| 
        			
					
					 ✠ தூய செசிலியா✠ 
					(St. Cecilia) | 
			 
			
            
				| 
        		  | 
				
        			
        			  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : நவம்பர் 
					22 | 
			 
			
			
				
					                                                
					
					
					பாடகர் குழுவின் பாதுகாவலி 
					
							இறை இசை புனிதையே இறைவனின் கீதமே 
							எங்களின் புனித செசிலியாவே 
							கற்பிலும், நட்பிலும், உறவிலும் வாழ்விலும்  
							இயேசுவிற்காகவே வாழ்ந்தவளே  
							 
							என்னோடு இருப்பவர் பெரியவரே  
							அவரே உலகின் ஒளி  
							என்னோடு இருப்பவர் பெரியவரே 
							அவரே உண்மையின் இறைவன் -2 
							என் இயேசுவே அன்பின் தலைவன் - நான்  
							அவரையே மகிழ்ந்து பாடுவேன் - என்ற
					  
							 
							வேதனையில் சோதனையில் ஆண்டவரை போற்றினீர் 
							தனிமையினில் தவிப்புக்களில் ஆண்டவரை போற்றினீர் 
							மரணத்தினில் பாடுகளில் ஆண்டவரை போற்றினீர் 
							திருப்பலியில் இறைவேண்டலில்ஆண்டவரை போற்றினீர் 
							இறைவனின் மகிமையினை புகழ் இசை பாக்களால் சாற்றினீர் 
							 
							கரங்களை விரித்து கண்ணீரோடு ஆண்டவரைப் போற்றினீர் 
							தூய்மையில் நிலைத்து வாழும்படி ஆண்டவரைப் போற்றினீர் 
							புலன்களை அடக்கி சுயநலம் மறுத்து ஆண்டவரைப் போற்றினீர் 
							திருவருட் சாதன மகிமையை பரப்பி ஆண்டவரைப் போற்றினீர் 
							இறைவனின் மகிமையினை புகழ் இசை பாக்களால் சாற்றினீர் 
					
					
					 
					
        			புனித 
					செசிலியம்மாள் றோம் நகரில் 3ம் 
					நூற்றாண்டிற்கு முன் பிறந்தார். இவர் ஒரு உயர் குடும்பத்தில் 
					பிறந்தவர். இவர் குடும்பம் கத்தோலிக்கர் அல்ல. ஆனால் நம் 
					புனிதை நம் ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவையும், அன்னை மரியாளையும் 
					வணங்கி, கத்தோலிக்க வாழ்விலும் சிறந்து விளங்கினார். 
					 
					புனித செசிலியம்மாள் திருப்பலியில் கலந்து கொள்ளும் பொழுது, ஆண்டவரைத் 
					தம் உள்ளத்தில் இருத்தி புகழ் பாடுவார். அவர் குறிப்பாக விசுவாசம், 
					நம்பிக்கை போன்ற நற்பண்புகளுடன் வளர்ந்தார். 
					 
					தன்னுடைய இளம் பருவத்தில், அவர் தன்னடக்கம் தூய்மையோடு 
					வாழ்ந்தார். ஏழை எளியோர் மீது அன்பு கொண்டிருந்தார். 
					                                            
					  
					எப்பொழுதும் கைகளை விரித்து செபம் செய்வார். இவரது உடை உடலை 
					மூடியிருக்கும். ஆனால் உடைக்குக் கீழ் முள் ஒட்டியாணத்தால் அணிந்து, 
					தம் புலன்களை அடக்கி இறைவனிடம் கண்ணீர் விட்டு மன்றாடுவார். 
					தன்னுடைய வாழ்நாளெல்லாம் கன்னிமையில் வாழ்வதற்கு 
					வார்த்தைப்பாடு கொடுத்திருந்தார். 
					 
					ஆனால் இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 
					இவருக்குப் பார்த்த மணமகன் பெயர் வலேரியன். இவரும் ஓர் உயர் 
					குடும்பத்தைச் சேர்ந்தவர். உயரிய நற்பண்புகளைக் கொண்டிருந்தவர். 
					கன்னித்தன்மையை ஆண்டவருக்கு அர்ப்பணித்த புனித செலியாவுக்கு, 
					மேலும் ஒரு அதிர்ச்சி வலேரியன் கத்தோலிக்கர் அல்ல என்பதே. 
					 
					திருமணமே வேண்டாம் என்று இருக்கும் நிலையில், இவரது பெற்றோர் 
					இவருக்கு வலேரியனுடன் மணம் செய்யத் துரிதமாக ஏற்பாடுகளைச் 
					செய்து கொண்டிருந்தனர். மிகவும் மனம் கசந்து ஆண்டவரிடம் அழுதார், 
					மன்றாடினார், உபவாசம் இருந்து ஜெபித்தார். சிசிலியம்மாவின் மன்றாட்டு 
					ஆண்டவர் முன் கேட்கப்பட்டது. ஆண்டவர் மனம்; இரங்கினார். இவருக்கு 
					ஒரு தூதரை அனுப்பி இவரோடு இருக்கும்படி கட்டளையிட்டார்  
					 
					சிறப்பாக திருமணச்சடங்கும் நடந்தேறியது. வலேரியன் மிகவும் பண்புள்ளவர் 
					என்பதால், அன்போடு பேசி செசிலியம்மாவின் அருகில் வந்தார். அப்போது 
					செசிலியம்மா அவரிடம் நான் உங்களுக்கு ஓரு இரகசியம் தெரிவிக்க 
					வேண்டும் என்றார். அவரும் மறுமொழியாக "என்ன" என்று கேட்டார். 
					அதற்கு அவர் "நான் சிறு வயது முதலே என் கன்னித்தன்மையை ஆண்டவருக்கு 
					அர்ப்பணித்து விட்டேன். என்னுடைய கன்னித்தன்மையைப் பாதுகாக்க 
					ஆண்டவர் ஒரு தூதரை எப்போதும் என்னுடன் வைத்துள்ளார்" என்றார். 
					மேலும் "நீங்கள் என்னை கன்னித் தன்மையோடு இருக்க அனுமதித்தால், 
					என் ஆண்டவரும், அவரின் தூதரும் என்னை நேசிப்பதுபோல், உங்களையும் 
					நேசிப்பார்" என்றார். வலேரியன் மிகவும் ஆச்சரியமடைந்து "நீ என்ன 
					சொல்கிறாய்? நானும் அந்த தூதரைப் பார்க்க முடியுமா?" என்று 
					கேட்டார்.
					அதற்கு செசிலியம்மாள் "கண்டிப்பாக நீங்களும் அவரைக் காணலாம். 
					ஆனால் அதற்கு நீங்கள் திருமுழுக்குப் பெற்று, ஆண்டவர் இயேசுக் 
					கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவேண்டும்" என்றார். 
					 
					அதற்கு வலேரியன் மறுமொழியாக "நான் என்ன செய்யவேண்டும்" என்று 
					கேட்டார். அதற்கு நீங்கள் போப்பாண்டவர் அர்பன் அவர்களை போய்ச் 
					சந்தியுங்கள்;.
					அவரிடம் "செசிலியின் நண்பன்" என்று கூறுங்கள். அவர் உங்களுக்கு 
					கத்தோலிக்க விசுவாச வாழ்க்கை பற்றி அனைத்தையும் தெரிவிப்பார்" 
					என்றார். 
					 
					வலேரியன் உடனடியாக புறப்பட்டுப் போய் போப்பாண்டவரை சந்தித்தார். 
					போப்பாண்டவரும் அர்பனுக்கு கத்தோலிக்க வாழ்வும், அதன் விசுவாசத்தையும் 
					எடுத்துக் கூறி, அவருக்கு திருமுழுக்கு கொடுத்தார். அங்கிருந்து 
					திரும்பி வந்த வலேரியன் செசிலியம்மாள் 
					ஜெபித்துக் கொண்டிருப்பதையும், 
					அவர் அருகே ஒரு அழகிய தூதர் ஒருவர் நிற்பதையும் கண்டு வியந்தார். 
					 
					வலேரியனும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஆண்டவர் தம் தூதரை அனுப்பிக் 
					காப்பார் என்பதை உணர்ந்து கொண்டார். அந்நாள் முதல் இருவரும் ஒன்றாய்க் 
					கூடி ஆண்டவரை புகழ்ந்து பாடி 
					ஜெபித்து வந்தனர். வலேரியனின் தம்பி 
					திபூர்சியுசுவும் அவர்களைக் காண வந்தார். அவர்கள் இருவரும் 
					ஜெபிப்பதையும், 
					பூக்களின் நறுமணம் வீசுவதையும் கண்டார். ஆனால் சுற்றிலும் பூக்களோ 
					அல்லது பூக்களின் செடியோ இல்லை என்பதை உணர்ந்து அவர்களிடம் 
					கேட்டார். 
					 
					இவர்களோ, நீயும் உயிருள்ள ஆண்டவரைக் காணவேண்டுமென்றால், 
					திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்க விசுவாசத்தைக் கைக்கொண்டால், 
					எங்களோடு இருக்கும் ஆண்டவரையும், அவரின் தூதரையும் காணலாம்" என்றனர். 
					அவரும் உடனே புறப்பட்டு போப்பாண்டவரிடம் போய், திருமுழுக்குப் 
					பெற்று கத்தோலிக்க விசுவாச வாழ்வில் இணைந்தார். அந்நாட்களில் 
					அல்மாக்கியஸ் என்ற ஆளுநர் இதைக் கேள்வியுற்றதும், இவர்களைச் 
					சிறைப்படுத்தக் கட்டளையிட்டான். வலேரியனையும் திபூர்சியுஸையும் 
					கொல்லச் சொன்னான். அவர்களிடம் ஆளுனரான அல்மாக்கிஸ் உங்கள் ஆண்டவரை 
					மறுதலித்து விடுங்கள். இப்போதே உங்களை உயிருடன் விட்டு 
					விடுகிறேன்" என்றான். ஆனால் இருவரும் "நாங்கள் கண்டது உயிர் உள்ள 
					ஆண்டவர். அவரே உலகின் இறைமகன். அவரை ஒருபோதும் மறுதலிக்க 
					மாட்டோம்" என்றனர். ஆளுநன் அவர்கள் இருவரையும் கழுத்தை 
					வெட்டிக் கொல்ல ஆணை பிறப்பித்தான். இருவரும் கழுத்து 
					வெட்டுண்டு வேதசாட்சியாக மரணித்தனர். செசிலியம்மாள் இருவரின் 
					உடலையும் நல்லடக்கம் செய்தார். ஆளுநன் செசிலியம்மாவை அழைத்து 
					"சிலுவையில் மரித்த இயேசுவை பின்பற்றுதை விட்டுவிடு. இல்லையேல் 
					நீயும் கொடுரமாக கொலை செய்யப்படுவாய்" என்றான். ஆனால் செசிலியம்மாவோ 
					"என்னோடு இருப்பவர் பெரியவர், அவரே உலகின் ஒளி. 
					அவரை விட்டு 
					நான் ஒருபோதும் விலகமாட்டேன். அவரே உண்மையான ஆண்டவர்" என்றார். 
					ஆளுநனோ இவரை கொலை செய்ய ஆணையிட்டான். 
					 
					செசிலியம்மாவை அவரது வீட்டில் உள்ள குளியலறையில் அடைத்து, அங்கே 
					நீராவியை உட்புக வைத்தார்கள். அது சாதாரண சூட்டைவிட ஏழுமடங்கு 
					அதிகமான வெப்பமாக இருந்தது. அவ்வாறே ஒரு இரவும், ஒரு பகலும் 
					குளியலறையில் அடைத்து வைத்தனர். அவரோ அந்த அதீத உஸ்ணத்திலும் 
					ஆண்டவரைப் போற்றிப் பாடிய வண்ணம் இருந்தார். இதை ஆளுனனின் காவலர்கள் 
					கேட்டனர். இவர்கள் மறு நாள் கதவைத் திறக்கும்போது, அவர் எந்தவித 
					காயமும் இல்லாதிருப்பது கண்டு ஓட்டம் பிடித்தனர். இதைக் 
					கேள்விப்பட்டு ஆளுனன் இவருடைய தலையை வெட்டிக் கொல்ல கொலைகாரனை 
					அனுப்பினான். அந்த கொலைகாரனோ இவருடைய கழுத்தை, தான் கொண்டுவந்த 
					கூரிய வாளால் மூன்றுமுறை வெட்டினான். ஆனால் வெட்டுப்பட்டதோடு 
					சரி, அவருடைய தலை துண்டாகவில்லை. தலையைத் துண்டிப்பதற்கு 
					மூன்று முறைக்கு மேல் வெட்டக் கூடாது என்ற சட்டம் இருந்தது.                 
					 கொலைகாரன் சிசிலியம்மாவின் கழுத்து பாதி வெட்டுப்பட்ட நிலையில் 
					விட்டுவிட்டுச் சென்றான். இரத்த வெள்ளத்தில் மிதந்த சிசிலியம்மாவின் 
					உடல் அனைத்தும் இரத்தத்தால் நனைந்து இருந்தது. அந்த மரண வேதனையுடனும் 
					மூன்று நாட்கள் உயிருடன் இருந்தார். அப்போதும் இறை 
					வார்த்தையைப் போதித்து, பாடல் பாடி சுமார் நானுhறு பேரை மனமாற்றினார். 
					தன்னிடம் இருந்த அனைத்தையும் ஏழைகளுக்குக் கொடுத்தார். தன்வீடு 
					ஒரு ஜெப ஆலயமாக மாறவேண்டும் என்ற கடைசி வார்த்தைகளைக் கூறி, 
					கடவுளுக்கு புகழ் பாடல் பாடி, தன் மாசற்ற ஆத்துமாவை ஆண்டவரிடம் 
					ஒப்படைத்தார். 
					                                 
					  
					அவருடைய உடலை போப்பாண்டவர் நல்லடக்கம் செய்தார். இவை அனைத்தும் 
					நிகழ்ந்தது 177ம் ஆண்டு. போப்பானவர் அவருடைய இல்லத்தை ஆலயமாக 
					மாற்றினார். 
					 
					பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆலயமாக மாறிய அவரது இல்லம் சேதமடைய 
					ஆரம்பித்தது. அப்போது பாப்பரசராக இருந்த முதலாம் பஸ்சல் ஆலயத்தைப் 
					புதுப்பிக்க எண்ணினார். ஆனால் இவரோ புனித செசிலியம்மாவின் கல்லறையைக் 
					காணாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அதிகாலை நேரம், இவர் 
					ஆண்டவரிடம் செபித்துக் கொண்டிருக்கும்போது, செசிலியம்மாள் இவருக்குத் 
					தோன்றி "என்னுடைய உடல் உங்களுக்கு சீக்கிரமே கிடைக்கும்" என்றார். 
					பின்னர் சில நாட்களிலே செசிலியம்மாவின் கல்லறை கிடைத்தது. 
					முற்றும் வேதசாட்சியாக மரித்த வலேரியன் கல்லறையும் கிடைத்தது.
					 
					 
					புனித செசிலியம்மாவின் கல்லறையினுள் அவரது உடல் எவ்வாறு வைக்கப்பட்டிருந்ததோ, 
					அதேபோன்று பளிங்குச் சிலை செதுக்கப்பட்டுள்ளது போன்று இருந்தது. 
					கல்லறை திறந்தபோது புனித செசிலியம்மாவின் உடல் அழியாமல் அப்படியே 
					இருந்தது. அவர் காயத்திற்காக கழுத்தில் கட்டப்பட்ட துணியும் இருந்தது. 
					இவை 521ம் ஆண்டு நடந்தது. அதன்பின் 1599ல் மீண்டும் கல்லறை திறக்கப்பட்டபோது, அவரது உடல் அன்று வைத்தது போலவே நறுமணத்துடன் இருந்தது. 1599ம் 
					ஆண்டுக்குப் பிறகு புனித சிசிலியம்மாவின் உடல் ஆலயத்தில் அடக்கம் 
					செய்யப்பட்டது. நம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வோர்க்கு இறைமகன் 
					இயேசு தம் தூதரை அனுப்பிக் காப்பார் என்பதை புனித சிசிலியம்மாவின் 
					வாழ்க்கை வரலாறு மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம். 
					 
					நமது கத்தோலிக்க திருச்சபை இப்புனிதரை பாடகர் குழுவிற்கு 
					பாதுகாவலராக கொடுத்துள்ளது. இவரின் திருவிழா நவெம்பர் 22ந் திகதியாகும். 
					 
                     
					  
					 
					================================================================================= 
					*கன்னியர் மற்றும் மறைசாட்சி :
					(Virgin and Martyr) 
					 
					*பிறப்பு : இரண்டாம் நூற்றாண்டு 
					ரோம், இத்தாலி
					(Rome, Italy) 
					 
					*இறப்பு : நவம்பர் 22, 230 
					சிசிலி
					(Sicily) 
					 
					*ஏற்கும் சமயம் : 
					ரோமன் கத்தோலிக்க திருச்சபை
					(Roman Catholic Church) 
					லத்தீன் கத்தோலிக்க திருச்சபை
					(Latin Catholic Church) 
					கிழக்கு கத்தோலிக்க திருச்சபை
					(Eastern Catholic Church) 
					ஆங்கிலிக்கன் திருச்சபை
					(Anglican Church) 
					கிழக்கு மரபுவழி திருச்சபை
					(Eastern Orthodox) 
					 
					*முக்கிய திருத்தலம் : 
					தூய செசிலியா தேவாலயம், ட்ரஸ்டேவெர், ரோம்
					(Santa Cecilia in Trastevere, Rome) 
					 
					*பாதுகாவல் : 
					பாசுரங்கள் (Hymns), இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், "ஒமாஹா பேராயம்" 
					(Archdiocese of Omaha), அர்ஜென்ட்டினா (Argentina), "மர் டெல் 
					ப்லடா"  ஒரு அர்ஜென்டினிய நகரம் (Mar del Plata  An 
					Argentinian City), ஃபிரான்ஸ் (France) 
					 
					புனிதர் செசிலியா, இசைக்கலைஞர்களின் பாதுகாவலர் ஆவார். தமது 
					திருமணத்தின்போது, தமது மனதுக்குள் கடவுளிடம் பாடினார் என்று 
					எழுதி வைக்கப்பட்டுள்ளது. திருப்பலியின்போது, பெயர் சொல்லி 
					நினைவு கூறப்படும் (அன்னை கன்னி மரியாளைத் தவிர்த்து) ஏழு 
					பெண்களுள் செசிலியாவும் ஒருவர் ஆவார். 
					 
					அவரது சரித்திர விவரங்கள் கற்பனையாக இருப்பதாகத் தோன்றினாலும், 
					அவரது இருப்பு மற்றும் மறைசாட்சியம், ஒரு வரலாற்று உண்மை என்றே 
					கருதப்படுகிறது. ரோம் நகரின் "டிரஸ்டேவியர்" (She is said to 
					have been beheaded with a sword) பகுதியிலுள்ள, நான்காம் 
					நூற்றாண்டில் நிறுவப்பட்ட, "தூய செசிலியா" (Santa Cecilia) 
					எனும் ஒரு ஆதி கிறிஸ்தவ ரோமன் தேவாலயத்தின் பக்கத்திலயே 
					செசிலியா வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பல்வேறு 
					இசையமைப்புகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ள புனிதர் செசிலியாவின் 
					நினைவுத் திருநாள், நம்பர் மாதம் 22ம் நாள் 
					கொண்டாடப்படுகின்றது. 
					 
					ரோம் நகரின் பிரப்புக்கள் குடும்பமொன்றினைச் சேர்ந்த பெண்ணான 
					செசிலியா, தமது கணவரான "வலேரியன்" (Valerian), கணவரின் 
					சகோதரரான "டிபர்ஷியஸ்" (Tiburtius), மற்றும் "மேக்சிமஸ்" 
					(Maximus) எனும் பெயர்கொண்ட ரோம சிப்பாய் ஆகியோர் "பேரரசர் 
					அலெக்சாண்டர் செவெரஸ்" (Emperor Alexander Severus) காலத்தில், 
					சுமார் கி.பி. 230ம் ஆண்டில் மறைசாட்சியராக மரித்தனர். 
					 
					ஓரு ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து, கிறிஸ்துவுக்காக 
					வாழ வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விரும்பியவர் புனிதர் 
					செசிலியா ஆவார். இளம் வயதிலேயே தன் கன்னிமையை கடவுளுக்கு 
					அர்ப்பணம் செய்ததால் அருட்சாதனங்கள்
 செய்துகொள்ள விரும்பவில்லை. 
					ஆனால் இவரின் பெற்றோர் செசிலியாவை "வலேரியன்" (Valerian) என்ற 
					"பாகன் இன பிரபுத்துவ" (Pagan Nobleman) இளைஞர் ஒருவருக்கு 
					அருட்சாதனங்கள்
 செய்ய நிச்சயம் செய்தனர். ஆனால் அதனை செசிலியா 
					பெரிதாக கருதாமல் தன்னுடைய ஆன்மீக காரியங்களில் மட்டுமே 
					கருத்தாக இருந்தார். வலேரியனுடன் அருட்சாதனங்கள்
 செய்யவிருப்பதை 
					வெறுத்தார். இருப்பினும் பெற்றோரை எதிர்த்து அவரால் ஒன்றும் 
					செய்ய இயலாமல் தவித்தார். 
					 
					திருமண நாள் வந்தது. இவரின் பெற்றோர் இவருக்கு திருமண உடையை 
					அணிவித்தபோது இதயம் வலித்தவராய், தன்னை முழுவதும் தன் மணவாளன் 
					இயேசுவிடம் ஒப்படைத்து செபித்தார். பெற்றோர் இவரை கணவரிடம் 
					ஒப்படைத்தபோது, தான் கடவுளிடம் கொடுத்த கற்பு என்னும் 
					வார்த்தைப்பாட்டை உன்னிடம் இழக்கமாட்டேன் என்று உறுதியாக 
					தெளிவாக கூறினார். தான் கடவுளுக்கு மட்டுமே சொந்தமானவள் என்பதை 
					தைரியமாக எடுத்துக்கூறினார். 
					 
					அவள் தன் கணவனை நோக்கி, "கடவுளின் தூதர் ஒருவர் என் கற்புக்கு 
					காவலராய் இருக்கிறார். எனவே, என்னுடைய கன்னிமைக்கு 
					தீங்கிழைக்கக்கூடிய அல்லது கடவுளது கோபத்தை உம்மீது 
					வரச்செய்யும்படியான எதையும் செய்ய நீர் முயற்சிக்கலாகாது" 
					என்றாள். 
					 
					வலேரியன், செசிலியா சொல்வது உண்மையா என்பதை சோதிக்கும் 
					நோக்குடன், "கடவுளின் அந்தத் தூதரை நான் பார்ப்பேனானால் இயேசு 
					கிறிஸ்துவை விசுவசிப்பேன்" என்றார். 
					 
					செசிலியா அதை நிரூபிக்க வேண்டுமானால், வலேரியன் முதலில் 
					திருத்தந்தை "அர்பனிடம்" (Pope Urban) சென்று திருமுழுக்குப் 
					பெற்று வருமாறு கூறினார். செசிலியாவின் வார்த்தைகளுக்கு 
					சம்மதித்து, அவரும் திருமுழுக்கு பெற்றார். அவர் திருமுழுக்கு 
					பெற்ற நாளன்றே வானதூதர் ஒருவர் அவர் முன்னின்று செசிலியாவுக்கு 
					ரோஜா மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்தியதைக் கண்டார். 
					 
					அதன்பின்னர் வலேரியன் செசிலியாவை அவரின் விருப்பப்படி வாழ 
					விட்டுவிட்டார். செசிலியாவை நம்பினார். வலேரியன் தன் குடும்ப 
					உறுப்பினர்கள் அனைவரையும் கத்தோலிக்க திருச்சபைக்கு 
					மனமாற்றினார். அவர்கள் அனைவரும் மனமாற்றம் பெற்ற நாளிலிருந்து 
					செசிலியாவிற்கு பணிந்து இரவும் பகலும் அவருக்கு பணிவிடை 
					புரிந்தனர். 
					 
					செசிலியா, தான் மணந்த வலேரியனின் உதவியுடன் கடவுளின் அன்பை 
					உணர்ந்து வாழ்ந்தார். ஏழைகளின் மீது இரக்கம் காட்டி, 
					அனைவரையும் சமமாக அன்பு செய்தார். இறைவனை இரவும் பகலும் 
					பாடல்களால் போற்றிப் புகழ்ந்தார். 
					 
					இவரின் பக்தியைக் கண்ட எதிரிகளில் ஒருவனான அரசு அதிகாரியான 
					"டுர்சியஸ் அல்மசியஸ்" (Turcius Almachius) என்பவன் செசிலியாவை 
					கூரிய குறுவாளால் மூன்றுமுறை அவரது கழுத்திலேயே குத்தினான். 
					மரணத்தின் விளிம்பில் வீழ்ந்த செசிலியா, தம்மை தேவாலயத்திற்கு 
					இட்டுச்செல்லுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார். அதன்பின் 
					மூன்றே நாட்கள் உயிர்வாழ்ந்த செசிலியா மறைசாட்சியாக உயிர் 
					துறந்தார். 
					 
					புனிதர் "கல்லிஸ்டஸ்" (Catacombs of St. Callistus) கல்லறை 
					நிலத்தில் அடக்கம் செய்யப்பட்ட செசிலியாவின் உடல் 
					"ட்ரஸ்ட்டேவேர்" எனும் இடத்திலுள்ள "தூய செசிலியா" 
					தேவாலயத்திற்கு (Church of Santa Cecilia in Trastevere) 
					மாற்றப்பட்டது. 1599ம் ஆண்டில், அவரது உடல் அழிந்துபோகாமல் 
					உறங்குவது போல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 
					 
					இவர் கிறிஸ்தவ பெண்கள் அனைவருக்கும் சிறந்ததோர் 
					எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். கிறிஸ்துவின் மீது கொண்ட 
					அன்புக்காக கன்னிமை காத்து வாழ்ந்தார். அவருக்காக 
					மறைசாட்சியாகவும் மரித்தார். 
					 
					================================================================================= 
					 
					தூய செசிலியா
					 (நவம்பர் 22) 
					 
					நிகழ்வு 
					 
					மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து, மறைசாட்சியா க உயிர்நீத்த 
					செசிலியாவின் உடல் ஸ்ரஸ்ட்டேவர் என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
					இவருடைய கல்லறை 1599 ஆம் ஆண்டு ஒரு சில காரணங்களுக்காகத் 
					தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது சைப்ரஸ் என்னும் மரத்தால் செய்யப்பட்ட 
					பெட்டியில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்தது 
					தெரியவந்தது. பின்னர் அவர் அடக்கம் செய்து வைக்கப்பட்ட 
					பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அவருடைய உடல் அழியாமல், அப்போதுதான் 
					இறந்ததுபோன்று இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டு 
					நின்றார்கள். செசிலியா தன்னுடைய பாக்களால் இறைவனுக்கு மகிமை 
					செலுத்தினாள், இறைவனும் செசிலியாவின் உடலை அழியாமல் காத்து மகிமைப்படுத்தினார்" 
					என்று அனைவரும் அவரை வாயாரப் புகழ்ந்துகொண்டே சென்றார்கள். 
					 
					வாழ்க்கை வரலாறு 
					 
					செசிலியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு இருக்கும் ஒரே ஆதாரம் 
					தூய செசிலியாவின் திருப்பாடுகள் என்ற புத்தகம்தான். இதில் 
					செசிலியா மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்றும் உரோமையை ஆண்ட 
					அலெக்ஸாண்டர் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் மறைசாட்சியாகக் 
					கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகின்றது. 
					 
					செசிலியா குழந்தைப் பருவத்திலிருந்தே தூய, மாசற்ற வாழ்க்கையை 
					வாழ்ந்து வந்தாள். தன்னுடைய கன்னிமை முழுவதையும் ஆண்டவருக்காக 
					ஒப்புக் கொடுத்து வந்தார். இத்தகைய தருணத்தில்தான் இவருடைய 
					பெற்றோர் இவருடைய விருப்பம் இல்லாமலே இவரை வலேரியான் என்ற இளைஞனுக்கு 
					மணமுடித்துக் கொடுத்தார்கள். செசிலியாவோ வலேரியாரிடம், "நான் 
					என்னுடைய உடலை எனது மணவாளனாகிய ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன். 
					ஆகையால் எந்தவிதத்திலும் என்னுடைய உடலை உனக்குத் தரமாட்டேன்; 
					என்னுடைய கற்பை எப்போதும் வானதூதர் ஒருவர் பாதுகாத்து வருகின்றார்" 
					என்றார். இதைக் கேட்ட வலேரியான், "உன்னுடைய கற்பை வானதூதர் காவல்காத்து 
					வருகின்றாரா?, என்னால் நம்பமுடியவில்லையே" என்றான். அதற்கு 
					செசிலியா, "இதெல்லாம் திருமுழுக்குப் பெற்றோரின் கண்களுக்கு மட்டுமே 
					தெரியும், வேறு எவரது கண்களுக்கும் தெரியாது" என்றார். 
					 
					உடனே வலேரியான் அர்பன் (Urban) என்ற திருத்தந்தையிடம் சென்று 
					திருமுழுக்குப் பெற்று வந்தான். அவன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது 
					செசிலியா தன்னுடைய அறையில் ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது 
					அவன் கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது. செசிலியா சொன்னதுபோன்றே, 
					அவருக்குப் பக்கத்தில் வானதூதர் நின்றுகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் 
					பிறகு வலேரியான் இறைவன்மீது முழுமையாக நம்பிக்கைகொண்டு வாழத்தொடங்கினான். 
					அவனுடைய சகோதரனாகிய திபெர்தியுஸ் என்பவனும் ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளத் 
					தொடங்கினான். 
					 
					இச்செய்தி எப்படியோ உரோமை ஆளுநராகிய அல்மாக்கியுஸ் என்பவனுக்குத் 
					தெரிந்தது. அவன் மாக்சிமஸ் என்ற தன்னுடைய படைத்தளபதியிடம் 
					சொல்லி வலேரியானையும் திபெர்தியுசையும் கைதுசெய்து கொலை செய்யச் 
					சொன்னான். அதன்படியே அவர்கள் இருவரும் தலை வெட்டப்பட்டு கொலை 
					செய்யப்பட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு அல்மாகியுஸ் என்ற 
					அந்த ஆளுநன் செசிலியாவிடம் கிறிஸ்துவை மறுதலிக்கச் சொன்னான். 
					ஆனால் செசிலியாவோ, "நான் ஒருபோதும் கிறிஸ்துவை மறுதலிக்க 
					மாட்டேன்" என்று சொல்லி தன்னுடைய நம்பிக்கையில் மிக உறுதியாக 
					இருந்தார். இதைப் பார்த்து சினம்கொண்ட ஆளுநன் தன்னுடைய படைவீரர் 
					ஒருவனை அழைத்து, அவரைக் கொன்றுபோடச் சொன்னான். படைவீரனோ 
					செசிலியாவின் கழுத்தில் வாளை இறக்கினான். அப்போது செசிலியாவின் 
					உடலிலிருந்து இரத்தம் வெளியேறியதே ஒழிய, அவருடைய உயிர் அவரை 
					விட்டுப் போகவில்லை. அந்நேரத்திலும் அவர் தன்னுடைய இனிமை மிகு 
					பாக்களால் இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார். ஏறக்குறைய 
					மூன்று நாட்களுக்குப் பின்தான் அவருடைய உயிர் அவருடைய உடலை 
					விட்டு நீங்கியது. 
					 
