| 
        			
					
					  ✠ புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் 
					✠ (St. Francis Xavier) | 
			 
			
            
				| 
        		  | 
				
        		  | 
				
				  | 
			 
			
            
				| 
					
				நினைவுத் திருநாள் : 
					
					டிசம்பர் 
					03 | 
			 
			
			
				
					
					✠ 
					புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ✠(St. Francis Xavier) 
					
					புனித 
					பிரான்சிஸ் சவேரியார் வரலாறு 
					
					 
					* 
					 தூர கிழக்கு நாடுகளின் 
					திருத்தூதர் : (Apostle to the Far East) 
					 
					
					
					* 
					பிறப்பு : ஏப்ரல் 7, 1506 
  ஜேவியர், நவார் அரசு, (தற்போதைய ஸ்பெயின்) 
 (Javier, Kingdom of Navarre (Present Spain) 
					 
					
					* இறப்பு 
					: டிசம்பர் 3, 1552 (வயது 46) 
  "சாவோ ஜோவாஓ" தீவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு, (தற்போதைய சீனா) 
  (Portuguese Base at So Joo Island (now China) 
					 
					
					* ஏற்கும் 
					சபை/ சமயம் : 
  ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) 
  லூதரனிய திருச்சபை (Lutheran Church) 
  ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) 
					 
					
					* அருளாளர் 
					பட்டம் : அக்டோபர் 25, 1619 
  திருத்தந்தை ஐந்தாம் பவுல் (Pope Paul V) 
					 
					
					* புனிதர் 
					பட்டம் : மார்ச் 12, 1622 
  திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி (Pope Gregory XV) 
					 
					
					* சித்தரிக்கப்படும் 
					வகை : 
   நண்டு, சிலுவை; லீலி மலர், நெருப்பு, போதகர், எரியும் இதயம் 
					 
					
					* 
					பாதுகாவல் : 
					இந்தியா; ஆப்ரிக்க மறைப்பணிகள்; அகர்தலா; அகமதாபாத்; அலெக்சாண்டிரியா 
					லூசியானா; ஆஸ்திரேலியா; மும்பை; கோவா (மாநிலம்); கேப் டவுன்; 
					சீனா; டோக்கியோ; பிலிப்பைன்ஸ்; கென்யா; ஸ்பெயின்; 
					நியுசிலாந்து; இந்தோனேசியா; மலாக்கா; மலேசியா; மங்கோலியா. 
					 
					புனிதர் ஃபிரான்சிஸ் சவேரியார் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 
					1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தமது 
					ஒன்பது வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே 
					அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பேனிஷ் மற்றும் பல 
					மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறிஸ்தவத்தின் 
					வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். 
					 
					கல்வி : 
					1525ம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் 
					பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள 
					புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை 
					பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். 
					 
					மீண்டும் 1534 முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது 
					புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார். 
					 
					"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் 
					அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை 
					இஞ்ஞாசியார், சவேரியாருக்கு எடுத்துரைக்க, சவேரியார் அவ்வார்த்தையின் 
					ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் 
					இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் 
					சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர். 
					 
					குருத்துவமும் இந்திய வருகையும் : 
					சவேரியாரின் பயணங்கள் : 
					இதை தொடர்ந்து 1537ம் வருடம் ஜூன் மாதம் 24ம் நாள் குருவாக 
					திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ம் நாள் 
					நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை 
					மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் 
					தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் 
					கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், 
					சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் 
					பயணம் மேற்கொண்டார். 
					 
					புனித சவேரியார் 1540ல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் 
					சென்றார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு 
					வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை 
					செய்துவிட்டு 1542 மே மாதம் 6ம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் 
					நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் 
					குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் 
					செய்துவந்தார். 
					 
					மறைப்பணி : 
					1543ல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் 
					தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் 
					தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு 
					இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் 
					சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் 
					புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு 
					வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் 
					நிறுவினார் என்று காண்கிறோம். 
					 
					கி.பி. 1544ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர 
					கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். 
					அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் 
					வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு 
					வேணாட்டு அரசரால் இயலாமல் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை 
					நாடினார். விஜய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை 
					நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் 
					பிடித்து வடுகர்ப்படைகளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார். 
					 
					புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை 
					நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஏதோ ஒரு பெரும் 
					பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய 
					வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு 
					வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து 
					அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் 
					ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண 
					மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது. 
					 
					"அவர்கள் என்னை மகாராஜா என்று அழைத்தார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் 
					உம்மை எப்போதும் மகாதந்தை என்று அழைப்பார்கள்" (They called me 
					great king, but hereafter for ever they will call you the 
					Great Father) என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் 
					பாராட்டினார். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் 
					ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது. 
					 
					ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை 
					தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் 
					சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர். 
					 
					மரணம் : 
					புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை மார்க்கமாகப் 
					பயணம் செய்து இறைப்பணியைச் செய்துள்ளார். கடைசியாக சாங்சோங் 
					தீவில் நோயால் பாதிக்கபட்டார். இவரை ஜார்ஜ் அல்வறேஸ் என்னும் 
					போர்த்துக்கீசியர் கவனித்து வந்தார். இருந்தாலும் 1552ம் வருடம், 
					டிசம்பர் மாதம், 3ம் நாள் உயிர் துறந்தார். ஜார்ஜ் அல்வறேஸ் சவேரியாரை 
					அத்தீவிலேயே அடக்கம் செய்துவிட்டுச் சென்று விடுகிறார். 
					 
					அழியா உடல் : 
					சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து (ஃபெப்ரவரி 17, 1553) அத்தீவின் 
					வழியாக வரும்போது, மீபொருட்களை, அவரின் சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்ல 
					கல்லறையை திறந்தபோது அவரது உடல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் 
					வைத்தது வைக்கப்பட்டது போலவே இருந்தது. நறுமணமும் வீசியது. 
					பின்னர் அவரது உடலை சண்ட க்ரூஸ் என்னும் கப்பலில் மக்காவு 
					கொண்டு சென்றனர். இக்கப்பலானது மார்ச் 22, 1553ம் வருடம் மக்காவுவை 
					வந்தடைந்தது. மீண்டும் ஒரு ஆலயத்தில் வைத்து அவரது உடலைப் 
					பார்த்தபோது அது கெட்டுப் போகாமல் நறுமணம் வீசியது என்பர். 
					பின்னர் சவேரியாரின் உடல் புனித சின்னப்பர் தேவாலயத்தில் உள்ள 
					கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 
					 
					இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தந்தை பெய்ரோ புனித சவேரியாரின் 
					உடலைக் கோவா கொண்டுசெல்ல உத்தரவிட்டார். இதன்படி டிசம்பர் 
					1553ல் புனித சவேரியாரின் உடல் கோவா வந்தடைந்தது. 450 வருடங்களைத் 
					தாண்டிய பின்னரும் அழியாமல் இன்றும் இப்புனிதரின் உடல் பொதுமக்கள் 
					பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 
					 
					புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு : 
					கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்தபோது, 
					அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் 
					இருந்த இடத்தில் கி.பி. 1600ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று 
					கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் 
					இன்றளவும் உள்ளது. 
					 
					 
					 
					 
					 
					 
					டிசம்பர் 3 : புனித பிரான்சிஸ் சவேரியார் - மறைப்பணியாளர், இந்தியாவின் 
					பாதுகாவலர் 
					இந்தியாவில் பெருவிழா 
					 
					மறைப்பணியாளர் - பொது (மறைபரப்புப் பணியாளர்) 
					 
					முதல் வாசகம் 
					 
					ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு 
					நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். 
					 
					இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61: 1-3 
					 
					ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு 
					அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், 
					உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் 
					பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை 
					அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் 
					கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று 
					அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், 
					சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் 
					பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் 
					பதிலாகப் புகழ் என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். 
					நேர்மையின் தேவதாருகள் என்றும் தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் 
					நட்டவை என்றும் அவர்கள் பெயர் பெறுவர். 
					 
					ஆண்டவரின் அருள்வாக்கு. 
					 
					டிசம்பர் 3 : பதிலுரைப் பாடல் 
					 
					திபா 117: 1. 2 . (பல்லவி: மாற் 16: 15) 
					 
					பல்லவி: உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 
					 
					அல்லது: அல்லேலூயா. 
					 
					1.பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! 
					நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! - பல்லவி 
					 
					2.ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப் பெரியது; 
					அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. - பல்லவி 
					 
					டிசம்பர் 3 : நற்செய்தி வாசகம் 
					 
					படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 
					 
					மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20 
					 
					அக்காலத்தில் 
					 
					இயேசு பதினொருவருக்கும் தோன்றி, உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
					நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு 
					திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ 
					தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் 
					அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; 
					புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். 
					கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. 
					அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர் 
					என்று கூறினார். 
					 
					இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து 
					கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று 
					எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, 
					நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார். 
					 
					ஆண்டவரின் அருள்வாக்கு. 
					 
					 
					 
					 
					புனித சவேரியார் 
					 
					அகில உலகத் திருச்சபை திருப்பலி வாசகம் மத்தேயு 8:5-11 என இருந்தாலும், 
					நம் தாய்த்திருநாட்டில் நாளைய தினம்தான் தூய சவேரியாரின் 
					திருநாளைக் கொண்டாடுகிறோம். ஆக, திருநாளுக்குரிய நற்செய்தி வாசகத்தையே 
					(மாற்கு 16:15-20) சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். 
					 
					தான் விண்ணேற்றமடையும் முன் தன் சீடர்களைச் சந்திக்கின்ற இயேசு 
					தன் பிரியாவிடைச் செய்தியாக, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் 
					நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்!' என்ற கட்டளையை 
					விட்டுச்செல்கிறார். 
					 
					நம்பிக்கை கொண்டோர் இத்தகைய அறிகுறிகளைக் கொண்டிருப்போர் என்று 
					இயேசு இவ்வாறு பதிவு செய்கின்றார். இந்த அறிகுறிகளை என் பணியோடு 
					பொருத்திப்பார்த்தால் நகைச்சுவையாக இருக்கிறது: 
					 
					'அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்' - நம்ம பேச்ச மனுசங்களே 
					கேட்க மாட்றாங்க. இதுல பேய்கள் எப்படி கேட்டு ஓடும்! 
					'புதிய மொழிகளைப் பேசுவர்' - நமக்கு தமிழே தரிகனத்தாம் போடுது! 
					'பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்' - நமக்கு மண்புழுவைப் 
					பார்த்தாலே பயமா இருக்கு! 
					'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது' 
					- புது இடத்துல மினரல் வாட்டர் குடிச்சாலே த்ரோட் இன்ஃபெக்ஷன் 
					ஆயிடுது! 
					'அவர்கள் உடலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்' - இது 
					மட்டும் எக்ஸெப்ஷன். இந்த அறிகுறி மட்டும் என் வாழ்வில் பல நேரங்களில் 
					நடந்துருக்கு! 
					 
					நிற்க. 
					 
					இந்த நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து தூய சவேரியார் தூய இஞ்ஞாசியாருக்கு 
					ஒரு கடிதம் எழுதுகின்றார். அந்தக் கடிதம்தான் நாளைய கட்டளை செபத்தின் 
					இரண்டாம் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் 
					நான் இரசித்தவற்றை இன்று பதிவு செய்கிறேன்: 
					 
					1. கடிதத்தின் தலைப்பு: 'நற்செய்தியை அறிவிக்காவிடில் எனக்கு 
					ஐயோ கேடு!' 
					 
					2. தென் இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்திலிருந்து இதை எழுதுகிறார். 
					நாள், இடம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. 
					 
					3. 'இங்கு வந்த நாளிலிருந்து நான் ஓய்வெடுக்கவேயில்லை. கிராமங்கள்தோறும் 
					சென்றேன். 'வலது எது இடது எது' என தெரியாத குழந்தைகளும், கொஞ்சம் 
					வளர்ந்த குழந்தைகளும் என்னைச் சுற்றியே இருக்கின்றார்கள். எனக்கு 
					கட்டளை செபம் சொல்லக் கூட முடியவில்லை. 
					 
					இதில் இரண்டு விடயங்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று, 
					நற்செய்திப் பணி அல்லது பங்கின் மேய்ப்புப் பணி குழந்தைகளிடமிருந்து 
					தொடங்கப்பட வேண்டும். குழந்தைகள் வந்துவிட்டால் வளர்ந்தவர்களும் 
					உடன் வந்துவிடுவார்கள். இரண்டு, தன் வேலையை செபத்தோடு இவர் 
					சமரசம் செய்துகொள்ளவில்லை. 'நான் செய்யும் வேலையே என் செபம்' 
					என சில அருட்பணியாளர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், 
					என்னதான் நாம் மக்களுக்காக வேலை செய்தாலும், அவை நம் செபத்தோடு 
					சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கக் கூடாது. 
					 
					4. 'நல்ல அறிவாளிகளையும் நான் கண்டேன்.' அதாவது, தான் பணியாற்றும் 
					இடத்தில் தனக்குக் கீழ் இருப்பவர்களும், தன்னால் பயன்பெறுபவர்களும் 
					அறிவற்றவர்கள் அல்லர், மாறாக, அறிவாளிகள் என்கிறார். அதாவது, 
					மற்றவர்களின் திறனை மதிக்கின்றார். என் பணித்தளத்திலும் கூட, 
					என்னைவிட அறிவாளிகள், திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் 
					திறனை நான் மதிப்பதே சால்பு. 
					 
					5. 'என்னை எங்கு வேண்டுமாலும் அனுப்பும்!' - இது இவரின் செபம். 
					 
					இந்தக் கடிதத்தில் புதிய இடத்தில் தான் அனுபவிக்கும் வெயில், 
					குளிர், மழை, பாதுகாப்பின்மை, நோய், வசதிக்குறைவு எதைப்பற்றியும் 
					ஒரு வார்த்தைகூட இல்லை. 
					 
					'நான் விரும்பித்தானே வந்தேன்!' என்று எல்லாவற்றையும் விரும்பி 
					ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்த ஒருவரால்தான் இப்படி குறைகளைப் 
					பெரிதுபடுத்தாமல் இருக்க முடியும். 
					 
					சவேரியாரின் வாழ்வியல் விருதுவாக்கு: 'மேன்மை' ('மாஸ்ஸிமோ'). 
					 
					நாம் செய்யும் எல்லாவற்றிலும் இந்த மேன்மை இருக்க இவர் நம்மைத் 
					தூண்டுவாராக. 
					 
					- Rev. Fr. Yesu Karunanidhi, Madurai. | 
			 
			 
		
				 | 
					 
					 
			   |