தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் 
					~ நேர்ந்தளிப்பு  
					✠ Dedication of Archbasilica of St. John Lateran ✠ | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				
					நினைவுத் திருநாள் : 
					
					
					(நவம்பர்
					
					
					 / 
					 
					
					Nov - 
					18) | 
			 
			
			
				
					 தூய இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் 
					~ நேர்ந்தளிப்பு  
					✠ Dedication of Archbasilica of St. John Lateran ✠ 
					 
 புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது ரோம மறைமாவட்டத்தின் தலைமைக் 
					கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் 
					கோவிலும் ஆகும். ரோம மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் 
					திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் 
					அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் "Archbasilica of 
					St. John Lateran" என்று வழங்கப்படுகிறது. 
					 
					இப்பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட விழா, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 
					9ம் நாள் கொண்டாடப்படுகிறது. 
					 
					பழமையான கோவில்: 
					புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், கத்தோலிக்க திருச்சபையின் 
					பேராலயங்களிலெல்லாம் மிகப் பழமையானதும் முதன்மையானதும் ஆகும். 
					ரோம் நகரில் சேலியோ குன்றின் அருகில் அமைந்துள்ள இக்கோவில், 
					உலகமனைத்திற்கும் "தாய்க் கோவிலாகவும்" "தலைமைக் கோவிலாகவும்" 
					கருதப்படுகிறது. இக்கோவிலுக்குத் தலைமைக் குருவாக உள்ள கர்தினால், 
					திருத்தந்தையின் பதில் குருவாக இங்கு பணிபுரிகிறார். 
					
					 
					கிறிஸ்துவுக்கு அர்ப்பணமான கோவில்" 
					இப்பெருங்கோவிலின் முகப்பில் "Christo Salvatori" என்னும் சொற்கள் 
					பதிக்கப்பட்டு்ள்ளன. இதற்கு "மீட்பர் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது" 
					என்பது பொருள். இக்கோவில் ரோம் நகரில் அமைந்திருந்தாலும், வத்திக்கான் 
					நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது ஆகும். 
					
					 
					இலாத்தரன் அரண்மனை: 
					கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் 
					"இலாத்தரானி" என்னும் குடும்பத்திற்கு உரிய அரண்மனையாக 
					இருந்தது. எனவே "இலாத்தரன்" என்னும் சொல் இக்கோவில் பெயரோடு 
					இணைக்கப்பட்டது. "டாசிட்டஸ்" (Tacitus) என்னும் பண்டைய ரோம 
					வரலாற்றாசிரியரின் "வரலாற்றுக் குறிப்புகள்" (ஆண்டு: கி.பி. 
					65) கூற்றுப்படி, இலாத்தரானி குடும்பத்தினரான "ப்ளாவுசியஸ்" 
					(Plautius Lateranus) என்பவர் ஆட்சியாளராகப் பொறுப்பேற்று, 
					"நீரோ" (Nero) மன்னனுக்கு எதிராக நிகழ்ந்த சதியில் பங்கேற்றார் 
					என்றும், அதனால் அவருடைய நிலத்தையும், சொத்தையும், மன்னன் 
					அரசுடைமை ஆக்கினார் என்றும் தெரிகிறது. ப்ளாவுசியசுக்குக் 
					கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. 
					 
					கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் "செக்ஸ்டியஸ் இலாத்தரனஸ்" 
					(Sextius Lateranus) என்பவர் அவ்விடத்தில் சீரும் சிறப்பும் 
					மிக்க ஒரு அரண்மனை கட்டினார். அதன் புகழ் எவ்வளவு ஓங்கியது 
					என்றால் அக்கட்டடம் இருந்த இடம் ரோம் நகரின் ஒரு முக்கிய 
					அடையாளத்தளமாக மாறியது. நடுக்காலத்திலும் நவீன காலத்திலும் 
					இன்றும் "இலாத்தரன்" என்னும் அடைமொழி நிலைத்துவிட்டது. 
					 
					முதல் கோவில் கட்டப்படுதல்: 
					"ஃப்ளாவியஸ் வலேரியஸ் காண்ஸ்டண்டைன்" என்னும் பெயர் கொண்ட 
					"முதலாம் காண்ஸ்டண்டைன்" (Emperor Constantine I) பேரரசர், 
					கி.பி. 313ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கு மதச் சுதந்திரம் 
					அளித்தார். அவரே இலாத்தரன் குடும்ப நிலத்தில் ஒரு பெருங்கோவில் 
					எழுப்ப வழிசெய்தார். "திருத்தந்தை முதலாம் சில்வெஸ்தர்" (Pope 
					Sylvester I), அக்கோவிலை கி.பி. 324ம் ஆண்டில், (அல்லது 318ம் 
					ஆண்டில்) "தூய்மைமிகு மீட்பராம் கிறிஸ்துவுக்கு" 
					நேர்ந்தளித்தார். ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தந்தை "மூன்றாம் 
					செர்ஜியுஸ்" (Pope Sergius III), இக்கோவிலைத் திருமுழுக்கு 
					யோவானுக்கும் அர்ப்பணித்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் 
					"திருத்தந்தை இரண்டாம் லூசியஸ்" (Pope Lucius II), அதே கோவிலை 
					"நற்செய்தியாளர் தூய யோவானுக்கும்" (St. John the Evangelist) 
					அர்ப்பணித்தார். 
					
					 
					திருத்தந்தையின் ஆட்சி மையம்: 
					கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை 
					திருத்தந்தையர்களின் ஆட்சி மையம் இலாத்தரானில்தான் இருந்தது. 
					இலாத்தரன் கோவில்தான் ரோம ஆயரும் திருச்சபைத் தலைவருமான 
					திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் இருந்த கோவிலாகவும் விளங்கியது. 
					இலாத்தரானில்தான் திருச்சபையின் ஐந்து பொதுச்சங்கங்கள் 
					நிகழ்ந்தன. 
					 
					இலாத்தரானில் அமைந்த பழைய கோவிலின் வடிவமைப்பு இன்றைய கோவிலின் 
					வடிவமைப்பைப் பெரிதும் ஒத்திருந்தது. கோவில் ஐந்து 
					நீள்வாக்குப் பிரிவுகளையும் பிரிவுச் சுவர்களையும் 
					கொண்டிருந்தது. 
					 
					சதுர வடிவில் அமைந்த பெருங்கோவில் ஐந்து நீள்வாக்குப் 
					பிரிவுகளாக அமைக்கப்பட்டது. கொரிந்து கலைப்பாணியில் அமைந்த 
					பளிங்குத் தூண்கள் அப்பிரிவுகளைப் பகுத்தன. நடு நீள்வாக்குப் 
					பகுதியின் இரு பக்கங்களிலும் பக்கத்துக்கு 15 தூண்கள், வலது 
					மற்றும் இடது நீள்வாக்குப் பக்கங்களில் வளைவுகளைத் 
					தாங்குவதற்கு 21 தூண்கள் என்று அமைக்கப்பட்டன. நடு 
					நீள்வாக்குப் பகுதியின் இறுதியில் ஒரு பெரும் உள்கூரை 
					அமைக்கப்பட்டது. நடுக்காலத்தில் இக்கோவில் கலையழகு மிக்க ஒரு 
					வழிபாட்டிடமாக விளங்கியது. 
					 
					நான்காம் நூற்றாண்டிலிருந்து இக்கோவில் வளர்ச்சியையும், 
					வீழ்ச்சியையும் கண்டது. கி.பி. 410ம் ஆண்டு "அலாரிக்" 
					என்பவரின் தலைமையில் "விசிகோத்து" இனத்தவர் கோவிலின் 
					உயர்மேடையை எடுத்துச் சென்றுவிட்டனர். "ஜென்செரிக்" என்பவரின் 
					தலைமையில் "வாண்டல்" இனத்தவர் கோவிலின் செல்வங்களை கி.பி. 
					455ம் ஆண்டில் கொள்ளையடித்தனர். 
					 
					கோவில் கைநெகிழப்பட்ட காலம்: 
					பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை ரோமில் இலாத்தரன் 
					தலைமையிடத்தை விட்டுவிட்டு, ஃபிரான்ஸ் நாட்டில் "அவிஞ்ஞோன்" 
					என்னும் நகருக்கு மாற்றினார். கோவிலும் கைநெகிழப்பட்டது. 
					 
					கி.பி. 1378ம் ஆண்டில், "திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி", 
					பொறுப்பேற்றதும் "அவிஞ்ஞோன்" நகரை விட்டு ரோம் வந்தார். ஆனால், 
					இலாத்தரன் கோவிலும் தலைமையிடமும் சீரழிந்த நிலையில் இருந்ததால் 
					திருத்தந்தை வத்திக்கானுக்குச் சென்றார். அதன் பிறகு கோவிலும், 
					அதனுள் அமைந்த திருமுழுக்கு அளிப்பிடமும், 
					சீர்ப்படுத்தப்பட்டன. திருத்தந்தையின் தலைமை இடமாக விளங்கிய 
					இலாத்தரன் அரண்மனையில் சீரமைப்பு வேலைகள் நடைபெறவில்லை. 
					 
					பதினாறாம் நூற்றாண்டில், ரோம் நகர் சூறையாடப்பட்ட பிறகு, 
					"திருத்தந்தை மூன்றாம் பவுல்" திருத்தந்தை அரண்மனைக் 
					கட்டடத்தின் பொருள்களைக் கொண்டு கோவிலின் சீரமைப்பைத் 
					தொடர்ந்தார். "திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ்", அரண்மனைக் 
					கட்டடத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு புதியதொரு கட்டடத்தை 
					எழுப்பினார். அதுவே இன்று ரோம் மறைமாவட்டத்தின் அலுவலக மையமாக 
					உள்ளது. 
					 
					கோவிலின் மறுமலர்ச்சிக் காலம்: 
					கி.பி. 1600ம் ஆண்டில், "திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்", 
					ஜூபிலி ஆண்டு கொண்டாடப் பணித்தார். 
					 
					கி.பி. 1650ம் ஆண்டு, புனித இலாத்தரன் யோவான் கோவில் அழகுற 
					சீரமைக்கப்பட்ட ஆண்டு ஆகும். "ஃபிரான்செஸ்கோ பொர்ரோமீனி" 
					என்னும் கட்டடக் கலைஞரின் மேற்பார்வையில், "திருத்தந்தை 
					பத்தாம் இன்னசெண்ட்" ஆட்சியில் கோவிலின் நடு நீள்வாக்குப் 
					பகுதியும் இரு பக்க நீள்வாக்குப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டன. 
					 
					திருத்தந்தை ஹிலாரியுஸ் (கி.பி. 461-468) என்பவர் கோவிலின் உள் 
					அமைந்த திருமுழுக்கு அளிப்பிடத்தின் அருகே மூன்று சிறு 
					வழிபாட்டிடங்களை வடிவமைத்தார். அவை: புனித திருமுழுக்கு 
					யோவான், புனித நற்செய்தி யோவான், திருச்சிலுவை என்பனவாகும். 
					கோவிலுக்கு பரோக்கு கலைப் பாணி அளிப்பதற்காக திருச்சிலுவை 
					வழிபாட்டிடம் ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையால் 
					அகற்றப்பட்டது. 
					 
					ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை மூன்றாம் லியோ 
					என்பவர் கோவிலின் உள்கூரையைச் செம்மைப்படுத்தி, பீட 
					உள்கூரையின் சாளரங்களைப் பன்னிறக் கண்ணாடிகளால் அணிசெய்தார். 
					பத்தாம் நூற்றாண்டில் கோவிலின் முன் மண்டபத்தின் ஒரு பகுதியில் 
					புனித தோமா வழிபாட்டிடம் கட்டப்பட்டது. அங்குதான் 
					முற்காலங்களில் திருத்தந்தையர் வழிபாட்டு ஆடைகளை அணிவது 
					வழக்கம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்கு 
					அளிப்பிடத்தின் முன் மண்டபத்தில் மேலும் இரண்டு 
					வழிபாட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கேற்றவாறு கோவிலின் கூரை 
					சீரமைக்கப்பட்டது. கோவில் முகப்பில் கற்பதிகை ஓவியங்கள் 
					சேர்க்கப்பட்டன. 
					 
					கி.பி. 1300ம் ஆண்டு "ஜூபிலி ஆண்டு" என்று கொண்டாடப்பட்டது. 
					புனித இலாத்தரன் பெருங்கோவிலில் அந்த ஜூபிலி அறிவிப்பைத் 
					"திருத்தந்தை எட்டாம் போனிபாஸ்" வெளியிட்டார். இதையொட்டி 
					கோவில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |