இயேசுவின் திரு இருதய
வணக்க மாதம்.
12-ம் தேதி.
இயேசுவின் திருஇருதயம் உண்மையான
மகிமையை கொடுக்கிறது.
அளவில்லாத மகிமையையும், பெருமையையும் மோட்சத்தில் அனுபவித்த
திருமகனாகிய இயேசுக்கிறிஸ்து உலக மகிமையின் அழிவைக் கற்பிக்கும்
பொருட்டு இவ்வுலகத்துக்கு வந்து அழியாத மோட்சத்தின்
வழியைத் தமது மாதிரிகைகளால் காண்பிக்க திருவுளமானார்.
மெய்யான பெருமை எதில் அடங்கியிருக்கிறதென்று பலருக்கு
நிச்சயமாய் தெரியாது. தங்கள் செயல்களால் தங்களைப் பிரபல்யப்படுத்தின
மனிதர்கள்தான் பெரியவர்களென்று அவர்கள் எண்ணுவார்கள்.
சில வேளை இந்தச் செயல்கள் மனுக்குலத்துக்குக்
கேடாயிருந்திருக்கலாம். தங்கள் சேனையின் வல்லமையால்
நாடுகளை கீழே விழச் செய்த அரசர்களின் பெயரை அவர்கள் மகிமைப்படுத்திக்
கொண்டாடுவார்கள். ஆனால் அந்த அரசர்கள் அந்த சண்டைகளால்
ஜெயித்திருப்பார்களேயாகில் அவர்கள் பெரிய மனிதர்களல்ல,
பெருங்கொலைக்காரர்கள். தங்கள் பேராசையை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான
மனிதர்களைக் கொன்ற கொலைக்காரர்கள். காற்றால் அலைக்கழிக்கப்படுகிற
தூசியைப்போல் உடனே காணாமல் மறைந்து போகிற அரசை ஏற்படுத்த
உலகத்தை மாசுப்படுத்தினார்கள். இத்தகைய அரசர்களின்
வாழ்வு மனித சந்ததிக்குக் கேட்டைத்தான் விளைவிக்கும்.
மற்றவர்களுக்கு மேலாய்த் தன்னை உயர்த்த வேண்டுமென்கிற
ஆசையானது மனிதர்களை தீயவர்களாக்குகின்றது. அப்படியே ஒரு
மனிதனிடத்தில் தன் குடும்பத்துக்குப் போதுமான செல்வம்
இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதைக் கொண்டு அவன்
சந்தோஷமாய் வாழலாம். ஆனால் தன்னைவிட பெரிய பணக்காரர்கள்
இருக்கிறார்களே என்கிற கவலை அவனுக்கு ஏற்படுகிறது. ஒன்றில்
அவர்களோடு சரிசமமாகவேண்டும் அல்லது அவர்களுக்கு மேற்பட்டவனாக
வேண்டும், இது நிறைவேறுகிறவரையில் அவனுக்குத் திருப்தி
ஏற்படாது. ஆதலால் அதிக செல்வந்தன் ஆக ஆக, அதிக கவலையும்
பெரும் கேடும் உண்டாகிறது. ஏனென்றால் தன்னைவிட பெரிய
பணக்காரர்கள் இன்னும் இருக்கிறார்களேயென்ற எண்ணம் அவனை
இராப்பகலாய் வாட்டுகிறது. இன்னும் கேள்: ஒரு கிராமத்தில்
ஒரு வாலிபனிருக்கிறான். அவனுக்கு அறிவும் திறமையும் உண்டென்று
வைத்துக்கொள்வோம். ஆதலால் இவன் சொல்லுகிறபடி அவ்வூர்
மக்களில் பலர் நடக்கிறார்கள். இந்த நிலையில் அவன்
திருப்தி அடைந்திருப்பானா? இல்லை, இல்லை. இன்னும் மேலே
ஏறவேண்டும் ஊருக்கு முதல் மனிதனாய் ஆகவேணும் என்ற,
வீணும் விழலுமான பெருமை அவனுக்கு உண்டாகிறது! நாள்
செல்லச் செல்ல அவனிலும் சாமர்த்தியவான்கள்
தோன்றுகிறார்கள். அவர்கள் அதிகாரிகளாகவே இவன் கீழே
போகிறான். அல்லது இவன் தன் வாழ்நாளெல்லாம்
செல்வாக்கில் வாழ்ந்தாலும் இறந்த பிறகு வரும் பயனென்ன?
(சில நாளைக்குள்ளாக இவனிலும் திறமையுள்ள வேறு சிலர் எழும்புகிறார்கள்)
அவ்வூரார் இவனைக் கூடிய சீக்கிரம் மறந்துபோகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு இவனைப்பற்றிப் பேசுபவர்
ஒருவருமில்லை. சிலவேளை இவன் ஜீவித்த காலத்திலிருந்த
செல்வாக்கைவிட, அந்தக் கிராமம், அதிக
செல்வாக்காயிருக்கிறதாக்கும்.
உலக பெருமையானது மணலில் பதிகிற காலடித் தடத்துக்குச்
சமம். அந்தத் தடமெல்லாம் ஒன்றில் காற்றினாலோ அல்லது மற்றப்
பிராணிகளின் காலடியினாலோ அழிந்துபோகிறது. இதுபோல்தான்
உலக பெருமையும் அழிந்துபோகும். இந்த அழிவுக்குரிய வீண்
மகிமைக்காக தன் ஆத்துமத்தையும், நித்திய மோட்ச பாக்கியத்தையும்
இழந்து போவது அறியாமை.
ஆனால் வேறோர் மகிமையிருக்கிறது. அது ஒரு போதும்
வாடாது, ஒருபோதும் அழியாது. அது எந்த மகிமை? புனிதத்தை
அஸ்திவாரமாகக் கொண்ட மகிமை. என்றென்றைக்கும் மகிமைப்படுத்தும்படி
புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் மகிமை. இதுவே தாராளகுணமும்,
உத்தமதானமும் நிறைந்த கிறிஸ்தவர்களின் மகிமை.
நம்முடைய உன்னத மாதிரிகையாகிய இயேசுவின் திரு இருதயமானது
தமது போதகங்களினாலும், மாதிரிகைகளினாலும் மகிமையின்
பாதையை நமக்குக் காண்பித்திருக்கிறது. திவ்விய இயேசு
இவ்வுலக வீண் மகிமையைத் தேடாமல் தமது பிதாவின் மகிமையையே
தேடினார். தமக்கோவென்றால் நிந்தை அவமானங்களையும், பாடுகளையும்
சிலுவை மரணத்தையும் மாத்திரம் தெரிந்து கொண்டார். இதன்
வழியாகவே தமது மகிமை உத்தானத்துக்கும், சகல புனிதர்களுக்கும்
நித்திய புகழ்ச்சி ஸ்தோத்திரங்களுக்கும் உரிமையாளரானார்.
புனிதர்கள் இவருடைய தெய்வீக மாதிரிகைகளையும் புண்ணியங்களையும்
கண்டுபாவித்து, தங்கள் ஆசைப் பற்றுதல்களோடு எதிர்த்துப்
போராடி, சோதனை நேரங்களில் திவ்விய இயேசுவுக்குப் பிரமாணிக்கமாய்
நடந்து, அவருடைய அன்புக்காக துன்ப தரித்திரங்களையும்,
நிந்தை அவமானங்களையும், கொடிய வேதனைகளையும் அனுபவித்து,
இயேசுக்கிறிஸ்துவின் ஊழியத்தில் சாகும் வரை
நிலைத்திருந்தார்கள். இப்போதோவென்றால் திவ்விய இயேசுவும்,
தூய ஆவியானவரும் அவர்களை மோட்ச இராச்சியத்தில் மகிமைப்படுத்துகிறார்கள்.
அவர்கள் இறைவனின் பிள்ளைகளுக்குரிய நித்திய பாக்கியத்தை
அனுபவிக்கிறார்கள். அவர்களைப் பகைத்தவர்களும்,
தீங்கிளைத்தவர்களும் நித்திய இருளிலும் நரக
நெருப்பிலும், அவமானத்திலும் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பரலோக மகிமையின் கதிர்களானது இவ்வுலகத்திலே புனிதர்களைச்
சூழ்ந்துகொண்டிருக்கிறது. திருச்சபையானது அவர்களை உலகத்தின்
எத்திசையிலும் மகிமைப்படுத்தி அவர்களுக்கு வணக்கம் வருவிக்கிறது.
அவர்களை விரோதித்து யாவராலும் மறந்து அவமதிக்கப்பட்டு
வருகிறார்கள். புனித இஞ்ஞாசியார், புனித சவேரியார்,
புனித ஞானப்பிரகாசியார் ஆகியோர் தங்களுடைய புனிதத்தன்மையால்
தங்களுடைய பெயரைப் பிரபல்யப்படுத்தியிராவிடில் யார்
அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி நினைப்பார்கள்?
புனித இஞ்ஞாசியார் நோயுற்றிருந்த காலத்தில் புனிதர்களுடைய
சரித்திரங்களை வாசித்ததினிமித்தம் தேவ அருட்கொடையால்
தூண்டப்பட்டவராய் முழுதும் மனந்திரும்பி செபமும் தவமும்
நிறைந்த வாழ்வு வாழ ஆரம்பித்து, தரித்திர வேடம் அணிந்து,
தேவ சித்தத்துக்காக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்குத்
தொண்டூழியம் செய்வதில் தன்னை முழுதும் கையளித்தார். மகிமை
பெருமையின் பேரில் நாட்டமுடையவரை அவருடைய அண்ணன் புனித
இஞ்ஞாசியாரை நோக்கி, நம்முடைய பேருக்கும் புகழுக்கும்
தகாத இந்த இழிவான தொழிலை நீர் செய்வதை நான்
பார்க்கும்போது, எனக்கு வெட்கமாயிருக்கிறது. நீர் தரித்திருக்கிற
லொயோலாவென்னும் நம்முடைய முன்னோர்களுடைய புகழ் பெற்ற
பெயரை ஞாபகப்படுத்திக்கொள்ளும். லொயோலா வம்சத்தின்
பெருமைக்கு இழிவை வருவியாதேயும் என்றார். உலக மனிதர்களிடத்தில்
விளங்குகிற மூடநம்பிக்கைக்கும், அறியாத்தனத்தன்மைக்கும்
இதுவே ஒரு நல்ல அத்தாட்சி. புனித இஞ்ஞாசியார் தமது
புனிதத்தன்மையால் அழியாத மகிமையைத் தமது குடும்பத்துக்கு
வருவியாதிருப்பாரேயாகில், லொயோலாவென்கிற பெயரும் மற்ற
அநேக பெயர்களைப்போல் இருளில் மூழ்கியிருக்கும்.
பெரும் புகழ் பெறவேண்டும் என்ற பேராசையால் வாலிபராகிய
பிரான்சிஸ் சவேரியார் மனிதரிடன் புகழ்ச்சியின் பேரில்
மிக்க நாட்டம் கொண்டிருந்தாரென்று ஏற்கனவே நமக்குத்
தெரியும். ஒரு புதிய மகிமைப் பட்டத்தயும், அழியாத
கீர்த்தியையும், தன் குடும்பத்திற்கு வருவிக்க
வேண்டுமென்பதே அவருடைய விருப்பம். உலக மகிமையின் நிலையற்ற
தனத்தைப்பற்றி இறைவனுடைய வரத்தால் ஏற்கெனவே ஞான வெளிச்சமடைந்திருந்த
இஞ்ஞாசியார் இந்த வாலிபனை அண்டி இயேசுக்கிறிஸ்துவின்
வாக்கியத்தை அடிக்கடி சொல்லுவான். ''மனிதன் உலகம் முழுவதையும்
ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில்
அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு
ஈடாக எதைக் கொடுப்பார்?" புனித மத்தேயு 16:26.
பிரான்சிஸ் சவேரியார் உலகத்தின் வெறுமையையும், இறைவனின்
பெருமையையும் உணர்ந்தார். இந்த நேரமுதல் உலக மகிமையெல்லாம்
வெறுத்து நிந்தித்து, கடவுளுடைய மகிமைக்காகவும், ஆத்தும்
மீட்புக்காகவும் தன்னை முழுதும் கையளித்து கடைசியாய்
மோட்சத்தில் தம்முடைய புனிதர்களுக்கு ஆண்டவர் தயார்
செய்திருக்கிற உண்மையும் அழியாததுமான மகிமைப் பெயரைச்
சுதந்தரித்துக் கொண்டார்.
வரலாறு
செல்வந்தனான ஒரு பக்தியுள்ள கிறிஸ்தவன் திடீரென்று தன்
செல்வத்தை எல்லாம் இழந்து எவ்வளவு நிர்ப்பாக்கிய
நிலையில் வர நேரிட்டதென்றால், தன் குடும்பத்தின் அன்றாட
சாப்பாட்டுக்குத் தினமும் அவசியப் பொருட்கள் கூட அவனுக்குக்
கிடைக்கவில்லை. அவனும் அவன் மனைவியும் தங்களுக்கு வந்த
இந்த நிர்ப்பாக்கிய நிலைமையை மற்றவர்களுக்கு அறிவிக்கத்
துணியாமல், பசியும் பட்டினியுமாய்க் கிடந்து கடைசியாய்
எழுந்திருந்து நடக்கக் கூடாத நிலைக்கு வந்துவிட்டார்கள்.
இச்சமயம் மின்னலைப்போல் ஓர் எண்ணம் அந்தப் பெண்ணின் உள்ளத்திலுதித்தது.
அதாவது : இன்னும் நமது வீட்டில் ஒரு மெழுகுவர்த்தி இருக்கிறது.