					செசிலியா தன்னுடைய மறைசாட்சிய வாழ்வால், இனிமைமிகு பாக்களால் 
					இறைவனுக்கு மகிமையும் புகழும் செலுத்தியவளாய் மாறினாள். 
					 
					கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் 
					 
					திரு இசையின் பாதுகாவலியான தூய செசிலியாவின் விழாவைக் 
					கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் 
					என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
					 
					 
					கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் திறமைகளால் அவரைப் புகழ்வோம் 
					 
					 
					செசிலியா தன்னுடைய வாழ்வு முழுவதும் கடவுள் தனக்குக் கொடுத்த 
					திறமையைப் பயன்படுத்தி இறைவனைப் புகழ்ந்துகொண்டே இருந்தார், 
					அதன்வழியாக அவருக்குப் பெருமை சேர்த்தார். அவருடைய விழாவைக் 
					கொண்டாடும் நாம் அவரைப் போன்று கடவுள் நமக்குக் 
					கொடுத்திருக்கும் திறமைகளால் கடவுளைப் புகழ்கின்றோமா? என 
					சிந்தித்துப் பார்க்கவேண்டும். 
					 
					திருப்பாடல் 9:11 ல் வாசிக்கின்றோம், "சீயோனில் தங்கியிருக்கும் 
					அனைவரும் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய செயல்களை மக்களினத்தாரிடையே 
					அறிவியுங்கள்!" என்று. நாம் ஒவ்வொருவரும் இறைவனைப் புகழ்ந்துபாடவேண்டும் 
					என்பதுதான் நமக்கு முன்பாக வைக்கப்படும் வேண்டுகோளாக இருக்கின்றது. 
					 
					முன்பொரு காலத்தில் ஒரு குக்கிராமத்தில் விறகுவெட்டி வெட்டி ஒருவன் 
					இருந்தான். அவன் தான் வெட்டிய விறகை விற்று, அதிலிருந்து 
					கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்திவந்தான். ஆனாலும் 
					அவன் அன்றாடம் கிடைக்கும் விறகுக்காக இறைவனைப் புகழ்ந்துகொண்டே 
					வந்தான். இறைவன் தனக்கு அன்றாடம் தரும் உணவிற்காக, உடைக்காக, 
					உறைவிடத்திற்காக இறைவனைப் புகழ்ந்து வந்தான். தன் மனைவிக்காக, 
					மக்களுக்காகவும் அவன் இறைவனைப்புகழ்ந்து வந்தான். 
					 
					ஒரு நாள் அவன் இப்படி இறைவனைப் புகழ்ந்து கொண்டிருந்தபோது, 
					மேலிருந்து மலர்கள் அவன் மீது பொழியப்பட்டன. அவன் ஏறெடுத்துப்பார்த்தான். 
					அப்போது ஆயிரக்கணக்கானோர் மலர்களை தூவிக்கொண்டிருந்தார்கள். 
					உடனே அவன் அவர்களிடம் "நீங்கள் எல்லாம் யார்?" என்று கேட்டான். 
					அதற்கு விறகு வெட்டி. "நாங்கள் கடவுளுடைய தூதர்கள்." என்றார்கள். 
					அவன் மீண்டுமாக அவர்களிடம், "என் மீது ஏன் மலர்களை தூவுகிறீர்கள்?, 
					நான் அப்படி ஒன்றும் கடவுளிடம் கேட்கவில்லையே" என்றான். 
					"அதற்காகத் தான் கடவுள் உன்மீது மலர்களை தூவச்சொன்னார். உலகில் 
					வாழும் கோடிக்கணக்கான மக்களில் நீ ஒருவன் மட்டும்தான் எதையும் 
					கேட்டதில்லை. மற்றவர்கள் எல்லாம் பட்டியல் போட்டு கடவுளை கேட்ட 
					வண்ணமாய் இருக்கிறார்கள். நீயோ எதையும் கேட்டதில்லை. மாறாக இறைவனைப் 
					புகழ்ந்துகொண்டே இருக்கின்றாய். எனவே தான் இறைவன் மகிழ்ந்து உன்னைப் 
					பெருமைப்படுத்தினார்" என்றார்கள். 
					 
					நாம் இறைவனைப் புகழும்போது இறைவன் நமக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டே 
					இருப்பார். அதைத்தான் இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 
					 
					ஆகவே, தூய செசிலியாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவனை 
					எப்போதும் புகழ்ந்துகொண்டே இருப்போம் என்ற உறுதி எடுப்போம். இறைவனுக்கு 
					உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் 
					பெறுவோம். 
					                           
							  | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |