற்க முடியும் என்ற புரிதலை கொடுக்கிறது. மிகச்
சுருக்கமாக பார்க்கையில், மனிதன் தன் நிலையில்
தற்காலிகமானவன் என்பதே ஞானம் அறிவுறுத்தும் பாடம். இவ்வுலக
செல்வம், பெருமை, புகழ், பதவி, பட்டம், ஆடம்பர வாழ்க்கை
இவையெல்லாம் ஆன்மாவை அழிக்கக்கூடியது. கீழ்நோக்கி நம்மைத்
தள்ள கூடியது. நிலையற்றவை. இங்கு ஞானநூலின் ஆசிரியர் ஒரு
கருத்தை மிகத் தெளிவாக கொடுக்கிறார்: "மண்ணுலகில்
உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது!" (சாஞா 9: 16).
அப்படியென்றால், நாம் வாழும் வாழ்க்கை சருகு போன்றது.
எப்போது வேண்டுமானாலும் உதிர்ந்து போகும். எனவேதான்
அன்பிற்கினியவர்கள், நம் வாழ்வைச் சற்று ஆழமாக சிந்தித்து
பார்க்க வேண்டும். ஞானமற்றவராய் செய்கிற அனைத்து
செயல்களும் நாக்கில் ஒட்டிய சுவையே. அது வீண் சுவை நம்
வாழ்வை வீணடிக்கும் தேவையற்ற சுவை. இதை மையப்படுத்தியே
நிறைய கேள்விகளை இன்றைய முதல் வாசகம் நம்மிடம் கேட்கிறது.
கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக்
கண்டுபிடிப்பவர் யார்? இதெல்லாம் வெறும் கேள்விகள் அல்ல.
சீடத்துவ வாழ்விற்கான அடிப்படை தத்துவங்கள். என்ன சொல்ல
விழைகிறார்: வெறும் மூன்றே கூற்றுகள்தான்.
இறைத் திட்டத்தை அறிதல்
இறையிடத்தில் ஒப்படைத்தல்
இறைத் துணையை நாடுதல்
இம்மூன்றும் யாரிடத்தில் தெளிவாய் விளங்குகின்றதோ அவர்கள்
ஞானமிக்கவராய் இறைவனின் சீடராய் வாழ்கிறார். இதுவே
ஞானமாகவும் உள்ளது.
இதே பின்னணியில் இன்றைய நற்செய்தியைச் சற்று கூர்ந்து
கவனிக்க விரும்புகிறேன். இறைத்திட்டம், இறைவனிடத்தில்
ஒப்படைப்பு, இறைத் துணையை நாடுதல் இவையனைத்தும் இன்று
இல்லாமல் போனதை இரு உவமைகள் வழியாக இயேசு குறித்து காட்ட
விரும்புகின்றார். ஒன்று: கோபுரம் கட்டும் நிகழ்வு,
இரண்டு: போர் புரிதல். இவை இரண்டும் இரண்டு பலங்களின்
அடிப்படை கூறு:
கோபுரம் கட்டுதல் - பண பலம்
போர் புரிதல் - ஆள் பலம்
இவையிரண்டுமே சீடத்துவத்திற்கு எதிரானவை. சீடத்துவ கனவைத்
தகர்க்கும் வழிகள் என்கிறார் இறைமகன் இயேசு. இத்தகைய
பின்னணியில் இன்னுமொரு விடயத்தை இயேசு தருகிறார். என்னைப்
பின்பற்ற விரும்பும் எவரும் பெற்றோர்களையும், சகோதர,
சகோதரிகளையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு வர வேண்டும்
எனவும், தம் உயிரையும் இழக்கத் துணிய வேண்டுமென்றும்
பறைசாற்றுகிறார். இப்படியாய் வாழ முடியாதவர்கள் என்
சீடராய் இருக்க முடியாது என்கிறார். என்ன இது சற்றும்
மாறுப்பட்ட போதனையாய் இருக்கிறது என சிலர் யோசிக்கலாம்.
பத்துக்கட்டளையில் நான்காம் கட்டளை: "உன் தந்தையையும்,
தாயையும் மதித்து நட" (விப 20:12) என்கிற கட்டளைக்கு
புறம்பாக இயேசு போதிக்கிறாரா? "நான் உங்களிடம் அன்பு
செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு
செலுத்துங்கள்" (யோவா 13:34) என்கிற கட்டளையை இயேசு
பின்பற்ற வேண்டாமென்கிறாரா? இல்லை அன்பிற்குரியவர்களே,
இன்றைய நற்செய்தியில் எல்லாவற்றையும் கைவிட்டு, துறந்து
என்னை மட்டும் மேலானதாக கருதாதவன் என் சீடனாய் இருக்க
தகுதியற்றவன் என்றே கூறுகிறார். இதை எப்படிப்
புரிந்துகொள்வது? பெற்றோரை அன்பு செய்வதுகூட ஆண்டவருக்கு
அடுத்ததாய் அமைதல் வேண்டும். ஆனால் இன்றெல்லாம் நாம்
கடவுளை கடைசியாக்கிவிட்டு, காசு பார்க்கும் உழரவெநசராய்
மாற்றிவிட்டோம். இதை விடுத்து என்றும் உண்மையான சீடத்துவ
வாழ்வு வாழ எதை செய்ய வேண்டும் என்று வழிகாட்டுகிறது
இரண்டாம் வாசகம்.
இரண்டாம் வாசகத்தில்,
சீடன் என்பவன் எதற்கும் அடிமையாகி விட கூடாது என்பதையும்,
அடிமை நிலைகூட அன்பு நிலையான மாற வேண்டுமென்ற கருத்தை
புனித பவுல் அடிகள் உரைக்கிறார். சிறையிலிருக்கும் புனித
பவுல் பிலமோனிடம் இருந்த ஒனேசிமுவை மீண்டும் ஏற்றுக்கொள்ள
கடிதம் எழுதுகிறார். தன் தவற்றால் சீடத்துவ வாழ்வின்
சுவையை இழந்த ஒனேசிமு மீண்டும் அத்தகைய நிலையைப்
பெற்றுக்கொள்ள உதவுகிறார். 1கொரி 7: 24இல் "சகோதர,
சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற
நிலையிலேயே கடவுள்முன் நிலைத்திருங்கள்" என்று
வாசிக்கின்றோமே இதுதான் உண்மையான சீடத்துவத்தின் அடையாளம்.