இதுதான் நம்முடைய கடைசி செல்வம். இதை இயேசுவின் திருஇருதய
சுரூபத்துக்கு முன் ஏற்றி வைக்கலாம். திருஇருதயம் நமது
பேரில் இரக்கமாயிருக்கும் என்று நினைத்துத் தன் கணவனிடம்
சொன்னதும் அவர் ஒப்புக்கொள்ளவே, அந்தப் பக்தியுள்ள
பெண் தான் இருந்த இடத்தைவிட்டு மிகுந்த கஷ்டத்தோடு நகர்ந்துபோய்
அந்த வர்த்தியை ஏற்றிவைத்தார். இயேசுவின் திரு இருதயம்
அவர்களுடைய மன்றாட்டுக்கு செவிகொடுத்தது. ஏறக்குறைய நடுச்சாமத்தில்
இந்த வீட்டில் இந்த வெளிச்சம் தெரிவதைக் கண்ட அடுத்த
வீட்டுப் பெண் என்னமோ, ஏதோ யாராவது நோயாயிருக்கிறார்களோ
என்று நினைத்து, இந்த வீட்டுக்கு வந்து பார்க்கையில்
இவர்களை இந்த பரிதாபத்துக்குரிய நிலையில் சாகுந்தறுவாயில்
கண்டாள். இதற்குக் காரணம் என்னன்று கேட்கையில், உண்மையை
வெளியிட்டார்கள். உடனே அந்தப் பெண் தன் வீட்டுக்கு ஓடிப்போய்
உணவு கொண்டு வந்தாள். இயேசுவின் திரு இருதய இரக்கத்தை
இரந்து மன்றாடின அவ்விருவரும் உயிர்ச்சேதத்திலிருந்து
காப்பாற்றப்பட்டார்கள்.
உடலின் உயிரைக் காப்பாற்ற இயேசுவின் திருஇருதயம் இவ்வளவு
கவலை எடுத்துக்கொண்டால், நாம் அன்போடும் நம்பிக்கையோடும்
அத்திருஇருதயத்தை இரந்து கேட்கும்போது நமது ஆத்தும் உயிரைக்
காப்பாற்ற அத்திருஇருதயம் என்னதான் செய்யாது !
சிந்தனை
நம்முடைய இருதயம் கடவுளுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது.
கடவுளை மறந்து வேறு எந்த செல்வத்தின் பேரிலும் தன்
திருப்தியைத் தேடுகிறவன், அல்லது தன் அன்பை வைக்கிறவன்
நிர்ப்பாக்கியன். இயேசுவின் திரு இருதயத்தை அன்பு
செய்கிறது எவ்வளவு இனிமை என்று நீ அறிவாயேயாகில், இந்தத்
தூய அன்பை கைக்கொள்ள நீ எவ்வித துன்பத்தையும் பட்டனுபவிக்க
பின்வாங்கமாட்டாய்.
செபம்
இயேசுவின் இனிய திருஇருதயமே! உம்மை நான் அதிகமதிகமாய்
அன்பு செய்ய அனுக்கிரகம் செய்தருளும்.
சேசுவின் திரு இருதயத்திற்கு
நவநாள் ஜெபம்
"கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்" என்று
திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே! தேவரீருடைய
இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது
திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை
நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு
உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக
விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும்
மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும்
பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு
இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக்
கேட்கப் போகிறேன்? தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம்
அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப்
போகிறேன்? சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள்
அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய
வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக்
கேட்கப்போகிறேன்? ஆகையால் என் நேச சேசுவின் திரு
இருதயமே! தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன்.
இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில்
என் அடைக்கலம் நீரே. சோதனைத் தருணத்தில் எனக்கு
ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம்
வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத்
தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம்
வைத்தாலே போதும், என் ஜெபம் பிரார்த்தனைகள்
அனுகூலமாகும். திவ்விய சேசுவே! தேவரீருடைய நன்மை
உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.
ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து
போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க
மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர்
தள்ளுவீரல்ல. உமது இரக்கமுள்ள கண்களால் என்னை
நோக்கியருளும். என் நிர்ப்பாக்கியத்தையும்
பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை
நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.
இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில்
தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே. தேவரீர்
வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான்
ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே,
ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத்
தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும்
சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.
நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி
நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற
ஆசையாயிருக்கிறேன். ஆமென்.
சேசுநாதருடைய திரு இருதயத்தின்
பிரார்த்தனை
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக்
கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா,
எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து
சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய்
ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய
ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கிமான சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும்
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள்
அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும்
சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும்
ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய
இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே,
எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய
இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத்
தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய
சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி
இரட்சியும் சுவாமி.
33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின்
திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும்
சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக்
கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய
செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும்
சுவாமி.
இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள்
இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை
செய்தருளும்.
பிரார்த்திக்கக்கடவோம்
சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா! உமக்கு மிகவும்
பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால்
உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி
புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.
உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர்
இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த
மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து
சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய
பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன்
சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும்
சுவாமி. ஆமென்.
|