ர் orizoஜெtal CSS3 Meஜெu Tutorial Css3Meஜெu.com

பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு

வருடாந்த
ஞாயிறு வாசகம்
     
Sr. Gnanaselvi (india)
அன்புக்குரியவர்களே!

இறையரசைக் கட்டி எழுப்ப அருள் தர அழைக்கிறது இன்றைய ஞாயிறு வழிபாடு.

அன்பு, அமைதி, உண்மை, நீதி, அக்கறை இவைகளை அடிப்படையாகக் கொண்டது இறையரசு. ஆனால் தன்னலம், பொய்மை, பேராசை, அடக்குமுறை இவைகள் தான் இன்றைய உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இயேசு இறையரசைக் கட்டி எழுப்ப அமைதியின் ஊற்றாகத் திகழ்ந்தார். நலிந்தோரைத் தொட்டுத் தூக்கினார். தோழராக்கினார். நலமளித்தார். மன்னித்தார். மகிழ்வில் சேர்த்தார். நிலவாத அமைதியை நிலைக்க வைத்தார்.

நாமும் இறையரசில் நிலவும் அன்பு, அமைதி, உண்மை, நீதி, அக்கறை இவைகளை மற்றவருக்கு வழங்கிடும் வாய்க்காலாக மாறுவோம்.

நமது சொல்லாலும், செயலாலும் வாழ்வாலும் பணியாலும் பிறருக்கு தொண்டு செய்வதன் வழியாக வற்றாத அமைதியை எல்லோருக்கும் பாய்ந்தோடச் செய்யும் ஊற்றாகத் திகழ்வோம்.

இயேசு இறையாட்சியை கட்டி எழுப்ப சீடர்களுக்கு கொடுத்த அதே அதிகாரத்தையும் வல்லமையையும் நமக்கும் தருகின்றார். நாம் வாழும் மண்ணில் மக்கள் நடுவிலே நாமும் இறையாட்சியைக் கட்டி எழுப்ப நமக்குத் தரும் அதிகாரத்தையும் வல்லமையையும் பயன்படுத்த இறையருள் கேட்டு இந்த திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.


 
திருப்பலி முன்னுரை:

பிரியமானவர்களே! பொதுக்காலம் 15ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டிற்கு வருகைத் தந்துள்ள உங்கள் அனைவருக்கும் இறைஇயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துகள்!

கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது சீடர்கள்‌ அனைவரும்‌ புறமுதுகுக்‌காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டபோது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய திருப்பலியிலிணைந்திடுவோம்‌.

நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌.

கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்தபோது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி கிறிஸ்து விண்ணகம்‌ சென்றபோது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே!

கிறிஸ்துவின் அமைதியின் தூதுவராக வாழ ஒவ்வொரு திருப்பலியிலும் சிறப்பு அழைப்புத் தருகின்றார் இறைமகன் இயேசு. இதனை ஏற்று இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்படுவோம். வாரீர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இறையாட்சிப் பணியைத் திறம்பட செய்வோரை தேர்ந்தெடுத்த இறைவா!
திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் ஆற்றும் திருப்பணிகள் திருச்சபையில் உலகம் தர இயலாத அன்பை அமைதியை நிலைக்கச் செய்ய ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஆறு போல் நிறைவாழ்வை பாய்ந்தோட செய்யும் இறைவா!
இறையாட்சிக்கு எதிராக நாட்டில் நிலவும் இனக்கலவரம், தீண்டாமை, வன்முறை அக்கறையின்மை மனித மாண்பின்மை போன்றக் குறைகளை நீக்கி நாடுகளிடையே நிறைவாழ்வை பாய்ந்தோடச் செய்ய தலைமைப் பொறுப்பில் உள்ளோருக்கு ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இறையாட்சியை கட்டி எழுப்ப ஆற்றல் தரும் இறைவா!
உம் பணியாற்ற நீர் தேர்ந்தெடுத்த எம் பங்குப் பணியாளர்களது வாழ்வில் ஏற்படும் துயர்களை நீக்கி உம்மைச் சார்ந்து செயல்பட ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. இறையாட்சியை கட்டி எழுப்ப எமை அழைத்த இறைவா!
திரு முழுக்கு பெற்ற நாங்கள் எல்லாரும் தனிமனித ஒழுக்கத்தினாலும், பிறர் நலம் பேணிக்காப்பதாலும். குடும்ப சமாதானத்தாலும், இறைவார்த்தையை நேசித்து வாழ்க்கை நடத்துவதாலும் இறையாட்சியை கட்டி எழுப்ப முடியும் என உணர்ந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. விண்ணகத் தந்தையே !
வேதனையில் இருப்போர் தங்கள் மீது நீர் அக்கறை கொண்டுள்ளீர் என்று உணரச் செய்தருளும். துன்புறும் எல்லா மக்களும் உமது ஆறுதலை அனுபவிக்க ஆற்றல் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இரக்கத்தின் ஆண்டவரே! ":ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்": என்றுரைத்து, சீடர்களைத் திருத்தூது பணிக்கு அனுப்பினீரே! தீமை தலைவிரித்தாடும் இவ்வுலகில், உமது தூய திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் ஆகிய அனைவரையும், நீர் தாமே பாதுகாத்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ":ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்": என்கிற வாக்குறுதியை, இன்றைய முதல் வாசகம்மூலம் தருபவரே, மூண்டு வரும் போர்களாலும், யுத்தங்களாலும், நீடித்து வரும் சண்டை சச்சரவுகளாலும், சர்வாதிகார போக்குகளாலும், பயங்கரவாத-தீவிரவாத வன்முறைகளாலும், நிலைகுலைந்து போயுள்ள இவ்வுலகில், அமைதி ஆறெனப் பெருக்கெடுத்து ஓடவும், தலைவர்கள் யாவரும், சமாதானத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்து ஒழுகவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ":தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;": என வாஞ்சையோடு வாக்களிப்பவரே! வறுமை, வேலையின்மை, நோய், முதுமை, இயலாமை, தொடர் தோல்விகள், ஏமாற்றங்கள், குடும்பத்தில் சமாதானமின்மை போன்ற பல்வேறு இன்னல்களால் அவதியுறும் மக்கள் அனைவரையும், குறிப்பாகச் சமீப கால விபத்துகளாலும், போர்களாலும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிப்போரையும், தாயின் பரிவோடு கண்ணோக்கி, கரம்பிடித்து வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ":புதிய படைப்பாவதே இன்றியமையாதது.": என்கிற பவுலடியாரின் அறிவுரையை ஆழ்மனதில் பதியவைத்து, சடங்கு சம்பிரதாயங்களைக் காட்டிலும் உண்மையான நம்பிக்கையும், நம்பிக்கைக்கு ஏற்ற நல்ல வாழ்க்கையும் தான் முக்கியம் என்கிற உணர்வோடு, சாட்சிய வாழ்வு வாழ்வதற்கான, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ":அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு": என்கிற நற்செய்திக்குறிப்பு இன்றளவும் உண்மையாக இருப்பதனால், உம்முடைய இறையாட்சிப் பணிக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி, தேவ அழைத்தல் பெருகும்படி, அறுவடையின் உரிமையாளராம் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.
அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்ஞானபுரம்.
பொதுக்காலம் 14ஆம் வாரம் - ஞாயிறு 06 07 2025

திருப்பலி முன்னுரை

"இறைவா! யாம் இரப்பவை பொன்னும் பொருளும் அல்ல, நின்பால் அன்பும் அருளும் அமைதியுமே": என்ற சிந்தனையை வாழ்வாக்க அழைக்கிறது இன்றைய வழிபாடு.

'என் இறைவா! என் இதயம் உம்மில் அன்றி வேறு யாரிடம் அமைதி பெறும்' என்கிறார் புனித அகுஸ்தினார். 'நிறை அன்பை அளிக்கும் தாயினும் மேலாக நான் உங்களைத் தேற்றுவேன்' என்ற இறைவார்த்தையையும் ஆறுபோல் நிறைவாழ்வு பெருக்கெடுக்கும் என்ற இறையன்பை ஆழமாக உணர்ந்தவர் புனித தோமா.


அறிவில் வளம் பெற, உறவு உரம்பெற, ஆன்மீகம் ஆழம் காண கேள்விகள் அவசியமானது, உறுதி செய்ய வழிகோலுகின்றது.

இன்றைய அருள்வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிப் பேசுகின்றது. அமைதி என்பது கடவுளின் கொடை. எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்கு அமைதி உண்டாகுக என்று வாழ்த்த பணிக்கிறார் இயேசு. 'கிறிஸ்துவை நம்பும் ஒவ்வொருவருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக' என்கிறார் புனித பவுல். சீடர்களாக வாழ்வது ஆண்டவரின் மேல் கொண்ட அன்பை அதிகப்படுத்தும். அளவில்லாத அன்பும் இறைப்பராமரிப்பின்மீது நம்பிக்கையும் கொண்டு வாழ நம்மைத் தூண்டும். இறைவனைப் பின்பற்றும்போது நமக்கு நூறு மடங்கு ஆசீர்வாதமும் அதே சமயம் துன்பமும் சவால்களும் இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாய் இப்பலியில் இணைவோம். இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ முயற்சிப்போம்.
 
 
மறையுரை சிந்தனைகள்
 
அக்கறை காட்டுவோம் ...

ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது. அவர்கள் வெளியே எடுத்தது. ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது. "கோழி தெனாவட்டாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான். நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்" என்றது.

மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதே பதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம். எலி மாட்டிக்கொண்டு விட்டது என்று பண்ணையார் மனைவி ஓடி வந்து எலிப்பொறியைத் தன் கையில் தூக்கினாள். "ஆ " எனக் கத்தினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழியை கொன்று சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள். அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை வெட்டினார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.

அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேட்போம். ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம். பிறரின் பிரச்சனையை தீர்க்க முயலாவிட்டாளும் காது கொடுத்து கேட்கவாவது செய்வோம். பிறரின் துன்பத்தில் இதமான ஒருவார்த்தை பேசுவோம்.

மேலே வாசித்த கதை போலவே உண்மை நிகழ்வு ஒன்று அண்மையில் இந்தியாவில் தமிழகத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் காலை வேளையில் வாலிபன் ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அருகில் நின்ற காவல்துறை உட்பட நுற்றுக்கு மேற்பட்ட மக்கள் கொலையை தடுக்கவில்லை. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை. தண்ணீர் தண்ணீர் எனக் கேட்டும் யாரும் தண்ணீர் தரக்கூட முன் வரவில்லை. இதைக் கேள்விப்பட்ட சமூகநல ஆர்வலர் ஒருவர் சுவாதி பேசுவது போல ஒரு கட்டுரையை வாட்ஸ் அப்பில் இப்படி வெளியிட்டுள்ளார்.

நான் தான் சுவாதி பேசுகிறேன். இன்று இறந்துவிட்ட நான் இன்னும் சில நாள் காட்சி ஊடகத்தில் உங்களுடன் வாழத்தான் போகிறேன். அதற்கு முன் உங்களுடன் சிலவற்றை பேசிவிட்டு போய்விட ஆசைப்படுகிறேன். எல்லோரையும் போல கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்த சமகால சமுதயத்தில் நானும் ஒருத்தி தான். எனக்கான கனவுகள் அதிகம் இல்லை. எல்லோரையும் போன்ற நானும் ஒரு சக மனுஷிதான். இன்று நானும் வழக்கம் போல என் அன்றாட வேலைக்கு கிளம்பினேன். வார இறுதிநாட்களை மகிழ்ச்சியுடன் செலவழிக்க நினைக்கும் சராசரி கனவுகளுடன். என் அப்பாவும் அப்படித்தான் நினைத்து என்னை அந்த இரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்.

உங்களில் எத்தனை பேர் இன்று அந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் உங்களின் மனதிற்கு தெரியும். உங்களில் எத்தனை பேர் பெண்கள் முன்னேற்றத்தை வாய்கிழிய பேசியவர்கள் என்று எனக்கு தெரியாது இன்று நான் வாய்கிழிபட்டு தான் இறந்தேன். உங்களில் ஒருவருக்கு கூட அதை தடுக்க அக்கறை இல்லையே,.

அவனை தடுக்காத உங்களின் கயமை கூட எனக்கு புரிந்தது. ஆனால், அவன் போன பின்பு எனக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கவோ அல்லது என் தாகத்தை போக்க தண்ணி கொடுக்க கூடவா ஆள் இல்லை. இரண்டு மணி நேரம் என்னை வேடிக்கை பார்த்தீர்களே அந்த கணங்கள் கூட உங்களை சுடவில்லையா?

உங்களின் அதிகபட்ச சமூக அக்கறை இன்று ஒரு நாள் உங்களின் பேசு பொருள் நான். எப்படியும் இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் என்னை கொன்றவன் எங்கேனும் பிடிபடுவான் இல்லை நீதிமன்றத்தில் சரணைடைவான். என் ஒழுக்கத்தை பற்றி ஒரு நீண்டவாதம் பேசுவான். இல்லை என்னால் ஏமாற்றப்பட்டதாக புலம்புவான். அதையும் விவாத பொருளாக வைத்து விவாதித்து கொண்டே இருங்கள்.

இல்லையேல் ஆளும் வர்க்கம் அவனுக்கு ஒரு தோட்டாவை பரிசாக அளித்து அவனை கொன்றுவிடும் அதையும் பாராட்டி ஒரு பதிவிட்டு உங்கள் சமூக கடமையை ஆற்றிவிடுங்கள். அதையும் மீறீனால் ஒரு கவிஞனின் இரங்கற்பா ஒரு பேச்சாளனின் தொண்டை நீர்வற்ற ஒரு உரை. ஒரு எழுத்தாளனின் ஒரு பக்க கட்டுரை இது தானே என் சாவின் எச்சங்கள்.

நான் நானாக இங்கு வீழ்த்தப்படவில்லை. ஒட்டுமொத்த சமூகமாகவே வீழ்த்தப்பட்டு இருக்கிறேன். அதை மறந்துவிடாதீர்கள்.

அன்பு, நீதி, அக்கறை, இரக்கம். பிறர் நலம் பேணுதல் போன்ற நற்பண்புகள் மனித மனங்களில் நிலவியிருந்தால் இப்படியான ஒரு கொலை நிகழ்வு நிகழ்ந்திருக்காது.
இன்று துன்புறும் மனிதர்களை வேடிக்கை பார்க்கும் சமூகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆபத்து காலத்தில் உதவுவோர் பேரன்பு படைத்தவர்.

பிறர் செய்கின்ற தவறுகளை பொறுத்துக் கொள்வோம்.

நோயுற்றோரை, சிறையில் இருப்போரை, ஆறுதல் தேடுவோரை அக்கறையுடன் அரவணைப்போம்.

ஒரு தவறை தடுக்க முடிந்தும் தடுக்காதவர் அந்த தவறுக்கு துணை போகிறவர்.

மனித உரிமை மீறல் நடைபெற விடாமல் தடுப்பது தவறல்ல.

அநீதி நடக்கும் போது தட்டிக் கேட்போம்.

நல்லது செய்யும் போது பிறரைப் பராட்டுவோம். பிறரை மதிப்போம். விட்டுக்கொடுத்து வாழ்வோம். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தான் பெற்றுக் கொள்வோம். நல்லதைக் கொடுத்து நல்லதைப் பெற்றுக் கொள்வோம்.

தனக்கென வாழ்ந்தவர் தாழ்ந்தவர் ஆகிறார். பிறருக்கென வாழ்ந்தவர் பெருவாழ்வு வாழ்கிறார்.

நமது எண்ணங்களும் செயல்களும் நாம் உடுத்தும் உடைகள். அவை கந்தல்கலாகவும் கிழிசல்களாகவும், அழுக்காகவும் இருக்கக்கூடாது. அவை நாம் யார் என நம்மை இனம் காட்டக்கூடியவை.

திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியை கட்டி எழுப்பக் கடமைப்பட்டுள்ளோம்.

அன்புக்காகவும், அமைதிக்காகவும், நீதிக்காகவும் உழைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
மனித மனம் அமைதிக்காக அலைமோதுகிறது. மனிதன் மன அமைதிக்காக ஏங்கித் தவிக்கிறான். அந்த அமைதியை மனித மனங்களில் நிலைக்கச் செய்ய முன் வருவோம்.

நம் மனதை முதலில் அமைதிப் படுத்துவோம். சமூதாயத்தில் குழப்பங்கள் நிலவுகின்ற இடங்களில் அமைதியை ஏற்படுத்த முன்வருவோம்.

தனி மனித ஒழுக்கம் இறையாட்சிப் பணியின் சமூக மாற்றத்தின் முதல் காரணி. நன்றும் தீதும் பிறர் தர வாரா. நம் மனத்தால் கூடப் பிறருக்கு தீங்கு நினைக்காது வாழ்வோம்.
 
ஆசை, கோபம், களவு கொள்பவர் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவ தெய்வம்.

அன்பு நன்றி கருணை இரக்கம், அக்கறை கொண்டு மனித வடிவ தெய்வமாக நடமாடி இறையாட்சியை கட்டி எழுப்புவோம்.