கடவுள் நமக்கு நலமான வாழ்வையும், ஆழமான ஆன்மிகச்
சுவையையும் வழங்குகிறார். ஆனால் நாம்தான் அதை பல
நேரங்களில் இழந்தும், தேவையற்ற சுவையையும் நம் நாக்கில்
மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்விலும்கூட ஒட்டிக்கொள்கிறோம்.
நாக்கை நீட்டி நன்மை வாங்கும் நம் நாக்கினால் நலமான
வாழ்வைத் தரும் இயேசு வரும்போது வேறு ஏதாவது முன்னரே
ஒட்டியிருந்தால், இயேசுவின் வருகையும் நமக்கு தெரியாது,
அவரின் வருகைக்கான நோக்கமும் புரியாது. இதைத்தான்
சீடத்துவம் என்று மொழிகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு. எனவே
சிந்தித்து பார்ப்போம். நான் எவ்வாறு இயேசுவின்
சீடத்துவத்தில் பங்கேற்க முடியும்? அல்லது இயேசு காட்டும்
சீடத்துவ வாழ்வில் நான் எப்படி என் வாழ்வைக் கண்டுகொள்ள
முடியும்? அதற்கு மூன்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இயேசுவின் சீடனாய் அவரை பின்பற்றி வாழ இம்மூன்று வழிகள்
நமக்கு உதவட்டும். யார் ஒருவர் இயேசுவின் சீடத்துவத்தில்
பங்கேற்க விரும்புகிறாரோ அவர்,
இணைய வேண்டும்
இழக்க வேண்டும்
துணிய வேண்டும்
இணைய விரும்புவோர், இழக்க துணிவர், இழக்க துணிபவர் எத்தகைய
நிலையிலும் துணிவோடு பயணிப்பர். இதுதான் சீடத்துவத்தின்
அடையாளம்.
முதலில், இணைய வேண்டும்:
இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்தில்
பங்கேற்க விரும்புபவர் முதலில் கடவுளோடு இணைய வேண்டும்.
கடவுளோடு இணையாதவர் கடவுளின் கட்டளைகளுக்கு தங்களை
உட்படுத்த முடியாது. மாற்கு 3: 14 இல் பார்க்கிறோம் -
"தம்மோடு இருக்கவும்" இயேசு சீடர்களுக்கு போதித்த கட்டளை.
சீடர்களாக வாழ நினைப்பவர்கள் அவரோடு இருக்க வேண்டும்.
இருந்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும். யோவான்
15: 4, "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும்
என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து
இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும்
என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது" என்று
வெளிப்படையாகவே இயேசு யோவான் நற்செய்தியில் கூறுகிறார்.
எனவே இறைவனுடன் இணையும் பொழுதுதான் எவையெல்லாம் என்
வாழ்வின் தேவையற்ற இணைப்புகள் என்று என்னால் புரிந்துகொள்ள
முடியும். அத்தகைய நிலையைத்தான் புனித பவுல் இவ்வாறு
சொல்கிறார்: 1கொரி 11: 1 "நான் கிறிஸ்துவைப் போல்
நடப்பதுபோன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்". இயேசு
எப்படி நடந்தார்? "மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே
இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்" (மத்
14:23) இதுதான் உண்மையான இணைதல். இது இருக்கும்போது நாம்
அவரின் சீடராய் வாழ்கிறோம்.
இரண்டாவது, இழக்க வேண்டும்:
இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்துக்கு
தடையாக இருக்கும் அனைத்தையும் இழக்க வேண்டும். இழப்பே
இணையற்ற வாழ்வைப் பெற்றுத்தரும். இழப்புகள் ஒவ்வொன்றுமே
இணையற்ற இணைப்புகளைக் கொடுக்கின்றன. இதை புனித பவுல் தன்
வாழ்வின் அனுபவத்திலிருந்து இவ்வாறு பறைசாற்றுகிறார்:
"நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால்
அது எனக்கு ஆதாயமே" (பிலி 1:21). "உண்மையில் என்னைப்
பொறுத்தமட்டில், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய
அறிவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற
எல்லாவற்றையும் இழப்பாகக் Pயபந 5 ழக 5 கருதுகிறேன்" (பிலி
3:8) என்று சீடத்துவத்தில் பங்கேற்க எல்லாவற்றையும் இழக்க
விரும்புகிறார் பவுல். இணைவது முழுமையாய் அமைய
வேண்டுமென்றால், அதற்கு நாம் இழக்க வேண்டும். இழப்பினால்
இணைப்பு இன்னும் அதிகமாகவும், நெருக்கமாகவும் மாறும்.
மூன்றாவது, துணிய வேண்டும்:
இயேசுவின் சீடத்துவ வாழ்வில் பங்கேற்க துணிவு மிக அவசியம்.
துணிவு என்றால் சண்டைக்கு போவது மட்டுமல்ல. ஆன்மிகத்தைப்
பின்பற்றுவதில்கூட நமக்கு துணிவு வேண்டும். எப்போது வரும்,
தன்னிலை உணரும் போதும், கை சுத்தமாய் இருக்கும் போதும்.
மடியில் கணம் இருந்தால், வழியில் பயம் இருக்கும்
என்பார்கள். அது மனித வாழ்வுக்கு மிகவே பொருந்தும். எவர்
ஒருவர் தன் வாழ்வில் துணிந்து முன்னேறுகிறாரோ அவர்
சீடத்துவத்தின் அடையாளத்தை அணிந்;துகொள்கிறார். ஏனெனில்;,
நாம் போராடுகிறோம், எவ்வாறு எபே 6:12 இல் "நாம்
மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர்,
அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது
ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும்
போராடுகிறோம்" என்கிறது பவுலின் வார்த்தைகள். இத்தகு
சூழலில் நிச்சயம் நமக்கு துணிவு அவசியம். அது
நற்செய்தியில் வருவதுபோன்று ஆள்பலமோ, பணபலமோ அல்ல. மாறாக,
இறை பலம். எப்படி கிடைக்கும்? பிலி 4:8 "சகோதர, சகோதரிகளே,
உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, தூய்மையானவை எவையோ,
விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ,
நற்பண்புடையவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்"
இதுதான் துணிவுமிகுந்த வாழ்வு.
ஆகவே, இவையனைத்தும் நம்மிடம் இருந்தால், இறைவனுடன்
இணைவதும், இழப்பில் மகிழ்வதும், இணைவதன் வழியாக, இழப்பதன்
வழியாக துணிவோடு பயணிக்கும் ஆற்றலை பெறுவதிலும் எவ்வகை
சிரமமமும் நம்மில் எழாது. சீடத்துவ வாழ்வும் சிறப்பாய்
அமையும். அதற்கான அருளைத் தொடர்ந்து கேட்போம்!
"கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம்
முதிர்ச்சியடைவோம்" (எபே 4:13)
மறையுரைச்சிந்தனை
-அருள்பணி
மாணிக்கம் , திருச்சி
நாக்கை நீட்டி நன்மை வாங்கும் நம் நாக்கினால் நலமான
வாழ்வைத் தரும் இயேசு வரும்போது வேறு ஏதாவது முன்னரே
ஒட்டியிருந்தால், இயேசுவின் வருகையும் நமக்கு தெரியாது,
அவரின் வருகைக்கான நோக்கமும் புரியாது. இதைத்தான்
சீடத்துவம் என்று மொழிகிறது இன்றைய ஞாயிறு வழிபாடு. எனவே
சிந்தித்து பார்ப்போம். நான் எவ்வாறு இயேசுவின்
சீடத்துவத்தில் பங்கேற்க முடியும்? அல்லது இயேசு காட்டும்
சீடத்துவ வாழ்வில் நான் எப்படி என் வாழ்வைக் கண்டுகொள்ள
முடியும்? அதற்கு மூன்று வழிகளை நாம் பின்பற்ற வேண்டும்.
இயேசுவின் சீடனாய் அவரை பின்பற்றி வாழ இம்மூன்று வழிகள்
நமக்கு உதவட்டும். யார் ஒருவர் இயேசுவின் சீடத்துவத்தில்
பங்கேற்க விரும்புகிறாரோ அவர்,
இணைய வேண்டும்
இழக்க வேண்டும்
துணிய வேண்டும்
இணைய விரும்புவோர், இழக்க துணிவர், இழக்க துணிபவர் எத்தகைய
நிலையிலும் துணிவோடு பயணிப்பர். இதுதான் சீடத்துவத்தின்
அடையாளம்.
முதலில், இணைய வேண்டும்:
இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்தில்
பங்கேற்க விரும்புபவர் முதலில் கடவுளோடு இணைய வேண்டும்.
கடவுளோடு இணையாதவர் கடவுளின் கட்டளைகளுக்கு தங்களை
உட்படுத்த முடியாது. மாற்கு 3: 14 இல் பார்க்கிறோம் -
"தம்மோடு இருக்கவும்" இயேசு சீடர்களுக்கு போதித்த கட்டளை.
சீடர்களாக வாழ நினைப்பவர்கள் அவரோடு இருக்க வேண்டும்.
இருந்தால் மட்டுமே நம்மால் புரிந்துகொள்ள முடியும். யோவான்
15: 4, "நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும்
என்னோடு இணைந்திருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து
இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும்
என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது" என்று
வெளிப்படையாகவே இயேசு யோவான் நற்செய்தியில் கூறுகிறார்.
எனவே இறைவனுடன் இணையும் பொழுதுதான் எவையெல்லாம் என்
வாழ்வின் தேவையற்ற இணைப்புகள் என்று என்னால் புரிந்துகொள்ள
முடியும். அத்தகைய நிலையைத்தான் புனித பவுல் இவ்வாறு
சொல்கிறார்: 1கொரி 11: 1 "நான் கிறிஸ்துவைப் போல்
நடப்பதுபோன்று நீங்களும் என்னைப் போல் நடங்கள்". இயேசு
எப்படி நடந்தார்? "மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே
இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்" (மத்
14:23) இதுதான் உண்மையான இணைதல். இது இருக்கும்போது நாம்
அவரின் சீடராய் வாழ்கிறோம்.
இரண்டாவது, இழக்க வேண்டும்:
இயேசுவின் சீடனாய் வாழ வேண்டுமென்றால், சீடத்துவத்துக்கு
தடையாக இருக்கும் அனைத்தையும் இழக்க வேண்டும். இழப்பே
இணையற்ற வாழ்வைப் பெற்றுத்தரும். இழப்புகள் ஒவ்வொன்றுமே
இணையற்ற இணைப்புகளைக் கொடுக்கின்றன. இதை புனித பவுல் தன்
வாழ்வின் அனுபவத்திலிருந்து இவ்வாறு பறைசாற்றுகிறார்:
"நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே, நான் இறந்தால்
அது எனக்கு ஆதாயமே" (பிலி 1:21). "உண்மையில் என்னைப்
பொறுத்தமட்டில், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய
அறிவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற
எல்லாவற்றையும் இழப்பாகக் Pயபந 5 ழக 5 கருதுகிறேன்" (பிலி
3:8) என்று சீடத்துவத்தில் பங்கேற்க எல்லாவற்றையும் இழக்க
விரும்புகிறார் பவுல். இணைவது முழுமையாய் அமைய
வேண்டுமென்றால், அதற்கு நாம் இழக்க வேண்டும். இழப்பினால்
இணைப்பு இன்னும் அதிகமாகவும், நெருக்கமாகவும் மாறும்.
மூன்றாவது, துணிய வேண்டும்:
இயேசுவின் சீடத்துவ வாழ்வில் பங்கேற்க துணிவு மிக அவசியம்.
துணிவு என்றால் சண்டைக்கு போவது மட்டுமல்ல. ஆன்மிகத்தைப்
பின்பற்றுவதில்கூட நமக்கு துணிவு வேண்டும். எப்போது வரும்,
தன்னிலை உணரும் போதும், கை சுத்தமாய் இருக்கும் போதும்.
மடியில் கணம் இருந்தால், வழியில் பயம் இருக்கும்
என்பார்கள். அது மனித வாழ்வுக்கு மிகவே பொருந்தும். எவர்
ஒருவர் தன் வாழ்வில் துணிந்து முன்னேறுகிறாரோ அவர்
சீடத்துவத்தின் அடையாளத்தை அணிந்;துகொள்கிறார். ஏனெனில்;,
நாம் போராடுகிறோம், எவ்வாறு எபே 6:12 இல் "நாம்
மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சி புரிவோர்,
அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது
ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீய ஆவிகள் ஆகியவற்றோடும்
போராடுகிறோம்" என்கிறது பவுலின் வார்த்தைகள். இத்தகு
சூழலில் நிச்சயம் நமக்கு துணிவு அவசியம். அது
நற்செய்தியில் வருவதுபோன்று ஆள்பலமோ, பணபலமோ அல்ல. மாறாக,
இறை பலம். எப்படி கிடைக்கும்? பிலி 4:8 "சகோதர, சகோதரிகளே,
உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, தூய்மையானவை எவையோ,
விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ,
நற்பண்புடையவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்"
இதுதான் துணிவுமிகுந்த வாழ்வு.
ஆகவே, இவையனைத்தும் நம்மிடம் இருந்தால், இறைவனுடன்
இணைவதும், இழப்பில் மகிழ்வதும், இணைவதன் வழியாக, இழப்பதன்
வழியாக துணிவோடு பயணிக்கும் ஆற்றலை பெறுவதிலும் எவ்வகை
சிரமமமும் நம்மில் எழாது. சீடத்துவ வாழ்வும் சிறப்பாய்
அமையும். அதற்கான அருளைத் தொடர்ந்து கேட்போம்!
"கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம்
முதிர்ச்சியடைவோம்" (எபே 4:13)
மறையுரை
முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க்
கழகம் பெங்களூர்
முதல் வாசகப் பின்னணி (சா.ஞா.
9:13-18)
சாலமோன் அரசன் தன்னுடைய இறையனுபவத்தைப் பகிர்ந்து
கொள்கின்றார். ஞானத்தின் கருப்பொருள் என்ன என்பதை
எடுத்து விளக்கி இறையுறவைப் புதுக் கண்ணோட்டத்தில் காண
வழி செய்கின்றது இவ்வாசகம். ஞானம் இல்லாத போது நாம்
இறைவனைக் கண்டூணர்வது என்பது இயலாத ஒன்றாகிவிடுகின்றது.
மனித புலன்களால் அறிய இயலாதக் கடவுளை, மதிநுட்ப அறிவைக்
கொண்டு, காண முடியாது என்பதைத் தெளிவுப்படுத்தும் பகுதி.
இந்நூல் எழுதப்பட்ட காலக்கட்டங்களில், மக்களின் மனம்
கடவுளை விட்டூ வெகுத் தொலைவில் இருந்திருக்க வேண்டும்.
பிற்கால ஆசிரியர்கள் இந்நூலில் உள்ள சில பகுதிகளில்
தங்களின் கருத்துகளைப் பரிந்துரைத்திருக்கலாம்.
அக்காலத்தில் கிரேக்கத் தத்துவங்கள் உலகமெங்கும்
பரப்பப்பட்டிருந்தது. எனவே அறிஞர்கள் அனைவரும் கடவுளை
அறிய ",அறிவு", இருந்தால் போதுமென நினைத்தக்
காலகட்டத்தில் ஞானத்தைப் பற்றி சற்று உயர்வாக
எழுதியிருந்திருக்கலாம்.
இரண்டாம் வாசகப் பின்னணி (பில. 9-10, 12-17)
செல்வந்தரான பிலமோன், அடிமையான ஒனேசிமுஸ்சை மீண்டும்
ஏற்றுக் கொள்வதன் மூலம் கிறிஸ்தவ அன்பைப்
பிரதிபலிக்கின்றார். ",கிறிஸ்துவின் கைதியாயிருந்த", (வ.8)
தூய பவுல் சிறையிலே தான் இருப்பதைக் குறிப்பிட்டாலும்,
கிறிஸ்துவின் அன்புச் சிறைக்குள்
கைதியாக்கப்பட்டிருக்கின்றார் என்று அர்த்தம்
கொள்ளலாம். ஒனேதிமுஸ் மனமாறியவுடன், அவனை ",நான்
ஈன்றெடுத்தப் பிள்ளை", என்று வர்ணிப்பது, கிறிஸ்துவின்
அன்புக் கோட்டைக்குள் நுழைந்தக் குழந்தையாகக்
காட்டுகின்றார். இன்றைய இரண்டாம் வாசகப் பகுதி,
பவுலுக்கும் ஒனேசிமுஸ்க்கும் உள்ள அன்புறவை விடக்
கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவ நெறிதவறிய மக்களுக்கும் உள்ள
அன்புறவு சற்று மேலானது என்பதை விளக்குகின்றது.
இக்கடித்ததில் தூய பவுல், கிறிஸ்தவர்களின் முக்கியமான
பண்பான அன்பு செய்வது குறித்து தெளிவுப்படுத்து கின்றார்.
