இயேசுவின் திரு இருதய
வணக்க மாதம்.
14-ம் தேதி.
இயேசுவின் திருஇருதயம் நசரேத்து
வாழ்வில் நமக்கு முன்மாதிரிகை.
மோட்சத்தில் வாழும் புனித மூவொரு கடவுளின் வாழ்வை நசரேத்தூரில்
வாழ்ந்த இயேசுவின் திருஇருதயமானது நல்ல விதமாய்ப் பின்பற்றி
நடந்தது. அங்கே பிதா, சுதன், தூய ஆவி ஆகிய மூவரும்
நித்திய அன்பால் ஐக்கியமாகி பேரின்ப பாக்கியத்தில்
குடிகொண்டிருக்கிறார்கள். கடவுள் மனிதர் பேரில் தாம்
வைத்த அளவற்ற பெருக்கத்தால் அவர்களைச் சுபாவத்துக்கு
மேலான நிலைக்கு உயர்த்தி தமது தத்துப் பிள்ளையாக
மாற்றி தமது தெய்வீக குடும்பத்தின் அங்கத்தினராகச்
செய்திருக்கிறார்.
திவ்விய இயேசு இவ்வுலகத்துக்கு வந்து முப்பத்து மூன்று
ஆண்டு நசரேத்தூரில் தமது திருத் தாயோடும், புனித சூசையப்பரோடும்
வாழ்ந்து புனித சூசையப்பருக்கும், குடும்பத்துக்கடுத்த
வேலையில் தூய கன்னி மாதாவுக்கும் உதவி புரிந்து வந்ததற்குக்
காரணம், அவர்களை அன்புச் செய்து அவர்களுக்குப் பணிந்து
ஊழியம் செய்யவேண்டுமென்பது மட்டுமல்ல; நம்மைத் தமது
சுவீகார சகோதரர்களாக்கி தேவ திருக்குடும்பத்தின் மேலான
வாழ்வில் பழக்கி, அக்குடும்பத்தின் புண்ணியங்களையும்
பரிசுத்ததனத்தையும் இவ்வுலகத்தில் நாம் கடைப்பிடிக்க
வேண்டிய வழியைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அவருடைய
கருத்து. நமது சாதாரண செயல்களைப் புனிதப்படுத்தும் விதத்தை
திவ்விய இயேசு நாசரேத்தூரில் தமது திவ்விய
மாதிரிகையால் நமக்கு அறிவித்திருக்கிறார். தாழ்மையும்
கஷ்டமுமுள்ள கைத்தொழிலால் தமது பரமதந்தைக்கு பூரிப்பு
வருவித்து அவரை மகிமைப்படுத்த தமது வாழ்நாளின்
பெரும்பாகமாகிய முப்பது வருடத்தை செலவழித்தார். புனிதத்தன்மை
எல்லாராலும் அடையக் கூடுமென்றும், வீண் பெருமையால்
தீங்கு விளையக்கூடிய பெரிய காரியங்களிலும், பிரபல்யமான
செயல்களிலும் அது அடங்கினதல்லவென்றும் கற்பிக்கச் சித்தமானார்.
நாம் தினந்தோறும் செய்கிற சாதாரண அலுவல்களை உத்தமமாய்ச்
செய்து முடிப்பதிலும், விவிலியம் திவ்விய இயேசுவைப்பற்றி
அவர் எல்லாம் நன்றாய்ச் செய்தார் என்று உச்சரிக்கும்
வாக்கியம் நம்மில் பூரணமாய் நிறைவேறும்படி செய்வதிலுந்தான்
புனிதத்தன்மை அடங்கியிருக்கிறது. ஆதலால் நம்முடைய செபமும்,
வார்த்தையும், செய்கையும் எவ்வளவு உத்தமமாயிருக்கவேண்டுமென்றால்
இயேசுவின் திருஇருதயமானது எப்படி செபம் பண்ணினதோ, எப்படி
வேலை செய்ததோ, அப்படியே நாமும் செய்கிறோமென்றும், அவர்
நசரேத்தூரில் வாழ்ந்த வாழ்வுதான் நாமும்
வாழுகிறோமென்றும் எதார்த்தமாய்ச் சொல்லவேண்டும். சாதாரணக்
காரியங்களைச் சுபாவத்துக்கு மேலான உத்தமமாய்ச் செய்வதில்தான்
தூயதன்மை அடங்கியிருக்கிறது என்று புனித பொன்வெந்தூர்
சொல்லியிருக்கிறார்.
செபம் பண்ண நேரமில்லையென்று சாக்குப்போக்கு சொல்லுகிற
கிறிஸ்தவர்கள் தான் ஒவ்வொரு நாளிலும் எத்தனை மணி நேரங்களை
வீண் பேச்சிலும், உபயோகமில்லாத வேலைகளிலும் செலவழித்து,
வீண் காலம் போக்குவார்கள்! அவர்கள் செபம்பண்ணத் தடையாயிருக்கிறது
நேரத்தின் குறைவல்ல, நல்ல மனதின் குறைவுதான். உறுதியான
மனதும், உண்மையான பக்தியும் அவர்களிடத்தில் கிடையாது.
நம்முடைய இருதயத்தை இயேசுகிறிஸ்துவின்பால் எழுப்பி, நம்முடைய
அன்றாட அலுவல்களை அவருக்கு ஒப்புக்கொடுக்க அதிக நேரம்
தேவையில்லை. நசரேத்தூரில் காலையில் எழுந்திருந்ததும்
திவ்விய இயேசுவின் முதல் நினைவும் செயலும் ஏதென்றால்,
தமது பிதாவுக்கு முன்பாக தமது மாதாவோடும், தம்மை வளர்த்த
தந்தையான புனித சூசையப்பரோடும், சாஷ்டாங்க தெண்டனிட்டு
அவர் தங்களுக்குச் செய்த சகல உபகாரங்களுக்கும் நன்றி
செலுத்தி, தங்களுடைய செயல்களையெல்லாம் உலக மீட்புக்காக
ஒப்புக்கொடுப்பதேயாகும். நாமும் அவருடைய திவ்விய
மாதிரிகையைப் பின்பற்றி நடப்போமாக.
நல்ல கிறிஸ்தவன் விவிலியக்கோட்பாடுகளை கடைப்பிடிக்க எப்படி
நடக்கவேண்டும் என்று இயேசுக்கிறிஸ்துநாதர் தாமே நமக்கு
அறிவித்திருக்கிறார். நீங்கள் தர்மம் செய்யும் போது,
உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும்
(மத்தேயு 6:3) என்று திருவுளம் பற்றுகிறார். இதற்கு அர்த்தம்
ஏதென்றால், நீ ஒரு நற்செயல் செய்யும்போது உன் வீண்மகிமைக்காகவும்,
மனிதர்கள் உன்னைப் புகழ்ந்து கொண்டாடும்படியிருக்கவும்
செய்யாமல், கடவுளுடைய மகிமைக்காகவும் பிறருடைய ஆத்தும்
மீட்புக்காகவும் செய், மோட்சத்தில் உனக்கு பலன்
கிடைக்கும் என்கிறார். நாம் செய்கிற நற்செயல்கள்
நித்தியத்தின் விதையென்று புனித பெர்நர்து
சொல்லுகிறார். விதை விதைக்கிற குடியானவன், தான்
விதைக்கிற சிறு விதையானது மிகவிரைவில் ஏராளமான பலன்
கொடுக்குமென்று அறிந்திருக்கிறான். கிறிஸ்தவர்கள்
நித்திய மகிமைக்காக விதை விதைக்கிறவர்கள். திரு இருதய
அன்புக்காக செய்கிற நமது நற்செயல்கள் நாம் மோட்சத்தில்
அநுபவிக்கப் போகிற விலையேறப்பெற்ற பலன்களை நமக்கு
விளைவிக்கும்.
ஆதலால் இயேசுவின் திரு இருதயத்திற்கு உன் செயல்களையும்,
களைப்பு தவிப்பையும் ஒப்புக்கொடுத்து, அதன் அன்புக்காக
சகலத்தையும் செய்வாயேயாகில் நீ கூலிக்காரனானாலும் சரி
அல்லது அரசு அலுவலனானாலும் சரி, நீ மாணவனானாலும் சரி,
நித்திய மோட்சபாக்கியத்தை அடையலாம்.
நசரேத்தூரில் இயேசுவின் திரு இருதயமானது நாம் நமது செயல்களை
புனிதப்படுத்தும் விதத்தைக் கற்றுக் கொடுக்கிறதுமல்லாமல்,
தாழ்ச்சி, கீழ்ப்படிதல், பிறரன்பு, தரித்திர அன்பு, இவ்வுலக
காரியங்களின்மேல் பற்றுதலில்லாமை, ஆண்டவருடைய ஊழியத்தில்
உறுதியான பிரமாணிக்கம், கடவுளுடைய தோத்திரத்தின்
பேரிலும், ஆத்தும் மீட்பின் பேரிலும் மிகுந்த பற்றுதல்
முதலிய புண்ணியங்களையும் படிப்பிக்கிறது.
வரலாறு.
இயேசுவின் திருஇருதயமானது புனித மார்கரீத் மரியம்மாளுக்குக்
கொடுத்த வாக்குறுதிகளில் எந்தெந்த இடங்களில் நமது இருதயத்தின்
சாயலான படங்களை நிறுவி வழிபட்டு வருகிறார்களோ அந்த இடங்களையெல்லாம்
நாம் ஆசீர்வதித்துக் காப்பாற்றுவோம் என்பது ஒன்று.
பின்வரும் நிகழ்ச்சி இந்த வாக்குறுதியில் மிக்க உரித்தான
சான்றாகும்.
மதுரை மிஷனைச்சேர்ந்த அய்யம்பாளையம் என்னும் ஊரில் சில
வருடங்களுக்கு முன் ஒரு பிற மதத்தவர் மனந்திரும்பி தன்
குடும்பத்தோடும், பிள்ளைகளோடும், அப்போது சிலுக்குவார்பட்டியிலிருந்த
குருவானவரிடம் திருமுழுக்கு பெற்றார். இந்தப்
புதுக்கிறிஸ்தவன் தான் சேர்ந்த இந்தப் புது மதத்தின்
மட்டிலும் நல்ல கிறிஸ்துவனுக்குரிய கடமைகள் மட்டிலும்
மிக பிரமாணிக்கமாயிருந்தான். ஒருநாள் பங்கு குரு அவனுக்கு
ஓர் அழகான இயேசுவின் திருஇருதயப்படத்தைக் கொடுத்து, உன்
வீட்டில் ஒரு நல்ல இடத்தில் இந்தப் படத்தை நிறுவி அதன்முன்
நாள்தோறும் அடிக்கடி சில செபங்கள் சொல்லிவா; அப்போது
இயேசுவின் திருஇருதய ஆசீர்வாதமும் ஆதரவும் உன் குடும்பத்தின்
பேரிலும், உன்வீட்டின் பேரிலும், இறங்கி வருமென்பதை உறுதியாய்
நம்பு என்று சொன்னார். குருவானவர் விருப்பப்படி இந்தப்
புதுக் கிறிஸ்தவனும் நடந்துவந்தான்.
இந்தப் புதுக்கிறிஸ்தவன் நாள்தோறும் தன் குடும்பத்தோடு
அருகாமையிலிருந்த மணலூர்மலைக் காப்பித்தோட்டத்தில்
போய் வேலை செய்து வந்தான். அங்கே அவன் வேலை
செய்துகொண்டிருந்த ஒருநாள் அவன் கிராமத்தில்
நெருப்புப்பிடித்து எல்லா வீடுகளும் எரிந்துபோனது.
