இறை இயேசுவின் தூய நெஞ்ச அன்பில் பிரியமுள்ள
சகோதர சகோதரிகளே, இன்று அனைத்துலக கத்தோலிக்க திருஅவை இயேசுவின்
திருஇருதயத்தின் பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றது. இயேசுவின்
திருஇதயம் ஆராதனைக்கும், வணக்கத்திற்கும், புகழ்ச்சிக்கும் உரிய
ஒன்றாகும். கனிவும் இரக்கமும் கொண்ட இயேசுவின் இருதய அன்பிற்கு
அளவேயில்லை. மூவொரு இறைவனின் கருணை இரக்கம் ஆகியவற்றின் சாயல் இது.
இந்த பக்தியானது கி.பி.1050களில் புனித பிரான்சிஸ் தெ சேல்ஸ்
மற்றும் புனித ஆசீர்வாதப்பர் சபையினரால் உலகெங்கும் பரப்பப்பட்டது.
கி.பி. 1672ல் விசிடேஷன் சபைத் துறவி மார்கரேட் மேரி ஆலகாக்கு
அவர்களுக்குப் பலமுறை இருதய ஆண்டவர் காட்சியளித்து
மனுகுலத்தின்மீது தமக்குள்ள அன்பை உறுதிச்செய்தார். தம் இதயப்
பக்தியைப் பரப்புவதற்குக் கருவியாய் அவரைத் தேர்ந்துக்கொண்டார்.
பாவப்பரிகாரத்தின் கடமையை மக்கள் உணர வேண்டுமென்று
வலியுறுத்தினார். மேலும் மார்கரேட் மரிக்கு இந்த பக்தியைப்
பரப்புவதில் ஏற்பட்ட ஐயங்கள், சிக்கல்களை நீக்கி வைக்கவும், இந்த
பக்தி மற்ற எல்லா பக்தி முயற்சிகளிலும் தலைச் சிறந்தது என்பதைத்
தெளிவுப்படுத்தவும் தூய கிளாட்லா கொலம்பியரை ஆன்ம குருவாகத்
தெரிந்துக்கொள்ளவும் பணித்தார்.
திருத்தந்தையர்கள் 9ம் பத்திநாதர், 13ம் சிங்கராயர் 11ம்
பத்திநாதர் ஆகியோர் இப்பக்தி முயற்சியை மிகவும் ஊக்குவித்தனர்.
கி.பி. 1856ல் திருத்தந்தை 9ம் பத்திநாதர் இப்பக்தியை கத்தோலிக்கக்
குடும்பங்கள், குழுக்கள், துறவற சபையினர் அனைவரும் இயேசுவின் திரு
இதயத்திற்குத் தங்களை அர்ப்பணிக்க அறிவுறுத்தினார். கி.பி. 1899ல்
திருத்தந்தை 13ம் சிங்கராயர் இயேசுவின் திரு இதயத்திற்குப்
பரிகாரம் செய்வதன் அவசியத்தைக் குறித்து எழுதிய திருமடலின் வழியாய்
முதல் வெள்ளிக்கிழமைப் பக்தி பரவலாயிற்று.
இயேசுவின் திருஇருதய பக்தி இவ்வுலக வாழ்வில் ஆசீர்பொழியும்
ஊற்றாகவும், அபரிமிதமான அருட்கொடைகளைக் கொடுக்கக் கூடியதாகவும்,
மறுமையில் நிலையான வாழ்விற்கு தொடக்கமாகவும் இருப்பதால், இவ்வுலக
தீய நாட்டங்களை விலக்கி அன்பு, பரிவு, இரக்கம், தாழ்ச்சி,
கீழ்ப்படிதல், மன்னிப்பு போன்ற பண்புகளைக் கொண்டு வாழ்வோம் எனும்
உறுதியுடன் இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.
