Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் திருஇருதயத்தின் பக்தி








இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 29-ம் தேதி.




இயேசுவின் திருஇருதயத்தின் மட்டில் புனித இராயப்பர் வைத்த அன்பு.

பெரிய அப்போஸ்தலராகிய புனித இராயப்பர் திவ்விய இரட்சகருடைய இருதயத்தின் பேரில் வைத்த அன்பாலும் ஆண்டவர் விஷயமாய் அவர் காண்பித்த தாராள குணத்தாலும் பிரமாணிக்கத்தாலும் சகலருக்கும் மாதிரிகையாயிருக்கிறார். இயேசுக்கிறிஸ்து நாதர் புனித இராயப்பரைத் தமது ஊழியத்துக்குக் கூப்பிட்டதும், அவர் சகலத்தையும் விட்டு உடனே பிரமாணிக்கமுள்ள சீடனாகப் பின்பற்றுகிறார். பின்பற்றின் முதல் நிமிஷம் துவக்கி திவ்விய இயேசுவின் பேரில் அவர் வைத்த விசுவாச வணக்கப் பற்றுதலால் மற்றச் சீடர்கள் எல்லோரையும் விட மேலானவராய் விளங்கினார்.

தம்மைப் பற்றி மனிதர்கள் என்ன சொல்கிறார்களென்று அப்போஸ்தலர்களை விசாரித்த பிற்பாடு , நீங்கள் என்ன சொல்லுகிறீர்களென்று அவர்களைக் கேட்கையில், புனித இராயப்பர் மற்றவர்கள் பேரால் வெகு துடுக்காய் : "சுயஞ்சீவியரான சர்வேசுவரனுடைய குமாரனாகிய கிறிஸ்துவாய் நீர் இருக்கிறீர்" என்கிற விசுவாச பிரகடனம் செய்தார்.

கடைசி இராப்போஜனத்துக்குப் பிறகு திவ்விய இரட்சகர் அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவ முழந்தாளிலிருக்கும் போது புனித இராயப்பர் தமது திவ்விய குருவின் மட்டில் எந்த அளவு விசுவாசமும் வணக்கமும் உடையவராயிருந்தாரென்றால், தேவ மகத்துவம் நிறையப் பெற்ற தெய்வம் தம் பதவியை மறந்து பாவியாகிய தன் பாதத்தைக் கழுவ வந்ததைக் கண்டு புனித இராயப்பர் கூச்சப்பட்டு, இந்தத் தாழ்ச்சி முயற்சியை நீர் செய்யக்கூடாதென்று உறுதியோடு தடுத்தார். ஆகிலும் ஆண்டவருடைய சித்தத்துக்குத் தடை செய்தால் அவருடைய அன்பை இழந்து போக நேரிடும் என்னும் பயத்தால் மாத்திரம் சம்மதித்தார்.

ஜெத்செமனி தோட்டத்தில் துரோகியான யூதாஸென்பவன் அழைத்து வந்த ஜனத்திரள் நமது ஆண்டவரைப் பிடிக்கத் தங்கள் பாவாக்கிரமம் நிறைந்த கரங்களை நீட்டி விரைந்து வரும்போது, புனித இராயப்பர் தன் திவ்விய குருவைக் காப்பாற்றும்படி தன் வாளை உபயோகிக்க உத்தரவு கேட்கிறார். ஆண்டவர் மறுமொழி சொல்வதற்கு முன்பாகவே மால்கூஸ் என்பவனைக் காதற வெட்டுகிறார். எல்லாச் சமயத்திலும் புனித இராயப்பர் தன் அன்பின் முதல் ஏவுதலுக்கு உடனே கீழ்ப்படிவார். தன் திவ்விய எஜமானைக் காப்பாற்றி மகிமைப்படுத்துவதில் எப்போதும் முதன்மையானவர் அவரே.

புனித இராயப்பர் நமது ஆண்டவர் மட்டில் எந்த அளவு அன்புடையவர் என்றால் தான் எப்போதாகிலும் தன் திவ்விய குருவுக்கு பிரமாணிக்கம் தவறி நடக்கக்கூடுமென்கிற நினைவு முதலாய் தன்னிடம் ஆகாதென்று எண்ணினார். பூங்காவனத்துக்குப் போகிற வழியில் திவ்விய இயேசு தமக்குச் சாவு வரப்போகிறதென்றும், அப்போஸ்தலர்கள் தம்மைவிட்டுப் பிரிந்து தம்மை மறுதலிப்பார்களென்றும் அறிவிக்கும் போது, புனித இராயப்பர், ஆண்டவரே! யாவரும் உம்மை மறுதலித்தாலும் நான் உம்மை மறுதலியேன் என்று சொல்லும்போது ஆண்டவர் பிரத்தியுத்தரமாக: இன்று இரவில் சேவல் கூவுமுன் நீ எம்மை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்றார். ஆனால் புனித இராயப்பர், நான் உம்மோடு சாகிறதாயிருந்தாலும் உம்மை மறுதலியேன் என்று தடுத்துச் சொன்னார்.

திவ்விய இயேசு இரக்கமும் உருக்கமுமான சிநேகம் நிறைந்த தமது கண்களால் புனித இராயப்பரை நோக்குகிறார். அந்த அப்போஸ்தலர் மனம் இளகி தன் திவ்விய குருவின் வார்த்தைகளை நினைக்கிறார். உடனே வெளியே போய் கைப்பான கண்ணீர் சொரிந்து தேம்பித் தேம்பி அழுகிறார். அது முதல் புனித இராயப்பர் அப்போஸ்தலர்கள் கூட்டத்தில் மிகுந்த தாழ்ச்சியாலும் மேலான நன்றியறிதலாலும் தனக்கு இம்மாத்திரம் இரக்கம் காண்பித்த இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் உருக்கமான அன்பால் விளங்கினார். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சேவல் கூவும் போது தன் பாவத்தை நினைத்து எவ்வளவு கண்ணீர் சிந்தி அழுதாரென்றால் அவருடைய கன்னங்கள் இரண்டிலும் சிறு வரிச்சுவடுகள் காணப்பட்டனவென்றும் பாரம்பரையாய்ச் சொல்லி வருகிறார்கள்.

புனித இராயப்பர் மனந்திரும்பின் பிற்பாடு இயேசுவின் திரு இருதயமானது அவருக்கு உருக்கமான பட்சத்தைக் காண்பிக்கிறது. ஆண்டவர் அவரை ஒரு போதும் அவர் பாவத்தினிமித்தம் கண்டித்தவரல்ல. அவருடையப் பிரதான அப்போஸ்தலராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும், இவ்வுலகத்தில் தம்முடைய உன்னத ஸ்தானாதிபதியாகவும் அவரைத் தெரிந்து கொள்ளுகிறார். இந்த உதவி உபகாரங்களெல்லாம் புனித இராயப்பருடைய இருதயத்தில் தனக்கு இவ்வளவு இரக்கமும் பட்சமும் காண்பித்த திவ்விய இரட்சகர் பேரில் சிநேகப்பற்றுதலையும், நன்றியறிதலையும், மட்டற்ற தாழ்ச்சியையும் உண்டு பண்ணினது. புனித இராயப்பரைப் போல் அல்ல, நாம் அவரைவிட இன்னும் அதிகமாய் சர்வேசுரனுக்குத் துரோகம் செய்திருக்கிறோம். என்றாலும் நம்மையும் திவ்விய இயேசு வெகு இரக்கத்தோடு கண்ணோக்கித் தமது திருக்கரங்களை விரித்து திரு இருதயத்தையும் திறந்து காட்டுகிறார். எதார்த்தமாய் மன்னிப்புக் கேட்போமேயாகில் நமது சகல பாவங்களையும் மறந்து தமது ஏராளமான வரங்களையும் ஆசீர்வாதங்களையும் நமது பேரில் பொழிந்தருள்வார்.

ஆதலால் புனித இராயப்பர் பாவனையாக இனி ஒரு போதும் மனம் பொருந்தி எந்தப் பாவத்தையும் செய்கிறதில்லையென்று பிரதிக்கினை செய்து, நமது ஆண்டவருடைய ஊழியத்துக்கும் அன்புக்கும் நம்மை முழுதும் கையளித்து, நமது கடமைகளை எல்லாம் நிறைவேற்றி பிறர் ஆத்துமங்களையும் இரட்சித்து, இவ்வகையாய் இயேசுவின் திரு இருதயத்துக்கு நமது அன்பையும் நன்றியறிதலையும் காண்பிப்போமாக.

வரலாறு

புனித இராயப்பர் திவ்விய இயேசுவோடு ஜீவித்த மூன்று வருடகாலங்களில் அவர் ஆண்டவரிடமாய்க் கண்ட கணக்கற்ற பிறர் அன்பு செயல்களில் சிலவற்றைத் திருச்சபையின் துவக்கத்திலிருந்தே கிறிஸ்துவர்களுக்குச் சொல்லிக் காட்டுவார். அவைகளில் ஒன்றை மட்டும் இங்கு புனித இராயப்பர் சொன்னது போல சொல்லிக் காட்டுவோம். "நாங்கள் ஓர்நாள் சாயந்திரம் திவ்விய இரட்சகரோடு பெத்தானியா ஊருக்குப் போய் மரியமதலேனாள் வீட்டில் இராத்தங்க வேண்டியிருந்தது. அக்காலம் வெகு குளிர்காலம். இரவில் எல்லோரும் அயர்ந்து நித்திரை போகும்போது திவ்விய இயேசு ஒவ்வொருவருடைய படுக்கையின் கிட்ட வந்து கம்பளியால் அவர்களுடைய கால்களை மூடினார். ஆண்டவர் என் கிட்ட வந்ததும் என் இருதய உணர்ச்சியைக் கொஞ்சமும் நான் அடக்கமாட்டாமல் கண்ணீர் சிந்தி அழுதேன். திவ்விய இரட்சகர் என்னைப் பட்சத்தோடு நோக்கி: "இராயப்பா, நீ பார்த்ததை ஒருபோதும் வெளியிடாதே" என்றார். என் திவ்விய குருவின் விருப்பத்துக்கு கீழ்ப்படிந்து அப்போஸ்தலர்களிடம் இதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் ஆண்டவர் இப்போது மோட்சத்துக்குப் போய்விட்டபடியால் இதை நான் வெளியிடாமலிருக்க எனக்குக் கட்டாயமில்லை; நமது திவ்விய இரட்சகருடைய திரு இருதயத்தின் அளவில்லாத அன்பும் நட்பும் எவ்வளவு என்று உலகமறியும் பொருட்டு நான் இதை வெளியிடுகிறேன்" என்றார்.



சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

"கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்" என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான். ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர் வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும். நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.





சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தன

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி. உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. ஆமென்.


 

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும் அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்