இறையாட்சி மலர உறவில் உரிமையைக் கொடுப்போம்.
வாழ்வில் நம்பிக்கையைக் கொடுப்போம்.
அன்பில் உண்மையைக் கொடுப்போம்.
நட்பில் நேர்மையைக் கொடுப்போம்.
துன்புறும் ஏழைகளுக்கு இதயத்தை திறப்போம்.

சென்ற இடமெல்லாம் நன்மை செய்த இறைவா! தொண்டு செய்வதில் இன்பம் கொண்டீர். எங்களுக்காகவே உம் உயிரை கொடுத்தீர். கொடுமையான சாவின் போதும் எதிரிகளை மன்னித்தீர். நோயாளிகளிக்கு சுகம் தந்தீர். தொழுநோயாளிகளை தொட்டுத்தூக்கி எடுத்தீர். உம்மைப் போல நாங்களும் வாழ்ந்திட அருள்புரியும். அன்பு செய்து மன்னித்து வாழ உதவிடும். மற்றவர்கள் வாழவும் மனித மாண்புக்கான உரிமை பெறவும் மனதார நாங்கள் எங்களையே செலவிடச் செய்யும். வன்முறைக்கும் இருளுக்கும் நடுவிலே நாங்கள் உமது அன்பையும் அமைதியையும் நிலைக்கச் செய்ய துணைபுரியும்

 
மறையுரைச்சிந்தனை அருட்சகோதரி: மெரினா O.S.M.

I. எசாயா 66:10-14
II. கலாத்தியர் 6:14-18
III. லூக்கா 10:1-12, 17-20
மகிழ்வின் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சி எது தெரியுமா? நம்மால் முடியாது என அடுத்தவர்கள் கூறியதை அவர்கள் முன்னே செய்து காட்டுவது. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்று சொல்வதை விட வாய்ப்புக்களைப் பயன்படுத்த முயலவில்லை என்று சொல்வதே சரியானது. நாம் இந்த உலகில் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்தது வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாமே மகிழ்வினை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட வேண்டும் அதை நம்முடனே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் தான். இந்த மகிழ்வின் பட்டியலில் நமது பெயர் இடம்பெற்றிருக்கின்றதா? என்பதை கண்டறியவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புற்ற இஸ்ரயேலர் அடையும் மகிழ்வு நிலை பற்றி எடுத்துரைக்கின்றார். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல அவர்கள் தேற்றப்படுவார்கள் என்கிறார். சிறு குழந்தைகள் தங்களது தாயை கட்டி அணைத்து மகிழ்வைத் தெரிவிப்பர். தாய் தனது சீராட்டல் உணவூட்டல் மூலமாக தனது அன்பினை வெளிப்படுத்துவார். அது போல இஸ்ரயேல் மக்கள் சீராட்டப்படுவர் என்று வாக்கு கொடுக்கின்றார்.

இரண்டாம் வாசகத்திலோ பவுலடியார் புதிய படைப்பாவதே இன்றியமையாதது என்கிறார். இதன் மூலம் மீண்டும் பிறந்து மகிழ்வோடு வாழுங்கள் என்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு மகிழ்வோடு வாழ என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று தெளிவாக தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் நாமும் எப்படி மகிழ்வாக வாழ வேண்டுமென்றும் நமக்கும் வெளிப்படுத்துகிறார்.

சீடர்களை பணிக்கு அனுப்பும் பகுதி இன்றைய நற்செய்தி வாசகமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் சீடர்கள், அவர்களின் செயல்பாடுகள் நமக்கு மகிழ்விற்கான வழியைக் காட்டுகின்றன. அதன்படி நாமும் செயல்பட்டால் நமது பெயர்களும் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் என்பதில் நாம் மகிழ்வடைவோம்.

கீழ்ப்படிதல் : இயேசு சொன்னவுடன் இருவர் இருவராக தெரியாத ஒரு ஊருக்கு செல்கின்றனர். ஏன் போக வேண்டும் என்றோ? எதற்காக போக வேண்டும் என்றோ? கேட்கவில்லை. நான் இவரோடு போக மாட்டேன் இந்த ஊருக்கு போக மாட்டேன் என்று சொல்லவில்லை மாறாக, உடனடியாக கீழ்ப்படிகின்றனர். இன்று நாம் பல நேரங்களில் உரிமை என்ற பெயரில் தேவையில்லாமல் கேள்விகள் கேட்டு நமது வாய்ப்புக்களை தவறவிடுகின்றோம். நமது கேள்வி கேட்கப்படும் இடம் சூழல் சரிதானா என்று பார்த்து கேட்க வேண்டும்.

செயல்படுதல்: இயேசு சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். அவர் சொன்னதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தைக் கேற்ப வாழ்கின்றார்கள். சரி என்று சொல்லிவிட்டு போகாமலோ, முடியாது என்று சொல்லிவிட்டு சென்றோ இவர்கள் இருக்கவில்லை. மாறாக சொன்னதை செயலில் காட்டுகின்றார்கள். நாம் சில செயல்களை செய்வதற்கு கால தாமதம் செய்கின்றோம். அதை விடுத்து உடனடி செயலில் இறங்க முயல்வோம்.

குணமளித்தல் : தங்களுக்கு கிடைப்பதை உண்டு நிறைவடைந்து தங்களது உடல் உள்ள பலனை அதிகரித்துக் கொள்கின்றனர். அதன் பலனாக தாங்கள் பெற்ற நலனை பிறருக்கும் குணமளிக்கும் வரமாக தருகின்றனர். நம்மிடத்தில் பலரிடம் இன்று சாப்பாட்டில் குறை கூறும் பழக்கம் இருக்கிறது. கொடுப்பதை உண்பதை விட விரும்பியதை கேட்டு உண்பதையே பெருமையாக எண்ணுகின்றோம். இதனால் பலனும் கிடைப்பதில்லை நலனும் கிடைப்பதில்லை.

பறைசாற்றுதல்: பிடித்தவர் பிடிக்காதவர் என்ற வேறுபாடு இன்'றி அனைவருக்கும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்று துணிவுடன் பறைசாற்ற ஆரம்பித்தனர். விரும்பாதவர்களுக்கு எதிராக தூசியை உதறி எதிர்ப்பையும் தெரிவித்தனர். அவர்களது துணிச்சலான பறைசாற்றுதலால் எல்லாம் நலமே நடந்தேறின. நாம் பல நேரங்களில் நற்செய்தியைப் பறை சாற்றவே விரும்புவதில்லை. அப்படியே பறைசாற்றினாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதில்லை. துணிவுடன் நற்செய்தியை பறைசாற்றி மகிழ்வோம்.


நன்மையை மட்டும் கூறுகின்றனர்.: சீடர்களது பயணத்திலும் பணியிலும் இன்பங்களோடு துன்பங்களும் நிறைந்து இருந்திருக்கும். ஆனாலும் அவர்கள் நன்மையை மட்டுமே இயேசுவிடம் தெரிவிக்கின்றனர். நாமும் நன்மையை மட்டுமே சொல்லிப் பழகுவோம்.

இப்படிப்பட்ட குணங்களோடும் நலன்களோடும் நாம் வாழும் போது நமது பெயர்கள் நிச்சயம் விண்ணகத்தில் இடம்பெற்றிருக்கும். சாதாரண அட்டைகளிலும் பலகைகளிலும் நமது பெயரைப் பார்த்து மகிழும் நாம் விண்ணகத்தின் நுழைவாயிலில் நமது பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் குறித்து பெருமகிழ்வடைவோம். ஏனெனில் நம்மை அடையாளப்படுத்துவது நம் பெயர். நமது பெயர் இடம்பெற்றிருக்கும் இடம் , அது பத்திரிக்கை ஆனாலும் மடலானாலும் வாழ்த்துப் பலகையானாலும் உயரத்திற்கும் வடிவத்திற்கும் ஏற்ப நமக்கு மகிழ்வைத்தரும். ( எனது பெயர் பெரிய எழுத்துக்களில் பதாகைகளில் வரவேண்டும். முன்னாடி பின்னாடி இந்த அடைமொழிகளும் பட்டங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.)

இதற்கு எல்லாம் மேலாக நமது பெயர்கள் விண்ணகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. என்பது குறித்து அகமகிழ்வோம். அதற்கேற்ப நமது பெயரை அப்பட்டியலில் சேர்க்க முயற்சி செய்வோம். மகிழ்வு என்னும் பெயர்ப்பட்டியலில் நமது பெயரையும் சேர்க்க நம்மாலான செயல்களை செய்ய முற்படுவோம். இறையாசீர் என்றும் நம்மோடும் நம் குடும்பத்திலுள்ள அனைவரோடும் இருப்பதாக ஆமென்.


 
மறையுரைச்சிந்தனை  - அருள்பணி ஏசு கருணாநிதி
 
பொதுக்காலம் 14ம் ஞாயிறு - 03.07.2022

I . எசாயா 66: 10-14;
II .கலாத்தியர் 6: 14-18;
III.லூக்கா 10: 1-12, 17-20)


அவர் மடியில் மகிழ்ச்சி!


ஒரு குழுவினர். அவர்கள் சென்றார்கள். அவர்கள் வெறுங்கையராய்ச் சென்றார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போல சாந்தமாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களோ ஓநாய்களைப் போல ஆபத்தானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை. தோளில் பைகள் இல்லை. மாற்று உடைகள் இல்லை. அரையில் பணம் இல்லை. பாதங்களில் மிதியடிகள் இல்லை. அவர்கள் போகும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அடுத்தவருக்கு வணக்கம் செலுத்தி முகஸ்துதி செய்யும் குணமும் அவர்களிடம் இல்லை. யாருடைய உறவும் அவர்களுக்குத் தேவையாய் இல்லை. உறவுகளை அவர்கள் சுமைகளாய் நினைத்தார்கள். தங்கள் கண்களில் பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் முன் வைக்கப்பட்டதை உண்டார்கள். அங்கிருந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்கள். இறையரசு வந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னார்கள். சிலர் கதவுகளைத் திறந்து ஏற்றுக்கொண்டனர். பலர் கதவு இடுக்கின் வழியே இவர்களைப் பார்த்துவிட்டு, கதவுகளைத் திறக்கவில்லை. சிலர் இவர்களோடு வாக்குவாதம் செய்தனர். சிலர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களின் வேலை முடிந்து தன் தலைவரிடம், தன்னை அனுப்பியவரிடம் திரும்பினார்கள். இவர்களின் உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருந்தாலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவர்களின் தலைவர் அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகின்றார்: 'உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று மகிழுங்கள்!' என்கிறார். மனிதர்களின் நினைவில் மறைந்துவிடும் இவர்களின் பெயர்கள் அழியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

இன்னொரு குழுவினர். செழிப்பாக வாழ்ந்தார்கள். நிலம், கடவுள், ஓய்வுநாள், திருச்சட்டம் என வாழ்க்கை இனிதே நகர்ந்தது. ஆனாலும், உடன்படிக்கை மீறலால் நாடுகடத்தப்பட்டார்கள். அடிமைகளாக அடுத்த நாட்டிலும், அநாதைகளாக சொந்த நாட்டிலும் திரிந்தனர். அவர்களின் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தன் தோள்மேல் சுமந்து, 'இதோ! என் மகன்! என் மகள்!' என வலம் வருகின்றார். 'உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்' என்கிறார் அவர்.

இருவருமே இழந்தார்கள்! ஆனால், இழந்த அவர்களை அவர் தன் மடியில் ஏந்திக்கொண்டார். அவரின் மடியில் மகிழ்ச்சி. அவரின் மடியில் மட்டுமே மகிழ்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் பாடங்களைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை இறையரசுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-12, 17-20) வாசிக்கக் கேட்டோம். எல்லாவற்றையும் இழந்தவர்களாய் அவர்களை வழியனுப்பும் இயேசு, இறைவனின் மடியில் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள அவர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:10-14), பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா குலத்தினர் தங்களின் சொந்த நகராம் எருசலேம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை விதைக்கின்ற மூன்றாம் எசாயா, எருசலேமை ஒரு தாயாக உருவகித்து அந்தத் தாயை நோக்கி அனைத்து நாட்டினரும் வர வேண்டும் எனவும், அவளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' (66:13) என்று கடவுளைத் தாயாக உருவகிக்கும் எசாயா, அதே உருவகத்தைக் கொண்டு எருசலேமையும் உருவகிக்கின்றார். 'அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகள்,' 'அவளின் மார்பு,' 'பால்,' 'அவளின் மடி' என்னும் வார்த்தைகள் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயை நம் கண்முன் கொண்டு வருகின்றன. எருசலேம் நகரம் இயற்கையாகவே மலைப்பாங்கான பகுதி. மலைமுகடுகளை மார்பாக உருவகிக்கின்ற எசாயா, முகடுகளில் வழிந்தோடும் நீரைப் பால் எனவும், முகடுகள் ஏற்படுத்தும் பள்ளத்தாக்குகளை தாயின் மடி என்றும் உருவகிக்கின்றார். முலைகள், மார்பு, பால், மடி போன்றவை குழந்தைக்கு மகிழ்ச்சி, நிறைவு, அல்லது இன்பம் தந்தாலும், இந்த மகிழ்ச்சிக்கு முன்னால் அந்தத் தாய் அனுபவித்த மரண வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேறுகால வேதனையுற்று தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்த துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனை போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. ஏனெனில் இறைவன் அவர்களை மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார் இறைவன். இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இழப்பு அவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது.

'நீங்கள் பால் பருகுவீர்கள்,' 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்,' 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' என மகிழ்ச்சிக்கு மூன்று பரிமாணங்களைத் தருகின்றார் எசாயா. 'பால் பருகுவீர்கள்' - தாய்மையின் நிறைவே இது. ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக மாற்றி தன் குழந்தையின் பசி தீர்க்கின்றாள். தன் உடலில் பத்து மாதங்கள் சுமந்து குழந்தைக்கு உடலும், இரத்தமும் கொடுத்த ஒரு தாய் தொடர்ந்து பால் வழியாக தன் உடலையும் இரத்தத்தையும் குழந்தைக்குக் கொடுக்கின்றாள். (தன் உடலையும், இரத்தத்தையும் கொடுக்க வல்லவள் பெண் மட்டுமே. அப்படி இருக்க, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் எடுத்து, 'இது என் உடல்,' 'இது என் இரத்தம்' என ஓர் ஆண் கொடுப்பதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி நியாயப்படுத்துவதை இயற்கையை இருட்டடிப்பது போல இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய கேள்வி.) இறைவனின் இரத்தமும், நாடு திரும்பியவர்களின் இரத்தமும் இனி ஒன்றாகிவிடும். 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்' - தாயின் இந்தச் செயல் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. மார்பில் அணைத்துச் சுமக்கப்படாத குழந்தைகள் வளர்ந்தவர்களாகும்போது பாதுகாப்பின்மையால் வருந்துகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளவியல் உண்மை. எதிரிகளின் கைகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தவர்கள் இனி இறைவன் தரும் பாதுகாப்பை பெறுவார்கள். 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' - எந்த ஒரு ஆபத்தும் இல்லாத நிலையை இது குறிக்கிறது. எந்த ஒரு பதட்டமும், கலக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்கும் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் அல்லது தொட்டிலில் கிடத்தி தாலாட்டுகிறாள். போரும், வன்முறையும், இயற்கைச் சீற்றமும் இருக்கும் இடத்தில் ஒரு தாயால் அமரவோ, தன் குழந்தையைத் தாலாட்டவோ முடியுமா? இல்லை. ஆக, இனி போர் இல்லை. வன்முறை இல்லை. இயற்கைச் சீற்றம் இல்லை.

ஆக, எல்லாவற்றையும் இழந்தவர்கள் ஆண்டவரின் மடியில் நிறைவான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் முதல் வாசகத்தில்.

தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியை தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் பவுல் தன் கடிதத்தை நிறைவு செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 6:14-18). 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்' என்னும் பவுல், 'என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதன் அடையாளம்' என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இழப்பின், அழிவின், அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைப் பற்றி பவுல் எப்படி பெருமைப் பட முடியும்? தன் பணியின் தோல்வி மற்றும் தான் அடைந்த துன்பங்களின் அடையாளமான தழும்புகளைக் கொண்டு எப்படி பெருமிதம் கொள்ள முடியும்? மேலும், 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, சிலுவை. அந்தச் சிலுவையின் ஒரு பக்கத்தில் உலகம். மறு பக்கத்தில் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது.

ஆக, வலி, துன்பம், அவமானம், அழிவு அனைத்தும் இழப்புகள் என்றாலும், அந்த இழப்புகள் பவுலுக்கு மகிழ்ச்சியை நிறைவாகக் கொடுக்கின்றன.

சிலுவை என்பதை சீடத்துவத்தின் நீட்சி என்று போதிக்கும் இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை தாம் போகவிருந்த ஊருக்கு தமக்கு முன் இருவர் இருவராக அனுப்புகிறார். இந்த நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில கிரேக்க பிரதிகள் 'எழுபது பேரை' அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன. நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்குப் பின் இருந்த 72 (அல்லது 70) நாடுகளையும் (காண். தொநூ 10), அல்லது மோசே தன் உதவிக்காக தெரிவு செய்த 72 (அல்லது 70) பேரையும் (காண். விப 24:1, எண் 11:16, 24) இது குறிக்கலாம். இருவர் இருவராக அனுப்பக் காரணம் மோசேயின் சட்டப்படி இருவரின் சாட்சியமே செல்லும் என்பதற்காகவும் (காண். இச 19:15) அல்லது பாலைநிலப் பகுதிகளின் ஆபத்து காரணமாக இருவர் சேர்ந்து அனுப்பப்படுதல் மரபாகவும் இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலும், பேதுரு மற்றும் யோவான் (8:14), பவுல் மற்றும் பர்னபா (11:30, 13:1), பர்னபா மற்றும் மாற்கு (15:39), பவுல் மற்றும் சீலா (15:40) என திருத்தூதர்கள் இருவர் இருவராகவே பணி செய்கின்றனர்.

'இருவர்' என்னும் இலக்கியக்கூறும் இங்கே கையாளப்படுகிறது. இங்கே இயேசு சொல்லும் பழமொழிகளும் இரண்டு: (அ) 'அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு.' (ஆ) ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி. மக்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளும் விதமும் இரண்டு: (அ) 'நேர்முகமாக ஏற்றுக்கொள்வார்கள்.' (ஆ) 'எதிர்மறையாக உதறித் தள்ளுவார்கள்.' இயேசுவின் போதனையும் இரண்டு: (அ) வீட்டிற்குள் போகும் போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) நகருக்குள் போகும்போது என்ன செய்ய வேண்டும்?

முதல் ஏற்பாட்டில் அறுவடை என்பது வரப்போகும் இறுதித்தீர்ப்பையும், இஸ்ரயேல் மக்கள் ஒன்றுகூட்டப்படுதலையும் குறித்தது (காண். யோவே 3:13, மீக் 4:11-13). அறுவடைக் காலம் என்பது விறுவிறுப்பான காலம். விறுவிறுப்பும், வேகமும் இல்லையென்றால் அறுவடை சாத்தியமல்ல. அறுவடைக் காலத்தில் சோம்பித் திரிந்தால் அது முதலுக்கே மோசம் கொண்டுவந்துவிடும். அறுவடைக்கால வேகம் இயேசுவின் மற்ற அறிவுரையிலும் வெளிப்படுகிறது: 'எதையும் கொண்டு செல்லாதீர்கள் - ஏனெனில், நீங்கள் எதையாவது கொண்டு சென்றால் உங்கள் கவனமெல்லாம் உங்கள் உடைமையில்தான் இருக்கும்!' 'யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள்!' 'இந்த ஊரு, வீடு ஓகேவா, அந்த ஊரு, வீடு ஓகேவா, என ஒவ்வொரு ஊராக, வீடாக மாறிக் கொண்டு இராதீர்கள்!'

பின் என்னதான் செய்ய வேண்டும் அவர்கள்? சீடர்கள் செய்ய வேண்டியது மூன்று காரியங்கள் மட்டுமே: (அ) 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - இதுதான் புதிய நற்கருணைப் படிப்பினை. எதையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளும், தன்னிடம் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொடுக்கும் உள்ளம்தான் நற்கருணையைக் கொண்டாட முடியும்! (ஆ) 'உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள்' - இறையாட்சிப் பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல. 'நல்லா இருங்க, சாப்பிடுங்க, நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன், நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க!' என வாயிலேயே அவரைப் பந்தல் போடும் பணி அல்ல. மாறாக, உடல்சார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்தல் - பசித்தோரின் பசி போக்குதல், பிணியுற்றோரின் பிணி போக்குதலே இறையாட்சிப் பணி. (இ) 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்' - சில நேரங்களில் இந்தச் செய்தியை சொல்வது நமக்கு கூச்சமாக இருக்கின்றது!

இப்படி எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இறையாட்சிப் பணிக்குச் சென்ற சீடர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்புகிறார்கள். இவர்கள் செய்த பணியின் காலம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கின்றது. 'ஐயோ! கையில காசு இல்லாம கஷ்டப்பட்டோம்! வழியில் பாம்பு கடிச்சது! மேலாடை இல்லாமல் ரொம்ப குளிரா இருந்தது! அந்தா அவருக்கு காலில் கல் எத்தியது!' என்ற எந்தப் புலம்பலும் இல்லை. மாறாக, 'பேய்கள் கூட அடிபணிகின்றன!' என்று மகிழ்ச்சியால் துள்ளுகின்றார்கள். சீடர்கள் தீமையின் மேல் ('பாம்பு,' 'தேள்,' 'பகைவரின் வல்லமை,' 'தீய ஆவி') அதிகாரம் பெறுகின்றனர். இதைவிட மேலாக அவர்களின் 'பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன'. இந்த இறுதிக் காரணத்திற்காக அவர்கள் மகிழ வேண்டும்.

ஆக, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனின் மடியில் மகிழ்ச்சி காண்கின்றனர். திருத்தூதர் பவுல் இயேசுவின் சிலுவையின் மடியில் மகிழ்ச்சி காண்கிறார். இயேசுவின் சீடர்கள் தங்களுடைய பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது குறித்து மகிழ்கிறார்கள்.

'அவரின் மடியில் மகிழ' நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. கிறிஸ்துவின் இடத்தில் நாம் இருத்தல் வேண்டும்
'இயேசு தான் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் தமக்கு முன் சீடர்களை அனுப்புகிறார்.' இதை சீடர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் மறு இயேசுவாக தங்கள் பணியிடத்திற்குச் சென்றார்கள். இன்று நாம் இந்த உலகிற்குள் மறு கிறிஸ்துவாக வந்துள்ளோம். பல நேரங்களில் 'நான்' என்ற 'ஈகோ' அல்லது 'தான்மை' உணர்வு நம்மில் மேலோங்கி இருக்கிறது. ஆனால், நான் கடவுளின் பதிலியாக இங்கு வந்துள்ளேன் என்றால் கடவுள்போல சிந்திப்பேன், மன்னிப்பேன், பரிவு காட்டுவேன். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் நான் கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும். கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

ஆ. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள்
ஓநாய் வன்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி மென்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி எந்நேரமும் கடிக்கப்படலாம், விழுங்கப்படலாம். அதற்காக, ஆட்டுக்குட்டி தன் இயல்பை விட்டுவிட வேண்டியதில்லை. எதிர்ப்பு அல்லது ஆபத்து எந்நேரமும் நம்மைச் சூழ்ந்தே இருக்கும். இது எதிர்மறைச் செய்தி அல்ல. மாறாக, எதார்த்தச் செய்தி. எல்லாம் நமக்கு நன்றாக இருந்தாலும் நமக்கு மேல் இறப்பு என்ற ஓநாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. இல்லையா? ஆக, எதிர்மறை உணர்வுகள், எதிர்மறையான மக்கள், எதிர்மறையான நிகழ்வுகள் அனைத்தோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

இ. அமைதி உங்களிடம் திரும்பிவிடும்
வீட்டிற்குள் செல்லும் சீடர் அமைதியை அளித்து, அமைதி அங்கே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவர் மனம் தளரக்கூடாது. அதற்காக, அவர் தன் அமைதியை இழந்துவிடக் கூடாது. அவருடைய அமைதி அவரிடம் திரும்பிவிடும். இன்று நாம் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அமைதி இழக்கிறோம். நாம் அழைத்த நபரின் அலைபேசி பிஸியாக இருந்தால், வாட்ஸ்ஆப்பில் இரண்டு டிக் விழுந்தும் நமக்குப் பதில் வராமல் இருந்தால், கண்டக்டர் சில்லறை தர மறந்தால், சுகர் டெஸ்டில் சில புள்ளிகள் கூட இருந்தால், உடல் எடை கூடினால் குறைந்தால் என எல்லாவற்றிற்கும் அமைதி இழக்கின்றோம். 'என் அமைதி என் உரிமை' என்ற ஒரு புதிய பதாகையை நாம் ஏந்திக்கொள்ளலாமே!

இவ்வாறாக, அவரின் மடியில் கிடைக்கும் மகிழ்ச்சி, இறப்பக்குப் பின் கிடைக்கும் நிலைவாழ்வு அல்ல. இது இப்போதே இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி. இது இழப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி.

அவரின் மடியில் மகிழ்தல் நலமே!

 
 
மறையுரைச்சிந்தனைஅருள்பணி மரிய அந்தோணிபாளையங்கோட்டை

இயேசுவின் தூதுவர்களாய்......
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள பெல்ஹெல்வி (Belhelvie) என்ற ஊரில் ஜார்ஜ் ஸ்டாட் (George Stott 1835 -1889) என்றோர் ஆசிரியர் இருந்தார். அவர்க்கு ஒரு கால் கிடையாது. இளம்பிள்ளை வாதத்தால்தான் அவர் தன் காலை இழந்திருந்தார். ஆனாலும், அவர் துடிப்புமிக்க ஓர் ஆசிரியராய்ப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சீனாவில் மறைபரப்புப் பணியைச் செய்துவந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பர் என்பவர் ஜார்ஜ் ஸ்டாட் வழக்கமாகச் செல்லும் ஆலயத்திற்கு வந்து, "யாராரெல்லாம் சீனாவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டதற்கு ஆலயத்தில் இருந்த யாரும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் ஸ்டாட் மட்டும், "நான் ஆர்வமாய் இருக்கின்றேன்" என்று தன்னுடைய கையை உயர்த்தினார். அதற்கு ஹட்சன் டெய்லர் அவரிடம், "உங்கட்குத்தான் ஓர் கால் இல்லையே! நீங்கள் எப்படி சீனாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க முடியும்?" என்று கேட்பதற்கு, அவர், "இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்கள் சீனாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்க விருப்பம் தெரிவிக்காததால், ஒற்றைக் காலுள்ள நான் விருப்பம் தெரிவித்தேன்" என்றார்.

இதைக்கேட்டு ஹட்சன் டெய்லர் மிகவும் மகிழ்ந்துபோய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவர் ஜார்ஜ் ஸ்டாட்டிற்கு செயற்கைக் காலினைப் பொருத்தி, சீனாவில் நற்செய்தியை அறிவிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 1865 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற ஜார்ஜ் ஸ்டாட் ஏறக்குறைய இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த உத்வேகத்தோடு அறிவித்து, பலரும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தார். இன்றைக்கு சீனாவில் கிறிஸ்துவம் இந்தளவுக்கு வேரூன்றி இருக்கின்றதென்றால், அதற்கு இவர் ஆற்றிய பணிதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

தனக்கு ஒரு காலை இல்லை என்பதைக்கூட ஒரு குறையாகக் கருதாமல், ஆண்டவரின்நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்த ஜார்ஜ் ஸ்டாட் நமது கவனத்திற்கு உரியவர். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் நற்செய்தியை எல்லா மக்கட்கும் எடுத்துரைவேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்தி இரண்டு அல்லது எழுபது சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்விற்கும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வில், அவர் அவர்களைக் கலிலேயாப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார் (மத் 10; லூக் 9: 1-11). ஆனால், இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வில் அவர்களை யூதேயப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார். முன்னவர்களோ திருத்தூதர்கள், பின்னவர்களோ சீடர்கள்.

இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதன்மூலம் நற்செய்தியாளர் நமக்குச் சொல்லவருகின்ற செய்தி, இயேசுவின் நற்செய்தி எல்லா நாட்டு மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றால், தொடக்க நூல் பத்தாம் அதிகாரத்தில் எழுபது நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. (அக்காலத்தில் எழுபது நாடுகள்தான் இருந்திருக்கும் போல). இயேசு, அந்த எழுபது நாடுகட்கும் தன் சீடர்களை அனுப்புவதைக் குறிக்கின்ற விதமாக எழுபது அல்லது எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்றார். இவ்வாறு அவர் எல்லா மக்களும் தன்னுடைய நற்செய்தியை அறிந்துகொள்ளச் செய்கின்றார்.

நற்செய்திப் பணி ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டும் இயேசு தன்னுடைய நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று மேலே பார்த்தோம். இப்பொழுது தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று இப்பொழுது பார்ப்போம்.

இயேசு எழுபத்தி இரண்டு பேரை அனுப்புகின்றபோது, தான் போகவிருந்த இடங்கட்கு தனக்கு முன்பாக, தன் சார்பாக அனுப்புவதாக நற்செய்தியாளர் பதிவுசெய்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடாது. அடுத்ததாக, பயணத்திற்கு பணப்பையோ, வேறு பையோ மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறுகின்றார். இதற்குக் காரணம், நற்செய்திப் பணி என்பது ஆண்டவருடைய பணி, ஆண்டவரை நம்பிச் செய்யப்படும் பணி. அப்படிப்பட்ட பணியை பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். மேலும், இயேசு குறிப்பிடுவது போல, "வேலையாள் கூலிக்கு உரிமையுடைவர் (லூக் 10:17). அப்படியிருக்கும்போது, யாராரெல்லாம் நற்செய்தியைக் கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கட்கு உணவும் உடையும் உறைவிடமும் தருவது அவர்களுடைய கடமையாகும். இயேசு தன்னுடைய சீடர்களிடம், வழியில் எவர்க்கும் வணக்கம் செலுத்தவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார். அதற்குக் காரணம், அறுவடை அதிகமாக இருக்க, வேலையாட்களோ மிகவும் குறைவாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது எல்லார்க்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தால், நற்செய்திப் பணியைச் செய்து முடிக்கமுடியாது என்பதற்காக அப்படிக் கூறுகின்றார். ஆகையால், விரைவாக அதுவும் ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டிய நற்செய்திப் பணியை அவரை நம்பிச் செய்வது மிகவும் நல்லதாகும்.

நற்செய்திப்பணி செய்ய ஆண்டவர் ஆற்றலைத் தருகின்றார்

எல்லா மக்களையும் சென்றடைய வேண்டிய நற்செய்திப் பணி எத்துணை முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்த நாம், நற்செய்திப் பணியைச் செய்வோர்க்கு இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் வல்லைமையும் நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகவும் . நற்செய்திப் பணியைச் செய்கின்றபோது ஓநாய்கள் போன்று பகைவர்களிடமிருந்து எதிர்ப்பும் இன்னலும் இடையூறும் வரலாம். இத்தகைய தருணங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விடமாட்டார் என்பதை இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் இயேசு அதிகாரமும் வல்லமையும் கொடுத்தார் என்று லூக் 9:1 ல் வாசிக்கின்றோம். அத்தகைய வல்லமையையும் அதிகாரத்தையும் உடனிருப்பையும் சீடர்கட்கும் தந்தார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் சீடர்கள் பணித்தளங்கட்குச் சென்று, திரும்புகின்றபோது, "உம் பெயரைச் சொன்னால் பேய்கள்கூட அடிபணிகின்றன" என்கின்றார்கள்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து, அவர்தரும் ஆற்றலையும் வல்லமையும் பாதுகாப்பையும் உணர்ந்து அவருடைய பணியைச் செய்வோம்.

சிந்தனை
"நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (எரே 1: 18,20) என்று இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து ஆண்டவர் கூறுவார். இதே வார்த்தைகளைத் தான் நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்திப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 
இறைவாக்கு ஞாயிறுஅருள்பணி முனைவர்அருள் பாளையங்கோட்டை
சீடனின் பண்புகள்

மனிதன் விளம்பரப் பிரியனாக மாறிக் கொண்டிருக்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன் பெயரை எங்கேயாகிலும் எழுதி நிலைநாட்ட விரும்புகிறான். தன் புகைப்படம், தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை பிறர் படித்துப் பார்க்கவேண்டும் என்பது அவனது ஆசை. அச்சில் தன் பெயரை முதலில் காணும்போது, அவனது உள்ளம் துள்ளுகிறது.

உல்லாசப் பயணமாக மலை உச்சிக்குச் சென்றால் அங்கே பாறைகளிலே பல்வேறு பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆலயம் சென்றால் அங்கே மின் விளக்குகளிலும், மின்விசிறிகளிலும் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். திறப்பு விழாக்களிலும், கட்டடங்களில் உள்ள கல்வெட்டுகளிலும் பெயரைப் பதிவு செய்வதைப் பார்க்கலாம். ஏன், இன்று இரயில் பெட்டிகளிலும், பேருந்துகளிலும், கழிவறைகளிலும் சிலர் தங்கள் பெயர்களை எழுதுகின்ற நிலை.

ஆனால் ஆண்டவர் திருத்தூதர்களை நோக்கி தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் (லூக். 10:20) என்கிறார். சீடன் என்பவர் யார்? (லூக். 14:27) என் சீடன் தன் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் அனைவரையுமே ஏன், தன் உயிரையுமே இழந்து தன் சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டும் என்கிறார். இல்லையேல் அவன் என் சீடன் அல்ல.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டிலே ஆண்டவர் தன் சீடனாக இருப்பவனுக்கு 4 நிலைகளைக் காட்டுகின்றார்.