கிறிஸ்தவ அன்பு ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலமாக இமைய
வேண்டும். இறைவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமம்
என்பதை எடுத்துக் காட்டுவது அன்பே என்று கூறுகின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 14:25:33)
இயேசு எருசலேம் நோக்கிப் பயணம் செய்கின்றார் (9-19).
பயணத்தின் போது கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளைப் போதித்துக்
கொண்டே செல்கின்றார். இன்றையப் பகுதியில்
இறைப்பணியாளன் (அல்லது) தூதுவர் எவ்வாறு இருக்க
வேண்டும் என்பதை நயம்பட எடுத்துரைக்கின்றார், லூக்கா
நற்செய்தியாளர். முற்பகுதியில் 9:23 27, 57, 62-இல்
சீடத்துவத்தின் பண்புகளைப் பற்றி எடுத்து கூறினாலும்
இங்கு, சீடத்துவப் பணி முழு மன நிறைவோடு அமைய வேண்டும்
என்பதை ஒப்புமைகள் மூலம் எடுத்து கூறுகின்றார்.
எவனொருவனாலும், மனித உயிரின் மீதுள்ள ஆசையாலும் உறவு
முறைகளோடூம் பொருளாசையினாலும் இறைவனை வந்தடைய முடியாது
என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார்.
மறையுரை
நம் கடவுளை மூன்று வாசகங்களும் தெளிவுபடூத்துகின்றன.
ஞானத்தின் மூலமாகவும், அன்பின் வழியாகவும், உறவுகள்,
பொருளாசைகள் இவற்றைத் தவிர்ப்பதினாலும், உண்மையான பரம்
பொருளாகிய இறைவனை, இறை அன்பைப் பெற்றுக் கொள்ள
முடியும். அன்பே ஞானத்திற்கு வழி செய்கின்றது,
அன்பினால்தான். உலக ஆசைகளை வெறுத்து ஒதுக்க முடியும்.
இதையே இன்றைய நிலையில்லா உலகில் அன்பு எவ்வளவு அவசியம்
என்பதையும், ஞானத்தின் பேறுபலன்களைச் சுவைத்து உணர
அன்பு என்ற கனிரசம் இன்றியமையாதது என்பதையும் பவுல்
தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் பெங்களூர்
பொதுக் காலம் ஒருபத்தி மூன்றாம்
ஞாயிறு
வழக்கமாக ஞாயிறு வாசகங்களில் முதல் "வாசகமும்
நற்செய்தியும் இணைந்து செல்லும். ஆனால் இன்று இரண்டாம்
வாசகமும் நற்செய்தியும் ",சீடன் - சீடத்துவம்' எனும்
கருத்தில் இணைந்து செல்கின்றன. இரண்டாம் வாசகத்தில்
பவுலடியார் தனக்குச் சீடரான ஓனேசிமு பற்றி தனது இன்னொரு
சீடரான பிலமோனுக்கு மடல் எழுதுகின்றார். நற்செய்தியில்
இயேசு தன்னைப் பின்பற்றி வருபவரிடம் இருக்கவேண்டிய பண்பு
நலன்களைப் பற்றி விவரிக்கின்றார். இதைப்பற்றி விரிவாகக்
காணும் முன் இன்றைய நற்செய்திப் பகுதிக்கான சில
பின்னணித் தகவல்களை அறிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி லூக் 74:15-35 எனும் நீண்ட பகுதியில்
இரண்டாவது பகுதியாகும். இப்பகுதிக்குப் (வச. 15-35)
லூக் 7427-14 பின்னணியாக அமைகின்றது. அதாவது இயேசு
பரிசேயர் தலைவர் வீட்டில் விருந்தில் இருக்கின்றார்.
மற்றவர்கள் அவர்மீது குற்றம் சுமத்தக்
காத்திருக்கின்றார். இயேசு நீர்க் கோவையுள்ள ஒருவரை
குணமாக்குகின்றார். அதற்கான காரணத்தை விளக்கு கின்றார்.
பின் பந்தியில் நடந்துகொள்ளும் முறையை விளக்கி
",தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்படுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்'' (வச. 11)
எனும் உயரிய கருத்தையும், இறையரசின் தலைகீழ்
மாற்றத்தையும் ஏழையரைவிருந்துக்கு அழைக்கவேண்டும் எனும்
அறிவுரையுடன் முடிக்கின்றார். இவற்றை யெல்லாம் கடந்த
ஞாயிறு கண்டோம் இதைத் தொடர்ந்து, பந்தியின் சூழலிலே
இன்னொரு கருத்து, அதாவது, ",இறையாட்சி விருந்தில் பங்கு
பெறுவோர் யார்?", என்பதற்கு இயேசு ஓர் உவமையின்
வாயிலாகப் பதிலளிக்கின்றார். அதில் பெரிய விருந்துக்கு
மூன்று வகையான அழைப்பு விடப் படுவதையும், மூன்று
வகையினர் அந்த அழைப்பை நிராகரிப் பதையும்
விளக்குகின்றார். எனவே இன்றைய நற்செய்திப் பகுதிக்கு
முந்தைய பகுதி அழைப்பு, ஏற்க, எதிர்ப்பு எனும் சூழலில்
நிறைவுபெற இன்றைய பகுதி அதையொட்டி இயேசு தன் பின்னே
தன்னைப் பின்பற்றி வந்த பெருந்திரளான மக்களுக்கு
சீடத்துவதின் சவால், அதற்குத் தரவேண்டியவிலை பற்றி
விவரிக்கின்றார்.
இன்னொரு வகையில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தை
லூக்கா விவரிக்கும்போது மனமாற்றத்திற்கான அழைப்பு,
சீடத்துவத்தைப் பற்றிய போதனை ஆகியவற்றைப் பற்றியும்
விளக்கிக் கொண்டு போவார். கடந்த உவமையில்
பரிசேயர்களுக்குப் பொருள்கள்மீதும், உறவுகள் மீதும்
அதிக பற்று கொண்டிருப்போர் இறையாட்சியைச் சுவைக்க
முடியாது என்பதை விளக்கியபின் (வச. 76-24), பெருந்திரளான
மக்களுக்கும் அதே செய்தியை நேரடியாகவும், இரு உவமைகள்
மூலமாகவும் மீண்டும் வலியுறுத்துகின்றார் (வச. 25-33).
1. இயேசுவே முதன்மை
விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டவர்
உவமையில் ஒருவர் ",எனக்கு இப்போதுதான் திருமணம்
ஆயிற்று", என்று (வச. 20) உறவைக் காரணம் காட்டி
விருந்துக்கு வராமல்போன பின்னணியில் இயேசு ",என்னிடம்
வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர்
சகோதரிகள் ",அகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட
மேலாகக் கருதினால் அவர் என் சீடராயிருக்க முடியாது",
(வச. 26) என்கிறார். மேலும் வேறு இருவர் வயல், ஏர்
மாடுகள் என தம் உடமைகளை காரணம் காட்டி (வச. 78-19)
மறுத்தனர். எனவே 'இயேசு, ",உங்களுள் தம் உடைமையை
எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க
முடியாது", (வச. 33). எனவே உடமை, உறவுகள், ஏன் தன்
உயிரையும் விட அதிகமாய் இயேசுவை அன்பு செய்பவரே அவரின்
சீடராக முடியும். இவற்றையெல்லாம் (உறவு, உயிர், உடமை)
துறப்பதே உண்மையான சிலுவை. எனவே, ",தம் சிலுவையைச்
சுமக்காமல் என்பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க
முடியாது", (வச. 27) என்கிறார் இயேசு.
2. எண்ணித் துணிக...
சீடத்துவத்தைப் பற்றிய அறிவுரையைத் தொடர்ந்து (வச.
26-27) இயேசு இரு உவமைகள் மூலமாக இந்த அழைத்தல் வாழ்வை
அல்லது சீடத்துவ வாழ்வை ஏற்பதற்கு முன் தீர யோசித்து,
திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் எனும் கருத்தை
வலியுறுத்துகின்றார். எனவே ",உன்னால் மூடிக்க மூடியாது
என்றால் தொடங்காதே' என்பதே இவ்விரு உவமைகளின் சாரம்.
இதையே திருவள்ளுவர் ",எண்ணித் துணிக... கருமம்
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு", என்றார்.
முடிவாக. . .
முதலாவதாக, இயேசுவின் சீடராக இருப்பது என்பது
இறைவனிடமிருந்துவரும்அழைப்பாகஇருந்தாலும்நாம் அதற்குச்
செவிமடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த
அழைத்தல் வாழ்வில் இயேசுவே முதன்மையானவராக
இருக்கவேண்டும். உறவுகளோ, உடமைகளோ, உயிரோ இதில்,
இயேசுவுக்கும் சீடருக்கும் இடையேயான உறவில் இடை வந்து
விடக் கூடாது. இத்தகைய சீடத்துவ வாழ்க்கையைத் தேர்ந்து
தெளிந்து, திட்டமிட்டு இறையருள் துணையுடன் வாழ இன்றைய
இறைவார்த்தை அழைக்கின்றது.
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி
சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - இருபத்து மூன்றாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : சாஞா. 9: 13 - 18
ஞானம், இறைவனால் அருளப்படும் அறிவு, அதன் செயலாற்றல் ஆகியவற்றைப்
பற்றி விரிவாகக் கூறுகிறது சாலமோனின் ஞானம். இஸ்ரயேல் வரலாற்றின்
தொடக்கத்தில் தொழில் நுட்பத்திறன், அதற்கு ஆசிரியர்கூறிய
விளக்கம் ஆகியவை ஞானமாக எண்ணப்பட்டது. நாளடைவில் ஞானம் ஒரு
ஒழுக்க நெறியாக, இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள
நெருங்கிய தொடர்பாக எண்ணப்பட்டது. தொடர்ந்து, ஞானம் இறைவனுடன்
என்றும் இருக்கும் ஓர் ஆளாக உருவகிக்கப்பட்டது. இறைவனது படைப்பிலே
பங்கெடுக்கும் அளவுக்கு அது உயர்த்தப்பட்டது. அதே ஞானம் இஸ்ரயேல்
மக்களிடையே தங்கி அவர்களை வழி நடத்தும் கருவியாகக் கருதப்பட்டது.
"இறைவா இத்தகைய ஞானத்தை எனக்குத் தருவாயாக" என்று மன்றாடும்
பாணியில் அமைந்துள்ளதே இன்றைய வாசகம்.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும்
நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர் (நீமொ.1:7)
ஞானத்தின் மேல் ஆசிரியர் கொண்டிருந்த மதிப்பும் (7:7-14)
அதன் பெருமையும் (7: 22-28) விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
",உம்மிடத்தில்தான் ஞானம் இருக்கிறது; உம் வேலைகள் அதற்குத்தான்
தெரியும். நீர் உலகை உண்டாக்கியபோது அது உம் அருகில் இருந்தது.
அது என்னுடனிருந்து என்னுடன் உழைக்கவும், உமக்கு உகந்தவற்றை
எனக்குக் கற்றுக் கொடுக்கவும் உமது பரிசுத்த வான்
வீட்டிலிருந்து அதை அனுப்பியருளும்", (9: 9 - 10). இறை ஞானத்தின்
சிறு துளி நம்மை வழி நடத்தும்படி மன்றாடுவோம். இறைவனின் ஞானமே
இயேசுவாகப் பரிணமித்துள்ளது (யோ. 1:1-5) என்பதை உணர்கின்றேனா?
மனித ஞானம்
"மனிதர்களுள் ஒருவன் அறிவு நிறைந்தவனாயிருந்தாலும், நீர்
அருளும் ஞானமும் அவனிடமில்லையேல் அவன் ஒன்றுமில்லை", என்பது
வேதவாக்கு. எனவேதான் இவ்வுலகப் போக்கின்படி ",இவ்வுலக ஞானம்
கடவுள் முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு,
"ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பார்",
என்கிறார் பவுல் (1 கொரி 3: 19). மனிதன் எவ்வளவுதான் தன்
அறிவைப் பெருக்கினாலும் இறைஞானத்தின் எல்லையை எட்ட
முடியாது. உலக ஞானிகள் ஒப்பற்ற இறைவனின் இலக்கணத்தை அவரது
வெளிச் செயல்கள் கொண்டு விளக்கினார்களே தவிர, அவரது உள்
வாழ்வை மூவொரு கடவுளின் முழுமையை அவர்களால் அறிய முடியவில்லை.
சாதாரண மனித ஞானத்தால் இறையுள்ளத்தை எம்மால் அறிந்து கொள்ள
முடியாது. நம்முடைய எண்ணங்கள் குறையுடையவை-பயனற்றவை. நமது
உடல் ஒரு மண் குடிசை; அதில் அழியாத ஆன்மா குடி கொண்டுள்ளது.
இந்த மட்பாண்டம் உடைந்து மண்ணோடு மண்ணாகிவிடும். அழியக்
கூடிய உடல் ஆன்மாவைப் பளுவாக்குகிறது. அழுத்துகிறது. எனவே
நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து பரிசுத்த ஆவியை
அனுப்பாமலும் இருந்தால் உமது திருவுளத்தை அறியக் கூடியவன்
யார்? (17) என்று கேட்கிறார் ஆசிரியர். நம் சாதாரண மனித
வாழ்வால் அடைய முடியாத ஒன்றை, திருமுழுக்கு வழியாக-தூய ஆவியைப்
பெற்றுக் கொண்டதன் வழியாக- அடைந்துள்ளோம்.
ஞான ஒளிக்காகத் தூய ஆவியின் துணையை வேண்டுவோம்.
நீர் ஞானத்தைத் தராமலும், உன்னதத்திலிருந்து உமது பரிசுத்த
ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உமத திருவுளத்தை அறியக்கூடியவன்
யார்?
இரண்டாம் வாசகம் : பில. 1: 9 10. 12-17
தவறு செய்து, தன் தலைவன் பிலமோனிடமிருந்து ஓடிவந்த ஒனேசிமுவை,
பவுல் அன்புடன் வரவேற்றார். அவனது விசுவாசக் கண்ணைத் திறந்து
இயேசுவில் அவனுக்குப் புது வாழ்வு அளித்தார். தவறு செய்த
அடிமையை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படி, பிலேமோனுக்கு எழுதப்பட்ட
சிபாரிசுக் கடிதமே இது.
அடிமையிடம் அன்பு (பரிவு)
சிறையிலிருந்த பவுலின் சிறிய மடல் இது. தன்னால் விசுவாச
வாழ்வுக்கு அழைக்கப்பட்டு திருநீராட்டுப் பெற்றவர்களைத் தன்
பிள்ளைகளாகவே எண்ணி அன்பு செய்பவர் பவுல். "நற்செய்தியின்
வழியாய் நான்தான் உங்களைக் கிறிஸ்துவுக்குள் ஈன்றெடுத்தேன்",
என்பார். ஒனேசிமுவும் இவரது அன்பு மகன். "பயனுள்ளவன்", என்பதே
ஒனேசிமு என்பதன் பொருள். தான் செய்த ஒரு குற்றத்திற்காகப்
பயனற்றவனாகப் பரதேச வாழ்வு வாழ்ந்த இவன், பவுலின் பணியில்
பயனுள்ளவனாக மாறிவிட்டான்.
அடிமை வாழ்வு அன்று சமுதாயத்தில் ஒன்றிவிட்ட ஓர் அமைப்பு.
ஒரு மனிதன், மற்றொரு மனிதனை வாணிகப் பொருளாக எண்ணி வாங்கி
விற்கும் அடிமை வாணிகம் அன்று ஒரு தொழில். மக்கள் மனித விலங்குகளென
நடத்தப்பட்ட அன்றுதான் ஒனேசிமு தன் உயிர் என்கிறார் பவுல்
(12). அவனைத் தன்னிடம் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவன்
மீது பாசம் கொள்ளுகிறார். தன் எஜமானனை விட்டுச் சிறிது காலம்
பிரிந்திருந்த இவன், இனிப் பிரியமாட்டான் என்று உறுதி
கூறுகிறார். பவுல் தவறியவனுக்கு அபயம் அளித்து அன்பு செய்ததுபோல்,
தவறியவர்களை நானும் அன்புடன் வரவேற்கிறேனா? பலவீனத்தால் தகாத
பழக்கத்திற்கு ஆளாகியிருப்போரை என் நல்லுரையால்-வாழ்வால்
திருத்தி நல்வழி காட்டுகின்றேனா?
எஜமான் - அடிமை நல்லுறவு
அடிமை அமைப்பை அடியோடு அகற்றிவிடப் பவுலால் முடியவுமில்லை;
அவர் முயலவுமில்லை. ஆனால் வாய்ப்புக் கிட்டும்
பொழுதெல்லாம் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற மறையுண்மையை
வலியுறுத்துகிறார் (காண் 1கொரி. 12:13; கலா. 3:28). எஜமான்,
அடிமை அமைப்பு முறையை மாற்ற முடியாத நிலையில், அந்த உறவைச்
சீர்படுத்துகிறார். இவ்வுறவைப் புதிய கண்ணோட்டத்தில்
காண்கிறார். ஒருவன் எந்த நிலைக்கு அழைக்கப் பட்டானோ அந்த
நிலையிலேயே அவன் கடவுள் திருமுன் நிலைத்திருக்கட்டும் என்கிறார்
(காண் 1 கொரி. 7:21-24). ஒவ்வொருவரும் நடக்க வேண்டிய
நெறியைக் குறிப்பிடுகின்றார். ",அடிமைகளே, நீங்கள்
கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல் இவ்வுலகில் உங்களுக்குத்
தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும் நடுக்கத்தோடும்
முழுமனத்தோடும் கீழ்ப்படியுங்கள்",... அப்படியே தலைவர்களும்
அடிமைகளிடம் அன்பு காட்ட வேண்டும் (காண் எபே. 6:5-9)
",எங்கு எங்குப் பார்த்தாலும் எவ்வுயிருக்கும் அவ்வுயிராய்
அங்கு அங்கு இருப்பது நீ அன்றோ, பராபரமே" (தாயு)
இன்றைய சமுதாயத்திலும் தம்மையே எஜமானர்களிடம் விற்று விட்ட
கொத்தடிமைகள் இல்லாமல் இல்லை. பணியாளர்களைக் கொத்தடிமை களாக
நடத்தும் முதலாளிகள் உள்ளனர். வீட்டு வேலைக்காரர்களை மனிதர்களாகவே
மதிக்காத மனித மிருகங்களும் உள்ளன. இது சமுதாயப் பாவம் என்பதை
உணர வேண்டும். செல்வந்தர்கள் மேலும் மேலும் பொருளைக்
குவித்துப் பணத்தில் மிதப்பதும், ஏழைகள் மேலும் சுரண்டப்பட்டு
வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டு அடிமைகளாக கொடுமைப்படுத்தப்படுவதும்
சமுதாய துரோகம் என்பதைப் பொறுப்புள்ள வர்கள் - திருச்சபை
உணர வேண்டும். அடிமையாக்கப்பட்டவர் களுக்காகப் பரிந்துபேச
நான் தயாரா? தவறு செய்பவர்களைக் காணும்பொழுது, நானும் தவறக்கூடும்
என்பதை உணர்ந்து, அவர்களுக்குப் பரிவு காட்டுகிறேனா?
அவனை உம்மிடம் அனுப்புவது என் உயிரையே அனுப்புவது
போலாகும்.
நற்செய்தி: லூக். 14 : 25 - 33
இயேசுவைப் பின்செல்வதில் தடையாயிருக்கும் எதையும், எவரையும்
நிராகரிக்காதவன் அவரது சீடனாயிருக்க முடியாது. தனது உயிரையும்
இழக்கத் துணிபவனே ஆண்டவரின் உண்மையான சீடன். கோபுரம் கட்டுதல்,
போருக்குச் செல்லுதல் என்ற உவமைகள் வழியாகச் சீடத்துவம் விளக்கம்
பெறுகிறது.
அனைத்திற்கும் மேல் ஆண்டவர்
",தாய் தந்தையரைப் பேணுவாயாக" என்பது இயற்கை விதி; இறைவனின்
கட்டளை. ",புதிய கட்டளை கொடுக்கிறேன்: ஒருவர் ஒருவர்க்கு
அன்பு செய்யுங்கள்", என்பது ஆண்டவர் அளித்த புதிய கட்டளை.
அதே ஆண்டவர் தாய் தந்தையரை, மனைவி மக்களை வெறுத்தொதுக்கி
விடு என்று கூற முடியாது. எனவே என் பெற்றோர் உற்றார் மீது
நான் காட்டும் அன்பும் இறையன்புக் கண்ணோட்டத்தில் அமைய
வேண்டும் என்பதே ஆண்டவரின் போதனை. ஆண்டவர் அன்புக்குத்
தடையாயிருக்கும் எந்த அன்பும் உண்மையான அன்பாகாது. வேத
கலாபனை காலத்தில் ",இயேசுவா, வாழ்வா?", எதைத்
தேர்ந்தெடுப்பது என்ற பிரச்சனை எழுந்த போது, இயேசுவைத்
தேர்ந்தெடுத்துத் தம் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்
இயேசுவின் நிபந்தனையை ஏற்று அவரைப் பின்சென்ற உண்மையான
சீடர்கள். ஊழலும், பொய்யும் புரட்டும் மலிந்துள்ள
சமுதாயத்தில் கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றுவதில் வரும்
தொல்லைகளை ஏற்று, நேர்மையான வழியில் நடப்பவன், இயேசுவின்
சீடன். ",ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின்
பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப்
பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய
அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற
எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். கிறிஸ்துவை
ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக்
கருதுகிறேன். கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின்
வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று,
சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்", (பிலி 3:7-8,
10)
",பெற்ற தாய் தன் மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
கற்ற நெஞ்சம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
(கர்த்தர்தனை) நான் மறக்கமாட்டேன்",
(திருவருட்பா) என்று சபதம் செய்வேனா?
இரு உவமைகள்
கிறிஸ்துவைப் பின்செல்வது கடினமானது; உலக மதிப்பீடுகளுக்கு
மாறான போதனையைப் பின்பற்றுவது எளிதன்று. இவரது சீடர்கள்
எதிர் நீச்சல் போடத் தயாராயிருக்க வேண்டும். எனவே தான்
"விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது" என்கிறார் இயேசு
(மத். 11:12). கோபுரம் கட்ட விரும்புபவன் வரைபடம் வரைந்து,
தன் செல்வநிலையைக் கணித்து, தேவையை உணர்ந்து, ஆட்களைச்
சரிசெய்து, இடத்தைத் தேர்ந்தெடுத்து கோபுர வேலையைத்
தொடங்குவான். இப்படிச் செய்யாவிட்டால் அவன் அதை முடிக்க
முடியாத நகைப்புக்குள்ளாவான். அப்படியே போருக்குச்
செல்பவரும் கீழ்க்கண்ட குறள் நெறியைப் பின்பற்றுவர்.
இச்சாதாரணச் செயல்களில் இவ்வளவு கவனம் தேவை என்றால்,
வாழ்க்கைப் பிரச்சனையாகிய இயேசுவின் சீடனாயிருப்பதில்
எவ்வளவு கவனம், துணிவு தேவை என்ற பாடம் இங்குப்
போதிக்கப்படுகிறது.
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின் செல்லாதவன் என்
சீடனாய் இருக்க முடியாது.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