ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
   
ஞாயிறு
முன்னுரை
MP3
Sr. Gnanaselvi (india)
             திருவருகைக்காலம் முதல் வார ஞாயிறு
விழித்திருந்து ஆண்டவரை சந்திக்க வந்திருக்கும் அன்புள்ளங்களே!
B தவக்காலம்1  
திருவழிபாட்டின் புதிய ஆண்டை ஆவலோடு தொடங்கும் நம்மை, இன்றைய திருப்பலிக்கு திருவருகைக் கால முதல் ஞாயிறு அன்போடு வரவேற்கின்றது.

அறச்செயல்கள் நிறைந்த வாழ்வினால் ஆண்டவர் இயேசுவை சந்திக்க விழிப்போடு காத்திருக்க அழைப்பு விடுக்கிறது, திருவருகைக் காலத்தின் ஆரம்ப நாள்.

அவரின் வருகை நாள் நமக்கு தெரியாது. அவரது வருகையின் நாள், மகிழ்ச்சியின் நாளாக அமைய. அவர் சுட்டிக் காட்டும் இறை வார்த்தையின் நெறியினை பின்பற்றுவோம்.

இரவு முடியப் போகிறது பகல் அண்மையில் உள்ளது. இருளின் செயல்களைக் களைவோம்... ஒளியின் செயல்களை அணிவோம்... மதிப்போடு நடந்து கொள்வோம். களியாட்டம், குடிவெறி தவிர்ப்போம்... தீய இச்சைகளை, சண்டை சச்சரவுகளை தகர்ப்போம்... கூடாஒழுக்கம் ஒழிப்போம். ஊனியல்பின் நாட்டங்களை விரட்டுவோம்...

கடவுளின் மகன் மிகுந்த வல்லமையோடு வருகின்றார். அவரது வருகை நமக்கு மிகுந்த வல்லமை தரக் காத்திருக்கின்றது. ஆம், அவரது வல்லமை......
- வேற்றினத்தார் மத்தியில் உள்ள நம் வழக்குகள் அனைத்தையும் 
  தீர்த்து வைக்கக் காத்திருக்கின்றது...
- நாட்டுக்கு எதிராய் நாடு வாள் எடுப்பதை தடுக்கக் காத்திருக்கிறது...
- போர்வாள் அமைதிக் கலப்பையாய் மாறக் காத்திருக்கிறது...
- போர்ப் பயிற்சி அமைதிப் பாசறையாய் மாறக் காத்திருக்கின்றது....
- அன்பையும் சமாதானத்தையும் தரக் காத்திருக்கின்றது...
- ஞானத்தையும், அறிவையும் தரக் காத்திருக்கின்றது...
- மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரக் காத்திருக்கின்றது...

நாமும் அவரது திரு முகம் கண்டு வல்லமை அனைத்தையும் பெற்றுக் கொள்ள விழிப்போடுக் காத்திருப்போம். இன்றைய திருப்பலி இங்கே கூடி நிற்கும் நாமனைவரும். விழிப்பாயிருந்து இயேசுவை மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடு சந்திக்க வல்லமை தருகின்றது. இணைந்து செபிப்போம்.


 
B தவக்காலம்2
B தவக்காலம்3
B தவக்காலம்4
திருநீற்றுப்புதன்
 
Sermon Fr.Albert
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. மிகுந்த வல்லமையோடு வருகின்ற எங்கள் இறைவனே!
பயத்தினாலும், பேராசையினாலும் பிளவுபட்டிருக்கும் இந்த உலகிற்கு மீட்பர் வர
வேண்டுமென்று வேண்டுதல் எழுப்பும் எம் திருச்சபையை ஆசிர்வதியும். உமது வருகைதிருச்சபையையும் அதை ஆள்வோரையும் பலப்படுத்தட்டும். நீர் வந்து கதவைத்தட்டும் போது இறைமக்கள் விழிப்போடு கதவைத் திறக்கவும்இ உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் உள்ளத்தை தட்டி எழுப்பி நம்பிக்கையோடு உம்மை சந்திக்கச் செய்யவும் திருச்சபைத் தலைவர்களுக்கு அருள் புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விழிப்போடு காத்திருப்போருக்கு உம் திரு மகனைக் காணச் செய்கின்ற இறைவா!
நாடுகளின் தலைவர்கள் அமைதிக்காக அன்போடு உழைக்கவும், தற்பெருமை நீக்கி பலவீனம் களைந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியின் நிறைவு காண ஆளும் அதிகாரத்தைப் பயன்படுத்தவும், நல்லபுரிதலையும் மனப்பக்குவத்தையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுடன் எமைக் காத்து வரும் கனிவான தெய்வமே!
உமது வார்த்தையானவரின் வருகைக்காக எங்கள் இதயக்கதவினைத் திறந்து உம்மை வரவேற்க எமை ஆயத்தமாக்கிடும் எங்கள் பங்குத்தந்தைக்காக உம்மை மன்றாடுகிறோம். மாட்சி மிக்க உமது பிறப்பை நாங்கள் கண்டு மகிழ, அவர் எடுக்கும் முயற்சிகளால் புதுப் படைப்பாக நாங்கள் உருமாற கனிவுடன் அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது வருகையின் அருளால் இவ்வுலகை நிரம்பி வழியச் செய்யும் இறைவா!
நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் பிழைப்புத்தேடி உழைப்போருக்கு, காணாமல் போன உறவுகளை உடமைகளைத் தேடுவோருக்கு, காயம்பட்டவர்களுக்கு, பெருஞ்சுமையைத் தாங்க இயலாதவர்களுக்கு, நோயில் தனிமையில், முதுமையில், வறுமையில் வாடுவோருக்கு, இங்கே உம் திருமுன் கூடி நின்று கண்ணீரோடு தங்கள் விண்ணப்பங்களை கேட்டுக் கொண்டிருப்போருக்கு உமது வருகையின் அருள் புத்துலகின் பாதையைக் காணச் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமது அன்பு மகன் வழியாக எங்களை வழி நடத்துகின்ற இறைவா!
அனைவருக்கும் நீர் செய்த ஆற்றல் மிகு அற்புதங்கள் அனைத்திற்கும் நன்றி கூறுகிறோம். தொடர்ந்து உம் அற்புதங்களை எங்கள் வாழ்வில் அன்றாடம் சந்திக்கவும் எங்கள் குடும்பங்களில் குழந்தைகள் அறிவில் ஆற்றலில் தெய்வீக ஆவியால் வளரவும், குடும்பங்களில் நிலவுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் ஒருவருக்கு தோள் கொடுத்து தூக்கி விடவும், நலன்களால் அயலாரைத் தாங்கிக் கொள்ளவும் அருள் புரியவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா!
இயற்தைச் சீற்றத்தாலும், தொற்று நோயினாலும் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் எங்களைக் காப்பற்றியருளும். உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்போரை அரவணைத்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய இந்த திருவருகைக் காலத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள எங்களுக்கு நல்மனதினைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்..
 


 
மறையுரை சிந்தனைகள்
வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும்!

தந்தையாம் கடவுள் நம்மை மீட்க தன்மகனை நமக்காக மீட்பராக அனுப்புகின்றார். அழிவைப் பற்றி அதிகம் பேசும் இந்த நாட்களில் பாவ வாழ்க்கை வாழும் நம்மை அழிக்க அல்ல பாவத்தை விட்டு விலக்க பிறக்கின்றார்.

அமெரிக்காவில் புளோரிடாவில் நடந்த உண்மை நிகழ்ச்சி இது! புளோரிடாவில் ஆறும் கடலும் கூடுகிற இடத்தில் ஒரு நூதனப் பாலம் கட்டியிருக்கிறார்கள். இப்பாலத்தின் சிறப்பு என்னவெனில் சாதரணமாக இப்பாலத்தின் மீது புகைவண்டி செல்லும். ஆனால் கப்பல்கள் வரும் போது பாலம் உயர்ந்து கப்பல் செல்ல வழிவிடும். இப்பாலத்தைக் கட்ட உதவிய எஞ்சினியர் இப்பாலத்தைக் காட்ட தன்னுடைய மகனை அழைத்துச் சென்றார். பாலத்தை உயர்த்திக் காட்ட பாலத்தின் மேல் சென்று பாலத்தை உயர்த்தினார். அதே சமயத்தில் பாலத்தின் அடிப்பாகத்தை நன்றாக காண்பதற்காகச் சிறுவன் பாலத்தின் அடியில் சென்று விட்டான். அப்போது ஒயர்லெஸில் புகைவண்டி வருகின்றது. பாலத்தை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று தகவல் வந்தது. உடனே எஞ்சினியர் பாலத்தைக் கீழே தணித்தார். அப்போது "அப்பா, அப்பா என்னைக் காப்பாற்றுங்கள்." என்று அபயக் குரல் கேட்டது.! ஆனால் மகனைக் காப்பற்ற வேண்டிப் பாலத்தை கீழே இறக்காமல் விட்டாலோ புகைவண்டியில் வரும் மூவாயிரம் பயணிகளும் மடிந்து போவர்கள். என்று எண்ணிய எஞ்சினியர் ஸ்தம்பித்துப் போய்விட்டார். ஒரு வினாடிக்குப் பிறகு புகை வண்டி செல்வதற்காக பாலத்தை கீழே இறக்கினார். அப்போது அப்பா, என்ற தன் மகனின் அபயக் குரல் மட்டுமே கேட்டது.

மகனை பலியாக்க தந்தை தயங்கவில்லை பலருடைய வாழ்வுக்காக தன் மகனை பலியாக்கிய தந்தையைவிட பன் மடங்கு நம் நலனில் அக்கறை கொண்டவர் நம் கடவுள்.
குறித்த காலத்தில் பேசப்படும் வார்த்தைகள் நம் கவலையை மாற்றி அமைக்கும்.
குறித்த காலத்தில் செய்யப்படும் செயல் பலருடைய உயிரைக் காப்பாற்றும்.
நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு இடையில் அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருப்போம்.
நமது துன்பத்தை மட்டுமல்ல அயலாரின் துன்பத்தையும் நீக்கச் சொல்லி மன்றாடுவோம். அப்போது நமது மீடபின் காலத்திற்கு அருகில் தலை நிமிர்ந்து நிற்போம்.
புகைவண்டியில் வந்த மூவாயிரம் பேரைக் காப்பாற்ற வேண்டிய எஞ்சீனியர் தம் மகனை பலி கொடுத்தது போல் இறைவன் உலக மக்களை காப்பதற்காக தன் மகனை அனுப்பி சிலுவையில் ஒப்புக் கொடுத்திருக்கிறார். தன்னை இழந்து நமக்கு வாழ்வு கொடுக்கும் கடவுள் நமது வாழ்க்கையை நாம் வாழும் நாட்களில் அழிப்பாரோ?
இதோ இந்த நாட்களில் அழிவைப்பற்றி அல்ல. நாம் வாழ்ந்த பாவ நாட்களை எண்ணி மனம் மாறி பிறக்க இருக்கும் பாலனை சந்திக்க என்ன செய்யலாம் என்று திட்டமிடுவோம்.

வந்தருளும் ஆண்டவரே உடனே வந்தருளும் என செபிக்கலாம்.
நமக்காக நம்மை மீட்பதற்காக பிறக்கும் பாலன் யேசுவிடம் நமது வாழ்க்கைப் பாதையை புதிதாக மாற்றி ஒப்புக் கொடுப்போம்.
உலக அழிவு என்பது நிச்சயம். ஆனால் எப்போது என்று எவருக்கும் தெரியாது.
வாழும் நாட்களை வரலாறாக்க பிறக்கும் யேசுவுக்கு ஏற்றதாக அமைப்போம்.
விழிப்புடன் காத்திருப்போம். மகிழ்ச்சியை சந்திக்க ஆவலுறும் நாம் .அவரது பிரியங்களை நமதாக்கி காத்திருப்போம். அப்போது பிறக்கும் பாலனுக்கு பிhயமானவராக நாமிருப்போம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

விழிப்பாயிருங்கள்.....

"தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சியைப் பற்றவைப்பதில் உள்ள கவனம்
முதல் தீக்குச்சியிலேயே வந்துவிட்டால் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம் "
என்பர் அறிஞர் சிலர். கவனம், விழிப்பு நம் வாழ்க்கைக்கு மிக மிக அவசியம் என்பதை இவ்வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. நமதாண்டவரின் பிறப்பின் வருகைக்காக நம்மை நாமே தயாரித்துக் கொண்டிருக்கக்கூடிய நாட்கள் இவை. இந்நாட்களில் நமதாண்டவர் நம்மை மிகுந்த விழிப்பு நிலையில் இருக்க வலியுறுத்துகிறார். விழிப்பு என்றதும், நாம் தூங்கி எழுந்ததும் வருமே, அது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். அதுவும் விழிப்பு தான். அது கண் விழிப்பு மட்டுமே. ஆனால் ஆண்டவர் கூறுவது முழு மன உடல் நிலை விழிப்பு.. ஆம் ஆழ்ந்த உறக்கத்தில் நாம் நம்முடைய ஆசை, ஆணவம், எண்ணங்கள், அனைத்தையும் கைவிடுகிறோம். இதையே விழிப்பு நிலையில் வாழும் போது நம்மால் கைவிடமுடிந்தால் நாம் யாரென்று அறிந்து கொள்ள முடியும். நாமும் பல நேரங்களில் விழிப்பாக தான் இருக்கிறோம். நம்முடைய தான் என்ற முனைப்பு எவ்விதத்திலும் யாராலும் தொடப்படவோ விமர்சிக்கப்படவோ கூடாது என்று நினைக்கின்றோம். வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களை விட தோற்று விடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் இங்கு அதிகம். நமது விழிப்பு வேறு திசை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. எனவே தான் ஆண்டவர் நமது திசையை அவரை நோக்கி திருப்ப அழைக்கின்றார். நம்முடைய கவனம் விழிப்பு நிலை இரண்டையும் அவரை நோக்கி திருப்ப அழைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் நம்முடைய விழிப்பு நிலை நாம் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதிலும் இரண்டாம் வாசகம், நமது விழிப்பு நிலை எதை நமக்கு பெற்றுத் தர இருக்கின்றது என்பதனையும், எடுத்துரைக்கின்றது. நற்செய்தி வாசகமோ, நமது கவனம் எதில் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.

நாம் யார்?
முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வாயிலாக இஸ்ரயேல் மக்கள் தாங்கள்யார் என்பதனையும் தங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்பதனையும் அறிந்து கொள்கின்றனர். ஆண்டவரை தங்களது மீட்பராக தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். தம்மை நம்பியிருப்போருக்காக செயலாற்றும் கடவுள், இவரைப் போல் வேறு யாரையும் கண்டதுமில்லை கேள்விப்பட்டதுமில்லை என்று சான்று பகர்கின்றனர். தங்களது பாவங்களால் தம்மை படைத்த கடவுளை மனம் நோகச்செய்து விட்டதை எண்ணி மனம் வருந்துகின்றனர். தாங்கள் களிமண் போன்றவர்கள், இறைவன் தங்களின் குயவன் என்று தங்களது நிலை உணர்ந்து இறைவனிடம் மீண்டும் திரும்பி வருகின்றனர்.

நம்மிடம் இறைவன் கேட்பதும் இத்தகைய விழிப்பு நிலையையே. இறைவன் முன் நாம் யார் நம் நிலை என்ன என்பதை அறிந்து வாழ வேண்டும். நாம் அனைவரும் இறைவனின் கை வேலைப்பாடுகள். அவரால் உருவாக்கப்பட்ட களிமண் பாத்திரங்கள். எனவே நம் திறன் அறிந்து செயல்படவெண்டும். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருப்போம். எனவே அதன் நோக்கம் அறிந்து செயல்படவேண்டும்.

எதைப் பெறுகின்றோம்?? பெற இருக்கின்றோம்??

இறையருளைப் பெறுகின்றோம். சொல்வன்மையும் நிறையறிவும் அருள் கொடைகளையும் பெற இருக்கின்றோம். அவரால் உறுதிப்பட இருக்கின்றோம். கிறிஸ்துவின் நட்புறவில் பங்கு கொள்ள அழைக்கப்படுகின்றோம். இந்த இறையருள், சொல்வன்மை, நிறையறிவு அருள்கொடை இவை அனைத்தையும் பெற இருக்கும் நாம் மிகுந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். வெறும் பொருள், பணம், சொத்து, வைத்திருக்கும் செல்வந்தர்களாக இல்லாமல் மனதளவில் செல்வந்தர்களாக வாழ அழைக்கின்றார். எவ்வளவு தான் சொத்து சுகம் இருந்தாலும் மனதளவில் நிறைவின்றி பலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். எதுவும் இன்றி குடிசையில் வாழ்பவர்களும் சில நேரங்களில் மன நிறைவுடன் தான் வாழ்கின்றனர். ஏனெனில் அவர்களோடு இறையருள் இருப்பதால். சொல்வன்மையும் நிறையறிவும் இன்று நம்மில் பலபேருக்கு தேவை. அதில் குறைபாடு இருப்பதால் தான் பலரது வாழ்வில் பல சிக்கல்கள். இவை அனைத்தையும் பெறவே நாம் நம்மையே தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற விழிப்பு நிலையில் நாம் வளர வேண்டும்.

எதில் இருக்க வேண்டும் நமது விழிப்பு :
நாம் நம்முடைய நேரத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதனை நற்செய்தி வாசகம் மூலம் எடுத்துரைக்கின்றார். பயணம் செய்யும் தலைவர் தன்னுடைய பணியாளர்களை அவரவர் பணிக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கின்றார். விழிப்பாக இருக்கச்சொல்லி வலியுறுத்துகின்றார். பணியாளர்கள் இப்பொழுது பொறுப்பாளர்கள். அதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். நம்மில் பலருக்கு நாம் பணியாளர்களா பொறுப்பாளர்களா என்ற தெளிவு இருப்பதில்லை. எனவே தான் பொறுப்பாளர் செய்ய வேண்டிய வேலையை பணியாளரும் பணியாளர் செய்ய வேண்டியதை பொறுப்பாளரும் செய்து குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

அடுத்ததாக வாயிற்காவலருக்கு தன் உடைமை முழுவதையும் திருடனிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றார். வாயிற்காவலர் வாசலுக்கு மட்டுமல்ல. வீடு முழுமைக்கும் அவர் தான் பொறுப்பு. அவர் மிகுந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும். தலைவர் வரும் நேரம் அவர் விழிப்போடு காவல் செய்வதைக்காண வேண்டும். இல்லையேல் அவர் வேலை பறி போகும் நிலை வரலாம்.

நம்முடைய உடல் என்னும் எண்சான் உடம்பிற்கு, வாயிற்காவலன் வாய் என்பர். நமது வாய் பல நேரங்களில் தன்னுடைய பணியை சரிவர செய்யாததால் தான் பல பிரச்சனைகள். சில நேரங்களில் அதிகம் பேசுவதால், சில நேரங்களில் பேசாமல் இருப்பதால். நாம் நம்முடைய வார்த்தைகளிலும் சொல்லும் சொற்களிலும் நம்முடைய கவனத்தை அதிகமாக செலுத்து செயல்படும்போது, நம் இல்லம் என்னும் மனமும் உடலும் நலமாக இருக்கும் . நம் தலைவராம் ஆண்டவர் வரும் வேளையில் அவர் தம் இல்லமாகிய நாம் நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்வார். எனவே மிகுந்த விழிப்பு நிலையிலிருக்க முயல்வோம்.

ஆக நமதாண்டவரின் வருகைக்காகக் காத்திருக்கும் நாம், நாம் யார்? எதை பெறுவதற்காக? எதில்? நமது விழிப்பு நிலை துல்லியப்பட வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவோம். நமது விழிப்பு அலாரம் வைத்து எழும்பும் அனுதின கண் விழிப்பாக இல்லாமல் எந்நேரமும் துடிப்புடன் செயல்படும் இதயத்துடிப்பு விழிப்பாக இருக்க முயற்சிப்போம். அன்பை அடையாளமாகக் கொண்ட இந்த முதல் வார திருவருகைக் காலமானது நம்மிலும் நம்மைச்சுற்றிலும் அன்பை பொழிய இறைவனிடம் அருள் வேண்டுவோம். இறைவனின் ஆசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


 
  மறையுரைச்சிந்தனை  - சகோ. செல்வராணி Osm
 
நம்பிக்கையோடு.... விழித்திருப்போம்......

அன்றொரு நாள், அகதிகள் நிறைந்த பாய்மரக் கப்பல் ஒன்று புறப்படத் தாயாராயிருந்தது. இரண்டு முன்று மாதங்கள் பயணம் செய்த கப்பல், துறைமுகத்தை நெருங்கும் தருவாயில், திடீர் நிலையில் உருவான சூறாவளி காற்றால் பாய்மரக் கப்பல் சிக்கித் தவித்தது. மக்கள் அச்சத்தால் கதறினர். தொடர்ந்து வீசிய புயல் காற்றால் கப்பல் நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது. ஒரே ஒரு வாலிபன் மட்டும் மிகுந்த நம்பிக்கையோடு அருகில் கிடந்த மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டு எப்படியோ கரை வந்து சேர்ந்தான். வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவிலே அந்த வாலிபன் சிக்கிக் கொண்டான் . ஆனாலும் அவன் நம்பிக்கையை தளர விடவில்லை. எப்படியோ கரை வந்து சேர்ந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொன்னான். எப்படியாவது மக்கள் நடமாடும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று எண்ணினான். இவ்வாறு எதிர்பார்ப்பில் நம்பிக்கையோடும், தனது செயலில் விழிப்புணர்வோடும் ஒவ்வொரு பொழுதையும் கழித்தான். கிடைக்கும் இலை, தழைகளை உண்டு உயிர் வாழ்ந்தான். அருகில் கிடந்த குச்சிகளை வைத்து ஒரு குடிசையை கட்டி அதில் வாழ்ந்து வந்தான். இப்படியாக நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த வாலிபன் உணவு தேடி நெடுந்தூரம் சென்று விட்டான். அந்த நேரத்தில், அவனது குடிசை தீப்பற்றி எறியத் தொடங்கியது. அப்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுற்று! " அங்கே நெருப்பு எறிந்து கொண்டிருக்கிறது, யாரோ மனிதர்கள் நடமாட்டம் இருப்பது போல் தோன்றுகிறது, வாருங்கள் அருகில் சென்று பார்போம் " என்று குடிசையை நோக்கி விரைந்தனர். உணவு தேடிச் சென்ற வாலிபனும் குடிசைக்கு விரைந்து வந்தான். அவன் வந்து பார்த்த பொழுது குடிசை எறிந்து சாப்பலானது. வாலிபன் கவலையுற்றான். ஆனால் மனிதர்களைக் கண்டுகொண்டதிலே பெருமகிழ்ச்சியுற்றான். தனது நம்பிக்கையும், துன்பங்களை மறந்து, விழிப்புணர்வோடு நான் செய்த செயல்களும் வீண்போகவில்லை என்று எண்ணினான். புதிய வாழ்க்கை வாழ், புத்துணர்ச்சியுன் புறப்பட்டான்.

