| 
					  | 
					
					                 
					   | 
					
					  | 
				 
				
					|                               
					  பொதுக்காலம் 
					20 ஆம் வாரம் - 
					ஞாயிறு - 3ம் ஆண்டு | 
				 
				
					
					
					================================================================================= 
					
					
					முதல் வாசகம் 
					================================================================================= 
					 
					நாடெங்கும் வழக்குக் காரணமாய் இருக்கும்படி 
					என்னைப் பெற்றாயே! 
					 
					இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 
					38: 4-6, 8-10 
					 
					அந்நாள்களில் 
					 
					தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாக 
					வேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள 
					போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். 
					இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை" 
					என்றார்கள். 
					 
					அதற்கு அரசன் செதேக்கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். 
					ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே" 
					என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல் கூடத்தில் 
					அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் 
					கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; 
					சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். 
					 
					எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, 
					"என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் 
					தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் 
					மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது" என்று 
					கூறினார். 
					 
					அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபேது மெலேக்கை நோக்கி, 
					"உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் 
					எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு" என்று 
					கட்டளையிட்டான். 
					 
					ஆண்டவரின் அருள்வாக்கு. 
					 
					================================================================================= 
					 பதிலுரைப் 
					பாடல் 
					- 
					திபா 40: 1. 2. 3. 
					17 (பல்லவி: 13b) Mp3 
					=================================================================================
					 
					  
					பல்லவி: ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். 
					1 
					நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் 
					பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். - பல்லவி 
					 
					2 
					அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார்; சேறு 
					நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் 
					நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 
					- பல்லவி 
					 
					3 
					புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று 
					எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் 
					மீது நம்பிக்கை கொள்வர். - பல்லவி 
					 
					17 
					நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; 
					நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை 
					செய்ய விரைந்து வாரும். - பல்லவி 
					 
					================================================================================ 
					இரண்டாம் வாசகம் 
					================================================================================ 
					 
					நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் 
					மன உறுதியோடு ஓடுவோமாக. 
					 
					எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 12: 1-4 
					 
					சகோதரர் சகோதரிகளே, 
					 
					திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து 
					நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் 
					பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் 
					மன உறுதியோடு ஓடுவோமாக. நம்பிக்கையைத் தொடங்கி வழிநடத்துபவரும் 
					அதை நிறைவு செய்பவருமான இயேசுவின்மீது கண்களைப் பதிய வைப்போம். 
					அவர் தாம் அடைய இருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் 
					பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது 
					அரியணையின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறார். 
					 
					பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு 
					தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் 
					சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், 
					இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை. 
					 
					ஆண்டவரின் அருள்வாக்கு. 
					 
					================================================================================= 
					நற்செய்திக்கு முன் 
					வாழ்த்தொலி 
					================================================================================= 
					யோவா 10: 27 
					 
					அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் 
					செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் 
					பின்தொடர்கின்றன. அல்லேலூயா. 
  
					================================================================================= 
					
					நற்செய்தி வாசகம் 
					================================================================================= 
					அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா 
					நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன். 
					 
					✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 
					12: 49-53 
					 
					அக்காலத்தில் 
					 
					இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். 
					அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் 
					விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. 
					அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 
					 
					மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? 
					இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 
					இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு 
					எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், 
					தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், 
					மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்." 
					 
					ஆண்டவரின் அருள்வாக்கு. 
					 
					 
					================================================================================= 
					
					
					மறையுரைச் சிந்தனை - 
					1 
					
					================================================================================= 
					ஒருநாள் ஒரு கணவர் தன் மனைவியிடம் கோபக்கனல் பறக்க, "அடியே! 10 
					நிமிடங்களில் குளிப்பதற்குச் சுடுதண்ணீர் வைத்துக் கொடுக்கா 
					விட்டால் என்ன நடக்கப் போகுது என்று பார்?" என்று கூறினார். 
					மனைவியும் உரத்த குரலில், "10 நிமிடங்களில் சுடுதண்ணீர் 
					வைத்துக் கொடுக்க முடியாது, என்ன நடக்கும்?" என்று 
					கேட்டதற்குக் கணவர், "அப்படியானால் பச்சைத் தண்ணீரில் 
					குளித்துக் கொள்கிறேன்" என்று மிகவும் சாதுவாகப் பதில் 
					சொன்னார். ஒருசில காரியங்களில் கணவர் மனைவிக்கு 
					விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் எல்லாக் காரியங்களிலும் 
					விட்டுக்கொடுக்க முடியுமா? 
					 
					16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றி 
					திருத்தந்தைக்கு எதிராகப் போட்டித் திருச்சபையை 
					ஏற்படுத்தினார். எல்லா மன்னர்களும் அரசனை ஆதரிக்க, தாமஸ்மூர் 
					என்பவர் மட்டும் மன்னனை ஆதரிக்க மறுத்துவிட்டார். அவர் 
					சிறையில் அடைக்கப்பட்டார்; மரண தண்டனை அவருக்கு 
					விதிக்கப்பட்டது. அவரின் மனைவி லூயிசா, மன்னனை ஆதரித்து மரண 
					தண்டைனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படி அவரை எவ்வளவோ 
					கெஞ்சியும் தாமஸ் மூர் மறுத்துவிட்டார். இன்முகத்துடன் மரண 
					தண்டனையை ஏற்றார். இன்று அவர் ஒரு மறைச்சாட்சி; 
					பொதுநிலையினரின் பாதுகாவலர். மனைவியின் சொற்கேட்டு அவர் விண்ணக 
					வாழ்வை இழக்க விரும்பவில்லை! கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவைத் 
					தக்கவைத்துக் கொள்வதற்காக மற்ற எல்லா உறவுகளையும் துண்டித்துக் 
					கொள்ள வேண்டும். 
					 
					இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார், "மண்ணுலகில் பிளவு 
					உண்டாக்க வந்தேன், என் பொருட்டு வீட்டில், ஒருவர் மற்றவர்க்கு 
					எதிராகப் பிரிவர்" (லூக் 12:51). கிறிஸ்துவத்தை உரோமையர் 
					அடியோடு வெறுத்தனர். ஏனெனில் அதனால் குடும்பம் இரண்டாகப் 
					பிளவுபட்டது. குடும்பத்தில் ஒருசிலர் கிறிஸ்துவுக்குச் 
					சார்பாகவும் வேறு சிலர் அவருக்கு எதிராகவும் பிரிந்தனர். 
					கிறிஸ்து உலக வரலாற்றை மட்டும் கி.மு - கி.பி. என்று 
					பிரிக்கவில்லை; குடும்பத்தையும் பிரித்துவிட்டார். அவரது 
					வார்த்தை வாளாகச் செயல்பட்டுக் குடும்பத்தைப் பிளந்தது. 
					 
					கிறிஸ்து எதிர்க்கப்படும் அடையாளமாய் இருப்பார் என்று சிமியோன் 
					இறைவாக்குரைத்தார் (லூக் 2:34), கிறிஸ்துவின் போதனையைக் கேட்ட 
					மக்களில் ஒருசிலர் வியந்து அவரை ஏற்றுக் கொண்டனர் (மாற் 1:27). 
					ஆனால் வேறு சிலர் அவர் மட்டில் இடறல்பட்டு அவரை ஏற்க மறுத்து 
					"இவர் தச்சருடைய மகன் அல்லவா?" (மத் 13:55) எனக்கூறி அவரை 
					ஏளனம் செய்தனர். நமது ஒவ்வொரு செயலிலும் நிலைப்பாட்டிலும், 
					ஒன்று நாம் கிறிஸ்துவுக்குச் சார்பாக இருக்கின்றோம்; அல்லது 
					அவருக்கு எதிராக இருக்கின்றோம். "என்னோடு இல்லாதவர் எனக்கு 
					எதிராக இருக்கிறார்" (மத் 12:30) என்று கிறிஸ்து தெளிவாகக் 
					கூறியுள்ளார். கிறிஸ்துவையும் அவருடைய நற்செய்தியையும் 
					பின்பற்றுவதில் சமரசத்திற்கு இடமில்லை. 
					 
					கிறிஸ்துவினுடைய திருச்சபையும் "எதிர்க்கப்படும் அடையாளமாக" 
					இருக்கிறது. திருச்சபை விசுவாசம் மற்றும் ஒழுக்கநெறி 
					ஆகியவற்றில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது. 
					எடுத்துக்காட்டாக, மணமுறிவு, கருச்சிதைவு, கருணைக்கொலை 
					ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கின்றது. இவற்றில் சமரசத்திற்கு 
					இடமில்லை. ஆனால் ஒரு சிலர் திருச்சபையின் போதனையை எதிர்த்துப் 
					போர்க்கொடி பிடிக்கின்றனர். அவ்வாறு செய்வது கிறிஸ்துவின் 
					நற்செய்திக்கு எதிரானது. 
					 
					அதே நேரத்தில் கிறிஸ்தவ விசுவாசிகள் இறைவாக்கு உரைக்கும் 
					பணியையும் செய்ய வேண்டும், திருச்சபைக்கு உள்ளும் வெளியிலும் 
					உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட அவர்களுக்குக் கடமையும் 
					உரிமையும் உண்டு. இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் 
					எரேமியாவைப்பற்றி உள்ளது. கி.மு. 7- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 
					அவர் அரசர்களுக்கும் மக்களுக்கும் ஆலயத்துக்கும் எதிராகப் 
					பேசினார். அவ்வாறு பேசக்கூடாது என்று அவர் விரும்பினாலும் 
					கடவுளுடைய வார்த்தை அவர் இதயத்தில் பற்றிளரியும் தீ போல 
					இருந்தது. அவரால் அதை அடக்கிவைக்க முடியவில்லை (எரோ 20:9). 
					எரேமியா. இறைவாக்கு உரைத்ததால் பல இன்னல்களுக்கு உள்ளானார். 
					பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டார்: தாடுகடத்தப்பட்டார்; மக்கள் 
					அவரைக் கொல்ல முயன்றனர். இருப்பினும் அவர் எதற்கும் அஞ்சவில்லை 
					. ஏனெனில் அவரை இறைவாக்கு உரைக்கும்படி அழைத்த கடவுள் அவரிடம் 
					கூறினார்: " அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் 
					உன்மேல் வெற்றிகொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை 
					விடுவிக்க உன்னோடு இருக்கிறேன்" (எரே 1:19). நமது இறைவாக்குப் 
					பணி கடவுளது பணியென்றால் எவராலும் அதை அழிக்க முடியாது. மாறாக, 
					அது நமது சொந்தப் பணி என்றால் அது சிதைந்து போவது உறுதி. 
					 
					"அமைதியை அல்ல, வாளையே கொண்டு வந்தேன்" (மத் 10:35) என்ற 
					ஆண்டவரின் காலகயை மேற்கோள்காட்டி ஒருசிலர் வன்முறையில் 
					ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதே ஆண்டவர் "வாளை 
					எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்றும் 
					எச்சரித்துள்ளார். கிறிஸ்து மண்ணுலகில் மூட்ட வந்த அன்புத் தீ 
					(லூக் 12:49) மட்டுமே நமது ஆயுதமாகும். 
					 
					ஓர் இளைஞன் ஓர் இளம் பெண்ணிடம், "வா! ஓடிப் போகலாம்" என்றான். 
					அதற்கு அவள், "செருப்பு பிஞ்சு போகும்" என்றதற்கு அவன் 
					அவளிடம், "பரவாயில்லை செருப்பைத் தூக்கிக் கொண்டே ஓடலாம்" 
					என்றான், இன்று பலர் பல காரியங்களுக்காகப் பலருடன் சேர்ந்து 
					ஓடுகின்றனர். ஆனால் இன்றைய இரண்டாம் வாசகம் நாம் யாருடன், 
					எப்படி ஓட வேண்டும் எனக்கூறுகிறது. நம்பிக்கையைத் தொடங்கி 
					வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான கிறிஸ்துவின்மேல் நம் 
					கண்களைப் பதிய வைத்து மன உறுதியுடன் வாழ்க்கைப் பந்தயத்தில் ஓட 
					எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் நம்மை அழைக்கிறது. 
					 
					நாம் ஓடுவோம்; கிறிஸ்துவுடன் ஒடுவோம்; உலகத்துடன் சமரசம் 
					செய்யாமல் ஓடுவோம், கிறிஸ்துவுக்குச் சார்பாக இறைவாக்கு 
					உரைப்போம், நலமானவைகளைத் தூக்கிப் பிடிப்போம்: நலமற்றவைகளை 
					உடைத்து எறிவோம். 
					  
					 
					 
					மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். 
					 
					  | 
				 
			 
			
			 |