முதலாவதாக: சமாதானத்தின் தூதுவனாக இருக்க வேண்டும். 1. எந்த வீட்டுக்கு, எந்த ஊருக்குள் நுழைந்தாலும் இந்த வீட்டிற்கு இந்த ஊருக்குச் சமாதானம் என வாழ்த்துங்கள் என்கிறார். திருத்தூதன் சமாதானத்தின் தூதுவனாக அனுப்பப்படுகிறான். மேலும் இயேசு சொன்னார் (யோவா. 14:27) நான் தரும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல என்றார். உலகில் பிறந்த போதும் சரி, உயிர்த்து காட்சி தந்த போதும் சரி, உங்களுக்குச் சமாதானம் என்று வாழ்த்தினாரே அந்த சமாதானப் புறா, அவர்தான் அந்தச் சமாதானம். அதைக் கொடுப்பதற்காகத்தான் நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம்.

இரண்டாவது : சீடனுக்குப் பெருமை சிலுவையில்தான். 2. உண்மைச் சீடன் சிலுவையில்தான் பெருமைப் படுவான். பணம், பட்டம், பதவி என்பதில் பெருமைப்பட மாட்டான். எனவேதான் பணப்பையோ, கைப்பையோ எடுத்துச் செல்ல வேண்டாம். ஆண்டவரின் ஏழ்மையே அவன் சொத்தாகத் தாங்கிச் செல்ல வேண்டும் என்கிறார் ஆண்டவர். சிலுவையின் மூலமாகத்தான் அப்போஸ்தலர் உலகோடும், உலகம் திருத்தூதர்களோடும் அறையப்படுகின்றன. நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அன்றி வேறு எதிலும் ஒருபோதும் பெருமைப்பட மாட்டேன் (கலாத். 6:14) என்றார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு விட்டேன். இனி வாழ்வது நான் அல்ல. கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் (கலாத். 2:19-20) என்கிறார்.

முன்றாவது: சீடன் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டியாக அனுப்பப்படுகிறான். 3. ஓநாய்கள் மத்தியில் ஒரு ஆட்டுக்குட்டி சென்றால் என்ன நடக்கும்? கடித்துக் குதறப்படும். இதை அறிந்த இயேசு ஆபத்து இருந்தாலும் ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டியைப் போல் உங்களை அனுப்புகிறேன் என்கிறார். அவரது பாதுகாப்பு உண்டு. நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியானவர் உங்களோடு இருப்பார் (யோவா. 16:13) என்றும் வாக்களித்துள்ளார். உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன் (மத். 28:20)

நான்காவதாக: சீடன் என்பவன் மகிழ்பவன் 4. துன்பத்தில் மகிழ்பவன்தான் இயேசுவின் உண்மை சீடன். பணியின் காரணமாக சீடன் துன்பப்படும்போது அது விண்ணகத்தில் கணக்கில் எழுதப்பட்டுள்ளது என்பதை அவன் மனதில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். அப்போது உலகம் மகிழும். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பெண்ணுக்குப் பேறுகால வேதனை வந்துவிட்டதால் வேதனை அடைகிறாள். ஆனால் உலகில் ஒரு உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தன் வேதனையை அவள் மறந்துவிடுவாள் (யோவா. 16:20-21). அதுபோல உழைப்பவனுக்குப் பலன் கிடைக்கும். எனவே மகிழுங்கள் என்கிறார் ஆண்டவர்.

என் பெயர் எங்கே எழுதப்பட்டுள்ளது? வானகத்தில் எழுதப்பட்டுள்ளதா? எழுதப்பட நான் சீடனாகப் பணிபுரிகிறேனா? அல்லது சிலுவையைக் கண்டு, ஓநாயைக் கண்டு ஓடுவது போல ஓடி விடுகின்றேனா?

மோட்ச வாசற்படிக்கு ஓர் ஆன்மா வந்தது. யார் என்று பேதுரு கேட்டபோது நான் ஒரு பணக்காரன். நான் உள்ளே செல்ல வேண்டும் என்றான். மோட்சத்திற்குப் போகின்ற அளவுக்கு நீ என்ன நல்ல காரியம் செய்தாய் என்று கேட்டார் பேதுரு. ஒருமுறை ஈஸ்டர் விழாவிற்கு சென்றபோது 30 பைசா ஒரு ஏழைக்குக் கொடுத்தேன் என்றான். கணக்குப் புத்தகத்தில் எழுதப்பட்டள்ளதா என்று அக்கவுண்டண்ட் மத்தேயுவை புரட்டினார் பேதுரு. ஆமாம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார் மத்தேயு . சரி இன்னும் வேறு என்ன செய்துள்ளாய் என்று கேட்டார்? இந்த கிறிஸ்மஸ் திருவிழாவில் ஒரு ஏழைக்கு 50 பைசா கொடுத்தேன் என்றான். அதுவும் வரவில் உள்ளது என்றார் மத்தேயு. வேறு ஏதாவது? இல்லை என்றான்.

யோவ்! மத்தேயு, 80 பைசாவை அவனிடம் கொடுத்து நரகத்திற்குத் தள்ளிவிடும் இந்த மனிதனை என்றார் பேதுரு.
 
மகிழ்ச்சியூட்டும் மறையுரைகள் குடந்தை ஆயர் F.அந்தோனிசாமி
ஒரு தாயைப் போல நான் உன்னைத் தேற்றுவேன்

ஓர் அடர்ந்த காடு! அந்தக் காட்டுக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் முனிவர் சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் கண்ணெதிரே ஒன்று நடந்தது. அது கோடைகாலம். இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டதால் தீப்பொறி பறக்க காடு பற்றிக்கொண்டது.

அவருக்கு முன்னேயிருந்த ஒரு பெரிய மரத்தின் உச்சியில் ஒரு குருவிக்கூடும். குருவிக்கூடு இருந்த அந்த மரமும் தீப்பற்றிக்கொண்டது.

தன் குஞ்சுகளுக்கு உணவு தேடிச் சென்ற தாய்ப்பறவை கூடு திரும்பியது. அதன் கண் முன்னால் அதன் கூடு இருந்த மரம் பற்றி எரிந்துகொண்டிருந்தது.

பாவம் அந்தத் தாய்ப்பறவை! அது கத்தியது, கதறியது, அழுதது, அலறியது. குஞ்சுகள், அம்மா என்று அலறின . சரியாக இறக்கை முளைக்காத குஞ்சுகள் உள்ள மரத்தைத் தாய்ப்பறவை கத்திக்கொண்டு சுற்றிச் சுற்றி பறந்தது. கூட்டை அதனால் நெருங்க முடியவில்லை ! நெருப்பின் அனல் அதைச் சுட்டது. கடைசியாக தாய்ப்பறவை ஒரு முடிவை எடுத்தது. தன் உயிரைக் கொடுத்தாவது தன் குழந்தைகளின் உயிரைக் காப்பது என்ற முடிவுக்கு வந்தது.

கூட்டை நோக்கிப் பாய்ந்தது. குஞ்சுகள் மீது அமர்ந்து அவற்றைத் தன் சிறகுகளால் மூடியது.

மரம் முழுவதும் நெருப்பில் எரிந்து கீழே சாய்ந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் ஒரு குச்சியை எடுத்து கீழே கிடந்த குருவிக்கூட்டைக் குத்தினார்.

அவர் கண்களை அவரால் நம்பமுடியவில்லை! அந்தக் கூட்டுக்குள்ளே இரண்டு குஞ்சுகள் உயிரோடு இருந்தன. தாய்ப்பறவை தன் சிறகுகளால் அந்தக் குஞ்சுகளை மூடியவாறு இறந்து கிடந்தது.

இதுதான் ஒரு தாயின் அன்பு. தனது குழந்தையைத் தேற்றுவதற்காக எதையும் செய்ய முன்வருவாள் ஒரு தாய். இதோ இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன் (எசா 66:13) என்கின்றார் இறைவன்.


மேலும் அறிவோம் : தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.
 
மறையுறை மொட்டுக்கள் தெய்வத்திரு அருள்பணி Y.இருதயராஜ்
ஹெலன் ஓர் அழகான இளம் பெண் ; பணக்கார அப்பாவின் ஒரே மகள். அவளுக்கு எக்குறையும் இல்லை . இருப்பினும் அவள் தன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். அவள் கடிதத்தில் எழுதியிருந்தது: " எனக்கு எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லை. நான் நித்திய சாந்தியைத் தேடிச் செல்கிறேன், எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்."

இன்றைய அறிவியல், தொழில் நுட்ப உலகம் மனிதருக்குப் பல்வேறு வசதிகளைக் கொடுத்துவிட்டு, மன அமைதியைத் திருடிக் கொண்டுவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. மனிதர் தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கே பலிக்கிடாய் ஆகிவிட்டனர்.

இப்பின்னணியில் இன்றைய அருள் வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தம் மக்களுக்கு நிறை வாழ்வை (அமைதியை) ஆறுபோலப் பாய்ந்தோடச் செய்வதாக வாக்களிக்கின்றார் (எசா 66:12). இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம், "நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக' என்று வாழ்த்தும்படி கேட்கின்றார்" (லூக் 10:5), கிறிஸ்து இம்மண்ணுக்கு வந்தபோது கொண்டுவந்த முதல் கொடை அமைதி (லூக் 2:14). கிறிஸ்து விண்ணகம் சென்றபோது வழங்கிய இறுதிக் கொடை அமைதி (யோவா 14:27, கிறிஸ்துவின் நற்செய்தி அமைதியின் நற்செய்தி (எபே 4:17). அமைதி என்பது கடவுளின் கொடை: அதே நேரத்தில் மனித முயற்சியின் கனி,

அமைதிக்கு மாபெரும் இடையூறு பேராசை, ஆசைகளை வளர்க்க வளர்க்க அமைதி வெகு தொலைவில் சென்றுவிடுகிறது. மனிதர் கடவுளிடம் மட்டுமே முழுமையான அமைதி பெற முடியும். புனித அகுஸ்தீன் கூறுகிறார்: "இறைவா! எங்களை உமக்காகப் படைத்துள்ளீர். உம்மை அடையும்வரை எம் நெஞ்சத்திற்கு நிம்மதி கிடையாது."

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார் "நீங்கள் பால் பருகுவீர்கள். மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள். மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்": (எசா 66:12-13). எவ்வளவு ஆறுதலான செய்தி! கடவுள் நம்மைத் தாயன்புடன் பேணிக் காக்கின்றார் என்பது உண்மையென்றால், நாமும் தாயின் மடியில் தவழும் குழந்தை போன்று கடவுளிடம் நம்பிக்கை வைக்க வேண்டாமா? நாம் இறுமாப்புக் கொள்ளாமல், நமது சக்திக்கு அப்பாற்பட்ட அரிய, பெரிய செயல்களில் ஈடுபடாமல், தாய்மடி தவழும் குழந்தைபோல் அமைதியுடன் ஆண்டவரை நம்பி வாழ வேண்டும் (திபா 131), கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யும் (மத் 6:24) இருமனப்பட்ட இதயம் கொண்டிராமல் கடவுளுக்கு மட்டும் பணிவிடை புரியும் ஒருமனப்பட்ட உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார், அப்போது அவர்களிடம் பணப்பையோ வேறு எப்பையோ எடுத்துச் செல்லக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகின்றார். ஏனெனில் பணத்தை நம்புகிற எவரும் நற்செய்தியை அறிவிக்கமாட்டார்கள். கடவுளுடைய அரசைப் பணத்தைக் கொண்டு எவரும் நிறுவமுடியாது. நற்செய்திப் பணிக்காகத் திருச்சபை நிறுவனங்களைக் கட்டி எழுப்பியது, ஆனால் காலப்போக்கில் திருச்சபை நிறுவனங்களைக் காப்பதில் கவனம் செலுத்திவிட்டு நற்செய்திப் பணியை ஓரங்கட்டிவிட்டது, இன்றையத் திருப்பணியாளர்கள் சிறந்த நிர்வாகிகள்; ஆனால் சிறந்த மறைப் பணியாளர்கள் அல்ல என்பது வேதனைக்குரியது.

நற்செய்திப் பணிக்குப் பணம் தேவையில்லையா? உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் விரைவில் வரவிருக்கின்றது என்பதை வலியுறுத்தி ஒரு பிரிவினை சபையினர் ":இயேசு வருகிறார்": என்ற தலைப்பைத் தாங்கிய ஒரு துண்டு பிரசுரத்தை ஒரு பேருந்தின் நடத்துனரிடம் கொடுத்தனர். அவர், ":இயேசு வரட்டும்; ஆனால் பயணச் சீட்டு வாங்கிய பிறகுதான் பேருந்தில் ஏற வேண்டும்" என்று கண்டிப்பாகக் கூறினார். நற்செய்தியை அறிவிக்கும் பணியாளர்கள் பயணச்சீட்டு வாங்கப் பணம் வேண்டாமா? அத்துடன் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்? இக்கேள்விகளுக்கு இயேசு கூறும் பதில் என்ன?

இயேசு கூறுகிறார்: "வேலையாள் தன் கூலிக்கு உரிமை உடையவரே" (லூக். 10:7). திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "கோவிலில் வேலை செய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவு பெறுவர்": (1கொரி 9:13), ":இறை வார்த்தையைக் கற்றுக்கொள்வோர் அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்"(கலா 5:6). எனவே திருச்சபைக்கும் அதன் பணியாளர்களுக்கும் தேவையான பொருள் உதவியைக் கொடுப்பது பொதுநிலையினரின் கடமையாகும், ஒவ்வொருவரும் தம் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டின் விதிமுறை (தொநூ 28:22; லேவி 27:30). இறைவனுக்குரிய பங்கைக் கொடுக்காதவர் இறைவனையே கொள்ளையடிக்கின்றனர் (காண்: மலா 3:8-10), தற்போது கிறிஸ்தவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு விழுக்காடு கொடுத்தாலே போதும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மனவருத்தத்தோடு கொடுக்காமல் முகமலர்ச்சியுடன் கொடுக்க வேண்டும். (2கொரி 9:6-7). கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6:38).

திருச்சபையின் தேவைகளுக்கு உதவிபுரிய கிறிஸ்தவ விசுவாசிகள் கடமைப்பட்டுள் ளனர் என்று திருச்சபைச் சட்டமும் கூறுகிறது (தி.ச. 222, ப. 1). பொதுநிலையினர் திருச்சபையின் பணியாளர்களைப் பராமரிக்க முன்வந்தால், திருப்பணியாளர்கள் காசைப்பற்றிக் கவலைப்படாமல் கடவுளின் அரசைப்பற்றிக் கவலைப்பட முடியும். தனது 10 வயது மகனுடன் திருப்பலிக்கு வந்த ஓர் அம்மா, திருப்பலி (முடிந்து வீட்டுக்குச் சென்றபோது பங்குத்தந்தையின் மறையுரையைப்பற்றி மிகவும் மட்டமாக விமர்சனம் செய்து கொண்டு போனார். அவருடைய மகன் அவரிடம், ":பேசாம வாங்கம்மா! நீங்க போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா?" என்று கேட்டு அம்மா வாயை அடைத்தான்!

கொடுப்பது 10 பைசா: கேட்பது பத்தாயிரம் கேள்விகள்? இது சரியா? பொதுநிலையினர் திருச்சபையின் தேவைகளைத் தாராள மனத்துடன் நிறைவு செய்தால், கடவுள் அவர்களுடைய தேவைகளை அபரிமிதமாகப் பூர்த்தி செய்வார். "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" (லூக் 5:38).
 
திருவுரைத் தேனடைஅருள்பணி இ.லூர்துராஜ் - பாளையங்கோட்டை
வேண்டுமா அமைதி?

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்பதற்கான வெளிப்பாடு எது? இப்படி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டது உளவியல் ஆய்வுக்குழு ஒன்று. கருத்துச் சேகரிப்பில் ":கைநிறையச் சம்பளம் வாங்கும் வேலை கிடைத்தாலே போதும். வெற்றிதான்": என்றார் ஒருவர். ":நாலுபேர் பேசும் அளவுக்குச் சாதனை புரிபவரே வெற்றி பெற்றவர்": என்றார் இன்னொருவர். ":நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், இப்படி வாய்க்கப் பெற்றவரே வெற்றியாளர்": என்றார் மற்றொருவர். திருப்தி தராத பதில்களுக்கிடையில் சாதாரண மனிதர் ஒருவர் சொன்னார்: "எவர் ஒருவர் படுத்தவுடனே நிம்மதியாக உறங்கிவிடுகிறாரோ அவர்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்":.
"இதுவே சரியான பதில்!": ஒரு மனதாக முடிவு செய்தது ஆராய்ச்சிக் குழு.
நிம்மதி! அதை அடைவதைவிட உயர்ந்த இலட்சியம் ஒன்று இருக்க முடியுமா என்ன?

":இறைவா, நீ எனக்கு எந்தச் செல்வத்தையும் தர வேண்டாம். நான் படுக்கச் செல்கிற நேரத்துக்கும் தூங்க ஆரம்பிக்கும் நேரத்துக்கும் உள்ள இடைவெளியை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்திடு. அது போதும்" என்று செபியுங்கள். உலகப் போர் முடிவுற்ற நேரம். பாதிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி, அச்சத்தினின்று விடுபடாத நிலையில் உலகின் பல பகுதிகள் கல்லறை அமைதி காத்தன. மயான அமைதியில் மனநிறைவு ஏது? உலகமே தோல்வி கண்ட நிலை. இனியும் போர் மேகங்களுக்குக் கீழே அஞ்சி நடுங்கி வாழும் அவலம் கூடாது. வேண்டும் சமாதானம். அதற்கான வழி? ஆராயத் துடித்தது சிறப்புக் குழு. கருத்துக்கள் கோரி விளம்பரம் செய்தனர்.

