| 
        			
					
					 ✠ புனிதர் அந்திரேயா ✠ (St. 
					Andrew) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : நவம்பர் 
					30 | 
			 
			
			
				
					✠ புனிதர் அந்திரேயா ✠(St. 
					Andrew) 
					 
					* 
					திருத்தூதர்/ முதல் அழைப்பு பெற்றவர்/ கிறிஸ்துவை அறிமுகம் 
					செய்தவர் : 
					(Apostle/ The First-Called/ Introduced Jesus) 
					 
					*பிறப்பு : கி.மு. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு 
					பெத்சாய்தா, கலிலேயா, ரோம பேரரசு 
					(Bethsaida, Galilee, Roman Empire) 
					 
					*இறப்பு : கி. பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதி 
					பட்ராஸ், அச்சையா, ரோம பேரரசு 
					(Patras, Achaia, Roman Empire) 
					 
					*ஏற்கும் சபை/ சமயம் : அனைத்து கிறிஸ்தவப் பிரிவுகளும் 
					 
					*முக்கிய திருத்தலங்கள் : 
					டூமோ கதீட்ரல், அமல்ஃபி, இத்தாலி (Duomo Cathedral in Amalfi, 
					Italy) 
					செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல், பட்ராஸ், கிரீஸ் (St. Andrew's 
					Cathedral, Patras, Greece) 
					செயிண்ட் மேரீஸ் கதீட்ரல், எடின்பர்க், ஸ்காட்லாந்து 
					(St. Mary's Cathedral, Edinburgh, Scotland) 
					செயிண்ட் ஆண்ட்ரூ மற்றும் செயின்ட் ஆல்பர்ட் ஆலயம், வார்சாவ், 
					போலந்து 
					(The Church of St. Andrew and St. Albert, Warsaw, Poland) 
					 
					*சித்தரிக்கப்படும் வகை : 
					'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள் 
					 
					பாதுகாவல் : 
					ஸ்காட்லாந்து, உக்ரைன், ரஷியா, சிசிலி, கிரேக்க நாடு, 
					பிலிப்பைன்ஸ், ரூமேனியா, மீனவர், பாடகர், கர்ப்பிணிப் பெண்கள், 
					இறைச்சி வெட்டுபவர்கள், கயிறு நெய்யும் தொழிலாளி, சைப்ரஸ், பட்ராஸ், 
					பரான்ஹேக்கின் மறைமாவட்டம் (Diocese of Paraaque), அமாஃல்பி 
					(Amalfi), லுக்கா (மால்டா) மற்றும் புருஸ்ஸியா (Luqa (Malta) 
					and Prussia), விக்டோரியா மறைமாவட்டம் (Diocese of Victoria), 
					பண்ணைத் தொழிலாளர்கள் 
					 
					புனிதர் அந்திரேயா அல்லது புனிதர் பெலவேந்திரர், இயேசுவின் பன்னிரு 
					திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். 
					 
					கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்த இவர், புனிதர் 
					பேதுருவின் மூத்த சகோதரர் ஆவார். மீன் பிடி தொழில் செய்துவந்தார். 
					திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்த இவர், பின்னர் இயேசுவோடு 
					சேர்ந்தார். இயேசு, திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் 
					செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, "இதோ! 
					கடவுளின் ஆட்டுக்குட்டி!" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். 
					இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். 
					(யோவான் 1:29-39). 
					 
					அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். 
					கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை 
					பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு 
					மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே (யோவான் 6:8). கோவிலின் அழிவை 
					முன்னறிவித்தபோது அழிவு எப்போது வரும்?" என கேட்டவரும் இவரே. 
					ஆண்டவரின் இறுதி இராவுணவின்போது இவருமிருந்தார். இறுதிகால இயேசுவின் 
					இரண்டாம் வருகையின் அறிகுறி என்னவென்று இயேசுவிடம் கேட்பதற்காக 
					ஒலிவ மலைக்கு (Mount of Olives) வந்த நான்கு சீடர்களுள் இவரும் 
					ஒருவராவார். 
					 