மாலைப்பொழுதில் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது ஒரே ஒரு
வீடு மாத்திரம் நெருப்புப்பற்றாமல் நிலைத்திருப்பதைக்
கண்டான். அருகில் வந்து பார்க்கும்போது அது அவனுடைய
சொந்த வீடுதான். அந்த நாள் முழுவதும் வீடு அடைத்துக்
கிடந்தது. அது கூரைவீடு. அகோர நெருப்பிலிருந்து அதைக்
காப்பாற்ற வீட்டில் ஒரு ஆளுமில்லை, இயேசுவின் திரு இருதயந்தான்
ஆச்சரியத்துக்குரிய விதமாய் தன்வீட்டைக் காப்பாற்றினதன்று
நிச்சயித்து, அத்திரு இருதயப் படத்திற்கு முன்பாக தெண்டனிட்டு
தன் முழு இருதயத்தோடு ஆயிரம் முறை அவருக்க நன்றி
சொல்லி அவருக்கு முன்னிலும் இன்னும் அதிக பிரமாணிக்கமுள்ள
ஊழியனாய் நடப்பதாக வாக்குக்கொடுத்தான். இந்த
வாக்குறுதி தவறாமல் சாகும்வரை சகலருக்கும் நன்மாதிரியாக
நடந்துவந்தான்.
இவ்வுலக நெருப்பைவிட மிக பயங்கரமான நெருப்பாகிய நரக
நெருப்பிலிருந்து இயேசுவின் திருஇருதயமானது நம்மை ஆதரித்துக்
காப்பாற்றும்படி அக்கருணைக்கடலை இரந்து மன்றாடுவோமாக.
சிந்தனை.
என்னுடைய குற்றங்குறைகளைப் பாராமல் நான் பிறந்த நாள்
முதல் என் வாழ்நாளெல்லாம் அயராமல் என் பேரில் அன்பார்ந்த
கவலை கொண்டிருந்த என் பரோபகாரிக்கு நான் எப்படி போதுமானவரையில்
நன்றியறிந்திருப்பேன். இயேசுவின் திருஇருதயம் ஓர் அன்பு
பாதாளம். அந்தப் பாதாளத்திலே நம்மிடத்திலுள்ள மற்றெந்த
அன்பும் அமிழ்ந்திப்போகவேண்டும். விசேஷமாய் நம்மிடத்திலுள்ள
சுய அன்பு அதில் துர்க்கனிகளாகிய முகத்தாட்சண்யமும்,
மற்றவர்களுக்கு மேலாய் நம்மை உயர்த்த வேண்டுமென்கிற ஆசையும்,
நம்முடைய சுயநாட்டங்களைப் பின்பற்றுதலும் ஆகிய இவைகளெல்லாம்
அந்த அன்புக்கடலில் சிதைந்து போகவேண்டும்.
செபம்.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தகுணமுமுள்ள இயேசுவே, என்
இருதயம் உமது இருதயம்போல ஆகச் செய்தருளும்.
சேசுவின் திரு இருதயத்திற்கு
நவநாள் ஜெபம்
"கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்" என்று
திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய
இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது
திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை
நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு
உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக
விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும்
மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும்
பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு
இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக்
கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம்
அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்
போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள்
அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய
வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக்
கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு
இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன்.
இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில்
என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு
ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம்
வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத்
தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம்
வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள்
அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை
உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.
ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து
போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க
மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர்
தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை
நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும்
பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை
நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில்
தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர்
வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான்
ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே,
ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத்
தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும்
சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.
நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி
நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற
ஆசையாயிருக்கிறேன். ஆமென்.
சேசுநாதருடைய திரு இருதயத்தின்
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக்
கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து
சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய்
ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய
ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும்
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள்
அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும்
சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும்
ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய
இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக்
கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும்
சுவாமி.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள்
இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை
செய்தருளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும்
பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால்
உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி
புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.
உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர்
இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த
மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து
சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய
பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன்
சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும்
சுவாமி. ஆமென்.
|