கற்றை கற்றையாகக் கடிதக் குவியல்கள். யூ.என்.ஓ. உருவாக்கம், நாடுகளுக்கிடையே நல்லிணக்கம், என்பன போன்ற பலவாறான ஆலோசனைகள். அவற்றிற்கிடையே உருக்கமான ஒரு சமாதானக் கடிதம் ஒரே வரியில் இரண்டே வார்த்தைகளில். "TRY JESUS"

அமைதி வேண்டுமா? இயேசுவிடம் செல்லுங்கள். இயேசுவில் முயலுங்கள். ஏனெனில் ":அவரே நமக்கு அமைதி அருள்பவர்": (எபேசி 2:14). உலக அமைதிக்கு ஒரே வழி: இயேசு! பிறந்தபோதும் உயிர்த்த பின்னும் செய்தியாகச் சொன்னதும் பரிசாக வாக்களித்ததும் சமாதானமே. இயேசுவின் மீட்புப் பணியே சமாதானப் பணிதான். அதுவே அவருடைய சீடனுக்குரிய நற்செய்திப்பணி. அதனால்தான் "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக என்று முதலில் கூறுங்கள்" (லூக். 10:5) என்று அறிவுறுத்துகிறார்.

இயேசு தரும் சமாதானத்தில் வாழும்போது இம்மண்ணில் இறையரசை மலரச் செய்கிறோம். ":அமைதியை விரும்புவோர் அங்கு இருந்தால் ... நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்":

"இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது" (ரோமை. 14:17). அந்த அமைதி நகரில் நுழைய கிறிஸ்துவில் நாம் அனைவரும் புதுப்படைப்பாக மாற அழைக்கிறார் திருத்தூதர் பவுல். அத்தகையோருக்கே அமைதியும் இரக்கமும். ":விருத்தசேதனம் செய்து கொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது. இந்தக் கொள்கையைப் பின்பற்றுவோருக்கும் கடவுளின் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் அமைதியும் இரக்கமும் உரித்தாகுக!" (கலா.6:15,16).

"என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன். அது உலகம் தரும் அமைதி போன்றதல்ல" (யோ. 14:27) என்கிறார் இயேசு. உலகம் தரும் சமாதானம் என்பது என்ன? இந்திய அணுகுண்டு கண்டுபிடிப்பு. நமது விஞ்ஞானிகளின் திறமை பாராட்டுக்குரியது எனினும் அண்டை நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. அகில உலக நாடுகள் ஆச்சரியத்தில் மூழ்கின. ஆனால் அரசியல்வாதிகளோ இது அமைதிக்காக என்று சொல்லவில்லையா?

-சமாதானம் வேண்டுமா? போரிடத் தயாராயிரு. அணுகுண்டு நம்மிடம் இருந்தால் அண்டைநாட்டான் வாலைச் சுருட்டிக் கொண்டு கிடப்பான் என்பது போல போரின்மையே சமாதானம் என்ற கோட்பாடு கொண்ட இராணுவப் பார்வை.
சுற்றி இருப்பவர்களின் பிச்சுப்பிடுங்கல் இல்லாமல் இருப்பதே சமாதானம் என்று கருதும் தனி மனிதப் பார்வை.
குடும்பத்தில் ஒரே குழப்பம். கணவனோடு ஓயாத சண்டை. ஆனால் அல்லேலூயாக் கூட்டத்தில் அமைதி தேடும் மனைவி. இப்படி ஒரு சமயப் பார்வை.

ஆனால் இயேசுவின் பார்வை - இறைவனோடும், பிறரோடும் தன்னோடும் (தனக்குத்தானே பகைவனாக இராமல்) ஒப்புரவாகி வாழ்வதே உண்மைச் சமாதானம் என்பது. அந்த அமைதியை மனித இனம் முழுவதற்கும் தரக் கடவுள் காத்திருக்கிறார். ":இதோ, ஆற்றுப் பெருக்குப் போல் அவள்மேல் சமாதானத்தை நாம் பொழிந்திடுவோம்": (எசா. 66:12 பழைய மொழி பெயர்ப்பு). ஆனால் நாம் பெறுகிறோமா? என்னதான் மழை பெய்தாலும் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருந்தால் துளி நீர் கூடக் கிடைக்காது. பூமியில் இருப்பது புதையல் என்று தெரியும். தோண்டி எடுக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்றால்...?

பகைமை அழித்து, பிளவு நீக்கி, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து மனிதனை மனிதனாக ஏற்று மதித்து எல்லாரோடும் இன்புற்று மண்ணில் இறையரசை மலரச் செய்யும் இயேசு தரும் சமாதானத்தின் தூதுவர்களாக வாழ, செயல்பட இயேசுவின் சீடர்களாகிய நாம் அழைக்கப்படுகிறோம். அனுப்பப்படுகிறோம்.

":அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு": (லூக். 10:2). குறைவு என இயேசு குறிப்பிடுவது எண்ணிக்கையில் அல்ல. இன்று எதிர்பார்ப்புக்கு மேலாகவே குருக்களாக இளைஞர்கள் முன்வருகிறார்கள். ஆனால் அன்பை அறுவடை செய்ய, மன்னிப்பை அறுவடை செய்ய, மகிழ்ச்சியை அறுவடை செய்ய இரக்கத்தை அறுவடை செய்ய, அமைதி சமாதானத்தை அறுவடை செய்ய, அதற்குத் தங்களையே அர்ப்பணம் செய்ய ஆள்கள் குறைவு. மிக மிகக் குறைவு!

ஓ... அமைதியே! உன்னைத் தேடி நான் அழுதேன்
திக்கற்ற பறவையாய்த் திரிந்தேன்
கடலைக் கடந்து, மலையில் பறந்து, மழையில் நனைந்து
குளிரில் அலைந்து, வெயிலில் எரிந்து, காற்றில் கரைந்து
தேடிச் சலித்து உன்னைக் காணாமல் திரும்பி
மூலையில் முடங்கி ஒடுங்கினபோது
சட்டெனப் பிடிபட்டாயே ... எங்கோ தேடின நீ
எங்கேயும் இல்லை எனக்குள்ளேதான் இருக்கிறாய்
என்பது இப்போதுதானே புரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபை (U.N.O.) தன் பணியைத் தொடங்குமுன் சொல்லும் அன்றாட செபம் பற்றித் தெரியுமா? அது இதுான்: "ஆண்டவரே, அண்ட சராசரங்களையும்விட, எங்கள் பூமி மிகச் சிறிய கோள்தான். இதனை ஒரு போர்க்களமாக நாங்கள் மாற்றாதிருப்போமாக. பசியினாலும் பயத்தினாலும் வாடும் இடமாக இதனை மாற்றாதிருப்போமாக. இனம், நிறம் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவினை இடமாக இதனை மாற்றாதிருப்போமாக. இந்த நல்ல பணியைத் தொலைநோக்குடன் இன்றே தொடங்க எங்களுக்கு மன உறுதியைத் தாரும். அதனால் எங்கள் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மனித மாண்பினைப் பெற்றுப் பெருமையுடன் வாழ்வார்களாக!''

ஒரு கிறிஸ்தவன் நாள்தோறும் சொல்ல வேண்டியது புனித பிரான்சிஸ் அசிசியாரின் செபம்.
"இறைவர், என்னை சமாதானத்தின் தூதுவனாக்கும். எங்கே - பகை இருக்கிறதோ அங்கே அமைதியையும் எங்கே வெறுப்பு - இருக்கிறதோ, அங்க அன்பையும் விதைக்க எனக்கு அருளும்".
 
 
ஞாயிறு மறையுரை அருள்பணி எல்.எக்ஸ்.ஜெரோம் சே.ச. திருச்சி
பொதுக்காலம் - 14ம் ஞாயிறு

ஜெர்மனியின் Strasbourg நகரில், இளம் பேராசிரியர் ஒருவர், தன் அறையில் அமர்ந்து, அன்று தனக்கு வந்திருந்த கடிதக்கட்டைப் பிரித்துக்கொண்டிருந்தார். அவர், இறையியலிலும், மெய்யியலிலும்

பட்டங்கள் பெற்று பேராசிரியராகப் பணியாற்றியவர். மறையுரை வழங்குவதில் தனக்கென தனியிடம் உருவாக்கியிருந்தவர். அவர் (1906ம் ஆண்டு) வெளியிட்ட "வரலாற்று இயேசுவைத் தேடுதல்" (The Quest of Historical Jesus) என்ற நூல், புகழின் உச்சியில் அவரை நிறுத்தியது. இசை மேதையான Johann Sebastian Bach அவர்களின் படைப்புக்களை 'ஆர்கன்' இசைக்கருவியில் வாசித்து, உலகப் புகழ் பெற்றிருந்தவர். அந்த இசை மேதையைக் குறித்த ஓர் ஆய்வை வெளியிட்டு, மக்களை வியக்கவைத்தவர்.

பல துறைகளில் தனக்கென தனியிடம் பெற்றிருந்த அந்த இளம் பேராசிரியருக்கு, பாராட்டுக்களும், அழைப்புக்களும் ஒவ்வொரு நாளும் கடித வடிவில் வந்தன. அன்று அவருக்கு வந்திருந்தக் கடிதக்கட்டில், ஒரு மாத இதழும் வந்திருந்தது. அந்த இதழின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டுரை, இளையவரின் கவனத்தை ஈர்த்தது. "காங்கோ பணித்தளத்தின் தேவைகள்" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த கட்டுரையை அவர் வாசித்தபோது, பின்வரும் வரிகள் அவரைக் கட்டியிழுத்தன: "இங்கு தேவைகள் மிக அதிகம். மத்தியக் காங்கோவின் கபோன் (Gabon) மாநிலத்தில் பணியாற்ற ஒருவரும் இல்லை. நான் இக்கட்டுரையை எழுதும்போது, என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் செபம் ஒன்றே... கடவுள் ஏற்கனவே தேர்ந்துள்ள ஒருவர், இந்த வரிகளை வாசிக்கவேண்டும், அதன் விளைவாக, அவர் எங்களுக்கு உதவிசெய்ய இங்கு வரவேண்டும்" என்று எழுதப்பட்டிருந்தது. அவ்வரிகளை வாசித்த இளம் பேராசிரியர், மாத இதழை மூடினார். பின்னர், தனது நாள் குறிப்பேட்டைத் திறந்து, "என் தேடல் முடிவுற்றது" என்று எழுதினார்.

அன்றுவரை அவர் செய்துவந்த அனைத்தையும் விட்டுவிட்டு, அவர், ஆப்ரிக்காவில் பணியாற்ற முடிவுசெய்தார். அவர் மதியிழந்துவிட்டாரோ என்று எண்ணி, அவரது உறவினர்களும், நண்பர்களும், அவர் எடுத்திருந்த முடிவை மாற்றுவதற்கு முயன்றனர். ஆனால், இயலவில்லை.

30 வயது நிறைந்த அந்த இளம் பேராசிரியரின் பெயர், Albert Schweitzer. அவர் பணியாற்ற விழைந்த ஆப்ரிக்க மக்களின் முக்கியத் தேவை, மருத்துவ உதவி என்பதை அறிந்த ஆல்பர்ட் அவர்கள், அடுத்த ஆறு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை மேற்கொண்டார். ஆப்ரிக்காவின் பின்தங்கியப் பகுதி ஒன்றில், தன் மருத்துவப் பணிகளைத் துவக்கினார். அவரது வாழ்வின் எஞ்சிய 60 ஆண்டுகள், அவர், ஆப்ரிக்காவில், வறிய மக்கள் நடுவே உழைத்தார். இறைவனின் அழைப்பு, ஆல்பர்ட் அவர்களின் வாழ்வை வேறு திசையில் அழைத்துச் சென்றாலும், இறைவன் மீது தன் முழு நம்பிக்கையை வைத்து, அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

சென்ற ஞாயிறு, நம் தலைவன் இயேசு தரும் அழைப்பைப்பற்றி சிந்தித்தோம். இந்த ஞாயிறு, அந்த அழைப்பை ஏற்பதால், மேற்கொள்ள வேண்டிய உழைப்பைப்பற்றி சிந்திப்போம். இந்த உழைப்பு எவ்வகையில் அமையவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். - லூக்கா நற்செய்தி 10: 1-5

":அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு": என்று, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் நாம் வாசிக்கிறோம். பொதுவாக, தேவ அழைத்தலுக்காகச் செபிக்கும்போது, இச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். தேவ அழைத்தல் என்றதும், குருக்கள், துறவறத்தார் என்ற குறுகிய கண்ணோட்டம் நம் மனதில் எழ வாய்ப்புண்டு. இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகளை ஆய்வு செய்தால், இயேசு, 72 பேரை புதிதாக நியமித்து, தன் பணிக்கென அனுப்பிய வேளையில், இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்பதை உணர்கிறோம். இயேசுவுடன் வாழ்ந்த பன்னிருத் திருத்தூதர்கள், ஏனைய 72 சீடர்கள் அனைவருமே, குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள். எனவே, ":அறுவடைக்கு வேலையாள்கள் தேவை": என்று இயேசு கூறியது, குருக்கள், துறவியரைக் குறித்து மட்டும் அல்ல. மாறாக, மக்களின் மனங்களில் இறையரசின் கனவுகளை விதைத்து, அதன் பலன்களை அறுவடை செய்வதற்கு துணிவுடன் முன் வரும் வேலையாள்களை நினைத்து, இயேசு, இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது உண்மை.

இவ்வழைப்பில் இயேசு குறிப்பிட்டுள்ள 'அறுவடை' என்ற செயலை இன்னும் சிறிது ஆழமாகச் சிந்திக்க முயல்வோம். அறுவடை செய்வது ஒரு தனிப்பட்டக் கலை. ஓ, இது என்ன பெரிய கலை? பயிர் வளர்ந்துள்ளது, கையில் அரிவாளை எடுத்து, அறுத்துத் தள்ளவேண்டியதுதானே என்ற ஏளன எண்ணங்கள், ஒரு சிலர் மனங்களில் எழலாம். இத்தகைய எண்ணங்கள் கொண்டிருப்போரின் கையில் அரிவாளைக் கொடுத்து, வயலில் இறங்கி, அறுவடை செய்யச் சொன்னால் தெரியும், வெட்டப்படுவது, கதிர்களா? கைவிரல்களா? என்று.

அடுத்து, அறுவடை என்பது எப்போதும் ஒரு கூட்டு முயற்சி. அறுவடை செய்பவர்கள், தனித்துச் செயல்படுவதில்லை. எல்லாரும் சேர்ந்து, ஒரே வரிசையில், அறுத்தபடியே முன்னேறுவர். இறையரசின் கனவுகளை விதைக்க, பலன்களை அறுவடை செய்ய, தனித் திறமைகள் பெற்றிருக்கவேண்டும். அதேநேரத்தில், பிறரோடு இணைந்து உழைக்கும் திறமையும் பெற்றிருக்கவேண்டும். இறையரசுக்காக உழைப்பவர்கள் பெற்றிருக்கவேண்டிய திறமைகளை, இன்றைய நற்செய்தியில், ஒரு சில நிபந்தனைகளாகச் சொல்கிறார் இயேசு.

முதல் நிபந்தனை: "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" இயேசுவுக்குத் தேவை. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதா? இது விபரீதமான முயற்சியாகத் தெரிகிறதே என்று நாம் தயங்கலாம். ஆனால், வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள், வீரக்கதைகளாகத் தொடர்ந்து நடந்துவருகின்றன என்பது நமக்குத் தெரியும்.

அளவுக்கதிகமாய் வளர்ந்திருந்த கோலியாத்து என்ற மனித மலையோடு (காண்க. 1 சாமுவேல், 17: 4-7) மோத புறப்பட்ட தாவீது, நம் நினைவுக்கு வருகிறார். அந்த மோதலில் யார் வென்றது, ஓநாயா, ஆட்டுக்குட்டியா என்பது நாமறிந்த வரலாறு.

"யார் இந்த அரை நிர்வாணப் பரதேசி?" என்று, ஆங்கில அரசு ஏளனமாகப் பார்த்த காந்தியடிகள் நம் நினைவுக்கு வருகிறார். அரை நிர்வாணமாய், நிராயுத பாணியாய் சென்ற அந்த ஆட்டுக்குட்டி, ஓநாய்களாய் வலம்வந்த ஆங்கில அரசை எவ்வளவு தூரம் ஆட்டிப் படைத்ததென்பது உலகறிந்த வரலாறு.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண் கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், பள்ளிக்குச் செல்லாமல், 'காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு' (Skolstrejk fr klimatet - 'School strike for the climate') என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். "எங்களுடைய எதிர்காலத்தின் மீது அரசியல்வாதிகள் பெருமளவுக் கழிவுகளை வீசுகின்றனர். எனவே, எங்கள் எதிர்காலத்திற்காகப் போராட வந்துள்ளேன்" என்று, இளம்பெண் துன்பர்க் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார். இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், வெள்ளிக்கிழமைகளில், ":Fridays for Future, அதாவது, "வருங்காலத்திற்காக வெள்ளிக்கிழமைகள்" என்ற விருதுவாக்குடன், வகுப்புக்களைப் புறக்கணித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு அழிவை உருவாக்கும் தொழில் நிறுவனங்களின் பெரும் செல்வந்தர்கள், பள்ளி மாணவ, மாணவியரியரின் போராட்டம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை என்று எண்ணி வந்தனர். ஆனால், இளையோரின் போராட்டம் இன்று பல தொழில் நிறுவனங்களின், குறிப்பாக, நிதி ஒதுக்கீடு செய்யும் வங்கிகளின் கவனத்தைப் பெற்றுள்ளது.

நிலத்தடி எரிசக்திகளை ஏற்றுமதி செய்யும், பெட்ரோலிய நாடுகளின் கூட்டமைப்பான OPEC, கிரேட்டா துன்பர்க் அவர்களின் போராட்டத்தைக் குறித்து தற்போது, கலக்கமடைந்துள்ளது. OPEC நிறுவனத்தின் தலைமைச் செயலர், மொஹம்மத் பார்கிண்டோ (Mohammad Barkindo) அவர்கள், இளம்பெண் கிரேட்டா அவர்களின் போராட்டம் நிலத்தடி எரிசக்தியை மூலதனமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்கு பெரும் சவால் என்று, ஜூலை 5, இவ்வெள்ளியன்று கூறினார். அவரது கூற்றைக் கேட்ட இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள், எதிர்காலத்திற்காகப் போராடி வரும் எனது தலைமுறைக்குக் கிடைத்த சிறந்ததொரு பாராட்டு இது என்று கூறியுள்ளார்.

பல இலட்சம் கோடி டாலர்கள் மதிப்புள்ள OPEC கூட்டமைப்பு, 16 வயது இளம்பெண்ணின் போராட்டத்தால் நிலை தடுமாறி இருப்பது, ஓநாய்கள் நடுவே ஆட்டுக்குட்டிகள் தலைநிமிர்ந்து சென்றால் என்ன நடக்கும் என்பதை நினைவுறுத்துகிறது. தான் கொண்டுள்ள குறிக்கோளில் தெளிவும், அதை அடைவதற்கு எதையும் தியாகம் செய்யும் துணிவும் கொண்ட இளம்பெண் கிரேட்டா போன்றோரை மனதில் கொண்டு, "ஓநாய்களிடையே செல்லக்கூடிய ஆட்டுக்குட்டிகள்" என்ற உருவகத்தை இயேசு பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள் போகவேண்டும் என்பது உறுதியாகிவிட்டது. சரி. அதற்குத் தகுந்ததுபோல், எல்லா ஏற்பாடுகளும் செய்துகொள்ள வேண்டாமா? மீண்டும் தாவீது நம் நினைவுக்கு வருகிறார். கோலியாத்தை எதிர்த்துச் செல்லும்போது, தற்காப்புக்காக, அவருக்கு கவசம் தேவைப்படும் என்று மற்றவர்கள் நினைக்க, தாவீதோ, தன் மீது போடப்பட்ட கவசங்களையெல்லாம் கழற்றிவைத்துவிட்டு, ஒரு கவணையும், கல்லையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார், இளையவர் தாவீது. அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த வீரம்? ஆயனாக இருந்த தாவீது, ஆண்டவனை அதிகம் நம்பியவர். தன்னையும், தன் ஆடுகளையும், இரத்த வெறி பிடித்த மிருகங்களிடமிருந்து காத்த இறைவன், இந்த மனித மிருகத்திடமிருந்து தன்னையும், தன் மக்களையும் காப்பார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையால் விளைந்த வீரம் அது (1 சாமுவேல், 17: 37). நம்பிக்கை இருந்தால் போதும், நம் கையில் வேறெதுவும் வேண்டாம் என்று, இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். "பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்லவேண்டாம்" என்று ஒலிக்கிறது, இயேசுவின் இரண்டாவது நிபந்தனை.

எவ்வித ஏற்பாடும் இல்லாமல் பயணம் மேற்கொள்வதா? பணியாற்றச் செல்வதா? சரியாகப்படவில்லையே. இப்படிச் சொல்ல வைக்கிறது, நாம் வாழும் காலம். உண்பதற்கு, உடுத்துவதற்கு, உடல் பயிற்சி செய்வதற்கு, ஏன்?... உறங்குவதற்கும் கூட திட்டங்கள் தீட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் 'management' காலத்தில் நாம் வாழ்கிறோம்.

நமது பயணங்களை எண்ணிப் பார்ப்போம். பயணம் என்று சொன்னதும், நாம் சுமந்து செல்லும், அல்லது, இழுத்துச் செல்லும் பெட்டிகள் நம் மனக்கண்களில் அணிவகுத்து நிற்கும். இதற்கு நேர் மாறாக, நமது பயணங்களுக்கு எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுவது, நடைமுறைக்கு ஒத்துவராத ஆலோசனையாகத் தெரிகிறது. ஆனால், ஆழமாக சிந்தித்தால், இயேசுவின் இந்தக் கூற்றில் உள்ள ஆழமான உண்மைகள் புரியும். நாம் எல்லாருமே இவ்வுலகில் வழிபோக்கர்கள்தாம். போகும் வழியில், நாம் பொருள்களை சேகரித்துக்கொண்டே போனால், இறுதியில், என்ன செய்யப் போகிறோம்? நம் இறுதிப் பயணத்தின்போது, இயேசுவின் இந்த ஆலோசனையை முற்றிலும் பின்பற்ற வேண்டியிருக்குமே. ஒன்றுமே எடுத்துச் செல்லமுடியாத அந்த இறுதிப் பயணத்திற்கு முன்னேற்பாடாக, இப்போதிருந்தே, திரட்டுதல், குவித்தல், சேர்த்து வைத்தல் போன்ற நோய்களிலிருந்து, கொஞ்சம், கொஞ்சமாய், விடுதலை பெறலாமே!

இயேசுவுக்கு இது எளிதாக இருந்திருக்கும். ஏனெனில், அவரிடம் சொத்து என்று ஒன்றுமே இல்லை. ஆனால், உலகத்தில் பல நாடுகளை வென்று, ஏராளமாய் பொருள்களைத் திரட்டிவைத்திருந்த மாவீரன் அலெக்சாண்டரும், இதே கருத்தைத்தானே தன் இறுதி மூன்று ஆசைகளில் ஒன்றாக சொல்லிச் சென்றார். தனது சவ ஊர்வலத்தில், திறந்தபடி இருந்த வெறும் கைகளை, சவபெட்டிக்கு வெளியில், மக்கள் பார்க்கும்படி அவர் வைக்கச் சொன்னார். அதற்கு காரணம் கேட்ட தளபதியிடம், வெறுங்கையோடு வந்தோம், வெறுங்கையோடு செல்வோம் என்ற பாடத்தை மக்கள் உணரவேண்டும் என்று சொன்னார், மாவீரன் அலெக்சாண்டர்!

வெறுங்கையோடு செல்லுங்கள், எதையும் எடுத்துச் செல்லவேண்டாம் என்று கூறும் இயேசு, கொடுக்கச் சொல்கிறார். நீங்கள் நுழையும் இல்லங்களில் எல்லாம் அமைதி என்ற ஆசீரைக் கொடுங்கள் என்கிறார். இது தன் பணியாளர்களுக்கு இயேசு தரும் மூன்றாவது நிபந்தனை.

ஒன்றுமில்லாத நிலையிலும் கொடுப்பது, உயர்ந்த கொடை. அத்தகைய 'கொடுத்தலை'ப்பற்றி சிந்திக்கும்போது, கவிஞர் கலீல் கிப்ரான் (Khalil Gibran) அவர்கள் எழுதிய கொடுப்பது (On Giving) என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. 'இறைவாக்கினர்' (The Prophet) என்ற கவிதைத்தொகுப்பில், காணப்படும் அக்கவிதையின் சில வரிகள்...v நீ சேர்த்துவைத்துள்ள உடைமைகளிலிருந்து நீ கொடுக்கும்போது, வெகு குறைவாகவே கொடுக்கிறாய். எப்போது நீ உன்னையே கொடுக்கிறாயோ, அப்போதுதான் உண்மையிலேயே கொடுக்கிறாய்.

தங்கள் உடைமைகளிலிருந்து சிறிது கொடுப்பவர்கள் உண்டு. பேரும், புகழும் தேடி அவர்கள் தரும் அக்கொடை, முழுமையானதல்ல. வேறுசிலர், தங்களிடம் உள்ளது மிகக் குறைவேயானாலும், அனைத்தையும் கொடுக்கின்றனர். இவர்கள், வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்; இவர்களது கருவூலம், காலியாவதே கிடையாது.

சிலர் மகிழ்வோடு தருவர்; அந்த மகிழ்வே, அவர்கள் பெறும் வெகுமதி.

சிலர் வேதனையோடு தருவர்; அந்த வேதனையே, அவர்கள் பெறும் திருமுழுக்கு.

இன்னும் சிலர், மகிழ்வோ, வேதனையோ இன்றி தருவர்; புண்ணியம் செய்கிறோம் என்ற எண்ணம் ஏதுமின்றி தருவர்.

தான் மணம் தருகிறேன் என்பதை உணராமல், தன் நறுமணத்தைப் பரப்பும் மலரைப் போல் தருபவர் இவர்கள்.

இவ்வாறு தருபவர் கரங்கள் வழியே, கடவுள் பேசுகிறார்; இவர்கள் கண்கள் வழியே கடவுள் இவ்வுலகைப் பார்த்து, புன்னகைக்கிறார்.

"தகுதியானவருக்கு மட்டுமே நான் தருவேன்" என்று நீ அடிக்கடி சொல்கிறாய். உன் தோட்டத்தில் உள்ள மரங்களோ, உன் பண்ணையில் இருக்கும் மிருகங்களோ அவ்வாறு சொல்வதில்லையே. அவை தருகின்றன; அதனால், வாழ்கின்றன. அவை தராமல் பதுக்கி, சேர்த்து வைத்தால், அவை அழிந்துவிடும்.

தன் சீடர்களுக்கு இயேசு வழங்கியுள்ள இந்த மூன்று நிபந்தனைகளுமே நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற தயக்கம் எழுகிறது. மனித இயல்பு, உலக வழக்கு என்ற குறுகிய வட்டங்களை நம்மைச் சுற்றி வரைந்துகொண்டு சிந்திப்பதால் நமக்குள் எழும் தயக்கம் இது. இவ்வுலகைச் சார்ந்த வழிகளில் மட்டுமே சிந்திப்பதால், உயர்ந்த கனவுகள் சிறகடித்துப் பறக்கமுடியாமல், சிறைப்படுத்தப்படுகின்றன.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்" (எசாயா 65:25) என்ற கனவை, இறைவாக்கினர் எசாயா மொழிந்தார். இயேசு அந்தக் கனவையும் தாண்டி, இன்றைய நற்செய்தியின் வழியே சொல்வது இதுதான்: "எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுமின்றி, ஓநாய்களிடையே செல்லும் ஆட்டுக்குட்டிகள், ஓநாய்களுக்குச் சமாதான ஆசீரை வழங்கட்டும்" என்பது, இயேசு நம்முன் வைக்கும் கனவு, அழைப்பு.

இயேசு கூறிய நிபந்தனைகளைக் கேட்டு, அவரது சீடர்களின் உள்ளங்களில், 'இது நடைமுறைக்கு ஒத்து வருமா?' என்ற கேள்வி எழுந்திருக்கும். இருப்பினும், அவர்கள், தங்கள் தலைவனை நம்பி பயணித்தனர். பலன் அடைந்தனர். அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது, ஒன்றுமில்லாத நிலையில் சென்றனர், திரும்பி வந்தபோது, நிறைவுடன் வந்தனர். தங்கள் நிறைவைக் குறித்து, அவர்கள் வியந்து பேசும்போது, இயேசு அவர்களுக்கு மீண்டும் ஒரு சவாலை முன்வைக்கிறார்.

நீங்கள் அடைந்த வெற்றியைக் குறித்து ஆரவாரம் செய்யாதீர்கள், "தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" (லூக்கா 10:20) என்று இயேசு வழங்கும் சவாலுடன், இன்றைய நற்செய்தி நிறைவடைகிறது.

":திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.": (He who fails to plan, plans to fail) என்பன போன்ற மேலாண்மைப் பாடங்கள் வழியே, திட்டங்கள் தீட்டுதல், அவற்றைத் திறம்பட முடித்தல், செல்வங்களைச் சேர்த்தல் என்ற வழிகளை நம் வாழ்வில் திணிக்கும் இன்றைய உலகின் அளவுகோல்களை ஒதுக்கிவைக்கும் துணிவை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். மறு உலகில் நம் பெயர்கள் நிரந்தரமாக எழுதப்பட்டிருக்கின்றன என்ற நம்பிக்கையோடு, அவரது பணியில் ஈடுபடும் தாராள உள்ளத்தை, நமக்கு அருளவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.
 
மறையுரை முத்துக்கள் புனித பேதுரு பாப்பிறைத்‌ தமிழ்க்‌ கழகம்‌ பெங்களூர்
பொதுக்காலம்‌ 14-ஆம்‌ ஞாயிறு
முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 66:10-14)

எசாயா இறைவாக்கினர்‌, இன்றைய முதல்‌ வாசகம்‌ நாடுகடத்தப்பட்ட மக்கள்‌ மீண்டும்‌ எருசலேமுக்குத்‌ திரும்பி வருவார்கள்‌ என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதாக அமைகின்றது. கடவுள்‌ இஸ்ரயேல்‌ மீது தனிப்பட்ட அன்பையும்‌, அக்கறையையும்‌ கொண்டுள்ளார்‌ என்பதை எசாயா வாயிலாக ஆண்டவர்‌ வெளிப்படுத்துவதை இன்றைய வாசகம்‌ விவரிக்கின்றது. அதேபோல்‌ கடவுள்‌ தம்‌ மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்‌ என்றும்‌ ":கடவுளின்‌ அன்பு தாப்‌ அன்பைப்‌ போன்றது, அந்த அன்பில்‌ நிலைத்து இன்புறுங்கள்‌' என்றும்‌ வலியுறுத்துகிறார்‌. கடவுளின்‌ உடன்படிக்கையின்படி வாழும்‌ போது, தம்‌ மக்களுக்கு அவர்‌ ஆற்றலைக்‌ கொடுப்பதோடு, அவர்களின்‌ பகைவர்கள்‌ அனைவரையும்‌ முறியடித்து, அடிமைத்‌ தனத்திலிருந்து அவர்களை மீட்பார்‌ என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (கலா. 6:14-18)

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ தூய பவுல்‌, பணம்‌ பதவி பகட்டு போன்ற உலக ஆடம்பர வலைகளில்‌ சிக்கிக்‌ கிறிஸ்தவ அடிப்படையை மறந்திருந்தக்‌ கலாத்திய மக்களுக்குக்‌ கிறிஸ்துவின்‌ சிலுவை மீது கொள்ளும்‌ நம்பிக்கையே அடிப்படை, மற்ற வெளி ஆடம்பரங்கள்‌ அவசியமில்லை என்பதை நினைவூட்டுகிறார்‌. கிறிஸ்துவின்‌ சிலுவையே உண்மையான சீடரின்‌ பெருமை. சிலுவையோடு நமது வாழ்வு அங்கீகரிக்கப்பட வேண்டும்‌. அதன்‌ மூலம்‌ தூய ஆவியில்‌ புதுப்படைப்பாக, புதிய மனிதர்களாகத்‌ தன்னைப்‌ போல இயேசுவின்‌ அடிமையாக மாறி, நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ள அழைப்பு விடுக்கிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 10:1-2, 17-20)

இன்றைய நற்செய்தியை நாம்‌ லூக்கா நற்செய்தியில்‌ மட்டுமே காணமுடிகிறது. இயேசு ஏற்கனவே 12 சீடர்களைத்‌ தேர்ந்தெடுத்திருந்தார்‌. ஆனால்‌ இங்கே அவர்களைத்‌ தவிர மேலும்‌ 72. பேர்களை நற்செய்திப்‌ பணிக்கு அனுப்புகிறார்‌. லூக்கா தன்னுடைய நற்செய்தியைப்‌ பிற இன மக்களுக்கு எழுதியிருப்ப- தால்‌, இந்த 72 என்ற எண்‌, யூதர்களை மட்டும்‌ அல்ல, மாறாகப்‌ பிற இன மக்களையும்‌ இயேசு அழைத்துள்ளார்‌ என்பதைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ வந்திருக்கலாம்‌, அல்லது விடுதலைப்‌ பயண நூலில்‌ மோயீசன்‌ நியமிக்கும்‌ 70 மூப்பர்களை அடிப்படையாகக்‌ கொண்டு வந்திருக்கலாம்‌, அல்லது 72 என்ற எண்‌ தொடக்க நூல்‌ 10-ஆம்‌ அதிகாரத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள எழுபது நாடுகளின்‌ பட்டியலைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ அமைத்து உலக மக்கள்‌ அனைவரும்‌ நற்செய்திப்‌ பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்‌ அல்லது உலக நாடுகள்‌ அனைத்திற்கும்‌ நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்‌ என்ற அடிப்படையிலும்‌ அமைத்திருக்கலாம்‌ என்று விவிலிய அறிஞர்கள்‌ கூறுகிறார்கள்‌.

மறையுரை

அன்று இயேசு கூறினார்‌ ":அறுவடையோ மிகுதி வேலையாட்‌ களோ குறைவு, அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி மன்றாடுங்கள்‌":. ஆனால்‌ இன்றோ, அறுவடையும்‌ மிகுதி, வேலையாட்களும்‌ மிகுதி. ஆனால்‌ உண்மையாக உழைக்கின்றவர்‌ களோ மிகக்குறைவு. ஆகையால்‌ இப்போது உண்மையான உழைப்பாளர்களுக்காக இறைவனிடம்‌ மன்றாட வேண்டும்‌.

இயேசுவைப்‌ பிடிக்க வந்தபோது அனைவரும்‌ புறமுதுகுக்‌ காட்டி ஓடினார்கள்‌. ஆனால்‌ அதே சீடர்கள்‌ தூய ஆவியால்‌ நிரப்பப்பட்ட போது தங்கள்‌ அழைத்தலின்‌ அர்த்தத்தை உணர்ந்தனர்‌. தங்களின்‌ கடமைகளை உணர்ந்தார்கள்‌. கிறிஸ்துவுக்காகச்‌ சாகவும்‌ துணிந்தார்கள்‌. மறைசாட்சிகளாய்‌ மரித்தார்கள்‌. இத்தகைய மாற்றம்‌ நம்‌ ஒவ்வொருவரின்‌ உள்ளத்திலும்‌ உதிக்க வேண்டும்‌, என்ற எண்ணத்தோடு இன்றைய நற்செய்திக்குள்‌ செல்வோம்‌.

கிறிஸ்துவை மூலைக்கல்லாகவும்‌ திருத்தூதர்களை அடிக்‌- கல்லாகவும்‌ விசுவாசிகளைக்‌ கட்டிடக்‌ கல்லாகவும்‌ கொண்டு அமைந்தது தான்‌ நமது தாய்த்‌ திருச்சபை. ஆனால்‌ இன்று உண்மையான ஊழியர்கள்‌ இல்லாமல்‌ கட்டிடம்‌ ஆட்டம்‌ கண்டுள்ள நிலை. ஒருபுறம்‌ நமது பிரிந்த சகோதரர்கள்‌, மறுபுறம்‌ அரசியல்‌ அமைப்புகள்‌ நமக்கெதிராகச்‌ செயல்படும்‌ நிலை. வேலையின்மை, பொருளாதாரத்‌ தட்டுப்பாடு, வசதியின்மை, கல்வியறிவற்ற நிலை ஒருபுறம்‌. அறிவியல்‌ வளர்ச்சி, மிதமிஞ்சிய அறிவு போன்றவை கடவுளையே கேள்விக்‌ குறியாக்கும்‌ நிலை மறுபுறம்‌. இந்த நிலையில்‌ அனுப்பப்பட்ட ஊழியர்களும்‌ துவண்டு விட்ட நிலை, தங்கள்‌ கடமைகளை மறந்து விட்ட நிலை.

நாம்‌ அனைவரும்‌ தவறாகப்‌ புரிந்திருப்பது, ஊழியர்கள்‌ என்றால்‌ குருக்களும்‌, சகோதரிகளும்‌, துறவறத்தாரும்‌ மட்டுமே. ஆனால்‌ திருமுழுக்கு வாங்கிய கிறிஸ்தவனும்‌ ஒவ்வொருவனும்‌ ஊளழியனே. கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌ அனுப்பப்பட்டவர்‌ களே. உயிர்த்த ஆண்டவர்‌ தான்‌ சந்தித்த ஒவ்வொருவரையும்‌ அனுப்புகிறார்‌. உயிர்த்த ஆண்டவரை முதன்‌ முதலாகச்‌ சந்தித்த மகதலேன்‌ மரியாவை ":நீ போய்‌ என்‌ சீடர்களுக்கு இதைப்‌ பற்றிக்‌ கூறு": என்று கூறி அவரை அனுப்புகிறார்‌. (யோவான்‌ 20:17) அடுத்ததாகச்‌ சீடர்களைச்‌ சந்தித்து பரிசுத்த ஆவி அளித்து அவர்களை அனுப்புகிறார்‌ (யோவான்‌ 20:22). அடுத்ததாக எம்மாவுஸ்‌ செல்லும்‌ வழியில்‌ இருவரை சந்தித்து அவர்களையும்‌ அனுப்புகிறார்‌ (லூக்கா 24:33) அடுத்ததாகத்‌ தமஸ்கு நகருக்குச்‌ செல்லும்‌ வழியில்‌ சவுலைச்‌ சந்தித்து அவரைப்‌ பவுலாக மாற்றி அனுப்புகிறார்‌ (தி.ப. 9:5-6). எனவே அவர்களின்‌ வழிவந்த நம்‌ அனைவரையும்‌ இயேசு அனுப்பியிருக்கிறார்‌. எப்படி அனுப்பியிருக்கிறார்‌. ":ஆட்டுக்‌ குட்டிகளை ஓநாய்களிடம்‌ அனுப்புவது போல நம்மை அனுப்பி யிருக்கிறார்‌": (லூக்கா 10:3).

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்குத்‌ தன்‌ தந்தையால்‌ அனுப்பப்பட்டார்‌. அனுப்பியது மாட மாளிகையில்‌ அமர்ந்து ஆட்சி செய்ய அல்ல. குடித்து விட்டுக்‌ கும்மாளம்‌ அடிக்க அல்ல. நான்தான்‌ இறைமகன்‌, மெசியா என்று பெருமைப்‌ பாராட்ட அல்ல. மாறாகச்‌ சிலுவை மரணத்தை ஏற்று, மனிதர்‌ அனைவரின்‌ பாவத்திற்காகத்‌ தன்னையே கழுவாயாக ஒப்புக்கொடுக்க அனுப்பப்பட்டார்‌. கிறிஸ்துவின்‌ மனநிலை நம்மிலும்‌ இருக்க வேண்டும்‌ (பிலி. 2:5).

இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுல்‌ கூறுகிறார்‌, ":நானோ ஆண்டவர்‌ இயேசுவின்‌ சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும்‌ பெருமைப்‌ பாராட்ட மாட்டேன்‌' நானும்‌ சிலுவையில்‌ அறைப்படுகின்றேன்‌ என்று கிறிஸ்துவின்‌ பாடுகளோடு தம்மையும்‌ இணைத்துக்‌ கொள்கிறார்‌. பல இன்னல்களையும்‌ கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொண்டார்‌ (கொரி. 11:16-33). நான்‌ ஆண்டவரால்‌ அனுப்பப்‌- பட்டவன்‌ என்று உறுதியாக அனைத்தையும்‌ எதிர்கொண்டார்‌. நமக்கும்‌ இத்தகைய உறுதிப்பாடு வேண்டும்‌.

இன்றைய உலகில்‌ ஓநாய்களை விடக்‌ கொடுரமான பிரச்சனைகளான, சாதிப்‌ பாகுபாடு, மதக்‌ கலவரம்‌, மொழிச்‌ சண்டை, இலஞ்சம்‌, ஊழல்‌ மனிதனை அணு அணுவாகச்‌ சாகடித்துக்‌  கொண்டிருக்கின்ற நிலையில்‌ நம்‌ அனைவரையும்‌ இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கிறார்‌.

கிறிஸ்தவர்களாகிய நாம்‌ அனைவரும்‌, சமுதாயப்‌ பிரச்சனை- களைக்‌ களைந்து, முதல்‌ வாசகத்தில்‌ கூறுவது போல ஒரு புதிய சமூகம்‌ அமைக்க அழைக்கப்பட்டுள்ளோம்‌. கத்தியையோ, துப்பாக்கிகளையோ எடுக்கத்‌ தேவையில்லை. கடவுளின்‌ வார்த்தை- களைக்‌ கையிலெடுப்போம்‌. தீமையை உங்கள்‌ நற்செயல்களால்‌ வெல்லுங்கள்‌ (உரோ. 12:20) என்ற பவுலின்‌ கூற்றுக்கேற்ப, நமது வாழ்வு முறையாலும்‌ படிப்பினையாலும்‌ இவ்வுலகத்‌ தீமைகளைக்‌ களைவோம்‌. புதிய எருசலேம்‌ அமைத்திடுவோம்‌.

இன்றைய நற்செய்தியில்‌ இயேசு சீடர்களை அனுப்பும்‌ போது ":நீங்கள்‌ இதைப்‌ போதிக்க வேண்டும்‌, அதைப்‌ போதிக்க வேண்டும்‌' என்று பட்டியல்‌ போடவில்லை. மாறாக அவர்கள்‌ எப்படி வாழ வேண்டும்‌ என்று கூறுகிறார்‌. ஆடம்பரம்‌ இல்லா வாழ்வு மூலம்‌ அமைதி' என்ற ஒரே ஒரு செய்தியை எடுத்துரைக்கச்‌ சொல்கிறார்‌. கிறிஸ்து இம்மண்ணுலகிற்கு வந்த போது கொண்டுவந்த முதல்‌ கொடை அமைதி (லூக்கா 2:14) கிறிஸ்து விண்ணகம்‌ சென்ற போது வழங்கிய இறுதிக்‌ கொடையும்‌ அமைதியே (யோவான்‌ 14:27).

கிறிஸ்தவர்களாகிய நம்மிடையே சாதிச்‌ சண்டை, பிரிவுகள்‌, உயர்வு, தாழ்வு இருந்தால்‌ நாம்‌ எப்படி இந்த உலகுக்கு அமைதியை அளிக்க முடியும்‌? முதலில்‌ அமைதி நமது உள்ளத்தில்‌ இருக்க வேண்டும்‌. நமது உள்ளத்தில்‌ உள்ள அமைதியானது நமது குடும்பத்தில்‌ வெளிப்பட வேண்டும்‌. பிறருடன்‌ உள்ள உறவுகளில்‌ வெளிப்பட வேண்டும்‌. நமது குடும்பத்தில்‌ உள்ள அமைதி நமது ஊரில்‌ வெளிப்பட வேண்டும்‌. இப்படி ஒவ்வொரு கிறிஸ்தவனும்‌ தன்‌ வாழ்வை அமைத்துக்கொண்டால்‌ பிரச்சனைகள்‌ நிறைந்த இந்தச்‌ சமூகம்‌ அமைதியான ஆசிரமமாக மாறும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை. புனித பிரான்சிஸ்‌ அசீசியின்‌ செபத்திற்கேற்ப நம்‌ வாழ்க்கையை அமைத்துக்‌ கொண்டால்‌ இந்தியா அமைதியான நாடாக மாறும்‌ என்பதில்‌ எள்ளளவும்‌ சந்தேகமில்லை.

பகையுள்ள இடத்தில்‌ அன்பையும்,
வெறுப்புள்ள இடத்தில்‌ மன்னிப்பையும்‌,
கலக்கமுள்ள இடத்தில்‌ அமைதியையும்‌,
போட்டியுள்ள இடத்தில்‌ தாழ்ச்சியையும்‌,
பிரிவுள்ள இடத்தில்‌ ஒற்றுமையையும்‌
வளர்க்க அருளை வேண்டி மன்றாடுவோம்‌.
பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1. கடவுளின்‌ வார்த்தை ஏந்தி வரும்‌ பணியாளர்களைப்‌ புறக்கணிப்பதைப்‌ பற்றியும்‌, அவர்களைத்‌ திறந்த மனத்தோடு ஏற்றுக்கொள்வதைப்‌ பற்றியும்‌ கூறலாம்‌.
2. இயேசுவின்‌ அறிவுரைகளில்‌ வாழ்வாக்கப்படாத எளிமையான வாழ்வு, கடின உழைப்பு, ஆகியவைப்‌ பற்றிக்‌ கூறலாம்‌.
3. தேவ அழைத்தலின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைக்கலாம்‌.
 
இறைவாக்குப் பயணம் அருள்பணி முனைவர் A ஜான் பாப்டிஸ்ட் ‌ பெங்களூர்
பொதுக் காலம் பதினான்காம் ஞாயிறு

இன்றைய நற்செய்தியில் இயேசு எழுபத்திரண்டுபேரை அனுப்பிய நிகழ்வு நமக்கு நற்செய்தியாக அளிக்கப்பட்டுள்ளது. அது தரும் செய்திகளை அறிந்து கொள்வதற்கு முன் இந்நிகழ்விற்கு பின்னணியாகச் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முயல்வோம்.

பின்னணி

எழுபத்திரண்டுப்பேரை நியமித்துஅனுப்புவதும்,அவர்கள் திரும்ப வந்து தங்களின் அனுபவத்தைப் பகிர்வதும் லூக்கா நற்செய்தியில் மட்டுமே(லூக்10:1-12;17-23) காணப்படும் ஒன்றாகும். அதே வேளையில் பன்னிருவரை அனுப்பும் நிகழ்வோடும் (லூக் 9:1-6), ஒத்தமை நற்செய்திகளில் இந்நிகழ்ச்சி பேசப்படும் விதத்தோடும் இன்றைய நற்செய்திப் பகுதி ஒரு சில விவரங்களில் ஒத்துப் போகின்றது. எழுபத்திரண்டுபேரை அனுப்புதல் (வச 1-12) அவர்கள் திரும்ப வருதல் (வச. 17-20) ஆகியவற்றிற்கிடையே, இயேசு மனந்திரும்பாத நகர்களைக் கடிந்துகொள்ளும் பகுதி அமைந்துள்ளது. எனவே இப்பகுதி (லூக் 10:1-20) எழுபத்திரண்டு பேரை அனுப்புதல் (வச. 1-12), இடைச்செருகலான சாபம் (வச. 13-16), அனுப்பப்பட்டவர் திரும்புதல் (வச. 17-20) ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இனி இப்திகுதி தரும் சில செய்திகளைக் காண்போம்.

1. எழுபத்திரண்டு பேர்

சில கையெழுத்துப் பிரதிகளில் இது எழுபது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது (காண். NRSV). இவைகளை எப்படி விளக்குவது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. லூக் 9:1-6ல் குறிப்பிடப்படும் பன்னிரண்டு பேரை இஸ்ரயேலில் மீட்கப்பட்ட பன்னிரு கோத்திரங்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். எழுபது / எழுபத்திரண்டு என்பது மோசே எழுபது பேரை கூடாரத்தைச்சுற்றி நிறுத்தியதையும், ஆண்டவர் மோசேக்கு அளித்திருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்ததையும்' அவர்கள் இறை வாக்குரைத்ததையும் குறித்துக் காட்டுகிறது (காண். எண் 11:24-25). எனவே இயேசு மோசே போன்ற இறைவாக்கினர் என்பதோடு, புதிய ஏற்பாட்டில், லூக்காவின் இறையியலில், இது நற்செய்தியானது இஸ்ரயேலையும் (பன்னிருவர்) கடந்து சமாரியா, பிற இனத்தாருக்கும் சென்று சேர்வதை அல்லது சென்றுசேர இருப்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம் (காண். லூக்கா 24:47, திதி 1:8; 8).

2.ஏற்பும் எதிர்ப்பும்

லூக் 9:1-6 பன்னிருவரை அனுப்பியதோடு இந்த எழுபத்திரண்டு (எழுபது) பேரை அனுப்பியதை ஒப்பிடும்போது இவை இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும் இன்றைய நற்செய்திப் பகுதியில் அவர்கள் சந்திக்க வேண்டிய எதிர்ப்புகள்பற்றி இயேசு கூறுவது விஞ்சி நிற்கின்றது. உதாரணத்திற்கு 'ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப் போல' (வச. 31); ஏற்றுக்கொள்ளாவிட்டால் திரும்பி வரும் வாழ்த்துக் கூறிய அமைதி (வச. 6);' (வச. 10-11) ஆகியவற்றைக் கூறலாம்.

3.தொடரும் போதனைப் பணி

அனுப்பப்பட்ட சீடர்களுக்கு எதிர்ப்புகள் பல இருந்தாலும், ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளைப்போல இருக்க வேண்டி யிருந்தாலும் (வச.3), வசதிகுறைவுகள் இருந்தாலும் (வச.4),அவர்கள் "இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக' (வச. 5) என தங்களின் போதனைப்பணியைச் செய்ய அழைக்கப்படுகின்றனர் உடல்நலம் குன்றியோரை குணமாக்கவும்,' "இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது' (வச.9) என அறிவிக்கவும் வேண்டும். ஒருவேளை ஓர் ஊரே அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் " அதன் வீதிகளில் சென்று எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்" எனச் சொல்ல வேண்டியவர்கள் (வச. 11). எனவே ஏற்பு இருந்தாலும், எதிர்ப்பு இருந்தாலும், இறையாட்சியைப் போதிக்கும் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கவேண்டும். இத்தகைய இறையாட்சிப் பணியை ஆற்றும் சீடர் களுக்குக் கிடைக்கும் வெகுமதி, பரிசு, தீய ஆவிகள் தங்களுக்கு அடிபணிகின்றன' எனும் பெருமையும் மகிழ்வும் அல்ல மாறாக 'விண்ணகத்தில் தங்கள் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன' (வச. 20) என்பதுதான்.

முடிவாக...

இயேசுவின் சீடராய் அனுப்பப்பட்டு இறையாட்சியைப் போதிக்கவும், நிஜமாக்கவும் அழைப்பு பன்னிருவரான திருத் தூதர்கள், பணி குருத்துவத்திற்கு என்று அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எழுபத்திரண்டு சீடர்கள் போன்ற திரு முழுக்குப் பெற்ற அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ள கடமை. அதை நாம் அனைவரும் எதிர்ப்புகளின் மத்தியிலும் செய்ய வேண்டும். ஏனெனில், இன்றும் ":அறுவடை மிகுதி; வேளையாள்களோ குறைவு" (வச. 2).
 
வைகைறை நாதங்கள் அருள்பணி.சிகே சுவாமி சே.ச.-ஆர்.சே. இராஜா சே.ச.
பொதுக்காலம் - பதின்நான்காம் ஞாயிறு
முதல் வாசகம் : எசா. 66 :10-14

எசாயா ஆகமத்தில் கூறப்படும் அனைத்தும் ஒருவரால் எழுதப்பட்டதன்று; இருவரால் எழுதப்பட்டது. (1-39 அதிகாரங்கள் முதல் எசாயா; 40 - 66 இரண்டாம் எசாயா), அல்லது மூவரால் எழுதப்பட்டது (1-39 / 40 -55/56 66) என்பர் ஆராய்ச்சியாளர். மூவர் எழுதினர் என்பதைப் பலர் ஏற்காவிடினும், எசாயா ஆகமம் இருவரால் எழுதப்பட்டது என்பதைப் பலரும் இன்று ஏற்கின்றனர். 1 - 39 அதிகாரங்கள் பாபிலோனியத் தளைக்குப் பின்னும் எழுதப் பட்டுள்ளன என்பதை இப்பகுதிகளின் இலக்கிய நடையும் கருத்தும் சுட்டுகின்றன.

இன்றைய வாசகம் விடுதலை பெற்ற இஸ்ரயேலின் மகிழ்ச்சி பற்றியும், புதுப்பிக்கப்பட்ட எருசலேமின் மகிமை பற்றியும் கூறுகிறது. எருசலேம் இஸ்ரயேலருக்குத் தாயாக இருக்கும்; இறைவனும் அவ்வாறே அவர்களுக்குத் தாயாயிருந்து அவர்களைக் கண்காணிப்பார் என்பது வாசகப் பொருள்.

எருசலேம் இஸ்ரயேலின் தாய்

எருசலேம் பாபிலோனியரால் அழிவுற்ற நிலையிலே, இஸ்ரயேலர் அது குறித்து வருந்தி அழுதனர். "பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்" (திபா. 136:1). சீயோன் (எருசலேம்) ஆண்டவரது நகர் (98 : 2); அது புனிதமானது, புகழ்மிக்கது, உலகனைத்திற்கும் மகிழ்ச்சியாக விளங்குவது (47:12). எனவே சீயோன் தாயாகவே கருதப்பட்டது. இப்போது, அச்சீயோன் நகர் திரும்பக் கட்டப்படும். எனவே, "எருசலேமுடன் சேர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள். அவள்மேல் அன்பு கொண்ட அனைவரும் அக்களியுங்கள்... எல்லாரும் அவளோடு சேர்ந்து அகமகிழுங்கள்": என்றழைப்பார் எசாயா (66:10). இது மட்டுமன்று, சீயோனிடமிருந்து ஆண்டவரின் ஆசியையும் அருளையும் மக்கள் பெறவேண்டுமென்று விரும்புகிறார். "அவளுடைய ஆறுதலின் கொங்கைகளில் பால்குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்..." என்பார் (66: 11).

கிறிஸ்தவர்களாகிய நமக்கு எருசலேமாயிருப்பது திருச்சபை. திருச்சபை நம் தாய். அழுவாரோடு அழுது, மகிழ்வாரோடு மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கொப்ப, திருச்சபைத் தாயின் துயரங்களிலே பங்கு பெறுவோம் எங்கெல்லாம் திருச்சபை துன்புறுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நம் தாய் துயருறுகிறாள் என்று உணர்ந்து, துன்புறும் திருச்சபை மக்களுக்கு உதவிடுவோம். அதேபோன்று, திருச்சபையின் மகிழ்ச்சிக் கொண்டாட்டங் களில் நாமும் பங்குகொண்டு பலன் பெறுவோம். பெற்ற தாய்க்கு அன்பு காட்டாதவன் விலங்கிலும் கேவலமானவன்.

தாய் திருச்சபை (புதுச் சீயோன்) கடவுளின் அருளை வாரி வழங்கும் சாதனமாக இருக்கிறது. அதனுடைய கொங்கைகளில் பால் குடித்து நிறைவடை வோமா? திருப்பலி திருவருட்சாதனங்கள், பக்தி முயற்சிகள் இவையெல்லாம் அத்தாய் வழங்கிடும் நன்மைகள். இவற்றிலே நமது பங்கு என்ன? திருச்சபையின் மகிமையின் பெருக்கினின்று இன்பமாய்ப் பருகி, மிகுதியாய்த் திளைப்போம்.

ஆண்டவரே நமது தாய்

திருச்சபை ஆண்டவர் இயேசுவை வெளிப்படுத்தும் அருட்சாதனமே. திருச்சபை நமக்குத் தாயெனில், ஆண்டவரும் நம் தாயே. "தாயானவள் தன் மகவைச் சீராட்டுவதுபோல நாம் உங்களுக்கு ஆறுதல் தருவோம்" (66-13) என்பார் ஆண்டவர். ஆம் ஆண்டவர் ":அம்மையும் அப்பனும்": ஆவார். "பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்" (எசா. 49:15) என்றவரன்றோ நம் ஆண்டவர்? "அன்னை எனப் பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் எனத் தெரிவித்தே அறிவுறுத்தி நின்றாய், நின்னை எனக்கு என்னென்பேன், என் உயிர் என்பேனா?": (திருவருட்பா). "அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடுதிரியா, நன்பு உருகி, ஞானச்சுடர் விளக்கேற்றி": (பூதத்தாழ்வார்) நம் அம்மையாகிய இறைவனுக்குப் பதிலன்பு காட்டுவோம்.

நாம் உங்களுக்கு ஆறுதல் தருவோம்.
இரண்டாம் வாசகம் : கலா. 6:14-18

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தின் முடிவிலே பவுல், தம்முடைய படிப்பினையைச் சுருக்கிக் கூறி, அப்படிப்பினைப்படி வாழக் கலாத்தியர்களை அழைத்து, அவர்களுக்கு இறையாசி அளிக்கிறார்.
புதுப்படைப்பு

திருமுழுக்குப்பெற்ற நாம் புதுவாழ்வு பெறுகிறோம். அது கிறிஸ்துவில் நாம் வாழும் வாழ்வாகும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!'' (2 கொரி. 5:17). கிறிஸ்து தம் உயிர்ப்பினால், "இறந்தோரின் முதற்பேறு" (கொலோ. 1: 18) ஆனார். எனவே, அவரில் புதுஉலகம், பாவத்தையும் சாவையும் அழித்த ஒரு புதுப்படைப்பு தோன்றுகிறது (கொலோ. 1:19-20). கிறிஸ்தவராகிய நாம் கிறிஸ்துவோடு ஒன்றித்தவர்கள் என்பதால், நாமும் இப்புதுப்படைப்பில் பங்கு பெறுகிறோம் (எபே.2:15:4:24; உரோ. 6:4; கொலோ. 3: 10). என்னே நமது மகிமை ! இறைவன் நமக்களித்த இம்மகிமைக்காக நன்றி கூறுவோம்.

கிறிஸ்துவுக்கு "முதற்பேறு": கிட்டியது அவரது சிலுவை மரணத்தாலே. எனவே, ":இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருக்காலும் பெருமை பாராட்டமாட்டேன்" (6 : 14) என்று பவுல் கூறியது நமது விருதுவாக்காய் அமைய வேண்டும். "அறிவிலிகளான கலாத்தியரே உங்களை மயக்கியோர் யார்? இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டவராய் உங்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டப்பட வில்லையா?" (கலா. 3 : 1) என்று கூறப்பட்டது நமக்குத் தான் என்பதை உணர வேண்டும். சட்டத்திற்கு நான் இறந்தேன். "கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்" (கலா. 2: 19) என்று நாம் ஒவ்வொருவரும் கூறவேண்டும்.

நாம் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டோமாயின், "உலகம் நமக்கு அறையுண்டதாயிருக்கிறது. நாமும் உலகத்திற்கு அறையுண்டவர் களாயிருக்கிறோம்" (6: 14). "உலகு" என்பது இங்குப் பாவ உலகைச் சுட்டும். ":பொல்லாத இன்றைய உலகினின்று நம்மை விடுவிக்கும்படி தம்மையே கையளித்தவர்" இயேசு (1:4) என்பதிலிருந்து இது புலனாகிறது (காண். எபே.2:2; 1 கொரி. 1 : 20; யோ. 1 : 10 முதலிய). எனவே, பாவங்களை அகற்றிய புதுவாழ்வை நாம் வாழ்வோமா? கிறிஸ்துவின் சிலுவையிலே இத்தகைய வாழ்வுக்கு உதவி வேண்டுவோமா? "புதிய படைப்பாவதே முக்கியம்" (6:15) என்பதை நமது கொள்கையாக, திட்டமாக ஏற்று நடப்போமா?

இயேசுவுக்கு அடிமை

அடிமைகள் தங்களின் உடைமைக்காரர்களுக்குச் சொந்தமானவர்கள். இவர்கள், குறிப்பிட்டவர்களுக்குத் தாங்கள் உடைமை என்று காட்ட, இவர்களின் உடலில் குறிப்பிட்ட வடிவிலே சூடுபோடப்பட்டது. இந்தச் சூட்டின் தழும்பை வைத்து, இவர்கள் இன்னார் இன்னாருக்கு அடிமைகள் என்று அறிந்துகொள்ளப்படும். தாம் கிறிஸ்துவுக்குச் சொந்தம், அவரது உடைமை, அவரது அடிமையென்று காட்டத் தம் உடலிலும் சூட்டுத் தழும்புகள் உள்ளதாகச் பவுல் கூறுகிறார் (6:17). கிறிஸ்துவின் சாட்சியப் பணியில் அவர் பட்ட பாடுகளால் அவர் உடலில் ஏற்பட்ட தழும்புகளே இவையெல்லாம் (காண் : 2 கொரி 6:4-5; 11:23-29). "கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவுசெய்வேன்" (கொலோ. 1: 24) என்பதைக் காண்க.

கிறிஸ்துவுக்காகப் பவுல் பட்ட துன்பங்கள்தான் அவர் கிறிஸ்துவின் ஊழியர் என்பதற்குச் சான்றேயொழிய, விருத்தசேதனத் தழும்பு அல்ல. எனவே, "விருத்தசேதனமும் ஒன்றுமில்லை; விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை; புதிய படைப்பாவதே முக்கியம்": என்பார் (6:15).

நாமும் கிறிஸ்துவின் உடைமைகள், அவருக்கு அடிமைகள் என்பதற்கு நாம் காட்டக்கூடிய "தழும்புகள்" யாவை? கிறிஸ்துவின் பெயரால் பிறர் நலனுக்காக, பிறர் உரிமைக்காகப் போராடும்போது, நமக்கு வரும் எதிர்ப்புகள், நம்மைப் பற்றிய தவறான மதிப்பீடுகள், நாம் அடையும் துன்பதுயரங்கள் எல்லாம் இத்தழும்புகளே. இத்தகைய தழும்புகளால் நம் உடலும் உள்ளமும் நிறையுமா?

புதிய படைப்பாவதே முக்கியம்.
நற்செய்தி: லூக். 10:1-12, 17 -20

இயேசு எழுபத்திரண்டு பேரை நற்செய்திப் பணிக்கு அனுப்பியது லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகிறது. பன்னிருவரை நற்செய்திப் பணிக்கு அவர் அனுப்பியது பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூவரும் கூறுகின்றனர். நற்செய்திப் பணி ஏதோ ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் செய்ய வேண்டியது அன்று; மாறாக, கிறிஸ்தவர்கள் அனைவரும் இப்பணிக்கு அழைப்பட்டுள்ளோம் என்பது உண்மை. எனவே, நற்செய்திப் பணி நமது கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

ஆண்டவரின் அறிவுரை

சமாதானம் இயேசு இவ்வுலகிற்குக் கொண்டுவந்த தனிப்பெரும் கொடை. எனவேதான், "அவரே நமக்கு அமைதி அருள்பவர்" (எபே. 2: 14) என்பார் பவுல். ஆண்டவரும் ":அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்" என்றார் (யோ. 14: 27). தம் சமாதானத்தைத் தம் பிறப்பிலும், வாழ்விலும், உயிர்த்த பின்னும் நமக்கு அளித்த இயேசு, சீடர்களும், இச்சமாதனத்தையே பிறருக்கு வழங்க வேண்டுமென்று விரும்புகிறார். "இவ்வீட்டுக்குச் சமாதானம்" (10 : 5) என்று சொல்வது நற்செய்திப் பணியாகும். ஏனெனில் நாம் சமாதானம் கூறும்போது, அச்சமாதானம் பலரை ஒன்றுபடுத்தும். "சமாதானத்திற்குரியவன்" ("சமாதானத்தின் மகன்":) அங்கு இருப்பான் என்பதற்கு இதுவே பொருள்.

லூக்கா, கிறிஸ்து கொண்டுவந்த மீட்பையும் சமாதானத்தையும் இணைத்துக்காட்டுவது, மீட்பே. இது மனித - மனித சமாதானம், மனிதர் கடவுள் சமாதானம், மனிதர் தம்மிலே சமாதானம்; இவற்றிலேதான் அடங்கும் என்பது தேற்றம் (காண் :1:79, 2:14, 29:7:50; 8:48;12:51; 19:38). சமாதானம் பெறுவோம்; சமாதானம் அளிப்போம்.

''அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு" (10:2). எனவே இயேசு நமக்குக் கூறும் அறிவுரை நாம் எல்லோரும் நற்செய்திப் பணித்தளத்தில் இறங்க வேண்டுமென்பதே. நம் குடும்பங்களில் தேவ அழைத்தலைத் தூண்டுகிறோமா ? வீட்டுக்கு ஓர் ஆள் என்ற முறையிலே ஏன் இருக்கக்கூடாது? கிராமங்களிலிருந்து தானே இன்று ஆண்களும் பெண்களும் இறைப்பணிக்குத் தங்களை அர்ப்பணிக்கின்றனர்? நம் நகரங்களில் ஏன் தேவ அழைத்தல் குறைவாயிருக்கிறது? இறைவன் எல்லோரையும் தான் அழைக்கிறார்? அழைப்புக்கு நமது பதில் என்ன? நம் குடும்பங்களில் தேவ அழைத்தலுக்காக வேண்டிக்கொள்வோமா? அறுவடை மிகுதி...

நற்செய்திப் பணி துன்ப துயரத்துக்கு இட்டுச் செல்லலாம். இட்டுச் செல்லும் என்பதைச் பவுல் மற்றும் திருத்தூதர்களின் பணி நமக்குக் காட்டுகிறது (காண் : 2 கொரி. 6:4-10; 11:23-29). இத்துன்பங்கள் கண்டு தளர்ந்து விடக்கூடாது. மேலும், தேவைகளையும் பெருக்கிக் கொள்வது தவறு. நமது தேவைகளை ஆண்டவரே கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை வேண்டும் (மத். 6:25-34). "வேலையாள் கூலிக்கு உரியவன்' (10:7) என்பது ஆண்டவருக்குத் தெரியுமன்றோ?

ஆண்டவர் அளிக்கும் பரிசு

ஆண்டவர் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு, ஆண்டவரே தம் வல்லமையை அளிக்கிறார். "என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்.... அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" (மாற். 16 :17 18) என்று கூறிய ஆண்டவர், அனைத்து வலிமையையும் வெல்ல வல்லமை அளிக்கிறார் (10 : 19). ":வன்மைமிக்க அவரது புயம்; வலிமை கொண்ட அவரது கை; உயர்ந்து நிற்கும் அவரது வலக்கை" (திபா. 89 : 13) என்றும் நம்பால் செயல்படும் என்பதை நாம் மறக்கக் கூடாது (திபா. 90:13).

இவை மட்டுமன்று, இறுதி வெற்றியும் ஆண்டவர் நமக்களிப்பார், "உங்கள் பெயர் விண்ணகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று மகிழுங்கள்" (10:20). ஆம், இவ்வுலகில் அவரது தொடர்ந்த உதவியும் பாதுகாப்பும் நமக்குண்டு; மறுவுலகிலும் நமக்கு மகிமையுண்டு. இவையாவும் நம்மை நற்செய்திப் பணிக்குத் தூண்டுமா?

உங்கள் பெயர் வானகத்தில் எழுதப்பட்டுள்ளது.
 

  
சிலுவையடியில் நின்ற தாயல்லோ - உம் பிள்ளைகளாய் எமை ஏற்றாயோ