Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 ஞாயிறு  வாசகம்

       * ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா *                Year C  
=============================================================
முதல் வாசகம்

===============================================================
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5,9-11

"ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்" என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு!

இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.


இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=====================================================================
 
பதிலுரைப் பாடல் - (திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1) Mp3
=====================================================================
 பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். பல்லவி

3 நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! 4 காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். பல்லவி

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. 25 இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. பல்லவி

27 தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. 28 நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. பல்லவி

29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

=================================================================
இரண்டாம் வாசகம்
=================================================================
புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்.

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14; 3: 4-7

அன்பிற்குரியவரே, மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்.

நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.

நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.


- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
===============================================================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
=============================================================
லூக் 3: 16

அல்லேலூயா, அல்லேலூயா! "என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்" அல்லேலூயா.
 
=============================================================
நற்செய்தி வாசகம்
==============================================================
இயேசு திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 15-16,21-22

அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.

மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது.

அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

==========================================================

 

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!