| 
        			✠ தூய ஜான் ராபர்ட்ஸ் ✠(St. John Roberts 
					) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				
					நினைவுத் திருநாள் : 
					
					
					(டிசம்பர்/ 
					 
					Dec - 
					
					10) | 
			 
			
			
				
					✠ 
					தூய ஜான் ராபர்ட்ஸ் ✠(St. John Roberts 
					) 
					 
					"நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும், 
					அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் 
					எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் 
					கேடு!" (1 கொரி 9:16) 
					 
					வாழ்க்கை வரலாறு 
					 
					இன்று நாம் நினைவுகூரும் ஜான் ராபர்ட்ஸ், இங்கிலாந்தில் உள்ள 
					நார்த் வேல்ஸில், 1577 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய குடும்பம் 
					ஒரு செல்வச் செழிப்பான குடும்பம். அதனால் இவர் எல்லா வசதிகளும் 
					கிடைக்கப்பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். 
					 
					இவருடைய பெற்றோர் ப்ராடெஸ்டென்ட் சபையைச் சார்ந்தவர்கள். அதனால் 
					இவரும் சிறுவயது முதலே பிராடெஸ்டென்ட் நம்பிக்கையிலே வளர்ந்துவந்தார். 
					ஒருசமயம் கத்தோலிக்கத் திரு அவையைச் சார்ந்த குருவானவர் ஒருவர், 
					கத்தோலிக்கத் திரு அவையின் போதனைகளையும் மறையுண்மைகளையும் எடுத்துரைத்ததைக் 
					கேட்டுவிட்டு, ஜான் ராபர்ட்ஸ் கத்தோலிக்கத் திரு அவைமீது 
					ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். 1598 ஆம் ஆண்டு இவர் பாரிஸ் 
					நகருக்கு படிக்கச் சென்றபோது, அங்கு கிடைத்த ஒருசில கத்தோலிக்க 
					நண்பர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் ஜான் ராபர்ட்ஸ் 
					கத்தோலிக்கத் திரு அவைக்கு வந்தார். 
					 
					நாட்கள் செல்லச் செல்ல கத்தோலிக்கத் திரு அவையின் போதனைகள் 
					ஜான் ராபர்ட்ஸிடம் பெரிய ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதனால் 
					இவர் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று, குருத்துவ வாழ்விற்கு 
					தன்னையே தயார் செய்து, 1602 ஆம் ஆண்டு குருவாக மாறினார். 
					இதற்குப் பின்பு இவர் அருட்தந்தை அகஸ்டின் ப்ராட்சா என்பவரோடு 
					சேர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கச் 
					சென்றார். இங்கிலாந்து நாட்டில் கத்தோலிக்க நம்பிக்கையை 
					அறிவிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருந்துவிடவில்லை. 
					அதற்கு இங்கிலாந்து நாட்டை ஆண்டுவந்த முதல் எலிசபெத் 
					அரசியிடமிருந்து பயங்கர எதிர்ப்பு இருந்தது. 
					 
					இதனைக் கண்டு பயன்படாமல் ஜான் ராபர்ட்சும் அவரோடு சென்ற 
					அருட்தந்தையும் மாறுவேடம் போட்டுக்கொண்டு ஆண்டவருடைய 
					நற்செய்தியை எடுத்துரைத்து, பலரையும் கத்தோலிக்க 
					நம்பிக்கைக்குள் கொண்டுவந்தார்கள். இது எப்படியோ அரசிக்குச் 
					தெரியவர, அவர், இவர்கள் இருவரையும் நாட்டைவிட்டே 
					துரத்திவிட்டார். இதனால் இருவரும் பிரான்சில் உள்ள டுவே என்ற 
					நகருக்கு வந்து, சில மாதங்கள் அங்கு தங்கி பணிசெய்தார்கள். 
					ஆனால், அதே ஆண்டில் (1603) லண்டனில் கொள்ளைநோய் பரவிய 
					செய்தியைக் கேட்டு, அங்கு உள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஜான் 
					ராபர்ட்ஸ் மட்டும் அங்கு வந்தார். நோயினால் பாதிக்கப்பட்ட 
					மக்களுக்கு இரவுபகல் பாராது உதவினார். ஆனால் ஜான் ராபர்ட்ஸ் 
					இங்கிலாந்தில்தான் இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட 
					எலிசபெத் அரசி, 8 மாதங்கள் அவரை சிறையில் அடைத்துவைத்து 
					சித்ரவதை செய்து அனுப்பினார். இதற்குப் பின்பு அரசி ஜான் 
					ராபர்ட்சை நாட்டிற்குள் வரவேகூடாது என்று எச்சரித்து அனுப்பி 
					வைத்தார். 
					 
					எனவே ஜான் ராபர்ட்ஸ் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று டுவேவில் 
					ஒரு துறவுமடத்தை நிறுவினார். அவர் நிறுவிய அந்த துறவுமடத்தில் 
					ஏராளமான இளைஞர்கள் வந்து சேர்ந்து, துறவிகள் ஆனார்கள். 
					இதற்கிடையில் 1606 ஆம் ஆண்டு, ஜான் ராபர்ட்சிற்கு மீண்டுமாக 
					இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று நற்செய்தி அற்விக்கவேண்டும் 
					என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் இவர் அங்கு சென்று நற்செய்தி 
					அறிவிக்கத் தொடங்கினார். ஆனால் எலிசபெத் அரசியுடைய ஒற்றர்களின் 
					கையில் மாட்டிக்கொண்டதால், சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை 
					செய்யப்பட்டார். ஓரிரு மாதங்கள் சிறையிலே இருந்த ஜான் 
					ராபர்ட்ஸ், ஒருநாள் தப்பித்து வெளியே வந்துவிட்டார்.  
					 
					இப்படி ஜான் ராபர்ட்ஸ் கத்தோலிக்க நம்பிக்கையையும் 
					நற்செய்தியையும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதும், அரசாங்கம் 
					அவரை சிறையில் அடைப்பதும், அதிலிருந்து அவர் தம்பித்துப் 
					போவதுமாகத் தொடர்ந்துகொண்டே இருந்தது. 1610 ஆம் ஆண்டு, 
					டிசம்பர் 2 ஆம் நாள், இவர் டைபர்ன் என்ற இடத்தில் திருப்பலி 
					நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, படைவீரர்கள் இவரைச் சுற்றி 
					வளைத்து சிறையில் அடைத்தார்கள். பின்னர் டிசம்பர் 10 ஆம் நாள், 
					இவரைக் தூக்கிலிட்டுக் கொன்றுபோட்டார்கள். இவருடைய உடலானது 
					டுவேவிற்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு 
					1970 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.  
					 
					கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் 
					 
					தூய ஜான் ராபர்ட்ஸின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், 
					அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று 
					சிந்தித்து பார்த்து நிறைவுசெய்வோம்.  
					 
					1. தோல்விகளைக் கண்டு மனந்தளராது இருப்போம்! 
					 
					தூய ஜான் ராபர்ட்சிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக 
					முக்கியமான பாடம், நம்முடைய பணிவாழ்வில், அன்றாட வாழ்வில் 
					வரும் தோல்விகள், அவமானங்களைக் கண்டு மனந்தளராமல் மனவுறுதியோடு 
					உழைக்கவேண்டும் அல்லது பணிசெய்ய வேண்டும் என்பதுதான். ஜான் 
					ராபர்ட்ஸ், ஆண்டவருடைய நற்செய்தி அறிவித்தபோது பலமுறை சிறையில் 
					அடைக்கப்பட்டார், சித்தரவதை செய்யப்பட்டார், 
					நாடுகடத்தப்பட்டார். அதற்காக அவர் மனந்தளரவில்லை. மாறாக 
					தொடர்ந்து நற்செய்திப் பணி செய்தார். அதனால் இறைவனின் 
					அன்புக்கு உகந்தவர் ஆனார். நாமும் மனந்தளராமல் உழைத்தால், 
					போராடினால் எதிலும் வெற்றியைக் காண்பது உறுதி. 
					 
					பள்ளி மாணவனாய் இருந்தபோது அந்தச் சிறுவனுக்கு கூடைப்பந்து 
					வீரராய் வளரேண்டும் என்று அவ்வளவு ஆசை. ஆனால், பள்ளியின் 
					அணியில் அவன் பெயர்கூட இல்லை. பல பயிற்சியாளர்கள் மாணவர்களைத் 
					தங்கள் அணிகளில் சேர அழைத்தனர். ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 
					அழைக்கப்படவே இல்லை. இதற்காக அவன் மனம் உடைந்து போகவில்லை. 
					மாறாக, மனவுறுதியோடு போராடினான். பின்னாளில் உலகம் போற்றும் 
					கூடைப்பந்து வீரனானான். அவன்தான் மைக்கேல் ஜோர்டன். 
					 
					வாழ்வில் வரும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு மனமுடைந்து 
					போகாமல், தொடர்ந்து உழைத்தால், போராடினால் வாழ்க்கையில் வெற்றி 
					நிச்சயம் என்பதற்கு தூய ஜான் ராபர்ட்சின் வாழ்வும், 
					கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் வாழ்வும் மிகச் சிறந்த 
					எடுத்துக்காட்டுகள். 
					 
					ஆகவே, தூய ஜான் ராபர்ட்சின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், 
					அவரைப் போன்று மனந்தளராது ஆண்டவருடைய பணியைச் செய்வோம். 
					அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.  
					 
					 
					- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். 
					 
  | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |