ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 20ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
ஆண்டின் பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறு திருப்பலி
முன்னுரை - 3ம் ஆண்டு
திபா 40: 1. 2. 3. 17 (பல்லவி: 13b)
பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்.

மண்ணுலகில் தீ மூட்ட வந்த இயேசுவின் வாரிசுகளே

இயேசு மூட்டி சென்ற நெருப்பை பற்றி எரிய செய்ய நம்மை அழைக்கிறது இந்த 20-ஆம் ஞாயிறு

அநீதியை கண்டும் காணாமல் அல்ல சுட்டு எரிக்க வந்தேன் என்று முழக்கமிடும் இயேசுவின் வார்த்தையை நமது வாழ்வின் பழக்கமாக்க செயலின் வடிவமாக்க பயிற்சி அளிக்கிறது இன்றைய திருப்பலி.

சமூக நீதிக்கு எதிரான தவறுகளை சரி செய்ய முன்வருவோம். துன்ப கடலின் அலையில் சிக்கி தவிப்போருக்கு உதவ முன் வரும்போது கேலியும் கிண்டலும் கைமாறாகலாம். துன்பப்படுவோருக்கு தோணியாக வருபவர்களையும், உதவும் கரமாக தென்படுபவர்களையும் இந்த உலகம் மறப்பதில்லை. அவர்களை மனிதர்களாக அல்ல தெய்வங்காக நினைக்கவும் தவறுவதில்லை.

அநீதியைக் கண்டு எதிர்ப்போம். நீதிக்கு குரல் கொடுக்கும் போதும் நீதிக்காக போராடும் போது ஏற்படும் சங்கடங்களில் இறையருள் கூட இருப்பதை உணர்வோம். அநீதியை கண்டு குமுறும் போது இறையருளால் வழி நடத்த படுவோம் அதற்கான அருள் தரும் திருப்பலி இது.

மண்ணுலகில் தீ மூட்ட வந்த யேசுவே உம் வாரிசுகளாக மண்ணுலகில் வலம் வர அருள் தாரும் என திருப்பலியில் மனமுருகி மன்றாடுவோம்
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1 திரண்டு வரும் மேகம் போல அருள் பொழிய திரண்டு வரும் ஆண்டவரே!
அநீதியை கண்டு அரண்டு போகாது நீதிக்கு குரல் கொடுக்க திருச்சபை தலைவர்களுக்கு அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

2 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்த ஆண்டவரே!
நாட்டில் அமைதியை ஏற்படுத்த நாடுகளிள் தலைவர்களுக்கு அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3நீதிக்காக பேசுபவரை நேசிக்கும் ஆண்டவரே!
நாங்கள் வாழும் சமூகத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் கொண்டாட்டங்களாக எங்கள் வழிபாடுகள் அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மனறாடுகிறோம்.
 
4 சமூக நீதிக்கு எதிரான தவறுகளை அகற்ற வருவோரை அரவணைக்கும் இறைவா!
எங்கள் குடும்பங்களில், நாங்கள் வாழும் ஊர்களில், எங்கள் நாடுகளில் நிகழ்கின்ற அநீதிகளை அகற்றும் கருவிகளாக நாங்கள் செயல்பட அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனைகள்
 
16ஆம் நுற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி திருத்தந்தைக்கு எதிராகப் போட்டி திருச்சபையை ஏற்படுத்தினாh.; எல்லா மன்னர்களும் அரசனை ஆதரிக்க, தாமஸ்மூர் என்பவர் மட்டும் மன்னனை ஆதரிக்க மறுத்துவிட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மரண தன்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவரின் மனைவி லூயிசா மன்னனை ஆதரித்து மரண தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளும்படி அவரை எவ்வளவோ கெஞ்சியும் தாமுஸ்மூர் மறுத்துவிட்டார். இன்முகத்துடன் மரண தண்டனையை ஏற்றார். இன்று அவர் ஒரு மறைச்சாட்சி. பொதுநிலையினரின் பாதுகாவலர். மனைவியின் சொற்கேட்டு அவர் விண்ணக வாழ்வை இழக்க விரும்பவில்லை. கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவை தக்கவைத்து கொள்வதற்காக மற்ற எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

அமைதியை அல்ல வாளையே கொணர வந்தேன் என்ற ஆண்டவரின் அருள்வாக்கை மேற்கோள்காட்டி ஒருசிலர் வன்முறையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதே ஆண்டவர் வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர் என்றும் எச்சரித்துள்ளார்.

கிறிஸ்து மண்ணுலகில் மூட்ட வந்த அன்பு தீ மட்டுமே நமது ஆயுதமாகும். நாம் ஓடுவோம் கிறிஸ்துவுக்கு சார்பாக இறைவாக்கு உரைப்போம் நலமானவைகள தூக்கி பிடிப்போம். நலமற்றவைகளை சுட்டு எரிப்போம்.

அயலார் மீது கொண்ட அன்பை பற்றி எரியச் செய்வோம்.

சமுக நீதிக்காக பாடுபடும் ஆற்றலை பற்றி எரியச் செய்வோம்.

மறையுரைச்சிந்தனை முன்னுரை   - ஞானஒலி


கிறிஸ்துவைப் போல் துன்பத்தைத் தாங்கி, உண்மையான சமாதானத்தை வாழ்வாக்கி அதன் மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ வரம் வேண்டி வருகை தந்துள்ள அன்பு இறை மக்களே உங்கள் அனைவரையும் பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

இயேசுவை இழப்பதைவிட எதையும் இழக்கத் தயாராய் இருப்பவனே எதிர்ப் பிலும் இன்பம் காண்பான், துயரிலும் அமைதி காண்பான் என்ற கருத்தை வலியுறுத்துகிறது இன்றைய வழிபாடு.

இன்றைய வாசகங்கள் மேலான சீடத்துவ வாழ்வுக்கு நம்மை அழைக் கின்றன. நாம் எந்தெந்த வகைகளில் எல்லாம் கிறிஸ்துவின் சீடர்களாக வாழ முடியும் என்பது குறித்து சிந்திக்க தூண்டுகின்றன.
முட்புதரின் நடுவே எரிந்த நெருப்பு தூணில் ஒளிர்ந்த நெருப்பு, நாவின் வடிவிலே இறங்கி வந்த நெருப்பு,

சவுலை பவுலாய் மாற்றிய நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை காட்டுகிறது. அதே நெருப்பை இறைவன் இன்று இத்திருப்பலி வழியாக ஒளிரச் செய் கிறார். இந்த நெருப்பு தாழ்ந்தோரை உயர்த்தும், நலிந்தோரை ஆற்றல் மிக்கவராய் மாற்றும்.

தீ புனிதப்படுத்துகிறது, தீ தின்று அழிக்கின்றது, தீ ஒளி கொடுக்கிறது, தீ வழி காட்டுகிறது, இப்படிப்பட்ட தீயை நம் நெஞ்சங்களில் ஏற்றிவைக்க சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப் போல புதிதாய் எழ இன்று நமக்கு இத்திருப்பலி வழியாய் இறை மகன் இயேசு அழைப்புவிடுக்கின்றார்.

திருமுழுக்கின் வழியாக நாம் பெற்றுக் கொண்ட தீயை அணையாமல் பாதுகாத்து அத்தீயினை தொடர்ந்து வளர்க்க, அத்தீயின் மூலம் நம் வாழ்வை புடம் போட்டு புனரமைக்க இத்திருப்பலி வழியாக இறையருளை வேண்டுவோம்.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1) நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும், அதை நிறைவு செய்பவருமான தந்தையே இறைவா, உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத் தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர் கள் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதியும். உம் திருமகன் இயேசு ஏற்றி வைத்த நெருப்பை தம் கரங்களில் ஏந்தி பாவ இருள் அகல அயராது உழைத்திடவும், இறைவாக்கினர் எரேமியாவைப் போல சான்று பகர்ந்து வாழ்ந்திடவும் அவர்களுக்கு வேண்டிய ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் நிறைவாக தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2) அன்பும் இரக்கமும் கருணையும் கொண்ட தந்தையே இறைவா, எங்களது குடும்பத்தில் உடல் நலமின்றி இருக்கும் ஒவ்வொருவரையும் உமது வல்லமையுள்ள திருக்கரத்தால் தொட்டு குணப்படுத்தும். நோயால் அவர்கள் படும் வேதனைகளில் இருந்து முற்றாக அவர்களை விடுவித்தருளும். அவர் களது உள்ளங்களுக்கு ஆறுதலை தந்து, அவர்கள் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஒருபோதும் தளர்ச்சி அடையாமல் இருக்க அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) தேவ அழைத்தலின் ஆண்டவரே இறைவா, அருட்பணியில் ஆர்வமும், துறவறத்தில் நாட்டமும், தளராத மனமும் கொண்டுள்ள இளைஞர் களையும், இளம் பெண்களையும் நிறைவாக ஆசீர்வதியும். அழைத்தலில் அவர்கள் உறுதியுடன் நிலைத்து நிற்கவும், உமது மறை உடலாகிய திருச்சபைக்கு அணிகலனா கத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளி யாகவும், வாழ்வாகவும் விளங்கவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4) தன்னலமற்ற தலைவராம் அன்பு இறைவா, எங்கள் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் சுயநலம் துறந்து லஞ்சம் தவிர்த்து பொது நலத்தோடும், நடுநிலையோடும், நேர்மையோடும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட அவர் களுக்கு நல்ல மன நிலையையும், மன உறுதியையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றா டுகிறோம்.


முதல் வாசக முன்னுரை
இறைவாக்கினர் எரேமியா தன் சொந்த மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் புறக்கணிக்கப்பட்டு பாழுங்கிணற்றில் தள்ளப்படுகின்ற நிகழ்ச்சி இன்றைய முதல் வாசகமாக அருளப்பட்டுள்ளது. இது இறை மகன் இயேசு படவிருக்கும் பாடுகளின் முன்னறிவிப்பாக அமைகிறது. உண்மைக் கும் நன்மைக்கும் குரல் கொடுப்பவன் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்பட்டாலும் மனம் தளராமல் இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை
அன்றைய கிறிஸ்துவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்களை மையப்படுத்தி மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கை பயணத்தில் ஓட வேண்டும் என்பதை விவரிக்கிறது இன்றைய
இரண்டாம் வாசகம். மனஉறுதியுடன் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தும்படி தூண்டும் இவ்வாசகத்தை கவனமுடன் கேட்போம்.

 
மறையுரை சிந்தனை
  
இறை இயேசுவிலே எனக்கு மிகவும் பிரியமான சகோதர, சகோதரிகளே, கடந்த வாரம் நற்செய்தியிலே நம் ஆண்டவர் இயேசு, நம் பரம தந்தை நம்பிக்கைக்குரியவர், அவர் தனது அமைதியின் ஆட்சியை, நீதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியை உங்களுக்கு தருவார். எனவே அஞ்ச வேண்டாம். அவருடைய திட்டம் நிறைவேறும்வரரை அவரில் நம்பிக்கை கொண்டு, அச்சம் தவிர்த்து வாழுங்களென அழைத்த இறைவார்த்தையை உள்வாங்கினோம்.

ஆனால், அன்பார்ந்த இறைச் சமூகமே, இந்த வார நற்செய்தி வாசகத்திலே, மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன் எனச் சொல்லிகின்ற இயேசு, மண்ணுலகிலே அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை பிளவு உண்டாக்கவே வந்தேன் என்று நமக்கு அதிர்ச்சியூட்டுகிறார். அமைதியின் அரசர் என அழைக்கப்பட்டவர், மண்ணுலகில் அவர் தயவு பெற்றோருக்கு அமைதி என்று வானதூதர்களால் பாடி மகிழப்பட்டவர் அமைதிக்கு எதிரானவரா? இயேசுவைத் தேர்ந்து கொள்ளுகிறவர்கள் எதிர் கொள்ள வேண்டிய பிளவு இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது. இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல. அதைச்சிலர் ஏற்றுக்கொள்வர், பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். ஏற்றுக் கொள்ளாதவர் இயேசுவைக் குறித்து இடறல் படுவர். இந்த இடறலே அவர்களுக்குள் பிளவை உண்டாக்கிவிடும். ஒருவர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும்போது, இந்தப் பிளவே அவரை இயேசுவோடு இணைக்கிறது.


ஆம் அன்பான இறைச் சமூகமே. கடவுளின் பணியாளாக விளங்கும் அனைவருக்கும் கிடைப்பது போராட்டமும், துன்பமுமே.
இப்படிப்பட்ட போராட்டமும், துன்பமும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து கடவுளின் மிகச் சிறந்த ஊழியராக விரும்பியவர் எரேமியா. அரசர் விரும்பியதையும், மக்கள் விரும்பியதையும் கடவுள் வாக்காக எடுத்துச் சொல்லி நல்ல பெயரைச் சம்பாதித்த போலி இறைவாக்கினர்களுக்கு மத்தியிலே, கடவுளின் வாக்கை சமரசமின்றி அரசருக்கு எடுத்துரைத்தவர் இறைவாக்கினர் எரேமியா. இதன் காரணமாக துரோகி என முத்திரை குத்தப்பட்டு, பலமுறை சிறையிலடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, பாழுங்கிணற்றிலே, சேற்றிலே உயிரோடு கட்டி இறக்கப்பட்டார் என்பதை நாம் இன்றைய முதல் வாசகத்திலே வாசித்தோம்.

ஆம் கிறிஸ்துவின் சீடனாக வாழ்வது என்பது மலர்கள் தூவப்பட்ட பாதையல்ல, மாறாக முட்களும், ஆணிகளும் சிதறிக்கிடககும் ஒரு பாதை. துன்பமும், துயரமும், வேதனையும், சோதனைகளும், அவமானமும், அவச்சொல்லும் நிறைந்த ஒரு வாழ்வு முறையாகும். இத்தகைய வாழ்வை திறந்த மனத்தோடு ஏற்று இயேசுவோடு பயணிப்பவனே அவரது உண்மையான சீடனாவான். இதையே லூக்கா 9/23 ல்- என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்கிறார் இயேசு ஆண்டவர்.

ஆம் அவர்கூட, பாலைவனத்தில் சோதிக்கப்பட்டபொழுது, துன்பத்தைத் தவிர்த்து, சுகபோகமாக வாழத் துணிந்திருக்கலாம். இருப்பினும், இறைவா, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன், எனக்கூறி தந்தையை முழுமையாக நம்பிப் பணிவாழ்வில் இறங்கி, பலி வாழ்வினைச் சந்தித்து தன் குருத்துவ வாழ்வை கல்வாரியில் நிறைவு செய்கிறார். ஆம், அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்களின் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு, கடவுளுக்கு உகந்தவராய் இருந்தார். எனவே, தந்தை கடவுளும் இவரை மிகவே உயர்த்தி எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார் என பிலிப்பியர் 2/9ல் காண்கிறோம்.

இன்றைய நற்செய்தியிலே, இயேசு, நான் அமைதியை அல்ல பிளவையே ஏற்படுத்த வந்தேன் என்று சொல்லும்பொழுது, இப்பிளவில் இயேசுவின் பக்கம் நிற்போர் தண்டிக்கப்படுவர். அவர்கள் தங்களுடைய குடும்பத்தாராலேயே தண்டிக்கப்படுவர். ஆனால், அனைத்தையும் கடந்து இயேசுவுக்குச் சான்று பகர்பவர்களே இறையாட்சிக்குள் நுழைவார்கள் என்றும் இயேசு கூறுகிறார். ஆம் எல்லாவற்றிலும், நாம் இறைவனின்மேல் நம் கண்களைப்பதித்து இருப்போமெனில், எல்லாப் பிளவுகளும் நம்மை அவரோடு இணைத்துவிடும் என நம்பிக்கையோடு வாழுவோம்.

இன்றை சமுதாயத்தின் மிகப்பெரிய பிரச்னையே நிலைப்பாடு இல்லாத மனிதர்கள்தான். இன்றைக்கு நம்முடைய இளைய சமுதாயமோ, சமூகத் தொடர்பு சாதனங்களின் கவர்ச்சியாலேயே ஈர்க்கப்பட்டு, தவறான மாதிரிகைகளையும், கொள்கைகளையும் ஏற்றுத் தங்கள் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுடைய வாழ்விலே மாற்றத்தை உருவாக்கிட நாம் உழைக்க வேண்டும். அதே வேளையில் உண்மையின் பக்கம் நிற்போர் தனித்துவிடப்பட்டுத் துன்பப்படுகிறார்கள். இனி வரக்கூடிய நாட்கள் பொல்லாதது. பல்வேறு இன்னல்கள் துன்பங்களை நாம் சந்திக்க வேண்டிய காலமாக இருக்கும். அப்படிப்பட்ட காலக்கட்ட்திலே நாம் இயேசுவின் பக்கமாய், உண்மையின் பக்கமாய், நீதியின் பக்கமாய் நின்று அவருக்குச் சாட்சிகளாய் வாழ்ந்து இறைவார்த்தையை வாழ்வாக்கிடுவோம்.

செபம்- எங்கள் அன்பான வாகத் தந்தையே நாங்கள், உம் அன்புத் சீடத்துவத்திலே பங்கு பெற்று உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு, இவற்றுக்குச் சான்று பகர்ந்து, எம் இளைய சமுதாயம் பாவ மாயையில், சமூக தொடர்பு சாதனங்களால் கவரப்படாமலும், ஈர்க்கப்படாமலும் உம் வார்த்தையின் சாட்சிகளாய் வாழ வரம் தரக் கேட்கிறோம். எம் வாழ்விலும், இளைய சமுதாயத்தின் வாழ்விலும், உம் அன்பென்ற அனல் பற்றியெரியவும், ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு நாங்கள் உம் பக்கம் நிற்கவும், உண்மை, நீதி, அன்பை உலகிற்கு பறைசாற்றிட, எங்களை உம் கரத்தில் ஒப்படைக்கிறோம். எங்களை ஆசீர்வதியும்.-ஆமென்
 
  
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

இணைக்கும் பிளவுகள்

ஒரு பங்கு ஆலயத்தில் திருப்பண்ட அறையில் (சக்ரீஸ்து) நடுத்தர நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவர் கொஞ்சம் படித்தவர். பல ஆண்டுகளாக திருப்பண்ட அறையில் வேலை செய்து வந்தார். அந்தப் பங்கிற்கு புதிதாய் வந்த அருள்பணியாளருக்கு அவரைப் பிடிக்கவில்லை. அவர் செய்யும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். ஒருநாள் கோபத்தின் உச்சியில், 'இனி நீ வேலைக்கு வர வேண்டாம். உன் கணக்கை முடித்துக்கொள்' என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார். இவர் ரொம்பவும் கெஞ்சிப் பார்க்க அருள்பணியாளர் மனம் மாறுவதாய் இல்லை. வீட்டிற்கு வருகின்ற இவர் ரொம்ப நேரமாக யோசிக்கிறார். தன் வீட்டிற்கு முன் நிறைய புல் முளைத்திருக்கிறது. இதை மேய்வதற்கு இரண்டு மாடுகள் வாங்கி விடலாம் என நினைக்கிறார். மாடுகள் வாங்கி விட, பால் வியாபாரம் நன்றாக நடக்கிறது. கோவிலுக்குச் செல்வதற்காக காலையில் எழுந்து பழகிய அவர் அதே பழக்கத்தில் மாடுகளைக் கவனிக்கவும், பால் கறக்கவும் என அர்ப்பணத்தோடு ஈடுபட சில ஆண்டுகளில் பெரிய பண்ணைக்கு உரிமையாளர் ஆகிவிடுகின்றார். இந்நேரத்தில் அருள்பணியாளரும் மாற்றலாகிச் சென்றுவிடுகின்றார். மாற்றலாய்ச் சென்ற அருள்பணியாளரை இவர் சந்திக்க தன்னுடைய புதிய காரில் செல்கின்றார். புதிய கார் வருகிறதே என்று வேகமாக அருள்பணியாளர் வெளியே வந்து பார்க்கிறார். காரில் வந்தவர் சக்ரீஸ்தர் என்றவுடன் அறைக்குள் சென்றுவிடுகின்றார். இவர் கதவைத் தட்ட, அவர் கோபமாய், 'என்னய்யா, என்ன வேணும்? இங்கு எந்த வேலையும் இல்லை' என்கிறார். அதற்கு இவர் சொல்கிறார், 'சாமி, உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். நல்ல வேளை என்னை சக்ரீஸ்தர் வேலையிலிருந்து வெளியேற்றினீர்கள். இன்னைக்கு நான் பெரிய பால்பண்ணைக்கு உரிமையாளராய் இருக்கிறேன். இல்லைன்னா இன்னும் மெழுகுதிரி ஏத்திக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்.'

நிற்க. இப்படியாக சில பிளவுகள் நன்மையில் போய் முடிகின்றன.
இதற்கு எதிர்மாறாக சில பிரிவுகள் அல்லது பிளவுகள் சோகத்தில் வெறுமையில் இறப்பில் முடிகின்றன.
எல்லாப் பிளவுகளும் தீமையானவை அல்ல. நன்மையான சில பிளவுகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன என்று மொழிகிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 38:4-6, 8-10) இறைவாக்கினர் எரேமியாவுக்கும் அரசன் செதேக்கியாவுக்கும் இடையே ஏற்படும் பிளவு பற்றி வாசிக்கின்றோம். பாபிலோனிய அரசன் நெபுகத்னேசர் யூதாவை முற்றுகையிடுகின்றார். தன்னுடைய பதில் அரசனாக செதேக்கியாவை நியமிக்கின்றார். இது அரச அலுவலர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது. எனவே பாபிலோனியாவுடன் போர் தொடுக்குமாறு அவர்கள் செதேக்கியாவைத் தூண்டுகின்றனர். ஆனால், அப்படிப் போர் செய்வது பெரிய அழிவை உண்டாக்கும் எனவும், இப்போதைக்கு சரணாகதி அடைவதே சிறந்த வழி என்றும் சொல்கிறார் எரேமியா. ஏனெனில், அரசர்களும் அரச அலுவலர்களும் மக்களும் கடவுளின் உடன்படிக்கையை மீறிப் பாவம் செய்ததால்தான் இத்தீமை வந்திருக்கிறது என்பதை எரேமியா அறிவார். அரச அலுவலர்கள் எரேமியாவின் இக்கூற்றை அரசியல் எதிர்க்கருத்து என்று எண்ணி, 'இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக வேண்டும். ஏனெனில் இவன் மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி நலனைத் தேடுவதில்லை' என்கிறார்கள். அத்தோடு அவரைப் பாழுங்கிணற்றில் தள்ளி, பசியால் அவரைக் கொன்றுவிட நினைக்கின்றனர். அரசவையின் எத்தியோப்பிய பணியாளன் எபேதுமெலேக்கு எரேமியாவுக்குச் சார்பாக நின்று அவரை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றுகின்றார்.

அரசன் மற்றும் அரச அலுவலர்கள் நெபுகத்னேசர் மீது மேற்கொண்ட போர் அவர்களுக்கு இன்னும் பேரழிவைத் தருகின்றது. அவர்கள் எரேமியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது. அவர்கள் இரண்டு நிலைகளில் தவறு செய்கின்றனர்: (அ) இறைவனின் வார்த்தை எது, தங்களின் வார்த்தை எது என்று அவர்களால் தேர்ந்து தெரிவு செய்ய முடியவில்லை, (ஆ) தங்களுடைய எண்ணம்போலக் கடவுள் செயல்படுவார் என்று எண்ணி கடவுளை ஒரு பொம்மையாக்க முனைகின்றனர். ஆனால் கடவுளின் வார்த்தைக்கு யாரும் விலங்கிட முடியவில்லை. அவரின் வார்த்தைகள் நிறைவேறுகின்றன. எரேமியாவின் வார்;த்தைகள் மக்களிடம் பிளவை உண்டாக்கின. ஆனால், கடவுளின் வார்த்தைகள் அவை என்று நினைத்தவர்களுக்கு அவை பாதுகாப்பைக் கொண்டுவந்தன.

இரண்டாம் வாசகம் (காண். எபி 12:1-4) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நம்பிக்கை என்றால் என்ன என வரையறை செய்த ஆசிரியர், 'திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் இருக்க' என எல்லா நம்பிக்கையாளர்களையும் ஒன்றாக்கி, இவர்களின் பாதுகாப்பில் தன்னுடைய நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து முன்னேற அறிவுறுத்துகின்றார். இந்த தொடர் முன்னேற்றத்தை ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிடுகின்றார் ஆசிரியர். ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவர் விரைவாக ஓடுவதற்கு உந்துப் பலகை வைக்கப்படுவதுண்டு. உந்துப் பலகை கனமாக இருக்கும். அதன் ஒரு பகுதி நிலத்தில் பதிக்கப்பட்டிருக்கும் உந்துப் பலகையை எத்தி ஒருவர் அந்த விசையைப் பயன்படுத்தி முதல் அடியை நீளமாக எடுத்து வைத்தால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் உந்துப் பலகையோடு தன்னை இணைத்துக் கொண்டால், அல்லது உந்துப் பலகையைத் தன் காலோடு சேர்த்துக் கொண்ட ஓட முயற்சித்தால் என்ன ஆகும்? அவர் விழுந்து தன்னைக் காயப்படுத்திக் கொள்வதோடு போட்டியிலும் தோற்றுவிடுவார். ஆக, அவரின் கால்களுக்கும் உந்துப் பலகைக்கும் இடையே ஏற்படும் பிளவே அவரை வெற்றியாளராக மாற்றும். இதையே ஆசிரியர், ஒருவர் தன்னுடைய சுமையையும், பாவத்தையும் உதறித் தள்ளாத ஒருவர் பந்தயத்தில் வெற்றி அடைய முடியாது என்கிறார். உந்துப் பலகையிலிருந்து கால்கள் எடுக்கப்பட்டவுடன் ஓடுபவரின் கண்கள் இலக்கில் பதிய வேண்டும். இதை ஆசிரியர், 'நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம்' என்கிறார். இங்கே நம்பிக்கையின் உந்துப் பலகையாக, உடன் ஓடி வந்து உற்சாகம் தருபவராக, பந்தயத்தை நிறைவு செய்து வைக்கும் விளையாட்டின் நடுவராக இயேசுவை முன்வைக்கிறார் ஆசிரியர்.

இயேசு இந்த நிலைக்கு உயரக் காரணம் அவர் அனுபவித்த இழிவும் சிலுவையுமே. தான் அடைய வேண்டிய மகிழ்ச்சியை முன் நிறுத்தி தன்னுடைய இழிவு மற்றும் சிலுவையை ஏற்றுக்கொள்கின்றார் இயேசு. அவருடைய செயல்களுக்கு பாவிகள் பலர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களோடு ஏற்படுத்திக் கொண்ட பிளவால் இவர் வெற்றியை அடைகின்றார். ஆக, இயேசு அவருடைய எதிரிகளோடு ஏற்படுத்திய பிளவு இவருக்கு வெற்றியைக் கொடுக்கின்றது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), 'மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்' எனச் சொல்கின்ற இயேசு, 'மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவை உண்டாக்க வந்தேன்' என்று நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றார். அமைதியின் அரசர் என்றழைக்கப்பட்டவர், 'மண்ணுலகில் அவர் தயவு பெற்றோருக்கு அமைதி' என்று வானதூதர்களால் பாடி மகிழப்பட்டவர் அமைதிக்கு எதிரானவரா? இயேசுவைத் தேர்ந்துகொள்கிறவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிளவு இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. இயேசுவின் நற்செய்தி எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல. அதைச் சிலர் ஏற்றுக் கொள்வர். பலர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். ஏற்றுக்கொள்ளாதவர் இயேசுவைக் குறித்து இடறல் படுவர். இந்த இடறலே அவர்களுக்குள் பிளவை உண்டாக்கிவிடும். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் ஒருவர் இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்ளும்போது இந்தப் பிளவே அவரை இயேசுவோடு இணைக்கும்.

இவ்வாறாக,
இன்றைய முதல் வாசகத்தில், எரேமியா ஏற்படுத்தும் பிளவு மக்களைக் கடவுளோடு இணைக்கிறது. இரண்டாம் வாசகத்தில், நம்பிக்கையாளர்கள் தங்களுடைய பாவத்தோடு ஏற்படுத்தும் பிளவு அவர்களை இயேசுவோடு இணைத்து நம்பிக்கையில் நிலைக்கச் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில், இயேசுவைத் தேர்ந்துகொள்வதால் ஏற்படும் பிளவு ஒருவரை நீதியின் அரியணைமுன் வெற்றியாளராய் நிறுத்துகிறது.
இதை இன்று நம்முடைய வாழ்வோடு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

பிளவுகள் அல்லது போராட்டங்கள் நமக்கு வெளியில் நடப்பதைவிட உள்ளேயே நடக்கின்றன. காலையில் அலார்ம் வைத்து எழுவதில் தொடங்கி, அருட்சாதனம் , அருள்பணி நிலை தேர்வு போன்ற பெரிய முடிவுகள் எடுப்பது வரை நம் உள்ளத்தில் போராட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. இந்தப் போராட்டத்தினால் நம்முடைய மன அமைதி கெட்டு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

ஏன் இந்தப் போராட்டம்?
தவறானதைத் தெரிந்துவிடுவோமோ என்ற பயம். நாளை என்ன நடக்குமோ? அல்லது ஒன்றின் முடிவு எப்படி இருக்குமோ? என்ற கலக்கம். நம்முடைய பயமும் கலக்கமும் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மற்றவர்களோடு ஒப்பிடுதல். மற்றவரோடு என்னையே ஒப்பிட்டு அவர் செய்வதனைத்தையும் நான் செய்ய முற்படும்போதும், அவருக்கு வெற்றியாக அமைவது எனக்கும் வெற்றியாக அமையும் என நினைப்பதும் கூட நம் அமைதியைக் கெடுத்துவிடுகிறது.

ஆனால், போரட்டம் அல்லது பிளவு இல்லாமல் வெற்றி இல்லை.
பிளவுபடாமல் நினைக்கின்ற உள்ளம் காலில் ஒட்டிக்கொண்ட உந்துப் பலகை மாதிரி சுமையாக மாறிவிடும். ஆக, தேவையான நேரத்தில் தேவையற்றதை உதறித் தள்ளினால் தேவையானதை நோக்கி நான் வேகமாக நகர முடியும்.
இதை மூன்று நிலைகளில் அடையலாம்:

அ. இறைவனின் வார்த்தை எது, என்னுடைய வார்த்தை எது என்று பிரித்துப் பார்த்தல். எரேமியாவின் வார்த்தைகளை இறைவனின் வார்த்தைகளாகப் பார்க்க அவருடைய சமகாலத்தவர்கள் மறுத்தார்கள். ஏனெனில், அவர்கள் சுகமானவற்றையே எதிர்பார்த்தார்கள். என்னுடைய மூளை சுமைக்குப் பயந்து சுகமான வார்த்தைகளையே இறைவார்த்தைகளாக என்முன் காட்ட ஆரம்பிக்கும். இது பெரிய ஆபத்து. இறைவனின் வார்த்தையை அடையாளம் காண ஆழ்ந்த அமைதி, தியானம், செபம் போன்றவை துணை செய்யும்.

ஆ. என்னுடைய சுமை அல்லது பாவத்தை உதறித் தள்ளுவது. சுமை என்று தெரிந்தும், இழுத்துக் கொண்டு போய் விடலாம் என நினைப்பது, என் கால்களுக்குத் தளர்ச்சியைத் தருவதோடு என்னை பந்தயத்திலிருந்து வெளியேற்றிவிடவும் செய்யும். அதே நேரத்தில் பாவத்தை உதறித் தள்ளாமல் புண்ணியத்தில் வளர நினைப்பது என்பது, இறந்து போன எலியை அகற்றாமல் ஊதுபத்தி கொளுத்தி, 'சமாளித்துக்கொள்ள' நினைப்பது. எவ்வளவு அகர்பத்திகள் கொளுத்தினாலும் இறந்த எலி தரும் நாற்றத்தை அகற்ற முடியாது.

இ. மனநெருக்கடிக்குத் தயாராக இருப்பது. இயேசுக்கும் மனநெருக்கடி இருக்கிறது. நெருக்கடி உள்ள இடமே விரைவில் காலி ஆகும். குட்டை கலங்கினால்தான் மீன் சிக்கும். என் வாழ்வில் நான் தெரிவுகளை மேற்கொள்ள நிறைய குழப்பங்கள் வழியே நடந்து செல்ல வேண்டும்.

இறுதியாக,
இவை எல்லாவற்றிலும் இறைவன் மேல் என் கண்கள் பதிந்து இருந்தால், எல்லாப் பிளவுகளும் என்னை அவரோடு இணைத்துவிடும்!

 
 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை
பொதுக்காலம் 20ம் ஞாயிறு - 14.08.2022

I எரேமியா 38: 4-6, 8-10;
II எபிரேயர் 12: 1-4;
III லூக்கா 12: 49-53

" மன உறுதியோடு ஓடுவோமாக"

நாத்திகர்கள் நடுவில் கிறிஸ்தவர்:
அது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதில் பணிபுரிந்த பலரும் பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களுமாக இருந்தார்கள். அந்த நிறுவனத்தில் பணிபுரிய ஒரு கிறிஸ்தவருக்கு அழைப்பு வந்தது.

'பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களும் பணிபுரியும் இடத்தில் கிறிஸ்தவனாகிய நான் எப்படிப் பணிபுரிவது?' என்று சற்றுத் தயங்கிய அவர், அங்கே வழங்கப்படும் ஊதியம், மற்ற நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியத்தை விடவும் கூடுதல் என்பதை அறிந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியக் கிளம்பிப் போனார். ஆனாலும் அவருக்கு அங்கு என்ன நடக்குமோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருந்தது.

அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு, மாலை வேளையில் வீட்டிற்குத் திரும்பி வந்த அவரிடம் அவரது மனைவி, " பிற சமயத்தைச் சேர்ந்தவர்களும் நாத்திகர்களும் உள்ள உங்கள் நிறுவனத்தில் உங்களை அவர்கள் எப்படி நடத்தினார்கள்?" என்று மிகுந்த எதிர்பார்ப்போடு கேட்டாள். அதற்கு அவர், 'நான் ஒரு கிறிஸ்தவர் என்பதை எந்தவிதத்திலும் காட்டிக்கொள்ளவே இல்லை" என்று சொல்லிக் கள்ளச் சிரிப்புச் சிரித்தார். இதைக் கேட்டு, அவரது மனைவி அதிர்ந்து போனார்.

இன்றைக்குப் ஒருசிலர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிந்தால், அவர்கள் ஏதாவது செய்யக்கூடும், நினைக்கக்கூடும் என்று தங்கள் கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. அதைத்தான் இந்த நிகழ்வு வேதனையோடு பதிவுசெய்கின்றது. இந்நிலையில் பொதுக் காலத்தின் இருபதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, " கிறிஸ்துவின்மீது நமது கண்களைப் பதிய வைத்து, நம்பிக்கை வாழ்வு என்ற பந்தயத்தில் மன உறுதியோடு ஒடுவோடுமாக" என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.


கிறிஸ்துவின்மீது கண்களைப் பதிய வைப்போம்:
இன்றையப் பலர் திரைப்பட நடிர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் என்று யார்மீதெல்லாமோ தங்கள் கண்களைப் பதிய வைத்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களெல்லாம் சிறிதுநேரம் ஒளிர்ந்து அணைந்துபோய்விடும் விளக்குகள். தவிர, இவர்களெல்லாம் தங்களுக்காகவும் தங்களுடைய குடும்பத்திற்காகவும் மட்டுமே வாழ்ந்து இறந்து போகும் சாதாரண மனிதர்கள். ஆகவே, இவர்கள்மீது தங்கள் கண்களைப் பதிய வைத்து வாழ்கின்ற யாரும் அடர்ந்த காட்டிற்குள் திக்குத் திரியாமல் போக நேரிடும்.

இயேசு கிறிஸ்து அப்படிப்பட்டவர் அல்லர். அவர் நாம் வாழ்வு பெறுவதற்காக, இழிவைச் சந்தித்தவர்; மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளானவர். இறுதியில் அவர் இரத்தத்தால் ஆன திருமுழுக்கான சிலுவைச் சாவையே ஏற்றுக்கொண்டவர். இந்த உலகில் இயேசு கிறிஸ்துவைத் தவிர நமக்காக இழிவையும் மனநெருக்கடியையும் சந்தித்து, இறுதியில் கொடிய சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட யாராவது ஒருவர் இருக்கின்றாரா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படிப்பட்ட இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைத்து வாழச் சொல்கின்றது எபிரேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம். இயேசுவின்மீது நாம் ஏன் நமது கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும் என்றால், அவர் ஒருவரே, நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும், அதை நிறைவு செய்பவரும் ஆவார்; திரைப்பட நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, அரசியல் தலைவர்களோ அல்ல.

இயேசுவின்மீது கண்களைப் பதியவைத்து வாழ்ந்தவர்கள்:
பல்வேறு போராட்டங்கள், சித்திரவதைகளுக்கு அஞ்சியும், உலகப் போக்கிலான வாழ்க்கையே பெரிதென நினைத்தும் அதன்மீது தங்கள் கண்களைப் பதிய வைத்து வாழ்ந்தோர், வாழ்வோர் பலர் இருக்கையில், திரண்டு வரும் மேகம் போல், கிறிஸ்துவின்மீது தங்கள் கண்களைப் பதிய வைத்து வாழ்ந்த சாட்சிகள் பலர் உண்டு. அவர்களைப் பற்றி, இன்றைய இரண்டாம் வாசக இறைவார்த்தைப் பகுதிக்கு முந்தைய பகுதியான எபிரேயர் திருமுகத்தின் பதினோராம் அதிகாரம் முழுவதும் வாசிக்கின்றோம். இப்படி இயேசுவின்மீது அல்லது கடவுள்மீது தம் கண்களைப் பதிய வைத்து வாழ்ந்த ஒரு சாட்சிதான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்ற இறைவாக்கினர் எரேமியா.

"எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே" என்று சொன்ன எரேமியாவிடம் ஆண்டவராகிய கடவுள், "சிறுபிள்ளை நான் என்று சொல்லாதே, யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ, அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்..." (எரே 1: 6-8) என்று சொல்லி, அவரைத் தனது பணிக்கென அழைத்தார். எரேமியாவும், ஆண்டவர் தன்னை யாரிடமெல்லாம் அனுப்பினாரோ அவர்களிடம் சென்று, அவர் சொல்ல வேண்டும் என்று சொன்னாரோ அதைச் சொல்லி வந்தார். அதற்காக அவர் அடைந்த துன்பங்கள் ஏராளம்.

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேமின் அழிவையும் பாபிலோனியர்களின் படையெடுப்பையும் பற்றி எரேமியா அறிவித்ததால், நாட்டிலிருந்த தலைவர்களின் தூண்டுதலால் செதேக்கியா மன்னன் அவரைப் பாழ்ங்கிணற்றில் இறக்கிவிடுகின்றான். அங்கே எரேமியா தண்ணீர் இல்லாமல், உணவில்லாமல் மிகந்த வேதனைப்படுகின்றார். எரேமியா இத்தகைய துன்பங்களை அடைந்தாலும், அவர் கடவுளின் வார்த்தையை அறிவிக்க மறக்கவில்லை. தன் முயற்சியிலிருந்து அவர் பின்வாங்கவும் இல்லை. மாறாக, அவர் கடவுள்மீது தன் கண்களைப் பதிய வைத்துப் பந்தயத்தில் மனவுறுதியோடு ஓடி, கடவுளுக்குச் சான்று பகர்ந்தார்.

சான்று பகர்வோருக்குக் கிடைக்கும் கைம்மாறு:
கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காக இழிவையும் மன மனநெருக்கடியையும் சந்தித்து, இறுதியில் சிலுவையை ஏற்றுக்கொண்டு, அதன்மூலம் கடவுளை மாட்சிப்படுத்திய இயேசுவைக் கடவுள் தமது வலப்பக்கத்தில் அமரச் செய்தார். அதைப் போன்று தன் ஒரே மகன் இயேசுவின் கண்களைப் பதிய வைத்து, அவருக்குச் சாட்சிகளாகத் திகழும் ஒவ்வொருவருக்கும் கடவுள் தக்க கைம்மாறு தருவார். அது எத்தகைய கைம்மாறு என்பதை இயேசு தெளிவுபடுத்துகின்றார் (மத் 19: 29).

இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து, அவரது சாட்சிகளாக வாழ்கின்றபோது, சொந்தக் குடும்பமே நம்மை வெறுத்து ஒதுக்கலாம். நண்பர்கள்கூடப் பகைவர்கள் ஆகலாம். அதற்காக நாம் மனம்தளர்ந்து விடாமல், பரிசு பெற வேண்டிய இலக்கை நோக்கி மன உறுதியோடு ஓடிவோம். அப்போது கடவுள் நமக்குக் கட்டாயம் கைம்மாறு தருவார்.

சிந்தனைக்கு:
கதாநாயகர்களுக்கும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழ்ந்த புனிதர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி, மிகப்பெரிய எழுத்தாளரான பெலிக்ஸ் அட்லர் கூறும்போது, " கதாநாயகர்கள் பெரிய பெரிய விளக்கை ஏற்றி வைத்து உலகிற்கு ஒளி தரலாம். புனிதர்களோ தங்கள் வாழ்வால் உலகிற்கு ஒளியாய் விளங்குவார்கள்" என்பார். நாம் இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்ந்த புனிதர்களைப் போன்று நமது வாழ்வால் உலகிற்கு ஒளியாய் விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 
உண்மையான அமைதியைத் தருபவர் இயேசு
பப்புவா நியூ கினிவா (Papua New Guinea) என்ற தீவில் உள்ள பழங்குடி மக்கள் மத்தியில் பல ஆண்டுகாலம் மறைபோதகப் பணியைச் செய்தவர் டான் ரிச்சர்ட்சன் (Don Richardson). இவர் அமைதியின் குழந்தை (The Peace Child) என்றொரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு இது.

பப்புவா நியூ கினியாவில் இரண்டு இனக்குழுக்கள் உண்டு. அந்த இரண்டு இனக்குழுக்களுமே காலங்காலமாக ஒருவரோடு இருவர் போரிட்டுக்கொண்டு செத்து மடிந்துகொண்டிருந்தார்கள். இதனால் அந்த இரண்டு இனக்குழுக்களிலும் இருந்த மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இந்நிலையில் அந்த இரண்டு இனக்குழுக்களின் தலைவர்கள் ஒன்றுகூடி வந்து, இப்பிரச்சினையை எப்படி முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று பேசினார்கள்.

அப்பொழுது ஒரு இனக்குழுவின் தலைவர் இன்னோர் இனக்குழுவின் தலைவரைப் பார்த்து, உனக்கொரு மகன் இருக்கின்றான் அல்லவா... அவனை என்னிடம் விட்டுவிட்டு... நான் அவனை வளர்க்கின்றேன்... ஒருவேளை உன்னுடைய மகனை நான் சரியாக வளர்க்கவில்லை என்றால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுக்கலாம். உன் மகனுக்கு ஏதாவது நான் செய்துவிட்டால், நீ என் இனத்தின்மீது போர்த்தொடுப்பாய் என்ற ஒருவிதமான அச்சத்தில், நானும் உன்னுடைய மகனை என்னுடைய மகன் போன்று வளர்ப்பேன்! என்றார். அவர் சொன்ன யோசனை இன்னோர் இனக்குழுத் தலைவர்க்குப் பிடித்துப் போகவே, அவர் தன்னுடைய மகனை அந்த இனக்குழுவின் தலைவரிடம் ஒப்படைத்து வளர்க்கவிட்டார்.

ஆண்டுகள் மெல்ல உருண்டோடின. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பக்கத்து இனக்குழுவின் தலைவருடைய மகனை நல்லமுறையில் வளர்க்கவேண்டும்... இல்லாவிட்டால் அவர் என்னுடைய இனத்தின்மீது போர்த்தொடுத்துவிடுவார் என்ற ஒருவிதமான அச்சம் கலந்த தவிப்பில் சிறுவனை நல்லமுறையில் வளர்த்துப் பெரியவாக்கினார் இவர். பக்கத்து இனக்குழுவின் தலைவரோ தன்னுடைய மகன் பக்கத்து இனக்குழுத் தலைவரின் வீட்டில் நல்லமுறையில் வளர்கின்றான் என்ற நம்பிக்கையில் அவருடைய இனத்தின்மீது போர்த்தொடுக்காமல் இருந்தார். இதனால் இரண்டு இனக்குழுக்களும் பகைமையை மறந்து ஒருவரை ஒருவர் அன்புசெய்யத் தொடங்கினர். இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு டான் ரிச்சர்ட்சன் இவ்வாறு நிறைவுசெய்வார்: ஒருவர் மாற்றி ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும் போர்த்தொடுத்துக்கொண்டும் இருந்த அந்த இரண்டு இனக்குழுக்களும் எப்படி அமைதியின் குழந்தையின் வருகைக்குப் பின்னால் சமரசமானார்களோ, அதுபோன்று அமைதியின் குழந்தையாய் இந்த அவனிதனில் பிறந்த இயேசு கிறிஸ்துவால் உண்மயான அமைதி பிறக்கும்.

இயேசுவால் இப்புவியில் அமைதி வரும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாளின் நற்செய்தி வாசகம் உண்மையான அமைதியைத் தரும் இயேசு என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்

இயேசு இவ்வுலகில் ஏற்படுத்த வந்தது அமைதியையா? பிளவையா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை. பிளவு உண்டாக்கவே வந்தேன் என் உங்கட்குச் சொல்கிறேன் என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவர் இவ்வுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தாரா? இல்லை, பிளவை உண்டாக்க வந்தாரா? என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றன. ஏனென்றால், அவருடைய பிறப்பின்போது வானதூதர்கள், உலகில் அவர்க்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக (லூக் 2: 14) என்றார்கள். இயேசுகூட தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக (லூக் 10:5) என்றுதான் வாழ்த்தச் சொன்னார். அப்படியிருக்கையில், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகின்ற வார்த்தைகள், ஒருவேளை அவர் இன்றைக்கு இருக்கின்ற ஒருசில அரசியல் தலைவர்களைப் போன்றும் மனிதர்களைப் போன்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றொரு கேள்வி எழுகின்றது.

பிளவின் வழியாக அமைதி
இயேசு, இன்றைக்கு இருக்கின்ற அரசியல் தலைவர்களைப் போன்று முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகின்றாரா? என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படியானால் இயேசுவின் இவ்வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? அதற்கு நாம் இதே பகுதி இடம்பெறுகின்ற மத்தேயு நற்செய்தியை இணைத்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

மத்தேயு நற்செய்தியில் இயேசு, அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் (மத் 10: 34) என்று சொல்லிவிட்டு, இருசில இறைவார்த்தைக்குப் பின்னால், என்னைவிடத் தன் தந்தையிடமோ, தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்... (மத் 10: 37) என்பார். இந்த இரண்டு இறைவார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போமேயானால், ஒருவர் இயேசுவைப் பின்பற்றுவதால் அவருடைய தாயோ, தந்தையோ, சகோதரனோ, சகோதரியோ அவரை வெறுக்கலாம். அதனால் குடும்பத்தில் பிளவு உண்டாகலாம். ஆனாலும் அந்தப் பிளவு அங்கு அமைதி ஏற்படுவதற்காக ஒரு முகாந்திரம் அல்லது தொடக்கம் என்று சொல்லலாம். எப்படியென்றால், இயேசுவைப் பின்பற்றி நடக்கின்றவருடைய வாழ்க்கையைப் பார்த்துவிட்டு, குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இயேசுவின் வழியில் நடக்கலாம். இதனால் அங்கு உண்மையான அமைதி நிலவலாம். இதைதான் இயேசு, அமைதியை அல்ல, பிளவையே உண்டாக்க வந்தேன் என்று கூறுகின்றார்.

பிரான்சிஸ் அசிசியாரின் தந்தை, தன் மகன் பெரிய போர்வீரனாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அவர் உடைமைகளையெல்லாம் விற்று ஏழைகட்குக் கொடுத்துவிட்டு, இயேசுவைப் பின்பற்றத் தொடங்குகின்றார். இதைக் கண்டு பிரான்சிஸ்சின் தந்தை அவரிடம், நீ எனக்கு மகனே இல்லை என்று தலைமொழுகுகின்றார். அதற்கு பிரான்சிஸ், எனக்கு விண்ணகத் தந்தை இருக்கின்றார் என்று சொல்லிவிட்டு இறைப்பணி செய்யத் தொடங்கினார். இது வெளிப்பார்வைக்கு இயேசுவின் பொருட்டு பிளவாக இருந்தாலும், உண்மையில் அங்கு அமைதிக்கான விதை தூவப்படுகின்றது. இத்தகைய அமைதியைத்தான் இயேசு இவ்வுலகிற்கு தருவதாகச் சொல்கின்றார்.



இயேசுவுக்கு உகந்தோர்க்கு அமைதி
இயேசு தருகின்ற அமைதி, வழக்கமாக இவ்வுலகம் தருகின்ற அமைதி போன்றது அல்ல, அவ்வமைதி பிளவின் வழியாக... உண்மையான தியாகம், அன்பு, கரிசனை போன்றவற்றின் வழியாக வரும் என்று பார்த்தோம். இப்பொழுது இயேசு தருகின்ற அமைதியைப் பெற ஒருவர் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவின் பிறப்பின்போது வானதூதர்கள், மண்ணுலகில் அவர்க்கு உகந்தோர்க்கு அமைதி உண்டாகுக (லூக் 2: 14) என்று பாடியதாக வாசிக்கின்றோம். அந்த வாழ்த்துப் பாடலிலேயே இயேசு தரும் அமைதியைப் பெறுவதற்கான வழி இருக்கின்றது. உண்மையில் யார் யாரெல்லாம் இயேசுவுக்கு உகந்த தியாக வழியில், அன்பு வழியில், மற்ற எல்லாரையும் விட அவர்க்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும் வழியில் நடக்கிறார்களோ அவர்கட்கு, இயேசு தரும் அமைதி நிச்சயம் உண்டு என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

சிந்தனை
உலக அமைதி உனக்குள் இருந்து தொடங்குகின்றது என்பார் தலாய் லாமா. ஆகையால், நாம் இன்மண்ணில் இயேசுவின் உண்மையான சீடர்களாய் வாழ்வதால், வரும் அமைதியை உலகிற்குத் தருவோம். அதன்வழியாக இப்புவியில் உண்மையான அமைதி நிலவச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ்.

 
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை

இன்று உலகத்திலே, குறிப்பாக நம் நாட்டிலே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். இன்று எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு, வெட்டு, குத்து, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் காண்கின்றோம். நேற்று ஒருவர் சொன்னார்: இன்று நாம் வாழும் இந்த நாட்டிலே எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம், அமைதியற்ற நிலை உருவாகியுள்ளது. அன்று ஒரு மனிதன் ஒரு தெருவில் உட்கார்ந்து மண்ணைத் தின்று கொண்டிருந்தான். பலரும் பார்த்து ஏளனமாகச் சிரித்துச் சென்றார்கள். ஆனால் ஒரு மனிதர் இந்தப் பரிதாபமான நிலையைக் கண்டு அவனை நெருங்கி, 'நண்பா ஏன் இந்த மண்ணைத் தின்று கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டான். அவன் சொன்னான், 'ஐயா இந்த நாட்டிலே கலப்படமில்லாத ஒன்று இருக்குமானால் இந்த மண்ணுதான். அதனால்தான் இதைச் சாப்பிடுகிறேன்' என்றான்.

ஆனால் இன்றைய நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு ஒரு புதிய கலாச்சாரத்தைக் கொண்டு வருகின்றார். நான் தீயை மூட்டவே வந்தேன், அது இப்போது பற்றி எரிய வேண்டும்.

சமாதானத்தைக் கொணர வந்தேன் என நினைக்க வேண்டாம். பிரிவினையை உண்டாக்கவே வந்தேன் (லூக். 12:49-53) என்கிறார். அவர் பிறந்தபோது வானதூதர் அறிவித்த செய்தி என்ன?
உலகிலே நல் மனத்தோருக்கு அமைதி உண்டாகுக (லூக். 2:14).

நான் தரும் சமாதானமோ இந்த உலகம் தரமுடியாது (யோவா. 14:27) என்கிறார். ஆனால் இன்றைய நற்செய்தியிலே நான் சமாதானத்தைக் கொணர வந்தேன் என நினைக்க வேண்டாம் - பிரிவினையை உண்டாக்கவே வந்தேன் என்கிறார்.

ஒரு நாள் ஒரு இளைஞன் ஒரு முனிவரிடம் சென்றான். ஐயா முனிவரே உண்மையான அமைதி தரும் இன்பத்தை எனக்குக் காட்டும் எனக் கேட்டான். அவர் சொன்னார்: 'மகனே ஊருக்குச் செல் - சந்தித்த மக்களை எல்லாம் கேள்' என்றார். தெருவிலே படுத்துக்கிடக்கும் ஒரு மனிதனைப் பார்த்து, 'ஐயா எனக்கு அமைதி தரும் இன்பம் எது என்று சொல்வாயா?' என்று கேட்டான். 'அதற்கு அவன் வேலை செய்யாமல் சும்மா இப்படி படுத்துக்கிடப்பதில்தான் எனக்கு இன்பம்' என்றான்.

இன்னொருவன் சொன்னான்: 'நன்றாக வயிறு முட்ட சாப்பிடுவதில், குடிப்பதில்தான் எனக்கு இன்பம்' என்றான். ஒருவன் சொன்னான், 'இடைவிடாது படம் பார்த்து, தொலைக்காட்சியில் உட்காருவதுதான் எனக்கு இன்பம்' என்றான். இன்னொருவன் சொன்னான், 'உலகச் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடப்பதில் தான் எனக்கு இன்பம்' என்று. இவ்வாறு பலவிதமான பதிலைக் கேட்ட இளைஞன் குழப்பம் அடைந்து, முனிவரிடம் சென்று திரும்பவும் கேட்டான். 'எதிலே உண்மையான இன்பம் உண்டு' என்று. 'மகனே அங்கே ஒருவன் ஆலயத்தில் உட்கார்ந்து இருக்கின்றானே, அவனிடம் கேட்டு வா' என்று அனுப்பினார். அவன் கண்ணீரோடுச் சொன்னான். 'சும்மா இருப்பதில் உண்மை இன்பம் என நினைத்தேன் கிடைக்கவில்லை. உண்பதிலும் குடிப்பதிலும் தான் இன்பம் எனக் கண்டேன். இன்பம் இல்லை . விடாது சினிமா பார்ப்பதில்தான் இன்பம் எனக் கண்டேன். இதிலும் எனக்கு அமைதி இல்லை. சிற்றின்பத்தில் மூழ்கினால் போதும் என நினைத்தேன். அதிலும் இன்பம் இல்லை. எனவே உண்மை இன்பத்தை நாடி இறைவனைத் தேடி வந்துள்ளேன்' என்றான். இத்தகைய போலித்தனமான இன்பங்களைத் தேடுவதில்தான் இந்தப் போலித்தனமான கலாச்சாரம் பரவியுள்ளது.

இந்தப் போலித்தனமான கலாச்சாரத்தைப் போக்குவதுதான் கிறிஸ்து தரும் போதனை - இது பிரிவினையை உண்டாக்க அல்ல. - என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதையே பெற்றுக்கொள்வான் (மத். 16:24). நீதியின்பால் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர். ஏனெனில் கடவுளின் அரசைக் காண்பர் (மத். 5:10).

கோதுமை மணியானது தரையிலே விழுந்து மடிந்தாலொழிய பலன் தராது (அரு. 12:24)


 
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
தீயை மூட்டவே இயேசு வந்தார்

இயேசு, தான் தீயை மூட்ட வந்ததாக இன்றைய நற்செய்தியில் கூறுகின்றார்.

தீ என்பது நெருப்பைக் குறிக்கும்! நெருப்பு மாற்றங்களை ஏற்படுத்தும்! மணமில்லாத மீன் நெருப்பால் சுடப்படும்போது மணம் பெறுகின்றது. அரிசி நெருப்பின் உதவியால் சோறாக மாறுகின்றது.

நெருப்பு ஆசைகளைச் சுட்டெரிக்கும். குப்பைகளுக்கு நெருப்பு வைத்து அவற்றை அழிக்கின்றோம்.

நெருப்பு தன்னால் சுடப்படும் தங்கத்தைச் சுடரச்செய்கின்றது.

இயேசு எத்தனையோபேரின் வாழ்க்கையை அடியோடு மாற்றியதை, பாவங்களையெல்லாம் மன்னித்ததை, சாதாரண மனிதர்களை விண்மீன்களாக மாற்றியதை நாம் அறிவோம்.

இதோ விவிலியத்திலிருந்து ஒரு சில உதாரணங்கள் : திப 26:1-18: இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டவர் புனித பவுலடிகளார். இறை மக்கள் பலரை சிறையில் அடைத்தவர்; கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க இசைவைப் பெற்றவர்; அவர்களுக்கு எல்லையில்லா துன்பங்களையும் துயரங்களையும் கொடுத்தவர்.

ஆனால் இயேசு பவுலை தமஸ்குவுக்குச் செல்லும் வழியிலே தடுத்தாட்கொண்டு அவரை அடியோடு மாற்றினார்.

இயேசு நெருப்பாய், ஒளியாய் நின்று சவுலின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டார்.

முள் மலரானது;
தேள் தேனானது;
பாலைவனம் சோலைவனமானது.
திப 2:1-11: அச்சம் ! அனைத்துத் திருத்தூதர்களின் உள்ளத்திலும் அச்சம் ! அவர்கள் யூதர்களுக்கு அஞ்சி, மேல்மாடி ஒன்றில் தங்கியிருந்தார்கள்.

அச்சம் அவர்களுடைய மனத்தை அடியோடு பலவீனப்படுத்தியிருந்தது! அவர்கள் இயேசு கொடுத்த கட்டளைகளையெல்லாம் மறந்து அடங்கி ஒடுங்கிக்கிடந்தார்கள்.

அப்போது இயேசு ஆண்டவர் அவரது ஆவியை அவர்கள் மீது பொழிகின்றார் ! அந்த ஆவி நெருப்பு உருவிலே அவர்கள் மீது இறங்குகின்றது. அச்சம் ஆண்டவரால் சுட்டெரிக்கப்பட, மாபெரும் மாற்றம் அவர்களுள் நிகழ்கின்றது. ஒரு திருத்தூதரைத் தவிர, மற்ற 11 பேரும் மறைச்சாட்சிகளாக விளங்கினார்கள். தாழ்ந்தோரை ஆண்டவர் உயர்த்தினார்; ஆற்றலற்றவரை ஆற்றல்மிக்க திருத்தூதர்களாக மாற்றினார்.

திசைமாறிய பறவை அவள்! அந்தப் பறவை ஒரு நாள் விண்ணகத் தீயான இயேசுவின் பாதத்திலே விழுந்தது!

அவள் தன் கண்ணீரால் இயேசுவிடம் தனது பாவக்கதையைச் சொன்னாள். இயேசுவுக்கு அவள் பேசிய மௌன மொழி புரிந்தது.

அவளைப் பார்த்து, உமது நம்பிக்கை உம்மை மீட்டது ; அமைதியுடன் செல்க என்றார். அவருடைய அன்புத் தீ, கனிவுத் தீ, கருணைத் தீ அந்தப் பெண்ணின் மனத்திலிருந்த பாவக் குப்பைகளையெல்லாம் எரித்துப்போட்டது.

ஆம். இயேசு ஒரு தெய்வீகத் தீ! அந்தத் தீயினால் நமது எல்லா துன்பங்களையும் எரித்துப் போட்டு, நமது வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கமுடியும்.

சேற்றுக்குள் புதைந்து கொண்டிருந்த எரேமியாவைக் காப்பாற்றிய கடவுள் (முதல் வாசகம்) ஒருநாள் இயேசுவின் உருவிலே பெத்லகேமிலே பிறந்தார் என்று நாம் நம்பினால் போதும் (இரண்டாம் வாசகம்); நமது வாழ்க்கையில் அற்புதங்களும் அதிசயங்களும் புதுமைகளும் நடக்கும்.

கொடுக்காமல், எல்லாத் துன்பங்களையும் வாழ்க்கைப் போராட்டத்தில் மனத்தளர்ச்சிக்கு இடம் தீக்கிரையாக்கும் ஆற்றல்மிக்க ஆண்டவர் என்னோடு இருக்கும்போது எனக்கென்ன குறை என்று வாழ்வோம். மேலும் அறிவோம்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஒருநாள் ஒரு கணவர் தன் மனைவியிடம் கோபக்கனல் பறக்க, "அடியே! 10 நிமிடங்களில் குளிப்பதற்குச் சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்கா விட்டால் என்ன நடக்கப் போகுது என்று பார்?" என்று கூறினார். மனைவியும் உரத்த குரலில், "10 நிமிடங்களில் சுடுதண்ணீ ர் வைத்துக் கொடுக்க முடியாது, என்ன நடக்கும்?" என்று கேட்டதற்குக் கணவர், "அப்படியானால் பச்சைத் தண்ணீரில் குளித்துக் கொள்கிறேன்" என்று மிகவும் சாதுவாகப் பதில் சொன்னார். ஒருசில காரியங்களில் கணவர் மனைவிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களிலும் விட்டுக்கொடுக்க முடியுமா?

16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி திருத்தந்தைக்கு எதிராகப் போட்டித் திருச்சபையை ஏற்படுத்தினார். எல்லா மன்னர்களும் அரசனை ஆதரிக்க, தாமஸ்மூர் என்பவர் மட்டும் மன்னனை ஆதரிக்க மறுத்துவிட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்; மரண தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அவரின் மனைவி லூயிசா, மன்னனை ஆதரித்து மரண தண்டைனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி அவரை எவ்வளவோ கெஞ்சியும் தாமஸ் மூர் மறுத்துவிட்டார். இன்முகத்துடன் மரண தண்டனையை ஏற்றார். இன்று அவர் ஒரு மறைச்சாட்சி; பொதுநிலையினரின் பாதுகாவலர். மனைவியின் சொற்கேட்டு அவர் விண்ணக வாழ்வை இழக்க விரும்பவில்லை! கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மற்ற எல்லா உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார், "மண்ணுலகில் பிளவு உண்டாக்க வந்தேன், என் பொருட்டு வீட்டில், ஒருவர் மற்றவர்க்கு எதிராகப் பிரிவர்" (லூக் 12:51). கிறிஸ்துவத்தை உரோமையர் அடியோடு வெறுத்தனர். ஏனெனில் அதனால் குடும்பம் இரண்டாகப் பிளவுபட்டது. குடும்பத்தில் ஒருசிலர் கிறிஸ்துவுக்குச் சார்பாகவும் வேறு சிலர் அவருக்கு எதிராகவும் பிரிந்தனர். கிறிஸ்து உலக வரலாற்றை மட்டும் கி.மு - கி.பி. என்று பிரிக்கவில்லை ; குடும்பத்தையும் பிரித்துவிட்டார். அவரது வார்த்தை வாளாகச் செயல்பட்டுக் குடும்பத்தைப் பிளந்தது.

கிறிஸ்து எதிர்க்கப்படும் அடையாளமாய் இருப்பார் என்று சிமியோன் இறைவாக்குரைத்தார் (லூக் 2:34), கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட மக்களில் ஒருசிலர் வியந்து அவரை ஏற்றுக் கொண்டனர் (மாற் 1:27). ஆனால் வேறு சிலர் அவர் மட்டில் இடறல்பட்டு அவரை ஏற்க மறுத்து " இவர் தச்சருடைய மகன் அல்லவா?" (மத் 13:55) எனக்கூறி அவரை ஏளனம் செய்தனர். நமது ஒவ்வொரு செயலிலும் நிலைப்பாட்டிலும், ஒன்று நாம் கிறிஸ்துவுக்குச் சார்பாக இருக்கின்றோம்; அல்லது அவருக்கு எதிராக இருக்கின்றோம். "என்னோடு இல்லாதவர் எனக்கு எதிராக இருக்கிறார்" (மத் 12:30) என்று கிறிஸ்து தெளிவாகக் கூறியுள்ளார். கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் பின்பற்றுவதில் சமரசத்திற்கு இடமில்லை.

கிறிஸ்துவினுடைய திருச்சபையும் "எதிர்க்கப்படும் அடையாளமாக" இருக்கிறது. திருச்சபை விசுவாசம் மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது. எடுத்துக்காட்டாக, மணமுறிவு, கருச்சிதைவு, கருணைக்கொலை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றது. இவற்றில் சமரசத்திற்கு இடமில்லை. ஆனால் ஒரு சிலர் திருச்சபையின் போதனையை எதிர்த்துப் போர்க்கொடி பிடிக்கின்றனர். அவ்வாறு செய்வது கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானது.

அதே நேரத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் இறைவாக்கு உரைக்கும் பணியையும் செய்ய வேண்டும், திருச்சபைக்கு உள்ளும் வெளியிலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட அவர்களுக்குக் கடமையும் உரிமையும் உண்டு. இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எரேமியாவைப்பற்றி உள்ளது. கி.மு. 7- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர் அரசர்களுக்கும் மக்களுக்கும் ஆலயத்துக்கும் எதிராகப் பேசினார். அவ்வாறு பேசக்கூடாது என்று அவர் விரும்பினாலும் கடவுளுடைய வார்த்தை அவர் இதயத்தில் பற்றிளரியும் தீ போல இருந்தது. அவரால் அதை அடக்கிவைக்க முடியவில்லை (எரோ 20:9). எரேமியா. இறைவாக்கு உரைத்ததால் பல இன்னல்களுக்கு உள்ளானார். பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டார்: தாடுகடத்தப்பட்டார்; மக்கள் அவரைக் கொல்ல முயன்றனர். இருப்பினும் அவர் எதற்கும் அஞ்சவில்லை . ஏனெனில் அவரை இறைவாக்கு உரைக்கும்படி அழைத்த கடவுள் அவரிடம் கூறினார்: " அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க உன்னோடு இருக்கிறேன்" (எரே 1:19). நமது இறைவாக்குப் பணி கடவுளது பணியென்றால் எவராலும் அதை அழிக்க முடியாது. மாறாக, அது நமது சொந்தப் பணி என்றால் அது சிதைந்து போவது உறுதி.

" அமைதியை அல்ல, வாளையே கொண்டு வந்தேன்" (மத் 10:35) என்ற ஆண்டவரின் காலகயை மேற்கோள்காட்டி ஒருசிலர் வன்முறையில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதே ஆண்டவர் "வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்றும் எச்சரித்துள்ளார். கிறிஸ்து மண்ணுலகில் மூட்ட வந்த அன்புத் தீ (லூக் 12:49) மட்டுமே நமது ஆயுதமாகும்.

ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணிடம், "வா! ஓடிப் போகலாம்" என்றான். அதற்கு அவள், "செருப்பு பிஞ்சு போகும்" என்றதற்கு அவன் அவளிடம், "பரவாயில்லை செருப்பைத் தூக்கிக் கொண்டே ஓடலாம்" என்றான், இன்று பலர் பல காரியங்களுக்காகப் பலருடன் சேர்ந்து ஓடுகின்றனர். ஆனால் இன்றைய இரண்டாம் வாசகம் நாம் யாருடன், எப்படி ஓட வேண்டும் எனக்கூறுகிறது. நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான கிறிஸ்துவின்மேல் நம் கண்களைப் பதிய வைத்து மன உறுதியுடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓட எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நம்மை அழைக்கிறது.

நாம் ஓடுவோம்; கிறிஸ்துவுடன் ஒடுவோம்; உலகத்துடன் சமரசம் செய்யாமல் ஓடுவோம், கிறிஸ்துவுக்குச் சார்பாக இறைவாக்கு உரைப்போம், நலமானவைகளைத் தூக்கிப் பிடிப்போம்: நலமற்றவைகளை உடைத்து எறிவோம்.


 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
போர் முழக்கம்!

புனித 10ம் பத்திநாதர் திருத்தந்தையாக இருந்த போது ரோமையில் உள்ள குருமடம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள குருமாணவர்களிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். உண்மைத் திருச்சபையின் அறிகுறிகள் என்ன என்பதே அக்கேள்வி. "1. ஒருமைத்தன்மை (ஏகம்). 2. தூய்மைத்தன்மை (பரிசுத்தம்). 3. பொதுமைத்தன்மை (கத்தோலிக்கம்) 4. திருத்தூதர்வழி மரபுத்தன்மை (அப்போஸ்தலிக்கம்) ஆகிய நான்கு பண்புகளே அல்லது தன்மைகளே இயேசு நிறுவிய திருச்சபையின் அடையாளங்கள்" என்றனர் குருமாணவர்கள்.

"இன்னொரு அறிகுறியை விட்டுவிட்டீர்களே" என்றார் திருத்தந்தை. அது எந்த அறிகுறி என்று திகைத்து நின்றார்கள் குருமாணவர்கள். "உலகப் போக்கின்படி போகாமல் எதிர் நீச்சல் அடிப்பதனால் பலருடைய எதிர்ப்புக்கு உள்ளாகும் திருச்சபைதான் உண்மைத் திருச்சபை என்று விளக்கினார் திருத்தந்தை.

கிறிஸ்துவுக்கு நண்பனாக இருக்க விரும்புகிறவன் உலகத்துக்கு எதிரியாக மாற வேண்டும். உலகப் போக்கின்படி போகாமல்...ஆம், போக முடியாது, போகக் கூடாது. காரணம்? இயேசுவின் சிந்தனைகள், இலட்சியங்கள், ஈடுபாடுகள் மதிப்பீடுகள் வேறு. உலகின் சிந்தனைகள் இலட்சியங்கள், ஈடுபாடுகள், மதிப்பீடுகள் வேறு.

இயேசு வழித் திருச்சபை எதிர்ப்புக்குள்ளாகும் திருச்சபை இயேசுவின் பொருட்டு நாம் எடுக்கிற எந்த நிலைப்பாடும் எதிர்ப்புக்கு நம்மை உட்படுத்தும். இழப்புக்களைச் சந்திக்க வைக்கும். தீமைக்கு எதிரான போரில் இரத்தம் சிந்த நேரும்.

பழைய ஏற்பாட்டு அரசன் செதேக்கியா, தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள, தீயவர்களின் ஆதரவைப் பெற அநீதித் தீர்ப்புக்கு ஆளாக்கிய இறைவாக்கினர் எரேமியா (முதல் வாசகம்), கருப்பின மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட மார்ட்டின் லூத்தர்கிங், ஏழை எளிய மக்களின் உரிமைக்காக உயிர் கொடுத்த பேராயர் ரொமேரோ... இப்படித் திரண்டு வரும் மேகம் போல இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க... நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்'' (எபி. 12:1-2).

சரியான நேரத்தில் தவறுகளைச் சுட்டிக் காட்டாவிட்டால் அவை நம்மையே சுட்டுவிடும்; கண்டிக்காவிட்டால் காலமெல்லாம் வேதனைப்பட நேரும். அடுத்த காம்பவுண்டில்தானே புதர் வளர்கிறது என்று சும்மா இருக்கலாமா? புதர் வேண்டுமானால் நம் வீட்டுக்குள் நுழையாமல் போகலாம். ஆனால் அந்தப் புதரில் வளரும் பாம்பு நம் வீட்டிற்குள் வராது என்பது என்ன நிச்சயம்? அடுத்த வீட்டு வாசலில்தானே குப்பை என்று கண்டுகொள்ளாமல் இருந்தால், அக்குப்பையிலிருந்து உருவாகும் கொசுக்களும் ஈக்களும் நமக்கு நோயைக் கொண்டு வராதா?

உள்ளதைச் சொன்னால் உடம்பு எரியும். நீதியை நினைத்தாலே நெஞ்சம் எரியும். அதற்காக வாய் மூடி மௌனியாக இருக்க முடியுமா ஓர் இறைவாக்கினர்?

போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித்
தூற்றுவார் தூற்றட்டும்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எதுவரினும் அஞ்சேன் நில்லேன்.

நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையே பிளவை உண்டாக்குவதே என் பணி என்கிறார் இயேசு (லூக். 12:51). தீயவற்றோடு கொள்ளும் சமரசத்தால் வரும் சமாதானத்தை விட அவற்றை அழிப்பதில் வரும் பிரிவினை நல்லது. தீயவற்றைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் வரும் அமைதியைவிட, அதைச் சுட்டிக்காட்டுவதால் வரும் பகைமை நல்லது.

"பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மனஉறுதியோடு தாங்கிக் கொண்ட இயேசுவை எண்ணிப் பாருங்கள்... பாவத்துக்கு எதிரான போராட்டத்தில் இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை எபி. 12:3,4 நமக்கு விடுக்கும் சவால் இது!

மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன்... பிளவு உண்டாக்கவே வந்தேன்" இன்றைய நற்செய்தி இயேசு செய்யும் போர் முழக்கம்! அர்த்தமுள்ள கிறிஸ்தவ வாழ்வுக்கு அடித்தளமிடும் வார்த்தைகள்!

இறைவாக்கினர் எசாயா முன்னுரைத்த "அமைதியின் அரசரா', உலகம் தர இயலாச் சமாதானத்தை வாக்களித்தவரா, பிரிவினையை உண்டாக்க வந்தேன் என்கிறார்? "மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும் எதிர்க்கப்படும் அறிகுறியாகவும் இருக்கும்" (லூக். 2:34) என்பதுதானே இயேசுவின் அடையாளம்!

இயேசு மூட்டுகிற தீ பாலைவனப் பாதையில் இறைவன் தன் உடனிருப்பை உணர்த்தி இஸ்ரயேலைத் தூணாக நின்று வழிநடத்திய நெருப்பா (சி.ப.13:21)? பதரைச் சுட்டெரிக்கும் தண்டனை நெருப்பா (லூக். 3:17)? இறைவாக்கினரின் நாவைத் தொட்டு தூய்மைப்படுத்தும் நெருப்பா (எசா.6:7)? தீ நாக்கு வடிவில் எழுந்த தூய ஆவி என்னும் நெருப்பா (தி.ப. 2:3)? இயேசுவின் பணியாலும் அவருடைய சீடர்களின் பணியாலும் எழுகின்ற தீ ஒவ்வொருவருடைய தன்மையையும் தரத்தையும் சோதித்து எடைபோட்டுத் தீர்ப்பிடும் தீயாகும். இயேசுவை முன்னிட்டு இயேசுவைச் சார்ந்தவர் இயேசுவுக்கு எதிரானவர் என்ற பிளவை ஏற்படுத்தும் தீயாகும் (னூக். 12:51). இத்தகைய சவால்களைச் சந்திக்க துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே இயேசுவின் சீடர்களாக முடியும்.

இதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமும் என்பது மழுங்கத்தனம் அல்ல.இயேசுவைப் பொருத்தவரை தாழ்ச்சி என்பது உண்மை. சாந்தம் என்பது வீரம். வீரன்தான் சாந்தமாக இருக்க முடியும். இல்லையென்றால் சாந்தம் கோழைத்தனமாகும்.

பிரிவினை தவிர்க்க இயலாது. 'இவன் ஊரை இரண்டு படுத்துகிறான்' என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் பலரைப் பற்றி எழும். அப்போதெல்லாம் திடீர்த் தீர்ப்பு கூடாது.

- பிரிவினை யாரால் வருகிறது, எதனால் வருகிறது என்ற கேள்விகள் எழ வேண்டும்.

- தன்னலத்தாலா, பதவி வெறியாலா, பேராசையாலா, அப்படியெனில் பிரிவினை கண்டனத்துக்குரியது.

இயேசுவினாலா, இறையாட்சி விழுமியங்களினாலா, அப்படி என்றால் பிரிவினை வரவேற்புக்குரியது.

தன்னலத்தாலும் சாதி வெறியாலும் பேராசையாலும் வரும் பிரிவினைகளுக்குக் காரணமாய் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!

மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும்" (லூக். 12:49). வாழ்க்கை என்பது சிறிய மெழுகுவர்த்தி அல்ல. அது ஒரு பெரிய தீப்பந்தம். அது என்னோடு இருக்கிறது. மற்றவருக்கு அதைக் கொடுப்பதற்கு முன்னதாக சிறந்த முறையில் அதை நான் மிளிர வைக்க வேண்டும்.

இயேசு தனது பணியைத் தீயோடு ஒப்பிடுகிறார். தீ புடமிடுவது போலும் தூய்மையற்றதை அகற்றித் தூய்மைப்படுத்துவது போலும் (மலாக். 3:3) பொய்மைகளுக்கிடையே நிற்கும் உண்மையைத் வந்த தீ கிறிஸ்து.

சமூகப் புரட்சியாளர் ஆயர் ஹெல்டர் காமொரா சொல்வார்: "ஏழைகளுக்கு உணவு கொடுத்தேன். என்னைப் புனிதன் என்றார்கள். ஏழைகளுக்கு ஏன் உணவு இல்லை? என்று உரிமையைத் தட்டிக் கேட்டேன். என்னைக் கம்யூனிஸ்டு என்றார்கள். நீதியற்ற நேர்மையற்ற, உலகைத் தட்டிக் கேட்டால் தீ பற்றத்தான் செய்யும். உண்மை சுட்டெரிக்கும் என்பார்கள். அப்படியென்றால் உண்மை தீ தானே! உண்மையே உருவானர் இயேசு. பொய்மையில் போலித் தனத்தில், பூரிப்படைந்த மக்களிடம் உண்மைக்கு வரவேற்பு இல்லை. அத்தகையோரிடத்தில் உண்மை என்ற தீ கலவரத்தை ஏற்படுத்துகின்றது. நாமும் குப்பை கூளங்களான தீமைக்கும், அநீதிக்கும், வெளி வேடத்துக்கும் தீ வைத்து உண்மையின் சீடர்களாகத் திகழ்வோம்.
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
சற்றும் எதிர்பாராத வேளைகளில், நம் கண்ணில்படும் ஒரு படமோ, ஒரு கூற்றோ, நமக்குள் பல சிந்தனைகளைக் கிளறிவிடுவதை நாம் உணர்ந்திருப்போம். என் கண்ணில் பட்ட அத்தகைய ஓர் ஆங்கிலக் கூற்று, இன்றைய வழிபாட்டுச் சிந்தனைகளைத் துவக்கிவைக்கிறது. "He (She) who is on fire, cannot sit on a chair" என்ற அந்த ஆங்கிலக்கூற்றை, தமிழில் சொன்னால், அது இவ்விதம் ஒலிக்கலாம்: "பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது".

இச்சொற்கள், 1989ம் ஆண்டு வெளியான ஓர் ஆங்கில நூலின் தலைப்பை என் நினைவுக்குக் கொணர்ந்தன. புகழ்பெற்ற Robert Fulghum என்ற எழுத்தாளர் உருவாக்கிய அந்நூலின் தலைப்பு: " It Was On Fire When I Lay Down On It" , அதாவது, "நான் அதில் படுத்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது."

நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியுடன், ஃபுல்கம் அவர்கள், இந்நூலை ஆரம்பித்துள்ளார். ஒரு வீட்டின் மேல் மாடியிலிருந்து புகை வெளியேறவே, அங்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். அவர்கள் அந்த அறையை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, அங்கு, எரிந்துகொண்டிருந்த ஒரு படுக்கையில் ஒருவர் படுத்திருந்ததைக் கண்டனர். அவரை மீட்டு, தீயை அணைத்தபின், அவரிடம் நடந்ததென்ன என்று கேட்டபோது, "எனக்குத் தெரியாது. நான் அதில் படுத்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்று சொன்னாராம்.

இந்தக் கதையைக் கேட்டு, நமக்குள் இலேசான புன்னகை தோன்றினால், ஃபுல்கம் அவர்கள், Horace என்ற கவிஞரின் ஒரு கூற்றை நினைவுபடுத்துகிறார். "ஏன் சிரிக்கிறாய்? பெயரை மாற்று, அந்தக் கதை உன்னைப்பற்றி கூறும்" என்ற அக்கூற்றை நினைவுபடுத்தும் ஃபுல்கம் அவர்கள், எரியும் கட்டிலில் படுத்திருந்த அம்மனிதரின் கூற்று, நம்மில் பலருக்குப் பொருந்தும்; இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில், "நான் அதில் படுத்தபோது, அது எரிந்துகொண்டிருந்தது" என்ற சொற்களை நம்மில் பலர் நம் கல்லறை வாசகமாகவும் எழுதலாம் என்று இந்நூலின் துவக்கத்தில் கூறியுள்ளார்.

"பற்றியெரியும் மனிதரால், பல்லக்கில் அமர்ந்திருக்க முடியாது" என்ற முதல் வாக்கியம், பற்றியெரியும் சுடர்களாக இவ்வுலகில் வாழ்வோரைக் குறிக்கிறது. இரண்டாவது வாக்கியமோ, தங்களைச் சுற்றி அனைத்தும் பற்றியெரிந்தாலும், கண்மூடித் துயில்வோரைக் குறிக்கிறது. இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும், இறைவனின் உண்மையால் பற்றியெரிந்த இரு தீப்பிழம்புகளைக் குறித்து சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள், இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா, தன்னை இறைவன் ஏமாற்றி, தன்மேல் வெற்றி கொண்டுவிட்டதால், பிறரது நகைப்புக்கு ஆளானதாகவும், ஆண்டவரின் வாக்கு தன்னை பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது என்றும் கூறுகிறார். (காண்க. எரேமியா 20:7-8) இருப்பினும், தன்னால் அமைதி காக்க இயலவில்லை என்பதை, அவர் கூறும்போது, பற்றியெரியும் ஒரு பணியாளரை நாம் காண்கிறோம். "அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. (எரேமியா 20: 9). என்ற கதறல் எரேமியாவிடமிருந்து எழுகிறது. இவ்விதம், ஒரு தீப்பிழம்பாக வாழ்ந்த எரேமியாவின் உயிருக்கு வந்த ஆபத்தை, இன்றைய முதல் வாசகம் (எரேமியா 38: 4-10) எடுத்துரைக்கிறது.

எரேமியா இந்த நெருக்கடிக்கு உள்ளானதற்குக் காரணம், அவர் சொன்ன உண்மை. யூதேயா நாடு, பாபிலோனிய மன்னரால் கைப்பற்றப்படும்; கொடும் துன்பங்கள் தொடரும் என்ற உண்மையை, மன்னரான செதேக்கியாவிடம் கூறினார், எரேமியா. மிகவும் கசப்பான இந்த உண்மையை, ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், மன்னர் தடுமாறினார். மன்னரது தடுமாற்றத்தை, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில தலைவர்கள், எரேமியா, ஒரு குற்றவாளி என, பொய்யான பழி சுமத்தி, அவரைக் கொல்லும்படி மன்னரைத் தூண்டினர். உண்மையைப் பேசியதால், உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை, இறைவாக்கினர் எரேமியா நம் நினைவுக்குக் கொணர்கிறார். அவர்களில் ஒருவர், எல் சால்வதோர் நாட்டில், கசப்பான உண்மைகளைப் பறைசாற்றிவந்த ஒரு பேராயர்.

1970களில், அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன், எல் சால்வதோர் அரசு, ஏழைகளை, வதைத்து வந்தது. கருணை ஏதுமின்றி, வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு, அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என, சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அமெரிக்க அரசுத் தலைவர், ஜிம்மி கார்ட்டர் அவர்களுக்கு, மடல் ஒன்றை அனுப்பினார். இந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின், 1980ம் ஆண்டு, மார்ச், 24ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில், கூலிப்படையினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தான் எடுத்துரைத்த உண்மைகள், பலருக்கு, குறிப்பாக, சக்திமிகுந்த செல்வர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சங்கடத்தை விளைவிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருந்த பேராயர் ரொமேரோ அவர்கள், தனது மரணத்தைப் பற்றியும் பேசத் தயங்கவில்லை. ஒருமுறை அவர் ஏழை விவசாயிகளுக்கு உரை வழங்கியபோது, "உங்கள் குருக்களையும், ஆயரையும் அவர்கள் கொன்றுவிட்டால், நீங்கள் ஒவ்வொருவரும் இறைவனின் குரலை ஓங்கி, ஒலிக்கச் செய்யும் ஒலிபெருக்கிகளாகச் செயல்படுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் இறைவாக்கினார்களாக மாறவேண்டும்... உயிர்ப்பு இல்லாத மரணத்தை நான் நம்பவில்லை. அவர்கள் என்னைக் கொன்றால், சால்வதோர் மக்களில் நான் மீண்டும் உயிர்ப்பேன்" என்று கூறினார் பேராயர்.

சால்வதோர் மக்களில் மட்டுமல்ல, உலக மக்கள் நடுவிலும் பேராயர் ரொமேரோ அவர்கள், உயிர்பெற்று வாழ்கிறார் என்பதற்கு, உலக அரங்கிலும், கத்தோலிக்கத் திருஅவையிலும் அவர் பெற்றுள்ள புகழ், சான்றாக விளங்குகிறது. 1998ம் ஆண்டு, ஆங்கிலிக்கன் சபையின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலயத்தில், 20ம் நூற்றாண்டின் மறைசாட்சிகள் என்ற பெயரில் ஒரு சிலரின் உருவச் சிலைகள், ஆலயத்தின் வெளிமாடத்தில் வடிவமைக்கப்பட்டன. அவர்களில், மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர், மற்றும் பேராயர் ரொமேரோ ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. 2010ம் ஆண்டு, ஐ.நா.அவை, பேராயர் ரொமேரோ அவர்கள் கொலையுண்ட மார்ச் 24ம் தேதியை, உண்மை அறியும் உலக உரிமை நாள் (International Day for the Right to the Truth) என்று அறிவித்தது.

2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையால், ஓர் அருளாளரென அறிவிக்கப்பட்டார். 2018ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேராயர் ரொமேரோவை புனிதராக உயர்த்தினார். எல் சால்வதோர் நாட்டிற்கு மட்டுமல்ல, மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் அனைத்து இடங்களிலும், புனித ரொமேரோ, ஓர் இறைவாக்கினராக, இன்றும் உயிர்பெற்று வாழ்கிறார்.
தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின், இறைவாக்கினர்களால் அமைதிகாக்க இயலாது. அவர்கள் பேசும் உண்மைகள், இவ்வுலகில் தீயை மூட்டும்; அமைதியைக் குலைத்து, பிளவை உருவாக்கும். தீயை மூட்டவும், பிளவை உண்டாக்கவுமே தான் இவ்வுலகிற்கு வந்ததாக, இயேசு, இன்றைய நற்செய்தியில் முழங்குகிறார். (லூக்கா நற்செய்தி 12: 49-53)

சாந்தம், பொறுமை, தாழ்ச்சி, எளிமை ஆகிய அனைத்து நற்பண்புகளுக்கும், இயேசு, ஓர் இலக்கணமாக விளங்குவதை, புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும், நமக்குத் தயக்கமில்லை. அமைதி, அன்பு என்ற அற்புதக் கொடைகளின் ஊற்று இயேசுவே என்று உலகறியப் பறைசாற்றவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய இயேசு, இன்றைய நற்செய்தியில் கூறியுள்ள வெப்பமான வார்த்தைகளை, துணிந்து, வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.

"உலகில் தீ மூட்ட வந்தேன், அமைதியை அல்ல, பிளவை உருவாக்கவே வந்தேன்" என்று இயேசு கூறும் வார்த்தைகள், நம்மைச் சங்கடத்திற்கு உள்ளாகுகின்றன. அதிலும் குறிப்பாக, தான் கொணரும் பிளவுகள், குடும்பத்திற்குள் உருவாகும் என்று இயேசு சொல்வது, நமக்குள் கூடுதலானச் சங்கடங்களை உருவாக்குகிறது. நமது சங்கடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இயேசு, தெளிவாக, தீர்க்கமாகக் கூறும் இந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

முதலில், இயேசு மூட்டவந்த தீயைப்பற்றி புரிந்துகொள்ள முயல்வோம். தான் வாழ்ந்துவந்த யூத சமுதாயத்தில் நிலவிய அநீதிகளை, அடக்குமுறைகளைக் கண்ட இயேசுவின் உள்ளம் பற்றியெரிந்திருக்க வேண்டும். அதேநேரம், நீதியும் அமைதியும் உலகில் நிலைக்கவேண்டும் என்ற வேட்கையும், அவர் உள்ளத்தில் பற்றியெரிந்திருக்க வேண்டும். நன்மையை நிலைநாட்ட, அவர் உள்ளத்தில் பற்றியெரிந்த தீயை, மற்றவர் உள்ளங்களில் மூட்டவே தான் வந்ததாக இயேசு கூறினார்.

தீ மூட்டுதல் என்ற செயலால், ஆக்கப்பூர்வமான விளைவுகளும், அழிவும் உருவாகும் என்பதை நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக, நமது இல்லங்களில், சமையலறையில், தீ மூட்டுவதை எண்ணிப்பார்ப்போம். குடும்பத்திற்கு உணவு படைக்கவேண்டும் என்ற அன்பினால், சமையலறையில் மூட்டப்படும்

தீ, ஆக்கப்பூர்வமான விளைவுகளைத் தரும். ஆனால், எத்தனையோ இல்லங்களில், புகுந்த வீட்டை நம்பி வந்த பெண்ணைக் கொளுத்துவதற்கு அதே சமையலறை தீ, ஒரு கருவியாக அமைவது, நாம் அறிந்த வேதனையான உண்மை. இயேசு, இவ்வுலகின் மீது கொண்ட அன்பினால் தீமூட்ட வந்தார். அந்தத் தீயில், தானே தகனமாகவேண்டும் என்பதையும், அவர், இன்றைய நற்செய்தியில், மறைமுகமாகக் கூறியுள்ளார் - லூக்கா 12: 49-50.

தீ மூட்டுதல், உருவாக்கத்தையும், அழிவையும் கொணரும் என்று இருகோணங்களில் சிந்தித்ததுபோல், இயேசு கொணரும் அமைதியையும், இரு கோணங்களில் சிந்திக்க முயல்வோம்.

உலக அரசுகள், 'அமைதி' என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அவை, பெரும்பாலும் குறிப்பிடுவது, போரும், வன்முறைகளும் இல்லாத ஒரு நிலை. இதை நாம் 'கல்லறை அமைதி' என்ற உருவகத்தில் எண்ணிப்பார்க்கலாம். உலகம் தரும் 'கல்லறை அமைதி'யை உருவாக்க, பல நியாயங்கள் அக்கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. அந்த நியாயங்களுக்குக் குரல் கொடுத்தவர்களும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய அமைதியை இயேசு கொணரவில்லை. இதை, இயேசு, தன் பிரியாவிடை உரையில், " நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல" (யோவான் 14:27) என்று தெளிவாகக் கூறினார். ஒவ்வொருக்கும் உரிய மாண்பை, நீதியின் அடிப்படையில் வழங்குவதால் உருவாகும் அமைதியையே இயேசு கொணர்ந்தார். இத்தகைய அமைதி, வானத்திலிருந்து, ஓரிரவில் அல்லது ஒரு நாளில் இறங்கி வரப்போவதில்லை. வானிலிருந்து இறங்கி வந்த இறைமகன், இத்தகைய அமைதியை, அவர் வாழ்ந்த காலத்தில், அவர் வாழ்ந்த நாட்டிலேயே கொணர முடியவில்லை. ஆனால், உண்மையான அமைதி வளர்வதற்குத் தேவையான விதைகளைப் பயிரிட்டுச் சென்றார்.

ஒவ்வொரு மனிதருக்கும் உரிய மரியாதையைத் தர, நாம் மறுக்கும்போது, அவரவருக்கு உரிய நீதியை, விடுதலையைத் தர, நாம் மறுக்கும்போது, முதலில், நம் உள்ளத்தில், அமைதி வேரறுந்து போகிறது; தொலைந்து போகிறது. உண்மை அமைதியைத் தொலைத்துவிட்டு, உலகம் தரும் பொய்யான அமைதியை நிலைநாட்ட, நாம் போர்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

நமக்குள் ஊற்றெடுக்கும் உண்மை அமைதி, நம் குடும்பங்களில் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவேண்டும். வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுவது, துணிகளைத் துவைப்பது என்று நம் இல்லங்களில் எளிய பணிகள் செய்வோரிடம் உண்மையான மதிப்பு, அன்பு, நீதி ஆகியவற்றை நாம் கொண்டுள்ளோமா என்பதில் நம் ஆன்ம ஆய்வு ஆரம்பமாக வேண்டும். இவர்களுக்கு உரிய நீதி வழங்க நாம் மறக்கும்போது, அல்லது மறுக்கும்போது நம் குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உண்டு. இத்தகைய கருத்து வேறுபாடுகளில், நீதியான, உண்மையான நிலைப்பாடுகள் எடுக்கவேண்டியிருக்கும். அவ்வேளைகளில், குடும்பத்திற்குள் பிளவுகள் உருவாகலாம். இதைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் தெளிவாகக் கூறியுள்ளார்:
லூக்கா 12: 52-53

இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

தந்தை-மகன் சண்டைகள், தாய்-மகள் சண்டைகள் மாமியார்-மருமகள் சண்டைகள், அனைத்து இல்லங்களிலும் உள்ளதுதானே... இதை ஏன் இயேசு பெரிதுபடுத்தவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், இயேசு கூறும் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் ஆத்திரத்தில், உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் எழும் சண்டைகள் அல்ல. மாறாக, மனச்சான்றை மையப்படுத்தி நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் உருவாகும் பிளவுகள்.

உலகில் நீதி நிலைபெற, அமைதி வேரூன்ற நாள் முழுவதும் நாம் கருத்துக்களை வெளியிடுவது எளிது. அவர்கள் அவ்விதம் செய்ய வேண்டும், இவர்கள் இவ்விதம் செய்ய வேண்டும், அரசுகள் இவற்றைக் கடைபிடிக்கவேண்டும் என்று விதிமுறைகளை அடுத்தவருக்கு வழங்குவது எளிது. ஆனால், அதே கருத்துக்களை நம் தனிப்பட்ட வாழ்வில், குடும்ப வாழ்வில் நடைமுறைப்படுத்த முயலும்போது, பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

நன்னெறி, நற்செய்தி இவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்சனைகளில் தகுந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்குப் பதிலாக, குடும்பத்தில் எவ்வகையிலாவது அமைதி நிலவினால் போதும் என்ற எண்ணத்துடன், உண்மைகளை மூடி மறைத்து, பூசிமெழுகி வாழ்வதால், உண்மையான அமைதியை நாம் இழக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.

இயேசு இவ்வுலகில் மூட்டிய தீ நம் உள்ளத்தில் பற்றியெரியவும், அமைதியை வளர்க்கும் முயற்சிகளை நம் உள்ளங்களிலிருந்து, குடும்பங்களிலிருந்து துவங்கவும் உண்மை அமைதியின் அரசனான இறைவனை இறைஞ்சுவோம்.
- L.X. Jerome, S.J.
 
புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌, பெங்களூர்
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு

முதல் வாசகப் பின்னணி (எரே. 38:4-6, 8-10) இந்தப்பகுதி 37:11-21-லுடன் பார்க்கும்போது எரேமியாவின் சிறை வாசகங்களை நமக்குக் கூறுகிறது. எப்படி என்ன குற்றம் செய்தார், "நகரின் நலனைவிட அழிவை விரும்பினாராம்?" இங்கே செதேக்கியா பிலாத்துவைப் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் அவர்கள் ஏரேமியாவை வாளுக்கு இரையாக்காமல் கிணற்றில் இறக்கினார்கள் என்பதற்குக் காரணம் கூறப்படவில்லை. ஒருவேளை இறைவாக்கினரின் இரத்தம் குறித்து பயந்தனரோ என்னவோ? எபத்மலேக்கு ஒரு அன்னியர். இவருக்கும் எரேமியாவிற்கும் எந்தச் சம்மந்தமும் முன்பு இருந்ததாகக் கூறப்படவில்லை, இருந்தும் இவர் ஏரேமியாவின் விடுதலைக்கு உழைக்கிறார். சொந்த மனிதர்கள் விலக அன்னியன் கைகொடுக்கும் ஒரு அழகான பகுதி.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 12:1-4)

பழைய ஏற்பாட்டில் நீதிமான்கள் யாவேயின் சாட்சிகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர், இறைவனுக்குச் சான்று பகர்ந்த மனிதர் என்று இயேசுவை மட்டுமே விளக்குகிறது விவிலியம். அவர் மீதே நம் கண்கள் பதிய வைத்து, பரிசாய் அவரையே பெறத் திருமுக ஆசிரியர் பரிந்துரைக்கிறார். கிறிஸ்து பெற்ற பரிசு இறைவனின் வலப்புறம் அமர்ந்தது அன்று, மாறாக நம் அனைவ- ருக்கும் இரக்கம் காட்டியதே என்று கூறப்படுகிறது. இதன் பின்னணி அன்றையக் கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்தச் சவால்களை மையப்படுத்தி எழுதியதாகக் காணப்படுகிறது. நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 12:49-53) இயேசுவின் எருசலேம் நோக்கியப் பயணத்தில் அவர் உரைத்த அவசரச் செய்திகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படு- கிறது. தன் அப்போதைய நிலையைத் திருமுழுக்கு என்னும் வார்த்தையின் மூலம் மக்களுக்கு உணர்த்த விரும்பியது போன்று காணப்படுகிறது. இந்தத் திருமுழுக்குத் துன்பத்தைக் குறிக்கிறதா? அல்லது மாட்சியைக் குறிக்கிறதா? என விளக்கப்படவில்லை. தன்னை பின்பற்ற விரும்புகின்ற ஒருவர் தன் போன்ற ஒரு நிலையில் அகப்படும்பொழுது அவர் குடும்பச் சூழல் எப்படி அமையும் என்பதை உணர்த்துவதாக அமைகிறது.
மறையுரை

நம் பரமனின் சொல்லைக் கேளுங்கள், "மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அது இப்பொழுதேப் பற்றி எரிந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்" (லூக்கா 12:49). தீப்புனிதப்படுத்துகிறது, தீத்தின்று அழிக்கிறது, தீ ஒளி கொடுக்கிறது, தீ வழிகாட்டுகிறது. இப்படிப்பட்டத் தீயை ஏற்றி வைக்கவே இன்று நமக்குக் கிறிஸ்து அழைப்புவிடுக்கிறார்.

பழைய ஏற்பாட்டில் இறைவன் எரியும் தீயில் பேசினார். பின் பிளந்தத் தீயில் வலுவூட்டினார் திருதூதர்களை, தீக்கொண்டு நகர் அழித்தார், தீக்கொண்டு தீமை அழித்தார், இப்படிப்பட்டத் தீ இன்று நம்மில் இருக்க வேண்டி நம்மைத் தீ வளர்க்கச் சொல்கிறார் இயேசு. ஆதி மனிதன் விலங்கை ஓட்டவும், குளிர் தணிக்கவும் தீ மூட்டினான், அறிவியல் மனிதன் தீயின் சக்தியைப் பன்மடங்காக்கி உயர்ந்து நின்றான். இருந்தும் இந்தத் தீப்பெரும்பாலும் நம் அடுப்படிகளில் முடங்கியேக் கிடக்கின்றது. இத்தகையத் தீயையா இறைவன் நம்மில் காண ஆசைப்பட்டார்? இறைவன் கூறும் தீ மனங்களை எரிக்க வல்லது! நம்மை அல்ல நம் மனங்களின் அழுக்கை ளிக்கத் தீ வளர்க்கச் சொல்கிறார் இயேசு!

இதேத் தீத்தான் அன்று எசாயாவை தூய்மைபடுத்தியது. "இதோ, இந்நெருப்புப் பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது" (எசா. 6:7). தீ புனிதப்படுத்துகிறது. தீத்தூய்மைப்படுத்துகிறது. இத்தகையத் தீ நாளும் நம் மத்தியில் எரிய வேண்டும் என விரும்புகின்றார்.

ஏனெனில் நம் இறைவன் தீமையை வெறுப்பவர், தவறுகளைச் சரிசெய்பவர், தடைகளைத் தகர்ப்பவர். இருந்தும் இந்த இறைவன் நம் பங்களிப்பையும் எதிர்ப்பார்க்கின்றார்! ஒரு தீப்பந்தத்தை ஏற்றி இறைவன் நம் கைகளில் தந்துவிட்டார், அது வழிகாட்டவும், ஒளிகாட்டவும், தீ மூட்டவுமே ஆகும். இந்தத் தீ நம் மத்தியில் இருக்கிறதா? திருமுழுக்கின்போது நாம் பெற்றத் தீ என்னவாயிற்று? திருமுழுக்கை அருள்வழங்கும் சாதனமாய்க் கருதும் நாம் அதனோடு நாம் பெற்றத் தீயை ஏன் அணைய விடுகிறோம்? இத்தகையத் தீயைப் பெற்றிருந்த இயேசு சும்மா இருந்து தன் தீயை மங்கச் செய்யவில்லை, தீமையைக் கண்டு பொங்கினார், ஆலயம் சுத்தப்- படுத்தினார். அறிஒளி ஏற்றினார். அவரின் பிள்ளைகளாகிய நாமும் அதைத் தானே செய்ய வேண்டும்! அவரின் விருப்பமும் அதுவே தானே!

இதனால்தான் மெட்ஸ்-ஜ. பி (J. B. Metz) என்னும் இறையி- லார் இத்தகையதோர் பிரதிபலிப்பை, ஒரு பயங்கரமான நினைவு", (A Dangerous Memory) என வருணிக்கிறார். என்ன அப்படி பயங்கரமானது கிறிஸ்துவின் நினைவுகள்? அன்றாடம் கொண்டாடும் திருப்பலி, இயேசுவின் பலியை மட்டும் நினைவு கூறுதல் மட்டுமல்ல, மாறாக அவரின் வாழ்வைப் பிரதிபளிக்க விடுக்கப்படும் அழைப்பு! 'என் நினைவாகச் செய்யுங்கள்' என வெறுமனே இறுதி இரா உணவு பலியை மட்டுமல்ல, நம் வாழ்நாள் முழுவதும் அவர் சொல், செயலைப் பிரதிபலிப்பது ஆகும்!

இதற்கு முதலில் நாம் அவரின் வார்த்தையால் வாழ்க்கையால் சுட்டெரிக்கப்பட வேண்டும், சாம்பலிருந்து எழும் பீனீச் பறவையைப் போன்று புதிதாய் எழ இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இப்படிப்பட்ட வாழ்க்கை நாம் வாழ முயன்றால் நம் வாழ்வில் தடைகள் வரும் இயேசுவிற்கு வந்தது போல, ஆனால் இயேசுவைப் போலத் தடைகளை எரித்துவிட்டு முன்னேற வேண்டும்! எப்படி? இதற்கு இன்றைய முதல் வாசகம் நமக்கு வழிகாட்டு கின்றது. இறைவார்த்தை என்னும் நெருப்பால் வலுப்பெற்ற எரேமியாவைப் பாடுகள் முடக்கி விடவில்லை. மீண்டும் மீண்டும் வீறுகொண்டு எழச் செய்தது! இறை வார்த்தைத் தீயை அவர் முடக்க நினைத்தும் முடங்கியே போனார்.

''உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீப்போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக்கிடக்கிறது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனான்" (எரே. 20:9). இத்தகையதோர் அணையாத, குறையாத, தீ நம்மில் பற்றி எரிந்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். ஏன் எரிய வேண்டும்? ஏனெனில் இன்னும் சமூக அவலங்கள் குறைய வில்லை, இன்னும் சமத்துவம் தழைக்க வில்லை, சமாதானம் மலர வில்லை, இவை அனைத்தும் நடக்கும் வரை நம்மில் இருக்கும் தீத்தொடர்ந்து எரிய வேண்டும்.

நம் தீ எதையும் எரிக்காவிட்டாலும், அடுத்தவர் குளிர்காய வாவது பயன்படும்போது, இறைசித்தம் செயல்படுகிறது. நம்மில் இருக்கும் அன்புத் தீ அயலானைத் தொட வேண்டும், பாசத் தீ பரவ வேண்டும், இவை முதலில் நம் குடும்பங்களில் துவங்கப்பட வேண்டும். குடும்பத்தில் துவங்கி சமூகத்தில் பரவ வேண்டும். இத்த கையத் தீயை அணைக்க நம் குரோதம், பொறாமை, பெருமை, ஆசை, சபலம் முதலியவைத் தடைகளாக வரும். அப்பொழுது இறைவார்த்தை என்னும் தீக்கொண்டு எதிர் கொள்ள வேண்டும், அதற்கு இயேசுவின் தீ நமக்குள் தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது? இறைகுரலுக்குச் செவிசாய்த்து திருமுழுக்கில் நாம் பெற்றுக்கொண்டத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்வோம், யாரும் தீயை துணிவைத்து மறைக்க முடியாது! தீ வளர்ப்போம்! இதற்கு வேண்டிய சக்தி வேண்டிப் பலியில் மன்றாடுவோம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்

இயேசுவின் திருமுழுக்கும், நம் திருமுழுக்கும், சிலுவையில் சாட்சியும், சமூகச் சாட்சிகளும்.
"பிரிவினை இறைவன்", நன்மைக்கும் தீமைக்கும், ஏற்புடையவர்களுக்கும், உலகத்தவர்களுக்கும் பிளவூட்டும் தலைவன்.
நாளும் தொடரும் இறையருள், ஆனால் நமது நிலை என்ன?
 
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌
பொதுக் காலம் இருபதாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி பலருக்குக் குழப்பமானதாகவும் கடினமானதாகவும், சிக்கலானதாகவும், தோன்றலாம். இன்றைய நற்செய்தி உருவகங்களைப் பயன்படுத்து வதால் இதைப் பல்வேறு கண்ணோட்டத்தில் நின்று நோக்கலாம். அவற்றை இவண் நோக்குவோம்.
1. இறுதிக்காலக் கண்ணோட்டம்

இன்றைய நற்செய்தியில் பற்றி எரிதல், தீ (வச. 49) ஆகிய உருவகங்களும், திருமுழுக்கு பற்றிய இயேசுவின் குறிப்புகளும் (வச. 50) நமக்குத் திருமுழுக்கு யோவான் போதித்தவைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. அவர் நற்கனி தராமரங்கள் எல்லாம் வெட்டப் பட்டுத் தீயில் போடப்படும் (லூக் 3:9) என்றும், நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்... அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார் (லூக் 3:16) என்றும் கூறியவை இயேசுகிறிஸ்து வரும் இறுதிக் காலத்தைக் குறித்துக் காட்டின. இன்றைய நற்செய்தியில் இயேசு பெறவிருப்பதாகக்கூறும் திருமுழுக்கு அவரது பாடுகளைக் குறிக்கின்றது என்பது தெளிவு. மேலும் நெருப்பால் கொடுக்கும் திருமுழுக்கு (காண். லூக் 3:16) திருத்தூதர் பணிகள் நூலில் தூய ஆவியின் வருகையைக் குறிப்பதாகும் (காண். திவ 2:3) ஆக ஒவ்வொன்றும் பிற்காலத்தில், இறுதிக்காலத்தில் நிகழ இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் உலகின் இறுதி நாளில் நெருப்பு எனும் உருவகத்தை இயேசு குறிப்பிட்டுப் பேசுகின்றார்: "லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன. மானிட மகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் (லூக் 17:29-30). எனவே இன்றைய நற்செய்தியில் கூறப்படுபவை எதிர்காலத்தில், இறுதிக்காலத் தண்டனையைக் குறிப்பதாகக் கொள்ள இடம் உண்டு.
2. இயேசுவின் பாடுகள்

மேலே குறிப்பிட்டதுபோல, நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மனநெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன் (வச. 50) எனும் பாவிகளால் இயேசுவின் வார்த்தைகள் அவரது மரணத்தைக் குறிக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினருக்கு இழைக்கப்பட்டத் துன்பங்கள் சிந்தனைக்கு அளிக்கப்பட்ட திலிருந்தும், இரண்டாம் வாசகத்தில், இழிவையும் பொருட் படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக் கொண்ட அவரை எண்ணிப் பாருங்கள் (எபி 12:2-3) என்று குறிப்பிடப்படுவதிலிருந்தும் இன்றைய நற்செய்தியை இயேசுவின் பாடுகள் எனும் நிலையினின்றும் நோக்கலாம். இயேசுவின் பாடுகளை விரிவாக வாசிக்கின்றபோது அங்கே மக்களும், தலைவர்களும் இயேசுவுக்குச் சார்பாக, எதிராக எனப் பிளவுபட்டு நிற்பதைக் காணலாம் (காண். நற்செய்திகளின் இயேசுவின் பாடுகள், மரணம்பற்றிய விவரிப்பு).
3. இறைவாக்கினர் இயேசு

இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்படும் தீ நமக்கு இறைவாக்கினர் எலியா பாகாலின் பொய்வாக்கினர்களுக்கு எதிரான போட்டியில் வானின்று தீ வரவழைத்ததையும் (காண். 1 அர 18:36-40), ஐம்பதின்மர் தலைவரையும் அவரோடு இருந்தவர்களையும் வானின்று நெருப்பு இறங்கிவந்து அழித்த நிகழ்வையும் (காண். 2 அர 1:10, 12, 14) நினைவூட்டுகின்றது. இந்தப் பின்னணியில்தான் இயேசு சமாரியரின் ஊர்மீது நெருப்பு இறங்கிவரச் செய்ய வேண்டும் என யாக்கோபும் யோவானும் விரும்பினர். ஆனால் இயேசு அதை விரும்பவில்லை (காண். லூக் 9:51-56). எனவே இயேசுவின் இந்த வார்த்தைகளை இறை வாக்கினரான இயேசுவின் இறைவாக்குகளாகவும் கொள்ளலாம். எனவே இறைவாக்கினருக்கேயுரிய உணர்வோடும், அவசியத் தோடும் இயேசு இங்குப் பேசுவதாகக் கொள்ள வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் இயேசு கூறவிரும்பும் செய்தி என்ன எனக்காண்போம்.
இயேசுவின் செய்தி

இயேசுவின் இளமைப் பருவநிகழ்வுகளை வாசிக்கும் போது இயேசுவின் பிறப்பு அமைதியை கொண்டு வருவதாக, அல்லது கொண்டு வந்ததாக வாசிக்கின்றோம் (காண். லூக் 1:79; 2:14, 29). எனவே இந்த இறைவாக்கினரை ஏற்றுக்கொள்பவருக்கு இவ்வமைதி கிடைக்கும் (காண். லூக் 7:50; 8:48; 10:5-6). ஆனால் இறைவாக்கினரின் இந்த அமைதிப் பணிக்கும் செய்திக்கும் இன்னொரு பரிமாணமும் உண்டு. இதைச் சிமியோன் இயேசு குழந்தையாக இருக்கும் போதே முன்னறிவித்தார்: இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்கள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப் படும் (லூக் 2:34-35). எனவே இறைவாக்கினரான இயேசு கொணரும் அமைதி எல்லாவற்றையும் பூசி மெழுகி, வண்ணப் பூச்சு போன்ற அமைதி அல்ல. மாறாக அவரின் போதனைகளும் செயல்பாடுகளும் மக்களை இரு கூறுகளாகப் பிரிக்கின்றன. ஒன்று அவரை ஏற்றுக்கொண்டு அவருக்குச் சார்பாய் இருப்பவர்கள் மற்றது அவரை ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு எதிராக இருப்பவர்கள். எனவே இத்தகையதொரு தீயைத்தான் கொண்டு வந்ததாகவும், அத்தகைய ஒரு தீ என்றும் பற்றி எரிய வேண்டும் என்றும், பிளவு ஏற்பட வேண்டும் என்றும் இயேசு எதிர்பார்க்கின்றார். இதனால் யார் எப்பக்கம் நிற்கின்றார்கள்? அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரிந்துவிடும். ஆனால் அதே நேரத்தில் இந்தத் 'தீ'யும் பிளவும் அவரை இன்னொரு திருமுழுக்கிற்கு (பாடுகள், மரணம்) இட்டுச் செல்லும் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். எனவே இயேசுவின் இறைவாக்குப் பணியில் அவரைப் பின்பற்றுவோர் இத்தகையதொரு நிலைப்பாட்டை எடுத்தாக வேண்டும். அடுத்து அவரைப் போல இறைவாக்குப் பணி செய்வோர் இன்னொரு திருமுழுக்கையும் சந்தித்தாக வேண்டும்.
 
 
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - இருபதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : எரே. 38 : 4-6, 8-10

மன்னன், அரசியல் தலைவர்கள், மக்கள் என்ற முத்திறத்து யூதர்களின் மனச்சாட்சியாய் விளங்கியவர் இறைவாக்கினர் எரேமியா. அந்த மனச்சாட்சியின் குறுகுறுப்பை அடக்க எடுக்கும் முயற்சி இன்றைய வாசகமாக அமைகிறது.
பாழுங்கிணற்றில் எரேமியா

கி.மு. 597-587 காலக் கட்டத்தில் பாபிலோனியப் பேரரசன் நெபுகத்னேசரால் அரசுகட்டிலில் அமர்த்தப்பட்டவன் செதேசியாஸ். அரசனுக்குரிய நெஞ்சுரம் இன்றி அவதிப்பட்டவன். இறைவாக்கினர் எரேமியாவிடம் மதிப்புக் கொண்டிருந்த மன்னன் அரசு அதிகாரிகளுக்கு அஞ்சினான். அரசியல் அதிகாரிகள் மன்னனின் பலவீனத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எகிப்து-பாபிலோன் என்ற இரு பேரரசுக்கு இடையே தன்னுரிமை நாடித் தத்தளிக்கும் நிலை யூதேயாவின் நிலை. இதனையும் பயன்படுத்திக் கொள்கின்றனர் அரசு அதிகாரிகள். சிலை வணக்கம் பரவிவிட்டது. அரசியல் குழப்பம், சமயக் குழப்பம் ஆகியவற்றிற்கு இடையே யாவேயின் தொண்டனாக, இறைவாக்கினனாகக் குரல் கொடுக்கிறார் எரேமியா. தமது உரையை எழுதிக் கோயிலிலும் அரசு அதிகாரிகளின் முன்னிலையிலும் முன்னைய மன்னன் முன்னிலையிலும் பாரூக் என்பவரைக் கொண்டு வாசிக்கச் செய்கிறார். மும்முறை வாசிக்கப்பட்ட இவ்வுரையாலும் தொடர்ந்து நிகழ்ந்த குழப்பங்களினாலும் அரசு அதிகாரிகள் இறைவாக்கினரை அழித்து ஒழித்துவிட முயல்கின்றனர்.

எரேமியாவின் சொற்கள் அழிவை முன்னறிவிக்கும் சொற்கள். அவற்றைக் கேட்கும் படைவீரர் தளர்ந்து விடுவர். ஆதலின் போர் வெறி கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடிக்கடி நிகழ்ந்த போராட்டங்களால் பஞ்சம் ஏற்பட்டிருந்த நிலை. இரத்தம் சிந்தாமலேயே இறைவாக்கினரைக் கொன்று விடும் வண்ணம் சேறும் சகதியும் நிறைந்த பாழுங்கிணற்றில் இறைவாக்கினரை இறக்கி விட்டுவிடுகின்றனர் அதிகாரிகள். நன்மனம் கொண்ட ஓர் அதிகாரியின் தூண்டுதலால் மன்னன் இறைவாக்கினரைக் காப்பாற்றுகின்றான். நடக்கவிருக்கும் நிகழ்ச்சியைக் கூறினார் எரேமியா. மக்களோ நம்ப மறுத்தனர். அவர்களின் அழிவுக் காலம் நெருங்கி விட்டதெனக் கூறினார்; தங்களுக்கு எதிராகக் கூறியதற்காக அவரைக் கொடுமைப் படுத்தினர். உண்மைக்கும் நன்மைக்கும் எவன் குரல் கொடுக்கின்றானோ அவன் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாவான் என்பதற்குச் சான்றாக விளங்குகிறார் எரேமியா. தொல்லைகள் தொடர்ந்து வரினும் அவரது தொண்டு ஓயவில்லை. உண்மையை மறுத்தோ குறைத்தோ அவர் கூறவில்லை. கிறிஸ்தவ வீர வாழ்வின் முன்னோடி இவர்.
கிறிஸ்துவின் சாயலாக அமைந்தவர் எரேமியா

எண்ணிலாத் துன்பங்களின் நடுவே, எதிர்ப்புக்களின் நடுவே, மனத் தளர்ச்சியின் நடுவே கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராக வாழ்ந்தவர். "நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார் என்று (திபா. 40 : 1) புகழ்பாடுகிறார் எரேமியா. இறை இயேசு படவிருக்கும் பாடுகளின் முன்னறிவிப்பு எரேமியா.

தாம் மறந்தாலும் யாம் மறக்கமாட்டோம் என்று உறுதியான விசுவாசத்துடன் கடவுள் தொண்டராய் விளங்குகின்றோமா? "பதி இழந்தனம், பாலனை இழந்தனம், பெற்ற நீதி இழந்தனம், இனி எமக்கு உளது என நினைக்கும் கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் (அரிச்சந்திர புராணம்) என்ற உறுதியுடன் அன்றோ இறைவாக்கினர் தொண்டு புரிகின்றார்! நமது பக்தி?

இவன் மக்களுக்குத் தீமையைத் தேடுகிறானே அன்றி நன்மையைத் தேடவில்லை.
இரண்டாம் வாசகம் : எபி. 12:1-4

மன உறுதியுடன் கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்தும்படி தூண்டுகிற பகுதி இன்றைய வாசகமாக அமைந்துள்ளது.
தடைகளை அகற்றுக

கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு போராட்டமாகவும், ஓட்டப் பந்தயமாகவும் வருணிப்பர். இவ்விரண்டிலுமே வெற்றியை நாடுவோர் முதற்கண் தடைகளை நீக்க வேண்டும்.

விசுவாச வாழ்க்கைக்குத் தடையாய் இருப்பவை தலையாய பாவங்கள். காமம் ஒரு பெருந்தடை. "பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை (கொலோ. 3:5) "நாணங்கெட்ட பேச்சு" (8) முதலியவற்றைக் காமத்தின் கீழ் பவுல் எடுத்துரைக்கின்றார். அடுத்து, "சினம், சீற்றம் ஆகியவை இடம் பெறுகின்றன. தொடர்ந்து, பொருளாசை, இதனைச் "சிலை வழிபாடான பேராசை" என்று (கொலோ. 3 : 5) வருணிக்கிறார் பவுல். சாதாரணமாக இவற்றைப் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று கிறிஸ்தவ மரபு குறிப்பிடும். "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்" என்று திருக்குறள் (360) இவற்றை எடுத்துரைக்கும். ஐம்புலன்கள் அடங்காமல் வெறித்துத் திரிவதும் ஞான வாழ்க்கைக்குப் பெருந்தடை. "சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டி, காற்றுவர் கனலப் பேசிக் கண் செவி மூக்கு வாயுள் ஆற்றுவர், அலந்து போனேன்" என்பர் அப்பர்.

நமது ஞான வாழ்விற்குத் தடையாக இவை இல்லையா? இவற்றைக் களைந்திட நாம் எடுக்கும் முயற்சி யாது?
கிறிஸ்து முன்னோடி

விசுவாச வாழ்க்கைக்கு முன்னோடிகளாக ஆபிரகாம், ஆபேல், ஏனோக், நோவா, மோசே, கெதெயோன், சாம்சன், தாவீது முதலிய பல பெரியோர்களைச் சுட்டிக் காட்டிவிட்டு, அனைவர்க்கும் மேலாக நம் பெருமானே விசுவாச வாழ்க்கைக்குத் தலை சிறந்த முன்னோடி என்கிறது எபிரேயரின் திருமடல்.

நம் பெருமான் விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவர் ; நிறைவு செய்பவர். வரவிருக்கும் மகிழ்ச்சியை மனக்கண் முன் வைத்தார். நிந்தையைப் பொருட்படுத்தவில்லை. சிலுவையை ஏற்றார். விளைவாக அனைவர்க்கும் மேலாக உயர்த்தப்பெற்றுத் தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கின்றார். "என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவர் தன்னை ஞானத்தளை இட்டு வைப்பேனே" (அப்பர்) என்ற உணர்வோடு இவரே நமது விசுவாச வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய முன்னோடி. இவருடைய துன்பங்களோடு ஒப்பிட்டால் நம்முடைய துன்பங்கள் ஒன்றும் இல்லை. நம் பெருமானின் வாழ்க்கையை எண்ணி மனத்தில் உறுதி கொள்ள வேண்டும். அவரைக் கண்முன் நிறுத்த வேண்டும். சோர்வு அகன்று விடும்.

இதனையே தியானம் என்கிறோம். "எனவே திரண்டு வரும் மேகம்போல் சிந்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க, எந்தச் சுமையையும் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளி விட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக" (1). "ஆவித்துணையே! என் ஆரமுதே! உன் வடிவைப் பாவித்து உன் நையேன் இப்பாவியேன்!! சேவித்து வாழ்த்தேன்; உன் பொன்னடியில் வந்து என் தலை குனிந்து தாழ்த்தேன்; என் செய்தேன் தவம்?" (திருவருட்பா) என்று இத்தியானம் அமைந்தால் நமது வாழ்க்கை உறுதியடையும்.

விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம்.
நற்செய்தி: லூக். 12 : 49 - 53

அமைதியின் அண்ணலான நம் பெருமான் புயலெனச் சீறுகின்றார். இம்மைச் சுகமே சுகம் என்று மனந்தேறி இருப்போர்க்குப் பேரிடியாக முழங்குகின்றது இந்த வாசகம்.
சமாதானமா?

பிறப்பிலேயே அவனிக்கு அமைதி என வாழ்த்தி, இறந்து எழுந்தபின்னும் "அமைதி" ன்று வாழ்த்தியவர் நம் பெருமான். ஆர்ப்பரிக்கும் கடலை நோக்கி அமைதி என்று கடிந்து அடக்கியவர். ஆனால் அவர் தருகின்ற அமைதி உலகம் தரும் அமைதியைப் போன்றது ஆகாது. இதனைத் தெளிவுபடுத்தும் வகையில் "தீயை மூட்டவே வந்தேன்" என்கிறார். தம்மை நல்லாயன் என்றும், உலகின் ஒளி என்றும், உயிர் தரும் உணவு என்றும் படம் பிடித்துக் காட்டும் நம் பெருமான் எதிர்க்கப்படும் அடையாளம் (லூக். 2:34). ஆதலின் "தீயை மூட்டவே வந்தேன் என்றும் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். "நான் மண்ணுலகிற்குச் சமாதானம் அளிக்க வந்தேன் என்றா எண்ணுகிறீர்கள்? இல்லை என்று ஐயத்திற்கு இடம் இன்றி அறைகூவல் விடுக்கிறார்.

இறைவன் அளிக்கும் சமாதானம் போலிச் சமாதானம் அன்று; கொள்கையைச் சாகடித்து, அனைத்திற்கும் ஆம்" போடும் கோழையின் சமாதானம் அன்று. இதில் எவனும் நடுநிலைமை வகிக்க முடியாது. இயேசுவின் பக்கம் இல்லாதவர் அவரது எதிரியேயாவர். மக்கள் ஒளியைச் சார்ந்தோ எதிராகவோ இருக்க வேண்டும் (யோ. 8: 12). ஆண்டவரைப் பின்செல்லும்பொழுது போராட்டத்திற்குத் தயாராயிருக்க வேண்டும். சீடர்களின் குடும்பத்திலேயே எதிர்ப்பு எழலாம். இயேசுவை இழப்பதைவிட எதையும் இழக்கத் தயாராயிருப்பவனே எதிர்ப்பிலும் இன்பம் காண்பான்; போரிலும் அமைதி காண்பான்.
தீயை மூட்டவே வந்தேன்

தீர்ப்பிடுவதன் அடையாளம் தீ. என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களைத் திருமுழுக்கு ஆட்டுவார்" (லூக். 3 : 16) என்கிறார் திருமுழுக்காட்டும் யோவான். இங்கே குறிப்பிடும் தீத்துப்புரவாக்கும் தீ, நல்லோரைத் தீயோரினின்றும் பிரிக்கும் தீ. அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் என்றார் (லூக். 3 : 17). அநீதியைக் கண்டும் கொதித்து எழாமல் அடங்கியிருந்து வீண் போராட்டம் வேண்டாம் என்று இருப்பது அமைதி அன்று. நீதிக்காகப் போராடும் பேறு பெற்றோரை, ஆர்வத்துடன் சேவை செய்யத் துடிப்போரை, அடங்கியிருப்போரினின்றும் நம்பெருமான் பிரித்துவிடுவார். "இது முதல் வீட்டில் இருக்கும் ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும் இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்." ஒன்றியிருக்கும் குடும்பம் உடைந்துவிடும். இத்தகைய தீ பற்றி எரிய வேண்டும். இப்போதே பற்றி எரிய வேண்டும் என்று ஏக்கம்கொள்பவர் நம் பெருமான். தாகம் கொள்பவர் அவர்.
திருமுழுக்கு

தீயைக் கொண்டு வருபவர் தீக்கு அஞ்சினால் செயல்பட முடியாது. ஆதலின் கொடுமைக்கு ஆளாக அஞ்ச முடியாது. "நான் பெற வேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு" என்று கொடுமைக் கடலுள் குதித்தெழ வேண்டியவர் நம் பெருமான். இதுவே அவர்தம் தொண்டருக்கும் உரியது. "நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? (மாற். 10 : 38) என்பது அவரது கேள்வி. நீதியின் மீது பசிதாகம் உள்ளோர் தீயால் பற்றி எரிவோர் ஆவர். திருமுழுக்குப் பெறுவோர் ஆவர். அவர்கள் நிறைவு பெறுவர், அமைதி காண்பர்.

மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன்.
 
 
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