நாமும் நமது எதிர்பார்பில் நம்பிக்கையும், நமது செயல்களில் விழிப்பு நிலையும் கொண்டு வாழ, இத்திருவருகைக் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது வாழ்க்கை எனும் படகு நடுக்கடலில் தத்தளித்தாலும், இறைவன் மேல் நம்பிக்கை வைத்து, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் விழிப்புணர்வோடு செய்து வந்தால் , மகிழ்ச்சி என்ற அக்கரைக்கு இறைவன் நம்மை அழைத்துச் செல்வார். திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் இருக்கும் நாம் இறைவனின் வருகைக்காக நம்மையே தயாரிக்க அழைக்கப்படுகிறோம். இஸ்ராயேல் மக்களை தேர்ந்தெடுத்த இறைவன், அவர்களை தொடர்ந்து தனது கண்காணிப்பில் வைத்து பாதுகாதுத்தார். அவர்கள் வழி தடுமாறிச் சென்ற போதெல்லாம், பல இறைவாக்கினர்களையும், அரசர்களையும் தேர்ந்தெடுத்து தம் மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். இஸ்ராயேல் மக்கள் பாவம் செய்தபோதெல்லாம், "நாங்கள் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்" என்ற விழிப்புநிலைக்கு கொண்டு வரச் செய்து, தம்மிடம் அழைத்து வந்தார் இறைவன். இத்தகைய இறைவன் தான், இன்று நம்மையும் விழிப்புநிலையோடு செயல்பட அழைக்கின்றார். விழிப்புநிலை என்பது கண் விழித்திருத்தல் மட்டும் அல்ல. பார்வையற்றவரும் விழிப்புணர்வோடு சாலையை கடந்து செல்கின்றனர். ஆக விழிப்பாயித்தல் என்பது நம்முடைய எண்ணங்கள், செய்யும் செயல்கள், பேசக்கூடிய வார்த்தைகள், நாம் செய்கின்ற பாவங்கள் இவற்றில் விழிப்பாய் இருக்கவேண்டும். தலைவர்கள் நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் விழிப்புணர்வோடு செயல்பட்டு, அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கக்கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில், நெடும் பயணம் செல்லவிருந்த தலைவர், தனது பணியாளர்களையும், வீட்டு காவலர்களையும் அழைத்து , அவர்களிடம் சில பொறுப்புக்களை கொடுத்து நான் வரும்வரையிம் , நீங்கள் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நாம் எத்தகைய விழிப்புணர்வோடு செய்கிறோம் என சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரு பணக்காரன் தனது தோட்டதில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தான். ஒவ்வொரு நாளும் அதற்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராபரித்து வந்தான். ஆண்டுகள் கழித்து மரங்கள் நன்றாக காய்க்கத் தொடங்கியது. பூக்கள், காய்கள், கனிகள் என எல்லாம் நன்றாகப் போயிக்கொண்டிருந்தன. பணக்காரனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. எப்படா காய்கள் எல்லாம் கனியாகும் என பழங்களை பறிப்பதில் தனது கவனத்தைச் செலுத்தினான்.

சில நாட்களுக்குப் பிறகு பூக்களும் பூக்க வில்லை, காய்களும் கனிய வில்லை. காரணமும் புரியவில்லை பணக்காரனுக்கு. கடைசியாக கண்டு கொண்டான், உயிர் கொடுக்கும் வேர்ப் பகுதிக்கு உரமிட்டு நீர் பாய்ச்ச மறந்துவிட்டேனே என்று. பழங்களை பறிப்பதில் கவனமாகவும், விழிப்பாகவும் இருந்த அவருக்கு, அடிப்பகுதியை நன்கு கவனித்தால் தான், மேல் பகுதி நன்றாக காய்க்கும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் போயிருச்சு. நாமும் பல நேரங்களில் இப்படித் தான், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம். நாம் விழிப்பாய் இருந்து செய்யும் ஒரு செயல், நமக்கும் மற்றவருக்கும் நன்மையைத் தருமாயின் அதுவே சிறந்தது. பஸ்சில் பயணம் செய்பவர்கள், தாங்கள் இறங்கும் இடம் எப்பொழுது வரும் என்ற கவனத்தோடும் விழிப்போடும் இருப்பவர்களே தங்களுக்கான இலக்கை அடைகிறார்கள். நமக்கான இலக்கு என்பது இறைவனை அடைவதே.

நமது இலக்கை அடைய, ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடும் , விழிப்புணர்வோடும் செயல்பட வேண்டும். கலைமானை கண்ணியில் சிக்க வைக்க முடியாது ஏனெனில் அதன் பார்வை மிகவும் கூர்மையானதாக இருக்கும். ஒரு பறவை விழிப்பாயிருந்தால் தான் வலையில் சிக்கிக் கொள்ளாதவாரு பார்த்துக்கொள்ளும். இப்படி விலங்குகளும், பறவைகளும் தங்களை காத்துக்கொள்வதில் விழிப்பாய் இருக்கும் போது, மனிதர்களாகிய நாம் மட்டும் ஏன் விழிப்புணர்வுடன் செய்யும் செயல்களில் கவனம் செலுத்துவதில்லை? சிந்திப்போம்! இறைவனின் வருகைக்குக்காக தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த நாட்களில், நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவோம். நம்பிக்கை என்ற விளக்கில் விழிப்புணர்வு என்ற ஒளியேற்றி, இறைமகன் இயேசுவை நம் உள்ளம் என்னும் கோவிலில் பிறக்க அழைப்போம். இறைமகன் இயேசு நம்மையும், நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்.


      
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி

நீரே எங்கள் தந்தை!

'மேகங்கள் நடுவே வானவில் பார்க்கும்போது
என் இதயம் துள்ளிக் குதிக்கிறது
என் வாழ்க்கை தொடங்கியபோது அப்படித்தான் இருந்தது.
இப்போது நான் வளர்ச்சி பெற்ற மனிதனாக நிற்கிறேன்
எனக்கு வயது முதிர்ந்தாலும்
நான் இறந்து போனாலும்
எனக்கு அப்படித்தான் இருக்கும்.
குழந்தையே மனிதனின் தந்தை.
இயற்கையான பற்றுடன் என் நாள்கள்
ஒன்றோடொன்று இணைக்கப்படுவனவாக!'
(வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், 1802)

'குழந்தையே மனிதனின் தந்தை' ('The child is the father of the man') என்ற வேர்ட்ஸ்வொர்த்தின் சொல்லாடல் இன்று வரை பலருக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், 'நான் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தேனோ அப்படியே வளர்ந்தபின்னும் இருப்பேன். நான் குழந்தைப் பருவத்தில் எப்படி வானவில்லை இரசித்தேனோ அப்படியே இறுதி வரை இரசிப்பேன்' என்ற மிக எளிமையான பொருளில்தான் வேர்ட்ஸ்வோர்த் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார்.

மனுக்குலத்தின் தந்தையாக வந்த குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட நாம் இன்றுமுதல் நம்மையே தயாரிக்கிறோம். ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றியும், உலக முடிவு பற்றியுமே அச்சம் கொண்டிருக்கும் நாம், அவரின் முதல் வருகையை, அந்த வருகை கொண்டுவந்த மகிழ்ச்சியை மறந்துவிடுகிறோம்.

விழித்திருத்தல், பரபரப்பு, எதிர்பாராத அவருடைய வருகை, தயார்நிலை, தயார்நிலையில் இல்லையென்றால் தண்டனை என எந்நேரமும் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருப்பதை விடுத்து, கொஞ்சம் சாய்ந்தே அமர்ந்துகொள்வோம். பரபரப்பில் அல்ல. மாறாக, அமைதியான, ஒய்யாரமான, ஓய்வில்தான் அவருடைய வருகை இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 63) அழகான இரண்டு சொல்லாடல்கள் உள்ளன: (அ) 'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை', மற்றும் (ஆ) 'நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்'.

எசாயா இறைவாக்கினர் நூலின் 63ஆம் அதிகாரம், 'குழுமப் புலம்பல்' என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த இஸ்ரயேலின் சார்பாகக் கடவுளிடம் பேசும் இறைவாக்கினர், கடவுளை, 'தந்தை' என அழைக்கிறார். 'தந்தை' என்ற சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் பரவலாகப் பயன்பட்டாலும், பழைய ஏற்பாட்டில், பெரும்பாலும் குலமுதுவர்களை (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆனால், இன்றைய முதல் வாசகப் பகுதியில், 'ஆண்டவரே தந்தை' என அழைக்கிறார் எசாயா. மேலும், 'ஆபிரகாம் எங்களை அறியார். இஸ்ரயேல் (யாக்கோபு) எங்களை ஏற்றுக்கொள்ளார்' என்று தங்களுடைய மூதாதையரின் தந்தையர்களின் இயலாமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்காக ஏங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. கடவுளோடு உறவு நெருக்கத்தில் இருக்கின்ற அவர்கள் தங்களது கடினமான வாழ்க்கைச் சூழலில், தங்கள் கையறுநிலையில் தங்கள் கடவுளிடம், குழந்தைகள் போலச் சரணாகதி அடைகின்றனர். மேலும், தங்களது பிறழ்வுபட்ட வாழ்க்கையையும் ஏற்றுக்கொள்கின்றனர்: 'நாங்கள் பாவம் செய்தோம் ... நாங்கள் அனைவரும் தீட்டுப்பட்டவரைப் போல உள்ளோம் ... எங்கள் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைகள் போலாயின. நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப் போல எங்களை அடித்துச் சென்றன.' தீட்டு, அழுக்கான ஆடைகள், கருகிய இலைகள், காற்றில் அடித்துச் செல்லப்படும் இலைகள் போன்ற உருவகங்கள் (வார்த்தைப் படங்கள்) இஸ்ரயேலின் பரிதாபமான நிலையைக் காட்டுவதுடன், இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அவர்களுக்கு ஒரு தந்தை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. தங்களுடைய மண்ணகத் தந்தையர்களான அரசர்களும், இறைவாக்கினர்களும், குருக்களும் தங்களைக் கைவிட, விண்ணகத்தில் வாழும் என்றுமுள தந்தையை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

'களிமண் - குயவன்' உருவகம் இறைவாக்கினர் இலக்கியங்களில் நிறைய முறை பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவராகிய கடவுளே தன்னைக் குயவன் என்று முன்வைக்கின்றார். குயவன் கையில் உள்ள களிமண் போல இஸ்ரயேல் தன்னையே கடவுளிடம் கையளிக்கக் கூடாதா? என்று கடவுளும் ஏங்கியுள்ளார். அந்த ஏக்கத்தை இஸ்ரயேல் இங்கு நிறைவு செய்கிறது. 'நாங்கள் களிமண் - நீர் எங்கள் குயவன்' என்னும் வார்த்தைகள், இஸ்ரயேல் மக்களின் சரணாகதியைக் காட்டுவதோடு, 'இதோ நாங்கள் உம் கைகளில்! உம் விருப்பம் போல எங்களை வளைத்துக் கொள்ளும்!' என்று இறைவேண்டல் செய்வது போல உள்ளன.

மேலும், 'நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வர மாட்டீரோ?' என்ற இறைவாக்கினரின் வார்த்தைகள், கடவுளின் அவசரம் மற்றும் அவசியத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 'வானங்களைப் பிளந்து கடவுள் இறங்கி வந்த நிகழ்வு' ஏற்கெனவே சீனாய் மலையில் நடந்தேறியது. அங்கேதான் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம், 'நான் உங்கள் கடவுளாய் இருப்பேன். நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்' என்று சொல்லி அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார். தங்களுடைய சிலைவழிபாட்டால் தாங்கள் இழந்த அதே உணர்வை மீண்டும் பெற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கமும் அழுகையும் எசாயாவின் வார்த்தைகளில் இருப்பதை நாம் அறிய முடிகிறது. இழந்து போன உறவுகளை அல்லது முறிந்து போன உறவுகளை எண்ணிப் பார்த்து, 'மீண்டும் நாம் சேர மாட்டோமா?' என்று கேள்வி எழுப்புவது நம் வாழ்வியல் அனுபவமும்கூட.

ஆக, தந்தையை விட்டுத் தூரம் போன மகன், தன் தந்தைக்காக ஏங்குவதோடு, தன் தந்தையின் கையில் தன்னையே சரணாகதியாக்குவதோடு, தன் தந்தை உடனடியாக வந்து தன்னை அள்ளிக்கொள்ள வேண்டும் என்று ஏங்குவதாக அமைகின்றது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 1:3-9), புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் தொடக்கப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிரிவினை, பரத்தைமை, சிலைவழிபாடு போன்ற பிரச்சினைகள் பவுலின் கண்களில் விழுந்த தூசி போல அவருக்குக் கலக்கம் தந்தாலும், 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வரானீர்கள்!' 'உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை!' என்று வாயார வாழ்த்துகிறார். ஏனெனில், பவுலைப் பொருத்துவரையில் இறையருள் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படையானது. கொரிந்து திருஅவையில் பிரிவுகளுக்கும் சண்டை சச்சரவுகளும் இருந்தாலும், இறையருள் அங்கே ஒருபோதும் குறைவுபடுவதில்லை.

இறையருள் குழுமத்தை இரண்டு நிலைகளில் உறுதிப்படுத்துகிறது: (அ) குழுமம் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்கிறது, (ஆ) எந்தவித குறைச்சொல்லுக்கும் குழுமம் ஆளாகாதவாறு கடவுள் இறுதி வரை அதை உறுதிப்படுத்துகின்றார்.

ஆக, குழுமம் என்ற குழந்தையை நிறைவு செய்து இறுதி வரை உறுதிப்படுத்துவது தந்தையாகிய கடவுளின் இறையருளே.

மாற்கு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் (காண். மாற் 13:33-37) இயேசுவின் பாடுகள், மற்றும் இறப்புக்கு முன் வழங்கப்பட்ட சான்று வாக்கியம் போல அமைந்துள்ளது. 'கவனமாயிருங்கள், விழிப்பாய் இருங்கள், விழித்திருங்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தயார்நிலையை இது வலியுறுத்துவதாக அமைகிறது. இரண்டாம் வருகை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது நற்செய்தியாளரின் புரிதலாக இருந்தது.

தயார்நிலையை ஓர் உருவகம் வழியாக எடுத்துரைக்கிறார்: நெடும் பயணம் செல்ல இருக்கும் ஒருவர். அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பொறுப்பாளகளாக்கி, அவர்களை காவல்காக்கச் செய்கின்றார். நெடும் பயணம் என்பது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் அல்லது அவருடைய மறைந்த நிலையைக் குறிக்கிறது. தான் தன் சீடர்குழுவை விட்டுச் சென்றவுடன், அது தூங்கிப் போகலாம், அல்லது மந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் இயேசுவுக்கு இருந்ததால், 'விழிப்பாய் இருங்கள்' என அவர்களை எச்சரிக்கின்றார். ஏனெனில், சீடர்களின் பொறுப்புணர்வு பெரிது.

ஆக, வேலைக்காரர் அல்லது பணியாளர் என்ற நிலையில் இருந்த சீடர்கள், வீட்டின் பொறுப்பாளர் நிலைக்கு உயர்த்தப்படுவதுடன், வீடு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் கடமையையும் பெறுகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில், தங்கள் ஆண்டவரே தங்களுடைய தந்தையாக இருந்து தங்களை நிறைவுசெய்ய முடியும் என எசாயா ஆண்டவராகிய கடவுளிடம் சரணாகதி அடைகின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுள் தந்த இறையருள் அனைத்தையும் அனைவரையும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், பிள்ளைக்குரிய வாஞ்சையுடனும் உரிமையுடனும் சீடர்கள் தங்கள் தந்தையாகிய தலைவருக்காகக் காத்திருக்கின்றனர்.

இவ்வாறாக,
'ஆண்டவரே, நீரே எங்கள் தந்தை' என அழைத்து, 'உம் கைகளில் களிமண் நாங்கள்' என்று சரணாகதி அடைவதே இந்த ஞாயிற்றின் செய்தியாக இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் நாம் சந்திக்கும் கதைமாந்தர்கள் அனைவரும் - மரியா, யோசேப்பு, இடையர்கள், ஞானியர், எலிசபெத்து, செக்கரியா, சிமியோன், அன்னா - தங்களையே இறைவனின் கைகளில் சரணாகதி ஆக்கினர்.
ஏனெனில், வரவிருக்கும் குழந்தையே தங்கள் அனைவரின் தந்தை என அவர்கள் அறிந்திருந்தனர்.

இன்றைய வழிபாட்டின் வாழ்வியல் சவால் என்ன?
'நீரே என் தந்தை' என்று பெத்லகேம் குழந்தையிடம் சரணாகதி அடைவது.

இதற்குத் தடையாக இருப்பவை எவை?
நம் தீட்டுகள், பாவங்கள், இலைகள் போலக் கருகிய நம் வாழ்க்கை, காற்றில் அடித்துச் செல்லப்படும் நம் நிலைப்பாடு போன்றவை. இவற்றை நாம் ஏற்றுக்கொண்டாலே போதும் அவர் வானத்தைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார். வருபவர் நம்மை அள்ளி எடுத்து, தான் விரும்பியதுபோலச் செய்துகொள்வார். நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். பணியாளர்களாகிய நம்மைப் பொறுப்பாளர்கள் ஆக்குவார்.

பெத்லகேம் குழந்தையை நாம் கொண்டாடுவதற்கு முன், அந்தக் குழந்தையே நம் தந்தை என அறிதல் நலம்.
'உமது வலக்கை நட்டு வைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!' (காண். திபா 80) என்பது நம் இறைவேண்டலாகட்டும்.

திருவருகைக்கால செபங்களும் வாழ்த்துகளும்!


 



 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி மரிய அந்தோணி பாளையங்கோட்ட
 
I. எசாயா 63:16-17, 64:1, 3-8 II. 1 கொரிந்தியர் 1:3-9 III. மாற்கு 13:33-37


" கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்"
நிகழ்வு: எப்பொழுதும் துறுதுறுவென்று இருக்கும் மகள் ஷாலினை அழைத்த அவளுடைய அம்மா, " பாப்பா! கடைக்குச் சென்று முட்டை வாங்கிக்கொண்டு வருகிறாயா? அம்மா சமையற்கட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்" என்றார். ஷாலின் " சரி" என்று சொன்னதும், அவளிடம் முட்டைக்குரிய பணத்தைக் கொடுத்து, கடைக்கு அனுப்பி வைத்தாள் அவளது அம்மா.

ஷாலின் முட்டை வாங்கச் சென்ற கடை, அவளது வீடு இருந்த தெருவின் முனையில்தான் இருந்தது. அதனால் அவள் மெதுவாக நடந்து சென்று கடையை அடைந்ததும், தன் அம்மா தன்னிடத்தில் கொடுத்த பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்து, " இந்தப் பணத்திற்கு முட்டை தாருங்கள்" என்று கேட்டு, கடைக்காரர் கொடுத்த முட்டைகளைத் தன் இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.

வரும் வழியில் சேவல்கள் இரண்டு மிகவும் உக்கிரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டாள் ஷாலின். அதுவரைக்கும் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டதைப் பார்த்திராத அவள், அவற்றை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். பின்னர் அவள், " நேரமாகிவிட்டால் அம்மா திட்டுவாள்" என நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆனாலும் அவளால் சேவல்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் அவள் சேவல்கள் சண்டையிடுவதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அப்பொழுது எங்கோ பார்த்துக்கொண்டு எதிரே வந்த ஒருவர்மீது ஷாலின் மீதோ, அவளுடைய கையிலிருந்த முட்டைகள் கீழே விழுந்து உடைந்துபோயின. இதனால் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்ற ஷாலினிடம் அவளுடைய அம்மா, " என்ன ஆயிற்று?" என்று கேட்டாள். அவள் நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னாள். உடனே அவளுடைய தாய், " இனிமேலாது கவனமாய் இரு" என்றார்.

ஆம், நாம் எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் போய் முடிந்துவிடும். திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு, " கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்" என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, ஆன்மிக வாழ்க்கையிலும் எப்படிக் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

அவர் வரும் நேரம் எப்பொழுது என்று தெரியாது
இன்று நாம் திருவருகைக் காலத்தில் அடியெடுத்து வைக்கின்றோம். ஆதலால், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, மானிட மகனின் வருகைக்காக எப்படி நம்மை அணியமாக்குவது என்பதைப் பற்றி எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு, மானிட மகனுடைய வருகை எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்காக வாயிற்காவலர் அல்லது வீட்டுப் பொறுப்பாளர் உவமையைப் பயன்படுத்துகின்றார். அக்காலத்தில், இன்றைக்கு இருப்பது போன்று போக்குவரத்து வசதியோ அல்லது தொடர்பு வசதியோ கிடையாது, ஆதலால் பணிநிமித்தமாக நெடும்பயணமோ அல்லது வெளியூரோ செல்லும் வீட்டுத் தலைவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். அவர் வீட்டிற்கு வருகின்ற நேரத்தில் வாயிற்காவலரோ அல்லது வீட்டுப் பொறுப்பாளரோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினைச் செய்துகொண்டிருப்பவராக இருக்கவேண்டும். இல்லையென்றால், வீட்டுத் தலைவரிடமிருந்து அவர் தண்டனை பெறுவார். இந்த அடிப்படை உண்மையை உவமையாகச் சொல்லும் இயேசு, மானிட மகனும் எந்த நேரத்தில் வருவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருங்கள் என்கின்றார். அப்படியென்றால், எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை எதிர்கொள்ள நாம் நமது கடமைகளைச் செய்துகொடிருப்பவர்களாக இருக்கவேண்டும்.

தம் வழியைக் நினைவில் கொள்வோர்க்குத் துணை வருகின்றார் ஆண்டவர்.
மானிடமகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம், அதனால் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தியின் வழியாக இயேசு கூறுகின்ற அதே நேரத்தில், இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, நேர்மையைக் கடைப்பிடிப்போர்க்கும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோர்க்கும் அவர் துணை செய்ய விரைகின்றார் என்கின்றார். அவ்வாறெனில், யாரெல்லாம் நேர்மையைக் கடைப்பிடித்து, ஆண்டவருடைய வழிகளில் நடந்து, கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு ஆண்டவர் உதவி செய்ய விரைகின்றார் என்று பொருள் கொள்ளலாம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசக இறைவார்த்தைப் பகுதியானது, கிமு. ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட யூதா நாட்டவர், அறுபது கால அடிமைத்தன வாழ்விற்குப் பின்பு, பெர்சிய மன்னன் சைரசால் அவர்களுடைய சொந்த நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டபொழுது, என்ன நடந்தது என்பதை எடுத்துக் கூறுவதாக இருக்கின்றது. இந்த இறைவார்த்தைப் பகுதி பல்வேறு உணர்வுகளை எடுத்துக்கூறுவதாக இருந்தாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு ஆண்டவர் துணை செய்ய வருகின்றார் என்ற முக்கியமான செய்தியை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. இதன்மூலம் ஆண்டவரின் வழிகளை நினைவில் கொண்டு, கவனமாகவும் விழிப்போடும் செயல்படுவோருக்கு ஆண்டவர் துணை செய்ய விரைகின்றார் என்பது உண்மையாகின்றது.

குறைச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்
மானிட மகன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்றாலும், ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்வோருக்கு, கவனமாகவும் விழிப்பாகவும் இருப்போருக்கு ஆண்டவர் துணை செய்வார் என்று இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். ஒருவேளை ஆண்டவரின் வழிகளை நினைவில் கொள்ளாமல், எப்படியும் வாழும் ஒருவர் திடீரென்று மானிடமகன் வருகின்றபொழுது, அவர் குறைசொல்லுக்கு ஆளாகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார்.

கொரிந்து நகரில் இருந்தவர்கள் கடவுள் கொடுத்த கொடைகளைத் தவறாகவும், தங்களுடைய நலனுக்காகவும் பயன்படுத்தி, முறைகேடாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறும் பொருட்டே புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில், " நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் நீங்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் உங்களை இறுதிவரை உறுதிப்படுத்துவார்" என்கின்றார். அப்படியெனில், மானிட மகன் - ஆண்டவர் இயேசு வருகின்றபொழுது நாம் குறைச் சொல்லுக்கு ஒருபோதும் ஆளாகாமல் இருக்கவேண்டும். அதற்கு நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், தம் வழிகளை நினைவில் கொள்வோருக்குத் துணை செய்யும் ஆண்டவர் நமக்கும் துணை செய்வார்.

ஆகையால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரக்கூடிய மானிட மகனை எதிர்கொள்வதற்கு நாம் எப்படியும் வாழாமல், கவனமாகவும் விழிப்பாகவும், ஆண்டவரின் வழிகளைக் நினைவில் கொண்டும் வாழ்வோம்.

சிந்தனை
" நீங்கள் எதைச் செய்தாலும், கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யுங்கள்" என்பார் புனித அல்போன்சா. எனவே, நாம் எப்பொழுது வேண்டுமானாலும் வரக்கூடிய மானிடமகனை நல்லமுறையில் எதிர்கொள்ளும் வகையில், எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்வோம். நாம் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கின்றோம் என்பதை, நாம் கிறிஸ்துவின் அன்புக்காகச் செய்யும் செயல்களால் நிரூபிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

 
   மறையுரைச்சிந்தனை  - அருள்பணி முனைவர் அருள் பாளையங்கோட்டை

திருவிவிலியம் காட்டும் விழிப்பு
திருவருகைக் காலத்திற்குள் காலடி வைத்திருக்கின்றோம், இறைவனின் வருகைக்காகத் தயார் செய்யும் காலம் இது, மலர் மணத்தைச் சந்திக்கிறது. ஆறு கடலைச் சந்திக்கிறது. கடல் கரையைச் சந்திக்கிறது. இதைவிட அழகான, ஆச்சரியமான, அற்புதமான சந்திப்பு விண்ணகம் மண்ணகத்தைச் சந்திப்பது. பாவத்தின் பிடியில் வழி தவறிய மனித குலத்தை மீட்க, தம் அன்பு மகனை அனுப்பியதில்தான் அவரின் அன்பு முழுமையடைகிறது. வானத்திற்கு மேல் எட்டாத தூரத்தில் இருந்து கடவுளை, தந்தை மகன் உறவைப்போல மனித குல மத்தியில் கொண்டு வந்து விடுகிறார் எசாயா. அச்சம் தவிர்த்து அன்பிலும் நம்பிக்கையிலும் தோய்த்து அவர் எழுப்பும் குரல், வானங்களைப் பிளந்து கடவுளை இறங்கி வரச்செய்கிறது. எங்களை வழிநடத்தும் உம்மைவிட்டு எங்கே போவோம் என்ற கேள்வி ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது. கடவுள் மேல் உள்ள எசாயாவின் நம்பிக்கை பளிச்சிடுகிறது. எம் மீட்பர், என்ற பெயரை கடவுளுக்குச் சூட்டுகிறார். நம்பிக்கையுள்ள மக்களாக வாழ வேண்டியது நமது கடமை, ஏனெனில் நாம் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டுள்ளோம். நமக்குச் சொல் வன்மையும், நிறையறிவும் தந்து நம்மை அவர் செல்வர்களாக்கியுள்ளார் என்கிறது இரண்டாம் வாசகம்.

தன்னைப் பார்க்க வந்த துறவிக்குப் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான், அந்த மன்னன். காட்டுப்பாதை வழியாக தனது ஊருக்கு சென்ற துறவி, களைப்பாக இருந்ததாலும், இருட்டிவிட்டதாலும் கல்லறைக்கு அருகில் உள்ள மரத்தடியில் ஓய்வு எடுத்தார். சற்று நேரத்தில் கத்தியோடு நான்கு திருடர்கள் அந்த வழியாக வந்தார்கள். மன்னன் தனக்குக் கொடுத்த பொற்காசுகளை, கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள் என்று நினைத்த துறவி, எப்படித் தப்புவது என்று யோசித்து, உட்கார்ந்தபடியே தப்பிக்க முடிவு செய்தார். அவர்கள் என்ன செய்தாலும் தப்பிப்பேன் என்ற நம்பிக்கையோடும். . வலிவோடும் விழிப்பாக இருந்தார். யார் நீ? என்ன வைத்திருக் கிறாய்....? அதற்கு துறவி ஒன்றுமில்லை ! நேற்றுதான் என்னை இந்த கல்லறையில் புதைத்தார்கள். கல்லறைக்குள் ஒரே புழுக்கம் அதனால்தான் காற்று வாங்கலாம் என்று வெளியே வந்தேன் என்றார். இதைக் கேட்ட கொள்ளையர்கள், கொள்ளையடிக்க பொருட்களை எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதன்பிறகு துறவி பயமில்லாமல் ஊர் போய்ச் சேர்ந்தார். துறவியின் முன் அறிவும், விழிப்பும் அவரைக் காப்பாற்றியது. எச்சரிக்கையாய் இருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாது. (இன்றைய நற்செய்தி)

திருவிவிலியம் காட்டும் விழிப்பு
குள்ளன் சக்கேயு எப்டியாவது இயேசுவைப் பார்க்க வேண்டும். அவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் விழிப்பாக இருந்தான். அதில் வெற்றியும் பெற்றான். (லூக். 19:1-10)

இயேசு இந்த வழியாக வருவார் என்பதை அறிந்த பிறவிக் குருடன் விழிப்போடு இருந்தான். பலர் அதட்டியும் அவன் கேட்கவில்லை. அவனின் காத்திருப்பு விழிப்பானது விழிகளுக்கு பார்வையானது (மாற். 10:46-52).

இயேசு ஓர் ஊரை அடைந்தபோது மார்த்தா என்ற பெண் தன் வீட்டில் விழிப்பாக இருந்து வரவேற்றாள் (லூக். 10:38).

தொழுகைக்கூடத் தலைவன் தன் மகளைக் காப்பாற்ற விழிப்பாக காத்திருந்து, இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டிற்கு அழைத்தான் (லூக். 8:41).

வாழ்வில் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் விழிப்பாகச் செயல்பட மேற்கண்ட நிகழ்வுகள் நமக்கு வழிகாட்டுகிறது.


விழிப்பின் நிலைகள்
தன்னையும் தனது நிறைகுறைகளையும் அறிந்திருக்கும் தன் உணர்வு நிலை.
தன்னை மட்டுமல்ல பிறரையும் அறிந்து வைத்திருக்கும் பிறர் உணர்வு நிலை.
தன்னையும் பிறரையும் கடந்த சக்தியான இறைவனின் அன்பை, உறவை உணர்கின்ற இறை உணர்வு நிலை.

இந்த மூன்று நிலைகளையும் சரியாக உணர்ந்தவன், எப்போதும் எல்லா காலத்திலும், விழிப்பாகவே செயல்படுவான் என்பது பொருள். இதை நினைவுபடுத்தும் காலம்தான் திருவருகைக் காலம். இது பய உணர்வுகொண்ட விழிப்பல்ல. பாசத்தோடு கூடிய விழிப்பு. பாசமுள்ள தாய் தன் பிள்ளையின் வருகைக்குக் காத்திருப்பதுபோல் இயேசுவின் வருகைக்காக விழிப்போடு காத்திருக்கும் நிலையாகும்.

காட்டில் எதிர்பாராத நேரத்தில் ஒரு புலியிடம் ஒருவன் மாட்டிக் கொள்கிறான். தப்பிக்க வேறு வழியில்லை. நடக்கவே மூச்சு வாங்கும் அவன், தன் முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு ஓடுகிறான். தன்னால் முடியாது என்ற சூழ்நிலைக்குத் தள்ளப்படும் போது மட்டுமே மனிதன் விழிப்பாகச் செயல்படுகிறான். அப்படி அன்று, எல்லா நேரங்களிலும், சூழ்நிலைகளிலும் விழிப்போடு செயல்படும் மனநிலையைப் பெற்றிருந்தால் அவன் எப்போதும் வெற்றி பெறுவான். காரணம் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. திருடன் எப்போது வருவான் என்பது உங்களுக்குத் தெரியாது (திருவிவிலியம்).

திருவருகைக் காலத்தில் நாம் விழிப்போடு காத்திருக் கின்றோமா...? இல்லையா...? நம் கடவுள் ஒரு தந்தையைப்போல நம்மை வரவேற்க விழிப்போடு காத்திருக்கிறார். நமது உள்ளங்களிலும், இல்லங்களிலும் தகுதியோடு விழிப்பாக இருந்து வரவேற்க, நம்பிக்கையோடு விழிப்பாயிருந்து செபிப்போம்.

அன்பை ஆடையாக அணிந்துகொண்டு இதயத்தில் விழிப்பு என்ற தோரணம் கட்டி இல்லங்களில் நம்பிக்கை என்ற விரிப்பு விரித்து இயேசுவை வரவேற்போம்.
 
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை  ஞானி




 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள்  - குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
நமது கிறிஸ்து அரசரின் ஆசி பெற நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இன்றைய நற்செய்தி நமக்குத் தெளிவுப்படுத்துகின்றது.

ஆறுவகையான மக்களுக்குஆண்டவரின் ஆசிகிடைப்பது விண்ணகம் கிடைப்பது உறுதியார்அந்தஅறுபேர்? பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள். தாகமாக இருப்பவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பவர்கள். அன்னியராக இருப்போரை ஏற்றுக் கொள்பவர்கள்.ஆடையின்றி இருப்பவர்களுக்கு ஆடைஅணிவிப்பவர்கள், நோயுற்றோரைக் கவனித்துக் கொள்கின்றவர்கள், சிறையிலிருப்பவர்களைத் தேடிச்செல்கின்றவர்கள் ஆகிய ஆறு பேரும் கடவுள் வாழும் இல்லத்திற்குள் நுழையும்பேறுபெறுவார்கள்.

கிறிஸ்தவ மறையைப் பொறுத்தவரையில் இறைவனின் ஆசிபெற நம்மிடமுள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.

நம்மிடமுள்ளதைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவிடாமல் நம்மைத் தடுப்பது எது? நமது சுயநலம். சுயநலம் என்றால் என்ன? என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு கதை!

ஒரு பெரிய பணக்காரருக்கு மூன்று மகன்கள் அந்தப்பணக்காரரிடம் நிறைய சொத்து இருந்தது அவருக்கு வயதாகிவிட்டது அவர் மரணப் படுக்கையில் படுத்திருந்தார் அப்போது அவர் இறந்த பிறகு எப்படி அவரை கல்லறைக்குத் தூக்கிச்செல்வது என்பதைப் பற்றி மூன்று மகன்களும் தங்களுக்குள்ளேபேசிக்கொண்டனர்.
மூத்தவன் "கல்லறைக்கு தூக்கிச்செல்ல வாடகைக் கார் ஒன்றை வைத்துக்கொள்ளலாம்" என்றான்.
இரண்டாமவன் "காருக்கு அதிக செலவாகும் இறந்த பிறகு எதில் தூக்கிச்செல்கின்றோம் என்பது அவருக்குத் தெரியவாபோகின்றது ஒரு மாட்டு வண்டிபோதும்" என்றான்.
மூன்றாமவன் : "மாட்டுவண்டி எதற்கு நம்ம ஊர் சவ வண்டி இருக்கின்றது அது இனாமாகக் கிடைக்கும்" என்றான்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிழவர், "எங்கே என் செருப்பும், கைத்தடியும்?" என்றார்.
மகன்கள் "இப்போது அவை உங்களுக்கு எதற்கு?" என்றார்கள்.
தகப்பனோ, "நீங்கள் எனக்காக எந்தச் செலவையும் செய்ய வேண்டாம் நான் நடந்தே கல்லறைக்குச் சென்று விடுகின்றேன்" என்றார்.

இந்தக் கதையில் வந்த மூன்று மகன்களும் கொண்டிருந்த மனநிலைக்குப் பெயர்தான் சுயநலம்! சுயநலம் என்பது, தான் வாழவேண்டும், தான் மட்டுமே வாழவேண்டும் என்று எண்ணுவது.
இந்தச் சுயநலத்தை அழிக்க வழி ஏதாவது உண்டா? உண்டு என்கின்றது முதல்வாசகம்! நல்லாயனாம் கடவுள் காணாமல் போன நமது நல்ல வாழ்க்கையை நமக்குக் கண்டுபிடித்துத் தருவார் என்கின்றது. தீயவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு.

நமது வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து போகும் ஒன்று அன்று நாம் அனைவரும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் (இரண்டாம் வாசகம்). அப்படி உயிர்தெழும்போது கிறிஸ்து அரசரால் விண்ணகத்திற்குள் நாம் வரவேற்கப்பட தகுதியுள்ளவர்களாகத் திகழ்வோமா? திகழ்வோம். எப்போது? நம்மிடம் உள்ளதை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது...

மேலும் அறிவோம்:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் (குறள் : 229).

பொருள்: பெரிதும் தேடித்திரட்டிய பொருள் அனைத்தையும் பிறருக்குக் கொடுத்தால் குறையுமோ என்றுதாமே சுவைப்பது, பிறரிடம் கையேந்திக் கெஞ்சிக் கேட்பதைக் காட்டிலும் கொடிய செயலாகும்.

 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
எதைப்பற்றி நாம் விழிப்பாயிருக்க வேண்டும்?
ஒரு வகுப்பில் ஒரு மாணவன் ஆசிரியரிடம், " சார்! நீங்கள் 40 அம்மாவுக்குச் சமம்" என்றாள், "எப்படி என்று ஆசிரியர் கேட்டதற்கு அம்மாணவன் கூறிய பதில்: வீட்டில் ஓர் அம்மா ஒரு நேரத்தில் ஒரு பிள்ளையை மட்டும் தூங்க வைக்கிறார். ஆனால் நீங்கள் ஒரே நேரத்தில் 40 மாணவர்களையும் தூங்க வைக்கிறீர்கள்." வேறொரு மாணவன் வரலாற்று ஆசிரியரிடம், "சார்! கணக்கு வகுப்பில் விட்டு விட்டுத் தூங்குவேன்; ஆனால் வாலாற்று வகுப்பில் விடாமல் தூங்குவேன்" என்றாள். "வாழ்க்கை என்பது தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி" என்கிறார் ஓர் அறிஞர்.

இப்பின்னணியில் நாம் திருவருகைக் காலத்தைத் தொடங்குகிறோம். திருவருகைக் காலம் நம்மைத் தாங்காமல் விழிப்புணர்வுடன் தமது அன்றாடக் கடனையச் செவ்வனே ஆற்ற அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்" (மாற் 13:33) என்று அறிவுறுத்துகிறார்,

எதைப்பற்றி நாம் விழிப்பாயிருக்க வேண்டும்? கிறிஸ்துவின் வருகையைக் குறித்து விழிப்பாயிருக்க வேண்டும். கிறிஸ்து எற்கெனவே வந்துவிட்டார் (முதல் வருகை), உலக முடிவில் மாட்சியுடன் வர இருக்கின்றார் (இரண்டாம் வருகை). ஒவ்வொரு நாளும் அவர் வந்துகொண்டே இருக்கிறார் (நிகழ்கால வருகை).

கிறிஸ்துவின் முதல்வருகையை இஸ்ரயேல் மக்கள் வழிமேல் விழி வைத்து ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர். "ஆண்டவரே வாரும், வானங்களைப் பிளந்து இறங்கி வாரும்' (எசாயா 64:1). என்று ஏக்கப் பெருமூச்சு விட்டனர். அவர்களது அவல நிலையை இன்றைய முதல் வாசகம் படம்பிடித்துக் காட்டுகிறது. அவர்கள் பாபிலோனியாவில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில் (கி.மு.587), கடவுளிடம் கண்ணீர் மல்க முறையிட்டனர்: "நாங்கள் பாவம் செய்தோம் ... தீட்டுப்பட்டவர்களாக, அழுக்கடைந்த ஆடைகளாக, கருகிப்போன இலைகளாக இருக்கின்றோம் " (எசாயா 64:6).

இஸ்ரயேல் மக்களின் ஏக்கங்களைப் போக்க கடவுள் தம் மகனை அனுப்பினார். ஆனால் அந்த மக்கள் கிறிஸ்துவில் தங்களது மெசியாவைக் கண்டுகொள்ளவில்லை. இந்தக் கசப்பான உண்மையை திருமுழுக்கு யோவான் பின்வருமாறு எடுத்துரைத்தார்: "நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்" (யோவா 1:26), மெசியா இஸ்ரயேல் மக்களிடம் வந்தார்; போதித்தார்; புதுமைகளைச் செய்தார், ஆனால் அவர்கள் அவரை அடையாளம் கண்டு, ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுடைய பெரிய பாவம், கடவுள் அவர்களைத் தேடிவந்த காலத்தை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை (லூக் 19:44). அவர்கள் எதிர்பார்த்தது அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அளிக்கும் மெசியாவை. தச்சரான யோசேப்பின் மகனிடத்தில் அவர்கள் தங்கள் மெசியாவைக் காண மறுத்து விட்டனர் அவர்கள் கிறிஸ்துவை முகக்கண்கொண்டு மனித முறையில் பார்த்தனர். விசுவாசக் கண்கொண்டு. அகக்கண்கொண்டு அவரை பார்க்கவில்லை.

கிறிஸ்துவின் முதல் வருகையை நம்பி அவரை நம் மீட்பராக எற்று. அவரது இரண்டாம் வருகையை நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம். எனினும் நாம் கிறிஸ்துவின் நிகழ்கால வருகையை அடையாளம் கண்டுகொள்வதில்லை. அவர் அருள்வாக்கு, அரும் அடையாளங்கள், அன்றாட நிகழ்வுகள் வழியாக தம்மை சந்திக்கின்றார். குறிப்பாக, ஏழை எளியவர்கள், நலிவுற்றவர்கள் நசுக்கப்பட்டவர்கள் மூலம் அவர் நம்மிடம் வருகிறார். நாமோ அவரை அற்புதங்களிலும் அரும் அடையாளங்களிலும் தேடி அலைகிறோய் கடவுள் நம்மைத் தேடிவரும் காலத்தையும் தேரத்தையும் தா அறிவதில்லை .

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து. நாம். கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள கடமைகளைச் செம்மையுடன் செய்து கிறிஸ்துவின் வருகையை விழிப்புணர்வுடன் உதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். உலக முடிவைப்பற்றியும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றியும் வெறும் யூகங்களைத் தவிர்க் வேண்டும். அவர் நாம் நினையாத நேரத்தில் வருவார். எனவே நாம் அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ள நற்செய்தி அறிவிப்புப் பணியைக் கருத்துடன் செய்ய வேண்டும்.

வெளியூர் சென்ற வீட்டுத் தலைவர் 40 மண் தொட்டிகளில் விலையுயர்ந்த பூவிதைகளை ஊன்றி வேலைக்காரரிடம் தான் திரும்பி வரும்வரை அத்தொட்டிகளில் தினமும் தண்ணீர் ஊற்றும்படி கேட்டுக்கொண்டார். வேலைக்காரர் ஒருவாரம் தண்ணீர் ஊற்றினார். ஒன்றும் முளைக்கவில்லை. தொட்டிகளில் வெண்டி விதையை ஊன்றித் தண்ணீர் விட, அவை வெகு விரைவில் முளைத்துவிட்ட அதன் பிறகு பூவிதைகள் முளைத்தன. அவற்றைக் களை என் நினைத்துப் பிடுங்கி எறிந்துவிட்டார் வேலைக்காரர். அவருடை மடமையை என்னவென்பது?

அந்த வேலைக்காரரைப் போலவே நாமும் நடந்து கொள்கிறோம். கிறிஸ்து திருச்சபையிடம், உலகெங்கும் சென்று நற்செய்தின அறிவிக்கும் முக்கியமான பணியை ஒப்படைத்துவிட்டுச் சென்றார் ஆனால் நாமோ நற்செய்தி அறிவிப்பதை விட்டுவிட்டு நிறுவனங்களைக் கட்டி அழுது கொண்டிருக்கிறோம். கடவுளுடைய வார்த்தையை அறிவிக்காததாலும், இறுகிப்போன நிறுவனங்களை கட்டிக்காப்பதாலும், மக்களை அவர்கள் வீடுதேடிச் செல்லாததாலும், மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு மற்ற சபைகளுக்குச் செல்லுகின்றனர். இதைக் கண்டும் நாம் நமது தவற்றை உணராது இருப்பது வேதனை அளிக்கிறது. நற்செய்திக்குப் பிரமாணிக்கமுள்ள உண்மையான ஊழியர்களாகப் பணிபுரிவோம். மக்களை நம்பிக்கையிலும் அன்பிலும் கட்டி எழுப்புவோம்.

"அண்டவரே, இனி உம்மைவிட்டு அகலமாட்டோம்.
எங்களுக்கு வாழ்வு அளித்தருளும். நாங்கள் உமது
பெயரைத் தொழுவோம் (பதிலுாரப்பாடல் தியா 8018)
 
 
மறையுறை மொட்டுக்கள்   Rev. Fr. Peter Jayakanthan sss


 
 
மறையுரைச்சிந்தனை  -திருவுரைத் தேனடை அருள்பணி இ.லூர்துராஜ் -
 

விழித்திரு
இரண்டாம் உலகப் பெரும்போர் முடிந்த நேரம் ஜெர்மனி நாட்டு அதிபர் கொன்ராடு அடனாவர் வானொலி, தொலைக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றுகிறார் "அழிவு சிதைவு இடிபாடுகளுக்கு இடையே நின்று கொண்டிருக்கிறோம். நாம் விழித்தெழும் நேரம் வந்து விட்டது. வீறுகொண்டு கரம் கோர்ப்போம் புதிய ஜெர்மனியைக் கட்டி எழுப்பக் கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விடக்கூடாது.
மக்கள் கூர்ந்து கேட்டனர். விழித்து எழுந்தனர். விளைவு? வளமான, செழிப்பான புதிய ஜெர்மனி.

திருவருகைக் காலத்தைத் தொடங்கும் போதே திருவழிபாட்டு முழக்கம் - விழிப்பாயிருங்கள் என்பதுதான் காரணம்? 'உறக்கத்தினின்று விழிதெழும் நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததைவிட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது" (ரோமை.13:11)

போரினால் உண்டான பாதிப்பால் அச்சமும் அதிர்ச்சியும் கொண்ட ஜெர்மனி நாட்டு மக்களின் உள்ளத்தில் எத்தகைய உணர்வுகள் கிளர்ந்தெழுந்தனவோ அதே தாக்கத்துக்கு ஆளான இஸ்ரயேல் மக்களின் மன உணர்வுகளின் சித்தரிப்பே முதல் வாசகம்.

- பபிலோனிய அடிமைத்தனத்துக்குப்பின் தாயகம் திரும்பிய நிலையில் அழிந்துபட்ட எருசலேமை, சிதைந்துவிட்ட திருக்கோவிலைச் கண்டு சிந்தையில் அமைதியிழந்து செல்வச் செழிப்பிழந்து இறைவழிபாட்டின் வளமை இழந்து வார்த்தைக்குள் அடங்காத வருத்தத்தை சோகத்தை ஏக்கத்தை வெளிப்படுத்தும் மன்றாட்டான புலம்பல்.

- இந்த இழிநிலைக்கெல்லாம் தங்கள் பாவ வாழ்வே, இறைவனை விட்டு அகன்ற அவலமே காரணம் என்ற தன்னிலை உணர்வு "நாங்கள் யாவரும் இலைபோல் கருகிப்போகின்றோம். எங்கள் தீச்செயல்கள் காற்றைப்போல் எங்களை அடித்துச் சென்றன" (எசாயா 64:6)

- இந்தத் தன்னுணர்வுக்கிடையிலும் உடைந்து போன இதயத்தின் அடித்தளத்தில் நம்பிக்கை வேரற்றுப் போகவில்லை. "ஆண்டவரே உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்ததேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எங்கள் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்?" (எசாயா 53:7) என்று தங்கள் தவறுகளுக்கெல்லாம் கடவுளுக்குமே பங்கு உண்டு என்பது போலப் புலம்பி "நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்" (எசா64:8) சீரழிந்த தன் வேலைப் பாடுகளைச் சீர்செய்ய இறைவனே இறங்கிவர உரிமையோடும் எதிர்பார்ப்போடும் கூடிய அழைப்பு.

- களிமண் தானாகக் குடமாக முடியுமா? வனைந்திடக்குயவன் அங்கே வரவேண்டாமா? கற்பாறை தானாகச் சிலையாக முடியுமா? செதுக்கிடச் சிற்பி அங்கே வரவேண்டாமா? பாவியான மனிதன் தன் சொந்த முயற்சியால் மட்டும் படைத்தவனைச் சென்றடைய முடியுமா? "நீர் வானத்தைப் பிளந்து (கிழித்து என்பது பழைய மொழிபெயர்ப்பு) இறங்கி வரமாட்டீரோ?" (எசா.64:1) இந்த இதய எழுச்சி, ஏக்கக்கதறல் இறைவன் எனக்குத் தேவை அதுவும் உடனடித் தேவை என்ற அவசர எதிர்பார்ப்புக் கலந்த தவிப்பு: திருப்பாடல் 144:5இல் கூட இதே துடிப்பின் வெளிப்பாடு: "ஆண்டவரே உம் வான்வெளியை வளைத்து இறங்கி வாரும் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தடையை அவரால் மட்டுமே தகர்க்க முடியும். நம்மால் இயலாது நம்மால் முடிந்ததெல்லாம் ஓசோன் படலத்தில் ஒட்டைகளைப் போட்டதுதான்!

ஆண்டவர் வருவார். "இந்த இயேசு உங்களிடமிருந்து விண்னேற்றமடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' (தி.ப1:11) அதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பதா?

'விழிப்பாய் இருங்கள் ஏனெனில் வீட்டுத்தலைவர். எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது (மாற்கு 13:35)

சென்னையில் ஓர் அரசு அலுவலர் தன் ஸ்கூட்டரை வெளியே நிறுத்திவிட்டு மதிய உணவை முடித்து வெளியே வந்தவருக்கு ஒரே அதிர்ச்சி. ஸ்கூட்டரைக் காணோம். அங்குமிங்கும் தேடி அலைமோதிய அவர் சிறிது தொலைவில் ஸ்கூட்டரைப் பார்க்கிறார். மகிழ்ச்சியோடு அருகில் செல்கிறார். ஸ்கூட்டரில் ஒரு கடிதமும் 2 சினிமா டிக்கெட்டுகளும் இருந்தன. "ஐயா, எங்களை மன்னியுங்கள். ஒர் அவசர வேலைக்காக வண்டியை எடுத்துச் சென்றோம். சொல்லாமல் எடுத்துச் சென்ற குற்றத்துக்காக ரிசர்வ் செய்யப்பட்ட இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ளோம். உங்கள் மனைவியோடு இன்று மாலையில் படம் பார்த்து மகிழுங்கள்" என்பது கடித வாசகம், இரட்டிப்பான மகிழ்ச்சி உற்சாகத்தோடு திரையரங்கு சென்று திரும்பிய போது வீடே கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விழிப்புணர்வைக் குலைக்க, கவனத்தைச் சிதறடிக்க, சாத்தான் எப்படியெல்லாம் திட்டமிடுகிறான். செயல்படுகிறான்.

விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்.
குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்.
"சுதந்திரம் இருளில் வாங்கினோம். இன்னும் விடியவில்லை என்று யார் சொன்னது? விடிந்துவிட்டது. இன்னும் நாம்தாம் விழித்தெழவில்லை நாளை என்பது விடியலில் அல்ல, விழித்தலில் உள்ளது.



 
சிந்தனைப் பயணம்: அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
 பசியாய், தாகமாய்... சிறைப்பட்டிருக்கும் அரசர்!
இங்கிலாந்து நாட்டை 70 ஆண்டுகளாக ஆண்டுவந்த 2ம் எலிசபெத் அரசி, 2022ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். அவரது அடக்கச் சடங்கு செப்டம்பர் 19ம் தேதி நடைபெற்றது. அந்த சடங்கின் ஒரு பகுதியாக, அரசியின் சவப்பெட்டிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த அவரது மகுடம், அவரது செங்கோல் ஆகியவை நீக்கப்பட்டு, அந்த பெட்டி கீழே இறக்கப்பட்டது. அவ்வேளையில், உலக அரசர்கள், மற்றும் அரசிகள் அனைவருக்குமே வழங்கப்பட்டுள்ள அதிகாரம் நிரந்தரமற்றது என்ற உண்மை அனைவருக்கும் தெளிவாகப் புரிந்திருக்கவேண்டும். இருந்தாலும், இன்றைய உலகத் தலைவர்களில் சிலர், தாங்கள் நிரந்தரமாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதாக கனவு கண்டு வருவது நாம் காணும் ஒரு வேதனையான போக்கு.

வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த மொயிசெஸ் நயிம் (Moiss Nam) என்ற சிந்தனையாளர், சென்ற ஆண்டு வெளியிட்ட ஒரு நூலின் தலைப்பு: "அதிகாரத்தின் பழிவாங்குதல் - எதேச்சாதிகாரிகள் 21ம் நூற்றாண்டில் உருவாக்கிவரும் அரசியல்" (" The Revenge of Power How Autocrats are Reinventing Politics for the 21st Century) அதிகாரத்தைத் தேடும் உலகத் தலைவர்களைப்பற்றி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூலின் அறிமுகப் பிரிவில் அவர் கூறும் ஒரு சில கருத்துக்கள் இதோ:
அதிகாரம் தேடுவோரின் ஒரு புதிய சந்ததியினர், அண்மைய ஆண்டுகளில் அடைந்துவரும் வெற்றியைப் பார்த்துவருகிறோம். இவர்கள், செல்வம் மிகுந்த நாடுகளிலும், வறுமைப்பட்ட நாடுகளிலும், முன்னேற்றம் அடைந்த நாடுகளிலும், முன்னேற்றம் இல்லாத நாடுகளிலும் தோன்றியுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத்தலைவராக இருந்த டொனால்டு டிரம்ப்பை எண்ணிப் பார்க்கிறோம். அதே வேளையில், வெனிசுவேலாவின் ஹ்யூகோ சாவேஸ், ஹங்கேரியின் விக்டர் ஓர்பன், பிலிப்பைன்ஸின் ரொட்ரிகோ துத்தெர்த்தே, இந்தியாவின் நரேந்திர மோடி, பிரேசிலின் ஜெயிர் பொல்சனாரோ, துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன், எல் சால்வதோரின் நயிப் பூக்கலே மற்றும் பலர்
அதிகாரத்தில் ஊறிப்போயிருக்கும் இவர்கள், வரம்பற்ற சக்தியைப் பெறுவதற்கும், பின்னர் தங்களால் முடிந்தவரை அதை தக்கவைத்துக்கொள்வதற்கும் புதிய நுட்பங்களை முன்னெடுத்துள்ளனர். வாழ்நாளெல்லாம் அதிகாரத்தைப் பெற்றிருப்பது இவர்களது இலக்கு... அவர்கள் அடைந்துள்ள வெற்றி, உலகம் முழுவதும் அவர்களைப்போன்ற முயற்சிகளை மேற்கொள்ள பலரைத் தூண்டுகிறது.

21 ஆம் நூற்றாண்டின் இத்தகைய எதேச்சாதிகாரிகளை 20 ஆம் நூற்றாண்டில் இருந்த எதேச்சாதிகாரிகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் ஆசிரியர். இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள் (ஹிட்லர், ஸ்டாலின், பினோஷே, மாவ் சேதுங், மற்றும் முசோலினி போன்றவர்கள்) முரட்டுத்தனமாக செய்ததை, இருபத்தியோராம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள் மறைமுகமாகச் செய்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை, வெறிகொண்டு அழிக்கப் புறப்பட்டனர். இருபத்தியோராம் நூற்றாண்டின் எதேச்சாதிகாரிகளோ, அவர்களுக்குத் துதிபாடும் இராணுவம், நீதித்துறை மற்றும் பாராளுமன்றத்தின் உதவியுடன் அதிகாரத்தில் நீடிக்க சட்டத்தையும் அமைப்பையும் பெருமளவு மாற்றியமைத்துள்ளனர். இதற்கு, இரஷ்ய அரசுத்தலைவர் விளாடிமிர் புடின் சிறந்த எடுத்துக்காட்டு.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், விளாடிமிர் புடின் அவர்கள், அவரது கைப்பாவையாக இருந்த பாராளுமன்றத்தின் உதவியுடன், 2036ம் ஆண்டு முடிய பதவியில் நீடிக்கும்படி சட்டத்தை இயற்றினார். அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன், 2018ம் ஆண்டு, சீனாவின் அரசுத்தலைவர் ஜி ஜின்பிங்க் அவர்கள், வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருக்கும் முயற்சியை மேற்கொண்டு, சீன பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றார். அவ்வாண்டு அமெரிக்க அரசுத்தலைவராக இருந்த ட்ரம்ப், "வாழ்நாள் முழுவதும் அரசுத்தலைவர் என்பது மிகவும் அருமையான திட்டம்... அதற்கு நாமும் ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் என்ன?" என்று கூறியதாகத் தெரிகிறது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவில் இதேபோன்ற நடவடிக்கையை நரேந்திர மோடி சிந்தித்துப் பார்த்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த எதேச்சாதிகாரிகளின் போக்கு, நாம் விழித்தெழுவதற்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை. ஆனால், இதை நாம் கவனத்தில் கொள்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறியே!

அதிகாரத்தின் பழிவாங்குதல் என்ற இந்நூலின் முதல் பக்கங்களில் இரண்டு அச்சுறுத்தும் மேற்கோள்களைக் காண்கிறோம். நமது அறியாமை மற்றும் மௌனத்தால், இத்தகைய அரக்கர்களை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது:
அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் நோக்கத்துடன் யாரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்லை என்பதை நாம் அறிவோம். (George Orwell, " Nineteen Eighty-Four" )
நமக்கு என்ன நடக்கிறது என்பதை நாம் அறிவதில்லை. அதுதான் நமக்கு நிச்சயமாக நடந்துகொண்டிருக்கிறது. (Jos Ortega y Gasset, " Man and Crisis" )

இத்தகையதொரு காலக்கட்டத்தில், " அனைத்துலகின் அரசர் கிறிஸ்து" என்ற திருநாள் வழியே, நாம் விழிப்புணர்வு பெறுவதற்கு, தாய் திருஅவை, இஞ்ஞாயிறன்று, நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
திருஅவையில் நாம் கொண்டாடும் அனைத்துத் திருநாள்களில், இந்த ஒரு திருநாள், நமக்குள் சங்கடங்களை உருவாக்க வாய்ப்பு உண்டு. கிறிஸ்துவை, நல்லாயன், நல்லாசிரியர், நண்பர், மீட்பர், என்று... பல கோணங்களில் எண்ணிப்பார்க்கும்போது, உள்ளம் நிறைவடைகிறது. இன்றைய முதல் வாசகத்தில், (எசேக்கியேல் 34:11-12,15-17) பரிவுகொண்ட ஓர் ஆயனாக, இறைவன், தன்னையே உருவகித்துப் பேசுவதைக் கேட்கும்போது, நம் உள்ளம் மகிழ்கிறது. அதைவிட அதிகமாக, இன்றைய பதிலுரைப்பாடலாக வழங்கப்பட்டுள்ள " ஆண்டவரே என் ஆயர் என்ற 23வது திருப்பாடலின் வரிகள், நம் வாழ்வில் பலமுறை நமக்கு ஆறுதல் வழங்கியுள்ளன. ஆனால், கிறிஸ்துவை, அரசராக கற்பனை செய்து பார்க்கும்போது, சங்கடங்கள் எழுகின்றன. அரசர் என்றதும், மனத்திரையில் தோன்றும் காட்சிகளே, இந்தச் சங்கடத்தின் முக்கியக் காரணம்.

அரசர் என்றதும், பட்டும், வைரமும் மின்னும் உடையணிந்து, பலரது தோள்களை அழுத்தி வதைக்கும் பல்லக்கில் அமர்ந்துவரும் ஓர் உருவம், நம் கற்பனையில் வலம் வருவதால், சங்கடமடைகிறோம். " அரசர்" என்ற சொல்லுக்கு நாம் தரும் வழக்கமான, ஆனால், குறுகலான இந்த இலக்கணத்தை வைத்துப்பார்த்தால், இயேசு, நிச்சயமாக அரசர் அல்ல. ஆனால், மற்றொரு கோணத்தில், இயேசுவும் ஓர் அரசர். ஓர் அரசை உருவாக்கியவர். அவர் உருவாக்கிய அரசுக்கு நிலப்பரப்பு கிடையாது!
அப்பாடா, பாதி பிரச்சனை இதிலேயேத் தீர்ந்துவிட்டது. நிலம் இல்லை என்றால், எல்லைகள் இல்லை, எல்லையைப் பாதுகாக்க, போர் இல்லை, படைகள் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை... ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு, இவை எதுவுமே தேவையில்லை. இத்தகைய மன்னரைக் கொண்டாடவே, கிறிஸ்து அரசர் திருநாள் நம்மை அழைக்கிறது.

கிறிஸ்து அரசர் திருநாள், திருஅவையில் உருவாக்கப்பட்டதன் பின்னணியை நாம் சிந்திக்கும்போது, இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன. முதலாம் உலகப்போர் முடிவுற்ற பின்னரும், உலகத்தில், பகைமை, பழிவாங்கும் வெறி ஆகியவை அடங்கவில்லை. முதல் உலகப்போருக்கு ஒரு முக்கிய காரணமாய் இருந்தது, அரசர்கள், மற்றும் தலைவர்களின் அத்துமீறியப் பேராசை. நாடுகளின் நிலப்பரப்பை விரிவாக்கவும், ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில், தங்கள் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, இன்னும் பலகோடி மக்களைக் கட்டுப்படுத்தவும் வேண்டுமென்ற வெறி, ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்தது. அரசர்களும், தலைவர்களும் கொண்டிருந்த அதிகார வெறியைக் கண்ட திருத்தந்தை பதினோராம் பயஸ் அவர்கள், இந்த அரசர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, 1925ம் ஆண்டு, கிறிஸ்துவை, அரசராக அறிவித்தார்.

அன்று நிலவிய அதிகார வெறி, முதல் உலகப்போருடன் முடிவடையாமல், இரண்டாம் உலகப்போரையும் உருவாக்கியது. இன்றும், அதே அதிகார வெறி, மூன்றாம் உலகப்போரை, சிறு, சிறு துண்டுகளாக, உலகெங்கும் நடத்திவருகின்றது. இத்தகையப் போர்களை ஊக்குவித்து, மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து அந்தக் கல்லறைகள் மேல் தங்கள் அரியணைகளை அமைத்து அமர்ந்திருக்கும் தலைவர்களை உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று காண்கிறோம்.

இத்தகையத் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, கிறிஸ்துவை அரசர் என்று பறைசாற்றுகிறது, கத்தோலிக்கத் திருஅவை. கிறிஸ்து என்ற அரசரிடமிருந்து, மக்கள், குறிப்பாக, தலைவர்கள் பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தத் திருநாள் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திருநாளின் உதவியோடு, தலைவர்கள், பாடங்களைப் பயில்வார்களா என்பது தெரியவில்லை. நாம் பாடங்களை பயில முன்வருவோமே!

உண்மை அரசரின் பண்புகளை கற்றுக்கொள்ள, இன்று நாம் கேட்கும் நற்செய்தி வாசகம், உதவியாக உள்ளது. மத்தேயு நற்செய்தியில் இயேசு கூறும் இந்த இறுதி உவமையில் பங்கேற்கும் கதைமாந்தர்கள் பலருடன், ஆண்டவர் தன்னையே இணைத்து, அவர்கள் வடிவாகவே மாறுகிறார். அரியணையில் வீற்றிருப்பவராகமட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாமல், இவ்வுலகில் துன்புறும் பலராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார் இறைவன். 'பசியால் இருந்தோருக்கு நீங்கள் உணவு கொடுத்தீர்கள்' என்று அரசர் சொல்லவில்லை; மாறாக, " நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' (மத்தேயு 25: 35-36) என்று அரசர் சொல்கிறார்.

இறுதித் தீர்வையின்போது, "பசியாய் இருந்தேன், தாகமாய் இருந்தேன்..." என்று இயேசு, தன்னையே அடையாளப்படுத்துவதை நம்மால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. "சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்று அவர் கூறும்போது, "எந்தக் குற்றமும் செய்யாத இயேசு, சிறையில் அடைக்கப்பட்டார்" என்று, அந்தக் கூற்றுக்கு, ஒரு விளக்கம் தந்து, இயேசுவை ஒரு சிறைக்கைதியாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், இயேசு, அவ்விதம் தன்னை அடையாளப்படுத்தவில்லை. "குற்றமேதும் புரியாத நான் சிறையிலிருந்தேன்" என்று அவர் கூறாமல், பொதுவாக, "நான் சிறையிலிருந்தேன்" என்று மட்டும் கூறியுள்ளார். குற்றம் புரிந்தோ, புரியாமலோ, சிறையில் தள்ளப்பட்டுள்ள அனைவரோடும் இயேசு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டார். இது நமக்குச் சவாலாக அமைகிறது.

சிறைக்கைதிகளில் இயேசுவைக் காண்பதோடு, அவர்கள் விடுதலைபெற்று வெளியே வரும்வேளையில், அவர்களை சமுதாயத்தில் ஒருவராக உணரச்செய்வதும் நம் பொறுப்பு. இது கடினமான ஒரு சவால் என்பதை வெளிப்படுத்தும் ஓர் உண்மை நிகழ்வு இது: சிறைக்கைதிகளில் ஒருவர் திருமுழுக்கு பெறுவதற்கு தன்னையே தயார் செய்துவந்தார். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்துவைத்த அருள்பணியாளர், அவரிடம், "நாளை ஞாயிற்றுக்கிழமை. நீங்கள் என்னுடன் கோவிலுக்கு வருவதாக இருந்தால், சிறைக்காவலரிடம் நான் அனுமதி பெறுகிறேன்" என்று கூறினார். அந்தக் கைதி, தன் கைகளிலும், முகத்திலும் கத்தியால் கீறப்பட்ட தழும்புகளை அருள்பணியாளரிடம் காட்டி, "சாமி, சிறையிலிருந்து வெளியேச் செல்வதற்கு, சிறைக் காவலர் எனக்கு எளிதாக அனுமதி தந்துவிடுவார். ஆனால், இந்தத் தழும்புகளுடன் நான் கோவிலுக்குள் நுழைவதற்கு மக்கள் அனுமதி தருவார்களா?" என்று கேட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அருள்பணியாளர் அமைதியாக நின்றார்.

மனமாற்றம் பெற்று மறுவாழ்வைத் துவக்கும் எத்தனை கைதிகள், மீண்டும் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத கொடுமையால், சிறைவாழ்வே மேல் என்று எண்ணி வருகின்றனர்! இவர்களை மீண்டும் சமுதாயத்தில் இணைப்பதற்குத் தடையாக இருப்பன, நாம் உள்ளத்தில் அவர்களைப்பற்றி செதுக்கி வைத்திருக்கும் முற்சார்பு எண்ணங்களே.

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2020ம் ஆண்டு, நவம்பர் 20ம் தேதி, கிறிஸ்து அரசர் திருநாளன்று, சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்ற சொற்களை நற்செய்தியில் வாசித்த வேளையில், அநீதியான முறையில் மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நோக்கி நம் எண்ணங்கள் திரும்பின. மற்றொரு சிறைக்கைதியின் உதவியுடன் எழுதி, அருள்பணி ஸ்டான் அவர்கள் வெளியிட்டிருந்த ஒரு மடலில், தான் சிறையில் உணர்ந்துவரும் மனிதாபிமானத்தை புகழ்ந்து பேசியுள்ளார். பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் அவர், உண்பதற்கும், குளிப்பதற்கும், அவருடன் தங்கியிருக்கும் இருவர் உதவி செய்ததாக அம்மடலில் கூறியிருந்தார். அவ்விருவரும் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்காக செபிக்கும்படியும் அவர், தன் மடல்வழியே விண்ணப்பித்திருந்தார். அநீதியான பழிகளைச் சுமந்து, மும்பை சிறையில் அடைக்கப்பட்டிந்த 83 வயதான அருள்பணி ஸ்டான் அவர்கள் உருவில், இயேசுவும் அந்தச் சிறையில் அடைபட்டிருந்தார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

ஏழைகள் வடிவில் இறைவன் வாழ்வதை, பல்வேறு மதங்களும், கலாச்சாரங்களும் பல வழிகளில் சொல்லித் தந்துள்ளன. மெக்சிகோவில் வாழ்ந்த Aztec என்ற பழங்குடியினர் எழுதிவைத்த ஒரு கவிதை, இறைவனை இவ்வகையில் அடையாளப்படுத்துகிறது. மண்ணோடு மண்ணாக, சிறு, சிறு துண்டுகளைப்போல் வாழும் மக்களைத் தேடினால், அங்கு அவர்களோடு தன்னையே அடையாளப்படுத்திக் கொண்டுள்ள இறைவனைக் காணமுடியும் என்பதை, இக்கவிதை கூறுகிறது. இக்கவிதையின் சுருக்கம் இதோ: "வாழ்வுப் பாதையில் நீங்கள் நடந்து செல்லும்போது, உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஒரு சக்தியை, கடவுளின் ஒரு சிறு பகுதியை நீங்கள் தேடினால், கீழ்நோக்கி நீங்கள் பார்க்கவேண்டியிருக்கும். நீங்கள் தேடும் கடவுள், சின்ன விடயங்களில் இருப்பார், பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பார். ஒருவேளை, பூமிக்கு அடியிலும் அவர் இருக்கலாம். கடவுளைத் தேடுவோர், தலையைத் தாழ்த்தி, கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும், கீழ்நோக்கிப் பார்க்கவேண்டும்."
துன்புறும் மனித சமுதாயம், தன்னில் ஒரு பகுதி என்றும், இறைவன் ஏழையாகவே இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார் என்றும், இன்றைய நற்செய்தி ஆணித்தரமாகக் கூறுகிறது.

வறியோர் வடிவில் இறைவன் வாழ்வதை மீண்டும் ஒருமுறை நினைவில் கொள்ள கடந்த வாரம் சிறப்பித்த வறியோரின் உலக நாள் நமக்கொரு வாய்ப்பை வழங்கியது. இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில், கிறிஸ்து அரசருக்கு முன் நாம் நிற்கும் வேளையில், அரசர் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு, உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, உரிமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள வறியோருக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே, இறைவனாக, அரசனாக, நம் முன் தோன்றும் இயேசு கேட்கும் கேள்வி. இறுதித் தீர்வையில் இக்கேள்விக்கு நாம் தரப்போகும் பதில், இன்று முதல் நம் வாழ்வில் செயல்வடிவம் பெறட்டும்!

இறுதியாக ஓர் எண்ணம். ஒரு வேண்டுதல்... ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து அரசர் திருநாள், இளையோர் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு தளங்களில் 'ஸ்டார்'களாக வலம்வரும் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்கள் காட்டும் தவறானப் பாதைகளில் பயணித்து தங்கள் வாழ்வை வீணடித்துவரும் இளையோர், வறியோர், பசித்தோர், நோயுற்றோர், சிறைக்கைதிகள் ஆகியோருடன் தங்களையே இணைத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வை மேம்படுத்தி, அவர்களுடன் விண்ணக அரசில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

=========================================================================
 
ஞாயிறு மறையுரை - திரு. சின்னப்பன் டிசில்வா. - வெலிங்டன்.ஊட்டி
 

   உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே! என்று சொல்லி
என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய்! சுடர் தீபமாக்கினாய்!!