நம்பிக்கையாளரின்
மன்றாட்டுகள்
1. நல்லாயனே இறைவா, திருஅவையை இறையாட்சியின் வழியில்நடத்திச்
செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார், பொதுநிலையினர், வேதியர் அனைவரும் மரியாவின்
மாசற்ற இதய அன்பின் வழிக்கேற்ப அன்பிலும், நம்பிக்கையிலும்
வாழ்ந்திடத் தேவையான வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆதியும் அந்தமுமான இறைவா, இயேசுவின் தாயான மரியாவுக்கு
பிரிவினைக் கிறிஸ்துவர்கய் வணக்கம் செலுத்தும் முறையை
எதிர்த்து மற்ற சபைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிற,
கோடிக்கணக்கான கத்தோலிக்க மக்கள் உமது அளவில்லா இரக்கப்
பெருக்கத்தால், விசுவாச உண்மையை உணர்ந்து வாழ வரமருள
இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
3. மகா பரிசுத்தமான இறைவா, உலகெங்குமுள்ள திவ்ய நற்கருணைப்
பேழைகளில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் விலைமதிக்கப்படாத
திரு உடலையும், திரு இரத்தத்தையும், ஆத்துமத்தையும்
தெய்வீகத்தையும் அவருக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம்,
அலட்சியத்திற்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்து, பாவிகளை
மனந்திருப்பத் தேவையான வரமருள இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
4. அமைதியின் அண்ணலே இறைவா, சகோதரி லூசியா 1939 மார்ச்
19ல் எழுதிய ஒரு கடிதத்தில் உலகத்தில் யுத்தமா, அமைதியா
என்பது. நாம் முதல் சனிக்கிழமைப் பக்தியை கடைப்பிடிப்பதில்தான்
இருக்கிறது. நம்மையே நாம் மாசற்ற இருதயத்திடம் ஒப்படைக்கவும்
வேண்டும். இதனாலேயே இப்பக்தி முயற்சி பரவ வேண்டுமென்று
நான் மிகவும் ஆசிக்கிறேன் என எழுதியுள்ள வார்த்தைகளை
நம்பி சனிக்கிழமை பக்தியை கடைப்பிடிக்கத் தேவையான வரமருள
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. விடுதலையின் நாயகனே இறைவா, இன்றைய சூழ்நிலையில் மக்களால்
மக்களை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்,
தொண்டர்கள் மனித நேய மாண்பினைப் பிரதிபலிப்பவர்களாக,
நேர்மையான வழியில் உண்மையின் ஊழியர்களாக, தியாக
வாழ்க்கை வாழ்ந்து மனித நேயப் பாதையில் மக்களை வழிநடத்திச்
செல்ல அவர்களுக்குத் தேவையான அருளைப்பொழியுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
7. அன்பின் அண்ணலே இறைவா, உலகில் வாழும் மக்களைத்
துன்புறுத்தும் அனைவரும், மனித நேயத்தை உணர்ந்து சகோதர
உணர்வோடு வாழ, உம் தெய்வீக அருளைப் பொழிந்தருள
வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
1. தொடக்கமும் முடிவுமான எம் இறைவா,
திருஅவையின் தலைவர் திருத்தந்தை, கர்தினால்கள்,
ஆயர்கள், குருக்கள், துறவறத்தார், இறைப்பணியாளர்கள்
அனைவரும் இயேசுவின் திரு இருதய இரக்கத்தின் பண்புகளால்
இறைமக்களை வழிநடத்தி வாழ்வளிக்க வேண்டிய அருளைத்
தந்தருள தூய நெஞ்சம் கொண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பை அள்ளித்தந்த இறைவா, உம்மை ஏற்றுக்கொண்ட
ஒவ்வொருவரும் உமது அன்பை வார்த்தைகளால் மட்டுமின்றி
செயல்களாலும் வெளிப்படுத்தி அன்பு நிறைந்த இதயங்களாக
வாழ அனைத்து வரங்களையும் அளித்து காத்திட உம்மை
மன்றாடுகிறோம்.
3. தியாகத்தின் திரு உருவே இறைவா, தனக்கு
குறிக்கப்பட்ட பணியை நினைத்து மனதில் கலக்கம்
கொண்டாலும் உமது பரிகார பலியின் செயல்திட்டத்தை
நிறைவேற்றி உலக மக்களுக்கு இரட்சணியம் வழங்கிய
திருமகனைப்போல் நாங்களும் தன்னலம் கொள்ளாமல்
பிறருக்காக தியாகமேற்கும் நல்லுள்ளத்தை வழங்குமாறு
உம்மை மன்றாடுகிறோம்.
4. நீதியின் பாதையில் வழிநடத்தும் இறைவா, மக்களை
நல்வழியில் வழிநடத்தவும், சிறந்த திட்டங்களினால்
கல்வி, வேலை வாய்ப்பு அளிக்கவும், மக்களின் நலனே தம்
வாழ்வென வாழவும் நல்மனம் கொண்ட நல்ல மனிதர்களை
ஆட்சியாளர்களாக அளிக்க வேண்டுமென்று தூய நெஞ்சம்
கொண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.
5. குணமளிக்கும் இறைவா, ஆரவார, ஆடம்பர வாழ்வே பெரிதென
நினைத்து தெய்வ பயம் என்பதே அறியாமல் மனம் போனபடி
வாழ்ந்துக் கொண்டிருக்கும் பேதை நெஞ்சங்களை உம் ஞான
ஒளியால் திசை திருப்பி குணமளிக்க வேண்டுமென்று
இயேசுவின் திருஇருதயமே எம்மில் இரங்குமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
நிகழ்வு 1673 ஆம் ஆண்டில் ஒரு நாள் மார்கரெட்
மரியா, தான் இருந்த துறவு மடத்தில் இருந்த சிற்றாலத்தில் இறைவனிடம்
ஜெபித்துக் கொண்டிருந்தபோது திரு இருதய ஆண்டவர் அவருக்குக்
காட்சி கொடுத்தார். இக்காட்சியைக் கண்டதும் மார்கரெட் மரியா ஒரு
விதமான பரவச நிலையை உணர்ந்தார். அப்போது திரு இருதய ஆண்டவர்
அவரைத் தன்னருகே அழைத்து, தன் மார்பில் சாய்ந்துகொள்ளச்
சொன்னார். மார்கரெட் மரியாவும் இயேசுவின் மார்போடு
சாய்ந்துகொண்டார். அப்போது இயேசு மார்கரெட் மரியாவின் இதயத்தை
தன்னுடைய இதயத்தில் பொருத்தி, மீண்டுமாக அதை எடுத்த இடத்தில்
வைத்தார். இந்தக் காட்சிக்குப் பிறகு அவர் இயேசுவின் திரு இருதய
அன்பை எங்கும் எடுத்துரைக்கத் தொடங்கினார் 1674, 1675 ஆம் ஆண்டுகளில்
ஆண்டவர் இயேசு மார்கரெட் மரியாவிற்கு பல முறை காட்சி
கொடுத்தார். அந்தக் காட்சிகளில் எல்லாம் அவர் அவரிடம், தன்னுடைய
இதயம் அன்பிற்காக ஏங்குகிறது என்றும், குடும்பங்களை தன்னுடைய
இதயத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கவேண்டும் என்றும், பாவப்
பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றும் பக்திமுறைகளை மேற்கொண்டால்,
அதற்கான பலன் கிடைக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திரு இருதய ஆண்டவர் நான்காம் முறையாக மார்கரெட் மரியாவிற்கு
காட்சி கொடுத்தபோது அவருக்கு பனிரெண்டு வாக்குறுதிகளைக்
கொடுத்தார். அந்த வாக்குறுதிகள் இதோ:
1.மக்களின் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம்.
2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம்.
3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம்.
4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத
அடைக்கலமாயிருப்போம்.
5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம்.
6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக்
கடலுமாக இருக்கும்.
7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர். 8.
பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர்.
9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ,
அந்த வீட்டை ஆசீர்வதிப்போம்.
10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு
அளிப்போம்.
11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி
பொறிக்கப்படும்.
12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள்,
தங்கள் பாவங்களுக்காக மனத்துயர்கொண்டு நன்மரணம் அடைவர், அவர்கள்
நம் பகைவராகவோ, திருவருட்சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.
வரலாற்றுப் பின்னணி
இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் பதினேழாம்
நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டாலும், இதற்கான தொடக்கம் படைவீரன்
ஒருவன் இயேசுவின் விலாவைக் குத்த, அதிலிருந்து வழிந்த இரத்தம்
மற்றும் தண்ணீரில் இருக்கின்றது (யோவா 19: 34). தண்ணீர்
வாழ்வின் ஊற்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மைப்படுத்தக்கூடிதாகவும்
இருக்கின்றது.
அதே போன்று இரத்தமும் வாழ்வின், தியாகத்தின் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின்
விலாவிலிருந்து வழிந்த தண்ணீரும் இரத்தமும் அவர் இந்த மனுக்குலத்தின்
மீது கொண்ட பேரன்பை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
திரு இருதய பக்தி முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர் பதினேழாம்
நூற்றாண்டைச் சார்ந்த ஜான் யூட்ஸ் என்பவர் ஆவார். இவர்தான் இயேசுவின்
திரு இருதயத்திற்கு பூசை பலிகளை ஒப்புக்கொடுத்து, இப்பக்தியை
வளர்த்தெடுத்தார். திரு இருதய ஆண்டவர் மார்கரெட் மரியாவிற்கு
காட்சிகொடுத்த பிறகு இந்த பக்தி முயற்சிகள் இன்னும் சிறப்பாக
வளர்ந்தன. இப்படி படிப்படியாக வளர்ந்த இயேசுவின் திரு இருதய பக்தி
முயற்சி 1899 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள், அப்போது திருத்தந்தையாக
இருந்த திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரால் அங்கீகாரம் செய்யப்பட்டது.
அவர்தான் இவ்விழா இயேசுவின் திரு உடல் திரு இரத்தப்
பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற முதல் வெள்ளிக் கிழமையில்
உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை
இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகின்றன.
2009 ஆம் ஆண்டு குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைத்துப் பேசிய
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், "இயேசுவின் இதயம் அன்பினால்
பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், அந்த அன்பிற்கு ஈடாக நாம் நம்முடைய
அன்பை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
சீமோன் பேதுருவைப் பார்த்து, "என்னை அன்பு செய்கிறாயா?" என்று
கேட்ட இயேசு நம்மையும் பார்த்துக் கேட்கிறார். நாம் இயேசுவின்
அன்பிற்கு பதிலன்பு காட்டுகிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இயேசுவின் திரு இருதயப்
பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன
பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப்
பார்ப்போம்.
இயேசுவிடமிருந்த அளவிட முடியாத அன்பு நற்செய்தியில் ஆண்டவர் இயேசு,
"நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்
மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள்
உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்" என்பார் (மத் 11: 29).
இயேசுவிடமிருந்து நாம்
கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பண்பே அவரிடத்தில் இருந்த
கனிவும் அன்பும்தான். அவர் கனிவும் அன்பும் கொண்டவராக இருந்ததால்தான்
ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்த மக்கள் மீது இரக்கம் கொள்ள
முடிந்தது, அவர்களுக்கு தேவையானதைச் செய்ய முடிந்தது (மத்
9:36)
இயேசுவின் அன்பு மனிதருடைய அன்பைப் போன்று சாதாரணமான அன்பு
கிடையாது. அது எல்லையில்லா அன்பு, மானிடருடைய மீட்புக்காகத் தன்னைத்
தந்த தியாக அன்பு, அதனால்தான் பவுலடியார் இயேசுவிடம் இருந்த அன்பைக்
குறித்து இவ்வாறு கூறுவார், "இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து
கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று
உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல்
பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள்
பெற்றுக்கொள்வீர்களாக" (எபே 3: 18) ஆம், நாம் அனைவரும்
கிறிஸ்துவிடம் விளங்கிய அந்த அளவுகடந்த அன்பை உணர்ந்து கொண்டு
அதற்கேற்ப வாழ்வதுதான் மிகவும் பொருத்தமானதாகும். இந்த நேரத்தில்
இயேசுவிடம் விளங்கிய அதே அன்பு நம்மிடத்தில் இருக்கிறதா என
சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருசமயம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா என்ற நகரில் வாழ்ந்த
காத்ரின் திரேசாள் (Catherine Drexel) என்ற பணக்காரப் பெண்மணி
சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதி வழியாக வாகனத்தில் பயணம்
செய்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை மிகவும் ஆச்சரியத்திற்கு
உள்ளாக்கியது. ஏனென்றால் அங்கிருந்த குழந்தைகள் போதிய உடையில்லாமல்,
உணவில்லாமல் வறிய நிலையில் இருந்தார்கள். இதைக் கண்ட அவர், அந்நேரத்திலேயே
ஒரு முடிவு எடுத்தார். அம்முடிவு வேறொன்றும் இல்லை. அவர்களுக்காக
தன்னுடைய வாழ்வை அர்ப்பணிப்பது. அதன்பிறகு அவர் அங்கே இருந்த
குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒரு துறவற சபையை
நிறுவி, அவர்களுடைய வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.
உண்மையான அன்பு என்பது துன்புற்று இருப்போரைக் கண்டு பரிதாபப்
படுவது கிடையாது. மாறாக, அவர்களுடைய துன்பத்தைப் போக்க தன்னைத்
தருவது. இயேசுவும் காத்ரின் திரேசாளும் அத்தகைய அன்பினை, கரிசனையைக்
கொண்டிருந்தனர். நாமும் இயேசுவிடம் விளங்கிய அன்பைக் கனிவை,
நமதாக்குவோம்.
இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை இயேசு அன்பிற்கும் கனிவிற்கும்
எப்படி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாரோ அதைப்
போன்று அவர் மனதாழ்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.
மனத்தாழ்மை இருக்கும் இடத்தில் பொறுமை இருக்கும்,
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும்,
துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் தன்மை இருக்கும். இயேசுவிடம் மனத்தாழ்மை
இருந்ததனால்தான் அவரால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்ள முடிந்தது,
துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. இன்றைக்கு நம்மிடத்தில்
இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை இருக்கின்றதா? என சிந்தித்துப்
பார்க்கவேண்டும்.
நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், "இறுமாப்பு ஒருவரைத்
தாழ்த்தும்; தாழ்மை ஒருவரை உயர்த்தும்" . நாம் இயேசுவிடம் விளங்கிய
மனத்தாழ்மையை நமது வாழ்வில் கடைபிடித்து வாழும்போது அவரால் உயர்த்தப்படுவோம்
என்பது உறுதி.
ஆகவே, இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக்
கொண்டாடும் இந்த நாளில் அவருடைய அளவுகடந்த அன்பை உணர்ந்து
பார்ப்போம். அவரிடத்தில் இருந்த கனிவை, அன்பை, தாழ்மையை நமது
வாழ்வில் கடைபிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்
பெறுவோம்
When God measures a man. He puts a tape around
his heart not his head.
இளைஞன் ஒருவன் கொடிய குற்றம்செய்ததற்காக,
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டான். அவனை விசாரித்துப்
பார்த்த நீதிபதி இறுதியில் அவனுக்கு மரணத்தண்டனை
விதித்தார். அவன், தான் இந்த நிலைக்குக் காரணமாக இருந்த சமூகத்தை,
உறவுகளை, நண்பர்களை, ஏன் தன்னுடைய தாயைக்கூட முற்றிலுமாக
வெறுத்தான். தன்னுடைய மகனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது
என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, அவனுடைய தாய் அவனைப்
பார்ப்பதற்காக சிறைக்கூடம் நோக்கி ஓடோடி வந்தாள். அப்போது
சிறைஅதிகாரி அவளைத் தடுத்துநிறுத்தி, அம்மா! உம்முடைய மகன்
இப்போது யாரையும், (உங்களையும் சேர்த்து) பார்க்க விரும்பவில்லை
என்றார். அதற்கு அந்தத் தாய் அவரிடம், அது ஏன்? என்று
கேட்டதற்கு அவர், உங்கள் அனைவரையும் அவன் முற்றிலுமாக
வெறுக்கிறான். அவனுக்கு இப்போது யாரையுமே பிடிக்கவில்லை
என்றார். அதற்கு அந்தத் தாய், அவன் என்னை வெறுத்தால் என்ன!,
நான் அவனை முழுவதும் அன்பு செய்கிறேன் என்றாள். மரணதண்டனைக்
கைதியான அந்த இளைஞன்மீது தாயானவள் எந்தளவுக்கு பாசம்
வைத்திருக்கிறார் என்பதை அந்த சிறைஅதிகாரி அப்போது உணர்ந்துகொண்டார்.
தாயன்பு போன்ற கலப்படமற்ற அன்பு, இந்த உலகில் வேறு எதுவுமில்லை
என்ற குன்றக்குடி அடிகளாரின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தம்
நிறைந்ததாக இருக்கிறது என்பதை மேலே உள்ள நிகழ்வு நமக்கு எடுத்துக்கிறது.
இன்று அன்னையாம் திருஅவை மரியாளின் மாசற்ற இதயப்
பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னையின் இதயம் மாசற்றது,
அது எப்போதும் அன்பினால் நிரம்பி வழிந்ததோடு மட்டுமல்லாமல்,
இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை நிறைவேற்றுவதிலே கண்ணும்
கருத்துமாய் இருந்தது. எனவே, இப்பெருவிழாவில் மரியாளின் மாசற்ற
இதயம் நமக்கு எத்தகைய பாடத்தைக் கற்றுத்தருகிறது என்று
சிந்தித்துப் பார்த்து மரியாளைப் போன்று, இறைத்திருவுளம்
எதுவென அறிந்து, அதை நிறைவேற்ற நாம் முயல்வோம்.
மரியாளின் மாசற்ற இதயத்திற்கான பக்திமுயற்சிகள் கி.பி.பதினேழாம்
நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டதற்கான வரலாறு இருக்கிறது.
ஜான் யூட்ஸ் என்ற குருவானவர்தான் மரியாளின் மாசற்ற இதயத்திற்காக
முதல்முறை திருப்பலி மற்றும் பூசைக்கருத்துகள் ஒப்புக்கொடுத்தவர்.
அவர்தான் இப்பக்தி முயற்சி உலகெங்கும் பரவ அடித்தளமிட்டவர்.
அதன்பின்னர் அன்னை மரியாள் பாத்திமா நகரில் லூசியா,
ஜெசிந்தா, பிரான்சிஸ் என்ற மூன்று சிறுவர்களுக்குக்
காட்சிகொடுத்தபோது இந்த பக்திமுயற்சி இன்னும் பரவத் தொடங்கியது.
1917 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் தேதி புதன்கிழமை காட்சியில்,
மரியன்னையின் தூய இதயம் முட்களால் ஊடுருவப்பட்டு இருப்பதை
லூசியா கண்டாள். ஜெசிந்தா, பிரான்ஸிஸ் மற்றும் மக்களோடு ஜெபமாலை
செபித்தபின் லூசியாவிடம் அன்னை மரியா, நீ இன்னும் கொஞ்சகாலம்
இங்கு இருக்கவேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி
உன்னை பயன்படுத்த இயேசு விரும்புகிறார்; உலகில் என் மாசற்ற
இதய பக்தியை ஏற்படுத்தி, இப்பக்தியைக் கைக்கொள்ளும் அனைவருக்கும்
நான் மீட்பை வாக்களிக்கிறேன்; என் மாசற்ற இதயம் உன் அடைக்கலமாகவும்,
கடவுளிடம் உன்னை அழைத்து செல்லும் வழியாகவும் இருக்கும்
என்று கூறினார்.
அப்போது பேரொளியின் பிரதிபலிப்பு அவர்கள் மேல் பாய்ந்தது.
மாதாவின் வலது உள்ளங்கையில் முட்களால் குத்தித் துளைக்கப்படுவதாகத்
தோன்றிய ஓர் இதயம் இருந்தது. மனுக்குலத்தின பாவங்களால்
நிந்திக்கப்பட்டு, நம்மிடம் பரிகாரம் கேட்கிற மரியன்னையின்
தூய இதயம் தான் அது.
அன்னை மீண்டும் அவர்களிடம் ஏதாவது சிறுசிறு ஒறுத்தல்கள்
செய்யுபோது, ஓ! இயேசுவே உமது அன்பிற்காகவும், பாவிகள்
மனந்திரும்புவதற்காகவும், மரியன்னையின் தூய இதயத்திற்கு எதிராகக்
கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இதைச்
செய்கிறேன் என்று சொல்லும்படிக் கூறினார்; ரஷ்யாவை என்மாசற்ற
இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு அருட்திரு
ஸ்தெபனோ கோபியிடம் அன்னை மரியாள் பேசும்போது, தன் மாசற்ற
இதயத்தின் ஒளி, திருத்தந்தை, குருக்களை ஆசீர்வதிப்பதையும்,
அடைக்கலமாகவும், பாதுகாப்பாகவும் தன் இதயம் எப்போதும் இருப்பதாகவும்,
தங்களையே அர்ப்பணிக்கவும் கூறினார்.
இந்த நிகழ்வுகளை எல்லாம் அறிந்த திருத்தந்தை பனிரெண்டாம்
பத்திநாதர் 1944 ஆம் மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை
உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். தொடக்கத்தில் இவ்விழா
ஆகஸ்ட் 22 ஆம் தேதிதான் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு
இவ்விழா இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்த
நாள் கொண்டாடப் பணிக்கப்பட்டது.
மரியாளின் மாசற்ற இதயத்தைப் பற்றி திருவிவிலியம் சொல்லாமலில்லை.
அதற்குத் தெளிவான விவிலியச் சான்றுகள் இருக்கின்றன. லூக்கா
நற்செய்தி 2 ஆம் அதிகாரம் 19& 51(இன்றைய நற்செய்தி வாசகம்)
ஆகிய வாசங்களில், மரியாள் நிகழ்ந்தவற்றை எல்லாம் தன்னுடைய
உள்ளத்தில் இருத்தி, சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்று படிக்கின்றோம்.
அதேபோன்று லூக்கா நற்செய்தி 2 ஆம் 35 ஆம் வசனத்தில் எருசலேம்
திருக்கோவிலில் சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் தாங்கி,
இக்குழந்தை இஸ்ரயேல் மக்களின் பலரது வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும்
காரணமாக இருக்கும்.... உம்முடைய உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப்பாயும்
என்று மரியாளைப் பார்த்துக் குறிப்பிடுவார். இதன்மூலம் மரியாள்
ஆண்டவர் இயேசுவைப் பற்றியே தன்னுடைய உள்ளத்தில்
சிந்தித்துக் கொண்டிருந்தார் என்று உறுதி செய்துகொள்ளலாம்.
மரியாள் எப்போதும் மீட்பின் திட்டத்தை தன்னுடைய உள்ளத்தில்
இருத்தி சிந்தித்துப் பார்த்தவள். அதோடு மட்டுமல்லாமல், அந்த
மீட்புத் திட்டம் நிறைவேற தன்னுடைய திருமகன் இயேசுவோடு
துன்பங்களையும், வேதனைகளையும், அவமானங்களையும் சந்தித்தவள்;
உள்ளத்தில் தூய அன்பை வைத்துக்கொண்டு, துன்புற்ற மானிட சமுதாயத்திற்கு
இரங்கியவள்.
ஆகவே, இத்தகைய ஒரு தூய, இரக்கமிக்க அன்னையைக் கொடையாகப்
பெற்றிருக்கும் நாம், அந்த அன்னை வாழ்ந்து காட்டிய
நெறியின்படி வாழ்வதுதான், நான் அன்னைக்குச் செய்யக்கூடிய
மிகச் சிறந்த கைமாறாக இருக்கும்.
ஒரு சாதாரண அன்னையே தன்னுடைய பிள்ளை நன்றாக இருக்கவேண்டும்,
வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை அடையவேண்டும் என்று கனவுகண்டு,
அதற்காக தன்னுடைய உடல், பொருள் அத்தனையும் தியாகமாகத் தருவாள்.
(தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளின் வளர்ச்சியில்
அவர்களுடைய தாயின் பங்கு எந்தளவுக்கு அளவிட முடியாததாக இருந்தது
என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ளவேண்டும்). அப்படியிருக்கும்
போது மரியாள் நமக்காக, நம்முடைய மீட்புக்காக எத்தகைய தியாகங்களை
மேற்கொண்டிருப்பார் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டும்
என்றில்லை.
எனவே, நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறவேண்டும் என்றால்,
மரியாளின் மாசற்ற இதயப் பெருவிழாவை அர்த்தமுள்ளதாக மாற்றவேண்டும்
என்றால் அவரைப் போன்று இறைத்திருவுளம் எதுவென அறிந்து, அதை
நிறைவேற்ற முன்வரவேண்டும். அதுதான் நாம் அன்னைச்
செலுத்தும் காணிக்கையாக இருக்கும். இவ்வாறு நாம் இறைத்திருவுளம்
எதுவென அறிந்து, அதை நிறைவேற்றும்போது இன்றைய முதல் வாசகத்தில்
கேட்பது போன்று நாம் மக்களினங்கள் நடுவில் புகழடைவோம்; ஆண்டவரின்
ஆசி பெற்ற மக்களாக விளங்கிடுவோம்.
எனவே, மரியாவின் மாசற்ற இதயப் பெருவிழாக் கொண்டாடும் இந்த
நல்லநாளில் மரியாளைப் போன்று, நம்முடைய இதயத்தையும்,
வாழ்வையும் தூயதாக்கிக்கொள்வோம், இறைதிருவுளம் அறிந்து அதை
நிறைவேற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.