புனிதவாரப்பாடல்கள் | ஏன் இந்தப் பாடுகள் | தூய வெள்ளி |
ஏன் இந்தப் பாடுகள் ஏன் இந்த நோவுகள்? என் நிலை மாறத்தானே இந்தச் சிலுவைகள். 1) இயேசு தீர்ப்பிடப்படுகிறார். அநியாயத் தீர்ப்பு ஒன்று அவசரமாய் எழுதப்பட அகிலம் படைத்த ஆண்டவவன் அமைதி காக்கின்றார். பொறுமை என்றும் தோற்பதில்லை இன்று ஜெயிக்குமே 2) பாரமான சிலுவை இயேசுவின் தோளில். பிறர் துயரை தன் துயராய் உணர்ந்து இயேசு வாழ்ந்ததனால் சிலுவை இங்கு சிறகுபோல இலகுவானதே விரும்பி சுமக்கும் சுமைகள் என்றும் சுகமாய் மாறுமே 3) இயேசு முதன் முறை கீழே விழுகின்றார். மதிப்பு மிகுந்த இலட்சியங்கள் தடைகள் தன்னைத் தகர்த்திடுமே விழுந்தவுடன் எழுந்து நடக்க துணிவு கொள்கிறார். முயற்சி அதை பயிற்சி செய்தால் வாழ்வு மாறுமே. 4) இயேசு அன்னை மரியாவை சந்திக்கிறார். உண்மை அன்பு ஒருபோதும் கை கழுவி செல்வதில்லை என்பதனை அன்னை மரி உறுதி செய்கின்றார். உணர்ந்து உதவி செய்வதுதான் உண்மை நேசமே. 5) சீமோன் இயேசுவுக்கு உதவி செய்கிறார். கைமாறு கருதாமல் உதவுவதே பிறர் சிநேகம் முகமறியா சீமோன் இங்கு உதவி செய்கிறார். உதவிடுவோர் உதவி பெறுவர் உரிய வேளையில். 6) வெரோணிக்கா இயேசுவின் முகத்தை துடைக்கிறாள். வலிமையதே உடலில் அல்ல, உள்ளமதின் உறுதி தன்னில் மென்மையான பெண்மை இங்கு உதவி செய்யுதே. ஆணின் இணை பெண்கள் என்ற உண்மை துலங்குதே. 7) இயேசு இரண்டாம் முறை கீழே விழுகின்றார். தொடர்கதையாய் துயர் வரினும் துவண்டு மனம் போகாமல் துணிவு கொண்டு மறுமுறையும் எழுந்து நடக்கிறார். வீழ்த்திடுவோர் வெட்கமுறை எழுச்சி காணுவோம். 8) இயேசு ஜெருசலேமே மகளிருக்கு ஆறுதல் கூறுகின்றார். விழியில் மட்டும் நீர் வடிந்தால் வீணாகிப் போய்விடுமே. உறவுகளின் இழிநிலைக்காய் உள்ளம் வருந்துவோம். உடன் இருப்போர் வாழ்வு மாற பொறுப்பினை ஏற்போம். 9)இயேசு முன்றாம் முறை கீழே விழுகின்றார். அவமானம் அவதூறு விமர்சனங்கள் துளைத்தாலும் வீறுகொண்டு மீண்டும் எழுந்து பயணம் தொடர்கிறார். தடைக்கல்லைப் படிக்கல்லாய் மாற்ற முயலுவோம். 10) இயேசுவின் ஆடைகளைக் களைகிறார்கள். வார்த்தையினால் பிறர் பெயரை பழித்துரைக்கும் போதெல்லாம் நாமும் பிறர் ஆடை களையும் பாவம் செய்கின்றோம். நல்வார்தை பேசி பிறர் மாண்பினைக் காப்போம். 11) இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். உண்ணும் உணவை பிறர் உழைப்பை வீணாக்கும் போதெல்லாம் நாமும் பிறர் உடலினிலே ஆணி அறைகின்றோம். உழைப்பவர்கள் உடலினை நாம் மறுத்திட முயல்வோம். 12) இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார். உயிர் தரவும் உண்மை அன்பு கலங்காது தயங்காது தன்னை தந்து இயேசு இங்கு உறுதி செய்கின்றார். வாழ்வளித்து வாழ்வு பெற அழைப்பு தருகிறார். 13) அன்னையின் மடியில் இயேசுவின் உடல். பயன் படுத்தி வீசிடுவோர் தவறுணர்ந்து மனம் திருந்த இறந்த மகன் உடலை மரி மடி சுமக்கிறார். பெற்றவரை பெரியவரை மதித்து வாழுவோம். 14) இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார். இறைவனது அன்பிற்கு இறப்பு கூட தடையில்லை. மீண்டும் வர கல்லறையில் உறக்கம் கொள்கிறார். தடைகள் உடைத்து உண்மை அன்பு என்றும் நிலைக்குமே. |