நம்பிக்கையோடு விழித்திருக்க வரம் வேண்டி வந்திருக்கும் சொந்தங்களே!
வானகத்தந்தை நம்மைத் தமது ஆட்சிக்கு உட்படுத்த விரும்புகின்றார்.
அதற்கான அருளுரைகளை நாம் அறிந்து கொள்ள இந்த ஞாயிறு வழிபாட்டின் வழியாக
அழைப்பு விடுக்கின்றார். நினையாத நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனை
சந்திக்க மேலோட்டமான வாழ்வு அல்ல வேரோட்டமான வாழ்வு நாம் வாழ வேண்டும்.
நம்மிடம் இருக்கும் உடமைகளை விற்று தருமம் செய்ய வேண்டும்.
நம்பிக்கையோடு தப்பேதும் செய்யாது எப்போதும் விழித்திருந்து கதவை
தட்டியதும் திறக்கும் பணியாளனாய் இருக்கவேண்டும். கடமையை சிறப்பாகச்
செய்து உயர்வு பெறவேண்டும். இற்றுப் போகாத பணப்பையும் விண்ணுலகில்
குறையாத செல்வமும் சேமித்து வைக்க வேண்டும். மேலானவை எவை என்று
கண்டறிந்து அவைகளில் நமது நேரத்தையும் நமது முயற்சியையும்
செலவிடவேண்டும். அவசியமானதை எல்லாம் அவசியம் செய்யவேண்டும்.
அவசியமற்றதை அவசியம் அகற்ற வேண்டும்.
மேலோட்டமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வேரோட்டமான வாழ்வு வாழ
நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை பொறுப்புடன் செய்வோம். இருப்பதை
கொடுத்து மகிழ்வோம். நலமானதை எல்லாம் மனமுவந்து செய்வோம்.
விழித்திருந்து நினையாத நேரத்தில் வரும் தலைவன் மெச்சும் ஊழியனாய் பணி
செய்வோம்.
வானகத் தந்தை விண்ணகத்தில் நமது பேறுபலன்களை மிகுதியாக்க அவரது
ஆட்சிக்கு உட்பட்டோராய் இந்த மண்ணகத்தில் நாம் நம்பிக்கையோடு
விழித்திருந்து பணியாற்ற அருள் பொழியும் திருப்பலியில் அன்புடன்
செபிப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. எங்களை உமது
ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்ட இறைவா!
உமது திருச்சபை, நாடுகளுக்கெல்லாம் ஒளியாகவும் அனைத்து மக்களையும்
ஒன்றுபடுத்தும் உமது ஆற்றலின் அடையாளமாகவும் அமையச் செய்தருளும்.
எங்களை உமது ஆட்சிக்கு அழைத்துச் செல்லும் கருவியாக திருச்சபை செயல்பட
அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இடையை வரிந்து கட்டி பணிசெய்வோருக்குப் பலன்
தரும் இறைவா!
திருச்சபையின் தலைவர்கள் ஆயர்கள் அனைவருக்கும் ஒற்றுமை, அன்பு
அமைதி, ஆகிய கொடைகளைப் பரிசாகத் தந்து வழி நடத்த வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
3. இறை வாழ்வுக்கு உரிய உள்ளொளி தரும் இறைவா!
அலைக்கழிக்கப்படும் எம் உலகில் அமைதியை நிலை நாட்டவும் மக்கள் மனக்
கவலையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழவும் ஆட்சி செய்வோர்
பொறுப்புடன் உழைத்திட அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நம்பிக்கையுடன் விழித்திருந்து பணி செய்ய
எமக்கு கற்றுத் தரும் இறைவா!
எங்கள் கடமைகளை சிறப்பாக பொறுப்பாகச் செய்யவும், தலைவன் மெச்சும்
பணியாளனாய் எங்கள் பணிகளைச் செய்யவும், இற்றுப்போகாத இடத்தில் எங்கள்
செல்வத்தை சேமித்து வாழவும் அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. வேரோட்டமான வாழ்வு வாழ எமை அழைக்கும் இறைவா!
ஏழைகள், நோயாளிகள், தனிமையில் வாடுவோர்,சிறையில் இருப்போர், அன்பு
செய்யப்படாதவர்கள் இவர்கள் மீது அன்பு காட்டி நீர் விரும்பும் வேரோட்ட
வாழ்வு வாழ அருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனை
அவர் பெயர்
குணாளன். அதிகம் சம்பாதித்து வைத்திருந்தார். போதுமான செல்வம் அவரிடம்
இருந்தது. புதிய தொழில் ஒன்று தொடங்கினார். ஆனால் கடன் வாங்கி வேலையை
ஆரம்பித்தார். வேலை நன்றாக நடைபெற்றது. பணமும் ஏராளம் வைத்திருந்தார்.
ஒரு நாள் காவல் நிலையத்தில் புகார் ஒன்று தெரிவித்தார். அதில் தன்
வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து என்னிடம் உள்ள 40 சவரன் நகை 45
லட்சம் பணம் இவைகளை கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்துச் சென்று
விட்டார்கள்.
தான் இழந்த நகையை பணத்தை தேடித்தருமாறு காவலர்களிடம் கேட்டுக் கொண்டான்.
காவலர்கள் வந்தார்கள். விசாரணை நடத்தினார்கள். பல கோணத்தில் ஆய்வு
செய்தார்கள். திருடனை அவர்களால் கண்டு பிடிக்க இயலவில்லை. ஒருவாரமாக
விசாரித்தார்கள். இறுதியாக அந்த வீட்டில் வெப் கேமரா ஒன்றை அந்த
வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் பொருத்திவிட்டு காவல் நிலையத்தில்
இருந்தவாறு காவலர்கள் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வீட்டில்
யாருமில்லாத நேரத்தில் நகையைத் தொலைத்த அந்த மனிதர் வீட்டின் உள்ளே ஒரு
மூலையில் நாற்காலியைப் போட்டு அடிக்கடி பரண் மேலே ஏறுவதும் அங்கு ஒரு
மூட்டையை தொட்டுப் பார்ப்பதுமாக இருந்தார். காவலர்கள் விடாது
கண்காணித்து வந்தார்கள். காவலர்களது சந்தேகம் வலுக்கவே வீட்டிற்கு
வந்தார்கள். நாற்காலியைப் போட்டு அந்த வீட்டின் பரண் மீது ஏறி அந்த
மூட்டையை கீழே இறக்கி அதை அவிழ்த்துப் பார்த்தால், காணவில்லை என்று
புகார் தெரிவித்த பொருட்களும் பணமும் அதன் உள்ளே இருந்தது.
காவலர்கள் ஏன் இப்படிச் செய்தாய்? என கேட்ட போது கடன்காரர்களை
ஏமாற்றவும், தான் பொருளை இழந்துவிட்டது தெரிந்தால் கடன்காரர்கள் தன்
மீது இரக்கப்பட்டு கொடுத்த கடனை தள்ளுபடி செய்து விடுவார்கள். தான்
மிகப் பெரிய பணக்காரனாக வாழலாம் என நினைத்தானாம். அதனால் இப்படிச்
செய்ததாக வாக்குமூலம் அளித்தான். இன்றும் அவனது மீது விசாரணை நடந்து
கொண்டிருக்கிறது.
உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்குமென்பது
குணாளன் நிகழ்வில் எத்துணை உண்மையாகிவிட்டது. எவ்வளவு பணம்
சம்பாதித்தாலும் எதையும் கொண்டு செல்ல இயலாது. என்பதை குணாளன் மட்டுமா
மறந்து போனான்? நாமும் அநேக வேளையில் நாமும் எதையும் கொண்டு போக இயலாது
என்பதை மறந்து பேராசை பிடித்து திரிகின்றோம் அல்லவா!
உங்களிடம் கடன் கேட்பவருக்கு முகம் கோணாது கொடுங்கள் என நம் ஆண்டவர்
இயேசு கூறுகிறார். நாமோ வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க, மனம்
கோணுகிறோம். பணம் இருந்தும் கொடுக்க மறுக்கிறோம். இற்றுப் போகாத
பணப்பைகளையும், விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ள நம்
உடமைகளை விற்று தருமம் செய்ய முன் வருவோம்.
பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு
பரம்பரை சொத்தாகவே பல வீடுகள் தோட்டம், வயல், நில புலன்கள் அமைந்து
இருந்தன. ஏராளமான வசதிகளும் வாய்ப்பும் இயல்பாகவே அமைந்திருந்தும்
அறச்செயல்களில் அறவே அவருக்கு நாட்டம் இல்லை. தரும காரியங்களிலும்
ஈடுபடமாட்டார். தான் செலவழிப்பதற்கும் கணக்குப் பார்ப்பார். ஆனால் அவர்
தந்தையாரோ சிறந்த தர்மவான் என்று ஊராரால் புகழப்பட்டவர். 'அப்பாவிற்கு
இப்படி ஒரு பையனா? ஈயாத லோபி இருந்தென்ன? வாழ்ந்தென்ன என்று பலரும்
பேசுவது மனைவியின் காதுகளில் அடிக்கடி விழுந்து கொண்டே இருந்தது.
பலமுறை சொல்லியும் கணவனின் கஞ்சத்தனம் கொஞ்சமும் அகலவில்லை.
ஒரு நாள் கடும் வெயிலில் அவர் மனைவியுடன் பக்கத்து ஊர் கோயிலுக்குப்
பயணம் புறப்பட்டார். வழியில் ஒரு ஆற்று மணல்வெளியில் நடக்க
வேண்டியிருந்தது. கடுன்கோடையில் வற்றிப்போன ஆற்றின் இடையிலே கொதிக்கும்
மணலில் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். கையில் குடையும் இல்லை.
காலில் செருப்பும் இல்லை. தங்கிச் செல்வதற்கும் நிழல்பரப்பு அருகில்
இல்லை.
மனைவி சொன்னாள் "நிழலில் தங்கி சற்று நேரம் இளைப்பாறுங்களேன்!"
'என்ன உளறுகிறாய்! கண்ணுக்கு எட்டிய வரை நிழல் எதுவும் தெரியவில்லையே!
உன் கண்ணுக்கு மட்டும் எந்த இடத்தில் நிழல். தெரிகிறதோ' என்றார்
செல்வந்தர்.
'கொஞ்சம் குனிந்து பாருங்கள்! உங்களின் நிழல் தெரிகிறதே! அதில்
ஒதுங்கி கொள்ளுங்கள்' என்றாள் மனைவி.
'என் நிழலில் நான் எப்படி இளைப்பாற முடியும்?' என்ற கணவரின்
கேள்விக்குப் 'பட்' என்று பதில் சொன்னாள் மனைவி.
'உங்கள் நிழல் உங்களுக்கு எப்படி உதவாதோ, அப்படித்தான் நீங்கள்
குவித்து வைத்திருக்கும் கோடிக்கணக்கான் செல்வமும்' என்றாள்.
அப்போதுதான் பொறி தட்டியது அவருக்கு. தன்னுடைய தந்தையார் அன்றாடம்
தருமம் செய்தது.
எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்காத பணத்துடன்
செல்வந்தன் ஒருவன் வாழ்ந்தால், விஷக்கனிகள் தரும் நச்சு மரம் நடுவூரில்
பழுத்தது போல்' என்று பாடுகிறார் திருவள்ளுவர்.
'கடவுள் என்னைப் பார்க்கிறார்' பள்ளிக்
கரும்பலகையில் ஆசிரியர் ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படிக்கும்
குழந்தைகள்.கடவுள் நம்மைப் பார்க்கிறார் நாம் எதைச் செய்தாலும்
அவருக்குப் பிரியமானதைச் செய்ய வேண்டும் என ஆர்வத்துடன் தங்கள்
காரியங்களைச் மிகச் சரியாகச் செய்தார்கள். மாணவச்செல்வங்கள் வேரோட்டமான
வாழ்க்கை வாழ்ந்தார்கள் நம் ஆண்டவர் இயேசு நம்மை இப்படித்தான்
வாழச்சொல்கின்றார். மனிதநேயமே வேரோட்டமான வாழ்வின் அடித்தளம்.
சக மனிதனை நேசிக்கிற மாண்பு, சக மனிதனை
மனிதனாகப் பார்க்கிற அணுகுமுறை. தனக்கு இருக்கிற அனைத்து உணர்வுகளும்,
தனக்குள்ள அனைத்து அடிப்படைத் தேவைகளும் அடுத்தவருக்கும் வேண்டும்
என்று எண்ணி ஏற்று அங்கீகரிக்கிற தன்மை. சக மனிதனைப் பாசத்தோடும்,
பரிவோடும், கருணையோடும் நோக்கும் அன்பு நிலையே மனிதநேயம். இதுதான்
உயிருள்ள மனிதனின் இயல்பான நிலை, இயற்கையான நிலை. "அன்பின் வழியது
உயிர் நிலை" என்பது திருவள்ளுவரின் திருவாக்கு. எனவேதான் தந்தை
பெரியார் மனிதனை நினை என்றார். ஆண்டவனைக்கூட "அன்பெனும் பிடிக்குள்
அகப்படும் மலை' என்கிறார் வள்ளலார்.
மனிதனை நேசிக்கிற மனிதனை நினைக்கிற தன்மை இருக்குமெனில் வீழ்ச்சி
என்பதே இல்லை, வளர்ச்சி என்பது மட்டுந்தான். முன்னேற்றமே மிஞ்சி
நிற்கும் பின்னேற்றம் இருக்காது. அன்புமயமான சூழலில் தனி மனிதனுக்கோ
சமூகத்திற்கோ, அல்லது நாட்டிற்கோ முன்னேற்றத்தைத் தவிர வேறு என்ன
இருக்க முடியும். அன்பான மனிதன், சக மனிதன் ஒரு வேளை உணவு கூட இல்லாமல்
அல்லற்படுவதைக் கண்டும் காணாமல் கிடக்க இயலுமா? தனக்குப் போக
மிஞ்சியிருப்பதை சக மனிதனுக்குப் பகிர்ந்தளித்துப் பசியாற்றினால்
எங்காவது இல்லாமையும், பட்டினிச்சாவும் இந்த மனிதகுலத்தில் நிகழுமா?
மனித நேயத்தோடு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து
அறநெறி செயல்கள் செய்து வாழும் போது தன் தலைவர் தன்னிடம் ஒப்படைத்த
பணியை தப்பேதும் செய்யாது எப்போதும் விழித்திருந்து கதவைத் தட்டியதும்
திறக்கும் பணியாளனாய் நாம் இருப்போம் .
விழிப்போடு இருப்பது வாழ்க்கையின்
வழிக்கு சிறப்பாய் இருக்கும். கடமையை சிறப்பாகச் செய்யும் போது உயர்வு
தானாக வரும். கடமையை கடமைக்காகச் செய்யும்போது தாழ்வு தானாக வரும்.
பொறுப்பை உணர்ந்து செயல்படுவது பெருமை. பொறுப்பின்றி அலைவது மடமை.
நமது செல்வம் எங்குள்ளதோ அங்கு தான் நம் உள்ளம்
இருக்கும். இற்றுப்போகாத பணப்பையும் விண்ணுலகில் குறையாத செல்வமும்
நாம் சேமித்து வைத்திருக்க வேரோட்டமான வாழ்வு வாழ முயற்சி செய்வோம்.
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா
O.S.M.
முன்னுரை -
ஞானஒலி
நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியர்களாக விழிப்புணர்வு கொண்டவர்களாக,
கடவுள் கொடுத்த பொறுப்பை சிறப்புடன் செய்பவர்களாக வாழ வரம்
வேண்டி வருகை தந்துள்ள அன்பு இறைமக்களே உங்கள் அனைவரையும்
பொதுக்காலத்தின் 19ம் ஞாயிறு வழிபாட்டிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
இன்றைய திருவழிபாடு நாம் இறைவன் மீது நம்பிக்கைக் கொடு
அவருக்கு நம்பிக்கை உள்ளவர்களாக வாழ அழைப்புவிடுக்கிறது.
நம்பிக்கை என்பது வாழ்வின் அடித்தளமாக இருந்தால் எத்தகைய
துன்பத்தையும் எதிர்கொள்ள முடியும். நற்செயல்கள் பல புரிய
முடியும் என்ற கருத்தை கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.
பகலினை அலங்கரிப்பது சூரியன், இரவினை அலங்கரிப்பது
சந்திரன். மனித வாழ்வை அலங்கரிப்பது அவனது நம்பிக்கை.
நம்பிக்கையில் நாம் வளர வளர, வாழ்வில் வரும்
இன்னல்களையும், இடர்களையும் மன தைரியத்துடன் சந்திக்கும்
மனப்பக்குவம் பெறுகிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்பிக்கையுள்ள பணியாளர்களாக வாழ
அழைக்கின்றன.
கடவுளுக்கும் அவருடைய சாயலாகப் படைக்கப்பட்ட
மனிதர்களுக்கும்
நம்பிக்கைகக்கு உரியவர்களாக இருப்பது காலத்தின் கட்டாயம்
என்னுமோர் உயர்ந்த நெறியைப் போதிக்கின்றன.
ஆபேலை நேர்மையாளனாக மாற்றியது நம்பிக்கை. நோவாவை
வெள்ளத்திலிருந்து காப்பாற்றியது நம்பிக்கை. ஆபிரகாமுக்கு
ஈசாக்கைத் தந்தது நம்பிக்கை. குருடர்கள் பார்த்ததும்,
செவிடர்கள் கேட்டதும், முடவர்கள் நடந்ததும், இறந்தவர்
உயிர் பெற்றதும், பாவிகள் மன்னிப்புப் பெற்றதும்
நம்பிக்கையால்தான். நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை.
நம்பிக்கை உள்ளவனுக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பதை
திருவிவிலியம் நமக்குக் கற்றுத் தருகிறது.
விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமைப்போல் நாமும் கடவுள் மீது
நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழவும்,
நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்ளவும், நம்பிக்கையோடு
எந்நேரமும் விழிப்புடன் இறைவனின் வருகைக்காகக்
காத்திருக்கவும் இத்திருப்பலி வழியான இறையருளை வேண்டுவோம்.
முதல் வாசக முன்னுரை
இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது அவர்கள்
இறைவன்மேல் கொண்டிருந்த நம்பிக்கையே என்பதை
எடுத்துரைக்கிறது இன்றைய முதல் வாசகம். கடவுளின்
வாக்குறுதிகளின்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுள்
முன்னிலையில் பெருமைப்படுத்தப்படுவார்கள் என்பதை விளக்கும்
இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களை நம்பிக்கையில் நிலைபெறச்
செய்யவும், மீண்டும் அவர்கள் யூத மதத்திற்கத்
திரும்புவதைத் தடுக்கவும் எழுப்பட்ட இத்திருமுகத்தின் ஒரு
பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம். இறைவனின் நம்பகத்தன்மையை
உணர்ந்துகொள்ளும் ஒருவரால் மட்டுமே நம்பிக்கை உள்ளவராய்
வாழ முடியும் என்பதை அறிவுளுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன்
கேட்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. அகத்திலே விசுவாச ஒளியை ஒளிரச் செய்யும் அன்பும் இறைவா.
உம் திருஅவையின் தலைவர்கள் அனைவரும் தமது சொல்லாலும்,
செயலாலும் மக்கள் மனங்களில் நம்பிக்கை ஒளியையும், இருள்
சூழ்ந்த உள்ளங்களில் உம் திருஒளியையும் ஏற்றிவைக்கக்கூடிய
வல்லமையையும் அற்றலையும் அவர்ளுக்குத் தந்து, அவர்கள் கடமை
தவறாதவர்களாய், விழிப்புடன் செயல்படுபவர்களாய்,
நம்பிக்கையின் நாயகர்களாய் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பும் கருணையும் கொண்ட தந்தையே இறைவா, ஆபிரகாம்
உம்மேல் கொண்ட விசுவாசத்தின் வழியாகத் தன்னை
வெளிப்படுத்தியதுபோல, கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை
யாரும் பிரிக்க முடியாது என்ற சத்தியத்தின் மூலம்
பவுலடியார் தன்னை வெளிப்படுத்தியதுபோல், தாழ்ச்சியாலும்,
தெய்வீக மாட்சியாலும் உமது திருமகன் தன்னை
வெளிப்படுத்தயிதுபோல் விசுவாசம், அன்பு, தாழ்ச்சி வழியாக
எம்மை வெளிப்படுத்தி உமது அன்பார்ந்த பிள்ளைகளாக வாழும்
வரமருள் வேண்டுமெனனு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எம்மைப் படைத்துக் காத்து வழி நடத்திவரும் அன்பு இறைவா.
நாட்டை ஆள்வோரை உம் திருக்கரங்களில் ஒப்புக்
கொடுக்கின்றோம். நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும்
மதநல்லிணகத்திற்கும் பங்கம் விளைவிக்காத சட்ட திட்டங்களை
இயற்றி, வேற்றுமையில் ஒற்றுமை என்ற உலகமே வியந்து போற்றும்
எம் பாரத நாட்டின் பண்பாட்டினை கட்டிக்காத்திடும் நல்ல
தலைவர்களாய் விளங்கிட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
4. அன்பும் கருணையும் நிறைந்த இறைவா. எங்கள்
குடும்பங்களின் தேவைகளை நீர் அறிவீர். எதெது எங்களுக்குத்
தேவையோ, எவையெல்லாம் எங்களுக்கு அவசியமோ அவற்றையெல்லாம்
எங்களுக்குத் தந்தருளும். எங்கள் குடும்பங்களில் அன்பும்,
பண்பும் மலர்ந்த மணம்வீசுவும், ஒருவரையொருவர் புரிந்து
வாழவும் தேவையான ஞானத்தையும், விவேகத்தையும் எம்மீது
பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
மறையுரை சிந்தனை
இறை இயேசுகிறிஸ்துவில் பிரியமானவர்களே!
இரவு என்ற வார்த்தையை கேட்டவுடனே நமக்கு பல வகையான எண்ண
அலைகள் ஓடும். இரவு நேரத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட
அனுபவங்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம் அல்லது
துன்பமாகவும் இருக்கலாம். அது நம் ஒவ்வொருவரின் நினைவுகளை
அல்லது அனுபவங்களைப் பொறுத்தது.
விவிலியத்திலும் இரவுக்கு என தனி இடமுண்டு. அதிலும்
குறிப்பாக, திருப்பாடல்களில் இரவு நேரம் முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது. தி.பா 1:2-ல் யார் ஒருவர் இரவும் பகலும்
திருச்சட்டத்தை சிந்திக்கின்றாரோ அவர் பேறுபெற்றவராக
பார்க்கப்படுகின்றனர். தி.பா 6:7ல் பார்க்கின்றோம்.
எப்பொழுது ஒரு மனிதன் துன்பங்களால் துளைக்கப்படுகின்றானோ
அப்போது அவன் ஒவ்வொரு இரவும் கண்ணீரால் தன் படுக்கை
மிதக்கின்றது என்று செபத்தில் இறைவனோடு பேசுகின்றான்.
தி.பா.16:7ல் பார்க்கின்றோம். எனக்கு அறிவுரை வழங்கும்
ஆண்டவரைப் போற்றுகின்றேன். இரவில் கூட என் மனச்சான்று
என்னை எச்சரிக்கின்றது என்கின்றனர். தி.பா. 17:3ல்
மாசற்றவரினின் மனச்சான்று கூறுகிறது.
என் உள்ளத்தை ஆய்ந்தறியும், இரவு நேரத்தில் எனைச்
சந்தித்திடும், என்னைப் புடமிட்டுப் பார்த்திடும் எனவும்
தி.பா 22:8ல் துயரத்தில் இருக்கக்கூடியவர் ஆண்டவரிடம் என்
கடவுளே நான் பகலில் மன்றாடுகின்றேன், நீர் பதில்
அளிப்பதில்லை. இரவில் மன்றாடுகின்றேன் எனக்கு அமைதி
கிடைப்பதில்லை என்கின்றார். தி.பா. 14:16ல் ஆசாபு
பாடுகிறார். பகலும் உமதே, இரவும் உமதே என. இதிலிருந்து
திருப்பாடல் ஆசிரியர் இரவுக்கு தரும் முக்கியத்துவம்
தெரிகிறது. தொடக்கநூலிலும் கூட கடவுள் ஒளியைப்படைத்து
அவ்வொளி நல்லது எனக் காண்கிறார். இருளுக்கு இரவு எனப்
பெயரிடுகிறார். ஒளியும் இருளும் இணைந்து ஒரு நாளாக
மாறுகிறது. இரவைப் படைக்கின்ற இறைவன் இரவின் தெய்வமாகவே
நாம் பார்ப்பதுதான் சாலச்சிறந்தது.
பலநேரங்களில் இரவு கெட்டது என நாம்
தீர்மானித்துவிடுகிறோம். இரவை ஆபத்தான தருணமாக
பார்க்கின்றோம். திருப்பாடல் ஆசிரியர் தி.பா: 23:4ல்
23:4ல் சாவின் இருள் சூழ்ந்தப் பள்ளத்தாக்கில் நான் நடக்க
நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும்
அஞ்சிடேன் என்கிறார். இரவு என்பது இறைவனோடு தொடர்புடையது.
தொடக்கநூல் 22:17ல் கடவுள் ஆபிரகாமை நோக்கி கூறுகின்றார்.
உன் வழிமரபை இரவில் இருக்கும் விண்மீன்களைப்போல் பலுகச்
செய்வேன் என சத்தியவாக்கு தருகின்றார்.
தொடக்க நூல் 28: 10ல் இரவை கழிக்க கல்லைத் தலையணையாக
வைத்து உறங்கும்போது யாக்கோபு கனவு காண்கிறார். இறைவனின்
சத்திய வாக்கை பெறுகின்றார். அந்த இரவுதான் யாக்கோபின்
நம்பிக்கை நிறைந்த இரவாக மாறிப்போகிறது. தொடக்கநூல்
32:27ல் யாக்கோபு இஸ்ரயேல் எனப் பெயர் பெறுவதும் இரவிலே.
2சாமுவேல் 7:2ல் பார்க்கின்றோம். தாவீது கடவுளுக்கு ஆலயம்
கட்ட விரும்பும் போது, ஆண்டவரின் வார்த்தை
நாத்தானுக்கு அருளப்படுகிறது அதுவும் இரவில் தான்.
இதுபோல இரவு நேரமானது திருவிவிலியத்தில் மிகமிக முக்கிய
பங்காற்றக்கூடிய ஒரு கால நேரம். இன்று இறைவனால் நமக்கு
அருளப்பட்ட நற்செய்தியும் இரவில் விழித்து காத்துக்
கொண்டிருக்கும் பணியாளனைப்போல காத்திருக்க
அழைப்புவிடுக்கின்றது. இங்கு விழித்திருப்பது என்பது
அறிவுதெளிவுடன் நம்முடைய விழிப்புணர்வை பயன்படுத்த
எப்போதும் ஆயத்தமாக இருக்க அழைப்புவிடுப்பதற்கு ஒப்பாகும்.
இதைத்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடமும்
எதிர்பார்க்கின்றார். இயேசு தன்னால் மட்டும் இறைப்பணியை
செய்ய வேண்டும் என்று அல்லாமல், தன்னுடைய சீடர்களும் ம்
இறைப்பணி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார். யாரெல்லாம்
அப்பணியை சிறப்பாக செய்தார்களோ அவர்களே இயேசுவின்
பிம்பங்கங்களாக சமுதாயத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சுயநலத்தோடு அல்லாமல் பொதுநலத்தோடு அனைவரும் வாழ வேண்டும்
என்று எதிர்பார்க்கின்றார்.
இன்றைய சமுதாயத்தை சற்று அலசிப்பார்ப்போம். இறைவனை
நினைத்து தியானிக்கக்கூடிய இரவாக இரவை பயன்படுத்தலாம்.
ஆனால் பல நேரங்களில் சமூக அநீதிகள் அரங்கேறும் நேரமாக இரவு
நேரம் மாறிப்போகிறது. இறைவனால் படைக்கப்பட்ட இரவு நம்மை
நாமே அன்றாடம் உழைக்கும் உழைப்புக்காக ஒய்வெடுத்து
உடலுக்கு நல்ல புத்துணர்வு தர அடுத்தநாள் மீண்டும்
உழைக்கப்புறப்படவே தரப்பட்டிருக்கிறது. நல்ல பணியாளர்களாக
அவரின் வருகைக்காக காத்திருக்க சொன்ன இறைவனுக்கு நாம்
அனுதினமும் நன்றியுள்ளவர்களாக வாழ அவர் நமக்கு கொடுத்த
அந்த அற்புத இரவை நமது ஆற்றலை இரட்டிப்பாக்க
பயன்படுத்துவோம். இன்றைய முதல்வாசகத்தில் இறைவனால்
முன்னறிவிக்கப்பட்ட அந்த இரவை மூதாதையர்கள் அறிந்து
கொள்வதையும் இரண்டாம் வாசகத்தில் இரவின் விண்மீன்கள் போல
ஆபிரகாமின் தலைமுறைகள் செழித்தோங்கும் என்னும் நம்பிக்கை
நிறைந்த வார்த்தைகள் போல் நாமும் இரவை நம்மை பிறரை
வளர்த்தெடுக்கும் நல்ல நேரமாக மாற்றிட வரம் வேண்டுவோம்.
-ஆமென்
மறையுரைச்சிந்தனை -
அருள்பணி ஏசு கருணாநிதி
ஆண்டின் பொதுக்காலம்
19ஆம் ஞாயிறு - 07 ஆகஸ்ட் 2022
I. சாலமோனின் ஞானம் 18:6-9
II. எபிரேயர் 11:1-2, 8-12
III. லூக்கா 12:32-48
நம்பிக்கையின் பொருள்
ஒவ்வொரு நாள் காலையில் அவன் அவளுக்கு பல் துலக்கிவிடுவான்.
அவளைக் குளிக்க வைப்பான். அவளுக்கு உணவு ஊட்டுவான். ஒவ்வொரு
நாள் மாலையில் அவன் அவள் அருகில் அமர்வான். அவளின் கரங்களைத்
தன் கரங்களுக்குள் பொத்திக்கொண்டு அவளை வருடிக்கொண்டே அவளுக்கு
நிறைய கதைகள் சொல்வான். தன் வலியையும் பொருட்படுத்தாமல்
அவள் புன்னகை புரிவாள். அவளுக்கு விருப்பமான பாடல்களை அவன்
பாடிக் காட்டுவான். அவளின் அழகை வர்ணனை செய்வான். அவளைப்
பார்த்துக்கொள்வதற்காக அவன் வேலைக்கு ஒரு இளவலை அமர்த்தியிருந்தாலும்
தான் மட்டுமே செய்யக்கூடியவற்றைத் தன் மனைவிக்கு அவன்
செய்தான். சில ஆண்டுகளுக்கு முன்தான் அவர்களுக்குத் அருட்சாதனம்
நடந்தது. அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் அவனுடைய மனைவி
பக்கவாதத்திற்கு ஆளானாள். இன்னொரு அருட்சாதனம்
செய்துகொள்ளுமாறு எல்லாரும் வற்புறுத்தியும் ஏன் நீ மறுமணம்
செய்துகொள்ளவில்லை என்று அவனிடம் கேட்டபோது அவன் சொன்னான்:
'எங்களுடைய திருமண நாளில் நான் என் மனைவியின் கண்களை உற்றுப்பார்த்து,
வாழ்நாள் முழுவதும் அவளை அன்பு செய்வதாகவும், அவளை மதிப்பதாகவும்
வாக்குறுதி தந்தேன். நான் சொன்ன அனைத்து வார்த்தைகளையும்
நான் பொருளோடு சொன்னேன். இன்று அதை நிறைவேற்றுகிறேன்.'
அவனது அன்பும் நம்பகத்தன்மையும் - இன்பத்தில் மட்டுமல்ல,
துன்பத்திலும், எல்லா நேரத்திலும் அவன் காட்டிய அன்பும் நம்பகத்தன்மையும்
- என்னை மெய்சிலிர்க்க வைத்தன.
நிற்க: ஆப்பிரிக்க வலைப்பூ ஒன்றில் நான் அண்மையில் படித்த
பதிவு இது.
நம்பிக்கை கொண்ட நபர்தான் நம்பகத்தன்மை உடைய நபர்.
'சுட்டெரிக்கும் வெயில் சிறுத்தையின் நிறத்தை மாற்றுவதில்லை'
என்பது ஆப்பிரிக்க பழமொழி. சூழல்கள் மாறினாலும் நம்பிக்கை
தன் இயல்பிலிருந்து மாறாது. நம்முடைய கிறிஸ்தவ மரபில் நம்பிக்கை
என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறோம். இறையியல் மதிப்பீடுகளில்
முதன்மையானதாக நம்பிக்கையைப் போற்றுகிறோம். விவிலியத்திலும்
இந்த வார்த்தை அடிக்கடி காணக்கிடக்கிறது. இருந்தாலும் இதன்
பொருள் நமக்கு மறைபொருளாகவே இருக்கிறது. இம்மறைபொருளைத்
தெளிபொருள் ஆக்குகின்றது இன்றைய இறைவாக்கு வழிபாடு. நம்பிக்கை
என்றால் உண்மையில் என்ன என்பதை இன்றைய வாசகங்கள் எடுத்தியம்புகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். சாஞா 18:6-9), சாலமோனின்
ஞானநூல் ஆசிரியர், இஸ்ரயேல் மக்கள் விடுதலைப் பயண நிகழ்வில்
எகிப்திலிருந்து வெளியேறிய இரவை நினைத்துப் பார்க்கிறார்.
'எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத்
தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு
எங்கள் மூதாதையருக்கு முன்னறிவிக்கப்பட்டது' என்கிறார் ஆசிரியர்.
கடவுளின் வாக்குறுதி உண்மையாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்
என அழுத்தம் கொடுக்கிறார் ஆசிரியர். இவ்வார்த்தைகள் உண்மையான
நம்பிக்கையின் முக்கியமான கூறு ஒன்றை வெளிப்படுத்துகின்றன.
எகிப்தை விட்டு வெளியேறியது இஸ்ரயேல் மக்கள் மேற்கொண்ட
பெரிய ஆபத்தான காரியம். எகிப்தியர்கள் மிகவும் பலசாலிகள்.
எந்தவொரு காரணத்திற்காகவும் அடிமைகள் தங்கள் நாட்டை நீங்கக்
கூடாது என்று எண்ணியவர்கள். கடவுளின் திட்டம் ஒருவேளை
தோற்றுப் போனால் அவர்கள் மிகப் பெரிய இழப்பை சந்திக்கவேண்டியிருந்திருக்கும்.
ஆகவே, கடவுளின் வாக்குறுதியின் மேல் அல்லது வாக்குப்பிறழாமையின்மேல்
நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து தங்களுடைய நம்பிக்கையை
வெளிப்படுத்துகின்றனர். எந்த அளவிற்கு என்றால், எகிப்தில்
தாங்கள் கொண்டிருந்த பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறி,
தாங்கள் முன்பின் தெரியாத ஒரு கடவுளைப் பின்பற்றும் துணிச்சல்
கொள்கின்றனர்.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 11:1-2,8-19) நேரடியாக
நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறது. 'நம்பிக்கை என்பது நாம்
எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப்
புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை' என்று நம்பிக்கையை வரையறை
செய்கிறார் ஆசிரியர். இவ்வரையறையைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை
என்பது காணாத ஒன்று நடந்தேறும் என்னும் உறுதி. இந்த வரையறைக்கு
இலக்கணமாக ஆபேல் தொடங்கி மக்கபேயர் காலத்து மறைசாட்சியர்
வரை முக்கியமான கதைமாந்தர்களை முன்வைக்கிறார். இவர்களில்
முக்கியமான இடம் வகிப்பவர் ஆபிரகாம். கடவுள் ஆபிரகாமுக்கு
ஒரு நாட்டை வாக்களிக்கின்றார். இந்த வாக்குறுதியின்மேல் நம்பிக்கை
கொள்கிற ஆபிரகாம் தான் எங்கு செல்கிறோம் என்று அறியாமலேயே
புறப்பட்டுச் செல்கின்றார் - இஸ்ரயேல் மக்கள் போல. கானான்
நாட்டில் கூடாரம் ஒன்றில் வசிக்கும் அவர் அந்த இடம் முழுவதும்
தன்னுடைய வழிமரபினருக்கு உரிமைச்சொத்தாகும் என்று எதிர்நோக்குகின்றார்.
இந்த நம்பிக்கையை ஆசிரியர் வரப்போகும் எருசலேமிற்கான முன்னறிவிப்பாகப்
பார்க்கின்றார். மேலும், குழந்தைப்பேறு இல்லாத ஆபிரகாம்-சாரா
தம்பதியினர் வானத்து நட்சத்திரங்களை விட வழிமரபினர் பெறுவதாக
கடவுள் வாக்களித்தார். இந்த வாக்குறுதி ஒருநாள் நிறைவேறும்
என்று உறுதியாக இருந்தார். கடவுளின் வாக்குறுதியும்
நிறைவேறியது.
இருந்தாலும், நம்பிக்கைக்கான இறுதிச் சோதனையும் வந்தது. தன்
ஒரே மகனைப் பலியிடுமாறு கடவுள் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார்.
இது கீழ்ப்படிதலுக்கான சோதனை அல்ல. மாறாக, நம்பிக்கைக்கான
சோதனையே. கடவுள் தந்த வாக்குறுதியான தன் மகனைக் கடவுளுக்கே
கொடுக்க முன்வருகிறார் ஆபிரகாம். தான் வாக்களித்த மகனையே
கடவுள் திரும்பப் பெற்றுக்கொள்வாரா? கடவுளின் கட்டளையை ஆபிரகாம்
புரிந்துகொள்ளவில்லை. இருந்தாலும், தன் நம்பிக்கையில் உறுதியாக
இருந்தவராய் கடவுளின் கட்டளையை நிறைவேற்றுகிறார். ஆபிரகாமின்
மனவுறுதி மற்றும் நம்பிக்கையால் அவருடைய மகன் ஈசாக்கு அவருக்கே
தரப்படுகின்றார். கடவுள் தன் வாக்குறுதியைக்
காப்பாற்றுகின்றார். தங்களுடைய நம்பிக்கைக்காகத் துன்பங்கள்
அனுபவித்த மக்களுக்கு அறிவுறுத்துகின்ற ஆசிரியர் ஆபிரகாமை
எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். நிலைவாழ்வு என்னும் கடவுளின்
வாக்குறுதியின்மேல் நம்பிக்கை கொள்வோர் உயிர்த்தெழுவர் என்றும்,
இந்த நம்பிக்கையே இவ்வுலக வாழ்வை அவர்கள் வாழும் வழியை
நிர்ணயிக்கிறது என்றும் அறிவுறுத்துகிறார் ஆசிரியர்.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 12:32-48) நம்பிக்கையின்
பொருளை இன்னும் நீட்டுகிறது. தன்னுடைய சீடர்களை, 'சிறு மந்தை'
என அழைக்கிற இயேசு, 'அஞ்ச வேண்டாம்' என அறிவுறுத்துகின்றார்.
பெரிய ஆபத்தான உலகோடு ஒப்பிடும்போது சீடர்களின் எண்ணிக்கை
மிகச் சிறியதாக இருந்தது. ஓநாய்களிடையே ஆடுகள் போல அவர்கள்
இருந்தார்கள் (காண். லூக் 10:3). இருந்தாலும், தந்தை அவர்களுக்கு
ஆட்சியைத் தரத் திருவுளம் கொண்டுள்ளார் என்கிறார் இயேசு.
சிறியவர்களாக, சாதாரணமானவர்களாக, துன்புறுவோர்களாக இருந்தாலும்
அவர்கள் இறுதியில் நிலைவாழ்வைக் கண்டுகொள்கின்றனர். கடவுளின்
இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டிய சீடர்கள் இந்த
உறுதிக்கேற்ப தங்களுடைய வாழ்வை நெறிப்படுத்திக்கொள்ள
வேண்டும்.
இந்த நம்பிக்கையின் முதல் வெளிப்பாடு உலகச் செல்வங்களைப்
பற்றிய அவர்களுடைய பார்வையில் தொடங்குகிறது. ஒவ்வொரு மனிதருக்கு
முன்னும் ஒரு தெரிவு இருக்கிறது: செல்வத்தை நம்புதல் அல்லது
இறைவனை நம்புதல். செல்வத்தின்மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கை
அவரை இவ்வுலகத்தோடு கட்டிவிடுகிறது. இது ஒரு மடமையான
தெரிவு. ஏனெனில், இந்த உலகம் கடந்துபோகக் கூடியது. கடவுள்மேல்
ஒருவர் கொள்ளும் நம்பிக்கை நிலைவாழ்வைத் தருவதால் அது விவேகமான
தெரிவு. கடவுள் மட்டுமே நம்பிக்கைக்குரியவர். ஏனெனில் அவரே
உண்மையா நிலைவாழ்வை நமக்குக் கொடுக்கிறார். இந்த வாழ்வையே
சீடர்கள் புதையலாகத் தேட வேண்டும்.
நம்பிக்கையின் இரண்டாம் வெளிப்பாடு விழித்திருத்தல். தலைவரின்
வருகைக்காக பணியாளர் விழித்திருக்கிறார். வரப்போகும் தலைவர்
இயேசுவே. இத்தகைய விழித்திருத்தல் ஒருவரின் மனத்தில் இருக்கும்
கவலை, கலக்கம் அனைத்தையும் அகற்றிவிடுகிறது. மேலும், சீடர்களின்
உள்ளத்தில் இருக்கும் கவனச்சிதறல்களையும் இது அகற்றுகிறது.
நம்பிக்கையின் இறுதி வெளிப்பாடு பணிவிடை செய்தல். இரண்டு
வகை வீட்டுப் பொறுப்பாளர்களை இயேசு எடுத்துக்காட்டாக
முன்வைக்கின்றார். முதல் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரியவராய்
இருக்கிறார். அதற்கேற்ற பரிசைப் பெறுகிறார். மற்றவர் தன்
தலைவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ணித் தன் மனம் போலச்
செயலாற்றுகிறார். தன்னுடைய செல்வம் மற்றும் இன்பத்தால் ஈர்க்கப்பெற்ற
இப்பொறுப்பாளர் பணிவிடை செய்ய மறுத்ததால் அனைத்தையும் இழக்கிறார்.
உண்மையான நம்பிக்கை என்பது இயேசுவுக்காக காத்திருந்து
விழித்திருப்பதிலும், பணிவிடை செய்வதிலும் அடங்கியுள்ளது
எனக் கற்பிக்கிறார் லூக்கா. இந்த நம்பிக்கை நம்பிக்கையாளர்களின்
பார்வையை இந்த உலகத்திலிருந்து அப்புறப்படுத்தாது. மாறாக,
இந்த உலகில் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான இலக்கையும்,
நோக்கையும் தரும். உண்மையான நம்பிக்கை எதிர்நோக்குவதில் உறுதியாக
இருந்தாலும், இன்றைய எதார்த்தத்தையும் ஏற்றுக்கொண்டு, இன்றைய
வாழ்வை நன்றாக வாழத் தூண்டும். ஆக, நம்பிக்கை என்பது
வெறும் சில கோட்பாடுகளுக்கு ஆம் என்று சொல்வதல்ல என்றும்,
மாறாக, அன்றாட வாழ்வை இனிமையாகவும் நிறைவாகவும் வாழத்
தூண்டும் ஒரு மதிப்பீடு. இஸ்ரயேல் மக்கள் கடவுளின்
வாக்குறுதியை நம்பி எகிப்தை விட்டுப் புறப்பட்டனர். விடுதலை
பெற்ற மக்களாக மாறினார்கள். ஆபிரகாம் கடவுளை நம்பினார். நம்பிக்கையின்
குலமுதுவராக மாறினார். நிலைவாழ்வில் நம்பிக்கை கொள்ளத் தன்
சீடர்களை அழைக்கும் இயேசு, அதை விழித்திருப்பதிலும் பணிவிடை
செய்வதிலும் செலவழிக்கச் சொல்கின்றார். இவ்வனைத்துக் கதைமாந்தர்களையும்
இணைக்கும் திருப்பாடல் ஆசிரியர் (33), 'நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்.
அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள்
நம்பியிருப்பதால் உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!' என்று
பாடுகிறார்.
நம்பிக்கையின் பொருளை நாம் எப்படி இன்று வாழ்வாக்குவது?
இன்று நாம் பயன்படுத்தும் சொற்கள், பொருள்கள், சந்திக்கும்
நபர்கள் என அனைத்தும், அனைவரும் நம்பகத்தன்மையை இழந்துகொண்டே
இருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும்
ஏற்றவாறு இருப்பதே மதிப்பீடாகப் போற்றப்படுகிறது. எல்லா
இடத்திற்கும் நேரத்திற்கும் நபருக்கும் பொருத்தமானவை எவையும்
இல்லை என்ற நிலை உருவாகிக்கொண்டே இருக்கின்றது. 'எனக்கு சரி
என்றால் அது எனக்குச் சரி. உனக்குச் சரி என்றால் உனக்குச்
சரி' என்று கேட்கும் மனப்பாங்கு வந்துவிட்டது. இன்றைய ஆபிரகாமிடம்
கடவுள் மகனைப் பலியிடுமாறு கேட்டால், 'நீயே கொடுப்பாய்.
நீயே எடுப்பாயா? கொடுப்பதும் நானே. எடுப்பதும் நானே.
கொடுக்க முடியாது. உனக்குக் கொடுத்துவிட்டால் நான் என்ன
செய்வேன்' என்று சொல்லி வழிநடப்பார் இவர். காண்பவை பற்றியே
நமக்கு இன்று ஒத்த கருத்து இல்லாதபோது காணாதவற்றின்மேல் எப்படி
நம்பிக்கை வரும்? இன்றைய வாழ்வே கேள்விக்குறியாகி
நிற்கும்போது நிலைவாழ்வின்மேல் மனம் எப்படி உறுதி
கொள்ளும்?
நம்பகத்தன்மை அல்லது நம்பிக்கை வளர இறைவன் அல்லது மாறாத ஒன்று
அடித்தளமாக அமைய வேண்டும். ஆகையால்தான், அருட்சாதனம் மற்றும்
ஞானஸ்நானம் அருளடையாளக் கொண்டாட்டங்களில் இறைவன்
முன்னிலையில் இனியவர்கள் வாக்குறுதி கொடுக்கின்றனர். நம்பிக்கையைத்
தளராமல் வைத்திருப்பவர்கள் இறைவனை உறுதியாகப் பற்றிக்கொள்வார்கள்.
ஆக, என்னுடைய முதல் பாடம் இறைவனை இறுகப் பற்றிக்கொள்வது.
இரண்டாவதாக, விழித்திருத்தல்.
விழித்திருத்தல் என்பது இன்றைய பொழுதை முழுமையாக வாழ்வது.
நம்பிக்கை கொண்ட ஒருவரே இன்றைய பொழுதை இனிதே வாழ முடியும்.
நம்பிக்கை குறையும்போது எதிர்காலம் பற்றிய அச்சமும், கடந்த
காலம் பற்றிய குற்றவுணர்வும் வந்துவிடுகிறது. நாம் நம்முடைய
ஒவ்வொரு பொழுதையும் இனிமையாக வாழ்ந்தால் தொடர்ந்து
முன்னேறிச் செல்லலாம். மாறாக, கோபம், சண்டை, கசப்புணர்வு
என்று நிமிடங்களை நகர்த்தினால், அவற்றைச் சரி செய்ய
மீண்டும் நம் நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலை வரும்.
செய்வதை திருந்தச் செய்துவிட்டால், அதை திரும்பச் செய்யத்
தேவையில்லைதானே. இது இரண்டாவது பாடம்.
மூன்றாவதாக, பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தல்.
நான் ஒரு நம்பிக்கைக்கு உரிய அறிவாளியான வீட்டுப்பொறுப்பாளர்
என்ற எண்ணம் எனக்கு வேண்டும். நம்பிக்கைக்குரிய நிலையோடு
அறிவும் மிக அவசியம். அறிவு இல்லாத நம்பிக்கை மூடநம்பிக்கையாகிவிடும்.
நம்பிக்கை இல்லாத அறிவு வெறும் பிதற்றலாகிவிடும். வாழ்வில்
வெற்றி கண்டவர்கள், இவ்வுலகை முன்னேற்றியவர்கள் அனைவரும்
பொறுப்புணர்வோடு பணிவிடை செய்தனர். அதற்குக் காரணம் அவர்களின்
கண்களில் ஒளிர்ந்த நம்பிக்கையே. இறுதியாக, நம்பிக்கையின்
பொருள் உணர்ந்த நாம் நம்பிக்கைப் பொருளாய் மாறும்போது
வாழ்வும் நிலைவாழ்வும் நமதாகும் - இன்றும் என்றும்!
தூர்ஸ் நகரத் தூய மார்டின் இளைஞனாக இருந்தபோது, ஒருநாள் ஆல்ப்ஸ் மலையடிவாரம்
வழியாகத் தனியாக நடந்துசென்றுகொண்ருந்தார். வழக்கமாக அந்த வழியாக
யாரும் நடந்துசெல்வது கிடையாது. வழிப்பறிக் கொள்ளையர்கட்கு அஞ்சி,
வேறொரு வழியாகச் சென்றுவிடுவர். ஆனால், மார்டினோ யார்க்கும் அஞ்சாமல்
அவ்வழியாக நடந்துசென்றுகொண்டிருந்தார். போகிற வழியில் ஒரு திருப்பம்
வந்தது. அந்தத் திருப்பத்தில் அவர் திரும்பியபோது, புதரில் மறைந்திருந்த
வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். பின்னர்
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு திருடன் மார்டினின் கழுத்தில் கத்தியை
வைத்து, அவரைக் கொல்வதற்கு முயன்றான். அவரோ, தன்னுடைய கழுத்தில் கத்தி
இருக்கின்றதே... இன்னும் சிறிதுநேரத்தில் தன்னுடைய உயிர் போகப்
போகிறதே... என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், மிகவும் அமைதியாகவும்
அதே நேரத்தில் துணிவோடும் இருந்தார். இதைப் பார்த்த அந்த வழிப்பறிக்
கூட்டத்தில் இருந்த இன்னொரு திருடன் மார்டினிடம் வந்து, "உன்னுடைய
கழுத்தில் கத்தி இருக்கின்றது... இன்னும் சிறிதுநேரத்தில் உன்னுடைய
உயிர் உன்னைவிட்டுப் போகப்போகின்றது... அப்படியிருக்கையில் எப்படி
உன்னால் இவ்வளவு அமைதியாகவும் அச்சமின்றியும் இருக்க முடிகின்றது"
என்றான். மார்டின் தன்னுடைய கண்களில் ஒளிபொங்க அவனிடம் சொன்னார்:
"கடவுளின் மகனாகிய என்னை அவர், எல்லாச் சூழ்நிலையிலும் என்னோடு இருந்து
பாதுகாத்து வருகின்றார். அப்படியிருக்கும்போது நான் எதற்கு
யார்க்கும் அஞ்சவேண்டும்." மார்டின் இவ்வளவு துணிவோடு பேசியதைப்
பார்த்துவிட்டு அந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரை ஒன்றும் செய்யாமல்
விட்டுவிட்டனர்.
நாம் அனைவரும் கடவுளின் மக்களாக இருக்கின்றபோது, அவர் ஒரு தந்தையைப்
போன்று நம்மோடு இருக்கின்றபோது, நாம் எதற்கு அஞ்சவேண்டும் என்ற உண்மையை
எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின்
பத்தொன்பதாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு, இன்றைய நாள்
நற்செய்தி வாசகம் 'சிறு மந்தையாகிய நாம் யார்க்கும் அஞ்சவேண்டாம்'
என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப்
பார்த்து நிறைவுசெய்வோம்.
'சிறுமந்தை' எனப்படுவோர் யார்?
லூக்கா எழுதிய நற்செய்தி நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி
வாசகத்தில், இயேசு, "சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்" என்று
கூறுகின்றார். இயேசு இங்கு குறிப்பிடுகின்ற 'சிறுமந்தை' யார்
யாரையெல்லாம் உள்ளடக்கி இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்பது
மிகவும் இன்றியமையாதது.
இயேசு செய்த அருமடையாளங்களையும் வல்ல செயல்களையும் பார்த்துவிட்டு,
ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள். அவர்களெல்லாம்
இயேசு சொல்கின்ற 'சிறுமந்தை'யில் அடங்கிவிடுவார்களா? என்றால் நிச்சயமாக
இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், இயேசுவைப் பின்பற்றிய பலர்,
வயிறார உணவு கிடைக்கும் (யோவா 6: 26) என்றும் தங்களுடைய உடல் உள்ளத்
தேவைகள் நிறைவுபெறும் (லூக் 9: 11) என்றும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்,
தேடினார்கள். இவர்களெல்லாம் இயேசு சொல்கின்ற 'சிறுமந்தையில்' அடங்குவதில்லை.
அப்படியானால் யார் இயேசு சொல்கின்ற சிறுமந்தையில் அடங்குவார்கள் எனில்,
அவருடைய குரலுக்குச் செவிமடுக்கின்ற அவருடைய உண்மையான சீடர்கள் அல்லது
ஆடுகள்... (யோவா 10: 27), அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும்
அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுகின்றவர்கள் (மத் 6: 33). இவர்களே
'சிறுமந்தையில்' இடம்பெறுவார்கள். நாம் இயேசுவின் சிறுமந்தையில்
இடம்பெற வேண்டும் என்றால், அவருடைய குரலுக்குச் செவிமடுத்து, அவர்க்கு
ஏற்புடையவற்றை நாடவேண்டும். அது மிகவும் முக்கியமானது.
சிறுமந்தையாக இருக்கின்றோம் என்பதற்காக அஞ்சத் தேவையில்லை
சிறுமந்தை எனப்படுவோர் யாரெனத் தெரிந்துகொண்ட நாம், 'அஞ்சவேண்டாம்'
என்று இயேசு சொல்வதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். இயேசுவைப்
பலர் பின்தொடர்ந்தாலும் அவருடைய உண்மையான சீடர்கள் குறைவுதான்!.
அவர்கள் சிறுமந்தைதான்! எனவே அவர்கள், 'ஐயோ! நாங்கள் சிறுமந்தையாக
இருக்கின்றோமே... எங்கட்கு ஏதாவது ஆகிவிடுமோ...' என்று நினைத்து அஞ்சி
வாழ்ந்துகொண்டிருக்காமல், துணிவோடு இருக்கவேண்டும் என்பதற்குத்தான்
இயேசு 'அஞ்சவேண்டாம்' என்று சொல்கின்றார்.
இயேசு இங்கு சொல்வதுபோல் 'சிறுமந்தை' ஏன் அஞ்சவேண்டாம் என்பதற்கான
காரணத்தை இப்பொழுது தெரிந்துகொள்வோம். முதலில், அவர்கள் சிறுமந்தையைச்
சார்ந்தவர்கள் - கடவுளின் பார்வையில் விலையேறப் பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாக
(எசாயா 43: 4) இருக்கின்றார்கள். சாதாரண சிட்டுக்குருவிகளை அற்புதமாகக்
காத்துப் பராமரிக்கின்ற கடவுள், தன்னுடைய பார்வையில் விலையேறப்
பெற்றவர்களாக, மதிப்புமிக்கவர்களாகத் திகழ்பவர்களை எந்தளவுக்குப்
பராமரிப்பார் என்பதால்தான், இயேசு அவர்களைப் பார்த்து அஞ்சவேண்டாம்
என்று சொல்கின்றார். அடுத்ததாக, சிறுமந்தையில் இருப்பவர்கள் அவருடைய
மக்கள் (யோவா 1: 12). அவருடைய மக்களாக இருக்கின்றபோது எதற்கு
யார்க்கும் அஞ்சவேண்டும் என்பதால்தான் இயேசு 'அஞ்சவேண்டாம்' என்று
சொல்கின்றார். இதைவிடவும் இன்னொரு முக்கியமான ஒரு விடயம் இருக்கின்றது.
அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
சிறுமந்தையைத் தன் ஆட்சிக்கு உட்படுத்தும் இறைவன்
இயேசு தன் சீடரிடம், "சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்" என்று
சொன்னதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தொடர்ந்து அவர் அவர்களிடம்,
"உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம்
கொண்டுள்ளார்" என்கின்றார். எத்துணை இனிமையான, நம்பிக்கை நிறைந்த
வார்த்தைகள் இவை!. யார் யாரெல்லாம் தந்தையாம் கடவுளின் குரலைக்
கேட்டு, அவர்க்கு ஏற்புடையவற்றை நாடி, அதனால் அவருடைய 'சிறு மந்தையாகின்றார்களோ',
அவர்களை அவர் தன் ஆட்சிக்கு உட்படுத்துவது எவ்வளவு பெரிய பேறு. அத்தகைய
பேறு சிறுமந்தைக்குக் கிடைக்க இருப்பதால், இயேசு சிறுமந்தையாகிய
நீங்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கின்றார்.
இங்கு நாம் இன்னொரு விடயத்தையும் நம்முடைய கவனத்தில் இருத்துவது நல்லது.
அது என்னவெனில், சிறுமந்தையை கடவுள் இவ்வுலக ஆட்சிக்கு உட்படுத்தத்
திருவுளம் கொண்டுள்ளார் என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, உண்மையும்
நீதியும் அன்பும் கொண்ட தம் ஆட்சிக்கு (யோவா 18: 36, 37) உட்படுத்தத்
திருவுளம் கொண்டுள்ளதாகச் சொல்கின்றார். ஆகையால், இப்படியோர் ஆட்சிக்குத்
தம் சிறுமந்தையை கடவுள் உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார் எனில்
அவர்கள் எதற்கும் யார்க்கும் அஞ்சத் தேவையில்லை என்பதுதான் நாம்
புரிந்துகொள்ளவேண்டிய செய்தியாக இருக்கின்றது.
இன்றைக்குப் பலர் 'நான் சிறியவனாயிற்றே... வறியவனாயிற்றே... எளியவனாயிற்றே...
என்னால் எப்படி இதையெல்லாம் செய்யமுடியும்... என்னால் எப்படி இதையெல்லாம்
சாதிக்க முடியும்' என்று அஞ்சி நடுவதைப் பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட
நிலையில் 'நான் சிறுவனாயிருந்தாலும் கடவுளின் அன்புமகனாக இருக்கின்றேன்'
என்பதை அவர்கள் உணர்ந்து வாழ்ந்தால், எப்படிப்பட்ட சூழ்நிலையையும்
எதிர்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை.
சிந்தனை
'வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும்
ஆண்டவருமான நான் நீ செல்லுமிடமெல்லாம் உன்னோடு இருப்பேன்" (யோசு 1:
9) என்று ஆண்டவர் யோசுவைப் பார்த்துக் கூறுவார். ஆண்டவர்
யோசுவாவிற்குச் சொல்லும் அதே வார்த்தைகளைத் தான் இன்று நமக்கும்
சொல்கின்றார். ஆகையால், ஆண்டவரின் அவ்வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டு,
எதற்கும் அஞ்சாமல் துணிவோடு இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
ஒரு கிராமத்தில் ஒரு நாட்டு
வைத்தியருக்கு மருந்து தயாரிக்கப் பச்சிலை தேவைப்பட்டது.
அந்த இலை இரு கற்பாறையின் இடுக்கில் பாதாளத்தில்
முளைத்திருந்தது. அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாத
நிலை. அந்த நாட்டு வைத்தியர் தனது 5 வயது மகனை அழைத்துக்
கொண்டு மலையின் மீது ஏறினார். தான் கொண்டு வந்த கயிற்றால்
மகனின் இடுப்பில் கட்டி அவனை கீழே இறக்கினார். அந்த மகன்
இலைகளைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம்
திரும்பினான். இதைப் பார்த்த மற்றவர்கள் அந்தச் சிறுவனைப்
பார்த்து உனக்கு பயமே இல்லையா? என்று கேட்டார்கள். அதற்கு
அந்தச் சிறுவன், என் தந்தை என்னைக் கீழே விடமாட்டார் என்ற
நம்பிக்கை இருந்ததால் எனக்கு எந்த பயமோ, அச்சமோ
ஏற்படவில்லை என்றான்.
1. எங்கே நம்பிக்கை உண்டோ. அங்கே அச்சமோ, பயமோ,
அதிர்ச்சியோ, குழப்பமோ இருக்காது.
இன்றைய முதல் வாசகத்திலே கடவுளின் வாக்குறுதிகளின் மீது
நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கடவுளின் முன்னிலையில்
பெருமைப்படுத்தப்படுவார்கள் என்று சாலமோனின் ஞானம்
கூறுகின்றது.
மனித வாழ்வு சிறக்க நம்பிக்கை மிக அவசியம். குழந்தை
பிறக்கும்போது நமக்கு மகன் பிறந்துள்ளான் என்ற
எதிர்பார்ப்போடு மகிழ்ச்சியடைகின்றனர் பெற்றோர்.
படிக்கின்றவர் கடினமாக உழைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்றால்
நமக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையின்
எதிர்பார்ப்பில் உழைக்கின்றனர்.
நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது நம்மீதும், பிறர் மீதும்,
கடவுள் மீதும் நம்பிக்கைக் கொண்டு நம்மைச் சிறப்புடன் வாழ
வைக்கிறது. இந்த நம்பிக்கையைப் பற்றிய அழகானதொரு மறையுரையை
எபிரேயருக்கு எழுதியக் கடிதத்தில் (2வது வாசகம்) அதன்
ஆசிரியர் தருகிறார். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி
இருப்பவை கிடைக்கும் என்ற உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை
பற்றிய ஐயமற்ற நிலை (எபி. 11:1).
பழைய ஏற்பாடு:-
ஆபேலை நேர்மையாளராக மாற்றியதே நம்பிக்கைதான் (எபி. 11:4)
நோவாவை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியதும் நம்பிக்கை தான்
(எபி.11:7)
முதிர்ந்த வயதில் இருந்த ஆபிரகாமுக்கு ஈசாக்கு என்ற மகனைத்
தந்ததும் நம்பிக்கைதான் (எபி. 11:11)
புதிய ஏற்பாட்டிலே
நோயாளிகள் நலம் பெற்றது நம்பிக்கையால்தான் (மத். 9:27- 31)
இறந்தவர்கள் உயிர் பெற்றதும் நம்பிக்கையால்தான் (யோவா.
11:1-44)
இன்றைய காலக் கட்டத்தில் உலக அரங்கில், திருச்சபையின்
அமைப்பு ரீதியைப் பார்க்கின்றபோது நம்பிக்கையற்ற நிலை
பலரது மனதில் எழலாம். ஆனால் இந்த அவல நிலை மாறத்தான்
எங்கிருந்தோ ஒரு ஒளி நம்மீது வீசுகிறது. அந்த ஒளியின்
நடுவே நம்பிக்கை நட்சத்திரமாக இயேசு தோன்றுகிறார். சிறு
மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் பரம தந்தையின்
மீதும் நம்பிக்கை வையுங்கள். என்னிடமும் நம்பிக்கை
கொள்ளுங்கள் (யோவா. 14:1-2). அவர் உங்களுக்கு நீதியின்
ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின் ஆட்சியைத்
திட்டமிட்டிருக்கிறார். (உரோ. 14:17).
உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும் + உங்கள்
எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும் உங்கள் சொற்களில்
நம்பிக்கைக் கற்கண்டாகட்டும் உங்கள் செயல்களில் நம்பிக்கை
நங்கூரமாகட்டும் ❖ உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை
மலரட்டும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆண்டவரே அடைக்கலம் (தி.பா.
9:9) அழிந்துபோகும் இந்த உலக செல்வங்களில் நாம் மதி மயங்கி
வாழாதபடி விழிப்பாய் இருக்கும்படி ஆண்டவர் இன்றைய
நற்செய்தியிலே அறைகூவல் விடுக்கிறார். சோதனைக்கு
உட்படாதபடி விழிப்பாய் இருங்கள்.
ஒரு கிராமத்திலே ஒரு மருத்துவர். அவருக்கு ஒரு பச்சிலை
தேவைப்பட்டது! அந்த இலை இரண்டு மலைகளுக்கு நடுவே,
பாதாளத்தில் ஒரு கற்பாறையின் இடுக்கில் முளைத்திருந்தது!
அந்த இடத்திற்கு யாராலும் செல்ல முடியாது.
அந்த மருத்துவர் தனது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு
மலையின் மீது ஏறினார். தான் கொண்டுசென்ற கயிற்றை மகனின்
இடுப்பில் கட்டி, அவனைக் கீழே இறக்கினார். அந்த மகன்
இலையைப் பறித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தந்தையிடம்
திரும்பினான்.
இதைப் பார்த்தவர்கள் அச்சிறுவனைப் பார்த்து: உனக்குப் பயமே
இல்லையா? என்றார்கள். அதற்கு அந்த மகன், என் தந்தை என்னைக்
கீழே விட்டுவிடமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு
என்றான்.
எங்கே நம்பிக்கை இருக்கின்றதோ அங்கே அச்சமோ, அதிர்ச்சியோ,
நடுக்கமோ, தயக்கமோ, குழப்பமோ இருக்காது!
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் வாக்குறுதிகளின் மீது
நம்பிக்கை வைத்திருந்தவர்கள் கடவுளின் முன்னிலையில்
பெருமைப்படுத்தப்பட்டார்கள் என்று சாலமோனின் ஞானம்
கூறுகின்றது (சாஞா 18:6-9).
நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது நாம்
எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி :
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).
புதிய ஏற்பாட்டிலே,
நோயாளிகள் உடல் நலம்பெற்றது நம்பிக்கையால்தான் (மத்
9:27-31); பாவிகள் பாவமன்னிப்புப் பெற்றது
நம்பிக்கையால்தான் (லூக் 7:36-50];இறந்தவர்கள் உயிர்
பெற்றது நம்பிக்கையால்தான் (யோவா 11:11-44). ஆம்.
நம்பிக்கையால் ஆகாதது ஒன்றுமில்லை!
நாம் எப்படிப்பட்ட நூற்றாண்டிலே
வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? ஒரு கல்லூரி ஆசிரியர்
மாணவர்களைப் பார்த்து: 2050-இல் உலகம் எப்படியிருக்கும்?
என்றார். மாணவன் ஒருவன் எழுந்து, 2050 இல் உலகத்தில் எந்த
மனிதனும் இருக்கமாட்டான். மூன்றாவது உலகப்போரில் எல்லாரும்
இறந்துபோவார்கள் என்றான்.நம்பிக்கை அற்ற நிலை!
இந்த நிலை மாற வழியே இல்லையா? ஏன் இல்லை! எங்கிருந்தோ ஓர்
ஒளி நம்மீது வீசுகின்றது. அந்த ஒளியின் நடுவே நம்பிக்கை
நட்சத்திரமாம் இயேசு தோன்றுகின்றார். அவர் நம்மோடு. இன்றைய
நற்செய்தியின் வழியாகப் பேசுகின்றார்: சிறு மந்தையாகிய
நீங்கள் அஞ்சவேண்டாம்! உங்கள் பரம தந்தையின் மீது
நம்பிக்கை வையுங்கள். அவர் உங்களுக்கு அவரது ஆட்சியை,
நீதியின் ஆட்சியை, அமைதியின் ஆட்சியை, மகிழ்ச்சியின்
ஆட்சியை (உரோ 14:17) வழங்கத் திட்டமிட்டிருக்கின்றார்!
அவருடைய திட்டம் நிறைவேறும் நாள்வரை அவநம்பிக்கைக்கு இடம்
கொடுக்காமல் பொறுமையாகக் காத்திருங்கள். நம்பிக்கையை
ஆடையாக அணிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உணர்வுகளில் நம்பிக்கை எதிரொலிக்கட்டும்!
உங்கள் எண்ணங்களில் நம்பிக்கை நடனமாடட்டும்!
உங்கள் சொற்களில் நம்பிக்கை கற்கண்டாகட்டும்!
உங்கள் செயல்களில் நம்பிக்கை நங்கூரமாகட்டும்!
உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை நடுநாயகமாகட்டும்!
இறையாட்சி உங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
நீங்கள் முன்னேறினால் அனைத்துப் பேறுகளும் உங்களதே!
மேலும் அறிவோம்:
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (குறள் 9).
பொருள்:
இயங்காத உடல், பேசாத வாய், நுகராத மூக்கு, காணாத கண்,
கேளாத செவி ஆகியவற்றால் பயன் எதுவும் விளையாது. அதுபோன்று
எண்ணரிய பண்புகளின் இருப்பிடமாகத் திகழும் இறைவனின்
திருவடியை வணங்கி நடவாதவரின் தலைகளின் நிலையும் பயன்
அற்றவை ஆகும்
ஓர் எருமைமாடு ரோட்டின் நடுவிலே படுத்திருந்தது. ஒருவர்
அதைத் தடியால் அடித்து எழுந்திருக்கும்படி கேட்டதற்கு அந்த
எருமைமாடு கூறியது: "நான் எழுந்திருக்கமாட்டேன்; ஏனென்றால்
நான் நீதிமன்றத்தில் இடைக் காலத்தடை (Stay order)
வாங்கியிருக்கின்றேன்" என்றதாம். இக்காலத்தில்
எருமைமாடுகூட நீதிமன்றத்தில் இடைக் காலத்தடை வாங்க
முடியும்.
நீதிமன்றம் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கும்போது, அவர்
அத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்து இடைக்காலத்தடை வாங்க முடியும். ஆனால் சாவு
வரும்போது அதற்கு இடைக்காலத்தடை' வாங்க முடியுமா?
ஒரு சிறுவனிடம், "உனக்குச் சாகப் பயமில்லையா?" என்று நான்
கேட்டதற்கு அவன் அமைதியாக, "நேரம் வந்தால்
போகவேண்டியதுதான்" என்று பதில் சொன்னான். எல்லாவற்றிற்கும்
ஒரு நேரமும் காலமும் உண்டு என்கிறார் சபை உரையாளர்:
"பிறப்புக்கு ஒரு காலம். இறப்புக்கு ஒரு காலம்" (சஉ 3:1).
என்று நாம் இவ்வுலகில் பிறந்தோமோ அன்றே நமது சாவின் நேரம்
குறிக்கப்பட்டுவிட்டது. அந்த நேரத்தை நாம் அறியோம்.
எனவேதான் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்;
"நீங்களும் ஆய்த்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத
நேரத்தில் மானிடமகன் வருவார்" (லூக் 12:40).
நாம் எப்பொழுதும் விழிப்பாய் இருந்து ஆயத்தமாய் இருக்க
வேண்டும். அதாவது. நாம் நம்பிக்கைக்குரிய
பணியாளர்களைப்போல், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணியை
நிறைவேற்ற வேண்டும். இதற்கு கிறிஸ்துவே ஓர்
எடுத்துக்காட்டு. அவர் தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தில்
தந்தையிடம் கூறினார்: "நான் செய்யுமாறு நீர் என்னிடம்
ஒப்படைத்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில்
மாட்சிப்படுத்தினேன்" (யோவா 17:4). ஆம், கிறிஸ்து தந்தை
தம்மிடம் ஒப்படைத்த வேலையைச் செய்து முடிப்பதில் கண்ணும்.
கருத்துமாய் இருந்தார். ஓய்வுநாள் அன்றுகூட அவர்
குணமளிக்கும் பணியைச் செய்தார். ஏன் அவர் ஓய்வுநாளை
மீறுகிறார்? என்று அவரைக் கேட்டதற்கு அவர் கூறியது: "என்
தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்"
(யோவா 5:17). கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் நமது அன்றாட
அலுவலைச் செய்து முடிக்க வேண்டும். நாம் இறக்கும்போது
கிறிஸ்துவைப்போல், "எல்லாம் நிறைவேறிற்று" (யோவா 19:28)
என்று கூறமுடியுமென்றால், நாம் உண்மையிலேயே
பேறுபெற்றவர்கள்.
ஓர் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கற்களை உடைத்துக்
கொண்டிருந்த ஒருவரிடம், என்ன செய்கிறீர்கள்?" என்று
கேட்டதற்கு அவர் கூறியது: "நான் ஓர் அழகிய கோயிலைக் கட்டி
எழுப்புகிறேன்". கூலிக்கு வேலை செய்வதாக அவர் கூறவில்லை.
மாறாக, ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்புவதாகச் சொன்னார்.
அவரின் பார்வை ஆழமானது, அர்த்தமுள்ளது. எந்தவொரு வேலையும்
இழிவானதல்ல. மாறாக, எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே
இழிவானது. எந்த வேலை செய்தாலும், அதன் மூலம் நாம் மாபெரும்
ஓர் அழகிய உலகைக் கட்டி எழுப்புகின்றோம் என்ற உயர்வான
எண்ணம் நம்மை ஆட்கொள்ள வேண்டும். 'செய்யும் தொழிலே
தெய்வம்' என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டுத் தலைவர் தங்களிடம் ஒப்படைத்துச் சென்ற பணியை
விழிப்புணர்வுடன் செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள்
பேறுபெற்றவர்கள் என்றும். வீட்டுத் தலைவரே அவர்களுக்குப்
பந்தியில் பணிவிடை செய்வார் என்றும் இன்றைய நற்செய்தியில்
கிறிஸ்து கூறுகிறார் (லூக் 12:37). இது நமக்குச் சற்று
வியப்பாகத் தோன்றலாம். எந்த முதலாளி தனக்கடியில் வேலை
செய்யும் தொழிலாளிக்குப் பந்தி பரிமாறுவார்? என்று
கேட்கலாம். ஆனால் நம் தலைவர் கிறிஸ்து அவ்வாறு செய்வதாக
வாக்களித்துள்ளார். "இதோ, நான் கதவு அருகில் நின்று
தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக்
கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு
அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவருந்துவார்கள்" (திவெ
3:20). கிறிஸ்து தமது பணியாளர்களுடன் சமபந்தியில்
அமர்வார்; அவரே அவர்களுக்குப் பணிபுரிவார்.
நாம் மேற்கொள்ளும் பணிகளில் இடையூறு எழும்போது இன்றைய
இரண்டாம் வாசகத்தில் வருகின்ற ஆபிரகாமை நம் கண்முன்
நிறுத்த வேண்டும். கடவுள் ஆபிரகாமை வேற்று நாட்டுக்குப்
போகும்படி பணித்த போது, அவர் எங்கே போகவேண்டுமென்று
தெரியாதிருந்தும் புறப்பட்டார். அவர் அவ்வாறு செய்தது
கடவுளின்மேல் அவருக்கிருந்த நம்பிக்கையின்
அடிப்படையில்தான் (எபி 11:8), ஆபிரகாம் தாம் செல்லவேண்டிய
பாதையை அறியாமல் சென்றதால், அவர் சரியான பாதையில்
சென்றார். நாம் நமது பாதையைத் திட்டமிட்டு அமைத்துக்
கொள்வதால், நாம் தவறான பாதையில் செல்கிறோம். நாம் செல்வது
கடவுளின் பாதையில் அல்ல, மனிதனின் பாதையில், ஆபிரகாம் தன்
ஒரே மகன் ஈசாக்கைப் பலியிட முன்வந்ததால், அவர் ஈசாக்கை
மீண்டும் பெற்றார். நாம் நமது குட்டி குட்டிச் சிலைகளை
விட்டுவிட மனமின்றி, தலைவர்களுக்கு ஊழியம் செய்யும்
இருமனப்பட்ட உள்ளம் கொண்டவர்களாய் இருக்கின்றோம்.
ஒருவர் ஒரு மலை விளிம்பில் நடந்தார். கால் இடறிக் கீழே
விழுந்தபோது, மலையின் இடுக்கில் இருந்த ஒரு மரத்தின்
கிளையைப் பற்றிக்கொண்டு, "கடவுளே! என்னைக் காப்பாற்று"
என்று கத்தினார். கடவுள் அவரிடம், "நான் உன்னைக்
காப்பற்றுவேன். ஆனால் உன் கைகளை மரக்கிளையிலிருந்து
எடுத்துவிடு" என்றார். ஆனால் அவர் அவ்வாறு செய்ய
மறுத்துவிட்டு, "கடவுளே! என்னைக் காப்பாற்று" என்றார்.
நாமும் பணம், பதவி, சொந்தம், பந்தம் ஆகியவற்றை உடும்புப்
பிடியாகப் பிடித்துக்கொண்டு கடவுளிடம் பாதுகாப்புத்
தேடுகின்றோம். இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது: "நாம்
ஆண்டவரை நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும்
கேடயமும் ஆவார்" (திபா 33:20). உண்மையில் கடவுள் நமது
கேடயமாய் உள்ளாரா? எந்நிலையிலும் நம்பிக்கையைக்
கேடயமாய்ப் பிடித்துக் கொள்வோம்" (எபே 6:16). தலைக்கவசம்
அணியலாம். அணியாமல் இருக்கலாம். ஆனால் நம்பிக்கையைத்
தலைக்கவசமாய் கட்டாயம் அணிய வேண்டும்.
கைமாறு கருதாமல் நம் கடமையைச் செய்வோம். கடவுள் நம்மைக்
கரைசேர்ப்பார். இறுதியில் நாம் அடையவிருக்கும் இன்பத்தைக்
கண்முன் கொண்டு துன்பங்களைத் துணிவுடன் எதிர்கொள்வோமாக.
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் 669)
விழிப்பும் விவேகமும்
உலகிலேயே மிகப் பெரிய பிரமாண்டமான 'டைட்டானிக்' கப்பலை
கடந்த நூற்றாண்டில் உருவாக்கிக் கடலில் விட்டபோது, அதில்
அவசரகாலத்திற்குரிய உயிர் காக்கும் படகுகள் ஆறுதான்
இருந்தனவாம். "இவ்வளவு பெரிய கப்பலில் ஆயிரக்கணக்கில்
பயணம் செய்பவர்களுக்காக ஆறு படகுகள் மட்டும் போதுமா?"
என்று கேட்டபோது அதனை உருவாக்கியவர் சொன்னாராம்: "இந்த ஆறு
படகுகள் கூடத் தேவையில்லை. ஏனெனில் இந்தக் கப்பலைக்
கடவுளால் கூட ஒன்றும் செய்துவிட முடியாது" என்று.
ஆனால் என்ன நேர்ந்தது? 1912 ஏப்ரல் 14ம் நாள்
பனிப்பாறையில் மோதி முறிந்து உடைந்து மூழ்கியது. பயணம்
செய்த 1600 பேர்களில் ஒரு சிலரே அந்த ஆறு படகுகள் மூலம்
தப்பிக்க முடிந்தது. கடவுளின் வல்லமையை மதியாதோர் காணும்
முடிவு இதுதான்!
இயந்திரத்தை இயக்கிய பொறியாளர் மட்டும் ஒரு தொலைபேசியின்
எச்சரிக்கைச் செய்திக்குச் செவி சாய்த்து உரிய நேரத்தில்
உடனடியாகச் செயல்பட்டிருந்தால், அந்த நூற்றாண்டின்
மிகப்பெரிய சோகத்தைத் தவிர்த்திருக்கலாம். மூன்று
நிமிடங்கள் தொலைபேசி மணி அலறியதாம். கப்பலைத் திசை
திருப்புங்கள். எதிரே மிகப்பெரிய பனிப்பாறை" என்பதுதான்
அந்த எச்சரிக்கை. விழிப்புணர்வோடு செயல்படாததால் நிகழ்ந்த
துயர விபத்து.
இயேசுவின் இன்றைய அறைகூவல்: நீங்களும் ஆயத்தமாய்
இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன்
வருவார்" (லூக். 12:40).
பேய்களின் தலைவன் லூசிஃபர் மூன்று குட்டிப் பேய்களை
அழைத்து, "உலகிற்கு உங்களை அனுப்பினால் கடவுளிடமிருந்து
மக்களைப் பிரிக்க என்ன செய்வீர்கள்? என்று கேட்டது.
கடவுளே இல்லை' என்று மக்களிடம் சொல்வேன் என்றது ஒரு பேய்.
'நரகம் என்பதெல்லாம் கற்பனை என்பேன்' என்றது இன்னொரு பேய்.
'இதெல்லாம் இப்போது எடுபடாது, எப்பயனும் தராது. மக்கள்
உங்களை நம்பமாட்டார்கள்' என்றது தலைமைச் சாத்தான்.
உடனே மூன்றாவது குட்டிப் பேய் நல்லது செய்ய இப்ப என்ன
அவசரம். இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. தற்போது
நமக்குத் தேவை பணம், பொருள், வசதி வாய்ப்புக்கள். அவற்றை
எந்த வழியிலும் பெருக்கிக் கொள்வோம். கடைசிக் காலத்தில்
அன்பு, மன்னிப்பு, தவம், பிறர் மீது பரிவு இவற்றைப்
பற்றியெல்லாம் சிந்திக்கலாம் என்று சொல்லிக் காலத்தைத்
தள்ளிப் போடச் சொல்வேன் என்றது. உடனே லூசிஃபர் அதனைப்
பாராட்டி 'உன்னால்தான் நரகம் நிரம்பும்' என்றதாம். இன்று
காலை 10 மணிக்கு ஒரு வீட்டில் கொள்ளையடிப்பேன். அதன்பின்
11 மணியிலிருந்து திருந்தி நல்லவனாக நடப்பேன்" என்று
சொல்லும் திருடனைப் பார்த்துச் சிரிக்க மாட்டோமா? அதுதவிர,
காலை 10.30 மணிக்கே மாட்டிக் கொண்டு சாக நேர்ந்தால்
அவனுடைய கதி? அதனால்தான் தலைவர் இரவின் இரண்டாம் காவல்
வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும்
பணியாளர்கள் விழிப்பாய் இருப்பதைக் காண்பாரானால் அவர்கள்
பேறு பெற்றவர்கள்" (லூக். 12:38) என்கிறார் இயேசு.பேய்.
இறைவன் மீது கொண்ட அன்பும் ஆழமான நம்பிக்கையுமே நம்மை
விழித்திருக்கச் செய்யும். "நம்பிக்கை என்பது நாம்
எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி.
கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" (எபி. 11:1)
என்ற இறை வார்த்தையை உள்ளத்தில் இறுத்திக் கடவுள்
வாக்குமாறாதவர் என்ற மனம் தளராத நிலையே நம்பிக்கை.
பழைய ஏற்பாட்டில் எபிரேயர்களின் வரலாற்றில் பலத்துக்கு ஒரு
சிம்சோன் போல, ஞானத்துக்கு ஒரு சாலமோன் போல, நம்பிக்கைக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் ஆபிரகாம். யூதர்களின்
நம்பிக்கையின்மையை முன்னிட்டு, திருமுழுக்கு யோவான்
ஆபிரகாமைப் புகழ்ந்து "ஆபிரகாமின் நம்பிக்கை அவருக்குக்
கல்லில் இருந்து மக்களை உருவாக்க வல்லது" (மத். 3:9) என்று
கூறுகிறார்.
கடவுள் தாம் சொன்னதை நிறைவேற்றுவார் என்ற மனந்தளராத நிலை.
கடவுள் சொன்னால் நடக்காததும் நடக்க முடியாததும் நடந்தே
தீரும் என்ற அசையாத மன உறுதி.
நம்பிக்கையின் இந்தப் பின்னணியில் இன்றைய நற்செய்தியில்
இரண்டு விதமான பணியாளர்களைப் பார்க்கிறோம்.
-நம்பிக்கைக்கு உரியவர்கள்
- தனக்கு அளித்த பணியில் கண்ணும் கருத்துமாக இருந்து
பொறுப்புடன் செயல்படுபவர்கள்.
- நம்பிக்கைத் துரோகிகள்
தனது தலைவரின் விருப்பத்தைத் தெரிந்திருந்தும் தன்
விருப்பம்போல் தான் தோன்றித் தனமாக செயல்பட முடிவு
செய்கிறவர்கள்.
தலைவர் காலம் தாழ்த்துகிறார் என்று எண்ணி செய்ய
வேண்டியதைச் செய்யாமல் காலம் தாழ்த்துபவர்கள்.
கடவுள் மீது நம்பிக்கை கொண்டு வாழவும் கடவுளுக்கு
நம்பிக்கைக் குரியவர்களாக இருக்கவும் இன்றைய வழிபாடு நம்மை
அழைக்கிறது. அதற்கு விசுவாசம், விழிப்பு, விவேகம் நிறைந்த
வாழ்வு வேண்டும்.
சோழ நாட்டு இளவரசருக்குத் திருமணம். தேனிலவுக்காகக்
கடற்கரை மாளிகைக்குக் குதிரைகள் பூட்டிய தேரில் இளவரசியோடு
சென்றார். "நேரம் இரவு. எதிரிகள் எதுவும் செய்யலாம் எனவே
விழித்திருந்து குதிரைகளையும் தேரையும் பத்திரமாகப்
பார்த்துக்கொள். தூக்கம் வந்தால் எதையாவது நினைத்துக்
கொண்டிரு" என்று தேரோட்டியிடம் சொல்லிவிட்டுப்
போய்விட்டார்.
இரண்டு மணி நேரம் கழித்து வந்து தேரோட்டியை இளவரசர்
கவனித்தார். தேரோட்டி ஏதோ சிந்தனையில் இருந்தான். என்ன
சிந்தனை?" என்று இளவரசர் கேட்க, "கடல் நீர் இவ்வளவு உப்பாக
இருக்கிறதே, இது இயற்கையிலேயே உள்ளதா அல்லது யாராவது
உப்பைக் கொட்டியிருப்பார்களா? என்று சிந்தித்துக்
கொண்டிருந்தேன்" என்றான். நல்ல சிந்தனைதான். இதுபோல
சிந்தித்துக் கொண்டே தூங்காமல் இரு என்று சொல்லிவிட்டுச்
சென்றார் இளவரசர்.
அடுத்து இரண்டு மணி நேரம் கழித்து வந்து இளவரசர்
பார்த்தார். தேரோட்டி அவரைப் பார்த்து "நீங்கள் சொன்னபடியே
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். வானம் முழுவதும் நீல
நிறமாக உள்ளதே, இது இயற்கையிலேயே நீல நிறம்தானா, அல்லது
யாராவது பெயின்ட் அடித்திருப்பார்களா? என்று கேட்டான்.
நல்ல ஊழியன் நீ. உன்னைப் போல இப்படி விழித்திருந்து
பணியாற்றும் ஊழியனைப் பார்த்ததில்லை. விடியப் போகிறது.
கவனமாக இரு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் இளவரசர்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பொழுது விடிந்தது. இளவரசர்
வந்தார். "டேய் பொழுதுதான் விடிந்து விட்டதே, இன்னும் என்ன
சிந்தனை? புறப்படு போவோம்" என்றார் இளவரசர். தேரோட்டி
அமைதியாகப் பதில் சொன்னான்: "இளவரசே, இங்கே கட்டியிருந்த
குதிரைகளைக் காணோம். அவை தானாகவே ஓடியிருக்குமா அல்லது
யாராவது அவிழ்த்துக் கொண்டு சென்றிருப்பார்களா? என்று
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.
இங்கே தேரோட்டி விழித்திருந்து பயன் என்ன?
எதற்காக விழித்திருந்தானோ அதைக் கோட்டை விட்டுவிட்டானே!
அதனால்தான் அறிவுத் தெளிவோடு விழிப்பாய் இருங்கள்" (1
பேதுரு. 5:8) என்கிறார் திருத்தூதர் பேதுரு.
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச.
திருச்சி
பணம், பூஜ்யங்களால் ஆனதல்ல
இந்தியாவில் இயங்கிவரும் COBRAPOST ("நாகம் பதிவு") என்ற
ஓர் இணையத்தளம், மறைந்திருந்து கொத்தும் செயல்பாடுகள் என்று
பொருள்படும் undercover sting operations வழியே, அதிகார வட்டங்களில்
நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் கடந்த 15
ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்விணையதளம் கூடுதலாகப்
புகழ்பெற்றுள்ளது. கறுப்புப் பணத்தைக் குவித்திருப்போர்,
அதை எவ்விதம் வெள்ளைப் பணமாக்கமுடியும் என்பதை, ஒரு சில
முக்கியமான வங்கிகளில் (Bank of India, Bank of Baroda,
Canara Bank, Central Bank of India, Indian Overseas Bank
போன்றவை) பணிபுரிபவர்கள் சொல்லித்தந்தபோது, அதை, அவர்களுக்குத்
தெரியாமல், காணொளி வடிவில் பதிவு செய்து, இவ்விணையத்தளம்
வெளியிட்டது.
கறுப்புப் பணத்தைப் பற்றி, ஒவ்வொரு நாளும்தான் செய்திகள்
வருகின்றன. புதிதாக இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்ற
கேள்வி எழலாம். இச்செய்தி வெளியான தேதி, என் கவனத்தை முதலில்
ஈர்த்தது. அது, மார்ச் 13, 2013.
வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான
மக்கள், ஆவலோடு காத்திருந்த வெள்ளைப் புகை, சிஸ்டீன்
சிற்றாலயத்திலிருந்து வெளியேறிய நாள் அது. ஆம், 2013ம் ஆண்டு,
மார்ச் 13ம் தேதி, மாலை ஏழு மணியளவில், சிஸ்டீன் சிற்றாலயப்
புகைப்போக்கியில், அதுவரை, அவ்வப்போது வெளியான கறுப்புப்
புகை மாறி, வெள்ளைப் புகை வெளியேறியது; கத்தோலிக்கத் திருஅவைக்கு
ஒரு புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தியது.
கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை
பிரான்சிஸ் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியைத் துவக்கினார்.
திருத்தந்தையைத் தேர்தெடுக்க சிஸ்டீன் சிற்றாலயத்தில்,
கர்தினால்கள் நடத்தும் 'கான்கிளேவ்' கூட்டத்தில், நல்லதொரு
தீர்வு கிடைத்தால், அது, வெள்ளைப்புகை வழியே
வெளிப்படுத்தப்படும். எனவே, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து
வெளியேறும் கறுப்புப் புகை, வெள்ளைப் புகையாக மாறினால்,
அது, நல்லதொரு செய்தி. கறுப்புப் பணம் வெள்ளைப் பணமானால்,
அது, மோசமானச் செய்தி. இவ்விரு செய்திகளும் ஒரே நாளில்
வெளியானது, இவ்வுலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே
நிகழும் தொடர் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.
நல்லவற்றை நிலைநாட்ட, இவ்வுலகம், மேற்கொள்ளும் முயற்சிகள்
ஒருபுறம். தீமையை நிலைநாட்ட, அதுவும், தீமையை நன்மை போல
உருமாற்றி, உலகில் நடமாடச் செய்யும் முயற்சிகள், மற்றொரு
புறம்.
பணம் பத்தும் செய்யும்; பணம் பாதாளம் வரை பாயும்; பணம்
என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளைக் கூறி,
பணத்திற்கு, ஏறத்தாழ, ஒரு தெய்வீக நிலையை அளிப்பது, தீமையை
நன்மை போல உருமாற்றி, இவ்வுலகில் நடமாடவிடும் ஒரு முயற்சி
என்று கூறலாம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான
தேவை, செல்வத்தைக் குவிப்பது. நன்மையின் ஆதிக்கத்தை
நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைப் பகிர்வது.
பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத்
திரட்டுவதிலும், சேர்த்து வைப்பதிலும், நாம் காட்டும்
அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கிவிடுகிறது.
செல்வத்தைக் குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப்பற்றி
சென்ற வாரம் ஞாயிறன்று, ஓர் உவமை வழியாக, இயேசு எச்சரிக்கை
விடுத்தார்.
அந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறை
வாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம் அதே 12ம் பிரிவில்
32ம் இறைச் வாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.
இடைப்பட்ட 10 இறைச் வாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம்,
வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து
நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே.
இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை
அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா?
என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.
தந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு,
அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய
நற்செய்தி ஆரம்பமாகிறது:
லூக்கா நற்செய்தி 12: 32
சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை
உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம்
கொண்டுள்ளார்.
இதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில
தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய
நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத
பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்
கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும்
அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள்
உள்ளமும் இருக்கும்.
திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம்
சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில்
நான் ஈடுபட்டிருந்தபோது, மேலே குறிப்பிட்ட COBRAPOST
இணையத்தள செய்தியும், இன்னும் பல செய்திகளும் என் கவனத்தை
ஈர்த்தன. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல்,
சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற,
இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல
செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு
குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக
இருக்கும்.
2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு
அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல்
தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள்,
நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய்
செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள
செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி?
(Stolen Indian Wealth Abroad How to Bring it back?)
என்பது, இந்நூலின் தலைப்பு.
செல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும்
இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு
போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து
நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான
வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால்,
உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச்
சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி
எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப்
பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள்
பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச்
சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை
காட்டவில்லை.
இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப்
பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு
கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker
என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் (Capitalism's Achilles
Heel: Dirty Money and How to Renew the Free Market
System). தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால்
சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில்
அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி,
2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப்
பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை
ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும்
அவர் கூறியுள்ளார்.
ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை?
விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில்
நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள்
ஒவ்வொரு நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு
செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740
ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு
சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,
பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக்
கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு
ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள்
ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ
முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.
பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு
ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப்
பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள்
வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின்
மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம்,
வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான்
இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து
வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக
நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன்
சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில்
பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று,
நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள்,
ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப்
பணமாய் குவிக்கப்படுகிறது.
Raymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும்
உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர்
ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப்
பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன்
டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன
என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை
அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு
நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா
ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும்
குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம்
கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான
கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால்
நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும்
அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள்
வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே
இயேசுவும், 'விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக்
கொள்ளுங்கள்' என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
சாதாரணமாகவே நாம் சேர்த்துவைக்கும் செல்வங்களைப் பற்றி
இயேசு பேசும்போது, நேரிய வழிகளில் நீங்கள் சேர்க்கும்
பணத்தையும், அளவுக்கு மீறி சேர்த்தால், அவை செல்லரித்துப்
போகலாம், அல்லது, திருடப்படலாம் என்று எச்சரிக்கிறார்.
அதற்குப் பதில், அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம்
இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று சொல்கிறார்.
பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை
நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப்
பணத்தைப்பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன
சொல்லக்கூடும்? ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக்
கையில் எடுப்பார். அன்று, எருசலேம் கோவிலைச் சுத்தம்
செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும்
வங்கிகளில் நுழைந்து, அவற்றைச் சுத்தம் செய்வார். அல்லது,
அன்று எருசலேம் நகரைப் பார்த்து, கண்ணீர் விட்டதைப்போல்,
இவர்களையும் நினைத்து அழுவார்.
இறுதியாக, நம்மைப் பார்த்து இன்றைய நற்செய்தியில் இயேசு
தெளிவாகச் சொல்லியுள்ளவற்றை நாம் எவ்வளவு தூரம் கேட்கப்
போகிறோம்? செயலாக்கப் போகிறோம்? என்ற கேள்விகளுடன் நம்
சிந்தனைகளை நிறைவு செய்வோம்.
லூக்கா 12: 32-34, 48ஆ
"உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்;
இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத
செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன்
நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள்
செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்
மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே
எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம்
இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்."
கணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக்
கவலைப்படவேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள, நம்மிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வங்களுக்கு நம்மிடம் தகுந்த
கணக்கை, இறைவன் எதிர்பார்ப்பார். கடவுளுக்குக் கணக்கு தர
நாம் தயாராக இருக்கிறோமா?
செல்வம்... பதுக்குவதற்கா? பகிர்வதற்கா?
கறுப்புப் பணத்தைப் பற்றி, ஒவ்வொரு நாளும்தான் செய்திகள்
வருகின்றன. புதிதாக இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்ற
கேள்வி எழலாம். இச்செய்தி வெளியான தேதி, என் கவனத்தை
முதலில் ஈர்த்தது. அது, மார்ச் 13, 2013. வத்திக்கான்
பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்,
ஆவலோடு காத்திருந்த வெள்ளைப் புகை, சிஸ்டீன்
சிற்றாலயத்திலிருந்து வெளியேறிய நாள் அது. ஆம், 2013ம்
ஆண்டு, மார்ச் 13ம் தேதி, மாலை ஏழு மணியளவில், சிஸ்டீன்
சிற்றாலயப் புகைப்போக்கியில், அதுவரை, அவ்வப்போது வெளியான
கறுப்புப் புகை மாறி, வெள்ளைப் புகை வெளியேறியது;
கத்தோலிக்கத் திருஅவைக்கு ஒரு புதிய திருத்தந்தை
கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. கர்தினால் ஹோர்கெ
மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற
பெயருடன் தன் தலைமைப்பணியைத் துவக்கினார்.
திருத்தந்தையைத் தேர்தெடுக்க சிஸ்டீன் சிற்றாலயத்தில்,
கர்தினால்கள் நடத்தும் 'கான்கிளேவ்' கூட்டத்தில், நல்லதொரு
தீர்வு கிடைத்தால், அது, வெள்ளைப்புகை வழியே
வெளிப்படுத்தப்படும். எனவே, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து
வெளியேறும் கறுப்புப் புகை, வெள்ளைப் புகையாக மாறினால்,
அது, நல்லதொரு செய்தி. கறுப்புப் பணம் வெள்ளைப் பணமானால்,
அது, மோசமானச் செய்தி. இவ்விரு செய்திகளும் ஒரே நாளில்
வெளியானது, இவ்வுலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே
நிகழும் தொடர் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.
நல்லவற்றை நிலைநாட்ட, இவ்வுலகம், மேற்கொள்ளும் முயற்சிகள்
ஒருபுறம். தீமையை நிலைநாட்ட, அதுவும், தீமையை நன்மை போல
உருமாற்றி, உலகில் நடமாடச் செய்யும் முயற்சிகள், மற்றொரு
புறம்.பேராசையின் உயிர் மூச்சாய் இருப்பது, பணம்.
பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும், பணம்
என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளை அடிக்கடி
கூறி, பணத்திற்கு ஏறத்தாழ ஒரு தெய்வீக நிலையை அளித்து
வருகிறோம். பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல.
அவற்றைத் திரட்டுவதிலும், குவித்து வைப்பதிலும் நாம்
காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கி
விடுகிறது. தானியங்களைச் சேர்த்து, குவித்து வைத்த ஓர்
அறிவற்ற செல்வனைப் பற்றி சென்ற ஞாயிறன்று ஓர் உவமை வழியாக
இயேசு எச்சரிக்கை விடுத்தார். இன்றைய நற்செய்தியில்,
செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளை நம் அனைவருக்கும்
தருகிறார் இயேசு. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளைக்
கேட்போம்:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத
பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்
கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும்
அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள்
உள்ளமும் இருக்கும்.
திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம்
சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்று நாம்
சிந்திக்கும்போது, அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப்படும்
கறுப்புப் பணம் நம் உள்ளத்தை இருளாய் கவ்வுகின்றது.
திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம்,
வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற,
இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல
செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு
குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக
இருக்கும்.
செல்வத்தைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும்
இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு
போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து
நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான
வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால்,
உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் சரிவைச்
சந்திக்க வேண்டியிருந்தது. இச்சீரழிவு, உலகை உலுக்கி
எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள், கறுப்புப் பணத்தைப்
பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும்
இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச்
சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப் பற்றி அதிக
அக்கறை காட்டவில்லை.
ஒரு டிரில்லியன் டாலர் என்பது எவ்வளவு பெரியத் தொகை?
விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில்
நீங்கள் ஒரு மில்லியன், அதாவது, பத்து லட்சம் டாலர்கள்
ஒவ்வொரு நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு
செய்து முடிக்க, பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740
ஆண்டுகள் ஆகும்.
விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு
சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,
பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக்
கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு ஒரு டிரில்லியன்
டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு
மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும்.
அந்த அளவுக்குப் பணம் இது.
ஒரு டிரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று
பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும்
ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப்
பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம்
வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான்
இருக்கும்.
பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து
வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக
நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம் தன்
சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில்
பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று,
நாற்றம் எடுக்கும் அளவுக்கு ஒரு டிரில்லியன் டாலர்கள்
ஒவ்வோர் ஆண்டும் பற்பல அயல்நாட்டு வங்கிகளில் கறுப்புப்
பணமாய் குவிக்கப்படுகிறது. Raymond W. Baker மற்றொரு வேதனை
தரும் உண்மையையும் தன் நூலில் கூறியுள்ளார். அதாவது,
ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு டிரில்லியன் டாலர்
கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500
பில்லியன் டாலர்கள் வளரும் நாடுகளிலிருந்து
கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும் Raymond W. Baker
கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி,
உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் 25
டிரில்லியன் டாலர்கள், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும்
பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது
பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல்,
நல்ல உடல், உள்ள நலனோடு வாழ முடியும். எவ்வளவு அழகான
கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால்
நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும்
அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள்
வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே
இயேசுவும் விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக்
கொள்ளுங்கள் என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.
Ernest Hemingway என்பவர் நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும்
எழுத்தாளர். அவரிடம் தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது.
ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக
விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத்
தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர்,
"இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால்,
இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால்
கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான்
அடிமை." என்று பதில் சொன்னாராம்.
தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன்
உவமையைச் சொன்ன இயேசு, சென்ற வாரம் நமக்குத் தந்த
எச்சரிக்கை இதுதான்: எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு
எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக்
கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இயேசு, வானத்துப்
பறவைகளையும், வயல்வெளி மலர்களையும் பார்த்து, பாடங்கள்
பயில நம்மைப் பணிக்கிறார். (லூக்கா 12: 24-28) இறைவனின்
பராமரிப்பை நம்பி அவை வாழ்கின்றன என்பதை ஒரு பாடமாக இயேசு
தந்தாலும், பறவைகளும், மலர்களும் சொல்லித் தரும் மற்றொரு
பாடமும் மனிதர்களாகிய நமக்கு இன்று மிகவும் தேவையான ஒரு
பாடம். அதுதான், பகிர்வு. வானத்துப் பறவைகளிடம்
பகிர்ந்துண்ணும் பழக்கம் உண்டு என்பதை அறிவோம். மலர்களோ,
தன்னிடம் உள்ள நறுமணத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி
மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றன. இந்தப் பகிர்வையே,
இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக நாம் கேட்டோம்:
லூக்கா நற்செய்தி 12: 33-34
உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத
பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக்
கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும்
அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள்
உள்ளமும் இருக்கும்.
தர்மத்தில், பகிர்வில் இவ்விதம் வளரும் உலகம்,
பாதுகாப்பிலும் அதிகம் வளரும். அந்த உலகில், மக்கள்
கூடிவரும் இடங்கள், விளையாட்டு விழாக்கள், இன்னும் பல
விழாக்கள் அனைத்தும் பாதுகாப்புப் படைகள் இல்லாமலேயே
பாதுகாப்புடன் நடைபெறும். அந்த சுதந்திர மண்ணகத்தை
உருவாக்க இறைவன் நம் அனைவருக்கும் துணைபுரியட்டும்.
அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம்,
பெங்களூர்
முதல் வாசகப் பின்னணி (சா.ஞா. 18:6-9)
நம்பிக்கையே நம் வாழ்விற்கு மிகவும் அவசியமானது. இயேசுவின்
பிறப்பிற்கு ஏறத்தாழ 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த யூதர்களில் ஒரு குழுவினர் பாலஸ்தீனத்திற்கு வெளியே
உரோமை அரசின் பல பகுதிகளில் விரிந்து கிடந்தனர். இவர்கள்
யாவே கடவுளைத் தொழுவதை விட்டு, பிற தெய்வங்களை வழிபட்டு
வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மூதாதையர்கள் யாவே
இறைவன் மீது எந்த அளவுக்கு நம்பிக்கைக் கொண்டிருந்தனர்
என்பதை நூலாசிரியர் மக்களுக்கு சுட்டிக்காட்டு- கிறார்.
இந்த நம்பிக்கையின் வாயிலாக அவர்கள் கடவுளைப் பெருமைப்
படுத்தியது ஒரு புறம் இருக்க, இஸ்ராயேல் மக்களுக்கு
விடுதலைப் பெற்றுத் தந்தது இந்த நம்பிக்கையே என்பதை
எடுத்துரைத்தார். இதையே இந்தப் பகுதி எடுத்துக் கூறுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபி. 11:1-2, 8-9)
பிற நாடுகளில் வாழ்ந்த யூதக் கிறிஸ்தவர்கள், பிற மத
மக்களால் மட்டுமன்றி, தன் யூத இன மக்களாலும் அவதியுற்றனர்.
யூதமதத்தை விட்டுக் கிறிஸ்தவர்களாக மாறியதால், யூதர்கள்
இவர்களைத் துரோகிகள் என்று கருதினர். இவர்கள் ஏற்கனவே
எருசலேம் ஆலயத்தையும் வழிபாடுகளையும் இழந்தனர். எனவே
தவறுதலாகக் கிறிஸ்துவர்களாக மாறிவிட்டோமா என்று அஞ்சினர்.
இந்நிலையில் இந்நூலாசிரியர் அவர்களை நம்பிக்கையில்
நிலைபெறச் செய்யவும், அவர்கள் மீண்டும் யூதமதத்திற்குத்
திரும்புவதைத் தடுக்கவும் இத்திருமுகத்தை எழுதுகிறார்
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 12:32-48)
பெந்தகோஸ்து விழாவிற்குப் பிறகு இயேசுவின் வருகை விரைவில்
நிகழும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்த்தனர். அதேச்
சமயம், வேதகலாபனைகளால் பெரிதும் துன்பத்திற்கு
ஆளாகியிருந்தனர். தங்களுடைய நிலபுலங்களையும், உடைமை
களையும் இழந்து தவித்தனர். எனவே கிறிஸ்துவின் இரண்டாம்
வருகை உண்மையாகவே நிகழுமா? என்று ஒரு சிலர்
சந்தேகப்பட்டனர். இத்தகையவர்களுக்கு உதவவே புனித லூக்கா
இந்த நற்செய்தியை எழுதுகிறார். பல நேரங்களில் பல இடங்களில்
இயேசு கூறிய வார்த்தைகளைத் தொகுத்து லூக்கா இன்றைய
நற்செய்தியில் வழங்குகிறார். மானிடமகனின் வருகைக்
கண்டிப்பா- கவே இருக்கும். அவரின் வருகைக்காக எப்பொழுதும்
விழிப்புடன் காத்திருக்க வேண்டும் என்பதை உவமை வழியாகப்
புனித லூக்கா எடுத்துரைக்கிறார்.
மறையுரை
என் சொந்த ஊரில் ஒரு குடும்பத்தில் தந்தையும், இரண்டு
மகன்களும் ஒருவித மரபு சார்ந்த நோயினால்
பாதிக்கப்பட்டிருந்தனர். இளைய மகன் ஏற்கனவே
இறந்துவிட்டான். மற்ற இருவரும் மிகவும் மோசமான நிலையில்
இருக்கின்றனர். மருத்துவர்கள் ஏதும் செய்ய முடியாது என்று
கைவிரித்து விட்டனர். இந்தத் தந்தையானவர் கோயிலுக்குச்
செல்வதில்லை. கடவுளைப் பற்றி எண்ணுவதுமில்லை. ஆனால்
அவருடைய மகன் படுக்கையிலேயே இருந்தாலும், யார் அவனைப்
பார்க்கச் சென்றாலும், ஞாயிற்றுக் கிழமை மறக்காமல் என்னைத்
திருப்பலிக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்டுக்-
கொண்டே இருப்பான். நானும் அவனை ஒருநாள் திருப்பலிக்கு
மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளேன். அவனால் ஒழுங்
காக உட்காரக் கூட முடிவதில்லை. ஆனால் அவன் திருப்பலியில்
கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுடைய எண்ணம்
எல்லாம் இயேசு ராஜா எனக்குச் சுகமளிப்பார் என்ற
நம்பிக்கைதான். தன்னுடைய கொடிய வேதனையிலும் அவன் இறைவன்
மீது நம்பிக்கைத் தளராமல் இருப்பது எனக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்தியது.
இன்றையத் திருவழிபாடு நாம் இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டு
வாழவும், இறைவனுக்கு நம்பிக்கைக்குரியவர்களாக வாழவும்
அழைப்பு விடுக்கிறது. நம்பிக்கை என்பது இறைவனை அறிந்துக்
கொள்வது அல்ல. மாறாகத் தான் உணர்வுபூர்வமாக இறைவனை தன்
வாழ்வில் உணர்ந்து அனுபவிப்பது ஆகும். இஸ்ராயேல் மக்களும்
இத்தகைய அனுபவத்தைப் பெற்றிருந்தனர் என்பதை இன்றைய முதல்
வாசகம் எடுத்துக்காட்டுகிறது. இஸ்ராயேல் மக்களின் 'கடந்து
செல்லல்' நிகழ்வை நாம் இன்றைய வாசகத்தில் பார்க்கின்றோம்.
இஸ்ராயேல் மக்கள் இறைவன் மீது அளவுகடந்த நம்பிக்கை
வைத்திருந்ததினால், இறைவனின் வல்ல செயல்களை அனுபவித்தனர்.
இஸ்ராயலரின் ஆண் பிள்ளைகளை எகிப்தியர் கொன்றனர். மோயீசன்
மட்டுமே தப்பியிருந்தார். அதற்குப் பதிலாக, இறைவன்
எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகளைக் கொன்று போடுகிறார். யூத
மக்களின் கடந்தக் காலம் இறைவன் தாழ்நிலையில் இருக்கும்
மக்களைத் தன்னுடைய ஞானத்தால் உயர்த்துகிறார். நம்முடைய
இன்ப நிலையில் இறைவன் மீது நம்பிக்கை வைப்பது மிகவும்
சுலபம். ஆனால் நம்முடைய இன்னல்- களுக்கிடையில் இறைவன் மீது
கொண்ட நம்பிக்கையில் தளராமல் இருப்பதுதான் மிகவும் கடினம்.
ஆர்தர் ஆஷே விம்பிள்டன் டென்னீஸ் வீரர் எய்ட்ஸ் நோயால்
அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு
நண்பர் அவரிடம் உனக்கா இப்படித் துன்பம்? கடவுள் உன்னைக்
கைவிட்டு விட்டாரா? என்று சொன்னபோது ஆர்தர் அந்த நண்பரிடம்
சொன்னாராம், "5 கோடி குழந்தைகள் டென்னீஸ் விளையாட
ஆரம்பிக்கின்றனர். 50 இலட்சம் பேர் விளையாடக் கற்றுக்கொள்-
கின்றனர். 50,000 பேர் களத்தில் குதிக்கின்றனர். 5000 பேர்
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பங்குப் பெறுகின்றனர். 50
பேர் விம்பிள்டனில் பங்கேற்கின்றனர். 4 பேர் அறை
இறுதியிலும், 2 பேர் இறுதிப்போட்டியிலும் கலந்துக்
கொள்கின்றனர். விம்பிள்டனில் வெற்றிப்பெற்று கோப்பையுடன்
நின்றபோது, "ஏன் ஆண்டவரே எனக்கு மட்டும் இந்தப் பெருமை?"
என்று கேட்கவில்லை. அதை நான் மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொண்டதைப் போல, இந்த துயரத்தை- யும் நான்
கடவுளிடமிருந்து ஏற்றுக்கொள்கிறேன்", என்றாராம்.
இறைவனுக்கு நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்
"நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும்
என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற
நிலை" (எபி 11:1). ஆபிரகாமின் வாழ்வில், நம்பிக்கை என்பது
இறைவனின் அழைத்தலுக்குக் கீழ்ப்படிந்து இறைவன் காட்டும்
நாட்டிற்குப் பயணம் செய்வதாகும். அவர் கடவுளின்
வார்த்தையில் மட்டுமே நம்பிக்கைக் கொண்டிருந்ததால், எந்த
ஒரு வினாவும் எழுப்பாமல் கடவுள் காட்டிய நாட்டிற்கு
புறப்பட்டுச் சென்றார். அந்த நாட்டை அடைந்தவுடன், அந்த
நாட்டைத் தன்னுடைய வழிமரபினருக்கு அளிப்பதாகக் கடவுள்
வாக்குறுதி அளிக்கின்றார். அவர் உடனே ஏன் அந்த நாட்டை
அளிக்கவில்லை என்று கேள்வி கேட்கவில்லை. இறைவனின்
வார்த்தையில் நம்பிக்கை வைத்து இறந்து போனார்.
இறைவன் ஆபிரகாமுக்கு முதிர்ந்த வயதில் ஒரு மகனை அளிப்பதாக
வாக்குறுதி தந்தார். இதை ஆபிரகாம் நம்பியதால், ஈசாக் என்ற
மகனைப் பெற்றுக்கொண்டார். எல்லாமே நன்றாய்ச்
சென்றுகொண்டிருந்த நிலையில், தீடீரென்று தன்னுடைய ஒரே
மகனைப் பலியாகச் செலுத்துமாறு இறைவனிடமிருந்து அழைப்பு
வருகிறது. ஆபிரகாமுக்குத் தள்ளாடும் வயதில் மகனைப்
கொடுத்து- விட்டு, உடனே பலி செலுத்தக் கேட்டு ஆபிரகாமுக்கு
மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. எனினும், கடவுள்மீது அவர்
கொண்ட நம்பிக்கை அசையாதிருந்தது. தன்னுடைய மகனையும் பலி-
கொடுக்கத் துணிந்ததன் மூலம், ஈசாக்கும்
காப்பாற்றப்பட்டான். இத்தகைய நம்பிக்கைக்குரியத் தன்
ஊழியனுக்குக் கடவுள், இஸ்ராயேலின் தந்தை என்ற பெயர்
மட்டுமல்லாமல் நம் அனைவருக்கும் அவர் இன்றுவரை
"விசுவாசத்தின் தந்தை" என்ற பெருமையைக்
கொடுத்திருக்கிறார். 4000 ஆண்டுகளுக்குப் பின்னும் அவரே
நம் அனைவரின் தந்தையாக இருக்கிறார். நாம் நம்மை ஆபிரகாமின்
வழிமரபினர் என்றும் அழைத்துக் கொள்கிறோம்.
இன்றைய நற்செய்தி நாம் நம்பிக்கையோடு எந்நேரமும்
விழிப்புடன் இறைவனின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும்
என்று அழைப்பு விடுக்கிறது. இஸ்ராயேல் மக்களின் 'கடந்து
போதல்' அல்லது பாஸ்காவைப் போன்று கிறிஸ்துவின் வருகை
எதிர்பாராமல் நடக்கும். விழிப்பாயிருங்கள், யாரும்
நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்' (லூக்கா 12:40).
இயேசு இந்த உவமையை யாரும் எதிர்பாராத வகையில் ஒரு
திருப்பத்தோடு முடிக்கிறார். அதாவது யாரும் எதிர்பாராத
நேரத்தில் தலைவர் வருகிறார். தலைவர் வரும்போது
விழித்திருக்கும் பணியாளனுக்குத் தலைவரே தம் இடையை
வரிந்துக் கட்டிக்கொண்டு, பணியாளர்களைப் பந்தியில் அமரச்
செய்து, அவர்களுக்குப் பணிவிடை புரிவார் என்றச் செய்தியை
அளிக்கிறார். இந்த ஒரு பணிவிடையைத்தான் நாம் ஒவ்வொருவரும்
திருப்பலியில் பெற்றுக் கொள்கிறோம். இயேசு நம்மை அமரச்
செய்து, வார்த்தையாலும், உணவாலும் நம்மை நிரப்புகிறார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் துன்பங்களால் துவண்டு விடக் கூடாது.
இயேசு நம்முடைய தேவைகளை என்றுமே நிறைவேற்றுவார்.
நம் வாழ்வில் இறைவன் மீது நாம் எந்த அளவுக்கு நம்பிக்கை
வைத்துள்ளோம்? நம்முடைய நம்பிக்கை உண்மையாகவே உறுதியானதா?
நான் ஒருமுறை ஒரு கிராமத்தில் மக்களுக்கு விளையாட்டுப்
போட்டிகளை நடத்திவிட்டு, சாமிப் படங்களைப் பரிசாகக்
கொடுத்தேன். சிறிது நேரத்தில், சிலர் வந்து படங்களை
என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டனர். காரணம், அந்தப்
படங்களில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்.
சிலுவையை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை. இன்னும்
நம்மில் சிலபேர் இப்படித்தான் எண்ணுகிறோம்.
சிலுவைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்கிறோம். சிலுவைகள்
நம்மில் சுமத்தப்படும்போது இறைவனுக்கு எதிராக நாம்
முணுமுணுக்கின்றோம். துன்பங்களில்தான் நம்முடைய நம்பிக்கை
வெளிப்படும். நல்ல கள்வன் சிலுவையில் தொங்கிக்
கொண்டிருக்கின்ற வேளையிலும், இயேசுவின் மீது நம்பிக்கை
கொண்டான். விண்ணக வாழ்வைப் பெற்றுக்கொண்டான்.
இன்று நாம், பங்குத்தந்தை, நமக்கு உதவிசெய்யவில்லை
என்பதற்காகக் கத்தோலிக்க மதத்தைத் துறந்துவிட்டு பிற மதச்
சபைகளில் பலர் சேர்ந்துக் கொள்வதைக் காண்கிறோம். போதிய
வசதிகள் கிடைக்கவில்லை என்பதற்காகவே கிறிஸ்துவை மறு-
தலிக்கின்ற நம்பிக்கைதான் உண்மையான நம்பிக்கையா?
இன்னும் நம்மில் சிலர் நம் குடும்பங்களில் பிரச்சனைகள்
வருகின்றபொழுது, பிறமதச் சபையினரை வீட்டிற்கு அழைத்துவந்து
செபிக்கக் கேட்கின்றோம். இன்னும் பலர் மந்திரவாதிகளையும்
சூனியக்காரர்களையும் அணுகுகிறோம். இதுதான் நாம் கடவுள்
மீது கொள்ளும் உண்மையான நம்பிக்கையா?
கடவுள்மீது நம்பிக்கை வைப்பதால் நாம் மகிழ்ச்சியாக
இருப்போம் என்று எண்ணுவது தவறு. மாறாக, கடவுள்மீது
நம்பிக்கை வைக்கும்போதுதான், இன்னல்களும், நெருக்கடிகளும்
நம்மை வந்து தாக்கும். நாம் மனந்தளராமல் உறுதியாய் இருக்க
வேண்டும். ஆபிரகாம் கடவுள்மேல் நம்பிக்கைக் கொண்டார்.
இருப்பினும் அவர் பல துயரங்களை எதிர்கொள்ள
வேண்டியிருந்தது. இருப்பினும் உறுதியாய் இருந்தார். அவரைப்
போல நாமும் கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழவும்,
நம்பிக்கைக் குரியவர்களாக நடந்துகொள்ளவும்
அழைக்கப்படுகிறோம்.
அன்னைத் தெரேசா கூறுகிறார். "God does not want us to be
successful persons but God wants to be faithful
servants" வெற்றியாளர்களாக இருக்க வேண்டும் என்று கடவுள்
விரும்புவதில்லை, மாறாக நாம் நம்பிக்கைக்குரிய பணியாளராக
இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
நாம் எப்பொழுதும், எந்நிலையிலும், எச்சோதனையிலும்
நம்பிக்கையில் தளர்ந்துவிடக் கூடாது.
நம்முடைய உழைப்பிற்கு ஏற்றாற்போல் இயேசு கிறிஸ்து
நமக்குப் பலன் அளிப்பார்.
கிறிஸ்தவர்கள் இயேசுவின் வருகையை எதிர்கொண்டு, அதற்- காக
முழுமுயற்சியுடன் உழைக்க வேண்டும்.
கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் என்றுமே
வாழ்வில் தோல்வி அடையார்.
புனித பேதுரு பாப்பிறைத் தமிழ்க் கழகம், பெங்களூர்
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
பின்னணி
இன்றைய இறைவாக்குகள் இன்றைய நிகழ்கால வாழ்விலிருந்து
எதிர்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கை அல்லது
எதிர்நோக்குகளைப் பற்றிச் சிந்திக்க அழைக்கின்றன.
சாலமோனின் ஞான நூலில் எகிப்தில் இருந்த மக்கள்
நம்பியிருந்த இறைவனின் வாக்குறுதிகளைப்'
பற்றிப்பேசுகின்றது.இரண்டாம் வாசகத்தில் எபிரேயருக்கு
எழுதப்பட்ட நூலின் ஆசிரியர் 'நம்பிக்கை' என்பது நாம்
எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி"
எனக் கூறி ஆபிரகாம் வாழ்வை உதாரணமாகக் கொண்டு
விளக்குகின்றார். இன்றைய நற்செய்தி கடந்த வாரத்தின்
தொடர்ச்சியாகும். எனவே கடந்த வாரம் போலவே பொருளாதாரம், உலக
செல்வம், அதுகுறித்து நாம் கொண்டிருக்க வேண்டிய மனநிலைகள்
ஆகியவை குறித்து இயேசு பேசுகின்றார். அவற்றோடு நமது
மனங்களை இவற்றைக் கடந்தும், இவ்வுலக வாழ்வைக் கடந்தும்
மானுட மகன் வரும்' (வச. 40) இரண்டாம் வருகையை நோக்கித்
திருப்புகின்றார். எனவே இன்றைய நற்செய்தியின் அடிப்படையில்
உலகச் செல்வம் பற்றிக் கொண்டிருக்க வேண்டிய மனநிலைகளைப்
பற்றி இவண் காண்போம்.
1. செல்வத்தைவிட உயர்ந்த இறையாட்சி
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய வசனத்தில் "நீங்கள்
அவருடைய (இறைவனுடைய) ஆட்சியை நாடுங்கள்; அப்பொழுது இவை
உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்" என்றார் இயேசு.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத் தில் உங்கள் தந்தை
உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் 146திருவுளம்
கொண்டுள்ளார்" என்கிறார். ஆக இறையாட்சி உலக செல்வத்தைவிட
உயர்ந்தது; அதை இறைவன் நமக்குத் தருவதற்கு, நம்மை அதற்கு
உட்படுத்துவதற்குச் சித்தமா யிருக்கின்றார். எனவே
இறையாட்சியை நாடித் தேடுவதுதான் நமது முதன்மையான வேலையாக,
முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
2. குறையாத செல்வம்
மேலே கூறப்பட்ட மனநிலை ஒருவருக்கு வசப்பட்டு விட்டால்
அவருக்கு இந்த உலக செல்வத்தின் மீதுள்ள பற்றுகள்
போய்விடும். எனவே இந்தக் குறைந்த, திருடப்படக்கூடிய,
பூச்சி அரிக்கக்கூடிய செல்வத்தை விற்றுத் தருமம் செய்வது
எளிதாகிவிடும். அதன் வழியாக அவர் இற்றுப் போகாத பணப்
பையையும், விண்ணுலகின் குறையாத செல்வத்தையும் பெற்றுக்
கொள்வார். அறிவற்ற செல்வனின் உவமையின் இறுதியில் கூறப்
பட்டதுபோல்கடவுள் முன்னிலையில் செல்வராய்' ஆகிவிடுவார்.
3. கவலை கொள்ளத் தகாததும், தகுந்ததும்
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் உயிர் வாழ
எதை உண்பது, உடலுக்கு எதை உடுத்துவது, எனக் கவலை கொள்ள
வேண்டாம் (வச.22) என்றார். அதற்குப் பறவைகளையும், காட்டு
மலர்களையும் உதாரணம் காட்டி கடவுள் அவர்களைக் காக்கின்றார்
(வச. 24-25) என்றும், மானிடராகிய நாம் இவற்றை விட
உயர்ந்தவர்கள் எனவே நமக்கு இன்னும் மிகுதியாகச் செய்வார்
(வச. 28) என்றும் அறிவுறுத்துகின்றார். எனவே இவ்வுலகத்
தேவைகள், பொருள்கள், செல்வங்கள்குறித்து அதிக, அவசியமற்ற
கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார். இன்று நற்செய்தியின்
தொடக்கத்தில் சிறு மந்தையாக (வச. 32) இருக்கின்றது
குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார்.
இவையெல்லாம் நாம் கவலை கொள்ளத் தகாதவை. இன்றைய
நற்செய்தியின் பெரும்பகுதி நாம் எதைக்குறித்துக் கவலை
கொள்ள வேண்டும், கவலை கொள்ளத் தகுந்தவை யாவை என
அறிவுறுத்துகின்றார் இயேசு. இங்கு மானிட மகனின் வருகையைப்
பற்றியும் (வச. 40), இரு உவமைகளில் வருதல்', 'திரும்ப
வருதல்', 'வந்து பார்த்தல்' ஆகியவை பற்றியும் பேசப்
படுகின்றன (காண். வச. 35, 37, 38, 39, 40, 43, 45, 46).
இவை யெல்லாம் இயேசுவின் இரண்டாம் வருகை, உலக முடிவு/ இறைத்
147தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்துக் காட்டுகின்றன. எனவே
உலகப் பொருள்கள், செல்வம்குறித்து கவலை கொள்ளாமல் இறைவன்
திருமுன் தீர்ப்புக்காக நிற்க இருப்பதைக் குறித்து
கவலையும் அச்சமும் கொள்ள வேண்டும் என்பது இயேசுவின்
போதனையாக இருக்கின்றது. இந்த இறைச் சந்திப்பு சுகமானதாய்,
இனிதாக இருக்கவேண்டுமானால் நாம் எப்போதும்
'விழிப்பாயிருக்க வேண்டும்' (காண். வச. 38),
ஆயத்தமாயிருக்க வேண்டும் (வச. 40). இவ்விரு
மனநிலைகளும்தான் தேவையானவை.
4. இறையாட்சியில் அதிகாரம்
இயேசு செல்வத்தைப் பற்றியும், அஞ்சத் தகுந்தது, தகாதது
குறித்தும் பேசியபோது இவையெல்லாம் சாதாரண 'பொது நிலை'
மக்களுக்குத்தான் சீடர்களான தங்களுக்கல்ல எனும் நினைப்பில்
பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா?
அல்லது எல்லாருக்குமா?" (வச. 41) என வினவுகின்றார். எனவே
செல்வம், அதிகாரம்குறித்த தலைவர் களின் பொறுப்பு யாது?
அவர்கள் கொண்டிருக்கவேண்டிய மனநிலை அல்லது நிலைப்பாடு என்ன
என விளக்குகின்றார். சீடர்களை, மக்கள் தலைவர்களை இயேசு
வீட்டுப் பொறுப்பாளர் களுக்கு (வச 42) ஒப்பிடுகின்றார்.
இவர்கள் நம்பிக்கைக்கு உரியவர் களாகவும், அறிவாளிகளுமாக
(வச. 42) இருக்க வேண்டியவர்கள். அவர்களுக்கு இருவகையான
பொறுப்புக்கள் உள்ளன. 1.அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட
ஊழியர்கள் மட்டில் அவர்கள் கொண்டிருக்க வேண்டிய செயல்பாடு:
அவர்களைப் பணியமர்த்தி அவர்களது பணியைச் சரியாகச் செய்ய
வைக்க வேண்டும், அவர்கள்மீது அதிகாரத்தையும்,
வன்முறையையும் பயன்படுத்தக் கூடாது (அடிக்கக் கூடாது வச.
45); அவர்களுக்கு வேளா வேளைக்குப் படியளக்க வேண்டும் (வச.
42). 2. அவர்களின் தலைவர் மட்டில் கொண்டிருக்க வேண்டிய
நிலைப்பாடு: எந்த நேரத்திலும் தம் பணியைச் செய்து
கொண்டிருக்க வேண்டும் (வச. 43); தலைவரின் விருப்பத்தை
அறிந்து ஆயத்தமாய் இருக்க வேண்டும் (வச. 47). இவ்வாறு
செயல்பட தவறும் தலைவர்களும் தண்டிக்கப்படுவர், தீர்ப்பு
உண்டு, துரோகிகளுக்குரிய இடத்திற்கு தள்ளப்படுவார் (வச.
46-48). எனவே தலைவர்களுக் கான இறுதி அறிவுரையாக இயேசு
"மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே
எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம்
இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்" (வச. 48) என்கிறார்.
எனவே நாம் பொதுநிலையினர் நிலையி லிருந்தாலும்,
தலைவர்கள்நிலையிலிருந்தாலும், உலகசெல்வத்தின் மீது
பற்றற்று, வானக செல்வத்தைப் பற்றிக்கொண்டு இறை சமூகத்தில்
வாழ்வோம்!
அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட்
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
முதல் வாசகம்: சாஞா. 18 : 6 - 9
பண்பாட்டு நலன்களை மேலாக மதித்து, திருச்சட்டங்களையும்
அருள் நெறிகளையும் மறந்தனர் இஸ்ரயேல் மக்கள். அவர்கட்கு
இறை ஞானத்தின் சிறப்பை உணர்த்த எழுதப்பட்ட நூல் சாலமோனின்
ஞானம் என்பர். அதிலிருந்து எடுத்தாளப்படும் இன்றைய வாசகம்
பாஸ்காவை மையமாகக் கொண்ட சிந்தனையாக விளங்குகிறது.
முன்னோர் நன்னெறி
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை உண்டு என்று
இஸ்ரயேலுக்குக் கடவுள் உறுதி கூறியிருந்தார். அது
நிறைவேறும் என்ற உறுதியுடன் மகிழ்ந்திருக்கவே இவ்வுறுதி
மொழி. ஆதலின் நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி
உயிர்வாழ்தல் அறியாமை" (பாரதி) அன்றோ?
உறுதி தருபவர் கடவுள். ஆதலின் அவன் "முடிப்பரிய காரியத்தை
முற்றுவிப்பான் (கம்பர்) என்று துன்பத்திலும் மகிழ்ந்து
இருப்பது அரிய விசுவாசம் ஆகும். அதனால் விடுதலை அடைந்த
இரவில் மறைவாகப் பலி செலுத்தினர் இஸ்ரயேல் மக்கள். நலம்,
தீது யாவற்றையும் சரி நிகராகப் பகிர்ந்து கொண்டு
கடவுளுக்குப் பணிந்து வாழ இசைந்தனர். உள்ளத்தில் பொங்கிய
மகிழ்ச்சி இறைப் புகழாக எழுந்து இசைத்தது. இது ஞானிகளின்
செயல் என்பது உள்ளடக்கம்.
வாழ்க்கையின் நம்பிக்கை
பழைய ஏற்பாட்டில் இறுதியாக எழுதப்பட்ட நூல் சாலமோனின்
ஞானம். நம் பெருமான் காலத்திற்கு 50 ஆண்டுகட்கு முந்திய
நூல் இது என்பர். மனஞ்சோர்ந்து தத்தளிக்கும் இஸ்ரயேல்
மக்களைத் திடப்படுத்தும் வண்ணம் இவ்வாசகம் அமைகிறது.
அதற்கு ஏற்பத் தியானப் பாடலும் கடவுள் நம்பிக்கைக்கு
உரியவர் என்பதை உணர்த்துகிறது. "தமக்கு அஞ்சி
நடப்போரையும், தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்
ஆண்டவர் கண்ணோக்குகின்றார் (திபா. 32). இஸ்ரயேல் இன்னும்
அதிகமாகவே கடவுளை நம்பலாம். ஏனெனில் அவர்களைக் கடவுள் தம்
மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தமது உரிமைப் பொருளாக
ஆண்டவர் தேர்ந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்" என்று முரசு
அறைகிறது திருப்பாடல். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர்
என்றால் அவரை நம்புகிறவர் செய்ய வேண்டியது என்ன? "நமது
ஆன்மா ஆண்டவருக்காகக் காத்திருக் கின்றது" என்பதேயாகும்.
"சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு, தீவினை கெடுத்து,
உய்யலாம் பத்தி தந்து, ... முத்தி தந்து, இந்த
மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் அத்தன்"
(திருவாசகம்) என்று மாணிக்கவாசகரும் தமது நம்பிக்கையைப்
புலப்படுத்துகிறார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது
நமது ஆழ்ந்த அனுபவமா?
பரிசுத்தர்
இறைவனது திருச்சட்டத்திற்குப் பரிசுத்தர்கள் உடன்பட்டனர்.
தந்தையர் களின் புகழ்ப்பாடல்களைப் பாடிப் போற்றினர்
என்கிறது இன்றைய வாசகம். என் தந்தையிடமிருந்து ஆசி
பெற்றவர்களே வாருங்கள் (மத். 25:34) என்ற வாழ்த்தைப்
பெறுவோர் பரிசுத்தர்கள். இவர்கள் மனமாரத் திருச்
சட்டத்திற்குக் கீழ்ப்படிவோர். இவ்வாறு கீழ்ப்படிதலை ஞானம்
போதிக்கிறது. "உன் தந்தையின் கடவுளை அறிந்து, முழு
மனத்தோடும், ஆர்வமிக்க உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்;
எனெனில் ஆண்டவர் எல்லா இதயங்களையும் ஆய்ந்தறிகிறார்; நீ
அவரைத் தேடினால் கண்டடைவாய், நீ அவரைப் புறக்கணித்தால்
அவர் உன்னை என்றென்றும் கைவிடுவார் (1 குறி. 28 : 9)
என்பதைக் காண்க. "நாம் அவரது திருமுன் பரிசுத்தரும்
மாசற்றவருமாய் இருக்குமாறு, உலகம் உருவாகு முன்னரே அவர்
நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார். இத்தகையோரின்
நாவிலிருந்து புகழ்ச்சிக் கீதம் பிறக்கின்றது.
"நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர்
அவரைப் புகழ்வது பொருத்தமானதே (திபா. 33:1) என்று இதனைத்
திருப்பா உணர்த்துகிறது. இறைவனை ஏற்றுப் பணிபவரே அவரை
உண்மையாக, மனமாரப் புகழ முடியும். இறைவனை நாம் புகழ்ந்து
ஏத்துவது, அவரை ஏற்றுக்கொள்வதன் ஆழத்தைப் புலப்படுத்தும்.
நீதிமான்களின் விடுதலையையும் அவர்களுடைய பகைவர்களின்
அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டுதான்
இருந்தார்கள்.
இரண்டாம் வாசகம்: எபி. 11:1-2:8-19
நம் பெருமான் இயேசு கிறிஸ்து காலத்திற்கு ஏறக்குறைய
நூறாண்டு களுக்குப் பின்னால் யூதக் கிறிஸ்தவர்களைத்
திடப்படுத்தும் வண்ணம் வரையப்பட்ட விசுவாச வாழ்க்கையின்
வருணனை இன்றைய வாசகமாக அமைகிறது.
விசுவாச வாழ்க்கை
'நாமோ அழிவிற்கு ஏதுவான முறையில் பின்வாங்குபவர்கள்
அல்லர்; ஆனால் நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் வகையில்
விசுவாசத்தில் வாழ்பவர்கள்' என்று உணர்த்திவிட்டு
இத்திருமடல் விசுவாச வாழ்க்கையை வருணிக்கிறது.
விசுவாசம் தன்னைக் கடவுளிடம் முற்றிலும் கையளித்து
விடுகிறது. "தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே (தேவாரம்)
என்ற நிலை அது.
கடவுளின் வாக்கு பொய்க்காது என்ற உறுதியுடன் பின்
வருபவற்றை எதிர்பார்த்து இருப்பது விசுவாசம். "தாரா அருள்
ஒன்று இன்றியே தந்தாய் என்று உன் தமர் எல்லாம் ஆரா
நின்றார்; அடியேனும் அயலார் போல அயர்வேனோ?" என்று இதனை
மாணிக்கவாசகர் உணர்த்துவார்.
எதிர்பார்த்திருப்பது கிடைக்கும் என்ற உறுதியினால்
விசுவாசம் என்பது நம்பிக்கையாகிறது. விசுவாசமும்
நம்பிக்கையும் நெருங்கிய தொடர்பு உடையவை. "விசுவாசம்
என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும்
என்னும் நிலையான உறுதி (1).
கடவுளின் வாக்குறுதிகளை நம்பி, நல்லவை நிகழும் என்ற
உறுதியுடன் நாம் வாழ்கிறோமா? அல்லது இடர்கள் தோன்றி நம்மை
நடை தடுமாறச் செய்கின்றனவா?
ஆபிரகாமின் விசுவாசம்
விசுவாசத்தில் நம் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஆபிரகாம்.
அவரது விசுவாச வாழ்க்கை எவ்வாறு அமைந்தது? இன்றைய வாசகம்
நான்கு நிகழ்ச்சிகளை நினைவூட்டுகிறது.
தமது சொந்த நாட்டையும் ஊரையும் துறந்து இன்னது என்று
தெரியாத நாட்டிற்குப் புறப்பட்டார் ஆபிரகாம்.
வாக்களிக்கப்பட்ட நாட்டை நம்பி, கானான் நாட்டில் நாடோடிபோல
வாழ்ந்தார். படிப்படியாக விண்ணகமே தாய்நாடு என்று உணர்ந்து
கொண்டார். வயது முதிர்ந்து, காலம் கடந்துவிட்ட நிலையிலும்
கடவுளின் உறுதி மொழிக்கு ஏற்பத் தமக்கு ஒரு மகன் பிறப்பான்
என்று பல ஆண்டுகள் மன உறுதியுடன் காத்திருந்தார்.
இறுதியாக, தன் கண்மணி போன்ற ஒரே மகனை, உயிருக்கு உயிராகிய
மகனைப் பலி கொடுக்கும்படி கேட்ட கடவுளுக்கு மறுப்பு
இன்றிப் பலி கொடுக்க முன் வந்தார்.
வாக்குறுதிகளைப் பெற்றிருந்தும் ஆபிரகாம் தம் ஒரே மகனைப்
பலியிடத் தயங்கவில்லை. ஏனெனில் கடவுள் இறந்தோரையும்
எழுப்பவல்லவர் என்பதை மனதிற்கொண்டு இருந்தார். எனவே தன்
மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். இது ஒரு முன் அடையாளம்
ஆயிற்று (19).
அவருடைய விசுவாசம் வீண் போகவில்லை. வாக்குறுதிகள்
நிறைவேறப் பன்னூறு ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அவை பொய்க்கா
என்பது திருமடல் சொல்லும் நற்செய்தி.
வான் நின்று இடிக்கில் என்? மாகடல் பொங்கில் என்?
கான் நின்ற செந் தீக்கலந்து உடன் வேகில் என்?
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்?
நான் ஒன்றி நாதனை நாடுவன் நானே (திருமந்திரம்)
என்ற உறுதிப்பாடே விசுவாசம்.
வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.
நற்செய்தி: லூக். 12 : 32 - 48
கவலையை ஒழிக்க வேண்டும். கடவுள் வருகைக்காகக் கவனமாய்க்
கருத்தாய்க் காத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது
இன்றைய வாசகம். இந்த நற்செய்தியில் இரண்டு பாகங்கள் உள்ளன.
அஞ்சக் கூடாது, விழிப்புடன் காத்திருக்க வேண்டும் என்பது
ஒன்று. இது சாதாரணக் கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தி.
மற்றொன்று தலைவர்கள் பொறுப்புடன் திருச்சபையைப் பேணும்படி
பணியாளர்களாய், தொண்டர்களாய்த் திகழ வேண்டும் என்பது.
என்னுடையதெல்லாம் உன்னுடையதே
"சிறு மந்தையே, அஞ்சாதே." நம்பெருமான் உயிர்த்து
எழுந்தபின் வாழ்த்துகிற வாழ்த்தை ஒத்தது இது. அஞ்சாதே
என்று ஆணையிட்டுத் தமது பயத்தைப் போக்க வேண்டும் என்று நம்
நாட்டு அருளாளர் பலர் வேண்டினர். ஆண்டவன் அருளால் அச்சம்
தீர்ந்ததையும் பாடினர். "யாமார்க்கும் குடியல்லோம்; யாதும்
அஞ்சோம்", என்றும் அச்சம் தீர்த்து ஆட்கொண்டவன்" இறைவன்
என்றும் செப்பும் திருவாசகம். கடவுளின் சொல் சக்தி வாய்ந்த
சொல், பயன் இன்றிப் போகாத சொல். ஆதலின், அஞ்சாதே என்று
அவர் அருளுவது ஒப்புக்குச் சொல்லும் சொல் அன்று. கெதயோன்,
மோசே, எசாயா என்று பல அடியார்களுக்கும் தம் திருத்தூதர்
கட்கும் வாழ்த்தாக வந்த சொல் அஞ்சாதே' என்னும் இவ்வமுதச்
சொல். ஏன் அச்சம் அகற்ற வேண்டும்? "ஏனெனில், உங்கள் தந்தை
தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்"
என்கிறார் நம்பெருமான். "விண்ணகத் தந்தையே, உமது அரசு
வருக" என்று நாள்தோறும் பல தடவை நாம் மன்றாடுகிறோம்.
நமக்குக் கடவுள் தர இருக்கும் அரசு நமக்கு உரியதாக
வேண்டும் என்பது அன்றோ இம்மன்றாட்டு? இவ்வரசு நமக்கு
உரியதாக வேண்டின் அதன் செல்வத்தையே நாம் நாட வேண்டும்.
அங்கே திருடன் அண்டுவது இல்லை. பூச்சி அரிப்பதும் இல்லை.
அச்செல்வம் வேண்டுமாயின் நமது இம்மை உடைமைகளை ஏழைகளோடு
பகிர்ந்துகொள்ளும் மனம் வாய்க்க வேண்டும். நம்மால் இப்படி
எல்லாம் நினைத்துப் பார்க்க முடிகிறதா? இதை எல்லாம்
விரும்ப முடிகிறதா?
மற்றுமோர் ஆறுதல்
என்னுடையது எல்லாம் உன்னுடையதே என்று தமது அரசை நமக்குத்
தர இருக்கும் தந்தையின் தனிப் பெருங் கருணைதான் என்னே!
அதைத் தர வரும்போது நாம் விழிப்புடன் முன்னேற்பாட்டுடன்
தக்க தகுதியுடன் காத்திருக்க வேண்டாமா? இதுவே மனுமகனின்
வருகையாயின் அஃது எத்துணை இனியது!
"விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில்
வருவார் என உங்களுக்குத் தெரியாது (மத். 24 : 42). இந்த
அமுதமொழி நம்மை அச்சுறுத்துகின்றதா? தேற்றுகின்றதா?
மனுமகனைத் தேடிக் காத்திருந்த பல அருளாளர்கள், ஊன் ஆர்
உடல் புகுந்தான், உயிர் கலந்தான், உளம் பிரியான்"
(திருவாசகம்) என்று ஆடிப் பாடினார்கள். நம்பிக்கை தரும்
ஆறுதல் மொழிகள்கூட நமக்குக் கசப்பாயின! கடவுளின் தனிப்
பெருங் கருணையை, ஒப்பற்ற பேரன்பை நினையாமல், ஏற்காமல்
காலம் போக்குகிறோம் நாம்! எத்தனையோ வழிகளில் கடவுள் தம்மை
அன்பின் மறுவுருவம் என்று காட்டியிருந்தாலும் இன்னும் நமது
மனம் மந்தமாகவே அன்றோ இருக்கிறது? அன்பே கடவுள் என்பதை
உள்ளத்தின் ஆழத்தில் நாம் உணர்ந்துகொண்டால், நமது வாழ்வு
எத்துணை இன்பமயமாகிவிடும்!
தலைவரும் ஊழியரும்
தலைவன் வருங்கால், விழித்திருப்போரைக் கண்டால் அவன்
இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில்
அமர்த்தி அவர்களுக்குப் பணிவிடை புரிவான். விண்ணகத் தலைவர்
தம் ஊழியர்களைப் பந்தியில் அமர்த்திப் பணிவிடை புரிவது நம்
தலைவர்கட்கு எவ்வளவு அரும்பெரும் எடுத்துக்காட்டு. பணிவிடை
புரிவதே இறையரசில், நம்பெருமான் தோற்றுவித்த அரசில்
பெருமை! அதுவே பேறு!! இதனை உணர்ந்து வாழும் திருச்சபைத்
தலைவர்களே உண்மையான தலைவர்கள்! உலகிற்கு அத்தகையவர் அல்லரோ
உண்மை வழிகாட்டிகள்!
எவருக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவரிடம் அதிகம்
எதிர்பார்க்கப்படும்.
அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