					புனிதர் அந்திரேயா, "மத்திய யூரேசியாவின்" (Central Eurasia) 
					பிராந்தியமான "ஸ்கித்தியாவில்" (Scythia) பிரசங்கித்தார். 
					கிரேக்க புராணங்களில் அறிவுமிக்க வயதான "நெஸ்டார்" (Nestor) எனும் 
					அரசனின் காலக்கிரமமாகத் தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிக் குறிப்பின்படி, 
					கருங்கடல் (Black Sea), "டினெபர் நதி" (Dnieper river) மற்றும் 
					"உக்ரெய்ன்" (Ukraine) நாட்டின் தலைநகரான "கியேவ்" (Kiev) வரை 
					அவர் பிரசங்கித்ததாகக் கூறுகிறார். அங்கு அங்கிருந்து வடமேற்கு 
					ரஷியாவின் நகரான "நோவ்கோரோடு" (Novgorod) சென்றார். எனவே, அவர் 
					"உக்ரேய்ன்" (Ukraine), "ரோமானியா" (Romania) மற்றும் 
					"ரஷ்யாவின்" (Russia) பாதுகாவலர் ஆவார். பாரம்பரியங்களின்படி, 
					பின்னாளில் கி.பி. 38ம் ஆண்டுகளில், "கான்ஸ்டண்டிநோபில் மற்றும் 
					இஸ்தான்புல்" (Constantinople and Istanbul) என்று அறியப்பட்ட, 
					பண்டைய கிரேக்க நகரான "பைசான்டியம்" (Byzantium) கண்டடைந்தார். 
					ரோம் கிறிஸ்தவ திருச்சபையின் மூன்றாம் நூற்றாண்டின் மிக 
					முக்கிய இறையியலாலர்களில் ஒருவரான "ஹிப்போலிட்டஸ்" (Hippolytus 
					of Rome) என்பவரின் கூற்றின்படி, அந்திரேயா பண்டைய தென்கிழக்கு 
					ஐரோப்பாவின் புவியியல் மற்றும் சரித்திரவியல் பகுதியான 
					"திரேஸ்" (Thrace) எனும் பகுதிகளிலும் பிரசங்கித்தார். 
					 
					அந்திரேயா, கிரேக்கத்தின் பிராந்தியப் பகுதிகளுள் ஒன்றான 
					"அச்சேயா" (Achaea) எனுமிடத்திலுள்ள "பட்ராஸ்" (Patras) நகரில் 
					'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு மறைசாட்சியாக கொல்லப்பட்டார். 
					இயேசு கிறிஸ்து அறையப்பட்ட அதேவிதமான சிலுவையில் தாமும் அரையப்பட 
					தாம் தகுதியானவனில்லை என்ற காரணத்தால், அவரே "X" வடிவ 
					சிலுவையில் தம்மை அரையுமாறு வேண்டினார் என்றும் கூறப்படுகிறது. 
					அச்சிலுவையைக் கண்டதும், "உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் 
					வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக" என்றார். பட்ராசில் (Patras) 
					உள்ள புனித அந்திரேயா ஆலயத்தில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது. 
					 
					================================================================================ 
					புனித அந்திரேயா - திருத்தூதர் விழா 
					 
					நிகழ்வு 
					 
					ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அந்திரேயா 
					கிரீஸில் உள்ள பல்வேறு பகுதிகளில் நற்செய்தி அறிவித்து வந்தார். 
					அவர் அறிவித்த நற்செய்தியின் பலனாக நிறையப் பேர் மனமாறி கிறிஸ்தவ 
					நெறியைப் பின்பற்றினார்கள். 
					 
					பத்ராஸ் என்ற நகரில் இருந்த ஆளுநன் ஏஜியுஸ் என்பவனுடைய மனைவி 
					மாக்ஸிமில்லா என்பவரும் அந்திரேயா அறிவித்த நற்செய்தியினால் 
					மனமாறி கிறிஸ்தவ நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். இதைக் 
					கேள்விப்பட்ட ஏஜியுஸ் சினம்கொண்டு அந்திரேயாவிடம், "நீ 
					கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விட்டுவிட்டு, என்னுடைய 
					கடவுளுக்குத் தூபம் காட்டு, இல்லையென்றால் நீ சாவது உறுதி" என்றான். 
					அவரோ எதற்கும் பயப்படாதவராய், "நான் எத்தனை இடர்கள் வந்தாலும் 
					ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதை விடமாட்டேன். 
					அதற்காக நான் என்னுடைய உயிரையும் இழக்கத் தயார்" என்றார். இதனால் 
					ஆளுநன் அவரை X வடிவ சிலுவையில் அறைந்து கொன்றான். அந்திரேயாவின் 
					உடலிலிருந்து மூன்று நாட்கள் உயிர் பிரியாமலே இருந்தது. அந்த 
					மூன்று நாட்களும் அவர் அங்கு வந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக்கொண்டே 
					இருந்தார். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவருடைய உடலிலிருந்து 
					உயிர் பிரிந்தது. இறந்துபோன அவருடைய உடலை மாக்ஸிமில்லா எடுத்து 
					கல்லறையில் அடக்கம் செய்தார். 
					 
					வாழ்க்கை வரலாறு 
					 
					அந்திரேயா கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். 
					இவருடைய தந்தை யோனா, தாய் யோவன்னா என்பவர் ஆவார். இவருடைய சகோதரர்தான் 
					பேதுரு. இவர் கலிலேயாக் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். 
					 
					தொடக்கத்தில் இவர் திருமுழுக்கு யோவானின் சீடராகத் தான் இருந்தார். 
					ஒருநாள் இயேசு வழியில் நடந்துபோய்க்கொண்டிருப்பதைப் பார்த்த 
					திருமுழுக்கு யோவான் தன்னுடைய சீடர்களிடம் (யோவான், அந்திரேயா), 
					"இவரே கடவுளின் ஆட்டுகுட்டி" என்று சுட்டிக்காட்ட, அந்திரேயாவும் 
					யோவானும் அவரைப் பின்தொடர்ந்து சென்று, "ரபி, நீர் எங்கே இருக்கிறீர்?" 
					என்று கேட்டார்கள். அவரோ, "வந்து பாருங்கள்" என்று சொன்னதும், 
					அந்திரேயாவும் யோவானும் அவரோடு தங்கி இறையனுபவம் பெற்றார்கள். 
					பின்னர் அந்திரேயா தான் பெற்ற இறையனுபவத்தை தன்னுடைய சகோதரனாகிய 
					பேதுருவிடம் சென்று சொல்லி, அவரை ஆண்டவர் இயேசுவிடம் கூட்டிவருகின்றார். 
					இவ்வாறு அவர் திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய பேதுருவை 
					ஆண்டவர் இயேசுவிடம் அறிமுகம் செய்து வைக்கும் பேறு 
					பெறுகின்றார் (யோவா 1:35-42). 
					 
					ஆண்டவர் இயேசு தன்னுடைய போதனையைக் கேட்க வந்த பெருந்திரளான மக்களுக்கு 
					உணவு கொடுக்க நினைத்தபோது அந்திரேயாதான், "இங்கே சிறுவன் ஒருவன் 
					இருக்கின்றான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு 
					மீன்களும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இவை எப்படிப் 
					போதும்?" என்று சொல்லி அங்கிருந்த சிறுவனை அந்திரேயா இயேசுவிடம் 
					அறிமுகம் செய்து வைக்கின்றார். அது மட்டுமல்லாமல் இயேசு மக்களின் 
					பசியைப் போக்க, அந்திரேயா ஒரு தூண்டுகோலாக இருக்கின்றார் (யோவா 
					6:8-9). இன்னொரு சமயம் கிரேக்க மொழிபேசும் ஒருசிலர் இயேசுவைக் 
					காண வந்தபோது, அந்திரேயாதான் அவர்களை இயேசுவிடம் அறிமுகம் 
					செய்துவைக்கின்றார். இவ்வாறு அந்திரேயா தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 
					மக்களை இயேசுவிடம் அறிமுகம் செய்துவைக்கும் பணியினை சிறப்பாகச் 
					செய்கின்றார்.  
					 
					இயேசுவால் அழைக்கப்பட்ட திருதூதர்களில் அந்திரேயாதான் முதலானவர் 
					என்றாலும், அவர் அதனை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 
					மாறாக அவர் தாழ்ச்சியோடுதான் ஆண்டவருக்குப் பணிசெய்து வந்தார். 
					ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அந்திரேயா 
					சீத்திய மக்களிடம் சென்று நற்செய்தி அறிவித்ததாக வரலாற்று ஆசிரியரான 
					யூசிபுஸ் என்பவர் கூறுவார். இன்னும் ஒருசிலர் மாசிதோனியா, 
					கிரீஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகச் 
					சொல்வர். கி.பி.60 ஆம் ஆண்டு நீரோ மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த 
					கிரீஸில் உள்ள பத்ராஸ் என்றும் இடத்தில் நற்செய்தி அறிவிக்கும்போதுதான் 
					இவர் கொல்லப்பட்டார்.  
					 
					இவ்வாறு அந்திரேயா தன்னுடைய வாழ்வாலும் போதனையாலும் மக்களை 
					ஆண்டவர் இயேசுவிடம் கூட்டிவந்து சிறந்த ஒரு நற்செய்திப் 
					பணியாளராய் வாழ்ந்தார். அந்திரேயாவின் கல்லறையில் இன்றைக்கும் 
					நடைபெறும் புதுமைகளில் ஒன்று. அவருடைய கல்லறையில் ஏழை 
					எளியவருக்குக் கொடுக்கப்படும் உணவின் அளவு பெருகுகின்றபோது, 
					நல்ல மழை பெய்து, விளைச்சல் பெருகும். அது குறைகின்றபோது மழை 
					குறைந்து, விளைச்சலும் குறையும்.  
					 
					கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் 
					 
					திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவைக் கொண்டாடும் இந்த 
					நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என 
					சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். 
					 
					நற்செய்திக்காக உயிரைத் தரத் துணிதல் 
					 
					சில ஆண்டுகளுக்கு முன்பாக தெற்கு பிரேசிலில் உள்ள ஒரு கடற்கரை 
					கிராமத்தில் நற்செய்திப் பணியாற்றி வந்த குருவானவர் ஒருவர், 
					ஒருநாள் மக்கள் அனைவரும் கூடி வந்த ஒரு நாளில், அவர்களிடத்தில் 
					ஒரு கேள்வியைக் கேட்டார். அவருடைய கேள்வி இதுதான். "எதற்காக 
					இயேசு மீனவர்களை தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்துகொண்டார்?". 
					அதற்கு அவர்களில் ஒருவர் சொன்ன பதில் அவரை மிகவும் ஆச்சரியப்பட 
					வைத்தது. "நிலத்தில் ஒருவர் பயணப்பட்ட வழியில், அதே 
					வழித்தடத்தில் இன்னொருவர் பயணம் செய்யமுடியும். பயணமும் மிக 
					எளிதாக இருக்கும். ஆனால் கடலில் அப்படிக் கிடையாது. ஒருவர் 
					பயணம் செய்த வழியில் இன்னொருவர் பயணம் செய்யமுடியாது; 
					வழித்தடமும் அமைக்க முடியாது. ஆகையால், அவர்களாகவேதான் 
					தங்களுக்கான வழித்தடங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்; பயணமும் 
					அவ்வளவு எளிதாக இராது. இப்படி மீனவர்கள் இயல்பிலே ஆபத்துகளை 
					எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருப்பதால்தான், நற்செய்திப் 
					பணிசெய்ய இத்தகையோர்தான் தேவை என்ற நோக்கத்தில் ஆண்டவர் இயேசு 
					மீனவர்களைத் தன்னுடைய சீடர்களாகத் தேர்ந்துகொண்டார்" என்றார் 
					அவர். 
					 
					ஆம் மீனவர்கள் இயல்பிலே ஆபத்துகளைத் தாங்கும் ஆற்றலைக் 
					கொண்டிருப்பவர்கள். சீமோன் பேதுரு, யாக்கோபு இவர்கள் எல்லாம் 
					ஆண்டவர் இயேசுவுக்காக எத்தனையோ ஆபத்துகளைச் சந்தித்தார்கள். 
					அந்திரேயாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் கிரீஸில் நற்செய்தி 
					அறிவித்தபோது பல்வேறு எதிர்ப்புகளை, ஆபத்துகளைச் சந்தித்தார். 
					ஏன் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய உயிரையும் தரத் துணிந்தார். 
					அவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரைப் போன்று 
					இயேசுவுக்காக தியாகங்களை மேற்கொள்ள, உயிரையும் துறக்கத் 
					துணிகின்றோமா? என்று சிந்தித்துப் பார்த்து, அதனை நம்முடைய 
					வாழ்வில் வாழ்ந்து காட்ட முயல்வோம். 
					 
					நாம் பெற்ற நற்செய்தியை/ நன்மைகளை பிறருக்கு அறிவிப்போம் 
					 
					நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், "கொடையாகப் 
					பெற்றீர்கள், கொடையாக வழங்குங்கள்" என்று (மத் 10:8). 
					அந்திரேயா தான் ஆண்டவர் இயேசுவிடமிருந்து பெற்ற இறையனுபவத்தை  
					நற்செய்தியை  தான் மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக அதனை 
					தன்னுடைய சகோதரராகிய சீமோன் பேதுருவுக்கு அறிவித்து, அவரை 
					ஆண்டவர் இயேசுவிடம் கொண்டுவந்து சேர்த்தார். இதுபோன்று 
					பலரையும் அவர் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்த்தார். அவரைப் 
					போன்று நாமும் இயேசுவை மக்களுக்கு அறிவித்து, அவர்களை 
					இயேசுவிடம் கொண்டு வந்து சேர்ப்பதே நம்முடைய தலையாய 
					கடமையாகும்.  
					 
					ஆகவே, திருத்தூதரான தூய அந்திரேயாவின் விழாவை கொண்டாடும் இந்த 
					நாளில் நாமும் அவரை போன்று ஆண்டவர் இயேசுவைப் பற்றிய 
					நற்செய்தியை எல்லா மக்களுக்கு அறிவிப்போம். அவர்களை 
					இயேசுவிடத்தில் கொண்டுவந்து சேர்ப்போம். அதன்வழியாக இறையருள் 
					நிறைவாய் பெறுவோம்.  
					 
					- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |